சமண தெய்வங்கள்



சமண தெய்வங்கள் 





யாரொருவர் தானே ஆன்மவிடுதலையடைந்து முக்தி பெற்றவரோ,
அவரே  விடுதலைக்கான பாதையை விளக்குகிறாரோ மற்றும்
பிறரும் அவரைப்போல் ஆக உத்வேகம் அளிக்கிறார்.


இம்மூன்று காரணங்களை மனதில் நிலைநிறுத்தியே சமணர்கள் தம் தெய்வங்களை வணங்குகிறார்கள்.


உலகியல் துன்பத்திலிருந்து தான் விடுதலைபெறுவதையே இலக்காக கொண்டுள்ளனர் சமணர்கள். ஜினர்களே முக்தஜீவன்கள், பெளதீக உடல்களை விலக்கி உலக உச்சியிலுள்ள சித்தலோகத்தில் உறைகின்றனர். மோட்சமார்க்கத்தின் சாத்தியகூறுகளை நினைவுகூறும் முகமாகவே ஜினப்பிரதிமைகள் நிறுவப்பட்டுள்ளன.


அதாவது முக்தி இலக்கிற்கான வாழ்க்கை நெறிமுறை குறியீடுகளையும், விடுதலைப்பேறு அனைவருக்கும் சாத்தியமே என்பதை நினைவுகூற வழிவகுக்கவே ஜினர் சிலை வடிவில் நிறுவப்பட்டுள்ளன.


ஆனால் உலகத்திலிருந்து விடுதலைப் பெற்ற சித்தர் அப்பிரதேசத்திலிருந்து திரும்பி வருவது அசாத்தியமான ஒன்றுதான். அவற்றை அறிந்திருந்தும் பிரதிமைகளை முக்திக்கான குருவாக ஏற்று பக்தர்கள் வழிபடுகின்றனர். எவ்வாறு ஏகலைவன் என்ற சீடன் துரோணரின் சிலையை வடித்து குருவாக பாவனை செய்து தனூர் வித்தையில் வித்தகன் ஆனானோ; அவ்வழியே இவற்றிக்குப் பொருந்தும். அந்நோக்கத்தில் பக்தர்களுக்கான வழிபாட்டு முறைகளே ஆச்சார்யர்களால் சரியாக வகுக்கப்பட்டு தரப்பட்டுள்ளன.


ஜினரை நேரில் கண்டு வணங்கி பூஜை செய்யும் பாவனையே ஜினப்பிரதிமைகள் வழிப்பாட்டின் வழிமுறையாகும். வணங்குபவரும் வணக்த்திற்குரியவராக உயர்வதே சமண வழிபாட்டின் நோக்கம்.


சமணத்தில், கி.மு இரண்டாம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்து கி.பி, மூன்றாம் நூற்றாண்டு வரை முதல் கட்டமாக ஜினர் சிலைகள் வடிக்கப்பட்டு வணங்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் ஐந்தாம் நூற்றாண்டில் சில மாற்றங்கள் செய்யப்படுள்ளது. ஐந்தாம் காலத்தின் முடிவிற்கு பின்னர் யக்ஷ, யக்ஷியர் வழிபாடுகளுக்கான வடிவங்களுடன் பல ஜினாலயங்கள் உருவாக்கப்பட்டு, பாரதத்தில் வணங்கத் தொடங்கியுள்ளனர்.


தமிழகத்தில் சிதறால், கழுகுமலை, ஆண்டிமலை, சீயமங்கலம், அனந்தமங்கலம் போன்ற குகைப்பள்ளிகளிலும் ஜினர் சிற்பங்களுடன், யக்ஷ, யக்ஷியர் புடைப்புச் சிற்பங்களும் அங்கு வாழ்ந்த முனிவர்களால் வடிக்கப்பட்டுள்ளதை தற்போதும் காணலாம். மேலும் பல இடங்களில் உள்ளவை தற்காலத்தில் அழிக்கப்பட்டிருக்கலாம் என்பதையும் ஆராய்ச்சியாளர்கள் பலர் தெரிவிக்கின்றனர்.


அதன் பின்னர் குகைகள் இல்லாத பகுதிகளிலும் சமவசரணத்தை நினைவு கூறும் முறையில் கற்பலகையில் ஜினர், யக்ஷ, யக்ஷியர் உருவங்களை செதுக்கி, வேதிகையில் நிறுவி வணங்கும் முறையும் இருந்துள்ளதை தற்காலத்தில் வழிபாட்டில் உள்ள சிற்பங்களும், மத துவேஷத்தில் அழிக்கப்பட்ட ஜினாலயங்களின் இடிபாட்டில் தப்பிய ஜினர் சிலைகளும், இயக்கியர் (யக்ஷ) சிற்பங்களும் காணப்படுகின்றன. இந்துக்களின் தேவியரின் ஒத்த சமண, பெளத்த இயக்கியர்களின் சிலைகளை சில மாறுதல்கள் செய்து தமது வழிபாட்டிற்கும் வகை செய்துள்ள செய்திகளையும் நாம் காண்கிறோம்.


மேலும் தமிழகத்தில் ஜினப்பிரதிமைகள் சன்னதிகளுடன் யக்ஷ, யக்ஷியரின் சன்னதிகளும் பெரும்பாலான ஜினாலயங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. பெரும்பாலும் ஆயிரம் அண்டுகளைக் கடந்த ஜினாலயங்களில் ஜினரும், ஸ்ரீகூஷ்மாண்டினி (தர்மதேவி) சிலையும், பின்னர் ஸ்ரீபிரம்மதேவர் சிலைகளும், அதன்பின்னர் காவற்தெய்வமான ஸ்ரீக்ஷேத்ரபாலகர் சிலைகளூம் நிறுவப்பட்டு வழிபாட்டில் உள்ளது.


அவை மூல தெய்வத்திற்கு இணையாக கருதப்படா விட்டாலும், ஜினரை கண்டும், அவரை வழிபட்டவராகவும் மதிக்கப்பட்டு அவ்வுருவச்சிலைகளும் நிறுவப்பட்டுள்ளன.


தொடக்ககால ஆகமங்களான ஸ்தானங்கசூத்ரா, உத்ராயண் சூத்ரா, பகவதிசூத்ரா, தத்வார்த்தசூத்ரா, அந்தகதசாசெளசூத்ரா மற்றும் பெளமக்ரியா க்களில் பெருமளவில் யக்ஷ, யக்ஷயரிகளைப் பற்றிய குறிப்புகள் நிறைய காணப்படுகின்றன.


உலகியல் பற்றுடைய அவர்கள் பிறவி உயிராக அதாவது பிறப்பு, இறப்பு சுழற்சி நிலையில் நம்மைப்போன்றவர்களே. யக்ஷர்கள் ஆண்பாலாகவும், யக்ஷியர் பெண்பாலர்களாகவும் அழைக்கப்பட்டனர். அவர்களை சாசன தேவர்கள், சாசன தேவியர்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர்.


காவற்தெய்வங்கள் என்றும் சுட்டப்பட்டுள்ளனர். வியந்தர தேவர்களில் ஒரு பிரிவைச் சேர்ந்த இவர்கள் அமானுஷ்ய சக்தியும், உருமாற்றம் செய்துகொள்ளும் வல்லமையும் பெற்றவர்கள். இந்த யக்ஷ, யக்ஷயரையே ஜினருக்கான பாதுகாப்பை அளிக்க இந்திரனாலும், ஜினருடன் முன் ஜென்மங்களில் ஏற்பட்டிருந்த நல்உறவின் காரணமாகவும் நியமனம் செய்யப்படுகின்றனர். தீர்த்தங்கரரான ஜினர்களுக்கு இவர்களால் எந்த ஒரு பாதுகாப்பும் தேவைப்படாவிடினும், ஜினதர்மத்தை கடைபிடித்து முக்தி  நெறிப் பாதையில் ஏற்படும் இடர்களிலிருந்து அவர்களை பாதுகாக்கும் பணியை ஏற்கின்றனர்.


ஜினதர்மம் தழைத்தோங்கும் நோக்கத்துடன் தீர்த்தங்கர பகவான்களின் முக்திப்பாதைக்கு அவர்கள் எதிர்நோக்காமலே உறுதுணையாய் இருந்த காரணத்தினாலே சமணர்கள் சாசன தேவதைகளை நிறுவி வணங்கி வந்துள்ளனர். பொதுவாக யக்ஷர்கள் ஜினருக்கு வலது புறத்திலும், யக்ஷியர் இடது புறத்திலும் காட்சியளிக்கும் முகமாக காணப்படுகிறது.




சமவசரணத்தை நினைவுகூறும் முகமாகவே ஜினாலயங்கள் அமைக்கப்படுகின்றன. அவ்வகையில் எந்த ஒரு ஜினாலய  அமைப்பிலும் தீர்த்தங்கர பீடங்களுக்கு மேலாகவோ, இணையாகவும் பிற தெய்வ உருவங்கள் அமர்த்தப்படவில்லை. ஒரு படிநிலை கீழாகவே, வணங்கும் வரிசை கிரமம் அறிய ஏதுவாக  அமைக்கப்பட்டிருக்கின்றன.


மேலும் பகவான்களுக்கு தீங்கிழைத்த யக்ஷர்களைப் பற்றிய குறிப்புகளும் புராணங்களில் குறிப்புகள் உள்ளன. சுல்பானி யக்ஷன் ஸ்ரீமஹாவீரரின் தவவாழ்வின் தியானத்தில் அமர்ந்தபோது இடையூறுகள் செய்தது போன்று மற்ற தீர்த்தங்கரரின் சரிதத்திலும் குறிப்புகள் உள்ளது.


அதுபோன்று ஜினதர்மத்தினை கடைபிடிப்போருக்கு தீங்கிழைக்கும் நோக்கத்தில் உள்ள தேவர்களின் உருவங்களை வணங்கி  மரியாதை செலுத்தும் வழக்கம் சமணத்தில் இல்லை.


மேலும் தமது விருப்பு வெறுப்புகளுக்கு உதவிடக் கோரி, இவ்வுலகியல் சார்ந்த தேவைகளுக்காக; பொருள், செல்வம், பதவி, புகழ் போன்றவற்றிற்காக  வேண்டி வணங்கும் பழக்கத்தையும் சமணம் ஆதரிக்கவில்லை.


(அதற்குரிய ஏற்பாட்டின் யந்திர அமைப்பு முறையும் ஜினாலயங்களில் இல்லை. அமைப்பில் இல்லா தந்திர, மந்திர முறைகள் எந்த முன்னேற்றத்திற்கும் வழிவகுக்காது.)


தீர்த்தங்கரரின் விடுதலைபேற்றை நோக்கிய தவவாழ்வில் அவர்களுக்கு உறுதுணையாக இருந்த காரணத்திற்காகவே வணங்கும் பழக்கம் உள்ளது.


ஜினரின் அஹிம்சைவழி தவவாழ்வை கடைபிடித்து முத்தி இலக்கிற்கான பாதையில் பயணிக்கும் போது தமக்கும் அவர்கள் உதவிட முன்வருவர் என்ற காரணத்தை முன்னிருத்தி நற்காட்சி சிந்தனையுடன் வணங்கும் வழக்கம் ஏற்பட்டுள்ளது.


மேலும் சமவ சரணத்தில் வரும் சில காவற்தெய்வங்களையும் நினைவுகூறும் முகமாக, உதாரணமாக நாற்புர வாயிலில் பாதுகாவலாக நின்றிருந்த க்ஷேத்ர பாலகர் போன்ற உருவங்களை வணங்கும் முறையும் பிற்காலத்தில் தோன்றியுள்ளது.


அதன் பின்னர் சென்ற நூற்றாண்டில்  சமவ சரணத்தில் அறவுரை கேட்டறிந்த  ஜோதிஷ்க தேவர்களில், ஜோதிட கலை கோள் அமைப்பு முறையில் உள்ள, நவக்கிரஹதேவர்கள் வடிவமும் அதற்குரிய தீர்த்தங்கரரை அதிபதியாக ஏற்கும் விதத்தில் நிறுவப்பட்டுள்ளன.


அதுபோன்று ஜினதர்மத்தின் முதல் அங்கமான அஹிம்சை நெறியை கடைபிடித்து, ஜினர் வழியில் முக்தி அடைய முயற்சித்த புராண கதாபாத்திரங்களை உருவங்களாக, ஓவியமாக ஜினாலயங்களில் வடித்து வந்தாதால் அவர்களுக்கு மரியாதை நிமித்தமாக வணங்கும் வழக்கம் சமணர்களிடையே ஏற்பட்டுள்ளது.


பொதுவாக ஜினாயல அமைப்பில் அனைத்துயிர்களுக்கும் அறங்கூறும் மன்றமான சமவசரண அமைப்பை நினைவுகூறும் முகமாக, அனைத்துயிரும் உய்ய வழிவகுக்கும் த்யத்தொனியின் வழியே வழங்கிய ஜினபகவானை கருவறை வேதிகையில் நிறுவி, அவர் அஹிம்சைநெறி சார்ந்த தவவாழ்வில் உறுதுணையாய் இருந்த வியந்திர தேவர் பிரிவில் ஒருஅங்கமாக விளங்கும் யக்ஷ, யக்ஷியரையும் மேலும் அறங்கூறும் மண்டபத்திற்கு காவல்புரிந்த காவல் தெய்வங்களையும் சன்னதிகளாக அமைக்கும் பழக்கம் தொன்றுதொட்ட காலம் முதல் இருந்து வந்துள்ளது.




ஆலயங்கள் பிராமணிய கலைவடிவத்தில் கங்கர்கள், சாளுக்கியர்கள் மற்றும் பல்லவர்காலத்திலும் ஜினாலயங்கள் கட்டப்பட்டு வந்தது. பின்னாளில் ஹெளய்சளர்கள் ஆட்சிக்காலத்தில் திராவிட கலையில் கட்டப்பட்டு வந்தது. அதன் பின்னர் விஜயநகரபேரரசின் காலத்திலும், பிற்காலத்திலும் பஸ்திகள், ஜினாலயங்கள் திராவிட பாரம்பரிய கலைநுட்பத்தில் கட்டப்பட்டு வந்துள்ளது.

              
பாரதத்தில் பெரும்பாலான ஜினாலயங்கள் இந்து, பெளத்த ஆலயங்களின் மாதிரிவடிவத்திலேயே கட்டப்பட்டு வந்துள்ளது. அதே அழகியல் நெறிமுறைகள், கட்டட அமைப்பு விகிதக் தீர்மானங்கள், மேலோட்டமான கருத்துக்களைக் தெரிவிப்பதான மாதிரி வடிவங்கள் போன்றவை  மூன்று ஆலயங்களிலும் ஒத்திருக்கின்றன.


அவ்வழியில் சமணம் அஹிம்சை நெறியை போதிப்பதையே முதற்கண் நோக்கமாக கொண்டு ஜினாலயங்களும், சன்னதிகளும் அந்தந்த பிரதேச ஆலய வடிவமைப்பின் சூத்திரத்தின் படி, சரியான அளவுகளுடன் கருவறை, பிற சன்னதிகள், மேற்புர விமானகள், திருச்சுற்றுகள், நுழைவாயிற்கள், கோபுரங்கள் அனைத்திற்கும் பாதுகாப்பாக மதிற்சுவர்களும் திராவிட கலை பாரம்பரியத்தில் அமைத்து வணங்கும் வழக்கத்தை நாமும் கொண்டுள்ளோம்.


முக்திஇலக்கினை மனதில் இருத்தி அதற்கான எண்ணங்கள் ஏற்படும் முகமாக ஜினாலய அமைப்பிற்கு சென்று பகவானையும், பிற சன்னதி உருவங்களையும் வணங்கி குழம்பிய மனநிலை சமநிலையடைந்து அமைதியுறும் விதமான வழிபாட்டு முறைகளை அந்தந்த பிரதேசத்தில் வாழ்ந்த முனிவர்கள் ஏற்படுத்தி தந்துள்ளனர். அவ்வழியே அந்தந்த தெய்வங்களை வணங்கியும் நம் முன்னோர்கள் அமைதியடைந்துள்ளனர்.


அதனால் தமிழக முனிவர்கள் காட்டிய வழியில் வணங்கி அமையடைந்த நம் வீட்டு முன்னோர்கள் நமக்கு அவ்வழியே காட்டி வணங்கச் செய்துள்ளனர்.


எல்லா மதங்களிலும் சிலை வழிபாடுகள் உள்ளன.  அனைத்தும் வணங்குபவர் மனதில் நல்ல பாவனைகளை ஏற்படுத்தி தமக்கும் பிறருக்கும் எந்த தீங்கின்றி வாழும் பழக்கத்தை கற்பிப்பதையே முதன்மையான நோக்கமாக கொண்டுள்ளன.


மறுபிறவியில் நம்பிக்கையும், விடுதலைக்கான முயற்சியில் ஈடுபடும் இந்து, பெளத்தம் போன்ற மதங்களும் இவ்வழியிலேயே ஆலயலங்களை அமைத்துள்ளனர். இறைவன் திருவடியைச் சேர்ந்தடைவதோ, நிர்வாண நிலையை எய்துவதோ, அமைதியில் உறைவதோ போன்ற இலக்கிற்கான சித்தாந்த சிலை வடிவங்களை அமைத்து வழிபாட்டுத் தலங்களை முற்காலத்திலேயே அமைத்துள்ளனர்.


அவ்வாறான அமைப்பின் ஆலயங்களில் தேவ, தேவியர், இயக்கன், இயக்கி, காவற் தெய்வங்கள் போன்ற சிலை வடிவங்களும் அவர்களின் இலக்கை அடைய வழிவகுக்கும் முகமாகவே அமைத்துள்ளனர்.


முக்திக்கான நோக்கத்தை விடுத்து, உலகியல் சார்ந்த விருப்பங்களை நிறைவேற்றும் பாவனையுடன் நம் தெய்வ உருவங்களை  வழிபாட்டால் எந்த ஒரு பலனையும் வழிபாட்டு முறைகள் அளிக்காது. நாமும் வாழ்ந்து பிறரையும் வாழவிடும் அஹிம்சை நெறி மார்க்கத்தில் பயணிப்பவருக்கே ஜினாலய தெய்வ உருவங்களின் அமைப்பும், வேதிகைகளின் உயரமும், அடி யந்திர தகடுகளும், தெய்வ அறைகளும், மண்படங்களும், நுழைவாயில் திருச்சுற்றுசுவரும் அதற்கான அதிர்வையே தரும்படி அமைக்கப்பட்டுள்ளன.


பூஜை, வழிபாட்டு முறைகளும், மந்திரங்கள், பாடல்கள் அனைத்தும் மனதில்  சமதாபாவனையை, நற்சிந்தனையை வளர்ப்பதையே நோக்கமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன. அதற்கான யோக வழிபாட்டு முறைகளே வகுக்கப்பட்டுள்ளன.



வழிபாட்டு நோக்கத்தில் மந்திர உச்சரிப்புகள் எண்ணங்களையும், அர்ச்சனைகள் மனஓட்டத்தை தடுத்து நிறுத்தியும், கிரியா பூஜைகள் உடலை கட்டுப்படுத்தும் வகையிலும்; மனதை ஒருநிலைப்படுத்திய தியானத்தில் ஆழந்திருக்க வழிவகுக்கின்றன. இதுவே யோக மரபாகும்.


எந்த ஒரு நற்குண நாயகர்களையும் குருவாக ஏற்று வணங்கும் மரபுடையது யோகக் கலாச்சாரம். அவ்வழிகாட்டிகளை அவர்கள் காலத்திற்கு பின்னரும் மனதில் நிலைநிறுத்தவே மரம், கல், உலோகங்களில் சிலையாக வடித்து கூரை அமைத்து வழிபடும் முறையும் அக்கலையே அளித்துள்ளது.


இவை மதங்கள் தீட்டிய மேலான இலக்கினை அடையும் நோக்கங்களின் வழியே வாழ வழிவகுக்கும் சிற்பங்களை நிறுவி வழிபாடுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அவ்வாறு வரையறை செய்யப்பட்ட வழிமுறையில் எண்ணம், சொல், செயலை ஒருநிலைப்படுத்தி வழிபடவும் நம் சான்றோர்கள் வழிவகை செய்துள்ளனர்.



ஜினாலய அமைப்புகளும் அந்தந்த பிரதேசத்திற்கேற்றால் போல் சமண மத மரபின்படியே அமைத்துள்ளனர்.


ஆலய அமைப்பும், அவற்றில் வைக்கப்பட்டுள்ள உருவங்களும், வணங்கி வழிபடும் முறைகளும் ஒட்டு மொத்த விளைவாக அமையும் போதுதான் இலக்கினை குறுகிய காலத்தில்  அடையலாம். ஒரு வழிபாட்டு முறை மதத்தின் நோக்கத்திலிருந்து மாறும் போது பலன் ஒருபோதும் கிடைப்பதில்லை.


ஆனால் ஆலயப்பிரவேசம்; மனதில் உள்ள சுமைகளையும், துன்பங்களையும் ரகசியமாக சொல்லி வழிபடும் போது பாமரர்களுக்கு அமைதி கிடைக்கத் துவங்கவே அக்காரணத்திற்காகவும் வணங்கும் பழக்கமும்  ஏற்பட்டுள்ளது.


சுமைகளை இறக்கும் சுமைதாங்கிகளாக அத்தெய்வங்களை கருத ஆரம்பித்தனர். உளவியல் ரீதியாக ஒருவர் மனக் கஷ்டங்களை பிறரிடம் வெளியிடும் போது மன அழுத்தம் குறைந்து அமைதி கிட்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். அதன் அடிப்படையில் வணங்க வருபவர்களுக்கு கண்டிப்பாக அமைதி கிட்டும் என்பதில் ஐயமில்லை.


ஜினரின் தவவாழ்வில் ஏற்பட்ட துன்பங்களுக்கு உதவிட முன்வந்த இயக்கி, இயக்கர்கள் அஹிம்சை அறத்தை பின்பற்றும் குலத்தில் பிறந்த நமக்கும் கிட்டும் என்ற எண்ணத்தில் தினமும் வந்து முறையிட்டு செல்கின்றனர். அவர்களுக்கு அமைதி கிட்டும் போது விசேஷ பூஜைசெய்து நன்றியை பிரார்த்தனை வழியே வெளிப்படுத்துகின்றனர்.



சமூகத்தில் கிடைக்காத நீதியை அத்தெய்வத்திடம் வேண்டினால் கிடைக்கும் என்று நம்பிக்கை துளிர்விட ஆரம்பித்து விட்டது. அதற்கான பிரச்சாரங்களும் வியாபார நோக்கில் அதிகரிக்க ஆரம்பித்து விட்டது.




மேலும் இத்தலைமுறையில் விஞ்ஞான முன்னேற்றத்தில் பல கருவிகள் மனிதனுக்கு உதவிட கண்டு பிடித்ததும்;  அதற்கான வேட்கையும் மனிதர்களிடத்தில் பெருகியதால், உலகியல் வாழ்விற்கான செல்வங்கள் பெருகவும் வணங்க துவங்கி விட்டனர். அவ்வாறான வேண்டுதலில், நல்வினை உதயத்தால் காரியம் ஈடேற, அத்தெய்வத்தின் அருளாக ஏற்க ஆரம்பித்தனர். அதற்கு பிரதி பலனாக நேர்த்திக் கடனை அளிப்பதாக வணங்கும் முறையும் ஏற்பட்டுவிட்டது பாதை மாறிய பயணத்திற்கே வழி வகுக்கும். 


***************************

No comments:

Post a Comment