Jain United News Centre, Whatsapp
குழுவில் தொடராக செய்யாறு திரு கம்பீர. துரைராஜ் அவர்கள் பதிவு செய்து
வந்த தொடர். அவரது தொகுப்பு அஞ்சல்களுக்கு நன்றி.
சிரவண பெளிகுளம்
பற்றி அறிவோம்!!!
இந்திநூல் மூல
ஆசிரியர் பேரறிஞர் பண்டிட் S.C திவாகர்
B.A.L.L.B (M.P STATE) அவர்கள், தமிழாக்கம்
ஆசிரியர் திரு.மல்லிநாத் ஜெயின் சாஸ்திரி, நூல் வெளிவர உதவியவர் ஆகியோர்களை வணங்குகிறேன்.
--------
சிரமண பெளிகுளம் மைசூர் (கர்னாடகா)
இராஜ்ஜியத்தின் புகழ் பெற்ற ஸ்தலமாக விளங்குகிறது. இது பெங்களூரிலிருந்து சுமார் 100 மைல், மைசூரிலிருந்து 60மைல், ஆசன் ஸ்டேஷனிலிருந்து 32
மைல் தொலைவில் உள்ளது. இது அழகு ததும்பும் மைசூர் (கர்னாடக) இராஜ்ஜியத்தின்
வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ஒப்பற்றத் தலமாக காட்சியளிக்கிறது.
இத்தலம் ஜைன சாசனத்தை ஆராதிப்ப (தொழுப)
வர்களுக்கு பெரிதும் போற்றத்தக்க புனிதத் 'தலம்' என்பதில் சிறிதும்
ஐயமில்லை. மேலும் உலக கலை நிபுணர்களுக்கும் ஒப்பற்றக் கலையின் உறைவிடமாக
விளங்குகின்றதென்பது ஏற்றுக்கொள்ளத் தக்கதாகும். அவ்விடத்தின் இயற்கையான
கவர்ச்சியையும், அமைதியைத்
தூண்டிவிடும் பொருள்களையும் கருத்தில் கொண்டு, அதன்
உள்ளும் வெளியும் நிரம்பி வழியும் அழகின் முழுமையைக் காணுங்கால் இது ஜைனர்களுக்கு
மட்டுமின்றி உலக மக்களுக்கும் ஈடு இணையற்ற புனிதத் தலமாகும் எனக் கூறுவது
மிகையாகாது. அங்கு செல்லும் மக்கள் தம் இன வேறுபாட்டை மறந்து இயற்கைக் கடவுளான
பகவான் கோமதீஸ்வரரை உள்ளன்புடன் கைகூப்பி வணங்கத் தவறுவதில்லை. மேலும் அவர்கள் பார்வையிற் காணும் காட்சியின்
வியப்பில் ஆழ்ந்தர்களாகிச் சொற்களால் சொல்ல இயலாத நிலையில் இன்பக் கடலில் மூழ்கி
மெய்மறந்து விடுகின்றனர்.
சிரமண பெளகுளம்
என்பதின் பொருள்!
சிரமண பெள குளத்தில் கல்யாணி என்றதொரு அழகிய
குளம் உண்டு. அதை கி.பி 1680-ல் மைசூர் மன்னரான சிக்கதேவர் தோண்டினார்.
கன்னட மொழியில் 'பௌ' என்பதின் பொருள் வெண்மை என்பதாகும். 'குள' என்பதின் பொருள் குளம் என்பதாகும். 'சிரமண' என்றசொல் திகம்பரஜைனத் துறவியைக் குறிக்கிறது.
இங்ஙனம் 'சிரமண பெள குளா'
என்பதன் பொருள்- திகம்பர ஜைன
சாதுக்களுக்கான வெண்மையான குளம் என்பதாகும். கி.பி 1129-தைச் சார்ந்த கல்வெட்டில் 'ச்வேதஸ்ரோவர்' வெண்மையான
குளம் என்று குறிக்கப்பட்டிருக்கிறது
(வளரும்)
சிரவண பெளிகுளம்
பற்றி அறிவோம்
----------------2-------------
' சித்தர் பஸ்தீ' என்று சொல்லப்படும் கோயிலின் கம்பத்தில் கி.பி 1432-ஐச் சார்ந்த கல்வெட்டானது 'தவள ஸ்ரோவர நகர்' வெண்மையான குளமுள்ள நகரம் என்று குறிப்பிடுகிறது.
இதிலிருந்து நாம் அறிந்துகொள்வது யாதெனில் சிக்க தேவ மன்னரால் 1680-ல் ஆக்கப்பட்ட கல்யாணி குளத்தின் காரணமாக
இவ்விடத்திற்கு 'பெள கொளா'
என்ற பெயர் வரவில்லை. ஏனெனில் கி.பி 1129
, கி.பி 1432 ஆகிய முற்பட்ட கல்வெட்டுகளிலும் 'ச்வேதஸ்ரோவர்' 'தவள
ஸ்ரோவரநகர்' என்று
குறிக்கப்பட்டுள்ளன. ஆகவே இக்கல்வெட்டுகளின் ஆதாரத்தைக் கொண்டு ஆராயுங்கால்
புலனாவது யாதெனில், இக்
கல்யாணி குளத்திற்கு முன் (முற் காலத்தில்) அங்கு ஒரு குளம் இருந்திருக்க வேண்டும்
என்பதாகும். ஒருக்கால் முற்காலத்திலிருந்த குளம் சீர் திருத்திச் செப்பனிடப்பட்டு
பிற்காலத்தில் 'கல்யாணி குளம்'
என்ற பெயரால் வழங்கி வந்திருக்கலாம்.
கி.பி. 1422-ல் கல்வெட்டில் குறிப்பிட்டுள்ளதாவது: ச்ருத
முனிவரின் அருகிலிருந்த (சீடரான) இரகப்பன்
என்ற சேனைத் தலைவன் உலகப் புகழ் பெற்ற தீர்த்த ஸ்தலமான பெளு கொளாவின் கோமடேஸ்வர பகவானுக்கு நித்ய பூஜைக்காக 'பெள குளம்' என்ற கிராமத்தையே தானமாக அளித்துள்ளார். இக்
கல்வெட்டில் இத்தலத்தை 'விச்வ
தீர்த்தம்' (உலகத் தீர்த்த
ஸ்தலம்) எனக் குறிக்ககப் பட்டுள்ளது. இன்றும் உலக மக்கள் ஆவலுடன் ஓடோடி வந்து
புண்ய (புனித) கருத்துடன் தரிசனம் செய்கின்றனர். மேலும் தன் பிறவிப் பயனைப் பெற்று
விட்டதாகவே கருதுகின்றனர். ஆகவே 'விச்வ தீர்த்தம்' என்ற
சொல்லானது முற்றிலும் பயனுள்ளதாகவே விளங்குகின்றது. பிரயாணத்திற்கேற்ற வாகன
வசதியற்ற காலத்திலும் கூட இத்தலமானது உலக மக்களுக்கு புனிதத் தலமாக விளங்கி
இருக்கிறதென்பது இதனால் புலப்படுகின்றது.
( வளரும்)
சிரவண பெளிகுளம்
பற்றி அறிவோம்
----------------3-------------
இத்தலத்தை 'கோமட்டபுரம்' என்ற புகழ் வாய்ந்த பெயராலும் வழங்கி வந்துள்ளனர்.
கி.பி 1159-ம் ஆண்டு கல்வெட்டு
கூறுவதாவது--'ஹுல்லன்' என்று பெயருள்ள சேனைத் தலைவன்
கோமடபுரத்திற்கு ஒப்பனை (அலங்காரம்) போன்று விளங்கிய இருபத்து நான்கு
தீர்த்தங்கரர்களின் கோயிலைக் கட்டினான். மற்றொரு கல்வெட்டு கூறுவதாவது:- பேரரசரான
நரசிம்மன் இக்கோயிலையும், கோமடேச்வரரையும்,
மனத்தைக் கவரும் ஒளிமிக்க பகவான்
பாரீச்வ நாதரையும் கண்டு வணங்கி தொழுதபோது அவருடைய ஆத்மா மிகவும் ஆனந்தமடைந்தது.
அப்பொழுது அம்மன்னன் மகிழ்ச்சிப் பெருக்கால் அளித்த 'ஸவணேரு' என்ற கிராமத்தைச் சேனைத் தலைவரான 'ஹுல்லன்' இக்கோயிலுக்குத்
தானமாக அளித்துள்ளார். அதன் காரணமாகக் கோயில்களைப் பழுது பார்த்தல், பூஜை செய்தல், பணியாட்களுக்கு ஊதியமளித்தல், துறவிகளுக்கு ஆஹாரதானம் அளித்தல் போன்ற பல
நற்காரியங்கள் நடை பெற்று வந்தன. இன்று ஒரு பெரிய கிராமம் போல் விளங்கும் சிரவண
பெளிகுளமானது பன்னிரண்டாம் நூற்றாண்டில் கோமடபுரம் என்ற பெயரால் பெரும் புகழோடு
முக்கிய வியாபார ஸ்தலமாக விளங்கி வந்தது. அந்நகர வியாபாரிகள் பல தீவுகளுக்குச்
சென்று வியாபாரம் செய்து பொருள் ஈட்டினர்.
இந்நகரை தக்ஷிண (தென்) காசீ என்றும் வழங்கி
வந்தனர். கி.பி. 1857-ம் ஆண்டு
கல்வெட்டு 'தென்காசி' என்ற பெயரால் புகழ் பெற்று விளங்கும்
பெளிகுளா நகரிலுள்ள 'பண்டாரிபஸ்தி'
(பஸ்தி எனில் கோயில் என்பதாகும்) யில்
பகவான் அனந்தநாதருடைய சிலையானது உற்சவத்திற்கென நிறுவப்பட்டது' எனக் கூறுகிறது. கி.பி.1858-யைச் சார்ந்த மற்றொரு கல்வெட்டிலும் இந்நகரை
தென்காசீ (தக்ஷிண காசீ) எனக் குறிக்கப்பட்டுள்ளது. கி.பி.650 சார்ந்த கல்வெட்டு இந்நகரை 'பெள் குள்' எனக் கூறுகின்றது. அதில் மேலும் பத்ரபாகு, சந்திரகுப்தர் என்ற இரு முனிவர்களின் பெருமையாலும்,
முயற்சியாலும் வளர்ச்சியடைந்த ஜைன
தருமமானது அவர்களுக்குப் பின்னர் குன்றிவிட்டிருந்தது. அதைத் திரும்பவும்
சாந்திஸேனர் என்ற மாமுனிவர் வளர்ச்சியடையச் செய்தார். இம்முனிகள் பெள் குள மலையின்
மிசை உணவு முதலியவற்றைத் துறந்து (உண்ணா வரதமிருந்து) மறுபிறவியை வென்றனர் என்று
விளக்கப் பட்டிருக்கிறது. எட்டாம் நூற்றாண்டு கல்வெட்டிலும் 'பெள் குளம்' என்ற சொல் கிடைக்கிறது.
சிரவண பெளிகுளம் பற்றி அறிவோம்
--------------4---------------
முதியோர் வழி
சில பிற்கால கல் வெட்டுகளில் இப்புனித
ஸ்தலத்தை பெள்குள், பெள்குளா,
பெளிகுளா என்ற சொற்களால்
குறித்திருக்கின்றனர். இதிலிருந்து ஒரு புதிய கருத்து வெளியாகிறது. 'பெள்குளா'(Solanum Ferox) எனில் ஒரு வெண்மையான பழத்தின் பெயராகும்.
இங்ஙனம் முதியோர் சொல் வழக்கில் உள்ள செய்தியாவது--ஒரு சாஸன தேவதை கிழத்தி உருவம்
கொண்டு தன் கையில் குல்ல பழத்தால் ஆன பாத்திரத்தில் ( குல்லபழம்--ஒரு வகை பழம்)
பகவான் கோமடேச்வரருடைய பூஜைக்காக பால் கொண்டு வந்து வைத்திருந்தது. அதன் காரணமாக
அப் பெண்மணி 'குல்லி காயஜ்ஜி'
எனப் புகழ் பெற்றாள். முதன் முறையாக
பகவான் பாகுபலி சுவாமிக்கு சிறப்புடன் அபிஷேகம் நடைபெற்றது. ஆனால் நிரம்ப அபிஷேகம்
செய்தும் பால் சிலை முழுவதும் பரவவில்லை. இதைக் கண்டு பூஜையின் கர்த்தாவான
சாமுண்டராயர் வியப்படைந்தார். அச்சமயம் சேனைத் தலைவரான சாமுண்டராயரிடம்
இம்முதியவளின் பாத்திரத்திலுள்ள பாலை அபிஷேகம் செய்ய சந்தர்ப்பம் அளிக்க வேண்டும்
எனக்கூறினர். சாமுண்டராயரும் அதற்கு இசையவே அப்பெண்மணி பூஜை செய்ய முற்பட்டாள்.
அம்முதியவளுடைய பாத்திரத்தின் பால்
சிலையின் மீது பட்டதுமே சிலை முழுவதும் பரவி அம்மலையின் இருபுறமும் பால், நதி போல் ஓடியது. இவ்வதிசயத்தைக் கண்ட
மக்கள் அனைவரும் வியப்படைந்து பாராட்டினர். அதன் நினைவாக சாஸந தேவதையின் சிலை
சிரமண பெளிகுள பெரிய மலையில் வைத்து இன்றும் போற்றப்படுகிறது. வீரத் தலைவரான
சாமுண்டராயர் தான் வணங்கும் குருதேவரான அஜிதஸேந மாமுனிவரின் கட்டளைப்படி
அந்நகரத்திற்கு 'பெள்கொள்'
என்ற பெயரைச் சூட்டினார். இங்ஙனம்
புதியதொரு போதனபுரத்தை (முற்காலத்தில் பாகுபலி மன்னர் ஆண்டது போதனபுரம்) நிறுவி
சாமுண்டராயர் பெரும் புகழ் பெற்றார்.
இச்செய்தி பஞ்சபாணர் என்ற கவியால்
இயற்றப்பெற்ற 'புஜபலி சரிதம்'
என்ற நூலில் குறிப்பிடப்
பட்டிருக்கிறது. கி.பி.1634
ஆம் ஆண்டு கல்வெட்டில் 'பஞ்சபாணர்'என்ற பெயர் செதுக்கப்பட்டிருக்கிறது. ஜைன
மடத்தினுடைய கி.பி.1634 ஆம்
ஆண்டின் செப்பேட்டில் இதை 'தேவர்
வெளுகுளம்' என்று
கூறப்பட்டுள்ளது. இங்கு 'தேவர்'
என்ற சொல் பகவான் கோமடேச்வரரைக்
குறிப்பதாகும்.......
சிரவண பெளிகுளம்
பற்றி அறிவோம்🙏
------------------5-----------
உலகப் புகழ்பெற்ற இப்புனித ஸ்தலத்திற்கு
உயிர்நாடி போன்று விளங்கும் பகவான் கோமடேச்வரர் ஜைன நூல்களில் 'பாகுபலி' என்ற பெயரால் போற்றப்பட்டிருக்கிறார். அவர் ஒப்பற்ற அழகு படைத்தவரானதால் அவரை
ஜைன ஆகம நூல்கள் 'காமதேவன்' (எழிலரசன்)
என்று புகழ்படப் போற்றுகிறது. காமதேவனுக்கு மன்மதன் என்ற மறுபெயர் உண்டு. இம் மன்மதன் என்ற சொல் 'மம்மட்' என்று மருவி 'கோமட்'
என்ற பெயரால் புகழ் பெற்றது எனச்
சிலர் கூறுகின்றனர். இதன் காரணமாக இத்தலம்
'கோமடபுரம்' என அழைக்கப்படுகிறது என்பர்.
விந்தியகிரி
*****************************
உலக அதிசய மூர்த்தியான பகவான் கோமடேச்வரர்
வீற்றிருக்கும் மலையை 'விந்தியகிரி' 'தொட்டபெட்டா' (பெரிய மலை)
என்று கூறுகின்றனர். இது இந்திரகிரி என்றும் போற்றப்படுகிறது. இம்மலை 475 அடி உயரமுள்ளது. கடல் மட்டத்திலிருந்து 3347 அடி உயரத்தில் இருக்கிறது. மலையின் மீது
செல்ல சுமார் 500 கற்படிகள்
உள்ளன. இம்மலையின் சுற்றளவு கால்மைல் இருக்கலாம். மலையின் மீது செல்லும்
நுழைவாயில் எடுப்பாகவும் , அழகாகவுமிருக்கிறது.
அங்கிருந்து பார்க்கும்போது மலை மிக்க இன்பகரமாக காட்சியளிக்கின்றது. மற்ற
மலைகளைப் போல் இம்மலை பார்க்க அருவருப்பாக இல்லை. இதன் வழவழப்பும் சரிவும் கொண்ட
மலைத்தொடர் உள்ளத்தில் மிகவும் பாசத்தை உண்டாக்குகிறது.
பகவான்
கோமடேச்வரரின் அருகாமை
******************************
மலைமீது ஏறிச் சென்றதும் மேடு பள்ளமில்லாத
(மட்டமான) முற்றம் காணப்படுகிறது.அம் முற்றத்தின் சுற்றுப்புறங்களில் ஜினேந்திர
பகவானுடைய சிலைகள் அமைக்கப் பட்டிருக்கின்றன. மேலே சென்றதும் மற்றொரு மதிற்சுவர்
காட்சியளிக்கிறது. அதன் நுழைவாயில் வழியாக உள்ளே சென்றதும் மூவுலகத்தோர் தொழும்
பகவான் கோமடேச்வரருடைய (பாகுபலி) ஒப்பற்ற
திருமேனி கம்பீரமாகக் காட்சியளிக்கிறது. அவரது 57 அடி உயரமுள்ள திருவுருவம் திகம்பர நிலையில் நின்ற
வடிவில் மிளிர்கின்றது. அமைதி நிலவும் மோகன நிலையில் தன்னுள் ஆழ்ந்த வெண்ணிற
வடிவம், உயிரோவியமாகக்
கண்களைக் கவருகின்றது. உலக அதிசயப் பொருள்களில் இதற்கு முதலிடம்
அளிக்கப்படுகின்றதெனில் மிகையாகாது.
அத்தகைய புனித திருவுருவின் உயர்ந்த உருவமும், படர்ந்த நெற்றியும், சுருண்ட முடியும், கருணையும் புன்முறுவலும் நிறைந்த முகத்தாமரையும்,
நீண்ட அழகிய செவிகளும், தியான நிலையிலும், சிறிது அலர்ந்த கண்களும், உயர்ந்தும், பரந்தும் காட்சி தரும் மார்பகமும், நீண்ட கொடி போன்ற இரு கைகளும், தொழுதேத்தும் தொண்டருக்கு இன்பம் பயக்கும் திருவடிகளும், எழிலே உருவங் கொண்ட அங்க அவயங்களும்
பொருந்திய காமதேவன் (பகவான்) சிலை வடிவில் மிளிர்கிறார்...
சிரவண பெளிகுளம்
பற்றி அறிவோம்
---------------6---------------
பகவான் சிலை வடிவில் மிளிர்கிறார். அத்தகைய
தேவருடைய அனைத்து அங்க அவயங்களின் அமைப்பைக் காணும் போது சிலைக்கும் மனித
உருவிற்கும் வேற்றுமையே காணப்படுவதில்லை.உடலில் மாதவிக் கொடியும், முழங்காலுக்கருகே படமெடுத்தாடும் பாம்புள்ள
புற்றும் அஙிலனின் அஞ்சா நெஞ்சத்தை பறைசாற்றுகின்றன. திருவடிகளுக்குக் கீழே
அலர்ந்ததோர் மாபெரும் தாமரை வடிக்கப் பட்டிருக்கின்றது. இத்தகைய அழகிய சிலையை
உற்று நோக்குங்கால் அழியாவரம் பெற்ற சிற்பியால் அண்மையில் படைக்கப் பெற்ற
கலைச்செல்வமே இது என்ற உணர்ச்சி உள்ளத்தில் தூண்டாமலே எழுகிறது. இக்கலைச் சிலையின்
மீது எத்தகைய நிழலும் விழுவதில்லை. இது ஒரே கல்லில் செதுக்கப் பெற்ற அற்புதச்
சிலையாகும். இம்மாபெரும் சிலை எவ்வித ஆதாரமுமின்றி தனித்து நிற்கிறது.
இத்தகைய கண்கவர் சிலையின் மேல் நீலவானம்
பார்வைக்கு இனிதாக விளங்குஙின்றது. கதிரவன் தோன்றுவதும், மறைவதும், நட்சத்திர மலையுடன் வெண்ணிலா உதிப்பதும், மறைவதுமாகிய காட்சியானது இயற்கை மாது இயற்கை
கடவுளுக்கு இயற்கைப் பொருள்களால் இடைவிடாது ஆரத்தி (ஆலம்) எடுக்கின்றாளோ என்று
தோன்றுகின்றது. இயற்கை தெய்வம் நீல நிற வானத்தட்டில் சூரிய-சந்திரர்களாகிய ஒளிப்
பிழம்பை நிரப்பி ஏற்றி-இறக்கி, இயற்கை நிலையிலுள்ள கடவுளுக்கு பூஜை செய்வது மனதிற்கு இனியதோர் விருந்தாகும்.
பகவான் கோமதீச்வரரை குளிரும், வெயிலும், மழையும் தாக்கிய
போதிலும் அவரது இயற்கை அமைதி சிறிதும் குலைவதில்லை.
அப் பிரபு அசையா மலையின் மீது அசையா
மலையாகவே காட்சி தருகிறார். உண்மையில் பகவான் பாகுபலி தேவரே தியானத்தில் ஆழ்ந்து
தவம் இயற்றுகின்றாரோ என்ற எண்ணம் தாமே மேலோங்கி நிற்கிறது. பிரபுவரரைத் தரிசித்ததுமே
'தியானதராஜர்' என்ற கவியின் பாடல் நினைவுக்கு
வருகிறது. 'தநி நகந பரதந நகநடாடே சுர அசுர பாயநிபரை'
இதன் பொருள்:-
இயற்கை வடிவிலுள்ள இயற்கைக் கடவுளின் திருவடிகளில் தேவர்களும், ஏனையோரும் சென்னி வைத்துத்
தொழுதேத்துகின்றனர்' என்பதாகும்.
பகவான் பாகுபலியின் சிலை சின்னஞ்சிறியதாக
இருந்திருப்பின் இச்சிறு (சிலை) உடலில் பெரியதொரு ஆத்மா நிலை நிறுத்தப்
பட்டிருக்கிறது என்று எண்ணலாம்.ஆனால் இங்கு வீற்றிருக்கும் மாபெரும் சிலையைக்
கண்டதும் உள்ளம் அப் புருஷோத்தமனின்
பெருமையை எவ்வித தூண்டுதலுமின்றி தாமே புகழ்கிறது. பெருமைக்குரிய இப்
பெரும் சிலையே பகவான் கோமடேச்வரரின் சிறப்பிற்கு போதுமான எடுத்துக்காட்டாகும்.
கோமதீச்வரரின் சிலையைக் காணும் சிறுவர், பெரியோர், கற்றோர்,
கல்லாதோர் ஆகிய அனைத்து மக்களின்
மனக்கோயிலில் அப்பெருமகனின் பெருமை பதியாமலிருப்பதில்லை. கம்பீரமான அச்சிலையைக் காணும்போது
ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் தன்னடக்கத்தின் தெளிவு ஏற்படுகிறது
சிரவண பெளிகுளம்
பற்றி அறிவோம்
----------------7--------------
பாகுபலி பகவானுடைய பேரழகைக் கண்டதும்
ஜிநேந்திர பகவானுடைய ஒப்பற்ற அழகினைப் பருக எண்ணி மகிழ்ச்சிப் பெருக்கால் ஆயிரங்கண்களைப்
படைத்தானென்று நூலில் கூறப்படும் உண்மை நன்கு புலனாகின்றது. மகாபிரபுவான
கோமதீச்வரரைத் தரிசித்ததும், கண்கள்
இமைக்கொட்டி இடைவெளியுண்டாக்குகின்றனவே, இல்லையேல் இமைகொட்டாமல் பார்த்துக் கொண்டே இருக்கலாமே என்ற ஏக்கம் எழுகிறது.
இங்கு எழிலுருவங் கொண்டு வீற்றிருக்கும் இறைவனைக் காண இந்திரன் வருவானாகில்,
அவன் இறைவனின் முழு எழிலையும் கண்டு
மகிழ ஆயிரங்கண்களைப் படைக்காமல் இருக்கவே முடியாது என்ற எண்ணம் தோன்றுகிறது.
இறைவனின் அங்க அவயங்களில்
நிறைந்திருக்கும் அழகு அனுபவித்து அறியத் தக்கதேயொழிய, கூற இயலாதது என்பதைத் துணிந்து கூறலாம். இறைவனின்
அழிவில்லாததும், அளவில்லாததும்,
எல்லையில்லாததுமான நிறைவழகில் எங்கும்
எக்காரணத்தைக் கொண்டும் குறைகாண முடியாது என்பதைக் கூறாமல் இருக்க முடியுமா ?.
பிரபுவான இறைவனைத் தரிசித்ததும் ஒரு நிமிடம்
கண்களை மூடிக்கொண்டு சிந்திக்குங்கால் பகவான் பாகுபலி சிலையின் அருகிலில்லாமல்,
யோகத்திலாழ்ந்திருக்கும் கோமடேச்வர
பகவானுடைய திருவடிகளின் அருகில் அமர்ந்திருப்பது போன்ற காட்சி மெய் சிலிர்க்கச்
செய்கின்றது.
அந்த ஜ்யோதி நாயகரை ஒரு முறை தரிசித்தால் மனத்
திருப்தி ஏற்படுவதில்லை. ஓயாமல் பார்த்துக் கொண்டே. இருக்கலாமா என்ற எண்ணம் மேலோங்கி நிற்கிறது.
வடமொழியில் கூறும் நீதிப்படி, பார்க்குந்தோறும் புதுமைக் காணபதே ஒப்பற்ற எழிலின் உறைவிடமென்பதற்கு இச் சிலை
உவமேயமாகக் காட்சி தருகின்றது. ஆங்கில
கவியான 'கீட்ஸ்' வின் 'அழகு நிறைந்த பொருட்கள் எப்பொழுதும் இன்பம்
அளிப்பதுடன், அதன் சிறப்பு
வளர்ந்து கொண்டிருக்குமே யொழிய குறைவதில்லை' என்ற
கருத்து பிரபுவான கோமதீச்வரருக்கு மிகவும்
பொருத்தமாக விளங்குகிறது. அத்துடன் அப்பிரபுவின் திருவடிகளுக்கருகில் சென்றதும்
மக்களுக்கு ஜிநேந்திர பகவானிடத்தில் உண்டாகும் பற்றற்ற தூய்மையானது, இயற்கையாகவே உண்டாகி விடுகின்றது என்பதில்
சிறிதும் ஐயமில்லை.
சிரவண பெளிகுளம் பற்றி அறிவோம்
-----'-----------8-------------
முகத்தாமரையின் கணிப்பு
------------------------------
பிரபுவின் அமைதி
நிறைந்த முகத்தாமரையை நுண்ணிய கருத்தோடு நோக்குங்கால், அம்மகான் வெளியுலகைப் பார்ப்பதுடன் ஆத்ம நிஷ்டையில்
ஆழ்ந்திருப்பதும் ஓர் அற்புதக் காட்சியாகும். அத்தூயத் திருமகனின் ஆழ்ந்த இரு
பார்வைகளும் அநேகாந்தத்தின் குறிக்கோளைக் கொண்டுள்ளன என்பது சொல்லாமலே
விளங்குகின்றது.
அப்பெருமகன் இமைக் கொட்டாது சிந்திக்கும்
(தியானிக்கும்) பொருள் யாதென்பது புரியாப் புதிராகவே விளங்குகின்றது. அத்தவச்
செல்வன் உள்-வெளியுலகின் நிஜஸ்வரூபத்தைக்
காண்பதில் ஈடுபட்டிருக்கிறார் என்பதை ஊகிக்க வேண்டியதாகிறது. அவரது புன்முறுவலின்
பொலிவு ஆன்ம அனுபவத்தில் கிடைக்கும் பேரின்பப் பெருக்கை வெளிப்படுத்துகின்றது.
கடுந்தவத்தில் ஆழ்ந்துள்ள மோனயோகியான பகவான் பாகுபலியின் ஆத்ம நிஷ்டையில், உலக
இன்ப-துன்பங்களின் மாற்றங்களால் ஒரு சிறிதும் இடர்ப்பாடு செய்ய இயலவில்லையென்பது
தெட்டென விளங்குகின்றது.
அத்தவப் புதல்வரின் அமைதி நிறைந்த தவநிலை
குரோதம், மானம், மாயை, உலோபம், சோகம், காமம், பயம், மோகம், பசி, நீர்வேட்கை, பற்று, பிறப்பு, இறப்பு ஆகிய மாறுபாடுகளின் வெற்றியைப் பறைசாற்றுகின்றது. அயக் காந்தக்கல்
இரும்பை இழுப்பது போன்று மிகக் கொடியவனும் அத் திருமகனின் திருவடியின்கண்
செல்வானாகில் அவர் தம் பெருமையால் மனமாற்றம் பெற்று பார்புகழ் பரந்த கருத்தைக்
கொள்வானென்பதில் ஐயமுண்டோ? ஜைன
திருவறத்தின் இரகசியத்தை மிகத் தெளிவாக தெரிய வேண்டின் பகவான் கோமடேச்வரரைத்
தரிசிப்பது இன்றியமையாததாகும்..
சிரவண பெளிகுளம்
பற்றி அறிவோம்
***************9**************
மௌன அறவுரை
-------------------
பகவானுடைய அறவுரை (ஒலி) சொல் வடிவமில்லாமல்
மௌனப் பேருரையின் வாயிலாக ஒவ்வொரு மக்களுடைய உள்ளத்தையும் ஒளி பெறச் செய்கிறது.
மாபெரும் ஆசாரியரான பூஜ்யபாதர் சொற்களைப் பொருள்படக் கூறாமல் உருவ அமைப்பையே
முக்தியின் வழிகாட்டியாக போற்றியிருக்கிறார். இயற்கையானது உலக மக்கள் அனைவரையும்
போதிக்க, விளக்கம் தரும்
மக்கள் மொழியைப் பின்பற்றாமல் , உலக மொழியின் வாயிலாகப் போதிக்கும் நோக்கத்துடன் பிரபுவின் பிரதி பிம்பமான
உருவச் சிலையை மக்கள் நன்மைக்காக அமைந்துள்ளதோ எனக் கருத வேண்டியிருக்கிறது. இதே காரணத்தால் மக்கள் அனைவரும்
அப்பெருமகனின் பேரானந்தக் கட்டளையை மகிழ்ச்சியோடு ஏற்கின்றனர். மேலும்
அப்பிரபுவின் அற்புத உருவக்காட்சியைக் கண்டு நிறைவெய்துகின்றனர். அப்புனிதனின் தூய உருவம் இயற்கைநூலின் கண் (Book
of Nature) படித்துணரும் தூய ஏடாக
நமக்கெல்லாம் புலப்படுகிறது. பிரபுவின் உலக மக்களைக் கவரும் முகத்தாமரையின் கவர்ச்சியில் கிடைக்கும் பெருமை பொருந்திய
அமைதியானது, அளவற்ற நூல்களை
ஆழ்ந்து படித்து உணர்வதால் கிடைப்பதில்லை. இங்கு அப்பெருமை இயல்பாகவே கிடைத்து
விடுகிறது.
அறவோனுடைய அறவுரை, சொல்வடிவம் கொள்ளாமல் மௌன வடிவமாக ஓங்கார
ஸ்வரூபத்தைப் பெறுகிறது. மேலும் அதிலிருந்து கிடைக்கும் பேரானந்தத்தை சொல் வடிவில்
எங்ஙனம் வருணிப்பது? என்பதைத் தர்க்க சாஸ்திர நிபுணர்கள்
கணித்துரைக்கின்றனர்.
சிரவணபெளிகுளம்
பற்றி அறிவோம்🙏
---------------10------------
மிகமிகச் சிறப்பாக அமைந்துள்ள பிரபுவின்
திருவடிகளில் ஆன்மா பெறுவதற்கு அரிதான பொருள் உளதோவெனில் இல்லையென்றே துணிந்து
கூறலாம். அறவோனின் திருவடிகளைக் காணும் மக்களின் கண்கள் வியப்பில் ஆழ்ந்து
விடுகின்றன. ஆன்மா மகிழ்ச்சிப் பெருக்கில் மூழ்கி விடுகிறது. மக்களின் வாழ்க்கை
எல்லையற்ற புண்யப் பெருக்கால் தூய்மையாக்கப் படுகிறது. பேரறிஞரும் மாபெரும்
கவியுமான ஷேக்ஸ்பியரின் கருத்துப்படி பரந்த உள்ளம் படைத்த மனிதன் பரவியோடும் நீர்
வீழ்ச்சியின் நூல்களையும், கற்களில்
அறவுரையையும், ஒவ்வொரு
பொருளிலும் நல்வழியையும் காண்கிறான். அக்கருத்தைக் கொண்டு நோக்குமிடத்து, பற்றற்ற நிலையில் தூய உருவங்கொண்டு உள்ளத்தை
அள்ளும் ஒப்பற்ற அழகின் உருவமாக விளங்கும் பிரபுவின் சிலையால் வாழ்க்கைக்கு
என்னென்ன நிதி கிடைக்கும் அல்லது கிடைக்கப் போகிறது என்பதை விளக்கமாக கூறவும்
வேண்டுமோ? தற்காலக் கல்வி ஆன்ம
இன்பத்தை அளிப்பதில் சக்கியற்றிருக்கிறது. அந்நிலையில் பிரபுவைப் பற்றுடன் பணியும்
மக்கள் ஆன்மரசம் நிறைந்த பேரின்பக் கடலில் முற்றிலும் மூழ்கி விடுகின்றனர்
என்பதைச் சொல்லவும் வேண்டுமோ ? தேவையில்லை.
உலக வெற்றி வீரர்
------------------------------
பகவான் பாகுபலி மிகச்சிறந்த புருஷராவார்.
மன்னாதி மன்னரான பரதராஜரின் பெயரால் நம்நாடு பாரதமெனப் போற்றப்படுகிறது. அத்தகைய
பேரரசரை நம் பிரபு எளிதில் வென்றவர். இறுதியில், "வைராக்யமே வா அபயம்" (பற்றற்ற நிலையே பயமற்றது) என்ற நீதிப்படி பயமற்ற
துறவறதுதை மேற்கொண்டார். அனைத்துலகப் பிரமுகர்கள்: அரசர்கள், பேரரசர்கள்,
மிகப்பெரிய வல்லவர்கள் ஆகிய அனைவரும்
பகவானின் திருவடிகளில் சென்னி வைத்து வணங்கினர்
எனில் அவர்தம் பிரதி பிம்பத்திலும்( உருவச் சிலை) கூட உலக வெற்றி வீரர்
என்ற கருத்து முற்றிலும் பொருத்தமாகக் காணப்படுகின்றதல்லவா ?
சிரவணபெளிகுளம்
பற்றி அறிவோம்
---------------11-------------
பகவானுடைய திருவடிக்குக் கீழே
காட்சியளிக்கும் தாமரையே இலக்குமி வசிக்குமிடமெனத் திட்டவட்டமாக (கமலம் எனில்
தாமரை, கமலாலயா எனில்
தாமரையையே தனதிடமாகக் கொண்டவள் இலக்குமி என்பது பொருள்) தெரிகிறது.
ஏனெனில்
திருமகனின் திருவடிகளுக்கருகே செல்லும் புண்ணிய புருஷர்கள் மண்ணுலகம் மற்றும்
விண்ணுலக இலக்குமியை எளிதாகப் பெற்று விடுகின்றனர். பாரத நாட்டின்
இலக்கியங்களில் இலஷ்மியை கமலத்தில்
வசிப்பவளாகக் கூறப் பட்டிருப்பதன் காரணம்--அவளுக்கு ஜிநேந்திர பகவனுடைய திருவடிகளின்
கீழ் தங்குவதற்குப் பொன்னான வாய்ப்பு கிடைத்திருப்பதே காரணம் எனக் கருதலாம்.
மற்றும் ஜிநதேவருடைய திருவடிகளில் செல்வம், செழிப்பு, முன்னேற்றம் ஆகிய அனைத்தும் நிறைந்து கிடக்கின்றன. ஆகவே அவரது திருவடிகளை
வணங்குபவர்களுக்கு இவையாவும் இயல்பாகவே கிடைத்து விடுகின்றன. ஜிநேந்திர பகவானுடைய
திருவடிகளைத் தூய பக்தியுடன் பணியும் பக்தர்களை வறுமை வாட்டுவதேயில்லை. அவர்களைக்
கண்டு நடுங்கி ஓடிவிடுகிறது.
சிலை வடக்கு
நோக்கியிருப்பதன் காரணம்...
------------------------------
திசையைக் கொண்டு நோக்கும் பொழுது சிலை வடக்கு
நோக்கி நிற்கிறது. அவரது குணங்களைக் கொண்டு நோக்குமிடத்து பதில் (உத்தர்-பதில்
என்ற பொருளும் உண்டு) கூற இயலாதது என்ற பொருள்பட வடக்கு (உத்தர்-வடக்கு) நோக்கி
(சிலை) நிற்கின்றது போலும் பகவான் பாகுபலியின் சிலை நிர்வாண (பற்றற்ற-முக்தி)
நிலையைப் போதிக்கிறது. ஆகவே சிலை வடக்கு நோக்கி இருப்பதால் உலகத்தின் தொல்லைகள்,
சிக்கல்கள், இடையூறுகள் போன்றவைகளைப் தீர்க்க வேண்டிய
வினாக்களுக்கு பதிலளிப்பதன் காரணமாக (உத்தர திசா-வடதிசை) நோக்கியிருககின்றதோ எனக்
கருதவும் இடமுண்டு. பகவானுடைய திருவடிகளையடையும் பக்தர்கள் பற்றற்ற நிலையைப் பெற்று
முற்றிலும் உலகத் துன்பத்தினின்றும் விடுதலைப் பெறுகின்றனர் என்பதே நாம்
அறியவேண்டிய பொருளாகும்.
சிரவணபெளிகுளம்
பற்றி அறிவோம்
---------------12------------
கற்குவியல்
-----------------
உலகில் (கல்)
கடினமாயிருக்கும் காரணத்தால் அதை அகங்காரத்தின் அடையாளமாகக் கூறுகின்றனர். அதாவது
கர்வமுடைய மனிதனைக் கல்லைப் போல் அழுத்தமாக இருக்கிறான் எனக் கூறுவது உலக
வழக்கு. அகங்காரத்திற்கு எடுத்துக்
காட்டாக விளங்கும் அதே கல் மூவுலக வெற்றி வீரரான கோமதீச்வரருடைய உருவ அமைப்பைக் கொண்டதும்
அகங்காரத்தை(மானத்தை) அழிக்கவும், மிருதுவை(இளகிய எண்ணத்தை) உண்டாக்கவும் வல்லதுமாகி மக்களின் உள்ளத்தில்
வியப்பை எழுப்புகிறது. ஜிநநாதரின் பார்வை படும் இடமெல்லாம் அமைதி, மென்மை ஆகியவற்றின் பேரரசே இடம் பெற்று
விளங்குகிறது. இக் கருத்துக்களையெல்லாம் வெளியிட்டுக் கொண்டிருக்கும்
விந்தியகிரியின் கற்கள் வழவழப்பையும், சம வடிவையும் பெற்றிருக்கின்றன. அவைகளின் உயர்வு தாழ்வற்ற நிலை சமதளத்தையும்,
அழகையும் அள்ளி அள்ளி அளித்துக்
கொண்டிருக்கின்றன.
பகவான் பாகுபலியின் பிரபாவமும் ஒப்பற்ற
பிரதாபமும் மூவுலகிலும் பரவி இருந்தன. ஆகவே அழியா வரம் பெற்றச் சிற்பி தன்
மனக்கோயிலில் பாகுபலி பகவானின் சிலையைக் கண்டான். அதே சமயம் சிலை வடிவம் பெறும்
அக்கல்லும் தனது கடின நிலையைத் துறந்து சிற்பியின் விருப்பத்திற்கு இணங்க
மென்மையாக மாறியது. அக்கல் மெழுகாக மாறிவிட்டதோ என எண்ணவேண்டியதாயிற்று. கல்லின்
மாற்றத்தால் சிலையை வடிப்பதில் சிற்பிக்கு எத்தகைய இடையூறும் ஏற்படவில்லை. ஆகவேதான் மனத்தை அள்ளும் அழகிய சிலை
மண்ணுலகத்தோர் மட்டுமல்லாமல் விண்ணுலகத்தோரையும் மயக்கிக் கவரும் நிலையைப்
பெற்றுள்ளது என்பதைச் சொல்லவும் வேண்டுமோ ?....
சிரவணபெளிகுளம்
பற்றி அறிவோம்👏
**************13*************
தேவேந்திரன்
தொழுதல்🙏🏻
-------------------------------
"சாமுண்டராயரால் உருவாக்கப்பட்ட ஒப்பற்ற பாகுபலி
சிலையை ஸர்வார்த்த சித்தியிலுள்ள அஹமிந்திர தேவர்களும், பரமாவதி ஸர்வாவதி என்ற அகக்கண்(அவதி ஞானம்) அறிவைப்
பெற்றப் பெருந் துறவிகளும் கண்டு களித்துத் தொழுதனர் எனில் அத்தகைய கோமட்டராய
சாமுண்டராயர் வெற்றி மேல் வெற்றி பெறுவாராக!"
சீரிய பாரதநாட்டின் கண் அனைத்து தேவர்களையும்
வருகைத்தர கவருவதற்கென்றே ஒப்பற்ற அழகு
ததும்பும் மிகமிக உன்னத கோமதீச்வரரின் சிலையை வடித்திருக்கலாமோ எனக் கருத
வேண்டியிருக்கிறது. நந்தீச்வர த்வீபத்தில்
விளங்கும் ஐந்நூறு வில் உன்னத இரத்தினமயமான சிலைகளைக் கண்டு வணங்கியும் கூற இயலாத
பேரானந்தப் பேற்றைப் பெற்ற இந்திரர்களையும் ஒப்பற்ற ஒளியால் கவரும் பெருமை
மூவுலகத்திரான பகவான் பாகுபலியினிடத்தில் நிறைந்துள்ளது. நிலவாழ் மக்கள், மூவுலகத்தில் உள்ள பவ்ய ஜீவன்களை இத்தகைய
ஜிநநாதருடைய தரிசனத்திற்காக வரவேற்று மகிழ்விக்கலாம். நல்ல உள்ளமுடைய பக்தரின்
மனம் அக்கற்சிலையைக் கண்டு போற்றுகின்றது. முன்பு ஓரறிவு உயிருக்கு உடலாக
அமைந்திருந்த அக்கல்லுக்கு இன்று பகவான் கோமதீச்வரரின் அழகிய சிலையாக மாறும்
பொன்னான வாய்ப்புக் கிடைத்திருப்பது போற்றுதற்குரிய விஷயமாகும். பெருமை மிக்க
அச்சிலையின் காரணமாக பற்றற்ற மக்களுக்கு அளவற்ற நல்வினை கிடைக்கும்; மேன்
மேலும் கிடைத்துக் கொணடே இருக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
சிரவணபெளிகுளம்
பற்றி அறிவோம்
--------------14--------------
கவிச் சக்ரவர்த்தியான இரவீந்திரநாத தாகூர் தன்
அழியா வரம்பெற்ற கீதாஞ்சலி என்ற சிறந்த நூலில் "எங்கு தலை நிமிர்ந்தும்
உள்ளம் முற்றிலும் பயமற்றும் இருக்கின்றவோ அத்தகைய இடத்திற்கு தன் நாட்டை அடைவிக்க
எண்ணினார்" கவியினுடைய உள்ளத்தில் விரும்பின இடம் எல்லா நன்மைகளையும் பயக்கக்
கூடியதும், பயத்தை விரட்டுவதுமான
பகவான் கோமதீச்வரருடைய இரு திருவடிகளைத் தவிர வேறில்லை எனக் கூறுவதில் சிறிதும்
கற்பனையில்லை. ஒவ்வொரு பக்தனும் இவ்வுண்மையை நன்கு உணருகிறான். வியப்பில்
ஆழ்த்துவதும் உவமையற்றதுமான பிரபுவினுடைய அழகைக் காணும்போது எவருடைய சிரம் ஆவலுடன்
நிமிர்ந்து நிற்காது ? அப்பகவானின்
அருகில் சென்றதும் உள்ளம் முற்றிலும் கவலையற்றதாகிறது. மேலும் அதே நிமிடம் எல்லாத்
தொல்லைகளும் ஐப்பசி, கார்த்திகை
(சரத்கால) மாத மேகங்களைப் போல பறந்தோடி விடுகின்றன. அச்சமயம் நாம் அவரிடம் பெறும்
உள்ளத் தூய்மையால் ஏற்படும் உணர்ச்சியில் எல்லாத் துன்பங்களும், இடையூறுகளும் விலகியதோடு நிம்மதியும்
நிறைவும் பெறக்கூடிய இடத்திற்குப் போய்ச் சேர்ந்து விட்டது போன்று தோன்றுகின்றது.
பழமையிலும் புதுமை
-------------------------------
ஒப்பற்றதும் நிறைந்த அழகு பொருந்தியதுமான
பகவானுடைய சிலையைத் தோற்றுவித்து ஆயிரம் ஆண்டுகள் கடந்த போதிலும், பார்ப்பவர்களுக்கு இன்றுதான்
தயாரிக்கப்பட்டது போன்ற புதுமையும், வியப்பும் ஏற்படுகின்றன. இது ஒன்றும் கற்பனை இல்லை. பகவான் பாகுபலியின்
புனிதத் தவநிலையை ஏற்கும் ஒவ்வொரு மனிதனும் பிறப்பு, இறப்பை வென்று முக்திக்குத் தலைவனாகிறான். சிலை
தோன்றி நெடுங்காலமாகியும் புரையோடுதல் போன்ற எவ்விதக் கெடுதலும் உண்டாகாமல்
இருப்பது வியப்புக்குரிய விஷயமாகும். பகவானுடைய கூற இயலாப் பெருமையைக் குறிக்கிறது
என்பது உணரர்ப்பாலது. அக் கற்சிலை மக்களை நோக்கி, அன்பர்களே
! நான் பகவான் கோமதீச்வரருடைய சிலை வடிவைப்
பெற்று கடவுட் தன்மையை அடைந்தது போல, நீங்கள் அத்தூயோனை உள்ளத்தில் இறுத்தி கடவுளாகவும், பரஞ்சோதியாகவும், பரமாத்மாவாகவும் ஆவதற்கான முயற்சியை (புருஷார்த்தம்)
ஏன் செய்வதில்லை ? செய்தால்
கிட்டுமல்லவா ! என்று கேட்பது போன்ற உணர்ச்சி எழுகிறது.
சிரவணபெளிகுளம் பற்றி
அறிவோம்
---------------15--------------
மகாகவியான 'வொப்பணர்' என்ற கன்னட கவி, புனைப்பெயர்
'ஸுஜநோத்தம்ஸ' என்பவர் உள்ளத்தையள்ளும் கன்னட கவிதையின்
வாயிலாக ஜிநநாதரைப் போற்றிப் பணிந்து அழியாப்புகழை எய்தியுள்ளார். அப்பாடல்
கோமடேச்வரருடைய வாயிற்படியின் இடது பக்கத்தில்உள்ள கல்லில் பொறிக்கப்
பட்டிருக்கிறது. அக்கல் வெட்டு கி.பி 1880 யைச் சார்ந்ததாகும். கல்வெட்டின் நெம்பர் 234. அதில் கன்னட கவியானவர் "சிலை அதிக
உயர்ந்திருக்குமாகில் அதில் அழகு பொருந்திருக்காது. அழகும் உயரமும்
நிறைந்திருக்குமாகில் அதில் கடவுள் தன்மைக்
காண்பதில்லை. ஆனால் கோமடேச்வர பகவானுடைய
சிலையில். ஒப்பற்ற அழகும், உயரமும்,
கடவுள் தன்மையும் நிறைந்து
பொருந்திருக்கின்றன. பணிவதற்குரிய இத்தகைய அதிசய சிலை மூவுலகிலும் கிடைப்பதற்கு
அரிது என்றே கூறலாம்" என நுட்பமாக குறிப்பிட்டுள்ளார்.
மஹிமை (சமத்காரம்)
------------------------------
பகவானுடைய உயரத்தையும், அழகையும் நேரில் அனைவரும் காண்கின்றனர்.
ஆனால் அவருடைய மகிமையைப் பற்றி அறிய யாருடைய உள்ளத்தில்தான் ஆவல் தோன்றாது? அதைப்
பற்றி மேற்கண்ட கவியானவர், 'ஒரு நாள் முழுவதும் பகவான் கோமடேச்வரருடைய
சிலையின் மீது சிறந்த அழகிய பூமழை பொழிந்த வண்ணமிருந்தது. அதைக் கண்ட ஆண், பெண், முதியோர், இளைஞர் ஆகிய அனைவரும் மகிழ்ச்சிப் பெருக்கால்
ஜய-ஜயவென்று போற்றினர். அந்நிகழ்ச்சி காண்பதற்கு- ஒளிக்கதிர் வடிவமான விண்
மீன்கள் பூக்களின் வடிவில் வரிசையாக தேவாதி தேவரான பகவான் கோமடேச்வரருடைய
திருவடிகளை வணங்குவதற்காக விண்ணுலகிலிருந்து இறங்கி வந்தனவோ என மக்கள் எண்ணும்படி
வியப்பையும் மகிழ்ச்சியையும் தந்தது"
"மேலும் எப்பொழுது பகவான் பாகுபலி
சுவாமியானவர் சக்ரவர்த்தியான பரதேச்வரரை வென்றாரோ மற்றும் அப்பிரபுவானவர் பாபங்களை
யொழித்து முற்றும் உணர்தல் என்ற கேவல ஞானத்தைப் பெற்றாரோ அப்பொழுது இத்தகைய
பூமழைப் பொழிந்ததாக மக்கள் கூறுகின்றனர்" எனக் கூறியுள்ளார்.
சிரவண பெளிகுளம்
பற்றி அறிவோம்!
***************16************
திறமை மிக்க சிற்பி
----------------------------
உலகத்திலேயே காணக் கிடைக்காத அற்புதச்
சிலையைப் படைத்த புகழ் பெற்ற சிற்பியின் அறிவையும், ஆற்றலையும் மக்கள் பாராட்டாமலும், போற்றாமலும் இருக்கமாட்டார்கள்.
அச்சிற்பியின் மனக்கோயிலில் முதன் முதல்
கோமதீச்வரருடைய கற்பனைச் சித்திரம் (plan) தோன்றியது. அதன்படி அவர் தன் ஒப்பற்ற கைத் திறமையால் வேறெங்கும் காண முடியாத அழகிய கற்சிலையை
வடித்தார். இன்று அந்த கலைச்செல்வர் அழியாவரம் பெற்றுவிட்டார் என்பதில்
வியப்பில்லை. பொதுவாக உலகில் கலை நிறைந்ததும் புகழ் பெற்றதுமான பொருள்கள் நிரம்ப
உள்ளன. ஆனால் நல்வினையையும், அமைதியையும்
தரவல்லதும், பற்றற்ற நிலையாலுண்டாகும்
மாபெரும் புண்யத்தையளிப்பதும், நெடுங்காலமாக உள்ளத்தில் நிறைந்துள்ள இருளைப் போக்குவதும், ஆத்மாவை ஒளிமயமாக்குவதும் ஆன தூய
கலைச்செல்வம் இதைத் தவிர உலகில் வேறெங்கும் இல்லவே இல்லை எனத் துணிந்து கூறலாம்.
இச்சிலையைத் தரிசித்த பின்னர் இதற்கு ஒப்பாக
(உவமையாக) வேறொரு சிலையைக் காண்பிக்கும்
எண்ணத்தை அறவே மறந்து விடவேண்டும். ஏனெனில் கலைகள் அனைத்தும் நிறைந்த இத்தகைய
அற்புதச் சிலை உலகில் வேறெங்கும் கிடையவே கிடையாது. தாஜ்மஹால் (ஆக்ரா)
கட்டிடத்தினுடைய அழகு சிறந்ததே. எகிப்திலுள்ள பிரமிடுகளின் பரப்பும், சிறப்பும், வனப்பும், வியப்பை உண்டாக்குகின்றன என்பது உண்மையே. ஆனால பிரபுவான பாகுபலி சிலையில் எல்லா குணங்களும்
நிறைந்திருப்பதோடு அவரைத் தொழும் ஆத்மாவின் உள்ளத்தில் வற்றாத நீர்வீழ்ச்சிப்
பெருக்கெடுத்தோடுவது வேறெங்கிலும் காண இயலாத சிறப்பல்லவா ?. இவ்வாறு ஆத்மாவிற்கு இன்பமளிப்பதும் நிலையான
அமைதியைத் தருவதுமான பொருள் உலகில் வேறெங்கும் காணக் கிடைக்காதென்பது முற்றிலும்
உறுதி. இத்தகைய ஒப்பற்ற நிதியாகிய சிலையை வடித்தச் சிற்பியைள் பாராட்டச் சொற்கள்
கிடைக்கவில்லையே என்பது வருத்தத்தை அளிக்கிறது...
சிரவண பெளிகுளம்
பற்றி அறிவோம்!
---------------17-------------
சிலை எழுப்பியதில்
கூறப்படுபவன!
------------------------------
இச் சிலையைத் தோற்றுவித்ததைப் பற்றி
மக்கள்பலவாறாகக் கூறுகின்றனர். 'இராஜாவளிகதே' என்ற
கன்னடநூலில் பண்டைய காலத்தில் இராமர், இராவணர், இராவணர் மனைவி
மந்தோதரி ஆகியோர் பெள்கொளக் கோயில்களைக்
கண்டு வணங்கினர் என்று கூறப்படுகிறது.
'முனிவம்சாப்யுதயம்' என்ற காவிய நூலில் பதினேழாம் நூற்றாண்டைச் சார்ந்த 'சிதாநந்தர்' என்ற கவி
கோமடேச்வரர், பாரீஸ்வநாதர்
ஆகிய சிலைகளை இராமரும், சீதையும்
இலங்கையிலிருந்து கொண்டு வந்து, பெரிய மலையில் கோமடேச்வரரையும், சிறிய மலையில் பாரீச்வநாதரையும் ஸ்தாபித்துத் தொழுதனர். ஆனால் அவர்கள்
செல்லுகையில் அச்சிலைகளை எடுத்துச் செல்ல
இயலவில்லை. ஆகவே அவ்விடத்திலேயே
விட்டுச்சென்றனர் என்று கூறியிருக்கிறார்.* பதினெட்டாம்நூற்றாண்டைச்
சார்ந்த 'அனந்தர்' என்ற கவி 'கோமடேச்வரசரிதம்' என்ற நூலில் சாமுண்டராயர் சந்திரகிரி மலையிலிருந்து
விந்தியகிரி மலையில் ஏவிய (விடப்பட்ட) சுவர்ணபாணத்தில் தோன்றிய சிலையைச் சிற்பிகளைக் கொண்டு
செப்பனிட்டு சிறப்புறச் செய்தார் எனக் குறிப்பிட்டுள்ளார்.
-------------------------------
*ஆசிரியர்
குறிப்பு:-
பத்ம புராணத்தில் இராமர், பகவான் முனிசூவிரத நாத தீர்த்தங்கரருடைய
அறவழிபாட்டு தீர்த்தம் காலத்தில் தோன்றியவர் எனக் கூறப்பட்டுள்ளது. முனிசூவிரத
நாதருக்குப் பின் நமிநாதர் தோன்றினார். அதன் பின்னர் 23-ஆம் தீர்த்தங்கரரான பாரீச்வநாதருடைய காலமாகும். ஆகவே
இருபதாவது தீர்த்தங்கரரான முனிசூவிரத நாதருடைய காலத்தில் இருபத்து மூன்றாவது
தீர்த்தங்கரரான பாரீச்வநாதருடைய சிலைக்குப் பூஜை நடந்ததென்பது ஆராய வேண்டிய
விஷயமாகும். ஒருக்கால் எதிர்கால தீர்த்தங்கரரை நிகழ் காலத்தில் வணங்கும் பழக்கம்
இருந்திருக்கலாம் எனக் கருதலாம்..
-------------------------------
சிரவண பெளிகுளம்
பற்றி அறிவோம்
***************18**************
'புஜபலிசதகம்' என்ற நூலில் திராவிட நாட்டிலுள்ள மதுரையின் மன்னன்
இராஜமல்லன். அவருக்கு வியாபாரி ஒருவன் போதனபுரத்தில் கோமடேச்வரருடைய ஒப்பற்ற
உயர்ந்த சிலை ஒன்று சிறப்புறக் காட்சியளிக்கிறது எனக் கூறினான். அச்செய்தி
சாமுண்டராயனுக்கும் எட்டியது. பின்னர் விரைவில் சாமுண்டராயர் தன் தாய், குருவான நேமிசந்திராசாரியார் ஆகிய
அனைவரையும் அழைத்துக் கொண்டு பகவானைத் தரிசிப்பதற்காகப் புறப்பட்டார். ஒவ்வொரு நாடு, நகரங்கள் அனைத்திலும் தேடியலைந்தபின் சிரமண பெள்குளா
வந்தனர். சாமுண்டராயர் சுவர்ண பாணத்தை
இங்குள்ள சிறிய மலையிலிருந்து பெரிய மலைக்கு எய்தினார். உடனே கோமடேஸ்வர பகவான்
காட்சியளிக்கலானார் என்று கூறப்பட்டுள்ளது.
கோமடேச்வரருடைய கோயிலின் இடது வாயிற்படியில்
கி.பி.1180ஆம் ஆண்டின்
கல்வெட்டில் கூறப்பட்டுள்ளதாவது, முதல் தீர்த்தங்கரரான பகவான் விருஷபதேவருடைய புதல்வர் பாகுபலியாவார். அவர் தம்
அண்ணனாகிய பரதேச்வரரைப் போரில் வென்றார். பின்னர் விருப்பு வெறுப்புக் காரணமாக வினைகளை
வெல்ல துறவறத்தை மேற்கொண்டார். சக்ரவர்த்தியான பரதர் கேவலி பகவானான பாகுபலியின்
உடல் அளவாகிய ஐந்நூற்று இருபத்தைந்து வில் உன்னதமான சிலையைப் போதனபுரத்தில்
அமைத்து அதற்கு பூஜை செய்தார்.
நீண்டகாலம் சென்றதும் மிகக் கொடியதும்
எண்ணற்றதுமான கோழிப்பாம்புகள் (குக்குட்) சிலையின் சுற்றுப்புறங்களைச் சூழ்ந்து
கொண்டன. அக்காரணத்தால் பகவான் 'குக்குடேச்வரர்' கோழிப்பாம்புகளின்
(பாம்புகளில் கொடிய இனம்) தலைவரெனப் போற்றப்பெற்றார். பின்னர் அவ்விடம் செல்ல
முடியாததாகி விட்டது. அந்நிலையில் சாமுண்டராயர் கோமடேச்வரருடைய இப்பெருஞ்சிலையை
நிறுவினார். 7-ஆம் நம்பர்
கல்வெட்டின் பாட்டில் சாமுண்டராயரை கோமடேச்வரர் என்றும் கூறப்பட்டிருக்கிறது. ஒருக்கால் கோமடேச்வரரிடம் ஆழ்ந்த பக்தி
கொண்டிருந்த காரணத்தால் அவ்வீர சிங்கத்தை 'கோமடர்' எனக்
கூறியிருக்கலாம்.
ஸித்தர் பஸ்தி (கோயில்)யின் நேரேயுள்ள
கம்பத்தில் கி.பி.1398 ஆம்
ஆண்டின் 254 வது கல்வெட்டு 'பெள்குள் நகரே' பெள்குள நகரத்தில் சாமுண்டராயர் கோமடேச்வரருடைய
சிலையை மலையின் மீது நிறுவினார்' எனக் கூறுகிறது.
சரவண பெளிகுளம்
பற்றி அறிவோம்
----------------19------------
கோமடேச்வரருடைய பிரமாண்ட சிலையின் இடது
திருவடிக்கருகிலுள்ள சக. ஆண்டு 950 தின் நாகர எழுத்துக்களைக் கொண்ட கல்வெட்டு சாமுண்டராயர் சிலையை நிறுவினார்
எனக் கூறுகிறது. சக ஆண்டு 1039-ஐச் சார்ந்த கல்வெட்டு கங்கராஜர் என்பவர் மதிர்ச்சுவரைக் கட்டினார் என
விளக்குகிறது. பகவானுடைய வலது திருவடிக்கருகிலுள்ள கன்னட கல்வெட்டிலும் மேலே
கூறப்பட்டச் செய்தி குறிக்கப்பட்டிருக்கிறது.
சாமுண்டராயர் அவருடைய நூலாகிய சாமுண்டராய
புராணத்தை கி.பி. 978- ல்
எழுதினார். அக்கன்னட நூலில் 24-தீர்த்தங்கரர்களின் சரிதம் (வரலாறு) கூறப்பட்டிருக்கிறது. அதில் சாமுண்டராயர்
தன் செயல்களைப் பற்றி விரிவாக விளக்கியிருக்கிறார். ஆனால் இந்தப் பிரமாண்டச்
சிலையை நிறுவும் (நிறுவிய) விஷயத்தில் எவ்விதக் கருத்தும் வெளியிடவில்லை.
சாமுண்டராயர் என்ற பெயருடன் கங்க வமிசத்து அரசரான இராஜமல்லருடைய அமைச்சர் ஒருவர்
இருந்தார். அவருடைய காலம் கி.பி 974 முதல் 984 வரை இருக்கலாம்
எனக் கணித்துள்ளனர். பொதுவாக இம் மாபெரும்
சிலையை நிறுவியது இராஜமல்லருடைய ஆட்சிக்காலம் எனக் கூறப்படுகிறது. எனவே வேறு
ஆதாரங்கள் கிடைக்காததால் இம் மாபெரும் சிலை தோன்றிய காலம் கி.பி.983-ஆகவே கருதப்படுகிறது. இதே கருத்தை முன்னுரையில்
விளக்கம் தந்த இராயபகதூர் நரசிம்மாசாரியார் அவர்கள் தம் 'சிரமண பெள்குளாவின் கல்வெட்டுகள்' என்ற சிறந்த நூலின் (Inscriptions of
sravanabelgola) பதினைந்தாம்
பக்கத்தில் நிலை நாட்டியிருக்கிறார்
பிரதிஷ்டை நடந்த
காலம்.
-------------------------------
சாமுண்டராயர் பெருமை வாய்ந்த இச்சிலையின்
பிரதிஷ்டையை கி.பி.1028-ல்
சித்திரை மாத வளர்பிறை பஞ்சமியில் ஞாயிறு அன்று பெள்குளநகரத்தின்கண் சிறப்புடன்
செய்து முடித்தார். அச்சமயம் கல்கி ஆண்டு 600 ஆம் விபவ வருஷமும், கும்ப லக்னமும் சௌபாக்ய யோகமும் மிருக சீரிஷநக்ஷ்த்திரமும்
இருந்ததாகக் குறிப்பிடப் பட்டிருக்கிறது. டாக்டர் சாமசாஸ்திரி பிரதிஷ்டையின்
காலத்தை கி.பி.1028 மார்ச் 23-ஆம் தேதி என நிர்ணயிக்கிறார். மேலும்
மைசூர் புதைபொருள் ஆராய்ச்சியாளர்
டைரக்டர் டாக்டர் எம்.எம்.கிருஷ்ணனும் பிரதிஷ்டையின் காலத்தை 1028
சிரவண பெளிகுளம்
பற்றி அறிவோம்
---------------20-------------
சாமுண்டராயருடைய
தாயின் பிரதிக்ஞை (சபதம்)
------------------------------
கி.பி. 1614 ஆம் ஆண்டு சிரமண பெளிகுளாவில் தோன்றிய கன்னட கவியான
பஞ்சபாணன் என்பவர் தாம் இயற்றிய 'புஜபலி சரிதத்தில் ' குருவான
ஜிநசேனர் என்பவர் தென்மதுரைக்குச் சென்று சாமுண்டராயருடைய தாயாரான காலல் தேவியிடம்
போதனபுரத்தில் புஜபலி ( பாகுபலி)
பகவானுடைய மாபெரும் சிலையொன்றுள்ளது. அதை தரிசித்தல் மிக்க நலம் என்றார். அதைக் கேட்ட சாமுண்டராயருடைய தாய் கோமட பகவானைத் தரிசிக்கும் வரை 'பால்' அருந்துவதில்லை எனப் பிரதிக்ஞை (சபதம்) ஏற்றார்.
இச்செய்தி சாமுண்டராயருடைய மனைவியான அஜிதா தேவிக்குத் தெரிய வந்தது. பின்னர் அவர்
அச்செய்தியை தன் கணவருக்குத் தெரிவித்தார்.
செய்தி அறிந்த சாமுண்டராயர் தாய்
மீது கொண்டுள்ள எல்லையற்ற பற்றின் காரணமாக விரைவில் அனைவருடன் போதனபுரத்திற்குப்
பிரயாணமானார். இடையில் அவர்கள் சிரமண பெள் கொளாவில் தங்கினர். அப்பொழுது அவர்கள்
அங்குள்ள சந்திரகிரிக்குச் சென்று பகவான் பாரீச்வநாதரைத் தரிசித்தனர். அதன்
அருகிலுள்ள சுருதகேவலி பத்திரபாகு சுவாமிகளின் திருவடிகளையும் தொழுதனர். அன்றிரவு
சாமுண்டராயருடைய கனவில் பிரம்மதேவரும், பத்மாவதியும் தோன்றி தற்சமயம் நீங்கள் போதனபுரத்திற்குச் செல்ல முடியாது.
ஆனால் உங்களுடைய பக்தியின் பலனாக பெரிய மலையில் அப்பகவானுடைய தரிசனம் கிடைக்கக்
கூடும். அதைக் காண்பதற்காண வழிமுறை யாதெனில், நீர்,
குளித்துத் தூய உடை உடுத்திக் கொண்டு
சிறிய மலையின் மீது அமர்ந்த வண்ணம் பெரிய மலையை நோக்கி சுவர்ண பாணத்தை விடுவாயாக! அதே சமயம் உமக்கு
பகவான் காட்சியளிப்பார் ' எனக்
கூறின.
சிலையைக் காணும்
அதிர்ஷ்டம்
----'---------------------------
சாமுண்டராயரின் தாயாருக்கும் இரவில் மேற்கண்ட
கனவே தோன்றியது. மறுநாள் காலையில் சாமுண்டராயர் சந்திரகிரியிலிருந்து சுவர்ண
பாணத்தை ஏவினார். அப் பாணம் சென்று பெரிய மலையில் உள்ள கல்லில் பட்டது. அக்
கல்லையும் துளைத்தது. உடனே கோமடேச்வர பகவானுடைய தரிசனமும் கிடைத்தது. அதன்பிறகு
அர்ச்சகர்கள் வைரத்தாலான வெட்டிரும்பாலும், இரத்தினம் பதித்த சம்மட்டியாலும் சுற்றுப்புறத்தில்
உள்ள கற்களை உடைத்தெடுத்து அப்புறப்படுத்தினர். அதன்பிறகு சிலை முழு அளவில்
காட்சித் தந்தது. அச்சமயம் ஒப்பற்ற கலைச் செல்வத்தை முதன்முதலாகக் கண்ட
சாமுண்டராயருடைய தூய உள்ளத்தில் தோன்றிய ஆனந்தப் பெருக்கை யாரால் வருணிக்க இயலும்?.
அவருக்கு தன் வாழ்க்கையே நிறைவு
பெற்றதாக புலப்பட்டிருக்கலாம் ! அப் புனிதத் தாயின் எல்லையற்ற மகழ்ச்சியைப் பற்றி
கற்பனைச் செய்து காண இயலுமோ ?. எனவே தாய் மகன் இருவருடைய உள்ளத்திலும் ஜிநசந்திரரைக் கண்டதால் மகழ்ச்சிக்
கடல் பொங்கி வழியலாயிற்று...
சிரவண பெளிகுளம்
பற்றி அறிவோம்!
-----'----------------------'---
இங்ஙனம் பூபால கவியின் சொற்களில் அவர்களின்
எண்ணத்தின் பிரதிபலிப்பு தெட்டென வெளியாகிறது.
திருஷ்டம் தாம
ரஸாயனஸ்ய மஹதாம் திருஷ்டம் நிதீ நாம்பதம்,
திருஷ்டம்
சித்தரஸஸ்ய ஸத்ம ஸதநம் திருஷ்டம் ச சிந்தாமணே,
(போஜராஜர் இயற்றிய
பூபால ஸ்தோத்திரம்-25)
கவி கற்பனைச் செய்கிறார். "ஜிநேந்திர
தேவருடைய தரிசனம் கிடைத்ததும், எனக்கு இரஸாயனப் பொருட்களின் மாளிகையைக் கண்டது போலும், பெரிய நிதி(புதையல்) களின் இருப்பிடம் துலங்கியது
போலும், ஸித்திரஸ (இரும்பைப்
பொன்னாக்கும் ரசம்) த்தின் பவனத்தை அறிந்தது போலும், சிந்தாமணி (விரும்பிய பொருளையளிக்கும் மணி) யைப்
பார்த்தது போலும் மகழ்ச்சித் தருகிறது" என்கிறார்.
உண்மையில் சாமுண்டராயருக்குச் சிந்தாமணி
இரத்தினம் கிடைத்து விட்டது. வீதராக(பற்றற்ற) த் தன்மையுள்ள ஆட்சிக்கு அளவற்ற
நிதியும்(Capital) கிடைத்து
விட்டது. பகவான் பாகுபலி சுவாமியினுடைய ஒப்பற்ற மாபெரும் சிலை வீற்றிருக்கும் வரை
உலகில் ஜிநதேவருடைய வீதராக ( பற்றற்ற) ஆட்சியின் வெற்றிக் கொடி பட்டொளி வீசி
வானளாவப் பறந்து கொண்டே இருக்கும். எண்ணற்ற பவ்ய ஜீவன்களுக்கு அமைதி நிலவிக்கொண்டே
இருக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
பிரபவினுடைய தரிசனத்திற்குப் பிறகு பக்தர்களுள்
சூடாமணி போன்ற சாமுண்டராயர் சிற்பிகளைக் கொண்டு வலப் பக்கத்தில் பிரம்மதேவருடன்
கூடிய பாதாள கம்பத்தையும், எதிரில்
பிரம்ம தேவருடன் (யக்ஞம்) ஹவன கம்பத்தையும் மேல் பாகத்தில் பிரம்ம தேவர் பொருந்திய
'தியாகதம்' என்ற கம்பத்தையும் 'அகண்ட வாகிலு' (பெரிய வாயற்படி) என்ற வாயற்படியையும், சிற்சில இடங்களில் படிக்கட்டுகளையும்
செய்வித்தார்.
சிரவண பெளிகுளம்
பற்றி அறிவோம்
""""""""""""""""22""""""""""""""""
சிலையின் அளவு
-------------------------------
பகவான் கோமடேச்வரருடைய அற்புதச் சிலை
நிறுவப்பட்டதன் காரணமாக பெளிகுளத்திற்கு புதியதொரு "போதனபுரம்" என்ற
சிறப்புப் பெயர் கிடைத்து விட்டது.
பகவானுடைய சிலையின் உயரத்தைப் பற்றி பற்பல கருத்துகள் நிலவின. புகானன் என்ற
மேல்நாட்டு அறிஞர் சிலையின் உயரம் 70 அடி 3 அங்குலமென்றும்,
சர். ஆர்தர் வெல்ஸ்வி என்ற
பேராசிரியர் 60 அடி 3 அங்குலமென்றும் கூறினார். ஆனால் 1865-
ல் மைசூரின் தலைமைக் கமிஷனர் திரு.
பாவுரங்கர் என்பவர் பெரியதொரு சாரம் கட்டி சரியான அளவைக் கண்டு பிடித்தார். அவர்
கண்ட அளவானது:- 57 அடியாகும்.
கி.பி. 1871-ல் நடைபெற்ற மாபெரும் முடி பூஜையின் போது சில
அரசாங்க ஊழியர்கள் சிலையின் எல்லா அவயங்களையும் அளந்தெடுத்தனர். அவைகளாவன:-
அடி. அங்
கால் முதல்
காது வரை -- 50
காதின் அடிப்
பாகம் முதல்
தலை வரை -- 6.6
கால்களின்
நீளம் -----9
இடுப்பின்
அகலம்,
(சுற்றளவு)-----10.
இடுப்பு முதல்
காது வரை-----17.3
கை முதல்
காது வரை------7. -
கால்களின்
முன் அகலம்---4.6
கால் விரல்-----2. -
காலின் பின்புற
மேல் அளவு. --6.4
முழங்காலின்
பாதி மேல்அளவு-10. -
புட்டத்திலிருந்து
காது வரை -----20.6
பின்புறத்தில்
இருந்து காது
வரை---20. -
தொப்புளின்
கீழ் வயிற்றின்
அகலம்,
(சுற்றளவு)----13. -
மார்பின்
அகலம்,
(சுற்றளவு)-----6. --
கழுத்தில்
இருந்து
காது வரை-----2.6
ஆள்காட்டி
விரல் அளவு---3.6
2வது விரல்
அளவு----5.3
3வது விரல்
அளவு---4.7
சுண்டு விரல்
அளவு---2.8
சிலையின்
முழு அளவு---57
feet
சிரவண பெளிகுளம்
பற்றி அறிவோம்
---------------23-------------
தென் கர்நாடகாவில் கார்களா என்ற இடத்திலும்
பகவான் பாகுபலியினுடைய புகழ் பெற்ற உன்னத சிலை கி.பி. 1432-ல்
நிறுவப்பட்டுள்ளது ஒன்றுண்டு. அதன் உயரம் 41 அடி 5 அங்குலமாகும். அதற்கு அருகிலுள்ள வேணூர் என்ற கிராமத்திலும் பகவான்
பாகுபலியின் மற்றொரு சிலையுண்டு. அது கி.பி.1604-ச் சார்ந்ததாகும். இதன் உயரம் 35 அடி.
மைசூரிலிருந்து சுமார் 12 மைல் தொலைவில் உள்ள சிறியதொரு மலையின் மீது 15 அடி உயரமுள்ள பாகுபலி சுவாமியின் சிலையொன்று
உள்ளது. அவ்விடத்தைக் கோமடகிரி என அழைக்கின்றனர்.
இங்ஙனம் கர்நாடகத்திலுள்ள பாகுபலி சுவாமியின் சிலைகளுள் சிரமண பெளிகுளாவின்
சிலையே எல்லாவற்றிலும் பெரிதாகக் காணப்படுகிறது. நான் (ஆசிரியர்) பெளிகுளாவின்
ஜிநநாதருடைய திருவடிகளின் இடையில் சாஷ்டாங்கமாக வணங்கியபோது அத்
திருவடிகளுக்கிடையே அடங்கி விட்டேன். அப்போது என்னுடைய உள்ளத்தில் பிரபுவின்
மேன்மையும் என் தாழ்மையும் தோன்றி மயிர்க் கூச்சலடையச் செய்தது. ஜிநதேவரின் இத்தகைய
நிலையைக் காணும் மற்ற சாதாரண மனிதர்களும் கூட அவருடைய உயர்வையும் தம்முடைய தாழ்வையும் நன்கு அறியலாம்.
சிரவண பெளிகுளம்
பற்றி அறிவோம்
**************23 A ***************
சில அறிஞர்களின்
கருத்துக்களாவன:
--------------------------------
பகவானுடைய அவயங்கள் அனைத்தும் 'ஸமசதுர ஸம்ஸ்தானம்' என்ற கட்டுக் கோப்புடன் அமைந்திருக்கின்றன.
இப்பெருமையைக் குறித்து காலஞ்சென்ற மாண்புமிகு குடியரசுத் தலைவர் இராஜேந்திர
பிரசாத் அவர்கள் கூறிய சொற்கள் மிகமிகச் சிறப்பு வாய்ந்தவை.அவர், பகவான் பாகுபலியின் அரிய தரிசனத்திற்குப்
பின்னர் தம் வாழ்க்கை வரலாற்றில் ' சிரமண பெள்குளாவின்' காட்சிகள்
அற்புதமானவை. உலகத்திலுள்ள மக்களை வியப்படையச் செய்யும் அற்புத இடங்களில் இதுவும்
ஒன்றாகும். எனவே அத்தகைய சிறப்பு வாய்ந்த இடங்களின் காட்சிகளை காணாதிருத்தல்
மனிதர்களின் மிகச் சிறந்த படைப்புகளைக் காணாமைக்கு ஒப்பாகும்" எனக்
குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் பகவான்
பாகுபலியின் சிலையைப் பற்றி, "மிகப் பெரிய சிலையொன்று மலையின் உச்சியில் உள்ளது. அது பாறையை வெட்டி எடுத்து
செதுக்கப்பட்டிருக்கிறது. பத்து பதினைந்து மைல் தொலைவில் இருந்து காணப்படுகிறது.
அவ்வளவு பெரிய சிலையாயிருந்தும் அதைத் தனியாகத் தயாரித்து மலையின் உச்சியில்
நிறுவப்பட வில்லை. மலையின் உயர்ந்த சிகரத்தை வெட்டி எடுத்து சிலையாகச் செதுக்கப்
பட்டிருப்பதுதான் மிகமிக வியப்பை அளிக்கிறது. அதன் நாலா பக்கத்திலுமுள்ள கற்கள்
வெட்டி எடுத்து அப்புறப் படுத்தப்பட்டுள்ளன. அதன் காரணமாக சுற்றுப் புறங்கள்
சமமாகக் காணப்படுகின்றன. சிலை மிகவும் அழகாக இருப்பதுடன் அதன் அங்க அவயங்கள்
பொருத்தமாகச் செதுக்கப் பட்டுள்ளன. அச்சிலை தூரத்தில் இருந்து பார்த்தாலும்,
அருகிலிருந்து பார்த்தாலும் ஒரே
அமைப்புள்ளதாகக் காணப்படுகின்றதே யொழிய அதில் எவ்வித குறைப்பாடும் தென்படுவதில்லை.
கால்விரல் முதல் காது வரை ஒவ்வொரு அவயங்களும் சரியானபடி செதுக்கப்பட்டு மிகவும்
பொருத்தமாகவும், அழகாகவும்
காட்சியளிக்கின்றன" என விரிவுபடக் கூறியிருக்கிறார்.
(ஆக்மகதா பக்கம் 566)
சிரவணபெளிகுளம்
பற்றி அறிவோம்
***************24**************
உலக சஞ்சாரகரும் மாபெரும் எழுத்தாளருமான
பண்டிட் ஜவகர்லால் நேரு 1951
ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9-ஆம்
தேதி பகவான் பாகுபலியின் தரிசனத்திற்காக சிரமணபெளிகுளா விற்குச் சென்றார்.
அப்பொழுது அவருடைய உள்ளம் அவ்விடத்திய புனிதப் பொருட்களால் தூய்மை பெற்றது.
அவருடைய முகத்தில் வியப்பும், மகிழ்ச்சியும் தாண்டவமாடின. பகவானுடைய, தரிசனத்திற்குப் பின்னர் ஜைன மடாலயத்திலுள்ள
யாத்ரிகருடைய குறிப்புப் புத்தகத்தில் தம் கருத்தை இரததினச் சுருக்கமாக இரண்டே
வரிகளில் "நான் இன்று இப்புனிதத் தலத்திற்கு வந்தேன். இங்குள்ள வியப்பையளிக்கும்
மாபெரும் சிலையைக் கண்டு அளவில்லா மகிழ்ச்சியடைந்தேன்" எனக்
குறிப்பிட்டுள்ளார்.
மிகப்பெரிய விஞ்ஞானிகளும், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களும்
பிரபுவினுடைய திருவடித் தாமரைகளைக் கண்டதும் கூற இயலாத பேரொளியைப் பெறுகின்றனர்.
செல்வச்சீமான் ஒருவர் சிரவணபெளி குளாவிற்கு வந்து பகவானைக் கண்டு அளவிலா
மகிழ்வெய்தினார். பின்பு அவர் "நான் உலகம் பூராவும் சுற்றியிருக்கிறேன்.ஆனால்
எனக்கு எங்கும் ஆனால் எனக்கு எங்கும் மன அமைதி கிடைக்கவல்லை. இங்குதான் இயல்பான
அமைதி கிட்டியது.இது அமைதியின் ஒப்பறற இடமாகும்" என்று கூறித் தன்
உள்ளக்கிடத்தலை உள்ளது உள்ளபடியே வெளியிட்டிருக்கிறார்.
ஒப்பற்ற அறிஞரும் காங்கிரஸ் மகாசபையின்
தலைவருமாயிருந்த புருஷோத்தமதாஸ் டண்டன் என்பவர் 1951-ஆம் ஆண்டு
ஜுலை மா 13-ஆம் தேதி அப்புனித் தலத்தலக் காணச்சென்றார்.
அப்போது அவர் தம் கருத்தை வெளியிடுகையிஹல் 'இம்மாபெரும் சிலையிற் காணும்,கருத்தைக் கவரும் பெருமையானது இதன் சிறப்பிற்கோர்
உதாரணமாகும். சிலையின் முகத்தாமரையில்
கருணையும், தியாகமும்
மிளிர்கின்றன. சிலை முழுவதிலும் உயர்ந்த
தத்துவக்காட்சி
நிரம்பி வழிகிறது எனக்குறிப்பிட்டிருக்கிறார்.
சிரவணபெளிகுளம் பற்றி
அறிவோம்!
**************25***************
ஆத்மதத்துவத்தின் இனிய அமிர்தரசத்தை
பருகியறியாத பாமரமக்களும் சிலை ஓர் ஒப்பற்ற நிதி என்பதை ஏற்பதில் தயங்குவதில்லை.
ஆனால் அவ்வழகும் இனிமையும் பாகுபலியின் வாழ்க்கையில் ஏனோ காணப்படவில்லை. பாகுபலி
குமாரருக்கு இராஜ்ய பாரத்தைத் திலாஞ்சலி செய்து விட்டு தபோவனத்திற்குச் செல்ல
முதலில் விருப்பமில்லை. ஆதலால்
போர்க்களத்தில் மாமன்னரான பரதரைத்
தோற்கடித்தார். ஆனால் அவரது வரலாற்றில் பொறுப்பை ஏற்று நடத்தும் தற்செயல்
புலப்படவில்லை. இருப்பினும் வெற்றி வீரரான
பாகுபலி அரசைத் துறந்து தபோவனத்தை நோக்கி ஏன் சென்றார்? என்ற கேள்வி நம்மையும் அறியாமல் தானே எழுகிறது.
பாகுபலியின் துறவுக்குக் காரணம்
---------------------------------
மேலே எழுந்த கேள்வியானது அழகாகத் தோன்றினாலும்
ஆராயும்போது பொருளற்றதாகக் காணப்படுகிறது. பாகுபலி குமாரர் துறவை
மேற்கொள்ளாதிருந்தால் என்ன ஆகியிருக்கும் என்ற விஷயம் மிகவும் சிந்திக்கத்
தக்கதாகும். பலசாலியான பாகுபலி யானவர் திருஷ்டி யுத்தம்(பார்வைப் போர்)
ஜலயுத்தம்(நீர் போர்) மல்யுத்தம் (குத்துச்சண்டை) ஆகிய மூன்றிலும் பரதரைத்
தோற்கடித்து விட்டார். அத்தகைய நிலையில் பரதருடைய உள்ளம் நீதியைப் புறக்கணித்து
விட்டு பாகுபலியைக் கொல்வதற்கான நேர்மையற்ற செயலைச் செய்யத் துணிந்து விட்டது.
அதன் பயனாகவே பரதர் கொடிய ஆயுதமான சக்கரத்தை ஏவினார். பாகுபலிகுமாரரின் பெரும்
புண்ய மகிமையின் காரணமாக உயிரைக் குடிக்கும் கொடிய ஆயுதம் பயனற்று பாத தாமரையில்
வந்து நின்றது. இதிலும் பரதருக்குப் படு
தோல்வியே நேர்ந்தது. ஆனால் இந்நிகழ்ச்சி யானது வெற்றி வீரரான பாகுபலிக்கு, பரதருடைய கொடிய உள்ளத்தை அறிய சந்தர்ப்பம்
அளித்தது. அச்சமயம் பாகுபலியின் மனம் சிந்தனைக் கடலில் அலைமோதியது..........
சிரவண பெளிகுளா பற்றி
அறிவோம்
************26****************
அண்ணனாகிய பரதர் அற்ப அரசின் பேராசையால்
என்னைக் கொல்லத் துணிந்து விட்டார். இதில் அவரது தோல்வியும் ஒரு பெருத்த காரணம்
என்பது மறுக்க வியலாததாகும். போகட்டும்!
இப்பொழுது நானும் அவரைப் போல் இராஜ்ஜியத்தின் மீது பேராசைக் கொள்வேனாகில்
எனக்கும், அவருக்கும் பகை
ஏற்படடுக் கொண்டேயிருக்கும. எனக்குத் தேவையான அரிய மன அமைதி சிறிதும் கிட்டவே
கிட்டாது. அன்றியும் உலகோர் போற்றும் எம் தந்தையான பகவான் ஆதிநாதரையும் உலக மக்கள்
இக்காரணத்தைக் கொண்டு எண்ணி நகையாடுவார்கள். ஆதிஜிநருடைய புதல்வர்கள் தம் உடன்
பிறப்பின் உள்ளன்பை முற்றிலும் மறந்து எளிய மக்களைப் போல் போரிடும் போக்கிரிகள் என
நிந்திப்பர். மேலும் இச்செயல் மக்களைத் தவறான பாதையில் இழுத்துச் செல்ல வழி
வகுக்கும். இவ்வாட்சியில் என் மன அமைதி குலையும். பெருமை மிக்கத் தந்தையின்
ஒளிமிக்கப் புகழும், பாழடையும்"
என அலசி ஆராயலானார்..............
மேலும் அவர்,
"தந்தையின் கௌரவத்தைக் காப்பாற்ற
எண்ணிய பிராம்மி, சுந்தரி என்ற
இரு சகோதரிகளும் இளமையிலேயே பிரம்மச்சரிய விரதத்தை ஏற்று துறவறத்தை மேற்கொண்டனர்.
ஏனைய சகோதரர்களும் மிக்க அமைதியைத் தரும் 'ஜிநேந்திர தீக்ஷையை' ஏற்றுக்
கொண்டனர். நானும் கீழ்த்தரமான சுயநலத்தையும் ஆசாபாசத்தையும் உதறித் தள்ளிவிட்டு
பேரின்பத்தை அளிக்கும் தூய துறவறத்தை மேற்கொள்வேன். இதுவே இன்றியமையாதக்
கடமையாகும்" என சிந்தித்தார்.
சிரவணபெளிகுளம் பற்றி அறிவோம்!
*************27***************
அமைதியே வாழ்க்கையாகக் கொண்ட வீரகுமாரரான பாகுபலியின் கருத்தில் ஆட்சி ஒரு பொருட்டாகத் தென்படவில்லை. இராஜாவின் கிரீடத்தை அணியும் எந்த மன்னனும் கவலையற்று நிம்மதியாக இருக்க முடியாதென்பதை அவர் நன்கு உணர்ந்திருந்தார். "போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து" என்ற பழமொழிக்கிணங்க அவர் தன் போதனபுரத்து ஆட்சியே போதுமென எண்ணி மேலும் வளர்க்க வேண்டுமென்ற நாடாசையை வெறுத்துக் கொண்டிருந்தார். ஆனால் பரதருடைய ஆட்சி வேட்கை இதற்கு மாறானதாகும். அதாவது பாகுபலி நிறைவுற்றிருந்தார். பரதர் குறைவுற்றிருந்தார். ஆகவே இருவருக்கும் மலைக்கும் மடுவுக்குமுள்ள வேறுபாடு காணப்பட்டதில் வியப்பேதுமில்லை.
பாகுபலியினுடைய தன்மான உணர்ச்சி சங்கடமான நிலைமைக்கு வராதிருந்தால் அவர் பரதருடன் போர் புரிந்திருக்க மாட்டார். பரதருடன் போரிட்டதில் அரசுப் பேராசையையே காரணமாகக் கொள்வதற்கில்லை. வீரம், க்ஷத்திரிய தருமம் ஆகிய இரண்டையும் காப்பதே அவருக்கு முக்கிய குறிக்கோளாக இருந்தது. சுய கௌரவத்தைக் காப்பதுடன் பேரரசைப் பெறுவதையும் பயனுள்ளதாகக் கருதினார். ஆனால் ஆன்ம அமைதி, குலகௌரவம், மக்கள் நலன்ஆகிய அனைத்தையும் கருத்தில் கொண்டு நோக்குமிடத்து அவர் எண்ணத்தில் தோன்றிய அரிய கருத்தாவது யாதெனில், 'நான் அரசுப் பேராசையிலிருந்து விடுபட்டு பரந்த உலகின் முற்றத்தில் வீற்றிருக்கும் அனைத்துலக நட்பை ஆதாரமாகக் கொண்ட இயற்கை முத்திரையை [நிர்வாண தீட்சையை] மேற்கொள்வேனாகில் சிறப்புள்ளவனாக விளங்குவேன்' என முடிவெடுத்தார்.
பாகுபலியானவர் துறவறம் ஏற்றதற்கு மற்றொரு காரணமாவது யாதெனில், மன்னர் மன்னரான பரதேச்வரரைத் தோற்கடித்து வெற்றி பெற்றதன் காரணத்தால் அவர் உள்ளத்தில் அனைத்துலக வெற்றியின் அவா தோன்றியிருக்கலாம். ஆனால் நாலாபக்கமும் பார்வையைச் செலுத்தியபோது அவருக்கு யாரும் பகைவர் இருப்பதாகத் தென்படவில்லை. இத்தகைய வெற்றி வீரரான புருஷசிங்கத்தைப் பகைத்துக் கொள்ள யார் துணிவர்? அதே நிமிடத்தில் வீரசிரோமணியின் சிந்தனை வெளியுலகைத் தாண்டி உள் உலகமான அந்தராத்மாவிடம் சென்றது. அங்கு வினையாகிய பகைவர்கள் கணக்கற்று மலைபோல் குவிந்து கிடப்பதைக் கண்டார். அப்பகைவர்களின் தலைவன் ஆசைத் தம்பி என்கிற மோஹ (மோகனீய) மாவான். அவனைத் தலைவனாகக் கொண்ட பகைவர்களின் கூட்டம் ஜீவனைச் சித்தாலயத்தின் பேரின்பப் பேரரசைப் பெற வொட்டாமல் தடுத்து, நீண்ட பிறவித் துன்பச் சுழலில் சுழலவைக்கும் ஈனச் செயலில் ஈடுபட்டு கொட்டமடித்துக் கொண்டிருப்பது அறிய வந்தது.
சிரவணபெளிகுளம்' பற்றி அறிவோம்🙏🏻
**************28*************
அச்சமயம் அப்புனித ஆன்மாவின் வீரம் வீறு கொண்டெழுந்தது. அக்கணத்தில் அவர் எண்ணியது யாதெனில்-'நான் என் உட் பகைவர்களை யடக்கி அழித்தொழிக்காவிடில் என் வீரம் வீணேயாகும்' என எண்ணிய வெற்றி வீரர் பரந்த பேரரசை உதறித் தள்ளிவிட்டு மிகக் கடின தவத்தை மேற்கொண்டார். அவருடைய தவத்தைக் கண்டு உலக மக்கள் வியப்பில் ஆழ்ந்தனர். ஓர் ஆண்டு முழுவதும் அசையாது நின்றபடியே தவம் புரிந்தார். பசி, நீர்வேட்கை, கொசு- ஈக்களின் கடி ஆகிய இடையூறுகளை அவர் சிறிதும் பொருட்படுத்தவேயில்லை. அவர் உடல் மீது ஓயாது பெருமழை பெய்து கொண்டிருந்தது. ஆனால் அவர் மலை போன்று அசையாது வர்ஷயோகமென்ற மழைக் காலத் தவத்தை மேற்கொண்டு ஒழுகினார். அவரது உடலின் மீது கொடிகள் படர்ந்தன. தேள், பாம்பு போன்ற கொடிய விஷ ஜந்துக்கள் அவர் உடலை தம் விளையாட்டு இடமாக அமைத்துக் கொண்டன. அவர் இவைகளைப் பற்றி சிறிதும் சிந்தனையில் கொள்ளாது தம் ஆத்ம சாதனையில் நிலைத்து ஆழ்ந்திருந்தார். இத்தகைய பெருமை மிக்கத் தவத்தின் காரணமாக அத்தவத் திருமகனார் இறுதியில் கைவல்ய லக்ஷ்மி என்ற முற்றுமுணர்தலைப் பெற்று மூவுலக நாயகனானார். மேலும் அவர் தருமசக்கரத்தின் தலைவராகவும், ஆன்மீகப் பேரரசின் பெருமகனாகவும் ஆனார். அழியா ஆன்ம சாம்ராஜ்யத்தின் முன்னால் அழியும் செல்வப் பேரரசுக்கு விலையேது ? ஆன்ம வைபவத்தின் பெருமையை உணரும் பேரறிஞர், மின்மினுக்கும் ஜடப் பொருளின் மீது ஒரு சிறிதும் பாசம் கொள்வாரோ ? மாட்டவே மாட்டார் என்பது திண்ணம்.
பாகுபலி குமாரருடைய ஒளிமிக்க வரலாற்றை ஆராயும்போது நன்கு புலப்படுவது யாதெனில்:- அப்பெரு மகனார் ஆரம்ப முதல் பொருளாசையாகிய மாயா பஜாரில் இருந்து விடுபட்டு உண்மைச் சுதந்திரத்தின் இனிமையை ருசி பார்க்கவே விரும்பி வந்தார். இல்வாழ்க்கைப் பேராசை அவர் அமங்கல உருவமாகவே மதித்தார். மகாபுராணம் என்ற வடமொழி நூலின் ஆசிரியரான ஜினசேனாசாரியார் என்ற துறவறப் பெரியார், பாகுபலியின் குறிக்கோளைப் பற்றி 'விபாக கடு ஸாம்ராஜ்யம்' எனில் வாழ்க்கைப் பேரரசு இறுதியில் கசப்பையே விளைவிக்கும் எனக் கருதியதாகவும், இல்வாழ்க்கை நிலையில்லாதது, இன்றிருக்கும் நாளை இருந்த இடம் தெரியாமல் அழிந்து போகும் தன்மையுள்ளது என நினைத்ததாகவும் என குறிப்பிடுகிறார். அஃதே கவி, பாகுபலி குமாரர் பரதேச்வரரிடம் வெளியிட்டக் கருத்தைக் குறிப்பிடுகையில் 'இந்த இராஜ்யலக்ஷ்மி உனக்கு ஆசை மனைவியைப் போல் மிகவும் பிரியமுள்ளவளாகக் காணப்படுகிறாள். எனவே அவளை நீயே என்றென்றும் அனுபவித்துக் கொண்டு இன்புற்றிருப்பாயாக' எனக்கு அவள் முற்றிலும் ஏற்றவளல்ல. ஏனெனில் கரும பந்தத்திற்குக் காரணமான பொருள்கள் அனைத்தும் மேலோர் (நல்லோர்) களுக்கு இன்பம் அளிக்கக் கூடியவை அல்ல என்பதை நன்கு உணர்வாயாக ! விஷமுட்கள் நிறைந்த வலைக்கு ஒப்பானவை. ஆகவே நான் இவைகளை முற்றிலும் வெறுப்பதுடன் இடையூறில்லா தபோ இலக்குமியை (தவச் செல்வியை) மணக்கப் போகிறேன் எனக் கூறியதாகவருணிக்கிறார்.
சிரவணபெளிகுளம் பற்றி அறிவோம்!🙏🏻
***************29*************
அமைதியே உருவாகிய பாகுபலியின் ஒளிமிக்கக் குறிக்கோளாவது - தம்மைப் பிறவிப் பெருங்கடலின் மாயா ஜாலத்தினின்றும் விடுவித்துத் தாம் மோஷபாதையை நோக்கிச் செல்ல வேண்டியதாகும். ஆகவே அவர் சக்ரவர்த்தியான பரதர் தோல்வியடைந்ததில் தம்மை நிமித்தகாரணமாக எண்ணிப் பரிதாபப்பட்டார். சக்ரவர்த்தி பதவியைப் பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ள உடன் பிறப்பின் ஆசையில் மண்ணைத் தூவினேன். என்னால் அவருக்கு வருந்தக்கூடிய நிலை ஏற்பட்டது. சக்கரவர்த்தி எல்லோரையும் அடக்கி ஆளவேண்டியவர் தானே ! அவருக்குக் கீழ்படியாமல் ஒருவனிருந்தால் அவர் ஆறுகண்டத்துக்கும் அதிபதியாக முடியாதல்லவா! அவர் நம்மைப் போருக்கு அழைத்தது நியாயமே. ஆனால் நாம் அவருடன் போரிட்டதுதான் அநீதியாகும். சக்ர இரத்தினம் உள்ளே செல்லாமல் வெளியே நின்று விட்ட பின்னர் நம்மைப் பணியுமாறு அழைத்தார். அண்ணன் சொல்லுக்கு மதிப்புக் கொடுத்துக் கீழ்படிந்திருக்கலாம்; அதில் தவறு ஏதுமில்லை. தந்தைக்கு அடுத்தவர் தமையனார். தந்தைக்குக்கொடுக்கும் மரியாதையைப் போல் அவருக்கும் கொடுத்திருக்கலாமல்லவா ? அதைச் செய்யவில்லையே; தம்பி அண்ணனுக்குப் பணியவில்லை என்ற செயலைக் குறித்து உலகம் காலமெல்லாம் பழித்துக் கொண்டிருக்குமல்லவா ? போகட்டும். இனி என்ன செய்வது ? அனைத்தையும் அவரிடத்திலேயே ஒப்படைத்து வந்து விட்டோம். அவருடைய தூண்டுதலே நம்மைத் திருவறப் பாதையில் செல்ல வழிவகுத்தது. இதுவும் நன்மைக்கே. ஆனால் அண்ணன் நம் மீது சக்ர ரத்தினத்தை ஏவியது நியாயமில்லாத செயல்தான். இருப்பினும் மனிதன் ஆத்திரத்தில் அறிவிழந்து விடுகிறான் என்பதற்கு இதுவே உதாரணமாகும். என்ன செய்வது! மறக்கற்பாலதே எனப் பலவாறு தம்மைத் தாமே நிந்தித்துக் கொண்டார். இத்தகைய பரந்த மற்றும் சமாதான எண்ணங்களே பாகுபலிக்கு துறவறம் ஏற்க உதவின.
பாகுபலியின் புனித வரலாற்றில் காணும் சிறப்பு யாதெனில்- அவருடைய வாழ்க்கையின் மறுமலர்ச்சியானது ஆன்ம தத்துவத்தினின்றும் பரமாத்ம தத்துவத்தை நோக்கிச் ( From man hood to god hood) சென்றதேயாகும். இத்தகைய சிறந்த முன்னோடியான பகவான் பாகுபலியின் பாதத் தாமரையைப் பின்பற்றிப் பணியும் ஒழுக்க சீலர்கள் விரைவில் பரமாத்ம நிலையை அடைவார்கள் என்பது திண்ணம்.
சிரவண பெளிகுளம் பற்றி அறிவோம்🙏🏻
***************30************
பகவான் பாகுபலியின் சிலையின் மீது படர்ந்துள்ள மாதவிக்கொடி மற்றும் நல்ல பாம்பு முதலிய விலங்கினங்கள் அறிவிப்பது யாதெனில்-- மிகப் பெரிய மனிதரான பாகுபலியானவர் மனிதர்களிடத்தில் மட்டுமல்லாது விலங்கினங்ளிடத்திலும் அன்பு காட்டும் அருளாளராவார். அவரிடம் சமத்வ (சரிசமம்) மனப் பான்மையானது மறு மலர்ச்சி அடைந்திருக்கிறது. ஆகவே அவருடைய நோக்கில் எல்லா ஜீவராசிகளும் அன்புக்கு அருகதையானவை என்பதாகும். பகவானுடைய சிலை பற்றற்ற நிலையை எடுத்துக் காட்டுகிறது. மாதவிக் கொடியும் நல்லபாம்பும் அவரது உள்ளத்திலிருந்து வெளிப்படும் பாவ புண்ணியங்கள் போல காட்சியளிக்கின்றன. இதிலிருந்து உணருவது யாதெனில் பகவான் பாகுபலி தன் ஒப்பற்ற தவத்தின் மகிமையால் வெளியேற்றிய பாவ புண்ணியங்கள் அனைத்தும் உலாவுவது போல் துவனிக்கின்றன.
பாகுபலியின் தூய வாழ்க்கை மற்றும் ஒளி மிக்க வரலாறு ஆகியவைகளால் கவரப்பெற்ற சக்ரவர்த்தியான பரதர், பாகுபலியின் திருவடிகளைத் தொழுவதையே தம் கடமையாகக் கருதினார். அச்சமயம் ஒழுக்கநெறியில் நிகரற்று விளங்கிய பரதரின் பெயரால் 'பாரத நாடு' புகழ் பெற்று விளங்கியது. சீரும் சிறப்புமிக்க பாரத நாட்டின் குடிமக்கள் மற்றும் பிரபுகககள் ஆகிய அனைவரும், ராஜரிஷியான பரதரைப் பின்பற்றி ரிஷிராஜரான பகவான் பாகுபலி சுவாமியினுடைய திருவடிகளின் பேரொளியைப் பெற அல்லும் பகலும் அயராது முயன்றனர்.
ஒரு கேள்வி?
-------------------
சிரமண பெளிகுளமாகிய புனித ஸ்தலத்திற்கு வருகைத் தந்த பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்கள் மக்களைக் கவரும் அதிசயச் சிலை வீற்றிருக்கும் இப்பெருமலையை விந்தியகிரி என ஏன் அழைக்கின்றனர் ? என்று சிறப்பு மிக்க வினா ஒன்றை விடுத்தார். அப்பொழுது அதற்குத் தகுந்த பதில் கிடைக்கவில்லை போலும்! ஆனால் பெருமைமிக்கச் சாமுண்டராயர் சந்திரகிரியிலிருந்து பொன் அம்பு ஒன்றை எய்தி இம்மலையைப் பிளந்தார். ஆகவே இம்மலை வேத்யகிரி என அழைக்கப் பட்டிருக்கலாம். (வேத எனில் பிளத்தல் என்பது பொருள்) பின்னர் வேத்யகிரி என்ற சொல் சிதைந்து நாளாவட்டத்தில் 'விந்தியகிரி' என மாறியிருக்கலாம்....
சிரவணபெளிகுளம் பற்றி அறிவோம்🙏🏻
***************31**************
இப்புனித ஸ்தலம் இயற்கை அழகிற்கோர் இருப்பிடமாகும். காலையிலும், மாலையிலும், நிலவு ஒளியிலும், ஒளி வீசும் விண்மீன்களைக் கொண்ட இரவிலும் கூற இயலாத அழகைப் பெற்றிருக்கிறது. இவ்விடத்திய கோயிலின் மாடியிலிருந்து பார்த்தால் சுமார் 40 மைல் தொலைவு வரை அழகிய காட்சிகள் காணக் கிடைக்கின்றன. சிற்பக் கலையில் ஒப்பற்ற அறிஞனான 'பர்குசன்' என்பவர்* 'ஈஜிப்டைத் தவிர வேறெங்கும் சிறப்பும், பெருமையும் நிறைந்த இத்தகைய இடம் கிடைக்கவில்லை. ஈஜிப்டிலும் கூட இதைவிடப் பெரிய சிலை காணக்கிடைக்க வில்லை என்று கூறியது நினைவில் கொள்ளத்தக்கது.**
எங்ஙனம் மனம் நிறைந்த மலரை வண்டுகள் விடுவதில்லையோ அங்ஙனமே நம் மனமும் கோமடேச்வர பகவானை விட்டு ஏனைய பொருள்களை வருணிக்கச் செல்வதில்லை. பாலின் சுவையைத் தவிர்த்து மற்ற பொருள்களின் சுவைக்கு யார்தான் ஏங்குவார் ? இருப்பினும் கடமைக்காகவும், தகுதியைத் தெரிவிக்கக் கருதியும் ஏனைய பொருள்களைப் பற்றிச் சிறிது விளக்கம் தருவது தவறாகாது.
ஏனைய பொருள்கள்
-----------------------
கோமதீச்வர பகவானுடைய சிலைக்கு முன்னால் பற்பல அணிகலங்களால் நிறைந்து விளங்கும் ஆறு அடி உயரமுள்ள கலைச் செல்வங்களான யக்ஷ- யக்ஷிணி (தேவதை) களின் கற்சிலைகள் அமைக்கப் பட்டுள்ளன. அவைகளின் வலது கைகளில் பழங்கள் உள்ளன. இடது கைகளில் வட்டமான பாத்திரங்கள் உள்ளன. அப்பாத்திரங்களின் பெயர் 'லலிதஸரோவரம்' என 183-ம் நெம்பர் கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது. இவைகளில் பகவானுடைய அபிஷேக நீர் வந்து சேருகிறது. அதிக நீர் கால்வாயின் வழியாக சிலைக்கு எதிரில் உள்ள கிணற்றில் போய் சேர்ந்து விடுகிறது. அங்கிருந்து அந்நீர் கோயிலின் மதிற்சுவருக்கு வெளியேயுள்ள குல்ஸகாயஜ்ஜி பாகிலு என்ற பெயருள்ள குகையில் வந்தடைகிறது.
-------------------------------
* This sacred place assumes an indescribable charm at dawn, at sunset, by moon light and in the darkness of a starlit night. Sravanabelgola, p 10
** Nothing grander are more imposing exists anywhere nut of Egypt and even there no known statue surpasses it in height'-l bid p io
-------------'-----------------
சிரவணபெளிகுளம் பற்றி அறிவோம் 🙏
---------------------32-------------------------
(1)ஸித்தர் பஸ்தி: பஸ்தி என்ற சொல் கோயிலைக் குறிப்பதாகும். இந்ங்குள்ள கோயிலில் 3 அடி உயரமுள்ள இரண்டு ஸித்தர்களுடைய சிலைகள் இருக்கின்றன. அவைகளின் பக்கத்தில் 6 அடி உயரமுள்ள உயர்ந்த கம்பங்கள் இருக்கின்றன. அவைகளின் சிற்பக்கலை மிகவும் அழகாக விளங்குகின்றது. அதற்கு நேராகக் காணப்படும் கம்பத்தில் கி.பி. 1389--ல் ஸமாதி மரணமடைந்த பண்டிதாசார்யருடைய குணங்களை வருணிக்கும் அருகதாச கவியால் இயற்றப்பட்ட அழகிய கல்வெட்டொன்று உளது. இக்கம்பத்தின் கீழே சீடனுக்கு அறவுரையாற்றும் ஆசாரிய (குரு)ருடைய உருவம் செதுக்கப்பட்டிருக்கிறது. இதன் இடது பக்கத்தில் உள்ள கம்பத்தில் கி.பி. 1432--ல் சுவர்க்கம் எய்திய ' சுருதமுனிவரைப்' பற்றி கங்கராஜ கவியால் இயற்றப்பட்ட வடமொழி கல்வெட்டுள்ளது. இவ்விரண்டு கம்பங்களும் சிறந்த வரலாற்றுச் செய்திகளைத் தாங்கிக் கொண்டுள்ளன. (2)அகண்ட பாகிலு:- இவ்வாயிற்படி (அகண்ட எனில் உடையாத என்பது பொருள்) உடையாத கல்லால் ஆக்கப்பட்டதால் இதற்கு 'அகண்ட பாகிலு' என்ற பெயர் வழங்கலாயிற்று. வாயற்படியின் மேலே இரு பக்கமும் யானைகளால் அபிஷேகம் செய்யப்படும் லஷ்மியின் உருவம் செதுக்கப் பட்டுள்ளது. வாயற் படிக்கு நேராக பாகுபலி பகவானுடைய சிலையும், இடது பக்கமாக பரத கேவலியின் சிலையும் உள்ளன. இவை ' கண்ட விமுக்த ஸித்தாந்த தேவரின்' சீடரான சேனாதிபதி ' பரதேஸ்வர' ரால் ஆக்கப்பட்டவை எனக் கல்வெட்டு கூறுகிறது. (3)ஸித்தர் குண்டு:- மேலே கூறப்பட்ட அகண்ட வாயிற்படிக்கு நேராக ஒரு பெரிய பாறை இருக்கிறது. இதன் மீது பல கல்வெட்டுகள் உள்ளன. ஜைன குருமார்களின் உருவங்களின் கீழே பெயர்களும் உள்ளன. (4) குல்லகா யஜ்ஜி பாகிலு:- இது தவறாக குல்லாயஜ்ஜி பாகிலு (பாகிலு--வாயற்படி) என அழைக்கப்படுகிறது. ஏனெனில் வாயற்படியின் நேராக உள்ள சித்திரம் (உருவம்) மல்ல செட்டி என்பவரின் மகளுடையதாகும். இச்செய்தியை கி.பி. 1300--ஆம் ஆண்டைச் சார்ந்த 477.நெம்பர் கல்வெட்டு விளக்குகிறது. ( வளரும்)
சிரவண பெளிகுளம் பற்றி அறிவோம் 🙏
----------------------33-------------------------
(5) தியாகத பிரம்ம தேவ ஸ்தம்பம் :-
இக்கம்பம் மிக்கச் சிற்பக்கலை நிறைந்ததாகும். இக்கம்பத்தை உருவாக்கிய திறமை நிறைந்த சிற்பி , இக் கம்பம் கீழே தரையைத் தொடாமல் 'கைக்குட்டை துணி' போகுமளவுக்கு அந்தரமாய்ச் செய்திருந்ததாகப் பாராட்டப்படுகிறது. ஆனால் தற்சமயம் அதன் ஒரு மூலையின் பகுதி தரையைத் தொட்டுக் கொண்டிருக்கிறது. இக் கம்பத்தின் வடபாகத்தில் சாமுண்டராயரைப் பற்றிச் சிறப்பாக வருணிக்கப் பட்டக் கல்வெட்டு உள்ளது. இக்கல்வெட்டு கி.பி. 983 யைச் சார்ந்தது. துரதிருஷ்டவசமாக 'ஹரகண்டே கண்டன்' என்பவர் சாமுண்டராயருடைய சிறந்த கல்வெட்டின் பெரும் பகுதியை சுயநலத்திற்காக அழித்து, தன் கல்வெட்டை கி.பி.1200--ல் செதுக்கச் செய்து விட்டார். இக் கம்பத்தின் வலது பக்கத்திலுள்ள உருவத்தை ஆசார்ய நேமி சந்திர ஸித்தாந்த சக்ரவர்த்தியினுடையது எனக் கூறுகின்றனர். மற்றொரு உருவத்தை சாமுண்டராயருடையது என்கின்றனர். சாமுண்டராயர் கோமடேச்வரருடைய சிலைக்குப் பிரதிஷ்டை செய்தபிறகு இவ்விடத்தில் மக்களுக்கு வாரி வாரி வழங்கினார் எனவும், அதன் நினைவாக இக்கம்பம் நாட்டப்பட்டுள்ளதாகவும், இதற்கு 'தியாகத'(வாரி வழங்குதல்)கம்பம் எனப் பெயர் சூட்டப் பட்டதாகவும் சொல்லப் படுகிறது. (6) சென்ன கண பஸ்தி :-- இக் கோயிலானது மேற்கண்ட கம்பத்திற்கு மேற்கு பக்கமாக உள்ளது. இதில் சந்திரபிரப பகவானுடைய சிலை நிறுவப் பட்டுள்ளது. அதன் எதிரில் 'மானஸ்தம்பம்' அழகுடன் காட்சியளிக்கிறது. கி.பி.1673 ஆம் ஆண்டைச் சார்ந்த 390--ஆம் நெம்பர் கல்வெட்டின்படி இக்கோயில் 'சென்னண்ணன்' என்பவரால் கட்டப் பட்டுள்ளதாகத் தெரிகிறது. வராந்தாவில் உள்ள இரு கம்பங்களுள் ஒன்றில் ஆண் சிலையும், மற்றொன்றில் பெண் சிலையும் செதுக்கப் பட்டிருக்கின்றன. ஒருக்கால் இவை சென்னண்ணன் மற்றும் அவருடைய மனைவி ஆகிய இருவர்களின் சிலைகளாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. (வளரும்)
சிரவணபெளிகுளம் பற்றி அறிவோம்!🙏
--------------------34---------------------------
(7) ஓதேகல பஸ்தி :--
இக் கோயிலின் சுவர்களை நீண்டநாட்கள் வரை நிலைத்திருக்க கருங்கற்களால் அமைத்திருக்கின்றனர். ஆகவே இதை 'ஓதேகல பஸ்தி'(கற்கோயில்) என வழங்குகின்றனர். இக் கோயிலில் மூன்று கற்பக் கிரகங்களிருப்பதால், இதை 'திரிகூட பஸ்தி' எனவும் அழைக்கின்றனர். இதில் ஆதிநாதர், நேமிநாதர், சாந்திநாதர் ஆகிய தீர்த்தங்கரர்களின் சிலைகள் அழகாகக் காட்சியளிக்கின்றன. கோயிலின் மேற்கு திசையிலுள்ள பாறையில் கி.பி.1645 முதல் 1851 வரையில் யாத்திரைக்காக வந்த வடநாட்டு யாத்ரீகர்களின் பெயர்கள் தேவ நாகரி எழுத்தில் பொறிக்கப் பட்டிருக்கின்றன. (8) சதுர் விம்ச தீர்த்தங்கர பஸ்தி :-- இச்சிறிய கோயிலில் 2 1/2 அடி உயரமுள்ள கல்லில் இருபத்து நான்கு தீர்த்தங்கரர்களின் சிலைகள் செதுக்கப் பட்டிருக்கின்றன. கி.பி.1648--ல் சாருகீர்த்தி பண்டிதர், தரும சந்திரர் ஆகிய இருவரும் இச்சிலையை நிறுவியுள்ளனர். (9) பிரம்ம தேவ மந்திர் :-- இது விந்திய கிரிக்குக் கீழே படிகளுக்கு அருகிலிருக்கிறது. இதில் ஸிந்தூரம் பூசப்பட்ட கல் ஒன்றுள்ளது . அதை 'பிரம்மர்' அல்லது 'ஜாருகுப்பே அப்பா' எனக் கூறுகின்றனர். இக் கோயிலின் மேல் மாடியில் பாரீஸ்வநாத பகவானுடைய சிலை அமைக்கப் பட்டிருக்கின்றது................(வளரும்)
சிரவணபெளிகுளம் பற்றி அறிவோம்!!🙏
----------------------35--------------------------
சந்திரகிரி (கடவப்ர ரிஷிகிரி---தீர்தத்கிரி )
********************************
விந்திய கிரிக்கு எதிரிலுள்ள மலையை 'சிக்கபெட்டா' எனக் கூறுகின்றனர். அதைச் 'சந்திரகிரி' எனக் கூறுகின்றனர். இது கடல் மட்டத்திலிருந்து சுமார் 3052 அடி உயரத்தில் இருக்கிறது. கி.பி.600--ம் ஆண்டு கல்வெட்டில் இதன் பெயர் 'கடவப்ரம்' எனக் குறிக்கப் பட்டிருக்கிறது. இவ்விடத்தில் ஆசாரிய பிரபாசந்திரரும், அவருக்குப் பின்னர் 700 முனிவரர்களும் ஸமாதி மரணம் (வடக்கிருத்தல்) எய்தியுள்ளனர். கி.பி.700- ஆம் ஆண்டு கல்வெட்டிலும் இதற்கு 'கடவப்ரம்' என்ற பெயர் காணப்படுகிறது. அதில் மயூர கிராம சங்கத்தின் 'தமிதாமதி' என்ற பெயருடைய ஆர்யாங்கனையார் இங்கு ஸமாதி மரணம் அடைந்தார் எனவும் குறிக்கப் பட்டிருக்கிறது. அதே காலத்தைச் சார்ந்த கன்னட மொழி கல்வெட்டில் ' காலந்தூர் முனிவரர்' கடவப்ரகிரியின் மிசை 108 ஆண்டு காலம் தவஞ் செய்து ஸமாதி மரணத்துடன் சித்தியடைந்தார் என விளக்கப் பட்டிருக்கிறது. கன்னட மொழி கல்வெட்டில் இம்மலைக்கு 'கல வப்பு' என்ற பெயர் குறிக்கப்பட்டிருக்கிறது. கி.பி. 700 ஆம் ஆண்டைச் சார்ந்த மற்றொரு கல்வெட்டில் ஆசாரிய சந்திரதேவர் என்பவர் 'கல்வப்பி' என்ற பெயருள்ள துறவிகளின் மலையின் மிசை விரதங்களை ஏற்று,பழுதின்றி சுவர்க்கம் அடைந்தார் என தெரிவிக்கப் பட்டிருக்கிறது. சக ஆண்டு 622 யைச் சார்ந்த கல்வெட்டுகளில் இம் மலையின் பெயர் 'தீர்த்தகிரி' எனக் குறிக்கப் பட்டிருக்கிறது. இம் ம்லையின் மீது ஒரேயொரு கோயிலைத் தவிர ஏனைய ஆலயங்கள் அனைத்தும் சுற்று மதிற்சுவருக்குள் கட்டப் பட்டிருக்கின்றன. அவைகளின் எண்ணிக்கை பதிமூன்றாகும். இவைகளுள் ஒரு கோயில் பழமையானது, மேற்கண்ட கம்பத்திற்கு மேற்கு பக்கமாக உள்ளது. இதில் சந்திரபிரப பகவானுடைய சிலை நிறுவப் பட்டுள்ளது. அதன் எதிரில் 'மானஸ்தம்பம்' அழகுடன் காட்சியளிக்கிறது. கி.பி.1673--ஆம் ஆண்டைச் சார்ந்த 390- ஆம் நெம்பர் கல்வெட்டின்படி இக் கோயில் 'சென்னண்ணன்' என்பவரால் கட்டப் பட்டுள்ளதாகத் தெரிகிறது. வராந்தாவில் உள்ள இரு கம்பங்களுள் ஒன்றில் ஆண் சிலையும், மற்றொன்றில் பெண் சிலையும் செதுக்கப் பட்டிருக்கின்றன. ஒருக்கால் இவை சென்னண்ணன் மற்றும் அவருடைய மனைவி ஆகிய இருவரின் சிலைகளாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. . (வளரும்)
சிரவண பெளிகுளம் பற்றி அறிவோம்🙏
----------------------------36-------------------
சுருதகேவலியின் திருவடிகள்
கிழக்குப் பக்கம் சுற்றுப்புறத்திற்கு வெளியே ஒரு குகை இருக்கிறது. அதில் இறுதி சுருத கேவலியான பத்ரபாகு சுவாமிகளின் திருவடிகள் உள்ளன. அம்மகான் இவ்விடத்திலிருந்து சுவர்க்கத்திற்குப் பயணமானார். மௌரியப் பேரரசரான சந்திரகுப்தர் இங்கு வருகை தந்தார் எனக் கூறப்படுகிறது. பின்னர் அவர் தென்னாட்டு ஆசாரியர் ஒருவரிடம் ஜினதீஷையைப் பெற்று இறுதி வரை பத்ரபாகு சுவாமிகளின் திருவடிகளுக்குப் பூஜை செய்து கொண்டிருந்தார் எனவும் அறிவிக்கப் படுகிறது. அக்குகையில் சிறப்பு மிக்கக் கல்வெட்டு ஒன்றிருந்தது. அக்குகையைச் சீர்திருத்தி செப்பனிடும்போது பொறுப்பின்மையின் காரணமாக அக் கல்வெட்டு அழிக்கப்பட்டு விட்டது. அஃது பதினோறாம் நூற்றாண்டைச் சார்ந்ததாகும். கல்வெட்டு நம்பர். 166 ஆகும். அதன் ஆரம்பமாவது ஸ்ரீ பத்ரபாகு ஸ்வாமிய பாதமம் ஜிநசந்த்ர ப்ரணமதாம் என்பதாகும். இக் கல்வெட்டு , பதினோராம் நூற்றாண்டில் ஜிநசந்திரன் என்ற பெயருள்ள ஒருவர் இருந்தார். அவர் இங்குள்ள பத்ரபாகு சுவாமிகளின் திருவடிகளைத் தொழுது வந்தார் என்பதை வெளியிடுகிறது. ஆகவே கி.பி பதினோராம் நூற்றாண்டு வரை இத்தலம் சுருதகேவலியின் திருவடிகளைத் தொழும் இடமாகப் புகழ்பெற்று விளங்கி இருந்ததென்பது நன்கு அறியக் கிடக்கிறது. இக் குகையின் முன்னால் ஒரு வாயற்படி அமைக்கப் பட்டிருக்கிறது. அதன் காரணமாக அக் குகையின் அழகு பாதிக்கப்படுகின்றது.
உலக வழக்கு,
இறுதி சுருதகேவலியான பத்ரபாகு சுவாமியானவர் வடநாட்டில் பன்னிரண்டு ஆண்டுகள் கடும் பஞ்சம் ஏற்படப்போகிறது எனத் தன் பேரறிவினால் அறிந்து கூறினார். மௌரியப் பேரரசரான சந்திரகுப்தர் தம் பேரரசைத் துறந்து பத்ரபாகு சுவாமிகளுடன் தெற்கு நோக்கிப் பயணமானார். அவர்களுடன் மிகப் பெரிய ஜைன சங்கம்(துறவிகளின் குழு) இருந்தது. அச் சங்கத்தில் பன்னீராயிரம் துறவிகள் இருந்தனர் என்று கூறப்படுகிறது. சுருத கேவலியான பத்ரபாகு சுவாமியார் சிரமண பெள்குளத்தையடைந்ததும் தன்னுடைய இறுதி நாள் நெருங்கி விட்டதை உணர்ந்தார். ஆகவே அவர் 'சிக்கபெட்டா' என்ற சந்திரகிரியில் தங்கி விட்டார். அவருடைய அருமைச் சீடரான சந்திரகுப்தர் தம் குருவின் இறுதிக் காலம் வரை பக்தியோடு பணிவிடைச் செய்துவந்தார். அவர் தம் குரு காலமானதும் சந்திரகுப்தர் துறவறத்தை மேற்கொண்டு ஜைனத் துறவியானார். பின்னர் சந்திரகுப்த முனிவர் இதே மலையில் ஸல்லேகனை (வடக்கிருத்தலை)யை மேற்கொண்டு நற்கதி எய்தினார்.
(வளரும்)
--------------------------37-----------------------
பேரரசரும் வலிமையுள்ளவரும், பெருமை மிக்கவருமான சந்திரகுப்தர் துறவறத்தை மேற்கொண்ட பின்னர் தம் தூய வாழ்க்கையின் இறுதிகாலம் வரை இதே மலையில் தங்கியிருந்து சமாதியுடன் தேவபதவியை அடைந்துள்ளார். அத்தகைய பெருமை மிக்க அப் பெரியார் ( சந்திரகுப்தர்) அம்மலையில் தங்கி இருந்த காரணத்தால் அவர் பெயராலேயே அம்மலை ' சந்திரகிரி' என்று புகழ் பெற்று விளங்குகிறது. அம்மலையில் உள்ள மிகப் பழையக் கோயில் ஒன்று அப் பெருமகன் பெயரால் 'சந்திரகுப்த பஸ்தி' என்று இன்றும் அழைக்கப் ப்டுகிறது. இதுவும் அவருடைய வருகையையும் (தென்னகம்)அம் மலையில் தங்கியிருந்ததையும் உறுதிப் படுத்துகிறது.
ஸ்ரீரங்கப் பட்டணத்தில் கி.பி. 900 ஆண்டைச் சார்ந்த 147,148-ம் நம்பர் கல் வெட்டுகள் உள்ளன. அவை காவேரி நதியின் வடக்கரையில் அமைந்துள்ள்ன. 'அக் கல்வெட்டுகள்(கலவப்பம்) அல்லது சந்திரகிரி என்ற மலையின் மிசை மாபெரும் துறவியான பத்ரபாகு சுவாமிகள் மற்றும் சந்திரகுப்த முனிவர் ஆகிய துறவறப் பெரியார்களின் திருவடிகள் உள்ளன' என்று அறிவிக்கின்றன. சிரமண பெள்குளாவின் கி.பி.650 ஐச் சார்ந்த கல்வெட்டானது பத்ரபாகு சுவாமிகள் மற்றும் சந்திரகுப்த முனிவர் ஆகிய அருந்தவப் பெரியோர்களின் பெருமையாலும், மகிமையாலும் சிறப்புற்றிருந்த ஜைன தருமம் பின்னர் வீழ்ச்சியுற்றிருந்த போது சாந்திஸேனர் என்ற துறவியானவர் திரும்பவும் அதை வளர்ச்சியடையச் செய்தார். அத்துறவியானவர் பெளிகுளாவில் இறுதிக் காலத்தில் உணவு முதலியவற்றைத் துறந்தார். ஸல்லேகனையை மேற்கொண்டார் என விளக்குகின்றது.
இம்மலையின் பாரீசுவநாதர் கோயிலிலுள்ள கி.பி.1129 ம் ஆண்டு கல்வெட்டு கூறுவதாவது:-- பத்ரபாகு முனிவருக்குச் சிஷ்யராயிருந்த புண்யத்தின் பெருமையால் சந்திரகுப்தருக்கு தேவதைகள் நீண்ட நாட்கள் வரை தொண்டு செய்தன. மஹாநவமி மண்டபத்தின் (கல்வெட்டு நம்பர் 64) கி.பி.1163 யைச் சார்ந்த கல்வெட்டில் ' சுருத கேவலியான பத்ரபாகு சுவாமிகள் அக்காலத்தில் ஈடு இணையில்லாப் புகழுடன் விளங்கினார்கள். அவருடைய ஒப்பற்ற சீடர் சந்திரகுப்தராவார். பத்ரபாகு சுவாமிகளின் மகிமையால் அவருடைய சங்கத்தின் சாதுக்கள் தேவதைகளால் வணங்கப் பட்டனர்' எனக் குறிப்பிடப் பட்டிருக்கின்றது. சித்தர் பஸ்தி( சித்தர் கோயில்) யின் வலப்பக்கக் கம்பத்தில் பத்ரபாகு சுருதகேவலி மிகப் பெரிய ஞானியாக விளங்கினார். அவருடைய சீடர் சந்திரகுப்தராவார். அவருடைய தூய ஒழுக்கத்தின் காரணமாக தேவதைகள் அவருக்குப் பணிவிடைச் செய்தன.
----------------------------38---------------------
கல்வெட்டுகளைத் தவிர ஜைன நூல்களில் சிறந்த ஆதாரங்கள் கிடைக்கின்றன. 5, 6 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த பிராகிருத நூலான திலோய பண்ணத்தியில் ஆசாரியரான யதிவிருஷபர் என்பவர் முடிசூழ் மன்னர்களில் இறுதி மன்னரான சந்திரகுப்தர் ஜிந தீஷையை மேற்கொண்டார். அதன் பின்னர் மன்னர் எவரும் ஜிந தீஷையை மேற்கொள்ளவில்லை எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
ஹரிஷேணருடைய 'ப்ருகத் கதாதோஷம்' என்ற, கி.பி.931 ஐச் சார்ந்த நூலில் ' புண்யவர்த்தனம்' என்ற நகரில் பத்மரதன் என்ற அரசன் ஆட்சி செலுத்தி வந்தான். அவனுடைய புரோகிதனான சோமசர்மனுக்கும் அவனுடைய மனைவி சோமஸ்ரீக்கும் 'பத்ரபாகு' மகனாகப் பிறந்தார். ஒரு சமயம் சுருதகேவலியான கோவர்த்தனர் என்ற ஆசாரியார் ' கிரிநார் ' மலையை தரிசிக்க வேண்டி விஹாரம் செய்து கொண்டே அந் நகரையடைந்தார். அப்பொழுது அங்கு விளையாடிக் கொண்டிருந்த 'பத்ரபாகு சிறுவன்' ஒன்றன் மீது ஒன்றாக பதினான்கு கோலிகளை அடுக்கி விட்டான். அதைக் கண்ட ஆசாரியரான கோவர்த்தனர் தம் நுண்ணிய ஞானக் கண்ணால் ஆலோசித்து இச்சிறுவன் பதினான்கு பூர்வங்களையும் முழுமையாக உணரும் ஐந்தாம் சுருதகேவலியாகிய பேரறிஞனாக ஆகப் போகிறான் என அறிந்தார்' என்று குறிப்பிடப் பட்டிருக்கிறது.
கோவர்த்தன சுவாமியானவர், எதிர் காலத்தில் மாபெரும் அறிஞனாக முன்னுக்கு வரக்கூடியவனும், நுண்ணிய அறிவு படைத்தவனும், புண்ணியசாலியுமான பத்ரபாகு சிறுவனுக்கு நன்கு கல்வி அறிவைப் புகட்டி நூலறிவில் ஒப்பற்ற மேதையாக்கி விட்டார். ஆகவே தேவர்கள் அவரைப் போற்றிப் பணிந்தனர்.
(வளரும்)
-------------------------39------------------------
பின்னர் அவர் பத்ரபாகு என்ற முனிவராகி சஞ்சாரம் செய்து கொண்டே உஜ்ஜயினிக்கு வந்தார். அங்குள்ள 'ஸிப்ரா' நதியின் அருகில் உள்ள பூங்காவில் தங்கினார். அவ்விடத்திய ஆட்சிப் பொறுப்பு , ஜிநேந்திர பக்தனான சந்திரகுப்தரிடமிருந்தது. அவருடைய ராணியின் பெயர் சுப்ரபாதேவி ஆகும். பத்ரபாகு சுவாமியானவர் ஆகாரத்திற்காக புறப்பட்டார். அப்பொழுது தாயின் மடியில் இருந்த குழந்தை 'தநோதிதோமுநி ஷிப்ரம் கச்சத்வம்பகவந்நித: 30. துறவித் தலைவ, தாங்கள் இங்கிருந்து விரைவில் சென்றுவிடுங்கள் என்பது பொருளாகும். அதைக் கேட்டதும் பத்ரபாகு சுவாமியானவர் நிமித்த ஞானம் என்ற தம் பேரறிவினால் இங்கு பன்னிரண்டு ஆண்டுகள் கடும் பஞ்சம் ஏற்படப் போவதால் சங்கத் துறவிகள் அனைவரும் இங்கிருந்து கடல் பக்கமாகப் போய்விட வேண்டும். என் ஆயுள் குறைவாக இருப்பதால் என் உயிர் விளக்கு அணையும் தருவாயிலிருக்கிறது. எனவே நான் இங்கேயே தங்குவேன் என்றார்.
இச்செய்தியை யறிந்த பேரரசரான சந்திரகுப்தர் குடும்ப வாழ்க்கையில் வெறுப்புற்றவராகி துறவறத்தை மேற்கொண்டார். அவர் பத்து பூர்வங்களையறியும் பேரறிவைப் பெற்றார். அவர் விசாகாசாரியார் என்ற பெயரால் புகழ் பெற்று விளங்கினார். அவர் தம் குருவான பத்ரபாகு சுவாமிகளின் கட்டளைப் படி சங்கத் துறவிகள் அனைவரையும் அழைத்துக்கொண்டு தென்னாடாகிய புன்னாடகத்தை அடைந்தார். பத்ரபாகு சுவாமியானவர் உஜ்ஜயினிக்கு அருகிலுள்ள ' பாத்ரபதம்' என்ற இடத்தில் வடக்கிருத்தலை மேற்கொண்டு உயிர் நீத்தார்.
மேற்கண்ட விவரம் பிரகத் கதாகோஷத்தின் ஆதாரப்படியாகும். அதன்படி பத்ரபாகு சுவாமியின் இறப்பு உஜ்ஜயினிக்கருகில் நடைபெற்றதாகவும், அவருடைய சீடரான சந்திரகுப்தர் மட்டிலுமே தெற்கு நோக்கிப் பயணமானார் என்றும் தெரிகிறது.
(வளரும்)
------------------------40--------------------------
'இரத்தின நந்தி' என்ற ஆசாரியரால் இயற்றப் பெற்ற பதினைந்தாம் நூற்றாண்டைச் சார்ந்த 'பத்ரபாகு சரிதம்' என்ற நூலில் பத்ரபாகு சுவாமியானவர் உஜ்ஜயினி வந்ததும் சந்திரகுப்தர் அவரிடம் சென்று தான் கண்ட கனவுகளின் பலனைக் கேட்டார். அவைகளின் பலனை முனிவரின் திருவாக்கால் கூறக்கேட்டு இல்வாழ்க்கையில் வெறுப்புற்றவராகி துறவறத்தை மேற்கொண்டார். சந்திரகுப்தருடைய கனவுகளின் பலன் பன்னிரண்டு ஆண்டுகள் வரை மழையின்றி ஏற்படப் போகும் கொடிய பஞ்சமாகும் என்பது அறிந்ததே. இதன் காரணமாகவே பத்ரபாகு சுவாமியானவர் தம் சங்கத் துறவிகளுடன் தெற்கு நோக்கிப் பயணமானார். வழியில் அவர் உயிர் விளக்கு அணையப் போவதாக அறிந்து கொண்டார். எனவே அவர் வழியிலேயே தங்கி விட்டார். அவ்விடத்தில் பத்ரபாகு முனிவர் காலமாகி விட்டார். சந்திரகுப்தரும் குருதேவருடைய திருவடிகளுக்கு பூஜை செய்தவாறு அங்கேயே தங்கி விட்டார். ஏனைய சங்கத் துறவிகள் அனைவரும் தெற்கிலுள்ள சோழநாட்டை நோக்கிப் பயணமாயினர். இச்செய்தி பத்ரபாகு சுவாமியும், அவருடைய சீடரான சந்திரகுப்தரும் தென்னாட்டிற்கு வந்தனர் என்ற பரம்பரைக் கொள்கையை மறுக்கிறது. மேலும், சந்திரகுப்தர் பத்ரபாகு சுவாமிகளிடம் முனி தீஷையைப் பெற்றார் என்பதை வலியுறுத்துகிறது.
'சிதாநந்தகவி' என்பவர் கி.பி.1680-ல் இயற்றிய 'முனிவம்சாப்யுதம்' என்ற கன்னட காவியத்தில் 'பத்ரபாகு சுவாமி' சிரமண பெளிகுளாவின் சின்னி மலையில் தங்கியிருந்தார். அப்பொழுது அங்கே ஒரு புலி அவரைக் கொன்று விட்டது. இன்றும் அவருடைய திருவடிகளுக்குப் பூஜை நடைபெற்று வருகிறது. சந்திரகுப்தர் தீர்த்த யாத்திரை செய்து கொண்டே சிரமண பெளிகுளாவிற்கு வந்தார். அங்கே அவர் தஷிணாசாரியரிடம் ஜிநதீஷையை ஏற்றார். தான் கட்டிய ஜிநாலயத்திலிருந்து கொண்டு பத்ரபாகு சுவாமிகளின் திருவடிகளுக்குப் பூஜை செய்துகொண்டே காலத்தைக் கழிக்கலானார். சில காலத்திற்குப் பின்னர் சந்திரகுப்தர் ஆசாரியப் பதவிப் பெற்றார் எனக் குறிப்பிடப் பட்டிருக்கிறது. இக்குறிப்பிலிருந்து பத்ரபாகு சுவாமியும் சந்திரகுப்தரும் சிரமண பெளிகுளாவிற்கு வந்தனர் என்பது அறியக் கிடைக்கிறது.
------------------------41-------------------------
கி.பி. 1838-ல் தேவ சந்திரகவியால் இயற்றப் பட்ட 'ராஜாவளிகதே' என்ற கன்னட நூலில் பாடலிபுரத்தில் பேரரசரான சந்திரகுப்தர் பதினாறு கனவுகளைக் கண்டார். அவைகளில் கடைசியான கனவில் பன்னிரண்டு பனாமுடிகளைக் கொண்ட நாகப் பாம்பொன்று தன்னை நோக்கி வரக் கண்டார். பொழுது புலர்ந்ததும் சந்திரகுப்தர், பூங்காவில் தங்கியிருந்த பத்ரபாகு சுவாமிகளிடம் சென்று தன் கனவுகளின் பலனைக் கேட்டார். சுருதகேவலியான பத்ரபாகு சுவாமியானவர் தன் நிமித்த ஞானத்தின் வாயிலாகக் கண்டறிந்து , இங்கு பன்னிரண்டு ஆண்டுகள் கொடிய பஞ்சம் ஏற்படப் போவதை இறுதி கனவானது அறிவிப்பதாகக் கூறினார். அதன் பின்னர் மாமன்னரான சந்திரகுப்தர் பத்ரபாகு சுவாமிகளிடம் முனி தீஷையைப் பெற்று அவரது திருவடிகளுக்கு தொண்டு செய்து வந்தார். பத்ரபாகு சுவாமியானவர் தம் பன்னீராயிரம் சீடர்களுடன் தெற்கு நோக்கிப் பயணமானார். மேலே சென்றதும் தம் ஆயுளில் சிறிதளவே எஞ்சியிருப்பதை அறிந்தார். எனவே அப் பெருமகனார் தம் சங்கத்தைச் சோழ-பாண்டிய நாட்டிற்கு அனுப்பிவிட்டு சந்திரகுப்த முனிவரை மட்டிலும் தம்மோடு இருக்க அனுமதித்தார். ஆசாரிய பத்ரபாகு சுவாமிகள் காலமான பிறகு சந்திரகுப்தர் தம் குருவின் திருவடிகளுக்குப் பூஜை செய்து கொண்டிருந்தார்.
சில காலத்திற்குப் பின்னர் அவருடைய பேரனானவர் அவரைக் காண வந்தார். அதன் பிறகு அவர் (பேரன்) சந்திரகிரிக்கு அருகில் பெளிகுளா நகரத்தை உண்டாக்கினார். அம் மலையின் மீது சந்திரகுப்தர் ஸமாதிமரணத்தை(வடக்கிருத்தலை) மேற்கொண்டார். இச் செய்தியிலிருந்து சந்திரகுப்தர் பத்ரபாகுவினுடைய சீடர் என்பதும் , சந்திரகுப்தர் பெளிகுளாவிற்கு வருகைத் தந்தார் என்பதும், ஆனால் பத்ரபாகு சுவாமியானவர் பெளிகுளாவிற்குச் செல்லவில்லை என்பதும் அறியக் கிடைக்கிறது.
(வளரும்)
---------------------------42-----------------------
மன்னர் மன்னரான சந்திரகுப்தரின் திகம்பர தீஷை:-
இத்தகைய நுண்ணிய ஆராய்ச்சியின் வாயிலாகக் கிடைத்த முடிவாவது யாதெனில்:- பத்ரிபாகு சுவாமியானவர் சிரமண பெளிகொளாவிலுள்ள சந்திரகிரியிலிருந்து வானுலகை எய்தினாரென்பதும், மாமன்னரான சந்திரகுப்தர் திகம்பர தீஷையை ஏற்று தம் குருவான பத்ரபாகு சுவாமிகளின் திருவடிகளுக்குச் சேவை செய்தாரென்பதும் காண முடிகிறது. இக்கருத்து நம்பத் தகுந்ததும் ஏற்கத் தக்கதுமாகும்.
டாக்டர் 'வ்யூமேன்' டாக்டர் 'ஹார்னலே' ஆகிய இருவரும் சுருத கேவலியான பத்ரபாகு சுவாமிகள் சிரமண பெளிகுளாவிற்குச் சென்றார் என்பதை ஏற்கின்றனர். டாக்டர் தாமஸ் என்பவர் 'சந்திரகுப்தர் ஜைனராவார், இக்கருத்தை ஜைன எழுத்தாளர்கள் எழுதியும், பரப்பியும் வருகின்றனர். இது அனைவரும் அறிந்த விஷயமாகும், இதற்கு வேறு எவ்விதச் சான்றுகளும் தேவையில்லை, இவ்விஷயத்தில் பண்டைய ஜைன சமய எழுத்தாளர்களின் குறிப்பே போதுமான சான்றாகும், இதில் எவ்வித ஐயப்பாடும் கொள்ளத் தேவையில்லை' என குறிப்பிடுகிறார்.
மெகஸ்தநீஜின் கருத்துப்படி ' சந்திரகுப்தர்' பிராமணர் அல்லது வைதீகக் கொள்கைக்கு எதிரான ஜைன முனிவர்களின் அறவுரைகளைச் சிரமேற்கொண்டு பொன்னேபோல் போற்றி வந்தார்' என்பது அறியக் கிடைக்கின்றது.
டாக்டர் 'தாமஸ்' 'முத்ரா ராஷஸம்' 'ஆயிநே அக்பர்' 'ராஜதரங்கிணி' ஆகியவைகளின் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு சந்திரகுப்தரையும், அவருடைய மகனான பிந்துஸாரரையும், பேரரசனாகிய அசோகரையும் ஜைன சமயத்தை சார்ந்தவர்களாகவே ஏற்கிறார். டாக்டர் 'காசிபிரஸாத் ஜாயஸவால்' என்பவர், பண்டைய ஜைன நூல்களும், கல்வெட்டுகளும் சந்திரகுப்தரை ஜைன சமய ராஜரிஷி (அரசத்துறவி) என முடிவு கட்டுவதாகக் குறிப்பிடுகிறார். என்னுடைய நூல் அறிவு என்னை ஜைன நூல்களின் வரலாற்றுக் கருத்தை ஏற்கும்படி வற்புறுத்துகின்றது எனக் கூறுகிறார்.
(வளரும்)
-------------------------43------------------------
மிஸ்டர் 'ராஈஸ்' சிரமண பெள்குளாவின் கல்வெட்டுகளை நுட்பமாக ஆராய்ந்தவர். அவரும் மேற்கண்ட கருத்தையே வலியுறுத்துகிறார். மிஸ்டர் 'ஸ்மித்' என்பவரும் இறுதியில் மேற்காணும் கருத்தையே ஏற்கிறார். டாக்டர் ஸ்மித் தம் கருத்தை விளக்கும் போது 'சந்திரகுப்த மௌரியரின் நிகழ்ச்சி நிறைந்த ஆட்சிக் காலம் எவ்வாறு முடிவுற்றது என்பதை அறிவதற்கு ஜைன பரம்பரையே உதவியளிக்கின்றது. ஜைனர்கள் மாமன்னரான சந்திரகுப்தரை பிம்பஸாரரைப் போன்று ஜைனராகவே ஏற்கின்றனர். அவர்களுடைய கருத்தை மறுக்க வேறு எவ்வித ஆதாரமும் கிடைக்கவில்லை. சிசுநாகர், நந்தர் மற்றும் மௌரியருடைய காலத்தில் மகத நாட்டின்கண் ஜைன தருமம் மிகவும் சிறப்புன்றிருந்தது என்பது ஐயமற ஒப்புக்கொள்ளத் தக்க விஷயமாகும். சந்திரகுப்தர் அறிவாளியான பிராமணரொருவரின் உதவியால் ஆட்சியைக் கைப்பற்றினார். ஆனால் இதன் காரணமாக ஜைன தருரம் ஆட்சி தருமமாக மாறுவதில் எவ்வித இடையூறும் காணப்படவில்லை. 'முத்ராராஷஸம்' என்ற நாடகத்தில் அரசரின் அமைச்சரான 'ராஷஸ'ருக்கு ஜைனத் துறவி ஒருவர் நண்பராக இருந்து நந்தவமிசத்திற்கு உதவினார் என்றும், பின்னர் மௌரியரிடம் ஆட்சி மாறியதும் மௌரியருக்கும் உதவினார் என்றும் கூறப் பட்டிருக்கின்றது. சந்திரகுப்தர் ஜைனரென்றோ அல்லது ஜைனராக மாறினாரென்றோ ஒருமுறை ஒப்புக்கொண்டு ஏற்கும்பொழுது, ஜைன பரம்பரைக் கொள்கையாகிய சந்திரகுப்தர், ஆட்சியைத் துறந்து ஜைன தரும முறைப்படி இறுதியில் வடக்கிருத்தலை, ஏற்றாரென்பதையும் நம்பிக்கையோடு ஏற்க வேண்டியதே' எனத்தெளிவு படுத்துகிறார்.
சந்திரகுப்தருடைய வரலாற்றைப் பற்றிய விளக்கமாவது யாதெனில்:- ஜைனத் துறவியான பத்ரபாகுவானவர் பாரத நாட்டின் வடக்கே பன்னிரண்டு ஆண்டுகள் வரை மழையின்றி கடும் பஞ்சம் ஏற்படப் போகின்றது என்று எதிர்கால நிகழ்ச்சியை எடுத்துக் கூறினார். அவர் கூறியது போன்று எவ்வித மாற்றமுமின்றி நிகழ்ச்சியும் நடைபெற்ற்து. அப்பொழுது அந்தத் துறவியானவர் தம் பன்னீராயிரம் சாதுக்களைக் கொண்ட சங்கத்தை, அழைத்துக் கொண்டு செழிப்புள்ள நாட்டைக் காண தெற்கு நொக்கிப் பயணமானார். மன்னர் மன்னரான சந்திரகுப்தரும் பஞ்சத்தின் காரணமாக வெறுப்புற்று ஆட்சியைத் துறந்ததுடன் மைசூர் நாட்டைச் சார்ந்த சிரமண பெளிகுளாவிற்குச் சென்று கொண்டிருந்த மாபெரும் சங்கத்தில் தாமும் ஒருவராகக் கலந்து கொண்டார். பெளிகுளாவில் பத்ரபாகு அடிகளாருக்கு வடக்கிருத்தலோடு முடிவு ஏற்ப்பட்டதும் அதன் பின்னர் பன்னிரண்டு ஆண்டுகள் கடந்து சந்திரகுப்த முனிவரும் ஸமாதி மரணமடைந்தார்.
(வளரும்)
--------------------------44--------------------------
இப்பண்டைய வரலாற்றைச் சிரமண பெளிகுளத்தினுடைய கோயில்களின் பெயர்களும், ஏழாம் நூற்றாண்டு மற்றும் அதற்குப் பிற்பட்டக் கல்வெட்டுகளும், பத்தாம் நூற்றாண்டைச் சார்ந்த நூல்களும் வலியுறுத்துகின்றன. இச்சான்றுகள் போதுமானதல்ல எனக் கூறலாம். ஆனால் பரந்த நோக்கத்தோடு ஆழ்ந்து ஆராய்ந்த பின்னர் இவ்வரலாற்றை வலியுறுத்தும் நேரிய கருத்தை உளமாற ஏற்கிறேன்.(நூலாசிரியர் கூறுவதாகும்) கி.மு 322 ல் சந்திரகுப்தர் ஆட்சிபீடம் ஏறினார் என்பது வரலாற்று வல்லுனர்களால் ஏற்றுக் கொண்ட விஷயமாகும். ஆனால் அவர் ஆட்சி பீடம் ஏறியபொழுது இளைஞராகவும்,அனுபவம் இல்லாதவராகவும் இருந்தார். அத் திருமகனுடைய ஆட்சி 24 ஆண்டுகள் சிறப்புடன் நடைபெற்றது. ஆனால் அவருடைய ஆட்சி முடியும் தறுவாயில் அவர் ஐம்பது வயதை எட்டியிருக்கலாம். அவ்வளவு சிறிய வயதில் அவருடைய ஆட்சி முடிவுற, அவரே வலிந்து ஆட்சியைத் துறந்திருக்க வேண்டுமென்பதே புலனாகிறது. அரசர்கள் தாமே ஆட்சியைத் துறப்பதற்கான சான்றுகள் பல கிடைக்கின்றன. அத்துடன் பன்னிரண்டாண்டு கொடிய பஞ்சமும் நடக்கக் கூடியதே. இதில் அவநம்பிக்கைக்கொள்ளத் தேவையில்லை. இதன் முக்கிய கருத்தாவது:- வேறு சான்றுகள் கிடைக்காததால் ஜைனர்களின் வரலாற்றையே ஏற்க வேண்டியிருக்கின்றதென டாக்டர் 'ஸ்மித்தும்' விளக்கவுரையில் வெளிப்படுத்தியிருக்கிறார்.
இத்தகைய ஆய்வுகளிலிருந்து கிடைத்த கருத்தாவது யாதெனில்:- குறுகிய நோக்கமின்றி பரந்தமனப்பான்மையைக் கொண்ட எந்த மனிதனும், சந்திரகிரியில் பத்ரபாகு சுவாமி வானுலகெய்தியதும், மாமன்னர் சந்திரகுப்தர் பாரத நாட்டின் ஆட்சி முடியைத் துறந்து திகம்பர ஜைன முனிவராகி தம் ஆசானாகிய, சுருதகேவலி பத்ரபாகு அடிகளாரின் திருவடிகளில் பணிபுரிய ஈடுபட்டதும் வரலாற்று உண்மையே என்பதை ஒரு மனதாக ஏற்றுக் கொண்டேயாக வேண்டும்.
(வளரும்)
-----------------------------45---------------------
புனித நினைவு நிறைந்த மலை
சந்திரகிரிமலை சிறியது. அதன் மீது கேவலி, சுருதகேவலிகளின் திருவடிகள் உள்ளன. விந்தியகிரி (பெரியமலை) பெரியது. அதன்மீது கேவலி ஞானியான பகவான் பாகுபலி வீற்றிருக்கின்றார். இவ்விரண்டையும் அருகருகே காணும் தூய உள்ளம் படைத்த ஜிநபக்தனுக்கு அளவற்ற மகிழ்ச்சி ஏற்படுகின்றது. இம்மலை எத்தனையோ எண்ணற்ற புனித நினைவுகளால் நிறைந்துள்ளது. இப்புனித ஸ்தலத்திற்கு கேவலி பகவானாகிய கதிரவன் முற்றிலும் மறைந்து விட்ட போது பத்ரபாகு என்ற சுருதகேவலியின் வாயிலாக நிலவு ஒளி போன்ற சுருதஞான ஒளி கிட்டியது. இத்தவத் திலகர் அங்கு தங்கி இருந்த காரணத்தால் அத்தலம் எண்ணற்ற பக்தர்களையும் தவத்தோர்களையும் கவரும் புனித பூமியாக ஆகியது. இத்தகைய சிறப்பு மிக்க காரணங்களால் அவ்விடத்திய கல்வெட்டுகள், எண்ண்ற்ற தவத்தோர்களும், ஆர்யாங் கனைகளும் அங்குத் தங்கி தவமிருந்து ஸமாதி மரணத்துடன் வானுலகை எய்திய செய்திகளத் தெரிவிக்கின்றன. ஸமாதி மரணமடைந்த புனிதத் தலம் ஒருவகையில் வீர பூமியான தீர்த்த ஸ்தலத்தைப் போன்று வணங்கத் தக்கதாகும். ஏனெனில் இங்குத் துறவி கொடிய மோக(ஆசை)த்தின் மீது கடுந்தாக்குதலை நடத்தி மேலுலகிற்குப் பயணமாகிறார். இம் மலையின் ஒவ்வொரு அணுவும் தூய தவத்தோர்களின் புனித நினைவுகளால் நிரம்பியதாகும்.

No comments:
Post a Comment