இருபத்துநான்கு தீர்த்தங்கரர் துதி




இருபத்துநான்கு தீர்த்தங்கரர் துதி




இந்த அஷ்டகத்தின் பிராகிருத மூல ஆசிரியர் ஸ்ரீ நேமிசந்திர ஆசார்யர் ஆவார்

சமஸ்கிருத கன்னட மொழி பெயர்ப்பினைச் செய்தவர் ஸ்ரீ பத்மநாப சர்மா அவர்கள், கர்நாடகா.
பொருளைத் தழுவித் தமிழில் பெயர்த்தவர் இந்நூலாசிரியர் புலவர் தோ.ஜம்புகுமாரன் அவர்கள், தமிழ்நாடு



திரு. ரவிச்சந்திரன் அவர்கள் இத்துதிப்பாடல்களை தினமும் வாட்ஸ் அப்பில் தொடராக வழங்கி வந்ததின் தொகுப்பு. மிக்க நன்றி



01. ஸ்ரீ ஆதிநாதர் துதி


001. இந்தியம் ஐந்த டக்கி
இயற்றிய தவமென் தீயால்
அந்தமில் வினையாம் காட்டை
அழித்தனை ஆதிநாதா!
சுந்தரக் கவிதைப் பூக்கள்
சொரிந்துநின் பாதம் போற்றும்
சிந்தனை உளத்த ரும்பச்
சேவடி குறுகி னேனே!


002. நடந்தன மலர்மேல்: தேவர்
நலந்திகழ் முடியின் மீதே
நடந்தன அடியார் நெஞ்ச
நளினப் பூமிசையே; அன்று
நடந்தன கானம் நோக்கி
நற்றவம் புரிய; இன்றே
நடந்தன என்னுள்; ஆதி
நாத! நின் நற்றாள் தாமே!


003. பிறபொருள் நோக்கம் கொண்டே
பேணிய ஆன்மாக்கள்தாம் தானும்
உறவரும் உள்நோக் கத்தில்
ஒன்றியே நிற்கு மாயின்
திறனுடை அவைகள் யாவும்
சிவபுரி சேரு மென்றே
அருளுரை பகர்ந்த எந்தாய்!
ஆதியே! தொழுதிட் டேனே!


004. குளிர்ந்தன புவனம் மூன்றும்
குளிர்ந்தது தீவி னைத்தீ
குளிர்ந்தவன் பவனம் புக்குக்
கோதிலாய்! ஆதி! நீயே
குளிர்ந்தநல் லுணவை ஏற்ற
கோலமே கண்டு சிரேயான்
குளிர்ந்தநல் லுள்ளம் போலக்
குளிர்ந்ததே இன்றென் நெஞ்சே!


005. மனத்திலே நின்னை வைத்தேன்
மலரடி தலைமேல் வைத்தேன்
கனந்தரும் நினது சொல்லைக்
கருத்தினில் வைத்தேன்; மூளும்
சினமுத லாதி யான
சிறுமைகள் விலக்கி வைத்தேன்
எனக்கினி குறையொன் றுண்டோ?
எந்தையே! ஆதி நாதா!


006. மணந்தன பிண்டி வாசம்;
மணந்தன மலர்பொன் மாரி;
மணந்தன அறவோர் நெஞ்சம்;
மணந்தரும் உன்றன் பாதம்
மணந்தவத் தாம ரைப்பூ;
மணமைந்தும் கொண்ட நாத!
தணந்தரும் நின்தாள் இன்றென்
மணிமுடி கொண்டேன் யானே!


007. நெறிகுழல் தெய்வ மாதர்
நிருத்தியம் ஆட, ஆயுள்
முரிந்துவீழ் அவலம் கண்டு
முனைவ! நின் உளத்தி னின்றே
இரிந்துசெல் மயலைப் போல
எண்வினைக் கூட்ட மெல்லாம்
தெறித்துமே வீழ்ந்த; உன்றன்
திருவடி மிலைந்த போதே!


008. அலர்ந்ததென் நல்வினைப்பூ
அலர்ந்தது ஞான வாசம்
அலர்ந்தமுக் குடையின் நீழல்
அமர்ந்தருள் ஆதி நாதா!
அலர்ந்த பொற்றா மரைமேல்
அடிதொடா தேகு கின்ற
அலர்ந்தமெல் லடிகள் தம்மை
அணியென மிலைந்த போதே!


009. வியர்த்தன வினைக ளெல்லாம்
வெளிறின புலன்க ளைந்தும்
அயிர்த்தன குரோத மாதி
அடர்க்கரு கஷாயம் நான்கும்
வியத்தகு முக்கு டைக்கீழ்
வீற்றருள் ஆதி நாதா!
உயத்தகும் உன்றன் பாதம்
உச்சிமேல் கொண்ட போதே!


010. முகிழ்த்தது மும்ம ணிப்பூ
முரிந்தன மும்மூ டங்கள்
நெகிழ்ந்தது வினைச்செறிப்பு
நிலைத்தது சமதா பாவம்
யுகத்தினைத் தொடங்கி வைத்த
உறுபுகழ்! ஆதி நாதா!
அகமகிழ் வுற்றே நின்னை
அண்டிநான் தொழுதிட் டேனே!


--0--0--0--0--0--0--0--0--0--0--0--0--0--0--


02. ஸ்ரீ அஜிதநாதர் துதி


011. பவமாம் இருளைப் பலிகொள் சுடரே!
நவமாம் பொருளை நவிலும் குருவே!
சிவமாம் பதமே சிவணும் ஜிநனே!
அவிரோ தியெனும் அஜிதா! சரணம்!


012. புவனம் புகழும் புகல்ற்(கு) அரிதாம்
தவவாழ் வினையே தலைகொள் புனிதா!
அவமே அணுகா அருமா மறைசொல்
அவதூ தியெனும் அஜிதா! சரணம்!


013. கவணின் விரையும் வினையும் அடர
அவதிப் படவோ? அட்டா! வந்தேன்
இவறும் விழைவிற்(கு) இனையும் என்றன்
அவசம் அறுமோ? அஜிதா! சரணம்!


014. கவசப் படையாக் கழறும் விரதமே
இவணே இவணே இனிகை கொளலேல்
பவமே அறுமோ? பகரத் தரமோ?
அவலம் விடுமோ? அஜிதா! சரணம்!


015. நிலையாப் பொருளை மலையா கவெணி
உளையும் நினைவை உரமென் கயிறால்
தளையின் வருமோ? தணலாம் பவமோ?
அலையும் மனமோ? அஜிதா! சரணம்!


016. விடுமேல் விழைவும் விலகும் பவமும்
விடுமேல் சினமும் விலகும் பகையும்
விடுமேல் கருவம் விலகும் துயரும்
அடுமேல் வினைவெல் அஜிதா! சரணம்!


017. பொருள்மேல் பற்றைப் பொடிசெய் மருமம்
எரிமீன் விழலால் எளிதின் உணர
கருமப் பகைகள் கழியக் கழிவாய்
அருளின் உருவே! அஜிதா! சரணம்!


018. ஜிதசத் துருவின் மகனாய் உலகின்
விதமத் தனையும் விரிவாய் சொலுவாய்
கதியத் தனையின் கருவைக் களைவாய்
அதியுத் தமனே! அஜிதா! சரணம்!


019. ஒளிரும் கனகக் கிரியின் ஒளிர்வாய்
தளிர்மெல் லடிமேல் தலைசாய்த் திடவே
வெளிறும் வெளிறும் வினைகள் முழுதும்
அளிமெய்த் தவனே! அஜிதா! சரணம்!


020. மனமத் தனையும் உனதா கிடவே
நினைவைத் தனையும் நினதே நினதே
வினையத் தனையும் அறம்நோக் கினதே
அனையொத் தனையெம் அஜிதா! சரணம்!


--0--0--0--0--0--0--0--0--0--0--0--0--0--0--


03. ஸ்ரீ சம்பவ நாதர் துதி


021. நம்புவ தும்நின(து) அறமொழி ஒன்றே
வெம்புவ தும்வினை யேன்வினை யன்றே
உம்பத மேபெறும் சிந்தனை கொண்டே
சம்பவ னே! உனைச் சரணம் அடைந்தேன்.


022. அம்பர மேயுடை யாயணி முக்தா!
உம்பர மேதொழு துய்ந்தனம் சித்தா!
கம்பமி லாமன முற்றிட வந்தே
சம்பவ னே! உனைச் சரணம் அடைந்தேன்.


023. துன்பப வக்கடல் ஏறுவ தெந்நாள்?
இன்பமு றும்பதம் துய்ப்பது மெந்நாள்?
சண்பக மேகொடு நெஞ்சம் உவக்க
சம்பவ னே! உனைச் சரணம் அடைந்தேன்.


024. வம்பம ரைமிசை செல்வுறு பாதா!
உம்பப தித்தொழு தேத்திடு நாதா!
பம்பர மேசுழல் வொத்தன விட்டே
சம்பவ னே! உனைச் சரணம் அடைந்தேன்.


025. நிம்பமெ னக்கரு தாமலிவ் வாழ்வை
கும்பமெ நத்தன முற்றிடு வார்கண்
அம்புப டத்தரி யாதலர் கொண்டே
சம்பவ னே! உனைச் சரணம் அடைந்தேன்.


026. விம்பம னையத ரம்முடை யார்வாய்த்
தம்பல மேவிழை யும்நினை வுற்றே
இம்ரி குந்தினி வாழ்வதும் வாழ்வோ?
சம்பவ னே!உனைச் சரணம டைந்தேன்


027. அம்பல முற்றக டார்ந்திட வேண்டி
இம்பரி ருந்தினி செய்வினை யென்னும்
தும்பில கப்பட துளியுமெ ணாதேன்
சம்பவ னே!உனைச் சரணம டைந்தேன்


028. கம்பமு றித்திடு மதகரி போலும்
ஐம்பொறி வாய்பட அஞ்சிய லந்தேன்
வம்பரு ழைஅணு காநினை வுற்றே
சம்பவ னே!உனைச் சரணம டைந்தேன்


029. பம்பிடு சீர்த்திட ராஜனின் மைந்த!
சம்பிர மத்தெழு நற்றவ மேசெய்(து)
அம்பத மேகொள சிகரிய ணைந்தாய்
சம்பவ னே!உனைச் சரணம டைந்தேன்


030. சம்புவெ னப்புகழ் சாந்தனும் நீயே!
நம்பனெ னப்படும் நம்பியும் நீயே!
வம்பம லர்க்கொடு வாழ்த்திட எண்ணிச்
சம்பவ னே!உனைச் சரணம டைந்தேன்.


--0--0--0--0--0--0--0--0--0--0--0--0--0--0--


04. ஸ்ரீ அபிநந்தன நாதர் துதி


031. ஆதியெனும் பகவன்குல வல்லியின்
அற்புத மாமுகையே!
சேதியொளிர் மிகுசுக்கில மாகிய
சுந்தர மாமலரே!
காதியிருள்பட கைவல மேந்திடும்
கற்பகப் பூங்கனியே!
ஆதவனாகி யென்னக விருள்போக்கிடும்
அபிநந்தன தேவே!


032. வெந்தது தீவினை; வீழ்ந்தது தீக்கதி
வென்றது நல்லறமே
சொந்த மறுந்தது; பந்த மகன்றது
சூழ்ந்தது நற்புகழே
கந்தமி கும்மல ரேகிய நாத!நின்
கானிழல் தோய்ந்தனமே
அந்தமி லாதுய ராழிகள் வற்றின
அபிநந்தன தேவே!


033. பிறவியெனும்மிருள் அடவியிற் சிக்கிப்
பேதுறும் ஜீவர்களை
அறவுரை யாகிய சேனைகள் கொண்டுமே
ஆபதம் நீக்கினையே!
சுறவுறை மாக்கடல் சூழ்ந்திடு புவியோர்
சோகம றுத்துனையே!
அறிவுரு கொண்டுல கம்முழு தும்மறி
அபிநந்தன தேவே!


034. மனமொழி மெய்கள் மடங்கிடி னேயொரு
மாதவம் வேறிலையே
சினமுத லாகிய தீய வுணர்வுகள்
சேர்வதும் இலையே
தனமுத லாயின நிற்பன வும்மிலை
தாண்டுக! என்றனையே!
அனக!நி னைத்தொழு தேத்திட வந்தேன்
அபிநந்தன தேவே!


.035. எத்தனை அன்னையர்? எத்தனை அன்னையர்?
எத்தனை எத்தனையோ?
இத்தரை மீதினில் ஜெனனம் எடுத்தவை
எத்தனை எத்தனையோ?
மெய்த்தவ மேகொடு பிறவிய றுத்திடும்
மெய்ம்மொழி கூறியவா!
அத்த! நினைப் புகழ்ந்தேத்திட வந்தேன்
அபிநந்தன தேவே!


036. சித்தம் டக்கிடும் செப்பிடு வித்தைகள்
தேர்ந்ததும் ஒன்றிலனே;
மத்தம தக்களி றொத்திடும் ஐம்பொறி
மாய்கை தெளிந்திலனே;
நித்தமு முன்பதம் நத்தி வணங்கிடும்
நீர்மை அறிந்திலனே;
அத்தம் னம்பட நின்றதெ னாயுளும்
அபிநந்தன தேவே!


037. துங்கமு றும்கவி ஆயிரம் பாடினும்
தோய்ந்திட லோ? இல்லை;
பங்கமி லாவிர தம்பல் நோற்பினும்
பவ்விய னாகவிலை;
புங்கவ ராயெழ எண்ணினும் எனோ?
புழுதியில் அளைகின்றேன்;
அங்கணத் தேவிடும் அமுதம தாயினேன்
அபிநந்தன தேவே!


038. புண்ணிய யோகின் கண்ணிய நிலையைப்
போற்ற அறிந்திடினும்
பொன்னிற மேனிப் புங்கவ னே! நின்
பொன்னடி தாழ்ந்திடினும்
மின்னலின் மறையும் வாழ்வினி யல்பினை
மேன்மே லோர்ந்திடினும்
அன்னியமே படநிற் பதென்விதியோ?
அபிநந்தன தேவே!


.039. கவ்விடு மாசைக் கெல்லையு மில்லை
காண்பதும் ஒன்றில்லை
வவ்விடு பொருளை, வாரியிறைப் பினும்
வருவதும் ஒன்றில்லை
துவ்விட பற்பல பொருள்க ளிருந்தும்
துக்கம் குறையவில்லை
அவ்விய மாமல ரடியினி லிட்டேன்
அபிநந்தன தேவே!


040. மூங்கைய னென்றே வாழ்வதும் வாழ்வோ?
மூள்வது தீவினையோ?
பாங்கறி யாவறம் பற்பல செய்யினும்
பாவ மகன்றிடுமோ?
வேங்கையி னீழல் நோற்றிடு தவனே!
வீழ்ந்திட மனமில்லேன்
ஆங்கெது நலமோ? அருளிட வேண்டும்
அபிநந்தன தேவே!


--0--0--0--0--0--0--0--0--0--0--0--0--0--0--


05. ஸ்ரீ சுமதி நாதர் துதி


041. அமிதப் பிறவி நீந்திடுவேன்
ஆத்தும ஞானம் பெற்றிடுவேன்
குமுறும் பகையைப் போக்கிடுவேன்
குணமென் குன்றில் ஏறிடுவேன்
இமயம் போலே துயர்வரினும்
எதிர்கொண் டிடவே அஞ்சுகிலேன்
சுமதி நாதனைக் கண்டதனால்
சுகமே காண்பேன் நிச்சயமே


042. அவதி யனைத்தும் வென்றிடுவேன்
அழியாப் புகழே பூண்டிடுவேன்
உவகை மலரால் அருச்சிப்பேன்
உன்னத வெற்றிகள் சாதிப்பேன்
பவமாம் இருளும் பாறிடவே
படிறில் நோன்பால் வினைகளினைத்
துவமிசம் செய்த சுமதிபாதம்
தூய மனத்தே வைப்பேனே.


043. பகடிகள் ஏழும் நசிதலினால்
பகர்சம் யக்த்வம் தோன்றிடுமே;
விகலம் அறுமே; விரிபொருள்மேல்
விரியும் பற்றும் அற்றிடுமே;
ககன மளாவும் சிகரிமிசை
கையற வினகள் நோற்றிட்டே
சுககதி உற்றான் சுமதிபதம்
சுகந்த மலரிட் டேத்துவனே!


044. உயிரின் வேறே இவ்வுடலென்(று)
ஓதிய தத்துவ உரைகேட்டே
மயலின் நீங்கி நின்றிட்டேன்
மணிகள் மூன்றும் கொண்டிட்டேன்
வயலுக் கோடும் நீரதனால்
வாய்க்கால் புல்லும் வளராதோ?
சுயமே அறிந்த சுமதியினால்
சுத்தான்ம நிலை தேர்ந்திட்டேன்


045. தோன்றல் திரிதல் நிற்றலெனும்
துகடீர் பொருளால் இஞ்ஞாலம்
கோன்றல் கொண்ட நிலைமையினைக்
கூறக் கேட்டே துயர்விட்டேன்
தோன்றல் இல்லை உயிருக்கே
தொலைதலு மில்லை என்றிட்ட
ஆன்றோர் பணியும் சுமதிபதம்
அடியேன் முடிமேல் பூத்ததுவே.


046. விரியும் பேரொளி ஞானமெனும்
விளங்கும் ஆடியில் எல்லாமும்
தெரியும் என்பதும் ஆகமமே
தீர்த்தன் உரையும் சத்தியமே
அருகன் சுமதியின் திருமொழியே
ஆகம நல்வழி காட்டியென
அறிந்து கொண்டேன் அதனாலே
அவன்தாள் முடிமிசை கொண்டேனே.


047. மோகம் தன்னைக் கொன்றிடுமோர்
முயற்சி என்னுள் பூத்திடுதே
மேகம் விலகிச் சென்றிடவே
மின்னொளி ஞாயிறு தோன்றிடுதே
போகம் மிசையே ஓடிடுமப்
பொறிகள் ஐந்தைப் புறங்கண்டே
சோகம் தீர்த்தச் சுமதியெனும்
சுகவா ரிதியில் தோய்ந்தேனே


048. மேகர தன்னெனனும் மன்னற்கே
மேட்டிமை சேரும் மகவாகி
ஆகரன் ஆனான் நெஞ்சத்தே
அயோத்தி நகரின் இறையானான்
ஏகன் இறையோன் அறவாழி
எல்லா மறியும் முழுஞானி
யோகக் கிரிமேல் சுடர்வீசும்
ஒப்பில் சுமதியைக் கண்டேனே


049. இத்தினம் எனக்கு நற்றினமே
இமயவ ருக்கும் சுபதினமே
நத்திய தீவினை கழிதினமே
நற்காட் சியர்கள் வருதினமே
பத்தியின் பாவலர் தம்குழுவும்
பாடிட அன்பின் கூடிடுமே
சித்தப் தம்சேர் சுமதிக்கென்
செங்கை மலர்கள் கூம்பிடுமே


050. ஐயம் யாவும் அகன்றனவே
ஆகம உட்பொருள் தோன்றினவே
நையும் துயர்ம் நைந்திடவே
நான்என் பதுவும் சென்றதுவே
கையும் வாயும் மொழியாவும்
கர்த்தன் தொண்டிற் கிசைந்தனவே
வையம் சுமதியைப் போற்றிடவே
வாசப் பூமழை பெய்தனவே


--0--0--0--0--0--0--0--0--0--0--0--0--0--0--


06. ஸ்ரீ பத்மப்ரப நாதர் துதி


051. வந்தணையும் போதெல்லாம்
வரவேற்றுப் பரிந்தோம்பி
நொந்திடுவார் துயர்தீர்க்கும்
நோன்மைசால் புரவலர்போல்
வந்தனைசெய் அன்பர்வினை
வழியடைக்கும் நெறிசொல்லிப்
பந்தமறும் பத்துமமாப்
பிரபனடியைப் பணியேமோ?


052. பத்துமமாப் பிரபனடிகள்
பற்றிடினே பற்றுவிடும்
பொத்திவரும் வினைத்தொடரும்
போயொழியும்; புன்மையிலா
பத்தியனால் கசிந்துருகிப்
பரவிநிதம் பூசிப்பின்
கொத்தவரு துயரொழிய
குறையில்சுகம் காணேமோ?


053. புத்தகமே கொண்டுநிதம்
பொழுதெல்லாம் வாசித்தும்
சித்தமதில் தெளிவின்றேல்
சிறுபயனும் விளையாதே
பித்தவுரை சீலத்தார்
பின்சென்றே உழலாமல்
பத்தும்மாப் பிரபனடியைப்
பணிந்தேத்தி உய்யேமோ?


054. பன்னிரண்டு சிந்தனைகள்
பானமையினைத் தோற்றிடுமே
எண்ணிரண்டு பாவனைகள்
இறைபதமே கூட்டிடுமே
முன்னிரண்டு வினையொழிந்தால்
முக்திநிலை வாய்க்குமென
பன்னியம்வெம் பத்துமமாப்
பிரபனடியைப் பணியேமோ?


055. குத்தியொரு மூன்றுடனே
கொள்ளவரு ஐஞ்சமிதி
வித்தினையே விதைத்திட்டால்
வினைவேரைக் கீண்டிடலாம்
புத்தியுளோர் வாருமெனப்
புகன்றருளும் எங்கோமான்
பத்துமமாப் பிரபனடியைப்
பரிவுடனே பணியேமோ?


056. நல்லோர்கள் போய வழி
நாலடிகள் போனாலும்
பொல்லாங்கு நீங்கிவிடும்
புகழ்சேரும் என்றன்றே
சொல்லாமல் சொன்னவுரை
சுகநெறிகாட் டுரையதனால்
பல்லார்செல் பத்துமமாப்
பிரபனெறியைப் பற்றேமோ?


057. மாணிக்க மணிமேனி
மரைமலர்தான் லாஞ்சனமே
காணிக்கை என்னிதயம்
கற்பகந்தான் திவ்தொனியே
தோணிக்கே திருவடிகள்
தொண்டர்க்கே எந்நாளும்
பாணிற்கே பத்துமமாப்
பிரபனடிகள் பாடேமோ?


058. தாமரைக்குச் சூரியனாய்
தணல்வெயிற்கே தருநிழலாய்
தீமைசேர் பிணிதனக்குத்
தேற்றுகின்ற மாமருந்தாய்
ஏமமுறும் திருநயனம்
எம்மடியார்க் கின்புறுக்கும்
பாமமிலாப் பத்துமமாப்
பிரபனடியைப் பணியேமோ?


059. பாதையேம் கைகொண்ட
பயணங்கள் போவார்போல்
ஈதேகம் உளபோதே
ஈட்டிக! புண்ணியமே
பாதோத மிசைசென்ற
பத்துமமாப் பிரபனடியின்
பாதோதகம் தானே
பாவமெலாம் நீக்கிடுமே!


060. காழ்மணிநித் திலமசையும்
கவினெழுமுக் குடைநீழல்
பாழ்நெறியைப் பகராத
பத்துமமாப் பிரபனடியை
ஏழ்பிறப்பும் மறவாமல்
இதயமதில் கொண்டேநாம்
ஊழ்வலியாம் வினைத்தொகையை
உப்பக்கம் பாரேமோ?


--0--0--0--0--0--0--0--0--0--0--0--0--0--0--


07. ஸ்ரீ சுபார்ஸ்வ நாதர் துதி


061. திருவுறை மார்பன்; பொருவரு ரூபன்
கருவறை நீத்தோன் கணநாதன்;
சிறுமை தவிர்த்தோன்; பெருமை தரித்தோன்;
சேர்வினை யற்றோன்; சீமானே!
அறி்வின் பெருக்கால் அகில மளந்தே
அழியா நல்லறம் சொல்வானே
சுருதி முதல்வன் கருது சுபார்ஸ்வன்
சுகமே யருள்வான் தொழுமனமே!


062. பிறவி விளைக்கும் தீவினை போக்கும்;
பேதைமை நீக்கும்; நான்மறையே
அருளி யெவர்க்கும் அவரவர் மொழியில்
அருபொருள் காட்டும் திவதொனியே
பரவிடு மித்யாத் துவமெனு மிருளைப்
பதற விரட்டும் பகலவனே
சுரபதி போற்றும் கருது சுபார்ஸ்வன்
சுடரடி என்றும் தொழுமனமே!


063. பத்ததி சயமே பாங்குற உற்றோன்
பதினெண் குற்றம் நீங்கியவன்
தத்துவ வித்தக ராயின ருள்ளத்
தாமரை நடுவண் தங்கியவன்
நித்தமு றும்வினை வருவழி தூர்த்திடும்
நியமமு ரைத்திடர் போக்கியவன்
சுத்தனை வன்னென நின்ற சுபார்ஸ்வன்
தூய்பதம் நாளும் தொழுமனமே!


064. நிலைபெறு பொருளை நிலையாப் பொருளின்
நீக்கி அறிந்திடின் பூசலிலை
அலைவுறு மனமும் ஒருநிலை படுமே
ஆகம மொழியில் பிழையுமிலை
புலையுட லிதனை உயிரினும் வேறா
போற்றிடு வார்க்கொடு துயரில்லை
கொலைதவிர் பேரறம் மொழியு சுபார்ஸ்வன்
கோமான் அடிமலர் தொழுமனமே!


065. பரவுறு காட்டின் பச்சை நிறமோ?
பரவை நீரின் சிதறொளியோ?
பொருவரு வான்முக டணையும் மலையைப்
போர்த்திய பைம்புல் லாடைகளோ?
சிறகமை பச்சைக் கிளியின் நிறமோ?
செப்பிடும் தரமோ? அவன்வண்ணம்
சுரர்பதி பூமழை பொழியு சுபார்ஸ்வன்
சுந்தர ரூபனைத் தொழு மனமே!


066. துப்புறழ் செவ்வாய் பிருதுவி சேனை
சுடர்மணி உதரம் முற்றவனே;
செப்பிய அதிசயம் முப்பதி நான்கொடு
சீரார் திருவறம் மொழிதவனே;
வெப்புறு பவநோய் விலகிட நோற்றே
விமல மெனும்சுகம் துய்ப்பவனே;
சுப்பிர திட்டன் சுதலை சுபார்ஸ்வன்
சோகம றுப்பான் துதிமனமே!


067. இமையவ ராசன மசைதர நின்றன;
இசைதரு துந்துபி ஆர்த்தனவே;
அமைபொரு தோளின ரம்பையர் வான்மிசை
அழகிய நர்த்தனம் ஆடினரே;
துமிபொதி வான்முகில் நீர்த்துளி சிந்தின;
துன்ப பாக்கொடி அற்றதுவே;
சுமைதவிர் வழிமொழி சுகுண சுபார்ஸ்வன்
தோன்றிய போதென் றறிமனமே!


068. அஞ்சலெ னச்சொலி அபயம் செயாவிடின்
ஆருல கில்நமைக் காப்பவரார்?
மிஞ்சிடும் இச்சைகள் அஞ்சி ஒதுங்கிட
மேற்றவ மேசெய சொன்னவரார்?
வெஞ்சின மார்களி றொத்திட வீழ்த்திடும்
வெம்புல மைந்தையும் வீழ்த்தவரார்?
குஞ்சம சைமுக் குடையின் சுபார்ஸ்வன்
கோமா னவனென குறிமனமே!


069. நிந்திப் பவரெவ ராயினும் வெகுளார்;
நேர்துதி செய்பவ ரைஉவவார்
பந்த முறும்மிரு பற்றுக ளேலார்
பகைகொண் டெவரையு மேயிகழார்
அந்த ரமீமிசை நின்றிடு சித்திரை
அகமல ரேற்றி துதித்திடுவார்
சொந்தமெ னக்கொள சொல்லு சுபார்ஸ்வன்
சுபமொழி குருவினைத் தொழுமனமே!


070. மோக மழித்தவன்; முனிவரர் சேவிதன்;
மூவுல கும்முணர் ஞானியவன்;
போக மறுத்திடும் திண்ணிய நெஞ்சினை
பூண்டவர் நெஞ்சல ரேறியவன்;
பூக மிடைந்திடும் சோலை யடைகரை
பூம்புனற் கங்கைக் காசியனன்;
தோக லிநீழல் பொருந்து சுபார்ஸ்னை
தோத்திரம் செய்வோம் எழு! மனமே!


--0--0--0--0--0--0--0--0--0--0--0--0--0--0--


08. ஸ்ரீ சந்திரப்ரப நாதர் துதி


071. வேதனைகங கெல்லை யில்லை
விழைவுகள் குறைய வில்லை
ஆதனாய் அடைந்த துன்பிற்(கு)
அளவிலை; அறிவி ருந்தும்
சாதனை செய்த தில்லை
சந்திரப்ல் ரபனே! உன்றன்
போதுலாம் சரன மொன்றே
புகலென அடைந்திட் டேனே


072. அறத்தொடு பொருளை இன்பை
ஆற்றவும் எண்ணா தந்தோ!
மறம்தொடு முனிவு மாயம்
மன்னிடச் செஉது வைத்தேன்
சரம்தொடு மதன ழித்த
சந்திரப் ரபனே! உன்றன்
சரணமே சரண மாகச்
சார்ந்துமே வணங்கி னேனே!


073. இதந்தரும் கொள்கை கட்கே
இருப்பிட மாகி, தேவர்
பதந்தொழ நிற்கும் பண்பின்
படிறிலாத் தவமி யற்றிச்
சதமுறும் வீடு பெற்றாய்
சந்திர நாதா! நின்னை
விதந்தரு துதிகள் பாடி
வினையறத் தொழுதிட் டேனே!


074. வான்மதி போலும் வெண்மை;
வாசமே வீசும் மேனி;
கான்மரை மிசையே சென்ற
கவினுறு திருப்பா தங்கள்;
நோன்பொரு தவத்தின் மேன்மை;
நுவலுரு சந்த்ர நாதத்
தோன்றலே! உன்பா தங்கள்
தோணியாய் பற்றி னேனே!


075. மோகமே அறுத்தெ றிந்தால்
முக்திசெல் நெறிசீ ராகும்
மோகமே பாவ வூற்றாய்
முடக்கிடும் உயிர்கள் தம்மை
மோகவெவ் வினைய ழித்த
முனிவனே! சந்த்ர நாத,
ஏகனே! இதயம் வைத்தே
இணையடி வணங்கி னேனே!


076. பவ்விய ரென்னும் அந்தப்
பனிமலர் நெய்த லுக்குச்
செவ்விய மதியு மானாய்;
சிரேட்டமாம் ஆறாம் லேஸ்யை
கவ்வுற நின்றாய்; கங்கைக்
கரையென விரியும் கர்மத்
தெவ்வழி சந்த்ரத் நாத!
திருவடி தொழுதிட் டேனே!


077. கேவல ஞான மென்னும்
கிளரொளி ஆடி தன்னில்
மூவுல கெங்கும் ஆர்ந்து
மொய்த்துள பொருள்க ளெல்லாம்
தேவனே! நின்னின் கண்டுத்
தெரிந்தவர் யாவ ருண்டு?
ஆவிநேர் சந்த்ர நாத!
அணிபதம் ஏத்தி னேனே !


078. ஐம்பொறி கூட்டில் சிக்கி
அலமரும் ஆன்ம னுக்கு
வெம்பவச் சுழலி னின்று
விடுபடல் எந்த நாளோ?
சம்பக மில்லா இன்பம்
சார்ந்திடு சந்த்ர நாத!
எம்பவம் ஒழிய வேண்டி
இணைபதம் ஏத்தி னேனே !


079. கணந்தொறும் முடிவை நோக்கும்
காழிலா உடலம் தன்னை
எணுந்தொறும் இரக்கம் மிஞ்ச
ஏதமே கொண்ட லைந்தேன்
தணத்தலில் கர்ம பந்தத்
தளையவிழ் சந்த்ர நாத !
இணைபதம் ஒன்றே எற்கு
இனிதுணை என்ற றிந்தேன்.


080. பலவிடர் பட்ட பின்னர்
பக்குவம் வந்த தின்று;
சலதியர் இணக்க மீந்தச்
சங்கடம் விட்ட தின்று;
தெளிவுரை சந்த்ர நாத!
தீர்த்தனே! நின்னைப் போற்றி
நிலமிசை நீடு வாழ
நேர்வழி அறிதிட் டேனே !


--0--0--0--0--0--0--0--0--0--0--0--0--0--0--


09. ஸ்ரீ புஷ்பதந்த நாதர் துதி


081. கண்கொடுத்துச் சித்தரத்தை வாங்கு வாரோ?
கயப்புலியை வரவேற்றுக் கடிப்பிப் பாரோ?
பந்தொடுக்காப் பாடலினைப் பாடு வாரோ?
பழத்திற்கா மரத்தினையே வெட்டு வாரோ?
பொன்கொடுத்த இதழ்வரிசை தாம ரைமேல்
போகியவெம் பெருமானாம் புஷ்ப தந்தன்
விண்கொடுக்க வல்லானென்(று) அறிந்த பின்னுmம்
வீணுக்கே இவ்வுடலை விடுவிப் பேனோ?


082. வாழ்நாளில் பயன்படுமோர் எல்லை மட்டும்
வாழ்நாள்கள் இருந்திட்டால் போதும் ! போதும் !
ஊழ்சாலில் முளத்தெழுமோர் துயர வித்தே
ஒறுத்திடுமோர் பேரிடராய் உருவெ டுத்துப்
போழ்வாயின் நரகத்தில் புகுத்தா வாரு
புறங்காத்தே அறமுரைத்த புஷ்ப தந்தன்
தாழ்வேதும் வாராமல் காப்பா னென்ன்று
தானுணர்ந்தும் தாழாமல தாழ்ப்பேன் கொல்லோ?


083. நற்காட்சி நன்ஞானம் நல்லொ ழுக்கம்
நவிலுமணி மூன்றினையும் ஞால முய்யப்
பொற்பார்ந்த முக்திக்கே ஏணி யாகப்
புகன்றருளிக் காத்திட்ட புஷ்ப தந்தன்
கற்பாந்த வினைகளெல்லாம் கலக லத்துக்
கால்பறிந்தே ஓடிடவே காட்டு வானென்(று)
அற்பார்ந்த தூயோர்கள் சொன்ன தாலே
அரைகணமும் இனிவணங்கா(து) அமைவேன் கொல்லோ?


084. வானபதி இந்திரனார் வார ணத்து
வளர்மத்த கத்திலணி மாணிக் கத்தின்
ஊனமிலா ஒளிக்கற்றை உதகம் தோய
உம்பர்விழி அன்புநீர் தோயச் சென்ற
ஞானவுரு வான எழில் சுவித நாதன்
நல்லோர்கள் மனந்தோய நனிவி ளங்கி
போனமனப் போக்கெல்லாம் தோய்ந்தி டாமல்
புறங்காப்பான் என்றறிந்துப் பொருந்து வேனே!


085. விண்தடவும் வெள்ளிமலை தோற்றம் போலும்
வெண்டாம ரைபோலும் விண்ணில் மேவும்
தண்மல்தியின் நிறம்போலும் தரளம் போலும்
தண்கயத்தே விளையாடும் அன்னம் போலும்
புண்ணியரின் புகழ்போலும் புஷ்ப தந்தன்
பொருந்தியமெய் யழகெல்லாம் கண்டு கண்டு
அன்பொழுகத் துதித்தேத்தும் அமர வாழ்க்கை
அடியேற்கும் உறுங்கொல்லோ? அறிகிலேனே!


086. காகந்தி பதிபூத்த மலரே! தேவர்
கைதொழுது புகழ்ந்த்தேத்தும் சுக்ரீ வற்கும்
போகம்சேர் ஜெயராம பொற்கொ டிக்கும்
புதல்வனெனப் போய்பிறந்த புஷ்ப தந்த!
யோகங்கள் செயவறியேன் உணர்வு மில்லேன்
உய்யுநெறி வேறறியேன் உலகில் யானித்
தேகமுள காலமெலாம் திருவ டிக்குத்
திருவணக்கம் செயலன்றித் தெரிகி லேனே!


087. மனம்மற்றும் இந்திரிய பகைவ ரோடு
மலைத்துவிடு தலைபெறுமெம் மானி டர்க்கும்;
இனிபிறர்பால் போய்கேட்க ஏது முண்டோ?
இச்சையெழும் பேச்சுக்கே இடமு முண்டோ?
புனிதமுறும் தத்துவக்கோள் புரிந்து கொண்டேன்
புங்கவனே! புணையளிக்கும் புஷ்ப தந்த !
பனிமலரின் திருப்பாதம் பணிந்த பின்னர்
பாதையினைக் கண்டிட்டேன் விடுதலைக்கே !


088. ஜினவரனைத் தூயவுயிர் எனவி ளக்கிச்
செப்பிய நல் லாகமத்தின் சூட்சு மத்தை
இனிதுறவே அறிந்ததனால் யானும் யோகி
என்னான்மா பரமான்மா இதனி லல்லால்
புனையவரு வேற்றுமைகள் இல்லை என்றே
புரிந்ததனால் பூமிசைசெல் புஷ்ப தந்த !
மனச்சுடரைக் கவிந்தயிருள் மேகம் நீங்க
மகிழ்ச்சியெனும் குன்றின்மிசை நின்றிட்டேனே !


089. போகமெனும் விஷயசுகப் புணரி தன்னில்
புக்கழுந்தும் நெஞ்சத்தைச் சிறிதே மீட்டு
யோகநிலை நற்கூட்டில் நிலைநி றுத்தி
உள்ளுறையும் ஆன்மாவை நோக்கச் செய்வதே
போகலிலா ஒருமைநிலை மூழ்க வைப்பின்
புகரற்ற பதம்கூடும் என்று ரைத்த
வேகவினை தடுத்தழித்த புஷ்ப தந்த !
விரைமலர்கள் சொரிந்துன்னை வழுத்துவேனே !


090. உயிரே நீ மூப்பிற்ப்பு தமைக்கு றித்தே
உளமஞ்சும் இழிநிலைக்குள் ளாக வேண்டா;
துயக்கலிலாப் பொருளியல்பை அறிவை யேல்நீ
துயர்விளக்கும் பவநோய்க்கு மருந்து கண்டே
அயர்வில்லா இன்பநிலை அடைவாய் என்றே
அறிந்துரைத்த ஸ்ரீ புஷ்ப தந்த தேவா !
மயலழித்த நான்மறையை உயிர்க ளுய்ய
மகிழ்ந்தளித்த நின்பதமே மனங்கொண்டேனே !


--0--0--0--0--0--0--0--0--0--0--0--0--0--0--

10. ஸ்ரீ சீதள நாதர் துதி



 (இதுமுதல் பத்து கவிகள் பறவைகளை விளித்து இறைவனிடம் சென்று வரும்படிப் பாடியவை)

வண்டு

091. பிண்டிமல்ர்த் தேனுகந்து
பிரசமெலாம் தானாடி
ஒண்டரங்க இசைபாடும்
அளியரசே ! சீதளனின்
விண்டடவும் பொற்கோயில்
நீசென்றே மலர்வாசம்
கொண்டணைந்தே எனக்களித்துக்
கூர்வினைகள் நீக்காயோ?

குருகு

092. அலமனத்தின் திரிந்தலையும்
மென்குருகே ! நற்றவத்தின்
நிலையுரைக்க நின்றானை
நிருமலனைச் சீதளனைத்
தலைவணங்கித் தேவர்தொழ
நிற்கின்றார் எயில்புக்கு
மலையவரு வினைதீர
மலர்கொணர மாட்டாயோ?

கோழி*

093. உணராதே உறங்கிடுவார்
துயிலெழுப்பும் வாரனமே !
கணமேத்தக் கருமவினை
அட்டானைச் சீதளனை
இணரேந்தித் தொழுமடியார்
ஏத்துமொழி கேட்டுவந்துக்
குணமேத்தும் நன்மொழியில்
குரலெடுத்துக் கூவாயோ?

நாரை*

094. செய்யுகளும் கயல்தேடும்
சிறுநாராய் ! சிற்றறிவின்
பொய்யுகளும் மித்யாத்வப்
பொறையழித்த சீதளனின்
சய்யமனை திருக்கோயில்
சாதுவர்சேர் சங்கத்தின்
அய்யமிலா நற்காட்சி
அறிந்தேவந் தறையாயோ?

புறா*

095. மனைமாட கோபுரத்தில்
மறந்துவளர் வெண்புறாவே !
சுனையாரும் குவளைக்கண்
சுனந்தைமகன் சீதளனை
பிணையேந்தி வருமுரகர்
பின்ல்தொழுமவ் விடம்போந்தே
வினைமாற்றும் வழிபாட்டின்
விதமறிந்து வாராயோ?

அன்னம்*

096. போதக்க யம்நீந்திப்
புங்கவரின் செல்அனமே !
வேதமுழக் கதிர்கின்ற
விண்ணகரச் சீதளன்சேர்
கோதிலவாம் கோயிலினுள்
புகுந்தேறி மறையவரின்
கீதமொழி கேட்டுவந்து
கிளத்திடவே மாட்டாயோ?

அன்றில்*

097. உயிருருக துணைபயிரும்
ஓங்குபனை அன்றில்காள்
மயல்கெடவே அறம்பகர்ந்த
மாதவனாம் சீதளனின்
உயர்கோயில் முன்றிலுக்குள்
விரைந்தேகி முனிவரரின்
செயிரில்லா உரைகேட்டுச்
செப்பிடவே வாரீரோ?

குயில்*

098. மாஞ்சோலை இளங்குயிலே !
மாசேனன் சீதளனின்
நாஞ்சிலெயில் புக்காங்கே
நல்லணங்க னார்பாடும்
தீஞ்சுவைசேர் துதிப்பாடல்
கேட்டுவந்தென் செவியினிலே
தேஞ்சுவையின் பாடாயோ?
தேமதுரத் தமிழாலே !

பூவை*

099. பொற்கொடியார் நெஞ்சுவக்க
விளையாடும் பூவைகளே !
பொற்குன்ற மேனியினான்
பூரணனாம் சீதளனின்
கற்பகம்சேர் முன்றிலினில்
கைகொள்ளும் விரதத்தார்
சிற்பமென வீற்றிருப்பார்
சீரறிந்து வாரீரே !

கிளி*

100. பச்சைப்ப சும்பாவாய் !
பாகுமொழிக் கிள்ளாய் ! நீ
இச்சைதனை வென்றிட்ட
எம்மானாம் சீதளனின்
துச்சிலிடத் தேயிருந்துத்
தூயோர்வ டக்கிருப்பர்
எச்சமற கண்டவரின்
இயல்செப்ப வாரோயோ ?


--0--0--0--0--0--0--0--0--0--0--0--0--0--0--


11. ஸ்ரீ சிரேயாம்ச நாதர் துதி


101. பொன்னலத்த மேனியெழு பூர ணன்காண்
புவிபோற்றும் இட்சுவாகு குலத்தி னன்காண்
உன்னதமாம் எண்பான்வில் லுயர்ந்த வன்காண்
உலகுதொழும் சிம்மபுரத் துதித்த வன்காண்
விண்ணவர்கள் தொழும்விஷ்ணு வரச னுக்கும்
விளங் கிழைபூண் நந்தைக்கும் புதல்வனாகிச்
சென்னியைல்வைத் தமரர்பதி போற்ற வந்த
சிரேயம்சன் காணெனது சிந்தை யானே !


102. விண்ணளந்த மணிமார்பும் வெற்றி சேர்க்கும்
வீரமெனும் திருமடந்தை விளங்கும் தோளும்
கண்ணகன்மா ஞாலத்தின் இருளை ஓட்டும்
கதிரவனைக் கண்டலரும் கமலம் போலத்
தண்ணளந்த திருமுகமும் விழியி ரண்டும்
தரித்தபுகழ் வசுதேவன் திவிட்ட னென்னும்
மண்ணளந்தான் மனமளந்த சிரேயாம் சன்காண்
மலரடிகள் ஒருபோதும் மறவேன் யானே !


103. கணக்கிலவாய் பவங்களெனும் கன்றை யீன்ற
கருமவினை தனைக்கட்டும் கண்ண வன்காண்
பிணக்கமிலாச் சியாத்வாதப் பெருந்தீ பத்தைப்
பிறசமய இருளகற்றப் பெருக்கி னான்காண்
சுணக்கமிலா தவயோகில் தோய்ந்த ஞானச்
சோதிதவ நெஞ்சகத்தே சுடர்ப வன்காண்
சிணுக்கலிலா திருவறங்கள் செப்பி னான்காண்
சிரேயாம்சன் காணெனது சிந்தை யானே !


104. இன்புதரும் இளவேனிற் பருவம் ஏக
இதுநமக்கு நிலையாமை எண்பித் தாலென(று)
அன்புதளை தனைவீட்டி அருந்த வத்தை
அளந்தறியச் சென்றவன்காண் ஆரண் யத்தே;
துன்பியல்சேர் சமுசாரத் தொகைம டங்கத்
சென்மவிதை களைந்தெறியச் செப்பி னான்காண்
சிரேயாம்சன் காணெனது சிந்தை யானே !


105. கவலையெனும் கனியீயும் கர்மக் காட்டைக்
கடைபோகா தவத்தீயால் கரித்த வன்காண்
அவலமுறும் பிறப்பொழிய அடிகள் கோலி
அவனியெலாம் முன்காத்த அண்ண லேகாண்
திவலைத்தேன் சொரிகின்ற பிண்டி நீழல்
திருவறத்தைச் சொல்லியருள் செம்ம லேகாண்
சிவம்சேர்க்கும் சித்தபதம் சேர்ந்த வன்காண்
சிரேயாம்சன் காணெனது சிந்தை யானே !


106. மங்கலஞ்சேர் சியாத்வாத மனையைக் கோலி
மங்காத மணிமூன்றால் இல்லெ டுத்துத்
திங்கள்மதி முக்குடையின் நிழல்வி ளங்கித்
திருவறமாம் சுடரேற்றித் தெருள்வித் தான்காண்
துங்கமுறும் துதிபாடி தேவ ராசி
சுடர்முடிகள் தாழ்ந்திறைஞ்சத் சோதி யூட்டும்
செங்கமல மலர்ப்பாதம் சிரமேல் வைத்த
சிரேயாம்சன் காணெனது சிந்தை யானே!


107. முழுதுணரும் ஞானத்தால் மூன்று லோக
முக்காலப் பொருள்களுமே அறிந்த வன்காண்
பழுதுபடும் பரசமயப் பனுவல் கூறும்
பகுத்தறிவிற் கொவ்வாத நெறிகள் தம்மின்
இழுதுகளை எடுத்தோதி எவரும் ஏற்க
இயம்பிடுநற் குருவேகாண் இமையோ ரேத்தச்
செழுமைமிகு மலர்மிசையே சென்ற வன்காண்
சிரேயாம்சன் காணெனது சிந்தை யானே !


108. அனைத்துயிரும் தலைவணங்கும் அமலன் காணென்
அகமென்னும் ஆதனத்தே அமர்ந்த வன்காண்
தினைத்துணையும் விறுப்புவெறுப் பில்ல வன்காண்
தியங்கிவார் கரையேற்றும் தீர்த்தனேகாண்
வினைபகடி வேரோடே அற்று வீழ
விரதசீல ஒழுக்கநெறி விதந்த வன்காண்
சினைப்பகழி தூர்க்குமதன் பகைய ழித்த
சிரேயாம்சன் காணெனது சிந்தை யானே !


109. அமலன்காண் அறிவன்காண் ஆறீ ரங்கம்
அருமறைகள் அறைந்தவன்காண் அங்கம் முற்றும்
இமையவர்தம் பதிஅனந்தம் விழியால் நோக்கி
எல்லையிலா உவகையுற நின்ற வன்காண்
துமிலமிலா ஈராறு சிந்தை பூண்டுத்
துளக்கமிலா அறிவுபெறச் சொற்ற வன்காண்
சிமையமிசை நோற்றுயர்ந்த செல்வன் காணச்
சிரேயாம்சன் காணெனது சிந்தை யானே


110. உரமென்னும் அங்குசத்தால், ஓடி ஓடி
உழல்கின்ற ஐம்பொறியாம் களிற டக்கிப்
பரமுய்க்கும் படிசிந்தை பரிவு கூர
படிறில்லாத் தவநெறியைப்ப் பாலித் தான்காண்
புறம்பிணைக்கும் ஆசைகட்குப் புள்ளி வைத்துப்
பொல்லாத பிறப்பறுக்கப் புகன்ற வன்காண்
சிரம்வணங்கி அமரர்தொழ நின்ற வன்காண்
சிரேயாம்சன் காணெனது சிந்தை யானே.


--0--0--0--0--0--0--0--0--0--0--0--0--0--0--


12.. ஸ்ரீ வாசு பூஜ்ய நாதர் துணை


111. ஆசி லாத பூமிசை
தேசு லாவ சென்றவா !
வாச கம்ம றிந்தனம்
வாசு பூஜ்ய னே! துணை


112. பாச கர்செய் நட்பினை
நீச மென்ற கன்றனம்
வீசு வாச கோயிலின்
வாசு பூஜ்ய னே! துணை


113. மூச லுண்டு யார்க்குமே
பூச லேன்ந மக்குளே?
ஏச லின்றி வாழுவோம்
வாசு பூஜ்ய னே! துணை


114. மோச மான வாழ்விலே
பாச மேன மக்குமே
கூச மேயொ துக்குவீர்
வாசு பூஜ்ய னே! துணை


115. ஈச னென்றும் சொல்வரே!
கேச னென்றும் சொல்வரே!
ஓச னேந மக்கவன்
வாசு பூஜ்ய னே! துணை


116. தாச னாகி, நாளுமே;
நாசன் வந்து சேருமுன்
பூச னைப்பு ரிகுவோம்
வாசு பூஜ்ய னே! துணை


117. வாச வன்வ ணங்கிட
வீசும் சாம ரைகளும்
மாசி லாவ சோகனாம்
வாசு பூஜ்ய னே! துணை


118. பாசு மைப்பைந் தோளியர்
சூசு கம்வி ரும்பியே
ஊச லின்ன லைவதேன்
வாசு பூஜ்ய னே! துணை


119. யோச னைம ணக்குறும்
வாச மேவும் தீர்த்தனின்
பாசு ரம்ப டிக்குவோம்
வாசு பூஜ்ய னே! துணை


120. நாச மில்நல் வீட்டினை
சாச னம்மொ துக்குவோம்
வாசு பூஜ்ய னே! துணை


 --0--0--0--0--0--0--0--0--0--0--0--0--0--0--


13. ஸ்ரீ விமல நாதர் துதி


121. வென்றார் வினைகள் விண்டார் தாமே
வியனார் மறைநூல் சொன்னார் தாமே
சென்றார் பூமிசை யுடையார் தாமே
சேரார் தீவினை செற்றார் தாமே
கன்றா இதமே மொழிவார் தாமே
காணும் புவிமுன் றுடையார் தாமே
ஒன்றா நின்றார் பொன்றா அறமே
ஒருவா துறையும் விமலர் தாமே


122. காதிப் பகையைக் காய்ந்தார் தாமே
கைவல மெட்டிய கர்த்தர் தாமே
சோதிச் சுடராய் ஆனார் தாமே
சுகவா ரிதியில் தோய்ந்தார் தாமே
நீதிக் கரணாய் நின்றார் தாமே
நிச்சய நயமே சொன்னார் தாமே
வேதிக் கிரிமிசை நோற்றார் தாமே
வேதனை சாய்த்த விமலர் தாமே


123. மனமே மரைமலர் நின்றார் தாமே
மங்காப் பொன்னிற மெய்யார் தாமே
சினமே முதலா சிறுமை நான்கும்
சேர்க்கும் தீவினை செற்றார் தாமே
கனமே பொருவும் ஆகம் மறைகள்
கடைதே றிடநாம் சொன்னார் தாமே
தினமே தொழுமத் தேவர் முடியொளி
தீண்டும் கழலின் விமலர் தாமே


124. பனியின் பொழிவு கழிவது கண்டே
பாச மொழித்தப் பகவர் தாமே
துணிவின் துறந்த தூயோர் தாமே
தொல்லற நெறிபுதுப் பித்தார் தாமே
தனியர் இனியர் தளரா முனிவர்
தாபப் பிரவி ஆபதம் ஒழிய
இனியென் னெஞ்சில் என்று மிருக்க
இசையும் தூயோர் விமலர் தாமே


125. மந்தர மிசைவான் மகிபர்கள் கூடி
மண்ணிய நல்வினை மாதவர் தாமே
அந்தமி லாவினை அடவி எரித்தே
அருளாம் பயிர்செயும் அண்ணல் தாமே
முந்திடு துந்துபி முதலா மதிர
மூவுல கும்சர ணென்று முழங்கி
வந்தனை செய்சம வசரண மேவி
வாயுறை வாழ்த்திடும் விமலர் தாமே


126. உயிரும் உடலும் ஒன்றே எனவே
உரைசொல் மடவார் மடைமை அழிய
மயலில் தத்துவ மொழிவார் தாமே
மன்னுயிர் வாழ்ந்திட செய்வார் தாமே
செயிரில் சீலம் உரைத்தார் தாமே
சிராவக ரறமே செப்புவர் தாமே
நயமே ழினையும் நவின்றார் தாமே
நம்முள மேறிடும் விமலர் தாமே


127. அறிவின் மையெனும் இருளே அகல
அந்தண் மதியாய் அணைவார் தாமே
உரகர் முடிமணி ஒளிநீர் பொழியும்
உகளப் பதமே உடையார் தாமே
இருபதி னேழதி சயமே பொதுளி
எண்குண முற்றும் உற்றவர் தாமே
விரியும் பொன்னொளி அரியணை மேவிட
விண்ணவர் பதிதொழும் விமலர் தாமே


128. கணதரர் மேரு மந்தர ரானோர்
கர்மச் சுழலினை நீக்கி உயர்ந்து
கணமீ ராறும் கைதொழு தேத்தக்
கமலத் திருவடி தொழுவார் தாமே
மணமோ ரைந்தும் கொண்டார் தாமே
மாதவர் நெஞ்சத் தொளிமணி தாமே
குணமெட் டுடையக் கோமான் தாமே
குன்றாப் புகழின் விமலர் தாமே !


129. முழுமதி முக்குடை நீழ லமர்ந்தே
முனைவ னெனப்படும் பெருமை பரத்தி
எழுதரு சுடரென இருளை யகற்றி
இன்னடி யாரெனும் கமல மலர்த்தி
தொழுதரு வானவர் சூழ லிருந்தே
தொன்மைய நல்லறம் சொன்னார் தாமே
கெழுமிய சீர்கிருத வர்மனின் மகனாய்
கீர்த்தி பரப்பிய விமலர் தாமே


130. ஏத மகற்றிடும் இறைவர் தாமே
எல்லா மறிந்த அறிவர் தாமே
கோதில வாம்குணக் குன்றனை யாரென
கூவித் தவர்தொழ கோமான் தாமே
நாத முழக்கொடு பாவலர் பாட
நாரிய ரன்பொடு நர்த்தன மாட
வேதியர் திருவடி முடிமிசை சூட
வினகளைச் சாடிய விமலர் தாமே


--0--0--0--0--0--0--0--0--0--0--0--0--0--0--


14. ஸ்ரீ அனந்த நாதர் துதி


131. இசைபெறும் இட்சு வாகென்
னினிய நற்குலத் துதித்தே
நசையறும் நெறிகள் காட்டி
நானிலம் உய்ய வைத்தாய்
அசைவறு யோகில் நின்ற
அனந்தனே ! நின்னைப் போற்றி
வசையற வாழும் வாழ்க்கை
வாழ்ந்திட அயர்ந்திட் டேனே


132. ஆன்மனைச் சிந்தி யாதே
அகத்துளே நோக்கி டாதே
பான்மையின் பரிவு மின்றிப்
பகரறு விரதம் தம்மைக்
கேண்மையின் நோற்றி டாமல்
கேடெலாம் பட்டொ ழிந்தேன்
மேன்மைசேர் அனந்த ! உன்றன்
மெல்லடி மறந்திட் டேனே


133. உண்ணலோ டுறங்கல் மற்றும்
ஒழிந்தன போக மாதி
எண்ணிடின் அனைத்து யிர்க்கும்
இவையெலாம் பொதுவே யன்றோ?
மண்ணிலே இவைக ளாற்றி
மடிவதோ? மானி டத்வம்
ஒண்ணிழல் மலர டிக்கீழ்
உணர்ந்தனன் அனந்த நாதா !


134. சீர்திகழ் சிம்ம சேனன்
ஜெயசியாமை இருவருக்கும்
ஈர்ம்மலர் சோலை சூழும்
எழில்மிகு அயோத்தி தன்னில்
பார்புகழ்ந் தேத்தும் பண்பின்
பவித்திர மகனாய் வந்தே
ஆர்கலி உலகை அன்பால்
அளந்தனை ! அனந்த நாதா !


135. முழுதுணர் ஞானி யானாய்
முற்றுறப் பற்று மில்லாய் !
அழிதரு வினைய ழித்தாய் !
அனந்தனே ! உன்றன் பாதம்
தொழுதிடா திழிந்த நாள்கள்
தொல்லையின் கழிந்த நாள்கள்
எழுதிடத் தரமோ? ஐய !
இன்றுனைச் சரண டைந்தேன்.


136. துக்கமும் சுகமும் தாமும்
சூழ்ந்திடும் வினையி ரண்டால்
ஒக்கவே விளைவ தன்றோ?
ஒழியுமேல் மோகந் தானும்
உற்கையின் பிறவி போமென்(று)
உரைத்ததை இன்று ணர்ந்தேன்
நிற்கிலேன் தொழுதி டாமல்
நிமலனே ! அன்ந்த நாதா !


137. திரிபுடை ஞானத் தாலே
தேற்றமில் உடலை முற்றும்
அறிவுறும் உயிரென் றெண்ணி
அதைப்புரந் திட்டேன் அந்தோ !
துரும்பினைத் தூல மாக்கித்
தூலத்தைக் கைவிட் டேனே
அருமலர் தூவி ஏத்த
அண்டினேன் அனந்த நாதா !


138. நிச்சய நயத்தை விட்டு
நீண்டநாள் விவகா ரத்தே
அச்சென நிலைத்து விட்டால்
அரியவீ டுறுவ தென்றோ?
வச்சிர உடம்போ? இக்து
வரையறை பட்ட தன்றோ?
இச்சையை விடுக்க வந்தேன்
எந்தையே ! அனந்த நாதா !


139. பொருளென ஆன்மா தன்னைப்
புரிந்தவர் அறிந்து ரைத்தும்
தெருளுறப் பெற்றே நில்லை
திருவறம் தெளிந்தே னில்லை
இருளினில் விளக்கை யேந்தி
ஏகிடும் குருட னானேன்
அருகனே ! அனந்த நாதா !
அடிமலர் தொழுதிட் டேனே !


140. பாவனைக் கேற்ற வண்ணம்
பரியாய நிலைகள் தோன்றும்
பாவனை தூய்மை யானால்
பழிபாவம் தோன்றி டாவே
பாவனை தூய்மை கொண்டு
பரமனின் பாதம் போற்றி
ஆவதே நன்றென் றெண்ணி
அடைந்தனன் அனந்த நாதா !


--0--0--0--0--0--0--0--0--0--0--0--0--0--0--


15. ஸ்ரீ தரும நாதர் துதி


141. அடரும் ஆசை முதல வாய
அனலம் தன்னை மாற்றியே
கடியும் காதி பகைய றுத்துக்
கைவ லத்தைக் கண்டவா !
தொடரும் வினையின் தொல்லை நீங்க
தூய பாதம் பற்றினோம்
கடிம ணத்தின் கமல மூர்ந்த
கனகன் தரும நாதனே !


142. உலக மூன்றின் உயிர்கள் தம்மின்
உற்ற நண்ப னென்றுமே
விலகி டாத கேண்மை கொண்டு
விமல னாக நின்றனை !
அலகி லாத ஒளிபொர் ருந்தும்
அழகு மேனி கண்டுமே
தலைவ ணங்கி தேவர் போற்றும்
தரும நாத சரணமே !


143. மூப்பி றப்பி றப்பில்லாத
முனைவர் போற்றும் முன்பனே !
காய்ப்பி லாத பாத வத்தின்
கடைய னாகி நிற்கிறேன்
வாய்ப்பு வந்த மைந்த போதும்
வறுமை யேனே னக்குளே?
சாய்ப்ப கற்றி என்னை யாள்க !
சரணம் தரும நாதனே !


144. பாவ மோடு டன்ற போது
பத்து தருமத் தேவர்களோ(டு)
ஓவி லாது போரி யற்றி
உட்ப கைஅ றுத்தவா !
ஏவல் கொள்ளும் வினையியக்க
இன்னும் நானி ருப்பதோ?
தாவி லாத குணம னைத்தும்
தங்கும் தரும நாதனே !


145. உயிர்த ரிக்கும் உடல மைந்தில்
உற்ற இரண்ட ழித்தவன்
செயிர்வி ளைக்கும் ஆசை யாதி
சிறுமை மூன்றும் அட்டவன்
வெயிலின் வெப்பை மாற்றும் ஆலின்
விளையு மாற்றை வீட்டினோன்
நயவி ளக்கின் ஜிநவ றத்தை
நாட்டி வைத்த தருமனே !


146. துக்க மென்னும் பொதிசு மந்துத்
தொல்லை ஏற்கும் உடலின்மேல்
பக்கம் வைத்துப் பரிக ரிப்பின்
பாறி டாது நிற்குமோ?
பொக்க மிக்க வாழ்வு தன்னைப்
போக்கி, யோகில் நின்றிடத்
தக்க வான மறைய னைத்தும்
தந்த தரும நாதனே !


147. கவலை ஏழும் விட்டி டாமல்
காலம் முற்றும் வாழ்வதால்
அவல முற்ற பவம னைத்தும்
அட்டை போல பற்றுமே
திவலை யேனும் நல்ல றத்தைத்
தினம்நி னைந்து வாழ்ந்திட’
தவமு ஞற்றும் தகுதி சேர்க்க !
தரும நாதனே சரணமே !


148. பானு சுப்ர பாப யந்த
பார்து திக்கும் பரமனே !
வான மேறும் தாம ரைக்கண்
வாவு புனித வாமனே !
கானு லாவும் மலரெ டுத்து
கணைது ரக்கும் காமனைத்
தானு கைத்த தரும னே! நின்
தாள டைந்தோம் சரணமே !


149. தேவ! தேவ! தேவ! என்று
தேவ ரேத்தும் மகிபனே!
காவ லற்ற இந்தி யத்தின்
கடல்க டக்க வல்லனோ?
ஆவ லுற்று தேடி வைத்த
யாவும் எம்மைக் காக்குமோ?
சேவ டிக்கண் ணலர்பொ ழிந்து
சிறுமை வென்றோம் தருமனே !


150. நானழிந்து போன பின்னே
ஞானம் வந்து சேருமே !
ஈன முற்ற வாழ்வு யெம்மை
எண்ணி டாது நீங்குமே !
மோன முற்ற யோகி னிற்க
முக்தி பாதை தோன்றுமே
தான வாரி ஏத்த நிற்கும்
தரும நாத சரணமே !


--0--0--0--0--0--0--0--0--0--0--0--0--0--0--


16. ஸ்ரீ சாந்தி நாதர் துதி


151. ஆர துய்த்திடின் ஆசை நீங்குமோ?
அல்ல லேவரா ததுத டுக்குமோ?
பார மேவிட மாற்ற ழிக்குமோ?
பஞ்ச இந்திரியப் பகைமு டங்குமோ?
வேரை வெட்டிட வினைது ளிர்க்குமோ?
வெய்ய வாகிய நைய ஏகுமோ?
சார வந்தவர்க் கருளு ஸ்ரீதரா!
சாந்தி நாத! நின் சரணம் சரணமே!


152. திங்கள் முக்குடை முகடு தட்டுமே
தேவ ராசிகள் துதியெ டுக்குமே
அங்க வாகமம் பொழியு திவதொனி
அந்த ரத்தினும் எதிரொ லிக்குமே
பொங்கு சாமரம் புடையி ரட்டுமே
புரியு துந்துபி புவிமி ரட்டுமே
சங்கை யில்லநற் சாது வர்தொழும்
சாந்தி நாத!நின் சரணம் சரணமே!


153. அத்தி னாபுரத் தண்ண லே!நினை
அணைய வந்தவர்க் கல்லல் நிற்குமோ?
சுத்த தத்துவக் கொள்கை யாளரின்
சொற்க ளுக்குளே சொத்தை சேருமோ?
வித்தி லாமலே செடிமு ளைக்குமோ?
வினையை வெல்ல வோர்வழி பிறக்குமோ?
சத்தி யம்மெனும் அத்த முற்றவா!
சாந்தி நாத!நின் சரணம் சரணமே!


154. கால னானவர் காலு கைத்தவா!
கருட யட்சரும் ஏத்த நின்றவா!
மால றுத்திடும் மறைமொ ழிந்தவா!
மன்னு தாமரை மிசைந டந்தவா!
வேல னார்விழி ஆல மேயென
விடைகொ டுத்தவர் தடையொ ழித்தவா!
சால மேசெயும் வினைய டர்த்திடும்
சாந்தி நாத!நின் சரணம் சரணமே!


155. தங்க மாமலைக் குன்ற மேயெனத்
தாங்கு நல்லெழிற் கோல முற்றவா!
சிங்க வாத னப்பொறை சுமந்திடச்
சீலமா விரதம் செப்ப வந்தவா!
துங்க நற்பதம் சேற லுற்றுமே
தூய வான்மலர் பொழிய நின்றவா!
சங்க மாதவர் சரண மேந்திடும்
சாந்தி நாத!நின் சரணம் சரணமே!


156. பொறிகள் வாய்லாப் புக்கு வந்திடும்
போக மாம்சுகம் நெடிது நிற்குமோ?
குறியி லாதுசெய் வினைகள் யாவுமே
கொணர வல்லதோர் பயனு முண்டுமோ?
மறித லுற்றுழல் உயிர்கள் யாவுமே
மாற்றி னைவிடுத் தென்று மீளுமோ?
சருவ ஞானியே அருள வேண்டினேன்
சாந்தி நாத!நின் சரணம் சரணமே!


157. மூன்ற தாகிய சல்லி யங்களின்
முட்டு நீக்கிடும் மணிகள் பூண்டுமே
ஊன்றி சீவனை உயரொ ழுக்கினில்
ஒட்ட வல்லனாய்: துட்ட ஆசையைத்
தோன்று காலையே முளைய ழித்தவன்
தோமி லாநெறி சொல்லி வைத்தவன்
சான்ற வந்தலை சாட்சி யாகுவான்
சாந்தி நாத!நின் சரணம் சரணமே!


158. விரிபுகழ் பெறும் குருகு லத்தினில்
வித்த கன்னெனும் தோற்ற முற்றவன்
அரிய யோகினில் நின்ற ஏதுவால்
அட்ட வினைகளை வெற்றி கண்டவன்
செருவு வெம்பகை முழுத ழித்துமே
செகம னைத்தும் ஆள நின்றவன்
சருவ ஜீவத யாப ரன்னவன்
சாந்தி நாத!நின் சரணம் சரணமே!


159. புலன டக்கமோ? கொஞ்ச மும்மிலை
பொறிக ளுக்குமே ஓய்த லும்மிலை
கலகம் செய்துமே உயிரைப் பற்றிடும்
கார்ம ணத்துகட் களவுமேயிலை
மலைன மற்றதோர் நிலையில் நின்றுமே
மாத வம்செயும் விழைவு வந்திலை
சலன் மில்லதோர்ர் சார்பு வேண்டினேன்!
சாந்தி நாத!நின் சரணம் சரணமே!


160. ஞானம் வந்தபின் தியானம் கூடுமே
தியானம் வந்தபின் கர்ம மோடுமே
ஊன மில்லதோர் பாவ னைவர
உலக மும்மிடம் ஏவல் கேட்குமே
வானவர்களும் அஞ்சும் வல்வினை
வழிய டைந்தபின் வரவு மோட்சமே
ஞான் நின்னுரை கேட்டுணர்ந்தனன்
சாந்தி நாத!நின் சரணம் சரணமே!


--0--0--0--0--0--0--0--0--0--0--0--0--0--0--


17. ஸ்ரீ குந்து நாதர் துதி


161. விட்டவர் யரும் பட்டது மில்லை
பட்டவ ருக்கோ? பற்றெது மில்லை
இட்டவர் கைமேல் என்றது தேர்ந்தேன்
கொட்டம கன்றது குந்து பிரானே !


162. மோக மகன்றது முனிவு மழிந்தது
ஏக னெனுமுணர் வின்று பிறந்தது
வேக வினையெமை விட்டு கழன்றது
கோக நகத்துறை குந்து பிரானே !


163. ஓதிய தும்பல: ஒட்டிய தோ? சில:
வாதிய லார்புரி வம்புகளும்முள:
நீதம லாதவர் நிழலு மொதுங்கேன்
கோதில வாமுரை குந்து பிரானே !


164. ஐந்தை அவித்தவன் அடிகளை ஏத்தி
விந்தைக ளெட்டு மிழைத்து வணங்கி
முந்திட வந்தம ரர்புகழ் போற்றும்
குந்தக மில்சொல் குந்து பிரானே !


165. மூவிரு கண்டமும் முறையினில் வென்று
தாவறு பேரர சப்பத முற்றும்
ஒவரு வினைகளு முட்க துறந்தாய்
கோவிய லேஅறி குந்து பிரானே !


166. ஆசை நிராசை யறுத்த வனேஉன்
தேசொ ளிர்தாணிழல் தேமல ரிட்டே
காசறு துதிகள் பாடி வணங்கிக்
கூச லறுத்தேன் குந்து பிரானே !


167. ஈட்டிய செல்வமும் ஒட்டி வராதே
நாட்டிய நற்புகழ் நம்பி னுறாதே
காட்டிய சீலம் கைகொளின் வீடே
கூட்டிடும் என்றாய் குந்து பிரானே !


168. அறியா மையிருள் அகலும் அகலும்
பொறியாம் பதமே புகவே நிலையும்
வெறிமா மலர்மேல் விரைவா னுன்னைக்
குறியா துளனோ? குந்து பிரானே !


169. நசையென்கடலில் நலியத் தாழின்
வசையென் பவமே: உறுமே: உயிரே
பசையில் மெய்யில் பற்றும்? துகளே,
குசலை வினையில் குந்து பிரானே !


170. முற்று முரைத்திடும் முனியே என்கோ?
அற்றம் தீர்த்திடும் அமலன் என்கோ?
செற்றம் சாடிய சீலன் என்கோ?
குற்றம் தீர்த்திடும் குந்து பிரானே !


--0--0--0--0--0--0--0--0--0--0--0--0--0--0--


18. ஸ்ரீ அரநாதர் துதி


171. திரிமணியைத் தேயமுளார் தெரிய ஓதித்
தெருளென்னும் நன்ஞான தீப மேற்றிக்
கருவினைகள் கழன்றோடக் காசில் லாத
கைதவமில் லொழுக்கத்தின் கடைதி றந்துத்
திருமகளாம் முக்தியெனும் நங்கை தன்னைத்
திருமணமே புணர்வித்துச் சித்தி செய்யும்
அருகனெனும் பேருக்குத் தகுதி கண்ட
அரநாதன் திருவடிகள் அணைந்தேன் யானே


172. சுதரிசனப் பேரரசன் சுதலை யாகித்
தூயகுரு குலத்தினுக்குத் திலக மாகி
வதமறியா தேபகைவர் வன்மை தன்னை
வலம்கண்டு நிலம்கொண்டு வானோர் ஏத்தப்
பதமுயரும் அறுகண்டம் முழுதும், செங்கோல்
பான்மையினில் கொண்டோச்சிப் பரம்விலக்கி
அதிகரண முக்திக்கே அதிப னான
அரநாதன் அடிமலர்கள் குடிகொண் டேனே


173. மும்மூட அரிமாக்கள் முன்னே ஓட
முன்னான்கு விரதமின்மைப் புலிக ளோட
செம்மாந்த காஷாயம் இருபத் தைந்தாம்
சினக்களிறும் தறிகெட்டுத் தாமும் ஓட
விம்மாந்து வெய்துர்யிர்த்து பவமென் சேற்றில்
வீழ்ந்துகிடந் தலமருமச் சீவ வர்க்கம்
அம்மாவென் றேகூறி அமைதி கொள்ள
அறவுரைசொல் அரநாதன் அடிகொண் டேனே


174. பன்னிரெண்டு சிந்தைக்கே இடம ளித்துப்
படருழக்கும் பவநிலைக்குப் புள்ளி வைத்தே
எண்ணிரெண்டு பாவனைகள் ஏணி யாக
இடும்பைகூர் எண்வினைக்கு விடையு மீந்தே
விண்ணுலகு மிசைநிலவும் வீடு புக்கு
விண்ணவர்தம் பதிவணங்க நின்ற தேவன்
அன்னியமோ? எனக்கவன்தாள் ஆத்ம பந்தம்
அறிந்ததனால் அரநாதன் அடிதாழ்ந் தேனா


175. சுடரறிவின் பெருஞ்சோதி சுயம்பு வென்றே
சுரபதியர் நாரபதியர் சூழ்ந்து போற்ற
விடவரவின் வேகத்தில் விரையும் வெந்தீ
வினைபோக்கும் சஞ்சீவி யென்று கூறி
தொடர்பிராவி வேரறுக்கும் துணிவின் நின்ற
துறவரசர் முடிதுளக்கிப் பணிந்தி றைஞ்ச
அடரவரு பாவங்கள் அஞ்ச ஓட்டும்
அரநாத மாதவன்தாள் அகம்வைத் தேனே


176. பூமுதிராப் பிண்டிநிழல் வீற்றி ருந்துப்
போற்றரிய உபதேச மழைபொ ழிந்தான்
காமனையும் காலனையும் வெற்றி கொள்ளக்
கனிவுடனே வழிபகர்ந்தான்: கவினார் சொல்லின்
நாமமலர் ஆயிரமும் கூறி ஏத்தும்
நல்லோரைக் கரையேற்ற உதவும் நாவாய்
ஆமெனவே அவந்திருத்தா ளென்ற றிந்தே
அரனவனை அகம்வைத்து வணங்கி னேனே!


177. உலகுவெல வுதவியவச் சக்க ரத்தின்
உயர்வினையே கருதாது குலாலன் கொண்ட
மலினமுறு சக்கரமாய் நினைத்தெ றிந்த
மண்ணகமாம் நங்கையினை, ஏவல் செய்யும்
சிலதியென நீத்திட்டான்; சீலம் கொல்லும்
செருபகைசேர் தீவினையைச் செற்றொழித்தான்
அலகிலவாம் ஞானமெனும் உருவு கொண்டான்
அரநாதன் அவன்திருத்தாள் அணிபூண்டேனே.


178. பிறவியெனும் பேதைமைக்கு வித்தினாகும்
பிரித்தறியும் அறிவின்மை ஏது என்றே
அறப்புணையாம் சார்பினையே அன்றே கண்டான்
அறிவர்தம் முளக்கோயில் அகம்பு குந்தான்
மறலிவரும் நாளெண்ணி மருள வேண்டா
மாவிரத மைந்தையுமே மறவேல் என்றான்
அருகனவன் ஆசார்யன் சாது என்றே
அழைத்திடுமெம் மரநாதன் அடிபூண் டேனே!


179. குற்றங்கள் இல்லாதான் குணமே கொண்டான்
கோதிலவாம் தவநிலையில் குன்ற மன்னான்
மற்றிந்த வையமெலாம் ஞான மென்னும்
மாவடியால் அளந்திட்டான் மறைகள் நான்கும்
செற்றங்கள் தீர்த்திடவே சேமம் செய்தான்
சினவரனாய் பதினெட்டு மலினம் தீர
அற்றங்கள் போக்கிடுவான் அடியார்க் கென்றே
அறிந்ததனால் அரநாதன் அடிபூண் டேனே!


180. உயிரிடத்தே வினைவருதல் ஊற்றே யாகும்
உறுதியுடன் அதுபிணைதல் பந்த மாகும்
அயமீர்க்கும் காந்தமென கொஞ்ச காலம்
அதுசேர்ந்து நிலைத்திருத்தல் சத்வ மாகும்
மயல்சேரும் இடர்தருதல் உதய மாகும்
மன்னியவை நீங்குதலே உதிர்தலென்றே
அயிர்ப்பின்றி வினையியல்பை விதந்து ரைத்த
அரநாதன் திருவடிகள் அகம்கொண் டேனே!


--0--0--0--0--0--0--0--0--0--0--0--0--0--0--


19. ஸ்ரீ மல்லிநாதர் துதி


181. பூரண கும்ப லாஞ்சனனே!
பொன்னார் மேனி எழிலோனே!
ஆரண முழக்கின் மிதிலையெனும்
அணியார் பதியில் பிறந்தோனே!
கோரமெ னும்பவ ஆழியினைச்
சுவறச் செய்யும் சூரியனே!
மாரகம் வென்ற மாதவனே!
மல்லி நாத பகவானே!


182. வென்றார் வினையின் விண்ணவனே!
விளம்ப லாகாப் பண்பினனே!
குன்றா ஆர்வம் தலையோங்கக்
குறையில் தவமே செய்தவனே!
சென்றார் சித்தப் பதமதிலே
செல்லும் நெறியை நானுணர
மன்றாடி யுனைவேண் டுவனே
மல்லி நாத பகவானே!


183. ஆதியு மந்தமும் தாமில்லா
அறுபொருள் யாவு முரைத்தோனே!
காதி யெனும்தளை வீடியதால்
கைவல ஞானம் உற்றவனே!
சேதிய முற்றும் நின்னடியார்
சீர்பா டிடவே நிற்போனே!
மாதவன் செய்தேன் நிற்காண
மல்லி நாத பகவானே!


184. விழைவன சேரின் மகிழ்வேனே!
விழையா தனவரின் கலுழ்வேனே!
இழைத்த வினையால் நட்டம் வர
இனைத லுற்றே கவல்வேனே!
சுழலும் காற்றில் தூசானேன்
சுகமே யுறுதல் எந்நாளோ?
மழைமே கமெனெ அருள்வோனே!
மல்லி நாத பகவானே!


185. ஆர்த்தத் தியானம் அதில்மூழ்கி
ஐயோ! அல்லல் படுவேனோ?
ரெளத்ரத் தியானம் நான்கும் வர
நரகா திகளில் வீழ்வேனோ?
தீர்த்தங் களிலே மூழ்கிவர
தீவினை யாவும் போகிடுமோ?
மார்த்தவ தர்மம் உடையானே!
மல்லி நாதப் பெருமானே!


186. திருவடி யிரண்டும் என்னுள்ளே
தேறப் பொருந்தி வீற்றிடுக!
அறவா ழியனே! என்னுள்ளம்
அடிமா மலரில் தோய்ந்திடுக!
பிறவா நெறியைப் பேசியுயிர்
பேரிடர் தம்மைப் பேர்ப்பவனே!
மறவா துன்னைத் தொழுதேனே!
மல்லி நாத பகவானே!


187. இருவினைப் பயனால் திரிதருமிவ்
வேழை உயிர்க்கு நற்கதியை
அருளும் வள்ளல் நீயென்றே
அறியத் தேர்ந்தேன் நானின்றே
பொருவரு புண்ணிய முடையார்க்கே
புன்மை யிடரே வந்திடுமோ?
மறுவரு மார்பா! நின்னுற்றேன்
மல்லி நாதப் பெருமானே!


188. ஜினனே! உனக்கே எந்நாளும்
சேவை புரிந்தே வாழ்ந்தாலும்
இனமும் வாழ்நாள் எத்துணையென்
றுணரே நிலையி லிருந்தாலும்
முனதா கவுனை வேண்டுகிறேன்
முடிவின் வாயில் அணுகுங்கால்
மனதால் நின்னைத் தொழுவருள்வாய்
மல்லி நாதப் பெருமானே!


189. சாதுவர் சங்கத் திருமுன்பில்
சுவாமியின் பிம்பச் சந்நிதியில்
வேதம் ஓதிடும் நாதவொலி
விரியும் தூயச் சூழலினில்
ஏதம் மிலாசல் லேகனையில்
இருந்தே ஏக வேண்டுகிறேன்
மாதவ! ஒவ்வோர் பிறவியிலும்
மல்லி நாதப் பெருமானே!


190. தெய்வம் பலவே பேசிடினும்
தீயக் காட்சிகள் தோன்றிடினும்
பைதல் பலவே வந்திடினும்
பரமா! உன்றன் பதமன்றி
உயிதல் தருவா ரெனப்பிறரை
உள்ளேன் உள்ளேன் ஒருகாலும்
மையல் கொள்ளேன் மாமணியே!
மல்லி நாதப் பகவானே!


--0--0--0--0--0--0--0--0--0--0--0--0--0--0--


20. ஸ்ரீ முனிசூவ்ரத நாதர் துதி


191. நம்மேத மெல்லாமும்
நாம்மகிழப் பேர்ப்பானைச்
சம்மேத கிரிமிசையே
சத்துவனாய் நோற்றானை
மும்மூடம் போக்கியருள்
முனிசூவ்ர தன்தன்னைக்
கைம்மாவாம் பொறியட்ட
காவலனை பாடேமோ?
கருநீல வண்ணந்தன்
கவினெழிலைப் பாடேமோ?


192. ஓதக்க டல்ஙசூழ்ந்த
உலகத்தே பவ்யர்களைத்
தீதெல்லாம் போக்கிடவே
தெருள்கூட்டும் சொல்லானை
மோதவரு வினையழித்த
முனிசூவ்ர தன்தன்னைப்
போதக்க மலமிசையே
போனவனைப் பாடேமோ?
புண்ணியனாய் வீடுற்ற
புகழானைப் பாடேமோ?


193. பன்னிரண்டு தவமியற்றும்
பான்மைதனைப் பகர்ந்தானைத்
துன்னிடுநால் வகையமரர்
துதிக்கவரு தூயானை
முன்னிடுபத் தறம்மொழிந்த
முனிசூவ்ர தன்தன்னை
இன்னிசையால் பவ்யர்தொழ
இருந்தானைப் பாடேமோ?
எல்லாம றிந்தானை
என்றென்ற்ம் பாடேமோ?


194. தயையென்னும் அங்கத்தைத்
தான்பெற்று நின்றானை
மயலூட்டும் சினமாதி
மடிந்திடவே நோற்றானை
முயற்சியினால் வீடுற்ற
முனிசூவ்ர தன்தன்னை
அயலவரே ஆருமென
அறைந்தானைப் பாடேமோ?
ஆறீராம் கணங்களுக்கே
அதிபதியைப் பாடேமோ?


195. நெக்குருக நெஞ்சமெலாம்
நினைந்தாரின் பவவினையைப்
பக்குவிடச் செய்தருளும்
பதமொழியை உரைத்தானை
முக்குடையின் நீழலமர்
முனிசூவ்ர தன்தன்னைத்
திக்குடையைத் தரித்தருளும்
தேவர்புகழ் பாடேமோ?
தேமலரிட் டருச்சித்தே
தீர்த்தனையாம் பாடேமோ?


196. அகிலமெலாம் புகழ்ந்தேத்தும்
அரிகுலத்தின் திலகமெனச்
சுகுணமிகு சுமித்திரனின்
சுதலையென வந்தானை
முககமல அரம்பையர்சூழ்
முனிசூவ்ர தந்தன்னை
அகமலர முகமலர
அவனிசையைப் பாடேமோ?
அமலபிரான் குணம்பரவி
அவனடியைப் பாடேமோ?


197. பவக்கடலின் கரையேற்றும்
பவித்திரமாம் மறைமொழிசொல்
சிவமுறுத்தும் முக்திபதம்
சேர்த்தருளும் மாமுனியைத்
திவதொனிசேர் திருநிலையத்
தேவன்முனி சூவ்ரதனை
அவலமொழித் தாள்பவனின்
அருமையினைப் பாடேமோ?
அருநிரயம் போகாமல்
ஆள்பவனைப் பாடேமோ?


198. உயிரிதனை உடலினொட
உரிமையுள தெனநினைவார்
மயலுடையார் அவர்மொழியை
மறந்திடுக! என்றானை
முயல்வுடையார் பற்றறுக்க,
மொழியுமுனி சூவ்ரதனை
நயம்பலவும் நவின்றானை
நாமேத்திப் பாடேமோ?
நாள்மரிட் டருச்சித்து
நலம்புனைந்து பாடேமோ?


199. மறுசுழலின் சமுசார
மாற்றொழிக்க உள்ளீரேல்
பரிவுடனே ஐவர்சரண்
பற்றுமினென் றுரைத்தானைக்
கறுவுசெறி பவவினையை
களையுமுனி சூவ்ரதனை
இறுதியில்பல் சுகம்காட்டும்
இனியவனைப் பாடேமோ?
என்றுமவன் சரணமக்குச்
சரணென்றே பாடேமோ?


200.வெகுளிமத மாயையினை
விட்டொழித்து, விகலமிலாப்
புகுதுநெறி நலம்பயக்கப்
புகன்றானை; பொறையாதி
இகவிலதாய் அறம்நோக்க
என்னுமுனி சூவ்ரதனை
பகையுறவே நினையாத
பண்ணவனைப் பாடேமோ?
பழவடில்யோம் நமை, தன்போல்
பார்ப்பானைப் பாடேமோ?

--0--0--0--0--0--0--0--0--0--0--0--0--0--0--


21. ஸ்ரீ நமி நாதர் துதி


201. செறுவார்பகை இல்லாரொரு
நண்பாவது மில்லார்
கருவாகிடு வினைமாய்த்திட
கற்றாருள முறைவார்
உருகாமன மிலராமவர்
உண்ணோக்கமு மொருவார்
நறுமாமலர் பதம் தூவியே
நமிநாதரைத் தொழுமின் !


202. வினையெட்டையும் வேர்கீண்டுமே
விமலப்பத முற்றார்
தனையுற்றவக் குணமெட்டையும்
தன்னாளணி கொண்டார்
சினைமாமலர்ப் பிண்டித்தரு
நிழலில் அறம்ஓதி
நனைமாமலர் மிசைமேவிடு
நமிநாதரைத் தொழுமின் !


203. சினமாதிகள் பவவூற்றென
செறிவேமிக வடைய
தனமாதிகள் மிசைமேவிடும்
தனவாவிழை வூற
இனலேவர மயலேயுற
இனிசெய்வது முளதோ?
நனவேவர அறமேயுரை
நமிநாதரைத் தொழுமின் !


204. பொய்க்காட்சியைப் புறம்போக்கியே
புலராமுழு துணர்வால்
நொய்காட்சியில் நற்காட்சியின்
நுவலும்பவ முறுமோ?
செய்கோலமே புறம்செய்துமே
சிந்தைபிற வானால்
நய்யாண்டியும் புவனம்செயும்
நமிநாதரைத் தொழுமின் !


205. மறமேவிளை செயலேசெய
மனமேசிறி தெண்ணேல்
திறமேவிளை விரதமேசெய
சிந்தைதனில் வைப்பீர்!
அறமேவிளை வதனால்வரும்
அழியாச்சுகம் காண
நறவேறிய மரைமேவிய
நமிநாதரைத் தொழுமின் !


206. இந்தீவர பூலாஞ்சனம்
எழில்பொன் நிறமேனி
கந்தாகிய வினையேபட
கழறும்திவ தொனியும்
இந்தேய்ப்பவும் வெண்சாமரம்
இருபக்கமு மிரட்ட
நந்தாவெழில் மதிமுக்குடை
நமிநாதரைத் தொழுமின்!


207. மிதிலாபுர பதியின்பதி
மேன்மைபொதி விஜயன்
சுதனாயுல குயிருய்ந்திடத்
தோன்றிப்புக ழறமே
விதையாமென வித்திப்பயன்
விளைநல்வினை கண்ட
நதிசெல்புணை வினைவென்றிடு
நமிநாதரைத் தொழுமின்!


208. பற்றாவது விடுமோ? என
பழைமைநிலை செப்பிச்
சற்றாகிலும் விலகும்எணம்
சாராமலே நின்றால்
எற்றே? நும தறியாமைகள்!
எனோஉயிர் வாழ்க்கை
நற்றாமரை மிசைமேவிய
நமிநாதரைத் தொழுமின்!


209. பாதாம்புய மதிலேவிழும்
பக்தர்எனும் அளிகள்
வேதாகம தேன்மாந்தியே
விரைவில்பசி யாறும்
ஆதாரமே முனமோதிய
அருமாமறை என்றே
நாதா!வென அறவோர் தொழும்
நமிநாதரைத் தொழுமின்!


210. கவினுந்திய அமரேந்திரன்
இருவர்கடி துற்றே
பவமுன்னதில் அகமிந்திர
பதமுற்றதைக் கூற
தவமுற்றிடும் நினைவக்கணம்
தகவேவர நோற்று
நவமேபொதி பதமேவிய
நமிநாதரைத் தொழுமின்!


--0--0--0--0--0--0--0--0--0--0--0--0--0--0--


22. ஸ்ரீ நேமிநாதர் துதி


211. இச்சைகள் முழுதும் வென்றான்
இடும்பைசேர் மாற்ற ழித்தான்
அச்சம்சேர் வினைக ளெட்டை
அடிப்பொடி யாக்கிக் கொண்டான்
உச்சந்த மலைமேல் நின்றே
உம்பர்கள் தொழவே நோற்ற
அச்சுதன் நேமி நாதன்
அவனடி தொழுவாய் நெஞ்சே!


212. சிவதேவி திருவ யிற்றே
தெய்வமா மணியாய்த் தோன்றி
பவமெனும் இருளைப் போக்கும்
பக்குவ வழிகள் கூறி
அவலமே துடைத்தெ றிந்த
அருகனாம் நேமி நாதன்
உவகையின் மலர்க ளிட்டே
உயர்பதம் ல்தொழுவாய் நெஞ்சே!


213. அறியாமை இருள்க விந்தே
ஆருயிர் சோர்ந்த காலை
ஒருவாத ஞான தீபம்
உளங்கையில் ஏந்திக் கொண்டு
பிறவாத நெறியைக் காட்டிப்
பெயர்ந்திட்ட நேமி நாதன்
அறவாழி அண்ண லென்றே
அடிமலர் பணிவாய் நெஞ்சே!


214. வஞ்சகன் வாசு தேவன்
வனமாக்கள் திரிய விட்டு
நெஞ்சிலே வைராக் யத்தை
நிறுத்திய தாலே, மாற்றிற்(கு)
அஞ்சியே துறவு பூண்ட
அணியிலா நேமி தன்னைச்
செஞ்சொலின் மாலை சூட்டிச்
சேவடி தொழுவாய் நெஞ்சே!


215. உயிர்முத லான ஐந்தாம்
உலப்பிலா காயம் தம்மை
அயிர்ப்பிலா தெடுத்தே கூறி
ஐயங்கள் அகற்றினானைச்
செயிர்புணர் கஷாயம் நான்கின்
சிறுமையும் விளக்கி, ஜீவன்
இன்னடி தொழுவாய் நெஞ்சே!


216. அந்தமே ஆதி யாக
அதுதானே மூல மாக
உந்திடும் வினையாம் காற்றால்
உதைப்புண்டே ஓடி வீழும்
நந்தமின் உயிரின் செய்கை
நவின்றிடப் போமோ? மேலாம்
நிந்தையில் துறவில் நின்ற
நேமியைத் தொழுவாய் நெஞ்சே!


217. அரிகுலம் விளங்க வந்த
அண்ணலான்; ஆழி சங்கமம்
ஒருகையின் கொண்டே ஊத
உம்பரும் வெருவி நின்றார்
உருவிய வாளி றக்கி
உட்கினான் வாசு தேவன்
மருவினார் வியந்த நேமி
மலரடி தொழுவாய் நெஞ்சே!


218. கருநிறக் கடலைக் காண்பார்
கார்மேக வண்ணம் காண்பார்
விரைமலர் குவளை காண்பார்
விரிந்திடும் வானம் காண்பார்
பொருவிலான் நேமி நாதன்
பொலிந்திடும் மேனி என்பார்
திருவினார் அவரை ஒப்பத்
திருவடி காண்போம் நெஞ்சே!


219. அழிந்திடும் பொருளின் போகம்
அதனிலே மூழ்கி மூழ்கிக்
கழிந்திடும் நாள்கள் எண்ணோம்
கையறக் கந்து யின்றே
எழுந்திடும் போதே வாணாள்
இழிந்ததே ஒன்றென் றெண்ணோம்
அழுங்குதல் விடுப்போக்; நேமி
அரும்பதம் தொழுவோம் நெஞ்சே!


220. துவாத சானுப் பிரேட்சை
துணைவர, துறவோர் நெஞ்சம்
உவாமதி கண்ட ஆழி
உவகையின் கொப்புளிக்க
துவாரகை பதியில் தோன்றி
தொடர்வினை அறுத்து வந்து
நிவாசமே நம்மில் கொண்ட
நேமியைத் தொழுவோம் நெஞ்சே!


--0--0--0--0--0--0--0--0--0--0--0--0--0--0--


23. ஸ்ரீ பார்ஸ்வ நாதர் துதி


221. வந்தனைகள் செய்துவரும்
வானமரர் போர்றுகிற
வளர்கின்ற பச்சை மலையோ?
கந்தமிகும் வாசமலர்
கமழ்வாவி நீர்மேவும்
கமலமதின் பாசடைகளோ?
விந்தையொளி வீசவரு
மரகதப் பச்சையென
வீற்றிடும் மணிதீபமோ?
எந்தவிதம் என்னுரைகள்
ஏற்குமோ? அறிகிலேன்;
எந்தையே! பார்ஸ்வ நாதா!


222. எண்ணமதும் ஒன்றிலே
இயல்வதுவும் ஒன்றிலே
ஏனிந்த தடுமாற்றமோ?
விண்ணளவு நிற்கும்நின்
விரிபுகழ் பேசவும்
விளையவரு லோபமேனோ?
திண்ணமது வினைவெல்லல்
என்றறிந்து தாலுமே
செய்தவம் நினைகிலேனே
நண்ணினேன் கவிமலர்கள்
சூடவே ஏற்றருள்
நாதனே! பார்ஸ்வ நாதா!


223. செருவினை செற்றமுறு
கமடனால் பிறவிதொறும்
சிறுமைகள் பலவடைந்தும்
உறுவினை களோடவே
உற்றதவ மீராறும்
உஞற்றியே உய்தியுற்றாய்
பருவரல் வென்றநும்
பான்மையைப் பகரவும்
பலநூறு யுகங்கள் வேண்டும்
தெருளடைய வேண்டியே
நின்றனன் இன்றுமே
தீர்த்தனே! பார்ஸ்வ நாதா!


224. தூய்மையாம் நெஞ்சுடன்
நினைபரவும் யாவர்க்கும்
தூயவாம் பதம்கிட்டுமே!
வாய்மையோ டைந்தாய
விரதங்கள் ஏற்றிடின் வ
ருவினை யூற்றடையுமே!
சேய்மை யினின்றுமே
தரிசித்த பேருக்கும்
தீமைகள் ஓடிவிடுமே!
பாய்மனம் அடங்கிட
ஓர்வழி புகன்றருள்
பகவனே! பார்ஸ்வ நாதா!


225. நல்லோர் தமக்குமே
நற்றானம் செய்திடின்
நலம்பலவும் வந்துசேரும்;
பொல்லாங்கு நீங்குமே
புங்கவா! நின்பாத
பூசனை செய்த பேர்க்கும்;
கல்லாது சீலமே
கழித்திடும் மாந்தர்க்குக்
கடுநரகு காத்திருக்கும்
தள்ளாது பாவமும்
என்றறிந் துற்றனன்
தயையருள் பார்ஸ்வ நாதா!


226. தக்கதோ? அல்லதோ?
தகுபுண்ய பாவமோ?
தமக்குள்ளே பேதமெதுவோ?
மிக்குவரு அறமெது?
மிடிகொளும் மறமெது?
மிடைந்திடும் பேதமெதுவோ?
தொக்கவரு வேற்றுமை
இவைக்குளே அறிந்துமே
தூயநற் காட்சி வேண்டி
சக்கரக் கதிவென்ற
மிக்குறும் பார்ஸ்வனே!
சார்ந்தனன் அருள்புரிகவே!


227. கமடனின் பொருபடைகள்
சாய்ந்தவா! காமனின்
கணைமுற்றும் போகட்டவா!
அமுதமென திவதொனியால்
ஆருயிர்கள் தாமுய்ய
அறமாரிதான் பொழிந்தவா!
விமலமெனும் வீட்டினைக்
கண்டவா! என்னையும்
வீடேற்ற நினைவுற்றவா!
திமிரமெனும் பிறவியற
திருவடிகள் பற்றினேன்
தேவனே! பார்ஸ்வ நாதா!


228. உன்னையும் என்னையும்
வேறுபட நோக்கிலேன்
உண்மையாம் நயநோக்கிலே!
என்னை நீ! மேம்படல்
என்னினும் புலனாசை
இற்றிட நோற்றதாலோ?
துன்னிடும் குரோதாதி
தீயவாம் உணர்வுகள்
தூர்த்திட வலியிலேனே;
பன்னகம் விரித்தகுடை
சென்னியில் அமைந்தவெழில்
பகவனே! பார்ஸ்வ நாதா!


229. உடலினின் வேறதா
உயிரையாம் எண்ணிடும்
உறுபேதெ ஞானமதனால்
திரையெனக்
கடுகிடும் பிறவிகளில்
கலக்கமது நேர்வதுண்டோ?
நடலையுறு வாழ்வினை
நாமேற்கும் நிலைமையும்
நனிசிறிதும் வாய்த்திடாதென்(று)
அடலுறும் வினைவென்ற
ஆத்தனே! அறிந்தனன்;
அருளுவாய்! பார்ஸ்வ நாதா!


230. காசியின் வாசனே!
கமலமிடை ஊர்ந்தமின்
கால்மலர் தலைவைத்தனே!
ஆசிலா நின்மொழிக்
கானமே என்செவிக்(கு)
அணியாக நான் பூண்டனே!
தேசுலா நின்வடிவ
சோபையே என்விழி
திகட்டாத நல்விருந்தே
மாசிலா நற்றவக்
கிரிமிசை நோற்றவென்
மன்னவா! பார்ஸ்வ நாதா!


--0--0--0--0--0--0--0--0--0--0--0--0--0--0--


24. ஸ்ரீ மகாவீரர் துதி 


231. சிந்தாகுலம் ஓட்டும்ஜிந
வறமேயது நமையே
பந்தாடிடும் வினைகள்தமைப்
பந்தாடிட செயுமே
முந்தோதிய மகவீரனின்
மொழியின்வழி செலினே
மந்தானமே சுழல்வொத்திடும்
மாற்றாமது விடுமே!


232. விடுமேலெனின் பற்றாமவை
வீயாச்சுகம் கிட்டும்
அடுமாவினை எட்டும்மவை
அடிகால்பறிந் தோடும்
படுமாதவம் செய்யுமுறை
பகரும்மக வீரன்
கடிமாமலர்ப் பதமேதொழ
கதிநான்குமே அறுமே


233. அறுகால்குழு போய்மொய்த்திடும்
அழகார்மலர் பிண்டி
உறையும்நிழல் உறைசன்மதி
உபயப்பதம் சேறின்
விரைமாமலர் ஏந்துமஅர
மகளிர்தொழ தேத்த
கறையில்லாதோர் கற்பத்தினில்
கண்கள்விழிப் பாரே


234. பாரேத்திடும் சித்தார்த்தனின்
பண்பின்னொரு மகவாய்
சீரேந்திட ஸ்ரீவர்த்த
மனன்எனும் பேரன்
தாரேந்தியே பவ்யர்தொழும்
தகையான் மகவீரன்
போரேந்தியே வருவெவ்வினை
புறமேபடத் தொழுவோம்.


235. தொழுவார்சிலர் அழுவார்சிலர்
துயர்வாழ்வினை எண்ணி;
விழுவார்நர குலகாழ்ந்துமே
வீயாயிடர் படுவார்;
கழுவாயுள தோ? என்றுமே
கரைவார்க்கருள் வீரன்;
எழுவான்மரை மலர்மிசை
இனியேனொரு பயமே?


236. பயமோடிடும் பற்றேவிட,
பற்றேயெனும் பரமன்
உயவைத்திடும் பதமாமலர்
உறுதிப்பட பற்றின்
நயமேழையும் இலகும்படி
நவிலும்மக வீரன்
செயமேபெற அருள்வான்நமை:
சிந்தித்திடு மனமே!


237. மனமோடிடும் நெற்யேகியே
மலினம்பட எண்ணேல்;
சினமாதிகள்தமைக் கட்டிட
செருவெவ்வினை வாரா;
கனமேவிய பரமாகமம்
கழறும்மக வீரன்
இனலேவிளை பவமேயற
இனியேயருள் புரிவான்.


238. புரிசைவளை எழில்குண்டல
புரமேவளர் வீரன்
உரகந்தலை மேலேறியே
உட்கும்படி ஆடி
விரகின்வரு தேவன்வலி
வீழ்க்கும்படி செய்தான்
கரவில்தவ வாள்கொண்டுமே
கருமந்தமை அட்டான்


239. அட்டாங்கமு முடைகாட்சியர்
அடிமாமலர் ஏத்த
நிட்டாபரர் நிகளம்மெனு
நெடுவெவ்வினை ஒட்ட,
பட்டாங்கினில் செலுமைம்பொறி
படவேசெயும் வீரன்
பட்டாரகன் பதமாமலர்
பணிவார்க்கிடர் இலையே!


240. இலையே!கதி இலையே!என
இனியாருமே நினையேல்;
கலிகாலமே நிலையுற்றதன்
கடையூழியில் வந்தே
நிலைமாறிய புவிமாந்தரை
நெறிசேர்த்தருள் வீரன்
சிலைமேலிடு வரியாகொளின்
சிந்தாகுலம் விடுமே!


--0--0--0--0--0--0--0--0--0--0--0--0--0--0--


ஸ்ரீ கோமடேசர் துதி


241. நீலதாமரை போலிலங்கிடும்
நேத்திரங்களும் மேலளா
நீலவான விதானமேவிடும்
நித்திலத்தொளிர் திங்களைப்
போலவாமுக மண்டலத்தொடு
பொருவு சண்பக நாசியும்
கோலமேவிடு கோமடேசரைக்
கூடிநாடொறும் போற்றுவாம்.


242. ஓடையில்செலும் தூயநீரென
ஒளிரும் ஆடியின் கன்னமும்
பீடுமல்கிடும் தோள்களைத்தொடும்
பெட்பினீண்டும் செவிகளும்
ஆடகம்புனை முகபடாமணி
ஆனைமத்தகத் தோள்களும்
கூடிநல்லெழில் கோமடேசரைத்
கூடிநாடொறும் ஏத்துவாம்.


243. வங்கவாழியின் சங்கமேயெனும்
வாமமேவிய மிடறுடன்
துங்கமாலிமயத் தினைநிகர்த்(து)
ஒங்கநின்றிடும் உருவமும்
அங்கண்பூமியில் காணுவாருளம்
அற்புதம்செயும் மார்புமே
கொங்குபூம்பத கோமடேசரைக்
கூடிநாடொறும் ஏத்துவாம்.


244. வானளாவிடும் விந்தியம்மிசை
வல்வினகெட நோற்றவன்
ஈனமில்லறம் புரியும் சிராவகர்க்(கு)
ஏறும்முடிமணி யானவன்
ஞானபவ்விய ராகுநெயதலை
மலரசெய்திடு மதியவன்
கோனெனும்புகழ் கோமடேசரைக்
கூடிநாடொறும் ஏத்துவாம்.


245. மாதவிக்கொடி சுற்றியேறிடும்
மாண்புடையெழில் மேனியன்
சீதகற்பக தருவுபோலவே
சேர்ந்தவர்க் கருள் சீதரன்
ஏதமில்பணி செய்யுமிந்திரர்’
இனிதினேத்திட நின்றவன்
கோதகல்குண கோமடேசரைக்
கூடிநாடொறும் ஏத்துவாம்.


246. திசைகள்பத்தையும் ஆடைகொண்டுமே
தேரும் அணிபணி விட்டவன்
இசையும்ஏழ்வகை அச்சமற்றவன்
எம்மையாண்டருள் கொற்றவன்
வசியெயிற்றின் பணிகள்சுற்றினும்
வாதனைபய மற்றவன்
சூசையிலாமதிக் கோமடேசரைக்
கூடிநாடொறும் ஏத்துவாம்.


247. நல்லகாட்சிய நானானதால்நசை
நல்கும்யாவினும் நீங்கினோன்
அல்லகண்டம கன்றுமேசெல
ஆன்மதிருஷ்டியில் மூழ்கினோன்
வெல்வதர்கரி தாகுகாமவி
சாரமோகமும் வீட்டினோன்
கொல்லவெண்ணிய பரதனையருள்
கோமடேசரை ஏத்துவாம்.


248. புற்றுயாதுமே பற்றிநிற்றிலன்
பரமசாந்த குணத்தனாய்
உற்றவெகுளியி னோதிடும்தீ
உணர்வுநான்கையும் விட்டுமே
துற்றுவெம்பசி தாங்கியாண்டுமோர்
தூயயோகில் நிலைத்தவன்
கொற்றவன்னவன் கோமடேசரைக்
கூடிநாடொறும் ஏத்துவாம்.


--0--0--0--0--0--0--0--0--0--0--0--0--0--0--

No comments:

Post a Comment