அக்ஷய திரிதியை







அளிப்பதே அக்ஷய திரிதியை…


இக்ஷுவாகு வம்சம் தோன்றிய நாள்…


அக்ஷய திரிதியை சமணர்களின் புனித, பெரும் மங்களகரமான நாளாக கருதப்படுகிறது. பகவான் ஆதிநாதர் திகம்பரமுனிநிலையில் முதல் ஆகாரமேற்ற நாளாக நம்பப்படுகிறது.


ஆதிநாதரே அவசர்ப்பிணி எனும் காலசகாப்தத்தின் முதல் தீர்ந்தங்கரராக கருதப்படுகிறார்.


போகபூமி முடிந்து கர்மபூமி துவங்கிய காலத்தில், கடைசி மனு நாபிராஜனின் குமாரரான சக்கரவர்த்தி  ஸ்ரீஆதிபகவன் மக்களுக்கு அறுவகை கலைகளான; தற்காப்பு ஆயுதக்கலை(அஸி), எழுத்துரு (மஸி), உழவு(கிருஷி), கல்வி(வித்யா), வணிகம்(வனிஜா), சிற்பம்(ஸில்ப்) கற்றுத்தந்தார். அக்கால கட்டத்தில் எந்த ஒரு மதமும் தோன்றவில்லை. அதனால் எங்கும் அமைதி நிலவியது.


பின்னர் அரச வாழ்வை தம் மக்களான பரதர், பாகுபலி மற்றும் 99  பேருக்கும் பகுந்தளித்து, திகம்பரத் துறவறம் ஏற்று சித்தார்த்த வனம் நோக்கிச் சென்றார்.


உண்ணுதலை  விடுத்து தபத்திலிருந்த பகவான் ஆறுமாதம் கழிந்த வேளையில், அக்கால மக்கள் ஒரு திகம்பர முனிவருக்கு எவ்வாறு ஆகாரமளிப்பது என்பதை அறிந்திருக்கவில்லை. அதனை உணர்த்தவே தனது உண்ணாநோன்பிற்கு விடையளிக்கும் முகமாக (பாரணைக்காக) வருகிறார்.


அவ்வேளையில் மக்கள் அரச பெருமான் நகர்புறம் வருவதைக் கண்டு தம் உடமைகளான மாடு,  குதிரை, யானை, ஆடை, அணிகலன்கள், அழகிய பெண்டிர் வரை அளிக்க முன்வந்தனர். முற்றும் துறந்த முனிவரோ  அவற்றை ஏற்காமல் மீண்டும் கானகம் திரும்பினார்.

பின் ஆறுமாதகால முடிவில் அஸ்தினாபுர நகருக்கு ஆகாரம் ஏற்க ஆதிபகவன் வருகிறார். அவ்வேளையில் ஸ்ரேயன்குமாரன் எனும் மன்னன், திகம்பரக் கோலத்திலிருந்த அவரைக் கண்ணுற்றான். உடன் தனது முற்பிறப்பில் முனிகளுக்கு ஆகாரமளித்த தருணம் நினைவில் (பூர்வ-பவ-ஸ்மரணம்) தோன்றியது.


(அதாவது முன்னொரு பிறவியில் வஜ்ஜிரசங்கனாக ஆதிநாதரும், மனைவி ஸ்ரீமதியாக தானும் இரு சாரணபரமேஷ்டிகளுக்கு உணவளித்த முறை நினைவுக்கு வருகிறது.)




அவர் அருகில் வருமுன் கரும்பைச் சாறு பிழிந்து அளிக்கவிருந்த வேளையில் அவரும் இருகையையும் குழிவாக கூப்பி உணவேற்க இசைந்தார். அரசனும் அச்சாற்றை பணிவுடன் வழங்க, அவரும் இரண்டு, மூன்று முறை அருந்தி உண்ண நோன்பை முடித்தார் என்பது வரலாறு.

(திகம்பர முனிவருக்கு தூய்மையான ஆகாரம் தயாரித்து அளிக்கும் முறைக்கு ஆகார சர்யை என்றழைப்பர்.)

இக்ஷு(ikshu) என்றால் கரும்பு எனும் பொருள் அதனை ஆகாரமாக அரசன் ஸ்ரேயன்குமாரர் அளித்ததினால் இக்க்ஷுவாகு வம்சம் என்ற காரணப்பெயர் பெற்றது.

வைகாசம் சுக்லபட்சம் திரிதியை திதியன்று  அவ்வுத்தம முனியாகார தான நிகழ்வை  நினைவு கூறுவதே அக்ஷய திரிதியை எனும்  மங்களகரமான இப்புனித நன்நாளாகும்.










No comments:

Post a Comment