சட்டம் பேசுகிறது.
ஜீவரக்ஷக சபையின் தோற்றமும் சேவையும்
சென்னை தென்னிந்திய ஜீவரக்ஷகப் பிரசார சபை
1926-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்
9-ஆம் தேதி சென்னையில் திறக்கப்பட்டது. இச்சபையைத்
தோற்றுவித்தவர் ஜைனாச்சாரிய கம்பீர விஜயாஜீ முனிவராவர். இம்மகான் குஜராத் மாகாணத்திலுள்ள
பாலிடாணா நகரத்தைச் சார்ந்தவர். சுவாமிகள் ஜைனத்துறவிகளின் கொள்கைப்படி பாலிடாணாவிலிருந்து
சென்னைக்குக் கால்நடையாகவே நடந்துவந்தார்கள். அவ்வாறு பல கிராமங்களையும் நகரங்களையும்
கடந்து சென்னைமாகாணத்தை அடைந்தார். இங்குள்ள சில கிராமங்களில் போலோம்மா, மாரியம்மா,
பிடாரி போன்ற பல சிறு தெய்வங்களுக்கு ஆயிரக்கணக்கான ஆடு கோழிகளையும் எருமைக் கடாக்களையும்
பலி கொடுப்பதாகக் கேள்வியுற்று மனம் வருந்தினார். உயிர்கள் மடிவது மட்டுமின்றி மனிதப்பண்பும்
நாகரீகமும் பாழாகின்றனவே என்ற கவலையும் சுவாமிகள் உள்ளத்தை வாட்டிற்று. இந்நிலையில்
சுவாமிகள் சென்னை வந்து சேர்ந்தார்கள். சென்னையிலுள்ள ஜைனப் பெருமக்கள் சுவாமிகளைப்
பக்திபரவசத்துடன் வரவேற்றுத்தினந்தோறும் சொற்பொழிவுக்கு ஏற்பாட செய்தார்கள்.
சுவாமிகள் வடமொழி இலக்கியங்களிலும் குஜராத் இலக்கியங்களிலும்
நல்ல பயிற்சியும் தேர்ச்சியும் பெற்றவராகையால் அவர் தம் சொற்பொழிவைக் கேட்க ஜைனமதத்தினர்கள்
ஆயிரக்கணக்கில் வந்து கூடினார்கள். சுவாமிகள் சொற்பொழிவுகளில் ஒன்று அஹிம்ஸா தர்மத்தைப்
பற்றியது. அன்று அஹிம்சையின் தத்துவத்தை விளக்கிப்பேசி அவ்வறத்தைப் பரப்பவும், தெய்வத்தின்
பெயரால் உயிர்ப்பலி செய்யும் கொடிய வழக்கத்தை நிறுத்தவும் ஒரு ஜீவரக்ஷகப் பிரசார சபையை
நிறுவவேண்டும் என உருக்கமாகப் பேசினார்கள். அவர் அறிவுரைகளைச் சிரமேற்கொண்ட ஜைனப்
(சமண) பெருமக்கள் அன்றே நிதி திரட்டி நாம் மேலே கூறிய தென்னிந்திய ஜீவரக்ஷகப் பிரசார
சபையைச் சென்னையில் நிறுவினர்.
அன்றுமுதல் இச்சபை சென்னை மாகாணமெங்கும் இடைவிடாது தொண்டாற்றி
வருவதைப் பலரும் நன்கறிவர். அடியேன் 1927-ஆம் ஆண்டு ஜூலை மாதத்திலிருந்தே
இச்சபையின் அமைப்பாளனாகவும் பிரதம சொற்பொழிவாளனாகவும் பதவி ஏற்று நாளதுவரை தொண்டாற்றி
வருகின்றேன். பல நூற்றாண்டுகளாகத் தெய்வத்தின் தொண்டாற்றி வருகின்றேன்.
பல நூற்றாண்டுகளாகத் தெய்வத்தின் பெயராலும் உயிர்ப்பலியிடும்
மூட நம்பிக்கையில் மூழ்கியுள்ள மக்களின் அறியாமையை அகற்ற இச்சபை பல துறைகளிலும் பணியாற்றி
வந்துள்ளது. பஜனை கோஷ்டிகளுடன் சொற்பொழிவுகள், நாடகங்கள், பாட்டுகள், கதைகள், பலவித
துண்டுப்பிரசுரங்கள், சுவரொட்டிகள் ஆகியவைகள் மூலம் மக்கள் அறிவை வளர்த்து வந்தது.
இத்தகைய அரிய சேவையின் பயனாகப் பெரும்பாலான மக்களிடையே புத்துணர்ச்சியும்
புதிய அறிவும் உதயமாயின என்றே கூறலாம். ஆயிரக்கணக்கான முதியோர்களும் இளைஞர்களும் புலாலுணவை
மறந்தார்கள். வரலாற்றுப் பிரசித்திபெற்ற திருவொற்றியூர், திருப்பாதிரிப்புலியூர்,
சிதம்பரம், சீர்காழி, திருப்புவனம், பாளையங்கோட்டை, சேலம், கோயம்புத்தூர், ஆத்தூர்,
சங்கரநயினார் கோயில் போன்ற பல நகரங்களிலும் நூற்றுக்கணக்கான கிராமங்களிலும் உயிர்ப்பலிகள்
அறவே நிறுத்தப்பட்டன.
எனினும், தெய்வத்தின் பெயரால் பலியிடும் வழக்கம் ஆங்காங்குத்
தலைகாட்டிக்கொண்டிருந்தது. தெய்வத்தின் பெயராலன்றி மக்கள் அஹிம்சா தர்மத்தின் மேன்மையை
அறிந்து கொள்ளவியலாது. அதுமட்டுமன்று; சமூகமும் முன்னேற்றமடையாது! "மூடநம்பிக்கைகள்
சமூக முன்னேற்றத்திற்குத் தடைகள். அத்தடைகளை ஒழிக்கக் கல்வியும் சட்டமும் தேவை"
யெனும் மேல் நாட்டு அறிஞரின் அறிவுரையும் நமது கொள்கைக்கு அரண் செய்வதாகும்.
இவ்வுண்மையை நமது நாட்டில் எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே
அறிந்து பகவான் விருஷபதேவர், லோகமூடம், தேவமூடம், பாசண்டி மூடம் என்ற மும்மூடங்களையும்
அகற்ற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். எனவே தெய்வத்தின் பெயரால் உயிர்ப்பலியிடும்
மூடக்கொள்கையை அறவே அகற்ற சர்க்கார் மூலம் சட்டம் கொண்டு வருதல் நலமென அறிந்தேன்.
உயிர்ப்பலியை சட்டத்தின் மூலம் ஒழிக்க முயற்சி
அன்றே (1932) "கிள்ளை விடு தூது" எனும்
ஓர் நூல் சபையின் சார்பாக இயற்றினேன். இந்நூலில் தெய்வத்தின்
பெயரால் உயிர்களை எவ்வாறு சித்ரவதை செய்கின்றார்களென்பதையும் அதனை ஒழிக்கச் சட்டம்
இயற்றவேண்டியது அவசியம் என்பதையும் நன்கு விளக்கியுள்ளேன்.
இதனால் பொதுமக்களின் மனம் சிறிது மாறிற்றேயன்றி அரசாங்கத்தின்
உள்ளத்தை சிறிதும் அசைக்கவில்லை. ஏனெனில் இந்திய மதங்களின் கொள்கைகளில் தலையிடுவதில்லை
என்ன பிரகடனத்தின் பீடத்தின் மீது அமர்ந்திருந்த ஆங்கில அரசாங்கம் அன்று ஆட்சி புரிந்தது.
பின்னர் 1938ம் ஆண்டு காங்கிரஸ்
கட்சி சட்டசபையைக் கைப்பற்றியது. சென்னை மாகாணத்தில் கனம் ஸ்ரீ C. ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் பிரதம மந்திரியாக
அமர்ந்திருந்தார். இதுதான் சமயம் என அறிந்து எனது நண்பரும் வடஆற்காடு ஜில்லா செய்யாறு தொகுதி சட்டசபை மெம்பருமாகிய திரு. D. இராமலிங்கசெட்டியார்
M.A., B.L., M.L.A., அவர்களைக் கொண்டு சட்டசபையில் உயிர்ப்பலி தடைமசோதா கொண்டுவருமாறு
சபையின் சார்பாக வேண்டிக்கொண்டேன்.
அவரும் அதற்கிசைந்து சட்டசபைக்கு உயிர்ப்பலி தடைமசோதாவைக்
குறித்து நோட்டீஸ் அனுப்பினார். பத்திரிகைகளிலும் வெளிவந்தது. இம்மசோதாவிற்கு ஆதரவு
தேடவேண்டி சபையின் சார்பில் மாகாணமெங்கும் சுற்றுப்பிரயாணம்
செய்து ஆயிரக்கணக்கான ஆதரவு தீர்மானங்களைச் சேகரித்து சர்க்காருக்கு அனுப்பினேன்.
அத்துடன் நிற்கவில்லை. எங்கள் சபையின் ஆண்டு விழாவிற்குத்
தலைமை வகிக்குமாறு கனம் முதன் மந்திரி C. ராஜகோபாலாச்சாரியார் அவர்களை வேண்டினோம்.
அவரும் இசைந்து 1939ம் ஆண்டு ஜனவரி மாதம் 16 கோகலே மண்டபத்தில்
நடைபெற்ற ஆண்டு விழாவில் தலைமை வகித்தார். அதுசமயம் எங்கள் சபையின் வரவேற்புப்
பத்திரத்தில் தெய்வத்தின் பெயரால் உயிர்ப்பலியிடுங்கொடிய வழக்கத்தை நிறுத்த சட்டமியற்றுமாறு
குறித்திருந்தோம்.
ஆனால் திரு. C. ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் மதசம்பந்தமான
இம்மசோதாவைக் கொண்டுவருவதற்கு இது சமயமல்லவென்று நிராகரித்துவிட்டார். எனவே சபையின்
முயற்சி வெற்றிபெறவில்லை எனினும், சபை தனது சேவையில் குறையவில்லை. முன்னைவிட தீவிரமாகவே
தொண்டாற்ற முனைந்து நின்றது. தமிழ்நாட்டிலுள்ள பல சங்கங்களும் தனிப்பட்ட அன்பர்களும்
எங்களுடன் ஒத்துழைத்தனர். அதனால் பிரசாரத்தின் மூலமாகவே மேலும் மேலும் வெற்றி கண்டு
வந்தது.
சுதந்திரமும் சட்டமும்
மகாத்மா காந்தி அடிகளின் சுதந்திரப் போராட்டம் வெற்றி கண்டது.
1947ம் ஆகஸ்டு ஆண்டு மாதம் 15 உ நமது நாடு சுதந்திர நாடாயிற்று, காங்கிரஸ் கட்சி ஆட்சி
பீடத்தில் அமர்ந்தது. "அந்நிய அரசாங்கம் நாட்டு மக்களின் அறியாமையையும் அநாகரீகத்தையும்
வளர்த்தும்; சுதந்திர அரசாங்கம் அறிவையும் நாகரீகத்தையும் வளர்க்கும்" என அயர்லாந்து
தேசபக்தர் டெரன்ஸ் டிரக்ஸ்வினி கூறியதுபோல் இனி
நமது முயற்சி வெற்றிபெறும் என்ற நம்பிக்கை பிறந்தது. நாடு சுதந்திரம் அடைந்துவிட்டதால்
மக்களின் அறியாமையைப் போக்க அரசாங்கம் முனையவேண்டும் என்றும், தெய்வத்தின் பெயரால்
உயிர்பலியிடும் அநாகரீக வழக்கத்தை நிறுத்தவேண்டி ஓர் சட்டம் இயற்றவேண்டும் என்றும்
பத்திரிகைகளில் அறிக்கைகள் விடுத்தோம்.
பின்னர் காங்கிரஸ் சட்டசபை அங்கத்தினர்கள் சிலரைக்கண்டு உயிர்ப்பலி
தடை மசோதா ஒன்றைக் கொண்டு வருமாறு சபையின் சார்பாக வேண்டிக் கொண்டேன். இவ்வேண்டுகோள்
மிக முக்கியமானதென அறிந்து தினந்தந்தி ஆசிரியர் உயர்திரு.
S.B. ஆதித்தன் M.L.C. அவர்கள் சென்னை சட்டசபையின் மேற்சபையில் 1947ம் ஆண்டு மசோதாவை
பிரேரித்தார். இம்மசோதாவைப் பற்றிக் கேள்வியுற்றதும் நம் மக்கள் காட்டிய ஆர்வமும்
ஆதரவும் அளவு கடந்தவை. அனைவரும் தமக்கு ஏதோ ஒரு புதையல் கிடைத்தது. போன்று ஆனந்தங்கொண்டனர்.
நமது வேண்டுகோளுக்கிணங்கி ஆங்காங்குப் பொதுக்கூட்டங்கள் கூட்டிப் பலி விலக்கு மசோதாவை
ஆதரித்துத் தீர்மானங்கள் நிறைவேற்றிச் சர்க்காருக்கு அனுப்பினர். இப்பேராதரவின் சார்பில்
சட்டசபையின் மேற்சபையில் 21-1-49ல் பெரும்பாலான கெளன்சிலர்களின்
(M.L.C) ஆதரவும் ஒத்துழைப்புங்கொண்டு சட்டமாக்கப்பட்டது.
பின்னர் கீழ்சபையிலும் இச்சட்டம் கொண்டுவரவேண்டும். அதற்காக
மதுரை ஜில்லா திருமங்கலம் தொகுதி சட்டசபை மெம்பரும், காங்கிரஸ்
தியாகியுமான உயர்திரு. K. இராஜராம் நாயுடு அவர்களைத் திருமங்கலத்திலுள்ள அவர்கள் இல்லத்திற்குச்
சென்று மேற்சபையில் நிறைவேறிய சட்டத்தைக் குறித்துப் பேசி கீழ்ச்சபையில் தாங்களே கொண்டு
வரவேண்டுமெனச் சபையின் சார்பாகக் கேட்டுக்கொண்டேன். அப்பெரியாரும் எனது வேண்டுகோளை
மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார்கள்.
பின்னர் 1949ம் ஆண்டு நவம்பர் மாதம் 25 உயர்திரு.
K. இராஜராம் நாயுடு M.L.A. அவர்கள் சட்டசபையில் பிரேரிதார்கள். அஃது 14-9-50 ல் பெரும்பாலான
சட்டசபை அறிஞர்களால் ஆமோதிக்கப்பெற்று பலிவிலக்குச் சட்டம் வெற்றிகரமாக நிறைவேறிற்று,
பின்னர் நம் ஜனாதிபதி இராஜேந்திர பிரசாத் அவர்களாலும்
அங்கீகரிக்கப்பட்டு 1-6-51 முதல் அமுலுக்கு வந்துவிட்டது.
இனி இச்சீரிய சட்டத்தை நாடெங்கும் வரவேற்று அதனை வெற்றிகரமாக
நடத்திவைப்பது பொதுமக்களாகிய நமது கடமையாகும். ஏனெனில் மிஸ்மேயோ போன்ற அந்நிய நாட்டவர்கள்
நமது நாட்டைப்பற்றி இழித்துக்கூறிய பழிகளைப் போக்கவும் நமது நாட்டுப் பண்டைய நாகரிகத்தின்
மேன்மையை விளக்கவும் இஃது ஒரு வாய்ப்பாகும். எனவே பலிவிலக்குச்
சட்டம் அமுலுக்குவரும் இந்த வேளையில் தெய்வங்களுக்கு உயிர்ப் பலியிடுதல் மத சம்பந்தமும்
தெய்வ சம்மந்தமும் உடையதுதானா என்பதை ஆராய்ந்து அறிவது நலம். சிலர் இவ்வழிபாட்டைத்
தெய்வ சம்பந்தமுடையதென்றே எண்ணியிருக்கின்றனர். இத்தகைய தவறான எண்ணத்தைப் போக்கவும்
மற்ற நாடுகளில் இவ்வநாகரிக வழக்கத்தை அந்தந்த நாட்டு அறிஞர்கள் எவ்வாறு போக்கினார்கள்
என்பதை மக்கள் அறிந்துகொள்ளவும் வேண்டி அதன் வரலாற்றைச் சுருக்கமாக இங்கு விவரிக்கின்றேன்.
உயிர்ப்பலியின் வரலாறு
நமது நாட்டில் காளி, மாரி, பிடாரி, மதுரைவீரன், மாடன் போன்ற
பல தெய்வங்களை வழிபட்டு வருவது போன்றே எகிப்து, இத்தாலி, கிரீஸ், பாலஸ்தீனம், அரேபியா,
இங்கிலாந்து, சீனா முதலிய நாடுகளிலும் மினர்வா, தார், ஓடியன் ஜுபிடர் எனப் பலவகையான
பெயர்களுடன் கூடிய பல தெய்வங்களை வழிபட்டு அவைகளுக்குப் பெரும்பாலான உயிர்ப்பலிகளும்
கொடுத்து வந்தனர். மிருகபலி மட்டுமல்ல-நரபலிகளும் நடந்திருக்கின்றன!
சீனா தேசத்தில் சன்யாட்சென் செய்த புரட்சி இயக்கத்தால் அந்நாட்டில் சிறு தெய்வ வழிபாடே
இன்று காணமுடியவில்லை! அது போன்று மற்ற மேல் நாடுகளிலும் அத்தெய்வங்கள் மாஜி
தெய்வங்களாகி மக்கள் நினைவில்கூடத் தோன்றாமல் மறைந்துவிட்டன. அதற்குக் காரணம் அந்தந்த
நாட்டு மதத் தலைவர்களும் அறிஞர் பெருமக்களுமாவர்.
உதாரணமாக கிறிஸ்துவ மதத் தலைவராகிய
ஏசுநாதருடைய மதப்போதனைகளிலும் இஸ்லாம் மதத் தலைவராகிய முகமது நபிநாயகம் அவர்களின் போதனைகளிலும்,
ரோமாபுரி மதநூல்களிலும் கடவுளின் பெயரால் உயிர்ப் பலியிடுவதைக் கண்டித்திருப்பதைக்
காணலாம்.
"நான் உயிர்ப்பலியை ஒழிப்பதற்கெனவே உலகில்
அவதரித்திருக்கின்றேன்" என்றும் "பாமர மக்களால் விக்கிரகத்தின் முன்படைக்கப்பட்ட
மாமிசம் இரத்தம் முதலியவற்றைக் கடவுள் ஏற்றுக்கொள்ளாமல் இருக்கின்றார்" என்றும்
ஏசுநாதருடைய அறிவுரைகளிலே காணப்படுகின்றன. அதுமட்டுமல்ல! விக்கிரகங்களின்
முன் படைக்கப்பட்ட மாமிசத்தைப் புசிக்கக்கூடாது எனக் கட்டாயப்படுத்தியுமுள்ளனர். அதனால்
பூசாரிகளாலும், மிருகங்களை விற்கும் வியாபாரிகளாலும் ஏசுநாதர் அடைந்த துன்பத்தை அளவிட்டுரைக்க
வியலாது.
இதுபோன்றே முகமதுநபி நாயகம் அவர்களும்,
"மக்களே நீங்கள் சமர்ப்பிக்கும் உயிர்பிராணிகளின் இறைச்சியும் இரத்தமும் எல்லாம்வல்ல
இறைவனை அடையா. உங்களுடைய, உண்மையான-மனப்பூர்வமான-பக்தியாகிய அன்பே கடவுளை அடைகின்றது"
என்று கூறியுள்ளார்.
ரோமாபுரி நூல்களில் ரோம் மதக்கடவுள் "என்னால்
படைக்கப்பட்ட என்குழந்தைகளாகிய ஊமைப்பிராணிகளை எதன் பொருட்டாக என் முன் பலியிடுகின்றீர்கள்!
நான் எருமை ஆடு முதலிய ஊமைப்பிராணிகளின் இரத்தத்தினால் மகிழ்ச்சி அடைவதில்லை"
என்று கூறியதாக விளக்கப்பட்டுள்ளது.
எனவே மேல் நாடுகளில் இத்தகைய மதபோதகர்களின் அறவுரைகளைச் சிரமேற்கொண்டு
அரசர்களும் பொதுமக்களும், கோயில்களைக் கொலைக்களமாக்கும் கொடும் வழிபாட்டை ஒழித்தனர்.
இன்றும் மாதாகோயில்களிலும், பள்ளிவாசல்களிலும் உயிர்ப்பலியைக்
காணமுடியாது.
"புண்ணிய பூமி"
எனப் பல்லோராலும் புகழப்படும் நமது நாட்டில் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் ஆதிபகவனால்
அஹிம்ஸா தர்மத்திற்கு விதை கோலப்பட்டது. பின்னர் மஹாவீரரும், புத்தரும் உலகெங்கும்
அன்பு நெறியைப் பரப்பினர். இவ்வளவு சிறந்த அறநெறி பிறந்த நாட்டில் தெய்வத்தின் பெயரால்
உயிர்ப்பலியிடும் தீய கொள்கை எவ்வாறோ புகுந்துவிட்டது.
சிறு தெய்வ வழிபாடும் உயிர்ப்பலியும் தோன்றிய வரலாறு
வரலாற்று ஆசிரியர்களின் ஆராய்ச்சிப்படி மக்கள் முதன்முதல்
காட்டுமிராண்டிகளாகவே வாழ்ந்தனர் என்பதையும், பெரும்பாலான மக்கள் காடுகளிலும் மலைகளிலும்
வசித்துவந்தனர் என்பதையும், அறிகின்றோம். அவ்வரலாற்றை அடிப்படையாக வைத்து ஆராய்ந்தால்
நமக்குப் பல உண்மைகள் தெளிவாகின்றன. காடுகளிலும், மலைகளிலும் வாழ்ந்துவந்த மக்கள் தங்கள்
தலைவனுக்குச் கட்டுப்பட்டு நடந்து வந்தனர். அவன் ஆணையை சிரமேற்கொண்டு செயலாற்றுவதே
தங்கள் கடமையாகக் கொண்டிருந்தனர்-உயிரைப் பற்றிக்கூட கவலைப்படுவதில்லை! தலைவன் ஆணையையே
அவர்கள் கடவுள் கட்டளையாகக் கொண்டனர்.
அத்தகைய தலைவன் இறந்துவிட்டால், அவனை நினைத்தற்கு அறிகுறியாக
ஒரு கல் நாட்டி, அவனை வழிபட்டுவந்தனர். அது அக்கால வழக்கமாகவும் இருந்தது. அதனை உலகம்
இன்றும் மறந்துவிடவில்லை. அச்சீரிய கொள்கை தமிழ் நூல்களில் "கால் கோள் விழா"
என்றும், இன்றைய நாட்களில் சிலை நிறுத்தல் என்றும் பலவிதமாக வழங்கப்பட்டு வருகின்றது.
இத்தகைய சிறந்த கொள்கையினின்றும் முளைத்ததுதான் "சிறுதெய்வ
வழிபாடு" காடுகளில் வசித்த மக்கள் தங்கள் தலைவன், தலைவிகளின் நினைவு கற்களுக்கு
ஆண்டுதோறும் விழா நடத்திச் சிறப்பியற்றினர். அன்று அவர்களுக்குரிய பல வெறியாட்டங்களையும்
நிகழ்த்தி வந்தனர். மேலும் தலைவனுக்குப் பிரியமான பலவித மிருகங்களின் ஊனையும், கள்ளையும்
படைத்துப் பலரும் சேர்ந்து உண்டு களித்தனர். இந்த நினைவுக் கொண்டாட்டமே பிற்காலத்தில்
தெய்வ வழிபாடாகவும், அக்கல்நாட்டுக் குறிகள் உருவங்களாக்கப்பட்டுத் தெய்வங்களாகவும்
மாறிவிட்டன. அவைகளே சிறு தெய்வங்களென நம்மிடையே காட்சியளிக்கின்றன.
காடுகளில் வசித்துவந்த வேடர்களும் குறவர்களும் தாங்கள் வழிபடும்
தெய்வங்களுக்கு உயிர்ப்பலி கொடுத்துவந்தனர் என்பதை நமது சங்ககால நூல்களிலும், சிலப்பதிகாரம்
போன்ற காவியங்களிலும் காணலாம். அந்நாட்களில் நரபலிகள் என மனதர்களையும் குழந்தைகளையும்
கூடப் பலியிட்டனர் என்பதை விளக்கக் கல்வெட்டுகளும் நூல்களும் இருக்கின்றன. இன்றும்
அம்மூட வெறியால் சில குற்றமற்ற குழந்தைகள் பலியிடப்படும் பரிதாபகரமான செய்தியையும்,
அதனால் தூக்குமேடையில் மடியும் பூசாரிகள், மந்திரவாதிகளின் மரணக்கோரத்தையும் அடிக்கடி
பத்திரிகைகளிலே பார்க்கின்றோம்.
காட்டு வழக்கம் நாட்டிற்குள் வந்த வரலாறு
இவ்வாறு காடுகளில் வளர்ந்து வந்த பழக்கவழக்கங்கள் நாடுகளில்
எவ்வாறு கலந்தன என்பதை அறிந்தால் ஆச்சரியம் உண்டாகும். காட்டுமக்கள் தங்கள் வாழ்க்கைக்கு
வேண்டிய பொருள்களைப்பெற பலவகைப் பழங்களையும், பச்சிலை மூலிகைகளையும், வேர்களையும் கிராம
நகரங்களில் விற்றுப் பிழைத்துவந்தனர். இன்னும் சிலர் தங்கள் தெய்வங்களைப்பற்றியும்,
அவைகளின் அற்புதச் சக்திகளைப்பற்றியும் பலவித பயங்கரமான வேடங்களுடன் பாடியும் ஆடியும்
மக்களைப் பயமுறுத்திப் பிச்சை ஏற்றுவந்தனர்.
உலகில் தோன்றும் காலரா, வைசூரி, பிளேக் முதலிய கொடிய விஷ வியாதிகளும்,
மழையின்மை, வறுமை முதலிய துன்பங்களுக்கு அத்தெய்வங்களின் கோபத்தாலேயே உண்டாகின்றன என்று
அவைகளைப் பலவித பூசைகளால் சாந்தப்படுத்தி, காட்டிற்கு நன்மை செய்யவே வந்துள்ளோம் என்றும்
கூறி மக்களுக்கு ஒரு வித அச்சத்தையும், ஆசையையும் தெய்வத்தின் பெயரால் உண்டாக்கிவிட்டனர்.
இதனால் பாமர மக்கள்-குறிப்பாகப் பெண் மக்கள்- அச்சங்கொண்டு
தங்களாலியன்ற அளவு தானியமாகவும் பொருளாகவும் அத்தெய்வங்களுக்குக் காணிக்கைகள் எனச்
செலுத்திவந்தனர், நாளாக, நாளாக அவைகளை வழிபடக்காடுகளுக்கு ஏகவும் ஆரம்பித்துவிட்டனர்.
இவ்வாறு நாட்டிலுள்ள பொதுமக்களுக்குக் காட்டு மக்களின் தெய்வங்களிடம்
நம்பிக்கையும், பக்தியும் வளரவே நாட்டிலும் பூசாரிகள் பலர் தோன்றிவிட்டனர். ஒவ்வொரு
கிராமத்திலும் நகரத்திலும் அத்தெய்வங்களை நிறுவினர். நாடெங்கும் சிறு தெய்வ வழிபாடுகளும்,
உயிர்ப்பலிகளும், நரபலிகளும் மலிந்து விட்டன. இவ்வரலாற்றை அறிய ஆராய்ச்சி நூல்களைத்
தேடிச் செல்லவேண்டியதில்லை. இத்தெய்வங்களின் கோயில்கள், அந்தந்த கிராமங்களின் புறம்பாகவோ
அல்லது எல்லையோரத்திலோ அமைந்திருக்கும் நிலையும், பூசாரிகள் தாங்கள் பாடும் பாட்டுகளிலே,
"கானகத்தில் வீற்றிருக்கும் கண்ணணூர் மாரிமுத்தே
ஈச்சங் குறக்கூடை இருக்கட்டும் பொன்னாலே
தாழங் குறக்கூடை தனிக்கட்டும் பொன்னாலே
ஏரிக்கரை மேடைவிட்டு எழுந்தருளவேணுமம்மா
எல்லைப்பதியை விட்டு இனிதாக வாருமம்மா?"
என்று பாடும் பாட்டுகளும் அவர்கள் உபயோகிக்கும் பயங்கரமான
வாத்தியங்களும், ஆவேசமாடும் மருளாளி ஆடிப்பாடி விழுந்தவுடன் "மலையேறிவிட்டது"
எனக்கூறும் வார்த்தையுமே இவைகள் காட்டு வழக்கங்கள் என்பதை மெய்ப்பிக்கப் போதுமான சான்றுகளாகும்.
இப்போலி சிறுதெய்வங்களும் உயிர்ப்பலியும் நாட்டுமக்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகி
மத சம்பந்தமாகவும் கலந்துவிட்டன. தேவிபாகவதம், காளி மகாத்மியம், பவிஷ்ய புராணம் முதலிய
நூல்களும் இயற்றப்பட்டன. அன்றே அறம் சாய்ந்தது! மறம் வளர்ந்தது! அதுமட்டுமா? தாழாத்
தமிழகம் தாழ்ந்தது!
தமிழ் இலக்கியங்களின் கண்டனங்கள்!
அறிவையும் அறநெறியையும் அடிப்படையாக வைத்து மக்கள் பண்பை வளர்க்கும்
திருக்குறள் போன்ற அற நூல்களுக்கு மாறாக இத்தகைய கோர சம்பவங்கள் மதத்தின் பெயரால் பரவி
வரவே, அறிஞர்களும், மதத்தலைவர்களும் கண்டிக்க ஆரம்பித்தனர். தமிழ்க் காவியங்களிலே தலைசிறந்த
காவியமாக விளங்கும் ஜீவக சிந்தாமணியின் ஆசிரியர்,
"மண்ணார மஞ்சளுரிஞ்சி மலர்சூட்டிக்
கண்ணார் மறியறுத்துக் கையாலுதிரத்தூய்
உண்ணீரேதேவீர் உவந்தென்பதிவ்வுலகம்
கண்ணார் கடந்தாய் நமனுலுகின் நான் மடங்கே"
என மக்களின் அறியாமைக்கு வருந்திப் பாடியுள்ளார்.
"சண்டகோபி தகவலின் தத்துவம்
கொண்ட கேள்வியுங் கூரறிவுமிலாத்
தொண்டர் கொண்டு தொழும் துருத்
தேவதை சண்டமாரி..."
என யசோதர காவிய ஆசிரியரும் வெறுத்துள்ளார்.
"மாமாங்க மாடல் மணற்குவித்தல் கல்லிடுதல்
தாமோங்கு உயர் வரைமேல் சாவீழ்தல்-காமங்கொண்டு
ஆடோடெருமை அறுத்தல் இவை உலக
மூடமென உணரபாற்று"
என அறநெறிச்சார ஆசிரியரும்,
"வேதவாதியர்கடம் வேள்வி வாய் விட்டவும்
பூததேவர்கட் கெனாப் புல்லியோர்கள் கொல்லவும்"
என சிவவாக்கியரும்,
"ஆடுவெட்டிப் பொங்கலிடும் ஆயன் பிடாரி யெல்லாம்
கூடுவிட்டுப் போமுயிரை ஞானத்தங்கமே
கொண்டு வந்து தாராதடி ஞானத்தங்கமே"
என ஒரு சித்தரும்,
"நலி தருசிறிய தெய்வ மென்றையோ நாட்டிலேபல பெயர்நாட்டிப்
பலிதர ஆடு, பன்றி, குக்குடங்கள் பலிக்கடா முதலிய உயிரைப்
பொலிவுறக் கண்டும் போகவுங்கண்டே புந்தி நொந்துன நடுக்குற்றேன்
கலியுறு சிறிய தெய்வ வெங்கோயில் கண்ட காலத்தெலாம் பயந்தேன்"
என இராமலிங்க அடிகளும்,
"மாடனைக், காடனை, வேடனைப் போற்றி
மயங்கும் மதியிலிகாள்"
என நமது அரசியல் கவிஞர் சுப்ரமண்ய
பாரதியாரும்,
"வேள்வியென்றோ உயிர்க்கொலை செய்தல்?
வேண்டல் என்றோ உயிர்ப்பலி செய்தல்?
கேள்வி யில்லை-கிளர்ச்சியு மில்லை!
கெட்ட கூட்டம் கிளைத்தல் அறமோ"
என்று தமிழ்ப் பெரியார் திரு.வி.க.
அவர்களும் சிறு தெய்வவழிப்பாட்டையும், உயிர்ப்பலியையும் வன்மையாகக் கண்டித்துள்ளனர்.
மஹாத்மா காந்தியடிகளின் அறிவுரைகள்:
அஹிம்ஸை, சத்தியம் ஆகிய இருபேரறங்களையும் அரசியலிலே புகுத்தி,
மக்கள் பண்பையும், நாட்டின் நலனையும் ஒருங்கே சீர் திருத்திவந்த மகாத்மா காந்தியடிகள்
தமது சத்தியசோதனையில் ஓரிடத்தில் இந்த உயிர்ப்பலியைப்பற்றிக் கூறுகையில் "அறிவு
நலன், தியாகஉணர்வு, பக்திக்காதல் இவற்றிற்குப் பெயர்பெற்ற நமதுநாடு இந்த உயிர்ப்பலிகளை
எவ்வாறு சகித்துக்கொண்டிருக்கிறதோ" என வருந்தி எழுதியுள்ளார்.
மேலும் திருநெல்வேலியைச் சார்ந்த பாளையங்கோட்டை ஆயிரத்தம்மன் கோயிலில் எருமைக்கடாக்களும் சூலாடுகளும் பலியிடுவது
வழக்கம். இக்கோரமான உயிர்ப்பலியை நிறுத்தவேண்டி பிரசாரத்திற்காக 1937ஆம் ஆண்டில் பாளையங்கோட்டைக்குச்
சென்றிருந்தேன். திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக மானேஜர் உயர்திரு. திருவரங்கம் பிள்ளை அவர்களும் அவர் தம் மனைவியார்
பண்டிதை நீலாம்பிகை அம்மையார்; அவர்களும் மற்றும்
அக்கழகப் பெரியோர்களும் எங்கள் பிரசாரத்திற்குப் பேராதரவு தந்தார்கள்.
அதனால் பல பொதுக்கூட்டங்கள் நடத்தி உயிர்ப்பலியைக் கண்டித்துவந்தோம்.
ஆனால் எதிர்ப்புப் பிரசாரமும் பலமாக ஏற்பட்டுவிட்டது. நல்லகாலமாக எதிர்ப்பு கற்போர்
மற்போராக இல்லாமல் பிடிவாதப்போராகவே வளர்ந்தது. இதை சமாளிக்க ஒரு எண்ணம் தோன்றிற்று.
உடனே மகாத்மா காந்தியடிகளுக்கும் அவ்வாண்டு நமது நாட்டின்
ராஷ்டிரபதியாய் விளங்கிய பண்டிட் ஜவஹர்லால்நேரு அவர்களுக்கும் இவ்வுயிர்ப்பலியைப்
பற்றி அப்பெரியோர்களின் கருத்துக்களை அறிவிக்குமாறு தந்தி கொடுத்தோம். அவ்விரு மாபெருந்
தலைவர்களும் பின்வருமாறு நமக்குத் தந்தி அனுப்பி உதவினார்கள்.
"Sacrifice of animals in the name of
religion is remnant of Barbarism"
"மதத்தின் பெயரால் உயிர்ப்பிராணிகளைப்
பலியிடுதல்
காட்டுமிராண்டித்தனத்தின் கையிருப்பு."
(ஒப்பம்) காந்தி.
(கையிருப்பு என்றால் நம்மிடமுள்ள அநாகரீகப் பழக்கவழக்கங்களில்
ஒழிந்தன போக மீந்திருப்பது.)
"I am grieved to learn that it is
proposed to offer animal sacrifice in temples. I think that such sacrifices are
Barbarous and they degrade the name of religion. I trust that the authorities
of the temple will pay heed to the sentiments of cultured People in this matter
and refrain from such sacrifices.
(sd.) JAWAHARLAL NEHRU.
"கோயில்களில் மிருகங்களைப் பலியிடுவதற்கு
ஏற்பாடு செய்யப்படுகிறது என்று கேட்க மிகவும் வருந்துகிறேன். அவ்வாறு பலியிடுதல் மிலேச்சத்தனமென்றும்
மதத்திற்கு இழுக்காகுமென்றும் நான் கருதுகிறேன். இவ்விஷயத்தில் கோயில் அதிகாரிகள் கற்றவர்களுடைய
மனப்பான்மையைக் கவனித்து அவ்வாறு பலியிடுவதை விலக்குவார்களென்று நான் நம்புகிறேன்."
(ஒப்பம்) ஜவஹர்லால் நேரு.
இவ்விரு அறிவுரைகளையும் ஆயிரக்கணக்கில் அச்சிட்டு வழங்கினோம்.
அதனால் பொதுமக்கள் சக்தியும், பெரியோர்கள், அதிகாரிகள் ஆதரவுகளும் எங்கள் பக்கம் திரும்பிவிட்டன.
கடைசியாக பாளையங்கோட்டை சப்மாஜிஸ்டிரேட் ஸ்ரீ D. விஸ்வனாதமுதலியார் அவர்கள் தலையீட்டால்
உயிர்ப்பலிகள் அறவே நிறுத்தப்பட்டு சுத்த பூஜையுடன் விழா நடைபெற்றது.
எனவே தெய்வத்தின் பெயரால் உயிர்பலியிடும் மூட வழக்கத்தை உலகெங்கும்
தோன்றிய அறிஞர் பெருமக்களும் மதத்தலைவர்கள் பலரும் அறவே வெறுத்துள்ளனர் என்பதை அறிந்தோம்.
இவ்வுண்மைகளை நன்கு ஆராய்ந்து, திருவாங்கூர் மகாராணியார்
சேதுலட்சுமிபாய் அம்மையார் அவர்கள் தமது சமஸ்தானம் முழுவதும் "எந்தக் கோயிலிலும்
உயிர்ப்பலியிடக்கூடா" தென 1930 ஆம் ஆண்டிலேயே சட்டமூலம் தடுத்துவிட்டார்கள்.
இன்று திருவாங்கூர் சமஸ்தான மக்கள் தங்கள் தெய்வங்களைத் தேங்காய் பழத்தால் வழிபடுகின்றனர்.
கோயிலா? கொலைக்களமா?
அஹிம்ஸாதருமம் பிறந்த புண்ணியபூமியில் மதத்தின்பெயரால் கொலை!
திருக்குறள் பிறந்த தமிழகத்தில் தெய்வத்தின் பெயரால் உயிர்ப்பலி! "தன்னுயிரைப்போல்
மண்ணுயிரைப்பார்" என்னும் பேரறம் எங்கே? "கொல்லா விரதம் குவலயமெல்லாம் ஓங்குக"
என்ற தாயுமானவரின் அன்புநெறி எங்கே? -எல்லாம் புறக்கணிக்கப்பட்டன. கோயிலுக்கு ஏகும்போது
கையிலே கூரியவாள்!-பக்கத்திலே ஆடு கோழிகள்! கோயிலெல்லாம் கொலைகளம்! இரத்த ஆறு! பிணக்குவியல்!
புலால் நாற்றம்! இதுதானா தெய்வவழிபாடு? மக்கள் சன்மார்க்கர்களாக விளங்க வேண்டுமென அறநூல்களெல்லாம்,
மக்களை அன்புநெறியில்-அறநெறியில் அழைத்துச் செல்கின்றன. பூசாரிகளோ சிறு தெய்வங்களின்
பெயரால் மக்களைக் கொலை நெறியிலே செலுத்துகின்றனர். கொலைமட்டுமா? மனிதனின் இயற்கைப்பண்பைப்
பாழ்படுத்தும் வகையில் சித்ரவதைகளும் நடைபெறுகின்றன. ஆடுகளை ஒடவிட்டுக் கம்பால் அடித்துக்
கொல்லுதல், ஆட்டுக்குட்டிகளைக் கடித்து இரத்தம் உறிஞ்சுதல், சூலாடுகளின் வயிற்றைப்
பிளந்து குட்டியுடன் பலியிடுதல், ஈட்டிகளால எருமைக் கடாக்களைக் குத்திக் கொல்லுதல்-போன்ற
பல தீமைகள் செய்யப்படுகின்றன. இவ்வநாகரீக செயல்களெல்லாம் தெய்வ வழிபாடாம்!
தெய்வங்களும் நோய்களும்
மேலும் மனித வர்க்கத்தையே புலால் உண்ணலைத் தவிர்க்க வேண்டும்
என அறங்கூறும் நாட்டிலே தெய்வத்திற்கு இறைச்சியையும், இரத்தத்தையும் படைப்பதை அனுமதித்திருப்பார்களா?
பகுத்தறிவால் ஆராய்ந்து பாருங்கள். தெய்வத்திற்குப் பலியிடுதல் பொருந்தாக் கொள்கை!
பொருந்தாக் கொள்கை!!-என்பது புலனாகும்.
நாம் தெய்வ வழிபாடு செய்வது எதற்காக? தெய்வத்தின் இணையிலாக்
குணங்களைப்போற்றி நம்மை நாமே புனிதப்படுத்திக் கொள்வதற்காகவேயாகும். இம்மாண்புறு கொள்கை
மாய்ந்து, நமது துன்பங்களையும், கோயில்களையும் நீக்கி, நம்மை இன்பத்தில் இருந்துமாறும்
வேண்டுமுறையில் தெய்வ வழிபாடு மாறிவிட்டது. அன்றே தேவாலயங்கள் வியாபாரப்பதிகளாகிவிட்டன.
எல்லாம் அவன் திருவிளையாடல் என்ற பழமொழி வளர்ந்தது. இக்கொள்கையையே வைத்துப் பார்த்தாலும்,
நமக்கு இன்பம் தருமாறு வேண்டுகின்றபோது, அத்தெய்வத்தின் முன்னே பிற உயிர்களைக் கொன்று
துன்பம் விளைவிக்கலாமா? தீமையைப் புரிந்துவிடடு நன்மையை அருளுமாறு வேண்டுவது அறிவுடைமையா?
தீமைக்குப் பதில் நன்மை விளையுமா? "தீயவை தீய பயத்தலால் தீயவை, தீயினும் அஞ்சப்படும்"
என்றார் நமது வள்ளுவக்கடவுள். ஆகவே, தீமைக்குத் தீமைதான் விளையும் என்பதை அறிந்தால்
தெய்வங்களுக்கு உயிர்ப்பலியிடுதல் மக்களின் இழிசெயலே என்பது தெளிவாகிற தல்லவா?
உலகில் தோன்றும் பிணிகளும்,
துன்பங்களும் தெய்வங்களால் வருவன அல்ல, அவைகள் சுகாதாரக் கேடுகளாலும், நமது ஆகாராதிகளாலுமே
வருகின்றன. காலரா, வைசூரி, முதலிய கொள்ளை நோய்கள் விஷப்பூச்சிகளின் வாயிலாகவே தோன்றுகின்றன.
நோய்களை அகற்றவேண்டி தக்க மருந்துகளையும் சுகாதார முறைகளையுமே கையாளவேண்டும். இவ்வித
செயற்கை சக்திகளையே பூசாரிகள் தெய்வங்களின் செயல்கள் என்றும் அவைகளுக்கு உயிருக்குயிர்க்
கொடுத்தால் நோய்கள் நீங்கிவிடுமென்றும் ஆசைக்காட்டிவிட்டனர். நாமும் நன்கு ஆராய்ந்து
பாராது, நோய்கள் தீரத் தெய்வங்களை வேண்டிக்கொள்ள ஆரம்பித்துவிட்டோம் நமது அறியாமையை
விளக்க ஒரு புலவர்,
"உங்கள் மக்களும் நீங்களும் நோய்பட
எங்கள் மக்களும் யாங்களும் என்செய்தோம்?"
என ஆடு கோழிகள் நம்மைப் பார்த்து அறிவுறுத்தியதுபோன்று பாடியுள்ளார்.
சட்டம் பேசுகிறது!
இதுவரை நாமறிந்த வரலாற்றுப் பேருண்மைகளாலும், மதப்பெரியோர்களின்
மாண்புரைகளாலும், இலக்கியங்களின் அறவுரைகளாலும், மகாத்மா காந்தியடிகள போன்ற பேரறிஞர்களின்
அறிவுரைகளாலும் தெய்வத்தின் பெயரால் உயிர்ப்பலியிடுதல் காட்டு மிராண்டித்தனமென்பதையும்
மதசம்பந்தமும் தெய்வசம்பந்தமும் அற்றவென்பதையும் தெளிவாக அறிந்தோம். இன்று சட்டமும்
அத்துறையிலேயே பேசுகிறது! ஆகவே இனி நமது கடமையை உணர்ந்து நடக்கவேண்டும். சட்டம் வெற்றிபெற
சகலரும் ஒத்துழைக்கவேண்டும். பலிவிலக்குச் சட்டம் நமது நன்மைக்காகவே பிறந்துள்ளதாகையால்
அதன் வழிநின்று தெய்வத்தின் பெயரால் நடைபெறும் உயிர்ப்பலி போன்ற பல கண்மூடி வழக்கங்களை
மண்மூடி, நாட்டில் அன்பையும், அறிவையும், நல்ல பண்பையும் வளர்த்து சிறந்து வாழ்வோமாக!
நன்றியறிதல்!
நமது நாட்டிற்கு இன்றிமையாததும் புரட்சிகரமானதுமான உயிர்ப்பலி
தடை மசோதவை சென்னை சட்டசபை இரண்டிலும் பிரேரித்த உயர்திரு. S.B. ஆதித்தன் M.L.C., அவர்களுக்கும்,
உயர்திரு. K. இராஜாராம் நாயுடு M.L.A. அவர்களுக்கும், சிறப்பு வாய்ந்த இம்மசோதாவை பேரன்புடன்
அனுமதியளித்துச் சட்டமாகவும் செய்தருளிய முன்னாள் முதல் அமைச்சர்களான உத்தமர் உயர்திரு.
ஓ.பி. இராமசாமி ரெட்டியார் அவர்களுக்கும், உயர்திரு. P.S. குமாரசாமி ராஜா அவர்களுக்கும்,
அந்நாள் அமைச்சர் குழுவினர்களுக்கும், சட்டசபை அங்கத்தினர்களுக்கும், சட்டத்தை அமல்
நடத்த அனுமதிதந்த நமது ஜனாதிபதி இராஜேந்திர பிரசாத் அவர்களுக்கும், அஹிம்ஸையின் பெயரால்,
குற்றமற்ற ஊமைப் பிராணிகளின் பெயரால், எங்கள் சபையின் சார்பாக நன்றிகலந்த வணக்கத்தைத்
தெரிவித்துக்கொள்ளுகின்றோம்.
திருவறம் வளர்க!
ஆ போர்ட் ஸெய்ன்ட் ஜார்ஜ் கெஜெட்
IV-B-வது பாகத்தின் சப்ளிமென்ட்
SUPPLEMENT TO PART IV-B OF THE
FORT ST. GEORGE GAZETTE
JANUARY 23, 1951.
மதராஸ்: செவ்வாய்க்கிழமை மாலை, 1951-ம் வருட ஜனவரி மீ 23
சென்னைப்பட்டணத்து சட்டங்கள்
MADRAS ACTS
சென்னை சட்ட நிரூபண சபையாரின் அடியிற்கண்ட சட்டமானது
1950-ம் வருடம் டிசம்பர் மீ 12-ம் தேதி யன்று ராஷ்டிரபதி அவர்களால் அங்கீகரிக்கப்பட்டு,
எல்லோருக்கும் தெரியும்பொருட்டு இதனால் பிரசித்தம் செய்யப்படுகிறது:-
ACT No. XXXII OF 1950
1950 வருடத்து - 32-வது சென்னை அரசாங்க சட்டம்
An Act to Prohibit the Sacrifice of Animals and Birds
in or in the precincts of Hindu Temples in the State of Madras.
சென்னை ராஜ்யத்திலுள்ள ஹிந்து கோயில்களிலாவது அவற்றின் சுற்றெல்லையிலாவது
மிருகங்களையும் பறவைகளையும் பலியிடுவதைத் தடுப்பதைக் குறித்த சட்டம்.
சென்னை ராஜ்யத்திலுள்ள ஹிந்து கோயில்களிலாவது அவற்றின் சுற்றெல்லையிலாவது
மிருகங்களையும் பறவைகளையும் பலியிடுவதைத் தடுப்பது யுக்தமாயிருக்கிறபடியால், இதனால்
விதிக்கப்படுவது என்னவென்றால்:-
சுருக்கமான பெயரும் வியாபகமும், செலவாணியாகத் தொடங்குவதும்,
1. (1) இச்சட்டத்தை மிருகங்களையும் பறவைகளையும் பலியிடுவதைத்
தடுப்பதைக் குறித்த 1950-ம் வருடத்திய சென்னப்பட்டணத்துச் சட்டம் என்று சொல்லலாம்.
2. இது சென்னை ராஜ்யம் முழுவதிலும் வியாபிக்கும்.
3. இப் பிரிவு உடனே செலவாணியாகத் தொடங்கும். இச்சட்டத்தின்
எஞ்சிய பாகம் இந்த ராஜ்ய அரசாங்கத்தார் போர்ட் ஸெய்ன்ட் ஜார்ஜ் கெஜெட்டில் விளம்பரம்
பிரசுரித்து அதன் மூலமாய் நியமிக்கக்கூடிய தேதியன்று செலவாணியாகத் தொடங்கும்.
அர்த்தம்
2. இச்சட்டத்திலே சங்கதியினால்ஆவது சந்தர்ப்பத்தினால்ஆவது
விரோதம்ஒன்றும் இராவிட்டால்:-
(a) யாதொரு கோயில் சம்பந்தமாய் "சுற்றெல்லை" என்பதில்,
யாதொரு கோயிலுக்குச் சமீபத்திலுள்ளவையும் அந்தக் கோயில் வழிபாடு சம்பந்தமான காரியங்கள்
அக்கோயிலுக்குள் நடந்தாலும் சரி, அதற்கு வெளியே நடந்தாலும் சரி, அந்தக் காரியங்களுக்காகச்
சாதாரணமாய் உபயோகப்படுபவையுமான நிலங்களும் கட்டடங்களும் அந்தக் கோயிலுக்குச் சொந்தமானவையாயிருந்தாலும்
சரி, இராவிட்டாலும் சரி, அப்படிப்பட்ட சகல நிலங்கள் என்பதும் கட்டடங்கள் என்பதும் அடங்கும்.
அதிலும் முக்கியமாய், அக்கோயிலின் மண்டபங்களுக்கும், பிராகரங்களுக்கும் முன் வெளிகளுக்கும்
பின் வெளிகளுக்கும் எந்தப் பெயர் வழங்கினாலும் சரி, அந்த மண்டபங்கள் முதலியவை என்பதும்,
கோயில் ரதம் சாதாரணமாகத் தங்கியிருக்கிற பூமி என்பதுங்கூட அதில் அடங்கும்.
(b) "பலி" என்பது யாதொரு தேவதையை சாந்தப்படுத்துவதற்காக
அல்லது அந்த உத்தேசத்துடன் ஒரு மிருகத்தையாவது பறவையாவது கொல்வது அல்லது ஊனப்படுத்துவது
என்ற அர்த்தமாகும்.
சென்னை 1927ம் வருடத்து 2-வது சட்டம்
(c) "கோயில்" என்பது ஹிந்து மத சம்பந்த மான நிதி
யேற்பாடுகளைக் குறித்த 1920ம் வருடத்திய சென்னப்பட்டணத்துச் சட்டத்தின் 9-வது பிரிவைச்
சேர்ந்த (12) பகுதியில் அர்த்தம் சொல்லப்பட்டபடியுள்ள ஒரு கோயில் என்று அர்த்தமாகும்.
கோயிலிலாவது அதன் சுற்றெல்லையிலாவது பலியிடக்கூடாதென்பது
(3) யாதொரு கோயிலிலாவது சுற்றெல்லையிலாவது எவரும் யாதொரு மிருகத்தையேனும்
பறவையேனும் பலியிடக்கூடாது.
பலிகொடுப்பது முதலியவற்றை முன்னிருந்து நடத்துவிக்கக்கூடாதென்பது
(4) எவரும் யாதொரு கோயிலிலாவது அதன் சுற்றெல்லையிலாவது ஒரு
பலியை
(a) முன்னிருந்து நடத்திவைக்கவோ முன்பிலிருந்து நடத்தி வைப்பதாகச்
சொல்லவோ கூடாது; அல்லது
(b) செய்யவோ செய்து வைப்பதாகச் சொல்லவோ கூடாது அல்லது,
(c) அதில் ஊழியம் செய்யவோ உதவி புரியவோ கலந்து கொள்ளவோ கூடாது
அல்லது ஊழியம் செய்வதாகவேனும் உதவி புரிவதாகவேனும் கலந்துகொள்வதாகவேனும் சொல்லவும்
கூடாது.
கோயிலிலாவது அதன் சுற்றெல்லையிலாவது பலிகொடுப்பதற்காக அதை
அனுமதிக்கக்கூடாதென்பது
(5) எவரும்___
(a) யாதொரு கோயிலுக்குள் அல்லது அதன் சுற்றெல்லையில் இருப்பதும்
(b) தமது சுவாதீனத்தில் அல்லது தம் மேல் விசாரணையிலிருப்பதுமான,
ஓரிடத்தில் யாதொரு பலி கொடுக்கப்படுவதைத் தெரிந்திருந்து அனுமதிக்கலாகாது.
தண்டனைகள்:
6. (1) எவராகிலும் 3-வது பிரிவில் கண்ட நிபந்தனைகளை மீறி நடந்தால்,
அவருக்கு முந்நூறு ரூபாய் வரையில் அபராதம் விதிக்கப்படும்.
(2)எவராகிலும் 4-வது பிரிவில் கண்ட நிபந்தனைகளை மீறி நடந்தால்
அவருக்கு முன்னூறு ரூபாய் வரையில் அபராதம் விதிக்கப்படும்.
No comments:
Post a Comment