ஸ்ரீ விருஷப நாதர் தாலாட்டு




1. சீர்பெரும் அயோத்திநகர் ஜிநவரனை தாலாட்ட

பேர்புகழும் பிரதிஷ்டைதனில் பிரியமுடன் வருவீர்கள்

 

2. பார்புகழும் விருஷபஜிநர் பாதமதையே தாலாட்ட

ஏர்திகழும் பத்துவபவம் எளிதுடனே ஏடுத்துரைப்பாம்

 

3. ஜெயவர்மா வென்பவராய் ஜகமதிலே வந்துதித்து

குணமுடைய முதற்பவத்தை கோரியே நாம் தாலாட்ட

 

4. இரண்டாம் பவமதனில் இனிமையுடன் அளகைதனில்

சிறந்த வித்தியாதரரில் பிறந்தவகை எடுத்துரைப்பாம்

 

5. நிதான பந்தமதின் நியதியினால் வந்துதித்து

பிரதான மஹாபலனாய் பிந்தரசு புரிகையிலே

 

6. மும்மூடந் தனிலழுத்தும் மூன்று மந்திரி சொல்தவிர்த்து

செம்மல் ஸ்வயபுத்தன் ஜிநவசநந் தனை நினைந்து

 

7. ஸல்லேகனைக் கொண்டு ஸமாதியுடன் உடல் நீத்து

நல்லீசான கற்பம் நலமுடனே வந்துதித்தார்

 

8. அந்தியத்தில் வந்துதித்த அழகுடைய ஸ்வயம்பிரபை யாம்

சிந்தைமகிழ் தேவியோடும் ஜமதினில் வந்துதித்தார்

 

9. வஜ்ஜிர ஜங்கனென்றும் வளர்நான்காம் பவமதனில்

மெச்சிய ஸ்ரீமதியும் மேன்மையுள்ள மனைவியானாள்

 

10. புத்திரராம் முனிவர்கட்கே புகழ்தான மீந்ததனால்

உத்தமமாம் போகமதை உவந்தளிக்கும் பூமிசென்றார்

 

11. ஆறாம் பவமதனில் அழகுடைய ஸ்ரீதரனாய்

அமரருலகில் ஜனித்த அதிசயத்தை தாலாட்ட

 

12. சுசிமாநகர்தனிலே சுத்ருஷ்டி யரசருக்கு

ஸுவிதிஎனும் புத்திரராய் சுகிதத்தையே தாலாட்ட

 

13. எட்டாம் பவமதனில் தட்டாத ஸுகமுடைய

வீரட்டாங் கல்பமதில் விண்ணவனைத் தாலாட்ட

 

14. ஒன்பதாம் பவமதனை உருக்கமுடன் எடுத்துரைக்க

 உலகிலுள்ளோர்களெல்லாம் உவந்து தாலாட்ட

 

15. புண்டரீகிணீ என்னும் புதுமையுள்ள மாநகரில்

அண்டரெல்லாம் வணங்க அவதரித்தார் வஜ்ஜிரநாபி

 

16. ஒத்துமையாய் மனமடங்கி உத்தம தவம் தாங்கி

உலகத்துள்ளோர் துதித்து உண்மையுடன் தாலாட்ட

 

17. ஸர்வக்ஞன் போன்ற சுகம் ஸர்வார்த்த ஸித்திதனில்

பகர்பத்தாம் பவமதனை பணிந்து நாம் தாலாட்ட

 

18. பதிநான்காம் மனுவான பகர்நாபி மாராஜன்

பத்தினியாம் மருதேவி பதமகிழ தாலாட்ட

 

19. விடியற்காலம் தனிலே வெள்ளையானை முதலாம்

ஈரெட்டு ஸ்வப்பனங்கள் இன்பமுடன் கண்டனராம்.

 

20. சுகநித்திரை தெளிந்து ஸ்வப்பன பலன் கேட்டு

சொல்லறிய ஆனந்த சுகிர்தமதை தாலாட்ட

 

21. ஏழைரையும் மும்மூன்றும் ரத்தினமும் ஸுவர்ணமும்

இருமூன்றும் மூம்மூன்றும் இனிமையுள்ள மாதமதில்

 

22. பக்தியுடன் தேவர்களால் பஞ்சாச்சர்யம் பொழிய

பகரும் குலவாஸுதேவிகளால் ஏவல்செய்ய

 

23. சித்திரை மாதமதில் சிறந்த நவமிதனில்

உத்திராட நாள் தனிலே உதித்தோனைத் தாலாட்ட

 

24. ஆதிஜினனென்னும் அதிசயமாம் ஜினவரருக்கு

நீதியுள்ள தேவர்களால் நேர்மையுடன் பூஜைசெய்ய

 

25. ஐராவதமென்னும் அழகுள்ள யானையின் மேல்

அமரேந்திரன் மடியில் அருகனையே தாலாட்ட

 

26. பாண்டுக சிலையமர்த்தி பாற்கடலில் ஜலம் கொணர்ந்து

பகர வொண்ணா புகழுடனே பரமனுக்கு பூஜைசெய்தார்.

 

27. ஆனந்த நர்த்தனமும் அதிசயமாய் முடிந்த பின்பு

அமரருடன் விளையாடி அமர்ந்திருக்கும் நாள்தனிலே

 

28. யஸஸ்வதி சுனந்தைஎனும் இருவரையும்தான் மணந்து

இன்பமுடன் ராஜ்ஜியத்தில் இணையின்றியே யமர்ந்தார்

 

29. புத்தரரும் நூற்றுவராம் புத்திரியாம் மற்றிருவர்

வித்தைகளை கற்பித்து வீற்றிருக்கும் வேளைதனிலே

 

30. எண்ணும் எழுத்துகளும் பெண்களுக்கு போதித்தார்

கண்போன பிரஜைகளுக்கு காட்டிவைத்தார் ஷட்கர்மம்

 

31. நீலாஞ்சனையவளால் நிலையாமை தானினைந்து

மேலோர்கள் எண்மர் சொல்ல மேன்மையுள்ள தீக்ஷை கொண்டார்.

 

32. சரணமுடன் நமி விநமி தரணிதனை வேண்டிநிற்க

தரணேந்திரன் தயவால் தானவரின் தலைவரானார்

 

33. விருஷபஜிநர் சரிகைசெல்ல விபரமின்றி பெண்கள்முதல்

விபவமுடன் பரதன்வர, விக்கினமாய் திரும்பினர் பின்

 

34. நாலுவித தானமதில் நலமுடைய இக்ஷுரசம்

சீலன் ஸ்ரேயான் கனவால் சிறப்புடனே ஈந்தனனாம்

 

35. காதிகர்மம் தான் கெடுத்து கடவுள் தன்மை தானடைந்தார்

கணமீறார் அடியேத்த கமலமதின் மீதமர்ந்தார்.

 

36. தர்மோபதேசமதை தான் மொழிந்தார் சகலருக்கும்

தகும் ஸமவசரணமதில் தங்கியிருந்தார் பணிவோம்.

 

37. அஹாதியும் தான் கெடுத்து அடைந்து விட்டார் மோக்ஷமதை

அன்புடனே எல்லோரும் அளவின்றியே ஸ்துதிப்பீர்

 

38. வீடுபெற்றோன் தன்புகழை வீடைநகர் பூர்ணசந்திரன்

பாடினதை யுலகிலுள்ளோர் பரிவுடனே பிழை பொறுப்பீர்

 

39. இவ்வுலகிலுள்ளார்கள் இனிமையுடன் ஏற்றிடுவீர்

இன்பஸுகமேயருளும் இறைவனடி போற்றிடுவீர்.

No comments:

Post a Comment