அருகன்
இரட்டைமணி மாலை.
பா வகை : வெண்பா, விருத்தம்.
தொடை : அந்தாதி
எண்குண நாத னிருவினை நீக்கியான்
தண்னிழல் தங்கிய வெண்குடை யேற்றவன்
நுண்ணிய நல்லற நாயகன் தந்தது
திண்ணிய நூலே உயர்வு. 1
உயர்வினை யடைய வுற்றதைத் துறந்தவன்
தயவினை தந்த தன்னிக ரிலாதவன்
மயக்கத்தைப் போக்கு மாசிலா பெரியவன்
பயனுறு நெறியை பல்லுயிர்க் கீந்தவன் 2
ஈந்தவன் வாய்மொழி யென்றும் திருமொழி
அந்நெறி தந்தவன் நன்நிலை தவகுணம்
வெந்திடுந் தொல்வினை சேரு முயிரினில்
போக்குமே புங்கவன் சொல் 3
சொன்னவ னனைத்தையுஞ் செயலினில் காட்டி
சென்னிய வழியினில் தெளிந்திடச் செய்து
பொன்னற மனைத்தையு புவியோர்க்கு தந்த
என்னவ னருகனின் மென்னடி பணிவோம் 4
பணிவினி லென்று மமைந்திடும் சாந்தம்
தினந்தினம் நெஞ்சில் கிளைத்திடும் கோபம்
சினத்தினை வென்றிட சிந்தையும் பண்பட
நிர்மலன் சொல்லே சிறந்து 5
சிறந்ததை தருவது சமணத்தின் கொள்கை
துறவினைப் போற்றிடும் தூயநல் பண்பு
அறமதைக் காத்திடும் திறமது சமணம்
பொறிவழி தடுத்திடும் நேர்வழி சமணம் 6
சமணமோ வாழ்வியல் மாந்தரின் வாழ்வில்
மனிதர்க்கு சொல்வது மாறிடா நல்வழி
கோபத்தைப் போக்கல் விரதத்தைக் காத்தல்
தருமத்தை யோம்பல் பெரிது 7
பெரிதென வுரைப்பத கிம்சையின் நன்னெறி
திருவென போற்றியே கைதொழு முயிர்களும்
பெருவதை போக்கலும் வருவதைத் தடுத்தலும்
அருகனின் நெறிகளை யறமுடன் போற்றலால் 8
போற்றலும் தூற்றலும் பூமியி லுள்ளதே
ஏற்றலும் தாழ்த்தலு மென்று மெதிர்வினை
உற்றவர் சீர்பட வுள்ளங்கள் மேம்பட
நல்நெறி நிற்கு முயர்ந்து 9
உயர்ந்தது யென்றுமே மெய்யுணர் வாகுமே
பொய்யுணர் வாற்றிடும் பொய்யுரை சமயமே
பொய்யினா லழித்தது பொலிவுரு சமணத்தை
பொய்யதே என்பதை பூவுல கறிந்தது 10
அறிதலு மாய்தலும் தத்துவ மாகுமே
தத்துவ சாரமே சத்திய நம்சமயம்
மாறிடா வாய்மை மயங்குமே பொய்மை
தருமே சமணம் புரிந்து 11
புரிந்திடும் நன்மையும் களைந்திடும் தீமையை
திரிந்திடும் பொய்களு மறுந்திடும் வினைகளும்
வருவினை நீங்கிட விலகிடும் மலங்களும்
பெருகிடும் நல்வினை பேறினை யடையலாம் 12
அடையலாம் நெஞ்சி லருகனின் மென்னடி
மென்மலர் மேவிடு மெண்குண நாதனால்
எண்வினை நீங்கி யெழில்தரு விண்ணினில்
தேவர் சுகத்தில் பிறந்து 13
பிறப்பது மிறப்பது வுலகினில் மாறிடா
உறவது பிரிவது மின்றய பிறவியில்
மறுமையி லுயிரது மாறிடும் வினைகளில்
நற்பேற டைந்திட பேரறம் செய்யுமின் 14
செய்யுங்கள் நல்லதே செவ்விய நல்பிறப்பில்
உய்யுங்கள் வாழ்க்கையி லுன்னத நல்நிலையில்
மெய்யினில் தூய்மை மனதினில் பொய்மையும்
தந்திடும் வாழ்க்கையில் தாழ்வு 15
தாழ்வினைத் தருவது தன்செயல் மட்டுமே
ஊழ்வினை வந்திட வுறுத்திடும் வாழ்க்கையும்
பாழ்வினை போக்கிட பகிர்ந்துண்டு வாழுங்கள்
தாழ்வினை நீக்கிடும் தந்திடு முயர்வினை 16
உயர்வினை நல்கிடும் நன்னெறி வாழ்வினில்
உன்னத காட்சியு மோங்கிய ஞானமும்
தந்திடும் நல்லொழுக்க மாகிடு மும்மணி
புங்கவன் தந்த மருந்து 17
மருந்தது மும்மணி மண்ணினில் மாந்தர்க்கு
விருந்தது வாகுமே வாமனன் சொல்லது
பொருந்திடும் நெறிகளை சொல்லிடும் சமணமே
வருந்திடா வாழ்க்கையின் வழியதே அருகனே 18
அருகனின் நல்வழி ஆகமச் சொல்வழி
நல்கிடும் புண்ணியம் பேறுக்கு செல்வழி
திண்ணிய வெவ்வினை போக்கு மொருவழி
மண்ணில் வகுத்த நெறி 19
நெறியுடை மனிதர்கள் நிறையுற வாழ்வர்
பொறையுடை குணமது திருவினைத் தருமே
நிறைகுண மனிதர்கள் நித்திலம் போற்ற
துறவினைக் கரங்கொள சித்தரா யானார் 20
No comments:
Post a Comment