எம்மான் கோவில்
ஜீவபந்து ஸ்ரீபால் அவர்களின் நூலிலிருந்து…..
மாணவர்கள் கண்ட பண்டைய மாண்புறு கோயிலும் வரலாற்று உண்மைகளும்
சென்னை கல்லூரி ஆசிரியர் ஒருவர்,
அறிவுடைநம்பி மற்றும் ஆனந்தன்
என்ற இரு மாணவர்களுடன்
உல்லாசப் பயணமாகப் புழலேரியைப் பார்க்கச் சென்றார்.
செல்லும் வழியில் புழல் கிராமத்தில் ஓர் பழைய கோயிலைக் கண்டனர்.
அக்கோயிலின் அழகிய
தோற்றம் அவர்கள் மனத்தைக் கவர்ந்தது. அங்கு நின்றிருந்த ஒரு பெரியவரைப் பார்த்து,
'ஐயா! அது என்ன கோயில்' என்றார்.
அப்பெரியவர் எம்மான் கோயில் என்றார். ஆசிரியரும் மாணவர்களும்
வியப்புற்று, 'எம்மான் கோயிலா' என்றனர்.
'ஆமாம்! சோழன் காலத்துக் கோயில், போய் பாருங்கள்' என்றார்
அப்பெரியவர்.
உடனே மூவரும் கோயிலுக்குள் சென்றனர். அங்குள்ள சிலையைக் கண்டதும்,
மாணவர்கள் “புத்தர்
கோயில் ஐயா!” என்றனர்.
ஆசிரியர் சிறிது நேரம் சிலையை உற்று நோக்கிவிட்டுப் புன்னகையோடு,
“புத்தர் சிலையல்ல!” ஆதீஸ்வரர்
என்றார்.
மாணவர்கள் :
"ஆதீஸ்வரரா? இதுவரை அப்பெயரை யாங்கள் கேட்டதே இல்லையே!"
ஆசிரியர் :
“ஆம்! கேட்டிருக்க முடியாது. ஆதீஸ்வரர் என
வழங்கும் இப்பெரியாரின் இயற்பெயர் விருஷபதேவர்.
இவர் நம்மைப் போன்று, தாய் தந்தை வயிற்றிற் பிறந்து, மனைவி
மக்களுடன் வாழ்ந்து, ஆத்மீகத் துறையில் தவம் செய்து, வீடு பேறு பெற்றவர்.
உங்கள் சரித்திர புத்தகத்தில் மகாவீரரையும் புத்தரையும் பற்றி
வாசித்திருக்கின்றீர்கள் அல்லவா?
அவர்களிருவருக்கும் எத்தனையோ ஆயிரம் ஆண்டுகள் முற்பட்டவர்.
அகிம்சா தர்மத்தின் தந்தை! அகர முதலாகிய எழுத்துக்களையும்,
ஒன்று முதலாகிய எண்களையும் முதன்முதல் தோற்றுவித்தப் பேராசிரியர்.
வாள், வரைவு, உழவு, வாணிபம், கல்வி, சிற்பம் ஆகிய அறு தொழில்களையும்
கற்பித்த சமுதாய அமைப்பாளர்.
மக்கள் நல மேம்பாட்டிற்குரிய இல்லறம் துறவறம் ஆகிய இரு பேரறங்களையும்
வகுத்த அறவாழி அந்தணர்!
தேவைக்கு மேலான பொருள்களைப் பதுக்கிவைத்தல், ஐம்பெரும் பாவங்களில்
ஒன்றெனக் கூறி "மிகுபொருள் விரும்பாமை" எனும் அரியதோர் அறம் வகுத்த முதற்
பொதுவுடமைத் தலைவர்!
செய்தொழில் வேற்றுமையன்றி பிறப்பினார் மக்களனைவரும் ஒன்றென
உரைத்த உத்தமர்!
கண்கள் எவ்வாறு புறப்பொருள்களைத் தெளிவாக அறிகின்றனவோ, அவ்வாறே
நூற்பொருள்களின் உண்மைகளை ஆராய்ந்தறிய வேண்டுமென்ற பகுத்தறி வியக்கத்தின் கர்த்தா!
இவ்வாறு பல திட்டங்களுடனும் கொள்கைகளுடனும் ஒரு புது சமுதாயத்தைப்
படைத்த புத்துலகச் சிற்பி!"
மாணவர்கள் கண்ட பண்டைய மாண்புறு கோயிலும் வரலாற்று உண்மைகளும்----
அறிவுடைநம்பி :
“ஆசிரியர் பெரும! என்னே விந்தை! இவ்வாறு செயற்கரிய
சேவையை மக்கள் சமுதாயத்திற்காகச் செய்தருளிய எம்மான் கோயில் சென்னைக்கருகில் இருப்பதை
இதுவரை யாங்கள் அறிந்ததில்லையே! அவரது சமயம்?”
ஆசிரியர் :
“சமயமா? அவர் தாம் வகுத்த அறநெறிகளை. ஒரு
வகுப்பாருக்கென குறிப்பிடவில்லை. சமயமென்றோ, மதமென்றோ அழைக்கவில்லை.
அது மட்டுமா? தமது பெயராலும் அக்கொள்கைகளை நிலைநாட்டவில்லை.
அகிம்சையை அடிப்படையாகக் கொண்ட தமது கொள்கைகளை அறம்! அறம்!! அறம்!!! என்றே அமைத்தார்.
இப்பேரறம் உலக மக்களனைவருக்கும் பொதுவானது. இவ்வறத்தினையே
தமிழ் நூல்களில் திருவறம் அல்லது திருமொழி எனப் போற்றிப் புகழப்படுகிறது.
ஆனந்தன் :
“ஐயா! அப்பெரியவர் கூறியபடி எம்மான் கோயில்
என்பது பொருந்தும்! இவ்வுத்தமனின் காலம் யாதோ?”
ஆசிரியர் :
“காலம்! மாணவர்களே! உலகம் அடிக்கடி பல மாறுதல்களை
அடைந்துள்ளதை அறிவீர்கள். பூகோள ரீதியிலுங்கூட, கடல் நாடாவதும், நாடு கடலாவதும் உண்டு.
இந்நிலையை நமது புராணங்கள் போகபூமி, கர்மபூமியாக மாறிற்றென்று
கூறுகின்றன.
இத்தகைய இயற்கைச் சூழலின் கண்வயப்பட்டு நமது நாடும் ஒரு காலத்தில்
சீர்குலைத்தது.
மக்கள் தங்கள் வாழ்க்கைக்குரிய வழி தெரியாமல் திகைத்தனர்.
சமைத்துண்ணவும் வகையறியாமல் பச்சைக் காய் கிழங்குகளைப் புசித்துக்
காலங் கழித்தனர்.
நன்மை, தீமை எனும் பாகுபாடுகூட அவர்களுக்குத் தெரியாது.
அந்நிலையில் நாபி என்பவருக்கும், மருதேவி என்ற அம்மையாருக்கும்
ஓர் ஆண்மகவு பிறந்தது.
அம்மகவுக்கே விருஷபதேவர் எனப் பெயரிட்டனர்.
அவர் செல்வாக்குடன் வளர்ந்து வந்தார்.
குழந்தைப் பருவத்திலேயே அவரிடம் அறிவு ஒளி வீசிற்று. காளைப்பருவம்
பெற்றதும், நாட்டின் நிலையைக் கண்டார்.
அறிவுக்குப் பொருந்தாத நிலையில் சமுதாயம் அமைந்திருந்தது.
மக்களெல்லாம் மாக்களாகவே வாழ்ந்தனர்.
எங்கும் துன்பம்! எங்கும் கவலை! எங்கும் குழப்பம் இப்பயங்கர
நிலையைக் கண்டு மனத்தில் இரக்கங்கொண்டார்!
இத்துன்பத்தினின்றும் மக்களை விடுதலை செய்ய வேண்டும் என உறுதிகொண்டார்.
இரவு பகலாகச் சிந்தனையிலாழ்ந்தார்.
அவர் சிந்தனையில் பல்வேறு திட்டங்கள் உருவாயின.
அத்திட்டங்களைக் கொண்ட ஒரு சமுதாயத்தை உருவாக்கினார்.
அச் சீரிய சமுதாயமே யான் முன்னர் கூறியது. இன்றியமையாக் கொள்கைகளுடன்
ஒரு புது சமுதாயத்தை முதன் முதல் படைத்தருளிய பகவான் விருஷபதேவர் காலம் சரித்திரங்
கடந்தது; வரையறுத்துக் கூறவியலாதது.
எனினும் அவர் வரலாற்றுப் புருஷர் என்பதற்குரிய இலக்கியச் சான்றுகள்
போதுமானவை கிடைக்கின்றன.
மாணவர்கள் :
“ஆதீஸ்வரர் என்ற பெயர் எவ்வாறு வந்தது?”
ஆசிரியர் :
“மாணவர்களே! பகவான் விருஷபதேவர் இல்லறம் துறவறமாகிய
இரு பேரறங்களை வகுத்தாரென்பதை அறிந்தோம்.
அவர் அவ்விரு அறங்களின் வழி நின்று தவமியற்றி வீடுபேறு பெற்றமையால்
அம்முனிவர் தலைவனை பகவன், சித்தன், சிவன், சிவகதி நாயகன், எண்குணன், அறவாழி அண்ணல்,
அருகன், அறிவன், சினன், தீர்த்தங்கரர் எனப்போற்றி வாழ்த்தினர்.
அவருக்குப் பின் அவ்வற நெறிகளை உலகெங்கும் பரப்பித் தவமியற்றி
வீடுபேறு பெற்றவர்கள் இருபத்துமூவர்.
அவ்விருபத்து மூவர்களுக்கும் பகவான் முதலிய சிறப்புப் பெயர்கள்
வழங்கலாயிற்று. அவர்களில் கடைசி தீர்த்தங்கரரே நாம் வரலாற்று நூல்களில் வாசிக்கும்
மகாவீர வர்த்தமானர்.
பகவான் விருஷப தேவர் முதல் மகாவீரர் ஈறாக இருபத்துநான்கு தீர்த்தங்கரர்
ஆவார்கள். தீர்த்தங்கரர் என்றால் அறவுரைப் பகர்வோர் என்பது பொருள்.
எனவே பகவான் விருஷபதேவர் இவர்களுக்கெல்லாம் ஆதியாக விளங்கியமையால்
அப்பெருமான் ஆதிபகவான், ஆதீஸ்வரன், ஆதிநாதன், ஆதிமூர்த்தி, ஆதிதேவர், ஆதிஜினன், ஆதிபட்டாரகர்
என அழைக்கப்பெற்றார்.”
அறிவுடைநம்பி :
“அருமை சார்ந்த பேராசிரியரே! இன்று அரிய செய்திகளைத்
தெரிந்துகொண்டோம். ஆதீஸ்வரர் வழி வந்தவர்கள் இருபத்து மூவர் என்றீர்களே அவர்களில் புத்தரும்
ஒருவரா?”
ஆசிரியர் :
“(சிரித்துக்கொண்டே) இல்லை. புத்தர் வேறு.
அவர் கொள்கைகளும் வேறு. மகாவீரர்தான் ஆதீஸ்வரர் வழி வந்தவர். அவர் அறம், பூரண அஹிம்சையையுடையது.”
ஆனந்தன் : புத்தரும் அகிம்சையைத்தானே போதித்தார்.
ஆசிரியர் :
“ஆம்! அகிம்சையைத்தான். இரண்டிற்கும் வேறுபாடு
உண்டு.
புத்தர் உயிர்க்கொலையை வன்மையாகக் கண்டித்தாலும், புலாலுண்ணலைத்
தடைசெய்யவில்லை.
எனவே இன்று புத்த மதத்தினர் பிறரால் விற்கப்படும் புலாலை வாங்கிப்
புசிக்கின்றனர்.
ஆத்ம தத்துவத்திலும் மாறுபட்டவர்கள். அதனாற்றான் இருவரும்
ஒரே காலத்தவராயிருந்தும் வெவ்வேறாகவே தங்கள் கொள்கைகளைப் பரப்பி வந்தார்கள்.
எனவே மகாவீரர்தான்
ஆதீஸ்வரர் வழி வந்தவர். அவர் கொள்கை உயிர்களைக் கொல்லவுங் கூடாது. புலாலுணவைப் புசிக்கவுங்
கூடாது.
இன்னும் ஆதீஸ்வரர் அறத்தினைப் பின்பற்றும் ஜைனர்கள் (சமணர்கள்)
கொல்லாவிரதம் உடையவராகவும், புலாலுண்ணா பண்பினராகவும் வாழ்கின்றனர்.”
அறிவுடைநம்பி :
“உண்மை ஐயா! எனக்குப் பல சமண நண்பர்களுண்டு.
அவர்கள் புலால் புசிப்பதே இல்லை.
இவ்விரு சமயத்தின் வேறுபாடு தெரியாமல் எனது சமண நண்பர் ஒருவரின்
தந்தையாருடன் பேசும்போது,
பர்மாவில் உங்கள் சமயத்தவர் நிறைய புலால் உண்கின்றனர் என்று
கூறிவிட்டேன். அவர் கோபக்குறியோடு, 'பர்மாவில் உள்ளவர்கள் புத்தர்களப்பா! சரித்திர
நூல்களை ஆழ்ந்து வாசி' என்று கூறினார்.
அவர் நோக்கத்தை அறிந்துகொண்ட நான் மேற்கொண்டு பேசவில்லை.
இன்று தங்களால், அதன் உண்மைகள் விளங்கிற்று.
சிலைகள் மட்டும் ஒரே மாதிரியாயிருக்கின்றனவே! அதனால்தான் இதனை
புத்தர் கோயில் என்றேன்.
ஆசிரியர் :
“இந்த மயக்கம் உனக்கு மட்டும் ஏற்படவில்லை.
படித்துப் பட்டம் பெற்றவர்களில் சிலருக்கும் உண்டு.
புத்தர் சிலைகளுக்குத் தலையின் உச்சியில் முடிந்திருக்கும்,
பெரும்பாலும் உடலில் ஆடையுங் காணப்படும். ஜைனர் சிலைகளின் தலை உச்சியில் முடியோ, உடலில்
ஆடை ஆபரணங்களோ கிடையாது.
"அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்
வேண்டிய வெல்லாம் ஒருங்கு"
"இயல்பாகும் நோன்பிற்கொன் றின்மை உடைமை
மயலாகும் மற்றும் பெயர்த்து"
"மற்றுந் தொடர்ப்பா டெவன்கொல் பிறப்பறுக்க
லுற்றார்க் குடம்பும் மிகை"
என்ற திருக்குறள் கூறும் துறவிலக்கணப்படி அமைந்திருக்கும்.
இத்தகைய பற்றற்றத் திகம்பர உருவச்சிலைகளின், இருபக்கங்களிலும்,
சாமரை வீசும் தேவர்கள் சிலைகளும் மத்தியில் முக்குடையுங் காணப்படும்.
இவ்வேற்றுமைகளை அறியாமல் எத்தனையோ சமணர் சிலைகளை புத்தர் சிலைகள்
என்று எழுதியும் பேசியும் விடுகின்றார்கள்.
மாணவர்கள் :
“ஐயோ! இதனால் சரித்திரமே பாழாகிவிடுமே!”
ஆசிரியர் :
“என்ன செய்வது? இப்பொழுதுதான் அவைகளைத் திருத்தம்
செய்து வருகிறார்கள்.”
அறிவுடைநம்பி :
“அன்புசால் ஆசிரியரே! பகவான் விருஷப தேவர்
சரிதம் இவ்வுலக சரிதத்தில் தலைசிறந்ததொன்று. அவர் வரலாற்றுப் புருடர் என்பதற்குரிய
சான்றுகள் இருப்பதாகத் தெரிவித்தீர்கள் அல்லவா!”
ஆசிரியர் :
“ஆம்! ஆம்! அது மிக முக்கியமானது. திருக்குறளாசிரியர்
தமது கடவுள் வாழ்த்தில் வழிபடும் ஆதிபகவான்தான் பகவான் விருஷப தேவர்!”
அறிவுடைநம்பி :
(ஆச்சரியத்தோடு) “என்ன?
தமிழ்மறையிலா? ஆதிபகவன் விருஷப தேவரா? புதுமையாயிருக்கிறதே!”
ஆசிரியர் :
“புதுமை என்ன? உண்மையை மறைத்தார்கள். அது
வெளிப்படும்போது நமக்கும் புதுமையாய்க் காணப்படுகின்றது.”
ஆனந்தன் :
“தங்கள் கருத்து தமிழ் இலக்கியங்களிலே ஒரு
திருப்புமையம் (Turning point) என நினைக்கிறேன், இதனை நிரூபிக்க அகச் சான்றுகள் ஏதாகிலும்,.”
ஆசிரியர் :
“ஆனந்தா! ஏதாகிலுமென்ன? ஏராளமாக இருக்கின்றன.
"ஆதிபகவன்" என்ற சொற்றொடரைக் கொண்டே பகவான் விருஷப தேவரை வழிபடும் தமிழ்
இலக்கியங்கள் பல இருக்கின்றன. அதுமட்டுமல்ல! வாலறிவன், எண்குணத்தான், அறவாழி அந்தணன்,
மலர்மிசை ஏகினான், ஐம்பொறி வென்றோன் போன்ற சொற்களும் அங்கே காணலாம்.”
ஆனந்தன் :
“சார்! ஆதிபகவன் என்ற சொற்றொடரைக் கொண்டே,
நூல்கள் உளவா?”
ஆசிரியர் : “ஆம்.
உள. கேளுங்கள்!”
"மன்னிய பேருலகனைத்தும்
நின்னுள்ளே நீயொடுக்கினை
நின்னின்று நீவிரித்தனை
நின்னருளின் நீகாத்தனை" என வாங்கு,
ஆதிபகவனை யருகனை
மாதுயர் நீங்க வழுத்துவம் பலவே"
அறிவுடை நம்பி :
“ஆமாம் சார்! ஆதிபகவன் என்ற சீரிய பெயரே அமைந்துள்ளதே!
இது எந்த நூல்!”
ஆசிரியர் :
“திருக்கலம்பகம் எனும் ஓர் அழகிய தமிழ் நூல்
இது மட்டுமா?”
"ஆதிபகவன் அசோகவசலன்
சேதிப முதல்வன் சினவரன் தியம்பரன்"
எனத் திருப்பா மாலையிலும்,
"அத்தனே என்னை ஆளீர் சரணம்
ஆதிபகவன் அருளே சரணம்"
எனத் தோத்திரத் திரட்டிலும்,
"கோதிலருகன் திகம்பரனெண்குணன் மூக்குடையோன்
ஆதிபகவன் அசோகமர்ந்தோன் அறவாழி அண்ணல்
சோதிமுனைவன் சினேந்திரன் பொன்னெயில் நாதன் சுத்தன்
போதி நடந்தோன் அதிசயன் சார்ந்தநற் புங்கவனே"
எனக் கயாதர நிகண்டிலும் ஆதிபகவானைக் காணலாம்.”
ஆனந்தன் :
“ஐயா! இந் நிகண்டில் ஆதிபகவன் மட்டுமல்ல!
திருக்குறளின் கடவுள் வாழ்த்தில் கூறப்படும் சிறப்புப் பெயர் அனைத்தும் அடங்கியுள்ளனவே!
ஒருவேளை ஆதிபகவன் அருளிய அறத்தினையே இயற்றியிருப்பாரோ!”
ஆசிரியர் :
“நன்று கூறினை! உன் அறிவை மெச்சினேன்! 12
அல்லது 13-ஆம் நூற்றாண்டில் சமய திவாகர மாமுனிவர் எனும் சமணப் பேராசிரியர் நீலகேசி
என்ற பண்டைய தர்க்க நூலுக்கு அறிவுசான்ற உரை எழுதியுள்ளார். அவர் தமது உரையில் மேற்கொளாகத்
திருக்குறளைக் குறிப்பிடும்போதெல்லாம் அஃது "எம்மோத்தாதலால்" (எமது வேதம்)
என உரிமையுடன் பாராட்டி எழுதுகின்றார். இக்கருத்தை நோக்கும்போது நீ கொண்ட கொள்கை தவறல்ல.
ஆதிபகவனின் அறமே திருக்குறள் எனத் துணிந்து கூறலாம்.”
அறிவுடை :
“ஐயா! அரிய செய்திகள்! தாங்கள் விளக்கிய கவிகளைக்
கூறுங்கள் குறித்துக்கொள்ளுகின்றோம்.”
ஆசிரியர் :
“உங்கள் அவாவை வரவேற்கின்றேன்! நான் இதுவரைப்
பேசி வந்தவைகளுக்கெல்லாம் இலக்கிய ஆதாரங்களுண்டு. அவைகளையெல்லாம் இங்கு விரிப்பதாயின்
நேரம் அதிகமாகும். அடுத்த ஞாயிற்றுக்கிழமை எனது இல்லத்திற்கு வாருங்கள். உங்களுக்கு
வேண்டியவற்றைக் குறித்துக் கொள்ளலாம். பல நூல்கள் இருக்கின்றன.”
அறிவுடை :
“பேராசிரியரே! வட¦மொழி
இலக்கியங்களில் பகவான் விருஷப தேவரைப்பற்றிப் பேசப்படுகின்றனவா?”
ஆசிரியர் :
“யானும் அவைகளைப் பற்றிதான் விளக்க வாய் திறந்தேன்.
நீயும் கேட்டுவிட்டாய். சிறு மாணவர்களாயினும், உங்களிடம் கூர்மையான அறிவு விளங்குகிறது.
ஜைன இலக்கியங்களில் ஆதிபுராணம், மகாபுராணம் போன்ற பல நூல்களில் ஆதீஸ்வரர் வரலாறுகள்
விளக்குவது போலவே வைதீக சமய சம்பந்தமான நூல்கள் பலவற்றிலும் அவர் போற்றப்படுகின்றார்.
அவைகளை மட்டும் குறித்துக் கொள்ளுங்கள். அக்குறிப்புகள் இங்கே எனது டைரியில் இருக்கின்றன.”
மாணவன் :
“(நகை முகத்துடன்) மிக மிக நன்றி சார்? தயவு
செய்து கூறுங்கள்.”
ஆசிரியர் :
“(¨டா¢யைப்
பிரித்து) ரிக்வேதம் (10, 12, 166 வது சூத்திரங்கள்)
மார்க்கண்டேய புராணம் (அதிகாரம் 50 பக்கம் 150)
கூர்ம புராணம் (பாகம் 1 அதிகாரம் 33 பக்கம் 51)
ஸ்காந்த புராணம் (அதிகாரம் 37 பக்கம் 148)
சிவ புராணம் (அதிகாரம் 4 பக்கம் 24)
இலிங்க புராணம் (அதிகாரம் 47 பக்கம் 68)
விஷ்ணு புராணம் (பாகம் 2 அதிகாரம் 1 பக்கம் 77)
பாகவதம் (5-வது ஸ்கந்தம்)
இவற்றுடன் ஒரு சிறந்த வரலாற்றைக் கேளுங்கள்!
பகவான் விருஷபதேவருடைய முதற் புதல்வன் பெயர் பரதன். அவரே இந்நாட்டின்
முதற் சக்கரவர்த்தி. அவர் பெயராலேயே இந்நாட்டிற்கும் பரதகண்டம் என வழங்குவது!”
அறிவுடை :
“என்ன வேடிக்கை. நமது நாட்டின் வரலாற்று ஆசிரியர்கள்
இவைகளைப் பார்த்தில்லையா? பலதரப்பட்ட இந்திய இலக்கியங்களில் பகவான் விருஷபதேவர் ஒரு
சின்னமாகவன்றோ காட்சியளிக்கின்றார். இந்நாட்டிற்குப் பரதகண்டம் என்ற பெயர் வந்த வரலாற்றையாவது
குறிக்கக் கூடாதா? இத்தகைய சிறந்த மாபெரும் தெய்வீகத் தலைவருக்குச் சரித்திரத்தில்
இடங்காணோம்! ஆசிரிய பெரும! இருட்டடைப்பு செய்திருக்கிறார்களே! வெட்கமாயிருக்கிறதே.”
ஆசிரியர் :
“வெட்கப்படவேண்டிய விஷயந்தான். எனினும், நாம்
கூறிய உண்மைகளையெல்லாம் நடுநிலைமையோடு ஆராய்ந்து அறிந்த பேரறிஞர்கள் தங்கள் தங்கள்
நூல்களில் குறிக்காமலும் இல்லை. காலஞ்சென்ற தமிழ் நாட்டு முதுபெரும் புலவரும் தனித்தமிழ்ப்
பெரியாரும் ஆகிய திரு.வி.கலியாண சுந்தரனார் அவர்கள் தாம் இயற்றிய "அருகன் அருகே
அல்லது விடுதலை வழி" "பொருளும் அருளும்" என்ற இரு நூல்களிலும் பகவான்
விருஷப தேவர் வரலாற்றை விரிவாக எழுதியுள்ளார்.
அரசியலில் நிதியமைச்சராகப் பணியாற்றிய (காலஞ்சென்ற) இலக்கிய
டாக்டர். R.K. சண்முகஞ் செட்டியார் அவர்களும், மற்றும் சில தமிழ் அறிஞர்களும் பகவான்
விருஷபதேவர் வரலாற்றுப் புருடர் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
நமது நாட்டு உதவி ஜனாதிபதியும், தத்துவப் பேரறிஞருமாகிய டாக்டர்
இராதாகிருட்டிணன் அவர்கள் தாம் எழுதிய இந்திய தத்துவங்கள் (Indian philosophy) என்னும்
ஆங்கில நூலில் "பாகவத புராணம் விருஷபதேவர் ஜைன மத ஸ்தாபகர் என்பதை ஆமோதிக்கின்றது.
கி.மு. முதல் நூற்றாண்டிலேயே முதல் தீர்த்தங்கரர் விருஷபதேவரை மக்கள் வழிபட்டு வந்தனர்
என்பதைக் காட்ட ஆதாரங்கள் இருக்கின்றன.
வர்த்தமானருக்கும், பார்ஸ்வநாதருக்கும் முன்பே ஜைன மதம் பரவி
இருந்தது என்பதில் சந்தேகமில்லை. யஜுர்வேதம், விருஷபர், அஜிதநாதர், அரிஷ்டநேமி ஆகிய
தீர்த்தங்கரரின் பெயர்களைக் கூறுகின்றது" என அழகாக எழுதியுள்ளார்.
மற்றொரு அறிஞராகிய N.N.Basu என்பவர், ஹிந்தி விஸ்வகோசா
(Hindi Visvakosa) என்ற நூலில், விருஷபதேவர் தான் முதலில் எழுதுங் கலையைக் கண்டுபிடித்தார்.
பிராமி எழுத்துக்களைக் கண்டு பிடித்தவரும் அவரே. அதனால்தான் அவர் 8-வது அவதாரமாகக்
கருதப்படுகிறார்.
அவர் இந்திய அரசர் நாபி ராசருக்கும் அவர் மனைவி மருதேவிக்கும்
பிறந்தவர். பாகவதத்தில் 22 அவதாரங்களில் 8-வது அவதாரமாகக் கூறப்படுகிறது" என விளக்கியுள்ளார்.
இன்று பூமிதான இயக்கம் நடத்திவரும் ஆச்சாரிய வினோபாஜீயும்
பகவான் விருஷபதேவரைப் போற்றுவதுடன் அவர் இயக்கமும் பகவான் அருளிய 'மிகு பொருள் விரும்பாமை'
யெனும் பேரறத்தின் அடிப்படையேயாகும்'.”
இவ்வரலாற்றுச் செய்தியைக் கேட்டதும் ஏதோ சிந்திப்பதுபோல் மெய்ம்மறந்து
சிலையை நோக்கினர்! முகங்கள் பொலிவுற்றன! புன்முறுவல் கொண்டனர்! ஆனந்தக் கண்ணீர் சொரிந்தனர்!
ஆசிரியரையும் மறந்து அசையாமல் மெளன முற்றனர்.
மாணவர்களின் உள்ளத்தூய்மையை
அறிந்த
ஆசிரியர்
"மாணவ மணிகளே! உலகையே மறந்துவிட்டீர்கள் போலும்!"
என்றார்.
உடனே மாணவர்கள் உணர்ச்சியுற்று
"எங்கள் பேராசியரே! எம்மான் எங்கள் தலைவன்! எம்மான் எங்கள்
ஆசிரியன்! எம்மான் எங்கள் முனிவன்! எம்மான் எங்கள் இறைவன்! எம்மான் எங்கள் அறிவு! எங்கள்
உயிர்! எங்கள் உடல்! எங்கள் உள்ளம்! எல்லாம் அவனே! ஆசிரிய பெரும! எம்மானை வணங்கவேண்டும்!
எம்மானைப் பாட வேண்டும்! எம்மானைப் போற்றவேண்டும்! எம்மானை எங்கள் உள்ளத்தில் பிரதிஷ்டை
செய்ய வேண்டும்! எம்மான் திருமொழியை உலகெங்கும் பரப்பவேண்டும்!
ஆசிரியர் :
“மாணவர்களே! இப்பொழுது இரண்டாங் குறளின் உரை
காண்கிறீர்கள் போலும்!”
அறிவுடை :
“ஆமாம் சார்! எங்கள் இருவருக்கும் இரண்டாம்
குறளைப் பற்றி அடிக்கடி விவாதம் நடக்கும். திருக்குறளாசிரியர் கடவுளை வழிபடுமாறு கற்றவர்களைத்தான்
வற்புறுத்துகிறார், பாமர மக்கள் ஏன் கோயிலுக்குப் போகவேண்டும் என்பார் ஆனந்தன்! யான்
அதை மறுத்து, கற்றவர் கடவுளைத் தொழுதால் மற்றவர் அவர்களைப் பின்பற்றிப் பயன் பெறுவார்கள்
என்பதுதான் அக் குறளின் கருத்து என்பேன்!
இன்று இருவர் கருத்தும் பொய்த்துவிட்டது. அகர முதலாகிய எழுத்துக்களைக்
கற்பித்த முதல் ஆசிரியன்! வர்க்க பேதமற்ற சமுதாயத்தை அமைத்தருளிய அரசியல் முதல் தலைவன்!
இன்னான் இனியன் என்றிராமல் அனைவருக்கும் அறம் வகுத்த முதல் அறவோன்! என்ற எம்மான் வரலாற்றின்
அருமைப் பெருமைகளை அறிந்த எவரும் அவரைப் போற்றாமலிரார்!
அப்பெருமைகளை அறிந்துகொள்ளும் ஆற்றலும் கற்றவருக்கே உண்டு.
மேலும் குறளாசிரியர் சமுதாய ஆரம்ப காலத்தையும் எழுத்துக்களின் தொடக்கக் காலத்தையும்
விளக்கவே "ஆதிபகவன் முதற்றே உலகு" என்றார். எனவே உலக முதல் பேராசிரியராய்
விளங்கும் தனிப் பெருந்தகையை வழிபடவேண்டியது கற்றவர் கடமை! இங்கே பக்தியின் காரணமென
உரைகொள்வது பொருந்தாது. கடமை உணர்ச்சியைக் கற்றவர்களுக்கு நினைவுறுத்தவே,
"கற்றதனாலாய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழா ரெனின்"
என்றார். நமது தமிழ்மறை தந்த ஆசிரியர் பெருமான்! இன்று எங்களிருவருக்கும்
ஏற்பட்ட உணர்ச்சிப் பெருக்கே கற்றவர் எவர்க்கும் ஏற்படும் உணர்ச்சி! இதுவே இரண்டாம்
குறளின் உரை என்றால் மிகையாகாது! அறிவுசான்ற ஆசிரியரே பிழையிருப்பின் பொறுத்தருள்க!”
ஆசிரியர் :
“சீரிய கருத்து! குறளாசிரியரின் உட்கருத்தும்
இதுதான்! அஞ்ச வேண்டாம்! எங்கும் உரைக்கலாம். மறுக்க முடியாது?”
ஆனந்தன் :
“ஐயா, தாங்கள் முதற் குறளின் கருத்தை நன்கு
விளக்கிக் கூறினீர்கள்! யாங்கள் இரண்டாம் குறளின் விரிவுரையாக விளங்கினோம்! மற்றக்
குறள்களின் கருத்துக்களை ஆராய்வானேன்! ஆதிபகவன் வகுத்த அறமே என்பது உறுதி!
ஆசிரியர் :
“ஆனந்தா! ஆழ்ந்த கருத்து! வரவேற்கின்றேன்!
ஆனால் ஒன்று! நீ சைவ சமயம்! அவர் வைணவம்! இருவருக்கும் இந்த உணர்வு நிலைத்திருக்குமா
என்பதுதான் சந்தேகம்!”
ஆனந்தன் :
“ஆசிரியர் பெரும! சமயமா? தாங்கள் ஆதீஸ்வரரின்
வரலாற்றை விளக்கி வருகையில் எங்கள் உணர்ச்சியை சமயமோ சாதியோ தடை செய்யவில்லை! உயிரும்
உள்ளமும் கலந்து போற்றினோம்! மேலும் பகவான் விருஷபதேவர், சமயம் என்ற பெயராலோ மதம் என்ற
பெயராலோ அறம் வகுக்கவில்லை! பொதுவாக உலக மக்களுக்கெனவே அறம் என்ற பெயரால் தமது கொள்கையைப்
பரப்பினார்! யான் உலகில் ஒருவன் அன்றோ! அத்தூயோனை வழிபடவேண்டிய கடப்பாடுடையவனல்லவா!
சமயக் கண் கொண்டு பார்த்தாலும் சிவபுராணம், ஸ்கந்தபுராணம், ஆகியவைகளில் பகவான் விருஷபதேவர்
போற்றப்படுகின்றார் என்றால் யானும் அவ்வழியைப் பின்பற்றுவது தவறாகுமா?
ஏதோ இடைக்காலத்தில் சமயக்காழ்ப்பு நூல்களைக்கொண்டு உலகிலேயே
ஒப்பாரும், மிக்காரும் இன்றி சிறந்து விளங்கிய ஒரு மாபெருந் தலைவரை மறக்க முடியுமா?
அறிவியல், அருளியல், அரசியல், உலகியல், பொருளியல் ஆகிய உலகக் கலைகளுக்கே உறைவிடமாய்க்
காட்சியளிக்கும் எம்மானை வணங்காத தலையும், தலையா? பாடாத நாவும், நாவா? பணியாத உடலும்
உடலா! தொழாத கரங்களும், கரங்களா? மனித சமுதாயத்தின் மாண்புறு தலைவனை மறப்பதா? ஆசிரியரே!
எம்மான் தாளை வணங்கி அவர் மெய்ப்பொருளின் வழி நிற்பேன்.”
ஆசிரியர் :
“ஆனந்தா! மெச்சினேன் உனது உறுதியை?”
ஆசிரியர் :
“நமது அறிவுடைய நம்பியின் கருத்து யாதோ?”
அறி-நம்பி :
“ஆசிரியரே! வைஷ்ணவ சமயத்தின் வரலாற்று நூலாக
விளங்கும் பாகவதமே பகவான் விருஷபதேவரை விஷ்ணுவின் 8-வது அவதாரமாகப் போற்றுகிறதென்றால்
அவ்வழியில் வந்த நான் அப் பகவானை வழிபடும் உரிமையுடையவனல்லவா? நமது நண்பர் ஆனந்தம்
கூறியதுபோல் பிற்கால நூல்களைக் கொண்டு, முற்கால நிகழ்ச்சிகளை, மறப்பதும், பழிப்பதும்,
அறியாமையாகும்!
கி.மு. முதல் நூற்றாண்டில் நாடெங்கும் போற்றிய எம்மானை பிற்காலத்தில்
மக்கள் மறந்தனரென்றால் ஏதோ சமய வெறியின் திருவிளையாடலாகத்தான் இருக்க வேண்டும்! மனித
சமூகத்துக்கன்றி மண்ணுயிரனைத்திற்கும் வாழ்வளிக்கும் அறம் அன்றோ ஆதிபகவன் திருவறம்!
அத்தகைய சிறந்த அறநெறிகளைப் பழிக்கும், இன்றைய சமய வாதிகள்
தங்கள் பண்டைய சமய நூல்களைப் புரட்டிப் பார்க்கட்டும்! அங்கே பகவான் விருஷபதேவர் தரிசனமளிப்பதைக்
கண்டு வெட்கப்படுவர். வைதீக சமயத்தின் முதல் நூல் எனப் போற்றப்படும் வேதங்களிலேயே பகவான்
விருஷபதேவர் துதிக்கப்படுகின்றார் என்றால்,
யான் அப்பெருந்தகையை வழிபடுதல் அறமும், கடமையும், முறைமையும்
அன்றோ! எனவே, எனது பேராசிரியரே! இன்று போல் என்றும் நமது இறைவனும் ஆதீஸ்வரரைப் பணிவேன்!
அவர் அறங்களைக் கடைப்பிடிப்பேன்!”
ஆசிரியர் :
“உணர்ச்சி மிக்க நம்பி! உனது உரை உயிர்பெற்று
விளங்குகிறது! ஆனந்தனும், நீயும் எனக்கே, ஒரு புத்துணர்ச்சியைப் புகுத்தி விட்டீர்கள்!
நானும், சைவ சமயத்தைச் சார்ந்தவன் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். யான் காலஞ்சென்ற
தமிழ்ப் பெரியார் திரு.வி.க. அவர்களின் சொற்பொழிவுகளை அடிக்கடி கேட்பதுண்டு.
அவர் சைவமும், ஜைனமும் ஒன்றே என்று பல மேற்கோள்களுடன் பேசுவார்.
இராவ்பகதூர் A. சக்கரவர்த்தி நயினார் M.A.I.E.S. (RTD) அவர்கள் வெளியிட்ட நீலகேசி,
மேருமந்தரபுராணம், சமயசாரம், திருக்குறள் ஆங்கில மொழிபெயர்ப்பு முதலிய நூல்களையும்,
காஞ்சிபுரம் உயர்திரு. தி. அனந்தநாத நயினார் எழுதிய "திருக்குறள் ஆராய்ச்சியும்,
ஜைன சமய சித்தாந்த விளக்கமும்" என்ற நூலையும் ஜீவபந்து T.S.ஸ்ரீபால் எழுதிய இளங்கோவடிகள்
சமயம் யாது? பகுத்தறிவும், சமதர்மமும், ஆதிபகவனும் ஆச்சாரிய வினோபாஜீயும் எனும் மூன்று
நூல்களையும் வாசித்தேன். அவைகளின் வாயிலாக பல உண்மைகளை அறிந்தேன்.
பிறகு திருக்கலம்பகம் எனும் சமண நூலில்,
"ஒருமொழியி னுயிர்பரந்த மருள்மருவா வருண்முதல்வனை
மூவிலையொரு நெடுவேலின்-மேவாத வினையவுணர்
குன்றுபட நூழிலாட்டி-வென்றட்ட விறல்வெகுளியை
மூவெயிலின் முரண்முருக்கி-மூவர்சர ணடைய நின்றனை
சுருப்புநாண் வில்லிபட-நெருப்புமிழ் நெடுநோக்கினை
கோள்வலிய கொடுங்கூற்றைத்-தாள்வலியின் விழவு தைத்தனை
பரிவில்கே வலக்கிழத்தி-பிரிவில்லா வொருபாகனை
யான்றமெய் யறம்வளர்க்கும்-மூன்றுகண் முனித்தலைவனை
யாலநெடு நிழலமர்ந்தனை-காலமூன்று முடனளந்தனை
தாழ்சடை முடிச்சென்னிக்-காசறுபொன் னெயிற்கடவுளை"
எனவரும் வரிகளைப் படித்தேன், திகைத்தேன்!
என் உள்ளத்தில் குடிகொண்டிருந்த சமயவெறி சொல்லாமல் மறைந்துவிட்டது!
மேலே கூறியவரிகளால் நாம் அறிந்துகொள்ளும் உண்மைகளைப் பாருங்கள்.
வினைகளை வென்று பகவான் விருஷபதேவர் தவமியற்றி வீடுபேறு பெற்ற
இடம் கயிலாயம். சிவபெருமான் வீற்றிருக்கை கயிலாயம். பகவான் விருஷபதேவருக்குச் சின்னம்
விருஷபம். சிவபெருமானுக்கு வாகனம் விருஷபம். பகவான் விருஷபதேவர் ஆலமரத்தின் கீழிருந்து
அறமுரைத்தார். சிவபெருமான் இருக்கையும் ஆலமரம். பகவான் விருஷபதேவர் பல மாதங்கள் அசையாமல்
கடுந்தவம் புரிந்தார்.
அதனால் தலையில் சடை வளர்ந்தது! சிவபெருமானுக்கு சடை இயற்கை.
பகவான் விருஷபதேவர் வினையெனும் அவுணரைத்துரத்த நற்காட்சி, நன்ஞானம், நல்லொழுக்கம் ஆகிய
மூன்று அறங்களையுடைய ஆயுதத்தை உபயோகித்தார்.
இங்கே சிவபெருமான் கொடிய அவுணரைக் கொல்ல மூன்று முனைகளையுடைய
சூலாயுதத்தை தாங்கியுள்ளார். பகவான் விருஷபதேவர் ஐம்புல அடக்கத்தால் காமனை வென்றார்.
சிவபெருமான் காமனை எரித்தார். நந்தியெனும் அறத்தின் பெயர்கொண்டு தருமநந்தி, கனகநந்தி,
விஜயநந்தி, பவணந்தி, என சமண முனிவர்களின் பெயர்களில் போற்றப்பெறுகின்றன.
சைவ சமயத்திலும் நந்தி போற்றப்படுகிறது! பகவான் விருஷபதேவர்
கேவல ஞானம் பெற்று விளங்கினார். அதனால் கேவலக்கிழத்தியை பிரியாத ஒரு பாகன் என்று புலவர்
போற்றினர். இங்கே சிவபெருமான் பார்வதியை ஒரு பாகத்தில் பெற்றுள்ளார்.
பகவான் விருஷபதேவருக்குத் தான் முதன் முதல் சிவன் என்ற பெயர்
இருந்ததாக கி.மு. நூற்றாண்டுகளில் காணப்படும் இலக்கியங்களில் பொறிக்கப்பட்டுள்ளன. அவர்
வீடுபேறடைந்த இன்ப நிலைக்கும் சிவகதி என்றும் பெயர்! எனவே, சிவன் என்ற சொல்லும் இங்கே
சைவமும் ஆண்டு வருகிறது.
இரு கடவுளருக்கும் கைலாசநாதர் என்றும் பெயர். பகவான் விருஷபதேவர்
பரிநிர்வாணமடைந்த தினத்திற்கு சிவராத்திரி யென்றே வழங்கப்பெறும்.
எனவே இவ்விரு சமயங்களின் இறைவன் நிலையை ஒப்பிட்டுப் பார்க்கும்போது
ஒருமைப்பாடு காணப்படுகிறது! வைணவ சமயமோ பகவான் விருஷபதேவரை தங்கள் கடவுளாகவே ஏற்றிப்
போற்றுகின்றது.
ஆகவே சிவபெருமான், மகாவிஷ்ணு முதலிய சிலைகளில் அமைந்துள்ள
ஆடை, ஆபரணங்கள், சங்கு, சக்கரம். சூலாயுதம், மண்டையோடு, எலும்பு மாலைகள், மயிர்க்கயிறுகள்
ஆகியவற்றை நீக்கி அசல் உருவத்தை நோக்கினால் அவை பகவான் விருஷபதேவரே என்பது தெளிவாகும்.
ஆசிரியர்:
“திருக்குறள் கடவுள் வாழ்த்தில் கூறப்படும்
இறைவன் பண்புகள் அங்கே காணப்படும்! துறவு, தவம் என்ற அதிகாரங்களின் இலக்கணம் புலப்படும்.
இதுபோன்றே கொள்கைகளிலும், காணலாம்! பகவான் விருஷபதேவர் அறம்,
"தன்னுயிர் தான் பரிந்தோம்பு மாறுபோல்
மன்னுயிர் வைகலும் ஓம்பி வாழுமேல்
இன்னுயிர்க் கிறைவனாய் இன்ப மூர்த்தியாய்
பொன்னுயிராய்ப் பிறந்து உய்ந்து போகுமே!"
-சீவகசிந்தாமணி.
"விரையார் மலர்மிசைவருவார் திருவறம் விழைவார்
கொலையினை விழையார்பொய்
யுரையார் களவினை யொழுகார் பிறர்மனை யுவலார்
மிகுபொருள் உவவார்வெஞ்
சுரையால் உணர்வினை யழியார் அழிதசைதுவ்வார்
விடமென வெவ்வாறும்
புரையார் நறவினை நுகரார் இரவுணல் புகழார்
குரவரை இகழாரே"
- திருக்கலம்பகம்.
"கதமொழிதீர்மின் கறுவுகள் தேய்மின் கருணைநெஞ்சோடு
இதமொழிகூறுமின் இன்னுயிரோம்புமின் எப்பொழுதுஞ்
சுதமொழிகேண்மின் சுகமிகவேண்டில் துறவர்சொன்ன
வதமொழியோன்மின் இவைசினனார் திருவாய்மொழியே"
- திருநூற்றந்தாதி.
தன்னுயிரைப்போல் மன்னுயிரைக் காத்தலும், கொல்லாமை, பொய்யாமை,
கள்ளாமை, பிறர்மனை நயவாமை, மிகுபொருள் விரும்பாமை, கள்ளுண்ணாமை, ஊனுண்ணாமை, தேனுண்ணாமை,
குரவரை இகழாமைப் போன்ற நல்லொழுக்கங்களை மேற்கொள்ளலும்,
அன்பு, இன்சொல், கருணை, சாந்தம், நல்லெண்ணம், நன்மொழி, நற்பணி
போன்ற உயரிய பண்புகளை வாழ்க்கையின் சின்னங்களாக அமைத்தலுமாகிய இயல் நெறிகளை ஏற்காத
மாந்தரும் இருக்கவியலுமோ?
எனவே மக்களனைவரும் இவ்வறநெறிகளை மேற்கொண்டு பல நூற்றாண்டுகள்
வாழ்ந்தனர். பின்னர் சமூகத்தில் பல பிளவுகள் ஏற்பட்டன. அதன் காரணமாக அவரவர்கள் வெவ்வேறு
கொள்கைகளைக் கொண்ட புது சமுதாயங்களைச் சிருட்டித்தனர்.”
அறிவு-நம்பி :
“ஐயா! பிளவுக்குக் காரணம்?”
ஆசிரியர் :
“நம்பி! சிக்கலான கேள்வி. அதை விளக்க விரும்பவில்லை.
பொதுவாக யான் கூறும் வரலாற்றில் உனது கேள்விக்குரிய பதில் கிடைக்கும்.
அறிவு-நம்பி : “மன்னிக்க
வேண்டும்! மேற்கொண்டு கூறுங்கள்!”
ஆசிரியர் :
“அப் புதுக் கொள்கைக்காரர் தங்கள் பிரிவுகளுக்கு
சமயம் அல்லது மதம் எனப் பெயரிட்டனர். நம்பிக்கையும் கடவுள் பக்தியும் அவர்கள் கொள்கைகளுக்கு
அடிப்படை. எனினும் பகவான் விருஷபதேவர் அருளிய அறங்களில் சிலவற்றையும் மேற்கொண்டனர்.
ஆனால் கடவுளின் பெயராலும் மதத்தின் பெயராலும் அவர்கள் புரியும்
வழிபாடுகளில் அந்நல்லறங்கள் ஒளிந்து ஒளிந்து நிற்கவேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. இந்நிலையை
உணர்ந்தே நமது திருக்குறளாசிரியர் பின்வரும் சில குறள்களால் அவ்வேற்றுமைகளை விளக்கி
அறத்தின் இயல்பை நிலை நாட்டுகின்றார்.
"ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
பின்சாரப் பொய்யாமை நன்று"
"நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக்
கொன்றாகும் ஆக்கம் கடை"
"அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று"
"கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை
சொல்லா நலத்தது சால்பு"
"கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்"
"தினற்பொருட்டாற் கொல்லாதுலகெனின்யாரும்
விலைப்பொருட்டால் ஊன்தரு வாரில்"
இவை போன்று வேறு பல குறள்களும் இருக்கின்றன.”
பகவான் விருஷபதேவர் அறம் பூரண அஹிம்ஸையை உடையதென முன்னமே அறிந்துள்ளோம்.
அறிவையும் ஒழுக்கத்தையும் அடிப்படையாகக்கொண்டது.
தமது கொள்கைகளை வளர்க்கப் பகவான் வகுத்த திட்டங்கள் மகத்தானவை.
மக்கள் எவ்வளவுக்கெவ்வளவு கல்வியறிவு பெறுகின்றார்களோ அவ்வளவுக்கவ்வளவு அவர்கள் வாழ்க்கை
நலமும் உயர்ந்து நிற்கும்!
எனவே அம்முனைவன் முதல் முதல் எழுத்துக்களையும் அறிவுக்கலைகளையும்
சிருட்டித்தார். அக்கலைகளில் அறிவையும் ஒழுக்கத்தையும் வற்புறுத்தி நற்காட்சி, நன்ஞானம்,
நல்லொழுக்கம் ஆகிய மூன்று இரத்தினங்களை மக்கள் வாழ்க்கைக்குரிய ஆபரணங்களாக வழங்கினார்.
சமூக முன்னேற்றத்திற்குத் தடையாயிருப்பவை மூட நம்பிக்கைகள்.
அவைகளை அகற்றினாலன்றி எந்த நல்லறமும் நல்லறிவும் வளர்ச்சியுறாது. எனவே உலகமூடம், தேவமூடம்,
பாஷண்டிமூடம் எனும் மும்மூடப் புலிகளைக் கண்டு அஞ்சி அகலுமாறு எச்சரிக்கை செய்தார்.
மக்களின் வாழ்வும் தாழ்வும் பெருமையும் சிறுமையும் அவரவர்கள் முயற்சியைப் பொறுத்தனவேயன்றி
பிறரோ, பிறசக்திகளோ காரணமாகாதென அறிவுறுத்தி முயற்சியில் ஈடுபடச் செய்தார்.
எனவே அறிவையும் ஒழுக்கத்தையும் அடிப்படையாகக்கொண்ட அப்பழமைவாய்ந்த
திருவறம் இன்றும் நின்று நிலவுகிறது! சீரும் சிறப்பும் பெற்றுப் பலர் புகழ் ஞாயிறெனத்
திருக்குறளாகக் காட்சியளிக்கின்றது! இவ்வேறுபாடுகளை அந்தந்த சமய நூல்களில் காணலாம்.
மாணவர் :
“அன்புசால் ஐயா! நன்கு புரிந்துகொண்டோம்.
பிற்காலக் கொள்கையாரிடம் அன்பும் அறமும் பேசப்படுவதாயினும் அங்கே அவைகளுக்கு உள்ளங்கனிந்த
வரவேற்பில்லை. கபாலிக, வாம மார்க்கக் கொள்கைகளுடன் அந்நற்பண்புகள் உறவாட நடுங்குகின்றன!
தாங்கள் விளக்கங்கொடுத்து வரும்பொழுதே புதிய கொள்கைகளைக் கொண்ட நூல்களின் நுணுக்கங்களை
யெல்லாம் ஆங்காங்கு மனத்தால் ஆராய்ந்து கொண்டோம்! பாவம்! அன்பும் அறனும் தாயுமான சுவாமிகள்
பாடலிலும் இராமலிங்கசுவாமிகள் அருட்பாவின் ஆறாந்திருமுறையிலுந்தான் மூச்சு விடுகின்றன!”
ஆசிரியர் :
“பொன்னை வாங்குகிறவர்கள் அப்பொன்னை நிறுத்து
அறுத்து சுட்டு, உரைத்துப் பரிட்சிப்பது போல் அறத்திறனையும் ஆராயும் பேரறிவு உங்களிடம்
உறைந்துள்ளதை இன்றுதான் அறிந்தேன்!”
"எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பதறிவு"
என்ற குறள் மொழிப்படி,
மெய்ப்பொருளைத் தெளிந்துரைத்தீர்கள். இவ்வேறுபாடுகளையெல்லாம்
நன்கு ஆராய்ந்த பின்னரே எனக்குப் பகவான் விருஷபதேவர் அறங்களில் பற்றும் அவர்பால் அறாத
அன்பும் ஏற்பட்டது! ஒரு மலையில் உற்பத்தியாகி ஓடிவரும் ஆற்றுநீரை ஆங்காங்குள்ள மக்கள்
சிறு சிறு கால்வாய்களாகப் பிரித்து நீரைக் கொண்டுபோவதுபோல எல்லா சமயங்களும் பகவான்
விருஷபதேவர் அருளிய வழியையே பின்பற்றிச் சிறிது மாறுதல்செய்து கொண்டார்களேயன்றி வேறில்லை!
இம்மாறுதல்களால் மக்களுக்குள் பிரிவு மனப்பான்மையும், உட்பகையும், சமயக் காழ்ப்பும்,
சாதிச் சண்டையும், மற்றும் பல தீமைகளுந்தான் வளர்ந்தன!”
ஆனந்தன் :
“ஆமாம் சார்! சமயச் சார்பற்றப் பகவான் விருஷபதேவர்
அறநெறிக்கு ஜைன சமயம் அல்லது சமண சமயம் என்ற பெயர் எவ்வாறுண்டாயிற்று?”
ஆசிரியர் :
“அவசியமான கேள்வி! பகவானுக்குப் பின்னர் சமயம்
என்ற பெயரால் பல பிரிவுகள் ஏற்பட்ட வரலாற்றை முன்னரே கூறியுள்ளேன். அப்பிரிவினர்களாலேயே
இவ்வறநெறிக்கும் சமயம் என்ற பெயர் சூட்டப்பெற்றது.
ஆதீஸ்வரர் தவமியற்றி வினைகளை வென்றார். வினைகளை வென்றமையால்
அவருக்கு வடமொழியில் ஜினன் என்ற பெயர் வழங்கலாயிற்று. துறவியாகி தவம் செய்தமையால் அத்துறவியை
வடமொழியில் சிரமணர் என்றழைத்தனர். ஜினன் என்றால்
வென்றவன்! சிரமணர் என்றால் துறவி. இவ்விரு பெயர்களைக்கொண்டே அவரால் தோற்றுவிக்கப்பெற்ற
அறநெறிகளுக்கு ஜைன சமயம், சமண சமயம் என்று பெயரிட்டனர்.
ஆனால் ஜைன சமய நூல்களில் தங்கள் அறங்களைச் சமயம் என்றோ மதம்
என்றோ எங்கும் குறிப்பிடவில்லை. சமண சமயம். ஜைன சமயம் என்பதெல்லாம் பிறரால் அழைக்கப்பெற்று
வழக்காற்றில் வந்துள்ளதேயன்றி அவர்கள் நூலில் எங்குங் காணமுடியாது. தொல்காப்பியர் பகவான்
விருஷபதேவர் அருளிய முதல் நூலைக் குறுப்பிடும்போது,
"வினையின் நீங்கி விளங்கிய அறிவின்
முனைவன் கண்டது முதல் நூல்"
என்றே சிறப்பித்துள்ளார்.”
அறிவு-நம்பி :
“அறிவு விருந்தளித்த ஆசிரியரே! தாங்கள் இதுவரை
அறிவுறுத்திய செய்திகளும், கவிகளும், தோத்திரங்களும் தமிழ் மாணவர்களாகிய எங்களுக்கு
புதியனவாகத் தோன்றுகின்றனவே!
ஆசிரியர் :
“ஆம்! தமிழ் நூல்களில் பகவான் விருஷபதேவர்
வழிவந்துள்ள நூல்கள், தொல்காப்பியம், திருக்குறள், சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம்,
வளையாபதி, சூளாமணி, பெருங்கதை, மேருமந்தரபுராணம், நீலகேசி, யசோதர காவியம், நாலடியார்,
பழமொழி நானூறு, ஏலாதி, சிறு பஞ்சமூலம் போன்ற பதினெண் கீழ்க்கணக்குகளும், அறநெறிச்சாரம்
அருங்கலச்செப்பு, திருக்கலம்பகம், திருநூற்றந்தாதி, தோத்திரத்திரட்டு, திருவெம்பாவை,
திருப்பாமாலை, போன்ற பல நூல்களுமாகும்.
நன்னூல், நேமிநாதம்,
காரிகைகள் முதலிய இலக்கண நூல்கள் வேறு!
இவைகளில் பெரும்பாலும் உங்கள் பாட புத்தகங்களில் பாடங்களாக
வைப்பதில்லை. கடவுள் வாழ்த்து எனப் பல பாட புத்தகங்களில் காணப்படுகின்றன. அவைகளில்
ஜைனத்தோத்திரங்களில் ஒன்று கூட காண முடியாது!
எனவே மாணவர்களாகிய உங்களுக்கு அவை புதியவைகளாகவே இருக்கின்றன!
இந்நிலை மாறி ஜைன சமயக்கொள்கைகளும் கடவுள் வாழ்த்துக்களும் பாட புத்தகங்களில் வரும்படி
செய்தால் மாணவர்களின் அறிவும் பண்பும் வளரும்!
அறிவுடை-நம்பி :
“தமிழ்மொழியின் வளர்ச்சிக்கும் தமிழர் பண்பாட்டுக்கும்
அடிப்படையாகவுள்ளவை சமணர் நூல்கள்தான் போலும்! ஐயா, இது போன்று ஆதீஸ்வரர் கோயில் தமிழகத்தில்
எங்கெங்கே இருக்கின்றன?”
ஆசிரியர் :
“பண்டைய காலத்தில் தமிழகமெங்கும் நிறைந்திருந்தன.
நமது மைலாப்பூர் ஜைனர்களின் உறைவிடமாயிருந்தது. 8-ம் நூற்றாண்டிற்குப் பின்னர் பலகோயில்கள்
மாற்றப்பட்டும் மறைக்கப்பட்டும் போயின!
எனக்குத் தெரிந்தவரை எஞ்சியுள்ள பண்டைய கோயில்களாக உள்ளவை
காஞ்சீபுரத்திற்கருகில், திருப்பருத்திக்குன்றம், அருங்குளம், ஆர்ப்பாகை, மாகரல், திருப்பறம்பூர்,
கரந்தை, திருமலை, சித்தாமூர், திருநறுங்கொண்டை, தீபங்குடி, தஞ்சை முதலிய இடங்களிலும்.
மதுரை (ஜில்லாவில்) மாவட்டத்தில் சமணர்மலை, விருஷபமலை, ஆனைமலை,
நாகமலைகளிலும்,
கோயமுத்தூர் மாவட்டத்தில் திருமூர்த்திமலை, விஜயமங்கலம், திங்களூர்,
சீனாபுரம் முதலிய இடங்களிலும்,
புதுக்கோட்டை சமஸ்தானத்தில் சித்தண்ணவாசல்,
திருநெல்வேலி ஜில்லாவிலுள்ள கழுகுமலை மற்றும் பல பாகங்களிலும்
ஆங்காங்கு சிலைகள் மட்டும் காணப்படுகின்றன.
ஆதீஸ்வரரை 'எம்மான்' என்று இங்கே அன்புடன் அழைப்பதுபோலவே,
எம்மான்பூண்டி, திருமூர்த்திமலை, எம்மானேஸ்வரம், சாமிமலை, அப்பன் கோயில், ஐயன்கோயில்
அப்பாண்டை நாதர் என்றெல்லாம் அழைத்து வழிபாடியற்றிய இடங்களும் இருக்கின்றன.
(சென்னை செளக்கார்பேட்டையில் இரு கோயில்களும் சுப்பிரமணிய
முதலி வீதி 6-ம் நெம்பரில் ஒரு கோயிலும் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன)
ஆசிரியர் :
(கைக் கடிகாரத்தைப் பார்த்துவிட்டு) அப்பா மணி மூன்றாகிறது.
நாம் ஏரியைப் பார்த்துவிட்டுச் செல்ல வேண்டுமல்லவா?”
ஆனந்தன் :
“ஆம்! புறப்படலாம். இக்கோயிலை இப்போதுதான்
புதுப்பித்திருக்கிறார்கள் போலிருக்கிறது.”
ஆசிரியர் :
“ஆம்! வடநாட்டு ஜைனப் பெருமக்கள் சென்னையில்
வசிக்கின்றார்கள். அவர்கள் இக்கோயிலை வழிபடவருவதுண்டு. அது சமயம் இக்கோயில் பாதுகாப்பாரின்றி
பாழடையும் நிலையில் இருந்தது. உடனே அவர்கள் முயற்சி எடுத்துக்கொண்டு இவ்வளவு அழகாகவும்
வசதியாகவும் அமைத்துள்ளார்கள்!
வடநாட்டு ஜைனர்கள் சென்னையில் பற்பல அறங்களைச் செய்து வருவது
உங்களுக்குத் தெரியும். ஜைன மிஷன் சங்கமும், வாசகசாலை, சென்னை தென்னிந்திய ஜீவரட்சகப்
பிரசாரசபை, ஜைன உயர்தரப்பாடசாலை, ஜைனக் கல்லூரி, இலவச ஜைன வைத்தியசாலைகள் ஆகியவற்றை
ஆங்காங்கு நிறுவி வருகிறார்கள். இன்னும் பலவித தருமங்கள் அவர்களால் நடைபெறுகின்றன.”
மாணவர்கள் : ஆசிரியரே, உலகுக்கே முதற்றலைவராய் விளங்கியவரையும்,
அம்மாபுருடன் நமது நாட்டில் தோன்றியவரென்பதையும், அவ்வறவோன் வகுத்த அறநெறிகளே உலகெங்கும்
பரவி உள்ளதென்பதையும் அவர் மூத்த புதல்வன் பரதன் பெயராலேயே இந்நாட்டிற்குப் பரதகண்டமென்று
வழங்குகிறதெனும் வரலாற்றையும் இன்று தங்களால் அறிந்துகொள்ளும் பேறு எங்களுக்குக் கிடைத்தது.
இப்போது மற்ற மாணவ மாணவிகளுக்கும், அறிஞர்களுக்கும் கிடைக்கும்படி
ஏற்பாடு செய்ய வேண்டுமென்பது எங்கள் அவா. ஆசிரியரே! பகவான் விருஷபதேவர் பிறந்த நாள்
குறிப்பு ஏதாவது கிடைக்குமா?”
ஆசிரியர் :
“ஓ தெரியும்! அவர் பிறந்த நாள் சித்திரை மாதம்
கிருஷ்ண பக்ஷம் நவமி. அவர் பரிநிர்வாணமடைந்த நாள் மாசி மாதம் கிருஷ்ண பக்ஷம் சதுர்த்தசி.
இப்புனித நாளையே சிவராத்திரி எனக் கொண்டாடுவது.”
மாணவர்கள் :
“எங்கள் குரு மூர்த்தியே! இவ்விரண்டு நாட்களிலும்
பகவான் விருஷபதேவரின் நினைவாக நாடெங்கும் விழா கொண்டாட ஏற்பாடு செய்வது நலம். அதற்கான
முயற்சியில் ஈடுபடுவோம்.”
ஆசிரியர் :
“மாணவர்களே! உங்கள் இருவருக்கும் தோன்றிய
எண்ணம் நமது முதுபெருந் தமிழ் முனிவர் திரு.வி.க. அவர்களுக்கு என்றோ, என்றோ, என்றோ
தோன்றி,
"ஆதிபகவன் சோதிநாதன்
விருஷபதேவன் புருஷநாயகன்
அவனே இறைவன் அவனே ஈசன்
அவனே மாயன் அவனே நான்முகன்
அவனே சித்தன் அவனே அருட்சினன்
அவனே தர்மம் அவனே அஹிம்சை
அவனே அருகன் அருகே அணைந்தால்
விடுதலை வழியைக் கடிதில் பெறலாம்
அவனை எண்ணுவம் அவனை வாழ்த்துவம்
அவன் பணி ஆற்றுவம் அவன் நெறி ஓம்புவம்"
என அருகன் அருகே அல்லது விடுதலைவழி என்ற அரும்பெரும் நூலில்
தமது அவாவை வெளியிட்டுள்ளார்.
எனவே யாமும் பகவான் விருஷபதேவர் விழாக்கொண்டாடி அவர் ஆணையை
நிறைவேற்றுவோமாயின் உலகிலேயே ஒரு புதுசமுதாயத்தைப் படைக்கலாம்!
அஹிம்ஸா தருமம் எங்கும் பரவும்! சகோதர உணர்ச்சியும், தன்னலமின்மையும்,
மிகுபொருள் விரும்பாமையும் நாடெங்கும் வளரும்!
சமரச சன்மார்க்கம் நிலைபெற்று விளங்கும்!
உலகம் சமாதானமாகவும் அமைதியாகவும் காட்சியளிக்கும்!
மாணவத் தோழர்களே! நீங்கள் மனதுவைத்தால் இவ்வுலகை ஆட்டிப்படைக்கலாம்!
மாணவர்களால் எத்தனையோ நாடுகள் முற்போக்கடைந்துள்ள வரலாற்றை நாம் படித்ததில்லையா?
பகவான் விருஷபதேவர் நாளைக்கொண்டாட இன்று முதலே முனைந்து முயலுங்கள்!
உங்கள் எண்ணம் வெற்றி பெறட்டும். பகவான் விருஷபதேவரை வாயார வாழ்த்திச் செல்லுவோம்!
ஆதி வேதம் பயந்தோய் நீ யலர் பெய்ம் மாரி யமைந்தோய் நீ
நீதிநெறியை யுணர்ந்தோய் நீ நிகரில் காட்சிக்கிறையோய் நீ
நாதனென்னப் படுவோய் நீ நவைசெய் பிறவிக் கடலகத்துன்
பாத கமலந்தொழுவேங்கள் பசையாப் பவிழப் பணியாயே.
- சீவகசிந்தாமணி.
மயிலாபுரி நின்றவ ரா¢யாசன
வும்பா¢ன்
மலர் போதிலிருந்தவ ரலர் பூவினடந்தவ
ரயிலார் விழிமென்கொடி மிடைதீபை நயந்தவ
ரமராபதி யிந்திரன ணியாடலு கந்தவர்
கயிலாய மெனுந்திரு மலைமேலுறை கின்றவர்
கணநாயகர் தென்றமிழ் மலைநாயகர் செம்பொனி
னெயிலாரில குஞ்சின கிரியாள்பவர் சம்பைய
ரெனையாள நினைந்துகொல் வினையேனுளமர்ந்ததே.
- திருக்கலம்பகம்.
நல்லார் வணங்கப்படுவான் பிறப்பாதி நான்கும்
இல்லான் உயிர்கட்கு இடர் தீர்த்து உயர் இன்பமாக்கும்
சொல்லான் தருமச்சுடரான் எனும் தொன்மையினால்
எல்லாம் உணர்ந்தான் அவனே இறையாக ஏற்றி.
- நீலகேசி.
திருவறம் வளர்க!”
முற்றும்.
*ஜீவபந்து ஸ்ரீபால்*
அவர்களின் நூலிலிருந்து…..
வழங்கப்பட்டவை…...
பத்மராஜ் ராமசாமி.
No comments:
Post a Comment