துவாரகை அழிந்த வரலாறு



துவாரகை அழிந்த வரலாறு



யதுவம்ச மன்னன் ஸ்ரீ கிருஷ்ணன் ஆண்ட துவாரகை நாட்டில் அமைந்துள்ள பெரும்வனப்பகுதி கிர்காடுகளாகும். அக்கிர்நார் காட்டை வனமாலி எனும் சேவகன் பாதுகாத்து வந்தான். ஒரு சமயம் அப்பாதுகாவலன் வியக்கும் வண்ணம் இளவேனிற்காலம் வரும் முன்பே அக்காடு பச்சை பசேலென்று செழிப்பாகவும், பூக்கள் பூத்துக் குலுங்கி, பழமரங்கள் கனிகளை பெருமளவில் காயத்தும் செழிப்பாய காட்சியளித்தன.


அவ்வதிசய நிகழ்வினை கண்டு வியந்த வனமாலை அதன் காரணத்தை கண்டுபிடிக்க அலைந்து திரிந்த போது, பகவான் நேமிநாதர் சமவசரணம் தேவேந்திரனால் உருவாக்கப்பட்டு திவ்யத்தொனியில் அருள்மொழி எங்கும் நிரம்பியதைக் கேள்வியுற்றான். நேரில் கண்டு பரவசமடைந்தான். அவ்வதிசய நிகழ்வினை தன் கோமான் ஸ்ரீகிருஷ்ணருக்கு தெரிவிக்க ஓடொடிச் சென்றான். அக்காட்டில் கண்ட அற்புத நிகழ்வை பரபரப்புடன் அவரிடம் வர்ணித்தான். அவரும், அண்ணன் பலராமரும் மக்கள் புடைசூழ அக்கானகம் வந்து பகவான் நேமிநாதரின் அறமழையில் நனைந்தனர்.


சொற்பொழிவு முடிந்த வேளை அவர் அருகில் சென்று உரையாடிய போது துவாரகாவின் எதிர்காலத்தைப் பற்றி வினவ; அதற்கு விடையளிக்கும் முகமாக முக்காலமும் உணர்ந்த முழுதுணர்ஞானியர் இன்னும் 12 ஆண்டுகளில் துவாரகை அழியும் அபாயம் உள்ளது என்றார். அவ்விபத்தில் நீங்கள் இருவர் மட்டும் உயிர் பிழைப்பீர் என்று மேலும் கூறினார்.  கலவரமடைந்தனர் இருவரும். அண்ணன் பலராமர் ஐய்யனே முற்றும் உணர்ந்தவர் தாங்கள், அழிவிற்கான காரணத்தையும் தெரிவிக்க வேண்டுகிறேன் என்றார்.


பகவானும் கள்ளும் மதுவும் கடலாக பெருகி வரும் உங்கள் நாட்டில் அதனை மேலும் மேலும் அருந்தி போதையில் தீயவை செய்வதறியாது பிற உயிர்க்கு துன்பம் தந்து கொண்டே இருப்பர். அச்சுழலில் தவமுனி தீபாயாணரை துன்புறுத்தவும் சிலர் துணிவர். அக்குற்றத்தினால் அவர் வெகுண்டு இந்நகரை தீக்கிரையாக்கும் அபாயம் தென்படுகிறது என்று தன்னுணர்வின் வழியே தோன்றிய காட்சியை தெரிவித்தார்.



துவாரகை திரும்பிய சகோதரர்கள் இருவரும் துவாரகைக்கு நேரும் தீங்கினை தடுக்க எண்ணி ஒரு அவசர ஆணை பிறப்பித்தனர். நாட்டில் உள்ள மதுபீப்பாய்க்கள் அனைத்தையும் மலைமீதேற்றி அங்கிருந்து மறுபுறம் வீசி அழித்து விடுமாறு கட்டளை பிறப்பித்தனர். அதற்கு கீழ்படிந்த மக்களும் அவ்வாறே மறுபுற பள்ளத்தில் மதுபுட்டிகளிலும், பீப்பாய்களிலும் இருந்த மதுதிரவத்தை கொட்டி, கலன்களை வீசிவிட்டு திரும்பினர்.


சில ஆண்டுகள் கடந்தபின்; ஓர்நாள் துவாரகை நகரின் அருகிலுள்ள வனத்தில் சிறுவர்கள் சிலர்  விளையாடிக் கொண்டிருந்தனர். சில மணிநேரம் கடந்தபின் விளையாடிக் களைத்து அவர்களுக்கு மிகவும் தாகம் எடுக்கத்துவங்கியது. குடிநீர் வேண்டி அங்கும் இங்கும் தேடி அலைந்தனர். எங்கும் கிடைக்கவில்லை. சிறு தொலைவு சென்றதும் மலைக்கு மறுபுறம் இருந்த ஒரு குட்டையில் நீர் இருந்தது. அதனைக் கண்டதும் அருகில் சென்று மகிழ்ச்சியுடன் கைகளில் அள்ளி குடித்தனர். ஆனால் அது நல்ல நீரின் சுவையின்றி இருந்ததை பருகும்வேளையில் உணர்ந்தாலும் தாகமிகுதியால் பெருமளவில் அருந்தி விட்டனர். ஆனால்  முற்காலத்தில் திராட்சை ரசத்தில் தயாரிக்கப்பட்ட மது மலைமீதிருந்து கொட்டியதினால் அக்குட்டையில் பெருமளவில் கலந்திருந்தது. நீர்மட்டும் கோடையில் ஆவியாகி, மீண்டும் மழையில் நிரம்பி இருந்ததே ஒழிய அடியில் தங்கிய மதுவின் அடர்த்தி குறையாமல் இருந்துள்ளது. 



அதனை உண்டதினால் அச்சிறுவர்கள் போதை தலைகேற வீடுதிரும்பும் வழிதெரியாமல் அலைந்தனர். வழிதவறிச் சென்றபோது கட்காசனத்தில் தவம் செய்து கொண்டிருந்த தீபாயண முனிவரைக் கண்டனர். அவரை முனிபுங்கவர் என்பதறியா மூடர்கள் பராரியென நினைத்து புத்தியின்றி அவரை ஏளனம் செய்தனர். அவரது ஏச்சுக்களை கேளாது கண்ணை மூடியபடி தியானத்தில் ஆழ்ந்திருந்தார். அவர் அசையாமல் இருக்கவே கற்களையும், மணலையும் அவர்மீது வீசி மகிழ்ந்தனர். அதற்கும் அசைந்து கொடுக்காமல் அமைதிகாக்கவே, அத்தீயோர்கள் அவர்மீது சிறுநீர் கழிக்கத் துவங்கினர்.



அக்கழிவின் ஸ்பரிசம் பட்டுத் தியானம் கலைந்த அம்முனிவர் அவர்களை சினத்துடன் கண்ட போது அவரது இடது தோளிலிருந்து ஒரு செந்தீப்பிழம்பு தைஜச சரீரத்தின் வெளிப்பாட்டில் மேல்நோக்கி எழும்பி அந்நகரத்தை நோக்கி விண்ணில் பாய்ந்து சென்றது. அத்தீப்பிழம்பானது துவாரகா நகரத்தையே அழித்தது என்பது நேமிநாதஸ்வாமி வரலாற்றில் வரும் ஒரு சம்பவம்.


அச்சம்பவம் மது, கள்ளுண்டதால் துவரைகையே அழிந்தது எனபதை அறிவுறுத்த கூறப்பட்டது. கள்ளுண்ணாமை விரத மேற்பதை வலியுறுத்த ஆரியிகை ஞானமதி மாதாஜி யவர்கள் கூறிய வரலாற்று கதையாகும்.


இக்கதையில் வரும் தைஜச சரீரத்தின் ஒருபகுதியின் வெளிப்பாடே தீயாய் சென்று துவாரகை நாட்டையே அழித்ததால், தைஜச சரிரத்தின் விளக்கத்தில் நெருப்பு போன்றது என்று எழுதி யிருந்தேன்.



அது ஆய்வுக்குரியதாக அம்மாத இதழில் வெளிவந்திருந்தது அதற்கு விளக்கமளிக்கவே இக்கதையை அருகன் தத்துவம் இதழுக்கு அனுப்பியுள்ளேன்.


நன்றி


பத்மராஜ் ராமசாமி.

No comments:

Post a Comment