வழிபாடு, பொருள் புரிதல்
வழிபாடு ;  பொருள் புரிதல்ஜினாலயம்;
வழிபாடு
பொருள் புரிதல்

வழிபாடு என்ற முறை இல்லாத மதமே உலகில் இல்லை. வழிபாடு ஒருபண்பை பெறுபவதற்கான கருவியாகும்.  மனிதனை நற்பண்பின் வழிச்செல்லும் வழிகாட்டியாக மதங்கள் அளித்துள்ளன. 


எந்த ஒரு விஷயத்தை மனதில் நிறுத்தி மீண்டும், மீண்டும் அசைபோடுகிறோமோ (எண்ணத்தில் சுழலவிடுகிறோமோ) அதுவாகவே ஒருநாள் நாம் உருமாற்றம் பெற்றுவிடுவோம் என்ற உளவியல் தத்துவத்தை மஹாவீரர் போன்ற அக்காலத்திய உளவியல் நிபுணர்களான ஞானியர் கண்டு பிடித்து தியான முறையை வழங்கினர்.


இயற்கையின் நுட்ப அறிவை, பிரபஞ்சத்தின் சக்தியை ஆராய்ந்து அறிந்து துன்பம் நீங்கிய வாழ்வைப்பெற முயன்றவர்களை பேரறிவாளர்காளாக கருதப்பட்டனர். அவர்களது அறிவு பிரபஞ்சத்தில் எங்கும் இறைந்துள்ள இயற்கை அறிவின்  வெளிப்பாடாக இருந்தது. எங்கும் இறைந்துள்ள அறிவினை உணர்ந்ததால் இறைவன் என்றே அழைக்கப்பட்டனர்.அக்காலத்தில் இயற்கை அளித்த கொடையான தீயை(fire) வணங்கும் பழக்கமும் இருந்தது. கற்களை தேய்தால் தீ கிடைக்கும் என்பதை அறிந்தனர். அத்தீயை (தேய்ப்பிலிருந்து தீ வந்ததால்) அதனை தெய்வம் என்றும் அழைத்து வணங்கினர். தெய்வம் என்றால் அருள் வழங்குதல் என்றும் கருதினர்.


அதே நோக்கில் இறைவனாக கருதப்பட்டவரின் அருளுரைகள் எங்கும் நிறைந்திருந்ததினால் அவ்விறையை தெய்வமாக அழைத்தனர். அவர் பண்பின் இலக்கணம், தன்மையாக அமைந்து தெளிவை உணர்த்தியமையால் தெய்வத்தன்மையாக கருதப்பட்டது. இறைவன் தெய்வத்தன்மை யுள்ளவராக கருதப்பட்டார்.

எப்பண்பை தீவிரமாக தன் ஆயுள் முழுவதும் கடைபிடித்து தாமும் மேநிலை அடைந்தனரோ அப்பண்பினை இவ்வுலகிற்கும்  நற்பயனாய் வழங்கி நற்குணக்கோட்டையாக திகழ்ந்தவர்களை; அன்பின் உருவமாக; கருணை, இரக்கத்தின் பண்பினராக கருதி அவர் வழியில் நடந்தனர் பலர்.


அவர் உயிர் பிரிந்த பின்னும் அவர் போதனைகளை, அறிவுரைகளை; கொள்கைகளாக கோட்பாடுகளாக, வாழ்வுநெறிகளாக அவரை பின்பற்றியவர்கள் தம் நினைவில் கொண்டு ஒழுகும் முகமாக, அவர் உருவங்களை தெய்வத்தன்மையின் உருவங்களாக கருதி  ஓவியங்களாக, மரச்சிற்பங்களாக, கல், உலோகச்சிற்பங்களாக உருமாற்றம் பெறச் செய்ததோடு, பின் வரும் தலைமுறைக்கும் அவற்றை விட்டுச் சென்றுள்ளனர்.


அன்பின் உருவமான அம்மாமனிதரின் கருணையும், இரக்கமும் நிறைந்த பண்பின் முழுமையை,  தெய்வத்தன்மையை  தெய்வ உருவங்களாக வடித்து வணங்கும் வழக்கமும் தொன்மை காலத்திலிருந்தே தொடர்ந்து வந்தவையே. அத்தெய்வங்களை எல்லாப்பருவங்களிலும் சென்று வணங்க இல்லங்களை அமைத்து ஆலயம் என்றும், அக்கோமானின் இல்லமாக கோவில் என்றும் அழைத்தனர். தெய்வத்தின் இருப்பிடம் பள்ளி என்றும்  அழைக்கப்பட்டது.


(அத்தெய்வத்தின் அறிவுரைகளை, அறவுரைகளை கற்பிக்கும் இடங்களை பிற்காலத்தில் பள்ளியாக அழைக்கப்பட்டு, சமணப்பள்ளி என்றழைத்தனர். அவ்வாறு இக்காலத்திலும் கல்வி கற்பிக்கும் இடங்களை பள்ளிக்கூடம் என்றே அழைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சமணம் தந்த காரணப்பெயரே பள்ளிக்கூடம்.)


அதே போல் உலகில் ஒவ்வொரு பிரதேசத்தில் நன்னெறிகளையும், வாழ்வுநெறிகளையும் வழங்கிய மாமனிதர்களை பின்பற்றியவர்கள் ஆலயங்களை அமைத்தபோது, அதனை பிற பிரதேசத்தினருக்கும் வழங்க எண்ணி இயக்கமாக உருவெடுத்தபோது மதமாக மாற்றம் பெற்றது. அவ்வாறு பல இயங்கங்கள் மதமாக உலகில் உருவெடுத்தன.


அம்மதங்கள் தோன்ற கோட்பாட்டினை, வழிமுறைகளை வழங்கிய மாமனிதரை மூல தெய்வ உருவாகவும்; பின்னர் அந் நெறியின் வழியே அத்தெய்வத்தன்மையை எய்தியவர்களையும், அவ்வாழ்வுநெறிக்கு உறுதுணையானவர்களையும் இணை மற்றும் துணை தெய்வங்களாக அதே ஆலயத்தில் சிற்றாலயங்களை நிறுவி வழிபடலாயினர்.


அத்தெய்வங்களின், பண்பின்  வழியில் பயணித்து மேநிலையை அடைய, அம் மதங்களைச் சார்ந்த சான்றோர், ஆன்றோர் பெருமக்கள் பின்பற்றும் பாமரர்களும் அத்தெய்வத்தன்மையை எய்த வழிபாட்டினை ஒரு கருவியாக ஆக்கித் தந்தனர். அவையே மதங்கள் மற்றும் வழிபாடுகளின் தோற்றுவாய்.

எனவே..

வழிபாடு: மனிதன் தேர்வு செய்யும் நற்பண்பில்  வழிபடுதலுக்காக துவக்கப்பட்டவையே.


குழந்தை பிறந்து 5 லிருந்து 7 அகவைக்குள்  உலகில் எந்த ஒரு பொருளையும் ஐம்புலன் வழியே கிரகித்தும், புரிந்து கொண்டதின் தெளிவை ஆளுமைப்பண்பாக உள்ளத்தில் உருவாக்கும். அது பிறந்த இல்லம், சமூகம், வாழும் பிரதேசம், தேசச்சூழல் இவற்றால் குழந்தைகளின்  மனம் வேறுபடுகின்றன.


அக்குழந்தை வளர்ந்த பின் தனக்கும், பிறருக்கும் நன்மையும், பயனையும் அளிக்கும் நற்பண்புகளாக இருப்பின் ஹிம்சையற்ற வழியில் பயணிக்கும்.

அவ்வாறான ஆளுமைப்பண்பை பெற்றிருத்தவரை, தெய்வத்தன்மையை இயற்கையில் பெற்றவர் என்றனர். ஆனால் ஒருவருக்கு அதுபோன்றமைவது மிகவும் அரிதானதே என்பதை இக்காலத்திலும் நாம் உணரலாம்.புலன் வழியே பெற்ற உணர்வை, ஆளுமைப்பண்பின் வழியே வெளியேற்றுகின்றன. அவை இயற்கைக்கு முரணாகும் போது துன்ப உணர்வாக மீண்டும் பெறுகின்றன. அத்துன்பம் அற்ற சொற்ப நேர அனுபவத்தை இன்பமாக கருதி மாயையில் உழலுகின்றன.


ஆரம்பத்தில் உள்ளத்தில் உருவான தாறுமாறான ஆளும் பண்பை;
இன்ப உணர்வையும், துன்ப உணர்வையும் சமநிலையில் உணரவும், நற்சிந்தனை வழியில் செயலாற்றவும் உருவாக்கப்பட்ட தொழிற்நுட்பமே நம்முன்னோர்கள் வழங்கிய வழிபாட்டு முறையாகும்.


எந்த தெய்வத்தன்மை பொருந்தியவரின் பண்பை ஏற்க வேண்டுமாயின் நம்மையறியாமல் நம்முள்ளே உறையும் ஆளுமைப்பண்பை சிதைக்க வேண்டும் அல்லது தெய்வத்தன்மைக்கு இணையான ஆளுமை உணர்வாக அமையின் அதனை வளர்க்க வேண்டும். அச்செய்முறை தொழிற்நுட்பத்தை அளிக்கும் வழிபாட்டினை அந்தந்த மதத்தின் ஞானியர் வழிவந்த சான்றோர்கள், பண்டிதர்கள் வரையறை செய்து வழங்கியுள்ளனர்.


ஆலயத்தில் தெய்வமாக வணங்கப்படும் அம்மாமனிதனின் மீது நம்பிக்கை வைத்து, அவர் கொள்கை, கோட்பாடு, வாழ்வுநெறியில் பற்று வைத்தவர்களே அப்பண்பில் முன்னேற்றம் காண்பர்.


எவர்மீதும் அன்பு வைத்தால் அவர்மீது நம்பிக்கை கொள்ளச் செய்வதும் மனிதமனத்தின் பண்பாகும். இளம்பருவத்தில் எதிர் பாலினத்தின் மீது தோன்றும் அன்பு, காதல்; வீழ்ந்தவரின் (fall in love) ஆளுமையைச் சிதைத்து எதிர்பாலினப் பண்பினை முழுமையாக ஏற்று நடப்பர் என்பது இன்றும் காணும் உளவியல் உண்மை. 


அதே போல் அவ்வருளார்மீது நம்பிக்கை வைத்து அன்பு கொள்வதை பக்திமார்க்கமாக; கொள்கை, கோட்பாட்டில் பற்று வைத்து வழிநடப்பதை ஞானமார்க்கமாக  சமண மதம் வழங்கியுள்ளது.


 இவ்வழிமுறையை வழங்காத மதமே உலகில் இல்லை என்றும் சொல்லலாம்.

இவ்விரண்டு மார்க்கத்தினையும் ஒருங்கிணைப்பதே வழிபாட்டு முறையாகும்.

மனதில் எந்நேரமும் அசைபோட்டு அப்பண்பினைப் பெறும் தத்துவமே வழிபாட்டின் யுக்தியாக கையாளப்பட்டுள்ளது.

மனதை அப்பண்பில் ஒருநிலை படுத்த முயல்வதே இதன் நோக்கம். மனதை ஒருநிலைப்படுத்த எண்ணத்தை சீரமைக்க வேண்டும்.
அதற்கு வழிவகுப்பது தியானமுறையாகும்.

அம்மேநிலைப் பண்பிற்கான தியானத்தினை தினமும் துவங்க தடையாய் இருப்பது எண்ணம், சொல், செயல் எனும் மன, வசன, காய எனும் யோக வழிமுறையாகும் (குப்தி).

எண்ணத்தின் ஓட்டத்தை ஒருநிலையில் நிறுத்தி தியானத்தில் மூழ்க  ஜபமும்,
அத்தியானத்திற்கு ஊறுவிளைவிக்காமல் உறுதுணையாக உடன்பாடாக அமைய சொற்தொகுப்பில் துதிகள், தோத்திரங்கள், அர்ச்சனைகள், நாமாவளிகள் உருவாக்கப்பட்டன.
எண், சொல் இரண்டும் ஒருநிலையில் இருக்கும் வேளை,
செயல் ஒருமைப்படாமல்,  முரணில் பிரிந்திருக்க முயலும்.
அதனையும் கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியே பூஜை முறையாக வகுத்துத் தந்துள்ளர்.

மெய்ச்செயல்பாடு, சொல், எண்ணம் மூன்றும் ஒருங்கிணையும் போதுதான் தியானம் தடைபடாமல் முன்னேற்ற மடையும்.

நற்பண்பின் உருவமான தெய்வத்தின் மீது நம்பிக்கையை தோற்றுவிக்க முயல்வதே ஜபம்;  துதி, தோத்திரம்; பொருள் அர்ப்பணித்தல், தீபம் காட்டுதல் போன்றவை எண்ணம், சொல், செயல் ஒருமித்து தியானம் கிட்டவே வழிபாட்டு முறையை நமக்கு சமண மதம் அளித்துள்ளது.
----------------------------------------------- 

அவ்வழிபாடு முன்று நிலையில் வழங்கப்பட்டது.
தியானம், துதித்தல், பூஜை என முன்று நிலைகளை கொண்டதாக வகுக்கப்பட்டது.

----------------------------------------------- 
அதாவது மனதை ஒருநிலைப்படுத்தும் முயற்சியே வழிபாட்டு செயல்முறையாகும்.


மூன்றும் ஒன்றிணைந்தால் தான் மனதில் அப்பண்பு ஒருநிலைப்படும்.
மனதில் அப்பண்பு பரவியதும், ஆளுமை முழுச்சிதைவுற்று அழியும்.

அத்தெய்வ உருவங்கள் நிறுவப்பட்ட, ஜினர் உருவங்களை மூலவராக உள்ளடக்கிய ஜினாலயங்களில் அவ்வப்போது அறநெறி கூறும் வழக்கமும் இணையாக துவக்கப்பட்டது. அதனை பொருள் புரிதல் என்பர்.

அவர் கூறிய அறிவுரைகள், போதனைகள், வாழ்க்கை நெறிமுறைகளை ஆன்றோர், சான்றோர்கள் ஆகமங்களாக தொகுத்து வழங்கியுள்ளனர்.

அதனை முழுவதும் அறிந்து, தெளிந்த பெரியோர்களின் விரிவுரையாக, அறிவுரையாக வழங்குவதை கேட்டறியும் போது, பொருள் புரிதலில்,  அவற்றின் மீது பற்று கொள்ளச் செய்து தம் வாழ்வுமுறையை மாற்றி அவர் அளித்த இயம, நியமங்களை கைக்கொண்டு ஒழுகும் வழக்கம் மேலோங்கச் செய்யும்.


வழிபாட்டின் வழியே சரியான காட்சியும், ஆகம வழியில் சரியான ஞானமும் கூடி நல்லொழுக்கமாக பரிணமிக்க வழிவகுக்கும் என்பது முன்னோர் கண்ட ஆய்வு. அவ்வழியில் பயணிக்கச் செய்வதே வழிபாடும், வழிபாட்டு ஸ்தலங்களின் நோக்கமாகும்.


அதனால் ஞானம் கலந்த பக்திமார்க்கத்தினையும் தெய்வ உருவ வழிபாட்டிலும், ஆகம வழி போதனைகளை, விரிவுரைகளை வழங்கும் கூடங்களையும் கொண்டுள்ள ஜினாலயங்கள் மோட்ச மார்க்கத்தின் முக்கிய அங்கமாக துவக்கப்பட்டவை.

அதுவே துவக்கநிலை ஆன்ம சாதகனுக்கு துணை புரிபவை.

பின்னாளில்

அதுவே நானாக, நானே அதுவாக மாறும். உள்செல்ல வகை செய்த தெய்வத்தன்மை தன்னுணர்வில் காணும் போது அதுவே மனம் கடந்த நிலையாக, உள்ளம் கடந்த கடவுள் நிலையாக உணர வகை செய்யும்.

இத்தத்துவத்தை வழங்குவதே வழிபாட்டு முறையில் பக்தி மார்க்கத்தின் நோக்கம்.
பொருள் புரிதலில் ஞானத்தை போதிக்கும் நோக்கம்.

அதில் நம்பிக்கை வைத்து செயல் படுவதே ஆன்ம முன்னேற்றம் காணலாம்.

சமண மரபில் அஹிம்சை வழிநிலையே கருணை, இரக்க உணர்வை அளிக்கும். அதுவே தெய்வத்தன்மையாக பரிணமித்து பின் பரவச நிலைக்கு ஆட்படுத்தும்.


இவ்வுலக வாழ்வாக தோற்றமளித்த மனம் எனும் மாயை நீங்கி ஞான, தரிசனமான ஆன்மாநிலை வெளிப்படும். அதுவே இன்ப, துன்ப அனுபவத்தை சமமாய் உணரச் செய்யும். அந்நிலையே விடுதலைப் பேற்றிற்கு வழிவகுக்கும்.

அந்த வழிபாடு எனும் அடிப்படை அரிச்சுவடியை இன்றே துவக்குவோம்.

பக்தியையும், ஞானத்தையும் ஒருங்கிணைத்து விடுதலைக்கு வித்திடுவோம்.No comments:

Post a Comment