அறம்

அறம்

தர்மம்



அறம் என்ற சொல்லாட்சி ஆத்மானுசாசனத்தில் மட்டுமின்றி அனைத்து நூல்களிலும் காண்கிறோம். அதன் அடிப்படையை தெரிந்து கொண்டால் நலம் பயக்கும்….



பொருளின் இயல்பு அறம்.

இயல்பில் அதன் குணங்கள், தோற்றம் போன்றவைகளே உள்ளன.
அறம்பற்றி முதலில் நமக்கு சொல்லிக் கொடுத்தவர்கள் நமது பெற்றோர்களே.

அவர்கள் நாம் வளர்ந்து வரும்போது அறிவும், ஆற்றலும் கூடவே நம்முடன் வளரும் படி செய்தவர்களும் நமது பெற்றோர்களே.
அவர்கள் நமது அறிவையும் ஆற்றலையும் வாழ்வின் வழிகாட்டுதலின் வழியாக வளர்ச்சியடையச் செய்யும்போது கூறிய வழிமுறைகளே, வார்த்தைகளே அறமாக மனதில் படியத் தொடங்குகிறது. அந்த அறத்தில் பிறழாமல் இருந்திருந்தால் உலகின் இத்தனை அறங்களும் நமக்குத் தேவையே இல்லை.

பொய் சொல்லக்கூடாது. (பொய்யாமை)
திருடக்கூடாது (களவாமை)
துன்புறுத்தினால் வலி, வேதனை அதனால் செய்யக்கூடாது (அஹிச்சை)
வீட்டிலுள்ள பொருளை கேட்காமல் எடுக்கக்கூடாது (மிகு பொருள் விரும்பாமை)
அளவுக்கு மீறி எதையும் அனுபவிக்கக்கூடாது. (பிறன் நோக்காமை)

இந்த அடிப்படையில் தான் நாம் வளர்க்கப்பட்டிருக்கிறோம். இந்த வழிகாட்டுதல் வீட்டளவில் மட்டும் என்பதாக பின்னாளில் மாற்றம் பெற்று விட்டது.  

இந்த ஆச்சாரத்திலிருந்து கலாச்சாரம் மாறுவதற்குக் காரணம் உலகியல், சூழல், பிரதேச கட்டுப்பாடுகள், சமூக வரைமுறைகள், சம்பிரதாயங்கள், அங்கு நிலவும் நியாய தர்மங்கள் என்று சொல்லப்படும் சட்ட திட்டங்கள். அவை நமக்குள் துளிர்விட்டதிலிருந்து திரிபுகளை வழங்கி திசைமாறச் செய்து விட்டன.


அதனால் நாம் துன்பத்திற்கு ஆளாகிறோம். அதனிலிருந்து விடுபட வேண்டி தவிக்கிறோம். அவ்வேளையில் தான் மகான்களின் சொற்களை, உபதேச மொழிகளாக கேட்கிறோம். அவையே அந்த பிரதேசத்திற்கு சரியாக அமைவதைப் பார்க்கிறோம். அதுவே அங்கு நிலவும் அறமாக, தர்மமாக நிறுவப்படுகிறது.
                                                       

அவர்கள் என்ன அப்படி யொரு வழிகாட்டுதலை தந்தார்கள், அளித்தார்கள், அருளினார்கள் என்று ஆராய்ந்தால் இந்த பிரபஞ்சத்தில் தோன்ற வழிவகுத்த பெற்றோர்கள் விதைத்த நன்மொழிகளுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் அவர் நீண்ட வழிகாட்டுதலாக, அதன் அடிப்படை உண்மைகளை விளக்கி அளிக்கின்றார்கள்.


அவ்வாறாக தாய்தந்தை அளித்த அறத்தை பின்னாளில் உலகியல் வாழ்வு சூழ்நிலையில் அவர்களே தவறாக நடப்பதை பார்த்தும், சுற்றி வாழ்தலில் உள்ள அறம்பிசகிய நிலையும், சமூகம் தரும் தவறான அறமீறல், அறவிலக்குகளும் சேர்ந்து அறத்தை விட்டு விலகச் செய்கின்றன.

துன்பமில்லா வாழ்வுக்கு வழியளிக்கும் அந்த அறவழிகள் எவ்வாறு தோன்றின. எனின் இந்த பிரபஞ்சமே அறத்தால் நிரம்பியுள்ளது. அதாவது பிரபஞ்சத்தின் அடிப்படைப் பொருட்களே அறம் நிரம்பிய மெய்ப்பொருட்களாக இருப்பதால் தான். அது அறமற்ற எந்த ஒன்றையும் விலக்க நினைக்கிறது. அந்த விலக்கும் அழுத்தங்களே நமக்கு துன்பமும், துயரமுமாக நம்மை உணர வைக்கிறது.


அதனால் நாம் துளிர்விடும்போது பெற்ற நற்போதனைகள் அனைத்துமே நமக்கு இந்த பிரபஞ்சம், அண்டம், பூவுலகம், அந்தப் பிரதேசம் நமக்கு அளிக்கும் அறவழிகளாகும். அதன் வழி நடந்தாலே நாமும் நம்மைச் சுற்றியுள்ள அனைவரும் துன்பமின்றி எக்காலமும் போகபூமியைப் போல வாழலாம். கற்பக விருக்ஷமாக இயற்கையே இப்பூவுலக ஜீவராசிகளின் தேவைகளை இட்டு நிரப்பும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.


அதனையே அந்தந்த மதப்பெரியோர்களும் நமக்கு தர்மமாக, அறமொழியாக அருளுகின்றனர். அந்த அருள் மழையை அனைவரும் கேட்டுணர்ந்தால் உலக நலம் காக்கப்படும் என்பதில் ஐயமில்லை.


பத்மராஜ் ராமசாமி.


அறம் காத்தல் , பல நூல்களை படித்து தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை.

 நாம் சிறுவயதில், 7 - 12 வயதுவரை எவ்வாறு கட்டுப்பாட்டுடன், விதிமீறல் இருந்தால் பெற்றோர்களால் சரிசெய்யப்பட்டு வளர்க்கப்பட்டோமோ அப்பருவத்தினை நினைவுகூர்ந்து மீண்டும் வாழ்வைத் துவக்கினாலே அறவாழ்வு துளிர்விடத் துவங்கும்.

ஆனால் ஏதோ ஒன்று நம்மை தடுக்கவே செய்கிறது. அதுதான் அஹங்காரம். அதன்வழி வந்த மமகாரம். இரண்டும் ஒழுந்தாலே, திரைவிலகினாலே, அடியாழ மனதில் குடியிருக்கும் அறம் மீண்டும் முளைவிட துவங்கும். அதற்குதவுபவையே அறநூல்கள், அறஉபதேசங்கள்…

No comments:

Post a Comment