திருப்பாமாலை
திருப்பாமாலை
இந்த அருமையான நூலினை திரு. இரவிச்சந்திரன் , போளூர் அவர்களால் 
JUNC Whatsapp குழுவில் தினமும் பதிவாக அஞ்சல் செய்யப்பட்டதின் தொகுப்பு.சமண முனிவர் அருளிச் செய்ததுபதிப்புரை


உலகில் உள்ள பழமையான மொழிகளில் ஒன்று தமிழ்மொழி. இந்த இளமை குன்றாத தமிழ்த் தாய்க்குச் சமணர் பூட்டிய அணிகலன்கள் பல. காலத்தால் அழியாத சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, சூளாமணி எனப் பட்டியலிட்டால் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும். அத்தகைய அணிகலன்களில் ஒன்று திருப்பாமாலை. இதில் ஆலோசனை பக்தி முதலாக சிவகதி அகவல் வரையிலான 14 அகவல்களும், சில தனிப்பாடல்களும் இடம் பெற்றுள்ளன.

முதலிலுள்ள ஆலோசனை பக்தி, நாம் மேற்கொள்ள வேண்டிய அற ஒழுக்கங்களை அழகாக விவரித்து, நாம் இவற்றை எல்லாம் கைக் கொள்ளவில்லையே! என்ற ஆதங்கம் எழலாம். நம் வாழ்வுக்கும், வீடு பேறு பெறுவதற்கும் நல்ல ஆலோசனைகளை தருகிறது. எளிய தமிழில் கிரியா கலாபம் என்ற சமஸ்கிருத நூலில் உள்ள பக்திகளின் பெரும் பகுதியை தமிழ் வடிவில் ஆக்கித் தந்தவர் யார்? என்பதை அறிய முடியவில்லை.இந்த ஆலோசனை பக்தியை மீண்டும் மீண்டும் படித்துப் பாருங்கள். ஆலோசனை செய்துப் பாருங்கள்! சாமாயிக பாடம் என்ற சமஸ்கிருத ஸ்லோகத்தின் சாயல் தெரியும். இந்நூலினுள் ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் மனம், மொழி, மெய்யால் அருகனை நினைத்து, வணங்கி பூசனை செய்வதெல்லாம் வல்வினை போக்கி வீடு பேறு பெறுவதற்கே என்ற கருத்தில் பாடல் வரிகள் முடிவில் வந்து நிறைவு செய்யும் அழகைக் காணலாம். இதில் உள்ள அனைத்து பக்திகளையும் பாராயணம் செய்து அருகனை துதித்து பூசனை செய்து, வினையின் வலிமையை குறைக்கச் செய்யலாம்.

முற்றும்.

-----------------------------------------
ஆக்குவது ஏதெனில் அறத்தை ஆக்குக

போக்குவது ஏதெனில் வெகுளி போக்குக

நோக்குவது ஏதெனில் ஞானம் நோக்குக

காப்பது ஏதெனில் விரதம் காக்கவே!

(மேரு பா)

--------------------------------
1. ஆலோசனை பக்தி


வாடாத் தாமரை மலர்மிசை யொதுங்கிய

சேடுபடு சிறப்பிற் செல்வ! நின் திருந்தடி

வீடுபேறு புண்ணியம் உடையோர்க்(கு) அல்லது

கூடா தேத்துதல்! கொடுமைசெய் பல்லுயிர்

 நீடுபல திரிதலும் அனந்தங் காலமென

வீடுபெற்(று) உயர்ந்தோய் விதித்தனை, அதனால்

தொன்மைசெய் தொடர்வினை துணிந்துடன் கெடுகென

நன்னெறி வழாமை நாள்மலர் தூவிப்

பன்னெடுங் காலம் ஏத்துவன்! வணங்குவன்!

கட்டொடு வீடுநன்(கு) அறியே னாயினும்,

பட்டினி பல நாள் செய்யே னாயினும்,

அட்டமி உவாவுடன் ஓரே னாயினும்,

மட்டமு முருத்தமும் நினைந்தே னாயினும்,

தத்துவ மாதவர்ப் பழித்தே னாயினும்,

உத்தம நன்னெறி நில்லே னாயினும்,

விரதமும் சீலமும் அழிந்தே னாயினும்,

குரவரை மறுதலைக் கொண்டே னாயினும்,

மறுதலை மனத்துடன் வைத்தே னாயினும்,

அறுவகை உயிர்களை ஓம்பே னாயினும்,

இந்திய வசைவழித் தேன்றே னாயினும்,
மந்திரப் பதங்களை மறந்தே னாயினும்

நன்றியில் உரைகளை நவின்றே னாயினும்,

மன்றிசைக் கிரிகையை வழுவினே னாயினும்

கொலைபுரி கொடுவினை செய்தே னாயினும்

நிலமிசை நீசரோ(டு) இசைந்தே னாயினும்,தானமொடு தவமிடை விட்டே னாயினும்,

மானமும் மாயமும் மருவினே னாயினும்,

பிழைத்தது குரவர்க்(கு) உரையே னாயினும்

உரைத்தது பேர்த்துநனி மீளே னாயினும்,

வரம்பில் கொள்கையோ(டு) ஒழுகினே னாயினும்வரம்பில் தீநெறி மருவினே னாயினும்,

நூல்களை விநயஞ் செய்யே னாயினும்,

நால்வகைச் சனனமே நயந்தே னாயினும்,

காட்சியின் மறுதலைக் கண்டே னாயினும்,

மாட்சியில் நூல்களை மதித்தே னாயினும்,தூய்மையி னடைவகை ஓதினே னாயினும்,

சூனை களுக்குடன் பட்டே னாயினும்,

குத்தியும் சமிதியும் தெரியே னாயினும்,

அத்தியைங் காயமும் தெளியே னாயினும்,

கனாநனி தீயன கண்டே னாயினும்


இனாத பொய் களவுடன் பட்டே னாயினும்,

சேதியம் இடத்திட்(டு) ஏகினே னாயினும்,

சாதியல்லாரொடு சார்ந்தே னாயினும்,

கோடும் புள்ளியும் எழுத்தும் பதமும்

பாடமும் ஓசையும் பழித்தே னாயினும்,இன்னும் பலவும் செய்தே னாயினும்,

அன்னவை எல்லாம் அகன்றுடன் கெடுகெனப்

பென்னெயில் நடுவுள் பொலிந்துவீற் றிருந்து

நன்னெறி பகர்ந்தோய் நின்னடி யல்லது

மரணமுத லாகிய வல்வின கெடுக்கும்


சரண்எமக்(கு) அடையு(ம்) அரண்பிறி(து) இன்மையின்

மனத்தினும் மொழியினும் காயம் தன்னினும்

நினைத்து வணங்கிநற் பூசனை செய்வேன்

வினத்துகள் அறுத்(து) யான் வீடுபெறல் பொருட்டே!


-ஆலோசனை பக்தி முற்றும்.


 2. சித்த பக்தி


காதி நான்மைக் கடும்பகை கருவற

சோதி வெள்வாள் துணித்தபின் தொல்லைக்

கடையி னான்மை யுடைமை யெய்தித்

தண்ட கவாட பிதர பூரணைப்

பண்பினில் விரிந்து பரந்த யோகினிற்         5கனலுண்(டு) உமிழ்ந்த புனைதுகி லென்ன

நின்ற வகாதி பொன்றவு மாகி

நிர்னா மம்முத லந்நாற் குணனும்

முன்னாற் குணத்துடன் முறைமை யெய்து

மருவிய பெருமை யருவியல் மாகி                10மூவகை உலகின் நால்வகைத் தேவரும்

முனிவரும் அரசரும் முதல்வரு மான

நனிபெருஞ் சிறப்பின் நன்கினி தயர

நன்பொன் வானுல குச்சி நலந்திகழ்

வெண்பொன் வானகர் வீதியு ளெய்திக்        15கைவல மடந்தை மெய்வலங் கவர்ந்த

மூவா முதல்வன் முத்தி நாயகன்

தாவா வின்பத் தகைமலர்ச் சேவடி

பூவும் புகையும் பொற்பமை விளக்கும்

மேவுஞ் சாந்தும் விளங்குதண் டுலமும்      20  


                      
சலமும் சருவும் பலமும் பிறவும்

வலமலி உவகையொடு வகைபெற வேந்தி

நாளும் நாளும் வணங்குவன்!

மீளா நற்கதி மேவுதற் பொருட்டே!


3.சைத்திய பக்தி


ஒருமறு வின்றி உலகமுழு துணர்ந்த

ததிருமறு மார்ப சிநவர சிநாலயம்

உயிர்பெறு மந்தரத் தோங்கிய வெண்பது

வக்கரத் தொருநூறு சிகரத் தொரு நான்(கு)

உத்தம சுவநிலத் தொருபது, மிக்க.  . . 5


வெள்ளியம் பெருமலை ஒரு நூற் றெழுபது

வள்ளிபங் குலமலை வகுத்தன முப்பது,

குண்டல ருசுகர குத்தரத் தின்மிசை

ஒண்டிறற் சேதியம் ஓரொரு நான்கே

ஐம்பத்தி ரண்டே நந்தீ சரத்தினோடு. . . 10ஏழு கோடிமிசை யெழுத்தி ரண்டுநூறு

ஆயிர மாகு மதோலோ கத்தில்

வயங்கிய வியந்தரர் சோதிட ரிடத்துப்

பயன்படு சுவர்க்கத்துப் பாங்கமை சேதியம்

எண்பத் தீரிரு நூறாயிரத்து.  . . 15


தொன்படு தொண்ணூற் றேழா யிரத்துஇரு

பத்துமூன் றேதிரு வொத்திலங்குவன 

ஆங்கவை யன்றிஅமரரும் அரசரும்

ஈங்க ணியற்றிய எல்லையில் சேதியம்

பட்டகம் படிமம் பாடீ வாரமொடு . . . 20


திட்டமை தூபைகள் சேதிய மரமாம்

ஆறணி சேதிகை யழகமை பெருங்கொடி

வீறிய பஞ்சகல் யாணமொடு பிறவும்

எனைத்துள பரமதீர்த் தங்களு மவற்றை

நினைத்த உள்ளமொடு நித்தலும் வணங்குவன்.  . . 25வினைத்துக ளறுத்தியான் வீடுபெறற் பொருட்டே!


------------------- 


வாழ்த்த வான் உலகு எளிது


சீயம் சுமந்த மாசறு மணியனை


மேய உரவோன் சேவடி


வாயின் ஏத்த வானுலகு எளிதே

பிறவா நெறி


பூந்தண்சினை மலர்மல்கிய பொழில்பிண்டி


வேந்தன்புகழ் பரவாதவர் வினைவெல்லார்


அதனால்


அறிவனது அடியினை பரவப்பெறுகுவர் யாவரும் பிறவா நெறியே!


4.பஞ்ச குரு பக்தி


ஒருபெருங் கேவலத் துலகம் மூன்றும்

பொருவற உணர்ந்த புண்ணிய ராகிப்

பேரொளி மண்டிலம் பெரிதினிது விளங்க

அரிசுமந் தேத்திய அணியா சனத்துப்

பொங்கு சாமரை புடைநின் றிட்ட.  . . 5


எங்குந் துந்துபி அந்தரத் தியம்ப

மருவிய பூமழை வானோர் சொரிதர

எரிதளிர்ப் பிண்டி யின்னிழல் மேவி

இலங்கொளி முக்குடை இயல்பெற நிழற்ற

கலங்கிய இருவினைக் கடிபடை உடையப்.  . 10


புனைந்த நல்லொளிப் பொன்னெயில் மன்னிக்

கணம்ஈ ராறும் கைதொழு(து) ஏத்த

வெங்கட் டீவினை வெருவிநின் றகல

அங்க பூவம் அருளிய அறிவரும்


எண்வகை வினைகளை இயல்கெட நூறி.  . 15

உண்மையின் எண்குணத்(து) உயர்ந்த சித்தரும்

இருவகைச் சுத்தியின் நிறைந்த தன்மையின்

அருமையின் ஐவகை ஆசா ரத்துத்

திருந்திய உள்ளமொடு பெருந்தகு பான்மை

அருந்தவப் பொருளாம் ஆசா ரியரும்.  . 20


பதினாற் பூவமும் பன்னிரண் டங்கமும்

பதினறு கேண்மையும் பாற்படு முறைமையின்

இதுவிதன் இயல்பென இயம்பிய முனிவரும் 

அருங்கல மும்மை ஒருங்கு நிறைந்த

பெருந்தகு பான்மை அருந்தவத் தோருமென்(று). . . 25


அற்பபெருங் குரவர் அணிமலர்ச் சேவடி

முழுமையின் இறைஞ்சி இருவகை யிருக்கை

நால்வகை வணக்கத்து ஆறிரு சுழற்றி

நாலெட்(டு) அகற்றி வாலிதிற் பணிகுவன்!

மேல்வரும் வல்வினை விரைந்துகெடற் பொருட்டே!! . . 30


5. ஆருகத பக்தி


அங்கண் வானத்து அமரர் அரசரும்

வெங்களி யானை வேல் வேந்தரும்

வடிவார் கூந்தல் மங்கையரும்

கடிமலர் ஏத்திக் கதழ்ந்து இறைஞ்சச்

சிங்கஞ் சுமந்த மணியனை மிசைக்.  . 5


கொங்கு இவர் அசோகின் குளிர்நிழல் கீழ்ச்

செழுநீர்ப் பவளத் திரள் காம்பின்

முழுமதி புரையும் முக்குடை நீழல்

வெங்கண் வினைப்பகை விளிவு எய்த

பொன்புனை நெடுமதில் புடைவளைப்ப.  . 10

அனந்த சதுட்டயம் அவை எய்த 

நனைந்தலை உலகுடன் நவை நீங்க

மந்த மாருதம் மருங்கு அசைப்ப

அந்தரத் துந்துபி நின்று இயம்ப

இலங்கு சாமரை எழுந்து அலமர.  . 15


நலங்கிளர் பூமழைநனி சொரிதர

இனிதிருந்து

அருள்நெறி நடாத்திய ஆதிதன்

திருவடி பரவுதம் சித்தி பெறல் பொருட்டே


6. நந்தீசுவர பக்தி.மூவுல குக்கு முழுதுநடு வாகிய

நாவலந் தீவுக்கு நாலிரண் டாய 

நந்தீ சுரத்தின் நடுவுநின் றோங்கும்

அஞ்சன மலைகள் நான்கே அவற்றினுள்

வாவிபதி னாறுள வடிவமைந் தியன்றன.  . 5


தாவில் ததிமுகந் தான்பதி னாறே

ததிமுக வாவிகள் தம்மாற் றிசைதொறும்

பதியமை காக்கள் பதினறு நான்கே

கீழ்த்திசைக் காவினுட் கிளரொளி அழகின் 

ஏத்தரு மிரதிகரம் எண்ணான் கென்ப.  . 10


பாற்பட மொழிந்த பருப்பதத் தின்மிசை

ஏற்பன விருந்த இயற்கைச் சிநாலயம்

ஐம்த் திரண்டே யமரேந் திரர்க்குந்த

தம்போற் புரத்தற் குரிய தமையும்

எண்ணருஞ் சிநாலயம் ஏத்திஎக் காலமும்.  . 15


.நந்தீசுவர பக்தி


பண்ணருங் கார்த்திகை பங்குனி ஆடியென

முன்னிய நாளின் முறை முறை வழாமல்

தப்பில் கொள்கையர் தம்பரி வாரமொடு

மூவகை யுலகின் நால்வகைத் தேவரும்

ஓவல ராகி ஒன்றுபல் லாயிரம்.  . 20


விகுர்வணை உருவொடு தொகுவன தோன்றி

அகமலி உவகையர் விரவினர் சென்றுசென்(று)

ஆடினர்! பாடினர்! ஆர்த்தனர்! ஆடிக்

கூடின பல்லியம், குழலிசை, முழவம்

காளமொடு சங்கு கடல்கிளர்ந் ததுவென.  . 25


வாலிதின் ஒலிப்ப வாழ்த்தினர்! வணங்கினர்!

முப்பா லட்டமி யிடையிருட் போதிற் 

றப்பா விதுப்பினர் தாமவை தொடங்கிப் 

பொற்பா வுழைக்கலம் பொலியநன்(கு) ஏந்தி

நற்பாற் சிநாலயம் நான்குடன் புக்கு.  . . 30


கீழ்த்திசைச் சோதமன் தென்றிசைச் சமரன்

மேற்றிசை ஈசானன் வயிரோ சனனே

வடதிசைப் பக்கம் வலமா முறைமுறை

திடவதின் அர்ச்சனை சீர்பெற இயற்றி

நாவரு காற்றிசை சேதியம் பூரணை . . 35


நாளோர் பதினைந் நாழிகை யளவா

நூனெறி வழாம னோக்கி முடித்தபின்

எண்ணா ளெல்லை யிம்முறை வழாமற்

கண்ணார் விழாவிற் கழித்த பின்றை

பிறப்பறு காறுமெம் பெருமான் சிநவரன்.  . 40


சிறப்பெமக் காகெனத் திசைதொழு தேத்திக்

கூர்த்தெழு மூவகைக் குவலய மகிழப்

பாற்கடல்  நறுநீர் ஆற்றின ராட்டி

மந்த மலையை வலம்பட வந்து


தம்பதி புகுவர்கள் தேவர்கள் நால்வரும்.  . 45


6.நந்தீசுவர பக்தி.


அப்படிக் காலத்(து) அங்குல சிநாலயம்

இப்படிக் காலத் திங்குள் ளனபோல்

ஆர்வம் மீதூர வணிகிளர்ந்(து) அர்ச்சனை

நீரினும் சாந்தினும் நிறைந்ததண் டுலத்தினும்

பூவினும், புகையினும், பொற்பமை விளக்கினும்.  . 50


அமுதினும் பலத்தினும் அறிவன் திருந்தடி

செவிகொள அர்ச்சித்துச் செயசெய வென்றெடுத்(து)

அருகனை அறிவனை அசியத்(து) ஒருவனை

உலகிடை ஒருவனை, உயர்கதி, தருவனைத்

தவநெறி முதல்வனைத் தாவாத் தலைவனைக்.  . 55


கருவினை கெடுத்த கைவலச் செல்வனைப்

பரவுநன் னூனெறி வலமுற வந்து

மனத்தினும், மொழியினும், காயம் தன்னிலும்

நினைத்து வணங்கிநற் பூசனை செய்குவன்

வினைத்துகள் அறுத்தியான் வீடுபெறற் பொருட்டே! . . 60


7. பரகதி யகவல்.


பரகதி யளிக்கும் பாரிச நாதா!

பஞ்ச கல்யாண! பகவ! பட்டாரகா!

செஞ்சுட ராகித் திமிரம் நீக்கிய

சிநவர! தினகர! தியம்பக முனிவ!

அருக! சித்த! அருளா சாரிய! . . . 5


ஓதா துணர்ந்த உபாத்தி  யாய!

சங்கர! சாதுவ! சதுரா னனத்த!

கொங்கலர் பிண்டிக் கொற்றவ! குணதர!

கேவல ஞான கிருபா சாகர!

அனந்த ஞான அனந்த வீரிய.  . 10


அனந்த போக அனந்த தரிசன 

மூவா முதல்வ! தேவாதி தேவ!

முக்குற் றத்தையும் முனிந்தருள் தலைவ!

ஞானா வரணியம் நயவா வித்தக!


தேனார் தருநிழற் செல்வ சிநேசுர! . . 15


7. பரகதி யகவல்


முக்தி வித்தகா சித்தி நாதா!

தேவர் புரோகிதா! திரைலோக்ய நாதா!

பொன்னெயில் நாதா! பூமிசை நடந்தவா!

தென்னவ சூழத் தீர்த்த நாதா!

எண்குண நாதா! இமையவர்க்(கு) இறைவா! . . . 20அந்தர நாயகா! சுந்தர புனிதா!

கருமம் எட்டும் கடிந்தருள் காரணா!

வாருதி மேல்வரும் வானவா! கேசவா!

அறவாழி நாதா! அரியா சனத்தா!

ஓர்ஐ நூறுவில் லோசனை உயர்ந்தவா! . . . 25


பணிபண நீழற் பார்த்திப! பண்ணவா!

இயக்கர் ஏத்தும் ஈச! நாதா!

ஆரியா! அமலா! பேரா சிரியா!

காமனை முனிந்தருள் ஏம நாயகா!

ஆகம நூலுநூ றாயிரந் தெரிந்தருள்.  . . 30


ஏக நாதா! மோகம்இல் லாதவா!

சத்திய வாசகா! சாரணர்க் கதிபா!

ஏத்தி இறைஞ்சும் பத்தர்க்(கு) எளியவா!

ஆர! பூரண! சாரண! காரணா!

ஆதி நாதா! வேத நாயகா! . . . 35


என்றிடு மன்னர்க(ள்) ஆரியாங் கனைகளும்

வந்தினி(து) இறைஞ்சி, மலரடி யேத்தி

எழுபது சாரியும் வழுவா(து) ஓடிய

மணித்தேர் ஏற்றி மகர தோரண

மாநிழல் நிலத்தில் வளம்பெற இருத்தி.  . . 40


மத்தளம், பேரிகை, வார்புனை யிடக்கை

சித்திரச் சல்லிகை, செழுங்குரற் பசுந்துடி, 

கடி முரசம், கைம்மணி தாளம்,

முதிர்குர லடக்கங் குரல்புனை உடுக்கை,


கஞ்ச தாளம் கடும்பரிக் கிடுகு.  . . 45நிசாளம் வெண்டகமரகம்நெடுங்குரல் றவுண்டை

சவளக் கிடுகு தண்ணுமை நெடும்பறை

இழுகு பறையோ(டு) இலங்குகைம் முரசம்

துய்யமல் லாரி தொல்புனை தவிசும்

ஒருகட் பறையுடன்.  . . 50


கைம்மணி பாலையாழ் கவின்படு குறிஞ்சி

மருத முல்லை வார்கட னெய்தல்  

சுருதிக் காளந் தோலார் முழவம்


சங்கு வலம்புரி சலஞ்சலங் கொம்பு


கட்டச் சின்னங் காளந் தாரை.  . . 55 


மன்னி முழங்க மறுகினி லியக்கிய 

முக்குடை யுடனே முத்த வெண்குடை  

மெழுகுவட் டத்துடன், வெள்ளை வட்டம் 

பெருங்கா லசைவு  

கொற்றக் குடையுடன் கொழுஞ்சே றாடி.  . . 60

வெண்சா மரமுடன் செஞ்சா மரமும் 

சிராலோ வியலும் திகழால வட்டமும் 

சேரச் சாத்தித் தெருவினி லியக்கிச்  

செம்பொன் ஆலயத்திற் றிகழ்பெற இருத்திச்  

சிங்கா தனத்திற் செல்வனை ஏற்றிக் . . . 65


கன்னிக் கமலமும் அங்கையி லாரமும்  

பொன்னெயில் நீரும் பூம்பனி நீரும் 

சந்தன அளரும் குங்குமக் குழம்பும் 

அகிலும் தேய்வையும் ஆனகற் பூரமும்   

பஞ்சகௌ வியமும் பசுஞ்சாந் துடனே.  . . 70


கழுநீர்க் கோட்டாங் கடுஞ்சா திக்காய் 

எலத் துடனே யிலவங் கந்தோடு  

அட்டி மதுர மட்டவிழ் செண்பகம்

எட்டும் அரைத்தே இன்புறக் கரைத்துத்

துய்ய நீரால் ஐயனை யாட்டி.  . . 75வெண்டா மரையும் செந்தா மரையும் 

செங்கழு நீரும் செண்பகப் பூவும் 

சிறுசெண் பகமும் 

நறுமலர்க் குடச ஞாழல்வெள் ளாம்பல் 

செம்பொற் சேலுந் திகழு மௌவல் . . . 80


பைங்கொடி முல்லையும் பவழப் பூவும்

மல்லிகை மலரும் வாடா குறிஞ்சியும் 

சீறார் வெட்சியும் சிவந்தபட் டிகையும்  

ஏரார் பிச்சி இலங்குசெவ் வந்தியும்  

மாதவி மலரு மத்தமுங் கடுக்கையும்.  . . 85


மருவும் கொழுந்தும் மணவிரு வேலியும் 

பகன்றையு மாடலும் படர்வெண் டாளியும் 

சூதப் பூவும் துய்யாதூ தாளியுந்

துளவுமும் பச்சையும் அளவில் வர்க்கமும்  

தும்பையும் குராவும் தூய்மலர்ப் பிடவும்.  . . 90


முள்ளுடைப் பிடவும் வெள்ளிலைக் கைதையும்

கன்னி காரமும் காட்டாங் கோலமும்

வன்னிரி ஞாழலும் வஞ்சிப் பூவும்

அரும்பவிழ் புன்னையும் நரந்தம் பூவும்

மடலவிழ் மெருகும் படலம் பூவும் . . . 95


விடந்தரு மலரியும்

நந்தியா வட்டமும் நாண்மாலை யகத்தியும்

செம்மந் தாரமும் வெண்மந் தாரமு

மகிற்குன் றாத்தியு மாதளை மலரும்

காவளை மலரும் காஞ்சிப் பூவும் . . . 100


ஈனா நாகின் இளமுலை போலும்

கொட்டைக் கரந்தையும் மட்டவிழ்நெய்தலும்

காலிலைக் குருந்தும் காயா மலரும்

கான மல்லியும் காட்டு முள்ளியும்

செழுநீர் மலரும் செம்பீர் மலரும் . . . 105


ஆம்பல் மலரும் அகத்தியும் குறிஞ்சியும்

நாளிகே ரத்தின் நலந்தரு பாளையும்

பூகப் பாளையும் பொன்னிற வண்ணமுங்

கடம்ப மாலையும் கடப்பம் பூவும்

கொத்தலர் குளவியும் குங்கும மலரும் . . . 110


மன்னவை வனமும் மணவை வனமும்

உச்சிமல் லிகையும் சச்சைமென் னிஞ்சியும்

சந்தனப் பூவும் சாதிப் பூவும்

பொற்றா மரையும் சொற்றபல் லவமும்

நொச்சியு மகிழும் மெச்சச் சாத்திச் . . . 115


சென்னெற் கதிரும் சிறந்தகற்  பூரமும்

துய்யதண் டுலமு மாரச் சாத்தி

வீரனை வணங்கிப் போனகத் துடனே

பொலிந்திடும் கருணையும்


குளமும் தயிரும் கோலச் சீனியும் . . . 120


கண்டும் தளிகையிற் கருத்துறப் படைத்து

வட்டணைக் கோலில் வளம்பட வேற்றி

அத்தந் தன்னால் ஐயனை ஊட்டி

நன்னீர் ஊட்டி நறுமென் புகையுந்

தூபமுங் காட்டித் துலங் (கு) ஆலத்தியும் . . . 125


சீர்பெற எடுத்துச் செழுங்காப் பிட்டு

மாதவ செயசெய! வானவ செயசெய!

சந்திர செயசெய! சுந்தர செயசெய!


வந்தினி திறைஞ்ச மனத்தவ! செயசெய!

புண்ணிய செயசெய! புங்கவ செயசெய! . . . 130

பண்ணவ செயசெய! பார்த்திப செயசெய!

இக்கனை முனிந்தருள் இறைவா செயசெய!

துக்கங் காணாத் துறைவா செயசெய!

நிரயங் கடந்த நிமலா போற்றி!

நித்தா போற்றி! நிமலா போற்றி! . . . 135


அத்தா போற்றி! அழகா போற்றி!

சுத்தா போற்றி! சுடரே போற்றி!

முத்தி அளித்த முதல்வா போற்றி!

மாசில் லாத மணியே போற்றி!

காதிக் கருமங் கடிந்தாய் போற்றி! . . . 140


எல்லும், இரவும், மானா, போற்றி!

வல்லவ ரேத்து மருந்தே போற்றி!

சாந்தி நாதா சரணம்! சரணம்!

மாந்தளிர் மேனி மாயவா! சரணம்!

கோடா அறநெறிக் கோவே! சரணம்! . . . 145


பீடார் விஞ்சைப் பிரானே! சரணம்! 

பிறப்(பு) இறப்(பு) இல்லாப் பிஞ்ஞக சரணம்!

சிறப்புடை வேதச் சிவனே! சரணம்!

அணிஅணி யாத அழகா அபயம்!

அண்டர் தேடிய அருளே அபயம்! . . . 150


தொண்டர்க்(கு) எளிய சுடரே அபயம்!

அய்யா நமஸ்தே! அருகா நமஸ்தே!

செய்யா நமஸ்தே! சித்தா நமஸ்தே! 

ஆசான் நமஸ்தே!அமலா நமஸ்தே!

ஈசா நமஸ்தே! இறைவா நமஸ்தே! . . . 155


கோவே நமஸ்தே! குருவே நமஸ்தே! 

சிந்தா மணியே! செல்வா நமஸ்தே! 

பாவ நாச பண்ணவ நமஸ்தே!

என்றென்(று) ஏத்தி, இறைஞ்சி,  இறைஞ்சிப்

பரகதி தன்னைப் பலகா லாக . . . 160


நின்றா யிரமும் இருந்தா யிரமும்

நாத்தழும் பேற, நாதனை வாழ்த்தி

எவ்வண்ணம் மெய்வண்ணம் அவ்வண்ணம் இறைஞ்சிச்

செவ்வண்ண மாறு தீங்கினை அழித்துப்

பிறவா யாக்கைப் பெரியோ ராவர். .  . 165


மறவா(து)  அருகனை வாழ்த்தினர் தாமே!


8. பஞ்ச கல்யாண அகவல்.


மிசை கொடு போந்து விழவுமூன் றாவது

முதிர்வனத் தியற்ற முனிவர் ஆகி

மதிகொடு காதி வல்வினை துணித்து

மாக நிலையின் வந்த தறிந்து

தோகையர் தம்மொடு சுரரும் இந்திரரும் . . . 20


தூசொளி பரவத் துன்னிய பன்னிரண் (டு)

யோசனை யகனர் ஒருகணத் தியற்றி

விருப்புற நான்காம் விழவு நடாத்திக்

கருத்துறப் பன்னிரு கணந்தொழு(து) ஏத்த

எண்ணான் காயிர மியனா டெங்கும் . . . 25


விண்ணா றிடையின் மீதெழுந் தருளித்

திருக்கிளர் அறம்உப தேசஞ் செய்து

பரித்தபின் இறுதியிற் பரிநிர் வாணம்

விதிப்படி ஐந்தாம் விழவு நடாத்தித்

துதித்தம ரேந்திரர் தொழவிங்(கு) அகாதியும் . . . 30

சிதைத்து, மாசித் திங்க ளபர

சதுர்த்தசி யபிசித் துகயகா லத்தின்

அகதி யடைந்தருள் ஆதி நாயகா!

புகழ் குனியிற் பூருவ பஞ்சமி

யமருங் கேட்டை யந்தி வேளையிற் . . . 35


பஞ்சம கதியடைந் தருள்சந்த்ரப் பிரபா!

பஞ்சமமி பொருந்திய பரணி அந்தியின்

மஞ்சணி சிவஞ்சேர் மல்லி நாயகா!

சிறுகிய சதுர்த்தி சித்திரை யந்திற்

பிறவி யறுத்த பதுமப் பிரப! சிநர் . . . 40


சத்தமி அனுஷம் உதய சமயத்துச்

சித்தி பதத்திற் றிகழ்பா ரீசா!

துவாதசி திருவா திரையுத யத்துத்

தவாநிலை பெற்ற தவமுனி சுவ்வதா!

சித்திரை வளர்பிறை சிறந்த பஞ்சமி . . . 45


உற்ற உரோகணி உதயகா லத்துத்

தத்தி யகாதி அறுத்தருள் அசிதா!

சஷ்டி மான்றலை அந்திச் சமயத்து

அஷ்ட வினைகள் அகற்றிய சம்பவா!

திதிமகிழ் ஏகா தசிமகத்(து) அந்தியில் . . . 50


துதிசிவம் இசைந்தருள் சுமதி நாயகா!

அபர சதுர்த்தசி ரேவதி அந்தியில்

அபவருக் கமடைந் தருள்அர நாயகா!

அமாவாசை ரேவதி உதயத்(து) அகதியுள்

இமையோர் பரவ எழுந்தருள் அனந்தா! . . . 55


புணர்வை காசி பூருவ முதற்றிதி

அணியுங் கார்த்திகை அந்தி வேளையில்

குணமெட் டும்பெறு குந்து நாயகா!

சஷ்டி புனர்பூ சத்துத யத்தில்

அஷ்ட வினையபி நந்தன முதல்வா! . . . 60 


அல்கிய சதுர்த்தசி அசுவனி உதயத்து

மல்கிய எண்குணம் மலர்நமிநாதா

ஆனி மாதம் மதிவளர் சதுர்த்தசி

ஆன பூசநாள் அந்தியில் அகதித்

தான மடைந்தருள் தரும நாயகா! . . . 65


சதுர்த்தசி அபரம் சார்பர ணியந்தி

சதுர்க்கதி கடந்த சாந்தி நாதா!

ஆடி மாதம் மதிவளர் சத்தமி

நாடிய சித்திரை நன்னாள் அந்தி

நீடிய வீடுசோர் நேமி நாயகா . . . 70


சிறு(கு)அட் டமியுத் திரட்டாதி அந்தியில்

குறுகிய பவமறு குணதர விமலா!

ஆவணி பூருவம் அடைந்த சத்தமி

மேவிய விசாகம் உதய வேளையில்

வீறுறு சிவமான விரும்புபா ரிசுவா! . . . 75


பூரணை அவிட்டம் புணர்நாள் அந்தி

சீரணி சிவநெறி சேர்சிரே யாம்சா!

திங்கள் புரட்டா சியின்வளர் அட்டமி

அங்கமா மூலநாள் அந்திய காலப்

பொன்கொடி மணம்புணர் புஷ்ப தந்தா! . . . 80


சதுர்த்தசி விசாகம் அந்தி சமயம்

மதித்திடும் முத்திசேர் வாசு பூச்சியா!

அற்பசி வளர்அட் டமிபூ ராடம்

நற்பகல் அந்தியில் மன்னு காக்கதி

சிற்பரம் அடைந்த சீதள நாதா! . . . 85

கார்த்திகை அபங்கர கண்ட சதுர்த்தசி

உய்த்த சுவாதி உதயத்(து) அகதிசேர்

வர்த்த மான வரத சிநவரா!! 

நித்தநின் னாம நிராயுத நின்மல!

உத்தம! சுகதர் உலகநா யகவென்(று) . . . 90


இத்திறம் எண்மூ விறைவர் திருவடி

தண்புனல், சாந்தம், தண்டுலம், நறும்பூத்

திண்படு சருநற் றீப தூபம்

பலமுத லருச்சனை பலவும் புரிந்த

புலவர்போல் யானும் புனைந்து, மூவகையின் . . . 95


வழுத்தி நாளும் வணங்குவன்! வணங்குவன்!!


வழுத்தா வில்கதி மருவதற் பொருட்டே!!


9. துர்சொப்பன அகவல்.


நாலு காலமும் நடந்தபின் இறுதிக்

காலமாம் ஐந்தாம் காலத்(து) அதனில்

தோற்றப் பட்ட சுதகே வலிகள்

ஏற்றவை யைவர்க்(கு) இயற்கை நாமம்

நண்ணிய நந்தி, நந்தி மித்திரர், . . . 5


திண்ணிய அபரா சிதர்,கோ வர்த்தனர்

படர்புகழ் பத்திர பாகுகே வலிகள்

கடையில் வீறிய காலத் துயர்ந்த

கொண்டநற் சந்திர குத்திமக ராசன்

கண்ட உற்பனக் கனாப்பதி னாறும். . . 10


பண்ணுற்ற பத்திர பாகுகே வலிக்கு

விண்ணப் பம்,முனி வினவக் கூறினான்,

வீறுள சுவப்பன விதம்,அடை வாகச்

சித்த இரவி அத்த மயமும், 

கற்பக விருக்கம் கவடு முறிந்ததும், . . . 15வைப்பெனும் விமானம் வந்து போந்ததும்

பன்னிரு தலையுள பாம்பு கண்டதும்

மன்னு மாமதி மண்டலம் பிளந்ததும்,

இருளுரும் யானை இரண்டு பொருததும்,

பரவிய மின்மினி பாரிற் கண்டதும், . . . 20


நாடிய தடாகம் நடுவெலாம் உலர்ந்ததும்,

நீடிய சுற்றில் நீர்நிற்கக் கண்டதும்,

மிகையெழப் புவியில் புகையெழக் கண்டதும்,

அரியணை மீதில் நரிஇருந் திட்டதும், 

பைம்பொற் பாசனப் பாயசம் தன்னை. . . 25


வன்புறச் சுவானம் வாயிடக் கண்டதும், 

குஞ்சர மீதினிற் கோந்தி இருந்ததும்

சஞ்சலக் கல்லில் தாமரை பூத்ததும், 

வேலைநீர் வேதிகை மிஞ்சிப் புரண்டதும்,

காலிளம் கன்று இரு கனதேர் பூண்டும்,


கருதரி தாமிளங் கன்றின்மே லேறி

வருதுரை மன்னன் தன்னையே கண்டதும்,

இப்படிக் கண்ட எண்ணிரு சுவப்பனம்

முற்பட உரைக்க, முனிவரர் மொழிவார்:

பானுஅத் தமனம் பரமா கமம்கெடும்! . . . 35


மோனையாம் கற்பகம் முறிந்து வீழ்ந்தது

க்ஷத்திரி யர்க்குத் தயையுறச் செவிக்குச்

சேர்தவ முத்தி தீட்சையும் இல்லை!

வானில் விமானம் வந்து போந்தது

சோனையாம் சாரணர் தோற்றமும் இல்லை! . . . 40பன்னிரு தலையுள பாம்பு கண்டது

பன்னிரு வற்சரம் பதிக்கொளும் அற்பம்! 

இந்துவின் மண்டலம் இரண்டாய்ப் பிளந்தது

பந்து சனங்கள் பேதம் பிறக்கும்!

நீல் இரண்(டு) யானை நீடிய யுத்தம் . . . 45


கால காலம் கார்பொழி யாது!

மின்மினி காண்டலால் மெய்ப்பர மாகமம்

செம்மையாய் அருளிச் செய்வரும் இல்லை!

நடுஉலந்து சுற்றில் நன்னீர் நின்றது

தடநடு வெங்கும் தன்மம் குன்றித் . . . 50


தொகையிலாத் தன்மம் சுற்றில் நடக்கும்!

புகையைக் காண்டலால் பொல்லார் மிஞ்சுவர்!

சிங்கா தனத்தில் நரிசேர்ந் திருத்தல்

வெங்கால நீசர்கள் மேதினி ஆள்வர்!

சொர்ண பாசனப் பாற்சோறு நாய்தீண்டல் . . . 55


சன்னமாம் மித்தியா தபசியர் தம்மைத்

திரைசெறி யும்கடல் செகதலத் தலைவர்

அரசர், பூ சித்தே ஆசாரம் செய்வர்!

அத்திமேல் மந்தி அமர்ந்த(து) இராச

புத்திரர் நீசரைப் போற்றிச்சே விப்பர்! . . . 60


கல்லினிற் கஞ்சம் பூக்கக் கண்டது

அல்லல் வேட்கை அநாசா ரம்செய்வர்

நற்சமுத் திரம்கரை புரளக் கண்டது

உற்ற ஆறினில் ஒன்றுகொள் மன்னர்

அஞ்சுபங் குகொண்டு ஆறினில் உட்குறை . . . 65


கொஞ்சமோர் பங்கு குடிக்கு நடத்துவர்!

எலமுறுந் தேர், இரண்டு கன்று இழுத்தல்

பலகா லத்தவம் பண்ணும தொழிந்து

சென்ற மூப்பிற் செய்தவம் மருவும்!

கன்றின்மேல் ஏறிய மன்னனைக் காண்டலாண் . . . 70


மித்தியா ஞான மிலேச்ச மாகி

மித்தியா தரிசனம் பிரபலம் ஆகும்!

என்றுஇக் காலத்(து) இழிவெலாம் புயத்து

மன்றல்சேர் சந்திர குத்திமன் னவர்க்குப்

பதினறு சுவப்பனப் பலன்பத்த பாகு . . . 75


சுதேக வலிகள் சொன்னநாள் தொடங்கி

மேல்இனி நடக்கும் காலஇச் சித்தியைச்

சாலவும் கேட்டு, அறம் சார்வது கடனே!


10. சமவ சரண அகவல்.


செஞ்சுடர் இலங்கும் திருமணிக் கோயிலை

எஞ்சுதல் இன்றி இருகையும் கூப்பி

வஞ்சமும் பொய்யும் நீக்கி,மன மகிழ்ந்து

விஞ்சுரப் புவியின் விளங்கும்,ஆ லயத்தை

வலங்கொள வந்து மணித்தோர ணத்துமுன் . . . 5


இலங்குபொற் பீடத்(து) ஈரியா பதிபுரிந்(து)

அஞ்சலி மிகசெய்(து) ஆங்கு அடியெடுத்திட்(டு)

அம்சுடர்க் கபாடம் அணிபெற நீக்கித்

தொல்லைநம் பிறவித் தொடுகடல் அறுகஎன

எல்லையில் உவகையோ(டு) இறைஞ்சிமன மகிழ்ந்து . . . 10


மணிநிலம் துடைத்து, வாசனை நீர்தெளித்(து)

அணிசெய் பொற்கலச(ம்) ஆங்கவை விளக்கி

அலகில் பெருங்குணத்(து) அச்சுதன் அருள்செய்(து)

உலகம் மூன்றும் அறஞ்செய்த உத்தமனை

கன்று கண்ட கறவைபோற் கசிந்து . . . 15சென்றுதொழு(து) ஏத்தி, சென்னிமேற் கொண்டு

மாசற விளக்கி, மணிபீடத்(து) இருத்திக்

காசற் பசும்பொன் கதிர்மணிக் குவட்டிடை

குலகிரி யதன்மேற் குளிர்மணிக் கயத்திடை

நிலவிய நீரொடு நித்திலம் தெளித்து . . . 20


வெள்ளியம் பெருமலை மிகுபனிக் கறைமிசை

நல்லொளி திகழும் நறுங்கடல் நீரும்,

நாற்கடல் வளைத்த பாற்கடல் நீரும்,

கோட்டமும் அகிலும் குங்குமக் குழம்பும்

கச்சோ லத்தோடு கமழ்.இலா மிச்சமும் . . . 25


கன்றிகழ் வெண்ணையும் கமழ்கற் பூரமும்

என்றிவை முதலாகி முருவேலி பிறவும்

இவைமுத லாகிய குழம்புகொண் டவைபெற

நவையறு சாந்தும் நன்குடன், கலந்து

நறுமழை பொழியநற் றுந்துபி கறங்கக் . . . 30


குடையும், கொடியும், கோடி கொடியொடு

இடையின் ஈண்டி எழிலொளி திகழ்தர

அரசரும், அமரரும், அருந்தவக் குழாமும் 

தமரித மாகித் தரமுடன் பெருகிச்

சீர்சால் செம்மலர்த் தடக்கை கூப்பி, . . . 35


ஆரா உவகையொ(டு) அகமகிழ்ந்(து) ஏத்தி

இந்திரன் வழிபடும் இறைவன் தாளினை

அந்தமில் சிறப்பின் அபிஷேகம் செய்து

தண்டா மரைமேல் நடந்ததத் துவனை,

வண்டார் அசோகின் நிழலமை வரதனை . . . 40


முத்தணி முக்குடை மூவா முதல்வனைச்

சித்தனைத், தீர்த்தனைத், திருமறு மார்பனை

அத்தனை ஆயிரத் தெண்குண நாதனைப்

பத்தியைச் செய்(து) அவன் பாதத்து வணங்கி


வெண்டா மரையும் செந்தா மரையும் . . . 45


கண்டார் மகிழும் கழுநீர் மலரும்,

நெய்தற் பூவொடு, நீலோற் பலமும்,

கைதைப் பூவும், கமழும் செருந்தியும்,

திலதமும் நறவும் செறியிதழ்ப் புன்னையும்

வேங்கைப் பூவொடு, வெள்ளம் பூவும் . . . 50


கோங்கம் பூவும், கொன்றை மாலையும்

மகிழம் பூவும், மல்லிகை மாலையும்

தாழம் பூவொடு, தாதுமா தளையும்,

ஞாழற் பூவொடு, நந்தியா வட்டமும்

போதலர் குறிஞ்சியும், பொன்னா வரையும், . . . 55


பாடலர்ந்(து) இலங்கிய பாடலம் பூவும்,

தோடலர்ந்(து) இலங்கிய செறியிதழ் வெட்சியும், 

மாதவி மலரொடு; மந்தார புட்பமும்,

எல்லா பூவும் இயல்பெறக் கொண்டு

கல்லா(து) உணர்ந்த கருணா கரனை, . . . 60


ஒருவனை, உலகில் உத்தமர் தலைவனை,

இருவினை, நீக்கிய ஈசனை, இறைவனை,

மூப்(பு) இறப்(பு) இல்லா, மூவொளி மூர்த்தியை

நாற்கதி நீக்கிய நவையறு நாதனை

பஞ்ச,கல் யாணனைப் பரம யோகியை . . . 65


ஆறிரு கணமுடை அருகப் பிரானை,

எழுவகை அறமும், எண்வகைப் பொருளும்,

ஒன்பது பதார்த்தமும், பத்துவகை அறமும்,

பழுதற மொழிந்த, பவித்திரன் தன்னை

அணுவுரு வென்னும் ஆதி வேதனை, . . . 70


வரகதிக் கனைய வரகதி நாதனைப்

பொன்னரி மாலையும், பொற்பூ மாலையும்,

மின்னொளி திகழும் விரிசுடர் மாலையும்,

முற்பவ ழத்தொடு முத்துடன் மாலையும்

தரளக் கோர்வையும் தரமுடன் சாற்றிச் . . . 75


சோதி வானவர் துதிசெய்(து) என்மன

மீதுறை வாய்போற்றி! பெள்குளத்தாய் போற்றி!

சிநகிரி வனகிரி சீர்திகழ் முனிகிரி

என்உயர் திருநறுங் குன்றையின் நடுவில்

ஒருதனி விளங்கிய உத்தமா போற்றி! . . . 80


அப்பா போற்றி! அருகா போற்றி!

துப்பா போற்றி! துணைவா போற்றி!

என்றுகொண்(டு) இறைவன் தன்திரு நாமம்

ஒன்றிய மனத்தில் உவந்துஉவந்து ஏத்தி

யாவரும் தொழுவ(து) இவ்வுல கினில் உயர் . . . 85


தேவரும் தொழஉயர் சித்திபெறற் பொருட்டே!


12. இருபத்தி நான்கு தீர்த்தங்கரர் அகவல்.


நிலவுல கெழுந்த நீதியின் அளித்த

அலகில் பெருங்குணத்(து) ஆதி இடபன்

விச வீரன் அசிதபட் டாரகன்,

அம்பவழ மேனிச் சம்பவ நாதன்

அரத்தகு சேவடி அபிநந் தனனும், . . . 5


உரைத்தகு மேனி உத்தம சரீரன்

தொலையா வாய்மைச் சுமதிபட் டாரகன், 

பரம மூர்த்தி பத்மப் பிரபனும்

ஏர்பெறு காட்சி சுபாரிச நாதன், 

சந்திர வீறொளி சந்திரப் பிரபன், . . . 10


புரையறு தவத்துப் புட்ப தந்தன்,

சிங்கம் ஏந்துஅணைச் சீதள நாதன், 

திருமறு மார்பிற் திகழ்சிரே யாம்சன்,

மலர்மிசை நடந்த வாசுபூச் சியனும்,

மேவல் மேனி விமலபட் டாரகன், . . . 15 இருபத்தி நான்கு தீர்த்தங்கரர் அகவல்.


அருள்நெறி யளித்த அனந்த சித்தன்

தருமலை யுடைய தன்மபட் டாரகன்,

தவநெறி யளித்த சாந்திபட் டாரகன்,

கொந்தார் மலர்மழை குந்துபட் டாரகன்

அந்தர வினையின் அரபட் டாரகன், . . . 20


தொல்லை வினைகெடுத்த மல்லிபட் டாரகன்,

முகடு பெறவுயர்ந்த முனிசுவ் விரதன்,

அரிட்ட நெறியின் நமிபட் டாரகன்,

அட்டவினை கெடுத்த அரிட்ட நேமி

பட்ட வினைப்பகல் பாரிச நாதன் . . . 25


சிட்டர்கள் ஏத்தும் ஸ்ரீவர்த்த மானன்

என்றிவர் ஓரிருபத்து நால் வரையும்

நாளும், நாளும் நலம்புகழ்ந் தேத்த

மீளா உலகம் வேண்டுதற் பொருட்டே!! 


 13. ஈர்யாபத - சுத்தி - அகவல்.    

                    
அறிவ! கேண்மின்! அறிவ! கேண்மின்!!

நெறிசெலு மிடத்து நின்மலர்ச் சயனம்

வறிதே படுக்கும் வாயுக் காயமும்,

முறைபுணர்ந் தொடுங்கு மொழியும் வழியிற்

புறப்படும் இடமும் புகூஉம் இடமும் . . . 5


உலைப்பெறும் வீதி உலாவும் இடமும்,

வீசிக் காயம் மேற்செலு மிடத்தும்,

காசிறு மதுரக் காயக் கண்ணும்

காய நீர், மலம் கான்றுஉமிழ் இடமும்,

சீ! என நாசிநீர் சீந்தும் இடமும், . . . 10


கடுப்பொடு செற்றநீர், காட்டம் இம்முதலா(ய்)

எடுப்யன வைப்பன இயலும் இடமும்,

ஓரறி(வு) உடையன, ஈரறி(வு) உடையன

பாரறி மூவறி(வு) படைப்பன, ஐம்பொறிகள்

உடையன, பிறிது, ஆயாமல் அவற்றை . . .15

வெட்டல், தகைத்தல், விழவே தள்ளல்,

கொட்டல், கோறல், குறைத்தல், நிறைத்தல்,

ஒட்டல், அடைத்தல், உடைத்தல், உரித்தல்,

கட்டல், இசித்தல், கடுநோ யுறுத்தல், 

எடுக்கும் இடத்தினும், வைக்கும் இடத்தினும், . . . 20


நடுக்குறப் பெயர்த்து நாட்டும் இடமும்

படருறும்! அதற்கே பாயச் சித்தம்

இடர்கெடச் செய்பவன் எவனெனக் கேண்மின்

நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம்! ஆதலின்

ஆய வதற்கே அனுகம்பை ஆகிக், . . . 25


கரத்தினும் மெய்யினும், காலினும்,  தோளினும்

உரித்த மனத்தி னுறும்வினை இந்தனம்

கருத்துறு தியானக் காட்டழல் மாட்டுவன்!

அருகனைச், சித்தனை, ஆச்சா ரியனை,

உருகும் அன்புடன் உவாத்தியைச், சாதுவை, . . . 30

ஒருகணம் கதுவா வுறாஅ வகையென

நடக்க வேண்டின் நுகத்திடை நாடிக்

குடக்கொடு தெனாது குணக்கொடு விதிக்கு

வடக்கிவை தன்னு மலர்க்கை வீசிப்

படியிற் செல்வழிப் பாதத் தாலே . . . 35


இடையா மனப்பதி யிகலியிந் தியங்களும்,

தெண்ணீர் மையவாம் சிறந்தஐம் பொறிகள்,

மண்ணீர் தேயு வாயுஎன்(று) இவற்றால்

புண்ணீர் மையவாய் புலங்கெட என்னால்

பண்ணப் பட்ட தாயினும், அந்நோய் . . . 40


பண்ணு விக்கப் படூஉம் ஆயினும்

எண்ணப் பட்ட தாயினும், உடன்பா(டு)

ஏற்றதா யினும்வினை மாற்றுதற் பொருட்டே!


 13. ஈர்யாபத - சுத்தி - அகவல்.

                       
அறிவ! கேண்மின்! அறிவ! கேண்மின்!!

நெறிசெலு மிடத்து நின்மலர்ச் சயனம்

வறிதே படுக்கும் வாயுக் காயமும்,

முறைபுணர்ந் தொடுங்கு மொழியும் வழியிற்

புறப்படும் இடமும் புகூஉம் இடமும் . . . 5


உலைப்பெறும் வீதி உலாவும் இடமும்,

வீசிக் காயம் மேற்செலு மிடத்தும்,

காசிறு மதுரக் காயக் கண்ணும்

காய நீர், மலம் கான்றுஉமிழ் இடமும்,

சீ! என நாசிநீர் சீந்தும் இடமும், . . . 10


கடுப்பொடு செற்றநீர், காட்டம் இம்முதலா(ய்)

எடுப்யன வைப்பன இயலும் இடமும்,

ஓரறி(வு) உடையன, ஈரறி(வு) உடையன

பாரறி மூவறி(வு) படைப்பன, ஐம்பொறிகள்

உடையன, பிறிது, ஆயாமல் அவற்றை . . .15                        


வெட்டல், தகைத்தல், விழவே தள்ளல்,

கொட்டல், கோறல், குறைத்தல், நிறைத்தல்,

ஒட்டல், அடைத்தல், உடைத்தல், உரித்தல்,

கட்டல், இசித்தல், கடுநோ யுறுத்தல், 

எடுக்கும் இடத்தினும், வைக்கும் இடத்தினும், . . . 20


நடுக்குறப் பெயர்த்து நாட்டும் இடமும்

படருறும்! அதற்கே பாயச் சித்தம்

இடர்கெடச் செய்பவன் எவனெனக் கேண்மின்

நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம்! ஆதலின்

ஆய வதற்கே அனுகம்பை ஆகிக், . . . 25


கரத்தினும் மெய்யினும், காலினும்,  தோளினும்

உரித்த மனத்தி னுறும்வினை இந்தனம்

கருத்துறு தியானக் காட்டழல் மாட்டுவன்!

அருகனைச், சித்தனை, ஆச்சா ரியனை,

உருகும் அன்புடன் உவாத்தியைச், சாதுவை, . . . 3013. ஈர்யாபத - சுத்தி - அகவல்.


ஒருகணம் கதுவா வுறாஅ வகையென

நடக்க வேண்டின் நுகத்திடை நாடிக்

குடக்கொடு தெனாது குணக்கொடு விதிக்கு

வடக்கிவை தன்னு மலர்க்கை வீசிப்

படியிற் செல்வழிப் பாதத் தாலே . . . 35


இடையா மனப்பதி யிகலியிந் தியங்களும்,

தெண்ணீர் மையவாம் சிறந்தஐம் பொறிகள்,

மண்ணீர் தேயு வாயுஎன்(று) இவற்றால்

புண்ணீர் மையவாய் புலங்கெட என்னால்

பண்ணப் பட்ட தாயினும், அந்நோய் . . . 40


பண்ணு விக்கப் படூஉம் ஆயினும்

எண்ணப் பட்ட தாயினும், உடன்பா(டு)

ஏற்றதா யினும்வினை மாற்றுதற் பொருட்டே!


14. சிவகதி அகவல்.


ஒருபொருட்(கு) இருதுணிபு உரைத்தனை! ஒருகால்

இருபிறப் பாளர்க்கு மூவமிழ்து ஆக்கி

ஈரறம் பயந்த ஓர்அருள் ஆழியை!

இருமலர் நெடுங்கண் அரிவையர் தம்மொடு

மூவகை உலகில் நால்வகைத் தேவரும் . . . 5


மும்மையின் இறைஞ்சும் ஈரடி ஒருவனை!

இருவினை பிரித்து மூவெயின் முருக்கி

நாற்கதி தவிர்த்த ஐங்கதித் தலைவ!

நான்மறை யாள! மும்மதிற் கிழவ!

இருகுணம் ஒருமையிற் றெரிவுறக் கிளந்த . . . 10


இருசுடர் மருட்டும் முக்குடைச் செல்வ!

நால்வகை வருணமும் ஐவகை குலனு

மாற்றி மாந்தர்க்(கு) அறிவுற வகுத்தனை!

ஐந்நிற நறுமலர் முன்னுற வேந்தி

நாற்பெரும் படையொடு மும்முறை வலங்கொண்(டு) . . . 15

இரண்டுநின் கவரி! ஒன்றுநின் அசோகே! 

ஒருதன்மையை! இருதிறத்தினை!

முக்குணத்தினை! நால்வகையினை!

ஐம்பதத்தினை! அறுபிறவியை!

ஏழகற்றிய மாதவத்தினை! . . . 30


அரிமருவிய மணியணையிணை!

வளர்கதிரொளி மண்டலத்தினை!

அதனால்

மாகெழு நீழற் கேவலந் தோற்றிய

ஆதியங் குரிசில்! நிற் பரவுதும் . . . 35


தீதறு சிவகதி சேர்க! யாம் எனவே!திருப்பாமாலை முற்றும்

நாளும் தேதி வரை இப்பதிவினை படித்த அனைத்து அன்பர்களுக்கும், திருப்பாமாலையை அருகனுக்கு சாற்றிய அனைத்து நல்லற உறவினர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த வணக்கங்களும் நன்றியும் உரித்தாக்கி, ஜினகுண சம்பத்தினை பெற ஜினகாஞ்சி நாதனை வேண்டி வணங்குகிறேன்!

இரவிச்சந்திரன்

No comments:

Post a Comment