ஸ்ரீ அப்பாண்டைநாதர் அந்தாதி.
பா வகை : ஆசிரியப்பா
உட்பிரிவு : நிலைமண்டில ஆசிரியப்பா
தொடை : செய்யுள் அந்தாதி.
கடவுள் வாழ்த்து.
பற்றினை பற்றற பற்றிய புங்கவன்
பற்றுகள் பற்றற பல்லறம் பாவிய
பற்றுகள் பற்றிய பற்றுடை பாலகன்
பற்றற நாதா பணிந்து.
பணிவோ முன்னருள் பரவிய நறுங்கொண்டை
திருமலை யமர்ந்த மேற்றிசை குரவரே
குறவனுங் குறத்தியுங் கிழங்கினை மலையினில்
தேடிய நிலையினில் திருவுரு தெரிந்ததே 1
தெரிந்ததை யவர்களு முரைத்தன ரனைவர்க்கும்
அரசனின் திருமகள் குந்தவை யறிந்தனள்
பெருயெழில் மடந்தையின் திருவாய் மலர்ந்திட
திரண்டனர் நறுங்கொண்டை யெழுந்தது வாலயமே 2
ஆலய யெழிலினி லனைவரும் திளைத்திட
மலையவன் கழலினை மனதினில் தாங்கினர்
நிலையவன் மனிதரின் நெடியதம் குறைகளை
தொலைத்திடும் தெய்வமாய் பூவுல கேற்றதே 3
ஏற்றன ளரசியு மிறையிலி தந்தனள்
திறம்பட வாலயம் திகழ்ந்தது போற்றிட
பிறமத மனிதர்கள் புகைந்தனர் மனதினில்
மாற்றிட நினைத்தனர் மாலவன் கோயிலை 4
கோயிலி னெதிரினில் குமுறிய குரலினில்
அப்பரு மிசைத்தன ரதைசைவ மாக்கிட
அசைந்திடா நிலையினி லப்பரை யாண்டிட
அவனியோ ரழைத்தனர் அப்பாண்டை நாதனே 5
நாதனின் சிரசினில் நாகத்தின் ஐந்தலை
நிழலினில் நிலைப்பது நின்னெழி லொருநிலை
எழிலினை இசைத்திடும் மனதுபா வதனை
மழலையாய் சூட்டினேன் மனமது மருள்வாயே 6
அருளிய வருளினா லடியவன் மனதினில்
தெரித்திடு வினையி னாசையை களைந்திடு
அரும்பிடும் துயரினை அறுபட பொடித்திடு
எரித்திடு கதிகளை எனக்களி வீட்டினையே 7
வீட்டினில் வசிக்கிற வழங்கா செல்வர்க்கு
தாழ்மை யேவலால் தரும்பொருள் பெறுகிற
வாழ்கிற நிலையற வரமதை தருமென
பாழ்மனம் முடையவன் பற்றினேன் பாதத்தை 8
பாதத்தை சிரங்கொள பரமனை மனங்கொள
மாதினை மனம்நீக்கி மங்கையி னெழில்போக்கி
தீதினி லலைகிற திருந்திடா மனமடங்க
கதியென பற்றினேன் காப்பே னுன்நெறியை 9
உன்நெறி படித்தறியேன் படித்தவ ரடிபணியேன்
ஆலயம் வலம்சுற்றே னருகனின் மொழிபற்றேன்
வல்பொறி யெனையாள வலையினில் சிக்குண்டு
அலைந்திடும் மனதினை யடக்கியே யணைப்பாய் 10
அணைத்திடும் கரங்கள் அப்பாண்டை நாதனின்கை
மும்மையில் தவம்புரியா மூடமன துடையோனான்
இம்மையு மறஞ்செய்யா ஈகையிலா நெஞ்சோனாய்
செம்மையா முனதருளால் சேர்ந்திடுவேன் பேறினையே 11
பேறினை யடைந்திட பிறவியினைக் கடந்திட
போற்றிடு மறத்தினை பெருமையாய் மனமேற்க
நிறைமணி குடையடி நிழலமர்ந்த நிர்மலனே
நறுங்கொண்டை நாயகனே நானுன்னை பற்றுவனே 12
பற்றுவே னுனதடியை பற்றறுத்த பரமனே
நிலையிலா வுடலினை நிலையென நினைத்து
இல்லற சுகத்தினை யினிதே தூய்த்திடும்
புல்லிய மனதில் பண்பினை யருள்வாயே 13
அருளிடுங் குணமதை யகிலமே யறிந்திடும்
ஆதவன் பயணமா யகன்றிடும் வாழ்க்கையும்
நறுங்கொண்டை யமர்ந்த நாயகன் கழலினை
கொத்தென பிடித்தேன் குற்றங்கள் போக்குவாயே 14
போக்கிடும் துயர்களை காத்திடு மிருவினை
இருவினை நீங்கிட யிற்றிடுந் துயரங்கள்
வருகிற பாவங்கள் விலகிடும் பொடியென
திருவடி சரணமே மேற்றிசை நாதனே 15
நாதனை நாடினால் தஞ்சமே தருபவர்
சேர்ந்திடும் வினையற சிரம்தொட பணிவேன்
கருமமே களைந்திட பணிவார்க் கருங்கலம்
திருக்குன்றின் மாமணி தரும்பலன் மலரடியே 16
மலரடி கரம்தொட நறுங்கொண்டை வந்தேன்
அற்றிடும் வினைகளு மருகனைக் தொழுதபின்
பற்றுகள் பறந்திடும் பார்சுவனின் பார்வையால்
பற்றினேன் மலரடி பாவங்கள் நீங்கவே 17
நீங்கிடேன் சரணத்தை திருவடி பற்றினேன்
தாங்கிடேன் வினைகளை தத்துவக் கடலே
பொங்கியே யொளிரும் பொன்மணிக் குடையோய்
தீங்கறு சுவாமியே திருமலை புனிதனே 18
புனிதமே யுன்குணம் பெற்றதோ யெண்குணம்
எண்வினை களைந்திட யெரித்திட்டாய் காமனை
உரைத்ததோ யிரண்டறம் வெறுத்ததோ ஐம்பொறி
தவிர்த்ததோ பிறப்பினை தவத்தினி லமர்ந்தனையே 19
அமர்ந்தது நிழலினி லழகிய முக்குடைகீழ்
மலர்ந்தது திருமொழி மூவுல கறிந்திட
அல்லலை யறுத்து வாட்கொள்ளும் தேவனே
நல்லறம் வழங்கிய நாதனே போற்றினேனே 20
போற்றினே னுனதுபுகழ் பாரினோ ரறிந்திட
முற்றின்ப மளித்தாலும் முழுவின்ப முடையோய்
ஆறினே னஞ்சினே னறுவினை யுணர்ந்து
ஏறினே னிழிந்தகதி யென்னைனா னறிந்திலேனே 21
அறிந்திலே னாதியாய் யுலகிய லளித்ததை
அறமதை பகர்ந்ததை யருந்தவ னானதை
நவபத மெண்குணம் நயமுடன் நவின்றதை
உவமையில் லைம்பதத்தை யுலகுக்கு தந்தாயே 22
தந்ததை யுணர்ந்திட தரணியி லுயிர்களும்
நெஞ்சினில் கொண்டது நின்னெழி லடியினை
கொஞ்சிடும் வண்டுசூழ் குளிர்பிண்டி நிழலமர்ந்து
தஞ்சமாய் காத்திடும் தரணியின் நாதனே 23
நாதனே நறுங்கொண்டை யாளும் நாயகா
ஆதியாய் வுலகியல் பளித்த மூத்தனே
சத்திய மாகவே யுனையல்லா யெனக்கினி
நித்திய நெறியினில் நாயகன் வேறிலையே 24
வேறிலை மனதினி லுனதுரை நாலின்றி
வாள்வில் வேல்சக்ர மின்றியே வினைவென்றாய்
கொல்லா நோம்பை கொண்டார் நெஞ்சினில்
நல்லுறை நாதனே நறுங்கொண்டை யுருவே 25
உருவாய் மேற்றிசை யருள்வாய் நாற்திசையும்
உம்பரி லுயர்ந்தோனே யுலகாளும் பெரியோனே
ஐங்கணை சிலைமதனை ஐயமற யகற்றிட்டாய்
பொங்குபுகழ் சித்தநகர் போற்றுகின்ற நாயகனே 26
நாயகனே நற்குணா நறுங்கொண்டை நல்மணியே
பொறியொடு வினைவென்ற பூந்தேரின் மணியொலியே
புறவிதழ் மருமலரில் பொருந்திய பெருந்தேவே
உறுவினை யுடனழிய உள்ளத்தி லமர்ந்தவனே 27
அமர்ந்தாய் வெள்ளானை முக்குடை குளிர்நிழலில்
அருள்தர திருவீதி அழகுடனே பவனிவந்தாய்
முரசொடு மத்தளமும் துந்துபி யிசைசேர
மிருதங்க பாட்டிசை மிகுந்தன வுனதுலாவே 28
உலாவினி லுனதருளை பாடிய மக்களும்
வீணையும் தும்புரு மேந்திய தேவரும்
பரியுட னிருபுறம் பணிவுடன் வரிநிற்க
முடியுடை யரசரு முனதடி பணிந்தனரே 29
பணிந்தவர் மனங்களில் கரைந்தன துயரங்கள்
நிறைந்தன மனதில் நல்லற தருமங்கள்
நிறைமணி துலங்கிடும் முக்குடை நாதனின்
பொற்புடை யடியினை போற்றியே நின்றனரே 30
நின்றவர் மனங்கள் சிந்தனை செயலுற
நல்லெழில் அணங்குகள் நெஞ்சில் வந்தனர்
குலமறியா குறைசொல்லி கரங்கூப்பி பெற்றதும்
கலங்கிய மனதினால் திருவடி பற்றினரே 31
பற்றினர் பொன்னடி பாவமே பொடித்தன
பற்றறு மனதிற்கு பார்சுவனை வேண்டினர்
மறுமைக்கு தவஞ்செயா மடமையை நினைத்து
வெறுமை மனங்கொண்டு வேண்டினர் நாதனையே 32
நாதனின் கழலது நம்பினோர் கினியது
நன்னெறி தருவதும் மென்மல ரடியது
நன்மைகள் கொடுப்பதும் நிர்மலன் பெருவடி
நன்மலை வீரரின் போற்றிடும் பொன்னடியே 33
பொன்னடி பணிந்திட பலவணி திரண்டனர்
நானிலம் புகழ்ந்தது நறுங்கொண்டை நாதனை
நன்றென நாளேழும் திருவீதி கொணர்ந்திட
எண்திசை மக்களு மெடுத்தனர் விழாவையே 34
விழாவது மமைந்தது சித்திரைத் திங்களில்
திரண்டனர் நாட்டவர் நறுங்கொண்டை நகரில்
இரவிலும் பகலிலும் யிறைவனின் பெருவிழா
இருந்தனர் பச்சைமா நாதனி னருளிளே 35
அருள்வுள மனதினன் சகோதரன் கமடனும்
அருளிலா கொடியவ னழுக்குடை மனதினன்
அருளற்ற தீயவை யனைத்தையும் மனங்கொள
நிரந்தர தவத்தினால் நின்றிட்ட பெருமகனே 36
பெருமகன் பொறுமையாய் தவத்தினி லிருக்கையில்
பெரும்புயல் நிலையினில் புழுதியை சிதறினான்
சிரம்பல வுடைய செவ்விய தரணியும்
சிரம்முத லடிவரை திருவுரு மறைத்தனரே 37
மறைத்தவன் தடுத்ததால் தவமது தொடர்ந்திட
கறைமனக் கமடனும் கல்பல எறிந்தனன்
பொறையுடை தரணியும் தேவியும் தாங்கினர்
நிறைதவம் பார்சுவர் நிலையுடன் தொடர்ந்தாரே 38
தொடர்ந்திடும் வினைகளும் தகர்ந்திடு மவரால்
கடந்திடும் கருமமும் கழலினை தொடுவதால்
நறுங்கொண்டை நாயகனே நாடியுனை வருபவர்கள்
இம்மையில் துயர்களைவர் மறுமையில் பயனுறுவர் 39
பயன்களும் பெருகிடும் பற்றுக ளறுந்துவிடும்
பெற்றவினை யழிந்திடும் பத்தறங்கள் கூடிடும்
நற்றவம் மனங்கொள நாதனருள் நெஞ்சமுற
மறுமையில் பிறப்பிலா மாதவத்தில் மனங்கொளுமே 40
மனங்கொள் பக்தியால் மனத்துயர் விலகிவிடும்
முதலதும் முடிவுமிலா முதல்வனிடம் மனம்பதியும்
மூவுலகும் தொழுதிடும் முழுமுதற் கொழுந்தே
நறுங்கொண்டை நாயகனே நாடினே னுனதடியே 41
உனதடி பற்றினே னுனைவிடேன் கடைவரை
நின்முடி மலர்சூடி நித்தமும் வணங்கினேன்
என்மல மனைத்தையு மெரிபட செய்வாயே
நறுங்கொண்டை நாயகனை நாளும் பணிவோமே 42
பணிவோம் பற்றுவோம் பரமனின் திருவடியை
பார்புகழ் திசையோனை பக்தியா லிசைப்போமே
இரவினில் பவனிவரும் எழிலினை பருகிட
இருவிழி பற்றிலை யெழில்லுடை திருவுருவே 43
நிர்மலா அமலா நறுங்கொண்டை யருகா
நரகமதை தவிர்த்திடும் நெறியுரை திருவேதா
இரவொடு பகலொடு கரமது தொழுதிட
பெருவில் பூவா லர்ச்சிப்பேன் தினந்தினமே 44
தினந்தினம் தாதார் மலர்மே லமர்தனை
பொன்னின் மலரினால் பூசிப்பே னருகனை
மின்னும் முக்குடை நிழலமர் மூலவனே
மன்னிய பெருங்குண மாதவா சரணமே 45
சரணமே பண்ணவா பற்றற்ற மாதவா
நச்சரவு நிழலமர் நறுங்கொண்டை வேந்தனே
நஞ்சாய் நெஞ்சூறும் வெந்துயர் பிணியதை
பஞ்சய் போக்கிடு பற்றினே னிருவடியே 46
அடியினை தினந்தினம் மலரினால் துதியேன்
இல்லிருந்தும் நல்லறம் செய்யாது இருந்தேன்
சொல்லிருந் துனதுபுகழ் துதியிலா திரிந்தேன்
எல்லாமும் பொறுத்தெனை மனங்கொள் மாதவனே 47
எழிலனே தருமா காமனை கடிந்தோனே
விழுமிய நன்னவரின் வீங்கிய மனதமர்ந்து
கழித்தா யென்பாவம் கடைதேற வழிகாட்டி
தழுவியே அணைத்த தன்னிக ரில்லானே 48
இல்லையே என்றுமே இல்லற கருமங்கள்
தொல்லை நீங்கிட துறவற மேற்றனை
எல்லாமு மழித்து ஏற்றிடும் பெருந்தவம்
சொல்லாமல் தந்தது சுகமான முக்தியே 49
முக்தியை யெய்தினாய் இருபத்து மூன்றானாய்
கமடனும் கால்பணிய கருணையா லருளினாய்
நறுங்கொண்டை திருமலையே யுனதுரிமை நற்தலமாம்
நல்லாட்சி தருகிறாய் யுனைவந்து பணிவோர்க்கே 50
ஸ்ரீ அப்பாண்டைநாதர் அந்தாதி நிறைவு.
No comments:
Post a Comment