நம் முன்னோர்கள் வழியிலேயே பயணிப்போம்.நம் முன்னோர்கள் வழியிலேயே பயணிப்போம்.
சாஸ்திரம், சம்பிரதாயம், சடங்கு.

சாஸ்திரம்நல்வழிகளைக் கூறும் நூல்

சம்பிரதாயம்கூறப்பட்ட நல்வழிகளை காலம் காலமாக கடைபிடித்து  வருவது சம்பிரதாயம்.

சடங்குஇதனைச் செயல் படுத்துவதே சடங்கு. (அவையே பண்பாட்டு நிகழ்வுகள்.)

----------------

பண்பாடு என்பதன் பொருளாக நமது இனக்குழுவின் பழக்கவழக்கங்கள்; மேலும் தோற்றம், வளர்ச்சி, தங்களை நிலை நிறுத்துவதற்கான போராட்டம், பெருமை, இவற்றைப் பிரதிபலிக்கிற நடைமுறை வாழ்க்கையையும், கருத்துருவான வாழ்க்கையையும் சொல்லலாம். இதை வெளிப்படுத்தவே சடங்குகள் என்று சொல்லப் படும் பண்பாட்டு நிகழ்வுகளை வாழ்க்கை முழுவதும் உருவாக்கி வைத்திருக்கின்றனர்.


அறிவியல் வளராத காலகட்டத்தில் தாங்களாகவே உருவாக்கிக் கொண்ட கருத்துருக்களுக்கு ஏற்பவும், பழைய வரலாற்றை நினைவு கூர்ந்து அதைத் திரும்பச் சொல்லும் முறையிலும் சடங்குகளின் நடைமுறை இருந்தது. ஒவ்வொரு பண்பாட்டு நிகழ்வுக்குள்ளும் சடங்குகள் தீவிரமாகக் கடைப்பிடிக்கப் பட்டன.


அவை நம் இனக்குழுவின் அடையாளமாகக் கருதப்பட்டது. இதற்குமப்பால் உளவியல் ரீதியாக இனக்குழுவின் தன்னம்பிக்கை, ஒற்றுமை, உற்பத்தி, உறவுகளின் ஊடாடல், இவற்றை முன்னிலைப்படுத்துவதாகவும் இருந்தது. பண்பாடு, சடங்குகள் இவற்றின் அடிநாதமாக, கொண்டாட்ட மனநிலை இருப்பதைக் காணலாம். அடுத்தது இனக்குழு கூடி வர்த்தமானங்களை, சுகதுக்கங்களைப் பகிர்ந்து கொள்கிற ஒரு இடமாக அந்த விழாக்கள் அமைகின்றன.


தங்களுடைய பூர்வீகத்தை, மூதாதையரை நினைவு கூர்ந்து மீண்டும் தங்கள் இனக்குழு அடையாளத்தை உறுதி செய்கிற நிகழ்வாகவும் இருக்கிறது. தங்களுக்கேயுரிய பண்பாட்டு அசைவுகளை மீளவும் ஒரு சடங்காக செய்து பார்க்கிற நிகழ்வாகவும் பண்பாட்டு நிகழ்வுகள் இருக்கின்றன.

-----------------

இதுநாள் வரை பொருளாதார வசதி குறைவால் அடக்கி வாசித்தார்கள். இப்போது வசதி வந்ததும் எல்லாம் அமர்க்களமாக நடக்கிறது.


சடங்குகளை அகற்றினால் வருகிற வெற்றிடத்தை எதைக்கொண்டு நிரப்புவது. அதற்கு திட்டங்கள் வகுத்த பின்பே மதச்சடங்குகளை அகற்றுவது பற்றி பேசவே முடியும். வெற்றிடம் ஏற்பட்டு ஒன்றும் நிரப்பாமல் போனால், அம்முறை எங்குள்ளதோ அதை நோக்கி நம்மக்கள் திரும்புவர். அதனால் நீக்க முடியாமல் மறுபடி அம்முறையே இதை பிடித்துக் கொள்ளும். அதற்கு நாம் பேசாமல் முன்பிருந்த சம்பிரதாய சடங்குகளை கடைபிடிப்பதே சாலச் சிறந்தது.

----------------

சமணம் நமக்கு ஆத்ம தரிசனத்தை பெறுவதே பிரதான நோக்கமாக சுட்டுகிறது. அதனை இருபத்து நான்கு ஆப்தர்கள் எவ்வழியில் அதனைப் பெற்றார்களோ, அதனை அறங்கூறும் மன்றத்தின் வாயிலாக தெரிவித்துள்ளவற்றை;  நாம் கணதரர், சுருதகேவலிகள் வாயிலாக மோட்ச மார்க்கமாக ஏற்றுக் கொண்டுள்ளோம். அதுவே துரத ஆத்மதரிசனத்திற்கு வழி வகுக்கும் என்பதை இன்றும் நமது ஆச்சாரியர்களும், முனிபுங்கவர்களும்  தெரிவித்து வருகின்றனர்.


சமணர்களாகிய நாம் அனைவரும் இல்லறத்தில் வாலிபம் எய்தும்  வரை ஜினாலயத்தில் வழிபாட்டில் இருந்து வருகிறோம். அதன் பின் இல்லற வழியிலே குடும்ப வாழ்க்கையை தொடர்வதா, அன்றி தனிமனித வாழ்க்கை ஏற்று சாதுக்களாக மாறுவதா என்பதை முடிவெடிக்கின்றோம்.


அதனால் நம் வாழ்வை கடை சேர்க்கும் முகமாக கடைசி தீர்த்தங்கரரான ஸ்ரீ மகாவீரரும் முனிவ வழியை தேர்ந்தெடுத்தவர்களுக்கான வாழ்க்கை நெறிகளையும், இல்லற தேர்விகளுக்கான நெறிமுறைகளையும் தனியாக ஆண், பெண் இருபாலருக்கான சாது, சாத்வி, சிராவக, சிராவகி ஆகிய நான்கு மார்க்கங்களை, சங்க விதி முறைகளை அளித்துச் சென்றுள்ளார்.


இல்லறத்தாருக்கு விரத முறைகளை சற்று தளர்த்தியும், முனிவர் வழியை தேர்வு செய்பவருக்கு சரியான விதிமுறைகளை (அவ்வழியை தேர்வு செய்யின் கடுமையல்ல) வகுத்தும், அதன் வழியில் ஒழுக போதனை செய்து மறைந்தார்.


அந்த சித்தாந்தங்களை நாம் கைக்கொள்ள, அதன் வழியில் செல்ல சில போதனைகளும், கிரியைகளும் விரதங்களாக நமக்கு தருவித்து பின்னர் வரும் ஆச்சாரியர்கள் அந்தந்த காலகட்டத்தில் வழங்கி வந்துள்ளனர். அதனை குகைகளில் பள்ளி அமைத்து அனைவருக்கும் மருத்தவ வசதி செய்து அந்த ஜினரை மறவாமல் இருக்க புடைப்புச் சிற்பமாக வடித்து அதனை ஆராதிக்கும் முறையும், அவர் கூறிய வாழ்க்கை நெறிகளையும் வழங்கி வந்துள்ளனர்.


அதுவே பிற்காலத்தில் ஜினாலயமாக உருவெடுத்துள்ளது. ஏனெனில் முனிவர்கள் வாழ்ந்த இடத்திற்கு இல்லறத்தார் சென்று தரிசித்து, நெறிமுறைகளை கேட்டுணர்ந்து வந்த காலம் அழிவுற்றது.


எவ்வாறெனின் சைவ, வைணவ சமயம் வேரூன்ற ஆரம்பித்து, மன்னர்கள் அம்மத தலைவர்கள் கூறியதை கேட்டு நம் முனிவர் பலரையும், ஏன் அனைவரையும் கழுவேற்றம் போன்ற தீய நடவடிக்கையில் இறங்கியதின் காரணமாய் அழிந்து ஒழிந்தனர் என்றால் மிகையாகாது.


அதனால் அம்முனிவர்கள் வழிகாட்டுதலை ஏற்ற நம் பரம்பரையினர் பல ஜினாலயங்களை நிர்மாணித்து அதில் புடைப்புச் சிற்பம் போல் ஜினர்களை பிரதிஷ்டை செய்தனர். அதனை சமவசரணத்தின் அடையாளமாக கருதி வடிவமைத்தனர். (குகை ஜினாலயங்கள் அம்முறையில் அமைக்கப்பட்டவை அல்ல.)


சமவசரணத்தோற்றதில் அவர் கூறிய  திவ்யத்தொனியை நினைகூற ஸ்ருதஸ்கந்த வடிவத்தையும், ஜினவாணியையும் நிறுவினர். அவ்வறங்கூறும் மன்றத்தில் தேவதேவியர்கள் அமர்ந்திருந்தை அடையாளப்படுத்த எண்ணிய போது, பிற சமயங்களின் ஆலயங்களில் வணங்கப்படும் தேவ, தேவியரை நம்மவர்கள் வணங்க முற்படுவதை தடுப்பது போல, அவற்றிற்கு இணையான வியந்திர தேவர்களில் ஒருபிரிவான யக்ஷயக்ஷியரையும், அவ்வாலய கல்ப வாசி தேவர்களுக்காக, ஸ்ரீபிரம்மதேவரையும் நிறுவி வணங்குமுறையை தொடங்கினர் என்பதும் பொருத்தமாகும். அவர்களது காவல் தெய்வத்திற்கு இணையான சமவ சரண காவலர்களான க்ஷேத்ர பாலகர், துவாரபாலகர் சிலைகளும்  நிறுவப்பட்டன.


தமிழ் நாட்டில் கழுகு மலைச் சமணச் சிற்பங்கள், சிதறால் மலை,  எண்ணாயிரம் மலை, அனந்த மங்கலம், சீயமங்கலம் ஆகிய இடங்களில் சமண குகைகள், முனிவர் படுக்கைகள், மருந்துக் குழிகளுடன், பல சமண தீர்த்தங்கரர்களின் அமர்ந்த, நின்ற நிலையிலுள்ள சிற்ப உருவங்களும், யக்ஷர், யக்ஷி ஆகியோர் சிற்பங்களும் வடிக்கப்பட்டுள்ளதிலிருந்து இங்கு வாழ்ந்த முனிவ பெருமக்கள் யஷ, யக்ஷியர் வழிபாடு செய்துள்ளனர் என்பதும் விளங்கும்.

 (அவ்வழியில் தான் தமிழ் நாட்டு ஜினாலயங்களிலும் யக்ஷ, யக்ஷியர் சிலைகளை நிறுவி வழிபாடு துவங்கி இருக்க வேண்டும்.)


வழிபாட்டு முறையும் அக்காலத்தில் வாழ்ந்த தமிழக முனிவர்கள் கூறிய விதத்தில் அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


அதாவது சமவசரணத்தின் முன் நிற்கும் மானஸ்தம்பத்தை  தரிசித்து, ஸ்ரீக்ஷேத்ர பாலகர் அனுமதி பெற்று அப்பூமியில்  நுழைய வேண்டும். அங்குள்ள கேளிக்கை பூமிகளையும், வனங்களையும் கடந்து லஷ்மிவர  மண்டபத்தின் அடையாளமாக அர்த்த, முக, மகாமண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ளன.


நமது தீய எண்ணங்களை பலிபீடத்தில் இட்ட பின் நற்சிந்தனையுடன் ஆலயத்தில் மூன்று முறை நற்காட்சி, நல்ஞானம், நல்லொழுக்கத்துடன் வலம் வருவதை சமவசரண கேளிக்கை பூமிகளை கடந்து செல்வதைப் போன்று நினைவில்(பாவனை) கொள்ள வேண்டும்.


திருச்சுற்று முடிந்ததும் கருவறையில் ஆயிரத்தெட்டு இதழ்  கொண்ட தாமரை மலர்மிசை ஏகி அமர்ந்த அடையாளமாக வேதிகையில் நிறுவப்பட்ட ஜினரை தரிசனம் செய்து அவர் அருளிய போதனைகளை மந்திரங்களாக நினைவு கூர்ந்து உச்சரித்து, அருளை பெற்று கருவறையை விட்டகல வேண்டும்.


பின் த்வியத்தொனியாய், துவாதசங்கமாக உள்ள ஸ்ருதஸ்கந்த பிரதிமையை நினைவு கூர்ந்து வணங்கி, அடுத்த படி நிலையில் அமர்ந்துள்ள சாசன  தேவதேவியரை வணங்கி நம்  அஹிம்சைப் பாதையில் ஏதேனும் வரும் இடையூறுகளை களைய அருளும் படி (சிறப்புகளை கூறி பாடல்களாக) வழிபட்டு இறுதியாக மீண்டும்  க்ஷேத்ர பாலகரிடம் விடைபெற்று அப்புனித பூமியை விட்டு வெளியேறுவது ஜினாலய அமைப்பின் தாத்பர்யம் ஆகும்.  இதுவே நம் தமிழக முனிகள் வழங்கிய விதிமுறைகள்அதனையே நாம் கடை பிடித்து வருகிறோம். இவையே தமிழக சமண மரபு ஆகும்.


மேலும் ஜினாலயங்கள் பலிபீடம் முதல் நிலையாகவும், அனைவரும் பிரார்த்திக்கும் கூடமான முகமண்டபமும், சாசன தேவ தேவியர் சன்னதியுடன் இரண்டாம் நிலையாகவும், மூன்றாம் நிலையில் திருவிழா மண்டகப்படிக்கான உயர தளமும், ஸ்ருதஸ்கந்தம் சன்னதியும் அமைத்து, நான்காம் நிலைக் கட்டுமானத்தில் தினபூஜை மேடையும் அதற்குரிய ஜினர், நவதேவதை, நந்தீஸ்வர தீப நினவுருவமும் அதில் வைத்திருப்பர். அதற்கடுத்த ஐந்தாம் நிலையில் முனிவர்கள் வந்து தரிசனம்  செய்ய  ஒரு படி உயர அமைத்திருப்பர். ஆறாம் நிலை உள்ளாலையாக  அமையும், கடைசி ஏழாம் நிலையில் கருவறை வேதிகையில் ஜினரில் புடைப்புச் சிற்பமும் நிறுவி இருப்பர். இந்த ஏழு நிலைகளும் அடுத்தடுத்தோ, பக்க வாட்டிலோ ஏழு தத்துவங்களாக அமைப்பது தமிழக திராவிட பாரம்பரிய ஜினாலய அமைப்பு முறையாகும்.


முதல் நிலை பலிபீடம், அடுத்து சற்று உயர நிலை சாசன தேவ, தேவியர்பிரம்ம தேவர்அடுத்த படி நிலையில் ஸ்ருதஸ்கந்தம், ஜினவாணி அமைக்க வேண்டும். அதற்கும் சற்று கூடுதலான உயரத்தில் தினபூஜை மேடை, கடைசி உயர மேடையில் ஜினரும்  வடிப்பது நமது தமிழக  சமண மரபாகும். மேலும் பலிபீடத்தின் தாமரை வடிவ மேற்பரப்பு மூலவரின் மேடை உயரத்திற்கு சமமான உயரத்தில் அமைப்பது வழக்கம். (இவை நம் தாத்தாக்கள் சொன்ன விளக்கம்)


ஆனால் பிற்காலத்தில் நாடு முழுவதும் பயணம்  செய்ய ஊர்திகள்  வந்தபின் ஒவ்வொரு மாநிலத்திலும் வழிபாட்டு முறைகள் மாறியுள்ளதைக் காணும் போது நம்மில் சிலருக்கு அவ்வழியில் சிலவற்றை எடுத்துக் கொண்டால் மேலும்  சிறப்பாக அமையும் என்ற எண்ணம் தோன்றவே, நமது தமிழக சமண மரபில் உள்ள ஆலய அமைப்பிலும், வழிபடும் தெய்வ உருவங்களிலும், வழிபாட்டு முறையிலும் சேர்க்கலும், நீக்கலும்  ஏற்பட்டுள்ளதை நாம்  ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டியுள்ளது.


மேலும் நடைப்பயணமாக வடமாநில மூனிவர்கள், மாதாஜிக்கள் தமிழக விஜயத்தின் போது அவர்கள்  அம்மாநில முறையில் வணங்கியதை கண்ணுற்றதும், நம்மாநிலத்தில் முனிவர்கள் இல்லாததினால், வந்தவர்கள் கூறும் வழிமுறைகளை ஏற்க துணிந்தனர். அதுவும் தவறன்று. அவையும்  நமக்கு பொருத்தமாக அமைந்துள்ளதாக கருதி முழுமனதுடன் வழிபடுவதில் தவறில்லை. அதுவும் நம் சமண மரபே. வேறு பகுதியில் உள்ள வழிபாட்டு முறை, அவ்வளவுதான். ஆனால் அவர்களுக்காக அம்முறையை அந்த நேரத்தில் மட்டும் செய்து விட்டு, மீண்டும் நம் சம்பிரதாயத்திற்கு வருவதே சாலச் சிறந்தது.


இரண்டும் சமண மோட்ச மார்க்கத்தை தழுவியே அமைந்துள்ளவை. அது மட்டுமில்லாது அந்தந்த வட்டாரத்தில் உள்ள மித்யாத்வ தெய்வ வழிபாட்டில் நம் சமணர்கள் தடம்  மாறிச் செல்லாதும்செல்பவர்களைத் தடுக்கும் முறையாக உள்ள வழிபாட்டு முறைகளையும் நாம் முழுவதுமாக குறைகூறவும் முடியாதுஅனைவரது நோக்கமும் அந்நியதா சரணத்தை தடுப்பதே யன்றி வெறொன்றுமில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்


ஆனால் நம் தமிழக சமண வழிபாட்டு முறை நமது தமிழக பாரம்பரியத்தை நழுவ விடாமல் தொடர்வது. ஆனால் பிற மாநில  முறையும் அந்தந்த பகுதியின் பாரம்பரியத்தை ஒட்டியே அமைத்துள்ளனர் என்பதும் நாம் கவனிக்க வேண்டியுள்ளது. நாம் ஏன் நமது பாரம்பரியத்தை விடுக்க எத்தனித்தது, அவர்கள் வழிமுறையை நாம் மனதளவில் ஏற்றுக் கொள்ள ஆரம்பித்ததே காரணம்.


ஒருவிடயத்தை இவ்வேளையில் கூற விரும்புகிறேன். இலங்கை பெளத்த மதத்தினர் புத்தருக்கு கருவாட்டை படைத்து வழிபடுகிறார்கள் என்று மு.வரதராசனார் தனது யான் கண்ட இலங்கை என்ற நூலில் எழுதியுள்ளார்கள். தனக்கு வாழ்வழிக்கும் பொருளை அம்மீனவர்கள் இறைவனுக்கு அர்ப்பணித்து படைத்தார்கள். அது அவர்களது சம்பிரதாயம். திபெத், ஜப்பான், சைனாவில் வழிபாட்டு முறை அவற்றிலிருந்து மாறுபடுகிறது.


தமிழகத்தில் வெளி மாநில ஜைனர்கள்;  இங்கே குடியிருப்பவரும், யாத்திரையாக வருபவர்கள் யாரும் நமது  முக்கிய ஸ்தலங்களுக்கு அதிகம் வருவதும் இல்லைவந்தாலும்  தங்கள் முறைப்படியே வணங்குகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


நீண்ட நாட்கள் தமிழகத்தில் தங்கும் சூழ்நிலை ஏற்படின் ஒரு ஜினாலயத்தை  நிறுவி அதில் அவர்களது மரபில் தான் வழிபடுகின்றனர். ஏனெனில் அப்போது தான் அவர்களது சம்பிரதாயம் சடங்கின் வழியே பாதுகாக்கப்படுகிறது.


ஆனால் தீர்த்தங்கர சந்தான  காலத்தில்  சமவ சரணத்தில் தமக்குரிய பிரதேசத்தில் அமர்ந்து த்வியத்தொனியை பருகியவர்கள், இக்கணமும் மரணிக்காமல் உயிருடன்  இருக்கும் சாசன தேவதைகளை வணங்காமல் எப்படி இருக்க முடியும். அதற்காகத்தான் அதற்குரிய சன்னதிகளை நம்முன்னோர்களும் அமைத்துள்ளார்கள்.


அவர்கள் மீது பக்தி  கொள்ளும் போது  விருப்பதை  நிறைவேற்றும் நோக்கத்தினை மாற்றி அமைக்க வழி சொல்லுவதே சாலச் சிறந்தது. ஜினருக்கு படைக்கப் பட்டது நிர்மால்யம் என்றும், சாசன தெய்வங்களுக்கு படைத்தால் பிரசாதம்  என்றும் வழக்கத்தில் உள்ளது.


நாம் அவ்வாறு அஹிம்சையை அறவே நீக்கும் முறையில் வழிபடவில்லை என்பதையும்  நாம் உணர வேண்டும். அபிஷேக அராதனையை திடீரென நிறுத்துவது தமிழக பாரம்பரிய பக்தர்களுக்கு வருத்தத்தையே அளிக்கும்.


நம் மத வழிபாட்டில் தான் இத்தனை குளருபடிகள் வரத்தொடங்கியுள்ளதுபிற மதத்த்தினர் அந்தந்த பிரதேசத்திற்கு ஏற்றார் போல் குறை சொல்லாது வணங்கிச் செல்கின்றனர். ஊடகம் வளர்ச்சியடையாத காலத்தில் ஒரே நாளில் தான் ஆவணி அவிட்டம், தீபாவளி, மகாவீரர் ஜெயந்தி போன்றவற்றைக் ஒற்றுமையாக கொண்டாடி மகிழ்ந்தோம். அவ்வேளையில் வெளி மாநிலத்தவர்கள் மாற்றி கொண்டாடியதையும் கண்டோம். ஆனால் தற்போது அவர்களுடைய வழியில் சிலரும், நமது பாரம்பரிய முறையில்  சிலருமாக பிரிந்து கிடக்கிறோம் என்பது வருத்தத்திற்குரியது.


அவர்களுக்காக ஒட்டு மொத்த முறையும் மாற்றி  அமைக்க எண்ணுவது பலருக்கிடையே போராட்டத்தில் முடியும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன்.


இவையனைத்திற்கும் காரணம் தமிழகத்தில் முனி சங்க அமைப்பு தொடர்ந்து இல்லாமல் ஒழிக்கப்பட்டது தான். நாம் அடிக்கடி அங்கு சென்று வரும் போது இறக்குமதியாகும் கொள்கைகளே நமக்குள் வேற்றுமையை ஏற்படுத்துகிறது.


-----------------
சாஸ்திரங்களின் வழியே ஜினாலயங்களும், கூறப்பட்ட நல்வழிகளை காலம் காலமாக கடைபிடித்து வருவதற்கான நமது சம்பிரதாயங்களும், இதனைச் செயல் படுத்துவதாக  ஜினாலய பூஜை சடங்குகளும் நடந்து வருவதை நம் வீட்டு முன்னோர்கள் கடைபிடிப்பதிலிருந்தே நாம் புரிந்து கொள்ளலாம். அப்பண்பாட்டு நிகழ்வுகளை நாம் மாற்ற நினைத்தால் சரியான சம்பிரதாய முறையை ஈடாக வழங்கி அனைவரும் ஏற்றுக் கொண்ட பின், பழைய சடங்குகளை மாற்ற முயலலாம்அவ்வாறு இல்லாமல் போனால் அந்த வெற்றிடத்தை  நிரப்ப பழைய  சடங்கு முறையே வந்து அமர்ந்து விடும்.


சிலர் மோட்சபயணத்தை வழங்க வேண்டியும், சிலர் வியாதியை குணப்படுத்து நோக்கத்திற்காகவும், பணம் வேண்டியும், பொருள் வேண்டியும், வியாபாரம்  செழிக்கவும், பெண், பிள்ளைகளுக்கு திருமண ஏற்பாட்டிற்காகவும்;  தங்கள் கோரிக்கை நிறைவேற வேண்டிக்கொள்ளும் பக்தர்களுக்கு ஸ்ரீ பார்ஸ்வ ஜினரான ஸ்ரீ அப்பாண்டநாதர் உள்ளாரே.


ஜினராகவும்சாசன தேவதையாகவும், மருந்தீஸ்வரராகவும், திருப்பதிசாமியாகவும், மேலும் திருமணங்கள்  கைகூடவும் அவரவர்கள்  வேண்டுதலை நிறைவேற்றி அருள் புரிகிறாரே எப்படி. அவர்வர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக அந்த புடைப்புச் சிற்பம்  வரமளிக்கிறதே.


அப்போது நறுங்குன்ற நாயகர் மோட்சமும் அளிக்க காரணமாகும், பாசமிகு பக்தனுக்கு பெற்றோராயும் இருந்து வேண்டுதலை நிறைவேற்றுகிறார். இருவரும் தங்கள்  வழியில் வணங்குவதை விடுத்து, அவரவர் வழிபாட்டின் நோக்கம்  தவறு என பக்தர்களுக்குள் கிளர்ச்சி ஏற்படின் பிரிவினை தானே ஏற்படுகிறது. உயர்வு தாழ்வு மனப்பன்மையும் மேலோங்குகிறது.


எந்த ஒரு தெய்வ உருவமும், தெய்வம் என்றால் அது தெய்வம், வெறும் சிலையென்றால் சிலை தான். அதில் மிகக் கவனமாக நம் முன்னோர்கள் நம்பிக்கையான உருவங்களை வடித்து மன நிறைவையும் தந்துள்ளது ஆச்சரியமான விஷயம். அதனால்  அச்சம்பிரதாய பூஜை சடங்குமுறைகளை மாற்ற நினைப்பது பெரிய போராட்டமாக முடியும்.


எப்படியும் அவரவர் மனதில் உள்ள குழப்பங்களை நீக்க ஒரு தெய்வ உருவம் தேவைப்படுகிறது. அது எவ்வழியில் கிடைத்திருந்தாலும்  அத்தெய்வம் வழங்கியதாக கொள்வதில் தவறில்லை. நல்லவை தானே நடக்கிறது. யாருக்கும் தீங்கிழைக்கும் வேண்டுதல் நம்  தெய்வங்களிடத்தில்   நிறைவேறுவதில்லை. அதுவே உன்னத நோக்கமாக தெய்வங்கள்  அமைக்கப் பட்டிடுப்பதுக் கண்டு நாம் பெருமை கொள்ள வேண்டும். நடப்பவை அனைவருக்கும் நன்மையை அளித்தால் அப்படியே விட்டு விடுவது நல்லது. மாற்ற முயற்சியெடுப்பது கடினமானதாக இருக்கும்.அவர்வர்கள் நம்பிக்கை அவர்களின் பாரம்பரிய தெய்வங்களிடமும், அவற்றுக்கு அளிக்கப்படும் பராம்பரிய சடங்கிலும் தான் உள்ளது என்பது தெளிவாகிறது. அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும். ஒன்றுபட்டு நற்சிந்தனையுடன் வேவ்வேறு நோக்கங்களுக்காக பூஜையோ, அர்ச்சனையோ, ஆராதனையுடனோ வழிபடுவதே மத ஒற்றுமையை வளர்க்கும்.ஆலயம்வழிபாடு அனைத்தும் மனநிலையில் அமைதியையும், திருப்தியையும் தருவதின் நோக்கத்தில் உருவாக்கப்பட்டவைதான். சில விஷயங்களில் குழம்பிய நிலையில் இருக்கும் போது, இறை வழிபாட்டால் மனதில் தெளிவான முடிவுகளின் பதிவுகள் விழிப்புணர்வு பெறும் என்பதை அறிய வேண்டுகிறேன். அவ்வாறான  சூழலை பெறும் வழியில் தான் சாஸ்திரங்களை காத்தும் சம்பிரயாதங்களை வழுவாத சடங்குகளைக் கொண்ட ஜினாலயங்கள்  அமைக்கப்பட்டுள்ளது  என்பது பெருமைக்குரியதாகும்.


நம் முன்னோர்கள் வழியிலேயே பயணிப்போம்.


நன்றி

குறிப்பு: இக்கட்டுரை யாருடைய வழிபாட்டு நோக்கத்தையும் குறை கூறுவதாக எழுதப்பட்டதல்ல, மத ஒற்றுமையே நோக்கமாக பதிவு செய்யப் படுகிறது.

No comments:

Post a Comment