புருஷார்த்தம்


புருஷார்த்தம்


நம்முடைய ஜினதர்மத்தை படிக்கும்போது புருஷார்த்தம் என்ற வார்த்தை அடிக்கடி உபயோகப்படுத்தப்படும். இது சனாதனா இந்து தர்மம் போன்ற பல தரிசனங்களிலும் பயன்பாட்டிலுள்ள சொல்லாகும். மோட்சத்தை வலியுறுத்தும் தரிசனங்கள் இச்சொல்லை பயன்பாட்டில் வைத்துள்ளன.


அது சில இடங்களில் மாறுபட்ட பொருளை வழங்குவதாக் தோற்றமளிக்கும். அதனால் அதன் இடம், பொருள் என்ன என்பதை நாம் அறிந்து கொண்டால் மேலும் படிக்கும் போது புரிந்துகொள்ள வசதியாக அமையும்.

ஜினதர்மத்தில் முதன் முதலில் பேசப்படும் கருத்து புருஷார்த்தம் ஆகும்.

புருஷன் என்றால் மனிதன்.
அர்த்தம் என்றால் இலட்சியம் அல்லது இலக்கு என்று பொருள்.

இலட்சியம்:

இவ்வுலகில் பலவிதமான ஜீவராசிகள் இருக்கின்றன. இதில் மனிதனுக்கு மட்டும்தான் தேர்வு செய்யக்கூடிய வாய்ப்பு தரப்பட்டிருக்கிறது. மற்ற ஜீவராசிகளுக்கு தேர்வு செய்யக்கூடிய வாய்ப்பு இல்லை. தேர்வு செய்யக்கூடிய வாய்ப்பு இருக்கும்போது இலட்சியம் அல்லது குறிக்கோள் அங்கு வந்துவிடுகிறது.

தேர்வு செய்யக்கூடிய வாய்ப்பு இருப்பதால்தான் நாம் நமக்கு பிடித்த அல்லது தேவையானவற்றை தேர்வு செய்கிறோம்.

உதாரணமாக இந்தத்துறைதான் நான் சாதிக்கவேண்டும் என்று விருப்பப்படுகிறோம், அதே துறையிலும் நாம் முன்னேறி சாதிக்கின்றோம். ஆனால் சிலவற்றில் நமக்கு தேர்வு செய்யக்கூடிய வாய்ப்பு இல்லை. உதாரணமாக நம்முடைய நிறத்தை, தாய்-தந்தையரை, போன்ற சிலவற்றில் தேர்வு செய்யக்கூடிய வாய்ப்பு இல்லை. ஆகையால் தேர்வு செய்யக்கூடிய வாய்ப்பு இருக்கும் விஷயங்களில்தான் இலட்சியம் என்பது வருகிறது.

ஜினதர்மத்தில் நாம் தேர்வு செய்ய அறிவுறுத்தப்படுவது மோக்ஷம். பேரானந்த நிலை; மீண்டும் பிறப்பெடுத்து துன்பத்தில் உழலாமல் நித்திய ஆனந்தத்தில் உறையும் நிலை இதையே பல தரிசனங்களும் கூறுகின்றன.


ஆனால் புருஷார்த்தங்களை கடைபிடிப்பதில் சிறு மாற்றங்கள், ஆசாரங்களில் அதாவது நல்லொழுக்கங்களில், வாழ்வியலில் வேறுபடுகிறது. நாம் சமண தரிசனத்தை கடைபிடிக்கும் தாய், தந்தையருக்கு பிறந்துள்ளதால் ஜினவறம் அருளும் புருஷார்த்தமான மோக்ஷம் எனும் இலட்சியப் பயணத்திற்கு தகுதியானவர்களாகவே உள்ளோம். ஏனெனில் மற்றவற்றை தேர்வு செய்ய முடியாத ஒன்றாக உள்ளது. மாற்ற முயன்றால் மேலும் பல பிறவிகளும், அதனால் வரும் துன்பங்களையும் நாம் சந்திக்க நேரிடும் அபாயமும் உள்ளது.

மனிதனுக்கு இருக்க வேண்டிய இலட்சியம் புருஷார்த்தம் என்று கூறுகிறது நம் சாஸ்திரங்கள்.  மேலும் அது நான்கு வகையான புருஷார்த்தத்தை கூறுகிறது.

அது சமஸ்கிருதத்தில்  தர்மார்த்தகாமமோக்ஷம் (தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம்) எனப்படும். நம்முடைய தமிழ் மொழியில் அறம், பொருள், இன்பம், வீடு எனப்படும்.

ஆக ஜினவறவழியை ஏற்று பொருள் ஈட்டி, இவ்வுலக இன்பங்களை அனுபவிப்பதோடு மோட்ச மார்க்கத்திற்குமான வழிகளையும் கடைபிடிப்பது அவசியம் என்பதை சுருக்கமாக புருஷார்த்தம் என்று கொள்ளலாம்.


நமது இலக்கு புருஷ அர்த்தம், எனும் புருஷார்த்தமாக, மனிதனால் சாதிக்க முடிந்த இலக்காகத்தான் இருக்க வேண்டும். அதற்கான வழியை நாமே கண்டு பிடித்து ஒழுக மேலும் பல பிறவிகள் வீணடிக்கப்படுமாதலால் மோக்ஷ இலட்சியத்தை அடையும் புருஷார்த்தத்தை சுயமாக கண்டு பிடித்து ஒழுகி வெற்றி பெற்ற ஜினரை பின்பற்றினால் காரியம் சுலபமாகும் என்ற விவேக ஞானம் நமக்கிருக்க வேண்டியது அவசியம்.


அனைத்து ஜீவராசிகளும் கடைத்தேற வழிகளை கூறுபவரே  பகவானாக கருத்தப்படுகிறார்.  அந்த பகவானை நமது புருஷார்த்த வழிகாட்டியாக பரமகுருவாக , ஞானகுருவாக நம் வாழ்வில் கைக்கொள்வது அவசியமாகிறது. அவரது நாமம் சொல்லுவதால் முக்திக்கான வழி பிறக்கும் என்றிருக்கும்பொழுது நாம் ஏன் உலகியல் செல்வங்களை நோக்கி பயணிக்க வேண்டும். பௌதிக சம்பத்துக்களெல்லாம் அநித்தியம்; இன்றிருக்கும் நாளையிராது. அதனால் நிரந்தர செல்வமான மோஷமே சிறந்தது.


புருஷார்த்தம் அறம், பொருள், இன்பம், மோக்ஷம் என நான்காக சுட்டப்படுகிறது. நமது பணியெல்லாம் ஜினதர்மத்தின் வழியில் சஞ்சரித்து, பொருளைத் தேடி மோக்ஷத்தை காமிக்க வேண்டும்; சுவீகரிக்க வேண்டும்; அடைய வேண்டும் என்பதே.


அதே சமயம் நாம் தேடுகின்ற, நாடுகின்ற பொருள் மீது பற்று வைக்கும்பொழுது நாம் பந்தனத்திற்கு உள்ளாகிறோம்; பிறப்பு –இறப்பு எனும் சுழற்சியில் அகப்பட்டு மீண்டும் மீண்டும் இந்த பிரபஞ்சத்தில் வந்து பிறக்கின்றோம். ஆகவே பொருளாசையை விட்டு பகவானைத் தேடினால் முக்தி கிடைக்கும்.


நம் ஐம்புலன்களால் உணரும் இவ்வுலகமே ஒரு மாயத்தோற்றத்தை உடையது. மாயையின் கருவிகளான பொருள் மற்றும் இன்பத்தை (காமத்தை), நமக்கும் மற்றும் சமூக காரியங்களுக்காக தர்ம வழியில் செயல்படுவது புருஷார்த்தத்திற்கு துணை போவதாகிறது.


அது தனிமனித ஸாதனை – சுய முன்னேற்றத்திற்காக செய்யப்படும் ஆன்மீக பயிற்சி மற்றும் சமூக ஸாதனை – சமூக முன்னேற்றத்திற்காக செய்யப்படும் ஆன்மீக பயிற்சி அவ்விரு வழியில் செயல்பட்டு அறத்திற்காக பொருளை உபயோகிப்பது. அதாவது சத்ய வழியில் செல்வம் ஈட்டுவது மற்றும் சத்தியத்திற்காக அந்த செல்வத்தை செலவழிப்பது ஆகும்.


தர்மத்திற்காக இன்பத்தை துய்ப்பது என்பது அறவழியில் திருமணம் செய்து கொண்டு நல்ல பிள்ளைகளை உருவாக்குவது ஆகும். ஒவ்வொரு காரியத்தையும் அறம் மற்றும் சமூக முன்னேற்ற காரியம் என்ற உணர்வுடன் பிரதிபலனை எதிர்பாராது செய்வதால் அது பகவானுக்கு (அதாவது அவர் கூறிய அறவழியில்) செய்யப்படும் சேவையாக உரு மாறுகிறது.


அப்பொது பொருள் மற்றும் இன்பம் ஆகியவையும் மோக்ஷத்திற்கு கூட்டி செல்லும் இவ்வுலக கருவிகள் ஆகின்றன. அவற்றைப் அறவழியில் பயன்படுத்துவதால் பேரானந்தம் கிடைக்கிறது;

அதே சமயம் யார் பொருள் மற்றும் இன்பத்தில் மாட்டிக் கொள்கிறார்களோ அவர்கள் பலவீனமாகிறார்கள். அவர்களுக்கு மோக்ஷம் கிடைப்பதில்லை. அவர்கள் பிறப்பு-இறப்பு எனும் சக்கர சுழற்சியில் மாட்டிக் கொள்கின்றனர்.


அறம் பொருள் இன்பம் வீடு ஆகியவை இலட்சியங்கள் ஆகும்.
ஜினவறவழியில் கடைபிடித்து பொருள் மற்றும் இன்பத்தை ஈட்ட நல்ல காரியங்களை மட்டுமே செய்வதால் மோக்ஷம் சித்திக்கிறது. இதுவே ‘உண்மையான புருஷார்த்தம் ஆகும்.


அதனால் பொருள் மற்றும் இன்பத்தை சாதனையின் அங்கமாக கொண்டு ஆன்மீக பயிற்சி செய்வதால் வாழ்க்கை அர்த்தமுள்ளதாகிறது. அதுவே புருஷார்த்தமாகும்.


தமிழில் உள்ள திருக்குறள், நாலடியார் போன்ற நூல்களும் இந்த நான்கு புருஷார்த்தங்களையும், முயற்சிகளையும், மோஷம் எனும் புருஷார்த்தத்தை, வீடுபேற்றை அளிக்க வல்லவையாகவே எழுதப்பட்டுள்ளன. அவையே நாம் தேர்வு செய்யும் முக்திக்கான பாதையை நமக்களிக்கின்றன.


அவ்வழியில் பயணிப்பதே சமணர்களின் கடமையாகும்.

நம்மை நாமறிவோம்…
நன்றி




No comments:

Post a Comment