சுபௌமன் கதை.

அரசன் சுபௌமன் கதை.
              


  சுபௌமன் என்னும் பேரரசன் விதேகமென்னும் வளநாட்டு மதுரை நகரத்தை ஆண்டு வந்தான். இவன் மனைவி மனோகரி. இவ்விருவருக்கும் புத்திரன் (ரிஷபாங்கன்) இடபாங்கன் என்பவன் ஆவான்.



       இவ்வரசனுக்கு சுமதி என்ற பெயருடைய முதன்மையான அமைச்சர் ஒருவர் இருந்தார். ஒருநாள் மேற்படி அமைச்சரானாவர் அரசவைக்கு காலதாமதமாக வரவே, அரசர் காரணம் கேட்டார்.



      அதற்கு சுமதி என்ற அமைச்சர், வேந்தே! இந்நகரத்தின் நடுவில் அமைந்துள்ள ஜிநாலயத்தில் பிகிதாஸ்வரர் என்கிற முக்காலமும் அறியும் முனிவர் எழுந்தருளியிருந்தமை கேட்டு, நகரத்து மாந்தரெல்லாம் வழிபாட்டு பொருட்களுடன் செல்வதைக் கண்டு நானும் அவர்களுடன் ஜிநாலயம் சென்று, அருகதேவரை பூஜித்து வணங்கி பிறகு பிகிதாஸ்வர முனிவரை கண்டு வணங்கி, அவர் அறவுரை கேட்டு வந்ததாக தெரிவித்தார்.



        சுமதி அமைச்சர் கூறியதைக் கேட்ட அரசன், தானும் ஆலயம் சென்று முனிவரை தரிசிக்க விரும்புவதாக கூறி,  அமைச்சர் பரிவாரங்களுடன் சென்று, முனிவரை வணங்கிய பின், நான் இன்னும் எத்தனைக் காலம் அரசாள்வேன் என அரசன் மனதில் சிந்திப்பதை தன் அவதிஞானத்தால் அறிந்த முனிவர்,

அரசே! உனக்கு இனி ஏழு நாட்கள்தான் ஆயுளும், ராஜ்யமும் என்று முனிவர் கூறியதைக் கேட்ட அரசன்,
நான் என்ன வியாதி கொண்டு மரணமடைவேன் என வினவ,

முனிவர்   இடியினால் மாண்டு, அரண்மனையின் வடக்கிலுள்ள சாக்கடையில் கருந்தலையுடன் பெரியபுழுவாய் பிறப்பாய் என தெரிவித்தார்.


அதனைக்கேட்ட அரசன் வாட்டமுற்று, இதற்கு அறிகுறி யாது என கேட்க, நீ இங்கிருந்து அரண்மனைக்குச் செல்கையில் மாது ஒருத்தியால் எறியப்படும் மலம் உன்மீது தெரிக்கும் என முனிவர் கூறினார்.


முனிவரை சந்தித்த அரசன் தன் வாழ்நாள் இறுதியும், குறிப்பையும் உணர்ந்து முனிவர் கூறியது உண்மையாகி விடுமோ என அஞ்சியும், அவர் இறுதியாக கூறிய வார்த்தையை சோதிக்க எண்ணி, தான் அரண்மனைக்கு செல்லும்போது வீதியில் மாதர் எவரும் வரக்கூடாது என கடுமையான உத்தரவிட்டு, எவ்வித ஆரவாரமின்றி எந்த வாத்தியங்களும் பேரிகை சத்தம் முழங்காமலும் அரசன் வீதிவீதியாக சென்று கொண்டிருந்தான்.


அப்போது அவ்வீதியில் மாளிகையின் மேல்மாடியில் இருந்த ஒரு பெண், அரசனுக்கு என்ன நடந்தது? என எண்ணியவளாய் அவனைக் காண எண்ணி தன் கையில் இருந்த புத்திரனை தொட்டிலில் கிடத்தினாள். மேலே நின்றவாறு தன் சேலை முந்தானையை உதறிக்கொண்டே அரசனைக் கண்டாள்.



        அவ்வமயம் அவள் முந்தானையில் கிடந்த குழந்தையின் மலம் மன்னன் மேல் விழ மன்னன் நடுங்கி, முனிவர் வார்த்தை பொய்யாகாது என வருந்தினான். பின்னர் தன் அரண்மனைக்குச் சென்றவன் தன் மகன் விருஷபாங்கனை அழைத்து,

இன்றைக்கு ஏழாம் நாள் எனக்கு மரணம் ஏற்படும். நான் இறந்து அரண்மனை சாக்கடையில் கருந்தலையுடன் பெரும்புழுவாய் பிறப்பேன், அரண்மனை போகவாழ்வு அனுபவித்த நான் புழுவாய் பிறந்து துக்கப்பட வேண்டுமா? அந்த இழிபிறவி எனக்கு வேண்டாம், புழுவாய் நான் பிறந்தபின் என்னை கொன்றுவிடு என தன் மகனிடம் அரசன் வேண்டினான்.


       அரசனின் மனக்கவலையை உணர்ந்த அமைச்சர்கள், அரசனை மரணத்திலிருந்து எப்படியாவது காப்பாற்றவேண்டும் என ஆலோசித்து, வசதியுள்ள ஒரு இரும்புப்பெட்டி தயார் செய்து, அதனுள் அரசனை இருக்கச்செய்து பெட்டியை சங்கிலியால் இணைத்து, ஆழ்கடலில் விட்டு, காவல் புரிந்தனர்.


ஏழாம் நாள் ஆழ்கடலில் இருந்த அப்பெட்டியானது ஒரு பெரிய திமிங்கலத்தின் மேல் தாக்க திமிங்கலம் சீற்றத்துடன் அது மேல்நோக்கி பெட்டியுடன் வர, அச்சமயம் கடும்புயலடித்து, இடி இடித்து அப்பெட்டியின் மேல் விழுந்தது. இடிதாக்கி இரும்பு பெட்டி தூள்தூளாகி அதனுள் இருந்த அரசன் இறந்து கருந்தலையுடன் பெரிய புழுவாய் பிறந்தான்.



பிறகு அரசன் மகன் இடபாங்கன், தன் தந்தை தன்னிடம் வேண்டியதை மனதில் கொண்டு, அந்த பெரும்புழுவை கொன்றுவிட வில்லும் அம்புடனும் சென்று சாக்கடை குழியிடம் சென்று கொல்ல முயற்சித்தான்.


புழு மரணத்திற்கு பயந்து சாக்கடை மலத்தினுள் மறைந்தது. பலமுறை முயற்சி செய்தும் புழுவானது அவனது அம்பிற்கு சிக்காமல் சாக்கடையுள் மறைந்து கொண்டது.


       இதைக்கண்ட இடபாங்கன் உயிர்கள் ஊழ்வசத்தால் எங்கெங்கே பிறப்பினும் அங்கே கிடைக்கும் இன்பத்தில் ஆழ்ந்து போகின்றன போலும், என்பதை உணர்ந்து பிறவியை வெறுத்து துறவு பூண்டு நற்கதி அடைந்தான்.



No comments:

Post a Comment