ஸ்ரீ வர்த்தமானர் மும்மணிக் கோவை .
செய்யுள் : ஆசிரியப்பா, வெண்பா, கட்டளைக்கலித்துறை.
தொடை : அந்தாதி மண்டிலம்.
வான்தொட வளர்ந்து நின்றிடு மரங்கள்
வான்மழை கொடையது செழிப்பில் விண்தொட
புண்டரீ கிணிநகர் பரந்தொரு பெருவனம்
மதுகவனப் பெயரினில் மலர்ந்திடும் பெருங்காடு 1
காட்டினில் வாழுங் குறவன் புரூரான்
வாழ்துணை காளிகை சேர்ந்து திரிய
மதுத்தே னூனினை யுள்ளத்தில் நீக்கிட
வானி லுயர்ந்தான் சிறந்து. 2
சிறந்திடு முள்ளமும் செவ்விய நல்சுகம் தீர்ந்திடவும்
பிறந்திட வாழ்ந்து முடிந்தது காலம் மறுமையினில்
அறம்நிறை மன்னன் பெரும்புக ழண்ணன் பரதனவன்
சிறப்பின் குடியில் மகனா யுதித்த மரீசியாரே 3
மரீசியாய் பிறந்தா னாதியின் பேரனாய்
ஆதியின் துறவினில் மரீசியும் தொடர்ந்திட
ஆணி வேரில்லா அருந்துற வுமாட்டமுற
பொய்யறங் கரங்கொள துஞ்சியே தேவனானான் 4
தேவன் மரீசியுந் தோய்ந்தான் பல்பிறவி
தேவநர கர்மனித ரென்று விலங்கானான்
சிங்கமாய் நல்லறங் கேட்டிட தேவனாகி
மாவீரன் தோன்றினா னாங்கு 5
ஆங்கவன் தோன்றினான் மன்னவன் பிள்ளை யவனியிலே
மங்கையுங் கண்டாள் பதினென் கனவுகள் சிந்தையிலே
செங்கதிர் தோன்ற விழிகள் மலர எழுந்தனளே
மங்கா மகிழ்வினில் குன்றா நிகழ்வை விளம்பினளே 6
விளம்பிய கனவுக்கு விடையினை வேண்டிட
வேந்தனும் பகர்ந்தான் தெள்ளியா பதிலினில்
அன்னையு மகிழிந்தா ளகமது குளிர்ந்திட
சன்மதி வளர்ந்திட செய்தனர் பணிவிடை 7
பணிவினில் நங்கையர் பன்னீர் கலந்தவர்
தேவி யழைத்து மணநீர் குளிப்பாட்டி
பொங்கலன் பூட்டியே பூவினை சூட்டியே
நல்லூண் னளித்தார் நவின்று 8
நவின்றனர் நல்மொழி தேற்றினர் மென்னுடல் தேவியர்க்கு
புவியினை ஆய்ந்திடும் பூரணன் வித்தினை கொண்டதற்கு
மதியுடை மங்கையர் மன்னனை வேண்டின ரோய்வினுக்கு
புவியாளு மன்னனு மென்மஞ்சம் தந்தான் துயில்வதற்கு 9
துயிலுட னெழுதலும் கழிந்தன தினங்களும்
ஒன்பான் திங்களு மணிமழை பெய்திட
சித்திரை திங்க ளுத்திரம் பதிமூன்றில்
பெற்றாள் காருணி பிள்ளையை நிலத்தினில் 10
நிலத்தினி லாடினர் நன்னகர் மக்களும்
விண்ணவர் வந்தனர் நன்னீ ரினிலாட்டி
வானோ ரழைத்தனர் வர்த்தமான ரென்று
குமரனாய் நின்றா ருயர்ந்து 11
உயர்ந்தோ ரிருவர் சயந்தர் விசய ரருமுனிவர்
கண்டனர் வர்தரை விண்டது வையம் மனதினிலே
நன்முனி சூடினர் நற்பெயர் சன்மதி தேவனுக்கு
மென்னடி வாழ்த்தியே வான்வழி நீங்கினர் தன்வழியே 12
தன்வழி யாடிட அடர்வனம் நடுவினில்
அடிமர முதலாய் நுனிவரை சுருண்டிட
அரவம் சீறிட அரண்டன ரனைவரும்
சிரசில் லாடினார் நடனம் மாவீரர் 13
மாவீரர் பெற்றார் மதிசுருத ஞானம்
இயல்பினில் பெற்றாரே கல்வியும் கேள்வியும்
ஒப்பில் லொழுக்கம் மோடியது முப்பதாண்டு
முற்பவம் நெஞ்சில் மலர்ந்து 14
மலர்ந்தது நெஞ்சில் துறவின் நினைவு தொடர்ந்துவர
அலர்ந்தது வாழ்வின் நிலையாமை தத்துவம் நெஞ்சினிலே
துளிராய் வளர்ந்தது பன்னிறு சிந்தனை யுள்ளமதில்
தளிராய் தழைத்தது நல்லற எண்ணமும் நித்தமுமே 15
நித்தமும் நினைவுகள் மனதினில் நிறைந்ததும்
லௌகாந்தி தேவரும் துறவினை பகர்ந்திட
அமரர் கூட்டமே யவனிக்கு விரைந்திட
கூடினர் குண்டல்பூர் பொருளுடன் துறவுக்கு 16
துறவுக்கு சன்மதி பெற்றோ ருடன்பட
பல்லக்கி லேறினார் பற்றினை விட்டிட
சண்டக அடர்வனம் சென்றது பல்லக்கு
நின்றது பாறையி லன்று 17
அன்றுதான் மார்கழி யுத்திரம் பத்தது தேய்பிறையாம்
பொன்கலன் நீக்கி சிகையினை போக்கியே வர்த்தமானர்
நன்னிய தோற்றத்தில் நற்தவம் நின்ற திருமுனியாய்
தன்னிலை வென்றிட பேறினை பெற்றிட நின்றனரே 18
நின்றவர் தவத்தி லூன்றிய முனிவரர்
உணவை யேற்றிட சரியை சென்றவர்
கூலனி னகத்தினி லுணவினை உண்டார்
ஐவகை யதிசயம் பொழிந்தது வாங்கே 19
ஆங்கே தவமது வாழமாய் நிலைக்க
சுடுகாடு வொன்றிலே நள்ளிரவு நின்றிட
பரமசிவ னென்பா னுறிதியை கண்டான்
அதிமகா வீர ருயர்ந்து 20
உயர்ந்தார் தவத்தி லொருதினம் கௌசாம்பி வீதியினில்
பெயர்ந்தா ருணவுக்கு பெண்ணவள் சந்தனை நெஞ்சினிலே
நயந்தே வுணவிட வெந்தது துன்பமும் முற்றிலுமே
பயத்தது நல்வினை நங்கைக்கு பாரோர் மகிழ்ந்திடவே 21
மகிழ்ந்தது வுலகம் சன்மதி தவத்தில்
பன்னிரு வருடமும் பரந்தது தவத்தில்
கரும்பிகை யடைந்ததும் நதிக்கரை சோலையில்
மராமர மடியில் பாறையி லமர்ந்தார் 22
அமர்ந்தார் தவத்தி லகன்றன காதிவினை
வைகாசி திங்கள் வளர்பிறை யுத்திரத்தில்
கிட்டியது வாலறிவு எட்டியது வானுலகு
தேவரும் வந்தார் மகிழ்ந்து 23
மகிழ்ந்தவர் கூடி அறமுரை மண்டபம் கட்டினரே
புகழ்ந்தனர் நல்ல முறைப்படி மண்டபம் செய்ததையே
மிகுவெழில் வீர ரொளியினைக் கண்டு அனைவருமே
திகைத்தனர் தோன்றா திருமொழி இன்றி பதைத்தனரே 24
பதைத்தா னிந்திரன் னறிந்தா ஞானத்தில்
விரைந்தா னிந்திர பூதியைக் கண்டிட
பூதியின் கர்வம் பொங்கிய தவனிடம்
இந்திர னுரைத்ததை விளங்கிட தொடர்ந்தான் 25
தொடர்ந்தவன் நின்றான் முதல்மதி லேழில்
முகில்தவழ் மானஸ்தம் பத்தா லவனது
கர்வமும் நீங்கிட கண்களின் நீரால்
திருமுனி காணப் பணிந்து 26
பணிந்தவன் நோக்கிட புங்கவன் பார்வை யொளியினையே
தொனியது தோன்றி கவிழ்ந்தது யீரொன்ப தெண்திசையில்
கனியென வான்மா வனைத்து முணர்ந்தது நன்னெறியை
வெண்கல வோசையாய் திருமொழி பொங்க மகிழ்ந்தனரே 27
மகிழ்ந்தன கணதர ருரையினைக் செவியுற
அந்தண புனிதன் கௌதமர் பெயர்பெற
அறுபத்து மூவரின் சரிதையை பகர்ந்திட
அறவனா மதிவீர ரருளினைப் பெற்றனர் 28
பெற்றனர் நல்நெறி மூபத்து வாண்டுகள்
நல்நெறி விட்டு மனோகர மேகினார்
காடது பாவா புரியி லமைந்திட
தாமரைசூழ் பாறை யமர்ந்து 29
அமர்ந்தா ரிருதினம் சுக்கி லதியானம் நீண்டிடவும்
அமைதி தவமது தீவினை யெல்லாம் மழித்திடவும்
தமிழது கார்த்திகை தேய்பிறை நல்ளிர வின்கடையில்
தமதுயிர் மேலிட முக்தி நிலையினில் வான்தொடுதே 30
மும்மணிக் கோவை நிறைவு.
No comments:
Post a Comment