samanamum tamizhum - 1




சமணமும் தமிழும்


(நூலாசிரியர் - மயிலை.சீனி. வேங்கடசாமி)


Part - 1

பதிப்புரை


     நம் தமிழகத்தில் பண்டைக்காலமுதல் இக்காலம்வரை பல்வகைச் சமயங்கள் பல்கி வளர்ந்துள்ளன. அப்பழங்காலச் சமயங்களுள், சமணமும் ஒன்றாகும்.

     சமயக் கணக்கர்கள், தத்தங் கொள்கைகளாகிய சமயத்தைப் பரப்புதற்கு மொழியைக் கருவியாகக் கொண்டு, மொழிக் கண் சமய நுணுக்கங்களைக் காதைகள் வாயிலாகவும், எடுத்துக் காட்டு, அளவைகள் முதலிய வாயில்களாகவும் எழுதி நிலைபெறச் செய்யலாயினர். அதுகாரணமாகக் காலத்துக் கேற்றவாறு மொழியை வளர்த்து வளம்படுத்துவாருமாயினர். அந்நிலையில் நந்தமிழ் மொழிக்குச் சமண சமயத்தார் செய்த தொண்டுகள் அளப்பற்றனவாகும்.

     இச் சமணரால் ஒருகாலத்து நம் தமிழ்மொழி வளம்பெறலாயிற்றெனின், அது மிகையாகாது. அச்சமண சமயத்தை வளர்க்க நம் தமிழ்மொழியில் பேரிலக்கியங்களாகவும், தமிழர் நாகரிகப் பண்பை விளக்கும் வரலாற்று நூல்களாகவும் திகழும் சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம் முதலிய இலக்கியங்களும், நன்னூல், நம்பியகப் பொருள் போன்ற இலக்கணங்களும் பிறவும் எழுந்தன.

     இத்தகைய சமணர்தம் கொள்கையையும் வரலாற்றுண்மைகளையும் நம் தமிழக மக்கள் நன்குணர்ந்து கோடற்கு வாய்ப்பாகப் பழங்கால இலக்கியச் சான்று, கல்வெட்டு, ஆராய்ச்சிக் குறிப்புகளின் துணைகொண்டு தம் அஃகி அகன்று பரந்த அறிவால் திரு.மயிலை.சீனி.வேங்கடசாமியவர்கள் எழுதி உதவியுள்ளார்கள்.

     சிறந்த வரலாற்று நூலாகிய இதனை நல்முறையில் பதித்து வெளியிட்டுள்ளோம். தமிழகம் இந்நூலை ஏற்றுப் போற்றி எம்மை ஊக்குவிக்குமென நம்புகிறோம்.

--------------------------
முன்னுரை

     சமணமும் தமிழும் என்னும் இந்நூலை எழுதத் தொடங்கிப் பதினான்கு ஆண்டுகள் ஆயின. இதனை எழுத இத்தனை ஆண்டு பிடித்ததா என்று கருதாதீர்கள். எழுதுவதற்கு மூன்று நான்கு ஆண்டுகள்தான் கொண்டன. ஆனால், ''''ஊழ்'''' இதனை இது காறும் வெளிவராமல் செய்துவிட்டது.

     பௌத்தமும் தமிழும் என்னும் நூலை எழுதி வெளியிட்ட 1940 ஆம் ஆண்டிலேயே சமணமும் தமிழும் என்னும் இந் நூலை எழுதத் தொடங்கினேன். அப்போது சில நண்பர்கள் "பௌத்தமும் தமிழும் எழுதினீர்களே; இஃதென்ன, சமணமும் தமிழும்?" என்று கேட்டார்கள். படித்தவர்களுக்கே பௌத்த சமயத்துக்கும் சமண சமயத்துக்கும் வேற்றுமை தெரியாதிருப்பதைக் கண்டு வியப்படைந்தேன். இன்னும் சில நண்பர்கள், "காஞ்சிபுரத்தில் திருப்பருத்திக் குன்றத்தில் புத்தர் கோயில் இருக்கிறதே, நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?" என்று கேட்டார்கள். இப்படிக் கேட்டவர்களும் படித்துப் பட்டம் பெற்றவர்கள்தாம். திருப்பருத்திக் குன்றத்தில் இருப்பது புத்தர் கோயில் அன்று; ஜைனக்கோயில் என்று விளக்கியபோது தான் அவர்களுக்குச் சமண சமயத்துக்கும் பௌத்த சமயத்துக்கும் உள்ள வேறுபாடு தெரிந்தது. படித்தவர்களுக்கே இந்த வேறுபாடு  தெரியவில்லை யென்றால், பாமர மக்களைப்பற்றிக் கூறவேண்டியதில்லையே.

     முற்காலத்தில், ஏறக்குறைய ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னே, தமிழ்நாட்டிலே தலைசிறந்திருந்த சமணசமயம் இப்போது மறக்கப்பட்டு விட்டது. சமணசமய வரலாறும், சரித்திரமும் மறக்கப்பட்டும் மறைக்கப்பட்டும் போயின. அது மட்டுமன்று, சமண சமயத்தின்மேல் வெறுப்பு உணர்ச்சியும் உண்டாக்கப்பட்டது. இவற்றையெல்லாம் கண்டபோது தமிழ் நாட்டின் வரலாற்றுப் பகுதியாகிய இதனை எழுதிமுடிக்க வேண்டும் என்னும் ஊக்கம் உண்டாயிற்று. இன்னொரு காரணமும் உண்டு. என்னவென்றால், தமிழ்நூல்களைப் படிக்கும் போதும் தமிழ் இலக்கிய வரலாற்றை ஆராயும்போதும் சமணசமயத்தவர், தமிழ் மொழிக்குச் செய்திருக்கும் சிறந்த தொண்டுகளைக் கண்டேன். சமண சமயத்தவர் செய்துள்ள தொண்டுபோல அவ்வளவு அதிகமான தொண்டுகளை வேறு சமயத்தவர் தமிழ் மொழிக்குச் செய்யவில்லை என்பதையும் அறிந்தேன். ஆகவே, பண்டைத் தமிழரின் சமய வாழ்க்கையில் பெரும் பங்குகொண்டிருந்து, தமிழ் மொழியை வளப்படுத்திய சமணசமய வரலாற்றை எழுதவேண்டுமென்னும் அவாவினால் உந்தப்பட்டு இந் நூலை எழுதினேன். இதனை எழுதும்போது அவ்வப்போது என்னை ஊக்கப்படுத்தித் தூண்டியவர் அண்மையில் காலஞ் சென்ற தமிழ்ப் பேராசிரியர் திரு.ச.த.சற்குணர்.க.இ., அவர்கள் ஆவர். அப் பெரியாரின் ஆன்மா சந்தியுறுவதாக.

     வரலாறுகளை ஆராய்ந்து எழுதுவது, கதைகளை எழுதுவது போல, எளிதான காரியமன்று, ஒவ்வொன்றையும் துருவித் துருவிப் பார்த்துச் சான்று காட்டி ஆதாரத்தோடு எழுதவேண்டும், அன்றியும், எனது மதம் பிறர் மதம் என்று கொள்ளாமல், காய்தல் உவத்தல் இல்லாமல், நடுநின்று செம்பொருள் காண வேண்டும். சாசனங்களையும், பல நூல்களையும், ஏனைய சான்றுகளையும் ஆராய்ந்து ஒத்திட்டுப்பார்த்து முடிவு காணவேண்டும். (இந்த மனப்பான்மை நூலை வாசிப்பவர்களுக்கும் இருக்கவேண்டும்). வாழ்க்கைப் போரட்டத்தின் இடையே கிடைத்த சிறு சிறு நேரங்களைப் பயன்படுத்திக்கொண்டு, என்னால் இயன்ற வரையில் எனது சிற்றறிவுக்கெட்டியவரையில் ஏறக்குறைய நான்கு ஆண்டுகள் இதனை எழுதி முடித்தேன். ஆயினும், முதலில் சொல்லியபடி, ''''ஊழ்'''' இதனைப் பத்து ஆண்டுகளாக வெளிவராமல் செய்துவிட்டது. நேரத்தையும் உழைப்பையும் செலவிட்டு இந்த நூலை எழுதி ஏன் என் ஆயுளை வீணாக்கினேன் என்று கருதி இதை வெளியிடாமலே இருந்துவிட்டேன். அதற்குச் சில காரணங்கள் உண்டு. அவற்றை இங்குக் கூறவிரும்பவில்லை. ஒன்றைமட்டும் கூற விரும்புகிறேன்; உண்மையாக உழைத்து ஆராய்ச்சி நூல் எழுதும் உழைப்பாளிகளுக்குத் தமிழ் நாட்டிலே இடமில்லை என்பதே அது. பாமர்களைப்பற்றியும் படியாத பணக்காரர்களைப்பற்றியும் கூறவில்லை நான் "கல்லாத பேர்களே நல்லவர்கள் நல்லவர்கள ", கல்வித்துறையிலே மிகவுயர்ந்த நிலை பெற்று ஆராய்ச்சியின் அருமை பெருமைகளை அறிந்தவர்கள்கூட, ஆராய்ச்சியாளரைப் போற்றுவதில்லை யென்றால்  இந்நு£ல்களை ஏன் எழுதவேண்டும் ஏன் வெளிப்படுத்த வேண்டும்?

     பத்து ஆண்டுகள் கடந்தன. இந் நு£ல் எழுதுவது பற்றிப் பலரும் முன்னமே அறிந்திருத்படியினால், பல நண்பர்கள் நேரிலும் கடிதம் எழுதியும் இதைப்பற்றிக் கேட்டார்கள். இலங்கயைலிருக்கும் நண்பர்கள் சிலரும் கடிதம் எழுதிக் கேட்டார்கள். அவர்களுக்கெல்லாம் வெளிவரும் வெளிவரும் என்று கூறினேனே யல்லாமல் என் மனவேதனையைக் கூறவில்லை.

     உண்மை அறிந்த நெருங்கிய நண்பர்கள்    சிலர் இதனை வெயிடுமாறு வற்புறுத்தினார்கள். ‘கிருஸ்துவமும் தமிழும் ‘, ‘பௌத்தமும் தமிழும், எழுதியது தமிழ்நாட்டின் சமயவரலாறு இலக்கிய வரலாறுகளை அறிதற்கு ஏற்றதாயிற்று. அதுபோலவே ‘சமணமும் தமிழும் வெளிவரவேண்டும். அதுமட்டுமல்ல ‘இஸ்லாமும் தமிழும். ‘இந்துமதமும் தமிழும் என்னும் நு£ல்களையும் எழுதவேண்டும் என்று அடிக்கடி வற்புறுத்தத் தொடங்கினார்கள். கடைசியாக சைவசித்தாந்த நு£ற்பதிப்புக் கழகத்தின் ஆட்சிப் பொறுப்பாளர் திரு,வ, சுப்பையா பிள்ளை அவர்கள் இந்நு£லை அச்சிடுவதாகக் கூறிக் கையெழுத்துப் பிரதியைக் கேட்டார்கள். அதற்கு இணங்கிக் கையெழுத்துப் பிரதியைத் தேடினேன்.அந்தோ! நான் கண்டதென்ன! பெட்டியினுள் சிதல் அரித்த ஏடுகள்! தாள்கள் பெரும்பாலும் மறைந்து விட்டன. சில தாள்களே அரைகுறையாகச் செல்லரிக்கப்பட்டுக்  கிடந்தன. எனது சில ஆண்டு உழைப்பு வீணாய்ப்போயிற்று. மீண்டும்  எழுத வேண்டியதாயிற்று.

     இயன்றவரையில் சான்றுகளையும் ஆதாரங்களையும் தேடி மறுபடியும் எழுதினேன். ஆனால், இது முற்பகுதியே. இப் பகுதியில் சமய வரலாறு மட்டும் பேசப்படுகிறது. பிற்பகுதி எழுதப்படுகிறது. அப்பகுதியில்தான் சமண சமயத்தினர் தமிழ் மொழிக்குச் செய்த தொண்டுகள் கூறப்படுகின்றன. அப் பகுதியும் விரைவில் வெளிவரக்கூடும்.

      வாழ்க்கைப் போருக்கிடையே, பல இன்னல்களுக்கிடையே கிடைத்த சிறுசிறு ஓய்வுக் காலத்தைப் பயன்படுத்தி இந் நு£ல் எழுதி முடிக்கப்பட்டது. இதில் மறைந்து போன வரலாறுகளும் செய்திகளும் கூறப்படுகின்றன. உண்மை காண விரும்புவோர் காய்தல் உவத்தல் இல்லாமல் இவற்றை ஆராய்ந்து பார்த்துக் குற்றங்களைந்து குணங்கொள்வாராக.

     இந் நூலில் ஜைனர் என்னும் சொல்லுக்குப் பதிலாகச் சமணர் என்னும் சொல் வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணம் இவ் வச்சகத்தில் வடமொழி அச்செழுத்துக்கள் அதிகம் இல்லாமையேயாம். ஜைன நண்பர்கள் இதனைப் பொருட்படுத்த மாட்டார்கள் என்று நம்புகிறேன்.

     இந்நூலின் பின்னிணைப்பில் சேர்ந்துள்ள சமணசமயப் புகழ்ப்பாக்கள் பெரும்பாலும் யாப்பருங்கலம், யாப்பருங்கலக்காரிகை உரைகளில் மேற்கோள் காட்டப்பட்டவை.

     பத்து ஆண்டு அஞ்ஞாதவாசத்தின் பிறகு இந் நு£ல் இப்போது முதன் முதலாக வெளிப்படுகிறது. இந் நு£ல் வெளிவருவதற்குக் காரணமாயிருந்து இதனை நன்கு அச்சிட்டு வெளிப்படுத்திய நண்பர், சைவசித்தாந்த நு£ற்பதிப்புக் கழக ஆட்சிப் பொறுப்பாளர் திரு.வ. சுப்பையா பிள்ளை அவர்களுக்கு எனது நன்றியும் தமிழகத்தின் நன்றியும் உரியவாகும்,

மலரகம், மயிலாப்பூர்                                                         மயிலை.சீனி. வேங்கடசாமி

சென்னை, 1-11-54

-----------------------------------

1.சமணசமயம் தோன்றிய வரலாறு

     சமணசமயத்திற்கு ஜைன மதம், ஆருகத மதம், நிகண்ட மதம், அநேகாந்தவாத மதம், ஸியாத்வாத மதம் என்னும் பெயர்களும் உள்ளன.

     சமணர் (ஸ்ரமணர்) என்றால் துறவிகள் என்பது பொருள். துறவை வற்புறுத்திக் கூறி, துறவு பூண்டோரே வீடுபெறுவர் என்று இந்த மதம் சாற்றுகிறது. எனவே, துறவு எனப் பொருள்படும் சமணம் என்னும் பெயர் இந்த மதத்திற்குச் சிறப்புப் பெயராக வழங்கப்படுகிறது. பலன்களையும் கர்மங்களையும் ஜயித்தவர்(வென்றவர்) ஆகலான் தீர்த்தங்கர்ருக்கு ஜினர் என்னும் பெயர் உண்டு. ஜினரைக் கடவுளாக உடைய மதம் ஜைன மதம் எனப்பட்டது. சமண சமயக் கடவுளுக்கு அருகன் என்னும் பெயரும் உண்டு. ஆகவே, அருகனை வணங்குவோர் ஆருகதர்1 என்றும் இந்த மதத்திற்கு ஆருகதமதம் என்றும் பெயர் கூறப்படுகிறது.

     சமணக் கடவுள் பற்றற்றவர் ஆதலின் நிர்க்கந்தர் அல்லது நிகண்டர் எனப்பட்டார். அதுபற்றிச் சமண சமயம் நிகண்டமதம் எனப் பெயர்பெற்றது. மதங்கள் ஏகாந்தவாதம், அநேகாந்தவாதம் என இருவகை. சமணம் ஒழிந்த ஏனைய மதங்கள் எல்லாம் ஏகாந்தவாத மதங்கள். சமணம் ஒன்றே அநேகாந்தவாதத்தைக் கூறுவது. ஆகவே, இந்த மதத்திற்கு அநேகாந்தவாத மதம் என்று பெயர் உண்டாயிற்று. ஸியாத்வாதம் என்றாலும் அநேகாந்தவாதம் என்றாலும் ஒன்றே. அசோக (பிண்டி) மரத்தைப் போற்றுவது சமணர் வழக்கமாதலின் சமணருக்குப் பிண்டியர் என்னும் பெயர் கூறப்படுகிறது.

     சமண சமயக் கொள்கைகளை அவ்வப்போது உலகத்திலே பரவச் செய்வதன் பொருட்டுத் தீர்த்தங்கரர்கள் என்னும் பெரியார்கள் அவ்வப்போது தோன்றுகிறார்கள் என்பது சமண சமயக் கொள்கை, இதுவரை இருபத்து நான்கு தீர்த்தங்கரர்கள் தோன்றியுள்ளார்கள் என்பதும், இனியும் இருபத்து நான்கு தீர்த்தங்கரர்கள் தோன்றப் போகிறார்கள் என்பதும் இந்த மதக் கொள்கையாகும்.

     இதுவரை தோன்றியுள்ள இருபத்துநான்கு தீர்த்தங்கரர்களின் பெயர் வருமாறு;

     1. விருஷப தேவர்             13. விமல நாதர்

       (ஆதி பகவன்.)              14. அநந்த நாதர்

     2. அஜிதநாதர்.                   (அநந்தஜித் பட்டாரகர்)

     3. சம்பவ நாதர்               15. தருமநாதர்

     4. அபி நந்தனர்               16. சாந்தி நாதர்

     5. சுமதி நாதர்                17. குந்துநாதர்(குந்து பட்டாரகர்)

     6. பதும நாபர்                18. அரநாதர்  

     7. சுபார்சவ நாதர்             19. மல்லிநாதர்

     8. சந்திரப் பிரபர்             20. முனிசு வர்த்தர்

     9. புஷ்ப தந்தர்(சுவிதி நாதர்)      21. நமிநாதர்(நமிபட்டாரகர்)

     10. சீதள நாதர்                22. நேமிநாதர்(அரிஷ்ட நேமி)

     11. சீறீயாம்ச நாதர்             23. பார்சுவ நாதர்

     12. வாசு பூஜ்யர்               24. வர்த்தமான மகாவீரர்.



     தீர்த்தங்கரர்கள் அருகக் கடவுளைப் போன்றே தெய்வமாகத் தொழப்படுகின்றனர்.

     சமண சமயக் கொள்கைகளை, விருஷப தேவர் (ஆதி பகவன்) முதல் முதல் உலகத்திலே பரப்பினார் என்றும், அவருக்குப் பின்னர் வந்த தீர்த்தங்கரர்களும் இந்த மதத்தைப் போதித்தார்கள் என்றும் சமணர் கூறுவர். ஆனால், வரலாற்றாசிரியர்கள் இதனை ஒப்புக்கொள்வதில்லை. இருபத்து மூன்றாவது தீர்த்தங்கரராகிய பார்சவநாதர் சமண மதத்தை உண்டாக்கினார் என்றும் அவருக்குப் பின் வந்த வர்த்தமான மகாவீரர் இந்த மதத்தைச் சீர்திருத்தியமைத்தார் என்றும் வரலாற்றாசிரியர்கள் கருதுகிறார்கள். இவ்விரு தீர்த்தங்கரருக்கு முன்பிருந்த ஏனைய இருபத்திரண்டு தீர்த்தங்கரரும் கற்பனைப் பெரியார் என்று இவர்கள் கூறுகின்றனர். இவர்கள் இவ்வாறு கூறுவதற்கு இரண்டு காரணங்களைக் காட்டுகின்றனர். அக்காரணங்களாவன;

     முதல் இருபத்திரண்டு தீர்த்தங்கரர்கள் இயற்கைக்கு மாறுபட்டு, அதிக உயரமும் அதற்கேற்ற பருமனும் வாய்த்திருந்தனர் என்று கூறப்படுவது ஒன்று.



     இவர்கள் இயற்கைக்கு மாறுபட்டுப் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் உயிர் வாழ்ந்திருந்தனர் எனக் கூறப்படுவது மற்றொன்று.

     தீர்த்தங்கரர்களின் உயரமும் ஆயுளும் சமண நூல்களில் இவ்வாறு

கூறப்பட்டுள்ளன.

     பெயர்              உயரம்            ஆயுள்

   1. விருஷபர்             500-வில்        84 லட்ச பூர்வ ஆண்டு

   2. அஜிதநாதர்            450-வில்        71 "

   3. சம்பவநாதர்            400-வில்       60 "

   4. அபிநந்தனர்           350-வில்        50 "

   5. சுமதிநாதர்             300-வில்       40 லட்ச பூர்வ ஆண்டு

   6. பதுமநாபர்             250-வில்       30 "

   7. சுபார்சவநாதர்           200-வில்       20 "

   8. சந்திரப்பிரபர்           150-வில்        10 "

   9. புஷ்பதந்தர்            100-வில்        2 லட்ச பூர்வ ஆண்டு

   10. சீதளநாதர்             90-வில்        1  "

   11. சிறீயாம்சநாதர்          80-வில்        80 லட்சம் ஆண்டு

   12. வாசு பூஜ்யர்           70-வில்        72 "

   13. விமலநாதர்            60-வில்        60 "

   14. அருந்தநாதர்           50-வில்        30 "

   15. தருமநாதர்             45-வில்        10 "

   16. சாந்திநாதர்            40-வில்         1  "

   17. குந்துநாதர்            35-வில்        95 ஆயிரம் ஆண்டு

   18. அரநாதர்             30-வில்        84 "

   19. மல்லிநாதர்            25-வில்        55 "

   20. முனிசுவர்த்தர்         20-வில்        30 "

   21. நமிநாதர்              15-வில்        10 "

   22. நேமிநாதர்            10-வில்         1 "

   23. பார்சுவநாதர்           9-முழம்       100 ஆண்டு

   24. மகாவீரர்             7-முழம்        72 ஆண்டு

     இவ்வாறு ஆயிரக் கணக்கான ஆண்டுகள் உயிர் வாழ்ந்திருந்தவராகக் கூறப்படுகிற முதல் இருபத்திரண்டு தீர்த்தங்கரர்களை கற்பனைப் பெரியார் என்று ஒதுக்கிவிட்டு முறையே 100 ஆண்டும் 72 ஆண்டும் உயிர் வாழ்ந்தவராகக் கூறப்படுகிற கடைசி இரண்டு தீர்த்தங்கரராகிய பார்சுவநாதரையும், மகாவீரரையும் உலகத்தில் உயிர்வாழ்ந்திருந்த உண்மைப் பெரியார் என்றும் கொண்டு, இவர்கள் காலத்தில்தான் சமணமதம் தோன்றியிருக்க வேண்டும் என்று வரலாற்றாசிரியர் கருதுகிறார்கள்.

     ஆராய்ந்து பார்த்தால் தீர்த்தங்கரர் அனைவரும் உண்மையில் உயிர் வாழ்ந்திருந்த பெரியார் என்பதும் கற்பனைப் பெரியார் அல்லர் என்பதும் புலப்படும். பண்டைக் காலத்திலிருந்த சமயப் பெரியார்களைப் பற்றிப் பிற்காலத்தவர், மக்கள் இயற்கைக்கு மேற்பட்ட இயல்புகளைக் கற்பித்துக் கதை எழுதுவது வழக்கம். இது எல்லா மதங்களுக்கும் இயல்பு. தம்முடைய மதப் பெரியார்களின் பெருமை, ஆற்றல், சிறப்பு, தெய்விகத் தன்மை முதலியவற்றை அதிகப்படுத்த வேண்டும் என்னும் சமய ஆர்வத்தினால் ஒவ்வொரு சமயத்தாரும் தத்தம் சமயப் பெரியாரைப் பற்றிப் பலவித செய்திகளைக் கற்பித்து விடுகிறார்கள். இயற்கைக்கு மாறுபட்ட இக் கற்பனைகளைச் ‘சமயப்பற்று என ஒதுக்கிவிட்டுப் பார்த்தால், அவர்கள் உண்மையில் உலகத்தில் வாழ்ந்திருந்தவர் என்பது புலனாகும். அதுபோன்று தீர்த்தங்கரரின் மிகப் பெரிய உருவத்தையும் நீண்ட வாழ்க்கையையும் சமணரின் ‘சமயக் கொள்கை என்று ஒதுக்கிவிடுவோமாயின், தீர்த்தங்கரர் அனைவரும் உண்மைப் பெரியார் என்பது புலப்படும்.

     சமணர்கள் தமது தீர்த்தங்கரருக்கு ஏன் பருத்த உயர்ந்த உடலையும் நீண்ட ஆயுளையும் கற்பித்தார்கள்?

     உயிர் உடம்பு முழுவதும் பரவி நிற்கிறது என்பதும், உடம்பின் உருவத்திற்கு ஏற்றபடி உயிரானது சிறிதும் பெரிதுமாக அமையும் என்பதும் சமண சமயக்கொள்கை. எறும்பின் மிகச்சிறிய உடலில் பரந்து நிற்கும் உயிர் அதன் உடலுக்குத் தக்கபடி சிறியதாகவும், மிகப்பெரிய யானையின் உடம்பில் பரந்து நிற்கும் உயிர் அதன் பெரிய உடம்புக்குத் தக்கபடி மிகப் பெரியதாகவும் அமைந்து நிற்கும் என்பது ஆருகதமதக் கொள்கை. இக்கருத்துப் பற்றியே ‘‘பெரியதன் ஆவி பெரிது’’ என்னும் பழமொழியும் சமணரால் வழங்கப்படுவதாயிற்று. என்னை?

    அரிதவித் தாசின் றுணர்ந்தவன் பாதம்
    விரிகடல் சூழ்ந்த வியண்கண்மா ஞாலத்
    துரியதனிற் கண்டுணர்ந்தார் ஓக்கமே போலப்
    பெரியதன் ஆவி பெரிது.

என்பது பழமொழி நானூறு.

     இச்சமயக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு ஆருகதர் தமது தீர்த்தங்கரருக்கு மிகப் பெரிய உருவத்தைக் கற்பித்தார்கள் போலும், மிகப் பெரிய உருவத்தைக் கற்பித்ததற் கேற்ப மிக நீண்ட ஆயுளையும் கற்பித்தார்கள் போலும். இவ்விரண்டு கற்பனைகளையும் தள்ளிவிடுவோமாயின், தீர்த்தங்கரர் உண்மையில் இருந்த பெரியார் என்பது விளங்கும்.

    தீர்த்தங்கரர் அனைவரும் உண்மைப் பெரியார் என்றே கொள்வோம். ஆனால், இவர்கள் அனைவரும் சரித்திர காலத்துக்கு உட்பட்டவர் அல்லர். முதல் பத்தொன்பது தீர்த்தங்கரர்கள் சரித்திரகாலத்துக்கு முற்பட்டவராகக் காணப்படுகின்றனர். கடைசி ஐந்து தீர்த்தங்கரர்களாகிய முனிசு வர்த்தர், நமிநாதர், நேமிநாதர் பார்சுவநாதர், மகாவீரர் என்பவர்கள் சரித்திர காலத்துக்குட்பட்டவராவர். எப்படி என்றால், கூறுதும்.

    இராமாயணக் கதையையும் பாரதக் கதையையும் சரித்திரக் கதைகளாக ஒப்புக்கொண்டு வரலாற்றாசிரியர் இந்திய சரித்திரத்தை எழுதி வருகிறார்கள். இந்திய சரித்திரத்தின் தொடக்கத்தில் இராமாயண, பாரதக் கதைகள் கூறப்படுகின்றன. இக்கதைகள் இந்துக்களுக்கு (சைவ வைணவர்) உள்ளதுபோலவே சமணர்களுக்கும் உள்ளன. இந்து, சமண இராமாயண பாரதக் கதைகளில் சில சிறு மாறுதல்கள் காணப்படுகிறபோதிலும் இரண்டும் ஒரே கதைகளாகும். இராமாயணமும் பாரதமும் இந்திய சரித்திரத்தில் இடம்பெற்று இருக்கிறபடியால், இராமாயண காலத்தில் இருந்த 20 ஆவது தீர்த்தங்கராகிய முனிசுவர்த் தரும், அவருக்குப் பின் இருந்த நமிநாதர் என்னும் 21 ஆவது தீர்த்தங்கரரும், அவருக்குப் பிறகு பாண்டவர் கண்ணபிரான் காலத்தில் இருந்தவராகிய 22-ஆவது தீர்த்தங்கரராகிய நேமிநாதரும்2, அவருக்குப் பிறகு இருந்த பார்சுவநாத தீர்த்தங்கரரும். அவருக்குப் பிறகு புத்த பகவான் காலத்தில் இருந்த 24 ஆவது தீர்த்தங்கரராகிய மகாவீரரும் சரித்திர காலத்தில் இருந்தவர் ஆவர்.

    இருபத்து மூன்றாவது தீர்த்தங்கரராகிய பார்சுவநாதர் கி.மு. எட்டாம் நூற்றாண்டில் இருந்தவர். அதாவது கி.மு. 817 முதல் கி.பி. 717 வரையில் இருந்தவர். இவருக்குப்பின்னர் 250 ஆண்டுகளுக்குப் பிறகு வர்த்தமான மகாவீரர் தோன்றி 72 ஆண்டுகள் உயிர்வாழ்ந்திருந்தார். இவர் கி.மு. 599 முதல் கி.பி. 527 வரையில் இருந்தவர். வர்த்தமான மகாவீரர் காலத்திலே, பௌத்த மதத்தை உண்டாக்கிய கௌதமபுத்தரும், ஆசீவகமதத்தை உண்டாக்கிய மற்கலியும் இருந்தார்கள். இவர்களில் மகாவீரர் வயதில் மூத்தவர். மற்கலி, மகாவீரருடன் ஆறு ஆண்டு ஒருங்கிந்தார். பிறகு மகாவீரருக்கு மாறுபட்டு ஆசீவகமதம் என்னும் புதிய மதத்தையுண்டாக்கினார். இதனால், பௌத்த மதமும் ஆசிவகமதமும் மகாவீரர் காலத்தில் தோன்றிய மதங்கள் என்பதும் இவ்விரு மதங்களுக்கு முற்பட்டது சமணமதம் என்பதும் விளங்குகின்றன.

    சமண சமயம் பிற்காலத்தில் மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிவுண்டது. அவை சுவேதாம்பர சமணம், திகம்பர சமணம், ஸ்தானகவாசி சமணம் என்பன. சுவேதாம்பர சமணத் துறவிகள் வெண்ணிற ஆடைகள் அணிவர். இவரின் ஆலயங்களில் உள்ள தீர்த்தங்கரர் திருவுருவங்களுக்கும் வெண்ணிற ஆடை உடுத்துவர். சுவேதாம்பரம் என்பதற்கு வெண்ணிற ஆடை என்பது பொருள். திகம்பர சமணத் துறவிகள் ஆடை அணியமாட்டார்கள், கௌபீனமும் உடுத்தமாட்டார்கள். திகம்பரர் என்றால் திசைகளை ஆடையாக உடுத்தவர் என்பது பொருள். (திக் + அம்பரம் = திகம்பரம்) அதாவது உடையின்றி இருப்பர். இவரின் கோயில்களில் உள்ள தீர்த்தங்கரர் திருவுருவங்களும் ஆடையுடுத்தப்பெறாமல் திகம்பரமாகவே (அம்மணமாகவே) இருக்கும். சுவேதாம்பர சமணரும் திகம்பர சமணரும் உருவவழிபாட்டினர். ஸ்தானகவாசி சமணருக்கு உருவ வழிபாடு உடன்பாடு அன்று; அவர்கள் தம் கோயில்களில் சமண ஆகம நூல்களை வைத்து அவற்றையே தீர்த்தங்கரராகவும், அருகக் கடவுளாகவும் பாவித்து வணங்குவார்கள்.

    சுவேதாம்பர, ஸ்தானகவாசி சமணர்கள் வட இந்தியாவில் காணப்படுகின்றனர். திகம்பர சமணர் பண்டைக் காலத்தில் தமிழ் நாட்டிலே பெருந்தொகையினராக இருந்தனர். இப்போதும் தமிழ் நாட்டில் உள்ள சமணர் திகம்பர சமணரே. தமிழ் நூல்களிலே ஜைனர் என்றும், சமணர் என்றும், அமணர் என்றும், ஆருகதர் என்றும் கூறப்படுகிறவர் திகம்பர சமணரேயாவர். 

 ____________________________________________________________________________


1.       ‘‘அருகனென நிறுத்தி இவனைத் தெய்வமாகவுடையான் யாவனெனக் கருதியவிடத்து அகரத்தை ஆகாரமாக்கி, ‘ஒற்றுமிகும் என்பதனாற் ககர வொற்றின் பின்னே தகரவொற்றை மிகுத்து, ‘சுட்டு மிகும் என்பதனால் அகரச் சுட்டை மிகுத்து, முன்னொற் றுண்டேற் செம்மை யுயிரேறுஞ் சிறந்து என்பதினால் ஒற்றிலே உயிரை ஏற்றி ஆருகதன் என முடிக்க’’ என்பது நேமிநாதம்; எழுத்ததிகாரம்; 10ஆம் செய்யுளுரை.

2.      நேமிநாத தீர்த்தங்கரரின் உறவினரான கண்ணபிரான், இனி உலகத்திலே தோன்றப்போகிற சமண தீர்த்தங்கரர்களின் முதல் தீர்த்தங்கரராகத் தோன்றிச் சமண சமயத்தைப் பரவச் செய்யப்போகிறார் என்பது சமணரின் நம்பிக்கை. 

---------------------

2.சமணசமய தத்துவம்

    இனி, சமண சமய தத்துவத்தைப் பற்றிச் சுருக்கமாகக் கூறுவோம்;

    ‘உயிரும்உயி ரல்லதும், புண்ணியம், பாவம், ஊற்றும்
    செயிர்தீர்செறிப் பும், உதிர்ப்பும், கட்டும், வீடும், உற்ற
    துயர்தீர்க்கும் தூய நெறியும்சுருக் காய்யுரைப்பன்;
    மயல்தீர்ந்த காட்சி யுடையோய்! இது கேண்மதித்தே

என்பது மேருமந்தரபுராணம்.

    சமணசமய தத்துவத்தில் ஒன்பது பொருள்கள் கூறப்படுகின்றன. இவற்றை நவபதார்த்தம் என்பர். இவை; உயிர், உயிரல்லது, புண்ணியம், பாவம், ஊற்று, செறிப்பு, உதிர்ப்பு, கட்டு, வீடு என்பனவாம். இவற்றை முறையே ஜீவன், அஜீவன், புண்ணியம், பாவம், ஆஸ்ரவம், ஸம்வரை, நிர்ஜரை, பந்தம், மோட்சம் என்றும் கூறுவர். இவ்வொன்பது பொருள்களை விளக்குவோம்.

     1. உயிர் (ஜீவன்); உயிர்கள் எண்ணிறந்தன; அழிவில்லாதன; அநாதியாகவுள்ளன. அதாவது, உயிர்களைக் கடவுள் படைக்க வில்லை. நல்வினை தீவினை என்னும் இருவினைகளை (புண்ணிய பாவங்களைச்) செய்து, அவற்றின் பயனாகிய இன்ப துன்பங்களைத் துய்ப்பதற்கு நரக கதி, விலங்கு கதி, மக்கள் கதி, தேவ கதி என்னும் நான்கு கதிகளில் பிறந்து இறந்து உழன்று திரிவதும் இருவினைகளை அறுத்துப் பிறவா நிலையாகிய பேரின்ப வீட்டினை அடைவதும் உயிர்களின் இயல்பாகும். உயிர்கள் ஓரறிவுயிர், ஈரறிவுயிர், மூவறிவுயிர், நாலறிவுயிர், ஐயறிவுயிர் என ஐந்து வகைப்படும். ஐயறிவுயிர்கள் பகுத்தறிவு (மனம்) இல்லாதவை, பகுத்தறிவு உடையவை என இருவகைப்படும்3.

     உடம்பின் பருமை சிறுமைக்கு ஏற்ப உயிரானது பெரியதாகவும் சிறியதாகவும் உடல் முழுவதும் பரந்து நிற்கும். குடத்திற்குள் வைத்த விளக்கு குடத்திற்குள் மட்டும் ஒளிகாட்டும்; பெரிய அறையில் வைத்த விளக்கு அறை முழுவதும் ஒளிகாட்டும்; அதுபோல, உடம்புகளின் அளவுக்குத் தக்கபடி உயிரானது பெரியதாகப் பரவியும் சிறியதாகச் சுருங்கியும் இருக்கும். ‘‘பெரியதன் ஆவி பெரிது’’ என்பது ஆருகதர் வழங்கும் பழமொழி.

     மேலும், உயிர்கள் வீட்டது, மாற்றது என இருவகைப்படும். வீட்டது எனப்படும் ‘மோக்ஷ ஜீவன் அறிவு விளங்கப்பெற்று இருவினைகளையும் நீக்கி வீடுபேறடையும் தன்மையுள்ளது. மாற்றது எனப்படும் ‘சம்சார ஜீவன் நல்வினை தீவினைகளிற் கட்டுண்டு அவ்வினைப் பயன்களைத் துய்ப்பதற்காக நரகத்திலும் சொர்க்கத்திலும் பிறப்பதும் இறப்பதுமாக உழன்று திரியும் தன்மையுள்ளது. விலங்கு, நரகர், தேவர் என்னும் பிறப்புக்களில் பிறந்த உயிர்கள் அப்பிறவிகளிலே வீடுபேறடையா. மக்களாகப் பிறந்த உயிர்கள் மட்டும் வீடுபெறும் வாய்ப்பு உடையன. அதுவும் துறவு பூண்டவர்களுக்கே வீடுபேறடைய முடியும். இல்லறத்தார்க்கு வீடுபேறு கிடையாது.

     2. உயிரல்லது (அஜீவன்); புத்கலம், தர்மம், அதர்மம், காலம், ஆகாயம் என்னும் இவை ஐந்தும் உயிரல்லனவாகிய அஜீவப் பொருள்களாம். இவைகளும் உயிரைப் போன்றே அனாதியாக உள்ளன. அதாவது, இவற்றைக் கடவுள் படைக்கவில்லை. உயிர்களின் இயல்பாகிய நல்வினை தீவினை என்னும் இருவினைகளைச் செய்து அவ்வினைகளுக்கேற்ப இன்ப துன்பங்களைத் துய்த்துப் பல பிறவிகளிலும் பிறந்து இறந்து உழல்வதும் பின்னர், நல்லறிவும் நன்ஞானமும் பெற்று இருவினைக் கட்டறுத்து வீடுபேறடைவதும் ஆகிய இத்தன்மைகள் உயிரல்லன வாகிய இந்த அஜீவப் பொருள்களுக்குக் கிடையா. இந்த ஐந்து அஜீவப் பொருள்களின் இயல்பை விளக்குவோம். புத்கலம் என்னும் பொருள், உயிர்களில் படிந்து அவற்றைப் புண்ணிய பாவங்களாகிய இருவினைகளைச் செய்விக்கும் தன்மையுள்ளது. புத்கலம் என்பதில் ஐந்து புலன்களும், ஐம்புலன்களும் அறியப்படுகிற பொருள்களும், இருட்டும், வெளிச்சமும், வெயிலும், நிழலும், ஒளியும், நிலம் நீர் நெருப்பு காற்று என்னும் நான்கு பூதங்களும் அடங்கியுள்ளன. நுண்ணிய அணுப்பொருளாகவும் (சூக்குமப் பொருள்), பெரிய பருப் பொருளாகவும் (ஸ்தூலப் பொருள்) மாறும் தன்மையுள்ளது இந்தப் புத்கலம். புத்கலத்திற்கு உருவம், நிறம், சுவை, நாற்றம், ஊறு என்னும் இவைகளும் உண்டு. உயிர்களுக்கு உடம்பையும், மனம், வாக்கு, சுகம், துக்கம் முதலியவற்றையும் பிறத்தல் வாழ்தல் இறத்தல் முதலியலற்றையும் புத்கலப்பொருள் கொடுக்கிறது. அஃதாவது, உயிர்கள் இவற்றை அடைவது புத்தகலப் பொருளினாலேதான்.

     தர்மம் அதர்மம் என்பவை தர்மாஸ்திகாயம் அதர்மாஸ்திகாயம் என்றும் கூறப்படும் (இவற்றைப் புண்ணியம் பாவம் என்று கருதுவது கூடாது. சமண தத்துவக் கொள்கைப்படி, தர்மம் அதர்மம் என்பவை வேறு புண்ணிய பாவம் என்பவை வேறு). தர்மம் அதர்மம் என்பவை நுண்ணிய அணுப்பொருளாக உள்ளன. இவை உயிர்கள் இயங்குவதற்கும் தங்கி நிற்பதற்கும் இடமாக உள்ளன. மீன்கள் நீந்துவதற்கும் ஓய்வு கொள்வதற்கும் நீர்நிலை (தண்ணீர்) எவ்வாறு உதவுகிறது அவ்வாறு உயிர்கள் இயங்குவதற்கும் தங்குவதற்கும் தர்ம அதர்மம் என்னும் அணுப்பொருள்கள் இடமாக உள்ளன. நடத்தல் ஓடுதல் முதலிய இயக்கங்கள் தர்மம் என்னும் அணுக்களின்

உதவியினாலாகும். இருத்தல், நிற்றல், கிடத்தல் முதலியவை அதர்மம் என்னும் அணுக்களின் உதவியினால் ஆகும். தர்ம அதர்மப் பொருள்கள் இல்லையானால் புத்கலங்களால் உண்டாகும்

பலவகையான உடம்புகள் இயங்கவும் தங்கவும் முடியாது.

    ‘‘தருமாத்தி காயம் தானெங்கும் உளதாய்ப்
    பொருள்களை நடத்தும் பொருந்த நித்தியமாய்
    அப்படித் தாக அதன்மாத்தி காயமும்
    எப்பொருள் களையும் நிறுத்தல் இயற்றும்’’

                               (மணிமேகலை 27;187 - 190)

எனவரும் மணிமேகலை அடிகளாலும் இதனை அறியலாம். தர்மம், அதர்மம் என்னும் இவை, ஆகாயம் பரந்துள்ள வரையில் நிறைந்து இருக்கின்றன.4

     காலம் என்பது, இமைத்தல் நொடித்தல் முதலிய சிறுகாலம் முதல் கற்பகாலம் முதலிய பெரிய கால அளவு ஆகும்.

    ‘‘காலம் கணிகம் எனுங்குறு நிகழ்ச்சியும்
    மேலும் கற்பத்தின்நெடு நிகழ்ச்சியும் ஆகும்’’

                              (மணிமேகலை 27;191 - 192)

     ஆகாயம் என்பது, சமண சமயக் கொள்கைப்படி ஐம்பூதங்களுள் ஒன்றன்று. தர்மம், அதர்மம், காலம், உயிர்கள், புத்கலங்கள் ஆகிய இவ்வைந்து பொருள்களும் தங்குவதற்கு இடம்கொடுப்பது ஆகாயம்.

    ‘‘...ஆகாயம் எல்லாப் பொருட்கும்
    பூக்கும்இடங் கொடுக்கும்புரிவிற் றாகும்’’

                             (மணிமேகலை, 27;193 - 194)

     ஆகாயம் லோகாகாயம் என்றும், அலோகாகாயம் என்றும் இரண்டு வகைப்படும். லோகாகாயம் என்பது, மேலே கூறியபடி புத்கலம் முதலிய ஐந்து பொருள்களுக்கும் இடம் கொடுப்பது. அலோகாகாயம் என்பது லோகாகாயத்திற்கு இடங்கொடுத்து நிற்பது.

     இவையே உயிரல்லனவாகிய அஜீவப் பொருள்களாம்.

3,4. புண்ணியம், பாவம் (நல்வினை, தீவினை); (இவற்றை, மேலே அஜீவப் பொருள்களில் கூறப்பட்ட தர்மம் அதர்மம் எனக் கருதுவது தவறு. இவை வெவ்வேறு பொருள்கள் என்பது மேலே விளக்கப்பட்டது). இந்தப் புண்ணிய பாவங்கள் மூன்று வகையாக உயிருடன் கலக்கின்றன. மனத்தினால் நினைப்பதும் வாக்கினால் சொல்வதும் காயத்தினால் செய்வதும் ஆக மூன்று வகை நல்ல எண்ணங்களாலும் நல்ல சொற்களினாலும் நல்ல செய்கைகளினாலும் பெறப்பட்ட புண்ணியமானது, உயிர்களை மனிதராகவும் தேவராகவும் பிறக்கச்செய்து அறிவு, செல்வம், இன்பம், புகழ், மேன்மை, சிறப்பு முதலிய நன்மைகளை யடையச் செய்கிறது. தீய எண்ணங்களாலும், தீய சொற்களாலும், தீய செய்கைகளினாலும் உண்டான பாவமானது உயிர்களை நரககதி, விலங்குகதி முதலிய இழிந்த பிறப்புகளில் பிறக்கச் செய்து அறிவின்மை, துன்பம், இகழ்ச்சி, வறுமை, சிறுமை முதலிய துன்பங்களை அடையச் செய்கிறது.

       5. ஊற்று (ஆஸ்ரவம்): நீர் ஊற்றுக்களில் நீர் சுரப்பது போல, நல்வினை தீவினை என்னும் இரண்டு வினைகளும் உயிரில் சுரப்பது (சேர்வது) ஊற்று எனப்படும். மனம் வாக்கு காயங்களின் வழியாக ஊற்றுக்கள் உயிரிடம் வந்து சேர்கின்றன. இதனைக் கன்மத் தொடர்ச்சி அல்லது பொறிவழிச் சேறல் என்றும் கூறுவர்.

       6. செறிப்பு (ஸம்வரை): மேலே கூறப்பட்ட இருவினைகளும் சுரக்கும் ஊற்றினது வழியை அடைத்து விடுவது செறிப்பு அல்லது ஸம்வரை எனப்படும். உயிர், முன்பு செய்த இருவினைகளை மறுபிறப்பில் துய்த்து ஒழிக்கும் போதே புதிதாக வினைகளைச் செய்து மீண்டும் கர்மத்தைத் தேடிக்கொள்கின்றன. உயிர்கள் தாம் முன்பு செய்த வினைப்பயன்களைத் துய்த்து ஒழிக்கும் போது, புதிய கர்மங்கள் வந்து சேராதபடி தடுக்கவேண்டும். அவ்வாறு தடுப்பது தான் செறிப்பு என்பது, ஒரு குளத்திற்கு நீர் வரும் கால்வாய்களை அடைத்துவிட்டால், அக் குளத்தில் மேன்மேலும் நீர் பெருகாமல் தடைப்படுவது போன்று, மனம் வாக்கு காயம் ஐம்புலன் முதலியவற்றை அடக்கி உயிரினிடத்தில் மேன்மேலும் இருவினைகள் சுரவாதபடி தடுத்தலே செறிப்பு ஆகும்.

       7. உதிர்ப்பு (நிர்ஜரை); இருவினை ஊற்று உயிரினிடத்து மேன்மேலும் பெருகாதபடி தடுத்தபின்னர், அனுபவித்துக் கழிக்காமல் எஞ்சி நின்ற வினைகளைக் களைந்து விடுவதற்கு உதிர்ப்பு அல்லது நிர்ஜரை என்பது பெயர். இதனைத் துவாதச தபம், குப்தி, சமிதி, தருமத்தியானம், சுக்கிலத்தியானம் முதலியவற்றால் செய்ய வேண்டும்.

    ‘‘வரும்பாவம் எதிர்காத்து மன்னுந்தம் பழவினையும்
    ஒருங்காக உதிர்த்தக்கால் உயிர்த்தூய்மை வீடென்றான்’’.
                                (நீலகேசி, மொக்கல 312)

     இதன் பொருள், ‘‘வருகின்ற கர்மங்களைக் குப்தி, சமிதி முதலாயினவற்றால் அடைந்து தபஸ் ஸம்ய மாதிகளால் நின்ற கர்மங்களை நிர்ஜரிப்பித்தல் (உதிர்த்தல்) ஆத்மாவின் கண் மல நீக்கத்தால் பிறக்கின்ற சுத்தியே வீடாவதென்று சொல்லுவது’’ (சமயதிவாகர வாமன முனிவர் உரை).

       8. கட்டு (பந்தம்); மனம், வாக்கு, காயம், ஐம்புலன் முதலிய வற்றால் உண்டான வினைகள் உயிருடன் ஒன்றிக் கலப்பது கட்டு  அல்லது பந்தம் எனப்படும். பழுக்கக் காய்ந்த இரும்பில் நீரைத் தௌ¤த்தால், அவ்விரும்பு நீரை இழுத்துக்கொள்வது போலவும், பாலுடன் நீரைக் கலந்தால் இரண்டும் ஒன்றுபடுவது போலவும் வினைகள் உயிருடன் கலக்கின்றன. எண்ணெய் தோய்ந்த துணியில் அழுக்கு எளிதில் பற்றிக்கொள்வதை இதற்கு உதாரணமாகக் கூறுவதுண்டு. உயிரைத் துணியாகவும், ஐம்புலன் வாக்கு காயம் முதலியவற்றை எண்ணெயாகவும் வினைகளை அழுக்காகவும் உபமான உபமேயப்படுத்திக் கூறுவர்.

       9. வீடு (மோக்ஷம்); ஐந்தவித்து வினைகளினின்றும் நீங்கிய உயிர் கேவல ஞானம், கேவலதரிசனம், கேவல வீரியம், கேவல சுகம் என்னும் கடையிலா அறிவு, கடையிலாக் காட்சி, கடையிலா வீரியம், கடையிலா இன்பம் என்பவைகளை அடைந்து, எல்லா உலகங்களுக்கும் உயர்ந்த உலகமாகிய பெறற்கரிய வீட்டுலகம் பெற்று எல்லோராலும் வணங்கப்படும் அருகந்த நிலையை யடைவது மோக்ஷம் அல்லது வீடு எனப்படும்.

    ‘‘வருவழி இரண்டையும் மாற்றி முன்செய்
    அருவினைப்பயன் அனுபவித் தறுத்திடுதல்
    அது வீடாகும்’’ (மணிமேகலை, 27;199 - 201)

     இந்த ஒன்பது பொருள்களின் விரிவான விளக்கத்தைச் சமண சமய நூல்களில் கண்டுகொள்க.

     குறிப்பு: சமண சமய தத்துவ நூல்களில் கடவுளைப் பற்றிக் கூறவில்லை. பந்தத்தினின்றும் விடுபட்டு மோக்ஷ நிலையடைந்த உயிரே கடவுள் என்பது சமணசமயக் கருத்து. சைவம், வைணவம் முதலிய சமயங்களில், உயிர்களுக்கு அப்பாற்பட்ட ஒரு தனிக்கடவுள் கூறப்படுவதுபோல, சமண சமயத்தில் தனிப்பட்ட ஒரு கடவுள் கூறப்படவில்லை.

     மேற்கூறிய ஒன்பது பொருள்களின் உண்மையை அறிந்து கொள்வது நன்ஞானம் என்றும், இவற்றின் தன்மையை ஐயப்பாடின்றி உணர்ந்து கொள்வது நற்காட்சி என்றும், நன்ஞானம் நற்காட்சி இரண்டையும் ஒரு தன்மைத்தாக மனத்திற்கொண்டு ஒழுகுவது நல்லொழுக்கம் என்றும் கூறப்படும். இதனை இரத்தினத் திரயம் என்றும் மும்மணி என்றும் கூறுவர். இரத்தினத்திரயம் வீடு பேற்றிற்கு இன்றியமையாதது.

    ‘‘மெய்வகை தெரிதல் ஞானம், விளங்கிய பொருள்கள்
                                            தம்மைப்
    பொய்வகை இன்றித் தேறல் காட்சி; ஐம் பொறியும் வாட்டி
    உய்வகை உயிரைத் தேயா தொழுகுதல் ஒழுக்கம்; மூன்றும்
    இவ்வகை நிறைந்த போழ்தே இருவினை கழியும் என்றான்’’.

                               (சிந்தாமணி, கேமசரியார், 25)

     கீழ்க்காணும் சித்திரம் சமண சமய தத்வத்தை விளக்குகிறது. இந்தச் சித்திரத்திற்குச் சுவஸ்திகம் என்று பெயர். பிறவிச் சக்கரம் என்றும் கூறப்படும். உயிர்கள் தாம்செய்த புண்ணிய பாவங்களுக்குத் தக்கபடி தேவகதி விலங்குகதி நரககதி மனிதகதி என்னும் நான்கு கதிகளில் பிறந்து உழல்வதைக் குறிக்கிறது இது.

                          

     பிறவிச் சக்கரத்திற்கு மேலே உள்ள மூன்று புள்ளிகள் மும்மணிகளைக் குறிக்கின்றன. அஃதாவது நன்ஞானம் நற்காட்சி நல்லொழுக்கம் என்பவற்றைக் குறிக்கின்றன.

     மூன்று புள்ளிகளுக்கு மேலே பிறைபோன்ற ஒரு கோடும் அக் கோட்டின்மேலே ஒற்றைப் புள்ளியும் காணப்படுகின்றன. இந்த ஒற்றைப் புள்ளி வினைகளை நீக்கி வீடு (மோக்ஷம்) அடைந்த உயிரைக் குறிக்கிறது. இந்தத் தத்துவக் குறியைச் சமணர் இல்லங்களிலும் கோவில்களிலும் காணலாம்.

_______________


3. தொடர்புரை I காண்க.

4. மாதவச் சிவஞான யோகிகள் தமது சிவஞானபோத மாபாடியத்திலே ஆருகத மதத்தைக் கூறுகிறபோது (அவையடக்கம்) "தன்மம்... நன்மையைப் பயப்பது; அதன்மம்... "தீமையைப் பயப்பது" என்று எழுதியிருப்பது சமண சமய தத்துவக் கருத்துப்படி தவறாகும். தன்மம், அதன்மம் என்பவற்றைப் புண்ணியம் பாவம் என்னும் பொருளில் கூறியிருப்பது ஏற்றுக் கொள்ளத்தக்கது அன்று.

-------------------------------


3. சமணமுனிவர் ஒழுக்கம்

     வாழ்க்கையை இல்லறம் துறவறம் என்று சமணர் இரண்டுவிதமாகப் பிரித்துள்ளனர். இவ்விரண்டினையும் முறையே சாவக (சிராவக) தர்மம், யதிதர்மம் என்றுங் கூறுவர். இல்லறம் எனப்படும் சாவக தர்மம், மனைவி மக்கள் சுற்றத்தாருடன் இருந்து ஒழுகும் ஒழுக்கம். துறவறமாகிய யதிதர்மம், உலகத்தைத் துறந்து வீடுபேற்றினைக் கருதித் தவஞ் செய்யும் முனிவரது ஒழுக்கம். சமண சமய ஆராய்ச்சிக்கு, யதிகர்மம் எனப்படும் சமண முனிவர் ஒழுக்கத்தை அறியவேண்டுவது இன்றியமையாததாதலின், அதனைச் சுருக்கமாக ஈண்டு விளக்குவாம்.

     பிறவியை நீக்கி, வீடுபேறு பெறுவதை நோக்கமாகக் கொண்டு, உலகத்தைத் துறக்கும் சமண முனிவர் தமது துறவற வாழ்க்கையில் மேற்கொண்டொழுக வேண்டிய ஒழுக்கங்கள் இருபத்தெட்டாகும். இவ்விருபத்தெட்டினையும் மூலகுணங்கள் என்பர். அவையாவன:- மாவிரதங்கள் ஐந்து; சமிதி ஐந்து; ஐம்பொறி அடக்கம் ஐந்து; ஆவஸ்யகம் ஆறு; லோசம்; திகம்பரம், நீராடாமை, பல்தேய்க்காமை, தரையிற்படுத்தல், நின்று உண்ணல், ஒரே வேளை உண்ணல் ஆக இருபத்தெட்டாம். இவற்றைச் சுருக்கமாக விளக்குவாம்.

     மாவிரதங்கள் ஐந்து: 1. அகிம்சை, 2. வாய்மை, 3. கள்ளாமை, 4. துறவு, 5. அவாவறுத்தல் என்பன. துறவு பெறும் சமண முனிவர் இவ்வைந்து மாவிரதங்களையும் தவறாமல் மேற்கொண்டொழுக வேண்டும்.

     1. அகிம்சை : ‘‘அகிம்சா பரமோ தர்ம’’ என்பது சமணரின் அடிப்படையான தர்மம். இன்னா செய்யாமை, அருளுடைமை, கொல்லாமை, புலால் மறுத்தல் ஆகிய இந்நான்கும் ஒன்று சேர்ந்ததே அகிம்சை என்பது, ‘‘ஓரறிவுயிர் முதலாக ஐயறிவுயிர் ஈறாக, அவை சிறியனவாயினும் பெரியனவாயினும், அவற்றைக் கொல்ல மாட்டேன்; கொல்லச் சொல்லவும் மாட்டேன்; கொல்ல நினைக்கவு மாட்டேன்; மற்றவர் கொல்வதற்கும் மனம் மொழி மெய்களால் உடன்படவும் மாட்டேன்’’, என்று உறுதி கூறிச் சமண முனிவர் அகிம்சா விரதத்தை மேற்கொள்கிறார்.

     2. வாய்மை : அஃதாவது பொய்யாமை. ‘‘பொய்யாமையாவது, தீமை பயக்கும் சொற்களைக் கூறாமை’’ என்றார் சமணராகிய இளம்பூரண அடிகள். சமணசமயக் கொள்கையின்படி, வாய்மை என்பது, மேற்கூறிய அகிம்சையை அடிப்படையாகக் கொண்டது. ஒருவன் ஓர் உயிரைக் கொல்லத் துணிவானாயின், அவ்வமயம் பொய் சொல்லியாகிலுங் கொலையினின்றும் அவ்வுயிரைக் காப்பாற்ற வேண்டியது, சமணத் துறவியின் கடமையாகும். ஓர் உயிரைக் காப்பாற்றப் பொய் சொல்லுவது வாய்மையினுள் அடங்கும் என்பது சமணரின் ஓத்து. இக்காரியத்துக்காக மட்டும் பொய் சொல்லலாமே தவிர மற்றப்படி சமணத் துறவிகள் சிறிதும் பொய் பேசக்கூடாது என்பதும், மனம் மொழி மெய்களால் மெய்பேசுவதை மேற்கொண்டொழுக வேண்டும் என்பதும் சமண சமயக் கொள்கையாகும். வாய்மையைப் பற்றி நீலகேசி (மொக்கல. 60ஆம் செய்யுள்.) உரையில் கூறப்பட்ட செய்தி ஈண்டுக் குறிப்பிடத்தக்கது:

     ‘‘என்னை?

    ‘பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
    நன்மை பயக்கும் எனின்(குறள். 292)

என்பது எம் (சமணரின்) ஓத்தாதலால், பிராணி பீடா நிவர்த்தியார்த்த மாகப் பொய்யுரைத்தலும் ஆவதாகலின் என்பது.....................ஆகலின் நன்மை பயக்கச் சொல்லும் பொய் குற்றமன்றென்பது’’

    ‘‘நான் எப்பொழுதும் மெய்ம்மையே பேசுவேன்; ஒரு போதும் பொய் பேசமாட்டேன்; பிறர் பொய் பேசுவதை உடன்படமாட்டேன்; பிறரைப் பொய் பேசத் தூண்டவும் மாட்டேன்; மனம் மொழி மெய்களால் முக்காலங்களிலும் மெய்ம்மையே பேசுவேன்,’’ என்று உறுதி கூறி ஆருகத முனிவர் வாய்மை என்னும் விரதத்தை மேற்கொள்கிறார்.

     3. கள்ளாமை: எவ்வளவு அற்பமான பொருளாயிருந்தாலும், அதனை அதற்குரியவர் கொடுத்தாலன்றி, எடுத்துக்கொள்ள மனத்தினாலும் நினையாதிருத்தல். ‘‘நாட்டிலாயினும் காட்டிலா யினும் கிராமத்திலாயினும் நகரத்திலாயினும் பிறர்க்குரிய பொருளை - அஃது அற்பமானதாக இருந்தாலும் விலைமதிக்கத் தக்கதாயிருந்தாலும், உயிருள்ள தாயிருந்தாலும் உயிரற்றதாயிருந்தாலும்-, அதற்குரியவர் கொடுத்தாலன்றி அதனை  எடுத்துக் கொள்ளமாட்டேன்; பிறர் எடுத்துக்கொள்ளவும் உடன்படமாட்டேன். மனம் மொழி மெய்களால் கள்ளாமையை மேற்கொள்கிறேன்’’ என்று உறுதி கூறிச் சமண  முனிவர் இந்த மூன்றாவது விரதத்தை மேற்கொள்கிறார்.

    4. பிரமசரியம்: அஃதாவது புணர்ச்சி விழையாமை. சிற்றின்பத்தை மனம் வாக்குக்  காயங்களால், செய்யாதிருத்தல்.

    ‘‘தெய்வங்களுடனாவது மனிதர்களுடனாவது விலங்குகளுடனாவது இணைவிழைச்சாகிய சிற்றின்பத்தைத் துய்க்க மாட்டேன்; இதனை மனம் மொழி மெய்களால் முக்காலத்திலும் செய்யாதிருக்க உறுதி கூறுகிறேன்’’ என்று கூறிச் சமணத் துறவி இந்த நான்காவது மாவிரதத்தை மேற்கொள்கிறார்.

    5. அவாவறுத்தல்: அஃதாவது முற்றத் துறத்தல். ‘‘துறத்தலாவது தன்னுடைய பொருளைப் பற்றறத் துறத்தல்’’ என்றார் சமணராகிய இளம்பூரண அடிகள். இதனைப் ‘பரிக்கிரகத் தியாகம் என்பர். 

    ‘‘அவாவென்ப எல்லா உயிர்க்கும்எஞ் ஞான்றும்
    தவாஅப் பிறப்பீனும் வித்து’’                   (குறள்: 461)

    என்றபடி, அவாவினால் மேன்மேலும் வினைகள் ஏற்பட்டு, அவற்றால் பிறப் பிறப்பாகிய சம்சாரம் உண்டாகும். ஆகையால், பிறப்பறுக்கத் துணிந்த துறவி அவா வறுத்தல் வேண்டும்.

     ‘‘உயிருள்ள பொருளாயிருந்தாலும் உயிரற்ற பொருளாயிருந்தாலும் சிறியதாயினும் பெரியதாயினும் எல்லாப் பொருள்களையும் துறந்து அவற்றின் தொடர்பை நீக்கிக் கொள்கிறேன்; இதனை மனம் மொழி மெய்களால் முக்காலத்திலும் செய்ய உறுதி கூறுகிறேன்’’, என்று கூறி இந்த ஐந்தாவது மாவிரதத்தைச் சமண முனிவர் மேற்கொள்கிறார்.

     இந்த ஐந்து மாவிரதங்களைப் பற்றிச் சமண நூல்களில் இவ்வாறு கூறப்பட்டிருக்கிறது:

    ‘‘ஐவகைப் பொறியும் வாட்டி, ஆமையின் அடங்கி, ஐந்தின்
    மெய்வகை தெரியுஞ் சிந்தை விளக்கும் நின்றெரிய விட்டுப்
    பொய் கொலை களவு காமம் அவா இருள் புகாது போற்றிச்
    செய்தவம் நுனித்த சீலக் கனைகதிர்த் திங்கள் ஒப்பார்’’
                                     (சிந்தாமணி, 2834)

    ‘‘கோறல் பொய்த்தல் கொடுங்களவு நீக்கிப்
                                   பிறர்ம னைகள்மேல்
    சேற லின்றிச் செழும்பொருண்மேல் சென்ற சிந்தை
                                       வேட்கையினை
    ஆறுகிற்பின் அமருலகம் நுங்கட் கடிய தாமென்றான்
    நீறும் ஓடும் நிழன்மணியும் பொன்னும் நிகரா
                            நோக்குவான்.’’ (நீலகேசி, 40.)

     சமிதிகள் ஐந்து : 1. இரியை, 2. பாஷை, 3. ஏஷணை, 4. ஆதான நி«க்ஷபனை, 5. உத்சர்க்கம் என்பன. இவற்றை விளக்குவாம்:

     1. இரியா சமிதி: சமணத்துறவி, நடக்கும்போது தரையை மூன்றுமுழ தூரம் பார்த்துப் புழுப்பூச்சிகள் இருந்தால் அவற்றை மிதிக்காமல் நடத்தல் வேண்டும். ‘‘நூற்கதிகொண்டு கண்ணால் நுகத்தளவெல்லை நோக்கி,’’ நடக்கவேண்டும் என்றார் சிந்தாமணி ஆசிரியர். கொல்லா நோன்பை அடிப்படையாகக் கொண்டவர் ஆதலால் எறும்பு, புழு, பூச்சி முதலிய  சிற்றுயிர்களும், நடக்கும் போது காலினால் மிதிபட்டிறவாதபடி விழிப்பாகத் தரையைப் பார்த்துச் சமணத் துறவி நடக்க வேண்டும். இது பற்றியே அவர் இராக்காலங்களில் பிரயாணம் செய்யார். வழியில் உள்ள சிற்றுயிர்கள் காலில் மிதிபடாதபடி ஒதுக்குவதற்காக மயிற்பீலிக் குஞ்சத்தை அவர் கையில் வைத்திருப்பார். இதுவே இரியா சமிதி எனப்படும்.

       2. பாஷா சமிதி: நாவடக்கம் அல்லது வாக்கடக்கம், பழித்துப் பேசுதல், புகழ்ந்து பேசுதல், கோபமாகப் பேசுதல், கடுஞ்சொற்கூறல் முதலிய பேச்சுக்களை நீக்கி இனிமையாகப் பேசுவதையும், தரும ஒழுக்கம் சமயக் கொள்கை இவற்றைப் போதிப்பதையும் துறவி தமக்கு ஒழுக்கமாகக் கொள்வது பாஷா சமிதி எனப்படும்.

       3. ஏஷணா சமிதி: நாற்பத்தாறுவகையான குற்றங்கள் இல்லாத உணவைச் சமணத் துறவி யாசித்துப்பெற்று அதிகமாக உண்ணாமல் அளவாக உண்ணுதல் ஏஷணா சமிதியாகும். உணவின் நாற்பத்தாறுவகைக் குற்றங்களைச் சமண நூல்களில் கண்டுகொள்க.

       4. ஆதான நி«க்ஷபனா சமிதி: சமண முனிவருக்குரிய நூல் (புத்தகம்), குஞ்சம் (மயிற்பீலி), கமண்டலம் என்னும் இப்பொருள்களை எடுக்கும்போதும் வைக்கும் போதும் எறும்பு முதலிய சிற்றுயிர்கள் இறந்துபோகாதபடி விழிப்போடு இருந்து பைய எடுத்தலும் பைய வைத்தலுமாம்.

       5. உத்சர்க்க சமிதி: சமணத் துறவி மலமூத்திரங்கழிக்கும்போது, ஊருக்கு அப்பால், ஒருவரும் நடமாடாததும் பாராததுமான இடத்தில் கழிக்கவேண்டும். அன்றியும் புழு பூச்சிகள் உள்ள இடங்களிலும் வளை முதலியவையுள்ள இடங்களிலும் கழிக்கக் கூடாது.

     ஐம்பொறி அடக்கம்: ஐம்பொறிகளின் வாயிலாகவே நல்வினை தீவினைகள் உயிரைப் பற்றிப் பிணித்து, அதனைப் பிறப்பு இறப்புகளிற் செலுத்துகிறபடியால் ஐம்பொறிகளை அடக்க வேண்டுவது துறவிகள் கடமை. நாட்டியம், நடனம் முதலிய காட்சிகளைக் காண்பதும், பாட்டு,யாழ், வீணை முதலிய இசைகளைக் கேட்பதும், சந்தனம், பூ முதலியவற்றின் நறுமணங்களை முகர்வதும், அறுசுவையுணவுகளை உண்பதும், ஊறு என்னும் புலனுக்கு  இன்பமளிக்கிற பொருள்களைத் தொடுதல் தேய்த்தல் முதலியவற்றைச் செய்வதும் ஆகிய ஐம்புலநுகர்ச்சியை மனம் மொழி மெய்களாலும் நீக்குதல் ஐம்பொறியடக்கம் எனப்படும். தீர்த்தங்கரர், அருகர் முதலிய கடவுளர்களின் தோத்திரப் பாக்களைப் பாடும் இசைப்பாட்டு முதலியவற்றைக் கேட்பது, அவர்களின் சரித்திரங்களை நாடகங்களில் காண்பது முதலியவை கடவுட்பற்றுக்குக் காரணம் ஆகையால் அத்தகையவற்றைச் சமண முனிவர் ஐம்பொறி களாலும் துய்க்கலாம். ஆனால், சிற்றின்பத்திற் செலுத்தக்கூடிய ஐம்பொறி இன்பங்களை மட்டும் அடக்கவேண்டும்.

    ‘‘மெய்வாய்கண் மூக்குச் செவிஎனப் பேர்பெற்ற
    ஐவாய வேட்கை அவாவினை - கைவாய்
    கலங்காமல் காத்துய்க்கும் ஆற்றல் உடையான்
    வலங்காது வீடு பெறும்.’’

என்பது நாலடி நானூறு என்னும் சமண நூல்.

     ஆவஸ்யகம் ஆறு: இவை ஷடாவஸ்யக்கிரியை எனப்படும். அவையாவன:

        1. சாமயிகம். 2. துதி. 3. வணக்கம். 4. பிரதி கிர்மணம். 5. கழுவாய். 6. விசர்க்கம் என்பன. இவற்றின் விளக்கம் வருமாறு:

       1. சாமயிகம்:

            இன்ப துன்பம், நன்மை தீமை, உயர்வு தாழ்வு முதலியவற்றை ஒரு தன்மையாக (சமமாகப்) பார்த்தல்.

      2. துதி:

            இருஷபர் முதலிய இருபத்து நான்கு தீர்த்தங்கரர்களையும் அருகப் பரமேட்டியையும் போற்றித் துதித்தல்.

      3. வணக்கம்:

           அருகர், சித்தர், தீர்த்தங்கரர் முதலியவர்களின் திருவுருவங்களையும், சாத்திரங்களைக் கற்ற தபசிகளையும், தீ¬க்ஷ கொடுத்த குருக்களையும், பெரியோர்களையும் மனம் வாக்குக் காயங்களினால் வணங்குதல்.

      4. பிரதிகிர்மணம்:

            பாவத்திற்குக் காரணமானவை தன்னிடத்தில் மனம் வாக்குக் காயங்களினால் நேராதபடி காத்துக் கொள்ளுதல்.

      5. கழுவாய்:

           அஃதாவது பிராயச்சித்தம். சமண முனிவர் தமது விரதத்தில் ஏதேனும் குற்றம் நேர்ந்துவிட்டால், அதனையுணர்ந்து வருந்தி மனம் மொழி மெய்களால் தம்மையே நொந்துகொண்டு அக்குற்றத்தைக் கழுவுதல்.

    ‘‘ஒன்றியும் ஒன்றாதும் தான்செய்த தீவினையை
    நின்று நினைத்திரங்கற் பாற்று.’’

    ‘‘தீயவை எல்லாம் இனிச்செய்யேன் என்றடங்கித்
    தூயவழி நிற்றலும் அற்று’’             (அருங்கலச் செப்பு.)

      6. விசர்க்கம்:

            காயோத்ஸர்க்கம் எனவும் கூறுவர். தவம் செய்யும்போது வரும் துன்பங்களை அஞ்சாமல் பொறுத்தல். வாளும் உறையும்போல உடலும் உயிரும் வேறு வேறு என்பதை உணர்ந்து, தமது உடம்பையும் தமது என்று கருதாமல் யாக்கையிற் பற்றறுத்தல்.

     ‘‘பிறப்பறுக்க லுற்றார்க்கு உடம்பும் மிகை’’ என்று கருதி உடற்பற்றையும் நீக்கித் துறவின் உயர்நிலையையடைந்த சமண முனிவர், தாம் துறந்த தமது உடலினை எவ்வாறு வைக்கவேண்டும் என்பதைக் கூறுவதுதான் கீழ் வரும் ஏழு ஒழுக்கங்கள். அவையாவன. 1. லோசம், 2. திகம்பரம், 3. நீராடாமை, 4. தரையிற் படுத்தல், 5. பல்தேய்க்காமை, 6. நின்று உண்ணல், 7. ஏகபுக்தம் என்பன. இவற்றை விளக்குவாம்.

        1. லோசம்: அஃதாவது மயிர் களைதல், சமண முனிவர் துறவுகொள்வதற்கு முன்னர்த் தீ¬க்ஷபெறுவர். தலைமயிரைக் களைவது தீ¬க்ஷயில் இன்றியமையாதது. தலை மயிரைக் கத்தியால் மழிக்காமல் கையினால் பிடுங்கிக் களையவேண்டும். மீண்டும் மயிர் வளரும்போதெல்லாம் அவ்வப்போது பிடுங்கிக் களையவேண்டும். இதனைச்செய்யும் நாட்களில் பட்டினி நோன்பிருக்கவேண்டும். இவ்வாறு மயிர் களையும்போது தேகத்தில் உண்டாகும் பொறுத்தற்கரிய பெரிய வலிமையப் பொறுத்துக்கொள்வது, சமணத் துறவியின் துன்பத்தைப் பொறுத்துக்கொள்ளும் ஆற்றலையும் மனவலிமையையும் தேகத்தின்மேல் பற்றின்மையையும் காட்டுகிறது.

       2. திகம்பரம்: அஃதாவது நிர்வாணமாக இருத்தல். நகை முதலியவற்றை நீக்கித் துணி, தோல், மரவுரி, இலை முதலியவற்றாலும் உடலை மூடாமல் திகம்பரமாக (ஆகாயமே உடையாக) இருத்தல். ‘‘பிறப்பறுக்க லுற்றார்க்கு உடம்பும் மிகை’’ எனக் கண்டு தமது உடலையும் தமதன்று என உடற்பற்றையும் நீங்கிய சமணமுனிவர், அதுதொடர்பான உடை உடுத்தல் முதலியவற்றையும் நீக்கி முழுத்துறவு கொள்வர். அன்றியும், வெயிலின் வெம்மையும் குளிரின் தண்மையும் தேகத்தில்பட்டால் அவற்றையும் பொறுத்துக் கொள்வதும், எறும்பு கொசுகு முதலியவை கடித்தால் அத் துன்பங்களையும் தாங்கிக் கொள்வதும் உடம்பு தமதன்று எனத் துணிந்த சமணமுனிவரின் கடமையாகும்.

       3. நீராடாமை: துறவு நிலையின் உயர்ந்தபடியிற் சென்று உடம்பும் தமதல்லவென்று துறந்து அதற்கு உடையுடுத்துவதும் பற்றுக்குக் காரணமாகும் என்று கருதித் திகம்பர நிலையை மேற்கொண்ட சமண முனிவர் உடம்பில் உண்டாகும் வியர்வை அழுக்கு முதலியவற்றைக் கழுவிப் போற்றமாட்டார். நீராடிச் செய்யும் புறத்தூய்மையைவிட அகத் தூய்மையே சிறந்ததெனக் கருதுவர் சமண முனிவர். இதுபற்றி நீலகேசி உரையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. ‘இந்திரிய ஜயார்த்தமாக அஸ்நான (நீராடாமை) விரதங்கொண்டதல்லது யாங்கள் சரீரத்து மலமாக்க வேண்டுமென்று சொல்லியதூஉம் செய்ததூஉம் இல்லை’’ (மொக்கல. 318 ஆம் பாட்டுரை).

    ‘‘செற்றம்விட்டார் திருமேனியெல்லாம் மாசுவிம்ம
    வற்றவிட்டார் .... நம்தொழு தெய்வமே’’

என்பது திருநூற்றந்தாதி.

     சமண முனிவர் நீராடாமைக்கு இன்னொரு காரணமும் இருக்கக்கூடும். நீரில் மிகச் சிறிய கண்ணுக்குப் புலப்படாத உயிர்கள் உள்ளன என்பது சமண மதக்கொள்கை. சிற்றுயிரையும் கொல்லாத அகிம்சா விரதத்தை முதன்மையாகக் கொண்ட சமண முனிவர், உடற்றூய்மைக்காக நீராடினால் அந்நீரில் உள்ள நுண்ணுயிர்கள் ஊறுபட்டு இறந்துபடும் என்றஞ்சிப்போலும் அவர் நீராடாதொழிந்தது எனக் கருதுவதும் பொருந்தும். நீரில் உயிர் அணுக்கள் உள்ளமை பற்றியே சமணமுனிவர் நீருண்ணும்போது ஏழுமுறை வடிகட்டிய பின்னர்க் குடிக்கவேண்டும் என்னும் ஒழுக்கத்தைச் சட்டமாக வைத்துள்ளனர்.

     4. தரையிற் படுத்தல்: பாய் படுக்கைகளின்றித் தரையின்மீது படுத்து உறங்கும்போது கல் மண் உறுத்துவதனால் உண்டாகும் வேதனைகளைப் பொறுத்தல். படுக்கும்போது இடது அல்லது வலது பக்கமாகப் படுக்க வேண்டும் என்பதும், குப்புறப் படுப்பதும் மல்லாந்து படுப்பதும் கூடாது என்பதும் கட்டளை. எறும்பு, புழு, பூச்சிகள் நசுங்கி இறவாதபடி அவை இல்லாத இடங்களில் படுக்கவேண்டும்.

     5. பல் தேய்க்காமை: உடம்பும் மிகை என்று தமது உடம்பையுந் துறந்த சமண முனிவர் பல் தேய்த்துச் சுத்தம் செய்யார். அப்படிச் செய்வது, தாம் புறக்கணித்துவிட்ட உடம்பின்மீது மீண்டும் பற்றினை உண்டாக்கும் எனக் கருதுவர். இதனால், அவர்கள் தமது உடலையுங்கூட எவ்வளவு திடமாகப் புறக்கணித்தனர் என்பது அறியப்படும்.

     6. நின்று உண்ணல்: சமண முனிவர், நின்றபடியே உணவை உட்கொள்ளவேண்டும். இலை முதலிய உண்கலங்களில் உண்ணாமல் கையில் வாங்கிப் புசிக்க வேண்டும். தமது அன்று என்று உடற்பற்றினையும் நீக்கிவிட்ட அவர்கள், அதற்குச் சுகங்கொடுத்து ஆசனத்தில் அமர்ந்து உண்கலத்தில் உண்பது அதனிடத்துப் பற்றுக் கொண்டு அதனைப் போற்றி வளர்ப்பதற்குக் காரணம் ஆகும் எனக் கருதி, இவ்வாறு நின்றவண்ணமே கையில் உண்பர்.

     7. ஏக புக்தம்: ஒரு நாளைக்கு ஒரே வேளை, உண்ணுதல், சமண முனிவர்களில் சிலர் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை, மூன்று நாட்களுக்கு ஒருமுறை உண்ணும் விரதத்தையும் கொண்டிருந்தனர். எட்டு நாட்களுக்கு ஒரு முறை உணவுகொண்ட அட்டோபவாசிகள் சாசனங்களில் கூறப்படுகின்றனர். சூரியன் புறப்பட்ட மூன்று நாழிகைக்குப் பின்னரும், சூரியன் மறைவதற்கு மூன்று நாழிகைக்கு முன்னரும், அஃதாவது, பகல் நேரத்திலேயே சமண முனிவர் ஒருவேளை உணவு கொள்ளவேண்டும்.

     இதுகாறும், கூறிய இவையே சமண முனிவர் கைக் கொண்டொழுகவேண்டிய இருபத்தெட்டு மூல குணங்களாகும்.

     சமண முனிவர் உடற்பற்றினைக் குறைத்துச் சக்திக்குத் தக்கபடி நோன்பிருந்தனர். இப்படிச் செய்வதை அளவுக்கு மிஞ்சிச் செய்யாமல் தமது உடல் நிலைக்கு ஏற்றபடி செய்துவந்தனர். சமணரைக் ‘‘கடுநோன்பிகள்’’ என்று ஏனைய சமயத்தவர் குறைகூறியதற்கு விடையாக, நீலகேசி என்னும் சமண நூலில் கீழ்க்கண்ட செய்தி கூறப்படுகிறது.

     ‘‘யாங்கள் (சமணர்) கொலை முதலாகிய பாவநிவர்த்தி யார்த்தமாக சக்திக்குத் தக்கவாறு அனசனாதிகள் (உண்ணாவிரதம் முதலியன) செய்து விஷயாநுபவம் (இன்ப நுகர்ச்சி) துறந்தனம். ...........யாங்கள் பலகாலுண்ணவும் குளிக்கவும் தாம்பூல சேவை முதலாயின பண்ணவும் புகுவோமாகில் ஆர்ஜன ரக்ஷணாதி (ஆக்கல் காத்தல் முதலிய) வியாபாரங்களால் கொலை முதலாயின பாவங்களும் ஞானத்தியான விக்கினங்களுமாதலின், ‘‘சக்தி தத்ஸ தியாக தபஸி’’ (சக்திக்குத் தக்கபடி கொடையுந் தபசும்) என்பது எம்மோத்தாகலின், சத்தியை அதிக்கிரமித்து அநசனாதிகள் செய்வதுமில்லை. வெயினிலை முதலாயினவும் வனசரராய் நின்று சகல வியாபாரங்களும் துறந்து ஒருவழி நிற்றல் இருத்தல் செய்து ஞான தியானங்கள் பயில்வுழி வெயிலும் மழையும் காற்றும் முதலாயின வந்தால் அவற்றைச் சக்திக்குத் தக்கவாறு பொறுத்தாம். என்னை?

    ‘‘உற்ற நோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
    அற்றே தவத்திற்கு உரு.’’                  (குறள். 241)

என்பது எம்மோத்தாகலின், தாமே வந்தன பொறுத்த லல்லது வெயில் முதலாயினவற்றுள் வருந்துதலே தவமென்று சொன்னோமோ? இல்வாழ்க்கைக்கண் நின்றாரும் இல்வாழ்க்கைக் காரியங்களுள் ஒன்று செய்வுழி அழிந்த காரியங்கள் துறந்து கிருஷி முதலாயின செய்ய, அவ்வழி வந்த வெயில் முதலாயினவும் சக்திக்குத் தக்கவாறு பொறுப்பதற்காகக் காயம் வருந்தினாராவரோ?’’ (மொக்கல, 87ஆம் பாட்டின் உரை)

     இதுகாறும் கூறிய இவை யதிகர்மம் ஆகும். அஃதாவது சமணசமயத் துறவிகள் ஒழுகவேண்டிய முறையாகும்.

-----------------------------
4. ஆருகதரின் இல்லற ஒழுக்கம்

    ‘‘பாங்கமை செல்வராகிப் பகுத்துண்டு வாழ்தல் ஒன்றே
    தாங்கிய தவத்தின் மிக்க தவநிலை நிற்றல் ஒன்றே’’

என்று திருத்தக்கதேவர் தாம் அருளிய நரிவிருத்தத்தில் கூறியதுபோல, சமணசமயத்தில் இல்லறம் துறவறம் என இரண்டு அறங்கள் மட்டும் கூறப்படுகின்றன. சமணர்கள் இவ்வறங்களில் ஏதேனும் ஒன்றை மேற்கொள்ள வேண்டும். சமணரின் துறவற ஒழுக்கத்தை மேலே யதிதர்மம் என்னும் அதிகாரத்தினால் கூறினோம். ஈண்டுச் சாவகர் (சிராவகர்) எனப்படும் இல்லறத்தார் ஒழுகவேண்டிய ஒழுக்கத்தைக் கூறுவோம்.5

     இல்லறத்தில் ஒழுகும் சமணர் ஒவ்வொருவரும் கீழ்க்கண்ட பத்து விரதங்களைக் (ஒழுக்கங்களைக்) கடைப்பிடித்துத் தவறாது ஒழுக வேண்டும் என்று சமண நூல்கள் கூறுகின்றன. அவையாவன: 1. கொல்லாமை (அகிம்சை), 2. பொய்யாமை (பொய் பேசாதிருத்தல்), 3. கள்ளாமை (களவு செய்யாதிருத்தல்), 4. பிறன் மனை விரும்பாமை, 5. பொருள் வரைதல், இவை ஐந்தும் ‘அணுவிரதம் என்று கூறப்படும்.

     இவ்வைந்தில், முதல் நான்கும் வெளிப்படையாக விளங்குகின்றன. ஐந்தாவதாகிய பொருள் வரைதல் என்பது, பொருளை இவ்வளவுதான் ஈட்ட வேண்டும் என்னும் வரையறுத்துக் கொண்டு, அவ்வரையறைப்படி பொருளை ஈட்டுவதாகும். நிலபுலம், வீடுவாசல், பணம் காசு, பொன் பொருள், தானிய தவசம், ஆடுமாடு முதலிய பொருள்களை இவ்வளவுதான் ஈட்டுவேன்; இதற்குமேல் சம்பாதிக்கமாட்டேன் என்று ஒரு வரையறை செய்து கொண்டு அந்த அளவாகப் பொருளைச் சேர்த்தல்.

     இந்த ஐந்து அணுவிரதங்களோடு கள் உண்ணாமை, ஊன் உண்ணாமை, தேன் உண்ணாமை என்னும் இம்மூன்றையும் சமணர் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்.

     தேன் உண்பது ‘பாவம் என்று ஏன் கொண்டார்கள் எனில், நமது நாட்டில், தேன் அடையிலிருந்து தேனை எடுக்கும்போது தீயிட்டுக் கொளுத்தித் தேனீக்களைக் கொன்றும் தேன் அடையிலுள்ள தேன் புழுக்களைக் கொன்றும் உயிர்க் கொலைகளைச் செய்கிறார்கள். ஆகவே, கொல்லா விரதத்தை முதல் விரதமாகக் கொண்ட சமணர் தேன் உண்பது பாவம் என்று விலக்கி வைத்தார்கள். மருந்தைத் தேனுடன் கலந்து உண்ண வேண்டியிருந்தால், தேனை விலக்கிச் சர்க்கரைப் பாகுடன் கலந்து கொடுப்பது சமண மருத்துவரின் மரபு.

     சமணர் முக்கியமாகக் கொள்ள வேண்டிய மற்றொரு விரதம் இரவு உண்ணாமை என்பது. சூரியன் மறைந்த பிறகு உணவு கொள்ளக்கூடாது என்பது சமணரின் முக்கியக் கொள்கை. ஆகையால் இரவு வருவதற்கு முன்பே உணவு கொள்வர். இந்த விரதத்தோடு ஆசாரியர் முதலிய பெரியோரை வணங்குதலும் ஒரு கொள்கையாகும். இந்தப் பத்து ஒழுக்கங்களும் இல்லறத்தார்க்கு இன்றியமையாதன. கீழ்க்கண்ட செய்யுள் இப் பத்து ஒழுக்கங்களையும் கூறுகிறது.

    ‘‘கொல்லாமை, பொய்யாமை, கள்ளாமை, காமத்தை
    ஒல்லாமை, ஒண்பொருளை வரைதலோ டிவைபிறவும்
    பொல்லாத புலைசுதேன்கள் இருளுண்ணா நிலைமையொடு
    நல்லாரைப் பணிவதுவும் நாமுறையே பயனுரைப்பாம்’’

     திருக்கலம்பகம் என்னும் சமணசமய நூலிலும் சாவக நோன்பிகளின் இப்பத்து ஒழுக்கங்கள் கூறப்படுகின்றன:

   ‘‘விரையார் மலர்மிசை வருவார் திருவறம்
         விழைவார், கொலையினை விழையார்; பொய்
    உரையார்; களவினை ஒழுகார்; பிறர்மனை
         உவவார்; மிகுபொருள் உவவார்; வெம்
    சுரையால் உணர்வினை அழியார்; அழிதசை
         துவ்வார்; விடமென வெவ்வாறும்
    புரையார்; நறவினை நுகரார்; இரவுணல்
         புகழார்; குரவரை இகழாரே’’

     இச் செய்யுள்களில் ஆருகத இல்லறத்தார் கடைப்பிடித்தொழுக வேண்டிய பத்து ஒழுக்கங்களும் கூறப்பட்டுள்ளன. தீபங்குடி என்னும் ஊரினராகிய சயங்கெண்டார் என்னும் சமணப் புலவரைச் சோழ அரசன், நுமதூர் யாது என்று கேட்டபோது அப்புலவர் பாடியது ஒரு செய்யுளிலும் சமண இல்லறத்தாரின் ஒழுக்கங்கள் கூறப்பட்டுள்ளன. அச் செய்யுள் இது:

   ‘‘செய்யும் வினையும் இருள்உண் பதுவும்
         தேனும் நறவும் ஊனும் களவும்
    பொய்யும் கொலையும் மறமும் தவிரப்
         பொய்தீர் அறநூல் செய்தார் தமதூர்
    கையும் முகமும் இதழும் விழியும்
         காலும் நிறமும் போலும் கமலங்
    கொய்யும் மடவார் கண்வாய் அதரங்
         கோபங் கடியுந் தீபங் குடியே’’

     இந்தப் பத்து விரதங்களோடு திசை விரதம், அனர்த்த தண்ட விரதம், போகோப போகப் பரிமாண விரதம் என்னும் மூன்று குண விரதங்களையும், நான்கு சிட்சா விரதங்களையும் சேர்த்து இல்லறத்தாரின் ஒழுக்கமாகக் கூறுவதும் உண்டு.

   ‘‘பெரியகொலை பொய்களவு பிறர்மனையி லொருவல்
    பொருள்வரைதல் மத்தம்மது புலைசுணலின் நீங்கல்
    பெரியதிசை தண்டமிரு போகம்வரைந் தாடல்
    மரீஇயசிக்கை நான்குமிவை மனையறத்தார் சீலம்’’

என்பது மேருமந்தர புராணச் செய்யுள் (பத்திர மித்திரன் அறங்கேள்விச் சருக்கம், 173) இதில் பின் இரண்டடிகளில் கூறப்பட்ட ஒழுக்கங்களை விளக்குவோம்.

     திசைவரைதல் என்பது திசை விரதம். எட்டுத் திசைகளிலும் ஒரு வரையறை செய்துகொண்டு அந்த வரையறைக்கு அப்பால் எக் காரணத்தை முன்னிட்டும் போவதில்லை என்று விரதம் செய்து கொள்வது. இந்த விரதத்தைத் துறவிகள் கொள்ளக்கூடாது.

     தண்டம் வரைதல் என்பது அனர்த்த தண்ட விரதம். இது நான்கு விதம். 1. பிறர்க்குத் தீங்கு நினையாதிருத்தல்; 2. அசட்டைத் தனத்தினால் பூச்சிகளைச் சாகவைக்காதிருத்தல்; அஃதாவது பால், எண்ணெய், நீர் முதலியவற்றை மூடி வைக்காதபடியால் ஈ, எறும்புகள் விழுந்து இறக்கின்றன. இவ்வாறு நேரிடாதபடி பார்த்துக் கொள்ளுதல்; 3. கத்தி முதலிய ஆயுதங்களினால் பிறருக்குத் துன்பம் ஏற்படுவதனால் அவ்வித ஆயுதங்களை வைத்துக் கொள்ளாமல், எவ்வளவு குறைக்க வேண்டுமோ அவ்வளவு குறைத்துக் கொள்வதோடு அவற்றால் பிறருக்குத் துன்பம் நேரிடாதபடி பார்த்துக் கொள்ளுதல்; 4. தன்னுடைய செல்வாக்கு பலம் முதலியவற்றை உபயோகித்துப் பிறருக்குத் தீமை செய்யாதிருத்தலும் பிறரைத் தீமை செய்யத் தூண்டாதிருத்தலும் ஆம்.

     இருபோகம் வரைதல் என்பது போகப் போக பரிமாண விரதம். அஃதாவது போகப் பொருள்களை வரையறுத்தல். உடுத்தும் உடைகள், உண்ணும் பழங்கள், காய் கறிகள் சிற்றுண்டி முதலிய உணவுப் பொருள்கள், பருகும் பால் பாயாசம் முதலிய பானவகைகள், சந்தனம் வாசனைத் தைலம் மல்லிகை ரோசா நறுமணப் பொருள்கள், குதிரை மாடு முதலிய ஊர்திகள், பஞ்சணை முதலிய சயனப் பொருள்கள், காலில் அணியும் பாதர¬க்ஷ முதலிய போகப் பொருள்கள் ஆகிய இவற்றில் இன்னின்ன பொருள்களை உபயோகிப்பதில்லை என்று விரதம் செய்து கொள்ளுதல். இவை பொய், களவு, கொலை முதலியன செய்யா திருப்பதற்கு உதவியாக உள்ளன.

     சிக்கை என்பது சிக்ஷ£விரதம். இது நான்கு வகைப்படும். அவை: - தேசாவதாசிகம், ஸாமாயிகம், புரோஷதோபவாசம், அதிதி ஸம்விபாகம் என்பன. இவற்றைச் சற்று விளக்குவோம்.

     தேசாவதாசிகம் என்னும் விரதம் மேலே கூறப்பட்ட திசை விரதம் போன்றது. இந்தத் திசையில் இந்த எல்லைக்கு அப்பால் செல்வதில்லை என்று உறுதிசெய்து கொண்டு அதன்படி நடத்தல்.

     சாமாயிக விரதம் என்பது தியானத்தில் அமர்ந்திருத்தல். குறைந்த அளவு நாற்பத்தெட்டு நிமிடமாவது கோயிலிலோ அல்லது வீட்டிலோ அமைதியான ஓரிடத்தில் அமர்ந்து தியானம் செய்வது. இதைக் காலை நடுப்பகல் மாலை என்னும் மூன்று வேளைகளில் செய்யலாம். ஆனால் காலையில செய்வதே சிறந்தது. சாமாயிகம் செய்யும்போது மனம் வாக்குக் காயங்களினால் பாவச் செயல்களை நினைக்காமலும் பேசாமலும் செய்யாமலும் இருக்கவேண்டும்.

     புரோதோபவாசம் என்பது போசத விரதம் என்றும் சொல்லப்படும். ஓரிரவும் ஒரு பகலும் ஆகிய ஒரு நாள் முழுவதும் உணவு கொள்ளாமலும் நீர் அருந்தாமலும் உயர்ந்த ஆடை அணிகள் அணியாமலும் இணைவிழைச்ச இல்லாமலும் விரதம் காத்தல். இந்த விரதத்தை மாதத்தில் நான்கு நாள் செய்யவேண்டும். பிற்காலத்தில் துறவு கொள்ளவிரும்பும் சமணர் இந்த விரதத்தை மாதத்தில் ஆறுமுறை செய்வது உண்டு. சமணப் பெண்மணிகள் இந்த விரதத்தை அதிகமாகச் செய்வது வழக்கம்.

     அதிதி சம்விபாக விரதம். இது வையா விரதம் என்றும் கூறப்படும். துறவிகளாகிய சமண முனிவர்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய பதினான்கு பொருள்களில் எதையேனும் அளிப்பேன் என்று விரதம் செய்துகொண்டு அதன்படி ஒழுகுதல் இந்த விரதமாகும். சமண முனிவர் இல்லறத்தாரிடமிருந்து ஏற்றுக் கொள்ளக் கூடிய பதினான்கு பொருள்கள் எவை என்றால், உணவு, நீர், பழம், கமண்டலம், மருந்து, உடை முதலியனவும் உபயோகப்படுத்திக்கொண்டு திருப்பிக் கொடுத்துவிடுகிற கம்பளி, படுக்கை, ஆசனம் முதலிய பொருள்களுமாம். இந்த வையா விரதம், துறவறத்தாரை இல்லறத்தார் போற்ற வேண்டும் என்பதற்காக ஏற்பட்டது. இல்லறத்தார் இந்தப் பொருள்களைத் துறவிகளுக்குக் கொடுக்கும்போது பணிவிடையாளரைக் கொண்டு கொடுப்பிக்காமல் தாமே தமது கைகளால் மனமுவந்து கொடுத்தல் வேண்டும். இவற்றைப் பெற்றுக் கொள்ளும் துறவியானவர், தமக்கு வருகையை முன்னரே தெரிவிக்கக்கூடாது; தமக்கு இன்னபொருள் வேண்டும் என்பதைத் தெரிவிக்கவும் கூடாது.

     இவ்வாறு சமணசமயத்து இல்லறத்தார்; தாமும் அறவழியில் ஒழுகித் துறவறத்தாரையும் நன்கு போற்ற வேண்டும் என்னும் முறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. சமணத் துறவிகளைச் சமண இல்லறத்தாராகிய சாவக நோன்பிகள் மிக்க ஆர்வத்தோடு போற்றி வந்தார்கள். இவ்வாறு போற்றுவதைப் பெரும் புண்ணியமாகக் கருதுவர். சமணசமய நூல்களில் இது பற்றி விரிவாகக் காணலாம்.

   துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்
    மற்றை யவர்கள் தவம்.                         (குறள்)

என்னும் திருக்குறளுக்கு இலக்கியமாக அமைந்திருந்தது சமணசமயத்து இல்லற வாழ்க்கை.

_____________________________________________________________________________

5. தேவாரம், நாலாயிரப்பிரபந்தம், பெரியபுராணம், திருவிளையாடற் புராணம் முதலிய சமண சமயமல்லாத நூல்களை மட்டும் படித்தவர், சமணர் என்றால் ஆடையின்றி அம்மணமாக இருப்பார்கள் என்று கருதிக்கொண்டிருக்கிறார்கள். இலங்கையிலே யாழ்ப்பாணத்தில் பிறந்த தமிழர் ஒருவர், சைவசமய நூல்களை நன்கு கற்றவர். சென்னையில் இந்நூலாசிரியரிடம் உரையாடிக் கொண்டிருந்தபோது ‘இப்போது சமணர்கள் இருக்கிறார்களா? உடை உடுத்தாமல் அம்மணமாகத்தானே இருக்கிறார்கள்?’’ என்று கேட்டார்.     

    ‘‘நீங்கள் பெரிய புராணம், திருவிளையாடற் புராணம், தேவாரம் முதலிய நூல்களைப் படித்திருப்பதனால் இவ்வாறு சொல்லுகிறீர்கள். அந்நூல்களில் கூறப்பட்ட சமண சமயத்துறவிகள் மட்டுந்தான் அம்மணமாக இருப்பார்கள். அதிலும், மிக உயர்ந்த நிலையடைந்த துறவிகள் மட்டும் அவ்வாறு இருப்பார்கள். மற்றைய இல்லறத்தார் ஆணும் பெண்ணும் நம்மைப்போன்றுதான் உடை உடுத்து இருப்பார்கள்’’ என்று கூறியபோது அந்த நண்பர், ‘‘அப்படியா’’ என்று அதிசயப்பட்டார்.

----------------------------

5. சமணசமயம் தமிழ்நாடு வந்த வரலாறு


     சமணர்களின் கடைசித் தீர்த்தங்கரராகிய வர்த்தமான மகாவீரர் தமது 72 ஆவது வயதிலே கி.மு. 527 இல் மோட்சம் அடைந்தார். மகாவீரரின் சீடர்களில் ஒன்பதின்மர், கேவல ஞானம் வாய்க்கப் பெற்று மகாவீரர் காலத்திலேயே இராசக்கிருக நகரில் வடக்கிருத்தல் என்னும் சல்லேகனை நோன்பிருந்து வீடுபேறடைந்தனர்6. கௌதம இந்திரபூதி, சுதர்மர் என்னும் இரண்டு சுணாதரர்கள், மகாவீரர் வீடுபேறடைந்த பின்னரும் உயிர் வாழ்ந்திருந்தார்கள்.

     மகாவீரர் வீடுபேறடையும் வரையில் தாமே சமண சமயத் தலைவராக இருந்தார். அவருக்குப் பின்னர், அவர் சீடர் கௌதம இந்திரபூதி என்பவர் சமயத் தலைவராக இருந்தார். அவருக்குப் பிறகு, மகாவீரரின் மற்றொரு சீடராகிய சுதர்மர் என்பவர் சமய குருவராக இருந்தார். அவருக்குப் பின்னர் அவரின் (சுதர்மரது) சீடராகிய சம்பு சுவாமி சமய குரவராக இருந்தார். அவருக்குப் பிறகு விட்ணுநந்தி என்னும் விட்ணுதேவர் சமயத் தலைவர் ஆனார். அவருக்குப் பிறகு நந்திமித்திரரும், அவருக்கும் பின்னர் அபராசிதரும், அவருக்குப் பிறகு கோவர்த்தனரும், அவருக்குப் பின்னர் பத்திரபாகு முனிவரும் சமய குரவராக இருந்தனர். பத்திரபாகு முனிவர் காலத்திலேதான் சமண சமயம் தமிழ் நாட்டிற்கு வந்தது என்பர். பத்திரபாகு முனிவர் கி.மு. 317 முதல் கி.மு. 297 வரையில் சமண சமயத் தலைவராக இருந்தார். இவர், சமணசமயத் தலைவராக இருந்ததோடல்லாமல், பேர்பெற்ற சந்திரகுப்தன் (கி.மு. 322 - 298) என்னும் மௌரிய அரசனுக்கு மத குருவாகவும் இருந்தார். இந்தச் சந்திரகுப்த மௌரியன் கிரேக்க அரசனாகிய மகா அலெக்சந்தர் காலத்தவன்;  இந்தியாவை அரசாண்ட சக்கரவர்த்தி; அசோக சக்கரவர்த்தியின் பாட்டன்7.

     சந்திரகுப்த அரசனுக்குச் சமய குருவாக இருந்த பத்திரபாகு முனிவர், மகத நாட்டில் பன்னிரண்டு யாண்டு வற்கடம் வரப்போவதையறிந்து அச் செய்தியை அரசனுக்கு அறிவித்து, வரப்போகும் வற்கடக் கொடுமையினின்றும் தப்பிக்கக் கருதித் தம்மைச் சார்ந்திருந்த பன்னீராயிரம் சமண முனிவர்களை அழைத்துக்கொண்டு தென்திசை நோக்கிப் புறப்பட்டு வந்தார். சந்திரகுப்த அரசனும், அரசைத் துறந்து துறவு பூண்டு பத்திரபாகு முனிவரின் சீடனாகி அவருடன் வந்தான். தென்திசை நோக்கி வந்த பத்திரபாகு முனிவர், மைசூர் நாட்டில் வந்து, சமணர் வெள்ளைக் குளம் என்னும் பொருள்படும் சிரவணபௌகொள என்று இப்போது பெயர் வழங்கப்படுகிற இடத்தில் தம்முடன் வந்த முனிவர்களுடன் தங்கினார். தங்கின பிறகு, தம் சீடர்களில் ஒருவரான விசாக முனிவர் என்பவரை அனுப்பிச் சோழ பாண்டிய நாடுகளில் சமண சமயக் கொள்கைகளைப் பரவச் செய்தார். பின்னர், கி.மு. 297 இல் வடக்கிருத்தல் என்னும் சல்லேகனையிருந்து வீடுபெற்றார். இவர் சீடராக இருந்த சந்திரகுப்தரும் அவ்விடத்திலேயே சல்லேகனை நோன்பிருந்து உயிர் நீத்தார்.8

     இச்செய்திகள் சமணசமய வரலாறுகளினால் அறியப்படும். அரிசேனர் என்பவர் (கி.மு. 931 இல்) இயற்றிய பிருகத் கதா கோசம் என்னும் நூலிலும், தேவசந்திரர் கன்னட மொழியில் (கி.பி. 1838 இல்) இயற்றிய ‘‘ராஜாவளி கதெ’’ என்னும் நூலிலும் சமணர்களின் கர்ணபரம்பரைச் செய்திகளிலும் இவ்வரலாறுகள் கூறப்படுகின்றன. அன்றியும், மைசூரில் உள்ள சந்திரகிரி மலையில் பத்திரபாகு குகை என்னும் குகையும் சந்திரகுப்த பஸ்தி என்னும் சமாதிக் கட்டிடமும் இன்னும் உள்ளன. சந்திரகுப்த பஸ்தியில், சந்திரகுப்த பத்திரபாகு வரலாறுகள் சிற்ப உருவங்களாகவும் அமைக்கப்பட்டிருக்கின்றன. மேலும் அங்குள்ள சாசன எழுத்துக்களும் இச் செய்திகளை உறுதிப்படுத்துகின்றன.

     எனவே, கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் பத்திரபாகு முனிவரின் சீடராகிய வைசாக முனிவரால் தமிழ் நாட்டிலே சமணசமயம் பரவச்செய்யப்பட்டது என்று அறிகிறோம். பாண்டிய நாட்டிலே மதுரை மாவட்டத்தில் காணப்படுகிற பிராமி கல்வெட்டெழுத்துக்கள் சமணரால் எழுதப்பட்டவை என்றும், அவை கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் எழுதப்பட்டவை என்றும் அரசாங்க ஆர்க்கியாலஜி ஆராய்ச்சியாளர் கூறுகிறபடியால், சமணசமயம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் தமிழ் நாட்டில் வந்திருக்க வேண்டும் என்று துணியப்படும். இவர்கள் கூறும் காலமும் பத்திரபாகு முனிவர் தென்திசை நோக்கிவந்த காலமும் ஒத்திருப்பதும் கருதத் தக்கது.    

     வட நாட்டினின்றும் தென்னாடு வந்த பன்னீராயிரம் சமணத்  துறவிகளும், மைசூரில் தங்கி வாளா காலங் கழித்திருக்கமாட்டார்கள். தமது மதக் கொள்கையைப் பரப்புவதையே தமது நோக்கமாகக் கொண்ட அவர்கள், மைசூருக்கு அடுத்திருக்கும் தமிழ்நாட்டிலும் வந்து தமது சமணசமயத்தைப் பரவச் செய்திருப்பர் என்பது தவறாகாது.

     இன்னொரு சான்றினாலும் இச்செய்தி உறுதிப்படுகின்றது. மகாவம்சம் என்னும் பௌத்த மத நூலில், இலங்கையிலே கி.மு. மூன்றாம் நூற்றாண்டிற்கு முன்பே சமண சமயம் இருந்ததாகக் கூறப்படுகிறது. கி.மு. 377 முதல் 307 வரையில் இலங்கைத் தீவை அரசாண்ட பாண்டு காபயன் என்னும் அரசன், அநுராதபுரம் என்னும் நகரத்திலே சோதியன், கிரி, கும்பண்டன் என்னும் நிகண்ட (சமண) மதக் குருமாருக்குப் பள்ளிகள் கட்டிக் கொடுத்தான் என்று மகாவம்சம் கூறுகிறது.

     வட இந்தியாவை அரசாண்ட சந்திரகுப்த அரசனும் இலங்கைத் தீவை அரசாண்ட இந்தப் பாண்டுகாபய அரசனும் ஏறத்தாழ ஒரே காலத்தில் வாழ்ந்திருந்தவர் என்பது கருதத்தக்கது. பாண்டுகாபய அரசன் காலத்தில் சமண சமயத்தவர் இலங்கையில் இருந்தார்கள் என்றால், அவர்கள் தமிழ் நாட்டிலிருந்தே சென்றிருக்க வேண்டும்; வட இந்தியாவில் இருந்து கப்பல் ஏறிக் கடல் வழியாக நேரே இலங்கைக்குச் சென்றிருக்க முடியாது. ஏனென்றால், சமணசமயத் துறவிகள், ஆறு முதலிய சிறு நீர்ப்பரப்புகளைக் கடந்து செல்லலாமே தவிர, கடலில் பிரயாணம் செய்யக்கூடாது என்பது அந்த மதக் கொள்கை. ஆகவே, வட இந்தியாவிலிருந்து சமணர் கப்பலேறி நேரே இலங்கைக்குச் சென்றார்கள் என்று நம்புவதற்கில்லை. அவர்கள் தமிழ் நாட்டிலிருந்தே இலங்கைக்குச் சென்றிருக்கவேண்டும். இலங்கைக்கும் பாண்டி நாட்டுக்கும் இடையில் உள்ள மன்னார் குடாக் கடல் அக்காலத்தில், மிகக் குறுகி ஆழமற்று ஒரே நாளில் இலங்கைக்குச் செல்லக்கூடிய அண்மையில் இருந்தது என்பது நினைவுகூரத்தக்கது. ஆகவே, கி.பி. மூன்றாம் நூற்றாண்டிலே தமிழ் நாட்டிலும் இலங்கைத் தீவிலும் சமணர் இருந்தனர் என்று துணிந்து கூறலாம்.

     இன்னும் ஊன்றி ஆராயப்புகுந்தால், கி.மு. மூன்றாம் நூற்றாண்டிற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே சமண மதம் தமிழ்நாட்டிற்கு வந்திருக்க வேண்டும் என்று தெரிய வருகிறது. மகாபாரத காலத்திலே, அஃதாவது கண்ணபிரானுடைய காலத்திலே சமணர் தமிழ் நாட்டிற்கு வந்ததாகத் தெரிகிறது. 22 ஆவது தீர்த்தங்கரராகிய நேமி நாத சுவாமி, கண்ணபிரானுடைய நெருங்கிய உறவினர் என்றும், கண்ணபிரான் எதிர்காலத்திலே சமணதீர்த்தங்கரராகப் பிறந்து சமணமதத்தை நிலைநாட்டப் போகிறார் என்றும் சமண நூல்கள் கூறுகின்றன: இக்காலத்துச் சமணருடைய நம்பிக்கையும் இதுவே. கண்ணபிரானும் அவரைச் சேர்ந்தவர்களும் சமணசமயத்தவர் என்று சமண நூல்கள் கூறுகின்றன. 

     கண்ணபிரானிடத்தில் அகத்தியர் சென்று அவர் இனத்தவராகிய பதினெண்குடி வேளிரையும் அருவாளரையும் தமிழ்நாட்டிற்கு அழைத்துவந்து குடியேற்றினார் என்று தொல்காப்பிய உரையிலே நச்சினார்க்கினியர் கூறுகிறார்:

     அகத்தியர் தென்னாடு போதுகின்றவர் ‘‘துவராபதிப் போந்து நிலங்கடந்த நெடுமுடியண்ணல் வழிக்கண் பதினெண்குடி வேளிரையும் அருவாளரையும் கொண்டு போந்து’’ காடுகெடுத்து நாடாக்கிக் குடியேற்றினார் என்று கூறுகிறார்; (தொல்: எழுத்து, பாயிரம் உரை)

     ‘‘இது மலயமாதவன் நிலங்கடந்த நெடுமுடியண்ணலுழை நரபதியருடன் கொணர்ந்த பதினெண்வகைக் குடிப்பிறந்த வேளிர்க்கும் வேந்தன் தொழில் உரித்தென்கிறது.’’

     (தொல்: பொருள். அகத்திணை 32 ஆம் சூத்திரத்திற்கு நச்சினார்க்கினியர் எழுதிய உரை)

     மலயமாதவனாகிய அகத்தியர், நிலங்கடந்த நெடுமுடியண்ணலாகிய கண்ணபிரானிடமிருந்து பதினெட்டுக் குடியைச் சேர்ந்த வேளிரையும் அருவாளரையும் தமிழ் நாட்டிற் கொண்டுவந்து குடியேற்றிய செய்தி இதனால் அறியப்படும். அகத்தியர் என்னும் பெயருடையவர் பலர் இருந்தனர். அவர்களுள் ஒரு அகத்தியர் வேளிரையும்  அருவாளரையும் தமிழ்நாட்டில் குடியேற்றிய செய்தியை நச்சினார்க்கினியர் கூறுகிறார். இவர் இவ்வாறு கூறுவது இவர் காலத்தில் கர்ணபரம்பரையாக வழங்கிவந்த வரலாறாக இருக்கவேண்டும்.

     கண்ணபிரான் சமணராக இருந்தால் அவர் வழியினராகிய அகத்தியரால் அழைத்துவரப்பட்ட பதினெண்குடி வேளிரும் அருவாளரும் சமணராக இருந்திருக்கவேண்டும். பதினெண்குடி வேளிர் தமிழ் நாட்டில் குடியேறியபின், சேர சோழ பாண்டிய அரசர்களுக்குப் பெண் கொடுக்கும் உரிமையுடையவராக வாழ்ந்து வந்தனர் என்று சங்க நூல்களினால் அறிகிறோம். அன்றியும் அவர்கள் அக்காலத்தில் சமண மதத்தவராக இருந்தனர் என்பதும் ஆராய்ச்சியினால் விளங்குகிறது. அகத்தியருடன் வந்த அருவாளர் தொண்டை நாட்டில் குடியேறினார்கள். அவர்கள் குடியேறிய பிறகு தொண்டை நாட்டிற்கு அருவாநாடு (அருவாளர் நாடு) என்று பெயர் உண்டாயிற்று. அருவாளரும் அக்காலத்தில் சமண மதத்தராக இருந்தனர் என்று கருதப்படுகின்றனர். நெல்லூர் மாவட்டம் கண்டகூர் தாலுகாவைச் சேர்ந்த மாலகொண்டா என்னும் மலைமேல் உள்ள ஒரு குகையில் கி.மு. 3 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சாசனம் ஒன்று காணப்படுகிறது. இது பிராகிருத மொழியிலே பிராமி எழுத்தினால் எழுதப்பட்டிருக்கிறது. ‘‘அருவாஹி (ள) குலத்து நந்த செட்டி மகன் சிறீவீரி செட்டி செய்வித்த குகை’’ என்று இந்தச் சாசனம் எழுதப்பட்டிருக்கிறது.10     

     இதில் கருதவேண்டியது என்னவென்றால், தமிழ் நூல்களில் அருவாளர் என்று கூறப்படுபவர்தான் இச்சாசனத்தில் அருவாஹிள குலம் என்று கூறப்படுகிறார் என்பதும் இந்தக் குகை சமணத் துறவிகளுக்காக அமைக்கப்பட்டது என்பதும் அருவாளர் பண்டைக் காலத்தில் சமணராக இருந்தனர் என்பதும் ஆகும். இன்னொரு சிறப்பு என்னவென்றால், இந்தச் சாசனம் காணப்படுகிற இடம் பண்டைக்காலத்தில் தமிழ்நாடாக (தமிழ்நாட்டின் வட எல்லையாக) இருந்தது என்பதே கி.பி. 2 ஆம் நூற்றாண்டில் இருந்த டாலமி என்னும் யவன ஆசிரியர் அருவார்னொய் (Aruvarnoi) என்னும் இனத்தார் இந்தப் பகுதியில் (தொண்டைநாட்டில்) வாழ்ந்தனர் என்று கூறுவது இந்த அருவாளரைத்தான் போலும்.

     கண்ணபிரான் மரபினராகிய பதினெண்குடி வேளிரும் அருவாளரும் சமணசமயத்தவராக இருந்ததோடு அவர்கள் தென்னாட்டிற்கு வந்தபிறகு கண்ணன் பலராமன் என்னும் இருவரையும் வழிபடும் வழக்கத்தைத் தமிழ்நாட்டில் நிலை நாட்டினார்கள் என்றும் தெரிந்தது. கண்ணன் பலராமன் வணக்கம் சங்க காலத்திலே தமிழ்நாட்டில் சிறப்புற்றிருந்தது என்பதைச் சங்க நூல்கள் பல இடங்களில் கூறுகின்றன. வைணவமதம் தலை எடுத்த பிற்காலத்திலே பலராமன் வணக்கம் மறக்கப்பட்டுக் கண்ணபிரான் வணக்கம் மட்டும் (கண்ணன் திருமாலின் அவதாரம் என்னும் முறையில்) கைக்கொள்ளப்பட்டது. இதுபற்றி ஆதாரத்துடன் தௌ¤வாக எழுதப்புகுந்தால் இடம் விரியும் ஆகலின் இதனோடு நிறுத்துகிறோம்.

     இச்செய்திகளை இங்குக் குறிப்பிட நேர்ந்த காரணம் என்னவென்றால், கி.மு. 3 ஆம் நூற்றாண்டுக்கும் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே - கண்ணபிரான் வாழ்ந்திருந்த மகாபாரதக் காலத்திலேயே - சமண சமயம் தமிழ்நாட்டிற்கு வந்தது என்பதைக் கூறுவதற்கேயாகும். கண்ணபிரான் தொடர்புடைய பாரதப்போர் நிகழ்ச்சியைச் சரித்திர நிகழ்ச்சியாக இந்தியச் சரித்திர நூல்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறபடியினாலே, கண்ணபிரான் காலத்தில் இருந்த அவர் உறவினராக நேமிநாத தீர்த்தங்கரரும் சரித்திர காலத்தவர் ஆவார். ஆகவே, நேமிநாத தீர்த்தங்கரர் காலத்திலே - கண்ணபிரான் பாரதப்போர் செய்த அந்தக் காலத்திலே - அகத்திய முனிவருடன் தமிழ்நாடு வந்த பதினெண்குடி வேளிர் அருவாளர் ஆகிய இவர்கள் மூலமாகச் சமணசமயம் தமிழ்நாட்டிற்கு வந்திருத்தல் கூடும். மிகப்பழைய அந்தக் காலத்திலே சமயப்பகையும் காழ்ப்பும் அதிகமாகப் பாராட்டப்படவில்லை. சமயப் பகையும் மதப் போர்களும் நிகழ்ந்தது மிகப் பிற்காலத்திலேயாகலின், சமரச நோக்கமுடைய மிகப்பழைய காலத்தில் எல்லா மதங்களும் சகோதர பாவத்தடன் இருந்தன. தமிழ்நாட்டிலிருந்த மதங்களில் மிகப் பழையமையானது சமணமதம் என்பதில் யாதோர் ஐயமும் இல்லை.

_____________________________________________________________________________

6. சல்லேகனை என்னும் தொடர்புரை காண்க.

7. மௌரியர் அல்லது மோரியர் தமிழ் நாட்டின்மீது படையெடுத்து வந்தனர் என்று சங்க நூல்களில் கூறப்படுகிற நிகழ்ச்சி இச் சந்திரகுப்த அரசன் காலத்தில் நிகழ்ந்திருக்க வேண்டும் என்று வரலாற்றாசிரியர்கள் சிலர் கருதுகின்றனர்.

8. வடக்கிருத்தல் - சல்லேகனை என்னும் தொடர்புரை காண்க.

9. மகாவம்சம் x 97, 98, 99

10. No. 531 of 1937-38 Annual Rep. South Indian Epi. 1938.

---------------------------


6. சமணசமயம் சிறப்படைந்த வரலாறு


     பண்டைக் காலத்திலே சமணசமயம் தமிழ்நாடு முழுவதும் பரவி நிலைபெற்றிருந்தது. பரவியிருந்ததுமட்டுமல்லாமல் செல்வாக்குப் பெற்றும் இருந்தது. இந்தச் சமயம் தமிழ் நாட்டிலே வேரூன்றி தழைத்துக் தளிர்த்து இருந்ததைத் தேவராம், நாலாயிரப் பிரபந்தம், பெரிய புராணம், திருவிளையாடற் புராணம் முதலிய பிற்காலத்து நூல்களும், மணிமேகலை, சிலப்பதிகாரம் முதலிய சங்ககாலத்து நூல்களும் தெரிவிக்கின்றன. இலக்கியச் சான்று மட்டுமல்லாமல், சாசனங்களும் அழிந்தும் அழியாமலும் காணப்படுகிற சமணக் கோயில்களும் காடுமேடுகளில் ஆங்காங்கே காணப்படுகிற சமண சமயத் தீர்த்தங்கரர்களின் திருவுருவங்களும் சான்று கூறுகின்றன. சமணசமயம் தமிழ்நாட்டிலே ஏன் செல்வாக்கடைந்தது? ஏன் செழித்து வளர்ந்தது?

     பிறப்பினால் உயர்வு தாழ்வு காணும் குறுகிய மனப்பான்மை பண்டைக்காலத்தில் சமணசமயத்தில் இல்லை. எக்குலத்த வனாயினும், தமது சமயக் கொள்கையைப் பின்பற்றுவானாயின் அவனைச் சமணர் போற்றிவந்தனர். அவருடைய அருங்கலச் செப்பு

என்னும் நூலிலே,

    ‘‘பறையன் மகனெனினும் காட்சி யுடையான்
    இறைவன் எனஉணரற் பாற்று.’’

என்று கூறப்பட்டிருக்கிறது. ஆகவே, பண்டைக்காலத்திலே சாதிபேதம் பாராட்டாத தமிழ்நாட்டிலே, சாதி பேதம் பாராட்டாத சமண சமயம் பரவியதில் வியப்பில்லை. மேலும், உணவு, அடைக்கலம், மருந்து, கல்வி என்னும் நான்கு தானங்களைச் செய்வதைச் சமணர் தமது பேரறமாகக் கொண்டிருந்தார்கள். இந்த நான்கினையும், அன்னதானம், அபயதானம், ஒளடததானம், சாத்திரதானம் என்று கூறுவர். உணவு இல்லாத ஏழை மக்களுக்கு உண்டி கொடுத்துப் பசிநோயைப் போக்குவது தலைசிறந்த அறம் அன்றோ? ஆகவே, அன்னதானத்தை முதல் தானமாகச் செய்துவந்தனர்.

     இரண்டாவதாகிய அடைக்கல தானத்தையும் சமணர் பொன்போல் போற்றிவந்தனர். அச்சங்கொண்டு அடைக்கலம் என்று புகல் அடைந்தவருக்கு அபயமளித்துக் காப்பது அபயதானம் என்பது. இதற்கென்று குறிப்பிட்ட சில இடங்கள் இருந்தன. இந்த இடங்கள் பெரும்பாலும் சமணக்கோயில்களை அடுத்திருந்தன. இந்த இடங்களுக்கு அஞ்சினான் புகலிடம் என்பது பெயர். இந்த இடங்களில் புகல் அடைந்தவரைச் சமணர் காத்துப் போற்றினார்கள். சாசனங்களிலும் இந்தச் செய்தி கூறப்படுகிறது. தென் ஆர்க்காடு மாவட்டம் திருக்கோவிலூர் தாலூக்காவில் பள்ளிச்சந்தல் கிராமத்திற்கு அருகில் உள்ள ஜம்பை என்னும் கிராமத்து வயலில் இச் செய்தியைக் கூறுகிற சாசனம் ஒன்று காணப்படுகிறது11. ஜம்பை என்னும் கிராமத்துக்கு வீரராசேந்திரபுரம் என்று பெயர் இருந்ததென்றும், இங்குக் கண்டராதித்தப் பெரும்பள்ளி என்னும் சமணக்கோயில் இருந்ததென்றும், அங்குச் சோழதுங்கன் ஆளவந்தான் அஞ்சினான் புகலிடம் என்று பெயர் உள்ள ஒரு புகலிடம் இருந்ததென்றும், அப் புகலிடத்திற்கு வந்த அடைக்கலம் புகுந்தவரைக் காப்பாற்றவேண்டும் என்பது கண்ராதித்தப் பெரும்புள்ளியில் எழுந்தருளியிருந்த நேமிநாதசுவாமி ஆணை என்றும் இந்தச் சாசனம் கூறுகிறது. வட ஆர்க்காடு மாவட்டம் வந்தவாசி தாலுகா தௌ¢ளாறு என்னும் ஊரிலே திருமூலீஸ்வரர் கோயில் முன் மண்டபத்தின் தரையில் ஒரு சாசனம் காணப்படுகிறது. மாறவர்மன் திரிபுவன சக்கரவர்த்தி விக்கிரம பாண்டிய தேவரின் 5 ஆவது ஆண்டில் எழுதப்பட்ட இந்தச் சாசனம் அஞ்சினான் புகலிடம் ஒன்றைக் குறிப்பிடுகிறது12.

வட ஆர்க்காடு மாவட்டம் வாலாஜாபேட்டை தாலுகா கீழ்மின்னல்
என்னும் ஊரில் உள்ள ஒரு சாசனம், சகலலோக சக்கரவர்த்தி வென்று
மண்கொண்டார் என்னும் சாம்புவராயர் அரசருடைய 16 ஆவது
ஆண்டில் எழுதப்பட்டது. அக்காலத்தில் இந்த ஊர் அஞ்சினான்
புகலிடமாக இருந்த செய்தியை இச்சாசனம் கூறுகிறது13.

     வட ஆர்க்காடு மாவட்டம் போளூர் தாலுகா வடமகாதேவிமங்கலம் என்னும் ஊரில் உள்ள சாசனம், சாம்புவராயர் சகலலோக சக்கரவர்த்தி ராஜநாரயாணனுடைய 19 ஆவது ஆண்டில் எழுதப்பட்டது. இது, மகாதேவிமங்கலத்தைச் சேர்ந்த தனிநின்று வென்றான் நல்லூர் என்னும் இடம் அஞ்சினான் புகலிடமாக இருந்தது என்று கூறுகிறது14. இதனால் அபயதானத்தைப் பண்டைக்காலத்தில் சமணர் நடைமுறையில் செய்துவந்தனர் என்பது ஐயமற விளங்குகிறது.

     மூன்றவதாகிய ஒளடத தானத்தையும் சமணர். செய்துவந்தனர். பௌத்தர்களைப் போலவே, சமணப் பெரியார்களும் மருத்துவம் பயின்று நோயாளிகளுக்கு மருந்து கொடுத்து நோயைத் தீர்த்து வந்தனர். சமணர் தம் மடங்களில் இலவசமாக மருந்து கொடுத்து மக்களின் நோயைத் தீர்த்தது அம்மடத்தின் ஆக்கத்திற்கு உதவியாக இருந்தது. (சமணர்கள் மருத்துவம் பயின்று மருந்து கொடுத்து நோய் நீக்கியசெய்தி, அவர்கள் இயற்றிய நூல்கள் சிலவற்றிற்குச் திரிகடுகம், ஏலாதி, சிறு பஞ்ச மூலம் என்று மருத்துகளின் பெயரிடப்பட்டதனாலும் அறியப்படும்.) உடல் நோயைத் தீர்க்க மருந்து கொடுத்தும் உள்ளநோயைத் தீர்க்க நூல்களை இயற்றிக் கொடுத்தும் சமணர் மக்களுக்குத் தொண்டாற்றி வந்தனர்.

     நான்காவதாகிய சாத்திர தானத்தையும் சமணர் பொன்னேபோல் போற்றிவந்தனர். சமணப் பெரியோர், (பௌத்தர்களும்கூட) தம் பள்ளிகளிலே ஊர்ச் சிறுவர்களுக்குக் கல்வி கற்பித்து வந்தனர்.

    இதனாலேயே பாடசாலைக்குப் பள்ளிக்கூடம் என்னும் பெயர் உண்டாயிற்று; (பள்ளி என்றால் சமணப் பள்ளி அல்லது பௌத்தப்பள்ளி என்பது பொருள்). சமணர்களின் சாத்திரதானம் பிள்ளைகளுக்குக் கல்வி கற்பிப்பதோடு மட்டும் நின்றுவிடவில்லை. செல்வம் படைத்த சமணர்கள், தம் இல்லங்களில் நடைபெறும் திருமண நாட்களிலும், இறந்தோருக்குச் செய்யும் இறுதிக்கடன் நாட்களிலும், தம் சமய நூல்களைப் பல பிரதிகள் எழுதுவித்து அவற்றைத் தக்கவர்க்குத் தானம் செய்தார்கள். அச்சுப் புத்தகம் இல்லாத அந்தக் காலத்திலே பனை ஏடுகளில் நூல்களை எழுதி வந்தார்கள். ஒரு சுவடி எழுதுவதற்குப் பலநாட்கள் செல்லும். பொருட் செலவும் (எழுத்துக் கூலி) அதிகம். ஆகவே, பொருள் உடையவர் மட்டும் புத்தகம் எழுதி வைத்துக் கொள்ள முடிந்தது. பொருள் அற்றவர் புத்தகம் பெறுவது முடியாது. ஆகவே, செல்வம் படைத்த சமணர் தமது சமய நூலைப் பல பிரதிகள் எழுதுவித்து அவற்றைத் தானம் செய்தார்கள். கி.பி. 10 ஆம் நூற்றாண்டிலே கன்னட நாட்டில் இருந்த, சமண சமயத்தைச் சார்ந்த அத்திமுப்பெ என்னும் அம்மையார் தமது சொந்தச் செலவிலே, சாந்திபுராணம் என்னும் சமணசமய நூலை ஆயிரம் பிரதிகள் எழுதுவித்துத் தானம் செய்தார் எனப.

     சமணசமயம் செழித்து வளர்வதற்கு மற்றொரு காரணமாயிருந்தது யாதெனின் அவர்கள் மேற்கொண்டிருந்த தாய்மொழிப் பிரசாரம் ஆகும். சமணசமயத்தார் பௌத்த சமயத்தாரைப் போலவே, தாங்கள் எந்தெந்த நாட்டிற்குப் போகிறார்களோ அந்தந்த நாடுகளில் வழங்குகிற தாய்மொழியிலே தங்கள் மத நூல்களை எழுதினார்கள். இதனால் அந்தந்த நாட்டு மக்கள் எளிதிலே இந்த மதக்கொள்கைகளை அறிந்துகொண்டு அவற்றைக் கைக்கொள்ள முடிந்தது. பிராமணர், தம் வைதீக மத நூல்களை மக்களுக்கு விளங்காத மொழியில் எழுதிக்கொண்டதோடு அந்நூல்களை மற்றவர் படிக்கக்கூடாது, ஓதுவதைக் கேட்கவும் கூடாது என்றும், அப்படிச் செய்தவர் நாக்கை யறுக்க வேண்டும், காதில் ஈயத்தைக் காய்ச்சி உருக்கி ஊற்றவேண்டும் என்றும் தடைகளையும் தண்டனைகளையும் ஏற்படுத்திக் கொண்டதுபோல் அல்லாமல், பரந்து விரிந்த மனப்பான்மையும் பெருந்தன்மையும் உள்ள சமணர்கள் தமது மத நூல்களை அந்தந்த நாட்டுத் தாய்மொழிகளிலே எழுதினார்கள். அதன்படி தமிழிலேயும் நூல்களை இயற்றினார்கள். இதனால் தமிழ் நாட்டில் சமணசமயம் செழித்தோங்கத் தொடங்கிற்று.

     மக்கள் அறியாதபடி வேறுமொழியில் மதக்கொள்கைகளை மறைத்துவைப்பது மன்னிக்கமுடியாத பெருங்குற்றம் என்றும் பெரும் பாவம் என்றும் சமணர் கருதினார்கள். ஆகவே, தம் மத நூல்களை மக்கள் பேசுகிற தாய்மொழியிலே எழுதினார்கள். இதனைச் சமணசமய வரலாறு ஒன்று நன்கு விளக்குகிறது.

     உச்சைனி தேசத்து அரசனது அவைக்களத்திலே, வடமொழியைக் கற்றுத் தேர்ந்து பெரும்புகழ் பெற்று விளங்கிய சித்த சேண திவாகரர் என்னும் பிராமணர் ஒருவர் இருந்தார். அதே காலத்தில், இவரைப்போலவே கல்விக் கடலைக் கரைகண்டவர் என்னும் புகழுடன் வாழ்ந்து வந்த விருத்தவாதி முனிவர் என்னும் சமணத் துறவி ஒருவர் இருந்தார். இவர்கள் இருவரும் ஒருவரையொருவர். நேரில் கண்டு வாதம் செய்து, தம்மில் யார் அதிகமாகக் கற்றவர் என்று அறியப் பேரவாக்கொண்டிருந்தனர். நெடுநாள் சென்ற பிறகு இவர் ஒருவரையொருவர் காணும்படி நேரிட்டது. இருவரும் வாதம் செய்யத் துணிந்து, வாதத்தில் தோற்றவர் வென்றவருக்குச் சீடர் ஆகவேண்டும் என்று முடிவுசெய்து கொண்டு வாதம் செய்யத் தொடங்கினர். அவ்வூர்ப் பொது மக்கள் அவர் வெற்றி தோல்வியைச் சொல்ல நடுநிலையாளராக இருந்தார்கள். சித்தசேன திவாகரர் தமது வடமொழி வல்லமையைப் புலப்படுத்த எண்ணி வட மொழியில் வாது செய்தார். விருத்தவாதி முனிவர், வடமொழியில் நன்கு தேர்ந்தவராக இருந்தும், அந்த மொழியில் வாது செய்யாமல் நாட்டு மக்கள் பேசும் தாய்மொழியிலே வாதம் நிகழ்த்தினார். இந்த வாதப் போரில் வெற்றி பெற்றவர் விருத்தவாதி முனிவரே என்று நடு நின்றவர் முடிவு கூறினர். ஆகவே, உடன்படிக்கையின்படி விருத்தவாதி முனிவருக்குச் சித்தசேன திவாகரர் சீடர் ஆனார். 

     இதன் பிறகு சித்தசேன திவாகரர், வடநாட்டு மக்கள் பேசிப் பயின்றுவந்த அர்த்தமாகதி மொழியில் எழுதப்பட்டிருந்த சமணசமய நூல்களை வடமொழியில் மொழிபெயர்த்தெழுதக் கருதித் தமது கருத்தைத் தம் குருவாகிய விருத்தவாதி முனிவரிடம் சொன்னார். விருத்தவாதி முனிவர் அவ்வாறு செய்யக்கூடாது என்று தடுத்தார். மக்கள் பேசிப் பயின்றுவரும் அர்த்தமாகதி மொழியில் உள்ள நூல்களை வடமொழியில் எழுதிவைத்துப் பொதுமக்கள் தெரிந்துகொள்ளாதபடி செய்வது பெரும்பாவம் என்பதை நன்கு விளக்கிச் சொன்னார். தம் ஆசிரியர் சொன்ன உண்மையினை உணர்ந்த பின்னர், சித்தசேன திவாகரர் தாம் செய்ய நினைத்த குற்றத்திற்குக் கழுவாயாகப் பன்னிரண்டு ஆண்டு வரை வாய் பேசாமல் ஊமைபோல் வாழ்ந்திருந்தார்.

     இந்த வரலாற்றினால், சமணரும் பௌத்தரைப் போலவே, தாய்மொழியின் வாயிலாகப் பொதுமக்களுக்குத் தங்கள் மதக்கொள்கைகளைப் போதிக்க வேண்டும் என்னும் கருத்துள்ளவர் என்பதும், மக்கள் அறியாத வேறு மொழியில் நூல்களை எழுதிவைக்கப் பயன்படாதபடி செய்வது பெரும்பாவம் எனக் கருதி வந்தனர் என்பதும் விளங்குகிறது.

     இவ்வாறு விரிந்த மனப்பான்மையுள்ள சமணர்கள் தமிழ் நாட்டிலே தமிழ் மொழியில் தம் மதக் கொள்கைகளை எழுதினார்கள். வேறு பல நீதி நூல்களையும் நிகண்டு நூல்களையும் காவிய நூல்களையும் ஒழுக்க நூல்களையும் எழுதினார்கள். இவையும் சமணசமயம் தமிழ்நாட்டில் பரவுவதற்குக் காரணமாயிருந்தன.

     தமிழ் நாட்டிலே சமணசமயம் பரவுவதற்கு இன்னொரு காரணமாயிருந்தவர் அந்த மதத்துத் துறவிகள் ஆவர். இவர்கள் ஊர் ஊராகச் சென்று தம் சமயக் கொள்கைகளைப் போதிப்பதைத் தமது கடமையாகக் கொண்டிருந்தனர். சமண முனிவரின் கூட்டத்திற்குச் சங்கம் என்பது பெயர். (சங்கம் = கூட்டம்) ஆதிகாலத்தில் சமண சங்கம் ஒரே கூட்டமாக இருந்தது. இதற்கு மூல சங்கம் என்று பெயர்.

பிறகு சங்கம் பெரிதாக வளர்ந்து விட்டது. ஆகவே, அது நான்கு பிரிவாகப் பிரிக்கப்பட்டு, நந்திகணம், சேனகணம், சிம்மகணம், தேவகணம் என்று பெயர் இடப்பட்டது. ஒவ்வொரு கணத்திலும் கச்சை, அன்வயம் என்னும் உட்பிரிவுகள் இருந்தன.

    ‘‘கனக நந்தியும் புட்ப நந்தியும் பவண நந்தியும் குமணமா
    சுனக நந்தியும் குணக நந்தியும் திவண நந்தியும் மொழிகொளா

    அனக நந்தியர்’’

     முதலியவர்களைத் திருஞான சம்பந்தர் தமது திருவாலவாய்ப் பதிகத்தில் கூறுகிறார். நமண நந்தி என்பவரைச் சுந்தரமூர்த்திகள் குறிப்பிடுகிறார். இவர்கள் நந்தி கணத்தைச் சேர்ந்தவர்கள். தமிழ்நாட்டுச் சாசனங்களிலும் நந்தி கணத்தைச் சேர்ந்த முனிவர்களின் பெயர்கள் காணப்படுகின்றன. அவை: புட்பநந்தி, ஸ்ரீநந்தி, கனகநந்தி படாரர், உத்தநந்தி குருவடிகள், பெருநந்தி படாரர், குணநந்தி பெரியார், அஜ்ஜநந்தி, பவணந்தி படாரர், சந்திரநந்தி முதலியன. நன்னூலை இயற்றிய பவணந்தி முனிவரும் இந்த நந்தி கணத்தைச் சேர்ந்தவரே. 

      சேனகணத்தைச் சேர்ந்த சமண முனிவர்கள் பெயரையும் திருஞான சம்பந்தர் தமது திருவாலவாய்ப் பதிகத்தில் கூறுகிறார்.

    ‘‘சந்து சேனனும் இந்து சேனனும் தருமசேனனும் கருமைசேர்
    கந்து சேனனும் கனக சேனனும் முதலாகிய பெயர்கொளா’’

என்று அவர் கூறியது காண்க. சுந்தரமூர்த்திகளும் தருமசேனன் என்னும் முனிவரைக் கூறுகிறார். திருநாவுக்கரசு சுவாமிகள் சமணராக இருந்தபோது இந்தச் சேன கணத்தைச் சார்ந்திருந்தார் என்பதை அவர் பெற்றிருந்த தருமசேனர் என்னும் பெயரினால் அறியலாம். சந்திர சேன அடிகள், தேவசேன படாரர் முதலிய பெயர்கள் சாசனங்களிலும் காணப்படுகின்றன.

     சிம்ம கணத்தைச் சேர்ந்தவர்கள் வீரர் என்னும் பெயரால் அழைக்கப்பட்டனர் போலும். சுந்தரமூர்த்தி சுவாமிகள் தமது தேவாரத்தில் கருமவீரன் என்பவரைக் குறிப்பிடுகிறார். கனகவீர அடிகள், குணவீர படாரர் என்னும் பெயர்கள் சாசனங்களில் காணப்படுகின்றன.

     சீவகசிந்தாமணியை இயற்றிய திருத்தக்கதேவரும், சூளாமணியை இயற்றிய தோலாமொழித் தேவரும் தேவ கணத்தைச் சார்ந்தவர்கள் போலும்.

     பிற்காலத்திலே, நந்தி சங்கத்திலிருந்து (நந்திகணத்திலிருந்து) திரமிள சங்கம் அல்லது திராவிட சங்கம் என்னும் ஒரு பிரிவு ஏற்பட்டதைச் சாசனங்களினால் அறியலாம். மைசூர் நாட்டுச் சாசனம் ஒன்று இவ்வாறு கூறுகிறது;

    ‘‘ஸ்ரீமத் திரமிள ஸங்கேஸ்மிம் நந்தி ஸங்கேஸ்தி அருங்களா
    அன்வயோ பாதி நிஸ்ஸேஷ ஸாஸ்த்ர வாராஸி பாரகைவU’’15

     வச்சிரநந்தி என்பவர் விக்கிரம ஆண்டு 526 இல் (கி.பி. 470 இல்) திராவிட சங்கத்தை ஏற்படுத்தினார் என்று தர்சனசாரம் என்னும் நூலில் தேவசேனர் என்பவர் எழுதியிருக்கிறார் என்று கூறுவர்16

     எனவே, வச்சிரநந்தி மதுரையில் திராவிட சங்கம் (தமிழ்ச் சங்கம்) ஏற்படுத்தினார் என்பதைச் சிலர் தமிழ் இரக்கிய ஆராய்ச்சிச் சங்கம் ஏற்படுத்தினார் என்று கருதுகிறார்கள். இது தவறு. வச்சிரநந்தி ஏற்படுத்தியது சமண முனிவர்களின் சங்கமாகும். இந்தச் சங்கத்தைச் சார்ந்த முனிவர்கள் தமிழ்நூல்களையும் இயற்றியிருக்கக் கூடும். ஆனால், இந்தச் சங்கம் பாண்டியர் நிறுவித் தமிழை ஆராய்ந்த தமிழ்ச் சங்கம் போன்றது அல்ல என்று தோன்றுகிறது. மைசூர் நாட்டுச் சாசனங்கள் திராவிட சங்கத்தைச் சேர்ந்த சில சமண முனிவர்களின் பெயர்களைக் கூறுகின்றன:- 1. திரிகாலமுனி பட்டாரகர், திராவிட சங்கத்து புஷ்டகச்சையைச் சேர்ந்தவர், கி.பி. 900 - இல் காலமானார். 2. அஜிதசேன பட்டாரகர் என்னும் வாதிகரட்டர்; திராவிட சங்கத்து அருங்கலான் வயத்தைச் சேர்ந்தவர். 3. மௌனி பட்டாரகர், திராவிள சங்கத்துக் கொண்ட குண்டான்வயம் புஷ்டக கச்சையைச் சேர்ந்தவர். கொண்ட குண்டான்வயம் புஷ்டக கச்சையைச் சேர்ந்தவர். 4.  சாந்திமுனி திராவிள சங்கம், அருங்கலான்வயம் நந்தி கணத்தைச் சேர்ந்தவர். 5. ஸ்ரீபாலதிரை வித்யர், இவர் மாணாக்கர் வசுபூச்ய சித்தாந்த தேவர். இவர்கள் இருவரும் திரமிள சங்கத்து அருங்கலான்வயத்தைச் சேர்ந்தவர்கள். 6. குணசேன பண்டிதர், திராவிள சங்கம், தவுளகணம், இருங்கலான் வயத்தைச் சேர்ந்தவர்.

     சமண சமயத்துப் பெண்பால் துறவிகளைச் சமணர் இயக்கியர் (யட்சி) என்றும், ஆர்யாங்கனை என்றும், கந்தியார் என்றும் கூறுவர். கந்தியார் என்பது கவுந்தி என்றும் வழங்கப்படும். கண்ணகியும் கோவலனும் மதுரைக்குச் சென்றபோது அவர்களுடன் சென்ற கவுந்தியடிகள் சமணசமயத் துறவியாகிய கந்தியார் ஆவார். சமண சமயத்துப் பெண்பால் துறவிகளுக்குக் குரத்தியர் என்று வேறு பெயரும் உண்டு. குரத்தி என்பது குரவர் (=குரு) என்பதன் பெண்பாற் பெயராகும். பெரிய புராணமும் திருவிளையாடற் புராணமும் சமணசமயப் பெண்பால் துறவிகளைக் குரத்திகள் என்று கூறுகின்றன. தமிழ் நாட்டுச் சாசனங்களிலும் குரத்தியர் என்னும் பெயர்கள் காணப்படுகின்றன. அவற்றில் சில வருமாறு: ஸ்ரீமிழலூர்க் குரத்திகள், சிறிவிசயக் குரத்தியார், திருச்சாணத்துக் குரத்திகள், நால்கூர்க் குரத்திகள், இளநேச்சுரத்துக் குரத்திகள், ஸ்ரீமம்மை குரத்திகள், மாணாக்கியார் அரிட்டநேமிக் குரத்திகள் ஸ்ரீபட்டினிப்படார் மாணாக்கிகள், திருப்பருத்திக் குரத்திகள், பேரூர்க் குரத்திகள், மாணாக்கியார் மிழலூர்க் குரத்திகள், கூடற் குரத்தியார், வேம்புநாட்டுக் குரத்தி, கனக வீரக் குரத்தியார், பிருதி விடங்கக் குரத்தி.

     சமணசமயத்தைச் சேர்ந்த துறவிகள் சமணசமயம் பரவுவதற்காகப் பெரிதும் உழைத்து வந்தார்கள்.

     தமிழ் நாட்டிலே சமணசமயம் பரவுவதற்கு இன்னொரு காரணமும் உண்டு. மீன் பிடித்தல், வேட்டையாடுதல் போன்ற உயிர்க்கொலை செய்யும் தொழில்களைத் தவிர ஏனைய தொழில்களை எல்லாம் இந்தச் சமயம் சிறப்பித்துப் போற்றி வந்தது. (மிகச் சிறந்த தொழிலாகிய பயிர்த்தொழிலை, பிராமண மதம் எனப்படும் வைதீக மதம் இழிவான தொழில் என்று தாழ்வு படுத்தியது போலல்லாமல்) சமணசமயம் பயிர்த் தொழிலை மிகச் சிறந்த தொழில் என்று போற்றியது. பயிர்த் தொழில் செய்யும் வேளாளரும், வாணிபம் செய்யும் வணிகரும் ஏனைய தொழிலாளரும் இந்த மதத்தை மேற் கொண்டிருந்தனர். எந்நாட்டிலும் எக்காலத்திலும் பொருளாதாரத் துறையில் செழிப்புற்றுச் சிறப்பும் செல்வாக்கும் பெற்றிருப்பவர் வாணிகரும், விவசாயிகளும் ஆவர். இவர்கள் சமணசமயத்தைச் சேர்ந்திருந்தபடியால் ஏனைய மக்களும் இச்சமயத்தைத் தழுவுவராயினர். சேர சோழ பாண்டிய, பல்லவ அரசர்களில் பலர் சமணசமயத்தைச் சேர்ந்திருந்தனர். இவர்களால் சமணசமயத்துக்கு ஆதரவும் செல்வாக்கும் ஏற்பட்டன. இந்த மதத்தின் செல்வாக்கைக் கண்டு, சமணசமயத்தவரல்லாத அரசரும்கூட, சமணப் பள்ளிகளுக்கும் மடங்களுக்கும் நிலபுலங்களையும் பொன்னையும் பொருளையும் ‘‘பள்ளிச் சந்தமாக’’க் கொடுத்து உதவினார்கள். 

     இத்தகைய காரணங்களினரலே, சமணசமயம் தமிழ் நாட்டிலே வேரூன்றித் தழைத்துச் செழித்துப் பரவியது. முற்காலத்தில், சமணசமயம் (பௌத்த சமயம்கூட) தமிழ்நாட்டிலே செழித்துப் பரவியிருந்ததையும் வைதீக மதம் முதலிய ஏனைய மதங்கள் அடங்கிக் கிடந்ததையும் பெரிய புராணம் முதலிய நூல்கள் நன்கு விளக்குகின்றன.

    ‘‘மேதினிமேல் சமண்கையார் சாக்கியர்தம் பொய்ம்மிகுத்தே
    ஆதி அரு மறைவழக்கம் அருகி, அரன் அடியார்பால்
    பூதிசா தனவிளக்கம் போற்றல்பெறா தொழியக்கண்டு
    ஏதமில் சீர்ச் சிவபாத விருதயர்தாம் இடருழந்தார்.’’

என்று, திருஞான சம்பந்தரின் தந்தைசார் சமண சமயமும் பௌத்த மதமும் தமிழ்நாட்டில் செழித்திருந்ததைக் கண்டு வருந்தியதாகப் பெரிய புராணம் கூறுகிறது. மேலும்,

    ‘‘அவம்பெருக்கும் புல்லறிவின் அமண்முதலாம் பரசமயப்
    பவம்பெருக்கும் புரைநெறிகள் பாழ்பட................’’

     ஞானசம்பந்தர் பிறந்தார் என்று க்ஷ புராணம் கூறுகிறது. இன்னும்,

    ‘‘பூழியர் தமிழ்நாட்டுள்ள பொருவில்சீர்ப் பதிகள் எல்லாம்
    பாழியும் அருகர் மேவும் பள்ளிகள் பலவும் ஆகிச்
    சூழிருட் குழுக்கள் போலத் தொடைமயிற் பீலியோடு
    மூழிநீர் கையிற் பற்றி அமணரே ஆகி மொய்ப்ப.’’

    ‘‘பறிமயிர்த் தலையும் பாயும் பீலியும் தடுக்கும் மேனிச்
    செறியுமுக் குடையும் ஆகித் திரிபவர் எங்கும் ஆகி
    அறியும் அச் சமய நூலின் அளவினில் அடங்கிச் சைவ
    நெறியினில் சித்தம் செல்லா நிலைமையில் நிகழுங் காலை.’’

     என்று பாண்டிய நாட்டிலும், சமணம் செழித்திருந்ததை அப் புராணம் கூறுகிறது. இச்செய்தியையே பிற்காலத்துத் திருவிளையாடற் புராணங்களும் கூறுகின்றன. பண்டைக் காலத்திலே தமிழ்நாடு முழுவதும் சமண சமயம் பரவியிருந்த செய்தியை, இலக்கியங்களும், ஆங்காங்கே காணப்படுகிற சமண உருவச் சிலைகளும், சமணக் கோயில்களும், கல்வெட்டுச் சாசனங்களும் சான்று பகர்கின்றன என்று மேலே கூறினோம். இந்தச் சான்றுகளை யெல்லாம் ஒருங்கு சேர்த்து ஆராய்ந்து நோக்குவோமானால், தமிழ் நாட்டில் முற்காலத்தில் சமணசமயம் எவ்வளவு செழித்துச் சிறப்புற்றிருந்ததென்பது நன்கு விளங்கும்.

_____________________________________________________________________________

11. 448 of 1937-38, Ep. Rep.1937-38, page 89.

 12. 22 of 1934-35.

13. 35 of 1933-34

14. 62 of 1933-34, S.I. Epi.Rep.1933-34, Page 37.

15. E.C. Vol. V Hassan Taluk, 131, Arsikera Tq. I.E.C. Vol.IV Gundlupet Tq.27

16. Page XXI. Introduction Pravacana Sara by upadhye Digambaka Darna, P.74 J Bom, B.A.S Vol XVII.
---------------------------


7.       சமயப்போர்



     பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே, ஆருகத மதம் தமிழ்நாட்டில் கால்கொண்டு செல்வாக்குப் பெற்றிருந்தது என்று கூறினோம். இதனால், வேறு மதங்கள் அக்காலத்தில் இல்லை என்று கூறியதாகக் கருதவேண்டா. அக்காலத்தில் வேறு சில மதங்களும் இருந்தன. அவை, ‘வைதீக மதம் எனப்படும் பிராமணீய மதமும், ‘தேரவாதம் எனப்படும் பௌத்த மதமும், மற்கலியுண்டாக்கிய ஆசீவக மதமும் ஆகும். சமண மதத்தைப் போன்றே இவையும் வடநாட்டில் தோன்றிப் பின்னர், தென்னாட்டிற்கு வந்தவை. இம்மதங்களை யன்றித் தமிழரின் மதம் ஒன்று தனியாக இருந்தது. இந்தத் தமிழர் மதத்தைத் ‘திராவிட மதம் என்னும் பெயரால் குறிப்போம். இத் திராவிட மதத்தைப் பற்றிப் பின்னர், உரிய இடத்தில் விளக்கிக் கூறுவோம்.

     மேற்சொன்ன ‘ஆருகதம்,’ ‘வைதீகம், ‘பௌத்தம், ‘ஆசீவகம் ஆகிய நான்கு வடநாட்டு மதங்களும் அடிநாள் தொடங்கி ஒன்றோடொன்று பகைத்துப் போரிட்டு ஒன்றையொன்று அழிக்க முயற்சி செய்துவந்தன. இந்தச் சமயப்போர் தமிழ்நாட்டிலும் பண்டைக் காலந்தொட்டு நடந்துவந்தது. ஆகையால், இந்த மதப் போராட்டத்தைப் பற்றிய வரலாற்றினை ஆராயவேண்டுவது நமக்குக் கடமையாகின்றது. இதனைச் சுருக்கமாக ஆராய்வாம்.

     தென்னாட்டில் நடைபெற்ற வடநாட்டுச் சமயப் போரில் ஆசீவகமதம் முதன்முதல் ஆற்றல் குன்றி அழிந்துவிட்டது.17 ஆகையால், வைதீகம், பௌத்தம், ஆருகதம் என்னும் மூன்று மதங்கள் மட்டும் நெடுங்காலம் வரையில் போரிட்டுப் பூசல் விளைத்துவந்தன.

    ‘‘ஒட்டிய சமயத் துறுபொருள் வாதிகள்
    பட்டி மண்டபத்துப் பாங்கறிந் தேறுமின்
    பற்றா மாக்கள் தம்முட னாயினும்
    செற்றமுங் கலாமும் செய்யா தகலுமின்’’
                            (மணிமேகலை, 1 - காதை 60-63)

என்று அரசன் ஆணையிருந்தும் சமயப்போர் நின்ற பாடில்லை. மூன்று சமயங்களும் ஒன்றற்கொன்று தீராப் பகைமை கொண்டிருந்த செய்தி தமிழ் நூல்களில் ஆங்காங்கே காணப்படுகின்றன. எடுத்துக்காட்டாகச் சிலவற்றைக் கூறுவோம். பௌத்த மதத்திற்கும் வைதீக மதத்திற்கும் இருந்த பகைமை மணிமேகலை என்னும் பழைய நூலில் ஆபுத்திரன் கதையில் கூறப்பட்டுள்ளது.

     சோழநாட்டுப் பார்ப்பனர் ஒருவர் அனாதைச் சிறுவனாகிய ஆபுத்திரனை வளர்த்துவருகிற காலத்தில், அவ்வூர்ப் பார்ப்பனர் கொலை வேள்வியாகிய யாகம் செய்யத் தொடங்கி அதன் பொருட்டுப் பசு ஒன்றைக் கொண்டு வந்து கட்டிவைத்தனர். பௌத்த தர்மத்தைக் கேட்டுப் பழகிய ஆபுத்திரன் ஆநியாயமாக ஒரு பசு கொல்லப்படுவதைத் தடுக்க எண்ணி ஒருவரும் அறியாமல் அப்பசுவை அவிழ்த்து அதைக் காட்டிற்கு ஓட்டிவிட்டான். பிறகு, உண்மையறிந்த பார்ப்பனர் இவனை ஒறுத்தனர். வளர்ப்புத் தந்தையும் இவனைத் துரத்தி விட்டான். ஆபுத்திரன் பிச்சையேற்று உண்ண நேரிட்டது. அவன் வீதியில் பிச்சைக்குச் சென்றபோது பார்ப்பனர் அனைவரும் அவனது பிச்சைப் பாத்திரத்தில் கல்லையும் மண்ணையும் கொட்டிக் கொடுமைப்படுத்தினார்கள். பிறகு, அவன் இப்பார்ப்பனச் சேரியை விட்டுப் போய்விட்டான்.18 இதனால் பௌத்தரிடம் வைதீகப் பார்ப்பனருக்கு இருந்த சமயப் பகையின் காழ்ப்பு வெளியாகிறது.

     கௌசிகன் என்னும் வைதீகப் பார்ப்பனன் காவிரிப் பூம்பட்டினத்தில் இருந்தபோது, ஒரு பசு தன் கூரிய கொம்புகளால் அவன் வயிற்றைக் குத்திக் கிழித்து விட்டது. அப் பார்ப்பனன் அருகிலிருந்த ஆருகதப் பள்ளியிற் சென்று உதவி வேண்டினான். ஆருகதர் கொலையையும் கொலை செய்வோரையும் கொலை வேள்வியையும் வெறுத்தவராகலின், கொலை வேள்வி செய்பவனும் அதுசெய்ய உடன்படுபவனுமாகிய இவ் வைதீகப் பார்ப்பனனுக்கு உதவிசெய்ய உடன்படாமல் அவனைத் தங்கள் பள்ளியினின்று வெளியே அனுப்பிவிட்டனர்.19 இதனால், வைதீகப் பார்ப்பனருக்கும் ஆருகதருக்கும் இருந்த சமயப் பகைமை விளங்குகின்றது.

     இனி, பௌத்தருக்கும் சமணருக்கும் இருந்த சமயப் பகை எல்லோரும் அறிந்ததே. சமண சமயத்தைக் கண்டிக்கக் குண்டலகேசி என்னும் நூலைப் பௌத்தர் இயற்றியதும், பௌத்த சமயத்தைக் கண்டிக்க நீலகேசி என்னும் நூலைச் சமணர் இயற்றியதும், இந்நூல்களுள் ஒருவர் சமயத்தை யொருவர் கடுமையாகத் தாக்கிக் கூறும் செய்திகளும் இவ்விரு சமயத்தாருக்கும் இருந்த சமயப் பகையைத் தௌ¤வாக்குகின்றன.

     இவ்வாறு, பல நூற்றாண்டுகளுக்கு முன்னர், வைதீகம், பௌத்தம், சமணம் என்னும் மும்மதங்களுக்குள் தமிழ்நாட்டிலே நடைபெற்ற போராட்டத்தில் வைதீக மதம் பின்னடைந்து அழிந்துபோகும் நிலைமை எய்திற்று. வைதீக மதம் பின்னடைவதற்குக் காரணங்கள் இவையாகும்:- வைதீகர் கொலை வேள்வியைச் செய்துவந்தது முதலாவது காரணம். பிராமணர் பிறப்பினால் உயர்வு தாழ்வு பாராட்டியதும், தங்கள் வேதத்தைத் தாங்கள் மட்டுமன்றி மற்றவர் படிக்கக்கூடாது என்று தடுத்துவந்ததும் மற்றொரு காரணம். அன்றியும், ‘‘சுவர்ணதானமே, «க்ஷத்திர (நிலம்) தானமே, கோதானமே, மகிஷ தானமே, அஸ்வதானமே, கஜதானமே, பார்யாதானமே கன்னியா தானமே’’ என்றிவை முதலான தானங்களைப் பெறுவதில் வைதீகப் பார்ப்பனர் கண்ணுங் கருத்துமாக இருந்தனர். பௌத்தரும் சமணரும் பொதுமக்களுக்குச் சாஸ்திரதானம், கல்விதானம், மருந்து முதலியவைகளைக் கொடுத்து உதவியதுபோல வைதீகப் பார்ப்பனர் செய்யவில்லை மற்றும், இக் காலத்திலும் வடநாட்டுப் பார்ப்பனர் மச்சம் மாமிசம் முதலிய ஊனுணவுகளை உண்பது போன்று அக் காலத்தில் தமிழ்நாட்டிலிருந்த பார்ப்பனரும் ஊனுணவை உண்டுவந்தனர். இக்காரணங்களால், தமிழ் மக்களிடையே வைதீகப் பார்ப்பன மதம், பௌத்த சமண மதங்களைப்போன்று செல்வாக்குப் பெறாமல் குன்றத் தொடங்கிவிட்டது. பொதுமக்களின் ஆதரவுபெறாதபடியால் இந்த மதம் பௌத்த சமண மதங்களுடன் போராட்ட வலிமை இல்லாமல் தோல்வியுற்றது. அங்கொருவர் இங்கொருவராகச் சில அரசர் மட்டும் வைதீக முறைப்படி யாகங்கள் செய்ததாகச் சங்க நூல்களில் காணப்படுகின்றன. ஆனால், வைதீக மதம் பொது மக்களால் போற்றப் பட்டதாகச் சான்றுகள் அந்நூல்களில் காணப்படவில்லை.

     வைதீக மதம் செல்வாக்கில்லாமல் பின்னடைந்து போக, பௌத்தமும் சமணமும் செல்வாக்குப் பெற்றுச் சிறந்திருந்தன. இவை செல்வாக்குப் பெற்றதற்குக் காரணங்கள் இவையாகும். இவ்விரு சமயத் தலைவர்கள். வைதீக மதத்தவர்களைப் போன்று இல்லறத்தில் இல்லாமல் துறவிகளாக இருந்தனர். பிராமணர்களைப்போன்று கோதானம் பூதானம் சுவர்ணதானம் முதலிய தானங்களைப் பெறாமல் உணவுதானத்தைமட்டும் சிறிதளவு  பெற்றுவந்தார்கள். தங்கள் மதக் கொள்கைகளை மறைக்காமல் சாதிபேதமின்றி எல்லோருக்கும் போதித்து வந்தார்கள். தங்கள் பள்ளிகளில் நாட்டுச் சிறுவர்களுக்குக் கல்வி கற்பித்துக் கொடுத்தனர். நோயாளிகளுக்கு இலவசமாக மருந்துகொடுத்து நோய் தீர்த்தனர். இவர்கள் பிறப்பினால் உயர்வு தாழ்வு பாராட்டவில்லை. கொலையையும், புலாலுண்பதையும் இவர்கள் முழுவதும் நீக்கியிருந்தார்கள். இவ்வித விரிந்த தாராளமான மனப்பான்மையும் கொள்கையும் உடைய பௌத்த சமண மதங்கள் நாட்டில் செல்வாக்குப் பெற்றுச் சிறப்படைந்திருந்தன. 

     ஆனால், இந்த இரண்டு மதங்களும் ஒற்றுமையாக இருக்கவில்லை. பௌத்தமும், சமணமும் வன்மையாகப் போரிட்டு வந்தன. சிலகாலத்திற்குள் பௌத்த மதத்தின் செல்வாக்குக் குன்றிவிட்டது. பௌத்த மதத்தில் சில பிரிவுகள் ஏற்பட்டுப் பிளவுபட்டு வலிமை குன்றிக் கடைசியில் செல்வாக்கிழந்துவிட்டது. (கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் கி.பி. 753 இல்) சமண சமய குருவான பேர்பெற்ற ஆசாரிய அகளங்கர்20 காஞ்சீபுரத்தில் பௌத்தக் கோவிலாக இருந்த காமாட்சி அம்மன் ஆலயத்தில் பௌத்தபிக்குகளுடன் சமயவாதம் செய்து அவர்களை வென்றார். தோல்வியுற்ற பிக்குகள் இலங்கைக்குச் சென்றுவிட்டனர். இவ்வாறு, பல நூற்றாண்டுகளுக்கு முன்னர், தமிழ் நாட்டிலே வைதீகம் பௌத்தம் என்னும் மதங்கள் பின்னடைந்துவிடச் சமண மதம் செல்வாக்குப் பெற்றுச் சிறப்புற்றிருந்தது.

     செல்வாக்குப் பெற்றிருந்த சமணசமயம் நெடுங்காலம் சிறப்புடனிருக்க முடியவில்லை. சிலகாலஞ் சென்ற பின்னர்ச் சமணசமயத்தின் செல்வாக்குக் குறையத் தொடங்கிற்று. இதற்குக் காரணம் யாதெனின், புதிதாகத் தோன்றிய ‘இந்து மதமும் ‘பக்தி இயக்கமுந்தான். இப்புதிய ‘இந்து மதம் எவ்வாறு தோன்றியது என்பதை ஆராய்வாம்.

     பண்டைக் காலத்திலே, வடநாட்டினின்று சமணம், பௌத்தம், வைதீகம் முதலிய மதங்கள் தமிழ்நாட்டிற்கு வருவதற்கு முன்னரே, தமிழர் ‘திராவிட மதத்தைக் கொண்டிருந்தனர் என்று முன்னர்க் கூறினோம் அன்றோ? அந்தத் திராவிட மதம் என்பது முருகன், கொற்றவை, சிவன், திருமால் முதலிய தெய்வங்களை வணங்கும் வழிபாடு ஆகும். அக்காலத்து வைதீகப் பிராமணர் தம் வேள்விகளில் ஆடுமாடுகளைக் கொன்றுவந்தது போலவே, அந்தக் காலத்துத் தமிழரும் முருகன், கொற்றவை முதலிய தெய்வங்களுக்கு ஆடு கோழிகளைப் பலியிட்டு வணங்கிவந்தனர். உயிர்ப்பலியிடுவதைப் பொறுத்தவரையில் திராவிட மதமும் வைதீக மதமும் ஒற்றுமைகொண்டிருந்தன. ஆனால், அப் பண்டைக் தமிழர் சேயோன் மாயோன் ஆகிய சிவன் திருமால் என்னும் தெய்வங்களுக்கு உயிர்ப்பலி கொடுத்ததாகத் தெரியவில்லை. அன்றியும் அக்காலத்தில் சைவம் என்றும் வைணவம் என்றும் தனித்தனியே இரண்டு மதங்கள் பிரிவுபடவும் இல்லை.

     குறுகிய நோக்கமும் குறுகிய கொள்கையும் உடைய வடநாட்டு வைதீக மதம் தென்னாட்டில் செல்வாக்கின்றி ஒதுக்கப்பட்டிருந்த தென்று முன்னர்க் குறிப்பிட்டோமன்றோ? ஒதுக்கப்பட்டுக் கிடந்த இந்த மதம் பௌத்த சமண மதங்களைப்போன்று செல்வாக்குப்பெற முயன்றது. செல்வாக்குப் பெறவேண்டுமானால் இவ்விரண்டு மதங்களையும் அடக்கி ஒடுக்கவேண்டும். இம்மதங்களை அடக்கி ஒடுக்க வைதீக மதத்திற்கு ஆற்றலும் ஆண்மையும்  இல்லை. ஆற்றலும் ஆண்மையும் பெற வழி யாது? ஒரே ஒரு வழிதான் உண்டு. அவ்வழி யாது எனின்: தமிழர் வழிபட்டு வரும் திராவிட மதத்துடன் வைதீக மதமும் கலந்து கொண்டு பொதுமக்களின் ஆதரவைப் பெறுவதுதான். இதைச் செய்ய வைதீக மதம் முற்பட்டது. நீரில் மூழ்கி உயிர் இழக்குந் தறுவாயிலிருக்கும் ஒருவனுக்கு ஏதேனும் பற்றுக்கோடு கிடைக்குமாயின் அதனை அவன் எவ்வாறு இறுகப் பற்றிக்கொள்வானோ, அவ்வாறே அழியுந் தறுவாயிலிருந்த வைதீக மதம் திராவிட மதத்தைத் தழுவிப் பிடித்துக்கொண்டது. அஃதாவது வைதீக மதம், திராவிட மதத்தின் தெய்வங்களாகிய முருகன், கொற்றவை, சிவன், திருமால் முதலிய தெய்வங்களை ஏற்றுக் கொண்டது.

     ஏற்றுக்கொண்டதோடு நில்லாமல், திராவிட வைதீகத் தொடர்பை உறுதிப்படுத்திக்கொள்ளும் பொருட்டு, திராவிடத் தெய்வங்களுக்கும் வைதீகத் தெய்வங்களுக்கும் புதிய தொடர்புகளையும் உறவுகளையும் கற்பித்துக் கொண்டது. தமிழ் முருகனுக்குச் சுப்பிரமணியன், கந்தன் முதலான புதுப்பெயர்களைச் சூட்டி, வள்ளி என்னும் ஒரு தமிழ் மனைவியோடிருந்த அத் தெய்வத்திற்குத் தெய்வயானை என்னும் ஆரிய வைதீகப் பெண்ணொருத்தியை இரண்டாம் மனைவியாகக் கொடுத்து ஆரியத் திராவிடத் தொடர்பை உறுதிப்படுத்திக்கொண்டது. சிவன் என்னும் திராவிடத் தெய்வம் உருத்திரன் என்னும் வைதீகத் தெய்வத்துடன் பொருத்தப்பெற்று இரண்டும் ஒன்றே என்று கற்பிக்கப்பட்டது. ‘சிசன தேவர் என்று வைதிகப் பார்ப்பனரால் ஆதிகாலத்தில் இழித்துரைக்கப்பட்ட சிவலிங்க உருவம், திராவிட வைதீக உறவின் பிறகு உயர்ந்த தெய்வமாக வைதீக மதத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. கொற்றவையைச் சிவனுடைய மனைவியாக்கிவிட்டனர். (ஆனால், மலையாள நாட்டில் கொற்றவையை (காளியை)ச் சிவனுடைய மனைவியாக்க உடன்படாமல், இன்னும் சிவனுடைய தங்கையாகவே கருதிவருகின்றனர்!) கொற்றவை, காளி, துர்க்கை இவர்களெல்லாம் பார்வதியின் வெவ்வேறு அம்சங்கள் என்று கற்பிக்கப்பட்டன. பார்வதிக்கும் சிவனுக்கும் ஆறுமுகன் மகனாகப் பிறந்தான் என்றும், மற்றும் பல கதைகளும் கற்பிக்கப்பட்டன. மாயோனாகிய திருமால் என்னும் திராவிட தெய்வத்துடன் வைதீக தெய்வங்களாகிய விஷ்ணு சூரியன் இவைகள் பொருத்தப் பெற்றுப் புதிய தொடர்புகளும் கதைகளும் கற்பிக்கப்பட்டன. இந்திரன், சந்திரன், பலதேவன், சூரியன் முதலிய சில தெய்வங்கள் மறைக்கப்பட்டு மறக்கப்பட்டன. விநாயகர் (பிள்ளையார்) முதலிய புதிய தெய்வங்கள் புதிதாகப் கற்பிக்கப்பட்டன. இவைகளுக்கு ஏற்ற முறையில் புதிது புதிதாகப் புராணங்கள் கற்பித்து எழுதப்பட்டன. இவ்வாறெல்லாம் திராவிட மதமும் வைதீகமதமும் ஒன்றோடொன்று கலக்கப்பெற்று வைதீகமும் அல்லாததாய் திராவிடமும் அல்லாததாய் இரண்டும் கலந்ததொரு புதிய மதமாக மாறிற்று. இவ்வாறு புதிதாகத் தோன்றிய மதம்தான் ‘இந்து மதம் என்பது. இப்புதிய ‘இந்து மதம் திடீரென்று உண்டாகவில்லை. இந்தத் தொடர்புகளும் கலப்புகளும் மாறுதல்களும் ஏற்படச் சில நூற்றாண்டுகள் சென்றிருக்க வேண்டும்.

     இவ்வாறு புதிய உருவம் அடைந்த ‘இந்து மதத்திற்கு நாட்டிலே சிறிது செல்வாக்கு ஏற்படத் தொடங்கியது. ஏனென்றால், பெருந்தொகையினரான திராவிடக் கொள்கையுடைய தமிழரும் சிறு தொகையினரான வைதீகக் கொள்கையுடைய பிராமணரும் இந்தப் புதிய இந்து மதத்தில் சேர்ந்திருந்தனர். ஆயினும் புதிய ‘இந்து மதம் அதிகச் செல்வாக்குப் பெறவில்லை. பின்னர், ‘இந்து மதத்தில் பக்தி இயக்கம் தோன்றியது. இந்தப் பக்தி இயக்கந்தான் ‘இந்து மதத்திற்குப் புத்துயிரையும் புதிய ஆற்றலையும் பெருஞ் செல்வாக்கையும் தந்தது. 

     ‘பக்தி இயக்கத்தை ஆதரவாகக் கொண்டு ‘இந்து மதத்தை நிலைநாட்ட நாயன்மார்களும் ஆழ்வார்களும் தோன்றினார்கள். இவர்கள் புதிய ‘இந்து மதத்தை ஆதரித்துப் பக்தி இயக்கத்தைப் பரவச்செய்தார்கள். சிவன், அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நாற்பொருளையும் அருளிச் செய்தார் என்றும், அவரே இருக்கு யசுர் சாமம் அதர்வணம் என்னும் நான்மறையையும் அருளிச் செய்தார் என்றும், அவரே நான்மறையின் பொருளாயிருக்கிறார் என்றும், அவ்வாறே திருமால், நான்கு அறங்களையும் நான்கு மறைகளையும் அருளிச்செய்தார் என்றும், அவரே நான்மறையின் பொருளாயிருக்கிறார் என்றும், நாயன்மார்களும் ஆழ்வார்களும் பாடியிருப்பது, திராவிட - வைதீகக் கொள்கையை ஒன்றோடொன்று பொருத்திப் பிணைத்துப் புதிய இந்து மதத்திற்கு ஆக்கந்தேடுதற் கென்க.

     அவ்வாறே, ‘முத்தமிழும் நான்மறையும் ஆனான் கண்டாய்,’ ‘வடமொழியும் தென்றமிழும் மறைகள் நான்கும் ஆனவன்காண்,’ ‘செந்தமிழோ டாரியனைக் சீரியனை,’ ‘ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய், ‘அண்ணாமலையுறையும் அண்ணல் கண்டாய்,’ ‘அந்தமிழின் இன்பப்பாவினை அவ் வடமொழியைப் பற்றற்றார்கள் பயிலரங்கத் தரவணையில் பள்ளிகொள்ளுங் கோவினை என்பது முதலாக இவர்கள் கூறியதும் இப்புதிய திராவிட - ஆரிய வைதீக மதக் கலப்பினை வற்புறுத்துவதற்கே.

    இவர்களைப் பின்பற்றியே சேக்கிழாரும் தமது பெரிய புராணத்தில், ‘வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத் துறைவிளங்க என்றும், ‘தாரணிமேற் சைவமுடன் அருமறையின் துறைவிளங்க என்றும், ‘சைவமுதல் வைதீகமும் தழைத்தோங்க என்றும், ‘அருமறைச் சைவந் தழைப்ப என்றும், ‘சைவநெறி வைதிகத்தின் தருமநெறியொடுந் தழைப்ப என்றும் ஆங்காங்கே திராவிட வைதீக மதங்கள் இரண்டினையும் இணைத்துக் கூறியுள்ளார்.

     புதிதாகத் தோன்றிய இந்து மதத்திற்குப் புதிய ஆற்றலைக் கொடுத்தது பக்தி இயக்கம் என்று கூறினோம். அதுமட்டும் அன்று, இந்து மதத்திற்குத் துணையாகக் காபாலிகம், காளமுகம், பாசுபதம், மாவிரதம் முதலிய சமயங்கள் தோன்றி வடநாட்டினின்றும் வந்து சேர்ந்தன. இவை இந்து சமயத்தின் உட்பிரிவாகக் கொள்ளப்பட்டு ‘அகச் சமயம் என்று பெயர் கொடுக்கப்பட்டன. இந்த மதங்களில் சில நரபலி கொடுக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தன. இந்த மதங்களின் உதவியினாலும், ‘பக்தி இயக்கத்தின் துணையினாலும் புத்துயிர் பெற்ற இந்து மதம், சமண சமயத்தை வன்மையாகத் தாக்கி அதனை வீழ்த்தத் தொடங்கிற்று.

     ‘இந்து மதம் சமண சமயத்தை எவ்வாறு அழித்தது என்பதை அடுத்த அத்தியாயத்தில் ஆராய்வோம்.

_____________________________________________________________________________________________ 
17. ஆசீவக மதத்தின் வரலாற்றினை இந்நூலாசிரியர் எழுதியுள்ள பௌத்தமும் தமிழும் என்னும் நூலில் காண்க.

18. மணிமேகலை: 13 ஆம் காதை.

19. மணிமேகலை, 5 ஆம் காதை, 32-55

20. Ep. Ind. Vol iii, P186, Ep.Rep.1904-05, P.57.

---------------------------------------


8. சமணசமயம் குன்றிய வரலாறு


இந்து மதத்தில் ‘பக்தி அல்லது ‘அன்பு இயக்கம் தோன்றிய பின்னர், இந்துமதம் சமண மதத்தை எதிர்க்க ஆற்றல் கொண்டது என்று கூறினோம். பக்தி இயக்கம் எவ்வாறு சமணசமயத்தின் செல்வாக்கினை அழிக்க முடிந்தது என்பதைக் கூறுவாம். இச் செய்தியை அறியவேண்டுமானால், முதலில் ‘வீடு அல்லது ‘மோட்சம் என்னும் உயர்நிலை அடைவதற்கு இவ்விரு சமயத்தவரும் கொண்டுள்ள கொள்கைகள் இன்னவை என்பதை அறியவேண்டும். ஆதலின், வீட்டு நெறியைப் பற்றி இவ்விரு சமயத்தவரின் கருத்து இன்னதென்பதை விளக்குவாம்.

சமண சமயத்தவர் கொள்கை இது: அருகப் பெருமான் விருப்பு வெறுப்பு அற்றவர். தம்மாட்டுப் பக்தி (அன்பு) செய்வோரிடத்தும் செய்யாதவரிடத்தும் உவப்பு வெறுப்பு இன்றி ஒரு தன்மைத்தாக இருக்கின்றார். தம்மை வணங்கித் தம்மாட்டுப் பக்தி செய்வோரின் பாவ புண்ணியங்களைப் போக்கி அவர்களுக்கு வீடு பேறளிப்பது விருப்பு வெறுப்பு அற்றவராகிய அவரது இயல்பு அன்று. மக்கள் வீடுபேறடையும் வழியை அவர் அருளிச் செய்திருக்கின்றார். அந்நெறியைக் கடைப்பிடித் தொழுகி முயற்சி செய்தால் அவரவர் வீடுபேறடையக் கூடும். துறவிகளுக்கே வீடுபேறடைய முடியும். இல்லறத்தாரும் மகளிரும் நல்வினை செய்வாராயின், தெய்வப் பிறவி பெற்றுச் சுவர்க்க பதவி பெற முடியுமேயன்றி வீடுபேறு அடைய முடியாது (சுவேதாம்பர சமணர்களுக்குப் பெண் மகளிரும் வீடுபேறடைய முடியும் என்னும் கொள்கை உண்டு.) சமணசமய நூல்களில் கூறப்பட்ட யதிதருமப்படி ஒழுகினால் துறவிகள் மோட்சமடையப் பெறுவர். அவர்கள் அருகக் கடவுள் மாட்டுச் சரண் அடையவேண்டும். மோட்ச நெறிக்குத் துணையாக நிற்பது அறவொழுக்கம் ஒன்றுதான். இவ்வற வொழுக்கத்தையும் தவத்தையும் துணையாகப் பற்றிக்கொண்டு அவரவர் தமது முயற்சியாலேயே வீட்டுலகைக் கைப்பற்றவேண்டும்.

‘‘கறங்கின் உழலுங் கதிதோறும் துன்பம்
பிறங்கும் பிறப்பஞ்சி வாழ்மின் - சிறந்த
பிறப்பிறப்பு மூப்புப் பிணிகளெனும் துன்பம்
உறுப்புணர யானுழக்குங் காலை - அறத்திறஞ் சேர்ந்(து)
யானாம் ஒருவனே யல்லது எனக்கு மற்(று)
ஏனோர் துணையல்லவர் என்றறிமின்.’’

என்னும் திருக்கலம்பகச் செய்யுளால் இக் கருத்தை நன்கறியலாம். இதனால், அருகக் கடவுள் மாட்டுப் பக்தி செலுத்தினால் மட்டும் வீடுபேறடைய முடியாது என்பதும், சமணசமய நெறியைப் பின்பற்றி ஒழுகி இருவினை யறுத்து வீடுபேறடைய வருந்தி முயற்சி செய்ய வேண்டும் என்பதும் விளங்குகின்றன.

சைவ வைணவராகிய ‘இந்துக்களின் கொள்கை இது: துறவிகளும் இல்லறத்தாரும், பெண் மகளிரும், மோட்சம் அடையலாம். ‘பக்தி மட்டும் இருந்தால் போதும். துறவு பூண்டு தவம் செய்யாமலே ‘பக்தி ஒன்றினாலேயே முக்தியடையலாம். ‘பக்தியால் முக்தி எளிதாகும்.’ சிவபெருமான் திருவடி, ‘பரவுவார் பாவம் பறிக்கும் அடி எத்தகைய பாதகம் செய்தவராக இருந்தாலும், அவர்கள், கடவுள் மாட்டுப் பக்தி செய்வாராயின் அவர் பாவங்களைக் கடவுள் நீக்கிவிடுவது மட்டும் அன்றி மோட்சமாகிய வீட்டுலகத்தையுங் கொடுக்கின்றார். ஆனால், பக்தி செய்யவேண்டும். பக்தி செய்யாதவருக்கு அவர் அருள் செய்கிறதில்லை. இதுவே இந்து மதத்தின் கொள்கை. இக் கருத்தை இந்துமதப் பெரியார்கள் வெளிப்படையாகக் கூறியிருக்கிறார்கள்.

‘‘திருமறு மார்வ! நின்னைச் சிந்தையுள் திகழ வைத்து
மருவிய மனத்த ராகில் மாநிலத்து உயிர்க ளெல்லாம்
வெருவுறக் கொன்று சுட்டிவிட்டு ஈட்டிய வினையரேனும்
அருவினைப் பயன துய்யார் அரங்கமா நகருள் ளானே.’
(நாலாயிரம், திருமாலை, 39)

மறிந்தெழுந்த தெண்திரையுள் மன்னும்மாலை
வாழ்த்தினால்

பறிந்தெழுந்து தீவினைகள் பற்றறுதல் பான்மையே.’

(நாலாயிரம், திருச்சந்த விருத்தம். 74)

தூமநல் விரைமலர்கள் துவளற ஆய்ந்து கொண்டு

வாமனன் அடிக்கென்றேத்த மாய்ந்தறும் வினைகள்தாமே
(நாலாயிரம் திருவாய்மொழி 10, பாட்டு 9)
‘‘வினைவல் இருள்எனும்
முனைகள் வெருவிப்போம்
சுனைகள் மலர்இட்டு
நினைமின் நெடியானே.’’
(நாலாயிரம் 5, திருவாய்மொழி, 10)

ஓது வேதிய னார்திரு வொற்றியூர்
பாத மேத்தப் பறையும்நம் பாவமே.’ (தேவாரம் - அப்பர்)

உரைசெய் நூல்வழி யொண்மலர் இட்டிடத்
திரைகள் போல்வரு வல்வினை தீர்ப்பரால்.’
(தேவாரம் - அப்பர்)
கச்சிளவர வசைத்தீர் உமைக் காண்பவர்
அச்சமோ டருவினை யிலரே.’ (தேவாரம் - சம்பந்தர்)

தாழ்சடை முடியீர் உமைக் காண்பவர்
ஆழ்துயர் அருவினை யிலரே.’ (தேவாரம் - சம்பந்தர்)

பிண்டம் அறுப்பீர்காள்!
அண்டன் ஆரூரரைக்
கண்டு மலர் தூவ
விண்டு வினை போமே.’ (தேவாரம் - சம்பந்தர்)

இதுபோன்று மேற்கோள்களை ஏராளமாகக் காட்டலாம். விரிவஞ்சி விடுகின்றோம். இதனால் சைவ வைணவராகிய ‘இந்துக்களுக்குப் பக்தி ஒன்றினாலேயே மோட்சம் பெற இயலும் என்னும் கொள்கை உண்டு என்பது உள்ளங்கை நெல்லிக்கனி என அறியப்படும். அன்றியும் இல்லறத்தார்க்குச் சுவர்க்க பதவி தவிர வீடுபேறு கிடையாது; துறவறத்தார்க்கே வீடுபேறு உண்டு என்னும் சமண சமயக் கொள்கையை மறுத்து, இல்லறத்தாருக்கும் வீடுபேறு உண்டு என்னும் இந்துமதக் கொள்கையைத் திருஞானசம்பந்தர் வற்புறுத்திக் கூறியுள்ளார்.

பிறவியால் வருவன கேடுள ஆதலாற் பெரிய இன்பத்
துறவியார்க் கல்லது துன்பம் நீங்காதெனத் தூங்கினாயே!
மறவல்நீ; மார்க்கமே நண்ணினாய்; தீர்த்தநீர் மல்கு சென்னி
அறவனார் ஆரூர் தொழுதுய்யலாம் மையல்
கொண்டஞ்சல் நெஞ்சே.’
தந்தை தாய், தன்னுடன் தோன்றினார், புத்திரர்,
தாரம் என்னும்
பந்தம் நீங்காதவர்க்கு உய்ந்து போக்கில் எனப் பற்றினாயே!
வெந்த நீறாடியார் ஆதியார் சோதியார் வேதகீதர்
எந்தை ஆரூர்தொழுது உய்யலாம் மையல்கொண்டஞ்சல்
நெஞ்சே (சம்பந்தர்-2 திருவாரூர்.)

இவ்வாறு, துறவறத்தாரும் இல்லறத்தாரும் ஆண்பாலரும் பெண் பாலரும் கடவுள் மாட்டுப் பக்தி மட்டும் செய்வாராயின் அவர்களுக்கு மோட்சம் உண்டு என்று இந்துமதம் பறை சாற்றியது. இவ்வளவு எளிய முறையில் யாதொரு வருத்தமுமின்றி வீட்டுலகத்திற்குச் செல்ல வழியைக் காட்டினால் அதனை மக்கள் விரும்பாதொழிவரோ? புதிய இந்து மதம், ‘பக்தியால் முத்தி எளிதாகும் என்னும் எளிய வழியைக் காட்டிச் செல்வாக்குப் பெற்றது. எளிய வழியைக் காணப்பெற்ற மக்கள், இதற்கு மாறாக உள்ள, மனைவி மக்களை வீட்டு, உலக இன்பங்களைத் துறந்து ஐம்புலன்களையும் அடக்கிக் கடுந்தவம் புரிந்து இருவினையுங் கெடுத்து ஞான வீரனாய் வீட்டுலகத்தை வெற்றியோடு கைக்கொள்ளும் சமண மோட்ச வழியைப் பின்பற்றுவரோ? ஆகவே, உலகம் ‘பக்தி செய்து ‘முக்தி பெற இந்துமதத்தைப் பின்பற்றத் தொடங்கியது. ஆகவே இந்துமதத்தின் பக்தி இயக்கம் சமண சமயத்தின் செல்வாக்கைப் பெரிதும் குறைத்துவிட்டது என்று துணிந்து கூறலாம்.

ஆனால், இந்து மதத்தின் பக்தி இயக்கம் ஒன்றினாலேயே சமணசமயம் தனது முழுச் செல்வாக்கையும் இழந்துவிட்டதாகக் கருதவேண்டா, சமணசமயத்தின் செல்வாக்கை யழிக்க இந்துமதத்தார் வேறு முறைகளையும் கையாண்டனர். அறநெறி அல்லாத மறநெறிகளையும், செம்மை முறைக்கு மாறுபட்ட முறைகளையும், கொடுஞ் செயல்களையும், சூழ்ச்சிகளையும் செய்தபடியினாலே சமண சமயம் முழுவதும் செல்வாக்கு இழந்துவிட்டது. இதற்குச் சான்றுகள் உள்ளன.

பக்தியிக்கம் இந்து மதத்தில் தோன்றிய பிறகு, இந்துக்களாகிய சைவ வைணவர் சமணரைக் கடுமையாகத் தாக்கினார்கள். இதனால் சமயப் பகை மேன்மேலும் காழ்ப்புக் கொண்டது. சமணர்மேல் வசை மொழிகளையும் இழிசொற்களையும் இந்துக்கள் அர்ச்சனை செய்தபடியினாலே சமணர்களுக்கு இவர்கள்மேல் சீற்றம் வருவது இயல்புதான். ஆகவே, சமணர் சைவ வைணவக் கோயில்களைக் காண்பதும், சைவ வைணவக் கடவுள்களைப் பற்றிக் கேட்பதும் ‘‘பாவம்’’ என்று கருதினார்கள். இதனைச் சமணர் ‘‘கண்டு முட்டு, கேட்டு முட்டு’’ என்பர்.

‘‘நீற்று மேனிய ராயினார் மேலுற்ற
காற்றுக் கொள்ளவு நில்லா வமணர்’’

என்று திருஞானசம்பந்தர் திருவாலவாய்ப் பதிகத்தில் கூறுவது காண்க. இவ்வாறு சமயப்பகை முற்றிக் காழ்ப்புக் கொண்டது. இந்தக் காலத்தில்தான் சைவ வைணவ ஆழ்வார்கள் தோன்றி நாடெங்கும் சுற்றுப் பிரயாணம் செய்து சைவ வைணவ சமயத்துக்கு ஆக்கம்தேட முயன்றார்கள். அவரவர் சமயத்தை அவரவர் பிரசாரம் செய்வது தவறன்று. ஆனால், மற்றவர் சமயத்தைக் குறை கூறுவதும் மற்றச் சமயத்தவருக்கு இடையூறுகளும் துன்பங்களும் உண்டாக்குவதும் கலகத்துக்கும் பகைமைக்கும் காரணமாகும். ஆகவே சமயப் போராட்டங்களும் கலகங்களும் நடைபெற்றன. இந்தச் சமயப் போராட்டம் மும்முரமாக நடைபெற்ற காலம் கி.பி. 7,8,9 ஆம் நூற்றாண்டுகளாகும்.

தேவாரப் பாடல்பெற்ற திருப்பதிகளின் சரித்திரத்தை ஆராய்ந்து பார்த்தால் அப்பதிகளில் அக்காலத்தில் பௌத்தரும் சமணரும் குடியிருந்ததையும் பௌத்த சமணப் பள்ளிகளும் அங்கிருந்ததையும் அறியலாம். அக்கோயில்கள் பிற்காலத்தில் அழிந்து மறைந்துவிட்டன.

கி.பி. 7,8,9 ஆம் நூற்றாண்டுகளில் சமயப்போர் தமிழ் நாட்டில் மும்முரமாக நடைபெற்றது என்று கூறினோம். அந்தச் சமயப் போர் முக்கியமாக மூன்று மதங்களில் நிகழ்ந்தது. ‘‘இந்து’’ மதத்துக்கும் சமணசமயத்துக்கும், இந்து மதத்துக்கும் பௌத்த மதத்துக்கும், பௌத்த சமயத்துக்கும் சமண சமயத்துக்கும் ஆக மும்முனைப் போர் ஆக நடைபெற்றது. இந்துக்கள் சமணரையும் பௌத்தரையும் தாக்கினார்கள். சமணர் இந்துக்களையும் பௌத்தர்களையும் தாக்கினார்கள். பௌத்தர் இந்துக்களையும் சமணர்களையும் தாக்கினார்கள். இவ்வாறு ஒரே காலத்தில் மும்முனைப்போர் நடந்தது. இந்தப் போரில் இந்து மதம் பௌத்த மதத்தை எவ்வாறு அழித்தது என்பதை எமது ‘‘பௌத்தமும் தமிழும்’’ என்னும் நூலில் கூறியிருக்கிறோம். இங்கு ‘‘இந்து’’ மதம் சமண மதத்தை எவ்வாறு அழித்தது என்பதை ஆராய்வோம்.

இந்தச் சமயப்போர் நடந்த காலத்திலே இந்துமதம் சைவம் வைணவம் இரண்டு என்னும் இரண்டு பிரிவுகளைக் கொண்டிருந்த போதிலும், பிற்காலத்தில் ஏற்பட்டதுபோல் பெரிய பிளவு ஏற்பட்டுச் சைவ வைணவப்போர் நிகழ்ந்தது போல அல்லாமல் இரண்டு மதங்களும் ஒற்றுமையாக இருந்து சமணசமயத்தையும் பௌத்த மதத்தையும் கடுமையாகத் தாக்கின. (பிற்காலத்தில் மும்முரமாக நடந்த சைவ வைணவப் போராட்டம், பௌத்த சமண சமயங்கள் பெரிதும் ஒடுங்கிப்போன காலத்தில் நடந்தது.)

சமணசமயம் பலவிதத்தில் தாக்கப்பட்டது. கொடுமைப்படுத்தல், கழுவேற்றுதல், கொலை செய்தல், கலகம் விளைவித்தல், நிலபுலங்களைக் கவர்தல் முதலிய செயல்கள் நிகழ்ந்தவரைக் காண்கிறோம். இவ்வாறு இந்துக்கள் சமண மதத்தை அழித்த செய்திகள் பல உள. இவற்றைச் சைவ வைணவ நூல்களில் ஆங்காங்கே காணலாம்.

‘‘வெறுப்பொடு சமணர் முண்டர் விதியில்
சாக்கியர்கள் நின்பால்
பொறுப்பரி யனகள்பேசிப் போவதே நோயதாகிக்
குறிப்பெனக் கடையுமாகில் கூடுமேல் தலையை ஆங்கே

அறுப்பதே கருமங் கண்டாய் அரங்கமா நகருளானே!’’

என்னும் தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் திருப்பாடல், அக்காலத்துச் சமயப்போர் எவ்வளவு முதிர்ந்து காழ்ப்புக் கொண்டிருந்தது என்பதை விளக்குகின்றது.

திருஞானசம்பந்தர் மதுரையிலே எட்டு ஆயிரம் சமணரைக் கழுவேற்றினார் என்று சைவசமய நூல்களாகிய பெரிய புராணம், திருவிளையாடற் புராணம், தக்கயாகப் பரணி முதலிய நூல்கள் கூறுவதும், இவற்றை நினைவுபடுத்த மதுரைப் பொற்றாமரைக் குளத்து மண்டபத்தின் சுவரில் சமணரைக் கழுவேற்றுங் காட்சியைச் சித்திரந் தீட்டி வைத்திருப்பதும், மதுரைக் கோவிலில் நடைபெற்று வரும் உற்சவங்களில் ஐந்துநாள் கழுவேற்று உற்சவம் ஆண்டுதோறும் நடைபெற்று வருவதும் இவை நடைபெற்றதற்கு முதன்மையான சான்றுகளாகும்.

காஞ்சிபுரத்துக்கடுத்த திருவோத்தூரிலும் இதுபோன்ற கலகம் நடந்திருக்கிறது. அவ்வூரில் ஒரு சைவர் பனை மரங்களை நட்டுவளர்க்க, அம்மரங்கள் வளர்ந்து ஆண் பனையாயிருக்க, அங்கிருந்த சமணர் அதைக்கண்டு ‘இவ்வாண்பனைகள் பெண்பனை ஆகுமோ?’ என்று கேட்டாராம். மதுரைக்குச் சென்று வந்த ஞானசம்பந்தர் இவ்வூருக்கு வந்தபோது இந்தச் சைவர், ஆண்பனைகளைப் பெண் பனைகளாகச் செய்யவேண்டும் என்று வேண்டிக்கொண்டனர். அதற்கு இணங்கி ஞானசம்பந்தர் பதிகம்பாடினார் என்றும், பொழுது விடிந்தவுடன் அப் பனைமரங்கள் ஆணாக இருந்தவை பெண் பனைகளாக மாறிப் பனங்காய்களைக் காய்த்தன என்றும், இதைக் கண்ட சமணர் அந்த ஊரைவிட்டு ‘ஓடி விட்டனர் என்றும், பெரியபுராணம் கூறுகிறது. இதற்குச் சான்றாக அந்தத் திருவோத்தூர்ச் சிவன் கோயிலில் சமணரைக் கழுவேற்றுதல் போன்ற சிற்ப உருவங்களை அமைத்து வைத்திருக்கிறார்கள். இவ்விதக் கலகமும் கழுவேற்றுதலும் அவ்வூரில் நிகழாமலிருந்தால், இவ்விதமான சிற்பங்கள் அங்கு அமைக்க வேண்டிய காரணமில்லை. திருவோத்தூர்க் கலகமும் கழுவேற்றுதலும், ஞானசம்பந்தர் மதுரைக்குச் சென்று அங்குச் சமணரை வென்ற பின்னர் நிகழ்ந்தவை.

இதுபோன்ற மற்றொரு கலகம், சோழ நாட்டிலே பழையாறை என்னும் இடத்திலே அப்பர் சுவாமிகள் சென்றபோது நடைபெற்றதாகத் திருத்தொண்டர் புராணத்தில் சேக்கிழார் கூறுகிறார். சமணர், பழையாறை வடதளியில் இருந்த சிவன் கோயிலைக் கைப்பற்றியிருந்தனர். இதனையறிந்த அப்பர் சுவாமிகள், அக்கோயிலை மீண்டும் சைவக் கோயிலாக்க எண்ணினார். அக்கோயிலில் இருக்கும் சிவபெருமான் திருவுருவத்தைக் கண்டு வணங்காமல் உணவுகொள்ளமாட்டேன் என்று சூளுரைத்து உணவுகொள்ளாமல் இருந்தார். அப்போது சிவபெருமான், அரசனுடைய கனவிலே தோன்றிச் சமணரை ஆழிக்கும்படி கட்டளையிட்டாராம். அரசன் யானைகளைச் சமணர் மேல் ஏவி அவர்களைக் கொன்றான்.

அப்பர் சம்பந்தர் காலத்துக்குச் சற்று முன்னர், திருவாரூரிலும் இத்தகைய சைவ - சமணர் கலகம் ஏற்பட்டுச் சமணர் துன்புறுத்தப்பட்டுத் துரத்தப்பட்டதோடு, அவருடைய நிலங்களும், மடங்களும், பள்ளிகளும், பாழிகளும அழிக்கப்பட்டன. இந்தச் செய்தியையும் பெரிய புராணம் கூறுகிறது.

இப்போது திருவாரூர்த் திருக்குளம் மிகப் பெரியதாகவும் பதினெட்டு ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்டதாகவும் இருக்கிறது. இத்துணைப் பெரிய குளம் தமிழ் நாட்டிலே வேறு எங்கும் கிடையாது என்று கூறப்படுகிறது. ஆனால், தண்டியடிகள் நாயனார் என்னும் சைவ அடியார் இருந்த காலத்திலே - அந்தக் காலத்தில் திருவாரூரில் சமணர் செல்வாக்குடனும் ஆதிக்கத்துடனும் வாழ்ந்திருந்தனர்-; இந்தக் குளம் மிகச் சிறியதாக இருந்தது. அந்தச் சிறு குளத்தின் நான்கு கரைகளிலும் சமண சமயத்தவருடைய நிலங்களும் மடங்களும், பள்ளிகளும் பாழிகளும் இருந்தன. அப்போது, அந்தச் சிறிய குளத்தைப் பெரிய குளமாகத் தோண்டவேண்டுமென்று தண்டியடிகள் என்னும் சைவ நாயனார் முயற்சி செய்தார். இந்தச் செய்தியைப் பெரியபுராணம் கூறுகிறது.

‘‘செங்கண் விடையார் திருக்கோயில்
குடபால் தீர்த்தக் குளத்தின் பாங்கு
எங்கும் அமணர் பாழிகளாய்
இடத்தால் குறைபா டெய்துதலால்
அங்கந் நிலைமை தனைத்தண்டி
யடிகள் அறிந்தே ஆதரவால்
இங்கு நானிக் குளம்பெருகக்
கல்ல வேண்டும் என்றெழுந்தார்.’’21

குளமோ மிகச் சிறியது. குளத்தின் கரைகளிலே சமணருடைய நிலங்களும் கட்டிடங்களும் உள்ளன. குளத்தைப் பெரியதாகத் தோண்ட வேண்டுமானால், குளக்கரையைச் சூழ்ந்திருந்த சமணருடைய நிலங்களையும் கட்டிடங்களையும் இடித்துத் தகர்க்கவேண்டும். தண்டியடிகள், சமணருடைய நிலங்களையும் கட்டிடங்களையும் விலை கொடுத்து வாங்கியபிறகு குளத்தைப் பெரியதாகத் தோண்டவில்லை. குளத்தைப் பெரியதாகத் தோண்டுகிறார். அப்போது சமணர், தங்கள் நிலங்களும் கட்டிடங்களும் தோண்டப்பட்டு இடிக்கப்படுவதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருப்பார்களா? அவர்கள் தடுக்கிறார்கள்; வழக்கம்போலக் கலகம் ஏற்படுகிறது. சேக்கிழார் வாக்குப்படி, ‘‘தண்டியடிகளால் அமணர் கலக்கம் விளைந்தது’’ கலக்கம் மட்டும் நிகழவில்லை; கலகமும் நடந்தது. ஏனென்றால், சிவபெருமான் அரசன் கனவில் தோன்றிச் சமணரை அழிக்கச் சொல்கிறார். அரசன், சமணரை ஊரைவிட்டுச் துரத்திய பின்னர், அவர்களுடைய கட்டிடங்களையும் நிலங்களையும் அழித்துப் பறித்து அந்தச் சிறிய குளத்தை இப்போதுள்ள பெரிய குளமாகத் தோண்டினான். இதனைப் பெரியபுராணம் இவ்வாறு கூறுகிறது.

‘‘அன்ன வண்ணம் ஆரூரில்
அமணர் கலக்கம் கண்டவர்தாம்
சொன்ன வண்ண மே அவரை
ஓடத் தொடர்ந்து துரந்ததற்பின்
பன்னும் பாழிப் பள்ளிகளும்
பறித்துக் குளஞ்சூழ் கரைபடுத்து
மன்ன னவனும் மனமகிழ்ந்து
வந்து தொண்டர் அடிபணிந்தான்.’’22

இவ்வாறெல்லாம் சமணர்களைக் கழுவேற்றுதல், யானைகளால் மிதிப்பித்தல், ஊரைவிட்டுத் துரத்துதல், நிலபுலங்களைக் கவர்தல் முதலிய கலகங்களும் கொடுமைகளும் சச்சரவுகளும் போராட்டாங்களும் நிகழ்ந்துவந்தன. சமயப்போர் - இல்லை, சமய வெறி - எல்லா நாட்டிலும் பெருந் தீங்கு செய்துள்ளது.

கிறித்துவர்களை உரோமர்கள் செய்த கொடுமைகளும், முஸ்லிம்- கிறிஸ்துவ மதப் போர்களும், செய்துள்ள துன்பங்களும் கொடுமைகளும் சொல்லி முடியா. இவ்வாறே, நமது நாட்டிலும் சமய வெறியர்கள் நிகழ்த்திய கொடுஞ் செயல்கள் கணக்கில. இவ்வாறெல்லாம் துன்பங்களும் கொடுமைகளும் நிகழ்ந்தபடியி னாலே நாளடைவில், சமணசமயம் செல்வாக்கிழந்து நிலை குன்றியது. துன்பங்களைப் பொறுக்க முடியாத சமணர்களில் பெரும் பான்மையோர் மதம் மாறினார்கள். அஃதாவது சமண சமயத்தை விட்டுச் சைவர்களாகவும் வைணவர்களாகவும் மாறிவிட்டார்கள்.

சைவ வைணவராகிய இந்துக்கள் எல்லாப் பழியையும் சமணர்மேல் சுமத்தினார்கள் என்பது, ‘‘போம் பழியெல்லாம் அமணர் தலையோடே’’ என்னும் பழமொழியினால் அறியலாம். வைணவராகிய திருவாய்மொழி விளக்க உரைகாரர், இந்தப் பழமொழியை விளக்க ஒரு கதை எழுதுகிறார். அந்தக் கதை இது:

‘‘ஒரு கள்ளன் ஒரு பிராமணக் கிருஹகத்திலே கன்னமிட, அது ஈரச்சுவராகையாலே இருத்திக்கொண்டு மரிக்க, அவ்வளவில் அவன் பந்துக்கள் வந்து பிராமணனைப் பழிதரவேணுமென்ன, இரண்டு திறத்தாரும் ராஜாவின் பாடேபோக, அந்த ராஜாவும் அவிவேகியாய் மூர்க்கனுமாகையாலே, ‘ப்ராஹ்மணா! நீரீரச்சுவரை வைக்கையாலே யன்றோ அவன் மரித்தான். ஆகையாலே நீ பழி கொடுக்கவேணும் என்ன, அவன் ‘எனக்குத் தெரியாது. சுவரை வைத்த கூலியாளைக் கேட்கவேணும் என்ன, அவனை அழைத்து, ‘நீயன்றோ ஈரச்சுவர் வைத்தாய்; நீ பழி கொடுக்கவேணும் என்ன, அவனும் ‘தண்ணீரை விடுகிறவள் போரவிட்டாள்; என்னாற் செய்யவாவது என்?’ என்ன, அவளை அழைத்துக் கேட்க, அவளும் ‘குசவன் பெரும்பானையைத் தந்தான்; அதனாலே நீர் ஏறிற்று என்ன, அவனை அழைத்துக் கேட்க, அவனும் ‘என்னால் வந்ததன்று; ஒரு வேஸ்யை போகவரத் திரிந்தாள்; அவளைப் பார்க்கவே பானை பெருத்தது என்ன, அவளையழைத்துக் கேட்க, அவளும் ‘என்னால் அன்று; வண்ணான் புடவை தராமையாலே போகவரத் திரிந்தேன் என்ன, அவனை யழைத்துக் கேட்க, அவனும் ‘என்னால் அன்று; துறையில் கல்லிலே ஓரமணன் வந்திருந்தான்; அவன் போகவிட்டுத் தப்பவேண்டியதாயிற்று என்ன, அந்த அமணனைத் தேடிப்பிடித்துக் கொண்டு வந்து, ‘நீயன்றோ இத்தனையும் செய்தாய்; நீ பழிகொடுக்க வேணும் என்ன, அவனும் மௌனியாகையாலே பேசாதிருக்க என்ன, ‘உண்மைக்குத்தரமில்லை என்றிருக்கிறான்; இவனே எல்லாம் செய்தான் என்று ராஜா அவன் தலையை யரிந்தான்.’’

இது கட்டுக் கதையே, ஆனாலும், மற்றச் சமயத்தார் சமணர்மேல் பழி சுமத்தினார்கள் என்பதற்கு இது ஓர் உதாரணம் ஆகும். சோழருடைய தலைநகரமாகிய உறையூர் மண்மாரி பெய்து அழிந்துபோனபோது, அதனைச் சமணர் தமது மந்திர சக்தியினால் அழித்தார்கள் என்று அவர்கள்மீது பழி சுமத்தியதையும் மற்றும் அபவாதங்களையும் இந்நூலில் மற்றோர் இடத்தில் காண்க.

சுமார் ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னே செஞ்சி வட்டாரத்தில் நடைபெற்ற ஒரு செய்தியைக் கூறி இதனை முடிப்போம். கி.பி. 1478 இல் செஞ்சிப் பிரதேசத்தை அரசாண்டவன் வெங்கடபதி நாயகன் என்பவன். இவனுக்குத் ‘துமால் கிருஷ்ணப்ப நாயகன் என்னும் பெயர் உண்டு. இவன் விஜயநகர மன்னருக்கு உட்பட்ட தெலுங்கு இனத்தவன். இவன், உயர்ந்த குலத்தவரான ஒவ்வொரு இனத்திலும் ஒவ்வொரு மனைவியை மணக்கவேண்டும் என்று எண்ணங் கொண்டு, முதலில் உயர்ந்த குலத்தவரான பிராமணர்களை அழைத்து, தனக்கு ஒரு பிராமணப் பெண்ணை மனைவியாகத் தரவேண்டும் என்று கேட்டான். தங்களை விடத் தாழ்ந்த இனத்தவனாகிய இவனுக்குப் பெண் கொடுக்கப் பிராமணர் இசையவில்லை. மறுத்துக்கூறவும் முடியவில்லை. ஏனென்றால் இவன் நியாய அநியாயம் அறியாத மூர்க்கன். ஆகவே, பிராமணர்கள் இந்தத் தர்ம சங்கடத்திலிருந்து தப்பித்துக்கொள்ளவும், சமணர்களைச் சங்கடத்துக்குள்ளாக்கி விடவும் யோசனை செய்து, அரசனிடம் சென்று, ‘‘சமணர்கள் பிராமணர்களைவிட உயர்ந்த இனம் என்று சொல்லிக்கொள்கிறார்கள். ஆகவே, முதலில் அவர்கள் பெண் கொடுத்தால் பிறகு எங்கள் இனத்தில் பெண் கொடுக்கிறோம்,’’ என்று கூறினார்கள். அரசன் சமணரை அழைத்துத் தனக்கு ஒருத்தியை மனைவியாகக் கொடுக்கவேண்டும் என்று கேட்டான். தாழ்ந்த இனத்தானாகிய இவனுக்குச் சமணர் பெண் கொடுக்க விரும்பவில்லை. ஆனால், மூர்க்கனாகிய இவனிடம் மறுத்துக் கூறினால் துன்பம் செய்வான் என்று அஞ்சினார்கள். கடைசியாக அவர்கள் ஒன்று சேர்ந்து ஒரு முடிவுக்கு வந்தார்கள். சமணப் பிரபு ஒருவரின் வீட்டைக் குறிப்பிட்டு அந்த வீட்டுக்குக் குறிப்பிட்ட ஒரு நாளில் அரசர் வந்தால் பெண்ணை மணம் செய்துகொண்டு போகலாம் என்று தெரிவித்தார்கள். அரசனும் அவ்வாறே பரிவாரங்களுடன் அந்த வீட்டிற்குக் குறிப்பிட்ட நாளில் வந்தான். ஆனால், அவன் கண்டதென்ன? அவ்வீட்டில் ஒருவரும் இலர். கலியாணப் பந்தல் மட்டும் இருந்தது. பந்தலின் ஒரு காலில் ஒரு பெட்டை நாய் கட்டப்பட்டிருந்தது!

பெண் கொடுப்பதாகத் தெரிவித்த சமணப் பிரபு அந்த ஊரைவிட்டு வேறு நாட்டிற்குப் போய்விட்டார். செஞ்சி மன்னன் தன்னைச் சமணர் அவமானப்படுத்தியதைக் கண்டு கோபம் அடைந்தான். சமணரைக் கொல்லும் படி கட்டளையிட்டான். சேவகர் செஞ்சி நாட்டிலிருந்தே சமணரைக் கொன்றனர். இதைச் சுமந்தான் தலைபத்து என்று கூறுவார்கள். இந்த அநியாயத்தைக் கண்ட சமணர் பலர் வேறு நாட்டிற்கு ஓடிவிட்டார்கள். பலர் பூணூலை அறுத்துப் போட்டுச் சைவசமயத்தில் சேர்ந்து விபூதி பூசிக்கொண்டார்கள்; (இவர்கள் நீறுபூசி வேளாளர் என்று கூறப்பட்டனர்.) பெண் கொடுப்பதாகச் சொல்லி வேறு நாட்டிற்குச் சென்ற சமணப் பிரபுவின் சந்ததியார் இப்போதும் சைவசமயத்தவராகவே இருக்கிறார்கள்.

இந்த அரசன் காலத்தில் செஞ்சிக்கு அருகில் உள்ள வேலூர் என்னும் ஊரில் வீரசேனாசாரியார் என்னும் பெயருள்ள சமணர் இருந்தார். அவர் அவ்வூர்க் குளத்தில் சமண சம்பிரதாயப்படி அனுஷ்டானம் செய்துகொண்டிருந்தார். இதனைக் கண்ட அரச சேவகர் அவரைப் பிடித்துக்கொண்டு போய் அரசனிடம் விட்டார்கள்.

அச்சமயம் அரசனுக்கு ஒரு குழந்தை பிறந்திருந்தபடியால் அவன் மகிழ்ச்சியோடிருந்தான். ஆகவே, அவரைக் கொல்லாமல் விடுதலை செய்து விட்டான். தமது தலைபோவது உறுதியென்று நம்பியிருந்த வீரசேனாசாரியார் விடுதலை செய்யப்பட்டபோது மறுபிறப்புப் பிறந்தவர் போலானார். அவர் நேரே மைசூரிலுள்ள சிரவணபௌகொள என்னும் இடத்தில் உள்ள சமண மடத்திற்குச் சென்று அங்குச் சமண சமய நூல்களை நன்கு ஓதினார்.

செஞ்சி அரசன் அந்நாட்டுச் சமணர் தலையை வெட்டிய காலத்தில், வேறு நாடுகளுக்குத் தப்பிப் போய்விட்ட சமணர்களில் காங்கேய உடையார் என்பவர் ஒருவர். இவர் திண்டிவனத்துக்கடுத்த தாயனூர் என்னும் ஊரைச் சேர்ந்தவர். இவர் உடையார்பாளையம் குறுநில மன்னரிடம் அடைக்கலம் புகுந்தார். குறுநில மன்னர் இவருக்கு நிலபுலன்கள் அளித்து ஆதரித்தார். உடையார் பாளையத்தில் தங்கியிருந்த காங்கேய உடையார், சிலகாலங் கழித்து மைசூரில் உள்ள சிரவண பௌகொள மடத்துக்குச் சென்று அங்கிருந்த வீரசேனாசாரியாரை அ¬ழத்துக் கொண்டு செஞ்சிக்கு வந்து அங்கு மதம் மாறியிருந்த பழைய சமணர்களை மீண்டும் சமண மதத்தில் சேர்ப்பித்தார். வீரசேனாசாரியார், சமண முறைப்படி அவர்களுக்குப் பூணூல் அணிவித்துத் தீக்கை கொடுத்துச் சமணர் ஆக்கினார்.

காங்கேய உடையார் பரம்பரையினர் இன்றும் தாயனூரில் இருக்கின்றனர். செஞ்சிப் பகுதியில் மறைந்து போன சமண மதத்தை மீண்டும் புதுப்பித்தவரின் பரம்பரையினராகையால், இவர்களுக்கு இங்குள்ள சமணர், திருமணம் முதலிய காலங்களில் முதல் மரியாதை செய்து வருகின்றனர்.

இவ்வாறெல்லாம் சமணர் பற்பல காலத்தில் பற்பல துன்பங்களை அடைந்தார்கள். ஆனால், பௌத்த மதம் தமிழ் நாட்டில் அடியோடு அழிந்து விட்டதுபோலச் சமண மதம் முழுவதும் மறைந்து விடவில்லை. சமணர் தமிழ் நாட்டில் இன்றும் சிறு தொகையினராக இருந்து வருகிறார்கள்.

சமயப்போர் கடுமையாக நடந்த காலத்திலும் சமணசமயம் குன்றிய காலத்திலும் சமணரிற் பெரும்பாலோர் ‘‘இந்து’’ மதத்தில் சேர்ந்து சைவராகவும் வைணவராகவும் மதம் மாறிவிட்டனர். இவ்வாறு இந்து மதத்தில் புகுந்த சமணர் வாளா வெறுங்கையோடு வந்துவிடவில்லை. சைவ வைணவராக மாறிய சமணர் தம் சமண சமய ஒழுக்கங்களையும் கொள்கைகளையும் இந்து மதத்தில் புகுத்தி விட்டார். ஏற்கெனவே, திராவிட வைதீக மதங்களின் கொள்கைகள் கலக்கப் பெற்றுப் புதிய உருவடைந்த இந்து மதத்தில் இன்னும் புதியதாகச் சமணக் கொள்கைகளும் கலக்கத் தொடங்கின. இதனோடு நின்றபாடில்லை. இக்காலத்திலேயே தமிழ்நாட்டிலிருந்த பௌத்த மதத்தினரும் இந்து மதத்தோடு சேரத் தொடங்கி அவர்களும் தம் சமயக் கொள்கைகளிற் சிலவற்றைப் புதிய இந்து சமயத்துடன் சேர்த்து விட்டார்கள்.23 இவ்வாறு, இந்து மதத்தில் புதிய புதிய கொள்கைகள் கலக்கப்பெற்று இந்துமதம் பலவாறு மாறுதல் அடைந்து கொண்டிருந்தது. சமணர் சைவ வைணவராகி இந்து மதத்தில் புகுத்திய சமணசமயக் கொள்கைகளை ‘இந்து மதத்தில் சமண சமயக் கொள்கைகள் என்னும் அதிகாரத்தில் காண்க.

இன்றும், தமிழ்நாட்டின் சில இடங்களில் ‘நீறுபூசும் வேளாளர் என்போர் உள்ளனர். இவரும் முன்பு சமணராக இருந்து பின்னர்ச் சைவராக மாறியவர். இவர் நீறணிந்து சிவனை வழிபடுகின்றனராயினும் இரவில் உண்ணாதிருத்தல் முதலிய சமணசமய ஒழுக்கங் களையும் ஒழுகி வருகின்றனர். இராமநாதபுரம் மாவட்டத்தில் ‘மஞ்சுபுத்தூர் செட்டிகள் என்று ஒரு வகுப்பார் உளர். இவர்கள் இப்போது சைவர்கள். ஆனால், வெள்ளிக்கிழமை தோறும், இளையான்குடி சிவன் கோவிலுக்கு வெளியேயுள்ள ‘அமணசாமியைத் தொழுது வருகின்றனர். இந்த அமணசாமி இவர்களின் குல தெய்வம் என்றும் சொல்லுகின்றனர். இப்போது சைவராக உள்ளவர்களில் பெரும் பகுதியோர் பண்டைக் காலத்தில் சமணராக இருந்தவர்களே என்பதற்குப் போதிய சான்றுகள் பல உள.

_____________________________________________________________________________

21. திருத்தொண்டர் புராணம் - தண்டியடிகள் புராணம்.

22. திருத்தொண்டர் புராணம் - தண்டியடிகள், 27.

23. இச்செய்தியை இந்நூலாசிரியர் எழுதியுள்ள ‘பௌத்தமும் தமிழும் என்னும் நூலிற் காண்க.

-----------------------


9. இந்துமதத்தில் சமணக் கொள்கைகள்


சமணசமயக் கொள்கைகளில் சில இப்போதும் இந்து மதத்தில்24 காணப்படுகின்றன. சமணசமயக் கொள்கைகள் இரண்டு வழியாக இந்து மதத்தில் சேர்ந்திருக்க வேண்டும். இந்துமதம் மேலோங்கிச் சமணசமயம் குன்றியபோது, சமணர்கள் இந்துமதத்தை மேற்கொண்டு இந்துக்களாக மாறியபோதிலும், தாம் முன்பு மேற்கொண்டிருந்த சமண சமயக் கொள்கைகளையும் விடாமல் ஒழுகி வந்தது ஒன்று. சமணசமயத்தை அழித்த இந்துமதம், சமண சமயத்தின் சிறந்த கொள்கைகள் சிலவற்றைத் தன் கொள்கையாக ஏற்றுக்கொண்டது மற்றொன்று. இவ்வாறு இரண்டு வழிகளில், சமணசமயக் கொள்கைகள் இந்துமதத்தில் கலந்து விட்டன. இந்து மதத்தில் காணப்படுகிற சமணசமயக் கொள்கைகளை ஆராய்வோம்.

ஊன் உண்ணாமை: இந்தக் கொள்கையை இந்து மதம் சமணசமயத்தினிடமிருந்து பெற்றுக்கொண்டது. பண்டைக் காலத்தில் தமிழர், முருகன் கொற்றவை முதலிய தெய்வங்களுக்கு ஆடு கோழி முதலியவற்றைப் பலியிட்டு வணங்கியதோடு, ஊன் உணவையும் உட்கொண்டுவந்தனர். இதற்குச் சங்க நூல்களே சான்றாகும். ஆரியரும் (பார்ப்பனரும்) பண்டைக்காலத்தில் இந்திரன், வருணன் முதலிய தெய்வங்களுக்கு ஆடு மாடு குதிரை முதலியவற்றைக் கொன்று பலியிட்டுவந்ததோடு புலாலுணவைப் புசித்து வந்தனர். ஆரியப்பார்ப்பனர் ரிஷிகளுக்கு விருந்துசெய்யும் போதும், சிராத்தம் செய்யும்போதும் கன்றுக்குட்டி, ஆடு, மான், முயல், உடும்பு முதலிய பிராணிகளின் மாமிசத்தைச் சமைத்து உண்டனர். எத்தனை வகை மாமிச உணவைச் சமைக்கிறார்களோ அத்தனை உயர்வாக மதிக்கப்பட்டது அவர்களுடைய விருந்து. இதற்கு அவர்களுடைய வேதம் இதிகாசம் முதலிய நூல்களே சான்றாகும். இக் காலத்திலும் வடநாட்டுப் பார்ப்பனர் மீன் மாமிசம் முதலிய புலால் உணவை உண்டுவருவது கண்கூடு. சமணசமயம் நமது நாட்டிலே பரவிச் செல்வாக்கடைந்திருந்த போது அது ஊன் உண¢பதைத் தடுத்து வந்தது. ஊன் உண்பவரும் பிராணிகளைக் கொல்கின்றவரும் இழிந்தவர் என்றும், மீன்பிடித்தல் வேட்டையாடுதல் முதலிய கொலைத் தொழில் செய்வோர் இழிபிறப்பினர் என்றும் சமணசமயம் கூறிற்று.


‘‘விலக்கின் மாக்கொன்று வெண்ணிணத் தடிவிளிம்படுத்த
பல்லினார்களும், படுகடல் பரதவர் முதலா
எல்லைநீங்கிய இழிதொழில் இழிகுலம் ஒருவி,
நல்ல தொல்குலம் பெறுதலும், நரபதி! அரிதே.’’

என்று சமண நூலாகிய சிந்தாமணி கூறுகிறது. இந்துக்கள் தம் தெய்வங்களுக்கு ஆடுமாடுகளைப் பலியிடுவதையும் யாகங்களில் உயிர்க்கொலை செய்வதையும் சமணர் வன்மையாகக் கண்டித்து வந்தனர். வைதீகராகிய ரிஷிகள் (பிராணிகளின் உயிரைக்கொன்று) யாகம் செய்தபோது அதை அரக்கர்கள் அழித்துவந்தார்கள் என்று இதிகாச புராணங்களில் கூறப்படுகிறதல்லவா? இதன் உண்மைக் கருத்து யாதெனின், ஆரியப்பார்ப்பனர் யாகத்தின்பேரால் பிராணிகளைக் கொலை செய்துவந்ததை அரக்கர்கள்25 அஃதாவது சமண சமயத்தவர் தடுத்துவந்தார்கள் என்பதே. சமண சமயத்தவருடைய கொள்கை நாடெங்கும் பரவிச் செல்வாக்கடைந்த போது, இந்து மதத்தவரும் இக் கொள்கையைத் தமது கொள்கையாக ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று. மற்றும் பிற்காலத்திலே இந்துமதம் செல்வாக்கடைந்து சமணசமயம் பின்னடைந்த காலத்தில், சமணர்கள் ஏராளமாக இந்து சமயத்தில் சேர்ந்து மதம் மாறியபோது, தமது ஊனுண்ணாக் கொள்கையை விடாமல் இந்து மதத்தில் புகுத்திவிட்டனர். இவ்வாறு இரண்டு விதத்தில் சமணரின் இக் கொள்கை இந்து மதத்தில் சேர்ந்து விட்டது.

பௌத்தர்களும் ஊனுண்ணாக் கொள்கையுடையவர். ஆனால், அவர்கள் கொல்லாமையை மட்டும் வற்புறுத்திக் கூறி ஊனுண்ணாமையை அதிகமாக வற்புறுத்தாது விட்டனர். சமணரோ கொல்லாமை, ஊன் உண்ணாமை ஆகிய இரண்டையும் வற்புறுத்தியதோடு, இவற்றைத் தமது மதத்தின் முதன்மையான கொள்கையாகவும் கொண்டனர். ஆதலால், சமணர்களாலேயே இந்தக் கொள்கை நமது நாட்டில் அதிகமாகப் பரவிற்று என்று கருதலாம்.

ஊன் உணவு அல்லாத ‘‘காய்கறி’’ உணவுக்கு இப்போது சைவ உணவு என்று பெயர் கூறப்படுகிறது. சமண சமயம் செல்வாக்குற்றிருந்த பண்டைக்காலத்திலே ‘‘மரக்கறி’’ உணவுக்கு ஆருகத உணவு என்று பெயர் வழங்கியதாகத் தெரிகிறது. இலங்கையிலுள்ள தமிழர்கள் ‘‘காய்கறி’’ உணவை இப்போதும் ஆரத உணவு என்று வழங்கி வருகின்றனராம்26. ஆரத உணவு என்பது ஆருகத உணவு என்பதன் திரிபு.

தீபாவலி: இது சமணரிடமிருந்து இந்துக்கள் பெற்றுக்கொண்ட பண்டிகை. கடைசித் தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரர், பாவாபுரி நகரத்திலே அவ்வூர் அரசனுடைய அரண்மனையிலே தங்கியிருந்தபோது, அங்குக் குழுமியிருந்த மக்களுக்கு அறவுரை செய்தருளினார். இரவு முழுவதும் நடைபெற்ற இந்தச் சொற்பொழிவு விடியற்காலையில் முடிவடைந்தது. வைகறைப்பொழுது ஆனபடியினாலே, சொற்பொழிவைக் கேட்டுக்கொண்டிருந்த மக்கள் அனைவரும் தத்தம் இல்லம் செல்லாமல் அவரவர் இருந்த இடத்திலேயே உறங்கிவிட்டனர். வர்த்தமான மகாவீரரும், தாம் அமர்ந்திருந்த ஆசனத்திலிருந்தபடியே வீடுபேறடைந்தார். பொழுதுவிடிந்து எல்லோரும் விழித்தெழுந்து பார்த்தபோது, மகாவீரர் வீடுபேறடைந்திருப்பதைப் கண்டு அரசனுக்கு அறிவித்தனர். அவ்வரசன் மற்ற அரசர்களை வரவழைத்து அவர்களோடு யோசனை செய்து, உலகத்திற்கு ஞானவொளியாகத் திகழ்ந்த மகாவீரரை மக்கள் நினைவுகூர்ந்து வழிபடும்பொருட்டு, அவர் வீடுபெற்ற நாளில் வீடுதோறும் விளக்குகளை ஏற்றிவைத்து விழாக் கெண்டாடும்படி ஏற்பாடு செய்தான். அதுமுதல் இந்த விழா தீபாவலி என்னும் பெயரால் கொண்டாடப்படுகிறது. (தீபம் = விளக்கு. ஆவலி = வரிசை) மகாவீரர் விடியற்காலையில் வீடுபேறடைந்தபடியால், தீபாவலி விடியற்காலையில் கொண்டாடப்படுகிறது. நீராடியபின்னர் திருவிளக்கேற்றித் தீபாவலிப் பண்டிகை கொண்டாடுவது வழக்கமாக இருக்கிறதன்றோ?

சமணசமயம் வீழ்ச்சியடைந்த பிறகு, சமணர்கள் பெருவாரியாக இந்துமதத்தில் சேர்ந்தனர். சேர்ந்த பிறகும் அவர்கள், தாம் வழக்கமாகக் கொண்டாடிவந்த தீபாவலியை விடாமல் தொடர்ந்து கொண்டாடி வந்தனர். இந்த வழக்கத்தை நீக்கமுடியாத இந்துக்கள், இதைத் தாமும், ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று. ஆனால், பொருத்தமற்ற புராணக் கதையைக் கற்பித்துக்கொண்டார்கள். திருமால் நரகாசுரனைக் கொன்றார் என்றும், அவன் இறந்தநாளைக் கொண்டாடுவதுதான் தீபாவலிப் பண்டிகை என்றும் கூறப்படும் புராணக் கதை பொருத்தமானது அன்று. அன்றியும், இரவில் போர் புரிவது பண்டைக்காலத்து இந்தியப் போர்வீரர்களின் முறையும் அன்று. சூரியன் மறைந்த உடனே போரை நிறுத்தி, மறுநாள் சூரியன் புறப்பட்டபிறகுதான் போரைத் தொடங்குவது பண்டைக்காலத்துப் போர்வீரர்கள் நடைமுறையில் கொண்டிருந்த வழக்கம். சமணர் கொண்டாடி வந்த, மகாவீரர் வீடுபேறடைந்த திருநாள் தீபாவலி என்பதில் ஐயமில்லை. ஆனால், இந்தப் பண்டிகையை ஏற்றுக் கொள்ளவேண்டிய நிலை ஏற்பட்ட பிறகு, இந்துக்கள் இந்தப் பண்டிகையின் உண்மைக் காரணத்தை ஏற்றுக் கொள்ள மனம் இல்லாமல் புதிதாகக் கற்பித்துக்கொண்ட கதைதான் நரகாசுரன் கதை.

சமண சமயத்திலிருந்து இந்துக்கள் சில கொள்கைகளைக் கைப்பற்றிக் கொண்டார்கள் என்று கூறினோம். இக் கொள்கைகளில் இந்துக்களாகிய சைவர்கள் சில முக்கியக் கொள்கைகளைத் தமக்குரியனவாகக் கொண்டிருக்கிறார்கள். அவற்றை முறையே ஆராய்வாம்:

சைவமும் சமணமும்: சைவர்களுக்கும் சமண சமயத்தவருக்கும் பொதுவான சில கொள்கைகளை இங்கு ஆராய்வோம். இக் கொள்கைகளில் சில இரண்டு சமயத்துக்கும் பொதுவானதாக, அடிப்படையான கொள்கைகளில் ஒற்றுமையுள்ளதாக இருக்கின்றன. வேறு சில மேற்பார்வைக்குப் பொதுவாகவும் அடிப்படைக் கொள்கையில் வேறுபட்டும் காணப்படுகின்றன. ஆயினும், மிக மிகப் பண்டைக் காலத்தில், இவ்விரு சமயங்களும் மிக நெருங்கிய தொடர்புடையனவாய் இருந்து பின்னர்க் காலஞ் செல்லச் செல்ல வேறுபட்டு வெவ்வேறு தத்துவப் பொருள்களைக் கற்பித்துக் கொண்டனவாகத் தோன்றுகின்றன. இக் கொள்கைகளை ஆராய்ந்து காண்போம்.

சிவராத்திரி: சைவ சமயத்தவர் சிவராத்திரியைப் புனிதநாளாகக் கருதிக் கொண்டாடி வருகின்றனர். எல்லாச் சிவன் கோயில்களிலும் சிவராத்திரி வழிபாடு மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. சமண சமயத்தவரும் சிவராத்திரியைக் கொண்டாடி வருகின்றனர். இதில், சிறப்பு என்னவென்றால், சைவர் சமணர் ஆகிய இருவரும் கொண்டாடும் சிவராத்திரி மாதம், பக்ஷம், திதி, நட்சத்திரம் முதலிய எல்லாம் ஒன்றாக அமைந்திருப்பதுதான்.

சைவர்கள் சிவராத்திரியன்று இரவு சிவபெருமானை வழிபட்டு ஒழுகினால் சிவகதியடையப் பெறலாம் என்று கருதுகின்றனர். ஆனால், சமண சமயத்தவர் சிவராத்திரி கொண்டாடுவதன் காரணம் என்ன? முதல் தீர்த்தங்கரராகிய ஆதிபகவன் (ரிஷபதேவர்) திருக்கயிலாய மலையிலே வீடுபேறடைந்தார் என்பது சமண சமயத்தவர் கொள்கை. வெள்ளியங்கிரியாகிய கயிலாயமலையிலே ஆதிபகவன் வீடுபேறடைந்தார் என்பதும், அது மாசித் திங்கள், அமரபக்ஷத்துச் சதுர்த்தசியன்று நள்ளிரவு என்பதும் சமணசமயக் கொள்கை. சமணர்கள், சைவ சமயத்திலே பிற்காலத்தில் சேர்ந்தபோது, தமது பழைய சிவராத்திரி வழிபாட்டைச் சைவ சமயத்தில் புகுத்தியிருக்கலாம். அல்லது, ஆதிகாலத்திலிருந்தே சிவராத்திரி வழிபாடு சைவ சமயத்தில் இருந்தது என்று கூறினால் அதை மறுத்துக் கூற யாதொரு சான்றும் கிடையாது. அப்படியானால், சமணர்களுக்கும் சைவர்களுக்கும் சிவராத்திரி வழிபாடு தொன்று தொட்டு இருந்து வருகிறது என்று கருதவேண்டும்; இதனால், மிகமிகப் பழைய காலத்தில் இரண்டு சமயங்களும் ஒன்று பட்டிருந்திருக்க வேண்டும் என்று கருத இடமுண்டு.

மோட்சமாகிய வீட்டுற்குச் சிவகதி என்றும், சிவபுரி என்றும், அருகக்கடவுளுக்குச் சிவகதிநாயகன், சிவன் என்றும் பெயர்கள் கூறப்படுவதைச் சமணசமய நூல்களில் பெரிதும் காணலாம். அது போலவே, தேவாரம் முதலிய சைவ சமய நூல்களிலே வீடுபேறு சிவகதி என்று கூறப்படுகிறது.

திருக்கயிலாயமலை : கயிலையங்கிரி என்னும் திருக்கயிலாயமலை இமயமலைக்கு வடபுறத்திலே திபெத்து நாட்டில் இருக்கிறது. இதற்கு வெள்ளியங்கிரி என்னும் பெயரும் உண்டு. பனிக்கட்டியால் நிறைந்துள்ள இந்த மலை இரவும் பகலும் வெண்மைநிறமாக வெள்ளிபோல் காணப்படுவதால் இதற்கு இப்பெயர் வாய்ந்தது. சமணர்களுக்கும் சைவர்களுக்கும் இந்த மலை புனிதமான திருப்பதியாகும். சிவபெருமான் இந்த மலையில் எழுந்தருளியிருக்கிறார் என்றும், இங்குள்ள சிவபெருமானை வணங்குவதற்காகத் திருநாவுக்கரசர் புறப்பட்டுச் சென்று, இக்கட்டான வழியில் செல்ல முடியாமல் திரும்பி வந்து விட்டார் என்றும் புராணம் கூறுகிறது. சுந்தரமூர்த்தி நாயனாரும் சேரமான் பெருமாள் நாயனாரும் முறையே யானை மீதும் குதிரை மீதும் அமர்ந்து ஆகாய வழியாக இக் கயிலை மலைக்குச் சென்றார்கள் என்றும், காரைக்கால் அம்மையார் இம்மலைக்குச் சென்று இவ்விடத்தைக் காலினால் மிதிக்க அஞ்சித் தலையினால் நடந்து சென்றார் என்றும் சைவ புராணங்கள் கூறுகின்றன. சைவசமயப் பெரியார்கள் எல்லாரும் திருக்கயிலாய மலையையும் அதில் எழுந்தருளியிருக்கும் கயிலாயநாதனையும் தம் பாடல்களில் பாடியிருக்கிறார்கள். திருக்கயிலாய மலை சைவர்களுக்குப் புனிதமான திருமலையாகும்.

அது போன்றே, சமணர்களுக்கும் திருக்கயிலாயமலை புனிதமான திருப்பதியாகும். ஏன்? சமணருடைய முதல் தீர்த்தங்கரரான ஆதிநாதர் இக்கயிலை மலையிலே வீடு பேறடைந்தார். ஆகவே, இது சமணர்களுக்குப் புண்ணியத்திருப்பதியாகும் திருக்கலம்பகம் என்னும் சமண சமய நூல், ஆதிநாதரை, கயிலாயம் என்னும் திருமலைமேல் உறைகின்றனர் என்று கூறுகிறது. மேலும்,


‘‘போக்கறு சுடர் வெள்ளி
மாக்கயிலை மிசை நாப்பண்’’

ஆதிநாதர் எழுந்தருளியிருக்கிறார் என்றும் மேற்படி நூல் கூறுகின்றது. இதனால் சைவர்களுக்குரியது போலவே சமணர்களுக்கும் உரிய புனிதமான திருப்பதி கயிலாயமலை என்பது விளங்குகிறது.

சடைமுடி : சைவர்கள் வணங்கும் சிவபெருமான் சடை முடியுடையவர் என்றும், அதனால் அவர் சடையன் என்று கூறப் படுகிறார் என்றும் சைவ நூல்கள் கூறுகின்றன. சமணரின் ஆதி நாதரும் (ரிஷபதீர்த்தங்கரர்) சடை முடியுடையவர் என்று சமண நூல்கள் கூறுகின்றன. ஆதிநாதரைத் தவிர, ஏனைய இருபத்து மூன்று தீர்த் தங்கரர் எல்லோரும் சடைமுடியற்றவர்கள். இவர்கள் திருவுருவங்கள் சடைமுடியில்லாமல் அமைக்கப்பட்டிருப்பதை இன்றும் சமணக் கோயில்களில் காணலாம். ஆனால், ஆதிநாதர் மட்டும் சிவபெருமானைப்போலவே சடைமுடியுடையவர். இதனைத் திருக்கலம்பகம்,

‘‘ஆலநெடு நிழலமர்ந்தனை
காலம் மூன்றும் கடந்தனை
தாழ்சடை முடிச் சென்னிக்
காசறு பொன்னெயிற் கடவுளை’’

என்று கூறுகிறது. இக்காலத்துச் சமணர் கோயில்களில் ரிஷபதேவராகிய ஆதிநாதர் திருவுருவமும், ஏனைய தீர்த்தங்கரரைப் போலவே, சடைமுடியில்லாமல் காணப்படுகின்றது. ஆனால் பண்டைக் காலத்திலே இருந்த ஆதிநாதர் திருவுருவங்கள் சடைமுடியுடன் அமைந்திருந்தன. இதற்கு ஆதாரமாகப் பழைய ஆதிநாதரின் திருவுருவங்கள் இன்றும் சடைமுடியுடன் சில இடங்களில் காணப்படுகின்றன.

இப்போதைய திகம்பரச் சமணர் இதை முற்றும் மறந்து விட்டனர். திருக்கலம்பகம் ஒன்று தவிர ஏனைய சமணத் தமிழ் நூல்கள் ஆதிநாதர் சடைமுடியுடையவர் என்பதைக் கூறவில்லை. ஆனால், சுவேதாரம்பரச் சமணரால் எழுதப்பட்ட திரிசஷ்டி சலாகாபுருட சரித்திரம் (ஆதீஸ்வர சரிதம்) இதைக் கூறுகிறது. சமண முனிவர் துறவுகொள்ளும்போது, லோசம் செய்துகொள்வது வழக்கம். அஃதாவது தலைமயிரைக் கைகளால் பிய்த்துக் களைவது வழக்கம். அந்த முறைப்படி, ஆதிநாதர் லோசம் செய்தபோது, இந்திரன் பொன்தட்டில் அந்த மயிரை ஏந்தினான் என்றும், ஆதிநாதர் தமது தலையிலிருந்து நான்கு பக்கங்களிலும் நான்கு பிடி மயிரைப் பிய்த்துக் களைந்து தட்டில் வைத்து, மற்றப் பக்கத்து மயிரையும் களையத் தொடங்கியபோது, இந்திரன் அந்த மயிரின் ஆழகைக் கண்டு இனியும் பிய்த்துக் களைய வேண்டாம் என்று வேண்டிக் கொண்டதாகவும், இந்திரன் வேண்டுகோளுக்கு இணங்கி ரிஷபர் (ஆதிநாதர்) மற்றச் சிகைகளைக் களையாமலே விட்டார் என்றும் ஆதீஸ்வர புராணம் கூறுகிறது.27

எருது அல்லது விருஷபம் : சமணருடைய முதல் தீர்த்தங்கரரான விருஷப தேவராகிய ஆதிநாதருக்கு முத்திரை (அடையாளம்) விருஷபம் என்னும் ஏறு ஆகும். இவரது திருவுருவத்தின்கீழ் விருஷபம் (ஏறு) அமைக்கப் பட்டுள்ளதைச் சமணக் கோயில்களில் இன்றுங் காணலாம். இவ்வாறே, சைவரும் சிவபெருமானுடைய வாகனம் ஏறு (விருஷபம்) என்று கூறுகின்றனர்.

அன்றியும், தருமத்திற்கு (அறத்திற்கு) வடிவம் ஏறு (எருது) என்று கூறுவது சமணசமயத் துணிபு. இதனை,


மணியினுக் கொளி; அகமலர்க்கு மல்கிய
அணியமை அங்குளிர் வாசம்; அல்லதூஉம்
திணி இமிலேற்றினுக் கொதுக்கம்; செல்வநின்
இணைமலர்ச் சேவடி கொடுத்த என்பவே.’

எனவரும் சீவகசிந்தாமணி முத்தியிலம்பகச் செய்யுளால் அறியலாம். இதற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர், ‘இமிலேறென்றது- அறத்தினை; தருமத்திற்கு அது வடிவமாகலின் என்று எழுதி யிருப்பதும் கருதத் தக்கது. விருஷபத்தைத் தருமத்தின் வடிவமாகக் கூறுவது போன்று தியானத்தையும் எருதின் வடிவமாகச் சமணர் கூறுவர். இதனை, ‘தியானமெனும் நரையம் புகா வினைத் தெவ்வென்றவா எனவரும் திருநூற்றந்தாதி28 அடியினாலும். ‘தியானம் என்னும் இடபத்திலே புகுந்து தீவினைப் பகையை வென்றபடி. நரை - விடபம் என வரும் அதன் பழைய உரையினாலும் அறியலாம்.

இந்தக் கருத்தைச் சைவரும் கொண்டுள்ளார். ஆதிநாதர் திருவுருவத்தின்கீழ், சமணர் எருது உருவத்தை (சிறியதாக) அமைப்பதைச் சைவர் சற்றுப் பெரியதாகச் செய்து, சிவபெருமானது வாகனம் எருது என்றும், அவர் அதன்மேல் ஊர்ந்து வந்து அடியார்களுக்குக் காட்சியளிக்கிறார் என்றும் கூறுகின்றனர். விருஷப வாகன சேவையைச் சிறப்பாகவும் கருதுகின்றனர். அன்றியும், தருமத்தின் உருவந்தான் எருது என்று சமணரைப் போன்றே சைவரும் கூறுகின்றனர். இதனை,

வானேறுரு மெனதாயுதம் அவனாயுத மழுவாள்
யானேறுவ தயிராபதம் அவனேறுவ தெருதே

என்று இந்திரன் சிவனைப் பழித்துக் கூறியதாகக் கூறப்படும் தக்கயாகப்பரணி29த் தாழிசையினாலும், ‘எருதென்றது எருதையன்று; தருமமென்பது30, தருமம் வெளுத்திருத்தலும் வஸ்துக்களில் வலிதாதலானும் தருமத்தின்மேலல்லது ஈசுவரன் ஏறானென்று கொண்டான். இதில் தேவேந்திரன் ஈசுவரனை இகழ்ந்தவாறாவது தரும வாகனன் யுத்தஞ் செய்ய வல்ல னல்லனென்றவாறு எனவரும் அதன் பழைய உரையினாலும் அறியலாம். இதனால், சமணரைப் போன்றே சைவரும் விருஷபத்தைத் தருமத்தின் (அறத்தின்) உருவாகக் கொண்டிருப்பது உணரலாம். இவ்வொற்றுமை இச் சமயங்களின் பண்டையத் தொடர்பைக் காட்டுகிறது.

நந்தி - கோமுகயக்ஷன்: திருக்கயிலாயமலையில் வீடு பேறடைந்த ஆதிநாதராகிய விருஷப தேவருடைய பரிவார தெய்வங்களில் கோமுகயக்ஷர் முதன்மையானவர் என்று சமணசமய நூல்கள் கூறுகின்றன. (கோமுகயக்ஷன் என்பதற்குப் பசுவின் முகத்தையுடைய யக்ஷன் என்பது பொருள்.

கோமுகயக்ஷன் உருவம் எருது அல்லது பசு முகத்துடன் சித்திரங்களிலும் சிற்பங்களிலும் அமைக்கப் படுகின்றன. சைவசமயத்தவரும் தம் சிவபெருமானுடைய பரிவாரத் தெய்வங்களில் ‘நந்தி தேவரை முதன்மையாகக் கூறுகின்றனர். சைவரின் நந்திதேவருக்கும் சமணரின் கோமுக யக்ஷனைப் போன்றே எருது முகம் உள்ளது. சிவன் கோவில்களில் நந்திவாகன சேவை சிறந்ததாகக் கருதப்படுகிறது.

அன்றியும், சமணர்களில் நந்திகணம் என்னும் ஒரு பிரிவு உண்டு. இந்தக் கணத்தைச் சேர்ந்தவர் நந்தி என்னும் பெயரைச் சூட்டிக்கொள்வர். அச்சநந்தி, ஆரிய நந்தி, பவணந்தி, புட்பநந்தி, கனகநந்தி முதலிய பெயர்கள் சமண முனிவருக்கு உண்டு. சிவபெருமானுடைய கயிலாய மலையில் உள்ள நந்தி தேவரது வழியில் வந்த சத்தியஞான தரிசனிகள் என்பவர் மெய்கண்டாருக்குச் சிவஞான போதத்தைப் புகட்டியதாகச் சைவர் கூறுவர். இந்த ஒற்றுமைகளால் இவ்விரண்டு சமயங்களில் பண்டையத் தொடர்பு அறியப்படும்.

காலனைக் கடந்தது: ஆருகதரின் அருகக் கடவுளும், சைவரின் விரிசடைக் கடவுளும் காலனைக் கடந்தவர் (இயமனை வென்றவர்) என்று இரண்டு சமய நூல்களும் கூறுகின்றன. இதற்கு, இரண்டு சமய நூல்களில் இருந்தும் இலக்கியச் சான்றுகளைக் காட்டுவோம்.

சிவபெருமான் காலனை உதைத்தார் என்று சைவ புராணங்கள் கூறுகின்றதை அனைவரும் அறிவோம். தேவாரத்திலும் இச் செய்தி பல இடங்களிற் கூறப்பட்டுள்ளது.

‘‘சாடினார் காலன் மாளச் சாய்க்காடுமேவினாரே’’

என்றும்,

‘‘காலனை உதைப்பர் போலும் கடவூர் வீரட்டனாரே’’

என்றும்,

‘‘சாற்றிநா ளற்ற தென்று தருமரா சற்காய் வந்த
கூற்றினைக் குமைப்பர் போலும் குறுக்கைவீ ரட்டனாரே’’

என்றும் தேவாரம் கூறுகிறது. இன்னும் பல மேற்கோள்கள் காட்டக் கூடுமாயினும் விரிவஞ்சி விடுகின்றோம் இனி, சமண நூல்களிலிருந்து சில மேற்கோள்களைக் காட்டுவாம்:

‘‘கோறன் மாற்றி யுதைப்பது கூற்றையே
கூறுகிற்பது மெய்ப்பொருட் கூற்றையே’’

என்றும், ‘‘காலனை வெந் கண்ட வென்றிப் பெருமானே’’ என்றும் சமணரின் திருக்கலம்பகம் கூறுகிறது.

‘‘கன்று காலனைக் கடந்தாய்! காதற் காமனைக் கடிந்தாய்!
தொன்று மூத்தலைத் துறந்தாய்! தோற்ற மாக்கட லிறந்தாய்’’

என்று மற்றொரு சமண சமய நூலாகிய நீலகேசி கூறுகிறது. விரிவஞ்சி இதனோடு நிறுத்துகின்றாம்.

சிவபெருமான் தம்மை வழிபட்ட அடியார்க்காகக் (மார்க்கண்டற்காக) கூற்றுவனை உதைத்தருளி, அடியவர்க்குச் சாவா வரத்தைத் தந்தருளினார் என்பது சைவரின் புராணக் கதை. அருகக் கடவுள் காலனைக் கடந்து (சாவைக் கடந்து) பிறவா நிலையைத் தாம் அடைந்தார் என்பது சமணரின் சாத்திரக்கொள்கை. காமனைக் காய்ந்தது என்னுங் கதையில், பொதுநோக்காகப் பார்க்கும்போது, இருசமயக் கருத்தும் ஒற்றுமையுடையன போற் காணப்படினும், அடிப்படையான கருத்தில் வேற்றுமையுடையனவே, அஃதாவது சிவபெருமான், இயற்கையாகவே பிறப்பிறப்பில்லாதவர்; ஆகையால், தம் அடியவர் பொருட்டுக் காலனை உதைத்து அடியவர்களை இறவாமை உள்ளவர்களாகச் செய்கிறார். ஆனால், அருகக்கடவுள், தமது பிறப்பை நீக்கிக்கொள்ளக் காலனைக் கடந்தார் என்பது,

காமனைக் காய்ந்தது: அருகப்பெருமானும் சிவபெருமானும் காமனைக் காய்ந்தவர் (வென்றவர்) என்று சமணராலும் சைவராலும் கூறப்படுகின்றனர். இவற்றையும் ஆராய்வோம்:

‘‘செற்றங் கனங்கனைத் தீவிழித்தான் தில்லை யம்பலவன்
நெற்றியிற் கண் கண்ட கண்கொண்டு மற்றினிக்

காண்பதென்னே’’

என்றும்

‘‘மகர வெல்கொடி கைந்தனைக் காய்ந்தவன்’’

என்றும்,

‘‘தூமன் சுறவந் துதைந்த கொடியுடைக்
காமன் கணைவலங் காய்ந்தமுக் கண்ணினர்’’

என்றும் திருநாவுக்கரசர் கூறியுள்ளதைப் படிக்கிறோம். சைவர்கள் இதைப்பற்றி நன்கறிந்திருப்பதால் மேன்மேலும் மேற்கோள் காட்ட வேண்டியதில்லை. அருகப்பெருமான் காமனைக் காய்ந்த செய்தியை ஆருகதமத நூல்களிற் காண்போம்.

‘‘காமனை வென்றோன் ஆயிரத்தெட்டு
நாம மல்லது நவிலாது என்நா.’’

என்று கவுந்தியடிகள் அருகக்கடவுளைத் துதிக்கிறார் சிலப்பதிகாரத்தில்.

‘‘அல்லற் பிறவி அகன்றோய் நீ! ஆசைவெவ்வே ரறுத்தோய்நீ!
வெல்லற்கரிய அனங்கனைமெய்,
வெண்ணீறாகவெகுண்டோய்நீ!’’

என்பது நீலகேசி.

‘‘களிசேர் கணையுடைய காமனையுங் காய்ந்த
அளிசேர் அறவாழி அண்ணல் இவன் என்ப’’

என்பது சீவகசிந்தாமணி.

‘‘சிலைவயங்கு தோளனங்கள் திறலழித்த விசயமென்னோ?’’
‘‘கண்மூன்று தோற்றிஇகல் காமனுடல் பொடியாகக்
கனன்றாய் தூய
விண்மூன்று மதிற்குடைக்கீழ் வீற்றிருந்தாங்
கறமுரைத் தாய்’’

என்பது திருக்கலம்பகம். இவ்வாறு சமண சமய நூல்களும் தம் அருகக்கடவுள் காமனைக் காய்ந்தார் என்று கூறுகின்றன.

பொது நோக்காகப் பார்க்கும்போது, சிவபெருமானும் அருகப்பெருமானும் காமனைக் காய்ந்த செய்தி ஒற்றுமை உடையதாகக் காணப்பட்டாலும், அடிப்படையான கருத்தில் வேறுபாடு உண்டு. அஃதாவது சிவபெருமான், மற்றவர் பொருட்டுக் காமனைக் காய்ந்தார். அருகப்பெருமானோ, தம்மிடத்தில் இருந்த காமம் என்னுங் குற்றத்தை நீக்குவதற்காகக் காமனைக் காய்ந்தார்.

முப்புரம் எரித்தது: சிவபெருமான் முப்புரத்தை எரித்து அழித்தார் என்று சைவ நூல்கள் கூறுகின்றன. சமணரின் அருகக் கடவுளும் முப்புரத்தை எரித்து அழித்தார் என்று சமண சமய நூல்கள் கூறுகின்றன.

தேவாரத்திலே, சிவபெருமான் முப்புரத்தை அழித்த செய்தி கூறப்படுகிறது. அவற்றில் சில வருமாறு:

‘‘சிலையினால் மதில்கள் மூன்றும் தீயெழச் செற்ற செல்வர்’’
‘‘வறவைத் தொழில்புரிந்து அந்தரத்தே செல்லும்
மந்திரத் தேர்ப்
பறவைப் புரமெரித்தார் எம்மை யாளும் பசுபதியே’’
‘‘செம்பு கொப்புளித்த மூன்று மதிலுடன் சுருங்க வாங்கி
அம்பு கொப்பளிக்க எய்தார் அதிகைவீ ரட்டனாரே’’

முப்புரம் என்பது மூன்று கோட்டைகள் என்று புராணக் கதை கூறுகிறது. ஆனால், முப்புரம் என்பது மும்மலம் என்று தத்துவார்த்தம் கூறப்படுகிறது.

‘‘அப்பணி செஞ்சடை ஆதி புராதனன்
முப்புரம் செற்றனன் என்பர்கள் மூடர்கள்
முப்புர மாவன மும்மல காரியம்
அப்புரம் எய்தமை யார் அறி வாரே’’

என்பது திருமூலர் அருளிச்செய்த திருமந்திரம். இதனால், முப்புரம் அல்லது திரிபுரம் என்பது ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்கள் என்று தெரிகிறது. ஆகவே சிவபெருமான் முப்புரம் அழித்தார் என்பதற்கு ஆன்மாக்களிடம் பொருந்தியுள்ள மும்மலங்களை அழித்தார் என்று தத்துவப் பொருள் கொள்ளவேண்டும்.

சமணரின் அருகக்கடவுளும் முப்புரத்தை எரித்தார் என்று சமண சமய நூல்களும் கூறுகின்றன. அருகப் பெருமான் எரித்த முப்புரம் என்பது காம, வெகுளி, மயக்கம் என்னும் மூன்று குற்றங்கள். சமண சமய நூல்களில் இருந்து இதனை விளக்குவாம்.

‘‘ஒருமூன்று அவித்தோன் ஓதிய ஞானத்
திருமொழிக் கல்லதுஎன் செவியகம் திறவா’’

என்று, கவுந்தி அடிகள் அருகப் பெருமானைப் போற்றுகிறார் (சிலப்பதிகாரம் நாடு காண் காதை). இதற்கு அடியார்க்கு நல்லார் உரை வருமாறு: ‘‘எனது செவிகள் காம, வெகுளி, மயக்கங்களைக் கெடுத்தவனால் ஓதப்பட்ட ஞான பாதமாகிய திருமொழியைக் கேட்டற்குத் திறப்பினல்லது பிறிதொன்றற்குத் திறப்பனவல்ல.’’

‘‘முரணவிய வென்றுலகம் மூன்றினையும், மூன்றில்
தரணிமேல் தந்தளித்த தத்துவன்தான் யாரே’’

(சிந்தாமணி, பதுமையார் இலம்பகம், 81)

இதற்கு நச்சினார்க்கினியர் உரை : ‘‘மூன்றுமதிலையும் அழித்து அங்கம், பூர்வம், ஆதி என்கிற மூன்றாகமத்தாலும் உலகம் மூன்றின் தன்மையையும் தரணிமேலே தந்து வெளிப்படக் கூறின தத்துவன் யார்தான்?’’

‘‘அரணங்கொடிய மதின்மூன்றும் அழியக்கனன்றீர் அன்றுள்ள
முரணம் பொன்றே நுமக்கங்கு.....................’’

என்பது திருக்கலம்பகம்.

‘‘காவலாகிய கொடுமையையுடைய ஆவரணங்களான முக்குற்றமும் கெடக் கோபித்தீர்; கோபிக்கும் காலத்தில், மனத்தினது வலியாகிய ஒரு கணையே உமக்கிருந்தது;’’(பழைய உரை)

குறிப்பு : சைவரின் சிவபெருமான் முப்புரத்தை எரித்தார் என்பதும், முப்புரம் என்பது ஆணவம், கன்மம், மாயை என்னும் முக்குற்றங்கள் என்பதும், அவ்வாறே சமணரின் அருகப்பெருமானும் முப்புரத்தை எரித்தார் என்பதும் அம்முப்புரம் என்பது காமம், வெகுளி, மயக்கம் என்னும் மூன்று குற்றங்கள் என்பதும் வெளிப்பார்வைக்கு ஒரே கருத்துள்ளனவாகத் தோன்றினாலும், உண்மையில் கருத்து வேறுபாடுடையன. இவ்வேறுபாடுகள் இவ்விரண்டு சமயங்களின் தத்துவக் கருத்தை அறிந்தவர் தாம் உணரமுடியும். இரண்டுக்கும் உள்ள வேறுபாடுகள் யாவை எனின்:

சைவ சமயக் கருத்துப்படி சிவபெருமான் ஆணவம், கன்மம், மாயை என்னும் மூன்று குற்றங்களை அழித்தார் என்றால் ஆன்மாக்களிடம் உள்ள இந்த மூன்று குற்றங்களையும் அழித்தார் என்பது பொருள். சிவபெருமான் தம்மிடமிருந்த இந்த மூன்று குற்றங்களையும் அழித்தார் என்பது பொருள் அன்று. என்னை? இறைவன் இயற்கையாகவே இக்குற்றங்கள் இல்லாதவர் ஆகலின்.

ஆனால், சமணரின் அருகக்கடவுள் காமம், வெகுளி, மயக்கம் என்னும் மூன்றும் குற்றங்களையும் அழித்தார் என்றால், சமண சமயக் கருத்துப்படி, தம்மிடமிருந்த இம்மூன்று குற்றங்களையும் அழித்தார் என்பது பொருள். என்னை? மற்ற உயிர்களிடமுள்ள இக்குற்றங்களை அருகக் கடவுள் அழிப்பவர் அல்லர். ஒவ்வோர் உயிரும் தம்மிடம் உள்ள குற்றங்களைத் தாமே முயன்று அழிக்க வேண்டும் என்றும் அருகக்கடவுள் பிறரிடமுள்ள இக் குற்றங்களை அழிக்கமாட்டார் என்றும் சமண சமய சாத்திரம் கூறுகின்றது.

ஆகவே, முப்புரம் எரித்த கதையில் இரண்டு சமயத்துக்கும் ஒற்றுமையுள்ளதுபோலக் காணப்பட்டாலும், அடிப்படையான தத்துவக் கருத்தில் மாறுபாடு உண்டு என்பது அறியத்தக்கது.

ஐயனார்: ஐயனார், சாஸ்தா, அரிகரபுத்திரன் எனும் பெயர்களையுடைய தெய்வம் ஊர்த் தெய்வமாக இப்போது இந்துக்களால் வணங்கப்படுகின்றது. இந்தத் தெய்வம் பௌத்தம், சமணம் எனும் இரு சமயங்களிலிருந்து இந்து மதத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டது. பௌத்த மதத்திலிருந்து ‘சாஸ்தா என்னும் தெய்வத்தை இந்துக்கள் எவ்வாறு ஏற்றுக் கொண்டார்கள் என்பதைப் ‘பௌத்தமும் தமிழும் என்னும் எமது நூலிற் காண்க. சமண சமயத்திலிருந்து இத் தெய்வத்தை இந்துக்கள் எவ்வாறு ஏற்றுக் கொண்டார்கள் என்பதை ஈண்டுக் கூறுவோம். சமணர்களுடைய கோவில்களில் இத் தெய்வத்தை இன்றுங் காணலாம். பரிவாரத் தெய்வங்களில் ஒன்றாகச் சமணர் இதனை இன்றும் வணங்குகின்றனர். இத் தெய்வத்திற்கு ‘பிரமம் யட்சன் ‘சாத்தனார் முதலிய பெயர்களை அவர்கள் கூறுகின்றனர். முதன் முதலாக, ஜினகாஞ்சியில் உள்ள திருப்பருத்திக்குன்றத்துச் சமணக் கோயிலைக் கண்ட போது, அங்கு இத் தெய்வத்தின் உருவமும் பூசிக்கப்படுவதைக் கண்டு வியப்படைந்தோம். பின்னர், ஏனைய சமணத் திருக்கோயில்களுக்குச் சென்றபோதும் அங்கும் இத்தெய்வத்தின் திருவுருவம் பூசிக்கப்படுவதைக் கண்டோம். இது சமணர்களிடமிருந்து இந்துக்கள் பெற்றுக்கொண்ட சிறு தெய்வங்களில் ஒன்று. சமணராக இருந்து இந்துக்களாக மாறிய ஆருகதர்களால் இது இந்து மதத்தில் புகுத்தப்பட்டிருக்க வேண்டும்.

பௌத்த மதத்திலிருந்தும் சமண மதத்திலிருந்தும் ஐயனாரை (சாஸ்தாவை) இந்துக்கள் ஏற்றுக்கொண்டனர். பௌத்த ஐயனாருக்கும் சமண ஐயனாருக்கும் உள்ள வேற்றுமை யாதெனில், பௌத்த ஐயனாருக்கு வாகனம் குதிரை; சமண ஐயனாருக்கு வாகனம் யானை என்பதே. சைவக் கோயில்களில் பிள்ளையார் அல்லது முருகன் எவ்வாறு போற்றப்படுகின்றனரோ அவ்வாறே சமணக்கோயில்களில் ஐயனார் எனப்படும் பிரம்மயட்சன் தனிக் கோயிலும் பூசை முதலிய சிறப்பும் பெற்று இன்றும் விளங்குகின்றார்.

‘‘பெரியபுராணம்’’ ‘‘அறுபத்துமூன்று அடியார்’’

‘‘ஸ்ரீபுராணம்’’ ‘‘சித்தாந்தம்’’

பெரியபுராணம் என்னும் திருத்தொண்டர் புராணம் கி.பி 11 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட சைவ நூல் இப் புராணத்திற்கு முதல் நூலாக உள்ளவை சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிய திருத்தொண்டத் தொகையும், நம்பியாண்டார் நம்பி அருளிய திருத்தொண்டர் திருவந்தாதியும் ஆகும். இந்தத் திருத்தொண்டர் புராணத்தைப் பெரியபுராணம் என்றும் வழங்குவர். இப் பெயர்கள் சமணரது ‘‘திரிஸஷ்டி ஸலாகா புருஷர் சரித்திரம்’’ என்றும் பெயரிலிருந்து அமைக்கப்பட்டதாகத் தோன்றுகிறது. திரிஸஷ்டி ஸலாகா புருஷர் சரித்திரம் சமணர்களுக்குரிய நூல். இதில் 63 பெரியார்களின் சரித்திரங்கள் கூறப்படுகின்றன. திரிஸஷ்டி = அறுபத்துமூன்று; ஸலாகா புருஷர் = பெரியார். சமணருக்கு 63 பெரியார்கள் உள்ளனர். அவர்களாவன: தீர்த்தங்கரர் இருபத்து நால்வர், சக்கரவர்த்திகள் பன்னிருவர், பலதேவர் ஒன்பதின்மர், வாசுதேவர் ஒன்பதின்மர், பிரதிவாசுதேவன் ஒன்பதின்மர் ஆக அறுபத்து மூவர். இவர்களுடைய சரித்திரங்களைக் கூறும் நூலுக்குத் திரிஸஷ்டி ஸலாகா புருஷர் சரித்திரம் என்பது பெயர்; அஃதாவது அறுபத்து மூன்று பெரியார்கள் சரித்திரம் என்பது பெயர்.

சைவரின் பெரியபுராணத்தில் (திருத்தொண்டர் புராணத்தில்) 63 அடியார்களின் சரித்திரம் கூறப்படவில்லை. எழுபத்திருவர் சரித்திரங்கள் கூறப்படுகின்றன. ஆனால், தொகையடியாரைக் கழித்து 63 அடியார்கள் என்று கூறுகிறார்கள். எழுபத்திரண்டை ஏன் 63 ஆகக் குறைக்கவேண்டும்? சமணரது 63 அடியாருக்குச் சமானமாகக் கணக்கிடுவதற்குத்தானே? சென்னை மயிலாப்பூர் போன்ற சில சிவன் கோயில்களில் இப்போதும் அறுபத்து மூவர் உற்சவம் வெகு சிறப்பாக ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அன்றியும் கன்னட மொழியிலே சைவ அடியார்களின் சரிதம், தமிழ்த் திருத்தொண்டர் புராணம் போலவே எழுதப்பட்டிருக்கின்றது. அவற்றிற்கும் அறுபத்து மூவர் பெரியார் சரிதம் என்று பெயர் சூட்டியுள்ளனர். அஃதாவது, அருவத்துமூவர புராதன சரிதெ என்றும், அருவத்து மூரு புராதன சரணர சரிதெ என்றும் பெயர் சூட்டியுள்ளனர்.31 இதனால், சமணரைப் போலவே சைவரும் தம் அடியார் தொகையை அறுபத்து மூவர் என்று ஆக்கிக்கொண்டது தெரிகிறது.

சமணர் தம் திரிஸஷ்டி ஸலாகா புருஷர் சரித்திரத்தை ஸ்ரீ புராணம் என்றும் வழங்குவர். ஸ்ரீபுராணம் என்னும் பெயரையுடைய மணிப் பிரவாள நடைநூல் ஒன்றும் சமணருக்கு உண்டு. இந்த ஸ்ரீபுராணத்தில் சமணருடைய 63 பெரியாருடைய சரிதங்கள் கூறப்ப டுகின்றன. சமணர் தம் திரிஸஷ்டி ஸலாகா புருஷர் சரித்திரத்தை ஸ்ரீபுராணம் என்று வழங்கிவருவது போலவே, சைவர்களும் தமது பெரிய புராணமாகிய திருத்தொண்டர் புராணத்தை ஸ்ரீபுராணம் என்று பண்டைக் காலத்தில் வழங்கி வந்தனர். ஆனால், இந்த வழக்கு இக்காலத்தில் வழங்கப்படுவதில்லை.

தொண்டை நாட்டில், திருவொற்றியூரில் உள்ள ஆதிபுரீஸ்வரர் கோயில் கல்வெட்டுச் சாசனம் இவ்வாறு கூறுகிறது. ‘‘திருப்பங்குனி யுத்திரத்து ஆறாந்திருநாளான புதன் கிழமையும் ஏகாதசியும் பெற்ற ஆயிலைத்தினன்று படம்பக்கநாயக தேவர் திருமகிழின் கீழ் திருவோலக்கஞ் செய்தெழுந்தருளியிருந்து ஆளுடைய நம்பி ஸ்ரீபுராணம் கேட்டருளி’’.32

இந்தச் சாசனம் கோவிராச கேசரிபன்மரான சக்கரவர்த்திகள் ஸ்ரீ இராசாதிராச தேவரது 9 ஆவது ஆண்டில் எழுதப்பட்டது. இவர் கி.பி. 1172 முதல் 1186 வரையில் அரசாண்ட இராசாதிராசர் II ஆவர். இந்தச் சாசனத்திலே, திருவொற்றியூர்க் கோயிலில், ஸ்ரீ புராணத்தில் ஆளுடைய நம்பி புராணம் படிக்கப்பட்ட செய்தி கூறப்படுகிறது. இதில், பெரியபுராணம் ஸ்ரீபுராணம் என்று கூறப்படுவது காண்க.

ஸ்ரீபுராணம், அறுபத்து மூவர் என்பவைகளைச் சைவரும் சமணரும் வழங்கியதுபோலவே சித்தாந்தம் என்னும் பெயரையும் இரு சமயத்தாரும் தம் சமய சாத்திரங்களுக்குப் பெயராக வழங்கி வருகின்றனர். சித்தாந்தம் என்பதற்கு முடிந்தமுடிபு என்பது பொருள். ஆயினும் இந்தப் பெயரைச் சமணரும் சைவரும் தம் சாத்திரங்களுக்குப் பெயராக வழங்கியுள்ளனர்.

‘‘ஸ்ரீகோமாறஞ் சடையற்கு யாண்டு 3. மதநெச்சுர நாட்டுத் திருச்சுரத்து திருமலைத் தேவர்க்கு குணசாகர படாரர்செயவித்த குழுவாணை நல்லூர் தும்பூர்க் கூற்றத்து காடந்தைகுடி தர்மசித்தனான தயாமாறர் திருமாலடைஞ்சிருந்து சித்தாந்தம் உரைக்கும் படாரர் உள்ளிட்டுப் பதின்மர் வயிராக்கியர்க்கு ஆஹாரதானமாகத் தன் முதல் குடுத்து33 என்று கழுகுமலைக் கல்வெட்டுச் சாசனம் கூறுகிறது. இதில் சமணருடைய சாத்திரம் சித்தாந்தம் என்று கூறப்பட்டிருப்பது காண்க. சைவரும் தமது சமய சாத்திரத்தைச் சித்தாந்தம் என்று கூறுகின்றனர்.

சித்தர் வணக்கம்

பண்டைக் காலத்தில் சிறுவர்களுக்கு நெடுங்கணக்குக் கற்பிக்கத் தொடங்கும்போது முதலில் சித்தர் வணக்கம் கூறுவது மரபு. ‘‘ஹரி நமோத்து சிந்தம்’’ என்று கூறிய பின் ஆசிரியர் பிள்ளைகளுக்கு எழுத்துக் கற்பிப்பர். இக்காலத்துப் பாடசாலைகளில் இந்த வழக்கம் கைவிடப்பட்டது. ஆனால், பண்டைக் காலத்தில் இந்த வழக்கம் இருந்து வந்தது. இதில் சிந்தம் என்பது சித்தம் என்பதன் திரிபு. சித்தர் என்பவர் சமணருடைய பஞ்சபரமேஷ்டிகளில் ஒருவர். எனவே, சமணர் சித்தர் வணக்கம் செய்து வந்தனர். இந்த வழக்கத்தைத்தான் மற்றவர்களும் கைக்கொண்டனர். தமிழ் நாட்டிலே சித்தர் வணக்கம் செய்த பிறகு சிறுவர்களுக்கு எழுத்துக் கற்பிக்கத் தொடங்கியது போலவே, ‘‘சிததம நம’’ என்று கன்னட நாட்டினரும், ‘‘ஓம் நமஸ்ஸிவாய சித்தம் நம’’ என்று தெழுங்கு நாட்டினரும் இவ்வாறே சித்த வணக்கம் செய்து பிள்ளைகளுக்கு எழுத்துக் கற்பித்து வருகின்றனர்.34

இவ்விடத்தில், பாடசாலைகளுக்குப் பள்ளிக்கூடம் என்னும் பெயர் வழங்குவது நினைவுகூரத்தக்கது. பள்ளி என்பதற்குச் சமண முனிவர் வாழும் பள்ளி என்பது பொருள். சமண முனிவர், நாட்டுச் சிறுவர்களைத் தம் பள்ளிகளில் உள்ள கூடத்தில் இருக்கச் செய்து அவர்களுக்கு எழுத்துக்களையும் நூல்களையும் படிப்பித்து வந்தனர். இதனால் பாடசாலைகளுக்கும் பள்ளிக்கூடம் என்னும் பெயர் ஏற்பட்டது. சமணர் தம் பள்ளிக் கூடங்களில், சிறுவர்களுக்கு எழுத்துக் கற்பிக்கும்போது சித்தர் வணக்கம் கூறிய பிறகு கற்பிக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர். இந்த வழக்கந்தான், இக் காலத்திலும் மற்றவர்களாலும் வழக்கத்தில் கைக்கொள்ளப்பட்டது. எனவே, பள்ளிக் கூடம் என்னும் பெயரும், சித்த வணக்க முறையும் சமணரிடமிருந்து பெற்றுக் கொண்டவை என்பது வெளிப்படை.

________________________________________________________________________

24. இந்துமதம் என்று இங்குக் கூறுவது சைவவைணவ மதங்களை.

25. இந்துக்களால் அரக்கர் என்று கூறப்படுவோர், சமண நூல்களில் வித்தியாதரர் என்று கூறப்படுகின்றனர்.

26. ஸ்ரீபுராணம்; நூன்முகம், பக்கம் 32.

27. P.116, Adisvara Caritra. Trisasti Salaka Purusa Carita. Vol I Gaekwad’s Oriental Series No.LI.

28. 34 ஆம் செய்யுள்.

29. காளிக்குக் கூளி கூறியது. 209

30. கி.பி. 8 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்த பரமேஸ்வரவர்மன் என்னும் பல்லவ அரசன், சைவ சமயத்தவனாய் எருதுக் கொடியைப் பெற்றிருந்தான். இவனது எருதுக் கொடியைச் சில புராணங்கள் ‘தர்மத்துவஜம் என்று கூறவதும் ஈண்டுக் கருதத்தக்கது. இவன் பரம்பரையின் யாவரும் ரிஷபக் கொடியைக் கொண்டிருந்தனர்.

31. P.5.6 Mys. Arch. Annual Report. 1925.

32. 371 of 1911. No. 1358 SII (Texts) Vol.V.P.494.

33. S.I.I. Vol V.

34. ஸ்ரீபுராணம், நூன்முகம், பக்கம் துதுதுடி.

----------------------------


10. சமணத் திருப்பதிகள்

தமிழ்நாட்டிலே சமண சமயம் பண்டைக் காலத்திலே நன்கு செல்வாக்குப் பெற்றுப் பரவியிருந்தது. கிராமங்களிலும் நகரங்களிலும் சமணக் கோயில்கள் இருந்தன. இப்போது, சமண சமயம் பெரிதும் மறைந்துவிட்டது. ஆகவே, அக்கோயில்களும் கிராமங்களும் இப்போது பெரிதும் மறைந்துவிட்டன. மறைந்துபோனவையும் மறையாமல் உள்ளவையும் ஆன சமணக் கோயில்களையும் ஊர்களையும் பற்றி இங்கு ஆராய்வோம். பண்டைக் காலத்திலிருந்த எல்லாச் சமணத் திருப்பதிகளையும் ஆராய்வதற்கு இடமில்லை. எமது ஆராய்ச்சிக்கு எட்டியவரையில் எமக்குத் தெரிந்த திருப்பதிகளைமட்டும் இங்குக் கூறுவோம்.

1. சென்னை மாவட்டம்

மயிலாப்பூர்: சென்னையைச் சேர்ந்த மயிலாப்பூரில் பண்டைக் காலத்தில் சமணக்கோயில் ஒன்று இருந்தது. இந்தச் சமணக் கோயிலில் நேமிநாத தீர்த்தங்கரர் உருவம் அமைக்கப்பட்டிருந்தது. இந்தக் கோயிலில் எழுந்தருளியிருந்த நேமிநாதரைப் போற்றிப் பாடிய நூல் திருநூற்றந்தாதி என்பது. திருநூற்றந்தாதியைப் பாடினவர் அவிரோதியாழ்வார் என்பவர். இவர் முதலில் வைணவராக இருந்து பின்னர் சமணராக மாறி இந்நூலை இயற்றினார் என்பர். திருநூற்றந்தாதியின் முதல் செய்யுள் இது:

மறமே முனிந்து மயிலாபுரி நின்று மன்னுயிர்கட்
கறமே பொழியு மருட்கொண்டலே யதரஞ் சிவந்த
நிறமே கரியவொண் மாணிக்கமே நெடுநா ளொளித்துப்
புறமே திரிந்த பிழையடி யேனைப் பொறுத்தருளே.’’

அருகக் கடவுள், மயிலாப்பூரில் கோயில் கொண்டிருந்தார் என்பதைத் திருக்கலம்பகம் என்னும் நூல்,

மயிலாபுரி நின்றவர் அரியாசன வும்பரின்

மலர்போதி லிருந்தவர் அலர்பூவி னடந்தவர்’’

என்று கூறுகிறது. மயிலாப்பூர்ப் பத்துப்பதிகம், மயிலாப்பூர் நேமிநாதசுவாமி பதிகம் என்னும் செய்யுள்களும் சமணர்களால் பாராயணம் செய்யப்பட்டு வருகின்றன.

இந்த நேமிநாதர் மயிலாப்பூர்க் கடற்கரையில், இப்போது செந்தோம் சர்ச்சு என்று கூறப்படுகிற கிறித்துவரின் தோமையார் கோயில் இருக்கும் இடத்தில் இருந்தது. பிறகு ஒரு காலத்தில், கடல் நீர் இக்கோயிலை அழித்து விடும் என்று அஞ்சி இக்கோயிலில் இருந்த அருகக்கடவுளின் திருமேனிகளைச் சித்தாமூர் என்னும் ஊரில் கொண்டுபோய் வைத்திருக்கிறார்கள். இங்குள்ள ஒரு கல்எழுத்துச் சாசனம்,

‘‘.........வுட்பட நேமிநாத ஸ்வாமிக்(கு)க்

குடுத்தோ. இவை பழந்தீ பரா.....’’

என்று கூறுகிறது.35 இதனால் நேமிநாதர் கோயில் இங்கு இருந்த செய்தி உண்மை என்பது அறியப்படும். தோமையார் கோவிலுக்கு எதிரில் உள்ள அனாதைப் பிள்ளைகள் விடுதியில் பல ஆண்டுகளுக்கு முன்னே சமணக் கடவுள் உருவங்கள் இருந்தன என்று ஆர்க்கியாலஜி அறிக்கை கூறுகிறது. இதன் அருகில் உள்ள கன்னிப்பெண்கள் மடத்தில் ஒரு பெரிய சமணத் திருவுருவம் இருந்ததாயும் அது இப்போது அவ்விடத்தில் புதைக்கப்பட்டிருப்பதாயும் கூறப்படுகிறது.36

மயிலாப்பூர் நேமிநாதர் பேரால் இயற்றப்பட்ட நூல் நேமிநாதம் என்பது. நன்னூலுக்கு உரை எழுதிய மயிலை நாதர் என்னும் சமணர் மயிலாப்பூரில் இருந்தவர் என்பர். வேறு சமணக் கடவுள் உருவங்கள் மயிலாப்பூர் பிஷப் வீட்டிலும் உள்ளன. இவை தோமையார் கோயில் தோட்டத்தில் பூமியில் இருந்து கிடைத்தவை. மயிலாப்பூரில் இருந்த வேறு இரண்டு சமண உருவங்கள் இந்நூலாசிரியரின் நண்பர் ஒருவரிடம் இருக்கின்றன.

2. செங்கற்பட்டு மாவட்டம்

உத்தரமேரூர்: இந்த ஊர் சுந்தரவரதப்பெருமாள் கோயிலில் ஆதிநாதர் (இருஷபதேவர்) திருவுருவம் இருக்கிறது. இங்கு முற்காலத்தில் சமணர் இருந்திருக்க வேண்டும்.37

ஆநந்தமங்கலம்: ஒலக்கூர் இரயில் நிலையத்திலிருந்து 5 மைலில் உள்ளது. இங்குக் கற்பாறையில் சமணத் திருவுருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ் வுருவங்களின் நடுநாயகமாக உள்ளது ஆனந்த தீர்த்தங்கரரின் உருவம். இத் தீர்த்தங்கரரின் பெயரே இவ்வூருக்கும் பெயராக அமைந்திருக்கிறது. ஆனந்த தீர்த்தங்கரருக்கு ஒரு யக்ஷ¤குடை பிடிப்பது போன்றும் மற்றொரு யக்ஷ¤ சாமரை வீசுவது போன்றும் அமைக்கப்பட்டுள்ளது. மதிரை கொண்ட பரகேசரிவர் மனுடைய (பராந்தகன் 1) 38 ஆவது ஆண்டில் (கி.பி. 945 இல்) எழுதப்பட்ட சாசனம் இங்கு உளது. இங்கு ஜினகிரிப்பள்ளி இருந்ததென்றும் வினபாசுரகுருவடிகள் மாணவர் வர்த்தமானப் பெரியடிகள் என்பவர் நாடோறும் இப்பள்ளியில் ஒரு சமண அடிகளுக்கு உணவு கொடுக்கும்பொருட்டு 5 கழஞ்சு பொன் தானம், செய்ததையும் இச்சாசனம் கூறுகின்றது. இவ்வூரில் இப்போது சமணர் இலர். சுற்றுப்புற ஊர்களிலிருந்து சமணர் தைத்திங்களில் இங்கு வந்து பூசைசெய்து செல்கின்றனர்.38

சிறுவாக்கம்: இவ்வூரில் இருந்த சினகரம் இடிந்து கிடக்கிறது. இங்குள்ள சாசனத்தினால், இச் சினகரத்துக்கு ஸ்ரீகரணப் பெரும்பள்ளி என்பது பெயர் என்றும் இதற்கு நிலங்கள் தானம் கொடுக்கப்பட்டன என்றும், தெரிகின்றன39.

பெரிய காஞ்சிபுரம்: இங்குள்ள ஒரு தோட்டத்தில் சமணத் திருவுருவம் ஒன்று இருக்கிறது.40 பெரிய காஞ்சி புரத்துக்குப் போகும் பாதையில் ஒரு சமணத் திருவுருவம் இருக்கிறது41 காமாட்சியம்மன் கோவிலில் இரண்டாவது பிரகாரத்தில் சமண உருவங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது42 யதோத்காரிபெருமாள் கோயில் அருகில் ஒரு சமண வுருவம் இருக்கிறது43.

மாகறல்: இங்கு ஆதிபட்டாரகர் (இருஷபதேவர்) கோயில் ஒன்று உளது. இவ்வூர் அடிப்பட்ட அழகர் கோயிலில் இரண்டு சமண உருவங்கள் உள்ளன44. இவ்வூர் திருமாலீஸ்வரரைத் திருஞானசம்பந்தர் பாடியுள்ளார். சம்பந்தர் இங்கு வந்தபோது இங்கிருந்த சமணர் துரத்தப்பட்டனர் என்று இவ்வூர் ஐதீகம் கூறுகிறது45. இங்குள்ள ஆதிபட்டாரகர் கோயில் இப்போது கிலமாய்க் கிடக்கிறது. இவ்வூரிலிருந்த சமண தீர்த்தங்கரரின் கல்சிலை ஒன்று என் நண்பர் ஒருவர்க்குக் கிடைத்திருக்கிறது.

ஆர்ப்பாக்கம்: மாகறலுக்கு ஒரு மைலில் உள்ளது. ஆரியப்பெரும்பாக்கம் என்பது இதன் சரியான பெயர். இங்கு ஆதிநாதர் கோயில் உள்ளது46.

விஷார்: இதுவும் மாகறலுக்கு அருகில் உள்ள ஊர். இங்கும் சிதைந்துபோன சமணத் திருவுருவங்கள் காணப்படுகின்றன.

குன்னத்தூதர் (ஸ்ரீபெரும்பூதூர்த் தாலுகா): இங்குள்ள திருநாகேஸ்வரர் கோயிலில் உள்ள சாசனம் பெரிய நாட்டுப் பெரும்பள்ளி என்னும் பள்ளியைக் கூறுகிறது. இது சமணப் பள்ளியாக இருக்கக்கூடும். இந்தத் தாலுகாவில் அம்மணப்பாக்கம் என்னும் இனாம் கிராமம் ஒன்று உண்டு. இப்பெயர்கள் இங்குச் சமணர் இருந்ததைக் குறிக்கின்றன.

கீரைப்பாக்கம் (செங்கல்பட்டுத் தாலுகா): இவ்வூர் ஏரிக்கருகில் உள்ள கற்பாறையில் உள்ள சாசனம் கி.பி. 9 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. கீரைப்பாக்கத்துக்கு வடக்கே தேசவல்லப ஜினாலயம் என்னும் சமணக் கோயிலைக் குமிழிகணத்து யாபனீய சங்கத்தைச் சேர்ந்த மகாவீரகுருவின் மாணாக்கர் அமரமுதல் குரு கட்டினார் என்றும், சமண சங்கத்தாரை உண்பிக்கக் கட்டளை ஏற்படுத்தினார் என்றும் இந்தச் சாசனம் கூறுகின்றது.47

திருப்பருத்திக்குன்றம்: ஜினகாஞ்சி என்பது இதுவே. இங்கு எழுந்தருளியுள்ள அருகக் கடவுளுக்குத் திரை லோக்கியநாதர் என்றும், திருப்பருத்திக்குன்றாழ்வார் என்றும் சாசனங்களில் பெயர் கூறப்படுகின்றன. மல்லிசேன வாமனாசாரியார் மாணவர் பரவாதிமல்லர் புஷ்ப சேனவாமனார்யர் என்னும் முனிவர் இக்கோயில் கோபுரத்தைக் கட்டினார் என்று இங்குள்ள ஒரு சாசனம் கூறுகின்றது.48 வாமனாசாரியார் மல்லிசேனாசாரியாரை இன்னொரு சாசனம் குறிக்கின்றது.49 இக்கோயிலில் உள்ள குராமரத்தடியில் இவ்விரு ஆசாரியர்களின் பாதங்கள் கல்லில் அமைக்கப்பட்டுள்ளன. மல்லிசேனவாமனாசாரியார் ‘மேருமந்தர புராணத் தையும் நீலகேசி என்னும் நூலுக்குச் சமயதிவாகரம் என்னும் உரையையும் இயற்றியுள்ளார். (இந் நூல்கள் இரண்டும் பிரபல சமணப் பெரியாராகிய ராவ்சாகிப் அ சக்கரவர்த்தி நயினார் க.மு., இ.கல்.ஆ.பெ. அவர்களால் அச்சிடப்பெற்றுள்ளன.) 2000 குழிநிலம் இக்கோயிலுக்குக் கொடுக்கப்பட்ட செய்தியை இன்னொரு சாசனம் கூறுகின்றது.50 விஷார் என்னும் கிராமத்தார் விக்கிரம சோழதேவரது 13 ஆவது ஆண்டில் இக்கோயிலுக்கு நிலம் விற்ற செய்தியை இன்னொரு சாசனம் கூறுகிறது.51 கைதடுப்பூர் கிராமச் சபையார் ‘திருப்பருத்திக்குன்றத்து ரிஷிசமுதாயத்தாருக்குக் கிணறு தோண்டிக்கொள்ள நிலம் தானம் செய்த செய்தியை மற்றொரு சாசனம் கூறுகின்றது. இக்கோயிலிலுள்ள குராமரத்தைப் புகழ்ந்து கீழ்க்கண்ட பாடல் பாடப்பட்டுள்ளது.

‘‘தன்னளவிற் குன்றா துயராது தண்காஞ்சி
முன்னுளது மும்முனிவர் மூழ்கியது - மன்னவன்தன்
செங்கோல் நலங்காட்டும் தென்பருத்திக் குன்றமர்ந்த
கொங்கார் தருமக் குரா.’’

இக் கோயிலைப் பற்றி நன்கறிய விரும்புவோர் அரசாங்கத்தார் வெளியிட்டுள்ள ஆங்கில நூலிற் கண்டுகொள்க.52

சைதாப்பேட்டைத் தாலுகாவில் மாங்காடு கிராமத்துக் காமாட்சியம்மன் கோயில் கல்வெட்டில் பள்ளிச்சந்தம் நிலம் கூறப்படுகிறது.53 இத்தாலுகா திருஆலம் தர்மீஸ்வரர் கோயில் சாசனம் தேமீஸ்வரமுடைய மகாதேவரைக் குறிப்படுகிறது.54 இது நேமிநாதர் கோயிலாக இருக்கக்கூடும். செங்கல்பட்டுத் தாலுகாவில் அம்மணம்பாக்கம் என்னும் கிராமங்களும், மதுராந்தகம் தாலுகாவில் அம்மணம் பாக்கம் என்னும் கிராமமும், பொன்னேரித் தாலுகாவில் அருகத்துறை, அத்தமணஞ்சேரி என்னும் கிராமங்களும், திருவள்ளூர்த் தாலுகாவில் அமணம்பாக்கமும் உள்ளன. இவை இங்குச் சமணர் இருந்ததைத் தெரிவிக்கின்றன.

புழல்: சென்னைக்கு வடமேற்கே 9 மைலில் புழல் என்னும் கிராமம் உண்டு. இங்கு ரிஷப தேவருக்கு (ஆதிநாதபகவானுக்கு) ஒரு கோயில் உண்டு. இதனால் புழல் கிராமம் பண்டைக்காலத்தில் சமணக் கிராமமாக இருந்திருக்கவேண்டும். தமிழ்நாட்டுச் சிற்ப முறையில் அமைந்திருந்த இந்தக் கோயிலின் கோபுரம் பழுதாய்விட்டபடியால், சென்னையிலுள்ள சில வடநாட்டுச் சமணர் இக்கோயிலை வடநாட்டுச் சிற்ப முறையில் புதுப்பித்துள்ளனர். இக்கோயிலில் இப்போதும் வழிபாடுகள் நடைபெறுகின்றன.

வில்லிவாக்கம்: செங்கல்பட்டு மாவட்டம் சென்னைக்கு அருகில் உள்ள இரயில் நிலையம் இவ்வூர். இவ்வூர்த் தெருவில், வீற்றிருக்கும் கோலத்தில் ஒரு சமணத்திருவுருவம் உண்டு.56

பெருநகர்: (பென்னகர்) செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தாலுகா, மதுராந்தகத்திலிருந்து வடமேற்கே 19 மைலில் உள்ளது. இந்தக் கிராமத்துக்குக் கிழக்கே சமணக் கோயில் ஒன்று இடிந்து கிடக்கிறது. இக்கோயில் கற்களைக் கொண்டுபோய் இவ்வூர்ப் பெருமாள் கோயிலைக் கட்ட உபயோகப்படுத்திக் கொண்டதாகக் கூறப்படுகிறது.57

3. வடஆர்க்காடு மாவட்டம்

கச்சூர்: காளாஸ்தி ஜமீன், திருவள்ளூருக்கு வடக்கே 12 மைலில் உள்ளது. கச்சூர் மாதரபாக்கம், இங்கு ஒரு சமண பஸ்தி உண்டு.58

நம்பாக்கம்: காளாஸ்தி ஜமீன். திருவள்ளூர் இரயில் நிலையத்திலிருந்து வடக்கே 9 மைலில் உள்ளது. இங்கு முன்பு, ஒரு சமணக் கோயில் இருந்ததென்றும், பிற்காலத்தில் அக்கோயில் சைவக் கோயிலாக மாற்றப்பட்ட தென்றும் கூறப்படுகிறது. இச் சைவக் கோயிலுக்கு மண்டீஸ்வர சுவாமி கோயில் என்று பெயர் வழங்கப்படுகிறது.59

காவனூரு: குடியாத்தம் தாலுகா, குடியாத்தத்திலிருந்து கிழக்கே 8 மைல். இந்தக் கிராமத்தில் சமணத் திருவுருவங்கள் உள்ளன.60

குகைநல்லூர்: குடியாத்தம் தாலுகா. திருவல்லம் இரயில் நிலையத்திலிருந்து வடக்கே 3 மைல். இங்குச் சமண உருவங்கள் உள்ளன.61

கோழமூர்: குடியாத்தம் தாலுகா குடியாத்தத்திலிருந்து கிழக்கே 3 மைல் விரிஞ்சிபுரம் இரயில் நிலையத்திலிருந்து தென்கிழக்கு 3 மைல். இங்குச் சமணச்சின்னங்கள் காணப்படுகின்றன.62

சென்னம்பட்டு: குடியாத்தம் தாலுகா. ஆம்பூர் இரயில் நிலையத்திலிருந்து தென்மேற்கே 5 மைல். இக்கிராமத்தின் தெற்கே 100 கெஜ தூரத்தில் ஒரு கல்லில் செதுக்கப்பட்ட ஓர் உருவம் காணப்படுகிறது. இவ்வுருவம் முன்பு சமணக் கோயிலில் இருந்ததாகக் கூறப்படுகிறது.63

திருமணி: விரிஞ்சிபுரம் இரயில் நிலையத்திலிருந்து கிழக்கே 4 மைல். இங்குச் சமண உருவங்கள் காணப்படுகின்றன.64

பெருங்கங்கி: வாலாஜாபேட்டை தாலுகா. வாலாஜா பேட்டைக்கு வடக்கே 9 மைல். முன்பு இது சமணரின் முக்கிய கிராமம். இங்கு ஏரிக்கரையிலும், கலிங்கின் அருகிலும், கிராமத்தில் பெரிய மரத்தடியிலும் சமண உருவங்கள் உள்ளன.65

சேவூர்: ஆரணி ஜாகீர். ஆரணியிலிருந்து வடமேற்கு 2 மைல். இங்கு ஒரு பழைய சமணக் கோயில் உண்டு.66

திருமலை: (வைகாவூர் திருமலை) போளூர் தாலுகா. போளூரிலிருந்து வடகிழக்கே 6 மைல். வடமாதி மங்கலம் இரயில் நிலையத்திலிருந்து கிழக்கே 3 மைல். இங்குள்ள குன்றின்மேல் நேமிநாத தீர்த்தங்கரரின் திருவுருவம் பாறையில் பெரியதாகச் செதுக்கப்பட்டு மிகக் கம்பீரமாகக் காணப்படுகின்றது. 161/2 அடி உயரம். குந்தவை ஜினாலயம் என்று சாசனங்களில் இதற்குப் பழைய பெயர் கூறப்படுகின்றது. சோழ அரசர் குடும்பத்தில் பிறந்த குந்தவை என்னும் அம்மையாரால் இது அமைக்கப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள சமணத் திருவுருவங்களில் இவ்வுருவமே பெரியது என்று கருதப்படுகிறது. இக்குன்றின் அடிவாரத்திலும் இரண்டு சமணக் கோயில்கள் உள்ளன. இக்குன்றில், இயற்கையும் செயற்கையுமாக அமைந்துள்ள குகையில் சோழர் காலத்து ஓவியங்கள் சிதைந்து காணப்படுகின்றன. இவற்றில் சமவசரணம் போன்ற சித்திரம் ஒன்று சிதைந்து காணப்படுகிறது. பிற்காலத்து. ஓவியங்களும் இங்குக் காணப்படுகின்றன. பாறையில் சில சிற்ப உருவங்கள் அழகாகச் செதுக்கப்பட்டுள்ளன.

‘‘ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து பங்கள நாட்டு நடுவில் வகை முகைநாட்டுப் பள்ளிச் சந்தம் வைகாவூர்த் திருமலை ஸ்ரீகுந்தவை ஜினாலயம்’’ என்று கல்வெட்டுக் கூறுகின்றது; (S.I.I. Vol. No. 98) கடைக்கோடூர்த் திருமலைப் பரவாதி மல்லா மாணாக்கர் அரிஷ்டநேமி ஆசாரியார், ஒரு திருமேனி (திருவுருவம்) இக்கோயிலில் செய்து வைத்ததாக இன்னொரு கல்வெட்டெழுத்துக் கூறுகின்றது. ‘பொன்னூர் மண்ணை பொன்னாண்டை மகள் நல்லாத்தாள் என்பவர். ‘ஸ்ரீவிஹார நாயகர் பொன்னெயில் நாதர் (அருகர்) திருவுருவம் அமைத்து இக்கோயிலுக்குக் கொடுத்த செய்தி இங்குள்ள மற்றொரு செய்தி கூறுகின்றது. பல்லவவரசர் தேவியார் சிண்ணவையாரும் இளைய மணிமங்கை என்பவரும் இக்கோயிலுடைய ஆரம்ப நந்திக்கு நந்தா விளக்குக்காக முறையே அறுபது காசும் நிலமும் கொடுத்த செய்தியை இன்னொரு கல்லெழுத்துக் கூறுகின்றது. கோராஜ கேசரிவர்மன் என்னும் இராசராச தேவர் காலத்தில், குணவீரமாமுனிவர் என்னும் சமணர் நெல்வயல்களுக்கு நீர்பாயும் பொருட்டு ‘கணிசேகர மருபொற் சூரியன் கலிங்கு என்னும் பெயருடன் ஒரு கலிங்கு கட்டினார் என்பதை இங்கு ஒரு பாறையில் எழுதப்படடுள்ள செய்யுள் கூறுகின்றது.(S.I.I. Vol. I. No. 94) அச்செய்யுள் இது:

அலைபுரியும் புனற்பொன்னி ஆறுடைய சோழன்
அருண்மொழிக்கு யாண்டிருபத் தொன்றாவ தென்றும்
கலைபுரியு மதிநிபுணன் வெண்கிழான் கணிசே
கரமருபொற் சூரியன்றன் றிருநாமத்தால் வாய்
நிலைநிற்குங் கலிங்கிட்டு நிமிர்வைகை மலைக்கு
நீடூழி இருமருங்கும் நெல்விளையக் கொண்டான்
கொலைபுரியும் படையரசர் கொண்டாடும் பாதன்
குணவீர மாமுனிவன் குளிர் வைகைக் கோவே.

விடால்: வட ஆர்க்காடு மாவட்டத்தில் உள்ளது. இங்குள்ள இரண்டு குன்றுகளில் இயற்கையாயமைந்த இரண்டு குகைகள் உள்ளன. குகைகளின் முன்புறத்தில் இரண்டு மண்டபங்கள் உள்ளன. மண்டபங்களில் ஒன்றைப் பல்லவ மன்னன் என்பவனும், மற்றொன்றை இராசகேசரி வர்மன் (ஆதித்தியன்) என்பவனும் கட்டியாதாக இங்குள்ள கல் எழுத்துக்கள் கூறுகிறபடியால் பல்லவ அரசனும் சோழ மன்னனும் இவற்றைக் கட்டியதாகக் கொள்ளலாம். இக் குகைகளில் பண்டைக் காலத்தில் சமண முனிவர் தங்கியிருந்தனர். ‘குணகீர்த்திபடாரர் வழி மாணாக்கியார் கனக வீரக் குரத்தியாரையும் அவர் வழிமாணாக்கியாரையும் பாதுகாத்த செய்தி இங்குள்ள கல் எழுத்துக் கூறுகின்றது. இவ்வூருக்குச் ‘சிங்கபுர நாட்டுக் கீழ்வழி விடால் மாதேவி ஆராந்திமங்கலம் என்று கல்வெட்டெழுத்துக் கூறுகின்றது67

புனதாகை: (பூனாவதி அல்லது திருவத்தூர்) வட ஆர்க்காடு ஜில்லா செய்யாறு தாலுகாவில் ஆனக்காவூருக்கு ஒரு கல் தொலைவில் இருக்கிறது. பண்டைக் காலத்தில் சமணர் இருந்த ஊர். இங்கு ஒரு சமணக் கோவிலும் இருந்தது. ஒரு சைவர் வளர்த்த பனைமரங்கள் யாவும் ஆண்பனையாகப் போவதைக் கண்டு இவ்வூர்ச் சமணர் ஏளனம் செய்ய, அதனைப் பொறாத சைவர் அக்காலத்தில் ஆங்குவந்த ஞானசம்பந்தரிடம் கூற. அவர் பதிகம் பாடி ஆண் பனைகளைப் பெண் பனையாகச் செய்தார் என்று பெரியபுராணம் கூறுகிறது. இவ்வூரிலிருந்த சமணக் கோயில் இடிக்கப்பட்டுத் தரைப்பகுதி மட்டுங் காணப்படுகிறது. இக் கோயிற் கற்களை எடுத்துக்கொண்டுபோய் இவ்வூருக்கருகில் உள்ள திருவோத்தூர்ச் சைவக் கோயிலைக் கற்றளியாகக் கட்டினார்கள் என்று கூறப்படுகிறது68 இவ்வூர்ச் சமணக்கோயில் பாழ்படவே, இக்கோயிலைச் சேர்ந்த இரண்டு சமணத் திருவுருவங்கள் வெளியே தரையில் கிடப்பதாகவும், இவ்வுருவங்களுக்கருகில் உள்ள குட்டையில் இக்கோயில் செம்புக் கதவுகளும் ஏனைய பொருள்களும் புதைந்து கிடப்பதாகவும் கூறப்படுகின்றன.69 இவ்வூர் வயலில் கிடந்த ஒரு சமணத் திருவுருவத்தை அரசாங்கத்தார் கொண்டுபோய்ச் செய்யாறு தாலுகா ஆபீசில் வைத்திருப்பதாகத் தெரிகிறது. திருவோத்தூர்த் தல புராணத்திலும் இவ்வூரில் சமணர் இருந்த செய்தி கூறப்படுகிறது.70

திருவோத்தூர்: இது முற்காலத்தில் சமணர் செல்வாக்குப் பெற்றிருந்த நகரம். திருஞானசம்பந்தர் இவ்வூருக்கு வந்தபோது இங்குச் சைவசமணர் கலகம் ஏற்பட்டு, சமணர் துரத்தப்பட்ட செய்தியை இவ்வூர்த் தலபுராணமும் பெரியபுராணமும் கூறுகின்றன. இவ்வூர்ச் சிவன் கோயிலில் சமணர் துரத்தப்பட்ட செய்தி சிற்பமாக அமைக்கப்பட்டுள்ளது என்பர்.71 இவ்வூருக்கு அருகில் உள்ள புனாவதி என்னும் கிராமத்தில் முன்பு சமணக்கோயில் இருந்ததென்றும் அக்கோயில்களைக் கொண்டுவந்து திருவோத்தூர்ச் சிவன்கோயில் கட்டப்பட்டதென்றும் கூறுகின்றனர். புனாவதி கிராமத்தின் வெட்டவெளியில் இரண்டு சமண உருவங்கள் காணப்படுகின்றன. இதற் கருகில் உள்ள குட்டையில் சமணக் கோயிலின் செப்புக் கதவுகள் முதலியன புதைந்துகிடக்கின்றன என்று கூறப்படுகிறது.72

திருப்பனம்பூர்: காஞ்சிபுரத்துக்குப் பத்து மைலில் உள்ளது. காஞ்சிபுரத்தில் இமசீதளமகாராசன் அவையில் பௌத்தர்களுடன் சமயவாதம் செய்து வெற்றிபெற்ற அகளங்க ஆசாரியார் என்னும் சமணசமயகுரு இக்கிராமத்தில் தங்கியிருந்தார். இங்குள்ள சமணக் கோயிலுக்கு முனிகிரி ஆலயம் என்றும் பெயர். இது இம் முனிவரை ஞாபகப்படுத்தும் பொருட்டு ஏற்பட்ட பெயர் என்று தோன்றுகிறது. இவ்வாலயத்தின் மதிற்சுவரில் இவ்வாசிரியரின் நினைவுக்குறியாக இவருடைய பாதங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இவரது நினைவுக்குறியாக இவர் திருவடிகளைக் கொண்ட ஒரு மண்டபமும் இங்கு உண்டு. இத்திருவடிகளுக்கு மாசிமாதத்தில் பூசை நடந்துவருகிறது. இக்கிராமத்தில் பழைமையும் புதுமையுமான இரண்டு சமணக்கோயில்கள் உண்டு. இங்குச் சமணர் இப்போதும் உள்ளனர். இதற்குக் கரந்தை என்றும் பெயர் வழங்கப் படுகிறது. இக்கரந்தைக் கோயிலில் இடிந்து சிதைந்து போன பழைய கோயில் ஒன்றிருக்கிறது இக்கோயில் கட்டிடம் சமவசரணம் போன்று அமைந்துள்ளது. இக்கோயிலில் சாசனங்களும் காணப்படுகின்றன. கோபுர வாயிலில் இப்பாடல் எழுதப்பட்டுள்ளது.

‘‘காவுவயல் சூழ்தடமும் கனத்தமணிக் கோபுரமும்
பாவையர்கள் ஆடல்களும் பரமமுனி வாசமுடன்
மேவுபுகழ்த் திருப்பறம்பை விண்ணவர்கள் போற்றிசெய்யத்
தேவரிறை வன்கமலச் சேவடியைத் தொழுவோமே.’’

பூண்டி: வட ஆர்க்காடு மாவட்டம் வாலாஜாப் பேட்டைத் தாலுகாவைச் சார்ந்ததும் ஆர்க்காட்டிலிருந்து ஆரணி செல்லும் வழியில் உள்ளதுமான இவ்வூரில் பொன்னிவன நாதர் கோயில் என்னும் ஒரு சினகரம் உண்டு. இக் கோயிலில் உள்ள ஒரு கல்வெட்டெழுத்து அழகிய ஆசிரியப்பாவினால் அமைந்தது. இக்கோயில் வரலாற்றினைக் கூறுகின்றது. அதில், ‘செயங்கொண்ட சோழ மண்டலந்தன்னில், பயன்படுசோலைப் பல்குன்றக் கோட்டத்து வேண்டிய சுரக்கும் மேயூர் நாட்டுப், பூண்டி என்பது காண்டகு திருநகர் என்று இவ்வூர் கூறப்படுகின்றது. இங்கிருந்த பொன்னிநாதர் என்னும் சமணப் பெரியார் வீரவீரன் என்னும் அரசனுக்குச் சிறப்புச் செய்ய அவன் மகிழ்ந்து என்ன வேண்டுமென்று கேட்க அவர் வேண்டுகோளின்படி இக்கோயிலை அமைத்து, வீரவீரசினாலயம் என்னும் பெயரிட்டு, கிராமங்களையும் இறையிலியாகக் கொடுத்தான் என்று மேற்படி ஆசிரியப்பா கூறுகின்றது.

இக்கோயிலிலிருந்த செம்பு உருவச்சிலை, ஆரணிக் கோயிலுக்குக் கொண்டுபோய் வைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த வட்டாரத்தில் உள்ள சமணக் கோயில்களில் இக் கோயில் மிகப் பழமையானது.73

வள்ளிமலை: வடஆர்க்காடு மாவட்டம் குடியாத்தம் தாலுகாவில் உள்ள மேல்பாடிக்கு அருகில் உள்ளது வள்ளிமலை என்னும் கிராமம் இக் கிராமத்தில் உள்ள குன்று கற்பாறைகளால் அமைந்துள்ளது. இக் குன்றின் கிழக்குப் பக்கத்தில் இயற்கையாயமைந்த ஒரு குகை உண்டு. இதன் பக்கத்தில் கற்பாறையில் இரண்டு. தொகுதி சமண உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தச் சமண உருவங்களின் கீழ்க் கன்னட மொழியில் சில எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இக்கல் எழுத்துக்களினால், இங்குள்ள குகையை உண்டாக்கியவன் இராசமல்லன் என்னும் கங்ககுல அரசன் என்பது தெரியவருகின்றது. மேல் கூறப்பட்ட சமண உருவங்களின் கீழ்ப் பொறிக்கப்பட்டுள்ள கல் எழுத்துக்களில் ஒன்று, ‘அஜ்ஜ நந்தி பட்டாரர் இந்தப் பிரதிமையைச் செய்தார் என்றும், இன்னோர் எழுத்து, ‘ஸ்ரீபாணராயரின் குருவாகிய பவணந்தி பட்டாரரின் மாணவராகிய தேவசேன பட்டாரரின் திருவுருவம் என்றும், மற்றோர் எழுத்து ‘பால சந்திர பட்டாரரது சீடராகிய அஜ்ஜநந்தி பட்டாரர் செய்த பிரதிமை; கோவர்த்தன பட்டாரர் என்றாலும் அவரே என்றும் கூறுகின்றன.

இங்குள்ள சமண உருவங்களைக்கொண்டும் கல்லெழுத்தினால் அறியப்படும் பெயர்களைக் கொண்டும் இது சமணர்களுக்குரியது என்பது வெள்ளிடைமலைபோல் விளங்குகின்றது. ஆகவே, பண்டைக் காலத்தில் இந்த மலையும் இந்தக் கிராமமும் சமணர்களுக்கு உரியதாய் அவர்களின் செல்வாக்குப் பெற்றிருந்தது என்பது துணியப்படும்.74

பஞ்சபாண்டவ மலை: ஆர்க்காடு நகரத்துக்குத் தென் மேற்கில் நான்கு மைல் தூரத்தில் பஞ்சபாண்டவ மலை என்னும் பெயருள்ள கற்பாறையான ஒரு குன்று உளது. இக்குன்றுக்குப் பஞ்சபாண்டவ மலை என்று பெயர் கூறப்பட்ட போதிலும் உண்மையில் பஞ்சபாண்டவருக்கும் இந்த மலைக்கும் யாதொரு தொடர்பும் இலது. இதற்கு வழங்கப்படும் இன்னொரு பெயர் திருப்பாமலை என்பது. இப் பெயர் திருப்பான்மலை என்பதின் திரிபு. இந்த மலையின் கிழக்குப் புறத்தில் அமைக்கப்பட்டுள்ள செயற்கைக் குகையில் ஏழு அறைகள் பன்னிரண்டு தூண்களுடன் காணப்படுகின்றன. இந்தக் குகைக்கு மேலே ஒரு கற்பாறையில் சமண உருவம் ஒன்று தியானத்தில் அமர்ந்திருப்பது போன்று செதுக்கப்பட்டுள்ளது. தென்புறத்தில் இயற்கையாக அமைந்த ஒரு குகையும் அதில் நீர் உள்ள சிறு சுனையும் காணப்படுகின்றன. இக் குகையினுள் கற்பாறையில் ஒரு பெண் உருவம் இடது கையில் சாமரை பிடித்துப் பீடத்தில் அமர்ந்திருப்பது போன்றும் இதன் வலது பக்கத்தில் ஓர் ஆண் உருவம் நின்றிருப்பது போன்றும் செதுக்கப்பட்டுள்ளன. பெண் உருவம் அமர்ந்திருக்கும் பீடத்தின் முன் புறத்தில் குதிரைமேல் ஓர் ஆள் இருப்பது போன்றும், ஓர் ஆண் உருவமும் ஒரு பெண் உருவமும் நின்றிருப்பது போன்றும் காணப்படுகின்றன. இக் குகையின் வாயிற் புறத்தின் மேல் உள்ள பாறையில் கீழ்க்கண்ட கல் எழுத்துப் பொறிக்கப்பட்டுள்ளது.

‘‘நந்திப் போத்தரசற்கு ஐம்பதாவது: நாகநந்தி குரவர் இருக்க பொன்னியாக்கியார் படிமம் கொத்துவித்தான் புகழாளை மங்கலத்து மருத்துவன் மகன் நாரணன்.’’

எனவே, நந்திப்போத்தரசன் என்னும் பல்லவ மன்னன் காலத்தில் நாகநந்தி என்னும் குருவுக்காக நாரணன் என்பவன் ‘பொன் இயக்கி என்னும் பெயருள்ள உருவத்தை அமைத்தான் என்பது இந்தக் கல் எழுத்தின் கருத்து. இக் குகையில் காணப்படும் சாமரை பிடித்த பெண் உருவம் இதில் குறிப்பிட்ட ‘பொன் இயக்கி யின உருவம் என்றும், அதன் பக்கத்தில் நிற்கும் ஆண் உருவம் நாகநந்தி என்பவரின் உருவம் என்றும் கருதப்படுகின்றன.

இந்த மலையில் பொறிக்கப்பட்ட இன்னொரு கல் எழுத்தும் உண்டு. அது, கி.பி. 984இல் அரசாட்சிக்கு வந்த இராசராச சோழனுக்குக் கீழ்ப்பட்ட லாடராசன் வீர சோழன் என்பவனால் பொறிக்கப்பட்டது. அதில், இந்த மலை, ‘படவூர்க் கோட்டத்துப் பெருந்திமிரி நாட்டுத் திருப்பான் மலை என்று கூறப்பட்டுள்ளது. இந்த லாடராசன் வீரசோழன் தன் மனைவியுடன் இந்த மலையில் இருந்த கோயிலுக்கு வந்து தெய்வத்தை வணங்கியபோது அவன் மனைவி இக் கோயிலுக்குத் தானம் கொடுக்கவேண்டுமென்று கேட்டுக்கொள்ள அதற்கு உடன்பட்டு அவ்வரசன் ‘கூறகன்பாடி கற்பூர விலை யாயும், ‘அந்நியாயவால தண்ட இறையையும் இக் கோயிலுக்குப் ‘‘பள்ளிச் சந்தமாகக்’’ கொடுத்தான். இக் கல் எழுத்தின் கடைப்பகுதி, ‘இப்பள்ளிச் சந்தத்தைக் கொல்வான் கங்கையிடைக் குமரியிடைச் செய்தார் செய்த பாவங் கொள்வார். இது வல்லதிப் பள்ளிச் சந்தத்தைக் கெடுப்பார்.................இத் தர்மத்தை ரக்ஷ¤ப்பான் பாத துளி என் தலை மேலன. அற மறவற்க. அறமல்லது துணையில்லை என்று முடிகின்றது. இந்தச் சாசனத்தில் கூறப்பட்ட கூறகன்பாடி கிராமம் என்பது, பஞ்ச பாண்டவ மலைக்குக் கிழக்கே இரண்டு மைல் தூரத்தில் உள்ள ‘கூறாம்பாடி என்னும் கிராமம் என்று கருதப்படுகின்றது.

இந்த மலையில் காணப்படும் சமணவுருவமும் இயக்கி உருவமும் மலைக் குகையில் உள்ள அறைகளும் சாசனத்தில் கூறப்படும் நாகநந்தி குரவர், பள்ளிச் சந்தம் என்னும் பெயர்களும் இந்தமலை ஒரு காலத்தில் சமணர்களுக்குரியதாயிருந்ததென்பதை அணுவளவும் ஐயமின்றித் தெரிவிக்கின்றன. பண்டைக் காலத்தில் இந்த மலையில் சமண முனிவர் தவம் புரிந்திருந்தனர் என்பதற்கு இங்குள்ள குகை சான்று பகர்கின்றது.75

பொன்னூர்: இது வட ஆர்க்காடு மாவட்டம் வந்தவாசி தாலுகாவில் உள்ள ஊர். இதற்கு அழகிய சோழ நல்லூர் என்னும் பெயரும் வழங்கியதாகத் தெரிகின்றது. இப்போதுள்ள சமணர்களின் முக்கிய ஊர்களில் ஒன்று. இவ்வூரில் ஆதிநாதர் கோயில் இருக்கின்றது. இக் கோயிலில் உள்ள ஜ்வாலாமாலினி அம்மன் (இயக்கி) பேர்போனது.- இவ்வூருக்கு 2 மைல் தூரத்தில் உள்ள பொன்னூர் மலை என்னும் ஒரு குன்றில் ஏலாசாரியார் என்பவரின் திருப்பாதம் இருக்கின்றது. இந்த ஏலாசாரியார் என்பவர் திருக்குறள் இயற்றிய திருவள்ளுவர் என்று சமணர்கள் கூறுகிறார்கள். இந்த மலையில் பாறையில் அமைக்கப்பட்டுள்ள ஏலாசாரியரின் திருப்பாதத்திற்கு ஆண்டுதோறும் சமணர்கள் பூசை முதலிய சிறப்புச் செய்து வருகிறார்கள். பொன்னூரைச் சுவர்ணபுரி என்றும் கூறுகிறார்கள்.

தேசூர்: வந்தவாசி தாலுகா. வந்தவாசிக்குத் தென் மேற்கு 10 மைல். இங்குச் சமணர் உள்ளனர். (Top List. P. 170., N.A. Dt. Mannual P. 215).

தௌ¢ளாறு: வந்தவாசியிலிருந்து தென்மேற்கு 8 மைலில் உள்ளது. இங்கு ஒரு சமணக் கோயில் உண்டு. (Top. List. P. 170).

திரக்கோல்: வந்தவாசியிலிருந்து தென்மேற்கு 81/2 மைல். இங்குள்ள குன்றின்மேலே மூன்று சமணக்கோயில்களும் மூன்று குகைகளும் உள்ளன. (Top. List. P. 170).

வெண்குன்றம்: வந்தவாசிக்கு வடக்கே மூன்று மைல். இங்குச் சமணக் கோயில் உண்டு. (Top. List P. 171)

4.தென்ஆர்க்காடு மாவட்டம்

கீழ்க்குப்பம்: (கீழருங்குணம்) கூடலூர் நெல்லிக் குப்பம் சாலைகள் சேரும் இடத்தில் உள்ள இவ்வூரில், கிராமதேவதை அம்மன் கோயிலின் மேற்புறம் ஒரு சமணர் திருவுருவம் காணப்படுகின்றது. செங்கற் சூளைக்காக மண்ணைத் தோண்டியபோது இது கிடைத்தது. வீற்றிருக்கும் கோலத்துடன் உள்ள இந்த உருவத்தின் தலைக்கு மேல் குடையும், இரு பக்கங்களிலும் சாமரை வீசுவது போன்ற இரண்டு உருவங்களும் உள்ளன.76

திருவதிகை: தென் ஆர்க்காடு மாவட்டம் கடலூரில் இருந்து பண்ருட்டிக்குப் போகும் சாலையில் 14 மைலில் உள்ள ஊர். ‘திருவதி என்றும் ‘திருவீதி என்றும் வழங்குவர். திருவதிகை வீரட்டானம் என்னும் சைவக் கோயில் இங்கு உள்ளது. சமணராக இருந்த தரும சேனர், சைவராக மாறி இவ்வூரில் சூலைநோய் தீரப்பெற்றுத் திருநாவுக்கரசர் என்னும் பெயர் பெற்றார். பாடலிபுரத்தில் (திருப்பாதிரிப்புலியூர்) இருந்த சமணப் பள்ளியை இடித்து அக் கற்களைக் கொண்டுவந்து ‘குணபரன் என்னும் அரசன் (மகேந்திரவர்மன்) இவ்வூரில் ‘குணதர வீச்சுரம் என்னும் கோயிலைக் கட்டினான் என்று பெரிய புராணம் கூறுகின்றது இதனால், இவ்வூரில் சமணரும் சமண மடமும் சமணக் கோயிலும் பண்டைக்காலத்தில் இருந்த செய்தி தெரிகிறது.

இவ்வூர் வயல்களில் இரண்டு சமணத் திருவுருவங்கள் கண்டெடுக்கப்பட்டன. ஒன்று 41/2 அடி உயரமுடையதாய் அமர்ந்திருக்கும் திருக்கோலத்துடன் உள்ளது. இஃது இவ்வூர்ச்சிவன் கோயிலில் வைக்கப்பட்டுள்ளது. மற்றொன்று, குமரப்பநாயகன் பேட்டையில் உள்ள சத்திரத்தில் வைக்கப்பட்டுள்ளது. இது 31/2 அடி உயரம் உள்ளது.77 ஜடாவர்மன் சுந்தரபாண்டியனுடைய 13 + 13 -ஆவது ஆண்டில், நால்முக நாயனார் முனையதீச்சுரம் உடைய நாயனார் கோயில் நிலம், அர்ஹதேவர் (அருகத்தேவர்= சமணக் கடவுள்) கோயில் நிலம் இரண்டிற்கும் எல்லையில் சச்சரவு ஏற்பட்ட செய்தி இங்குக் கிடைத்த சாசனத்தினால் தெரிய வருகிறது.78 இதனால், இங்குச் சமணக் கோயில்களும் அக்கோவில்களுக்குரிய நிலங்களும் இருந்த செய்தி அறியப்படுகிறது. இங்குக் கண்டெடுக்கப்பட்ட (மேலே கூறப்பட்ட) இரண்டு சமணத் திருவுருவங்களும் இதன் உண்மையை உறுதிப்படுத்துகின்றன. சாசனத்தில் கூறப்படுகிற ‘நால்முகநாயனார் கோயில் என்பதும் சமணக்கோயிலாக இருக்கக்கூடும். ஏனென்றால், அருகக் கடவுளுக்கு ‘நான்முகன் (நான்கு அதிசய முகங்களையுடையவர்) என்று பெயர் கூறப்படுகிறது.

திருப்பாதிரிப்புலியூர்: (பாடலிபுரம்) திருப்பாப்புலியூர் என வழங்கப்படும். தென் ஆர்க்காடு மாவட்டத்தில் உள்ளது. கடலூர் என்பதும் இதுவே. இது பண்டைக் காலத்தில் பாடலிபுரம் என்று பெயர் பெற்றிருந்தது. இங்கு முற்காலத்தில் சமண மடமும் சமணக் கோயிலும் இருந்தன. இந்தப் பாடலிபுரத்துச் சமண மடம் மிகப் பழமை வாய்ந்தது. சர்வநந்தி என்னும் சமண முனிவர் இந்த மடத்தில் தங்கியிருந்தபோது லோகவிபாகம் என்னும் நூலை அர்த்தமாகதி யிலிருந்து வடமொழியில் மொழி பெயர்த்தார். இது, சக ஆண்டு 380 இல் (கி.பி 458 இல்) காஞ்சியில் அரசாண்ட சிம்ம வர்மன் என்னும் பல்லவ மன்னனுடைய 22 ஆவது ஆண்டில் எழுதப்பட்டது என்று அந்நூல் கூறுகிறது (Mysore Archaeological Report 1909-10. Page 45, 46) இப் பாடலிபுரச் சமண மடத்தில் கல்விகற்றுப் பின்னர் இம் மடத்தின் தலைவராக விளங்கியவர் தருமசேனர் என்பவர். இவர், பிறகு சைவ மதத்தில் சேர்ந்து அப்பர் எனப் பெயர் பெற்றார்.79 இங்கிருந்த சமண மடத்தை இடித்து அக்கற்களைக் கொண்டுபோய், திருவதிகையில் ‘குணதரவீச்சுரம் என்னும் கோயிலைக் ‘குணபரன் என்னும் அரசன் கட்டினான் என்பர்.80 இங்குச் சமணர் கோயில் இருந்த தென்பதை உறுதிப்படுத்த, மஞ்சக்குப்பம் சாலையில் யாத்ரிகர் பங்களாவுக்கு அருகில் இன்றும் ஒரு சமணத் திருவுருவம் காணப்படுகிறது.81 இது 4 அடி உயரம் உள்ளது.

திண்டிவனம்: திண்டிவனம் தாலுகா. இங்குள்ள தோட்டம் ஒன்றில் முக்குடையுடன் வீற்றிருக்கும் சமணவுருவம் காணப்படுகிறது. இதன் இருபுறத்திலும் இயக்கிகள் சாமரை வீசுவதுபோல் அமைந்துள்ளது. இது செஞ்சியில் இருந்து இங்குக் கொண்டுவரப்பட்டது.82

சிறுகடம்பூர்: திண்டிவனம் தாலுகாவில் உள்ளது. செஞ்சிக்கு வடக்கே 1 மைல். இங்குள்ள ஏரிக்கரையின் மேல் உள்ள பாறையில் 41/2 அடி உயரம் உள்ள சமணத் திருவுருவம் இருக்கிறது. இரண்டாகப் பிளவுபட்டுள்ளது. இதற்கருகில் மற்றொரு கற்பாறையின்மேல், நின்ற கோலத்தோடு இன்னொரு தீர்த்தங்கரரின் திரு உருவமும், வரிசையாக 24 தீர்த்தங்கரரின் திருவுருவங்களும் அமைக்கப் பட்டுள்ளன.83 இவை, நல்ல நிலையில் இப்போதும் புத்தம் புதிதாகக் காணப்படுகின்றன.84 இப்பாறைக்குத் திருநாதர் குன்று என்று பெயர் கூறப்படுகிறது. இங்கு, சந்திரநந்தி ஆசிரியரும், இளையபடாரர் என்பவரும் முறையே 57 நாளும் 30 நாளும் உண்ணா நோன்பிருந்தனர் என்று இங்குள்ள கல்வெட்டுச் சாசனம் கூறுகின்றது.85 இங்குக் காணப்படும் வட்டெழுத்துச் சாசனம் கி.பி 3 அல்லது 4 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதென்றும், தமிழ்நாட்டில் காணப்படும் வட்டெழுத்துச் சாசனங்களில் இதுவே மிகப் பழமையானது என்றும் கூறுவர்.

மேல்சித்தாமூர்: திண்டிவனம் தாலுகா. இங்குள்ள மல்லிநாதர் கோயிலில் மல்லிநாதர், பாகுபலி, பார்சுவநாதர், மகாவீரர் இவர்களின் திருவுருவங்கள் உள்ளன. இவை வெகு அழகாக அமைந்துள்ளன. இங்கு ஒரு சமண மடம் உண்டு. இதுவே தமிழ்நாட்டுச் சமணமடம். இம்மடத்தில் ஏட்டுச் சுவடிகளும் உண்டு. சென்னை மயிலாப்பூரில் இருந்த நேமிநாதர் கோவில் கடலில் முழுகிய போது அங்கிருந்த நேமிநாதர் திருவுருவத்தை இங்குள்ள கோயிலில் கொண்டுவந்து வைத்திருக்கிறார்கள்.86 இங்குள்ள கோயில்களில் சில சாசனங்கள் காணப்படுகின்றன.86(a)

தொண்டூர்: திண்டிவனம் தாலுகா. திண்டிவனத்திற்கு மேற்கே 6 மைலில் உள்ளது. செஞ்சியில் இருந்து 8 மைலில் உள்ளது. இவ்வூருக்குத் தெற்கே ஒரு மைலில் ஒரு குன்று, ‘பஞ்சபாண்டவ மலை என்னும் பெயருடன் உள்ளது. இதில், இரண்டு குகைகளும், சில கற்படுக்கைகளும் உள்ளன. குகைக்குள் 2 அடி உயரமுள்ள தீர்த்தங்கரர் திருவுருவம் ஒன்று உள்ளது.86(b)

இவ்வூரில், வழுவாமொழிப் பெரும்பள்ளி என்னும் சமணக் கோயில் இருந்ததாகச் சாசனத்தினால் தெரிகிறது. இந்த வழுவாமொழிப் பெரும்பள்ளி விளாகத்திற்கு, இவ்வூரைச் சேர்ந்த குணனேரிமங்கலம் என்னும் வழுவாமொழி ஆராந்தமங்கலத்தையும் தோட்டங்களையும் கிணறுகளையும் விண்ணவகோவரையன் வைரிமலையன் என்னும் சிற்றரசன் பள்ளிச்சந்தமாகத் தானம் செய்தான் என்றும், இந்தத் தானத்தைப் பாம்பூர் வச்சிர சிங்க இளம்பெருமானடிகளும் அவர்வழி மாணவரும் மேற்பார்வை பார்த்து வரவேண்டும் என்றும் இச்சாசனம் கூறுகின்றது.86(c)

விழுப்புரம்: விழுப்புரம் தாலுகாவின் தலைநகரம். இங்கு யாத்திரிகர் பங்களாவுக்கு அருகில் உள்ள ‘பட்டா நிலம் என்னும் இடத்தில் முன்பு சமணக் கோயில் இருந்தது. இப்போது இக்கோயில் இல்லை. இங்கு இருந்து சிதைந்துபோன சமணத் திருவுருவங்கள் (Tate Park) என்னும் இடத்தில் வைக்கப்பட்டுள்ளனவாம்.87

அரியாங்குப்பம்: புதுச்சேரிக்கு அருகில் உள்ள ஊர். இங்கு 4 அடி உயரம் உள்ள சமணத் திருவுருவம் உள்ளது. இதனை ஓர் ஆண்டி, ‘பிரமா என்னும் பெயருடன் பூசைசெய்து வருகிறார்.88 அரியாங்குப்பம் என்பது அருகன் குப்பம் என்பதன் மரூஉ போலும்.

பாவண்டூர்: திருக்கோயிலூருக்குத் தென்கிழக்கில் 9 மைலில் பண்ருட்டி சாலையில் உள்ளது. இவ்வூரில், பண்டைக்காலத்தில் சமணரும் சமணக் கோயிலும் இருந்திருக்கவேண்டும். இவ்வூரில் இருந்த ரிஷபதேவரின் திருவுருவம் திருநறுங்கொண்டை சமணக் கோயிலில் இருக்கிறது.

திருநறுங்கொண்டை: (திருநறுங்குன்றம் - திருநறுங்குணம்.) திருக்கோயிலூர் தாலுகா. திருக்கோயிலூருக்கு, 12 மைலில் உள்ளது. இவ்வூருக்கு வடக்கே சுமார் 60 அடி உயரம் உள்ள பாறைக்குன்றில் கோயில் இருக்கிறது. மலைக்குச் செல்லப் படிகள் உண்டு. இக்கோயிலில் பார்சுவநாதர் திருவுருவம் இருக்கிறது. பார்சுவநாதர் கோயிலை அப்பாண்டைநாதர் கோயில் என்றும் கூறுவர். நின்ற திருமேனி. இங்குச் சந்திரநாதர் கோயிலும் உள்ளது. இங்குப் பல சாசனங்கள் காணப்படுகின்றன.89 குலோத்துங்கச் சோழரது 9 ஆவது ஆண்டில், வீரசேகர் காடவராயர் என்பவர் இங்கிருந்த நாற்பத்தெண்ணாயிரம் பெரும்பள்ளிக்கு வரிப்பணம் தானம் செய்திருக்கிறார். இராசராச தேவரது 13 ஆவது ஆண்டில் இங்கிருந்த மேலைப்பள்ளிக்குப் பணம் தானம் செய்யப்பட்ட செய்தியை இன்னொரு சாசனம் கூறுகிறது. இந்தத் தானத்தை ஆதிபட்டாரகர் புஷ்பசேனர் என்பவரிடம் ஒப்புவிக்கப்பட்டது. அப்பாண்டார்க்கு வைகாசித்திருநாள் சிறப்பு நடைபெற்றதையும், தைமாதத்தில் ஒரு திருவிழா நடைபெறும்படி நிலம் தானம் செய்யப்பட்டதையும், திரிபுவன சக்கரவர்த்தி கோனேரின்மை கொண்டான் காலத்துச் சாசனம் ஒன்று கூறுகின்றது. ‘திருநறுங்கொண்டை பெரியபாழி ஆழ்வார்க்கு நிலம் தானம் செய்யப்பட்ட செய்தி இன்னொரு சாசனம் கூறுகின்றது. இங்கிருந்த கீழைப்பள்ளிக்கு ஸ்ரீதரன் என்பவர் பொன் தானம் செய்ததை இன்னொரு சாசனம் கூறுகின்றது. இக்கோயில் ஸ்தலபுராணம் இவ்வூர்ச் சமணரிடம் உண்டு.90

ஒலக்கூர்: திண்டிவனம் தாலுகா, பிராமண வீதியில் உள்ள சிதைந்து தேய்ந்துபோன கல்சாசனம், ‘பிருதிவி விடங்க குரத்தி என்னும் சமண ஆரியாங்கனையைக் குறிப்பிடுகிறது.91

திருக்கோயிலூர்: திருக்கோவலூர் என்பது இதன் சரியான பெயர். இங்குள்ள பெருமாள் கோயிலிலுள்ள கொடிமரம் சமணருடைய மானஸ்தாம்பம் போன்றிருக்கிறது. ஆகையால் இது ஆதியில் சமணர் கோயிலாக இருந்திருக்கக்கூடும் என்று ஐயுறுகின்றனர்.92 இங்கு அரசாண்ட அரசர்களில் பலர் சமணராக இருந்தனர் என்பதும் கருதத்தக்கது.

தாதாபுரம்: இதன் பழைய பெயர் இராசராசபுரம் (திண்டிவனம் தாலுகா.) இவ்வூர்ப் பெருமாள் கோவிலின் வடக்கு, மேற்குச் சுவர்களில் உள்ள சாசனங்களினால் இங்குச் சமணக் கோயில்கள் இருந்தன என்பது அறியப்படுகிறது. இச்சாசனம் இராசகேசரிவர்

மரான இராசராச தேவரது 21 ஆவது ஆண்டில் எழுதப்பட்டது. ‘குந்தவை ஜினாலயம் என்னும் சமணக் கோயிலைப் பராந்தக குந்தவைப் பிராட்டியார் என்னும் சோழ அரசியார் (இவர் பொன் மாளிகைத் துஞ்சிய தேவருடைய மகளார்.) கட்டி, அக்கோயிலுக்குப் பொன், வெள்ளிப் பாத்திரங்களையும், முத்துக்களையும் தானம் செய்ததை இச்சாசனம் கூறுகின்றது.93 வட ஆர்க்காடு மாவட்டம் போளூர் தாலுகா திருமலையில் உள்ள சமணக் கோயிலையும், திருச்சி திருமலைவாடியில் உள்ள சமணக் கோயிலையும் இந்த அம்மையார் கட்டினார்.(S.I. Vol. No. 67,68.)

வேலூர்: (திண்டிவனம் தாலுகா). இங்கிருந்த சமணக் கோயிலை ஜயசேனர் என்பவர் பழுதுதீர்த்துப் புதுப்பித்தார் என்று ஒரு சாசனம் கூறுகிறது.94

வீரசேகரப் பெரும்பள்ளி: இது, வந்தவாசி தாலுகாவில் உள்ள சளுக்கி என்னும் ஊரில் இருந்த குகைக் கோயில் என்பது சாசனங்களால் அறியப்படுகிறது.95

பெருமண்டூர்: (திண்டிவனம் தாலுகா.) இங்குள்ள சந்திரநாதர் கோயில் மண்டபத்தூணில் உள்ள சாசனம், ‘பெருமாண்டை நாட்டுப் பெருமாண்டை இரவிகுல சுந்தரப் பெரும்பள்ளியைக் கூறுகிறது.96 இன்னொரு சாசனம் பெரும்பள்ளியைக் குறிக்கிறது.97

திட்டைக்குடி: (விருத்தாசலம் தாலுகா.) இங்குள்ள வைத்தியநாத சுவாமி கோயில் சாசனங்கள், ‘மகதை மண்டலத்துத் தென்கரைத் தொழுவூர் பற்றில் வாகையூர் பள்ளிச்சந்தத்தையும்,98 இடைச் சிறுவாய் அமணன்பட்டு99 என்னும் ஊரையும் குறிப்பிடுகின்றன. இதனால், பண்டைக் காலத்தில் இங்குச் சமணர் இருந்த செய்தி அறியப்படும்.

கீழுர்: (திருக்கோயிலூர் தாலுகா.) இங்குள்ள சாசனம்,

...................கண்ணெனக்
காவியர் கயல்பயி லாவியூ ரதனில்
திக்குடை யிவரும் முக்குடையவர்தம்
அறப்புற மான திறப்பட நீக்கி

என்று கூறுகின்றது. எனவே, இங்கு முக்குடையவர்க்கு (அருகக் கடவுளுக்கு) உரிய நிலங்கள் இருந்த செய்தி அறியப்படுகிறது.100

பள்ளிச்சந்தல்: (திருக்கோயிலூர் தாலுகா.) இங்குள்ள ஒரு சிறு குன்றின்மேல் சிதைந்துபோன சென்னியம்மன் கோயில் என்னும் சமணக் கோயில் இருக்கிறது. பாகுபலியின் திருமேனியும் சிதைந்து காணப்படுகிறது. இங்குள்ள சாசனம் சகம் 1452 (கி.பி. 1530) இல் விஜய நகர அரசர் அச்சுததேவ மகாராயர் காலத்தில் எழுதப்பட்டது. இதில், ‘ஜோடிவரி,’ ‘சூலவரி என்னும் வரிப்பணத்தை, ஜம்பையிலிருந்த நாயனார் விஜயநாயகர் கோயிலுக்குத் தானம் செய்யப்பட்ட செய்தி கூறப்படுகிறது.101 இதில் கூறப்படுகிற ஜம்பை என்னும் ஊர் பள்ளிச்சந்தலுக்கு ஒருமைலில் உள்ளது. ஜம்பையில் உள்ள சாசனம் ஒன்று, பரகேசரி வர்மன் (பராந்தகன் 1) உடைய 21 ஆவது ஆண்டில் எழுதப்பட்டது. ‘வாலையூர் நாட்டுப் பெரும்பள்ளி என்னும் சமணக் கோயிலுக்கு உரிய ஏரியைப் பராமரிக்கும்பொருட்டு நிலம் (ஏரிப்பட்டி) தானம் செய்ததை இது கூறுகிறது.102 இதற்கு அப்பால் ஒரு மைலில் உள்ள ஒரு வயலில் இராசராச சோழன் III உடைய சாசனம் ஒன்று காணப்படுகிறது. இதில், ‘கண்டராதித்தப் பெரும்பள்ளி என்னும் சமணக் கோயில் குறிப்பிடப்படுகிறது.103 அன்றியும், கண்டராதித்தப் பெரும்பள்ளியின் தலைவரான நேமிநாதர் என்பவரின் உத்தரவை (கட்டளையை) இச்சாசனம் கூறுகின்றது. அக்கட்டளை என்னவென்றால், ஜம்பை என்று கூறப்படும் வீரராசேந்திரபுரத்தின் ஒரு பகுதி ‘சோழதுங்கன் ஆளவந்தான் அஞ்சினான் புகலிடம் என்னும் பெயர் உடையது என்பதும், இவ்விடத்திற்கு வந்து அடைக்கலம் புகுந்தவரைக் காத்து ஆதரிக்கவேண்டும் என்பதும் ஆகும்.

(குறிப்பு: ‘அஞ்சினான் புகலிடம் என்பது அடைக்கல தானத்தைக் குறிக்கும். சமணர் அகாரதானம், ஒளடததானம், சாஸ்திரதானம், அடைக்கலதானம், என்னும் இந்நான்கு தானங்களைச் சிறப்பாகக் கொள்வர். இந்தத் தானங்களைப் பற்றிச் சமண நூல்களில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. அடைக்கல தானத்தைத்தான் அஞ்சினான் புகலிடம் என்று இந்தச் சாசனம் கூறுகின்றது.)

சோழவாண்டிபுரம்: (திருக்கோயிலூர் தாலுகா.) இங்கே கீரனூர் என்னும் கிராமத்தில் ‘பஞ்சனாம் பாறை எனப்படும் கற்பாறைகளில் கோமடீஸ்வரர், பார்சுவநாதர் திருவுருவங்களும் கற்படுக்கைகளும் உள்ளன. இங்குப் பண்டைக் காலத்தில் சமணர் சிறப்புற்றிருந்தனர்.104 சோழ வாண்டிபுரத்தில் உள்ள ‘ஆண்டி மலையில் 10 ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. வேலி கொங்கரையர் புத்தடிகள் என்பவர் இங்குள்ள. ‘தேவாரத்தை (கோயிலை) அமைத்ததாக இவை கூறுகின்றன. மலைப் பாறையில், பத்மாவதி அம்மன், கோமடீஸ்வரர், பார்சுவநாதர், மகாவீரர் திருவுருவங்கள் காணப்படுகின்றன. பத்மாவதி அம்மனைக் காளியம்மன் என்று இவ்வூரார் கூறுகின்றனர்.105 இங்குள்ள மற்றொரு சாசனம், சித்தவடவன் என்பவர் பாணப்பாடி என்னும் ஊரை இங்குள்ள பிண்டிக் கடவுளுக்கும் (அருகக்கடவுளுக்கும்), மாதவருக்கும் தானம் செய்ததைக் கூறுகின்றது. தானம் கொடுக்கப் பட்ட இவ்வூரைக் குரந்திகுணவீரபடாரரும் அவர் வழிமாணாக்கரும் மேற்பார்வை பார்த்துவந்ததாக இச்சாசனம் கூறுகிறது.106

இதில், தானம் செய்த சித்தவடவன் என்பவர் வேலி கொங்கராயர் புத்தடிகள் என்று பெயர் பெறுவார். கோவல் நாட்டரசனான சித்தவடவன் என்னும் சேதி அரசனும் மலைய குலோத்பவன் என்று கூறப்படுபவனும் இவரே என்பர். இவரே, வேளிர் கொங்கராயர் என்றும் கூறப்படுகிறார். அன்றியும் இவர், சேதிநாட்டு ஓரி குடும்பத்தவர் என்றும், பாரி குடும்பத்தில் பெண் கொண்டவர் என்றும் கூறப்படுகிறார். (ஓரி, பாரி என்னும் குடும்பத்தைச் சேர்ந்த சிற்றரசர் சங்க நூல்களில் கூறப்படுகின்றனர். இவர்கள் கடை ஏழு வள்ளல்களைச் சேர்ந்தவர்.) இராஷ்ட்ரகூட அரசன் கன்னர தேவர் காலத்தில் (10 ஆம் நூற்றாண்டின் இறுதியில்), இவ்வரசனுக்குக் கீழ்ப்பட்டுத் திருக்கோவலூரை அரசாண்ட மலாட அரசன் சத்திநாதன் என்றும் சித்தவடவன் என்றும் பெயருள்ள நரசிம்மவர்மன்தான் இவன் என்றும் சிலர் கருதுகின்றனர்.107

இவ்வூருக்கு அருகில் உள்ள தேவியகரம், எலந்துறை என்னும் ஊர்களிலும் பார்சுவநாதர் முதலிய சமண உருவங்கள் காணப்படுகின்றன. இந்தத் தென் ஆர்க்காடு மாவட்டத்தில் இன்னும் பல இடங்களில் சமணர்களும் சமணக் கோயில்களும் இருந்த செய்திகள் சாசனங்களால் அறியப்படுகின்றன. அவற்றைச் சுருக்கமாகக் கூறுவோம்:

திருக்கோயிலூர் திருவீரட்டானமுடைய தேவருக்குரிய நிலம் தானம் செய்யப்பட்ட சாசனத்தில், ‘பள்ளிச் சந்தமாகிய இயக்கிப்பட்டி குறிக்கப்படுகிறது.108 (இதில், இயக்கிப்பட்டி என்பது இயக்கியாகிய யக்ஷ¤க்குத் தானம் செய்யப்பட்ட நிலத்தைக் குறிக்கும். இயக்கி, யக்ஷ¤ என்பது சமண தீர்த்தங்கரரின் பரிவார தெய்வங்களில் ஒன்று.)

திருக்கோவலூர் அகத்தீஸ்வரர் கோவில் நிலத்தைக் குறிக்கும் சாசனம் ஒன்று, ‘குளவி குழி பள்ளிச் சந்தம் என்னும் நிலத்தைக் குறிக்கிறது.109

சிதம்பரத்துச் சாசனங்கள், ‘திருவம்பலப் பெரும்பள்ளி நல்லூர் என்னும் ஊரையும்,110 ‘ஆற்றூரான ராஜராஜ நல்லூரில் இருந்த ‘பள்ளிச் சந்த நிலங்களையும்,111 குறிப்பிடுகின்றன. திருவண்ணா மலைச் சாசனம், ‘மதுராந்தக வளநாட்டு ஆடையூர்நாட்டு ஆடையூர் வடக்கில் ஏரி கீழ்ப்பார்க்கெல்லை பள்ளிச் சந்தம் மேல் பார்க் கெல்லை பள்ளிச் சந்தம் நிலங்களைக் குறிக்கின்றது.112 இன்னொரு சாசனம், ‘தச்சூர் பள்ளிச் சந்தத்தைக் குறிக்கிறது.113 இவற்றிலிருந்து இங்கெல்லாம் சமணக் கோயிலுக்குரிய நிலங்கள் இருந்தன என்பது புலனாகும்.

கொலியனூர்: (கோய்லனூர் என வழங்கும்) விழுப்புரம் தாலுகாவில் விழுப்புரத்திற்குத் தென்கிழக்கே 4 மைலில் உள்ளது. கிலமாய்ப்போன சமணக் கோயில் இங்கு உண்டு. இங்குச் சாசனங்களும் காணப்படுகின்றன.114 கோலியபுரநல்லூர் என்பது இதன் பழைய பெயர்.115 ‘ஸ்வஸ்தி ஸ்ரீ நயினார் தேவர் பெருமானார் ஸ்ரீ கோயில் திருவிருப்புக் கல்பணி இடையாறன் திருமறுமார்பன் வணிகபுரந்தரன் திருப்பணி என்று ஒரு சாசனம் காணப்படுகின்றது,116 ‘‘காளயுக்திu ஆனிமீ 10உ ஸ்ரீமன் மகாமண்டலேஸ்வர ஆருவ அசுரநாராயண தியாக சமுத்திர இம்மடி தொராத வசவைய தேவ மகாராசாவின் காரியத்துக்குக் கர்த்தரான நல்ல தம்பி முதலியார் பெரிய தம்பியார் கொலியாபுர நல்லூர் நயினார் அருமொழி நாயகர் கோயில் பூசைத் திருப்பணிக்குப் பூருவமாக வடக்கு வாசலில் மேற்கு உள்ள விசயராசபுரத்து எல்லைக்கு இப்பால் உள்ள நஞ்சை புஞ்சை நாற்பாற்கெல்லையும் தடவிட்டுச் சந்திராதித்த வரையும் நடத்த சீமை பல பட்டடையும் கல்வெட்டிக் குடுத்த தன்மத்துக்கு அகுதம் நினைத்தவன் கெங்கைக் கரையில் காராம் பசுவைக் கொன்ற பாவத்திலும் பிராமணரைக் கொன்ற பாவத்திலும் போகக்கடவன்,’117 என்று ஒரு சாசனம் கூறுகிறது.

ஜினசிந்தாமணி நல்லூர்: விருத்தாசலம் தாலுகா. இவ்வூர்ப் பெயரே இது ஒரு சமண ஊர் என்பதைச் தெரிவிக்கிறது.

வேடூர்: விழுப்புரத்திற்குக் கிழக்கே 11 மைலில் உள்ளது இங்குள்ள சமணக் கோயில் இப்போதும் பூசிக்கப்படுகிறது.118

எள்ளானாசூர்: திருக்கோயிலூர் தாலுகா. திருக்கோயிலூருக்குத் தெற்கே 161/2 மைலில் உள்ளது. ஒரு பழைய சமணர் கோயில் இங்கு உள்ளது.119

செஞ்சி: செஞ்சிக் கோட்டைக்கு அருகில் 24 தீர்த்தங்கரர்களின் திருவுருவங்கள் பாறையில் செதுக்கப்பட்டுள்ளன. (Annual Report of Arch Dept. Southern Circle Madras. 1912-13. P.7)

5. திருச்சிராப்பள்ளி மாவட்டம்

உறையூர்: இதனை ‘உறந்தை, ‘கோழியூர் என்றும் கூறுவர். இது சோழ அரசரின் தலை நகரமாக இருந்தது. இவ்வூரில் அருகக்கடவுளின் கோயிலும் சமண முனிவர்களும் இருந்தனர் என்றும், கோவலன் கண்ணகியருடன் மதுரைக்குச் சென்ற கவுந்தியடிகள் என்னும் சமணத் துறவி, இவ்வூரில் தங்கி அருகக்கடவுளையும் முனிவரையும் வணங்கினார் என்றும் சிலப்பதிகாரம் கூறுகின்றது120. இதனால், கி.பி.2 ஆம் நூற்றாண்டில் இங்குச் சமணர் இருந்த செய்தி அறியப்படுகிறது. நீலகேசி என்னும் நூலிலும், இவ்வூரில் சமணக் கோயில் இருந்த செய்தி கூறப்படுகின்றது121. உறையூரிலும் அதனைச் சார்ந்த ஊர்களிலும் பண்டைக் காலத்தில் சமணர் இருந்தனர். இவ்வூரைச் சமணர் தமது மந்திர வலிமையினால் அழித்துவிட்டார்கள் என்று சைவ சமய நூலாகிய தக்கயாகப்பரணி உரையில் கூறப்பட்டுள்ளது122. சோழ அரசன்மேல் சினங் கொண்ட சிவ்பெருமான், மண் மழை பொழியச் செய்து உறையூரை அழித்தார் என்று பிற்காலத்தில் எழுதப்பட்ட செவ்வந்திப் புராணம் என்னும் மற்றொரு சைவ நூல் கூறுகிறது123. இதனை அழித்தது சமணர் ஆயினும் ஆகுக; சைவர் ஆயினும் ஆகுக; இவ்வூர் பிற்காலத்தில் மண்மாரியால் அழிக்கப்பட்டதென்பது தெரிகிறது. இவ்வூர் அழிந்தபிறகு, திருச்சிராபள்ளி சோழரின் தலைநகராயிற்று என்பர்.

வெள்ளனூர்: திருச்சி மாவட்டத்தில் உள்ள இந்த ஊரின் வயலில் கல்லினால் அமைக்கப்பட்ட சமணத் திருவுருவச் சிலைகள் காணப்படுகின்றன; (Arch. Rep. 1909-1910).

பழநாகப்பள்ளி: கரூர் தாலுகா நாகம்பள்ளி கிராமத்தில் உள்ள மகாபலீஸ்வரர் கோவில் மண்டபத்தில் உள்ள சாசனம் திரிபுவன சக்கரவர்த்தி குலோத்துங்கச் சோழ வேந்தர் காலத்தில் எழுதப்பட்டது. இச்சாசனத்தில், பழநாகப்பள்ளிக் கோயிலுக்குத் திருவிளக்குத் தானம் செய்யப்பட்ட செய்தி கூறப்படுகிறது124. இதில் குறிக்கப்பட்ட பழநாகப்பள்ளி என்பது சமணக் கோயில் என்பதில் ஐயமில்லை. இதனால் இங்குப் பண்டைக் காலத்தில் சமணர் இருந்தது அறியப்படுகிறது.

அமுதமொழிப் பெரும்பள்ளி: திருச்சி தாலுகா அன்பில் என்னும் ஊரில் உள்ள சாசனம், திரிபுவன சக்கரவர்த்தி இராசராசசோழ தேவரது 19 ஆவது ஆண்டில் எழுதப்பட்டது. இதில், ‘திருவிடைக்குடி அமுது மொழிப் பெரும்பள்ளி என்னும் சமணக் கோவில் குறிப்பிடப்பட்டள்ளது125.

புலிவல்லம்: திருச்சி தாலுகா திருப்பாலைத் துறை தாருகவனேஸ்வரர் கோயிலில் உள்ள சாசனங்களில், ‘புலிவல்லத்து ஊரிடைப் பள்ளிச்சந்தம் கூறப்படுகிறது126. இதனால், சமணக் கோயிலுக்குரிய நிலங்கள் இங்கிருந்தது அறியப்படும்.

அமண்குடி: திருச்சி தாலுகா திருச்செந்துறையில் உள்ள சந்திரசேகரர் கோயில் சாசனம், மதுரை கொண்ட கோப்பர கேசரிவன்மரது 16 ஆவது ஆண்டில் எழுதப்பட்டது. இதில், அமண்குடி குறிக்கப்பட்டுள்ளது127. ஷ அரசனது 23 ஆவது ஆண்டில் எழுதப்பட்ட சாசனம் ‘உறையூர் கூற்றத்து அமண்குடி யைக் கூறுகின்றது128. இப்பெயரினால் இங்குச் சமணர் இருந்தது அறியப்படும். அமணர் எனினும் சமணர் எனினும் ஒன்றே.

பழைய சங்கடம்: குளித்தலை தாலுகாவில் உள்ள இப் பழைய சங்கடம், மகாதானபுரத்தின் ஒரு பகுதி. இங்குச் சமணச் சின்னங்கள் காணப்படுகின்றன129. இங்குப் பண்டைக்காலத்தில் சமணர் இருந்தனர்.

சீயாலம்: குளித்தலை தாலுகா சீயாலத்தில் ‘சுண்டக்காபாறை என்னும் குன்றில் சமண முனிவர் இருந்ததற்குச் சான்றுகள் உள்ளன.130

குத்தாலம்: தென்காசி தாலுகாவில் உள்ள குத்தாலம் என்னும் இடத்தில் ‘பரதேசிப் பொடவு என்னும் குன்றும் குகையும் உள்ளன. இங்கும் பண்டைக்காலத்தில் சமண முனிவர் இருந்தனர் என்பதற்குச் சான்றுகள் காணப்படுகின்றன131.

வீரப்பட்டி: திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்குப் போகிற பாதையின் இடதுபுறத்தில் உள்ள இந்த ஊருக்கருகில் அன்னவாசல் என்னும் இடத்தில் ஒரு வயலில் சமண தீர்த்தங்கரரின் திருவுருவம் காணப்படுகிறது132.

ஜம்புகேஸ்வரம்: திருச்சி தாலுகாவில் உள்ளது. இவ்வூர் ஜம்புகேஸ்வரர் கோயிலில் உள்ள, இராச கேசரிவர்மரான திரிபுவன சக்கரவர்த்தி இராசராச தேவரது 16 ஆவது ஆண்டில் எழுதப்பட்ட சாசனத்தில், ‘கவிராஜப் பெரும்பள்ளி,’ என்னும் சமணக் கோயில் கூறப்படுகிறது133.

திருமலைவாடி: இங்குக் குந்தவைப் பிராட்டியார், ஒரு சமணக் கோயிலைக் கட்டினார் என்று தெரிகிறது. (S.I.I. Vol.I.67&68) இந்த அரசியார் வடஆர்க்காடு மாவட்டம் போளூரிலும், தென் ஆர்க்காடு மாவட்டத்திலும் சமணக் கோயில்களைக் கட்டியுள்ளார்.

பெரியம்மா பாளையம்: பெரம்பலூர் தாலுகா பெரம்பலூருக்கு வடகிழக்கே 14 மைல். இக் கிராமத்தின் அருகில் பெரிய சாலை வெள்ளாற்றைக் கடக்கிற இடத்தில் ஒரு சமணத் திருவுருவம் ஆற்றங்கரை மணலினால் மூடுண்டு கிடக்கிறது. இவ் வுருவத்தின் தலையும் தோள்களும் வெளியே தெரிகின்றன134.

அம்பாபுரம்: இக் கிராமத்துக்கு விக்ரமம் என்னும் பெயரும் உண்டு. உடையார் பாளையம் தாலுகாவில் உடையார் பாளையத்திலிருந்து தென்மேற்கில் 11 மைலில் உள்ளது. இங்குச் சில சமண உருவங்கள் இருக்கின்றன135.

ஜயங்கொண்ட சோழபுரம்: உடையார் பாளையம் தாலுகா உடையார் பாளையத்திலிருந்து வடமேற்கே 5 மைலில் உள்ளது. இங்கு ஏரிக்கரையில் ஒன்றும், ஒரு தெருவில் ஒன்றும் ஆக இரண்டு சமணத் திருவுருங்கள் உள்ளன. ஏரிக்கரையிலிருக்கிற திருவுருத் திற்கு இந் நகர மக்கள் ஆண்டுக்கு ஒருமுறை பூசை செய்கிறார்கள்136.

வண்ணம்: உண்ணம் என்றும் கூறுவர். உடையார் பாளையத்துக்குத் தென்மேற்கில் 19 மைலில் உள்ளது. கீழ்ப்பளூருக்குத் தெற்கில் 2 மைலில் உள்ளது. இங்கு ஒரு சமணத் திருவுருவம் காணப்படுகிறது137.

லால்குடி: திருச்சி தாலுகா திருச்சிராப்பள்ளிக்கு வடகிழக்கே 11 மைல். இவ்வூருக்கருகில், புள்ளம்பாடிக்குப் போகிற சாலையில் இடது பக்கத்தில் ஒரு வயலியே ஒரு சமணத் திருவுருவம் காணப்படுகிறது138.

மகாதானபுரம்: குளித்தலை தாலுகா குளித்தலைக்கு மேற்கே 13 மைலில் உள்ளது. இது கங்கைகொண்ட சோழபுரத்தின் (இதற்குப் பழைய செங்கடம் என்றும் பெயர்.) ஒரு பகுதியாக உள்ளது. இவ்விடத்தில் பல சமண உருவங்கள் காணப்படுகின்றன139.

சிவாயம்: குளித்தலை தாலுகா குளித்தலைக்குத் தெற்கே 5 மைல். இங்கு ஒரு சமண உருவம் காணப்படுகிறது140.

சுண்டைக்காப்பாறை: குளித்தலைக்குத் தெற்கே 3 மைல். இக்கிராமத்தில் ஒரு பாறையின் மேல் ஒரு சமணத் திருவுருவம் அமைக்கப்பட்டிருக்கிறது141.

வெட்டுவாந்தலை: குளித்தலைக்கு வடமேற்கே 9 மைல். இங்கே மூன்று சமணத் திருமேனிகள் காணப்படுகின்றன142.

6. புதுக்கோட்டை

அம்மா சத்திரம்: அம்மா சத்திரத்துக்கு மேற்கே பள்ளிக்குளம் என்னும் ஒரு குளம் உண்டு. பள்ளிக்குளம் என்றால், சமணப்பள்ளிக்குரிய குளம் என்பது பொருள். இக் குளத்திற்கு மேற்கே 25 அடி உயரமுள்ள கற்பாறை மீது அருகக் கடவுளின் திருவுருவம் முக்குடையுடன் காணப்படுகிறது. இங்கு இரண்டு கல்வெட்டுச் சாசனகள் உள்ளன. இவற்றிலிருந்து இக் கற்பாறைக்குத் திருப்பள்ளிமலை என்னும் பெயர் உண்டென்று தெரிகிறது. இத்திருப்பள்ளி மலைக்குரிய குளந்தான் மேற்கூறிய பள்ளிக்குளம். இப் பள்ளிக்குளத்துக்கருகில் வேறு சில சமணத் திருவுருவங்கள் சிதைந்து காணப்படுகின்றன.

ஆளுருட்டி மலை: அம்மா சத்திரத்துக்கு அருகில் உள்ளது இங்குள்ள குன்றின்மேல் இரண்டு சமணத் திருவுருவங்கள் காணப்படுகின்றன. இம் மலையின் குடகுக்கு முன்பாகச் சாசனம் பொறிக்கப்பட்டுள்ளது. இச் சாசனத்தினால், இம் மலைக்குத் திருமான் மலை என்னும் பெயர் உண்டென்பது அறியப்படுகிறது. ‘சக்கரவர்த்திகள் சுந்தரபாண்டிய தேவர்க்கு..........குலோத்துங்க சோழ பட்டணத்து பள்ளிச் சந்த.......உடையார் கனகசந்திர பண்டிதர் மாணாக்கர் தன்மதேவ ஆசாரியார் பாரிசை........பெரியபள்ளி வயலில் நாயனார் திருமான்மலை யாழ்வார் பள்ளிச் சந்தமாய் எங்களுக்கு அர்ச்சனா போகமாய் வருகிற நிலம் இரண்டுமா,’ என்பது இச் சாசனத்தின் வாசகம்143. சிதைந்துள்ள வேறு சமணத் திருவுருவங் களும் இங்கு உள்ளன.

நாரத்தமலை: இப் பெயர் நகரத்துமலை என்பதன் திரிபு. இரட்டைபாடி கொண்ட குலோத்துங்க சோழ நகரத்து மலை என்று பழைய சாசனம் கூறுகின்றது. பரகேசரி வர்மன் திரிபுவன சக்கரவர்த்தி ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவர் காலத்துத் திருமலைக் கடம்பர் கோயில் சாசனம் இங்குள்ள சமணக் கடவுளைத் திருமான்மலை அருகத் தேவர் என்று கூறுகின்றது144. இந்த மலையின் ஒரு பகுதிக்குத் திருப்பள்ளி மலை என்றும் மற்றொரு பகுதிக்குத் தென்திருப்பள்ளி மலை என்றும் பெயர் வழங்கப்பட்டன. திருப்பள்ளி மலையில் பெரிய சமண மடமும் கோயிலும் இருந்தன. இம் மடங்களுக்குரிய நிலங்களிலிருந்து கிடைக்கும் வருவாயில் பெரிய மடத்துக்கு இரண்டு பங்கும் சிறிய மடத்துக்கு ஒரு பங்கும் வழங்கப்பட்டன. இச்செய்திகள் பொம்மைப்பாறையின் மேற்புரத்தில் உள்ள சாசனத்தினால் அறியப்படுகின்றன. இந்தச் சாசனம் சகம் 675 இல் (கி.பி. 753 இல்) எழுதப்பட்டது. அது வருமாறு:

ஸ்வஸ்தி ஸ்ரீ திரிபுவன சக்கரவர்த்தி கோனேரின்மை கொண்டான் திருப்பள்ளிமலைப் பள்ளி உடையார்களுக்கும் தென் திருப்பள்ளிமலை உடையார்களுக்கும் திருப்பள்ளி மலை நாயகர்க்கும் திருப்படி மாற்றுள்ளிட்ட நித்த நிபந்தங்களுக்குத் தென் சிறுவாயில் நாட்டுக் கொற்றமங்கலம் நான்கெல்லைக் குட்பட்ட நீர் நிலமும் நஞ்செய் புன்செய்யும் அந்தராயமும் தோட்டமுங் குளமும் தருவதான அச்சும் காரிய வாராட்சியும் வெட்டிபாட்டமும் பஞ்சுபிலி சந்திவிக்கிரணப் பேறு வாசற் பேறு இலாஞ்சினைப்பேறு தறியிறை செக்கிறைத் தட்டொலிப் பாட்டமும் இடையவர் வரியும் இன வரியும் பொன் வரியும் மற்றுமெப் பெயர்ப் பட்டனவும் உட்பட ஆறாவது முதல் பள்ளிச்சந்த இறையிலியாகத் திருப்பள்ளிமலையாழ்வார்க்கு இருகூறும் தென் திருப்பள்ளிமலை நாயகர்க்கு ஒருகூறும் குடுத்தோம். இப்படிக்கு இவ் வோலை பிடிபாடாக் கொண்டு புரவிலும் வரியிலும் கழிப்பித்துச் சந்திராதித்தவற் செல்வதாக. இரண்டு திருமலையிலும் கல்லிலும் வெட்டி நான்கெல்லையிலும் ஸ்ரீ முக்குடைக் கல்லும் நாட்டிக்கொள்க - இவை பழந்திபராய னெழுத்து - ஆண்டு 6075. இவை வில்வவராயனெழுத்து - இவை தென்னவதரையனெழுத்து145.

பள்ளிவயல்: நார்த்தலை திருமயக் கடம்பர் கோயிலுக்கு வடபுறத்துப் பாதையில் உள்ள சாசனம், ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவரது 27 ஆவது ஆண்டில் எழுதப் பட்டது. இதில், ‘இரட்டைபாடி கொண்ட சோழவள நாட்டுத் தெலுங்க குலகாலபுரத்துப் பள்ளிவயல் நிலம் குறிக்கப்பட்டுள்ளது. அன்றியும், ‘இவ்வூர்த் திருமானைமலை அருகத்தேவற்குப் புறகரை நிலம் இரண்டுமா என்றும் கூறுகின்றது.146 இன்னொரு சாசனம், வீரப்பிரதாப தேவராய மகாராயர் விசெயராயர் குமாரர் தேவராய மகாராயர் சகாப்தம் 1353 இன் மேல் செல்லாநின்ற இராட்சச வருடம் (கி.பி. 1431) எழுதப்பட்டது. இச் சாசனத்திலும், ‘கடலடையா திலங்கைகொண்ட சோழவளநாட்டு நகரம் தெலிங்ககுலகால புரமான குலோத்துங்க சோழ பட்டணத்து உடையார் திருமலைக்கடம்பூருடைய நயினார் பள்ளிவயல்நிலம் இரண்டுமா என்று கூறுகிறது.147 இவற்றால் இங்குப் பண்டைக் காலத்தில் அருகக்கடவுளுக்குரிய நிலங்கள் இருந்தது அறியப் படுகிறது.

சமணர்திடல்: இதற்குச் சமணர் குண்டு என்றும் வேறு பெயர் உண்டு. காயாப்பட்டியில் உள்ள வெண்ணாவிக்குளத்தின் புறகரையில் உள்ளது. இங்குள்ள கல் ஒன்றில், ‘ஸ்வஸ்திஸ்ரீ. திருவெண்ணாயில் ஐஞ்ஞூற்றுவப் பெரும்பள்ளித் திருவாய்த்தல் மாடம் சயவீரப் பேரிளமையான் என்று பொறிக்கப்பட்டுள்ளது. இதனால், ஐஞ்ஞூற்றுவப் பெரும்பள்ளி என்னும் சமண மடமும் கோயிலும் இங்கு இருந்திருக்கவேண்டும் என்று தெரிகிறது.

சடையாபாறை: இது சடையார்மலை என்றும் வழங்கப்படும். திருக்கோகர்ணத்திற்கு அருகில் உள்ள ஒரு பாறை இது. இங்குச் சமண தீர்த்தங்கரர் திருவுருவம் ஒன்று உள்ளது. இவ்வுருவத்தின் அருகில் ஒரு சாசனம் காணப்படுகிறது.148 இச் சாசனத்திலிருந்து, பெருநற்கிள்ளி சோழப்பெரும்பள்ளி என்னும் சமணக்கோயில் இங்கு இருந்த செய்தி அறியப்படுகிறது. ‘‘கோனேரின்மை கொண்டான் தென்கவி நாட்டாற்குத் தங்கள் நாட்டுக் கல்லாற்றுப் பள்ளிப் பெருநற்கிள்ளி சோழப் பெரும்பள்ளியாழ்வாற்கு திருப்படி மாற்றுள்ளிட்டு வேண்டும் நிமந்தங்களுக்கு இவ்வூர்ப்பள்ளி உடையார்கள் காணியான நிலம் முக்கால் குடுத்தோம். இந்நாட்டுச் சடையார்மலைமேல் தென்கவி நாட்டுப் பெரும்பள்ளி ஆழ்வாற்கு இவ்வூர்.............’’ என்று இதில் எழுதப்பட்டிருக்கிறது.

தேனிமலை: இதற்குத் தேனூர்மலை என்றும் பெயர் உண்டு. இங்குச் சில சமணத் திருமேனிகள் காணப்படுகின்றன. இம்மலையில் மலையத்துவஜன் என்னும் சமணத் துறவி தவம் செய்வதைக் கண்டு இருக்குவேள் என்னும் கொடும்பாளூர்ச் சிற்றரசன் நிலம் தானம் செய்த செய்தியை இங்குள்ள சாசனம் கூறுகின்றது.149 அது கீழ்வருமாறு:- ‘ஸ்வஸ்திஸ்ரீ மலயத்துவஜன் தேனூர் மலையில் தவஞ் செய்யக் கண்டு இருக்குவேள் சந்தித்து அவிப்புறஞ் செய்த பள்ளிச்சந்தம் நாலேகால். இவ்வறங்காத்தான் அடி நீளென் சென்னியன.’

இங்குள்ள தீர்த்தங்கரர் திருவுருவம் ஒன்றின்கீழ், ‘ஸ்வஸ்திஸ்ரீ. ஸ்ரீவல்ல உதன செருவொட்டி செய்வித்த திருமேனி என்று எழுதப்பட்டுள்ளது.150

மலையகோயில்: இங்குள்ள இடதுபுறப் பாறையில் உள்ள ஒரு சாசனம் குணசேனர் என்னும் சமணப் பெரியாரைக் குறிக்கிறது.151 கற்பாறையில் குடைந்தமைக்கப்பட்ட இரண்டு கோயில்கள் இங்கு உள்ளன.

சித்தன்னவாசல்: சித்தன்னவாசல் கிராமத்திற்குக் கிழக்கே ஒரு மைலில் வடக்குத் தெற்காக ஒரு மலை உள்ளது. இம்மலைமேல் பண்டைக்காலத்தில் சமண முனிவர்கள் தவஞ்செய்துவந்தனர். இம்மலையில் கற்பாறையில் குடைந்தமைக்கப்பட்ட குகைக்கோயில் உண்டு. இக்கோயிலின் முன் மண்டபம் வடக்குத் தெற்காக 22 அடி 10 அங்குல நீளமும் 111/2 அடி அகலமும் உள்ளது. முன்புறத்தில் இரண்டு கற்றூண்களையுடையது. தூண்கள் ஒவ்வொன்றும் 2 அடி 2 அங்குலம் சதுரமும் 6 அடி 10 அங்குலம் உயரமும் உள்ளன. இவை யாவும் ஒரே பாறையைக் குடைந்து அமைக்கப்பட்டன. இம் மண்டபத்தின் வடபுறத்தின் சுவரையொட்டி, முக்குடையுடன் வீற்றிருக்கும் அருகக்கடவுளின் திருவுருவமும் தென்புறச் சுவரை யொட்டிப் பார்சவநாதர் திருவுருவமும் அழகாக அமைக்கப் பட்டுள்ளன. மண்டபத்தின் மேற்கூரையிலும் தூண்களிலும் சுவர்களிலும் ஓவியங்கள் எழுதப்பட்டிருந்தன. இவ்வோவியங்கள் இப்போது சிதைந்து காணப்படுகின்றன. சிதைந்த நிலையிலும் இவ்வோவியங்கள் மனதைக் கவரக்கூடியனவாக உள்ளன. இந்த மண்டபத்துக்கு நடுவில் பாறையைக் குடைந்தமைக்கப்பெற்ற ஒரு சிறு கோவில் உண்டு. இதன் அகலமும் நீளமும் உயரமும் 101/2 அடி. இக்கோயிலின் வாயில் 5 அடி 7 அங்குலம் உயரமும் 21/2 அடி அகலமும் உள்ளது. இக்கோயிலில் அருகக்கடவுளின் மூன்று உருவங்கள் முக்குடையுடன் அமைக்கப்பட்டுள்ளன. இக் குகைக் கோயிலை அமைத்தவன் பேர்போன மகேந்திரவர்மன் I என்னும் பல்லவ அரசனாகும். இவன் கி.பி. 600 முதல் 630 வரையில் தொண்டைமண்டலம் சோழமண்டலங்களை அரசாண்டான். இவனுடைய உருவம் இக்குகைக் கோயிலில் ஓவியமாக அமைக்கப் பட்டுள்ளது. இக்குகைக்கோயிலுக்கு வடகீழ்ப்புறத்தில் இயற்கையா யமைந்த ஒரு குகை உளது. இக்குகைக்குள் 17 கற்படுக்கைகள் பாறையில் அமைக்கப்பட்டுள்ளன. இக்குகைக்கு ஏழடிப்பட்டம் என்னும் வழியாகச் செல்லவேண்டும்.152 இக்குகையில் முற்காலத்தில் சமணத் துறவிகள் தங்கியிருந்து தவஞ்செய்து வந்தனர். இங்கு, பிராமி எழுத்திலும் வட்டெழுத்திலும் சாசனங்கள் உள்ளன. இங்குள்ள சாசனம், ‘தொழக்குன்றத்துக் கடவுளன் நீலன். திருப்பூரணன் திட்டைச்சரணன். திருச்சாத்தன். ஸ்ரீபுராணசந்திரன், நியத்தக்கரன் பட்டக்காழி.........த்தூர்க் கடவுளன் என்னும் பெயர்களைக் கூறுகின்றது.153 இப்பெயர்கள் இங்குத் தவஞ்செய்திருந்த சமணமுனிவர்களில் சிலருடைய பெயர்கள் எனத் தோன்றுகின்றன.

இன்னொரு சாசனம் கி.பி 9 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ‘அவனிசேகரன் ஸ்ரீவள்ளுவன் (ஸ்ரீவல்லபன்)’ காலத்தில், மதுரையாசிரியன் இளங்கௌதமன் என்பவர் இங்குள்ள உள்மண்டபத்தைப் பழுதுதீர்த்து வெளிமண்டபம் ஒன்றைக் கட்டினார் என்று கூறுகிறது.154 மதுரை ஆசிரியன் என்னும் பெயருடைமையால் இவர் சிறந்த புலவராக இருக்கவேண்டும்.

இங்குள்ள ஒரு தோட்டத்தில் உடைபட்ட ஒரு சமண தீர்த்தங்கரர் திருவுருவம் உண்டென்றும் இதனைத் தட்டினால், இசையுடன் கூடிய ஓசை உண்டாகிறது என்றும் கூறுகின்றனர்.

ஆலங்குடித் தாலுகா திருவரங்குளம் என்னும் இடத்தில் அரிதீர்த்தீஸ்வரர் கோவிலில் உள்ள சாசனம் கி.பி. 1260 இல் திருபுவன சக்கரவர்த்தி வீரபாண்டியதேவர் காலத்தில் எழுதப்பட்டது. இதில், பள்ளிச்சந்தநிலம் குறிக்கப்படுகிறது.155 இத் தாலுகா கோகர்ணம் கோகர்ணீஸ்வரர்கோவில் சாசனம் வீரபாண்டிய தேவரது 14 ஆவது ஆண்டில் எழுதப்பட்டது. இதில், தென்கவிநாட்டுப் பள்ளிச் சந்த நிலங்கள் குறிக்கப்படுகின்றன.156 இத் தாலுகா வளவம்பட்டி அரசாங்கப் பாடசாலைக்கு அருகில் சமணத் திருவுருவம் ஒன்று காணப்படுகிறது. இத் தாலுகா புத்தாம்பூரில் மொட்டைப்பிள்ளையார் என வழங்கும் சமணத் திருவுருவம் காணப்படுகிறது. இத் தாலுகா செம்பாட்டூரில் தீர்த்தங்கரரின் உருவம் காணப்படுவதுடன் சிங்கத் தூண்களும் காணப்படுகின்றன. சிங்கத்தூண்கள் பல்லவர் காலத்தில் பல்லவ அரசர்கள் கட்டிய கோயில்களில் காணப்படுவதால், இங்குப் பண்டைக்காலத்தில் பல்லவ அரசரால் கட்டப்பட்ட கோயில் இருந்திருக்கவேண்டும். இத்தாலுகா திருக்கட்டளை சுந்தரேஸ்வரர் கோயில் சாசனம் குலோத்துங்க சோழனுடைய 10 ஆவது ஆண்டில் எழுதப்பட்டது. இதில் வளத்தாமங்கலம் பள்ளிச்செய் கூறப்படுகிறது.157 (செய் = வயல்).

திருமய்யம் தாலுகாவில் பொன்னமராபதி கோளீசுவரர் கோவில் சாசனம் ‘ஒல்லையூர் கூற்றத்துக் கொன்றையூரான உத்தம சோழபுரத்துப் பொன்னமராபதி பள்ளிச் சந்தம், கூறப்படுகிறது.158 இத் தாலுகா காரையூர் சுந்தரராசப் பெருமாள் கோயில் சாசனம், ‘ஒல்லையூர் கூற்றத்துக் காரையூர் பள்ளிச் சந்த நிலத்தைக் கூறுகிறது.159 புலாலைக் குடியில், பாறையில் அமைக்கப்பட்ட சிறு சமணக் கோயில் உண்டு. தேவர் மலை என்னும் இடமும் சமணக் கோயிலே.

குளத்தூர் தாலுகா குன்னாண்டார் கோயில் என்னும் குகைக்கோயில் சமணக் கோயிலாகும். இத்தாலுகா அன்னவாசல் பள்ளி ஊருணிக்கு மேற்கில் உள்ள தென்னந் தோப்பில் இரண்டு சமணத் திருவுருவங்கள் உள்ளன. இத் தாலுகா வீரக்குடிக்கு அருகில் உள்ள சமணர்மேடு என்னும் இடத்தில் சமணத் திருவுருவங்கள் பூமியிலிருந்து கிடைத்தன. குளத்தூர்த் தாலுகா திருப்பூரில் ஒரு சமண உருவம் கிடைத்தது. ஷெ தாலுகா தேக்காட்டூரில் சமணத் திரு உருவம் உண்டு. ஷெ கண்ணங் குடியில் ஒரு சமணத் திருமேனி கிடைத்துள்ளது.160 ஷெ விராலூரில் சமண உருவம் உளது. கீழைத்தனியம் என்னும் ஊரில் சில சமண உருவங்கள் சில ஆண்டு களுக்கு முன்னர்க் கண்டெடுக்கப்பட்டன. இவையெல்லாம், பண்டைக் காலத்தில் இவ்விடங்களில் சமணர் இருந்ததை உறுதிப்படுத்துகின்றன. அம்மணங்குறிச்சி என்னும் ஊர் இங்கு உண்டு. இப்பெயர் இங்கு அமணர் இருந்தனர் என்பதைக் காட்டுகிறது.

7. தஞ்சாவூர் மாவட்டம்

திருவாரூர்: இவ்வூரில் பண்டைக் காலத்தில் சமணர் செல்வாக்குப் பெற்றிருந்தனர். அக்காலத்தில் இவ்வூர்த்திருக்குளம் மிகச் சிறியதாக இருந்தது. அச்சிறு குளத்தைச் சூழ்ந்து சமணர்களின் பள்ளிகளும், மடங்களும், நிலங்களும் இருந்தன. கி.பி. 7 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் (அப்பர் சம்பந்தர் காலத்துக்குச் சற்று முன்னர்) இவ்வூரில் சைவச் சமணர் கலகம் உண்டாகி இங்கிருந்த சமணர்களைச் சைவர் துரத்தினர். தண்டி அடிகள், நமிநந்தியடிகள் என்னும் சைவநாயன்மார்கள் காலத்தில் இக்கலகம் நிகழ்ந்ததாகப் பெரிய புராணம் கூறுகின்றது.161 இக்கலகத்தின் பயனாக இச்சிறு குளத்தைச் சூழ்ந்திருந்த சமணர்களின் கட்டிடங்களும் நிலங்களும் இடித்துப் பறிக்கப்பட்டுப் பெரிய குளமாகத் தோண்டப்பட்டது. இப்போது இக்குளம் பதினெட்டு ஏக்கர் உள்ள பெரிய இடப்பரப்பைக் கொண்டுள்ளது. இக் குளத்தின் பெரும்பகுதி பண்டைக் காலத்தில் சமணரின் நிலமாக இருந்தது என்பது அறியத் தக்கது.

செந்தலை: தஞ்சைத் தாலுகாவில் உள்ள இவ்வூர் சந்திரலேகை என்று பண்டைக் காலத்தில் பேர் பெற்றிருந்தது. இங்குள்ள சுந்தரேச்சரர் என்னும் சிவன் கோயில் வெளிக் கோபுர வாயிலின் இடதுபுறச் சுவரில் உள்ள சாசனத்தால் இங்குப் பண்டைக்காலத்தில் சமணர் இருந்த செய்தி அறியப்படும். அச் சாசனப் பகுதி இது: ‘கோப்பர கேசரி பன்மர்க்கு யாண்டு 12-வது கா...................ற்குடிப் பள்ளியுடைய ஆரம்ப வீரனேன் கையெழுத்து. வடகவிர................. பள்ளியுடைய கனகசேனபடாரர் கையால் யான் கொண்டு கடவ.’162 மற்றொரு சாசனம், ‘நங்கை ஒளி மாதியார் தாயார் நக்க நீலி163 என்பவர் பொன் தானம் செய்ததைக் கூறுகின்றது. இவ்வூரில் இப்போது இடிந்து கிடக்கும் ஒரு கோயிலின் கற்றூண் ஒன்றில் சமண தீர்த்தங்கரரின் சிறிய திருவுருவம் இருந்ததைப் பார்த்ததாக என் நண்பர் ஒருவர் கூறுகின்றார்.

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டித் தாலுகாவில் உள்ளது. இவ்வூர் மருந்தீச்சுரர் கோயிலின் மண்டபத்தில் உள்ள, திரிபுவன சக்கரவர்த்தி இராசராச தேவர் 3-உடைய II-ஆவது ஆண்டில் (கி.பி. 1227. மே. 15). எழுதப்பட்ட சாசனத்தில், சாத்தமங்கலத்தைச் சேர்ந்த ‘பள்ளிச்சந்தம். குறிக்கப்பட்டுள்ளது.164 இதனால், இவ்வூருக்கருகில் இருந்த சாத்தமங்கலத்தில் சமணக் கோயிலுக் குரித்தான நிலங்கள் இருந்த செய்தி அறியப்படுகிறது. ஆதலால், பண்டைக்காலத்தில் இங்குச் சமணர் இருந்திருக்கவேண்டும்.

திருநாகேச்சுரம்: கும்பகோணம் தாலுகாவைச் சேர்ந்த திருநாகேச்சுரர் கோயிலின் மண்டபக் கற்றூணில் உள்ள சாசனம். ‘தென்கரைத் திரைமூர் நாட்டில்,’ இருந்த ‘மிலாடுடையார் பள்ளி,’ என்னும் சமணக் கோயிலைக் குறிப்பிடுகிறது. இந்த மிலாடுடையார் பள்ளி, திருக்கோவலூரில் இருந்த மிலாட அரசனால் கட்டப் பட்டிருக்க வேண்டும். முற்காலத்தில் இங்கு ஒரு சமணக் கோயில் இடிந்து கிடந்ததென்றும், அக் கோயிற் கற்களைக் கொண்டு இப்போதுள்ள திருநாகேச்சுரத்துச் சைவக்கோயில் கட்டப்பட்ட தென்றும் இவ்வூரார் கூறுவர். அம்மன் கோயில் மண்டபத் தூண்களில் இப்போதும் சமண உருவங்கள் காணப்படுகின்றன. இவை, இவ்வூரார் கூறுவதை உறுதிப் படுத்துகின்றன. இவ்வூருக்கு அருகில் உள்ள வயல்களில் சமண உருவங்கள் காணப் படுகின்றன.165 திருநாகேச்சுரத்திற்குப் பண்டைக்காலத்தில் ‘குமார மார்த்தாண்ட புரம்,’ என்று பெயர் வழங்கியதென்றும், இங்கிருந்த மிலாடுடையார் பள்ளியில் மண்டபத்தையும் கோபுரத்தையும் ஒரு வணிகர் கட்டினார் என்றும் இராஜகேசரி வர்மன் என்னும் சோழனது 22 ஆவது ஆண்டில் எழுதப்பட்ட சாசனம் கூறுகின்றது.

திருப்புகலூர் (வர்த்தமானீச்சுரம்): இவ்வூர் நன்னிலம் இரயில் நிலையத்துக்குக் கிழக்கே நான்கு மைலில் உள்ளது. இங்கு வர்த்த மானீச்சுரர் கோயில் உண்டு. இக் கோயில் இப்போது சைவக் கோயிலாக உள்ளது. ஆனால், இக்கோயிலின் பெயரைக்கொண்ட இது பண்டைக் காலத்தில் சமணக் கோயிலாக இருந்தது என்பதை அறியலாம். ஸ்ரீவர்த்தமானர் (மகா வீரர்) இருபத்து நான்காவது தீர்த்தங்கரராவர். இச் சமணக் கோயில் கி.பி 7 ஆம் நூற்றாண்டுக்கு முன்னரே சைவரால் கைப்பற்றப்பட்டுச் சைவக் கோயிலாக்கப் பட்டது. அப்பரும் சம்பந்தரும் இக்கோயிலைப் பாடியுள்ளனர். இங்குச் சமணர் பண்டைக் காலத்தில் இருந்தனர்.

பழையாறை: இதனைப் ‘பழையாறு,’ ‘பழசை, என்றுங் கூறுவர். பட்டீச்சுரத்துக்குத் தென் கிழக்கே ஒரு மைலில் உள்ளது. சோழ அரசர்களின் உறவினர் இங்கு வாழ்ந்திருந்தனர். இங்குப் பண்டைக் காலத்தில் சமணர் இருந்தனர். கி.பி. 7 ஆம் நூற்றாண்டில், அப்பர் சுவாமி காலத்தில், இங்கே கலகம் ஏற்பட்டுச் சமணர் துரத்தப்பட்ட செய்தியைப் பெரிய புராணம் கூறுகின்றது.166 167 கி.பி. 11 ஆம் நூற்றாண்டிலும் இங்குச் சமணரும் சமணக் கோயிலும் இருந்த செய்தி அறியப்படுகிறது. இங்கிருந்த சமணக் கோயிலில் எழுந்தருளியிருந்த அருகக்கடவுள்மீது இயற்றப்பட்ட இரண்டு செய்யுள்கள் யாப்பருங்கல விருத்தி உரையில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. இங்கு வாழ்ந்திருந்த சோழ அரசன் இக் கோயிலுக்குச் சிறப்புச் செய்தான் என்பதும் விளங்குகின்றது. அச் செய்யுள் வருமாறு:

தாழி யோங்கு மலர்க் கண்ணவர் தண்ணடி
பாழி யோங்கு புனலார் பழை யாற்றுள்
காழி நின்றம் மதியான் மதிசேர்ந்து
வாழி என்று வணங்க வினை சேரா.’

முழங்கு களியானை மூரிக் கடற்படை முறிதார் மன்னர்

வழங்கு மிடமெல்லாந் தன்புகழே போக்கிய வைவேல்

விண்ணன்
செழுந் தண்பூம் பழசையுட் சிறந்தது நாளுஞ் செய
வெழுந்த சேதிகத் துள்ளிருந்த வண்ணலடி
விழுந்தண்பூ மலர்களால் வியந்து நாளுந் தொழத்
தொடர்ந்து நின்ற வல்வினை துறந்துபோ மாலரோ

மருத்துவக்குடி: இவ்வூர், பாபநாசம் தாலுகாவில் உள்ளது. இவ்வூர் ஐராவதீஸ்வரர் கோயில் மண்டபத்தில் உள்ள, திரிபுவன சக்கரவர்த்தி ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவர் 3 உடைய 16 ஆவது ஆண்டில் (கி.பி. 1194 இல்) எழுதப்பட்ட சாசனத்தில், ஜனநாதபுரம் என்னும் ஊரில் இருந்த சேதிகுல மாணிக்கப் பெரும்பள்ளி, கங்கருள சுந்தரப்பெரும்பள்ளி என்னும் இரண்டு சமணக் கோயில்கள் கூறப்படுகின்றன.168 இதனால், இவ்வூருக்கருகில் சமணரும் சமணக் கோயில்களும் இருந்த செய்தி அறியப்படும்.

திருவலஞ்சுழி: இது கும்பகோணம் தாலுகாவினுல் உள்ளது. இங்குள்ள சிவன் கோயிலுக்கருகில் சில சமண உருவங்கள் காணப்படுகின்றன.169 இதனால், இவ்வூரில் பண்டைக்காலத்தில் சமணர் இருந்தது அறியப்படுகிறது.

மன்னார்குடி: மன்னார்குடித் தாலுகாவின் தலைநகர். பண்டைக் காலத்தில் இவ்வூரில் சமணர் அதிகமாக இருந்தனர். இப்போதும் சில சமணர் உள்ளனர். ஒரு சமணக் கோயிலும் இருக்கிறது.170 இங்குள்ள ராஜகோபால சுவாமி கோயில் துவஜஸ்தம்பம், ஜைனருடைய மானஸ்தம்பம் போன்றிருக்கிறபடியால் இஃது ஆதியில் சமணக் கோயிலாக இருந்திருக்கக்கூடும் என்று கருதுகின்றனர்.171

தீபங்குடி: நன்னிலம் தாலுகாவில் உள்ளது. நன்னிலத்திற்குத் தென்மேற்கு 7 மைலில் உள்ளது. இதுவும் பழைய சமண ஊர். இங்கிருந்த ஜயங்கொண்டார் என்னும் சமணர் ‘தீபங்குடிப் பத்து,’ என்னும் சிறந்த, இனிய, அழகிய பாடல்களைப் பாடியுள்ளார். இவரே ‘கலிங்கத்துப் பரணி,’ என்னும் நூலை இயற்றியதாகக் கூறுவர். இத் தீபங்குடியில் இப்போதும் சமணர் உள்ளனர். சமணக் கோயில் ஒன்றும் இருக்கிறது.172

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்னும் பல இடங்களில் சமணர் இருந்த செய்தி சாசனங்களால் அறியப்படுகிறது. ‘அருமொழி தேவ வளநாட்டு இங்களநாட்டுப் பாலையூர்ப் பள்ளி,’173 ‘அரிசிலுக்கும் காவிரிக்கும் நடுவான உய்யக் கொண்ட வளநாட்டுத் திரைமூர்நாட்டுப் பள்ளிச்சந்தம்,’174 ‘திருவாலி நாட்டுக் குறுவாணியக்குடி பள்ளி,’175 ‘உய்யக் கொண்ட வளநாட்டு அமண்குடி176 என வரும் சாசனப் பகுதிகளால் தஞ்சாவூர் மாவட்டத்தில் சமணர் இருந்த செய்தி அறியப்படும்.

அமண்குடி: ‘சோழ மண்டலத்து உய்யக் கொண்ட வளநாட்டைச் சேர்ந்த வெண்ணாடில் அமண்குடி என்னும் ஊர் இருந்ததென்றும் இவ்வூர் பிற்காலத்தில் கேரளாந்தகச் சதுர்வேதி மங்கலம் என்று பெயர் மாற்றப்பட்டதென்றும் ஸ்ரீ இராசராச சோழரது சேனாபதியான கிருஷ்ணன் இராமனான மும்முடி சோழ பிரம்மராயன் என்பவர் இவ்வூரில் வாழ்ந்திருந்தார் என்றும், தஞ்சை இராச ராசேச்சுரக் கோயில் கல்வெட் டெழுத்துக்கள் கூறுகின்றன. 177 இவ்வூர்ப் பெயரே இங்குச் சமணர் வாழ்ந்திருந்தனர் என்பதைத் தெரிவிக்கிறது.

கருந்திட்டைக் குடி: (கருந்தட்டான்குடி என்று வழங்குவர்) அங்குச் சமணர் முன்னாளில் சிறப்புற்றிருந்தனர். இப்போதும் இங்குச் சமணர் உள்ளனர். சமண ஆலயமும் உண்டு.

குகூர்: இங்குக் குலோத்துங்கன் I காலத்தில் குலோத்துங்கன் பெயரால் பெரும் பள்ளி கட்டப்பட்டது.178

8. இராமநாதபுர மாவட்டம்

கோவிலங்குளம்: அறுப்புக்கோட்டைத் தாலுகாவில் உள்ள இவ்வூரில் அம்பலப்பசாமி கோயில் மேடையின் மேற்கு, தெற்குப் பக்கத்தில் சில சாசனங்கள் காணப்படுகின்றன. இப்போது, இந்த மேடைமட்டும் உள்ளது; கோயில் இல்லை. இங்குள்ள சாசனம் நல்ல இலக்கிய நடையுள்ளது. திரிபுவன சக்கரவர்த்தி ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவரது 48 ஆவது ஆண்டில் எழுதப்பட்ட இந்தச் சாசனம், முக்குடைநாதருக்கு (அருகக்கடவுளுக்கு) பொன்மயமான மண்டபமும் விமானமும், முக்குடை நாதர், இயக்கி இவர்களின் செப்புத் திருமேனிகளும், தண்ணீர்ப்பந்தலும், இக்கோயில் கட்ட நிலமும் இவ்வூரில் இருந்த சமணர்களால் அமைக்கப்பட்ட செய்தியைக் கூறுகிறது. இச்சாசனத்தில் இவ்வூர் ‘வேம்பு வடநாட்டுச் செங்காட்டிருக்கையைச் சேர்ந்த கும்பனூர் என்று கூறப்படுகின்றது. இங்குள்ள இன்னொரு சாசனம், இக்கும்பனூரையும், குரந்தி, குன்றத்தூர், புத்தூர் என்னும் ஊர்களையும் அரசாண்ட சிற்றரசன் சோழகோன் என்பவனையும் புகழ்ந்து கூறுகிறது.179

இருப்பைக்குடி: சாத்தூர்த் தாலுகாவில் உள்ள எருக்கங்குடிக்கு அரைக்கால் மைலில் உள்ள ஏரிக்கு மேற்கில் ஒரு பாறையில் உள்ள வட்டெழுத்துச் சாசனம் உள்ளது. இச்சாசனம் பாண்டியன் சடையன் மாறன் ஸ்ரீவல்லபனது 18 ஆவது ஆண்டில் எழுதப்பட்டது. இவ்வரசனுக்குக் கீழ்ப்பட்டிருந்த ‘இருப்பைக்குடி கிழவன் என்பவன் ‘பெரியபள்ளியைக் கட்டிப் ‘பாழிக்குளம் என்னும் ஏரியைப் பழுதுபார்த்த செய்திகள் இதில் கூறப்படுகின்றன. இருப்பைக்குடி கிழவனுக்கு ‘எட்டிசாத்தன் என்னும் பெயரும் இருந்ததாகத் தெரிகிறது. இவன் சமணனாக இருக்கவேண்டும் இவன் கட்டிய ‘பெரிய பள்ளியும் சமணக் கோயில் என்பதில் ஐயமில்லை.180

பிரான்மலை: திருப்பத்தூர்த் தாலுகா பிரான்மலையில் உள்ள மங்கைநாதர் கோயிலில் சாசனங்கள் உண்டு. இச்சாசனம். ‘கடலடையாதிலங்கை கொண்ட சோழவள நாட்டு தென்கோ நாட்டு இடையாற்றூர் பள்ளிச்சந்த நிலங்களைக் குறிப்பிடுகிறது.181 இங்குள்ள மற்றொரு சாசனம், ‘கூடலூரான ஐஞ்ஞூற்றுவ மங்கலத்துப் பள்ளிச்சந்த நிலங்களைக் கூறுகின்றது.182 பள்ளிச்சந்தம் என்பது சமணப் பள்ளிக்குரிய நிலங்களாகும்.

இளையான் குடி: பரமக்குடி இரயில் நிலையத்துக்கு 7 மைலில் உள்ளது இவ்வூர். (இவ்வூரில் சைவ அடியாரான இளையான்குடி மாற நாயனார் இருந்தார்.) இவ்வூர் சிவன் கோயிலுக்கு வெளியே சமணத் திருவுருவம் ஒன்று காணப்படுகிறது. இதனை ‘அமணசாமி (சமணக் கடவுள்) என்று கூறுகிறார்கள். இவ்வூரார் வெள்ளிக்கிழமை தோறும் இந்த அமணசாமியைப் பூசித்து வணங்கிவருகின்றனர். இதனால், முற்காலத்தில் இங்குச் சமணர் இருந்திருக்கவேண்டும் என்பது அறியப்படுகிறது. மஞ்சபுத்தூர்ச் செட்டிமார்கள் வழிபட்டு வருகின்றனர். இவ்வூர் ஏரிக்கரையில் ஒரு சமண உருவம் காணப்படுகிறது.183

பள்ளி மடம்: அறுப்புக்கோட்டைத் தாலுகாவில் உள்ள இக் கிராமம் பண்டைக் காலத்தில் சமணர் கிராமமாக இருந்திருக்க வேண்டும் எனத் தெரிகிறது. இக்கிராமத்தின் பண்டைப் பெயர், ‘திருப்பருத்திக்குடி நாட்டுத் திருச்சுழியில் பள்ளி மடை என்பது. இங்குள்ள கலாநாதசுவாமிகோயில் சாசனம் ஒன்றில், வேம்பு நாட்டுக் குரத்தி திருக்காட்டம்பள்ளி தேவர் என்னும் சமணக் கோயிலில் நந்தா விளக்குக்காகச் சாத்தன்காரி என்பவர் ஐம்பது ஆடுகளைத் தானம் செய்த செய்தி கூறப்படுகிறது.184

அனுமந்தகுடி: இராமநாதபுரத்துக்கு வடக்கே 371/2 மைலில் உள்ளது. திருவாடானைத் தாலுகாவில் உள்ள இக்கிராமத்தில் மழவநாத சுவாமி கோயில் என்னும் சமணக் கோயில் உண்டு. இக் கோயிலின் எதிரில் உள்ள உடைந்து போன சாசனம் சகம் 1455 (கி.பி 1535) இல் விஜயநகர அரசன் (பெயர் காணப்படவில்லை) காலத்தில் எழுதப்பட்டது. இதில், ‘முத்தூற்றுக் கூற்றத்து அஞ்சுகோட்டை என்னும் ஊரும், ஷ முத்தூற்றுக் கூற்றத்து ‘குருவடிமிடி...........என்னும் ஜினேந்திரமங்கலம் என்னும் ஊரும் குறிக்கப்பட்டுள்ளன. ஜினேந்திரமங்கலம் என்னும் பெயர் இங்குச் சமணர் இருந்தனர் என்பதை விளக்குகின்றது.185 இப்போதும் சமணக்கோயில் உளது.186 இயக்கி கோமடேசுவரர் முதலிய நான்கு செம்புவிக்கிரகங்களும் உள்ளனவாம்.

திருக்களாக்குடி: திருப்பத்தூர்த் தாலுகாவில் உள்ள இவ்வூர், திருப்பத்தூருக்குப் பதினேழு மைல் சேய்மையில் உள்ளது. இங்கு மலையும் கோயிலும் உண்டு. இக்கோயில் பண்டைக்காலத்தில் ஆருகதக் கோயிலாக இருந்திருக்க வேண்டும். இப்போது சைவக் கோயிலாக உள்ளது. இக்கோயிலில், பார்சுவநாத சுவாமியின் திருமேனி ஒன்று வீற்றிருப்பதுபோன்று அமைக்கப்பட்டுள்ளது. இத்திரு மேனியின் தலைக்குமேல் ஐந்தலை நாகமும் காணப்படுகிறது.187

இந்த மாவட்டத்தில் இரணியூர், இளையாத்தங்குடி, நாச்சியாபுரத்துக்கு ஒரு மைலில் உள்ள நடுவிகோட்டை என்னும் ஊர்களில் பண்டைக்காலத்தில் சமணர் இருந்தனர் என்பதற்குச் சான்றுகள் உள.188

பெரியபட்டினம்: இராமநாதபுரம் இரயில் நிலைத்திலிருந்து தென்கிழக்காகப் பத்து மைலில் உள்ள கடற்கரைக் கிராமம். இங்குச் சமண உருவச்சிலைகள் காணப்படுகின்றன.189

தேவிபட்டினம்: இராமநாதபுரம் தாலுகாவில் உள்ளது. இவ்வூரில் உள்ள திலகேசுவரர் கோவில் சாசனம், ‘‘இடைக்குள் நாட்டுச் செழுவனூரான சத்துரு பயங்கர நல்லூரும், கிடாரமான கிடாரங் கொண்ட சோழபுரமும், கொழுவூர் நாட்டுக் கிளியூரும் ஆகிய இவ்வூர் நான்கெல்லைக் குட்பட்ட நிலத்தில்’’ இருந்த பள்ளிச் சந்தத்தைக் கூறுகிறது.190 இதனால் இங்கே சமணர் இருந்தனர் என்பது தெரிகிறது.

கிடாரம்: இராமநாத புரத்துக்குத் தென்மேற்கே 14 மைலில் உள்ளது. இந்தக் கிராமத்தின் தெற்கே ஒரு சமண உருவம் இருக்கிறது.191

கோவில்குளம்: இராமநாதபுரத்துக்குத் தென்மேற்கில் 34 மைலில் உள்ளது. இங்கு இரண்டு சமணத் திருவுருவங்கள் உள்ளன.192

குலசேகர நல்லூர்: (நல்லூர்) திருச்சூளை என்னும் இடத்திலிருந்து மேற்கே 8 மைலில் உள்ளது. இராமநாதபுரத்திலிருந்து வடமேற்கே 50 மைலில் உள்ளது. இங்கு இடிந்துபோன ஒரு சிவன் கோயில் உண்டு. இந்தக் கோயில் முன்பு சமணக் கோயிலாக இருந்ததென்று கூறுப்படுகிறது. இந்தச் கிராமத்தில் சமணர் இருந்தனர் என்றும் குலசேகர பாண்டியன் அவர்களைத் துரத்திவிட்டு இக்கோயிலைச் சைவக் கோயிலாகச் செய்தான் என்றும் ஊரார் கூறுகின்றனர்.193

மஞ்சியூர்: இராமநாத புரத்திலிருந்து வடமேற்கே 15 மைலில் உள்ளது. இக் கிராமத்தின் மேற்கே ஒரு பர்லாங்கில் ஒரு சமணத் திருவுருவம் இருக்கிறது.194

செலுவனூர்: செல்வநல்லூர் என்றும் கூறப்படும். முதுகுளத்தூருக்குத் தென்கிழக்கில் 91/2 மைலில் உள்ளது. இராமநாதபுரத்திற்குத் தென்மேற்கே 23 மைலில் உள்ளது. இக்கிராமத்திற்கு மேற்கே குடிகள் அற்ற ஒரு கிராமத்தில் ஒரு சமணத் திருமேனி இருக்கிறது.195

9. மதுரை மாவட்டம்

பண்டைக் காலத்திலே மதுரையிலே சமணசமயம் சிறப்படைந்திருந்தது. மதுரையைச் சூழ்ந்துள்ள மலைகளிலும் பாறைகளிலும் செதுக்கப்பட்டுள்ள பிராமி எழுத்துக்கள், கி.மு. இரண்டாம் நூற்றாண்டிலேயே அங்குச் சமணர் இருந்தார்கள் என்பதைத் தெரிவிக்கின்றன. மூர்த்தி நாயனார் காலத்திலே இங்குச் சமண சமயம் இருந்த செய்தியைப் பெரிய புராணம் கூறுகிறது.

ஞானசம்பந்தர் காலத்திலே பாண்டி நாட்டில் சமண சமயம் மிகச் சிறப்புற்றிருந்தது. கூன்பாண்டியன் என்னும் நெடுமாறனும் சமணசமயத்தை மேற்கொண்டிருந்தான். ஆகவே பாண்டி நாட்டில் சமணசமயம் தலைதூக்கி நின்றது. இச் செய்தியைப் பெரியபுராணம் இவ்வாறு கூறுகிறது:

‘‘பூழியர் தமிழ்நாட்டுள்ள
பொருவில்சீர்ப் பதிகள் எல்லாம்
பாழியும் அருகர் மேவும்
பள்ளிகள் பலவு மாகிச்
சூழிருட் குழுக்கள் போலத்
தொடைமயிற் பீலி யோடு
மூழிநீர் கையிற் பற்றி
அமணரே யாகி மொய்ப்ப.’’

‘‘பறிமயிர்த் தலையும் பாயும்
பீலியும் தடுக்கும் மேனிச்
செறியுமுக் குடையு மாகித்
திரிபவர் எங்கு மாகி
அறியும் அச் சமய நூலின்
அளவினில் அடங்கச் சைவ
நெறியினிற் சித்தஞ் செல்லா
நிலைமையில் நிகழுங் காலை.’’

இவ்வாறு சமணர் ஆதிக்கம் மிகுந்திருந்த பாண்டி நாட்டில் ஞானசம்பந்தர் சென்று, பாண்டியனுக்கு வெப்பு நோயை உண்டாக்கிப் பின்னர் அந்நோயைத் தீர்த்துப் பாண்டியனைச் சைவசமயத்தில் சேர்த்தார். பாண்டியன் நீறுபூசிச் சைவனானான். இதனை யறிந்த நாட்டுமக்களும் நீறணிந்து சைவர் ஆனார்கள் என்று பெரியபுராணம் கூறுகிறது.

‘‘தென்னவன் தனக்கு நீறு
சிரபுரச் செல்வர் ஈந்தார்
முன்னவன் பணிந்து கொண்டு
முழுவதும் அணிந்து நின்றான்
மன்னன்நீ றணிந்தான் என்று
மற்றவன் மதுரை வாழ்வார்
துன்னிநின் றார்கள் எல்லாம்
தூயநீ றணிந்து கொண்டார்.’’

இதனோடல்லாமல், ஞானசம்பந்தர் சமணருடன் வாதப்போர்செய்து தோல்வியுறச் செய்து அவர்களைக் கழுவில் ஏற்றினார். சமணருடைய பாழிகளும் பள்ளிகளும் தகர்த்து அழிக்கப்பட்டன.

‘‘பூழியன் மதுரை யுள்ளார்
புறத்துளர் அமணர் சேரும்
பாழியும் அருகர் மேவும்
பள்ளியும் ஆன எல்லாம்
கீழுறப் பறித்துப் போக்கிக்
கிளரொளித் தூய்மை செய்தே
வாழியப் பதிகள் எல்லாம்
மங்கலம் பொலியச் செய்தார்.’’

என்று பெரிய புராணம் கூறுகிறது. இவ்வாறு பெரிய புரணம் கூறுவதைக்கொண்டு அக் காலத்திலேயே சமண சமயம் பாண்டி நாட்டில் அழிந்துவிட்டது என்று கருதக் கூடாது. ஏனென்றால், ஞானசம்பந்தர் காலத்திற்குப் பிறகு பல நூற்றாண்டுவரையில் சமணசமயம் பாண்டி நாட்டில் இருந்த செய்தி கல்வெட்டுக்களினால் தெரிகிறது. ஞானசம்பந்தர் காலத்தில் பாண்டிநாட்டிலே சமணசமயத்தின் ஆதிக்கம் குறைவுபட்டுப் பின்னர்ப் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு அச்சமயம் மறையத்தொடங்கிற்று என்று கருதவேண்டியிருக்கிறது.

இனி மதுரையைச் சூழ்ந்திருந்த எட்டுச் சமண மலைகளை ஆராய்வோம். மதுரையைச் சூழ்ந்து எட்டுமலைகள் உள்ளன என்றும் அவ்வெட்டு மலைகளிலும் எண்ணாயிரம் சமணமுனிவர் இருந்தனர் என்றும் கூறப்படுகின்றன. ஒருமலையில் ஆயிரம் சமணமுனிவர் வீதம் எட்டு மலைகளில் எண்ணாயிரம் முனிவர் வாழ்ந்திருந்தார்கள். ஆயிரம் முனிவர் என்று கூறுவது குறிப்பிட்ட தொகையையன்று; பெருந்தொகையினர் என்பது கருத்து. எட்டுமலைகளில் எண்ணாயிரவர் என்றால் எட்டுமலைகளில் தவஞ்செய்திருந்த பெருந்தொகையான சமண முனிவர்கள் என்பது கருத்து. இந்த எட்டுமலைகளில் இருந்த எண்ணாயிரம் சமணரும் கழுவேறி னார்கள் என்று பெரியபுராணம் கூறுகிறது. ‘‘எண்பெருங்குன்றத்து எண்ணாயிரவரும் ஏறினார்கள்’’ என்பது பெரியபுராண வாசகம்.

தக்கயாகப் பரணியிலும் எண்பெருங் குன்றங்கள் கூறப்படுகின்றன.

‘‘தேவப் பகைவர் நம்முடம்பு
வீங்கத் தூங்கும் வெங்கழுவிற்
சேதப்படும் எண்பெருங் குன்றத்
தெல்லா வசோகும் எரிகெனவே.’’ (218-ஆம் தாழிசை.)

இதற்குப் பழைய உரை இவ்வாறு கூறுகிறது. ‘‘எண் பெருங்குன்றாவன: யானைமலையும் நாகமலையும் சுணங்க மலையும், செப்புமலையும்..........வெள்ளிமலையுமென மதுரையைச் சூழ்ந்திருப்பன என உணர்க’’

இவ்வுரையில், மதுரையைச் சூழ்ந்திருந்த ஐந்து சமணர் மலைகளின் பெயர்கள் கூறப்படுகின்றன. மூன்று மலைகளின் பெயர்கள் ஏட்டில் சிதல் அரித்துவிட்டபடியினாலே மறைந்து விட்டன. இப்பெயர்களில் சுணங்கமலை, செப்புமலை, வெள்ளி மலை என்பன எவை என்பது தெரியவில்லை. யானைமலையும் நாகமலையும் மதுரைக்கருகில் உள்ளன.

சமணர் வழங்கிவரும் ஒருசெய்யுள் எட்டுமலைகளின் பெயரைக் கூறுகிறது. அச்செய்யுள் இது:

‘‘பரங்குன் றொருவகம் பப்பாரம் பள்ளி
யருங்குன்றம் பேராந்தை யானை - இருங்குன்றம்
என்றெட்டு வெற்பும் எடுத்தியம்ப வல்லார்க்குச்
சென்றெட்டு மோபிறவித் தீங்கு.’’

இதில் கூறப்படும் எட்டு மலைகளில் பரங்குன்றம், யானைமலை, இருங்குன்றம் (அழகர்மலை அல்லது சோலை மலை) மதுரைக்கருகில் உள்ளன. மற்ற ஒருவகம் பப்பாரம் பள்ளி அருங்குன்றம் ஆந்தைமலை என்பவை எந்த மலைகள் என்று தெரியவில்லை. ஆயினும், கல்வெட்டுச் சான்று இலக்கியச் சான்று முதலியவற்றைக்கொண்டு எண்பெருங் குன்றங்கள் எவை என்பதை ஆராய்வோம்.

யானைமலை: இது மதுரைக்குக் கிழக்கே 6 மைல் தூரத்தில் உள்ள ஒரு குன்று. இதில் யானைகள் வாழ்ந்திருப்பதனாலே இதற்கு இப்பெயர் வந்ததென்று இப்பெயரைக்கொண்டு கருத இடமுண்டு. ஆனால், உண்மை இதுவன்று. யானையொன்று கால்களை நீட்டிக்கொண்டு படுத்திருப்பதுபோல இந்த மலையின் உருவம் அமைந்திருக்கிறபடியினாலே இதற்கு இப்பெயர் ஏற்பட்டது. இந்த மலை சமணர்களின் எண்பெருங் குன்றுகளில் ஒன்று. ஞானசம்பந்தர் தமது திருவாலவாய்ப் பதிகத்தில், இந்த யானைமலையிலும் ஏனைய இடங்களிலும் சமணர் இருந்த செய்தியைக் குறிப்பிடுகிறார்.

யானைமலையில் குகைகளும், அவற்றில் பிராமி எழுத்துக்களும் காணப்படுகின்றன. இந்த எழுத்துக்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே எழுதப்பட்டவை என்று சாசன ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். இங்குள்ள குகைகளிலே சமண முனிவர்கள் வாழ்ந்திருந்தார்கள். பிற்காலத்திலே, ஞானசம்பந்தருக்குப் பிறகு, இந்த மலையில் நரசிங்கப்பெருமாள் ஆலயம் ஒன்று கட்டப்பட்டது. பின்னர் இம்மலையிலிருந்து சமண முனிவர்கள் இவ்விடத்தை விட்டுப் போய்விட்டார்கள் போலும்.

இப்பொழுது யானைமலையில் நரசிங்கப்பெருமாள் கோயில் இருக்கிறது. இக்கோயிலில் உள்ள கல்வெட்டுச் சாசனத்திலிருந்து இக்கோயில் கி.பி. 770 இல் உண்டாக்கப்பட்டதாகத் தெரிகிறது. இச்சாசனங்களில் ஒன்று வடமொழியிலும் மற்றொன்று தமிழ் வட்டெழுத்திலும் எழுதப்பட்டுள்ளன. தமிழ்ச் சாசனம் வருமாறு:

‘‘கோமாறஞ் சடையற்கு உத்தர மந்திரி களக்குடி வைத்தியன் மூவேந்த மங்கலப் பேரறையன் ஆகிய மாறங் காரி இக் கற்றளி செய்து நீர்த்தளியாதே சுவர்க்கா ரோகணஞ் செய்த பின்னை அவனுக்கு அனுஜன் உத்தர மந்த்ரபதம் எய்தின பாண்டிமங்கல விசையதரையன் ஆகிய மாறன் எயினன் முகமண்டபஞ் செய்து நீர்த்தளித்தான்.196

இந்தச் சாசனத்திலிருந்து நாம் தெரிந்துகொள்ளுவது என்ன வென்றால், மாறஞ்சடையன் என்னும் பாண்டியன் காலத்தில் அவனுடைய அமைச்சர்களாக இருந்த மாறன் காரியும் அவன் நம்பி மாறன் எயினனும் யானை மலையிலே நரசிங்கப் பெருமாளுக்குக் கோயில் அமைத்தனர் என்பது. இந்த மலையைப்பற்றி மற்றும் தெரிந்து கொள்ள விரும்புவோர் எபிகிராபி அறிக்கையில் கண்டு கொள்க.197

பௌத்தக் கோயில்களையாவது சமணசமயக் கோயில்களை யாவது வைணவர் கைப்பற்றிக் கொள்வதாக இருந்தால், அந்தக் கோயில்களில் நரசிங்கப் பெருமாளை அமைப்பது வழக்கம். இந்த முறைப்படி சமணர்கள் இருந்த யானை மலையைக் கைப்பற்று வதற்கு வைணவர்கள் அதன்மேல் நரசிங்கப் பெருமாளுக்குக் கோயில் அமைத்தார்கள். பிறகு இது ‘‘இந்து’’க்களின் மலையாக மாறிவிட்டது. இந்தச் செய்திகயைப் பிற்காலத்தவர் கதையாகக் கற்பித்துப் புராணம் எழுதிவிட்டார்கள். அதுதான் திருவிளையாடற் புராணத்தில் யானை எய்த படலம் என்பது.

மதுரைமா நகரத்தை அழிக்கும் பொருட்டும் சமணர்கள் தமது மந்திரசக்தியால் ஒரு யானையை உண்டாக்கி அனுப்பினார்கள் என்றும், சோமசுந்தரக் கடவுள் அந்த யானையை நரசிங்க அம்பு எய்து கொன்றார் என்றும், கொல்லப்படட அந்த யானை மலையாகச் சமைந்துவிட்டது என்றும் இப்புராணக்கதை கூறுகிறது. இப்புராணத்தின் உள்பொருள் என்னவென்றால், யானைமலையில் சமணர் இருந்தார்கள் என்பதும் அவர்கள் மதுரையில் அதிகம் செல்வாக்குடையவராக இருந்தார்கள் என்பதும் அவர்கள் செல்வாக்கையடக்க அவர்கள் இருந்த யானைமலைமீது நரசிங்கப் பெருமாள் கோயில் அமைக்கப்பட்டதென்பதும் ஆகும்.

நாகமலை: இதுவும் மதுரைக்கு அருகில் உள்ள ஒரு மலை. பாம்பின் உருவத்தை ஒத்திருப்பதனால் இந்த மலைக்கு நாகமலை எனப்பெயர் உண்டாயிற்று. இந்த மலையின் மேலும் சமண முனிவர்கள் பண்டைக்காலத்தில் இருந்தனர். பிற்காலத்தில் இங்கிருந்த சமணமுனிவர்களை ‘இந்து சமயத்தார் துரத்திவிட்டனர். பிறகு ஒருபுராணக் கதையைக் கற்பித்துக் கொண்டு, ‘‘நாகமெய்தபடலம்’’ என்ற பெயரிட்டனர். சமணர், மதுரைமா நகரத்தை அழிப்பதற்காக ஒருபெரிய பாம்பைத் தமது மந்திரசக்தியினால் உண்டாக்கி அதை மதுரை நகரத்தில் ஏவினார்கள் என்றும் சொக்கநாதப் பெருமான் அந்தப் பாம்பை அம்பு எய்து கொன்றார் என்றும் இறந்த அந்தப் பாம்பு கல்லாகச் சமைந்து விட்டது என்றும் அப்புராணம் கூறுகிறது.

யானைமலை நாகமலையைப் பற்றிய கதைகள் வெவ்வேறு காலத்தில் வெவ்வேறு விதமாக வழங்கப்பட்டதைச் ‘சில புராணக் கதைகள் என்றும் தொடர்புரையில் காண்க.

இடபகிரி: இதற்குச் சோலைமலை என்றும் பெயர் உண்டு. தண்டலைமைலை (தண்டலை = சோலை) என்று திருவிளையாடற் புராணங் கூறுகிறது. திருமாலிருஞ்சோலை என்றும் இதற்குப் பெயர் உண்டு. ‘‘ஓங்கிருங்குன்றம்’’, ‘‘சோலையொடு தொடர்மொழி மாலிருங் குன்றம்’’ என்று பரிபாடலில் இம்மலை கூறப்படுகிறது. இது இப்போது யானைமலையைப் போலவே வைணவத் திருப்பதியாக இருக்கிறது. பண்டைக் காலத்தில் இந்த மலையில் சமணர்கள் இருந்தார்கள் என்பதை இங்குள்ள குகைகளும் பிராமி எழுத்துக்களும் சான்று கூறுகின்றன. இதனை எபிகிராபி அறிக்கையில் காணலாம்.198

யானைமலையிலிருந்தும் நாகமலையிலிருந்தும் சமணர் துரத்தப்பட்டதுபோலவே இம்மலையிலிருந்தும் சமணர் துரத்தப்பட்டனர். பிறகு, இந்த மலைக்கும் ஒரு புராணக் கதையைக் கற்பித்துக் கொண்டனர். சமணர் தமது மந்திர சக்தியினால் ம