ஸ்ரீ பார்சுவநாதர் நான்மணிக் கோவை.
பா வகை : வெண்பா, கட்டளைக் கலித்துறை,
ஆசிரியப்பா, விருத்தம்
தொடை : அந்தாதி.
மனிதனாய் வாழ்ந்தே அனைத்தைத் துறந்து
முனியாய்த் தொடர்ந்து தவத்தில் நிலைத்து
வினைக ளறுத்து கதிகள் தகர்த்து
அருகனா யானா ருயர்ந்து 1
உயர்ந்த சுரம்யாவின் நல்லிய பௌதன மன்னனுடை
தயமிகு மந்திரி பெற்ற யிருவர் மகன்களவர்
பெயரில் மருபூதி யில்லாள் வசுந்தரி நல்லெழிலாள்
கயவன் கமடனும் கட்டிய பெண்ணே வருணையாளே 2
வருணையின் கணவன் காமுக னானான்
பெருவழி யணங்கவள் வசுந்தரி யுருவினில்
உபாயத்தின் சூதினில் வசுந்தரி வலையுற
கமடனின் கரங்களில் வீழ்ந்தவள் தாழ்ந்தாளே 3
தாழ்ந்தவள் வாழ்ந்தாள் நாணத்தை விட்டவள்
வீழ்ந்தனள் சேறிலே தவழ்ந்தனள் சுகத்திலே
ஆழ்ந்தனர் பெற்றோ ருயிரினை மரணத்தில்
கோழையாம் காமம் வழங்கிய தண்டனை 4
தண்டனை தந்தான் கமடனு மேற்றான்
மருபூதி யானா னமைச்சனாய் நாட்டுக்கு
உண்மை யறிந்து தமையனை கண்டனன்
பாறையை வீச யிறந்து 5
இறந்த மருபூதி அண்ணி வருணையு மாண்பிடியாய்
உறவில் திரிய யிணைத்தது வந்த விதியதுவே
இறந்தது வேழம் கமடனாம் குக்குட பாம்பினாலே
பிறந்தது தேவனாய் வாழ்ந்ததே யாங்கே அகவையிலே 6
அகவையு முடிந்திட யரசனாய் பிறந்தான்
குக்குட மிறந்திட மலையரவா யுருண்டது
முன்வினைப் பயனா லரசனை விழுங்கிட
மன்னனும் மறுபடி யமரனாய் பிறந்தனனே 7
பிறந்தான் மீண்டும் மண்ணினில் மன்னனாய்
துறந்தா னாட்சி ஏற்றனன் தவத்தினை
இறந்த பாம்பும் பிறந்தது குறவனாய்
நிறைந்த துன்பம் தந்தது முனிவர்க்கு 8
முனிவர் தவத்தால் வினைகளும் நீங்கிட
தேவனாய் தேவ ருலகினில் கால்பட
வாழ்ந்தார் சுகத்தினி லாயுள் முடிவில்
பிறந்தா ருலகி லவர் 9
அவரின் பிறப்பே அரச குலத்தி லமைந்திடவும்
தவத்தின் பெருமை தணியா சுகத்தில் மனங்கொளவும்
துவளா மனது துறவினை யேற்க துணிவுகொள்ள
தவறா தவத்தி லரிமாவும் தாக்க உயர்ந்தனரே 10
உயர்ந்தனன் மருபூதி பிராமியின் மகனானார்
கமடனா யரிமாவும் நரகிற்பின் னரசனானான்
பார்சுவனாய் பிறந்தார் பிராமியின் கருவினில்
கமடனும் பிறந்தான் மகிபால மன்னனாய் 11
மன்னன் மகிபாலன் கொன்றா னிருநாகம்
சொன்னார் பார்சுவனு மோங்கார் மந்திரத்தை
சொன்ன மந்திரமும் பாவம் போக்கியது
சென்றா ரிருவருமே பவண தேவராக 12
தேவன் தரணியும் தேவியாம் பத்மாவும்
தேவராய் வீற்று தினமும் மகிழ்ந்திட
பார்சுவர் நின்றார் குமரப் பருவத்தில்
மூபத்து வாண்டும் கடந்து 13
கடந்தது காலம் தெரிந்ததே ஆதி சரிதையையும்
தொடங்கிய தெண்ணம் துறவினை நாடி மலர்ந்ததுவே
திடமுடன் வந்தனர் லௌகாந்தி தேவ ரெடுத்துரைக்க
உடனவர் சென்றார் விமலையாம் கச்சில் துறவினுக்கே 14
துறவினி லமர்ந்தவர் வடதிசை நோக்கியே
மறுநாள் சென்றார் சரியைக்கு குலமகேடம்
உணவினை யெடுத்தார் தன்ய னில்லத்தில்
மனையினி லதியச மைந்தும் பெய்தது 15
பெய்தது தவத்தின் வலிமையுடன் நெறிகளும்
செழித்தது மனதில் சிந்தனையும் பன்னிரு
தழைத்திட நின்ற தேவதாரு மரத்தடி
அழிந்திட நின்றார் கருமங்க ளனைத்தையும் 16
அனைத்துமே வெல்ல தவத்தினில் நிற்க
பகையில் கமடனும் சம்பர தேவனாய்
விண்வழி செல்ல விமானமும் நின்றிட
முன்பகை நெஞ்சில் சினந்து 17
சினத்தினில் சம்பரன் வீசினான் வேல்வாள் திருமுனிமேல்
மனதினில் வன்மமாய் மண்மழை கொட்டித் துயரளித்தான்
மனமிலா துட்டனும் கல்மழை மின்ன லெனதொடர
மனதில் சினக்கா நிலையொடு நின்றார் தவமதிலே 18
தவமதி லிருந்திட யசைந்தது யிருக்கையும்
தரணியு முணர்ந்தனன் பகவனின் நிலையினை
பன்னிரு சிரசினை கவிழ்த்தனன் குடையென
நின்றனன சம்பரன் செயலினை தடுத்தே 19
தடுத்திட சிரசினில் தாக்கிய பொருள்களால்
கொட்டிய குருதியும் நதியென பெருகிட
மட்டிலா கொடுமையை தரணியு மடைந்திட
துட்டனை தடுத்திட பத்மாவ திவந்தனள் 20
வந்தவள் மூடி தரணியைக் காத்தாள்
சிரசினில் தாங்கி யவன்துயர் போக்கினாள்
சம்பரன் கொடுமைகள் தன்சிரம் கொள்ள
முனியின் தவமும் சிறந்து 21
சிறந்தது பார்சுவர் நல்தவ மாங்கே தடையறவே
பறந்தது வெவ்வினை பூவினை கொண்ட யிருசிரசும்
நிறைதுயர் தந்திட்ட சம்பரன் தீமை யழிந்ததுவே
அறமதை காத்து யிருவரும் செய்த பணியதுவே 22
பணிந்தான் சம்பரன் முன்பவக் கமடனாய்
தன்தவ றுணர்ந்தான் தம்பியைத் தொழுதான்
நாணியே நவின்றான் நெறியிலா செயலை
உடலது நிலம்தொட உள்ளத்தால் வணங்கினானே 23
வணங்கியே பாடினா னாதியே யறிவனே
பணிந்தவ னியம்பினான் பாவங்க ளொழிந்திட
தணித்திடு தொல்வினை தகர்ந்திடா அருளினை
துணையென வேண்டினான் துயரற பற்றினான் 24
பற்றினை வென்றவா பாவங் களைந்தவா
நன்னெறி சொன்னவா நாற்கதி யற்றவா
பொய்நெறி புல்லரின் பொய்யுரை வேத்தத்தை
மெய்யுணர் கொண்டு சிறந்து 25
சிறந்த குணத்தினை சிந்தையி லேற்றா நிலையினிலே
குறையுடை மூடனாய் யுன்மனை யோம்பி நிலையிழந்தேன்
நெறியிலா வாழ்வால் நரகினில் வீழ்ந்து பலபிறப்பில்
மறுமையில் வாட்டிய துட்டனை யென்று மருளிடுமே 26
அருளிடு வணைத்திடு வறமது வழங்கிடு
பொறுத்திடு புல்லனின் பொறையிலா செயலினை
நிறுத்திடு மனமெழும் மலங்களி னூற்றினை
தவிர்த்திடு மயக்கத்தை தந்திடு குணத்தினையே 27
குணத்தினைக் கொண்டவா வினைகளை வென்றவா
மணமலர் மேவிடும் மாதவ வேதனே
துணையென வுன்னடி கரங்கொள பற்றினேன்
அண்ணனை மன்னித்து வருளென உரைத்தனன் 28
உரைத்தனன் சம்பர னுள்ளம் திருந்திட
பெற்றான் துறவறம் பார்சுவன் கைகளில்
நின்றனன் நல்தவம் நிர்மல உள்ளனாய்
முக்தி யடைய உயர்ந்து 29
உயர்ந்த தவத்தினி லூன்றிட பார்சுவ ரான்மனிலே
பயத்தன நல்வினை நீங்கின நாற்கதி நல்லறத்தால்
நயந்தவர் நாடினார் சுக்கில நல்தவம் நெஞ்சினிலே
வியத்தகு கேவலி வாய்த்தது பார்சுவர் நல்லறமே 30
நல்லறம் வழங்கிட மண்டப மமைத்திட
அமரரும் நிலம்வர அனைத்துமே துவங்கினர்
எழில்மதி லேழுடன் யெழுந்தது வரங்கமும்
கந்தக்கு டியினில் காலடி பதித்தாரே 31
பதித்தவர் நல்மொழி ஒலித்தது சபையினில்
புதியதோர் திருமொழி பன்னிரு மொழியினில்
மதியுடை யுயிர்களும் மற்றய வுயிர்களும்
துதியுடை யறத்தினை யவனியே நுகர்ந்தது 32
நுகர்ந்தது நல்லறம் பார்சுவரின் பொன்னறம்
ஆண்டு வறுபத்து வொன்பான் கடந்தது
பார்சுவர் சொன்னார் பலவிடம் தன்னறம்
நன்கு வுணர்ந்தன ராங்கு 33
ஆங்கவர் நல்லருள் நல்கியே சென்றார்சம் மேதமலை
தாங்கியே அவ்விடம் நின்றார் தவத்தி னிலொருதிங்கள்
தேங்கிய தீவினை முற்று மழிந்திட நின்றவரே
ஓங்கியே நின்றது வுன்புகழ் நித்திலம் போற்றிடவே 34
போற்றிட நின்றவர் வளர்பிறை ஆவணியில்
துலங்கும் சப்தமி விசாகவின்மீ னதிகாலை
நித்திய வானந்தம் நித்தமும் வழங்கிடும்
முக்தியை யடைந்ததை மனதினில் போற்றுவோமே 35
போற்றிடு வருகனை மனமதில் வைத்து
ஏற்றிடு நெறிகளை யின்பமே வழங்கும்
ஆற்றிடு வறங்களை யனைத்துயிர் தொழும்
தோற்றிடா நிலையது துவங்குமே தினந்தினம் 36
தினந்தினம் வாழ்வி லருகனின் நல்லரம்
நன்றதைத் தந்திடும் நல்வழி நல்கிடும்
சொல்லிடு ஐம்பதம் சென்றிடும் நம்துயர்
நம்வழி துன்ப மகன்று 37
அகன்றிடு மாணவ மந்தமில் லின்னல் பொடித்திடவும்
மிகுபொரு ளாசை மனதினில் நீங்கி யழிந்திடவும்
பகையுறு வன்மம் படிந்திடும் நெஞ்சு நிலைபடவும்
தகையுறு பார்சுவா வுன்னடி யென்மனம் பற்றியதே 38
பற்றிய வடியினை சிரசினில் பதித்தேன்
பொறுப்புட னுனதறம் கரத்தினி லேற்றேன்
கறையிலா மனதினை கருணையில் தருவாய்
நித்தமும் புகழினை யுருகியே உரைப்பேனே 39
உரைப்பது யென்தொழில் காப்பது வுன்னிழல்
கரைவது யென்மனம் கறையிலா வுன்குணம்
தருவது வுன்னருள் பெறுவது யென்னிலை
தரையினில் வாழ்வது தவத்தினை யேற்கவே 40
No comments:
Post a Comment