ஸ்ரீ ஆதிநாதர் நூற்றந்தாதி
பா வகை : ஆசிரியப்பா.
உட்பிரிவு : நிலைமண்டில ஆசிரியப்பா.
தொடை : சீரந்தாதி மண்டிலம்.
கடவுள் வாழ்த்து.
என்வினை யறுந்திட யென்கதி நொறுங்கிட
மென்மலர் நடந்திடும் மென்னடி யருகனை
நன்மலர் பலவுடன் நின்னடி பணிந்திடும்
என்னையு மருளுவாய் யெண்திசை யெழிலனே
எழிலொடு வனப்புடன் எழுச்சியில் திகழ்ந்திடும்
திகழ்மிகு நகரமே யொளிர்ந்திடும் திங்களாய்
திங்களும் நாணியே தலைகவிழ் சிகரம்
சிகரத்தி லுயர்ந்தது வயோத்தி நகரமே 1
நகரினி லமைந்தது நிலாதவழ் மாளிகை
மாளிகை யுடையவன் மன்னன் நாபியே
நாபியின் நங்கையே நலமிகு மருதேவி
மருதேவி மகனாய் மலர்ந்த தோர்மகவே 2
மகவது யிருந்தது வகமிந்தி ரதேவனாய்
தேவனி னாயுளும் தீர்ந்தது சுகத்தினில்
சுகமது முடிந்திட மருதேவி வயிற்றினில்
வயிருடை கருவாய் வந்தது வமர்ந்ததே 3
அமர்ந்திடு தினமதி லரையிருள் வைகலில்
வைகலின் கனவாய் வாய்த்தது ஈரெட்டு
ஈரெட்டு கனவினை கணவனுக் குரைக்க
உரைத்தவக் கனவினை நீங்களு மறியுமே 4
அறிந்தனள் கனவினில் களிறது நடப்பதை
நடந்ததன் பின்னே வெள்ளெரு தோடிட
ஓடிய தருகினி லொருசிங்க முலவிட
உலவிய சமயமே இலக்குமி நின்றனளே 5
நின்றவள் நிலையினி லிரண்டிணை மாலைகள்
மாலையை தொடர்ந்து இருகுடம் இருகயல்
இருகயல் தவழ்ந்திட பொய்கையும் வானமும்
வானமும் முத்திடும் வையம்சூழ் ழாழியை 6
ஆழியின் கரையினில் லரியாச னத்துடன்
உடனிரு பொன்னாச னத்துடன் விமானம்
விமானமும் வியக்கு மோர்நாக விமானம்
விமானத்தி னருகில் நவரத்ன குவியலே 7
குவியலி னொளியில் கனலது கனவாய்
கனவினை தேவியும் கணவனுக் குரைக்திட
உரைத்ததைக் கேட்டு மன்னனும் நவின்றிட
நவின்றதை யறிவீர் நாயகன் பிறப்பையே 8
பிறப்பான் பொன்மகன் பெறுவான் புகழினை
புகழொடு தரணியில் போற்றிட வளர்வான்
வளர்ந்திடு மாட்சியும் வானவர் போற்றிட
போற்றியே மகிழ்ந்தனர் பூவுலக மாந்தரே 9
மாந்தர்கள் மகிழ்ந்தி ருந்தனர் போகத்தில்
போகபூமி தந்தத தனைத்தையு மவர்கட்கு
அவகர்களும் பெற்று கிடைத்ததை சுகித்து
சுகித்திட கழித்தனர் சுகமுறு வாழ்வினை 10
வாழ்ந்தனர் சிறப்பில் போகபூமி மக்களாய்
மக்களின் துயரமும் துளிர்த்தது மாற்றத்தால்
மாற்றத்தில் போகபூமி வற்றவும் துவங்கிட
துவங்கியது கர்மபூமி தந்தது துயரதை 11
துயரினை துடைத்திட துவங்குவா னுன்மகன்
மகனது செயல்களும் மகிழ்ச்சியை யீந்திடும்
ஈந்ததை மக்களு மிசைபட யேற்றனர்
ஏற்பரே அவனையே அனைத்தையும் தருவராய் 12
தருவதும் நலம்பெற மனமது பண்பட
பண்புடை கல்வியை பலருக்கும் தருவான்
தருவது யிருவறம் தானதை காத்திட
காத்திடுந் திறனால் காசினியோ ருயர்வரே 13
உயர்மகன் பிறப்பினை உணர்ந்தனள் மனதினில்
மனமது நெகிழ்ந்தனள் நிறையுடை மகிழ்வினில்
மகிழ்ச்சியில் மலர்ந்தது மன்னனின் நகரமும்
நகரமே யொளிர்ந்தது விண்ணவ ருலகெனவே 14
உலகினர் பரப்பினர் வெண்மணல் பாய்யென
பாய்யதை விரித்ததால் தெளித்தனர் கோலத்தை
கோலத்தின் வண்ணங்கள் மின்னின விழிகளில்
விழிகளும் களைத்தன மண்நக ரழகிலே 15
அழகினை மெருகிட அலையென தோரணம்
தோரணந் தொங்கிடும் தெங்கது குலையுடன்
குலையுடன் கரும்பும் வாழையு மிணைந்திட
இணைந்தது சொர்கமும் நன்நகர் மண்ணிலே 16
மண்ணிலோர் நகரென யெழிலினை யருந்திட
அருந்திடு விழியுட னமரரும் வந்தனர்
வந்தவர் கண்களும் வியப்பினில் சுழன்றன
சுழன்றிடும் நிலையால் சூழ்ந்தவர் மயங்கினரே 17
மயக்கத்தில் மண்ணவர் விண்ணவ ராயினர்
ஆனவர் துள்ளின ரன்னையின் கருவினால்
கருவது வளர்ந்திட கீழ்த்திசைப் பாலகன்
பாலக னனுப்பினான் பாவைகள் பலரையே 18
பலருமே வந்தனர் பணிந்தன ரரசியை
அரசிக்கு செப்பின ரவர்செய்யும் பணியினை
பணியது தொடக்கமே மணநீ ராட்டலில்
ஆட்டலும் முடிந்திட அகில்புகைக் காட்டினர் 19
காட்டினர் மங்கையர் கட்டினர் பட்டுடை
பட்டினை யணிந்து பொன்னகை பூண்டனள்
பூண்டவள் கண்களில் ஒப்பனைத் தீட்டினர்
தீட்டிய புருவங்கள் வில்லென வளைந்ததே 20
வளைந்த புருவங்கள் வீசின அன்பினை
அன்பினி லமிழ்ந்தன னயோத்தி மன்னனும்
மன்னனும் மொழிந்தன னரசியின் களைப்பினை
களைப்பினை போக்கிட கனிகளை யூட்டினர் 21
ஊட்டிய பின்னர் உண்டனள் திரையில்
திரையில் மென்றவள் தலையணை சாய்ந்தனள்
சாய்ந்தவள் விழிகள் மூடின களைப்பினில்
களைப்பைப் போக்கிட கால்களை பிடித்தனரே 22
பிடித்தவர் மொழிந்தனர் பெருந்தேவி பெருமையை
பெருமையில் பூத்தவள் குறிஞ்சியின் மலரென
மலரினில் சிறந்த மல்லிகை யிவளென
இவளது சிறப்பே திங்களாம் மார்கழி 23
மார்கழி யொன்றுமே மாதத்தில் சிறப்பது
சிறப்பினி லவளொரு சித்திர வழகியாம்
அழகினி லுயர்ந்தது மலரது மல்லிகை
மல்லிகை மணமது மணத்திடும் மங்கையாய் 24
மங்கையை புகழ்வர் மாங்கனி இவளென
இவளொரு தாரகை மதியென வொளிர்வதில்
ஒளிர்வதில் திகழ்வதில் மருதேவி தலையவள்
தலையவ ளயோத்தியின் விண்தவழ் திங்களே 25
திங்களு முடையது கறையென அறிவர்
அறிந்தவர் பகர்ந்தன ரவள்கறை யிலையென
இல்லையென மறுத்திடா கற்பக மரமவள்
மரம்தரும் நிழலென தருபவள் ஆதியையே 26
ஆதியின் பிறப்பு சித்திரை திங்களில்
திங்களி லமைந்தது தேய்பிறை நவமியில்
நவமியின் திதியினில் விண்மீ னுத்திராடம்
உத்திராட வைகலி லுதித்தா ராதியுமே 27
ஆதியவர் பிறக்கையி லண்டமே யொளிர்ந்திட
ஒளிர்ந்திடு மதிகண்டு ஓங்கியது கடலலைகள்
கடலலை யொலியில் கற்பகம் மலர்சொரிய
மலர்சொரி நாழியில் துந்துபி யொலியோசை 28
ஒலியோசை வான்நுழைய வான்மண் னிருவுலகும்
இருவுலகோர் மகிழ்விலே இருந்தனர் மாளிகைமுன்
மாளிகைமு னெழுந்தது ஓங்காரத் தனியோசை
தனியோசை யொலிக்கையில் தரணிவந் தாராதி 29
ஆதியவர் தரணிவர அழைத்திட்டா னமரேசன்
அமரேசன் குரலுக்க மரர்கள் திரண்டனரே
திரண்டிட்ட தேவர்கள் தேவமகன் பிறந்ததற்கு
பிறப்பினை தரிசிக்க போந்தனர் அயோதிக்கே 30
அயோத்தி யரண்மனையி லடிவைத்தாள் சசிதேவி
சசிதேவி பாலகனைக் கைக்கொண்டாள் நீராட்ட
நீராட்ட தந்திட்டா ரிந்திரனின் கரங்களிலே
கரங்கொண்ட யிந்திர னடிவைத்தான் மேருவிலே 31
மேருவில் நீராட்ட தேவர்களும் சூழ்ந்திருக்க
சூழ்ந்தபெரு மாசனத்தில் பாலகனை யிருத்தி
இருத்திய இடத்தினிலே யெல்லோரும் நீராட்டி
நீராட்டி பாலகனை கொணர்ந்தன ரயோத்திக்கு 32
அயோத்தி வந்தவர்க ளரசமக னாதியை
ஆதியை யணைத்து நீராடல் செய்விக்க
செய்விக்க நீர்கொணர ஐங்கலசம் யானையேற்றி
ஏற்றிய யானையில் பாற்கடல்நீர் கொணர்ந்தனரே 33
கொணர்ந்திட்ட நன்னீரால் பாலகனை நீராட்டி
நீராட்டி முடிந்ததும் நிறைமனதால் வாழ்த்தினரே
வாழ்த்திய தேவர்கள் வாய்நிறைய ஆதியென
ஆதியென பெயரிட்டு அவர்சென்றார் வானுலகே 34
வானுலகோர் சென்றபின் மண்ணுலகோர் கூடி
கூடி கூத்தாடி குதுகலித்தா ரவர்பிறப்பை
பிறந்ததும் வளர்ந்ததும் பல்லரு கலைபயின்றும்
பயின்ற கலையோடு பருவவய தடைந்தாரே 35
அடைந்தார் நல்பருவ மாசையுடன் பெற்றவர்கள்
பெற்றவ ரவருக்கு மணம்செய முடிவெடுத்தார்
எடுத்த வம்முடிவை எழில்மக னுக்குரைக்க
உரைக்கு மதிப்பளித்து உறுதியினை தந்தாரே 36
தந்தன ரிருநெறியை கர்மநில மக்களுக்கு
மக்களு மதைக்கற்றா ரில்லறமும் பணிவினையும்
பணிவுட னவர்சொல்ல பார்வேந்தன் நாபிராசன்
நாபிராசன் சந்தித்தார் மகாகச்சன் கச்சனையே 37
கச்சனுக்கு யசஸ்வதியும் சுனந்தையும் சகோதரிகள்
சகோதரிக ளிருவரையும் மணமுடித்தா ராதிக்கு
ஆதியின் இல்லறமும் இனிமையுடன் கழிந்திடவும்
கழிந்தவோர் வைகறையில் கனவாழ்ந்தாள் யசஸ்வதி 38
யசஸ்வதி கனவுபல னாதியும் சொல்லுரைக்க
உரைத்த கனவினி லுருகண்டாள் மேருமலை
மேருமலை பலத்துடன் பரிதியி னொளியாவான்
ஒளியொடு பொருளொடு வுயர்ந்த மன்னனாவான் 39
மன்னனாகப் போகிறவன் மகனாகப் பிறப்பான்
பிறக்கையில் கரமதுவும் தரைதழுவி பிறந்தனனே
பிறந்தவன் பார்தழுவ பெற்றோரும் பரதனென
பரதனும் பிறக்கையில் பஞ்சாச்ச ரியம்நடக்க 40
நடந்தது எசஸ்வதிக்கு நூற்றிலொன்றி லாபிள்ளை
பிள்ளையொடு பிறந்தது பெண்மகவு பிராமியும்
பிராமியின் சிற்றன்னை சுனந்தையும் பெற்றாள்
பெற்றது பாகுபலி பெண்மகவு சுந்தரியாம் 41
சுந்தரிக்கு யெண்களையும் பிராமிக்கு யெழுத்தையும்
எழுத்தோடு கல்வியினை இயம்பிட்டா ராதிநாதர்
ஆதிநாதர் கல்வியின் அவசியம் தெரிவிக்க
தெரிவிப்பை மக்களேற்று மனைவரும் கற்றனரே 42
கற்றுதந்த ஆதிக்கு கிட்டியது ஒருசிக்கல்
சிக்கலது ஆதிக்கு போககர்ம பூமிமாற்றம்
மாற்றமது ஒன்றிலே மனம்நினைக்க கிட்டிவிடும்
கிட்டிவிடும் மற்றதில் கடுமுழைப்பு செய்வதாலே 43
செய்வது அறியாமல் கர்மநிலத் தார்திகைக்க
திகைப்பவர் துயர்நீக்க சிந்தித்தா ராதிநாதர்
ஆதிநாதர் மனம்போல நகரொடு நாடமைத்து
அமைத்த இடந்தோறு மருகனின் கோயிலொடு 44
கோயிலும் நாடுகளும் குறும்பெரு கிராமங்கள்
கிராமமொடு சாலைகள் கடல்வழி பாதைகளும்
பாதைகளில் வாணிபமும் பாங்குடன் செய்தான்
செய்ததனால் இந்திரனை புரந்தர னெனவழைத்தார் 45
அழைத்தார் ராதியு மனைத்து மக்களையும்
மக்களுக்கு கற்பித்தார் வாழ்வுக்கா றுதொழிலை
தொழிலோடு றவுகளை ஊரோர்க்கு கற்றுதர
கற்றுதந்த ஆதிநாதர் ஆதிபிரம் மாவானார் 46
ஆதிபிரம் மரருளாட்சி இளவரசு வாதியினை
ஆதிக்கு முடிசூடி அரசனாக்க நினைத்தநாபி
நாபியின் மனமறிந்த அமரகோன் இந்திரனும்
இந்திர சிமாசனத்தை யேற்பாடு செய்தாரே 47
செய்வித்த வேளையிலே சசிதேவி தரைமெழுக
மெழுகிய யிடத்தினிலே வான்மகளீர் கோலமிட
கோலமும் அழகுற கொடிமலர்தோ ரணமாலை
மாலைகளை கட்டினர் மண்ணவராய் விண்ணவரே 48
விண்ணர்கோன் கிழக்கினி லாதியை அமர்விக்க
அமர்ந்த ஆதியை அனைத்துநதி நீர்கொண்டு
கொண்டுவந்த புனிதநீரால் நீராடல் செய்விக்க
செய்வதை விழிகுளிர மனமது மகிழ்ந்தனரே 49
மகிழ்வினி லரசாள மன்னகுல மைந்தமைத்தார்
அமைத்த இட்சவாகி னரசனாய் தானானார்
ஆனவராண் டிட்டார ருளாட்சிபல் லாயிரம்
ஆயிரத்தி னாட்சியிலே மகிழ்ந்ததந்த அயோத்தியே 50
அயோத்தி மக்களா னந்தத்தி லமரராக
அமரலோகத் திலமைந்த தோர்சல சலப்பு
சலசலப்பில் பேசியது யாதியவர் துறவுதனை
துறவுகாலம் வந்தபின் தொடர்கிற ஆட்சியினால் 51
ஆட்சியின் போகத்தில் ஆழ்ந்திடு மமரர்கள்
அமரர்கள் பேசுவது யோகத்தில் நிற்பவரை
நிற்பவரோ ஆதிநாதர் நீலாஞ்ச னைமாதாள்
மாதவ ளுணர்த்துவாள் மாபெரும் துறவினையே 52
துறவினை உணர்த்திட தொடங்கின ரமரர்கள்
அமரனாக ஆட்சியை அளித்தாரே ஆதிநாதர்
ஆதியின் சபையிநி லாடினாள்நீ லாஞ்சனை
நீலாஞ்ச னைநடனம் நித்திலதில் சரித்திரமே 53
சரித்திரம் நிறைந்தது மயிலது நடனத்தால்
நடனமே திருப்பமாம் நாதனாதி வாழ்க்கையில்
வாழ்வதில் வெறுப்புற வரவேற்றார் துறவினை
துறவினி லொளியாக துணையானாள் நீலாவும் 54
நீலாவின் வாழ்க்கையை நடனமே முடித்தது
முடிந்ததே துவக்கமா யமைந்தது ரிஷபருக்கு
ஆதியின் சரித்திரத்தி லவள்லொரு திருப்புமுனை
திருப்புமுனை தந்தது திகம்பரத் தலைவனை 55
தலைவனே ரிஷபராம் சமணத்தின் தலைநாதன்
தலைநாதன் தந்தது தரணிக்கு வேதமது
வேதத்தை தொடங்கி வித்தகரா யொளிர்ந்தார்
ஒளியிழந்த அவனிக்கு ஒளிதந்து முடித்தார் 56
முடிந்திடும் வாழ்வென அறிந்திடா நிலையில்
நிலையிலா உறவையு மனிதர்கள் விரும்பவும்
விரும்பியே துறவினை யோகியும் நாடிடனரே
நாடிட விழைதலும் மானிட ரியல்பாகும் 57
இயல்பில் மாந்தர்க்கு நிலையிலா பற்றுகள்
பற்றுகள் நிலையிலை பண்புடை ஞானிக்கு
ஞானியும் மனிதனும் அவரவர் விழைதலின்
விழைதலி லோடுதல் பிறவியின் வினைகளே 58
வினைகளோ அழுதிட விதியது சிரித்திட
சிரிப்பதை அழுவதை தேற்றுவார் யாருளர்
யாருடை மறுப்பிலும் மாறிடா நிலையினில்
நிலையிலா வுடலையு உயிர்விட்டு போகுமே 59
போய்விடு மிமைக்கையில் கருமத்தி னுயிருமே
ஆன்மனின் நிலையது யடைமழை குமிழாமே
குமிழது நிலையது மனிதரின் வாழ்க்கையும்
வாழ்வது நிலையறியா வாழ்வினில் திளைப்பதே 60
திளைத்திடும் கருமமே தொற்றென பரவிட
பரவிடும் வினைகள் பாவமும் தொடர்ந்திடும்
தொடர்வதோ புலன்வழி சேர்வதோ வுயிரினில்
ஆன்மனின் நலத்திற்கு வருந்தவ மேற்போமே 61
ஏற்றிடும் தவத்தினால் பறந்திடும் பிறவிகள்
பிறவிக ளகன்றிட பெரும்பயன் கிடைத்திடும்
கிடைத்திடும் பேறினை காத்திடும் செய்கைகள்
செய்திடும் நல்வினை யறுத்திடும் வினைகளை 62
வினைகளின் விதிப்படி நடனத்தி லிறந்தாள்
இறந்தது முயிரது நிலையிலை யுணர்ந்தார்
உணர்ந்திட ஆதியின் மனமதில் மாற்றமும்
மாற்றமே மாற்றிட மனமுற்றார் துறவுக்கு 63
துறவுக்கு முன்னே தோன்றிய நினைவுகள்
நினைவுகள் திரண்டதால் ஈராறு சிந்தனை
சிந்தனை யனைத்துமே உயிரது நலம்பெற
நலமதை கரங்கொள துணிந்தாரே துறவுக்கு 64
துறவது என்பதே பொருளினைப் பிரிவது
பிரிந்திடும் பொருளது தருவதோ இழப்பது
இழப்பது வருவதால் இழப்பது இன்பங்கள்
இன்பங்கள் துறந்திடும் துவக்கமே துறவறதே 65
துறவது வாதிக்கு தோன்றிட அமரர்கள்
அமரரு மயோத்தி நகரினை யடைந்தனர்
அடைந்தவர் பகர்ந்தனர் நகரது நிலைமையை
நிலைமையை மாற்றிட வேண்டின ரறத்தினை 66
அறத்தினை நவின்றிட அடிப்படை துறவென
துறவினை யுரைத்தரே துணைவிக ளிருவர்க்கும்
இருவரும் வருந்தின ரிறுதியில் மகிழ்ந்தனர்
பற்றறு மாதியின் பற்றிலா உரையினால் 67
உரைத்தா ராதியுந் துறவினை உலகோர்க்கு
உலகோ றேற்றனர் பரதனை யரசனாய்
அரசனி னிளவளா ஆண்மையான் பாகுபலி
பகுபலி இளவரசாய் பட்டத்தை சூட்டினரே 68
சூட்டிய முடியினால் துயருற இருவரும்
இருவரின் மனமுமே திளைத்தது துயரினில்
துயரினில் துவள்தலு மின்பத்தில் மகிழ்தலும்
மகிழ்தலும் துவள்தலு மில்லாமை சமநிலையே 69
சமநிலை உயிரது பயணத்து நெறியாகும்
நெறியினை பகர்ந்தார் நிலந்துறந்த ஆதிநாதர்
ஆதியு மரசரில்லை அவனியின் துறவரசர்
துறவரசை முதலிலே துவக்கியது மாவாதியே 70
ஆதியின் துறவுக்கு அயோத்திக்க மரர்கள்
அமரரும் சுதர்சனம் விமானமும் வந்ததுவே
வந்தவரு டனிருந்த சௌதர்மன் கரம்நீட்ட
நீட்டிய கரம்பற்றி நெறியரச ரேறினாரே 71
ஏறியது மரசர்க ளேழெட்டு தோள்கொடுக்க
கொடுத்தது மேழடி சுதர்சன முயர்ந்து நிற்க
நின்றிட்ட விஞ்சையரு மேழடி மேல்தூக்க
தூக்கின ரமரர்களு மேழடி மேன்மேலும் 72
மேலும் தூக்கிட சௌதர்மனும் குடைபிடித்தான்
பிடித்ததும் சனத்துடன் மகேந்திரனும் கவரிவீச
வீசிடும் சமயத்தில் வான்பிளக்கும் வாழ்த்தொலி
ஒலிமுழக்கம் கூறியதோ மோகம்வெல் லுமாதியே 73
ஆதியின் சுதர்சன மமர்ந்தது சித்தார்த்தம்
சித்தார்த்த வனத்தில் சந்திரகாந் தபாறையது
பாறையின் தளம்நின்று பல்லணி குழலதனை
குழலினை களைந்திட கிழக்கமர்ந்தா ராதியுமே 74
ஆதியின் துறவே சித்திரைத் திங்களில்
திங்களில் வந்த தேய்பிறை நவமிதிதி
திதியினில் விண்மீன் உத்திரா டநாளினில்
நாளின் பிற்பகல் தீட்சையின் திருமணமே 75
திருமண தினத்தினில் திரண்டனர் துதித்தனர்
துதித்து கூறினர் தொழுதனர் அகோரனாய்
அகோரத்தின் பொருளதே அற்றது கடினத்தை
கடினமாம் நிர்வாணம் கடந்தவ ரேற்றிட்டார் 76
ஏற்றிடு தவமதே அசையாத மாமலையாய்
மலையினால் கலங்கா மாபெரும் கடலாய்
கடலையு மலைத்திடும் பற்றற்ற காற்றாய்
காற்றென கடந்தது அருந்தவ மாறுதிங்கள் 77
ஆறுதிங்கள் கழிந்தது தினவுணவு எடுத்திட
எடுத்திடா பசியிலும் நெறியினை யுரைத்திட
உரையது எதிர்வரும் முனிவரின் உணவிற்கு
உணவினை யேற்றிடு முறையினை காட்டினார் 78
காட்டிய வழியது இருவற நெறியோர்க்கும்
நெறியினில் விளக்கமே தருவதும் பெறுவதும்
பெறுவது முனிவர்கள் இல்லறத்தோர் தருவது
தரும்பொருள் வழியினை யொருவரு மறிந்திலரே 79
அறிந்திலர் மனிதரு மழைத்திடும் விதியினை
விதிகளோ ஒன்பது முறைகளை யறிந்திலர்
அறிந்திலர் பொருளினை தந்தனர் பொன்பொருள்
பொருளோடு பரியானை பெண்களைத் தந்தனரே 80
தந்ததை யேற்றிலர் தவமது தொடர்ந்தது
தொடர்ந்தது வறுதிங்கள் நடந்தன ருணவுக்கு
உணவினை தந்திட ஒன்பது விதிகளில்
விதிகளின் முறைபடி சிரேயனு மழைத்தனன் 81
அழித்தா னாதியை யாசன மமர்த்தினான்
அமர்ந்தவ ரடிகளை புனிதநீ ராட்டினான்
ஆட்டின புனலினை சிரசினில் தெளித்தனன்
தெளித்து மங்கலப் பொருளால் போற்றினானே 82
போற்றியே தந்தான் கன்னல் சாறினை
சாறினை பருகினார் வெறுப்பும் விருப்பின்றி
விருப்பினில் துவங்கிட யுகத்தி னாகாரம்
ஆகார துவக்கமே யமைந்தது சிரேயனாலே 83
சிரேயன் தானமே தனிநிலை பெற்றது
பெற்றது அவனியும் அட்சய திரிதியை
திரிதியி லாகார தானத்தை தந்ததால்
தந்தான் பரதன் தானதீர்த்தன் பட்டமே 84
பட்டமே துறந்து பற்றினை பற்றற
பற்றிலா தவத்திற்கு பரமனுந் திரும்பினார்
திரும்பிடும் நடையில் மனதினில் உறுதியும்
உறுதியில் தவமது ஆயிரம் ஆண்டுகளே 85
ஆண்டினில் பங்குனி தேய்பிறை தசமிதிதி
திதியில் விண்மீன் உத்திரா டதினத்தில்
தினத்தில் பூத்தது வாலறிவு ஞானம்
ஞானத்தா லறிந்தனர் வானுலக அமரர்கள் 86
அமரரு மமைத்தன ரறவுரை மண்டபம்
மண்டபம் வமைந்தது மதில்பொன் னேழினில்
ஏழது முதலினில் வான்தொடு தூண்கள்
தூண்கள் நின்றன தோரண நுழைவினிலே 87
நுழைவது தொடக்கமாம் முடிவது மண்டபம்
மண்டபம் நடுவினில் மணவிதழ் தாமரை
தாமரை மலரினில் தருமத்தின் போதகர்
போதகர் மென்னிதழ் பொழிந்தது திருமொழியே 88
திருமொழி செவியுற தரணியி னுயிர்களும்
உயிர்களும் நனைந்தன உயர்ந்தவ அறத்தினில்
அறங்க ளனைத்துமே உலகுக்கு முதலறம்
முதலறம் அருளிய மூலவ ராதியே 89
ஆதியி னறங்களு மவனிக்கு புதியது
புதியத றப்பற்று பொருள்பற்றை நீக்குமே
நீங்கிடும் பொருளத றவழியி லீட்டிடில்
ஈட்டிய அறமோ நெடுவழி காக்குமே 90
காத்திடு மகத்தினை அழுக்கினை உதிர்த்திடும்
உதிர்ந்திடு மழுக்கால் நிலையுறு முயிரது
உயிரெனும் பயிருக்கு வறமெனும் நீரே
நீரினை தருவது மாதியின் திருமொழியே 91
திருமொழி தருவது பரதனுக் கொருவழி
ஒருவழி பகர்ந்தது தொடர்ந்திடும் பற்றினை
பற்றது தகர்த்திடும் பாகுபலி தவத்தினை
தவமென நினைத்து தம்பியை பணிந்திடு 92
பணிந்தனன் திருவடி பரதனு மிளவளை
இளவளும் பற்றற தமையனை வணங்கினான்
வணங்கி ஆதியின் தவயிடம் நடந்தனன்
நடந்தவன் நின்று வென்றனன் வீட்டையே 93
வீட்டினை யடைய தூய்த்திடும் வழிகளை
வழியுடன் நெறிகளை வகுத்தவ ரிடபரே
ரிடபரே யமைத்தா ரவ்வழி நடந்தார்
நடந்ததை யுணர்த்தி நெறியுடன் காட்டினாரே 94
காட்டிய வழியது உயிரது யியல்பினை
இயல்பினி லமையும் மூவினை உணர்வும்
உணர்வினி லெழுந்திடும் மோகத்தை துறந்து
துறந்திட யுதிர்ந்தது நிரந்தர மூவினையே 95
மூவினை யழிந்திட மும்மணி பெறுவதை
பெற்றிட பிறப்பினில் பெருந்தவஞ் புரிவதை
புரிவதா லறுந்திடு மறுவினை நாற்கதி
நாற்கதி நீக்கும் நெறிகளை யுணர்த்தினாரே 96
உணர்ந்தா ரான்மனி னழுக்குக ளுதிர்ந்ததை
உதிர்ந்தது மாசியின் தேய்பிறை சதுர்தசியில்
சதுர்தசியி லாயிரம் முனிவர்கள் சூழ்ந்திட
சூழ்ந்திடு நிலையில் சித்தரானா ராதியும் 97
ஆதியின் நெறியெலாம் அழிந்திடா திருக்கும்
இருக்கும் இல்லற துறவற வாழ்வினில்
வாழ்ந்திடு நெறிகளை உரைத்திடும் பெரியோர்
பெரியவ ரறமது ஆதிசொல் லறமாமே 98
அறக்கடல் மிதக்கும் மான்மீக கப்பலுக்கு
கப்பலின் வழிகாட்டி வானொளிர் துருவமே
துருவமோ ரிடபரே துலங்கிடு மொளியாலே
ஒளியாக்கி வாழ்க்கையில் உன்னத நிலையாவோம் 99
நிலைத்த யின்பம் நித்திலத்தி லேதுமில்லை
ஏதுமில்லா ஒன்றுக்கு எத்தனை வினைசெய்வோம்
செய்திடும் வினையற தொழுதிடு ரிடபரை
ரிடபரின் திருவுரு அவனியி னெழிலாமே 100
ஆதிநாதர் அந்தாதி நிறைவு.
No comments:
Post a Comment