தூய வந்தனை


    தூய வந்தனை
     (சாமாயிகம்)



ஸ்ரீ அமிதகதி ஆசாரியர் இயற்றி அருளியது

1

 ஸத்வேஷு மைத்ரீம் குணிஷு பிரமோதம்
      க்லிஷ்டேஷு ஜிவேஷு க்ருபா பரத்வம்,
மாத்யஸ்த பாவம் விபரீத வ்ருத்தௌ
     ஸதா மமாத்மா விததாது தேவ.

(கருத்துரை)

       ஜிநேஸ்வரனே ! என் ஆன்மா பிறவிதோறும் எவ்வுயிரிடத்தும் அன்பும் நற்குணமுள்ளோர்பால் மகிழ்ச்சியும், துன்புறும் உயிர்களிடத்து கருணையும், அறநெறிக்கு மாறான கொள்கை உடையவரிடம் விருப்பு, வெறுப்புக் கொள்ளாத நடுநிலைமையும் கொண்டு என்றும் விளங்க விழைகிறேன்.


--------------------------------------

2

சரீரத: கர்த்துமனந்த சக்திம்,
     விபின்ன மாத்மானமபாஸ்த தோஷம்.
ஜினேந்த்ர ! கோஷா திவ கட்கயஷ்டிம்,
     தவப்ரசாதேன மமாஸ்து சக்தி.


(கருத்துரை)

     

      ஜினேஸ்வரனே ! உறையினின்றும் வாளை உருவிய பின்னர், உறை வேறு வாள் வேறு என்பதை உணர்வது போல உடல் முழுவதும் நிறைந்திருக்கும் உயிரும் உடலும் வெவ்வேறானதென்ற உண்மையை உமதருளால் அறிந்துகொள்ளும் ஆற்றல் எனக்கு உண்டாகுக.

--------------------------------------

3


 துக்கே சுகே வைரிணி பந்து வர்கே,
   யோகே வியோகே பவனே வனே வா.
நிராக் ருதா சேஷ மமத்வ புத்தே,
   சமம் மனோ மேஸ்து சதாபி நாத.

(கருத்துரை)

        ஏ ஜினேஸ்வரனே ! என் மனம் இன்பம் அடைந்தபோதும், துன்பமுற்றபோதும், பகைவர்களிடத்தும், உறவினர்களிடத்தும், வலிந்து வந்த பொருளிடத்தும், கைப்பொருள் இழந்த காலத்தும், அரண்மனை போன்ற மாளிகையில் வாழும் காலத்தும், வனவாசியாக வாழ நேரிட்ட நிலையிலும் மகிழ்ச்சியும் வேதனையும் கொள்ளாது அவைகளைச் சமமாகக் கொண்டாடி வரவேற்பதாக விளங்குக.

-------------------------------------- 

4

 முனீச ! லீனாவிவ கிலீ தாவிவ,
    ஸ்திரௌ நிகாதா விவ பிம்பிதா விவ.
பாதௌ த்வதீயௌ மம திஷ்டதாம் சதா,
   தமோது நா நௌ ஹ்ருதி  தீபிகாவிவ.


(கருத்துரை)



     முனிவர்தம் தலைவா ! உன் திருவடிகள் என் உள்ளத்தில் உள்ள மித்யாத்வம் [மயக்கம்] என்னும் இருளைப் போக்க வல்ல ஒளி வீசும் விளக்குகளாகும். ஆகவே, அத்திருவடிகள் என் உள்ளத்தே என்றும் நிலைத்திருத்தல் வேண்டும் எனப் பிரார்த்திக்கிறேன்.

--------------------------------------

5

 ஏகேந்த்ரியாத்யா யதி தேவ தேஹின :,
   ப்ரமாதத : ஸஞ்சரதா இதஸ்தத :!
க்ஷதா விபின்னா மிலிதா நிபீடிதா :
   ததஸ்து மித்யா துரனுஷ்டிதம் ததா.


(கருத்துரை)




        வாழ்க்கையில் இங்குமங்கும் செல்லும்போது கவனக் குறைவின் காரணமாக சிற்றுயிர்களுக்குத் துன்பம் விளைவித்திருப்பேன். அவை அனைத்தும் என் உள்ள உணர்வால் ஏற்படாததால் ஜினேஸ்வரனே ! அத்தீவினைகள் என்னை அடையாதிருப்பதாக .

--------------------------------------
6

 விமுக்தி மார்க ப்ரதிகூலவர்தானா,
    மயா கஷாயாக்ஷவசேன துர்தியா
சாரித்ர சுத்தே: யதகாரி லோபனம்,
    ததஸ்து மித்யா மம துஷ்க்ருதம் பிரபோ.

(கருத்துரை)

      அருகப் பெருமானே ! நான்கு கஷாயங்கட்கும், ஐம்புலன்கட்கும் யான் அடிமையாகி மோக்ஷ மார்க்கத்திற்கு மாறான தீயொழுக்கங்களை மேற்கொண்டதனால் உண்டான தீவினைகள் அனைத்தும் இனி மறைந்து நீங்குக.


-------------------------------------- 


 விநிந்த நாலோசன கர்ஹனை ரஹம்,
     மனோவச: காய கஷாய நிர்மிதம்.
நிஹன்மி பாபம் பவதுக்க காரணம்,
    பிஷக்விஷம் மந்த்ர குணைரிவா கிலம்.



(கருத்துரை)


         மந்திரவாதி மந்திரத்தால் விஷயங்களைப் போக்குவது போன்று யான் நாற்கதிக்குக் காரணமாகிய கோபம் முதலிய நால்வகைக் கஷாயங்கட்கு உட்பட்டு மனம், வாக்கு, செயல்களால் வந்தடைந்த பாவங்களை ஆராய்ந்தும், என்னை யானே நிந்தித்துக் கொண்டும், அவைகளின் சேர்க்கைக்காக வருத்தங்கொண்டும், வெறுத்துக்கொண்டும் தீவினைகளைப் போக்கிக்கொள்ளுகிறேன்.



-------------------------------------- 

8

  அதிக்ரமம் யம் விமதேர் வ்யதிக்ரமம்
    ஜினாதிசாரம் சுசரித்ர கர்மண:
வ்யதா மனாசாரமபி ப்ரமாததா:,
    ப்ரதிக்ரமம் தஸ்ய கரோமி சுத்தயே.

(கருத்துரை)


      அறிவிலியாகிய யான் கவனக்குறைவால் நல்லொழுக்கத்திற்கு மாறாக தீயொழுக்கங்களாகிய நால்வகைக் குற்றங்களைச் செய்துள்ளேன். அக்குற்றங்களுக்காக இப்போது கழுவாய்(ச்) செய்து(க்) கொள்ளுகிறேன்



-------------------------------------- 


 க்ஷதிம் மன: சுத்தி விதேரதிக்ரமம்,
    வ்யதிக்ரமம் சீல வ்ரதேர் விலங்கனம்.
பிரபோதிசாரம் விஷயேஷு வர்த்தனம்,
    வதந்தி அனாசார மிஹாதி சக்ததாம்.

(கருத்துரை)


        பிரபுவே ! நல்லொழுக்கத்தின்பால் உள்ளம் செல்லாது மாசுறுவதை அதிக்ரம தோஷம் என்றும், பிறர்மனை நயவாமையினின்றும் நழுகுவதை வ்யதிக்ரம தோஷம் என்றும், ஐம்பொறி வழி சென்று அழிவதை அதிசார தோஷம் என்றும், மேற்கண்ட எல்லாவற்றிலும் அளவு கடந்து மூழ்கி இருப்பதை அநாசார தோஷம் என்றும் நல்லோர் கூறுவர்.


-------------------------------------- 

10 

 யதர்த்த மாத்ரா பதவாக்ய ஹீனம்,
   மயா ப்ரமாதாத்யதி கிஞ்ச னோக்தம்
தன்மே க்ஷமித்வா விததாது தேவீ,
   ஸரஸ்வதீ ! கேவல போத லப்திம்.

(கருத்துரை)


        ஜின வாணியே ! உதாசீனத்தாலோ தற்பெருமை போன்ற காரணமாகவோ, அருகப்பெருமான் அறவுரைகளுக்கு மாறாக தவறான பொருள் கற்பித்தோ, மாத்திரைகளைக் குறைத்தோ, கூட்டியோ, பதங்களைத் தவறாகப் பிரித்தோ, வாக்கியங்களைச் சிதைத்தோ கூறி இருப்பின் அவைகளுக்காக என்னை மன்னித்து கேவல ஞானமெனும் முழுதுணர் ஞானத்தை எனக்கு அருள்வாயாக.

-------------------------------------- 

11 

போதி : ஸமாதி : பரிணாம சுத்தி:,
      ஸ்வாத்மோப லப்தி: சிவ சௌக்ய சித்தி:-
சிந்தா மணிம் சிந்தித வஸ்து தானே,
    த்வாம் வந்த்ய மானஸ்ய மமாஸ்து தேவி.



(கருத்துரை)


          சரஸ்வதியே ! யார் எதை நினைக்கிறார்களோ அதனை அவர்களுக்கு அருளும் சிந்தாமணி என்னும் இரத்தினம் போன்றவளே ! உன்னை வணங்கும் எனக்கு கேவல ஞானம், ஆத்ம இறுதி, குற்றமற்ற எண்ணங்கள், தன் ஆன்மாவைத் தானே அறியும் ஆற்றல், வீடுபேறு அடையும் வலிமை ஆகியவைகள் உன் அருளால் உண்டாகட்டும்.


-------------------------------------- 

12

  ய: ஸ்மயர்தே ஸர்வ முனீந்த்ர வ்ருந்தை:,
      ய: ஸ்தூயதே ஸர்வ நரா மரேந்திரை:,
யோ கீயதே வேத புராண சாஸ்த்ரை:,
    ஸ தேவ தேவோ ஹ்ருதயே மமாஸ்தாம்.



(கருத்துரை)


             முனிவர்களாலும், மக்களாலும், தேவர்களாலும், இந்திரர்களாலும், வேத, புராண, சாத்திரங்களாலும் இடைவிடாது போற்றப்படும் தேவாதி தேவனான ஜினேஸ்வரன் என் உள்ளத்தில் என்றென்றும் நிலைத்திருப்பாராக.

-------------------------------------- 

13 

 யோ தர்சன ஞான ஸுக ஸ்வபாவ :,
    ஸமஸ்த ஸம்ஸார விஹார பாக்ய:.
ஸமாதி கம்ய: பரமாத்ம ஸஞ்ஜ:,
    ஸ தேவ தேவோ ஹ்ருதயே மமாஸ்தாம்.


(கருத்துரை)

          கடையிலா ஞானம், கடையிலாக் காட்சி, கடையிலா இன்பம் முதலிய எண் குணங்களையுடையவனும், பிறப்பு இறப்புக்குக் காரணமான உலகியல் சம்பந்தப்பட்ட இருவினைகளை வென்றவனும், சிந்தனையின் ஆற்றலால் அறியக்கூடியவனுமாகிய தேவாதிதேவன் ஜினேஸ்வரன் என் உள்ளத்தில் அகலாது வீற்றிருக்கட்டும்.

-------------------------------------- 


14 நிஷூததே யோ பவதுக்க ஜாலம்,
        நிரீக்ஷதே யோ ஜகதந்த ராலம்.
யோந்தர் கதோ யோகி நிரீக்ஷணீய:
        ஸ தேவ தேவோ ஹ்ருதயே மமாஸ்தாம்.




(கருத்துரை)


        எவன் உலக வாழ்க்கையில் உண்டாகும் பிறப்பு, இறப்பு, இன்பம், துன்பம் ஆகியவற்றைக் கெடுத்தவனோ, உலகில் உள்ள எல்லாப் பொருள்களையும், அவைகளின் தன்மைகளையும், ஒரே சமயத்தில் அறியும் கேவல ஞானத்தை உடையவனோ, மகாமுனிகளின் தியானத்தின் ஆற்றலால் அறியக்கூடியவனோ, அந்த தேவாதிதேவனான ஜினேஸ்வரன் என் மாசற்ற மனத்திலே தங்கியிருப்பானாக.

--------------------------------------  

15

  விமுக்தி மார்க ப்ரதி பாதகோ யோ,
       யோ ஜன்ம ம்ருத்யு வ்யசனாத் வ்யதீத:
த்ரி லோக லோகீ விகலோ கலங்க;
         ஸ தேவ தேவோ ஹ்ருதயே மமாஸதாம்.



(கருத்துரை)


           மோக்ஷ மார்க்கத்திற்குரிய வழியை அறிவித்தவரும், பிறப்பு இறப்புத் துன்பங்களைக் கடந்தவரும், வேண்டுதல் வேண்டாமை யில்லாதவரும், முழுதுணர் ஞானத்தைப் பெற்றவரும், குற்றமற்றவரும் ஆகிய தேவாதி தேவரான *ஸ்ரீ விருஷப தேவர் என் மனத்துக்கண் அகலாது இருக்கட்டும்.

-------------------------------------- 

16

  க்ரோடீக்ருதா க்ஷேஷ சரீரி வர்கா:,
    ராகாதயோ யஸ்ய ந ஸந்தி தோஷா:
நிரிந்தரியோ ஞான மயோsந பாய:,
    ஸ தேவோ ஹ்ருதயே மமாஸ்தாம்.



(கருத்துரை)


         அன்பினால் எவ்வுயிரையும் ஆட்கொண்டவனும், ஆசை முதலான பதினெண் குற்றங்கள் இல்லாதவனும், முழுதுணர் அறிவனும், வினைகளின் அச்சம் நீங்கி விளங்கியவனுமான தேவாதி தேவன் ஜினேஸ்வரன் என் உள்ளத்தே நீங்காது வீற்றிருக்கட்டும்.

-------------------------------------- 
17


  யோ வ்யாபகோ விஸ்வ ஜனீன வருத்தே:,
        ஸித்தோ விபுத்தோ  துத கர்ம பந்த: .
த்யாதோ துனீதே ஸகலம் விகாரம்,
     ஸ தேவ தேவோ ஹ்ருதயே மமாஸ்தாம்.



(கருத்துரை)


           அறிவாற்றலால் எல்லா உயிர்களிலும் பரவி இருப்பவனும், எண் வினைகளையும் கெடுத்து சித்த நிலையை அடைந்தவனும், சர்வக்ஞனும், வினைகளினின்றும் நீங்கி விளங்குபவனும்; அப்பெருமகனின் குணங்களைச் சிந்திப்பவர்களின் குற்றங்களைப் போக்கும் தன்மை வாய்ந்தவனும், ஆகிய தேவாதி தேவன் ஜினேஸ்வரன் என் மனத்தே என்றும் நிலைத்திருக்கட்டும்.


-------------------------------------- 

18

ந ஸ்ப்ருஸ்யதே கர்ம கலங்க தோஷை: ,
     யோ த்வந்த ஸங்கைரிவ திக்மரஸ்மி:  .
நிரஞ்சனம் நித்யமனேக மேகம்,
     தம் தேவ மாப்தம் சரணம் ப்ரமத்யே.




(கருத்துரை)


        சூரியனை எத்தகைய சூழ் இருளும் மறைக்கவியலாதது போல கேவல ஞான ஒளியுடைய அகப் பெருமானை இருவினைகளாகிய கார்இருள் அருகிலும் அணுகவியலாது. அத்தகைய குற்றமற்றவனும், அருவில்லாதவனும், அனந்த ஞானாதி குணங்களால் நோக்கும்போது அநேக ஸ்வரூபனும், த்ரவ்ய ரூபத்தால் ஏக ஸ்வரூபனும், ஆன அருகப் பெருமானின் திருவடி கமலங்களை சரணமாக அடைகிறேன்.


-------------------------------------- 

19

விபாஸதே யத்ர மரீசி மாலி,
    ந வித்யமானே புவநாவபாசீ.
ஸ்வாத்ம ஸ்திதம் போதமய ப்ரகாசம்,
    தம் தேவ மாப்தம் சரணம் ப்ரபத்யே.\




(கருத்துரை)


          கதிரவன் ஒளி செல்லவியலாத இடங்களிலும் ஜின பகவானின் அனந்த ஞான ஒளி பரந்து விரிந்துள்ளது. இத்தகைய கேவலஞானப் பெருமானை அடைக்கலம் அடைகின்றேன்.

-------------------------------------- 
20

விலோக்ய மானே ஸதி யத்ர விஸ்வம்,
     விலோக்யதே ஸ்பஷ்ட மிதம் விவிக்தம்.
சுத்தம் சிவம் சாந்த மனாத் யனந்தம்,
     தம் தேவமாப்தம் சரணம் ப்ரபத்யே.



(கருத்துரை)


         வினையின் நீங்கி விளங்கும், தூய மங்கள, சந்தமயமான ஜினேஸ்வரனைத் தியானத்தின் மூலம் அறியுமிடத்து பல்வேறு பொருள்களைக் கொண்ட இவ்வுலகம் விளக்கமாக அறியப்படுகிறது. ஆகவே, ஆதி அந்தமற்ற ஜினனின் பாதகமலங்களைச் சரண் அடைகிறேன்.

-------------------------------------- 

21
யேன க்ஷதா மன்மத மானமூர்ச்சா
    விஷாத நித்ரா பயசோ சிந்தா.
க்ஷயானலே னேவ தருப்ரபஞ்ச,
      ஸதம் தேவமாப்தம் சரணம் ப்ரபத்யே.



(கருத்துரை)
  

           தாவரங்கள் நெருப்பினால் எரிக்கப்படுவது போன்று காமம் முதலிய பதிணென் குற்றங்களையும் தியானம் என்னும் தீயினால் எரித்தகற்றிய ஜினேந்திர பகவானின் திருவடிகளை சரணம் அடைகிறேன்.

-------------------------------------- 

22

ந ஸம்ஸதரோ s ஸ்மா ந த்ருணம் ந மேதினீ,
    விதானதோ நோ பலகோ வினிர்மிதம்,
யதோ நிரஸ்தாக்ஷ கஷாய வித்விஷ; ,
    சுதீபிராத்மைவ சுநிர் மலோ மத.


(கருத்துரை)

             வீடுபேறு விரும்பி தவமியற்றுவோருக்கு ஆசனம் தர்ப்பை, மனை ஆகியவைகள் அவசியமில்லை. ஆன்ம விடுதலைக்குப் பகையாகிய கோபம், கர்வம், மயக்கம், கோபம் முதலியவற்றோடு ஐம்புல வேட்கைகளை வெல்லக்கூடிய தியானம் ஒன்றையே ஆசனமாகக் கொள்வார் அறிவான் மிக்க அறவோர்கள். 



-------------------------------------- 

23

ஸம்ஸ்தரோ பத்ர ஸ்மாதி சாதனம்,
ந லோகபூஜா ந ச சங்கமேலனம்,
யதஸ்த தோ s த்யாத்மரதோ பவானிசம்,
விமுச்ய ஸாவாமபி பாஹ்யவாசனாம்


(கருத்துரை)

             முக்தி மார்க்கம் என்பது ஆசனமோ, ஆடம்பரச் செயல்களோ அல்ல. நால்வகை சங்கங்களைக் கூட்டுவதும் அல்ல. ஆகவே புறப்பற்று அகப்பற்று ஆகியவற்றை நீக்கி ஆத்ம சிந்தனையில் ஆழ்ந்திருப்பதே வீடு பேற்றிற்குரிய வழி என அறிந்து நடப்பாயாக. 



-------------------------------------- 


24

ந ஸந்தி பாஹ்யா மம கேசனார்த்தா,
     பவாமி தேஷாம் ந கதாச னாஹம்.
இத்தம் விநிஸ்சித்ய விமுச்ய பாஹ்யம்,
     ஸ்வஸ்த: ஸதா த்வம் பவபத்ர முக்த்யை : 



(கருத்துரை)


      பவ்ய ஜீவனே! எனது ஆன்மாவையன்றி வேறு எந்த உயிருள்ள பொருள்களும், உயிரற்ற பொருள்களும்  என்னுடையவையல்ல. யான் அவைகளுக்கு உரியவனாகமாட்டேன். ஏனெனில் அவைகளின் தன்மையும், என் பண்பும் தனிப்பட்டவை. எனவே இவ்வுறுதியோடு பிற பொருள்களை எனது மனம், வாக்கு செயல்களால் மறந்து, வீடுபேறு அடையும் குறிக்கோளுடன் எந்நேரமும் ஆன்ம சிந்தனையில் ஈடுபடுவேனாக.

-------------------------------------- 
25

ஆத்மான மாத்மன்யவலோக மான,
    ஸ்த்வம் தர்சனஞான மாயோ விசுத்தா : .
ஏகாக்ர சித்த: கலு யத்ர தத்ர,
    ஸ்திதிதோபி சாதுர் லபதே ஸமாதிம்.




(கருத்துரை)


          ஆன்மாவில் ஆன்மாவை தியான சிந்தனையிலாழ்ந்து காணுமிடத்து நீ மாசற்ற அனந்தகுண உருவத்தோடு விளங்குகிறாய். அங்கு ஓருள்ளத்துடன் உன்னை நோக்கி சிந்திக்கும் துறவி சாந்தியை அடைகிறார்.

-------------------------------------- 

26

ஏக: ஸதா சாஸ்வதிகோ மமாத்மா,
    விநிர்மல: ஸாதிகமஸ்வ பாவ: .
பஹிர் பவா: ஸந்த்யபரே ஸமஸ்தா,
    ந சாஸ்வதா: கர்மபவா: ஸ்வகீயா.




(கருத்துரை)


       பவ்யனே! நமது ஆத்மா ஒருவனே ; என்றும் அழியாதவன் ; குற்றமேதுமின்றி தூய்மையானவன், அறிவுமயமானவன். உலகில் காணக்கூடிய உடல் ஈறாக உள்ள உயிரற்ற பொருள்கள் யாவும் நம்முடன் நிலைத்திருக்கக் கூடியவை அல்ல என்பதை உணர்வாயாக.

-------------------------------------- 
27
யஸ்யாதி நைக்யம் வபுஷாபி சார்த்தம்,
       தஸ்யாஸ்தி கிம் புத்ர கலத்ர மித்ரை: ,
ப்ருதக்க்ருதே சர்மணி ரோம கூபா: ,
     குதோ ஹி திஷ்டந்தி சரீர மத்யே.

(கருத்துரை)



          அறிவுமயமான ஆன்மாவுக்கு தன்னுடைய உறைவிடமாகிய உடலுடன் உறவு இல்லை எனில், அந்த ஆன்மாவுக்கு மனைவி, மக்கள், நண்பர்களுடன் உறவு ஏது? உடலினின்று தோலை உரித்து வேறுபடுத்தியவுடன் அவ்வுடலில் கேசத்வாரங்கள் எங்ஙனம் இருக்க முடியும் ? முடியாது என அறிக.
-------------------------------------- 
28
ஸம்யோகதோ துக்கமனேக பேதம்,
        யதோ ஸ்நுதே ஜன்மவனே சரீரீ.
ததஸ்ரிதா ஸௌ பரிவர்ஜனீயோ,
         யியாசுனா நிர்வ்ருதி மாத்மனீனாம்.



(கருத்துரை)


             பிறப்பு, இறப்பு என்னும் வனத்தில் எந்த உயிர் தனது செயல்கள் வாயிலாக ஈட்டப்பட்ட வினைகளின் சூழலால் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகிறதோ, அவ்வுயிர் தன்னை அத் துன்பங்களினின்றும் விடுவித்துக் கொள்ள விரும்பினால் மனம் வாக்கு செயல்களால் பிறப்பு இறப்பு என்னும் பிறவிக்காடு விடத்தக்கது என்பதாம்.

-------------------------------------- 
29

ஸர்வம் நிராக்ருத்ய விகல்ப ஜாலம்,
       ஸம்சார காந்தார நிபாத ஹேதும்.
விவிக்த மாத்மான மவேஷ்ய மாணோ,
     நிலீயசே த்வம் பரமாத்ம தத்வே.


(கருத்துரை)

           ஆத்மனே ! பிறப்பு இறப்புக்குக் காரணம் கோபம் முதலான தீய குணங்களேயாகும். அவைகளை அறவே அகற்றி ஆன்ம சிந்தனையை மேற்கொள்ளும் போது நீ பரமாத்ம நிலையை அடைவாய்.
-------------------------------------- 

30
ஸ்வயம் க்ருதம் கர்ம யதாத்மனா புரா,
    பலம் ததீயம் லபதே சுபாசுபம்,
பரேண தத்தம் யதி லப்யதே ஸ்புடம்,
    ஸ்வயம் க்ருதம் கர்ம நிரா்த்தகம் ததா:.



(கருத்துரை)


      பவ்யனே! முற்பிறவியில் ஆன்மாவினால் செய்யப்பட்ட, நல்வினை  தீவினைக்கேற்ப அவ்வான்மா இன்ப துன்பங்களை அடைகிறது. இங்வியற்கைக்கு மாறாக நமக்குரிய இன்பதுன்பங்கள் பிற சக்தியால் அளிக்கப்பட்டவையெனில் ஒரு ஆன்மா தான் செய்த நல்வினை தீவினை வீணே என்பது சொல்லாமல் விளங்கும்.
-------------------------------------- 

31

நிஜார்ஜிதம் கர்ம விஹாய தேஹிநோ,
    ந கோபி கஸ்யாபி ததாதி கி்ஞ்சன.
விசாரயந்நேவ மனன்ய மானஸ:,
      பரோ ததாதீதி விமுச்ய சேமுஷீம்.



(கருத்துரை)


            ஒவ்வொரு ஜீவனும் தான் செய்த நல்வினை தீவினைக்கேற்ப பயனை அடைகின்றது. இப்பயனை பிறர் கொடுக்க முடியாது என்ற உண்மையை அறிந்து தனித்த மனத்துடன் தூய எண்ணத்தோடு ஆன்மாவை தியானிப்பதன் மூலமே இருவினைகளின் தொடர்பு நீங்கி நற்பயனைப் பெறுவாய்.

-------------------------------------- 
32

யை: பரமாத்மா s மித கதிவந்த்ய:,
         ஸர்வ விவிக்தோ ப்ருசமனவத்ய: .
சஸ்வத்தீதோ மனசி லபந்தே,
      முக்தி நிகேதம் விபவவரம் தே.



(கருத்துரை)

          எல்லாப் பற்றினின்றும் நீங்கியவனும், குற்றங்களில்லாதவனும், வீடுபேறு பெற்றுயர்ந்தவனுமாகிய ஜினேஸ்வரனை, முனி அமிதகதி ஆசாரியரால் துதிக்கப்பட்ட இத்தோத்திரப் பாக்களால் எவர் பாடி வணங்குகிறார்களோ, அவர்கள் வீடுபேற்றைப் பெறுவார்கள்.

-------------------------------------- 

33

இதி த்வாத்ரிம்ஸ்தா வ்ருத்தை :
     பரமாத்மான மீக்ஷதே.
யோsநன்ய கத சேதஸ்கோ,
     யாத்யஸௌ பதமவ்யயம்.



(கருத்துரை)

            எவர் இந்த 32 பரிசுத்த வேண்டுகோளையும் பாராயணம் செய்து அருகப்பெருமானை தினந்தோறும் துதிக்கின்றார்களோ, அவர்கள் என்றும் அழியாத இன்பம் நிறைந்த வீடுபேற்றைப் பெறுவார்கள்.

           "தூயவந்தனை" நிறைவுற்றது.


 இதில் என்னையறியாது எழுத்துப் பிழைகள் ஏற்பட்டிருப்பின், அதை நிவர்த்தி செய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

-------------------------------------- 



2 comments: