அருகன் அந்தாதி.
கவிஞர்
முட்டத்தூர். அ. பத்மராசன்
பா வகை : கலிப்பா.
பா இனம் : துறை
உட்பிரிவு : கட்டளை கலித்துறை.
தொடை
: செய்யுள் அந்தாதி மண்டிலம்
கடவுள் வாழ்த்து.
நற்கதி கிடைத்திட நவபத மறிந்திட
செல்வழி யுயர்ந்திட செயல்தவம்
செழித்திட
திருமொழி போற்றிட திருவறம்
பெற்றிட
நம்நிலை யுயர்ந்திட வருகனின்
மலரடியே.
மலரிதழ் மேவிய மாலவன் காலடி பற்றுவோரே
துலங்கிய பிண்டி
குளிர்ந்த நிழலமர் கோமகனின்
நலம்பல நல்கிடும்
நன்னெறி சொல்லி னறங்களையே
பலருடன் பாடிட வந்திடும் புண்ணியம் நம்மவர்க்கே 1
நம்மவ ரீட்டிய
நல்லற மொன்றே கடைவழிக்கு
நம்முடன் வந்து நெடுவழி காக்கத்
தொடர்ந்திடுமே
நம்மன மென்றுங்
கலங்கிடா நிற்க வருகனடி
நம்மனம் பற்ற நிறைந்திடுந் தூய்மை
யுளமதிலே 2
உள்ளமே பற்றிட
புங்கவன் காட்டிய நல்வழிகள்
துள்ளியே ஆடும் மனதை நிறுத்தி
யடக்கிடுமே
உள்ளமே காட்சியும்
ஞான மொழுக்க மடைந்திடுமே
தெள்ளிய நல்வினை முன்வினை நீங்கிடும் பேறவர்க்கே 3
பேறினை நாடுவோர்
தேடுவர் சித்தரை சிந்தையிலே
போற்றுவ ரென்று
மவர்வழி நெஞ்சினில் நித்தமுமே
தூற்றிடும் தீவினை
யற்றிடு மென்றும் திருவடியில்
வீற்றிடும் நெஞ்சி லொருமனங் கொண்டிட போற்றிடுமே 4
போற்றிடு நெஞ்சம்
மலரினை தூவும் திருவடியில்
மாறிய நெஞ்சில்
திருமொழி சொல்லியே நின்றிடுவேன்
ஏற்றிடு மச்ச முனதருள் கொண்ட மனதினிலே
காற்றினில் தூற்றியே துச்சமாய் கொள்கிற யென்மனமே 5
என்மனம் வேண்டா
யெதையு மருகனே யுன்னருளில்
என்மன வேண்டு
தலெல்லா மறிந்த நிறைகுணனே
நன்னிலை பெற்றிட
நல்லறம் நல்கும் பெருவறமே
என்றுமே யிம்மை
நிலையிலை யென்ப துனதறமே 6
உன்னறம் பத்தையு
மில்லறம் நல்கிய புங்கவனே
நன்னிய மெய்பொருள்
நல்லுல கீந்திய நல்லுருவே
வன்குணம் நீங்கிட
ஐம்பொறி வென்ற திருவுறுவாய்
உன்னறம் போற்ற யவனியு மென்றுமே தப்பிடுமே 7
தப்பிடும் நல்வினை
வெல்வது நம்வினை நிர்மலனே
முப்போது முன்னறம்
நீக்கிடும் வல்வினை யென்மனமே
தப்பிடா கர்மங்க
ளுன்னருள் நோக்க யெழிலவனே
எப்போது மென்று
முலகமே போற்றிடும் வல்லவனே 8
வல்லவன் தந்தார்
தனதறம் மாந்தரி னுலகுக்கு
பல்லறந் தூய்த்து
முயிர்களும் பெற்றது நன்னிலையே
செல்வம் நிலையா
வினையது நிற்கு மெனவுரைத்தாய்
நில்லா பொருளது
பின்னா லலைவது யென்மனமே 9
என்மன ஊற்றில்
திரளு மழுக்குகள் போய்விடுமே
வன்மனம் மற்று நலம்பல பெற்றிடு
முன்னருளால்
நன்மை யகிம்சை
மிகுபொருள் நீக்கல் வசப்படுமே
கன்னியுங் கள்ளும் பிறன்மனை யோம்பல் தொலைந்திடுமே 10
தொலைந்திடும் பாவம் தொடரும் வினைக ளறுபடுமே
நிலையிலா வாழ்வும்
நிலையா யிளமை புரிந்திடுமே
அலையென வாடும்
மனதது யென்றும் நிலையுறுமே
நிலைத்திட முன்னரு
ளீந்திடும் பேறை திருவறனே 11
திருவறம் கொண்டோர் வருவினை நீக்கும் நெறியுடயார்
அருந்தவ மேற்க யனைத்தையும் நீக்கும்
வலியுடையார்
பெருவறக் கொள்கை
மனதினில் கொண்ட பொறையுடையார்
வரும்பெரு பாவத்தை
யென்றுமே யேற்கா திடமையரே 12
திடமுடை
நெஞ்சை யகத்தினில் கொள்ளும்
சமயமிது
முடமுடை நெஞ்சினில்
மெய்ப்பொரு கொண்டிடு நேரமிது
தடைகளை நம்பும்
மனதை யடக்கிடு முன்மொழிகள்
கடைவழி செல்ல வரும்தடை வெல்ல புகலிடமே 13
புகலிட மென்று
வனைவரும் நிற்கு மருகனடி
தகையுடை மக்கள்
மனைவியும் செல்வந் தடைவழியே
பகையது நீங்க வினைக ளறுபட
வோர்வழியே
மிகவரு ளீந்து
யருகனி பாதம் பணிவதுவே 14
பணிந்திட வான்மா
யெடுக்கும் பிறவி வினைவழியே
தணிந்திட மோகம் தவத்தினி லாழ்ந்திட
முக்திவழி
அணியென மும்மணி
நெஞ்சி லமர கிடைத்திடுமே
மண்ணினி லான்மா பிறந்திடா பேறை யடைந்திடுமே 15
அடைந்திடுந் தஞ்சம்
பெறுவது வுந்தன் புனிதநெறி
அடங்கிடா வைம்பொறி
தன்னிலை மாய்க்கு மருகனெறி
துடித்திடும் நெஞ்சி
லொளிர்ந்திடு முந்தன் திருவுருவம்
கொடுத்திடும் தூய்மையா
லன்பெனு பூவு மலர்ந்திடுமே 16
மலர்ந்த மனதினில்
தீவினை தோற்றம் மறைந்திடுமே
துலங்கிய முக்குடை
புங்கவ நல்லுரு தோன்றிடுமே
அலர்ந்திடு பூவி லமர்ந்திட யீந்தும்
பெருவறத்தால்
மலர்ந்திடும் நல்வினை வல்வினை யிற்றி யுதிர்ந்திடுமே 17
உதிர்ந்த வினைகளா
லான்மனின் தூய்மை நிலைத்திடுமே
மதியுடை வாழ்வி
லகிம்சை நெறியினை போற்றிடுவோம்
துதியுடை மனிதரும்
மும்மணி கொள்ளும் நிலையதுவே
நிதியது மும்மணி
தந்திடு மென்று முயர்வதுவே 18
உயர்வினை தந்திட
வெல்லு மறங்களை யீந்தவரே
பயத்திடும் தீமை பொடித்திட நல்வழி
காட்டியவர்
உயரிய யெண்ண முயிரில் பதிய பகர்ந்தவரே
தயவினி லெல்லா வுயிர்களும் போற்றும் மனதினிலே 19
மனதினில் நஞ்சினை
யுன்னருள் போக்க வரமருள்வாய்
நன்குண நெஞ்சினில்
பூவது பூத்திட நீயமர்வாய்
உனதடி போற்றிட
நற்றவம் செய்ய வனைவருமே
தினந்தினம் பற்றுவோம்
நிர்மலன் பாத மலரடியை. 20
மலராய் வனப்பு
மிளமையு மென்று நிலைத்துநிற்கா
வலிமை வளமையு
மின்பமும் வற்றும் மழைபுனலாய்
விலகிடும் செல்வமும்
வந்திடும் சுற்றம் அகன்றிடுமே
தொலைந்திடும் பாவ மருக னடியை பணிந்திடவே
21
பணிந்திட நிற்பர்
வரிசையில் வானோர் மலர்சொரிந்து
வணங்கியே நின்றனர்
நால்வகை தேவர்கள் பாவிசைத்து
துணையென வேண்டியே
மண்ணவர் நின்றனர் கைகுவித்து
கணதரர் நல்கினார் மாலன் மொழியை யுயிர்களுக்கே 22
உயிர்களின் பாவ முதிர்ந்தன மூலவன்
நல்லறத்தால்
மயங்கிய நெஞ்சில்
தகர்ந்தன யெண்வினை வெண்பனியாய்
துயர்க ளழிந்தன
துன்ப மறுந்தன வுன்மொழியால்
பயமது நீங்கிட
பல்லுயிர் போற்ற வுயர்வுறுமே 23
உயர்ந்த வுயிர்கள்
தவத்தினை யேற்றிடும் வீட்டினுக்கே
அயர்ந்த வுயிர்களை
மாற்றும் வினையற நற்கதிக்கே
பயத்திடும் நன்மை தொடர்ந்திடும் நல்வினை
மண்ணுலகில்
தயவினில் வாழும்
நிலையது மாறும் சரணமதே 24
சரணமாய் நெஞ்சு
பதிந்தது பொன்னா யருகனடி
மரணமே வந்திட
யென்மனம் மாறா யருகநெறி
தருமமே முன்னால்
மலையென நின்றிடும் வாழ்வியலில்
கருமமே கண்ணாய்
மனமது செய்யு மனைத்துயிர்க்கே 25
அனைத்துயிர் போற்ற வருகன் நெறிக ளொளிர்ந்திடுமே
மனைவியு மக்களு
மென்றுந் தொடரார் நிரந்தரமே
நினைவினில் நிற்கும்
மனமது நோக்கும் பெருநிலையை
வினைகளை போக்கி
குணங்க ளடைந்திட பேறதுவே 26
பேறினை பெற்றிட
நேர்வழி யொன்றே தவமதுவாம்
மாறிடா நெஞ்சம்
நிலையா யிருக்கும் கதியறவே
போற்றிடும் சொல்லும்
பலமலர் தூவல் திருவடிக்கு
ஏற்றமே தந்திடும்
யெண்குண நாதனின் நல்லறமே 27
நல்லறஞ் சொல்பவ
ருன்மொழி தந்ததை போற்றிடுவர்
பல்லறம்
நல்கிய பாரீசன் பாதத்தைப்
பற்றிடுவர்
சொல்லறந் தன்னி லுயர்ந்தது யென்றுமே
நம்மறமே
இல்லறத் தோடு துறவறம் சொல்லுஞ்
சமணமதே 28
சமண முரைப்பது
சத்தியம் நேர்மை யகிம்சையினை
சமவ சரணமே தேவர்கள் செய்கை
சமணமதில்
சமயத்தி லோங்கி
சமரச மில்லா நெறியினிலே
சமணத்தின் தத்துவம்
சாய்ந்திடா உத்தம பூமியிலே 29
பூமியில் மாந்தர்
மனமதில் நிற்கும் திருவுருவம்
தாமரை பூவினில்
மேவிடு மாலவா னுன்னடியும்
காமனை வென்று
கடுவினை நீக்கிய வும்நிழலும்
பாமர மக்களின்
வாழ்வினில் நல்லதை தந்திடுமே 30
தந்திடும் நல்வினை
வீழ்த்திடுந் தீவினை யென்நாளுமே
நித்தமு முன்னருள்
மக்களின் வாழ்வதை காத்திடுமே
பித்தனாய் வாழ்ந்திடு
பக்தனென் குற்றங்கள் போக்கிடுவாய்
அத்தனே முத்தனே
நித்தமு முன்பாதம் பற்றினேனே 31
பற்றினேன் பற்றினை
பற்றியது பாவங்கள் பற்றறுக்க
பற்றற னுன்னடி
பற்றிலா பொன்னடி பற்றினேனே
பற்றிய நாளதில்
பற்றுக ளற்றிட பல்லறங்கள்
பற்றின நெஞ்சினில்
பாவிட நின்றன நின்னறமே 32
நின்னற மெல்லாம்
நமதற மாக்கிடி மண்ணுலகில்
நன்னெறி யோங்கும்
நலிவுருந் தீமைகள் தன்னிலையில்
உன்குணந் தோன்றிட
யெண்வினை நீங்கிட மாந்தருக்கு
வின்னகம் சென்றிடும்
நல்வழி காட்டிடும் நம்மவர்க்கே 33
நம்மவர் போற்றிடு
மெண்குண நாத னருகனையே
நம்பியே யேற்பரே
தன்சிரம் கொள்வரே பொன்னடியை
இம்மையில் செய்திடு
நல்வினை வந்திடும் பின்தொடர்ந்து
நம்மனம் மாறிட நல்லவை கூட்டிடு
மவ்வருளே 34
அருளினை யீவது ஐம்பொறி வென்றவன்
நல்விழிகள்
அருவினை போக்கு
மழித்திடும் பாவமு மன்னவனால்
திருமொழி சொல்லிடு
நல்லற மெல்லா முயிர்களுக்கே
தருவது யின்பம்
கொள்வது வீடின்ப மறியுவீரே 35
அறிவது மாய்தலு
நல்செய லாகுமே மாந்தருக்கு
அறவாழி அந்தண னாதியாய் நின்றா
னருள்வதற்கே
அறமொடு வாத மிருவகை யென்று
வுலகினுக்கே
அறிய வுரைத்தா
ரனேகாந்த யேகாந்த நல்லவையே 36
நலங்களை நல்கிய
நல்லற வேந்த னருகனுக்கே
அருளொடு தந்தா ரெழுத்தையு மெண்ணையு
மாந்தருக்கே
மருளது நீங்கி
யிருவினை வீழ்பட புண்ணியமே
தருவது யின்பம்
பெறுவது யென்றுமே முக்தியையே 37
முக்தியை யீன்றிடு
மும்மூடம் போக்கிய நாதனருள்
பக்தியில் மூழ்குவோம்
புங்கனைப் பாடுவோ மெய்யுருகி
மிக்கெழில் கொண்டோன்
மலர்மிசை நின்றோ னருகனையே
எக்காலும் போற்றலு
நெஞ்சில் நிறுத்தலு முன்னடியே 38
உன்னடி யேற்றலு
நின்புகழ் பாடலும் மண்ணவரே
என்குண மாகிட பொன்னெழில் பூத்திட
மன்னனுக்கே
நன்மலர் கைகொண்டு
பண்ணிசை யாற்றி துதிப்பதுவே
நன்னில வாழ்வினில்
மண்ணவர் செய்கை முறையதுவே 39
முறையென வொன்றை
மனிதரின் வாழ்க்கையில் தந்ததுவே
நிறைமதி யாதியே
நித்திலம் போற்ற வகுத்ததுதான்
குறையற கர்ம நிலத்தினில் வாழும்
நெறியனைத்தும்
பொறையுடன் போற்ற நிறையுடன் வாழ்த்திட
சொன்னதுவே 40
சொன்னது நல்லறம்
வென்றது வல்வினை யான்மனுக்கே
தன்னை யுணர்ந்து
வுலகினை யாய்ந்த பெருவுருவே
உன்னையே நீங்கி
தொழுதிடா நெஞ்சம் பிறவுருவில்
உன்னடி யென்றும்
சிரசினி லேற்பேன் வரமதுவே 41
வரமது தந்து பொறியதை காத்திடு
மாற்றலினை
திருவென தந்து பெருநிதி யாக்கிடும்
பேரழகே
அருளுடை நெஞ்சமு
மன்புடை செய்கை யெனக்கருள்வாய்
அரியவுன் நன்னெறி
தந்திடும் நுண்மதி நல்லுயிர்க்கே 42
நல்லுயி ராவதும்
தீயவை யாவது மூழ்வினையே
பல்லுயிர் காக்கும்
பரமனாய் நிற்பது முன்நிழலே
நல்வழி காட்டிட
செல்வழி யாகுமே மண்ணுயிர்க்கு
பல்வினை நீங்கிட
பாவ மழிந்திடும் வீட்டினுக்கே 43
வீட்டினை நோக்கிடு
மண்ணுயி ரெல்லாம் வினையறுக்கும்
ஏட்டினில் பூத்திட்ட
புங்கவன் பொன்னறம் நெஞ்சினிக்கும்
பாட்டொடு போற்றலும்
பல்மலர் சாற்றலும் பாதமதில்
கோடை மழையென
கொட்டும் முரசுகள் பேரொலியே 44
பேரொலி யோங்கி
புகழினை பாடு மனைவருமே
காரிருள் வாழ்வி
லொளியினை வேண்டி பணிந்திடுவர்
தீர்ந்திடு மூழ்வினை
மென்னடி பற்றிட நெஞ்சுருகி
நீர்த்திடும் வெவ்வினை
நீர்குமிழ் போல மறைந்திடுமே 45
மறைந்திடும் பொய்யற
மோங்கிடு ஞானமும் நல்லறத்தால்
குறைந்திடும் பாவம் நிறைந்திடும் நல்வினை
பேரருளால்
பொறையுடை வாழ்வு
குறையிலா நன்னெறி கூடிடுமே
நிறைகுடம் போல துறவற நோன்பது
கைவருமே 46
கைவர வாய்த்தது
மெய்பொரு ளொன்றே யருகநிலை
கைவரப் பெற்றது
மும்மணி யொன்றே யெனதுநிலை
கைவரப் பெற்றதை
காப்பது வொன்றே தருமநிலை
கைவரப் பெற்ற கனிந்தநல் காட்சி
துறவதுவே 47
துறவினைப் போற்றிடும்
நல்லுயி ரெல்லாம் தகுதிநிலை
மறைந்திடும் செல்வத்தை
நெஞ்சில் துறந்த பெருநிலையே
வெறுப்பது வேண்டலும்
நீங்கிய வோர்நிலை சித்தநிலை
அறுப்பது வல்வினை கொள்வது நல்வினை நம்நிலையே 48
நம்நிலை யொன்ற தவத்தினை யேற்கும்
பெருநிலையே
நம்முடை வாழ்வது
மேனிலை கொள்ளலு மிப்பிறப்பில்
நம்பிறப் பொன்றுதான்
முக்தியை போற்றும் தர்மநெறி
நம்வினை போக்கி
யருகனா யாகிட நேர்வழியே 49
நேர்வழி காட்டும்
நெறியினைக் கூட்டும் சமயமிது
பாரினி லொன்றே
யகிம்சையை போற்றும் சமயமிது
நேர்பட வாழ நிறைநெறி கூறும்
சமயமிது
பாரீசன் சொல்ல சமய நெறியா
மலர்ந்ததுவே 50
அருகன் அந்தாதி
நிறைவு.
No comments:
Post a Comment