அவதிஞானம்





தொலையுணர் ஆற்றல்..

Clairvoyance..



பாரததேசத்தில் மகதநாட்டிலுள்ள ஒரு வியாபார நகரம். அதில் ஆனந்தன் என்னும் பெரும் தனவந்தர் வாழ்ந்து வந்தான். பல கோடிகளுக்கு அதிபதியான அவனிடம் நாற்பதாயிரம் பசுக்கள் இருந்தது. தயா குணம் நிறைந்த அவனும் தினம் அன்னதானம் போன்ற பல தானதர்மங்களை அவ்வூர் மக்களுக்கு வழங்கி வந்தான். அவனிடம் ஆஸ்திக்கு அளவில்லை என்றாலும் அவனது நற்பண்பிற்கும் அளவில்லை என்பதால், மக்கள் அனைவரும் பாராட்டி அவனிடம் மிகுந்த மரியாதை கொண்டிருந்தனர். அந்நகரை ஆட்சிபுரிந்த மன்னர் ஜித்சாத்ருவும் அவனை கண்ணியமாக நடத்தி வந்தார்.


அப்போது  பகவான் மஹாவீரர் தனது பன்னிரண்டாயிரம் முனிவர்களுடன் அவ்வூரில் சிலநாட்கள் தங்கி தர்மங்களையும், நற்சிந்தனைகளையும் போதித்து வந்தார். அஹிம்சை மற்றும் அபரிக்கிரஹ தர்மத்தை கடைபிடித்தலே பிரதானமானது. அதன் வழியில் வந்த பதினோரு விரதங்களை ஏற்று ஒழுகுதலே இல்லறத்தாருக்கு உத்தமமான வாழ்க்கை நெறியாகும் என்பதை புரியும்படி போதித்து வந்தார். அதுவே முக்தி என்னும் பேரானந்த ஸ்தலத்திற்குச் செல்ல வழிவகுக்கும் என்பதை வலியுறுத்தி வந்தார்.


அவரது உபதேச மொழிகளை கனிவான திவ்யத்தொனியில் கேட்டு வந்த ஆனந்தனும் தடுத்தாட் கொள்ளப்பட்டான். இவ்வுலக வாழ்வு நிலையற்றது. துன்பம் நிறைந்த இவ்வுலகவாழ்விலிருந்து  நிரந்தரமாய் விலகிட முடிவு செய்தான்.  தனது உள்ளார்ந்த விழிப்பினைப் பெற முடிவு செய்தான். தன்வாழ்வு உய்யும் வழியில் நாட்டம் கொண்டு அவர் கூறிய அணுவிரதங்கள் பன்னிரண்டையும் வழுவாது கடைபிடிக்க உறுதி கொண்டான். அதற்கு இடையூறாய் இருந்த ஆஸ்திகள், வியாபார பணப்பரிவர்த்தனைகளை தனது வாரிசுகளிடம் ஒப்படைத்து இல்லறத் துறவியாக முக்திக்கான இயம, நியமங்களை, அதாவது விரதங்களை கடைபிடிக்கலானான். தீவிரமாய் புறஉலகப்பற்றிலிருந்து விடுபடவும், அகத்தாய்வு செய்து ஆன்மனை தரிசிக்கும் தவநெறிகளை ஏற்றும்,  எளிய வாழ்க்கை முறையும், தினத்தியானமும் செய்வதிலேயே தனது வாழ்நாட்களை கழித்து வந்தான்.


அவனது வாழ்வுமுறை மேன்மையான அறஒழுக்கமுறையை கடைபிடித்ததினால் மனம் தூய்மையானது. ஆன்ம முன்னேற்றத்தில் வளர்ச்சியடைந்ததின் பலனாக ஒருநாள் **அவதிஞானம் என்னும் அறிவின் மூன்றாம் நிலை ஆற்றலைப் பெற்றான். அந்த தெய்வீக  ஆற்றல் பன்னிரண்டாம் சுவர்க்கத்திலுள்ள (புத்கலப்)பொருட்களை இங்கிருந்தே காணும் தொலைநோக்கு சக்தியை தந்தது. அத் தொலைதிருஷ்டி ஆற்றல் புதிய அனுபவமாகவும், வியப்பாகவும் இருந்தது.


சிலஆண்டுகள் கழிந்து, ஒருநாள் பகவானின் பிரதான சீடர் கெளதம் ஸ்வாமி, முனிசங்கத்தினரின் பசியாற ஆகாரம் வேண்டி அந்நகருக்கு விஜயம் செய்திருந்தார். அப்போது அவ்வூர் சிராவகர்கள் பவ்யர் ஆனந்தரின் உடல்நிலைக் குறைவையும், மேலும் அவர் பெற்றிருக்கும் பிரத்யேக அறிவுத்திறனையும் அவரிடம் கூறி வியந்தனர். அச்செய்தியறிந்த கெளதம் ஸ்வாமி பவ்யரை கண்டு அவரது நலம் விசாரிக்க அவரிடம் சென்றார்.


நலம்குன்றிபடுக்கையோடிருந்த ஆனந்தரும் முனிகளைக் கண்டதும் எழுமுடியாமல் கரம்கூப்பி வணக்கத்தை தெரிவித்தார். மேலும் முனிவர் பெருமானிடம் குருவரரே தங்களின் ஆசீர்வாதத்தில் அவதிஞானம் வெளிப்பட்டுள்ளதாக தெரிகிறது. தாங்கள் தான் அதனை உறுதி செய்தல் வேண்டும் என்று கூறுகிறார். அதனைக் கேள்வியுற்ற கெளதமரால் கூற்றை ஏற்றுக் கொள்ள இயலவில்லை. அவரிடம் ஸ்ராவகநிலையில் அவ்வாறான ஆற்றலுக்கு சாத்தியமில்லை, முனிநிலையில் தான் அது சாத்தியப்படும் என்று நினைக்கிறேன். ஏதோ பிரமையில் உள்ளீர்கள் என்று கூறியதோடு, அவ்வாறான தவறான நம்பிக்கையில் இருப்பதால் அதற்காக வருந்தி பிராயச்சித்தம் செய்து விடுங்கள். ஏனென்றால் அது பொய்யுரைக்கு சமம் என்று பதிலளித்தார்.

அதனை செவியுற்ற பவ்யர் ஆனந்தர் குருவே, உண்மைத்யைதான் கூறுகிறேன். இதில் பொய்யுரைக்க ஏதும் காரணமில்லை. அதனால் உண்மையைக் கூறினாலும் பிராயச்சித்தம் செய்ய வேண்டுமா என்று பவ்யமாக வியப்புடன் கேட்டதற்கு, கெளதமரும் நான் பகவானிடம் தெரிவித்து, உறுதி செய்தபின் வருகிறேன் என்று விடைபெற்றுச் சென்றுவிட்டார்.


அருகிலுள்ள வனத்தில் தங்கியிருந்த முனிசங்கத்திற்கு சென்று  தான் பெற்றுவந்த ஆகாரங்களை சகமுனிவர்களுக்கு வழங்கியதும், பகவானிடம் சென்று வணங்கி ஆனந்தர் அறிவுஆற்றல் உயர்வு பற்றிய செய்தியை கூறுகிறார். மேலும் அவ்வாறு ஸ்ராவகர்களுக்கு அவதிஞானம் என்னும் இந்த மூன்றாம்நிலை அறிவுஆற்றல் சாத்திமா என்றும் தான்அறிந்து கொள்ள விரும்புகிறேன் என்று வினவினார்.


அதனைக்கேட்ட பகவான் மெல்லிய புன்னகையை விரித்து  கெளதம் ஸ்வாமி, ஒருவர் தவநெறியை சரியாக கடைபிடிப்பதால் வரும் ஆன்மீகஆற்றலில் ஒரு படிநிலை. அந்த தவநெறி ஒழுக்கம் முனிவரா, ஸ்ராவகரா என்று பிரித்துப் பார்ப்பதில்லை. எவரொருவர் தீவிர முக்திப்பயணத்தில் நற்காட்சி, நல்ஞானம் மற்றும் நல்லொழுக்கத்தில் வழுவாது பயணிக்கிறாரோ அவர் அந்நிலையைப் பெறுவது நிச்சயம். அதனால் அவதிஞானம் எனும் மூன்றாம்நிலை ஞானத்தை ஸ்ராவகரும் பெறுவது சாத்தியமே. பற்றற்று வாழும் எந்த ஒரு ஜீவனும், அறநெறி வாழ்க்கையில் தீவிரமாய் உறுதியுடன் செல்லும் எந்த ஒரு ஜீவனும் ஆன்மத்தூய்மை முழுவதுமாக நீங்கி கேவலஞானம் எனும் முழுதுணர்ஞானம்வரை சென்றடைவது நிச்சயம் என்று விடையளித்தார்.

கெளதம் ஸ்வாமியும் தனது தவறுக்கு பகவானிடம் மன்னிப்பை வேண்டியதோடு, உடன் பவ்யர் ஆனந்தன் இல்லம் நோக்கி விரைந்தார். அவரிடம் எனது தவறான புரிதலுக்கு மன்னிக்க வேண்டுகிறேன். நானே பிராயச்சித்தம் செய்ய வேண்டியவன் என்றார். அவரும் குருவே தாங்கள் என்னிடம் அவ்வாறு நடந்து கொள்வது மிகவும் வேதனையை அளிக்கிறது. தாங்கள் என்றும் எனது வழிகாட்டியே என்று தன்னடக்கத்துடன் கரம்கூப்பி வணங்கினார்.

ஆனந்தன் எனும் அந்த பவ்ய ஜீவனும் தனது ஆயுள் முடிந்து, செளதர்ம கல்பத்தில் தேவனாக பிறந்தார். அங்கு ஆயுள் முடியும் வரை தேவசுகம் அனுபவித்து மஹாவீதேஹ க்ஷேத்திரத்தில் பிறந்து, ஜினவற ஒழுக்கத்தில் மூழ்கி முக்தி பெற்றார் என்று முடிகிறது.

இது உண்மைச் சம்பவமாக  பாவாபுரி நகரில் பழங்காலத்திலிருந்து உலவிவருகிறது. இந்த கர்ணபரம்பரைக் கதையின்  நீதி; எவரொருவர் பகவான் மஹாவிரர் அருளிய அறஉபதேசங்களில் அசையா நம்பிக்கை வைத்து, அணுவிரதங்களை தவறாமல் எக்கனமும் ஒழுகியவர் ஆன்மமுன்னேற்றம் அடைவது உறுதி என்பதை தெளிவாக்குகிறது.

பகவான் மஹாவீரரின் அருள்வாக்கினை சுருதமாகக் கேட்டு தவறாமல் ஒழுகிய எந்த ஒரு ஜீவனும் சீக்கிரமே முக்திநிலை எய்தும் என்பது திண்ணமே.

** அவதிஞானம் – புறத்தே தெரியும் தொலைதூரப் புத்கலப்பொருளைக் கண்டுகொள்ளும் ஆன்மீகஆற்றல். அது தீர்த்தங்கரர்களுக்கு வரம்பற்றது என்றாலும் மற்றவர்களுக்கு ஆன்மத்தூய்மையைப் பொருத்து வரையறைக்குட்பட்டது.

நன்றி..





குறிப்பு: அவதிஞானம் (Clairvoyance) இப்போது சாத்தியமா என்றால் சாத்தியம் தான். ஏனெனில் இன்றைய உலகம் கூறும் Telepathy, Telekinesis சாத்தியமென்றால், அவதிஞானமும் சாத்தியமே… ஆன்மப்பயிற்சிதான் முக்கியம்.

No comments:

Post a Comment