சீவக சிந்தாமணி - 3

 

 சீவக சிந்தாமணி - 3




1.     சுரமஞ்சரியார்  இலம்பகம்.

 

நாளிரண்டு  கழிந்த  பின்பு  தோளிரண்டை  ஒத்த  தோழர்கள்

            சீவகன்  திருவடி  வணங்கி  திருமணம்  செய்த  பெண்களின்

பெயர்களைக்  கூறச்  சொல்ல  துறவியும்  மயங்கிச்  சாயும்

            சுந்தரி  விமலை  என்று  நண்பர்கட்கு  நம்பி  சொன்னான்                     648

 

புத்திசேனன்  புன்னகைத்தான்  சீவகனை  நோக்கி  சொன்னான்

            நீர்  சென்ற  ஊரிலெல்லாம்  தேன்  சிந்தும்  மாலை  அணிந்த

தேவியரை  மணந்து  முடித்து  காமனென  வலம்  வருகிறாய்

            முழுமதி  போல்  ஒரு  மங்கை  இந்நகரில்  உள்ளாள்  என்றான்             649

 

ஆடவர்  பெயரைக்  கேட்டாள்  அதிர்ந்திடும்  அழகிய  உடல்

            ஆண்கள்  அவள்  வீதியில்  சென்றால்  ஆவியைப்  பிரிவேன்  என்றாள்

காமனே  தன் எதிர்  வந்தாலும்  காணேன்  அவன்  உருவம்  என்றாள்

            நீ  அவளை  மணம்  முடித்தால்  காமத்திலகன்  என்றழைப்போம்      650

 

வண்டு  தேனும்  வில்லின்   நாணாய்  மலர்களை  அம்பாய்  கொண்ட

            காமனின்  கோட்டம்  சென்று  மறைந்திரு  சிலைக்குப்  பின்னே

சுரமஞ்சரி  மனதின்  உள்ளே  மணங்கொள்  ஆண்  பெயர்  பொறித்து

            காதலில்  மயங்கச்  செய்வேன்  காத்திரு  தோழர்காள்  என்றான்        651

 

அந்தணக்  கிழவன்  வடிவில்  கோலுடன்  வடிவம்  கொண்டான்

            தாங்கொணா  பசியினோடு  தள்ளாடி  அவள்  மனைசென்றான்

தடுத்தனர் காவலர்  அங்கு  தன்  பசிஎடுத்துச்  சொன்னான்

            காவலர்  உள்ளே  அனுப்ப  கன்னிமாடம்  வாயில்  வந்தான்                  652


காத்திடும்  கன்னியர்கள்  கூடி  கடுஞ்சொல்லில்  அவனைச்  சூழ

            கண்டனர்  அவன்  நிலையை  கருணையால்  பேசலுற்றார்

சோர்ந்த  இம்முதிய  அந்தணர்  தொட்டாலே  இறப்பார்  போலும்

            நங்கையிடம்  நாம்  உரைப்போம்  நடப்பதை  அவளுரைப்பாள்          653

 

தோழிகள்  சொல்லக்  கேட்டு  தோகை  மயில்  சுரமஞ்சரியும்

            பொன்மாடம்  விட்டிறங்கி  மென்னடி  எடுத்து  வைத்தாள்

சிற்றடி  சிலம்பு  சிணுங்க  செவ்விடை  மேகலை  குலுங்க

            பொன்மலரடி  குழய  நடந்து  மறையோனை  காண  வந்தாள்            654                  


வேதியனை  நோக்கிக்  கேட்டாள்  வேண்டி  வந்த  காரியந்  தனை

            நெஞ்சம்  வருத்தும்  நீருடைய  குமரியில்  நீராட  வந்தேன்

வருங்காலம்  முன்னே  வந்து  வாட்டிடும்  இந்த  முதுமை

            என்னை  விட்டு  அகலும்  என்றான்  எழில்  உடைய  சீவக நம்பி           655

 

குமரி  ஆடி  இளமைப் பெறும்  குறுக்கு  வழி  செல்லும்  இவர்

            சித்தம்  பெரிதும்  பேதலித்த  பித்தன்  என  என்று  எண்ணி

இவன்  உற்றபசி  போக்கிடுவோம்  உணவு  சமைத்து  வருக  என

            பணிப்பெண்களை  பணித்தாள்  பால்  மொழியாள்  சுரமஞ்சரி          656

 

நறுமண  நெய்  மேனியில்  பூசி  நன்னீரில்   நீராடச்  செய்து

            தூய  நல்ல  ஆடைகள்  தந்து  துலங்கும்  பொன்  பூணூல்  தந்து

செம்பொன்  கலத்தினிலே  செங்கர  மகளீர்  உணவு  தர

            அறுசுவை  கொண்ட  உணவை  அகமகிழ்வில்  உண்டான்  அவன்     657

 

உணவுண்ட  களைப்பினையும்  உடன்  வரும்  நித்திரையையும்

            மஞ்சரிக்கு  காட்ட  எண்ணி  மென்  மொழியில்  கூறலானான்

கால்கள்  மிக  வலிக்கின்றன  கண்கள்  துயில  துடிக்கின்றன  என்றிட

  கட்டிலின் படுக்கை  மேலே  கண்ணுறங்கு  என்றாள்  மஞ்சரி             658

 

மென்  மலர்  மஞ்சத்தின்  மேல்  மெல்லவே  சாய்ந்த  நம்பி

            காந்தர்வ  மணத்தினை மனம் கடிதில்  முடிக்க   எண்ணியதால்

தேவர்களும்  நாடி  கேட்கும்  தேவாமிர்த  கானம்  ஒன்றை

            தன்  உருவத்தை  மறைத்து  தென்றலென  பாடலானான்                       659


இசைக்  கேட்ட  இளங்கன்னியர்  மன்மதனின்  குரெலென்றார்  சிலர்

            சுரமஞ்சரி  மனதில்  வாழும்  சீவகனின்  குரலென்றார்  சிலர்

தேனிசை  மழையென  பொழியும்  தேவலோகமே  உருகும்  இசையில்

            மஞ்சரியும்  மயங்கி  விட்டாள்  மனம் இசையில்  ஆழ்ந்ததாலே           660

 

ஆடவரை  இவள்  அறவே  வெறுத்தாள்  அமைந்து  விட்ட  நிகழ்ச்சி  கேட்டு

            சுண்ணத்தை  சீவகன்  பழித்தான்  துறந்து  விட்டாள்  ஆடவர்களை

தீமை  இவளுக்கு  செய்த  சீவகன்  செத்து  விட்டான்  என்று  எண்ண

            தத்தை  சொன்ன மொழியினில் தலைவன் உள்ளான் என்றறிந்தாள் 661

 

உம்  திருமுகத்தைக்  கண்ட  மஞ்சரி  சினம்  தணிந்த  முகம்  கொண்டாள்

            நங்கையர்கள்  நயந்து  கேட்டனர்  நல்லிசை  ஒன்று  பாடச்  சொல்லி

மஞ்சரியின்  மாசற்ற  முகம்  நோக்கி  மது தளும்பும்  இனிமையுடன்

            மகரயாழ் இருகையில்  எடுத்து மதுரகானம் பொழியலானான்      662        

               

சுதஞ்சணன்  சொல்லித்  தந்த  சொர்க  இசையை  அவனிசைக்க

            வளையணிந்த  மங்கையர்கள்  வசமிழந்த  மயிலை  ஒத்தர்

ஆடகச்  செம்பொற்பாவை  அந்தணனை  மிகப்  புகழ்ந்து

            காமன்  கோயில்  வழிபாட்டில்  சீவகன்  வரம் கேட்பேன்  என்றாள்  663

 

பொன்மணி  மாலை  அணிந்து  பிறைநூதலில்  பட்டம்  சூட்டி

            எருதினை  வண்டியில்  பூட்டி  ஏந்திழையாள்  கோலுடன்  ஓட்ட

  சுரமஞ்சரி  தன்  தோழியருடன்  சீவகனை  பெறம்  வரம்  கேட்க

            காமனின்  கோட்டம்  தன்னில்  காலினை  பதித்து  நின்றாள்               664

 

காமனின்  சிலையின்  முன்னே கரங்களை  கூப்பி  வணங்கி

            காளையாம்  சீவக  நம்பியை  கரம்  பற்ற  வைத்தாயாகில்

கன்னலின்  வில்லும்  அம்பும்  கவர்ந்திடும்  மகரக் கொடியும்

            தேருடன்  ஊரையும்  சேர்த்து  திருவிழா  செய்வேன்  என்றாள்             665

 

சிலை  பின்னால்  வீற்றிருந்த  சீவகன்  நண்பன்  புத்திசேனன்

            நின்  மனதின்  விருப்பம்  போல  நீ விரைவினில்  அடைவாய்  எனறான்

தெய்வமே  திருவாய்  மலர்ந்து  செப்பிய  அருளாய்  எண்ணி

            மங்கையும்  மனம்  மகிழ்ந்து   மனையது  திரும்பி  வந்தாள்                 666


செவ்வடியில்  கழல்  பொருந்த  செவியினில்  குண்டலம்  ஒளிர

            மாலையும்  மண்டிய  குழலுமாய்   மதிமுகம்  ஒளியில்  சிவக்க

மணவறையில்  வீற்றிருந்த  மதன்  ஒத்த  சீவக  நம்பியை

            மாவடு கடைக்கண்ணால் நோக்கி மருண்டிட்டாள் மானைப் போல  667

 

மன்மதன்  மலர்  அம்பு  பொழிய  மங்கையோ  நாணித்  தெளிய

            தெய்வமாய்  உன்னை  ஏற்றேன்  செவ்வடி  பணிய  வந்தேன்

அன்புடன்  உம்அருளைப்  புரிந்து  அணைத்து  என்னை  ஏற்க  என்றாள்

            சீவகன்  அவளை அணைத்தான் திருமார்பின் மாலை குழைந்தது    668           

        

காந்தர்வ  ணம்  புரிந்தனர்  கன்னியும்  காளையும்  அங்கு

            குங்கும  குழம்பு  மார்புடன்  குவிந்த  மென்  தனங்கள்  இணைய

மேகலை  ஒலியுடன்  ஒதுங்க  மென்னடி  சிலம்புகள்  ஒலிக்க

            தமிழ்  அகப்  பொருள்  கூறும்  தன்மையில்  புணர்ந்தனர்  இருவரும் 669

 

நண்பரை  நாடிச்  சென்றான்  நமது  காமத்திலகன்  நம்பி

            மஞ்சரியை  திருமணம்  பேச  தக்காரை  அனுப்பி  வைத்தான்

வெம்மைத் தேனை  வாயில்  கொண்டு விழுங்கவும்  உமிழவும் இயலாமல்

            மறுக்கவோ ஏற்கவோ மனமின்றி மயங்கி நின்றான் குபேரதத்தன்    670

 

சுரமஞ்சரி  எண்ணம்  என்றும்  சீவக  நம்பியை  மணப்பதாகும் -என

            செவிலித்தாய்  எடுத்துரைத்தாள்  பெற்ற  நற்றாயான  சுமதிக்கு

சுண்ணத்தில்  நேர்ந்த  நிலையால்  சுரமஞ்சரி  கன்னிமாடம்  சென்றாள்

            இந்த  நிலை  நமக்கு  என்றும்  பாற்கடலில்  தேன்  மழை  என்றாள்     671

 

குபேரதத்தன்  மனமது  மகிழ்ந்து  சுற்றத்தார்க்கு  மணவோலை  அனுப்பி

            பொன்னோடு  பொருள்கள்  அள்ளி  யாவர்க்கும்  மகிழ்ந்து  அளித்து

மங்கல  ஒலிகள்  இசைக்க  மக்கள்  எல்லாம்  வாழ்த்து  கூற

            சுரமஞ்சரியை  சீவகனுக்கு  திருமணம்  செய்து  வைத்தான்                 672

 

நூற்றெட்டு  நுண்ணிடை  மாதரும்  ஒன்றரை  கோடி  செம்பொன்னும்

            வளம்  தரும்  மூன்று  ஊரும்  மஞ்சரிக்கு  சீதனம்  தந்தான்

மேரு  ஒத்த  சீவக  நம்பியும்  மெல்லிடையால்  சுரமஞ்சரியும்

            அன்புடன்  இல்லறக்  கடலில்  அமிழ்ந்தமிழ்ந்து  முத்தெடுத்தனர்       673


நங்கையைப்  பிரிய  எண்ணி  நயம்பட  நம்பி  சொன்னான்

            நின்னை  நான்  பிரிவேன்  சிலநாள்  பிரிவினில்  அன்பு  பெருகும்

மன்னனே  உன்  விருப்பம்  என்றும்  மனைவி  என்  விருப்பம்  ஆகும் - என

            சுரமஞ்சரி  சொல்லுதிர்க்க  சீவகன்  சென்றான்  தன்  இல்லம்             674

 

அரசன்  ஒற்றன்  அறியா  வண்ணம் அசைவினால்  செய்தி  சொல்ல

            சுற்றமும்  நட்பும்  சூழ்ந்து  சீவகனை  காண  வந்தனர்

தத்தையும்  மகிழ்சி  கொண்டாள்   குணமாலையை  காணச்  சொன்னாள்

            நம்பியும்  அங்கு  சென்று  நங்கையை  மகிழச்  செய்தான்                    675

 

குணவதி  குணமாலையுடன்  கூடியே  நல்துயில்  கொண்டான்

            சுநந்தையும்  அகம்  மகிழ்ந்தாள்  சுந்தர  மகன்  வருகையால்

அடுத்து  நடக்கும்  செயல்களை  தந்தைக்கு  எடுத்து  சொல்லி

            குதிரை  வணிகன்  வேடம்  ஏற்று  தோழர்  சூழ  நகர்  நீங்கினான்       676

 

 

                                    சுரமஞ்சரி  இலம்பகம்  முற்றிற்று.

 

10 .    மண்மகள்  இலம்பகம்.

 

குடம்  ஒத்த  பால்  மடியும்  குறுந்தடி  போல்  காம்புகளும்

            குவளைமலர்  மேயும்  வாயும்  கொடி  படரும்  கொம்பும்  கொண்ட

எருமைகள்  சொரியும்  பால்  இளந்தாமரை  இலையில்  நிற்க

            நாரைக் குஞ்சுகள் உண்ணும்  நன் மருதம் கடந்து சென்றனர்   677

 

நீரையும்  பாலையும்  பிரிக்கும்  நெடு  ஆற்றல்  கொண்ட  அன்னம்

            சஞ்சலம்  சங்கினைத்  தான்  பெடையென  தழுவச்  செல்ல

சங்கென  அறிந்த  பின்பு  தன்  சஞ்சலத்தில்   குழம்பித்  திரும்பும் 

            நெய்தலின்  நிறை  எழிலை  நெஞ்சினில்  பருகி  சென்றனர்                678

 

வான்  தொடும்  கொன்றை  மரங்கள்  வழங்கிடும்  குளிர்  நிழலில்

            கொம்புடை  ஆண்  பெண்  மான்கள்  குலவியே  துயில்  கொண்டிருக்க

இளமகளீர்  எழிலைப்பாடும்  இளம்பரிதி  ஒத்த  ஆடவர்  போல்

            முல்லையை  மொய்க்கும்  வண்டுடை  முல்லை  நிலம்  கடந்தனர்    679


நிறை  மூங்கில்  நெருங்கி  வளர்ந்து  நீர்  கொட்டும்  மலைச்சாரலில்

            நீள் கொம்பு  யானைக்  கூட்டம்  நின்று  நீர்  ஆட்டம்  போடும்

சந்தன  மரங்கள்  நிறைந்து  நறுமணம்  கமழ்ந்து  வீசும்

            குறத்தியர் தினைபுனம் கொண்ட குறிஞ்சியை பிரிந்து சென்றனர்   680

 

காலத்தில்  பெய்திடும்  மழையால்  கன்னல்  கமுகு  கதளியும்  பெருகி

            சிறுமுக  மந்திகள்  இருகையால் செங்கனிகளை  எறிந்து  ஆடும்

அருவிகள்  நீரால்  ஆறுகள்  நிறைந்து  காடென  செழித்த  பொழில்கள்

            நிறைந்திட்ட  விதேக  நாட்டுக்கு  நண்பருடன்  வந்தான்  நம்பி            681

 

வெண்மணல்  வீதியில்  பரப்பி  வீட்டினில்  தோரணம்  கட்டி

            கமுகொடு  தெங்கின்  குலைகள்  செவ்வனே  வரிசைப்  படுத்தி

வனம்  கடல்  தந்த  பொருள்களை  வழிதோரும்  குவியலாக்கி

            வளைக்கரங்கள்  மலரைத்தூவி  வரவேற்றனர் சீவக  நம்பியை           682

 

பேரழகு  மகளீர்  அணிந்த  பிறை  நூதல்  பட்டம்  ஒளிர

            கரங்களில்  மழலைகள்  ஏந்தி  காரிகைகள்  கால்  சிலம்பொலிக

இளந்தளிர்  எழிலுடை  மாந்தர்  இடை  அணி  மேகலை  சிணுங்க

            இளமாறன்  சீவகனைக்  காண  திரண்டது  மகளீர்  கூட்டம்                   683

 

தேன்  சிந்தும்  மலர்மாலை  சூடிய  திருநிறைச்  செல்வா  வருக

            மின்னலுடை  மேகம்  தங்கும்  மலை  பிளந்த  முருகா  வருக

காதி  கர்மங்கள்  வென்ற  கற்பகத்  தேவனே  வருக          

            கண்கவர் எழிலுடை ஏறே  காமனின்  உருவே  வருக  என்றனர் 684

 

மங்கல  முரசுகள்  ஒலிக்க  வளைந்த  நல்  கொம்புகள்  ஊத

            பைங்கொடி  பணிமகளீர்  சேர்ந்து பல  மலர்கள்  தூவி  நிற்க

பட்டத்து  அரசிகள்  நம்பியை  பாசத்தில்  விழியால்  அணைக்க

            மாமனின்  மாளிகை  உள்ளே  மதகளிறு  போல்  நடந்தான்                  685

 

மலர்ந்த  மலர்களில்  இருந்து  மகரந்தப்  பொடிகள்  சிந்த

            ஒடிந்திடும்  இடையின்  மேலே  ஒளிர்ந்திடும்  மேகலை   மின்ன

செம்பருத்தி  குழம்பு  தோய்ந்த  சிற்றடி  மண்  ஊன்றி  நின்று

            மாணிக்க  கொத்தாய்  அங்கு  இலக்கணை  தாதியுடன்  நின்றாள்    686


அண்ணலும்  அவனை  நோக்கினான்  அவளும்  அவனை  நோக்கினாள்

            அடங்கொண்ட  விழிகள்  நான்கும்  அவர்களை  மதிக்கவில்லை

அவன்  உள்ளேஅவள்  நுழைந்தாள்  அவள்  நெஞ்சில்  அவன்  விழுந்தான்

            ஐங்கணையான்  தன்  ஆடலை  அங்கேயே  துவங்கி  விட்டான்            687

 

வீரக்கழல்  அணிந்த  மாமன்  கோவிந்தன்  தாள்  பணிந்தான்

            அண்ணலை  ஆரத்தழுவி  அணைத்து  ஆனந்த  கண்ணீர்  கொண்டான்

மன்னனின்  கண்ணீர்  கண்டு  மாளிகை  வாழ்  மக்களெல்லாம்

            மலையில்  அழும்  மயில்  கூடமாய்  மயங்கியே கண்ணீர் சிந்தினர்  688

 

மாமனும்  மருமகனும்  கூடி  மற்ற  நல்  அமைச்சர்களுடன்

            மேற்கொண்டு  ஆய்தல்  பற்றி  மந்திர  ஆலோசனை  செய்ய

கட்டியங்காரன்  அனுப்பிய  முத்திரை  இட்ட  ஓலையை

            விரிசிகனைப்  படிக்கச்  சொல்லி  செவியுற  இருந்தனர்  அங்கு          689

 

விரிசிகன்  படிக்கலானான்  விதேக  நாட்டு  வீரவேந்தனே

            சச்சந்தனை  கொன்றேன்  என்ற  சதிப்  பழி  என் மேல்  விழுந்தது

மதங்கொண்ட  அசணிவேகத்தை  மன்னன்  சச்சந்தன்  அடக்க

            மதக்களிறு  மார்பைப்  பிளக்க  மாய்ந்திட்டன்  மன்னன்  அன்று         690

 

விதேகத்தின்  வேந்தே  கோவிந்தா  உனக்காக  உயிரை  விடுவேன்

            நீ  இங்கு  வந்தாயாகில்  என்  பழி  என்னை  விட்டு  அகலும்

இனி    ஏமாங்கத  நாட்டு  அரசன்  கோவிந்தன்  நீ என  அறிவிக்கின்றேன்

            தாமதம் இன்றி வரவேண்டும் என தந்திர வார்த்தையில் முடித்தான் 691

 

சீவகன்  உட்பொருளை அறிந்து  சிந்தையில்  நகைத்துச்  சொன்னான்

            காலனே  கட்டியங்காரனை  கை  அசைத்து  கூப்பிடுகின்றான்

அரசநூல்  கல்வியில்  தேர்ந்த  அவையோரே  அமைச்சர்களே

            இவனை நாம் கொல்வதற்கு இதைவிட தருணமில்லை என்றான்        692

 


கள்ளத்தால்  நம்மைக்  கொல்ல  கருதிய  கட்டியங்காரனை

            வஞ்சத்தால்  வைத்துக்  கொல்வோம்  வெளியினில்  கூற  வேண்டாம்

கட்டியங்காரனோடு  கனிந்தது  நம்  நெருங்கிய  நட்பு  என்று

            முழங்கட்டும் முப்பெரும் முரசு கூடட்டும் நம் படைகளென்றான்    693     

                 

கட்டியங்காரன்  நட்பால்  துண்டித்த  வணிகம்  தொடரும்

            நீரொடு  நெல்லும்  பொன்னும்  இருநாடும்  வழங்கிக் கொள்ளும்

விளைவினை  வதந்தி  ஆக்கினால்  வெட்டுறும்  வீணர்கள்  நாக்கு

            வள்ளுவன்  முரசு  அறைந்தான்  விதேகத்தின்  நாடு  நெடுகவும்    694              

         

சினந்து  சீறும்  யானைப்  படையும்  சிறந்த  கொடியுடை  தேர்ந்த  தேர்களும்

            வாயுவென  பறக்கும்  பரிகளும்  வலக்கை  வாள் ஏந்திய  வீரர்களும்

சங்கொடு  மத்தளம்  முரசொலிக்க  சமுத்திரமே  நாணும்  வண்ணம்

            நிலமகள்  நெளிந்து  வருந்த  நால்படை  திரண்டது  நகரில்                   695

 

சிறிய  வெண்சங்குகள்  ஒலிக்க  திண்ணிய  முரசுகள்  முழங்க

            நல்லதோர்  நிமித்தம் பார்த்து  நிறைகுடத்தோடு  பறவைகள்  ஒலிக்க

அரசனின்  வலக்கண்  துடிக்க  அலையொலியாய்  படையொலி  எழும்ப

            ஏமாங்கத  நாட்டை  நோக்கி  எழுச்சியில் நகர்ந்தது   படைகள்           696

 

  அவனை எமன்  தேடிவந்ததை  அறியாத  அரசன்  கட்டியங்காரன்

            வெண்கொம்பு  வேழம்  இருநூறும்  விரைந்திடும்  தேர்கள்  நூறும்

புயல்  ஒத்த  பரிகள்  ஆயிரம்  பொன்மணி  அணிகலங்களோடு

            விதேகத்து  வெற்றி  வேந்தனை  வரவேற்க  அனுப்பிவைத்தான்         697

 

வரிமணானன்  என்னும்  வேழத்தையும்  விசயம் எனும்  பெயருடை தேரையும்

            பவணவேகம்  என்னும்  பரியையும்  பொன்மணி  மாலைகளோடு

களித்திடும்  உள்ளத்துடனே  கட்டியங்காரன்  மனம்  மகிழ

            இருமடங்கு  சிறப்புகள்  செய்து  எதிரிக்கு  அனுப்பினான்  விதேகன்             698

 

குணம்  கொண்ட  கோவிந்தராசன்  குணமகள்  இலக்கணைக்கு

            கணவனைத்  தேர்ந்தெடுக்க  கடும்  வில்  போட்டி  வைத்தான்

சுழன்றிடும்திரிபன்றிகள்தனை துள்ளியமாய் ஓர்  அம்பு  கொண்டு  வீழ்த்தும்

ஒப்பற்ற ஓர் வீரனுக்கு இலக்கணை மனைவியென அறிவித்தான்  699  

 

வட்டமிடும்  பொறி  பன்றியை  வனித  நாட்டை  ஆளும்  அரசன்

            கூர்நோக்கில்  அம்பை  எறிய  குறிதவறி  பறந்தது  அம்பு

அஸ்தினாபுரத்து  அரசனும்  காம்பிலி  நாட்டு  காவலனும்

            கோசல  நாட்டு  வேந்தனுடன்  குனிந்தனர் தலை தோல்வியாலே   700

 

அவந்தி  நாட்டு  மன்னன்  வந்து  அம்பு  எய்து  தோல்வி  கண்டான்

            மகத  நாட்டு  மன்னன்  அம்பும்  பொறி  தொட்டு  பொடித்து விழுந்தது

கலிங்க  ராஜன்  தொடுத்த  அம்பு  கடந்தது  பொறியைத்  தாண்டி

            காசி  வேந்தன்  விட்ட  அம்பு  கடைசியில்  வீழ்ந்தது  மண்ணில்           701

 

இன்னும்  பல  மன்னர்கள்  முயன்று  இறுதியில்  அடைந்தனர்  தோல்வி

            சென்றன  நாட்கள்  ஆறு  ஜெயித்தவர்  யாரும்  இல்லை

வெற்றிவேல்  உடைய  சீவகன்  வேழத்தில்  ஏறி  அமர்ந்தான்

            பொறியுடை  பொன்பன்றியை  பொறி  விட்டு  அகற்ற  சென்றான்    702

 

சீவகனை  கண்ட  கட்டியங்காரன்  சிந்தையில்  அஞ்சம்  கொண்டான்

            சுற்றிடும்  மூன்று  பன்றிகளும்  சேர்ந்திடும் நேரம் கணிக்க

இரண்டு  நாழிகை  நேரம்  நோக்கி  இதயத்தால்  அளந்து  கொண்டு

            சீவகன்  விரைந்து  சென்றான்  சுழன்றிடும்  சக்கரம்  அருகில்             703

 

முறிந்திடாத  கொம்பில்  கட்டிய  அறுந்திடாத  நாணைப்  பற்றி

            தருமநெறிகள்  காத்து  நிற்கும்  தவத்தோர்கள்  உள்ளம்  போன்று

அம்பினை  வில்லில்  பொருத்தி   ஆழ்ந்து  ஆராய்ந்து  குறியுடனே

            அம்பினை  எய்தான்  சீவகன்  அறுபட்டு  வீழ்ந்தது  பன்றிகள்              704

 

பன்றிகள்  மூன்றும்  வீழ்ந்தன  படை  முரசுகள்  அதிர்ந்து  முழங்கின

            சீவகன்  என்னும்  சிங்கம்  கட்டியங்காரன்  என்ற  களிறை

அழித்திட்டு  தன்  குலம்  காத்து  அரியனை  பெறுவான்  என்று

            வானிலே  தோன்றிய  இயக்கன்  வாய்மொழி  பகர்ந்தான்  அங்கு      705

 

கட்டியங்காரன்  படையும்  சீவக  நம்பியின்  படையும்

            இருகடல்  கலக்கும்  நீர்  போல்  இணைந்தன  போர்  களத்தில்

செங்குருதி  ஆறாய்  ஓட  சிரங்கள்  பனங்காய்களாய்  உருள

            நரிகளும்  நாயும்  கழுகும்  நாடின பிணங்களின்  ஊடே                         706

 

விசயனின்  வாளின்  வீச்சால்  மதனின்  தலை  மண்ணில்  வீழ

            அவனிளவல்  மன்மதன்  பாய  அவனை  வீழ்த்திட்டான்  வேழத்தாலே

நான்மறையோன்  புத்திசேனன்  திரிபுரம்  எரித்த  சிவனாய்  மாறி

            அரசர்கள்  சிரங்களைக்  கொய்து  ஆழிசூழ்  புயலாய்  நின்றான்        707


மகதநாட்டு  மன்னன்  படை  மாய்ந்தது  தேவதத்தன்  வீச்சால்

            கலிங்கத்து  அரசன்  படை  கலைந்தது  சீதத்தன்  செயலால்

உலோகபாலன்  விட்ட  அம்பு  உடைத்தது  காம்பிலி  மன்னன்  மார்பை

            பதுமுகன் வெட்டி சாய்த்தான் படைத்தலைவன் காமுகன் தலைய    708

 

கட்டியங்காரன்  மைந்தர்கள்  சீவகன்  அம்பால்  மாய்ந்தனர்

            கட்டியங்காரன்  வந்தான்  கர்வத்தின்  சீற்றங்கொண்டு

சீவகன்  நாண்  தொடுத்தான்  கட்டியங்காரன்  உயிர்  எடுத்தான்

            கொட்டியது  வெற்றியின்  முரசு  குளிர்ந்தது  விசையை  மனது        709

 

                                    மண்மகள்  இலம்பகம்  முற்றிற்று.


 

11.  பூமகள்  இலம்பகம்.

 

செவ்விழிகள்  கொண்ட  சீவகன்  சிந்திடும்  அருள்  நோக்காலே

            உள்ளத்தைக்  கவர்ந்து  வென்று  போர்களத்தை  வலம்  வந்து

வண்டுகள்  மொய்க்கும்  மலரால்  மாலைகள்  தொங்க  விட்ட

            ராசமாபுரத்தில்  நுழைந்தான்  நன்மக்கள்  கை கூப்பி  வணங்க         710

 

கூண்டில் அடைபட்ட  புலியும் குகையில்  வாழ்சிங்கமும்  போன்ற

            பகைவர்களை  அழித்து  வென்று  பவனி  வரும்  சீவகனைக்  காண

முத்துமணி  மாலைகளோடு  மலர்ந்த  மலர்  மாலைகள்  கொண்ட

            மகளீர்கள்  வெண்  மாடங்களில்  மயில்  கூட்டம்  போல்  நின்றனர்    711

 

குணமாலையை  மணந்ததனால்  கொடுந்துன்பம்  உற்றான்  நம்பி – என்ற

            பழியது  நீங்கியது  இன்று  என  பகர்வோர்கள்  பலரும்  உண்டு

பட்டத்து  யானை  அம்பாரி  மேல்   பவனி  வரும்  சீவக நம்பி  மேல்

            பாவையர்கள்  தூவும்  மலர்கள்  தேவர்கள்  பூமழையாய்  நின்றது 712        

              

ஆர்த்திடும்  முரசொலி  கொம்புடன்  அரண்மனை  நுழைந்தான்  நம்பி

            இள ஞாயிறு  கண்ட  ஆம்பலாய்  இருண்டன  மகளீர்  முகங்கள்

கட்டியங்காரனைச்  சார்ந்த  மகளீர்  கடுஞ்சேனை  நுழைவைக்  கண்டு

            கதறினர்  மனதுக்குள்ளே  கண்ணீரை  கொட்டி  நின்றனர்                   713

 

மலரணை  பதித்தல்  இன்றி  மண்ணினை  அறியா  பாதம்

            தரையினில்  பதிந்ததாலே  சிவந்தன  சிறிய  அடிகள்

கலங்கின  மை  கொண்ட  விழிகள்  கரித்தன  கண்ணீர் வாயில்

            தெரித்திடும்  துக்கத்தாலே  சேர்ந்தனர்  அரண்மனை  வாயில் 714

 

சீவகன்  நயந்து  கேட்டான் சிறந்த  தன்  ஏவலரை  நோக்கி

            கட்டியங்காரன்  தேவி  இக்கூட்டத்தில்  யாருளர்  என்று

மன்னனும்  அவன்  மைந்தர்களும்  மாய்ந்தனர்  களத்தில்  என்றான்

            மாது  அவள்  அதனைக்கேட்டு  மயங்கித் தன்  உயிரை  நீத்தாள்         715 

 

நம்பியே  நங்கைகட்குச்  சொன்னான்  நஞ்சென முதலில்  கொதித்தேன்

            வெஞ்சினம்  அணைவதற்கு  விழ்த்தினேன்  கட்டியங்காரனை

கருநிற  நாகப்பாம்பு  ஒன்று  கருடன்  வயப்பட்டது  என்று

            கலங்கிட  வேண்டாம்  உங்களை  காப்பது  என்  கடமை  என்றான்    716

 

இனியொரு  நாளும்  நீங்கள்   இன்னல்  என்னால் படமாட்டீர்கள்

            மன்னனால்  பெற்ற  பொருள்கள்  மறுபடியும்  நீங்கள்  பெறுவீர்

மனமது  இந்நாட்டில்  என்றால்  மகிழ்ச்சியுடன்  தொடரட்டும்  வாழ்வு

            வேறிடம் செல்ல நினைத்தால் வேந்தனாய் அனுப்பவேன் என்றான்   717

 

பொன்மதில்  சூழ்ந்த  மனையை  கை விளக்கு ஏந்திய  வீரர்கள்

            கருவூல  அறையைச்  சேர்த்து  கண்டனர்  பிற  இடங்களையும்

நன்றென  அறிந்து  ஆய்ந்து  மனமது  தெளிந்த  பின்னே

            சீவகன்  அரண்மனை  உள்ளே  செவ்வடிகள்  எடுத்து  வைத்தான்       718

 

வெண்பட்டாடைகள்  அணிந்து  பொன்மணி  மாலைகள்  பூட்டி

            காமனே  மயங்கும்  வண்ணம்  களிறை  கொன்ற  சிங்கம்  போல

அயல்  நாட்டு  மன்னர்கள்  சூழ  அரியணையில்  சீவகன்  இருக்க

            தோழர்கள்  தம்பிகள்  மாமனும்  கந்துக்கடனுடன்  வந்தனர்  அங்கு   719

 

சுதஞ்சணதேவன்  வந்தான்  சூழ்ந்திடும்  தன்  தேவியருடன்

            வித்யாதர  நகரில்  இருந்து வந்தன முடிசூட்ட  பொருள்கள் 

 பாற்கடல்  நன்னீர்  கொண்டு நூற்றெட்டு  பொற்குடங்களால் 

            மன்னனுக்கு நன்னீராட்டி    மணிமுடி  கிரீடம்  சூட்டினர்                        720

 

வின்னவர்  இச்செய்தி  அறிய  முழங்கின  தேவதுந்துபிகள்

            மகர  யாழ்  ஒலிக்கு  ஏற்ப  மங்கையர்  ஆடி  மகிழ்ந்தனர்

வாய்ப்பாடின்  மென்னொலியோடு  வாசிக்கும்  வாத்திய  ஒலியுடன்

            காணிக்கை மன்னர்கள்  வழங்க கடிகையர்  மங்கலம்  பாடினர்        721

 

சிறியவன் தம்பி  நந்தட்டனிடம்  சிறைகளை  இடிக்கச்  சொன்னான்

            ஈரெட்டு  ஆண்டு  காலம்  வரியினை  விலக்கச்  சொன்னான்

இறையிலி  நிலத்தை  எல்லாம்  உடையோர்க்கு  ஈந்தச்  சொன்னான்

            பசி  பிணி  பொருந்தாப்  பகை  ஏமாங்கத்தில்  இல்லை  என்றான்     722

 

விழிவழி  நோக்காதோர்க்கும்  நோயால்  உடல்  தளர்ந்தவர்க்கும்

            பரத்தையின்  மோகத்தாலே  கைவிட்ட  பத்தினியோர்க்கும்

வாழுவதற்கு  வீடும் பொருளும்    வழங்குக  தடையின்றி என்று

            சீவகன்  மனம்  ஆணை  இட  சீரியது  முரசுகள்  நாட்டில்                       723

 

                     

                                            பூமகள்  இலம்பகம்  முற்றிற்று



                                    12 .     இலக்கணையார்  இலம்பகம்.


 

தம்பியரை அழைத்தான் நம்பி தன் தேவியரை அழைத்துவரச்  சொன்னான்

            வெள்ளருவி  வனம்  மலை  கடந்து  விரைந்தனர்  அவர்கள்  நாட்டுக்கு

அண்ணியரை  அழைத்துக்  கொண்டு அழகு  இராசமாபுரம் திரும்பினர்

            அழகிய மயில்கள் கூட்டமாய்   அரண்மனைக்கு  வந்து  சேர்ந்தனர்   724

 

 

பிரிந்ததில்  மெலிந்த  மேனியுடனும்  சேர்ந்ததில்  ஆனந்த  கண்ணீருடனும்

            சீவகன்  செவ்வடிகள்  இரண்டையும்  ஒரு  சேர  வீழ்ந்து  வணங்கினர்

அன்புடனன்  அவர்களை அணைத்து   அருளுடன்  தழுவிக்  கொள்ள

            கலங்கிய  கயல்விழி  நீரோ  காதுகள்  வரை  நீண்டு  ஓடின                   725

                                   

சேடியர்கள்  ஒன்றாய்  கூடி  திருத்தினர்  அரசியர்  அழகை

            மேனியில்  சந்தனம்  பூசி  மணிமலர்  மாலைகள்  சூடி

காதினில்  குண்டலம்  பொருத்தி  கை  இடையில்  மேகலை  கட்டி

            காமனாம்  சீவகன்  கண்டு  காமுற்று  மகிழச்  செய்தனர்                    726            

                  

மாமன்  மகள்  இலக்கணையை  மணம்  முடிக்க நாள்  குறிக்க

            சிவிகையுடன்  வேழத்தையும்  சிறப்பினால்  பெற்ற  சோதிடன்

நல்ல நாள்  நல்  ஓரையோடு  நல்ஊழ்வினையும்  சேர  ஆய்ந்து

            நம்பிக்கு  நாட்கள்  தன்னை  நயமுடன்  விளக்கிச்  சொன்னான்         727

 

சிறந்த  ஒரு  மங்கல  நாளைசீவகனும்  ஆய்ந்து  அறிந்த  பின்

            முரசுகள்  வேழம்  முதுகில்  முறையுடன்  பொதிந்து  கட்டி

மேனியில்  சந்தனம்  பூசி  மென்முத்து  மாலைகள்  அணிந்து

முரசறைவோர்  யானை  ஏறி  முழங்கிட வீதியில் சென்றார்கள்           728

 

மக்களே  மகிழ்ந்து  கேளுங்கள்  மன்னனின்  திருமணநாள்

            ஏழு  நாட்கள்  இன்புற  நடக்கும்  எழில்பெற  வேண்டும்  நாடு  நகரம்

வீதிகள்தோறும்  செம்மணல்  பரப்பி  கமுகொடு  கதலி  மரங்கள்  கட்டி

            விண்தொடும்  கொடிகள்  நாட்டி  வீதியை  அழகு  செய்யுங்கள்          729

 

பிறையொத்த  சிறு  நூதலில்  பெரிய  பட்டம்  அணிந்திடுங்கள்

            பொன்மணி  மாலைகள்  கொண்டு  மென்மேனி  அலங்கரியுங்கள்

பசும்பால்  சோற்றைத்  தவிர  பிற  உணவு  உண்ணாதீர்கள்

            பட்டாடை  உடல்  அணிந்து  பகட்டுடன்  நாளும்  களித்திடுங்கள்       730

 

முரசறைவோன்  அறிவித்த  பின்  மூவிரு  நாட்கள்  கடந்தன

            யாழுடன்  குழலும்  இணைந்து  ஒலித்தன  அரங்குகள்  தோறும்

வீட்டினை  சுத்தம்  செய்து  வெண்  சாந்து  நிலம்  மெழுகி

            இல்லுறையும்  தெய்வத்திற்கு  இதயத்தால்  பூப்பலி  செய்தனர்         731

 

பசுக்களின்  பால்  உலை  பொங்க  பறந்திடும்  ஆவியினாலே

            வெண்ணாடை போர்த்தியது போல் விளங்கின மாடங்கள் எல்லாம்

பைங்கொடி  மகளீர்  பாதம்  பதிந்திட்ட  செங்குழம்பாலே

            செவ்வானம்  மண்  வந்தது  போல்  சிவந்தது தரையின்  தன்மை        732

 

வீதிகளில்  வாயில்  தோறும்  வித  வித  தோரணங்கள்  தொங்க

            மணிக்குடங்கள்  வரிசையாலே  மாடங்கள்  ஒளிர்ந்தன  எங்கும்

ஆடிடும்  மகளீர்  ஒலியும்  அதற்கிசை  பண்ணும்  பாட்டும்

            ஆழியாய் ஒலியினை எழுப்ப அழகுடன் மிளிர்ந்தது ராசமாபுரம்      733


அரண்மனை  வாயில்  எல்லாம்  துகில்  கொடி  தென்றலாய்  அசைய

            மடல்  விரிந்த  கமுகினோடு மண்  தாழ்ந்த  கதலி  குலையும்

பட்டுத்துகில்  உரையினோடு  போர்த்திய  பெருங்கண்ணாடியும்

            பொன் பூரண  கும்பம்  போல  பொளிர்ந்தன  இருபக்கமும்                  734

 

பொற்காசு  குவியல்  ஒருபுறம்  வெண்முத்துக்  கூடைகள்  ஒருபுறம்

            அட்டமங்கலங்கள்  ஒருபுறம்  ஐமுக  விளக்குகள்  ஒருபுறம்

நறுமண  புகைகள்  ஒருபுறம்  நங்கைகள்  கை  கவரிகள்  ஒருபுறம்

            மங்கல  வாழ்த்து  முழங்க   சீவகன்  இருக்கையிலிருந்தான்                 735

 

ஆயிரத்தெட்டு  யானை  மதநீரால்  நிலம்  நனைந்து  சேறாய் குழம்ப

            திருமஞ்சண  தண்ணீர்  கொணர  திரண்டு அவை  வரிசை  கட்ட

முரசும்  முழவும்  கொம்பும்  எண்திசையும்  ஒலி  எழுப்ப

            பொற்குடங்கள்  நீர்  முகர்ந்து  பொன்குடை  நிழலில்  வந்தன              736

 

திருமஞ்சண  நீரைக்  கொண்டு  சீவகன் நம்பி நன்னீர்  ஆடி

            சந்தனமும்  புனுகும்  கொண்டு  தன்  மேனி  எல்லாம்  படரவிட்டு

பட்டாடை  உடல்  அணிந்து  பலமணிகள்  அணிகலன்  பூண்டு

            மணமகனின்  முழுக்கோலம்  மன்னனுக்கு  முழுமை  பெற்றது           737

 

அரசியற்  கலை  வல்ல மகளீர்  ஆரணங்கு  இலக்கணையை

            மலை  விளைந்த  பசும்பொன்னே  பாற்கடலில்  பிறந்த  அமுதே

வலம்புரி  சங்கு  ஈன்ற  முத்தே  கோவிந்தரின்  குலக்கொடியே  என

            போற்றிப்  புகழ்ந்த  படியே  பணி  செய்ய  சூழ்ந்தனர்  அங்கு              738

 

பொன்குடம்  கொண்ட  நன்னீரல்  பூவையை  நீராட்டினார்கள்

            சந்தனமும்  குங்குமம்  கொண்டு  செம்மேனி  தான்னில் பூசினார்கள்

அகிற்புகைக்  கொண்டு  அவள்  கருங்குழலை  ஆற்றினார்கள்

            பஞ்சொத்த  வெண்பட்டு  கொண்டு  பாவை  மேனி  சாற்றினார்கள் 739

 

கையில்  வளைகள்  பூட்டினார்கள்  கண்களில்  மை  எழுதினார்கள்

            பிறையொத்த  சிறு  நூதலில்  பொன்  பட்டம்  பொருத்தினார்கள்

ஒடிந்துவிடும்  மென்னிடையில்  ஒளிரும்  மேகலைக்  கட்டினார்கள்

            ஒப்பனை  நூல்கள்  சொல்லும்  அத்தனையும்  செய்திட்டார்கள்          740


வேதிகை  மேடையின்  மேல்  வெண்மணலை  சீராய்  பரப்பி

            சமிதைகளை  கிழக்கு  நீக்கி  மற்ற  மூன்று  திசையில்  வைத்து

மணியக்கல்  ஒன்றில்  நெய்யும்  மணியக்கல்  இரண்டில்  நீரும்

            பொன்  அகலில்  தூபம்  நிரப்பி  முறைப்படி  வைத்தனர்  அங்கு         741

 

நல்வினைப்  பயன்  இருந்தால்  நஞ்சுண்டாலும்  கேடில்லை

            தவப்பயன்  அற்றுப்  போனால்  தன்  அழிவு  தானே தேடி  வரும்

நல்வினை  கொண்ட  சீவகன்  ராசமாபுர  அரசன்  ஆனான்

            கட்டியங்காரன்  அழிந்தான் கடும்வினை  சேர்ந்ததாலே                        742

 

நகர்  வலம்  வந்தான்  நம்பி  நகரத்தோர்  மகிழ்ந்து  வாழ்த்த

            அசோகமர  நிழலில்  அமர்ந்த  அருகனின்  கோயில்  வந்தான்

மணியிழைத்த  கோயில்  கதவுகள்  மலர்ந்தன  மன்னன்  வரவால்

            வேழத்தை  விட்டு  இறங்கி  வலம்  வந்தான்  ஜினாலயத்தை                743

 

பிறப்பிலா  பெருமை  கொண்ட  பெருமானே  போற்றி  போற்றி

            முக்குடை  நிழல்  அமர்ந்த  மூலவா  போற்றி  போற்றி

காதிவினைகள்  அறுத்த  கர்த்தாவே  போற்றி  போற்றி

            எண்குணம்  நிறையப் பெற்ற  எம்மானே  போற்றி  போற்றி                 744

 

முக்காலம்  முழுதும்  உணர்ந்த  முதல்நிலை  இறைவா  போற்றி

            எண்வினை  எல்லாம்  அழித்த  என்  ஞானத் தலைவா  போற்றி

அழிவிலா நல்லறம்  அளித்து  ஆன்மனை  வென்றாய்  போற்றி

            அந்நிலை  நானும்  பெற்றிட  அருளுவாய்  என  தொழுதான்                 745

 

அணைந்திடா  விளக்குகள்  எரிய  நாலு  கோடி  பொன்  கொடுத்தான்

            அருகனின்  வழிபாட்டிற்கு  நூறு  பழம்  பதிகள்  தந்தான்

நூறு  மதயானைகளையும்  நூறு  கொடியுடை  தேர்களையும்

            பொன்மணி  மாலைகளோடு  பெருமானின் திருவடி  சேர்த்தான்       746

 

அரன்மணை  திரும்பிய  மன்னன்  அரியணையில்  வீற்றிருந்தான்

            சுநந்தையாம் தன் அன்னைக்கு  பெருந்தேவி  பட்டம்  தந்தான்

தன்  இளவல்  நந்தட்டனை  நாட்டின்  இளவரசன்  ஆக்கினான்

            வளம்  செழித்து  ஓங்கிய  நாட்டை  வழங்கினான் தம்பிக்கு  நம்பி  747


நபுல  விபுல  தம்பிகளுக்கு  மன்னர்  மகளை  மணக்க வைத்தான்

            பதுமுகன்  முதலிய  நண்பர்களை  பல நாட்டு அரசனாக்கினான்

ஏனாதி  மோதிரத்தையும்  செம்பொன்  பட்டயத்தையும்

            நன்மணி  பொருள்கள்  பிறவும்  நன்றியுடன்  மகிழ்ந்து  தந்தான்        748

 

உலோகபாலன்  விசயனுக்கு  உயர்ந்த  பல  சிறப்புகள்  செய்தான்

            குதிரைகள்  பூட்டிய  தேர்களும்  பரிகளும்  கரிகளும்  தந்தான்

தன்  மாமன்  கோவிந்தனுக்கு  கட்டியங்காரன்  உடமைகள்  தந்தான்

            அமுதசுரபி  வழங்குதல்  போல  அனைவருக்கும்  வழங்கி நின்றான் 749

 

  பார்புகழ்  அரசியர்  பட்டம்  பத்தினி எண்மரும்  பெற்றனர்

            அரசியர்  ஒவ்வொருவர்க்கும்  ஐந்தரை கோடி  பொன்  கொடுத்தான்

சாந்துக்கும்  உணவுக்குமாக தினம்  ஆயிரம்  பொன்  கிடைக்கும்

            அருகினில்  உள்ள  நிலங்களை  அளித்திட்டான்  தானமாக                  750

 

சுதஞ்சண  நல்  தேவனுக்கு  சுந்தர  கோயில்  அமைத்தான்

            பசும்பொன்னால்  உருவம்  செய்து  குடமுழக்கு  செய்து  வைத்தான்

கோயில்  சேவைக்கு  மான்யமாக பல  ஊர்கள்  தானம்  தந்து

            அவன்  வரலாற்றை  நாடகமாக  நாடெங்கும்  நடக்கச் செய்தான்      751

 

ஒளிவிடும்  பொற்கலம்  ஒன்றில்  நெற்பொறி  நிரையச்  செய்து

            அம்மியும்  அக்கலின்  மேலே  ஆவின்  பால்  நெய்யும்  வைத்து

சிறுவிரல்  தருப்பை  அணிந்து  தருப்பையால்  நெய்  மந்திரித்து

            ஓமத்தீயை  வளர்ப்பதற்கு  உரியன  செய்தனர்  அங்கு                          752

 

சமிதைகளில்  நெய்யைப்  பெய்ய  தீத்  தெய்வம்  செழித்தோங்க

            ஆழி  மேல்  வியாழன்  தோன்ற  முரசு முழவொடு  சங்கு முழங்க

வேற்படை  மன்னர்கள்  எல்லாம்  வேந்தனை மகிழ்ச்சியில்  வாழ்த்த

            அரசருக்கு  அரசரான  சீவகன்  கலசநீரை  ஓமத்திலிட்டான்                 753

 

இருகரங்கள்  மூடிய  முகத்தை  இலக்கணை  தோழியர்  பிரித்தனர்

            இளந்தளிர்  போன்ற  கைகளை  இதமாக  மெல்ல  விடுத்தனர் 

வளைகொண்ட  இடக்கரத்தை  வாள்வேந்தன்  சீவகன்  பற்றி

            ஓமத்தை வலம் கொண்டு வந்து அமர்ந்தனர் பொன்னாசனத்தில்      754

 

பொன்கடைந்த  கால்கள்  நிறுத்தி  பொன்மணி முத்து  விமானம் வேய்ந்து

            தேன்நிறை  மலர்மாலைகளும்  தென்றல் மணப்  புகையும்  சாற்றி

அன்னத்தின்  இறகு  போன்ற  அடர்பஞ்சு  மணவறை  மஞ்சில்

            நம்பியும்  நாயகியும்  சேர்ந்து  நாகம்  போல்  பிணைந்தனர்  அங்கு  755

 

மன்னன்  செய்த  அறத்தினாலே  மாதம்  மும்மாரி  பெய்ய

            நாடெல்லாம்  விளைவு  பெருக  நல்ல  செழிப்பில்  மக்கள்  வாழ

போகபூமி  உத்திரகுருவும்  பொன்னுலகான  தேவலோகமும்

            நாணின  தத்தம்  நிலையில் நலிந்தது  அதனதன்  பெருமையை         756

 

வளைஞரின் வாயில்  முன்னே  வாளைமீன்கள்  மகிழ்ந்து  துள்ள

            வேடனின்  சிறிய  குடிசையில் வெண்புள்ளி மான்கள் ஆடி  நிற்க

கொலை  களவு  பேராசை  நீங்கி  கலியுகத்தின்  தன்மையை  மாற்றி

            திரேதாயுகத்தைப்  போல  சீவகன்  ஆட்சி  செய்தான்                             757

 

                        இலக்கணையார்  இலம்பகம்  முடிவுற்றது.


13 .    முக்தி  இலம்பகம்.

 

1.    விசயை  துறவு :

 

எண்வினைகள்  முற்றும்  அறுத்த  எண்குணங்கள்  எய்தப்  பெற்ற

            அருகபெருமானின்  ஆலயம்  அசோக  மரச்  சோலையிலே

வான் தவழும்  முகில்  பிளந்து  விண்  பரிதி  மதி  சுடர்  கடந்து

            சீவக  நம்பி  ஆணையாலே  சிறப்புடன்  அமைக்கப்பட்டது                   758

 

சச்சந்தனின்  அழகு  மனைவி  தவநெறியாள்  விசையை  தேவி

            அரிசியும்  கீரையும்  காயும்  அருங்கனிகள்  கிழங்கும்  தந்து

பசியினைப்  போக்கிக்  காத்து  பரிவுடன்  தன்னை  காத்து  வந்த

            துறவிகட்கு  தன்  புண்ணியத்தை  தானமாய்  தந்தாள்  தேவி               759

 

சுடுகாட்டில் மெல்ல  வீழ்ந்து  சொல்லொன்னா  துன்பம்  தூய்த்து

            தவப்பள்ளி  ஒன்றில்  சேர்ந்து  தன்  வாழ்வை  உய்யச்  செய்த

சண்பகமாலை  தெய்வத்திற்கு  சுடுகாட்டில்  கோயில்  கட்டி

            மயில்பொறி  வடிவந்தன்னை  மாடத்தே  ஓவியம்  ஆக்கினாள்             760

 

சீவகன்  பிறந்த  சுடுகாட்டை  சிறந்த  அறச்சாலையாக்கி

            ஐநூற்று  ஐந்து  மழலைகள்  அன்றாடம்  பால்  நெய்  கலந்த

அறுசுவை  உணவு  உண்டு  அரும்பசி  தீர்த்துக்  கொள்ள

            கோவிந்தன் உதவிகொண்டு கோதையவள் செய்து முடித்தாள்      761          

             

சீவகனை  வளர்த்த சுநந்தையை  சிரசினில்  வைத்துப்  போற்றி

            மாமகனைப் பெற்ற தாயே என மகிழ்ச்சியில் தழுவிக்கொண்டாள்

மருமகள்கள்  எண்மரும்  வந்து  அவள்  மலரடி  விழுந்து  பணிய

            அரும்பெரும்  மக்களைப்  பெற்று  அருகன்  அறம்  காக்க  என்றாள்   762

 

மன்னனை  அன்னை  அழைத்தாள்  மென்னடியை  மலரால்  தொழுதான்

            உள்ளமும்  உடலும்  நடுங்க  உரையுங்கள்  தாயே  என்றான்

உன்  தந்தைக்கு  நேர்ந்த  தீங்கை  ஊரார்  கூற  நீ  அறிவாய்

    உனைபெற்றவள் நான் உனக்கு உரைத்திடுவேன் கேட்பாயென்றாள்  763     

                  

மங்கை  இன்பத்தில்  இருந்து  மீண்டு  வாரா  நிலையினாலும்

            மற்றவர்  இழிமொழிகட்கு  மனம்  நாணாத  நெஞ்சத்தாலும்

நல்  அமைச்சர்  அறிவுரைகளை  நகைத்திட்ட  இறுமாப்பாலும்

            மதம் பிடித்த களிறாய் மன்னன் மன்மதனின் பிடியில் இருந்தான்     764

 

மதிகொண்ட மந்திரிகள் எல்லாம் மன்னனை விட்டு  அகன்றனர்

            சுற்றமும்  நண்பர்கள்  கூட  சொல்லாமல்  விலகி  சென்றனர்

தீவினை  விதைத்து  விட்டால்  நல்வினையா  பயனாய்  கிட்டும்

            அரசன்  துணை  யாருமின்றி  அரண்மனையில்  தனியனானான்       765

 

பகையரசர்கள்  அனைவரையும்  துணையரசர் ஆக்கிக்  கொண்டான்

            கட்டியங்காரன்  ஒருநாள்  கடும்  போரால்  சூழ்ந்துக் கொண்டான்

மயில்போறி  ஒன்றில்  ஏற்றி  மனைவியும்  நீயும்  பிழைக்க  அனுப்பி

            மாவீர  மன்னனாய்  போரிட்டு  மடிந்திட்டார்  உனது  தந்தை                766


காமத்தின்  சுகத்தால்  நீயும்  உன்  தந்தையை  போல்  மூழ்கிடாதே

              தாயான  நானும்  இனி  என்றும்  துறவினை  ஏற்றுச்  செல்வேன்

அன்னையின்  சொல்லைக்  கேட்டான்  ஆண்சிங்கம்  போன்ற  சீவகன்

            மனமது  மயக்கம்  கொள்ள  மயங்கியே  மண்ணில்  சாய்ந்தான்        767

 

பிறந்த  இம்மண்ணில்  நாம்  பிழைத்திருக்கும்  காலம்  அறியோம்

            நிரந்தரமாய்  வாழ்வோம்  என்ற  நிறையாசையில்  நீந்துகின்றோம்

கூற்றுவன்  நம்  வாழ்நாளை  பறித்துண்ணும்  போது  நாம்

            கண்கள்  மூடி  அழுதலின்றி  கழிந்த  நாட்கள்  மீட்களாகுமோ             768

 

காற்றினால்  சிதறும்  முகில்போல்  தீவினைத்  தாக்கப்  பிரிவோம்

            கன்னியர்  மேல்  ஆசையாலே  காமத்தை  விட்டு  அகல்வாய்

காமமாம்  பெரும் கள்ளை  நீக்கி  அருகன்  நெறி  அறிந்து  வாழ்ந்து

            கருங்கூந்தல்  நரைக்கும்  முன்னே  தானமும்  தவமும்  செய்வாய்      769

 

உடம்பென்னும்  வண்டி  ஓட்டி  உருதொழில்  செய்யும்  மக்களே

            உயிர்  என்னும்  அச்சி  இற்றால்  உடன் வேறு  அச்சி  இணையுமோ

பிறந்திட்டோம்  மனிதகதியில்  மெய்  பொருள்  காண  விழைவோம்

            தவத்தினை  ஏற்று  காக்க  என்னை  துறவுக்கு  விடுவீர்  என்றாள்  770   

                   

நிலையற்ற  செல்வம்  தன்னை  நிலையானது  என்று  எண்ணி

            அறுசுவை  உணவுகளை  தட்டில்  அனுதினமும்  உண்டோரெல்லாம்

தீவினை  திரண்டு  வந்து  உறுத்த  திரண்ட  மாசெல்வம்  தொலைய

            ஒருவேளை  சோற்றுக்காக  ஓடிடும்  நிலையும்  உண்டு  என்றாள்       771

 

கார்கூந்தலில்  மலர்கள்  சூடி  கண்ணிரண்டில்  கருமை  எழுதி

            மென்மேனியில்  சுண்ணம்  பூசி  மெய்யினில்  இளமைக்  காத்தோர்

ஈளைக்கட்டி  இருமல்  தாக்கி  வெண்ணை  போல்  கோழை  உமிழ்ந்து

            முதுமையாம்  கோலை  ஊன்ற  இளமையும்  நீங்கும்  உணர்க             772

 

விசயையும்  சுநந்தையும்  இணந்து  துறவினை  மனதில்  கொண்டனர்

            சுற்றமும்  உறவும்  கண்ணீர்  சிந்த  பல்லக்கில்  ஏறி  சென்றனர்

பண்போடு  புகழும்  கொண்ட  பம்மை  என்னும்  தவச்செல்வியின்

            பள்ளியை  அடைந்த  இருவரும்  பல்லக்கை  விட்டு  இறங்கினர்         773


பம்மையை  பணிந்து  தொழுது  துறவறம்  வேண்டி  கேட்க

            விறகிலே  பற்றும்  தீ  போல்  தவத்தினை  ஏற்றல்  எளிதல்ல

ஐம்பொறி  வென்ற  நிலத்தில்  அறதானமாம்  விதை  விதைத்து

            நல்லொழுக்க  நீர்  பாய்ச்சினால்  நாடெலாம் போகபூமி  என்றாள்     774

 

அறிவுரை  பின்னர்  கேட்போம்  அளியுங்கள்  துறவென  வேண்ட

            பாலினால்  சிற்றடிகள்  கழுவி  பைந்துகிலால்  மார்பைக்  கட்டி

பொன்  அணி  மாலைகள்  நீக்கி  பொதிந்த  கருங்  கூந்தல்  போக்கி

            அருகனின்  ஆகம  நெறியுடன்  அரிய  தவம்  ஏற்றனர்  இருவரும்       775

 

புங்கவன்  பயந்த  ஆகமப்  பொருளினை  உணர்ந்த  மனதால்

            போற்றலின்  மகிழ்ச்சியுமின்றி  தூற்றலின்  இகழ்ச்சியுமின்றி

உயிர்களுக்கு  நேரும்  துன்பம்  தன்  உயிரின்  துன்பம்  ஆக்கி

            கலங்கமில்லா  சிந்தையராகி  காத்தனர்  தவநெறி  தருமம்                 776


 

2.    நீர்  விளையாட்டு :

 

சீவகன்  உள்ளமும்  உடலும்  துறவறம்  நாடும்  என  அஞ்சிய

            கன்னியர்  இன்பந்தன்னில்  கலந்து  தூய்க்க  வேண்டுமென

குளத்தினில்  சந்தனம்  சுண்ணம்  கலந்திட  நன்நீரைப்  நிரப்பி

            அமைச்சர்கள்  அமைத்தனர்  அரசன்  நீர்விளையாட்டைத் தொடர    777

 

நீராடும்  தெப்பத் துறையில்  நின்றாடும்  மெல்லிய தெப்பங்கள்

            மலர்மாலை  சந்தனம் சுண்ணம்  மழையென பீச்சும் குழாய்கள்

மன்னனுக்கும் மகளீர்களுக்கும் மனம் போல வகுத்து வைத்து

            மன்னனே  தெப்பவிழாவில் மகிழ்ந்திடு என்றனர் மந்திரிகள்              778

 

கழலுவேகன் மகள் தத்தை கட்டியங்காரனாய் மாறி

            பருத்ததன பைங்கொடிகள்  பகை வீரர்களாய் நிற்க

மாலையால் மகளீரைத் தாக்கி பீச்சிடும் குழாயால் நீர் பெய்ய

            மதனநீர்  விளையாட்டை மகிழ்ச்சியுடன் தொடங்கினார்கள்              779

 

தத்தையின் பீச்சுக்குழல் நீரை  தாங்கொணா  தாதியர் எல்லாம்

            தலைவனாம் சீவகன் பின்னே  தங்கள் உருவம் மறைத்து நிற்க

கன்னியர் துயரம் தாளா மன்னன்  கார்மழை போல் நீரைப் பீச்சி

            காந்தருவதத்தை மகளீரை கலக்கினான் காமத்திலகன்                       780


அண்ணலின் நீர் மழையால்  அஞ்சி ஓடிய ஆரணங்குகள்

            ஆடையை நீரில் இழந்ததாலே அவிழ்ந்த குழலால்  மேனியை மூடி

தத்தையின் படை மகளீர் சிலர் வெண் நுரையை ஆடையாக்கி

            மன்னன் தங்கள் அழகை நுகர மயக்கத்தில் நின்றார்  அங்கே             781

 

தான் பீச்சும் நீர்தாரைகள்  தத்தையை வருத்தும்  என்று

            அஞ்சிய  மன்னன்  அங்கு  அசைவற்று  சிலையாய்  நிற்க

தத்தைத்  தன்  குழலை  மாலையாக்கி  தலைவனின்  கைகளைக் கட்டி

       கொம்பினைத் தழுவும்  கொடியாய் கொற்றவன் மேல் படர்ந்திட்டாள்  782

 

3.    இருது  நுகர்வு  :

( முதுவேனில். )

முதுவேனல்  பருவம்  தரும்  முழுவெம்மை  தாங்கா  மன்னன்

            சந்தனக்  குழம்பில்  உலவி  தணியாத  காம  சுகத்தால்

பாட்டையும்  கூத்தையும்  கண்டு  பன்மணி  கொடி  மகளீரை

            மருவியே  தாகம்  தணிந்து  முழுவேனில்  பருவம்  கழித்தான்              783

 

                                                            ( கார் )

கருமுகில்  அலைந்து  மோத  கடும்  இடி  முழங்கி  ஒலிக்க

            நடுங்கிய  மெல்லிடை  நங்கையர்  நம்பியை  நாகமாய்  தழுவ

சிணிங்கின  சிலம்புகள்  காலில்  சிரித்தன  மேகலை  இடையில்

            கார்கால  மழையைப்  போல  காமத்தில்  கழிந்தது கார்பருவம்         784

 

                                                ( கூதிர் )

கார்காலம்  கடந்த  பின்னர்  தொடர்ந்து  கூதிர்  பருவம்

            குணமாலை  முன்  ஊடல்  கொண்டாள்  சீவகனை  பின்  கூடி  மகிழ

நங்கையே  உன்  முகவொலியால்  நாணியது  வான்  நிலவு  அங்கே – என

            அவள்  ஊடலை  முழுதும்  நீக்கி  கூடியே  கூதிர்  காலம்  கடந்தான்    785

 

                                                            ( முன்பனி காலம் )         

கூந்தலில்  அகிற்புகை  ஊட்டினர்  பச்சிலை  மாலைகள்  அணிந்தனர்

            எலுமிச்சை இஞ்சி  இணைந்த  அவல்பொரி  மதுவினை உண்டனர்

சிவந்த  சண்பகமலரை  நீக்கி  மல்லிகை  மலரை  சூடிய  மகளீர்

            மன்னனை  மருவி  அணைத்து  முன்பனி  காலம்  போக்கினர்           786

                                                            ( பின்பனி  காலம் )

செந்துகில்  அணிந்த  மகளீர்  சிறந்த  மணிமாலைகள்  அணிந்து

            நெருப்புண்ணும் எலியின்முடியால் நெய்திட்ட  கம்பளி  ஆடையணிந்து

தேனிசை  வாய்ப்  பாடலோடு  யாழோடு  குழலிசை  சேர்ந்திட

            நம்பியை  தழுவி  மகிழ்ந்ததில்  நகர்ந்தது  பின்பனி  பருவம்                787

 

                                                ( இளவேனில் )


குரவமலர் கொட்டும்  தேனுண்டு  குளிர்  சங்கின்  தூசிகள்  சிதற

            மரவமலர்  மதுவை  உண்டு  வாடைக்  காற்றும்  விரைந்து  விலக

தென்றலை  தூதுவிடும்  காமனை  தன்  விருந்தாய்  ஏற்றுக்  கொள்ள

            துளிர்  தழைத்து  மலர்ந்திடும்  தூய  இளவேனில்  வந்தது                     788

 

யாழிசையாய் வண்டொலிக்க   குழலோசையாய் தும்பி  பாட

            குயில்பாட்டு  முழவொலியாக  குளிர்சோலை  அரங்கங்களாக

கணவனைப்  பிரிந்த  மகளீர்  கனியுடல்  பசலைக்  கொண்டதை

            பாணன்  மகரயாழ்  இசைக்க   இளவேனில்  எழுந்து  ஆடியது              789

 

மெல்லிடை  பாரம்  கொள்ளா  மெந்தனங்கள் கொண்ட  மகளீர்

            மேகலையை  வளைத்து  கட்டி  மென்னடியில்  சிலம்புகள் பூட்டி

மன்மதன்  தவழும்  மார்பில்  மணிமுத்து  மாலைகள்  அணிந்து

            வாசனை  சந்தன சுண்ணத்தோடு  வரவேற்றனர்  இளவேனிலை       790

 

வில்லொத்த  புருவத்தின்  கீழ்  வீழ்த்திடும்  விழிகள்  கொண்டு 

            சிற்றடிகள்  சிலம்பொலிக்க  சின்னயிடை  கொடியென  துவள

இடையணி  மேகலை  நாதமும் இள  மேனியில்  ஐந்து  வாசத்துடனும்

            மயில்  கூட்டம்  போல  மாதர்கள்  மலர்  பொழிலில்  மகிழ்ந்தனர்       791

 

4.    புதல்வர்  பேறு  :

 

சீவகன்  மனைவியர்  எண்மரும்  சேர்ந்து  மகிழ்ந்த  காலத்தில்

            நம்பியின்  நல்  ஆற்றலுடன்  நல்லதோர்  மகவு  வேண்டினர்

இளவயிற்றில்  கருவது  தங்க  இலை  வயிறு  பருத்து  திரள

      தோள் மெலிந்து முகம் வெளிற  பஞ்சணை  கொண்டனர் எண்மரும்       792

 

அஞ்சுகம்  போன்ற  எண்மரும்  அழகிய  வலம்புரிச்  சங்காய்

            ஈன்றனர்  எட்டு  மகவுகள்  இன்பத்தில்  வீழ்ந்தது  இராசமாபுரம்

மங்கல  முரசுகள்  முழங்கின  மன்னனும்  மகிழ்ச்சியில்  ஆழ்ந்தான்

            பொன்  பொருள்களை தானமாக வரையின்றி  வாரி  வழங்கினான்  793

 

யாழ்  குழல்  கொம்பு  முழவுகள்  இசைத்தன  அரங்குகள்  எல்லாம்

            சுதஞ்சண  தேவன்  வந்தான்  நம்பி  கதையை  நாடகமாக்கினான்

சோதிடர்கள் ஒன்றாய்  சேர்ந்து  கோள் குறித்து  ஜாதகம்  எழுதினர்

            ஈராறு நாட்களில் தொட்டிலிட்டு எண்மருக்கும்  பெயர்கள்  எழுதினர்794

    

சச்சந்தன், சுதஞ்சணன், தரணி, கந்துக்கடன், விசயன், தத்தன்

            பரதன், கோவிந்தன் என  வரிசையில்  பெயர்களை  வைத்தனர்

அரசியல்  அறநெறிகளோடு  படைக்கல  பயிற்சி  பெற்றனர்

            களிரென  எண்மரும்  வளர  கழிந்தன  ஐயாறு  ஆண்டுகள்                   795

 

5.    சோலை  நுகர்வு

 

மந்தளிர் நிற மேனி  அழகில்  மல்லிகைமாலை  என்னும்  தோழி

            மன்னனும்  மகளீரும்  இருக்க  மன்னனை  வாழ்த்திச்  சொன்னாள்

இளமாறன்  மலர்க் கணைகளுடன்  இருக்கின்றான்  பூம்பொழிலில்

            காமனே உன் கிழத்திகளுடன்  காண்பாய்  அவனை  அவ்விடத்தில்   796

 

  வண்டுகள்  தும்பிகளுடன்  சேர்ந்து  வடிகின்ற  தேன்  உண்டு துயில

            மாசிலா  மலர்  படுக்கை  விட்டு  மயில்கள்  துயில்  நீங்கி  எழ

வெண்துகில்  சிறகைக்  கொண்ட  பெண் அன்னங்கள்  விலகி  ஓட

            சீவகன்  தன்  தேவியருடன்  செம்பொழிலை  வந்தடைந்தான்              797

 

ஊஞ்சலை  மரத்தில்  கட்டி  காற்றினில்  மிதந்து  ஆடி

            வேடுவ  மகளீர்  போன்று  வித விதமாய்  மலர்கள்  கொய்து

குன்றுகள்  பலவற்றில்  ஏறி  குரலொலி எதிரொலியாய்  கூவ 

            எண்மரும்  பிரிந்து  சென்று  இயற்கையின்  இன்பம்  தூய்த்தனர்       798

 

இன்னிசையாய்  யாழை  மீட்டி  இதயத்தின்  வேட்கையை  பாடி

            சீவகன்  செவியினை அடைந்து  சேர்ந்திட  வருவான்  என்று

ஏங்கிடும்  மனதுடை  மாந்தர்  எண்ணத்தில்  மனமது  சோர

            மலரினை  நாடும்  வண்டாய்  மங்கையரை  அணைத்தான்  நம்பி     799


கலவியின்  இன்பம்  தூய்த்து  காளை  போல்  சென்றான்  மன்னன்

            களவொழுக்கம்  நாடிய  கடுவன்  காதலி  மந்தியை  அழைத்து

கனி  ஒன்று  அதற்குத்  தர  காவலன்  கடுவன்  மந்தியை  விரட்டி

            அக்கனியினை  உண்டு  மகிழும்  காட்சியை கண்டான்  அரசன்        800


( கடுவன்  :  ஆண் குரங்கு,  மந்தி  :  பெண் குரங்கு )

 

கைப்  பழத்தை  இழந்த  மந்தி  கட்டியங்காரனுக்கு  ஒப்ப

            கனியினை  உண்ணும்  காவலன்  தன்னிலைக்கு  ஒப்பான்  என்றும்

நினைவினில்  எண்ணிய  வேந்தன்  நிலையற்ற  வாழ்வை  நீக்கி

            துறவறத்தை  ஏற்றோமானால்  துன்பங்கள்  நீங்கும் என்றான்             801

 

எளியவர்கள்  செல்வம்  தன்னை  வலியவர்கள்  வேரோடு  கொள்ளல்

            வரம்பினை  மீறிச்  செய்யும்  குறும்பினை பிறவியில்  காண்டோம்

ஐம்புலன்கள்  அடக்கி  ஆண்டு  அறநெறி  ஒழுக்கம்  காத்து

            தவநெறியை  ஏற்றுக்  கொண்டு  வீடுபேறடைய  எண்ணினான்         802

 

காமமாம்  கொடிய  கள்ளினை  கண்மூடி  பருகிய  எனக்கு

            இக்காரிருள்  நீங்கும்  படி  காட்டிய  கடுவன்  மந்தியும்

தேவர்களாய்  காட்சி  தந்து  தேர்ந்த  நல்  வழியில்  செல்ல

            நல் ஞானத்தை  மீட்டுத்  தந்து  துறவினைக்  காட்டியதென்றான்         803

 

6.    அறிவர்  சிறப்பு  :

 

நறுமண  எண்ணைய்  பூசி  நன்னீரில்  குளியல்  ஆடி

            அகிற்புகை  மணத்தை  ஊட்டி  ஆடை  அணிகலங்கள்  அணிந்து

அவிழ்ந்திட்ட  கூந்தல்  திருத்தி  அழகிய  மங்கையர்கள்  சூழ

            அருகனின்  கோயில் சென்றான்  அரசற்கரசன்  சீவகன்  நம்பி            804

 

முக்குடை  நிழலில்  அமர்ந்த  முக்காலம்  அறிந்தவன்  அடியை

            மும்மையில்  பற்றி  பணிந்தோர்  இம்மையில்  இனிதே  வாழவர்

எண்வினைகள்  அறவே  அறுத்து  எண்குணம் கொண்ட  நாதனின்

            மலரடி  வணங்குகின்றேன்  மறுபிறவி  நீக்கென  வேண்டினான்         805

 

வீட்டினை  விரும்பி  கேட்கும்  வேட்கையில்  சீவக மன்னன்

            நறுமண  பல் மலர்களாலும்  நல்ல  சுண்ணப்  பொடிகளாலும்

சந்தன  குங்குமக்  குழம்பினாலும்  அகிற் புகை  தூபத்தாலும்

            அருகனுக்கு  அர்ச்சனை  செய்து  அவனடி  வணங்கி  தொழுதான்     806

 

7.    அறவுரை  :

 

விண்ணிலிருந்து  இறங்கி  வந்து  வீங்கெழில்  கொண்ட  நாதனை

            வலம்  வந்து வணங்கி தொழுது  வண்ண பளிங்கு  கல்லில்  நின்ற

சாரணர்கள்  இருவரைக்  கண்ட  சச்சந்த  மாமன்னன்  மகன்

            எதிர்வந்து  வாழ்த்தி  வணங்கி  எளிமையாய்  நின்றான்  சீவகன்       807


(சாரணர் : சமண முனிவர்.  தல சாரணர்,  ஜல சாரணர்,  பல சாரணர்,  பஷ்ப சாரணர்,  தந்து சாரணர்,  சதுரங்குல சாரணர்,  சங்க சாரணர்,  ஆகாச சாரணர் என எட்டு  வகையினர்.  இருவர்  இருவராக  சேர்ந்து தர்மோபதேசம் செய்வர். )

 

இம்மண்ணினை  ஆளும்  நெறி  மனதினில்  இன்பமா  என்று

            சாரணர் சீவகனைக் கேட்க தன் துறவெண்ணம் அறிந்ததை வியந்து

பிறப்பு  அறும்  வழியை  அறியேன்  பெருந்தீவினை  விலக  தவம்  ஏற்று

            மும்மணிகள் அடையும் நெறியை எனக்கு நீவீர் அளியுமென்றான்     808

 

நிலையற்ற உடலின் அழிவையும்  நாற்கதி உழலும் துன்பத்தையும்

            உயிரினது இயல்பு தன்மையும்  உள்ளத்து ஒழுக்க நிலையையும்

நுண்ணிய  நல் அறங்களையும்  நற்காட்சி பெரும் பயனையும்

      நாங்கள் உனக்கு சொல்வோம்  நல்வினை உடையோய் கேளென்றனர்  809

 

8.    பெறுதற்கு  அருமை  :

 

தென்கடலில்  இட்ட  கழி  கடல் அலையில் மிதந்து சென்று

            வடகடலில் இட்ட நுகத்தடியின்  துளையினில் பொருந்துதல் போல்

பல நூறு  ஆண்டுகளில்  பலப்  பிறவிகள் எடுத்து தப்பி

            மனித பிறவி எடுத்ததாகும்  மன்னவா  நீ அறிவாய் என்றார்                 810

 

ஊனையே உணவாய் கொள்ளும்  காட்டில்  வாழ்  வேடர்களும்

            கடுங்குளிரில்  உடல்  நடுங்கும்  பனிநிலத்து குறும்பர்களும்

கயல்களே தங்கள் உணவென்று  கடலலை வாழும்  பரதவர் கூட

            மனிதனாய்  பிறந்திட்டாலும்  மண்ணில் இழிகுல பிறப்புதனே            811

 

கூன் குருடு செவிடு நீங்கி  குற்றமற்ற உடலுடனும்

            நன்னிலமும் நற்குலமும்  நல்லறமும்  நற்செல்வத்துடனும்

அறநெறிகள்  சிறிதும்  பிறழா  அருகனின்  ஆகமம்  அறியும்

            மனிதபிறவி எடுப்பதென்பது  மலைதோண்டி எலி பிடித்தலாகும்       812

 

9.    நிலையாமை  :

 

பெறற்கரிய பிறவி  பெறினும்  நிறைந்த  ஆயுள்  கதி என்பது

            தணலில்  இட்ட வெண்ணெய்யாகும்  தண்ணீர்  மேல்  குமிழியாகும்

கருவுற்றும் கலையும் உயிர்  கைமகவில்  மறையும்  நிலை

            பெயர் சூட்டும் காலத்திலும்  போன உயிர் போனது தான்                      813

 

எழில்  மலர்போல்  வளர்ந்து  எழுத்தோலை  பிடிக்கும்  கால்

            எமன் வந்து அழைத்திடலாம்  ஈன்றோர்கள்  கதறிடலாம்

மணங்கொண்டு  மங்கையோடு  மணவாழ்க்கை புகும்போது

            காத்திருந்து  இறப்பு வரும்  கருத்தினில்  கொள்  நல்வேந்தே                814

 

கைபிடித்த மனைவியுடன்  காலங்கள்  பல  வாழ்ந்து

            மனைவி மக்கள் தினம் சூழ்ந்து  மங்கலமாய் வாழ்கையிலே

கடல் மிதக்கும்  கப்பலிலே  கடும் வெள்ளம்  பாய்வது போல்

            நோய் என்னும்  புலி பாய்ந்து  நொந்து அழியும் இந்த உடல்                   815

 

காமத்தின் நுகர்ச்சி அற்று  கருத்தினில்  லட்சியம்  இற்று

            ஊமைபோல் குறிப்பு சொல்லி  ஒன்பது வாயில் வளம் இழந்து

தூய்மை அற்ற உடம்பாகி  சுற்றத்தார்  புறக்கணிக்க

            சுடுகாட்டு  ஈமத்தீயில்  சுடும்  சாம்பல்  ஆவது  உண்மை                       816

 

மண்ணுலகில் வீரம் காட்டி  விண்ணுலகில் பகை வென்று

            மாபெரும்  செல்வம் பெற்று  மாரியை போல் வாரித்  தந்து

மன்னர்களுக்கு  மன்னராகி  ஆண்டிட்ட  அரசரெல்லாம்

            மண்ணுலகில் இன்று இல்லை  நிலையாமையை உணர்க என்றார்    817

 

10. நரககதி  துன்பம்  :

 

வெவ்வினைகள் உயிரில் சேர  உடல் விட்டு உயிர் பிரிய

            தீந்தணல் நரகம் தன்னில்  தலைகீழாய் விழுந்து உழல

செய்திட்ட  தீவினைகட்கு ஏற்ப  கிடைத்திடும்  துன்பம்  தன்னை

            நினைத்தால் நெஞ்சம் நடுங்கும் நிலையினை உனக்கு சொல்வேன் 818

 

ஐம்பொறிகள் அடக்கம் இன்றி  எண்வினைகள் புரிந்த நரகர்

            ஈட்டியும் வேலும் வாளும்  எரிந்திடும் பெரும் தீயுமுள்ள

இடத்தினில் குப்புற விழ  உடல் தசைகள் எட்டாய்  சிதற

            எண்திசையும்  பரவி கிடக்க  எல்லையற்ற துன்பம் தூய்ப்பர்               819

 

ஊன்களை உண்டு வாழ்ந்து  உயிரினை வளர்த்தோர் எல்லாம்

            பைந்கொடி  மகளீர் ஆடும்  பந்து போல் பொங்கி எழுந்து

தீயினில் வீழ்ந்து மீண்டும்  அத்தீயினில்  விழுந்து விழுந்து

            உடல் உடைந்து உருகிடுவர் உள்ளத்தில் கொள் மன்னா என்றார்        820

 

பிறவுயிரை வதைத்து கொன்று  பெரும் பிழை செய்தோரெல்லாம்

            பெருமுனைகள்  கூரிய முள்ளை  உடலெல்லாம் பொருந்த செய்து

முள்ளிலவ மரத்தில் ஏற்றி  மூட்டுவார்  பெரும் நெருப்பை

            வதைபட்ட உயிர் முடிகொன்றாய்  தசை அறுந்து தீயில் வீழும்             821

 

உடும்பு இன ஊனைத்  தின்றோரை  வேட்டைநாய் கடித்து குதறும்

            வாளைமீன் ஊனை உண்டோர் வாயது நிறையும்உருக்கிய செம்பால்

பிறன்மனை தூய்த்தோர் எல்லாம் வெந்தணல்  பாவையை அணைப்பர்

            உயிர்களை வதைத்து வாழ்ந்தோரை உடல்கருக இட்டு வறுப்பர்        822

 

நரகினில் வீழ்ந்தோர்க்கெல்லாம்  நஞ்சது உணவாய் அமையும்

            எந்திர ஊஞ்சலில் ஏற்றி  எரிநெருப்பின் மேல் எறிவர்

செக்கினில்  உடலை சிதைப்பர்  சிலரது  மார்பை பிளப்பர்

            தடியினை கையில் ஏந்தி சினங்கொண்டு நையப்புடைப்பர்                823

 

11. விலங்குகதி  துன்பம்  :

 

கொடும்  நரகில்  துன்பமுறும்  தீவினை  நரகர்  போல

            விலங்குகதி  பெற்ற  உயிர்  வேதனையுறும்  அப்பிறவியில்

வெம்புலியின்  முழக்கம்  கேட்டு மான்கள்  கொள்ளும்  மாறத்  துன்பம்

            பகைவேந்தர்  உன்னைக் கண்டு  பட்ட  துன்பம் போல  ஆகும்             824

 

தண்ணீரில்  குளிப்பாட்டி  தலை  முழுதும்  மஞ்சள்  பூசி

            கழுத்தினில்  மாலையிட்டு  கடவுளுக்கு  பலியாகும்  ஆடும்

கடலில்  வாழும்  வாளை  மீனை  கறியுணவு  சமைத்து  உண்ண

            கத்தியியால்  வெட்டும்  போது  கதறும்  வினை  யாரைச்  சேரும்         825


கடல்  பாதுகாவல்  அற்று  காடு  பாது  காவல்  இன்றி

            குடல்  பாது  காவல்  நீங்கி  குன்று  மலை  காவல்  போக்க

முற்பிறப்பின்  தீவினையால்  இப்பிறப்பில்  விலங்கான  உயிர்கள்

            படுந்துயரம்  அத்தனையும்  பதைபதைத்து  மனம் வேகும்                    826

 

பெரும்  சுமை  இழுக்கும்  எருதுகள்  புண்களில்  புழுக்கள்  நெலிய

            காக்கையும்  கொத்தித்  திண்ணும்  கவனிப்பார்  யாரும்  இன்றி

மதயானைகள்  சிங்கத்தாலே  மாண்டிடும்  தம்  உயிரை  விட்டு

            மாபெரும்  தீ  சூழ்ந்த வனத்தில்  மறித்திடும்  விலங்குகள் உயிர்     827    

                              

பெருமுனியை  இகழ்ந்தோர்  பலரும்  பிறர்  காண  உண்ணும்  பாவிகளும்

பரத்தையாய்  வாழும்  பெண்களும்  விலங்கினத்தில்  பிறப்பெடுத்து

விலங்கினை  விலங்குகள்  தாக்க  வேல்  கொண்டு  மனிதர்கள்  தாக்க

            அதனதன் பசியைப் போக்க அடுத்த உயிரை கொன்று புசிக்கும்      828


 

12.  மக்கட்கதி  துன்பம்  :            

 

தன்  வயிற்று  கருப்பையுள்ளே  துளிர்விடும்  உறுப்புகள்  நாளில்

            ஈரலாம்  தசையை  மூடிய  போர்வையை  புழுக்கள்  மொய்க்க

நீர்  நிறை  சகதியின்  வழியே  வெளிவந்த  மக்கள்  தம்  உடலை

            நிலையென எண்ணிப் பார்த்து நித்தமும் வியப்பினைக் கொள்வர்  829

 

நங்கையர்  மேல்  கொண்ட  ஆசையால்  நெஞ்சிலே  மயக்கம்  கொண்டு

            களவினை  நாடிச்  செய்து  கழுமரத்தில்  ஏற்றப்பட்டு

மரக்கலம்  கடலில்  மூழ்கி  மக்கள்  படும்  துன்பம்  எல்லாம்

            நரகத்தின்  கொடுமையை  விட  நால்  மடங்கு  பெரியதாகும்              830

 

பகைநாட்டின்  செல்வர்  பொருளை  பெறுவதற்கு  அரசன்  முன்னே

            இருகரங்கள்  கட்டப்பட்டு  புகையெரி  நெருப்பில்  சுட்டு

தோல்  வாரால்  அடிக்கப்பட்டு  தோண்டப்பட்ட  கண்களோடு

            மனிதர்கள்  தூய்க்கும்  துன்பம்  நரகத்தை  விடவும்  கொடிது              831

 

மன்னனாய்  ஆளும்  போது  போர்  செய்தல்  மிகவும்  துன்பம்

            வென்றிட்ட  நாட்டை  ஆளல்  வெந்தணலுக்கு  ஒப்ப துன்பம்

பிணியது  உடலைத்  தாக்க  பொங்கிடும்  பொருந்தாத்  துன்பம்

            மங்கையரால்  மகிழும்   இன்பம்  மறுமைக்கு  மாபெரும்  துன்பம்     832


விரும்பிடும்  ஆசைகள்  எல்லாம்  விலகிடும்  போது  துன்பம்

            விரும்பிய  மனைவி  மக்கள்  பிரிந்திடும்  போது  துன்பம்

துள்ளிடும்  இளமை  நீங்கி  தளர்ந்திடும்  முதுமை  துன்பம்

            எழுத்தறிவு  இல்லா  போது   இகழ்படுதல்  துன்பமோ துன்பம்              833

 

13. தேவகதித் துன்பம் :

 

கருவினில்  பிறவா  பேறும்  கால்  நிலம்  தொடா  நிலையும்

           மேனியில்  வாடா  மாலையும்  பரிதியின்  ஒளிகொள்  மேனியும்

ஓவியமாய்  எழுதா  அழகும்  ஒளி  வீசும்  மணிமுடியும்

           வானவில்  போல  விளங்கும்  தேவகதி  எடுத்த  உயிர்கள்                       834

 

அழகிய  மூங்கில்  தோள்கள்  அனிச்சைப் பூ  மெல்லிய  அடிகள் 

           செவ்வரி  படர்ந்த  கண்கள்  தேன்  சொட்டும்  பவள  இதழ்கள்

சிந்திடும்  முத்துப்  புன்னகை  சிறுயிடை  தாங்கா  தனங்கள்

           தேவரின்  தேவியர்  அழகை  திருமகளும்  நாணிப்  பார்ப்பாள்             835

 

புருவத்தை வில்லாய் கொண்டு  பொன்  விழிகள்  அம்பைப்  பொழிய

           பொன்னணி  அணிந்த மேனியில்  புனுகுடன்  சுண்ணம்  மணக்க

தேவியரைக்  கண்ட தேவர்கள்  சிறுயிடை  நெலிந்து  குழைய

           கைக்கொண்டு  இறுகத்  தழுவி  காமமாம்  கடலைக்  கடப்பர்             836

 

இன்னிசைக்  கருவிகள்  முழங்க  இடைகொண்ட  மேகலை  சிரிக்க

           செவ்வாழைக்  கால்களில்  தவழும் சிலம்புகள்  சிளிர்த்து  ஒலிக்க

கயல்விழி  கண்கள்  காதலால்  காதோடு  மோதித்  திரும்ப

           தேவியர்கள்  ஆடும்   ஆடலைத்  தேவர்கள்  கண்டு  களிப்பர்                837

 

தேவகதி  நீங்கும்  காலம்  மூவைந்து  நாட்கள்  முன்னே

           விழிகளின் இமைகள் இமைக்கும் எழில் அணி மாலைகள்  வாடும்    

நஞ்சுற்ற  அமிர்தம்  உண்டு  நாட்களைக்  கழித்தோம்  என்று

           துன்பத்தில்  ஆழ்ந்து  உழலும்  துன்பமும்  தேவர்க்கு  உண்டு               838

 

தேவராகப்  பிறந்திட்டாலும்  பிற தேவரால்  சபிக்கப்பட்டு

           அவர்கள்  இடும்  ஏவல்  கேட்டு  அதற்கஞ்சியே  பணிபுரிந்தும்

வாகன  தேவதைகளாகி  வணங்கியே  சுமந்து  சென்றும்

           வருந்துவதும்  துன்பம்  ஆகும்  தேவகதி  அடைந்த  பின்னும்                 839


14. நற்காட்சி  :


புனிதமரம்  அசோகம்  நிழலில்  பொன் சிம்மாசனம்  அமர்ந்த

            இளாம்பரிதி  எழில்  கொண்டு  இருள்  விலக  வீற்றிருக்கும்

எம்பெருமான்  அருகதேவனை  தேவர்களும்  வாழ்த்திப் போற்ற

            அத்தேவன்  திருவடியை  யான்  என் சிரமேற்கொண்டேனென்றார்    840

 

ஒளிர்  பொன்  மதில்கள்  மூன்றும்  பொன்முத்துக்  குடைகள்  மூன்றும்

              வலம்  வந்து  மலர்கள்  தூவி  வணங்கிடும்  உலகம்  மூன்றும்

வினை  அறுக்கும்  படைகள்  மூன்றும்  கலங்கா உயர்  அதிசயம் மூன்றும்

            ஆகமங்கள்  மூன்றும்  தந்த  அருகன்  நம்மை  ஆட்கொள்வார்             841


( 3 மதில் : உதயதரம், பிரீதிதரம், கல்யாணதரம்.  3 குடை : சந்ராதித்யம், நித்ய வினோதம், சகலபாசனம். 3உலகம் :நாகலோகம்,பூலோகம், சுவர்க்கலோகம்.                                   

3 படை : நற்காட்சி, நல் ஞானம், நல் ஒழுக்கம்.  3 அதிசயம்  : சககாதிசயம், கர்மஷாயதிசயம், தெய்விகாதிசயம்.  3 ஆகமம் : அங்காகமம், பூர்வாகமம், பகு சுருதியாகமம். )

 

தவத்தோரைப்  பேணிக்காத்து  வேண்டுதல்  வேண்டாமையற்று

            வீட்டினை  அடையும்  மனதால்  வீதராக  பெருமானைத்  தொழுது

தவநெறிநிலை  தவறுவோரை  தவநெறியில் மீண்டும்  நிறுத்தி

            இழிந்தவர்  சேர்க்கை  நீத்தோர்  பரமாகமம் அறிந்தோராவர்               842

 

வெஞ்சினத்தை  விட்டு  நீங்கல்  வேருடன்  செருக்கை  அழித்தல்

            அருகனின்  அறத்தில்  நின்று  அடியோர்க்கு  இனியோனாதல்

அறத்தினை  அறிந்து  கூறல்  அனைத்துயிர்க்கும்  அன்பு  காட்டல்

            அனைத்தையும் உடையோரென்றால்  ஆகமம் தெளிந்தோராவர்       843

 

பரமாகம  வழியில்  நடப்போர்  விலங்குகதி என்றும் சேரார்

            மனிதகதியில்  பிறந்தார் எனில்  மங்கையராய்  பிறவார்  என்றும்

கீழான  முத்தேவர்  ஆகார்  கடும்  நரகில்  வீழார்  என்றும்

            அருகன் அளித்த பரமாகமோஅத்தனை பலன் அளிக்குமென்றார்   844

 

15. சீலம்  :

 

பதினெண்ணாயிரம்  சீலாச்சாரம்  பற்றற்ற  துறவிகட்ளுக்கு  அறமாகும்

            போரில்  தம்  உடலைக்  காக்கும்  போர் கவசம்  போன்றது  சீலமாகும்

ஐம்பொறிகள்  ஆசை  அறுத்து  நல்வினை  நல்கும்  சீலம்

`           தீவினையை  அறவே  மாய்க்கும்  சீலமாம்  நெறிகள் வேண்டும்         845


பிறன்மனை  பேணாதிருத்தல்  போற்றிடும்  சீலம்  ஆகும்

            மயக்கிடும்  கள்ளைத்  நீக்கல்  மனிதர்கட்கு  நல் சீலமாகும்

தேன்  ஊன்  தவிர்த்து  வாழ்தல்  சிறந்தவர்கள்  சீலம்  ஆகும்

            இல்லற  நெறியில்  நிற்போர்  இத்தனை சீலமும்  கொள்வர்                  846

 

16. தானம்  :

 

நன்னிலம்  பெற்ற  விதை போல்  நன்றாக  செழித்து  வளர்ந்து

            செல்வத்தைப்  பிறர்க்கு  தருதல்  தலையாய  தானத்தின்  இயல்பு

பாழ்நிலம்  பட்ட  விதை போல் பயனின்றி  வளர்ந்தோர்  பலன்

            மின்னல்  என  விரைவில்  மறையும்  இடைப்பட்ட தானம்  இயல்பு      847

 

ஐம்பொறியை  ஆமையாய்  அடக்கி  அத்திகாயங்கள் ஐந்தை ஆய்ந்து

            ஐம்பெரும்  பாவங்கள்  நீக்கி  பழித்தலும்  புகழ்தலும்  இன்றி

வருவது  ஊழ்வினை  என்றெண்ணி  ஆகம  நெறியைக்  கொண்டு

            தவத்தோர்க்கு  அளிக்கும்  தானம்  தலையாய  தானம்  ஆகும்            848

 

இந்நெறிகள்  எதுவும்  இன்றி  இருப்பதை  அள்ளிக்  கொடுத்தால்

            இல்லற  வாழ்க்கையில்  அது  இடைப்பட்ட  தானம்  ஆகும்

விலங்கினை  வதைத்துக்  கொன்று  ஊன்  உணவு  கொடுப்போரும்

            அதை  உண்டிடும்  பாவிகளும்  அடையும்  தீவினை  கூறல்  அரிது     849

 

17. தானப்பயன்  :

 

கொல்லன்  துருத்தி உலையில்  பழுத்திட்ட  இரும்பின்  மீது

            கொட்டிடும்  நீரை  உறுஞ்சும்  கொதித்திடும்  அவ்விரும்பைப் போல

தானத்தின்  புண்ணியத்தை  தன்  உயிர்பெற்றுக்  கொண்டு

            தான் நின்ற உடம்பினை ஒழித்து போகபூமியில் உயிராய் பிறக்கும்  850

 

தலையாய  தானம்  செய்தோர்  போகபூமி  உயிராய்  பிறந்து

            தங்களின்  விருப்பம்  போல  இன்பத்தை  நுகர்ந்து  கழிப்பர்

இடையாய  தானம்  செய்தோர்  கர்மபூமியில்  கருவாய்  தரித்து

            செல்வமும்  செருக்கும்  பெற்று  தீவினையில்  மயங்கி  கிடப்பர்         851

 

18. சீலப்பயன்,  காட்சிப்பயன்  :

 

சீலத்தின்  பயன்கள்  பெற்றோர்  ஈரெட்டு  கல்பலோகத்தில்

            தேவர்களாய்  பிறந்து  என்றும்  தேவசுகம்  அனுபவிப்பர்

நற்காட்சி  அமுதம்  உண்டோர்  கடல்  சூழ்ந்த  உலகம்  தன்னை

            ஒருகுடை  கீழ்  கொண்டுவந்து  உலகாளும்  சக்ரவர்த்தியாவர்            852

 

19. வீடுபேறு  :

 

பொருளினை  அறிதல் ஞானம்  பொருள்  தன்மை  தெளிதல்  காட்சி

            ஞானமும்  காட்சியும்  சேர்ந்தால்  நல்லொழுக்கம்  தானே  வரும்

இம்மூன்று  மணிகளும்  சேர்ந்து  இருவினை  மரத்தை  அழிக்க

            இருவினை  அற்ற  உயிர்கள்  வீடுபேறு  அடையும்  என்பர்                     853

 

கடையிலா  அறிவினோடும்  கடையிலா  காட்சியோடும்

            கடையிலா  வீரியத்தோடு  கடையிலா  இன்பம்  கொண்டு

நாமமும்  கோத்திரம்  இன்றி  ஆயுளற்ற  அழியா  இயல்பால்

            எண்குணம் பெற்றதாலே விண்ணவர் தொழ  வீட்டை அடையும்         854

 

20. பிறவிகள்  அறவுரை  :

 

சாரணர்  கூறிய  அறவுரைகளை  சிந்தையில்  பதித்த  சீவகன்

            முற்பிறப்பில்  தன்  நிலையும்  முடித்து  வைத்த  பாவத்தையும்

ஐயமற  எடுத்துரைத்து  அடியேனுக்கு  சொல்லுங்கள்  என்றான்

            மாதவச்  சாரண  முனிவரர்  மன்னனுக்கு  உரைக்கலானார்                 855

 

அலை காற்று  தென்றலாகி  அகிற்புகையை  சேர்த்தணத்து

            மழைமுகிலாய்  காடெல்லாம்  மணம்  பரப்பி  சூழ்ந்திருக்க

ஞாயிறோடு  திங்களும்  சேர்ந்து  தங்கள்  வழி  மறைந்த போதும்

            கேடற்ற  நாடாய்  மிளிரும் தரணி போற்றும்  தாதகீ நாடு                      856

}

தாதகி  நாட்டின்  தனி  அரசன்  தங்கக்  கழலோன்  அணிந்த  பவணதேவன்

            பவணனனின் பட்டத்து ராணி தேவரும்  இமையசைக்கும் சயமதிதேவி

காமனின்  கணைகள்  கொண்டு  களித்திருந்த  அவர்களுக்கு

            அரிமா  நிகர் மகன் பிறந்தான் அசோதரன் என பெயர் கொண்டான் 857


கல்விக் கேள்விகள்  கற்று  காளையாய்  வளர்ந்த  அசோதரன்

            பெற்றோர்கள்  மனங்குளிர  பெண்களை மணம்  புரிந்தான்

மனைவியர்  உடன்  சூழ  மலர்  ஒத்த  பஞ்சணையில்

            காமனின்  ஐங்கணைகளுடன்  காதல்  போர்  புரியலானான்               858

 

அன்னங்கள்  தன்  குஞ்சுகளுடன்  அலையும்  தாமரைப் பொய்கையிலே

            அசோதரன்  மனைவியருடன்  அங்கு  நீர்  விளையாடச்  செல்ல

அஞ்சிய  அன்னக்கூட்டம்  அலறி  எழுந்து  மேல்  பறந்து செல்ல

            வானம்  என்னும்  நங்கை மேனி  வெண்துகில் போல்  மூடியதங்கு  859      

               

வின் பறக்கா  அன்னக்குஞ்சுகள் விழ்ந்தன  தாமரை  மலர்களில்

            அஞ்சிய  குஞ்சுகளில்  ஒன்றை  அவன்  மனைவியர்  விரும்பி  கேட்க

காஞ்சுகிக்கி  கட்டளையிட  அவன் கைபற்றிய  குஞ்சைத்  தர

            அசோதரன்  மனைவியுடன்  அரண்மனையை  வந்தடைந்தான்           860

 

அன்னத்தின்  மழலைகளை  அன்போடு  மார்பில்  அணைத்து

            பால்  அமுதம்  பலவும்  ஊட்டி  பாதுகாத்து  வருகையிலே

பவணமாதேவன்  ஒருநாள்  பங்கஜம் போன்ற குஞ்சுகளை 

            தாயினை  விட்டுப்  பிரித்தது  தன்  மகன்  என்று  அறிந்தான்               861

 

அசோதரனை  அன்புடன்  அழைத்து  அறவுரைகள்  கூறலானான்

            தன்  மகவுகள்  இல்லை  என்று  தாய்  அன்னம்  பதறும்  நிலையில்

அன்னத்தின்  மழலையைப்  பிரித்தல் அதை சிறை போல் வைத்து காத்தல்

            இவ்விரண்டு தகாசெயல்களும்  வினை விளைக்கும் வித்துகளாகும் 862

 

உயிர்வதை  செய்யதிருத்தல்  உயர்ந்த  தலையாய  அறம்

            பொய்யுரை  கூறாதிருத்தல்  பொன்னுலக  வாழ்வைத்தரும்

களவினை  களைந்து எறிந்தால்  கடும்  நரகம்  விட்டுப்  போகும்

            பிறன்மனை சேரல்  என்பது  பெருந்துன்பத்தில்  ஆழ்த்தும்                   863

 

மிகுபொருள்  விரும்பாநிலை  மேல்  உலகுக்கு  ஏணியாகும்

            ஐம்பொறிகள் மகிழ்ந்து  சேர்ந்தால்  அருளுடன்  புகழும்  போகும்

எண்வினைகள்  அறுத்து  விட்டு  எண்குணங்கள்  முழுதும்  பெற்ற

            அருகன் அடி  தொழுதல்  ஒன்றே அனல் நரகை தவிர்க்கும்  வழி          864


தரணிவாழ்  உயிர்கள்  எதையும்  தாயைவிட்டு  பிரித்து வைத்தல்

            மறுமையில்  தன்  உறவை இழந்து  மற்றவரால்  சிறைவக்கப்படுவர்

தந்தையின்  அறிவுரைக்கேட்டு  தன்  ஆடை  பற்றிய  நெருப்பாய்  பதறி

            அன்னத்தின் மழலைகளை அதன் தாயிடம் சேர்த்தான் அசோதரன் 865     

 

முன்பிறவி  எதிலும்  நீங்கள்  என்  சுற்றமாய்  இருந்ததில்லை

            வரும்  பிறவிகளிலும்  நீங்கள்  உறவுகளாகப்  போவதில்லை

தந்தைக்கு  எடுத்து  சொன்னான்  தான்  துறவு  கொள்வேன்  என்று

            பாசமென்னும் தளை அறுபட  பவணதேவன் பிறப்பை விட்டான்      866  

                  

ஐம்புலன்  வேட்கை  வென்று  அருகன்  நெறி  சிரமேற் கொண்ட

            நாற்கதியில்  பிறக்க  அஞ்சி  நல்தவம்  நாடி  ஏற்றதனால்

இந்திரனாய்  விண்ணுலகம்  சென்று  ஈடில்லா  இன்பம்  தூய்த்து

            இவ்வுலகில்  மீண்டும்  பிறந்தாய்  ராசமாபுர  சீவகன்    பெயரில்   867   

                    

21. தாயத்தீவு  :

 

சாரணர்கள்  அனைத்தும்  கூறி  தம்  வழியே  சென்ற  பின்

            சீவகன்  செவ்வரி  கண்கள்  சிந்தின  மண்டிய  கண்ணீரை

எண்பெருந்தேவியர்  வருந்த  இன்னுரைகள்  ஏதும்  இன்றி

            அவ்விடம்  விட்டு  அகன்று  அரண்மனை  வந்து  அடைந்தான்              868

 

கொண்டவன்  சென்ற  பின்பு  கடும்  வெப்ப  மூச்சி  விட்டு

            சீவகனின்  செல்ல  உரையன்றி  வேறேது  கேளா நெஞ்சால்

வேந்தன்  தோள்  தழுவா நிலையில்  வேதனையில்  மேனி வாடி  சரிய 

            பால் நுரை மென்மையான பஞ்சணையில் வீழ்ந்தனர் கொடியாய்    869

 

இளஞ்சிங்கம்  நந்தட்டனிடம்  இடிமுழக்கம்  போல்  முழங்கினான்

            ஏமாங்கத  நாட்டின்  பொறுப்பை  ஏற்றிட்டு  ஆள்வாய்  என்றான்

அண்ணலே  அரசு  வேண்டேன்  அண்ணன்  அடி  விரும்பி  வாழ்வேன்

            என் தலைவன் ஏற்கும் துறவை ஏற்று நான் தொடர்வேனென்றான் 870

   

தத்தை  மகன்  சச்சந்தனுக்கு  தனிமையில்  அறிவுரை  சொன்னான்

            செங்கோல்  வளையாமல்  காத்து  செழிப்புடன்  நடத்தி  செல்ல

நல்லமைச்சர்  காட்டும்  வழியில்  நல்  அறம்  காத்து  நடந்தால்

            நெடுநிலப்  பரப்பை  நீயும்  நின்  குடை  நிழலில்  ஆளலாம்                  871


முற்றிய  நெல் கதிர்  அறுத்து  முழ்ச்சோற்று  கவளம்  ஆக்கி

            யானைக்கு  உணவாய்  தரலாம்  எவ்வித சேதமும்  இராது -  அதுபோல்

முறையான  வரிகள்  விதித்து  முறையே  வரி  வசூல்  செய்தால்

            மன்னனின்  ஏவல்  கேட்பர்  மலைபோல  செல்வம்  கொழிக்கும்         872

 

தேர்  ஓட்டும்  வல்லான்  ஒருவன்  தேறாதை  நிலத்தில் செலுத்தினால்

அச்சோடு  தேரும்  முறியும்  தேரோட்டி  தானும்  வீழ்வான் – அதுபோல்

அரசர்கள்  அறமிழந்தாண்டால்  அந்நாடே  அழிவதும்  இன்றி

            மக்களும்  துன்பங்கொள்வர்  மன்னனும்  ஓர் நாள்  அழிவான்              873

 

பகையினை  நெஞ்சில்  வைத்து  கருவிடும்  களிறு  போலின்றி

            அருளொடு  ஆய்ந்து  சினம்  விடல்  அரசர்க்கு நன்பொருளாகும்

மக்களால்  புகழப்பட்டு  மாய்த்திடும்  பொய்மை  நீக்கி

            மந்திரியை  மதித்தானானால் மன்னர்கள்  உன்  அடியில்  கிடப்பர்    874

 

சச்சந்தனை  மன்னன்  ஆக்கி  சுதஞ்சணனை  இளவரசாக்கி

            மற்ற  மகன்கள்  மனம்  மகிழ முறைப்படி  அனைத்தும்  செய்து

தம்பி  நந்தட்டன் மகனை  தனி  நாட்டு  குறு  மன்னனாக்கி

            நண்பர்கள்  குடும்பம்  எல்லாம்  சச்சந்தனை  காக்கச்  செய்தான்      875

 

22. துறவு  உணர்தல்  :

 

செம்பொன்  தகடுகள்  வேய்ந்த  சிறந்த மணிகள்  சிரம்  வைத்து

            பகலவன்  விலகிச்  செல்ல  பெருமாடக்  கூடம்  வந்து

எழில்  தேவியர்கள் எண்மரையும்  தன்  இருப்பிடம்  வருவதற்கு

            ஏவலர்க்கு  ஆணையிட்டு  எதிர்பார்த்து  சீவகன்  இருந்தான்                876

 

மென்னிடை  நொந்து  வருந்த  மேகலை  மௌனமாய்  ஒலிர

            சிலம்பொலி  சோர்ந்து  ஒலிக்க  சீவகனை  வணங்கிய  தேவியரை

மணமிகு கூந்தலை  உடையீர்  மது சொட்டும்  செவ்விதழோரே

            அலைந்திடும் மனதை நிறுத்தி அடியேன் உரை கேட்பீர் என்றான்    877

 

வலம்புரி  சங்குகள்  என்றும்  வடிந்திடுங் குளத்தில்  இல்லை

            அருங்கொடை  தானமும்  தவமும்  வறுமையில்  அமைவதில்லை

குன்றில்  தான்  வைரம்  தோன்றும்  குளத்தில்  தான்  குவளை  மலரும்

            பண்பினை உடையோர்  அன்றி  பகுத்துண்வோர்  யாருமில்லை        878

 

வறியோர்க்கு  செய்யும்  தானம்  மா மேரு  பலனைக்  கொடுக்கும்

            கொலை நீக்கி  ஊன்  தேன் விட்டால்  மண்ணோடு விண்ணும்  தொழும்

மன்னனாய் இருப்போர்ரெல்லாம்  முற்பிறப்பில்  கள்ளுண்ணாதோர்

     கையேந்திபிச்சையில்பிழைபோர்மும்மையில் கொடுத்துண்ணாதோர் 879

 

வேடனிடம்  தப்பும்  கலைமான்  காலனிடம்  உயிரை  விடும்

            வேடுவரிடம் சிக்கிய  பறவை  நல்வினை பயனால்  தப்பும்

பிறப்பு இறப்பு  வளந்து  தேய்தல் உடல் கொண்ட இயற்கையாகும்

            நல்லறம்  நாம் ஏற்றல்  ஒன்றே  நல்வினைப் பயனைத்  தரும்            880      

              

அறம்  ஒன்றே தொடர்ந்து வரும்  அடுத்த பிறவி எடுத்த பின்பும்

            அனிச்சமலராய்  மனது  வாடும்  அறுவினைத்  தொடரும் போது

இளமையில்  ஆடும்  ஆட்டம்  முதுமையில்  முடங்கிப்  போகும்

            நிலையாமை மனதில் தோன்ற  நிலைப்பது நிலையாமை ஒன்றே     881


 

23. அந்தப்புர  விலாவினை.  ( துன்பம் ) :

 

இல்லறத்தின்  தருமம்  ஏற்று  இன்பத்தைத்  தூய்த்தோம்  அன்று

            அறவுரைகள்  கேட்ட பின்பு  அயலராகி  நின்றோம்  இன்று – என

சீவகன்  சொல்லிய  மொழிகள்  தேவியர்கள்  செவியைத்  தாக்க

            மலை விட்டு  விழும்  அருவியாய்  மங்கையர்  விழிகள் கொட்டின     882

 

அயலார்  என்னும்  அக்னி  மொழியை  அரண்மனை ராணிகள்  கேட்டு

            புயலிடை  சிக்கிய  பூங்கொடிகள்  பூக்களை உதிர்ப்பது  போல

சீவகன்  காலடியில்  வீழ்ந்து  சிந்திய  கண்ணீர்  எல்லாம்

            அரண்மனை  கலங்கள்  நிறைய  அழுதனர்  அரண்மனை மக்கள்     883

 

நம்பியின்  திருப்பாதங்களே  நாங்கள்  செய்த  பிழைதான் என்ன

            எமைத்  தாங்கி சுமந்த  துடைகளே எவ்விடத்தில் இனியாம்  தங்குவது

திண்ணிய தோள்கள்  அணைக்க  திணறிய  எங்கள்  தேனுடல்

            அயலார்  என  ஆன  பின்பு  ஆவி  பிரிந்த  மேனி  என்றழுதனர் 884

 

அன்னமே  மயிலே  மகரயாழே  ஆராய்ந்த இனிய  இசையே – என

            செவ்விய வாய் உதிர்த்த நாவே யாம் செய்த குற்றம் எதை கண்டாய்

பொன்மணி முத்துக்கள் மின்னும்  போர்களம்  போல்  பரந்த  மார்பே

            இன்று எங்கள் உறவை விட்டு நீங்குதல் நற்குணமா என்றழுதனர்      885


24. கோயில்  விலாவினை ( அரண்மனைத் துன்பம் ) :

 

முழவுடன் கொம்பொலி   முடங்கி  மகர  யாழ்  தன்னிசை  மறக்க

            துணையோடு  கூடிய  குழலும்  துக்கத்தால்  ஒலியினை துறக்க

தாளமும்  இசையும்  தளர்ந்திட  சிலம்பொடு  மேகலை  ஒலி  நீங்கி

            வலம்புரி  சங்கொலி  அழிந்து  வாடியது  அரண்மனை  அங்கு              886

 

கழுத்தினில்  மணிகள்  கொண்டு  கண்களில்  செந்நிறம்  படர

            தூண்களாய்  பருத்த  காலும்  துருத்திபோல் உப்பிய கன்னமும்

பிறையென்  அழகிய  கொம்புகளும்  வண்டுகள்  மொய்க்கும் மதமுமாய்

            பட்டத்து யானையும்  பரிகளும் பதறியே துவண்டன துறவால்              887

 

காதணிந்த குண்டங்களும்  கரம்  இழந்த  வளையல்களும்

            நவமணிமுத்து  மாலைகளும்  மணம்  மிக்க  சந்தனமும்

நற்சுண்ணப் பல பொடிகளும்  நவமணிகளும் சிதறி  கிடக்க

            விண் வெறுத்த  வான்மீன்கள்  மண் நாடி  வந்தது போலாயின             888        

                     

25. நகர விலாவினை. ( நகர துன்பம் ) :

 

கோயில்களில்  கூட்டம் இல்லை  சாலைகளில்  ஆட்கள்  இல்லை

            கறிவகையும்  கனியும்  ஏற்க  விரும்பியவர்  வீதியில் இல்லை

மணிமுத்து  மாலைகள் இருந்தும்  மன்னனின்  துறவறத்  துக்கம்

            மங்கையர்கள் நெஞ்சம்  பரவ  மாதவத்துறவி போல் இருந்தனர்    889    

                  

ஆடலுடன்  பாடல்கள்  இல்லை  அதற்கு  மத்தளம்  யாழ்  இசை  இல்லை

            மதவேழங்கள் பிளிரல்  இல்லை  மழலைகள்  சிரிப்பொலி  இல்லை

கூகையும்  குயில்களும்  கூவிட  மஞ்சையின்  நடனம்  இல்லை

            மலையென  அலையை  எழுப்பும்  மாபெரும்  கடலொலி இல்லை      890

 

வேள்வித்தீ புகையும்  இல்லை  வளர்  குழல்  அகிற்  புகையுமில்லை

ஆடைக்கு  இடும்  புகையுமில்லை மாலைக்கு இடும் புகையும் இல்லை

எல்லாவகைப்  புகைகளும்  இங்கு  ஈயாதார்  புகழைப்  போல

            தோன்றாமல் மறைந்து போயின சீவகன் ஏற்கும் துறவை எண்ணி 891

 

வண்டுகள்  மலரைத்  துறந்தன  தத்தைகள்  உணவை  மறந்தன

            வானவர்  பூஜைகள்  நின்றன  வேழங்கள்  கன்னல்  வெறுத்தன

மக்களின்  எண்ணங்களெல்லாம்  மனதிற்குள்  மங்கி  கிடந்தன

            ஏமாங்கத  பெருநாடே  இன்று எழிலிழந்து காரிருள்  மலர்ந்தது     892       

               

26. துறவு  வலியுறுத்தல்  :

 

நற்தவத்தையும்  இவ்வுலகத்தையும்  நன்கு  ஆராய்ந்து  பார்த்தால்

            குற்றமற்ற  தவத்தின்  முன்னே  குறுங்கடுகு  உலகம்  ஆகும்

அகப் புறப் பற்றை  நீக்கி  அருந்தவம்  செய்தோமானால்

            வீடென்ற  மோட்சம் சென்று  விலகுவோம்  நால் கதியை விட்டு           893

 

சினங்கொண்ட  களிறை உண்ண  சுண்டெலி  காத்திருத்தல் போல்

            நல்வினை தந்த பொருளை நுகர்ந்து  வினை வெள்ளம்  கடத்தலாகும்

தவம்  சிறிதும்  இல்லையாயின்  பொன்னோடு  பொருளும்  போகும்

            நற்தவம்  மனம் ஏற்று  புரிந்தால்  நால்கதி  வென்றூ  நாடலாம்        894                                 


இருவினைக்  கடலைக்  கடந்து  நால்கதி  பிறப்புகள்  தவிர்த்து

            உயிர்களுக்கெல்லாம்  காவலான  உன்னத  மோட்சம்  செல்ல

துறவினை  ஏற்றுக்  கொண்டேன்  துறந்திடுங்கள்  பற்றுகள்  தனை – என

            சீவகன்  செப்பிய  மொழிகளால்  தேவியரும் துறவுக்கு  துணிந்தனர் 895

 

27. தேவியர்  துறவு :

 

தன் தேவியர்  எண்மரையும்  சேர்த்திட்டான்  விசையையிடம்

            அணிகலங்கள்  அத்தனையும்  அவர்களே  களைந்து நின்றனர்

கார்குழல்  அனைத்தும்  நீக்கி  பால்நிற  வெண்ணாடை  போர்த்தி

            அருகனின்  அறத்தை ஏற்று அனைவரும்  துறவியாயினர்                     896

 

28. பெரிய  யாத்திரை  :

 

மன்னனின்  கரங்கள்  இரண்டும்  சங்கநிதி பதுமநிதியை ஒத்து

            வறியவர்கள்  அனைவருக்கும் பொன்மணி பொருள்கள்  தந்து

தவத்தையே  சிரமேற்  கொண்ட  தவச்செல்வி  விசையை  வணங்கி

            சிவிகையில்  சீவகன்  அமர  தேவர்கள்  சுமந்துச்  சென்றனர்               897


29.  சமவசரண  வருணனை  :

 

அகிர்புகை  மணந்து  வீச  அழகிய  முழவுகள்  முழங்க

            குழலோடு  யாழும்  சேர்ந்து  குளிர்ந்த  நல்லிசை எழுப்ப

கற்பகமாலைகள்  ஒளிர்ந்து  கையிலே சுண்ணம்  ஏந்தி  நிற்க

            அண்ணல் பல்லக்கில் செல்ல அருகன் கோயிலைக் கண்டனர்           898

 

அருகனின்  திருவடி  தொழுதனர்  அவன் புகழைப் பாடி நின்றனர்

            அன்பிலே மெய்யது  தளர  ஆடினர்  அவனைப்  போற்றி

பல்வகை  இன்னிசை  எழுப்பி  பரமனின்  பாதம்  பணிந்தனர்

            அவ்வொலி  அனைத்தும்  சேர்ந்து  ஆழ்கடல் அலையாய் ஒலித்தது   899

 

ஐயாயிரம்  வில்  உயரத்தில்  ஆறிரண்டு  யோசனை  அளவில்

            சௌதர்ம  தேவர்கள் சேர்ந்து  செதுக்கி கட்டிய ஜினாலயத்தில்

இருபதினாயிரம்  படிகள்  கொண்டு  நாற்திசை வாயில்களோடு

            சமவசரண  பூமியை  நெருங்க ஸ்ரீ வர்தமானர்  தோன்றினாரங்கு   900

 

இருவினை  அற்றவர்  தோற்றத்தை  இருகரம்கள்  குவித்து வணங்க

            நம்பியின் இருவினை  கெட்டன நடுக்கத்தில்  மெய்மலர் சிளிர்த்தது

இருவிழிகள்  கண்ணீர்  சொரிய  இளங்குரல்  விம்மித்  தழைய

            அடைமழையாய் மலர்கள் தூவி ஆலயத்தை வணங்கி தொழுதான் 901

 

திவ்வியன்  மகாவீரரைச் சுற்றி  தென்றலென  சாமரங்கள்  வீச

            நவமணிகள் பதித்த முக்குடை  நாற்புறமும்  ஒளியினை  சிதற

புனிதமாம்  அசோகநிழலில்  புண்ணியன்  பொன்னாசனம்  அமர

            அறமாகிய  அமுதம்  உண்பீர் என  அசரீரி குரல் ஒலித்தது அங்கு  902    

       

சீவகன்  நெருங்கிச்  சென்றான்  சுற்றியுள்ளோர்  சொல்லலானார்

            குருகுலத்தில் தோன்றிய சீவகன் கோத்திரத்தில் காசிபனாவான்

மணிமுடி மண்ணில்  பதிய தொழுது  யான்  துறவேற்பேன்  என்று  கூற

            நின் மனம்  துறவில்  வீழ்ந்தது  துறத்தலே  மாண்பென கூறினார்  903                      

30. சீவகன்  துறவு :            

 

தூயவன்  திருவடி வணங்குவோர்  துன்பத்தை துறப்பார் என்றும்

            மாலவன்  அருளில்  நின்றால்  மறைந்தொழியும்  எண்வினைகள்

அருகனின்  அறங்கள்  ஏற்றால்  அருந்துயர் பிறப்பைத்  தவிர்ப்பர்

        மோட்சமாம் வீட்டை அடைய முழுமையாய் துறப்பதே என்றான்            904


செவியணி பொன் தோடுகளும்  செம்பொன்  அணிகலங்களும்

            மணிமுத்து மாலைகளும்  மணக்கும்  மலர் கண்ணிகளும்

கால்தவழும்  வீரக்கழலும்  கையணிக்  கடகங்களும் துகிலுடன்

            மண்ணிலே தவழ்ந்து அசைய மலரடியை வணங்கினான் சீவகன்  905

 

முழுமதி  நாணும்   பேரொளியும்  மண்ணுயிர்  காக்கும் அன்பும்

            பசி பகை பிணியைப் போக்கும்  பல்கிய  நல்ளருளுடனும்

பாற்கடல் போல்  ஞானம்  கொண்ட  பாரீசனாம்  குணக் கடலை

            விண்ணவர்  வியக்கும்  வண்ணம்  சீவகன்  வணங்கிச் சென்றான்     906

 

அருகனின்  அறத்தையேற்று  அனைத்தையும்  துறப்பேன்  என்று

            கணதரர்  கோட்டம்  சென்றான்  கடுந்தவம் கைமேல் கொள்ள

கீழ்திசை நோக்கி அமர்ந்து  கருநிற சுருள்  குஞ்சை நீக்கி

            வெறுங்கையில்  சிகையைப் பெற்று வெள்ளித் தட்டிலிட்டான் நம்பி 907


(கணதரர் கோட்டம் :  கௌதமர்,  வாயுபூதி,  அக்னிபூதி,  சுதன்மர்,  மௌரியர்,  மந்தரர்,  புத்திரர்,  மைத்ரேயர்,  அகம்பனர்,  அசேலர்,  பிரபாசர்.  கணதரர்  இருக்கும்  இடம். )

 

சிகைத்  தட்டை  கையில்  ஏந்தி  சுதஞ்சண  தேவன்  சென்றான்

            ஈராறு  கடலைத்  தாண்டி  பாற்கடல்  வந்தான்  தேவன்

நமோ  என்ற  சொல்  உதிர்த்து  பாற்கடலில்  தட்டை  வைக்க

            நடுக்கடலில்  அந்த  தட்டு  வெண்மதியாய்  போய்  நின்றது                  908

 

நந்தட்டனும்  தோழர்களும்  பூவுலகின்  பந்தம்  நீக்கி

            படநாகம் தோலுரித்தாற் அகப் புறப் பற்று  போக்கி

உள்ளத்தில்  அஞ் ஞானம்  போக  சிந்தை  சுருத ஞானம்  ஏற்க

            சீவகசாமியின்  குழுவில்  தவத்திற்கு  தாமும்  சேர்ந்தனர்                     909

 

31. சேணிகன்  வரவு  :

 

கயல்கள் இனம் எம்பிப் பாய  கண்டு அஞ்சிய குறு முயல்கள்

            இனத்தினை  விட்டு  பிரிந்து  இளம்பசுவின்  கன்றுடன் ஓடும்

கன்னலும்  செந்நெல்லும்  தழைத்து  கண்கட்டும்  பசுமை கொண்ட

            வளமிக்க ஒரு நாடாம்  மகதம்  என்னும்  பெரு நாடாம்                            910


மகத நாட்டின்  தலைநகரம்  மாளிகைகள்  நிறைந்த  ராசமாகிருகம்

            இந்திரன்  நகர்  அமராவதிக்கு  இணையான  அழகிய நகரம்

அந்நகரின்  அரசன்  பெயர்  அரிமா நிகர்  சேணிகன்  என்பான்

            அசோக  நிழல்  அருகதேவனுக்கு அபிஷேகத்திற்கு முரசறைந்தான்  911

 

மணக்கும்  மலர்  மாலை  கொண்ட  மாணிக்கச்  செப்புகளும்

            மென்மணச்  சுண்ணம்  கொண்ட  பொன்னால்  செய்த  செப்புகளும்

புலனறியா  மணம் கொழிக்கும்  பவழ  சந்தனச்  செப்புகளும்

            வேழத்தின்  மேல்  ஏற்றி வைக்க விரைந்தன  ஜினாலயத்திற்கு      912    

                               

மணிமுடி  மன்னர்கள்  திரண்டு  மறுமையில்  வீடுபேறடைய

            இருவினை  அறுத்த  தேவன்  ஸ்ரீ வர்த்தமானர்  அறிவுரை ஏற்க

பாரினில்  பறை  முரசு  அறைந்து பொன்மதில் புறத்தே  தங்க

            சேணிகன்  பொருளுடன்  வந்து  சேவித்தான்  ஸ்ரீ வர்த்தமானரை       913

 

வர்த்தமானரின்  வடியோளி  அழகால்  வான் வாழும்  தேவர்கள்  மங்கிட

            வின்முகில்  கிழித்த  மதி போல்  முனிவர்  குழாம்  கண்ட  சேணிகன்

கடுந்தவம்  ஏற்று  நிற்கும்  தவமுனி  சீவகனைக்  கண்டு

            ஞாயிறு  போல்    திகழும்  இவர்  யாரென  சுதன்மரைக் கேட்டான்     914

 

திருமகள்  தங்கி  வாழும்  திரண்ட  மார்பன்  சீவகசாமி 

            இவன்  அழகுக்கும்  புகழுக்கும்  இணை  அவனியில்  யாருமில்லை

கண்  இமை  அசைத்துப்  பார்க்க  சீவகன்  அல்ல  என்பார்  சிலர்

            கண்  உற்று  நோக்கினாலோ  கண்  தெறித்து  போகும்  என்றார்        915

 

32. சேணிகன்  வினா. ( சேணிகன்  வேண்டுகோள். )

 

பற்றற்ற முனி  சீவகசாமியின்  பிறப்புப்  பற்றி  சேணிகன்  வேண்ட

            சூழ்ந்த  தவமுனிகள்  சேர்ந்து  கை கூப்பி  அறிய  விழைய

கார்முகில்  சுதன்மர்  தன்  கேவலக் ஞானம்  கொண்டு

            பிறப்பொடு  தவத்தைக்  கூற  பக்தியில் கேட்டனர்  எல்லாம்                916

 

33. கேவலக் ஞானம்  அடைதல்  :

 

கவரியோடு  முயலும்  மேயும்  காடு  சூழ்  மலையுச்சி  சென்று

            நாலிரண்டு  கர்மங்களும்  நல்லுயிரை  விட்டுப்  பிரிந்து

தூய்மையாம்  சிந்தை  கொண்டு  அருந்தவத்தில்  நின்ற  சீவகன்

            நீலமணிக் கல்லின்  மீது  நிலைத்த  மாணிக்கம்  ஆனான்                     917

 

ஞானம்  என்ற  யானை  ஏறி  நாட்டியப்  பொன்  தூணைப் போல

            ஆறுகாலமும்  அசைவின்றி  நின்று  அருந்தவம்  செய்த  சீவகனுக்கு

நந்தட்டன்  தோழரும்  தேவியரும்  நல்லுணவு  அளிக்க  வேண்டி

            மலையினை  நாடிச்  செல்ல  மறுத்திட்டான்  உணவினை நம்பி          918

 

மெய் ஞானத்  தேரில்  ஏறி  உயிர்  என்னும்  குதிரைப்  பூட்டி

            நற்சிந்தை  களிறுகளோடு  நல்லொழக்க  கவசம்  ஏற்று

கருணையாம்  சீலத்தோடு  மெய்ப்பொருள்  வாள்  கேடயத்தோடு

            வினைகள்  என்னும் பகைவனை  விரட்டிட  முற்றுகையிட்டான்     919        

               

அருந்தவன்  சீவகன்  நடத்திய  ஆன்மீகப்  போரினை  கண்டு

            எழுவரும்  கலங்கிச் சிதற  ஈரெட்டோர்  போரிட்டு  மாய

நற்சிந்தைக்  களிறுகள்  காலில்  நாலிரண்டு  எதிரிகள்  நசுங்க

            மும்மணிச்  சக்கரத்தினால் மூவிரண்டு  துவர்ப்பும்  அழிந்தன            920


( எழுவர் :  மித்யாத்துவம்,  சம்யக்த மித்யாத்துவம்,  சாம்யக்துவ பிரகிருதி,  அனந்தானபந்த குரோதம்,  மானம்,  மாயை,  லோபம்.  எண்மர்  :  அப்பிரத்யாக்கியான  குரோதம்,  மானம்,  மாயை,  லோபம்,  பிரத்தியாக்கியான  குரோதம்,  மானம்,  மாயை,  லோபம்.    ஈரெட்டோர்  :  இருகதி,  நாற்சாதி,  ஈராது பூர்வி,  வெய்யில்,  விளக்கு,  நிற்றல்,  நுணுக்கல்,  பொது உடம்பு,  நித்தாதி  மூன்று.  6 துவர்ப்பு  :  சிரித்தல்,  வேண்டுதல்,  வேண்டாமை,  துயரம்,  பயம்,  அருவருப்பு. ) 

 

மோகனீய  கர்மம்  என்னும்  பகைவனின்  படைகள்  அழிய

            ஐம்பொறி  எதிரிகளையும்  கன்னல்  போல்  துண்டுகளாக்கி

அருகனின்  ஆகம  நெறியில் நின்று  அனைத்துலகையும் ஒன்றாய்  வென்று

            கடையிலா  நாலும்  பெற்று  கேவலக் ஞானம்  அடைந்தார்                   921

 

வானுலக  தேவர்கள்  சேர்ந்து  வலம்புரி  சங்கொலிக்க  வந்தனர்

            நிறைகடல் விஞ்சை  வேந்தர்கள்  கற்பகமாலைகள் ஏந்தி வந்தனர்

நீள்நில  மன்னர்கள்  எல்லாம்  நறுமணச்  சந்தனம்  கொணர்ந்தனர்

            மண்ணுலக  மாந்தர்கள் கூடி  மாலவன்  திருவடி  தொழுதனர்             922


34. மணியரும்பதம்  :

 

இருவினை  தொலைத்தார்  குழல்  நறுமணம்  நாற்புறமும்  வீசும்

            எண்வினை  களைந்தார்  மேனி  எண்திக்கும்  மணந்து வீசும்

இயல்பினை கொண்ட  உடலோ    இருகோள்கள்  சுடரை அணைக்கும்

            அனைத்தயும்  அறிந்த  தேவர்கள்  அவரடி சிரமேல் கொண்டனர்   923   

                    ( இரு கோள்கள் :  ஞாயிறு,  திங்கள். )

 

மனைவியர்  எண்மரும்  தொழுது  மனக்குற்றம்  போக்கிக்  கொண்டனர்

            மதிநிறைந்த  ஞானத்தாலே  மலர்கள்தூவி  அடி தொழுதனர்

தாமரை மேல்  நடக்கும்  செல்வா  பிறவி  அச்சம்  அற்றோம்  நாங்கள்

            பொருள்களின்  தன்மை  கூறும் அநேகாந்தவாதா என வாழ்த்தினர்              924


( அநேகாந்தவாதம்  :  பொருளின்  உண்மைத்  தன்மையை  பல கோணங்களில்  ஆய்ந்து  முடிவெடுத்தல்.  ஏகாந்தவாதம்  :  ஒரே கோணத்தில்  நின்று  முடிவு கூறுதல்.  பிறசமயத்தவர் கொள்கைகள். )

 

35. பரிநிர்வாணம்  :

 

தேவர், தவசியர்,  தேவியர்  கூடி  திக்கொலிக்க  தோத்திரம்  பாடி

            பரமாகங்கள் நெறியை  அறிய  அறமொழி   அருள்க என  வேண்ட

அகப் புறப்பற்றை அறவே நீக்கி அருகனின்  நெறியை அணைத்து

     தூயவன் அடியே  துணையென  பற்றிட வீடுபேறுண்டென  கூறினார்   925

 

தன்னுயிர்  காத்தல்  போல்  பிறவுயிர்  போற்றிடச்  செய்தால்

            மண்ணுயிர்  நீங்கிச்  சென்று  பொன்னுயிர்  பெறுவான்  அங்கு

அருகன்நெறி  ஏற்ற  சிந்தை    அணூகாது வேறு  நெறி என்றும்

            மாலவன்  மலரடி  ஒன்றே  மண்ணுயிரைக்  காக்கும்  என்றார்             926

 

விண்ணிலே  துகிற்கொடிகள்  அசைய  வானவர் தேவதுந்தூபிகள்  ஒலிக்க

            விண்ணவர்  தம்  ஊர்தியில்  வந்து  வான்மழை போல்  பூ பெய்ய

சந்தனம், புனுகு,  அகிற்புகையோடு  தூப  தீபங்கள்  ஒளியாய்  ஏற்ற

            வைகாசிப்  பிறைத்திங்களன்று  வீடுபேறடைந்தான்  சீவகன்              927

 

 

36.  தேவியர்  நோற்றுயர்வு   :

 

சீவகசாமியின்  அறவுரை கேட்டு  சீரிய  தவத்தினை  ஏற்ற  மகளீர்

            மேனியெல்லாம் மாசுகள்  படிந்து மேலும் பெண் பிறவி  கெடுகவென்று

நால்கதியை  தவிர்க்க  வேண்டி  நற்காட்சியை   சிந்தையில்  போற்றி

              நல்ல தவம் செய்த பயனால் ஞானத்தில் சொர்க்கம் சென்றனர்      928

 

37.  நந்தட்டன்  தோழர்கள்  நோற்றூயர்வு : 

 

நந்தட்டனும்  அவன் தோழர்களும்  நாள்தோறும்  நற்றவம்  புரிந்து

            ஐம்பொறியை  அடக்கியாளும்  ஆற்றலை மனதினில்  கொண்டு

ஈரெட்டு  சோடசபாவனைகளுடன்  இறைவனை வணங்கி நின்று

            உணவினை  நஞ்சாய்  தள்ளி  உயர்  தவம்  செய்யலுற்றனர்              929

 

கருவுருவான  காலத்திலேயே  நிர்ணயத்த  இறப்புவரை

            கடுந்தவத்தில்  பொருந்தி  கற்சிலை போல்  அசைவின்றி

விண்ணவரும்  வியந்து  நோக்கும்  வீரிய  நல்ல  தவத்தினாலே

            மண்ணுலக  உடலை  விட்டு  விண்ணுலகில்  தேவர்  ஆயினர்        930          

 

38. ஓம்  படை . ( நூல்  பயன் ) :  

 

பிறர் குற்றம்  கூறக்  கேட்டு  பொருந்திய  பொருளின்  அழகை

            மூவொன்பது  மாணிக்கத்தையும்  முத்துவடம்  போல்  கோர்த்த

சீவக சிந்தாமணி  இந்நூலை  படித்தோறும்  அதை  செவியுற்றோரும்

            இந்திரனாய்  பிறந்து  பின்  இணையற்ற  மனிதனாய்  பிறப்பர்   931        

     

 

39. தேவர்  முடிவுரை  :

 

நல்வினை என்னும்  கடலில்  தீவினை  என்னும்  குற்றம்  நீக்கி

            அறிவு  என்னும்  முழுமதியாலே  அழகியச்  செய்யுள்  மலரை

செறிந்த  வினை இருளை நீக்கும்  செவ்விய  முக்குடையான்  அடியில்

            அர்ச்சித்து  தொழுதேன்  என  ஆசிரியார்  தேவர்  முடித்தார்                 932

 

முக்தி  இலம்பகம்  முடிவுற்றது.   

சீவக சிந்தாமணி  நிறைவுற்றது.



என்  இனிய  சொந்தங்களே,

                        இன்று  வரை,  சுமார் 186  நாட்கள்,  931  சீவக  சிந்தாமணி  செய்யுளை,  கதையாக  தொடர்ந்த  அனைவருக்கும்  என்  உளம் கனிந்த  நன்றி.  இது  முழுக்க,  முழுக்க  கதை  மட்டுமே.  தேவரின்  கவி வளத்தையும்,  கற்பனைச்  சிறப்பையும்  முழுதும்  பருக  விரும்புவோர்,  தேவரின்  2700  செய்யுள்களையும்,  இடைச்  செருகளான  445  செய்யுள்களையும்  உரையுடன்  படித்து  ரசியுங்கள்.  கம்பனே  சுவைத்து,  தனக்கென்று  ஒரு  அகப்பைப்  பருகிய,  இச்சிந்தாமணி  சமணம்  தந்த  பொக்கிஷம்.  தமிழ்த்  தாய்க்கு  தந்த  பெருங்கொடை.

                        இதைத்  தொட  நினைத்தது  என்  அறியாமை. தொட்டு  இடையில்  பல  தவிர்த்தது  என்  இயலாமை.  கதை  மட்டும்  சொல்லியது  என்  பேதமை.  கவி  முழுக்க  கற்றவர்க்கு  இது  சிறுமை.  தனிச்  சிறப்பு  இந்நூலின்  தமிழ்  வளமை.  தமிழ்த்  தாய்க்கு  சமணம்  தந்த  தனிப்  பெருமை.  தமிழ்ச்    சான்றோரே  பொறுத்திடுங்கள்,  என்  தமிழ்  வறுமை.  தமிழ்  கற்று  எழுதுவது என்  நிலைமை.  தாங்கள் இதைப் படித்தது உம்  பெருந்தன்மை. தமிழ்  எழுதும்  தயக்கத்தில்  என்  புலமை. தொடர் படித்து,  குறை  மன்னித்தது,  உங்கள்  மேன்மை.  தொடர்ந்திட்ட  அனைவருக்கும்  என்  தமிழ்  அடிமை.  நன்றி,  வணக்கம்.

 

                                                                        அன்புடன்  உங்கள்,

                                                            முட்டத்தூர். அ. பத்மராஜ்.

                       

           

No comments:

Post a Comment