ஸ்ரீபாலன்
என்ற பெயர் சமணசமுகத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது. அனைவருக்குமே
பரிச்சயமான பெயர். ஒவ்வொரு கிராமத்திலும் குறைந்த பட்சம் ஒரு ஸ்ரீபாலன் என்ற நாமம்
ஒவ்வொரு தலைமுறையிலும் வாழ்ந்து வந்துள்ளனர் என்பதை அனைத்து கிராம ஜினாலய தரிசனத்திற்குச்
சென்ற போது கிராமத்தாருடன் அளவளாவியதின் வாயிலாக அறுதியிட்டு கூறவியலும்.
ஒரு குடும்பத்தை எடுத்துக் கொண்டால் மூன்று தலைமுறையில் ஒருவர்
ஸ்ரீபாலனாகத்தான் இருப்பார்கள். உதாரணத்திற்கு 150 ஆண்டுகளுக்கு பிறகு உள்ள வீட்டின்
மூலப் பத்திரத்தை எடுத்து பார்த்தால் ஒரு பூட்டனோ, பாட்டனோ, தாத்தாவோ, ஒரு மாமாவோ, ஒரு சித்தப்பாவோ இல்லை அப்பாவோ
இருந்திருப்பார். அந்த அளவிற்கு பிரபல்யமான, வழக்கிலுள்ள சமணப் பெயர். ரிஷபநாதனுக்கு
அடுத்து ஸ்ரீபாலன் என்று அறுதி இட்டு சொல்லுமளவிற்கு மிகவும் பிரயமுடன் எடுத்தாளப்பட்ட
ஒரு நாமம் என்றால் மிகையாகாது. (சிக்குன்னு வேற இருக்கா….)
நான் சிறுவயதில் இருந்த போது எனது பாட்டி சொன்னகதை(அப்பம்மா), பலருக்கும்
இந்த கதையை அவர் வழங்கியுள்ளார் (என்பதை எனது உறவினர்கள் சொன்னபோது தெரிந்து கொண்டேன்)
சிறுவயதில் கேட்டதால் சில சம்பவங்கள் மட்டுமே என் நினைவில் இருந்தது. ஸ்ரீபாலன், மதனசுந்தரி,
தவள செட்டி போன்ற பெயர்கள் மட்டுமே எப்போதும் நினைவை ஆட்கொண்டிருந்தன.
ஒருமுறை ஜீவபந்து திரு. TS ஸ்ரீபால் அவர்கள், புதுக்கோட்டை சமணச்
சின்னங்களை காணச் செல்லும் வழியில் எனது தகப்பனார் உடன் செல்ல ஆயத்தமானதால் எங்கள்
விட்டில் தங்கி யிருந்தார். அப்போது மீண்டும் அக்கதை நினைவுகள்….. அவரிடமும் அக்கதை
பற்றி கேட்டபோது அக்கதை தருமசீலன் என்ற மாதஇதழில் தொடராக வந்ததாக சொல்லிச் சென்றார்.
எங்கள் இல்லத்தில் கட்டுக் கட்டாக தருமசீலன்(1921) எனது பாட்டனார்
(அம்மப்பா) கட்டி வைத்திருந்தார். அதனை கீழிறக்கி தூசியைத் தட்டி புரட்டியபோது சரிதத்தொடரின்
பின்பகுதி மட்டுமே கிடைத்தது.
பின்னர் சில ஆண்டுகள் கழித்து ஆரணி மோட்டூரைச் சார்ந்த சிந்தாமணி
நாவலர், திரு. சாந்தகுமார் அவர்கள் ஆலய திருவிழாக் காலத்தில் தொடராக வழங்கினார்கள்.
அந்நாளில் அமர்ந்து கேட்டபோது நினைவில் உறங்கிய சற்று கூடுதலான சம்பவங்களைத் தொட வழி
வகுத்தது.
பணிக்காலம் 36 அண்டுகளிலும் வெறும் debit / credit, தொழிற்சங்கம்,
பொருள் தேடுதல், குடும்ப முன்னேற்றம் என்றவற்றிற்கே முன்னுரிமை வழங்க நேர்ந்தது. ஓய்விற்குப்பின்
அக்கதையை எப்படியும் முழுமையாக படித்து விட வேண்டும் என்ற சில ஆண்டுகளுக்கு முன்னர்
பல தேடுதலுக்கிடையே இதனைச் சேர்த்துக் கொண்டேன்.
பல பெரியோர்களைச் சந்தித்து பேசும் போது இடையில் இக்கதை புத்தகம் பற்றி கேட்பதுண்டு.
…. இருந்தால் அனுப்பி வைக்கிறேன் என்பார்கள்.
சில நாட்களுக்கு முன்னர் மீண்டும் தஞ்சை மாமா திரு. C அப்பாண்டராஜ்
அவர்கள் என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஸ்ரீபால மஹாராஜா சரிதம் கிடைத்துள்ளது.
சென்னைக் கொரட்டூரைச் சேர்ந்த பெரியவர் திரு. சுபாஷ் அவர்கள் அனுப்பி வைத்ததாக கூறினார்கள்.
உடன் சென்று அதனை பெற்றதுடன் முழுவதுமாக படிக்கத் துவங்க வுள்ளேன். (முதலிலும் கடைசியிலும்
சிலபக்கங்கள் missing)
அந்த ஸ்ரீபாலன் எங்கிருந்து தமிழ் நாட்டிற்குள் வந்தார் என்று சரித்திரத்தை புரட்டினால், சமணத்தில் மூல ஆகமமாக திகழும் மஹாபுராணத்திலுள்ள ஒரு கிளைச் சரிதத்தின் நாயகன் என்பது தெரிந்தது. இது வெறும் சரிதமல்ல மஹாசரிதம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏனென்றால் அத்தனை சமணக் கருத்துக்களை அக்கதை உள்ளடக்கியுள்ளதால் அவ்வாறாக சூட்டியிருப்பார்கள் நம் முன்னோர்கள்.
அக்கதையை தினமும் (உங்களுடனும் சேர்ந்து) படிக்கலாம் என்றெண்ணியதோடு பதிவாக வழங்கவும் முடிவு செய்துள்ளேன்.
இந்தக் கதைக்கு ஏன் இவ்வளவு பீடிகையும், சுயபுராணமும் என்று சிலர்
கேட்பது காதில் விழுகிறது. இது போன்ற நற்கருத்துக்கள் நிரம்பிய புராணக் கதைகளை பெரியோர்கள்
பால்யர்களின் நினைவுப் பெட்டகத்திற்குள் திணித்துவிட்டால் நல்ல விஷயங்களுக்கான தேடுதல் பின்னாளில்
துவங்கி விடும் என்றளவில் தான் எழுதினேன்.
எனவே நற்கருத்துக்களை, பக்திக் கதைகளை, நீதி நூல்களை குழந்தைகளுக்கு வயது முதிர்ந்த பெரியோர்கள், வீட்டிலோ, வெளியிலோ ஏன் தொலைபேசியிலோ கூடத் தொடர்பு கொண்டு பால்ய வயதில் கூறி வந்தால் தடம் மாறாமல் நல்வழியில் பயணிக்கும் வேட்கையை அளிக்கும் என்றளவில்தான் பகிர்ந்துள்ளேன்.
பிரத்யேகமாக இக்கால பெண் பிள்ளைகளுக்கு இதுபோன்றக் கதைகளை கண்டிப்பாக
வழங்க வேண்டுகிறேன். கடந்த பத்தாண்டுகளில் நான் சமூகத்தில் மங்கையரான பலரைக் காணும்
போது சென்ற தலைமுறையினர் இதுபோன்ற பக்தி, நீதிக் கதைகளை வழங்கத் தவறியதால் விளையும்
மோசமான விளைவையும் கண்ணுற்று வருகிறேன். தவறிழைப்பது எக்காலத்திலும் உண்டு. அது இலைமறைவாக
காய் மறைவாக இருக்கும். மதில் மேல்பூனையாய் இருந்த சிலர் நல்வழியில் பயணிக்கத்
துவங்கியதும் நற்சிந்தனையுடன் வாழத்தொடங்கி விடுவர் என்பதே நிதர்சனம்.
ஆனால் அதுவே பகிரங்கமாகும் போது வருங்காலச் சமூகத்தையே சீரழவிற்கு
கொண்டு செல்லும் என்பதை தற்காலத்தில் உணர முடிகிறது. விடலைப் பருவத்தில் சில அகச்சுரப்பிகளால்
விளையும் ரசாயனங்கள் நம் உணர்வில் அத்துமீறல்களை கட்டுப்பாட்டிலிருந்து வெளியேற்றத் துவங்கும்.
அவ்வேளையில் இச்சமூகம் அதனை எதிர்த்தா லொழிய கட்டுப்பாட்டிற்குள் அடங்காமல் வெடித்துச்
சிதறிவிடும். அத்தீக்குச்சிகளை பற்றவைக்கும் வேலையை ஊடகங்கள் மிக நன்றாக செய்து வருகின்றன.
அதனால் நற்கவசத்தை பால்யத்திலேயே உருவாக்கி விட்டால் கர்ணனின் கவசம்
போல் அதுவும் இளம் வயதுவரை வளர்ந்து நற்பண்புகளை பாதுகாக்கும் என்பது உறுதி.
பல பெரியோர்களும் , தாய்மார்களும் இக்காலத்திய குறிப்பாக பெண்பிள்ளைகள்
பலரின் அத்துமீறிய கலாச்சாரத்தை ப்பற்றி பேசாதவர்களே இருக்க முடியாது. மேலும் மகளிர்
தினத்தன்று நான் கண்ட சில காட்சிகள் மனதில் நெருடலை தந்ததால் இக்கதையைப் பதிவிட (உண்மையான) காரணம் என்றும்
சொல்லலாம். அந்த அளவுக்கு மிகவும் மோசமான, விரசத்தின் எல்லையைத் தாண்டி எங்கோ பயணித்துக்
கொண்டிருக்கிறார்கள் இக்காலப் பள்ளி மாணவ/ மாணவிகள்
கல்லூரியைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்; 2013ம் ஆண்டு அருகிலுள்ள ஒரு
பொறியியற்கல்லூரிக்கு வங்கி அலுவல் காரணமாக சென்றேன். அப்போது ladies Hostel ஐ கடந்து
சென்றபோது பல பீர் பாட்டில்களை கண்டபோது அடிவயிற்றில் அமிலம் சுரக்க அரம்பித்து விட்டது.
உடன் இருந்த கல்லூரிக் கணக்கரைக் கேட்ட போது இவை அனைத்தும் மங்கையர் குடித்து வீசிய
காலி பாட்டில்கள் என்றார்.
ஆனால் இப்போது பள்ளி அளவில் வந்து சேர்ந்து, இக் காலித்தனத்தின் எல்லைக்கோடு
விரிவடைந்ததை காணும் போது பெற்றோரான என்னிடத்திலும் மனக் கண்ணீர் துளிர்க்கத் துவங்கியதும் இயற்கையே. நல்லவேளை நாம் வளர்த்ததில்குறையின்றித் தப்பித்தோம் என்ற திருப்தியாக இருந்தாலும் அந்த அதிர்ச்சிக்கு
ஈடாக அது அமையவே இல்லை.
இச்சூழலுக்குக் காரணம் “கற்பு
பெண்களுக்கானது” என்ற ஆணாதிக்கத்தின் முடிவே; இக்காலத்து இளைய தலைமுறையை இழிவான நிலைக்கு தள்ளியது. இருபாலருக்கான பண்பு இது என்பதை
ஏற்காத ஆணினம் இத்தலைமுறையில் அதன் தாக்கத்தை பார்த்து அரண்டு போயுள்ளது.
கடந்த சில நாட்களாக பஸ்நிலையத்திலுள்ள ஒரு கடையில் மாலை ஒருமணிநேரம் அமர்ந்து கவனித்ததில் நானும் அரண்டு போயுள்ளேன். ஐந்தாண்டுகளில் என்ன ஒரு தமிழ்ப் பண்பாட்டிற்குப் பின்னடைவு…… எதிர்காலத்திய பாதிப்பு சொல்லிலடங்காது. (Not in multiples but in matrix units of negative growth) ஒரு இருபத்திரண்டு வயது இளைஞன் கூறியதாவது “எனக்கு கல்யாணம் பண்ணிக்கிற ஆசையே போய்விட்டது. பயமாகவும் இருக்கிறது” என்று கூறி வருந்தினான்.
அந்த அளவிற்கு இளைஞர்கள் பலரையும் பாதிப்பிற்குள்ளாக்கி யிருக்கிறது
என்றால் முன் தலைமுறையான என்போன்றவர்களை இக்காலச் சூழல் எவ்வாறு அச்சுறுத்தியிருக்கும்
என்று பாருங்கள். பல பெற்றோர்களும் எந்தளவுக்கு இந்தச் சமூகச் சீரழிவை கண்டு வருந்தியிருப்பார்கள்
என்பதை வார்த்தைகளால் குறிப்பிட இயலாது.
கற்பை ஆண்களுக்கு கற்பிப்பதற்கு எந்த ஒரு மகளிர் அமைப்பும் முன்
வரவில்லை.
அதே சமயம் கற்பு பெண்களுக்கானதும் அல்ல, அது சரித்திரத்தில் உள்ள ஒரு குறிப்பு; என்றளவில் இக்கால குழந்தை – முதுமை இருபருவ இடையில்லாமல் பெரும்பாலான விடலைப் பருவ வயதினரின் நிகழ்காலம் சென்று கொண்டிருக்கிறது வருங்காலத்தை வரவேற்க.
(இனி ஏழு பருவ நிலைகளில் ஆண்/பெண் வளர்ச்சி யில்லை. மூன்றே தான்,
குழந்தை, ஏழு வயதிற்கும் மேல் காளை/ மங்கை, முதுமை தான்)
இனி வருங்காலத் தலைமுறையினரைப் பால்யத்திலேயே சரி செய்யத் துவங்குவோம்
பெரியோர்களே… பெற்றோர்களே…
(Sorry, எழுத முற்படுவதற்கான காரணத்தை சுருக்கி வழங்காமல் நீட்டிக்
கொண்டே ……………….)
ஸ்ரீபால மஹாராஜா மஹா சரிதம்…,,
சேர்ந்து படிக்கும் வரிகளைச் சீக்கிரமே காண்போம்.
பத்மராஜ் ராமசாமி.
-----------------------------------------------
ஸ்ரீபாலன்
சரிதம்
காலம்
காலமாய் நமது மரபில் இருந்து வந்த கதைகளை புராணங்கள், இதிகாசங்கள் என்று கூறப்படுகிறது.
இதிகாசம்
எனப்படுவது கடவுள், கடவுள் அவதாரம் அல்லது பெரும் வீரர்கள் நிகழ்த்திய அரும்பெரும்
வீரச் செயல்களையும், நீதிநெறிகளையும் விவரிக்கும் புராண வரலாறாகும்(Pre-historic
Period). (இந்தியாவைப் பொறுத்தளவில் இராமாயணமும், மகாபாரதமும் இதிகாசங்கள் என்றழைக்கப்படுகின்றன.)
புராணம்
என்றால் பழைய அல்லது பண்டைய எனப் பொருள்படும். நுட்பமான நன்னெறியையும் ஆன்மிக தத்துவத்தையும்
எளிதான முறையில் விளக்குவதற்காக தெய்வப்பண்புகளை பெற்றவர்களை மையமாகக் கொண்டு கூறப்பட்ட
கதைகள் தான் புராணங்கள்.
ஜைன
மரபு படைப்புக் கொள்கையை ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால் இதிகாசம் உரைக்கும் வழக்கம் இல்லை.
இரண்டுமே நிச்சயமாக நடந்த உண்மைச் சம்பவங்கள், என்ற அடிப்படையில் செவி வழிச் செய்தியாக
(கர்ண பரம்பரைக்கதையாக) நமக்கு அளிக்கப்பட்டவை தான்.
நம்முடைய
புராணங்களை வெறும் கற்பனைக் கதைகள் என்றே வைத்துக்கொள்ளுங்கள். அந்தக் கற்பனைக்கு ஈடு
கொடுக்க உலகத்தில் இன்னும் ஓர் எழுத்தாளன் பிறக்கவில்லை.
பெருங்கதைகளும்
அவற்றுடனான உப கதைகளுமாக எழுதப்பட்ட நமது புராணங்களின் பாத்திரப் படைப்புத்தான் எவ்வளவு
அற்புதம்! அவை கூறும் வாழ்க்கைத் தத்துவங்கள்தான் எத்தனை!
நம்பிக்கை
/ அவநம்பிகை; ஆணவம்; மீட்சி; காதல்; ராஜதந்திரம்; குறுக்குவழி; நட்பு; அன்பு; பணிவு;
பாசம்; கடமை - இப்படி வாழ்க்கையில் எத்தனை கூறுகள் உண்டோ அத்தனையும் நமது புராண(இதிகாச)ங்கள்
காட்டுகின்றன.
எத்தனையோ
காலச்சூழலை சந்தித்திருந்தாலும் இன்றளவும் அழியாமல் இந்தியப் பெருமக்களுக்கு வழிகாட்டுதலை
வழங்கிக் கொண்டிருப்பவை புராண(இதிகாச)ங்களே.
இன்றைய
சட்டமன்றம், அரசாங்கம், நீதிமன்றம் ஆகிய மூன்று தூண்களும் ஒருங்கிணைந்து அளிக்க வேண்டிய
நீதியும், அமைதியும் நமக்கு இன்றளவில் கிடைக்கவில்லை என்பதே நிதர்சனம்.
ஆனால்
இம்மூன்றும் ஒரு குடைக்கீழ் ஒருங்கே அமைந்த ஆறுகண்டங்கள் ஆண்ட பெருநில மன்னர்களான சக்கரவர்த்திகள்,
குறு நில அரசர்கள் செங்கோலோச்சிய காலத்தில் நல்லாட்சி புரிந்து மக்களுக்கு எல்லா நலன்களும்
பெற்றதை விவரமாக நிகழ்வுகளுடன் தெரிவிக்கின்றன.
அமைதியான
சூழலை என்றும் நிலைத்திடும் வண்ணம் தங்களது பண்பாட்டையும், கலாச்சாரத்தையும், வாழ்க்கை
நெறிகளையும் இதுபோன்ற மாபெரும் காப்பியங்கள் வழியே நமக்கு அளித்து சென்றுள்ளவையே இன்றளவிலும்
நமக்கு வழிகாட்டுதலாக உள்ளது என்பதில் எந்த ஒரு ஐயமுமில்லை.
-----------------------------------------------
ஸ்ரீபாலன்
மஹாசரிதம் எனும் இவ்வரலாற்றுக் கதை சமணர்களின் முக்கிய நூலாகிய மஹாபுராணத்தில் உள்ள
ஒரு கிளைக்கதை யாகும். மஹாபுராணத்தில் தீர்த்தங்கரர், சக்கரவர்த்திகள் போன்ற அறுபத்து
மூன்று உத்தமபண்பாளர்களின்(ஸலாகா புருஷர்கள்) கதைகளுடன் இது போன்ற கிளைச் சரிதங்களும்
வழங்கப்பட்டுள்ளன.
இவற்றில்
அறுபத்து மூவர்களின் சரிதங்கள் நிகழ்வுகளுடன் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டது ஸ்ரீபுராணம்
ஆகும். மற்றக் கிளைக்கதைகள் தனித்தனி புராணக் கதைகளாக மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளன.
அவ்வாறான வகையில் இக்கதையும் ஓர் அங்கம் வகிக்கிறது.
மஹாபுராணம்
ராஷ்ட்ரகூட ராஜவம்சத்தினர் காலத்தில் எழுதப்பட்டது. கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில்
வீரசேனாச்சாரியாரின் சீடர் ஜினசேனாச்சாரியர் ஆதிபுராணம் எனும் நூலையாத்துள்ளார். அதன்
பிற்பகுதியான உத்தரபுராணத்தை அவரது சீடர் குணபத்திரர் எழுதி முடித்துள்ளார். அவ்விரண்டின்
தொகுப்பே மஹாபுராணம் எனும் வரலாற்று நூல். அவ்விரண்டின் தொகுப்பினை குணபத்ர ஆச்சார்யாரின்
சீடர் லோகசேனர் (898 Christian Era அடிப்படையில் ) வெளியிட்டதாக குறிப்புகள் தெரிவிக்கின்றன.
அப்பிரம்மாண்டக் காப்பியமே சமணர்களின் முதல் சரித்திர நூலாகக் கருதப்படுகிறது. அதற்கு முன்னர் கர்ணபரம்பரைக்
கதையாகவே வழங்கப்பட்டு வந்துள்ளது. தொன்மையான சமண வம்சாவளியினர்களின் கலைக்களஞ்சியமாக,
தொகுப்பு நூலாக இம்மஹாபுராணமே முதன்மை நூலாகவும் கருதப்படுகிறது.
அக்களஞ்சியத்தில்
தோண்டி எடுக்கப்பட்ட ஒரு மஹாசரிதமே இந்த “ஸ்ரீபால மஹாராஜா” வின் வரலாற்று சித்திரம். நம்முடைய முன்னோர்கள் தங்கள் காலத்தில் சாதித்த அரும்பெரும்
காரியங்களைக் குறித்துப் பெருமிதமும் பெரு வியப்பும் கொள்ளாமலிருக்க முடியாது. நம்
மூதாதையர்கள் தங்களுடைய நலனுக்கும் தங்கள் காலத்திய மக்களின் நலனுக்கும் உரிய காரியங்களை
மட்டுமா செய்தார்கள்? இப்பாரதத் திருநாட்டில் தங்களுக்குப் பிற்காலத்தில் வாழையடி வாழையாக
வரப்போகும் ஆயிரங்காலச் சந்ததிகளுக்கும் நன்மை பயக்கும் மாபெரும் செயல்களை நிறைவேற்றி
விட்டுப் போனார்கள் என்றால் மிகையாகாது.
இக்காப்பியத்தினை நோன்புக் கதை என்றும் சமணர்கள் வழங்கினாலும் இந்நூல் தன் வழியே நற்கருத்துக்களின் தொகுப்பாக அளிக்கப்பட்டிருக்கிறது. இந்நூல் வழியே பெண்டிரின் கற்பின் மகிமையை அறிவதோடு சத்புருஷர்களின் பண்புகள், நட்பின் உயர்வு, கூடிக்கெடுக்கும் துரோகிகள் தீங்கடைதல், வஞ்சனைக்காரர்களின் சஞ்சலம், பொறுத்தார் பூமியாளுதல், பொங்கினார் வனமுறைதல், பெண் விட்டில் சேர்ந்திருப்பதனால் உண்டாகும் இழிவு, தீங்கிழைத்தோர்க்கும் நன்மையே செய்யும் உத்தமகுணத்தாரின் உயர்வு, முயற்சி திருவினையாக்குதல் போன்ற நற்கருத்துக்களையும் தன்னகத்தே கொண்டது இக்காப்பியத்தின் சிறப்பாகும்.
ஒரு
உத்தமப்பெண் தன் கணவனின் பெருவியாதியை நீக்க உறுதிபூண்டு சித்தசக்ர நோன்பிருந்து குணமடையச்
செய்வதின் வழியே தன் கற்பை உலகத்தில் பறைசாற்றும் சம்பவங்களைக் கொண்டிருந்தாலும் அச்சம்பவங்களில்
ஊடுறும் காதாப்பாத்திரங்கள் வழியே மேற்சொன்ன நற்கருத்துகளையும் ஆங்காங்கே வழங்கிய பாங்கும்
போற்றுதற்குரியது.
இத்தனைச் சிறப்பும் வாய்ந்த இக்காப்பியத்தை வடமொழியிலிருந்து தமிழ் நாட்டினரும் பயனுறும் வகையில் மணிப்பிரவாள நடையில் தர்மசீலன் எனும் சஞ்சிகையில் தொடராக வந்துள்ளது. (எழுதியவர் பெயர் கிடைக்கவில்லை) அதன் தொகுப்பே எனக்குக் கிடைத்த தமிழாக்கம் செய்யப்பட்ட நூல் என்பதாக அறிகிறேன்.
ஆண்களுக்கும்,
பெண்களுக்கும் நல்ல நீதிகளைப் போதிக்கும் இந்நூலை தொடராக எழுத முற்படுகிறேன் இக்குழுவில்
இணைந்துள்ள மதிப்பிற்குரிய திருவறப்புலவர் தோ. ஜம்புகுமாரன் அவர்கள் போன்றோர் ஆசியுடன், துணையுடன்…
உங்களுடன்….
(ஏனெனில்
முதல் பக்கத்திலேயே அளகை, உம்பர் போன்ற வார்த்தைகள் ஐயத்தை விளைவிக்கின்றன. தினம் படித்து
அதில் தவறேதும் கண்டீர்கள் என்றால் உடன் எனது தனி அஞ்சலுக்கு அனுப்பி வைக்க வேண்டுகிறேன்).
நன்றி…
பத்மராஜ்
ராமசாமி.
-----------------------------------------------
ஸ்ரீபாலன்
சரிதம்
அத்தியாயம்
– 1
மதனசுந்தரியின்
திருமணம்:
அவந்தி
நாட்டின் சிறப்பு…
பல புனிதர்களை
ஈன்ற புண்ணிய நாடாகிய பரத கண்டத்தில் முற்காலத்திய 16 ராஜ்ஜியங்களில் அவந்தி ராஜ்ஜியமும்
ஒன்றாகும். இந்நாட்டில் பெருமழை, கடும் வெயில், கொடிய விலங்கு, தீய பறவைகள்,
முறையற்ற அரசு ஆகிய கேடுகள் இல்லாததோடு; பொருள் வளம் நிறைந்ததாகவும், பிறர் போற்றத்
தக்கதாகவும், நல்ல விளைச்சல் கொண்ட கழனிகளை யுடையதாகவும், நாட்டுப்பற்றுடைய உயர்குடிமக்களையுடையதாக
ஒப்புயர்வற்ற சிறந்த நாடாய் திகழ்ந்தது.
(தற்கால இந்தியாவில் குஜராத்திற்கு கிழக்கே, மத்தியப் பிரதேசத்திற்கு மேற்கேயுள்ள பகுதி, அதாவது மால்வா பீடபூமியை மையமாக கொண்ட நிலப்பரப்பே அக்கால அவந்தி நாடாகும். மஹாபாரதம் போன்ற பல காப்பியங்களிலும் இடம்பெற்றுள்ள ஒரு முக்கிய பிரதேசமாகும்.)
அறமே மேலோங்கி இருந்தமையால் வான் பொய்க்காது மாதம் மும்மாரி பெய்தும்,
விளை நிலங்கள் முழு பலன்களை அளித்தது. செழுமையான பசுக்கள் இனம் பெருகி வளர்ந்து வந்தன.
வேளாண் பெருமக்களும் தம் வயல்களில் விளைந்த விளை பொருளில் ஆறில் ஒருபங்கைத் தவறாது திறை
செலுத்தி, ஐம்பங்கை தம்தம் இல்லங்களில் சேர்ப்பித்தும், தெய்வங்களையும், பெரியோர்களையும்,
விருந்தினர்களையும், சுற்றத்தார்களையும் பேணிக்காத்து அறநெறி வழுவா வாழ்வை மேற்கொண்டிருந்தமையால் அவந்தி வானழகாபுரியை விஞ்சும்
சுவர்ணங்களைப் கொண்டு விளங்கியது. இந்நாட்டில் எந்நாளும் செல்வம் கொழித்து விளங்கியமையால்
யாசகரைக் காண்பதரிது. ஆனால் அந்நாட்டினரோ “பிறர்க்கு
ஈந்து தாம் உண்ணும் பாக்கியம் பெறவில்லை”
என்ற ஏக்கம் மேலோங்க பிரதிதினம் உண்டு வாழ்ந்தனர். அவர்களுக்கு எப்போதும் இக்கவலையின்றி
வேறேதும் ஏற்பட்டதில்லை. இவைபோன்ற எண்ணற்ற சிறப்புகளைக் கொண்டமையால் சுவர்க்கமும் இதற்கீடாகாமல்
விளங்கியது.
இவ்வுயர் நாட்டின் தலைநகர் உஜ்ஜயினியாம். இவ்வெழில் நகரோ; புனித பல ஆலயங்களாலும், வானுயர கோபுரங்களாலும்,
எந்திரப்பொறிகள் பொருந்திய கொத்தளங்களைக் கொண்ட கோட்டைச் சுவர்களாலும், அவ்வரணைச்சுற்றிய
ஆழ்ந்த அகழிகளாலும்; உப்பரிகைகளும், அந்தப்புரங்களும் நிறைந்த இராஜ மாளிகைகளாலும்;
பிரம்ம, க்ஷத்ரிய, வைசிய, சூத்திர எனும் நால்வகை வருணத்தாரும் ஒற்றுமையுடன் வாழும்
அகன்ற தெருக்களாலும்; நாடு, நகர், கடல், மலை இந்நான்கின் உருவான பொருள் குவிந்த கடைவீதிகளாலும்;
வண்ணத் தேரோடும் வீதிகளாலும்; யானை நடை பயிலும்
செண்டு வெளி(மைதானம்)களாலும்; எந்நேரமும் குளம்பொலிகளால்
நிரம்பிய குதிரைகள் செல்லும் வையாளி வீதிகளாலும்; நீண்ட இராஜபாட்டையுடனும் சிறப்புற்று
விளங்கியது.
அந்நகரத்தில் அங்காங்கே எக்காளமும், துந்துபியுடனான டமார அதிர்வுகளுடன் புறப்பட்ட திருவிழா முழக்கங்களும்; இருமணம் கூடும் திருமணச் சடங்கினை தெரிவிக்கும் மேளதாள வாத்திய முழக்கங்களும், வேதபாராயண கூட்டொலிகளும், ஆழிப்பேரலைப் போல் ஆர்ப்பரிக்கும் ஆயுதப்பயிற்சிக் கூடங்களும், பாட்டும், நடனமும், சங்கீதங்களும் நாதத்துடன் எங்கும் எப்போதும் ஒலித்துக் கொண்டிருந்தன.
தம்தமக்குரிய ஒழுக்கங்களினின்றும் எள்ளளவும் வழுவா ஆணும், பெண்ணும்
சேர்ந்தமைந்த இல்லறத்தாரும் மகிழ்ச்சிபொங்க எல்லையில்லா இன்பத்துடன் புகழுடையோர்களாய்
வாழ்ந்து வந்தனர். அவ்வினியோர்களின் வாழ்வோ நாகர் வாழ்வினும் மேம்பட்டதாய் அமைந்திருந்தது.
இத்தகைய சிறப்புகளும் ஒருங்கேப் பெற்ற அந்நகரத்தில் அறநெறி வழுவா
நீதிநேர்மையுடன் மஹாராஜா பிரஜாபாலன் என்னும் மன்னன் முற்காலத்தில் சொங்கோலோச்சி ஆண்டு
வந்தான்.
உத்தமப் பண்புகளோடு கூடிய இம்மாண்புடையான் தன்னுயிர்போல் இம்மண்ணுயிர்களைப் பாவிக்கும் தயையுள்ளவனாதலால்; சாந்தம், அடக்கம், பொறுமை முதலிய நற்குணக் கோட்டையாய்
திகழ்ந்தான். தெய்வபக்தியில் ஆழ்ந்த சிந்தையான்; அறம் உறையும் உள்ளத்தான்; படைக்கஞ்சா நெஞ்சோன். அம்மாவீரன்;
முடி, குடை, கவரி, அங்குசம், முரசு, (தர்ம)சக்கரம், யானை, கொடி, மதில், தோரணம், கலசம், பூமாலை, சங்கு, கடல்,
மகரம்(கடலில் வாழ்வது), ஆமை, இணைக்கயல், சிம்மம், தீபம், ரிஷபம், ஆசனம் என்னும் இருபத்தோரு
அரச சின்னங்களையுடையோனாய் திகழ்ந்தான்.
மந்திரியார், புரோகிதர், சேனாதிபதியர், தூதர், சாரணர் எனும் ஐந்தடுக்கு
கூட்டத்தை (அலுவலர்கள்) என்றும் நீங்காது பெற்றவன்.
மந்திரியார், கருமாதிக்காரர், சுற்றத்தார், கடைக்காப்பாளர், நகரமக்கள்,
படைத்தலைவர், இவுளி மறவர்(குதிரைவீரன்), யானைவீரர் எனும் எண்வகை பாதுகாவலரைப் பெற்றவன்.
நட்பாளர், அந்தணர், மடைத்தொழிலாளர், மருத்துவர், நிமித்திகப் புலவர்
எனும் ஐவகை சுற்றங்களைப் கொண்டவன்.
படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் எனும் அறுவகை அரசியல் அடுக்கினையுடையவன்.
வருவாயில் மக்கள் உளமார வழங்கும் ஆறில் ஒருபங்கை திறையாய்பெற்று
தம்குடிகளை ஆதரிக்கும் அருளாளன்.
அந்தணர், அறவோர், பாவையர், பாலர், ஆச்சாரியர், தாய், தந்தையர், குருக்கள்
முதலியோர்களையும்; பல்லாயிரம் பசுக்களையும் தன்னுயிரினும் மேலாக பாதுகாக்கும் பெருங்குணத்தவன்.
இறைக்கிணையான இத்தருமசீலன், மஹாராஜா பிரஜாபதி தன் உத்தமப் பெண்டிராய்
விளங்கிய செளபாக்கியசுந்தரி என்பாளை அரசியாக, மனைவியாக பெற்றவன். இவள் அருந்ததியொத்த
கற்பிலக்கணம் பெற்றவள் என்று அந்நாடே போற்றியது.
இப்பெரும் பேற்றினையுடைய மகாராஜன் பிரஜாபாலன் தன் பத்தினியுடன் வாழ்ந்து வருங்கால்…
மதனசுந்தரியின் திருமணம்:
இப்பெரும் பேற்றினையுடைய மஹாராஜா பிரஜாபாலன் தன் பத்தினியுடன் வாழ்ந்து
வருங்கால், மஹாராணி கருவுற்று ஈரைந்து மாதங்களில் மதனசுந்தரி என்னும் பெண்மகவை ஈன்றெடுத்தாள்.
பின்னர் சுரசுந்தரி என்னும் ஒரு இளையவளையும் ஈன்றெடுத்தாள். இவ்விரு பேதைகளும் மிகுந்த
வனப்புடையவர்களாய் வளர்ந்து வந்தார்கள்.
பள்ளிப்பருவம் எய்திய இருவரும் குருகுலம் சென்று பல கலைகளும் கற்று
வந்தனர். இதில் சுரசுந்தரி எனும் இளையாள் புறச்சமய சாஸ்திரங்களில் பண்டிதரான சிவசர்மன்
என்கிற அந்தணனிடத்தில் அனைத்தையும் கற்று தேர்ச்சி அடைந்திருந்தாள். மூத்தவள் மதனசுந்தரியோ
மஹாபதிவிரதைக்கான குணமமைந்தவள். அச்சிரோமணி சுயம்புத்திலகம் எனும் ஜினராலயம் அடைந்து
தினமும் தரிசித்து அங்குறையும் தெய்வங்களின் அருளை வேண்டி வந்தாள். அத்தலத் தங்கலிலிருந்த யமதரமுனிவரை வணங்கி தினமும் அநேக சாஸ்திரங்களைக்
கற்றும், கேட்டும் சகல சாஸ்திர பண்டிதையாயினள். இவ்வாறாக கல்வி கேள்விகளில் தேர்ச்சியடைந்த
இருவரும் மங்கைப்பருவம் எய்தி தாய் தந்தையர்மீது அன்புடனும், மிக்க பணிவுடனும் அந்தப்புரத்தில்
அகமகிழ வாழ்ந்து வந்தனர்.
அப்போது ஓர்நாள்…
உஜ்ஜயினி நகர வீதிகளின் வழியாக இரட்டைக் குதிரைகள் பூட்டிய அழகிய
விமான ரதம் ஒன்று சென்றது. குதிரைகளின் அலங்காரங்களும், ரதத்தின் வேலைப்பாடுகளும்,
பொன் தகடு வேய்ந்து மாலை வெயிலில் மற்றொரு சூரியனைப் போல் பிரகாசித்த ரதத்தின் மேல்
விதானமும்; உடன் சென்ற மெய்க்காப்பாளக் குதிரைவீரர்களின் உடைவாளின் ஒளியை காணும்போது
அதில் அமர்ந்தவர் மஹாராஜா பிரஜாபாலன் என்பதை
உணர்த்தின. அந்த ரதம் இராஜபாட்டைக்குள் நுழைந்து இரு பக்கத்திலும் இருந்த ஏராளமான வீடுகள்,
கடைவீதிகள், கொல்லர், தச்சர் பட்டறைகளைக் கடந்து சென்றபின் அரண்மனை நோக்கி திரும்பி
வந்து கொண்டிருந்ததைக் கண்ட பாதுகாப்பு கோபுரத்திலிருந்த வீரர்கள் தலை குனிந்து வணங்கி
கீழிருந்த வாயிற்காப்போரைக் கண்டு கையசைத்ததும் அரண்மனை பிரதான கதவு திறக்கப்பட்டது.
அவர் ரதம் புடைசூழ உள்ளே நுழைந்ததும் உடன் அடைத்துக் கொண்டது.
ஊர்வல ரதத்திலிருந்து கம்பீரமாய் இறங்கிய மஹாராஜா பிரஜாபாலன் காப்பாளர்களை
அனுப்பிவிட்டு மஹாராணியைக் காண அந்தப்புரம் நோக்கிச் சென்றார். அவரைத் தாதியர்கள் அழைத்து
அரசியிருப்பிடம் கொண்டு சேர்த்தனர். ஆங்கமைந்த மண்டபத்தின் மேடையில் அமர்ந்து மீட்டியிருந்த
மகரயாழை கிடத்திய மஹாராணி செளபாக்கியசுந்தரி முகமலர்ச்சியுடன் அரசரை வரவேற்றாள். அரசியுடன்
அருகிலிருந்த நந்தவனத்தின் உலாமேடையில் நடந்து கொண்டே…
தமது அருமை மகள்கள் இருவரும் பருவமடைந்து நாட்கள் கடப்பதை அவதானித்த
அரசர், “இனி
இவர்களுக்கு மணமுடிக்காதிருப்பது அழகன்று, பருவமடைந்த பெண்களை நம்முடனே வைத்திருந்து
காலம் கழிப்பது சரியல்ல, விரைவில் தகுதியுடைய ஒரு ஆண்மகனிடத்தில் சேர்த்தலே அறிவுள்ள
செயலாகும். இவர்களுக்கு விரைவில் மணமுடிக்க ஏற்பாடு செய்யவேண்டும்” என்று அரசியாருடன் உசாவியபோது,
அரசியும் அவரின் இம்முடிவை தாமும் எதிர்பார்த்திருந்தமையால்
“அரசே மிக்க மகிழ்ச்சி,
நானும் பலநாட்களாய் தங்களிடம் அதையே தெரிவிக்க சரியானத் தருணத்தை எட்டி இருந்தேன். நல்லநேரமே
தங்களை இம்முடிவிற்கு அழைத்தது போலும், ஐயனே உடன் மணமுடிக்க ஏற்பாடு செய்யுங்கள்” என்றாள். மேலும் “பலநாட்டு இளவரசர்களையும் இங்கழைத்து
சுயம்வரம் ஒன்றை நடத்த ஆணையிட வேண்டுகிறேன்”
என பணிந்தாள்.
ஆனால் அரசரோ “அவ்வாறான
சுயம்வரம் தவிர்த்து, அவர்கள் விருப்பமறிந்து, அதுவும் நமக்கு பொருந்துவதாய் அமைந்தால்
அவ்வரசகுமாரர்களையே அவரவருக்கும் மணம் புரியச்
செய்து விடலாம். அதுவே அவர்களின் விருப்பத்தை பூர்த்தியடையச் செய்வதோடு பின்னாளில்
அவர்கள் வாழ்வில் மகிழ்ச்சி பொங்க வழிவகை செய்வதாய் அமையும்” என்றார். மஹாராணியாரும் உளம்
மகிழ்ந்து அக்கூற்றை ஏற்றுக் கொண்டாள். அவ்வுலாமண்டபத்தில் அவர்களை எதிர் கொண்ட இளையகுமாரி
சுரசுந்தரி “தந்தையே வணங்குகிறேன்” என இருகரம் கூப்பி நின்றாள்.
அவரும் பிரியமுடன் “
எனதருமை மகளே, வாழிய நீ; சுரசுந்தரி நீயோ மங்கைப்பருவமெய்து விட்டாய். இனி ஒரு மணமகனுக்கு
மனைவியாய் இல்லறத்தை துவங்கும் கடமையை மேற்கொள்ளுதல் வேண்டும். ஆதலால் நம்வம்ச பெருமைக்கு
நிகரான, தகுதியான ஒரு அரசகுமாரனை தெரிவிப்பாயாயின் அவ்வரசகுமாரனுக்கே உன் விருப்பம்
போல் மணமுடித்து வைக்கிறேன். உனது முடிவைக் கூறுவாயாக…” என்றார்.
சில நாட்களில் தனது மூத்த குமாரத்தி மதனசுந்தரிக்கும் அவ்வழியே
மணமுடிக்க எண்ணி, தந்தை பிரஜாபாலனும் தம் அரசியுடன் கலந்தாலோசித்து மகளிடம் தெரிவிக்க
முடிவெடுத்தனர்.
அவ்வேளை மதனசுந்தரியானவள் அரண்மனையிலுள்ள அருகன்கோவிலில் இருந்தாள்.
கோட்டை அரணை விட நெடிதுயர்ந்த மானஸ்தம்பம்; சதுர மேடைமீது நிறுத்தப்பட்டு
கீழ்நாற்புறமும் ஜினபுடைப்புச் சிற்பமும், 64, 32 என பட்டைகளைக் கொண்ட உருளைவடிவ வெண்சலவைக்கல்
தூணின் மீது சர்வதோபத்ரம் போன்று கர்ணகூட வடிவ சிறிய மண்டப அமைப்பிற்குள் நான்புறமும்
ஜின பிம்பங்களுடன் காணப்பட்ட அமைப்பு மேற்புறம் தங்கக் கலசத்துடன் பளிச்சென பக்தர்களை
வரவேற்பது போல் காணப்பட்டது. அதற்கடுத்த மேடையில் துவஜமரம் வெள்ளிக்கவசமணிந்து கொடிபோன்ற
அமைப்பு துருத்தியபடி மூலவரை பார்த்த முகத்துடன் நிறுத்தப்பட்டிருந்தது. ஏறக்குறைய
எண்கோண வடிவ மூன்றடுக்கு மேடையில் பலிபீடமும்; நகாசு வேலைகளுடனான போதிகைகளைக் கொண்ட
சிற்பங்க வேலைப்பாடுகளுடனான தூண்களால் தாங்கப்படும் முகமண்டபம் மேலே கொடுங்கைகளை விரித்தபடி
பதினோரு படிகளுடன் கருவறைக்கு வழியை காட்டிய படி காட்சியளித்தது. அடுத்து மஹாமண்டபமும்,
அர்த்த மண்டபங்களும் அழகிய வேலைப்பாடுகளைக் கொண்ட லதா மண்டப தூண்களாக அஸ்மானகிரியில்
வட்ட ஓவியங்களுடன் காட்சி யளித்துக் கொண்டிருந்தன. நெடிய நுழைவாயிலுடனான உள்ளாலையை
கடந்து அடுத்த கருவறையில் அழகிய வெண்ணிற ஜினப்பிரதிமை முழுச்சிற்பமாக பத்மாசன நிலையில்
வடிக்கப்பட்டு வேதிகையில் நிறுப்பட்டு அழகுற காட்சி யளித்தது. அச்சிலைக்கு மேற்புறம்
சிறிய முக்குடையும் இருபுறமும் தூண்களில் சாமரை தேவர்களும் பின்சுவற்றில் பிண்டி மரமும்,
தங்கத்தால் ஆன பிரபாஒளி வட்டத் தகடும் சரவிளக்குகள்
ஒளியில் பளீரென மூலவரை காட்சியளிக்கச் செய்து தொழுபவருக்கு அருள் பாலிக்க வகை செய்து
கொண்டிருந்தன.
அப்போது தந்தை மஹாராஜா பிரஜாபாலன் மதன சுந்தரியை நோக்கி “எனதருமை புதல்வியே! மதனசுந்தரி,
இளையோளுக்கு முன்னர் உனக்கு மணமுடிக்க வினவியபோது
சிறிது காலம் செல்லட்டும் என்றுரைத்து மறுத்து விட்டாய். உன் தங்காள் சுரசுந்தரிக்கு
மணவிழா நிறைவுற்று சிலமாதங்களும் கழிந்து விட்டன. இந்நிலையில் உனது திருமணத்தை இனியும்
காலம் தாழ்த்த நாங்கள் விரும்பவில்லை. காலமறிந்து செய்தலே அறிவுடையோர்க்கழகு. பருவமடைந்த
உன்னை மணமின்றி எங்களுடன் வைத்திருத்தல் மஹாபாவம் அன்றோ; ஆதலால் உன் இசைவை தெரிவிப்பதோடு,
நீ மணம் செய்ய விரும்பும் ஒரு அரச குமாரனை உன் சகோதரியைப் போன்று தெரிவித்தல் நலம்
பயக்கும். அவனையே உனக்கு மணமுடிக்க எண்ணியுள்ளோம். உன் விருப்பத்தை கூறு…” என்று சொல்லி அவளிடமிருந்து
நல்லதொரு பதிலை எதிர் நோக்கினார். தாயும் கணவனை ஆமோதிப்பதாய் தலையசைத்து கனிவுடன் பதில்
வேண்டி நின்றாள்.
அவளோ ஜினஆகமங்கள் பல கற்றதினால் இல்லறத்தில் அதிக நாட்டமின்றி வாழ்ந்து
வந்தாள். பெற்றோர்கள் கடமையை முடிக்க வற்புறுத்துவதால் காலம் தாழ்த்தி வந்தாள். அதனால்
பதிலேதும் கூறாமல் தலைகுணிந்து நிற்பதைக் கண்ட தந்தை பிரஜாபாலன் “ மகளுக்கு வரன் பேசுங்கால் தந்தையானவன்
நல்ல கல்வியறிவிற் சிறந்த, வீரனுமான காளையொருவனை விரும்புவான். தாயோ தனவந்தனாகிய மருமகனை
தேர்வு செய்வாள். சுற்றமோ நல்ல குலத்திலுதித்த மணாளனை தேடச்சொல்வர். பெண்ணோ பொருள்
பெரிதல்ல கண் நிறைந்த கணவனே சிறந்தவன் என்று ஆணழகனாய் மணமுடிக்க விரும்புவாள். ஆகவே
உன் விருப்பப்படி தாய், தந்தையர், சுற்றத்தார் அனைவரையும் திருப்தி செய்யும் வகையில்
ஒரு வரனை கூறி நிறைவேற்றுதலே மங்கல வாழ்க்கைக்கு ஏதுவாக அமையும் “ என்று அவளை கனிவுடன் நோக்கினார்.
அவள் பதிலேதும் கூறாமல் மணவிருப்பத்திற்கான நாணத்தை முகத்தில் காணாததைக் கண்ட பிரஜாபாலன் மதனசுந்தரியிடம் “ அக்கணவனுக்கு துணையாயிருந்து
இல்லற தர்மங்களை நடத்தி மனமொத்த வாழ்வை உருவாக்கி, முக்திக்கு வழி வகுக்க காரணமான வாழ்க்கைக்கு,
தன் மனத்தில் எண்ணிய கணவனை பெறுவதே சிறப்புடையதாகும். அவ்வாறின்றி உனது விருப்பதை கேளாமல்
பொருந்தா வரனை உனக்கு முடித்து வைத்தால் ஆயுள் முடிவு வரையிலும் துன்பக்கடலிலேயே மூழ்கிட
நேரிடும் மகளே. அவ்வாறாக ஒரு பெண்ணின் இனிய வாழ்க்கையை கெடுத்தல் மஹாதோஷமாயிற்றே என்பதை
பல சாஸ்திரங்களை கற்ற நீயும் அறிவாய். அதனால் உன் விருப்பத்தை உடன் தெரிவிப்பாயாக” என்று கூறி அவள் முகத்தை ஆராய்ந்த
படி நின்றார்.
அதனை பொறுமையுடன் கேட்ட மதனசுந்தரி மனம் குழம்பியவளாய் “தந்தையே, நான் அவ்வாறான எந்த
ஒரு விருப்பத்தையும் மனதில் கொள்ளவில்லை. தங்கள் கடமையை நிறைவேற்ற முடிவிருந்தால் உங்கள்
விருப்பப்படியே என் மணம் ஆகட்டும். இல்லையெனில் சிலகாலம் ஜினபக்தியிலேயே என் பொழுதைக் கழித்து வருகிறேன்” என்றாள்.
அவளது இப்பதிலை எதிர்பார்க்காத அரசரும் முகம் சுழித்தபடி அவளை நோக்கிய
“ மகளே! பெற்றோர்கள் பலரும் தங்களது புதல்வியின் மனதை நன்குணராது
ஒரு கீழான குலத்தில் குரங்குபோல் ஒரு குரூபியை கணவனை தேடிவிடுவர். அறிவற்ற சிலரோ பணமிருந்தால்
போதும் என ஒரு பெருநோயாளிக்கு முடித்து விடுவார்கள். மேலும் சிலர் வித்தையறிந்த ஆனால்
விகார சொரூபம் கொண்ட ஒரு தரித்திரனுக்கு திருமணம் செய்குவித்து அவள் வாழ்வை பாழக்கவும்
செய்வதுண்டு. பெரும் பணக்காரனிடம் செல்வங்களைப் பெற்றுக்கொண்டு எத்தன்மையவனாக இருப்பினும்
சுயநலத்துடன் இலக்குமி போன்ற தம்மகளை சேர்ப்பித்தும் விடுவர். சிலர் நிர் மூடனாயிருந்தாலும்
உயர்குலத்தில் பிறந்திருந்தால் போதுமென்று நிறைய வரதக்ஷணையும் அளித்து பாழுங்கிணற்றில்
தள்ளி விடுவர். அவ்வாறாக எதையும் சிந்திக்காது தம் குலப்பெருமை, படித்த வரன், வித்தைக்காரன்,
மூடன் என்றும் பாராது தம் கடமையை முடிக்கும் பெற்றோர்களை நான் பலசமயம் சபைக்கு வரும்
வழக்கின் வழியே உணர்ந்துள்ளேன். மேலும் மாறுவேஷத்தில் நகர்வலம் சென்று பல இல்லங்களில்
கண்ட பூசல்களின் வழியேயும் கண்டுள்ளேன். அத்தெளிவினால் உன் விருப்பதை கேட்டறிய முடிவு
செய்தேன். இதுவே உன் எதிர்கால வாழ்விற்கும் நன்மை பயக்கும். நீயே விரும்பி ஏற்றுக்
கொண்ட மணாளளே எங்களுக்கும் எந்த ஒரு இழிவையும் தராது நடந்து கொள்வான். அதுபோன்ற ஒரு
கண்ணிய மிக்க ஒரு இளவரசனை நன்கு சிந்தித்து உடன் கூறி விடு எங்கள் கடமையை நாங்கள் முடிக்கும்
வேளையின் விளிம்பில் நின்று கொண்டிருக்கிறோம்.”
என்று சற்று அழுத்தமாக கூறி சற்று கடுமையான முகத்துடன் மகளைக் கண்டார் மஹாராஜன்.
அவள் மிகுந்த பயங்கொண்டு தந்தையை பார்த்த மட்டில் மனமிளகி “ மகளே! கலங்காதே சற்று கடுமையாக பேசியதாக எண்ணாதே. ஏனெனில்
திருமணத்தால் பல பெண்கள் உயிர் விடவும் நேரிடுவதுண்டு. பெண்ணின் விருப்பமறியாமல் பல
வழக்கினை என் அரசவையில் நான் விசாரித்ததுண்டு. அப்பெண்களைக் கண்டு வருந்திய காரணத்தினால்
அதுபோன்ற ஒரு நிலை உனக்கு வர என் மனம் இடம் கொடுக்க வில்லை. அதனால் பெண்கள் தாங்கள்
சுதந்திரமாக சிந்தித்து அவர்கள் விருப்பத்தை கேட்டறிந்த பின்னே திருமணம் செய்தல் நலம்
என்று பலமுறை ஆணையும் பிறப்பித்துள்ளேன். அவ்வாணையை நாட்டுக் காவலன் நானே மீறுதல் நன்றன்று;
அதனால் நல்ல மருமகனை நீயே உன் விருப்பப்படி தெரிவித்தால் , எங்களுக்கும் பொருந்தும்
பட்சத்தில் அவ்வரனை உனக்கு மிகுந்த மகிழ்ச்சியுடன் முடிப்பேன். மேலும் என் மகளின் திருமண
முடிவில் பெண்ணின் மனம் போல் மாங்கல்யம் அமைந்தது என்ற பெருமிதத்துடன் நானும் ஆட்சி செய்ய வழிவகுக்கும். அதனால் நல்ல மணாளனை நீயே
கூறு” என்று அன்புக்கட்டளை இடுவதுபோல்
கூறினார்.
மேலும் “மகளே! என் கட்டளையாக ஏற்று அஞ்ச
வேண்டாம். உன்மீதுள்ள பாசம் லவலேசமும் குறையவில்லை. அன்பு தந்தையின் விருப்பமாக ஏற்று
நல்ல பதிலை துணிவுடன் சொல். ஏனெனில் சிறந்ததொரு ரத்தினக்கல்லை ஈயத்தோடு சேர்த்தாலும்,
சுவர்ணத்தோடு சேர்ப்பினும் அதன் இயற்கை குணம் மாறுவதில்லைதான், இருப்பினும் தங்கத்துடன்
சேர்த்தலே அதனை அழகுடன் மிளிரச் செய்யும் ; அதுபோல் நல்ல குணமுள்ள பத்தினிப்பெண்டிர்கள்
எந்த ஒரு ஆண்மகனை மணமுடித்தாலும் அவர்கள் தங்கள் ஒழுக்கங்களினின்றும் என்றும் மாறுவதில்லை.
ஆனால் நல்லிடத்தில் சேர்மின் அழகுடைய இல்லறமாகவும், பொருந்தா இடத்தில் சேர்ந்தால் அழகிழந்தும்
வாழ்விழந்து விளங்கும் என்பதை மனதில் இருத்தியே உன் விருப்பத்தை கேட்டு முடிக்க வற்புறுத்துகிறேன்” என்று தன்நிலையை விளக்கினார்.
ஸ்ரீபாலன் அறிமுகம்…
தந்தையின்
விளக்கம் அனைத்தையும் செவியுற்ற மதனசுந்தரியானவள் தன் தந்தை மஹாராஜா பிரஜாபாலனை நோக்கி
“தந்தையே தங்களின் அன்பை முழுவதுமாய்
பெற்று திளைப்பவள் நான். அதில் ஏதும் குற்றம் காணுதல் என்றும் என்னிடத்தில் இல்லை.
இருப்பினும் சுயேச்சையாய் என் துணையை நானே தேடிக்கொள்ளுதல் முறையன்று; அதை யோக்கியமானதாகவும்
இவ்வுலகம் கருதாது. தாய் தந்தையர் தேர்வு செய்த ஒருவனை திருமணம் செய்வதே மகளின் பணிவான
செயல் மற்றும் முறையும் கூட. பெற்றோர்கள் எக்காலமும்
தங்கள் குழந்தைகளுக்கு பொருந்தாதவற்றை செய்வதில்லை. தந்தை முடிவு செய்யும் ஒரு வரனையே
உரிய நாயகனாக கொள்ளுதலே குலமாதர்கழகாகும். தாங்கள் அவ்வாறே எனக்கு மணம் முடித்து விடுங்கள்,
அதுவே எனக்கு பொருத்தமான வாழ்க்கைத் துணையாக அமையும்” என்றனள்.
அவ்வாறு
கூறியதும் தன் கூற்றுக்கு எதிர்கூற்றாக நினைத்த அரசனின் முகத்தில் ரெளத்ராகாரத்தின்
அடையாளங்கள் தென்பட்டன. ஏனெனில் அவரோ சாமான்யரல்ல; கண்டவுடன் விலகிச் செல்லும் பகைவரைத்
தவிர, கலங்கவைக்கும் பகைவரையும் அறியா அவந்தி ராஜ்ஜியத்தின் காவலனன்றோ பிராஜாபாலன்
எனும் இப்பராக்கிரமசாலி. இருப்பினும் தன் மகளிடம் “
நீ இப்போது என்னதான் சொல்ல வருகிறாய். என் அபிப்ராயத்தை ஏற்க உன் மனம் மறுக்கிறதா.
உன் விருப்பத்தை என்மீது திணிக்க எண்ணாமல்
நான் கூறுவதை ஏற்றுக் கொள்வதே உனக்கு சாலச் சிறந்தது” என்றார் தோன்றிய ரெளத்ராகரத்தை முழுவதும் வெளிக்காட்டாமல்
விழுங்கி விட்ட நிலையில்.
“தந்தையே என்னை மன்னியுங்கள்.
தங்கள் கூற்றை மறித்து நடக்க நான் எக்காலமும் எண்ணுயதில்லை. அவ்வாறான அடக்கமின்மையுடன்
தாங்கள் இருவரும் என்னை வளர்க்கவுமில்லை. அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு என்ற நாற்பண்புடன்
எப்போதும் ஒழுகும் மடந்தையாகத்தான் என்னை வளர்த்துள்ளீர்கள். சினம் கொள்ளவேண்டாம் தந்தையே
தங்களின் விருப்பதை மீறுவதற்கான நிலைப்பாட்டில் இதனை கூறவில்லை. விதி வலியது என்னும்
வினைக்கொள்கையை நன்குணர்த்தும் ஜினவறத்தின் மீது முழு நம்பிக்கையுள்ளவள். பகவான் கூறிய
வழியில் நடப்பதையே எந்நாளும் நோக்கமாக கொண்டவள். நான் ஈட்டிய வினைக்கேற்ற இல்லற வாழ்க்கையே
எனக்கமையும். என் தலைவிதிப்படி எந்த நாயகன் எனக்கமைய வேண்டுமோ அவனே என்னைச் சேர்வான்.
அதனால் தாங்கள் கூறியதைப்பற்றி யாதொரு அபிப்ராயமும் என்னிடம் இல்லை. பொருத்தருள வேண்டுகிறேன்
தந்தையே! தங்கள் விருப்பப்படியே என் வாழ்வு அமையட்டும். அதனையே சிரமேற்கொண்டு சிறப்போடு
வாழத் துணிவேன். தங்கள் புகழுக்கு எவ்வகையிலும் இழுக்கு நேராவண்ணம் எந்நாளும் வாழ்வேன்.” என்ற பதிலுரைத்தவுடன், எதிரியைக் கண்ட பிரஜாபாலனாக வெகுண்டு
“நீ என் கூற்றுக்கு மாறாக பேசத்துணிந்தாயோ,
இனி என் கண்முன் நில்லாது செல்வாயாக; விதிப்படி எது நடக்குமோ அதுவே நடக்கட்டும். அதையும்
நானே நடத்துகிறேன்” என்று ஆவேசமாய் திரும்பிய போது,
அவர் பட்டாடைகளில் உள்ள முத்துக்கள் ஒன்றோடொன்று உரசிதோடு, மார்பில் சூடிய ரத்தினங்கள்
பதிக்கப்பட்ட உருட்டு திரிசரத்துடன் மோதியதில் “சளக்” என்ற சப்தம் அங்கிருந்தவர்களை அவர் வாளை வீசியது போன்று அரளச்
செய்தது.
மதனசுந்தரி
அவர் சென்ற திசை நோக்கி கைகூப்பி வணங்கி பின் அந்தப்புரத்திலுள்ள தன் இருப்பிடம் நோக்கிச்
சென்றாள்.
மாலை;
பகலை இரவின் இருள் விழுங்கத் தொடங்கியது. கோட்டைக்குள் இருந்த தூண் விளக்குகளுக்கும்,
அரணில் சொருகிய தீவட்டிகளுக்கும் இலுப்பை எண்ணை ஊற்றி ஏற்றத்தொடங்கிய சேவகர்களின் பாட்டொலியும்,
தூரத்திலிருந்து வருபவர்களுக்கு வழிகாட்ட கோட்டை மீதமைந்த வானுயர்ந்த விளக்கத்தில்
சுடர் விட்டுப் பிரகாசித்த பெரும் தீப்பந்தங்களுக்கு அவ்வப்போது எண்ணை விட்டுக் கொண்டிருந்த காவலாளிகள், மேலிருந்து இலுப்பெண்ணெய்
கேட்டுப் போட்ட கூச்சல்களும் அதற்கு தரை மட்டத்திலிருந்து கிடைத்த பதில்களும் சேர்ந்து
அமைதியை கிழித்துக் கொண்டிருந்தன. இரவு ஏறி விட்டதன் காரணமாக அதுவரை கட்டிக் கொண்டிருந்த
பட்டாடைகளை நீக்கி வெள்ளைத் துணிகளை உடுத்திய மங்கையர் ஒருவருக்கொருவர் போட்டிருந்த
மலர்மாலையை நிலைமாற்றி கோஷமிட்டபடி ஓடிப்பிடித்துக் கொண்டிருந்தனர். இரவு நெருங்கியும்
வெளியே வர்த்தகசாலையில் வெளிநாட்டு வியாபாரிகளின் பேரக்கூச்சல்கள் பெரிதாகவே கேட்டன.
மெள்ள மெள்ள கூச்சல் குறைவதால் இரவு அர்த்தசாமத்தை நெருங்குகிறது என்பதை யாவர்க்கும்
உணர்த்தியது. அந்த இரவிலும் பிரஜாபாலன் காலை தன் மகளிடத்தில் நடந்த உரையாடலின் எண்ண
ஓட்டத்தில் அங்கும் இங்குமாய் நடந்து கொண்டிருந்தார்.
மறுநாள்
பூத்துக்குலுங்கும் செடிகளும், கனிந்த மரங்களும், அதைத் தேடிவரும் கிளி போன்ற பறவைக்கூட்டமும்;
அணில், குரங்கு, மான் போன்ற மிருகங்களும் நிரம்பிய கானகத்திற்கு மன்னர் பிராஜாபாலன் அமைதியை தேடி தன்
படைகளுடன் வந்து தங்கினார்.
ஒருதினம் கழிந்து அவ்வனத்தை விட்டு வெளியேறப் புறப்பட்ட
வேளையில் பெருவியாதியில் பீடிக்கப்பட்ட பெருங்கூட்டத்தினர் தம் நாடு நகரங்களை விட்டு
ஒன்றாக கானகத்தில் அரசரை நோக்கி வந்து கொண்டிருந்தனர். அவர்களின் தலைவன் போன்ற ஒருவன்
முன்னே வருவதை தன் தேரில் அமர்ந்தபடியே கண்ட மஹாராஜன் அமைச்சரை நோக்கி “எதிர் கொண்டு வருபவன் இக்குஷ்டரோகக் கூட்டத்திற்கு தலைவன்
போல் தோன்றுகிறதே, இவன்?” என்று சந்தேகத்துடன் பேச்சை
முடிக்கும் முன்னே, குறிப்பறிந்த அமைச்சரும் “ஆம் மன்னா! இவன் ஒரு அரசகுமாரன்; தங்களிடம் நட்புக்கரம் நீட்டவே
உங்களைக் காண வந்து கொண்டிருக்கிறான்” என்றார். அவன் அரசரை நெருங்கியதும்
அவரும் அவனை ஏற்று தன் நாட்டிற்கு அழைத்தார்.
அப்போது
அவரது மனதில் ஒரு வக்கிர எண்ணம் தீயென பற்றிக்கொண்டு எரியத்தொடங்கியது. இவனோ ஒரு குஷ்டரோகி,
ஆனால் அரசகுமாரனாய் தோன்றியுள்ளான். இவனையே; எல்லாம் விதிப்படியே நடக்கும், தலைவிதியை
யாராலும் அழிக்க இயலாது என்று வேதாந்தம் பேசிய மதனசுந்தரிக்கு மணமுடித்தால் அவள் அகந்தை
அழிய வழிவகை செய்யும். என் கூற்றை மதியாது மறுத்துப் பேசியவளுக்கு இதுவே பெரும் தண்டனையாய்
அமையும்” என்று மதன்சுந்தரியின் ஊழ்வினை
அவர் காதுகளில் ஓதியது. அவையே மனதில் ஊடுருவி
உறுதியாய் பதிந்தது.
அந்தோ
அவள் வாழ்வில் பேரிடியுடன் இருள்சூழ வந்த கருமேகமாய் கானகத்தில் எதிர்ப்பட்டவனே கதையின்
நாயகன் ஸ்ரீபாலன் ஆவான்.
ஆனால்
அவன் வாழ்வில் வசந்தம் அன்றிலிருந்துதான் துவங்கியது….
ஸ்ரீபாலனைக் கரம் பிடித்தல்…
அரசரின் அழைப்பை ஸ்ரீபாலனும், குஷ்டரோகக் கூட்டமும் ஏற்றுக் கொள்ள
அப்படையின் பின்னே உஜ்ஜயினி கோட்டையை நோக்கி சென்றனர். கோட்டைத்தலைவன் உத்தரவிட வாயிற்காப்போர்
கதவுகளை திறந்த கொண்டே பின்னால் வரும் யாசகர்கள் போன்று தோன்றிய அக்கூட்டத்தை நோட்டம்
விட்டனர். அருவெருப்புடன் கோட்டைத் தலைவனைக் கண்டதும் தலைவனும் அரசனின் ஆணையை நிறைவேற்றுவதே
நம் கடமை என்பது போல் பிதுங்கிய உதடுகள் கீழிறங்க
காவலர்களைக் காண அவர்களும் அதே முகத்தோற்றத்துடன் வழிவிட்டு உள்ளே அனுப்பி வைத்தனர்.
பேரரசர் அமைச்சரை அழைத்து ஸ்ரீபாலனும், கூட வந்தவர்களும் பெருவியாதியால்
பீடிக்கப்பட்டிருந்தாலும் அவர்களுக்கு வேண்டிய வசதிகளுடன் இருப்பிடங்களை அமைக்க ஏற்பாடுகளைச்
செய்யுமாறு உத்தரவிட கூறினார். அதுவரை அவர்கள் அனைவரும் உரிய மரியாதையுடன் விருந்தினர்
மாளிகையில் தங்க தக்க ஏற்பாடு செய்யுமாறும் உத்தரவிட்டார்.
அக்கூட்டமும்
ஸ்ரீபாலனை தலைமையாகக் கொண்டதினால் தங்களுக்கு கிடைத்த அரச மரியாதையை கண்டு வியந்து
அகமகிழ்ந்தனர். வீதியில் பிச்சைக்காரர்கள் போன்று அலைந்து திரிந்து சத்திரத்திண்ணையில்
படுத்துறங்கி வாழ்ந்த கூட்டம் இன்று உஜ்ஜயினி கோட்டைக்குள் விருந்தினர் மாளிகையில்
ராஜஉணவு உபசராங்கள் கிடைத்ததும் - உஜ்ஜயினி மஹாராஜா பிரஜாபாலன் வாழ்க! வாழ்க! அரசகுமாரன்
ஸ்ரீபாலன் வாழ்க! வாழ்க! என்று கோஷமிட்டுக்கொண்டே தம் தம் மஞ்சத்திற்கு சென்று அமர்ந்தனர்.
பிரஜாபாலனின்
அஹங்காரத்தின் வழியே பேயேன நுழைந்த மதனசுந்தரியின் விதி தன் விளையாட்டைத் துவங்கியது.
அரசரும் அமைச்சரிடம் தாம் ஸ்ரீபாலனை அழைத்து வந்த நோக்கத்தை நிறைவேற்றும் பூர்வாங்கப்
பணிகளைத் துவக்கிட பணித்தார்.
அவரின்
பொருந்தாச் செய்தியைக் கேட்ட மந்திரியானவர் மனம் பதைத்து மன்னனை நோக்கி “ இப்புவனக்காவலனே தாங்கள் என்ன காரியம் செய்ய துணிந்தீர்காள்!
இரதியை ஒத்த குமாரத்தியை உடலெங்கும் ரோகத்தால் அழியும் இவனுக்கு மணஞ்செய்து கொடுத்தல்
நற்செயல் ஆகாது. நல்லமுதத்தை பாழுங்கிணற்றில் கவிழ்க்கும் செயலையே ஒக்கும். ஐயனே இச்செயலை
தவிர்த்து இலக்குமி போன்ற இப்புதல்விக்கு தகுந்த அழகு மணாளனை செய்குவித்தல் புண்ணியமாகும்,
என் வேண்டுகோளை கேட்க விரும்புகின்றேன்” என்று தெரிவித்தார். அரசனின்
பிடிவாதம் இவ்வற மொழிகளை செவிமடுக்கவில்லை. அரசாங்க சோதிடரை அழைத்து திருமண நாளை குறித்து,
அதற்குரிய ஏற்பாடுகள் அனைத்தையும் அவ்விருந்தினர் மாளிகைக்கூடத்திலேயே செய்ய ஆணை பிறப்பித்தார்.
அதன் படியே எளிய முறையில் திருமணப் பணிகளும் ஆயத்தமாயின.
இந்த
நோக்கம் பற்றி ஏதுமறியா தன் அரசியையும் மகளையும் அழைத்து “இந்த ஸ்ரீபாலன் எனும் அரசகுமாரனையே இவள் மணமுடிக்க வேண்டும்
என்பதே விவாக விதி. அதன் படியே இவன் குஷ்டரோகியாய் இருப்பினும் இவ்வேற்பாடுகளை செய்யத்
துவங்கினேன். இவனுடனே நீ சேர்ந்து இல்லற இன்பத்தை அனுபவி.” என்று கூறியதைக் கேட்டு தாயின் உள்ளம் பதறிப்போனது. அவள்
மன்னனை பலவகையில் மன்றாடி இத்திருமண ஏற்பாட்டை நிறுத்தக் கோரினாள். அவரோ அவளது கூற்றெதற்கும்
செவிசாய்ப்பதாய் இல்லை. அவள் வேண்டுகோளை ஏற்க மறுத்ததோடு தன் செயலில் உறுதியுடன் இதுவே
என் ஆணை என்று அரசியாரைப் பணிய வைத்தார்.
ஆனால்
மதனசுந்தரியோ “தந்தையே தங்கள் சித்தம் என் பாக்கியம்.
அதுவே தங்கள் விருப்பமாயின் அதனை சிரமேற்கொண்டு அம்மணாளனையே என் கணவனாக முழுமனதுடன்
ஏற்றுக் கொள்கிறேன். அதுவே என் விவாகவிதியென்றால் அதனை மாற்றவோ, மறுக்கவோ என்னால் ஏது
செய்ய இயலும். அவரோடு தங்களுக்கும், நாட்டுக்கும்
எக்குந்தகமும் விளையாமல் பெருமை சேர்க்கும் வகையில் கவனமுடன் வாழ்கிறேன். இதுநாள் வரை
பேணிக்காத்த தங்களுக்கு எனது ஒளிமயமான எதிர்காலம் பற்றி தெரியாதா என்ன! தங்கள் உத்தரவுக்கு
பணிகிறேன் தந்தையே” என்று மனதில் எக்கிலேசமும் இன்றி முகம் சுளிக்காமல் அவரை வணங்கி நின்றாள்.
அதுவரை
பிராஜாபாலனின் ஆணவத்தின் பின்னே தூண்டிகொண்டிருந்த அவளின் விதியும் வியக்கவே செய்தது.
இவளை எத்தண்டனையாலும் இச்சிக்க இயலாது போலும். எச்சூழலையும் ஏற்கும் அவளின் பொறுமையையும், சகிப்புத்தன்மையையும் கண்டு தன் தோல்வியை
ஒத்துக் கொண்டது. இச்சமநிலை உணர்வைக் கண்டுதான் வினைஉதயமும் விலகத்துணியும் என்பதை
அவளே இவ்வுலகிற்கு வழங்கிச் சென்றாள் போலும். அவளது விதியின் அக்கலக்கத்தில் பிரஜாபாலனின் இதயதிரையில்
மறைந்த தந்தைப் பாசம் மீண்டும் துளிர் விடத்துவங்கியது. அப்போது தான் செய்வது குற்றமா,
துரோகமா, நீதியற்ற செயலா என்னை யார் தன்பிடியில் வைத்துள்ளார்கள் என அவர் சித்தம் சிறிது கலங்கினாலும் விதியின் கிரகணமும்
முற்றும் விலகாததால் திருமணப்பணிகள் பற்றிய சிந்தனைக்குள் தள்ளப்பட்டார்.
பலநூறு
தேசத்து அரசர்கள், ஆயிரம் தனவந்தர்கள், பல்லாயிரம் பந்துக்கள், உறவினர்கள் மத்தியில்;
நுழைவாயிலில் வரும்போது முரசும், மத்தளமும், மங்கல இசைக்கருவிகளும் வரவேற்க, வைரங்கள்
பதித்த ரத்தினக் கம்பங்கள் நுனியில் தோரணமும், மாலைகளும் தொங்க, முத்துப்பந்தலால் அமைந்த பிரம்மாண்ட மணமேடையில் அக்னிக்குண்டம் அமைத்து அந்தணர் மந்திரம் ஓதும் மணச்சடங்குகளுடன்; மணம் தெளிப்போர், மலர் தூவுவோர், ஒளிவீசும் மேனியர்,
வாழ்த்துரைப்போர், மங்கலம் பாடுவோர், சந்தனம்
பூசுவோர், நறுமணம் புகைப்போர், மாலை சூடிய மகளிர் மணப்பொடி வீசுவோர், விளக்குடன் செல்வோர்,
அணிகலன் சுமப்போர், முளைப் பாலிகைத் தட்டும் குடமும் சுமப்போர், புன்முறுவல் காட்டுவோர்,
கூந்தலில் பூ முடித்த பொற்கொடி போன்றோர் பலரும் ஒன்றுகூடி நிறைவேற்றும் பெரும் சிறப்பேதும்
சேர்தலின்றி;
கோட்டைக்
காவலன் வீட்டுத் திருமணம் போல், நாட்டுக் காவலனின் குலமகள் மதனசுந்தரியின் திருமணம்
ஊரில் யாரும் அறியாமல் நிறைவேறியது. அதுவும் அவ்விதியின் விளையாட்டில் ஓர் அங்கம் போலும்.
திருமணமும்
நிறைவேறியது. விதியெனும் தளையில் சிக்குண்ட அஹங்காரமும் விடுதலை பெற்றது.
ஒளிமதிவதன,
தளிர் கொடியிடையாளை கரும் குரங்கொன்று கரம் பிடித்து மணமேடை வலம் வருவதை கண்டு, பித்துநீங்கிய
தந்தை நெஞ்சம் தன் கொடுஞ்செயல் கண்டு நடுங்கினாலும், மன்னர் தோற்றம் மட்டும் கம்பீரமாய்
நின்றது. தலை குனிந்து மாங்கல்யம் பெற்ற மங்கையை,
மனம் கலங்கி வாழ்த்தி “ஐயகோ என்ன கொடுமை செய்துவிட்டோம்,
மன்னன் என்ற அஹங்காரம் தந்தை என்ற அன்பை மறைத்திட்டதே. இத்தீச்செயலை எத்தனை பிறவியில்
நான் தேற்றுவனோ என்று மனம் அரற்றிய தருணம், கணவனான ஸ்ரீபாலனுடன் மதனசுந்தரியும் அவர்
காலடியில் வீழ்ந்து வாழ்த்த வேண்டினாள். “இல்லறம் எனும் நல்லறம் வளர வாழ்த்துகிறேன்” என வாழ்த்தி நின்றாலும்; தன்னைத்தானே நிந்தித்துக் கொண்டு
“சரி செய்ய வொன்னா தவறிழைத்து
விட்டேன். இனி காரியம் நிறைவேறிய பின் என்ன செய்வது?” என்று சிறிது மனம்தேற்றிக் கொண்டிருந்தார்.
அதே
சமயம் ஸ்ரீபாலனுக்கு அளவற்ற சீதனைப் பொருளையும், பரிவாரங்களையும் அளித்து அரண்மனை வளாகத்தில்
அவர்க்கென மாளிகை அளித்து தங்க ஏற்பாடு செய்தான்.
அத்தியாயம் – 2
மதனசுந்தரியின் கற்புயர்வு:
சித்தசக்ர நோன்பின் மகிமை…
உஜ்ஜயினி நகரத்தின் மையத்தில் அமைந்த மஹாராஜா பிரஜாபலனின் அரசமாளிகையும், அருகே அந்தப்புரமும்
அமைக்கப்பட்டிருந்தன. கோட்டைக்கு வெளியே நாற்புறம் படைவீடுகள்; அங்கே எப்போதும் வீரர்கள்
வாள், வேல், வில், அம்பு, ஈட்டி போன்ற ஆயுதங்களை எடுப்பதும் வைப்பதுமான எஃகு உரசி எழுப்பும்
சத்தமும்; அருகிலுள்ள கொல்லன் பட்டரைகளில் ஆயுதம் தயாரித்தலும், மழுங்கியவைகளுக்கு
கூரமைப்பதுமாக அடைக்கல்லில் சுத்தியல் அடிபடும் சத்தம் எப்பொதும் கேட்டுக் கொண்டே இருக்கும்.
படைவீடுகளுக்கு இடையில் மல்யுத்த மேடையில் ஆஸ்தான பயில்வான்கள் ஒருவரை ஒருவர் தட்டிக்கொள்ளும்
ஓசையும், செண்டு வெளியில் மத்தகத்தில் அமர்ந்து
விரர்கள் ஈட்டி எறியும்போது எழும் யானைகளின்
காலடிச் சத்த ஒசைகளும், வையாளி வீதிகளில் முகக்கயிற்றை பிடித்து ஏறி விருட்டென ஓடும்
வீரர்களின் குதிரைகள் எழும்பும் குளம்பொலிகளும் வானைப் பிளந்து கொண்டிருக்கும்.
அதற்கும் அடுத்த சுற்றில் நகரத்தின் வீதிகளில் கூட்டத்துக்கும்
கலகலப்புக்கும் குறைவில்லை. இப்போது அவ்வீதிகளில் பெரும்பாலும் ஆலய ஸ்தபதிகள், சிற்பக்
கலைஞர்கள், அடியார்கள், ஓதுவார்கள், அரண்மனை ஊழியர்கள், ஆலயப் பணியாளர்கள், கோயில்களில்
சுவாமி தரிசனம் செய்யவும் திருவிழாக் காட்சிகளைப் பார்க்கவும் வெளியூர்களிலிருந்து
வரும் ஜனங்கள் ஆகியோர் அதிகமாகச் சஞ்சரித்துக் கொண்டிருந்தனர். இத்தனை அரவாரங்களுக்கிடையேயும்
கோட்டைச் சுவற்றின் உள்ளே அமைதி வெளியேறாமல் குடி கொண்டிருந்தது.
அரண்மனை நான்கு மூலைகளில் அவரவருக்கான ஆலயங்கள் பெரிதாக கட்டப்பட்டிந்தது.
அதன் வடமூலையில் அருகர் ஆலயத்தின் நெடிதுயர்ந்த மானஸ்தம்பம் வெள்ளை வெளேர் கல்லிலும்,
அருகில் துவஜமரத்தின் வெள்ளிக் கவசமும் சூரியனின்
கிரங்கள் பட்டு கண்ணைக் கூசிக் கொண்டிருந்தன. மேலும் மூலவர் விமான தங்ககலசமும் மஞ்சள்
நிறத்தில் ஜொலித்து அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துக் கொண்டிருந்தது.
அவ்வாலய வளாகத்திற்கருகே ஸ்ரீபாலனும் மதனசுந்தரிக்கான உப்பரிகை
மாளிகை நாற்புறக் காவலுடன் அமைக்கப்பட்டிருந்தது. அரசமாளிகையும், அந்தப்புரமும் இவர்கள்
மாளிகையும் லதா மண்டத்தால் இணைக்கப்பட்டிருந்தது. அம்மாளிகையில் அவர்களும் முறையே தம்
இல்லறம் நடத்தி வந்த போழ்து ஒருநாள்….
மதனசுந்தரி வளமையாய் சென்று வணங்கும் சுயம்புத்திலகம் எனும் அந்த
அருகன்கோயிலுக்கு இருவரும் சென்றனர். மானஸ்தம்பத்தை வணங்கி, பலிபீடத்தில் தீயச்சிந்தனைகளை
இறக்கி விட்டு அஜ்ஜினாலயத்தை மும்முறை வலம் வந்தனர். பின் ஆலய உள்ளாலை வழியே கருவறைக்குள்
நுழைந்து பகவானை வணங்கி நீர், சாந்து, அரிசி, பூமாலை, திருவமுது, தீபம், தூபம், பழம்
என்னும் எட்டுவிதப் பொருட்களைக் கொண்டு மனதில் அவையவைக்குரிய பாவனையை இருத்தி அர்ச்சனைச்
செய்து ஆரத்தி எடுத்த பின் அருகனை போற்றிபாடி ஸ்தோத்திரம் செய்து வணங்கினார்கள்.
அச்சமயத்தில் அவ்வாலயத்தின் பக்கத்தில் உள்ள குடிலில் வரகுப்த ஆச்சாரியர்
எனும் முனிவர் தங்கியிருந்தார். அச்செய்தி யறிந்து இருவரும் அவரைக் காண சென்றனர். அம்முனிவ
பெருமானைக் கண்டு சாஷ்டாங்கமாய் வணங்கி அவரிடம் “ஸுவாமி!
எங்கள் நிலையை நாங்கள் எடுத்துச் சொல்ல வேண்டுவதில்லை. எங்களைக் கண்ட மாத்திரத்தில்
தாங்கள் அனைத்தையும் அறிந்து கொண்டிருப்பீர்கள். இவ்வாழ்விலிருந்து கடைத்தேறும் நல்வழிகளை
எங்களுக்கு உரைக்க வேண்டுகிறோம்.”
என பணிவுடன் கைகூப்பி வணங்கி நின்றனர்.
அவரும் இந்நிலைக்கான காரணத்தை உணர்ந்ததோடு, இத்துயரிலிருந்து மீள
வழிகளையும் அன்புடன் கூறத்தொடங்கினார். ஜினதர்மம் கூறும் துறவறம் மற்றும் இல்லறத்தின்
மாண்புகளை உபதேசித்தார். அணுவிரதங்களை கடைபிடிக்க வலியுறுத்தி: இரவு உணவு உண்ணாமை,
நீரை வடித்துண்ணுதல், ஜினபிம்பப் பிரதிஷ்டை, உத்ஸவமுறைகள், நித்திய கர்மானுஷ்டானங்கள்,
விரதத்தின் வகைகள், அவற்றை கடைபிடிக்கும் முறைகள் அனைத்தையும் இருவருக்கும் உபதேசித்ததோடு;
அவற்றுள் பிரதானமாக சித்தசக்ர நோன்பின் தன்மையையும் பயனையும் அதற்கான செயல்முறையும்
விரிவாக எடுத்துக் கூறி அத்தினங்களில் கிரமப்படி தவறாமல் அனுஷ்டிக்குமாறு மதனசுந்தரிக்குக்
கட்டளையிட்டார். அதுவே உன்வாழ்வில் வசந்தத்தை அளிக்கும் என்று ஆசீர்வதித்தார். அருகன்
வழியே தன் வழி என்று வாழும் மதனசுந்தரியும்
“அவ்விரத்தத்தினை சிரமேற்கொண்டு
கிரமப்படி கடைபிடிக்கிறேன் ஐயனே”
என்று கூறி பணிந்தாள்.
ஆலயத்திலிருந்து ஸ்ரீபாலனுடன் தம் மாளிகைக்கு திரும்பிய மதனசுந்தரி
முனிபுங்கவர் கூறிய விதிப்படி அப்புனித நோன்பை நோற்கும் பூர்வாங்கப் பணிகளை தொடங்கினாள்.
தன் இஷ்ட தேவதையை வணங்க எக்கணமும் காத்து நிற்பவளாயிற்றே அதனால் எதிர்வரும் பாலகுண
மாதம் வளர்பிறை அஷ்டமி திதி வருவதற்குள் அந்நோன்பிற்கான பூஜைத் திரவியங்களை சேகரிக்கத்
துவங்கினாள். அந்நோன்பிற்கான சித்த சக்ர யந்திரம் ஒன்றினை வெள்ளியினால் செய்குவித்தாள்.
பஞ்ச பஞ்சபரமேஷ்டி பிம்பமும் அவ்வாறானதாகவே அமைந்தது. உத்யாபனையின் போழ்து அவ்வெந்திரத்திற்கு
மந்திரப் புஷ்பங்கள் இட தங்கத்தினால் ஆன பூக்களை தயார் செய்தாள். (வெள்ளி இல்லாவிடில்
வாசனையுள்ள பூக்களையும் வசதிக்கேற்றவாறு உபயோகப்படுத்தலாம்)
பன்னிரண்டு ரிஷிகளுக்கு தானமளிக்க; ஸ்ருத வஸ்திரத்தில் சித்தாந்த
சாஸ்திரங்களை எழுதியதோடு, மஹாபுருஷர்களின் கதைகளை எழுதி அதன் ஒட்டணைக்கோலையும் இணைத்து
வைத்தாள். (அவ்வாறான பாக்கியம் இக்காலத்தில் கிட்ட வழியில்லை அதனால் ஸ்ராவகர்களுக்கு
ஆஹாரதானம் அளிப்பது, பன்னிரண்டு ஆர்யாங்கனைகளுக்கு வஸ்திரம் கொடுப்பது, பன்னிரண்டு
ஸ்ராவக தம்பதியருக்கு வஸ்திரம் மற்றும் ஆபரணங்கள் போன்றவற்றை அளிக்கலாம்)
-----------------------------------------------
இந்த சித்தசக்ர நோன்பு பிறவியை நீக்கி, வீடுபேறு பெறுவதை நோக்கமாகக்
கொண்டிருந்தாலும், அப்புனித நோன்பினை செவ்வனே நிறைவேற்றுவதால் காரியசித்தியும் ஆகும்
என்றும் கூறப்படுகிறது.
இந்நோன்பு பற்றி அம்முனிவர் விளக்கியவாறே இக்காலத்திலும் செய்விக்கப்படுகிறது.
இது மதனசுந்தரிக்கான நோன்பு என்று கருதவேண்டியதில்லை. அவள் அந்நோன்பினை நோற்று பலனைப்
பெற்ற பல பவ்ய ஜீவன்களில் அவள் ஒருவராகும். அதனால் அதன் விபரங்களையும் இடையிடையே காண்போம்
.
சித்த சக்ர நோன்பின் விபரம்
கர்மாஷ்டக விநிர்முக்தம்
மோக்ஷ லக்ஷ்மீ நிகேதனம்
ஸம்யக்வாதி குணோபேதம்
சித்த சக்ரம் நமாம் யஹம்,;
சுக்லாஷ்டமி சமாரப்ய
தினான் யஷ்டென ஜகத்ஹிதே
ஜிநேந்திர பவனே சோபாம்
க்ரத்வா த்ரைளோக்ய மோஹிநீம்;
க்ரஹீத் சத்வா குரோ; ஆக்ஞாம்
பவ்யானாம் சர்மதாயினீம்
யதா சக்திம் சமாதாய
சத்த போபி: சுகப்ரதம்.
இந்நோன்பு வளர்பிறை அஷ்டமியில் துவக்க வேண்டுமாதலால், ஆண்டுக்கு
மூன்று முறை வரும் நந்தீஸ்வர ஆஷ்டானிகத்தில் அதாவது ஆவணி, கார்த்திகை, பங்குனி மாத
ஏதாவதொரு அஷ்டமி தினத்திலிருந்து பெளர்ணமி பூர்வகம் விரதத்தை கைக்கொள்ள வேண்டும்.
-----------------------------------------------
அவள் திருமணம் முடிந்து பங்குனி(பால்குன) மாதத்தில் வரும் நந்தீஸ்வர
ஆஷ்டானிக பருவத்தில் துவங்க முற்பட்டாள்…
ஆலயம் முழுவதும் வண்ணம் தீட்டி, தூய்மை செய்யப்பட்டு மாவிலை தோரணங்கள்
கட்டப்பட்டு திருவிழாக் கோலத்துடன் காணப்பட்டது. விரத அஷ்டமிக்கு முதல் நாள் சப்தமியன்று அதிகாலை எழுந்து தம்பதியர்
இருவரும் உடல் தூய்மைகளை முடித்து, தூயஆடை(நீரில் நனைத்து உலர்த்திய) உடுத்தி ஆலயம்
சென்றனர். மும்முறை வலம் வந்து மூலவரை இருவரும் சாஷ்டாங்கமாய் வணங்கினர்.
மதனசுந்தரியும் பகவான் பிரதிமைக்கு வலப்புறம் நின்று அபிஷேக விதிமுறைகளைச்
செய்து, அஷ்டவிதார்ச்சனைகள் செய்குவித்து; குருக்களை நமஸ்கரித்து நோன்பின் கிரமங்களை
பக்திசிரத்தையுடன் கேட்டாள். அன்றிலிருந்து பெளர்ணமி திதிவரை பிரம்மச்சர்ய விரதத்துடன்,
திக் விரதம்(நோன்பு முடியும் வரை வழிநடை போகாமலிருத்தல்), திசை விரதம் (வேறொரு கிராமங்களுக்கும்
போகாமலிருத்தல்) போன்ற விரதங்களை கடைபிடிக்க உறுதி பூண்டாள். சப்தமியன்று (ஏகபுக்தம்)
மாளிகைக்கு சென்றதும் ஒருவேளையுணவு எடுத்துக் கொள்ளவும் கூறப்பட்டது. அஷ்டமியிலிருந்து
வரும் தினங்களில் உபாவாசம் ஏற்று பெளர்ணமியன்று பாரணை செய்வதாகவும் உறுதி எடுத்துக்கொண்டாள்.
(உபவாசம் ஏற்க முடியாதவர்கள், சதுர்த்தசி அன்று மட்டும் எடுத்துக்கொள்ளலாம் அல்லது
மற்ற நாட்களும் ஒருவேளை கஞ்சியுணவு மட்டும் எடுத்துக் கொண்டு, ரசபரிதியாகம் செய்தல்
நலம் பயக்கும்)
அஷ்டமி தினத்தன்று சித்தசக்ர நோன்பு விதிகளின் கிரமப்படி அனுசரிக்க துவங்கினாள்….
மதனசுந்தரியின் கற்புயர்வு:
சித்தசக்ர நோன்பு விதிமுறை…
பால்குண மாதம் அஷ்டமி திதியன்று அருகர் ஆலயத்தில் நந்தீஸ்வரதீப
பூஜை துவக்க ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அவ்வேளையில் அங்கு முகாமிட்டிருந்த
வரகுப்த ஆச்சாரியர் முனி சங்கத்தினரும் ஆலயத்தில் பக்தி செலுத்திக் கொண்டிருந்தனர்.
-----------------------------------------------
நந்தீஸ்வர தீபம் – சுருக்கமாக….
மகிழ்ச்சிக் கண்டம்(continent of jubilation) என்று சொல்லப்படும்
நந்தீஸ்வர தீபத்தில் தேவ, தேவியர் அங்குள்ள அக்ருத்திம, சுயம்புவாக தோன்றிய, ஜிநாலயங்களை
மூன்று பருவத்தில் ஆடிப்பாடி மகிழ்வுடன் வழிபாடு நடத்தும் பூஜை முறையாகும்.
நாம் இருப்பது ஜம்பூத்வீபத்தில் (கண்டம்). இங்கிருந்து எட்டாவதான
த்வீபமே நந்தீஸ்வரத்வீபம் என்பது, நந்தீஸ்வர சமுத்திரத்தினால் சூழப்பட்டுள்ளது. இக்கண்டத்தில்
பத்மாவர் வேதிகா வனமும், பெரிய பள்ளத்தாக்குகளும், நதிகளும் நிரம்பிய அழகிய பிரதேசம்
ஆகும்.
இக் கண்டத்தின் நடுவில் ஒரு அஞ்சன (antimony) மலையும், ஒவ்வொரு திக்கிலும் அதேபோன்று பர்வதம்
ஒன்றுளது. ஒவ்வொரு அஞ்சனமலை நீட்சியில் திசைக்கொன்றாக நந்தா என்கிற நான்கு ஏரிகள்(குளங்கள்)
உள்ளன. அவற்றிற்கு நடுவே, ஒவ்வொரு திக்கிலும், ததிமுக பர்வதம் நான்கும், ரதிகர பர்வதம்
எட்டும் அவற்றின் மீதும் ஜினபவனமும் உள்ளன. ஆக பதிமூன்று பர்வதங்கள் உள்ளன.
ஆக நாற்திசையிலும் 13 X 4 = 52 அக்கிருத்திம ஜினசைத்யாலயங்கள் உள்ளன.
இந்த ஐம்பத்திரண்டு ஜினாலயங்களில் தேவர்களால் நடத்தப்பெறும் பூஜை முறை போன்றே நாமும்
அப்பருவ நாட்களில் பரத கண்டத்திலும் நடத்துகிறோம். அதுவே நந்தீஸ்வர தீப பூஜை என்றழைக்கப்படுகிறது.
மேலும் படங்களுடன் விபரங்கள் பெறவிருப்பமுள்ளவர்கள் visit the
page http://www.ahimsaiyatrai.com/p/blog-page_69.html
-----------------------------------------------
பங்குனி வளர்பிறை அஷ்டமியாகிய
முதல் நாள் அதிகாலை எழுந்து தம்பதியர் இருவரும் உடல் தூய்மைகளை முடித்து, தூயஆடை(நீரில்
நனைத்து உலர்த்திய) உடுத்தி ஆலயம் சென்றனர். மும்முறை வலம் வந்து மூலவரை இருவரும் சாஷ்டாங்கமாய்
வணங்கினர். அன்றைய நந்தீஸ்வர தீப புஜையினையும், சித்தசக்ர யந்திர மஹாபூஜையும் விதிமுறை
கிரமப்படி செய்திட ஆச்சார்யஸ்ரீ தம் சங்கத்துடன் கலந்து கொண்டார்கள்.
இந்த ஐம்பத்திரண்டு ஜினாலய உலோக மாதிரி வடிவத்தினை ஜின பிரதிமைக்கு
எதிரில் உள்ள மேடையில் அமர்த்தியிருந்தனர். அவ்வடிவத்திற்கு அபிஷேகங்கள் செய்வித்து,
தீப ஆரத்தியுடன் அதற்குரிய மந்திரங்களையும் உச்சரித்து பூஜையை நிறைவேற்றினாள் மதனசுந்தரி
அதனை மற்றவரும் பாவனையுடன் ஏற்றனர். அன்றைய ஜெப மந்திரத்தையும் 108 முறை சொல்லி புஷ்பங்களுடன்
அங்கு குழுமியிருந்த முனிவர்களும், ஸ்ராவகர்களும், ஸ்ரீபாலன், மதனசுந்தரியும் விதிகிரமப்படி
அர்ச்சித்து வணங்கினர்.
அடுத்து பஞ்சபரமேஷ்டி வடிவம் பூஜை மேடையில் அமர்த்தப்பட்டது. மதன
சுந்தரி முனிவர் கூறியபடி ஒரு சதுர வெள்ளித்தகட்டில்(செம்பு) குங்கும கற்பூராதி சந்தனம்
கலந்த வாசனாதிகளை அதில் தடவி ஸ்வர்ண(தங்க) ஊசியினால் எழுதினாள். அதற்கு பிராண பிரதிஷ்டை
செய்து அபிஷேக ஆராதனை செய்து, அந்த யந்திரத்தின் மந்திரங்களை முனிபுங்கவரிடம் எழுதிக்கொண்டதும்;
பகவான் முன் யந்திரத்தை ஸ்தாபித்து
“ஓம்
ஹ்ரீம் அர்ஹம் அஸிஆஉஸா அநாகத வித்யாதிபதே ஸ்ரீ சித்தசக்ர யந்த்ர அத்ர அவதர அவதர சம்வெள
ஷட் அத்ர திஷ்ட திஷ்ட டட அத்ர மம சன்னிஹீதோ பவபவ வஷட் ஸ்வாஹா” என்று ஆஹ்வான ஸ்தாபன சன்னிதீ
கரணம் செய்வித்தாள்.
பின்னர் ஜலகந்தாதி அஷ்டவிதார்ச்சனைகளால் ஆராதனை செய்தாள். ஆராதிக்கும்
போது பன்னிரண்டு தடவை சித்த சக்ர யந்திரத்தை
அஷ்டவிதார்ச்சனை செய்தாள். பின்னர் நோன்பைக் கைக்கொண்டாள்.
அதன் பின்னர் சித்த சக்ர யந்திரத்தின் மீது தங்கத்தினால் செய்த
பூக்களைக் கொண்டு (அல்லது ஸுகந்த வாசனாதி புஷ்பங்களாலும்)
“ஓம்
ஹ்ரீம் அர்ஹம் அஸிஆஉஸா அனாஹத வித்யாதி பதயே ஸ்ரீ சித்தசக்ர யந்த்ராய நம: மம ஸர்வரோக
விநாசனம் குருகுரு ஸ்வாஹா”
என்று நூற்று எட்டு தடவை ஜபம் செய்து மந்திரபுஷ்பம் (அனைவருடன்
கூட்டுப் பிரார்த்தனையாய்) செய்தாள்.
சித்தசக்ர மஹாயந்திரத்தை
நோன்பிற்கான பாவனைக் கருதி ஜினபூஜா பூர்வகம் அஷ்ட விதார்ச்சனை செய்து அன்றைய
விதியையும் நிறைவேற்றினார்கள்.
சிரத்தை பக்தியுடன் தூயபாவனையுடன் சித்தசக்ர யந்திரத்திற்கு அபிஷேகம் செய்த கந்தோதகத்தை (வாசனை ஜலத்தை)க் கொண்டு வந்து
தன் மணாளன் ஸ்ரீபாலன் மீது தெளித்தாள். அத்தோடு நில்லாமல் அவருடன் வந்த மற்ற ரோகிகளின்
மேனியிலும் அப்புனித நீரைத் தெளித்தாள். மற்றவர்களும் பெற்றுக் கொண்டார்கள்.
ஸ்ரீபாலனும் அவனுடன் வந்த ரோகிகளும் அவளின் அப்பூஜை நிறைவேற்றி
கிரமங்களில் லயித்து பஞ்சபரமேஷ்டிகளை மனதில் இருத்தி ஜினபக்தியுடன் மோட்சசுகத்தில்
முழு நம்பிக்கைவைத்து வணங்கி கந்த உதகத்தை ஏற்றதும் உடலெங்கும் புத்துணர்ச்சி பெற்றதை
உணர்ந்தனர். ஒரு மடங்கு பலம் பெருகியது போன்ற உணர்வு சரீரத்தில் தோன்றியது. உடல் ஆரோக்கியப்பாதைக்கு
திரும்புகிறது என்பதை புரிதலும் அவர்களிடையே விளைந்தது.
அன்றைக்கு ஒரு மடங்கு பூஜையும், ஆராதனையும், மந்திரபுஷ்பம் இட்டதின்
விளைவிற்கே இத்தனை மகிமை என்றால் நாளுக்குநாள் அதனை கூட்டிக்கொண்டே வந்தால் அந்த கந்தஉதகத்தின்
மருத்துவக்குணம் கூடும் என்ற கணித விவேகஞானம் மனதில் தோன்றியது.
உபவாசம் ஏற்ற அன்றிரவு ஜினாலயத்தில் தூங்காமல் ஜினதர்மத்தை மையக்கருத்தாக
எழுதப்பட்ட கதைகள் படித்தாள். (அது மற்றநாட்களுக்கும் தொடர்ந்தது)
அந்தளவில் ஸ்ரீபாலனும் மற்றவர்களும், ஸ்ராவகர்கள் பலரும் அப்பூஜையில்
ஆர்வத்துடன், முழு ஈடுபாட்டுடனான உணர்வு நிலையில் மறுநாள் நவமியன்று பக்தியுடன் வந்தடைந்தனர்.
ஆலயத்தில் தூய்மையுடன் மதனசுந்தரி பூஜை துவங்க ஆயத்தம் செய்வதை கண்டு கொண்டிருந்தனர்.
அவளது மன, வசன, காய சுத்தியும், சிரத்தை பக்தியும், முழு ஈடுபாட்டுணர்வையும்
கண்டு அவள் வயிறுப்பசியும் இன்று உபவாசமே என்று தீர்மானம் செய்து உறங்க சென்று விட்டது.
(பசிநோக்கார் கண்துஞ்சார் கருமமே கண்ணாயினார்.)
நோன்பின் அதிசய பலன்…..
நவமியன்றும் வழமையான அனுஷ்டாங்களுடன் பூஜையைத் தொடங்கினாள். ஆனால் நேற்று நடந்த விதிமுறைகளைக் கண்டு பிரமித்ததினால்
மேலும் பல ஸ்ராவகர்களும் கலந்து கொண்டனர். அன்றைய
நந்தீஸ்வரதீப பூஜை கிரமப்படி முடிந்தது.
பின்னர் ஆச்சார்யர் மகராஜ்
அவர்கள் முதல் நாள் நோன்பை ஸ்ரத்தா பக்தியுடன் மதன சுந்தரியும், மற்ற பவ்யர்களும் சம்யக்த்வ
பூர்வகம்(நற்காட்சி முழுமையுடன்) இந்நோன்பை நோற்றதைக் கண்டதும் மதன சுந்தரிக்கு உத்யாபனை
வரை உள்ள விதிமுறைகளை, கிரமங்களை செய்ய வழிகாட்டினார். அதுவே உத்தம பூஜை விதிகளென அவளுக்கு
தெரிவித்தார்.
-----------------------------------------------
அதாவது : --
அஷ்டோத்கர சதேனோச்சை;
ஜபை பாபப்ரணாசனை:
அஸிஆஉஸா இத்யேவம்
ஜப நீயஞ் சதத் ஹிதம்
விசிஷ்டாஷ்ட மஹாத்ரவ்யை;
ஜல கந்தாக்ஷ தாதிபி:
பூஜாம் ஏக குணாம் சக்ரே
சித்த சக்ரஸ்ய சர்ம தாம்
ராத்ரெள் ஜாகரணம் க்ரத்வா
ஸங்கேன மஹதாஸஹ
நவம்யாம்த சதோபேதாம்
ததாஸ்ன பன பூர்வகம்
தசம்யாம் ச ததா பூஜாம்
ஏகாதச்யாம் ஸஹஸ்ரதர
த்வாதச்யாம் தத்தசோ பேதாம்
த்ரயோ தச்யாம் ச லக்ஷகாம்
தசலக்ஷகுணாம் பூஜாம் சதுர் தர்யாம் விதாயச
பூஜாம் சக்ரே சுப சயா
என்பது…
முதல்நாள் அஷ்டமி தினத்தில் ஜைன சங்கத்துடன், பவ்யர்களுடன் ஒரு
மடங்கு பூஜையும், ஆராதனையும், ஜபமும் செய்த அளவைப்போல், அதே மனோபாவனை மற்றும் ஈடுபாட்டுடன்
நவமி திதிக்கு பத்து மடங்கும், தசமிக்கு நூறு மடங்கும், ஏகாதசிக்கு ஆயிரம் மடங்கும்,
த்வாதசிக்கு பத்தாயிரம் மடங்கும், த்ரையோதசிக்கு லக்ஷமும், சதுர்த்தசிக்கு பல லக்ஷம்
மடங்கும், பெளர்ணமி திதியன்று கோடி என்றளவில் (பக்தி பாவனை, நம்பிக்கையும் அவற்றுடன்)
கூட்டிபடியே கடைபிடிப்பதால் பலன் உடனே கிட்டும் என்ற விளக்கத்தை அளித்தார்.
அதனால் இந்த சித்த சக்ர நோன்பு உத்தம காலமான பன்னிரண்டு வருஷங்களுக்கு
இருப்பதோ, மத்திம காலஅளவில் ஆறு வருஷங்களோ, குறைந்த (ஜகன்ய) மூன்று அண்டுகளோ இருந்து
உத்யாபனை செய்ய வேண்டும். இதுவே இந்நோன்பின் கிரமமாக கருதப்படுகிறது.
இவ்வாறு உத்தம் கால அளவுடன் உத்யாபனை செய்ய முடிவு செய்து நோன்புக்காலத்தில்
எட்டுநாளும் உபவாசம் இருத்தல் பூரண பலனை பயக்கும்.
அல்லது மத்திமத்தில் அஷ்டமியிலும், சதுர்தசியிலும் உபவாசமும் மற்ற
திதிகளில் ரச வஸ்துக்களை, பால், தயிர், பச்சை வஸ்துக்களை விட்டு செய்தல் மத்திம பலனும்;
அல்லது ஜகன்ய அளவில் அஷ்டமியிலும், சதுர்த்தசியிலும் கஞ்சி அகாரம்
மட்டும் எடுத்து, மற்ற நாட்களில் ரசபரி தியாக செய்தல், ஏகபுக்தம் செய்தல் அதற்குரிய
பலனையும் நமக்கு அளிக்கும் என்றார்.
-----------------------------------------------
ஆனால் அந்த பன்னிரண்டு ஆண்டுகால் விதியை மீறும் அளவில் இப்போதே கடைபிடித்தால் பலன் உடன் கிட்டுவது உறுதி என அனைவருக்கும்
உத்வேகத்தை வழங்கினார். அவரது கூற்றை சிரமேற்கொண்டு அவளும், மற்ற பவ்யர்களும் மேலும்
சிரத்தையுடன் ஜலகந்தாதி அஷ்டவிதார்ச்சனைகளால்
ஆராதனையை தொடங்கினார்கள். ஆராதிக்கும் போது
பன்னிரண்டு தடவை சித்த சக்ர யந்திரத்தை அஷ்டவிதார்ச்சனை செய்தாள். அனைத்து பவ்யர்களும்,
சங்கத்துறவிகளும் செய்ததினால் மேலும் பலமடங்கு சமுதாயக்கூட்டு அர்ச்சனையாயிற்று. பின்னர் நோன்பைக் கைக்கொண்டாள்.
-----------------------------------------------
எவரொருவர் (எந்த ஒரு ஜீவனோ) மும்மணியை நற்காட்சி, நல்ஞானம், நல்லொழுக்கம்,
அடையத் தகுந்த தகுதியை பெற்றதோ அத்தகைய ஜீவனை பவ்வியர் எனக் கூறுகின்றனர். சம்யக்த்வததின்
மீது முழு நம்பிக்கை வைப்பதில் உறுதியுடன் இருந்தார்களோ, இந்த சித்தசக்ர நோன்பின் இலட்சியமான
மோட்சப்பராப்தியில் நம்பிக்கை வைத்தார்களோ அவர்கள் அனைவரும் பவ்வியர் ஆகிறார்கள்.
-----------------------------------------------
அதன் பின்னர் சித்த சக்ர யந்திரத்தின் மீது தங்கத்தினால் செய்த
பூக்களைக் கொண்டு (அல்லது ஸுகந்த வாசனாதி புஷ்பங்களாலும்)
“ஓம்
ஹ்ரீம் அர்ஹம் அஸிஆஉஸா அனாஹத வித்யாதி பதயே ஸ்ரீ சித்தசக்ர யந்த்ராய நம: மம ஸர்வரோக
விநாசனம் குருகுரு ஸ்வாஹா”
என்று நூற்று எட்டு தடவை ஜபம் செய்து மந்திரபுஷ்பம் (அனைவருடன்
கூட்டுப் பிரார்த்தனையாய்) செய்தாள். அனைவருமே நற்சிந்தனையுடன் பக்தியுடன் இணையாக செய்து
அந்த ஜபத்தின் அளவையும் பலமடங்காக்கி முடித்தனர்.
சித்தசக்ர மஹாயந்திரத்தை நோன்பிற்கான பாவனையாகக் கருதி ஜினபூஜா
பூர்வகம் அஷ்ட விதார்ச்சனை செய்து நவமிக்கான விதியையும் நிறைவேற்றினார்கள்.
சிரத்தை பக்தியுடன் தூயபாவனையுடன் சித்தசக்ர யந்திரத்திற்கு அபிஷேகம் செய்த அன்றும் கந்தோதகத்தை (வாசனை ஜலத்தை) தன் மணாளன்
ஸ்ரீபாலன் மீது தெளித்தாள். அவருடன் வந்த மற்ற ரோகிகளின் மேனியிலும் அவ்வாறே அப்புனித
நீரை வழங்கினாள். அவர்களும் மற்ற பவ்யர்களும் சிரம் தாழ்த்தி பவ்யமாய் பெற்றுக் கொண்டார்கள்.
நேற்று ஒருமடங்கு பூஜையும் ஆராதனையும் ஜெபமும் செய்தனர். நவமியான
இன்று ஆர்வத்துடன் பத்து மடங்களவிற்கு கூடுதலாக பூஜாராதனை ஜெபமும் நிறைவேற்றப்பட்டது.
-----------------------------------------------
இந்த சித்தசக்ர நோன்பின் வழியே எவரொருவர் மோட்சப்பராப்தி பலனை பிரதானமாக
நிறுத்தி பூஜையை துவக்குகிறார்களோ அவ்வழிக்கு இடையூறாய் உள்ள துன்பங்கள் அனைத்தும்-
உடலளவிலும், உள்ளத்தளவிலும் - அறவே நீங்கி முழுஆயுள் முடியும் வரை வாழ்ந்து பிறவிக்கடலை
கடக்கும் பிரயத்தனத்திற்கு கூடுதல்வாய்ப்பு கிட்டும் என்பதே தாத்பர்யம். (ஓருவரின்
ஆயுள் மூன்றில் இருபங்கு முடியும் போதும் மரணம் சம்பவிக்கலாம் என்பது ஜினஆகமங்கள் தெரிவிப்பதாகும்…)
அதனால் எந்த ஒருவரின் உடலில் ஒட்டியுள்ள தீயதும், மனதில் தங்கிய
மலங்களும் அறவே நீக்க இப்பூஜை முறை நமக்கு
வழிவகுக்கும் என்பதால் எவ்வகைப்பலனும் நமக்கு கிடைக்கும் என்பதை அறியலாம்.
-----------------------------------------------
அதேவழியில் ஸ்ரீபாலனும் மற்ற குஷ்டரோகிகளும் அன்றும் பூஜைவிதிகளை
நிறைவேற்றி மேலும் லயித்து பஞ்சபரமேஷ்டிகளை மனதில் இருத்தி ஜினபக்தியுடன் மோட்சசுகத்தில்
முழு நம்பிக்கைவைத்து சிரம் தாழ்ந்து கந்த உதகத்தை ஏற்றதும் உடலின் ஆரோக்கியம் மேலும்
கூடியது. சரும ரோகங்களிலும் நீரின் குளிர்ச்சியை உடன் உணரமுடிந்தது. அதாவது உடலெங்கும்
மேலும் புத்துணர்ச்சி பெற்றதை உணர்ந்தனர். உடல் ஆரோக்கியம் பெறுவதை கண்டு அதிசயிக்க
துவங்கினர். (குஷ்டரோக திட்டுகளில் இறகு கொண்டு வருடினால் ஸ்மரணை இருக்காது. தோலில்
மற்ற இடத்தை விட கூடுதலான அழுத்தம் கொடுத்தல் மட்டுமே உணரமுடியும்.)
அதேபோல் மற்ற பவ்யர்களும் மேலும் உடலில் புத்துண்ர்ச்சியும், பலமும்
பெற்றனர் என்றால் மிகையாகாது.
அன்றைய தினமும் உபவாசமே அவளை தழுவியது. இரவு ஜினாலயத்தில் ஜினதர்ம புராணக் கதைகளைப் படித்தாள்
அனைவரும் நிசப்தமாய் அமர்ந்து கேட்டு மகிழ்ந்தனர்.
இவ்வாறாக இரண்டு நாட்கள் கடந்தது.
ஸ்ரீபாலன் நோன்பின் பலனால் பேரழகன்
ஆதல்..
இவ்வாறு மூன்றாம் நாள் நூறு மடங்கு பூஜை, ஆராதனை, ஜெபதபங்கள் ஆர்வமும்,
ஈடுபாட்டுடனும் செய்தனர். அன்றைய கந்தஉதகத்தின் மகிமையால் ஸ்ரீபாலன், மற்றவர்களின்
தோலில் அங்காங்கு புண்களிலிருந்து வழிந்த சீழ்கள் அடைபட்டன. திட்டுத்திட்டாக பருத்து
மடிப்புடன் சரிந்த தோல்பகுதிகள் சற்று நிமிர்ந்தன.
சம்யக்துவத்துடன்; தினம் தினம் மன, வசன, காயம் சுத்தியுடனும், தூய
அர்ச்சனை திரவியங்களால் பலமுறை அர்ச்சனை செய்ததாலும், முழு ஈடுபாட்டுடன் பூஜை ஆராதனை
செய்ததாலும்;
அஷ்டமி அன்று ஒருமடங்கு பூஜை ஆராதனை ஜெபமும் துறவியர் சங்கம் மற்றும்
ஸ்ராவகர்கள் கூடி இதனை நிறைவேற்றியது போல. நவமி, தசமிக்கு நூறு மடங்கும், ஏகாதசி, த்வாதசி,
த்ரையோதசி, என்று கூடுதலாகி சதுர்த்தசிக்கு பல லக்ஷம் மடங்கும், பெளர்ணமி திதியன்று
கோடி என்றளவில் படிப்படியாக அனுதினம் பலமடங்கு மந்திரங்களை புஷ்பத்துடன் உச்சாடம் செய்தும்,
ஆராதனை செய்தும், உபவாசத்துடன் சித்தசக்ரத்திற்குரிய ஜபத்தினை பன்மடங்கு செய்து வந்ததின்
பலனாக அபிஷேக கந்தநீரை புஷ்பங்கள் கொண்டு தெளித்து வந்த போது தோலிலுள்ள ரோகங்களின்
மாற்றங்கள் படிப்படியாக குணமாகத்தொடங்கியதோடு மடிப்பான தோல் மென்மையானது, சீழ்வடியும்
புண்கள் ஆறிவந்தன. கூன் விழுந்த சரீரம், நரம்புகள் முறுக்கேறியது, தசைகள் நிமிர்ந்து
ஆரோக்கியம் முழுவதுமாய் அனைவருக்கும் கிடைத்தது.
பெளர்ணமி திதியன்று இரவு ஜபதபானுஷ்டானங்களுடன் ஜினவறக்கதைகளை மதனசுந்தரி
படிக்க அனைவரும் கேட்டுத் தெளிந்தனர். அன்றிரவு முழுவதும் விழித்திருந்தனர்.
பிரதமை அன்று உடல்தூய்மையுடன் ஆலயம் வந்து பகவானையும், சித்தசக்கரத்தையும்
-----------------------------------------------
மஹாமண்டலம் என்று இந்த சக்கரத்தை சொல்வதுண்டு, யந்திரம் என்றும்
அழைப்பதுண்டு. அதாவது ஒருதேவதையை மட்டும் நிறுவப் பயன்படுவது யந்திரம் என்றும், ஒரு
தொகுதியான வற்றை நிறுவ பயன்படுவது மண்டலம், மஹாமண்டலம் என்றே அழைக்கின்றார்கள். இவை
பலன் கருதி மாறுபடும்
-----------------------------------------------
பூஜித்துவிட்டு சாஸ்திரத்தை ஸ்ருத வஸ்திரத்துடன் அலங்கரித்து ஸ்ருத
பூஜை செய்தாள். பின்னர் கணதரர் மற்றும் ஆச்சார்யர் போன்ற மற்ற குருக்களையும் பூஜித்தாள். அனைத்து சாது சங்கத்திற்கும் ஆகார தானம் முறைப்படி
அளித்தாள். அதன் பின் தன் உபவாசனையுடனான விரதத்தை பாரணையுடன் முடித்தாள். (அதாவது உண்ணாமல்
இருந்து நோன்பு நிறைவேறியதும் ஆகாரமோ, பழச்சாரோ, நீரோ பருகுவதை பாரணை என்பர்)
-----------------------------------------------
உத்யாபனைக்கிரமம் யாதெனில் பஞ்சபரமேஷ்டி பிம்பத்தையும், சித்த சக்கரத்தை
சுவர்ணம்/வெள்ளி/செம்பு இவற்றில் ஏதாவதொன்றால் எழுதி/உருவாக்கப்பட்டு ஸ்வர்ண புஷ்பங்கள்
நூற்று எட்டால் மந்திரபுஷ்பம் செய்வது. (வசதிக்கேற்றவாரு வெள்ளி அல்லது வாசனைப் பூக்களையும்
பயன் படுத்தலாம்). ஸ்ருத குரு பூஜை செய்து பன்னிரண்டு ரிஷிகளுக்கு ஸித்தாந்த சாஸ்திரங்களை
எழுதி மஹாபுருஷர்களுடனான கதைகளையாவது எழுதி ஸ்ருத வஸ்திரத்துடன் ஒட்டணைக்கோலுடன் தானம்
கொடுப்பது. (அந்தகாலத்தில் துணிகளில் சாஸ்திரங்கள், புராணங்களை எழுதுவர் அதன் விளிம்புகள்
கிழியாமல் இருக்க பயன்படும் மரச்சட்டத்திற்கு ஒட்டணைக்கோல் என்று பெயர்)
அவ்வாறு தானமளிக்க முடியாவிட்டால் உத்தம் ஸ்ராவகர்களுக்கு ஆகாரம்
அளித்து சதுர்விதானம் செய்வது; பன்னிரண்டு ஆர்யாங்கனைகளுக்கு வஸ்திரம் அளிப்பது; பன்னிரண்டு
ஸ்ராவக தம்பதியருக்கு வஸ்திரம் மற்றும் ஆபரணங்கள் அளிப்பது அதாவது சன்மானம் கொடுப்பது.
இதுவே உத்யாபனை விதிக்கிரமம்.
அபிஷேகம், ஆராதனை, ஜபங்கள், மந்திரபுஷ்பங்கள் இடுவதை பல நபர்கள்
கொண்டு நாளுக்கு நாள் பலமடங்காக கூட்டுப்பிரார்த்தனையாக நற்காட்சி சிந்தனையுடன், அதாவது
நான் ஆன்மன், எனக்கு மோட்சமார்க்கமே இனி என்வாழ்வின் லட்சியம், என்ற பாவனையில் உறுதியுடன்
இந்த சித்த சக்கர நோன்பை நந்தீஸ்வரதீப பருவத்தில் நிறைவேற்றினால் அதுவரை நம்மை பீடித்திருக்கும்
பீடைகளும், நோய்களும், மனதிலுள்ள மலங்களும், தீய சிந்தனைகளும் விலகி வருங்காலம் அமைதியாக
கழியும் என்பதே தாத்பர்யம். அவ்வாழ்வே பல பிறவிகளை அறுக்கும் என்ற நம்பிக்கையுமுள்ளது.
இது போன்று ஒவ்வொருவரது வாழ்விலும் நிறைவேறுமா நடைபெறுமா என்பது
அவரவர் நற்சிந்தனை, நற்காட்சியின் அளவை பொருத்தது. சரியான நம்பிக்கையைப் பொருத்தது.
எந்த ஒரு சித்தாந்தம், தத்துவம் பிறவி எனும் பிணியறுத்து நமக்கு நித்திய சுகமான விடுதலைப்பெற்றை
அளிக்குமோ, சித்தலோகத்தில் உறையும் கதியை அளிக்குமோ அதன் வழியில் நடந்தால், செயல்பட்டால்,
நல்லொழுக்கத்தை கடைபிடித்தால் நற்காட்சி கிட்டும் என்பது அனுபவபூர்வமான உண்மை, சத்தியம்.
நான் ஆன்மா; உடலோ மனமில்லை; அதற்கு உறுதியை அளிக்கும் அஹங்காரம்
அழிந்துவிட்டது; என்ற நற்காட்சி கிட்டும் வழியை
ஆராய்ந்தறிந்து, அதன் படி வாழ்ந்து பிரபஞ்சத்தைப்பற்றியும் அதில் வாழும் உயிரனங்களைப்பற்றியும்,
அவை இப்பிறவியில் எதிர்கொள்ளும் தடைகளையும், இடர்களையும், துன்பங்களையும் கண்டறிந்து;
அத் துன்பத்திற்கு காரணமான பலபிறவிகளில் ஈட்டிய
செயல்விளைவு பதிவுகள் பற்றியும் முற்றிலும் அறிந்த முழுதுணர்ஞானியராகவும்; அவற்றிலிருந்து
இந்த பிறவித்துன்ப சுழற்சியிலிருந்து விடுபடும் வழிகளையும் திர்க்கதரிசனத்துடன் வழங்கிய
தீர்க்க தரிசிகள்;
இவ்வுலக துன்பத்தினை களைந்தெறிய வழிவகுத்த உலகஉயிர்கள் கடைத்தேற
வழிசொல்லும் பகவானாக விளங்கும் ஜினர்கள் மீதும்;
அவர்கள் வழங்கிய வழிகாட்டல்கள்/ போதனைகள் தொகுப்பாய் எக்காலத்திற்கும்
பொருந்தும் சுருதஆகாமங்கள் மீதும்;
அவற்றை வழங்கி வாழ்வின் இருளைப்போக்க வகைசெய்த குருவின் மீதும்
ஸ்திரமான நம்பிக்கை வைப்பதே நற்காட்சியாகும். அந்த நல்பாவனையே சம்யத்வம்
எனப்படுகிறது.
அச்சிந்தனை, பாவனையை மனதில் உருவேற்றி உருவேற்றி ஆன்ம விழிப்பை
பெறுவதற்கான கருவிகளே, சாதனங்களே இது போன்ற பூஜைமுறைகள், பக்தி மார்க்கங்கள், வழிபாட்டு
முறைகள். அதனை நற்சிந்தனையுடன் பூர்வாங்கமாக ஏற்று நடந்தால் ஒரு நாளில் மனம் செம்மையடையும்
அதன் பின்னர் இந்த மந்திரமும், ஸ்லோகமும், வழிவகுக்கும் கருவிகளும் நம்மை நல்ஞானத்தில்
ஏற்றுவிட்டு விலகிவிடும்.
இந்த நற்காட்சியின்றி நல்ஞானம் கிட்டுவதில்லை. நல்ஞானம் கிட்ட நற்காட்சிக்கு
வழிவகுக்கும் இவைபோன்ற பக்திநெறிகள் வாழ்க்கை நெறிகள் நல்லொழுக்கத்தை தூண்ட வழிவகுக்கும்.
அந்த நல்லொழுக்கமே நமக்கு விடுதலைப்பேற்றை அளிக்க வல்லது.
இதுபோன்ற விதான, மண்டலங்கள், பூஜைகள் ஆகிய அனைத்துமே யந்திர, மந்திரங்கள்
அடங்கியவை. அவையே விடுதலை பெறும் தந்திரத்தை(தந்த்ரா) வழங்குபவையாகும்.
அதனால் இது போன்ற ஒட்டுமொத்த வழிகாட்டல்கள், அவ்வழியில் நடந்து
பலன் பெற்றவர்களின் வாழ்க்கை வரலாறுகள், அவற்றில் பிராதன கருத்துக்களாக அமைக்கப்பட்டுள்ள
மந்திரங்களுமே வாழ்வில் உயர உதவும் escalator கள் என்றால் மிகையாகாது.
அதன் நோக்கம், வழிமுறைகள், கிரமங்கள், வரையறைகள், செயல்முறைகள்
அனைத்தையும் சரியாக அறிந்து, புரிந்து, வழிகாட்டும் ஆச்சார்யர்கள், யதிகள் இருக்கும்
வரை இச்சாதனங்கள் இலவசமாக கிடைக்கும். அவ்வாறில்லாத பட்சத்தில் அதனை அடிக்கடி பயிற்சி
செய்தால் அழியாமல் நம் பின் வரும் சந்ததியருக்கும் கருவியாக/ சாதனமாக அளித்து சென்றால்
பின்வரும் பிறவிகளில் நமக்கும் பயன்படும் என்ற சுயநலமும் இதில் அடங்கியுள்ளது.
ஏனெனில் மோட்சமார்க்கம் என்பது தனிமனித விடுதலையே. ஒருவகையில் சுயநல
நோக்கமே. அனால் அந்நோக்கில் கடைபிடிக்கும் போது சமுதாயமும் எவ்வித தீங்கின்றி ஹிம்சையற்று
அமைதியான சூழலுடன் வாழும் என்பதை கானகத்தில் ஆண்டியாக வாழ்ந்து பகவானாகிய மஹாவீரர்
ஒரு அரசகுமாரர். அவர் மனதில் தனிமனித சிந்தனையும், சமூக உணர்வும் மேலோங்கியே இருந்திருக்கும்
என்பதே நிதர்சனம்….
ஸ்ரீபாலனின் தாய் கமலாவதியின் வருகை..
பகவானின் கருணையினால் நற்காட்சி பாவனையுடன் சித்த சக்ர நோன்பினை
விதிப்படி, ஆச்சாரியர் கூறிய கிரமப்படி அரசகுமாரி மதனசுந்தரி நிறைவேற்றினாள் என்பதற்கு
அடையாளமாக தனது பூர்வஜன்ம தீவினைப்பயனால் குஷ்டரோகியாகி, கருநிறமாகி தடித்து மடிப்பு
விழுந்த தோலுடனும், சீழ்வழியும் புண்களுடன் இருந்த வங்கதேசத்து மஹாராஜா சிம்மசேனனின்
அரசகுமாரனான ஸ்ரீபாலன், கரிபடிந்த லாந்தர் விளக்கின் கண்ணாடியை சாம்பல்தூள் கொண்டு
துடைத்தேற்றியதும் ஒளிர்வது போன்று, தன் தீவினை
உதிர்ந்ததும் தேசஸுடன் இளமை ததும்பும் த்ரேகமும், பேரழகும், கம்பீரமுமான தோற்றத்துடன்
தேவலோகத்தில் உதித்த தேவகுமாரனைப் போன்று மாறியிருந்தான்.
இவ்வதிசய மாற்றத்தை கண்ட ஸ்ரீபாலன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.
அதேசமயம் இனி தன் வாழ்வில் வசந்தம் வருமோ,
இல்லை சோகமெனும் இருளில் மறைந்து போகுமோ என்று வருந்திய மனதைக் பொருட்படுத்தாமல்; பொறுமையும்,
சகிப்புத்தன்மையும் கொண்டு போராடி இலட்சியத்தில் வெற்றி கண்ட மதனசுந்தரியின் ஆனந்தத்தை என்னவென்று சொல்வது. எவ்வாறு
வர்ணிப்பது….
அவளின் அருகபக்தியும், நற்காட்சியும்; ஜெபதபம், பூஜை விரதானுஷ்டானங்களின்
மீதான முழுஈடுபாடுமே அவளுக்கு நல்வாழ்வை அளித்தது என்றால் மிகையாகாது.
அதேசமயம் ஸ்ரீபாலனுடன் உஜ்ஜயினி வந்த எழுநூறு ரோகிகளும் தங்கள்
குஷ்டரோகம் நீங்கி சுயரூபம் பெற்றதை எண்ணி அகமகிழ்ந்து இறைவனையும், மதனசுந்தரியையும்
வாழ்த்தி கொண்டாடினர். அவளை ஈன்ற தாயினும் மேலான வாத்சல்யமிக்கவளாய் போற்றி பாராட்டினர்.
மிக்க மகிழ்ச்சியுடன் மதனசுந்தரியும் தனக்கு
அந்த நோன்பை உபதேசித்த ஆச்சார்யர் வரகுப்த முனிவரையும், சித்தசக்கரத்தையும்
பலவாறு ஸ்தோத்திரம் செய்து கொண்டாடினாள். தந்தை பிரஜாபாலனும், தாயார் செளபாக்கியசுந்தரியும்
தன் மகளின் நற்குணத்தை போற்றி பாராட்டினர். ஜினபக்தியினால் விளைந்த இவ்வதிசய நிகழ்வினை
கண்டு அத்தேசத்து மக்களும் பரவசமடைந்தனர்.
இவ்வாறாக உஜ்ஜயினி மக்கள் ஆனந்த வெள்ளத்தில் திளைத்திருந்த வேளையில்
வங்கதேசத்து சம்பா நகரத்தில் பிறந்த ஸ்ரீபாலனுடைய தாய் கமலாவதி யென்பாள் தன்மகன் நோன்பின்
மகிமையால் அழகுததும்பும் காளையுரு பெற்றான் என்ற செய்தி அறிந்து, வியந்து அகமகழ்ச்சியுடன்
மகனைக் காண உஜ்ஜயினி அடைந்து கோட்டையை நோக்கி விரைந்து வந்து கொண்டிருந்தாள். கோட்டைக்காவலனும்
வந்திருப்பது இளவரசர் ஸ்ரீபாலனின் தாயார் என்பதை
உறுதி செய்து மகிழ்ந்து வணங்கி அவளை சிவிகையிலேற்றி அந்தப்புரம் வரை செலுத்தி வந்து
ஓர் சேவகியிடன் ஒப்படைத்துச் சென்றான்.
தூரத்தில் வருவது தன் தாயெனக் கண்ட ஸ்ரீபாலன் தன் பரிவாரங்களை அழைத்து
தாயின் அருகில் சென்று அவள் பாதத்தில் வீழ்ந்து வணங்கினான். தாயும் அவனைக் கண்டு இன்பஅதிர்ச்சி
கொண்டாள். அவனை குழந்தைபோல் வாரி அணைத்துக் கொண்டாள். அவனைப் ஈன்றதருணத்தின் மேலாக
அகமகிழ்ந்து போனாள். ஸ்ரீபாலனும் தன்உருமாற்றத்திற்கு முழுவதும் காரணமானவள் தன் மனைவி
மதனசுந்தரி என்பதை தெரிவித்தான். அவளது தீவிர பதிபக்தியும், அருகனை வேண்டச் செய்த விதமும்தான்
இவ்வதிசயம் நிகழ்ச் செய்தது என்று விவரித்தபடியே மதனசுந்தரி இருக்கும் மாளிகைக்கு அழைத்துச்
சென்றான்.
வந்திருப்பது கணவனின் தாய் என அறிந்து வீழ்ந்து வணங்கிதோடு அவளுக்கு நீராட்டி பட்டாடைகளை வழங்கி உயர்ந்த உணவளித்து இராஜபோக உபச்சாரம் அளித்து உவந்து போனாள். அவளும் மதனசுந்தரியின் அழகையும், நற்குணத்தையும் கண்டு மெய்ச்சினாள். தன் மகளென போற்றி மகிழ்ந்தாள். அரசி கமலாவதியும் இளைப்பாறிய பின் “தாயே உடல்நிலை எவ்வாறுள்ளது, தாங்கள் எப்படி மகனைப் பிரிந்தீர்கள். இத்தனை நாளாக எங்கு வசித்து வந்தீர்கள்” என ஆவலுடன் கேட்டு பதிலுக்காக காத்திருந்தாள்.
அவளும் தன் மருமகள் மதன்சுந்தரியை வாஞ்சையுடன் நோக்கி “நற்குணங்கள் வாய்த்த நங்கையே
நான் வங்கதேசத்து சம்பா நகரத்து மஹாராஜா சிம்மசேனனின் மனைவி கமலாவதியானவள். மணி மண்டபமும்,
கூடகோபுரமும், தர்பார்மண்டபமும், அந்தப்புரமும், நாட்டியக்கூடம் என ஆயிரம் சேவகர்கள்
பணிசெய்ய சீரோடும் சிறப்போடும் அரண்மனையில்
ஆட்சி நடத்தி வந்த காலத்தில் என்புத்திரனான ஸ்ரீபாலன் சில ஆண்டுகளில் பிறந்தான். அவன்
இரண்டாவது அகவை எட்டும் வேளை இவன் தந்தை திடீரென இருதய நோய்வாய்ப்பட்டு இறந்து போனார்.
அவருக்குப்பின் அவர் மந்திரிகள் நால்வரில் ஆனந்தன் என்பவர் உன் நாயகன் ஸ்ரீபாலனுக்கு
பட்டாபிஷேகம் செய்து அரியணையில் அமரச்செய்தார். அரசபிரதிநிதியாக இவனது அதிகாரம் பெற்று
தாமே ராஜ்ஜியத்தை நடத்தி வந்தார். மக்களும் இப்பாலகனை தம் அரசராக மதித்து அவனை வாழ்த்தி
மகிழ்ந்தனர்.
அவ்வமைதி சூழந்த ஆட்சி நடந்து வந்த காலத்தில்….
ஸ்ரீபாலனின் கடந்த காலம்…
சிம்மசேன மஹாராஜாவின் மறைவிற்குப் பின் அவரது இரண்டரை வயது மகன்
அரியணை ஏறி ஆட்சிப்புரிவதை அவரது சகோதரனின்
மகன் வீரமதன் என்னும் பங்காளிப் பகைவனால் ஜீரணிக்க முடியவில்லை. தனக்கே இவ்வரியணை கிடைக்கும்
என்ற பேராசையுடன் எதிர்பார்த்திருந்தவனுக்கு
ஏமாற்றமே கிடைத்தது. அரசபோகம் கிடைத்தும் அதிகாரம் தன் கையில் இல்லை என்ற சிறுமதியுடன்
ஸ்ரீபாலனை கொல்லவும் துணிந்தான். அதன்பின்னரே தான் இப்பொறுப்பை நிருவகிக்க தகுதியானவனாக்கப்படுவேன்
என்று நினைத்து சதிவேலை செய்ய முயன்றான். மிகுந்த
எச்சரிக்கையுடன் அரச மெய்க்காப்பாளர்கள் எப்போதும் கண்காணித்து வந்ததினால் மறைமுக திட்டம்
தீட்டி உணவில் விஷம் வைத்து கொல்ல முடிவுசெய்தான்.
அதற்காக அடிக்கடி ஒரு மடைத்தொழில் புரிபவனை ஏற்பாடு செய்ய அரசாங்க
அடுக்களை கூடத்திற்கு சென்று வந்தான். அப்போது அத் திட்டத்தை உக்கிரான அறையில் ஒளிந்திருந்த
ஒர் ஒற்றன் இவன் சூழ்ச்சியை கண்டு பிடித்து விட்டான். அச்செய்தி அறிந்த அமைச்சரும்
வெளிப்பகைவர்களை படைகொண்டு வென்று விடலாம். தாயாதிகளின் தூரோகச் செயலை எதிர்க்கும்
வல்லமை இப்பச்சிளம் பாலகனுக்கு இல்லை என்றார்.
இந்நாட்டு இளவரசர் ஸ்ரீபாலனின் உயிர்க் காப்பதே இவ்வேளையில் நம் முதற்கடமை என்றும்
வலுயுறுத்தினார். அதனால் தாங்கள் இந்நாட்டை
விட்டு வெளியேறி அரசரை ரகசியமாய் வைத்து காப்பாற்றுங்கள். அவன் உயிருடன் இருப்பதே இப்போது
விவேகமான செயல். வளர்ந்தபின் கண்டிப்பாக இந்நாட்டையும் கைப்பற்றுவதோடு, வேறுபல ராஜ்ஜியங்களையும்
வென்று நல்லாட்சி புரிவான், இது நிச்சயம் – என்றுரைத்தார். நானும் அவர்கூறும் உபாயமே இவ்வாபத்திலிருந்து அவனைத்
தப்பவைக்கும் என முடிவு செய்து, யாரும் அறியா வண்ணம் இருவரும் சம்பா நகரம் விட்டு வெளியேறினோம்.
நாங்கள் வெளியேற முற்படுவதை அறிந்து அரசவிசுவாசமுள்ள பலரும் எங்களுடன்
இடம் பெயர்ந்து கூட்டமாக வாரணாசி நகரம் சென்றடைந்து அங்கேயே தங்கினோம். வளர்ந்த பின்னரும்
அவனது பழம்வினை மேலும் வாட்டத்துவங்கியது. அருகிலிருந்த குஷ்டநோயுள்ளவனால் இவனுக்கும்
அவ்வுயிர்க்கொல்லி தொற்றி விட்டது. அச்சமயம் பலரும் அந்நகரத்தில் அந்நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
அவன் தன்மீதே அருவெருப்படைந்ததால் என்னிடமும்
கூறாமல் அந்நகரை விட்டு வெளியேறித் துணிந்தான். அவனுடன் பல ரோகிகளும் அவ்வாறே வெளியேறினர்.
பின்னர் அவன் புனர்வாழ்வு பெற்று இவ்வெழில்தோற்றம் பெற்றதை பல ஜனங்களால்
அறிந்து இந்நகருக்கு உடன் வந்தடைந்தேன். மகனையும் கண்டேன், எழிலும், அறிவும் மிக்க
மங்கை என் மருமகளையும் கண்டேன். பூரித்து நிற்கிறேன் மதன சுந்தரி; நீங்கள் இருவரும்
கடவுள் க்ருபையால் எப்போதும் சகல செளபாக்கியத்துடன் வாழ்வீர்கள்” என்று ஆசீர்வதித்து முடித்தாள்.
ஸ்ரீபாலன் சிறுவயதில் அரசபோக வாழ்வை இழந்துது மட்டுமின்றி, பெருவியாதி
பீடித்து மேலும் துயரடைந்ததை தாய் கூற கேட்டறிந்ததும் மதனசுந்தரிக்கு அவன் மீதிருந்த
அன்பு பன்மடங்காகியது. மேலும் அவனை பாதுகாக்கும் பொருட்டு தனது அரசவாழ்வைத் தியாகம்
செய்து, அவனை பீடித்திருந்த நோயினால் மேலும் துயருறடைந்த அரசி கமலாவதியின் துன்பங்களை
உணர்ந்து வருந்தினாள். இனி நம் வாழ்வில் என்றும் வசந்தமே என்று அவர்களுடன் தன்னையும்
தேற்றிக்கொண்டாள்.
இவ்வாறு அனைவரும் மகிழ்வாய் வாழ்ந்தபோது குளிர்காலம் முடிந்து கோடையை
வரவேற்கும் வசந்த காலத்த்தில் முருக்கம் மரங்கள்
பூத்து குலுங்கின. காடு மற்றும் மலைப்பாங்கான இடங்களில் வளரக்கூடிய இந்த மரங்களில்
பூக்கள் தீயை கொளுத்தி போட்டால் காணப்படும் அடர்ந்த சிவப்பு நிறத்தில் பூத்து கண்களுக்கு
விருந்தளித்துக் கொண்டிருந்தது. நீலநிறம் ததும்பிய ஏரிக்கரைகளில், பூங்கொத்துக்களின்
பாரம் தாங்காமல் மரக்கிளைகள் வந்து வளைந்து அலங்காரப் பந்தல் போட்ட இடங்களில், பசும்புல்
பாய்களில் ஸ்ரீபாலனும் மதனசுந்தரியும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்த வண்ணம் பலமணிநேரம்
அமர்ந்து பேசிய அந்த நேரங்களில் மரக்கிளைகளில் நூறு ஜோடிக் குயில்கள் உட்கார்ந்து கீதமிசைத்ததையும்,
ஆயிரம் பதினாயிரம் வண்டுகள் சுற்றிச் சுற்றி வந்து ரீங்காரம் செய்ததையும், கோடிகோடி
பட்டுப்பூச்சிகள் பல வர்ணச் சிறகுகளை அடித்துக்கொண்டு ஆனந்த நடனம் ஆடியதையும் கண்டு
கழித்த வண்ணம் தம்மை மறந்திருந்தனர்.
அவ்வின்ப நாட்களில் ஒருநாள் ஸ்ரீபாலன் இலட்சியங்கள் உள்ளத்தில்
உறங்கும் கடமைகள் விழித்தெழ மாஹாராஜா பிரஜாபாலனை அனுப்பி வைத்தது. அவ்வாறே அரசரும்
வசந்தகால பொழுதுபோக்கின் நிமித்தமாக ஒரு பூங்காவனத்தை அடைவதற்குத் தன்னுடைய பரிவாரங்களுடனே
புறப்பட்டு செல்லும் போது ஸ்ரீபாலனும், மதனசுந்தரியும் தங்கள் மாளிகை மேலுப்பரிகையில்(பால்கனி)
நின்று வேடிக்கைப் பார்த்ததைக் கண்டார்.
அவர் தன் அமைச்சரிடம் “அருமை
மந்திரியே அன்று நான் ஆணவம் தலைக்கேறி ஒரு குஷ்டரோகிக்கு மகளை முடிவு செய்தபோது மறுத்து
அறிவுறுத்தினீர்கள். அவற்றைக் கேளாது ஒருகருமேனியனை
மணமுடித்தேன். என்ன ஒரு கீழான செயல் என்று இன்றும் அச்செயலை எண்ணி வருந்துகிறேன். நான்
செய்தது என் குலத்திற்கு அழியாப்பழியாய் அமைத்திடுமோ என்றெண்ணி இருந்தவேளை; என் அன்பு
மகள் அவனை தன் அருகபக்தியினால் யெளவன புருஷனாக மாற்றி தன் இல்லறத்தை நல்லறமாய் மாற்றிஅமைத்து
சீரான வாழ்வை தானே அமைத்துக் கொண்டதை கண்டு இரும்பூதடைகிறேன்.” என மகிழ்ச்சியுடன் கூறினார்.
அமைச்சரும் “அரசர்
பெரும தங்கள் மகள் மதனசுந்தரி பதிவிரதைகளில் மிகவுஞ் சிறந்தவர். நற்குணங்களில் அவருக்கிணை
அகிலத்தில் எவரும் இலர். அவளது பதிவிரத தர்மமும் தயாள குணமும் கீர்த்தியும் அறிவுடையோர்கள்
எல்லோராலும் கொண்டாடத்தக்கவை. அவளுடைய நன்னடைத்தையால் உண்டாகியிருக்கும் ஆச்சர்யமான
விளைவுகளை நினைக்கும் போது எனதுள்ளம் சிலிர்க்கின்றது. இனி கவலையை விட்டு விடுங்கள்” என்றார்.
பூங்காவனம் செல்வதை மறந்து தன் பரிவாரங்களுடன் ஸ்ரீபாலனுடைய மாளிகைக்குள் நுழைந்தார். அங்கே…..
அத்தியாயம் – 3
ஸ்ரீபாலன் தேசாந்திரம் போதல்
ஸ்ரீபாலனின் கடமை விழித்தது…
பூங்காவனம் செல்வதை மதனசுந்தரியின் மேன்மையான செயல் மஹாராஜாவை மறைக்கச்
செய்து தன் பரிவாரங்களுடன் அவள் மாளிகைக்குள் வரவேற்றது. அங்கே நின்றிருந்த மாளிகைக்
காவலர்கள் தலைகுனிந்து வணங்கி வழியனுப்பினர். உள்ளே மன்னரை மலர்தூவி வரவேற்ற தாதிகளும்
உள்மண்டத்திற்கு அழைத்துச் சென்றனர்.; மஹாராஜா மாளிகைக்குள் விஜயம் செய்வதைக் கண்ட
ஸ்ரீபாலனும், மதனசுந்தரியும் உப்பரிகையிலிருந்து கீழிறங்கி வந்து அவரை எதிர்கொண்டு அழைத்தனர். பரிவாரங்கள் வெளியே நிற்க
அடுத்தகட்டிற்குள் அவரை வரவேற்று விலையுயர்ந்த ரத்தினங்களும், தங்கக்கவசத்துடனான உன்னத
ஆசனத்தில் அமரச் செய்து அவருக்கு செய்ய வேண்டிய மரியாதைகளை இருவரும் செய்தனர். அவரை
நோக்கி “வரவேண்டும் மன்னா! வரவேற்கிறோம்! எங்களையும் ஒரு பொருட்டாக மதித்து
மாளிகைக்கு வருகை புரிந்துள்ளீர்கள். நாங்கள் பெரும் பாக்கியசாலிகளே! தன்யன் ஆனோம்
பிரபு” என்று இனியமொழியில்
கூறினர்.
இவ்வினிய வார்த்தைகளைக் கேள்வியுற்ற அவரும் மனமகிழ்ந்து தன் புதல்வியை
அருகில் அழைத்து வாத்சல்யத்துடன்”
எனதருமை மகளே! உனது உன்னத குணங்களை முன்னர் உணராமல் போனாலும் உன் மேன்மையான செயலால்
நன்குணர்ந்தேன். நீ நம் குலத்திற்கெல்லாம் ஒளிவிளக்காய் திகழ்ந்து, உனது கீர்த்தியை
மூவுலகத்திற்கும் பரவச் செய்துவிட்டாய். பதிவிரதாப் பண்புடன் குஷ்டரோகம் பீடித்த கணவனை
வெறுக்கமால் அவன் சொற்படி இல்லறம் நடத்தி, மேன்மையான நோன்பினையும் நோற்று அவனது தீராப்பிணியை
தீர்த்ததோடு, உடனிருந்த குஷ்டரோகியர்களையும் நலமாக்கி இனிமையான வாழ்வை தோற்றுவித்தாய்.
உலகில் உன்போல் உத்தமிகள் கிடப்பதரிது. அதில் நாங்களும் பாக்கியம் செய்துள்ளோம்.
தேவையின் போது பெய்யும் மழை தப்பாது பயன் தருதல் போல கணவனையே தொழுது
வாழ்பவள் பயன்தரத்தக்கவளாக இருப்பாள், என்ற கூற்றுக்கு நீயே சான்றாய் அமைந்து விட்டாய்.
பதிவிரதையின் செயற்கரிய காரியத்தை உன்னிடத்தில் நான் நேரிடையாக கண்டேன். அவ்விரத மகிமையும்
உன் கற்பை விளக்க சாட்சியாய் அமைந்தது. நீ எப்போதும் செளபாக்கியத்தை அடைவாய்” என்று ஆசீர்வதித்ததோடு தன் மருமகன்
ஸ்ரீபாலனை நோக்கி “எனதருமை
மருகனே! நீ பூர்வ கருமத்தால் தீராதநோய் கொண்டிருந்தாலும் மதனசுந்தரியின் விரதானுஷ்ட
மகிமையால் முழுவதும் நீங்கப்பெற்றாய். தேவேந்திரன் போன்று பேரழகனாய் திகழும் நீயே என்
ராஜ்ஜியத்திற்கு உரியவன் எனும் அந்தஸ்தைப் பெற்றாய்”
எனக்கூறியதோடு அவனுக்கு நால்வகை சேனைகளையும், அனேக செல்வங்களையும், பல கிராமங்களையும்
பரிசாக வழங்கி, விடைபெற்றுச் சென்றார். (நால்வகை சேனைகள் – இரதம், பானை, குதிரை, காலாட்படை
என்பன)
அரசரும், பரிவாரங்களும் மாளிகையை விட்டகன்றதும் மதனசுந்தரி முகமலர்ச்சியுடன்
தனருமை மணாளனை நோக்கினாள். ஆனால் அவனோ அப்பெருஞ்செல்வமும், சேனைகளுடனான நாடும் பெற்றதற்கான
முகமலர்ச்சி தென்படவில்லை. மாறாக முகத்தில் வாட்டமே தென்பட்டது. அவனது முகமிறுகத் தோன்றிய
மனஅழுத்தத்தை அறிய அவனை நோக்கி, “நாதா!
ஏன் தங்கள் முகம் வாடியிருக்கிறது. என் தந்தை முன்பு விரோதமான காரியத்தை இழைத்திருந்தாலும் அதனை உணர்ந்து, நம் செயலை மகிழ்ந்து
பாராட்டியதோடு, நம்மிருவருக்கான நன்மைகளையே அளித்திருக்கிறார். இவ்வேளையில் மகிழ்ச்சியை
மறந்து துயரத்துடன் ஏன் காணப்படுகின்றீர்கள். எதுவாகியிலும் மனம் திறந்து என்னிடம்
கூறுங்கள். உங்கள் மரியாதைக்கு ஏதும் இழுக்கு ஏற்பட்டுள்ளதா? அருள் கூர்ந்து தெரிவியுங்கள்” என்றாள்.
ஸ்ரீபாலனும் மதனசுந்தரியின் வினாவிற்கு “என் இனியவளே, என்னில் பாதியான
உன்னிடத்தில் தெரிவிக்காமல் யாரிடம் கூறப்போகிறேன். கவலை கொள்ளவேண்டாம். உன் தந்தை
உயர்ந்த பரிசுகளை வாரி வழங்கிச் சென்றுள்ளதில் பெருமகிழ்ச்சி என்றாலும், அவை மருமானுக்கு
மாமனார் அளித்த சீதனமாயிற்றே. நான் ஒரு சாதாரண வீரனாய் இருந்தால் அகமகிழ்ந்துருப்பேன்.
அதேசமயம் அவர் அளித்த பரிசில்கள் பற்றி குறைஏதும் எண்ணிடத்திலில்லை. அவை அனைத்தும்
என் உழைப்பால் கிடைத்திருந்தால் மேலும் உயர்வாய்
அமையுமே என்றெண்ணினேன், அதனால் ஏற்பட்ட முகவாட்டம் தான். சுயமாய் சம்பாதித்துப் பெறுவதில்
தோன்றும் மகிழ்ச்சியே உயரியதாகும்.
மேலும் என் பூர்வீக நாட்டை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயச் சூழலில்
தள்ளப்பட்டுள்ளேன்.. என் தாயாதி வீரமதனின் சூழ்ச்சியினால் இழந்த ஆட்சிப்பொறுப்பை மீண்டும்
என்கைக்குள் கொண்டுவருவதே என் க்ஷத்ரிய வீரத்திற்கழகாகும். அதுவே என் குலத்திற்கும்,
உன் தகப்பனாருக்கும் பெருமையைச் சேர்க்கும். ஆதலால் அவர் அளித்த வெகுமதிகளை நான் ஏற்பதாய்
இல்லை. நான் பல தேசங்களுக்குச் சென்று பெரும் செல்வம் ஈட்டி, என் நாட்டையும் மீட்டெடுக்க
முடிவெடுத்துள்ளேன். இதற்கு நீ அனுமதி தர வேண்டும்”
என்று அவள் கைகளைப் பிடித்தபடி கூறினான்.
இதைக்கேட்டதும் மதனசுந்தரி இடிவிழுந்த நாகம் போல் நடுநடுங்கி ஸ்ரீபாலனை
நோக்கி, “என் பிராண நாதா!
தாங்கள் பொன்னும், பொருளும் தேட தேசாந்திரம் போக உத்தேசம் செய்தது ஒருவகையில் பொருத்தமான
முடிவே, திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்ற மொழிக்கேற்ப தாங்கள் புறப்படுவது புருஷலக்ஷணம்
என்றாலும், என்னை விட்டு பிரிவதைத்தான் என்னால் தாங்கமுடியவில்லை. எக்காலமும் கணவனைப்
பிரியாது அவன் இன்பதுன்பங்களை பகிர்ந்து கொள்வதே பதிவிரதைக்கழகாகும். ஆதலால் உம்மை
விட்டுப் பிரிய என் மனம் இசையவில்லை. அவ்வாறு பிரிந்து தினம் தினம் வியாலகுலத்தில்
வீழ்ந்து கிடப்பதை தாங்களும் விரும்பமாட்டீர்கள்; எனவே நானும் தங்களுடன் சேர்ந்து வருவதே
உசிதமான முடிவாகும். என்னையும் உடன் அழைத்துச் செல்லுங்கள்” என்று வேண்டினாள்.
அவள் மன்றாடுவதைக் கண்டு ஸ்ரீபாலன் மனம் கலங்கினாலும் அவளை அழைத்துச்
சென்று அங்கு நிகழும் ஆபத்துக்களை அவள் ஏற்பதை அவன் விரும்பவில்லை. தான் உத்தேச காரியத்தை
தனியே நின்று நிறைவேற்றுவதே உசிதமான செயல் என அவன் மனம் அறிவுறுத்தியது. எவ்வாறாயினும்
சமாதானம் கூறி அவளை தேற்றி விட்டு விடைபெறும் நோக்கில், “மனையாளே மதனசுந்தரி, உலகில் அரசகுலமகளிர் தங்கள்
நாயகரை விட்டுப் பிரிவது இயற்கையே. தன் கணவன் போர்புரியச் செல்லும் போது தடுப்பதுமில்லை,
கூட வருவதுமில்லை என்பதை அறியாதவளா நீ. நான் என் பரவாரங்களின் துணையுடன் சம்பா நாட்டின்
மக்களை அக்கொடுங்கோலன் வீரமதன் பிடியிலிருந்து மீட்டு நல்லாட்சியை நிறுவ புரட்சிவீரர்களாய்
மிகுந்ததுணிவுடன் காரியத்தில் இறங்குகிறோம். இதுவும் ஒருவகைப் போர்நிமித்தமே அதனை நீயும் உணர்வாய் என்று நம்புகிறேன். இதுபோன்ற
காலத்தில் நீ வருவதாக சொல்வது தகாது. தடையேதும் சொல்லாமல் தாரளமாய் என்னை அனுப்புவாயாக”
“மதன சுந்தரி, விதியென்று ஏதும் செய்வதறியாது அது விட்டவழியே வியாதியும்
கண்டு நொந்து வாழ்ந்து வந்தேன். ஆனால் நீயோ விதியை மதியாது அருகனை நம்பினாய். அவரோ
முயற்சியே முக்திக்கு வழியென வாழ்ந்து வெற்றி கண்டவர். வாழ்வில் முயற்சியே அவசியம்,
அதை புறக்கணிப்பது கடமை தவறுவதாகும் என்ற அறிவில், அவர் வழியில் சென்று, ஆச்சார்யார்
கூறிய நோன்பினை கடமை தவறாது முழுமுயற்சியுடன் கடைபிடித்தாய். அதில் வெற்றியும் கண்டாய்.
நம் இருவரின் விதியை முயற்சி எனும் மதியால் வென்றாய். நீயே என் வாழ்வில் முன்னோடியாய்
நின்றாய்.
அதுபோல்
என் கடமையை நிறைவேற்ற முழுமுயற்சியுடன் செல்லத் துடிக்கிறேன். உன்வழியில் தான் நான்
செல்லதுணிகிறேன், ஆனால் உனைப் பிரிந்து” என்று கூற அவள் வாயடைத்து நின்றாள்.
அதுவே சம்மதமாக கருதினான் அவள் கணவன் ஸ்ரீபாலனும். “இனி
நடக்கப்போகும் நல்ல காரியங்களை மனதில் கொண்டு பன்னிரண்டு ஆண்டுகாலம் மட்டும் சகித்துக்
கொண்டு கடத்தி விடு. நிச்சயமாக அதற்குள் அனைத்து கடமைகளையும் நிறைவேற்றி சுகமாய் திரும்பிவருவேன்.
அதுவரை உன் மாமியாருடன் மாளிகையில் வசித்திருப்பாயாக” என்று கூறினான்.
அதைக்கேட்டு
அவளும் மனம் தேறி அவன் பிரயாணத்திற்கு சம்மதம் தெரிவித்து “ நாயகரே! உமது விருப்பம் அதுவானால் அப்படியே செய்யுங்கள்.
ஆனால் தேசசஞ்சராம் செய்யும் போதும், புரட்சிசெய்து நாட்டை மீட்டு திரும்பி வரும் வரை
தினம் தினம் முயற்சி நாயகர்கள் பஞ்ச பரமேஷ்டிகளையும், நமக்கு வாழ்வளித்த சித்தசக்கரத்தையும்
வணங்க மறக்கவேண்டாம். அவையே உங்கள் முயற்சியை திருவினையாக்க வல்லவை.” என்றாள்.
பின்னர் அவனும் தன் எண்ணத்தை தெரிவிக்க அன்னையைக் காணச் சென்றான்…
தன் எண்ணத்தை தெரிவிக்க அன்னையைக் காணச் சென்றான்.
அவளும் அவனை பின் தொடர்ந்தாள். மாளிகையின் தென்புறம் அமைந்த விசாலமான பள்ளியில் செம்மரத்தால்
ஆன மஞ்சத்தில் சாய்ந்தபடி அரசி கமலாவதியும் ஓய்வெடுத்திருந்தாள். அருகில் சேவகிகள்
கட்டளைக்காக காத்து நின்றனர். வருவது ஸ்ரீபாலன் என்பதைக் கண்டதும் அவர்களும் அவ்விடத்தை
விட்டகன்றனர். அரவம் கேட்டு திரும்பிய அரசி ஸ்ரீபாலனைக் கண்டதும், கண்களை அகலவிரித்து
“வா மகனே! நீடூழி வாழ்வாயாக, என்ன
காரிய நிமித்தமாக என்னைக் காண வந்துள்ளாய்” என்று வினவியவளை இருவரும் வணங்கினர்.
ஸ்ரீபாலனும்,
“அன்னையே பொருள்தேடி நான் தேசாந்திரம்
செல்ல உள்ளேன். பொருள் ஈட்டியவுடன் படை திரட்டி நம் சம்பா நகரத்தை முற்றுகையிட்டு மீண்டும்
அரியணையை மீட்பேன். அதற்கு தாங்கள் அனுமதி தர வேண்டுகிறேன்” என பிரயாணத்திற்கான காரணத்தை முழுவதுமாக விளக்கினான்.
அவன்
கூற்று ஏற்புடையதாய் அமைந்ததால், அவன் வீரமும் வெளிப்படும் வேளை வந்தாயிற்று என்றெண்ணி
தன் புதல்வனின் கடமையுணர்வை பாராட்டினாள் “தவப்புதல்வனே! எப்போதும் உனக்கு
என் ஆசிகள் உண்டு. நீ எங்குச் சென்றாலும் ஜிநதர்மத்தை மறவாதே, செல்லும் இடங்களிலும்
ஜினாலயம் அடைந்து தரிசித்து பூஜித்து அன்றைய பணிகளை துவக்கவேண்டும். துஷ்டர்களுடன்
சகவாசம் செய்யாதே. எப்போதும் பஞ்ச பரமேஷ்டிகளின் மீதுள்ள பக்தியும், சித்தசக்ரத்தின்
மகிமையும் உன்னை காப்பாற்றும். அவற்றை தினமும் நினைவில் கொள். சென்று நம் நாட்டை வென்று
வருவாயாக.” என்றாள்.
ஸ்ரீபாலன்
அன்னையின் பாதங்களில் வீழ்ந்து வணங்கி “இருவரும் என்னைப் பற்றி கவலை
கொள்ளாமல் இருங்கள். நான் திரும்பி வரும் வரை பஞ்ச பரமேஷ்டிகள் தியானத்தையும், சித்தசக்ர
பூஜையையும், யதிகளுக்கு ஆகாரதானஞ் செய்வதையும் கடமையாக கொண்டிருங்கள். அவையே என் உயிர்காத்து
நிற்கும். எனது வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கையை உங்களுக்கு அளிக்கும். விடைபெறுகிறேன்” என்று இருவரிடமும் கூறிவிட்டு, அரண்மனையை விட்டு வெளியேறி
நகரங்களைக் கடந்து போயினான்.
அத்தியாயம் - 4
ஸ்ரீபாலன் தவள செட்டியோடு நட்பு கொள்ளல்.
உஜ்ஜயினியை விட்டு வெளியேறிய ஸ்ரீபாலன் பல நாடு, நகரங்களையும்,
காடுகளையும், மலைகளையும் கடந்து துறைமுக நகரமான ப்ரகுகச்ச நகரத்தை அடைந்தான். அந்நகரம்
தேவகானம் இசைக்கும் வானகத்தின் கந்தர்வ நகரம் போல் மிகவும் சிறப்புடையதாக விளங்கிற்று.
கடலும் கடலைச் சார்ந்த நதியுமாய் காட்சியளித்தது. நதி வெள்ளத்தை
வாரிவந்து கடலுடன் கலக்கும் பரந்து கிடக்கும் முகத்துவார நீர்ப்பரப்பில் அங்கும் இங்குமாக படகுகள் ஊர்ந்து சென்றவண்ணமாக இருந்தன. வெளிநாட்டிலிருந்து
வந்த சரக்குகளோடு சற்றுத் தொலைவில் நங்கூரம்
பாய்ச்சப்பட்டு நின்றிருந்த பலநூறு நாவாய்களிலிருந்தும், கப்பல்களிலிருந்தும் பொருட்களை இறக்கி உள்நாட்டு கிடங்குகளுக்கு எடுத்துச்
செல்லும் படகுகளின் இருபுறத்திலிருந்தும் பத்து, பதினைந்து துடுப்புகள் நீரில் உரசும்
சரேல், சரேல் என்ற சத்தம் எங்கும் கேட்ட வண்ணம் இருந்தது. நேற்று விற்ற சரக்குகளுக்கு
மாற்றாக பெற்ற மூட்டைகளை ஏற்றிச் செல்லும் பெரும் படகுகளும் நடுக்கடலில் நிற்கும் பாய்மர
மரங்கலங்களை நோக்கி நீரைக் கிழித்தெறிந்து
செல்லும் சத்தமும் கூடவே கலந்தொலித்தது.
சரக்குகளை இறக்கிவிட்டு வந்த படகு, தோணிகளைக் கயிற்றால் கரைமுளைகளில்
பிணைத்துக் கட்டிக்கொண்டிருந்த பரதவர்களின்
அதட்டல் குரல்களும், அங்காங்கு சென்று அலுவல் புரிந்து கொண்டிருந்த சுங்கக் காவலர்களின்
கட்டளை கூச்சல்களும் பல பாக்கங்களைக் கொண்ட அப்பட்டினத்தில் இரவும் பகலாகவே இறைச்சலுடன்
எங்கெங்கும் காணப்பட்டது.
இரவு வெகுநேரமாயும் பகைவரைப்பற்றிய பயமறியாத அக்கடற்கரையில் வாழும்
வலைஞர்களும் ஆட்டுக்கிடாயுடன் ஆட்டையும், சேவற்கோழியுடன் சேவலையும் சண்டைக்குவிட்டு
வேடிக்கைபார்த்த ரசித்து குதித்து கும்மாளம் போட்டுக் கொண்டிருந்தனர். சிலர் ஒரு கையில்
இறைச்சியும், மறுகையில் மதுபாட்டிலுடன் ஆடிக்கொண்டும், தள்ளாடி ஒருவரை ஒருவர் தள்ளிக்கொண்டும்
பாட்டென்ற பெயரில் ஆ, ஊ என்று கத்தி கானம் பாடிக்கொண்டிருந்தனர். இத்தனை இரைச்சல்களும்
அப்பட்டினத்தில் இரவில் ஒதுங்கவந்த அமைதியை கபளீகரம் செய்து கொண்டிருந்தன.
எந்நேரமும் கரையோரக்காவல் செய்யும் துறைமுகக்காவலர்கள் கையில் தீவட்டி, ஆயுதங்களுடன் நான்கு, நான்கு பேராய் சரக், சரக் கென்ற தோற்காலணிகள் உரச அவ்வப்போது சென்று கொண்டிருந்தனர். அவர்கள் கடந்து செல்லும் போது அருகில் இரவென்றும் பராமல் வெள்ளையுடை உடுத்தி தம் கணவனுடன் நடனமாடிய மீனவப்பெண்டிர்களை நோட்டம் விட்டுக் கொண்டே நகர்ந்தனர். இவை அத்தனையும் வெளிநாட்டுக் மரக்கலன்கலுக்கு வெளிச்சமிட்டுக் காட்ட அமைக்கப்பட்டிருந்த கலங்கரை விளக்கத்திலுள்ள திவட்டிகளின் ஒளியில் தெளிவாக தெரிந்து கொண்டிருந்தன.
இவை அனைத்தையும் பார்த்து அலைகளுக்கருகில் நின்று கொண்டிருந்த ஸ்ரீபாலன்
கால்களை வருடுவதும், பின்வாங்குவதுமாக அலைகள் வந்து சென்ற வண்ணம் இருந்தன. அதனால் கால்களுக்கு
கிடைத்த இதத்தை அனுபவித்துக்கொண்டிருக்கும் போது அவன் செவிப்பறைகளில் உள் நிலப்பகுதியில்
அமைந்த ஆலயத்தின் இரண்டாம் சாம மணியோசை அறைந்ததும், அத்திசை நோக்கி செல்லத் துவங்கினான்.
சற்று தொலைவைக் கடந்ததும் ஒரு சத்திரத்தில் ஓய்வெடுக்க திண்ணையின் மீதமர்ந்தான். இப்பட்டினமே
நம்மிடமுள்ள எதிர்காலம். ஏதாவது பணியிலமர்ந்து, பொருளீட்டி, அதனை மூலதனமாக்கி வியாபாரம்
செய்து பெருக்கிட பொருத்தமான நகரம் என்று எண்ணி இங்கேயே தங்கிட முடிவு செய்தான்.
காலையில் எழுந்தபின் ஊரைச் சுற்றி பார்த்து பின் தேர்வு செய்யலாம்
என்றசை போட்டபடியே கண்ணயர்ந்தான்…
அவன் கண்ணயர்ந்தான், நாம் விழித்துக்கொள்வோமா!
இந்த கட்டத்தில் ஸ்ரீபாலன் தன்னுடைய வாழ்வை மீண்டும் பூஜ்ஜியத்திலிருந்து
துவக்குகிறான். அவனது முட்டாள்தனத்தை என்னவென்று கூறுவது என்றுதான் தோன்றுகிறது. ஆனால்
இப்பிரபஞ்சம் இதுபோன்றவர்களுக்குத்தான் விடுதலையையும், பேரானந்தத்தையும் வழங்குகிறது.
எப்படி? எவ்வாறு…
இரண்டு வயதில் தனது அரசபோக வாழ்வை இழந்தான் கதையின் நாயகன் ஸ்ரீபாலன்.
தன் பங்காளியால் அவனது அழிவுக்கான திட்டங்களும் வகுக்கப்பட்டன. அந்நிலையை அளித்ததும்
விதிதான், அதிலிருந்து தப்புவிக்கும் சந்தர்ப்பத்தை வகுத்ததும் அதே விதிதான்.
அங்கிருந்து வாரணாசி வந்து தாயின் கருணையால் அவனது வாழ்வு துளிர்கிறது,
பிழைக்கிறது. அரசகுமாரனுக்கு ஆண்டிக் கோலத்தில் பிழைப்பு. – survival, பிழைத்தல், பிழைத்தால்
போதும் என்ற வாழ்வுநிலை
அவனுக்கு குஷ்டமளித்து மதனசுந்தரி எனும் பதிவிரதை சன்மானமாய் கிடைக்கிறது,
குஷ்டமும் விலகுகிறது என்றோ கொடுக்கப்பட்ட ஒரு சாபத்தின் விலகலால். தெய்வசங்கல்பத்தால்..
பக்திபரவசத்தால், சம்யக்வ விழிப்புணர்வால்…
மேலும் மாமனார் பிரஜாபாலனால் மாளிகைகள், ஐஸ்வர்யங்கள், ஆட்சிப்பிரதேசங்கள்
அந்தஸ்து, கெளரவம் என அனைத்தும் அவன் வாழ்வில் கிடைத்தது. அதுவும் அவனது புண்ணியபலனால்
கிடைத்தவையே. அதுவும் விதியே. அப்படியே வாழ்வை அமைதியாய் கிடத்தலாம் – existing
life. இருத்தல், இருப்பதை அப்படியே வைத்து வாழ்வது.
ஸ்ரீபாலனாக இல்லாமல் வேறொருவராய்(நாமாக?) இருந்தால் அரசபோகவாழ்வு,
ஆயிரம் சேவர்கள், பாதுகாவலர்கள். அவ்வப்போது அடிமையைப்போல் கவனித்துக் கொள்ளும் பதிவிரதை
இதைவிட அதிர்ஷ்டம் ஒரு மனிதனின் வாழ்வில் என்ன உள்ளது.
இவ்வாழ்வை மேம்படுத்த வேண்டும் என்றாலும் மேலும் ஐஸ்வர்ங்களின்
துணையுடன் மேலும் மேலும் பல பிரதேசங்களை ஆட்சிக்கு கொண்டுவரலாம். மேலும் வாழ்வில் வளர்ச்சியை
பெருக்கலாம். – living , வாழ்தல். இதுதான் உன்னத வாழ்வு நிலை என்கிறது இன்றைய சமூக
விஞ்ஞானம்.
இது ஒரு சாதாரண மனிதனுக்கு அளிக்கப்பட்டது.
ஆனால் ஸ்ரீபாலனோ உஜ்ஜயினிக்கு வரும்போது இருந்த ஆண்டிக்கோலத்தை
மீண்டும் ஏற்கத்துணிந்தான். – survival, பிழைத்தல், ஜீவனத்துக்காக அலைதல்.
இது விதியல்ல, மதியின் விழிப்பு. அறிவின் விழிப்பு.
இதுபோன்ற சுகங்களை, ஆட்கள், அதிகாரம், புகழ், பெருமை, வரவேற்பு,
ராஜபோகம் போன்ற இவையனைத்தும் விட்டுவிட்டு ஒருவன் மீண்டும் ஆண்டியாய் போகதுணிந்தானே.
இதுதான் துறவு… .
இதெப்படி துறவாகும்?
உழைக்காமல் இக்கர்மபூமியில் எது கிடைத்தாலும் அது சீக்கிரமே விலகிவிடும்.
இது போகபூமியல்ல, கர்மபூமி. இப்பூமியில் இறைக்கொடையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இங்கு
இனி உழைத்து வாழ்வதே ஒவ்வொருவரின் கடமை. அக்கடமையை நிறைவேற்றும் வழியும் நல்வழியாய்
அமையவேண்டும், நற்பண்புடனான செயலாய் அமையவேண்டும் என்பதும் இறைநீதியாய் வகுக்கப்பட்டுள்ளது.
இவற்றை நாம் மாற்ற முடியாது. மாற்றா எத்தனித்தாலும் நாமே நம் வாழ்வில் தீயவற்றை ஈட்டுவோம்.
(அவற்றை நன்குணர்ந்த ஸ்ரீபாலன் எனும் விவேகஞானி அவ்வழியில் நாளையிலிருந்து பயணிக்க
துணிகிறான்.)
அவனது கடமை அவனது தாய்நாட்டின் விசுவாசிகளை, தேசப்பற்றுள்ளவர்களை
காப்பதே மேலான செயல். அவர்கள் கொடுங்கோலன் பிடியில் அவதியுறுவது இவனுக்கு சாபமாய் அமையும். அச்சாபத்தின் தீங்கை
நன்குணர்ந்த ஸ்ரீபாலன் தன் நாட்டுமக்களை காக்கும் கடமையை நிறைவேற்ற முடிவு செய்கிறான்.
ஒருவர் தன் கடமையை மறந்து அமர்ந்துண்ணத் துவங்கினால் அதுவே பாவச்
செயல் என்கிறது இறைநீதி. பக்திமார்க்கமோ, ஞானமார்க்கமோ அவர்களுக்கு விடுதலைப்பேறு அளிப்பதில்லை.
அதைப்பொருத்தமட்டில் பயனற்றவையே. தானும் வாழ்ந்து, பிறரையும் வாழவைப்பதே இப்பிரபஞ்சம்
கர்மபூமியில் கட்டளையாய் அளித்துள்ளது.
அதை புரிந்து கொள்ளவே இதுபோன்ற நீதிக்கதைகளை நமக்கு நம்முன்னோர்கள்
வழங்கியுள்ளார்கள். அதை புரிந்து கொள்வதே விவேகஞானமாகும்.
ஸ்ரீபாலன் செய்யத்துணிவது மதிகெட்ட செயலா, விவேகமான செயலா என்பதை பொருத்திருந்து காண்போம்…
பிரகுகச்ச துறைமுகப்பட்டினம் ஏற்றுமதி, இறக்குமதி செய்யும் பல பெருவணிகர்கள்,
அவற்றை பெருமளவில் வாங்கி கிடங்குகளில் சேமித்து தாமதமாக விற்கும் மொத்தவணிகர்கள் பலரும்,
அவற்றை வெளியூர்கள்களுக்கு சரக்குவண்டிகளில் எடுத்துச் சென்று விற்பனை செய்யும் சரக்குவணிகர்களும்,
உள்ளுரில் சில்லரை வாணிபம் செய்யும் சிறுவாணிபர்கள் பலரும், தெருத்தெருவாய் கூவி விற்கும்
வண்டிவிற்பனையாளர்கள் ஆயிரமாய் பல அடுக்கு வணிகர்கள் நிறைந்த ஒரு பெரும் வியாபாரத்தலமாய்
திகழ்ந்தது.
அவ்வியாபாரிகளுக்கு தலைவனாய் ஐந்நூறுக்கும் மேற்பட்ட நாவாய் மற்றும்
கப்பல்களுக்கு உரிமையாளருமான கடல்வாணிபம் செய்து பெரும்பொருள்ஈட்டி அரசாங்கத்திற்கு
அதிக வாணிபவரி செலுத்தி அரசரிடம் பெருமதிப்பைப் பெற்றவனான தவளசெட்டி என்னும் பெருவணிகன்
படாடோபமாய் வாழ்ந்து வந்தான். அவனிடம் ஆயிரக்கணக்கான பணியாளர்கள் ஊதியம் பெற்று பிழைத்து
வந்தனர். இட்ட ஏவல் செய்ய ஆயிரம்பேர் இருந்தும் அவன் குறிப்பறிந்து செயலாற்றும் நம்பிக்கையான
உதவியாளன் இல்லை என வருந்திக்கொண்டிருந்தான்.
அவன் வருத்தம் நீங்க ஒருவன் ப்ரகுகத்திக்கு வந்து இறங்கியுள்ளான்
என்பதை தெரிவிப்பதுபோல், அவனது சரக்கைச் சுமந்த ஐந்நூறு மரக்கலங்களும், நங்கூரத்திலிருந்து விடுபட்டும் நகர மறுத்தன. கப்பல்
மாலுமிகளும் சுக்கானை சுழற்றவும் நகர்த்தவும் முடியாமல் தவித்தனர். பழுது நீக்கும்
பட்டரையார்கள் பலர் முயன்றும் நாழிகைகள் நகர்ந்து கொண்டிருந்ததே தவிர நாவாய்க்ள் நகரமறுத்தன.
அவனும் உதவியாளர்களிடம் கூச்சலிட்டும், விரட்டியும் எதுவும் நடந்தபாடில்லாமல் பொறுமையிழந்தான்.
அதனால் பெரும்கவலையுற்று தன் ஆஸ்தான சோதிடரை வரவழைத்து காரணத்தை வினவினான். அவன் குறிசொல்வதிலும்
வல்லவனாதனால் தவளசெட்டியிடம் “வணிகர்
பெரும! சிலதுஷ்டதேவதைகள் வழிமறித்து அக்கிரமங்கள் செய்வதால் நகரவில்லை. ஆயினும் முப்பத்திரண்டு
அங்கலக்ஷணங்கள் உள்ள ஒரு மஹாபுருஷன் தன் கரத்தால் அக்கப்பல்களைத் தொட்டால் அத்தேவதைகள்
உடனே தன் கொட்டங்களை நிறுத்தி கலங்கள் செல்ல வழிவிடும். ஏனெனில் அத்தனை சுபலக்ஷணங்கள்
பொருந்தியவனே தருமத்தின் வழியில் நடப்பவனாயிருப்பான். அவன் கரம் பட்டவுடன் தீயது விலகும்” என்று உபாயத்தை கூறிச் சென்றான்.
அவ்வாறு ஒருவனை உடனே தேடி கண்டுபிடுக்கும் படி தன் உதவியாளர்களை
நகரின் நாற்திசைக்கும் ஏவினான். எஜமானனின் உத்தரவை சிரமேற்கொண்ட பலரும் நாலாபுறமும்
சிதறி வலைவீசித் தேடினர்.
அவ்வேளையில் தவளச்செட்டிக்கு அணுகூலம் செய்ய புறப்பட்டவனாய், ஸ்ரீபாலனும்
பல விற்பனைசாலைகளில் ஏறி இறங்கி விற்பனைப் பணிக்காக அலைந்து கொண்டிருந்தான். அவனது
அரசகுமாரத் தோற்றத்தை கண்டவுடன், அறிமுகம் அளித்தால் உதவுவதாக சொல்லி அனுப்பிக் கொண்டிருந்தனர். அவனும் சளைக்காமல் ஏறி இறங்கியவண்ணம் கடைவீதியில்
அலைந்து கொண்டிருந்தான்.
அப்போது வஸ்திரசாலை ஒன்றின் உரிமையாளனிடம் தனக்கு கொஞ்சம் சரக்குகளை
கொடுத்துதவினால் விற்று மாலை திரும்பியதும் விற்றமுதலையும் மீதமுள்ள துணிகளையும் நேர்மையாக
அளிப்பதாக கூறி வேண்டிக்கொண்டிருந்தான். அவரும் இவனது தோற்றத்தைக் கண்டு மனமிரங்கி
தரலாம் என்று முடிவெடுத்தபோது; தவளசெட்டியின் உதவியாளன் கண்ணில் பட்டுவிட்டான். அவனைக்
கண்டு ஆச்சரியமடைந்து இவனே நம் செட்டியார் தேடிய அதிரூபன், இவன் முப்பதிரண்டு என்ன
முன்னூறு சுபலட்சணங்களையும் ஒருங்கே கொண்டிருக்கிறான். இவனே அத்தடையை நீக்க உதவுபவன்
என உறுதிபூண்டு தன்னுடன் வந்த சகபணியாளர்களுடன் ஸ்ரீபாலனை நெருங்கினான்.
“ஐயா,
தாங்கள் நகரத்திற்கு புதியவர் போலத் தெரிகிறது. உங்களுக்கு என்ன உதவி தேவைப்படுகிறது” என்று வினவியதும். அதைச் செவியுற்ற
கடைமுதலாளி விபரத்தை கூறினார். உடனே மற்றொருவன் “தங்களுக்கு
எந்தக் கவலையும் வேண்டாம் உங்களைப் போன்றோருக்கு உதவுவதற்காகவே எங்கள் சிரேஷ்டி உள்ளார்.
பெரும் வணிகரான தவள செட்டியாரும் உங்கள் வியாபாரத்திற்கு நிச்சயமாய் உதவி செய்வார்.
அவருக்கு உங்கள் உதவியும் தற்போது தேவைப்படுகிறது. அதை நீங்கள் நிவர்த்தி செய்து விட்டால்
கண்டிப்பாய் நீங்கள் கேட்ட உதவி சுலபமாய் கிடைத்துவிடும். வாருங்கள் என்னுடன்” என்பதைக் கேட்ட முதலாளியும்
“ஆம் பெரிய இடம், ஐநூறு
கப்பல்களுக்கு எஜமானர், ஆள்பலமும், பொருள்பலமும் நிரம்பியவர். அதிர்ஷ்டம் உன்னை அழைக்கிறது.
வாய்ப்பை பயன்படுத்திக்கொள்”
என்றதும். ஸ்ரீபாலன் அழைத்தவர்களுடன் தவளை செட்டியைக் காணச் சென்றான்.
சரிதம் வளரும்…
-----------------------------------------------
தனி அஞ்சலில் விளக்கம் கேட்டிருந்தனர் சிலர்….
அதனால்…
Survival, Existing, Living…
Economic status of a man in a family / country.
பிழைத்தல், இருத்தல், வாழ்தல் … எனும் மூன்று பொருளாதார வாழ்வுநிலை.
மனிதர்கள் தன் வாழ்வில் பிழைத்தல் நிலையிலிருந்தால்(SURVIVAL
economic status, தினம்தினம் செத்து பிழைப்பவர்கள், உழைத்தால் தான் உணவு என்ற நிலை)
இருத்தல் நிலைக்கு செல்வதை நோக்கமாக கொண்டிருக்க வேண்டும். பெரும்பாலான நாடுகளில்,
முற்கால பாரதத்தில் இந்தநிலைதான்.
பின்னர் கல்விநிலையை உயர்த்தி, திறமையை வளர்த்து, இடம்பெயர்ந்து
வாழுதலுக்கு செல்ல முற்படும்போது இருத்தல் நிலைக்கு உயர்வார்கள் (EXSITING
economic status, உணவுப் பற்றாக்குறையின்றி சில வசதிகளுடன் வாழும் நிலை அந்த மட்டிலான
முயற்சியுடன் வாழ்வது. Maintaining the life status. (
யாரையாவது எப்படியிருக்க என்று கேட்டால் , “ஏதோ இருக்கம்ப்பா” என்று பதிலளிக்கும் நிலை.
(Economic professors வழக்கமாய் சொல்லும் உதாரணம்.)
பல
நாடுகளிலும் இந்தியா உட்பட இந்த வாழ்வு நிலைதான் அதிக விழுக்காடு. தனிமனிதனும், அரசும்
மேலும் முயற்சி செய்தால் developing status / country யாக உயர வாய்ப்புள்ளது.
அவ்வாறான
வாய்ப்பு எவ்வழியில் வந்தாலும், அரசாங்கம் அமைத்துக் கொடுத்தாலும் தினம் தினம் பொருளாதாரத்தை
உயர்த்திக் கொண்டே செல்வது, பொருளாதார வரைபடம் கிழே இறங்காத வளர்ச்சி விகிதத்தில் வாழ்வது.
Growth rate daily increasing … அதுதான் வாழ்வில் வசந்தமான வாழ்வுநிலையாக பொருளாதார
வல்லுநர்கள் கூறுகிறார்கள். யானை படுத்தலும் குதிரை மட்டம் என்றளவில். LIVING
Status, third category of Economic life status. இந்த வாழ்வுநிலையில் உள்ளவர்கள் அதிகம்
உள்ள பிரதேசத்தை developed countries என்றழைப்பர்.
ஆனால்
developing status ஒரு தனிமனிதனுக்கோ, நாட்டுக்கோ வந்தால் உடனே பிறரின் பொறாமை குணம்
உயர்ந்து விடும், எதிரிகளின் தாக்குதலுக்கு ஆளாகும் அபாயமும் உள்ளது. அதனால் பாதுகாப்பு அரண் அவசியமாகிறது.
அப்போது தான் வல்லரசு நாடாக அணுஆயுதங்கள் வரை செல்ல வேண்டிய கட்டாயச் சூழல் இக்காலத்தில்
ஏற்பட்டுள்ளது.
ஆன்மீகம்
இந்த மூன்றாம் நிலையை விருப்பவில்லை என்று கணிப்பும் பலரிடம் உள்ளது. அதுவும் தவறு.
உயர்ந்த வாழ்வில் இருப்பவன் தாழ்வு நிலையில் இருப்பவனது வசதியை மேலே உயர்த்தும் போது
உணர்வில் சமநிலை ஏற்பட்டால் அந்த பொறாமை குணம் வெளியேறிவிடும்.
அதனால் தான் அரசகுமாரனாய் வாழ்ந்த பகவானும் தான, தர்மங்களைச் செய், பிறருக்கு ஏற்படும் இடரை, துயரை நீக்க வழியை தேடு, வாழு வாழவிடு என்ற சிந்தாந்தத்தை வழங்குகிறார். (மிகச் சரியாக சொன்னால் பகவான் பிறரை வாழவிடு பின்னர் நீ வாழு என்றுதான் சொல்லி யிருப்பார். அதுவே அஹிம்சை உணர்வு. அதிலும் சுயநலம் கொண்டவரின் மனம் வாழு வாழவிடு என்று மாற்றியமைத்துள்ளது.)
அதனால் இளமையில் தனிமனித பொருளாதார நிலையை உயர்த்த
வேண்டிய கட்டாயம் அவசியம். நிர்வகிக்க செய்ய இயலாத முதுமையில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
ie retirement. அதனை நாம் சரியாக புரிந்து
கொள்ள வேண்டும் என்பது என் தனிப்பட்ட கருத்து. அவரவர் காலத்திலும் அவ்வாறான இலட்சியத்தில்
இருப்பதே அந்த குடும்பத்திற்கும், நாட்டிற்கும் சிறப்பை அளிக்கும். இது தியாகமல்ல,
அதாவது இந்த கர்மபூமியில் தோன்றியவனின் கடன் பணியாகும், கடமையாகும்.
அதனால்
இந்த வாழ்வுநிலை உயர, அவசியம் உழைப்பை புறக்கணிக்காத உணர்வு. அதுவே கடமையுணர்வு. அந்த
கடமையை நிறைவேற்ற தினம் தினம் முயற்சி செய்து கொண்டே யிருப்பது விடாமுயற்சி. அதுவே
தனிமனித வாழுவின் இலட்சியத்தை நிறைவேற்றும் செயல்முறை.
அந்த
இலட்சியத்தில் பயணிக்கும் நன்முயற்சியாளனே சிரமணன், தமிழில் சமணன். அவர்களில் உன்னத சமணனான ஸ்ரீபாலன் தன் கடமையை நிறைவேற்றுவதே
இலட்சியம்; அதாவது வாழ்வின் பொருளாதார மூன்றாம் நிலையை எட்டுவதே இலட்சியம் என்று உறுதியுடன்
செயல்பட்டான். இந்த கருத்தை மையமாக கொண்டு இந்த கதை வழங்கப்பட்டுள்ளது.
(உங்களுக்கு
வேறுகோணத்தில் கருத்திருந்தாலும் வழங்கலாம் வழக்காடு மன்றம் போல் இல்லாமல். இந்த காலத்தில்
பட்டி மன்றங்கள் ஒழிந்து வழக்காடுமன்றத்தைத் தான் வழங்கிக் கொண்டிருக்கின்றார்கள்.
மறுத்துப் பேசும் கலை.)
ie
Win Defeat culture propagating instread of Win Win culture propagation.
-----------------------------------------------
நகராத
கப்பலும் நகர்ந்தது…
நாவாய்,
கப்பல் மாலுமிகளும் நங்கூரம் மரக்கலத்தின் பக்கபலகைகளின் மேற்புறம் முழுவதுமாக மேலேற்றிக்
கட்டியபிறகு இவ்வளவு நாழிகைகள் நின்றதே இல்லை. ஒருநாள், இரண்டு நாள் என மூன்றாவது நாளின்
பதினைந்து இருபது என நாழிகைகள் கூடிக்கொண்டே போகின்றன, ஆனால் கப்பல் நகர்ந்த பாடில்லை.
சுழலில் மாட்டியபோதும் கூட அது சுழன்று கொண்டாவது இருந்த இடத்திலேயே இருக்கும் அதற்கும்
வழியில்லாமல் நிர்கதியாய் நிற்கும் அப்பிரம்மாண்டங்களை யார் இத்தனை அழுத்தமாக பிடித்துள்ளார்கள்
என்ற வியந்து பார்த்தவண்ணம் செய்வதறியாது தவித்துக் கொண்டிருந்தனர். அதே நேரம் அத்தனை
பணியாளர்களையும் விரட்டி விரட்டி விடுவிடு என உத்தரவுகளைப் பிறப்பித்த தவளசெட்டியின்
முகத்தில் எள்ளும் கொள்ளும் போட்டால் வெடித்துவிடுமளவிற்கு கனல்தெறிக்கும் முகத்துடன்
காணப்பட்டான். சல்லிக்கு சல்லிக்கு லாபத்தை நொடிக்கு நொடி தேடித்தானே இத்தனைக் கப்பல்களுக்கு சொந்தக்கரானாகியுள்ளான்.
இந்நேரம் வெகுதூரம் பயணம் செய்து அடுத்த தீவை நெருங்கியிருக்க வேண்டும். ஏன் அப்படி
ஆகாமல் இந்த இழவெடுத்த துர்தேவதைகள் நிறுத்தி வைத்துள்ளன. அவைகளுக்கு என்ன வேண்டும்
என்று சொல்லித்தொலைத்தால் உடன் கையூட்டை அளித்துவிட்டு வழிவிடச்செய்யலாம். ஆனால் அவை
கண்ணுக்குத் தெரியாமல் நாற்புறம் கயிற்றால் இழுத்துக் கட்டியது போல் நிற்க வைத்துள்ளதே
என்று புலம்பிக் கொண்டிருந்த சிரேஷ்டியின் கோபத்திற்கு யார் ஆளாகப்போகிறோமோ என்ற பயம்
கலந்த பதட்டத்துடன் பணியாளர்கள் நேர்கண்ணில் படாமல் ஒதுங்கியே நின்றிருந்தனர்.
“இத்தனை தண்டங்கள் இருந்தும் ஒன்றும்
செய்தபாடில்லை. போடப்போட சோற்றை மூச்சு முட்ட தின்று விட்டு படுத்து தூங்க தயாராக இருப்பீர்கள்.
சோம்பேறிகள்.. வேறேதற்கும் நீங்கள் லாயக்கற்றவர்கள்.” என்ற வழக்கமான அர்ச்சனைகளை அள்ளி வீசிக்கொண்டிருந்த போது
தூரத்தில் தேவலோகத்திலிருந்து இறங்கிவந்த தேஜஸுடன், கனகச்சிதமான உடல் அமைப்புடன் ஒருவனை
இவனது பரவாரங்கள் அழைத்து வருவதை கண்டதுமே அவன் வசவுத்தொனி சற்றே கீழ்த்தாய்க்கு இறங்கியது.
அருகில் வர வர அவனது இஷ்ட தேவதை அனுப்பி வைத்த சுபலக்ஷண புருஷன் என்பது விளங்கி விட்டது.
அவனை அருகில் கண்டமாத்திரத்தில் முகம் மலர்ந்த தவளசெட்டியுடம் “ஆண்டவனே இவனைப்பாத்திர மாத்திரத்தில் கப்பல் கிளம்பிவிடும்
என்ற நம்பிக்கை எங்களுக்குள் துளிர்விடத்தொடங்கியது. இருந்தாலும் தங்கள் ஆணைக்கு காத்திருக்கிறோம்.
கப்பலின் மேற்தளத்திற்கு அழைத்து வர உத்தரவு தாருங்கள்” என்று வணங்கியதை கவனிக்காமல் சிரேஷ்டியும் கப்பலின் நடுத்தளத்திற்கு
படியில் இறங்கிபடியே அவனை நோட்டம் விட்டான். இவனே சுபலக்ஷணங்கள் பொருந்தியவன் என்பதை
அச்சோதிடனிடத்தில் சோதிக்கத் தேவையில்லை. அவனது சாந்தமுகமே இவன் தர்மத்தின் தலைவன்
என்பதை பறைசாற்றுகிறது. இந்த ஏமாளியை வைத்தே பலகோடி பொற்காசுகளை ஈட்டி விடலாம் என எடைபோட்டபடியே
ஸ்ரீபாலனை நெருங்கி “ஸுவாமி, என்னை ரக்ஷிக்க வந்த
கடவுள் போன்றுள்ளாய். நீயே என் ஆபத்பாண்டவன். உம்மை தரிசித்த மாத்திரத்தில் சகல துன்பங்களும்
என்னை விட்டு விலகிய உணர்வு தோன்றிவிட்டது. உன்னை அழைப்பித்ததற்கு காரணம் எனது அளவிடாத
சரக்குகளுடன் நகர மறுக்கும் எனது கப்பல்களை இடம் பெயரச் செய்யவேண்டியே. இந்நாட்டு அரசனை
மட்டுமே வணங்கியகைகளால் கூப்பி மன்றாடுகிறேன். இவைகளை சிறைபிடித்திருக்கும் துர்தேவதைக்
கூட்டத்தை நீயே விரட்டி எங்களுக்கு கருணை செய்ய வேண்டுகிறேன். இவ்வேண்டுகோளை நீ நிறைவேற்றினால்
நீ என்ன கேட்கிறாயோ அவ்வாறு அளிக்கிறேன். மேலும் இனி எனது தோழனாய் என்னுடனே இருந்து
விடு. இணைபிரியாமல் வாழ்வோம். நீயே என் அதிர்ஷ்டம் என்று என் மனது கூறிக்கொண்டே இருக்கிறது” என்று ஸ்ரீபாலன் கைகளை இறுகப்பிடித்துக் கொண்டான்.
அவன்
வேண்டுவதைத் தீர்ப்பதே தன் வேலை என்ற வேட்கையுடன் வாழும் ஸ்ரீபாலனும் அவனை நேசத்துடன்
பார்த்தான். தோழமையை வெளிப்படுத்தினான். ஆனால் அது நிரந்தர நட்பல்ல பழிதீர்க்கும் சந்தர்ப்பத்தை
எதிர்நோக்கும் துரோகச்செயலின் மாயங்கள் என்பதை அந்த வேளையில் அவன் உணரவில்லை தவளசெட்டிக்குமே
அப்போது தெரியவில்லை. மூன்றாசைகளையே பூர்த்தி செய்ய அவதாரம் எடுத்தவர்களிடம் நேசம்
ஸ்திரதன்மையில் நிற்பதில்லையே. அதிலும் எல்லைக்கோடே வரையாமல் பொருள் ஈட்டுவதையே இலட்சியமாக
கொண்ட பணப்பைத்தியத்திடம் எவ்வாறு நேசத்தின் முழு இலக்கணத்தை காணமுடியும். வேட்கை உதயத்தையும், அதன் வேகத்தையும் எவரால் உணரமுடியும்,
அது வரும்போது எவர் உணர்வையும் மதிப்பதில்லை.
ஆனால்
இலட்சியத்தை எப்போதும் தலையில்சுமக்காமல் நிகழ்கால விழிப்புணர்வில் எப்போதும் வாழும்
ஸ்ரீபாலனுக்கு நட்பும், துரோகமும் சமஉணர்வே. சம்பா நாடும், பிரகுகச்ச நாடும் ஒன்றே.
இரு நாட்டினரையும் தன் மக்கள் என சமநிலை உணர்வில் வாழும் நீதிமானாயிற்றே அதனால் “ஐயா, தாங்கள் உங்கள் விருப்பப்படியே
அதனை நிறைவேற்றுகிறேன். நான் என்பங்கிற்கு யாது செய்ய வேண்டும்” என்றான். சிரேஷ்டியும் மீண்டும் கப்பல்கள் அசையா நிற்கும்
காரணமும், அதனை இடம்பெயரச் செய்ய சோதிடன் உரைத்த உபாயத்தையும் தெரிவித்தான்.
ஸ்ரீபாலன்
அதைக் கேட்டதும் “சற்று காத்திருங்கள் அதற்குரிய
ஆற்றல் என்னிடம் உள்ளதா என்பது தெரியவில்லை. ஆனால் என் மனம் உங்கள் தேவையை பூர்த்தி
செய்ய விழைகிறது. அதனால் ஜினாலயம் சென்று எனது ஐயனை பூஜை செய்து அருளைப்பெற்று வர அதற்குரிய
திரவியங்களை தாங்கள் அளிக்க வேண்டுகிறேன்.” அவனும் தன் உதவியாளர்களிடன்
சொல்லி உடனே தருவித்ததோடு ஸ்ரீபாலனை அருகிலுள்ள ஜினாலயத்திற்கு குதிரையில் ஏற்றி அனுப்பி
நகராக் கப்பலை விட்டு நகர மனமில்லாமல் நின்று விட்டான்; கடவுள் எங்கும்தான் இறைந்துள்ளாரே
இங்கிருந்தபடியே வணங்கிக் கொள்வோம் என்ற நிலைப்பாட்டில்..
தூய
மனமுடைவனும் உடல் தூய்மைபெற பொய்கையில் நீராடி, துணியைப்பிழிந்து இடையில் உடுத்தினான். மானஸ்தம்பத்தை
கண்டதும் வணங்கி, பலிபீடத்தில் மனச்சுமையை இறக்கிவிட்டு, வெற்று மனத்துடன் உள்ளே உறையும்
ஜினரின் அருளைப் பெற்று நிரப்ப கருவறைக்குள் சென்றான். அவர் வலப்புறம் நின்று அபிஷேகங்களை
முடித்து, ஆராதனை செய்து, பூசனைகளை நிறேவேற்றி அவர் பாதங்களில் சாஷ்டாங்கமாய் வீழ்ந்து
வணங்கினான். அப்பிரதிமையின் அபிஷேக கந்தநீரை செம்புக்கிண்ணத்தில் ஏந்தி வந்து தவளசெட்டியின்
முதல் கப்பலுக்கு அருகே நின்று மீண்டும் ஸ்தோத்திரம் செய்து, “ஓம் நம சித்தேப்ய:” என்று மூன்று முறை மந்திரம் சொல்லி அக்கந்தோதகத்தை
அம்மரக்கலன் மீது தெளித்ததும் அசையவிடாது தடுத்த தீயசக்திகள் காற்றாய் பறந்தோடின. உடனே
கப்பல்கள் அனைத்தும் துடுப்புவிசையால் நீரைநெட்டித்தள்ளியது போல் மெல்லநகரத்தொடங்கின.
இவ்வதிசயத்தை வாயைப்பிளந்தபடி கண்ட ஜனங்களும், தவளசெட்டியும் அகலவிரிந்த கண்களுடன் ஸ்ரீபாலனை தரசித்து மஹா சந்தோஷத்தை
அடைந்தனர். ஸ்ரீபாலனின் தெய்வபக்தியினால் விளைந்த ஆற்றலை பாராட்டி வணங்கினர்.
தவளசெட்டி
புளகாங்கிதம் அடைந்தான். ஸ்ரீபாலனைக் கட்டி பிடித்தபடி “இனி உனக்கு வேண்டிய உதவிகளை கேள் அளிக்கிறேன். பொன்னையும்,
பொருளையும், நிலத்தையும் வாரி வழங்குகிறேன். எக்காலமும் நீ என்னை விட்டு அகலாமல் இரு.
நீ நட்பிலும் மேலானவன். உன் வரவு என்வாழ்வில்
பெரும் லாபத்தை எனக்களிக்கும் என்பதில் ஐயமில்லை. என்னுடனே தயங்காமல் புறப்படு. இந்த
வெற்றுசோற்றுப் பிண்டங்கள் ஆயிரம் இருந்தென்ன, நீ ஒருவன் இருந்தாலே என் நம்பிக்கையின்
விளக்கு தூண்டமலே எரிந்து கொண்டு இருக்கும்.” என்று கூறி அவனை தன் மேற்தள
அறைக்கு அழைத்துச் சென்றான்.
அக்கப்பலின்
தலைமை மாலுமி வழக்கமாய் வாங்கும் வசைபாடுகள் தானே என்று தட்டிவிட்டு, கையில் உள்ள சங்கை
ஊதி அனைவரையும் புறப்பட ஆயத்தப்படுத்தினான். பணியாட்கள் ஏறியதும் ஏணிப்படிகள் ஏற்றப்பட்டன.
உடன் இருபக்க பலகையில் அமர்ந்து கடல்நீரில் தூழாவி எழுந்த துடுப்புகளின் ஏற்ற இறக்கத்தினால், சரேல் சரேல் என்ற ஒருமித்த சத்தம் கொஞ்சம் கொஞ்சமாக
அதிகரித்துக் கொண்டே வந்து; கப்பலின் ஓட்டமும் கூடிக்கொண்டே வந்தது. கடற்காற்றின் ஊ
என்ற ஊதல் சத்தமும் காதைக் கிழிக்கத்துவங்கியது. முகப்புத்தளத்தில் நின்ற மாலுமி, நுனியில்
படபடக்கும் கொடியைத்தாங்கும் கம்பத்தை பிடித்தபடி சுக்கானை இயக்கும் மாலுமியிடம் கூச்சலிட்டு
ஏதோ கட்டளை இட்டுக் கொண்டே வந்தான். அவ்வாறு
அந்த ஐந்நூறு மரக்கலங்களும் ஒன்றன்பின் ஒன்றாக நகர்ந்து நடுக்கடலுக்கு சென்றது. அங்கே
பாய்மரக்கம்பங்களில் ஏறி பாய்கள் விரிக்கப்பட்டன. சுக்கானும் சுழன்றது செல்லவேண்டிய
திசையில் கப்பல்களும் திரும்பிபடி சென்று கொண்டிருந்தன.
அவ்வாறு
சரியான திசைக்கு புறப்பட்டதை சாளரத்தின் வழியே சரிபார்த்த பின் தவளசெட்டி, ஸ்ரீபாலன்
பற்றிய விபரங்களையும், இந்நகரம் வந்த நோக்கத்தையும் கேட்டறிய எதிரில் அமர்ந்தான். அவனது
பூர்வீகம், வாழ்வு நிலை வந்த நோக்கம் அனைத்தையும் விலாவாரியாக வினவி கேட்டபின்பே அவன்
மீது முழுநம்பிக்கை பிறந்தது. அதற்குள் மாலை வெளிச்சம் மங்கி, இருள்சூழத் தொடங்கியது.
மேற்தளத்தின் திவட்டிகள் கொளுத்தப்பட்டன. நடுத்தளத்தில் சொருகப்பட்டிருந்த தீவட்டிகளும் எண்ணை ஊற்றப்பட்டு
எற்றத் தொடங்கினர்.
இரவு
நெருங்க நெருங்க அதன் அமைதியைக் கிழிக்க மெள்ள மெள்ள மரக்கலத்தின் பக்கப் பகுதிகளைத்
தட்டிக்கொண்டிருந்த அலைகளின் மென்மையான சப்தத்திலும், வானம் கருக்கத்தொடங்கி கருப்புக்கம்பளித்துணியில்
வைரத்தை வைத்து தைக்கத் தொடங்கியது போல், தாரகைகள் அதில் ஒன்றிரண்டாய் கண்சிமிட்டத்தொடங்கி
கொத்துக் கொத்தாய் வைரவைடுரியங்கள் போல் எங்கும்
ஜொலிக்கத் தொடங்கின. அவைகளுக்கிடையே வெள்ளிதாம்பாளமாய் சந்தரனும் ஒளிவீசிக்கொண்டே மேல்நோக்கி பயணிக்கத்
தொடங்கியது. இயற்கையின் சிருஷ்டி விசித்திரத்தை பார்த்துக் கொண்டே பக்கமரப்பலகையில்
சாய்ந்த வண்ணம் நின்று கொண்டிருந்த ஸ்ரீபாலனை, மேலே தென்படும் துருவ நட்சத்திரம், புஷ்ப
நட்சத்திரக்கூடம், சப்த ரிஷிமண்டலம் இவற்றை வைத்து கப்பல் சரியான திசையில் பயணிக்கிறாதா
என்று கண்காணித்தபடியே செட்டியும் ஸ்ரீபாலனை நெருங்கி மீண்டும் தன் சுயபுராணத்தை அள்ளி
வீசத்தொடங்கினான். இருவரும் அளவளாவிக்கொண்டிருந்தாலும் நித்தரை என்னவோ அதன் வேலையை
சரியாக செய்யத் துவங்கி வாயைப்பிளந்து விரல்களால் சுண்டவைத்து விட்டது.
ஆனால் கப்பல் மட்டும் திசைமாறாது இரவிலும் கண்விழித்தபடியே பயணித்துக் கொண்டுதான் இருந்தது. தாமதத்தை சரிசெய்ய வேண்டி துடுப்போசைகள் நிறுத்தப்படவில்லை. இவ்வாறாக இரண்டு நாட்கள் இரவும் பகலுமாய் கழிந்தன. மூன்றாம் நாள் இரவின் இருள் முழுவதுமாக கவ்விக் கொண்டதும். அந்தரதீபம் என்று திட்டுக்கருகில் நடுக்கடலில் சென்று கொண்டிருந்தபோது, சர் சர் என்றபடி எரியம்புகள் ஒன்றன்பின் ஒன்றாய் வந்து ஸ்ரீபாலனும், சிரேஷ்டியும் இருந்த கப்பலில் வீழ்ந்தபடி இருந்தன. அனைவரும் அங்கும் இங்குமாய் கலவரத்துடன் ஓடத்தொடங்கினர்…..
கடல்
கொள்ளையர்கள்…
அந்தரதீபம்
எனும் நிலத்திட்டுக்கருகே நடுக்கடலில் சென்று கொண்டிருந்தபோது, சர் சர் என்று சரமாரியாக
எரியம்புகள் ஒன்றன்பின் ஒன்றாய் வந்து ஸ்ரீபாலனும், சிரேஷ்டியும் இருந்த கப்பலில் வீழ்ந்தபடி
இருந்தன. உடனே கலவரமடைந்து அனைவரும் அங்கும் இங்குமாய் ஓடத்தொடங்கினர்.
எந்த
திசையிலிருந்து வந்தது என்பதை கணிப்பதற்குள் மேலும் நெருப்பைக்கக்கிக் கொண்டு ஈட்டிகள்
முன்வரிசையில் துடுப்புப் போடும் அடிமைகளுக்கருகில் நிற்ற பாதுகாவலர்கள் சிலரின் மீது
ஊடுருவி அழித்தது. அதிர்ந்த துடுப்படிமைகளும், மற்றவர்களும் தங்களை காப்பாற்றினால்
போதும் என்று அப்படியே பதுங்கத் தொடங்கினர். பக்கமரப்பலகைளில் படீரென உரசும் சத்தம்
கேட்டது. இடிஓசைபோன்று கேட்ட திசையில் கருப்புக்கொடியுடனான கப்பலின் விளிம்பிலிருந்து
பலர் கருமையுடையுடன், தலைமூடிய துணிப்பட்டி, கையில் வாள், ஈட்டி போன்ற ஆயுதபாணியராய்
சரக்குக் கப்பல்களில் தாவி குதித்தனர். இரண்டுபேர் கையில் கொண்டு வந்த கற்றாழைநார்க்கயிற்றால்
இரண்டு கப்பலையும் கட்டிக் கொண்டிருக்கும்போதே, எகப்பட்ட கூட்டம் திபுதிபு என்று கப்பலுக்குள்
பாய்ந்தும், நூலேணியில் ஏறியும் வந்த வண்ணம் இருந்தது. அனைவருமே கடல் கொள்ளையர்கள்.
கொள்ளையில் மிகவும் கைதேர்ந்த கடலோடிகள். அதனால் அவர்கள் நெருங்கும் வரை கண்டுபிடிக்க முடியவில்லை.
இருட்டிலும் எதையும் நிதானத்துடன் செய்யும் திறமை வாய்ந்தவர்கள் என்பது அவர்களது துரிதகதியே
நிரூபித்துக் கொண்டிருந்தது.
முகவாயிலும்
பின்பக்க பலகையிலும் அங்காங்கே ஆயுதபாணியராய் நின்றிருந்த பாதுகாவலர்களை நிராயுதபாணியராக்கி
தாக்கினர், சிலரை அழித்தனர். அடிமைகளை ஒன்றும் செய்யாது கப்பல் பணியாளர்களை, மாலுமிகளை
பிடித்துக் கட்டினர். ஸ்ரீபாலனுக்கும், செட்டியாருக்கும் அதேகதிதான். சுக்கான் இயக்கத்தை தடை செய்தபோதே நங்கூர எஃகுகயிறு சரசரவென கடலுக்குள்
இறங்கிவண்ணம் இருந்தது. இதே போன்று முன்னால் சென்ற நூறு கப்பல்களுக்கும் அதே கதிதான்.
அங்கிருந்த விலையுயர்ந்த பொருள்களை சூரையாடினர். வேண்டிய உணவுப்பொருட்களையும் இடையே
இடையே தங்கள் கப்பல்களில் மாற்றினர்.
“ம் சீக்கிரம் நடக்கட்டும்” என்ற கட்டைக்குரலின் அதட்டல் சத்தம் கேட்ட திசையை நோக்கினால்
ஒற்றைக்கண்ணை மறைக்கும் கண்பட்டை, ஒரு மரக்கட்டைகாலுடன், கருப்புத்தாடியுமாக ஒரு கரிய
உருவம் பயங்கரமான தோற்றத்துடன் நின்று கொண்டிருந்தது. அந்த உருவத்தின் தோற்றமே அவன்
தான் கடல் கொள்ளைத்தலைவன் என்பதை நிரூபித்தது. “ம்
சீக்கிரம் ஏற்றுங்கள், இன்னும் இடமிருக்கிறது.”
என்றவண்ணம் அடுத்தடுத்த கப்பல்களுக்கு மரக்காலுடனே பாய்ந்து பாய்ந்து சென்று அதட்டி
உருட்டிக் கொண்டு இடுப்பில் குறுவாள் தொங்க, கையில் கண்டகோடாலியுடன் தாவி ஓடிக்கொண்டிருந்தான்.
கொள்ளையர் கப்பலின் பாய்மரக்கம்பத்தின் நுனியில் கட்டப்பட்ட சகடைக்குள் நுழைத்திருந்த
எஃகுஇழைக்கயிற்று கொக்கிகளில் மாட்டப்பட்ட இரும்புப்பட்டை அடிக்கப்பட்ட மரப்பெட்டிகள்
அப்படியே இடம் மாறிக்கொண்டிருந்தன.
என்ன
நடக்கிறதென்று புரிந்து கொள்வதற்குள் கொள்ளையரின் புதையல்(கஜானா) பெட்டிகள் நிரம்பிவிட்டதால்
திரும்பத்தொடங்கினர். ஒவ்வொரு கப்பலுக்குள்ளும் பிரளய மழைவெள்ளம் வந்து வாரிக் கொண்டு
போனது போன்ற வெற்றிடத்துடன் தவளசெட்டியின் பெரும்பாலான கப்பல்கள் அதிர்ச்சியில் ஒன்றும்
செய்வதறியாது மிதந்து கொண்டிருந்தன. ஒரிரு உயிர்சேதமே. அடிமைகள் மனதிற்குள் சந்தோஷம்,
முகத்தில் கலவரம். ஓட்டும்போது அடிமைகளிடம் சாட்டையை வீசும் கண்காணிகளும் அதன் நுனியாலே
சுற்றப்பட்டு கட்டப்பட்டிருந்தனர். காவலர்கள் பெருங்காயத்துடன் முக்கல் முணகலுடன் வீழ்ந்து
கிடந்தனர். சிரேஷ்டியும், ஸ்ரீபாலனும் விடுவித்துக் கொண்டு வருவதற்குள் கருப்புக்கொடிபறந்த
நூறு கப்பல்களும் பலயோசனை தூரம் கடந்து மறைந்து கொண்டிருந்தது. பல இடிபாடுகளுடன், பாய்மரங்கள்
பாதி எரிந்து அலங்கோலமாக காட்சியளித்தது. கொள்ளை போன பொருட்களைக் கணக்கிட்டுக் கொண்டே,
தவளசெட்டியும் தலையிலடித்து புலம்பிக் கொண்டு இருந்தான். உதவியாளர்கள் காயத்தின் மீது
வசைஅம்புகளை மேலும் தொடுத்துக் கொண்டிருந்தான். அடிமைகளோ அத்தனைபேரின் கோபமும் நம்மீது
தானே கடைசியில் பாயும் என்ற பயத்தில் நடுநடுங்கிக் கொண்டு நின்றிருந்தனர்.
அந்த வேளையிலும் ஸ்ரீபாலன் தன்னை விடுவித்துக் கொண்டு; அடிபட்ட அடிமைகளையும், காவலர்களையும், மாலுமிகளையும் அக்கறையுடன் கவனித்து, காயம்பட்டவர்களுக்கு மருத்துவ சிகிச்சையும் அளித்துக் கொண்டிருந்தான். அப்படியே இடிந்து உட்கார்ந்திருந்த சிரேஷ்டியிடம் “வருந்தாதீர்கள். சரக்குகள் களவாடப்பட்டதே ஒழிய உங்களது அறிவும் திறமையும் அப்படியே தான் உங்களிடம் உள்ளது. கவலை கொள்ள வேண்டாம். அத்தனையும் திரும்பவும் வேறுவழியில் கிடைத்துவிடும்.” என்று ஆறுதல் கூறிக்கொண்டிருந்தான். தவளசெட்டியிடம் கப்பல் காவல்தலைவனும் “இதுவரை இத்தீவைக் கடக்கும் போது இவ்வாறு கொள்ளை நடந்ததில்லை. ஏதோ புதிய கடலோடிகள் ஒன்று சேர்ந்துள்ளனர் போல் தோன்றுகிறது. எதிர்பாராத தாக்குதல் சற்று அதிர்ந்து விட்டோம்.” என்றதும் மிகச்சினங்கொண்ட செட்டியும் “ஆமாம் உனக்கு செய்தி அனுப்பிவிட்டு கொள்ளையடிக்க வருவார்கள். முதலைவாயில் சென்ற என் மூலதனம் திரும்பவா போகிறது. இன்னும் பலதடவை வியாபாரம் செய்தாலும் இக்கொள்ளையை ஈடு செய்ய முடியாது. வாயை மூடு” என்று அலறினான்.
அவனது
இழப்பை ஸ்ரீபாலன் ஒருவனால் தான் ஈடு செய்ய முடியும் என்று அவனுக்குள் மறைந்திருந்த
கடும்பற்றுள்ளம் விழித்தெழந்து “தோழா, நீ நினைத்தால் அனைத்தையும்
மீட்டு விடலாம். மாவிரனே வாள்போரிலும், விற்வித்தையிலும், மல்யுத்தத்திலும் பயிற்சி
பெற்றவன் என்று என்னிடம் கூறிக்கொண்டு வந்தாய், அதனை நீரூபிக்கும் வேளை வந்து விட்டது.
நீ அருகிலிருக்கும் போது இதுபோன்று நடக்கலாமா!
நடுக்கடலில் ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்ய நம் பொருளை திரும்பப்பெற வேண்டுகிறேன். இங்குள்ள
இடிபாடுகளை நான் சரிபார்க்கிறேன். உடனே கிளம்பு, உன்னுடன் மீதமுள்ள கப்பலின் காவலர்களும்
ஆயுதங்களுடன் பின் தொடருவர்.” என்று அவனது சம்மதத்தை கேளாமலே
“முட்டாள்களே என்ன வேடிக்கை பார்த்துக்கொண்டு
நிற்கிறீர்கள் சொல்வது புரியவில்லையா! ஸ்ரீபாலனுக்கு வேண்டிய ஆயுதங்களை தருவித்து சுவாமியின்
தலைமையில் அக்கொள்ளையரோடு போரிட்டு பொருள்களை மீட்க தயாராகுங்கள்.” என கூச்சலிட்டான்.
அவ்வாறே
ஸ்ரீபாலனும் தன் சிரேஷ்டிக்கு உதவிடத் துணிந்து காவற்தலைவன் தந்த இரும்புக் கவசங்களை
அணிந்து கொண்டு, இடுப்பில் உறைவாளின் பட்டையை கட்டி, கூரிய அம்புகளை தேர்வு செய்து
அம்புறாத்தூளியை நிரப்பி முதுகில் பூட்டி கையில் வில்லுடன், பல வீரர்களுடன் ஐம்பது
மரக்கலன்களை, அந்த கொள்ளையர் சென்ற திசையில் நீரை கிழித்துச் செல்ல கட்டளை இட்டபடி
போருக்குப் புறப்பட்டான். நடுக்கப்பலின் மேடையில் ஏறி அக்கடலோடிகள் கப்பலை நெருங்கியதும்;
எவ்வாறு சூழ்வது, எத்தனை பிரிவாய் அணிவகுத்து அவர்களை சுற்றிலும் தாக்குவது என்ற கடற்போர்
வியூகத்தை விளக்கிய கட்டளைகளை கேட்டவுடன் மரக்கலங்களும் கடல்நீரைக் கிழித்து சீறிப்
பாய்ந்து கொண்டிருந்தது. கடைசியாக “நம் நோக்கம் நாம் இழந்த பொருள்களை
மிட்பதே தவிர அக்கொள்ளையரை அழிப்பதல்ல. காயப்படுத்தவே உங்கள் ஆயுதம் பயன்படவேண்டும்,
யாரையும் அழிக்கத்துணியவேண்டாம். உங்களை காப்பதில் எந்த ஒரு விபரீதமும், விபத்தும்
நடந்தால் அதிரடியில் இறங்குங்கள். அதுவரை சீறிப்பாயும் வேகமும் சினமில்லா தாக்குதலுமாய்
உங்கள் செயல்பாடு அமைய வேண்டுகிறேன். நம் உடமைகளை மீட்பதே நம் போரின் நோக்கம், உயிரழிப்பதில்
அல்ல” என்று வேண்டுகோளை அவர்களிடம்
கூறிக்கொண்டிருக்கும் போது, கருப்புக்கொடியிலிருந்த மஞ்சள்கோடுகளின் நிழலாட்டம் தூரத்தில்
தெரிய ஆரம்பித்தன.
அக்கொள்ளையரும்
அதற்குள் வெகுதூரம் சென்றுவிட்டார்கள் என்பதை அறிய இவர்களும் விரைந்து கடத்தி நெருங்கிய
பின்னரே உணர முடிந்தது. நிறைந்த வெகுமதிகளுடன் திரும்பிய அவர்களும் ஆனந்த கூத்தில்
மூழ்கி ஆடிக்கொண்டிருந்தமையால், அருகாமையில் வந்த வீரர்கள் கப்பல்களை அக்கடலாடிகளும்
கண்டுகொள்ளவில்லை. நெருங்கும் முன்னே வீரர்களும் நான்கணியாய் பிரிந்து அக்கொள்ளையர்
கப்பலை சூழ்ந்தனர். தீடீரென அதே இடிமின்னல் மழை, மாறாக கொள்ளையர்களை தாக்கத் தொடங்கியது.
ஸ்ரீபாலனின் அம்புகள் அம்புராத்தூளியை விட்டு
புயலென பாய்ந்தன. சூறாவளியாய் வாள் சுழன்றபடி அக்கடாலாடிகளை திணற அடித்தது. ஆயுதங்களை
தேடுவதற்குள் அதிரடியாய் தாக்கியதும் அவர்களும் செய்வதறியாது திணறினர்.
இவையனைத்தையும்
சாளரத்தின் வழியே கண்ட அந்த ஒற்றைக்கண்ணனும் வெறியுடன் வெளியே வந்தான் ஸ்ரீபாலனை நோக்கி…..
பகைவரும்
நண்பராதல்…
தம்
கப்பலில் நடப்பதனைத்தையும் சாளரத்தின் வழியே கண்டு கொண்டிருந்த அந்த வெறிபிடித்த ஒற்றைக்கண்ணனையும்
சீராக சிந்திக்கவைத்துவிட்டான் ஸ்ரீபாலன் “யாரிவன், எங்கிருந்து இங்கு வந்தான்.
வெறிபிடித்த போரைத்தான் கண்டிருக்கிறேன். இதெப்படி! யாரிடம் இதைக்கற்றான்! தன்னையும்
காக்கிறான், பிறரையும் காக்கிறான். தாக்குவதுபோல் தெரிந்தாலும் மாறாக காக்கிறான். இந்தப்புதுமை
இவனிடம் மட்டும் எங்கிருந்து வந்தது. நிற்பதிலும் ஸ்திரம், இங்கும் அங்குமாய் கயிற்றைப்பிடித்து காற்றாய் பறப்பதிலும்
துல்லியம். அம்பு தொடுப்பிலும், வாள்வீச்சிலும் வேகம் தெரிகிறது. மாறாய் எதிர்த்தவன்
அச்சத்தில் காண்கிறான். ஆனால் யார்மீதும் ஒரு கீறலும் விழவில்லையே. இது என்ன? அதிரடியாய்
தாக்குவதையும். வெறிபிடித்துத்தாக்குவதையும் தான் போர் என்று நினைத்தேன். எதிர்ப்பரை
அதிரவைத்து அச்சம் மட்டுமே கொள்ளச் செய்யும் இப்புதிய சூத்திரத்தை வகுக்கும் யார் இவன்.
முகத்திலே சாந்தக்குறிகள், நிதானம், கவனம் மட்டுமே தெரிகிறது; எப்படி கொடுமையும், கொலைத்தனமும்
போர்க்கலையை விட்டு விலகியது. வித்தியாசமான
வீரன், வீரம் என்பது இதுதானோ; நாம் அனைத்தையும் தலைகீழாய் புரிந்துகொண்டிருக்கிறோமோ.
உள்ளத்தில் பொங்கும் கருணை அவன் முகத்தில் வழிந்து கொண்டிக்கிறது. செயலின் வீரமும்,
வேகமும், போரும், விளைவில் அதிர்ச்சியை மட்டும் அளித்துவிட்டு செல்கிறதே.
இவனை
எப்படி எதிர்ப்பது, போரிடுவது. முகத்தில் அச்சமோ, கொடூரமோ இல்லையே. என்னால் எப்படித்
தாக்க இயலும், இவன் இலக்கணம் மாறுபட்டே காண்கிறது. இவனைக் நேரில்கண்டால் என் கோடாலியும்
வீச மறுக்கும். என் வெறித்தனத்தையும் எங்கோ வீசிவிட்டானே. என்னிடமும் இந்தக் கருணையுள்ளதா
என்ன? இவன் மனிதனே அல்ல, என்னை திருத்த வந்த
சுவாமி” என்ற நிலைப்பாட்டுடன் வெளியே
வந்தான். ஸ்ரீபாலன் அந்த ராட்சத உருவத்துடன் பயங்கர கோலத்துடன் கொள்ளையர் தலைவன் வந்தாலும்
அவனிடம் போர்க்குணம் தென்படவில்லை. வாளின் கூர்முனையை உறையில் செலுத்தினாலும், எந்த
நிலைமையையும் சமாளிக்கச் சர்வசன்னத்தமாகவே நின்றிருந்தான்.
ஆனால்
மாறாக அத்தலைவனும் போரிட விரும்பவில்லை. நிலைமை கட்டுக்குள் இருந்து மீறியதையும் கண்டுகொண்டே
ஸ்ரீபாலனிடம் சரணடைந்தான். அனைவரையும் கூவி போர்நிறுத்தத்தை பிரகடனம் செய்தான். அவனது
கடலோடிக் கூட்டமும், ஆயுதங்களைக் களைந்தனர். எதிரணி தலைவனின் போர்நிறுத்த அறிவிப்பைக்
கேட்ட காவலர்தலைவன் கொள்ளைத்தலைவனை பாய்மரகம்பத்தில் கட்டியதைக் கண்ட மற்றவீரர்களும்
எதிரிக் கூட்டத்தினரையும் பிணைத்தனர். கொள்ளையடித்த பொருள்கள் அனைத்தும் அதேவேகத்தில்
கப்பல்மாறின. உணவுப்பண்டங்களை ஏற்ற முனைந்தபோது ஸ்ரீபாலன் “அவற்றை அவர்களிடமே விட்டு விடுங்கள்” என்றதும், தலைமைக்கடலோடியின்
கண்களில் நட்பு துளிர்விடுவதைக் கண்ட ஸ்ரீபாலனும் அவனிடம் “நீங்கள் அனைவரும் நல்லவர்களாகவே தோன்றுகிறீர்கள். பின்பு ஏன்
இந்த இழிவான தொழிலைச் செய்ய துணிந்தீர்கள்” என்று வினவியபோது கப்பல்கள்
அனைத்தும் சிரேஷ்டியின் மாலுமிகளால் வந்தவழியில் திரும்பிக்கொண்டிருந்தன.
துடுப்புகள்
கடலைத் துழாவிவரும் சுழலலைகளைக் கண்டபடியே அத்தலைவனும் தனது இந்நிலைக்கான காரணத்தை
விளக்கத் துவங்கினான். “ஆமாம்
ஸ்வாமி, தாங்கள் கூறியதுபோல் நாங்கள் நல்லவர்கள் தான். இத்தொழிலுக்கு முன்னர் நாங்களும்
கடல் வாணிபர்களால் அடிமைகளாக வாங்கப்பட்டவர்கள். எங்கள் சொந்த நாட்டு கொடுங்கோல் அரசன்
எங்களை விற்று விட்டதால், கடல்வர்த்தகர்களின் ஏவல்களை பூர்த்தி செய்து, அளிக்கும் சொற்பஉணவை
உண்டு வாழ்ந்து வந்தோம். பல கஷ்டங்களையும், வேதனைகளையும் அனுபவித்தோம். தினம் கசையடியுடன்
அரைவயிறு சோறே எங்கள் வாழ்வின் வாடிக்கை. உடல்
எங்கும் காயங்கள், தழும்புகள் என சுரணையற்று போய்விட்டோம். அதேசமயம் நோயுற்றால் எங்களை
கொன்றுவிடுவார்கள். ஊனமென்றாலும் விசிவிடுவார்கள். அவ்வாறாக ஒருநாள் கப்பலுக்கு அடியில்
பழுதுநீக்கும் போது சுறாவினால் தாக்கப்பட்டு ஒருகாலையும், கண்ணையும் இழந்தேன். அப்படியே என்னையும், சிலரையும்
கடலிலே விட்டுச் சென்று விட்டனர். அலைகளால் தள்ளப்பட்டு மயங்கிய நிலையில் இந்த அந்தரத்தீபத்தை
அடைந்தோம். அங்கே பல நாட்டு அடிமைகளும் அங்குள்ள பழங்குடியினர் போல வயிறுக்கு அரிசிச்
சோறின்றி, காய்களையும் கனிகளையும் உண்டு வாழ்வதைக் கண்ணுற்றேன். அனைவரையும் ஒன்று திரட்டி,
உழவுத் தொழில் செய்து வயிற்றைக் கழுவலாம் என்று முடிவு செய்தோம். பின்னர் வியாபாரம்
செய்து இத்தீவையே செல்வம் கொழிக்கும் நாடாக்க திட்டங்கள் தீட்டினோம்.
அனைத்திற்குமான் பொருள்! எங்கே செல்வது….. அவ்வேளையில் கரையொதுங்கிய
சில கப்பல் வர்த்தகர்களிடம் எவ்வளவு மன்றாடியும் ஒன்றும் கிடைக்கவில்லை. உடனிருந்தவர்கள்
கோபம் கொண்டு பறித்ததோடு அவர்களை அழித்தும் விட்டனர். அன்றிலிருந்து அக்கப்பலில் சென்று
அவ்வழியில் கடக்கும் கப்பல்களை வழிமறித்து கொள்ளையடித்து பொருள் ஈட்டுவதே எங்கள் வழி
என்றானோம். அனைவருமே கடலோடிகளாக இருந்தால் பல கப்பல்களை திரட்டினோம். எங்கள் திட்டம்
நிறைவேறியதும் இத்தொழிலை நிறுத்த முடிவு செய்துள்ளோம். ஆனால் அடுத்தடுத்து தேவைபெருகிக்
கொண்டே வந்தது. இவ்வீனத்தொழிலும் எங்களை விட்டு விலகியபாடில்லை.
ஆனால் நீயோ கருணையுள்ளவன். எங்களை அழிக்கவுமில்லை. காயப்படுத்தவும்
துணியவில்லை. அதைக் கண்டதும் அபயம் வேண்டி உன்னிடம் சரணடைந்தேன். மேலும் களவாடிய உணவுப்பொருளையும்
மீட்க உத்தரவிடவில்லை. நாங்களும் அபிமானம் மிக்கவர்கள் தான். சூழ்நிலை எங்களை முரண்பட்ட
செயலை செய்யத்தூண்டியது” என்று
கரகரத்த குரலில் தன் சோகச் சரித்திரத்தை கூறிக்கொண்டிருக்கும் போதே, தவளசெட்டியின்
மற்ற கப்பல்கள் நங்கூரமிட்டு நின்றிருந்த கடல்பகுதியை நெருங்கினர். கேட்ட ஸ்ரீபாலனும்
மனமிரங்கி “கவலையை விடுங்கள் தோழரே! உங்களுக்கு எத்தீங்குமின்றி உங்கள்
தீவிற்கே திருப்பி அனுப்ப ஏற்பாடு செய்கிறேன். மீண்டும் அடிமையாக்கப்பட மாட்டீர்கள்.
இது உறுதி. அளிக்கும் சிறுசிறு தண்டனை ஏற்றுக் கொள்ளுங்கள். பொறுமையைக் கையாளுங்கள்” என்று
தெரிவித்து விட்டு சிரேஷ்டியின் கப்பலுக்கருகில் நிறுத்தக் கட்டளை இட்டான்.
இவன் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்த சிரேஷ்டியும் மனமகிழ்வோடு
வரவேற்றான். தன் சரக்குகளில் ஏற்பட்ட பள்ளம் மீண்டும் நிரப்பப்பட்டதில் அளவிலா ஆனந்தம்
அடைந்தான். தோண்டிய பற்றுள்ளமும் நிறைவடைந்தது. கையில் இருக்கும் போது கிடைத்த மகிழ்ச்சியை
விட, இழந்து மீண்டும் கிடைத்த மகிழ்ச்சி பலமடங்காய் உணரவைத்தது. அங்கே ஸ்ரீபாலன் புகழ்
ஓங்கியது. அங்கேயே நங்கூரமிட்டு சில தினங்கள் தங்கினார்கள். கடல் கொள்ளையர்களை விடுவிக்க ஸ்ரீபாலன் வேண்டிக்கொண்டதும்
சிரேஷ்டியும் ஏற்றுக் கொண்டு அவர்களை விடுவித்தான்.
அக்கொள்ளையர்தலைவனும் மிக்க கருணையுடைய ஸ்ரீபாலனிடம் விசுவாசத்துடன்
நெருங்கி “உங்கள் நட்பு என்றுமே என்னுள்ளத்தில் வசிக்கும். சுவாமி
உங்களைப்போன்ற அறிவும், ஆற்றலும் மிக்கவர் அந்தரத்தீபத்தின் தலைவனாய் இருப்பின் இத்தொழிலை
துறந்து நற்குணமுடையோராய் புதுவாழ்வை தொடங்குவோம். ஆகவே எங்களுடன் அத்தீவிற்கு வந்து
விடுங்கள் மாஹாபிரபு” என்று வேண்டினான். ஸ்ரீபாலனும் செவிமடுப்பதைக் கண்ட தவளசெட்டியும்” அவர்
நிறைவேற்றக் கடமைகள் நிறைய காத்துக் கிடக்கின்றன. அனைத்தையும் நிவர்த்தி செய்தபின்
வந்தடைவார்” என்று அவனே சாதுர்யமாக பதிலளித்து முடித்து வைத்தான்.
“ஸுவாமி தாங்கள் எங்கள் விருந்தினராய் சிலகாலம் தங்குங்கள்.
திருப்தியுடன் பலசெல்வங்களை காணிக்கையாய் அளித்து, பல கெளரவங்களையும் செய்து அனுப்புகிறோம்.” என்றான்.
ஸ்ரீபாலன் தயக்கம் கொள்ளவே அத்தலைவனும், பகைவரையும் நண்பனாக்கும் அவன் பண்பை மெச்சி,
தங்களிடம் உள்ள செல்வங்களையும், ஏழு கப்பல்களையும் நட்பின் அடையாளமாயளித்து பிரியா
விடைபெற்று தன் பரவாரங்களுடன் தீவிற்கு திரும்பினான்.
அவர்கள் சென்றதும் தவளசெட்டி ஸ்ரீபாலனிடம் “ஸுவாமி,
அவர்கள் நவவஞ்சகர்கள் சென்றால் அவர்களிடம் மாட்டிக்கொண்டிருப்பீர். அவர்களை காணச் செல்லும்
எண்ணத்தை அடியோடு அகற்றிவிடுவீராக” என்றான்.
பின்னர் இருவரும் வாணிபப் பரிவாரங்களுடன் கடலில் சிலநாட்கள்
பயணித்து பல துறைமுகங்களை அடைந்து விற்பனை செய்து பெரும்பொருள்ஈட்டி வந்தபோது, முடிவாக இரத்தினத்தீபம் எனும் துறைமுக நகரத்தை அடைந்தனர்.
அந்நகரத்தில் த்ரைலோக்ய திலகம் எனும் ஆலயக்கதவுகள் (ஸ்ரீபாலன் எனும்) சம்வக்யத்வம்
நிறைந்த தர்மவானைக் கண்டபிறகே திறப்பேன் என வெகுநாட்களாய் அடைத்துக்கிடந்தன. (ஆலயம்
பக்தனிடம் எதிர்நோக்குவது இதுதானோ) அதனையறியா இப்புனிதனும் அப்பூமியில் தன் பாதங்களைப்
பதித்தான்…..
அத்தியாயம் – 5
மதன
மஞ்சுஷை திருமணம்
ஆலயமணிக்
கதவே தாள் திறவாய்…
இரத்தினதீபத்
துறைமுகநகரம்; ஐந்நூற்று ஏழு கப்பல்களும் அழமுள்ள பகுதியில் நங்கூரமிட்டு நின்றிருந்தது.
அதிலிருந்து படகுகளில் காவலர்கள் சிலரும், தவளசெட்டியும், ஸ்ரீபாலனும் நூலேணியில் இறங்கி
பணியாளர்களால் படகில் நீரைக்கடந்துச் சென்று கரையை சீக்கிரமே அடைந்தனர். ஏனெனில் கரைக்குஅருகிலேயே
கப்பல் மிதக்கும் ஆழமான துறைமுகம் அது. அதனால் கடலில் எழும் ஆணலைகள் அவ்வளவாக இல்லை. அலையோசை குறைந்த
அமைதியான கடல் பட்டினம். வெளேர் என்ற மணற்பரப்பு.
சற்று நடந்து சென்றதும் பனைமரக்கூட்டமும், தென்னைமரத்தோப்புமாக காட்சியளித்தன. கமுகும்,
ஈச்சையுமாய் கூட்டமாய் அடர்ந்த தோட்டமாய் அழகுடன் காணப்பட்டது. நீர்வளமும், நிளவளமும்
பெருகிய நாடு என்பதை பார்த்தாலே புரிந்தது.
துறைமுகத்திற்கு
வந்துள்ள சரக்குக்கப்பல்களைக் கண்டதுமே மொத்த வியாபாரிகளின் தரகர்கள் தவளசெட்டியை மொய்க்க ஆரம்பித்து விட்டார்கள். தங்கள்
விருந்திரன் மாளிகைக்கு அழைத்துச் செல்ல தயாராய் இருந்தனர். அவர்களுடன் குசலம் விசாரித்துக்
கொண்டே சிரேஷ்டியும், ஸ்ரீபாலனை அழைத்துக் கொண்டு பட்குகளில் ஏறி நகருக்குள் செல்ல
புறப்பட்டான்.
கடலில்
கலக்கும் நதியும் சற்று அகலமாகவே இருந்தது.
அதன் கரைகளிலே பூத்துக் குலுங்கும்
புன்னை மரங்களும் கொன்னை மரங்களும் கடம்ப மரங்களும் எத்தகைய மனோகரமான காட்சிகள். நீரோடைகளில்
குவளைகளும் குமுதங்களும் கண்காட்டி அவர்களை அழைப்பதும் செந்தாமரைகள் முகமலர்ந்து வரவேற்பதும்
எத்தகைய இனிய காட்சிகலை அளித்தன. அழகிய வனங்கள், ஆற்றுப்படுகைகள் என கடந்து கொண்டே
வந்தனர். இரு கரைகளிலும் அற்புத வேலைப்பாடமைந்த ஆலயங்கள். ஒன்றைவிட ஒன்று அழகாக தோற்றமளித்தது.
அவற்றைக் கண்டதும் ஸ்ரீபாலனும் “சிரேஷ்டியாரே,
தங்கள் அலுவல் முடிந்து மீண்டும் திரும்ப எவ்வளவு நாழிகை செல்லும்?” என்றான்.
அவரும் ஏன் என்பது போல் முகம்சுளிக்க ஸ்ரீபாலனும் “நீங்கள்
வர்த்தகர்களை கலக்கும் வரை நான் அருகன் கோவிலுக்கு சென்று தரிசித்து திரும்பலாம் என்றுதான்…” என்றதும்;
அவனும் “அப்படியா, இவர்களுடன் பேரம்பேசி சரக்குகளை விற்றுமுதல் செய்து
பொற்காசுகளையும், பண்டமாற்றுப் பொருள்களையும் பெற்று திரும்ப, இன்று பகல், இரவு முடிந்து, நாளை பகல் முடியும்
வேளை நெருங்கிவிடும். அநேகமாக அப்போதுதான் இம்முகத்துவாரத்திற்கு திரும்பவும் வந்து
சேர்ந்து விடுவேன். நீங்கள் முன்னரே திரும்பி விட்டால் இங்கேயே பொழுதைக் கழித்துக்
கொண்டிருங்கள் சுவாமி. இருவரும் ஒன்றாய் நம்கப்பலுக்குச் சென்று அடுத்த பட்டினத்திற்கு
புறப்பட்டு விடலாம்.” என்றான் ஒரு தோராயமாக கணித்து.
அவ்வாறே ஸ்ரீபாலனும் தீர்மானம் செய்து இறங்கினான். நடக்க
முற்படும்போது நகரத்தின் முக்கிய வீதிகள்தென்பட ஆரம்பித்தது. அந்நகரிலுள்ள மாடமாளிகைகளும்
கூடகோபுரங்களும் படை வீடுகளும் கடைவீதிகளும் ஆலயக் கற்றளிகளும் அழகாக காட்சியளித்தன.
ஆலயங்களில் இசை வல்லவர்கள் இனிய குரலில் பாடல்களையும்
பாசுரங்களையும் பாடற்கேட்டபடி பரவசமடைந்த ஸ்ரீபாலன் ஒரு முதியவரிடம் “இங்கு
அருகன் கோவில் எங்கே அமைந்துள்ளது” என்று வினவினான். திரும்பிய அவரும் அவனது சாந்தஸ்வரூபத்துடனான
தேஜஸைக் கண்டு அவன் ஒரு அரசகுமாரன் என முடிவுக்கு வந்தார். “ஆம்,
திரிலோக்யத் திலகம் எனும் ஜினாலயம், இங்கிருந்து தென் திசையில் இரு சாலைகளைக் கடந்தால்
அங்கே நெடிதுயர்ந்த மானஸ்தம்பத்தின் தலைப்பகுதி தென்படும். வீதியில் நின்றபடி தரிசனம் செய்யலாம்” என்று
கூறிவிட்டு சென்றார்.
ஸ்ரீபாலனும் அத்திசையில்
சென்று கொண்டே அவர்கூறிய “வீதியில் நின்றபடி” என்றவார்த்தைகளில்
துணுக்குற்றபடி சாலையைக் கடந்து கொண்டிருந்தான். என்ன ஒரு அழகிய வீதிகள் நூல் பிடித்தமாதிரி
சாலைகளும், குறுக்கு வீதிகளும் நேர்நேராக அமைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு கூட்டுச்சாலையிலும்
வட்டவடிவ திருப்பங்கள், சாலைக் குறியீடுகள், பாதசாரிகளுக்கென தனி மேடைகள்; வண்டிகள்,
ரதங்கள் ஓட தனித்தனி பகுப்புகள் சீரான போக்குவரத்துக்கேற்ற வகையில் அமைக்கப்பட்டிருந்தது.
மாளிகைகளும், கூடங்களும், உப்பரிகைகளும், திண்ணைகளும் கூட சரியான அளவில், விகிதத்தில்
நீள, அகல, உயரத்துடன் சாளரங்கள், மழைக்கூரைகளுடன் கண்ணைக் கவரும் வண்ணத்துடன் கட்டப்பட்டிருந்தன. தேவலோக கட்டிட கைவினைஞனிடன் உதவியாளனாய்
இருந்திருப்பானோ இவ்வூரை நிருமானித்தவன். என்ன ஒரு நூதன, நவீன கட்டிடங்கள் என்று பிரமிக்கும்
படி அந்நகரம் நேர்த்தியும், ஒழுங்குமாய் அமைக்கப்பட்டிருந்தது.
ஆம் உண்மைதான் அந்த நாட்டின் இறைவனாக ஒரு வித்தியாதரன் ஆண்டுவந்தான்.
வித்தைகள் பல கற்றவர்கள்; உடன் தோற்றத்தை மறைக்கும் மாயமந்திரங்கள் தெரிந்தவர்கள் அவ்வித்தியாதர்கள்.
அம்முதியவர் கூறியபடி மானஸ்தம்பத்தின் தங்கக்கலசம் பளபளக்கும்
உச்சி மண்டபம் நாற்திசை ஜினபிம்பங்களுடன் காட்சியளித்தது. வெள்ளிக்கவசமும், தங்ககுமிழ்களும்,
தொங்குமணிகளுடனான நுழைவாயிற் கபாடம் (படர்ந்தகதவுகள்) மூடியபடி இருந்தது. ஸ்ரீபாலன்
ஏதேனும் சீரமைப்பு வேலை நடபெற்றுக் கொண்டிருக்கிறதோ என்று எண்ணியபடி ஆலயத்தினருகில்
சென்றான். அவன் முன் இரு துவாரபாலகர்கள், கீரடமும், கையில் கதையாயுதங்களுடன் வலிமைமிக்க
தோற்றத்துடன் தோன்றினர்.
அவர்களும் “ஐயா தாங்கள் உள்ளே செல்ல வழியில்லை. ஆதலால் வெளியிருந்தபடியே
மானஸ்தம்ப ஜினரை தரிசித்து விட்டு செல்லுங்கள்” என்று
கூறினர். ஸ்ரீபாலனும் ஏனென அறிய முற்பட அவர்களும் “இவ்வாலயக்
கபாடங்கள் இரண்டும் பல்லாண்டுகளாய் மூடி திறக்க முடியாமல் போனது. பல நிபுணர்கள் முயன்றும்
இப்பிரம்மாண்டக் கதவுகளை திறக்க இயலவில்லை. எதற்கும் மசியாமல் அடைத்தபடி வழிவிட மறுக்கிறது.
அவ்வாறிருக்க உம்மால் மட்டும் என்ன செய்ய இயலும், ஏதும் சிந்திக்காமல் அங்கிருந்தபடியே
வணங்கிவிட்டு வந்த வழியே சென்றுவிடு. உம்மாலும் இயலாது என்றே கருதுகிறோம். நேரத்தை
வீணடிக்க வேண்டாம்.” என அவனை குறுமதிப்பிட்டு அனுப்பிக் கொண்டிருந்தனர்.
அவன் அவர்கள் கூற்றை ஏற்காது அங்கே கைகூப்பி வணங்கிபடி “மூன்றுலோகத்திற்கும்
அதிபதியான திரைலோக்ய நாதரே! எனை ஆள்பவரே! உன் தரிசனம் வேண்டி ஆவலுடன், பல கடல்தூரங்களை
நெடுநாள்கடந்து வந்துள்ளேன். காணத்தடையாய் நிற்கும் இக்கபாடம் எதிரில் நின்று வழிமறிக்கின்றன.
என் செய்வேன்! எனை கடைத்தேற்றுவாயாக என்று நெஞ்சுருகி வேண்டியபடியே “இன்று
என் நித்தியக் கடமை இவ்வாலயத்தில் நிறைவேற எனக்கு வழிவிடு கபாடமே. தூயமனதுடன் என் பிராணநாதரை
பூஜிக்க வந்துள்ளேன். தடைநீக்கி வழிவிட உனைப்பணிவுடன் வேண்டுகிறேன். அவர் அருள் பெறக் காத்திருக்கும் என் வேண்டுதலை
பூர்த்தி செய்வாயாக!” என்றபடி “ஓம் நம சித்தேப்ய: ” என்று மூன்று முறை உச்சரித்த பின், நுழைவாயிற் நிலைகளில்
கைவத்து “நிஸ்ஸகி, நிஸ்ஸகி, நிஸ்ஸகி” என்றான்.
அவனது புனிதக் கரம் தன்னைத் தீண்டியதும், கள்ளுளி மங்கன்
போல் மூடிக்கிடந்த கபாடமும் சந்தடிஏதுமின்றி கண்திறந்தது. வழி கிடைத்த மகிழ்வில் ஸ்ரீபாலனும்
திருச்சுற்றை மும்முறை வலம் வரத் துவங்கினான். பின்னர் கருவறையை நெருங்கி ஜினபிம்பத்தை
சாஷ்டாங்கமாய் வணங்கி, மனதில் தூயபாவனையுடன் அன்றாட நித்திய பூசனைகளை அர்ச்சிக்கத்
தொடங்கினான்.
இதனைக் கண்டு ஆச்சர்ய மடைந்த அந்த துவாரபாலகர்கள் மூலவரையும்,
ஸ்ரீபாலனையும் வணங்கிவிட்டு, தன் இறவனான வித்தியாதர அரனைக் காண பறந்தோடிச் சென்றனர்.
திறந்த அலயத்தைக் கண்ட அப்பகுதி மக்களும் அவ்வதிசய நிகழ்வை பறைசாற்றி பகிர்ந்து கொண்டே
அங்கு திரண்டு கொண்டிருந்தனர்…..
ஊர்மக்கள் அனைவரும் இனி அத்தெய்வ
கடாக்ஷம் கிடைக்கச் செய்த அப்புனிதனை போற்றி வணங்கினர். நெடுநாள் பழியும் அந்த நகரை
விட்டகன்றதை நினைத்து மகிழ்ந்தனர். அவனை அணுகிய ஒரு பெரியவரும் வணங்கியதைக் கண்டதும்
“முதியவரே
தாங்கள் என்னை வணங்கத் தேவையில்லை. நான் மாபெரும்செயல் எதையும் நிறைவேற்ற வில்லை” என்றான்
எளியோனாகிய ஸ்ரீபாலனும்.
மேலும் “மனதை
ஆட்கொண்ட
அஹங்காரம் விலகியபின்னே தெய்வக்காட்சி கிட்டும் என்பதை உணர்த்தவே இக்கபாடம்
முயன்றுள்ளது. அந்நிலைக்கு தூய ஜினபக்தியே வழிவகுக்கும். அந்த மாபெரும் தத்துவத்தை
அனைவரும் புரிந்து கொள்வதே மேன்மையளிக்கும்.” என்றுரைத்தான்.
அதனைக் செவியுற்றபடி ஆலயத்திற்கு விஜயம் செய்த அந்நகர காவலனான
வித்தியாதர அரசனும்(பெயர்க்குறிப்பே தரப்படவில்லை) ‘ஆம் இக்கூற்று உண்மையானதே சுவாமி.
எனக்கிருந்த ஆணவமும், பெருமிதமுமே இந்நிலைக்குக் காரணம், ஓவ்வொருநாளும் இப்பழியை தீர்ப்பார்
எப்போதுவருவார் என ஏங்கி தவித்துக் கொண்டிருந்தேன். நீயும் வந்தாய் இவ்வதிசய நிகழ்வும்
இன்று நிகழ்ந்தது. மேலும் எனது இன்னொரு வியாகூலத்தையும் விலக்கி விட்டாய்” என்ற
அரசனை கண்டதும் ஸ்ரீபாலன் வணங்கினான். அவனைக் கட்டித்தழுவி “ சுவாமி, எனதருமை
மகள் மதனமஞ்சுஷை பருவமெய்தினாள். அச்சமயம் இந்நகருக்கு விஜயம் செய்து தங்கியிருந்த
ஞானசாகர் எனும் முனிவரிடம் அவள் சுயம்வரம் பற்றி வேண்டியபோது அவரும், இஜ்ஜினாலயக் கபாடத்தை
கடல்கடந்து வந்து ஒருவன் திறப்பான். அவனே உன்
புதல்விக்கு தகுந்த மணாளாவான் என கூறியிருந்தார்.
அன்றிலிருந்து த்ரையோக்யதிலகத்தின் நுழைவாயிலில் இரு துவாரபாலகர்களை, இவ்வதிசயம் நிகழ்ந்தால்
உடன் தெரிவிக்கவே இங்கு அமர்த்தியிருந்தேன். இன்று அவர்கள் கூறியபின்னே உன்னை நேரில்
கண்டு தரிசித்து எனது அரண்மனைக்கு அழைத்துச் செல்லவே நானும் என் தேவி தேவமாலினியும்
இங்கு வந்துள்ளோம். பகவான் த்ரைலோக்யநாதரின் கருணையே உன்னை இங்கு வரவழைத்துள்ளது. அவர்மீது
நாங்கள் கொண்ட பக்தியே இன்று உன்னை அழைத்திருந்ததென்பதே நிதர்சனம். மறுக்காமல் எங்கள்
அழைப்பை ஏற்க வேண்டும்” என்று பல மரியாதைகள் செய்து அழைத்தான்.
ஸ்ரீபாலனும் எதிர்பாராமல் இதுபோன்ற காரியங்கள் பூர்வஜன்ம
கரம உதயத்தினால் நிகழலாம். ஆதலால் நாம் மறுத்தல் கூடாது என்றெண்ணி, அவர்கள் வரவேற்பை
ஏற்று உடன் செல்லத் துணிந்தான். வெளியே வெண்குதிரைகள்
பூட்டிய ஸ்வர்ணசிவிகையோடு அரசனது இருபுத்திரர்களான சித்திரனும், விசித்திரனும் மலர்ந்த
முகத்துடன் அழைத்துச் செல்ல ஆயத்தமாயிருந்தனர். அவர்களுடன் அரண்மனைக்கு சென்றான். ஆங்கே
டமார பேரிகைகள் முழங்க மங்கல வாத்தியத்துடன் மலர்த்தூவி வரவேற்றனர். சிவிகையிலிருந்திறங்கிய
தன் மணாளனை ஆவலுடன் உப்பரிகையில் காத்திருந்த மதனமஞ்சுஷையும் கண்டாள். நாணம் கொண்டாள்.
அதிரூபழகனான ஸ்ரீபாலன் மீது காதல் கொண்டாள். வரவேற்று ரத்தினங்கள் பொருத்திய தங்கச்சிங்காதனத்தில்
அவனை அமரச் செய்தனர். பலவித மங்கலப் பொருட்கொண்டு மரியாதை செய்தனர்.
அன்றே நல்முகூர்த்தநாழிகையும் பொருத்தமாய் அமைந்திருக்கவே
ஸ்ரீபாலனுக்கும், மதனமஞ்சுஷைக்கும் திருமணம் ஏற்பாடாயிற்று. மணிகள், முத்துக்களால்
ஆன தோரணங்களுடன் நாற்புறமும் மணக்கால் நிறுத்தி மலருடனான மணமேடை அமைத்து, புரோகிதர்கள்
மந்திரங்கள் கூற, பந்துக்கள் ஆயிரம் கரங்கள்
அட்சதை இட ஆசீர்வாதத்துடன் உடன் நடந்தேறியது. அந்நகரத்து அரசனும் புத்திரியை விவாகம் செய்து கொடுத்ததோடு உயர்ந்த ஆடைஆபரணங்களையும்,
அளவற்ற செல்வங்களையும், நால்வகை சேனைகளையும் வழங்கி, அத்துடன் அபூர்வமான பந்தமோசினீ மற்றும் பரசஸ்தரஹாரம்
எனும் இரண்டு வித்தியாதர வித்தைகளையும் ஸ்ரீபாலனுக்கு கற்பித்தான்.
இவ்வாறு இங்கு விவாகம் நடந்து கொண்டிருந்த வேளையில் தவளசெட்டியும்
வேண்டிய காரியங்களனைத்தும் பூர்த்தியானபின் கப்பலில் வந்து தங்கியிருந்தான். அவ்வாறு
ஸ்ரீபாலனும் வித்தியாதர நங்கை மதனமஞ்சுஷையுடன் ஸ்வர்ணசிவிகையில் ஏறி துறைமுகம் வந்து
சேர்ந்தான். அளிக்கப்பட்ட வெகுமதிகளும் சேனைகளும் கப்பல்களில் ஏறின. அவனும் தவளசெட்டியை
அணுகி நடந்தவற்றைக் கூறினான். சிரேஷ்டியும் மகிழ்ந்து ஸ்ரீபாலனை கொண்டாடினான். இவ்வாறாக
அனைத்தும் நிறைவேறியபின் ஐந்நூற்று ஏழு கப்பல்களும் நடுக்கடலை விட்டு புறப்பட்டன.
கப்பலைச் செலுத்திய மாலுமிகளிடம், விற்பனைக்குள்ள மீதமுள்ள
பொருட்களை, அடுத்து எந்த தீவிற்குச் சென்று விற்பனை செய்யலாம் என்று முடிவெடுத்தபடி
உத்தவிட்டுக் கொண்டிருந்தான். அவர்களும் அவ்வாறே சுக்கானை இயக்கி துடுப்புஅடிமைகளை
விரட்டி அந்த திசைநோக்கி சென்று கொண்டிருந்தனர். பணம், பொருள், செல்வம், பொற்காசுகள்
தேடி மண்ணைப்பெறுவதும், மாளிகை வசதிகளை பெருக்குதலே பிரதானமாய் கொண்டு இயங்கும் தவள
செட்டி மனித உணர்வுகள், வேதனைகள் எப்படி புரியும். சுற்றியுள்ளவர்கள் தனக்கு உதவிடும்
கருவியே என்ற உணர்வில் வாழ்பவன். தன்னை மனிதன் என்று கருதினாலும் தானும் மண்ணிற்கும்,
மாளிகைக்கும், பொன்னிற்கும், பொருளிற்குமான வேட்கையில் ஜடமாய் வாழ்பவன் தானே. அந்த
மண்ணாசை மட்டுமின்றி பெண்ணாசையின் வேட்கை அவன் பேராசையை தூண்டி பேராபத்தை விளைவிக்கப்
போவதை உணராமல் இருந்தான்.
அவ்வாறின்றி ஸ்ரீபாலன் தன் இலட்சியம் நிறைவேற இக்கண மகிழ்ச்சியை தொலைத்திடும் அறிவீலியல்ல. எனவே அப்போது வானத்தில் பறக்கும் பறவைகளையும், அவை கீழிறங்கி இரையை கவ்விச் செல்லும் லாவகத்தையும், துடுப்புதுழாவலின் சுழற்சியில் தோன்றும் சுழலலைகளையும் ரசித்தபடி சுற்றிவந்தான். சுக்கானை இயக்கும் மாலுமிகளுடனும், பாய்மரத்தை காற்றடிக்கும் திசைக்கேற்றபடி திருப்பிக் கொண்டிருக்கும் கப்பல்தலைவனுடனும், அரை வயிறுசோறும், கசையடியுமென வாழும் துடுப்புஅடிமைகளுடனும், சுமைதூக்கிகளுடனும் வாஞ்சையுடன் அளாவிக்கொண்டு அங்கும் இங்கும்மாய் சென்று கொண்டிருந்தான். தன் அன்புமாளிகையில் அனைவரையும் குடியேற்றி கொண்டிருந்த மணாளனை சாளரத்தின் வழியே கண்டுகளித்த வித்தியாதர பேரழகு மங்கை மதனமஞ்சுஷையும் தன் சுவாமியின் கடந்தகால நிகழ்வுகளை கேட்டறியும் ஆவலுடன் காத்திருந்தாள்.
அவள் ஆவலை பூர்த்திசெய்ய அதிரூப தோற்றனான ஸ்ரீபாலனும் அறைக்குள்
நுழைந்தான். எழுந்து நின்று வரவேற்ற அப்பூங்குழலியை அப்போதுதான் முழுவதுமாய் கண்டான்.
ஆம்; அவள் பூங்குழலியாகத்தான் இருக்க வேண்டும். பெயருக்குத் தகுந்தாற் போல் இவள் கூந்தலில்
ஒரு தாழம்பூவின் இதழ் அழகு பெற்றுத் திகழ்ந்தது. நீண்ட கரிய கூந்தல் சுருண்டு சுருண்டு
விழுந்து அவளுடைய கடைந்தெடுத்த தோள்களை அலங்கரித்தன. கடல் அலைகள் கரையில் ஒதுக்கும்
சங்குகள், சிப்பிகள் முதலியவற்றை ஆரமாக்கி அவள் அணிந்து கொண்டிருந்தாள். ஆனால் இவையெல்லாம்
அவளுடைய மேனியில் பட்டதனால் தாங்களும் அழகு பெற்றனவேயன்றி, அவளை அலங்கரித்ததாகச் சொல்ல
முடியாது. அழகே ஒரு வடிவம் தாங்கி வந்தால், அதற்கு எந்த ஆபரணத்தைக் கொண்டு அழகு செய்ய
முடியும்?
இப்படியாக இருவரும் காதலில் கட்டுண்டபோது ஜில்லென்ற வீசிய
காற்று உஷ்ணமாகவே உணரவைத்தது. இது பகல்வேளையல்லவோ கிணற்றுநீரை ஆற்றுவெள்ளமா அடித்துச்
செல்லப்போகிறது என்று சுதாரித்த இருவரும் தம்தம் வாழ்வில் இதுநாள்வரை எதிர்கொண்ட நிகழ்வுகளை
பட்டியலிடத் தொடங்கினர்….
தவளசெட்டியின் துரோகச் செயல்
இவ்வாறு ஸ்ரீபாலனும் தன் பிரியாள்
மதனமஞ்சுஷையிடம் சம்பாநகரத்து மன்னருக்கு மகனாய் பிறந்து, அவர் இறந்தபின் அமைச்சரின்
துணையுடன் இரண்டு வயதில் அரியணை அமர்ந்து ஆட்சி புரிந்ததையும், தந்தையின் தாயாதி செய்த
சதிச்செயலால் நாடிழந்து தாய் மஹாராணி கமலாவதியுடன் வாரணாசி நகரம் சென்று பிழைத்து வந்ததையும்;
பின்னர் தான் பெருவியாதியால் பீடிக்கப்பட்டு, எழுநூறு குஷ்டரோகக் கூட்டத்துடன் வெளியேறி
உஜ்ஜயினி நகர மாஹாராஜா பிரஜாபாலனிடம் அடைக்கலம் பெற்றதாகவும், அவரே தனது மகளை விதிவசம்
என்று கூறி தனக்கு மணமுடித்ததையும், ரூபவதியான அவ்வரசிளங்குமரி மதனசுந்திரி என்பாளும்
தன்னை பதியாய் ஏற்றொழுகி, தனது அருகபக்தியாலும், சித்தசக்கர நோன்பை அங்கு தங்கியிருந்த
வரகுப்த ஆச்சார்யர் கூறிய நோன்புவிதிகளை ஒழுக்கமாய் கடைபிடித்து நிறைவேற்றியதாலும்,
அவளது பதிவிரதை ஒழுக்கத்தின் மகிமையாலும் தனது பெருவியாதி முழுவதுமாய் எட்டுநாளில்
நீக்கப்பட்டு மீண்டும் புத்துயிர் பெற்ற பெரும்பேற்றை மகிழ்ச்சியுடன் தெரிவித்தான்.
பின்னர் “என்
பரம்பரையால் எனக்களிக்கப்பட்ட இலட்சியத்தை நிறைவேற்றும் கடமையுணர்வோடு பொருளீட்ட பலதேசம்
சென்றுகொண்டிருந்த போது, பிரகுகுச்ச நகர பெருவணிகன் இத்தவளசெட்டியில் ஐந்நூறுகப்பலகள்
நகர வழிசெய்தேன். அதனால் அவரின் நட்பு பெற்றேன். அவருடன் வியாபார நிமித்தமாய் இந்நகருக்கு
விஜயம் செய்தேன். பின்னர் அருகப்பக்தியினால் நித்தியபூசனையை நிறைவேற்ற தேடியபோது த்ரைலோக்ய
நாதரின் அருளால் இந்நாட்டின் மன்னரின் சிநேகமும், ரூபவதியான உன் வாழ்க்கைத்துணையும்
எனக்கு கிட்டியது” என இதுவரை நடந்த வாழ்வுநிகழ்வுகளை சுருக்கமாய் தெரிவித்தான்.
இவனது கடந்தகால சரித்திரமறிந்து வியப்படைந்து தன் ஸ்வாமியின் மீது மேலும் பக்தியுடைவளானாள்.
மிக்க மகிழ்ச்சியுடன் அவன் மஞ்சத்தில் தஞ்சம் புகுந்தாள்.
இவ்வாறாய் இன்பம் பொங்க இனிய நாளாய்
கழிந்தகொண்டிருந்தபோது, ஒருநாள் ஸ்ரீபாலனின் கடமைதான் விழித்ததெழுந்ததோ, இல்லை தவளசெட்டியின்
தீவினை உதயமானதோ தம்பதியரின் தற்காலிக பிரிவுக்கான செயல்களில் ஈடுபட அன்றைய நாழிகைகள்
தொடங்கி நகர்ந்து கொண்டிருந்தன. அக்காலத்திட்டத்தை அறியா மதனமஞ்சுஷையும் தன்மேற்தள
அறையை விட்டு காற்றாட வெளியேறினாள். அவளை அடுத்திருந்த கப்பலிலிருந்து தவளச்செட்டி
கண்டுவிட்டான். ஆஹா ஏதோ ஒரு அன்னம் அசைந்தாடி நடந்துவந்து கீழிறங்கி நடுத்தளத்தின்
பக்கப்பலகையில்; படர்ந்த நீலவானின் முன்தோன்றிய நிலவுபோல வெள்ளுடை உடுத்தி, மயிலின்
ஒயிலாய் ஒய்யாரமாய் நின்றதைக் கண்டான். இல்லை அது ஒருமானுடம். அதிலும் அதிரூபபெண்ணினம்.
அவதும் புன்னகை புரிந்தது. அப்போது அவன் கண் முன்னால் ஒரு மின்னல் மின்னியது! ஆனால்
தேனைச் சொரிந்தது. ஒன்று திரண்டிருந்த நீண்டநாள் காமவேட்கையில் அவன் கட்டுண்டான். அது
யமனாய் வந்த பாசக்கயிறென்பதை அறியாத மூடன்.
அருகிலிருந்த உதவியாளனிடம் “யாரிந்த
மோகினி இந்தப் பகல்நேரத்தில் நண்பன் ஸ்ரீபாலன் மரக்கலத்தின் பக்கப்பலகையில் நின்றிருப்பது” என்று
வினவ; அவனும் “ ஆம் சிரேஷ்டியாரே அவர்தான் அன்று அவர் திருமணம் செய்து
அழைத்து வந்த வித்தியாதர அரசனின் ஒரேமகள் மதனமஞ்சுஷை எனும் நங்கை” என்று
அவனுரைத்த வார்த்தைகள், கண்வழியே புகுந்த மயக்கவேதியினால் ஆட்கொண்டிருந்த செட்டியிடம்
அரைகுறையாகவே காதுகளில் வீழ்ச்செய்தது.
அந்தோ! நட்பின் அடையாளம் என்றுகூறிவந்த வார்த்தைகள் அனைத்தும்
வேஷமாகி துரோகமாக மாறியது. சுவாமியான ஸ்ரீபாலன் மீதிருந்த விசுவாசமெல்லாம் எங்கோயோ
பறந்தோடிவிட்டது. தனக்கு செய்த நன்றிகளையும் அடியோடு அழித்து விட்டது. மதனமஞ்சுஷையை
அடையும் தீய எண்ணம் அச்சண்டாளனின் மனதில் நெருப்பாய் பற்றி எரியத் தொடங்கியது. “நண்பனின்
இல்லாளுக்கு தீங்கிழைப்போன் செத்த பிணத்திற்கு சமம்; உத்தமிகளுக்கு இடர் செய்வார் எக்காலமும்
நரகத்தில் வீழ்வர்” என்று கேட்ட நல்லோர் அறிவுரையும் காமத்தின் கருமேகம் படர்ந்து
மறைந்து போயின. அவளை எப்படியும் அடைந்திடவேண்டும் என்று, அந்த மட்டித்தனமான செட்டியும்
தீர்மானித்து விட்டான் உறுதியுடன்.
இம்மாபதகம் மனதில் பற்றிக் கொண்டதின்
மதிமயத்தில் உணவருந்த மறந்தான். கூண்டுக்குள் அடைபட்ட மிருகம் போல அப்புறமும் இப்புறமும்
நடந்தபடி இருந்தான். அவனது வாட்டத்தையும், ஓட்டத்தையும் கண்ட அவன் உதவியாளனும் “ ஆண்டே!
என்னவாயிற்று. எதில் கண்டுண்டு அலைக்கழிந்து வருகிறீர்கள். உங்கள் மனக்கவலையை தெரிவியுங்கள்,
உடன் சரிசெய்ய துணிகிறேன்.” என்றதும் அவனிடம் தெரிவித்தால் ஏதேனும் உபாயஞ்செய்து அடையச்
செய்துவிடுவான் என்ற என்ற நப்பாசையில் செட்டியும் தன் மனதில் உறுத்திக் கொண்டிருக்கும்
தீர்மானத்தை அவனிடத்தில் தெரிவித்ததோடு, “ எப்படியும் என் எண்ணத்தை பூர்த்தி செய்து விடு. அப்பொது
தான் என் மண்டையில் தோன்றிய பித்து நீங்கி சுயநினைவுக்கு திரும்ப இயலும். அதுவரைவேறெதுவும்
என்னால் செய்ய இயலவியலாது. உடனே அக்காரியத்தை எப்படியாயினும் உறுதியாய் முடித்து விடு” என்று
அதட்டாமல் வேண்டினான்.
ஆனால் நல்விசுவாசியான அவனும்” உத்தமான
குலத்தில் பிறந்த உங்களுக்கு இது தகாத செயல். நாங்கள் பரம்பரையாய் உங்களிடம் பணியாற்றி
வருகிறோம். இதுபோன்ற ஒரு செயலைக் உங்கள் குலத்தில் கண்டதில்லை. அவ்வெண்ணத்தை விட்டொழியுங்கள்.
உத்தமப் பெண்டிரை நினைத்தாலே நெஞ்சு வெந்து போகுமே! மேலும் பதிவிரதை மீதான மோகம் எவ்வளவு
மேன்மையானவரையும் அழித்த நிகழ்வுகளை புராணமும், இதிகாசமும் தெரிவித்தள்ளனவே! அதனை எவ்வாறு
தாங்கள் மறந்தீர்! பதிவிரதை த்ரெளபதியை கற்பழிக்க நினைத்த விராட மன்னனின் மைத்துனன்
கீச்சகனின் அழிவு மஹாபலசாலி பிமனால் நிழந்ததையும், மஹாபதிவிரதை சீதையை அபகரித்த இலங்கேஸ்வரனும்
நாடு, நகரங்கள், தம்பிகள் மற்றும் படைகளோடு தன் பத்துத்தலைகளையும் ஸ்ரீராமனால் இழந்ததை
தாங்கள் கேட்டதில்லையா! அவ்விரக்கமற்ற குணமுடையோர் இறந்த பின்னும் நரகில் வீழ்ந்துழன்றதையும்
அவை உரைக்கின்றனவே.
மேலும் சுவாமி ஸ்ரீபாலனும் தனது
நற்சிந்தினை, செயலால், நங்கூரமிட்டது போல் நின்ற இக்கப்பல்கள் அனைத்தையும் நகரச்செய்து
இத்தலம் வரை நாம் பயணித்து வருவதையும் எவ்வாறு மறந்து போனீர்கள். அவரால் மேலும் பல நன்மைகள் தாங்கள் பெற உள்ளீர்கள், இந்த
நிலையில் இத்துரோகச் செயல் உங்களை மீளாதுயரில் தள்ளி விடும். அதனால் இம்மாபாதகச் செயலைத்
தூண்டும் இவ்வெண்ணத்தை உடன் அறவே நீக்கி விடுங்கள்” என்று
அறிவுறுத்தினான்.
ஆனால் இவை அனைத்தும் செவிடன் காதில்
ஊதிய சங்காயிற்று. அச்சிறுமதியோனின் வினையுதயம் அழிவை தன் கண்முன் நிறுத்துவதை காணாமல்,
நல்மதி கூடும் நல் உபாயத்தையும் கேளாமல், சினம் கொண்டு அவனை வசை பாடியதோடு, தன்சதியும்
பாழாகிவிடவும் நெரிடும் என்றெண்ணி அவனை அங்கேயே தீர்த்துவிட்டு கடலில் வீசி விட்டான்
அக்கொடூரன். விதியும் நன்றாய் வலைபின்னுவதை உணரா அவ்வீணனும், மதிகெட்டு எதைச் செய்தால்
அப்பெண்ணை அடையலாம் என்பதில் தீவிரம் காட்டத் துணிந்தான். ஆசை மூன்றில் மண்ணாசையோ,
பொன்னாசையில் மீட்ட பொருளை கொஞ்சம் இழக்கச் செய்வதோடு விட்டு விடும், ஆனால் பெண்ணாசையோ
அனைத்தையும் இழந்து மரணிக்கச் செய்துவிடும் என்பதை உணரா மயக்கத்தின் பிடியில் சிக்கித்
தவிக்கும் செட்டியும் அடுத்துக் கெடுக்கும் ஒரு பொய்யனின் துணையை நாடினான்.
அவ்வாறான ஓருவனிடம் தன் பெருவிருப்பத்தை
தெரிவித்து, தானளிக்கும் கையூட்டின் மதிப்பில் அவனை விலைபேசினான். அவனிடம் “ நான்
கூறுவதைக் கவனமாய்க் கேள். நாளை மாலை அந்திப்பொழுதின் அரையிருட்டில், கலத்தின் பக்கப்பலகையின்
கீழே பார்த்துக் கொண்டே பெரிய மச்சமொன்று கப்பலைத் தாக்க வருகிறது. என கூச்சலிட்டுக்
கொண்டே இரு. அதனை கேட்டபலரும் வந்து குமிவர். அப்போது ஸ்ரீபாலனும் அவ்விடம் வந்ததும்,
அடிக்கப்பலில் இருப்பதாய் சுட்டிக்கொண்டிரு, அவனும் குனிந்து ஆராய்வான், உடன் இருவருமாய்
சேர்ந்து காலைவாரிவிட்டுக் கடலில் தள்ளிவிடுவோம். என் திட்டமும் நிறைவேறும். நீயும் வேண்டிய வெகுமதியையும் பெறலாம். இது ரகசியமாகவே
நடக்கட்டும். எக்காலமும் இதனை தெரிவிக்க துணியவேண்டாம் என்பதை நான் சொல்லியா தெரிந்து
கொள்ளவேண்டும்” என்று மிரட்டிய குரலுடன் முடித்தான்.
அவனும் மறுநாள் அவ்வாறே தன் திட்டத்தை
தொடங்கினான். அக்கயவன் கூக்குரல் கேட்டு அனைவரும் அவ்விடம் விரைந்தனர். இருவரும் ஸ்ரீபாலனை
எதிர்நோக்கும் வேளை….
ஸ்ரீபாலன் நீந்திக் கரைசேர்தல்…
அக்கயவன் கூக்குரல் கேட்டு அனைவரும்
அவ்விடம் விரைந்தனர். இருவரும் ஸ்ரீபாலனை எதிர்நோக்கும் வேளையில் பொறியை இரையெனத் தேடிவந்த
எலிபோல் அவ்விடத்திற்கு வந்துசேர்ந்தான். அனைவரும் பலகையில் சாய்ந்தபடி பார்த்துக்
கொண்டிருந்தனர், ஆனால் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருந்த பாய்மரக் கயிற்றில் தொங்கியபடி
கப்பல் நீரைத்தொடும் விளிம்புவரை தலையைச் சாய்ந்தபடி
பார்த்துக் கொண்டிருந்தான். அங்கு பெரும்மீன் ஏதும் தென்படவில்லை. ஆனால் இங்கிருந்த
ஒருதிமிங்கலம் நல்ல சந்தர்ப்பம் என அக்கயிற்றை சாதுர்யமாய் அறுத்து விட்டது. அந்தோ
பரிதாபம் ஸ்ரீபாலனும் ஆழ்கடலில் வீழ்ந்து விட்டான். எந்தக் கப்பலில் ஸ்ரீபாலனை ஏற்றி
அகமகிழ்ந்தானோ அதே கப்பலிருந்து ஆழ்கடலில் தள்ளி மீண்டும் அகமகிழ்ந்தான் அதே செட்டி;
என்ன ஒரு விதியின் விளையாட்டு. உடனே தன் கப்பலின் மாலுமிகளை விரட்டி வேகமாக செலுத்திவரச்
செய்தான். அதற்குள் இருளும் வந்து கவ்விக் கொண்டது ஸ்ரீபாலனின் வாழ்விலும்.
அவன் கயிற்றை அறுத்து கப்பலிலிருந்து
விழவைத்த அதேசமயம், இவன் கழுத்தைச் சுற்றி மரணம் சுருக்கிட்டு விட்டதை செட்டியும் உணரவில்லை.
அவன் விதியது யென்று கூறி வருந்தி அனைவரையும்
ஏமாற்றிக் கொண்டிருந்தான் ஆனால் அவ்விதி இவன் முடியும் வேளை என்பது புரியாமலே. ஆம்
அவனை முடிக்கும் காலன் தவிர யார்தான் அறிவர்.
கடலில் வீழ்ந்த ஸ்ரீபாலனும் தன்
நிலைதடுமாற்றம் தெளிந்து எழுந்து யாரும் தன்னைக் காப்பாற்ற வரவில்லை என்பதை யுணரும்
போது, கப்பலும் நெடுந்தொலைவு விரைந்து விட்டது. இது தவளசெட்டியின் சதியே என்பதைப் புரிந்து
வேதனையுற்றான். அவன் நீரில் மிதந்திருந்தாலும் அலைகள் சுழன்று வீசி முச்சுதிணறிப் படும்
துன்பமோ ஏராளம். மூழ்கி மூச்சு முட்டியதும் மேலெழுந்து, மீண்டும் முழ்குவதுமாய்; வேதனையை
விதியென பொறுத்துக் கொண்டான். “அட சிரேஷ்டியாரே! உன்னை உத்தமரென்று நினைத்தேன். பல உதவிகளையும்
செய்தேன். அத்தனை நன்மைகளையும் பெற்றதால் எனக்கு எத்தீங்கும் அளிக்க மாட்டீர் என்று
நம்பினேன். நீயோ நயவஞ்சகனாய் இருந்துள்ளாய். எதை உத்தேசித்து இவ்வாறு செய்தாய் என்பது
விளங்கவில்லை. நீயோ பேராசை பிடித்தவன். என் மனையாளையும், பொருளையும் அடைந்திடும் நோக்கத்தில்தான்
இவ்வாறு செய்தனை போலும். பெண்ணாசையும், பொன்னாசையும் எவரையும் வாழ வைத்ததில்லை. உன்
விதியின் இத்தூண்டலை உணராது மதிகெட்டவனாய் மயங்கிவிட்டாய். அந்த அறியாமையே உனக்கு தண்டனையாய்
வந்தமையும் என்பது திண்ணமே. இந்த விருப்பத்தை நண்பனாய் கேட்டிருந்தால் அவற்றை உனக்கே
அளித்திருப்பேன். உன் துரோகச்செயல் எவ்வளவு காலம் உன்னை இவ்வுலகில் வாழவைக்கப்போகிறது.
நீயோ அறிவிழந்தவன். உலகில் எதுவும்
நிரந்த இடமில்லை. இதனை சிறிதும் உணர்ந்தவனில்லை யாதலால் அற்பகாலச் சுகத்திற்கான இத்தீராப்
பழியை எப்பிறவிவரை சுமக்கப்போகிறாயோ. நீ நினைத்தபடி எவ்வகையிலும் இதனை அடையப்போவதில்லை.
இம்மையில் பெரும் துன்பத்தையும், மறுமையில் கீழ் நரகத்தில் தோன்றி ஆறாத்துன்பத்திற்கிரையாவாய்” என்று
அந்த இக்கட்டில் அவன் விடும் சாபம் செட்டியின் விதியை மேலும் சுழலவைத்தது. அப்போது
தன் அருமை மனையாளை நினைத்து “மணமுடித்த இரு நாளில் உன்வாழ்வில் இப்படியொரு சோகம் சூழ்ந்ததே.
எனக்கு நேர்ந்தது விபத்தல்ல ஆபத்து இதை நீ இன்னும் உணர்ந்திருக்க மாட்டாய். தெரிந்ததும்
எவ்வாறு இத்துயரை ஏற்கப்போகின்றாயோ? அடைய அச்சண்டாளனும் உன்னை என்ன கோலம் காணத்துணிவானோ?
நான் பிழைத்தாலும் உனைக் காண்பது எந்நாளோ? நான் வணங்கும் தெய்வம் தான் காப்பாற்ற வேண்டும்” என்று
மனம் வருந்தி நிலம் எத்திசையெனக் காணாது இக்காரிருளில் திணறிக்கொண்டிருந்தான்.
அன்று மதனசுந்தரி கூறிய அருகனின்
கிருபையையும், சித்தசக்ர நோன்பின் மகிமையையும் மனதில் நிறுத்தி துதிக்கலானான். அடுத்தக்கணமே
சமநிலை எய்தினான். அவனது திரேகத்தில் பலம் கூடியது. நெஞ்சில் உரம் ஏறியது.
எவ்வித களைப்பும் இன்றி நீந்தி குறிப்பானதிசையில் நம்பிக்கையுடன் சென்று கொண்டிருந்தான்.
அச்சங்கற்பத்தினால் சீக்கிரமே கால்தரைதட்டியது. மிகவும் மகிழ்ந்தான். அருகனையும், சித்தசக்கிரத்தையும்
பலவாறு புகழ்ந்தான். போற்றினான். அவனது வஸ்திரங்கள் களைந்து, உள்ளாடை மட்டுமே உடலை
போர்த்திய நிலையைக் அப்போதுதான் கண்ணுற்றான். அக்கோலத்தில் முனிவன் போல் கரைக்கருகே
ஒரு மரத்தடியில் அமர்ந்தான்.
“எதுவும் ஊழ்வினைப்படியே எதிர்வரும், அதனை நாம் துணிவுடன்
ஏற்பதே மதியுள்ள செயல் என்பதை அவன் குருவிடம் அறிந்தவன். ஆகையால் நேர்ந்த துன்பத்தை
எண்ணிக் கலங்குவதால் எந்த ஒரு நன்மையும் விளையப்போவதில்லை. இப்போது தெய்வத்தை தியானப்பது
மட்டுமே நமக்கு இச்சூழலிலிருந்து விடுதலையளிக்கும் என்ற உறுதியுடன் “உனது மனித இயல்பை ஏற்றுக் கொள், பிறரது விலங்கு இயல்பையும்
ஏற்றுக் கொள். எதுவாக இருப்பினும் உள்ளது உள்ளபடி ஏற்றுக் கொள். கண்டிக்க வேண்டாம்.
எதிர்க்க வேண்டாம். ஏற்றுக் கொண்டால் மாற்றம் நிகழும். ஏனெனில் ஏற்றுக் கொள்வதால்தான்
விழிப்புணர்வு சாத்தியமாகும். அவ்விழிப்புணர்வே நல்வழிகாட்டும்” என்ற அருகனின் கூற்றில் அசையாநம்பிக்கை வைத்து தியானத்தில்
ஆழ்ந்தான். மனம் சஞ்சலமற்று அசையாமல் நின்றது, காலம் அசைந்தபடி தன் பணியை அமைதியாய்
செய்து கொண்டிருந்தது.
கருக்கல் விலகியது விடியல் துவங்கியது, புள்ளினமும் சிறகடித்து இரைதேட கிளம்பின. மானினமும் அக்கானகத்தில் துள்ளித்திரிய துவங்கின. கரையைக் காத்திருந்த காவலர்களும் கண்டதும் கையில் ஈட்டியுடன் ஸ்ரீபாலனை நோக்கி ஓடி வந்தனர்…..
கருக்கல் விலகியது விடியல் துவங்கியது, புள்ளினமும் சிறகடித்து
இரைதேட கிளம்பின. மானினமும் அக்கானகத்தில் துள்ளித்திரியத் துவங்கின. கரையைக் காத்திருந்த
காவலர்களும் ஸ்ரீபாலனைக் கண்டதும் கையில் ஈட்டியுடன் அவனை நோக்கி ஓடி வந்தனர். அருகில்
வந்து அவனது தேசஜைக் கண்டதும் அவன் ஒரு அரசகுமாரனாய் இருக்க வேண்டும் என்றே கருதினர்.
ஒரு காவலன் “ஒருவேளை அரசரிடம் அன்று முனிவர்
கூறிய அந்த நாயகன் இவராய் இருக்கலாம். எதற்கும் அவரிடமே கேட்டறிவோம்.” என்று கூறிக்கொண்டே மற்றவனும் சேர்ந்து “ஸுவாமி, ஸுவாமி” எனக்கூவி அவன் தியானத்தைக் கலைத்தனர். கண் திறந்து பார்க்க
“தாங்கள் யார் எப்படி இப்பட்டினக்கரைக்கு
வந்து சேர்ந்தீர்கள்.” என்றதும் ஸ்ரீபாலனும் நேற்றிரவு
கப்பலிலிருந்து நீரில் வீழ்ந்து, பின் நீந்தி கரைசேர்ந்ததாக கூறினான். அதைக்கேட்டதும்
“அப்படியானால் தாங்கள் ஒரு அரசகுமாரரா?
எந்த நாட்டைச் சேர்ந்தவர்” என்று மேலும் வினவ அவனும் தனது
பூர்வீகத்தை சுருக்கமாக தெரிவித்தான். அவர்களும் அகமகிழ்ந்து “நாங்கள் தினமும் உங்கள் வருகைக்காகவே இக்கரையில் காவல்காக்க
பணிக்கப்பட்டவர்கள். இச்செய்தியை உடன் அரசரிடம் தெரிவித்தல் வேண்டும் “ என்று கூறிக்கொண்டே ஒருவன் ஓடோடிச் சென்றான்.
ஸ்ரீபாலனும் அவன் கூறியதை கேட்டு வியந்ததோடு இருப்பவனிடம் கேட்கவே, மற்றோரு காவலனும் “ஸுவாமி இத்தலம் தவளவர்த்தன மென்னும் ஓர் பட்டினம். சில பாக்கங்களைக்
கொண்ட துறைமுக நகரம். இதன் மன்னர் ஸ்ரீதனபாலன் என்பார். மஹாராணி வனமாலை என்பவர். மக்கள்
துயர்தீர்த்து நீண்டகாலமாய் நல்லாட்சி புரிந்து வருகிறார். அவர்களுக்கு மனோகரன், சுகண்டன்,
ஸ்ரீகண்டன் என்ற மூன்று கம்பீரமான புதல்வர்களும், குணமாலை எனும் ஒரு அழகிய புத்திரியும்
உள்ளனர். அரசகுமாரியும் பருவம் எய்தியவேளை, அப்போது இந்நகரில் அருகர் கோவிலில் தங்கியிருந்த
முனிவரிடம் தன் மகளுக்கு தகுந்த நாயகனைக் கூறவேண்டினார்.
அவரும் “ மன்னா, இன்னும் கொஞ்சகாலத்தில் ஒரு ராஜகுமாரன் இப்பட்டின கடல்கரைக்கு
மரக்கலத்திலிருந்து நடுக்கடலில் வீழ்ந்து நீந்தி வந்து சேர்வான். அவனே உன் மகளுக்கு
ஏற்ற நாயகனாய் திகழ்வான் என்றுரைத்திருந்தார்.
அவர் கூற்றில் நம்பிக்கை வைத்த எம்மரசரும் எங்களை நீண்ட நாட்களாக இப்பகுதியில் காவல்
புரிய உத்திரவிட்டிருந்தார். உங்களைப் போன்ற திவ்வியபுருஷர் வந்து சேர்மின் உடன் அரசவையில்
தெரிவிக்கச்சொல்லி ஆணையும் பிறப்பித்துள்ளார். அதன் படி இன்னும் சிறிது நேரத்தில் இந்நகரக்
கோமானும் வந்தும்மை அழைத்துச் செல்வார் என்றே கருதுகிறேன். அதுவரை தாங்கள் இங்கேயே
இருந்து பொருத்தருள வேண்டுகிறேன். தங்கள் தேவையை
தெரிவித்தால் உடன் பூர்த்தி செய்ய தயாராய் உள்ளேன். தங்கள் சித்தமே என் பாக்கியம்.” என்று கைகளை கூப்பியபடி தன்நாட்டிற்கு அரச அதிதியாய் வந்த
ஸ்ரீபாலனை வணங்கி நின்றான்.
ஸ்ரீபாலனும் இதைக்கேட்டு வியந்தான். தீவினை என்று வேதனைபட்ட
அத்தருணங்கள் நல்வினை உதயத்தால் தோன்றியதே. விதியின் கட்டளையை எவர்தான் மீறமுடியும்.
இவ்வாறு நேராவிடில் நான் எவ்வாறு என் இனிய மதனமஞ்சுஷையை விட்டு விலகியிருக்க முடியும்.
இப்படியும் என்வாழ்வில் நடக்கவேண்டும் என்றிருந்தால்
இச்சுபங்களை ஏற்று நிற்பதே என் கடமையாகும். ஆனால் இதுவும் என்வாழ்வில் கடந்து போகும்
என்பதே நிதர்சனம். அதுவரை இதுபோன்ற அரசர்கள் சிநேகமும் நம்நாட்டை மீட்க பேருதவியாய்
அமையும். அவ்வழியே மதனமஞ்சுஷைக்கு இழைக்கப்பட்ட துயரையும் நீக்க இயலும் என்று விவேகமாய்
சிந்தித்தான். அதனால் இந்நகரத்து அரசர் வந்தழைத்தால் அவர் இஷ்டப்படி நடப்பதே அனைவருக்கும்
நலம்பயக்கும்.” என்றெண்ணியபடி அமர்ந்திருந்தபோது,
மன்னர் தனபாலனும் தன் பரிவாரங்களுடன் வந்து சேர்ந்தார்.
அரசரும் ஸ்ரீபாலனுக்கருகே நெருங்கியதும் அவனது அதிரூப சிவந்தமேனியைக்
கண்டு கட்டித்தழுவி “புண்ணிய புருஷனே வருக வருக! எங்கள்
நாட்டின் விருந்தினராய் வந்திருக்கும் தங்களை என் அரண்மனைக்கு மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன்.” என்று மேலும் உபச்சார வார்த்தைகள் பல கூறி புதிய ஆடை அணிகலங்களை
தருவித்து வழங்கியதோடு, தம் முனிபுங்கவர் புத்திரியின் விவாகம் பற்றிக் கூறியதையும்
விளக்கினார். “நீயே என்மகள் குணமாலைக்கு நாயகன் ஆவாய்” என்றார். அதைக்கேட்ட ஸ்ரீபாலனும் இதுவும் பூர்வஜன்ம கர்மத்தின்
கட்டளையே என்று கூறி இசைந்தான். கரையில் ஒட்டுத்துணியுடன் அமர்ந்திருந்த ஸ்ரீபாலனுக்கு
பட்டுத்துணிகளை, பரிவட்டத்துடன் அணிவித்து; மாலை மரியாதை செய்து, எக்காளம், துந்துபியுடன் டமார,
பேரிகைகள் முழங்க; மங்கல வாத்தியங்களுடன் பட்டத்து யானைமீதிலேற்றி இராஜபாட்டை, அரண்மனை
வீதிவழியாக மங்கலப்பெண்டிர்கள் சீர்வரிசையைக் கைகளில் ஏந்தி மாப்பிள்ளை ஊர்வலமாக அரசமாளிக்கைக்கு
அழைத்து சென்றார்கள். ரத்தினக் குடையின் கீழ் யானைமீது கம்பீரமாய் அமர்ந்து அவனும்
கோட்டை வாயிலை சென்றடைந்தான். அக்கோட்டைக் காவலனும் தன் கூட்டத்தினரின் மரியாதை அணிவகுப்புடன்
வணங்கி நின்று அரசமாளிகைக்குள் வரவேற்றான். அங்கிருந்து அரண்மனை சேடியர்கள் வழியெங்கும்
மலர்தூவி லதாமண்டபத்திற்குள் அழைத்துச் சென்றனர்.
அங்கே ஸ்ரீபாலனை ரத்தினங்கள் பதித்த ஆசனத்தில் அமரச்செய்து
வாழ்த்துப்பாடிக்கொண்டிருந்தபோது; சுற்றிலும் வடிக்கப்பட்டுள்ள சிற்பங்களை காணும் போழ்து
எதிரேஅமைந்த மேல்தள சாளரத்தின் ஊடே வடிக்காத சிலையொன்று தன்னைப் பார்த்துக் கொண்டிருப்பதைக்
கண்ணுற்றான். உயிருள்ள சிலைபோல் தோன்றும் இவள்தான் அரசகுமாரி குணமாலை எனும் தேவதையோ
என்று யூகித்தறிந்தான். அரசிளங்குமரியும் ஸ்ரீபாலன் தன்னைக்கண்டதும் வெட்கத்தில் தலைகுனிந்துவாறு
நளினத்துடன் சிரித்துக் கொண்டிருந்தாள். திரைச்சீலைகள்
காற்றில் மறைப்பதும், விலகுவதுமாய் இருந்தது; அப்போது அவள் மீது பட்ட ஒளித்தகடுகள்
செம்பவள உதடுகளுக்கிடையே தெரியும் முத்துப்பற்களை மாறி மாறி மின்னச்செய்து கொண்டிருந்தன.
அவளும் அவ்வப்போது தோன்றி மறையும் தேவஸ்திரீயைப் போன்றே காட்சியளித்து வந்தாள். குணமாலையும்
செந்நிறமேனியன் ஸ்ரீபாலனது கட்டழகையும், கம்பீரத்தையும் கூரிய வாள்போன்று உற்றுநோக்கி,
தூரத்தில் பேரழகனாய் விளங்கும் இவன் அருகே
நெருங்கினால் இணையற்ற அழகுடன் திகழ்வான் என கணித்தபடியே மலர்ந்த விழிகளை சிமிட்ட மறந்தபடி
ரசித்துக் கொண்டிருந்தாள்.
வரவேற்றுச் சடங்குகளும் முடிந்தன. அரண்மனை புரோகிதரும் வரவழைக்கப்பட்டார்.
நெருக்கத்தில் விவாக நாளும் குறிக்கப்பட்டது. அரண்மனை மாளிகைகள் மாலையும், தோரணமாய்
விழாக் கோலம் பூண்டது. அந்நன்னாளன்று வாயிற்கோலங்களும், வண்ணத் திரைசீலைகளும் எங்கும்
சுகந்த பொடிகள் மணம் வீச அனைவரையும் வரவேற்றது. சுபநாழிகைக்குள் சகலதேச ராஜாக்களும்,
தனவந்தர்களும், முக்கிய அதிதிகளும், படைத்தலைவர்களும், முனிவர்களும், குருமார்களும்
வந்து அவரவர் இருக்கையில் அமர்ந்தனர். அனைவர் முன்னிலையிலும் இருவரின் விவாகமும் இனிதே
நிறைவேறியது. மஞ்சள் அரிசியும், மலரும் தூவி மணமக்களை வாழ்த்தினர். ராஜ உபசார உணவுகளுடன்
அனைவரும் கெளரவிக்கப்பட்டு வழிஅனுப்பி வைக்கப்பட்டனர். குணமாலையை ஸ்ரீபாலனுக்கு வழங்கியதோடு,
பொன்னும், பொருளும், ஐஸ்வர்யங்களும், மாளிகையும் அளித்து மன்னன் தனபாலனும் தன் மருமகனை
அரசாங்க பொக்கிஷசாலை தலைமைப் பொறுப்பையும் அளித்து சிறப்பித்தான்.
அச்சிறப்புகளை ஏற்ற ஸ்ரீபாலனும் அப்பட்டினத்தில் ரூபவதி குணமாலையுடன்
இனிதே வாழ்ந்திருந்தானென்றாலும்; பஞ்சபரமேஷ்டிகளையும், சித்தசக்ர யந்திரத்தையும் நினைத்து
அருகர் கோவிலில் தினமும் பூசனை செய்து, தியானிப்பதோடு தன் கடமையை நிறைவேற்றவும், தன்னை
வாட்டிக் கொண்டிருந்த மதனமஞ்சுஷையின் துயர்நிலை நீங்கவும், அதற்குரிய தீர்வையும் வேண்டிக்கொண்டிருந்தான்.
ஸ்ரீபாலனும் கடலில் வீழ்ந்த அச்சமயத்தில்… அங்கே மதனமஞ்சுஷையும் ஸ்ரீபாலன் பலமணிநேரம் வராதது
கண்டு மனம் வருந்தி வாடிக்கொண்டிருந்தாள். அவள் சேடியோ பல உபாயங்களைக் கூறி அவளைத்
தேற்றி வந்தாள். சினேகிதனை கடலில் தள்ளிய தவளசெட்டியும் அவனது வித்தியாதர மங்கையை அடைய
பலசூழ்ச்சிகளை வகுத்துக் கொண்டிருந்தான்.
குணமாலை திருமணம்
ஸ்ரீபாலன் தவளசெட்டி மீண்டும் சந்தித்தல்
ஸ்ரீபாலன் கடலில் வீழ்ந்த அக்கணத்திலிருந்து….
கப்பலை விரைந்து செலுத்திய தவளசெட்டியும் அவனது வித்தியாதர
மங்கையை அடைய பலசூழ்ச்சிகளை வகுக்கத் தொடங்கினான். சொல்வதைப் புரிந்து நடக்கும் சில
சேடியர்களை அழைத்து “தாதிகளே! ஸ்ரீபாலனோ அவன் விதிப்படி
சமுத்திரத்தில் வீழ்ந்து மடிந்துவிட்டான் என்பது இதுவரை திரும்பாமல் இருப்பதிலிருந்து
ஸ்திரமாகிறது. அதுவே எனக்கு மிகவும் கவலையாக உள்ளது. ஆனால் அவனது மனைவியிடம் எவ்வாறு
இதைத் தெரிவிப்பது என்பது தெரியவில்லை. அப்படியே தெரிவித்தாலும் அவள் நிலை கவலைக்கிடமாவதில்
சந்தேகமில்லை. அவ்வாறான துயரத்தில் வீழ்ந்து அவள் வாழ்நாளை கடத்துவதை நான் விரும்பவில்லை. அரசகுமாரியான அவளும் மணம் செய்த
ஒரிரு நாட்களிலேயே தன் சுகங்களை இழந்து நிற்கிறாள். ஸ்ரீபாலனும் இனி திரும்பி வரப்போவதில்லை.
ஆதலால் நான் அவள் மீண்டும் மகிழ்ச்சியடைய புனர்வாழ்வு
அளிக்க துணிந்துள்ளேன். இச்செய்திகளை அவளிடம் நயமாக எடுத்துக் கூறி அவள் சம்மதத்தை
பெற்றுத் திரும்புங்கள். பாவம் அவள் நிலை இனி யாருக்கும் வரவேண்டாம்” என ஆடு நனைவதைப் பார்த்து இரங்கிய ஓநாய் போன்று அக்கறை வார்த்தைகளை
அள்ளி வீசி அனுப்பி வைத்தான்.
அங்கே மதனமஞ்சுஷையும் ஸ்ரீபாலன் கப்பலை இடரிலிருந்து காக்க
சென்றதிலிருந்து இன்னும் வரவில்லையே என்ற துயரத்தில் ஆழ்ந்திருந்தாள். அனைவரும் சகஜமாய்
தன்பணியை நிறைவேற்றிக் கொண்டிருந்தனர். இவள் மட்டும் வியாகூலம் எனும் சங்கிலியால் பிணைக்கப்பட்டு
குத்துக் கல்லாய் அமர்ந்திருந்தாள். இரு தினங்கள் முன் வரை என்னை சுதந்திரமாக ரத்தன
தீபத்தில் அலைந்து திரிந்து விளையாட அனுமத்தித்த இக்காலம் இன்று ஏன் நகரவிடாமல் அவன்
நினைவால் தடைசெய்கிறது அன்று பெற்றோரும் அகமகிழ்ந்து அவரைப் பாராட்டி மகிழ்ந்து அனுப்பி
வைத்தனரே. இக்கணம் மட்டும் ஏன் அவளைச் சிறையில் தள்ளி வேடிக்கைப் பார்க்கிறது. அவளை
சுதந்திரத்தை ஆட்கொண்டவன் எப்போது வந்து விடுதலை செய்யப்போகிறானோ. இரண்டு நாள் உறவினனும்
இவள் வாழ்வில் இப்படி ஒரு நம்பிக்கையை அளித்து விட்டு பிரிந்து எங்கு சென்றான். அவன் அவள் மீது பாசம், காதல், அக்கறை என்ற வலையை
விரித்துவிட்டு எங்கு சென்றான்.
அவளோ எப்போது வருவான். இக்கணத்திலிருந்து எப்படி மீள்வது என்று
மனம் புழுங்கிய நிலையில் அமர்ந்திருந்தாள். அருகில் வைத்த உணவும், நீரும் அவளை அழைப்பது
கூட அவள் காதுகளில் விழவில்லை. அவை கூவி, கூவி அலுத்து ஆறி அலன்று போய்விட்டன. அவ்வியாகூலச்
சுமையில் அழுந்திய அவ்விளமங்கையை காண அச்சேடியரும் உள்ளே நுழைந்தனர்.
சென்றவன் எப்போது திரும்புவான் என்ற கவலை அவளை பீடித்திருக்கிறது
என்பதை உணர்ந்த அவர்களும் அவளிடம் சென்று “அரசியாரே! அளித்த உணவும், நீரும் அப்படியே உள்ளனவே. இப்படியே
எத்தனை நாழிகை அமர்ந்திருக்கப் போகிறீர்கள். எழுந்தாவது அமருங்கள். உணவை எடுத்துக்
கொள்ளுங்கள்” என்று இரக்கத்துடன் கூறிய வார்த்தைகளுக்கேட்டு,
அவள் உடலும் மெதுவாய் எழுந்தது. தலைவிரிகோலமாய், கண்களில் நீர்வழிந்த அக்காரிகையின்
கைவளையும் கழன்று கீழே விழுந்தது. அதைக் கண்ட அச்சேடியரும் அதற்குள் இப்படி வாடிவிட்டாளே
என்று உளமுருகினர். “அம்மையே! உன் வாழ்வில் இத்தனை
துயர்வந்து கவ்விக் கொள்ள வேண்டாம். மிகவும் துரதிஷ்டசாலியாய் நிற்கிறாய். கடலில் வீழ்ந்த
ஸ்ரீபாலரும் இதுவரை வந்து சேரவில்லை. மேலும் சிரேஷ்டியார் அனுப்பிய பலரும் தேடிப்பார்த்ததில்
எவ்வித பலனுமில்லை. நீண்ட நேரம் அவர் உடல் நீரின் மேலமட்டத்தில் தென்படவுமில்லை; எப்படியும்
தேடிக் கண்டுபிடியுங்கள் என்று அனுப்பி இதுவரை அவர்கள் திரும்பவுமில்லை” என்று கூறியதோடு ”இச்செய்தியை உன்னிடம் தெரிவிக்க
துணிவில்லாமல் எங்களை அனுப்பியுள்ளார். அய்யஹோ மணம் முடித்த இரு தினங்களில் அவரை இழக்கும்படியாயிற்றே
அம்மையே” என அழுதபடி, அவள் மனதில் பெருங்கலக்கத்தை
அளிக்கும் செய்தியை செவிகளில் சாதுர்யமாய் புகுத்திவிட்டனர்.
அதைக் கேட்டு இடிவிழுந்த நாகம் போல் துடித்த மங்கை குணமாலையும்
“ஐயகோ! என் நாயகனுக்கா இக்கதி.
என்னை விட்டு பிரிந்து போயினரா”
என கூச்சலிட்டாள்.
நூலிழையில் தொங்கிய அவள் நம்பிக்கையும் அறுந்துபட்டது; அப்படியே நிலைதடுமாறி வீழ்ந்தாள்.
பிரக்ஞயற்று சிறகொடிந்த பறவைபோல் அவிழ்ந்த கூந்தலுடன் படர்ந்து கிடந்த அவளைக் கண்டதும்
அத்தாதிகளும் மனமிரங்கினர். உடன் அவள் முகத்தில் நீரைத் தெளித்து விசிறியால் வீசி அவளது
மூர்ச்சையை நீக்கிக் கொண்டிருந்தனர். உத்தமியான இத்தோகை மயிலாளுக்கு தவளசெட்டி இத்தகைய தீங்கிழைக்கிறானே
என எண்ணி மேலும் வருந்தினார்கள். நம்பிக்கையளிக்க வேண்டிய தருணத்தில் ஆதாரத்தை அசைத்து
விட்டோமோ என்று தங்களையே நொந்து கொண்டனர். என் செய்வது அடிமைகள் தானே நாம் என்று அங்கலாய்த்துக்
கொண்டனர்.
அவளுக்கு சுயநினைவு திரும்பியது. அவள் தன் நாயகனை நினைத்து “ஆ! என் நாதரே! எனை இவ்வளவு சீக்கிரம்
பிரிந்து செல்வீர்கள் என நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. ஐயகோ அழ்கடல் நீரில் வீழ்ந்து என்ன பாடுபடுகின்றீர்களோ? எக்கதியில் தடுமாறுகின்றீர்களோ?
எவ்வாறாயினும் பிழைத்து என்னிடம் வந்து சேருங்கள். நிர்கதியாய் நிற்கிறேன். தனிமரமாய்
உங்களையே நம்பி வாழும் என்னை மோசம் செய்துவிடாதீர்கள்! அறிவிற்சிறந்த உத்தமரே! அழகிற்
சிறந்த எம்மானே! சினமில்லா சீர்குணம் மிக்கவரே! திரிலோகமும் கீர்த்திபெற்று வாழ பிறந்தவரே!
என் ப்ராணநாதா! அதற்குள் எம்மை விட்டு பிரிந்து விட்டீரோ! கோமானே! உம்முடைய அழகிய வதனத்தையும்,
அமிர்த வசனத்தையும் எப்போது காணப்போகிறேனோ! நீர் சென்ற இடத்திற்கே நானும் வருகிறேன்” என்று முகத்தில் அறைந்தவாறு அழுது புலம்பியதைக்கண்ட சேடியரும்
கண்ணீரும் கம்பலையுமாய் அவளைத் தேற்ற முடியாமல் திணறிக் கொண்டிருந்தனர்.
அவள் முகத்தை நோக்கி “அரசிளங்குமரியே
உன்நிலை எவருக்கும் வேண்டாம். இருப்பினும் விபத்து நடந்தது என்னவோ நடந்து விட்டது.
அதுவும் ஊழ்வினைப்படியே நடந்திருக்கும் என்பதை நீயும் அறிவாய். அறிவிற் சிறந்த அரசகுமாரியான
உனக்கு நாங்கள் ஏதும் ஆறுதல் கூறத்தேவையில்லை. போருக்குச் சென்ற வீரனுக்கு ஏதும் நிகழலாம்
என்பதை அறியாதவளா நீ. சென்றவர் திரும்பலாம் இல்லாமலும் போகலாம். உன் தலையில் இவ்வாறே
விதி எழுதப்பட்டுள்ளது. உலகில் ஒருகத்தியை தொங்கவிட்ட பின்பே இப்பூமியில் ஒருவர் தோன்றுவார்
என்பதை அறியாதவளா நீ. அதனால் பிறப்பதும் இறப்பதும் அனைவரது வாழ்வில் வாடிக்கையே. உலக
பந்தத்தால் எப்படிப் பிணைக்கப்பட்டிருந்தாலும் ஒருநாள் பிரிந்து செல்வது உறுதி. யாரும்
யாரையும் காப்பதும் இல்லை, விலகுவதும் இல்லை. உன் மணாளரும் அவர் விதிப்படியே உன்னை
விட்டு பிரிந்துள்ளார். இனி உன் எதிர்காலத்தை பற்றி நினைத்திரு. உன் செளக்கியம் என்ன
என்பதற்கான வழிகளைத் தேடு. அவ்வழியில் உன் காலத்தை கழிப்பதே விவேகமாகும். இதைத்தவிர
வேறேதும் உனக்கு உசிதம் இல்லை. அமைதியாய் இரு”
என அவர்கள் தவளசெட்டிக்கான அனுகூலக வார்த்தைகளையும் மறைத்துப் பேசி தேற்றினார்கள்.
அவ்வாறு அவர்கள் கபடநாடகமாடினாலும் அவ் வார்த்தைகள் மதனமஞ்சுஷைக்கு
இதமாகவே இருந்தது. அவற்றால் தேரிய அவளும் “நல்வினையும், தெய்வக்கிருபையும்
கூடியிருந்தால் நடுக்கடலில் வீழ்ந்த நாயகனும் திரும்பிவரக்கூடும். என் துக்கத்தை அந்தநாளால்
மட்டுமே நிறைவு செய்ய இயலும். அந்த நாள் வரத்தான் போகிறது. தீவினை கொண்டோர் நல்லமுதம்
உண்டாலும் தொண்டைக்குள் செல்லும் முன் விஷமாய் மாறிவிடும். நல்வினை கூடியோர் நடுக்கடலில்
விழ்ந்தாலும் மிதந்து திரும்பி வருவர்” என உண்மையை தன் மனக்கண் முன்
கண்டதுபோன்று அப்பதிவிரதை தன் நம்பிக்கையை வேரூன்றச் செய்து தெய்வத்தை நினைத்து வேண்டினாள். எதையும் ஆழ்ந்து யோசித்தே செய்தல் வேண்டும்
என்ற தன் தந்தையின் கூற்றை நினைத்தாள். தன் மணாளன் உயிருடன் திரும்பும் போது, நாம்
இவ்வுலகில் இல்லை எனில் அவர் என்ன பாடுபடுவார் என நினைத்து உயிர்விடாமல் வாழ்வதே இருவருக்கும்
நலம்பயக்கும் என்ற உறுதியுடன் அப்பதிவிரதை வாழ முடிவு செய்தாள். பின்னொரு நாளில் அவன்
இறந்தான் என்பது உறுதியானால் தாமும் உலகைத் துறக்கலாம் எனவும் முடிவெடுத்தாள். சேடியர்களும்
இவள் நிலையைப்பார்த்து மனம் வருந்தினர். அவளிடமிருந்து
விடைபெற்று தவளசெட்டியிடம் நடந்தவைகளை தெரிவித்து நின்றனர்.
தவளசெட்டியும் தாம் நினைத்தனுப்பியதில் பெருமளவு காரியங்கள்
நிறைவேறிவிட்டன. மீதியை முடிப்பதில் எவ்வித சிரமமும் இருக்க வாய்ப்பில்லை என்ற திருப்தியுடன்,
ஓரிருநாள் கழித்து மேலும் சில தாதியரை தூதனுப்பலாம் என்று முடிவு செய்தான்.
பதிவிரதத்தின் மகிமை….
தவளசெட்டியின் காமத்தீ கொழுந்து விட்டு எரியவே அவனும் என்ன
செய்து அவளை வழிக்குக் கொண்டுவரலாம் என்ற நினைவோடு தனது காமவேட்கைக்கு இணங்கும் வேறு
சில தாதிப்பெண்களை அழைத்து “என் மனம்போல் நடந்து என்னை சந்தோஷப்படுத்தும்
பெண்டிர்களே! நான் சொல்லப்போகும் விஷயத்தை நீங்கள் ரகசியமாக, சாமர்த்தியமாய் செய்து
முடிக்க வேண்டும். இக்கப்பலில் ரத்தினதீப பட்டினத்தைச் சார்ந்த மதனமஞ்சுஷை, தன் நாயகனை
பறிகொடுத்து ஊனுறக்கம் இன்றி வாடி இருக்கிறாள். முன்னால் சென்ற உங்களினப்பெண்டிரும்
அவளை ஒருவாறு தேற்றியதில், இனி தன் வாழ்வில் என்ன செளக்கியத்தை எவ்வகையில் பெறலாம்
என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளாதாக அறிந்தேன். அவளிடம் சென்று என் விருப்பத்தை நாசுக்காய்,
இதமான வார்த்தைகளைக் கூறி என்னுடன் இணைய சம்மதிக்கச் செய்து விடுங்கள். நீங்கள் தான்
மஹாபுத்திசாலிகளாயிற்றே! எதையும் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோன்று காரியத்தை முடிப்பதில்
வல்லவர்களாயிற்றே அவ்வழியிலே இந்த ஆவலையும் பூர்த்தி செய்து விடுங்கள். உங்களுக்கு
மிகுந்த செல்வங்களை வெகுமதியாய் அளிப்பேன்.” என்றான் அந்த தூர்த்தன்(காமுகன்).
அவர்களும் “ எஜமானரே எங்களால் இயன்றதை செய்கிறோம். நீங்கள் சொல்வதை
தட்டாமல் இதுவரை செய்துள்ளோம். தற்போதும் உங்களை மகிழ்விக்கும்படி செய்வோம்” என்றபடி மதனமஞ்சுஷை
இருந்த அறைத்தளத்திற்கு சென்றனர். அங்கு கிழிந்த நாராய் வீழுந்து கிடந்த அவளருகில்
அமர்ந்து அவளை தேற்றும் முகமாக “தாயே!
இன்னும் ஏன் வெட்டிய வாழைபோல் வீழ்ந்து வாடிக்
கிடக்கிறீர்கள். இனிமேல் நடந்தவற்றை மறந்து ஜீவிக்கின்ற வழியைப் பாருங்கள். உங்களுக்கு
நன்மைதரும் செயல் எதுவோ அதனை நன்கு ஆராய்ந்து அவ்வழியில் செல்ல முடிவெடுங்கள்! பெண்ணாய்
பிறந்த நாம் தனித்து வாழ்வதில் அர்த்தமில்லை. இவ்வுலகம் மிக மோசமானது என்பதை நாங்கள்
உங்களுக்குச் சொல்ல வேண்டுவதில்லை. உலகில் மாண்டார் என்றும் திரும்பி வரப்போவதில்லை.
அதனால் நம்மை நாமே தேற்றிக் கொண்டு, அடுத்து நம் பாதுகாப்பான வாழ்க்கைக்கான வழிகளை
நாடுவதே உசிதமாகும். இச்சிறுவயதில் உன்னெழில்
வடிவத்தை வீணடித்து விடாதே. உனக்கு நல்வாழ்வொன்று கிடைத்தால் அதனை பயன்படுத்திக் கொள்ளும்
வழியைப் பார். அதனால் உன்னைப்போன்ற இளம் பருவமங்கையர் மறுவிவாகம் செய்து கொள்வது மிகவும்
உத்தமமான செயலாகும். வலியவரும் ஸ்ரீதேவியை எட்டி தள்ளிவிடாதே! நன்கு ஆராய்ந்து முடிவெடுத்து
நம் தலைவர் தவளசெட்டியாரை உன் நாயகராக்க துணிந்தாயேயானால் உன் வாழ்வு மேலும் சிறக்கும்.
மிகச்சிறந்த அவரும் உன்னுடன் சேர்ந்த வாழ விருப்பத்துடனிருப்பதுபோல் தெரிகிறது. இச்சாதக
சூழ்நிலைப் புரிந்து கொள்வாயாக”
என அனுகூல வார்த்தைகள் கூறுவது போல துர்போதனைகளை அள்ளி விசினர்.
அவ்வசிய வார்த்தைகளைக் கேட்டவுடன் மதனமஞ்சுஷையும்
வெயிலில் வீழ்ந்த புழுபோல் துடித்தாள். அவர்கள் பேச்சிலிருந்து தவளசெட்டியின் சதியே
தன் நாயகனை இழக்கச் செய்தது என்பது சூசகமாக புரிந்தது.. அவர் தாமே சமுத்திரத்தில் விழவில்லை,
இவனால் தள்ளப்பட்டுள்ளார் என்பதை யூகித்தறிந்தாள். தன்னை அடையவே இக்கீழான செயலைச் செய்ததோடு,
இந்த நீச்சகுலக் கணிகையர்களை அனுப்பி வைத்துள்ளான்; என்பதை உணர்ந்ததும் வெகுண்டெழுந்து
கண்சிவக்க சுட்டெறிப்பது போல் அச்சேடியர்களை நோக்கி
“பாவிகளே, தீக்கிரையான
வீட்டில் பிடிங்கியதாதாயம் என்றே இங்கு நுழைந்துள்ளீர்கள். நீச்சர்களே உங்களைப் போல்
இழிகுலத்தில் பிறந்தவளென்று நினைத்து என்னையனுகினீர்களோ? இழிவானவர்களிடமல்லவா இக்கேவலங்களைக்
கூறவேண்டும். உங்கள் பசப்பான சொற்களைக் கேட்டு மயங்குபவள் நானல்ல. அரசகுடும்பத்தில்
பிறந்த உயர்குலப்பெண்டிரான நான், பார்த்தன் பிரிந்தவுடனே உயிர் துறந்திருக்கவேண்டும்,
இம்மரக்கலத்தில் அச்சடங்கை நிறைவேற்ற இயலாததால் அவரை எந்நேரமும் தியானித்து உயர்ந்த
கைம்மை விரதங்களை அனுஷ்டித்தபடியே நாழிகையைக் கழித்துவருகிறேன். உண்ணா நோன்பிருந்து
உயிர் துறந்தாலும் துறப்பேனேயன்றி உன் எஜமானின் இச்சைக்கு இணங்கும் கீழ்குலத்தவள் அல்ல
நான் என்பதைத் தெரிவித்து விடு. என் நாயகன் எங்கோ வாழ்கிறான் என்றே என் தெய்வம் கூறிவருவதால்
என் உயிரை மாய்க்காமல் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
கரைகடந்து கடலும் நிலத்திற்குள் செல்லலாம்; நெரும்பும் பண்பை
மறந்து குளிர்ச்சியை அளிக்கலாம்; அசையா மேருவும்
அசையலாம் ஆனால் ஒருபோதும் உங்கள் சிரேஷ்டியின் இச்சைக்கு நான் இசையமாட்டேன் என்பதை
உறுதிபட கூறிவிடுங்கள். உடனே இவ்விடத்தை விட்டு அகன்று விடுங்கள். உங்கள் தவளச் செட்டி
அக்கிரமமாக எனக்கு தீங்கிழைக்க நினைத்தானாகில் இக்கப்பலும் தீக்கிரையாகி தவளசெட்டியும்
அதில் விழ்ந்து மடிவான்” என்று சாபமிட்டாள் அந்த உத்தமஜாதி
பத்தினிப் பெண்டிர்.
அவர்களும் அஞ்சி ஓடோடி மறைந்தனர். அங்கே தன் எஜமானனிடம் அங்கு
நடந்தவற்றைக் கூறியும், தவளசெட்டியின் கண்களை காமம் மேலும் குருடாக்கி கொண்டிருந்தது.
“உங்களுக்கு அவளை கையாளும் சாமர்த்தியமில்லை.
நானே அவளை சரிசெய்ய முயல்கிறேன்”
என்று
சொல்லி அவர்களை வெளியேற்றினான். அவர்களிடம் பேசியது போன்று நம்மிடம் பேசத்துணியமாட்டாள்,
தராதரம் தெரிந்தவள். அவர்கள் முன்னிலையில் தன்மானத்தை விற்க துணியாதவளாய் அவ்வாறு கூறி
இருக்கலாம். நம்மிடம் அவ்வளவு கடுமையாய் பேசாது சம்மதம் தெரிவிக்கலாம் என்று தவறாகவே
கணக்கிட்டுக் கொண்டிருந்தான். நாமே நேரில் சென்று அவளை நம் வசம் கொண்டு வர முயலுவோம்
என்று மதனமஞ்சுஷையைக் காண விரைந்தான்.
அங்கே, மதனமஞ்சுஷைக்கு அன்று அயோத்தியாய் இருந்த அக்கப்பல்
இன்று அசோகவனமாய் மாறிஇருந்தது. அவள் முடிந்த கூந்தல் அவிந்தது தெரியாமல் தலவிரிகோலமாய்,
கண்களில் கருவளையம் படர்ந்து, கண்ணீர் வழிந்து
பிதுங்கிய கன்னங்களுடன், ஒரே நாளில் நீர்சுருங்கி குறைந்த த்ரேகமாய் காணப்பட்டாள்.
ஆனால் அந்தக் காமுகன் அப்போதும் அவளது அந்த தெய்வீகமான எழில், தன் அற்பமான ஆசைகளுக்கென்றே
எண்ணினான். நண்பன் மனையாளின் அழகும், கள்ளமில்லாப் பார்வையும் ஆராதிப்பதற்கே என்பதை
மறந்தான். சகோதரத்தை மறந்த அச்சண்டாளன் பெண்டாளவே துணிந்து அறைக்குள் நுழைந்தான். பூனையைக்
கண்ட எலிபோல் ஒரு மூலையில் ஒதுங்கி அவன்முகம் காணாது நின்றாள். அய்யஹோ இவன் எத்தீங்கை
இழைக்கத் துணிந்தானோ? இன்று என்ன கோலம் ஆகப்போகிறதோ என அஞ்சியபடி இருந்த போது,
அவனும் “மாதரசியே என்னை மன்னித்துவிடு.
உன்னிடம் தராதரம் தெரியாமல் அவர்கள் நடந்து கொண்டுவிட்டனர். தாதிகளிடம் இதுபோன்ற விஷயங்களை
தாராளமாய் பேசக்கூடியதன்று. நான் அறிவில்லாமல் நடந்து கொண்டேன். அதனால் நானே நேரில்
காண வந்தேன். இனி எதுவாக இருந்தாலும் மனம் விட்டு பேசலாம். நான் உன்மீது மிக்க அக்கறை
கொண்டே இங்கு வந்துள்ளேன். உனது இந்த நிலைகண்டு மிகவும் வருந்தினேன். மணம் முடிந்து
ஒரிரு நாட்களில் இதுபோன்ற துயரம் யாருக்குமே வரக்கூடாது. அதனை சரிசெய்யவே நான் உன்னிடம்
வந்துள்ளேன். எனது ஆஸ்திகளனைத்தும் உனக்கே. என் மனம் போல் நடந்து கொள். அதுவே போதுமானது.
தேடிவரும் ஸ்ரீதேவியை காலால் தள்ளுவது அறியாமையாகும். உன்னைத்தேடி வரும் பெரும் பாக்கியத்தை
உதாசீனம் செய்து விடாதே. என்னை அலட்சியம் செய்யாமல் அனுகூலமான வார்த்தைகளைக் கூறுவாயாக” என்று பித்துப் பிடித்தவன் போல் பேதையிடம் உளறிக்கொண்டிருந்தான்
அக்காமுகன்.
அந்த வஞ்சகச் செட்டியின் கபட எண்ணத்தை நேரடியாய் அறிந்து கொண்ட
மஞ்சுஷையும் ஆற்றொனாத் துயரத்துடன், கடுங்கோபமும் கொண்டாள். பூனையும் புலியானது. அவனை
ஏறேடுத்தும் பாராமல் அவனிடம் சுடு சொற்களால் “ஏ
காமுகனே, உன் இச்சையை நிறைவேற்ற நான் ஒன்றும் கணிகையர் குலத்தில் பிறக்கவில்லை. நானோ
பதிவிரத நியமங்களை அனுஷ்டித்துக் கொண்டிருப்பவள். உன் எண்ணம் ஈடேறாது” என்று விடுவிடு என்ற
தொனியில் பொரிந்து தள்ளினாள். அவனோ அதைச் செவிமடுக்காது அவளிடம் ஏதோ பல்லைக் காட்டியபடி
பேசத்துவங்கியதும் “அட பைத்தியக்காரனே, நீ எதற்காக
மனித ஜென்மம் எடுத்தாய். உலகத்திற்கு பாரமாய் ஏன் நின்று கொண்டிருக்கிறாய். உன் புத்தியை
எவ்விடத்தில் விற்று விட்டாய். பயனற்ற பதரே! உனக்கு சிறிதேனும் நாகரீகம் இருந்தால்
இதுபோன்று தனியாய் இருக்கும் பெண்ணிடம் பேசத்துணிந்திருக்க மாட்டாய். நீ நட்பை மறந்து
துரோகம் செய்து நன்றி மறந்த சண்டாளன். நீ ஒரு நீசகுலத்தில் பிறந்திருக்கவேண்டும், மாறாக
சிரேஷ்டியாய் தோன்றியுள்ளாய். நீ உன் குலத்திற்கே இழுக்கை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறாய்.
பதிவிரதைக்கு தீங்கு செய்தோர் எவரும் உலகில் எப்பாடுபட்டார்கள் என்பதை நினைத்துப்பார்.
எனக்கு இவ்வளவு தீங்கு செய்ய நினைக்கும் நீ அழிந்தவுடன் உன்னை நரகமும் எதிர்பார்த்துக்
கொண்டிருக்கும். அந்நிய மனையாளுக்கு வஞ்சனை செய்தவனும், கன்னிக்கு கலகஞ் செய்தவனும்,
ஜீவராசிகளைக் கொன்று தின்றவனுக்கும், அமைச்சனாய் இருந்து அரசைக் கெடுத்தபாவிகளும் குஷ்டரோகத்தால்
பீடிக்கப்பட்டு, பின் நரகத்தில் வீழ்வார்கள் எனும் பெரியோர் வாக்கை ஆராந்து பார். இவ்வாறு நடக்கும் உனக்கு என்ன கதி என்பதை நன்றாக
தெரிந்து கொள் இங்கே நில்லாதே; சீ சீ நீசனே
வெளியே சென்று விடு, இல்லையேல் உன்னை எரித்து விடுவேன்” என்ற சாபத்தையும் செவிமடுக்காமல் அங்கேயே நின்று மீண்டும்
பசப்பும் வார்த்தைகளைக் கூறி அருகில் சென்று கொண்டிருந்தான்.
அவள் உடனே தன் இஷ்டதெய்வத்தின் மந்திரத்தை உச்சரிக்க துவங்கினாள்.
உடனே அவனைச் சுற்றி நெருப்புடலிகளின் அடர்த்தி கூடிற்று, அதன் வெப்பம் தனலாய் தகிக்கத்தொடங்கிற்று.
உயிரோடு தீயில் வைத்து கொளுத்தியது. துடிதுடித்துப் போய் அய்யோ என்னைக் காப்பாற்றுங்கள்
என்று கூவியபடி வெளியே ஒடினான். அதற்குள் அக்கப்பலின் பாய்மரம் பாதி எரியத்தொடங்கி
விட்டது, ஒருமுகபிலிருந்து மறு முகப்புவரை பலகைகளில் நீ பற்றியது. நின்றவர்கள் மறுபுறம்
ஓடத்துவங்கினர். எங்கும் எரியத்தொடங்கியதும் மீட்டுப்பணியினர் அணைக்க ஓடிக்கொண்டிருந்தனர்.
கப்பலின் பெரும்பகுதியில் தீப்பிழம்பு கட்டுக்குள் இல்லாமல் கொழுந்து விட்டு எரிந்தது.
ஆ, ஓ என்ற ஓலங்கள் விண்ணைப் பிளந்தன. சந்தடியுடன் கப்பல் திமிலோகப்பட்டது.
தவளசெட்டியும் கதிகலங்கி நின்றான். என்ன செய்வது என்று அறியாமல்
திகைப்பூண்டை தீண்டியவன் போன்று முழிபிதுங்கி நின்றான். சுய நினைவு வரவே மதனமஞ்சுஷையின் இருப்பிடத்திற்கு ஓடிக்கொண்டே “தாயே, என்னை மன்னித்துவிடு, ஏதோ அறியாமல் தவறிழைத்து விட்டேன்.
உன்னை மன்றாடிக் கேட்கிறேன், என்னையும், என் மரக்கலத்தையும் தீயிலிருந்து காப்பாற்று” என்று கூறிக்கொண்டே அவள் காலடியில் சாஷ்டாங்கமாய் வீழ்ந்தான்.
அவளும் மனமிரங்கி அத்தீயை கட்டுக்கொள்ளவேண்டிய மந்திரத்தை கூறி தன் தெய்வத்தை வேண்டி
தியானித்தாள். நீர் தெளிக்காமலே ஜ்வாலைகள் தணிந்தது. தீயும் கட்டுக்குள் வந்தது. அனைவரும் ஆச்சர்யத்துடன் அனைத்தையும் கண்டு மிரண்டு
நின்று கொண்டிருந்தனர். உடன் அனைத்தும் கட்டுக்குள்
வரவே, அவளது பதிவிரதாத்தன்மையின் மகிமை கண்டு வணங்கி வாழ்த்தி நின்றனர்.
அவ்வாறான தீவிபத்திலிருந்து தப்பிய மரக்கலங்களும் ஒரு கரையை சேர்ந்த பின்பே அனைவரும் பாதுகாப்பை உணர்ந்தனர். தரையிறங்கியதும் தவளசெட்டிக்கு அது தவளவர்த்தனப் பட்டினம் என்பது புரிந்தது…..
தவளசெட்டி ஸ்ரீபாலனுக்கு களங்கம் விளைவித்தல்
தரையிறங்கியதும் தவளசெட்டிக்கு அது தவளவர்த்தனப் பட்டினம்
என்பது புரிந்தது. அரசரைப் பார்த்து வெகுமதிகளை அளித்து சிலநாட்கள் தங்கி என் வியாபாரத்தை
செய்து பின்னர் நாடு திரும்பலாம் என்று தம்முடன் வந்துள்ள பிற வியாபாரிகளிடமும், உதவியாளர்களிடமும் தெரிவித்தான்.
அவர்களும் ஒப்புதல் தெரிவித்தனர். அதேசமயம் மதனமஞ்சுஷையை இக்கப்பலிலேயே காவலில் வைத்து
விடுவோம். ஏனெனில் அவள் சுதந்தரமானால் நான் செய்த தீங்கை இப்பட்டினத்தின் இறைவனிடம்
தெரிவித்து நீதி கேட்டால் நம் கதி அதோகதியாகி விடும். மேலும் அவளும் ஒரு நாட்டின் அரசகுமாரிதானே
இந்நாட்டு மன்னருக்கும் முன்னமே தெரிந்திருக்கவும் வாய்ப்புள்ளது என்ற தீர்மானத்துடன்,
சில காவலர்களையும், சேடியரையும் காவலில் நிறுத்தி கவனமாக பாதுகாக்கும்படி செய்தான்.
ஒருவேளை அவள் மனம் மாற்றத்திற்கும் இக்காவல் துணைபுரியலாம்.
தனித்தே எத்தனை நாள் சிறைப்பட்டு வாழ முடியும். நிலைமை தனக்குச் சாதகமாக மாறும் என்று
சிந்தித்தான் அந்தப் பைத்தியக்காரன். ஆனால் அவன் விதி இந்த தவளவர்த்தனபுரியோடு முடியப்போவதை
எவ்வாறு அறிவான். சில நாட்கள் இங்கு ஜீவிக்கட்டும் என்று அவனை அந்நகரம் நோக்கிச் செல்ல
அனுமதியளித்ததுள்ளதே.
அந்தரத்தீபம் போன்றே இந்நகரமும் செழுப்பாகவும், வளமாகவும்
காணப்பட்டது. வானளாவிய மாளிகைகளும், கோவில்களும் கண்டு இங்கு தன் சரக்குகள் நிறைய விற்பனையாகும்
என்ற நோக்கில் அந்நாட்டு கோமகன் தனபாலரைக் காண கோட்டை வாசலில் அனுமதி கேட்டான். அவர்களும்
அவனை உள்ளேசெல்ல வகைசெய்யவே அரசரைக் கண்டு மிகுந்த சன்மானங்களை அளித்து மரியாதை செய்தான்.
அவரும் மகிழ்ந்து செட்டியை நோக்கி “நீ யார்? எந்த நகரைச்சார்ந்தவன்?
இங்கு வந்த காரணமென்ன” என்று வினவினார். சிரேஷ்டியும் தனது சரித்திரசுருக்கத்தை
கூறி அவரிடம் “மன்னர்பெரும! வாழிய நீவீர் பல்லாண்டு.
தாங்கள் தயை செய்தால் கொஞ்சநாட்கள் இந்நகரத்தில் தங்கி வியாபாரம் செய்யலாமென்று வந்தேன். அதற்கு தாங்கள்
அனுமதி தரவேண்டுகிறேன். என் சரக்குகளுக்கான சுங்கவரியைச் செலுத்திவதோடு எனக்கு கிடைக்கும்
லாபத்தின் ஐந்து விழுக்காடுகளை திறையாக செலுத்துகிறேன்.” என்றான்.
அவரும் “அப்படியே ஆகட்டும், நீயும் தங்கியிருந்து
வியாபாரம் செய்யலாம். தகுந்த பாதுகாப்பும், தங்க இடமும் தர உத்தரவிடுகிறேன்.” என்று தவளசெட்டிக்கு அனுமதி அளித்தார். மேலும் கஜானா தலைவனான
ஸ்ரீபாலனை அழைத்தார். தனக்கு காணிக்கை அளித்த இச்செட்டிக்கு பதில் மரியாதை செய்து அனுப்புங்கள்
என்று கூறினார். அப்போது ஸ்ரீபாலனும், தவளசெட்டியும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்தனர்.
கண்டதும் செட்டி அதிர்ச்சியுற்றான். இவன் இன்னும்
சாகவில்லையா! ஆழ்கடலில் வீழ்ந்தவன் எவ்வாறு தப்பினான். இறந்து விட்டானென்றல்லா கருதியிருந்தேன்.
எப்படியோ தப்பி இங்கு வந்து சேர்ந்துள்ளானே! என்று வியப்புடன் நோக்கினான். மேலும் நான்
இவனுக்கு செய்த வஞ்சனையை இவன் உணர்ந்திருக்க மாட்டான். அதனால் நமக்கு எத்தீங்கும் செய்யமாட்டான்
என்றே கருதுகிறேன். ஆனால் எப்படி நம்பிக்கைகொள்வது. ஒருவேளை அவன் அறிந்திருந்தால் அவனால்
பெருந்தீங்கே நம்மை வந்தடையும். ஆகவே அவனை தெரிந்தவன் போல் காட்டிக்கொள்ளாமல் இவன்
விஷயத்தில் தோன்றிய சந்தேகத்தை நிவர்த்தி செய்ய வேண்டும். அதேசமயம் எப்படியிருந்தாலும்
மதனமஞ்சுஷையும் இவன் இருப்பதை அறிந்தால் நமக்கு ஆபத்தே விளையும். அதனால் அவனை சீக்கிரமே
ஒழித்து விடவேண்டும் என்று மீண்டும் சதிச்செயலை சரியாகச் செய்ய திட்டம் தீட்டினான்.
ஸ்ரீபாலனும் இவனைக் கண்டதும் “இத்துரோகி இங்கு வந்ததும் ஒருவகையில் நல்லதே. இவனுடன் என்
மதனமஞ்சுஷையும் வந்திருப்பாள். அவளைப்பற்றிய செய்தியை அறிய முற்படவேண்டும். அதுவரை
இவனிடம் தெரியாதவன் போல் காட்டிக்கொள்வதே நல்லது. அவள் நிலை என்ன என்பது தெரிந்ததும்
இவனை எப்படி எதிர்கொள்வது என சிந்திக்கலாம். இப்போது அரசர் இட்ட கட்டளையை நிறைவேற்றுவோம்
என்று பொக்கிஷ அறையிலிருந்து வந்து செட்டியை கண்டும் காணாததுமாய் பல பழவர்க்கங்களையும்,
பல்வேறு ஆபரணங்களையும் பிரதியாக அளித்து மரியாதை செய்து வைத்தான். அவனும் தன் இருப்பிடம்
சென்ற பின் நெடுநேரம் வஞ்சனையுடன் சிந்தனை செய்து ஒருசதித்திட்டத்தை உருவாக்க முடிவுசெய்தான்.
அங்கிருந்த அரண்மனை காவலர்கள் சிலரிடம் கையூட்டாக செல்வங்களை கொடுத்து அவர்களை வசப்படுத்தி
ஸ்ரீபாலன் பற்றிய விருத்தாந்தங்களை(வரலாற்றுசுருக்கத்தை) விசாரித்தறிந்தான். ஸ்ரீபாலன்
அரச செல்வாக்குடன் வாழ்வதைக் கேள்வியுற்று மனம்புழுங்கினான். அவன் மனதில் பொறாமைதீ
கொழுந்துவிட்டு எரியத்தொடங்கிற்று. இவன் இப்படியே இருந்தால் நம்மை குலத்தோடு நாசம்
செய்துவிடுவான், அதனால் மிகவும் எச்சரிக்கையுடன் விரைந்தழித்திடவேண்டும் என்ற முடிவுக்கு
வந்தான்.
அங்கிருந்த கூத்தாடும் கலைஞர்கள் வாழும் சேரிக்குச் சென்றான்.
அவர்களில் பணத்திற்கு விலைபோகும் சிலரை கண்டறிந்து பொன்னும், பொருளும் அளித்து “நீங்களனைவரும் எனக்கொரு உபாயம்
செய்தல் வேண்டும். அதற்கு பிரதிபலனாக மேலும் மிகுந்த ஆபரணங்கள், செல்வங்களை அளிப்பேன்.” என்றதும், அவர்களும் அதற்கிரையாகி சொல்லுங்கள் சிரேஷ்டியாரே
நாங்கள் யாது செய்தல் வேண்டும் என்றனர். “நண்பர்களே நன்கு புரிந்து கொண்டீர்கள்,
நல்லது, நீங்கள் அனைவரும் அரசரவையில் பறையறைந்து, பள்ளுப்பாடி, கூத்துக்களை நிகழ்த்த
வேண்டும். அதற்கான அனுமதியை நான் வாங்கித்தருகிறேன். அவ்வாறு செய்தவுடன் அவர் வெகுமதியளிக்க
கட்டளை இடுவார். அதனை அளிக்கவரும் பொக்கிஷத் தலைவனை உங்கள் நெருங்கிய உறவினன் என்று
கூறிக்கொண்டு, அதனை உறுதிப்படுத்துவதுபோன்று ஒரு நாடகத்தினை அனைவரும் அறிய அரங்கேற்றவேண்டும்.
அவ்வேஷத்தை அவர்கள் நம்பும் படி செய்தபின் என்னை வந்து பாருங்கள் கூறியபடி வெகுமதிகளை
அளிக்கிறேன்.” என்றான்.
இது பயங்கரமான சதியாயிற்றே, அதுவும் அரசகுடும்பத்தினருடன்
என தயங்கினாலும், அவர்களுக்கு மேலும் செல்வங்களை பெறும் பேராசை அக்கலைஞர்களை சதிகாரனிடம்
விற்று விட்டது. அவர்களும் அவன் கைவசம் வந்தனர். திட்டப்படி அவர்களும் அரசமாளிகைக்குள் சென்றனர்.
ராஜசமூகத்தினரின் முன் வெட்டவெளி மைதானத்தில் பறையொலித்து, பள்ளுப்பாடி, மானாட்டம்,
மயிலாட்டம், ஒயிலாட்டம் போன்றவறை நடத்தி, இரவு கூத்தினையும் செய்து மகிழ்வித்தனர்.
அக்கேளிக்கைகளைக் கண்ட மன்னர் தனபாலனும் ஸ்ரீபாலனுக்கு தகுந்த வெகுமதி அளிக்க கட்டளை
இட்டார். அதன்படி ஸ்ரீபாலனும் பொற்கிழியலைக் கொணர்ந்து அக்கலைஞர்களிடம் அளிக்கும் போது;
தலைவனானவன் “அட சகோதரா நீ இங்குதான் இருக்கிறாயா.
நீண்டநாட்களாக அச்சேரிப்பக்கமே வரவில்லையே. நாங்கள் எங்கோ உன்னைத் தேடிக்கொண்டிருக்கிறோம். நீ
இங்கேதான் இருக்கிறாயா. நீ அதிர்ஷ்டசாலிதான் போ மேலிடத்தில் கெளரமான பதவியில் அமர்ந்து
விட்டாய்.” என்றதும், அருகிலிருந்தவனும்
“ஆமா மச்சா… எப்படியுள்ளீர்கள்,
அங்கே அக்காவை தவிக்க விட்டு விட்டு வந்து இங்கு என்ன செய்கிறீர்கள்” என்றான். அதுபோல் வந்திருந்தவர்கள் ஒவ்வொருவராக ‘அண்ணா, தம்பி,
சித்தப்பா, மாமா’ என்று மாறிமாறி அழைத்தனர். “நீ
எங்களை விட்டு ஓடிவந்ததிலிருந்து அனைவரும் சோகத்தில் ஆழ்ந்து விட்டோம். நம் சமூகத்தவருக்கு
இவ்வரண்மனையில் எப்படி உத்தியோகம் வழங்கினார்கள். உனக்கெப்படி கிடைத்தது. அவ்வழியில்
எனக்கும் ஒரு…” என்றிழுத்தபடியே அவன் முகவாயில்
கைவத்து ஆட்டிவிட்டான். பலரும் கட்டி அணைத்தனர். முதுகில் தட்டினர். “ஆமாம் ஏரும், எருதும், பறைக்கொட்டுதலும், பண்ணையில் உழுவும்,
படிநெல் வாங்கி வாழ்வதுமாய் இருக்கும் நம் குலத்தவரிடையே நீ எவ்வாறு? ஏதோ பொய் சொல்லி
சேர்ந்துள்ளாய் என்றே தோன்றுகிறது. சாமர்த்திய சாலிதான் நீ” என்று பலர் காதில் விழச்செய்தனர். அது அரசர் காது வரை உடன்
எட்டியது.
ஸ்ரீபாலனும் திடீரென இக்கீழ்மதியோர்கள் கலந்து கொண்டதில் திகைப்பில்
ஆழ்ந்து விட்டான். எந்த ஒரு பதிலளிக்கவும் நா எழவில்லை. இது ஒருவேளை தவளசெட்டி செய்த சதியாகவும் இருக்கலாம். நாம் இந்த சமயத்தில்
உண்மையைக் கூறினாலும் இக்கூட்டத்தினரின் போலி நாடகத்தின் முன்னே எதுவும் எடுபடாது.
ஏனென்றால் இம்மோசக்காரர்களின் வேஷம் அவ்வளவு சாமர்த்தியமாய் உள்ளது. இதுவும் நம் பழவினையில்
ஒன்றுதான். அதன் இஷ்டப்படியே இப்போது நடப்போம். மெளனம் சாதிப்பதே இப்போதைய நிலை” என்று வாய் பேசாமல் நின்றான்.
அவனது மெளனம் அவர்களுக்கு சாதகமாகி நின்றது.. அரசரும் “ஸ்ரீபாலனும் எதுவும் பதிலளிக்காமலும்,
மறுக்காமலும் இருப்பதிலிருந்தே இவன் குற்றம் புரிந்துள்ளான் என்பது ருஜுவாகிறது. இந்த நீசகுலத்தில் பிறந்தவனுக்கா என் மகளை விவாகம் செய்து,
அரசாங்கத்தில் முக்கியபதவியும் வழங்கினேன். திட்டமிட்டு நம்மை ஏமாற்றியுள்ளான் போலும்.
அரசகுலத்தினருக்கு தகாத செயலைச் செய்த இவனை சிரச்சேதம் செய்வதே சரியான தண்டனையாய் இருக்கும்.
உடனே கொலையாளிகளை வரவழைத்து கொலைக்களத்திற்கு கொண்டு சென்று கொன்று விடுங்கள்” என்று சினத்துடன் அவசரபுத்தியுடைய அரசரும் உத்தரவிட்டார்.
அதைக்கேட்ட படைத்தலைவனும் ஸ்ரீபாலனை கொலைக்கள வண்டியின் கம்பத்தில் கட்டி அழைத்துச்
செல்ல உத்தரவிட்டார். கொலையாளிகளை வரவழைக்கவும் காவலனை அனுப்பி வைத்தார்.
இந்த ஏழையின் சொல் அம்பலமேறாது;
விதிவிட்டவழியோ,
தெய்வம் அளித்த சாபமோ எதுவானாலும் அதை மெளனமாக ஏற்பதே இத்தருணத்தில் சரியாகும். இப்படித்தான்
என் ஆயுள் வினை முடியவேண்டும் என்றால் எவ்வாறு
தடுக்க இயலும், என்ற மனநிலையில் ஸ்ரீபாலனும் விரக்தியுடன் அவ்வண்டியில் ஏறி தன்னை கயிற்றால்
வரிந்து புனைந்தவனுக்கு ஒத்துழைத்தான். அவனது பச்சிளங்குழவி போன்ற கபடுசூதில்லா முகத்தோற்றத்தைக்
கண்ட அக்காவலனும் வருந்தியபடியே நிறைவேற்றினான்.. கண்டிப்பாக இச்சூழ்ச்சியை இவன் செய்திருக்கமாட்டான்.
என் மனமும் அவ்வாறே கூறுகிறது என்று வண்டியும் செலுத்துபவர்களின் சம்பாஷனைகளை கேட்டபடி
வீதியில் சென்று கொண்டிருந்தது.
கொலைக்களம் செல்லும் குற்றவாளியைக்
கண்ட ஊரின் வாயும் திறந்தபடியே சாலையின் இருமருங்கிலும் நின்று மென்றுகொண்டிருந்தது….
“தோற்றத்தில் அரசகுமாரனைப்போன்றிருக்கிறானே, ஒருவேளை பறைச்சமூகத்தினர்கள்
பொய்யான நடிப்பை அரகேற்றியிருப்பார்களோ”
“அவ்வாறிருந்தால், அரசர் சரியாக விசாரித்து உண்மையை கண்டறியாமல்
அவரகதியில் தண்டனையளித்திருக்கக் கூடாது.”
“உள்ளது உள்ளபடி நீதிவிசாரணை செய்துதானே கொலைதண்டனை விதிக்க
முடியும், இது பொய்க்குற்றமாய் இருப்பின் அவருக்கு பாவம் வந்தல்லவா சேரும்!”
என்று சிலதும்; சில பேதைகள்,
“இந்த நீசகுலத்தவனுக்கு என்ன தைரியம்! அரசகுடும்பத்தையே ஏமாற்றி
ராஜகுமாரியை திருமணமும் செய்துள்ளானே”
“கெட்டிக்காரன் பொய்யும் புரட்டும்
எட்டு நாளில் தெரிந்துவிடும்”
என்று தலையசைத்தபடியே
சொல்லியது;
“ஆமாம் இப்போது வெட்டவெளிச்சமானதால்
இப்போக்கிரி தலையை இழக்கப்போகின்றான்”
“ஜாதியை மறப்பது போன்ற பெருங்குற்றம்
உலகில் வேறேதும் உண்டோ. நீசன் நீசபுத்தியுடன் தான் இருப்பான்”
“இவனுக்கு என்ன தண்டனை வழங்கினாலும்
அரச குலத்திற்கு ஏற்பட்ட இழுக்கு அழியவா போகிறது”
“சம்பந்தமும் செய்துவிட்டான்,
சமபந்தி போஜனத்திலும் அமர்ந்துவிட்டான், ராஜ குடும்பத்தாருடன் ஒன்னடி மன்னடியாக இருந்து
விட்டானே. அந்த கறையை யார் அழிப்பது”
“என்ன இருந்தாலும் இக்கயவன் இவ்வாறு
துணிந்திருக்கக்கூடாது. ரொம்ப குருட்டுத் தைரியம் தான். அதான் அழியப்போகிறான்.”
என்று மனம் போனபடி தன்னுள் நுழைந்த வார்த்தைகளை விசிக்கொண்டிருந்தது.
இவை எவற்றையும் காதில் வாங்காமல், இந்த இக்கட்டான சுழலில்
மதனசுந்தரி கூறியபடி பஞ்சபரமேஷ்களையும், சித்தசக்ரத்தையும் தியானித்தபடியே சமநிலையுடன்
தியானித்துக் கொண்டே கொலைக்களம் சென்று கொண்டிருந்தான்.
இவ்வாறு ஸ்ரீபாலன் சென்றதை பார்த்த, அந்தப்புர தாதி ஒருத்தி
அவசர அவசரமாக ஓடிச் சென்று அரசகுமாரி குணமாலையிடம் இறைத்தபடி ஸ்ரீபாலனுக்கு நேர்ந்துள்ள
ஆபத்து பற்றி தெரிவித்தாள். சிகையலங்காரம் செய்து கொண்டிருந்தவள் இதைக்கேட்டதும் அதிர்ச்சியடைந்தாள்.
அவளிடம் சுருக்கமாக அங்கு நடந்த வர்த்தமானங்களை கேட்டறிந்ததும், “என் நாயகனுக்கா இக்கதி! ஒருக்காலும் அப்படி செய்திருக்கமாட்டார்.
சிறுமதி படைத்தவரல்ல என் ஸ்வாமி. அவருடன் நானல்லவா வாழ்கிறேன். தந்தை அவரைப்பற்றி என்ன
தெரிந்து கொண்டிருப்பார். தவறிழைத்து விட்டார் என்றே கருதுகிறேன். தந்தையே!” என்றழைத்தபடியே விசாரனை மண்டபத்தில் அமர்ந்திருந்த தனபால
மஹாராஜாவிடம் ஓடினாள். அங்கு “தந்தையே! என்னை மன்னியுங்கள்
சபையில் குறுக்கிடுவதற்கு, தாங்கள் என் நாதரை நீசராக கருதிவிட்டீர்கள். அவ்வாறான இழிகுலத்தில்
பிறந்திருக்க நிச்சயமாக வாய்ப்பில்லை. யாரோ ஒருவரின் சதியினால் அக்கூத்தாடிக் கூட்டம்
அவ்வாறு நாடகமாடியிருக்கிறது. என்னை நம்புங்கள். அவருக்கு பிறப்பித்த கொலைதண்டனை சற்று
நிறுத்தி வையுங்கள். உங்கள் மகளாக இதைக் கோரவில்லை,
கணவனை காப்பாற்ற வந்த ஒரு சாதாரண அபலைப்பெண்ணின் வேண்டுகோளாக ஏற்க வேண்டுகிறேன். அரசகுடும்பத்தை
சார்ந்தவள் என்ற சலுகையை நிலைநிறுத்தும் எண்ணத்தில் தங்களை நாடவில்லை. உண்மையை கண்டு
பிடித்து இந்த இக்கட்டிலிருந்து என் நாதரைக் காக்கவே, எனக்கு சிறிது அவகாசம் தர வேண்டுகிறேன்.
அவ்வாறு நடந்திருந்தால் என் நாயகனை மட்டுமல்ல,
அளித்த தண்டனையை நிறுத்திய குற்றத்திற்காக என்னையும் அவ்வாறே தண்டித்திடுங்கள்.” என்று சபையோர் முன்னிலையில் அரசரின் காலில் விழுந்து மன்றாடினாள்.
கண்ணீரும் கம்பலையுமாய் அந்த அபலையின் வேண்டுகோளை ஏற்க அரசபையினரும் அவ்வாறே கோரினர்.
அரசரும் “ஆகட்டும் நங்கையே, ஒரு பிரஜையின்
வேண்டுகோளை நிறைவேற்றுவதே நல்லதொரு காவலனனின் இலக்கணமாகும். கணவனைக் காப்பாற்றும் உனது
பதிபக்தியை மெச்சினேன். அவ்வாறே கடமையை நிறைவேற்று”
என்று அனுமதி அளித்தாள்.
உடனே அவளும் நாயகனைக் காண கொலைக்களம் நோக்கி சிவிகையில் ஏறி
பறந்தாள் குணமாலை எனும் அந்த வீரமகள். அங்கே; கொலைக்களத்தில் வளைந்த பீடத்தில் ஸ்ரீபாலனது
தலையை இருத்தி இருபுறமும் கிங்கிரர்கள் இருவர் கிடாமிசையுடன் கொடுவாளை ஓங்கினர். “படைத்தலைவரே தண்டனையை நிறுத்துங்கள்” என்று கத்திக்கொண்டே சிவிகை விட்டிறங்கி கொலைபீடத்தை நோக்கி
ஓடினாள் குணமாலை….
அக்கணத்தில் தீவினை கழிந்தது, நல்வினை உதயமானது; ஆனால் எது
எதை விஞ்சியது…
தவளசெட்டியின் பொய்யும் புரட்டும்…
“படைத்தலைவரே தண்டனையை நிறுத்துங்கள்” என்று கத்திக்கொண்டே சிவிகையை விட்டிறங்கி கொலைபீடத்தை நோக்கி
ஓடினாள் குணமாலை. அக்கணத்தில் தீவினை கழிந்து, நல்வினை உதயமானதால் ஸ்ரீபாலனை வெட்ட
வந்த கொடுவாளும் விலகியது. படைத்தலைவனும் குணமாலை அரசரிடம் பெற்றிருந்த - தண்டனை நிறைவேற்றம்
- ஒத்திவைத்தல் ஆணைக்கான உத்திரவை முத்திரையுடன் கண்டதும் ஸ்ரீபாலனுக்கு கொலைத்தண்டனை
சிறைத்தண்டனையாக குறைக்கப்பட்டது.
அக்கொலைக்களத்தில் தன் பர்த்தாவை இக்கோலத்தில் கண்டு மனம்கலங்கிய
குணமாலையின் கண்களில் கண்ணீர்வெள்ளம் கரைபுரண்டோடியது. ஒருவாறு தேற்றிக் கொண்டு ஸ்ரீபாலனிடம்
இந்நிலைக்கான காரணத்தை கேட்டாள். “நாதா! உங்களுக்கு இக்கதி எவ்வாறு நேர்ந்தது. இக் குற்றம் சாட்டப்பட்டு தண்டனைக்கான ஆணை பிறப்பிக்கும்
வரை உங்கள் விருத்தாந்தங்களை ஏன் தெரிவிக்காமல் இருந்தீர்கள். அதனால்தான் இவ்வாபத்து
உங்களுக்கு நேர்ந்துள்ளது. உடன் அதன் விபரங்களை
என்னிடம் தெரிவியுங்கள் அதனை நான் நிரூபித்தால்தான் உங்கள் பூர்வீகம் வெளிப்படும்.
அதுவே உங்களை இச்சிரச்சேதத்திலிருந்து விலக்கும். எவ்வித குற்றமும் இழைக்காமல் நீங்கள்
இறப்பதால் என்ன பயன். தாங்கள் இல்லா வாழ்வை என்னால் நினைத்தும் பார்க்க இயலவில்லை.
உங்களுடனே நானும் என்னை அழித்துக் கொள்வேன்.” என்றதும் ஸ்ரீபாலனின் மனத்தளர்ச்சி முழுவதும் விலகவே சுயநினைவுக்கு
வந்தான். ஆம் நம்மை நம்பி வந்த தாய் கமலாதேவி, மதனசுந்தரி, மதனமஞ்சுஷை, குணமாலை மற்றும்
சம்பா நகர கொடுங்கோலிருந்து விடுதலை போன்ற இக்கடமைகளை நிறைவேற்ற சிந்திக்காமல் எவ்வாறு
விரக்தி நிலைக்கு தள்ளப்பட்டேன். இதுவும் ஒருவகையில் தன்முனைப்பே. கடமையை நிறைவேற்றாத்
தன்மையும் ஒருவகையில் சுயநலமே. இறந்தபின் உண்மைகள் தெரியவந்து நம்மைஇவ்வுலகம் போற்றுவதால்
யாருக்கு என்ன பயன். பெரும்புகழ் என் நாமத்திற்கு வந்து சேரும். பல கடமைகளை நிறைவேற்றாமலே
நான் மரணித்தால் நரகமே வரவேற்கும் என்ற விவேகமும் அற்ற சுயநல சிந்தனையுடன் இருந்துள்ளேனே.
என் தரப்பில் உள்ள நியாயத்தை, உண்மைத்தன்மையை வெளிப்படுத்திய பின் இத்தண்டனையை பெற்றிருந்தால்
சரியான அணுகுமுறையாய் இருந்து என்அடுத்தபிறவிக்கும் நலம் பயத்திருக்கும். அறியாமையால்
வந்த விரக்தியும் தீவினையைத்தான் அளிக்கும். அதனால் இவ்வுயிர்த்தியாகமமும் அறிவீலித்தனமே
என்று விவேக புத்தி விழுத்தெழுந்ததால், தான் விடுதலை பெற்றாவது கடமைகளை நிறைவேற்றியே
தீரவேண்டும் என்ற உறுதி மனதில் வலுவாய் தோன்றியது.
அவ்வழியே ஸ்ரீபாலன் சிந்திக்கும்போது அறியாமை எனும் விரக்தி
விலக அவன் புத்திசாலித்தனம் மேலோங்கத் துவங்கியது. சரி அப்படியானால்…. என் சுயசரிதத்தை
இவளிடம் கூற துவங்கும்போது, நானே சொல்வது பொருத்தமாய் அமையாது. மேலும் மதனமஞ்சஷையின்
நிலைப்பற்றியும் தெரிந்து கொள்ளவும் இவ்வுபாயம் வழிவகுக்கும் என்றெண்ணி, “குணமாலை, என் இனியவளே, உன்னைப்பற்றி சிந்திக்காமலும், என்
கடமைகளை மறந்து விரக்தி மனப்பான்மையில் இருந்தமைக்கு என்னை முதலில் மன்னித்துவிடு.
திடீரென அக்கூத்தாடிக் கும்பல் எனது நெருங்கிய
உறவினன் போல் நடித்தது என்னை திகைப்பில் ஆழ்த்தி விட்டன. இதன் பின்னனியில் யார் இருப்பார்
என்பதை யூகிப்பதிலேயே கவனமாய் இருந்து விட்டேன். மேலும் என் வரலாற்றை நானே எவ்வளவு
அழுத்தமாய் அழுது புரண்டு கூறினாலும் அச்சமயத்தில் யார் காதிலும் விழப்போவதில்லை. விசாரணையில்
சாட்சி சொல்ல யாருளர், என்ற சிந்தனையின் தாக்கமே அவ்வாறு முழுவதுமாய் செயலிழக்கச் செய்தது.
அதே சமயம் என் பின்னாளைய வாழ்வை நீ மட்டுமே உறுதியாய் நம்புவதால்
எந்தப் பயனும் விளையப்போவதில்லை. அதற்குரிய சாட்சியாய் எத்தடையமும் விசாரணையில் அளிக்கவும்
இயலாது. அதனால் துரிதகதியில் நான் இப்போது கூறுவதை உடனே செயல்படுத்த துவங்கிவிடு. அதாவது
தவளசெட்டி என்பவனின் கப்பல்கள் இப்பட்டினத்தின் நடுக்கடலில் நங்கூரமிட்டு நிற்கின்றன.
அவற்றுளொன்றில் மதனமஞ்சுஷை எனும் வித்தியாதரப் பெண்ணொருத்தி இருப்பது உறுதி. நீ அவளிருக்குமிடத்தை
கண்டுபிடித்து அவளிடம் எனது வரலாற்றை கேட்டறிவதே என் விடுதலைக்கு மேலும் பொருத்தமான
சாட்சியாய் அமையும். அதனால் தவளசெட்டிக்கு இவ்விஷயங்கள் சென்றுசேருமுன் நீ அவனது கப்பலுக்குள்
நுழைந்து துப்பறியத் தொடங்கிவிடு. அவள் ரத்தினதீபமெனும் நாட்டைஆளும் வித்தியாதர மன்னனின்
அரசகுமாரியாவாள். மேலும் கட்டழகான மேனியும், கழுத்தில் சங்கு, கிளிஞ்சல்கள், ரத்தினங்கள்,
வைரங்கள் கோர்த்த மாலை அணிவித்திருப்பாள். பெரும்பாலும் வெண்ணிற ஆடை தரித்திருப்பாள்.
அவ்வாறான அடையாளங்களை கொண்டிருக்கும் பெண்ணை
அணுகி, என் நாமத்தை கூறியதும் முகமலர்ந்து என்நிலை பற்றி கேட்டறிய விழைவாள். அதுவே
அப்பெண்ணிற்கான முழு அடையாளம். அவளே இச்சூழ்ச்சியிலிருந்து எனக்கு விடுதலையை வாங்கித்தரும்
முக்கிய சாட்சியாகும். உடனே இக்காரியத்தை நிறைவேற்ற சென்று விடு.” என்று முழுவிழிப்புடன் கூறி அனுப்பிவைத்தான்.
அவளும் உடனே சில பெண்காவலர்களுடன் சிவிகையில் ஏறி துறைமுகம்
வந்து சேர்ந்தாள். அங்கு ஒரு படகில் நடுக்கடலில் மரக்கலங்கள் நிற்குமிடத்திற்கு சென்றாள்.
ஒவ்வொரு கப்பலாக ஆராய்ந்து வருங்கால் முடிவாக ஒரு கப்பலில் காவலுடன் இருக்கும் அழகியவதனத்துடனான
மங்கையைக் கண்டதும், இவள் தான் தன் நாதர் கூறிய வித்தியாதர அரசகுமாரியாய் தோன்றுகிறாள்
என்று யூகித்ததும் அவளை நமஸ்கரித்தாள். அவளும் குணமாலையின் அங்கலக்ஷணங்களை கண்டதும்
இவளை அரசிளங்குமரி என்பதை அறிந்து கொண்டு “அம்மையே நமஸ்கரிக்கிறேன். நான்
ரத்தினதீபபுரியின் இளவரசி மதனமஞ்சுஷை எனும் வித்தியாதரப்பெண். என்னை இங்கு தவளசெட்டி
என்பான் சிறைவைத்துள்ளான். தங்களைக் கண்டால் அரசகுலத்தை சேர்ந்தவர் போன்று தெரிகிறது.
என்னை விடுவித்து எனக்குதவிட வேண்டுகிறேன்.” என்று சுற்றிலுமுள்ள சேடியர்
தன்னை தடுக்கும் முன் சொல்லி முடித்தாள். உடனே குணமாலை மனமகிழ்ந்து அவளருகிலிருந்தக்
காவலர்களிடம் “நான் இந்த நாட்டின் இளவரசி குணமாலை
என்பாள். இவளை விட்டு விலகுங்கள் இல்லையேல் உங்களுக்கு தக்க தண்டனை வழங்கி சிறையில்
அடைக்க ஆணை இட வேண்டியிருக்கும்” என்றதும் அவர்களும் அஞ்சி தவளசெட்டியிடம்
தெரிவிக்க ஓடிவிட்டனர்.
அத்தருணத்தை சாதகமாக்கி அவளும் மதனமஞ்சுஷையை தன் படகில் ஏற்றி
கரைக்கு கடத்திக் கொண்டே செல்லும் போது, “சகோதரி நான் உங்கள் முழு வரலாற்றையும்
கேட்டறிய விரும்புகிறேன். உங்களின் இந்நிலைக்கு என்ன காரணம். தங்களை அரசகுமாரர் ஸ்ரீபாலன்
சந்திக்கவே என்னை அனுப்பி வைத்தார். அவர் எப்படி அறிமுகமானார். உங்கள் இருவருக்குமான
தொடர்பு பற்றி தெரிவிக்க வேண்டுகிறேன்.” என்றாள். மதனமஞ்சுஷையும் முகமலர்ந்து
தன்னைக் காப்பாற்றி அழைத்துவந்தமைக்கு நன்றி தெரிவித்து “ஸ்ரீபாலன் உயிருடன்தான் உள்ளாரா? எனது நம்பிக்கை வீண் போகவில்லை.
என் அருகபக்தி அவரை நடுக்கடலிலிருந்து காப்பாற்றி விட்டது.” என்று அகமகிழ்ந்து “தாங்கள்
அவரிடம் எப்படியோ என்னைப்பற்றி அறிந்து கொண்டுள்ளீர்கள். அதனால் தான் என் நிலையறிந்து இக்கப்பலுக்கு வந்து
என்னை காப்பாற்ற வந்துள்ளீர்கள் என்பது தெரிகிறது. நான்
ரத்தினதீபபுரிக்கு அரசகுமாரியாய் பிறந்திருந்தாலும், முனிவரின் வாக்குபடி ஸ்ரீபாலன்
என்னும் தூயவனை என் தந்தையின் இஷ்டப்படி என் மணாளனாக வாய்க்கப்பெற்றேன்.” என்று தொடங்கி, ஸ்ரீபாலன் சம்பா நகரத்து இளவரசனாய் வாழ்ந்து,
குஷ்டரோகியாகி, பின்னர் மதனசுந்தரியை மணந்து, அவள் கொண்டுஒழுகிய சித்தசக்ர நோன்பின்
மகிமையால் ஆரோக்கியம் பெற்றதையும், பின்னர் தவளசெட்டி எனும் பேராசக்காரனின் நட்பைப்
பெற்று, தனது ரத்தினதீபபட்டினத்திற்கு கப்பலில் வந்திறங்கி, அந்நகரத்தில் சிலஆண்டுகளாய்
திறக்க மறுத்த அருகராலய கபாடம் ஸ்ரீபாலன் புனிதக் கரம் பட்டதும் திறந்ததால், தனது தந்தையாரின்
விருப்பப்படி தான் மணம் செய்து கொண்டதையும், தவள செட்டியின் சூழ்ச்சியினால் சமுத்திரத்தில் வீழ்த்தப்பட்டது
வரை கூறியதோடு, அவனது மோகவலையில் தான் வீழ அவன் செய்த சூழ்ச்சிகள் பலனிக்காது போது
தனக்கு சிறைவைத்தது வரை நடந்த வரலாற்று சுருக்கத்தை தெரிவித்த போது படகு கரையை அடைந்தது.
இருவரும் காலவர்களுடன் வந்த சிவிகையில் ஏறியதும்; குணமாலை
மதனமஞ்சுஷையின் வாழ்வுநிலைபற்றியும், ஸ்ரீபாலனின் விருத்தாந்தங்களையும் தெரிந்து கொண்டபின்
தான் இந்த நகரத்தின் அரசரான தனபாலரின் ஒரே மகள்”
என்று கூறத்தொடங்கி, தன் விவாகம் பற்றிய ஜோதிஷக்குறிப்பை திகம்பர முனிவர் தெரித்தபடியே;
நடுக்கடலில் வீழ்ந்து கரைசேர்ந்த ஸ்ரீபாலனை அண்மையில் விவாகம் செய்து கொண்டேன் என்றும்,
மேலும் அவள், “சகோதரியே, தன் ஸ்ரீபாலன் சிரச்சேதம்
செய்யப்பட விருக்கும் குற்றவாளியாக சூழ்ச்சியின் காரணமாக கருதப்பட்டுள்ளார். அவர் ஒரு
நீசவம்சத்தை சேர்ந்தராகவும் குற்றம் சாற்றப்பட்டுள்ளது. அதனால் நீ அரசவையில் எனது தந்தையின்
முன் அவரது பூர்வ வரலாற்றை தெரிவித்தால் அவரும் ஏற்று நம் மணாளரை விடுதலை செய்வது உறுதி.
மேலும் அதே தவளசெட்டி மீண்டும் தன் மணாளனுக்கு இங்கு வந்தபின்னும் தீங்கிழைத்து வருவதை
உன்வார்த்தைகள் மூலம் உறுதி செய்தும் கொண்டேன். அவனையும், அவனுக்கு துணையாய் இருந்த
அக்கூத்தாடிக் கும்பலையும் மன்றத்தில் விசாரித்து கடும் தண்டனையும் வாங்கித்தருவதே
என் இப்போதைய லட்சியம்” என்று கூறி முடித்தாள். சிவிகையும்
அதே சீற்றத்துடன் இருவருடன் அரண்மனை வந்து சேர்ந்தது.
தவளசெட்டியும் இவ்விஷயங்களை அறிந்து அஞ்சினான். ஆனால் அக்கூத்தாடிகள்
வேடமிட்டதை ஒத்துக் கொண்டால் தானே அரசரும் நம்புவார். அதே போல் மதனமஞ்சுஷை ஒரு வேஷதாரி
பொய்யுரைக்கிறாள் என்று கூறினால், மேற்குடியில் பிறந்த என் வார்த்தைகளை கண்டிப்பாக
ஏற்பது உறுதி. அதனால் ஸ்ரீபாலனுக்கு மீண்டும் அதே தண்டனை நிறைவேற்றப்படுவதும் உறுதி
என்று கனாக் கண்டு கொண்டிருந்தான் தவளசெட்டி எனும் அந்த நயவஞ்சகன். எத்தனைக் காலம்தான்
ஏமாற்றுவாய் இந்த நாட்டிலே என்று அவனைப்பார்த்து கூறிக் கொண்டிருந்தது குணமாலையின்
மதி.
ஸ்ரீபாலனின் தயை
சிவிகையும் அதே சீற்றத்துடன் இருவருடன் அரண்மனை வந்து சேர்ந்தது.
அவ்விஷயங்கள் காட்டுத்தீயாய் நகரெங்கும் பரவி, அரண்மனை மண்டபத்திற்கு வெளியே ஜனக்கூட்டம்
நெருக்கமாய் என்ன நடக்கப்போகிறதென்று காண நின்றிருந்தினர். காவலர்கள் நெரிசலை விலக்கி குணமாலையையும், மதனமஞ்சுஷையையும்
உள்ளே அனுப்பி வைத்தனர். விசாரணை மண்டபத்தில் இருபுறமும் பல பெரியோர்களும், புலவர்களும்,
கலைஞர்களும், குருமார்களும் அரசின் படைத்தலைவரும், ராஜகுருவும், அமைச்சரும் அமர்ந்திருக்க
மையத்தில் மன்னர் தனது சிம்மாசனத்தில் கம்பீரமாய் அமர்ந்திருந்தார். அருகில் இரு காவலர்களும்,
பின்னால் இரண்டு சேடியர்கள் சாமரை வீசிக்கொண்டிருந்தனர். அந்த விசாலமான மண்டபத்தின்
நடுப்பகுதியில் இருவரும் வணங்கி நின்றனர். குணமாலை, “மன்னர் மன்ன! நான் கூறிச் சென்றது போன்றே ஸ்ரீபாலனை விடுவிக்க
சாட்சியாக இரத்தினத்தீபபுரியைச் சார்ந்த அரசிளங்குமரி மதனமஞ்சுஷையும் வந்துள்ளார்கள்.
அவர்களை தங்கள் சபைமுன்னே சாட்சியங்களை கூற அனுமதி கோருகிறேன். அதைக்கேட்ட மன்னர் தனபாலரும்
“அப்படியா, நீ இரத்தினத்தீபபுரி
வித்தியார மன்னரின் மகள் மதனமஞ்சுஷையா. அவரை நான் நன்கறிவேன். நீ என் நண்பனின் புதல்வியா!
அப்படியானால் நீயும் என் மகளே! வாழிய பல்லாண்டு! தைரியமாக கூற வந்ததை எவ்வித தயக்கமுமின்றி
சபையோர் முன்னிலையில் எடுத்தியம்பலாம். விசாரணை துவங்கட்டும்” என்றார் அரசர்.
அங்கே குழுமியிருந்தோரின் முன்னே அரசாங்க நிமித்திகரும் அன்றைய
வழக்குகளைப்பற்றிய குறிப்புகளை வழங்கினார். அதில் “முதலாவதாக
ஸ்ரீபாலனின் குற்றம் பற்றிய மறுபரிசீனை விசாரணை துவங்குகிறது” என்று கூறி “அதில் முக்கிய சாட்சியான மதனமஞ்சுஷை
தான் அறிந்துலுள்ள நியாயங்களை இச்சபையோர் முன் வைக்கலாம்” என்றதும்;
மதனமஞ்சுஷை எனும் அம்மங்கை “இந்த புவனத்தின் காவலரே! ராஜகுருவரரே! அமைச்சர் பெருமக்களே!
படைத்தலைவரே! சபை நிரம்பிய பெரியோர்களே! அனைவருக்கும் எனது நமஸ்காரங்கள். என் தந்தையைப்
போன்றவரே! உம்மை மகளாய் மீண்டும் வணங்குகிறேன். நான் இரத்தினதீபபுரியின் மன்னரின் அரசிளங்குமரி
மதனமஞ்சுஷையானவள். அதற்குரிய ராஜமுத்திரை” என்று தன் விரலிருந்து வெளியேற்றி
அரசிடம் காண்பித்தாள்.” தொடர்ந்து “நான் பதிவிரதையானவள். என் வாக்கில் பொய்யென்பதே வருவதில்லை.
தெய்வசாட்சியாக நான் சொல்வதெல்லாம் உண்மை; என் சொற்களை தாங்கள் சந்தேகமின்றி ஏற்றுக்கொள்ள
வேண்டுகிறேன்.” என்று ஸ்திரமான தனக்குரிய அந்தஸ்தையும்
தெரிவித்து, அனைவர் முன்னே மரியாதையுடனான வார்த்தைகளால் சொல்லத் தொடங்கினாள்.
ஸ்ரீபாலன் சம்பாநகரத்து அரசனுக்கு மகனாக பிறந்தது முதல், தன்
தாயாருடன் வெளியேறி உஜ்ஜயினி வந்து மதன சுந்தரியை மணந்தது, அவளது சித்தசக்ர நோன்பு
நியமத்தின் மகிமையால் ஆரோக்கியம் பெற்றது; தவளசெட்டியுடன் சினேகம், ரத்தினத்தீபத்தில்
அருகராலய கபாடம் திறந்து தன்னை மணந்து கொண்டது, தவளசெட்டி சூழ்ச்சி செய்து கடலில் தள்ளியது,
பின்னர் தான் தவளசெட்டியின் இச்சையால் கொடுமையை அனுபவித்தது போன்ற அனைத்தையும் விளக்கினாள்.
மேலும் ஸ்ரீபாலன் நீசர்களின் உறவினராக சித்தரிக்கப்பட்ட கபடநாடகமும் தவளசெட்டியின்
சூழ்ச்சியாகத்தான் இருக்க வேண்டும் என்ற சந்தேகசிந்தனை வரை விளக்கமாக தெரிவித்தாள்.
அவள் கூறக்கூற அரசரின் முகத்தில் வாட்டம் கூடிக்கொண்டிருந்தது.
என்ன ஒரு மதியீனம், குற்றசாட்டப்பட்டத்தை தீர விசாரிக்காமல் இப்படி என் மருமகனையே தண்டித்து
விட்டேனே என்று தன்னை நொந்து கொண்டு “மகளே! என்னை மன்னித்துவிடு. நெடுநாள்
அடைத்த அருகராலயக் கபாடத்தை திறந்த இப்புண்ணியவானை எப்படிச் சந்தேகித்தேன். அதன் பலனை
எவ்வாறு தேற்றப்போகிறேனோ. கண்ணால் கண்டதும் பொய், காதால் கேட்டதும் பொய், தீரவிசாரித்தலே
நிஜம் என்ற நீதி விசாரணை இலக்கணத்தை மறந்து போய் தீங்கிழைத்து விட்டேன்.” என்று கூறி வருந்தினார். “மேலும்
நல்லவர் ஒருவர் தண்டனை பெறக்கூடாது எனும் நீதிநெறிக் கோட்பாட்டை மீறிய நீதிக்காவலனாய்
இருந்துவிட்டேன். தெய்வத்தன்மையற்ற அரசனே அவசர தீர்ப்புவழங்கி கொல்வான் என்ற கொடுங்கோலனாய்
இருந்துள்ளேன் என்பதை நினைக்கும் போது வெட்கமாய் இருக்கிறது. மேலும் இக்கூத்தாடியர்கள்
போட்ட கபட நாடகத்தை மதியின்றி நம்பிவிட்டேன். உலகில் உண்மையை பொய்யாகவும், பொய்யை உண்மையாகவும்
மாற்றும் வல்லமை பெற்றவர்களை கண்டுகொள்ளும் திறனற்ற அரசனாய் இருந்துள்ளேன். இவற்றிற்கெல்லாம்
காரணமான தவள்செட்டியையும், அப்பறைக்கூத்தாடிகளையும் சித்தரவதை செய்தாலும் என் சினம்
தீராது. சத்தியவானான ஸ்ரீபாலனை சந்தேகித்து தண்டனை வழங்கியதும் அவன் மனம் என்ன பாடுபட்டிருக்குமோ” என்று தெரிவித்து அவனை அரசபைக்கு வரவழைத்தார்.
ஸ்ரீபாலனும் அவர் முன் தோன்றியதும் “இராஜகுமாரனே எனது மதிகெட்ட செயலால் நடந்த தவற்றை மன்னிக்க
வேண்டும். உலகில் ஏமாற்றுக்காரர்களின்று நீங்குவது எப்பேர்பட்டவர்களுக்கும் அரிதாயிருக்கும்.
அந்தப்பாவிகளுடைய வார்த்தைகளில் மதிமயங்கி உன்னை தண்டித்து விட்டேன். நீ கோபங்கொள்ளாதிருப்பது
உனது மேலான பண்பை தெரிவிக்கிறது. அதனால் உனக்கு நான் அளிக்கும் மரியாதையை ஏற்றுக் கொள்ள
வேண்டுகிறேன்.” என்று கூறி அவனை சிம்மாசனத்திலேற்றி
உபசரித்தார். அப்போது ஸ்ரீபாலனும் அம்மன்னனை வணங்கி “மண்டாலாதிபதியாரே, இது தங்களுடைய தவறன்று, தவளசெட்டியின் மீதும்
குற்றமில்லை. நடந்தவை அனைத்தும் என் பழவினையின் பலனாகும். என்றோ நான் ஈட்டியவை இப்போதைய
விதியாய் மாறி தண்டிக்கிறது. நான் ஜினதர்மம் பயின்றவன். அதன் மீது நம்பிக்கையுடன் வாழ்பவன்.
அருகபக்தி நிறைந்தவன். அதனால் எனக்கு எவர் மீதும் சினமில்லை.” என்று சாந்தஸ்வரூபியாய் கைகூப்பினான். அரசரும், சபையோரும்
அவனது சமநிலை உணர்வை மெச்சி அகமகிழ்ந்தார்கள்.
அரசர் தவளசெட்டியையும், அக்கூத்தாடிகளையும் அழைத்துவர உத்தரவிட்டார்.
காவலர்களும் அவர்களை கைது செய்து அவர் முன்னர் நிறுத்தினார்கள். கண்டதும் வெகுண்ட அரசர், “இரண்டு பதிவிரதைகளுக்கும், ஒரு மஹாபுண்ணியனுக்கும் தீங்கு
செய்த பாதகர்களே, உண்மையைக் கூறிவிடுங்கள். உங்களது சதிச்செயலை ஒத்துக் கொண்டுவிடுங்கள்
இல்லையேல் கடும் தண்டனையை அனுபவிக்க நேரிடும்’ என்று அதட்டினார். அவ்வேளையிலும் தவளசெட்டி, “ஐயோ, மன்னா! நான் எவ்வித தீங்கும் செய்யவில்லை. ஸ்ரீபாலன்
தானே சமுத்திரத்தில் வீழ்ந்து விட்டார். அதன் பின்னர் எத்துன்பமும் இழைக்காமல் மதனமஞ்சுஷையை
நானே காப்பாற்றி வந்துள்ளேன். ஸ்ரீபாலன் கிடைத்ததும் அவரிடம் ஒப்படைக்கும் எண்ணத்தில்
தான் அவ்வாறு செய்தேன். அப்படியில்லை என்றால் என் விருப்பத்திற்கிணங்காத அரசகுமாரியை
அன்றே கொன்றிருக்க மாட்டேனா! அதைவிடுத்து என் மீது பழியை சுமத்த வேண்டாம். மேலும் அதுபற்றி
நீசர்கள் செய்த நாடகம் பற்றியும் எனக்கெதுவும் தெரியாது. இந்நகரத்தை சேராத பிரஜையான
எனக்கு அவர்களிடத்தில் இவ்வளவு பரிச்சயம் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை” என்று சத்தியவான் போல் பேசினான். அதேபோல் அந்நீசக்கூட்டமும்
மீண்டும் நாடகத்தை தொடங்கிற்று “இங்கே குடியுருமை பெற்றிருக்கும்
எங்களை நம்புங்கள். எங்கிருந்தோ வந்த இவர்கள் பேச்சை ஏற்றுக் கொள்ளாதீர்கள் அரசே. எங்களுடன் சேரியில் வாழ்ந்தவன் தான் அச்ஸ்ரீபாலன் எங்களை நீங்களே
பாதுகாக்கவேண்டும்” என்று உண்மையை கூறுவது போன்று
பொய்வேடமிட்டு நின்றனர்.
இவர்களின் செய்கை மேலும் அனைவரது சினத்தை தூண்டியது. படைத்தலைவரும்
“ அரசே இவர்களை இப்படி விசாரித்தால்
குற்றத்தை ஒத்துக் கொள்ள மாட்டார்கள். என்னிடம் ஒப்படையுங்கள். அடிக்கு பணியாதவர்கள்
யார் உளர்.” என்றார். அரசரும் “ஆம். உண்மையை கூறும்வரை இவர்களை புளியமிளாரால் விலாசித்தள்ளுங்கள்” என்று ஆணையிட்டார். அவ்வாறே அனைவரது கால்களிலும், முதுகிலும்
மாறி, மாறி தேள் கொட்டியது போது காவலர்களும் வலிமையுடன் அடித்து நொறுக்கினார்கள். தோற்படலம்
சிதைந்து உதிரம் கசியத் தொடங்கியது. மனவுறுதியை கைவிட்டனர். “அய்யோ, விட்டுவிடுங்கள்; உண்மையை
கூறிவிடுகிறோம்” என்று கதறியபடி அனைவரும் தவளசெட்டி
வெகுமதிகள் நிறைய அளித்து தங்களை விலைபேசி இச்சதியை நிறைவேற்ற திட்டமிட்ட சதிமுழுவதையும்
ஒத்துக் கொண்டனர். அவ்வாறே தான் ஸ்ரீபாலனுக்கும், மதனமஞ்சுஷைக்கும் செய்யத் துணிந்த
தீங்கனைத்தையும் தவளசெட்டியும் குற்றங்களை ஏற்றுக் கொண்டு தலைகுனிந்து நின்றான்.
அரசரும் “இந்த தவளசெட்டியும், மற்றவர்களும்
பெரும் தீங்கே விளைவித்துள்ளனர். அதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை என்றே கருதுகிறேன்
சபையோர்களே. இவர்களுக்கு தக்க தண்டனை புரிய வேண்டும். இத்தண்டனை மற்ற தீயோர்களுக்கு
அச்சுறுத்தலாகவும் அமைய வேண்டும்.” என்றபடி அமைச்சரை நோக்கினார்.
அவரும் “ஆம் அரசே! தங்கள் கூறுவது முற்றிலும்
உண்மை. இவர்கள் தம் ஆயுள் நாட்களில் இக்குற்றங்களை மீண்டும் புரிய சிந்திக்கவே கூடாது.
அதனை கருத்தில் கொண்டு நம் நாட்டு நீதிநெறி சட்டத்தின் படி ஏழாண்டு கருங்காவல் தண்டனையும்,
வாரம் பத்து கசையடிகளும் வழங்குமாறு பரிந்துரை செய்கிறேன்” என்று கூறி அமர்ந்தார். அரசரும் “அவ்வாறே விசாரணைக் குறிப்பில் இட்டு படைத்தலைவரிடம் ஒப்படைத்து
நிறைவேற்றச் செய்யுங்கள்” என்று உத்தரவிட்டார். இவற்றை
கண்டு கொண்டிருந்த தலையாரிகளும் தலையை ஆட்டி வணங்கிச் சென்றனர்.
ஸ்ரீபாலனும் “அரசபெருமானே! இக்குற்றங்கள் அனைத்தும்
எனது விதியின் தூண்டுதலால் அவர்கள் மதியிழந்து இழைத்தவை. அதற்கான தண்டனையை அவர்கள்
சுய உந்துதலால் நிறைவேற்றியவை அல்ல. அதனால் அவர்களை விடுவிக்க வேண்டி கேட்டுக் கொள்கிறேன்.
மேலும் தவளசெட்டியும் இந்த நாட்டைச் சேர்ந்தவர் அல்லர் இந்நகர சட்டமும் அவருக்கு பொருந்துவதில்லை.
அவரை தண்டிக்கும் உரிமை அவர் நாட்டுக்காவலரிடமே உள்ளது. ஆகவே அவரிடம் நாம் ஒப்படைத்தலே
சரியான நீதியாய் அமையும். பெரும் சிரேஷ்டி வம்சத்தில் பிறந்தவர். அறிவிற்பிசகி காமத்தீயில்
விழ்ந்து இவ்வாறு நடந்துள்ளார். அதனால் அரசர் பெரும! பெரியமனதுடன் தவளசெட்டியாரை மன்னித்து
இந்நகரத்தை விட்டு வெளியேறச் செய்தலே பொருத்தமாய் இருக்கும். மன்னித்தலே அவருக்கு பெரும்தண்டனையாய் அமையும்.” என்று தெரிவித்து அமர்ந்தான் அத்தயாளன்.
ஸ்ரீபாலனின் கூற்றை கேட்ட அரசசபையினர் பாராட்டினர். அக்கும்பலும்
அவன் காலடியில் வீழ்ந்து வணங்கியது. தவளசெட்டியும் நட்பைமறந்து கீழ்த்தரமாய் நடந்து
கொண்டமைக்கு வெட்கித்து தலை குனிந்து நின்றான். அரசரும்…..
அத்தியாயம் - 5
ஸ்ரீபாலன் மதனசுந்தரியிடம் போய்ச் சேருதல்
கப்பல்கள் பிரகுகச்ச நகரத்திற்கு விரைந்தன
ஸ்ரீபாலனின் கூற்றை கேட்ட அரசசபையினர் பாராட்டினர். அக்கூத்தாடிக்
கும்பலும் அவன் காலடியில் வீழ்ந்து வணங்கியது. அரசரும் அவர்கள் மீது கோபமிருந்தாலும்,
ஸ்ரீபாலன் அவ்வாறு பரிந்துரை செய்ததால் அவற்றை ஏற்று அவர்களை தண்டிக்காமல் விடுதலை
செய்தார். மேலும் “குற்றவாளிகளே உங்களிடத்தில் மனமாற்றம்
ஏற்படவே தண்டனைகளை அளிக்கிறோம். தண்டனைக்காலத்தில் தினமும் தனிமையில் சிந்திப்பீர்கள்
அப்போது உங்கள் தீயபாவனைகள் அழியும். அதேசமயம் உங்கள் உழைக்கும் காலமும் வீணடிக்கப்படும்.
தண்டனை முடிந்து வெளியேறியபின் இவ்வுலகில் கடுமையாய் உழைத்தே நீங்கள் உங்கள் லட்சியங்களை
ஈடுசெய்ய நேரிடும்.
பொருள் ஈட்டுவதே எந்த ஒரு மனிதனின் பிரதான லட்சியமல்ல. அவ்வாறாய்
இருப்பின் மீண்டும் திருடியோ, கொள்ளையடித்தோ ஈடு செய்து விடலாம். அதற்கு சமயோஜிதமும்,
சந்தர்ப்பத்தை தனதாக்கிக் கொள்ளும் சிறுமதியும், தந்திரமும் திறமையாய் இருந்தால் நிறைவேறும்.
ஆனால் நம் பாரம்பர்ய தரிசனங்களான சமண, பெளத்த, இந்து தர்மங்கள் போன்றவை அதை பரிந்துரை
செய்யவில்லை. மாறாக நிரந்தர சுகமான விடுதலைப்பேற்றையே வற்புறுத்துகின்றன. அற்பசுகத்திற்கான
பொருள் ஈட்டி புகழ், செல்வாக்கை பெறுவதை எந்த ஒரு தரிசனமும் அறிவுருத்தவில்லை. அந்தந்த
ஞானியரின் கூற்று மெய்ஞானத்தின் வழியே மீண்டும் பிறவா நிலையையே ஈட்டுவதே பிரதான லட்சியமாக
நல்வழிகாட்டுகின்றனர். அவ்வழியில் சிந்திக்கும் போது இச்சிறைவாசம் அதற்கான கால அவகாசத்தை
தள்ளிப்போட்டு விடுவது உறுதி.
அவ்வாறான நிலையின்றி தர்மவான் ஸ்ரீபாலன் உங்களை மன்னிக்க வேண்டி
கூறியதால், உங்கள் உழைக்கும் காலத்திற்கு தடையேதும் ஏற்படப்போவதில்லை. சிறைவாசம் செய்து
அவ்விவேகத்தை பெறுவது போன்றல்லாமல் இன்றே அவ்விவேக புத்தியைப் மனதில் இருத்துங்கள். இன்றிலிருந்தாவது நல்லவழியில் செல்ல முயலுங்கள்,
உங்கள் ஊதியத்தை உழைத்தபின்னே ஈட்டுங்கள். உழைக்காமல் சூதில் பெற எண்ணினால் இப்போதைய
தண்டனையை மிஞ்சிய பெரும் அழிவையே நீங்கள் சந்திக்க நேரிடும். ஒன்றை நினைவில் கொள்ளுங்கள்,
எப்போதும் நீதி, நியாய, தர்மமே மிக்க விழிப்புடனே உங்களை கண்காணித்து கொண்டிருக்கும்.
நீதி வழுவும் போது துன்பக்காரணிகளே உங்களைச் சூழும். தவளவர்த்தனபுரி மக்களின் ஒட்டுமொத்த
மனசாட்சியே சமுகநீதியாகும். ஒருவருக்கு உங்களால் ஏற்படும் தீங்கிற்கு அந்தகூட்டுச்
சமூகநீதியே உங்களுக்கு பெரும் தண்டனையை விதிக்கும் என எச்சரிக்கிறேன். அச்சமூகநீதியின்
முகவர்களே என் போன்ற அரசர்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள். திருந்தி வாழும் உறுதியோடு சென்று வாருங்கள். மீண்டும் சூது, கபடத்தில் வீழ்ந்து விடாதீர்கள்” என்று குற்றவாளிகளை எச்சரித்து விடுதலை செய்தார்.
தவளசெட்டியும் நட்பைமறந்து கீழ்த்தரமாய் நடந்து கொண்டமைக்கு
வெட்கித் தலை குனிந்து நின்றான். அவன்மீது விழுந்த அத்தனை அடிகளும் மனதில் காயத்தை
ஏற்படுத்தியது. உடல் ரணத்தின் வலியை விட உள் ரணமே மிஞ்சி நின்றது. அரசரும் “பெண்ணாசை, மண்ணாசை, பொன்னாசை ஆகிய மூன்றுவிதமான ஆசைகளால் உலகம்
கெட்டுப் போகிறது என்கிறது தர்ம சாஸ்திரங்கள். இந்த மூன்றும் இன்று மட்டுமல்ல; எல்லா
யுகங்களிலும் வாழ்ந்தவர்களை அழித்திருக்கிறது; அழித்துக் கொண்டும் இருக்கிறது.
தெய்வ பக்தி மிகுந்திருந்தாலும் பெண்ணாசையால் இராவணன் அழிந்தான்.
குருட்டு திருதராஷ்டிரன், தன் மகன்வழியே பெரிய சாம்ராஜ்யத்தை ஆள வேண்டும் என்ற மண்ணாசையால்,
தன் தம்பி பாண்டுவின் மகன்களோடு சூதாட வைத்து கௌரவ வம்சமே அழிந்து போகக் காரணமானான்.
பொன்னாசையால் இன்று பலரும் கொடுமைக்கு ஆளாகி மாண்டு போக, பொன்னாசைக் குடும்பங்கள் தாங்களாகவே
அழிந்து போகிறார்கள்.. பல ஞானியரும் எவ்வளவு எடுத்துச் கூறினாலும், முன்வினைப் பயனால்
இவை தொடர்ந்து கொண்டே போகின்றன.
பலசாலிக்குப் பயப்படுபவர்கள், வாழும் வகை அறியாதவர்கள், சொத்தை
இழந்தவர்கள், காமவயப் பட்ட கொடூரர்கள், திருடர்கள்தான் இரவில் தூங்க மாட்டார்கள். இனி
உன் வாழ்நாளில் நிம்மதியாகத் தூங்கவே முடியாது. அதுவே பெரிய தண்டனையாகும்.
சங்கு சுட்டாலும் வெண்மை தரும் மேற் குடியில் பிறந்த சிரேஷ்டியாரே
உமக்கு ஏன் இந்த கீழ்மதி. ஏன் இந்த இருளில் விழ்ந்தீர். இனியாவது நற்குணம் எனும் ஆதவனின்
கிரணங்கள் உதிக்கட்டும். வியாபாரத்தில் மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாய் விளங்கும்
நீ மதிகெட்ட செயலில் இனி இறங்காமல் வாழும். உன் தொழிலில் கவனம் செலுத்து, சூதில் கவனம்
செலுத்தாதீர். பிறன் மனை நோக்காமை எனும் அணுவிரத்தை முற்றிலும் மறந்தனையே. அதுவே இக்கதிக்கு
உன்னை வீழ்த்தி விட்டது. எத்தனை பொருள் இருந்தாலும் இவ்வயப்பெயர் இனி உன்வாழ்வில் விலகிடுமா?
சற்றும் ஆராயாமல், ஈட்டிய நற்பெயரை முழுவதுமாய் இழந்து நிற்கிறீர். இனியாவது திருந்தி
அருகன் உரைத்த அறவழியில் நடந்து உய்வீராகுக” என்று கூறி அவனையும் எச்சரித்து
அனுப்பி வைத்தார்.
சபையிலிருந்து வெளியேறிய தவளசெட்டியை பார்த்து ஊரே கைகொட்டிச்
சிரித்தது, ஏளனம் செய்தது, தள்ளு முள்ளு செய்து வெளியேற்றியது. - ஐயஹோ! என்ன ஒரு சிறுமதியோனாய்
நடந்து கொண்டிருக்கிறேன். எவ்வளவு திறமையுடன் வர்த்தகம் செய்து பொருள் ஈட்டியவன், இன்று
அனைத்தையும் இழந்து விட்டது போன்ற உணர்வு தோன்றுகிறதே. மிகுபொருளே; பேராசை, புகழ்,
செல்வாக்கு யெனும் பூதமாய் மாறி என்னை விழுங்கிவிட்டதே. பொன்னாசை மேலோங்க மண்ணாசைக்கு
தள்ளப்பட்டேன். அப்போதே அது பேராசை என்பது விளங்கவில்லை. ஆனால் அதனிலும் மேலான பெண்ணாசை
காம இச்சையை கொழுந்து விட்டு எரியத்தூண்டிவிட்டது. காமம் வேறு, இச்சை வேறு என்பதனை
ஏனோ மறந்தேன். அதுவே என்னை படுகுழியில் தள்ளிவிட்டதே!
இனி பொருள் ஈட்டி என்ன பயன். நண்பனுக்கு நம்பிக்கை துரோகம் இழைத்தேன். நட்பைக் கொன்று அவன் மனைவியை அடையத் துணிந்தேன். கெடுமதி என்னுள்ளே குடிகொண்டதற்கு காரணம் பொருள் வேட்கையே. இனி அவ்வேட்கை தணிந்தாலும் ஈட்டிய நற்பெயர் விட்டு விலகியது விலகியதே. அது மீண்டும் திரும்பவதற்கில்லை. ஈட்டிய நற்பெயரின்றி எவ்வாறு நாடு திரும்புவேன்.” என்று நானும் சரியில்லை இவ்வுலகும் என்னை ஏற்கபோவதில்லை என்ற மனநிலை - மீண்டும் அழுத்த அழுத்தத்தோன்றிய - பெரும்பள்ளம் அவனை உள்ளே அழைத்தது. அக்குழியை நிரப்ப அவன் விதியும் பரிந்துரை செய்தது. அவனும் விழைந்தான். உடனே கையில் அணிந்திருந்த வைர, வைடூரிய மோதிரக்கல்லை விழுங்க கடித்தான், அவையும் கட்டிடத்தை விட்டு விலகி அவன் வயிற்றினுள் விழ்ந்தது. அறுபட்ட வயிற்றில் உதிரம் வெளியே