Shri Jwalamalini Devi Thiruvirutham



ஸ்ரீ ஜ்வாலாமாலினி அம்மன்


திருவிருத்தம்






செங்கமலர்  போலுமுன் சேவடியை யனுதினந்
  தெரிசிக்குமன்பர் தன்மேற்

றிருவளர் கடாக்ஷம் வைத்தின்பசுகம் நீ தந்து
  ஜெகமுழுது மாள வருள்வாய்

பொங்குமதி  வொளிபோல வெங்கு நிறை  செல்வி 
  நீ  புண்யரக்ஷகி காரணி

பூரணி புராதணி புகழுமஷ்டாயுதம்
  பொருதஸ்த புவனவிஜயி

மங்கள செளந்தரி  மகிடமிசை நடன 
   சம்வர்த்தினி ஜோதிவிமலி

வாமனுக் கிணையிலாதது போலுனக்கு நிகர்
   மறுதெயவம் வேறுமுளதோ

தங்கநவரத்னமணி சோடசாபரணமுந்
  தனதியல்  பராசக்தியே

(ஊர் பெயர்)… நகர் தனில் வளர் ஜ்வாலாமாலிநி தேவி
   தரவேணுமுந்தனருளே





திருவளரும் நித்திய கல்யாணி பரிபூரணி
  ஜினசமயபரிபாலினி

சீர்பெற்ற மகிடமிசை நடனமிடு சுந்தரி
   ஜெகமுழுதும் புகழ் பெற்ற நீ

மருமலரணிந்த பொன்மெளலி பொற்றொடு  நன்
  வன்ன நிறை கொலிசு  தண்டை

 மாணிக்கமாலை முத்தாரஞ் சரப்பளி
  வதன திலதத்தினழகுங்

குருவளரனேக வாபரணங்கள்  நிறைவுற்ற
  குணவதி கொடியசூலீ

குன்மமுதல் பில்லி  சூனியமெல்லா முன்னருள்
  கொண்டவர்க்கெதிர் நிற்குமோ

தருமமே வுருவாக வந்த ஜெகதீஸ்வரி
  தயாபரி யெனையாதரி

(ஊர் பெயர்)… நகர் தனில் வளர் ஜ்வாலாமாலினி தேவி
  தரவேணுமுந்தனருளே
      
         (2)



திருமுகஞ் சசிகரங் காந்தள்பத நளினமாஞ்
   சேல்விழிகள் குமுள்நாசியாஞ்

சிலைநுதற் கமுகுகந்தரம் வள்ளைசெவிகளாஞ்
  ஜலமுண்ட முகில் கூந்தலாம்

மருவு பல்லெழில் முத்து வாய்குமுதமொழி கன்னல்
  வணிதமிதழ் பவளமிணையாம்

வளர்வேணு தோள்களாம் வனசமுகுள் தனமிணை
  வண்மைநீர்ச் சுழிநாபியாங்

குருவளர் வாழைபோற்றுடை மின்னலிடைகணை  
   கொள்தூணி கெண்டை காலாங்

கோதில் பொற்சுபலெக்ஷணாபரண பூஷணி
   கோடிசூரிய  ப்ரகாசி நீ

தருமவுத்தாரணி வோங்காரரூபி நீ
   தயாபரி லோகசக்தி

(ஊர் பெயர்)… நகர் தனில் வளர் ஜ்வாலாமாலினி தேவி
   தரவேணுமுந்தனருளே

         (3)



சீர்கொண்ட செங்கமலர் நிறம் வேறுபடுதலால்
  சேவடிக்கிணையாகுமோ

திகழ்கின்ற மின்கொடி கண்டுமறைகின்றதுன்
   சிற்றிடைக்கிணையாகுமோ

போர்கொண்ட வனசமுகுள் பருதிகண்டலர்வதாற்
  பிதிர் தனங்கட்கு நிகரோ

பெரிதான  கமுகுமடல் விரிவதுன் கழுத்தினை
  பேசவும் நிகராகுமோ

ஏர்கொண்ட முகமதுக்கினை மதிகளங்கமா
  மிணைவிழிக்கிணையதுவதா

மெழிலான  உனது  திருவவயவங்கிட்கிணை
  யியம்பவொரு பொருளுமுளதோ

தார்கொண்ட  சிங்காரதன கனகபூஷணி
  சத்தர்மபரிபாலினீ

(ஊர் பெயர்)… நகர் தனில் வளர் ஜ்வாலாமாலினி தேவி
  தரவேணுமுந்தனருளே

          (4)



சுந்தரமிகுந்தவொளி நவமணி  கிரீடமுந்
   துணை  சிமிக்கோலை கொப்புந்

துதுபெற்ற  சந்தர்முருகெழில் புலாக்கொளிர் நத்து
  சோதிமுக திலதவழகுங்

சுந்தரந்தனில் சந்த்ரஹாரம்  சரப்பளி
  கருதரிய வயிரமணியுங்

கனககிள்ளட்டிகை பதக்கமணி டீக்கா
  கதிர்முத்துஹாரநிலவும்

விந்தை மிகுபொட்டு விரலாழி தொடிகங்கணம்
  விலையின்  மணி வங்கியழகும்

விளங்குமொட்டியான பதசரங் கல்கலீரெனும்
  வினோத மிகு வெகுபூஷணீ

சந்ததமுமுன்னையே நம்புமடியேனை நீ
   தற்கார்ப்பதரிதோ வம்மா!

(ஊர் பெயர்)… நகர் தனில் வளர் ஜ்வாலாமாலினி தேவி
  தரவேணுமுந்தனருளே


         (5)


இந்திரனமைத்த பொன்னெயிலில் பன்னிருகண
  மின்புற்றிருக்குமழகு

மெழின்மிகும் ப்ராதிஹார்யாஷ்டகம் நிறைந்துவள
  ரின்பமுறு தர்மசக்ரம்

முந்துற  விருப்பதெண்மங்கலம் நிறைந்துவளர்
  முதலாயனேக விபவம்

மூர்த்திகரமான பொன்சமவசரணத்திலுரை
  முதல்வன்  ஸ்ரீ சந்திரநாதன்

கந்தமலரடியை விட்ட கலாதவன்புடன்
  களித்துவளர் சாமயக்ஷன்

காதலி செளந்தரி  துரந்தரி  வரந்தருங்
  கனகமயமான  தேவி

சந்தமுமுந்தனை  நினைந்தவர்கள்  சிந்தையிற்
  சார்ந்து குடிகொண்ட நிதியே

(ஊர் பெயர்)… நகர் தனில் வளர் ஜ்வாலாமாலினி தேவி
  தரவேணுமுந்தனருளே

          (6)



என் வறுமை நீ யறிந்தறியாதவள்போ
  லிருக்கின்றதென்காரண

மேழையடியேன் மிகக்கலங்கித் தவிப்பதற்
  கென்ன பிழை செய்தனம்மா

உன்பதந்தன்னை யானேற்றித் துதிப்பதை
 யுட்கொள்ள மனமில்லையோ

வுத்தமி  கிருபாகரியென நினைந்தாயெனக்
  குண்மைதனை யருள பூரணீ

வன்மமதுவென்ன வென்பேரில் மனமகிழாதுன்
  மைந்தன்  யான்  செய்த வினையோ

மெளனமென்னா சொல்லு யெல்லாமறிந்த வுன்
  மனது கரையாது கல்லோ

தன்மபரிபாலினி யுனைவிடேனென் வறுமை
  தவிர்த்து செளபாக்கியமருள்வாய்

(ஊர் பெயர்)… நகர் தனில் வளர் ஜ்வாலாமாலினி தேவி
  தரவேணுமுந்தனருளே

          (7)



தந்தை கோபித்திடிற் பிள்ளை தன்றாய்தனைச்
  சாருமவள் கோபித்திடிற்

சகலருந் துணையெனக்கென்று பந்துக்களைச்
  சாருமவர் கோபித்திடில்

விந்தை சேர் மன்னரைச் சேருமப்பிள்ளைமேல்
  வெகுண்டில் விசனமுற்று

வேறு கதியிலையெனத் தெய்வமே கதியென்று
  மேவுகின்றது போலயான்

உந்தனை நம்பினேன் தந்தைதாய்  குருதெய்வ
  முற்ற துணை நீயேயம்மா

வுத்தமி கார்க்கிறேனொன்றுக்கு  மஞ்சலென
  றொருதரஞ் சொல்வதரிதோ

சந்ததமு முந்தனை நம்பினவனிப்படித்
  தவிப்பதழகாமோ  தாயே

(ஊர் பெயர்)… நகர் தனில் வளர் ஜ்வாலாமாலினி தேவி
  தரவேணுமுந்தனருளே

         (8)


பெற்றதாயானவள்  தன்பிள்ளை குற்றமது
  பெரிதாகவே  செய்யினும்

பேசிடாளொருவர் முன்றனிமையாய்  மகனுக்குப்
  பெரிதான புத்தி  சொல்வாள்

சித்தமதிலுண்டான தீமையை யகற்றுவாள்
  தெளிய ஞானம் புகட்டுவாள்

தேகசவரக்ஷணை செய்குவாள்  தினந்தினஞ்
  சிறந்த பாலமுதூட்டுவாள்

உற்றதாய் நீ யெனக்காதார முன்னடிமை
  யுற்ற பிழையுண்டாகிலுன்

உளங்க்கொண்டிரக்ஷிப்பதரிதோ வமாவாசை
  யுவாவரச்செய்யவிலையோ

தத்துவ முறைத்தமதி நாதனிரு  பொற்பதஞ்
  சந்ததம் போற்றி வாழுந்

(ஊர் பெயர்)… நகர் தனில் வளர் ஜ்வாலாமாலினி தேவி
  தரவேணுமுந்தனருளே


         (9)

ஆகமபுராண முனுநீதியெல்லாம் வளர்வ
  தாதார நீயேயெனு

மஞ்செழுத்தாமுனது திருவளருநாமமதை
  யன்புடன் துதிப்பவர்க்குப்

போகவுபபோக சாம்ராஜ்ய வைபோகமாம்
  புத்ரசந்தான மிகவாம்

புகழ்கொண்ட கீர்த்தி நலமேதரும் பூரணன்
  புராணமதில் மனது நண்ணும்

யோகநிறை சிந்தையா  முயர்சித்தி சொந்தமா
  முண்மைஜின தர்மலாப

மொத்து  வளர் செய்கின்ற செல்வி கருணாகரி
  வுத்தமி ஜெகதீஸ்வரி

தாகமது கொண்டுனையடைந்தேன் மனக்கவலை
  தவிர்த்து சந்தோஷமுற்றேன்

(ஊர் பெயர்)… நகர் தனில் வளர் ஜ்வாலாமாலினி தேவி
  தரவேணுமுந்தனருளே

         (10)


திருமேவு செங்கமலர்மிசை மேவு திருவளர்
  திருமுகங்கண்டு  வன்பர்

சீர்கொண்ட மலர்மாரி பொழிய சுந்தர மிகுந்
  தேவர்செய் தெயிலில் வளரும்

அருள்மேவு நித்யகல்யாணி யென்வறுமையை
  யகற்றியே கர்ணாகரி

யன்புநிறை தந்தை முதலனைவரும்  நீயென
  கனந்தநிதி சகலமருளும்

பொருள்மேவு பெற்றதாய் நீயென்னை ரக்ஷிக்கும்
  பூரணி புனிதாகமப்

பொருளான திருவறம் புவிதனில் வளர்க்கின்ற
  புண்யவதி நீயேயெனத்

தருமேவு பொன்னுலகு புகழ்கின்ற  துன்பதஞ்
  சரணமெனை யடிமை  கொண்ட

செளந்தரிவரந்தருஞ் ஜ்வாலாமாலினி தேவி
  சதாமங்களம் மங்களம்.


(பத்தும் பதிகமாகிய திருவிருத்தம் முற்றிற்று)


No comments:

Post a Comment