கவிதைச்சாரல்

 


கவிதைச்சாரல்.


தாயழகு.


பா வகை : விருத்தம்.

உட்பிரிவு : கலிவிருத்தம்


தாய்தமிழில் ழவழகு தாய்மையில் தாயழகு

தாயிக்கு மகவழகு தாய்மொழியே மிகவழகு

தாய்சேயின் முகம்பார்த்து தாயவள் சிரிப்பழகு

தாய்கரமோ மகவுக்கு தருஞ்சுகமோ தனியழகு 1

தாலாட்டுந் தாய்மடியே மகவின்தூ ளியழகு

தாலாட்டுக் கனியாகி கதையாகும் சொல்லழகு

கோலமிடு மிருவிழிகள் காக்கின்ற கண்ணழகு

பாலமென அமைந்திடும் பாவையவள் நெஞ்சழகு 2

தாயிருக்க அவளணைப்பி லிருப்பதுவும் சிறப்பழகு

தாயிக்குபின் தாரமாயின் தாயன்பே பெருவழகு

தாய்சொல்லை தட்டாத தனையனின் வளர்ப்பழகு

தாயிக்கு அவன்தரும் தனியுரிமை மதிப்பழகு 3

படிப்பறிவு யின்றிடினும் தாயுள்ள மறிவழகு

பட்டறிவில் தருமறமோ பெற்றதாயி னுளமழகு

படுந்துய ரெதுவெனினு மவள்தூற்றா மனமழகு

பட்டினியில் மகவழுக பதறுகிற பயமழகு 4

இதயத்தை மகவுகேட்க யெடுத்துதரும் துணிவழகு

இதமின்றி நடக்கையிலு மிளகிநிற்கும் செயலழகு

உதிரத்தைப் பாலாக்கி ஊட்டிவிட்ட வுறவழகு

உத்தமனாய் வாழ்ந்திடவு மூக்கிவிடும் பொறுப்பழகு 5

தன்மகவு துயர்கண்டு தடுமாறும் தவிப்பழகு

தனதுமடி தஞ்சமாக தருமன்பி னணைப்பழகு

துன்பத்தைத் தந்திடா நற்சொற்கள் நெறியழகு

நன்நெறியை காத்திட நவிலுமவள் மொழியழகு 6

இளமைமுத லவள்கொண்ட இரும்புமனத் திறனழகு

இளமனது சதிராட யேங்கிநிற்கா பலமழகு

தெளிவிள்ளா வாழ்க்கையிலே தெளிவுதரும் மதியழகு

துள்ளியமா யில்லறத்தை தூக்கிநிற்கும் தெம்பழகு 7

நிழலெனவே அவள்தொடரும் நெருக்கமது நட்பழகு

வழுக்கிவிழும் காலத்திலே தாங்குகின்ற தெம்பவழகு

பழமையிலே வாழ்ந்தாலும் தருகின்ற அன்பழகு

தழைத்தோங்கி வளர்ந்திடவு தருஞ்சொல்லின் பண்பழகு 8

வருந்துன்ப மெதிர்கொள்ளும் மனங்கொண்ட திடமழகு

பெருயின்ப மெதுவெனினும் வெளிகாட்டா குணமழகு

வருவோரை வாய்நிறைய வரவேற்கும் பாங்கழகு

பெருமையினை காக்கின்ற தருமமுடை வுயர்வழகு 9

தரணியில் தெய்வமிலா குறைபோக்கும் தாயழகு

தரங்காண யியலாத தனித்தெய்வம் தாயழகு

பெருமனமும் கருணையுடை பேரழகே தாயழகு

பெருமையுடன் போற்றுவோமே புனிதமான தாயழகை 10


பெண்ணழகு.

பா வகை : கலிப்பா.

தளை : களித்தளை, வெண்சீர் வெண்டளை

ஓசை : அகவல் துள்ளலோசை.


தையலவள் நகையழகு தத்தையவள் மொழியழகு

திங்களது கறையழகு தருமொழியோ சுவையழகு

சிலம்பொலியாய் சிரிப்பழகு சிணுங்குமவ ளொலியழகு

சீறுகின்ற சினமழகு சிறுபாதம் நிறமழகு 1

இருள்மேகக் குழலழகு யிருகன்னக் குழியழகு

இதழ்சிந்தும் மதுவழகு யிளஞ்சிவப்பு வாயழகு

பாயுமவள் விழியழகு பளபளக்கும் கழுத்தழகு

எள்ளுப்பூ மூக்கழகு இருசெவியும் மடலழகு 2

இளமூங்கில் தோளழகு இருதனமும் மிகவழகு

உடுக்கையென யிடையழகு ஒருயிலைபோல் வயிறழகு

இளவாழைத் துடையழகு இருகாலும் தனியழகு

சிறுயானை நடையழகு செதுக்கிவைத்த வுடலழகு 3

தனிமகளாய் யிருக்கையிலே தளிர்தழைத்த துளிரழகு

தாரமான நொடியினிலே தனதில்லப் பாங்கழகு

குடும்பத்தில் துணைநிற்கும் குலவிளக்கி னொளியழகு

பாசமுடன் நடத்துவதில் படித்ததொரு நட்பழகு 4

சூளுற்ற தருணத்தில் துவளுமவ ளுருவழகு

தாயாகி மகவுவர தனிச்சிறப்பில் தாயழகு

மகவுக்கு மணமுடிக்க மயக்கமுறு வுறவழகு

மருமகளின் மகவுக்கு பாவையவ ளாச்சியழகு 5

ஆச்சியாகி யரசோச்சும் பொக்கைவாய் சிரிப்பழகு

பேரபேத்தி முகங்கண்டு பூரிக்கும் முகமழகு

தொய்வில்லா குடும்பத்தை நிறுத்திநிற்கும் துணிவழகு

தெய்வத்தின் மறுவுருவாய் தரணிவந்த பெண்ணழகு 6


தலைவியின் பிரிவு.


பா வகை : கலிப்பா.

உட்பிரிவு : தரவு கொச்சக கலிப்பா.

தளை : களித்தளை.

தொடை : அந்தாதி


காளையவன் விழிகண்டு கனியொத்த வனிதையவள்

காமனவன் மலர்கணையால் மலைர்கோர்த்த சிலைதொடுக்க

கோலமிட்ட அடிவிரல்கள் குறுஞ்சிவப்பில் சிவந்துவிட

நாட்டியமாய் விழியிரண்டும் நளினமுடன் கொஞ்சினவே 1

கொஞ்சுகின்ற கடைவிழியும் குதுகலத்தி லவனைகாண

மஞ்சமிடு மிதழிரண்டும் மலர்கணையா யெனைமிரட்ட

பஞ்சிதழின் சுகவழைப்பில் பாற்கடலா யெழுச்சியுற

நெஞ்சங்க ளிணைந்ததுவே செந்நித்தின் புதுப்புனலாய் 2

புதுப்புனலாய் மனம்பொங்க பெதும்பைமனம் பரிதவிக்க

புதுமனைவி பெருநினைவில் பிரிந்தமனம் வருந்துகையில்

பதுமையவ ளணைத்தயின்ப பாற்கடலா யெழுச்சியுற

பதிந்துவிட்ட விழிநான்கும் பிணைவதென்று மஞ்சமதில் 3

மஞ்சமிட்ட நினைவுகளு மலைகடலாய் நடனமிட

நெஞ்சமதி லவள்வதனம் நிறைமதியாய் சுழன்றுவர

கொஞ்சிநிற்கும் சிவந்தயிதழ் குவித்திருக்கும் மதுவதனை

பஞ்சமின்றி பருகவரு முவகைமிகு தினமெதுவோ 4

தினமெதுவோ யெனயெண்ணி மனமதுவோ நிலையின்றி

உனதுமுக மலைகழிக்க எனதுமனம் கனவுதனில்

என்சுகமும் தொலைந்துவிட நித்திரையும் விலகிவிட

என்னிதய முழுமதியே உனதிதழ மழைப்பதெப்போ 5


குறலழகு

பா வகை : விருத்தம்.

உட்பிரிவு : அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்.

தளை : அனைத்தும் காய்ச்சீர்.


முத்தமிழில் சொல்லெடுத்து முப்பாலை

தந்திட்ட யெழுசீர்கள் கொண்டகுறள்

சத்தான கருத்தோடு சொத்தாக

தமிழுக்கு யெப்போது முள்ளகுறள்

முத்தாக பலநூல்கள் யெம்தமிழி

லிருந்திடினும் தன்தலைமை கொண்டகுறள்

பத்தோடு பதினொன்று யென்றெண்ணா

நிலையினில் பார்போற்றுந் தெய்வகுறள் 1

சமணத்தின் கொள்கையா மகிம்சையினை

போற்றுகிற சரித்திரத்தை தந்தகுறள்

சமமாக அனைத்திற்கும் தருமநெறி

பகர்கின்ற சமயசாரா சங்ககுறள்

சமயத்தார் பலர்கூடி தனதென்று

மார்தட்டும் சாத்திரங்க ளுள்ளகுறள்

சமயங்கள் பலவிருந்து மவைகூறு

மொழுக்கநெறி யத்தனையுஞ் சேர்ந்தகுறள் 2

அறமென்னும் பொருள்தன்னை யரசமுத

லாண்டிவரை யனைவருக்குஞ் சொன்னகுறள்

அறமான பெருஞ்செயலை அயல்நாடு

முள்நாடு மரங்கேற்றி பார்த்தகுறள்

மறவருட னாற்றுகின்ற நெறியினையு

முறையினையு மரபுடனே யாத்தகுறள்

திறமுடனே போர்முறையை தெளிவுடனே

விளக்கிவிடும் தெள்ளியதர் நூல்குறளே 3

பொருள்பற்றி பேசுகையி லருள்சேர்த்து

வுரைத்திட்ட திருநூலாம் நம்குறளே

பொருள்நிலையா யெனதறிந்து பின்னோடும்

மக்களுக்கு பொருள்பற்றி சொன்னகுறள்

அருளோடு பொருள்சேர்த்து மனதோடு

பொருள்தந்து நிறைவாழ்வு சொன்னகுறள்

தருமத்தை முதலாக்கி தரைவாழ்வை

பிறதாக்கி தரணிக்கு வுரைத்தகுறள் 4

நாடாளும் நெறியையும் கோணாத

ஆட்சியையும் தவிர்க்காமல் பகர்ந்தகுறள்

நாடாள வுதவுகின்ற நல்லமைச்சர்

பணியினையு நயமுடனே நவின்றகுறள்

நாடோடு நதியனைத்தை நல்வளமாய்

மாற்றுகிற வுழுதொழிலை பேசுங்குறள்

நாடோரும் திருபெருக பெருநாடாய்

பேரெடுக்க வழியுரைத்த வண்ணகுறள் 5

இவ்வுலக வாழ்க்கைக்கு யறமோடும்

பொருளோடும் சுகம்வேணு மென்றகுறள்

தவஞ்செய்யு முன்பேயே யுகவின்பம்

நுகர்ந்திடவு காமத்தை வைத்தகுறள்

தவறாத வொழுக்கத்தை தம்பதிகள்

வாழ்முறையில் தலையெனவே வுரைத்தகுறள்

தவமாக காமத்தை கையாள

சொல்லுகிற காவியமே நமதுகுறள் 6

கடுகினில் துளையிட்டு கடலினையே

புகுத்திட்ட அறமனைத்துங் கொண்டகுறள்

தடுமாறு மிம்மைக்கும் பனையாகும்

மறுமைக்கும் மனைமாண்பு தருங்குறளே

திடமாக வினையறுக்கும் வரைந்துள்ள

நெறியேற்றால் திருவாழ்வு வருங்குறலால்

பொடியளவு பெற்றயின்பம் மலையளவு

பெருகிடுமே தினந்தொடர திருக்குறளை. 7


தீபாவளி வாழ்த்து 2024.


பா வகை : வெண்பா.

உட்பிரிவு : கலிவெண்பா

தளை : வெண்சீர் வெண்டளை

சிறப்பு : 40 அடிகள்.


எம்சமண நன்நாதன் யெவ்வுயிர்க்கும் பொன்னாதன்

பத்தறங்கள் சொல்நாதன் பற்றறுத்த பேராளன்

தீர்த்தங்க தேவனவன் திங்களென தண்மையவன்

நித்திலத்தை யாளுபவன் நித்தமும்நாம் போற்றுவமே

எண்குணத்தான் தந்ததுதான் தன்னொழுக்க நன்னெறியாம்

காட்சியுடன் நல்லொழுக்கம் கற்றுணர்ந்த ஞானநெறி

மூவுலகும் வந்துதிக்கும் முற்றில்லா வுற்றநெறி

பக்தியுடன் போற்றிடுவோம் பாதமதை கைதொழுவோம்

நற்துறவு பூண்டிட்டார் நல்லறங்கள் சொல்லிட்டார்

நல்லிடபா வாபுரியில் நின்றிட்டார் நற்தவத்தில்

கார்த்திகையின் தேய்பிறையில் நற்சதுர்த்தி நாளினிலே

பூரணனாய் நின்றவர்தான் பேறடைந்து வீடடைந்தார்

வீடடைந்த நன்நாளில் வீதியெல்லாம் பேரொளி

தீபவொளி கண்பறிக்க ஆகியதீ வாவளிதான்

இல்லத்தில் நல்லினிப்பில் யெல்லோரும் நீராடி

புத்தாடை நாமுடுத்தி பூரணனை தாள்பணிவோம்

தாள்பணிந்து மாவிளக்கில் தந்திடுவோம் பாவொலியை

நின்றிடுவோம் மெவ்வுயிர்க்கும் தீமைதரா நல்லுயிராய்

பட்டாசு நீக்கிடுவோம் பாழாக்கும் நச்சுபோக்கி

பெட்டகமாய் சேர்த்தபொருள் திட்டமாக காத்திடுவோம்

காப்போமே யெவ்வுயிரும் கர்மவீரர் நல்லறத்தால்

வாழ்வோமே வாழ்க்கையினை வாழுவாழ விட்டிடென்று

தாள்பணிவோம் வீரனடி தானழியும் பாவநெறி

பொய்மைநெறி நின்றழிய பூத்திடுமே வாய்மைநெறி

வாய்மைநெறி யிவ்வுலகி லோங்கசெய்த மாவீரர்

சித்தராகி நின்றநாளே தீபாவொளி நன்னாளாம்

நல்லறத்தார் கொண்டாட நாணமின்றி சொல்லுரைக்கும்

பொய்யுரையை நீக்கிடுவோம் மெய்யதனை போற்றிடுவோம்

போற்றிடுவோம் சொல்லுவதை பொய்யெதையு சொல்லவில்லை

சாற்றிடும்நம் புள்ளியலோ சாதிக்கும் திண்மையில்லை

ஒற்றுமையு மிங்கில்லை யொன்றுசேரும் பண்பில்லை

சேர்ந்திருக்க நெஞ்சிருந்தும் சேர்த்துவைக்க யாருமில்லை

நம்நெறிக ளொன்றேதான் நம்நடப்பு வேறாகும்

நல்லறங்க ளொன்றாகு மேற்போர்கள் தன்குணத்தால்

நாலறுவ ரெல்லோரும் நல்குரவ ரெல்லோர்க்கும்

போற்றிடுவோம் யென்றென்றும் காத்திடுவோம் நல்லறத்தை

ஒன்றாக வாழ்வதுதான் சான்றாகும் நம்மிடையே

ஒன்றாக சேர்வதுதான் நன்றாகும் நம்மோர்க்கும்

தீபவொளி நன்னாளில் கைகோர்த்து சேர்ந்திடுவோம்

தீபாவளி வாழ்த்துக்கள் காண்.


நூலழகு.

பா வகை : விருத்தம்.

உட்பிரிவு : கலிவிருத்தம்

தொடை : அந்தாதி.


நித்திலத்தில் நூல்களுண்டு நெறிபலவு முரைப்பதற்கு

அத்தனையும் யாத்ததுவோ யருள்நெறியார் தூரிகையே

முத்தெனவே மொழிந்தவைகள் முழுவுலகு முணர்வதற்கு

சொத்தெனவே தந்ததுதான் தொய்வில்லா நூல்பலவும் 1

பலநூல்க ளிருந்திடினும் நுண்ணியபல் நெறியிருந்தும்

பல்லுயிரைப் போற்றுகின்ற பண்புடைய பொருளிருந்தும்

நல்லுரையை நவிலுகின்ற நல்லொழுக்க நிலையிருந்தும்

சொல்லெடுத்து தூற்றாத தூயநூல்கள் சமணநூலே 2

சமணநூல்க ளத்தனையும் தருமநெறி கொண்டவையே

சமமுரைக்கும் சமயநூலே சத்தியத்தின் வழிநூலே

மமதையதை போக்கிடுமே மயக்கமதை நீக்கிடுமே

மும்மூட மழித்திடுமே முழுஞானம் வழங்கிடுமே 3

வாழும்பல் நூல்களுண்டு வரலாற்றை சிதைத்ததுண்டு

கீழ்மையில் தருமத்தை தணல்கொண்டு யெரித்ததுண்டு

காழ்ப்புணர்வில் யாத்தவையே கடவுளரின் வார்த்தையென

வாழ்த்துரையை வழங்குபவர் வையகத்தில் பலருளரே 4

பலருண்டு நெறிகாப்போர் பொய்மையினை யெதிர்மொழிவர்

பலகாலம் பொய்யுரைத்தல் புல்லறிவின் சொல்லென்பர்

பல்லறிவு மிகவுடையோர் பலசமய நூலறிந்தோர்

சிலநூலின் வஞ்சனையை சிறப்புடனே பகர்ந்திடுவர் 5

பகர்ந்திடுமவ் நூல்களிளே பழிவாங்குஞ் சிந்தனைகள்

சுகமற்ற போதனைகள் சுட்டெரிக்கும் வன்மொழிகள்

மகவென்று கூறிடுவர் மகவுகூறா சொல்லுடையர்

தகைவிலா சொல்கண்டு தலைகுனிந்தாள் தமிழன்னை 6

தமிழன்னை மேனியெல்லாம் சமணர்கள் நூலணிகள்

சமணர்கள் நூல்நீக்கின் தமிழன்னை மனைவெறுமை

தமிழ்மொழியின் வல்லுனரும் தமிழறிந்த சான்றோரும்

சமணத்து நூலருமை சரித்திரத்தை யறிந்தவரே 7

அறிந்தவர்கள் கூறுகிறா ரத்தனையும் நன்னெறிகள்

துறவிகளால் யாத்தவைகள் துயரத்தை நீக்குபவை

நெறியுடைய மனிதகுலம் நித்திலத்தில் வாழ்வதற்கு

பொறையுடைய வொழுக்கமதை போற்றுகிற நூல்களென்று 8

நல்நூலில் மென்மையுண்டு நூறொழுக்க மதிலுமுண்டு

இல்லறத்தின் நெறிகளுண்டு துறவறத்தை போற்றலுண்டு

நல்லாட்சி முறைகளுண்டு நாட்டரசன் கடமையுண்டு

நல்லிணக்க மில்லாமல் தூற்றுகிற சொல்லிலையே 9

சொல்லிலையே ஒழுக்கத்தில் தூற்றுகிற நூலிடையே

பல்லொழுக்க நெறிசொல்லல் பண்பிலார் கைபொருளே

நல்புனலும் நல்லனலும் வாதமென வஞ்சனையால்

பலதோல்வி தந்தால்லும் புகழ்கொண்ட நூல்களாகும் 10


ஞானம்.


பா வகை : வெண்பா

உட்பிரிவு : கலிவெண்பா.

சிறப்பு : 72 அடிகள்.


இனிமையி லில்லறம் ஓம்பதல் ஞானம்

இணையிலா இல்லற ஐங்குணம் ஞானம்

இறைவன் தொழதிடல் தேர்ந்தநல் ஞானம்

இருவினை நீக்கல் மறுமையின் ஞானம்

உலகினில் நல்லுயிர்க் கருள்வது ஞானம்

உலகமே போற்று மகிம்சையே ஞானம்

உயிர்க்களை காத்தல் உயரிய ஞானம்

உயர்ந்த அருள்மன முள்ளதும் ஞானம்

உயிரில் வினைகள் கலவாமை ஞானம்

உபவாச நோன்பினை யேற்றலும் ஞானம்

உயர்நெறி நற்காட்சி யுள்ளமே ஞானம்

உளத்தில் வொழுக்க முடையதும் ஞானம்

உளமே தெளிந்திடல் உயர்வினை ஞானம்

உலகில் அருகன் நெறியது ஞானம்

உடல்தவ மேற்ற லுயிரது ஞானம்

உயிர்தவம் காத்தல் உயர்ந்த ஞானம்

உயர்நூல் படித்தல் தருவதும் ஞானம்

உரைத்து மகிழ்தலும் உண்மையில் ஞானம்

உளமது வதையா வுரைத்தலும் ஞானம்

உயர்ந்த தியானம் உயிருக்கு ஞானம்

உடலது பற்றினை விட்டிடல் ஞானம்

எளிமையாய் வாழ்த லிம்மையின் ஞானம்

எளியவர் கண்டு யிகழாமை ஞானம்

களவுடன் காம மழித்தலும் ஞானம்

கலைபல கற்றோரைக் காமுறுதல் ஞானம்

கதிகளை நீக்கிடும் நல்நெறி ஞானம்

கெடுதலே ஏகாந்த வாதத்தின் ஞானம்

தவத்தினை தந்திடும் வேதங்கள் ஞானம்

தவறினை மன்னிக்கும் மேல்குணம் ஞானம்

தவறியோர் மன்னிப்பு வேண்டல்நல் ஞானம்

திரும்பிடா வீடுபேற டைதல்நல் ஞானம்

துறந்தோரின் நல்லுரை தந்திடும் ஞானம்

துறந்தோர்க் குணவிடல் துள்ளிய ஞானம்

துறவிகள் சொல்லினை யேற்றலும் ஞானம்

துயரற வாழ்தலும் தூயநல் ஞானம்

துயரினைக் கண்டு துடித்தலும் ஞானம்

துயரினை போக்கலும் தூயநல் ஞானம்

நவின்றிடும் சப்தபங்கி தத்துவம் ஞானம்

நலிந்திடா நம்சமணம் தந்திடும் ஞானம்

நலமுடன் தீமை அறிதலே ஞானம்

நிலையிலா செல்வம் தவிர்த்தலே ஞானம்

பொறிகளை யடக்கல் புகழ்தரு ஞானம்

புலன்வழி செல்லா பெருமையே ஞானம்

பிறனில் விழையா பேராண்மை ஞானம்

பெரும்பொருள் சேர்க்கா குணமது ஞானம்

பிறரை வதைக்கா பெருஞ்செயல் ஞானம்

பொறுப்புடன் பெற்றோரை பேணலும் ஞானம்

பிறர்துயர் போக்கல் போற்றிடும் ஞானம்

பிழையின்றி வாழ்தலும் பண்புடை ஞானம்

புகழினை போற்றா மனமது ஞானம்

பொருளி னியல்பை உணர்தலும் ஞானம்

பொருளின் குணங்க ளிரண்டுமே ஞானம்

பெருநிலை நெஞ்சில் இரக்கமே ஞானம்

மதுவுட னூன்தேன் தவிர்த்தலே ஞானம்

மறையினர் சொல்லை மதித்தலே ஞானம்

மனமதில் பொய்யா நிலையது ஞானம்

மனதினை நிறுத்தல் மறையவர் ஞானம்

மனிதரின் வாழ்க்கையே முக்திக்கு ஞானம்

வறியோர்க்கு யீதல் வளமுடை ஞானம்

வரும்பழி நீக்கல் தருமது ஞானம்

வருங்குண மெட்டு மடைதலும் ஞானம்

வருவினை யேற்றலு மூழென ஞானம்

வினையது வாயிலை மூடலும் ஞானம்

வினைகளை வேருடன் போக்கலும் ஞானம்

அனேகாந்த வாதம் ஏற்றலே ஞானம்

அனைத்துநல் ஞானங்க ளரியவை யாகும்

அறநெறி தூவிடும் ஞானத்தைப் பாவிடும்

ஆகம ஞானம் அருகனின் தானமே

எல்லோர்க்கும் கிட்டுமே நல்லிய நேர்மையில்

மேரென வோங்கிடும் வாழ்க்கை சிறந்திடும்

பாரினில் பாய்ந்திடும் புங்கவன் பேரொளி

விண்ணுலகு சென்றிட வான்வழி காட்டும்

சிறந்தது ஞானம் உயர்ந்து..


                                        கவிதைச்சாரல் நிறைவு

No comments:

Post a Comment