சமண நெறி

 

  சமண நெறி.


பா  வகை  :  கலிப்பா.

உட்பிரிவு  :  தரவு  கொச்சக  கலிப்பா.

தொடை    :  அந்தாதி.


கவிதைக்கு  கவியெழுத  கவிஞனாகப்  பிறக்கவில்லை

கவிதையது  கவிகேட்டால்  கவியாக்க  வொருவரில்லை

கவிதையது  பெருவழகில்  திருமகளா  யுருவெடுக்க

கவியென்று  யிதழ்சிந்த  குவலயத்தி  லொருவருண்டோ 1


உண்டொருவ  ரிருந்தாலே  அவரொருவ  ரருகரேதான்

எண்குணத்தை  அடையவர்தா  னறுவினையை  அழித்தவர்தான்

மன்மதனை  எரித்தவர்தான்  மறமழிய  பகர்ந்தவர்தான்

நன்னுலகி  லடிபதிய  நவிலுகின்ற  நெறியவரே 2


நெறிகளுடை  திருவுருவம்  தருமமுரை  இதழாகும்

மறுமையினை  விரட்டிவிடும்  கருமமதை  துரத்திவிடும்

துறவறத்தை  தனதாக்கி  அனைத்தறத்தை  பொதுவாக்கி

அறம்போற்று  முலகாக்க  அவனிவலம்  பெயர்ந்தவரே 3


பெயர்ந்ததுவே  மலரடிகள்  புறவிதழின்  மலரிதழ்மேல்

தயங்கவில்லை  அவர்மொழிகள்  தரணியுயிர்  தழைப்பதற்கு

மயக்கமது  மனதைவிட்டு  மறைந்தழியும்  விளக்கமது

பயத்ததுவே  அனைத்துயிர்க்கு  பெரும்பயனை  அவனியிலே 4


அவனியிலே  மனிதவுயி  ரலைகிறது  பொருளின்பின்

அவைனிலையா  எனவறிந்து  மவரியல்பு  குறைவதில்லை

தவநிலையுந்  துறவறமும்  தருவதுதா  னொருநிலையே

துவக்கிவிடும்  வழியதனை  கதியறுக்கும்  பெருநிலைக்கு 5


பெருநிலைக்கு  பயணமது  தனதுநிலை  யுணர்வதுதான்

பெருமைமிகு  வருகனெறி  பருகுவதே  ஒருவழிதான்

தருமமது  தழைப்பதற்கு  விழிப்புணர்வே  சமணநெறி

விரும்புவது  வெறுப்பதுவுந்  துறந்ததொரு  உயர்ந்தநெறி         6

உயர்ந்தநெறி  திருத்திவிடும்  பரந்தமனங்  கிடைத்துவிடும்

துயரமது  விலகிவிடும்  துணையெனவே  யறமும்வரும் 

மயக்கமது  பறந்துவிடும்  மணிமூன்று  மிணைந்துவிடும்

தயக்கமது  கலைந்துவிட  தரணியெங்கும்  சமணமாமே 7


சமணமது  வழங்குவது  சரிந்திடாத  அகிம்சையினை

சமணமது  முரைப்பதுமே  சகிப்பினையும்  மதிப்பினையும்

சமணமது  சமயமில்லை  சிறப்பான  நெறியியலே

சமணத்தின்  நெறிச்சாரல்  திருமொழியின்  பெருமழையே 8


பெருமழையால்  பெருகிடுமே  புதுப்புனலின்  பரியோட்டம்

தருமமழை  விரட்டிவிடும்  கருமமதின்  சதிராட்டம்

பெருமைதரு  மருகனெறி  இருவறத்தில்  சிறப்போங்க

அரும்பொருளை  உரைத்தவரே அருகராக  உயர்ந்தவரே           9


உயர்ந்தவர்கள்  பிறந்தகுடி  உலகமாளு  மரசகுடி

தயவுடனே  அரசநீதி  நயந்தளித்த  பெருங்குடியே

பயனுடைய  பலவறங்கள்  பகிர்ந்தளித்த  வரசாட்சி

நியமமுட  னரசாண்ட  திறமையுடை  யரசராவர் 10


அரசராக யிருக்கையிலே  யரசபோக  மனுபவிக்க

தரணியிலே  நிலையாமை  தனதுமனம்  நிலைகொள்ள

சரிந்திடாத  சுகமனைத்து  நெருங்கிடாத  வொருநிலையில்

நிரந்தரமாய்  துறவுகொண்டு  நிலவுலகில்  முனிவரானார் 11


முனிவரது  விரதங்கள்  முழுமனதில்  பதிந்துவிட

தன்னிலையி  லுறுதியுடன்  துறவுடனே  தவமேற்றார்

நன்னெறியாம்  துறவினையும்  நலம்பயக்கும்  தவத்தினையும்

அன்றறியா  மனிதருக்க  வரிருந்து  முரைத்தனரே 12


உரைத்தனரே  அறங்களையும்  கரமேற்றா  ருரைத்ததையும்

நெறியுணர்ந்தார்  நிலையாமை  நினைவேற்றார்  துறவினையும்

குறையற்ற  தவமிருந்தார்  குறைகளற  மனம்நிலைத்தார்

வற்றாவா  லறிவுகொண்டு  வலம்வந்தா  ரவனியெல்லாம் 13


அவனியெல்லா  மவனறங்க  ளவையனைத்து  புகழறமே

தவமியற்றி  கிடைத்திட்ட  தருமனெறி  மிகுந்தவறம்

புவியதனி  லுயிர்களிடம்  பொதிந்துவிட்ட  திருவறங்கள்

காவியமாய்  விளங்கவைத்தார்  தொடர்ந்துவந்த  அறுநால்வர் 14


அறுநால்வர்  சமணத்தி  னரியபெருங்  குரவர்கள்

அறமுரைத்த  பெரியோர்க  ளருகனான  நெறியோர்கள்

போற்றுதலுக்  குரியவர்கள்  மலரிதழி  லமர்ந்தவர்கள்

மறமழித்த  அறவோர்கள்  மனமமர்ந்த  அருகர்கள் 15


அருகனிலை  யடைவதற்கு  மழியவேண்டும்  பெருவினைகள்

தருமநிலை  மனதுணர  தருமவழி  நடக்கவேண்டும்

கருமமெல்லா  மழியவேண்டும்  கடைசிவரை  யுறுதிவேண்டும்

அருந்தவத்தைத்  தொடரவேண்டு  மடைந்திடலாம்  பெரும்பேறை 16


பேறடைந்த  உயிர்களெல்லாம்  பிறவியினை  அழித்தவைதான்

துறவுநிலை  ஒருவழியே  பிறப்பினையே  தவிர்ப்பதுவே

அறமனைத்து  முரைப்பதுவு  மருகனவன்  திருமொழியே

நிறைமனதில்  குடியேற்றி  நிலவுலகில்  பயனடவீர் 17


பயனடைய  பயத்தவைதான்  பரமனவன்  திருவறங்கள்

நயமுடவே  பலபிறவி  எடுப்பதையுந்  தவிர்த்திடுமே

பயமனைத்தும்  பொடித்துவிடும்  பலவியிர்க்கு  மருளீனும்

சுயவொழுக்கம்  நமைச்சேரும்  சுவர்க்கவழி  திறந்திடுமே 18


திறந்ததொரு  பெருநூலே  திருமொழியா  ஒலித்தவைகள்

மறமனைத்து  மழிப்பவைகள்  மறுமலர்ச்சி  தருபவைகள்

சிறப்புடனே  அவனியிலே  பொறுப்புடனே  கழித்தபின்பு

துறந்துவிட்டு  தவத்துடனே  அருகநிலை  தருவதுவே 19


தருவதுவும்  பெறுவதுவு  மவரவரின்  பிறவியூழே

மருள்வதுவும்  பிறழ்வதுவு  மவரவரின்  செயல்வினையே

அருகனவன்  நவின்றதெலா  மவரவரி  னுயிர்சிறக்க

தருமமதை  கரங்கொண்டு  பொறுமையுடன்  செயல்படுவீர் 20


செயல்படுதல்  சிறப்பாகும்  திருவறத்தின்  நெறிவழியில்

நயமுடனே  நடப்பதுவு  மருகனவன்  திருமொழியில்

திருமொழிதான்  பெருமொழியாம்  தரணிக்கு  திருமறையாம்

திருமறையை  கரம்பற்றி  தினந்தினமும்  தொழுதிடுவோம் 21


தொழுகையது  பெருநோன்பு  துயரங்கள்  களைந்துவிடும்

அழகனவன்  தரும்நிழலோ  அவனியினை  குளிராக்கும்

நிழலமர்ந்த  நிறைகுணத்தான்  விழியொளியில்  தவமிருந்தால்

கழலருமை  கிடைத்துவிடும்  கதிநீங்கி  சுகமடைவோம் 22


சுகமென்று  நினைப்பதெல்லா  முடல்மனதின்  சுகமல்ல

சகவுறவின்  சுகமல்ல    பொருள்தந்த  சுகமல்ல

அகவழுக்கும்  புறவழுக்கு  மழிந்திட்ட  வொருநிலையே

சுகமாகு  முயிருக்கு  சுவர்க்கநிலை  யடைவதற்கு 23


அடைந்திடலாம்  சுகமனைத்து  மகிம்சைவழி  மனமேற்றால்

கிடைத்துவிடும்  குணமெட்டும்  கழிந்திடுமே  வினையெட்டும்

தடையற்ற  பெருஞ்சுகமும்  மடைதிறந்த  பெரும்புனலாய்

கிடைத்துவிடும்  பெருமுக்தி  யருகனவன்  கருணையினால் 24


கருணையொன்றே  உயிர்களது  கதிவினைய  துரத்திவிடும்

பெருமையுறும்  நிலைமைபெரும்  புகழனைத்தும்  விரைந்துவரும்

பெருவறங்கள்  நமையணைக்கும்  பெருநிலைக்கு  வழிவகுக்கும்

தருமனவன்  திருவடிகள்  பெறற்கரிய  சுகத்தைத்தரும் 25



No comments:

Post a Comment