கல்யாணமந்திர ஸ்தோத்திரம்
கல்யாணமந்திர ஸ்தோத்திரம்கல்யாணமந்திரமுதார மவத்யபேதி
  பீதாபய ப்ரதமநிந்திதமங்க்ரி பத்மம்

ஸம்ஸாரஸாகர நிமஜ்ஜத சேஷ ஜந்து
    போதாயமாந மபிநம்ப ஜிநேச்வரஸ்ய  -  1


யஸ்ய ஸ்வயம் சுரகுருர் கரிமாம்புராசே:
   ஸ்தோத்ரம் ஸுவிஸ்த்ருமதிர் ந விபுர்விதாதும்

தீர்த்தேஸ்வரஸ்ய கமடஸ்மய தூமகேதோ
  ஸ்தஸ்யா ஹமேஷ கில ஸம்ஸ்தவநம் கரிஷ்யே  -  2


கருத்து: எல்லா சுகங்களுக்கும் அல்லது பஞ்ச கல்யாணங்களுக்கும் இருப்பிடமாயும், பக்தரகளின் இஷ்டத்தைக் கொடுப்பதாயும், பாபங்களைப் போக்கடிப்பதாயும், ஸம்ஸார துக்கத்திற்குப் பயந்தவர்களுக்கு அபயமளிப்பதாயும், சிலாகிக்கத்தகுந்தாயும், ஸம்ஸார ஸமுத்திரத்தில் மூழ்கியிருக்கிற (விழா நின்றிருக்கிற) ஜனங்களுக்குக் கரையேற தெப்பமாயுமிருக்கிற ஸ்ரீஜிநேச்வரருடைய பாதகமலத்தை வணங்கி, தேவ குருவாகிய பிரஹஸ்பதியினாலும் செய்யமுடியாத அவ்வளவு மஹிமை வாய்ந்தவரும், கமடன் என்கிற அரக்கனுடைய கர்வத்தைத் தகிக்க அக்கினியாயிருந்த வரும் ஆன ஸ்ரீ பார்ஸ்வ தீர்த்தங்கருடைய ஸ்தோத்திரத்தை (இந்த ஆகம கர்த்தா) ஸ்ரீ குமுதசந்திராச்சாரியாராகிய யான் செய்ய முற்படுகின்றேன்.

இது ஆச்சர்யம் என்றும் கூறுகின்றார்.

இவை கடவுள் வணக்கமும், அவையடக்கமும் ஆகும். இவை இரு சுலோகங்களும் ஒரு தொடர். இது யுக்மம் என்று ஸம்ஸ்கிருதத்தில் சொல்லப்படுகிறது.


************ 0 ************


ஸாமான்யதோzபி தவ வர்ணயிதும் ஸ்வரூபமஸ்மாத்ருசா:
  கதமதீச! பவந்த்யதீசா

த்ருஷ்டோzபி கெளசிகசிசுர்யதி வா திவாந்தோ
  ரூபம் ப்ரரூபயதி கிம் கில கர்மரஸ்மே:


ஏ ஸ்வாமியே! பகல் குருடாயிருக்கிற கோட்டானின் குஞ்சு, என்ன தைரியமிருந்தாலும், சூரியனுடைய உருவத்தை வர்ணிக்க முடியுமா? முடியாதல்லவா? அதுபோல் நானும் மந்தபுத்தியுள்ளவனாயிருப்பதினால், மூவுலகத்தின் அதிபதியாகிய ஸ்ரீ பகவானின் ஸ்வரூபத்தை எப்படி வர்ணிப்பேன்?
ஸண்டஸ்ரமே என்றும் பாடபேதம் உண்டு.


************ 0 ************


மோஹக்ஷயாதநுபவந்நபி நாத! மர்த்யோ
  நூநம் குணாந் கணயிதும் நதவ க்ஷமேத

கல்பாந்தவாந்த பயஸ: ப்ரகடோzபி யஸ்மா
  ந்மீயேத கேந ஜலதேர் நநு ரத்நராசி: -  4


பிரளகாலத்துக் காற்றினால் பொங்கியெழும் ஜலத்தையுடைய ஸமுத்திரத்திலுண்டான இரத்தினக் குவியலானது( அந்தக் காற்றினால் ஜலமெல்லாம் வாரி இறைக்கப்பட்டு அதனால் இந்த இரத்தினக்குவியலானது) வெளிப்படுத்தப் பட்டிருந்தாலும், அவைகளை எண்ணிக் கணக்கிடுவதென்பது ஒருவருக்கு இயலாது.

ஏ ஸ்வாமியே ! உம்முடைய குணங்களை எண்ணிக் கணக்கிடுவது என்பது பெரிய ஞானவான்களினாலும் முடியாது என்றால், உம்முடைய குணங்கள் அவ்வளவு கணக்கற்றதாய் உள்ளன. அவைகளை நான் கூறுவது என்பது எப்படி முடியும்? என்கிறார்.


 ************ 0 ************


அப்யுத்யதோzஸ் மி தவ நாத! ஜடாசயோzபி
  கர்தும் ஸ்தவம் லஸதஸங்க்ய குணாகரஸ்ய

பாலோz பி கிம் ந நிஜபாகுயுகம் விதத்ய
  விஸ்தீர்ணதாம் கதயதி ஸ்வதியாzம் புராஸே:  -  5


பெரிய சமுத்திரத்தின் விஸ்தீர்ணத்தை சிறு குழந்தையும் தன் சுய புத்தியைக் கொண்டு, தன் இரு கைகளையும் விரித்து, சமுத்திரம் இவ்வளவு பெரிதாய் இருக்கிறது என்று சொல்லவில்லையா! என்ன அதுபோல், நானும் என் அல்ப புத்தியைக் கொண்டு, என்னால் முடிந்த வரையில், உமது ஸ்தோத்திரத்தைச் செய்ய முற்படுகிறேன் என்கிறார்.
  


 ************ 0 ************யே யோகிநாமபி ந யாந்தி குணாஸ்தவேச
  வக்தும் கதம் பவதி தேஷுமமாவகாச:

ஜாதா ததேவ மஸமீக்ஷித காரிதேயம்
  ஜல்பந்தி வா நிஜகிரா நநு பக்ஷினோz பி  -  6


ஏ ஸ்வாமியே ஞானிகளால் கூட தங்கள் குணங்களை வர்ணிக்க முடியாது. அப்படியிருக்க என்னைப்போலொத்த மந்திபுத்தியுள்ளவனால் எப்படி வர்ணனை செய்ய முடியும்? ஆனால், நான் அவ்வாறு அவற்றை வர்ணிப்பதற்கு முயற்சித்தவனாய் இருக்கிறேன். இது ஆலோசிக்காமல் செய்த காரியந்தான்; ஆனாலும், பக்ஷிகள்கூட தங்கள் பாஷையால் பேசுவது போல், நானும் என் சக்தியின் அளவு உன்னை தோத்திரம் செய்வது தப்பிதம் ஆகாது. என்கிறார்.
  


 ************ 0 ************ஆஸ்தாமசிந்த்ய மஹிமா ஜிந! ஸம்ஸ்தவஸ்தெ
  நாமாபி பாதி பவதோ பவதோ ஜகந்தி

தீவ்ராதபோ பஹதபாந்த ஜநாந்நிதாகே
  ப்ரீணாதி பத்மஸரஸ: ஸரஸோz நிலோz பி  -  7


வெயிற்காலத்தில் கடும் வெயிலினால் அடிபட்ட வழிப்போக்கர்களுக்கு தாமரைத்தடகாத்தினுடைய ஜலமேயன்றி, அதன் வழியே அடிக்கும் காற்றுங்கூட குளிர்ச்சியைக் கொடுத்து சந்தோஷிக்கச் செய்கிறது. அதுபோல் உம்மை ஸ்தோத்திரம் செய்வதைவிட உம்முடைய பெயரைச் சொல்லுவதே ஜனங்களைக் காப்பாற்றப் போதுமானது. அப்படியிருக்க, நான் உம்மை ஸ்தோத்திரம் செய்ய ஆரம்பித்திருப்பதினால், நீர் என்னைக் காப்பாற்றுவது நிச்சயம் என்கிறார். ************ 0 ************
ஹ்ருத்வர்திநி ஜ்வயி விபோ! சிதலீபவந்தி
  ஜந்தோ: க்ஷணேந நிபிடா அபி கர்மபந்தா:

ஸத்யோ புஜங்கமமயா இவ மத்யபாக
  மப்யாகதே வநசிகண்டிநி சந்தநஸ்ய  =  8


சந்தன மரங்களை நெருக்கமாய்ச் சுற்றிக் கொண்டிருந்த பாம்புக் கூட்டமானது. அம்மரங்களுக்கு மத்தியில் ஒரு மயில் வரக்கண்டபொழுது, அவை அம்மரங்களை விட்டு ஓடி விடுவதைப் போல; ஸ்ரீ பகவான் மனதில் ஸ்மரித்த மனிதர்களை விட்டு, அவர்களை அனாதிகாலமாய்ப்பற்றிக் கொண்டிருந்த கர்மபந்தங்கள் தளர்ந்துவிடுகின்றன என்பதாம்.
  


 ************ 0 ************முச்யந்த ஏவ மநுஜா: ஸஹஸா ஜிநேந்த்ர
  ரெளத்ரை ரூபத்ரவசதை ஸ்த்வயி வீக்ஷிதேz பி

கோஸ்வாமிநி ஸ்புரிததேஜஸி த்ருஷ்டமாத்ரே
  செளரைரிவாசு பசவ: ப்ரபலாயமாநை:  -  9

பசுக்களுக்குடையோனைக் கண்டவுடன் பசுவைத் திருடவந்த திருடன் ஓடிவிடுவதால் பசுக்கள் எப்படி விடப்படுகின்றனவோ; அதே போல், ஏ ஸ்வாமியே! உம்மைப் பார்த்த மாத்திரத்தில் ஜனங்களைப் பீடித்திருந்த நூற்றுக்கணக்கான உபத்திரவங்கள் தாங்களே நீங்கிவிடுவதால் அவர்கள் அவ்வுபத்திரவங்களின்றும் விடுபடுகிறார்கள்.
  


 ************ 0 ************த்வம் தாரகோ ஜிந! கதம் பவி நாம் த ஏவ
  த்வாமுத்வஹந்தி ஹ்ருதயேந யதுத்தரந்த

யத்வா த்ருதிஸ்தரதி யஜ்ஜலமேஷ நூந
  மந்தர்கதஸ்ய மருத: ஸ கிலாநுபாவ:  -  10எப்படிக் காற்றடைத்த துருத்தியானது ஜலத்தைக் கடக்க உதவியாயிருந்தாலும், அதன் உள்ளிருக்கும் காற்றுதான் அவ்வாறு கடக்க முக்கிய காரணமாய் இருக்கிறதோ: அதேபோல் உம்மை மனதில் தியானித்த ஜனங்களின் ஸம்சார துக்கத்தைப் போக்க (மோக்ஷத்தை அடைவிக்க) அவர்கள் மனதில் உள்ளிருக்கும் நீர்தான் (பக்திதான்) உண்மைக் காரணம் ஆகிறீர் எனபதாம்.
  


 ************ 0 ************யஸ்மிந் ஹரப்ரப்ருதயோzபி ஹதப்ரபாவா:
  ஸோzபி த்வயா ரதிபதி: க்ஷபித: க்ஷணேந

வித்யாபிதா ஹுதபுஜ: பயஸாதயேந
பீதம் ந கிம் ததபி துர்தரவாடவேந  -  11


அக்னியை அணைக்க உதவும் ஜலத்தைக் கூட வடவாக்கியானது வற்றச் செய்துவிடுகிறது. குடிக்கப்பட்டது அதேபோல், ஏ ஜிநேச்சவரரே ஹரிஹராதிகளால் ஜயிக்க முடியாத மன்மதனைக் கூட நீர் ஒரு கணநேரத்தில் ஜயித்துவிட்டீர். ஆகவே ஹரிஹராதி தெய்வங்களை விட நீரே சிறந்தவர் என்பதாம்.
  


 ************ 0 ************ஸ்வாமிந்நநல்ப கரிமாணபி ப்ரபந்நா:
  த்வாம் ஜந்தவ: கதமஹோ ஹ்ருதயே ததாநா:

ஜந்மோததிம் லகு தரந்த்யதிலாகவேந
சிந்த்யோ ந ஹந்த மஹதாம் யதி வா ப்ரபாவ:  -  12


ஸம்ஸாரியாகிய ஜனங்கள் அதிகமான பாரத்தையுடைய (மஹிமையுடைய) உம்மை அடைந்து, உம்மை மனதில் தரித்து (தியானம் செய்து) அதிசீக்கிரத்தில் சுலபமாக ஸம்ஸார ஸமுத்திரத்தைத் தாண்டுகிறார்கள் என்பது பெரும் ஆச்சரியம். இது வாஸ்தவம் தான். பெரியோர்களுடைய பராக்கிரமம், மஹாத்மியம், குணங்கள் முதலியவைகள் மனதின் சிந்தனைக்கு (கற்பனைக்கு) இடம் அளிப்பன அல்ல (சிந்திக்க முடியாதன) ************ 0 ************க்ரோதஸ்த்வயா யதி விபோ! ப்ரதமம் நிரஸ்தோ
  த்வஸ்தாஸ்ததா வத கதம் சில கர்மசெளரா:
ப்ளோஷத்யமுத்ர யதி வ சிசிராபி லோகே
  நீலத்ருமாணி விபிநாநி ந கிம் ஹிமாநீ  - 13


ஏ ஸ்வாமியே, நீர் கோபத்தை முன்னாலேயே விட்டுவிட்ட சாந்தமூர்த்தியேயானால், அப்போது அஷ்ட கர்மங்களாகிற திருடர்கள் எப்படி நாசம் செய்யப்பட்டார்கள் என்றால், குளிர்ச்சியான பனிக்கூட்டங்களினால் பசுமையான கடப்பை மரங்கள் அடர்ந்த காடுகள் எப்படிக் கருகி நாசம் அடைகின்றனவோ, அதேபோல்தான் அவைகளும் அழிந்து விடுகின்றன என்பதாம்.
  


 ************ 0 ************த்வாம் யோகிநோ ஜிந! ஸதா பரமாத்மரூபமந்வேஷயந்தி
  ஹ்ருதயாம்புஜ கோசதேசே

பூதஸ்ய நிர்மலருசேர் யதி வா கிமந்யதக்ஷஸ்ய
  ஸம்பவபதம் நநு கர்ணிகாயா


கமல விதையானது கமலத்தின் காயைத் தவிர வேறு இடத்தில் தேடக்கிடைக்க மாட்டாது. அதே போல், சுத்த ஆத்ம சொரூபமான உன்னை யோகிகளுடைய ஹ்ருதய கமலத்தின் மத்தியைத் தவிர் வேறு இடத்தில் தேட முடியாது. ஆகவே யோகிகள் தங்கள் ஹிருதய கமலத்தில் தேடுகிறார்கள் (ஸ்மரிக்கிறார்கள்) என்பதாம்.
  


 ************ 0 ************த்யாநாஜ்ஜிநேச! பவதோ பவிந: க்ஷணேச
  தேஹம் விஹாய பரமாத்மதசாம் வ்ரஜந்தி
தீவ்ராநலாதுபலபாவ மபாஸ்ய லோகே
  சாமீகரத்வ மசிராதிவ தாது பேதா:


கிட்ட காளிதங்களோடு, அதாவது பலவித பாஷாணங்கள் முதலியவைகளோடு கூடிய தங்கமானது கடுமையான தீயிலிட்டு எரிக்கப்படுவதால் (புடம் போடப்படுவதால்), அது அந்த பாஷாணங்கள் நீங்கி சுத்த தங்கத்தன்மையை அடைகின்றது. அதேபோல், உம்மை பக்தி செய்வதினால் பவ்விய ஜனங்கள் தங்கள் கர்மங்களைக் கெடுத்து சுத்த பரமாத்ம சொரூபத்தை அடைகின்றார்கள் என்பதாம்.

கிட்ட காளிதமு நீங்கிய பொன்போல விட்டு விளங்கு முயிர் – அருங்கலச் செப்பு – 157 வது குறள். ************ 0 ************
அந்த ஸதைவ ஜிந! யஸ்ய விபாவ்யஸே த்வம்
  பவ்யை: கதம் ததபி நாசயஸே சரீரம்

ஏதத்ஸ்வரூபமத மத்யவிவர்த்திநோ ஹி
  யத்விக்ரஹம் ப்ரசமயந்தி மஹாநுபாவா:  -  16


மகானுபாவர்களான பெரியோர்கள் சண்டையை நீக்கி விடுகிறார்கள். அதேபோல் உம்மைத் தியானம் செய்கிற ஜனங்களுடைய விக்ரஹத்தை (சரீரத்தை) நீர் நாசம் செய்கிறீர் (மோக்ஷத்தை அளிக்கிறீர்) அது மஹாங்களுக்கு இயற்கைதான் என்பதாம்.

விக்ரஹம் – சரீரம், துவேஷம் அல்லது சண்டை
மத்ய விவர்திந – மத்தியஸ்தர்கள், இராகத் துவேஷ மில்லாத
பாவத்தையுடையவர்கள் – என இரு பொருட்களில் வந்தது.
  


 ************ 0 ************ஆதாம் மநீஷிபிரயம் த்வதபேத புத்யா
  த்யாதோ ஜிநேந்திர! பவதீஹ பவத்ப்ரபாவ:

பாநீய மப்யம்ருதமித்ய நுசிந்தயமாநம்
  கிம் நாம நோ விஷவிகார மபாகரோதி  -  17


யோகியர்கள் தங்கள் ஆத்மாவை உமக்குச் சமம் என்று எண்ணித் தியானம் செய்கிறார்கள். அதனால் அவர்கள் உம்மைப் போலவே சாமர்த்தியம் உள்ளவர்களாக (மோக்ஷத்தை அடைந்தவர்கள்) ஆகிறார்கள். எதைப் போல என்றால், சாதாரண ஜலமானது மந்திரத்தின் சேர்க்கையான அமிர்தம் என்று நினைத்து உபயோகப்படுத்தப்பட்டதேயானால் ( மந்திர உச்சாடனம் செய்து தெளிக்கப்பட்டதேயானால்) அந்த அமிர்தத்தினால் ஆகக்கூடிய விஷ பரிஹாரத்தை (விஷத்தை போக்கும் சக்தியை) அந்த ஜலமும் செய்கிறதல்லவா? அதுபோல் தான் என்பதாம்.
  


 ************ 0 ************த்வாமேவ வீததமஸம் பரவாதிநோzபி
நூநம் விபோ! ஹரி ஹராதிதியா ப்ரபந்நா:

கிம் காசகாமலிபிரீச ஸிதோzபி சங்கோ
  நோ க்ருஹ்யதே விவிதவர்ணவிபர்யயேண -  18


காமாலைக் கண்ணுடையவர்களுக்கு வெண்மையான சங்கு பலவித வர்ணங்களைக் கொண்டதாக காணப்படுவதுபோல, நையாயிகன் முதலிய பிற மதஸ்தவர்களும், ஞான ரூபியாகிய உம்மையேதான் விஷ்ணு, பரமசிவன், புத்தன் என பலவிதமாக எண்ணி வழிபடுகிறார்கள் என்பதாம்.
  


 ************ 0 ************தர்மோபதேச ஸமையே ஸவிதாநுபாவா-தாஸ்தாம்
ஜநோபவதி தே தருரப்யசோக:

ஆப்யுத்கதே திநபதெள ஸமஹீருஹோzபி
கிம் வா விபோதமுபயாதி ந ஜீவலோக:  -  19


சூரியன் உதயமாகிறபோது விருக்ஷங்களோடும் கூடிய ஜீவலோகமே பிரகாசத்தை அடைகிறதல்லவா, அதேபோல் பகவான் தர்மோபதேசம் செய்யும் காலத்தில் அவருடைய ஸமீபத்திலிருக்கிற மஹிமையினால் மரம் (அசோக மரம்) கூட பிரகாசத்தை (சோகமின்மையை) அடைவது போன்று, அவர் உபதேசத்தைக் கேட்கும் ஜனங்களுமே நிச்சயமாய் (சோகமில்லாமயை) ஞானத்தை அடைகிறார்கள்.

ஸ்ரீ பகவானுக்குரிய அஷ்டமஹா பிராதிகாரியங்கள் எட்டில் முதலாவது அசோக விருக்ஷத்தின் வர்ணனையாகும். அடுத்த ஸ்லோகங்களில் மீதமுள்ள பிராதிஹார்யங்களை வர்ணிக்கிறார்.

அசோகம் – ஒரு விருக்ஷம், ஸ்ரீ பகவான் ஸமீபத்திலுள்ளது.
அ+சோகம் – சோகம் இல்லாதது என இரு பொருள் பட ஸ்லோகம் செய்யப்பட்டுள்ளது. ************ 0 ************
சித்ரம் விபோ! கதமவாங்முகவ்ருந்தமேவ
  விஷ்வக் பதத்யவிரலா ஸுரபுஷ்பவ்ரூஷ்டி:

த்வத்கோசரே ஸுமநஸாம் யதி வா முநீச
  கச்சந்தி நூநமத ஏவ ஹி பந்தநாநி  -  20ஸ்ரீபகவானுக்கு தேவர்களால் செய்யப்பட்ட புஷ்பமாரியானது ஆகாயத்திலிருந்து கீழே நாலா பக்கமும் அடர்த்தியாய் விழும்படி சொறியப்பட்டாலும், அப்புஷ்பங்களின் காம்புகள் எல்லாம் கீழ் நோக்கிய முகமாகவே விழுகின்றன. இது எதைக் காட்டுகிறது என்றால், நல்ல மனமுடையவர்களுக்கு கர்ம பந்தங்கள் எவ்வாறானாலும், ஸ்ரீ பகவானுடைய ஸந்நிதியில் (ஞானம் உதித்தவுடனே) அவைகள் (கர்ம பந்தங்கள்) நிச்சயமாக கீழேயே போய்விடுகின்றன. (அழிந்து விடுகின்றன) என்பதாம்.

இது இரண்டாவது மஹாபிராதிஹார்யத்தில் ஸுரபுஷ்ப வ்ருஷ்டியின் வர்ணனையாகும்.
பந்தநம் – கட்டு, கர்ம பந்தங்கள்.
  


 ************ 0 ************ஸ்தாநே கபீர ஹ்ருதயோததி ஸம்பவாயா:
  பியூஷதாம் தவ கிர: ஸமுதீரயந்தி

பீத்வா யத: பரமஸம்மத ஸங்க பாஜோ
  பவ்யா வ்ரஜந்தி தரஸாப்ய ஜயாமரத்வம்  - 21


ஸ்ரீ பகவானின் திவியத்வனியை கேட்ட ஜனங்கள் கிழத்தன்மை, மரணம் முதலியவையின் இல்லாமையை அடைந்து,  மிகவும் ஆனந்தத்துடன் கூடிய மோக்ஷத்தை அடைகிறார்கள். அதனால் பகவானது திவ்யத்வனியானது அமிர்தம் என்று சொல்லப்படுகிறது வாஸ்தவம்தான் (பொருத்தமானதுதான்) என்பதாம்.
இது மூன்றாவது பிராதிகார்யம் ************ 0 ************
ஸ்வாமிந்! ஸுதூரமவநம்ய ஸமுத்பதந்தோ
  மந்யே வதந்தி சுசய: ஸுரசாமரெளகா:

யேzஸ்மை நதிம் விதததே முநிபுங்கவாய
  தே நூதமூர்த்வகதய: கலு சுத்தபாவா:  -  22


ஸ்ரீபகவானுக்குத் தேவர்களால் வீசப்பட்ட சாமரங்கள் மிகவும் கீழேயிருந்து வளைந்து மேல்நோக்கி கிளம்புவது எதைக் காட்டுகிறது என்றால், அதைப்போல ஸ்ரீ பகவானைப் பக்தி சிரத்தையுடன் வணங்குகிறவர்கள் சுத்தமான சித்தத்தை அடைந்தவர்களாகி, மேலே இருக்கப்பட்ட மோக்ஷத்தை அடைகிறார்கள் என்பதைக் காட்டுகிறது. என்று தான் எண்ணுவதாக கூறுகிறார்.
நான்காவது பிராதிஹார்யம் சாமரங்களின் வர்ணனையாகும்.
  


 ************ 0 ************ஸ்யாமம் கபீரகிரமுஜ்ஜ்வலஹேமரத்ந-
 ஸிம்ஹாஸநஸ்தமிஹ பவ்வியசிகண்டிந ஸ்த்வாம்

ஆலோகயந்தி ரபஸேந நதந்தமுச்சை-
  ச்சாமிகராத்ரி சிரஸீவ நவாம்புவாஹம்.  – 23


மஹாமேரு பர்வதத்தின் மேல் கர்ஜிக்கும் மேகக் கூட்டத்தை மயில்கள் எவ்வாறு ஆசையோடு பார்க்குமோ, அதேபோல ஏ பார்ஸ்வநாத ஜினரே! பிரகாசிப்பதான நல்ல இரத்தினங்களை வைத்து இழைத்த தங்க ஸிம்மாஸனத்தின் மேல், நீல மேக நிறத்துடன் கூடிய நீர் வீற்றிருப்பதை, பவ்விய ஜனங்கள் மிக ஆவலோடு பார்க்கிறார்கள் என்பதாம்.

இது ஐந்தாவது பிராதிகார்யம் சிங்காதனத்தின் வர்ணனையாகும்.

  

 ************ 0 ************உத்கச்சதா தவ சித த்யுதி மண்டலேந
  லுப்தச்சதச்ச விரசோகதருர் பபூவ!

ஸாந்நித்யதோzபி யதி வா தவ வீதராக
  நீராகதாம் வ்ரஜதி கோ ந ஸசேதநோzபி  -  24


அசோக மரமானது ஸ்ரீ பகவானின் நீலநிறமான பிரபாமண்டலத்தின் அருகிலிருப்பதால், அதன் இலைகளின் சுயவர்ணமாகிய பச்சை மாறி விடுகின்றன. அதே போல வீதராக ராகியான(ஆசையை விட்டவராகிய) ஸ்ரீ பகவானின் ஸமீபத்தில் போகிற பவ்ய ஜீவன்கள், தங்கள் ஆசைகளை விட்டவர்களாகி பரிசுத்தம் அடைகிறார்கள் என்பதாம்.

ஆறாவது பிராதிஹார்யம் பிரபாமண்டலம் வர்ணனையாகும். ராகம் – வர்ணம், ஆசை என இரு பொருள்களில் வந்தது) ************ 0 ************
போபோ: பிரமாதமவதூய பஜத்வமேந
  மாகத்ய நிர்வ்ருதிபுரீம் ப்ரதி ஸார்த்தவாஹம்

ஏதந்நிவேதயதி தேவ! ஜகத்த்ரயாய
  மந்யே நதந்நபிநப: ஸுரதுந்துபிஸ்தே  -  25


ஆகாயத்தில் தேவர்களால் சப்திக்கிற தேவதுந்துபி வாத்தியமானது எதைத் தெரிவிக்கிறது என்றால் ஏ ஜனங்களே! உங்களை மோக்ஷத்திற்கு அழைத்துக் கொண்டு போகிற ஸ்ரீ பார்ஸ்வ தீர்த்தங்கரரை வந்தடைந்து பூஜியுங்கள் என்று அழைப்பதுபோல் இருக்கிறது என்கிறார்.

தேவதுந்துபி – ஏழாவது பிராதிஹார்யமாகும். ************ 0 ************
உத்யோதிதேஷு பவதா புவநேஷு நாத
  தாராந்விதோ விதுரயம் விஹதாதிகார:

முக்தா கலாபகலிதோல்ல ஸிதாதபத்ர
  ஸ்யாஜாத்த்ரிதா த்ருததநுர்த்ருவ மப்யுபேத:  -  26


ஏ ஸ்வாமியே நீங்கள் மூன்று உலகங்களிலும் பிரகாசித்திருப்பதினால் நக்ஷத்திரங்களோடு கூடிய சந்திரனானவன் தன் அதிகாரமாகிற பிரகாசிப்பதிலிருந்து விடுபட்டவனாய் முத்துக்களால் அலங்கரிக்கப்பட்ட மூன்று குடை ரூபத்தில் சேவை செய்கிறான்.

முக்குடை – எட்டாவது பிராதிஹார்யமாகும்.
அவை சந்திராதித்யம், ஸகலபாஜனம், நித்திய விநோதம். ************ 0 ************
ஸ்வேந பரிபூரித ஜகத்த்ரய பிண்டிதேந
  காந்தி ப்ரதாப யசஸாமிவ ஸஞ்சயேந 

மாணிக்ய ஹேம ரஜத ப்ரவிநிர்மிதேந
  சாலத்ரயேண பகவந்நபிதோ விபாஸி  -  27


சமவசரண பூமியில் ஸ்ரீ பகவானைச் சுற்றி மாணிக்கம், தங்கம், வெள்ளி இவைகளால் ஆன( மூன்று கோட்டைகள் போல) மூன்று ஆபரணங்கள், மூன்று பிரகாரங்கள் போல சூழ்ந்துள்ளன. அவைகளைப் பார்க்கும் போது இந்த மூன்று லோகங்களிலுமுள்ள ஸ்ரீ பகவானின் காந்தி, ப்ரதாபம், கீர்த்தி எல்லாம் ஒன்று சேர்ந்து ஒரே இடத்தில் கூடினால் போல் அவரைச் சூழ்ந்திருக்க ஸ்ரீபகவான் எங்கும் விளங்குகிறார். அல்லது ஸ்ரீ பகவான் மூன்று லோகங்களிலும் கீர்த்தி, காந்தி, பிரதாபங்களுடன் விளங்குகிறார் என்பதைத் தெரிவிக்கின்றது என்கிறார்.
இது சமவசரணத்தின் வர்ணனை. ************ 0 ************
திவ்யஸ்ரஜோ ஜிந! நமத்த்ரிதசாதிபாநா
  முத்ஸ்ருஜ்ய ரத்நரசிதாநபி மெளலிபந்தாந்

பாதெள ச்ரயந்தி பவதொ யதி வா பரத்ர
  த்வத்ஸங்கமே ஸுமநஸோ ந ரமந்த ஏவ  - 28


உம்மை வணங்குகிற தேவேந்திரர்களைஉடைய கிரீடங்களிலுள்ள புஷ்பமாலைகள், அவர்கள் உம்மை வணங்கும் போது, கீழே வீழ்ந்து எப்படி உம்முடைய பாதத்தை விட்டு வேறு இடத்திற்கு (திரும்ப இந்திரர்களின் கிரீடத்திற்கே) திருப்ப போகாதோ அதே போல் நல்ல மனதுடையவர்கள் (ஸம்யக் ஞானமுடையவர்கள்) உமது காலை வணங்கிப் பிறகு வேறு தெய்வங்களை வணங்க மாட்டார்கள்.

அல்லது சம்யக்ஞானிகளாகிய பவ்வியர்கள், தங்கள் நிர்மலமான மனதினால் உம்முடைய குணங்களை ஸ்மரித்து, எப்போது தங்கள் ஹிருதயத்தில் உம்மைத் தரிக்கிறார்களோ அப்போது உம்மைவிட்டு வேறு எங்கேயும் சந்தோஷம் உண்டாவதில்லை என்பதாம்.

ஸுமநஸ – புஷ்பமாலைகள், நல்ல மனதையுடையவர்கள் என இருபொருள் படும்) ************ 0 ************
த்வம் நாத! ஜன்மஜலதேர்விபராங்முகோzபி
  யத்தாரயஸ்ய ஸுமதோ நிஜப்ருஷ்டலக்நாந்

யுக்தம் ஹி பார்த்திவந்ருபஸ்ய ஸதஸ்தவைவ
  சித்ரம் விபோ! யதஸி கர்மவிபாகசூந்ய:  -  29


ஜலத்தில் கவிழ்க்கப்பட்ட சுட்ட மண்பானையானது தன்பேரில் ஏறிக்கொண்டவர்களை எப்படி அக்கரைக்குக் கொண்டுபோய்ச் சேர்க்கிறதோ அதேபோல் ஏ ஸ்வாமியே நீர் உம்மை வணங்கியவர்களை ஸம்ஸார ஸமுத்திரலிருந்து கரையேற்றவைக்கிறீர். இரண்டும் சரிதான். ஆனால் இதில் ஆச்சர்யம் என்ன வென்றால் பானை பரிபக்குவமானது (ஸுடப்பட்டது) நீர் கர்மவிபாகம் இல்லாதவர் என்பதுதான்.

விபாகம் – சுடப்பட்டது, கர்மபலனை அனுபவித்தல்
பார்த்திவ ந்ருப – மண்பானை, ஜகத்துக்கு அரசன் என இருபொருள்பட உள்ளது.
  


 ************ 0 ************விச்வேஸ்வரோzபி ஜநபாலக! துர்கதஸ்த்வம்
  கிம்வாக்ஷர ப்க்ருதி ரப்ய லிபி ஸ்த்வமீச

அஜ்ஞாநவத்யபி ஸதைவ கதஞ்சிதேவ
  ஜ்ஞாநம் த்வயி ஸ்புரதி விச்வவிகாசஹேது: --  30


இந்த ஸ்லோகம் விரோதபாச அலங்காரம். அதாவது மேலோட்டமாக விரோதமான அர்த்தமுன்ம், ஆழ்ந்து நோக்குமிடத்து உண்மையான அர்த்தமும் விளங்கும்.

1.   நீர் ஜகதீசனாயிருந்தாலும் தரித்திரனாயுள்ளீர் – விரோதம்.
நீர் ஜகதீசனாயிருந்தாலும் வெகு சிரமத்தினால் அறியக்கூடியவர். – பொருத்தம்.

2 நீர் எழுத்தின் ஸ்வபாவமாயிருந்தாலும், அக்ஷர மில்லாதவர் (எழுதப்படமுடியாதவர்) - விரோதம்
நீர் எழுத்தின் ஸ்வபாவமாயிருந்தாலும் மோஹம் இல்லாதவர். – பொருத்தம்.

3 நீர் ஞானமில்லாதவர் ஆயினும், எல்லா உலகத்தையும் பிரகாசிக்ககூடிய ஞானம் எப்பொழுதும் உம்மிடத்திலிருக்கிறது.  – விரோதம்.
அஞ்ஞானமுள்ள பிராணிகளைக் காப்பாறுபவரான உம்மிடத்தில் திவ்யஞானம் எப்போழும் பிரகாசிக்கின்றது. – பொருத்தமாகும். ************ 0 ************ப்ராக்பார ஸம்ப்ருதநபாம்ஸி ரஜாம்ஸிரோஷா
துத்தாபிதாநி கமடேந சடேந யாநி

சாயாபி தைஸ்தவ ந நாத! ஹதா ஹதாசோ
  க்ரஸ்த ஸ்த்வமீபிரயமேவ பரம் துராத்மா  -  31


ஏ நாதரே! பூர்வார்ஜித (ஜன்மாந்தர அல்லது பூர்வஜன்ம) வைரத்தால் துஷ்டனான கமடனால் உம்மை மறைத்து மூச்சுத் திணறும் படி ஆகாயத்துக்கும் பூமிக்குமாக கிளப்பி விடப்பட்ட தூசுகளால், உம்முடைய நிழலைக்கூட கெடுக்க முடியவில்லை. ஆனால் அவைகள் அந்த கெட்டவனான கமடனுக்கே கேடு விளைவிப்பதாயிற்று என்பதாம்.
  


 ************ 0 ************யத்கர்ஜதூர்ஜித கநெளகமதப்ரபீமம்
  ப்ரஸ்யத்தடிந்முஸலமாம்ஸல கோரதாரம்

தைத்யேந முக்தமத துஸ்தரவாரி தத்ரே
  தேநைவ தஸ்ய ஜிந! துஸ்தரவாரிருத்யம்  -  32


கெடுவான் கேடு நினைத்தான். ஏ ஜிநரே! கமடனால் உம்மைக்குறித்து ஏவப்பட்ட இடி, மின்னல், காற்று, பிரவாஹம் (மழை) முதலியவைகளால் உம்மை ஒன்றும் தீங்கு செய்யமுடியவில்லை. பின்னர் அவைகளை அவன் கழுத்துக்கு கத்தியாக (அழிவுக்கு காரணமாக) ஆயிற்று அல்லவா? என்பதாம்.
துஸ்தரவாரி – ஒரு இடத்தில்; துஸ்தரா – தாண்டமுடியாத, வாரி – மழை என்றும். இரண்டாவது இடத்தில் துஸ் – கெட்ட; தரவாரி – கத்தி என்றும் இரு பொருட்படுமாறு கூறப்படுகிறது.

  


 ************ 0 ************த்வஸ்தோர்த்வகேச விக்ருதாக்ருதி மர்த்யமுண்ட
  ப்ராலம்பப்ருத்பயதவக்த்ர விநிர்யதக்நி:

ப்ரேதவ்ரஜ: ப்ரதிபவந்தமபீரிதோ ய:
  ஸோzஸ்யாzபவத் ப்ரதிபவம் பவதுக்கஹேது:  -  33


ஏ பரமேச்வரரே! அந்த கமட அசுரனால் உம்மைக்குறித்து ஏவப்பட்ட மிக பயங்கரமான பிசாசுக் கூட்டங்களால் உம்மை ஒன்றும் அழிக்க முடியவில்லை. ஆனால் அவைகள் அவனுக்கே பல பிறவிகளுக்கு (ஸம்ஸார துக்கத்துக்கு) காரணமாக ஆயிற்று என்பதாம். ************ 0 ************
தந்யாஸ்த ஏவ புவநாதிப ! யே த்ரிஸந்த்ய-
  மாராயந்தி விதிவத்விதுதாந்ய க்ருத்யா:

பக்த்யோல்லஸத்புலகபக்ஷ்மல தேஹ தேசா:
  பாதத்வயம் தவ விபோ! புவி ஜந்மபாஜ:  -  34


திரிலோகநாதராகிய ஜினரே பூமியில் எந்த பவ்ய ஜனங்கள் தங்களுடைய மற்ற காரியங்கள் விட்டு, ஏகாக்ர சிந்தையர்களாய், மயிர்க் கூச்சலடையும் படியான பக்தி சிரத்தையுடன் உமது இரண்டு பாதகமலங்களையும், தினம் காலை, மதியம், மாலை முன்று வேளையும் காலமும் தவறாமல் பூஜிக்கின்றார்களோ, அவர்களே தன்யர்கள் (புண்ணிய புருஷர்கள்) ஆவார்கள் என்பதாம்.
  


 ************ 0 ************அஸ்மிந்நபார பவவாரிநிதெள முநீச
  மந்யே ந மே ச்ரவணகோசரதாம் கதோzஸி

ஆகர்ணிதே து தவ கோத்ர பவித்ர மந்த்ரே
  கிம் வா விபத்விஷதரீ ஸவிதம் ஸமேதி  - 35


முனிவர்களுக்கு நாதரே! நான் முன் ஜன்மத்தில் உமது பவித்ரமான பெயரை கேள்விப்பட்டிருந்ததே இல்லை என்று தோன்றுகிறது. அப்படியின்றி அந்த விஷத்தை போக்கும் படியான மந்திரமாகிய உனது பெயரைக் கேட்டிருந்தேனேயானால், இந்த ஜன்மம் என்கிற ஸர்ப்பமானது என்னை தீண்டியிருக்குமா இராது. அதாவது இந்த ஜன்மாவை அடைந்திருக்க மாட்டேன் என்பதாம்.

அல்லது ஸ்ரீ பகவானின் பெயரே பவத்தை அழிக்கும் மந்திரமாம் என்பதாம்.
 ************ 0 ************
ஜந்மாந்தரேzபி தவ பாதயுகம் ந தேவ!
  மந்யே மயா மஹிதமீஹித தாநதக்ஷம்

தேநேஹ ஜந்மநி முநீச ! பராபவாநாம்
  ஜாதோ நிகேதநமஹம் மதிதாசயாநாம்.  -  36


ஏ பிரபுவே! இஷ்டத்தை அளிக்கும் உமது பாதங்கள் இரண்டையும் நான் ஜன்மாந்திரத்தில் கூட பூஜிக்கவில்லை போலும்: அதனால் தான் நான் இந்த ஜன்மத்தில் இப்படி மனம் கெடும்படியான அநேக இகழ்ச்சிகளுக்கு இருப்பிடமாய் ஆனேன். (இல்லையேல் ஸம்ஸார்துக்கமில்லாதவனாய் ஆகியிருப்பேன்) என்கிறார்.
  


 ************ 0 ************நூநும் ந மோஹதிமிராவ்ருதலோசநேந
  பூர்வம் விபோ! ஸக்ருதபி ப்ரவிலோகிதோzஸி

மர்மாவிதோ விதுரயந்தி ஹி மாமநர்த்தா:
  ப்ரோத்யத் ப்ரபந்தகதய: கதமந்யதைதே  -  37


ஏ பிரபுவே! மோஹமாகிற அந்தகாரத்தால், மறைக்கப்பட்ட கண்களையுடைய என்னால், ஜன்மாந்தரத்தில் ஒருதடவை கூட பார்க்கப்படாதவராய் இருக்கிறீர். இல்லையேல் எனது மனதில், மர்மஸ்தானத்தில் தாக்கும் துக்கங்கள் (பிறவிக்கு ஏதுவாகிற கர்மபந்தங்களாகிற துக்கங்கள்) எப்படி என்னை பீடிக்கும்? ஒரு போதும் பீடித்திருக்காது என்பதாம்.

மோஹமாகிற அந்தகாரத்தால் மறைக்கப்பட்ட எனது கண்களால் நான் எத்தனையோ தடவை உம்மைப் பார்த்திருந்தாலும், அந்த மோஹாந்தகாரமில்லாத் கண்களால் (ஞானமாகிற கண்களால்) நான் ஒரு தடவைகூட உம்மைப் பார்த்து அனுபவித்ததில்லை. அப்படி அனுபவித்திருந்தால், இப்பிறவித்துன்பம் என்னைப் பீடித்திருக்காது என்பதாம்.
  


 ************ 0 ************ஆகர்ணிதோzபி மஹிதோzபி நிரீக்ஷிதோzபி
நூநம் ந சேதஸி மயா வித்ருதோzஸி பக்த்யா

ஜாதோzஸ்மி தேந ஜநபாந்தவ! துக்கபாத்ரம்
  யஸ்மாத்கிர்யா: ப்ரதிபலந்தி ந பாவசூந்யா:  -  38


ஏ ஜனங்களுக்கு பந்துவான ஜினரே! உம்முடைய நாமத்தை நான் கேட்டிருந்தாலும், உம்மைப் பார்த்திருந்தாலும், பூஜித்திருந்தாலும், பக்தியோடு உம்மை நான் மனதில் தியானம் செய்தவனாய் இருக்கிறேன்.  அதனால் துக்கத்துக்கு (பிறவித்துன்பத்துக்கு) இருப்பிடமாயுள்ளேன். அந்தோ! ஏன் என்றால் பக்தியில்லாத கிரியைகள் (காரியங்கள்) சபலமாவதில்லையன்றோ (பிரயோஜப்படுவதில்லையல்லவா) ஆகவே பக்தியே மேலானது என்பதாம். ************ 0 ************
த்வம் நாத! துக்கிஜநவத்ஸல! ஹே சரண்ய
  காருண்ய புண்யவஸதே! வசிநாம் வரேண்ய!

பக்த்யா நதெ மயி மஹேச! தயாம் விதாய
  துக்காங்குரோத்தலந தத்பரதாம் விதேஹி  -  39


துக்கத்தை அடைந்த ஜனங்களைக் காப்பாற்றுபவராயும், காருண்ணியத்திற்கும், புண்ணியத்திற்கும் இருப்பிடமானவரையும், யோகிகளுக்குள் சிரேஷ்டமானவராயும், மஹேச்வரராயும் உள்ள ஏ ஸ்வாமியே! பக்தியோடு உம்மை வணங்கின எனக்கு தயைசெய்து, என்னுடைய துக்கங்களுக்கு ஏதுவான முளைகளை வேரோடு களைந்தெறிய பற்றுதலை (ஆசக்தியை) உண்டு பண்ணுவாயாக என்கிறார். ************ 0 ************நிஸ்ஸங்க்யஸார சரணம் சரணம் சரண்ய
  மாஸாத்ய ஸாதித ரிபு ப்ரதிதாவதாதம்

த்வத்பாதபங்கஜமபி ப்ரணிதாந வந்த்யோ
  வந்த்யோzஸ்மி தத் புவநபாவந ஹா ஹதோzஸ்மி  -  40


ஏ மூவுலகத்தையும் பவித்ரமாக செய்கின்றவரே! கணக்கற்ற வஸ்துக்களுக்கு இருப்பிடமானதாயும், வந்தடைந்தவர்களைக் காப்பாற்றுகிறதாயும். கர்மமாகிற சத்துருவை ஜயித்ததனால் பிரஸித்தியடைந்த கீர்த்தியை உடையதாய் முள்ள உம்முடைய பாதகமலங்களை வந்தடைந்து தரிசித்தும், உம்மை பக்தியோடு தியானம் செய்யாததினால், நான் வீணனான ஆகிவிட்டேன். அந்தோ, இது அதிக கஷ்டம்.
  


 ************ 0 ************தேவேந்திரவந்த்ய! விதிதாகில வஸ்துஸார
  ஸம்ஸாரதாரக! விபோ! புவநாதிநாத!

த்ராயஸ்வ தேவ கருணாஹ்ரத மாம் புநீஹி
  ஸீதந்தமத்ய பயத ஸ்யஸநாம்புராசே:  -  41


தேவேந்திரர்களாய் பூஜிக்கப்பட்டவரே! ஸகல வஸ்துக்களின் சாரத்தை அறிந்தவரே! ஸம்ஸாரத்தைத் தாண்ட வைக்கிறவரே! எல்லா இடங்களிலும் வியாபித்துள்ள பிரபுவே! மூன்று உலகங்களுக்கும் நாயகரே! தயாஸமுத்திரரே பயத்தைத் கொடுக்கிற ஸம்ஸார துக்கத்திலிருந்து என்னைக் காப்பாற்றும். காப்பாற்றுவீராக என்கிறார்.
  


 ************ 0 ************யத்யஸ்திநாத! பவதங்க்ரிஸரோருஹாணாம்
  பக்தே: பலம் கிமபி ஸந்ததஸஞ்சிதாயா:

தந்மே த்வதேகசரணஸ்ய சரண்ய! பூயா:
  ஸ்வாமீ த்வமேவ புவநேzத்ர பவாந்தரேzபி  -  42


ஏ ஸ்வாமியே! உம்முடைய பாதகமலங்களில் பக்தி செய்வதால் ஏதாவது பலன் (நன்மை, பிரயோஜனம்) உண்டாகுவதானால் அது, உம்மையே சரணம் என்று வந்து அடைந்த எனக்கு, இந்த ஜன்மாவிலும் அடுத்த ஜன்மாவிலும் நீரே எஜமானராக ஆக வேண்டும் என்பதாம்.
  

 ************ 0 ************


இத்தம் ஸமாஹிததியோ விதிவஜ்ஜிநேந்த்ர
  ஸாந்த்ரோல்லஸத்புலக கஞ்சுகிதாங்கபாகா:

த்வத்பிம்ப நிர்மலமுகாம்புஜ பத்தலக்ஷ்யா
  யே ஸம்ஸ்தவம் தவ விபோ! ரசயந்தி பவ்யா:


ஜநநயந குமுதசந்த்ர! ப்ரபாஸ்வரா:
  ஸ்வர்க்க ஸம்பதோ புக்தவா

தே விகலித மலநிசயா:
  அசிராந்மோக்ஷம் ப்ரபத்யந்தே -  44


எந்த சம்சாரி (பவ்விய) ஜனங்கள் ஸ்ரீ பார்ஸ்வ தீர்த்தங்கரருடைய பிம்பத்தின் முககமலத்தில் குறிவைத்து, மனதை ஒரு நிலையில் நிறுத்தி, புளகாங்கிதர்களாய் பக்தி சிரத்தையுடன் இந்த ஸ்தோத்திரங்களைப் பாராயணம் செய்கிறார்களோ அவர்கள், தேவ சுகங்களை அனுபவித்துப் பின் கர்மங்களைக் கெடுத்து மோக்ஷ ஸாம்ராஜ்யத்தைச் சீக்கிரம் அடைகிறார்கள் என்பதாம்.

இந்த ஸ்லோகத்தில் கிரந்த கர்த்தாவின் பெயர் ஸ்ரீ குமுதசந்திராசாரியார் என்பது வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. இவருக்கு ஸித்தஸேந திவாகரர் என்ற வேறு பெயரும் உண்டு என்று தெரிகிறது.


சுபம்  மங்களம்  சுபம்.


முற்றிற்று.
2 comments:

  1. super , very much useful to all , try to include the orginal slokam also with the name of the author, namosthu

    ReplyDelete
  2. thanks. I will try to get and upload

    ReplyDelete