புண்ணிய புருடர்களாக, துவாரகாபுரிக்கு வந்த பாண்டவர்கள், மூவுலக நாதனான ஸ்ரீநேமி பகவானை தரிசிக்கும் ஆவல் மிக்கவராய், அவர் இருக்கும் இடம் சார்ந்து, அவர் திருக்கோலம் கண்டு, விம்மித முற்றுப் பக்திப் பரவசமாகி, அவர் திருவடிகள் தம் முடிகளில் படும்படி பலகாலம் விழுந்து வணங்கி,
மூவுலக நாதனே! நீ வெற்றி காண்க!
என உள்ளம் கசிந்துருகப் பாடித் துதி செய்தனர். அப்பொழுது புண்ணியசாலியான தருமநந்தர், ஆரா அன்புடையவராய், மீண்டும், பகவானை வணங்கி எழுந்து, எல்லா உலகங்கட்கும் தலைவனான ஸ்ரீநேமி சுவாமியே!
துதி
இன்றும்மை யாம்கண்ட தாலே எந்தம்
போதமுறு வைகரைப்போ(து) அன்பின் வந்தும்
நின்னருள்சேர் திருப்பார்வை பட்ட பேரின்
இந் நாவலந்தீவின் பரத கண்டத்து மதுராபுரி என்னும் நகரை சூரசேனன் என்னும் மன்னன் ஒருவன் ஆண்டு வந்தான். அந்நகரத்தே எத்திக்கும் பரவிய கீர்த்திமிக்க பானுதத்தன்' என்னும் பெயருடைய சிறந்த வணிகன் ஒருவன் இருந்தான். அவன் மனைவி, *யமுனை* என்பவள். இவ்விருவரின் இல்லற வாழ்வின் நன்மணிகள் என ஏழு புதல்வர்கள் பிறந்தனர். அவர்கள் முறையே, பானு, பானுகீர்த்தி, சுபானு, பானுசேனன்,சூரதேவன், சூரமித்திரன், சூரகேதனன் ஆவர். இப்புதல்வர் யாவரும் நன்முறையில் வளர்ந்து வருவதைக் கண்ட பெற்றோர் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தனர்.
அரசனுடன் பானுதத்தன் துறவு பூணல்:
வணிகர் தலைவனான பானுதத்தன் அரசனிடம் மிகவும் கேன்மை பூண்டவன். ஆதலின் அனைவராலும் மதிக்கப்படலாயினன். அவன் ஒருநாள் அரசனோடும், தன் மனைவியுடனும், புதல்வர்கள் எழுவரும் தன்னைச் சூழ்ந்துவர, நகரத்தின் அண்மையில் இருந்த காட்டிற்குச் சென்றான். ஆங்கு அபிநந்தனர் என்னும் தவத்தோரைரைக் கண்டு சிறந்த பக்தி கொண்டு முறைப்படி வணங்கி, அவரிடம் திருவறத்தின் பெருமைகளை உரைக்கக் கேட்டு மனத்தெளிவடைந்தான். அதனால் பிறவிக்குக் காரணமான அகப்பற்று புறப்பற்றுக்களை விட்டொழித்து, அனசனம் முதலாகிய பன்னிருவகை தவங்களையும் கை கொண்டு துறவற நெறியில் சலியாது நின்றான்; அரசனும் அவனைப் பின்பற்றி தவ ஒழுக்கில் நிலை பெற்றான்.
புதல்வர் எழுவரும் கள்ளராகி உச்சயினியில் நுழைதல்:
இவர் நிலை இவ்வாறாக, வணிகன் புதல்வர் எழுவரும், தந்தை துறவுக்குப் போனபின் பெற்றோரது கட்டுப்பாட்டினை இழந்து, தம் மனம் போனபடி, ஏழுவகைத் தீச்செயல்களிலும் (வியசனங்கள்) ஈடுபட்டவர்களாகித் தந்தை ஈட்டி வைத்த செல்வங்களையும், வீட்டையும் சூதாட்டத்தில் இழந்து போயினர். பின்னர் அந்நகரினின்றும் வெளியேறி, பணத்தாசையால் களவுத் தொழிலைச் செய்து பிழைக்கத் தொடங்கினர். இவ்வாறு அவர்கள் ஒரு சமயம் *உச்சயினி* நகரத்தை அடைந்தனர். அங்கு அனைவரும் தாம் களவாடிக் கொணர்ந்த பெரும் பொருளை, அந்நகரின் மயானத்திற்கு அருகில் ஓங்கி பரவி வளர்ந்திருந்த பெரியதோர் ஆலமரத்தின் கீழே புதைத்து வைத்துவிட்டு, அதற்குக் காவலாகத் தன் இளைய தம்பியாகிய சூரகேதனன் என்பவனை இருக்கச் செய்தபின், மற்ற அறுவரும், களவு நூலறிவு பெற்ற தம் திறமை வெளிப்படும்படி, அன்றைய இரவே, பெரும் பொருளாசையினால் களவாடி வர அந்நகரத்துள் நுழைந்து மறைந்து போயினர்.
மாமியார் கொடுமை:
இவ்வாறிருக்க, அந்நகரத்தில் நடந்த வேறொரு நிகழ்ச்சியைக் காண நேயர்களை அழைக்கிறோம்.
அந்நகரத்தில், திடரதன் என்னும் புகழ் படைத்த படைத்தலைவன் ஒருவன் இருந்தான். அவன் மனைவி வப்ரஸ்ரீ என்பவள். அவ்விருவருக்கும் வச்சிரமுஷ்டி என்னும் புதல்வன் ஒருவன் இருந்தான். அவ்வச்சிர முஷ்டியின் மனைவி மங்கி என்பாள். இவள் அழகின் இருப்பிடமாய் விளங்கினாள்; அரசன் புதல்வியாகிய இவள், இயல்பாகவே தன் அழகாலும் செல்வத்தாலும் செருக்குற்று நடந்து வந்தாள். இந்நிலையில் திடரதன் இறந்து போனான். விதவையாகிவிட்ட அவன் மனைவி வப்ரஸ்ரீ தன் மருமகள் மங்கியிடம் தன் புதல்வனுக்கு ஏற்பட்டிருந்த மிகுந்து அன்பினைப் பார்த்து கவலைப்பட்டாள். "என் புதல்வன் தன் மனைவியின் வசமாகி அவள் சொற்படியே நடந்து வருகிறான், அவளும் கருவம் கொண்டு அடக்க குணம் சிறிதுமின்றி இருக்கிறாள். என் அதிகாரம், என்னிடமிருந்து பறிபோய் விட்டால் நான் என்ன செய்வேன்?" என்று சிந்திக்கத் தலைப்பட்டாள்.
பூக்களின் கீழே பூநாகம்:
பொதுவாகவே இப்படிப்பட்ட
எண்ணம் எல்லாப் பெண்களுக்கும் தோன்றுவது இயல்பே ஆயினும், வப்ரஸ்ரீ உள்ளத்தில் ஏற்பட்ட
இந்த எண்ணம், அவளை, மிகவும் கொடியவளாக விரைவில் மாற்றி விட்டது. எவ்வாறேனும், மங்கியைத்
தன் மகனிடமிருந்து நிரந்தரமாகப் பிரித்து விட வேண்டும் என முடிவு செய்தாள். அதன்படி அவள், தன் மருமகள் தன் தாய் வீட்டிற்குச்
சென்றிருந்த சமயத்தைப் பயன்படுத்தி , அவள் திரும்பி வருவதை அறிந்து, குடம் நிறைய மணமுள்ள
மலர்களை நிரப்பி, அவற்றின் கீழே கொடிய விஷ நாகம் ஒன்றை புகவிட்டு, மருமகளின் வரவை எதிர்
நோக்கி இருந்தாள்.
நங்கையைத் தீண்டியது நாகம்:
தாய் வீட்டிற்குச் சென்றிருந்த
மங்கி, அன்றே கணவன் இல்லத்திற்கு திரும்பினாள். வந்தவள், வீட்டில் பூக்கள் நிறைந்த
குடத்தை பார்த்தாள். அதனுள் விஷப் பாம்பு இருப்பதை அறியாதவளாய், மாலை தொடுப்பதற்கு
எண்ணி, அதில் கையை விட்டாள். அவ்வளவிலே, அப்பாம்பு அவளைக் கொத்தியதும், அவள் மூர்ச்சையுற்றுக்
கீழே விழுந்தாள்.
பிணம் இடுகாட்டில்:
பாம்பால் தீண்டப்பட்ட
மங்கி, விஷம் தலைக்கேறி வேரற்ற கொடி போல மூர்ச்சையுற்று விழுந்ததைக் கண்ட வப்ரஸ்ரீ,
தான் எண்ணி திட்டமிட்டபடியே மருமகள் உயிர்
துறந்தாளெனக் கருதி, வெளியூர் சென்றிருந்த தன் மகன் வருவதற்குள் பிணத்தை அப்புறப்படுத்திவிட
நினைத்து, இரகசியமாக பணியாட்கள் சிலரை வரவழைத்து, வைக்கோல் புரிகொண்டு அவளைச் சுற்றி
மூடி யாரும் அறியாவண்ணம் பிணத்தைச் சுடுகாட்டில் எறிந்து விட்டு வரும்படிப் பணித்தாள்.
அவர்களும் வப்ரஸ்ரீ சொல்லியபடியே செய்து முடித்துவிட்டுத் தமதிடம் சேர்ந்தனர்.
மனைவி இறந்ததைக் கணவன் அறிதல் :
வெளியூர் சென்றிருந்த வஜ்ரமுஷ்டி,
வீடு திரும்பினான். வீட்டினுள் நுழையும் போதே மனைவியின் மேல் அன்பு மிக்கவனாதலின்,
"மங்கீ! மங்கீ!" என்று அழைத்துக்
கொண்டே வந்தான். அவனை கண்டதும் வப்ரஸ்ரீ உள்ளூர நடுக்கமடைந்து, "மகனே! நான் எதைச்
சொல்வேன்? உன் மனைவி மங்கி, பூ வைத்திருந்த
குடத்தில் கையை வைத்தாள். அப்போது அதிலிருந்த விஷப் பாம்பினால் கடிபட்டு இறந்துபோனாளப்பா!
அவள் மேல் எனக்கிருந்த அன்பின் காரணமாக, அவள் உடலை கொளுத்தவும் மனமின்றி, அரசனுக்கு
தெரிந்தால் விபரீதம் ஆகுமென அஞ்சி அவள் உடலை அப்படியே மயானத்தில் சேர்ப்பிக்கும்படி
செய்து விட்டேன்" என்று சொல்லி பொய்யாக வேனும் கண்ணீர்விட்டுப் புலம்பி அழுதாள்.
கணவன் கத்தியுடன் கானகம் சேரல்:
தாய் பொய்ம்மொழியை, உண்மையென்றே
நம்பிய புதல்வன், மனைவிமேல் கொண்ட மோகத்தால், அவள் பிணத்தைத் தேடிக் காண வேண்டுமென்னும் ஆவலால், நீளமான பெரிய கத்தி
ஒன்றைத் தன் பாதுகாப்புக்காகக் கையில் எடுத்துக்கொண்டு
அவ்விரவிலேயே காட்டுக்குள் புகுந்து தேடலானான். அவ்வாறு தேடிச் சென்றபோது, அங்கு ஓரிடத்தில்
ஆத்ம தியானத்தில் ஆழ்ந்திருந்த சுதருமர் என்னும் முனிவர் ஒருவரைக் கண்டு அருகில் சென்று
அவரது திருவடிதொட்டு வணங்கி நின்று, "சுவாமி! உமது அருளால் நான் என் மனைவியை இந்தக்
காட்டில் தேடி அடையப் பெற்றேனாகில், உம் திருவடிகளில் ஆயிரத்தெட்டு மலர்களையிட்டு அருச்சனை
செய்கிறேன்" என்று பிரார்த்தனை செய்தான்.
மங்கி பிழைத்தெழுதல்:
அவ்வேளையில், தற்செயலாக
வீசிய காற்று *ஔஷத ரித்தி* பெற்ற அம்முனிவரரின் உடல் மேல்பட்டுச் சென்று, சற்றுத்
தொலைவில், விஷத்தால் மூர்ச்சையுற்றுக் கிடந்த மங்கியைத் தழுவியது. அதனால் விஷம் நீங்கி,
மூர்ச்சை தெளிந்தெழுந்த மனைவியைக் கண்ட வஜ்ரமுஷ்டி, முனிவர் அருளாலேயே தன் மனைவி உயிர் பெற்றெழுந்தாள்
என நினைத்து அளவிலா மகிழ்ச்சி பொங்க, ஓடோடிச் சென்று அவளை ஆசைப் பெருக்கினால் மார்புறத்
தழுவி கண்ணீர்விட்டுக் கதறினான். அம் முனிவரின் தவ வலிமையாலே இறந்து போன தன் மனைவியை
உயிர் பெற்றெழுந்தாள்' என நம்பிய மூடனாகிய வஜ்ரமுஷ்டி, தனது பிரார்த்தனையை அப்பொழுதே
நிறைவேற்றிட வேண்டும் என நினைத்து, அப்பெண்ணை, அம்முனிவர் அருகிலேயே இருக்கும்படி சொல்லிவிட்டுத்
தாமரை மலர்கள் பறித்து வரும் பொருட்டு, கத்தியுடன் பிரிந்து சென்றான்.
சூரகேதனக் கள்ளன், மங்கியிடம் இச்சகம் பேசல்:
இவ்வளவு நிகழ்ச்சிகளையும், அங்கிருந்த பெரிய ஆலமரத்தின்
அடியிலே அமர்ந்து கவனித்துக் கொண்டிருந்த, கள்ளன் சூரகேதனன் இந்தப் பெண்ணின் மனோதிடத்தைச்
சோதித்துப் பார்ப்போம் என எண்ணித் தனியாக இருந்த மங்கியின் அருகில் வந்து நின்றான்.
அவனைக் கண்ட மங்கி, சற்று துணுக்குற்று, பின் ஒருவாறு தெளிந்து, "ஐயா! நீர் யார் ? இந்த இருளில் இங்கே எதற்காக
வந்து நிற்கிறீர்?" எனக் கேட்டாள்.
அதற்கு சூரகேதனன்,
அவள் அருகில் சற்று நெருங்கி நின்று,
"அழகு மங்கையே! என் பெயர் சூரகேதனன் ; வைசிய குலத்தைச் சேர்ந்தவன். என்
அண்ணன்மார்கள் அறுவர் உளர். நாங்கள் எழுவரும்
களவுத் தொழிலில் மிகவும் திறம் படைத்தவர்கள். செல்வந்தர்களின் வீடுகளில் நாங்கள் வைத்ததுதான்
மிச்சம். எங்களிடம் செல்வக் குறைவு ஏற்பட்ட
நாளே இல்லை. திருடிவரும் பெரும் பொருளை நான் பிறர் மனைவியர்க்கே கொடுக்கிறேன். அவர்களுடன்
கூடி அளவற்ற காமசுகத்தை அனுபவிக்கிறேன். இம்முறையிலேயே என் காலம் கழிந்து கொண்டிருக்கிறது.
இப்போது நான் உன்னைக் கண்ட அளவில் உன்னுடன் கூடி இன்புற வேண்டும் என்னும் ஆசை மிகுந்துள்ளது.
என்னை உன் ஆசைக் கணவனாக ஏற்று எனக்கு இன்பம் தருவாயேயானால், நான் ஈட்டி வைத்த பொருளனைத்தையும்
உன் காலடியில் கொட்டுவேன்; மன்மத லீலா வினோதத்தில் மகிழும் இயல்புடைய பெண்கள் எப்போதும்
ஒரு ஆடவனிடமே இருந்து காலங்கழித்தது இல்லை. எவர் அரிதாகக் கிடைக்கிற இந்த காம சுகத்தைக் கைவிட்டு, வேறொரு சுகத்தை நாடிப்
போகிறார்களோ, அவர்கள் மூடர்களே ஆவர்" என்று அன்பொழுகக் கூறினான்.
மங்கி கணவனைக் கொல்லத் துணிதல் :
கள்ளனின் காம உரை என்னும்
தீயினால் கட்டழகியின் உள்ளம் மெழுகுபோல் கரையலாயிற்று. காமவாஞ்சை மிக்குள்ள மாதரின்
மனவுறுதி எந்த இடத்திலும் நிலைத்திருந்ததாக வரலாறு இல்லை. மங்கியின் உள்ளமும், சூரகேதனன் பால் தாவியது. இதைக்
குறிப்பால் உணர்ந்து கொண்ட அவன், அவள் மனக் கருத்தை மேலும் அறிந்து கொள்ள விழைந்து, "அன்பின் மிக்க இன்பத்துணையே! உன் கணவன் இருக்கும்போது
நம்மிருவரின் இன்பக்கூட்டுறவு எப்படி முழுமை பெற்றதாக அமையும்?" என்றான். பாபியான
மங்கி, சூரகேதனன் இவ்வாறு கூறியதைக் கேட்டு, தன் சொந்த கணவனைக் கொன்றுவிடுவதாக அப்போதே
சூளுரை மொழிந்தாள்.
வச்சிரமுஷ்டி மூக்களுடன் திரும்புதல்:
வீரருக்கு தலைவனான வச்சிரமுஷ்டி
அவ் விரவில் ஒரு தடாகத்தை அடைந்து அதில் இறங்கி, கையிலிருந்த வாளின் உதவியால் ஆயிரத்தெட்டு தாமரைப் பூக்களைப் பறித்துக் கொண்டு தன் துணைவியை
விட்டுச்சென்ற அவ்விடத்திற்கு வந்து சேர்ந்தான்.
வந்தவன், தன் கையில் வைத்திருந்த கத்தியை, மங்கியிடம் கொடுத்துவிட்டுத் தாமரை
மலர்களை முனிவரர் திருவடி முன் இட்டு அருச்சித்துக் குனிந்து வணங்கும்போது, தக்க நேரத்தை
எதிர் நோக்கியிருந்த மங்கி, தன் கையில் வைத்திருந்த கத்தியை, கணவனை வெட்டிச் சாய்ப்பதற்காக
ஓங்கினாள். இதற்கு மேலும் அக் கொடுஞ்செயலை பார்க்கப் பெறாத, சூரகேதனன், மங்கியின் கணவன்
அறியாதவாறு, மங்கி கணவனை வெட்ட ஓங்கிய கத்தியை, விரைந்து வந்து தட்டிவிட்டு இருளில்
மறைந்தான். கத்தியும் 'கல்'லென ஓசையுடன் கீழே விழவும், குனிந்திருந்த கணவன் நிமிர்ந்து,
"கத்தியை ஏன் கீழே விட்டாய்?" என்று மங்கியைக் கேட்டான். அதற்கு அவள், ஒருபோதும்
நான் கத்தியை பிடித்தவள் அல்லவே! அதனால் கை நடுங்கி வாளைத் தவற விட்டேன்" என பொய்
கூறி கபட நகை புரிந்தாள். அவள் உரையை உண்மையென நம்பி வச்சிரமுஷ்டி, அவளை ஆதரவாக அணைத்தவாறு
அழைத்துக் கொண்டு அங்கிருந்து அகன்று போனான்.
சூரகேதனன் பெண்டிரின் இயல்பை
சிந்தித்து இரங்கல்:
மங்கியின் இந்த பொய்
மாயச் செயல்களைப் பார்த்து, கள்ளனாகிய சூரகேதனன், பெண்டிரின் இழி தகைமையைப் பற்றி சிந்திக்கத்
தொடங்கினான்.
காமத்தீ கனலவரும் நீசப் பெண்டிர்
கருதாமல் அனைவரையும் விரும்பிச்
சேர்வர்
சேமரத்தின் கிளையதுவும் அன்னத் திற்கும்
சிறுகாக்கை தங்கற்கும்
இடம் கொடுக்கும்; காமுகியர் கணவர்தம் அன்பை நாளும்
கரைத்திடவும் கூட்டிடவும்
செய்த லைப்பர்
தேமொழியார் மாதர்தமை நம்பி நம்பித்
தெருக்கடையில் நின்றோர்க்குக்
கணக்கு முண்டோ?
பறவைகளுள் சிறந்தவையாகக்
கருதப்படும் அன்னம் வந்து உட்கார்வதற்கு இடம் அளிக்கும் மரத்தின் கிளையானது, இழிந்த
காக்கை வந்து அமர்வதற்கும் இடம் தருதல் போல, இவ்வுலகில் காமவுணர்வு மிக்க, இழிகுலப் பெண்டிர், தாழ்ந்தவர் உயர்ந்தவர் ஆகிய வேற்றுமை பாராட்டாமல் பொருளொன்றையே
கருதி, அவர்கள் முயங்க இடம் தருகின்றனர். காமுகியர் தன்னைத் தழுவ வரும் கணவரை, விரும்புவது
போலவும், சில சமயம் வெறுப்பது போலவும் காட்டி அவர்களை அலைகழிப்பர். இத்தகையவரை நம்பி,
மோசம் போனவர்களுக்கு கணக்கு வழக்கே இல்லை! மேலும்,
நெய்குறைய தீபநுனி கருகு மாப்போல்
நேசமது குறைந்துவிடின்
கொழுந ரோடு
பெய்வளையர்; தமைவிரும்பும் கணவ ருக்கும்
பேர்க்கரிய களங்கமதை பெரிதிழைப்பர்;
மெய்முழுதும் படவணிந்து கழித்த மாலை
மீளவதைச் சூடிடவே விழையார்
போல
நொய்யிடையார் பிறரோடு சேரக் கற்றால்
நொடியினிலே கணவரையே விலக்கி
வைப்பர்.
மிகுந்த காமவுணர்வு கொண்ட
ஒரு பெண், அவள் தன் கணவனால் கொண்டாடப் பெற்று பூஜிக்கப்பட்டாலும், தன் கணவனுக்கு இன்பம்
தர இசையாள்; அமிர்தமதி, யானைப் பாகனின் இசையில் தன் மனத்தைப் பறிகொடுத்து, தன்னையும்
அவனிடம் இழந்து, கண் போலும் தன் கணவன் யசோதர மன்னனை நஞ்சிட்டுக் கொல்லவில்லையா ?
கள்வர்கள் எழுவரும் துறவு பூணல்:
இவ்வாறெல்லாம் அவன்
பலபட சிந்தித்தவாறு பிறவிப்பற்றை வெறுத்தொதுக்கும் துறவு நிலையில் மனம் ஒன்றி நிற்க
அம்மரத்தடியில் தங்கியிருந்த போது, இவனுடைய அண்ணன்மார் பானு முதலிய அறுவரும் அவ்வுச்சயினி
நகர தனவந்தர்களின் பொருள்களை ஏராளமாகக் களவாடிக் கொண்டு, விடியற்காலைப் பொழுதில் ஆலமரத்தடிக்கு
வந்து சேர்ந்தனர். அவ்வாறு வந்து கூடிய அவர்கள் தாம் கொண்டு வந்த பொருள்களை ஏழு பங்காகப்
பிரித்து, ஒரு பங்கினை சூரகேதனனுக்கு அளித்தனர். ஆனால் அவனோ அப்பங்கு பொருளை வாங்க
மறுத்து ஒதுங்கிப் போனான். இவனது வழக்கமில்லா இச்செயலைக் கண்டு, வியப்புற்ற அவர்கள்,
அதற்கான காரணத்தைச் சொல்லும்படி வற்புறுத்தினர்.
அதனால் அவன், சகோதரர் அறுவரும் களவாடிவரத் தன்னை அங்கு காவல் வைத்துச் சென்றதிலிருந்து
அவர்கள் மீண்டு வரும்வரை, ஆங்கு மங்கி நிகழ்த்திய திருவிளையாடல்களை எல்லாம் அவர்களுக்கு
விளக்கமாக எடுத்துரைத்தான்.
இளைய சகோதரன் கூறிய,
'காமப்பற்றை விடுவதற்குக் காரணமான' இந்த வரலாற்றைக் கேட்டு, அறுவரும் மிகவும் வியப்படைந்தனர்.
ஒரு செயல் நிகழ்வதற்கான உபாதான காரணம் கனிந்து வரும்போது, அதற்கான நிமித்த காரணங்கள்
தாமே விரைந்து வந்து துணை நிற்பது இயல்பே அல்லவா? அதுபோல, மங்கி என்னும் அந்தப் பெண்ணினது
வரலாற்றினை அறிந்து, அஃதே ஏதுவாக, அவ்வேழு பேரும் உலக வாழ்க்கையில் வெறுப்பு கொண்டு,
அவ்வாலமரத்தடியில் இரவு முழுவதும் யோகத்திலிருந்து, பின் யோகம் விட்டுக் கலைந்தெழுந்த,
சுதரும முனிவரிடமே, *திருவறம்* கேட்டு, தவத்தை
விரும்பித் துறவு பூண்டு, முனிவர்களாகிப் போயினர். தீச்செயல் புரிவதையே தொழிலாகக் கொண்டிருந்த
திருடர்களும், முக்தி அடையும் பக்குவம் கனிந்த போது, நற்காட்சி பெறுவதில் வியப்பில்லை.
சூரகேதன முனிவர் மங்கியின் இல்லம் சேரல்:
இவையெல்லாம் நிகழ்ந்து
சில நாட்களுக்குப் பிறகு, ஒரு நாள் சூரகேதன முனிவர் மட்டும், சரியா மார்க்கமாக ஆகாரம்
ஏற்க, உச்சயினி நகரத்துள் புகுந்தார். புகுந்தவர் தற்செயலாக, மங்கியின் வீட்டுக்கு
அருகே வந்தபோது, மங்கி அம்முனிவரை உற்று நோக்கி இன்னாரென்று அறிந்து கொண்டு, அவரை மகிழ்வோடு
வரவேற்றுத் தம் இல்லத்திற்கு அழைத்தேகி, நவபக்தி கிரமத்தினால் ஆகாரதானம் அளித்து, அமர்வித்தபின்,
அவரை நோக்கி, "சுவாமி! தாங்கள் எதனால் இந்தத் துறவை மேற்கொண்டீர்? இதற்கான காரணத்தைக்
கூறுங்கள்!" என விண்ணப்பித்தாள்.
மங்கியும் துறவு ஏற்றல் - கள்வர்கள் தேவராகப் பிறத்தல் :
முனிவரும், அவளை இன்னாரென்று
அறிந்ததினால், "அம்மையே! அன்றிரவு ஆலமரத்தடியில் உன்னால் இயற்றப்பட்ட செயல்களே
எனக்கு வைராக்கியம் ஏற்படக் காரணமாயின. என்னைப் போலவே, உன் கதையைக் கேட்டு என் தமையன்மார்
அறுவரும், எம் மனைவியர் எழுவரும் கூட வைராக்கியம் வரப்பெற்றுத் துறவு பூண்டனர்"
என்று கூறினார்; அதைக்கேட்ட மங்கி, வெட்கத்தால் உள்ளம் புழுங்கி, தலை குனிந்து நின்று,
தன் தவறுக்கு வருந்தி, முனிவரின் அறவுரையால் உளத் தூய்மை பெற்று, கணவனது அனுமதியும்
பெற்று, அம்முனிவரர் மனைவியரான ஆர்யாங்கனையரிடமே துறவு பூண்டாள். பவ்வியர்களுக்கு நல்வினை வசத்தால், அவர்கள் அறிந்தோ,
அறியாமலோ செய்த தீய செயல், அவர்கள் துறவு மேற்கொள்ளக் காரணமாகி விடுகிறது. பாகுபலியோடு
போரிட்டு, தோல்வி அடைந்தபோது, அதுவே பரதசக்கரவர்த்தி மனம் திருந்தவும், பாகுபலி சுவாமி
துறவு மேற்கொள்ளவும் காரணமாக வில்லையா? மங்கி தான் ஏற்ற துறவற மகிமையால் தீவினைகள்
உதிர, சல்லேகனையிருந்து சமாதி மரணம் உற்று, தேவருலகில் சென்று அமரனாகப் பிறந்தாள். சீவகனிடம் அறவுரை கேட்ட நாயானது, தேவகதியிற் போய்,
இயக்கனாகப் பிறக்கவில்லையா? மற்ற ஏழு சகோதர முனிவர்களும் கூட தங்களுடைய ஆயுள் முடிவில்,
மானிடவுடலை விட்டு நீங்கி, சௌந்தர்ம கல்பத்தை அடைந்து தேவர்களாகப் பிறந்தனர்.
கற்பத்து தேவர் எழுவரும் விஞ்சையராகப் பிறத்தல்:
சௌதர்ம கல்பத்துத் தேவர்களாகப்
பிறந்து அமர சுகங்களை ஒரு 'பல்லவம்' காலம் துய்த்த பின்னர், தாதகிஷண்டத்தீவக பரதக்
கண்டத்தில் விஞ்சையர் குலாதிபனாகிய சித்திரசூளன் என்பவனுக்கும் அவன் மனைவி மனோகரி என்பவளுக்கும்
முறையே, சித்திராங்கதன், தனவாகன், தார்ஷ்யவாகன், மணிசூளன், புஷ்யசூளன், நந்தசூளன்,
வியோமசூளன் என்னும் புதல்வர்களாக வந்து பிறந்தனர். முற்பிறவியில் தேவர்களாயிருந்த நல்வினையாளர்களுக்கு,
உடலழகும், ஒளி மேனியும், செல்வம் முதலியனவும் சிறந்து விளங்கும் எனச் சொல்லவும் வேண்டுமோ?
சுயம்வரத்தில் போர் - விஞ்சையர் மாகேந்திர தேவராகப் பிறத்தல்:
அந்திர விஜயார்த்த பருவத்தின்
வித்தியாதர நங்கை ஒருத்தி, ஈடும் எடுப்பும் அற்ற பேரழகியாக விளங்கினாள். அவள் பெயர்
தனஸ்ரீ என்பது. அவள் சுயம்வரத்தின் போது, தான் விரும்பிய ஹரிவாகனன் என்பானுக்கு மாலை
சூட்டிக் கணவனாக வரித்துக் கொண்டாள். அப்பொழுது அவ்விடமிருந்த, அயோத்தி மன்னன் புஷ்யன் என்பவன் புதல்வனாகிய சுதத்தன் என்பவன், தனஸ்ரீயின்
மேல் கொண்டிருந்த மோகத்தால் ஹரிவாகனனோடு போரிட்டு அவனைக் கொன்று, தனஸ்ரீயைக் கைப்பற்றிக்
கொண்டு சென்றுவிட்டான். இவ்வடாத செயலை, அப்பொழுது
ஆங்கு வந்திருந்த சித்திராங்கதன் முதலாகிய எழுவரும் கண்டு, அதுவே காரணமாக, வாழ்வில்
வெறுப்புற்றுத் துறந்துக் கடுந்தவமியற்றி,
இம்மானிட உடலம் நீங்கி, நான்காவது தேவருலகமாகிய மாகேந்திர கல்பத்து தேவராகச் சென்று தோன்றினர்.
மாகேந்திர கற்பத்து தேவர்கள் நந்தயசாவுக்குப் புதல்வராதல் :
நிற்க, குருஜாங்கல
நாட்டின் அஸ்திநாகபுர த்தை, அப்போது கங்கதேவன்
என்பான் ஆண்டு வந்தான். அவன் பட்டத்தரசி 'நந்தயசா' என்பவள்; அவ்விருவருக்கும் மேலே
கூறிய சித்ராங்கதன் தவிர, மற்ற ஆறு பேரும் (ஏழு கடற்காலங்கள் தேவசுகத்தைத் துய்த்து
முடித்த பின்னர்) முறையே கங்கன், கங்கமித்திரன், கங்கதேவன், நந்தவாகனன், சுனந்தன்,
நந்திமித்திரன் என புதல்வராயினர். சித்திராங்கதன் மட்டும் தன் தம்பியரைப் போலவே மாகேந்திர
கல்பத்து தேவனாக இருந்து, ஆயுள் முடிந்து வந்து, அஸ்திநாகபுரத்தில் வாழ்ந்த வணிகன்
சுவேதவாகனன் என்பவனுக்கும் அவன் மனைவி பந்துமதி என்பாளுக்கும் சங்கன் என்னும் குமாரனாகி
வந்து பிறந்தான்.
எழுவரின் முற்பவங்கள்:
இப்பொழுது சொல்லப்பட்டுவரும்
எழுவரும் இதற்கு முன், நான்காவது பவத்தில் வணிகர் குலத்தில் பானுதத்தன், யமுனை என்பவர்க்கு
பானு முதலிய பெயர்களை உடையவராய் பிறந்து, கள்ளர் தொழிலில் ஈடுபட்டு, மங்கி என்பவளின்
கதை கேட்டு, வெறுத்து துறவு பூண்டு, சௌதர்ம கல்பத்து அமரராகச் சென்று பிறந்து, ஆங்கிருந்து
நழுவி, வித்தியாதரனாகிய சித்திரசூளன், அவன்
மனைவி மனோகரிக்கு சித்திராங்கதன் முதலிய பெயர்களை கொண்டு எழுவராகவே பிறந்து, சுதத்தன்
என்பவனின் தனஸ்ரீ என்னும் பெண்ணின் கணவனை அவளது சுயம்வரத்தில் கொன்று, அபகரித்துச்
சென்ற அடாத செயலைக் கண்டு, அதன் காரணமாக வெறுப்புற்றுத் துறந்து, நான்காவது கற்பமாகிய
மாகேந்திரத்தில் அமரராகப் பிறந்து மீண்டும்வந்து, வணிகன் சுவேதவாகனன்
மனைவி பந்துமதிக்கு, (சித்திராங்கதனாயிருந்தவன்) சங்கன் என்பவனாகவும், மற்ற அறுவரும் நந்தயசா தேவியினிடம்
கங்கன் முதலாகிய ஆறு சகோதரர்களாகவும் பிறந்து, இவ்வாறு தர்மானுபந்தி புண்ணியம் உடையவர்களாய்
உலகோர் போற்றும்படிச் சிறந்து விளங்கலாயினர் என்பதை வாசகர்களே! ஈண்டு நினைவில் இருத்துவீராக!
நந்தயசா இளைய புதல்வனைத் துறத்தல் :
இவ்வாறு சில காலம் கழிந்தபிறகு
கங்கதேவன் பட்டத்தரசியாகிய நந்தயசா மீண்டும் கருவுற்று, ஒரு மகனைப் பெற்றாள். முற்பவத்திலிருந்து
தொடர்ந்து வந்த குரோத பரிணாமத்தாலோ என்னவோ, இம்மகனைக் கருவுற்ற நாளிலிருந்தே அம்மகவுமேல்
வெறுப்பு கொண்டிருந்தாள். இப்போது, அவ்வெறுப்புணர்வு மேலும் அதிகரிக்க, குழந்தை பிறந்தவுடன் அதை காணவும் மனமின்றி, தன்
கண்களை இறுகப் பொத்திக்கொண்டு, அதை உடனடியாக எடுத்துச் சென்று எறிந்து விட்டு வரும்படி
பணித்தாள். அச்செய்தியை அறிந்த வேந்தன், அக்குழுவில் மேல் அன்பு கொண்டு அதை அரசிக்குத்
தெரியாமல், சுவேதவாகனன் மகன் சங்கனை வரவழைத்து, அவனிடம் ஒப்படைத்து, அதை வளர்த்து வரும்
படி இரகசியமாகக் கொடுத்தனுப்பி விட்டான். சங்கனும் அரசன் பணித்தபடி, குழவியை எடுத்துச்சென்று
கண்ணும் கருத்துமாக அன்போடு வளர்த்து வரலானான். அரசியின் கோபத்திற்குப் பயந்து, யாரும்
அக்குழந்தைக்குப் பெயர் சூட்டாமலேயே இருந்துவிட்டனர். அதனால் நகர மக்கள் அவனை (பெயரில்லாதவன்) நிர்நாமகன் என்றே அழைக்கத் தொடங்கினர்.
நிர்நாமகனுக்கு அரண்மனையில் இடமில்லை:
ஒருநாள் சங்கன், நிர்நாமகனை
அழைத்துக்கொண்டு ஒரு வேலையாக அரண்மனைக்குச் செல்ல வேண்டியிருந்தது. அவ்வாறு அவ்விருவரும்
அரண்மனைக்குச் சென்ற நேரத்தில், அரசனின் ஆறு புதல்வர்களும், உணவு கொள்வதற்காக ஓரிடத்தில்
அமர்ந்து இருந்தனர். அதைக்கண்ட சங்கன், ஆற்றாமை மீதூர, தன் வளர்ப்புத் தம்பியான நிர்நாமகனைப்
பார்த்து, "இவர்களும் உன் சகோதரர்கள்தானே! இவர்களோடு அமர்ந்து நீயும் உணவு உட்கொள்"
என்று கூறவும், அவனும் கள்ளமின்றி உண்பதற்காக அவர்களோடு அமர்ந்து விட்டான். அந்த சமயம்
பார்த்து, நந்தயசா தற்செயலாக ஆங்கே வந்தவள், நிர்நாமகன், தன் புதல்வர்களோடு உணவு உட்கொள்வதற்காக
அமர்ந்திருப்பது கண்டு, முற்பிறவிப் பகையால், அவனை வெளியேறும்படி காலால் எட்டி உதைத்தாள்.
அரசியின் எதிர்பாராத இந்த செயலைக் கண்டு சங்கன் அவமானம் அடைந்து, நிர்நாமகனை அழைத்துக்
கொண்டு வீடு திரும்பினான்.
துருவசேன முனிவரின் அறவுரை:
இவ்வாறு நாள்கள் சில கழிந்த
பிறகு, அஸ்திநாகபுர, உபவனத்தில் துருவசேனன் எனும் மகா முனிவர் ஒருவர் வந்து தங்கினார். இச்செய்தி அறிந்தார் அனைவரும் நாடோறும் அவரிடம்
சென்று அறவுரை கேட்டு வரலாயினர் .நந்தயசாவும் மன்னனும் கூட, ஒரு நாள் அம்மா முனிவரின்
அறிவுரையைக் கேட்கும் விருப்புடன் அவர் இருந்த வனத்திற்குச் சென்று, அவரை வணங்கி அறம்
கேட்கலாயினர். வணிகன் சங்கனும், அச்சமயம் முன் செய்த நல்வினை உதயத்தால் ஏவப்பட்டு,
தம்பி நிர்நாமகனுடன் வந்து, ஆங்கு முனிவரின்
அறவுரையைப் பருகத் தொடங்கினான்.
சங்கனின் ஐயம் :
மேற்கூறியவாறு யாவரும்,
முனிவரிடம் அறவுரை கேட்டு முடித்தபின், சங்கன் எழுந்து, முனிவரை பணிவோடு வணங்கி நின்று, "திருவற நாயகரே! பிறவித் தளையை விடுவித்து
எம்மைக் காப்பவரே! அடியேன் கூறுவதைச் சிறிது செவிமடுத்துக் கேட்பீராக !இந்த அரசிக்குப்
புதல்வர்களாகப் பிறந்துள்ளவர்கள் ஏழு பேர்; இதோ என் அருகில் இருக்கும் இந்த நிர்நாமகன்
அந்த எழுவரில் இளையோன் ஆவான். மற்ற புதல்வர்களிடமெல்லாம்
அளவற்ற அன்பு காட்டும் இந்தத் தாய், ஏன் நிர்நாமகனை மட்டும் எப்பொழுதும் வெறுக்கின்றாள்?
அதன் காரணத்தை யாங்கள் அறியும்படிக் கூறி அருள்வீராக!" எனக் கேட்டான்.
தாய், இளைய புதல்வனை வெறுக்கக் காரணம்:
வணிகன் கூறியதைக் கேட்ட
முனிவரர், தனது அவதிஞானத்தாலே, அவளது வரலாற்றை அறிந்து கூறத் தொடங்கினார்.
சௌராஷ்டிர தேசத்திற்குத்
தலைநகரமாக இருந்தது கிரனாரம் என்னும் பெயருடைய பெரிய நகரம். அதை சித்திராதன் என்னும்
அரசன் நீதி தவறாமல் ஆண்டு வந்தான். ஆனால் முற்பிறவித் தீவினையால் புலால் உண்பதில் பெரிதும்
நாட்டம் கொண்டவனாயிருந்தான். அவனது அந்தத் தீய ஒழுக்கத்திற்கு, நீரூற்றி வளர்ப்பவனாக, அமுதரசன் என்னும் அவனது சமையல்காரன்
அமைந்து விட்டிருந்தான். அவன் நாள்தோறும் விதம் விதமாக புலால் உணவைச் சமைத்து, அரசனுக்குப்
படைத்து அவனது பேரன்பினை எளிதில் பெற்றிருந்தான். அதன் காரணமாக, மன்னன் அந்த சமையல்காரனுக்கு
மூன்று ஊர்களை வரிநீக்கி தானமாக அளித்தான்.
முனிவர் உபதேசம்:
இன்னவாறு செல்லும்
நாளில், அந்நரத்திற்குச் சரியா மார்க்கமாக வந்திருந்த சுதருமர் என்னும் முனிவர், நாடாள்வேந்தனின்,
இந்த தீய ஒழுக்கத்தை பிறர் உரைக்கக் கேட்டு, பவ்வியர்களுக்குத் தாமாகவே அருள்பாலிக்கும்
பண்பினரான அவர் அரசனிடம் தாமே சென்று, கொல்லாமை என்னும் அறத்தின் பெருமையையும், புலால்
உண்ணுதலின் இழிவையும், அவன் மனங்கொள்ளும் வகையில் எடுத்துரைத்தார். வேந்தனும் முனிவரின்
அறிவுரையால் மனம் மாறி நன்னெறிக்குத் திரும்பினான். அதோடு, ஊண் உண்ணும் பாவச் செயல்
புரிய தனக்கு உடந்தையாயிருந்த, அமுதனுக்கு தானமாக அளித்து இந்த மூன்று ஊர்களையும் திரும்பப்
பெற்றான். இதனால் சமையல்காரனுக்கு முனிவர் மேல் கோபம் மூண்டது.
அமுதரசன் முனிவருக்கு நஞ்சு இடுதல்:
அதனால் முனிவருக்கு
ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உணவில், ஒரு நாள் அக்கொடியவன் யாரும் அறியாவண்ணம் நஞ்சு
கலந்து வைத்து விட்டான். ஆகாரம் ஏற்றுக் கொள்ள வந்த முனிவர், அவ்வுணவு விஷம் கலந்தது
என அறிந்தவராயிருந்தும், நண்பர்களிடம் அன்பும், பகைவர்களிடம் வெறுப்பும் இலதாகிய சமதா
பாவனை கொண்டவராக இருந்தமையால், நயத்தக்க நாகரிகம் விரும்பி அவ்வுணவை அன்புடன் ஏற்று,
மாறின்றி உண்டு, உயிர் நீங்கப்பெற்று, கிரைவேயக உலகில் அகமிந்திரனாகச் சென்று பிறந்தார்.
நஞ்சிட்டவன் நரகம் சேரல்:
கொடிய பாவியாகிய அந்த அமுதரசன்,
முனிவரை நஞ்சிட்டுக் கொன்ற தீவினையால், ஆர்த்த ரௌத்திரத் தியானத்துடன் இறந்துபோய்,
அஞ்சத் தக்கதும், பொறுத்தற்கரிய துன்பங்களைத் தருவதுமான, வாலுகா பிரபை என்னும் நரகத்தை
அடைந்தான். அங்கு அவன் பல காலங்கள் பயங்கரமான நரகத் துன்பங்களை அடைந்து, ஆயுள் முடிவில்
மரித்து, இப்பூமியில் பலாசகேடம் என்னும் ஊரில் வாழ்ந்து வந்த குடியானவன் ஒருவனுக்கு
மூத்த புதல்வனாகி 'யட்சன்' என்னும் பெயருடன் பிறந்து, மூடனும் மூர்க்கனுமாகி வளர்ந்து
வந்தான். அவனுக்கு இளையவன் ஒருவன்; அவன் பெயர் 'யட்சிலன்' என்பது. அவன் நற்குணங்களுக்கு
உரியவனாகி யாவராலும் குணவான் எனப் போற்றப்பட்டு வந்தான்.
குருட்டுப் பாம்பு கொலை:
இவ்வாறிருக்க, ஒருநாள்
அண்ணன் தம்பியராகிய இவ்விருவரும், வெளியூரிலிருந்து உணவு தானியப் பொருட்களை வண்டியில்
ஏற்றிக்கொண்டு தம் ஊர் நோக்கி வந்து கொண்டிருந்தனர். அவர்கள் அவ்வாறு வரும் வழியில்
ஒரு குருட்டுப் பாம்பு, பாதையின் குறுக்கே ஊர்ந்து சென்று கொண்டிருந்தது. அதைக் கண்டு
மனமிரங்கிய இளையவன், வண்டியை சற்று நிறுத்தும்படி அண்ணனைக் கேட்டுக் கொண்டான். ஆனால்
மூர்க்கனாகிய யட்சன் தம்பி சொல்லைச் செவியேற்காமல்,
பாம்பின் மேல் வண்டியை ஓட்டினான். அந்த பாம்பும் இறந்து போய், தன் தீவினை கழிய பல பிறவிகள்
எடுத்து, மரித்து, எப்பொழுதோ ஒட்டிவந்த சிறிது நல்வினையால், இதோ எதிரே இருக்கும் அரசி
நந்தயசாவாகத் தோன்றியுள்ளது.
யட்சன் திருந்துதல் - நிர்நாமகனாகப் பிறத்தல்:
தம்பியாகிய யட்சிலன்
உபதேசத்தால் சின்னாட்களில் யட்சன் மனம் திருந்தி
திருவறத்தை மேற்கொண்டொழுகி, மாய்ந்து, இன்னும் பல பிறவிகள் எடுத்து, நன்மையை கடைபிடித்
தொழுகிய காரணத்தால், முடிவில் புதல்வர்களில் சிறந்த இந்த நிர்நாமகனாகப் பிறந்துள்ளான்.
இதனாலேயே, நந்தயசா, எப்பொழுதும் நிர்நாமகன்மேல்
குரோதம் உடையவளாக இருந்து வருகிறாள் என்பதை அறிவாயாக! இவ்வுலகில் தாதுவாதம் முதலானவற்றின் சேர்க்கையால்,
செம்பும் தூய பொன்னாக மாறுவதுபோல, பாவிகளும், அறத்தின் பெருமையால் மகாத்மாவாகப் பிறக்கிறார்கள். சங்கன், நிர்நாமகன் என்ற நீவிர் இருவரும் இனி வருங்காலத்தில்
அறவழி ஒழிகி, மறுபிறவியில் மகாசுக்ர கற்பத்து அமரராகத் தோன்றுவீர்; ஆங்கு அனந்த காலம் தேவசுகம் அனுபவித்துப்பின், இப்பரதக் கண்டத்து யதுகுல மன்னர்களுக்கு சூடாமணிகளெனப் போற்றும் வண்ணம் பலதேவன் வாசுதேவன் என்னும் இரு
சகோதரர்களாகப் பிறந்து, இம்மூன்று கண்டங்களையும் அரசாளும் அர்த்த சக்கரவர்த்திகளாகிப்
பேரும் புகழும் பெற்று வாழ்ந்து, அதன்பின் நற்காலப்பேறு இனிதே வந்து உங்களுக்கு வாய்க்க,
தவம்புரிந்து, இருவினை போக்கி, முக்தி நாடு அடைவீர்கள்" என்று கூறினார்.
சங்கனும் நிர்நாமகனும்
இவ்வண்ணம், தங்கள் முற்பிறவி வரலாறுகளை, துருவசேனரால் உரைக்கக் கேட்டு, வாழ்வை வெறுத்துத்
துறவுபூண்டு அம்முனிவரிடமே தங்கிப் பணிவிடை செய்து வரலாயினர்.
நந்தியசா விருப்பம்:
நந்தியசாவும், முனிவர் கூறிய இவ்வரலாற்றைக் கேட்டு, நிர்நாமகன் மேல் கொண்டிருந்த பகைமையை விட்டுத் துறந்து, முக்திச் செல்வத்தைத் தரும் துறவை மேற்கொண்டனளாயினும் ,மோகனீய வினையின் தாக்கத்தால், அறிவு மயங்கி மீண்டும் தம் புதல்வர் எழுவர் மேலும் கொண்ட அன்புப் பெருக்கால், மறுபிறவியிலும் இந்த எழுவரையும் புதல்வர்களாக யானே பெறவேண்டும்' எனும் நிதான சல்லியம் கொண்டு நோற்று, உடலம் நீத்தாள்.
நிர்நாமகன் வாசுதேவ பதம் விரும்பல்:
நிர்நாமகனும் பற்றற்ற துறவை மேற்கொண்டு , மறுபிறவியிலும் புகழ்பெற வேண்டும் எனும் விருப்பத்தால் கடுந்தவம் புரியலானான். அப்போது மூன்றாவது வாசுதேவ பதத்தை அடைந்திருந்த சுயம்பு என்பவன் தன் பகைவனை வென்று, மிகவும் கோலாகலத்துடன் அவ்வழியே வந்து கொண்டிருந்தவனின் விபவங்களைக் கண்ட நிர்நாமகன், யான் செய்யும் இந்த தவத்தால் எனக்கும் இந்த வாசுதேவ பதவி கிடைக்கவேண்டும் எனும் நிதான சல்லியத்தை அடைந்து உடலம் நீத்தான்.
கேண்மைக்குக் காரணம் :
தரும நந்தரே! இப்போது நான் கூறப்போவதைக் கவனமுடன் கேட்பீராக! சங்கன், நிர்நாமகன் ஆகிய இருவரும் மேற்கூறிய பத்தாவது மகாசுக்ர கற்பத்து அமரரானார்கள். அதற்கு முன்பே, பதினாறாவது அச்சுத கற்பத்தில் அமரர்களாகப் பிறந்திருந்த நீங்கள் (இங்கு, பாண்டவர்கள் அச்சுத கற்பத்து அமரராக முன்பு பிறந்திருந்த வரலாற்றை, ஸ்ரீநேமிபகவான் தருமருக்கு உரைக்கின்றார். அந்த செய்தி இந்த ஜைனபாரதத்தின் பதினேழாம் சருக்கத்தை வாசிக்கும் போது ஆங்கு அறியலாம்) உங்கள் தெய்வீக ஆற்றலால் அவ்விருவரையும் உங்கள் இருப்பிடத்திற்கு அழைத்துச் சென்று தூய மன, மொழி, மெய்களால் பாராட்டி உபசரித்தீர்கள். நீங்கள் நேயமுடன் போற்றிப் பாராட்டிய அன்பினால், பலதேவ வாசுதேவராகிய இவ்விருவரும் உங்கள்மேல் இப்பிறவியிலும் அன்பு காட்டி வருகிறார்கள்" என்று சாரண முனிவர் கூறி முடித்தார்.
பாண்டவர்களோடு கூட, ஆங்கு உடனிருந்த பலதேவர் வாசுதேவர்கள் முதலானோர், சஞ்சயந்த மாமுனிவர் மொழிந்த வரலாற்றைக் கேட்டு, மகிழ்ச்சி அடைந்தனர் . மாந்தர்கள் பொதுவாக பிறரது கதைகளைக் கேட்டு மகிழ்ச்சி அடைவர். அதுவும் நமது முற்பிறவி வரலாறுகளைக் கேட்டபின் மகிழ்ச்சி அடைவதற்குக் கேட்க வேண்டுமா?
பலதேவ வாசுதேவர்கள் பிறப்பு வரலாறு:
மீண்டும் சஞ்சயந்தர் அவர்களை நோக்கி, "இன்னும் சற்று கேளுங்கள் !மகாசுக்ர கற்பத்திலே அமரனாகப் பிறந்திருந்த சங்கன், வசுதேவன் மனைவியருள் ஒருத்தியாகிய ரோகினி உதரத்தில் பலதேவன் என்னும் புதல்வனாகப் பிறந்தான். (மிருகாவதி என்னும் தேசத்தரசன் தேவசேனனுக்கு, அவன் பட்டத்தரசியாகிய தனஸ்ரீ என்பவளின் வயிற்றில்) முன்பு நந்தயசாவாக இருந்தவள் தேவகியாகப் பிறந்து வளர்ந்தாள்; (இந்த தேவசேனன் வேறுயாருமல்ல; திருதராட்டிரன் மனைவியாகிய காந்தாரியின் மூன்று தமையன்மார்களில் இவன் இரண்டாமவன்; மூத்தவன் உக்கிரசேனன்; மூன்றாமவன் மகாசேனன்) உக்கிரசேனன் தன் தம்பி தேவசேனன் புதல்வி தேவகியை வசுதேவனுக்குத் திருமணம் செய்வித்தான். தேவகி, முற்பிறவியில் நிதானம் செய்த வண்ணமே முன்பு புதல்வர்களாயிருந்த எழுவர்களையே இப்பிறவியிலும் புதல்வர்களாகப் பெற்றாள். அந்த புதல்வர்களுள் கடைசியில் பிறந்த (முன்பு நிர்நாமகன் ) கிருஷ்ணனாகிய நீ, வீரமும் தீரமும், ஒருங்கே பெற்று வாசுதேவ பதத்தைப் பெற்றுள்ளாய்" என்று கூறி முடித்தபின்பு, அவ்விரு சாரண பரமேட்டியரும், 'நல்லறம் வளர்க!' என்று கூறி, பாண்டவர்களையும் மற்றவர்களையும் ஆசீர்வதித்தபின், ஆங்கிருந்து வான்வழியாக நீந்கிச் சென்றனர்.
முனிவர் உரைத்தவைகளை எல்லாம் கேட்டு மகிழ்ச்சியடைந்த பாண்டவர்கள் அதன்பிறகு குற்றமற்ற அந்த சாரண முனிகள் மொழிந்து சென்ற திருவற நெறியில் ஈடுபட்டுப் பக்தியுடன் ஒழுகுவராயினர்.
கருமவினை வென்றுயர்ந்த தூயன்; கோதில்
கலியாணம் ஓரைந்தும் கண்ட நாதன்;
திருமொழியால் உலகளந்த வாமன்; யார்க்கும்
தெய்வபத வீடளிக்கும் வள்ளல்; தோன்றும்
இருசுடரின் கேவலமா ஞானத் தாலே
இகவுலகத் தோருய்ய நெறிப கர்ந்தே
மரைமலர்மீ மிசை சென்ற பாதன்; அந்த
மாதவனை வணங்கிடுவோம் நலம்பெ றற்கே!
பத்தாம் சருக்கம் முற்றும்.
பதினோராம் சருக்கம்
தருமன் தூது அனுப்ப வேண்டுதல்:
பாண்டவர் ஐவரும், இவ்வாறு தூய அறச் சிந்தனையில் ஈடுபாடு கொண்டவராய், பகவான் நேமிநாதரை நாடோறும் வழிபட்டு வணங்கி துவாரகை நகரில் தங்கியிருந்தபோது, ஒருநாள் தருமர் அரசவையில் பலதேவருடன் இருந்த கிருஷ்ணனை நோக்கி, "மைத்துனரே! தீவினை வசத்தால் நாங்கள் துரியோதனனோடு சூதாடித் தோற்று, பந்தயத்தில் ஒப்புக்கொண்டபடி பன்னீராண்டுகள் வனவாசம் செய்து மீண்டு வந்துள்ளோம்' என்பதைத் தாங்கள் அறிந்ததே! தற்போது எமக்கு முன்பு உரிமையாயிருந்த நமது பாதி நாட்டைத் தருவதற்கு அவன் இசைகின்றானா? இல்லையா ? என்பதை, ஒரு தூதனாலன்றி அறிய முடியாது; ஆகவே எவ்வகையிலும் திறமைமிக்க தூதன் ஒருவனைத் தேர்ந்தெடுத்து துரியனிடம் அனுப்புவீராக!" என்று வேண்டிக்கொண்டார்.
வீமனின் சினவுரை :
அவர்தம் வார்த்தைகளைக் கேட்ட வீமன், சினம் கொண்டு எழுந்து நின்று அவையோர்களை நோக்கி, "சான்றோர்களே! எந்த துரியோதனன் நம்மைப் பல முறையும் கொல்லத் துணிந்து, நம்மை அலைக்கழித்துத் துன்பத்தில் ஆழ்த்திக் கொண்டிருக்கிறானோ, அக்கொடியவன் நம்மால் கொல்லத் தக்கவன் என உணர்ந்திருந்தும், அவனிடம் நமது நாட்டைத் தரும்படி தூதனுப்புவது ஏன் ?தன்னைக் காட்டிலும் மிக்கார் ஒருவர் இவ்வுலகில் இல்லை, என்று தலைச் செருக்கு கொண்டுள்ளவனோடு போர் செய்து, நாட்டை மீட்க முயற்சி செய்வதல்லது வேறொரு சிந்தனை செய்யாதீர்கள்" என முழக்கமிட்டான்.
அலைக்கழித்தே நமைத்துன்பில் ஆழ்த்தா நின்ற
அக்கொடிய துரியனவன் நம்மால் என்றும்
கொலைபடவே வேண்டியவன் எனவு ணர்ந்தும்
கொண்டநிலம் வேண்டித்தூ தனுப்பல் நன்றோ?
தலைச் செருக்குக் கொண்டவன்பால் எவர்போ னாலும்
தான்தரவே இசைகுவனோ? அரசு தன்னை
நிலைகலங்கப் போரிட்டே மீட்ப தன்றி
நினைவேதும் பிறசெய்யீர்! செய்யீர்! என்றான்!
பலதேவர் வீமனுக்கு அறிவுறுத்தல்:
வீமனது உரையைக் கேட்டு அவையில் உள்ளோர் அனைவரும், அவன் கூறியதை ஆமோதிப்பது போல மௌனம் காத்தனர். அப்போது, பலராமர் எழுந்து வீமனை நோக்கி, "வீமா! நான் சொல்வதைச் சற்று அமைதியுடன் கேட்பாயாக! நீ கூறியவாறு, பகைவனாகிய துரியோதனன் நம்மால் அழிக்கத்தக்க கொடியவனே என்பதில் சிறிதும் ஐயமில்லை. ஆனால் எப்படிப்பட்ட பாதகங்கள் புரிந்தவனாயினும் சாம, பேத, தானம் என்னும் உபாயங்களைப் பயன்படுத்திப் பார்த்த பிறகே, அவனுக்குத் தண்டனை வழங்க வேண்டும் என்று சான்றோர் கூறியுள்ளனர். இராமன் கூட தன் மனைவி சீதையைக் கவர்ந்து சென்ற ராவணனை கொல்வதற்கு விரும்பினான் என்றாலும், முதலில் அனுமனைத் தூதனாக அனுப்பி, அவன் கருத்தினை அறிந்து கொள்ள முயற்சி செய்தான் அல்லவா? ஆகவே அரசர்களாகிய நாமே, நீதி நெறியைத் தவறுவது பெரும்பழிக்கு இடமாகும்" என்று அறிவுரை பகர்ந்தார்.
கேசவன் தூது:
பலதேவர் கூறியவற்றைக் கேட்ட, அவையில் இருந்த பலரும், 'அதுவே தக்கது' என ஆமோதிக்கவும், வீரனும், சாதுரியமாகப் பேசவல்லவனும், தலைவன் கட்டளையைக் குறைவின்றி நிறைவேற்றுபவனும், கம்பீரமானவனும், கையூட்டிற்கு ஒருபோதும் இணங்காதவனும், சகல கலைகளையும் அறிந்தவனுமான, *'கேசவன்'* என்பானை அழைத்து, அவனை அஸ்திநாகபுரம் சென்று, துரியோதனனிடம் அவன் சொல்ல வேண்டியவற்றை உரைத்து, அவன் மனக் கருத்தைத் தெரிந்து வரும்படித் தூதாக விடுத்தனர்.
கேசவனும் அனைவரிடமும் விடை பெற்றுக்கொண்டு, புறப்பட்டு சில நாள்களில் அஸ்திநாகபுரம் வந்தடைந்தான். அவ்வாறு வந்த தூதன் சிறந்த உதாரண புருஷராகிய விதுரனின் இல்லத்திற்கு வந்து, அவரால் உபசரிக்கப் பெற்று, ஓய்வு எடுத்துக் கொண்ட பிறகு விதுரரிடம், தான் அஸ்திநாகபுரம் வந்ததற்கான காரணத்தைக் கூறத் தொடங்கினான்.
கேசவன் தான் வந்ததற்கான காரணத்தை விதுரற்கு உரைத்தல்:
"சுவாமி! மங்கலம் அனைத்தையும் குறைவற பெற்றுள்ளவராகிய கிருஷ்ணரோடு கலந்து ஆலோசித்தபின், பாண்டவர்கள் என்னை இங்குத் துரியோதனனிடம் தூதனாக அனுப்பியுள்ளார்கள். அதற்கு முன்னதாக உம்மிடம் முதலில் தெரிவிக்கச் சொன்ன செய்திகளைக் கூறிவிடுகிறேன்; கேட்பீராக! பாண்டு மன்னன் உமக்கு உடன்பிறந்த சகோதரர் அல்லவா? பாண்டவர்கள் யார்? அவர்கள் அப்பாண்டுவின் புதல்வர்கள் அல்லவா? அவர்கள் உங்களால் காப்பாற்ற வேண்டியவர்களா? அல்லது அழிக்கப்பட வேண்டியவர்களா? அவர்கள் உம்மால் ஆதரிக்க படவேண்டியவர்களாயின் வனவாசம் செய்து விட்டு வந்த அவர்களுக்குரிய பாதி நாட்டை, அவர்களுக்கே திருப்பிக் கொடுக்கும்படி செய்வீராக!
'சூதாட்டத்தில், துரியோதனன் வசத்திற்கு சென்றுவிட்ட அரசுரிமையை மீண்டும் எவ்வாறு கொடுக்க முடியும்? என்று வாதிக்கலாம். அவ்வாறு கூறுவது தக்கதன்று; இவ்வுலகில் பொருளிழந்த உடன்பிறப்புகள் சொத்துக்களில் சரிசமமான பங்கு கேட்பது முறையே அல்லவா? ஆகவே நீவீர் போர் நிகழாவண்ணம் பாண்டவர் பங்கைக் கொடுக்கச் செய்து நீதி முறையை நிலைநாட்டுமாறு' தருமர் உங்களிடம் கூறச் சொன்னார்" என்று மொழிந்தான். இவ்வாறு நீதியுரை புகன்ற தூதனை 'நல்லது' எனக் கூறி, விதுரர் துரியோதனன் அவைக்கு அழைத்துச் சென்றார். தூதனும் துரியோதனன் பாதங்களை முறைப்படி வணங்கியபின், தன்னை இன்னான் என அரசனுக்கு அறிமுகப்படுத்திக் கொண்டுவிட்டுப் பிறகு தான் வந்த காரியத்தை அரசவையில் கூறத் தொடங்கினான்.
கேசவன், பாதிநாட்டைக் கேட்டல் :
"பேரரசே! பாண்டவர் தந்தையான "பாண்டு" மன்னன் துறவு மேற்கொண்டு சென்று, ஆவிநீத்தபின், உம் தந்தையாகிய திருதராஷ்டிரர், தம்பிக்கு (பாண்டு மன்னற்கு) வரும் இழிவு, தமக்கும் பழியாகும் என்று அஞ்சித் தம் கையால் உங்கட்கு அரசுரிமையை தர மனமில்லாது, காங்கேயரும் விதுரருமே அந்தப் பொறுப்பினை பார்த்துக் கொள்ளட்டும்' என்ற மனநிலையில் தாமும் துறவிற்குச் சென்று விட்டார். அக்காலத்தில் விதுரராலேயே உமக்குப் பட்டம் சூட்டப்பட்டது. அவராலேயே திரௌபதியின் சுயம்வர காலத்தில் நடந்த பெரும் போரின் இறுதியில், குந்தியன்னையின் சொற்படி, பாண்டவர்க்கு பாதி அரசுரிமை பகிர்ந்து கொடுக்கப் பெற்றது. இதன் மூலம், மறைந்த பாண்டு மன்னனுக்கும் பெருமை சேர்ந்தது. அப்படியிருக்க, அவர் புதல்வர் பாண்டவர் மட்டும், இப்போது ஏன் உம்மால் அவமானம் அடைய வேண்டும் ? அரசே! உமது நீதிக் கண்களைத் திறந்து பாரும்! பாண்டவர்க்கு அரசுரிமை இன்றேல் உமக்கும் புகழ் கிடையாது. பொன்னாபரணத்தில் பதித்தாலன்றி நவமணிகளுக்குச் சிறப்பில்லை. பொன்னுக்கும் சிறப்பில்லை! தலைவரே !பாண்டவரோடு உமக்கு விரோதம் இல்லாமல் இருப்பின், உமக்கு எக்காலத்திலும் பகைவர்கள் இருக்கமாட்டார்கள். காலனும் உம்மை அணுக அஞ்சுவான்.
பாண்டவர் வல்லமையை உரைத்தல்:
வேந்தே! மற்றொன்றையும் நீர் எண்ணிப் பார்க்கவேண்டும்! பாண்டவர்களின் வல்லமை
பற்றி நீர் நன்கு அறிந்துள்ளீர்! விஞ்சையர் தலைவனான இந்திரராசனின் பகைவர்களைப் போரிட்டுத்
தொலைத்து, அரசாட்சியில் அவனை நிலைக்கச் செய்தவர் அருச்சுனன்; கங்கை நதியைப் படகில் கடக்கும் போது வழிமறித்த கொடிய துண்டிகாதேவதையைக்
கொன்றவன் வீமன்; பகனையும், கீசகனையும் அழிந்தவன்
அவனே !வனவாசத்தின்போது, தம் மனைவரையும் விழுங்க வந்த- ( உம்மால் ஏவப்பட்ட) கிருத்தகா
தேவதையும் கூட வறிதே திரும்பிப் போகச் செய்து
காத்தது கூட, தருமரின் புண்ணியமே !துவைத வனத்தில் விஞ்சைய மாணவர்களிடமிருந்து நீர்
காப்பாற்றப்பட்டதும், கூட அந்த தருமரின் தயவாலேயே! வராட நகரில் பசுக்கூட்டங்களை நீவீர்
படைகளுடன் வந்து மடக்கிய போதும் அவர்களுடைய பேராற்றலை நேரில் கண்டுள்ளீர்! ஆகவே பாண்டவர்களின்
வீரத்தை யான் இனிமேலும் வருணிக்கத் தேவையில்லை. ஏனெனில் கையிலிருக்கும் கைவளையலைக்
காண, கண்ணாடி தேவையில்லை அல்லவா? ஆகவே ,மன்னரே! இப்போதே நீர் பாண்டவரிடம் சென்று, கிருஷ்ணரைச்
சான்றாக முன்னிறுத்தி, அவர்கள்தம் மன்னிப்பைப் பெற்று, அரசுரிமையை சிறிது பாகமாவது
கொடுத்துச் சமாதானம் செய்து கொள்வீராக!" என்று கூறி இருக்கையில் அமர்ந்தான்.
துரியோதனன் நாடு கொடுத்த மறுத்தல்:
கேசவ தூதன் இவ்வண்ணம் கூறிய உரையைக் கேட்ட துரியோதனன், அவனை நோக்கி, "தூதனே!
இங்கு உன்னால் கூறப்பட்டவை யாவும் உண்மையே! ஆனால் நான் கூறுவதையும் சற்று செவிமடுத்துக்
கேள்! பாண்டவர்க்குப் பாதி அரசுரிமை அளிக்காவிடில் மக்கள் பழிதூற்றுவர் என்றெண்ணியே
முன்பு ஒரு தடவை பாதி அரசாட்சி தரப்பட்டது. அதை அவர்கள் காப்பாற்றிக் கொள்ளும் திறமை
இல்லாமல் இழந்து போனார்களே! அது யாருடைய தவறு? இந்த பாண்டவர்தம் தலையில், இவர்கள் அரசாளுவார்கள்
என்று எழுதப்பட்டிருக்கவில்லை போலும்! ஆகவே,
அதை வலிந்து கைப்பற்றுவது என்றால் எங்ஙனம் இயலும்? சூதாட்டத்தில் நியாயமாக நான் கைப்பற்றிய
நாட்டை அவர்கள் திரும்பப் பெறுவது என்ன நியாயம்? நடுக் கடலில் விழுந்துவிட்ட மணியை
யாரால் மீண்டும் அடைய முடியும் ?கர்விகளான பாண்டவர்கள், இனி தலை நிமிரவே முடியாது.
கிருஷ்ணனே கதியென்று சரணடைந்து கிடந்தாலும் பாண்டவர்க்கு இனி வாழ்வில்லை.
கிருஷ்ணனைப் பழித்தல்:
"தூதனே! இதை நீ போய் அவர்களிடம் சொல்! மாடு மேய்த்துக்கொண்டிருந்த கண்ணனை,
நான் எப்போதும் சிறந்த வீரன் என்று நினைத்ததில்லை; அவன் உண்மை வீரனாக இருந்திருப்பின்,
தங்கள் நகரமான சூரியபுரத்தை விட்டுத் துவாரகைக்கு ஏன் ஓட வேண்டும்? அவன் இப்போதே, சராசந்த
சக்கரவர்த்தியால் மடிந்தவனாக எண்ணிக்கொள்! அவனோடு பாண்டவர்களும் கூட மாய்ந்து போனதாக
அறிந்துக் கொள்" என்று கடுமையாக மொழிந்தான்.
இவ்வாறு கூறிய துரியோதனனின் கொடிய சொற்களைக் கேட்ட தூதனுக்கு கோபம் பொங்கியது. வீணே கர்வம்கொண்டு பேசுகிற
துரியோதனன் மீது கோபம் கொள்வதில் யாதொரு பயனும் விளையாது எனத் தெரிந்து கொண்ட கேசவன்,
சற்று நிதானமாகவே அவனை நோக்கி,
தூதனின் மறுப்புரை:
"வேந்தனே! பாண்டவர்கள் தேவர்களாலும் கொல்லப்பட முடியாத புண்ணியசாலிகள்;
வைரத்தாலும் பிளக்கமுடியாத இரத்தினத்தை, மென்மையான பூவின் காம்பினாலா பிளந்து விட முடியும்? நீங்கள், போர்க்களத்தில், ஜராசந்தனால் கிருஷ்ணன்
கொல்லப்படுவான்' என அறியாமையால் பிதற்றுகிறீர்கள்! இந்த கிருஷ்ணனாகிய வாசுதேவன், பின்வாங்கிச்
செல்வது பிரதிவாசு தேவனாகிய ஜராசந்த சக்கரவர்த்தியைக் கொல்வதற்காகவே! காட்டில் வாழும்
சிங்கம் யானையைக் கொல்ல வேண்டிக் குறி தவறாமல் பாய்வதற்காகவே பின்வாங்கிச் செல்லும்
என்பதை நீர் அறியவில்லை போலும்! உதயகிரியிலிருந்து தோன்றும் சூரியன் கரிய இருளையும்
விரைவில் நாசம் செய்வது போல வாசுதேவனைத் துணையாகக் கொண்டிருக்கும் பாண்டவர் உங்களைக்
கட்டாயம் போரிலே வென்று வாகை சூடுவார்கள்" என்று உணர்ச்சி ததும்பப் பேசினான்.
பாண்டவர்கள் ஐந்து ஊர்கள் தருமாறு கேட்டல்
- துச்சாதனன் மறுப்பு:
கேசவனின் உரைகள் துரியனின் நெஞ்சில், அச்சத்தை ஊட்டின. ஒருகால் தூதன் கூறியது
உண்மையாகிவிடுமானால்....? சற்று சிந்தனை வயப்பட்ட,
மன்னன், தன் தம்பியர்களைக் கலந்து ஒரு முடிவு எடுக்கலாமா' என நினைத்துத் துச்சாதனன் பக்கம் திரும்பினான். அதற்குள் தூதன்
குறுக்கிட்டு, "வேந்தரே! எனது இந்த முடிவான கருத்தையாவது சற்று கேட்டு விடுங்கள்!
உங்கள் இரு திறத்தாருக்கும் போர் ஏற்படுமானால், அது சாதாரணமாக இருக்காது; அது பல நாட்களுக்கும்
நீடிக்கக் கூடும். அவற்றால் உங்கள் இருபக்கத்தார்க்குமே பெறும் உயிர்ச்சேதங்களும் பொருட்
சேதங்களும் விளையும். ஆகவே, இப்போதாவது நீர் உமது எண்ணத்தை மாற்றிக்கொண்டு, அப் பாண்டவர்களுக்கு
ஐந்து நகரங்களையாவது கொடுத்து, வள்ளலாவீரேல்,
யாவருக்கும் நன்மை பயக்கும்" என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே, துச்சாதனன்
துள்ளி எழுந்து, 'ஏ ! தூதனே! தானம் கொடுத்துச் சமாதானமாகப் போய்விடுவது போருக்கு அஞ்சும்
கோழைகளின் செயலாகும்; நாட்டில் சிறிதளவும்
கொடுக்க இசையோம்; நாங்கள் போர்புரிய தயாராகவே
இருக்கிறோம். அந்த பாண்டவர்களைப் போருக்கே வரச்சொல்! ஆங்கே அவர்கள் தங்கள் வல்லமையைக்
காட்டட்டும்! இவ்வுலகில் எவனும், முற்பிறவியில் செய்த நல்வினையின் பயனின்றி எந்த செல்வத்தையும்
அடைந்ததில்லை; இந்த வார்த்தையை அந்தக் குந்தியின் மக்களிடமே சென்று சொல்!" என்று
முழங்கினான்.
தூதன் வெளியேறுதல் - பாண்டவர்க்கு விவரம் அறிவித்தல்:
கேசவனாகிய தூதன், துச்சாதனன் வார்த்தைகளைக் கேட்டு, செருக்கால் உங்கட்கு புத்தி மழுங்கி விட்டது. எவ்வளவு அறிஞராயினும் மூர்க்கனான மாணாக்கருக்கு நல்லறிவைப் புகட்ட ஒரு காலும் முடியாது' என்று மனத்திலே எண்ணிக் கொண்டு, அவையோரைப் பார்த்து, "வரப்போவதை யாரால் தடுக்க முடியும்" என்று கூறிக்கொண்டே அச்சபையில் இருந்து புறப்பட்டுச் சென்றான்.
அஸ்திநாகபுரத்தை விட்டுக் கிளம்பிய கேசவன், சில நாள்களில் துவாரகாபுரியை அடைந்தான். அங்குத் தன் வரவை ஆவலுடன் எதிர்நோக்கியிருந்த பாண்டவர் முதலான அரசர்கள் கூடியிருந்த அவைக்குச் சென்று பாண்டவர்களுக்கு துரியோதனன் உரைத்த செய்திகளை எல்லாம் கூறினான்.
"அரசர்களே! துரியோதனாதியர் ஒருபோதும் சமாதான வார்த்தையை ஏற்பவராகத் தோன்றவில்லை. மிகுந்த செருக்குடன் பிதற்றும் அவர்கள் போரில் மடிவதற்கே தக்கவர்; பழ மரத்துக் கனிகளை யானை முறித்துத் தள்ளுவதாலேயே, கனிகள் சுலபமாகக் கிடைக்குமே அல்லாமல் பூவில் அமரும் வண்டுகளினாலா மரத்தை முறித்து வீழ்த்த முடியும்? அ
செருக்கதனால் நல்வார்த்தை செவியிற் கொள்ளார்
செயத்தகுவ இனியில்லை அவர்கள் மாட்டே;
பொருகளத்தே போரியற்றி மடிவ தற்கே
புல்லியர்கள் நினைந்துள்ளார்; உலகி லென்றும்
பருக்களிறு ஒசித்திட்ட பழும ரத்தின்
பக்குவநற் கனிகளவை கிட்டு மாப்போல்
வரிவண்டு மொய்ப்பதனால் கிளைமு றிந்து
வருவார்க்கே கனிகிடைத்தல் என்றும் உண்டோ?"
இவ்வாறு கூறிய தூதனுரையைக் கேட்ட பாண்டவர் முதலியோர் இனி போர் தொடங்குவதே செய்ய வேண்டுவது எனத் தீர்மானித்து அதற்கான ஏற்பாடுகளை ஊக்கமுடன் செய்யத் தொடங்கினர்.
துரியன் போருக்குத் துணை தேடல்:
பாண்டவர் தூதனாக வந்த கேசவன் திரும்பிச் சென்றபிறகு, துரியோதனன் பல்வேறு சிந்தனைகளில் மூழ்கினான். பாண்டவர்களை எவ்வாறேனும் போரில் வெற்றி கொள்ள வேண்டுமானால், யாருடைய உதவியையாவது பெற்றே தீரவேண்டும்; பாண்டவர்களைக் காட்டிலும் கண்ணனே நமக்கு இப்போது பெரும் பகைவனாக விட்டிருக்கிறான். சில சமயங்களில் காரணமில்லாமலே கூட, சிலருக்கு சிலர் பகைவர்கள் ஆகிவிடுகிறார்கள்.
இதற்கு என் செய்வதென ஆலோசித்த அவன், தன் அமைச்சர்களை நோக்கி, "இவ்வுலகில் மகத தேசாதிபதியான ஜராசந்த சக்கரவர்த்தி ஒருவர்தான் கிருஷ்ணனையும், அவன் நண்பர்களான பாண்டவர்களையும் ஒருசேரக் கொன்றொழிக்கும் ஆற்றல் பெற்றவர். மற்றவர் யாராலும் இவர்களை அழிக்க இயலாது. ஆகவே அவரோடு தொடர்பு கொண்டு, படை உதவி வேண்டி ஓலை போக்குவதுதான் தற்போது செய்யவேண்டியதாகக் கருதுகிறேன். உங்கள் யாவரது கருத்தும் என்ன?" என்று வினவினான். அமைச்சர்களும் அவன் சொன்னதே சரி என ஒப்புக் கொண்டனர்.
ஜராசந்தனிடமிருந்து துரியனுக்கு ஓலை:
இத்தருணத்தில் யாரும் எதிர்பாராதபடி, ஜராசந்தனால் அனுப்பப்பட்ட தூதன் ஒருவன் ஓலையுடன் அவைக்குள் நுழைந்தான். இவன் வருகை, துரியோதனனுக்குப் பழம் நழுவி பாலில் விழுந்தது போலவும், அதுவும் நழுவி வாயில் விழுந்தது போலவும், கன்னம் வைத்துக் களவாட முனைந்தவனுக்கு வீட்டின் கதவு தானே திறந்து வழி விட்டது போலவும் ஆயிற்று. துரியோதனன், அடங்கா ஆவலுடன் தூதன் கொண்டுவந்த ஓலையைத் தானே வாங்கி, அதன் முத்திரையை விலக்கிப் பிரித்து வாசித்தான்.
போரிடலாம் வாருங்கள்:
" சமவசரண வைபவங்களோடுத் திகழாநின்ற ஆதிபகவானின்
திருவடிகளை வணங்கி, மூன்று கண்டங்களுக்கும் தலைவனும், தேவ, அசுர, விஞ்சையர் வீரர்களின்
செருக்கெனும் மலைகளைப் பிளந்தவனும், வளம் மிகுந்த இராசகிருக நகரத்திற்கு அதிபதியுமான
'ஜராசந்தன்' விடுத்த ஓலையைக் காண்க!
ஸ்ரீநேமிபகவானின் பிறந்த தினக் கொண்டாட்டத்தின் போது, துவாரகைக்குச் சென்றிருந்த
அரசர்கள் சிலரால், யதுகுல அரசர்கள் இன்னும் அங்கு உயிரோடு இருக்கிறார்கள் என அறியப்
பெற்றேன். அவர்கள் மீதுள்ள எமது பழம் பகையைத் தீர்த்துக் கொள்ளக் கருதி அறுவகைச் சேனைகளுடன்,
சென்று கார்த்திகை மாதம் வளர்பிறை சப்தமி நாளன்று போர் செய்யக் கருதியுள்ளேன். ஆதலால்,
நீங்கள் அதிசயமான செல்வங்களைப் பெற விரும்புவீராயின், நீங்களும் கூட உங்கள் சேனைகளுடன்
அப்போது விரைவில் வந்து எம்மிடம் சேரக் கடவீர்."
ஓலையில் எழுதப்பட்டிருந்த இவ்வாசகங்களைத் தாமே வாசித்த துரியோதனன், தான் விரும்பியவாறே
செய்தி வந்ததறிந்து, மிகவும் மகிழ்ச்சி அடைந்தான். கொடியவனாகிய அங்காரகன், கொடியவனான
சனியோடு சம்பந்தப்பட்ட கதையாயிற்று இது:
துரியோதனன் படையுடன் ஜராசந்தனிடம் சேரல்:
உடனே, துரியோதனன், சிற்றரசர்கள் பலருடன்வரத் தானே பதினோரு அட்சௌகினி சேனைகளுடன்
சக்கரவர்த்தியிடம் செல்வதற்குப் புறப்பட்டான். அவ்வாறு செல்லும் துரியோதனனின் பக்கத்
துணைவர்களாக அவன் தம்பியர் தொண்ணூற்றொன்பது பேரும், மற்றும் விதுரர், காங்கேயர், துரோணர்,
கர்ணன், சல்லியன், அசுவத்தாமன் ஆகிய மகா வீரர்களும் தத்தம் பெரும் படைகளுடன் நெருங்கிச்
சென்றனர். அவ்வாறு கிழக்கு நோக்கிச் செல்லும் துரியனின் படைகளால் மேடுகள் பள்ளமாயிற்று;
பள்ளங்கள் மேடாயின; போர்பறைகளின் ஒலியினால்,
காட்டு விலங்குகளோடு குகைகளில் வாழும் சிங்கங்களும் கூட அஞ்சி ஓடின. பரவிச்
செல்லும் சேனைகளினால், எழும்புகின்ற தூசுகள், வானத்தே வருகின்ற சூரியனையும் ஒளி மழுங்கச்
செய்தன. படைகளின் பாரத்தைத் தாங்கமுடியாமல் நாகலோகத்தின் ஆதிசேஷனுடைய பணாமுடிகள் நெளிந்தன.
ஜராசந்தன் துரியனை வரவேற்றல்:
இவ்வாறு மிகுந்த ஆரவாரத்தோடு புறப்பட்ட படைகள், நகரத்தின் அருகே வந்து சேர்ந்துள்ளதை
அறிந்த ஜராசந்தன், தன் புதல்வன் அபராஜிதனை தக்க சன்மானங்களுடன் முறைப்படி எதிர் கொண்டு
சென்று அழைத்து வரும்படி பணித்தான். அவனும் அவ்வாறே சென்று, படைகளை புறநகரிலே நிறுத்தச்
செய்து, அரசன் முதலானோரை அரண்மனைக்கு அழைத்து வந்தான். துரியோதனனும் சக்கரவர்த்தியை
முறைப்படி வணங்கிப் பின்னர் தானறிந்துள்ளபடி, பாண்டவர் கிருஷ்ணன் ஆகியோரது வரலாறுகளையும்
அவர்களது தற்போதைய நிலைமைகளையும் முழுவதுமாக அறிவித்தான்.
ஜராசந்தன் துரியோதனனை சேனாதிபதி ஆக்கல்:
அதன் பின்பு, அவன் சக்கரவர்த்தியை நோக்கி "தலைவ ! குருக்ஷேத்திரத்திலே, நம் இருவருக்கும் பொதுப் பகைவர்களாக
இருக்கும் பாண்டவர் கிருஷ்ணர் முதலானோருக்கும், நமக்கும் நடைபெறவிருக்கும் போர்க்களத்தில்,
முதன்முதல் என்னாலேயே பாண்டவப் பகைவர்கள் கொல்லப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
ஆதலால் உடனே போர்முரசுகள் முழங்க ஆணையிடுவீராக!" என்று கேட்டுக்கொண்டான். ஜராசந்தனும்
அவனது மனத்துணிவை மெச்சி, தன் படைகளுக்கு அவனே சேனாதிபதி என அறிவித்து, துரியனைக் கௌரவித்தான்.
பின் சேனாதிபதியான துரியோதனனை, சேனைகளின் முன்வரிசையில் செல்லச் செய்து, பிரளய காலத்து
அக்கினியைப் போலவும் கூற்றுவன் போலவும் தோன்றுமாறு தான் சேனையின் பின்னே சென்றான்.
இவ்வாறு இவ்விருவரது சேனைகளும் ஒன்றுகூடி, உலகையே நடுங்கச் செய்யும் பெரும் முழக்கத்தோடு,
பலநாளும் பயணம் செய்து குருக்ஷேத்திரத்தை வந்தடைந்தன.
நாரதர்
துவாரகை சேரல்:
இது இவ்வாறிருக்க, குருக்ஷேத்திரத்தை வந்தடைந்த கௌரவர் படைகளைக் கண்ட 'நாரதர்'
விரைவாக துவாரகையை அடைந்து, கிருஷ்ணனை நோக்கி, "வாசுதேவ! தேவர், விஞ்சையர் முதலான
ஆறுவகை சேனைகளால் சூழப்பட்ட ஜராசந்தன், தன் புதல்வர்களோடும், துரியோதனன் முதலானவர்களோடும்
சேர்ந்து போரிட, குருக்ஷேத்திரத்தை வந்து அடைந்துள்ளான். அந்த சேனையில் பெருவீரர்களான
துரோணர், காங்கேயர், கர்ணன் துச்சாதனன், காலயவனன், அபராஜிதன், விஞ்சையரின் அரசனான சல்லியன்,
ஜயந்திரதன் ஆகியோர் காணப்படுகின்றனர். தசதிக்குப் பாலகர்களையும் நடுங்கச் செய்யும்
பிரபாசன் முதலான தேவர்களும், மிலேச்ச அரசர்களும் கூட காணப்படுகின்றனர்.
நாரதர் கலகம்:
துவாரகாபுரியின் இறைவனே! கடல் நடுவில் உள்ள இந்த நகரத்திற்கு அவர்கள் எவ்வாறு
வந்து நம்மைக் கொல்வார்கள்' என நீ எண்ணாதே! மிகவும் பராக்கிரமம் படைத்த ஜராசந்தன் இன்றோ
நாளையோ கடல்கடந்து இங்கு வந்து விடுவான்' என்றே நிச்சயம் அறிவாயாக! அன்றியும் உம்மிலும்
பலமடங்கு வீரம் பொருந்திய அவர்களோடு நீ போரிட்டு வெல்வது என்பது உன்னால் ஆகாத ஒன்று.
'வில்லாளிகள் அனைவருமே துரோணருக்குப் பிறகுதான்' என்று உலகோரால் புகழப்படும் அந்த மாவீரர்,
துரியோதனனின் பின்பலமாக இருக்கிறார் என்பதை மறந்து விடாதே! வாட்போரில் கீர்த்தி பெற்ற சதாயுதனும் அவர்கள் பக்கமே
உள்ளான். ஆகவே நம்மால் வெல்லவியலாத அவர்களை நாம் வென்றுவிடலாம் என்று எண்ணி, வீணே போர்தொடுத்து
ஏன் மடியப் போகிறாய்? வேந்தே! நான் அறிந்ததைச் சொல்லிவிட்டேன். நீ ஹரிகுலத்திற்குத்
தலைவர்; உன் உறவினருடன் நன்கு ஆராய்ந்து பார்த்து, உனக்கும் உன்னைச் சார்ந்தவர்க்கும்
எது நன்மையோ அதனைக் கடைப்பிடிப்பீராக! என்று கூறிய நாரதர், தான் நினைத்து வந்த காரியம்
இனிதே முடிந்தது' என எண்ணியவராய், அவர்களை விட்டு, வான்வழியே ஏகினார்.
கண்ணன் கலக்கத்தைப் பாண்டவர் போக்கல்:
நாரதர் கூறிச்சென்றதைச சிந்தித்துப் பார்த்த வாசுதேவனுக்கு சிறிது கலக்கம்
ஏற்படத்தான் செய்தது. அதை அவனது முகக் குறிப்பால் அறிந்த அருச்சுனன், "அரசே! நீர்
சிறிதும் கலக்கம அடைய வேண்டாம். அமரர்களோடு சேர்ந்துள்ள அமரேந்திரனையும் நான் நொடிப்பொழுதில்
அழிப்பேன். அப்படியிருக்க, இம்மானிடப் புழுக்களான ஜராசந்தன், துரியோதனன் முதலியோர்
எனக்கு எம்மாத்திரம்?" என்று முழங்கினான். வீமனும் அவரை நோக்கி, என் கையில் உள்ள
இந்த வித்தியாமயமான கதாயுதத்தால் பகைவர் எல்லாரையும் அழிப்பேன்" என்று சூளுரைத்தான்.
இவ்வாறு பராக்கிரமசாலிகளாக அங்குக் கூடியிருந்த சக வீரர்கள் அனைவரும் கிருஷ்ணருக்கு
ஏற்பட்ட கலக்கம் நீங்கும் வகையில் வீரவுரைகளைக் கூறி, பெருமிதம் தோன்ற, தங்கள் தங்கள்
வாகனங்களில் ஏறிப் போர் முகம் நோக்கி புறப்பட்டனர்.
பாண்டவரோடு சென்ற வீரர்கள்:
அவ்வாறு புறப்பட்டுச் சென்றவர்களில் திரௌபதியின் தந்தை துருபதன், தருமனின் மாமனாரான
வித்தியசேனன், சிகண்டி, ருக்குமணியின் புதல்வன் பிரத்யும்ன குமாரன், வராடன் புதல்வர்களான
சுவேதகுமாரன், உத்தரகுமாரன், சுபத்திரை மகன் அபிமன்யு, வீமனின் மகன் கடோத்கஜன், கிருஷ்ணன்
தந்தை வசுதேவன், ரோகினி புதல்வர் பலதேவர், ஒன்பது சகோதரர்களை உடையவரும், நேமிபகவானின்
தந்தையுமான சமுத்திரவிஜயர் முதலான சிறந்தத யதுகுலத் தலைவர்களான ஏனைய வேந்தர்களும்,
மறவர்களும் அடங்குவர்.
வாசுதேவன் நேமிபகவானிடம் போர் குறித்துக் கேட்டல்:
அப்போது, கிருஷ்ணன் நேமிபகவான் இருக்குமிடம் சேர்ந்து அவரை வணங்கி, "சுவாமி!
பகைவர்களோடு நான் இயற்றப்போகும் இந்தப் போரில் எனக்கு வெற்றியாகுமா? தோல்வியாகுமா?
யதுகுலத் தலைவரே! இவ்வுலகில் எனக்கு, வருங்காலத்தில் எத்தகைய சிறப்பு கிடைக்கும்? கூறியருளுங்கள்!"
என்று பணிவுடன் கேட்டார். மூவுலக நாதனாகிய பகவான், கிருஷ்ணனின் வசனத்தைக் கேட்டு யாதொன்றும்
உரையாமல், புன்முறுவல் பூத்தார். அவருடைய புன்சிரிப்பால், தமக்கு வெற்றியே ஆகுமென்று குறிப்பால் அறிந்து கொண்டு
கிருஷ்ணன் மீண்டும் பகவானை வணங்கி மகிழ்வுடன் அங்கிருந்து புறப்பட்டுத் தேவர், விஞ்சையர்,
யானை, குதிரை, தேர், காலாட்படை ஆகிய ஆறு வகை சேனைகளோடு, நன்னி மித்தம் எதிர்கொள்ள சங்கோசை
எழுப்பிக் கொண்டு, சேனைகளின் பின் தொடர்ந்தவராய் குருக்ஷேத்திரம் வந்தடைந்தார். இவ்வண்ணம் இருதிறத்துச் சேனைகளும் வேகமாகச் செல்லும் போது
எழுந்த துகள்கள், காற்றினால் அசையும் தேர்க் கொடிகளால் தள்ளப்பட்டு, வானை மறைத்தபடி
சென்று கடலில் வீழ்ந்தன.
பதினோராம் சருக்கம் முற்றிற்று.
பன்னிரண்டாம் சருக்கம்
ஸ்ரீநேமி பகவானுடைய திருவறங்களை மக்கள் கேட்டுப் பயன்பெற வேண்டிய காலத்திலேதான்
(தீர்த்தசந்தான காலம்) குருக்ஷேத்திரத்தில் இந்த பாரதப் போர் நிகழ்ந்தது' என்று அறியும்போது
இது கலிகாலத்தின் விளைவேயன்றி வேறு யாதாக இருக்க முடியும்' என எண்ணத் தோன்றுகிறது.
நேயர்களே! உங்களை எல்லாம் பதினெட்டு நாட்கள் நடைபெற்ற அந்த குருக்ஷேத்திரப் போரினைக்
காண, கற்பனைத் தேரில் அமர்ந்து புறப்படுங்கள் என்று கேட்டுக்கொண்டு இந்த எழுத்துப்
பயணத்தைத் தொடர்கிறோம்.
முதல் நாள் போர் - போர்க்களக் காட்சிகள்:
எண்ணற்ற சேனைகளுடன் எதிர் எதிர் திசையில் அணிவகுத்து நின்ற படைவீரர்கள், சேனாதிபதியரின்
அனுமதி சைகையால் கிடைக்கப்பெற்ற உடனே போர் செய்யத் தொடங்கினர். காலாட்படை வீரர்கள்,
காலாட்படை வீரர்களோடும், யானைவீரர்கள் யானை வீரர்களோடும், தேர்வீரர் தேர்வீரர்களோடும்
போரிட ஆரம்பித்தனர். போரில் கால்கள் துண்டிக்கப்பட்டு ஆயுதங்களுடன் கீழே விழுந்தனர்
வீரர்கள் சிலர்; அப்போது ஆயுதம் இழந்த வீரர்கள் அவர்கள் கைகளில் பிடித்திருந்த ஆயுதங்களைப் பறித்துக் கொண்டு
போரிட்டனர். நிலத்தில் மட்டுமின்றி, வித்தியாதரர்களால் வான் வெளியிலும் போர் நிகழ்ந்தன;
விரைந்து வரும் அம்புகளால் அறுக்கப்பட்ட, அவ்விச்சையரின் தலைகள், கீழே நிலத்திலிருந்து
போர் செய்யும் மற்ற வீரர்கள்மேல், பனங்காய்கள் போல பொத்தென்று விழுந்தபடியே இருந்தன.
எல்லாப் பக்கங்களிலும், தேர்களின் சக்கரங்களில் அகப்பட்டு, உருவின்றி நசுங்கிய வீரர்கள், தேவருலகம் புக விரும்பி உயிரைத்
துறந்தார்கள். யானைகளின் துதிக்கையால் அறையப்பட்டு, தேர்தல் சுக்குநூறாயின. கரங்கள்
ஒடிந்து வீழ்ந்தபோதும், சிலர் தம் கைகளில் தாங்கியிருந்த வில்லை பிறர் பறிக்க விடாமல்
பிடித்தபடி கிடந்தனர். அக்காட்சி, முக்தியை அடைய விரும்பும் ஆன்றோர்கள் தமக்கு எவ்விதத்
துன்பங்கள் நேர்ந்தாலும் அறத்தைக் கைவிடாதொழுகலை நினைவூட்டியது. தலையறுக்கப் பட்டு வீழ்ந்த வீரர்களின் கவந்தங்கள்
(முண்டங்கள்) தம்மை இந்நிலைக்கு ஆளாக்கிய பகைவர்களைத் தேடுவது போல் அங்குமிங்கும் சிறிது
நேரம் உலாவியபடி இருந்தன. வானில் பறந்து வரும் வீரர்களின் அம்புகள் எதிரிகளின் தலைகளோடு,
சுழன்று சுழன்று, சென்று பறவைகளுக்கு அச்சமூட்டின. தலைவனை இழந்த சில குதிரைகள், அங்கும்
இங்கும் தறிகெட்டு ஓடின; சில இறந்த தலைவனைப் பிரிந்து செல்ல மனமின்றி அவனருகிலேயே நின்று
கண்ணீர் உகுத்துக் கொண்டிருந்தன.
பிரத்யும்ன குமாரன் போர்:
இவ்வண்ணம் குருக்ஷேத்திரத்தில் பாரதப்போர் மும்முரமாக நடந்து கொண்டிருந்த போது,
கண்ணனது படைகள் சற்றே பின் வாங்குவதைக் கண்ட பிரத்யும்னகுமாரன், தன் படை வீரர்களுக்கு
தைரியமூட்டும் வார்த்தைகளை மொழிந்தபடி முன்சென்று,
பகைவர்கள் அஞ்சி நடுங்கும்படி, அம்புகளை மழையெனப் பொழிய தொடங்கினான். அதைக் கண்ட துரியோதனன், அவனை ஒரு காலத்தில் வளர்த்து ஆளாக்கிய *காலசம்பர
வித்தியாதரனையே போரிடும்படி அவன் மேல் ஏவினான்.
தன்னோடு போரிடுவதற்கு வரும் தந்தையைக்
கண்ட தனையன், "நும் புதல்வனைக் கொல்ல வருவது தகுமோ?" என வினவினான். அதற்கு அவன், "போர்க்களத்தே நீதி தவறாமல் போர்
புரியும் வீரர்க்கு புதல்வர்கள் என்றும் உறவினர்கள் என்றும் வேற்றுமை கிடையாது"
என உரைத்து மரத்தை மறைக்கும் பறவைகளைப் போல, மகன் ஏறி நின்ற தேரை,அம்புகள் சொரிந்து மறைத்தான். ஆயினும் அவன், அந்த கணைகளை தன் கணைகளால் துண்டித்ததோடு,
தந்தையின் தேர்மேல் பறந்த கொடிகளை அடித்து வீழ்த்தினான். இச்சமயத்தில், அடாத முறையில்
பிரத்யும்னனின் பின்புறம் வந்த சல்லியன், அவனைக் கதாயுதத்தால் தாக்கி, மூர்ச்சையுற்று
விழச் செய்தான். இதைக்கண்ட தேர்ப்பாகன், அவன் உயிரைக் காப்பாற்றும் பொருட்டு, தேரைப்
பின்புறம் நடத்திச் செல்ல, அப்போது மூர்ச்சை தெளிந்து எழுந்த பிரத்யும்னன், பாகனைத்
தடுத்து மீண்டும் தேரை முன்னோக்கிச் செலுத்த செய்து, மாயாத்திரத்தால் தன் தந்தையைக்
கட்டி தேர் மீது வைத்து செல்லத் தொடங்கினான். அச்சமயம், சிசுபாலனின் சகோதரன் ஒருவன்,
இவனை, கிருஷ்ணன் மகன் காமனே என்றறிந்து கதாயுதத்தால் அவனை அடித்து மீண்டும் மூர்ச்சித்து
விழும்படி செய்தான். அதைக்கண்ட துரியோதனாதியர் அவன் இறந்தான் என்றே நினைத்து வெற்றி!
வெற்றி! என்று முழக்கமிட்டு பேராரவாரம் செய்தனர்.
இந்த ஆரவாரத்தை செவிமடுத்த கண்ணன், தன் புதல்வன் மூர்ச்சையடைந்து இருப்பானேயன்றி
இறந்திருக்க மாட்டான் என்று ஊகித்துக் கொண்டு, மீண்டும், போரிட வருகின்ற சிசுபாலன்
தம்பியை முன்னேற விடாமல் தடுத்தான். இச்சமயத்தில் முனைமுகத்து நின்ற சல்லியன், கிருஷ்ணனை
நோக்கி, "ஏய்! இடையனே! இங்கிருந்து தப்பி ஓடி விடு! இல்லையேல் பிழைக்க மாட்டாய்!
நீ மாடு மேய்ப்பதற்குத் தகுதி உடையவனேயன்றி போர் புரிவதற்கு ஆற்றல் இல்லாதவன்; யாதவராகிய
நீங்கள் எனக்குப் புழுக்களுக்கு சமானம்" என்று வீரம் பேசினான்.
சல்லியனும் வசுதேவரும்:
இவ்வடாத மொழிகளைக் கேட்டு சினம் கொண்ட வசுதேவர், காண்போர்க்கு அச்சத்தை ஊட்டும்படியான,
அரக்க வடிவத்துடன் பெரிய உருவம் கொண்டு விண்ணேறிச் சென்று, அவன் மேல் வீழ்ந்தார். அதற்கும்
அஞ்சாத சல்லியன், தன்மேல் விழப்பாய்ந்த அவரை கதாயுதத்தால் அடித்து வெகுதொலைவில் விழச்செய்தான்.
சல்லியனும் கிருஷ்ணனும்:
அதன்பிறகு, விஞ்சைய வேந்தனாகிய சல்லியன், தான் ஓர் அந்தணனாக மாய உருவம் கொண்டுவந்துப்,
போரிட்டுக் கொண்டிருந்த கிருஷ்ணன் முன் தோன்றி, "சுவாமி! உன் பகைவர்களால் துவாரகாபுரி நாசமடைந்து விட்டது.
சமுத்திரவிஜய மன்னரும் கூட கொல்லப்பட்டார்" என்று பொய்மொழி கூறினான். நேமிபகவான்
இருக்கும் வரை துவாரகை நகரத்தை யாராலும் அழிக்க முடியாது என்பதை உணர்ந்தவராதலின் கிருஷ்ணர்,
இவன் சல்லியனே என அறிந்து கொண்டு, "ஓ ! சல்லியா! உன்னை யாரென்று அறிந்து கொண்டேன்.
என் படைகளுக்கு நடுவே நான் இருக்கும் வரை கூற்றுவனும் அஞ்சி இங்கு வர மாட்டான்; ஏன்
பொய்யாக கதைக்கிறாய்? இங்கிருந்து ஓடிவிடு என்று பதிலுக்குக் கூவினார்.
யாதவர் சக்கர வியூகத்தை உடைத்தல்:
இந்நிலையில் ஜராசந்தன், தம் படைகளை சக்கர
வியூகமாக, நிறுத்திப் போர்ப்படைகளை பாண்டவர் மேல் ஏவினான். படைகள் சக்கர வியூகமாக அணிவகுத்துத்
தம்மை நெருங்குவதைக் கண்ட கண்ணன், பலராமருடைய உதவியுடன், அவ்வளையத்துள் புகுந்துக்
கடும்போர் இயற்றினார். அக்கொடிய போரில், பெரும் எண்ணிக்கையில் யானைகளும் குதிரைகளும்
மாண்டன. தேர்த்திரள்கள் நொறுங்கின. பலநூறு காலாட்படை வீரர்கள் அழிந்தனர். கண்ணன் தன்
கதாயுதப் படையால் சேனைக்கடலைக் கலக்கி, தேவேந்திரன் மலைகளைப் பிளந்து வீழ்த்தியது போல,
சக்கரவியூகத்தை அதிவிரைவாக உடைத்து பங்கம் செய்துகொண்டு வெளிவந்தார். இதைக் கண்ணுற்ற
ஜராசந்த மன்னன், பழைய சேனாதிபதியாகிய *இரண்யாபன்* என்பவனையும் புதிய சேனாதிபதியான துரியோதனனையும்,
மற்றும் *இரதநேமி* என்பவனையும் ஊக்குவித்து, உற்சாகப்படுத்தி, அவர்கள் மேல் ஏவினான்.
ஆயினும் அவர்கள், கடலின் பெரிய அலைகள், தன்னில் புகும் பெரிய நதிகளின் அலைகளால் தடுக்கப்படுவது
போல, *ருக்மணன்* அருச்சுனன், தர்மர் மூவராலும் தடுக்கப்பட்டனர்.
துரியனும் அருச்சுனனும்:
அப்போது துரியோதனன், அருச்சுனனைப் பார்த்து, "அன்று தீப்பற்றி எரிந்த அரக்கு
மாளிகையிலிருந்து நீ எவ்வாறோ பிழைத்துச் சென்றுவிட்டாய்! இப்போது உன்னை இங்கிருந்து
உயிரோடு போக விடமாட்டேன்!" என்று கருவினான். அவனுரை கேட்ட அருச்சுனன் மிகவும்
சினந்துத் தன் காண்டீபத்தை நாணேற்றிச் சரங்களைத்
தொடுத்து, அவன் தேர்மேல் பறந்து வந்த கொடியையும், குடையையும் தேரோடு துண்டித்து வீழ்த்தினான்.
அப்போது ஜாலந்தரன், துரியோதனனுக்கு உதவிபுரிய வந்தான். அவனும் துரியோதனன் அடைந்த கதியையே
அடைந்து ஓடிப்போனான். சக்கர வியூகத்தைப் பாதுகாப்பதற்காக அனுப்பப்பட்ட இரண்யாபனை, ருக்மணன்
கொன்று வீழ்த்த, காலனுக்கு இணையான இரதநேமியைத்,
தருமர் கொன்றொழித்தார். இவ்வாறு மூவரும், தம்மை எதிர்த்த துரியோதனன் முதலான
வீரர்களை முறியடித்து, எளிதாகப் பெரும் வெற்றியின் மகிழ்ச்சியையும் பெற்று பாரதப் போரின்
முதல் நாள் போரில் நற்புகழைப் பெற்றார்கள்.
மாலை வந்தது:
ஆம்; பாரத யுத்தத்தின் முதல் நாள் போர்
முடிவிற்கு வந்தது. இவ்வுலகில் ஒருவன் தன்னை ஒத்த வீரருக்கு ஏற்பட்ட துன்பங்களைக் காணச்சகியாது
இழிந்துபோகும் உண்மை வீரனைப் போல, அம்மாலைக் காலத்தே, சூரியன் ஒளி மழுங்கி, அத்தமன
கிரியை அடைந்தான். எங்கும் இருள் பரவியது. இருதிறத்துப் படைவீரர்களும் தம் போர்ச் செயல்களை
அதோடு நிறுத்திக் கொண்டு, தத்தம் பாசறைகளுக்குத் திரும்பினர்.
-------------------------------------------------------
காலசம்பர வித்தியாதரன்: வாசுதேவர் ஆகிய கிருஷ்ணருக்கு,
ருக்மணியிடமாகப் பிறந்தவன் இந்த பிரத்யும்ன குமாரன். இவன் பிறந்த போது அவனது முற்பிறவிப் பகைவனாகிய வித்தியாதரன்
ஒருவன் இவனை எடுத்துச் சென்று கொல்ல முயன்றான். ஆயினும் இவனது நல்வினை மிகுதியினால்,
ஒன்றும் செய்ய இயலாமல், தென்மலையின் தட்சக சிலை என்னும் பாறையின் கீழே விட்டுவிட்டுச்
சென்றான். அவனைக் காலசம்பர வித்தியாதரன் கண்டெடுத்துச்
சென்று, தன் மகனாகவே பாவித்து பதினாறு ஆண்டு காலம் அருமையாக வளர்த்து வந்தான். அதன்
பின்னே அவன் தன் தந்தையின் நகரமாகிய துவாரகைக்குப் போய் சேர்ந்து பெற்றோர்களிடம் வாழ்ந்து
வரலானான். இக்கதை ஹரிவமிச புராணத்துள் காணப்படுகிறது.
வராடனின் அரசி புலம்பல்:
மாலைக் காலம் நெருங்கிவர, சூரியனும்
நல்லோரின் வீழ்ச்சியைக் காணப் பொறுக்காதவன் போல, மேலைக் கடலில் சென்று மறைந்து போகவும்
இருளும் மூடியது. இருதரத்து சேனைகளும் தத்தம்
பாசறைக்கு திரும்பியதால், போர்க்களம் ஒலியவிந்து கிடந்த அந்த இரவுப் தமிழில் ஒரு பெண்ணின் அழுகை ஒலி மட்டும் தீனமாகக்
கேட்கத் தொடங்கியது.
நோக்கும் என் விழியிரண்டை
நொடிப் போதில் இழந்தேனே!
போர்க்களமாம் வேள்வியிலென்
புதல்வர்களைப் பொசுக்கிடவோ,
காத்து வளர்த்தேனோ?
கண்மணிகாள்! இனியும்மைப்
பேர்த்தும் என் பிள்ளைகளாய்
பெரும்பேறு கிட்டிடுமோ?
ஆபத்து
வந்துறுங்கால்
அவரவரும் தம்முயிரைக்
காபந்து செய்திடவே
கைவிட்டே ஓடுகிறார் !
என்ன
உலகமம்மா?
இப்புவியால் மன்னர்களும்
நன்னெறியைப் பேணாரோ?
நல்லவரைக் காவாரோ?
தருமனும் சிகண்டியும் சபதம் செய்தல்:
அன்பு வாசகர்களே! ஆம்; இந்தப் புலம்பல் ஒலி எந்தத் தாயினுடையதாக இருக்கக்கூடும்
என்று யூகித்து விட்டீர்களா? ஆம்; வராட நாட்டரசனின்
பட்டத்தரசி. ஒரே நாள் போரில் தன் கண்ணான இரு
புதல்வர்களை இழந்து தவித்த அந்த உத்தமத் தாயின் ஒப்பாரிக் குரலே அது! அந்நற்றாயின் அழுகுரலைப் பாண்டவர்களும் கேட்டுத்
துன்புற்றனர். ஆம்; நல்லோரின் இயல்பு அதுவன்றோ?
அப்போது தருமர் வராட மன்னன் தமக்குச் செய்த
பேருதவிகளை எண்ணி மனங்கசிந்தார். நன்றியால் அவர் உள்ளம் எழுச்சி பெற்றிட, அம்மன்னனின்
துன்பத்தை நீக்கும் பொருட்டு, "யான் இந்த
பாரதப் போரின் இந்த இரண்டாம் நாளிலிருந்து பதினேழாம் நாளில் அந்த சல்லியனைக் கொல்வேன்;
அங்ஙனம் இல்லையேல், காட்டில் மூட்டப்பட்ட தீயில் விழுந்து உயிர் துறப்பேன்" என்று
யாவரும் கேட்கும்படி சபதம் செய்தார். அவ்வாறே, "சுவேத குமாரனைக் கொன்ற பீஷ்மரை
இன்றிலிருந்து ஒன்பதாம் நாளில் கொல்வேன்; அங்ஙனமின்றேல், யானும் காட்டுத் தீயில் விழுந்து
மடிந்து போவேன்" என்று சிகண்டியின் பலரும் அறியத் சூளுரைத்தான். இவ்வாறு துன்பகரமான அவ்விரவு கழிந்து போக, மறுநாள்
காலையில், சூரியனும் தருமர், சிகண்டி ஆகிய இருவரின் கடுஞ்சினம் போல, கீழ்வானில் சிவந்து
தோன்றினான்.
மூன்றாம் நாள் போர் :அருச்சுனன், பீமன், கடும்
போர் செய்தல்:
முதல் இரண்டு நாட்களை விட, மூன்றாம் நாள் போரில் போர்க்களம் பிணக் களமாகியது.
ஆம்; அருச்சுனன் அதிவிரைவில் உயிரைப் போக்கக் கூடிய, கொடிய சரங்களைக் கோத்து, மாரியெனப்
பொழிந்துத் தள்ளினான். அன்று எத்தனை வீரர்கள் களத்தில் வீழ்ந்தார்கள் என்று கேட்பதைவிட,
வீரர்கள் எவர்தான் அவனம்பால் கொல்லப்படாமல் உயிர் பிழைத்தனர் என்று கேட்பதே பொருத்தமாய் இருக்கும். இறந்த யானைகளும்,
குதிரைகளும், முறிந்த தேர்களும் கூட இதற்கு விதி விலக்கில்லை. இவ்வண்ணம் வீராவேசத்துடன் போரிட்டுக் கொண்டிருந்தவனை
அவன் பாட்டனாராகிய பீஷ்மர் பார்த்து,
"அடே அர்ச்சுனா !வீரனாகிய நீ என்னோடு எதிர்த்துப் போர் செய்! விணே எளியவர்களை அழிப்பதனால் என்ன பயன்?" என்று கூறிக்கொண்டே
பல்வேறு வகையான அம்புகளைச் சொரிந்து படைகளை
முறியடித்தார். அப்போது துரியோதனன் அவர் அருகில் வந்து, "சுவாமி! எவ்வாறு போர்புரியின்
பகைவர் குலம் விரைவில் நாசமடையுமோ, அவ்வகைப் போர்முறையை உடனே மேற்கொள்வீராக!"
என்று கூறி வணங்கினான் துரோணரும் அவ்வேளையில் கணைத் தொகுதிகளைச் சொரிந்து கொண்டே அங்கே வந்தார்; அவரை பீமன், தன் கதாயுதத்தைச் சுழற்றித் தடுத்து
வெற்றிகொண்டான். அவனுடைய கதாயுதத்தின் சுழற்சியைக் கண்டு அமரரும் அஞ்சினர். அப்படையால்
அவன் , கலிங்க நாட்டரசன் மகனை விண்ணுலகம் சேர்த்ததோடு, ஏழுநூறு தேர்களை அடித்து நொறுக்கிப்
பொடிப்பொடியாக்கினான்.
அபிமன்யுவின் வீரப்போர்:
அப்பொழுது சுபத்திரையின் மகன் அபிமன்யு பீஷ்மருடைய செருக்கினைப் பொடியாகும்படி,
அவர் ஏறிவந்த தேரினை, கதையால் அடித்து நொறுக்கினான். அதைக் கண்ட துரியோதனன் புதல்வனும்
,சிறந்த வில்லாளியுமாகிய இலட்சுமணன் என்பவன், அபிமன்யுவின் பயங்கரமான வில்லை, நாணொடும்
அறுத்துத் துண்டித்தான். சினங்கொண்ட அபிமன்யு, கடிதில் வேறொரு வில்லை எடுத்து வளைத்து
அந்த இலட்சுமணனை விண்ணுலகம் அனுப்பினான். இதனால் ஆத்திரமடைந்த துரியனின் பக்கம் என்ற
அரசர் ஆயிரம் பேரும் அவனைச் சூழ்ந்து நின்று எதிர்த்தனர். ஆயினும் என்ன பயன்? ஒரு சிங்கத்தின்
முன் ஆயிரம் மான்கள் கூடி வந்தாலும் வெல்ல இயலுமா ?இவ்வண்ணம் இருதிறத்து வீரர்களும்
ஒருவரோடொருவர் எதிர்த்துப் போர் புரியும் தொழிலில் ஊக்கத்துடன் ஈடுபட்டிருந்தனர். எட்டு நாட்களும் இவ்வாறே கழிந்து போக, ஒன்பதாம் நாள் பிறந்தது.
ஒன்பதாம் நாள் போர்: அருச்சுனன் ஈந்த அஸ்திரம்:
இந்த ஒன்பதாம் நாள் போரை, அதன் முடிவை அறிய மண்ணுலகோரோடு விண்ணுலகோரும் மிகுந்த
ஆவலுடன் எதிர்நோக்கி இருந்தனர். துருபதன் மகன் சிகண்டியின் சபதம் நிறைவேற வேண்டிய நாள்
அல்லவா? அது? பீஷ்மர், சிகண்டியினால், போரிட வருமாறு முறையாக அழைக்கப்பட்டார். அதற்கு
முன்பாக, அருச்சுனன் சிகண்டியை நோக்கி, "மைத்துனா! எவருக்கும் அஞ்சாதவர் என் பாட்டனார்.
அவரை உன்னால் மட்டும் எவ்வாறு எளிதாக வெல்ல முடியும்? இது சமயம் நீ அவரோடும் நடத்தும்
போரில் இந்த தேவாஸ்திரம் இல்லாமல், அவரது அம்பு வரிசைகளை உன்னால் தடுத்து நிறுத்த முடியாது.
இந்த அஸ்திரம் வெள்ளியங்கிரியில் இந்திர ராசனால் எனக்கு அளிக்கப்பட்டது. இதை நீ கைகொண்டு
செல் ! உன் சபதம் நிறைவேறுவதாக!" எனக்கூறி தன் வைத்திருந்த அத்திரத்தை அவனுக்குத்
தந்துப் போருக்கு அனுப்பி வைத்தான்.
சிகண்டியும் பீஷ்மரும் பொருதல்:
சிகண்டியும் அருச்சுனன் நல்லுரையைக் கேட்டு, தேவாஸ்திரங்களைப் பெற்றுக்கொண்டு
உள்ளமும் உடலும் பூரிக்க, பீஷ்மரோடு போரிடத் தயாராகி முனை முகத்தில் வந்து நின்றான்.
எவரையும் அஞ்சச் செய்யும் பீஷ்மரும், அவ்வாறே வந்து, சிகண்டியின் முன் வந்து நின்றார்.
விற்போரும் தொடங்கியது. காங்கேயர், சிகண்டியால்
எய்யப்பட்ட சாதாரண பாணங்களை எல்லாம் எளிதாகத் துண்டித்தவாறே இருந்தார். இதைக் கண்ட சிகண்டியின் தமையனான திஷ்டார்ச்சுனன், நம்பிக்கை
இழந்தவனாய், "என் தம்பி வெகுவிரைவில் தோல்வி அடையப் போகிறான்; உணவு உட்கொள்ளத்
தொடங்கிய முதல் கவளத்திலேயே ஈ விழுந்தது போல் ஆயிற்றே! எவராலும் தடுக்கவியலாத வல்லமை
படைத்த இந்த பீஷ்மரை இனி இவன் எவ்வாறு வெல்லப் போகிறான்? 'ஒன்பதாம் நாள் போரில், பீஷ்மரைக்
கொல்வேன்' என இவனிட்டுள்ள சூளுரை என்னாகுமோ?
பீஷ்மருடைய தேரும் கொடியும் இப்போதும் மிக சோபையுடன் காட்சி அளிக்கின்றனவே;
அவருடைய வில்லின் நாதம் கூட 'டங்' டங்' என்று கேட்டவாறே உள்ளதே" என்று வருத்தம் மேலிட
புலம்பத் தொடங்கினான்.
பீஷ்மர் மரணம் - பாண்டவர், கௌரவர் துயரம்:
தமையன் இவ்வாறு உரைத்துக் கொண்டிருப்பதைக் கேட்ட சிகண்டி, தனஞ்செயன் தமக்களித்த
தேவாஸ்திரங்களை வில்லில் தொடுத்து, காங்கேயரின் சேனைகள் அனைத்தையும் ஒரு நொடியில் அழித்து
நாசம் செய்தான். சிகண்டியின் பானங்களால் அடிபட்டு இறந்தவர்கள் போக, எஞ்சியிருந்த அவருடைய
சேனா வீரர்கள், 'ஒருவருக்கு ஆபத்து ஏற்படும்போது அவரைக் கைவிட்டு ஓடும்' அதமர்களைப்
போல, தத்தம் உயிரைக் காப்பாற்றிக்கொள்ளும் பொருட்டு போர்க்களத்தை விட்டு ஓடலாயினர்.
போர்க்களத்தில் தேருடன் தனித்து விடப்பட்ட பீஷ்மருக்குச் சிறிதும் அவகாசம் தர விரும்பாத
சிகண்டி, கூர்மையான பாணங்களை எய்து, அவருடைய குடை, கொடி, தேர் முதலானவற்றையும் தேர்ப்பாகனையும்
ஒருசேர அழித்தொழித்தான். இதனால் ஆத்திரமும் அவமானமும் அடைந்த காங்கேயர், சிகண்டி தன்னைக்
கொல்வதற்கு முன், தான் அவனைக் கொல்வோம் என எண்ணி, வாட்படையை வீசிக் கொண்டு அவன் முன்னே
பாய்ந்தார். சிகண்டி அவரை முற்பட்டு தடுக்கும் எண்ணத்துடன், வாளேந்திய அவரது கையைக்
கண்ணிமைக்கும் நேரத்திற்குள் துண்டித்து வீழ்த்தினான். பிதாமகராகிய பீஷ்மர், கையறுபட்டு,
பெருமலை சாய்ந்து விழுவது போல மண்ணில் சாய்ந்தார்; இந்த அவலக் காட்சியைக் கண்ட பாண்டவர்களும்
சரி; துரியோதனாதியர்களும் சரி; தாம் வைத்திருந்த போர்க் கருவிகளை கீழே எறிந்து விட்டு,
அவர் அருகில் ஓடிச்சென்று, 'ஐயயோ !' என ஓலமிட்டு அலறினர்.
"சுவாமி! நாங்களே உமக்குச் சத்ருவானோம். இந்த பாரதப் போரில் உம்மைக் கொல்லும்
கூற்றுவனாகிவிட்டோம்; எங்களின் பிதாமகராகிய உங்களைக் கொள்வதற்காகவே நாங்கள் இந்த பழிக்கிடமான
பிறப்பினை எடுத்தோமா?" என்று இரு திறத்தினரும் 'ஓ'வெனப் புலம்பிக் கதறி அழுதனர்.
பீஷ்மரின் அறவுரை:
பாண்டவரும் கௌரவரும் இவ்வாறு கூறி அலறி அழுது கொண்டிருப்பதை, அம்பாகிய படுக்கையில்
குருதி வெள்ளம் சோர கண் மூடியவாறு படுத்திருந்து கேட்டுக்கொண்டிருந்த காங்கேயர் விழிதிறந்து
அவர்களை அன்புடன் நோக்கி,
அன்புள்ள பெயரர்களே!
அகிலமதில் வீரருக்கே,
அந்தத்தில் வினை பயனை
அடைந்தேன் என்று அறியுங்கள்!
துன்பமதும் இன்பமதும்
பிறராலே தோன்றிடுமோ?
தொல்மோக வினைதன்னைத்
துய்த்தலால் கழிப்போமா?
முன்புவரு சமுசாரச்
சுழலேற வல்லேமோ?
மொய்ம்பினனாம் சிகண்டியெனை
முடித்தானென் றெண்ணாதீர்!
வன்பினதாம் பகைவிட்டு
வாழ்வீரேல், ஒற்றுமையாய்;
வசையில்லா அமைதிதனை
வழங்கியவர் ஆகுவிரே !
இதில் உங்கள் தவறு என்னவிருக்கிறது? வீர புருடர்களின் இறுதி முடிவு இப்படித்தான்
அமையும்: நான் சிகண்டியொடு போர் செய்தல் என்
தீவினையினாலேயே ஆகும். அவன் மீது தவறு ஏதும் இல்லை. ஒருவன் நமக்குத் துன்பம் செய்யவும்
முடியாது, இன்பம் தரவும் முடியாது. பிறவிச் சுழற்சியிலிருந்து நம்மால் விடுபடவும் முடியாது.
இனியாவது நீவீர் இரு திறத்தாரும் பகையை மறந்து ஒற்றுமையுடன் வாழ்வீரானால் என் ஆன்மாவிற்குச்
சாந்தியை தந்தவர் ஆவீர்கள்" என்றார்.
சாரணர் அறிவுரை:
பீஷ்மர் இவ்வாறு அன்பு மொழிகளை உகுத்துக் கொண்டிருந்த வேளையில், அவரது நல்வினை
உதயத்தால், வானத்தே சென்று கொண்டிருந்த ஹம்சர்,
பரமஹம்சர் என்னும் பெயர்தரித்த சாரண பரமேஷ்டிகள் இருவர், திடுமென அவ்விடம் வந்த அவர்கள், பீஷ்மரை நோக்கி, "பெரியீர்! இந்தப் போர்க்களத்தில் அம்புகளால் துளைக்கப்பட்டு
வீழ்ந்து கிடக்கின்ற போதும், உம் பகைவர் மேல் சினம் கொள்ளாமல், பொறுமை எனும் அரும்
குணத்தைப் பூண்டவராய், அவர்கட்கு அறவுரை ஆற்றிக் கொண்டுள்ளீர்! நீரே உண்மை வீரர்
! நல்லொழுக்கத்திற்கு ஆதாரமாயும் கருணைக்கு
இருப்பிடமாயும் அறத்திற்கு உறைவிடமாயும் காணப்படுகிறீர்! இக்கொடிய போர்க்களத்தில் இப்போது
உம் நெஞ்சம் அருகனது திருவடிகளிலே பதியட்டும்! பிறவிக்கடலில் உழலும் மாந்தர்க்கு, அவர்
திருவடிகளே அரணாவதன்றி, சரணாவது வேறில்லை. இவ்வுடலை விட்டு உயிர் பிரிந்து செல்லுங்கால் அதற்குத் துணையாய் வருவது புண்ணிய பாபங்கள் அன்றி
வேறில்லை ஆகவே இப்போது, உனக்கு எல்லா உயிர்களிடத்தும் சமதா பாவத்தோடு கூடிய உத்தமப்
பொறை குணம் ஏற்படுவதாக! அதுவே உமக்கு நற்கதியை நிச்சயமாய் அடைவிக்கும்" என்று
அறவுரை பகர்ந்ததன் பின் அங்கிருந்து அகன்றனர்.
சாரண பரமேட்டியர் அருளிய அறவமுதை உண்ட
பீஷ்மர், மகிழ்ச்சியால் உளம் பூரித்தார். தூய எண்ணத்தோடு, ஜின தீட்சையினை பாவனையால்
வரித்துக்கொண்டார். நற்காட்சி, நன்ஞானம், நல்லொழுக்கம் ஆகிய மும்மணிகளில் இடைவிடாமல்
தோய்ந்து பஞ்ச பரமேட்டியரின் முதலெழுத்துக்கள் ஐந்தால் ஆகிய அ சி ஆ உ ஸா என்னும் மந்திர மொழியை உச்சரித்தவாறே, தன் உடலை
விட்டு ஐந்தாவது பிரமகற்பத்தில், அக்கணமே சென்று தேனாகப் பிறந்தார்.
திருவறம் மறவேல் :
அதன்பிறகு பாண்டவர் துரியோதனாதியர் அனைவரும் பீஷ்மரின் உடலைத்
தகனம் செய்து இறுதிக் கடன்களை முடித்த பின்னர் தத்தம் பாசறைகளுக்குத் திரும்பினர்.
அவர்கள் அனைவரது நெஞ்சங்களையும் துன்ப இருள் கவ்வி நின்றது.
திருவறம் தன்னை யேற்று
திருமொழி ஐந்து ரைத்தே
அருகனின் திருவ டிக்கே
அன்புசெய் உளத்த ராயின்
மறுவிலா கற்ப லோகம்
மருவலாம் மாநி லத்தீர் !
கரவிலா வீட்டு மன்தன்
கதை நமக்(கு) எடுத்துக் காட்டே !
[பன்னிரண்டாம் சருக்கம் முற்றிற்று.]
பதின்மூன்றாம் சருக்கம்
சிகண்டி,தான் சூளுரைத்தபடியே, ஒன்பதாம் நாள் பாரதப்போரில்
பீஷ்மரை விண்ணேற்றிய கதையை முன் சருக்கத்தில் படித்தோம் அல்லவா? மேலே பத்தாம் நாள்
போரில், என்ன நடந்தது எனப் பார்ப்போம்.
சல்லியன் புதல்வன் மடிந்தான்:
பத்தாவது நாள்; விடியற் காலையிலே,யே
உலோப குணத்திற்கும் குரோத குணத்திற்கும் ஆட்பட்டிருந்த பாண்டவர்களும், துரியோதனாதியர்களும்,
எல்லாவற்றையும் மறந்துபோய் ஒரு நாளும் சண்டையையே பாராதவர்கள் போல, குருக்ஷேத்திரப்
போர்க்களத்திலே இறங்கி எதிர்க்கத் தொடங்கினர். அப்போது அது அபிமன்யுவோடு போரிடுவதற்காக,
சல்லியனது மகன், கூற்றுவனைத் தானே தேடி செல்லும் அசடன் போல, முற்பட்டுச்சென்று, கணைகளை
எய்தான். அவை எல்லாவற்றையும் அபிமன்யு விளையாட்டாகவே, தன் எதிர் பானங்களால் துண்டுபட வீழ்த்தியதோடு அவனையும் எமனுலகுக்கு அனுப்பினான்.
துரியன் புதல்வனும் மடிந்தான்:
அவ்வளவில் துரியோதனனின் மகன் இலட்சுமணன், முன்னால் வந்து மழை மேகம் மலையை மூடுவதுபோல,
தன் சரங்களால் அபிமன்யு குமாரனை மூடினான். அவற்றை எல்லாம் கூட, துண்டித்து வீழ்த்திய
அபிமன்யு முடிவில் அவனையும் தன் அம்பிற்கு இறையாக்கினான்.
அபிமன்யுவும் அசுவத்தாமனும்:
இந்த பத்தாம் நாள் போரில் அபிமன்யு ஒருவனே பதினாலாயிரம் அரசகுமாரர்களைக் கொன்று
குவித்தான். இவ்வாறு அபிமன்யு செய்த பயங்கரப் போரையும், மகன் இழந்ததையும் துரியன் கேட்டு,
மிகவும் புத்திர சோகம் கொண்டவனானான். தன் நண்பன்
கர்ணனையும் துரோணரையும், சென்று அவனைக் கொன்று வரும்படி போர்முனைக்கு அனுப்பி வைத்தான்.
ஆயினும் என்ன பயன்? இரு யானைகள் கூடிவந்தாலும், சிங்கக் குருளையை வெல்ல முடியாதது போல,
அவ்விருவரும் அபிமன்யுவால் விரட்டப்பட்டு பின்வாங்கிச் சென்றனர். "இனி இந்த சேனையில்
இவனை எதிர்த்து வெல்லக் கூடியவர் யாரும் இல்லை" என்னும் புகழ்மொழி, ஜராசந்தன்
காதுக்கு எட்டியது. துரோணரின் மகன் அசுவத்தாமன், அபிமன்யுவைப் பற்றிய இந்த புகழுரை
கேட்டு, மனம் பொறுக்காமல், களம் புகுந்து கணைகளால் அபிமன்யுவைப் பலமாகத் தாக்கி மூர்ச்சையடையச்
செய்தான். எனினும், அபிமன்யு சிறிது நேரத்தில் மூர்ச்சை தெளிந்து எழுந்து, வில்லையும்,
அம்பையும் ஏந்தி நாணேற்றி, அசுவத்தாமனைக் கணப்பொழுதிற்குள் புறமுதுகு காட்டி ஓடச் செய்தான்.
சூதர்கள் சதி:
அபிமன்யுவின் பேராற்றல் எல்லையற்றதாக இருப்பதைக் கண்ட கர்ணன் துரோணரோடு கலந்து
ஆலோசித்து, அருச்சுனன் மகனாகிய இந்த அபிமன்யுவைத்
தனி ஒருவனால் எதிர்த்து வெல்வது என்பது இயலாத காரியம். படைத் தலைவர்கள் அனைவரும்
ஒன்றுகூடி போரிட்டால்தான் அவனை வென்றழிக்க முடியும்' என முடிவெடுத்தனர். அதன்படி அவர்கள்
அனைவரும் பல்வேறு ஆயுதங்களை ஏந்திக் கொண்டுவந்து கூடி நின்று அவன்மேல் படைக்கருவிகளை
வீசலாயினர். பகைவரின் இந்த அடாதசெயலால் அவனது தேர் முறிந்து வீழ்ந்தது. எனினும், அவ்வீர
இளைஞன் தன் கையிலிருந்த கதாயுதத்தை வலமாகவும்
இடமாகவும் கறங்கெனச் சுழற்றி பகைவர்களைக் கலக்கினான். அப்போது சிந்து நாட்டரசனாகிய
ஜயத்திரதன் ஒளிந்துவந்து அபிமன்யுவின் புறமுதுகில்
விட்ட கூர்மையான அம்பானது அவன் மார்பை ஊடுருவிச் செல்லவும் அவன் மலைபோல் சரிவது போல
மண்ணில் சாய்ந்தான். அதைக்கண்ட தேவர்கள் கூட, "ஐயோ! பாவிகாள்! பலர் சேர்ந்து ஒரு
வீரனைக் கொன்று தீராத பழி ஏற்றுக்கொண்டீர்களே!" என்று கூறி இரங்கினர்.
அபிமன்யு இறப்பு - கர்ணன் துடிப்பு:
அப்போது கர்ணன், வலிதாளாமல் வருந்துகின்ற அபிமன்யுவைப் பார்த்து மனங்கசிந்து,
தன் தேரில் அவனை ஏற்றிக்கொண்டு, "அபிமன்யு குமாரனே!"
தனியனாய்
நின்றுநீ நடத்திய போரில்
தாங்கரும் தோல்வி,யாம் பெறவும்
இனியதாம்
புகழுடல் ஏற்றனை செல்வா!
இவ்வுடல் மண்ணினுக்(கு) இறையா;
அனலெனச்
சீறும் அருச்சுனன் மகனா
ஆயிரம் அருச்சுனன் வன்மை
புனிதனே ! பெற்றுப் பொலிந்தனை; இனிநீ
புன்மையில் நல்லறம் ஓர்க!
" புதல்வனே ! யாம் அனைவரும் உன்னால்
தோல்வியைத் தழுவினோம். நீயோ புகழுடல் பெற்று, ஆயிரம் அருச்சுனனுக்கு நிகரான வலிமை பெற்றுத் திகழ்ந்து மடிந்துபோனாய்! இந்த பாரதப்போர் உன்னாலேயே
பெருமை பெற்றது; பிரியவிருக்கும் உயிரைப் போகாமல் தடுக்க வல்லவர் உலகில் யாவர் உளார்?
ஆகவே மகனே! உனது இந்த இறுதி சமயத்திலே திருவறத்தை நெஞ்சிலே நிறுத்துவாயாக!" என்று
பகர்ந்தான். அச்சமயத்தில் துரோணர் முதலான பெரியோர்களும் அவ்விடம் வந்து பஞ்சம்மந்திரங்களை
அவன் செவியில் புகல, ஆத்ம வீரனான அபிமன்யு நல்ல நினைவோடு அவைகளை மனத்தகத்தே நிறுத்திப்
பகைமை உணர்வை விலக்கி, யாவரிடமும், தன்னை மன்னிக்கும்படி கோரி, தானும் அவர்களை மன்னித்து,
தியாகபாவனையை மேற்கொண்டு, ஆத்மத்தியானத்தோடு கூட சமாதி மரணம் அடைந்து அமரரானானான்.
தருமரின் புலம்பல் :
அப்பொழுதே அந்த அந்திவேளையில், தீயவர்களான, துரியோதனாதியரின் பாசறைகளில், வெற்றி
முழக்கமும், ஆனந்த முரசொலி அரவமும் கேட்டன. போர்த் தொழிலால் களைப்படைந்து தம் பாசறைகட்கு
திரும்பிக்கொண்டிருந்த தருமர் முதலானோர் இதைக் கேட்டு, குழப்பமடைந்தவராய், வெற்றிமுழக்கொலி
கேட்பதற்கான காரணத்தைக் கண்டறிந்து வரும்படி ஒற்றரை ஏவினர். அவர்களும் விரைந்து சென்று,
குமரன் இறந்த செய்தியை அறிந்துவந்து தருமனிடம் கூறவும், தருமர் அதைக் கேட்டுப் புத்திர
சோகத்தால் மூர்ச்சித்து விழுந்தார். சற்று நேரத்துக்குப் பிறகு மயக்கம் தெளிந்து எழுந்து,
"மகனே! நின் குலத்தைச் சூனியமாக்கிவிட்டு, நீ எங்ஙனம் எங்களைவிட்டுப் பிரிந்தாய்?
ஐயோ ! எந்தப் போரினால் பிள்ளைகளையும், பெயரர்களையும் இழக்க நேர்கிறதோ, அப்படிப்பட்ட
இந்தப் போரை இனியும் தொடர வேண்டுமா?" என்று கூறி கதறினார்.
அருச்சுனன் புலம்பல் :
சுபத்திரையுடன் அச்சமயத்தில் அங்கு வந்த அருச்சுனன், தருமரால் கூறப்பட்ட இச்செய்தி
கேட்டு மனைவியுடன் அவனும் மூர்ச்சித்து விழுந்தான். பின்னர் மயக்கம் தெளிந்து எழுந்து,
புதல்வனே ! என்வலி போனதே! வீணாய்;
அங்கை பிடித்த அம்பொடு வில்லும்
அபலமாய் ஆனவே ! ஐயகோ ! மகனே!
எடுத்த பிறவிப் பயனும் இழிந்ததே!
காண்டிபத் தனுசு காவா விடினே
சாதிக்க வேண்டிய சாதனை ஏதினி?
பேதைமை போக்கிடா பெருநூல் பயிற்சியால்
ஆவதென்? மகனே! ஐயகோ! உன்றன்
இறப்பினைக் கேட்கவோ இருசெவி பெற்றேன்?
தீவினை தீய்த்திடத் தீர்ந்ததோ நல்வினை?
உள்ளத்(து) உரமும் உடைந்து போனதே!
இனியிருந் திப்போர் இயற்றினும், வெற்றி
ஏற்பினும் பயனென்? எல்லாம் முடிந்தவே!
பாவியான் இருக்க பலருனைச் சூழ்ந்தே
ஆவியைப் போக்கினர்; அற்பர்கள்; அந்தோ!
அருச்சுனன் எதிர்நின்(று) அமர்புரி வீரர்
இலரெனும் புகழ்மொழி இல்லை யாயிற்றே!
கண்ணன் அருச்சுனனைத் தேற்றல் :
புத்திரனின் பிரிவு சோகத்தால் அரற்றுகின்ற
அருச்சுனனை நோக்கி, கண்ணன், "தனஞ்செயா! இது புலம்புவதற்குக் காலமும் அன்று; இடமும்
அன்று; நீ வருந்துவதில் பயனில்லை; உனது வருத்தம் பகைவர்க்கே மகிழ்ச்சி அளிக்கும். நம்பகைவர்
நின் புதல்வனுக்குச் செய்திட்ட கொடுமை, தவறானதென நாம் இப்போது அவர்களுக்கு உணர்த்திட
வேண்டும். அதைவிட்டு உயிர் துறக்கிறேன் என்று நீ புலம்பிக் கொண்டிருந்தால் நின் பகைவர்
என்னதான் நினையார்? ஆதலால் உன் புதல்வனைக் கொன்ற ஜயத்திரதனை நீயே கொன்றொழித்து, பழியை
தீர்த்துக் கொள்வாயாக!" என்று கூறினார்.
அருச்சுனன் சபதம் :
கண்ணனது இந்த ஆறுதல் உரையால், அருச்சுனன் மனத்துயர் சிறிதே ஆறிட, அவன் வெஞ்சினம்
கொண்டு எழுந்து நின்று, " என் மகனைக் கொன்ற பாவியை, நாளைய பகற்பொழுதிற்குள் கொல்வேன்;
அப்படிக் கொல்லாவிட்டால், அப்போதே நான் அக்னியில் வீழ்ந்து மடிவேன்" என்று வீர
சபதம் செய்தான்.
ஜயத்திரதன் அஞ்சுதல் :
ஈங்கு, இவ்வாறு பாண்டவரது பாசறையில்
நடந்த நிகழ்வுகள், ஒற்றர் மூலம் ஜயத்திரதன் செவியை எட்டின. அப்போதே அவன் அருச்சுனனால்
தான் இறப்பது திண்ணம் எனும் முடிவிற்கு வந்துவிட்டான். உடனே துரியோதனனிடம் ஓடிச்சென்று,
நடுங்கியபடியே, "வேந்தே! நான் கொல்லப்படுவது உறுதியாகிவிட்டது. அருச்சுனன் சூளுரை
வீணாகாது; இப்போதே நான் பார்ப்பன வேடம் பூண்டு, புண்ணிய தலங்கட்குத் தீர்த்த யாத்திரை
செய்யச் செல்லட்டுமா? அல்லது என் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள மலைக் குகைக்குள் சென்று
ஒளிந்து கொள்ளட்டுமா? என்ன சொல்கிறாய்?" என்று வாய்விட்டுக் கதறினான்.
துரியன் சக்கரவியூகம் அமைத்தல்:
அவனுரை கேட்ட துரியன், "நண்பா! நீ சிறிதும் அஞ்ச வேண்டாம். நான் சக்கரவர்த்தியின்
பெரும் படைகளைக் கொண்டு உன்னைக் காப்பாற்றுவேன்; இது நிச்சயம் !" என்று கூறி அவன்
பயத்தை விலக்கியதோடு, பெரும் படைகளைத் திரட்டி வந்து, சக்கர வியூகமாக நிறுத்தி, அதனுள்
ஜயத்திரதனை மறைவாக இருக்கச் செய்தான். அதோடு,
'இவனை நாளைப் பொழுதிற்குள் காப்பாற்றிவிட்டால், சத்தியம் தவறாத அருச்சுனன்,
தீயிலே வீழ்ந்து மடிந்து போவான்; அவன் மாண்டு விட்டால் நமக்கு அரச பதவி தானாகவே கிடைக்கும்'
என்பதை துரோணருக்கு உணர்த்தி அவரிடம், வியூகத்தைக் காக்கின்ற பெரும் பொறுப்பை ஒப்படைத்தான்.
அவரும் அப்பொறுப்பை விரும்பி ஏற்றுப் படை வியூகம் அமைத்து அதனுள் ஜயத்திரதனை இருக்கச்
செய்தார்.
அருச்சுனனுக்கு கண்ணன் கூறிய உபாயம்:
இஃது இவ்வாறாக, ஜயத்திரதனைக் காப்பாற்றும்
முயற்சியில் பகைவர்கள் ஈடுபட்டிருக்கும் செய்தி, அந்த இராப்போதே பாண்டவர்க்குக் கிடைத்தது.
அப்போது வாசுதேவர், அருச்சுனனை நோக்கி, "மைத்துனா! நாம் எவ்வளவுதான் திறமை பெற்றவர்களாக
இருப்பினும் , நாளை ஒரு பகல் முடிவதற்குள், கணக்கற்ற படைகளால் அமைக்கப்பட்டுள்ள சக்கர
வியூகத்தினை உடைத்து ஜயத்திரதனை கொல்வது எப்படி?
நமக்கு ஏதாவது ஒரு தேவனின் உதவி கிடைக்குமானால் வெற்றி எளிதாகும். சூரியனுக்கு
இருளைப் போக்கும் சக்தி இருந்தும் அது காலையில் உதய கிரியில் இருந்து புறப்பட விட்டால்
இந்த உலகைச் சூழ்ந்துள்ள இந்த இருள் எவ்வாறு விலகும்" என்று கேட்டார். இதன்மூலம்,
மறுநாள் போரில் கண்ணனே தேர்சாரதியாக அமர ஒப்புக்கொண்டார் எனக் கருத இடமிருக்கிறது.
அதோடு தாம் உதயகிரியாகவும், அருச்சுனன் சூரியனாகவும், தேவாஸ்திரங்கள் சூரியனின் கிரகணங்களாகவும்,
பகைவர் இருளாகவும் கிருஷ்ணன் குறிப்பால் உருவகித்துப் பேசியுள்ளார் எனவும் நினைக்க
இடமுள்ளது.
விஜயன் சாசனதேவரை வேண்டுதல்:
வாசுதேவன் கூறிய யோசனைகளை, பார்த்தன் சிக்கெனப் பிடித்துக் கொண்டான். உடனே,
அவன் அவ்விரவிலேயே, தருப்பாசனத்தில் அமர்ந்து, தான் கருதியதைத் தரவல்ல சாசன தேவதையை
அழைக்கும் சக்தியும் தகுதியும் பெற்ற மந்திரத்தை விதிப்படி உச்சரிக்க, அவனெதிரே அக்கணமே
அச்சாசனதேவன் தோன்றி, "விஜயனே! குபேரனுக்குரியதான ஒரு தடாகம்; வடக்கு திசையில்
இங்கிருந்து சற்று தூரத்தில் உள்ளது. அதற்கு *விசுவமோகினி* என்பது பெயர். நான் கூறும்
மந்திரத்தை ஜபித்துக் கொண்டே நீ அங்குச் சென்று அதில் இறங்கினால் உன் எண்ணம் கைகூடும்"
என்று சொல்லி அம்மந்திர மொழியையும் கூறிவிட்டு தெய்வம் மறைந்துபோனது.
விஜயனும் மகிழ்ச்சியுற்று, அவ்வாறே சென்று,
தெய்வ சக்தி பொருந்திய அத்தடாகத்தில் குதித்தான். குதிக்கவும், அங்கிருந்த இரண்டு கொடிய
பாம்புகள் அவனை நோக்கிச் சீறிக்கொண்டு வந்தன. பார்த்தன் அவற்றைக் கண்டு சிறிதும் அஞ்சாமல்,
கைக்கு ஒன்றாக அவைகளைப்பற்றி எடுத்த அளவிலேயே அவைகளில் ஒன்று வில்லாகவும், மற்றொன்று
அதில் தொடுக்கும் கணையாகவும் அதிசயிக்கத்தக்க வகையில் உருவம் கொண்டன. அருச்சுனன் அந்த
தெய்வ அஸ்திரங்களை முறைப்படி பூஜித்து அவற்றை தன் முடியில் வைத்து எடுத்துக் கொண்டு
வந்து வாசுதேவருடன் பாசறைக்குத் திரும்பினான். அதன்பின்பு இருவரும், சூரிய உதயத்தை
எதிர்நோக்கிக் காத்திருந்தனர்.
பதினோராம் நாள் போர்: விஜயன் தேர் ஏறல்:
அன்று போர் தொடங்கிப் பதினோராம் நாள்;
குருக்ஷேத்திரத்தில் அன்றைக்கு நிகழவிருக்கும் விந்தைமிகு போர்ச் செயல்களைத் தானும்
காண விழைந்தவன் போல, கதிரவன் கீழ்த்திசையில் விரைந்து உதயமானான். அவ்வளவில், பாண்டவரோடு,
சேனையில் இருந்த வீரர்கள் யாவரும் தத்தம் ஒளிமிகும் ஆயுதங்களை ஏந்தியவராய் உடன் புறப்பட்டனர்.
அன்றைய தினம், பார்த்தனுக்கு மாயவனே சாரதியானார்; தெய்வ அத்திரங்களாகிய வில்லும் அம்புமே
அர்ச்சுனனுக்கு போர்க்கருவிகளாயின. பீமன் முதலாகிய வீரர்கள், விஜயனுக்கு உதவியாக வந்து,
சக்கர வியூகமாக நின்றிருந்த படைகளைச் சுற்றிலும் வளைத்துக்கொண்டு சூழ்ந்து நிற்க அருச்சுனன்,
கம்பீரமாகத் தேர்த்தட்டில் ஏறி நின்று, நாகாத்திரங்களை ஏந்தியபடி வியூகத்தின் முன்னால்
வந்து நின்றான்.
குருவும் சீடனும்:
வந்து நின்றவன், ஆங்கே தன் முன்பு போரிட கையில் வில்லேந்தி நின்ற ஆசான் துரோணரைப்
பார்த்து சிரம் தாழ்த்தி வணங்கி, அவருக்குக் கேட்கும்படியாக, "குருவே! எனக்கு
இப்பொழுது இந்த வியூகத்தில் நுழைவதற்கு வழிவிடுங்கள்! என் புதல்வனை அநியாய வழியில்
கொன்ற பகைவனைக் கொன்று விடுகிறேன். உங்களோடு நான் எதிர்த்துப் போரிடுவது முறையன்று;"
என்று பணிவுடன் வேண்டினான்.
அவ்வுரை கேட்ட துரோணர், "விஜயா! போரிட வந்த நீ என்னை வழிவிடும்படிக் கூறுவது
முறையன்று. இவ்வியூகத்தில் பக்கம் ஒன்றிற்கு பதினான்காயிரம் யானைகள் நின்றுள்ளன. அவ்வாறே
ஒரு இலட்சம் குதிரைகளும், அறுபதினாயிரம் தேர்களும், இருபது இலட்சம் காலாட்படையினரும்
நிறுத்தப்பட்டுள்ளனர்; அதோடு நான் இந்த வியூகத்தின் காப்பாளனாக முன்னே நிற்க, இதன்
மத்தியில் இருக்கும் ஜயத்திரதனை வித்தியாதரனாகட்டும், அல்லது இந்திரனே யாகட்டும் யாவராலும்
வெல்லவோ, கொல்லவோ முடியாது என்பதை அறிந்து
கொள்!" என்று வீரமுழக்கம் செய்தார்.
கண்ணன் துரோணருக்கு அறிவுரை பகர்தல்:
அப்போதும் மாயனாகிய கிருஷ்ணன், துரோணரை நோக்கி, மிகவும் தந்திரமாக, "சுவாமி!
உம்மை எதிர்த்துப் போரிடும் ஆற்றல் பெற்றவர் இவ்வுலகில் யாருமில்லை; இங்கு உம்புதல்வனுக்கு
ஒப்பான அருச்சுனனை, இக்கொடிய போரில், வீணாக வதைபுரிய எதற்காக நினைக்கிறீர்? இந்நாள்வரை
உம் மகன் அசுவத்தாமன் வேறு, இவன் வேறு என நீவீர் பிரித்துப் பார்த்ததாக நான் அறிந்ததில்லையே
!எதற்காக இவனை அழிப்பதன் மூலம் பழிக்குக் காரணமான தீவினையை மூட்டைகட்ட நினைக்கிறீர்
?"என்று பக்குவமாகக் கூறினார்.
துரோணரின் மனமாற்றம் - துரியனின் நிந்தனை:
வாசுதேவரின் வார்த்தைகள், அவருடைய உள்ளத்தில் எங்கேயோ ஓரிடத்தை பாதித்திருக்க
வேண்டும்; எவ்வாறெனில், அவருடைய போர் எதிர்ப்பு நடவடிக்கைகளில் சற்றே தளர்ச்சி காணப்பட்டது.
அத்தருணத்தைப் பயன்படுத்திக்கொண்ட கண்ணன், தேரினைச் சட்டென வியூகத்தினில் செலுத்திக்
கொண்டுப் போய்விட்டார். அப்போது துரியனது படை வீரர்கள் சிலர், "ஜயத்திரதனை கொல்வதற்காக
துரோணர் வியூகத்தினுள் அருச்சுனனுக்கு வழிவிட்டு விட்டார்" எனப் பெருங் கூச்சலிட்டார்கள்.
அதைக் கேட்டு ஆங்கு விரைந்து வந்த துரியோதனன், நிகழ்ந்ததைக் கேட்டறிந்து, அவரை ஏளனமாகப்
பார்த்து, "துரோணரே! எம்மோடு கூடியிருக்கும்
உமக்கு, அவர்களிடம் தான் அதிக அன்பு இருக்கக்கூடுமோ, என ஐயம் கொண்டிருந்தேன். அதை நீர்
இப்போது மெய்ப்பித்துக் காட்டிவிட்டீர். உண்மையில் நீரே எமக்குப் பகைவர்; உம்மாலேயே
என் குலத்திற்கு நாசம் ஏற்படப்போகிறது" என்று வெகுண்டுரைத்தான். வேந்தனின் இந்த
நிந்தனை மொழியால் உசுப்பப்பட்ட, குருவானவர், கணையோடு கூடிய வில்லை ஏறிட்டுப் பிடித்து
பார்த்தனோடு பெரும் போர் தொடுத்தார்; எனினும் உள்ளே நுழைந்துவிட்ட அருச்சுனனை எதிர்ப்பதில்
அவருக்கு சங்கடங்கள் அதிகமாகக் காணப்பட்டன.
களத்தில் பிணக்குவியல்:
ஆசானால் ஏவப்பட்ட பாணங்கள் அத்தனையும் நொடிப்பொழுதில் துண்டித்துப் போட்ட அருச்சுனன்,
ஆயிரம் பற்களைக் கொண்ட பெரிய மீன், கடலைக் கலக்குவது போல, வியூகத்தின் நடுவே புகுந்து
கலக்கினான். பார்த்தனின் சரங்களால் அடிபட்டு வீழ்ந்து குதிரைகள், யானைகள், காலாள் வீரர்கள்
ஆகியோரின் பிணங்கள் போர்க்களத்தை, நீக்கமற நிறைத்தன.
சதாயுதனைக் கண்ணன் மாய்த்தல்:
அச்சமயத்தில், ஜராசந்த சக்கரவர்த்தியின் சேனையிலிருந்த சதாயுதன் என்னும் வித்தியாதரன், பார்த்தனின் போர்த் தொழிலைக்
கண்டு, அவன் மீது பொறாமை கொண்டான். அதனால் அக்கொடியவன், தேவதாசக்தி பெற்றிருந்த தனது
கதாயுதத்தை எடுத்து அருச்சுனனின் மார்பிற்குக் குறிபார்த்து வீசினான். இதை கவனித்து
விட்ட கிருஷ்ணன், அருச்சுனனை தன் கையால் விலகும்படித் தள்ளிவிட்டு, அப்படையைத் தன்
மார்பிலே ஏந்த, அந்தக் கதாயுதம், அக்கணத்திலேயே, பூமாலையைப் போல் மென்மையாகிக் குழைந்து
பூமியில் விழுந்தது; அதைக் குனிந்து எடுத்த கண்ணனாகிய வாசுதேவர், அதை எறிந்த சதாயுதனின்
மார்பிற்கே குறிவைத்து எறிந்து முதன் முதலாக அந்த பாரதப் போரில் தன் கையால் அந்த துட்டனைக்
கொன்றொழித்தார்.
குதிரைகளின் நீர் வேட்கையைத் தணித்தல்:
நண்பகல் நேரம்; உக்கிரமான வெயிலால், கதிரவன் போர்க்களத்தை மேலும் வருத்திக்
கொண்டிருந்தான். இன்னும் ஜயத்திரதனைக் கொன்ற பாடில்லை. தேரில் பூட்டப்பட்ட குதிரைகள்
நீர் வேட்கையால் தளர்ச்சி அடைவதைக் கண்ட கண்ணன், அதை அருச்சுனனுக்கு எடுத்துரைத்தார். உடனே அவன் சிறந்த அம்புகளை நாணேற்றி விட்டு பூமியைப்
பிளக்க, ஆங்கே பொங்கி வந்த நீரைப்பருகி பரிகள் வருத்தம் தீர்ந்தன. தேவர்களும் அதுகண்டு
அவன் கீர்த்தியைப் புகழ்ந்து பாடினர்.
துரியன் குருவை நிந்தித்தல் :
துரியோதனாதியர்களின் சேனைகள் அணி அணியாக,
அருச்சுனன் விடும் சரங்களால் அடிபட்டு வீழ்ந்த வண்ணம் இருந்தன. துரியன் இக்காட்சியைக்
கண்டு மனம் பொறாமல் குருவினிடம் ஓடிச்சென்று, வெறுப்புடன், "துரோணரே! நீர் செய்த
பாவம் என் தலையில் வந்து வீழ்ந்ததே!" என வெதும்பிக் கூறினான். அரசன் மொழிந்ததைக்
கேட்ட குரு, "வேந்தே! என்னை நிந்தித்துக் கொண்டு நிற்காதே! எனக்கோ வயதாகிவிட்டது; நீயோ வாலிபன்; ஆகவே,விஜயனோடு நீயே சென்று போரிடு"
என்று வெறுப்புடன் மொழிந்தார். குருவின் வார்த்தையைக் கேட்டுச் சினம் கொண்ட துரியன்
எஞ்சிய படைகளைத் திரட்டி சென்று, எதிர்க்கத் தொடங்கினான். வெறுப்புடன் அவன் எய்யும்
கணைகளை, பார்த்தன் விளையாட்டாகவே துண்டித்தபடி நின்று கொண்டிருந்தான். அவன் செயலைப்
பார்த்த கிருஷ்ணன், "அருச்சுனா! துரியோதனன், போரில் விளையாட்டாகவே வெற்றியைக்
கண்டு வருகிறான். அதனை நீ உணர்ந்திருந்தும், எதிர்க்காமல் சாந்தமாக, அவன் விடும் அம்புகளைத்
தடுத்துக் கொண்டிருக்கிறாயே? என்ன காரணம்? போரில் சோர்ந்து விட்டாயா?" என்று வினவினார்.
அதனைக் கேட்ட அருச்சுனன் சுவாமி என் சகோதரனைக் கொல்லுவேனாயின் கொடிய பாவம் உண்டாகும்
என்று அஞ்சியே, இப்போது அவனோடு போரிடும் கருத்தின்றி நிற்கிறேன்" என்று தன் உள்ளக்கருத்தை
வெளிப்படுத்தினான்.
வாசகர்களே! குருஷேத்திரத்திலே இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற பாரதப்போரில்
அருச்சுனன் தன் உற்றார் உறவினர்களோடு போரிடத் தயங்கி நிற்கின்ற நிலையில், கண்ணன் அவனுக்கு
உலக இயற்கையையும், அரச நீதிகளையும், ஆத்தும தத்துவங்களையும் விரிவாக உபதேசம் செய்து,
அவனைப் போரில் ஈடுபடும்படித் தூண்டினான்' என 'வியாசபாரதம்' முதலிய பிற சமயத்தவரின்
இதிகாசங்களிலே பார்க்கிறோம். ஆனால் வாதிசந்திரரால் எழுதப்பட்ட பாண்டவ புராணத்திலும் சரி, பாண்டவர்
வரலாறு பகரும் அரிவமிசபுராணத்திலும் சரி விஜயனுக்கு கண்ணன் அவன் மனம் தளர்ந்து நிற்கும்
சிற்சில நேரங்களிலன்றி மற்ற போது அவற்கு நீண்ட உபதேசம் ஏதும் செய்ததாகக் குறிப்புகள்
இல்லை என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாகும்.
ஜயத்திரதன் தலை பறந்தது :
நிற்க, பார்த்தன் சக்கரவியூகத்தின்
மற்ற படைகளை தன் அம்பு மழையால் தாக்கிச் சிதறுண்டு
ஓடச் செய்து மாலைப்பொழுதில், உள்ளமும் உடலும் நடுங்கியபடி கிடந்த ஜயத்திரதனை சிங்கம்
மான் கன்றைக் கண்டது போலப் பார்த்தான்.
"ஜயத்திரதா! உன்னை இனி பாதுகாக்கும் வீரன் எவனிருக்கிறான்! கூப்பிடு பார்க்கலாம்"
என்று கர்ச்சித்தான். அச்சமயத்தில், துரியனால் அனுப்பப்பட்ட அசுவத்தாமன், அம்புகளைச்
சொரிந்தபடி ஆங்கே வர, விஜயன் அவனையும் போரில் தனது சரமழையால் அடித்து வெகுதூரம் ஓடச்
செய்தபின், மீண்டும் ஜயத்திரதனை வெகுண்டு நோக்கி, "அடே! கொடியவனே! எந்தத் திறமையால் என் மகனை நீ அழித்தாயோ,
அந்தத் திறமையை இப்போது என்னிடம் காட்டு!" என்று கூறிக்கொண்டே, தேவனால் அருளப்பட்ட
பாணத்தால் ஜயத்திரதன் தலையை துண்டித்து பறக்கச் செய்தான். அறுந்த அத் தலை தெய்வீக அஸ்திரத்தால் எடுத்துச்
செல்லப்பட்டு காட்டில் நெடுநாளாகத் தவம் செய்து கொண்டிருந்த ஜயத்திரதனின் தந்தை மடியில்
வீழ்ந்தது. தந்தை மகன் இறந்தான் என அறிந்து கொண்டு அறிந்துத் துக்கத்தில் மயங்கி விழுந்து
உயிர் துறந்தான்.
அடுதலும் தொலைதலும் இயற்கை :
கௌரவச் சேனையினர், ஜயத்திரதன் தலை பறிபோனது கண்டு ஐயோ! ஐயோ! எனக் கூச்சலிட,
பாண்டவர் சேனையினர் வெற்றி! வெற்றி! என முழங்கி ஆரவாரம் செய்தனர். என்ன விசித்திரம்!
பாருங்கள் !
"ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும்
புதுவ தன்று இவ்வுலகத்து இயற்கை"
எனப் பாடிச் சென்ற சங்ககாலப் புலவர் ஒருவரின்,
தத்துவ வரிகள் நினைவுக்கு வருகின்றன. பிறவிச் சுழற்சியில் உழல்கின்ற உயிர்களுக்கு,
இன்பமும் துன்பமுமாகிய பேரலைகள் மாறிமாறி உண்டாகி வருவதைப் பார்த்தும், மானிடர்கட்கு
மெய்யறிவு தோன்றாமல் இருப்பதுதான் அதிசயமாக இருக்கின்றது.
நிற்க, சூரியனும், ஜயத்திரதன் இறந்ததைக்
காண சகியாதவன் போல, மேலைக் கடலில் சென்று மறைந்தான். இருளும் மெல்ல பரவியது. இறுதிறத்துப் படை வீரர்களும் போர்ச் செயலை நிறுத்திவிட்டுப்
பாசறைக்குத் திரும்பினர். தான் செய்த சபதத்தை நிறைவேற்றிய பூரிப்போடு, விஜயனும் தன்
மைத்துனரோடு தாம் தங்குமிடம் சார்ந்தான்.
பாராண்ட அரசரெவர் மடியா நின்றார்
பார்முழுதும் அவரோடா போயிற்(று) அந்தோ!
சீராண்ட செல்வங்கள் நிலைத்தில் இல்லை!
செருக்கதனை வேந்தருமே விட்டா ரில்லை!
(பதின்மூன்றாம் சருக்கம் முடிவுற்றது)
பதினான்காம் சருக்கம்
பதினோராம் நாள் இரவில் நடந்த ஓர் அக்கிரமம்
:
சூரியன் மேலைக்கடலில் மூழ்கியதும், கீழ்வானில்
தன் குளிர்ந்த கிரணங்களைப் பரப்பிக்கொண்டு முழுமதியோன் புறப்பட்டான். உலக உயிர்கள்
அனைத்திற்கும் இன்பம் நல்கவல்ல, முழுமதியின் தன் கதிர்களால் பகையுணர்வில் வெம்பிக்
கருகிப்போய் உறக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்த துரியனக்கு மகிழ்ச்சியை அளிக்க முடியவில்லை.
அடுக்கடுக்கான சிந்தனைகள் தோன்றியவாறே இருந்தன. முடிவில், ஒரு திட்டம் அவன் மனத்தில்
உருவாகியது. உடனே அவன் அந்த இரவே துரோணர் தங்கியிருந்த இடத்திற்கு சென்று அவரை நோக்கி,
குருவே!
மகனையும் இழந்து விட்டோம்!
மாவீர னெனப்பேர் பூண்ட
சகம்புகழ் சயத்தி ரன்தன்
சாவையும் கண்டு விட்டோம்!
பகவிலாச் சேனா வீரர்
பலரையும் தோற்று விட்டோம்!
இகத்தினில் உள(து) என்? தோற்க;
இழவெலாம் விளைந்த(து) உம்மால்;
இந்த போரில் நம் பக்கத்தே ஏற்பட்ட உயிரிழப்பு
உம்மாலேயே ஏற்பட்டது. அந்தக் கொலைபாதகம் யாவும் உம்மையே சாரும். நீர் மட்டும் வஞ்சகமின்றிப்
போர் செய்வீறேயானால், அந்தப் பகைவர்கள் எம்மோடு போரிட வல்லவர் ஆவாரோ? ஒருகாலும் ஆகார்
! என்று வருத்தத்தோடு கூறினான்.
துரோணரின் சினவுரை :
துரியன் கூறியதைக் கேட்ட துரோணர், "அரவக்
கொடியோனே! பிரம குலத்தில் பிறந்த அந்தணர்கள்,
உயிர் வதைக்குக் காரணமான போரில் ஒருபோதும் ஈடுபடார். நீயோ, சத்திரிய குலத்தில் பிறந்துள்ளவன்;
இளமையும் வல்லமையும் உன்னிடம் ஒருங்கே இணைந்துள்ளன. அங்ஙனமிருக்க, என்னை வெறுத்துப்
பேசுவதை இனியாவது விட்டுவிடு! மேலும் உன் சொல்லுக் கிணங்கி யான் பல முறை பார்த்தனோடு
போர் தொடுத்தும், அவன் என்னைக் கொல்லாமல் விட்டது, அந்தணனைக் கொன்ற பாவம் தன்னைச் சேரக்கூடாது
என அஞ்சியதாலும், நான் அவனுடைய ஆசான் என்ற காரணத்தினாலுமே யன்றி வேறில்லை. பலவும் சொல்லி
என்ன பயன்? சக்கர வியூகத்துள்ளிருந்து சயத்திரதனை நீயே தனியாக விட்டு விட்டுத்தானே
வந்தாய் !அப்படியிருக்க, கிழவனான என்னைத் திரும்ப, திரும்ப ஏன் வெறுத்துப் பேசுகின்றாய்?"
என்று அதட்டினார்.
துரியோதனன் குருவைச் சமாதானம் செய்தல் :
அளவுகடந்த கோபத்துடன் தன்னை அதட்டிப்ப் பேசிய துரோணரைப் பார்த்து, துரியோதனன்
அவரை சமாதானம் செய்யும் வகையில், அஞ்சியவன் போல் நோக்கி, "சுவாமி நான் சந்தர்ப்பம்
தெரியாமல் ஏதேதோ உளறி விட்டேன்; என்னை மன்னியுங்கள் ! இனி, இறைவன் ஆணையாக, உம்மைத்
தவறாக நினைக்க மாட்டேன், குருவே ! போரில் நாங்கள் உம்மோடு சேர்ந்திருக்கும்போது, பாண்டவர்களை
போர்த்திறமை மிக்கவர்கள் என்று ஒருபோதும் நினைக்க மாட்டோம் ! மந்திரமொழியால் கட்டப்பட்ட
பாம்பைக் கண்டு தவளைகள் அச்சமின்றி கத்துகின்றன அல்லவா? அது மந்திரவாதியின் சக்தியாலன்றி
வேறொன்றும் இல்லையன்றோ? மாவீரனாகிய ஜயத்திரதன் உயிர் பிழைத்தால் பாண்டவர் தாமே மடிந்து
போவார்கள் ; பின் யானே பகையின்றி அரசாளலாம்
எனப் பெருமிதம் கொண்டிருந்தேன், அவனோ அழிக்கப்பட்டான் ! அதனால் நானும் இறந்தவன் ஆனேன்.
இந்தத் தோல்வி என் உள்ளத்தை மிகவும் வருத்தியுள்ளது. ஆகவே இந்த இழிவைப் போக்குவதற்கு
உம்மையன்றி வேறு யாரால் முடியும்? ஆதலால் சுவாமி! நான் சொல்வதைத் தயவு செய்து கேளுங்கள்!,
பாண்டவர்கள் அனைவரும் உறங்கிக் கொண்டிருக்கின்ற இந்த இரவுப் போதில், அவர்கள் பாசறைக்குச்
சென்று அவர்களைக் கொன்று விடுங்கள்!" என்று பகர்ந்தான் அந்தப் பாம்புக் கொடியோன்.
துரோணர் அறிவுரை :
இவ்வண்ணம் கௌரவன் மொழிந்ததைக் கேட்ட துரோணர் மிகவும் துணுக்குற்றார்.
" வேந்தே! இரவில், போர் புரிவது அறநெறியாகாது. சத்திரிய குலத்தவர் இத்தகாத செயலை
என்றும் செய்யத் துணியார்! உனது குருகுலத்துக்கே
உனது எண்ணம் அவமானத்தை உண்டாக்கிவிடும். ஆயுதம் தாங்கி எதிர்ப்பவரோடு போரிடுவதே அறநெறியாகும்.
இந்த நீதி முறையைப் பிழைத்துச் செய்யும் போர் உமதுகுலத்தின் புகழை அழித்துப் பழியை உண்டாக்கும். ஏற்கனவே நீங்கள் அறமுறை தவறி
போர்புரிந்து அபிமன்யுவைக் கொன்றதால் ஏற்பட்ட அவப் பெயர் நிலைத்துவிட்டது. பாண்டவர்
சக்கரவியூகத்தில் போரிட்டு, அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று நீ நினைக்கக்
கூடும். ஆயினும் அவர்களால் நீங்கள் வெல்லப்படுவது உறுதி" என்று அறிவுரை பகர்ந்தார்.
இரவில் போர் :
துரோணர் கூறிய அறிவுரைகள் எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்கு போல் ஆயிற்று.
கௌரவர்கள் ஒன்று கூடி அவரை வற்புறுத்தி ஒப்புக்கொள்ளச் செய்து பிடிவாதமாக கூட்டிக்கொண்டு
அவ்விரவிலேயே படைகளுடன் புறப்பட்டுச் சென்று பாண்டவர்களைச் சூழ்ந்து வேகமாகத் தாக்கினர்.
அறியாரும் அல்லர்; அறிவது அறிந்தும் பழியோடு
பட்டவை செய்தல் ******
*****
***** *****
செய்த வினையான் வரும்.
- நாலடியார்
இத்தாக்குதலால் வீமன் பத்து அம்புகளாலும், நகுல சகாதேவர்கள் மும்மூன்று அம்புகளாலும்,
வீமனுடைய மகன் கடோத்கஜன் பத்து அம்புகளாலும், அருச்சுனன் ஐந்து அம்புகளாலும், சிகண்டி
ஆறு அம்புகளாலும், திட்டத்தூய்மன் ஏழாலும், கண்ணன் ஐந்தினாலும், பிரத்யும்ன குமாரன்
நான்கினாலும் தாக்கப்பட்டனர். நல்வினைப் பேற்றின் காரணமாக, அந்த சமயம் தருமர் மட்டும்
உறங்காமல் விழித்துக் கொண்டிருந்த காரணத்தால், விரைந்தெழுந்து பகைவருடன் போர்புரியத்
தொடங்கினார். முதலில் துரியோதனனுடைய வில்லைத்
துண்டித்தார். அப்போது அவனைக் காக்கும் பொருட்டு ஆங்கே வந்த துரோணர், தருமரை விளையாட்டாகவே
பாணத்தால் அடித்துத் தள்ளிவிட்டு, சேனை நடுவே புகுந்து, வஜ்ராயுதத்தால் பெருமலைகளைப்
பிளந்து சாய்ப்பது போல், சேனைத்திறனை அடித்துக் கலக்கினார்.
கடோத்கசன் மரணம் :
இதற்குள் வீமன் முதலான மற்றவீரர்கள், சமாளித்துக் கொண்டு எழுந்து வந்தனர். அருச்சுனனும்
ஆசான் கொட்டத்தை ஒருவாறு அடக்கினான். கர்ணன்
அச்சமயம் அருகே வந்து விஜயனோடு மோதினான். அவன் வில்லை அருச்சுனன் துண்டித்தான். அச்சமயம்
துரோணர், தேரின் மேல் வீற்றிருந்த திருஷ்டார்ச்சுனனைப் போருக்கு அழைத்து அவனோடு பொருது
தோல்வியுறச் செய்தார். அதோடு பாண்டவர்களுக்குத் துணையாக வந்த, நாற்பதினாயிரம் அரசர்களையும்
கொன்றார். தோற்று ஓடிய திருஷ்டார்ச்சுனன் மீண்டும் தன் படைகளைத் திரட்டிக் கொண்டு வந்து
துரோணரைப் பலமாகத் தாக்கினான். அந்த சமயத்தில் அசுவத்தாமன், கூற்றுவனை போலத் தோன்றி,
கடோத்கஜனை போரிட அழைத்தான். நெடு நேரம் நடந்த அப்போரில், அசுவத்தாமன், கடோத்கசனைக்
கொன்று வீழ்த்தினான்.
வீமனின் துன்பம், கண்ணனின் ஆறுதல் :
விந்தையில் இணையற்று விளங்கிய தன் மகன் கடோத்கசன் போரில் மடிந்ததைக் கேட்ட வீமன்
துன்பக்கடலில் வீழ்ந்தான். அப்போது கிருஷ்ணன், அவனை ஆறுதல் வார்த்தை கூறி தேற்றுவித்து,
"வீமா! நின் புதல்வனைக் கொன்ற அசுவத்தாமனைக் கொன்று பழி தீர்த்துக் கொள்! அதன்
மூலம் துரோணருக்கு புத்திர சோகம் என்றால் என்ன? என்பதை அவர் உணரும்படி பாடம் புகட்டு!"
என்று கூறினார்.
வீமன், அசுவத்தாமனைத் தாக்குதல் :
வீமனும், அவருரை கேட்டு ஆவேசத்துடன்
வீறுகொண்டெழுந்தான். அசுவத்தாமனைக் கூவி அழைத்தான். "அடேய்! அசுவத்தாமா!
நீ என் குருவின் மகனாயிற்றே என்று கருதி உன்னைக் கொல்லாமல் விட்டு வைத்திருந்தேன்.
நீ அந்த கௌரவத்தைக் காப்பாற்றிக் கொள்ளத் தவறி விட்டாய். இனியும் நான் பொறுமை காட்டுவது
என் வீரத்திற்கே இழுக்காகும்" என்று கூறிக் கொண்டே தன் கதாயுதப் படையைச் சுழற்றி,
அவன் மீது வீசினான். அசுவத்தாமன் அந்த கதாயுதத்திற்குப் பயந்து ஓடிப்போய் ஒரு யானையின்
பின்னால் ஒளிந்து கொண்டான்; வேகமாக வந்த அந்த கதாயுதம் தாக்கி யானை இறந்துவீழ, அசுவத்தாமன்
அந்த யானையின் குருதி வடியும் இறைச்சிச் சிதறலில் தன்னை யாரும் காணாதபடி மறைத்துக்கொண்டு
மண்ணில் கிடந்தான்.
போர்க்களப் புரளி: பன்னிரண்டாம் நாள் போர்:
பொழுது விடிந்தது. அசுவத்தாமனைக் காணாத போர்வீரர்கள் அவன் போர்க்களத்தில் இறந்தான்
எனக் கருதி, 'அசுவத்தாமன் இறந்து போய் விட்டான்' எனப் பெருங்கூச்சலிட்டனர். இச்சமயத்தில் வாசுதேவர், இப்படியே
விட்டால் துரோணர் பாண்டவர்களையும், அவர்கள்தம் படைகளையும் முழுவதுமே நாசம் செய்து விடுவார்
என நினைத்து, பாண்டவர் பக்கமிருந்த படைவீரர்கள் சிலரைத் தூண்டிவிட, அவர்கள் தருமரிடம்
சென்று, "மன்னரே! துரோணர் இவ்வாறே போரிட்டால் நம்மையெல்லாம் அழித்து
விடுவார்; எனவே அசுவத்தாமன் இறந்துவிட்டான் என்று ஒரே ஒரு பொய் சொல்லி அவர் கவனத்தைத்
திசை திருப்ப வேண்டும்" என்று பரிதாபத்துடன் வணங்கிக் கேட்டுக் கொண்டார்கள்.
தருமர் மறுப்பும், ஏற்பும்:
அவர்களுரை கேட்ட தருமர், "பிரியமானவர்களே! நான் பிறந்த நாள் முதல் இந்நாள்வரை
ஒரு பொய் கூடச் சொல்லியறியேன். உயிர் பிரியப் போகும் இத்தருணத்தில் பொய்சொல்லி பாவ
மூட்டையைக் கட்டிக்கொள்ள ஒப்பமாட்டேன். அசுவத்தாமன் இறந்தானா? இல்லையா? என்று தெரிந்து
கொள்ளாத நிலையில் நான் போய், குருவிடம் இந்த வார்த்தையை எங்ஙனம் கூறுவேன்" என்று
மறுத்துவிட்டார். அப்போது ஆங்கு வந்த கிருஷ்ணர், தருமரை நோக்கி, "தருமபுத்திரரே!
எந்த ஒருமொழியால் உயிர்களுக்குத் துன்பம் உண்டாவதில்லையோ, அந்த மொழி பொய்மொழியாக இருப்பினும்,
வாய்மையே ஆகும். ஆகவே நீர், படைமாக்கள் சொற்படி நடப்பதே மேல்" என்று கூறினார்.
'பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை
பயக்கும் மெனின்'
எனவரும் குறள் கருத்து இங்கு ஒப்பு நோக்கத்தக்கது.
தருமர் கூறிய பொய்: திருஷ்டார்ச்சுனன் துரோணரைக்
கொல்லல்:
தருமர் வாசுதேவர் உரைத்ததைக் கேட்டுச் சிறிது நேரம் என்ன செய்வதென்று அறியாமல்
திகைத்து நின்று, பின் ஒருவாறு மனந்துணிந்தவராய்,
மிக உக்கிரமுடன் தம் சேனைகளை அழித்துக் கொண்டிருந்த துரோணர் அருகில் தயக்கத்துடன்
சென்று நின்று அவர் காதில் விழும்படி,
"சுவாமி!
கிமர்த்தம் குருஷே யுத்தம்
அஸ்வத் தாமா ஹதஸ்ஸுத:
ஸ்வபுத்ர ஹத துக்கேந
ஸங்க்ராமே வாயுஜந்மநா:
என்று
மொழிந்தார். அதாவது,
"குவலயம் போற்றும் குருவே! நீவீர்
எதனைக் கருதிஇப் போர் புரிகுவதோ?
புத்திர சோகம் பொத்திய தாலே
வீறுகொண் டெழுந்த வீமன் உந்தன்
அருமகன் அசுவத் தாமனை அடர
மறைந்து விட்டான் மதலையும் ஈண்டே!"
"குருவே ! நீர் எதைக் கருதி இவ்வண்ணம் கடுமையான போரினைச் செய்து கொண்டிருக்கிறீர்?
போர்க்களத்தில் தன் புதல்வன் மடிந்த காரணத்தால், புத்திரசோகம் கொண்ட வீமனால், உமது
அரும்புதல்வன் அசுவத்தாமன் தாக்கப்பட்டு மறைந்தான்" என்று தருமர் கூறவும், ஒருகாலும்
பொய்யுரையாத தருமரது சொல்லைக் கேட்டு, மகன் மடிந்தானென்றெண்ணி , அவர் புத்திர சோகத்தால்
'ஆ' என்று அலறி, தமது அஸ்திரங்களை தரையில் வீசி எறிந்துவிட்டுத் துறவிபோல் நின்றார்.
அந்தக் கணமே ஆயுதம் ஏதும் இல்லாதிருந்த அந்த அந்தணரை, அவ்வரிய சமயத்திற்காகவே காத்திருந்த
திருஷ்டார்ச்சுனன் அநீதியாக சரம் தொடுத்து ஆயுள் முடிய செய்தான்; திருஷ்டீர்ச்சுனன்
அம்பு, துரோணரை வீழ்த்திய அந்த வேளையில் தருமன், மீண்டும் துரோணரிடம், "அங்கு
அடிபட்டு வீழ்ந்தது அசுவத்தாமனோ? அல்லது யானையோ? என்று யானறியேன் எனக் கூறினார்.
நேயர்களே! பிறசமயப் பாரதக் கதையில், இந்நிகழ்ச்சி, சற்று வேறுபடக் கூறப்படுகிறது.
அசுவத்தாமா என்னும் பெயருடைய பட்டத்து யானை போரிலே பட்டுவீழ்ந்த நிகழ்ச்சியையாவது துரோணரிடம்
சென்று கூறுக! என கண்ணன் தருமரை வற்புறுத்தி ஒப்புக்கொள்ளச் செய்ய, அதன்படி குருவின்
அருகில் சென்ற தருமர், "அஸ்வத்தாமா ஹதா" என்று சொல்லும்போதே, அடுத்து அவர்
சொல்ல வந்த "குஞ்சர" என்னும் சொல் குருவின் செவியில் விழுந்துவிடாதபடி, போர்முரசை
கிருஷ்ணன் கட்டளைப்படி, முரசம் அறைவோர் ஓங்கி அடித்தனர். அதனால் "அஸ்வத்தாமன்
என்னும் யானை கொல்லப்பட்டது" என அறியாமல், அசுவத்தாமன் கொல்லப்பட்டான் என நினைத்தே, துரோணர், களத்தில்
வீழ்ந்தார்' என விவரிக்கப்பட்டுள்ளது. இங்கு இவ்வடமொழித் தொடருக்கு, 'அஸ்வத்தாமா ஹதா' - அஸ்வத்தாமன் கொல்லப்பட்டான்;
கொல்லப்பட்டது யாதெனில் குஞ்சரம் (யானை) என்று பொருள் கொள்ளவேண்டும்.
எது எப்படியிருப்பினும், கதைப்போக்கில் பார்க்கும்போது, வாய்மை தவறாமை என்னும்
விரதத்தை அணியாகப் பூண்டிருந்த தருமரும், கிருஷ்ணரின் சூழ்ச்சிக்கு இரையாகியிருக்கிறார்
என்றே கருத வேண்டியுள்ளது.
துரோணர் சுவர்க்கம் புகுதல் :
திருஷ்டார்ச்சுனனால் விடுக்கப்பட்ட கொடிய வாளியினால் அடிபட்டு
நிலத்தில் வீழ்ந்த துரோணர், இந்நாள் வரை யாரிடத்தும்
கொண்டிருந்த விருப்பு வெறுப்புகளை, ஒரு கணத்திலேயே உதறிவிட்டு, அவர்கள் மீது, சமதாபாவம்
என்னும் உயரிய நடுவுநிலைமை பாவனையைத் தோற்றுவித்துக் கொண்டு, உத்தமப் பொறை என்னும்
அறத்தைக் கைகொண்டு சல்லேகனையை ஏற்று, பஞ்சபரமேட்டியரை
முறைப்படி தியானித்தவாறு சமாதி மரணத்தைத் தழுவினார். அடுத்த சமயமே அவர் ஆன்மா ஐந்தாவது
அமரர் நிலமாகிய பிரம கற்பத்தினை அடைந்து தேவகதி பெற்றது.
தேர்ந்த கல்வியும் ஞானமும் உடையவராய் இருந்தபோதிலும், துரோணர் போர்க்களத்திலே
பல பாவச் செயல்கள் புரிந்தவாராயிருந்தும், இறுதிக் காலத்தில் மேற்கொண்ட தியானபலத்தால்,
தேவகதி அடைந்தார். இஃது எவ்வாறு என சிலர் சிந்திக்கக் கூடும். காலமெல்லாம் தீச்செயல்
புரிந்தே வாழ்ந்த மாதங்கன் என்னும் சண்டாளன், அஷ்டமி முதலாகிய நல்விரதங்களை ஏற்று அதன்
பயனால் தேவகதி அடைந்தான் என்பது பிரதமானுயோகத்தில் கூறப்பட்ட உண்மை கதை. இப்படி சண்டாளனுக்கே
நற்கதி கிடைக்கும் போது குலத்திலுதித்த துரோணர் நற்கதி அடையத் தடையேது?
அருச்சுனன் புலம்பல்:
இதற்குள், துரோணர் கொல்லப்பட்ட செய்தியைக் கேட்டு, அவ்விடம் விரைந்து வந்த அருச்சுனன்,
துருபதன் மகனை நோக்கி, "அடப் பாவி! அந்தணனைக் கொன்று கொடும் பாவத்தைக் கட்டிக்
கொண்டாயே! ஆயுதம் ஏதும் இல்லாதிருந்த போது அவரைக் கொன்று பெரும் பழிக்கு ஆளாகிவிட்டாய்
!அவர் ஆயுதபாணியாக இருந்தபோது, போரிட்டு அவரை நீ கொன்றிருந்தால் அப்போது நான் உண்மையான
ஆண்மையாளன் என உன்னை மதித்திருப்பேன்" என்று சினந்து கூறியவாறு, துரோணரது உடல்
கிடந்த இடத்தை அடைந்து, "சுவாமி!
உயிருடன்
நான்ஈண்டு உறைந்திடும் போதே
ஐயனே! நும்முயிர் அகன்றதே! ஐயகோ!
இக்கணம் தொட்டே என்னுயிர் வாழ்க்கை
பயனொன் றின்றிப் பழுது பட்டதே!
துருபதன் மகனால் தோன்றின பெரும்பழி!
துரியன் சூழ்ச்சியால், துணையெமக் குற்ற
மறுவில் மாயன் மனத்துறு சூழ்ச்சியால்,
குருவே நின்னுயிர் கொள்ளை போனதே!
எம்முட் பகைமையால் இருநிலம் வீழ்ந்ததே!
வெற்றியால் விளைந்த விழுப்பயன் போனதே!
அற்றம் காவா(து) அல்லல் தந்ததே!
அறுந்தநின் யாக்கை இருந்துநான் காண
எப்பிறப் பதனில் இழிவினை செய்தனோ?
என்றன் தந்தை ஏகிய பின் உமை
இருந்திடும் தாதையாக் கருதியே இருந்தோம் !
இன்றுநீர் மாண்ட இடர்விளை தினமே
எந்தையர் ஏகிய ஏக்கறும் தினமாம் !
கண்ணனின் உபதேசம் :
என்று இவ்வாறெல்லாம் புலம்பி அழுத பின், இனி இவ்வுலகில் வாழ்ந்து பெறப்போகும்
நன்மை ஏதுமில்லை யெனக் கருதி, இறப்பதே மேல் என நினைத்தவனாய், தன் வாளை உருவி எடுத்து,
அதை மிகவும் உயரே செல்லும் வண்ணம் தூக்கி எறிந்து, அதற்கு நேராகத் தன் மார்பைக் காட்டி
நின்றான். அக்கணத்தே, ஆங்கிருந்த மாயன், அவனைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு அவ்வாறு நிகழாமல்
நெஞ்சம் அவனைத் தடுத்துக் காத்தார். பின்பு அவர் அருச்சுனன் நெஞ்சம் அமைதி அடையும்படி,
"அருச்சுனா! நீ அவலம் கொண்டு இவ்வாறு புலம்புவதை விட்டொழி ! உதயசூரியன் தன் ஒளியை
எப்போதுமே தந்து கொண்டிருப்பதில்லை; மாலையில் அவன் தன் கதிர்களைச் சுருக்கிக் கொண்டு
மறைந்து விடுவதைப் போல, இவ்வுலகில் தோன்றுகின்ற பொருள்கள் யாவும், சிலகாலம் நிலைத்திருப்பன
போலக் காணப்பட்டாலும், பிறகு அவைகள் தமக்கென வரையறை செய்யப்பட்டுள்ள நியதியினை ஒட்டி
நாசத்தை அடைகின்றன :
மரணேன ஸமம் ஜன்ம
யௌவனம் ஜரஸா பிச
ஜராபி ம்ருத்யுநா சச்வத்
வர்வர்த்தி ஸரதாம் பவே!
பிறவியில் உழலும் சீவன்
பிறக்குங்கால் மரணத் தோடே
அறக் கலந்(து) இருக்கும் என்னின்,
அழுவதால் என்ன லாபம்?
சிறப்புலாம் இளமையோடே
சேர்ந்துள்ள முதுமை தானும்
உறழ்ந்திடும் மரணம்; என்னும்
உண்மையை உளத்தே வைப்பாய் !
"பிறவிச் சூழலில் சிக்கி உழல்கின்ற உயிர்களுக்கு, பிறவியானது மரணத்துடன்
கலந்தே இருக்கிறது. அவ்வாறே, இளமையும் முதுமையோடு
கூடியதே! அம்முதுமையும் கணந்தோறும் மரணத்துடனே கலந்துள்ளது என்பதை நெஞ்சில் நிறுத்தி வைப்பாயாக
!"என்று கூறி, அவனைத் தேற்றுவித்தார். இவ்வாறு பதிமூன்றாவது நாளும் கழிந்தது.
துரோணர் சுவர்க்கம் புகுதல் :
திருஷ்டார்ச்சுனனால் விடுக்கப்பட்ட கொடிய வாளியினால் அடிபட்டு
நிலத்தில் வீழ்ந்த துரோணர், இந்நாள் வரை யாரிடத்தும்
கொண்டிருந்த விருப்பு வெறுப்புகளை, ஒரு கணத்திலேயே உதறிவிட்டு, அவர்கள் மீது, சமதாபாவம்
என்னும் உயரிய நடுவுநிலைமை பாவனையைத் தோற்றுவித்துக் கொண்டு, உத்தமப் பொறை என்னும்
அறத்தைக் கைகொண்டு சல்லேகனையை ஏற்று, பஞ்சபரமேட்டியரை
முறைப்படி தியானித்தவாறு சமாதி மரணத்தைத் தழுவினார். அடுத்த சமயமே அவர் ஆன்மா ஐந்தாவது
அமரர் நிலமாகிய பிரம கற்பத்தினை அடைந்து தேவகதி பெற்றது.
தேர்ந்த கல்வியும் ஞானமும் உடையவராய் இருந்தபோதிலும், துரோணர் போர்க்களத்திலே
பல பாவச் செயல்கள் புரிந்தவாராயிருந்தும், இறுதிக் காலத்தில் மேற்கொண்ட தியானபலத்தால்,
தேவகதி அடைந்தார். இஃது எவ்வாறு என சிலர் சிந்திக்கக் கூடும். காலமெல்லாம் தீச்செயல்
புரிந்தே வாழ்ந்த மாதங்கன் என்னும் சண்டாளன், அஷ்டமி முதலாகிய நல்விரதங்களை ஏற்று அதன்
பயனால் தேவகதி அடைந்தான் என்பது பிரதமானுயோகத்தில் கூறப்பட்ட உண்மை கதை. இப்படி சண்டாளனுக்கே
நற்கதி கிடைக்கும் போது குலத்திலுதித்த துரோணர் நற்கதி அடையத் தடையேது?
அருச்சுனன் புலம்பல்:
இதற்குள், துரோணர் கொல்லப்பட்ட செய்தியைக் கேட்டு, அவ்விடம் விரைந்து வந்த அருச்சுனன்,
துருபதன் மகனை நோக்கி, "அடப் பாவி! அந்தணனைக் கொன்று கொடும் பாவத்தைக் கட்டிக்
கொண்டாயே! ஆயுதம் ஏதும் இல்லாதிருந்த போது அவரைக் கொன்று பெரும் பழிக்கு ஆளாகிவிட்டாய்
!அவர் ஆயுதபாணியாக இருந்தபோது, போரிட்டு அவரை நீ கொன்றிருந்தால் அப்போது நான் உண்மையான
ஆண்மையாளன் என உன்னை மதித்திருப்பேன்" என்று சினந்து கூறியவாறு, துரோணரது உடல்
கிடந்த இடத்தை அடைந்து, "சுவாமி!
உயிருடன்
நான்ஈண்டு உறைந்திடும் போதே
ஐயனே! நும்முயிர் அகன்றதே! ஐயகோ!
இக்கணம் தொட்டே என்னுயிர் வாழ்க்கை
பயனொன் றின்றிப் பழுது பட்டதே!
துருபதன் மகனால் தோன்றின பெரும்பழி!
துரியன் சூழ்ச்சியால், துணையெமக் குற்ற
மறுவில் மாயன் மனத்துறு சூழ்ச்சியால்,
குருவே நின்னுயிர் கொள்ளை போனதே!
எம்முட் பகைமையால் இருநிலம் வீழ்ந்ததே!
வெற்றியால் விளைந்த விழுப்பயன் போனதே!
அற்றம் காவா(து) அல்லல் தந்ததே!
அறுந்தநின் யாக்கை இருந்துநான் காண
எப்பிறப் பதனில் இழிவினை செய்தனோ?
என்றன் தந்தை ஏகிய பின் உமை
இருந்திடும் தாதையாக் கருதியே இருந்தோம் !
இன்றுநீர் மாண்ட இடர்விளை தினமே
எந்தையர் ஏகிய ஏக்கறும் தினமாம் !
கண்ணனின் உபதேசம் :
என்று இவ்வாறெல்லாம் புலம்பி அழுத பின், இனி இவ்வுலகில் வாழ்ந்து பெறப்போகும்
நன்மை ஏதுமில்லை யெனக் கருதி, இறப்பதே மேல் என நினைத்தவனாய், தன் வாளை உருவி எடுத்து,
அதை மிகவும் உயரே செல்லும் வண்ணம் தூக்கி எறிந்து, அதற்கு நேராகத் தன் மார்பைக் காட்டி
நின்றான். அக்கணத்தே, ஆங்கிருந்த மாயன், அவனைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு அவ்வாறு நிகழாமல்
நெஞ்சம் அவனைத் தடுத்துக் காத்தார். பின்பு அவர் அருச்சுனன் நெஞ்சம் அமைதி அடையும்படி,
"அருச்சுனா! நீ அவலம் கொண்டு இவ்வாறு புலம்புவதை விட்டொழி ! உதயசூரியன் தன் ஒளியை
எப்போதுமே தந்து கொண்டிருப்பதில்லை; மாலையில் அவன் தன் கதிர்களைச் சுருக்கிக் கொண்டு
மறைந்து விடுவதைப் போல, இவ்வுலகில் தோன்றுகின்ற பொருள்கள் யாவும், சிலகாலம் நிலைத்திருப்பன
போலக் காணப்பட்டாலும், பிறகு அவைகள் தமக்கென வரையறை செய்யப்பட்டுள்ள நியதியினை ஒட்டி
நாசத்தை அடைகின்றன :
மரணேன ஸமம் ஜன்ம
யௌவனம் ஜரஸா பிச
ஜராபி ம்ருத்யுநா சச்வத்
வர்வர்த்தி ஸரதாம் பவே!
பிறவியில் உழலும் சீவன்
பிறக்குங்கால் மரணத் தோடே
அறக் கலந்(து) இருக்கும் என்னின்,
அழுவதால் என்ன லாபம்?
சிறப்புலாம் இளமையோடே
சேர்ந்துள்ள முதுமை தானும்
உறழ்ந்திடும் மரணம்; என்னும்
உண்மையை உளத்தே வைப்பாய் !
"பிறவிச் சூழலில் சிக்கி உழல்கின்ற உயிர்களுக்கு, பிறவியானது மரணத்துடன்
கலந்தே இருக்கிறது. அவ்வாறே, இளமையும் முதுமையோடு
கூடியதே! அம்முதுமையும் கணந்தோறும் மரணத்துடனே கலந்துள்ளது என்பதை நெஞ்சில் நிறுத்தி வைப்பாயாக
!"என்று கூறி, அவனைத் தேற்றுவித்தார். இவ்வாறு பதிமூன்றாவது நாளும் கழிந்தது.
துரோணர் சுவர்க்கம் புகுதல் :
திருஷ்டார்ச்சுனனால் விடுக்கப்பட்ட கொடிய வாளியினால் அடிபட்டு
நிலத்தில் வீழ்ந்த துரோணர், இந்நாள் வரை யாரிடத்தும்
கொண்டிருந்த விருப்பு வெறுப்புகளை, ஒரு கணத்திலேயே உதறிவிட்டு, அவர்கள் மீது, சமதாபாவம்
என்னும் உயரிய நடுவுநிலைமை பாவனையைத் தோற்றுவித்துக் கொண்டு, உத்தமப் பொறை என்னும்
அறத்தைக் கைகொண்டு சல்லேகனையை ஏற்று, பஞ்சபரமேட்டியரை
முறைப்படி தியானித்தவாறு சமாதி மரணத்தைத் தழுவினார். அடுத்த சமயமே அவர் ஆன்மா ஐந்தாவது
அமரர் நிலமாகிய பிரம கற்பத்தினை அடைந்து தேவகதி பெற்றது.
தேர்ந்த கல்வியும் ஞானமும் உடையவராய் இருந்தபோதிலும், துரோணர் போர்க்களத்திலே
பல பாவச் செயல்கள் புரிந்தவாராயிருந்தும், இறுதிக் காலத்தில் மேற்கொண்ட தியானபலத்தால்,
தேவகதி அடைந்தார். இஃது எவ்வாறு என சிலர் சிந்திக்கக் கூடும். காலமெல்லாம் தீச்செயல்
புரிந்தே வாழ்ந்த மாதங்கன் என்னும் சண்டாளன், அஷ்டமி முதலாகிய நல்விரதங்களை ஏற்று அதன்
பயனால் தேவகதி அடைந்தான் என்பது பிரதமானுயோகத்தில் கூறப்பட்ட உண்மை கதை. இப்படி சண்டாளனுக்கே
நற்கதி கிடைக்கும் போது குலத்திலுதித்த துரோணர் நற்கதி அடையத் தடையேது?
அருச்சுனன் புலம்பல்:
இதற்குள், துரோணர் கொல்லப்பட்ட செய்தியைக் கேட்டு, அவ்விடம் விரைந்து வந்த அருச்சுனன்,
துருபதன் மகனை நோக்கி, "அடப் பாவி! அந்தணனைக் கொன்று கொடும் பாவத்தைக் கட்டிக்
கொண்டாயே! ஆயுதம் ஏதும் இல்லாதிருந்த போது அவரைக் கொன்று பெரும் பழிக்கு ஆளாகிவிட்டாய்
!அவர் ஆயுதபாணியாக இருந்தபோது, போரிட்டு அவரை நீ கொன்றிருந்தால் அப்போது நான் உண்மையான
ஆண்மையாளன் என உன்னை மதித்திருப்பேன்" என்று சினந்து கூறியவாறு, துரோணரது உடல்
கிடந்த இடத்தை அடைந்து, "சுவாமி!
உயிருடன்
நான்ஈண்டு உறைந்திடும் போதே
ஐயனே! நும்முயிர் அகன்றதே! ஐயகோ!
இக்கணம் தொட்டே என்னுயிர் வாழ்க்கை
பயனொன் றின்றிப் பழுது பட்டதே!
துருபதன் மகனால் தோன்றின பெரும்பழி!
துரியன் சூழ்ச்சியால், துணையெமக் குற்ற
மறுவில் மாயன் மனத்துறு சூழ்ச்சியால்,
குருவே நின்னுயிர் கொள்ளை போனதே!
எம்முட் பகைமையால் இருநிலம் வீழ்ந்ததே!
வெற்றியால் விளைந்த விழுப்பயன் போனதே!
அற்றம் காவா(து) அல்லல் தந்ததே!
அறுந்தநின் யாக்கை இருந்துநான் காண
எப்பிறப் பதனில் இழிவினை செய்தனோ?
என்றன் தந்தை ஏகிய பின் உமை
இருந்திடும் தாதையாக் கருதியே இருந்தோம் !
இன்றுநீர் மாண்ட இடர்விளை தினமே
எந்தையர் ஏகிய ஏக்கறும் தினமாம் !
கண்ணனின் உபதேசம் :
என்று இவ்வாறெல்லாம் புலம்பி அழுத பின், இனி இவ்வுலகில் வாழ்ந்து பெறப்போகும்
நன்மை ஏதுமில்லை யெனக் கருதி, இறப்பதே மேல் என நினைத்தவனாய், தன் வாளை உருவி எடுத்து,
அதை மிகவும் உயரே செல்லும் வண்ணம் தூக்கி எறிந்து, அதற்கு நேராகத் தன் மார்பைக் காட்டி
நின்றான். அக்கணத்தே, ஆங்கிருந்த மாயன், அவனைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு அவ்வாறு நிகழாமல்
நெஞ்சம் அவனைத் தடுத்துக் காத்தார். பின்பு அவர் அருச்சுனன் நெஞ்சம் அமைதி அடையும்படி,
"அருச்சுனா! நீ அவலம் கொண்டு இவ்வாறு புலம்புவதை விட்டொழி ! உதயசூரியன் தன் ஒளியை
எப்போதுமே தந்து கொண்டிருப்பதில்லை; மாலையில் அவன் தன் கதிர்களைச் சுருக்கிக் கொண்டு
மறைந்து விடுவதைப் போல, இவ்வுலகில் தோன்றுகின்ற பொருள்கள் யாவும், சிலகாலம் நிலைத்திருப்பன
போலக் காணப்பட்டாலும், பிறகு அவைகள் தமக்கென வரையறை செய்யப்பட்டுள்ள நியதியினை ஒட்டி
நாசத்தை அடைகின்றன :
மரணேன ஸமம் ஜன்ம
யௌவனம் ஜரஸா பிச
ஜராபி ம்ருத்யுநா சச்வத்
வர்வர்த்தி ஸரதாம் பவே!
பிறவியில் உழலும் சீவன்
பிறக்குங்கால் மரணத் தோடே
அறக் கலந்(து) இருக்கும் என்னின்,
அழுவதால் என்ன லாபம்?
சிறப்புலாம் இளமையோடே
சேர்ந்துள்ள முதுமை தானும்
உறழ்ந்திடும் மரணம்; என்னும்
உண்மையை உளத்தே வைப்பாய் !
"பிறவிச் சூழலில் சிக்கி உழல்கின்ற உயிர்களுக்கு, பிறவியானது மரணத்துடன்
கலந்தே இருக்கிறது. அவ்வாறே, இளமையும் முதுமையோடு
கூடியதே! அம்முதுமையும் கணந்தோறும் மரணத்துடனே கலந்துள்ளது என்பதை நெஞ்சில் நிறுத்தி வைப்பாயாக
!"என்று கூறி, அவனைத் தேற்றுவித்தார். இவ்வாறு பதிமூன்றாவது நாளும் கழிந்தது.
கர்ணனைத் தன் பக்கம் அழைத்தல்:
அடுத்த நொடியே தேர் கர்ணன் இருக்குமிடத்தை அடைந்து நின்றது. அப்போது அருச்சுனன்
கர்ணனைப் பரிவோடு நோக்கி, "அண்ணலே" சுற்றத்தினர்களான எம்மை விட்டு, எதிரணியில்
சேர்ந்திருக்கும் உமக்கு எவ்வகையிலும் நன்மைகள் விளையப் போவதில்லை; ஆகவே, எம்மோடு வந்து
சேர்ந்து நலம் பெறுவீராக!" என்று கேட்டுக்கொண்டான்.
கர்ணன் பதிலுரை :
நீதிமானான கர்ணன் பார்த்தன் கூறிய பரிவுச் சொற்களைக் கேட்டு, நிதானமாக,
"அருச்சுனா !பிறருக்கு ஆபத்து வரும்போது காப்பது அறிஞர் கடன். அதிலும் நம்மை நம்பினவர்களை ஆபத்து வேளையில் கைவிடல் என்பது தகாத காரியம். நிற்க,
உங்களின் சூழ்ச்சியினாலேயே துரோணரும் காங்கேயரும் இறந்தனர். அதனால் நமக்கே வெற்றி என
நீங்கள் பெருமிதம் கொள்ள வேண்டாம். சூரியனை மறைக்கும் கேதுவைப் போல நானிருக்கிறேன்.
அனேகாந்தவாதிகளை வெல்ல ஏகாந்தவாதிகளால் முடியாது. என் எதிரில், உன் வல்லமை, காய்ந்த
புல்லினும் கடைபட்டதே! வீரனாகில் என்னோடு எதிர்த்துப் போரிடு ! வீரனாகில் என்னோடு எதிர்த்துப்
போரிடு !மற்றவற்றைப் பிறகு பார்க்கலாம்" என்று வெகுண்டுரைத்தான். அதோடு, அனைவரும்
பார்த்துக் கொண்டிருக்கும்போதே, பார்த்தன்
ஏந்தியிருந்த வில்லை, தன் வாளியால் துண்டித்தான்.
இருவரும் போரிடல்:
அதனால், சுற்றத்தினன் என்னும் அன்பால்
கர்ணன் மேலிருந்த பாசமும் துண்டிக்கப்பட்டு, கிருஷ்ணனின் அறிவுரையால் சினமாக மாற, அருச்சுனன்,
வேறொரு வில் எடுத்து நாண்பூட்டி, சரங்களை கர்ணன் மேல் மாரியெனப் பொழியலானான். போர்த்
தொழிலில் இருவருமே சாதனையாளர்களாக, வில்லாற்றலில் சமமானவர்களாக விளங்கியதால், அவ்விருவரில்
ஒருவரும் வெற்றியோ, தோல்வியோ பெற முடியவில்லை.
பார்த்தன் கணையால் கர்ணன் வீழ்தல்:
நெடுநேரம் நடைபெற்ற போருக்குப் பின், விஜயன்
தெய்வத்தன்மை வாய்ந்த ஓர் கணையை ஏந்தி,
தெய்வமாக் கணையே! கேட்க!
தீர்த்தனின் திருவ றந்தான்
உய்வகை தம்மைக் காட்டல்
உண்மையே யாகுமானால்
பொய்வழி அறியா மூத்தோன்
புகலுதல் வாய்மை யானால்
நைவகை புரிந்த கர்ணன்
நலிந்திட நாசம் செய்க!
"தெய்வத்தன்மை பொருந்திய சரமே!
இறைவன் அருளிய திருவறம் உண்மையாக இருக்குமானால், எவரையும் பகைக்காத என் அண்ணன் தருமர்
சத்தியத்தையே பேசுவது உண்மையானால், எம் பகைவரோடு சேர்ந்து பல கொடுமைகளைச் செய்து வரும்
கர்ணனை, விரைவில் சென்று அழித்தொழிப்பாயாக!"
என்று கூறி, முறையாக வணங்கி, வில்லில் பூட்டி, குறிதவறாமல் அந்த தெய்வீக அம்பை
விட, அது வேகமாகச் சென்று கர்ணனது தலையைத் துண்டித்தது. தலையற்ற பிறகும் கூட, அவனது
முண்டம் அருச்சுனனைக் கொல்லுவதற்குச் சுழன்று வந்ததெனில், அக் கர்ணனது கோபமாகிய தீய
உணர்வு எவ்வளவு மிகுதியாய் இருக்க வேண்டும் என்பதை நினைத்துப் பாருங்கள்! இந்த அரிய
செயலைக் கண்ட வானவ மகளிரும் வீரர்களின் ஆற்றலை வியந்து பாராட்டி மலர்கள் சொரிந்து வாழ்த்தினர்.
துரியனின் துயரம் :
நிற்க, கர்ணன் மடிந்ததைக் கண்ட துரியோதனன், "என் உயிர்த் தோழனே! என்னை விட்டு நீ மட்டும் பிரியவில்லை; என் கையிலிருந்த அரச பதவியும் பிரிந்துவிட்டதே
! நீ இல்லாததனால், சூரியன் இருந்தும் இல்லாதது
போல் இருள் சூழ்ந்து விட்டதே! இன்றோடு போர்முனை முறிந்து போயிற்றே!" என்று பலவாறு
கூறி புலம்பினான். வேந்தனின் பெருந்துயர நிலையைக் கண்ட அவன் சகோதரர்களாகிய துச்சாதனன்
முதலியோர், தாமும் கண்கலங்கி, அரசனின் துயர்தீர்க்க எண்ணி பயங்கர ஆயுதங்களை ஏந்திவந்துப்
போரிடத் தொடங்கின, வீமனைச் சூழ்ந்து கொண்டனர். ஆயினும் அனைவரும் போரிடும் வீமனின் கதாயுதத்தால்
அறையப்பட்டு, கூற்றுவன்வாயில் சேர்க்கப்பட்டனர்.
தன் உயிர்த் தோழனாகிய கர்ணன் இறந்தான்;
தம்பியர் அனைவரும் உயிர் துறந்தனர் எனினும் வேந்தன், தன் இறந்த சகோதரர்களைக்
கண்டும் கூட, பாண்டவர் மேல் கொண்ட பகையுணர்வை விட்டானில்லை. மாறாக, பாண்டவரைக் கொல்ல
வேண்டுமென்னும் சினத்தீயே மிக்கெழ, எஞ்சிய படைகளைத் திரட்டிக்கொண்டு தேர்மீதேறி போருக்குப்
புறப்பட்டான்.
தேர்ப்பாகன் அறிவுரை; துரியன் மறுப்புரை :
அப்போது அவனது தேரைச் செலுத்தும் பாகன், துரியோதனனை நோக்கித் துணிவுடன்,
"வேந்தே ! யான் கூறுவதைச் சற்று செவிமடுத்துக் கேட்பீராக! நம் படை பலமும் குறைந்துவிட்டது.
தலைவரான துரோணரும் மாண்டார் கர்ணரும் மறைந்தார். இணை உமக்கு நல்லுரை கூறுபவர் எவரும்
இல்லை. ஆகவே, நீர் உம்முடைய பிடிவாதத்தை விட்டு, சாந்தமுடையவராகி, பாண்டவரோடு சமாதானம்
செய்துக் கொள்ளுங்கள்!" என்றுரைத்தான்.
தன் பாகன் கூறிய மொழிகளைக் கேட்ட துரியன், "பாகனே ! எனக்குப் பிறந்தநாள்
தொட்டே வைரிகளாக இருந்துவரும் பாண்டவரோடு இப்போது மட்டும் எங்ஙனம் சமாதானம் ஏற்படும்?
அதிகம் பேசி என்ன பயன்? எங்கள் இரு திறத்தார்க்கும் நிச்சயமாக அன்பு கலந்த உறவு இனி
இருக்கமுடியாது. கீரியும் பாம்பும் ஒத்து உறவாடுவதுண்டோ? அன்றியும் என் உறவினர் அனைவரையும் இழந்துபோன பிறகு,
நான் மட்டும் உயிரோடு பிழைத்திருந்து என்ன சுகத்தைக் காணப்போகிறேன்?.
சுற்றங்கள் யாவும் தோற்றேன்!
துணைவரைத் தோற்று நின்றேன்!
பெற்றஎம் செல்வம் தோற்றேன்!
பீடுறும் படைகள் தோற்றேன்!
நிற்றநின் அன்பு தோற்க
நேரினும் பொருத லன்றி
குற்றியின் அளவும் கூட
கொள்கிறேன் கூடார் நட்பே!
என்று சமாதானமாக பதில் உரைத்தான். அவனது
உலோப குணமும், வைராக்கிய பாவமும் இக்கடைசி நேரத்திலும் அவனை விட்டுச் சிறிது கூட அகலவில்லை.
போர் தொடர்ந்தது; கர்ணன் புதல்வர்கள் மூவரையும்,
அவர்களுக்குப் படைத்துணையாக வந்த அரசர்கள்
எண்மரையும் நகுல சகாதேவர்கள், எதிர்த்து அழித்தனர்.
துரியன் வீமன் போர் :
அந்தப் போர் அரங்கில், வணங்காமுடி மன்னனாகிய துரியோதனன், சினத்தீயினால் தன்
கண்களில் பொறிபறக்க வெகுண்டு வந்து தன்னை எதிர்த்த வீமனுடைய வில்லைத் துண்டித்து மறு
கணை தொடுக்க ஆரம்பித்தான். வீமனும் தனது சக்தி எனும் எரிகோலை ஏந்தி, வஞ்சக துரியனின்
மார்பைப் இலக்கை குறிவைத்து எறிந்தான். அதனால் காலனிடமிருந்து வந்த தூதுபோல், அப்படை,
துரியனின் கவசத்தைக் கிழித்து மார்பில் புதைந்தது. அதனால் அவன் மூர்ச்சையடைந்து வீழ்ந்தான்.
அஞ்சியவர், ஆயுதமில்லாதோர், மயங்கியவர், இளையோர், முதியோர் ஆகியவர் மீது எவ்விதப் படையும்
எய்தல், தகாத செயல் என்று உணர்ந்தவனாகிய வீமன், துரியோதனன் மூர்ச்சை தெளியும் மட்டும்
வாளாவிருந்தனன்.
தர்மர் துரியனுக்கு அறமுரைத்தல் :
அஞ்சாநெஞ்சம் கொண்ட துரியன் மயக்கம் தெளிந்து எழுந்ததும், மிக்க சினத்தோடு வீமன்
மீது அம்பு மழை பொழிந்தான். அம்மழையில் குளித்தபடியே வீமன் தனது கதாயுதத்தைச் சுழற்றியபடியே
துரியோதனனை நெருங்கினான். அவ்வளவில் அவன் பொருதலைக் கண்டு மனமிளகிய தருமர் அவன் அருகில்
சென்று, சகோதரனே! இப்பொழுதாவது நீ ,
பகைதனை விட்டொ ழித்துப்
பண்புசேர் அன்பு தன்னை
வகைபட கடைபி டித்து
வாழலாம்! உரைப்பக் கேளாய்!
முகையவிழ் அலங்கல் தாழும்
முடியினை நீயே ஏற்றுத்
தகவுற
நகரம் ஐந்து
தந்தெமை விட்டால் போதும் !
துரியனின் வீழ்ச்சி :
என்று இரக்கத்தோடு கேட்டுக் கொண்டார். அவரது இந்தப் பரிவுரை கேட்டு, துரியன்
கோபக்கனலால் எரியெழ விழித்து நோக்கி, "பாண்டுவின் புதல்வனே! பிறருக்கு ஏவல் தொழில்
புரியும் அடிமைகள் எங்கேயாவது நாடாளும் அரசுரிமை பெற முடியுமா ? பேடிகளால் பெண்ணின்பம்
நுகர இயலுமா ? நாடாளும் பெரும்பேறில்லாத உமக்கு, அரச இன்பம் நுகரும் நல்வினை எப்படி
வாய்க்கும் ? என்று வசைமாரி பொழிந்து கொண்டே தனித்து வந்துள்ள தருமரைக் கன்னத்தில்
அறைந்து கொல்லும் பொருட்டு கையை ஓங்கினான். அவ்வளவில் இவையாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்த
வீமன் சட்டெனப் பாய்ந்து சென்று தன் கதாயுதப் மடையைச் சுழற்றி, துரியன் மீது அறையவும், அவன் மீண்டும் நிலத்தில்
விழுந்து மரண மூர்ச்சையடைந்தான். அதோடு அங்கிருந்த பதினாயிரம் வீரர்களையும், பதினாயிரம்
அரசர்களையும், எண்ணாயிரம் தேர்த்திரளையும் அழித்து வெற்றி பெற்றான்.
இறப்பிலும் குரோதம்:
தனது இடை, தொடைப் பகுதிகளில் தாக்குண்டு மூர்ச்சையுற்று வீழ்ந்த துரியன், சற்று
நேரம் மயக்கம் தெளிய தன் அருகிலிருந்த படைவீரர்களை நோக்கி, "என் எதிரிகளாகிய பாண்டவரோடு
பொருது அவர்களின் தலைகளைக் கொய்து எடுத்துவரும் வீரன் யாராயினும், அவனை என்முன்னர்
கொண்டு வாருங்கள்! அவனுக்கு என் நாட்டில் பாதியைத்
தருகிறேன்" என்று ஆணையிட்டான். தனக்கு
இறுதிக்காலம் அருகில் வந்துள்ளதை அறிந்திருந்த போதிலும், மோகனிய வினைவயப்பட்ட துரியன்
சிறிதளவாவது வெறுப்பு உணர்வை கை விட்டானா?, என்பதை எண்ணிப் பாருங்கள்.
மீண்டும் ஒரு பெரும்போர்:
சந்திரன் இராகுவால் மறைக்கப்படும் போது, உலகம் ஒளியிழந்து இருள் மூடுவது போல,
துரியன் மரணம் எய்தியபோதே அவன் படைவீரர், ஒளி குன்றி வருந்திச் செயலற்று நின்றனர்.
இச்செய்தியைக் கேள்வியுற்ற ஜராசந்தன், யாதவ குலத்தை அடியோடு அழித்தொழிக்கக் கருதி,
வித்தியாதரப் படைகளோடு புறப்பட்டு வந்தான். இதை முன்னதாகவே நாரதர் அறிந்து கொண்டு,
விரைந்து பலதேவ வாசுதேவர்களை அணுகி, "அரிகுலத் திலகங்களே ! நும் பகைவன் பெரும்படையோடு
எதிர்க்க வந்துவிட்டான். அவனோடு போரிடுவதைவிட்டு, ஏன் இங்கிருந்து கொண்டு காலதாமதம்
செய்கிறீர்கள்?" என்று கேட்டார்.
கண்ணன் ஜராசந்தன் போர்:
நாரதர் மொழிந்ததைக் கேட்டவுடன், கிருஷ்ணன், மிகுந்த கோபாவேசத்துடன் புறப்பட்டுப்போய்,
ஜராசந்தனுடன் கடும்போர் விளைவித்தார். ஜராசந்தன் அக்னி அஸ்திரத்தை, மேக அஸ்திரம் கொண்டு
நாசம் செய்தார். பாம்புக் கணையை, கருடக் கணையால் வீழ்த்தினார். பகுரூபினி என்னும் வித்தியாயமயமான
பாணத்தை, சங்கத்தொனி எழுப்பி விலகி ஓடச் செய்தார். இவ்வண்ணம், பகைவனால் விடப்பட்ட,
வெவ்வேறு வகை வாளிகளையும் யதுகுல நந்தனால் முறியடிக்கப்பட்டது. இவ்வாறு நீண்ட நேரம்
நடைபெற்ற, விற்போரால், செருக்கிழந்த ஜராசந்தன், சக்கரவடிவம் கொண்டதும், ஆயிரம் தேவதைகளால்
தாங்கப்படுவதும், புண்ணியப் பேற்றால், சக்கரவர்த்திகளின் ஆயுத சாலையில் தானே தோன்றுவதுமான
சக்கராயுதத்தை, தம்மிடம் வருமாறு தியானித்து அளவிலேயே, அச்சக்கரம் போந்து ஜராசந்தனின்
கையில் தங்கியது.
சக்கராயுதம் கண்ணனை வந்தடைதல் :
அச்சக்கரத்தைக் கண்டவுடனே, பலதேவ வாசுதேவர்களின் நல்வினை மட்டும் அவர்களைக்
கைவிடாமல் நிற்க, துணைக்கு வந்திருந்த அரசர்கள் அனைவரும் அவர்களைத் தனியே கைவிட்டுவிட்டு ஓடிப் போயினர். பலதேவரின் தைரியமூட்டும் உரையால்
வாசுதேவர் கலங்காமல் நின்றார். அப்போது பகைவனால் ஏவப்பட்ட மகாசக்தி வாய்ந்த அந்த சக்கர
ரத்தினம், விரைவில் வந்து அவரை மும்முறை வலம் வந்தபின் வலக்கரத்தில் அமர்ந்தது. அவ்வத்திரத்தைக்
கையில் ஏந்தியபடி கண்ணன், அருளுணர்வு தோன்ற, பகைவனை நோக்கி, "மகத தேசாதிபதியே!
பார்த்தாயா? இனியாவது எம் கட்டளையை ஏற்று நட ! அகங்காரத்தை கைவிட்டு, அண்ணனின் அடிபணிந்து,
அவர் ஏவலைக் கேட்டு நடந்தால், என் கையால் மடியாமல் உயிர் பிழைப்பாய்" என்று கூறினார்.
கண்ணன் சக்கரப்படையால் ஜராசந்தனைக் கொல்லல்:
மாயவன் உரைகேட்ட அரசன், அவரைப் பார்த்து, "ஆயர்குலத்தில் தோன்றி ஆடுமேய்க்கும்
இடையர்களுக்கு இராஜதந்திரம் எப்படித் தெரியும்? ஏய்! கிருஷ்ணா! உன் தந்தை வசுதேவன்,
எனக்குப் பாதசேவை புரிந்து வாழ்ந்தவன் என்பதை மறந்து விடாதே ! அவன் புதல்வனான நீயா
எனக்குக் கட்டளை இடுவது?" என்று வெகுளிச்
சிரிப்போடு கூறினான். உடனே, அந்த இழிச்சொல்லைப் பொறாத, வாசுதேவர், தம் கையிலிருந்த
சக்கராயுதப் படையை அவன் மேல் ஏவினார். அவ்வாயுதம் விரைந்து சென்று, அவன் செய்த தடைகளையெல்லாம்
தாண்டிப் போய் அவனது தலையைத் துண்டித்து விட்டு
அவர் கையில் மீண்டும் வந்து தங்கியது. அப்போது வானவர்கள் ஆகாயத்தே குழுமி நின்று வெற்றி
ஆரவாரம் புரிந்து, வாசுதேவர் மேல் பூமாரி பொழிந்தனர்.
கண்ணன் இளையவனுக்கு முடிசூட்டல் :
சக்கரவர்த்தி மடிந்ததைக் கண்டு, கடுஞ்சினம் கொண்டு எதிர்க்கவந்த அவன் புதல்வர்களான
காலயவனன் முதலானோரும் கண்ணனை வெற்றி கொள்ள இயலாமல் போரிட்டு மடிந்தனர். ஊழிக்காலத்துத் தீயினிலே அகப்பட்ட விட்டில் பூச்சிகள்
போல, பெருந்திரளாக வந்து போரிட்ட மற்ற மறவர்களும், கண்ணனால் மடிந்து வீழ்ந்தனர். அதன்பின்பு,
ஜராசந்தனின் நற்குணமமைந்த அமைச்சர்கள் தமக்குள் ஆலோசித்து, போரில் உயிர் பிழைத்திருந்த
அவன் இளையமகனைக் கண்ணனிடம் கூட்டிவந்து, அவர் திருவடிகளில் பணியுமாறு செய்ய, அவரும்
சினம்மாறி அப்புதல்வனுக்கு மகதநாட்டின் அரசுரிமையைத் தந்து, முடிசூட்டி வாழ்த்தினார்.
அசுவத்தாமன் பாண்டவரோடு போரியற்றல்:
அப்போது அசுவத்தாமன் ,கௌரவன் அருகில் வந்து அவனைப் பணிந்து, "வேந்தே! நீங்கள்
கூறியவாறே நான் பாண்டவரிடம் சென்று, கடும்போர் புரிந்து, அவர்கள் ஐவரையும் கொன்று,
அவர்கள் தலைகளோடு வருகிறேன். இது உறுதி !நீங்கள் கவலை நீங்கியிருங்கள்! இந்த சமயத்திலாவது
நாங்கள் உங்கள் விருப்பத்தை நிறைவேற்றிக் காட்டாவிட்டால் நாங்கள் நன்றி மறந்த கயவர்களாவோம்!
எனக்கு இது ஒன்றும் பெரிதல்ல;" என்று கூறி அவ்விடம் விட்டு நீங்கி, ஜராசந்தனிடம்
சென்று, அவனை வணங்கி, "பேரரசே! தங்கள் அனுமதியில் இந்நாள்வரை நடைபெற்ற பெரும்போரில்,
இன்று நம் சேனாதிபதியாக துரியோதனன், வீமன் ஒருவனாலேயே கதாயுதத்தால் மொத்துண்டு, எண்ணற்ற
அரசர்களோடும் படைவீரர்களோடும் வீழ்ந்து உயிர் துறந்தான்" என்றுரைத்தான்.
அந்தத்தில் அசுவத்தாமனுக்கு பட்டம் :
மூன்று கண்டங்களுக்கும் தலைவனான சக்கரவர்த்தி இச் செய்தியைக் கேட்டதும் தன்
தலையை அசைத்து, "என்னே ஆச்சரியம்! நம் சேனாதிபதியின் நிலை இவ்வாறாகிவிட்டதே"
என்று வருந்தி உரைத்தான். பின்பு அவன் தன் படைகளின் சேனாதிபதி பட்டத்தை அப்பொழுதே அந்தண
வீரனாகிய அசுவத்தாமனுக்குச் சூட்டி, போருக்கு அனுப்பி வைத்தான்.
அசுவத்தாமனும், துரியனது பெரும் படைகட்குத் தலைமையேற்று, எழமாட்டாமல் வீழ்ந்து கிடந்த துரியனிடம் பெருமிதத்துடன்
வந்து, நிகழ்ந்தவற்றை அவனுக்கு உரைத்து, பாண்டவர்களையும், கண்ணனையும் விரைவில் கொன்று
வருவதாகச் சூளுரைத்துச் சென்று, திக்குபாலகர்களும் அஞ்சியோடும்படி, தேர்ந்தெடுத்த தேவதாஸ்திரங்கள்
என்னும் மேகத்தால், பாண்டவர்கள் என்னும் பருவதங்களை மூடினான். இச்செயலால் குருக்ஷேத்திரப்
போர் மீண்டும் புத்துயிர் பெற்றது.
தேவதை
பாண்டவர் தலைகளைக் கொணரப் போதல்:
இச்சமயம் அசுவத்தாமன், மந்திரத்திற்குக் கட்டுப்பட்டு தான் இட்ட பணியை நிறைவேற்றும்,
*'மாகேஸ்வரி'* என்னும் கொடிய வித்தியா தேவதையை, மந்திர உச்சாடனம் செய்து, தன்முன் வரவழைத்து,
பாண்டவர்களிடம் சென்று, அவர்கள் அனைவரையும் கொன்று, அவர்களது தலைகளை மட்டும் கொண்டு
வரும்படி பணித்தான். அந்த தேவதையும் அப்படியே கோர உருவங்கொண்டு, வேகமாக பாண்டவர் இருக்குமிடம்
சாரும் எல்லையில், பாண்டவர்கள் படைகள் அனைத்தும் தேவதையை கண்டு அஞ்சி அலறி ஓடின.
தருமதேவன் தேவதையைத் தடுத்தல்:
அவ்வேளையில், முன்பொருமுறை காட்டில் கிருத்திகா என்னும் கொடிய தேவதையிடமிருந்து,
தருமன் முதலானவர்களைக் காத்த தருமதேவன், தேவதையின் முன் தோன்றி, "தேவியே! நல்வினை
மிக்கவர்களும் எவ்வித ஆயுதங்களாலும் பின்னம் அடைவிக்க முடியாதவர்களும், வீடுபேறு அடைவதற்குத்
தகுதிவாய்ந்த சரீரம் பெற்றவர்களுமான பாண்டவர்களையா நீ கொல்ல முடியும் ?"என்று
கூறித் தடுத்தான். இதைக் கேட்ட தேவதை, தன்
அவதி ஞானத்தால், அறக்கடவுள் மொழிந்தவை அனைத்தும் உண்மையே என்று அறிந்துகொண்டு, பாண்டவர்களை
விடுவித்துச் சென்று, உறங்கிக்கொண்டிருந்த திரௌபதியின் புதல்வர்களான இளம் பஞ்சபாண்டவர்களைக்
கொன்று, அக்குழவிகளின் தலைகளைக் கொய்து கொண்டு வந்து, அவற்றை அசுவத்தாமனிடம் சேர்ப்பித்து
விட்டுச் சென்று விட்டது.
இளம்பாண்டவர் தலைகளைக் கண்ட துரியன் அசுவத்தாமனை
நிந்தித்தல் :
அசுவத்தாமன் அக்குழந்தைகளின் அறுந்த
தலைகளை எடுத்துக்கொண்டு, அதிவிரைவில் துரியோதனனிடம் சென்று காட்டவும், அவன் அவைகளைக்
கூர்ந்து நோக்கி, "அடே ! பிராமணா! நீ
என்ன காரியம் செய்து விட்டாய்? இவைகள் பாண்டவரின் தலைகள் அல்ல; இத்தலைகள் இளம் பாண்டவர்களுடையவை.
தெய்வப் படையாலும் கொல்ல இயலாத பாண்டவர்களை உன்னால் மட்டும் கொல்ல முடியுமா என்ன? வீணே
கருவங் கொண்டு சென்று, ஒன்றுமறியா இப்பாலகர்களை கொல்லும்படி செய்து விட்டாயே! துட்டனாகிய நீ இனியும் என் கண் முன் நின்று கொண்டிருக்காதே
!எங்கேயாவது ஓடி உயிர்தப்பி அந்தணர்க்குரிய புரோகிதம் செய்து பிழைத்துக் கொள்!"
என்று கோபத்துடன் கடிந்து கூறினான். வேந்தனால்
வெறுக்கப்பட்ட அசுவத்தாமன், வெட்கத்துடன், முகவொளி குன்றியவனாய், தன் விதியை நொந்தபடி
அங்கிருந்து அகன்றான்.
துரியனின் இறுதிக்காலம் - தருமர் உபதேசம்
:
மரணஅடி பெற்று வீழ்ந்து கிடந்த மன்னனின் கடைசி ஆசையும் நிராசையாய் முடிய, அவன் உயிர் பிரியும் வேளையும்
வந்துற்றது. அதைக் கண்டு கொண்ட தருமர், மறுபடியும் அவனருகுற்றுக் கனிவுடன் அவனை நோக்கி, "வீர புருடனே! உன்மீது எங்களுக்கிருந்த விரோதத்தை விட்டுவிட்டோம்; நீயும் எங்கள் மீது கொண்டுள்ள பகையுணர்வை விட்டுவிட்டு,
மனவமைதி பெறுவாயாக!" என்று உபதேசித்தார்.
துரியோதனன் இறத்தல் :
என்ன உரைத்தும் யாது பயன்? 'மூர்க்கனும் முதலையும் கொண்டது விடா' என்னும் பழமொழிக்கிணங்க, தருமரது நல்லுரைகளைக் காதால் கேட்டும் கேட்காதவன்
போலவே இருந்து, வெகுளி என்னும் தீய உணர்வுடனேயே மௌனத்துடன் உயிர் துறந்தான் அந்த மாமன்னன்.
ஒருவர் தான் அடையப்போகும் எதிர் பிறவிக்குத் தக்கவாறே உயிர் பிரியும் காலத்திலே அவருடைய எண்ணங்கள் அமையும் என்பது ஞானியர் கண்ட
உண்மையல்லவா ?
பாவம் ! அந்த அரவக் கொடியோனாகிய துரியோதனன்.
நானென்னும் செருக்கதனை விட்டா னில்லை !
நமன்வருகை தாமறிந்தும் திருந்த வில்லை!
வீணுரையின் பிடிவாதம் ஒன்றே பற்றி
விரிபுகழின் குருகுலத்தின் பீட ழித்தான் !
தானடங்காப் பேதையெனத் தருக்கி நின்றான் !
தகுதியலாதன புரிந்தே தாழ்வ டைந்தான்!
ஆனமுதல் ஆர்த்தரௌத்ர தியானத்(து) ஆழ்ந்தே
அறவோர்கள் அஞ்சும் நர(கு) அடைந்திட் டானே !
(பதினான்காம் சருக்கம் நிறைவடைந்தது)
மீண்டும் ஒரு பெரும்போர்:
சந்திரன் இராகுவால் மறைக்கப்படும் போது, உலகம் ஒளியிழந்து இருள் மூடுவது போல,
துரியன் மரணம் எய்தியபோதே அவன் படைவீரர், ஒளி குன்றி வருந்திச் செயலற்று நின்றனர்.
இச்செய்தியைக் கேள்வியுற்ற ஜராசந்தன், யாதவ குலத்தை அடியோடு அழித்தொழிக்கக் கருதி,
வித்தியாதரப் படைகளோடு புறப்பட்டு வந்தான். இதை முன்னதாகவே நாரதர் அறிந்து கொண்டு,
விரைந்து பலதேவ வாசுதேவர்களை அணுகி, "அரிகுலத் திலகங்களே ! நும் பகைவன் பெரும்படையோடு
எதிர்க்க வந்துவிட்டான். அவனோடு போரிடுவதைவிட்டு, ஏன் இங்கிருந்து கொண்டு காலதாமதம்
செய்கிறீர்கள்?" என்று கேட்டார்.
கண்ணன் ஜராசந்தன் போர்:
நாரதர் மொழிந்ததைக் கேட்டவுடன், கிருஷ்ணன், மிகுந்த கோபாவேசத்துடன் புறப்பட்டுப்போய்,
ஜராசந்தனுடன் கடும்போர் விளைவித்தார். ஜராசந்தன் அக்னி அஸ்திரத்தை, மேக அஸ்திரம் கொண்டு
நாசம் செய்தார். பாம்புக் கணையை, கருடக் கணையால் வீழ்த்தினார். பகுரூபினி என்னும் வித்தியாயமயமான
பாணத்தை, சங்கத்தொனி எழுப்பி விலகி ஓடச் செய்தார். இவ்வண்ணம், பகைவனால் விடப்பட்ட,
வெவ்வேறு வகை வாளிகளையும் யதுகுல நந்தனால் முறியடிக்கப்பட்டது. இவ்வாறு நீண்ட நேரம்
நடைபெற்ற, விற்போரால், செருக்கிழந்த ஜராசந்தன், சக்கரவடிவம் கொண்டதும், ஆயிரம் தேவதைகளால்
தாங்கப்படுவதும், புண்ணியப் பேற்றால், சக்கரவர்த்திகளின் ஆயுத சாலையில் தானே தோன்றுவதுமான
சக்கராயுதத்தை, தம்மிடம் வருமாறு தியானித்து அளவிலேயே, அச்சக்கரம் போந்து ஜராசந்தனின்
கையில் தங்கியது.
சக்கராயுதம் கண்ணனை வந்தடைதல் :
அச்சக்கரத்தைக் கண்டவுடனே, பலதேவ வாசுதேவர்களின் நல்வினை மட்டும் அவர்களைக்
கைவிடாமல் நிற்க, துணைக்கு வந்திருந்த அரசர்கள் அனைவரும் அவர்களைத் தனியே கைவிட்டுவிட்டு ஓடிப் போயினர். பலதேவரின் தைரியமூட்டும் உரையால்
வாசுதேவர் கலங்காமல் நின்றார். அப்போது பகைவனால் ஏவப்பட்ட மகாசக்தி வாய்ந்த அந்த சக்கர
ரத்தினம், விரைவில் வந்து அவரை மும்முறை வலம் வந்தபின் வலக்கரத்தில் அமர்ந்தது. அவ்வத்திரத்தைக்
கையில் ஏந்தியபடி கண்ணன், அருளுணர்வு தோன்ற, பகைவனை நோக்கி, "மகத தேசாதிபதியே!
பார்த்தாயா? இனியாவது எம் கட்டளையை ஏற்று நட ! அகங்காரத்தை கைவிட்டு, அண்ணனின் அடிபணிந்து,
அவர் ஏவலைக் கேட்டு நடந்தால், என் கையால் மடியாமல் உயிர் பிழைப்பாய்" என்று கூறினார்.
கண்ணன் சக்கரப்படையால் ஜராசந்தனைக் கொல்லல்:
மாயவன் உரைகேட்ட அரசன், அவரைப் பார்த்து, "ஆயர்குலத்தில் தோன்றி ஆடுமேய்க்கும்
இடையர்களுக்கு இராஜதந்திரம் எப்படித் தெரியும்? ஏய்! கிருஷ்ணா! உன் தந்தை வசுதேவன்,
எனக்குப் பாதசேவை புரிந்து வாழ்ந்தவன் என்பதை மறந்து விடாதே ! அவன் புதல்வனான நீயா
எனக்குக் கட்டளை இடுவது?" என்று வெகுளிச்
சிரிப்போடு கூறினான். உடனே, அந்த இழிச்சொல்லைப் பொறாத, வாசுதேவர், தம் கையிலிருந்த
சக்கராயுதப் படையை அவன் மேல் ஏவினார். அவ்வாயுதம் விரைந்து சென்று, அவன் செய்த தடைகளையெல்லாம்
தாண்டிப் போய் அவனது தலையைத் துண்டித்து விட்டு
அவர் கையில் மீண்டும் வந்து தங்கியது. அப்போது வானவர்கள் ஆகாயத்தே குழுமி நின்று வெற்றி
ஆரவாரம் புரிந்து, வாசுதேவர் மேல் பூமாரி பொழிந்தனர்.
கண்ணன் இளையவனுக்கு முடிசூட்டல் :
சக்கரவர்த்தி மடிந்ததைக் கண்டு, கடுஞ்சினம் கொண்டு எதிர்க்கவந்த அவன் புதல்வர்களான
காலயவனன் முதலானோரும் கண்ணனை வெற்றி கொள்ள இயலாமல் போரிட்டு மடிந்தனர். ஊழிக்காலத்துத் தீயினிலே அகப்பட்ட விட்டில் பூச்சிகள்
போல, பெருந்திரளாக வந்து போரிட்ட மற்ற மறவர்களும், கண்ணனால் மடிந்து வீழ்ந்தனர். அதன்பின்பு,
ஜராசந்தனின் நற்குணமமைந்த அமைச்சர்கள் தமக்குள் ஆலோசித்து, போரில் உயிர் பிழைத்திருந்த
அவன் இளையமகனைக் கண்ணனிடம் கூட்டிவந்து, அவர் திருவடிகளில் பணியுமாறு செய்ய, அவரும்
சினம்மாறி அப்புதல்வனுக்கு மகதநாட்டின் அரசுரிமையைத் தந்து, முடிசூட்டி வாழ்த்தினார்.
பாண்டவர் கௌரவர்க்கு ஈமக்கடன் செய்தல்:
பாரதப்போரின் தொடர்ச்சியாக நடந்த இப்பெரும் போர் ஒருவாறு ஓய்ந்து போனதும், பாண்டவர்கள்
மகிழ்ச்சியோடு ஆனந்த பேரிகை முழங்குவித்துக் கொண்டு, போர்க்களம் புகுந்து, பிணக்குவியல்களுக்கிடையே
மடிந்து கிடந்த, துரோணர், கர்ணன், துரியோதனன், அவன் தம்பியர்கள் அனைவரையும் கண்ணுற்றனர்.
அம்மாத்திரத்திலேயே அவர்களின் உள்ளத்து மகிழ்ச்சி இருக்குமிடம் தெரியாமல் ஓடிப்போயிற்று.
கண்ணீர் மல்க, பாசத்தால் புலம்பியவாறு, பெருமூச்சு விட்டனர். பின்னர் ஒருவாறு மனந்தேறி,
துரியோதனன் முதலானவர்களை போர் நடைபெற்ற குருக்ஷேத்திரத்திலும், நல்வினை மிக்க துரோணரை
கங்கைக்கரையிலும், சந்தனம், அகில், தேவதாரு முதலிய மணம் பொருந்திய வாசனை மரங்களைக்
கொண்டு எரியூட்டி, முறைப்படி செய்யவேண்டிய இறுதிக் கடன்களை எல்லாம் செய்து முடித்தவுடன்,
துன்பத்தால் கனத்த நெஞ்சத்தினராய் அவ்விடம்
விட்டு அகன்றனர்.
வாசுதேவர் திக்குவிசயம் செய்தல்:
இரண்டு போர்களை நடத்தித் தம் பகைவர்களை வீழ்த்திய பின்னரும் கூட, பலதேவ,
வாசுதேவர்க்கும், பாண்டவர்க்கும் போர் செய்யும் வேட்கை தணியவில்லை. மண்ணாசை விடவில்லை.
அதிகார வெறியும் அடங்கிய பாடில்லை. மீண்டும் வாசுதேவர், தமயனாருடனும் பாண்டவர்களோடும்
புறப்பட்டு மூன்று கண்டங்களையும் தம்மடிப் படுத்த நினைந்தவராய் பெரும்படையுடன் சென்று,
கடல் மையத்திலுள்ள வியந்தர தேவர்களையும், வெள்ளியங்கிரியில் உள்ள நூற்றுப்பத்து விஞ்சைய
வேந்தர்களையும், கங்கை சிந்து நதி தீரங்களில் வாழ்ந்த தேவதைகளையும், வெள்ளியங்கிரிக்கு
அடுத்து வாழ்ந்த தருமகண்டத்து அரசர்களையும், இரண்டு மிலேச்ச கண்டத்து அரசர்களையும், கீழ்கடல் மேல் கடல், தென்கடல்களின் உரிமை கொண்ட மாகதன் முதலானோர்களையும்,
பின்னும் பல அரசரையும், சக்கர ரத்தினத்தின் ஆற்றலால் எளிதாக வென்றுத் தன்வசமாக்கி, அவர்கள் திறைப் பொருள்களாக அளித்திட்ட
பெண், பொன், அணிகள் முதலியவற்றை வாரி முகந்து கொண்டு அனைவரையும் கீழ்ப்படியச் செய்துவிட்டு
"ஒன்பது வாசுதேவர்களில் முதல் வாசுதேவனாகிய திவிட்டகுமாரன், பிரதி வாசுதேவனாகிய
அசுவக்கிரீவனை வென்று, மூன்று கண்டங்களுக்கும் அதிபதி என்னும் பேருடன் பௌதனபுரத்தை
அடைந்தது போல, துவாரகை நகரை வந்தடைந்தார்.
கண்ணனும் பலதேவனும் முடிபுனைதல்:
அதன்பின் பாண்டவர்கள் பலதேவ வாசுதேவர்களுக்குத் தூய புனித நதிகளின் நீரைத் தருவித்து அப்புனித மஞ்சனநீரால்,
நீராட்டி, முடி புனைவித்து, மூன்று கண்டங்களையும் வென்று பெற்ற பெருஞ்செல்வம் காரணமாக
அவர்களுக்குத் "திரிகண்டாதிபதிகள்" என்னும் பட்டத்தையும் சூட்டிப் பெருமைப்படுத்தினர்.
இவ்வாறு அப்பஞ்சவர்கள், துவாரகைப் பதியிலேயே மகிழ்ச்சியோடு சிலநாட்கள் தங்கினர்.
பாண்டவர் நாடுதிரும்பி அரசாளுதல்:
பாண்டவர்கள் சிலகாலம் துவாரகையில் தங்கியிருந்த பின்னர், தம் நாட்டிற்குத் திரும்பும்
எண்ணம் கொண்டவர்களாய், பலதேவ, வாசுதேவர்களின்
அனுமதி பெற்று, அவர்கள் அன்புடன் வழியனுப்பிவைக்க துவாரகையினின்றும் நால்வகைப் படைகளுடன்
புறப்பட்டு, பலநாள் பயணம் செய்து, நகரமாந்தர்கள் பூரணகும்பம் முதலானவைகளைக் கொண்டு
மகிழ்வோடு வரவேற்க, மங்களகரமான அஸ்திநாகபுரத்தை ஒரு நன்முகூர்த்தத்தில் வந்தடைந்தனர்.
நல்வினைப் பயனால், செல்வம்
நற்புகழ் வலியும் சேரும்;
நல்வினைப் பயனால், போக
வாழ்க்கையும், அரசும் கிட்டும்;
நல்வினைப் பயனால் உள்ளத்(து)
உறுதியும், இன்பம் சூழும்;
நல்வினை தம்மால் வாரா
நற்பொருள் உலகில் உண்டோ?
தருமரின் செங்கோல் சிறப்புகள் :
அஸ்திநாகபுரத்தின் அரசுரிமையை இயல்பாகவே
அடைந்திருந்த பாண்டவர்கள், கொடுங்கோலனாகிய
துரியோதனனது ஆட்சியில் வாடிக்கிடந்த குடிமக்கள், மகிழ்ச்சியுற்று வாழ்ந்திட,
பற்பல சீர்திருத்தங்களைச் செய்தனர். சுவைமிக்க சிறந்த பழங்களின் பயனை, பிறரும் துய்க்கும் வண்ணம் தந்துதவும் பழமரங்களைப் போல,
பிறருக்கு நன்மை புரிவதிலேயே கருத்துடையவராய் விளங்கிய அவர்கள், மக்களுக்கு எவ்வகை
துன்பங்களும் சூழாதபடி, கண்ணும் கருத்துமாக அவர்களைப் புரந்தனர்.
தருமர் அரசாட்சியை மேற்கொண்டவுடன் பன்னீராண்டுகள்வரை குடிமக்களிடமிருந்து 'நிலவரி'
வாங்க வேண்டாம் என ஆணை பிறப்பித்தார். பற்பல அறச்செயல்கள் இனிதே நடைபெற ஏராளமான மானியங்களை
அளித்தார். அறநெறி பிறழா அரசனாக தருமர் ஆட்சி புரிந்தமையால், குருஜாங்கலநாடு, காலம்
தவறாமல் பெய்த மழை வளத்தால் நீர்வளமும், நில வளமும் பெற்று, மனவளம் பெற்றுவாழும் குடிமக்களை
உடையதாயிற்று. கொடிய நோய்களாலும், திருடர்களாலும் மக்கள் வருந்தாதபடி, ஒரு தாய் தன்
சேயைக் காப்பதுபோல, அவர்களுக்கு எவ்வகை குறையும் நேராதபடி ஆட்சி புரிந்தார். முன்னதாக,
தாம் அந்நாட்டின் வேந்தனாக முடி சூட்டிக்கொண்டவுடன், தம்மையும் தம்பியரையும் கல்வி கேள்விகளிலும், விற்பயிற்சி, வாள்பயிற்சி முதலானவற்றிலும்,
பிற படைகலப் பயிற்சிகளிலும் சிறந்து விளங்கச்செய்த, குருவாகிய துரோணாச்சாரியாரின் அன்பு
மகன் அசுவத்தாமனை அழைப்பித்து, அவனை அவன் தந்தை
போலவே, தம் குலத்திற்குக் குருவாக இருத்தி, பெருமை நல்கினார். உட்பகையும், கலகமும்,
வேற்றரசர் படையெடுப்பும் நாட்டைப் பாழ்படுத்திடாதபடி, சிறந்த சேனைவீரர்களைக் கொண்டு
நாட்டின் பாதுகாப்பிற்கு வலிமையூட்டினார். இதனால், நாட்டு மக்களிடையே அமைதியும் அறவுணர்வும்,
நல்வினைச் செயல் வேட்கையும் மிக்கு வளரலாயின. இறைவழிபாடும், நற்கலைகளைக் கற்கும் வேட்கையும்,
கிளைத்தன.
பாண்டவர்களும், முன்னர்தாம் அனுபவித்த
பழைய துன்பங்களை எல்லாம் மறந்தவராய், தத்தம்
உரிமை மகளிருடன் கூடி, இன்பம் துய்த்தும், பொறிப்புலன்களினால் நுகரும் இன்பங்களில் மூழ்கியும் வேடிக்கை, வினோத
விளையாட்டுகளினால் நாள்களைக் கழித்தும், போகபூமியில் வாழ்வாரை ஒத்து விளங்கலாயினர்.
வாசக அன்பர்களே! "இத்துடன் பாண்டவர்களின் வரலாறு முடிவுக்கு வந்தது"
என்று எழுதி முடித்துவிடலாம் என என்னுள் ஒரு சிந்தனை உதிப்பதை மிகவும் சிரமப்பட்டு
அதை அணையிட்டு தேக்கி விட்டு, இன்னும் முடிவுக்கு
வராமல், கங்கை பேர்யாற்றைப் போல நீண்டு போய்க்கொண்டிருக்கும் பாரதக் கதையை மிகவும்
சுருக்கமாக கூறி நிறைவு செய்து விடுகிறேன். நேயர்களே! மன்னிப்பீராக!
களைத்துப்போய் இருப்பவனுக்கு நடக்கும் வழி நெடிதாகத் தோன்றுகிறது. ஒருவருக்குத்
துன்பம் தோன்றி சிறுபோழ்தே நிலைத்திருந்து மறைந்தாலும், நெடுங்காலம் தாம் துன்பக் கடலுள்
ஆழ்ந்திருந்ததாக பிரமை ஏற்படுகிறது. ஆனால், வாழ்க்கையில் இன்பங்களை நெடிதுகாலம் துய்த்துக்
கழித்தவர் கூட, அவ்வின்பங்களைத் தாம் சில காலமே அனுபவித்ததாக நினைக்கிறார். இதைப்போலவே
பாண்டவர்கள், இடர்க் கடலினின்றும் கரையேறி இன்ப ஆழியில் பலகாலம் நீந்தித் திளைத்தபோதும்
அவை கணநேரம் போலவே தோன்றி கழிந்து போனதில் வியப்பில்லை.
ாரதர் உருவில் வந்த துன்பம்:
உலகோர் விரும்பியவற்றையே, தாமும் விரும்பிச்
செய்து இன்புற்றிருந்த பாண்டவரது வாழ்வில்,
ஒரு பெருந்துன்பம் நாரதர் உருவத்தில் நுழைந்தது எப்படி என்று கேட்கிறீர்களா? சொல்லுகிறேன்!
கேளுங்கள்!
திரௌபதி தன்னை அலங்கரித்துக் கொள்ளல்:
அருச்சுனன் மனைவியாகிய திரௌபதி வீரமும், அழகும், வெற்றியும் ஒருங்கே பொருந்திய கணவனை அடைந்தமைக்காகவும்,
இல்லற இன்பங்களை இடையீடு இன்றி பெற்று வருவதற்காகவும், அளவிலாப் பூரிப்பு அடைந்து,
நாள்களை இனிதாக கழித்து வரும்போது, ஒருசமயம் அரண்மனையின் அந்தப்புரத்து ஒப்பனை மண்டபத்தில்
வீற்றிருந்து, தன்னை மிகவும் அழகாக அலங்காரம் செய்துகொண்டு, தன் எழில் உருவத்தை தன்முன்
வைக்கப்பட்டிருந்த பெரிய நிலைக்கண்ணாடியில் பார்த்து தானே மெய்மறந்து பரவசப்பட்டுக்
கொண்டிருந்தாள்.
நாரதர் வருகை :
அவ்வமயம் லோகசஞ்சாரியாகிய நாரதர், அந்த ஒப்பனை மண்டபத்தின் உள் புகுந்தார்.
தன் மெய்யழகைக் காண்பதில் தனது முழுகவனத்தையும் செலுத்திக் கொண்டிருந்த திரௌபதி, நாரதர்
வந்ததைக் கவனிக்கவில்லை. அவளது இச்செய்கையினால்
கோபம் கொண்ட நாரதர், "செல்வச் செருக்கினால் இவள் நம்மை மதிக்காமலும், வரவேற்று
வணங்காமலும் இருக்கிறாள்; மிகவும் கருவம் படைத்துள்ள இவளுக்குத் தகுந்த பாடம் புகட்டவேண்டும்"
என்று மனத்துள் கருவிக் கொண்டே, தான் வந்த சுவடே தெரியாதபடி அவ்விடம் விட்டு நீங்கினார்.
நாரதர் பத்மநாபனை அடைதல்:
அதன்பிறகு அவர், "இந்த திரௌபதியை வேறொரு வேந்தனைக் கொண்டு கவர்ந்து கொண்டு
போகும்படிச் செய்து, கணவனை விட்டுப் பிரிக்க வேண்டும். பாண்டவர் தோழனான கண்ணன் தற்சமயம்
மூன்று கண்டங்களையும் ஆட்சிபுரிந்து கொண்டிருப்பதால், பாண்டவர்க்கு விரோதமான காரியம்
செய்பவர் ஒருவரும் இல்லை. பிறரால் வெல்ல முடியாதவனும், காமஎழுச்சி மிக்கவனும், செல்வச்
செருக்குடையவனுமாகிய வல்லமை படைத்தவன் எங்குள்ளான்?" என ஆலோசித்த நாரதர், அத்தகையவன், தாதகி சண்டத்தீவிலுள்ள
பத்மநாபபுரத்தரசன், பத்மநாபன் என்பவனே, என
உறுதி செய்துகொண்டு, திரௌபதியின் எழிலுறுவைத் தானே படமாக வரைந்து எடுத்துக்கொண்டு,
ஜம்புத்தீவகத்தைச் சுற்றியுள்ள இலவணமாக் கடலைக் கடந்து சென்று தாதகி சண்டத்தீவிலுள்ள
பத்மநாபன் அரண்மனையை வந்தடைந்தார்.
பத்மநாபனிடம் நாரதர் கலகம்:
அவ்வாறு சென்று புகுந்த நாரதரை, பத்மநாபன் முனிவருக்குத் தகுந்த மரியாதை செய்து
வரவேற்று இருக்கையில் அமர்வித்து, வணங்கியிருக்க, அப்போது நாரதர் தாம் கொண்டுவந்த திரௌபதியின்
படத்தை அவனுக்குக் காட்டினார். பத்மநாபன், படத்திலுள்ள திரௌபதியின் உருவத்தைக் கண்ட
அளவிலேயே காமவாஞ்சை உடையவனாகி, அவளைத் தான் அடையும் வழியைக் கூறும்படி கேட்டான். அவரும்
தாம் கருதி வந்த காரியம் விரைவில் முடிந்தது கண்டு, உள்ளூர மகிழ்ச்சி அடைந்து,
"மன்னனே! உனக்கு வல்லமை இருக்குமானால், எவனாவது ஒரு தேவனை வயப்படுத்தி அவன்மூலம்
இவளை அபகரித்துக் கொண்டு வந்துவிடு !எப்போதும், உயர்ந்த மதிப்புடைய பொருள், அதற்குத்
தகுதியான ஒருவரிடம் இருப்பதே சிறப்பல்லவா?" என்று கூறிவிட்டு அவனிடம் விடைபெற்று
அகன்றார்.
தேவன் ஒருவனால் திரௌபதி மன்னனிடம் சேரல்:
மந்திர சித்திபெற்ற பத்மநாப அரசன், நாரதர் கூறியபடியே ஒரு தேவனை, அவனுக்குரிய
மந்திரத்தை ஓதி வருவித்துத் தன் எண்ணத்தைக் குறிப்பிட்டு அஸ்திநாகபுரத்தில் உள்ள திரௌபதியை,
கவர்ந்து வரும்படி கேட்டுக் கொண்டான். அந்த தேவனும் அவ்வாறே சென்று உறக்கத்திலிருந்த
திரௌபதியை, அவள் படுத்திருந்த கட்டிலோடு, ஆடாமல் அசையாமல் கொண்டுவந்து, மன்னனிடம் சேர்ப்பித்துவிட்டு
நீங்கினான்.
திரௌபதியின் தந்திரம் :
தூக்கம் கலைந்தெழுந்த திரௌபதி, தான்
ஒரு புதிய இடத்திற்கு வந்துள்ளதை அறிந்து திடுக்கிட்டாள். மனம் கலங்கினாள். தன் எதிரே,
அழகன் ஒருவன் நின்று கொண்டு தம்மைக் காமக் குறிப்போடு நோக்குவதைக் கண்டாள். "இது
எந்த இடம் ?இந்த மனிதன் யார் ?இவனைக் கொண்டே இங்குநான் வந்த வரலாற்றினை முழுதும் அறிந்துகொள்ள
வேண்டும்" என்று நினைத்து, அவ்வரசனிடம் தான் அங்கு கொண்டுவரப்பட்ட விவரத்தைக்
கூறும்படிக் கனிவோடு கேட்டுக் கொண்டாள். பத்மநாப அரசனும், நாரதர் தன்னிடம் வந்ததிலிருந்து
தொடங்கி, அனைத்தையும் ஒன்றுவிடாமல் எடுத்துக்கூறி, தான் அவள்பால் கொண்ட மையலைத் தெரிவித்து
தனக்கு இல்லக் கிழத்தியாக இருக்க சம்மதிக்கும்படிக் கேட்டுக்கொண்டான்.
கற்புக்கரசியான திரௌபதி, அவனது இச்சையை
அறிந்து நடுங்கினாள். ஆயினும் தன்னை மீட்பதற்காக அருச்சுனன் வரும் வரையிலும் தான் ஏதேனும்
ஒரு தந்திரம் செய்து, தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என ஆலோசித்துப் பொய்யாக
அவனை நோக்கி, "மன்னனே! உன்னிச்சைக்கு
இணங்குவதற்கு ஒரு தடை ஏற்பட்டுள்ளது. நான் ஒரு நோன்பைக் கை கொண்டுள்ளேன். அது முடிய
இன்னும் ஒரு மாதம் ஆகும். அதுவரை நீ பொறுத்திருக்க வேண்டும்" என்று மொழிந்தாள்.
பத்மநாபனும் அவளுரை கேட்டு அவள் தன் விருப்பத்திற்கு இசைந்தாள் என நம்பி, அவள் நிபந்தனைக்கு
ஒப்புக் கொண்டான்.
திரௌபதியைத் தேடுதல் :
இங்கு இவ்வாறாக, அஸ்திநாகபுரத்தில் திரௌபதியைக்
காணாததால் அரண்மனையை அல்லோலகல்லோலம் ஆயிற்று. அவளைப் பலவிடங்களில் சென்று தேடிப்பார்த்தனர். எங்கு தேடியும் அவள் காணப்படாமையால், அவளை யாரோ
கவர்ந்து சென்றிருக்க வேண்டும் என்று யூகித்த பாண்டவர்கள், செய்வதறியாது கலங்கி நின்றனர்.
பின்னர் ஒருவாறு தேறி, துவாரகைக்குச் செய்தி அனுப்பினர். வாசுதேவன், ' யாராலோ திரௌபதி
கவர்ந்து செல்லப்பட்டாள்' என்பதை அறிந்து, இந்த மூன்று கண்டங்களுக்கும் சக்கரவர்த்தியாக
நானிருக்கும்போது, என் தோழனான பார்த்தனின் மனைவியைக் கவர்ந்து போக யாருக்கு மனவுரம் இருக்கும்? என யோசித்தவனாய், தன்கீழ் அரசராயுள்ள
அனைத்து நாட்டவர்க்கும் ஓலைகள் அனுப்பி, திரௌபதியைத் தேடிக் கண்டு தகவல் தெரிவிக்கும்படி
கட்டளையிட்டார்.
நாரதர் கண்ணனிடம் வருதல் :
நாடுகளெங்கும் இவ்வாறு திரௌபதியைத் தேடும்பணி மும்முரமாய் நடந்து கொண்டிருந்ததை
அறிந்த நாரதர், 'இதுவரை திரௌபதி துன்புற்றது
போதும்!" என நினைத்தவராய், வாசுதேவரிடம் வந்து திரௌபதி கவர்ந்து செல்லப்பட்டுள்ள
இடத்தையும், அதற்குத் தாம் நிமித்தமாக அமைந்ததற்கான நிகழ்வையும் எடுத்துக் கூற, கண்ணன்,
"நாரத முனிவரே! நல்ல காரியம் செய்தீர்! முனிவர்களை அவமதிப்போருக்கு இயற்கையாகவே
துன்பம் வருகிறது. இதில் தங்களின் தவறு என்ன இருக்கிறது?" என்று தக்க சமாதானம்
கூறி அவரை அனுப்பிவைத்த பின்பு, தாமே புறப்பட்டு விரைந்து அஸ்திநாகபுரத்தை அடைந்து,
திரௌபதி இருக்கும் இடத்தை நாரதர் கூறியவாறே பாண்டவர்களிடம் கூறி, அவர்களின் துன்பத்தை
ஆற்றுவித்தார்.
பத்மநாபன் மீது போர் :
அதன் பின் அனைவரும் கூடி ,ஆலோசித்தபின், வாசுதேவருடன் புறப்பட்டுச் சிலநாளில்
ஜம்பூத் தீவகத்தைச் சூழ்ந்துள்ள இலவணமாக் கடலின் கரையை அடைந்தனர். அங்கு, மாதவன் மகிமைதங்கிய *நைகம தேவனை*
முறைப்படி தியானம் செய்து வரவழைத்து, அவன் தனது விஞ்சையால் நிருமித்துத் தந்த
பெரிய கப்பலில் ஏறி, புறப்பட்டுச் சென்று விரைவில் பத்மநாபபுரத்தை அடைந்தனர்.
அங்கு சென்றவுடன் வீமன், சினங்கொண்டு, கதாயுதத்தால் அந்நகரைச் சூழ்ந்திருந்த
கோட்டையின் மதிலைக் மோதி அறைந்தான். அப்பெரிய
மதிற்சுவர், கதாயுதத்தின் அடிகளைத் தாங்கமாட்டாமல் உடைந்து பொலபொலவென உதிர்ந்தது. வாயுதேவனின்
அருள்பெற்ற வீமனால் கோட்டை மதில் உதிர்ந்து
போனதில் வியப்பேதுமில்லை.
பத்மநாபன் தன்னை மன்னிக்க வேண்டுதல்:
காவலர்களால் இச்செய்தியை அறிந்த பத்மநாபன்,
பாண்டவரை எதிர்க்க அஞ்சியவனாய், ஓடோடிச் சென்று திரௌபதியின் அடிபணிந்து, " தாயே!
கற்புக்கரசியே! நான் செய்த தவறைப் பொறுத்து என்னைக் காப்பாற்று!" என்று வேண்டினான்.
திரௌபதியும் 'அவன் தன் உயிருக்கு அஞ்சுகிறான்' என்பதைப் புரிந்துகொண்டு, 'அவனை அஞ்சவேண்டாம்'
என கையமர்த்தி, அவன் அனுப்பி வைத்த பல்லக்கில்
ஏறிச்சென்று, பாண்டவர், கிருஷ்ணர் முதலானோர் இருக்குமிடத்தை அடைந்து, "பெரியீர்!
பத்மநாபனோடு போரிடவேண்டாம் !பகைவர்கள் தாம் பிழைபுரிந்ததை உணர்ந்து மன்னிக்கும்படி
வேண்டுவாராயின், அப்படிப்பட்டவரை மன்னிப்பது அறிஞர்கள் பண்பு அல்லவா? எனக்கூறி, அவர்களின்
சினத்தை விலக்கி, அவன் அரண்மனையைத் தான் அடைந்ததிலிருந்து நடந்தவற்றையெல்லாம் கூறி
அடிபணிந்து நின்றாள். பாண்டவரும் கிருஷ்ணரும், திரௌபதியின் நல்லுரையால் சீற்றம் தணிந்து,
பத்மாநாபனுக்குச் சிறந்த அபயமளித்து அருளுரை வழங்கியபின், கற்பிற் சிறந்த அவளை அழைத்துக்
கொண்டு நகருக்குப் புறம்பே வந்து, கடற்கரையை அடைந்தனர்.
கண்ணன் சங்கநாதம் :
அப்பால் அவர்கள் அனைவரும் நைகமதேவன் அமைத்துத் தந்த தெய்வ விமானத்தில் ஏறி,
ஆகாய வழியாகச் சென்றபொழுது, கீழே எல்லையின்றி பரந்து கிடந்த அந்த உப்புமாக் கடலின்
(இலவண சமுத்திரம்) உவமையற்ற அழகைக்கண்டதும், வாசுதேவர் மகிழ்ச்சியால் தமது, பாஞ்சஜன்யம்
என்னும் சங்கை ஊதி நாதம் எழுப்பினார். அச்சங்கநாதத்தை,
சமவசரணத்தின் அறக் கோட்டத்திலிருந்து, அறவுரைக்
கேட்டுக் கொண்டிருந்த 'கபிலன்' என்னும் வாசுதேவன் கேட்டு, "என்னே இது! என்னைப்
போலும், சங்கநாதம் செய்பவன் இவ்வுலகில் வேறு எவன் உளான்? என்று வியப்புடன் ஜினேந்திர பகவானை வணங்கிக் கேட்டான்.
பகவான் கபிலனுக்கு கூறியது:
பகவானும் அருளுவார், வாசுதேவனே! நான் கூறுவதைக் கேட்பாயாக!
நாவலம் தீவின் நடுவண் உள்ள
கண்டம் ஒன்றே தண்டினால் ஆள்வோன்
தரும கண்டம் தன்னில் வசிப்போன்
விஞ்சையர் தேவரை வெற்றி கொண்டவன்
கபிலனே! நின்போல் கடல்நிற மேனியன்
வெள்ளைப் புகழை விரித்த நேமியன்
வசுதேவ ருக்கும் வளரினங் கொடியாள்
தேவகி தனக்கும் தெய்வமாக் குழவியாய்
தோற்றம் கொண்ட தொல்லிசை கிருஷ்ணன்.
அவன் உன்னைப் போல ஒரு வாசுதேவனேயாவான். அவன் அருச்சுனனிடம் தனக்கிருந்த நட்பின்
காரணமாக நாரதமுனிவன் தூண்டுதலால், தாதகி சண்டத்து பத்மநாப மன்னனால் கவர்ந்து செல்லப்பட்டு
சிறை வைக்கப்பட்டிருந்த அருச்சுனன் மனைவி திரௌபதியை, மீட்டுச்செல்ல வந்தவன் திரௌபதியை
மீட்டுக்கொண்டு, பாண்டவர்களுடன் தெய்வீக விமானத்தில் ஏறி, வியப்பிற்கிடமான சங்கநாதம்
செய்துகொண்டே, இலவணமாக் கடலின் மேலே இப்போது
சென்று கொண்டுள்ளான். அவன் செய்த சங்கநாதமே நீ இப்போது கேட்ட ஒலியாகும்" என்று
அருளினார். (இங்கு வாசகரும் ஒன்றை கவனத்தில் கொள்ள வேண்டும். ஜினபகவான் வாய்திறந்து
பேசுவதில்லை, சமவசரணத்தில் இருக்கும் அவர், பவ்வியர்களின் ஐயங்கட்கு திவ்யத்தொனி மூலமே
விளக்கம் தருகிறார். ஆங்குள்ள கணதரர் அந்த திவ்யத்தொனியின் உட்பொருளை வாங்கித் தம்
மொழியில் பிறருக்கு வெளியிடுகிறார்கள். இந்த செயலையே பகவான் உரைத்தார் என்று கூறப்படுகிறது.
இது ஒரு புராண வழக்கு)
கபிலவாசுதேவன் கிருஷ்ணவாசுதேவனைக் காண விரும்பல்:
பகவான் அருளியதைக் கேட்ட கபிலன், பாண்டவருடன்
சென்று கொண்டிருக்கும் வாசுதேவரைப் பார்க்க விருப்பம் கொண்டான். அதை அறிந்த பகவான்,
"வாசுதேவ! சக்கரவர்த்தியை மற்றொரு சக்கரவர்த்தி கண்ணால் காண முடியாது, ஆகவே அதற்காக
முயற்சி செய்வது வீணே !" என்று கூறினார். அப்படியும் கபிலன், தன் ஆவலை அடக்கமாட்டாமல்,
தானொரு விமானமேறிச் சென்றபோது, கிருஷ்ணனது விமானத்தின் கொடியை மட்டுமே காணமுடிந்தது.
அதற்குமேல் அவன் ஏறிச்சென்ற விமானமும் மேலே பறக்காமல் நின்றுபோனது. அவ்விடத்திலிருந்தே
அவன் தன் சங்கை எடுத்து வாய்வைத்து ஊதினான். கிருஷ்ணர், கபிலனின் அச்சங்கொலி கேட்டதும்
திரும்பிப் பார்த்தார். கபிலன் ஏறிவந்த விமானத்தின் கொடிமட்டும் தெரிந்ததே தவிர, வேறொன்றும்
கண்ணிற்குப் புலப்படவில்லை. எனவே அவர் தன் விமானத்தை வேகமாக செலுத்திக் கொண்டுபோய்
இலவணக் கடற்கரையை அடைந்தார். ஆங்கு அவர்களனைவரும் நைகம தேவனை முறைப்படி அனுப்பிவைத்துவிட்டுத்
தத்தம் தேர்களில் ஏறிச் சென்று கங்கைக் கரையை அடைந்தனர்.
விளையாட்டு வினையாகியது:
கங்கை நதி தீரத்தை அடைந்து ஆங்கே சிறிதுநேரம் தங்கி ஓய்வெடுத்துக் கொண்டிருந்த
பாண்டவர்கள், கண்ணன் தனியே சற்றுநேரம் வெளியே சென்றிருந்த சமயம் பார்த்து திரௌபதியை
தனியே அவ்விடத்தில் விட்டுவிட்டு, தாங்கள் மட்டும் ஓடத்தில் ஏறிக் கங்கையைக் கடந்துசென்று
தாம் ஏறிவந்த ஓடத்தைக் கண்ணன் அறியாமல் மறைத்து வைத்தனர். தனியாக வெளியே சென்றுவந்த
வாசுதேவர் அடுத்தகரையில் நின்றிருந்த பாண்டவர்களைப் பார்த்து "நதியை எவ்வாறு கடந்தீர்கள்?"
என்று கேட்டார். அதற்கு அவர்கள் 'நீந்தி வந்து கரையேறினோம்' என விளையாட்டாகப் பொய்யுரைத்தனர்.
அவர்கள் விளையாடுகிறார்கள் என்பதை அறியாத கிருஷ்ணர், திரௌபதியைத் தேரில் அமர்வித்து,
குதிரைகளுடன் இருந்த அந்தத் தேரை இடக்கையால் ஏந்திப்பிடித்தபடி, வலக்கையால் விரைவாக
நீந்திவந்து மறுகரையில் ஏறினார். அப்போது அப்பாண்டவர்கள்,
கிருஷ்ணரைப் பார்த்து வியப்படைந்தவர்களாய், "உமது வல்லமையைக் காணும் பொருட்டே,
ஓடத்தை மறைத்துவைத்து உம்மைச் சோதித்தோம்"
என்று மைத்துனக்கேண்மை தோன்ற நகைத்தனர்.
கண்ணன் பாண்டவர்களை சினத்தல்:
பாண்டவர்கள் நகைத் இதைக் கண்ட கிருஷ்ணர், மிகவும் சினம் கொண்டார். அவர்களை நோக்கி,
ஏய்! ஏய்! பாண்டுபுத்திரர்களே! பலமுறை என்னால் உதவி பெற்றிருந்தும் அதனை மறந்து, என்னைப்
பரிகசித்தீர்கள் ! தேரைச் சுமப்பதிலா என் வல்லமையை
நீங்கள் பரிசோதிக்க வேண்டும்? ஆயிரம் தேவதைகளோடு கூடிய சக்கராயுதத்தை என் தோளில் சுமக்கும்
வலிமை பெற்றிருக்கும் போது இது எம்மாத்திரம்? நான் குழந்தையாய் இருந்தபோதே கம்சன் அனுப்பிய
தேவதைகளை அலறி ஓடச் செய்தவன். முன்பு 'கோடி சிலை' என்னும் மலையை எளிதாகத் தூக்கி பிடித்தவன்.
காளிங்கன் என்னும் விடப்பாம்பின் தலையில் ஏறி மிதித்தவன். கம்சனையும், ஜராசந்தனை நாசம்
செய்தவன். இவற்றையெல்லாம் நீங்கள் கண்டும் கேட்டுமிருந்தும், என்னைச் சோதிக்க துணிந்தீர்!
நீங்கள் மிகவும் துஷ்டர்கள்! கோள் சொலுபவர்கள்! துரியோதனனிடம் தவறில்லை! இனி நீங்கள்
உங்கள் நன்மைகளை நாடுவீராயின், இப்பொழுதே நீங்கள் ஆண்டு கொண்டிருக்கும் குருஜாங்கல
நாட்டை விட்டு ஓடிப் போய்விடுங்கள்! விரைவாக மதுராபுரிக்குப் போய் சேருங்கள்!"
என்று கடிந்துரைத்தார்.
பாண்டவர் நாட்டை விட்டகலல்:
இதைச் சற்றும் எதிர்பாராத பாண்டவர்கள், விளையாட்டு வினையாகிவிட்டதே என்று வருந்தி,
கிருஷ்ணரிடம், "சுவாமி! நீர் சொல்வது உண்மையே ஆயின் அவ்வாறே நாங்கள் நாட்டை விட்டுச்
செல்கிறோம்" என்று இரக்கத்துடன் கூறினர். அவ்வுரை கேட்ட பிறகும் வாசுதேவர்,
"அவ்வாறே செய்யுங்கள்!" என்பது போலத் தம் தலையை ஆட்டினார். பாண்டவர்கள் மறுபேச்சின்றி,
கண்ணனை வணங்கி, தன் விதியை நொந்தவாறு பரிவாரங்களுடன் குருஜாங்கல நாட்டைவிட்டு, மதுரையைச்
சென்றடைந்து அங்கு அரசாளத் தொடங்கினர்.
அதன்பிறகு கண்ணன், குருஜாங்கல நாட்டு அரசபாரத்தை, அபிமன்யுவின் குமாரனான பரீட்சித்து
குமாரனுக்கு வைத்துப் பட்டம் சூட்டிய பின்னர், துவாரகாபுரியை அடைந்து நிம்மதியாக அரியணையில்
அமர்ந்தார்.
நெஞ்சில் கொள்ள வேண்டிய நீதிகள்:
அரசர், ஆசிரியர், பெண்கள், நெருப்பு ஆகிய இந்நான்கிடத்தும் ஒருவர் நெருங்கிப்
பழகுவாராயின் துன்பமடைவர். அவைகளை விட்டு தூர விலகுவாராயினும் பயன்பெற இயலாது. ஆகவே, மிகவும் நெருங்காமலும், தூரவிலகாமலும் இருந்து அவைகளிடம் பயன் கொள்ள வேண்டும் என்பது சான்றோர்
உரை அன்றோ ?
அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர் சேர்ந்தொழுகு வார்.
(குறள்)
கல்வியொடும் நாடாளும் அரச ரோடும்
கைபிடித்த மனைவியொடும் கலந்தி ருந்தும்
மல்குமிவை எப்போதும் நிலையா தென்றே
மனத்தினிலே நிச்சயமாய் மதிக்க வேண்டும்
கல்வியினை பலகாலும் பயில வேண்டும்
கழிவில்லா ஐயமுடன் அரச ரோடு
புல்கியிருந்(து) அகன்றுறைதல் வேண்டும்; கொண்ட
புனையிழையார் அன்புகெடா(து) ஓம்ப வேண்டும்.
கல்வி, அரசர், மனைவி ஆகிய மூன்றினிடத்தும் நிலைத்த தன்மை என்பது ஒருகாலும் இல்லை.
எனவே, தெளிந்த ஞானத்துடன் கல்வியைக் கற்பதோடு, மீண்டும் மீண்டும் (கற்பது) மறவாவண்ணம்
பயிலவேண்டும். அரசரிடம் நெருங்கியிருக்கும் நிலை ஏற்பட்டவிடத்தும், ஒவ்வொரு கணமும்
ஐயமுடனே நெருங்கிப் பழக வேண்டும். தன் மனைவியோடு கலந்திருந்தாலும், அவளுடைய அன்பு தன்னை
விட்டு நீங்காமல் நிலைத்திருக்கும்படி, காத்துக்கொள்ள வேண்டும்.
(பதினைந்தாம் சருக்கம் நிறைவுற்றது)
பதினாறாம் சருக்கம்
பாண்டவரின் மதுரை ஆட்சி - கண்ணன் சினம் தணிதல்
:
வாசுதேவர் இட்ட கட்டளையின்படி, அனைவரும் மதுரை நகரை அடைந்து, அந்நகரத்தை இந்திரனும் வியக்குமாறு திறம்பட ஆட்சி
புரிந்து வந்தனர். அவர்கள் இனிதாகவே காலம் கழியுமிடத்து, கண்ணனுக்கு அவர்கள் மீது ஏற்பட்ட
சினம் கொஞ்சம் கொஞ்சமாகத் தணிந்துவர, அவர் பாண்டவர் மீது தாம் கொண்ட சினத்திற்காக வருந்தி,
அவர்களை அமைதி பெறச் செய்வதற்காக, சிறந்த அணி, மணிகளை அவர்கட்குத் தூதர் மூலமாக அனுப்பி
வைத்துப் பெருமைப்படுத்தினார். அவர்களும் கண்ணன் செயலால் ஏற்பட்ட வருத்தம் நீங்கி அமைதி
பெற்று மகிழ்ந்து வாழ்ந்தனர்.
யார் வல்லமை பொருந்தியவர்:
இவ்வாறிருக்க, ஒருநாள் யதுகுல அரசர் சபையில், "இவ்வுலகில் பலசாலி யார்?"
என்பது பற்றி ஓர் பேச்சு எழுந்தது. ஒருவர் பலதேவரே பலசாலி என்பாரும், ஒருவர் கண்ணன்
என்பாரும், ஒருவர் அருச்சுனன் என்பாரும், ஒருவர் ஜாம்பவதி என் மகன் ஜம்புகுமாரன் என்பாரும்
இவ்வாறு அவரவர்களுக்குத் தோன்றிய வகையில் ஒவ்வொருவரைக் குறிப்பிட்டு, அவர்களே வல்லமை
பொருந்தியவர்கள் என வாதிட்டுக் கொண்டிருந்தனர் . அப்போது நேமிகுமாரர், நால்வகைத் தேவர்
குழாம் சூழ விளையாடுவதில் விருப்பம் கொண்டவராகி அரசவைக்கு வந்தார்.
கண்ணனுக்குக் கசப்பு:
அப்போது நற்குணச் செம்மலான பலதேவர் நீங்கள் யாரும் இனி பலசாலி யார்? என ஆராய்ச்சியில்
இறங்க வேண்டாம் ! இதோ வந்திருக்கின்ற நேமி பகவானுக்கு நிகரான வல்லமை படைத்தவர் யாராவது
இருக்கமுடியுமா ?விண்மீன்கள் கதிரவன் பேரொளியில் எதிர் நிற்க முடியுமா? என்றார். அவரது
கூற்று அனைவருக்கும் சரியாகப் பட்டது. ஆனால் கண்ணனுக்கு அவர் பேச்சு வேம்பாய் கசந்தது.
அதனால் விரைந்து எழுந்துநின்று, தமயனை நோக்கி,
நற்குணச்
செம்ம லே! நீர்,
நவில்வது விந்தை! விந்தை!
பொற்புடை நேமி நாதர்
புண்ணியர் எனினும் என்றும்
அற்புத ஆற்றல் காட்டி
அமரேதும் செய்த துண்டோ?
சொற்பமே அவரி சைந்தால்
மற்போர்க்கு வருக! என்றார்.
தம்பியின் அறியாமை பொதிந்த இச்சொற்களைக்
கேட்ட பலதேவர்,
தம்பியை
நோக்கி மன்னர்
தகுமொழி கூற லுற்றார்;
எம்பியே!
இவரை யாரென்(று)
எண்ணிநீ பேசு கின்றாய்?
வம்புசீர்
அரகந் தர்தம்
வல்லமை சொல்லப் போமா?
தும்பிக்கை களிற்றை ஆங்கோர்
தும்பியா எதிர்த்து வீழ்த்தும்?
என்று
வினவினார். இதைக் கேட்ட கண்ணபிரான் தர்மானுபந்தி புண்ணியம் மிகுதியாய் பெற்றிருப்பினும்,
உண்மை தத்துவத்தை உணருவதற்குக் ஆதாரமான, நற்காட்சி நிலைபெற்றிராத காரணத்தால், ஜினராகிய
நேமிகுமாரரின் குணத்தில் ஐயம் கொண்டு, தான் எனும் ஆணவம் தலைக்கு விஞ்சி நிற்க, மிக்கக்
கோபத்துடன் யதுகுல அரசர் தடுத்துக் கூறியும் அடங்காதவராய், சுவாமியோடு போரிடும் கருத்து
உடையவராய் எழுந்து நின்றார்.
நேமிகுமாரர் கையை மடக்க கண்ணன் முயன்று தோற்றல்:
அப்போது பலதேவர், நேமிநாதரை கண்ணால் சைகை செய்து, அவை நடுவே வரவைத்து, அவரது
இடக்கையின் சுண்டு விரலை கண்ணனின் மார்புக்கு நேரே குறுக்காக நீட்டச் செய்து, அனைவருக்கும்
கேட்கும்படி, "கண்ணா! இவரது நீட்டிய இந்த சுண்டுவிரலை மட்டும் நீ மடக்கிவிடுவேயானால்,
உன்னை யாவரினும் வல்லமை உடையவன் என அறிந்து கொள்கிறேன்" என்று மொழிந்தார்.
பிறரால் வெல்ல இயலாத கடையிலா வீரியமுடையவரான நேமிகுமாரர் என அறியாத கிருஷ்ணன்,
அவர் நீட்டிய சுண்டுவிரலை பலங் கொண்ட மட்டும், மடக்க முயற்சிசெய்தும் முடியாமல், அந்த சுண்டு விரலையே பற்றிக்கொண்டு தொங்கினார். அப்போதும் இயலாமற் போகவே, அவரை நோக்கி, "சுவாமி!
எனக்காகவாவது விரலை கொஞ்சம் மடக்குவீராக !" எனக் கெஞ்சத் தொடங்கினார். அப்போது
அவையோர் அனைவரும் அதைக்கேட்டு, 'ஜய ! ஜய!' வெனக் கைகொட்டி ஆரவாரித்தனர். அவமானமடைந்த வாசுதேவர் மிகுந்த மன வேதனையுடன் அவையை
விட்டு வெளியேறினார் .
உடன்பிறந்த சகோதரருள் வீரம் முதலிய நற்குணங்களில், தம்மினும் மிக்கோர், யாரேனும்
இருப்பாரேயானால் யாருக்குத்தான் மனவமைதி நிலைத்திருக்கும்?
வாசுதேவரின் தந்திரம்:
வாசுதேவர் அவையில் தான் அவமானம் அடைந்ததை அவ்வளவு எளிதாக அவரால் ஒதுக்க முடியவில்லை.
" நம் மனையில் நம்மினும் வீரம் பொருந்திய ஒருவர் இருக்கும்வரை நமக்கு இச்செல்வம்
நிலையானதென்று எவ்வாறு கருதமுடியும்? சிங்கம் வாழும் காட்டில் மான் முதலிய பிற விலங்குகள்
எவ்வாறு அச்சமின்றி உலவ முடியும்?" எனப் பலவாறு சிந்தித்த வாசுதேவர், நேமிகுமாரனை, ஏதேனும் துறவு வாழ்க்கையை மேற்கொள்ளச் செய்துவிட்டால்,
அச்சமின்றி மூன்று கண்டங்களுக்கும் தொடர்ந்து சக்கரவர்த்தியாக இருந்து வரலாம்"
என ஆலோசித்து அதற்கான ஏற்பாடுகளில் இரகசியமாக இறங்கினார்.
நேமிகுமாரருக்குத் திருமண ஏற்பாடு:
அதன்படி நேமிகுமாரருக்குத் திருமணம்
நடைபெறப் போவதாக அறிவித்து, *இராஜமதி* என்ற
பெண்ணை நிச்சயித்து, அவர் திருமணத்தின் முன்னாள், மணமகன் ஊர்வலம் வரும் வழியில், விலங்கினங்களைத்
தருவித்து அவற்றை ஆண், பெண் என இரட்டை இரட்டைகளாகப் பிணைத்துக் கத்திக் கொண்டிருக்குமாறு
செய்தார். அதன்பின் மணமகன் கோலத்தில் ஊர்வலமாக வந்த நேமிகுமாரர், விலங்குகள் கதறிக்
கொண்டிருப்பதைக் கண்டு, தேர்ப் பாகனை நோக்கி இதற்கான காரணத்தை வினவ, சுவாமியின் திருமணத்திற்கு
வரும் அரசர்களின் விளையாட்டிற்காக இவைகள் தருவிக்கப்பட்டன என அவன் கூறினான்.
பகவானுக்கு விரக்தி தோன்றுதல்:
சாரதி கூறியதைக் கேட்ட நேமிபகவான், "தோள்வலியால் வாழும் தூய குலங்களைச்
சேர்ந்த அரசர்கள், கேவலம் விலங்குகளோடு ஆடும் விளையாட்டினையா விரும்புவர்? எனக் கருதிய
அவர் தம் அவதிஞானத்தால், இது கண்ணனது நாடகமே எனத் தெளிவாக அறிந்துகொண்டு, அதுவே நிமித்தமாக
வாழ்வை வெறுத்துத் துறவு மேற்கொள்ள எண்ணினார்.
(சுவாமி! நின் திருவிளையாட்டிற்காக மிருக சமூகம்
சக்கரவர்த்தியால் அழைப்பிக்கப்பட்டது என்று ஸ்ரீபுராணத்தில் வருகிறது)
ேமிநாதரின் சிந்தனை:
மக்கள் துன்பத்திற்குக் காரணமான தீய செயல்களிலே ஈடுபடுகின்றனர். இன்பத்திற்குக் காரணமான நற்செயல்களைச் செய்வதில் மட்டும் நாட்டம் கொள்வதே இல்லை. அதனால் தம்மிடம் சேரும் தீவினைகளுக்குக் காரணமான, கார்மண அணுக்கள், துன்பப் பலனை அளித்து விட்டே அகலும் என்பதனை அவர்கள் அறிவதே இல்லை. இந்த உண்மையை அறிவதற்கு வேண்டிய கல்வியறிவும், தத்துவ சிந்தனையும் அவர்களுக்கு இருப்பதில்லை.
நேமிகுமாரர் தீட்சை ஏற்றல் :
இவ்வாறு ஆன்ம சிந்தனையில் ஈடுபட்டிருந்த நேமிகுமாரர் தாமாகவே துறவு கொள்ளும் உள்ளமுடையவராக இருந்தபோதும், தீர்த்தங்கரர்களுக்குச் சொல்லப்படும் சில நியமங்களை ஒட்டி, கற்பத்து அமரர்களாகிய லௌகாந்திக தேவர்கள் எண்மரும் அக்கணமே வந்து, "சுவாமி! இது தாங்கள் தீட்சை ஏற்க வேண்டிய காலம்" என்று போதித்தனர். அதனால் நேமிகுமாரரும் பல்லக்கில் அமர்ந்தருளிச் செய்ய, நால்வகைத் தேவர் குழுவும் கூடி வந்து, சுவாமியை, 'சகஸ்ர ஆம்ரவனம்' என்னும் காட்டிற்கு எடுத்துச்சென்று, ஆங்கே, 'பரிநிஷ்க்ரமணம்' என்னும் தீட்சா கல்யாணத்தைப் பகவானுக்கு முறைப்படி செய்வித்தனர். பகவானும், தூயதான துறவை மேற்கொண்டு, செய்த தியானத்தினால், பிறர் மனக்கருத்துக்களை அறியக்கூடிய, மனப்பரியஞானம் என்னும் நான்காவது ஞானத்தை அடைந்தார். (மற்ற மூன்று ஞானங்களாவன: மதி ஞானம், சுருதஞானம், அவதி ஞானம் என்பன.)
ராஜமதி துறவு ஏற்றல் :
நிற்க, உக்கிரவம்சத்துக்கொடி போன்றவளும், உக்கிரசேனனுக்கும் ஜயவதிக்கும் புதல்வியாகத் தோன்றியவளுமான ராஜமதி தனக்கு கணவனாக வரவிருந்த நேமிகுமாரர் துறவு பூண்டார் என்பதனை அறிந்து, நீர்வற்றிய குளத்தில் துடிக்கும் மீன் போல், பெரிதும் துடிதுடித்தாள். பின்னர் உலகவாழ்வின் இயல்பினை உணர்ந்து ஒருவாறு மனம் தேறி, அவளும் துறவு பூண்டாள்.
பகவான் ஆகாரதானம் ஏற்றல் :
சில நாட்களுக்குப் பிறகு, உணவு ஏற்க சரியா மார்க்கமாக வந்த நேமிநாத முனிவரை வரதத்தன் என்னும் சிராவகன், நவபுண்ணிய கிரமப்படி எதிர்கொண்டு வந்து அழைத்துச் சென்று ஆகாரம் அளித்து சிறப்படைந்தான். தேவர்களும், பொன்மாரியும் பூமாரியும் பொழிந்து அவன் புண்ணிய வினையைப் போற்றினர்.
கேவலஞானம் தோன்றியது:
இவ்வாறு நேமிநாத முனிவர் சுத்தோப யோகத் தவத்தில் ஐம்பத்தாறு நாட்கள் கழிந்தவுடன், ஐப்பசித் திங்கள் வளர்பிறை முதல் நாளில், முனிவருக்கு, மூவுலகத்திலும் முக்காலத்திலும் உள்ள பொருள்கள் அனைத்தையும் ஒவ்வொரு சமயத்திலும் ஒருங்கே அறிகின்றதாகிய கேவலஞானம் தோன்றியது.
No comments:
Post a Comment