Egeebhavam - ஏகீபாவம்

 ஏகீபாவம்


 ஸ்ரீ வாதிராஜசூரியின் ஏகீபாவம் (அ) கல்யாணகல்பத்ரும ஸ்தோத்திரம்   



இந்த அருமையான பக்திமலரை திரு. இரவிச்சந்திரன் , போளூர் அவர்களால் JUNC Whatsapp குழுவில் தினமும் பதிவாக அஞ்சல் செய்யப்பட்டதின் தொகுப்பு.

                      
  

நூன்முகம்


ஏகீபாவம் என்றால் ஒரே பாவம் (ஒரே எண்ணம் / உணர்வு) என்று பொருள் கொள்ளலாம். ஆனால் நூலாசிரியர் இங்கு "ஆன்மனும் கர்ம வினையும், பாலும் நீரும் போல் சேர்ந்து ஒரே பாவனையில் செயலாற்றி, துக்கத்தை அனுபவிக்கிறது" என்ற பொருளில் சுட்டிக் காட்டுகிறார். இத்தவறான பாவனைகளால் விளையும் துக்கத்தைப் போக்கும் வழியாக இப்பாடல்கள் மலர்கின்றன. 25 நான்கு வரிப் பாடல்களைக் கொண்ட இந்நூலை இயற்றியவர் வாதிராஜ முனிவர் ஆவார். பக்தாமரம் நூலை யாத்த மானதுங்க ஆசாரியார், கல்யாண மந்திரத்தை எழுதிய குமுதசந்திர ஆசாரியார், விஷாபஹாரத்தை இயற்றிய ததனஞ்சய கவி, பூபாலம் தந்த கவிராஜர் பூபால் ஆகியோருக்கு ஏறக்குறைய சம காலத்தவராய் வாழ்ந்தவராக இவரை அறிய முடிகிறது. அதனாலேயே இவ்வைந்து நூல்களும் ஒரு நோக்கு உடையவனவாய் விளங்குகின்றன.


தொடர்ந்து பிறவி தோறும் சேர்ந்து வந்த கர்ம வினைகள், ஜீவனுடன் சேர்ந்து, ஒரே பாவனையில் இருந்து வருவதால், துன்பங்களையும் அனுபவித்து வருகின்றன. ஆனால் ஜினவரனே! அந்த கர்ம வினைகள் நாசாமாகும் பொருட்டு உம்மை துதி செய்தால், எல்லாவித துன்பங்களும் நீங்கிவிடாதா என்ன! என்று முதல் பாடலிலேயே அருகனை வியக்கிறார். முதல் பாடல் ஏகீபாவம் என்று ஆரம்பமாவதால் இந்நூல் அப் பெயரிலேயே வழங்கப்படுகிறது என்றும் கூறுவர்.


ஜோதி சொரூபனே! தத்துவங்களை அறிந்த அறிஞர்கள், உம்மை பாப இருளைப் போக்கும் சூரியன் போன்றவர் என்கின்றனர். அதனால் நீர் என் மனத்தே வீற்றிருக்கும் போது வினைகள் அங்கு எப்படி தங்கியிருக்கும்? என்கிறார். நீர் இப்பூமியில் வந்து அவதரிக்கும் முன்பாகவே, பொன் மாரியால் இப்பூமி பொன் மயமாக்கப்பட்டது எனில், நோயால் துன்புறும் இவ்வுடலும் தேவரே! உன்னால் பிரகாசமடையாதோ? என்று வினவுகிறார்.




மானஸ்தம்பம் (மனத்தூய்மை தூண்) கல்லால் ஆனது. அது மற்ற கற்களப் போலவே தான் இருக்கிறது, ஆனால் அது முப்போதும் எப்போதும் அருக பகவானாகிய உம் அருகிலேயே இருப்பதாலேயே அதனை அண்ணாந்து பார்த்து நமஸ்கரித்த உடனே எம்முடைய கர்வம் நீங்கி பணிவும் பரவசமும் உண்டாகிறது என்பதை அறிந்தேன் என்று அதன் மகிமையை விளக்குகிறார்.                        



கங்கை நதி இமய லையில் உற்பத்தியாகி சமுத்திரம் வரை நீண்டு, விஷ்ணுவின் பாதங்களை அடைகிறது என்பதும், அதில் மூழ்கி எழுவதால் பாபங்கள் நீங்குகிறது என்பதும் பிறரின் கொள்கை. மேலும் தேவர்கள் சமுத்திரத்தை கடைந்து அதில் உண்டான அமிர்தத்தை பருகினர் என்று அவர்கள் கூறுவர். ஆனால் பொருளின் சிக்கலான எல்லா பக்கங்களையும் அறியும் ஸ்யாத்வாத நயத்தினால் தெளிவடைந்து, ஜின தேவனின் உபதேசத்தின் வழி நிற்பவனே பரிசுத்தனாய் முக்தி பாதையில் செல்கிறான். அதனை அடையவும் செய்கிறான் என்று நம்மை தெளிவிக்கிறார்.                        


அழகற்றவனுக்கே ஆடை, ஆபரணங்கள் தேவை. அது போலவே பகைவர்களை உடைய பலமற்றவனுக்கே பல வகை ஆயுதங்கள் தேவையாய் இருக்கிறது. ஆனால் 1008 அழகு லட்சணமுடையவனாய், பகைவர்களால் வெல்ல முடியாதவனாய் உள்ள உமக்கு ஆடை, ஆபரணம், ஆயுதங்களால் என்ன பயன் உண்டாகும்? அவை உமக்குத் தேவை இல்லைதான்! என்று பகவானின் பேரழகை அந்த அனந்த வீரியனை நம் கண்முன் காட்டுகிறார்.



பிறவிப் பெருங்கடல் நீந்த உதவும் இந்த மனிதப் பிறவியின் நமது ஒரே இலக்கு / எண்ணம் பிறவிக்கு அஞ்சுதலே என்ற ஒரே பாவனையில் தோத்திரத்தை ஓதி, துதி செய்வோம். பயனடைவோம்.

-----------------------------


 ( 1 )


ஏகீபாவம் கதஇவ மயா ய: ஸ்வயம் கர்மபந்தோ

கோரம் துக்கம் வபவகதோ துர்நிவார: கரோதி I

தஸ்யாப்யஸ்ய த்வயி ஜிநரவே! பக்திருந்முக்தயே சேத்

ஜேதும் சக்யோ பவதி ந தயா கோZரஸ்தாபஹேது:II


பகவந்தனே! உம்மிடம் பக்தி செய்வதானது பல பவங்கள் (பிறவிகள்) தோறும் பின் தொடர்ந்து வந்து துக்கத்தைக் கொடுக்கும் கர்ம பந்தங்களை நாசம் செய்து விடுகிறது. அதாவது மோட்சத்தை உண்டாக்குகிறது. அப்படி இருக்க, அந்த பக்தியினால் வேறு சரீர சம்பந்தமான துக்கங்களையும், போக்க முடியும் என்பதாம்.



இந்நூலாசிரியர் வெண்குஷ்ட நோயால் துன்புற்றார் என்றும், இவரது தோத்திரப் பாடல்களால் அது முழுதும் நீங்கியது என்றும் ஒரு செய்தி நிலவுகிறது. அதனைக் கருதியே இந்நூலில் வரும் நான்காம் பாடல் அதனைச் சுட்டுகிறது என்பர்.


2 )
.

ஜ்யோதீரூபம் துரிதநிவஹ த்வாந்த வித்வம்ஸ ஹேதும்

த்வாமேவாஹூர் ஜிநவர! சிரம் தத்த்வவித்யாபி யுக்தா:

செதோZZவாஸே பவஸிச மம் ஸ்பார முத்பாலமாந-

ஸ்தஸ்மிந்நம்ஹ: கதமிவ தமோ வஸ்துதோ வஸ்துமீஷ்டே    
  

ஏ கவந்தரே! விளக்கின் ஒளியால் எப்படி இருள் நீங்குகிறதோ, அதே போல் உம்மைத் தியானிப்பதால், அப்படித் தியானிபவனுடைய வினைகள் அனைத்தும் நீங்கி விடுகின்றன (நாசமாகின்றன) என்பதாம்.


குறிப்பு: ஒரு பொருள் ஓர் இடத்தை அடைத்துக் கொண்டு விட்டதேயானால், அந்த இடத்தில் வேறொரு பொருள் தங்க இடம் இராது. அதே போல் மனதில் பகவானுடைய நினைவே (பக்தியே) குடிகொண்டு விட்டதேயானால் (எப்போதும் பகவானிடம் பக்தியாயிருப்போமானால்) அந்த மனத்தில் துக்கம் முதலிய வினைகள் இடம் பெறாமல் போய் விடுகின்றன. அப்படி செய்பவன் சதா ஆனந்தத்தை அடைகிறான்.


 ( 3 )

ஆநந்தாச்ருஸ்நபித வதநம்
கத்கதம் சாபி ஜல்பந்

யஸ்சாயேத த்வயி த்ருடமநா:
ஸ்தோத்ர மந்த்ரைர் பவந்தம்

தஸ்யாப் யஸ்தாதபிச ஸுசிரம்
தேஹ வல்மீக மத்யாத்


நிஷ்காஸ்யந்தே விவித விஷம வ்யாதய: காத்ரவேயா


பகவந்தரே! எவன் உம்மிடத்தில் ஆழ்ந்து பக்தியுடனே உம்மை ஸ்தோத்திரஞ் செய்கிறானோ, அவனைப் பற்றியுள்ள பலவித கொடிய வியாதிகள் அனைத்தும், புற்றில் உள்ள பாம்பு வெளிப்படுவது போல் உடனே அவனை விட்டு விலகிவிடுகின்றன என்பதாம்.


( 4 )

ப்ராகேவேஹ த்ரிதிவபவநா தேஷ்யதா பவ்ய புண்யாத்

ப்ருத்வீசக்ரம் கநகமயதாம் தேவ! நித்யே த்வயேதம் I

த்யாநத்வாரம் மம ருசிகரம் ஸ்வாந்த கேஹம் ப்ரவிஷ்ட -

ஸ்தத்கிம் சித்ரம் ஜிந! வபுரிதம் யத் ஸீவர்ணீ கரோஷி II


பகவந்தரே! தாங்கள் இவ்வுலகில் தீர்த்தங்கரராக அவதரிக்க போவதற்கு ஆறு மாதம் முன்னரே இப்பூமண்டலத்தைப் பொன்மயமாகச் செய்ய செய்தீர். அப்படியிருக்க எனது மனமாகிய வீட்டில் எப்போதும் குடியிருக்கும் நீர், எனது (குஷ்டரோகத்துடன் கூடிய) இந்த உடலைப் பொன்மயமாகச் (அழகாக) செய்தது ஆச்சரியமா, என்ன?


குறிப்பு: ஸ்வாமியானவர் தே லோகத்திலிருந்து இப்பூவுலகில் தீர்த்தங்கரராய் ஜனிப்பதற்கு ஆறு மாதம் முன்னரே தேவேந்திரனது கட்டளையால் குபேரன் பொன் மாரி பெய்வித்து, இப்பூமியை அலங்கரிப்பதாகச் சொல்லப்பட்டிருப்பதால் அதனையே ஸ்வாமியின் மஹிமையினால் அவ்வாறு செய்யப்படுவதாக இங்கு கூறப்பட்டிருக்கிறது. 


( 5 )


லோகஸ்யைக ஸ்த்வமஸி பகவந்நிர்நிமித்தேந பந்து:

த்வய்யேவாஸெள ஸகல விஷயா சக்திரப்ரத்யநீகா I

பக்த ஸ்பீதாம் சிரமதிவஸந்மாமிகாம் சித்த சய்யாம்

மய்யுத்பந்நம் கதமிவ தத: க்லோசயூதம் ஸஹேதா:II


பகவந்தரே! நீர் ஒருவரே உலகத்து ஜனங்களுக்கு யாதொரு சம்பந்தமும் இன்றி உதவி செய்கிற பந்துவாக (உறவாக) உள்ளீர். உம்மிடத்திலேயே உலகில் உள்ள ஸகல விஷயங்களையும் வசப்படுத்தி ஆளும் சக்தியும் தடையில்லாமல் இருக்கின்றது. அப்பேர்ப்பட்ட நீர், எனது மனமாகிற படுக்கையில் வெகு காலமாக வசித்துக் கொண்டு இருக்கின்றீர். அப்படியிருக்க என்னிடத்தில் உண்டாயிருக்கும் துக்கங்களை நீர் எவ்வாறு பொறுத்திருப்பீர்? மாட்டீர். அதாவது அவைகள் தானாகவே விலகி ஓடி விடும் என்பதாம்.


( 6 )

ஜன்மாடவ்யாம் கதமபி மயா தேவ! தீர்கம் ப்ரமித்வா

ப்ராப்தைவேயம் தவ நயகதா ஸ்பாரபீயூஷவாபீ I

தஸ்யா மத்யே ஹிமகர ஹிமவ்யூஹ சீதேநிதாந்தம்

நிர்மக்நம் மாம் ந ஜஹதி கதம் துக்கதாவோபதாபா: II


பகவந்தரே! காட்டுத்தீயின் வெப்பத்தினால் வெதும்பிய மனிதன் குளிர்ச்சியான நீரையுடைய குளத்தில் மூழ்கியவுடன் அவனது வெப்பம் நீங்கி விடுவது போல தங்கள் நயவாதத்தை நன்குணர்ந்து அதன்படி நடக்கிறவனுடைய துக்கங்கள் அனைத்தும் அவனை விட்டு விலகி விடும் என்பதாம்.



( 7 )


பாதந்யாஸாதபி ச புந்தோ யாத்ரயா தே த்ரிலோகீம்

ஹேமாபர்ஸோ பவதி ஸூரபி: ஸ்ரீநிவாஸஸ்ச பத்ம: I

ஸர்வாங்கேண ஸ்ப்ருசதி பகவம் ஸ்தவய்யசேஷம் மநோ மே

ச்ரேய: கிம் தத்ஸ்வய மஹர ஹர்யந்ந மாமப்யுபைதி II


பகவான் இவ்வுலகில் ஸ்ரீ விஹாரஞ் செய்யும் போது, அவர் நடக்கும் அடிவைப்புகளுக்கு அடியில் தேவர்கள் தாமரை மலர்களைப் பரப்புகிறார்கள். அம் மலர்கள் பகவானுடைய மஹிமையால் பொன் போன்ற அழகு உள்ளவையாயும், நறுமணமுள்ளவையாயும். லட்சுமியின் இருப்பிடமாயும் ஆகின்றன. (இதனால் அவருக்கு மலர்மிசை ஏகினான் என்ற பெயரும் உண்டாயிருக்கிறது) இவ்வாறு அவருடைய மஹிமை இருக்க, நான் சதா ஸர்வ காலமும் அவரை முழு மனதுடன் தியானிப்பதினால், (அவர் சதா ஸர்வ காலமும் எனது மனதில் குடி கொண்டிருப்பதினால்) எனக்கு எந்த நன்மைகள் தான் வந்தடைய மாட்டா? (எல்லா நன்மைகளும் வந்து அடையும்).



( 8 )

பச்யந்தம் த்வத் வசநம்ருதம் பக்திபாத்ர்யா பிபந்தம்

கர்மாரண்யாத்புருஷ மஸமாநந்த தாம ப்ரவிஷ்டம் I

த்வாம் துர்வார ஸ்மர மதஹரம் த்வத்ப்ரஸாதைக பூமிம்

க்ரூராகாரா: கதமிவ ருஜா கண்டகா நிர்லுடந்தி II



பகவந்தரே! உம்மைத் தரிசிப்பவனும், பக்தி செய்து உமது திருவாய் மொழியாகிற உபதேசங்களைப் பருகுகின்றவனும் (சாஸ்திரங்களப் படிப்பவனும்), பவ்வியனும் ஆகிய மனிதனை பயங்கரத்தன்மை வாய்ந்த வியாதிகளாகிற முட்கள் என்ன துன்பம் செய்ய முடியும்? (ஒரு துன்பமும் செய்ய முடியாது), இது எப்படியெனில், நீர் வேட்கை (தாகம்)யுடன் கூடிய மனிதன் சூரை முட்கள் அடர்ந்த காட்டில் அங்கும் இங்கும் நீரைத் தேடி அலைந்தால், அவனை முட்கள் குத்தி துன்புறுத்தும். ஆனால் குளிர்ந்த நீரைக் குடித்து நீர் வேட்கையற்ற மனிதன் நல்ல வீட்டில் இருந்தானேயானால், அம்முட்கள் அவனை என்ன செய்யமுடியும்? ஒன்றும் செய்ய முடியாது அல்லவா? அதேபோல் தான் என்பதாம்.


( 9 )

பாஷாணாத்மா ததிதரஸம: கேவலம் ரத்ந மூர்த்தி –

ர்மாநஸ்தம்போ பவதி ச பரஸ்தாத்ருசோ ரத்நவர்க: I

த்ருஷ்டி ப்ராப்தோ ஹரதி ஸ கதம் மாநரோகம் நராணாம்

ப்ரத்யாஸத்திர்யதி ந பவத ஸ்தஸ்ய தச்சக்திஹேது: II



கற்சிலையினாற் செய்யப்பட்ட மானஸ்தம்பமானது ஏனைய கற்களைப் போலவே இருக்கிறது. அதை இரத்தினதினால் செய்யப்பட்டதாகக் கொண்டாலும், அதுவும் மற்ற இரத்தின ஸமூஹங்களப் போலவே தான் இருக்கும். அப்படியிருந்தும் அது, அதனைப் பார்க்கும் மனிதர்களின் அஹங்காரத்தைப் (கர்வத்தைப்) போக்கி விடுகிறது. இது எதனால் என்றால், அது பகவானுடைய அருகாமையில் இருப்பதினாலேயே அந்த சக்தி அதற்கு ஏற்படுகிறது. அப்படி இல்லாவிட்டால், அதற்கு அப்பேர்ப்பட்ட சக்தி எப்படி உண்டாகும்? மற்ற கற்களைப் போல் லிதற்கும் உண்டாகாது என்பதாகும்.

( 10 )

ஹ்ருத்ய: ப்ராப்தோ மருதபி பவந்மூர்த்தி சைலோபவாஹீ

ஸத்ய: பும்ஸாம் நிரவதிருஜா தூலிபந்தம் துநோதி I

த்யாநாஹூதோ ஹ்ருதய கமலம் யஸ்ய துத்வம் ப்ரவிஷ்ட –

ஸ்தஸ்யாசக்ய: க இஹ புவநே தேவ! லோகோபகார: II


தேவரே! உமது உடல் பக்கத்தினின்றும் வீசும் காற்று கூட வியாதியஸ்தர்களாகிய மனிதர்களின் மேல் பட்ட மாத்திரத்தில், அவர்களுடைய வியாதிகள் அனைத்தையும் நீக்கி விடுகின்றது. அப்படியிருக்க, பக்தி செய்வதினால் யாருடைய மனமாகிற தாமரையை நீர் குடி கொண்டீரோ அவர்களுடைய வியாதிகள் நீங்கி அவர்களுக்குப் பலவித நன்மைகள் ஏன் உண்டாகாது? அதாவது கண்டிப்பாய் உண்டாகும் என்பதாகும்.


( 11 )

ஜாநாஸி த்வம் மம பவபவே யச்ச யாத்ருக் ச துக்கம்

ஜாதம் யஸ்ய ஸ்மரணமபி மே சஸ்த்ரவந்நிஷ்பிநஷ்டி I

த்வம் ஸர்வேச: ஸக்ருப இதிச த்வாமுபேதோZஸ்மி பக்த்யா

யத்கர்தவ்யம் ததிஹ விஷயே தேவ ஏவ ப்ரமாணம் II

பகவந்தரே! தாங்கள் முற்றும் உணர்ந்த கேவல ஞானி ஆகையால், எனக்கு ஜன்ம ஜன்மங்கள் தோறும் ஏற்படும் துக்கங்களை நீரே அறிவீர். மேலும் நீர் எல்லாம் வல்ல ஈசர். தயவையே உருவாகக் கொண்டவர் என்று உம்மைப் பக்தியால் அண்டி, நான் சரண் அடைந்திருக்கிறேன். ஆகையால் தாங்கள் மனமிரங்கி என்னுடைய துக்கங்கலைப் போக்கச் செய்யத் தகுந்தவற்றை அறிந்து செய்வீர். அதற்கு முக்கியமானவர் நீர் தான் என்பதாம்.


( 12 )


ப்ராபத் தைவம் தவ நுதிபதைர் ஜீவகேநோபதிஷ்டை

பாபாசாரீ மரணஸமயே ஸாரமேயோZபி ஸெளக்யம் I

க: ஸந்தேஹோ யதுபலபதே வாஸவ ஸ்ரீ ப்ரபுத்வம்

ஜல்பந் ஜாப்யைர் மணிபிரமலை ஸ்தவந் நமஸ்கார சக்ரம் II



பகவந்தரே! சதா பாபச் செயலையே செய்கின்ற நாயானதும் கூட, தான் இறக்கும் தருணத்தில் ஜீவேந்திர ஸ்வாமியினால் உபதேசிக்கப் பட்ட பஞ்ச நமஸ்கார மந்திரத்தை பக்தியோடு கேட்டதனால் “சுதரிசனன்” என்னும் யட்ச தேவனாக பிறந்தது என்றால், எப்பொழுதும் பக்தி பூர்வமாக பஞ்ச நமஸ்கார மந்திரத்தை நிர்மலமான ஸ்படிகம், முத்து, பவழம், பொன், வெள்ளி முதலிய ஏதாவது ஒன்றாலான மணிகளால் செய்யப்பட்ட ஜப மாலையினால் ஜபம் செய்து கொண்டிருப்பவன் தேவேந்திர பதவியை அடைய மாட்டானா? சந்தேஹமின்றி அடைவன் என்பதாம்.


குறிப்பு: கதையை ஜீவக சிந்தாமணி, சூடமாணி ஸ்ரீபுராணம் முதலிய நூல்களில் பார்க்க காணலாம்.


( 13 )

கத்தே ஞாநே சுசிநி சரிதே ஸத்யபி த்வய்யநீசா

பக்திர்நோ சே தநவதி ஸூகாவஞ்சிகா குஞ்சிகேயம் I

சக்யோத்காடம் பவதி ஹி கதம் முக்திகாமஸ்ய பும்ஸோ

முக்தித்வாரம் பரித்ருட மஹாமோஹ முத்ராகவாடம் II


ஒருவனிடத்தில் ஸம்யக் ஞானமும், ஸம்யக் சாரித்திரமும் இருந்தும், தேவரே! உம் மீது செலுத்துகிற பக்தியாகிய ஸம்யக் தரிசனமானது இல்லாதிருப்பின், அவன் முக்தியாகிற மோட்ச வீட்டிற்குச் செல்லும் வாயிலைத் திறந்து செல்ல முடியாது. (பக்தி இல்லாமல் மோட்சத்தை அடைய முடியாது) என்பதாகும்.


(14 )


ப்ரச்சந்ந: கல்வயமகமயை ரந்தகாரை: ஸமந்தாத்

முக்தே: பந்தா: ஸதபுடிதபத க்லேசகர்தைரகாதை: I

தக்கஸ்தேந வ்ரஜதி ஸுகதோ தேவ! தத்த்வாவபாஸீ

யத்யக்ரேZக்ரே ந பவதி பவத்பாரதீ ரத்நதீப: II


ஸ்வாமியே! முக்தியாகிற வீட்டிற்குச் செல்லும் பாதையானது பாபமாகிற இருளினால் சூழப்பட்டும், துக்கமாகிற மேடு பள்ளங்கள் உள்ளதாகவும் (கரடு-முரடுகள் உள்ளதாகவும்) இருக்கிறது. அவ்வழியிற் செல்ல தங்கள் திருவாய் மொழியாகிற இரத்தின தீபமானது முன்னால் வழி காட்டியாக இல்லாமற் போனால், எவன் தான் அவ்வழியே சுகமாகச் செல்வான்? எவனாலும் செல்ல முடியாது என்றபடி. அதாவது தங்கள் உபதேசம் இன்றி மோட்சத்தை அடைவது முடியாத காரியம். தங்கள் உபதேசமே மோட்சத்தை அடைய இன்றியமையாததாகும் என்பதாம்.


( 15 )


ஆத்ம ஜ்யோதிர் நிதிரநவதிர்த்ரஷ்டு ராநந்தஹேது:

கர்மக்ஷேணீ படலபிஹிதோ யோZந்வாப்ய: பரேஷாம் I

ஹஸ்தே குர்வந்த்ய நதிரிச்ரதஸ்தம் பாத்பக்தி பாஜ:

ஸ்தோத்ரைர் பந்த ப்ரக்ருதி புருஷோத்தாம தாத்ரீ கநித்ரை II


பூமியினுள் மறைந்து கிடக்கும் புதையலை மண்வெட்டி இன்றி எடுக்க முடியாதது போல, கர்மமாகிற படைகளினால் மூடப்பட்டு, மறைந்துள்ள ஆத்ம ஞானத்தைத் தங்களது ஸ்தோத்திரமாகிய மண்வெட்டி இன்றி பெற முடியாது. அதாவது, தங்களது ஸ்துதியினால் கர்மங்களாகிற பொறைகள் நீங்க, ஆத்மஞானம் அடையப் பெறுகிறது என்பதாம்.


( 16 )


ப்ரத்யுத் பந்நா நயஹிமகிரே ராயதா சாம்ருதாப்தே:

யா தெவ! த்வத்பத கமலயோ: ஸங்கதா பக்தி கங்கா I

சேதஸ் தஸ்யாம் மம ருசிவசாதாப்லுதம் க்ஷாலிதாம்ஹ:-

கல்மாஷம் யத் பவதி கிமியம் தேவ! ஸந்தேஹ பூமி: II



கங்கா நதியானது இமய மலையில் உற்பத்தியாகி, ஸமுத்திரம் வரையில் நீண்டு, விஷ்ணு பகவானின் பாதங்களைச் சேருகின்றது என்பதும், அதில் ஸ்நாநம் (குளியல்) செய்கின்றவன் பாபங்கள் நீங்கி, சுத்தமாகி, கடவுளுடன் ஐக்கியமாகிறான் என்பதும் பிற மதஸ்தர்களின் கொள்கை. இதனைக் கிரந்த கர்த்தா மிகத் தெளிவாக உருவகப்படுத்தி, ஸ்யாத்வாத நயத்தால் ஏற்பட்ட பக்தி பூர்வகம் ஸ்ரீ ஜினதேவனை வழிபடுகிறவன் தன்னுடைய பாபங்கள் நீங்கி, பரிசுத்தனாகி மோக்ஷம் அடைகிறான். இதில் ஸந்தேகமே இல்லை என்கிறார்.


( 17 )

ப்ராதுர்பூத ஸ்திரபதஸுக! த்வாமநுத்யாயதோ மே

தவய்யே வாஹம் ஸ இதி மதிருத்பத்யதே நிர்விகல்பா I

மித்யை வேயம் ததபி தநுதே த்ருப்தி மப்ரேஷ ரூபாம்

தோஷாத்மா நோZப்யபிமதபலா ஸ்த்வத் ப்ரஸாதாத்பவந்தி II



ஸ்வாமியே! யான் தியானஞ் செய்யும் போது என்னை மறந்து யானும் தங்களைப் போலவே இருக்கிறேன். அதாவது, உமக்கும் எனக்கும் யாதொரு வித்யாசமும் இல்லை என்று எண்ணுகிறேன். இந்த என்னுடைய எண்ணமானது திரவ்யாபேஷையினால் சரியானாலும், பரியாப்தியினால் பொய்யாகும். ஏனெனில், தாங்கள் அழிவற்ற அனந்த சுகத்தைப் பெற்று இருக்கின்றீர்: யான் ஸம்ஸாரத்தில் இறப்பு – பிறப்புக்களின் துக்கத்தை அனுபவித்துக் கொண்டு இருக்கிறேன். அப்படியாயினும், அந்த எண்ணமானது ஆத்மன் அனந்த சுக செளக்கியம் உடையது என்ற ஆத்ம ஸ்வரூபத்தை அறிவிக்கிறது. அதாவது, தற்போது நான் துக்கத்தை அனுபவித்துக் கொண்டு இருந்த போதிலும், சமயம் நேரும் போது, நானும் உம்மைப் போல் அனந்த சுக ஸெளக்கியத்தை அடைவேன் என்பதைத் தெரிவிக்கின்றது. அப்போது அது எனக்கு அழிவற்ற சந்தோஷத்தை (மோக்ஷ சுகத்தை) அளிக்கிறது. யான் உம்மைத் தியானம் செய்வதற்கு முன்னால், யான் என்னுடைய உண்மைத் தன்மையை அறியவில்லை. ஆகவே, யான் இடைவிடாமல் துக்கத்தையே அனுபவித்துக் கொண்டு இருந்தேன். அதனால், யான் தோஷம் உள்ளவனாயிருந்தேன். இப்போது யான் தியானம் செய்வதினாலேயே உண்மை நிலையை அறிகிறேன். அதனால் செளக்கியத்தை அடைகிறேன். இந்த உண்மையை கிரந்த கர்த்தா “ தோஷம் உள்ளவர்களும் பகவானைத் தியானம் செய்வதினால் தாம் விரும்பிய பலனை அடைகிறார்கள்” என்று பொதுவாகக் கூறுகின்றார்.


( 18 )


மித்யாவாதம் மலம்பநுதந் ஸப்தபங்கீதரங்கை:

வாகம் போதிர்புவந மகிலம்தேவ! பர்யேதி யஸ்தே! I

தஸ்யாவ்ருத்திம் ஸபதி விபுதாஸ் சேதஸைவா சலேந

வ்யா தந்வந்த: ஸுசிரமம்ருதா ஸேவயா த்ருப்நுவந்தி II



ஒரு சமயம் தேவர்கள் மந்தர மலையை மத்தாகவும், வாசுகி நாகத்தைக் கயிறாகவும் கொண்டு ஸமுத்திரத்தைக் கடைந்தனர். அதில் பதனான்கு இரத்தினங்கள் கிடைத்தன. அதில் ஒன்று மிர்த இரத்தினம். அதை அவர்கள் குடித்து சதா திருப்தியை அடைந்தனர். என்பது உலகப் பிரஸித்தம். அதே போல், வித்துவான்கள் தங்களது மனத்தால் ஸ்ரீ பகாவனுடைய உபதேசத்தை அடிக்கடி (சதா) அப்பியசித்து, மோக்ஷம் எய்தி, அழிவற்ற சதோஷத்தை (மோக்ஷ சுகத்தை) அடைகிறார்கள் என்பதாம்.


குறிப்பு: இந்த ச்லோகத்தில் விபுத-தேவர், வித்துவான்: ஆவ்ருத்தி-கடைதல், அடிக்கடி அப்பியசித்தல்: அம்ருத-அமிர்தம், மோக்ஷம் என இரு பொருள்களிலும்: வாக்-ஸமுத்திரம்: சித்த-மலை என ரூபகமாகவும் உபயோகப்படுத்தபட்டிருப்பது நோக்கத்தக்கது.


( 19 )


ஆஹார்யேப்ய: ஸ்ப்ருஹயதி பரம் ய: ஸ்வபாவாதஹ்ருத்ய

சஸ்த்ரக்ராஹீ பவதி ஸததம் வைரிணாம் யஸ்ச சக்ய: I

ஸர்வாங்கேஷு த்வமஸி ஸுபகஸ்த்வம் ந சக்ய: பரேஷாம்

தத்கிம் பூஷாவஸநகுஸுமை: கிம் ச சஸ்த்ரை ருதஸ்த்ரை: II



எவன் அழகற்றவனாக இருக்கிறானோ அவனே நல்ல துணி, நல்ல ஆபரணங்கள் முதலியவற்றை அணிய வேண்டும். எவனொருவன் பகைவருக்குப் பயப்படுகிறானோ அவனே ஆயுதங்களை தரிக்க வேண்டும். இவ்வுலகில் பிற தெய்வங்கள் பார்வைக்கு குரூர ரூபமாகவும், பயங்கரமாகவும் இருப்பதால் தான் அவர்களுக்கு நகைகளும் துணிகளும் அணிய வேண்டியதாயிருக்கின்றன. அவர்களுக்குப் பகைவர்கள் இருப்பதாலேயே அவர்கள் தங்கள் கைகளில் ஆயுதங்களைத் தரித்திருக்கின்றனர். ஏ பகவந்தரே! நீரோ மிகவும் அழகுள்ளவர், அனந்த வீரியத்தை (சக்தியை) உடையவர்! கோபம் முதலியனவும் இல்லை. ஆகையால் தங்களுக்குப் பகைவருமில்லை. ஆகவே, தாங்கள் துணி முதலிய உடுப்பதுமில்லை. ஆயுதம் முதலியவற்றை தரிப்பதுமில்லை என்று ஜினேஸ்வரருடைய வீதராகத் தன்மையை நிந்தாஸ்துதியாகக் கூறுகிறார் கிரந்தகர்த்தா.



( 20 )


இந்த்ர: ஸேவாம் தவ ஸுகுருதாம் கிம் தயா ச்லோகநம் தே

தஸ்யைவேயம் பவலயகரீ ச்லாக்யதா மாதநோதி I

த்வம் நிஸ்தாரீ ஜநநஜலதே: ஸித்திகாந்தாபதி ஸ்த்வம்

த்வம் லோகாநாம் ப்ரபுரிதி தவ ச்லாக்யதே ஸ்தோத்ரமித்தம் II


பகவந்தரே! இந்திரன் தங்களுக்குப் பணிவிடை செய்கிறான். அவன் செய்வதாகவே இருக்கட்டும். அப்படி அவன் பணிவிடை செய்வதினால் தங்களுக்குப் புகழ்ச்சி ஒன்றுமில்லை. அது அப்படி பணிவிடை செய்யும் அவ்விந்திரனுக்கே புகழ்ச்சியைக் கொடுக்கிறது. ஏனெனில், பெரியோர்களுக்கு சிறியோர்கள் பணிவிடை செய்வது தகுதியானதே. அதைப் புகழ்வதினால் அந்த சிறியோர்களுக்கே அது புகழ்ச்சியை அளிக்கிறதேயன்றி, பெரியோர்களுக்கு அதனால் புகழ் ஒன்றும் ஏற்படுவதில்லை. ஆகையினால், ஸ்ரீ பகவானைத் தாங்கள் ஸம்ஸார ஸமுத்திரத்தை கடந்தவர் (பிறப்பு இறப்பு அற்றவர்) என்றும். மோக்ஷ் லட்சுமிக்கு எஜமானர் என்றும் மூவுலகிற்கும் பிரபுவானவர் என்றும் இவ்வாறாக ஸ்துதி செய்வதே கொண்டாடத் தகுந்தது என்கிறார் கிரந்த கர்த்தா.


( 21 )


வ்ருத்திர் வாசா மபர ஸத்ருசீ ந த்வமந்யேந துல்ய:

ஸ்துத்யுத்காரா: கதமிவ ததஸ்த்வய்யமீ ந: க்ரமந்தே I

மைவம் பூவம் ஸ்ததபி பக்வந்! பக்தி பீயுஷ புஷ்டா:

தே பவ்யா நாமபிமதபலா: பாரிஜாதா பவந்தி II


பகவந்தரே! தங்கள் திருவாய் மொழியானது உவமையற்றது. தங்களைய்ப் போன்றவர் உலகில் யாரும் இல்லை. அப்படி இருந்தும், “ தங்கள் வசனம் அதற்குச் சமானமானது, இதற்கு சமானமானது: தாங்கள் இப்பொருளுக்குச் சமானமானவர்” என்று இவ்விதமாக நான் தங்களைப் புகழ்ந்து ஸ்தோத்திரம் செய்வது எப்படித் தங்களுக்குப் பொருந்தும்? (பொருந்தாது. பக்திமார்க்கத்தில் அதனைப் பொருட்படுத்துவது இல்லை) ஆயினும், இந்த ஸ்துதிகள் பக்தியால் நிறைந்திருப்பதால், பவ்விய ஜனங்களுக்கு இது கற்பக விருக்ஷத்தைப் போல் விரும்பிய பலனை அளிக்கும் என்பதாம்.


( 22 )


கோபாவேசோ ந தவ ந தவ க்வாபி தேவ! ப்ரஸாதோ

யாப்தம் சேதஸ்தவ ஹி பரமோபேக்ஷயை வாநபேக்ஷம் I

ஆஞ்ஞாவச்யம் ததபி புவநம் ஸந்நிதிர்வைரஹாரீ

க்வைநம் பூதம் புவநதிலக! ப்ராபவம் த்வத் பரேஷு II


பகவந்தரே! நீர் இராகத்துவேஷம் இல்லாதவர். உம்முடைய மனம் விருப்பம் அற்றது. ஆயினும், இவ்வுலகம் உம்முடைய கட்டளைக்கு உட்பட்டிருக்கிறது. தங்கள் அருகாமையை (சமீபத்தை) அடைவதால் எல்லோருடைய பகையும் அற்று விடுகிறது. இப்பேர்பட்ட விலக்ஷணமான பிரபுத்தன்மை (பெருமை) உம்மைவிட வேறு அன்னியரித்து உண்டாகாது என்பதாம்.


( 23 )


தேவ! ஸ்தோதும் த்ரிதிவ கணிகாமண்டலீ கீதகீர்த்திம்

தோதூர்தி த்வாம் ஸகல விஷயஞாந மூர்திம் ஜநோ ய: I

தஸ்ய க்ஷேமம் ந பதமடதோ ஜாது ஜோஹூர்தி பந்தா

தத்வ க்ரந்த ஸ்மரணவிஷயே நைஷ மோமூர்தி மர்த்ய II



ஸ்வாமியே! தங்களை, ஸ்துதி செய்யும் காரியத்தில் எவன் ஒருவன் ஆழ்ந்து முனைந்து இருக்கிறானோ, அவனுக்கு ஸ்வர்க்காபவ்ர்க்கம் எய்துவதில் (அடைவதில்) யாதொரு தடையும் இராது. அவன் தத்துவ நூல்களையும் ஐயம் இன்றி கற்று அறிஞனாகவும் ஆகிறான் என்பதாம்.


( 24 )


சித்தே குர்வந்நிரவதி ஸுக ஞாந த்ருக்வீர்ய ரூபம்

தேவ! த்வாம் ய: ஸமய நியமாதாதரேண ஸ்தவீதி I

ச்ரேயோமர்கம் ஸ கலு ஸுக்ருதி தாவதா புரயித்வா

கல்யாணாநாம் பவதி விஷய: பஞ்சதா பஞ்சிதாநாம் II


பகவந்தரே! எந்த மனிதன் அனந்த சதுஷ்டயங்களுடன் கூடிய தங்களை முழு மனதுடன் ஸ்துதி செய்கிறானோ, அவன் தீர்த்தங்கரர் பதவியை அடைந்து, தேவர்களால் (தீர்த்தங்கரர்களுக்கு ஐந்து காலங்களில்) செய்யப்படும் பஞ்ச மஹா கல்யாணங்களுக்குப் பாக்கியம் உள்ளவனாய் ஆகிறான். 


( 25 )


பக்தி ப்ரஹ்வ மஹேந்த்ர பூஜிதபத! த்வத் கீர்தநே ர க்ஷமா:

ஸுக்ஷ்மஞ்ஞாந த்ருசோZபி ஸம்யமப்ருத: கே ஹந்தமந்தாவயம் I

அஸ்மாபி: ஸ்தவ நச்சலேந து பரஸ்த்வய்யா தரஸ்தந்யதே

ஸ்வாத்மாதீந ஸுகைஷிணாம் ஸ கலு ந: கல்யாண கல்பத்ரும: II


பகவந்தரே! பெரிய பெரிய மகரிஷிகளாலும் தங்கள் குணங்களைக் கொண்டாடுவதற்கு முடியாது எனில், மந்த புத்தியுள்ள எங்களால் எப்படி முடியப்போகிறது? ஆனாலும், நாங்கள் தங்களிடமுள்ள பக்தி மேலீட்டினாலேயே இவ்விதம் வணக்கமுள்ளவர்களாய் இருக்கிறோம், ஆகவே, இவ்விதம் நாங்கள் தங்களுக்குச் செய்யும் ஆதரவான வணக்கமானது எங்களுக்கு ஆத்ம சுகத்தைத் தருவதில் ஒரு கற்பக விருக்ஷத்தைப் போல இருக்கிறது என்றபடி.


குறிப்பு: இந்த ஏகீபாவ ஸ்தோத்திரத்திற்கே “கல்யாண கல்பத்ரும ஸ்தோத்திரம்” என்ற வேறு பெயரும் உண்டு. அதை வைத்தே இந்த ச்லோகம் கூறப்பட்டுள்ளது.



( 26 )

வாதிராஜமநு சாப்திக லோகோ

வாதிராஜமநு தார்கிக ஸிம்ஹ: I

வாதிராஜமநு காவ்ய க்ருதஸ்தே

வாதிராஜமநு பவ்ய ஸஹாய: II


ஏகீபாவம் அல்லது கல்யாண கல்பத்ருமம் என்கிற இந்த ஸ்தோத்திரங்களைச் செய்த ஸ்ரீ வாதிராஜ ஆச்சாரியரானவர் வியாகாணம், தர்க்கம், காவியம் முதலிய எல்லாவற்றையும் நன்குணர்ந்த பெரியார் என்பதாம்.


சுபம் ! மங்களம் !! சுபம் !!!



ஸ்ரீ வாதிராஜசூரி என்பவரால் இயற்றப்பட்ட ஏகீபாவம் அல்லது கல்யாணகல்பத்ரும ஸ்தோத்திரம் முற்றிற்று.


-----------------------------------

No comments:

Post a Comment