Thravyasangraham - திரவிய சங்க்ரகம்




ஓம்

  திரவ்ய சங்க்ரகம்
     
        (மூலமும் உரையும்)


 மூலம்:

ஆசார்ய ஸ்ரீ நேமிசந்திர சித்தாந்த சக்ரவர்த்தி

             உரை ஆசிரியர்

ஆத்மபந்து T. S. பரதசக்ரவர்த்தி ஜெயின் சாஸ்திரி.

           வெளியிடுதல்

ஸ்ரீ குந்த குந்த கஹான் திகம்பர் ஜைன் தீர்த்த சுரஷா டிரஸ்ட்,
         பம்பாய்


----------------------

திரு. துரைராஜ் கம்பீரம் அவர்களால் வாட்ஸ் அப் குழுவில் 

தினமும் பகிர்ந்து வந்ததின் தொகுப்பு. 

-------------------------  

நூலாசிரியர்: 


  ஒன்பதாவது நூற்றாண்டில் 'தவலா' மற்றும் 'ஜயதவலா' எனும் சித்தாந்த நூல்களுக்கு இரு உரை நூல்கள் வடிக்கப்பட்டன. அக்காலத்தில் இவ்விரு உரைகளும் மக்களால் பரவலாக போற்றப்பட்டன. ஆயினும் கால கிரமத்தில் இவ்வுரைகள் மக்களுக்குக் கடினமாகக் காணப்பட்டன. இந்நிலையில் இந்நூல்களின் மொத்த மையக் கருத்துக்களை ஒன்று திரட்டும் அரிய பணியை ஆசார்ய நேமிசந்திரர் மேற்கொண்டு பெரும் வெற்றியும் கண்டார். "சித்தாந்த சக்ரவர்த்தி" என்பது இவரது சிறப்புப் பெயர் (பட்டப் பெயர்)

     இக்கருத்து ' கோமடசார கர்மகாண்ட ' நூலில் கீழ் கண்டவாறு காணப்படுகிறது.

  " ஜஹ சக்கேண ய சக்கீ, சக்கண்டம் சாஹியம் அவிக்கேண !

  தஹ  மஇ- சக்கேண மயா, சக்கண்டம் சாஹியம் சம்மம் !!

   "சக்ரவர்த்தி தன் சக்ரரத்தினத்தின் பலத்தால் ஆறு கண்டங்களாக விளங்கும் பாரத நாட்டை எவ்வகையிலும் பாதகமின்றி தன் வயப்படுத்திக் கொள்வதைப்போல நான் (நேமிசந்திரர்) சித்தாந்த பேரறிவு பலத்தால் 'சட்கண்டாகமம்' எனும் ஆறு பகுதி சித்தாந்த நூல்களை வயப்படுத்தியுள்ளேன்".

  ஆசார்ய வீரசேன சுவாமிகள் காலத்திலிருந்தே சித்தாந்த நூல்களை அறிந்தவர்களைச் ' சித்தாந்த சக்ரவர்த்தி ' என்று போற்றுவது வழக்கமாக இருந்து வந்துள்ளது.  இந்த வரிசையில் ஆசார்ய நேமிசந்திரரும் இச்சிறப்புப் பெயரைப் பெற்றுத் திகழ்கிறார். ஆகவே, இவர் தவல சித்தாந்தத்தைக் கடைந்து  'கோமடசார' நூல்களையும், ஜயதவலா உரையைக் கடைந்து 'லப்திசார ' நூலையும் படைத்தருளியுள்ளார்.


வாழ்க்கை : 

   ஆசார்யர் நேமிசந்திரர் தேசிய கணத்தவர். இவர் அபயநந்தி, வீரநந்தி மற்றும் இந்திரநந்தி ஆகியோரை குருவாக ஏற்றுப் போற்றியுள்ளார். இதற்கான சான்று கோமடசார கர்மகாண்ட  நூலில் காணப்படுகிறது.


   இத்தகு சிறப்புமிக்க குரு பரம்பரையில் உதித்த ஆசார்ய நேமிசந்திரரின் பட்ட  சீடனாக விளங்கியவன் 'சாமுண்டராயன் '. இவன் கங்க வமிசத்து அரசன் 'இராஜமல்லனின்' பிரதான   அமைச்சனாகவும் சேனாதிபதியாகவும் விளங்கினான். மேலும் பல போர்க்களங்களில் வியக்கத்தகு வெற்றிவாகை சூடியவன். ஆகவே இவன் குறிப்பாக 'வீரமார்த்தாண்டன் ' (வீரத்தில் சூரியனுக்கு ஒப்பானவன்) எனப் போற்றப் பட்டான்.


 ஆசார்ய நேமிசந்திரரும் கோமடசார நூலில் சம்யக்த்வரத்ன நிலையன்  குணரத்னபூஷன், சத்தியயுதிஷ்டிரன், தேவராஜன் என்றெல்லாம் அவனைப் புகழ்ந்துள்ளனர்.

     விருஷபதேவர் மகன் பாகுபலி கடுந்தவமியற்றி முக்தி பெற்றதன் நினைவாக பரதசக்ரவர்த்தி ஒரு சிலையை அவருக்கு வடித்து பிரதிஷ்டை செய்தான். அது குக்குட சர்ப்பங்களால் (கோழிப்பாம்பு) சூழப்பட்டு விட்டதால் எவரும் அங்கு அணுக முடியாத நிலை ஏற்பட்டது. எனவே சாமுண்டராயன் அந்த 'குக்குடஜிநன்' (பாகுபலி) நினைவாக தென்னக சிரவணபெளிகுள நகரில் 'பாகுபலி' சிலைக்கு பிரதிஷ்டை செய்து மகிழ்ந்தான். இன்றும் பாகுபலி பகவானுக்கு 'குக்குடஜிநன்' என்ற பெயர் வழங்குகிறது. மேற்கண்ட கருத்து கோமடசார கர்ம காண்டத்தில் தெளிவாக உள்ளது. விந்திய மலையில் வீற்றிருக்கும் 'பகவான் பாகுபலி' யை சர்வார்த்த சித்தி தேவர்களும் வணங்கிப் போற்றியதாகவும் கூறப்படுகிறது.

     இப்படிப்பட்ட ஆசார்ய நேமிசந்திரரின் ஆரம்பகால வாழ்க்கை, தாய், தந்தை, வமிசம் பற்றிய செய்திகள் கிடைக்கவில்லை என்றாலும் அவரது பிறப்பிடம் தென்னகம் என்பதே பெரும்பாலோர் கருத்தாகும். தென்னக சிரவண பெளிகுளத்திற்கு வருகை தந்து இந்நகரையே தனது தர்மோபதேசத்திற்கு பிரதான ஷேத்திரமாக அமைத்துக் கொண்டது மட்டுமே தெளிவாகிறது.

காலம் :

திராவிட தேசத்து சாமுண்டராயனுடன் ஆசார்ய நேமிசந்திரருக்குத் தொடர்பு விக்கிரம சகாப்தம் 735 ல் ஏற்பட்டிருக்கிறது என்பது உறுதி.

    நேமிசந்திர ஆசார்ய தேவர் சித்தாந்த சாஸ்திரங்களில் தன்னிகரற்று விளங்கியதோடு கணித சாஸ்திரங்களிலும் வல்லுனராகத் திகழ்ந்தார். தவிர ஜோதிட சாஸ்திரத்திலும் நல்ல தேர்ச்சி இருந்ததாக தெரிய வருகிறது. சாமுண்டராயன் போன்றவர்கள் இவரது பரம பக்தராக இருந்தார் என்றால் இவர் பெருமையை,  தனித்தன்மையை விளக்கவும் வேண்டுமோ ? திகம்பர ஜைன சமூகம் இன்றும் இம்மகானைப் பெரும் மதிப்புடன் போற்றிப் புகழ்கிறது.



நூல்கள் : 

    இவர்  இயற்றிய நூல்கள் : 1. கோமடசாரம்  2. திரிலோகசாரம் 3. லப்திசாரம் 4. க்ஷபணசாரம் 5. திரவ்ய சங்க்ரகம்.


   1. கோமடசாரம் :  இது ஜீவகாண்டம், கர்மகாண்டம்  என இருவகைப்படும்.


ஜீவகாண்டம் : ஜீவனுடைய அசுத்தநிலை, உணர்வுகள், ஜீவன்களின் பேதம் மற்றும் அவற்றின் இயல்புகள் நுணுக்கமாக வர்ணிக்கப்படுகின்றன.

கர்ம காண்டம் : வினை, அவற்றின் மாற்றம், உதயம் , பந்தம் முதலிய பேதாபேதங்களை விளக்குகிறது.


இவ்விரு நூல்களுக்கும் நான்கு உரைகள் காணப்படுகின்றன.



1. ஸ்ரீ சாமுண்டராயன் வடித்த கர்னாடக விருத்தி்.

2. ஸ்ரீ கேசவவர்ணி எழுதிய வடமொழி உரை.

3. ஸ்ரீ அபயசந்திர சித்தாந்த சக்ரவர்த்தி இயற்றிய 'மந்த பிரபோதினி' உரை.

4. பண்டிட் டோடர்மல் இயற்றிய 'சம்யக்ஞான சந்திரிகா'  ஸ்ரீ பண்டிட் கூப்சந்திர சாஸ்திரி அவர்களின் இந்தி உரையுடன் வெளியிடப் பட்டுள்ளது.


    இவை ஜைன சித்தாந்த நூல்களில் தலை சிறந்தவை. உயர் பரீட்சைகளில் இவை இடம் பெற்றுள்ளன.  ஜீவகாண்டம் 734 காதைகள், கர்ம காண்டம் 962 காதைகள் கொண்டவை.


2. திரிலோக சாரம் : இது 1018 காதைகளைக் கொண்டது. இது கரணானு யோக நூல்.  இதற்கு ஆதாரம் திலோயபண்ணத்தி, தத்வார்த்தவார்த்திகம்.  இதில் மூவுலக வர்ணனைகள் விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன.

3. லப்திசாரம் : இதில் 649 காதைகள் உள்ளன ; இது தர்ஸனலப்தி சாரித்ரலப்திகளை விளக்குகிறது.

4. க்ஷபணசாரம் : 653 காதைகள் இதில் உள்ளன. இது வினைகளைக் கெடுக்கும் வழிமுறைகளை விளக்குகிது.


5. ப்ருஹத்திரவிய சங்கிரகம் : தாரா நகரைத் தலைநகராகக் கொண்டு மாலவ நாட்டை  ஆண்டுவந்த கலிகால சக்ரவர்த்தி போஜதேவ மன்னன் சம்பந்தி மகாமண்டலேஸ்வரன் ஸ்ரீபாலன்; அவனுடைய  'ஆஸ்ரம' எனும் நகரில் ஸ்ரீமுனிசுவிரத தீர்த்தங்கரர்  ஜிநாலயத்தில் சுத்தாத்ம திரவியானுபவத்தால்  தோன்றக்கூடிய ஆன்மசுகம் எனும் அமுத சுவைக்கு மாறான நரகம் முதலிய துன்பங்களினின்றும் பயந்தவன். பரமாத்ம பாவனையால் தோன்றும் ஆன்ம சுக இன்பத்தைப் பருக ஆர்வம் கொண்டவன். பேத, அபேத இரத்தின திரயத்தை விரும்பிப் போற்றக் பூடியவன். அரச கஜானாவின் பொறுப்பான  பொறுப்பாளன், இதுபோன்ற பல அரசாங்க உயர் அதிகாரிகளாக விளங்கிய  'சோமன்' எனும் இராஜ சிரேஷ்டி காரணமாக ஸ்ரீ நேமிசந்திர  சித்தாந்த தேவர் 26 காதைகள் கொண்ட  லகு திரவ்ய சங்க்ரகம் (சிறிய திரவ்ய சங்க்ரகம்) இயற்றி அருளினார்.  பின்னர் விரிவாக தத்துவ ஞானம் பெற விரும்புவோரை மனதிற்கொண்டு பிருஹத் திரவ்ய சங்க்ரகம் எனும் நூலை இயற்றினார்.

இஃது 58 காதைகளைக் கொண்ட ஒரு சிறுநூல் என்றாலும் 'பொருள் நோக்கில் அரியதொரு பெரிய நூல்' என்பதில் ஐயமில்லை.

   முதல் 27 காதைகளில் ஆறு பொருள்கள், ஐந்து அத்தியாயங்கள் விளக்கப் படுகின்றன. அடுத்த 11 காதைகள் ஏழு தத்துவங்கள், ஒன்பது பதார்த்தங்கள் விளக்கம் கொண்ட இரண்டாவது அதிகாரம், பின்னர் 20 காதைகளில் மோஷமார்க விளக்க முறையை மையக் கருத்தாகக் கொண்டு விளக்கும் மூன்றாவது அதிகாரம்.

    முதல் அதிகாரத்தில் 18 காதைகளில் 'ஜீவ' திரவியமும், அடுத்த 8 காதைகளில் 'ஆஜீவ' திரவியமும், அடுத்த ஐந்து காதைகளில் ஐந்து அத்திகாயங்கள்  நிச்சய நயம் மற்றும் வியவகார நயம் ஆக இரு நயநோக்கில் தெளிவாக விளக்கப் பட்டுள்ளன. இப்படி முதல் அதிகாரம் 3 உட்பிரிவுகளை உடையதாக விளங்குகிறது.

   இந்நூலின் சிறப்பு அம்சம் என்னவென்றால் ஒவ்வொரு தத்துவத்தையும்  நிச்சய நய  வியவகார நய அடிப்படையில் விளக்கப்படுகிறது. இதனால் தத்துவங்களை அடிப்படையிலிருந்தே இரு நய நோக்கில் அறிந்து கொண்டாலன்றி தத்துவ ஞானம் உண்மை நிலையைக் கொண்டதாக இருக்க முடியாது. ஆகவேதான் ஆசார்ய தேவர் ஆரம்ப கட்டத்திலேயே இரு 'நய' நோக்கில் விளக்கும் நூலை படைத்துத் தந்துள்ளார்.

    சந்தர்ப்பவசமாக இங்கு ஒன்றை தெளிவுபடுத்த நான் கடமைப் பட்டுள்ளேன். அதாவது பூஜை முதலிய புறச் செயல்களையும் நாம் 'வியவகாரம்' என்றுதான் குறிப்பிடுகிறோம். இந்தப் புறச்செயல் நாட்டுக்கு நாடு, மாநிலங்களுக்கு மாநிலம், ஏன் சில சமயம் மாநிலங்களுக்குள்ளேயும் பிரதேச வேறுபாட்டால் வேறுபடுவதைக் காண்கிறோம். இஃது அந்தந்த நாட்டின்/ மாநிலத்தின் சூழ்நிலையை ஆதாரமாகக் கொண்டது. உதாரணமாக வடமாநில ஜைனர்கள்  'சுரைக்காய்' சாப்பிடுகிறார்கள். தென்னக ஜைனர்கள் அதை தொடுவதுகூட கிடையாது. வடக்கே சிலர் பூணூல் அணிகின்றனர், சிலர் அணிவதில்லை. ஆனால் தென்னக மக்கள் தவறாமல் பூணூல் அணிகின்றனர். இவ்வாறு பல வேறுபட்ட, மாறுபட்ட புறச்செயல்களைக் காண்கிறோம். இதனால் தத்துவ ஞானம் பாதிக்கப் படுவதில்லை. தவிர இவை புறச் செயல்கள். ஆகவே இதை 'வியவகாரம்' என்றுதான் குறிப்பிடுகின்றோம்.


   'வியவகார நயம்' தத்துவங்களை அறிவதற்கான ஒரு சாதனம். இது தத்துவங்களை தற்கால நிலையில் ஆராய்ந்து அறியும் சாதனம். 'வியவகாரம்' எனும் புறச் செயல் வேறு ; வியவகார நயம் என்பது வேறு. இரண்டுக்கும் உள்ள உண்மை அறியப்படும் போதுதான் மயக்கம் தெளிய முடியும். இல்லையேல் "பித்த சுரத்தால் பாதிக்கப் பட்டவனுக்கு இனிப்பான பாலும் கசக்கும்" என்ற பழமொழியை நினைவிற்கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை. எனவே வியவகார நயம், வியவகாரச் செயல் இவற்றின் வேறுபாட்டைப் புரிந்துகொண்டு, ஞானம் பெற்று பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன். இத்திசையில் இந்நூல் தத்துவ ஆர்வம் கொண்ட பவ்யர்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் என நம்புகிறேன்.

     'வெறும் சடங்குகள்' ஒரு சமயத்தின் உண்மைகளை உணர்த்த முடியாது. ஏனென்றால் அவை நாட்டுக்கு நாடு, மனிதனுக்கு மனிதன் மாறுபடுகின்றன. ஆகவே அவை தத்துவங்களை அறிய எப்படி சாதனமாக இருக்கமுடியும்? இந்த உண்மையை புரிந்துகொண்ட ஆசார்ய தேவர் 'புறச் செயல்கள்' பற்றி தொட்டுக் கொள்ளாமலே 'நய' நோக்கில் நமக்கு உணர்த்தி மயக்கத்தை தெளிய வைத்துள்ளார். ஆகவே ஒவ்வொரு ஜைனனும் இந்நூலை வாங்கிக் கருத்துணர்வோடு பயின்று பயன்பெற தவறமாட்டார்கள் என்ற அசையா நம்பிக்கையுடன் உள்ளேன்.

    "தத்துவஞான விஹீனானானாம நைர்க்ரந்த மபி நிஷ்பலம்"  அதாவது தத்துவ ஞானம் இல்லாத துறவறங்கூட வீண் என்கிறார் வாதிராஜ சுவாமிகள். இதனால் தத்துவ ஞானத்திற்கு எவ்வளவு பெருமை உள்ளது என்பதை அவரவர்  ஊகத்திற்கே விட்டு விடுகிறேன்.
     

-----------------------------------------


           முதல் அதிகாரம்




ஜீ வமஜீவம் தவ்வம், ஜிநவரவஸஹேண
         ஜேணநித்திட்டம் !
தேவிந்த விந்த வந்தம், வந்தே தம் ஸவ்வதா ஸிரஸா !!  (1)



      இது கடவுள் வணக்கமும், அதிகாரமும் கூறுகிறது.



(ஜேண) எந்த (ஜிநவர வஸஹேண) ஜிநருக்குள் உயர்நதவராகிய ஆதி பகவன், (ஜீவம்) உயிர்ப்பொருளையும், (நித்திட்டம்) கூறினாரோ, (தேவிந்த விந்த வந்தம்) தேவ இந்திரர்களால் வணங்கப்பட்டாரோ, அந்த தீர்த்தங்கர பரம தேவனை, (ஸவ்வதா) எப்போதும், (ஸிரஸா) தலையால் (வந்தே) வணங்குகிறேன்.


        மெய்ப்பொருளை உரைத்தவரும், தேவ இந்திரர்களால் வணங்கப்பட்டவரும் ஆகிய  ஆதிபகவனை நானும் வணங்குகிறேன் என்பதாம்.     

               
                   


     கடவுள் வணக்கம் கூறுபவர் நூலாசிரியர் நேமிச் சந்திர சித்தாந்த சக்கரவர்த்தி, தான் எழுதப்புகும் நூல் மெய்ப் பொருள் இயல்பைப் பேச இருப்பதால், உயிர், உயிரில்லாப் பொருள்களை விளக்கிய பகவன் என்று குறிப்பிட்டார். எனவே கடவுளைத் தொழுவதற்குக் காரணம் காட்டினார். கடவுள் எத்தகையவர் ? எளியவராகிய தன்னைப் போன்றவர்களால் மட்டுமல்லாது இன்ப வாழ்க்கையில் திளைக்கும் இந்திரர்களாலும் வணங்கப்படுபவர் அவர். அதனால் 'தேவேந்திரர் வணங்கிய' என்றார். அவர் யார் ? அவர் ஜினர்களுள் சிறந்தவர் - விருடப தேவர் அல்லது தீர்த்தங்கரர். 'ஜிவரஸஹேண ' என்ற தொடர் 'ஜிநர்களுள் சிறந்த விருடபர் 'என்றும் , 'ஜிநர்களுள் சிறந்தோர் ' (தீர்த்தங்கரர்) என்றும் இரு பொருள்படும்படி அமைந்துள்ளது.

      ' ஜிநர் 'என்ற சொல்  ' ' ஜிந ' பதவியை உடையவர் என்று பொருள்படும். எதிர் காலத்தில் அப்பதவியை அடையக் கூடியவரையும், அப்பதவியை அடைந்தவரையும் ஒருசேர ' ஜிநர் 'என்று குறிப்பது மரபு.

      அரசனாகப் போகின்றவனை ' அரசன் ' என்று முன்னரே அழைப்பது போல, நான்காம் குணத்தானம் முதல் பன்னிரண்டாம் குணத்தானம் வரை உள்ளவர்கள் ' ஜிந'பதவியை அடையும் தகுதி உடையவர் ஆவர். ஆதலால் அவர்களையும் 'ஜிநர் 'என்று சுட்டுவது மரபு. அதேபோல 13 -ஆம் குணத்தானத்தில் இருப்பவர் அப்பதவியை அடைந்தவர் ஆதலால் அவரையும் 'ஜிநர்'என்று சுட்டுவர். ஜிநர்களுள் சிறந்தவர் தீர்த்தங்கரர். ஆதலால் தீர்த்தங்கரர்களுக்குப் பொதுவாக வாழ்த்துக் கூறப்பட்டது என்றோ அல்லது 24தீர்த்தங்கரருள் முதலாமவரான ஆதி பகவன் என்னும் விருடப தேவருக்கு வாழ்த்துக் கூறப்பட்டது என்றோ பொருள் கொள்ளலாம்.



ஜீவன் : உணர்வு உடையது, உயிர்.

அஜீவன் : உணர்வு இல்லாதது, உயிர் இல்லாதது.

திரவியம் : எந்தப் பொருளிடத்து தோற்றம், மறைவு, நிலைபேறு மூன்றும் காணப்படுகிறதோ அது 'திரவியம்' எனப்படுகிறது.

குணத்தானம் : ஓர் ஆன்மா முக்தி நோக்கி முயலும்போது அவ்வான்மா விளக்கம் பெறும் பாங்கு பதினான்கு நிலைகளாகப் பகுக்கப்பட்டுப் பேசப்படுகிறது. அதனை 'குணத்தானம்' என்பர். விளக்கம் பெறும், நிலையாவது கர்மங்களது நீக்கத்துக்குத் தக்கவாறு ஆன்மாவின்கண் தோன்றும் தூய்மை நிலை (விசுத்தி).

ஜிநர் : 'ஜிநர் ' என்ற சொல்லுக்கு 'வெற்றியாளர் 'என்று பொருள். காம, வெகுளி, மயக்கங்களைவென்று கர்ம பந்தத்தினின்று, விடுபட முயல்பவரை 'ஜிநர் 'என்பர்.

இந்திரர் : பவன இந்திரர் 40, வியந்தர இந்திரர் 32,கல்ப இந்திரர் '24, சோதிச இந்திரர்  (சூரிய - சந்திரன்) 12,நர இந்திரன், மிருக இந்திரன் ஆக 100பேர்,இவருள் பாதி இந்திரர், பாதி பிரதி இந்திரர்  ஆவர்.


ஜீவோ உவஓகம்வோ, அமுத்தி கத்தா ஸதேகபரிமாணோ
போத்தா ஸம்ஸாரத்தோ  ஸித்தோ ச விஸ்ஸஸோட்டகயீ !!  (2)


    இது உயிரின் பண்புகளைக் கூறுகிறது.


   (ஸோ)அந்த உயிர், (ஜீவோ) உணர்வும், (உவஓகமஓ) உபயோகமும்,  (அமுத்தி) உருவமின்மையும், (கத்தா) வினை முதலாம் தன்மையும், (போத்தா) வினையைத் துய்த்தலும், (ஸம்ஸாரத்தோ) பிறவி எடுத்தலும், (ஸித்தோ ச) சித்த நிலை அடைதலும் பெற்றிருப்பதோடு, (விஸ்ஸஸா) இயல்பாகவே, (உட்டகயீ) மேல்நோக்கி எழும் இயல்பும் உடையது.


     உணர்வும், உபயோகமும், உருவமின்மையும், வினை முதலாம் தன்மையும், தான் எடுத்த உடல் அளவு வரம்புட்பட்டு அமைதலும், நல்வினை தீவினை பயன்களைத் துய்ப்பதும், பிறவியில் உழலுதலும், சித்த நிலையை அடைதலும், மேல்நோக்கிச் செல்லுதலும் ஆகிய இவை ஒவ்வொரு உயிரிடத்தும் காணப்படும் இயல்புகளாம்  என்பதாம்.


உணர்வுடைமை : உயிர் தன்னையும், பிற பொருள்களையும் அறியவல்லது; என்றும் அழியாத தூய ஞானகுணம் ( 'பாவ ப்ராணன் ' ) உடையது. அனாதி கால வினைக்கட்டின் காரணமாக மெய், வாய், கண், மூக்கு, செவி, உடலாற்றல் (காய சக்தி), மொழியாற்றல் (வசன சக்தி), மன ஆற்றல், உயிர்த்தல் (சுவாசித்தல்), ஆயுள் ஆகிய பத்து 'திரவிய பிராணன் ' உடையது.

உபயோகம் : செயலாற்றல் இயல்பு. உயிர் ஒப்பற்ற தூய கேவல ஞானம், கேவல தர்சனம் (அதாவது ' ஞான பயோகம்'  'தர்சனோ பயோகம்' ) எனும் இரண்டுச் செயல்களை ( உபயோக) இயல்பாக உடையது. ஆனால் பிறவியில் உழலுவதால் மறைக்கப்பட்ட ஞான, தரிசனங்களை உடையது.

உருவமற்றது : உயிர் இயல்பாகவே உருவமற்றது; பொறிகளுக்குப் புலப்படாதது.

வினைமுதல் - செயலுரிமை : உயிர் தன்னுடைய இயல்பான ஞான, தர்சன குணங்களுக்கே காரணன். ஆனால், வினைகளுடன் கூடியிருப்பதால் மனம், வாக்கு, உடல் செயல்களுக்குக் காரணமாகி நல்வினை, தீவினைகளுக்கும் தானே உரியோனாக - காரணமாக விளங்குகிறது.

உடலளவு அமைதல் : தான் அடைந்துள்ள உடல் அளவில் உயிர் பரந்துள்ளது. குடத்தில் உள்ள விளக்கின் ஒளி குடத்திற்குள்ளே ஒளிர்கிறது. அதனை வெளியில் வைத்தால், பரந்த அளவிற்கு ஒளிரும். அதுபோன்றே, ஆன்மா தான் பெறும் உடலளவில் பரந்து காணப்படும் இயல்புடையது.

துய்த்தல் : நற்செயல், தீச்செயல்களால் உண்டான இன்ப துன்பங்களைத் துய்க்கும் (அனுபவிக்கும்) இயல்புடையது உயிர்.

பிறவி எடுத்தல் : தான் கட்டிக்கொண்ட வினைக் கட்டால் பிறவியில் உழலும் இயல்புடையது உயிர்.

சித்த நிலை : வினைகளின்றும் விடுபட்ட நிலையில் இயல்பாக இருத்தலாகிய சித்த நிலையை அடையும் இயல்புடையது உயிர்.


மேலெழுதல் : உயிர் என்றும் மேல்நோக்கிச் செல்லும் தன்மையுடையது. ஆனால், வினைக் கட்டின் காரணமாக மேலும், கீழும், இடையிலும் செல்லுகிறது. வினைக்கட்டு விலகினால் மேல்நோக்கிச் செல்லும்.


        உயிரிடத்துக் காணப்படும் ஒன்பது இயல்புகளை இங்கே சுட்டியுள்ளார். இந்த ஒன்பது இயல்புகள் குறித்து பின்னர் [4 - 14 ] தெளிவாக விளக்குகிறார். ஆன்மாவின் இயல்புகள் குறித்து பலவாறான கருத்துகள் கூறப்படுகின்றன. ஆன்மா குறித்து ஜிநர் கருத்து என்ன ? சாங்கியர், நையாயிகர், மீமாம்சகர், சாருவாகர், சதாசிவர், பௌத்தர் ஆகியோர் உயிருக்குக் கூறும் இயல்புகளினின்றும் ஜிநர் கூறும் இயல்பு எப்படி மாறுபட்டது என்பதைச் சுட்டவே இந்த ஒன்பது பண்புகளை எடுத்துப் பேசி இருக்கிறார் என்று உரையாசிரியர் பிரம்மதேவர் குறிப்பிடுகிறார்.
              
          காதை


                 (3)

திக்காலே சதுபாணா, இந்தியம் பலமாவு, 
        ஆணபாணோயா !
வவஹார் ஸோ ஜீவோ, ணிச்சய ணயதோ து சேதணா ஜஸ்ஸ  (3)


       இது உயிரின் தனித்தன்மை கூறுகிறது.

(வவஹாரா) வியவகார நயத்தினால் (ஜஸ்ஸ) எதனிடத்து, (திக்காலே) மூன்று காலங்களிலும், (இந்திரியம்) பொறிகள், (பலம்) ஆற்றல், (ஆவு) ஆயுள், (ஆணபாணோ) உயிர்ப்பு, (மூச்சு விடுதல்) ஆகிய, (சதுபாணா) நான்கு பிராணன்கள் காணப்படுகின்றனவோ, (ஸோ) அது, (ஜீவோ) உயிர்;  (து) மேலும், (ணிச்சய ணயதோ) உண்மை நயத்தால், (ஜஸ்ஸ) எதனிடத்து, (சேதனா) அறிவு உணர்வு காணப்படுகிறதோ,(ஸோ) அது (ஜீவோ)உயிர் ஆகும்.


       மூன்று காலத்தில் பொறிகள், பலம், ஆயுள், உயிர்ப்பு (சுவாசம்) ஆகிய நான்கு பிராணன்களைப் பெற்று வாழ்வதனை வியவகார நயத்தால் சுட்டும்போது உயிர் (ஜீவன்) என்று கூறுவர். நிச்சய நயத்தால் சுட்டும்போது ஞான (சேதனா) குணம் உடையது உயிர் (ஜீவன்) என்று கூறுவர்.


    பொறி முதலானவற்றைப் பெற்றிருப்பது உயிர்என்பது கருத்து.

       ஒன்பது இயல்புகள் உயிர்களிடத்தில் காணப்படும் என்று முன்னர் (காதை - 2ல்) கூறினார். அந்த ஒன்பது இயல்புகளையும் ஒவ்வொன்றாக விளக்க எடுத்துக்கொண்டு முதலில் பிராணன் இயல்பு கூறுகிறார். அப்படிக் கூறும்போது இரண்டு வகையான விளக்கம் தருகிறார். ஒன்று 'வியவகார' நய (உலகியல்) விளக்கம், மற்றொன்று 'நிச்சய' நய (உண்மை) விளக்கம்.

      ' நயம் ' என்ற சொல்லுக்குக் குறிப்பிட்டுச் சொல்லுதல் என்று பொருள். ஒவ்வொரு பொருளிடத்தும் பல பண்புகள் (குணங்கள்) காணப்படும். அப் பண்புகளில் ஏதாவது ஒன்றினைச் சொல்லுதல் 'நயம்' எனப்படும்.


 'பிறிதினை விலக்கலும் மாட்டலும்
இன்றாய்
ஒருபொருள் உரைப்பது சுட்டெனப் படுமே'


என்று நயத்திற்கு இலக்கணம் காட்டுவர்  நீலகேசி உரைகாரர்.


   ' தண்ணீர் குளிர்ச்சியாய் இருக்கிறது ' என்று சொல்லும்போது, தண்ணீரின் குளிர்ச்சித் தன்மை மட்டும் சுட்டப்படுகிறது. சுவை, நிறம், வடிவம் முதலானவை சுட்டப்படவில்லை, மறுக்கப்படவில்லை. இப்படி ஒரு பொருளின் குணத்தைத் தனித்தனி எடுத்துப் பேசுவது நயம்.



   ' வியவகார நயம் ' என்பது உலக வழக்கு. உலகத்தார் ஒரு பொருளின் குணத்தை மற்றொரு பொருளோடு சார்த்தி விளக்கும் முறை 'வியவகார ' நயம் எனப்படுகிறது. ' மண்குடம்' என்று கூறும்போது 'குடம் மண்ணால் ஆக்கப்பட்டது' என்று பொருள்படும். 'எண்ணெய்க் குடம்' என்று கூறும்போது குடம் எண்ணெய்யால் ஆக்கப்பட்டது என்று பொருள் தராது. 'எண்ணெய் உள்ள மண் குடம்' என்று கூறுவதற்குப் பதிலாக 'எண்ணெய்க் குடம்' என்று கூறுவது 'வியவகார' நயம், அதாவது வேறொரு பொருளோடு சார்த்திப் பேசுவது.



       'நிச்சய நயம்' என்பது உண்மை வழக்கு. பொருளின் இயல்பான பண்பை உள்ளவாறே எடுத்துக் கூறுவது. 'தண்ணீர் குளிர்ச்சியாய்' இருக்கிறது '  'ஆன்மா ஞானமுடையது' என்பன உண்மை வழக்கு.


       உயிர் உடலோடு கூடியிருக்கும்போது 'சம்சார ஜீவன்' அல்லது 'மாற்றுயிர்' என்றும், உடலின்றி இருக்கும்போது 'வீட்டுயிர்' அல்லது 'சித்த ஜீவன்' என்றும் அழைக்கப் படுகிறது. இப்படி உயிர் இரண்டு நிலையில் இருப்பதால், அதனுடைய இயல்புகள் இரண்டு நயங்களாலும் விளக்கப் படுகின்றது.


       மூன்று காலத்திலும் தொடர்ந்து வாழ்வதற்குத் துணை செய்யும் ஆற்றல் 'பிராணன்' எனப்படுகிறது. உடலோடு கூடிய உயிரிடத்து நான்கு பிராணன்கள் காணப்படுகின்றன. அவை : பொறிகள், பலம், ஆயுள், உயிர்ப்பு (மூச்சு விடுதல்) உடலைச் சார்ந்து இந்த குணங்கள் பேசப்படுவதால், இவற்றை 'வியவகார' நயம் என்றார். உடல் நீங்கும்போது இவை உயிரிடத்துக் காணப்படா. உடல் நீங்கிய நிலையில் ஞானம் முதலானவை மட்டுமே காணப்படும். அதனால் ஞானத்தை 'நிச்சய நய' நோக்கில் கூறினர்.


      பொறிகள் ஐந்து. அவை: மெய், வாய், கண், மூக்கு, செவி. 
பலம் மூன்று :மன பலம், வாக்கு பலம், உடல் (காய) பலம். ஆயுள்ஒன்று; உயிர்ப்புஒன்று; உயிர்ப்பு *'சுவா சோச்வாசம்'என்று கூறப்படும். இவற்றை 'திரவிய பிராணன்'என்பர். அதாவது வடிவுடைய அல்லது கருவிப் பிராணன் என்று பொருள். இவை மூலமாக ஆன்மாவில் தோன்றும் உணர்வுகளை 'பாவ பிராணன்'என்பர்.


       ஓர் உயிரிடத்துக் குறைந்தது நான்கு பிராணன்கள் இருக்கும் ; கூடியது பத்துப் பிராணன்கள் இருக்கும்.


    மனமுள்ள உயிர் என்றால், பகுத்தறியும் ஆற்றல் உடைய உயிர் என்று பொருள். 'ஸஞ்ஞி ஜீவன்'என்பர். மனமில்லாத உயிர் (மனமிலி) என்றால் பகுத்தறியும் ஆற்றல் இல்லாத உயிர் என்று பொருள். 'அஸஞ்ஞி ஜீவன்'என்பர். இந்த பாகுபாடு விலங்கு இனத்தில் மட்டும் காணப்படுகிறது.

வியவகார நயத்தால் உயிரினுடைய பிராணன்கள் :


உயிர்    புலன்   பலம் 
------------------------------------------------------- 

ஆயுள்   உயிர்ப்பு
----------------------------------------------

 பிராணன் எண்ணிக்கை
-------------------------------------------------------

ஒரு புலத்தன :(மரம், செடி முதலியன)  தொடு புலன்  உடல்(காயம்)  ஆயுள்  உயிர்ப்பு  பிராணன் எண்ணிக்கை-4


இரு புலத்தன :(புழு, அட்டை முதலியன)  ஊறு, சுவைப் புலன்   உடல்,மொழி    ஆயுள்  உயிர்ப்பு  பிராணன் எண்ணிக்கை-6

மூன்று புலத்தன :(தேள்,பேன் முதலியன)  ஊறு,சுவை,நாற்றம்    உடல்,மொழி      ஆயுள்   உயிர்ப்பு    பிராணன் எண்ணிக்கை-7

நான்கு புலத்தன :(கொசு,ஈ முதலியன)  ஊறு,சுவை,நாற்றம்,ஒளி    உடல்,மொழி  ஆயுள்  உயிர்ப்பு   பிராணன் எண்ணிக்கை-8

மனம் இல்லா ஐந்து புலத்தன :(உடும்பு,ஓணான் முதலியன)  ஊறு,சுவை, நாற்றம்,ஒளி,ஓசை     உடல், மொழி   ஆயுள்    உயிர்ப்பு  பிராணன் எண்ணிக்கை-9


மனமுள்ள ஐந்து புலத்தன :(நாரகர், மனிதர், தேவர்,விலங்கு) ஊறு,சுவை,நாற்றம்,ஒளி,ஓசை     மனம்   ஆயுள்  உயிர்ப்பு  பிராணன் எண்ணிக்கை-10

        
உவஓகோ துவியப்போ, தம்ஸணம் ணாணம்ச தம்ஸணம் சதுதா !
சக்கு அசக்கூ ஓஹி தம்ஸண மத கேவலம் ணேயம் !!   (4)


   இது உபயோக குணத்தை விளக்குகிறது.


(உவஓகோ) உபயோகம், (துவியப் போ) இரண்டு வகைப்படும், (தம்ஸணம் ச ணாணம்) தரிசன உபயோகமும், ஞான உபயோகமும் என; இவற்றில், (தம்ஸணம்) தரிசன உபயோகமும், (சக்கு) கண்ணால் அறிதல், (அசக்கு) பிற பொறியால் அறிதல், (ஓஹி) ஓதியால் அறிதல், (சதுதா) நான்காகுமென்று, (ணேயம்) அறியப்படும்.


    தரிசன உபயோகம், ஞான உபயோகம் என உபயோகம் இரு வகைப்படும். இதில் தரிசன உபயோகம் நால் வகைப்படும்.

    ஆன்மாவுக்கு 'உபயோக' குணம் உண்டு என்று முன்னர் குறிப்பிட்டார். இந்தக் காதையில் ஆன்மாவின் 'உபயோக' குணம் குறித்து விளக்குகிறார்.

     'உபயோகம்' என்றால் என்ன ? உணர்வுடையது உயிர். அந்த உயிரில் பார்த்தல் உணர்வும், அறிதல் உணர்வும் விளங்கும் நிலை 'உபயோகம்' என்று குறிக்கப் படுகிறது. Functionality என்று ஆங்கிலத்தில் குறிப்பர். தரிசனம் என்றால் பார்த்தல் என்று பொருள்.

இது நான்கு வழிகளில் நடைபெறுகிறது.

1. கண்ணால்

2. பிற பொறிகளால்

3. அவதி உணர்வால்

4 கேவல உணர்வால்


     நமக்கு ஆறு பொறிகள் இருக்கின்றன. அவை : மெய், வாய், கண், மூக்கு, செவி, மனம்.

     கண்ணால் ஒரு பொருளைப் பார்க்கலாம். அது 'சஷு தர்சஸனம்' , சஷு என்றால் கண் என்று பொருள்.

     மெய்யால் தொட்டும், வாயால் சுவைத்தும், மூக்கால் முகர்ந்தும், செவியால் கேட்டும், மனத்தால் எண்ணியும் பொருள் இருப்பதை அறியலாம். இப்படி அறிவது 'அசசஷு தர்ஸனம்', அசசஷு என்றால் கண் அல்லாதது என்று பொருள்.

      இனி ஐந்து பொறிகள், மனம் இவற்றின் துணை இல்லாமல், உயிரே உருவமுள்ள பொருள்களை குறிப்பிட்ட அளவு அறிய முடியும். இது 'அவதி தர்ஸனம்' என்று பெயர்.

        இந்த மூன்று வகையும் வினைகள் அடங்கி இருப்பதாலும் அடங்குதலும், கெடுதலும் உடைமையாலும் உண்டாகும்.

       ஐந்து பொறிகள் மனம் இவற்றின் துணையின்றி முக்காலப் பொருள்களையும் ஒரே சமயத்தில் பார்த்தல் 'கேவல தர்ஸனம்' ஆகும். கேவல தர்ஸனம் வினைகள் முற்றிலும் நீங்கிய பிறகு உண்டாகும்.

       நாம் பிறவியில் உழலும் உயிர்கள். அதனால் பொறிகள் வாயிலாகத்தான் பொருள்களின் இருப்பை முதலில் அறிகிறோம். பிறவியில் உள்ள எல்லா உயிரும் இப்படித்தான் இருக்கின்றன.

        பிறகு பொருள்களின் சிறப்புத் தன்மை அறியப் படுகிறது. ஆகவே, நமக்கு முதலில் தர்ஸன உபயோகமும், பின்னர் ஞான உபயோகமும் ஏற்படுகின்றன. ஒன்றன்பின் ஒன்றாகவே அறிகிறோம்.


      ஆனால் நான்கு வினைகளை வென்ற பகவானுக்கு இரண்டும் (கேவல தர்ஸனம், கேவல ஞானம்) ஒரே சமயத்தில் ஒரு சேர நிகழ்கின்றன.


                             (5)

ணாணம் அட்டவியப்பம், மதிசுத ஓஹி அணாண ணாணாணி !
மனபஜ்ஜிய கேவல மவி பச்சக்க பரோக்க பேயம்ச!!


      (அணாண ணாணாணி) அறியாமையுடனோ, அறிவுடனோ அமைகின்ற, (மதிசுத ஓஹி) மதி, சுருத, அவதி ஞானங்கள்; (மன பஜ்ஜய) மனப்பரியயம், (அவி) மற்றும், (கேவலம்) முற்றறிவு (இவற்றுடன் சேர்த்து), (ணாணம்) அறிவு, (அட்ட வியப்பம்) எட்டாகிறது. மேலும், (அந்த அறிவு), (பச்சக்க பரோக்க பேயம்) நேரறிவு, பொறியறிவு என இரு வகைப்படும்.

      ஞான உபயோகம் எட்டு வகைப்படும். அவை :

1. மதி ஞானம்

2. சுருத ஞானம்

3. அவதி ஞானம்

4. கெட்ட மதி ஞானம்

5. கெட்ட சுருத ஞானம்

6. கெட்ட அவதி ஞானம்

7. மன பர்யய ஞானம்

8. கேவல ஞானம்

    மேலும் ஞானம் (பரோசஷம்) பொறி அறிவு என்றும், (பிரத்தியசஷம்) நேரறிவு என்றும் இரு வகையாகும்.

    ஒரு பொருளைப் பொதுவாக அறிதல் 'தர்ஸனம்' என்றால், அப்பொருளின் சிறப்புகளை அறிதல் ஞானம் ஆகும்.



மதி ஞானம் : ஐம்பொறி, மனம் இவற்றின் துணை கொண்டு அறியப்படும் ஞானம் மதி ஞானம் ஆகும். கண்ணால் கண்டு அறிதல்,  நாக்கால் சுவைத்து அறிதல், மெய்யால் தொட்டு அறிதல், மனத்தால் நினைத்து அறிதல் எனும் இவை மதி ஞானம் எனப்படும்.

சுருத ஞானம் : மதி ஞானத்தின் வழி பெறப்படும் நூலறிவு சுருத ஞானம் எனப்படுகிறது. சுருதம் - நூல் அல்லது கேள்வி ஞானம்.

அவதி ஞானம் : ஐம்பொறி, மனம் இவற்றின் துணையின்றி மூர்த்தப் பொருள்களை அளவுடன் அறிதல், இம்மூன்று ஞானங்களும் நன்மையை அறியாது, தீமையை அறியும்போது, 'கெட்ட மதி ஞானம்' , 'கெட்ட சுருதி ஞானம்' , 'கெட்ட அவதி ஞானம்' என்று கூறப்படும். இவற்றை 'சிங்கிய மதி சுதங்கள் விபங்கமும், தீய ஞானம்' என்பர் மேருமந்தர புராணத்தார் (1323).

மனப்பர்யய ஞானம் : ஐம்பொறி, மனம், இவற்றின் துணையின்றி, பிறர் மனத்தில் உள்ளதை அறிதல் மனப்பர்யய ஞானம்.

கேவல ஞானம் : முக்காலப் பொருளையும் ஒருசேர முற்றும் உணர்தல் கேவல ஞானம். இந்த எட்டு ஞானங்களையும் (பரோசஷ ஞானம்) பொறி அறிவு, (பிரத்யசஷ ஞானம்) நேரறிவு என்று இரண்டு பிரிவுக்குள் அடக்கலாம். 'பரோசஷம்' என்றால், நேரே உணர முடியாதது - பிறவற்றின் துணைகொண்டு அறிவது என்று பொருள் படுகிறது. உயிர் நேரே அறியாது பொறி முதலானவற்றின் துணைகொண்டு அறியும் ஞானம் ' பரோசஷ ஞானம்' எனப்படுகிறது.


இதைக் 'காண்டல் இல்லாத' ஞானம் என்பர். மதிஞானமும், சுருதஞானமும் இதன்பாற்படும். பிறவற்றின் துணையின்றி உயிர் தானே பொருளை அறிதல் 'பிரத்யசஷம்' எனப்படுகிறது 'காண்டல் ஞானம்' என்பர். அவதி, 'மனப்பர்யயம்', கேவல ஞானங்கள் இதன் பாற்படும். (அட்டவணை அடுத்து வரும் தொடரில் பார்க்க.)


                          (6)
அட்ட சதுணாண தம்ஸண ஸாமண்ணம் ஜீவலக்ணம் பணியம் !
வவஹாரா சுத்தணயா சுத்தம் புண தம்ஸணம் ணாணம் !!


         இது உயிரது பண்பு கூறுகிறது.


        வியவகார நய நோக்கில் எட்டு வகை அறிவும், நான்கு வகை தரிசனமும், (ஸாமண்ணம்) பொதுவாக, (ஜீவலக்கணம்) உயிரது இலக்கணம் என்று, (பணியம்) கூறப்பட்டது ; (புண) மற்றும், (சுத்தணயா) சுத்த நிச்சிய நய நோக்கில், (சுத்தம்) தூய, (தம்ஸணம்) தரிசனமும், (ணாணம்) அறிவும், (ஜீவலக்கணம்) உயிரது இலக்கணம் என்று சிறப்பாகக் கூறப்பட்டது.

         எட்டு வகை ஞான உபயோகமும், நான்கு வகை தர்சன உபயோகமும் உயிரது இயல்பு என்று வியவகார நயத்தினால் கூறப்படுகின்றன. சுத்த நிச்சய நயத்தால் கூறும்போது சுத்த தரிசனமும், சுத்த ஞானமுமே உயிரது இயல்பு ஆகும் என்று கூறப்படுகிறது.


      உயிரிடம் உபயோக குணம் உண்டு என்றும், உபயோகம் தர்சன உபயோகம், ஞான உபயோகம் என இரண்டாகும் என்று முன்னர் கூறினார். குணத்தையும் குணமுடைய பொருளையும் தனித்தனியாக பிரிக்க முடியாது. பொருள் என்பதே குணங்களுடைய தொகுப்புத்தான். அப்படி இருக்க எட்டுவகை ஞான உபயோகம், நான்கு வகை தர்சன உபயோகம் என்று கூறுவதின் பொருள் என்ன ? என்ற வினா எழுகிறது. அதற்கு விடையாக இந்தக் காதை அமைகிறது. உயிரிடத்தில் இருப்பது உண்மையில் ஞான, தர்சன உபயோகமே. அவை முறையே எட்டும், நான்குமாக வகைப்படும் என்று கூறுவது வியவகாரம் (உலக வழக்கு) என்று கூறுகிறார். வியவகார நய அடிப்படையில் கூறப்படும் வகைப்பாடு (சம்சார ஜீவனுக்கு) மாற்று உயிருக்குப் பொருந்தும். நிச்சய நய அடிப்படையில் கூறப்படும் குணங்கள் இந்த உயிருக்குப் பொருந்தும். இப்படிப் பொருள்களின் குணங்களை இரண்டு நயங்களின் அடிப்படையில் ஆராய்வது நல்ஞானம் (ஸம்யக் ஞானம்) ஆகும். பொருளும், குணமும் தனித்தனிப் பிரிக்க முடியாதவை என்றாலும், அவற்றை கருத்தளவில் , அதாவது எண்ணத்தால் பிரித்து ஆராய்கிறோம் என்று அறிதல் வேண்டும்.



                          (7)
வண்ண ரஸ பஞ்சகந்தா தோ பாஸாஅட்ட னிச்சயா ஜீவே ணோ ஸந்தி அமுத்தி ததோ வவஹாரா முக்தி பந்தீதோ !


     இது உருவமின்மைக்குக் காரணம் கூறுகிறது.

   (ஜீவே) உயிரிடத்தில், (நிச்சயா) உண்மையில், (பஞ்ச) ஐந்து,(வண்ண) வண்ணமும்,(பஞ்ச) ஐந்து, (ரஸ)சுவையும், (தோ) இரண்டு, (கந்தா) நாற்றமும,(அட்ட) எட்டு,(பாஸா)ஊற்றும், (ணோசந்தி) இல்லை; (ததோ) அதனால், (அமுத்தி) உருவம் இல்லாதது; (பந்தா தோ) வினைக்கட்டுடன் கிடப்பதால், (முத்தி) உருவமுடைவது ஆகும்.

     வண்ணம்,சுவை, நாற்றம்,ஊறு முதலியன அற்றது உயிர். ஆகவே, உருவமின்மை (அமூர்த்த) குணம் உடையது. இது உண்மை நோக்கு. வரம்பற்ற காலமாக, உருவமுள்ள பொருளாகிய வினைகளுடன் கட்டுண்டு ஏதாவது ஓர் உடலில் காணப்படுவதாலும், பிறவியில் உருவப் பொருள்களுடன் தொடர்பு கொண்டிருப்பதாலும், 'உயிர் உருவுடையது' என்று வியவகார நய நோக்கில் கூறப்படுகிறது.


    இப்படி கூறுவதால் உயிர் ஒருபோதும் உருவகுணம் உடையதாக ஆகிவிடாது. உண்மையில் உயிரை உருவமுடையது என்று ஏற்றுக்கொண்டு விட்டால் உயிருக்கும், பிற பொருளுக்கும் வேறுபாடு காணமுடியாது போய்விடும்.










     உயிருக்கு உருவம் உண்டா ? இல்லையா ? என்பது வினா. உருவத் தன்மை உள்ள பொருளிடத்தில் வண்ணம், சுவை, நாற்றம், ஊறு என்ற நான்கு குணங்களும் இருக்கும். அதாவது அத்தகைய பொருள்கள் பொறிகளுக்கு இலக்காகக் கூடும் என்பது கருத்து. ஆனால், உயிர் எந்த நிலையிலும் பொறிகளுக்கு இலக்காவதில்லை. ஆதலால் அதனிடத்து வண்ணம், சுவை, நாற்றம், ஊறு முதலான குணங்கள் இல்லை என்றாகிறது. எனவே, உருவத் தன்மையும் இல்லை என்று தெரிகிறது. இப்படிச் சொல்வதனால் உயிருக்கு உருவமே எப்பொழுதும் இல்லையா என்று கேட்கலாம். ஜைன ஆசாரிய தேவர்கள் எதையும் ஒன்றைப் பற்றியே கூறுவதில்லை. உண்மை நிலையில் உயிருக்கு உருவம் இல்லை. ஆனால், உயிர் வரம்பற்ற காலமாக உடலோடு கூடியும், பிற புற்கலப் பொருளுடன் சார்ந்தும் காணப்பட்டு வருகிறது. உடல் முதலான புற்கலப் பொருள்களுக்குச் சுவை முதலான குணங்கள் உண்டு. அதனால் உயிருக்கும், சுவை முதலான குணங்கள் உண்டு என்று வியவகார நய அடிப்படையில் கூறுப்படுகிறது. எப்படி எனில் எலுமிச்சை சாறுடன்  சர்க்கரை சேர்த்தால் அதில் இனிப்பும் காணப்படுவது போல், உயிர் உருவமுள்ள புற்கலப் பொருள்களுடன் காணப்படும் போது, அதற்கும் உருவம் முதலியன கூறப்படுகின்றன.

சுவை :-  கசப்பு, உறைப்பு, துவர்ப்பு, புளிப்பு, இனிப்பு என ஐந்து.

நாற்றம் :-  நல்நாற்றம், தீ நாற்றம் என இரண்டு ; நாற்றம் - மணம்.

ஊறு :-  மெதுவ, கடினம், பளு, பளுவின்மை, குளுமை, வெம்மை, பசைத்தன்மை, வறட்சி என எட்டு.

      இக் குணங்கள் எல்லாம் உருவத்தன்மை உடைய பொருள்களில்தான் காணப்படும்.


      உருவத் தன்மையும் பலவகைப் படும்.



                          (8)
புக்கல கம்மா தீணம் கத்தா வவஹாரா தோது ணிச்சயதோ !
சேதண கம்மாதா சுத்தணயா சுத்த பாவாணம் !!

       இது கட்டுக்கும் முத்திக்கும் கர்த்தா கூறுகிறது.

    (ஆதா) உயிர், (வவஹாரா) வியவகார நய நோக்கில், (புக்கல கம்மா அதீணம்) புற்கலமாகிய ஞான மறைப்பு முதலான வினைகட்கும், (ணிச்சயதோ) அசுத்த ணிச்சய நய நோக்கில் ஆர்வம், செற்றம் முதலான 'பாவ'வினைகட்கும், (து) மற்றும், (சுத்தணயா) சுத்த நிச்சய நய நோக்கில், (சுத்த பாவாணம்) தூய காட்சி, அறிவு முதலான உணர்வுக்கும்,(கத்தா) கர்த்தா ஆகும்.

 கருத்தா - செய்பவன் அல்லது செயலை உடையவன். நல்வினையும், தீவினையும் உள. இவற்றைச் செய்பவன் யார்? ஒவ்வொருவனுக்கும், அவன் ஆன்மாவே கருத்தா என்று இங்கு ஆசார்ய தேவர் விளக்குகிறார். அப்படி விளக்கும் போது மூன்று நோக்கில் அதை விளக்குகிறார். ஒருவன் தன்னுடைய பாவனைகள் காரணமாக 'கர்ம' அணுக்களைப் பந்தித்துக் கொள்கிறான். 'கர்ம' அணுக்கள் புற்கலப் பொருள்கள். அப் புற்கல கர்ம ம் பந்தமாவதற்கு அவனே கருத்தா ஆகிறான். பந்தத்தினால் அவனிடம் காமம் ,வெகுளி முதலான பாவனைகள் தோன்றுகின்றன. எனவே, அவற்றிற்கும் அவனே கருத்தா ஆகிறான்.

     கேவல ஞானம் முதலான தன் இயல்பான குண வெளிப்பாடும் அவனிடம் தோன்றுகிறது. அதற்கும் அவனே கருத்தா ஆகிறான்.

    கரும அணுக்களுக்குக் கருத்தா என்று சொல்வது வியவகார நயம். காம, வெகுளி உணர்வுகளுக்குக் கருத்தா என்று சொல்வது அசுத்த நிச்சய நயம். கேவல ஞானம் முதலான குண வெளிப்பாட்டிற்குக் கருத்தா என்று சொல்வது சுத்த நிச்சய நயம் என ஆசாரிய தேவர் குறிப்பிடுகிறார்.


      பொருள்களிடத்து இயற்கையாக உள்ள தன்மைகளை அறிவது நிச்சய நயம். பொருளிடத்து இயற்கையாக இல்லாத ஒன்றை ஏற்றிக் கூறுவது வியவகார நயம்.



                        (9)
வவஹாரா சுஹதுக்கம் புக்கல கம்மப்பலம் பபுஞ்ஜேதி !
ஆதா ணிச்சய ணயதோ சேதண பாவம் கு ஆதஸ்ஸ !!


   இது உயிரது துய்ப்பு (போக) உணர்வைக் குறிப்பிடுகிறது.


    (ஆதா) உயிர், (வவ ஹாரா) வியவகார நய நோக்கில், (புக்கல கம்மப் பலம்) புற்கலமாகிய ஞான மறைப்பு முதலான வினைகளின் பயனாகிய, (சுக துக்கம்) இன்ப துன்பங்களைத் (பபுஞ்ஜேதி)துய்க்கிறது, (ணிச்சய ணயதோ) நிச்சய நய நோக்கில், (ஆதஸ்ஸ) உயிரினுடைய, (சேதண பாவம்கு) தூய காட்சி அறிவு உணர்வுகளையே, (பபுஞ்ஜேதி) துய்க்கிறது.


  வியவகார நய நோக்கில் பார்க்கும்போது உயிர் புற்கல வினைகளின் பயன்களான இன்ப துன்பங்களைத் துய்க்கிறது. ஆனால் நிச்சய நய நோக்கில் பார்க்கும்போது அது தன்னுடைய தூயகாட்சி ஞான உணர்வினையே துய்க்கிறது.


  உயிர் இன்ப - வடிவமான தன்னுடைய விகார பாவங்(உணர்வு)களை அசுத்த நிலையில் துய்க்கிறது. உயிர் சாதக நிலையில் புலன் கடந்த இன்பத்தை ஓரளவும் கேவல ஞானம் உண்டான பிறகு முழுமையாகவும் சுத்த பாவத்தால் அனுபவிக்கிறது. ஆனால் உயிர் புற்கல வினைப் பயனையோ, பிற பொருள்களையோ துய்ப்பதில்லை.



  உயிர் நிச்சய நய நோக்கில் பிற பொருள்களை துய்ப்பதில்லை. ஆனால் உயிரது துய்ப்புணர்வு குணம் நிமித்தமாக பயனைத் துய்க்கிறது என்று வியவகார நய அடிப்படையில் கூறப்படுகிறது. வினையின் காரணமாக விரும்பிய பொருள் மற்றும் விரும்பாத பொருள்கள் வந்தடைகின்றன. 


அப்போது ஆன்மா அவற்றைத் துய்ப்பதாக எண்ணிக் கொள்கிறது. உயிரது இந்த நிமித்த பாவம் காரணமாக உள்ளது என்று கூறவே வினையின் இன்ப துன்பங்களைத் துய்க்கிறது என்று வியவகார நய அடிப்படையில் கூறப்பட்டது. இதனால் உயிர் உண்மையிலேயே வினையின் பயனை அல்லது விரும்பிய பொருள்களைத் துய்க்கிறது என்று பொருள் கொள்ளக் கூடாது.


 அசுத்த நிச்சய நயத்தால் மகிழ்ச்சி, வருத்தம் போன்ற இன்ப, துன்பங்களைத் துய்க்கிறது. சுத்த நிச்சய நயத்தால் அழியா ஆனந்த வடிவமான அமுதத்தை மட்டுமே பருகுகிறது.


 விளக்கின் ஒளி தன் இயல்பில் மாற்றமின்றி உள்ளது. ஆனால் தான் வைக்கப்படும் இடத்திற்கு ஏற்ப அதன் ஒளி சுருங்கியும், பரந்தும் காணப்படுகிறது. இதுபோன்றே உயிரது இயல்பான 'அஸங்கியாத' பிரதேசங்கள் குறைவதோ, கூடுவதோ கிடையாது. அது ஒரே நிலையில்தான் உள்ளது. ஆனால் உயிர் தனக்குக் கிடைக்கும் உடல் அளவில் வரம்புட்பட்டு நிற்கிறது. இதனால் அதன் பிரதேசம் கூடவோ, குறையவோ செய்கிறது என்று பொருள் கொள்ளக் கூடாது.

பாலில் வைக்கப்பட்ட மாணிக்கமணி பால் முழுவதையும் தன் ஒளியால் ஆட்கொள்கிறது. அதே பாலைக் காய்ச்சினால் பால் பொங்குகிறது. அப்போதும் அம்மணியின் ஒளி மேல் நோக்கி வரும் பாலைக் கவர்ந்து கொள்கிறது. இது போன்றே உயிரும் கிடைக்கும் உடல் அளவில் பரவி இருக்கிறது.

ஸமுத்காதம் : ஆன்மா தான் பெற்றுள்ள உடலை விட்டுப் பிரியாமல், அவ்வுடலுக்கு வெளியிலும் தன் பிரதேசத்தைச் செலுத்துவது உண்டு. இதையே 'ஸமுத்காதம்' என்பர்.

ஸமுத்காதம் ஏழு வகை :

1. வேதனா சமுத்காதம்
2. கஷாய சமுத்காதம்
3. வைக்ரியிக சமுத்காதம்
4. மாரணாந்திக சமுத்காதம்
5. தைஜல சமுத்காதம்
6. ஆஹார சமுத்காதம்
7. கேவலி சமுத்காதம் என்பன.
        
1.  வேதனா சமுத்காதம்   
        
         கடுந்துன்பம் அனுபவிக்கும் போது, தான் பெற்றுள்ள உடலை விட்டு நீங்காமல், ஆன்மப் பிரதேசம் உடலின் வெளியிலும் செல்லுதல்.

2.  கஷாய சமுத்காதம்


       வெகுளி முதலிய கஷாயங்களின் உதயம் தீவிர நிலையில் உள்ளபோது, பிறரைத் துன்புறுத்துவதற்காகத் தான் அடைந்துள்ள உடலை விட்டுப் பிரியாமல் ஆன்மப் பிரதேசம் வெளியில் செல்லுதல் 

3. வைக்ரியிக சமுத்காதம் :

தான் பெற்றுள்ள உடலை விட்டுப் பிரியாமல் வேறு ஓர் உருவத்தை ஏற்க ஆன்மப் பிரதேசம் வெளியில் செல்லுதல்.

இது தேவர், நரகர், போக பூமியில் உள்ளவர்கள் சக்கரவர்த்திகள், ரித்திதாரி மகாமுனிகள் முதலானோர் தம்தம் விருப்பப்படி பலவகை உருவை எடுக்கும்போது ஆன்மப் பிரதேசம் முன்னர் பெற்றுள்ள உடலை விட்டுப் பிரியாமல் வேறு ஒரு உடலிலும் பரவி இருக்கும். 'விகுர்வண சக்தி' என்றும் இதனைக் குறிப்பிடுவர். பலவகை உருவங்களைத் தரிக்கும்போதும், ஆன்மப் பிரதேசம் துண்டுபடாது ஒன்றாகவே பரவி நிற்கும்.

4. மாரணாந்திக சமுத்காதம் : 

ஓர் உயிர் மரண காலத்தில் தான் பெற்றுள்ள உடலை உடனே விட்டு விடுவதில்லை. அவ்வுடலில் இருந்துகொண்டே அடுத்து பிறக்கப் போகும் இடம் வரை ஆன்மப் பிரதேசம் பரவும்.

அவ்வண்ணம் பரவிய பின்னர் ஆன்மா மீண்டும் மூல உடலை அடைந்து, மறுபடியும் தான் பிறக்கும் இடம் செல்லும். இது மரணம் எனப்படுகிறது.

5. தைஜஸ சமுத்காதம் :

இது 'சுபதை ஜஸம்'. 'அசுபதை ஜஸம்' என இரு வகைப்படும்.மக்கள் வியாதி, வறட்சி போன்றவற்றால் துன்புறும் போது மகாமுனிகளுக்கு இரக்கம் உண்டாகலாம். அப்போது அவர்கள் மக்கள் துன்பத்தைப் போக்க பெற்றுள்ள உடலை  விட்டுப் பிரியாமல், தவத்தின் மகிமையால் வலது கை தோள் பட்டையிலிருந்து வெண்ணிற மனித வடிவ (புருஷாகார)  உருவம் ஒன்று தோன்றி துயர் துடைக்கும் பணியை முடித்துக் கொண்டு மீண்டும் வந்து தன் உடலில் கலந்து விடும். இதை 'சுப தைஜஸ சமுத்காதம்' என்பர்.


தனக்குப் பிறரால் தீங்கு நேரிடும் என்று தெரியவந்து கடும் கோபம் கொள்ளும்போதும் மகா முனிகளுடைய இட புயத்திலிருந்து சிந்தூர நிறமும், 12- யோஜனை உயரமும், அடியில் குறுகியும், முடியில் விரிந்தும் பூனை (காகன) உருவில் உருவம் ஒன்று புறப்பட்டு, இடது புறமாகச் சுற்றி வந்து மனதில் நினைத்த பகைவனை  அழித்துவிட்டுத் திரும்ப வந்து அம்முனிவருடன் தானும் அழிந்து விடும். இதுதான் 'அசுப தைஜஸம் சமுத்காதம்'. எடுத்துக்காட்டு : தீபாயனமுனி. 



6. ஆஹார சமுத்காதம் :

மகாமுனிகளுக்குப் பரமாகமங்களில் கூறப்பட்ட ஆறு பொருள்கள், ஏழு தத்துவங்கள் போன்றவற்றில் ஏதேனும் ஐயம் தோன்றுமானால், (ஆறாவது குணஸ்தானத்தில் உள்ள) மகாமுனிகள் தலையில் இருந்து புருஷாகார வடிவில், வெண்ணிற உருவம் ஒன்று தான் பெற்றுள்ள உடலை விட்டுப் பிரியாமல் புறப்பட்டுச் சென்று கேவலிகள் அல்லது சுருத கேவலிகள் பாத கமலங்களைத் தொட்டு வணங்கிய உடனே தன் ஐயம் நிவர்த்தியாகி விடும். பிறகு அது புறப்பட்ட இடத்திற்கே திரும்ப வந்து கலந்துவிடும்.

7. கேவலி சமுத்காதம் :

கேவல ஞானம் உண்டான பிறகு (கேவல ஞானிகளுக்கு) வேதனீயம், ஆயுஷ்யம், நாமம் மற்றும் கோத்திரம் எனும் நான்கு அகாதி கர்மங்களில் ஆயுள் கர்மத்தின் காலம் குறைவாகவும், மற்ற மூன்றின் காலம் அதிகமாகவும் இருக்குமேயானால் அவற்றின் கால அளவைச் சமப்படுத்த எட்டு சமயங்களில் 'தண்ட' 'கவாட' 'பிரதர' 'லோகபூர்ண' என நான்கு விதமாக கேவலிகளின் ஆன்மப் பிரதேசம் பரவுகிறது. இதுதான் கேவலி சமுத்காதம்.

இந்த கேவலி சமுத்காதம் எல்லா கேவலிகளுக்கும் உண்டாவதில்லை. ஆனால் கேவல ஞானம் உண்டாகி ஆயுள் ஆறு மாதம் ஆனபிறகும் ஆறுமாதம் இல்லாதவருக்கும் ஆயுட் கர்மத்தின் காலம் குறைவாக இருந்தால் அவர்களுக்கு மட்டும் தவறாமல் கேவலி சமுத்காதம் உண்டாகும்.

தண்டம் :

  பெற்றுள்ள உடலைவிட கேவலியின் ஆத்ம பிரதேசம் மூன்று மடங்கு பருமனாகவும், 14 ரஜ்ஜு (கயிறு) உயரமாகவும் பரவுதல்.

கவாடம் :

கேவலியின் ஆத்ம பிரதேசம் பெற்றுள்ள உடலைவிட மூன்று மடங்கு பருமனாகவும், வடக்கு தெற்கில் ஏழு ரஜ்ஜு (கயிறு) அகலமாகவும் பரவுதல்.

பிரதரம் :

உலகைச் சூழ்ந்திருக்கும் கனோததி, கனவாதம், தனுவாதம் எனும் மூன்று காற்றுகளையும் விட்டு உலகத்தினுன் மண் பாண்டத்தில் நிரம்பி இருக்கும் பால் போல ஆன்மப் பிரதேசம் உலகில் வியாபித்திருத்தல்.

லோக பூர்ணம் :


ஆன்மா மேலே கூறப்பட்ட காற்றுகளுடன் பரவி உலகெங்கும் பரவியிருத்தல்.



   அசுத்த நய நோக்கில் எல்லாப்  பிறவி உயிர்களும் 'மார்க்கணஸ்தானம்'  'குணஸ்தானம்' என்று பதினான்கு, பதினான்கு நிலைமைகளை உடையன என்று விளக்கப்படுகின்றன. சுத்த நய நோக்கில் உண்மையில் எல்லா உயிர்களும், தூய்மை உடையன என்று அறிதல் வேண்டும்.

பதினான்கு பிறவி நிலை (மார்கணா ஸ்தானம்)

1. கதி           
2. இந்திரியம்
3. காயம்
4. யோகம்
5. வேதம்
6. கசாயம்
7. ஞானம்
8. ஸம்யமம்
9. தர்சனம்
10. இலேசியா
11. பவ்வியத்துவம்
12. ஸம்யக்த்வம்
13. ஸஞ்ஞித்துவம்
14. ஆகாரம்

ஒவ்வொன்றுடனும் 'மார்கணா' என்று சேர்த்துப் படிக்க வேண்டும்.

1. கதி மார்கணா :

நரககதி, விலங்குகதி, மனிதகதி மற்றும் தேவகதி என நான்கு வகைப்படும்.

2. இந்திரிய மார்கணா :

ஒருபுலன், இருபுலன், மூன்றுபுலன், நான்குபுலன், ஐம்புலன் என ஐவகைப்படும்.

3. காய மார்கணா :

மணல், நீர், காற்று, நெருப்பு, நிலையுயிர் உடல் என மற்றும் இயங்குயிர் உடல் என ஆறுவகை.

4. யோக மார்கணா :

மனம், வாக்கு, செயல் என மூவகை.

5. வேத மார்கணா :

பெண் வேதம், ஆண் வேதம், அலிவேதம் (நபும் சக) என மூவகை.

6. கசாய மார்கண :

குரோதம், மானம், மாயை, உலோபம் என நால்வகை.

7. ஞான மார்கனா:

மதி, சுருதி, அவதி, மனப்பர்ய்யம், கேவல ஞானம் மற்றும் குத்தி, குசுருதி,கு அவதி என எட்டுவகை.


8. ஸம்யம மார்கணா :

ஸாமாயிக, சேதோபஸ்தாபன, பரிகார விசுத்தி, சூக்கும சாம்பராயம், யதாகியாதம் என ஐந்து மற்றும் ஸம்யமா ஸம்யம், அஸம்யம் என இரண்டு ஆக ஏழுவகை.

9. தர்சன மார்கணா :

சக்கு, அசக்கு, அவதி, கேவல தர்சனம் என நான்கு வகை.

10. இலேசியா மார்கணா :

கிருஷ்ன, நீல, காபோத, பீத, பத்ம, சுக்கில என ஆறு வகை.

11. பவ்யத்துவ மார்கணா :

பவ்வியன், அபவ்வியன் என இருவகை.

12. ஸம்யக்த்துவ மார்கணா :

ஔபசமிக ஸம்யக்த்துவம், க்ஷாயோபசமிக சம்யக்த்துவம், க்ஷாயிக சம்யக்த்துவம் மற்றும் மித்யா தரிசனம், ஸாஸாதனம், மிசரம் என ஆறு வகை.

13. ஸஞ்ஞி மார்கணா :

மனமுடையன, மனமில்லன என இருவகை.

14. ஆஹார மார்கணா :

ஆகாரகம் மற்றும் அனாகாரகம் என இரு வகை.

குணத்தானங்கள் 14 :

1. மித்யாத்வம்
2. ஸாஸாதனம்
3. மிசரம்
4. அவிரத ஸம்யக்த்துவம்
5. தேச சம்யதம்
6. பிரமத்த சம்யதம்
7. அப்ரமத்த ஸம்யதம்
8. அபூர்வ கரணம்
9. அணி விருத்தி கரணம்
10. ஸுக்ஷம சாம்பிராயம்
11. உபசாந்த கசாயம்
12. க்ஷீண கசாயம்
13. ஸயோக கேவலி
14. அயோக கேவலி

1. உண்மை தேவ, சாஸ்திர குரு முதலான தத்துவங்களில் திரிபான நம்பிக்கை இருப்பது 'மித்யாத்வ குணஸ்தானம்'.

2.  ஸம்யக்த்துவமும் மித்யாத்துவமும் இல்லாத அல்லது இரண்டிற்கும் இடையிலான நிலை 'ஸாஸதன குணஸ்தானம்'.

3. ஸம்யத்துவமும் மித்யாத்துவமும் கலந்த நிலை 'மிசர குணஸ்தானம்'.

4. ஸம்யக்த்துவம் இருந்தும் சாரித்திரம் இல்லாத நிலை 'அவிரத குணஸ்தானம்'.

5. ஸம்யக்த்துவத்துடன் அணுவிரதம் கலந்தது 'தேச ஸம்யதம்'.

6. மகா விரதத்தை ஏற்க முடியாமல் இருப்பது 'பிரம்மத்தம்'.

7. பிரமாதம் (ஆலஸ்யம்) இல்லாமல் மகா விரதங்களை காப்பது 'அப்ரமத்தம்'.

8. ஏழாவது நிலைக்கு மேல் தன் தூய்மையில் சிறப்பாக உயர்ந்து செல்வது 'அபூர்வகரணம்'.

9. எட்டாவது நிலையிலிருந்து உயர்ந்து செல்வது 'அனி விருத்தி'.

10. எல்லா கசாயங்களையும் சாந்தம் செய்தல் அல்லது க்ஷயம் செய்தல் உலோப கக்ஷாயம் மட்டும் சிறிதளவு இருத்தல் 'சூக்கும சாம்பிராயம்'.

11. கசாயங்கள் முற்றிலும்  உப சமம் அடைதல் (தணிவு) 'உபசாந்த கசாயம்'.

12. கசாயம் முற்றிலும் அகன்று விடுதல் 'க்ஷீண கக்ஷாயம்'.

13. கேவல ஞானம் உண்டான பிறகும் யோகங்கள் செயல்படுதல் 'ஸயோக கேவலி'.

14. கேவல ஞானம் உண்டான பிறகும் யோகங்கள் செயல் படாமை 'அயோக கேவலி'.

------------------



ணிக்கம்மா அட்ட குணா கிஞ்சூணா சரமதேஹதோ சித்தா !
லோயக்கடிதா ணிச்சா உப்பா தவயேஹிம் ஸஞ்ஜுத்தா !!   -    (14)


  இது உயிரது தூய நிலையைக் கூறுகிறது.


   (ணிக்கம்மா) வினைக்கட்டு நீங்கி, (அட்ட குணா) எட்டு குணங்களும் விளக்கம் பெற்று, (சரமதேஹதோ) கடைசியாகப் பெற்ற உடலின் அளவில், (கிஞ்சூணா)சற்றுக் குறைந்த வடிவம் பெற்றவர் (ஸித்தா) சித்தராவார் ; அவர் (ணிச்சா) என்றும் நிலைத்திருப்பவர் ; (உப்பாதவயேஹிம் ஸஞ்ஜுத்தா) தோன்றுதல் மறைதல் நிலைத்திருத்தல் இயல்புடன் கூடியவர் ; (லோயக் கடிதா) உலகத்தின் உச்சியிலிருப்பவர்.

   சித்த பரமேட்டி வினைக்கட்டு அற்றவர். எட்டு குணங்களை உடையவர். கடைசியாகப் பெற்ற உடலின் அளவில் சற்றுக் குறைந்த தோற்றமுடையவர், உலகத்தின் உச்சியிலிருப்பவர், என்றும் நிலைத்திருப்பவர், தோன்றுதல் மறைதல் நிலைத்திருத்தல் தன்மையுடன் கூடியவர்.

   சித்த பரமேட்டியானவர் ஞான மறைப்பு வினை விலகுதலால்  வரம்பற்ற ஞானமும், காட்சி மறைப்பு வினை விலகுதலால்  வரம்பற்ற காட்சியும், வேதனீயம் வினை விலகுதலால் 'அவியாபாதத்துவமும்', மோகனீய வினை விலகுதலால், 'சம்யக்த்துவமும்', ஆயுள் வினை விலகுதலால் 'அவககனத்துவமும்', நாம வினை விலகுதலால் 'சூக்குமத்துவமும்', கோத்திர வினை விலகுதலால் 'அகுரு லகுத்துவமும்', அந்தராயம் விலகுதலால் வரம்பற்ற ஆற்றலும் வெளிப்பட்டு விளங்குகிறார்.


                            

அஜ்ஜீவோ புண்ணேவோ புக்கல தம்மோ அதம்ம ஆயாஸம் !
காலோ புக்கல முத்தோ ரூவாதி குணோ அமுத்தி ஸேஸா து !!   (15)


   இது உயிரில்லாப் பொருள்களின் வகைபாடு கூறுகிறது.


   (புக்கல) புற்கலமும், (தம்மோ) தன்மமும், (அதம்மோ)அதன்மமும், (ஆயாஸம்) ஆகாயமும், (காலோ) காலமும், (அஜ்ஜீவோ) உயிரில்லாப் பொருள்கள் என( ணேவோ) அறிதல் வேண்டும் ; (புண) மற்றும், (புக்கல) புற்கலமானது (ரூவாதி குணோ)நிறம்,சுவை, மணம், ஊறு ஆகிய இவற்றை உடைய உருவப் பொருள்களாகும்; மேலும், பிற நான்கும் (அமுத்தி) உருவமில்லாதன என (ணேவோ) அறிதல் வேண்டும்.


     எந்தப் பொருளிடத்து அறிதல் உணர்வு இல்லையோ அது உயிரில்லாப் பொருளாகும். நிறம், சுவை, மணம், ஊறு ஆகியவற்றை  உடையதாகி ஐம்பொறிக்குப் புலனாவது உருவப் பொருள் (மூர்த்தம்) ஆகும். ஐம்பொறிக்கு இலக்காகாமல்இருப்பது உருவம் இல்லாதது (அமூர்த்தம்) ஆகும்.


(விளக்கப்படம் பார்க்க)






                         

ஸத்தோ பந்தோ சுஹமோ தூலோ ஸம்டாண பேத தம சாயா !
உஜ்ஜோ தாவ ஸஹியா புக்கல தவ்வஸ்ஸ பஜ்ஜாயா !!     (16)


     இது புற்கலப் பொருளின் ஆக்கப்பாடுகளை கூறுகிறது.


 (ஸத்தோ) ஒலி, (பந்தோ) இணைதல், (சுகமோ) நுண்மை, (தூலோ) பருமை, (ஸம்டாண) உருவம், (பேத) வேறுபடல், (தம) இருள், (சாயா) நிழல், (உஜ்ஜோ) ஒளி, (ஆதவ) வெய்யில், (ஸஹியா) முதலான இவை (புக்கல தவ்வஸ்ஸ) புற்கலப் பொருளினுடைய (பஜ்ஜாயா) ஆக்கப்பாடுகளாகும் (பரியாயங்களாம்.

      ஒலி இணைதல், நுண்மை, பருமை, உருவம் வேறுபடல், இருள், நிழல், ஒளி, வெய்யில் முதலான இவை புற்கலப் பொருளினுடைய ஆக்கப்பாடுகளாகும்.

                    (17)

கயிபரிணயாண தம்மோ புக்கல ஜீவாண கமண ஸஹயாரி !
தோயம் ஜஹ மச்சாணம் அச்சந்தா ணேவ ஸோ ணேயி !!


  இது தன்மப் பொருளின் இயல்பைக் குறிக்கிறது.


  (ஜஹ) எப்படி(தோய)நீர் (கயிபரிணயாண) நீந்தும் முயற்சியுடைய (மச்சாணம்)  மீன்கள் (கமணஸஹயாரி) நீந்த துணையாகிறதோ, அவ்வாறே, (கயிபரிணயாண) இடம் பெயரும் இயல்புடைய (புக்கல ஜீவாணம்) புற்கலம் உயிர் ஆகிய இவை (கமண ஸஹயாரி) இடம் பெயரத் துணையாகிறது ; (தம்மோ) தன்மப் பொருள் என்று (ணேவ) அறிக. ஆனால் (ஸோ) அது (அச்சந்தா) இடம் பெயராமல் நிற்கும் உயிர், புற்கலங்களைத் தானே (ணேயீ) இடம் பெயரச் செய்வதில்லை.

                
      ஆறு பொருள்களுள் புற்கலமும் உயிரும்  இடம் விட்டு இடம் பெயர்வன. மீன் நீந்துவதற்குத் தண்ணீர் தூண்டாத் துணையாக இருக்கிறது. மீனை நீந்தும்படி நீர் தூண்டுவதில்லை. மீன் நீந்தும் போது அது இடம் பெயர இசைவாகத் துணையாகிறது நீர். இவ்வாறே இடம் பெயரும் பொருள்களை இடம் பெயரும்படித் தன்மப் பொருள் தூண்டுவதில்லை. அவை இடம் பெயரும் போது நீரைப்போல துணை இருக்கிறது. தன்மப் பொருள் உலகம் முழுவதும் பரவி உள்ளது.


                         

டாண ஜுதாண அதம்மோ புக்கல ஜீவாண டாண ஸஹயாரி !
சாயா ஜஹ பஹியாணம் கச்சந்தா ணேவ ஸோ தரயீ !!     (18)


     இது அதன்மப் பொருள் இயல்பு கூறுகிறது.


   (ஜஹ) எப்படி (சாயா) நிழல் (டாண ஜுதாண) நிற்கும் முயற்சியுடைய (பஹியாணம்) வழிப் போக்கர்கள் (டாண ஸஹயாரி) நிற்பதற்குத் துணையாகிறதோ, அவ்வாறே, (டாண ஜுதாண) நிற்கும் இயல்புடைய (புக்கல ஜீவாண) புற்கலம் உயிர் ஆகிய இவை (டாண ஸஹயாரி)நிற்பதற்குத் துணையாகிறது, (அதம்மோ) அதன்மப் பொருள் என்று (ணேவ]அறிக. ஆனால் (ஸோ) அது(கச்சந்தா)இடம் பெயர்ந்து கொண்டிருக்கும் உயிர் புற்கலங்களைத் (ணேவ தரயீ) தானே தடுத்து நிற்க வைப்பதில்லை.



    சென்று கொண்டிருக்கும் உயிர், புற்கலங்கள் தாமே நிற்கும் போது நிற்பதற்குத் துணையாக இருப்பது அதன்மப் பொருள். வழிப் போக்கன் வெயிலின் கொடுமை தாங்காது மர நிழலில் நிற்கிறான். அப்போது நிழல் அவன் நிற்பதற்குத் துணையாக உள்ளது. ஆனால் வழிப்போக்கனை நிழல் போகவிடாமல் தடுப்பதில்லை. இவ்வாறே இடம் பெயரும் உயிர் புற்கலங்களை நிலைபெறும்படி அதன்மப் பொருள் தூண்டுவதில்லை. அவை நிலைபெற நிழல் போல துணையாகிறது. அதன்மப் பொருள் உலகு முழுவதும் பரவி உள்ளது.




தம்மா தம்மா காலோ புக்கல ஜீவாய ய ஸந்தி ஜா வதியே !
ஆயாஸே ஸோ லோகோ தத்தோ பரதோ அலோகுத்தோ !!   (20)


     இது ஆகாயத்தின் வகைபாடு கூறுகிறது.

   (ஆயாஸே) ஆகாயத்தில், (ஜாவதியே) எவ்வளவிற்கு (தம்ம அதம்ம) தன்மப் பொருளும் அதன்மப் பொருளும், (காலோ) காலப்பொருளும், (ய) மற்றும் (புக்கல ஜீவா) புற்கலமும் உயிரும் நிலைபெற்றுள்ளனவோ (ஸோ) அப்பகுதியை (லோகோ) உலக ஆகாயம் என்றும் (தத்தோ) அதற்குப் (பரதோ) புறத்தே உள்ள பகுதி (அலோகுத்தோ) உலகிலா ஆகாயம் என்றும் கூறப்படுகின்றன.

    வரம்பு இல்லா (அனந்த) பிரதேசப் பரப்பு உள்ள ஆகாயத்தில் எண்ணமுடியாத பிரதேசப் பரப்புடைய உலக ஆகாயம் இருக்கிறது. இந்த எண்ண முடியாத பிரதேச உலக ஆகாயத்தில் வரம்பற்ற உயிர்களும் அதைவிட வரம்பற்ற மடங்கு புற்கலமும், உலக ஆகாயம் முழுதும் நிறைந்துள்ள காலமும், தன்மமும், அதன்மமும் அடங்கியுள்ளன. எப்படி ? ஒரு விளக்கு ஒளியில் பல விளக்கு ஒளி அடங்குதல் போலவும், ஒரு குடம் சோறும் ஒரு குடம் தயிரும் ஒரு குடத்து அடங்குமாறு போலவும், ஒரு குட ஊசியும் ஒரு குட சாம்பலும் ஒரு குட நீரும் ஒருகுடத்து அடங்குமாறு போலவும், ஒரு குடம் தேனும் ஒரு குடம் ஒட்டகப் பாலும் ஒரு குடத்து அடங்குமாறு போலவும், உலக ஆகாயத்தில் ஆறு பொருள்களும் ஒன்றாக அடங்கி இருக்க முடியும்.


      தன்மமும், அதன்மமும், ஆகாயமும் இடயீடு இன்றி ஒன்றை ஒன்று ஊடுருவி உள்ளன. அவை உருவம்  இல்லாதவை. ஆதலால் ஒன்றை ஒன்று தடுப்பதில்லை. 


தவ்வ பரிவட்டரூவோ ஜோஸோ காலோ ஹவேயி வவஹாரோ !
பரிணாமாதி லக்கோ வட்டணலக்கோ ய பரமட்டோ !!      (21)

       இது காலப் பொருளின் இயல்பு கூறுகிறது.

    (ஜோ) எது, (தவ்வ பரிவட்டரூவோ) பொருள்களது மாறுகை வடிவாக உள்ளதோ, (பரிணாமாதி லக்கோ) மாற்றம் முதலானவற்றால் அறியப்படுகிறதோ, (ஸோ) அது, (வ்யவகாரோ காலோ) வியவகார காலம் (ஹவேயி) ஆகும். (ய) மற்றும், (வட்டண லக்கோ) வர்தனை லட்சணம் (அடிப்படையாக) இருப்பது (பரமட்டோ) நிச்சய காலமாகும்.

    எது திரவிய மாற்றங்களில் நிமிடம், மணி, நாள், மாதம் முதலிய வடிவில் உள்ளதோ, எது மாற்றங்களால் அறியப்படுகிறதோ அது வியவகார காலம். பரிவர்த்தனையை இலட்சணமாகக் கொண்டது நிச்சய காலம் எனப்படுகிறது. காலம் இருவகை, வியவகார காலம், நிச்சய காலம் என. நிமிடம், மணி முதலிய முறையான பிரிவுகள் உடையது வியவகார காலம். அதற்கு அடிப்படையாக விளங்கும் திரவியம் நிச்சயகாலம் எனப்படுகிறது.  'பரிணாமம்', 'கிரியை', 'பரத்வ' மற்றும்  'அபரத்வ'  தன்மையால் வியவகார காலத்தை அறியலாம்.

பரிணாமம் :

உயிர் புற்கல திரவியங்களில் உண்டாகும் மாற்றங்கள்.

கிரியை :

சமைத்தல், பால் கறத்தல் போன்றவை. உதாரணமாக   ' சமைப்பதற்குள், பால் கறப்பதற்குள் போய்வருவேன்' என்பன.

பரத்வா பரத்வம் :


இது பெரியது, இதைக் காட்டிலும் அது சிறியது, இது புதியது, இது பழையது முதலிய உலக வழக்குகள்.



திரவிய வடிவமான நிச்சய காலம் :

குயவனுடைய சக்கரம் சுற்றுவதற்குச் சக்கரத்தின் கீழ் உள்ள கல் உதவுவது போல, தன்னுடைய உபாதான சக்தியால் (இயற்காரணம்) தனக்குத்தானே மாறும் பொருள்களுக்கு உதவுவது நிச்சய காலம். கல் சக்கரத்தைச் சுழல வைப்பதில்லை. ஆனால் கல் இல்லாமல் சக்கரத்தின் சுழற்சி ஏற்படாது. இதுபோல பொருளது மாற்றங்களுக்குக் காலம் உதவியாக இருக்கிறது. ஆனால் மாற்றங்களை அது உண்டாக்குவதில்லை.

ஜீவ புற்கல திரவியங்கள் இயற்கையாக மாற்றம் அடையும்போது அவை அத்தன்மையை அடைவதற்கு உதவி செய்யும் திரவியம் நிச்சய காலம். அதாவது வர்தனா லக்ஷணமுடைய காலாணு திரவியம் நிச்சய காலம்.


'சமய வடிவமே நிச்சய காலம்.இதைத் தவிர்த்த வேறு ஒரு காலாணு - திரவிய - வடிவ - நிச்சய காலம் இல்லை. ஏனென்றால் அப்படி ஒரு தனிப்பட்ட கால திரவியம் காணக் கிடைக்கவில்லை' ,இப்படி ஐயம் எழலாம். 'சமயம்' காலத்தின் பர்யாயம். எப்படி எனில் பர்யாயம் தோன்றி மறையும் தன்மை படைத்தது. இதையே 'ஸம ஓ உப்பண்ண பத்தம்ஸி' என்று கூறப்பட்டிருக்கிறது. அந்த பர்யாயமும் திரவியம்  இல்லாமல் நிகழ்வதில்லை. ஸமய வடிவமான பர்யாய காலத்திற்கு உபாதான காரணமாக விளங்குவது திரவிய காலம் கால வடிவமாக இருக்கவேண்டும். விறகு, நெருப்பு முதலிய துணைக் காரணத்தால் உண்டாகும் அன்ன (சாதம்) வடிவத்திற்கு உபாதான காரணம் அரிசி ஆவது போலவும், குயவன், கத்தி, கயிறு முதலிய புற நிமித்த காரணங்களால் உண்டாகும் மண்குட பரியாயத்திற்கு உபாதான காரணம் மண் ஆவது போலவும், அல்லது நர, நாரக பர்யாயங்களுக்கு உபாதான காரணம் உயிர் ஆவது போலவும், சமயம், நாழிகை முதலியவற்றிற்கு உபாதான காரணம் கால திரவியமாகும். உபாதான காரணத்திற்கு ஏற்றவாறே காரியம் நிகழ்கிறது.

--------------------- 


                 

லோயாயாஸ பதேஸ இக்கிக்கே ஜேடியா ஹு இக்கிக்கா !
ரயணாணம் ராஸி இவ தே காலாணு அஸங்க தவ்வாணி !!            (22)


     இதுவும் அது.


     (இக்கிக்கே) ஒவ்வொரு, (லோயாயாஸ பதேஸே) உலக ஆகாய பிரதேசத்திலும், (ரயணாணம்) மணிகளது, (ராசி இவ) குவியலைப் போல, (இக்கிக்கா) தனித்தனியாக, (ஜே)எவை, (ஹு) உறுதியாக, (டியா) உள்ளனவோ, (தே) அத்தகைய, (காலாணு) கால அணுக்கள், (அஸங்க தவ்வாணி) எண்ண முடியாத (அயங்கிய) திரவியமாக இருக்கின்றன.


உலக ஆகாயத்தின் ஒவ்வொரு பிரதேசத்திலும் மணிக் குவியலைப் போல் தனித்தனியாக ஒவ்வொரு காலாணு உள்ளது. அந்த காலாணுக்கள் அயங்கியம் (எண்ண இயலாத) மணிகள் குவியலாக இருக்கும்போது ஒன்றாக (ஒரே ராசியாக) காணப்பட்டாலும் அவை ஒவ்வொன்றும் தனித்தனியானவை. இது போன்றே உலக ஆகாயத்தின் ஒவ்வொரு பிரதேசத்திலும் இந்த காலாணுக்கள் தனித்தனியாக உள்ளன.

கேள்வி :

உலக ஆகாயத்திற்கு வெளிப்புறத்தில் காலாணு திரவியம் இல்லாததால் அலோக ஆகாயத்தின் பரிணமன் (மாற்றம்) எப்படி இருக்க முடியும்?

பதில் :

ஆகாயம் ஒரு அகண்ட திரவியம். ஆதலால் குயவனுடைய சக்கரம் ஓரிடத்திலிருந்து தூண்டுதல் கிடைத்ததும் முழு சக்கரமும் சுற்றுவதைப்போல, தொடுபுலன் நுகர்ச்சி ஓரிடத்தில் அனுபவத்திற்கு வந்தாலும் உடல் முழுவதும் அதன் உணர்வு, உணரப் படுவதைப் போல உலக ஆகாயத்தில் உள்ள காலாணு திரவியம் ஆகாயத்தின் ஒரு பகுதியில் இருப்பதால் ஆகாயம் முழுமையிலும் மாற்றத்திற்கு காரணமாக உள்ளது.

கேள்வி : 

கால திரவியம் மற்ற திரவியங்களின் மாற்றங்களுக்குத் துணை காரணமாக உள்ளதுபோல கால திரவிய மாற்றத்திற்குத் துணைக் காரணம் எது ?

பதில் :


ஆகாய திரவியம் மற்ற எல்லா திரவியங்களுக்கும் ஆதாரமாக உள்ளது போல தனக்கும் ஆதாரமாக உள்ளது. இதுபோன்றே கால திரவியமும் பிற திரவியங்கள் மாற்றத்திற்குத் துணைக் காரணமாக உள்ளது. தன் மாற்றத்திற்கும் தானே காரணம் ஆகும்.


ஏவம் சப்பேயமிதம் ஜீவாஜீவப்ப பேததோ தவ்வம் !
உத்தம் கால விஜுத்தம் ணாயவ்வா பஞ்ச அத்திகாயா து !!    (23)


   இது பொருள்களின் பெயர் வேறுபாடு கூறுகிறது.


(ஏவம்) இப்படி, (இதம்) இந்தப், (தவ்வம்) பொருள்கள், (ஜீவா ஜீவ பேததோ) உயிரும் உயிரல்லது எனும் வேறுபாட்டால், (சப்பேயம்) ஆறுவிதமாகும் என்று, (உத்தம்) கூறப்படுகிறது. (து) மற்றும், (கால விஜுத்தம்) காலம் ஒன்று நீங்கலாக, (பஞ்ச) ஏனைய ஐந்தும், (அத்திகாய) அத்தி காயங்கள் என்று ( ணாயவ்வா) அறியத்தக்கவை.


   உயிரும் புற்கலம், தன்மம், அதன்மம், ஆகாயம், காலம் என ஐந்து உயிரல்லனவும் சேர்ந்து பொருள்கள் ஆறாம். காலம் நீக்கி ஐந்தும் அத்திகாயங்களாம்.



     பொருள்கள் உயிர் உயிரல்லன எனப் பகுக்கப்படுகின்றன். அவற்றுள் உயிரல்லன புற்கலம், தன்மம், அதன்மம், ஆகாயம், காலம் என ஐந்தாகப் பகுக்கப்படுகின்றன. உயிரும் உயிரல்லனவும் கூடி பொருள்கள் ஆகின்றன.


                      பொருள்
 ---|--------- ---------|---------------|           

உயிர்.                         உயிரல்லன

                                      -----------|---------

                                         புற்கலம்
                                         தன்மம்
                                        அதன்மம்
                                         ஆகாயம்
                                         காலம்



    இவற்றுள் உயிர், புற்கலம், தன்மம், அதன்மம், ஆகாயம் ஆகிய ஐந்தும் அத்தி காயங்கள் எனப்படுகின்றன.




ஸந்தி ஜதோ தேணேதே அத்தித்திபணந்தி ஜிநவரா ஜம்ஹா !
காயா இவ பகுதேஸா தம்ஹா காயா ய அத்திகாயா ய !!    (24)


   இது அத்திகாயம் சொல் விளக்கம் கூறுகிறது.


(ஜதோ) எக் காரணத்தால், (ஏதே) இத்திரவியங்கள், ( சந்தி) அநாதிகாலமாக, (நிலை பெற்று) இருக்கின்றனவோ, (தேணே) அக்காரணத்தால், (ஜிநவரா) பெருஞ்சிறப்புடைய ஜிநர்கள், (அத்தித்தி) அவற்றை நிலை பேறுடையன (அஸ்தி) என்று, (பணந்தி)அருளினர். (ய) மேலும், (ஜம்ஹா) எக்காரணத்தால், (காயா இவ) உடலைப் போல, (பஹு தேஸா) (இத் திரவியங்கள்) பல பிரதேசங்களை உடையனவாக இருக்கின்றனவோ (தம்ஹா) அக்காரணத்தால் (காயா) காயங்கள் என்றும் (ய) மற்றும் (இவற்றை)(அத்திகாயா) அத்திகாயங்கள் என்றும் அருளினார்.


அநாதி காலமாக நிலைபெற்று வருவதால் 'அஸ்தி' என்றும், உடலைப்போல, பல பிரதேசங்களை உடைமையால்  'காயங்கள்' என்றும் கூறப்படுகின்றன.


'அத்தி - காயம்' -'அத்தி', 'காயம்' எனும் இரண்டு சொல் கொண்ட தொடர். 'அத்தி' என்பதற்கு இருத்தல், நிலைத்தல் என்று பொருள். 'காயம்' என்ற சொல் உடல் என்று பொருள் படுகிறது. உடலைப் போல பல பிரதேசங்களைக் கொண்டிருப்பதால் 'காயம்' என்று குறிப்பிட்டனர்.


உயிர், புற்கலம், தன்மம், அதன்மம், ஆகாயம் ஆகிய இவ்வைந்தும் 'நிலைத்தல்' (அத்தி), பல பிரதேசப் பரப்பினைப் பெற்றிருத்தல் (காயம்) எனும் இரண்டு இயல்புகளையும் ஒரு சேர பெற்றிருத்தலால் இவற்றை 'அத்திகாயம்' என்றனர். எனவே ஒரு பொருளை அத்திகாயம் என்று குறிப்பிட வேண்டுமானால் அதனிடம் இவ்விரு இயல்புகளும் இருத்தல் வேண்டும் என்று தெளிவாகிறது.


கால திரவியம் நிலைத்தல் (அஸ்தி) இயல்பு பெற்றிருந்தாலும், பல பிரதேசப் பரப்பினைப் பெறாமையால் அது அத்திகாயம் என்று சுட்டப்படவில்லை.




ஹோந்தி அஸங்கா ஜீவே தம்மா தம்மே அணந்த ஆயாஸே !
முத்தே திவிஹ பதேஸா காளஸ்ஸேகோண தேண ஸோ கரவோ !!    (25)

  
 இது பிரதேச விவரம் கூறுகிறது.


   (ஜீவே) உயிரிடத்தும், (தம்மா தம்மே) தன்மத்திடத்தும் அதன்மத்திடத்தும், (அஸங்கா) எண்ணமுடியாத, (பதேஸ) பிரதேசங்கள், (ஹோந்தி) உள்ளன. (ஆயாஸே) ஆகாயத்திடனித்து, (அணந்த) அனந்த பிரதேசம் உள்ளன; (முத்தே) உருவுடைய புற்கலத்தினிடத்து, (திவிஹ) மூன்று வகை பிரதேசங்கள் உள்ளன; (காலஸ்ஸ) காலத்தினிடத்து, (ஏகோ) ஒரு பிரதேசமே உள்ளது. (தேண) அதனால், (ஸோ) அது (காலம்) (காவோ) காயம் உடையதாக (ண) ஆகாது.


  உயிர், தன்மம், அதன்மம் இம்மூன்று திரவியங்கள் எண்ண முடியாத (அஸங்க்யாத) பிரதேசங்கள் உடையன; ஆகாயம் எண் வரம்பு இல்லாத (அநந்த) பிரதேசங்கள் உடையது; புற்கலம் மூன்று வகை (எண்ணக் கூடியது (ஸ்ங்க்யா), எண்ண முடியாதது (அஸங்க்யா), எண் வரம்பு இல்லாதது (அநந்தம்) பிரதேசங்களை உடையது; கால திரவியம் ஒரு பிரதேசம் உடையது. ஆகவே, பிற திரவியங்களின் பிரதேச இயல்பு நோக்கில் பார்க்கும் போது காலம் 'காயம்' உடையதாக கருதப்படவில்லை. (ஒன்றுக்கு மேற்பட்ட பிரதேசங்களாக எண்ணப்படும் போதுதான் காயத்தன்மை உடையதாகக் கருதப்படுகிறது).


    ஓர் உயிர் உலக ஆகாயம் முழுமையும் பரவக்கூடும். உலக ஆகாயம் 'அஸங்க்யாத' பிரதேசம். ஆகவே, உயிரும் அஸங்க்யாத  பிரதேசம் கொண்டது எனப்படுகிறது. தன்ம, அதன்மமும் உலக ஆகாயம் எங்கும் எள்ளில் எண்ணை உள்ளது போல் பரவியுள்ளது. ஆகவே இவ்விரண்டும் 'அஸங்க்யாத' பிரதேசம் கொண்டவை. ஆகாயம் அனந்த பிரதேசம். ஏனென்றால் ஆகாயம் உலகத்திற்கு வெளியிலும் உள்ளது. அதற்கு ஒரு வரம்பு இல்லை. புற்கல திரவியம் அனந்த பரமாணு கொண்டது. இரண்டு, மூன்று என்று பரமாணுக்கள் கூடிச் சிறிய அல்லது பெரிய உருவில் காணக் கிடைக்கும். எனவே, புற்கலம் 'ஸங்க்யாத பிரதேசி' , 'அஸங்க்யாத பிரதேசி' , 'அனந்த பிரதேசி' என்று அழைக்கப்படுகிறது. காலம் ஒவ்வொரு பிரதேசமாகவே உள்ளது. அவை சேர்ந்து பிண்டமாவதில்லை. ஆகவே கால திரவியம் காயமுடையது அல்ல.


ஏயபதேஸோ வி அணு ணாணாகந்தப்பதேஸதோ ஹோதி !
பஹுதேஸோ உவயாரா தேண ய காவோ பணந்தி ஸவ்வண்ஹு !!  (26)

     
  இது புற்கலத்தின் பிரதேச விளக்கம் கூறுகிறது.


      (அணு) புற்கல பரமாணுவானது, (ஏயபதோஸோவி) ஒரு பிரதேசத்தை உடையதாயினும், (ணாணாகந்தப்பதேஸதோ) பல பரமாணுக்கள் கூடிப் பல வகையான ஸ்கந்தங்களாகும் (அணுக்கூட்டத் தொகுதிகளாகும்). (பஹுதேஸோ) அதனால் பல பிரதேசங்களை உடையதாக (ஹோதி) ஆகும். (தேணய) அக் காரணத்தினால் (லவ்வண்ஹு) முற்றுணர்ந்தோர் (உவயாரா) வியவகார நயத்தால் (காவோ) அதனைக் காயம் என்று (பணந்தி) அருளினார்.


  பரமாணு ஒரு பிரதேசம் உடையது, என்றாலும் பல பிரதேசங்கள் உள்ள தொகுதிகளாக (ஸ்கந்தங்களாக) ஒன்று படுவதால் புற்கலத்திலும் பல பிரதேசங்கள் உள்ளன என்று வியவகார நயத்தால் முற்றுணர்ந்தோர் அருளினர்.


  கால அணு ஒவ்வொரு பிரதேசத்திலும் தனித்தனியாக இருப்பதால் அது ஒரு பிரதேசம் உடையது என்று சொல்லுவர். அதேபோல ஒவ்வொரு பரமாணுவும் ஒரு பிரதேசம் உடையதுதான். இந்த அடிப்படையில் பார்க்கும்போது புற்கலமும் ஒரு பிரதேசம் உடையது என்று குறிப்பிட வேண்டும். அப்படிக் குறிப்பிடாமல் பல பிரதேசம் உடையது என்று ஏன் குறிக்கின்றனர் ?


  பரமாணு மற்றொரு பரமாணுவுடன் சேர்ந்து பல பிரதேச பரப்புள்ள பல வகையான ஸ்கந்தங்களாக (தொகுதிகளாக) உருவாகின்றன. இந்த நிலையிலேயே புற்கலம் பல பிரதேச பரப்பு இயல்புடையது என்று குறிக்கின்றனர். இதனால் வியவகார அடிப்படையில் பரமாணு பல பிரதேசங்களை உடையது என்று கூறுவர். பல பிரதேசங்களை உடையது 'காயமுடையது'  எனப்படும். எனவே, புற்கலமும் காயமுடையதாகக்  கருதப்படுகிறது. அதனால் 'அத்தி காயத்தில்' ஒன்றாக   புற்கலமும் எண்ணப்படுகிறது.



     பரமாணுக்கள் ஒன்றோடொன்று கூடி தொகுதியாக உருவாக முடியும், ஆனால் கால அணுக்கள் இப்படி ஒன்றோடொன்று கூடி தொகுதியாக முடியாது. ஒவ்வொரு கால அணுவும்  தனித்தனியே உள்ளன. வியவகாரத்தில் புற்கல நிலையை பல பிரதேசங்கள் உடையது என்று கூறுவது போல கால அணுக்களை கூறமுடியாது. எனவேதான் காலம் 'அத்திகாயத்தில்' எண்ணப்படவில்லை.

--------------------- 



ஜாவதியம் ஆயாஸம் அவிபாகி புக்கலாணு வட்டத்தம் !
தம் கு பதேஸம் ஜாணே ஸவ்வாணுட்டாண தாணரிஹம் !!    (27)


        இது பிரதேசத்திற்கு இலக்கணம் கூறுகிறது.


   (ஜாவதியம் ஆயாஸம்) ஆகாய திரவியத்தில் எத்துணைப் பரப்பு வரையில், (அவிபாகி) மறுபடியும் துண்டு செய்ய முடியாத, (புக்கலாணு வட்டதம்) ஒரு பரமாணு அடைத்து நிற்குமோ, (தம்) அப்பரப்பினை , (கு) நிச்சயமாக (ஸவ்வ அணுட்டாண தாணரிஹம்) எல்லாவற்றின் அணுக்களும் அடங்குவதற்கு இடம் கொடுக்கத் தகுந்ததாகிய பிரதேசம் என்று, (ஜாணே) அறிக
.

மறுபடியும் துண்டு செய்ய முடியாத ஒரு நுண்ணிய புற்கல பரமாணுவானது அடைத்துக் கொள்ளும் இடப் பரப்பினை பிரதேசம் என்பர். அதில் பிற அணுக்களும் அடங்குவதற்கு இடம் விளங்கும்.


இந்த ஒரு பிரதேசத்தில் தன்மம், அதன்மம், அதன்மம் காலணு மற்றும் புற்கலத்தின் பல அணுக்களும் தடையின்றி ஒரு சேர நுண்ணியதாக  அடங்கும்.



(முதல் அதிகாரம் முற்றும்) 









இரண்டாவது அதிகாரம்

                  
ஆஸவ பந்தண ஸம்வர, ணிஜ்ஜா மோக்கா ஸபுண்ணபாவா ஜே !
ஜீவா ஜீவ விஸேஸா, தேவி ஸமாஸேண பபணாமோ !!         (28)


       இது பொருள்களது பெயர் வேறுபாடு கூறுகிறது.


  (ஜீவா ஜீவ விஸேஸா) உயிர் மற்றும் உயிர்  அல்லன திரவியங்களின் தொடர்பால் ஏற்படும், (ஆஸவ பந்தண ஸம்வர ணிஜ்ஜா மோக்கா) ஆஸ்ரவம், பந்தம் ஸம்வரை, நிர்ஜரை, மோக்ஷம், (ஸபுண்ணபாவா) புண்ணியம் மற்றும் பாவம் ஆகிய (ஜெ) எவை உள்ளனவோ (தேவி) அவற்றையும், (ஸமாஸேண) சுருக்கமாக, (பபணாமோ) கூறுவோம்.


புண்ணியம், பாவம், ஆஸ்ரவம், பந்தம், ஸம்வரம், நிர்ஜரை மற்றும் மோக்ஷம் இவை ஏழும் உயிர் உயிரல்லா திரவியங்களின் தொடர்பால் உண்டாகும் வேறுபாடுகள். அதாவது உயிர் மற்றும் உயிரல்லா திரவியத்தில் ஆறு பொருள்கள் ஏழு தத்துவம் ஒன்பது பதார்த்தங்கள் எல்லாம் அடங்கும் என்பதாம்.



உயிருக்கு செறிப்பு (ஸம்வரை), உதிர்ப்பு (நிர்ஜரை) மற்றும் முக்தி (மோக்ஷம்) இந் நான்கு பொருள்களும் ஏற்புடையவை. மற்ற உயிரல்லன ஆஸ்ரவம், பந்தம், புண்ணியம், பாவம் இவ்வைந்தும் ஏற்புடையன அல்ல; விடத்தக்கவை. முக்தி நெறியில் இந்த ஒன்பது பொருள்களையும் அறிய வேண்டியது அவசியம். ஏனெனில் இவற்றின் நம்பிக்கையின் அடிப்படையில் முக்தி நெறி கிட்டும்.



ஆஸவதி ஜேண கம்மம், பரிணாமேணப்பணோ ஸ விண்ணேயோ !
பாவாஸவோ, ஜிணுத்தோ, கம்மாஸவணம் பரோ ஹோதி !!    (29)


    (அப்பணோ) ஆன்மாவின், (ஜேண) எந்த, (பரிணாமேண) பரிணாமத்தால், (கம்மம்) கர்மம், ((ஆஸவதி) வருகிறதோ, (ஸோ) அது, (ஜிணுத்தோ) ஜிநேஸ்வரனால்  அருளப்பட்ட (பாவாஸவோ) பாவாஸ்ரவம் என்று, (விண்ணோயா) அறிதல் வேண்டும். அதனால் ஞானாவரணம் முதலிய புற்கல கர்மங்களின் வருகை, (பரோ) திரவியாஸ்ரவம் என்று அறிக.



ஆன்மாவின் எந்த ஆசை, வெகுளி, மயக்க பரிணாமங்களால் கர்மம் வருகிறதோ அந்த பரிணாமம் பாவாஸ்ரவம்; அந்த பாவாஸ்ரவ அடிப்படையில் வரும் ஞானாவரணியம் முதலிய திரவிய கர்மங்களின் வருகையை திரவியாஸ்ரவம் என்கிறார்கள்.உதாரணமாக எண்ணெய் பசை உள்ள பொருளில் தூசுகள் வந்தடைகின்றன. அது போன்றே ஆசை, வெகுளி முதலிய பசை போன்ற பாவாஸ்ரவத்தின் நிமித்தத்தால் ஜீவனுக்கு திரவியாஸ்ரவம் உண்டாகிறது.


மிச்சத்தா விரதிபமாத ஜோக கோஹாத ஓத விண்ணேயா !
பண பண பணதஹதிய சது, கமஸோ, பேதா து புவ்வஸ்ஸ !!   (30)


    இது ஊற்று வகை கூறுகிறது.


     (அத) மற்று, (புவ்வஸ்ஸ) முதலான பாவாஸ்ரவத்தை, (கமஸோ) கிரமமாக, (பண,பண, பணதஹ, திய சது) ஐந்து, ஐந்து, பதினைந்து, மூன்று மற்றும் நான்கு பகுதிப்படும். (மிச்சத்தா விரதிபமாத ஜோக கோகஹாத   ஒ )மித்யாத்வம் அவிரதி, பிரமாதம், யோகம் மற்றும் கஷாயம் (பேதா) வகையாக, (விண்ணேயா) அறிய வேண்டும்.



பாவாஸ்ரவத்திற்கு மித்யாத்வம் 5, அவிரதி 5, பிரமாதம் 15, யோகம் 3, மற்றும் கக்ஷாயம் 4 மொத்தம் சேர்ந்து (5 + 5 + 15 + 3 + 4 ) 32 வகை. மேலும் அவிரதி 12, யோகம் 15, கக்ஷாயம் 25 என்று மேலும் பேதம் பிரித்துப் பார்க்கும்போது பாவாஸரவத்திற்கு 72 பேதங்கள் உண்டாகின்றன.


ணாணாவரணாதீணம், ஜோக்கம் ஜம் புக்கலம் ஸமாஸவதி!
தவ்வாஸவோ ஸ ணேஓ, அணேயபேயோ ஜிணக்காதோ !!   (31)

       இதுவும் அது.

  ( ணாணாவரணாதீணம்) ஞானாவரணீயம் முதலிய எண்வினைகளாக மாறும், (ஜோக்கம்) தகுதி படைத்த, (புக்கலம்) புற்கலதிரவியம், (ஸமாஸவதி) வருகிறது, (ஸ) அது, (ஜிணக்காதோ) பகவான் ஜிநேஸ்வரனால் கூறப்பட்ட, (அணேயபேதோ) அநேக வகைகளைக் கொண்ட, (தவ்வாஸவோ) திரவியாஸ்ரவம் என்று, (ணேஓ)அறிய வேண்டும்.


எண்ணை பூசப்பட்ட உடலில் தூசுகள் வந்தடைவதைப் போல ஞானாவரணீயம் முதலிய எண்வினைகளாக மாறும் தகுதி படைத்த கார்மண வர்கணைகளின் புற்கலக் கூட்டங்கள் ஆன்மாவுடன் கலந்து நிற்பதாக வருகின்றன; அப்படி வந்து கொண்டிருக்கும் கர்மபரமாணுக்களை திரவியாஸ்ரவம் என்கிறார்கள். இது அநேக வகை.


திரவியாஸ்வரத்திற்கு ஞானாவரணீய, தர்சனாவரணீய, வேதனீய, மோகனீய, ஆயு, நாமம், கோத்ரம், அந்தராயம் என 8 வேறுபாடு உண்டு. அல்லது ஞானாவரணம் 5, தர்சனாவரணம் 9, வேதனீயம் 2, மோகனீயம் 28, ஆயு 4, நாமம் 93, கோத்ரம் 2 மற்று அந்தராயம் 5, இப்படி 148 பேதமும் தொடர்ந்து அஸங்க்யாத அதாவது எண்ண முடியாத பேதமும் என திரவியாஸ்ரவம் பல வகை.



பஜ்ஜதி கம்மம் ஜேண து சேதணபாவேண பாவபந்தோ ஸோ !
கம்மாதப தேசாணம், அண்ணோண்ணப வேஸணம் இதரோ !!   (32)


        இது கட்டு இயல்பு கூறுகிறது.


        (ஜேண) எந்த, (சேதணபாவேண) ஆன்ம பரிணாமத்தால், (கம்ம) கர்மம், (பஜ்ஜதி)பந்திக்கிறதோ (கட்டுகிறதோ), (ஸோ) அந்த பரிணாமம், (பாவபந்தோ) பாவபந்தம் எனப்படுகிறது. (து) மற்றும், (கம்மாதப தேஸாணம்) கர்மம் மற்றும் ஆத்ம பிரதேசங்கள், (அண்ணோண்ணப வேஸணம்) ஒன்றோடு ஒன்று பிணைந்து ஒன்றாக கலந்து நிற்பதை, (இதரோ) திரவிய பந்தம் என்பர்.


       ஆன்மாவின் எந்த மித்யாத்வம் அல்லது ஆசை, வெகுளி, மயக்க பரிணாமங்களால் ஆன்மாவில் வினைக்கட்டு நிகழ்கிறதோ அது 'பாவபந்தம்' எனப்படுகிறது. பாவபந்தத்தின் நிமித்தத்தால் கர்ம வடிவ புற்கல பரமாணுக்கள் ஆன்ம பிரதேசங்களில் பாலும் நீரும் போல ஒன்றோடு ஒன்று இணைந்து கலந்து நிற்பதை திரவிய பந்தம் என்பர்.
)

பயடிட்டிதி அணு பாகப்பதேச து சதுவிதோ பந்தோ !
ஜோகா பயடிபதேசா, டிதி அணுபாகா கஸாயதோ ஹோந்தி !!     (33
      

இது கட்டின் வகையும் காரணமும் கூறுகிறது.


    (பந்தோ) பந்தம், (பயடிட்டதி அணுபாகப்பதேச பேதா) பிரக்ருதி பந்தம், ஸ்திதிபந்தம், அனுபாகபந்தம், பிரதேசபந்தம் என (சதுவிதோ) நால்வகை ஆகும். (பயடிபதேசா) பிரக்ருதி பந்தம் மற்றும் பிரதேச பந்தம் இரண்டும், (ஜோகா) யோகத்தினாலும், (மனம், வாக்குச் செயல்) (து) மற்றும், (டிதி அணுபாகா) ஸ்திதி பந்தமும் அனுபாக பந்தமும், (கஸாயதோ) கஷாயத்தாலும் (குரோதம், மானம், மாயை, உலோபம்) (ஹோந்தி) நிகழ்கின்றன.


1 பிரக்ருதி பந்தம், 2 ஸ்திதி பந்தம், 3 அனுபாக பந்தம் மற்றும் 4 பிரதேச பந்தம் என பந்தம் நால்வகை. இவற்றுள் பிரக்ருதி பந்தமும் பிரதேச பந்தமும் யோகத்தாலும், ஸ்திதி பந்தமும் அனுபாக பந்தமும் கஷாயத்தாலும் நிகழ்கின்றன.

-------------------------- 


                  

சேதன பரிணாமோ ஜோ, கம்மஸ்ஸாகஸவணிரோ ஹணே ஹேஊ !
ஸோ பாவஸம்வரோ கலு, தவ்வாஸவ ரோஹணே அண்ணோ !!     (34)


    இது செறிப்பின் இயல்பு கூறுகிறது.


 (ஜோ) எந்த, ( சேதனபரிணாமோ ) ஆன்ம பரிணாமம், (கம்மஸ்ஸ) கர்மத்தின், ( ஆஸவணிரோஹணே) ஆஸ்ரவத்தைத் தடுப்பதில், ( ஹேஊ) காரணமாக உள்ளதோ, (ஸோ) அந்த பரிணாமத்தை, (கலு) நிச்சய நயத்தால், ( பாவஸம்வரோ) பாவ ஸம்வரை என்பர். (ஜோ) எது, (தவ்வாஸவரோ ஹணே) திரவியாஸ்வரத்தைத் தடுப்பதில், (ஹேஊ) காரணமாக உள்ளதோ, (ஸோ) அதை, (அண்ணோ) திரவிய ஸம்வரை என்பர்.



ஆன்மாவின் எந்த பரிணாமத்தால் கர்மம் வருவது தடைபடுகிறதோ அந்தப் பரிணாமத்தை பாவஸம்வரை என்கிறார்கள். அதனால் திரவியாஸ்வரம் தடைபடுதலை திரவியஸம்வரை என்பர்.


பாவஸம்வரம் மற்றும் திரவிய ஸம்வரை நான்காவது 
குணஸ்தானத்திலிருந்து துவங்குகிறது. பதினான்காவது குணஸ்தானத்தில் ஆஸ்வரம் முற்றிலுமாக அகன்று விடுகிறது. அப்போது அதனை ஸர்வஸம்வரம் என்பர்.



ஆஸ்ரவத்திற்குக் காரணம் ஆன்மாவில் தோன்றும் சுப அசுப வடிவமான அசுத்த பரிணாமம். இந்த அசுத்த பரிணாமம் தோன்றாமைக்குக் காரணமாக உள்ள சுத்த பரிணாமத்தில் நிலைத்திருப்பது 'பாவஸம்வரம்'. இந்நிலையில் புண்ணிய பாவ வடிவமான வினை அணுக்கள் ஆன்மாவை நோக்கி வராமல் தடைபடுவது 'திரவியஸம்வரம்' எனப்படும்.

---------------------------- 



வதசமிதீ குத்தீ ஓ, தம்மாணுபேஹா பரீஸஹஜ ஓ ய !
சாரித்தம் பஹுபேயம, ணாயவ்வா பாவஸம்வர விஸேஸா !!    (35)


    இது செறிப்பின் வகை கூறுகிறது.


 (வதசமிதிகுத்தீஓ) விரதம், சமிதி, குப்தி, (தம்மாணுபேஹா) தர்மம், அனுபிரேக்ஷை, (பரீஷஸஜ ஓ) பரீஷகஜயம் (ய) மற்றும், ( பஹுபேயம்) பலவகை, (சாரித்தம்) சாரித்ரம், (பாவாஸம்வரவிஸேஸா) பாவஸம்வரையின் வகை, என்று (ணாயவ்வா) அறியவேண்டும்.


 5 விரதம், 5 சமிதி, 3 குப்தி, 10 தர்மம், 12 அனுபிரேக்ஷை, 22 பரீஷஹஜயம் மற்றும் பலவேறு வகை சாரித்ரம் இவை எல்லாம் பாவ சம்வரையின் வகைகள்,  அதாவது இவை எல்லாம் கர்மத்தின் ஆஸ்ரவத்தைத் தடுப்பதற்குக் காரணமாக உள்ளன.


இந்த காதை பாவஸம்வரத்தின் வகையை விளக்குவதாகும். ஆகவே இவை நிச்சய விரதத்தைக் குறிப்பதாகும். நிச்சய விரதம் என்றால் சுப அசுப வடிவமான பாவத்தினின்றும் விலகி சுத்த பரிணாமத்தால் ஒன்றி இருப்பது.


 வியவகார விரத,  சமிதி குப்திகளை இதே நூலில் 45 வது காதையில் விளக்கப் படுவதிலிருந்து இந்த 35 வது காதை நிச்சய விரதம் என்ற உண்மை தெரிய வரும்.


கேள்வி :


ஆஸ்ரவத்திற்கும் பந்தத்திற்கும் காரணம் மித்யாத்வமும் அவிரதமும் என்று கூறும்போது இரண்டிற்கும் காரணம் ஒன்று என்பது தெளிவு. அப்படியிருக்க ஆஸ்ரவத்திற்கும் பந்தத்திற்கும் இடையில் இருக்கும் வேற்றுமை என்ன ?


பதில் :



மித்யாத்வம் மற்றும் அவிரதம் காரணமாக முதலில் கர்ம புற்கலங்களின் வருகை ஆஸ்ரவம் ; அடுத்த க்ஷணத்தில் ஆன்ம பிரதேசங்களுடன் சேர்ந்து நிலைத்து விடுவது பந்தம். இதுதான் இவ்விரண்டிற்கும் இடையில் உள்ள வேறுபாடு.

  ------------------------- 
          

ஜஹகாலேண தவேண ய, புத்தரஸம் கம்மபுக்கலம் ஜேண !
பாவேண ஸடதி ணேயா, தஸ்ஸடணம் சேதி ணிஜ்ஜரா துவிஹா!!        (36)

  
 இது உதிர்ப்பின் இயல்பு கூறுகிறது.


  (ஜஹகாலேண) கர்மத்தின் கால அளவு, (ஆயுள்) முடிந்த்தும், (புத்தரஸம்) எதன் பலனை அனுபவித்து ஆகிவிட்டதோ, (கம்மபுக்கலம்) அப்படிப்பட்ட புற்கல கர்மம், (ஜேண) எந்த, (பாவேண) பரிணாமத்தால், (ஸடதி) உதிர்ந்து விடுகிறதோ, (விலகுகிறதோ) [அந்த பரிணாமத்தை ஸவிபாக பாவ நிர்ஜரை என்பர்]. (ய) மேலும், (தவேண) தவத்தின் மூலம், (ஜேண பாவேண கம்மபுக்கலம் ஸடதி) ஆன்மாவின் எந்தப் பரிணாமத்தால் கர்மம் விடுபடுகிறதோ அந்த பரிணாமம் அவிபாக நிர்ஜரை எனப்படுகிறது ; (ஜஹகாலேண ய தவேண) கால அளவு முடிந்ததும் அல்லது தவத்தால், (தஸ்ஸடணம்) ஞாணாவரணீயம் முதலிய திரவிய கர்மங்கள் விடுபடுவது (ஸவிபாக மற்றும் அவிபாக) திரவிய நிர்ஜரையாகும். (இதி) இப்படி, (ணிஜ்ஜரா) நிர்ஜரையை, (துவிஹா) இருவகையாக, (ணேயா) அறிய வேண்டும்.


நிர்ஜரை இருவகைப்படும்.


 1. திரவிய நிர்ஜரை.
 2. பாவ நிர்ஜரை.


ஆன்மாவின் எந்த பரிணாமத்தால் ஓரளவு கர்மம் விடுபடுகிறதோ அந்த பரிணாமத்தை பாவநிர்ஜரை என்றும் ஞானாவரணாதி திரவிய கர்மங்கள் ஓரளவு விடுபடுவதை திரவிய நிர்ஜரை என்றும் கூறுவர்.


இந்த இருவித திரவிய மற்றும் பாவ நிர்ஜரையும் ஸவிபாக (அகாம நிர்ஜரை) மற்றும் அவிபாக (ஸகாம நிர்ஜரை) என இருவகையாகக் கூறுவர்.



கர்மத்தின் கால அளவு  முழுமை பெற்றதும் அதாவது தன் பலனைக் கொடுத்து விட்டு ஆன்மாவினின்றும்  கர்மங்கள் ஓரளவு விடுபடுவது ஸவிபாக நிர்ஜரை எனப்படும். தவிர தவம் முதலியவற்றால் கர்மங்கள் ஓரளவு விடுபடுவது அவிபாக நிர்ஜரை எனப்படுகிறது.

,

சிதாநந்த சுபாவ ஆன்மா தன் சுத்தாத்ம சுபாவ பலத்தால் ஓரளவு தன்னில் தூய்மை கொண்டு அசுத்த (சுப அசுப) நிலையை ஓரளவு விளக்குவது 'பாவ நிர்ஜரை ' என்றும், அத்தூய சுபாவத்தில் தோய்ந்திருக்கும்போது, ஓரளவு திரவிய கர்மம் தானாகவே விலகுவது 'திரவிய நிர்ஜரை ' என்றும் கூறப்படுகிறது. (இரண்டு நிலைகளிலும் சுத்த பாவம் நிமித்த காரணமாக உள்ளது)


நிர்ஜரா தத்துவம் ஸவிபாக நிர்ஜரை, அவிபாக நிர்ஜரை என மேலும் இருவகைப்படும்.


ஸவிபாக நிர்ஜரை :


வினை தன் உதய காலத்தில் இன்ப துன்பங்களைக் கொடுத்துவிட்டு தானாக ஆன்மாவை விட்டு விலகுவது  ' ஸவிபாக ' நிர்ஜரை. உதாரணமாக மாங்காய் தன் காலத்தில் தானாகப் பழுத்து மரத்தினின்றும் உதிர்ந்து விடுவதைப் போன்றது.


அவிபாக நிர்ஜரை :

வினை உதயத்திற்கு வருமுன்னரே தவம் தியானம் முதலியவற்றால் வினைகளை நீக்குவது 'அவிபாக' நிர்ஜரை. உதாரணமாக காய் நிலையில் உள்ள மாங்காயைக் கொண்டு வந்து வைக்கோல் முதலியவற்றில் வைத்து பழமாக்குவது போன்றது.


பாவ நிர்ஜரை :

வினைகள் உதிர்வதற்குக் காரணமாக உள்ள ஆன்மாவின் சுத்த பரிணாமம் 'பாவநிர்ஜரை' எனப்படுகிறது.


திரவிய நிர்ஜரை :

வினைகள் ஆன்மாவினின்றும் உதிர்வது  'திரவிய நிர்ஜரை' ஆகும்.




ஸவ்வஸ்ஸ கம்மணோ ஜோ, கயஹேதூ அப்பணோ ஹு பரிணாமோ !

ணேஒ  ஸ  பாவமோக்கோ,  தவ்வவிமுக்கோ  ய  கம்மபுதபாவோ !!  (37)





     இது முக்தி இயல்பு கூறுகிறது.





 (ஜோ) எந்த, ( அப்பணோ) ஆன்மாவின், (பரிணாமோ) பரிணாமம், (ஸவ்வஸ்ஸ) எல்லா, (கம்மணோ) கர்மங்களின், (கயஹேதூ) க்ஷயத்திற்குக் காரணமாக உள்ளதோ, (ஸ) அந்த பரிணாமம், (ஹு) நிச்சயமாக, (பாவமோக்கோ) பாவமோக்ஷம் என்று, (ணேஒ) அறிக ; (ய) மேலும், (கம்மபுதபாவோ) ஞானாவரணீயம் முதலிய திரவிய கர்மங்கள் முழுமையாக விடுபடுவது, (தவ்வவிமோக்கோ) திரவிய மோக்ஷம் என்று தெளிக.







மோக்ஷம் இருவகை ,





   1  திரவிய மோக்ஷம்.



    2  பாவ மோக்ஷம்.




   ஆன்மாவின் எந்த பரிணாமம் எல்லாக் கர்மங்களும் முற்றிலும் க்ஷயமாவதற்குக் காரணமாக உள்ளதோ அந்தப் பரிணாமத்தை பாவமோக்ஷம் என்கிறார்கள். மற்றும் ஞானாவரணீயம் முதலிய எண்வகை திரவிய கர்மங்கள் முற்றிலுமாக அழிவதற்கு திரவியமோக்ஷம் என்பர். இந்த   திரவிய மோக்ஷம் அயோக குணஸ்தானத்தில் உள்ள ஜீவனுக்கு கடைசி நேரத்தில் உண்டாகிறது.

---------------

                 

ஸுஹ அஸுஹ பாவஜுத்தா, புண்ணம் பாவம் ஹவந்தி கலு ஜீவா !
ஸாத் ஸுஹாஉ ணாமம், கோதம், புண்ணம் பராணி பாவஞ்சா !!   (38)


      இது புண்ணிய பாப இயல்பு கூறுகிறது.


      (சுஹ அசுஹ பாவஜுத்தா) நல்ல மற்றும் கெட்ட பரிணாமங்களுடன், (ஜீவா) ஜீவன், (கலு) நிச்சயமாக, (புண்ணம்) புண்ணிய வடிவமாக, (ச) மற்று, (பாவம்) பாவ வடிவமாக, (ஹவந்தி) ஆகிறது, இதில் (ஸாதம்) சாதா வேதனீயம், (சுஹாஉ) சுப ஆயுள், (ணாமம்) சுப நாமம், (கோதம்) உயர்ந்த கோத்திரம், (முண்ணியம்) புண்ணியரூபமாக, (அவந்தி) உள்ளன, (பராணி) மிகுந்தவை எல்லாம், (பாவம்) பாப வடிவமாக, (ஹவந்தி) உள்ளன.



   புண்ணியமும் பாபமும் இருவகைப்படும் ;

1. பாவ புண்ணியம்,
2. திரவிய புண்ணியம்,

1. பாவ பாபம்,
2. திரவிய பாபம்.
           

            இதில் ஜீவனுடைய நல்ல எண்ணங்களை பாவ புண்ணியம், அசுப எண்ணங்களை பாவ பாபம் என்பர்.


              கர்மத்தின் புண்ணிய பிரக்ருதிகளை திரவிய புண்ணியம் என்கிறார்கள். பாவ பிரகிருதிகளை திரவிய பாபம் என்பார்கள்.


            சாதாவேதனீய, சுபாயு, சுபநாமம், உச்ச கோத்திரம்  --- இவை புண்ணிய பிரக்குதிகள். அசாதா வேதனீயம், அசுப ஆயு, அசுப நாமம், நீச கோத்திரம் இதோடு காதிகர்மங்கள் சேர்ந்து 82 பாப ப்ரக்ருதிகள்.


ஆன்மாவின் உபயோக சுபாவம் (ஞானம்) மூன்று நிலைகளாக மாறக்கூடும். 
1 சுபம், 2 அசுபம், 3 சுத்தம். இவற்றில் முதல் இரண்டு நிலைகளில் ஈடுபாடு கொள்ளும் ஜீவனுக்கு சுப பரிணாமத்தால் (நல்லெண்ணம்) புண்ணியமும், அசுப பரிணாமத்தால் பாபமும் பந்தமாகிறது. இவ்விரு நிலைகளிலிருந்து உயர்ந்து சென்று தன் சுபாவ நிலையில் (சுத்த நிலையில்) ஈடுபடும்போது புண்ணியம் பாபம் இரண்டும் பந்திப்பதில்லை என்பது மட்டுமல்ல, மாறாக முன்னர் கட்டப்பட்ட இரு வினைகளும் கெடுகின்றன என்று அறிதல் வேண்டும்.


(இரண்டாம் அதிகாரம் முற்றும்)

-------------------

 மூன்றாம் அதிகாரம்

                     

ஸம்மத்தம் சணணாணம், சரணம் மோக்கஸ்ஸ காரணம் ஜாணே !
வவஹாரா ணிச்சயதோ, தத்திய ம இஒ  ணிஒ அப்பா !!    (39)


      இது முக்தி நெறி கூறுகிறது.


     (வவஹாரா) வியவகார நயத்தால், (ஸம்மத்தம் சணணாணம் சரணம்) ஸம்யக்தரிசனம், ஸம்யக்ஞானம் மற்றும் ஸம்யக்சாரித்ரம், (ணிச்சயதோ) நிச்சய நயத்தால் (தத்திய ம இஒ) அம் மூன்றுடன், (ணிஒ) தன், (அப்பா) ஆன்மா, (மோக்கஸ்ஸ) மோக்ஷத்திற்குக், (காரணம்) காரணம் என்று, (ஜாணே) அறிய வேண்டும்.


வியவகாரம்  நிச்சயம் என்று மோக்ஷமார்கம் இருவகைப்படும். இதில் ஸம்யக்தரிசனம், ஸம்யக்ஞானம் மற்றும் ஸம்யக்சாரித்திரம் மூன்றின் கூட்டம் வியவகார மோக்ஷமார்கம், ஸம்யக் தரிசனம், ஸம்யக்ஞானம் மற்றும் ஸம்யக்சாரித்ரம் மூன்றுடன் இணைந்த ஆன்மா நிச்சய மோக்ஷ மார்க்கம்.


ஸம்யக்தரிசனம் முதலிய மூன்றின் கூட்டமே மோக்ஷமார்க்கம்; தனித்தனியாக அல்ல. உதாரணம் மருந்தின் மீது நம்பிக்கை, அது பற்றிய ஞானம் மற்றும் உட்கொள்ளுதல் ஆன இம் மூன்றில் ஏதாவது ஒன்று இல்லை என்றாலும் உடல் நலம் கிடைக்கமாட்டாது. இது போன்றே ஸம்யக்தரிசனம் முதலிய மூன்றும் தனித்தனியாக மோக்ஷ மார்க்கமாக ஆகமுடியாது.


வீதராக ஸர்வக்ஞ பரமாத்மனால் அருளப்பட்ட ஆறு திரவியம், ஐந்து அத்திகாயம், ஏழு தத்துவம் மற்றும் ஒன்பது பதார்த்தங்கள் ஆகியவற்றில் நன்னம்பிக்கை, நல்ஞானம் நல்லொழுக்கம் மற்றும் விரதம் முதலிய ஈசாரங்கள் என்கிற விகல்ப வடிவம் வியவகார மோக்ஷ மார்கம் என்றும், ஸம்யக் தரிசன ஞான சாரித்ர வடிவமான தன் சுத்தாத்ம தத்துவத்தில் தோய்ந்திருப்பது நிச்சய மோக்ஷ மார்கம் என்றும் கூறப்படும்.


கிட்ட காலிமாதிகள் கலந்த தாதுவில் நெருப்பைப் போல சாதகனுக்கு வியவகார மோக்ஷ மார்கம் நிமித்த மாத்திரமே ஆகும். தங்கத்திற்கு ஒப்பாக நிர் விகார தன் ஆன்மாவை அடைவது நிச்சய மோக்ஷ மார்க்கம். இவ்வாறு சுருக்கமாக வியவகார நிச்சய மோக்ஷ மார்கம் கூறப்பட்டது.
   

ரயணத்தயம் ண வட்ட இ, அப்பாணம் முஇத்து அண்ண தவியம்ஹி !
தம்ஹா தத்தியம இஒ, ஹொதிஹு, மோக்கஸ்ஸ காரணம் ஆதா !!   (40)


     இதுவும் அது.


      (ரயணத்தயம்) இரத்தினத்ரயம், (அப்பாணம்) ஆன்மாவைத் (முஇத்து) தவிர்த்து (விட்டு), (அண்ணதவியம்ஹி) வேறு திரவியங்களில், (ணவட்ட இ) இருப்பதில்லை. (தம்ஹா) இதனால், (தத்திய ம இஒ) அம்மூன்றுடன் கூடிய தன் ஆன்மாவே, (மோக்கஸ்ஸ) மோக்ஷத்திற்கு, (காரணம்) காரணம், (ஹொதி) ஆகும்.



          இரத்தினதிரயம் [ஸம்யக் தரிசன, ஸம்யக் ஞானம், ஸம்யக் சாரித்ரம் ] ஆன்மாவில்தான் உள்ளது. வேறு திரவியங்களில் அல்ல. ஆகவே இம் மூன்றும் கலந்த தன் ஆன்மாதான் நிச்சய மோக்ஷ மார்கம்.

------------------



ஜீவாதி ஸத்தஹணம், சம்மத்தம் ரூவ அப்பணொ தம் து !
துரபிணிவேஸ விமுக்கம், ணாணம் ஸம்மம் கு ஹொதி ஸதி ஜம்ஹி !!           
 (41)


    இது நற்காட்சி இயல்பு கூறுகிறது.


      (ஜம்ஹி ஸதி) எதன் இருப்பினால், (கு) நிச்சயமாக, (ணாணம்) ஞானம், (துரபிணிவேச விமுக்கம்) ஐயம் முதலியவை இல்லாதது, (ஸம்மம்) உண்மையானதாக (ஸம்யக் ஞானமாக), (லஹாதி) ஆகிறதோ, (அப்படிப்பட்ட) (ஜீவாதி ஸத்தஹணம்) ஜீவன் முதலான ஏழு தத்துவங்களில் உள்ள நம்பிக்கை, (ஸம்மத்தம்)  ஸம்யக் தரிசனம் எனப்படும். (தம்) அந்த ஸம்யக் தரிசனம், (அப்பணொ) ஆன்மாவின், (ரூவம்) ஸ்வரூபம்.


பகவான் ஜினேஸ்வரனால் அருளப்பட்ட ஏழு தத்துவங்களில் உள்ள உண்மை நம்பிக்கை வியவகார ஸம்யக் தரிசனம் என்று கூறப்படுகிறது. ஆன்ம ஸ்வரூபத்தில் உள்ள நம்பிக்கை நிச்சய ஸம்யக் தரிசனம் எனப்படுகிறது. இந்த ஸம்யக்தரிசனம் ஆன்மாவின் ஸ்வரூபம், ஸ்வபாவம், குணம் அல்லது தர்மம் என்று அழைக்கப் படுகிறது. அந்த ஸம்யக் தரிசனம் உண்டான பிறகுதான் சந்தேகம் முதலியன விலகிவிடுகின்றன. அப்போது ஞானம் ஸம்யக்ஞானம் என்று கூறப்படுகிறது.

----------



ஸம்ஸயவிமொஹ விப்பம் விவஜ்ஜியம் அப்பரஸ்ஸ ரூவஸ்ஸ !
கஹணம் ஸம்மம் ணாணம், ஸாயார மணெயபேயம் ச !!     (42)


   இது நல் ஞான இயல்பு கூறுகிறது.


   [அப்பரஸ்ஸரூவஸ்ஸ] தன்னுடைய ஆன்மா மற்றும் பிறபொருள்களுடைய ஸ்வரூபத்தை, [ஸம்ஸய விமொஹ விப்பம் விவஜ்ஜியம்] சந்தேகம், விபரீதம் அனத்யவசாயம் [இன்னது என்று உறுதியாக கூறமுடியாமை] இன்றி, [ஸாயாரம] அந்தந்தப் பொருள்களின் உருவத்துடன் [கஹணம்] எது எப்படி உள்ளதோ அதை அப்படியே அறிவது, [ஸம்மம் ணாணம்] ஸம்யக் ஞானம், [ச] மேலும், அந்த ஸம்யக் ஞானம், [அணேயபேயம்] அநேக பேதமாக உள்ளது.


ஆன்மா மற்றும் பிற பொருள்களின் ஸ்வரூபத்தை ஐயம், விபரீதம் மற்றும் அனத்யவசாயம் இன்றி அவற்றின் உருவத்துடன் இது குடம், இது படம் போன்ற வேறுபாட்டுடன் எப்படி உள்ளதோ அப்படியே அறிவது ஸம்யக் ஞானம். ஆன்ம ஸ்வரூபத்தை உள்ளபடி அறிவது நிச்சய ஸம்யக்ஞானம். அந்த ஸம்யக் ஞானம்  மதிஞானம் முதலிய வகைகள் கொண்டது.

------------------------ 


  

ஜம் ஸாமண்ணம் கஹணம், பாவாணம் ணேவ கட்டுமாயாரம் !
அவிஸேஸிதூண அட்டே, தம்ஸணமிதி பண்ணயே ஸமயே !!     (43)


     இது உபயோகம் கூறுகிறது.


     [அட்டே] பொருள்களில், [அவிசேசிதூண] விசேஷ பாகுபாடு செய்யாமல், [ ஆயாரம்] உருவத்தை, [ணேவ கட்டு] ஏற்காமல் (அறியாமல்), [ஜம்பாவாணம்] பொருள்களுடைய, [ஸாமண்ணம்] சாமான்யத்தை மட்டும், [கஹணம்] அறிவதை, [ஸமயே] ஜைன ஆகமத்தில், [தம்ஸணம்] தர்சனோப யோகம் என்று [பண்ண ஏ] கூறப்படுகிறது.



பொருள்களின் தனித்தன்மையோ (விசேஷத்தை) அவற்றின் குறிப்பிட்ட உருவத்தையோ அறியாமல் பொருள்களின் சாமான்ய (பொது) இருப்பை மட்டும் அறிவது தரிசனோபயோகம். இதில் இது கருப்பு, இது சிறியது, இது குடம் என்பன போன்ற பாகுபாடு காணப்படுவதில்லை. ஏதோ பொருள் உள்ளது என்று இருப்பு (சத்) மட்டும் காணப்படுகிறது. இதுதான் தரிசனோப யோகம். இதை 'நிர்விகல்பம்' என்றும் கூறுவர்.

--------------

   

தம்ஸணபுவ்வம் ணாணம், சதுமத்தாணம் ண துண்ணி உவ ஓகா !
ஜுகவம் ஜம்ஹா கேவலி ணாஹே, ஜுகவம் து தே தோவி !!    (44)


     இதுவும் அது.


  (சதுமத்தாணம்) க்ஷயோபசம ஞானம் உள்ளவர்களுக்கு (ஸம்ஸாரி ஜீவன்களுக்கு), (ணாணம்) ஞானம், (தம்சணபுவ்வம்ஹி) தரிசன பூர்வகமே உண்டாகிறது, (ஜம்ஹா) ஏனென்றால், (சதுமத்தாணம்) க்ஷயோப சம ஞானிகளுக்கு, (துண்ணிஉவயோகா) இரண்டு உபயோகங்கள் (ஞானோப யோகம், தர்சனோப யோகம்), (ஜுகவம்) ஒரே சமயத்தில், (ண) உண்டாவதில்லை, (து) ஆனால், (கேவலிணாஹே) கேவலிகளுக்கு, (தே தோவி) அவ்விரண்டும், (ஜுகவம்) ஒரே சமயத்தில், (ஹோதி) உண்டாகின்றன.



      அல்பஞானிகளுக்கு தரிசனமும் ஞானமும் ஒரே சமயத்தில் உண்டாவதில்லை ; ஏனென்றால், க்ஷயோப சம ஞானம் படைத்த எல்லா பிறவி ஜீவன்களுக்கும், தரிசனத்திற்குப் பிறகே ஞானம் உண்டாகிறது. சம்சாரி பிராணிகளின் ஞானம் முழுமை பெற்றதல்ல , குறைபாடு உடையது. ஆனால் கேவலி பகவானுக்கு இவ்விரண்டு உபயோகங்களும் ஒரே சமயத்தில் உண்டாகின்றன. ஏனென்றால், அவருடைய ஞானமும் தரிசனமும் புலன் கடந்தவை மட்டுமல்ல முழுமையைப் பெற்றுள்ளவை.
--------------



பஹிரப்பந்தரகிரியா ரொஹொ பவகாரணப்பணா ஸட்டம் !
ணாணிஸ்ஸ ஜம் ஜிணுத்தம், தம் பரமம் ஸம்ம சாரித்தம் !!    (46)


    இதுவும் அது.


(பவகாரணப்பணாஸட்டம்) சம்சாரத்திற்கு (பிறவிக்கு) காரணமாக உள்ளவற்றை ஒழிப்பதற்காக, (ணாணிஸ்ஸ) ஞானியின் (முனிவரின்),  (பஹிரப்பந்தர கிரியாரொஹொ) அகப்புறச் செயல்களைத் தடுத்து நிறுத்தும் செயலை, (பரமம்) உயர்ந்த, (சாரித்தம்) சாரித்ரம் என்று, (ஜிணுத்தம்) ஜிநேஸ்வரனால் கூறப்பட்டது.


ஸம்யக் ஞானம் உண்டான பிறகு பிறவியினின்றும் விடுபட மூன்று யோகங்களின் (மனம், வாக்குச் செயல்)சுப, அசுப, அக - புறச்செயல்களை தடுப்பது நிச்சய சாரித்ரம் என்று கூறப்பட்டது.

-----------



துவிஹம்பி மொக்கஹெஉம், ஜாணெ பாஉணதி ஜம் முணீணியமா !
தம்ஹா பயத்தசித்தா, ஜுயம் ஜாணம் ஸமப்பஸஹ !!       (47)


    இது தியானத்தின் தேவை கூறுகிறது.


   (ஜம்) ஏனென்றால், (முணீ) முனிவன், (ணியமா) நியமமாக, (ஜாணே) தியானத்தால், (துவிஹம்பி) இருவிதமான (நிச்சயம்,விவகாரம்), (மொக்கஹெஉம்)மோக்ஷ காரணங்களை, (பாஉணதி) அடைகிறார்.(கம்ஹா) ஆகவே, (ஜுயம்) நீங்களும், (பயத்த சித்தா) முயற்சியுடையவர்களாகி, (ஜாணம்) தியானத்தை, (ஸமப்பஸஹ) நன்கு பயிலுவீராக.


தியானத்தின் வாயிலாகத்தான் முனிகள் நிச்சய மோக்ஷமார்கம் மற்றும் வியவகார மோக்ஷ மார்கம் இரண்டையும் அடைகிறார்கள். உங்களுக்கும் மோக்ஷ மார்கத்தில் நாட்டம் இருக்குமானால் நன் முயற்சியுடன் தியானத்தைப் பயிலுவீராக.


நிச்சய இரத்தின திரய வடிவ நிச்சய மோக்ஷ மார்கம், வியவகார இரத்தின திரய வடிவ மோக்ஷமார்கம் ஆக இரண்டும் சாத்திய சாதக ரூபத்தில் முன்னர் விளக்கப் பட்டன. (சாத்தியம் அடையவேண்டிய நிலை, குறிக்கோள் ; சாதகம் - சாதகனுடைய பாவங்கள்). இவ்விரண்டு மோக்ஷ மார்கங்களையும் தன்னைத்தான் உணரும் நிர்விகார உயர்ந்த தியானத்தின் மூலம் முனி அடைகிறான்.


ஆகவே பவ்வியர்களாகிய நீங்களும் பார்க்கப்பட்ட, அனுபவிக்கப்பட்ட சுப, அசுப, ஆசை முதலிய அனைத்து விகார பாவங்களையும் விடுத்து, ஆன்ம நலத்தால் உண்டாகக் கூடிய சுகாம்ருத சுவையை அனுபவிப்பதில் தோய்ந்து தியானத்தைப் பயிலுவீராக.
-------------- 



மாமுஜ்ஜஹ மா ரஜ்ஜஹ மா  துஸ்ஸஹ, இட்டணிட்ட அட்டேசு !
திரமிச்சஹ ஜஇ சித்தம், விசித்த ஜாணப்ப சித்திஏ !!     (48)


   இது ஒரு தியான முறை கூறுகிறது.


   (ஜஇ ) ஒரு வேளை, (விசித்தஜாணப்ப சித்தீயே) பல்வகை தியான சித்திக்காக, (சித்தம்) மனதை, (திரம்) ஒரு நிலைப்படுத்த, (இச்சஹ) விரும்புகிறாய் என்றால், (இட்டணிட்ட அட்டேசு) இஷ்ட -- அனிஷ்ட பொருள்களில் (விருப்பும் வெறுப்பும் உள்ள பொருள்களில்) , (மாமுஜ்ஜஹ) மோகம் கொள்ளாதே, (மா ரஜ்ஜஹ) ஆசை கொள்ளாதே, (மாதுஸ்ஸஹ) துவேஷம் கொள்ளாதே.


நீ உண்மையான சுப அசுப விகல்பம் இல்லாத தியானம் செய்ய விரும்புகிறாய் என்றால் விரும்பும் பொருளில் மோகத்தையோ, ஆசையோ கொள்ளாதே; விரும்பாத பொருள்கள் மீது துவேஷம் கொள்ளாதே. ஏனென்றால் பொருள்களிடத்து விருப்பு வெறுப்பு கொண்டுதான் இந்த ஜீவன் பிறவியில் சிக்கிக் கொள்கிறது. இதை நீக்குவதால் இரத்தின திரயம் கிட்டுகிறது. அப்போது ஜீவன் பிறவியிலிருந்து விடுபட்டு முக்தியை அடைகிறது.


நமக்கு நன்மை தரும் அல்லது உதவி செய்யும் என்று கருதப்படும் பிற பொருள்களை விரும்பும் பொருள் என்றும், நன்மை பயக்காத, உதவி புரியாதவற்றை விரும்பத் தகாத பொருள் என்றும் கூறுகிறோம். ஆனால் உலகில் உள்ள ஒவ்வொரு பொருளும் தம் தம்  சுபாவ குணத்திற்குத் தானே கர்த்தா. எந்தப் பொருளும் வேறு பொருளுக்கு இன்ப துன்பங்களைக் கொடுக்கவோ அல்லது உதவவோ, உதவாமல் இருக்கவோ செய்வதில்லை.


ஆயினும் இந்த உயிர் தன் பரிணாமங்களுக்கு ஏற்ப அவற்றை (பிற பொருள்களை) இன்பம் நல்கக் கூடியது என்றும், உதவக் கூடியது அல்லது துன்பம் விளைக்கக்கூடியது என்றும், உதவக்கூடாதது என்றும் எண்ணிக்கொண்டு விரும்பும் பொருள், விரும்பாப் பொருள் என்று பாகுபாடு காணுகிறது. ஆனால் பொருள்களின் நிலை அது அல்ல. இது உயிரினுடைய கற்பனையாகும். இது முற்றிலும் தவறாகும். தியானம் நால்வகைப்படும்.


1  ஆர்த்த தியானம் :

    துன்பம் மற்றும் தொந்தரவுகளைப் பற்றி சிந்தித்திருத்தல்.

2  ரௌத்ர தியானம் :

   இரக்கமற்ற, கொடிய எண்ணங்களை மனதில் கொள்வது.

3  தர்ம தியானம் :

   தர்மத்தோடு கூடிய தியானம் தர்மதியானம்.

4  சுக்ல தியானம் :


   பவித்ர எண்ணம் அதாவது சுபாசுப விகல்பமற்ற தூய ஆன்ம தியானம்.




பணதீச ஸொல சப்பண, துகமேகஞ் ச ஜபஹ ஜாஏஹ !
பரமேட்டி வாசயாணம், அண்ணஞ் ச குரூவ ஏ ஸேண !!    (49)


    இது தியான மந்திரம் கூறுகிறது.


     (பரமேட்டிவாசயாணம்) பஞ்ச பரமேட்டிகள்ன் திருநாமங்கள், (பணதீஸ) மப்பத்தைந்து, (ஸோலஹ) பதினாறு, (சப்பண) ஆறு, ஐந்து, (சது) நான்கு, (துகம்) இரண்டு, (ஏகம்) ஓர் எழுத்து   மந்திரத்தை, (குருவ ஏஸேண) உண்மை குருவின் உபதேசத்தால், (அண்ணம்) இதைத் தவிர வேறு மந்திரங்களையும், (ஜபஹ) உச்சரிக்க வேண்டும் ; அதேபோல, (ஜாஏஹ) தியானம் செய்யுங்கள்.


பஞ்சபரமேட்டிகளைக் குறிக்கும் 35,  16,  5,  4,  2  மற்றும் ஓர் எழுத்துக் கொண்ட மந்திரங்களையும் குருவினால் உபதேசிக்கப்பட்ட  வேறு சில மந்திரங்களையும் (சித்த சக்கரம் முதலியன) ஜபிக்கவும், தியானிக்கவும் செய்வாயாக.


1. "ணமோ அரஹந்தாணம், ணமோ சித்தாணம், ணமோ ஆஇரியாணம், ணமோ உவஜ்ஜாயாணம், ணமோ லோஏ ஸவ்வஸாஹுணம்"


இவை முப்பத்தைந்து எழுத்துக்களைக் கொண்ட 'ஸர்வபதம்' .


2. " அரஹந்த -- ஸித்த -- ஆஇரிய  உவஜ்ஜாய -- ஸாஹு "

இவை 16 எழுத்துக்களைக் கொண்ட 'நாமபதம்' 
.

3. " அரஹந்த -- சித்த"

ஆறு எழுத்துக் கொண்ட இரண்டு பரமேட்டிகள் 'நாமபதம்' .


4. " அ,  ஸி,  ஆ,  உ,  ஸா"

இவை ஐந்து எழுத்துக்களைக் கொண்ட பஞ்ச பரமேட்டிகளின் 'ஆதிபதம்' .


5. "அரஹந்த "

நான்கு எழுத்துகளைக் கொண்ட அரிஹந்த பரமேட்டி  'நாமபதம்'


6. " ஸித்த "

இரண்டு எழுத்து சித்தபரமேட்டி  'நாமபதம்' .


7. " அ "

ஓர் எழுத்து அரஹந்த பரமேட்டி  'ஆதிபதம்' .


' ஓம் ' இதுவும் ஓர் எழுத்து பஞ்ச  பரமேட்டிகளின் ஆதிபதம்.

அ (ருகர்) + அ (சரீரி) + ஆ (சாரியர்) +  உ (வாத்தியாயர்) + மு (னீ) = ஓம்.

அ+அ = ஆ + ஆ = ஆ + உ = ஓ + ம் = ஓம்



ணட்டசதுகாஇகம்மோ, தம்ஸண சுஹணாண வீரியமியோ !
ஸுஹதேஹத்தோ அப்பா, சுத்தோ அரிஹோ விசிந்திஜ்ஜோ!!     (50)


   இது தியானத்துக்கு உரியவரைக் கூறுகிறது.


(ணட்ட சதுகாஇகம்மோ) நான்கு காதி வினைகளை வென்றவர், (தம்சணசுஹணாண விரியம இஓ) அனந்த தரிசனம், அனந்த சுகம், அனந்த ஞானம், மற்று அனந்த வீரியம் எனும் அனந்த சதுஷ்டயங்களைப் பெற்றுயர்ந்த, (சுஹதேஹத்தோ) பரம ஔதாரிக சரீரத்தைப் பெற்றுள்ள (இரத்தம், மாமிசம் முதலிய ஏழு தாதுக்கள் அற்ற உடல்), (சுத்தோ) பதினெட்டு குற்றங்கள் இல்லாத, (அப்பா) ஆன்மா, (அரிஹோ)அரிஹந்த பரமேஷ்டி எனப்படுவர்.(இப்படிப்பட்ட அரிஹந்தபகவான்) (விசிந்திஜ்ஜோ) தியானத்திற்கு உரியவர்.


ஞானாவரணீயம், தர்சனாவரணீயம்,  மோகனீயம், அந்தராயம் என்னும் நான்கு காதி வினைகளை வென்றவரும், அக் காதி வினைகளின் கேட்டினால் அனந்த சதுஷ்டயங்களைப் பெற்றவரும், ஸப்த தாது இல்லாத பரம ஔதாரிக சரீரத்தை உடையவரும், பசி முதலான பதினெண் குற்றங்கள் இல்லாதவரும் ஆன அரஹந்த பரமேட்டி நம் தியானத்திற்கு உரியவர்.


அரிஹந்த பரமேட்டி ஜிநன், ஸர்வக்ஞன், கேவலி, வீதராகன், ஆப்தன், ஆன்ம இதத்தை போதிப்பவர் (ஹிதோபதேசி) என்று பல திருநாமங்களால் போற்றப் படுபவர்.


18 குற்றங்கள்


பசி, தாகம், பயம், துவேஷம், ஆசை, மோகம், சிந்தனை, மூப்பு, பிணி, மரணம், துன்பம், வியர்வை, கர்வம், அரதி, ஆச்சரியம், பிறப்பு, தூக்கம், மகிழ்ச்சி.



ணட்டட்ட கம்மதேஹோ, லோயா லோயஸ்ஸ ஜாணஓ தட்டா !
புரிஸாயாரோ அப்பா, சித்தோ ஜாஏஹ லோய சிஹரத்தோ !!    (51)


    இதுவும் அது.


    (ணட்டட்ட கம்மதேஹோ) எண் வினைகளையும் சரீரத்தையும் கெடுத்தவரும், (லோயா லோயஸ்ஸ) உலகம் மற்று அலோகம் இரண்டையும், (ஜாண ஓ) அறிபவரும் , (தட்டா) பார்ப்பவரும், (புரிசாயாரோ) மனித வடிவில் உள்ளவரும், (லோயசிஹரத்தோ) உலகத்து உச்சியி்ல் இருப்பவரும் ஆன, (அப்பா) ஆன்மா, (சித்தோ) சித்த பரமேட்டி ஆவார். (தம்) அவரை, (ஜாஏஹ) நீ தியானிப்பாயாக.


ஞானா வரணீயம், தர்சனா வரணீயம்,  வேதநீயம், மோகநீயம், ஆயு,  நாமம், கோத்திரம், அந்தராயம் எனும் எண்வினைகளைக் கெடுத்தவர், ஔதாரிகம், வைக்ரியகம் , ஆஹாரகம், தைஜஸம், கார்மணம் எனும் ஐந்து சரீரங்களைக் கெடுத்துத் தூய்மை அடைந்தவர்,  லோகா லோகங்களை பார்ப்பவர், அறிப்பவர்,  எந்த மனித உருவத்திலிருந்து முக்தி அடைந்தாரோ அவ்வடிவத்தில் இருப்பவர்,  உலகத்து உச்சியில்  இருப்பவர் சித்த பரமேட்டி ஆவார். இவரை முக்தான்மா, பரமாத்மா, சுத்தாத்மா ஸகல பரமாத்மா என்றும் போற்றுவர். இவரும் நம் தியானத்திற்கு உரியவர்.




தம்ஸணணாணபஹாணே,  வீரியசாரித்தவரத வாயாரே !
அப்பம் பரம் ச ஜுஞ்ஜ இ, ஸோ  ஆயரிஓ முனீ ஜேஓ!!      (52)


    இதுவும் அது.


    (தம்சணாணபஹாணே) எவரிடத்தில் தரிசனாசாரமும் ஞானாசாரமும் குறிப்பாக (முக்கியமாக) காணப்பட்டு, (வீரிய சாரித்தவரதவாயாரே) வீர்யா சாரம், சாரித்ரா சாரம் மற்றும் தபா சாரம் ஈக ஐந்து ஆசாரங்களில் (அப்பம்) தன்னையும், (பரம்ச) பிறரையும், (ஜுஞ்ஜ    இ) எவர் ஈடுபடுத்துவாரோ, (ஸோ) அந்த, (முனீ) முனிவர் ஆகிய, (ஆஇரியோ) ஆசார்ய பரமேஷ்டி, (ஜேஓ) தியானத்திற்கு என்றும் உரியவர்.


தர்சன, ஞான, வீரிய, சாரித்திரம், தவம், ஆகிய ஐந்து ஆசாரங்களையும் தான் கடைப்பிடித்து ஒழுகுவதோடு பிறரையும் அவற்றில் ஈடுபடுத்தும் சாது  ஆசார்ய பரமேட்டி ஆவார். அவரும் நம் ஆராதனைக்கு உரியவர்.



ஸம்யக் தரிசனத்தை ஆராதிப்பது தரிசன ஆசாரம் ;  ' ஸம்யக் ' ஞானத்தை ஆராதிப்பது ஞான ஆசாரம் ;  வீதராக சாரித்திர பாவம், சாரித்திர ஆசாரம் ; தப ஆசரணம், தப ஆசாரம்,  இந்த நான்கையும் தன் சக்தியளவு செய்வது வீரிய ஆசாரம் எனப்படுகிறது. 



தம்ஸணணாண சமக்கம், மக்கம் மோக்கஸ்ஸ ஜோ சாரித்தம் !
ஸாதயதி ணிச்ச சுத்தம், ஸாஹு ஸ முனி ணமோ தஸ்ஸ !!     (54)


   இதுவும் அது.


   (ஜோ) எந்த, (முனீ) முனிவன், (மோக்கஸ்ஸ) மோஷத்திற்கு (மக்கம்) மார்க  வடிவமாக உள்ள , (தம்ஸணணாணசமக்கம்) தர்சன ஞானத்துடன், (ணிச்ச சுத்தம்) எப்போதும் சுத்தமாக உள்ள, (சாரித்தம்) சாரித்ரத்தை (சாதயதி) ஆராதிக்கிறாரோ, (ஸோ) அவர், (ஸாஹு) சாது பரமேஷ்டி எனப்படுகிறார்.(தஸ்ஸ) அந்த சாதுபரமேஷ்டிக்கு (ணமோ) நமஸ்காரம்.


மோஷ காரணமாக உள்ள நிர்மல சம்யக் தரிசன, ஸம்யக் ஞான, ஸப்யக் சாரித்திரத்தைப் பெற்றுள்ள வீதராக முனி சாது பரமேட்டி எனப்படுகிறார். அந்த சாது பரமேட்டியும் நம் ஆராதனைக்கும் நமஸ்காரத்திற்கும் உரியவர்.



சாஷாத் மோக்ஷத்திற்குக் காரணமான வீதராக நிச்சய ஸம்யக் தரிசன, ஸம்யக் தரிசன, ஞான சாரித்ரங்களை ஆராதிக்கும் முனிவர் சாது பரமேட்டி எனப்படுகிறார்.


ஜம் கிஞ்சி விசிந்தந்தோ, ணிரீஹவித்தீ ஹவே ஜதா ஸாஹூ !
லத்தூணய ஏயத்தம், ததாஹு தம் தஸ்ஸ ணிச்சயம் ஜாணம் !!    (55)


    இது நிச்சய தியானம் இதுவெனக் கூறுகிறது.

    (ஜதா) எப்போது, (சாஹு) சாது, (ஏயத்தம்) ஒரு நிலைப்பட்ட மனத்தை, (லத்தூணய) அடைந்து, (ஜம் கிஞ்சி) எப் பொருளை (அரஹந்தர், சித்தர் அல்லது ஆன்மா) (விசிந்தந்தோ) சிந்திக்கிறாரோ, (ணிரீஹவித்தீ) பிற பொருள் பற்றில்லாதவராகிறாரோ, (ததா) அப்போது, (ஹு) நிச்சயமாக, (தஸ்ஸ) அந்த சாதுவுக்கு, (ணிச்சயம் ஜாணம்) நிச்சய தியானம் என்பதாக (ஆஹு) கூறுகிறார்கள்.


அகப்புறப் பற்றுகளிலிருந்து விலகி ஒன்றுபட்ட மனம் வாக்குச் செயலால் ஆன்ம சொரூபத்தையோ, அல்லது அரஹந்தர் முதலிய தியானப் பொருளையோ சிந்தித்தல் நிச்சய தியானம் எனப்படுகிறது.


தியாதா :

புலன்கள் மற்றும் மனோகுப்தி, வசனகுப்தி மற்றும் காய குப்தி ஆகியவற்றுடன் கூடியவன் தியாதா அதாவது தியானிப்பவன்.


தியானம் :

தன் ஞாயக சுபாவ ஆன்மாவில் தோய்ந்திருப்பது தியானம்.


ஸம்வரையும் நிர்ஜரையும் தியானத்தின் பயன்.



மா சிட்டஹ மா ஜம்பஹ, மா சிந்தஹ கிம் வி ஜேண ஹோஇ திரோ !
அப்பா அப்பம்மி ரஓ,  இணமேவ பரம் ஹவே ஜ்ஜாணம் !!     (56)


    இதுவும் அது.


    (கிம் வி) எவ்விதமான, (மா சிட்டஹ) உடற் சேட்டைகளையும் செய்யாதே, (மா ஜம்பஹ) வினை வருகைக்குக் காரணமான வார்த்தைகளைப் பேசாதே, (மா சிந்தஹ) வினைச் சேர்க்கைக்குக் காரணமான பொருள்களைச் சிந்திக்காதே, (ஜேண) எதனால், (அப்பா) ஆன்மா, (அப்பம்மி) ஆன்மாவில், (ரஓ) தோய்ந்து, (திரோ) உறுதியாக இருக்க முடிகிறதோ, (இணமேவ) அதுவே, (பரம்) உயர்ந்த, (ஜாணம்) தியானம் ஆகும்.


மனம், வாக்குச் செயல்களின் சேட்டைகளை நிறுத்தி (நீக்கி) ஆன்மாவை ஆன்ம சிந்தனையில் தோய்ந்திருக்கச் செய்வது பரம தியானம் எனப்படும். ஆகவே மேற்கண்ட மூன்றின் செயல்களையும் விலக்கி ஆன்ம இயல்பில் தோய்ந்திருக்கச் செய்ய வேண்டும்.



சுப, அசுப வடிவ மனம், வாக்குச் செயல்களால் புற்கல கர்மங்கள் வந்தடைகின்றன. அவற்றைச் சுப, அசுப வடிவ மாறுதலில் செல்லாது தடுத்து ஆன்மாவில் தோயச் செய்யும் போது ஸம்வரையும் நிர்ஜரையும் நிகழ்கின்றன. இதனால் தியானம் மேலும் மேலும் உறுதிபடும்போது மேலும் கட்டுண்டு கிடக்கும் வினைகள்  வலுவிழந்து தாமாகவே ஆன்மாவை விட்டு விலகி விடும் அப்போது ஆன்மா தூய்மை பெறும் . ஆகவே இந்த பரம தியானத்தின் பெருமையை உணர்ந்து தியானத்தைப்  பயில வேன்டும்.




தவ சுத வதவம் சேதா, ஜ்ஜாணரஹதுரம் தரோ ஹவே ஜம்ஹா !
தம்ஹா தத்தியணிரதா, தல்லத்தீஏ ஸதா ஹோஹ !!  (57)


    இது தியானத்திற்குக் காரணம் கூறுகிறது.


     (ஜம்ஹா) எந்தக் காரணத்தால், (தவசு தவதவம்) தவம், சாத்திரம் மற்றும் விரதங்களைப் பெற்றுள்ள (ஏற்றுள்ளவன்), (சேதா) ஆன்மா, (ஜ்ஜாணரஹதுரந்தரோ) தியானமாகிற இரதத்தின் பாரத்தை தாங்கக்கூடியவனாக, (ஹவே) ஆகிறான். (தம்ஹா) அதனால், (தல்லத்தீஏ) அந்தத் தியானத்தைப் பெறும் பொருட்டு, (ஸதா) எப்போதும், (தத்தியணிரதா) அம் மூன்றில் (தவம், சாஸ்திரம், விரதம்) தோய்ந்து, (ஹோக) இருப்பாயாக.

    தவத்தை ஏற்று, சாஸ்திரங்களை உள்ளபடி தெரிந்து, விரதங்களைக் காப்பவனே உயர்ந்த தியானத்தில் தோய்ந்திருக்க முடியும். எனவே அப்படிப்பட்ட உயர்ந்த தியானத்தைப் பெற தவம், தத்துவஞானம், விரதங்களை அடைய எப்பொழுதும். முயற்சியுடையவராக இருப்பீராக.

    தவம் , சாஸ்திர ஞானம் மற்றும் விரதம் ஆகியவற்றை அனுஷ்டிப்பவன்தான் தியானமாகிய இரதத்தின் நுகத் தடியைச் சுமக்க வல்லவன். ஆகவே பவ்யர்களே ! அந்தரங்க, பகிரங்க தவங்கள் கூறப்பட்டுள்ளன. இவற்றின் காரணமாக குறிக்கோளாக உள்ள (சாத்யம்) சுத்தான்ம சொரூபத்தில் தோய்வது நிச்சய தவம். திரவிய சுருதம் (சாஸ்திர ஞானம் ) இதன் அடிப்படையில் நிர்விகார ஸ்வஸம்வேதன வடிவம் (தன்னைத்தான் உணருதல்) பாவ சுருதம் உண்டாகிறது. கொலை, பொய் , களவு, காமம் மற்றம் பரிக்ரகம் முதலிய பரிக்ரங்களை அந்தரங்க பகிரங்க வடிவில் தியாகம் செய்வது.  விரதம். இவைதான் தியானத்திற்குக் காரணப் பொருளாக  கூறப்படுகிறது.

இக்கருத்தையே :

வைராக்யம், தத்துவ விஞ்ஞானம், நைர்க்ருந்தம் சம சித்தா !
பரீஷஹ ஜயச்சேதி, பஞ்சைதே தியானஹேதவ :!!


வைராக்யம், தத்துவ விஞ்ஞானம், பரிக்ரகத் தியாகம், சமதா பாவம், பரீஷஹங்களை வெல்லல் இவ்வைந்தும் தியானத்திற்குக் காரணங்கள்.



தவ்வசங்கஹமிணம் முணிணாஹா , தோஸஸஞ்சய சுதா சுதபுண்ணா !
ஸோதயந்து தணுசுத்ததரேண, ணேமிசந்த முணிணா பணியம் ஜம் !!   (58)


   இது நூலாசிரியர் அடக்கம் கூறுகிறது.


  (தணுசுத்ததரேண) அல்ப ஞானியான, (ணேமிசந்தமுணிணா) நேமிசந்திர முனிவரால், (ஜம்) யாதொரு, (இணம்) இந்த, (தவ்வ சங்கஹம்) திரவிய சங்கிரக நூல், (பணியம்) கூறப்பட்டதோ இதை, (தோஸஸஞ்சயசுதா) ஆசை, வெகுளி, ஸம்சயம் முதலிய தோஷங்கள் இன்றி, (ஸத்புண்ணா) திரவிய சுருதம் மற்றும் பாவ சுருதம் ஆகிற பரமாகமங்களை உணர்ந்த, (முணிணாஹா) மகா முனிகள், (சோதயந்து) சோதிக்கட்டும்.


நான் (அல்பஞானியாகிய நேமிசந்திரர்) இயற்றிய திரவ்ய சங்க்ரக நூலில் பல குறைபாடுகள் இருக்கக்கூடும். ஆகவே திவ்விய ஞானிகள் நன்கு சோதித்து ஏற்பாராக !



ஸ்ரீ நேமிசந்திர  சித்தாந்த தேவர் அருளிய 58 காதைகளைக் கொண்ட திரவ்ய சங்க்ரக நூல் 


முற்றும்.


No comments:

Post a Comment