History of scriptures ஆகம வரலாறு


சுருத வரலாறு.







தார்மீக மதிப்பீடுகளையும், பல்வேறு கோட்பாடுகளையும், வாழ்க்கை திறன்களையும் அளித்த உன்னத ஆசான்கள் மீது பக்தி செலுத்துவதே குருபக்தி என்பது பலருக்கும் தெரிந்த உண்மை யாகும். அவர்களே தர்மத்தை வழங்கியவர்கள் அவர்.

தர்மத்தை வழங்கியர்கள் மூன்று வகையினர்:

தீர்த்தங்கரர்கள் மற்றும் கேவலிகள்

கணதரர்கள் மற்றும் சுருதகேவலிகள்

ஆசார்யர்கள்- இவர்கள் நூல்களை இயற்றுபவர்களும் முனிவர்களை வழிநடத்திச் செல்பவர்களும் ஆவர்.


அந்த மேன்மையானவர்களுக்கு நமது நன்றியை தெரிவிக்கும் தினமே குருபூர்ணிமா என்றழைக்கப்படுகிறது. முக்கியமாக நமக்கு அறிவுப்பொக்கிஷத்தை வழங்கிய கணதரர்களையும், சுருதகேவலிகளையும் அந்த நன்னாளில் வணங்கி வழிபடுகிறோம். அந்த  அறிவே நமக்கு நற்காட்சியையும், நல்ஞானத்தையும், நல்லொழுக்கத்தையும் தந்து நம்மை வழிநடத்தும் கருவியாகும்.

சமண மரபின் படி குருபூர்ணிமா சாதுர்மாஸம் துவங்கும் நாளன்று கொண்டாடப்படுகிறது. பகவான் மஹாவீரர் கேவலஞானம் அடைந்த பின் மழைக்காலத்தங்கல் என்ற நான்கு மாதம் முனிவர் ஓரிடத்தில் தங்கி ஜீவ வதை நீக்கியும், அதனை பாதுகாக்கும் முகமாகவும், தவ வாழ்வின் உன்ன வழிமுறைகளை கடைபிடிக்கவும், தியானத்திற்கான நேரத்தை வளர்க்கவும் இம்முறையை பகவான் வழங்கினார்.

அந்த நற்காட்சி, ஞானம், ஒழுக்கம் பெறும் விவேகஞானத்தை சுருதகேவலிகள் நமக்கு அளித்திருக்கிறார்கள். அவை ஆன்மீக தத்துவங்களான ஜீவவிசார், நவ தத்துவம்சியாத்வாதம், அனேகாந்தவாதம்… மேலும் இத்யாதிகள் மூலமாக அளித்துள்ளார்கள். அவர்களே குருவின் குருவாக மதிக்கப்படுகிறார்கள். அதனால் நாம் மன, வசன, காய துய்மையுடனும், நன்றியுடனும் வணக்கத்தை தெரிவிக்கிறோம்.

தீர்த்தங்கர பகவான் முழுதுணர்ஞானம் அடைந்ததும், சமவசரணத்தில் அமர்ந்து திவ்யத்தொனி வழியே தற்போதுள்ள ஆகம கருத்துக்களை வழங்கினார்கள். அதனை முதற் சீடரான  கணதர பரமேஷ்டி அதனை முழுதுமாக தெளிந்து உணர்ந்து அவர் மனதில் பதிந்துள்ள செவிவழிஆகமத்தை, த்வயத்தொனி அற்ற நேரத்தில் எழும் ஐயங்களுக்கு அனைவருக்கும் வாய்மொழியாக வழங்கினார்கள். பின்னர் ஆச்சார்ய ஸ்வாமிகளால் வரிவடிவம் பெற்றது.

அவையே ஸ்ருதகேவலிகள், ஆச்சார்யர்கள் வழியே ஆகமங்களாக நமக்கு தருவிக்கப்பட்டுள்ளன. அதாவது  முழுவதுமாக மரபிற்குட்படாத (non-cononical) பதினான்கு அங்க பாஹ்யங்கள்; சமண மரபிற்குட்பட்ட பன்னிரண்டு அங்கங்களாகபதிநான்கு பூர்வங்களாக, சூளிகைகளாக, இத்யாதிகளாகவழங்கப்பட்டுள்ளன.

சுருதகேவலிகள் என்பவர்கள் எழுத்து வடிவ ஆகமங்கள் அனைத்திலும் முழுஞானம் அடைந்தவர்கள் ஆவார்கள். கேவலஞானத்திற்கு அடுத்த நிலைக்கான  விழிப்புணர்வை ஆகமங்கள் வழியே பெற்றவர்கள். அவர்கள் பகவான் மகாவிரருக்கு பிறகு அனைத்து அங்கங்களையும், பூர்வங்களையும் அறிந்தவர்கள்.

அதனால் நாம் நம்முடைய ஆகம வரலாற்றை அறிந்து கொண்டால் அன்றைய தினம் நம் வழிபாட்டின் முக்கியத்துவம் புலப்படும்.

பகவான் மஹாவீரர் பரிநிர்வாணம் அடைந்த வுடன் அவரது பிரதான  கணதரர் கெளதம் ஸ்வாமி கேவலஞானம் அடைந்தார்கள்அதன் பின் 12 ஆண்டுகள் கழித்து பரிநிர்வாணம் அடைந்தார்.

அவர் நிர்வாணம் அடைந்த  அன்று மஹாவீரரின் மற்றொரு கணதரரான ஸ்ரீசுதர்மாசார்யா கேவலஞானம் அடைந்தார்.   அதன் பின்னர் பன்னிரண்டு ஆண்டுகள் வாழ்ந்து விடுதலை பெற்றார்.

அதே நாள் ஜம்புஸ்மாமி முழுதுணர்ஞானம் பெற்றார். அதற்கு பிறகு 38 ஆண்டுகள் வாழ்ந்துள்ளார்கள். அதனால் பகவான் மஹாவீரருக்கு பின் தொடர்ச்சியாக கேவலிகள் 12+12+38=62 ஆண்டுகள் வாழ்ந்துள்ளார்கள்.

ஜம்புஸ்வாமிக்கு பின்னர் கேவலஞானிகள்  பரத க்ஷேத்திரத்தில் இல்லாமையால் சுருத ஞானத்தின் ஆழம் சற்று குறைய ஆரம்பித்தது.

அவர்களுக்கு பின் ஐந்து சுருதகேவலிகள் 100 ஆண்டுகளில்  ஸ்ரீவிஷ்ணு அச்சார்யா, ஸ்ரீநந்திமித்ரா ஆச்சார்யா, ஸ்ரீஅபராஜித் ஆச்சார்யா, ஸ்ரீகோவர்தண் ஆச்சார்யா, ஸ்ரீபத்ரபாகு ஆச்சார்யர் போன்றோர் தோன்றியுள்ளனர்.

ஐந்து ஆச்சார்யர்களே துவாதசாங்கத்தை (12 அங்கா, 14 பூர்வா) முழுவதுமாக அறிந்திருந்தார்கள். அவர்கள் காலத்துடன் ஞானமார்க்கம் இறுக்கப்பட்டன. பத்ரபாகு முனிவர் காலத்தில் 12 ஆண்டுகளில் ஏற்பட்ட கடும் பஞ்சம் காரணமாக ஸ்ருதஅறிவு குன்ற ஆரம்பித்தது.

11 அங்கமாக, 14 பூர்வமாக இருந்த ஸ்ருதம் பிற்காலத்தில்;

அந்த 11 அங்கங்கள், 14 பூர்வங்களை கொண்ட செவிவழி ஆகமமான துவாதசங்கத்தை திகம்பர முனிவர்களே உட்கிரகித்து தன்னுடன் ஐக்கியமாக்கியுள்ளனர். ஆரியிகாவினர் 11 அங்கம் மட்டுமே அறிந்துள்ளவர்கள், சுல்லக், ஐலக் என்ற சிராவகர்கள் துவாத்சங்கின் எப்பகுதியையும் அறிய தகுதியில்லாதவர்கள்.

எவ்வாறு துவாதசங்க முழுவதுமாக ஏன் எழுத்துரு பெறவில்லையாயின்:

11 ஆச்சார்யர்கள் வழியே 11 அங்கங்கள்,  10 பூர்வமாக 183 ஆண்டுகளாக அறியப்பட்டு வழக்கத்தில் இருந்துள்ளது.

5 ஆச்சார்யர்கள் வழியே ஆகமங்கள் 11 அங்கங்கள் மட்டும், பூர்வங்கள் ஏதுமின்றி 220 ஆண்டுகள்  வரை வழக்கத்தில் வந்துள்ளது.

அக்காலத்திற்கு பின்னர் நான்கு ஆச்சார்யர்களுக்கு ஒரு அங்க ஆகமம், ஆச்சாரங்கம் மட்டுமே அறிய முடிந்தது. மற்ற 10 அங்கங்களும், 14 பூர்வங்களும் அழிந்து விட்டன.

 ஆக கெளதம் ஸ்வாமி காலத்திலிருந்து ஆச்சாரங்கதாரி ஆச்சார்யர் வரை 62+100+183+220+118 = 683 வருடங்களாகிறது ஆகமங்கள் நிறையிலிருந்து குறைவான காலம்.
அவருக்குப் பின் அவர்வழியில், சுமார் 683 ஆண்டுகள் கழித்து ஸ்ரீதர்சேனச்சாரியார்  மற்றும் குணபத்திராச்சாரியார் காலம் வந்தது. அப்போது ஸ்ருத அறிவில் பெரும்பகுதி அழிந்து ஓர் அங்கமாக குறைந்துபட்டது.

தர்சேனாச்சாரியார் கிர்நார் பகுதியில் குகையில் வாழ்ந்து வந்தார். அவர்காலம் வரை துவாதசாங்கம் வாய்மொழி தலைமுறையாகவே தொடர்ந்து வந்திருந்தது. ஆனால் அக்காலத்தியவர்களுக்கு மூளைசெயல்திறன் குறைந்து வந்ததால், அவர் தென் பகுதியிலிருந்த ஸ்ரீபுஷ்பதந்தர் மற்றும் பூதபலி என்ற இரு முனிகளை அழைத்தார்.

அவர்கள் இருவரையும் தவறான  மந்திரங்களை ஜெபிக்கச்  செய்து பரீட்சித்து பார்த்தார். இருவரும் ஜபிக்கும் போது கொரூர உருவம் கொண்ட தேவதைகள் தோன்றின. அதனால் இருவரும் அம்மந்திரங்களை சரிசெய்து உச்சரிக்கவே இரண்டு அழகிய தேவதை எதிர் கொண்டனர். அதனைக் கண்ட தரசேன முனிவர் இருவரையும் சீடர்களாக ஏற்று, அவர்கள் வழியே ஷட்கண்டாகமம் என்ற நூலை எழுத்துருவேற்றினார். அதுவே முதல் எழுத்துரு ஆகமமாக கருதப்படுகிறது. அன்று தேவர்களும் ஆவலோடு பூமிக்கு வந்து சிறப்பான பூஜைகளை செய்து சென்றனர்.

அந்நூலை அங்க்லேஸ்வர் என்னும் நகரத்தில்  இயற்றிய நன்னாள், ஜ்யேஷ்ட (ஆனி) சுக்ல (வளர்பிறை) பஞ்சமி (ஐந்தாம்நாள்) ஆகும்.  அந்நாளே சுருதபஞ்சமி நாளாக சிறப்பு பெற்று விழாவாக தற்காலத்திலும் கொண்டாடப்படுகிறது. (roughly around 160 A.D.)








அதே வழியில் ஸ்ரீகுந்தர் ஆச்சார்யர் கஷாயப்ராகிருதம் என்னும் நூலை ஐந்தாவது பூர்வத்தின் வழியே வந்த தெளிவுடன் எழுதினார்.

ஆகவே ஸ்வாதசங்கத்தின்(12 அங்கம்) மிக நுணுக்கமான பகுதிகள் கஷாயப்ராகிரதமாகவும், ஷட்கண்டாகமாகவும் எழுத்துரு பெற்றன.

தற்கால திகம்பர சமண மரபில் அந்த 12 அங்க ஆகமங்களையும், 12 பூர்வ ஆகமங்களையும் எழுத்து வடிவமாக்கும் முயற்சியை யாரும் எடுக்கவில்லை. ஏனெனில் தற்கால சூழலில் உள்ள மூளையின் செயல்திறன் குறைந்து, அறிவுதிறன் அருகி காணப்படுகின்றது. அதனால்  அவற்றை வரிவடிவம் தர முயன்றால் தவறான ஆக்கமாக அமைய வாய்ப்புள்ளது என ஆச்சார்யர்களும் அதனைக் கைவிட்டனர்.

மேலும் ஒரு  முக்கிய விஷயத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும், அதாவது ஒரு நடுத்தர பதவரி 1634 கோடியே  83 லட்சத்து 7888 அரிச்சுவடுகளைக் கொண்டது.

ஆனால் மொத்தம் 112 கோடியே 83 லட்சத்து 58005 பதவரிகள் த்வாதசங்கத்தில் உள்ளன.

இன்னொரு  விஷயத்தையும் நாம் புரிந்து  கொள்ள வேண்டும், யாதெனில் ஆசார்யர்கள் சுருதகேவலி பத்ரபாகு ஸ்வாமிஸ்ரீ புஷ்பதந்தர் ஸ்ரீபூதபலி ஆச்சார்யர், ஸ்ரீ குந்த குந்த ஸ்வாமி, ஸ்ரீ உமாஸ்வாமி ஆச்சார்யர் போன்றவர்களும்  அதனை முழுவதுமாக வரிவடிவம் தர  முன்வரவில்லை என்பதே உண்மை.

அவ்வாறு அனைத்து த்வாதசங்கத்திற்கும் எழுத்துருவு தர முயலாமல், இதுவரை நமது சுருதகேவலிகள் ஆக்கங்களின் வழியே நடந்து ஆன்மீக முன்னேற்றம் காண்பதே பயனளிக்க கூடியதாகும்.

-----------------

சுருத ஞானத்தில் இரண்டு வகை ஆகமங்கள் உள்ளன:


அங்க பாஹ்யம் (non-canonical, வழிமறைகள்), 
அங்க பிரவிஷ்டம் (canonical – மறை நூல்கள்/ மூல ஆகமங்கள்) ஆகும்.


   அங்க பாஹ்யம் (எழுத்து வடிவமற்றது) என்பது தசவைகாலிகம் மற்றும் உத்தராத்யயனம் முதலிய அநேக வகைகள் ஆகும்.

அங்க பிரவிஷ்டம் பன்னிரு வகைகள் .

1. ஆசாரங்கம் : துறவறத்தார்களின் ஒழுக்கங்களைப் பற்றியது.

2. சூத்ரக்ருதாங்கம்: ஞானம் தர்சனம் ஆகிய இவைகளை வணக்கம் செய்யும் முறையைக் கூறும் நூல்.

3. சமவாயாங்கம்: திரவியம், க்ஷேத்ரம், காலம் எனும் பாவங்களினால் ஒன்றுக்கொன்று (பரஸ்பரம்) சமனாய் இருப்பவற்றைக் கூறும் நூல்.

4. வியாக்யாப்ரஜ்ஞப்தி:  உயிர் இருக்கிறது (அஸ்தி இல்லை நாஸ்தி) என்பதைப் பற்றி 60000 கேள்விகளுக்கு விடை அளிக்கும் நூல்.

5. ஸ்தானாங்கம்: அ. உயிர் பொருள், ஆ. புத்கலப் பொருள், இ. தர்மப் பொருள், ஈ. அதர்மப் பொருள், உ. ஆகாசப்  பொருள்ஊ. காலப் பொருள் எனும் ஆறு மெய்ப் பொருள்களைப் பற்றிக் கூறும்  நூல்.

6. ஞாத்ருகதாங்கம்:  தீர்த்தங்கர்ர், கணதரர் முதலானவர்களின் வரலாற்றை கூறும் நூல்.

7. உபாஸகாத்யநாங்கம்:  இல்லறத்தார்களின் ஒழுக்கங்களைக் கூறும்  நூல்.

8. அந்தக்ருத்தசாங்கம்: ஒவ்வொரு தீர்த்தங்கரர் காலத்திலும் பிறரால் செய்யப்படும் கொடிய துன்பங்களை (உபஸர்க்கங்களை) அடைந்த பத்து முனிவர்களின் வரலாற்றைக் கூறும் நூல்.

9. அநுத்த ரோப்பாதிகதசாங்கம்:  ஒவ்வொரு தீர்த்தங்கரர் காலத்திலும் பிறரால் செய்யப்படும்  கொடிய துன்பங்களை வென்றும், விஜய, வைஜயந்தஜயந்த, அபராஜித, ஸர்வார்த்த  சித்தி என்னும் ஐந்து அனுத்தர விமானங்களில் பிறந்த ஒவ்வொரு பத்து முனிவர்களின் வரலாற்றைக் கூறும் நூல்.

10. பிரஸன வ்யாகரணாங்கம்:*  நஷ்ட, முஷ்டிசிந்தை, லாபம்அலாபம் முதலான பொருள்கள் பற்றி எழுப்பப்பட்ட வினாக்களுக்கு விடையளிக்கும் நூல்.

(1)  கதநி, அக்ஷேபநிஉண்மைக்கு உரம் போடுதல்

(2)   விக்ஷேபிணிகுற்றம் களைதல்

(3)  ஸவேதணிஉண்மைக்கு ஆர்வம் ஏற்படல்

(4)  நிர்வேதணிசமநிலையிருத்தல் (அதன் விளக்கம்)


11. விபாக சூத்ராங்கம்: புண்ய, பாப பலன்களைக் கூறும் நூல்.

12. திருஷ்டி வாதாங்கம்: 363 மித்யாவாதிகளின் தன்மைகளை அவர்களுடைய கூற்றுகளையும் மறுக்கும் முறைகளைக் கூறும் நூல்.
இது ஐந்து பிரிவுகளைக் கொண்டது.

12.1.  ஐந்து பரிகிரமங்கள்

(1)   சந்திரப்ரஜ்ஞபதிசந்திரனின் சுற்று, உபகிரகங்கள், திதி முதலியன பற்றியது.

(2)   சூர்ய ப்ரஜ்ஞபதிசூரியனின் பெருமை அதன் உபகிரகங்கள் முதலியவற்றைப் பற்றியது.

(3)  ஜம்பூத்வீப ப்ரஜ்ஞப்திஜம்பூத்வீபம், மேருமலை, மற்ற மலைகள் தடாகங்கள், நதிகள் பற்றியது.

(4)   த்வீபஸாகர பர்ஜ்ஞப்திஉலகின் எல்லா சமுத்திரங்களும், த்வீபங்களும், பவண, வ்யந்தர, ஜோதிஷ்க தேவர்களின் இருப்பிடங்கள், ஜிநாலயங்கள் முதலியன பற்றியது.

(5)   வியாக்யா ப்ரஜ்ஞப்திநவ பதார்த்தங்கள், ஜீவன், அஜீவன், இவற்றின் எண்ணிக்கை முதலியன கொடுக்கப்பட்டுள்ளது.

12.2. சூத்திரம் 21 இதில் மித்யா சமயங்கள் 363, அவற்றின் கொள்கைகள் விளக்கப்படுகின்றன.

12.3. பிரதமாணு யோகம்இது இருபத்துநான்கு தீர்த்தங்கரர்கள், பன்னிரண்டு சக்கரவர்த்திகள், ஒன்பது நாராயணர்கள், ஒன்பது பிரதி நாராயணர்கள், ஒன்பது வாசுதேவர்கள், ஒன்பது பிரதி வாசுதேவர்கள், ஒன்பது பலதேவர்கள் ஆகிய அறுபத்து மூவர்களின் வரலாறு.


இதனை முதல் அநுயோகமாகவும், கரணாநு யோகம், சரணாநு யோகம், திரவ்வாநு யோகம் என அநுயோகங்கள் நான்காக பிரித்து விளக்கம் கூறப்பட்டிருப்பினும் இவை ஒன்றோடு  ஒன்றாக இணைந்த அநுயோகங்களே யாகும்.


12.4. பூர்வங்கள் (14)

  பூ.1 – உத்பாத பூர்வம்;  ஜீவன்,  புத்கலம் இவற்றின் இயல்பியல்

  பூ.2 – அக்ரயநீ பூர்வம்:  ஏழுதத்துவங்கள், ஒன்பது பதார்த்தங்கள்,  ஆறு திரவியங்கள் மற்றும் நயம் பற்றிய விளக்கம்.

  பூ.3 – வீர்யாநுவாத பூர்வம்; ஆன்மா, அதன் வீரியம், தபத்தின் சுத்தத்தன்மை, வீரியம் மற்றும் அறுபத்து மூன்று ஸலாகா புருஷர்களின் வீரியம் முதலியன

  பூ.4 – அஸ்தி நாஸ்தி ப்ரவாத  பூர்வம்:  ஜீவன், அஜீவன், க்ஷேத்ரம், கால பேதங்கள், ஸப்தபங்கி முதலியன.

  பூ.5 – ஞான ப்ரவாத  பூர்வம்: மதி,  சுருதி, அவதி, மனப்பர்யாய ஞானங்கள் பற்றியும், குமதி,குஸ்ருதி மற்றும் விபங்க ஞானம் பற்றியும் கூறுகிறது.

  பூ.6 – ஸத்ய ப்ரவாத  பூர்வம்: இது மெளனம் பற்றியும் பேச்சு பேசுவதில் உண்மை, பொய் என்பது பற்றியும்  கூறப்படுகிறது.

  பூ.7 – ஆத்ம ப்ரவாத  பூர்வம்: ஆன்மா வினைகளுக்கு கர்த்தாவாகவும், போக்தாவாகவும் இருக்கிறது. நிச்சய நயம், வியவகார நயம், பத்து பிராணங்கள், நிச்சயம்,  வியவகாரம் என இரண்டு இரண்டு  விதமாக செயல்படுதல் பற்றியும் ஆன்மா பற்றிய பல விவரங்களும் உள்ளன.

  பூ.8 –  கர்ம ப்ராவாத  பூர்வம்: கர்மங்கள் வருதல்,  பலன் தருதல், உதீர்ணம் இவை பற்றியும், முக்கியமாக ஞானாவரணம் முதலிய எட்டு கர்மங்களைப் பற்றியது.

  பூ.9 –  பிரத்யாக்யான பூர்வம்: மனிதனின் உடல் அமைப்பு,பலம் அவன் விட வேண்டிய பழக்கங்கள், கடைபிடிக்கவேண்டிய விரதங்கள், சமிதி, குப்தி முதலியன

  பூ.10 – வித்யானுவாத  பூர்வம்: இது சோதிரம், கைரேகை, சாஸ்திரம் முதலிய 700 வகைகள் குறிக்கப்பட்டுள்ளன, அவை  கற்பதின் பயன் அடைய வேண்டிய உபகரணங்கள் முதலியன.

  பூ.11 – கல்யாணவாத  பூர்வம்: தீர்த்தங்கரர்களின் பஞ்ச கல்யாண வைபவங்கள்- சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், கிரகங்கள்  இவற்றினால் ஏற்படும் பாதிப்புகள் முதலியன  கொடுக்கப்பட்டுள்ளன.

  பூ.12 – பிராணவாத  பூர்வம்: மருத்துவத்தில் எட்டு வகைகள், மந்திரத்தால் பேய், பிசாசுகளை கட்டுப்படுத்துதல், ஸர்ப்ப விஷத்தை முறித்தல் முதலியன  கொண்டவை.

  பூ.13 – கிரியாவிசால  பூர்வம்: சங்கீதம் முதலிய கலைகள் எழுபத்திரண்டு கலைகள்- அதாவது பெண்களுக்கு 64 கலைகள், மற்றும் பெண்களுக்குண்டான கிரியைகளும், கடவுள் பக்தி முதலியன உள்ளடக்கியது.

  பூ.14 – திரிலோக  பிந்து ஸார  பூர்வம்:  மூன்று உலகங்கள் 26 பரிகர்மா(செய்ய வெண்டிய செயல்கள்) மற்றும் பீஜம் முதலிய  கணக்குகளும் மற்றும் மோக்ஷம் அடையும் வழியும், மோக்ஷம் அடைவதால் உண்டாகும் சிறப்பும்,  ஆனந்தமும் விளக்கப்பட்டுள்ளன.

12.5. சூளிகைகள்

1.   ஜலகதம் -  மந்திரங்களின் சக்தியால் நீரில் மூழ்கியிருத்தல், நீரின் மேல் நடத்தல், நெருப்பில் மூழ்குதல், நெருப்பை உண்ணுதல் முதலியன  செய்தல்.

2. ஸ்தலகதம் – மந்திரங்களின் சக்தியால் மேருமலை போன்ற இடங்களுக்கு நினைத்தவுடன் செல்லுதல்,  வாஸ்து வித்தை முதலானவற்றை கூறும் நூல்.

3. மாயாகதம் – மந்திர தந்திரங்களுக்கான மந்திரங்களும் செய்முறைகளும்.

4. ரூபகதம் – சிங்கம், புலி போன்று உருவங்கள் எடுக்கவும், பித்தளையை  தங்கமாக மாற்றுதல்  போன்ற வேதியியல் மாற்றங்களும்  செய்யும் வழிகள்.

5. ஆகாஸ கதம் – ஆகாயத்தில் பறந்து செல்லும் ரித்தி பெறுவதற்கான மந்திரங்களும் வழிமுறைகளும்.



மேற்கண்ட பன்னிரண்டு அங்கங்கள் தவிர மற்றவை 

அங்க பாஹ்யம் சுருதங்கள் (வழி மறைகள்) பதினான்காகும்.

1. ஸாமாயிக ப்ரகீர்ணகம் – ஸாமாயிகம்  செய்வதில் நாம, ஸ்தாபனா, திரவ்ய, க்ஷேத்ர, கால, பாவ என  ஆறு வகைப்படும்.

2. ஸம்ஸ்தவ ப்ரகீர்ணகம் – தீர்த்தங்கரர் வாழ்வில் ஐந்து முக்கிய நிகழ்வுகள், முப்பத்து நான்கு அதிசயங்கள், எட்டு பிராதிஹார்யங்கள்  இவற்றைப் பற்றி கூறுவது.

3.  வந்தநா ப்ரகீர்ணகம் – ஜினாலயங்கள் மற்றும் பூஜிக்கத்தக்க ஸ்தலங்களைப்பற்றி கூறுகிறது.

4. பிரதிக்ரமணா ப்ரகீர்ணகம் – பகல், இரவு, மாதம், பட்சம் இவற்றில் ஈர்யாபதம் முதலாய குற்றாங்களைப் பற்றி கூறுகிறது.

5. விநய ப்ரகீர்ணகம் – நற்காட்சி, நல்ஞானம், நல்லொழுக்கம், தபஸ் இவற்றில் இருக்க வேண்டிய விநயம்(மரியாதை) பற்றிக் கூறுகிறது.

6. கிருதிகர்ம ப்ரகீர்ணகம் – தீர்த்தங்கரர்கள், சித்தர், ஆச்சார்யர், உபாத்தியாயர், ஸாதுக்கள் முதலானவர்களை வணங்கும் முறை  கூறப்படுகிறது.  மூன்று முறை குனிந்து வணங்க வேண்டும். கோயிலை மூன்று முறை  வலம் வருதல் போன்றவற்றை விளக்குகிறது.

7. தஸ வைகாலிக ப்ரகீர்ணகம் – முனிவர்களுக்கு ஆகாரதானம் செய்யும் முறை கூறப்பட்டுள்ளது.

8. உத்திராத்யாந ப்ரகீர்ணகம் - முனிவர்களுக்கு ஏற்படும்  சலனங்கள் மற்றும் 22 பரீஷஹங்கள் இவற்றைப் பற்றியது.

9. கல்ப வியவகார ப்ரகீர்ணகம் – முனிவர்களின் ஒழுக்க முறையும், தவறுக்கான பிராயச்சித்தகளின் விளக்கங்கள்.

10. கல்பாகல்ப ப்ரகீர்ணகம் – முனிவர்களின் வாழிடங்கள் பற்றியவை.

11. மஹாகல்ப ப்ரகீர்ணகம் – ஜிநகல்பி சாதுக்களைப் பற்றியது. அவர்கள் முனிவர் சங்கத்திலிருந்து பிரிந்து சென்று தீவிர யோகத்தில் ஈடுபட்டிருப்பார். மற்றவர்கள் ஸ்தாவர கல்பி முனிவர் ஆவார்.

12. புண்டரீக ப்ரகீர்ணகம் – தேவ பிறவி  எடுக்கக் காரணமான வந்தனை, தவம் முதலிய விபரங்கள்.

13. மஹாபுண்டரீக ப்ரகீர்ணகம் – இந்திரன், பிரதீந்திரன் முதலிய உயர் தேவர்களாகப் பிறக்க செய்ய வேண்டிய தவம் முதலியனவற்றைக் கூறுகிறது.

14. நிஸித்திகா  ப்ரகீர்ணகம் – ஜாக்கிரதையின்மையால் ஏற்படும்  குற்றங்களிலிருந்து ஒருவன் தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டியதின் அவசியமும் வழி முறைகளும் கூறப்பட்டுள்ளன.


இந்த மூன்று வகைப்படுகள் மூவகை ஆச்சார்யர்களின் அடிப்படையில் வந்தவை.


சர்வக்ஞர்/தீர்த்தங்கரர் அல்லது சாமான்ய கேவலிகள்

சுருதகேவலிகள்

ஆச்சார்யர்கள்

சர்வக்ஞர் கேவலஞானம் உடையவர் மூவுலகத்தினையும், முக்காலத்தையும் ஒரே நேரத்தில் உள்ளது உள்ளபடி அறியக்கூடியவர். சர்வ வல்லமை படைத்த அவர் எடுத்துரைத்த ஸ்ருதமே வேதமாக கருதப்படுகிறது. அவரே பிரமாணமாக இருக்கிறார்.

அவருக்குப் பின் வந்த அவருடைய உண்மைச் சீடர்கள் அவருரைத்த ஆகமத்தை, வேதத்தை, சுருதத்தை அப்படியே நினைவுகூர்ந்து சொல்லக் கூடியவர்கள். அவர்களே பகவான் உபதேசங்களை அங்கங்களாகவும், பூர்வங்களாகவும் வழங்கியவர்கள்.

அதன் பின் வந்த ஆசாரியர்கள் சிஷ்யர்களின் நலன் கருதி, உபகாரமாக தஸவைகாலிகம் போன்ற நூல்களை இயற்றினார்கள். அவைகளும் அங்கங்கள், பூர்வங்களை சுருக்கி வழங்கப்பட்டவையாகும். அவையும் பகவான் ஞானமாகவே கருதப்படும். அவை பகவான்  வசனத்தையே ஆதாரமாக கொண்டவை.  கடலளவை  கடுகளவாக  சுருக்கப்பட்டவையே யாகும்.

-----------






இவ்வாகமங்களின் தோற்றத்தை மரமாக உருவகம் செய்து இடது, வலது பக்கக்கிளைகளாக கற்சிலையாகவோ, உலோகப்படிமங்களாகவோ வடிவம் செய்து ஸ்ருதஸ்கந்தம் என்றும் வழிபடுவர்.





மேலும் திவ்யத்தொனி வழியே வந்த ஆகம நூல்களை துவாதசாங்கங்களை ஜினவாணி என பெண்தெய்வமாக கருதி, ஸ்ருத தேவி, ஜின ஐஸ்வர்யா எனவும் உருவங்கள் அமைத்து வழிபடும் மரபும் சமணத்தில் உள்ளது.


^^^^^^^^^^^^^^^^^^^^

No comments:

Post a Comment