நீரோட்டக அந்தாதி.
நெறியுடையோர்.
பா வகை : ஆசிரியப்பா.
உட்பிரிவு : நிலைமண்டில ஆசிரியப்பா.
தொடை : செய்யுள் அந்தாதி
சிறப்பு : உதடுகள் ஒட்டா பா.
எண்வினை யழித்தோன் யெண்திசை யுடையோன்
அவனியைத் துறந்திட யறுவினை யறுத்தோன்
தண்குடை நிழலோன் தவநிலை யடைந்தோன்
அன்னவ னடியே யனைவர்க்கு நிலையே 1
நிலையா நெஞ்சினை நிறுத்திய நெறியோன்
கொல்லா நல்லற குணத்தை சொன்னவன்
எல்லா வேதங்க ளியற்றிய திருவோன்
சொல்லா நீதிகள் சூழுலகி லில்லையே 2
இல்லையே வினைக ளெழிலனை வணங்கிட
சொல்லவுஞ் சொல்லிலை சுகனின் நல்லருளினை
தளிர்தழை யசோகின் நன்நிழ லுடையவன்
தரைதொடா வடிகளை யுடையதோர் திருவே 3
திருவுடை செல்வ னருளுடை யறவோன்
அரசனா யிருந்தவ னனைத்தையுந் துறந்தவன்
திருவறத் துறவனாய் தத்துவ வரசனாய்
நின்ற னோர்நிலை யெய்தான் வீடினையே 4
வீடினை யடைய நல்லற வழிகளை
நாடியே யடைவது வுயர்வினை செயலினால்
தேடியே யலைவது திருந்திடா நெஞ்சது
கூடிடா வாசையால் குழுவுங் குற்றங்கள் 5
குற்றங்கள் நீங்கிட குணங்களு நிறைந்திட
நற்செய லனைத்தை நாடிட நல்நெஞ்சு
அறத்தினை வளர்த்திட அருந்தவங் கொண்டிட
நற்றவ திருவுரே நாடினே னுனதடியே 6
உன்னடி தொழுதிட யுயர்நிலை யடைந்தேன்
ஊணினைக் குறைத்தேன் தேனினைத் தவிர்த்தேன்
கள்ளினை துறந்தேன் கன்னியை வெறுத்தேன்
நிறைசெல்வங் கொண்டிலேன் நிறைனெறி யடைவனே 7
அடைவது சரணத்தை யறிவது நெறியினால்
உடைய நல்வாழ்க்கை யுடன்வரா நின்றிட
தொல்வினை தொடர்ந்திட அருவழி நடந்திட
நினைவினில் நெறிவர நீங்கு நல்லுயிரே 8
நல்லுயி ரனைத்து வீட்டினை யடைந்திட
நல்லறச் செயல்களில் நயந்தவை சென்றிட
தொல்லிய நெறிகளை கரங்கொள காத்திட
வல்லிய கதியி னுயர்வினை யடையவே 9
அடைந்திடு யிலக்கை யகந்தையை யழித்து
துடைத்திடு வழுக்கை துயரதை நீக்கியே
கிடைத்திடுந் தவநெறி கிட்டிடுந் தனிவழி
தடையுறு தீயவை தணலுற வழியுதே 10
அழியுதே எண்வினை யடையுதே நல்வினை
தழையுதே அருள்வினை தருவதோ வீடினை
நிழலென தொடர்ந்திட நாயக னருளது
குழையுதே நெஞ்சது கொள்ளுதே அடியையே 11
அடியதை சிரங்கொள அலைகிறே னவனியில்
கொடியென தவிக்கிறேன் தடியென தாங்குவாய்
நடிக்கு நல்லுலகில் நன்நெறி தேடிய
நொடிநொடி திரிவதை நியதியா ஏற்றேனே 12
ஏற்றே னருகனின் திருவொலி நெஞ்சினில்
சாற்றினே னவனடி நனைகளை கரங்கொண்டு
வற்றிடா னவநெறி வாழ்ந்திடு வுலகினில்
காற்றென வீசியே கனிவினை தருவதே 13
( நனை : மலர் )
தருவது நிலையா வாழ்க்கையி னிலையினை
தேடிய செல்வங்கள் நாடியே களைந்திட
நிலையா யாக்கையு நொடியினி லழிந்திட
நிலையா தத்துவ நெறியது கொள்கையே 14
கொள்கையே வுலகுக்கு வருகனின் நெறியே
நல்லிய அறங்களே நிறையுடை அறங்கள்
துல்லிய அறங்கள் சாத்திர நிறைகள்
எல்லா உயிர்கட்கு சுகத்தினை தருவதே 15
தருவது கிடைத்திட நிறுத்திடு விதியதே
தருவதை நிறுத்திட தயங்கிடா விதியிதே
திருவினை வருவது வருகனை தொழுதிட
இருளது நீங்கிட இறையொளி தோன்றுதே 16
தோன்றிடு ஞானத்தை துணையென் றேற்று
நன்றென வாழ்தல் நாதனின் நெறியே
தன்னிலை யுணர்ந்து தானொன் றறியா
நன்நெஞ் சுடையோர் நிறையுடை நெறியரே 17
நெறியவ ரனைவரு நிறையறி யுடையவர்
நிறுத்தியே தடுத்தவ ரவ்வகை யரக்கரை
அறுவினை யழித்து நெடுவழி வீட்டினை
குற்றங்கள் நீக்கியே குடியேற நின்றவரே 18
நின்றவ ரனைவரு நற்சுத னடியவர்
அன்னவ நன்னெறி அகத்தினி லேற்றவர்
தன்னிலை யழித்திட தவத்தினை யேற்றவர்
விண்ணுல கேகிட விரதங்க ளுடையரே 19
உடையவ ரருகனி னுருவதை நெஞ்சினில்
தடையற யேற்றிட்ட தகையுடை யறிவரே
உடைந்திடு வல்வினை நலிந்திடு கதிவினை
அடைந்திடு யெண்குணங் களைத்திடு யெண்வினை 20
எண்வினை யகன்றிட இறைநிலை யடைந்திட
நன்னெறி கரங்கொள நல்வினை சிரங்கொள
தன்வினை விலகிட திருவறஞ் சூழ்ந்திட
விண்ணகஞ் செல்லுதே வினையொழி யுயிரது 21
உயிரது நுகர்ந்திடு நல்வினை தீவினை
உயரிய உயிர்நிலை கொண்டிடுங் குடிலது
கதிகளி லுழல்வது வுயிரென அறிந்திடு
துதியுடை யருகனை கரங்கொண்டு தொழுதிடு 22
தொழுதிடுங் கரங்களா லறங்களை செய்திடு
வழங்கு நல்லறங்கள் தொடர்ந்திடுந் துணையென
நிழலென குடையடி நின்றிடு நாயகனின்
தழைக்கு நல்லறங்கள் தந்திடு வீட்டினை 23
வீட்டினை யடைந்திட விழைந்த நல்லுயிர்கள்
காட்டிடு வழிகளால் நீங்கிடுந் தீவினைகள்
தொடர்ந்திடு வினைகளை விரட்டிடு வழியினை
நாடியே சென்றிட நலங்கள் வளருதே 24
வளருதே உயர்வினை வற்றிடுந் தீவினை
தளர்ந்திடா நெறியினால் தொடர்ந்திடா கடுவினை
களைந்திடுந் துயரங்கள் நிறைந்திடு நெஞ்சங்கள்
நிலையிலா வாழ்க்கையில் நிலைத்திடு அறங்களே 25
நீரோட்டக அந்தாதி நிறைவு.
No comments:
Post a Comment