Gometeshar Pohtrimalai

 ஸ்ரீகோமடேசர் போற்றி மாலை


🔹 பழம்பெரும் ஜைன ஸ்தலமாகிய சிரவண பெளிகுளத்தில் எழுந்தருளியிருக்கும் பாகுபலி பகவானைக் குறித்து பலதுதி நூல்கள் வெளிவந்துள்ளன.


🔹 அவ்வகையுள் என்னால் புனையப்பட்ட *கோமடேசர் போற்றிமாலை* என்னும் *துதி நூல்* சிரவணபெளிகுளம் ஸ்ரீசந்திரகிரி சின்னமலையில் 29-1-2001 முதல் 7-2-2001 வரை நடைபெற்ற பெருவிழாவின் போது வெளியிடப்பட்டது.


🔹 ஸ்ரீசேத்திர  அரகந்தகிரி திருமலை திகம்பர ஜைன மடத்தின் *ஸ்ரீநேமிநாதர் பதிப்பகத்தாரால்* அப்போது அந்நூல் வெளிவந்தது.


🔹 *128 அடிகள் கொண்டதாய் கலிவெண்பா* வகையுள் இயற்றப்பட்ட அத்துதிப்பாக்களை இசைவடிவில் நாள்தோறும் வாட்ஸ்அப்பில் வெளியிட விழைகின்றேன்.


🔹 இதற்கு உதவிட முன் வந்துள்ள மன்னை திரு. பத்மராஜ் ராமசாமி அவர்களைப் பாராட்டி மகிழ்கிறேன்.


🔹 ஆன்மீக ஆர்வலர்கள் படித்தும் பாடியும் உணர்ந்தும் பயனுறுவார்களாக! 1. பாகுபலி போற்றி! பரமநின் தாள் போற்றி!
ஏகனே! போற்றி! இதமுரைப்பாய் ! தாள்போற்றி!

 2. சேமம் அளித்துயர்ந்த சீராரடி போற்றி!
கோமடேசா! போற்றி! கோவே! நினதாள் போற்றி!

 3. வளமெல்லாம் தாம் பெற்றே வாமன் புகழ்போல் துளக்கமிலா நல்லறிவின் தூயோர் வாழ் பெளிகுளத்தே

 4.  பொல்லாப் பிறவிப் பிணி அகலத் தான் நோற்று வல்லானாய் உலகத்தை வாழ்விக்க வந்துதித்த

 5. ஆதிபகவன் அருமகவே! தாள்போற்றி!
சோதி வடிவான சுந்தரனே! போற்றி!

 6. அனந்த தவம் செய்தே அன்புடனேஈன்ற சுனந்தை மகனே! சுகிர்தனே! போற்றி!

 7. அந்தர தேவர் புகழ, ஆரணங்கா வந்துதித்த, சுந்தரிதன் சோதரனே! தூயவீனே! போற்றி!

 8. விண்ணுலகும் மண்ணுலகும், வேண்டித்துதிபாடும், கண்ணின் மணியாகும் கற்பகமே! போற்றி!

 9.  முன்னம்செய் தீவினைகள் மூண்டு கிடந்தாலும், பின்னைச் சிறிதே பேதையேன் செய்துவைத்த

 10. நல்வினைகள் தாம்வந்தே நற்பயனைத் தந்தனவோ? மல்யுத்தப் போரேறே! மானவனே! நின்புகழை

  11. வாழ்த்தி வணங்குகிறேன் வள்ளால்! உனையெண்ணி, ஏத்தித் தொடங்குகிறேன் இப்போற்றி மாலைதனை

  12. நன்றே முடிகவென  நல்லறத்தோய்!நின்னருளே,இன்றே விளைக என ஏத்துகிறேன் பொன்னடியை

  13. ஐயாவே!  உன்றன் அருளறத்தை யான்பாட,மெய்யாகவே அகத்தே மீ(து)இவரும் எண்ணங்கள்

  14. ஆயிரம் ஆயிரமாம் ஆனதற்கும் மேற்பலவாம், வாயிறங்கும் வார்த்தைகட்கு வல்லமைதான் உள்ளனவோ?

 15. பேசமுடியாப் பெரும்புகழின் பெட்டகமே! ஆசைவிலங்கறுத்த அற்புதம்சேர் மூர்த்தியனே!

  16. உன்றன் திருச்சரிதம் உன்னடியார்க்(கு)இன்பளிக்கும் என்றன் பெருவிருப்பும் ஈடேறும் என்பதனால்

  17. பற்பலவாய் தாம்நிகழ்ந்த பான்மைசேரக் செய்திகளில் சிற்சிலவே தாம்கூற சிறுமதியேன் எண்ணுகிறேன்.(நாளையும் மலரும்)

  18. முன்னை ஒருபிறப்பில் மூவாப் புகழ் சான்ற, மன்னும் பெருவலிமை மாபாகுவாய் தோன்றி

 19. வெல்லா வினைவெல்ல வேகத்தவம் செய்து, பொல்லாத வாழ்வைப் புறம்போக்கி விண்ணகத்தே

  20. ஆகும் அகமிந்த்ர லோகமே தானடைந்து,போகம் முடித்தபினர் பூமிதனில் ஆதியற்குப் 21. போற்றும் புதல்வனாய் பொன் பரதன் தம்பியாய், ஏற்ற இளவரசாய் இன்புறவே தோன்றினையே!

  22. மின்னல் கொடியிடையார் மீன்விழிகள் தாமுடையார், கன்னல் மொழியுடையார் கன்னியர்தம் நெஞ்சமெனும்

  23. தேரேறித் தான்வளர்ந்த தீந்தமிழே! மன்மதனைப் போரேறி வென்றிட்ட பூமானே! நின்னிளமைக்

  24. காட்டில் கருங்குயிலின் கானமழை எந்நாளும், நாட்டில் நடமாடும் நல்லனங்கன் நீயென்றே

  25. ஏத்திப் புகழாத ஏந்திழையார் யாருமிலை, கீர்த்தி பரவாத கேடகமும் தானில்லை

26. ஆறுதொழில் காட்டிஅருந்துயரம் தானகற்றி, ஆறுதலைத் தந்தே ஆருயிரைக் காத்திட்ட

27. ஆதி பகவனவன் ஆரருளைப் பெற்றதனால், நீதியுரை சாத்திரங்கள் நேரானபோர்முறைகள்

28. நலிய வரும் நோய்தீர்க்கும் நன்முறைகள்; மாந்தர், பொலிவுரைக்கும் அங்க சாமுத்திரிகா லட்சணங்கள்

29. இன்பக் கலைகளென இன்னவெலாம் தாம்கற்று, மன்பதைகள் போற்ற மகிழ்ந்தினிது வாழ்ந்தனையே!

30. ஆடரங்கம் ஏறி அவிநயங்கள் தாம் காட்டிக்,கேடுற்று மாய்ந்த கிளரெழில் நீலாஞ்சனையின்

31. அவலநிலை கண்ட ஆதிபகவன், சவலைப் பிறப்பறுத்துச் சான்றோர் மிகப்போற்ற

32. அரசு துறந்தே அருங்கானம் செல்ல, முரசு முழங்கிடவே முன்னவனாம் எம்பகவன்

33. நாடு பிரித்து நகரங்கள்தாம் பிரித்துப், பீடு விளங்கிடவே பிள்ளைகட்கு அன்றளித்த

34. ஔதர்யமே புனையும் ஆன்றோர்கள் வாழ்பதியாம்,பௌதனபுராதிபதி யாய்பட்டம் பெற்றனையே!

35. நீதி நிலைத்தோங்க நேரிய செங்கோல் ஓச்சிப், பாதகம் ஏதும் படராமல் ஆண்டனையே!

36. மூவிரு கண்டங்கள் முழுதும் அடிப்படுத்திக், காவலனாய் ஆண்ட கனப்பேர் பரதன் செய்

37. ஆதிக்க வேட்டை அடிமனத்தே தீமூட்ட, பேதித்த கொள்கை பெரும் போரை மூட்டியதே

38. நீதியுணர்ந்து நெறியுரைக்கும் நல்லமைச்சர், ஓதிஉரைத்திட்ட உண்மை உளங்கொண்டு

39. படைகள்தமை விலக்கிப் பண்பின்செய் போரில்,இடைமுரிய மூத்தவனும் ஏவவரும் சக்கரமே

40. சக்கரமே வந்துசரணமெனத் தாங்கூறி, பக்கம் ஒதுங்கிடவும் பரதன் 
செயல் கண்டு41. மோதி அழிக்க வரும் முள் சினத்தைக் கைவிட்டுப், போதமிகு சிந்தனையாம் பூம்புனலில் மூழ்கினையே!

42. உடன்பிறந்தான் மேற்கொண்ட உள்நேசம் எங்கே? மடங்கொண்ட நெஞ்சுஎங்கே? மாண்புதான் எங்கே?

43. தம்பிதான் என்றே தவச்சிறிதும் நோக்கிலனே, வெம்பி நினைந்துருகும் வேதனையைச் சூழ்ந்தானே

44. ஒறுத்தாரைத் தாம் பொறுத்தல் ஒள்ளியோர் தம்பண்பே, செறுத்தார்க்கு நற்பெருமை சேருவது தானுண்டோ?

45. பொருள்பதவி ஆசையெலாம் பூரியார் பண்பே, அருளின்றி வாழ்பவர்தம் ஆயுள் வளர்ந்திடுமோ?

46. பொல்லாவழி நடந்து போனவர்தாம் எத்துணைபேர்? கல்லாது நாள்கழிப்பின் காண்பறியா துக்கமன்றோ?

47. மண்ணில் பிறந்தார் மடிவதுவே உண்மையெனில், கண்ணஞ்சி வாழ்வதுதான் கற்றறிந்தார் பண்பலவோ?

48. வாழும் உயிர் மற்றும் வாழாதே இவ்வுடலம்,தாழல் நமக்கில்லை தாண்டுவதே நல்லறிவு.

49. மண்ணோடு பொன்தூள் மருவிக் கிடந்தாலும், உள்நோக்கி ஆய்வார்க்கே உண்மை புலனாகும்.

50. சடம்வேறு சத்வேறு சாத்திரங்கள் கூறும், உடன்பாட்டுத் தத்துவத்தை ஓருதலே மெய்ஞ்ஞானம்.

51. யாக்கை நிலையில்லை ஆகிவரும் மெய்வனப்பும், பாக்குகடிக்கும் பொழுதைக்குள் ஓடிவிடும்.

52. தும்மலிலே நம்ஆவி துள்ளித் தெறிக்குமெனின், நம்பிக்கை வைத்து நலிவதுவும் எற்றுக்கோ?

53. பந்தம் உடன் வருமோ? பாசம் தடுத்திடுமோ?, அந்தகன்தன் பாசம் அணையாமல் சென்றிடுமோ?(மாலை நாளையும் மலரும்)

54. செல்வமெலாம் செல்வமெனச் செப்பாதே சென்றொழியும், நல்வினையின நாசமது நம்விழிக்குத் தோன்றிடுமோ?

55. அரசபதவியின்மேல் ஆசை படிந்தால் , புரசை மதக்களிற்றின் பொல்லாங்கே மேலோங்கும்,

56. ஒருதாய் வயிற்றில் உதித்தவரும் தம்முள், செருவிளைத்துச் சாவரெனில் சீ!என்று தள்ளல்மேல்.

57. அழியும் சுகம் நச்சி அண்ணன் பிழைத்தால், பழிவாங்க யான்முனையின் பாருலகோர் என்சொல்வர்?.

58. இவ்வெல்லாம் சிந்தித்தே ஏகாந்தம் ஏகினையோ?. அவ்வியம்சேர் நெஞ்சத்தன் அல்லல் பொறுத்தனையோ?

59. ஆதிபகவன் அறவமுதை மாந்தியபின், சோதியனே ஆன்ம சுகம் வேண்டி  நின்றாயோ?

60. பொன்னை வெறுத்தாய் புகழ் வெறுத்தாய்; ஆண்டுவந்த,மண்ணை வெறுக்கும் மனத்துணிவை ஏற்றாயே!61. சுடச்சுடரும் பொன்எனவே சூழவரும் துன்பம், சுடச்சுடவே நீநோற்று சுத்தான்ம ரூபத்தை

62. நீங்காமலே நினைத்து நின்மலனாய் நிச்சலனாய், தாங்காப் புகழ்த்தரணி தான்நோற்ற நின்றாயே!

63. ஓராண்டு காலம் உலக நினைவற்றே, பேராப்பெரும்பதமே பெற்றிடவே நோற்றாயே!

64. குக்குடமா நாகங்கள் கூடியுறை புற்றுகள்தாம், பக்கம் வளர்ந்து நின் பாதங்கள் மூடினவே

65. முட்புதரின் தூறுமுடுகி வளர்ந்ததனால், புட்களுமே கூடுகட்டிப் பொள்ளென் றொலித்தனவே

66. மாதவியாம் வல்லி மலரடியின் கீழ்தோன்றிப், போதனே! உந்தன் பொன்னுடலைச் சுற்றினவே!

67. அரிமா கரிகளுமே அண்ணலே! நின்முன், ஒருபேதமின்றி உலவிமகிழ்ந்தனவே.

68. காசாயம் நீங்கக் கடுந்தவமே நோற்றாலும், ஆசானே! நின்னெஞ்சம் ஆறமறுத்ததுவே.

69. தமையன்தன் மண்ணில் தவமிருத்தல் எண்ணிக், குமையவரும் சிந்தனைகள் கூரம்பாய் தாக்கினவே!

70. சித்திக்கும் காலம் சிதறும் நிலையுணர்ந்தே, முத்திக்குத் தூக்கிவிட முன்னியே முன்னவனும்.

71. உச்சிக் கிளையேறும் ஊக்கம் இடைமுரிந்தே மிச்சத்தில் நிற்கின்றான் மேல்தாங்க வேண்டுமென

72. நெஞ்சம் திருந்த நிமிடத்தில் ஓடிவந்து, தஞ்சமெனத்தாள் பணிந்து தன்முடியை முன்வைத்துப்

73. பின்னவனே! பேரறிவே! பேதமெலாம் மாய்த்தவனே!, இந்நிலமே உன்னதுவாம் ஏற்பாய் என்று ஓதுதலும்

74. பொங்கிவரும் பாலைப் புதுநீர் தணிப்பதுபோல், பங்கம் தணிய பரஞானம் ஏறினையே!

75. ஞானப்பெருமலையே! நானுன்னைப் பாடுவதோ?, வானபெரு வெளியை வரிவண்டு தாண்டுவதோ?


76. மோனமுனிவரனே! மோட்சத்திருவிளக்கே!, தேனுகக்கும் தீஞ்சொல் திகட்டா அறவமுதே!

77. சேணாட்டுக் கற்பத்து அமரரும்தாம் சென்றேத்தும், வேணூரில் நின்றருளும் விண்ணோர்தம் கண்மணியே!

78. பார்க்கும் இடங்களெலாம் பைம்பொழிலே காட்சிதரும், கார்க்காளா நின்றருளும் கைவலத்தின் நாயகமே!

79. ஓயாதே ஒழியாதே உள்ளிவரும் யாவர்க்கும், மாயாத செல்வம் மடியளக்கும் மாமுகிலாய்
80. பாரேந்தும் கீர்த்தியெலாம்,பக்குவமாய் தானேந்தும், வீரேந்திரஹெக்டே வீற்றருளும் நற்பதியாய்

81. கர்மங்கள் எல்லாமும் கண்காணாதே விரட்டும்,தர்மத்தலம் நின்ற தனிமலையாம் தத்துவமே!

82. தாமடங்கிவாழ்வதனால் தாவில்சீர் கிட்டுமெனக்,கோமடமாகிரிமேல் கூவுகின்ற பூங்குயிலே!

83. வெளிறில்லாக் கேள்வியினார் விட்டகலா ஊராம், பெளிகுளத்து ஓங்கல்மேல் பேசாது நிற்பவனே!

84. பாமண்ட லாதிபர்தாம் பாதம் பணிந்தேத்தும், சாமுண்ட ராயன்தான் சாற்றரிய பக்தியினால்

85. இந்தியங்கள் என்னும் எதிர்காற்றினைத் தடுத்து,விந்தியம்மேல் நின்ற வீரா! இளம்மாரா!

86. வானமுகில் தங்கும் வாகுவலி நின்முடியில், தேனமரும் பூ தங்கும் தேவர்கோன் நின்னடியில்.

87. தென்றல் தவழ்ந்து வரும் தேமலரின் வாசம்மிகும், உன்றன் திருவருள்போல் ஓயாது அருவிவிழும்

88. சோதிச்சுடரதுவும் சொக்கவெள்ளிப் பால்நிலவும், ஆதிமகன் உன்றனுக்கே ஆரத்தி தானெடுக்கும்

89. தலைவானின் விண்மீன்கள் தாமம்எனத்தோன்ற, கலைவல்லோய்!நின்முடியில் கார்மேகம் நீர்தெளிக்கும்  

90. மேகத்திரைஅசைவில் மின்னற்கொடி இறங்கி, மோகம் அறுத்த முனியே! நின்தாள்பணியும்;

91. பூஞ்சோலைப் பைங்கிளிகள் பூமான்! நின்பேர்பயிறும், காஞ்சிப்பண்பாடி களிவண்டு வாழ்த்து சொலும்.

92. மானமதலோப பயம் மாய்த்திட்ட மன்னவனே, வானபதிவந்துதொழும் வாழ்வு சேர் புண்ணியனே!

93. செந்தாமரை வதனம் சிந்தும்உன் புன்முறுவற்கு, இந்தா!என அளிப்பின் இவ்வுலகம ஈடாமோ?

94. நந்தாகருணை நறாதுளிர்க்கும் கண்மலர்க்குச்,சிந்தாமணி கோடி சேர்த்தளிப்பின் ஈடாமோ?

95. திசையளக்க வந்ததெனத் தீர்த்தெழுந்த மெய்யின்,மிசைசுடரும் சோதிக்கு மேற்சுடரும் ஈடாமோ?

96. உத்தரமே நோக்கி நிலும் உந்தன் திருக்குறிப்பே, எத்தனையோ கேள்விகட்கு ஏற்ற விடைதருமே!

97 வானம்விழுந்திடலாம் வையகமும் மேல்எழலாம்,மானவனே!உந்தன் மகிமை குறைந்திடுமோ?

98. நீலமலைமிசையே நின்னையான் கண்டதனால்,சாலப்பிறப்பறுத்தேன் சத்தியமே சத்தியமே!

99. பாதமே பற்றிப் பாவியேன் வீழ்ந்ததனால், ஏதம்எனக்கில்லை ஏழ்பிறப்பும் நிச்சயமே!

100. வெள்ளிமலை மேலோர் வெள்ளிமலை நிற்பதெனத்,தெள்ளியோய்!நின்கண்டு தேகம் சிலிர்த்தேனே!

101. படியேறியே வந்து பாதம்பணியத்,தடுமாற்றம் எல்லாம் தலைசாயக் கண்டேனே!

102. நூல்கள் உனைப்புகழும நோற்போரும் நின்னடைவர் ,கால்கள்எனை ஈர்த்துவரக்,கைகுவித்து நின்றேனே!

103. அசையாமலைமேல் அசையா மலைபோல்,இசையால் திசைமூட என்இறைவா!கண்டேனே!

104. பற்றென்னும் பாசக் குழிவிழுந்தேன் ஆயினும்உன்,பற்றினையேயான் பற்ற  பற்றுவிழக்கண்டேனே!

105. இமைகொட்டிப் பார்த்தாலும் என்னெஞ்சம் வாடும், அமைவூட்டும் நின்கோலம் அற்புதமே காட்டும்


106. கண்கொள்ளாக் காட்சிதனைக் கட்டுரைக்கக் கூடிடுமோ? மண்கொள்ளா நின்னிசைக்கு வாய்வார்த்தை மாற்றாமோ?

107. பத்திரபாகுத்துறவி மித்திரமாய் வந்துறைந்த, நித்தியமாம் ஓங்கல்மேல் நிம்மதியைக் கண்டேனே!

108. சந்திரகுப்தர் பணிந்து சல்லேகனை ஏற்ற,சந்திரப்பேர் கொண்டசலம் சாந்திதரக் கண்டேனே!

109 . வெள்ளைக்குள நகரில் வேண்டிப் புகும்முன்னே,கள்ளம் கபடமெல்லாம் கட்டவிழக் கண்டேனே!

110. குல்லகாயக் குடுவை கொள்ளப்பால் கொண்டுவரும், வல்லிமுதுக்கிழவி வார்த்திட்ட பாலதுதான்

111. நூலாடைப் போர்த்ததென நுண்ணுணர்வோய்! நின்மேனிப் பாலாடை போர்த்த கதைப்பாங்கை அறிந்தேனே!

112. கன்னலுடன் செந்நெல் கலந்து கிளர்ந்துவளர், கன்னடமா தேயமெனும் கன்னியவள் கண்ணாகத்

113. தவளச்சரோவரம்சேர் தண்மலையின் மேலென், அவலம் அறுத்துநிலும் அன்புருவைக் கண்டேனே!

114. நின்னாம கோத்திரம் ஆயுள் அந்தராயமெனும், கன்மம் அறுத்தே கதிமோட்சம் பெற்றவுனை

115. என்னென்று நான் புகழ்வேன்? ஏதுவுரை செய்வேன்? கல்நெஞ்சன் ஆயிடினும் காக்கக் கருணாளா!

116.  ஆராஇயற்கை அவாதன்னை நீத்தவனே! தூராவயிற்றேனைத் தூக்கியருள் தோர்ப்பலியே!

117. எண்குணத்தாய்!போற்றி! எம்பெருமான் தாள்போற்றி! மண்ணளந்த கீர்த்தி மணிமார்பா! தாள்போற்றி!

118. எழுகடலும் கூடிவந்தே ஏய்ந்தனபோல் அன்பர் ,குழுக்கடலே கூடிவரும் கோலவரையின் மேல்

119. உத்தமனே! பன்னிரண்டு ஆண்டிற்கு ஒருமுறைசீர், மத்தகாபிடேகம்கொள் மன்மதனே! போற்றி!

120. புறத்தேசூழ் வெம்பகையைப்  பொன்றுவித்தல் தன்னின், அகத்தேசேர் வெம்பகையை ஆற்றுவிப்பாய்!போற்றி!

121. மோனத் தவக்கொழுந்தே! மும்மணியின் நாயகமே!,வானத்தமரர்  முடிவைத்த தாள் போற்றி!

122. ஆயிரம்மேல் ஆண்டுகளாய் அவ்வெழில்சீர் குன்றாதே,தேயாத்திருப்பார்வை தேற்றுவிப்பாய் போற்றி!

123. நசைஎன்னும் நீத்தத்தே நான்மூழ்கா முன்னே,இசைசேர் மொழியால் வசைவிலக்கு வாய் போற்றி!

124. சாந்தமெனும் தாயீன்ற சாதுக்களை ஈர்க்கும்,காந்தமெனநிற்கின்ற கம்பீரா!போற்றி!

125. ஆருகததர்மம் அகிலமெலாம் தாம்பரப்பும் , சாருகீர்த்தி பட்டார சற்குணரின் உள்ளத்தே

126. என்றும் நிலைத்திருக்கும்  எம்மானே!போற்றி! பொன்றாதிசையாடை போர்த்தவனே!போற்றி!

127. என்றெல்லாம் மெய்யன்பின்  ஏத்தித் தொழுதுன்னைக்,குன்றாத ஆர்வம் தலைகொண்டு போற்றி

128. ஓதுவார் ஆர்?அவரே உலகத்தின் உச்சிபதம்,போதுவார் வாழ்வார் புரிந்து,

(கோமடேசர் போற்றிமாலை நிறைவுற்றது)

இத்துதிமாலையைஇந்நாள் வரை வாசித்தார்,

கேட்டுஇன்புற்றார் யாவருக்கும்,

பகவானின்படங்களோடு வெளியிட்ட மார்க்கப்ரபாவனைசெம்மல் திரு. மன்னை.பத்மராஜ்ராமசாமி அவர்கட்கும்

என்சிரம்தாழ்ந்த வணக்கங்களை நன்றியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆன்ம நலம் விளைக!


வழங்கியவர்:

புலவர் தோ. ஜம்புகுமாரன்,
திருவறக்கவிஞர்.
-------------No comments:

Post a Comment