சீவக சிந்தாமணி - 2

 

சீவக சிந்தாமணி - 2




5. பதுமையார்  இலம்பகம் 

 

கட்டியங்காரன்  படைகளால்  கைகள்  கட்டி  சிக்கிய  போதும்

            சுதஞ்சணன்  அவ்விடம்  வந்து  வான்  தூக்கி  சென்ற போதும்

புலம்பவும்  இல்லை  மாற்றி  பூரிப்பும்  இல்லா  மனதால்

            இரண்டுமே  ஊழ்வினை  என  இருந்திட்டான்  சீவக நம்பி                      392

 

மந்திகள்  மருவி  பாயந்து  மலர்களில்  மதுவாய்  கொட்ட

            தேனுண்ட  வண்டுகளெல்லாம்  தேனடை  என  மதியை  மொய்க்க

வெள்ளியாய்  அருவி  கொட்டும்    வெண்சங்க  மலையின்  மீது

            நம்பியை  சுமந்து  கொண்டு  சுதஞ்சணன்  ஏறிச்  சென்றான்               393

 

நன்னீரில்  நம்பியை  நீராட்டி  நல்ல  அணிகலங்கள்  பூட்டி

            வெண்குடை  நிழலில்  அமர்த்தி  வேல்விழியர்  கவரி  வீச

இசையொடு  இணைந்த  கூத்தை  இளம்பரிதி  சீவகன்  பார்க்க

            சுதஞ்சணன்  துணைவியர்  கேட்டனர்  தொடங்கிய  நட்பை பற்றி      394

 

விலங்கினில்  நாயாய்  பிறந்து  வெந்துயரில்  வாழ்ந்த  போது

            அப்பிறவி  நீக்கி  எனக்கு  அழகிய  உடல்  தந்தான்  என்றான்

காமனைப்  போன்ற  இவன்  கடும்  பகையை  நாம்  அழித்து

            மண்மகளை  மணக்க  வைக்க  சுதஞ்சணன்  தேவியர்  வேண்டினர் 395


மலைகளும்  காடுகளும்  மண்ணூலகின்  சுந்தரங்கள்

            அறிந்திடாத  நாடுகளும்  அழகுமிகு  பொய்கைகளும்

ஆறுகளில்  இருகரை  புரள  அடித்து  செல்லும்  நதி நீரும்

            காணுகின்ற  ஆசை எனக்கு  நீ  சுற்றத்துடன்  வாழ்க  என்றான்      396   

                    

இரண்டு  காத  தூரத்திலே  இருண்ட  ஒரு  மலையைக்  காண்பாய்

            அரண்பாதம்  மலையின்  கீழே நல்  தீ  வினைகள்  போக்குகின்ற

பற்றுகள்  முற்றும்  துறந்திட்ட  நல்சாரணர்கள்  வாழ்கின்றார்கள்

            அவர்கள் செவ்வடி தொழுத பின் அங்கோர் இயக்கியை காண்பாய்397

 

அறுசுவை  நல் விருந்தளிப்பாள்  அவ்விருந்தை  உண்ட  பின்பு

            அரண்பாதம்  மலை  கடந்து  ஐந்தைந்து  காதம்  செல்வாய்

களிறுகள்  கூட்டம்  கொண்ட  கடலனைய  பெருங்காடு  உண்டு

            காட்டில் பல பொய்கையுண்டு கடந்து  அவ்விடம் அகல்கவென்றான் 398

 

இரண்டு  காதம்  சென்ற பின்பு  இரு  குன்றுகள்  கண்ணில்  தோன்றும்

            பூந்துகில்  அணிந்த  பெண்களாய்  பேய்கள்  பொலிவுற்று  தெரியும்

அணைத்து  மகிழும்  ஆர்வத்தோடு அவை  உன்னை  நெருங்கும்  போது

            அவைகளிடமிருந்து தப்பி நீ  அவ்விடத்தை  விட்டு  அகல்வாய்            399

 

காத  தூரம்  கடந்தாயாகில்  கடல்  சூழ்  பொன்  தீவு  தோன்றும்

            பருவத்தால்  பெய்யும்  மழையால்  பல்லவநாடு  செழித்து  நிற்கும்

கடுந்தூர  வழி  கடந்து  வந்த  களைப்பினை  போக்கிக்  கொள்ள

            இரு  திங்கள்  அங்கு  தங்கி  ஏகிடுவாய்  மேலே  செல்ல                          400

 

காட்டினை  கடந்து  செல்ல  கல்வழி  காண்பாய்  ஆங்கு

            அவ்வன  வெம்மை  சொன்னால்  வாயது வெந்து  போகும்

இறக்கின்ற  விதியைப்  பெற்றோர்  ஏகுவார்  அவ்வனவழியே

            ஏனைய  மற்றோர்  எவரும்  அவ்வழியே  செல்லமாட்டார்                 401                                   

 

குழவிகள்  உடைய  பிடிகள்  கொடும்  வெய்யில்  தாங்காதென்று

            களிறுகள்  அவற்றைத்தழுவி  தாங்கிடும்  வெப்பம்  தன்னை

சேவல்கள்  பெடைகளைச்  சேர்ந்து  திரண்டதம்  இறகால்  காக்க

            பினைமானுக்கு  நிழலை  ஈந்த  கலைமான்  தன்  நிழலைத்  தரும்     402


( பிடிகள் : பெண்  யானை, பெடை : பெண் கோழி, பினை மான் : பெண்மான் )


அறநெறி  தவறியவர்களும்  ஐம்புலன்  தளர்ந்தவர்களும்

            அவ்வழியில்  முனிவராய்  உளர்  அவர்  தன்மை  அறிந்து  செல்க

ஒரு யோசனை  சென்ற  பின்பு  நீண்ட  குளிர்  நிலத்தைக்  காண்பாய்

            அங்குள்ள  மலைக்குப்  பெயர்  அழகு  தளும்பும்  சித்திரகூடம்            403

 

முரசு  போல்  இசை  முழங்கி  முத்து  போல்  அருவி  கொட்டும்

            வயிரத்தோடு  நவமணிகள்  கல்  என  ஒலி  கொண்டு  வீழும்

மூங்கிலோடு  சந்தன  கட்டைகள்  மிதந்து  செல்லும்  நீரினோடு

            இருகரை  மறைந்த  ஆற்றை  அஞ்சன  மா  நதியென்றழைப்பர்         404

 

சில்லென்ற  சித்திரகூட  மலை  அலை  தவழும்  அஞ்சன மாநதி

            இடையினில்  தவமுனிவர்  பள்ளி  இன்பத்தால்  அறிவு  மழுங்கும்

கவனமாய்  அக்காட்டைக்  கடந்தால்  விளைநிலம்  சூழ்ந்திருக்கும்

            தக்க  நாட்டைக்  காண்பாய்  தங்காமல்  கடந்து  செல்வாய்                  405

 

செண்பக  மலர்கள்  போர்த்தி  தவழ்ந்திடும்  ஓர்  நதியை  காண்பாய்

            இருகரை  தழுவும்  புனலை  விரைவினில்  நீந்தி  செல்வாய்

காய்  கனி  கிழங்கு  தேன்  ஊன்  கட்டிய  உரிகள்  தொங்கும்

            வேடுவர்  குசைகள்  கொண்ட கடலொத்த   காட்டையடைவாய்        406

 

வனத்திற்கு  எழிலை  தரும்  வளமான  குளங்கள்  நான்கு

            செவ்விதழ்  செந்தாமரைகள்  சேர்ந்திருக்கும்  ஓர்  குளத்தில்

ஒரு  குளத்து  நீரினாலே  இரும்பது  பொன்னாய்  மாறும்

            நோய்களை  தீர்க்கும்  ஒன்று  நல்லுயிரை  கொல்லும்  ஒன்று               407

 

காட்டினில்  வாழுகின்ற  கையில்  வில்  அம்பு  கொண்ட

            தோளினில்  தோல்பை  அணிந்து  தோற்றத்தில்  கருணை  அற்று

குளங்களை  காவல்  செய்வோர்  குளங்களை  அணுகுவோரை

            உயிரினை  வதைத்து  கொன்று  உடலினை  எடுத்து  செல்வர்             408

 

குளத்தினை  புறத்தே  தள்ளி  குணத்திலே  குளத்தை  நீக்கி

            நடப்போரை  வில்லேந்திகள்  நல்வினை  உடையான்  என்று

மலர்களை  மொய்க்கும்  வண்டாய்  அம்மனிதனை  சூழ்ந்து  வந்து

            இருகை  தொழுது  செல்வர்  என்றுரைத்தான்  சுதஞ்சண தேவன்        409


பாடல்  உண்டு  யாழ்   ஒலியோடு  பசும்பொன்  கிண்கிணியுண்டு

            குறுக்கத்தி  முல்லை  மலர்களை  கூறையாய்  வேய்ந்து  வைத்த

மகரந்த  பொடிகள்  தூவி  மெத்தையாய்  வழி  அமைத்த

            ஐந்து  காத  வழி  நடப்பாய்  அம்மலர்களை  நுகர்ந்திடாமல்                 410

 

இந்திரன்  பொன்முடி  தவழும்  வினைவென்ற அருகன்  மொழியை

            அன்றாடும்  தவறுதல்  இன்றி  அதில்  ஒன்றி  வாழும்  முனிகள்

மனம்  தவறும் மதனகீதம்  நீக்கி  மற்றய  நாதங்கள்  ஒலிக்கும்

            வனகிரி  கடந்து  செல்ல  வழிநெறி  நான்  உரைப்பேன்  என்றான்      411

 

தேனுண்ட  வண்டுகள்  சூழ்ந்த  தேன்  சுவை  சுனை  ஒன்றுண்டு

            சுனையிருந்த  இடத்தினிலே  சுற்று  வட்ட  பாறையுண்டு

வண்டிசைகள்  முழங்குகின்ற  ஒரு  வேங்கை மரம்  அருகிலுண்டு

            அம்மரத்தின்  அருகே  செல்லும்  செவ்வியநெறி  என்  சொல்லாகும்  412

 

காந்தள்  மலர்  மணங்கமழும்  காட்டினை  கடந்த  பின்பு

            மத்திம  தேசத்தை  அடைவாய்  மன்னன்  தனமித்தனை  காண்பாய்

மன்னன்  மகள்  கனகமாலையை  மணந்து  நீ  அங்கிருப்பாய்

            ஊழினால்  இவை  நடக்கும்  உன்  நண்பர்கள்  உனையடைவார்         413

 

சுதஞ்சணன் நற்கதி  பெற அன்று   சீவகன்  செப்பியது  போல்

            சீவகன்  வாழ்வில்  வளர  தேவன்  மூன்று  மந்திரம்  சொன்னான்

கன்னியரை  கவரும்  குரலும்  கடும்  நஞ்சைப்  போக்கும்  திறனும்

            விரும்பிய  வடிவம்  பெறும்  மந்திரம்  மூன்றும்  சொன்னான்               414

 

மந்திரம்  மூன்றும்  கற்றான்  மன்மதன்  போன்ற  சீவகன்

            மலர்  வண்ணமாலை  அணிந்த  சுதஞ்சணை  மார்புடன்  தழுவி

மனைவியர்  கூட்டத்தைப்  நோக்கி  மனதினால்  நன்றி  கூறி

            விருப்படி  நான்  செல்வேன்  விடைகொடுங்கள்  அன்றான்  நம்பி       415

 

மனை பெருங்கிழத்தி  தத்தையை  மாசற்ற  மனையாள்  குணமாலையை

            எப்போது  காண்பேன்  என்று  எண்ணத்தில்  நினைத்த  உடன்

சுதஞ்சணன்  நகைத்து  சொன்னான்  ஈறாறு  திங்கள்  சென்ற  பின்

            இருவரையும்  சேர்ந்து  மகிழ்ந்து  இல்லற  இன்பம்  காண்பாய்            416

 

ஈராறு  திங்களுக்குப் பின்  ராசமாபுரத்தை  அடைவாய்

            கட்டியங்காரனைக்  கொன்று  கடும்  பகை  முடித்துக்  கொள்வாய்

மணிமுடியை  சூடிக்கொள்வாய்  மண்ணுலகில்  விழா  எடுப்பாய்

            அருகனின்  அறத்தினாலே  வீடுபேறடைவாய்  என்றான்  தேவன்       417

 

சொல்  சூழ்ச்சி  வன்மையுடைய  சுதஞ்சணன்  தேவன்  சீவகனுக்கு

            அத்தனையும்  ஆராய்ந்து  சொல்லி  அவன்  மலை  நீங்கான்  என்று

தன்  தேவியர்  வழி  அனுப்ப  சீவகனை  கையில்  ஏந்தி

            சோலைகொள் நிலத்தில் விட்டு சுதஞ்சணான் சென்றான் மீண்டும்  418

 

தம்பியர் நண்பர்கள்  கூட்டம்  நீங்கி  தத்தை  குணமாலை  பிரிந்து

            தனிக்  களிறாய்  ஒதுங்கி  வந்த  தரணி  புகழ்  நம்பியை  கண்டு

மலைகள்  மேனி  கருகி  வாட  மலை  அருவி  கண்ணீர்  சொரிய

            மயில்களும்  விலங்குகளும்  தம்  மேனி  நடுங்க  அழதனதங்கு         419    

                

கருமையில்  இருளின்  உருவம்  கரடி  போல்  முடி  செழித்தோன்

            ஆடு போல்  குரல்  உடையோன்  ஒடுங்கிடும்  மார்புடையான்

மரவுரி  தரித்த  வில்லான்  மனைவி  பின்  தொடர்ந்து  வர

            சீவகன் அவனைக் கண்டு கேட்டான் எம்மலைவாழ் வேடன் என்று  420   

                 

தென்மேற்கு  மூலையிளுள்ள  சிறந்த  மலை  சிகரந்தன்னில்

            திணைபுனத்தின்  வேடர்கட்கு  தேர்ந்த  தலைவன்  நானென  கூற

உண்ணுகின்ற  உணவு  யாது  என  உயர்நிலையான்  நம்பி  கேட்க

            ஊன்  தேன்  நெய்  திணை  வடித்த  கள்  உண்பேன்  என்றான்  421

 

ஊனோடு  தேன்  கள்  உண்டு  உயிர்களை  வதைத்த  பாவம்

            இப்பிறப்பில்  வேடராகி  இழிந்த  வாழ்வு  பெற்றுள்ளீர்கள்

ஊன்  உண்டு  உடல்  பெருக்கி  உழல்கின்ற  நரகம்  பெரிதா

            ஊன்  தேன்  கள்  தவிர்த்து  தேவர்  வாழ்வு  சேரல்  நன்றா என்றான்   422

 

ஊன்  தவிர்த்து  தேவன்  ஆதல்  உயர்நிலை  என்றான்  வேடன்

            நல்லதை  ஆய்ந்து  சொன்னாய்  நலம்  பல  பெறுவாய்  என்றும்

ஆகம  விதிகள்  கூறும்  அகிம்சையை  விரத்தத்தோடு

              தேன்  கள்  தவிர்த்தாயானால்  தேவகதி  உண்டென்றான்  நம்பி        423

 

அரண்பாதம்  மலையை  அடைந்தான்  அறமுனிகள்  அடிபணிந்தான்

            அறுவினைகள்  அனைத்தும்  வென்ற  அருகனின்  கோயில்  வந்தான்

வலம்  கொண்டு  கரம்  தொழுதான்  வண்ணமலரால்  அர்ச்சித்தான்

            இசை கொண்டு  தாளத்தோடு  இறைவன்  புகழ்  பாடலுற்றான்           424

 

ஆதியாம்  வேதம்  தந்த  அருள்  நிறை  செல்வன்  நீயே

            அகமகிழ்வில்  தூவுகின்ற  மலர்  மழையில்  நனைந்தாய்  நீயே

நீதி  நெறிகள்  எங்களுக்கு அளித்த  நிர்மல  நாதன்  நீயே

            நிகரில்லா  பேரறிவுக்கு  நித்திலத்தில்  இறைவன்  நீயே                         425

 

துன்பப்  பிறவியின்  தொடர்பை  துறந்திட்ட  தூயவன்  நீயே

            திகட்டாத  இன்பத்தில்  தினம்  திளைத்துள்ள  தீர்த்தங்கர்  நீயே

ஐம்பொறிகள்  அனைத்தும்  வென்று  அறம்  உரைத்த  நாதன்  நீயே

            எண்வினைகள்  துன்பம்  அகல  எங்களுக்கு  அருள்வாய்  நீயே 426

 

தேவர்கள்  போற்றி  நிற்கும்  தேவாதி  தேவன்  நீயே

            திக்கெட்டும்  ஒளிர்கின்ற  முக்குடை  நிழலான்  நீயே

காமம்  வெகுளி  மயக்கம்  கடந்திட்ட  அருளான்  நீயே

            கட்டி  நிற்கும்  வெவ்வினையை  சுட்டெரித்த  சுந்தரன்  நீயே               427

 

இதயத்தால்  தொழுது  நின்றான்  இயக்கியவள்  விருந்து  தந்தாள்

            பல்லவ  நாடு  செல்ல  பாவையரிடம்  பாதை  கேட்டான்

அடர்  மலர்  கவிழ்ந்த  அகழியும்  அஞ்சிடா  வீரர்  காக்கும்  மதிலும்

            ஆடையாய்  அகத்தில்  கொண்ட  அழகிய  தலைநகரடைந்தான்        428

 

சந்திராப  நகரில்  நடந்தான்  சச்சயந்தன்  மகன்  சீவக  நம்பி

            சந்தன  சோலைகள்  சூழ்ந்த  செண்பகப்  பூம்பொழிலில்

அண்ணலை  வரவேற்பது  போல்  அரம்பைகள்  குழல்  திருத்தி

            சலங்கைகள்  சல  சலக்க  சதிராடல்  நிகழ்த்தினார்கள்                        429

 

பல்லவ  இளவல்  உலோகபாலன்  பூம்பொழிலில்  பொருந்தி  அங்கு

            பூவையர்  ஆடும்  ஆடலை  புன்முறுவல்  கொண்டு  களிக்க

வீணையும்  முழவும்  குழலும்  மெல்லிசை  வெள்ளம்  பெருக்க

            தீ  பட்ட  வெண்ணெய்  போல  துவண்டனர்  ஆடவரெல்லாம்                430

 

பசும்பொன்  நகைகள்  பூண்ட  பாவையாம்  ஆடல்  அழகி

            நெற்றியில்  பட்டம்  மின்ன  நெடுங்குழல்  பின்னே  அசைய

பொன் தோடு  இடமாய்  நெளிய  பொங்கும்  தனமேல்  அணிகள்  பிறழ

            வளைகரத்தால் துதி  செய்து  கடைவிழியில்  கட்டினாள்  நம்பியை    431

 

கண்டவள்  கயல்விழிகள்  இரண்டும்  கவ்வின  சீவகன்  அழகை

            கலைந்தன  தாள  லயங்கள்  கண்கள்  அரும்பின  ஒருதுளி  நீரை

தேசிக  பாவையவள்  ஆடலில்  தேங்கிய  இமைகள்  கண்டு

            உலோகபாலன் அங்கு நோக்க உறைந்தன விழிகள் சீவகன் மேலே    432

 

நம்பியை  நயமுடன்  அழைத்தான்  நல்லுரை  ஆடி  மகிழ்ந்தான்

            மணிகொண்ட  மன்னன்  மகனும்  கழல்  கொண்ட  சீவகனும்

உள்ளத்தால்  ஒன்றிணைந்து  உற்றதொரு  நண்பர்கள்  ஆக

            தேசிக  பாவை  மகிழ்ந்து  திருந்திய  தாள  லயங்கொண்டாள்             433

 

இசையொடு  நடனம்  கண்டு  இன்பத்தில்  ஆழ்ந்த  வேளை

            இடர்  என  வீரன்  வந்தான்  இன்னலைச்  சொல்லி  முடித்தான்

தனபதி  மன்னன்  மகளும்  தங்களின்  உடன்பிறப்பாளும்

            பதுமையாம்  பொன்  மகளை  பாம்பொன்று  தீண்டியதென்றான்     434

 

நடந்ததை  வினவுவாய்  என்று  நடுங்கி  உலோகபாலன்  கேட்க

            பாவையவள்  பதுமை  பொழிலில்  பலமலர்  செடிகள்  வளர்க்க

இளமுல்லை  கொடிக்கு  அன்னாள்  அன்னையின்  பெயரைச்  சூட்டி

            திலோத்தமை  என்றழைத்து  தினம்  அதை  வளர்த்து  வந்தாள்           435

 

கொடியது  படர்ந்து  வளர்ந்து  குவித்திட்ட  மலரைக்  கண்டு

            பூங்கொடியவள்  கரங்கள்  நீட்டி  பூக்களைப்  பறிக்கச்  செல்ல

குக்குட  நாகம்  என்னும்  கோழிப்  பாம்பு  அங்கிருந்து

            கொத்தியது கோதையவளை குரல் தந்து  தரையில்  சாய்ந்தாள்        436

 

விபரம்  அறிந்த  உலோகபாலன்  விரைந்திட்டான்  பதுமையை  காண

            தானறிந்த  மந்திரத்தோடு  விஷம்  நீங்க  மருந்து  தந்தான்

அவர்கள்  செய்த  செயலனைத்தும்  அவ்விடம்  பொய்த்துப்  போக

            அந்நாகம்  கக்கிய  விஷம்  அவளுடம்பில்  விரைந்து  பரவியது           437

 

பெற்றவன்  உடல்  பதைத்தான்  பெற்ற  தாய்  உயிர்  துடித்தாள்

            கொடும்  விஷம்  நீக்குவோர்கள்  குவலயத்தில்  யாரென்றாலும்

பொன்னோடு  பொருளும்  நாடும்  பதுமையும்  மணங்கொள்வாளென

            கொட்டினான்  முரசு  நாட்டில்  குடிமக்கள்  அறியும்  வண்ணம்             438

 

பதுமையை  தீண்டியது  ஒரு  சீதமண்டலி  என்றார்  சிலர்

            இளவரசியை  கொத்தியது  ராஜநாகம்  என்றார்  சிலர்

நங்கையை  கடித்த  உயிர்  நாகப்பாம்பு  என்றார்  சிலர்

            மருத்துவம்  பார்க்க  வந்தோர்  மாறி  மாறி  கருத்துரைத்தார்              439

 

நிமித்திகன்  ஒருவன்  சொன்னான்  நிலமாளும்  மன்னா  கேட்பீர்

            கோங்கு மர  உச்சியில்  ஓர்  ஆந்தை  யாழ்  இசைக்கிறது

இத்துன்பம் முழுவதும்  களைய  இங்கு  ஓர்  இளைஞன்  உண்டென  கூற

            உலோகபாலன்  உடனே  சொன்னான்  சீவகனை  அழைத்து  வர        440

 

சினம்  கொண்ட  பாம்பு கடித்து  விஷம்  நீக்க  இயலாதெனினும்

            விண்ணவர்  செய்  சூதெனினும்  வஞ்சி  இவளுக்கு மரணமில்லை

மேல்  கீழ்  வாய்  பல்லின்  விஷம்  உயிரது  உடனே  பிரியும்

            மற்ற  பல்லால்  கடிபட்டிருந்தால்  உடலது  துன்பம்  கொள்ளும்           441

 

பால்  அமுது  மணம்  வீசினால்  கடித்த  நாகம்  அந்தண  ஜாதி

            நந்தியாவட்ட  மலரின்  மணம் நாட்டிய  பல்  அரச  ஜாதி

தாழம்பூ  மணத்தைக்  கொண்டால்  தீண்டியது  வணிக  ஜாதி

            அரிதார  மணவீச்சென்றால்  சூத்திர  ஜாதி  என்றான்  நம்பி                 442

 

குவளமலரை  மூன்றாயாக்கி  கருங்குழலின்  மீது  அழுத்தி

            பதுமையின்  எதிரே  நின்று  பஞ்சமந்திரங்கள்  ஓதி

ஓங்கார  மந்திரத்துடன்  ஒருமித்த  தியானம்  செய்து

            பதுமையைப்  பார்த்த  நேரம்  பஞ்சென  பறந்தது  விஷம்                        443

 

நயனங்கள்  நிமிர்ந்து  நோக்க  நேரினில்  கண்டாள்  நம்பியை

            கைவளைகள்  நாணத்தோடு  கழன்றன  கரங்களை  விட்டு

பதுமையின்  மேனி  எல்லாம்  பசலையால்  படர்ந்து  போர்த்த

            ஐங்கணையான்  அம்புகள்  எல்லாம்  அடைந்தன  அவளின் உடலில் 444

 

செவிலித்  தாயொடு  தாதியர்  கூடி  செப்பினர்  வாழ்த்துக்கள்  நம்பிக்கு

            செம்மேனியை  நீ   தீண்டிடயதும்  தீர்ந்தது  இவள்  விஷம்  என  கூற

காதலர்  காணினும்  கேட்பினும்  தீண்டினும்  நின்றிடும்  நல்லுயிர்  என்று

            சந்தனம்  பூசினார்  போல்  தடவினான்  பதுமையின்  உடலை             445

 

தனபதி  ஆணையை  தாதியர்  ஏற்று நன்னீர்  ஆட்டினர்  சீவக நம்பியை

            சந்தனம் கொண்டு மேனியில்  பூசி  சிறந்த  அகிற் புகையினை  காட்டி

பசும்பொன்  பேழை  நிறைய  பட்டுத்  துகில்களைக்  கொணர்ந்து

  அணிகலன்கள்  பல  கொண்டு  அவன்  மேனியை  அழகு  செய்தனர்    446                   

 

பொன்கலம்  வைத்து  நிரப்பி  பூவையர்  கைகள்  பரிமாறிட

            அறுசுவை  உணவு  படைக்க  அண்ணலும்  மகிழ்ந்து  உண்டிட

அணங்குகள்  வெற்றிலைத்  தர  அவ்வீரன்  வாயது  மென்றிட

            தனபதி  மன்னன்  வந்தான்  தன்  நன்றியை  நயந்து  சொன்னான்     447

 

பஞ்சணை  மேல்  அமர்ந்திருந்த  பரிதி  ஒத்த  சீவக  நம்பி

            பதுமையின்  வடிவழகில்  பல  நினைவுகள்  கொள்ளலானான்

கதிரவன்  களைத்துப்  போனான்  கண்களில்  தூக்கம் தொடங்கிட

            மேல்  திசை  வாயில்  சென்று  மேனியில் உறக்கம் கொண்டான்        448

 

நம்பியின்  பார்வைத்  தாக்க  நங்கை  நாணி  நிலத்தை  நொக்க

            பதுமையின்  தனச்  சுமையாள்  பைங்கொடி  இடைத்  துவள

கயல்விழி  கக்கும்  காதலை  காளையவன்  மனதில்  நிறுத்தி

            படுக்கையில்  நம்பி  இருந்தான்  பதுமையின்  நினைவால்  மயங்கி  449

 

மென்கை  வளையணிந்த  பதுமை  மென்மையாம்  பஞ்சணை  அமர்ந்து

            நெஞ்சினில்  நம்பியை  நிறுத்தி  நினைவில் அவன்  எழில்  பரப்பி

சீவகன் செய்த செயல்கள்  யாவும்  தாதியர்  தத்தை  போல்  மொழிய

            ஓராண்டாய் ராப்பொழுது நீள  உள்ளத்தில்  வருந்தி  வாடினாள்         450

 

குக்குட  கோழி நாகம்  கொத்திய  கொடிமலர்  சூழ்ந்த  சோலைக்கு

            தந்தையின்  மொழியை  மீறி  தத்தை  போல்  தோழியர்  சூழ

பதுமையும்  பைய  நடந்திட  பாவையின்  நினைவில்  சீவகன்

            அவள்  ஆடிய  இடத்தைக்  காண  அவ்விடம்  வந்தான்  அண்ணல்       451

 

மாங்குயில்  பாடும்  இசைக்கு  மஞ்சையும்  மகிழ்ந்து  ஆட

            மரம்  தாவும்  மந்திகள்  தங்கள்  இணையுடன்  ஊடலில்  வாட

மண்டிய  பூப்பந்தலின்  கீழ்  மென்மணல்  பரவிய  இடத்தில்

            சீவகனை  சிந்தையில்  நிறுத்தி  சிந்தித்து  இருந்தாள்  பதுமை           452

 

மாதவி பூப்  பந்தலின்  அழகு  மங்கையின்  அழகால்  கெட

            நங்கையை  தேடி  வந்த  நம்பியின்  விழிகள்  நோக்க

தாமரை  மலரில்  வாழும்  திருமகள்  தானோ  இவள்  என

            எண்ணியே  அருகில்  சென்றான்  பதுமையை  கண்டு  மகிழ்ந்தான் 453

 

நங்கையின்  விழிகள்  இரண்டும்  நம்பியின்  மேனியைத்  தழுவ

            நாணமோ  அவளை  விட்டு  நதியென  நழுவிச்  செல்ல

கந்தர்வர்  அமைத்து  தந்த  கந்தர்வர்  திருமணத்தால்

            மாதவி பூப்பந்தலின்  கீழ்  கூடினர்  சீவகனும்  பதுமையும்                     454

 

இன்பத்தில்  இமைகள்  மூடி  இதயத்தில்  உவகை  கொண்டு

            வெண்சங்கு  வளைகள்  ஒலிக்க  மெய்யினில்  வனப்பு  கொண்டாள்

உடல்  கொண்ட  சுண்ணப்பொடியும்  உடல்  விட்டு  நீங்கிச்  செல்ல

            குங்கும  குழம்பு  வழிய  துகிலற்ற    பொன்  மேனியானாள்                  455

 

வான்  ஊறும்  மதியின்  உள்ளே  மலர்ந்துள்ள  மறுவைப்  போல

            உன்  மீது  கொண்ட  அன்பு  என் உள்ளத்தில்  நிலைத்திருக்கும்

உன்  தாதியர்  வருவதாலே  என்  தங்கமே  நீயும்  செல்வாய்

            தாதியர்  கண்படாமல் நான்  தழையிடை  மறைவேன்  என்றான்        456

 

மன்னன்  தனபதி  அழைத்தான்  மாசறு  மந்திரி  மித்திரனை

            மகளின் அரிய  உயிரை  மீட்ட  மன்மதன்  ஒத்த  நம்பியை  நாடி

கனியொடு  மங்கலப்  பொருள்களை  கைகளில்  தட்டாய்  ஏந்தி

            பதுமையை  மணக்க  வேண்டி  பணிவுடன்  கூறி  வா என்றான்           457

 

சீவகன்  அச்செய்தி  கேட்டு  சிந்தையில்  மகிழ்ச்சி  கொண்டு

            தனபதியின்  செவ்விய  மகளை  தன்னகத்தே  ஏற்பேனென்றான்

நிமித்திகன்  ஆய்ந்து  பார்த்து  நல்லதோர்  நாள்  குறித்தான்

            மங்கல  மரபுகள்  செய்து  மணிக்கரத்தில்  காப்பு  கட்டினர்                 458

 

மங்கல  முரசுகள்  முழங்க  மக்களின்  வாழ்த்து  ஒலி  அதிர

            சந்திராப  நகரம்  முழுதும்  சந்தோஷ விழா  என  மகிழ

தனபதி  தன்  சுற்றம்  சூழ்ந்து  தன்  மகள்  பதுமை  அவளை

            சீவகன்  கையில்  பதித்து  திருமணம்  நடத்தி  வைத்தான்                     459

 

காந்தர்வ திருமணத்தால்  கலந்திட்டான்  பதுமையுடன்  பொழிலில் 

            காதல்  மணம்  இன்று  புரிந்து  கலவினான்  திருமகளை  மனையில்

ஈருடல்  ஓர்  உயிர்  என  இருவரும்  இன்பத்தில்  திளைக்க

            இருதிங்கள்  கழிந்த  காலம்  இருதினம்  போல்  கரைந்ததங்கு             460

 

இரு  திங்கள்  கடந்த பின்பு  இருள்  சூழ்ந்த  நள்ளிரவில்

            விரும்பிய  உடலை  விட்டு  நல்  உயிர்  நீங்குதல்  போல்

பைங்கொடி  பதுமையை  நீங்கி  பஞ்சணையை  விட்டு  இறங்கி

            மற்றவர்  கண்கள்  மறைந்து  மாளிகையை  விட்டகன்றான்                 461

 

மதிமுகம்  கொண்ட  பதுமை  மஞ்சத்தில்  கண்  விழித்தாள்

            மனம்  கவர்ந்த  மன்மதனை  மலர்  மஞ்சில்  காணவில்லை

சேவலைத்  தேடி  அலையும்  பெண்  அன்னம்  போல  வருந்தி

            சீவகன்  முகம்  காணாமல்    சிவந்த முகம்  துயரடைந்தது    462  

                    

சீவகன்  அணைத்து  தழுவ  என்  மெய்யின்  அணிகலங்கள்

            மேனியில்  பதிந்து  அழுத்த மங்கை  நான்  தாங்கேனென்று 

நம்பியை  பழித்து  தூற்றும்  என்  நலம்  நாடும்  தத்தையே  நீயும்

            அண்ணலை  தடுக்க  மறந்து  ஆழ்துயரில்  எனை தள்ளியதேன்         463

 

வின்முகில்கள்  தழுவி  தவழும்  வெண்மாட  மாளிகையே

            கொடிகளில்  ஒரு  கோடியும்  கொடிநட  பண்ணும்  துளைகளும்

பூசுதற்கு  வெண்நிறச்  சாந்தும்    பல  பொருள் இன்னும்  தருவேன்

            அனைத்தையும்  காணும்  நீ    அண்ணலை  கண்டு  சொல்லேன்         464

 

கைவளைகள்  கழற்றி  எறிந்தாள்  கனி  தனப்  பூண்  துறந்தாள்

            மணிமுத்து  மாலைகள்  நீக்கி  மீன்விழிகள்  கண்மை  போக்க

மெல்லிடை  மேகலை  பயந்து  மென்  ஒலி  எழுப்பாதிருக்க

            பதுமையின்  துன்பம்  கண்டு  பரவியதோர்  துக்கம்  அங்கு                  465

 

சில்லென்ற  அருவி  கொட்டும்  சிறந்த  பொன்  குன்றுகளே

            சிந்திடும்  மதுவை  உண்டு  சொக்கிடும்  பூ  வண்டுகளே

வான்வெளியில் நடை  பயிலும்  வெள்ளி  ஒளி  வெண்ணிலவே

            என்  கண்வன்  சென்ற  இடம்  எனக்கு இன்று உரையும்  என்றாள்        466

 

பொன்னுலகில்  வாழுகின்ற  வின்னுலக  தேவர்களே

            சீவகன்  சென்ற  இடம்  தெரிந்திருப்பீர்  நிச்சயமாய்

சிறுமை  கொண்ட  மானிடரிடம்  சிந்தையில்  இரக்கமின்றி

            என்  கணவர்  இருக்கும்  இடம்  எனக்குரைக்க  தயங்குவதேன்             467

 

இளங்கொடியாள்  பதுமையின்  இடைவிடாத  அழுகை  கண்டு

            அனலிடை  மெழுகு  போல  நைந்துருகும்  வாடலினால்

யாழி  இசையாய்  சொல்லுதிரும்  நல்ல  ஓரு  தோழி  வந்தாள்

            பதுமையின்  துயர்  போக்க  பக்குவமாய்  பல  சொன்னாள்                  468

 

தெளிந்த  நீர்  நதிகள்  எல்லாம்  உவர்  கடலில்  சேர்வது  போல்

            உண்டிடும்  பழுத்த  காமம்  உள்ளத்தில்  பிணைத்திடினும்

பழுத்த  செம்பொன்னின்  மீது  பட்ட  தண்ணீர்  துளியைப்  போல

            காதலின்  தன்மை  என்றும்  பிறர்  காணாதிருத்தல்  நன்று  என்றாள் 469

 

காமத்தால்  மிகுந்து  நிற்கும்  காளை  நிகர்  ஆடவரெல்லாம்

            கன்னியர்  உடல்  குழைய  கலவி  இன்பம்  தூய்த்த  பின்பு

மங்கையை  விட்டுப்  பிரிய  மனதினில்  வருத்தம்  கொள்ளார்

            பிரிவினை  கண்டு  வருந்தும்  பேதமை  உடையோர்  பெண்கள்         470

 

பேதமை  என்னும்  விதையில்  தீவினை  மரங்கள்  முளைத்து

            ஆசை  என்னும்  வேரூன்றி  அடையாப்  பொருள்  விருப்பத்தோடு

கிடைத்த  பொருள்  உவகை  என்னும்  கிளைகள் பல பரந்து  விரிந்து

            துன்பப் பூவில் கவலைக் காயால் மரணம் என்னும் கனியை தரும்     471

 

பொன்மணி  அணிந்த  பெண்ணே  புகல்கிறேன்  மேலும்  கேளாய்

            முற்பிறப்பு  பெண்  பிறவியில்  பிரிந்து  சென்ற  கணவனுக்காக

அழுத  கண்ணீர்  தொடுத்து  பார்க்க  அது ஆழிநீர்  அளவை  மிஞ்சும்

            இப்பிறப்பில்  மேலும்  அழுதால்  எல்லையேது  அழுகைக்கெல்லாம்  472

 

குற்றம்  சூழ்  மனித  பிறப்பில்  இறப்பதும்  பிறப்பதும்  இயற்கை

            இவ்வியற்கை  நியதி  என்றும்  இமைப்பளவும்  இன்றி  தொடரும்

கற்றறிந்த  பெரியோர்  இதனை  கயல்கண்  அளவும்  கவலை  கொள்ளார்

            அவ்வறிவு  இல்லாதவர்கள்  கவலையாம்  கடலில்  ஆழ்வார்                 473

 

தனிமையில்  ஓர்  ஆந்தைக்  கூவ  வரும்  துன்பம்  பாம்பினால்  என்றேன்

            நாகம்  உனைத்  தீண்டியதால்  நம்பியை  நீ  மணந்து  கொண்டாய்

ஆண்  பெண்  ஆந்தை  இணைந்து  கூவ  அமைந்தது  நற்சகுனம்  இன்று

            அழுது  நீ  புலம்ப  வேண்டாம்  அழகு  சீவகன்  மீண்டும்  வருவான்     474

 

பதுமையின்  தாய்  திலோத்தமை  பகர்ந்திட்டாள்  தன்  மகளிடத்தில்

            போர்  தொழில்  செய்வதற்கும்  பொருள்  தேடி  பெறுவதற்கும்

ஆரணங்கைப்  பிரிந்து  செல்லுதல்  ஆடவரின்  கடமை  ஆகும்

            அவர்  நினைவில்  இறந்திடாமல்  காத்திருத்தல்  கன்னியர்  கடமை   475

 

மயக்கிடும்  இசை  பொழியும்  மகரயாழ்  இனிய  சொல்லாள்

            பதுமைக்கு  நேர்ந்த  துன்பம்  பணியாட்கள்  மன்னனுக்கு  சொல்ல

எண்திசையும்  தேர்படை  அனுப்பி  எழில்  மன்னன்  சீவகனைத்  தேட

            தனபதி  ஆணையிட்டான்  தாவின  படைகள்  எல்லாம்                          476

 

மாசறு  பொன்னைப்  போன்ற  பொன்வண்ண  மேனி  சீவகன்

            மின்னலில்  பிறந்த  ஒரு  மின்னல்  கொடியை  ஒத்தவன்

தன்  மனம்  மகிழ்ந்து  ஒப்பும்  தனி  ஒரு  வடிவம்  தாங்கி

            வடதிசை  நோக்கிப்  போக  மனதினில்  எண்ணம்  கொண்டான்        477

 

முழுமதி  போன்ற  கலைகள்  முற்றிலும்  பெற்ற  சீவகன்

            வீரக்கழல்  அணிந்த  நம்பி  விரைந்து  தான்  செல்வதற்கு

அணிகலன்  அனைத்தும்  நீக்கி    அருளொடு தந்தான்  ஒருவனுக்கு

வெண்துகிலை  இரண்டாக்கி    ஏற்றிட்டான்  மேனி  தன்னில்               478

 

மன்னனால்  அனுப்பிய  வீரர்கள்  மதன்  ஒத்த  சீவகனைக்  கண்டு

            காமனை  மிஞ்சும்  எழிலோன்  காண்பவர்  மயங்கும்  வடிவோன்

நின்  முக  வடிவழகும்  நிறைகொண்ட  இளமைப்  பொலிவும்

            கொண்டதோர்  ஆடவனை  நீர்  கண்டீரோ  வழியில்  என்றனர்           479

 

ஈரைந்து  மாத  எல்லையில்  ஓர்  திங்கள்  குறைந்த  ஒன்பதில்

            உள்ளத்தில்  உறைந்து  நிற்கும்  உன்  மன்னன்  மகளைக்  காண

அண்ணலும்  வருவான்  எதிரில்  என்  உரை  பொய்த்ததிலை என

            தனபதி  மன்னனுக்கும்  உலோகபாலனுக்கும்  உரைப்பீர்  என்றான்  480

 

                             பதுமையார்  இலம்பகம்  முடிவுற்றது


                                                        6. கேமசரியார்  இலம்பகம்.

 

வான்முகில்  கொடையைப்  போல  வழங்கிடும்  கரங்கள்  கொண்ட

            மணிமுத்து  மாலைகளோடு  மதுமலர்  மாலைகள்  சூடிய

விசையையால்  பெற்ற  வீரமகன்  பைங்கொடி  பதுமையின்  கணவன்

            வெங்கனல்  வனங்களின்  உள்ளே  கால்நடையாய்  கடந்தான்            481

 

பழம்  நிறை  வாழைத்தோப்பில்  பயந்தன மந்திகள்  அவனைக்  கண்டு

            அருளோடு  அதனை  நோக்கி  அச்சத்தைப்  போக்கிச்  சென்றான்

மலர்  மது  உண்ட  வண்டுகள்  மதுவற்ற  மலரைத்  தாக்கி

            எழுப்பிடும்  இன்னொலிகள்  செவிபட  சீவகன்  நடந்தான்                    482

 

செல்வரின்  உள்ளமாய்  உயர்ந்து  திரு அற்றார் மனமாய்  இருண்டு

            பூக்களில்  இருந்து  ஒழுகும்  பூந்துகள்  மழையாய் கொட்டி

நஞ்சுடை  அரவம்  மறைந்து  கீழ்மக்கள்  நட்பாய்  குறுகும்

            வழியினை கடந்து சென்று  வான்தொடும் மலையை அடைந்தான்    483

 

அருவியில்  அசதி போக  ஆழ்ந்திட்டான்  நன்னீராடலில்

            குளிர்  மலர்  பிண்டி  நிழலில்  துலங்கிடும்  முக்குடையானை

நறுமணம்  கமழும்  மலர்களை  நாடியே  கையில்  ஏந்தி

            அருகனடி  வைத்து  தொழுது  அவன்  புகழ்  பாடலானான்                   484

 

எண்குணத்தான்  காதலாலே  எண்வினைகள்  அழிந்து  போகும்

            எண்வினைகள்  பின்  தொடரும்  எண்ணமதில்  அவன்  மறைந்தால்

இருவினைகள்  செய்தோரெல்லாம்  ஏற்றிடுவார்  வினைகள்  பயனை

      இதையுணர்ந்த உயிர்களெல்லாம் வென்று நிற்கும் நாற்கதிசுழலை   485     

 

சுதஞ்சணன்  சொல்லித்  தந்த  சித்திரகூடம்  பள்ளி  செல்ல

            அருகனை  வணங்கி  விட்டு  அடுத்த வனம்  உள்ளே  சென்றான்

நல்ல  அரிசிகள்  பலவினோடும்  நலம்  தரும்  பழங்களோடும்

            உண்டு  வாழும்  முனிவர்களின்  உயர்ந்த  நல்பள்ளி  சேர்ந்தான்       486

 

சீவகனின்  நல்ல  அழகும்  தெளிந்த  அவன்  சொல்லழகும்

            சாதுக்கள்  மனம்  பதிய  தவநூல்  தருமம்  பேசலுற்றான்

கல்லினை  கழுத்தில்  கட்டி  கடல்  கடப்பான்  பிழைப்பானாகில்

            காமத்து  நுகர்ச்சியோடு  காக்கும்  விரதத்தோறும்  பிழைப்பார்         487

 

கருங்குழலை  சடையாக்கிக்  கொண்டு  காவியை  உடலில்  போர்த்தி

            மண்டையோட்டை  கையில்  ஏந்தி  மக்களை  விட்டு  பிரிந்து  வந்து

வீடு  பேறு  அடைவதற்கு  விரதங்கள்  என  நினைத்து  வாழ்தல்

            சிறப்பு  அற்ற  ஒரு  பிறவிக்கு  சிறந்த  விதை  என்றான்  நம்பி              488

 

முனிவர்கள்  மறுத்துக்  கூற  மேலும்  ஓதினான்  சீவகநம்பி

            காய்கனிகள்  உண்பதாலே  கிடைத்திடும்  மோட்சம்  என்றால்

பழங்களை  உண்டு  வாழ்ந்து  மரத்தினில்  தொங்கும்  வவ்வாள்கள்

            பழவினை  எல்லாம்  நீங்கி  பெற்றிடும்  வீடுபேறு  அன்றோ                 489

 

நீள் சடை  முடியினோடு  நீரினில்  குளித்து  வாழ்ந்து

            உடம்பினை  வருத்தி  நின்றால்  வீட்டினை  பெறலாம்  என்றால்

குளத்தினில்  குளித்து  மூழ்கி  காட்டினில்  வாழும்  கரடி

            கதி  மோட்சம்  அடைவதில்லை  கைவிடுங்கள்  உங்கள்  உரையை   490

 

எரிந்திடும்  ஆடை  என்றெண்ணாமல்  நெருப்பினை  ஆடையில்  வைத்து

மறைவிடம்  வைத்து  விட்டால்  நெருப்பது  ஆடையை  விடுமா

வீட்டினை  முற்றும்  துறந்து  வனமதை  வீடாய்  கொண்டு

            மங்கையை  கலவி  வாழ்ந்தால்  பாவங்கள்  போகுமா  என்றான்        491

 

காமத்தில்  முதிர்ந்த  மந்தியாய்  காமத்தை  நுகரல்  வேண்டாம்

            காய்  முற்றி  கனி வீழ்தல்  போல  காயமும்  ஒருநாள்  வீழும்

காமனை  வென்ற  அருகனை  காலடி  பணிந்து  நோற்றால்

            கிட்டிடும்  அனந்த  சுகம்  கிடைத்திடும்  வீடுபோறென்றான்                492

 

நம்பியின்  சொல்லைக்  கேட்டு  நங்கையை  துறந்தனர்  முனிகள்

            அருகனின்  அறத்தை  ஏற்று  அவர்  மலரடி  தொழுது  நின்றனர்

விடியலில்  குளித்து  தொழுது  வழியினை  முனிவர்கள்  கூற

            சென்றிடும்  திசையை  நோக்கி  செவ்வடி  பெயர்க்கலானான்             493

 

தாமரை  நிறைந்த  பொய்கைகள்  தண்மலர்  சூழ்ந்த  பொழில்கள்

            அகிற்புகை  சூழ்ந்த  மணமும்  அரிய  சந்தன  குழம்பின்  மணமும்

தங்குதற்கு  எல்லா  வளமும்  தன்னகத்தே  கொண்ட  நாடு

            தக்கநாடு  எனும்  பெயருடைய  தனி  நாட்டின்  எல்லை  வந்தான்       494

 

செண்பகமலர்  காட்டின்  உள்ளே  சல  சலக்கும்  வண்டுகள்  ஒலியும்

            சந்தனம்  மணக்கும்  வெளியும்  சிறந்த  வெற்றிலைக்  காடும்

உண்ணுதற்கரிய  உணவுகள்  ஒருகுறையும்  இன்றி  கிடைக்கும்

            விண்ணவர்  உலகை  ஒத்த  புகழ்  வளம்  கொண்ட  தக்கநாடு             495

 

மதில்  செல்வி  மானம்  காக்கும்  மங்கல  ஆடையே  அகழிகள்

            மணிகோர்த்த  மேகலாபரணம்  அகழியில்  அலையும்  அரவங்கள்

இளம்  தனம்  போல  விளங்கும்  மதிலின்  மேல்  உள்ள  ஞாயில்

            எழும்பிய  கோபுரம்  அவள்  எழில்  கொண்ட  மதிமுகம்  ஆகும்           496

(   ஞாயில்  :  படைவீரர்கள்  மறைவிடம்  )

 

பாற்கடல்  அமுதம்  தன்னை  பரிவுடன்  ஊட்டினாலும்

            நாடியே  அமுதம்  அருந்த  நகரினை  விட்டு  நீங்கார்

வின்முட்டும்  மாளிகைகளும்  விளைநிலம்  போல்  வீதிகளும்

            தன்னகத்தே  கொண்டு  திகழும்  கேமமாபுரம்  தலைநகராகும்          497

 

கேமமாபுரம்  அரசன்  நரபதி  கேடற்ற   நல்லாட்சி  செய்தான்

            மன்னன்  நரபதிக்கு  நிகராக  நல்லதொரு  பெருவணிகனாய்

சுபத்திரன்  வாழ்ந்திருந்தான்  நிப்புமதியை  கரம்  பற்றி

            இருவருக்கும் பிறந்த  மகள்  எழில்  மங்கை  கேமசரியாவாள்              498

 

கேமசரி  பிறந்த  நன்நாளில்  சோதிடன்  ஆய்ந்து  சொன்னான்

            நல்லழகு  பெற்ற  இவள்  நற்பருவம்  அடைந்த  பின்னர்

நங்கையிவள்  விழி  நோக்கி  நாணமுற்று  தலை  கவிழ்ந்தாள்

            நாடு  போற்றும்  அம்மகனே நல்லதொரு  கணவனாவான்                    499

 

கைபிடி  சிற்றிடை   உடையாள்  கனியிதழ்  செவ்வாயுடையாள்

            திருமகளின்  பெரு  அழகில்  செவ்வரி  கண்ணுடையாள்

செவ்விளநீர்  தனம்  உடையாள்  தேன்  சொட்டும்  சொல்லுடையாள்

            நாணமுற்று  தலை  குனிய  நல்லவனை  கண்டறியாள்                         500

 

அவள்  நாண  அவ்வணிகன்  விருந்தளித்தான்  தினம்  தினமும்

            ஆயிரத்தில்  ஆண்களைக்  கண்டு  நாணவில்லை  ஒருதினமும்

ஈராறு  ஆண்டுகளும்  இப்படியே  விருந்தளித்தே  கழிந்ததனால்

            கேமசரி  முதிர்ச்சி  கண்டு  தாய்  துவண்டாள்  துன்பத்திலே                501

 

இருண்டு  நீண்ட  குஞ்சுடனும்  ஈரடிகள்  ஆமை  வடிவுடனும்

            தென்திசை  பிறந்த  ஞாயிறு  வடதிசை நோக்கி  வந்தது போல்

ஆலமரத்தின்  அடியில்  அமர்ந்து  அருகனை  மனதில்  நிறுத்தி

            தியானத்தில்  திளைத்த  நம்பியை  சுபத்திரன்  கண்டு  மகிழ்ந்தான் 502

 

சீவகனை  தன்  தேரில்  ஏற்றி  திருவீதியில்  செல்லுகையில்

            கேமசரி கையில் யாழ்  எடுத்து  அருகனின் புகழ் இசைத்தாள்

இல்லம்  வந்த  சீவகனை  இனிய  மண  நன்னீராட்டி

            அகிற்புகை  மணம்  வீச  ஆடை  அணிகலன்  தந்தான்                           503

 

சந்தனத்தால்  தரை  மெழுகி  சங்கு  முத்தால்  கோலமிட்டு

            பசும்  பொன்  கலத்தினிலே  பலசுவை  உணவளித்து

பைங்கொடி  மங்கையர்கள்  பக்கம்  அமர்ந்து  பரிமாற

            அறுசுவை  உண்டியினை  அண்ணலும்  மகிழ்ந்து  உண்டான்              504

 

சீவகனை  செல்வி  கண்டாள்  சித்தத்தில்  நாணமுற்றாள்

            செங்கை  வளை  கொடிகள்  சிதறின  அவள்  சிற்றடிகளில்

ஆசையை  ஒளிரும்  நெருப்பாய்  அவள்  மனது  வளர்த்து கொள்ள

            அத்தீயால்  அவள்  உடலும்  அனலிலிட்ட  மெழுகானது                           505

 

தனங்கள்  சுமைத்  தாங்காமல்  தள்ளாடும்  சிற்றிடையும்

            செம்பவளம்  தேர்ந்தெடுத்து  செதுக்கி  வைத்த  செவ்விதழும்

கடல்  கயலைக்  கைகொண்டு  முகம்  பதித்த  கருவிழிகளும்

            சிந்தையினை   கலக்கி  விட  சீவகனும்  கண்  கரித்து  நின்றான்        506

 

சுபத்திரன்  தன்  சுற்றத்துடன்  மன்னன் நரபதி  மனையடைந்து

            மகள்  கேமசரி  திருமணத்தின்  மங்கல  நாள்  சொல்லி  வந்தான்

மங்கல  பேரிக்கைகள்  மற்றும்  முரசு  முழவு  பறை  முழங்க

            சீவகனும்  கேமசரியும்  கரம்  இணைய  மனம்  கலந்தனர்                    507

 

திண்ணிய  தோள்கள்  கொண்ட  திருமகன்  சீவகநம்பியும்

            கந்தர்வரும்  கண்டு  காமுறும்  கலைமகள்  கேமசரி  மெய் தழுவி

இல்லற  இன்பந்  தன்னில்  இருவரும்  இணைந்து  மகிழ்ந்து

            நல்லறத்  தம்பதிகளாய்  நாள்தோரும்  இன்பம்  தூய்தனர்                    508

 

மது  கொண்ட  மலருள்  புகுந்து  மயங்கிடும்  வண்டுகள்  போல்

            தேன்  சுவை  நாடிச்  சென்று  தேனில்  சிக்கிய  ஈக்கள் போல்

கேமசரி  என்னும்  மலரில்  கிடைத்திடும்  தேன்  மதுவில்

            சிக்கிய  வண்டு  ஈக்கள்  போல  சீவகனும்  சிக்கி  மகிழ்ந்தான்             509

 

இரு  திங்கள்  விரைந்து  செல்ல  இன்பத்தில்  வீழ்ந்த  சீவகன்

            காலையில்  குழவியாய்  பிறந்து  கடும்  பகல்  இளைஞனாகி

மாலையில்  முதுமை  சேர்ந்து  மேற்திசை  பரிதியாய்  மறைய

            அகிற்புகை  சூழ்ந்திருந்த  அணங்குகள்  அறையை  அடைந்தான்      510

 

கலவியில்  இன்பங்கண்டு  களித்தன  இருவுடல்கள்

            களைத்தன  மெய்கள்  இரண்டும்  கண்ணுறங்கின  காமத்தின்  பின்

சிந்தையில்  பிரிவை  ஏற்ற  சிங்க  நிகர்  சீவக  நம்பி

            கேமசரி கண்  விழிக்கும்  முன்னே  கடந்திட்டான்  மாளிகை  விட்டு  511

 

கனவினால்  உறக்கம்  களைய  கேமசரி கண்கள்  விழிக்க

            கட்டியவன்  கட்டிலில்  இல்லை  கலங்கினாள்  நெஞ்சம்  பதற

மாணிக்க  மணி  இழந்த  மாநாகம்  கலங்குதல்  போல்

            மாளிகை  எங்கும்  அலைந்தும்  மன்னவனை  அவள்  காணவில்லை 512

 

கைவளைகள்  தானே  கழல    கண்களும்  நாற்புறம்  மயங்க

உடலது  பொன்னாய்  உருக  உள்ளமோ ஆழியாய்  பொங்க

மெல்லிடை  துவண்டு  நெளிய  மேனியில்  பசலைப்  படர

            பிண்டி வனப் பெண்ணாகப் பேதையும் துயரம் கொண்டாள்             513

 

இளமையோ  நீர்குமிழ்  ஆகும்  இன்பமோ  மின்னலாய்  அழியும்

            பொன் பொருள் செல்வங்கள்  பரிதியின்  பனியாய்  கரையும்

ஊழ்வினை  உடன்  வருங்காலை  தீவினை  வலிதாய்  இருக்கும்

            பிரிவினையை  எண்ணி  நீயும்  புலம்பாதே  என்றாள்  தோழி              514

 

சுபத்திரன்  ஆட்கள்  கூடி  சுற்றி  தேடினர்  எண்திசையும்

            சீவகன்  நடந்து  சென்றான்  சித்தன்  போல்  தன்  திசையில்

எதிரினில்  வந்த  ஒருவன்  இவன்  விபரம்  விரும்பி  கேட்க

            துணைவியர்  நால்வருண்டு  துக்கமில்லா மகனுண்டென்றான்           515

 

தானம், ஒழுக்கம், தவம், வழிபாடு  நான்கும்  என்  மனைவியரென்றும்

            நால்வரும்  பெற்றெடுத்த  நல்வினையே  என்  ஒருமகனென்றான்

இம்மகனை  பெற்றவர்  எல்லாம்  இருவினையற்ற  அருகனை  தொழுது

            வீடென்ற  மோட்சம்  பெற்று  வென்றிடலாம்  பிறவி  என்றான்             516

 

கூற்றுவன்  உயிரைக்  கொண்டு  கொடியவழி  செல்லுகையில்

            நல்வினை  என்னும்  உணவை  நாடியே  எடுத்து  செல்வீர்

காமம்  தரும்  இன்பத்தாலும்  கள்  தரும்  மயக்கத்தாலும்

            களிப்புடன்  இருந்தாயாகில்  கடும்  வினை  தொடரும்  என்றான்       517

 

ஊனினை  மிகவும்  உண்டு  உடலினை  பேணும்  மனிதா

            மண்ணின்  மேல்  ஆசையாலே  மதம்  கொண்டு  வாழும்போது

உயிர்  பிரிந்த  உடலுக்காக  அம்மண்ணே  ஆசை  கொள்ளும் – என்ற

            அறிவை  நீ  பெற்றாயானால்  அறங்களை  விரும்பிச்  செய்வாய்        518

 

இன்னும்  பல  அறங்கள்  சொல்லி  எதிரில்  நின்ற  மனிதனுக்கு

            ஒளிவிடும்  மணியும்  வைரமும் உடைய  நல்லணிகள்  தந்தான்

வழிப்போக்கன்  நம்பியை  வணங்கி  வலமது  சுற்றி  வந்தான்

            சீவகன்  தனியே  சென்றான்  செழித்த  பெருங்காட்டினுள்ளே              519

 

கேமசரியார்  இலம்பகம்  முற்றிற்று.



 7.  கனகமாலையார்  இலம்பகம்.

 

 

மனமது  காமம்  கொண்டு  மந்தி  போல்  ஆட்டம்  போட

            மனைவியை  விட்டு  நீங்கி  பரத்தையை  நாடுதல்   போல

தீம்புனல்  பாய்ந்து  பெருகும்  தழைத்திருந்த  மருதம்  விட்டு

            வேழமும்  வேங்கையும்  திரியும்  வனத்தின்  வழியுள்  சென்றான்       520

 

 

காயம்பூ  மலர்கள்  மலர்ந்து  கோங்குகள்  படர்ந்து  விரிந்து

            வெண்முகில்  தவழ்ந்து  ஓடும்  விண்வரை  தொட்ட  மலைகள்

கொட்டிடும்  அருவி  ஓசை  கொட்டிடும்  முழவாய்  ஒலிக்க

            தோகையின்  மயில்கள்  ஆட  சொர்க்கம்  போல்  இருந்தது  காடு       521

 

 

களிறுகளின்  வெண்கொம்பாலே  கருங்கல்  உரலின்  உள்ளே

            ஐவன  நெல்லைக்  கொட்டி  அவலாக  இடித்து  எடுத்து

தேன்  அதில்  கலந்து  பிசைந்து  கனிந்திட்ட  வாழை  கனியொடு

            குறவர்கள்  மகிழ்ந்து  உண்ணும்  குறிஞ்சி  நில எல்லை கடந்தான்     522

 

 

மரகதப்  பலகை  மேலே  செம்பஞ்சை  பரப்பியது  போல்

            பசுமையாம்  பயிர்கள்  மேலே  பசி கொண்ட  புச்சிகள்  பரவ

இடையர்கள்  ஊதும்  குழலுடன்  ஆவின்  வெண்மணிகள்  ஒலிக்க

            இணைந்த  அம்முல்லை  நிலத்தை  இணையற்ற நம்பி  கடந்தான்    523

 

நறுமண  மலர்கள்  கொண்ட  நல்லெழில்  சோலை  தன்னில்

            பளிங்கென  நீர்  நிறைந்த  பரந்த  வெண்  குளத்தினுள்ளே

கொட்டியும்  ஆம்பலும்  குவிந்து  கொட்டிடும்  மதுவைப்  பருக

            வண்டுகள்  பாடும்  இசையை  சீவகன்  அமர்ந்து  ரசித்தான்                524

 

விண்ணிலே  வலமாய்  செல்லும்  விண்ணுலக  ரம்பை  ஒருத்தி

            நம்பியின்  அழகில்  மயங்கி  நாடினாள்  சீவகன்  அருகில்

கையினில்மலர்  ஒன்றெடுத்து  காமனாம்  சீவகன்  மேல்  வீசி

            தூதாக  மணக்கும் புகையை அநங்கமாவீணை அனுப்பினாள்            525

 

சீவகன்  அவளைப்  பார்த்தான்  சிந்தையில்  ஆசை  ஏதின்றி

            அவன்  உள்ளம்  அறிந்த  அழகி  அகமது  நடுக்கம்  கொண்டாள்

எண்ணத்தில்  அவனைக்  கூடும்  அவள்  இறுகிய  ஆசைக்  கண்டு

            உள்ளத்தில்  எண்ணலானான்  உயர்ந்த  நல்  எண்ணத்தாலே               526

 

இளமையில்  இன்பம்  நாடும்  எழில்  கொண்ட  மங்கையர்கள்

            முதுமையின்  நிலையை  எட்ட  மூடுவர்  தம்  விழிகள்  தன்னை

மென்மலர்  தோள்கள்  மீது  மிகுதியாய்  உறங்கிய  ஆடவர்

            தன்  புலன்கள்  குன்றி  தளர  தம்  கண்கள்  மூடி  அகல்வர்                    527

 

குருதியை  உள்ளே  தோய்த்து  நரம்பினால்  எலும்பைக்  கட்டி

            தசையினை  மேலே  அப்பி  தோலினை  அதன்  மேல்  போர்த்தி

ஒப்பனை  மயிரால்  மூடி  ஒன்பது  வாசல்கள்  வைத்து

            உருவத்தை  ஆக்கித்  தந்த  அத்தச்சன்  நல்லவன்  என்றான்                 528

 

அநங்கமாவீணை  அவனின்  கவனத்தை  தன்பால்  ஈர்க்க

            வானத்தில்  விளையாடியவளை   விஞ்சையன்  கொண்டு  செல்ல

அவன்  மனைவி  உதவியாலே  அழகிய  சோலையில்  வீழ்ந்தேன்

            நின்னை  நான்  நோக்கிய  பின்  நெஞ்சது  என்னிடம்  இல்லை            529

 

வாதமும்  பித்தமும் கொண்டு  ஊனுடன் செங்குருதி  சேர்த்து

            சீழுடன்  நிணமும்  மலமும்  சேர்ந்திடும்  விழியின்  பீளையும்

முடைநாற்றம்  வீசும்  உடலை  மோகத்தால்  பேணிகாத்து

            காமத்தின்  சுகத்தைக்  காண  கவிஞர்கள்  கூறியதென்றான்               530

 

அநங்கமாவீணையின்  மறைவு  அவள்  கணவன்  பவதத்தனை  வாட்ட

            மனைவியின் பிரிவால்  கொண்ட  மயக்கத்தில்  மனமது  துவள

இயக்கியே  நீதான்  என்  மனைவியின்  எழிலைக்  கண்டு

            மறைத்த  நீ  அவளைத் தந்தால் வேண்டுவதை  தருவனென்றான்       531

 

பவதத்தன்  நிலையைக்  கண்டு  சீவகன்  நம்பி  அருகில்  வந்தான்

            துணைவியை  காணாத் துயரை  நம்பிக்கு  நவின்று  நிற்க

மந்திரம்  ஒன்றைச்  சொல்லி  மனமது  ஒன்றிக்  கூறினால்

            வில்  மீண்ட  அம்பு  தொலைவில்  மனவியை  காண்பாய்  என்றான்   532

 

பவதத்தன்  அம்மந்திரத்தை  பலமுறைச்  சொல்லச்  சொல்ல

            அநங்கமாவீணையும்  அங்கு  சீவகனின்  ஆசையை  விட்டாள்

மந்திர  ஒலியின்  தன்மை  மனதினை  தூய்மையாக்க

            நெஞ்சினில்  கணவனைக்  காண  வஞ்சியும்  நாடி  சென்றாள்             533

 

நீலமும்  நாகமும்  கோங்கும்  நறுமண  மலர்கள்  கைஏந்தி

            அருகனின்  திருவடியில்  வைத்து  அவன்  புகழை  வாழ்த்திப் பாடி

காமத்தின்  வேரை  அழித்து  காதிவினைகள்  அனைத்தும்  துறந்த

            எம்மானே  வணங்குகின்றேன்  உன்  நிலை  பெறுவதற்கு  என்றான் 534

 

கருத்தினில்  அருகன்  பதிய  கால்களும்  பரியாய்  இயங்க

            காட்டினில்  நடக்கலானான்  களிறை  ஒத்த  சீவக நம்பி

ஐம்புலன்  நுகர்ந்து  மகிழும்  அத்தனை  அம்சமும்  கொண்ட

            கன்னலில்  சாறு  பிரிக்கும்  வளமான  மத்திமதேசம்  சென்றான்        535

 

கரும்பினை  ஆலையில்  இட்டு  கனியொத்த  சாறு  பிழியும்

            ஓசையை  கேட்ட  மயில்கள்  முகிலோசையோ  என  கூவ

கமுகு  மரக்  காயைப்  பிய்த்து  களிப்போடு  மந்திகள்  வீசும்

            காயோடு  கனிகள்  கொண்ட  சோலைக்குள்  நுழைந்தான்  நம்பி      536

 

கரியது  தான்  மறையும்  அளவு  கதிர்கள்  கொண்ட  செந்நெல்  நாட்டை

            பல  துறைகள்  மேம்படுத்தி  பாங்குடன்  நல்ஆட்சி  செய்து

வறியோர்க்கு  வாரி  கொடுக்கும்  வளம்  பல  கொண்ட  நகரம்

            ஏமமாபுரம்  என்னும்  நகரில்  ஏறு  போல்  நடந்தான்                                537

 

வண்டுகள்  மொய்த்து  திரியும்  வனப்புடன்  திகழும்  பொழில்களும்

            பளிங்கென  உருவம்  தெரியும்  பன்னீர்  ஒத்த  குளக்கரையும்

அருகினில்  பாங்காய்  அமைந்த  அத்தாணி  மண்டபம்  ஒன்றின்

            அடர்ந்து  வளர்ந்து  செழித்த    மாமர  நிழலில்  அமர்ந்தான்                  538

 

பவளவாய்  பேடை  அன்னம்  தன்  பேதமை  மிகுதியாலே

            நீரினில்  அசைந்து  தெரியும்  தன்னிழல்  உருவங்கண்டு

தன்  துணை  ஆண்  அன்னத்தை  உன்  காதலியை  கண்டேன்  என

            சினத்துடன்  ஊடல்  கொள்ள  திகைத்தது  அந்த  ஆண்  அன்னம்        539

 

பேடையின்  ஊடல்  போக்க  சேவலும்  தன்  இறகால்  தழுவ

            அன்னங்கள்  ஊடல்  தனை  அமர்ந்திருந்த  சீவகன்  கண்டு

தத்தையின்  ஊடல்  தன்னை  தன்  மனம்  விரும்பி  வருந்த

            தன்  பிரிவு  தத்தை  நெஞ்சிக்கு  தணல்  வதை  என  எண்ணினான்    540

 

மத்திமதேய  நாட்டின்  மன்னன்  மறம்  போக்கி  ஆளும்  தடமித்தன்

            மங்கையர்  குலமே  வாழ்த்தும்  நளினை  அவன்  பட்டத்தரசி

இல்லற  இன்பத்தில்  இணைந்து  நல்லறம்  போல்  பிறந்த  மகன்

            விசயன்  என்னும்  பெயர்  சூடிய  வீரப்புகழ்  கொண்டவனாவான்       541

 

வண்டு  அலர்  சோலைக்குள்ளே  வருகின்ற  மணத்தை  நுகர

            வீரக்கழல்கள்  இசை  ஒலிக்க  வீசும்  தென்றலாய்  நடந்து – அங்கு

கல்விக்  கடலான  சீவகனை  குறிப்பால்  கண்டு  அருகில்  சென்று

            எந்நாட்டு  அறிஞன்  நீவீர்  எங்கிருந்து  வருகிறீர்  என்றான்                   542

 

சீவகன்  தன்  பெயரும்  நாடும்  தன்னுள்ளே  மறைத்துக்  கொண்டு

            புகழையே  மிகவும்  விரும்பி  பொய்யான  தகவல்  தந்தான்

விசயனோ  அவன்  சிந்தை  அறிய  இந்நாடு  இவ்வூர்  இல்லமெல்லாம்

            இன்று முதல் உன்னது என அண்ணலும் அவன் சொல்லேற்றான்         543

 

மன்னன்  மகன்  விசயன்  மாங்கனி  உண்ண  விரும்பி

            வில்லினில்  அம்பை  தொடுத்து  விட  விட  கனி  விழவில்லை

சீவகன்  வில்லை  வாங்கி  பெருங்கனி  ஒன்றைத்  தாக்க

            அம்பது  அக்கனியை  அவன்  நின்ற  இடத்தில்  தந்தது                           544

 

வில்  வளம்  கண்ட  விசயன்  வில்  படைத்த  கடவுள்  இவனே

            இவன்  மனம்  மகிழ்ச்சியாக  எதையும்  நான்  செய்வேனென்று

உள்ளத்தில்  உறுதி  பூண்டு  சீவகனை  அழைத்துக்  கொண்டு

            அரசனின்  முன்னே  நிறுத்தி  அண்ணலின்  திறம்  கூறலானான்        545

 

இராமன்  எடுத்தது  கண்டனர்  இற்றதை  கேட்டனர்  இருந்தவர்

            எய்திட்ட  ஒரு  அம்பால்  ஏழு  மரம்  சாய்ந்தது  என்று

காவியம்  சொன்னது  அதை  கண்டவர்  யாரும்  இல்லை

            இவரது  கைவில்லின்  திறன்  இருகண்ணால்  கண்டேன்  என்றான்    546

 

மைந்தனின்  மொழியைக்  கேட்டான்  மன்னனும்  மகிழ்ந்து  சொன்னான்

            விசயனோடு  இன்னும்  நால்வர்  என்மகன்கள்  உள்ளார்  என்றும்

வில்  பயிற்சி  எதையும்  அவர்கள்  முறைப்படி  கற்றார்  இல்லை

            துரோணராய்  நீ  இருந்து  சொல்லித்தர  வேண்டும் என்றான்               547

 

அண்ணலும்  அதனை  ஏற்றான்  அவர்களுக்கு  ஆசான்  ஆனான்

            பலகலைகள்  அவர்களுக்கு  பக்குவமாய்  பயிற்சி  தந்தான்

சீவகன்  நினைத்ததை  எல்லாம்  சிறப்புடன்  கற்றுத்  தெளிந்தனர்

            நம்பியும்  ஒரு  நாள்  தனியே  அரண்மனை  நந்தவனம்  புகுந்தான்    548

 

வேங்கை  மரம்  விரிந்து  நிற்க  வெண்துகிலாய்  செம்மரம்  பூக்க

            தேர்  கொண்ட  சக்கரம்  போல்  மகிழம்  பூக்கள்  மலர்ந்து  வீச

முல்லை  அரும்புகள்  எல்லாம்  முழுமதி  போல்  பூத்துக்  குலுங்க

            அத்தனை மலர்கள் கோர்த்து அழகிய வாகைமாலை தொடுத்தான்  549

(  வாகைமாலை  :  மாலைகளில்  ஒரு  வகை  )

 

வாகையை  தொடுத்த  கைகள்  வேறொரு  மாலைத்  தொடுத்து

            மாலையை  பந்தாய்  சுருட்டி  மணக்க  சந்தன  புனுகு  தெளித்து

மலர்  பந்து  செய்யும்  போது  மாங்கனி  போல்  சொல்  உதிர்க்கும்

            பணிப்பெண்  ஒருவள்  வந்து  பணிந்து  நின்றாள்  சீவகன்  முன்         550

 

மாலையும்  பந்தும்  என்  தலைவி  கனகமாலைக்கு  பொருந்தும்  என

            செம்பவள  வாய்  திறந்து  சீவகனிடம்  தேனாய்  கொட்ட

நம்பியோ  அனைத்தும்  தந்தான்  நங்கையும்  ஏற்றுக்  கொண்டாள்

            கனகமாலைக்கு எடுத்துக் காட்ட  தலைவியும்  மகிழ்ந்து  ஏற்றாள்     551

 

பெண்களின்  வளரும்  மார்புகள்  ஆண்களின்  மார்பை  தாக்க

            சூடிய  மாலைகள்  நெகிழ்ந்து  சுவைகொண்ட  மதுவைக்  கொட்ட

வேல்விழி  நடத்தும்  நாடகத்தை  வாழ்க்கையில்  நுகரா  ஆண்கள்

            வேடரின் வாழ்க்கை ஆகும்  என மாலையில் எழுத்தை கண்டாள்       552

 

கன்னியின்  பெண்  மனது  காமத்தீ  நோயால்  வருந்த

            தோள்கள்  இரண்டும்  மெலிய  கைவளை  தோல்வரை  நீள

உடலினில்  பசலைப்  பரவி  உள்ளத்தில்  அவனை  நினைத்து

            மாலையை  தெப்பம்  ஆக்கி  இரவென்னும்  கடலைக்  கடந்தாள்        553

 

மாலையை  எனக்கு  அளித்து  என்  மனதினை  இறுக்க  பிணைந்த

            மன்மதன்  ஒத்த  அவனை  மாலையால்  நானும்  பிணைப்பேன் என

மணிச்செப்பு  மாலையை  எடுத்து  அநங்கவிலாசினி  கைபதித்து

            அவனிடம்  தந்து  வா  என்று  அப்பெண்ணுக்கு  ஆணை  இட்டாள்      554

 

அநங்கவிலாசினி  மாலையை  தந்தாள்  அண்ணலும்  ஏற்க  மறுத்தான்

            அரண்மனையில்  தங்குவோர்கள்  ஐம்புலன்கள்  அடக்க வேண்டும்

ஆசிரியன்  பணி  ஆணை  எனக்கு  இது  அறம் பிழை செயல்  என்றான்

            தலைவி  வருந்துவாள்  என்றாள்  தலைவனும் ஏற்றுக்கொண்டான்    555

 

விற்போரில்  விசயன்  ஒரு  பாண்டவ விசயன்  ஆனான்

            வேல்  போரில்  கதம்பன்  ஒரு  வேல்முருகன்  போல  ஆனான்

வாள்  போரில்  கனகன்  ஒரு  பரசுராமனுக்கு  நிகர்  ஆனான்

            யானை தேர் போரில் அசலகீர்த்தி  சச்சந்தனின் அசலன் ஆனான்     556

(  அசலன்  :  சச்சந்தனின்  படைத்தலைவன்  )

 

குதிரை  போரில்  சேனன்  ஒரு குற்றமற்ற  நகுலன்  ஆனான்

            தடமித்தன்  மக்கள்  ஐவரும்  தன்நிகர்  அற்ற  வீரனானார்கள்

சீவகன்  தந்த  பயிற்சிகளை  சிந்தையில்  மகிழ்ந்த  மன்னன்

            நம்பியை  தனியே  அழைத்து  நயம்பட  உரைக்கலானான்                   557

 

என்  மக்கள்  ஐவருக்கும்  நீ  கற்று தந்த  போர்  கலையை

அங்கமே  கண்ணாய்  கொண்டு  அகம்  குளிர களித்தவன்  நான்

 ஈடுயிணையற்ற  உனக்கு  நான்  என்ன  கைமாறு  செய்வேன்

            என்  மகள்  கனகமாலையை  இசைவுடன்  ஏற்றுக்கொள்  என்றான்   558

 

நங்கையின்  எழில்  வடிவை  நம்பியின்  மனமும்  விரும்ப

            எண்ணத்தை  உள்ளே  அடக்கி  இன்சொல்லில்  மறுத்து  மொழிய

கனகமாலைக்கு  ஏற்ற  கணவன்  வில்லாற்றல்  கொண்ட  வீரன் – என

            சோதிடன் சொல்லிய சொல்லை நெறியுடன் வேந்தன் சொன்னான்  559

 

நகரது  மணக்கோலம்  பூண  நற்புறமும்    முரசொலிக்க

            சீவகனுக்கும்  கனகமாலைக்கும்  சிறப்புடன்  மணம்  முடித்தான்

மணிக்  குண்டலங்கள்  ஒளிவீச  மேகலையும்  சிறு  ஒலி  எழுப்ப

            சிலம்புகள்  சிணுங்கி  நகைக்க  சீவகன்  இன்பம்  நுகர்ந்தான்             560

 

இல்லறக்  கடலில்  மூழ்கி  இன்பமாம்  முத்தை  எடுத்து

            தரணி  போற்றும்  கனகமாலையின்  தாழ்விலா  அழகைப்  பருகி

தனமித்தன்  அன்பைத்  தூய்த்து  சில  நாட்கள்  தங்கி  இருக்க

            ராசமாபுரத்து  நிகழ்வை  நயம்பட்  தேவர்  சொல்கிறார்                        561

 

நம்பியின்  தம்பி  நந்தட்டன்  சீவகன்  இருப்பிடம்  காண

            ஏமாங்கத  நாடு  முழுவதும்  ஏக்கத்தில்  சுற்றி  அலைந்து

மனம் அது  மயங்கி  சோர்ந்து  ராசமாபுரத்தை  அடைந்து       

            கழலுவேகன் மகள் தத்தையை காண அவள் மனைக்கு சென்றான்   562

 

ஐந்து  வில்  பின்னே  நின்று  சிரமது  தாழ்ந்து  வணங்க

            தத்தையோ  வியந்து  நோக்கி  தன்  அருகில்  வரப்பணித்தாள்

மூன்று  வில்  தொலைவில்  வந்து  முகமது  அவள்  சிலம்பை  நோக்க

            என்  தலைவர்  சீவகநம்பி  எங்குள்ளார்  என  ஏக்கத்தில்  கேட்டான்   563

 

மதிமுகம்  எனும்  வித்தையாலே  தத்தை  ஒரு  வித்தைக்  கூறி

            மதி  ஒத்த  தன்  முகத்தை  மலர்  போலத்  தடவிக்  கொண்டு

கனகமாலையின்  கருங்குழலில்  கற்பகமாலை  சூடும்  நம்பியை

            எதிரில்  கண்டு  முறுவல்  பூத்து  நந்தட்டன்  வணங்கி  நின்றான்        564

(  மதிமுகம்  :  தூரத்தில்  நடப்பதை  அறியும் வித்தை  )

 

நம்பியை  கண்ட  நந்தட்டன்  தத்தையை  மீண்டும்  வணங்கி

            சீவகனின்  அடியைச்  சேர  அருளிட  வேண்டும்  என்றான்

அரண்மனை  அரசனைப்  போல்  அணிகலன்  அணியச்  செய்தாள்

            ஆகாச  காயினி  என்னும்  மந்திரத்தை  ஓதி  நின்றாள்                           567

 

அகிற்புகை  மணம்  நிறைந்த  ஆடை  விரித்த  படுகையில்

            நந்தட்டனைப்  படுக்கச்  சொன்னாள்  நல்நெஞ்சாள்  காந்தர்வதத்தை

நந்தட்டன்  அதையே  செய்ய  நாடி  ஒரு  தெய்வம்  வந்து

            ஏமமாபுர  அரண்மனையில்  சீவகன்  வடிவில்  விட்டு  சென்றது          568

 

சீவகன்  வடிவம்  கொண்ட  நந்தட்டனைக்  கண்ட  வசுந்தரி

            வில்லாளன் விசயனிடம்   விஷயத்தை சொல்லிய  பின்

விசயனும்  சென்று பார்த்தான்  வடிவத்தில்  ஒத்த  அவனை

            ஊள்ளுணர்வு  ஏதோ  சொல்ல  உண்மையில்  நீயரென கேட்டான்      569

 

நந்தட்டன்  மௌனம்  கொள்ள  விசயனும்  விரைந்தான்  சீவகனிடம்

            சீவகன்  விரைந்து  வந்தான்  இளவளோ  அடி  பணிந்தான்

நீண்ட  நாள்  பட்ட  பிரிவால்  நந்தட்டன்  கண்ணீர்  சொரிய

            தம்பியை  ஆரத்தழுவி  தன்  மார்பில்  அணைத்துக்  கொண்டான்      570

 

அண்ணலும்  தம்பி  நந்தட்டனை  அரண்மனை  அழைத்து  வந்தான்

            கற்புடை  கனகமாலையை  தம்பி  காலடி  விழுந்து  தொழுதான்

மனைவிக்கு  அவனைக்  காட்டி  இவன்  உன்  மைத்துனன்  என்றுரைக்க

            மனமது மிக மகிழ்ச்சி கொள்ள மைத்துனனுக்கு விருந்தளித்தாள்     571       


 

சீவகனும்  நந்தட்டனும்  சேர்ந்து  செவ்விய  பூம்பொழில்  வந்து

            அழகிய  ஓர்  மண்டபத்தில்  தனியே  அமர்ந்து  பேசலானார்

சுதஞ்சணன்    கொண்டு  செல்ல  சுற்றமும்  பெற்றோர்களும்

            அடைந்திட்ட  துன்பத்தை  நான்  அறிந்திட  விளக்கு  என்றான்            572

 

பதுமுகன்  பொருமிச்  சொன்னான்  இனி  செய்வதைச்  சிந்திப்போமென

            புத்திசேனன்  பொங்கி  சினந்தான்  மன்னனைக்  கொல்வோம்  என்று

தேவதத்தன்  தெளிவுடன்  சொன்னான்  சீவகன்  நிலை  அறிவோம்  என

            சீதத்தன் மனம் சீறி நின்றான் வெம்பகை  வெல்வோம்  என்று          573  

                              

பழம்பகை  எந்த  நாளும்  பழகிடும்  நட்பு  ஆவதில்லை

            பாரெல்லாம்  தேடிச்  செல்வோம்  பரிதியாம்  சீவகனை  காண

குணமாலை  அண்ணியிடம்  சென்றேன்  குமுறிய  சோகத்தில்  இருந்தார்

            தாங்கொணா  அவர்நிலையால்  தலை  குனிந்து  இல்லம்  வந்தேன்  574

 

தத்தையை  காணச்  சென்றேன்  தனிமையில்  யாழிசைப்பதை கண்டு

            கணவனை  காணா நிலையில்  களிப்பதை  இழித்துரைத்தேன்

கற்புடை  அந்த  அண்ணி  கனிமொழியில்  மந்திரம்  சொல்லி

            எனை  இங்கு  அனுப்பி  வைத்தார்  இதயத்தால்  நன்றி  சொன்னேன் 575

 

சுதஞ்சணன்  எனை  தூக்கி  வந்தான்  சுகமதை  சில  நாள்  தந்தான்

            சென்றிடும்  வழியைச்  சொல்லி  செய்திடும்  முறைகள்  சொன்னான்

நடந்ததை  முழுதும்  சொல்லி  நந்தட்டனை  தெளியச்  செய்து

            தடமித்தன் நகரம் வந்தேன் தம்பி உன்னை அடைந்தேன் என்றான்   576

 

ராசமாபுரத்தில்  உள்ள  நம்பியின்  நண்பர்கள்  எல்லாம்

நாடினர்  தத்தை  இல்லம்  நண்பனின்  நிலையைக்  கேட்டனர்

தத்தையும்  மகிழ்ந்து  சொன்னாள்  தலைவனின்  நிலையைப்பற்றி

            தன்னிலை  மறந்து  ஆடி  தாய்  கண்ட  சேயாய்  மகிழ்ந்தனர்              577

 

அன்னையே  நாங்கள்  அனைவரும்  அவ்விடம்  செல்லுகின்றோம்

            அண்ணலுக்கு  செய்தி  உளதோ  என  அன்புடன்  வேண்டி  கேட்க

மற்றவர்கள்  அறியா  எழுத்தில்  மன்னனுக்கு  ஓர்  ஓலை  தந்தாள்

            மகிழ்வுடன்  பெற்ற  அவர்கள்  நம்பியை  நாடிச்  சென்றனர்                 578

 

வெண்மதி  ஐப்பசி  நாளில்  பிறந்து  வளர்ந்த  பரிகள் 

            இருபதினாயிரம்  எண்ணிலும்  நொடிக்கு  நூறுவில் ஓடும்  எருதுகள்

வலிய  நடையுடை  கழுதைகளும்  விரைந்திடும்  ஒட்டகங்களும்

            பொருள்களை  சுமந்து  கொண்டு  புறப்படும்  படையாய்  நின்றது    579

 

நண்பர்கள்  நால்வரும்  அவரவர்  நல்ஜாதி  குதிரையில்  ஏறி

            பறவைகள்  சகுனம்  பார்த்து  பிற  நிமித்தம்  ஆய்ந்து  அறிந்து

முரசுகள்  இடியாய்  முழங்க  சங்கின்  சங்கநாதம்  ஒலிக்க

            சமுத்திரம்  போன்ற  சேனை  தரை  அதிர  புறப்பட்டது  அன்று           580

 

அருவிகள்  கொட்டும்  மலைகளையும்  நெல்  விளைந்த  மருதத்தையும்

            தினைப்புனம்  உடைய  காட்டையும்  வறியவர்  வாழும்  நாட்டையும்

சீவகன்  இருப்பான்  என்று    எங்கும்  தேடியே  கடந்து  சென்று

            தவமுனிகள்  சேர்ந்து  வாழுகின்ற பள்ளியில்  படை  தங்கியது           581

 

மங்கலம்  அனைத்தும்  இழந்தும்  திருமகள்  போலத்  திகழும்

            மங்கையாம்  சச்சந்தன்  மனைவி  விசயை  தன்  மகன்  நினைவால்

மறைவிடம்  தன்னில்  அமர்ந்து  அருகனின்  அடியைப்  போற்றி

            கண்களில்  கண்ணீர்  பெருக கடும்  தவசி  போல்  இருந்தாள்              582

 

விசயை  என்று  அறியாமலே நால்வரும்  அவளை  வணங்கி

            திருமகள்  போன்ற  தாயே  தாங்கள்  குலம்  யாதென கேட்க

என்  குலம்  சொல்லுதலும்  என்  வரவை  பற்றி  கூறுதலும்

            இயலாது  என்று  சொல்லி  உம்  விபரம்  கூறுமென்றாள்                        583

 

சாகரன்  மனைவி  குருதத்தை  பெற்ற  மகன்  சீதத்தன்  இவன்

            அசலன்  துணைவி  திலோத்தமையின்  அன்பு  மகன்  புத்திசேனன்

தனபாலன்  இல்லத்தாள்  பவித்திரையின்  மகன்  பதுமுகன்  இவன்

            விஜயதத்தன்  வீட்டரசி  பிரிதிமதியின்  புதல்வன்  தேவதத்தனிவன் 584

 

கந்துக்கடன்  இல்லத்தில்  சீவகன்  களித்திருந்து  வாழ்ந்த  நாட்களிலே

            நந்தன்,  நபுல,  விபுலர்  என  மூவரும்  பிறந்தனர்  அங்கே

எட்டு  திக்கு  யானைகள்  போல்  வளர்ந்து  வந்தோம்  நண்பர்களாய்

            எட்டெட்டு  கலைகளிலும்  எதிர்ப்பாரின்றி  தெளிந்து  நின்றோம்       585

 

கந்துக்கடன்  பெற்ற  சீவகனை  கட்டியங்காரன்  கொல்ல  என்று

            ஆரம்பித்த  வார்த்தைக்  கேட்டு  அங்கு  விசயை  மயக்கமுற

நண்பனுக்கு  வந்த  துன்பம்  தன்  மகனின்  துன்பம்  போல

            மயங்கி  விழுந்த  மங்கையிவள்  மாதவத்தின்  பெருமை  என்றனர்   586

 

பாவை  கொண்ட  மயக்கத்தை  பன்னீரால்  தெளியச்  செய்ததும்

            சச்சந்தன்  மனைவி  புலம்பலானாள்  சிவந்த முகம் பாலாய் வெளிற

பொய்  மயிலின்  பொறியில்  ஏறி  பிணம்  சுடும்  காட்டில்  இறங்கி

            ஐயனே  உன்னைப்  பெற்றேன்  அடுத்தவன்  கையில்  சென்றாய்       587

 

கந்துக்கடன்  சுனந்தை  உன்னை  கண்போல  வளர்த்திட்டாலும்

            நான்  கண்ட  கனவின்  பயனை  நாயகன்  எடுத்துச்  சொல்ல

உயிர்  தாங்கி  நானிருந்தேன்  உயிருடன்  நீ  இருப்பாய்  என்று

            உன்  உயிர்  நீங்கிய  பின்  உயிர்  வாழ்தல்  தீவினை  என்றாள்             588

 

குன்றொத்த  சச்சயந்தன்    மகனே  குருகுலத்தில்  தோன்றிய  கோவே

            ஏமாங்கத  நாட்டின் அரசே  என்  உயிரின்  இனிய  உயிரே

மலர்மாலை  அணிந்த  மார்பா  மறம்  அழிய  பிறந்த  சீவகா

            இனி  உன்னை  என்று  காண்பேன்  என்றழுது  தரையில்  வீழ்ந்தாள்  589

                                   

அரசன்  சச்சந்தன்   மறைந்தும்  அவன்  தேவி  விசயை  என  அறிந்து

            களிப்பினில்  கையை  கவிழ்த்து  கட்டியங்காரன்  வீழ்ந்தான்  என்று

மயில்  போல  மண்ணில்  வீழ்ந்து  மயங்கிய  ராணி  விசயையை

            தெளிவுர  செய்து  நண்பர்கள்  சீவகன்  உள்ளான்  என்றனர்                 590

 

சச்சந்தன்  பரணியில்  பிறந்தான்  தரணியை  நன்கு  ஆண்டான்

            என்  மீது  கொண்ட  அன்பால்  இரணியனின்  துன்பம்  உற்றான்

நான்  உற்ற  துன்பங்கள்  எல்லாம்  நயம்பட  எடுத்து  சொல்லி

            நம்பி மனம் வருத்தம் இன்றி  நாடி என்னை  வரப் பணித்தாள்             591

 

சீவகநம்பி  ஒருவனன்றி  செய்தி  வெளியே தெரிய  வேண்டாம்

            எவ்விடம்  நீர்  சென்றாலும்  யாரையும்  நம்ப  வேண்டாம்

மங்கையர்  தொடர்பை  நீக்கி  மனதினில்  உறுதி  கொள்வீர்  என்றாள்

            நால்வரும்  விசயை  வணங்கி  நம்  படை  எழுக  என்றார்கள்               592

 

அருவிகள்  கொட்டும்  மலையையும்  அடர்ந்த  பெருங்காடுகளையும்

            இருகரை  புரளும்  ஆறுகளையும்  இனிய  மலர்ச்  சோலைகளையும்

கடந்து  சென்ற  அவர்கள்  படை  கடைசியில்  ஏமமாபுரம்  வந்து

            நான்கு  காத  தூரத்தில்  நல்ல  ஆற்றங்கரையில்  தங்கின                     593

 

தோழர்கள்  நால்வரும்  கூடி  தூய  நன்  மணலில்  அமர்ந்து

            நம்பியை  நகரில்  காண்பதற்கு  நல்லதோர்  உபாயம்  ஆய்ந்திட

பதுமுகன்  பணிவுடன்  சொன்னான்  பசுக்களைக்  கவர்ந்தோமாகில்

            சீவகன்  இந்நகரில்  இருந்தால்  சீற்றத்தில்  படையுடன்  வருவான்  594

                    

நால்வரால்  அனுப்பப்பட்ட  ஒற்றர்கள்  மூவர்  வந்தனர்

            நகரினில்  நடந்த  நிகழ்வை  நயம்பட  எடுத்து  உரைத்தனர்

வளையசுந்தரம்  என்னும்  ஓர்  வளமிக்க  பட்டத்து  யானை

            ஐநூறு  பிடிகள்  இடையே  அரும்  கருங்குன்றாய்  வாழும்                      595

 

மும்மதநீர்  கண்கள்  சொரிய  முழுமதம்  கொண்ட  மயக்கத்தில்

            முகில்  மோதும்  இடியைப்  போல  முடிமன்னன்  வேழம்  பிளிர்ந்து

கட்டுத்தறிகளை  நொறுக்கி  கரு  உருளை நீர் தொட்டிகளை  பிளந்து

            கால்  சங்கிலிகளை  அறுத்து  கடும்  சினம்  கொண்டது  களிறு            596

 

கரியது  கழுத்துக்  கயிறை  பற்றி  களிறின்  மேல்  விரைந்து  ஏறி

            கரங்களால்  முதுகைத்  தடவி  “ அப்புது  அது  ஐ  ஐ “  என்று  கூற

வளையசுந்தரம்  யானை  அவனின்  வாய்மொழி  சொல்லுக்கேற்ப

            மகிழ்ச்சியில்  பணிந்து  நிற்க  மக்களும்  மகிழ்ந்து  கூவினர்               597

 

ஒற்றர்கள்  மூவரும்  சேர்ந்து  ஒன்றுபோல்  கூறி  சொல்

            ஒப்பற்ற  சீவகன்  நகரில்  உள்ளதை  உள்ளம்  அறிந்து

ஆநிரை  கவர்தல்  ஒன்றே  ஐயனை  காணும்  வழியென

            நால்வரும்  நகைத்துக்  கூறி  பரிகளைவகுத்து  நிறுத்தினர்                  598

 

எருதுடன்  பசுக்களைக்  கவர  எண்ணிய  அந்த  நாளில்

            சிறுபறை  துடியுடன்  ஒலிக்க  சங்குகள்  விண்வரை  முழங்க

வீரர்கள்  கவசம்  அணிந்து  வென்றிடும் களிப்பில்  மூழ்கி

            அணியென  திரண்டு  நின்றனர்  ஆநிரையை  கவர்ந்து  வர                599

 

அரசனின்  ஆநிரை  கவர  அதிர்வுடன்  சென்ற  படைகள்

            காற்றென குதிரைகள்  விரைய  கார்மழையாய்  அம்புகள்  வீச

பசுக்களை  வளைத்துப்  பிடித்து  பாங்குடன்  கவர்ந்து செல்ல

            இடையர்கள்  போரை  விட்டு  இயம்பிட  அரண்மனை  சென்றனர்     600

 

தப்பித்த  இடையர்  கூட்டம்  தடமித்தன்  தாள்  பணிந்து

            ஆநிரை  அத்தனையும்  ஒரு    அடங்கிடா  குதிரைக்  கூட்டம்

முழுமதியை  சூழ்ந்த  முகிலாய்  முற்றிலும்  கவர்ந்து  செல்ல

            மீட்டிட  வேண்டும்  என்று  ஆயர்கள்  அலறினர்  அங்கு                           601

 

நால்வகை  படையும்  அணிவகுக்க  நகரமே  அதிர்ந்து  நிற்க

            நம்பியும்  நன்மொழி  பகர்ந்தான்  நாடாளும்  மன்னனிடம்

ஆநிரையை  மீட்டு  வருவேன்  அவர்கள்  நின்  அடி  தொழுவார்கள்-என

            திண்ணிய  தேரில்  ஏறி  மின்னலாய்  விரைந்தான்  நம்பி                      602

 

சீவகனின்  சீரிய  தேரை  தூரத்தில்  பார்த்த  பதுமுகன்

சச்சந்தன்  மகன்  சீவகனை  சந்திக்க  வந்தோம்  என

ஓலையில்  சீட்டு  எழுதி  ஒரு  அம்பினில்   பொதிந்து  கட்டி

            சீவகன்  தேரில்  விழும்படி  எய்திட்டான்  அந்த  அம்பை                         603

 

கடிதத்தை  படித்த  சீவகன் எதிர்த்தவன்  பதுமுகன்  என்று

            தேரினில்  வெண்துகில்  கட்டி  தடுத்திட்டான்  தன்  படையை

அரசன்  மகன்  என்று  அறிந்த  அவன்  தோழர்கள்  அனைவருமே

            காலடி  வீழ்ந்து  வணங்கி  கண்களில்  நீர்  சொரிய  நின்றனர்             604

 

நண்பர்கள்  அனைவரையும்  நகருக்குள்  அழைத்து  சென்றான்

            மன்னனை  கண்ட  நண்பர்கள்  மலரடி வீழ்ந்து  வணங்க

சீவகன்  எடுத்து  சொன்னான்  சிங்க    நிகர்  நண்பர்கள்  என்று

            கொற்றவன்  மகிழ்ந்து  சொன்னான்  கனகமாலை  காண்பீர்  என்று 605

 

வானுலகு  இதுவே  என்று  விழியகல  நோக்கும்  நகரின்

            இந்திரன்  ஒத்த  மன்னன்  மகள்  எழில்  மங்கை  கனகமாலைக்கு

நண்பர்கள்  என்று  சொல்லி  நால்வரையும்  அணைத்து  கூற

            ஆநிரை  கவர்ந்த  இவர்க்கு  அறுசுவை  விருந்தளிப்பேன்  என்றாள்  606

 

அந்தண  நாண்பன்  புத்திசேனன்  நம்பி  தனித்திருந்த  வேளையில்

            காந்தர்வதத்தைத்  தந்த  கடிதத்தை சீவகனுக்கு  தந்தான்

குண்டல  முத்திரையிட்டு  குழலுக்குள்  இருந்த  ஓலையை

            தன்  கை  தவிப்புடன்  பிரிக்க  தலைவன்  முகம்  மலர  படித்தான்     607

 

என்  தந்தை  கழலுவேகன்  எல்லையில்லா  பொருளனைத்தும்

            தரன்  மூலம்  அனுப்பி  வைத்தார்  தனியே  அவனிடம் நான் கூறியது

ஏழு  மாதங்கள்  கழிந்த  பின்னர்  என்னவர்  தோழர்களுடன்

ஏமமாபுரத்தை  விட்டு  நீங்கி  ராசமாபுரம்  வருவார்  என்று                  608

 

கட்டியங்காரன்  உங்களை  கைது  செய்தான்  என்னும்  பழி

            வெள்ளிமலை  பரவுவதற்கு  அஞ்சி  வேறு  பல  அவனிடம்  சொல்லி

என்  சிரம்  தொட்டு  வாக்கு கேட்டு  செல்லும்படி  செய்து  விட்டேன்

            அரசுரிமை  பெறுதல்  இன்றி  அணங்குகளை  மணத்தல்  பழியே       609

 

என்  தங்கை  குணமாலையும்  இரவெது  பகலெது  என  அறிந்திடாமல்

            உள்ளமும்  உடலும்  வருந்த  உயிர்  பிழைப்பாளோ  அறியேன்

என்னுள்ளே  நீர்  இருப்பதால்  என் மனம்  வருந்தவில்லை – என

            காவல்  மந்திரம்  ஒன்று  எழுதி  கடிதத்தை  முடித்து  வைத்தாள்          610

 

மந்திரத்தை  மனனம்  செய்தான்  மனதிலே  பதியச்  செய்தான்

            சிந்தையில்  மகிழ்வு  கொண்டு  சிநேகிதரை  நாடிச்  சென்றான்

மன்னன்  மகன்  நான் தான் என்ற  மறைந்திருந்த   ரகசியத்தை

            எப்படி  நீவீர்  அறிந்தீர் எனக்கு  அதை  கூறுவீர்  என்றான்                 611            

                      

தண்டகாரணியம்  வனத்தில்  தவநெறி  கொண்ட  அம்மையார்

            உள்ளத்தில்  உன்னை  நிறுத்தி  உன்  வாழ்வு  சிறக்க  எண்ணி

புறத்தினில்  துறவு  பூண்டு  புத்திர  சோகத்தில்  வாழும்

            சச்சந்தன்  மனைவியான  விசையையிடம்  வணங்கி  பெற்றோம்     612

 

ஈன்றவள்  இருக்கின்றாள்  என்ற  செய்தியே  நெஞ்சம்  நிறைய

            பெற்றவள்  இருக்கும்  திசையை  பலமுறை  தொழுது  வணங்கி

தீவினை  இனி  எனக்கு  இல்லை  தெய்வம்  நமக்கு  அருளும்  என்று

            தடமித்தன்  மனைக்கு  சென்றான்  தாங்கொணா  மகிழ்ச்சியாலே   613

 

குருகுலத்  தலைவன்  என்ற  உண்மையை  அறிந்த  மன்னன்

            அவன்  நிலை  அறிந்து  ஆய்ந்து  அனுப்பிட  விழைவு  கொண்டான்

நம்பியும்  கனகமாலைக்கு  நயம்பட  எடுத்து  சொல்லி

            அனைவரையும் தொழுது எழுந்து அன்னையை காண விரைந்தான் 614

 

                                    கனகமாலையார்  இலம்பகம்  முற்றிற்று.


 8. விமலையர்  இலம்பகம்.

 

சீவகன்  குதிரையில்  செல்ல  நந்தட்டன்  பதுமுகனை  அழைத்தான்

            புழுதியில்  புதைந்த  மாணிக்கத்தை  புழுதி  போக்கி  ஒளிரச்செய்தீர்

அவ்வொளியை  மறைத்து  காப்பது  அனைவரின்  கடமையாகும்

            அப்படி  செய்தீரானால்  உம்  தலைமுறை  தழைத்து  வாழும்               615

 

 

வணங்கிடும்  கையின்  உள்ளே  வதைத்திடும்  பொருள்கள்  இருக்கும்

            வடித்திடும்  கண்ணீர்  தன்னில்  வஞ்சிக்கும்  எண்ணம்  இருக்கும்

அணிந்திடும்  அணிகலங்களில்  ஆவிபோக்கும்  ஆயுதம்  இருக்கும்

            அனைத்தையும்  ஆய்ந்து  அறிந்து  அழிவினைப்  போக்கவேண்டும்  616

 

 

சந்தனம்  அணிகள்  ஆடைகளை  சக்கரவாக  பறவை  முன்  காட்டி

            தூய்மையை  அறிந்த  பின்னர்  சுகங்கொள்ள  அணிய  வேண்டும்

காய்  கனி  உணவு  நீரையெல்லாம்  கருங்குரங்கிற்கு  இட்டு  ஆய்ந்து

            கலங்கமில்லை  என  அறிந்து  கவனமுடன்  உண்ணவேண்டும்           617

 

மைதீட்டும்  சிறிய  கோலால்  மாய்ந்திடும்  சிறிய  நாகம்

            மலையொத்த  களிறு  தனை  மாய்த்திடும்  தன்  பற்களாலே

பஞ்சினும்  மிக  மெல்லிய  பகையினை  அறிந்தும்  விட்டால்

            நீருபூத்த  நெருப்பாய்  கனிந்து  நம்மையே  நின்று  கொல்லும்            618

 

நம்பியை  பிரியாது  இருக்க  நாம்  பல்லிபோல்  பழக  வேண்டும்

            நாடியதை  தந்து  காக்க  நலம்  தரும்   தாயாக  வேண்டும்

ஐம்புலன்  அடக்கம்  முறையில்  ஆமைபோல்  அடங்க  வேண்டும் 

            அறிவுரை  வழங்க  வேண்டின்  பகைவராய்  இடித்து  கூறவேண்டும் 619

 

சந்தன மரத்தோப்புகளும்  இடையே  தக்கோல  மரங்களுடன்

            திமிக  மரங்கள்  சூழ்ந்து  கற்பூரம்   புனுகுடன்  கலந்து

  காதம்  நான்கு  தொலைவு  வரை  கலந்து  நறுமணம்    வீசும்

            காட்டினில்  விரைந்து  சென்றனர்  காவலர்கள்  பின்  தொடர              620

 

மலைகளில்  மான்கள்  ஆட  மாணிக்க  மணிகள்  உடைய

            சிதறிய  சிறு பொடிகள் எல்லாம்  செந்நிறமாய்  மரங்களில்  படிய

கற்பக  விருட்சம்  போல  காட்டினில்  மரங்கள்  ஒளிர

            காட்சியை  காணா  நெஞ்சனாய்  தாயினை  காண  விரைந்தான்      621

 

கூகை  கொடிகள்  படர்ந்து  கோட்டம்  குங்கும  மரங்கள்  ஆட

            வெண்பனி  உருகி  பெருக  வெள்ளமாய்  நதிகள்  பாய

சந்தன  மரத்தின்  காற்றும்  சாய்ந்தாடும்  மயில்கள்  கொண்ட          

துறவியர்  வாழும்  சோலையில்  தோழருடன்  தங்கினான்  நம்பி        622

 

விசயை  மகன்  என்ற  விஷயம்  வெளியினில்  தெரியாதிருக்க

            அண்மையில்  இருந்தவர்களை  அகன்றிட  செய்தான்  அண்ணல்

பதுமுகனை  பரிவுடன்  அழைத்து  பாசத்தால்  தாயைக்காண

            ஏற்றதொரு  காலத்தை  நீ  அறிந்து  எனக்கு  சொல்வாய்  என்றான்    623

 

விசயமாதேவி  மனமது  கண்டது  விடியலில்  ஒரு  நற்கனவு

            இடது  கண்  இமைகள்  துடிக்க  இருந்த  பல்லியும்  பலன்  சொல்ல

சீவகன்  நம்பி  வருவானோ  என்று  சித்தத்தில் ஓர் எண்ணம்  தோன்ற

            சீவகன்  வந்துள்ளான்  என  பதுமுகன்  கூறி  வணங்கினான்                624

 

அன்னையின்  விழிகள்  இரண்டிலும்  ஆனந்த  மகிழ்ச்சி  பொங்க

            எங்குள்ளான்  என்மகன்  என்று  எல்லையில்லா  அன்பால்  கூவ

இங்கு  தான்  உள்ளேன்  என  இருகரம்  குவித்து  வணங்கி

            தாயின்  அடிகளில்  விழுந்தான்  தாயவள்  தாங்கி  அணைத்தாள்      625

 

வாலிப  வயதை  அடைந்தும்  மழலையாய்  மகனை  நினைத்து

            மார்புடன்  தழுவிக்  கொண்டாள்  மயங்கிடும்  தாய்மை  நெஞ்சால்

இடுகாட்டில்  உன்னை  விட்டேன்    சூழ்ந்த  என்  தீவினையாலே

            எனைக்  காண  வந்ததனால்  என்  தவம்  வென்றதென்றாள்                 626

 

மயில்  ஒன்று  தன்  சிறகுகளால் குஞ்சுகளை  தழுவுதல்  போல

            விசயை  அவள்  தழுவிக்  கொண்டாள்  சீவகனையும்  நந்தட்டனையும்

ஆர்த்திடும்  தாய்மையுடனும்  அலையாய்  பெருகும்  பாசத்துடனும்

            அனைவருக்கும்  விருந்தளித்து  ஆறுநாளும்  மகிழ்ந்தது  தாய்மை    627

 

மக்களின்  வருவாய்  தன்னில்  ஆறில்  ஒரு  பங்கு  பெறலும்

            அணைந்திடா  பகைமை  தன்னை  அடிமனதில்  பொருத்துதலும்

பகைவர்கள்  இருவருக்குள்ளும்  பகையினைத்  தூண்டுதலும்

            பகைமுற்றி  போர்செய்ய  வைத்தல் பாராள்வோர்  தந்திரமாகும்      628

 

ஒற்றரை  பிரிதோர்  ஒற்றரால்  உண்மையை  ஆய்ந்து  தெளிதலும்

            கற்ற  நல்  அமைச்சர்களை  கண்கள்  போல்  போற்றுதலும்

மந்திரி  தந்திரி  சுற்றங்களை  மலையினை  போல்  பெருக்குதலும்

            வெற்றியை  விரும்பும்  வேந்தனுக்கு  வேதத்தின்   நல்பாடமாகும்      629

 

படை  வலிமை  பெருகுவதற்கு  பொருளினைப்  பெருக்க  வேண்டும்

            அப்படை  பெரும்  வன்மையாலே  அடையலாம்  நாடுகள்  பலவும்

அந்நாட்டினால்  செல்வம்  கிட்டும்  நம்  நாட்டின்  ஆற்றல்  பெருகும்

            அரசனுக்கு  வெற்றி  என்றும்  அறத்தோடு  செல்வம் பெருகும்              630

 

சச்சயந்தன்  பெற்ற  செல்வா  நம்  நாட்டை  நாம்  இழந்தோம்

            நம்  நிலை  வளர்வதற்கு  செல்வத்தில்  குறைந்து  உள்ளோம்

குணமுள்ள  அமைச்சர்கள்  இல்லை  குலத்தினில்  தாழ்ந்துள்ளோம்

            இந்நிலையில்  யாம்  இருக்க  நின்  துணிவு  யாது  என்றாள்                  631

 

கட்டியங்காரனான  பாம்பு  நந்தட்டன்  கருடனால்  அழியும்

            ஊழித்தீ  போன்ற  பதுமுகன்  சக்கரப்  படை வெல்லும் என்றான்

சீவகா  உன்  மாமனைக்  கண்டு  துணயுடன்  அவன்  ஆணை  கேட்டு

            பகையினை  கொன்று அழித்து பலன்களைப் பெறுவாய் என்றாள்    632

 

சீவகன்  அன்னையை  தொழுது  சென்றிடுவீர்  மாமன்  இல்லம்  என

            நூற்றம்பது  மகளீர்  சூழ  விசயை  புறப்பட்டாள்  பொழிலை  விட்டு

பெருகிடும்  அருவிகள்  கடந்து  புரண்டோடும்  ஆறுகள்  தாண்டி

            வயலோடு  தோட்டங்கள்  சூழ்ந்த  ஏமாங்கத  நாட்டை  அடைந்தார்   633

 

மலர்கொடி  மரங்கள்  நிறைந்த  மணம்  வீசும்  பூஞ்சோலையில்

            சீவகன்  படைகள்  தங்கியது   சோர்வினை  போக்கிக் கொண்டது

ராசமாபுரம்  வளத்தை  ரசிக்க  நெஞ்சத்தில்  எண்ணம்  கொண்டு

            ஐங்கணையான் வடிவம் தோற்க அந்நகரினில்  நுழைந்தான்  நம்பி  634

 

மான்  விழி  கொண்ட  மங்கை  பால்  வண்ண  மேனி  பாவை

            கார்குழல்  கலைந்து  பரவ  மார்பணி  முத்துக்கள்  ஒளிர

துடி  இடை  மேகலை  ஒலிக்க  தொங்கிடும்  குண்டலம்  ஆட

            ஐந்து  பந்துகள்  கைகளில்  சுழல  ஆரணங்குகள்  ஆடினர்  பந்து        635

 

மாலையில்  மறைந்த  பந்துகள்  மலர்  கைகளில்  வந்து  சேர

            கூந்தலிடம்  சென்ற  பந்துகள்  குளிர்ந்த  மதி  முகத்தில்  நிற்க

தலையிடம்  வந்த  பந்துகள்  தன்  மார்பின்  மாலையை  தொட

            மாலையின்  மேல்  உள்ள  பந்துகள்  மங்கையர்  விரல்  கொண்டன   636

 

பந்தாடும்  பாவை  விமலையின்  பந்தொன்று  எல்லைத்  தாண்டி

            தெருவினில்  விழுந்து  ஓடி  சீவகன்  முன்னே  நிற்க

மின்னிடை  ஒடியும்  வண்ணம்  மேகலை  ஒலியது  சிணுங்க

            மண்ணிலே  விழுந்த  பந்தை  மலர்கொடியொன்று  நோக்கி வந்தது 637

 

பந்தினை  மறந்து  விட்டாள்  பழம்பூ  பசலைக்  கொண்டாள்

            நாணத்தை  நழுவ  விட்டாள்  நற்சிலைப்  போல  நின்றாள்

அண்ணலின்  அழகைக்  கண்டாள்  அகம்  எல்லாம்  தீயைப்  பெற்றாள்

            கண்ணில்  அவன்  வடிவம்  தங்க  காதல்  நோய்  தாக்கி துவண்டாள் 638

 

அண்ணலும்  அவனை  நோக்க  அவள்  விழி  அவனைத்  தாக்க

            பற்றிய  காதல்  நோயோ  பகடை  போல்  இடையே  உருள

மாந்தளிர்  போன்ற  விமலை  மறுபடி  பார்த்து  செல்ல

            சாகரதத்தன்  கடையருகே  சலிப்புடன்  நின்றான்  சீவகன்                    639

 

சாகரதத்தன்  கடைக்குள்  தேங்கிய  பொருட்கள்  எல்லாம்

            பசும்பொன்  ஆறு  கோடிக்கு  புரண்டிட்ட  விற்பனை  கண்டு

சீவக நம்பி  அருகில்  சென்று  செல்வம்  தந்த  திருமகனே

            செல்வோம்   இல்லம்  என்றான்  சீவகனும்  பின்னே  சென்றான்         640

 

ஐயனே  நான்  ஒரு  வணிகன்  சாரதத்தன்  என்பது  என்  பெயர்

            என் இல்லத்தை  இனிமை  ஆக்க  என்  மனைவி  கமலை  ஆனாள்

அழகினில்  திருமகள்  போல்  அளித்திட்டாள்  பெண்  மகவை

            அகத்துக்கு  ஒளியைத்  தந்தாள்  அவள்  பெயர்  விமலை  ஆகும்          641

 

விமலை  உதித்த  நாள்  முதல்  விற்கவில்லை  கடையில்  பொருள்கள்

            குளத்திலே  தேங்கிய  நீராய்  கொள்வாரின்றி  குவிந்தது  கடையில்

ஜோதிடர்  கணித்து  சொன்னார்  விற்றிடும்  கடை  பொருளெல்லாம்

            விமலைக்கு உரியவன் வந்து உன் கடை அருகில் நின்றால் என்று      642

 

கணித்திட்ட  நிமித்திகன்  உரைபோல்  கடலளவு  செல்வம்  பெற்றேன்

            கன்னியை  உனக்குத்  தருவேன்  கனிவுடன்  மணம்  கொள்  என்றன்

மங்கல  இசைகள்  முழங்க  மறையோர்கள்  வேதம்  ஓத

            விமலையைக்  கைபிடித்தான்  வீரக்கழலோன்  சீவக  நம்பி                  643

 

சிலம்பது  சிரித்து  ஒலிக்க  சிறுயிடை  மேகலை  சிதறி  சிலுங்க

`           கார்கூந்தல் கலைந்து  சரிய  கனியொத்த  தனங்கள்  தளர

நாற்கரங்கள்  நாகமாய்  பிணைய  இருவுடல்  ஓர்  உடலாய்  காண

            இசைத்திடும்  படுக்கை  ஒலியில்  இணைந்தனர்  இருவரும்  அங்கே 644

 

கனிகளில்  பிழிந்த  மதுவை  கிண்ணத்தில்  ஊற்றி  எடுத்து

            விமலைக்கு  சீவகன்  ஊட்ட  விரும்பியே  அவளும்  பருக

காமத்தின்  கடலில்  மூழ்கி  களைத்துப்  போய்  கண்ணயர்ந்தாள்

            சீவகன்  அவளை  எழுப்ப  விமலையும்  கண்  மலர்ந்தாள்                     645       

                       

விமலையின்  மாலைகள்  திருத்தி  சந்தனத்தால்  மார்பில்  எழுதி

            செங்காந்தள்  அரும்பு  போன்ற  விரல்களை  தன்  கையால்  பற்றி

சோலையில்  என்  தோழர்களை  சந்தித்து  திரும்புவேன்  என்று

            சொன்னதைக்  கேட்ட  விமலை  கொடியென  துவண்டாள்  அங்கு     646

 

விமலையை  சீவகன்  அணைத்தான்  விழிநீரை  தன் விரலால்  நீக்கி

            கண்ணீரில்  கலைந்த  மையை  கரத்தினால்  பொருந்தச்  செய்து

ஆறுதல்  வார்த்தை  பலவும்  கூறி  அவளது  மனத்  துன்பம்  போக்கி

            குன்றனைய சீவகன் சென்றான் கொடியான விமலை சோர்ந்தாள்   647

 

 

                                    விமலையார்  இலம்பகம்  முற்றிற்று


 தொடர்ச்சி   Click here

No comments:

Post a Comment