ஸ்ரீ நேமிநாதர் திருவரலாறு
(பெருமதிப்பிற்குரிய தெய்வப்புலவர் தோ. ஜம்புகுமாரன் அவர்கள்
நூலிலிருந்து தருவிக்கப்பட்டவை. )
பழம்பெருமையும் கீர்த்தியும் பெற்ற ஜின தருமத்தினை உலக உயிர்கள்
அனைத்தும் பின்பற்றி உய்யும் வண்ணம் போதித் தருளிய அருளாளர்களே தீர்த்தங்கரர்கள் ஆவர்.
அவருள் இருபத்திரண்டாம் தீர்த்தங்கரராகிய ஸ்ரீ நேமிநாதரின்
திருவரலாறு குறிப்பிடத்தக்க சிறப்புகள் பலவற்றைக் கொண்டுள்ளது. வைதிக சமய இதிகாசங்களில்
சிறப்பித்துப் பேசப்படும் கிருஷ்ணன், பாண்டவர் ஆகியோர் ஸ்ரீ நேமிநாதருக்கு நெருங்கிய
உறவினர்களாகப் பகவான் திருவரலாற்றில் காட்சி தருகிறார்கள்.
அன்றியும் அறுபத்து மூன்று மகா புருஷர்களின் வரலாற்றைக் கூறும்
மகா புராணத்தில் குறிப்பிடப்படும் வாசுதேவர் ஒன்பதின்மரில், கிருஷ்ணனும் ஒருவராகச்
சொல்லப்பட்டுள்ளார்.
மேலும் நேமி பகவான் வரலாற்றில் கிருஷ்ணனைப் பற்றிய செய்திகளும்
அவர் பிறந்த ஹரிவம்சத்தில் தோன்றிய அரசர்களின் செய்திகளுமே நிறைந்து காணப்படுகின்றன
ஆகவே பகவான் நேமிநாதர் வரலாற்றினைக் கூறுவது அக்கால வரலாற்றை நாம் நன்றாகப் புரிந்து
கொள்ளவும் பயன்படும் என்பதில் ஐயமில்லை.
--------------
*ஸ்ரீஇட்சுவாகு வம்சத்தின் முதல்வராகிய ஸ்ரீ ஆதிபகவன் ஸ்ரீ
விருஷபஸ்வாமி புண்ணியவானும், அறிவாளியும், வரனுமாகிய ஹரி என்பவரை அழைத்து ஹரிகாந்தன்
என்று பெயரிட்டு ஹரிகுலத்திற்கு முதல்வனாக்கி ஐந்து குலங்களுள் ஒன்றாக ஹரி குலத்தைப்
படைத்தருளினார். (ஸ்ரீபுராணம் கூறும் தகவல்)
----------------------
அக்காலத்தில் அங்க நாடானது அரசனின்றி தவித்துக் கொண்டிருந்தது.
சந்ததியின்றி அரசன் இறந்து போனதால், அமைச்சர் தளபதி முதலானோர் கூடி, அக்கால வழக்கப்படி,
பட்டத்து யானையை அலங்கரித்து அதனிடம் மலர் மாலையைக் கொடுத்து நகர்வலமாக அனுப்பி வைத்தனர்.
அவ்வாறு வந்த யானை சோலையில் விடப்பட்டிருந்த சிம்ம கேதுவின் கழுத்தில் மாலையை அணிவித்து,
வித்யுன் மாலையுடன் தன் மத்தகத்தின் மீதேற்றிக் கொண்டுபோய், நகர மாந்தர் முன்பு விட்டது.
நகரப் பிரதானியர் இவ்விருவரையும் கண்டு மகிழ்ச்சி கொண்டு,
சிம்ம கேதுவைத் தம் அரசனாக ஏற்றுக் கொண்டனர். அதன்பின்னர், அவர்கள் சிம்மகேது ஹரி குலத்துத்
தோன்றல் என்பதை அறிந்து கொண்டு, *ஸ்ரீ ஆதிபகவன் காலந் தொட்டு வரும் ஹரி வம்சத்துப்
பெயர் இவனது சந்ததியினர்க்கும் வழிவழி வந்து வழங்குவதாக! என வாழ்த்தி மிருகண்டுவின்
மகனான படியால் மார்க்கண்டேயன் என்றே பெயரிட்டு அழைக்கலாயினர்.
இந்த மார்க்கண்டேயனது ஆட்சி, யாதொரு இடையூறுமின்றிப்பல ஆண்டுகள் இனிதே நடைபெற்றது. இவனது காலத்திற்குப் பிறகு, பெயர் பெற்ற அரசர் பலர் இவன் குலத்திலே தோன்றி சீரும் சிறப்புமாக ஆட்சி புரிந்து மறைந்தனர். இறுதியாக குசார்த்த நாட்டு சௌரிய புரத்தை (சூரிய புரம்) ஆண்டு வந்த இவ்வமிச அரசன் சூரசேனனுக்கும் அரசி தாரிணி என்பவளுக்கும் அந்தக விருஷ்ணி, நரபதி விருஷ்ணி என்னும் மக்கள் இருவர் தோன்றி. இவ்வமிசத்தின் இரு கண்களாகப் புகழ்பெற்று விளங்கினர்.
அந்தக விருஷ்ணி
அன்புள்ள வாசகர்களே! இந்த 'அந்தக விருஷ்ணி' யாரென்று நினைக்கிறீர்கள்?
யாவரால், ஹரிவம்ச குலத்துக் கீர்த்தி, மூவுலகங்களிலும் பரவக் காரணமாக இருந்ததோ, அத்தகு
பெருமை பூண்ட, நேமி நாதருக்கும், கிருஷ்ணனுக்கும், 'பாட்டனே' இவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்!
இது இவ்வாறாக, அந்தக விருஷ்ணிக்கு, அவன் தேவி சுபத்திரையிடமாக
சமுத்திர விஜயன் முதலாக வாசுதேவன் ஈறாகப் பத்துப் புதல்வர்களும் குந்தி, மாத்ரி என்னும்
பெண்கள் இருவரும் பிறந்தனர். அவ்வாறே, நரபதி விருஷ்ணிக்கு அவன்தேவி பத்மாவதியிடமாக
உக்கிரசேனன், தேவசேனன், மகாசேனன் எனப்புதலவர் மூவரும் காந்தாரி என்னும் ஒரு புதல்வியும்
பிறந்தனர்.
இவர்களில் குந்தியும் மாத்ரியும் குருகுலத்து வேந்தனான 'பாண்டு'
என்பவனுக்குத் தேவியர்களாகி, பாண்டவர்களைப்
பெற்றெடுத்தனர். காந்தாரி, பாண்டுவின் தமயனான திருதராட்டிடரனனுக்குத் தேவியாகி, துரியோதனாதியர்க்குத்
தாயானாள். இனி மற்றொரு செய்தியும் உண்டு. திருமணத்திற்கு முன்பே, பாண்டுவிற்கும் குந்திதேவிக்கும்
களவுப் புணர்ச்சி (காந்தர்வ மணம்) மூலம் ஆண் குழந்தை ஒன்று பிறக்க, உலகப் பழிக்கு நாணி
தாயரால் ஆற்றில் விடப்பட, அது சம்பா புரத்து மன்னன் ஆதித்யன் என்பவனிடம் சேர்ந்து அவன்
மனைவி இராதை என்பவளால் 'கர்ணன்' எனப் பெயரிடப்பட்டு வளர்ந்து வந்தது 'என்பதே அச் செய்தியாகும்.
வசுதேவன்
மேலும் நாம் இப்பொழுது ஸ்ரீ நேமி பகவான் அவதரித்த ஹரி குலத்து
முன்னோர்களைப் பற்றிப் பார்த்து வருகிறோம் அன்றோ? அவருள் அந்தக விருஷ்ணியின் கடைசி
மகனான வசுதேவனுக்கு இக் கதையில் ஒரு தனி இடம் உண்டு. இவனைப் பற்றிய வீர வரலாறுகள் புராணங்களில்
நிரம்பக் காணப்படுகின்றன. தன் தமையன் சமுத்திரவிஜயனது கட்டுப் பாட்டிற்கு அடங்க மறுத்து
நகரை விட்டு நீங்கிச் சென்று தனது ஒப்பற்ற சாகசச் செயல்களாலும், கலை வன்மையாலும், முன்
செய்த நல்வினைப் பயனாலும் சியாமளை, சால்மலிதத்தை, கந்தர்வ தத்தை, வீணா, ரோஹிணி முதலான
அரச, வித்யாதரப் பெண்களை மணம் புரிந்த செயல்கள், இவனை ஒரு தன்னிகரற்ற தலைவனாகவே காட்டுகின்றன.
இவனுக்கும் பட்டமகிஷி தேவகிக்கும் மகனாகப் பிறந்தவன் வசுதேவன் கிருஷ்ணன். அவனது சரிதம் பலவகையிலும்
நமக்குத்தெரிந்த ஒன்று. அவனது பெரிய தகப்பனாரின் மகனே ஸ்ரீநேமிநாதர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் கிருஷ்ணனுக்கு பத்தாண்டுகளுக்குப்பின் பிறந்த தமையன் ஆவார்.
இவ்வாறாக யாதவ குலத்தரசர் சமுத்திரவிஜயன் சீரும் சிறப்புமாக
வாழ்ந்து வரும் நாளில் ஜயந்த விமானத்தில் அகமிந்திரனாக எழுந்தருளியிருந்த பகவான் இன்னும்
ஆறு மாதத்தில் சமுத்திரவிஜய அரசனின் பட்ட மகிஷியான சிவதேவியின் திருவயிற்றில் வந்து
திருமலியும் கருவாக அடையப் போகிறார் என்பதைத் தன் அவதி ஞானத்தால் அறிந்த தேவேந்திரன்,
பகவானை வரவேற்பதற்கான புனித செயல்களைச் செய்யும்படிக் குபேரன் முதலாகிய தேவர்களுக்குக்
கட்டளை இட்டான்.
அதன்படியே, அரசனின் அரண்மனையில் மூன்றரை கோடி இரத்தினங்களைக்
குபேரன் நாடோறும் பொழிவித்தான்; இந்த அற்புத நிகழ்ச்சிகள் துவாரகையில் நடைபெற்றுவரும்
காலத்தில், கார்த்திகை மாதம் சுக்கிலபட்ச சஷ்டி உத்திராட நட்சத்திரத்தில் சிவதேவி,
பஞ்ச சயனத்தில் உறங்கிக் கொண்டிருந்த போது, அந்த இரவுப் பொழுதின் கடை யாமமாகிய மனோகரயாமத்தில்
அரசி பதினாறு கனவுகளைக் கண்டாள்.
தேவி கண்ட கனவுகள்
அவையாவன, யானை, எருது, சிங்கம், இரண்டு யானைகளால் நீராட்டப்படும்
திருமகள், இரு பூமாலைகள், முழுநிலவு, இளஞ் சூரியன், மீன்கள், பூரண கும்பம்,தாமரைக்
குளம், கடல். சிங்காதனம், தேவ விமானம், நாகவிமானம், இரத்தினக் குவியல், புகையில்லாமல்
எரியும் நெருப்பு என்பவை.
இங்ஙனம் காணப்பட்ட கனவுகளுக்குப் பிறகு, இறுதியாக, யானை ஒன்று
தன் வாயில் நுழைவது போலவும் கனா கண்டு, கண் விழித்து எழுந்தாள் சிவதேவி. அவள் மனம்
மகிழ்ச்சியால் நிரம்பியது. தான்கண்ட அற்புதக் கனவுகளின் பலன்களைத் தன் கணவனது வாயால்
கேட்டறிய வேண்டும் என்னும் விழைவுடன் மங்கலப் பாடகர் துதிகள் பாடவும். துந்துபி முதலான
இசைக் கருவிகள் முழங்கவும், சர்வாலங்கார வனிதையாய், மன்னனிடம் வந்து வணங்கி, அர்த்தாசனத்தில்
அமர்ந்து தான் கண்ட கனவுகளைக் கூறினாள்.
அரசன் தன் அவதி ஞானத்தால் அக்கனவுகளின் பலன்களை அறிந்து, திரிகால
ஞானியும், சர்வஜீவ தயாபரனும், அனைத்துலகத்திற்கும் தலைவனும், வீரம், மகிழ்ச்சி, இன்பம்,
செல்வம் ஆகிய அரும் பேறுகளை உடையவனும், கரும வல்வினைகளை நாசம் செய்வபனுமாகிய பகவான்
அவள் கர்ப்பத்தில் வாசம் செய்ய வருவான் என்றும், யானை ஒன்று வாயிலே நுழைந்தது போலக்
கண்டமையால் பஞ்சானுத்தர ஜயந்த விமானத் திலிருந்து அவன் வருகிறான்' என்பதைக் குறிப்பால்
உணர்த்தும் என்றும் கூறியதைக் கேட்ட தேவியும், "மூவுலக நாதனை என் கர்ப்பத்தில்
தாங்கும் பேறு பெற்றேன்" என்றெண்ணி மிகவும் மகிழ்ச்சியுற்றிருந்தான்.
கர்ப்பாவதரண ஜன்மாபிஷேக கல்யாணம்
(ஸ்ரீ நேமி பகவான் அவதாரம்)
அன்று
முதல், ஸ்ரீ,ஹ்ரீ, திருதி, கீர்த்தி, புத்தி,லட்சுமி முதலான தேவமாதர்கள் சிவதேவியின்
அருகிலிருந்து எப்போதும் பணிவிடைகள் செய்ய, ஒன்பது திங்களும் நிறைந்த பிறகு, ஆவணித்
திங்கள் வளர்பிறை, சஷ்டி திதியில் சித்திரை நட்சத்திரத்தில்
பகவான் அவளது கர்ப்பத்திலிருந்து அவதாரம் செய்தருளினார். அப்பொழுதே அவர் மதி, சுருதி,
அவதி எனும் மூவகை ஞானங் களும் பெற்றவராயிருந்தார்.
ஜன்மாபிஷேகம்
அதன்
பின் தேவேந்திரன் ஜினபாலகனை யானை மீது கொண்டு சென்று மேரு மந்தர மலையில் வைத்து பாற்கடல்
நீரால் ஜன்மாபிஷேகம் செய்வித்து பகவானுக்கு 'நேமி நாதர்' என்னும் திருநாமம் சூட்டிக்
கொணர்ந்து ஜினரின் தாய் தந்தையர்களிடம் சேர்ப்பித்தபின் அவர்களைக் கொண்டாடி புகழ்ச்சி
மாலை சூட்டி விடைபெற்றுச் சொர்க்க லோகம் சேர்ந்தனர்.
இருபத்தோராம்
தீர்த்தங்கராகிய நமி பகவானின் தீர்த்த சந்தான காலம் ஐந்து லட்சம் ஆண்டுகளாகும். அதனுள்ளடங்கிய
பரமாயுள் உடையவராகி அவதரித்த ஸ்ரீ நேமி பகவானின் பரமாயுள் ஆயிரம் ஆண்டுகளாகும்; அவரது
திருமேனியின் உயரம் பத்து வில்; நிறம் இந்திர நீலம்.
சொர்க்க
லோகத்தில் கிடைக்கும் போகப் பொருள்களை இந்திரன் ஏவலால் குபேரன் கொண்டுவந்து பகவானுக்கு
அந்தந்த வயதிற்கும், காலத்திற்கும் ஏற்ப அமைத்துக் கொடுத்துக் கொண்டிருக்க அவர் அதை
அனுபவித்துக் கொண்டிருந்தார்.
ஜராசந்தன்
அறிந்த உண்மை
இவ்வாறு
நாட்கள், யாவருக்கும் இனிதின் நிகழாநின்ற போது கடல் வாணிபத்தின் பொருட்டுக் கலமூர்ந்து
சென்ற மகத நாட்டு வணிகர்கள் சிலர், கடலில் வழிதவறி, துவாரகைக் கடலோரம் வந்து ஒதுங்கினார்.
அவர்கள் அங்குச் சில காலம் தங்கியிருந்து தன் நாட்டிற்குத் திரும்பிய போது, அங்கிருந்து
சில அரிய இரத்தினங்களைத் தம்முடன் கொண்டு சென்று, மன்னன் ஜராசந்தனுக்கு அவற்றில் சிலவற்றைக்
காணிக்கையாகத் தந்தனர். "விலைமதிப் பற்ற அவ்வரியமணிகள், யாதவ வேந்தன் வாசுதேவனால்
ஆனப்படும் துவாரகையில் கிடைத்தன' என்பதை அறிந்த ஜராசந்தன். யாதவ மன்னர் அனைவரும் உயிரோடிருக்கும்
செய்தியை அறிந்து கொதித்தெழுந்தான். 'தான் ஏமாற்றப் பட்டோம்' என்பதை அறிந்து சினத்தின் உச்சியில்
நின்றான். இப்பொழுதே படையெடுத்துச் சென்று ஹரிவம்சத்தையே வேரொடு அழிப்பேன் என எழுந்தான்.
இச்செய்தியைத்
துவாரகைக்கு வந்த 'அதோன்முக நாரதன்' என்பான் வாசுதேவனிடம் கூறினான். அதைக் கேட்ட இவனும்
'சிங்க ஏறு' என வெகுண்டெழுந்தான். தானே படையுடன் எதிர் கொண்டு சென்று போரிடத் தீர்மானித்து,
குமார பருவத்தில் இருந்த ஸ்ரீ நேமி குமாரனிடம் சென்று நடந்தவற்றைக் கூறித் தான் சென்று
ஜராசந்தனோடு பொருது, அழித்துவிட்டு வருமளவும் துவாரகை நகரைக் காத்தருளும்படி வேண்டிக்
கொண்டான்.
------------------
சரி துவாரகை உருவானது எப்படி …
கிருஷ்ணனால்
கம்சன் கொல்லப்பட்டான் என்பதை அறிந்த அவன் மாமனும், மகத நாட்டரசனுமாகிய ஜராசந்தன்,
பிறவி தோறும் தொடர்ந்து வரும் பகை வந்துறுத்த மிகு சினம் கொண்டுத் தன் மகன் அபராஜிதன்
என்பவனை பெரும் படையுடன் கிருஷ்ணனைக் கொல்வதற்காக அனுப்பி வைத்தான்; அவன் வாசுதேவனோடு
முந்நூற்று நாற்பத்தாறு நாட்கள் கடும் போர் செய்தும் வெற்றிபெற முடியாமல் தோற்றுத்
திரும்பினான். அதன்பின்னர், ஜராசந்தன் பேராற்றல் படைத்தவனான காளயவன் என்னும் மற்றொரு
மகனை, நால்வகைப் படையுடன் அனுப்பி வைத்தான். நில மகளின் முதுகு நெளியும்படிப் பெரும்
படை யுடன் காளயவன் வருகிறான் என்பதை அறிந்த யாதவ அரசர்கள் யாவரும் அஞ்சியவராய், தாம்
அரசாண்டு கொண்டிருந்த செளரிய புரம், ஹஸ்தினபுரம், மதுராபுரி ஆகிய பட்டணங்களைக் கைவிட்டு
விட்டு, மேற்குக் கடற்கரையை நோக்கி விரைவில் இடம் பெயர்ந்து செல்லத் தொடங்கினர். அவர்களைப்
பின் தொடர்ந்து செல்ல முயன்ற காளயவனை, செளரியபுரத்தின் காவல் தேவதை ஒன்று, கிழவன் உருவந்
தாங்கி வந்து வழிமறித்து நிறுத்தி,"பெரு வீரனே! இங்கு வாழ்ந்த யாதவ குல அரசர்கள்
அனைவரும் உனக்கு அஞ்சி, மானத்தைக் காப்பதற்காகத் தீயில் விழுந்து மடிந்து போயினர்"
என்றுரைக்க, அவ்வுரையை மெய்யென்று நம்பிய காளயவன் செருக்குற்றுத் திரும்பினான்.
துவாரகாபுரியின்
தோற்றம்
இஃது
இவ்வாறாக, மேற்குக் கடற்கரையை வந்தடைந்த யாதவ மன்னர் அனைவரும், தாம் இனி தங்கி வாழ்வதற்கு
ஏற்ற இடம் எங்கு கிடைக்கும் எனச் சிந்தித்தவராய் ஒன்று கூடி ஆலோசிக்கத் தொடங்கினர்.
சில நாள்கள் இவ்வாறு ஆலோ சனையில் கழியவும், கிருஷ்ணன், ஒரு நாள் கடற்கரை மணலில் தர்ப்பை
யைப் பரப்பி அதன்மேல் அமர்ந்து கொண்டு, மந்திரம் ஓதி ஜபம் செய்தவாறு எட்டு நாள்கள்
உண்ணா நோன்பைக் கைக் கொண்டான்.
அவ்வாறு,
அவன் நோன்பில் அமர்ந்த எட்டாம் நாள் பின்னிரவு நேரத்தில், அவன் கனவில் கௌதமன் என்றொரு
தேவன் தோன்றி வைகறைப் பொழுதில் குதிரை உருவில்வரும் தன் மீதேறிப் பன்னிரண்டு யோசனை
தூரம் கடலுக்குள் சென்றால் அங்கு அனைவரும் தங்குவதற்குத் தகுந்த இடத்தை காணலாம் எனக்
கூற, அவனும் அவ்வாறே சென்று அத்தீவை அடைந்தான்.
ஸ்ரீநேமி
பகவான் திரு அவதாரம் செய்யப் போகிறார் என்ற காரணத்தால் அத் தீவானது, இந்திரனது ஆணையின்
படி, குபேர னால், பொன், வெள்ளி, இரத்தினங்களால் இழைக்கப்பட்ட மதி லுடன் கூடியதான அரண்மனைகளையும்,
ஜினாலயங்களையும், மக்கள் வசிப்பதற்கு ஏற்ற சிறிய பெரிய மாளிகைகளையும் குடி யிருப்புகளையும்
கொண்டதாய் நிருமாணிக்கப்பட்டு, வானுலகி லுள்ள அமராவதி நகரமோ? என்று, கண்டோர் ஐயுறும்படியான
பேரெழிலுடன் விளங்கியது. அங்கே திருவவதாரம் செய்யப் போகிற (அரிஷ்ட) நேமி பகவானின் மகிமையினாலேயே,
முன் கூட்டியே இவ்வேற்பாடுகள் அனைத்தும் தேவேந்திரனால் நிறைவேற்றப்பட்டன என்று சொல்ல
வேண்டிய அவசியமில்லை. இவ்வளவுப் பேரழகுடன் விளங்கிய அப்பதியே 'துவாரகை' எனப் பெயர்
பெற்ற துவாரகாவதி என்னும் நகரமாகும். இது பன்னி ரண்டு யோசனை நீண்டும், ஒன்பது யோசனை
அகன்றும் இருந்தது எனப் பாண்டவர் புராணம் கூறுகிறது. இவ்வளவு பெரிய நகரப் பரப்பைக்
கண்ட, வாசுதேவன். பெருமகிழ்ச்சி கொண்டு, தம் குலத்தவர் அனைவரையும் ஆங்கு வருவித்து,
அம் மாளிகைகளில் குடியமர்த்தினான்.
--------------------------------
அடுத்து…
கிருஷ்ணன்
- ஜராசந்தன் போர்
வாசுதேவனின்
சித்தத்தை அறிந்து கொண்ட பகவான், அருட் பார்வையுடன் புன்முறுவல் பூத்தார். அவற்றையே
தான் அடைய விருக்கும் வெற்றிக்கு நன்னிமித்தங்களாகக் கருதி, மகிழ்வுடன் விடை பெற்றுக்
கொண்டு தம் பெருங் சேனையுடன் பயணத்தைத் தொடங்கினான். அவன் படைகளோடு, பாண்டவர் தம் சேனை
களும், ஜயன், விஜயன், சாரணன்,விராடன்,துருபதன்,விதுரன், உக்கிர சேனன் முதலான அரசர்தம்
சேனைகளும் சேர்ந்து கொண்டன. சிலநாள் பயணத்திற்குப்பிறகு அவர்கள் யாவரும் குருக்ஷேத்திரம்
வந்து அடைந்தனர். ஜராசந்தனும் தன் அளப்பருஞ் சேனைகளு டனும், பீஷ்மர், துரோணர், கர்ணன்,
அசுவத்தாமன், துரியோதனன், ஜயத்ரதன், முதலான பேரரசர்களின் படைகளுடனும் புறப்பட்டு வந்து
குருக்ஷேத்திரம் அடைந்தான்.
இவ்வாறு
போருக்குச் சித்தமாகிப் போர் முனையில் எதிரெதிர் வந்துநின்ற இரு திறத்தாரும், ஒருவருக்கொருவர்
பயங்கரமாக மோதிக் கொண்டனர். ஆங்கு நேரிட்ட உயிர்ச் சேதங்கட்குக் கணக்கில்லை. குருதியாறு
பெருக்கெடுத் தோடியது.இப்போர் வெகுகாலம் நடைபெற்றது. இறுதியில், ஜராசந்தன் படைகள் கடும்
போரிட்டு தோல்வியைத் தழுவின. இதைக் கண்ட ஜராசந்தன் இறுதியில் கொடிய சினத்தோடு தன் சக்கராயுதத்தை
வாசுதேவன் மேல் ஏவினான். அச்சக்கரம் வாசுதேவனை வலமாக வந்து அவனது வலக்கையில் வந்து
பொருந்தவும். அவன் அதனை வாங்கி ஜராசந்தன் மீதே ஏவினான். அது அவன் உடலைப் போழ்ந்து மீண்டது.
பிரதிவாசுதேவனாகிய ஜராசந்தன் இவ்வாறு உயிர் துறந்தான்.
வாசுதேவன்
சக்கரவர்த்தி ஆதல்
இதன்பின்,
வாசுதேவன் எண்டிசையிலுமுள்ள பல நாடுகள் மீது படையுடன் சென்று, தன்னை எதிர்த்த பகை மன்னரை
எல்லாம் வென்று, அவர்கள் அளித்த அவர்கள் கப்பம் கொண்டு, துவாரகைக்கு மீண்டு வந்தபின்,
தேவ வித்தியாதர மன்னராலும், தம்குலத்து முன்னோராலும் மணிமகுடம் சூட்டப்பட்டு, அர்த்த
சக்ரவர்த்தி (மூன்று கண்டங்கட்கும் தலைவன்) எனப் புகழப்பட்டு, சிறப்போடு வாழ்ந்தான்.
இவ்வாறு
முற்பிறவியின் நல்வினைப் பயனாய், பலதேவ வாசுதேவர்கள் இருவரும் தாம் விரும்பிய சுக போகங்களை
இனிதின் அனுபவித்து வரும் நாட்களில், ஸ்ரீ நேமி குமாரனின் திறத்தே. ஒரு குறிப்பிடத்தக்க
நிகழ்ச்சி நடந்தது.
நேமி
குமாரனின் நீர் விளையாட்டு
ஒரு
நாள் நேமி குமாரன் வாசுதேவனின் பட்ட மகிஷியரில் ஒருத்தியான சத்திய பாமையுடன் மனோகரம்
என்னும் பொய் கையில் நீர் விளையாட்டு நிகழ்த்திக் கொண்டிருந்த போது, அவ்விருவருக்கும்
ஏற்பட்ட போட்டியில், சத்திய பாமை தோற்றுப் போக, நேமி குமாரன் வெற்றி பெற்றார். ஆயினும்,
முன்னதாக ஒப்புக் கொண்டபடி, பந்தய நிபந்தனைக்குக் கட்டுப்பட்டு நடக்க வெட்கமுற்ற சத்தியபாமை,
நேமிகுமாரனை நோக்கி, "நீ என்ன திரிவிக்கிரம் செய்த மகா புருஷனோ?" என்று பரிகசித்தாள்.
நேமி
குமாரனின் மூன்று சாதனைகள்
(திரிவிக்ரமம்)
நேமி
குமாரன் இதைக் கேட்டு 'அவ்வாறே செய்து காட்டுவேன்' என்று கூறி, முன்பொருமுறை வாசுதேவன்
கம்சனது மதுராபுரியில் செய்தது போல, இந்திரன் கோயிலில் புகுந்து நாக சயனத்தின்மேல்
ஏறிநின்று சங்கினை வாய் வைத்து ஊதி, வில்லினை ஏறிட்டு வளைத்தார்.
எல்லாரையும்
திடுக்கிட வைத்த அந்த சங்கின் முழக்கொலி
துவாரகை
நகரம் முழுதும் எதிரொலித்த போது, மாட மாளிகைகள்
அதிர்ந்தன;
யானைகள் கட்டுத்தறியை முறித்துக் கொண்டு அஞ்சி ஓடின. அது சமயம் சபா மண்டபத்திலிருந்த
வாசுதேவன். பிரமிப்புடன் 'இது என்ன?' என்று கேட்க, ஏவலர் "நேமி குமாரர் திரிவிக்கிரமம்
செய்தார்" எனக் கூறக் கேட்டு வியப்படைந்தான்.
பேராற்றலும்
தேகபராக்கிரமும் மிகுந்த குமாரருக்கு விரைவில் திருமணம் செய்விக்க வேண்டும்' எனத் தீர்மானித்து
உத்ரவம்சத்து உக்ரசேன மன்னனுக்கும், ஐயவதிக்கும் மகளான இராஜமதி என்னும் கன்னிகையைக்
குமாரனுக்கு மணம் புரிவிக்க நிச்சயித்து அதற்கான ஏற்பாடுகளை விரைவில் தொடங்கிடக் கட்டளை
இட்டான்.
கிருஷ்ணனின்
தந்திரம்
மணநாளும்
நெருங்கியது. அப்போது கிருஷ்ணன் எண்ணினான். மிகுந்த பலபராக்கிரமசாலியான நேமி குமாரருக்கு
திருமணம் முடிந்ததும், ஆட்சிப் பொறுப்பில் சர்வ வல்லமையுடன் அவர் அமர்வாரேயானால், நமது
அரசின் பெருமையும், புகழும், வலிமையும், அவரெதிரில், சூரியன் முன் நிற்கும் சந்திரனைப்
போல அன்றோ, ஒளி குன்றிப் போகும்? அன்றியும் அவருக்கு அடங்கிய சிற்றரசாக அன்றோ, நாம்
இருக்க நேரிடும் என்றெல்லாம் எண்ணி அழுக்காறுற்ற வாசுதேவன், இத்திருமணத் திற்கு முன்,குமாரனுக்கு
எவ்வாறேனும் வாழ்க்கையில் வெறுப்பு தோன்றும்படி செய்துவிட வேண்டும் எனச் சிந்தித்தான்.
அதன் படியே காட்டிலிருந்து பலவகை விலங்குகளைப் பிடித்துவரச் செய்து, அவற்றைப் பிணைத்து
திருமணநாளின் முதல் நாள் நகரின் வீதிகளிலே கூட்டம் கூட்டமாக அடைத்தான்.
இந்
நிலையில் ஸ்ரீ நேமி குமாரன், தம்மைச் சிறந்த அணி மணி களால் ஒப்பனை செய்து திருமணக்
கோலம் பூண்டு மணமகனாகத் தேரிலேறி, நகரின் வீதி வழியாக வழியாக வந்த போது, பாது, வீதிகளில்
கதறிக் கொண்டிருக்கும் விலங்குகளைக் கண்ணுற்று "இதற்கு என்ன காரணம்?" என்று
கேட்க பணியாளர்கள், "சுவாமி! நீங்கள் இவற் றோடு விளையாடல் புரிவதற்காகவே, சக்கர
வர்த்தியால் இவைகள் தருவிக்கப்பட்டன" என்று கூறவும், கருணைக் கடலான நேமி குமாரன்,
அவ் விலங்கினங்களின் துன்பம் கண்டு மனமிரங்கி அப் பொழுதே வைராக்கியமென்னும் மலர், உள்ளத்
தடாகத்திலே அரும்பிட நகர்வலத்தைக் கைவிட்டு, அடைக்கப்பட்ட விலங்கு களை விடுவிக்கச்
செய்துவிட்டு மாளிகைக்குத் திரும்பினார்.
பரிநிஷ்க்ரமண
தீட்சாக் கல்யாணம்
அந்த
கணமே, பிரம்ம கல்ப வாசிகளாகிய லௌகாந்திக தேவர்கள் அவர்முன் தோன்றி வணங்கி நின்று,
"சுவாமி! பொய்க் காட்சி என்னும் கடும் வெப்பத்தால் வாடிக்கிடக்கும் இவ்வுலக உயிர்களை,
அறமென்னும் அமுத மழை பொழிந்து காத்தருள வேண்டிய நற்காலம் தங்களுக்கு இன்று கிட்டியுள்ளது;
இது துறவுக் குரிய காலம் என்று பணிவுடன் விண்ணப்பித்துக் கொண்டனர்.
நேமி
குமாரரின் உள்ளத்தில் துறவு பூணும் துணிவு துளிர்த்து உரம் பெற்றது. தேவேந்திரன், பரிநிஷ்க்ரமான
கலியாணத்தை (துறவுக்குப் புறப்படுதல் கலியாணம் ) அளவுகடந்த பக்தியுடன் செய்தபின், நேமி
குமாரன் தேவகுரு எனும் பல்லக்கில் ஏறி அமர்ந்தார். ஆங்குக் கூடியிருந்த முடி மன்னர்களே
முதன் முதலாகச் சிவிகையைச் சுமந்து செல்லும் பேறு பெற்றனர். பின்னர் அதை வித்தியாதரர்கள்
வாங்கிச் சிறிது தூரம் சுமந்தனர். அவர்க்குப் பிறகு தேவர்கள் அதை வாங்கிச் சுமந்தவராய்,
வான் வழியாகச் சகஸ் ராம்ரவனம் (மாவாயிரஞ் சோலை) என்னும் உத்தியான வனத்திற்கு எடுத்துச்
சென்றனர்.
அவ்வமயம்
சௌதர்மன் வெண்குடை பிடித்துவர, சனத்குமார மாகேந்திரர்கள் சாமரம் வீச, படகமென்னும் இசைக்
கருவி தானே முழங்கியவாறு முன்னே செல்ல, திசை பாலகியர் மங்கலப் பொருள்கள் ஏந்திவர, மந்த
மாருதம் மெல்லென வந்துலவ, மலர்மழை பொழிந்திட, இவ்வகை சிறப்புகளுடன் வனத்திற்கு எழுந்தருளிய
நேமி குமாரர், ஆங்கு குளிர் தருக்களிடையே இருந்ததோர் தூய்மையான படிகப் பாறையில் ஏறி
கிழக்குமுகம் நோக்கி அமர்ந்தார்.
பிறகு,
தாம் அணிந்திருந்த ஆடை அணிகலன்களையும் மாலைகளையும் நீக்கித் திகம்பரத் திருக்கோலம்
பூண்டார். அதன்பின் சித்தபரமேஷ்டிகளுக்கு வணக்கம் கூறி, தம் தலைக் கேசங்களை ஐந்து தொகுதிகளாக
பிரித்து, ஒவ்வொரு கேசத் தொகுதியையும், சிறிதும் வருத்தமின்றித் தம் கைகளாலேயே வாங்கி,
தேவர்களால் நீட்டப்பட்ட பொன் தட்டில் இட்டார். முன்பே, பசுவானால் களைந்து வைக்கப்பட்ட
ஆடை அணிகலன்களை, இக் கேசங் களுடன் ஏற்று தூய வெண்ணிற ஆடையினால் மூடி எடுத்துச் சென்று
தேவர்கள் பாற்கடலில் இட்டுப் புனித நிலை எய்தினர்.
இவ்வாறு
பசுவானுக்குத் தீட்சா கல்யாணம் என்னும் மூன்றாவது மணத்தை முடித்தபின் தேவர்கள் தமதுலகம்
சேர்ந்தனர்.
பகவான்
ஆறுநாள் உண்ணாநோன்பு (சஷ்டோபவாசம்) புரிந்து, ஆவணி மாதம், வளர்பிறை சஷ்டி திதி சித்திரை
நட்சத்திரம் பிற்பகலில் ஆயிரம் மன்னர்களுடன் தீட்சை ஏற்றருளினார். தீட்சா கலியாணத்தை
கண்குளிர கண்டு மகிழ்ந்த தேவர்கள் தமதுலகம் சேர்ந்தனர். துறவுக் கலியாணம், மஹா பிரஸ்தானம்
என்றும் அழைக்கப்படும். அப்பொழுதே முகை அவிழும் மலரில் மணம் தோன்றுவது போல நேமி நாதர்க்கு
'மனப்பரியம்' என்னும் நான்காவது ஞானம் தோன்றியது.
முதல்
பாரணை
ஆறாம்
நாள் உண்ணா நோன்பு முடிவுற்றதும், துறவியர்க்கு ஆகார தானம் அளிக்கும் கடமைகளை இல்லறத்தார்
அறிந்திடவும் முனிவர்தம் பெருமையை உலகத்தோர் உணர்ந்திடவும் பகவான் துவாரகை நகரின் வீதியில்
மௌனதாரியாகி நடக்கத் தொடங் கினார். அப்பொழுது வரதத்தன் என்னும் மன்னன் முனிவரை எதிர்கொண்டு
வரவேற்று அழைத்துச் சென்று தனது மாளிகையில் வைத்து, தூய ஆகாரம் அளித்து ஐவகை அதிசயங்களையும்
அடைந்து அனைவராலும் புகழப் பட்டான்.
கேவல
ஞானக் கல்யாணம்
பகவான்
இவ்வாறு, தீட்சை பெற்றது முதல் கேவல ஞானம் அடையும் வரையிலான இடைப்பட்ட (சத்மஸ்த காலம்)
ஐம்பத்தாறு நாட்களும் கடந்த பின் 'ரைவதகம்' என்னும் மலையின் சாரலில் மூங்கிற் புதரின்
கீழ் எழுந்தருளியிருந்து, கடுயோகம் சாதித்தருளி, ஐப்பசித் திங்கள் வளர்பிறை சித்திரை
நட்சத்திரப் புனித நாளின் முற்பகலில், காதிவினை நான்கும் கழன்றோட, கேவல ஞானம் என்னும்
முழுதுணர் வாலறிவைப் பெற்றார். இதுவே பசுவானின் நான்காம் கல்யாணம் எனப்படும் கேவல ஞானக்
கல்யாணம் ஆகும்.
அப்பொழுதே
தம் அவதி ஞானத்தால் அதை அறிந்து ஆங்கு வந்து கூடிய தேவ தேவேந்திரராதியோர், பகவானுக்குக்
'திருவறநிலையம்' என்னும் சமவ சரணம் அமைத்துக் கேவலஞான கல்யாண பூஜையினைச் சிறப்புற நடத்தி
பாதசேவை செய்தவராய் அடிநிழல் நீங்காதிருந்தனர்.
ஸ்ரீ
விஹாரம் செய்தல்
வரதத்தர்
முதலான கணதரர் பதினொருவருடன் கூடிய பன்னிரண்டு கணங்களுமடங்கிய சமவசரண வைபவத்தோடும்
பகவான் நேமி நாதர் எல்லா தருமத்தலங்களுக்கும் சென்று (ஸ்ரீ விஹாரம் செய்து) அறவுரை
ஆற்றி வந்தார். இவ்வாறு பகவான் அறுநூற்றுத் தொண்ணூற்றொன்பது ஆண்டும், பத்து மாதமும்
நான்கு நாட்களுமாகிய கேவலி காலமெல்லாம், உலக உயிர்கள் உய்யும் வண்ணம் உயர் நல்லறங்களை
உபதேசம் செய்தருளினார்.
கதைகளோ
ஏராளம்!
பவ்விய
நெஞ்சங்களே! மேற்குறிப்பிட்டபடி ஸ்ரீ நேமி பகவான் சமவ சரண வைபவங்களோடு ஸ்ரீ விஹாரம்
செய்து வரும் காலத்தில் அவர்தம் முதல் கணதரராக இருந்து,திவ்யத் தொனியின் உள்பொருளை
அனைவருக்கும் வெளிப்படுத்தி வந்தவர் 'வரதத்தர்' என்னும் கணதரராவர். ஹரி வம்சத்து மன்னர்களும்
குருகுலத்து வேந்தர்களும் ஸ்ரீ நேமி பகவானின் சமவ சரணத்திற்கு வரும் போது அவர்கள் கேட்டுக்
கொண்டதற்கு இணங்க, அவர்கள் தம் முற்பிறவி வரலாறுகளையும், வருங்கால நிகழ்ச்சிகளையும்,
பகவானின் திவ்யத் தொனியால் அறிந்து அவர்களுக்கு உரைத்தவரும் இக்கணதரரே ஆவார் என்பதை
நாம் அறிதல் வேண்டும். கிருஷ்ணனின் தாயாகிய தேவகி, அவன் மனைவியராகிய சத்தியபாமை. ருக்மணி,
ஜாம்பவதி சுசீமை, லஷ்மணை, காந்தாரி, கௌரி, பத்மாவதி ஆகியோர் தம் முன்பிறவி வரலாறுகளும்,
இவ்வாறு உரைக்கப்பட்டனவே. அன்றியும் பல தேவனது வேண்டுகோளுக்கு இணங்கி, வாசுதேவனின்
முற்பிறவிக் கதைகளும், எதிர்காலத்தில் நிகழப் போகும் நிகழ்ச்சிகளும் அவனின் புதல்வர்களான
பிரத்யும்தன், சம்பவன், சுபானு, ஜரத்குமாரன், மற்றும் துவீபாயணன் ஆகியோரது முற்பவசரிதங்களும்,
பின்னைய நிகழ்ச்சிகளும் கூட வரதத்த கணதரரால் உரைக்கப்பட்டுள்ளன.
இவர்களில்
பிரத்யும்ன குமாரனது வரலாறு மட்டும், அழகிய கட்டுக் கோப்பும்,
கலை நயமும் கொண்ட செறிவான நிகழ்ச்சி களைக் கொண்டதாய், தனியொரு காவியம் புனையும் அளவிற்குச்
சிறந்த கதைப் பாத்திரங்களைக் கொண்டதாய் உள்ளது என்று கூறினால் மிகையாகாது. நிற்க, பாண்டவர்
ஐவர் வரலாறுகளும், குந்தி, மாத்ரி, ஆகியோரது முற்பிறவி மற்றும் எதிர்கால சரிதங்களும்
கூட இவ்வாறே கணதரரால் உரைக்கப்பட்டு, நேமி நாதர் புராணத்தின் பெரும் பகுதியை நிறைத்துக்
கொண்டுள்ளன.
கிருஷ்ணன்
மரணமும் துவாரகை அழிவும்
அன்பு
நேயர்களே! எப்படிப்பட்ட கதையாக இருப்பினும் 'முடிவு' என்பது ஒன்று இருந்தே தீரும் அல்லவா!
தன் செயற்கரிய செயல் களால் இவ்வுலகில் புகழை நிலை நாட்டிச் சென்ற, பேரரசர்கள் எத்துனைபேர்?
அவர்களெல்லாம் இன்று எங்கே? என்னும் சிந்தனை நம் ஒவ்வொருவர் உள்ளத்திலும் நிலைபெற்றிருக்குமானால்,
தன்னிகரற்ற பெரு வீரனாகி, தரணி முழுதும் தன் ஒரு குடைக் கீழ் ஆண்ட கிருஷ்ணனின் முடிவை
இப்பொழுது நாம் அறிந்து கொள்ளும் போது, 'துணுக்கம்' ஏற்படாது அன்றோ?
ஆம்;
அந்த, அர்த்த சக்ரவர்த்தி பதம் பெற்ற கிருஷ்ணன் அவன் மகன் ஜரத்குமாரனால் (அறியாமல்)
வீசப்பட்ட கணையினால் மரணமெய்தி, முதல் நரகம் புகுந்தான். அவனால் ஆளப்பட்ட தேவ நிருமிதமான
துவாரகை நகரம், துவீபாயண முனிவனால் எரிந்து போனது. இவ்விரு துயர நிகழ்ச்சிகளும் கூட
இவ்வாறுதான் நிகழுமென முன்பாகவே கணதரரால் அறிவிக்கப்பட்டவையே!
இவைகளெல்லாம்
ஸ்ரீ நேமிபட்டாரகரது சமவ சரண தருமோபதேச கால எல்லைக்குள்ளேயே நடந்து முடிந்து போன நிகழ்ச்சிகளாகும்.
துறவு!
துறவு!! துறவு!!!
இவ்வாறிருக்க,
முற்பிறவியில் செய்திட்ட நல்வினைப் பயனால், கிருஷ்ணன் என்னும் தோணியைக் கொண்டு, துரியோதனாதியர்
என்னும் துடுப்பால் கரை கடந்தேறிய பாண்டவர்கள், துவீபாயண குமாரனால் துவாரகை எரிந்து
போனதையும் ஜரத் குமாரன், கிருஷ்ணனின் மரணத்திற்குக் காரணமாயிருந்ததையும், இச் சோக நிகழ்வுகளைக் கண்டு வெறுப்புற்ற
பலதேவன் தீட்சை மேற்கொண்டதையும் அறிந்து, மனம் வெதும்பி, முடி மன்னர் பலர் புடை சூழ
தாமும் துறவு பூண்டனர்.
இவர்களைப்
போலவே, குந்தி, மாத்ரி, சுபத்திரை திரௌபதி ஆகியோரும் கூட இராஜமதிகளிடம் துறவு பூண்டு,
தவமியற்றி, இறுதிக் காலத்தில் இவ் வுடலத்தை உதறியெறிந்து விட்டு அச்சுத கல்பம் சேர்ந்தனர்.
துறவு
பூண்ட பாண்டர்கள், தவமகிமையால் பலரித்திகளையும் அடையப் பெற்றனர். ஸ்ரீ நேமி பகவானின்
ஸ்ரீ விஹார காலத்தில், ஒருநாள் சத்ருஞ்சய பர்வதத்தில் யோகத்தில் நின்ற போது, துரியோதனின்
மருமகனான குர்யவரன் என்பவன் இவர்களைக் கண்டு, தன் மாமனது அழிவிற்கு இவர்களே காரணம்
என்னும் நினைவு வர, அதனால் எழுந்த பகை உணர்வினால், அதிக சினங்கொண்டு பழுக்கக் காய்ச்சிய
இரும்பு ஆபரணங்களை இவர்கள் உடம்பில் பூட்டித் துன்புறுத்தினான். அப்போதும் அவர்கள்
சிறிதும் தளர்ச்சியடையாமல், சுக்கிலத் தியான மகிமையால், எல்லாக் கருமங்களையும் நாசம்
செய்து, முக்தி பதம் அடைந்தனர். இவர்களில் நகுல, சகாதேவர் இருவரும் தம் தவ வலிமையால்
சர்வார்த்த சித்தியை அடைந்தனர்.
பிரமதத்த
சக்ரவர்த்தி
ஸ்ரீ
நேமி பகவானின் சந்தான காலத்தே தோன்றி சக்கர வர்த்தியாக விளங்கியிருந்த பிரம தத்தன்
என்பவன் வரலாறு சுருக்க மாகக் கூறப்படுகிறது. சண்டாளர் குலத்திலே பிறந்த சம்பூதன் என்பவன்
தான் பிறந்த குலத்தின் இழிதகைமைக்கு நாணித் தன் உடன் பிறந்தானுடன் சென்று தவம் செய்து
கொண்டிருந்தபோது, அரச விபவங்களோடும் சென்று கொண்டிருந்த ஒரு பேரரசனைக் கண்டு, தான்மறுமையில்
அவ்வண்ணம் ஆக வேண்டும் என்னும் நிதான சல்யத்தனாகி இறந்துபோய், காம்பில்ய நகரத்து அரசனுக்குப்
'பிரம தத்தன்' என்னும் மகனாகப் பிறந்து, முன் செய்த நல்வினையின் பயனாகச் சகல சக்ரவர்த்தியாகி
ஷட்கண்ட மண்டல சாம்ராஜ்ய சுகம் அனுபவித்து, பின், இறந்து, புண்ணியக் குறைவால் ஏழாம்
நரகம் சேர்ந்தனன் என்று அவன் வரலாறு முடிவடைகிறது. சக்கர வர்த்திபன்னிருவரில் இவனே
இறுதியானவன் ஆவான்.
ஸ்ரீ
நேமி பகவான் பரிநிர்வாண கல்யாணம்
ஸ்ரீ
நேமி பகவான் தமது கேவலி காலமெல்லாம் அறமழை பொழிந்து முடித்தபின், இறுதியில் ஒரு மாதம்
சமவ சரண விபூதிகளைத் துறந்து ஊர்ஜயந்த மலைமிசை சென்று,படிமை போல் அசையாது நின்று ஆன்ம
தியானத்தில் மூழ்க, எஞ்சிய அகாதிவினைகள் நான்கும் இரிந்தோடிட, ஐந்நூற்று முப்பத்து
மூன்று தவமுனிவர்களுடன் ஆடி மாதம்,வளர்பிறை, சப்தமி திதி, சித்திரை நட்சத்திர நன்னாளின்
முன்னிரவில், முக்தியாகிய அபவர்க்க பதமடைந்து பரிநிர்வாண கல்யாணத்தைச் சாதித் தருளினார்.
அப்பொழுதே
அமரர் உலகம் முழுதுமே போந்து பகவானின் ஆன்ம கல்யாண பூஜையை கொண்டாடி இன்புற்றுச் சென்றது.
இதுவே பரிநிர்வாண மென்னும் ஐந்தாம் கல்யாணமாகும்.
ஈண்டு
ஸ்ரீ நேமி பகவானின் ஐந்து திருக்கல்யாணங்களும் சித்திரை நட்சத்திரப் புனித நாளன்றே
நிகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு
பகவான், பிரதிமா யோகதாரியாகத் திருவடியூன்றி நின்ற ஊர்ஜயந்தி; இந்நாள் 'கிர்நார்' என
அழைக்கப்படுகிறது.
முடிவுரை
எவன்
ஒருவன், வித்தியாதர மன்னனுக்குச் சிந்தாகதி என்னும் புதல்வனாய் பிறந்து, இளமையிலேயே
துறவு பூண்டு, பின் மாகேந்திர கல்பத்தில் தேவனாகச் சென்று பிறந்து பின்னர் அபராஜிதன்
என்னும் மன்னனாக, நிலவுலகம் போந்து, அரச போகம் துறந்து, அச்சுத கல்பத்தில் இந்திரனாகச்
சென்று தோன்றி. மீளவும் இப்பூவுலகம் வந்து சுப்ரதிஷ்டன் என்னும் அரசனாகித் துறவறம்
ஏற்று, அகமிந்திர லோகம் புகுந்து அமரசுகம் துய்த்து, முன் ஈட்டிய தீர்த்தங்கர நாம கர்ம
புண்ணியத்தனாகி, சமுத்திர விஜயனுக்கும் சிவதேவிக்கும் நேமி ஜினபதியாய் தோன்றி, உயிர்கள்
உய்ந்திட வழி காட்டினானோ, அப்படிப்பட்ட ஸ்ரீ நேமி பகவான் நமக்கெல்லாம் உதாரண புருஷராக விளங்கட்டும்.
---------------------------
-
No comments:
Post a Comment