பாவ பாஹுடம் - 1




 பாவ பாஹுடம்


தொகுதி 1
(பாடல் 1 - 90)

அகவுணர்வு விளக்க நூல் 


ஆசாரியர் குந்த குந்தர் அருளியது

வழிகாட்டுதலும் வாழ்த்தும்;  மிகுபணிவுக்குரிய,   ஆர்ஜவசாகர் முனிவர்

     தமிழ் விருத்தியுரை; சுல்லக் ஸ்ரீ ஆதிசாகர்ஜி மகராஜ்



வெளியீடு

ஸ்ரீ சுருதகேவலி பத்ரபாகு சுவாமி சேவாதளம்
ஸ்ரீ விசாகாசாரியர் தப நிலையம்
குந்த குந்தர் நகர்
604 505.


வாட்ஸ்அப் பில் தினப்பதிவாக அஞ்சல் செய்தது.
G. துரைராஜ்,செய்யாறு  அவர்கள்.  மிக்க நன்றி

         ******

    ஓம் நம: சித்தேப்யா:


    மங்கல நுழை வாயில்,

     உயிர்கள் தொடக்கமற்ற காலமாகத் தன் இயல்பை அறியாமல் பிறவியில் உழன்று வருகிறது. தன்னைப் பிற பொருளோடு சார்த்தியே அறிந்து கொள்கிறது.அதனால், தான் துன்பமில்லா இன்பம் அடையவேண்டும் என்ற உணர்வுடன் அது உழல்கிறது. தன்னை அறியாத அறியாமை இருப்பதால் இன்பம் வேண்டி அது செய்யும் முயற்சி எல்லாம் துன்பமாகவே முடிகிறது. இன்ப வேட்கை ஒருபுறம், துன்ப அனுபவம் மற்றொரு புறம். நோய் உடலில் மிகுந்து ஒருபகுதியில் காணப்படும்போது மற்றொரு பகுதியில் உள்ள நோயின் அளவு/ வேதனை குறைந்து உள்ளது போல ஓர் னுபவம் செய்கிறது. அதாவது துன்பங்களில் ஏற்றத்தாழ்வு கற்பனை செய்து ஒன்றைத் துன்பமாகவும் மற்றொன்றைச் சாந்தியாகவும் கற்பனை செய்கிறது. அதேபோல புலன் இன்பங்களல் அது இன்பத்தையும் அது இல்லாதபோது துன்பத்தையும் கற்பனை செய்கிறது. புலன் இன்பம் தணிந்துள்ள நோய் என்பது அதற்கு விளங்கவில்லை. ஆசாரியர் பெருமக்கள் அருளுணர்வோடு பிறவி நிலையில் துன்பம் உண்டு, அதில் இன்பம் என்பது கற்பனை மட்டுமே என்று சுட்டிக்காட்டி உண்மையான இன்பம் - பேரின்பம் - உயிரிலேயே உள்ளது, அது வெளியே இல்லை என்று தெளிவு செய்கின்றனர்.

----------------------------------------------- 

"பாவ பாஹடம்" எனும் இந்த நூல் உயர் இன்பத்தை அடைய வழிகாட்டுகிறது.  தன்னை அறிந்ததாகக் கருதி உயர் இன்பத்தை அடைய துறவு ஏற்கின்றது உயிர். ஆனால் தன் துறவுத் தோற்றமே அந்த இன்பத்தை அடையச் செய்துவிடும் என்று அது நம்புகிறது. எனவே ஆசாரியர் துறவுத் தோற்றம் வேறு; துறவு உணர்வு வேறு என்று பிரித்துக் காட்டுகிறார். துறவியின் உண்மையான அடையாளம் அகவுணர்வே; புறத்தோற்றம் அன்று என முதலிலேயே தெளிவுபடுத்தி விடுகிறார் (காதை 2) துறவி அகப்பற்று. புறப்பற்றுகளைப் பற்றித் தெளியாத வரை பற்றற்ற நிலையை அடையமுடியாது. அதனால் ஆசாரியர் அகப்பற்று நீங்காதவரை புறப்பற்றை விடுதல் பயனில்லை என்கிறார்.

        எட்டுப் பாகுடங்களில் இந்தப் பாகுடம் தனிச் சிறப்புடையது. ஆசாரியர் துறவியை மையமாக வைத்தே எல்லா நூல்களையும் ஆக்கியுள்ளார். உண்மையான துறவு நிலையை விளக்குவதே அவரது நோக்கமாகும். பகவானுடைய தோற்றம் ஒன்றே உண்மையான தோற்றம் என வற்புறுத்தும் ஆசிரியர் அத் தோற்றத்தை ஏற்றும் அகவுணர்வு கொள்ளவில்லை யெனில் அந்தத் தோற்றம் வீணானது மட்டுமல்ல; அதனால் அது நாற்கதியில் உழல்கின்றது என்று காட்டுகிறார். முனித்தோற்றம் எடுத்துக் கீழ்ப் பிறவியில் உழன்ற முனிவர் வரலாற்றை எடுத்துக் காட்டுகிறார். ( காதைகள் 45- 50). அகவுணர்வு இல்லாமல் புறத் தோற்றம் பயன் இல்லை என்பதோடு அத் தோற்றத்தை மாசு படுத்துவதால் உயிர் அடையும் மிகு துன்பங்களை நூல் விரிவாகப் பேசுகிறது.

         இந்த நூல் 165 காதைகளைக் கொண்டுள்ளது. ஆனால் சமற்கிருத உரையில் 163 காதைகள் மட்டுமே உள்ளன.

        துறவு ஏற்கும்போது அகவுணர்வே முதன்மை என்று குறிப்பிட்டு, அது இல்லாமல் துறவு ஏற்றல் கூடாது என்கிறார். துறவுக்கு மட்டுமல்ல, எல்லா முக்தி நெறியாளருக்கும் இது பொருந்தும். முக்தி நெறியில் செல்லும் ஒவ்வொரு அடியிலும் இந்த அகவுணர்வு நிலையாக இருத்தல் வேண்டும். இந் நூல் அதனையே சுட்டுகிறது.

           முக்தி நெறியில் விருப்பம் உடையோர் இந்த உணர்வை உள்நிறுத்தி நூலுள் மங்கல நுழைவைச் செய்யலாம். நூலில் நுழைக ! மங்கள உணர்வு உள்ளத்தில் நுழைய விடுக!!!

           ஓம் சாந்தி.

குறிப்பு: இது ஆகமம். இதனை அதற்குரிய பணிவோடு ஆளுக. பயன் கொள்க. ஒவ்வோர் முறையும் ஓதும்போது நூல் முடிக்கும் வரை ஏதேனும் பொருளை விலக்கி வையுங்கள். இது மங்கல உணர்வு.

----------------------------------------------- 



ஆகமம் படிக்கும் முன் கூற வேண்டிய,

      அருகர் வாழ்த்து

   ஓங்கார பிந்து சம்யுக்தம்
நித்யம் த்யாயந்தி யோகின |
 காமதம் மோக்ஷதம் சைவ
   ஓங்காராய நமோ நம: ||

     அவிரள சப்த கனௌக
ப்ரக்ஷாளித ஸகல பூதல மல களங்கா |
     முனிபிருபா ஸித தீர்த்தா
ஸரஸ்வதி ஹரது நோ துரிதான் ||

 அஞ்ஞான திமிராந்தானாம்
ஜ்ஞானாஞ்ஜன சலாகயா |
  சஷுருன் மீலிதம் யேந
  தஸ்மை ஸ்ரீகுருவே நம: ||

ஸ்ரீ பரம குருவே நம: பரம்பராசார்ய
       ஸ்ரீ குருவே நம:

ஸகல கலுஷ வித்வந்ஸகம் ஸ்ரேயஸாம் பரிவர்தகம், தர்ம சம்பந்தகம், பவ்ய ஜீவமந: ப்ரதிபோதகாரக மிதம் சாஸ்த்ரம் ஸ்ரீ பாவ பாஹுடம் நாமதேயம் அஸ்ய மூல க்ரந்த கர்த்தாரா: ஸ்ரீ சர்வக்ஞதேவா ஸ்துதத்தர க்ரந்த கர்த்தாரா: ஸ்ரீ கணதர தேவா: ப்ரதிகணதரதேவாஸ் தேஷாம், வசோ அனுஸார மாசாத்ய ஸ்ரீமத் குந்தகுந்த ஆசார்ய விரசிதம்

  மங்கலம் பகவான் வீரோ
மங்கலம் கௌதமோ கணீ |
  மங்கலம் குந்த குந்தாத்யோ
ஜைன தர்மோஸ்து மங்கலம் ||

  ஸர்வ மங்கல்ய மாங்கல்யம்
ஸ்ரவ கல்யாண காரகம் |
 ப்ரதானம் ஸர்வதர்மாணாம்
ஜைனம் ஜயது ஸாஸனம் ||

ஸ்ர்வே ஸ்ரோதார ஸாவதானதயா ஸ்ருண்வந்து ||.


**************************************

1.
ணமிஊண ஜிணவரிந்தே ணரஸுர பவணிந்த வந்திஏ ஸித்தே |
வோச்சாமி பாவபாஹுட மவஸேஸே ஸஞ்ஜதே ஸிரஸா ||

(பதவுரை) ணர - மனிதர், ஸுர - தேவர், பவணிந்த -- பவண இந்திரன் ஆகியோர், வந்திஏ - வணங்குகின்ற, ஜிணவரிந்தே - தீர்த்தங்கரர், ஸித்தே - ஸித்தர், அவஸேஸே ஸஞ்ஜதே - பிற ஆசாரியர், உவாத்தியாயர், ஸாது என பஞ்ச பரமேட்டிகளையும், ஸிரஸா - தலையால், ணமிஊண - வணங்கி, பாவபாஹுட - பாவ பாகுடம் நூலை, வோச்சாமி - உரைப்பன், என்றவாறு.

(கருத்துரை)  அரசரும் தேவேந்திரரும் பவணேந்திரரும் வணங்கும் தீர்த்தங்கரர், ஸித்தர், ஆசாரியர், உவாத்தியாயர், ஸாது என ஐங் குரவரையும் தலையால் தாழ்ந்து 'பாவ பாஹுடம்' நூலைச் சொல்லுவன்.

(விளக்கவுரை)  ஆசாரிய தேவர் ஐங்குரவரையும் தொழுது நூலைத் தொடங்குகிறார். இதனை மங்கல வாழ்த்து என்பர். நூலைத் தொடங்குங்கால் மங்கல வாழ்த்துக் கூறுதல் நூலறிந்தார் மரபாகும். என்னை?

' வழிபடு தெய்வம் வணக்கம் செய்து
மங்கல மொழிமுத லாக வகுத்தே
எடுத்துக் கொண்ட இலக்கண இலக்கியம்
இடுக்கண் இன்றி இனிது முடியும்'

என்ப ஆகிலின்¹

    தூய ஆன்மாக்களைத் தொழுது தம் நூலைத் தொடங்கியுள்ளார். இதனால் இடுக்கண் இன்றி நூல் இனிது முடியும் என்பது கருத்து. ஏனெனில், இந்த ஐங்குரவர் வடிவில் ஆன்மாவின் தூய குணங்கள் போற்றப்பட்டுள்ளன. நற் குணங்களைப் போற்றும் உணர்வு நல்லுணர் வாகும். நல்லுணர்வால் நற்பேறு அமைகிறது. அதனால் இடையூறுகள் விலகிப் போகின்றன என்பதாம் ; என்னை?

'அலகுஇ லாஅறி வின்கண் அடங்கிவந்து
   உலகெ லாம்உள் அடங்கிய உன்னைஎன்
மலம்இ லாத மனத்திடை வைத்தபின்
   அலகி லாமையது என்கணது ஆயதே'

   எனத் தூய குணங்களைப் போற்றும் உணர்வு தூய்மை அடைதலைச் சுட்டுதலைக் காண்க.²

        ஐங்குரவரை அரசரும் தேவ இந்திரரும் தொழுகின்றனர் எனக் குறிப்பிட்டுள்ளார் ஆசாரியர். அது ஐங்குரவர் சிறப்பினைச் சுட்டுகிறது. பிறவி நிலையில் பெரும் இன்பத் திளைப்பில் சிறந்து இருப்போர் தேவர் இந்திரரும், பேரரசரும் முதலான நூறு பேர் ஆவர். அவர் - பவண இந்திரர் 40, வியந்திர இந்திரர் 32, கல்ப இந்திரர் 24, சோதிட தேவ இந்திரர் 2, பேரரசர் 1, விலங்கு இந்திரர் (சிங்கம்) 1.  இவரை நூறு இந்திரர் என்பர்.இவரால் தொழப்படும் சிறப்புடையவர் ஐங்குரவரும் என்பதாம். இவரினும் புலன் இன்பத்துய்ப்பு மிக உடையார் எவரும் இலர். எனினும், இவ் வின்ப வாழ்வு, 'சிறப்பின்று இவ்வாழ் வென்று'³ இவர் தொழுகின்றனர், ஐங்குரவரை. அத்துனைச் சிறப்புடையவர் ஐங்குரவர் என்பதாம்.

      இனி, இந்நூல் அக உணர்வின் தூய்மையை விளக்குகிறது. அருகரும், சித்தரும் தூய்மையின் தலைவரம்பைத் தொட்டவர். அத்தூய்மை அக ஒழுக்கத்தாலே அமைந்த தாகும். அக ஒழுக்கம் போற்றுபவர் ஆசாரியர், உவாத்தியாயர், சாதுக்கள். எனவே ஐவரையும் வணங்கியுள்ளார் ஆசாரியர். இது ஏற்புடைய இறையை வணங்கியதாம். என்னை? எடுத்துக்கொண்ட நூல் பொருட்டு ஏற்ப இவ் வாழ்த்து அமைந்துள்ளமையால் என்க.5

" வணக்கம் அதிகாரம் என்றுஇரண்டும் சொல்ல
சிறப்பு என்னும் பாயிரம் ஆம் "

      என்றதால் இவ் வாழ்த்து ஆசாரியர் யாத்த சிறப்புப் பாயிரம் ஆகும். 'ணமி ஊண' என்பது வணக்கம். 'வோச்சாமி பாவபாஹுடம்' என்பது அதிகாரம்.
----------------------------------------------------
1. நன்னூல் 55 மேற்கோள்
2. மேருமந்த்ர புராணம் -633
3. திருநூற்றந்தாதி-81
4. பாவபாகுட இந்தி உரை
5. திருக்குறள் பரிமேலழகர் உரை 1
---------------------------------------------------

2.
பாவோ ஹி படமலிங்கம் ண தவ்வலிங்கம் ச ஜாண பர மத்தம் |
பாவோ காரணபூதோ குணதோஸாணம் ஜிணா விந்தி ||

(பதவுரை)

பாவோ ஹி- அக உணர்வே, படம- முதன்மையான, லிங்கம்- அடையாளம், ச- மற்று, தவ்வ லிங்கம்- புற உடல் அடையாளத்தை, பரமதத்தம்- உண்மையானது என, ண ஜாண- கருதாதே, ஏனெனில், குண தோஸாணம் - குணம் குற்றம் இவற்றுக்கு, காரணபூதோ- காரணமாவது, பாவோ- அகவுணர்வே என்று, ஜிணா- அருகர், விந்தி- அருளுகிறார்.

(கருத்துரை)
    அகவுணர்வே முதன்மையான அடையாளம். உடல் தோற்ற அடையாளம் உண்மையானது என்று நீ கருதாதே! ஏனெனில், குணம் குற்றங்களுக்குக் காரணம் அகவுணர்வுதான் என்று அருகர் அருளுகிறார்.

(விளக்கவுரை)

       ஆசாரியர் அகவுணர்வின் விளைவைச் சுட்டுகிறார். அக  உணர்வு உயிரைச் சார்ந்தது. அது நிகழும் நிலைக்கு ஏற்ப உயிர் உயர்ந்த நிலையோ இழிந்த நிலையோ அடைகிறது. அகவுணர்வு குணமாக அமையும்போது அது தேவ, முக்தி நிலைகளை அடைகிறது. அவ்வுணர்வு குற்றமாக அமையும்போது நரக, விலங்கு போன்ற பிறவிச் சுழற்சிக்கு ஏதுவான இழிநிலையை அடைகிறது. அதனால் அகவுணர்வுதான் உயர்வுக்கும் தாழ்வுக்கும் அடையாளம் என்றார்.  ஆனால் புறத்தே கொள்ளும் அம்மண தோற்றம் முனிமைக்கு உண்மையான அடையாளம் அன்று எனச் சுட்டுகிறார்.

        துறவு நிலையில் அகவுணர்வும் புறத் தோற்றமும் இசைந்து அமைய வேண்டும். ஏனெனில் அகவுணர்வு கொள்ளும் நிலையைப் புறத்தோற்றம் புலப்படுத்துகிறது. அகவுணர்வு பற்றற்ற நிலையை உடையது. புறத் தோற்றம் பற்றுகள் இன்றி நின்று அவ்வுணர்வைக் காட்டுகிறது. அதனால் உண்மையான அடையாளம் அகவுணர்வே. புறத் தோற்றம் உண்மையான அடையாளம் அன்று. ஏனெனில் உயர்வையும் தாழ்வையும் ஆக்குவது அகவுணர்வுதான். புறத்தோற்றம் அன்று. முனிமை நிலையில் புறத்தோற்றத்தை உண்மையான அடையாளமாகக் கருத முடியாது என ஆசாரியர் சுட்டுகிறார். ஏனெனில் அகவுணர்வு கீழான (குற்ற) நிலையில் உள்ளபோதும் அல்லது உயிரின் உண்மை இயல்பை அறியாத போதும் புறத்தே பற்றுகள் அற்ற தோற்றம் அமைய முடியும். அதனால் அதனை உண்மை அடையாளமாகக் கருத முடியாது. ருத்திரனையும், அபவ்விய முனியையும் இங்கு இணைத்துப் பார்க்கலாம்.

    குணம் நற்காட்சி, நல்லறிவு, நல்லொழுக்கம் முதலான ஆகும். அதனால் உயிர் அடைவது தேவ,முக்தி நிலைகள்.
குற்றம் பொய்க்காட்சி, பொய்யறிவு , பொய்யொழுக்கம் முதலான ஆகும். அதனால் உயிர் அடைவது விலங்கு, நாரக நிலைகள்.
   இந்த குண, குற்றங்களுக்குக் காரணம் அகவுணர்வே (பாவமே) ஆகும்.

 ' என்றலும் எனதும் யானும்
      இவையென மயங்கிக் கீழ்நாள்
 நின்றியான் கதிகள் நான்கில்
    சுழன்ற னன்நெறி அறிந்த
 இன்றுநான் இவற்றின் நீங்காது
   ஒழிவனேல் என்கண் நீங்காது
 ஒன்றினால் ஒன்று நில்லாது
    ஒழிகஇத் தொடர்ச்சி என்றான்'

    என இப்பாடல் அகவுணர்வின் நிலையைச் சுட்டுதலைக் காணலாம்.*
-----------------------------------------------------
*மேருமந்த்ர புராணம் - 413
-------------------------------------------------------


************************************** 



3. பாவ விஸுத்தி ணிமித்தம் பாஹிர கந்தஸ்ஸ கீரஏ சாஓ |
பாஹிர சாஓ விகலோ அப்பந்தர கந்த ஜுத்தஸ்ஸ ||

(பதவுரை)
பாவ- அகவுணர்வு, விஸுத்தி- தூய்மை, ணிமித்தம்- பொருட்டு, பாஹிர- புற, கந்தஸ்ஸ- பற்றுகளை, சாஓ- நீக்குதல், கீரஏ- செய்யப்படுகிறது, ஆனால், அப்பந்தரகந்த- அகப்பற்று, ஜுத்தஸ்ஸ- கூடியிருக்க, பாஹிர- புறப்பற்று, சாஓ- விடுகை, விகலோ- வீணேயாகும்.

(கருத்துரை)
அகவுணர்வு தூய்மை வேண்டியே புறப்பற்றுகள் விடப்படுகின்றன. ஆனால், அகத்தில் பற்று வைத்துப் புறத்தே பற்று விடுதல் வீணே ஆகும்.

(விளக்கவுரை)
 அகப்பற்று அற்ற நிலையில் புறப்பற்று விலக்கப்படுதல் பயனுடையது என்கிறார்.

      குணமும் குற்றமும் அகவுணர்வால் அமைகிறது என முன்னே சுட்டினார். அந்த அகவுணர்வு குணமுடையதாக விளங்க அகப்புற பற்றுகள் அகல வேண்டும் என்கிறார்.  அகவுணர்வு தூய்மையில் விளங்குதல் என்பது பற்றுகள் அற்ற நிலையிலே ஆகும். பற்றுகள் அகப்பற்று, புறப்பற்று என கூறிட்டு கூறப்படும். இங்கே அகப்பற்று இல்லாதபோது புறப்பற்று விலக்குதல் பயனுடையது அன்று என்கிறார். அகப்பற்று பொய் நம்பிக்கை முதலாகப்  பதினான்கு வகையாகும். புறப்பற்று வீடு முதலாகப் பத்து வகையாகும். அக உணர்வு தூய்மை அடைய இப்பற்றுகள் ஒழிய வேண்டும். 

இங்கே ஆசாரியர் புறப்பற்றுகளை விடுவதற்கான நோக்கத்தைச் சுட்டுகிறார்.  அகவுணர்வு தூய்மை பெறும் பொருட்டே புறப்பற்று விடப்படுகிறது. புறப் பற்றுகளை விடுதல் என்பது அக நிலையில் தோன்றும் தெளிவின் வெளிப்பாடாகும். பற்றுகள் அற்ற தன் உயிரின் இயல்பைத் தெளிந்து உறுதி கொள்ளும்போது புறப்பொருள் ஆர்வம் விடுபடுகிறது. அதனால் அதனைத் தூய்மைக்கு ஏது என்று காட்டினார். புறப்பற்றுகள் விடுவது அடையாளம்.  அக நிலைத் தெளிவை அது காட்டுகிறது. ஆனால் அக நிலையில் அத் தெளிவு இல்லாமல் புறப்பற்றை விடுதல் தூய்மைக்கு ஏது எனக்கொண்டால் அது வீண் என்கிறார். ஏனெனில் புறப் பற்றுகள் நீக்கத்தால் அக உணர்வு தூய்மை அடைவது இல்லை. அது அகப்பற்றுகள் நீங்குதலால் அமைகிறது. அதனால் அந்த அகப்பற்று நீக்கம் இன்றி புறப்பற்றுகளை நீக்குதல் பயன் இன்று எனக் கருத வேண்டும்.

'வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்னெஞ்சம்
தான்றி குற்றப் படின்'

     என அகப்பற்று நீங்காமையால் புறத் தவ வேடம் பயன் இன்று எனச் சுட்டியுள்ளதைக் காண்க.*

*திருக்குறள்-272.

 ************************************** 



4. பாவரஹிஓ ண ஸிஜ்ஜஇ ஜஇ வி தவம் சரஇ கோடிகோடீ ஓ |
ஜம்மந்தராஇ பஹுஸோ லம்பியஹத்தோ கலியவத்தோ ||



(பதவுரை)

கோடி கோடீ ஓ - கோடானகோடி, ஜம்மந்தராஇ- பிறவிகள் தோறும், லம்பியஹத்தோ- தொங்கிய கையும், கலிய வத்தோ- ஆடை இன்றியும், பஹுஸோ- பல முறை, ஜஇ வி தவம் சர இ- தவம் செய்தாலும், பாவரஹிஓ- அகவுணர்வு இல்லான், ண ஸிஜ்ஜ இ - முக்தியை அடையான்.

(கருத்துரை)

     கோடான கோடி பிறவிகள் ஆடையின்றி நின்று தவம் பலமுறை செய்தாலும், அகவுணர்வு இல்லான் முக்தியை அடையான்.

(விளக்கவுரை)

       புற ஒழுக்கத்தால் முக்தியைப் பொருந்த முடியாது என்கிறார்.

        அகவுணர்வு பெறும் தூய்மையால் ஆகிறது முக்தி நிலை. அது நற்காட்சி, நல்லறிவு, நல்லொழுக்கம் நிகழ்வால் அமைகிறது.  ஆனால், அந்நிகழ்வு இல்லாது முனிவர் கோடானகோடி பிறவிகள்  ஆடையின்றி நின்று பலமுறை தவம் செய்தாலும் முக்தியை அடைய முடியாது. ஆசாரியர் 'தொங்கிய கைகளும்' 'அம்மண தோற்றமும்' கொண்டு தவம் இயற்றும் முனிவர் நிலையை இங்கே காட்சிப்படுத்துகிறார். இவை இரண்டுமே புற நிலைகள் - புறத்தார் அறியக் கூடிய நிலைகள். இந்தத் தவ நிலைக்கு அடிப்படையாக அமைய வேண்டியது உயிரின் தூய அகவுணர்வாகும். அந்த அகவுணர்வில் ஆர்வம் முதலானவற்றுக்கு இடமில்லை. அந்த மலினப்பட்ட அகவுணர்வுடன் ஆயிரமாயிரம் பிறவிகள் எடுத்துத் தவம் செய்தாலும் அந்த உயிர் பிறவியில் உழலுமே தவிர முக்தியைத் தொட முடியாது.

    ' போத பாகுடத்தில் ' முனிவர் தோற்றத்தைக் கூறும்போது, 'பிறந்த உடம்பு போன்ற தோற்றம், தொங்கிய கைகள், படை பூணாத சாந்த முத்திரை' என்று குறிப்பிடுகிறார். (கா-51). ஆயிரம் கோடி ஆண்டுகள் கடுந்தவம் செய்தாலும் நற்காட்சி இல்லார் முக்தியை அடையார் என ' தம்ஸண மக்கத்தில் ' குறிப்பிடுகிறார் (5). இங்கே அவற்றை இணைத்துப் பார்க்கலாம்.

     புறவொழுக்கம் எவ்வளவு சிறந்து இருந்தாலும், எத்தனை ஆண்டுகள் நீண்டு இருந்தாலும், தூய அகவுணர்வு இல்லாத போது அவற்றால் பயன் இல்லை.


************************************** 


5
பரிணாமம்மி அஸுத்தே கந்த்தே முஞ்சேஇ பாஹிரே ய ஜஇ |
பாஹிரகந்த்தச் சாஓ பாவ விஹூணஸ்ஸ கிம் குணஇ ||


(பதவுரை)

பரிணாமம்மி- அகவுணர்வு நிகழ்வு, ஜஇ யஅஸுத்தே- மலினப்பட்டு இருக்குமானால், பாஹிரே- புற, கந்த்தே- பற்றுகளை, முஞ்சேஇ- விடுதலால், பாவ- அகவுணர்வு, விஹூணஸ்ஸ- இழிந்தவருக்கு, பாஹிர கந்த்த- புறப்பற்று, சாஓ- விடுகை, கிம்- என்ன, குணஇ- செய்யும்.

(கருத்துரை)

அகநிலை மலினப்பட்டுள்ள போது, புற பற்றுகளை விடுதலால், அகவுணர்வு இழிந்தவர்க்கு அந்தப் புறப்பற்று விடுகை அம் முனிவருக்கு என்ன செய்யும் ? ஒன்றும் செய்யாது.

(விளக்கவுரை)

    அக நிலையில் வெகுளி முதலான உணர்வுகள் உள்ளன. அவை உள்ளபோது புறநிலையில் வீடு முதலான பற்றுகள் விடப்படுகின்றன. அவ்விடுகை (பற்றை விட்ட) முனிவருக்கு என்ன பயன் செய்யும் என வினா எழுப்பி விழிப்பூட்டுகிறார். வீடு முதலான பொருள்கள் விடப்படுகின்றன. உடை விடப்படுகின்றது. அப்பொருள்களில் இருந்து முனிவர் விலகியுள்ளார். இது புற நிலை. ஆனால் அகநிலையில் ஆர்வம் முதலான துவர்ப்புகள் உள்ளன.  அத் துவர்ப்புகள் தடைக் கற்கள். அவை உள்ளபோது அகவுணர்வு தன் மலின நிலையிலிருந்து விடுபடாது. அதனால் கருமத்தின் செறிப்போ, உதிர்ப்போ, நிகழ முடியாது. புறநிலையில் நிகழ்ந்த ஒன்று அக நிலையில் ஒரு காரியமும் செய்ய முடியாது. அதனால் 'அவ்விடுகை என்ன செய்யும் ?' என்றார்.

     புறப்பொருள் விடுகையில் அகவுணர்வின் தூய்மை மிக வேண்டும். அது நற்காட்சி முதலான உள்ளபோது நிகழ முடியும். ஏனெனில் அவை இல்லாமல் வினையின் தடுப்பு, அழிப்பு நிகழ முடியாது.


************************************** 

6
ஜாணஹி பாவம் படமம் கிம் தே லிங்கேண பாவ ரஹிஏண |
பந்திய சிவபுரி பந்தம் ஜிண உவஇட்டம் பயத்தேண ||

(பதவுரை)

     பந்திய- சிவபுரி பயணியே !, படமம்- முதலில், பாவம்- அகவுணர்வை, ஜாணஹி- அறிக, பாவ- அகவுணர்வு, ரஹிஏண- இல்லாத, லிங்கேண- அடையாளத்தால் (புறத் தோற்றத்தால்), தே- உனக்கு, கிம்- என்ன பயன்? , சிவபுரி பந்தம்- முக்தி நெறி, பயத்தேண- முயற்சியால் ஆவது என, ஜிண- ஜிநர், உவஇட்டம்- அருளியுள்ளார்.

(கருத்துரை) 

சிவபுரி செல்வோனே ! முதலில் அகவுணர்வை அறிவாயாக ! அகவுணர்வு இல்லாத புறத் தோற்றத்தால் உனக்கு என்ன பயன்? முக்திநெறி முயற்சியால் முடிவது என அருகர் அருளியுள்ளார்.

(விளக்கவுரை)

முக்தி நெறி முயற்சியாளருக்கு அகவுணர்வே முதன்மையானது எனக் கூறுகிறார்.

      ஆசிரியர் முக்தி நிலையைச் 'சிவபுரி' என்கிறார். அதனை முயற்சியால்தான் அடையமுடியும் என்பதால் அகவுணர்வை அறிக என ஆணையிடுகிறார். மும்மணி கூடிய உயிர் உணர்வே முக்தி நெறியாகும். அவ்வுணர்வு இல்லையென்றால் உடை உடுத்தாமை முதலான புறத் தோற்றத்தால் என்ன பயன் விளையும் ? என வினா எழுப்புகிறார்.

     முக்திச் செலவில் அகவுணர்வே முதன்மையானது. ஏனெனில் முக்தி நிலையை அடைவது அகவுணர்வு உடைய உயிரே ஆகும். அந்த உயிரில் அதற்கான உணர்வு இல்லையென்றால் புறத்தோற்றத்தால் அல்லது புற ஒழுக்கத்தால் பயன் ஏதும் விளையாது. இங்கே ஆசாரியர் முயற்சியாளனை நெறிப்படுத்துகிறார். புறத் தோற்றத்தைக் கொண்டே மக்கள் முக்திக்கு முயற்சிப்பாரை அறிகின்றனர். அதாவது துறவியைப் புறத் தோற்றத்தாலேயே அவர் அறிகின்றனர்! நெருங்குகின்றனர். அதுபோல தன் துறவுத் தோற்றத்தைக் கொண்டு தன்னைச் சிவபுரி பயணியாகத் துறவி மயங்கக் கூடாது. அவருடைய பார்வை உள்ளே இருக்க வேண்டும். புறத்தே அன்று. அகவுணர்வு நிலையை அவர் அறிதல் வேண்டும். மும்மணி அங்கு உள்ளதா என அறிதல் வேண்டும். அதனால் அகவுணர்வு அறிக என்றார். அந்த மும்மணி அகவுணர்வை முயன்று பெற முடியும். தன் முயற்சியால் பெற முடியும். பகவானும் முயற்சியால் சிவநெறி பெறப்படுகிறது என்று அருளியுள்ளார். வெறும் தோற்றத்தால் முயற்சி இல்லாமல் பெறப்படுவது அன்று. அது!

      'பயத்தேண' (முயற்சியால்)என்ற சொல் ஆட்சி முக்தி நெறி அடைதலைத் தெளிவு செய்கிறது. முக்திநெறி  புறத் தோற்றத்தால் கிடைப்பது அன்று. ஏனெனில் புறத்தோற்றம் உடல் சார்ந்தது. உயிர் சார்ந்தது அன்று. உடல் தோற்றம் உயிரை முக்தி நெறியில் செலுத்த முடியாது. ஏனெனில் உடல் வேறு பொருள், உயிர் வேறு பொருள். அதனால் 'முயற்சியால்' - உயிர் தன் முயற்சியால்தான் அதனைப் பெற முடியும். தன் முயற்சி உயிரைச் சார்ந்தது. உடலைச் சார்ந்தது இன்று. அதனால் உயிர் உணர்வை அறிக என்றார். செறிப்பும், உதிர்ப்பும் அகவுணர்வால் அமைகின்றன. அதனாலே முக்தி கைகூடுகிறது.

"தன்னுள்ளே நின்றே தன்னைத்
தான்சித்தி அகத்து வைக்கும்"

எனத் தன் அகவுணர்வே சித்தியைத் தரும் எனச் சுட்டுதலை அறியலாம்.*


*மேருமந்த்ர புராணம்-976.

************************************** 



7 பாவரஹிஏண ஸபுரிஸ அணாஇ காலம் அணந்த ஸம்ஸாரே |
க ஹி உஜ்ஜியா இம் பஹுஸோ பாஹிரணிக்கந்த்த ரூவாஇம் ||

(பதவுரை)

    ஸபரிஸ- நல்லவரே ! அணாஇ- தொடக்கமற்ற, காலம்- காலமாக, அணந்த- முடிவற்ற, ஸம்ஸாரே- பிறவிச் சுழலில், பாவ- அகவுணர்வு, ரஹிஏண- இன்றியே, பாஹிர- புறத் தோற்றமான, ணிக்கந்த்த- நிர்வாண (அம்மண), ரூவாஇம்- வடிவங்களை, பஹுஸோ- பலமுறை, கஹிஉஜ்ஜியா இம்- (நீர்) ஏற்று விட்டுள்ளீர்.

(கருத்துரை) நல்லவரே ! அனாதி காலமாக அனந்தமாம் பிறவியில் அனந்த முறை நிர்வாண வடிவை அகவுணர்வு இன்றியே நீர் ஏற்று விட்டுள்ளீர், அறிவீராக!

(விளக்கவுரை)

   பிறவி நிலையில் உயிர் அனந்த காலமாக உழன்று வருகிறது. நான்கு வகை பிறவியிலும் எத்தனை வகை யோனிகள் உண்டோ அத்தனை யோனிகளிலும் அது அனந்த முறை பிறந்து இறந்துள்ளது. இந்தப் பிறவிச் சுழலில் அது எடுத்த வடிவங்களும் வரம்பற்றன வாகும். துறவுத் தோற்றத்தையும் அது அனந்த முறை ஏற்றுள்ளது. அனந்த முறை விட்டுள்ளது. அதனையே இங்கு நினைவு படுத்துகிறார் ஆசிரியர்.

       முக்தி நெறியில்  மும்மணி உணர்வே முதன்மையானது. ஏனெனில் மும்மணி உணர்வுடைய உயிரே முக்தியை அடைய முடியும்.

"உள்பொருள் இதுவென உணர்தல் ஞானமாம்
தெள்ளிதின் அப்பொருள் தெளிதல் காட்சியாம்
விள்ளற இருமையும் விளங்கத் தன்னுள்ளே
ஒள்ளிதின் தரித்தலை ஒழுக்கம் என்பவே"

"கூடிய மும்மையும் சுடர்ந்த கொந்தழல்
நீடிய வினைமரம் நிரைத்துச் சுட்டிட
வீடெனப் படும்வினை விடுதல் பெற்றதங்கு
ஆடெழில் தோளினாய் அனந்த நான்மையே" *

     என மும்மணி வடிவ உயிரே முக்தி அடைகிறது எனத் தேவர் சுட்டுதலைக் காணலாம்.

        இந்த மும்மணி வடிவ அகவுணர்வு இல்லாமல் இந்த உயிர் அனந்த முறைத் துறவுத் தோற்றம் ஏற்றுள்ளது. அதனால் ' நவக்ரைவேகம் ' வரை சென்று புலன் இன்பம் நுகர்ந்துள்ளது, என்றாலும் வினை அழிவினை அது செய்யவில்லை. ஏனெனில் வெறும் புறத் தோற்றத்தால் செறிப்பும் உதிர்ப்பும் செய்யமுடியாது. அதனையே ஆசாரியர் இங்குச் சுட்டிக் காட்டுகிறார். புறத் தோற்றத்தால் மட்டும் பயன் இல்லை என்பதாம்.

    ஒருவர் இந்தப் பிறவியில் துறவு ஏற்கவில்லை என்றால் அவர் எந்தப் பிறவியிலும் துறவு ஏற்கவில்லை என்று கருதுதல் கூடாது. அதேபோல இந்தப் பிறவியில் துறவு ஏற்பவர் இப்போதுதான் துறவு ஏற்கிறார், முன் பிறவிகளில் துறவு ஏற்கவில்லை என்றும் கருதுதல் கூடாது. அனாதியாக வரும் இந்தப் பிறவிச் சுழற்சியில் அனந்த முறை உயிர் துறவு ஏற்றுள்ளது. அனந்த முறை ஏற்காமலும் இருந்துள்ளது. இரண்டு நிலைகளிலும் அது பிறவியிலேயே உழன்று வந்துள்ளது. அதற்குக் காரணம் உயிரை நோக்கும் அகவுணர்வு இல்லாமையே ஆகும்.

"குற்றமோர் மூன்று நான்கு
  கதிகளில் பொறிகள் ஐந்தில்
பற்றிய காயம் ஆறில்
   பழவினைத் திரிவோர் ஏழில்
சுற்றிய வினைகள் எட்டில்
   தோன்றிய சுழற்சி கண்டாய்
கற்றவர் கடக்க எண்ணும்
   மாற்றிது கடிகொள் தாரோய்"

 எனப் பிறவிச் சுழற்சியின் இயல்பை வாமனர் குறிப்பிடுதலை அறியலாம். **

*சீவக சிந்தாமணி 2845/2846.

**மேருமந்தர புராணம் -114.

************************************** 


8 பீஸண ணரயகஈஓ திரியகஇஓ குதேவ மணுகஇஏ |
பத்தோ ஸி திவ்வ துக்கம் பாவஹி ஜிணபாவணா ஜீவ ||

(பதவுரை)

ஜீவ- உயிரே ! பீஸண- கொடிய, ணரயகஈஓ- நரகப் பிறவியிலும், திரியகஈஓ- விலங்குப் பிறவியிலும், குதேவ மணுகஇஏ- குதேவ குமானுடப் பிறவிகளிலும், பத்தோஸி- பிறந்துழன்று, திவ்வ துக்கம்- பெரும் துன்பம் அடைந்துள்ளாய், இனி, ஜிண பாவணா- பரமான்ம பாவணை, பாவஹி - அடைவாயாக (செய்வாயாக).

(கருத்துரை) உயிரே ! இத்தனை காலமாக கொடிய நரகப் பிறவியும்  விலங்குப் பிறவியும் குதேவ குமானுட பிறவிகளையும் அடைந்து பெருந்துன்பத்தை அடைந்துள்ளாய் ! இனி பரமான்மாவை உணர்ந்து உன்னுக!

(விளக்கவுரை)

எல்லையற்ற பிறவியில் தொடக்கமற்ற காலமாக உயிர் உழன்று வருகிறது. அதற்குக் காரணம் உயிரை நோக்கும் அகவுணர்வு இல்லாமையே என முன்பு குறிப்பிட்டார். அதனால் விளைந்த துன்பத்தைச் சுட்டிக் காட்டி பரமான்ம உணர்வு பெற இங்கு வழிகாட்டுகிறார்.

     பிறவிகள் நான்கு என்பர். அவை மனித, விலங்கு, நரக, தேவப் பிறவிகள் ஆகும். அந் நான்குப் பிறவிகளிலும் துன்பமே உள்ளது என்பதனை நினைவு படுத்தி உள்ளார். இங்கே சமண இலக்கியங்கள் நான்குப் பிறவிகளில் உள்ள துன்பங்களை மிக விரிவாகவே பேசுதலைக் காணலாம். ஆசாரியரும் அதனையே இங்குச் சுட்டியுள்ளார்.

"கறங்கென வினையின் ஓடிக்
  கதியொரு நான்கி னுள்ளும்
பிறந்தநாம் பெற்ற பெற்ற
   பிறவிகள் பேச லாகா
இறந்தன இறந்து போக
   எய்துவது எய்திப் பின்னும்
பிறந்திட இறந்தது எல்லாம்
    இதுவும்அவ் வியல்பிற் றேயாம்."

    என நான்குப் பிறவிகளுள் உழலுதல் உயிர் இயல்பாகும் * என்பர்.

'இறந்தநம் பிறவி மேனாள்
   எண்ணுதற்கு அரிய தம்முள்
கறந்துகொண்டு உயிரை உண்ணும்
    காலன்வாய்ப் பட்ட போதும்
பிறந்துநாம் கதிகள் நான்கில்
    பெருந்துயர் உழக்கும் போழ்தும்
துறந்திடா வினைகள் அன்றித்
    துணை பிறிது இல்லை கண்டாய் '


 என நான்கு பிறவிகளும் துன்பம் தருவன எனச் சுட்டுதலைக் காணலாம்


இந்தப் பிறவித் துன்பத்திலிருந்து விடுபட பரமான்ம இயல்பை பாவனை செய்யவேண்டும் என்கிறார். ' ஜிண பாவணா '  என்ற தொடரை ஆண்டுள்ளார். 'பாவணா'  எனில் சிந்தனை, 'ஜிண' எனில் தூய ஆன்மா அல்லது பரமான்மா. எனவே பரமான்ம சிந்தனை வழியே பிறவித் துன்பத்தை நீக்கலாம் என்பது கருத்தாகிறது. இனி, "பரமான்ம வடிவமான அருகரை அடைக்கலமாகக் கொண்டு அவர் திருமொழியைச் சிந்தனை செய்க " என்றும் கொள்ளலாம். எப்படிக் கொண்டாலும் கருத்து தன் உயிர் இயல்பை சிந்திக்க வேண்டும் என்பதுதான்.

" ஒன்றிய உடம்பின் வேறாம்
    உயிரினது உருவம் உள்ளி
நன்றென நயந்து நங்கள்
    நல்லறப் பெருமை நாடி "

என்பார் யசோதர காவியமுடையார்.

      உயிர் தன்னுள் தோயும் போதுதான் முக்தி கிடைக்கிறது. அத் தோய்வு அமையாத வரையில் பரமான்மாவை நினைவு கூர்தல், சிந்தனை செய்தல் வேண்டும். சிந்தனை பிரிவு நிலை, தோய்தல் ஒருமை நிலை. ஒருமை நிலையை நிலைநிறுத்தும் வரை பிரிவு நிலை, சிந்தனை நிலை வேண்டப்படுகிறது. மேலும், அப் பிரிவுநிலை வழியேதான் ஒருமைநிலை அமையப்படுகிறது. இதனால் ஆசாரியர் 'ஜிண பாவணா கொள்க ' என்றார்.

        தேவர்களுள் பூத, பிசாசு, முதலான வியந்தர தேவர், நீசதேவர் அல்லது குதேவர் என்று குறிப்பிடுகின்றனர். இவர் இறந்து கீழ்ப்பிறவியை அடைவர் என்பர். மிலேச்சராகக் கருதப்படுபவர் குமானுடர். தீவுகளில் வசிப்பவர் இவர். இத்தகு கீழ்ப்பிறவிகளிலும் உழன்றது உயிர் என்பதாம். துறவுத் தோற்றம் ஏற்று இப் பிறவிகளையும் அடைகிறது உயிர், உயிர் நோக்கும் அகவுணர்வு இல்லாமையால்.
     

(யசோதர காவியம்-49)

************************************** 

9
ஸத்தஸு ணரயாவாஸே தாருணபீமாஇம் அஸஹணீயாஇம் |
பத்தாஇம் ஸுஇரகாலம் துக்காஇம் ணிரந்தரம் ஸஹியம் ||

(பதவுரை)
உயிரே!  ஸத்தஸு - ஏழு, ணரயாவாஸே- நரகங்களில் உள்ள பிலங்களில், தாருண- மிகுதியான, பீமாஇம்- அஞ்சத்தக்க, அஸஹணீயாஇம்- பொறுக்க இயலாத, துக்கா இம்- துன்பங்களை, ணிரந்தரம்- இடைவிடாது, ஸுஇரகாலம்- நீண்டகாலம், பத்தாஇம்- அனுபவித்தாய், ஸஹியம்- பொறுத்தாய்.

*(கருத்துரை) உயிரே ! அகவுணர்வு இல்லாமையால் நீ ஏழு நரகங்களின் பிலங்களிலும் மிகுதியான அஞ்சத்தக்க பொறுக்க இயலாத துன்பங்களை இடைவிடாது நீண்ட காலம் அனுபவித்தாய், பொறுத்துக் கொண்டாய் !

(விளக்கவுரை)

      நான்குப் பிறவிகளிலும் உயிர் துன்புற்றது என்று குறிப்பிட்ட ஆசாரியர் நரகப் பிறவியில் உற்ற துன்பங்களைச் சுட்டுகிறார்.

   நரகம் உலக அமைப்பில் கீழே உள்ள நிலமாகும். மேருமலைக்குக் கீழே இது உள்ளது. அது இருளின் இருள். இருள், புகை, அளறு, மணல், பரல், மணி என ஏழு பகுதியாக உள்ளது. இவற்றை முறையே 'தமஸ்தம ப்ரபை, தமப்ரபை, தூமப்ரபை, பங்கப்ரபை, வாலுகாப்ரபை, சர்க்கராப்ரபை, இரத்தினாப் ப்ரவை' என்பர் வட நூலார். இப் பெயர்கள் கீழே இருந்து மேலே உள்ள நரகங்களின் பெயர்களாகும். இந் நரகங்களில் 49 படலங்களும், 84,00,000 பிலங்களும் (உறைவிடமும்) உள்ளன. இப் பிலங்களில் உயிர்கள் அடையும் துன்பங்களை நூல்கள் விரிவாக உரைக்கின்றன. அங்குக் காணலாம் என்றாலும், அத் துன்பங்களை வருணிக்க இயலாது என்பதே உண்மை. ஒரு கண போதும் ஓய்வு என்பதே இல்லாமையால் 'நிரந்தரம்' என்னும் சொல்லை ஆண்டு அங்கு துன்பம் இடையறாது உள்ளது என்பதைச் சுட்டினார். நரகர் ஆயுள் குறைந்தது 10,000 ஆண்டுகள். உயர்ந்தது 33 கடற்காலமாகும். அதனால் 'ஸுஇர காலம்' என்றார்.

"ஏழுள நரக நாமம் இரதனம் சக்க வாலு
ஆழிய பங்கம் தூமம் தமம்தமத் தமத்த மாகும்
பாழிஇந் தகங்கள் சேணி பகிணகம் தொகுப்ப வந்த
ஏழினும் புகஎண் பத்து நான்குலக் கங்கள் ஆமே"

என நரகங்களின் பெயரையும் வாழிடங்களின் எண்ணிக்கையும் சுட்டுவார் வாமனர்.

"கணமும் இடையின் றிஎழும் பசியால்
   உணவுஎன் றெனவந்து உலகத்து உளநஞ்சு
இணையில் எனகாய்ந் தஇரும் பினைநீர்
   அணையும் படியால் அணையா அடுமே"

 என நரகர் படும் துன்பத்தைச் சுட்டுவார் வாமனர். ★★

     உயிரை நோக்கும் அகவுணர்வு இல்லாமையால் இத்தகு நரக துன்பங்களைத் துய்த்துப் பொறுத்தது உயிர் என்பதாம்.

மேருமந்தர புராணம் -936.
★★ மேருமந்தர புராணம் -944.

************************************** 




10
கணணுத்தாவணவாலண வேயண விச்சேயணாணிரோஹம் ச |
பத்தோ ஸி பாவரஹி ஓ திரியகஈஏ சிரம் காலம் ||

(பதவுரை)
உயிரே!  பாவ- அகவுணர்வு, ரஹிஓ- இல்லாமையால், திரியகஈஏ- விலங்குப் பிறவியில், சிரம் காலம்- நீண்ட காலம், கணண்- மண்ணைத் தோண்டுதல், உத்தாவண- சுடுதல், வாலண- எரிதல், வேயண- துன்புறுதல், விச்சேயாணா- வெட்டுதல், ச- மற்றும், ணிரோஹம்- தடைப்படுதல் முதலான, பத்தோ ஸி- அடைந்து துன்புற்றாய்.

(கருத்துரை)
உயிரே ! அகவுணர்வு இன்மையால் நீண்ட நெடுங்காலம் விலங்குப் பிறவியில் தோண்டுதல் முதலான துன்பங்களை அடைந்தாய் !

(விளக்கவுரை)

விலங்குப் பிறவியில் உற்ற துன்பங்களைச் சுட்டுகிறார். இங்கே, விலங்குப் பிறவியில் ஐவகைப்படும் ஒரு பொறி நிலை உயிர்களும், இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து பொறியுடைய இயங்கு உயிர்களும் உள்ளன. இந்த உயிர் விலங்குப் பிறவியில் இப் பொறியுடைய பிறப்புகளை எடுத்துத் துன்புற்றது.

     மண்ணுடலியில் அதாவது மண் வகையை உடலாகப் பெற்ற பிறப்பில் கடப்பாறையால் தோண்டுதல், மண்வெட்டியால் வாருதல், முதலான துன்பங்களை அடைந்தது. நெருப்புடலியில் அதாவது நெருப்பு வகையை உடலாகப் பெற்ற பிறப்பில் நீரால் அணைக்கப் படுதல், மூடப்படுதல், முதலான துன்பங்களை அடைந்தது. நீருடலியில்  அதாவது நீர் வகையை உடலாகப் பெற்ற பிறப்பில் சுடப்படுதல், கொட்டப்படுதல் முதலான துன்பங்களை அடைந்தது. காற்றுடலியில் அதாவது காற்று வகையை உடலாகப் பெற்ற பிறப்பில் மோதி தடைப்படுதல், விசிறி போன்றவற்றால் வீசப்படுதல் முதலான துன்பங்களை அடைந்தது. தாவர வகையை உடலாகப் பெற்ற பிறப்பில் பறித்தல், வெட்டுதல், முறித்தல் முதலான துன்பங்களை அடைந்தது. இயங்குயிராகப் பிறப்பு எடுத்தபோது பிறவற்றால் தடைப்படல், பசி முதலானவற்றால் துன்புறுதல் முதலான துன்பங்களை அடைந்தது. இப்படி விலங்குப் பிறவியில் சொல்ல முடியாத துன்பங்களை உயிர் அடைந்தது.

     இங்கே ஆசாரியர் ஆறு வகை துன்பங்களைக் காட்டியுள்ளார். அதனால் ஆறுவகை உடலைப் பெற்ற விலங்குப் பிறப்புகளை சுட்டியுள்ளார் எனக் கருதலாம். நிமித்தங்களைச் சுட்டி உயிர் பெற்ற துன்பங்களைச் சுட்டியுள்ளார். தன் இயல்பை அறியாது இருத்தலே உண்மையில் துன்பங்களுக்குக் காரணமாகும்.

" ஓரறி வாகி உழக்கும் உயிர்களைப்
பேர்அ றிவாரும் பிறரில்லை இன்னவை
யார்அ றிவார்அழி யும்திறம் யாதெனில்
கூரறி வில்லார் கொன்றிடு கின்றார் "

" உயிர்த்தொகை ஆறனுள் ஒன்றொழித்து ஏனைப்
பெயர்தொகை பெற்ற பிறவிகள் தம்மைப்
பயிர்த்தலும் இன்றி உலகம் பதைப்பச்
செயிர்த்தவர் போலச் செகுத்திடும் கண்டாய் "

என ஆறுவகை விலங்கு உயிர்கள் அடையும் துன்பநிலையைச் சுட்டுவார் சூளாமணியுடையார் விலங்குப் பிறவித் துன்பங்கள் பற்றிய வருணனையை நூல்களுள் காணலாம்.


சூளாமணி. துறவுச் சருக்கம் 119/120.

************************************** 


11
ஆகந்துக மாணஸியம் ஸஹஜம் ஸாரீரயம் ச சத்தாரி |
துக்காஇம் மணுயஜம்மே பத்தோஸி அணந்தயம் காலம் ||

(பதவுரை)

உயிரே ! மணுய ஜம்மே - மனிதப் பிறவியில் (நீ), அணந்தயம்- அனந்த, காலம்- காலம், ஆகந்துக- வந்துறுதல், மாணஸியம்- மனத்திடை பிறத்தல், ஸஹஜம்- இயல்பாக வருதல், ச- மேலும், ஸாரீரயம்- உடலால் வருதல், என சத்தாரி- நான்கு வகையான, துக்காஇம்- துன்பங்களை, பத்தோஸி- பெற்றுள்ளாய்.

(கருத்துரை). மனிதப் பிறவியில், உயிரே ! வந்துறும் துன்பம், மனத்துன்பம், இயல்பான துன்பம், உடல் துன்பம் என நான்கு வகைத்  துன்பங்களை வரம்பற்ற காலம் அனுபவித்து வந்துள்ளாய் !

(விளக்கவுரை)

   மனிதப் பிறவியில் அடைந்த துன்பங்களை இங்கே சுட்டுகிறார்.

      உயிர் பலவகையான துன்பங்களை மனிதப் பிறவியில் துய்க்கிறது என்றாலும், அத்துன்பங்களை நான்கு வகையாகத் தொகுத்துச் சுட்டுவர்.

" மனத்திடைப் பிறக்கும் துன்பம்
     வந்துறும் அவற்றின் துன்பம்
தனுத்தனில் பிறக்கும் துன்பம்
    தானியல் பாய துன்பம்
எனச்சொல்லப் பட்ட நான்கும்
    யாவர்க்கும் ஆகும் இன்ன
நினைத்துஅறம் புணரின் நின்ற
   தீக்கதி நீங்கும் என்றேன் !"

என்று சுட்டுவார் வாமனர்.

"ஆகந்துகம்" --  எதிர்பாராமல் வந்துறும் துன்பம். இடிவிழுதல், நிலநடுக்கம், வெள்ளச்சேதம், கடல்கோள் முதலானவற்றால் ஏற்படும் துன்பம்.
"மாணஸியம்"-- மனத்துன்பம். விரும்பியன கிடைக்காமை, பிறர் இன்பம் கண்டு ஏக்கம், வேண்டாதான வந்து சேருதல் முதலியவற்றால் மனத்திடைத் தோன்றும் துன்பம்.
" ஸஹஜம் "-- இயல்பான துன்பம். இங்கே இயல்பு என்றது காரணமின்றித் தானாக நிகழ்தல். பெற்றோர் ஏசுதல், குறை கூறல், விருப்பு வெறுப்பு கொள்ளல் முதலான காரணமாகத் தோன்றும் துன்பம்.
" ஸாரீரயம்" -- உடல் நிலையால் வரும் துன்பம். அடித்தல், வெட்டல், பிணி முதலானவற்றால் உடலில் ஏற்படும் வலிகாரணமாகத் தோன்றும் துன்பம்.

      இந்த நான்கு வகை துன்பங்கள் வேறு வேறு காரணங்களால் எல்லாப் பிறவிஉயிர்களுக்கும் பொருந்தும் என்றாலும் ஆசாரியர் குறிப்பாக மனிதப் பிறவிக்குச் சுட்டியுள்ளார். உயிரை நோக்கும் அகவுணர்வு இல்லாமையால் முத்தி முடித்தலுக்கு உரிய மனிதப்பிறவியிலும் இந்த உயிர் வரம்பற்ற காலம் இத்தகு துன்பங்களைத் துய்த்து வந்துள்ளது என்பதாம்.

      'ஸஹஜம், நைமித்திகம், தேஹஜம், மானஸிகம் என நான்கு வகைப்படுத்துகிறது 'நய சக்கர நூல்'.★★ அசுர குமாரர் தரும் துன்பம், உடல் தரும் துன்பம், மனத்துன்பம், இடம் (நிலம்) தரும் துன்பம், ஒருவருக்கொருவர் தரும் துன்பம் என ஐந்து வகையான துன்பங்களைச் சுட்டுகிறது, 'கார்த்திகேய அனுபிரேக்ஷா' நூல்.±

மேருமந்தர புராணம் - 936.
★★ நய சக்கரம் - 93.

±கார்திகேயானுபிரேக்ஷை -35.

************************************** 

12
ஸுரணிலயேஸு ஸுரச்சரவிஓயகாலே ய மாணஸம் திவ்வம் |
ஸம்பத்தோ ஸி மஹாஜஸ துக்கம் ஸுஹபாவணாரஹிஓ ||

(பதவுரை)

மஹாஜஸ - புகழுக்குரியோனே ! ஸரணிலயேஸு-- தேவ உலகில், ஸுரச்சர- பிரிய தேவரும் தேவியரும், விஓய காலே - பிரிந்த போது துன்பமும், ய - மற்றும், மாணஸம் - மனத்துன்பமும், திவ்வம் - மிகுதியாக, ஸுஹபாவணரஹிஓ - நல் அகவுணர்வு இல்லாமையால், ஸம்பத்தோஸி - அடைந்தாய், துக்கம் - துன்பம் துய்த்தாய்.

(கருத்துரை)

புகழுக்குரியோனே ! நீ தேவ உலகில் பிரிய தேவரும் தேவியும் இறந்தபோது துன்பம் அடைந்தாய், இந்திரன் முதலானோர் 'ரித்திகளைப் பார்த்து தாழ்வு மனம் கொண்டு மிகுதியாக மனத்துன்பம் அடைந்தாய் ! நல் அகவுணர்வு இல்லாமையால் தேவப் பிறவிப் பெற்று அங்கும் இத்தகு துன்பங்களைத் துய்த்தாய்.

(விளக்கவுரை)

தேவப் பிறவியில் அடைந்த துன்பங்களைச் சுட்டுகிறார் ஆசாரியர். தேவப்பிறவி இன்பப் பிறவி என்று பொதுவாகச் சொல்லுவர். ஐம்புல இன்பம் அங்கு மிகுதியாக உண்டு. பிற பிறவிகளில் காணப்படும் உடல் சார்ந்த துன்பங்கள் தேவர்களுக்கு இல்லை என்றாலும், பிற பிறவிகளை நோக்க இங்கு மனத் துன்பம் மிகுதியாகும்.

"தேவரே தாமு  மாகித் தேவராற் றெழிக்கப் பட்டும்
ஏவல் செய்திறைஞ்சிக் கேட்டும் அணிகமாப் பணிகள் செய்தும்
நோவது பெரிதும் துன்பம் நோயினுள் பிறத்தல் துன்பம்
யாவதும் துன்பம் மன்னா யாக்கைகொண் டவர்கட் கென்றான்"

[[ தாமும் தேவராக இருந்தபோதிலும், பிற தேவரால் கோபிக்கப்பட்டும் (சபிக்கப்பட்டும்) வணங்கி, அவர் ஏவல் கேட்டுப் பணி புரிந்தும், இவர்களுக்கு ஊர்திகளாகி (வாகன தேவதைகளாகி) பணி செய்தும் வருந்துவது மிக்க துன்பமாகும் ! ஆதலால் எந்தப் பிறவியாயினும் அந்தப் பிறவி துன்பம் தருவதே.]]

எனத் தேவர் அடையும் மனத் துன்பத்தைச் சுட்டுவார் திருத்தக்க தேவர். ²ⁿ

     தேவப் பிறவியில் இரண்டு வகையான துன்பங்களைக் குறிப்பாகச் சுட்டுகிறார். ஒன்று, தான் பிரியமுடன் பழகிய தேவரும், தேவியரும் தம் ஆயுள் முடிவில் இறக்கும் போது அப் பிரிவால் துன்பம் அடைகின்றனர். இரண்டு - இந்திரன் போன்றோர் பெற்றுள்ள 'ரித்தி' களைக் கண்டு அவற்றைத் தாம் பெறவில்லையே என்பதால் அமையும் தாழ்வு உணர்ச்சியால் வரும் துன்பம். இவ்விரண்டும் பெரிதும் மனத்தைத் தாக்க வல்லன. அதனால் தேவப் பிறவியில் மனத்துன்பம் பெரிது என்பர்.

       இங்கே ஆசாரியர் 'மஹாஜஸ' (புகழுக்குரியோனே) எனக் குறிப்பிட்டுள்ளது தனிச் சிந்தனைக்கு உரியது. முனிவரைச் சுட்டி எழுந்த விளியாகும். முற்பிறவியில் முனித் துறவு ஏற்று அத் துறவு நெறிக்குரிய புற ஒழுக்கங்களை எல்லாம் புறந் தள்ளாமல் ஒழுகினார். ஆனால் உயிர் நோக்கும் அகவுணர்வு இல்லாமல் இருந்தார். 'ஸுஹபாவணார ஹிஓ' என்ற தொடரால் அதனைப் பெற வைத்தார்.ஆனால் அவர் செய்த புற ஒழுக்கங்களால் மக்கள் புகழுக்குரியவராக விளங்கினார். மக்களால் போற்றப்பட்டார். ஆனால், தன் தூய உயிரை நோக்கிய அகவுணர்வு இன்றி வெறும் வேடமுடையவராக வாழ்ந்து இறந்து தேவப் பிறவியை அடைந்தார். துறவு நிலையில் அகவுணர்வு இல்லாமையால் நல் அக ஒழுக்கம் அமையவில்லை.  அதனால் 'கில்விஷர்' போன்ற 'வாகன' தேவராகப் பிறந்து இந்திரன் ஆணை கேட்டு நடக்க வேண்டிய நிலை அமைந்தது. அதுவே மனத்துன்பம் ஆகும். அந்த தேவ இன்பத்தில் மிகு பற்றுக்கொண்டு துன்புறும் நிலை ஆயிற்று. அகவுணர்வு இல்லாமையால் தேவப் பிறவியிலும் துன்பம் அடைகிறது உயிர் என்பதாம்.

(²ⁿ சீவக சிந்தாமணி - 2811)

************************************** 


13
கந்தப்பமாஇயாஓ பஞ்ச வி அஸுஹாதிபாவணாஈ ய |
பாஊண தவ்வலிங்கீ பஹீணதேவோ திவே ஜாஓ ||

(பதவுரை)

கந்தப்பமாஇயாஓ - கந்தர்ப்பம் முதலான, பஞ்சவி - ஐந்தாகக் கூறப்படும், அஸுஹாதி - அசுபம் முதலான, பாவணாஈய - பாவனைகளை, பாஊண - கொண்டு, தவ்வலிங்கீ - உடல் தோற்றம் மட்டும் ( திரவிய லிங்கி) உடையவனாகி, பஹீண - கீழ்நிலை, தேவோ - தேவனாக, திவே - தேவ உலகில், ஜாஓ - பிறந்தாய் !

(கருத்துரை)
உயிரே ! கந்தர்ப்பம் முதலான எண்ணங் கொண்டு துறவு நிலையில் உடல் துறவியாக நிகழ்ந்து தேவ உலகில், இழிந்த தேவனாகப் பிறந்தாய்!

(விளக்கவுரை)
துறவு ஏற்றும் தேவப் பிறவியில் இழிந்த தேவனாகப் பிறத்தலுக்குக் காரணம் கூறுகிறார்.

     துறவு நெறி ஆன்ம இயல்பை அடைவிக்கும் நெறியாகும். ஆன்மா பற்றிய அகவுணர்வு (பாவனை) இல்லாமல் துறவுத்தோற்றம் மட்டும் கொண்டு நிகழ்ந்ததால் இழிந்த தேவனாகப் பிறக்கும் நிலை ஆயிற்று என்று சுட்டுகிறார். துறவின் புற ஒழுக்கத்தால் தேவப்பிறவி கிடைத்தது. ஆனால், அகவுணர்வு உயிரை நோக்கி இல்லாமல் புறம் நோக்கி இருந்ததால் இழிந்த தேவனாகும் நிலை அமைந்தது என்பது கருத்து.

      இங்கே ஆசாரியர் ஐந்து தீய அகவுணர்வுகளைக் குறிப்பிடுகிறார். அவை துறவிக்கு உருக்கத் தகாதன என உய்த்துணர வைக்கிறார். அவை, 1. 'கந்தர்ப்பம்' , 2 'கில்விஷம்' , 3 'ஸம்மோஹம்', 4 'தானவம்', 5 'அபியோகம்'.

கந்தர்ப்பம் :- துறவி ஆசையில் சிக்கிச் சிரித்து உறவாடுதல் உணர்வு. இது காமத்தின் பாற்படும். துறவு நிலையில் இத்தகு உணர்வு கொள்ளுவதால் தேவப் பிறவியில் கந்தருப்ப தேவராகப் பிறக்கின்றனர். இவர் இசை வல்லவராக இருப்பர்.

கில்விஷம் :-  'கில்விஷ' எனில் பாபம் என்று பொருள். பாபம் வரும் உணர்வு கொள்ளுதலை 'கில்விஷ' பாவனை என்பர். துறவி அகத்தில் அறப்பற்று இன்றி புறத்தே அது இருத்தல் போலக் காட்டுதல், அதாவது கபடமாக ஒழுகுதல் இவ்வுணர்வின் பாற்படும். அதனால் 'கில்விஷ' தேவராகப் பிறக்கின்றனர். இந்திர அவையில் இவர் இடம்பெறுதல் இல்லை. எல்லைக்கு வெளியே நிற்கும் இழிநிலை உடையவர்.

ஸம்மோஹம் : - உலக உறவில் மோகம் கொள்ளும் உணர்வு. துறவி உலகப் பொருள்களில், குடும்ப உறவு முதலான உறவுகளில், பொய்யான கருத்துகளைப் பரப்புதலில் ஈடுபாடு கொள்ளுதல் இதன்பாற்படும். பிசாசு இனத்தில் 14 வகை குறிப்பிடுவர். இந்த உணர்வு உடையோர் பிசாசு தேவராகப் பிறக்கின்றனர்.

தானவம் :-  'தானவ' எனில் அசுரர் என்று பொருள். அகிம்சை முதலானவற்றில் ஈடுபாடு / ஆர்வம் உடையவர் சுரர். அது இல்லாதவர் அசுரர். அசுரர் பலவகைப் படுவர். துறவு ஏற்றவர் கலகப் பிரியராகவும், கோபப் பிரியராகவும் நிகழ்வாரானால் அவர் வியந்தர தேவருள் அசுரராகப் பிறக்கிறார். அந்த அசுரருள் சிலர் மூன்றாம் நரகம் வரைச் சென்று நாரகரிடையே கலகம் மூட்டி அவர் ஒருவரோடு ஒருவர் வெகுண்டு சண்டை இடுதலைக் கண்டு மகிழ்ச்சி அடைகின்றனர். 'அம்பரீஷர்' என ஒருவகை அசுரர் இருக்கின்றனர். அவர் அப்படிச் செய்கின்றனர் என்பர். துறவு ஏற்றவர் இந்த்த் தீய அகவுணர்வால் இழிந்த தேவராகப் பிறக்கின்றனர்.


அபியோகம் :- மந்திரம் பன்படுத்தல், காலமல்லா காலத்தில் மழை தோன்றச் செய்தல் முதலான காட்டி மகிழ்தல், தனக்குள்ள இருத்தி முதலான பற்றி தற்பெருமை கொள்ளல் முதலானவை 'அபியோக' பாவனை எனப்படுகிறது. துறவு ஏற்ற முனிவர் இதுபோன்ற செயல்களில் மனங் கொள்வாரானால், அவர் 'அபியோக' தேவனாகப் பிறக்கின்றார் என்பர். அங்கே ஊர்தி (வாகன) தேவராகச் செயல்படுகின்றனர். இந்த ஐந்து வகையான தீய அகவுணர்வு (பாவனை) கொள்ளும் துறவி / முனிவர் அகவுணர்வு அழிந்து உடல் துறவியாகி (திரவியலிங்கி) இழிந்த தேவராகச் சென்று பிறக்கின்றனர். அங்கே உயர்ந்த தேவரால் அவமானம் அடைகின்றனர். தாம் இழிந்தவர் என்னும் மனத்துன்பம் அடைகின்றனர். இத்தகு தீய உணர்வுகளில் சிக்காமல் முனிவர் விழிப்பாக இருத்தல் வேண்டும் என ஆசாரியர் எச்சரிக்கிறார் எனலாம்.

************************************** 



14
பாஸத்த பாவணாஓ அணாஇகாலம் அணேயவாராஓ |
பாஊன துஹம் பத்தோ குபாவணா பாவ பீ ஏஹிம் ||

(பதவுரை)

பாஸத்த - உதவி கொள்ளும், பாவணாஓ - உணர்வுகளோடு, அணாஇ காலம்  - அனாதி காலமாக, அணேய வாராஓ - அனந்த முறை, பாஊண - அடைந்து, குபாவண பாவ - அந்தத் தீய பாவனை எனும், பீஏஹிம் - விதைகளால், துஹம் - பிறவித் துன்பத்தை, பத்தோ - அடைந்தாய்.

(கருத்துரை)

உயிரே ! துறவு ஏற்றும் அனாதி காலமாக அனந்த முறை உதவி கொள்ளுதல் என்னும்  தீய அகவுணர்வு கொண்டதால் பிறவித் துன்பத்தை அடைந்துள்ளாய் !

(விளக்கவுரை).

 உடல் துறவி உதவி கொள்ளுதல் முதலான உணர்வுகளை உடையவராகிறார் என்று விளக்குகிறார்.

        துறவு நிலை பற்றற்ற நிலையாகும். அங்கே அகவுணர்வு உயிரை நோக்கியே அமைய வேண்டும் . புறநோக்கு இருத்தல் ஆகாது. நற்காட்சியுடைய துறவியின் நிலை இதுவே. ஆனால் உடல் துறவி (திரவிய லிங்கி) தன் உயிரை நோக்குதல் இல்லை. புறத்தே அவர் பார்வை உள்ளது. பாஸத்த' என்ற சொல்லை ஆசாரியர் ஆண்டுள்ளார். பற்றற்ற துறவுத் தோற்றம் கொண்டும் தன் வாழ்வின் ஏற்பாடாக இடங்களை அமைத்துக் கொள்ளுதல், அதில் ஆர்வம் கொள்ளல், 'பாஸத்த' உணர்வு எனப்படுகிறது. தன் வாழ்வின் உதவியாக அமைத்துக் கொள்ள விரும்பும் உணர்வு எனப் பொருளாகிறது. இது போன்ற உணர்வுடையாரை ஐந்து வகையாகக் குறிப்பிடுகின்றனர். உதவி ஏற்பாடு செய்த கொள்பவர்  'பார்சவர்' எனப்படுகிறார். நோன்புகளைக் கைவிட்டும், சங்க பணி காட்டாமலும் துவர்ப்புணர்வோடு துறவியாகச் செயல்படுபவர் 'தீய சீலர்' எனப்படுகிறார். மந்திரம், தந்திரம், ஜோதிடம் கூறியும், மருத்துவம் கூறுயும், அரசர் போன்றோரிடம் நயந்தும் வாழும் துறவி ' கூட்டம் விரும்பி'  (ஸம்ஸக்த) ஆவார். ஜிநர் நெறிக்கு எதிராகச் செல்லுதல். ஒழுக்கக் குறை, செயலில் சோம்பல் முதலான உடைய துறவி ' சிதைந்தவர்' (ஆஸன்ன) ஆவார். குருவை நீங்கி தன்னிச்சையாகச் சுற்றுதல், ஜிநர் ஆணையைப் புறக்கணித்தல், உடையவர் 'விலங்கனையர்' (ம்ருகசாரி) எனப்படுகிறார். துறவு ஏற்ற முனிவர் அகத்தில் இவை போன்ற உணர்வுகள் உடையவரானால் அவர் உடல் துறவி (திரவிய லிங்கி) மட்டுமே ஆவார். உள்ளத் துறவி அல்லர். இவர் எல்லாம் உண்மையான நெறியுடையார் அல்லர். இவை போன்ற உணர்வுகளுடன் இந்த உயிர் அனாதி காலமாக அனந்தமுறை துறவு ஏற்றுப் பிறவியில் உழன்று வருகிறது.  ஆசாரியர் இவை தீய உணர்வுகள் என சுட்டிக் காட்டியுள்ளார். இவ் வுணர்வுகளால் துன்பமே விளைகின்றது. துறவு ஏற்று இருந்தாலும் இத்தகையோர் துறவித் தோற்றம் கொண்டு இருந்தாலும் பணிவுக்கும் போற்றுதலுக்கும் உரியவர் அல்லர் என சமஸ்கிருத உரை சுட்டுகிறது.

    துறவில் அகவுணர்வு உயிரை நோக்க வேண்டும் என்பது கருத்து.

************************************** 




15
தேவாண குண விஹூஈ இட்டு மாஹப்ப பஹுவிஹம் தட்டும் |
ஹோஊண ஹீணதேவோ பத்தோ பஹு மாணஸம் துக்கம் ||

(பதவுரை)

உயிரே ! ஹீண தேவோ - கீழான தேவனாக, ஹோஊண - பிறந்து, தேவாண - உயர்ந்த தேவருடைய, குண - சிறந்த குணங்களையும், விஹூஈ - பெரும் சிறப்புகளையும், இட்டீ - சித்திகளையும், மாஹப்ப - உயர்வுகளையும், பஹுவிஹம் - பல வகையாக, தட்டும் - கண்டு, பஹு - மிகுந்த, மாணஸம் - மனத்தின், துக்கம் - துன்பத்தை, பத்தோ - அடைந்தாய்.

(கருத்துரை) 

உயிரே !  நீ கீழான தேவனாகப் பிறந்து உயர்ந்த தேவருடைய குணங்களையும், சிறப்புகளையும், சித்திகளையும், உயர்வுகளையும் பல வகையாகக் கண்டு மிக்க மனத்துன்பத்தை அடைந்தாய் !

(விசேடவுரை)

துறவு ஏற்றும் அதற்கு உரிய அகவுணர்வு இல்லாமல் எதிரான உணர்வுகளில் நிகழ்ந்ததால் கீழான தேவனாகப் பிறந்து மனத்துன்பம் அடைய நேர்ந்தது என விளக்குகிறார். மனத் துன்பத்துக்கான காரணத்தையும் காட்டியுள்ளார்.

        தேவ உலகில் உடல் சார்ந்த துன்பங்கள் இல்லை. பிணி முதலான துன்பங்கள் இல்லை. ஆனால் அங்கே உள்ள வைபவச் சிறப்புகளின் ஏற்றத்தாழ்வால் மனத் துன்பம் மிகுதியாக உள்ளது. உடலை அணுவாகச் சுருக்கவும், மேருமலை அன்ன பேருருவாகப் பெருக்கவும், காற்றிலே மிதப்பது போல எடை அற்ற உடலைப் பெறவும், 'வஜ்ஜிரம்' போல வலுவான எடையுள்ள உடலைப் பெறவும், கண்பார்வையில் படாமல் மறையவும், ஒரே சமயத்தில் பல உருவங்கள் எடுக்கவும், இருந்த இடத்திலிருந்தே வேகு தொலைவில் உள்ள பொருளைத் தொடவும், நீரில் நடக்கவும், நிலத்தில் நீர் போல மூழ்கவும் இவை முதலான ஆற்றல்கள் தேவருடைய குண சித்திகளாகும். இவை எல்லோருக்கும் ஒத்து இரா. அதேபோல பரிவார எண்ணிக்கையிலும் அவர்தம் விகுர்வணை ஆற்றலிலும் ஏற்றத் தாழ்வுகள் உள்ளன. இந்திரர் போன்றோர் ஆற்றல் சிறப்புகள் மிக உன்னதமாகும். இத்தகு ஏற்றத்தாழ்வுகள் காரணமாகவே தேவர்களுக்கு மனத்துன்பம் மிகுதியாக உள்ளது. துறவு ஏற்ற காலத்தில் உயிரை நோக்கிய அகவுணர்வு கொள்ளாமல் மலினப்பட்டதால் தேவ உலகில் கீழான நிலை தேவராகப் பிறக்க நேர்ந்தது. இத்தகு நிலை  அனாதி காலமாக அனந்த முறை நிகழ்ந்துள்ளது. ஆகையால் உயிர் நோக்கிய அகவுணர்வோடு கூடிய துறவியாக (பாவ லிங்கி) விளங்குக என ஆசாரியர் அறிவுறுத்துகிறார் எனலாம்.

"தேவரே தாமும் ஆகித்
     தேவரால் தெழிக்கப் பட்டும்
ஏவல் செய்திறைஞ்சிக் கேட்டும்
     அணிகமாகப் பணிகள் செய்தும்
நோவது பெரிதும் துன்பம்
       நோயினுள் பிறத்தல் துன்பம்
யாவதும் துன்ப மன்னா
     யாக்கைகொண் டவர்கட்கு என்றான்"

என ஏற்றத் தாழ்வால் தேவர் படும் துன்பத்தை விளக்குவார் தேவர் ²¹
--------------------------------------------------- 
²¹ சீவக சிந்தாமணி -2811



************************************** 



16
ச உவிஹ விகஹாஸத்தோ மய மத்தோ  அஸுஹபாவபயடத்தோ |
ஹோஊண குவேத்தம் பத்தோ ஸி அணேயவாராஓ ||

(பதவுரை)

ச உவிஹ - நான்கு வகையான, விகஹாஸத்தோ - தீய கதைகளில் ஈடுபாடும், மய மத்தோ - செருக்குகளில் மயக்கம் கொண்டு, (அதனால்) அஸுஹ பாவ - தீய உணர்வுகளை, பயடத்தோ - வெளிப்படல் , ஹோஊண - செய்து, அணேயவாரா ஓ ஸி - பலமுறை உறுதியாக, குவேத்தம் - கீழான தேவ நிலையை, பத்தோ - அடைந்தாய்.

(கருத்துரை) 

உயிரே ! நான்கு வகையான தீய கதைகளில் ஈடுபாடு கொண்டும், செருக்குகளில் மயங்கியும், அவற்றால் தீய உணர்வுகளை அடைந்து பலமுறை இழிந்த தேவப் பிறவியை அடைந்தாய் !

(விளக்கவுரை)

இழிந்த தேவப் பிறவிக்கு மீண்டும் வேறு காரணங்களைக் காட்டுகிறார்.

          துறவு ஏற்று அகவுணர்வு உயிருக்குக் கேடு செய்யும் கதைகளில் ஈடுபாடு கொள்ளும்போது அது தீய உணர்வாக அமைந்து போகிறது. அக் கதைகள் விருப்பு வெறுப்பு உணர்வுகளுக்கு நிமித்தமாக அமைவனவாகும். அறவுணர்வைத் தூண்டாமல் மற உணர்வைத் தூண்டும் கதைகள் 'வி கதை' என்பர். புலனடக்கம் நோற்கும் நோன்பியர் இக் கதைகளில் ஈடுபாடு கொள்ளார். அக்கதைகள் நான்கு வகைப்படும் என்பர். அவை உணவுக்கதை (ஆஹார கதா), பெண் கதை (ஸ்திரீ கதா), அரச கதை (ராஜ கதா), நாட்டுக் கதை (தேச கதா) என.

உணவுக் கதை :-  சுவையான ஊட்டமான உணவு சமைக்கும் முறையை விளக்குவன உணவுக் கதைகள். உணவு  உடல் ஆற்றல்பெற தேவைப்படுகிறது. ஆற்றல் தரும் உணவை ஏற்க வேண்டும். அதை விடுத்து உடலுக்கு ஊட்டமான, மனத்துக்குச் சுவையான உணவை குறித்து ஈடுபாடு கொள்ளும்போது விருப்பு முதலான உயிருக்கு ஊறு செய்யும் உணர்வுகள் தோன்ற வாய்ப்பாகின்றன. அதனால் நோன்பியர் இத்தகு நூல்களைப் படித்தல் செய்யார். துறவு ஏற்றும் உணவில் சுவை ஈடுபாடு கொள்ளுதல் அத் துறவை மலினப்படுத்தும் - கெடுக்கும்.

பெண் கதை :- பெண்களை வருணிக்கும் நூல் ' பெண் என்று சுட்டினாலும் காம உணர்வைத் தூண்டும் நூல்கள் எனக் கருத வேண்டும். காமத்தைத் தூண்டும் வருணனையில் ஆர்வம் கொள்ளுதல் அசுப உணர்வாகும்.

"மோகரா கத்த வாய
      கதைகளை முனிவன் சொல்ல"

என்பது முனிவரின் அசுப உணர்வுக்கு நல்ல எடுத்துக்காட்டாகும்.²²

அரச கதை :- அரசு குறித்து அல்லது அரசர் குறித்து வருணிக்கும் நூல். அரச வாழ்வு குறித்த சிந்தனை அல்லது உணர்வுகள் விருப்பு வெறுப்புகளுக்கு ஏது ஆகக் கூடும். துறவு ஏற்றபின்  அத்தகைய வருணனைகளில் ஆர்வம் கொள்ளல் அசுப உணர்வாகும். அதனால் துறவு மலினப்படும் - கெடும்.

²² மேருமந்தரம்-856

      நாட்டுக் கதை :-  நாடுகள் பற்றிய வருணனையில் ஆர்வம் கொள்ளுதல் அசுப உணர்வாகும். ஏனெனில் அவ்வுணர்வு  விருப்பு வெறுப்புகளை - நாடு பற்றிய விருப்பு வெறுப்புகளை - தோன்றச் செய்யக்கூடும். அதனால் துறவு கெடும்.

      நாட்டுக் கதைக்குப் பதிலாகத்  திருட்டுக் கதையும் பல இடங்களில் சுட்டப்படுகிறது. கதைகளை 25 வகையாகச் சுட்டும் மரபும் காணப்படுகிறது. இத்தகு கதையில் துறவியர் ஆர்வம் கொள்ளக் கூடாது என நூல்கள் எச்சரிக்கின்றன. ஏனெனில்,

"அருந்தவம் தாங்கி மேரு
   அனையவர்க்கு ஏலும் ஆசை
துரும்பிடைத் தோன்று மேனும்
    துகளினும் சிறியர் ஆவர்"

என்பர் வாமன முனிவர். ²³

       செருக்கு என்பது பிறரைத் தாழ்த்தி தன்னை உயர்த்திப் பார்க்கும் உணர்வாகும். அச் செருக்குத் தோன்ற பல காரணங்கள் அமையலாம். நூல்கள் எட்டு வகையுள் அவற்றை அடக்குகின்றன.

" பிறப்புக் குலம்வலி செல்வம் வனப்புச்
சிறப்புத் தவமுணர்வோடு எட்டு "

எனக் குறிப்பிடும் அருங்கலச் செப்பு.²  துறவு ஏற்றபின் உயிர்களுக்கிடையே வேற்றுமை பாராட்டல் அசுப உணர்வாகும். ஏனெனில் அவ் வேற்றுமை பாராட்டல் உலக வழக்கை - வாழ்க்கையை - ஒட்டியதாகும். அது உயிருக்கு ஊறு செய்யும் உணர்வாகும்.

" இவற்றால் பெரியேம்யாம் என்றே எழுந்தே
இகழ்க்கில் இறக்கும் அறம்.

எனச் சுட்டுகிறது அருங்கலச் செப்பு.

     இப்படி அசுப உணர்வால் பலமுறை இழிந்த தேவனாகப் பிறந்துள்ளது துறவு ஏற்ற உயிர். உயிர் தாங்க இயலாத மனத்துன்பத்தை அடைந்துள்ளது. இங்கே ஒன்றை நினைவில் கொள்ளவேண்டும். தீய கதை ஈடுபாடு முதலான காரணத்தால் இழிந்த தேவப் பதவி அமையவில்லை. ஆனால், முனிவராகிப் புறத்தே துறவு ஒழுக்கம் கொஞ்சம் கைக் கொண்டு இருந்தும் அக நிலையில் விகதை போன்றவற்றில் ஆர்வம் கொள்ளுதலால் இத்தகு  தேவ நிலை அமைகிறது என்று அறிய வேண்டும். ஆகையால், துறவு நிலையில் அத் துறவுக்கு இசைவான உணர்வில் ஒழுக வேண்டும் என ஆசாரியர் நினைவு ஊட்டுகிறார் எனலாம்.

-------------------------------------------------
²³ மேருமந்தர புராணம்- 135
² அருங்கலச் செப்பு -34
அருங்கலச் செப்பு - 35


                                 **************************************  
17

அஸுஈ பீஹத்தேஹி யகலிமலபஹுலாஹி கப்பவ ஸஹீஹி |
வஸிஓ ஸி சிரம் காலம் அணேயஜணணீண முணிபவர ||

 (பதவுரை)

முணிபவர - முனி முதல்வ ! அஸுஈ - தூய்மையற்ற, பீஹத் தேஹி - அருவருக்கத் தக்க,  ய - மற்றும், கலி மல - பாபத்தால் மலினமான அழுக்குகள், பஹுலாஹி - மிகுந்த, கப்ப வஸஹீஹி - கருப்ப இடத்தில், அணேய - பல, ஜண்ணீண - தாயாரிடத்து, சிரம் - நீண்ட, காலம் -காலம், வஸிஓ ஸி - இருந்துள்ளாய்.

(கருத்துரை)

முனி முதல்வ ! இழிந்த தேவப் பிறவியிலிருந்து இறங்கி தாயர் பலரின் தூய்மையற்ற, அருவருக்கத் தக்க, அழுக்குகள் நிறைந்த கருவில் நீண்ட காலம் இருந்துள்ளாய் !

(விளக்கவுரை)

தேவப் பிறவியில் இருந்து வந்து கருவில் துன்புற்ற நிலையை விளக்குகிறார்.

       கருநிலை மனித, விலங்குப் பிறவியில் அமைகிறது. தேவப் பிறவி உயிர் அங்கிருந்து வந்து மனிதராக அல்லது விலங்காகப் பிறக்கும். தேவப் பிறவியில் மீண்டும் தேவனாக அல்லது நாரகனாகப் பிறப்பது இல்லை. எனவே ஆசாரியர் கருவில் அடையும் துன்பத்தை இங்கு விளக்குகிறார். அந்தக் கருவிடம் தூய்மை அற்றது. மற்றும் அருவருப்பு அடையச் செய்வது. ஏனெனில் அங்கே மலம், மூத்திரம் முதலானவை சூழ்ந்துள்ளன.

"ஈருள் தடிமூடி ஈண்டு மலப்பண்டப்
போர்வை புழுமொய்ப்பப் பொல்லாக் குடர்சூடிச்
சார்தற்கு அரிதாகித் தானின்று அறாஅள்ளல்
நீர்வாய்ச் சுரம்போந்தார் தம்மை நினையாரோ"

என கரு நிலையின் இழிநிலையைச் சுட்டுவார் தேவர்.²6

      இந்தக் கருநிலை பிறப்பினை பல தாயரிடத்துப் பல காலம் பலமுறைப் பெற்றுள்ளாய் ! என்ன காரணம் ? துறவுத் தோற்றம் கொண்டும் அகவுணர்வு உயிரை நோக்காது, புறம் நோக்கி, உடல் துறவியாகப் பலமுறை பலகாலம் இருந்துள்ளமையால் ஆகும்.  நான்கு வகைப் பிறவியிலும் உழலும் நிலையே துறவு ஏற்றப் பிறகும் அமைகிறது. ஏனெனில் புறத் துறவுத் தோற்றம் (திரவிய லிங்கி) அமைந்ததே ஒழிய அகத் துறவு ஒழுக்கம் அமையவில்லை. ஆசாரியர் அதனைச் சுட்டிக் காட்டுகிறார், முனி முதல்வ  என்று விளித்து !
----------------------------------------------------
²6 சீவக சிந்தாமணி 2791


                               **************************************  
18
பீஓஸி தணச்சீரம் அணந்த ஜம்மந்தராஇம் ஜணணீணம் |
அண்ணாண்ணாண மஹாஜஸ ஸாயரஸலிலாது அஹியயரம் ||

(பதவுரை)

மஹாஜஸ - புகழுடையோனே ! அணந்த - எண்ணத் தொலையா, ஜம்மந்தராஇம் - பிறப்புகளில், ஜணணீணம் - தாயர், அண்ணாண்ணாண - வெவ்வேறானவர், தணச்சீரம் - முலைப்பாலை, ஸாயர ஸலிலாது - கடல் நீரைக் காட்டிலும், அஹியயரம் -   மிகுதியாக, பீஓஸி - குடித்துள்ளாய்.

(கருத்துரை) 

புகழுடையோனே ! நீ எண்ணத் தொலையா பிறப்பெடுத்து வெவ்வேறான தாயரிடம் கடல் நீர் அளவைக் காட்டிலும் மிகுதியான அளவு பாலைக் குடித்துள்ளாய் !

(விளக்கவுரை)

கருவில் தோன்றிய பிறப்புகளுக்குக் கணக்கு இல்லை என்று இங்குக் குறிப்பிடுகிறார்.

          சென்ற காதையில் கருவில்பட்ட துன்பத்தை உணர்த்தினார். இந்தக் காதையில் எண்ணத் தொலையா தாயரிடம் குடித்த பாலின் அளவைக் கணக்கிட்டால் அது கடல் நீரின் அளவைக் காட்டிலும் மிகுதியாக இருக்கும் என்று சுட்டி, எடுத்த பிறப்புகளின் எண்ணிக்கையை நினைவுபடுத்தி, வீணே பிறப்புகளைக் கழித்துள்ள நிலையைக் காட்டியுள்ளார். துறவு ஏற்று அடைந்த பிறப்புகள் இவை. பிறவியை முடிக்க துறவு ஏற்பர். ஆனால் அப்படி முடிக்காமல் பிறவியில் உழலவே துறவுத் தோற்றம் பயன்பட்டுள்ளது. ஏனெனில், துறவு நிலையில் அகவுணர்வு உயிரை நோக்காமல் புறத்தே நோக்கி பிறவிச் சுழற்சியை நீட்டித்து உள்ளது.

     ' மஹாஜஸ ' என்ற சொல் சிந்தனைக்கு உரியது. முனிவரைச் சுட்டி விளித்த சொல், முனிவர் புகழுக்குரியவராக விளங்கி உள்ளார். அவருடைய கடுமையான புறத் தவத்தைக் கண்டு மக்கள் புகழ்ந்துள்ளனர். அத்தவம் புகழைத் தந்தது. அதில் ஆழ்ந்து போனார் முனிவர். அதாவது முனிவர் புகழில் மயங்கி புறத்துறவில் சிறப்பாக வினையாற்றி அகத்தே உயிரை நோக்கத் தவறி விட்டார்.

"பத்தர்நல் சித்தனைப் பன்னிரண்டு ஓசனைப் பொன்னெயில்சேர்
அத்தனைப் பண்டறி யாமையின் யான்அனந்தம் உயிர்கட்கு
எத்தனை தந்தையும் தாயரும் ஆயினன் இன்றுஎனக்கே
எத்தனை தந்தையும் தாயரும் ஆனர் என்று எண்ணுவனே!"


என அந்தாதியர் குறிப்பிடுவார்.²⅞ துறவில் உயிரை நோக்கும் அகவுணர்வு கொள்ள வேண்டும் என்பது இதன் கருத்து.


                                 **************************************  

19
துஹ மரணே துக்கேண அண்ணண்ணாணம் அணேய ஜணணீணம் |
ருண்ணாண ணயணணீர ஸாயராஸலி லாது அஹியயரம் ||

(பதவுரை)

முனிவர !  துஹ - உன், மரணே - இறப்பால், அண்ணண்ணாணம் - வெவ்வேறான, அணேய - பல, ஜணணீணம் - தாயர், துக்கேண - துன்பத்தால், ருண்ணாண - அழுது விட்ட,  ணயணணீர - கண்ணீரானது, ஸாயர ஸலிலாது - கடல் நீரைக் காட்டிலும், அஹியயரம் -  மிகவும் அதிகமாம்.

(கருத்துரை)

முனிவர ! நீ வெவ்வேறான பல தாயரிடம் பிறந்து இறந்ததால் அவர் துன்புற்று அழுது சிந்திய கண்ணீர் கடல் நீரின் அளவைக் காட்டிலும் மிகுதியாகும்.

(விளக்கவுரை)

வெறும் தோற்றத்தில் முனிவராகி உயிர் எடுத்த பிறவிகள் பலவாகும். அப்பிறவிகளில் அவ் வுயிரைப் பெற்றெடுத்த தாயர் அழுது சிந்திய கண்ணீர் கடல் நீரைக் காட்டிலும் மிக அதிகம் என்று கூறி வீணே அழிந்த பிறவிக்குக் கணக்கு இல்லை என்கிறார்.

       துறவு ஏற்று உயிரை நோக்கும் அகவுணர்வு இல்லாத நிலை பொய்ம்மை நிலையாகும். நல் நம்பிக்கை இழந்த நிலையாகும். அத்தகு நிலையில் உயிர் பல பிறவிகளில் பிறந்துள்ளது, இறந்து உள்ளது. அந்த இறப்பினால் அது மனிதனாகவும் விலங்காகவும் கணக்கற்ற பிறவிகளை அடைந்துள்ளது. அப்பிறவிகளில் அந்த உயிரைப் பெற்றெடுத்த தாயர் பலர் ஆவர். வெவ்வேறு பிறவிகளில் வெவ்வேறு தாயர். அத் தாயர் அவ்வுயிரின் இறப்பால் அழுது சிந்திய கண்ணீரின் அளவு கடல் நீரின் அளவைக் காட்டிலும் மிக அதிகமாகும். கண்ணீரின் அளவைக் காட்டி எடுத்த பிறவிக்கு எண்ணிக்கை இல்லை என்றும், உற்ற துன்பத்துக்கும் எல்லை இல்லை என்றும் காட்டி உள்ளார். வெறும் வேடம் பிறவிக்கே காரணம், துன்பத்துக்கே காரணம் என்பதாம்.

  **************************************  

20
பவ ஸாயரே அணந்தே சிண்ணுஜ்ஜிய கேஸணஹ ரணாலட்டீ |
முஞ்ஜஇ ஜஇ கோ வி ஜஏ ஹவதி ய கிரிஸமதியா ராஸி ||

(பதவுரை)

முனிவரே ! அணந்தே  - கணக்கற்ற, பவஸாயரே- பிறவிக்கடலில், சிண்ணுஜ்ஜிய - நீக்கிய, கேஸ - மயிர், ணஹ - நகம், ணால் - தொப்பூழ்க் கொடி, அட்டீ  - எலும்பு இவற்றை, யகோவி ஜ ஏ - தேவனொருவன், முஞ்ஜஇ ஜ இ - தொகுப்பானானால், ராஸீ - அவற்றின் தொகுப்பு, கிரிஸமதியா - மேருமலை அளவைக் காட்டிலும் - மிகுதியாக, ஹவதி - இருக்கும்.

(கருத்துரை)

முனிவரே ! நீண்ட பிறவிக் கடலில் நீ எடுத்த பிறப்புகளில் நீக்கிய உன்னுடைய மயிர், நகம், தொப்பூழ்க் கொடி, எலும்புகளை தேவன் ஒருவன் தொகுத்துக் காட்டுவானானால், அத் தொகுப்பின் அம்பாரம் மேரு மலையின் அளவைக் காட்டிலும் மிகுதியாக இருக்கும்.

(விளக்கவுரை) 

உடல் முனிவராக (திரவிய லிங்கி) எடுத்த பிறவிகளுக்கு எல்லை இல்லை எனக் காட்டுகிறார்.

     முனிவர் தோற்றம் கொண்டும் புறவய (பஹிரான்மா) ஆன்மாவாக விளங்கிய பிறவிகளுக்கு எண்ணிக்கை இல்லை என்பதனைச் சுட்ட உடம்பின் மயிர், நகம், எலும்புகள், நாபிக் கொடி இவற்றின் தொகுப்பைக் காட்டி விளக்கி உள்ளார். வீணான பிறவிகளை எண்ணிப் பார்த்து  உயிரை நோக்கும் அகவுணர்வு உடைய முனிவராக (பாவ லிங்கி) விளங்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்.

                               **************************************  

21
ஜலதள ஸிஹிபவணம்பர கிரி ஸரிதரிதருவணாஇ ஸவ்வத்த |
வஸிஓ ஸி சிரம் காலம் திஹுவணமஜ்ஜே அணப்பவஸோ ||


(பதவுரை)
உயிரே ! நீ, ஜல - நீரில், தள - நிலத்தில், ஸிஹி - நெருப்பில், பவண் - காற்றில், அம்பர - ஆகாயத்தில், கிரி - மலையில், ஸரி - ஆற்றில், தரி - குகையில், தரு - மரத்தில், வணாஇ - காடு முதலானவற்றில் என, ஸவ்வத்த - எல்லா இடங்களிலும், திஹுவண மஜ்ஜே - மூவுலகில், அணப்பவஸோ - புறத்தைச் சார்ந்து, சிரம் காலம் - நெடுங்காலமாக, வஸிஓஸி - வாழ்ந்துள்ளாய்.

*(கருத்துரை) 
உயிரே ! நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம், மலை, ஆறு, குகை, மரம், காடு முதலான எல்லா இடங்களிலும் மூவுலகிலும் புறவய உயிராக (பஹிராத்மா) நெடுங்காலம் வாழ்ந்துள்ளாய்.

(விளக்கவுரை)
நெடும் பிறவியில் உயிர் உழன்று வருகிறது என்று சுட்ட அது மூவுலகிலும் பிறவி எடுக்காத இடம் ஏதும் இல்லை என்று சுட்டுகிறார்.

       இங்கே ஆசாரியர் உயிர் வினைவயப்பட்டு நெடுங்காலம் உழன்று வருகிறது என்கிறார். அதற்குக் காரணம் பிறவற்றைத் தனதாக ஏற்று தனதை அறியாத அறியாமை என்கிறார். அந்த அறியாமை நிலையில் உயிர் இம் மூவுலகில் பிறவி எடுக்காத இடம் எதுவுமே இல்லை. ஒரு பொறி உயிராக மூவுலகிலும் பிறந்துள்ளது.  இரு பொறிகள் முதலான உயிராக நாளிகை முழுதிலும் பிறந்துள்ளது.

' இந்தியம் ஒன்றினால் உலகு எங்குமாம்
ஐந்தினால் நாளிகை அகத்து வாழுமே
அந்தினோடு இரண்டரைத் தீபம் ஆழிமூன்று
இத்திய நான்குமூன் றிரண்டின் எல்லையே '

     என மூவுலகிலும் உயிர்கள் பிறந்துழலும் இடங்களைச் சுட்டுவார் வாமனர்.²8

'எழுகயிறு அகன்றும் ஈரேழ்
   கயிறுயர்ந்து இடையில் ஒன்றாய்
முழவென இடையில் ஐந்தாய்
    முடியொன்றாய் அடியில் ஏழாய்
அழிவிலா உலகில் தோற்றம்
   அனந்தமாம் படிப்ப தேசம்
எழுவெனத் திரண்ட தோளாய்
   இறந்தநாள் பிறந்த என்றான் '

என 343 கன கயிறு உலகத்தில் அனந்தமுறை பிறப்பு இறப்பு நிகழ்ந்துள்ளது எனச் சுட்டுவார்.²9. பிறக்காத இடமில்லை என்பது கருத்து.
--------------------------------------------
²8 மேருமந்தர புராணம்- 79.
²9 மேருமந்தர புராணம்-115.

                              **************************************  

22

கஸியாஇம் புக்கலாஇம் புவணோதரவத்தியாஇம் ஸவ்வாஇம் |
பத்தோ ஸி தோ ண தித்திம் புணருத்தம் தாஇம் புஞ்ஜந்தோ ||

(பதவுரை)

உயிரே ! நீ, புவணோதர - மூவுலக முழுதும், வத்தியாஇம் - நிறைந்துள்ள, ஸவ்வாஇம் புக்கலாஇம் - எல்லா புற்கல பரமாணுக்களை, கஸியாஇம் - உண்டு, பத்தோ ஸி - அடைந்தாய், தோ - எனினும், புணருத்தம் தா இம் - அவற்றை மீண்டும் மீண்டும், புஞ்ஜந்தோ - துய்த்தும், ண தித்திம் - நிறைவு அடையவில்லை.

(கருத்துரை)

உயிரே ! நீ மூவுலகிலும் நிறைந்துள்ள புற்கலங்களை உண்டு அடைந்தாய் ! அவற்றை மீண்டும், மீண்டும் துய்த்தும் நிறைவு அடையவில்லை.

(விளக்கவுரை)

துறவு ஏற்றும் போக உணர்வைத் துறவாமையைச் சுட்டிக் காட்டுகிறார் ஆசாரியர்.

      உயிர் அனாதி காலமாகப் பிறவியில் உழலுவதற்குக் காரணம் அதன் ஐம்புல போக உணர்வே ஆகும். பிறவற்றால் இன்பம் அடையமுடியும் என்பது அறியாமை ஆகும். உயிர் இன்பம் தருவன என எவற்றைக் கருதுகிறதோ, அவை எல்லாமே உயிரற்றப் புற்கலப் பொருள்களே. ஐம் பொறிகளுக்கும் புலமாவன புற்கலப் பொருள்களே ஆகும். அப் புற்கலத் திரள்கள் மூவுலகிலும் எங்கும் செறிந்து நிறைந்துள்ளன. அவற்றாலான பொருள்களையே இன்பம் தருவனவாகக் கருதி இந்த உயிர்கள் அனாதி காலமாகத் துய்த்து வருகின்றன. ஒரு முறை அல்ல. வரம்பற்ற முறை துய்த்த பொருளையே மீண்டும் மீண்டும் துய்க்கின்றன. ஆனாலும் இன்னும் நிறைவு அடையவில்லை.

"பூமிஅந் தரத்து வந்து
    பொருந்திய புலத்தின் ஆசை
ஓவிலம் துய்த்தும் வேறோர்
   சுவைஇன்மை உணர்ந்து மீட்டும்
மேவுதற்கு எழுதல் மென்று
    விட்டதை மென்றல் அன்றிக்
கூவல்மண் டூகம் போலும்
   குணத்தமே நினைக்கின் என்றான் !"

எனப் புலனாசையின் இழிவைச் சுட்டுவார் வாமனர்.³ⁿ


       உடல் துறவு கொண்டும், உள்ளத் துறவு கொள்ளாது ஐம்புல வேட்கையில் உயிர் அழுந்துவதால் பிறவியை அறுக்க முடியாமல் மீண்டும், மீண்டும் பிறவியில் பிறந்து இறந்து துன்புறுகிறது. ஆசாரியர் இந்த காதையில் உயிர் துய்க்காத புற்கலப் பொருள் உலகில் இல்லை என்று சுட்டுகிறார். என்றாலும், துய்ப்பு ஆசை நிறைவு அடைவது இல்லை என உய்த்துணரவைத்து, உயிர் நோக்கும் உள்ளத் துறவு கொண்டு உடல் துறவு பெறுதலே வீடுபேற்று நெறி என விளக்கி உள்ளார்.

³ மேருமந்தர புராணம் - 415.


  **************************************  



23
திஹுயணஸலிலம் ஸயலம் பீயம் திண்ஹாஏ பீடிஏண துமே |
தோ வி ண தண்ஹாசேஓ ஜாஓ சிந்தேஹ பவமஹணம் ||

(பதவுரை)

உயிரே ! துமே -நீ, திண்ஹாஏ - வேட்கையால், பீடிஏண - வேதனையுற்று, திஹுயண - மூவுலக, ஸலிலம் ஸயலம் - நீர் முழுதும், பீயம் - குடித்துள்ளாய், தோ வி - எனினும், தண்ஹா சே ஓ ண ஜா ஓ - வேட்கை தணிந்து போகவில்லை. அதனால், பவ மஹணம் - பிறவி ஒழிய, சிந்தேஹ - எண்ணுவாயாக.

(கருத்துரை)

உயிரே ! நீ மூவுலக நீர் முழுதும் வேட்கையால் குடித்துள்ளாய். எனினும், வேட்கை தணியவில்லையே ! அதனால், பிறவியை முடிக்க எண்ணுக.

(விளக்கவுரை) 

அனாதி காலமாகத் தொடர்ந்து வரும் பிறவிக்கு ஏதுக் காட்டி அதனை முடிக்க அறிவுறுத்துகிறார்.

     பிறவியில் உயிர் உழலக் காரணம், அதன் புலன் வேட்கையாகும். அவ் வேட்கையை நிறைவு செய்ய, அது துய்த்த அத்தனையும் வேட்கையை வளர்த்தனவே ஒழிய அதனைத் தணிக்கவில்லை. நெய் ஊற்றி நெருப்பை அணைக்கும் முயற்சியாகவே முடிந்தது. அதனால் ஆசாரியர் வேட்கை தணிய நீரைத் தேடாமல், மும்மணியாகிய நீரைப் பருகி பிறவி வேட்கையை முடிக்கச் சொல்லுகிறார்.

"வேட்கைமை என்னும் நாவில்
    காமவெந் தேறல் மாந்தி
மாட்சிஒன் றானும் இன்றி
    மயங்கினேற்கு இருளை நீங்கக்
காட்டினார் தேவர் ஆவர்
    கைவிளக்கு அதனை என்று
தோட்டியால் தொடக்கப் பட்ட
     சொரிமதக் களிற்றின் மீண்டான்"

எனத் திருத்தக்க தேவர் புலன்வேட்கை இருள் , அறிவு விளக்கால் விலக துறவு தோன்றிற்று என்பார்.³¹
-------------------------------------------------

³¹ சீவக சிந்தாமணி- 2729

                                **************************************  

24
கஹி உஜ்ஜியாஇம் முனிவர கலேவராஇம் துமே அணேயாஇம் |
தாணம் ணத்தி பமாணம் அணந்த பவ ஸாயரே தீர ||


(பதவுரை)

முனிவர - சிறந்த முனியே ! துமே - நீ, அணந்த - வரம்பற்ற, பவ ஸாயரே - பிறவிக் கடலில், அணேயாஇம் - பலதடவை, கலேவராஇம் - பல உடலகளை, கஹிஉஜ்ஜியாஇம் - ஏற்றும் விட்டும் உள்ளாய், தாணம் - அவற்றுக்கு, பமாணம் - அளவும், ணத்தி - இல்லை, தீர - தீரரே.

(கருத்துரை)

சிறந்த முனிவரே! நீ வரம்பற்ற பிறவிக் கடலில் எடுத்துவிட்ட உடல்களுக்கு கணக்கே இல்லை தீரரே!

(விளக்கவுரை)

துறவு ஏற்றும் உடல் பற்றினை விடாமையை இடித்துக் காட்டுகிறார்.

      இந்த உயிர் தொடக்க மற்ற பிறவியில் தொடாத உடல்களே இல்லை. எல்லா உடல்களையும் ஏற்று விட்டுள்ளது. என்றாலும், துறவு ஏற்றும் அவ்வுடல் மீது பற்று விடாது உடலுக்கு வேண்டியதைச் செய்கிறது. உயிருக்கு வேண்டியதைச் செய்யவில்லை. எனவே ஆசாரியர் எடுத்த உடலுக்கு எண்ணிக்கையே இல்லை, பிறகு ஏன் இன்னும் உடல் மீது அன்பு என இடித்துக் காட்டுகிறார்.

"பிறந்தநம் பிறவிதோறும் பெறும்உடம்பு அவைகள் பேணாத்
துறந்தறம் புணரின் நம்மைத் தொடர்ந்தன அல்ல தோகாய்
சிறந்ததை இது என்றி எண்ணிச் செம்மையே செய்யத் தாமே
இறந்தன இறந்த காலத்து எண்ணிறந் தனகள் எல்லாம்!"

[பொறிகள் ஐந்தடைந்து பிறந்த நமது ஒவ்வொரு பிறவியிலும், பெற்ற உடம்புகளை பற்று வையாது துறந்து, அறநெறியை மேற்கொண்டிருந்தோமாயின், நம்மை அப் பிறவிகள் தொடர்ந்திரா ;

'ஐம்பொறியினால் நுகரப்படும் இந்திரிய சுகமே மேலானது ; இதைவிட வேறு இன்பம் இல்லை' என்று நினைத்து, அப்பிறவிக்கு வேண்டிய சிறந்த செயலைச் செய்து உழன்றதனால் எண்ணற்ற பிறவிகள் கழிந்தன.]

என உடல் பற்று பிறவிச் சுழலுக்குக் காரணமாயிற்று என்பார் யசோதர காவியத்தார்.³²
-------------------------------------------
³² யசோதர காவியம் -36

 **************************************  


25
விஸவேயண ரத்தக்கய பய ஸத்தக்கஹண ஸங்கிலே ஸேணம் |
ஆஹாருஸ்ஸாணாம் ணிரோஹணா கிஜ்ஜஏ ஆவூ ||


பதவுரை :- விஸ - நஞ்சு, வேயண - வேதனை, ரத்தக் கய - குருதி இன்மை, பய - அச்சம், ஸத்தக்கஹண - படைக்கருவிகள் தாக்கம், ஸங்கிலேஸேணம் - சங்கிலேசம், ஆக்ஷார ணிரோஹணா - உணவு இன்மை, உஸ்ஸாஸாணம் ணிரோ ஹணா - மூச்சு நிற்றல் இவற்றால், ஆவு - ஆயுள், கிஜ்ஜஏ - அழிகிறது.

கருத்துரை :-- நஞ்சு உண்பதால், வேதனை துன்பத்தால், குருதி இன்மையால், படைக்கருவி தாக்குவதால், கவலையால், உணவு உண்ணாமையால், உயிர் மூச்சு நிற்றலால் ஆயுள் முடிந்து போகிறது.



 **************************************  


26

ஹிமஜலண ஸலில குருயர பவ்வய தரு ருஹணபடண பங்கேஹிம் |
ரஸவிஜ்ஜோயதாரண அணய பஸங்கேஹிம் விவிஹேஹிம் ||

(பதவுரை)
ஹிம - குளிரால், ஜலண - நெருப்பால், ஸலில - நீரால், குருயர பவ்வய - பெரும் பாறை ஏறி விழுதலால், தரு ருஹண படண - மரம் ஏறி விழுதலால், பங்கேஹிம் - உடல் சிதைவால், ரஸவிஜ்ஜோயதாரண - ரச வித்தையால், என அணய - வெவ்வேறு, விவிஹேஹிம் - வகையான, பஸங்கேஹிம் - தொடர்பால், ஆயுள் அழிகிறது.

(கருத்துரை)

குளிரால், நெருப்பால், நீரால், பெரும்பாறை ஏறி விழுதலால், மரம் ஏறி விழுதலால், உடல் சிதைவால், ரச வித்தையால் வெவ்வேறு வகையான தொடர்பாலும் ஆயுள் அழிகிறது.

 ************************************** 


27

அய திரிய மணுய ஜம்மே ஸுஇரம் உவவஜ்ஜிஊண பஹுவாரம் |
அவமிச்சுமஹா துக்கம் திவ்வம் பத்தோ ஸி தம் மித்த ||


(பதவுரை)
மித்த - நண்ப, தம் - நீ, அய - இப்படி, திரிய - விலங்கு, மணுய - மனித, ஜம்மே - பிறவிகளில், ஸுரம் - பல காலம், பஹுவாரம் - பல முறை, உவவஜ்ஜிஊண - பிறந்து, திவ்வம் அவமிச்சுமஹா துக்கம் - அகால இறப்பு எனும்  தீவிர பெரும் துன்பத்தை, பத்தோஸி - அடைந்துள்ளாய்.

(கருத்துரை)
நண்ப ! நீ இவ்வாறு பலகாலம் பல விலங்கு, மனிதப் பிறவிகளில் பிறந்து அகால இறப்பு எனும் மிக பெருந்துன்பத்தை அடைந்துள்ளாய் !

(விளக்கவுரை) உயிர் நிலையற்ற பிறவிகளை எடுத்து ஆயுள் வினை முடிவால் இறந்து துன்புற்றலை நினைவுறுத்துகிறார்.

      அகவுணர்வு உயிரை நோக்காத நிலையில் புறத் துறவு தோற்றங்கள் பிறவிச் சுழற்சிக்கே ஏதுவாகின்றன. அதனால் ஆசாரியர் புறத் தோற்றங்கள் ஏற்று பிறவியில் உழன்று வந்துள்ளமையைச் சுட்டிக் காட்டி வருகிறார். அந்த வகையில் அகால இறப்பு அடைந்து உற்ற துன்பத்தையும் சுட்டுகிறார்.

        இறப்பு ஆயுள் முடிவாகும். அது கால நிமித்தத்தால் முடியும்போது கால இறப்பு அல்லது இயல்பான இறப்பு எனப்படும். காலம் தவிர்த்து வேறு காரணங்களால் இறப்பு நிகழ்தல் அகால இறப்பு எனப்படும். இந்த காதையில் ஆசாரியர் வேறு காரணங்களால் சிலவற்றைச் சுட்டியுள்ளார். இறப்புக்குப் பல வேறு காரணங்கள் இருக்கின்றன. முதன்மையான சிலவற்றை இங்கே சுட்டியுள்ளார். நஞ்சு உண்ணல் முதலானவை இறப்புக்கு வேறு காரணங்கள் ஆகும். இவை எல்லாம் புற நிமித்தங்கள் ஆகும். இத்தகு இறப்பினை 'குமரணம்' என்பர். இந்த இறப்பு நேரும்போது மிகுந்த துன்பம் உண்டாகிறது. அத்துடன் தீய எண்ணங்களுடன் இது நேர்தலால் கீழான பிறவிகளில் உழல வேண்டியுள்ளது. இப்படி இந்த உயிர் அகால இறப்பால் பெருந் துன்பத்தை அடைந்துள்ளது. அதனால் ஆசாரியர் அருளுடன் ' நண்ப ' என விளித்து மீண்டும் மீண்டும் பிறவியின் துன்ப நிலையை நினைவூட்டிப் பிறவியிலிருந்து விடுபட வழி உரைக்கிறார்.


     மனித, விலங்குப் பிறவியில் மட்டுமே அகால இறப்பு உள்ளது. தேவ, நாரகப் பிறவிகளில் இல்லை. போக பூமியிலும் இல்லை. கடைசி உடலைப் பெறும் மனிதருக்கும் இல்லை. அதனால் ஆசாரியர் இரண்டு பிறவிகளை மட்டும் சுட்டியுள்ளார்.

 ************************************** 


28

சத்தீஸ் திண்ணீ ஸயா சாவட்டி ஸஹஸ்ஸ வார மரணாணி |
அந்தோ முஹுத்தமஜ்ஜே பத்தோ ஸி ணிகோயவாஸம்மி ||

(பதவுரை)

உயிரே  நீ, ணிகோய வாஸம்மி - நிகோதத்தில் இருந்தபோது, அந்தோ முஹுத்த மஜ்ஜே - உள் அழுத்த (அந்தர் முஹுர்த்த) கால அளவில், சத்தீஸ் திண்ணி ஸயா சாவட்டி ஸஹஸ்ஸ வார - அறுபத்தாறாயிரத்து முந்நூற்று முப்பத்தாறு தடவை, மரணாணி - இறப்புகளை, பத்தோஸி - அடைந்துள்ளாய்.

(கருத்துரை)

 உயிரே நீ, நிகோத பிறவியில் இருந்த காலத்து அந்தர் முகூர்த்த காலத்தில் 66,336 தடவை பிறந்து இறந்துள்ளாய் !

(விளக்கவுரை)

பிறவி நிலையில் உயிர் நிகோத பிறவியில் துன்புற்ற நிலையை நினைவுபடுத்துகிறார்.

        நிகோத உயிர் என்பது ஒரு நாடித் துடிப்புக் காலத்தில் 18 முறை பிறந்து இறக்கும் என்பர். ஓர் உடலில் வரம்பற்ற உயிர்கள் வாழ்தல் நிகோத நிலை ஆகும். அவை ஒன்றாகவே பிறக்கின்றன ; ஒன்றாகவே இறக்கின்றன. இவ் வகை உயிர்களைப் 'பொதுவுடலி' என்பர். ஆனால் இங்கே ஆசாரியர் குறிப்பிட்டுள்ள உயிர்கள் ஆற்றல் நிறைவுறா (லப்தயபர்யாப்த) உயிர்கள் ஆகும். பொது உடலி உயிர் என்பது ஒரு பொறி - உடல் - மட்டும் உள்ளது. ஆற்றல் நிறைவுறா உயிர் என்பது ஒன்று முதல் ஐந்து பொறிகளும் உள்ள உயிர் வகை ஆகும். இவ்விரண்டு வகையுமே ' நிகோத ' என்ற சொல்லால் சுட்டப்படுகின்றன.

        மண்ணுடலி, நீருடலி, நெருப்புடலி, காற்றுடலி, மற்றும் பொது உடலி என இவை ஒரு பொறி உடைய உயிர்கள். இவை ஒவ்வொன்றும் நுண்மை பருமை (சூஷ்ம, பாதர) என இரண்டு வகைப்படும். அதனால் 10 வகை ஆயின. இவற்றோடு தனி உடலி தாவரம் கூட்ட பதினோர் வகை ஆயின. இவை ஒவ்வொன்றும் உயர்ந்த அளவு 6012 முறை பிறவி எடுக்கலாம். அப்படி பார்க்கும்போது 6012 × 11 = 66132 முறை ஒரு பொறி உயிராகப் பிறக்க முடியும். இனி இரண்டு பொறி உயிராக 80, மூன்று பொறி உயிராக 60, நான்கு பொறி உயிராக 40, ஐந்து பொறி உயிராக 24 முறைகளும் பிறவி எடுக்க முடியும். அதனால் மொத்தம் 66,336 (66132 + 80 + 60 + 40 + 24 ) பிறவிகளை எடுக்க முடியும்.


         3773 நாடித்துடிப்புகள் (சுவாசோச்சுவாசம்) கொண்டது ஒரு முழுத்தம் (48 நிமிடம்) ஆகும். ஒரு நாடித்துடிப்புக் காலத்தில் 18 பிறவி என்றால் 66,336 பிறவி எடுக்க (66336 / 18 ) = 3685 1/3 நாடித் துடிப்புகள் ஆகும். இதனையே உள் முழுத்த (அந்தர் முகூர்த்த) காலம் என்றார். இந்தப் பிறப்பு இறப்புத் துன்பத்தை உயிர் பொய் நம்பிக்கையில் (மித்யாத்துவ) துய்க்கிறது.


************************************** 

29

வியலிந்தஏ அஸீதீ ஸட்டீ சாளீஸமேவ ஜாணேஹ !
பஞ்சிந்திய சஉவீஸம் குத்தபவந்தோ முஹுத்தஸ்ஸ !!

(பதவுரை)

உயிரே ! அந்தோ முஹுத்தஸ்ஸ - அந்த உள்முழுத்த (அந்தர் முகூர்த்த) காலத்தில், வியலிந்த ஏ -  குறைந்த பொறிகள் உயிர்கள், அஸீதீ - எண்பது, ஸட்டீ -அறுபது, சாளீஸம் - நாற்பது, ஏவ -  மற்றும், பஞ்சிந்திய - ஐம்பொறி உயிர்கள், சஉவீஸம் - இருபத்து நான்கு, குத்த பவந்தோ - நுண்பிறவியன என, ஜாணேஹ - அறிக, நீ.

(கருத்துரை)

உயிரே ! உள்முழுத்த காலத்தில் குறைந்த பொறிகள் உடைய பிறவியில் எண்பது, அறுபது, நாற்பது தடவைகளும் மற்றும் ஐந்து பொறிகள் உடைய பிறவியில் இருபத்து நான்கு தடவைகளும் நிகழும் (இறப்பு பிறப்பு) பிறபுகள் நுண் பிறப்புகள் என அறிக.

(விளக்கவுரை)

ஆசாரியர் நிகோத பிறவியில் உயிர்கள் எடுக்கும் பிறவிகளின் எண்ணிக்கையை முன் காதையில் குறிப்பிட்டார். இந்த காதையில் பொறிகள் அடிப்படையில் ஒவ்வொரு பிறவியிலும் எத்தனை தடவைகள் பிறப்புகள் நிகழ்கின்றன என்று குறிப்பிடுகிறார்.

        பொறிகள் ஐந்தாகும். ஒரு பொறி குறைந்தது.  ஐந்து பொறிகள் உயர்ந்தது.  ஐந்து பொறிகளுக்குக் குறைவாகவும், ஒரு பொறிக்கு மேலும் பொறிகளைப் பெறும் உயிர்களை ' விகலேந்திரிய' உயிர்கள் என்பர். அதாவது குறைந்த பொறிகள் உடைய உயிர்கள் என்பதாம். இரண்டு பொறிகள் உடைய பிறவியில் எண்பது, மூன்று பொறிகள் உடைய பிறவியில் அறுபது, நான்கு பொறிகள் உடைய பிறவியில் நாற்பது தடவைகளும் பிறவி எடுத்துள்ளது உயிர். ஐந்து பொறிகள் உடைய பிறவியில் எல்லாப் பொறிகளும் உடைய பிறவியில் (சகலேந்திரியம்) இருபத்து நான்கு தடவைகளும் பிறவி எடுத்துள்ளது. ஆக 204 பிறவிகள் (80 + 60 + 40 + 24) எடுத்துள்ளது. இவை போக எஞ்சிய 66,132 பிறவிகள் (66336  - 204)  ஒரு பொறியுடைய பிறவியில் நிகழ்ந்துள்ளன. இப் பிறவிகளை நுண் பிறவிகள் (க்ஷுத்ர பவ) என்பர். இவற்றின் ஆயுள் காலம் ஒரு நாடித்துடிப்பு காலத்தில் பதினெட்டில் ஒரு கூறாக அமைவதால் இவற்றை நுண்ணிய பிறவிகள் என்றனர்.

************************************** 

30

ரயணத்தய அலத்தே ஏவம் பமிஓ ஸி தீஹஸம்ஸாரே !
இய ஜிணவரேஹிம் பணியம் தம் ரயணத்தய ஸமாயரஹ !!

(பதவுரை)

உயிரே ! ரயணத்தய - மும்மணியை, அலத்தே - அடையாமையால், தீஹ ஸம்ஸாரே - நீண்ட பிறவியிலே, ஏவம் பமிஓஸி - சுற்றினாயே, அதனால், தம் - அந்த, ரயணத்தய - மும்மணியில், ஸமாயரஹ - ஒழுகுக, இய - என்று, ஜிணவரேஹிம் - அருகரால், பணியம் - அருளப்பெற்றுள்ளது.

(கருத்துரை)

உயிரே ! நீ மும்மணியை இதுவரை அடையாமையால் நீண்ட நெடும் பிறவியில் சுற்றியுள்ளாய். அதனால் அந்த மும் மணியை அடைந்து ஒழுகுக என்று அருக பரமேட்டி  அருளியுள்ளார்.

(விளக்கவுரை)

உயிர் பிறவிகளில் உழலுவதற்குக் காரணம் கூறுகிறார்.

       உயிரை நோக்கும் அகவுணர்வு இல்லாமல் வெறும் உடல் துறவு கொள்ளுதல் பிறவிக்கு ஏது என்று காட்டி வந்த ஆசாரியர் இந்த காதையில் பிறவியை முடிப்பது மும்மணி ஒழுக்கமே என்று சுட்டுகிறார். மும்மணி ஆன்ம வடிவமாகும். அது உண்டாகும் போதுதான்  உயிர் முக்தியை அடைய முடியும். அது இல்லாதபோது உயிர் பொய்யுணர்வில் நிகழ்கிறது. அந் நிகழ்வே பிறவிகளைக் கூட்டுவதாகும். எனவே ஆசாரியர் மும்மணி ஒழுக்கத்தை அடைக என அறிவுறுத்துகிறார்.

உரைத்தஇப் பொருளின் மெய்ம்மை
   உணர்வது நல்ல ஞானம்
புரைப்பறத் தெளிதல் காட்சி
   பொருந்திய இரண்டும் ஒன்றின்
தரித்தநல் லொழுக்கம் ஆகும்
   சாற்றிய மூன்றும் ஒன்றின்
விரைபொலி தாரோய் வீட்டின்
   மெய்ந்நெறி யாவ தாமே

என மும்மணியே வீட்டு நெறி என்று சுட்டுவார் மேருமந்தர புராணத்தார். ³
---------------------------------------------
³ மேருமந்தர புராணம் - 107


************************************** 

31

அப்பா அப்பம்மி ரஓ ஸம்மாஇட்டீ ஹவேஇ புடு ஜீவோ |
ஜாணஇ தம் ஸண்ணாணம் சரதீஹம் சாரித்த மக்கோ த்தி ||

(பதவுரை)

அப்பா - ஆன்மா, அப்பம்மி - ஆன்மாவில், ரஓ - தோய்கிறது, ஜீவோ - அந்த ஆன்மா - புடு - உறுதியாக, ஸம்மா இட்டீ - நற்காட்சியது, ஹவேஇ - ஆகிறது, தம் - அந்த ஆன்மாவை, ஜாண இ - அறிவது, ஸண்ணாணம் - நல்லறிவு ஆகும், சரதீஹ - அதில் ஒழுகுதல், சாரித்தம் - நல்லொழுக்கம் ஆகும், த்தி - இவ்வாறு, மக்கோ -  முக்தி நெறியாகும்.

(கருத்துரை)

ஆன்மா தன்னில் தோய்கிறது ; அது உறுதியாக நற்காச்சி உடையது, தன்னை அறிவது நல்லறிவு, தன்னில் ஒழுகுதல் நல்லொழுக்கம் . இவ்வாறு வீடு பேற்று நெறி அமைகிறது.

(விளக்கவுரை)

ஆசாரியர் உண்மை மும்மணியை விளக்குகிறார்.

       மும்மணியை அடைக என முன் காதையில் குறிப்பிட்டார். அம் மும்மணியின் இலக்கணம் இங்கே கூறுகிறார்.ஆன்மாவின் நம்பிக்கை அறிவு, ஒழுக்கம் உண்மையான மும்மணி ஆகும். முக்தி அதனாலேயே அடையப் படுகிறது.  அதாவது மும்மணி வடிவமாக ஆன்மா நிகழுதலே வீடுபேற்றுக்கு வழி ஆகும். உயிர் முதலான மெய்ப் பொருளை நம்புதல், அவற்றை அறிதல், தானொழிந்த பிற பொருள்களில் உணர்வு கொள்ளாமை வழக்கு நய மும் மணி ஆகும். இவ்விரண்டும் உடையது முக்தி நெறி என அறிதல் வேண்டும். உண்மையான மும் மணி இல்லாதபோது வழக்கு மும் மணி வீடுபேற்று நெறி ஆகாது. அது பிறவி நெறியாகவே விளங்கும். உண்மை நெறிக்கு உதவுவது வழக்கு மும் மணி நெறியாகும். இரண்டும் ஒன்றாகவே இருக்கும். ஒன்று இல்லாமல் மற்றொன்று இல்லை. ஆனால், உண்மையில் தோய்ந்து விடும் போது வழக்கு மும்மணி உணர்வு ஒழிந்து போகிறது என அறிய வேண்டும். உண்மை மும்மணி உயிரின் தோய்தலாகும். வழக்கு மும் மணி உயிரை நோக்கியதாகும். அதனால் முன்னது முழுமை வடிவம் ; பின்னது பிரிவு வடிவம்.

" காட்சி நன்னிலையில் ஞானக்
   கதிர்மணிக் கதவு சேர்த்திப்
பூட்சிசால் ஒழுக்கம் என்னும்
   வயிரத்தாழ் கொளுவிப் பொல்லா
மாட்சியில் கதிகள் எல்லாம்
   அடைத்தபின் வரம்பில் இன்பத்து
ஆட்சியில் உலகம் ஏறத்
   திறந்தனன் அலர்ந்த தாரான் "

என வீட்டு நெறி விளையும் பாங்கினை விளக்குவார் திருத்தக்கதேவர். ³⅝
---------------------------------------------
³ - சீவக சிந்தாமணி- 381


************************************** 

32

அண்ணே குமரண மரணம் அணேய ஜம்மந்தராஇம் மரிஓஸி |
பாவஹி ஸுமரண மரணம் ஜரமரணவிணாஸணம் ஜீவ ||


(பதவுரை)

ஜீவ - உயிரே, அணேய - பலவான, ஜம்மந்தராஇம் - பிறப்புகளில், அண்ணே - வெவ்வேறான, குமரண - குமரண, மரணம் - இறப்புகளில், மரிஓ ஸி - இறந்தாய் (இனி), ஜர மரண விணாஸணம் - பிறப்பு இறப்பு அழியும், ஸுமரண - நல்மரண, மரணம் - இறப்பினை, பாவஹி - நினைப்பாயாக.

(கருத்துரை)

உயிரே ! பலவான பிறப்புகளில் வெவ்வேறான தீய இறப்புகளைப் பலமுறை அடைந்தாய். இனி நீ, பிறவியை ஒழிக்கும் நல் இறப்பினை நினைப்பாயாக.

(விளக்கவுரை)

 பிறவியைத் தொடர வைக்கும் இறப்பு வேண்டாம். பிறவியை முடிக்கும் இறப்பை நினைக்க வேண்டும் எனக் கூறுகிறார்.

        உலகில் பிறப்பும் இறப்பும் துன்பமாகக் கருதப்படுகின்றன. பிறவி என்பதே பிறப்பு இறப்பின் தொடர்ச்சிதான். ஆசாரியர் இங்கு இறத்தல் பற்றிக் குறிப்பிடுகிறார். எந்த இறப்பு மீண்டும் பிறப்புக்குக் காரணம் ஆகாதோ அந்த இறப்பினை நினைக்கச் சொல்கிறார். இறப்பு துன்பம் எனும் போது, அத் துன்பம் வேண்டாம் எனில், இறப்பு மீண்டும் வராத இறப்பு அமையட்டும் என்கிறார். பிறப்பு நிகழ்ந்தால் இறப்பு நிகழும் இது இயற்கையின் நியதி. அதனை நினைவு படுத்தி இறப்பு மீண்டும் இல்லாத கடைசி இறப்பினை அடைக என்கிறார். மீண்டும் இறப்பு இல்லை  என்று உறுதி ஆகும்போது கடைசி இறப்பு இன்பமான இறப்பாகவே அமைய முடியும். ஏனெனில், பிறப்பு இறப்பு எனும் நெடும் பிறவித்தொடரை  அறுக்கும் இறப்பு அது. அதனால் அதனை நினைவு கொள்க என்கிறார். அதாவது பிறவா நிலைக்கு ஏதுவான இறப்புக்கு முயற்சி செய்ய வேண்டும் என்பது கருத்து.

       பலவகையான இறப்புகள் குறித்து நூல்களில் காணப்படுகின்றன. அவற்றை இங்குத் தொகுத்துப் பார்த்தால் இறப்பின் தன்மையை விளங்கிக் கொள்ளலாம். பதினேழு வகையான இறப்புகள் விளக்கப்படுகின்றன.

************************************** 

33

ஸோ ணத்தி தவ்வ ஸவணோ பரமாணு பமாண மேத்தஓ ணிலஓ|
ஜத்த ண ஜாஓ ண மஓ தியலோய பமாணிஓ ஸவ்வோ ||

(பதவுரை)

திய லோய- மூன்று உலகமாக, பமாணிஓ - அளவுபட்டுள்ள, ஸவ்வோ - எல்லா இடத்திலும், தவ்வ ஸவணோ - உடல் துறவேற்ற, ஸோ - அந்தத் துறவி, ஜத்த  - இங்கு, ண ஜாஓ - பிறக்கவில்லை, ண மஓ - இறக்கவில்லை என, பரமாணு - பரமாணு, பமாண - அளவு, மேத்தஓ - மாத்திரை, ணிலஓ - இடம் ஏதும், ணத்தி - இல்லை.

(கருத்துரை)

உடல் துறவி மூவுலகம் முழுதிலும் பிறக்காத, இறக்காத இடம் பரமாணு அளவும் ஏதும் இல்லை. (எல்லா இடங்களிலும் பிறந்து இறந்து உழன்றுள்ளார்.)

(விளக்கவுரை)

துறவு ஏற்றவர் உள்ளுணர்வு இல்லாத நிலையில் மூவுலகிலும் பிறந்து இறந்து உழல்கிறார் எனப் புறத் துறவின் பயனின்மையை விளக்குகிறார்.

      ஆகாயப் பகுதியில் ஒரு பரமாணு அடைத்துக் கொள்ளும் இடமே இடப் பரப்பின் கடைசி கூறாகும். இதற்கு குறைந்த இடப்பரப்பு இல்லை. மூவுலகிலும் அதாவது 343 கன கயிறு (ரஜ்ஜு) அளவுள்ள உலகில் அயங்கியம் அணுவிடங்கள் (பிரதேசம்) உள்ளன. அத்தனை இடங்களிலும் உடல் துறவி பிறந்து இறந்துள்ளார் என்று குறிப்பிடுவதால் வரம்பற்ற பிறவிகளை அவர் எடுத்துள்ளார் எனச் சுட்டிக் காட்டுகிறார். அகவுணர்வு சூனியமான புறத் துறவால் பயன் ஏதும் இல்லை என்பது கருத்து. உயிர் இயல்பை உள்ளவாறு அறிவாரே துறவுணர்வு கொள்ள முடியும். உள்ளுணர்வு அப்படி அமையும்போது புறத்தேயும் துறவுத் தோற்றம் காணப்படும். அகத் துறவுணர்வு இருந்து புறத்தே அதற்கு இசைவான உடல் தோற்றம் இல்லாது இருக்க முடியாது. ஆனால் புறத்தோற்றம் இருந்து அகவுணர்வு இல்லாமல் இருக்க முடியும். அதனையே இந்த காதை சுட்டுகிறது. அகவுணர்வு இல்லாது எடுத்த புறத் தோற்றங்களுக்கு வரம்பு இல்லை.

"வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்னெஞ்சம்
தானறி குற்றப் படின் "

எனப் புறத் துறவால் பயனின்மை கூறுவார் தேவர்.
------------------------------------------------
திருக்குறள் - 272


************************************** 

34

காலமணந்தம் ஜீவோ ஜம்மஜரா மரண பீடிஓ துக்கம் |
ஜிணலிங்கேண வி பத்தோ பரம்பராபாவரஹிஏண ||


 (பதவுரை)

பரம்பரா - வழிமுறையாக வரும், பாவ - அகவுணர்வு, ரஹிஏண - இன்மையால், ஜீவோ - உயிர், ஜிணலிங்கேண வி - அருகர் தோற்றம் கொண்டும், கால மணந்தம் - வரம்பற்ற காலம், ஜம்ம - பிறப்பு, ஜரா - மூப்பு, மரண - இறப்பு, பீடிஓ - வருத்தும், துக்கம் - துன்பத்தை, பத்தோ - அடைந்துள்ளது.

(கருத்துரை)

உயிர் வழிமுறையாகப் போற்றப்பட்டு வரும் அகவுணர்வு பெறாமையால் அருகர் தோற்றம் ஏற்றும் அனந்த காலம் பிறப்பு மூப்பு  இறப்பு துன்பங்களை அடைந்துள்ளது.

(விளக்கவுரை)

அகவுணர்வு முக்தி நெறியில் வழிமுறையாகப் போற்றப்படுகிறது. அவ்வுணர்வு கொள்ளாமல் புறத்தோற்றம் கொண்டு பிறவியில் உழன்று வருகிறது என்று சுட்டுகிறார்.

     புறத் தோற்றம் அகவுணர்வுக்கு இசைய அமையும்போது அது அகவுணர்வுக்கு ஆக்கம் தருவது ஆகும். ஆனால் புறத் தோற்றம் கொண்டால் அகவுணர்வு அமைந்து விடும் என்பது இல்லை. ஏனெனில் அகவுணர்வு வாய்ப்பான காலம் முதலியன இன்றி அமைவது இல்லை. ஆனால் புற வேடம் போற்றுவதால் முக்தி நெறி கூடுவது இல்லை. முக்தி நெறியில் அகவுணர்வே முதன்மையானது ஆகும். அதனால் அகவுணர்வைக் குறிக் கொள்ளும் புற வடிவமே பயனுடையதாம் என்பது கருத்து.

"மணிமுடி கலிங்க மாலை
   மணித்துணர் அனைய குஞ்சி
பணியொடு பரிந்து நின்றார்
   பருமத யானை ஒத்தார்
குணமணி அணிந்து குன்றாப்
   பண்ணவர் குழாத்தைப் புக்கார்
இணையிலாச் சித்தி நன்னாட்டு
   இளவரசி இயன்றது ஒத்தார் "

எனப் புறத் தோற்றமும் அகவுணர்வும் ஒன்றி நிற்றலைக் காட்டியுள்ளமை காணலாம். (37)
------------------------------------------------
37 மேருமந்தர புராணம் – 123

************************************** 

35

படிதேஸ ஸமய புக்கல ஆஉக பரிணாமணாமகாலட்டம்  |
கஹிஉஜ்ஜியாஇம் பஹுஸோ அணந்தபவ ஸாயரே ஜீவ ||

(இதன் பொருள்) ஜீவ - உயிர், அணந்த - கடக்க அரிதான, பவ - பிறவி, ஸாயரே - கடலில், படி தேஸ - ஒவ்வொரு ஆகாய அணுவிடத்திலும், ஸமய - ஸமயந்தோறும், ஆஉக - (பரியாயந் தோறும்) ஆயுள் காலம் வரை, பரிணாம - பரிணாமம், ணாம - நாம கரும, காலட்டம் - ஏறுகாலம் இறங்கு காலங்களில், பஹுஸோ -  பல வகையான, புக்கல - புற்கலத் திரள்களை, கஹிஉஜ்ஜியாஇம் - ஏற்றும் விட்டும் இருக்கிறது.

(கருத்துரை)

உயிர் பிறவிக் கடலில் எல்லா புற்கல கருமத் திரள்களை வரம்பற்ற காலம் ஏற்றும் விட்டும் உள்ளது.

(விளக்கவுரை)  

அகவுணர்வு இல்லாத உடல் துறவில் உயிர் பிறவிக் கடலில் கரும புற்கலத் திரள்களை ஏற்றும் விட்டும் உழன்றுள்ளது என்கிறார்.

       ஆசாரியர் ஐம்பரிவட்டணையை இங்கே குறிப்பாகச் சுட்டியுள்ளார். ஒவ்வொரு ஆகாயப் பிரதேசத்திலும் புற்கல அணுத்திரள்களை ஏற்றும், விட்டும் இருக்கிறது உயிர். அதாவது எல்லா இடத்திலும், எல்லா காலத்திலும் பிறந்தும் இறந்தும் உள்ளது. எல்லா அணுத் திரள்களையும் ஆயுள் காலம் வரை தன் ஒவ்வொரு துவர்ப்பு பரிணாமத்திலும் ஏற்றும் விட்டும் உள்ளது. அதாவது உயிர், பொருள், காலம், இடம், பிறவி, பரிணாமம் எனும் ஐந்து சுழலில் உழன்று உள்ளது.

       பொருள் சுழல் (திரவிய பரிவர்த்தனை) என்பது புற்கல அணுத்திரள்களை ஏற்றலும் விடுதலும் ஆகும். இடச் சுழல் (க்ஷேத்திர பரிவர்த்தனை) என்பது ஆகாயத்தில் ஒவ்வொரு அணுவிடத்திலும் பிறந்து இறத்தல் ஆகும். காலச் சுழல் (கால பரிவர்த்தனை) என்பது ஒவ்வொரு சமயத்திலும் பிறந்து இறத்தல் ஆகும். பிறவிச் சுழல் (பவ பரிவர்த்தனை) என்பது ஒவ்வொரு பிறவியிலும் சமயந்தோறும் பிறந்து இறத்தல் ஆகும். உணர்வுச் சுழல் (பாவ பரிவர்த்தனை) என்பது துவர்ப்பு உணர்வு வரிசையாகக் கொண்டு பிறந்து இறத்தல் ஆகும். கருத்து என்னவென்றால், உயிர் பிறவியில் சுழன்ற காலத்துக்கு வரம்பு இல்லை என்பதாம்

       'படி புற்கல' என்பதால்  பொருள் சுழலையும், 'படி பதேஸ' என்பதால் இடச் சுழலையும், 'படி ஸமய' என்பதால் காலச் சுழலையும், 'படி ஆஉ' என்பதால் பிறவிச் சுழலையும், 'படி பரிணாம' என்பதால் உணர்வுச் சுழலையும் சுட்டியுள்ளார் எனலாம். ஐந்து சுழல் குறித்து வல்லார்வாய் கேட்டு அறிக.

"மாற்றில் நின்றது வையகம் மூன்றிலும்
   ஆற்ற வும்பரியட்டமோர் ஐந்தினால்
தோற்றம் வீதல் தொடர்ந்திடை யில்வினைக்
   காற்றி னால்கதி நான்கில் சுழலுமே"

என பிறவி உயிரின் ஐந்து சுழைச் சுட்டுவார்.
------------------------------------------------
மேருமந்தர புராணம் - 71
-------------------------------------------------   
************************************** 

36

தேயாலா திண்ணி ஸயா ரஜ்ஜூணம் லோயகேத்த பரிணாமம் |
முத்ததூணட்ட பஏஸா ஜத்த ண டுருடுள்ளிஓ ஜீவோ ||

(பதவுரை)

தேயாலா திண்ணி ஸயா - முன்னூற்று நாற்பத்து மூன்று, ரஜ்ஜூணம் - கயிறு, லோய - உலகம், கேத்த பரிணாமம் - இடப்பரப்பளவு உடையது, (இவ்வுலகில்) முத்தூணட்ட பஏஸா - எட்டு அணுவிடம் (பிரதேசம்) தவிர, ஜீவோ - உயிர், ஜத்த ண டுருடுள்ளிஓ - சுற்றாத இடம் இல்லை.

(கருத்துரை )

343 கன கயிறு அளவுள்ள உலகில் எட்டு அணுவிடம் தவிர எல்லா இடங்களிலும் உயிர் சுற்றித் திரிந்துள்ளது.

(விளக்கவுரை)

உலகில் உயிர் பிறந்து உழலாத இடம் இல்லை என்கிறார்.

      உலகின் நடுவில் மேருமலையின் கீழ் பசு மடி போல எட்டு அணுவிடங்கள் உள்ளன. காம்புகளுக்கு இடையே இரண்டு அணுவிடங்கள் போல நான்கு திசைகளிலும் அமைந்துள்ளன. இந்த எட்டு இடங்கள் தவிர உலகின் பிற எல்லா இடங்களிலும் உயிர் பிறந்து இறக்காத இடம் எனச் சுட்ட ஓரிடமும் இல்லை. எல்லா இடங்களிலும் வரம்பற்ற முறை பிறவி எடுத்துள்ளது. எட்டு அணுவிடத்தில் தொடங்கி ஒவ்வொரு ஆகாய அணுவிடமாகச் சுற்றி வந்து இடச் சுற்றை (க்ஷேத்திர பரிவர்த்தனை) உயிர் முடிக்கிறது. மீண்டும் தொடங்கிய இடத்தைக் கணக்கிடாமையால் எட்டு அணுவிடங்களைத் தவிர என்றார்.

அகவுணர்வைப் போற்றிப் பிறவியை அறுக்க வேண்டும் என்பதாம்.

------------------------------------------- 
************************************** 

37

ஏக்கேக்கங்குலி வாஹி சண்ணவதீ ஹோந்தி ஜாண மணுயாணம் |
அவஸேஸே ய ஸரீரே ரோயா பண கித்தியா பணியா ||

(பதவுரை)

மணுயாணம் - மனிதருடைய, ஸரீரே - உடலில், ஏக்கேக்கங்குலி - ஒவ்வொரு அங்குலத்திலும், சண்ணவதீ - தொண்ணூற்று ஆறு, வாஹி - நோய்கள், ஹோந்தி - உண்டாகின்றன, ய - எனில் மற்றும், அவஸேஸே ஸரீரே - எல்லா உடல் பகுதிகளிலும், ரோயா - நோய்கள், கித்தியா - எத்தனை என, பண பணியா - உத்தியால் கணக்கிட்டு, ஜாண - அறிதல் வேண்டும்.

(கருத்துரை) மனித உடலில் அங்குலத்துக்கு தொண்ணூற்று ஆறு நோய்கள் உண்டாகின்றன எனில் , உடல்  முழுதும் எத்தனை நோய்கள் உண்டாகும் என கணக்கிட்டு அறிய வேண்டும்.

(விளக்கவுரை)  உயிர், உடல் எடுப்பதால் அவ்வுடலில் எத்தனை நோய்களை அடைந்து துன்புறுகிறது என்று ஆசாரியர் குறிப்பிடுகிறார்.

            உடல், நோய்களுக்கு ஆதாரமாகும். மனித உடலில் எத்தனை நோய்கள் தோன்ற முடியும் என ஆகமத்தில் கணக்கிட்டுச் சொல்லப்படுகிறது. மனித உடலில் 5,86,90,584 நோய்கள் உண்டாகின்றன என்பர். எடுக்கும் உடலின் அளவுக்கு ஏற்ப உயிர், நோயுற்றுத் துன்புற்று வருகின்றது. நோயற்ற உடல் என எந்த உடலும் இல்லை. எனவே ஆசாரியர், எடுத்த உடலுக்கும் கணக்கில்லை ; துன்புற்ற நோய்களுக்கும் கணக்கில்லை எனச் சுட்டி உடலுணர்வை விட்டு அகவுணர்வை ஆளுக என அறிவுறுத்துகிறார்.

-- -------------------------------------------------------------
************************************** 

38

தே ரோயா வி ய ஸயலா ஸஹியா தே பரவஸேண புவ்வபவே |
ஏவம் ஸஹஸி மஹாஜஸ கிம் வா பஹுஏஹிம் லவிஏஹிம் ||

(பதவுரை)

மஹாஜஸ - புகழுடையோனே ! புவ்வபவே - முந்தைய பிறவியில், தே - நீ, பரவஸேண - புற ஆளுமைக்கு ஆட்பட்டு, தே ரோயா வி - அந்த நோய்கள், ஸயலா - அனைத்தையும், ஸஹியா - பொறுத்துக் கொண்டாய், ஏவம் ஸஹஸி - இனியும் பொறுத்துக் கொள்வாய், ய - மற்றும், அதனால்,  பஹுஏஹிம் - அதிகமாக, லவிஏஹிம் - சொல்லுவதால், கிம் வா ? - என்ன பயன்?

(கருத்துரை)

புகழுடை முனிவரே ! முன் பிறவிகளில் எல்லா நோய்களையும் தாங்கினீர் ; இனியும் தாங்குவீர். இனி, அதிகமாகப் பேசுவதால் என்ன பயன் ?

(விளக்கவுரை)

நோய்த் துன்பத்தைப் பொறுத்துக் கொண்டு உழன்ற நிலையை எடுத்துக் காட்டி அகவுணர்வு பெற அறிவுறுத்துகிறார்.

      துறவு ஏற்றும் தன்னை நோக்கும் அகவுணர்வு கொள்ளாமல் புறத்தே நோக்கும் துவர்ப்புணர்வில் சிக்கியதால் தன்னுரிமை இழந்து பிறிதின் ஆளுமைக்கு ஆட்பட்டு பிறவிகளில் உழன்றது உயிர். அப்பிறவிகளில் எடுத்த உடல்களுக்கும் வரம்பில்லை ; அவ் வுடல்கள் வழி பெற்ற நோய்களைப் பொறுத்தமைக்கும் வரம்பில்லை. 'பரவசேண' என்ற தொடரால் உயிர் தன்னை நோக்காது புறத்தே நோக்கியமையால் தன்னுரிமையை இழந்து  பிறவற்றுக்கு அடிமைப்பட்ட நிலையைச் சுட்டுகிறார் ஆசாரியர். அதிகம் என்ன சொல்ல வேண்டும்? எனும் வினாவால், நோயில் துன்புற்ற அனுபவத்தாலே உயிருக்கு உண்மை புரிந்து இருக்கும் எனும் குறிப்பைத் தருகிறார்.

      துன்புற்றதற்குக் காரணம் அகவுணர்வு இல்லாமை ஆகும். புறவுணர்வு எனும் பிற ஆளுமையில் சிக்குதலாகும். அகவுணர்வு கொள்ளும் அறிவு விளங்கினால், துன்பம் வந்தபோதும் அதன் வழிச் செல்லாது தன்னைச் சார்ந்து, அத் துன்பத்தில் விலகி, வினையை நீக்கிக் கொள்ளலாம் ; முக்தியையும் பெறலாம்.

"சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரு நோய்.

[தெளிவுரை :- ஒருவன் எல்லாப் பொருட்களுக்கும் சார்பாகிய மெய்ப்பொருளை உணர்ந்து, பற்று அற நடக்க வல்லவனானால், அவனைச் சாரக்கூடிய துன்பங்கள் அவனது உணர்வைக் கெடுத்து அவனை வந்து அடையமாட்டா.]

எனவும்,

" வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும். " ★★

[தெளிவுரை :-  ஒன்றை விரும்ப வேண்டுமானால் பிறவாமையை விரும்ப வேண்டும் ; ஒரு பொருளையும் விரும்பாமையை விரும்பப் பிறவாமை உண்டாகும்.]

எனவும், தன்னைச் சாரவும் பிறிதைச் சாராது இருக்கவும் தேவர் வலியுறுத்தலைக் காணலாம். நோய் தீர அதுவே நேரிய நெறி ஆகும்.
-------------------------------------------------
திருக்குறள் - 359
★★ திருக்குறள் - 362
------------------------------------------------- 
************************************** 
39

பித்தந்த முத்த பேபஸகாளிஜ்ஜயருஹிர கரிஸகிமிஜாலே |
உயரே வஸிஓஸி சிரம் ணவதஸ மாஸேஹிம் பத்தேஹிம் ||

(பதவுரை)

பித்த - பித்தம், அந்த - குடல், முத்த - சிறுநீர், பேபஸ - நுரையீரல், காளிஜ்ஜய - நிணம், ருஹிர - குருதி, கரிஸ - கபம், கிமிஜாலே - நுண்ணுயிர்கள் கூட்டம் கூடிய, உயரே - வயிற்றில், ணவ தஸ மாஸேஹிம் - ஒன்பது, பத்து மாதங்கள், பத்தேஹிம் - அடைந்துள்ளாய், சிரம் - பலமுறை, வஸிஓஸி - தங்கியுள்ளாய்.

(கருத்துரை)

பித்தமும், குடலும், சிறுநீரும், நுரையீரலும், நிணமும், குருதியும், கபமும், நுண்ணுயிரிகளும் உள்ள தாய் வயிற்றில் ஒன்பது பத்துமாதங்கள் பலமுறை தங்கியுள்ளாய், துறவியே !

(விளக்கவுரை)

முனித் தோற்றம் கொண்டும் அகவுணர்வு இன்மையால் வரம்பற்ற முறை கருப்பையில் தங்கித் துன்புற்றது உயிர், என உரைக்கிறார்.

"என்பினை நரம்பில் பின்னி
   உதிரம் தோய்த்து இறைச்சி மெத்திப்
புன்புறந் தோலின் மூடி
   அழுக்கொடு புழுக்கள் சோரும்
ஒன்பது வாயிற் றாய
   ஊன்பயில் குரம்பை தன்மேல்
அன்பறா மாந்தர் கண்டாய்
   அறிவினால் சிறிய நீரார்."

(தெளிவுரை :-
எலும்பினை நரம்புகளால் இணைத்து இரத்தத்திலே தோய்ந்து இறைச்சியை மேலே பதித்து வெளிப்புறத்தைத் தோலால் மூடி, அழுக்குடன் புழுக்கள் நெளியும் ஒன்பது வாயில்களுடன் கூடிய நிணம் மிக்க இந்த உடலாகிய குடிசையின் மீது மாறாத பற்றுடைய மனிதர்கள் அற்ப அறிவும் இழிந்த தன்மையும் உடையவராவர் என்பதை அறிவாய்)

     என உடலின் அமைப்பைச் சுட்டுவார் மேருமந்தர புராணத்தார்.⁴¹

"ஈருட் டடிமூடி ஈண்டு மலப்பண்டப்
போர்வை புழுமொய்ப்பப் பொல்லாக் குடர்சூடிச்
சார்தற்கு அரிதாகித் தானின் றறாஅள்ளல்
நீர்வாய்ச் சுரம் போந்தார் தம்மை நினையாரோ"

(தெளிவுரை :-
தாய் வயிற்றுக் கருப்பையுள் உறுப்புகள் திரளும் காலத்தே ஈரலாகிய மாமிசத்தை மூடிய உடம்பாகிய போர்வையைப் புழுக்கள் மொய்க்க, அழகல்லாத நாற்றக் குடலோடு கூடி, தூய்மை செய்யாக்கால் நெருங்குதற்கு அரிய நீர் நிறைந்த சகதியாகிய வழியே வந்த மக்கள், தம் தூய்மையின்மையைப் பற்றிச் சிறிதும் எண்ணிப் பார்க்கமாட்டார்களோ ? எண்ணிப் பார்க்காததாலன்றோ தம்மை வியக்கின்றனர் !

 எனக் கருப்பையில் உருவாகிய இயல்பினைச் சுட்டுவார் தேவர். ⁴²

       பெற்ற உடல்களுக்கு கணக்கில்லை. உடலெடுக்க பெண்கள் வயிற்றில் துன்புற்றமைக்கும் அளவில்லை. ஏன் எனில், புறத்துறவுத் தோற்றம் கொண்டு அகத் துறவு கொள்ளாமை ஆகும். எனவே, அகத் துறவைத் தெளிக எனத் தெளிவிக்கிறார்.
--------------------------------------------------
⁴¹ மேருமந்தர புராணம் - 116
⁴² சீவக சிந்தாமணி- 2791
--------------------------------------------------
 ************************************** 

40

தியஸங்கட்டிய மஸணம் ஆஹாரிய மாயபுத்த மண்ணாந்தே |
சத்திக்கரிஸாண மஜ்ஜே ஜடரே வஸிஓஸி ஜணணீஏ ||

(பதவுரை)
ஜணணீஏ ஜடரே - அன்னை வயிற்றில், தியஸங்கட்டிய மஸணம் - பெற்றோர் புணர்வில், விளைந்த உணவு, சத்திக்கரிஸாண - அழுக்குக் குருதி படுக்கை, மஜ்ஜே - இடையே, மாய - அன்னை, புத்தமண் ணாந்தே - உண்டு துப்பிய, ஆஹாரிய - எச்சில் உணவை உண்டு, வஸிஓஸி - இருந்தாய்.

(கருத்துரை)
உயிரே ! நீ அன்னை வயிற்றில் இருந்த போது, பெற்றோர் புணர்வில் விளைந்த விந்து, உணவு, அழுக்குக் குருதி படுக்கைக்கு இடையே அன்னை உண்டு வயிற்றில் துப்பிய எச்சில் உணவை உண்டு இருந்தாய் !

(விளக்கவுரை)

தாய் வயிற்றில் தங்கிய காலத்து உயிர் எத்தகு சூழ்நிலையில் கிடந்து துன்புற்றது என ஆசாரியர் இங்கு நினைவு படுத்துகிறார். புறத்தோற்றம் மட்டும் ஏற்று அகத்தே பற்றுடன் இருந்ததால் பிறப்புத் தொடர்ச்சி அறுபடவில்லை எனக் காட்டியுள்ளார்.

 ************************************** 

41

ஸிஸுகாலே ய அயாணே அஸுஈமஜ்ஜம்மி லோலிஓ ஸி துமம் |
அஸுஈ அஸியா பஹுஸோ முணிவர பாலத்தபத்தேண ||

(பதவுரை)

முணிவர - முனிவரரே, துமம் - நீர், ஸிஸுகாலே - குழவிப் பருவத்தில், ய அயாணே - அறியாமை நிலையில், அஸுஈ மஜ்ஜம்மி - அழுக்கு மிகுந்த இடத்தில் அழுக்குகளுக்கு இடையே, லோலிஓஸி - கிடந்தாய், அஸுஈ - தூய்மை இல்லாதவற்றை, பஹுஸோ - மிகுதியாக, அஸியா - உண்டாய், பாலத்த பத்தேண - குழந்தைப் பருவத்தை அடைந்து இப்படிக் கிடந்தாய்.

(கருத்துரை)
முனிவர ! நீ குழவிப் பருவத்தில் அறியாமை நிலையில், அழுக்கான இடங்களில் அழுக்குகளுக்கு இடையே கிடந்தாய்; தூய்மை இல்லாத பொருள்களை மிகுதியாக உண்டாய்; சிறுவனாக இப்படிக் கிடந்தாய்.

(விளக்கவுரை)
கருவில் பட்ட துன்பங்களை விளக்கிய ஆசாரியர், குழவியாகப் பிறந்த நிலையில் கிடந்த இழி நிலையை இங்குச் சுட்டுகிறார். குழவிப் பருவம் அறியாமையுடைய பருவம். அதனால் மண்ணில் புரண்டதையும், கண்டதெல்லாம் தின்றதையும் சுட்டிக்காட்டி இழி நிலையில் கிடந்ததை நினைவுபடுத்துகிறார். இக் குழவிப் பருவத்தை 'அரும் சுரம்'  என்ற பாலை நிலத்துக்கு ஒப்பாகக் காட்டுகிறார் தோலாமொழித் தேவர். ⁴³


     'முனிவர' என முனிவரை விளித்துள்ளார். இந்த நூல் புறத்தளவில் முனியாக நின்று அகத்தளவில் தன் 'அனுபவ' சாதனை நோக்காத முனிவரைக் கருதியே ஆக்கப்பட்டுள்ளது. முனித் தோற்றம் கொண்டு அகவுணர்வு இன்றி, தன் தோற்றத்தையே போற்றி, உண்ணாமை, உண்டி சுருக்கல் முதலான புறத்தவங்களைக் கடுமையாக நோற்று, உடல் முனியாக விளங்குபவருக்கு அறவுரை கூறுதலாகக் கருத வேண்டும், இந்த அழைப்பை! புற ஒழுக்கத்தால் மட்டும் வீடுபேறு கிடைக்காது; அகவுணர்வு வேண்டும் என்பதாம்.

************************************** 

 42

மம்ஸட்டி ஸுக்க ஸோணிய பித்தந்த ஸவத்த குணிமதுக்கந்தம் |
கரிஸ வஸா பூயகிப்பிஸ பரியம் சிந்தேஹி தேஹஉடம் ||

(பதவுரை)
தேஹ உடம் - உடல் என்னும் குடம், மம்ஸட்டி - மாமிசம், எலும்பு, ஸுக்க - வீரியம், ஸோனிய - குருதி, பித்தந்த - பித்தம் குடல், கூடி, ஸவத்த குணிம துக்கந்தம் - மிகு பிணவாடை வீசும், கரிஸ - குருதி கலந்த மலம், வஸா- ஊனீர், பூய - கெட்ட குருதி, கிப்பிஸ பரியம் - நிணம் நிரம்பியது என, சிந்தேஹி - சிந்திப்பாயாக.

(கருத்துரை)
ஏ! முனீ ! உடல் எனும் குடல் மாமிசம், எலும்பு, வீரியம், குருதி, பித்தம், குடல் கூடி மிகு பிணவாடை வீசும். அத்துடன் குருதியில் கலந்த மலம், ஊனீர், கெட்ட குருதி, நிணம் நிரம்பியது என எண்ணுக !

(விளக்கவுரை)
ஆசாரியர் உடலின் தூய்மை இன்மையைச் சுட்டுகிறார் ,இங்கு.  உயிர் தூய அறிவு மயமானது. அந்த தூய உயிர் பிறவியில் சிக்கி இவ்வாறான உடலில் தங்கி இருத்தல் பொருத்தமன்று எனக் கூறி உயிரின் அகவுணர்வைக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்.

"என் பினை நரம்பிற் பின்னி
  உதிரந் தோய்த்து இறைச்சி மெத்திப்
புன்புறந் தோலின் மூடி
   அழுக்கொடு புழுக்கள் சோரும்

ஒன்பது வாயிற் றாய
   ஊன்பயில் குரம்பை தன்மேல்
அன்பறா மாந்தர் கண்டாய்
   அறிவினால் சிறிய நீரார்."

என உடலின் இழிநிலை இயல்பை விளக்குவார் மேருமந்தரத்தார். ⁴⁴
--------------------------------------------------
⁴⁴ மேருமந்தர புராணம் - 116
----------------------------------------------------
************************************** 

43

பாவவிமுத்தோ முத்தோ ண ய முத்தோ பந்தவாஇ மித்தேண |
இய பாவிஊண உஜ்ஜஸு கந்தம் அப்பந்தரம் தீர ||

(பதவுரை)
தீர - தீரரே, பாவ விமுத்தோ - உணர்வில் பற்றை விட்டவர், முத்தோ - பற்று விட்டவர்(என்பர்), பந்தவாஇ மித்தேண - சுற்றம் முதலான குடும்பம், நண்பரை, முத்தோ ய - விட்டு நீங்கியவர், ண - பற்று விட்டவர் அல்லர், இய - எனவே, பாவி ஊண - இதனை அறிந்து, அப்பந்தரம் - அகத்தில், கந்தம் - பற்றினை, உஜ்ஜஸு - நீக்குக.

(கருத்துரை)
 உணர்வில் பற்று விட்டவர், பற்றுவிட்டவர் ஆவார். அப்படி இன்றி சுற்றம், உறவு, நட்பு முதலானவற்றிலிருந்து நீங்கியவர் பற்றுவிட்டவர் அல்லர்! இதனைத் தெளிந்து, அகப்பற்றினை அகற்றுக, தீர !

(விளக்கவுரை)
பற்று விடுதலின் பான்மையை ஆசாரியர் இங்கு சுட்டுகிறார். பற்று, அகப்பற்று புறப்பற்று என இருவகைப்படும். சுற்றம், உறவு, நட்பு முதலான இவை எல்லாம் புறப்பற்று. விருப்பு, வெறுப்பு, மயக்கம் முதலான இவை எல்லாம் அகப் பற்றுகள். குடும்பம் முதலான தொடர்பை விட்டு துறவுத் தோற்றம் கொண்டு அகத்தில் யான், எனது எனும் வடிவமான உணர்வு, வேண்டுவன வேண்டாதனவற்றில் விருப்பு, வெறுப்பு இவை முதலானவற்றை விலக்க வில்லை என்றால் அவர் பற்றற்ற துறவி அல்லர். அகப்பற்று ஒழியும் போதே பற்றற்ற நிலை தோன்றுகிறது. ஆகையால் 'அகப்பற்றினை அகற்றுக' என அறிவுறுத்துகிறார் ஆசாரியர்.

"பற்றினை பற்றி னாலே
   பற்றெனப் பற்றி னாரை
பற்றுதான் இடும்பை நீருள்
   பரியட்டம் தன்னை ஆக்கும்
பற்றினைப் பற்றி லாமை
   பற்றெனப் பற்றி னாரை
பற்றுவிட்டு இடும்பை நீருள்
   பரியட்டம் ஒழிக்கும் கண்டீர்."

[தெளிவுரை]. ஆசையை உயர்ந்தது உறுதியானது என்று ஆசையோடு பற்றிக்கொண்டவர்களை அந்த ஆசையானது துன்பக் கடலில் ஆழ்த்திப் பிறப்பினை ஆக்கும். ஆசையை ஒழிப்பதுதான் தனது ஆசை என்றிருப்பவர்களை அந்த ஆசையானது நீங்கித் துன்பக்கடலில் இருந்து நீக்கி பிறவிச் சூழலில் இருந்தும் விடுபட வைக்கும். இதை உணர்வீர்களாக.

என்பர் மேருமந்தர புராணமுடையார். #
--------------------------------------------
# மேருமந்தர புராணம் - 323
----------------------------------------------
 ************************************** 

44

தேஹாதி சுத்த ஸங்கோ மாணகஸாஏண களுஸிஓ தீர |
அத்தாவணேண ஜாதோ பாஹுபலி கித்தியம் காலம் ||

(பதவுரை)

தீர- தீரரே ! பாஹுபலீ - பாகுபலி முனிவர், தேஹாதி சுத்த - உடல் முதலான எல்லா, ஸங்கோ - பற்றுகளை விட்டும், மாணகஸாஏண - மான உணர்வால், களுஸிஓ - மலினப்பட்டு நின்றார்,  அதனால் அவர், கித்தியம் காலம் - எவ்வளவு காலம், அத்தாவணேட - ஆதப யோகத்தில், ஜாதோ - கழித்தார், என அறிக.

(கருத்துரை)
தீரரே ! பாகுபலி முனிவர் உடல் முதலான எல்லா பற்றுகளையும் விட்டு தபத்தில் நின்றார். ஆனால், மான உணர்வால் எவ்வளவு காலம் நிற்க வேண்டியதாயிற்று, அறிக. !

(விளக்கவுரை)
 ஆசாரியர் ஓர் எடுத்துக் காட்டு வழி அகவுணர்வு மலினப்பட்டால் விடுதலை பெற முடியாது என்று காட்டுகிறார்.

        பரதரும் பாகுபலியும் ஆதிநாதரின் பிள்ளைகள். ஆதிநாதர் நாட்டுப் பொறுப்பை மகன்களிடம் ஒப்படைத்துவிட்டு துறவியாகச் சென்றுவிட்டார். கடுந் துறவு ஏற்ற அவர் முழுதுணர் அறிவு பெற்றார். அவர் கேவல ஞானம் அடைந்த அன்று பரதருடைய ஆயுத சாலையில் 'சக்கர ரத்னம்' தோன்றியது. அதனால் அவர் ஆறு கண்டங்களையும் வென்று அரசராக வேண்டிய நிலையில் பாகுபலி பிணங்கி நின்றார். எனவே இருவரும் முரண்பட்டு நின்றனர். 'சக்கரம்' நகரில் நுழைய வில்லை. போரிட வேண்டிய கட்டாயம் அமைந்தது. போரிட்டனர். பாகுபலி வென்றார். அவமானம் அடைந்த பரதர் தம்பி பாகுபலி மீது 'சக்கரத்தை' ஏவினார். ஆனால் அச்சக்கரம் அவரைக் கொல்லாது வலம் வந்து நின்றுவிட்டது. ஒரு குடும்பத்தாரை அது கொல்லுதல் இல்லை. அதனால், பாகுபலி பிறப்பின் இழிநிலை கண்டு உறுதி பெற்று (வைராக்யம்) துறவு ஏற்றார். உடல், உறவு, வைபவம் முதலான அனைத்தையும் புறம் என ஒதுக்கினார். ஆனால், பரதன் நிலத்தில் நிற்க வேண்டியுள்ளதே என்ற மான உணர்வால் அகத்தில்  மலினப்பட்டு நின்றார். அதனால் ஓராண்டு காலம் தவத்தில் நின்றும் கேவல அறிவைப் பெற முடியவில்லை. பரதன் இதையறிந்து ,பாகுபலியிடம் பணிந்து வேண்டும்போது அம் மான உணர்வை அழித்து அகவுணர்வில் தூய்மை பெற்று கேவலஞானம் அடைகிறார்.

      ஆசாரியர் இந்த வரலாற்றை நினைவுபடுத்தி, பாகுபலி போன்ற சிறந்த வீரரும் அகவுணர்வில் சற்று மலினப்பட்டதால் கேவல ஞானத்தைப் பெற முடியவில்லை எனச் சுட்டுகிறார். பாகுபலிக்கு இருந்த மானவுணர்வு 'சஞ்சுவலன கஷாய' மாகும் என்பர். அந்தச் சிறு மலினமே தடையாக இருந்தது எனும் போது, பெரும் அகப் பற்றுகளை விடாது புறத் தோற்றம் கொள்வதால் ஒரு பயனும் இல்லை என்பது கருத்து.

"அருந்தவம் தாங்கி மேரு
   அனையவர்க்கு ஏலும் ஆசை
துரும்பிடைத் தோன்று மேனும்
   துகளினிஞ் சிறியர் ஆவர்"

      அரிய தவத்தை ஏற்று மேரு மலைக்கு நிகராக விளங்கியவராயினும் அவரிடம் துரும்பை விரும்பக் கூடிய சிறு ஆசை தோன்றுமாயின் அக்கணமே அவர்கள் அணுவினும் சிறிய அற்பராவார்கள்.

என்பார் மேருமந்தர புராணமுடையார்.
---------------------------------------------
மேருமந்தர புராணம் - 135

--------------------------------------------- 

************************************** 

45

மஹுபிங்கோ ணாம முணீ தேஹாஹாராதிசத்தவாவாரோ |
ஸவணத்தணம் ண பத்தோ ணியாணமித்தேண பவியணுய ||


(பதவுரை)

பவியணுவ - பவ்வியரால் தொழப்படுகின்ற முனிவரே ! தேஹ - உடல், ஆஹாராதி - உணவு முதலான (பற்று), சத்தவாவாரோ - விட்டு ஒழுகிய, மஹுபிங்கோ - மதுபிங்கன் எனும், ணாம - பெயருடைய, முணீ - முனிவர், ணியா ணமித்தேண - நிதான சல்லியத்தால் மட்டுமே, ஸவணத்தணம் - அகவுணர்வு முனிமையை, ண பத்தோ - அடையவில்லை.

(கருத்துரை)

பவ்வியர் தொழும் முனியே! உடல், உணவு முதலான பற்றுவிட்ட மதுபிங்க முனிவர் நிதானத்தால் மட்டுமே பாவ முனிமையை அடையாது போனார், அறிக.

(விளக்கவுரை)

ஆசாரியர் மற்றும் ஒரு வரலாற்றை எடுத்துக்காட்டி அகவுணர்வு மலினப்படுமானால் பிறவியில் உழல வேண்டி வரும் எனக் காட்டுகிறார்.

         மதுபிங்கன் வரலாறு விரிவாகப் புராணங்களில் காணப்படுகிறது.

         பரத கண்டத்தில் சுரமிய நாட்டில் போதனபுர அரசன் திருணபிங்கலன். அவன் மகன் மதுபிங்கலன். சாரணயுகல அரசன் சுயோதனன் தன் மகள் சுலசைக்கு 'சுயம்வரம்' நடத்தினான். அதில் பங்குபெற மதுபிங்கலன் வந்தான். அங்கே, சாகேதபுரி அரசன் சகரனும் வந்து இருந்தான். அவனுடைய அமைச்சன் ஒரு புதிய அங்க இலக்கண நூலை எழுதி பொன்மை (பிங்கல) நிற கண்ணை உடையவனை மணப்பவள் இறந்து போவாள் என மதுபிங்கலனை அங்க குற்றம் உடையவனாகக் காட்டினான். அதனால் சுலசை சகரனுக்கு மாலையிட்டாள். சுலசை தன்னை மணக்காததால், மதுபிங்கலன் வெறுப்புற்றுத் துறவியானான்.

       சுலசை தனக்கு மாலையிடாமைக்கு காரணம் சகரனுடைய அமைச்சன் செய்த வஞ்சனை எனப் பிறகு அறிந்த மதுபிங்கலன், "சகரன் குலத்தையே அழிப்பேன்" என நிதானம் செய்தான். மதுபிங்கலன் இறந்து அசுர தேவனாகப் பிறந்தான். சகரனை அமைச்சனோடு அழிக்க உபாயம் ஆய்ந்தான். இவனுக்கு சூரகதம்ப ஆசிரியரின் மகன் பர்வதன் கிடைத்தான். பசுவதை யாகம் செய்ய உதவுவதாக அவனிடம் கூறினான். சகரனை யாகம் செய்யத் தூண்டினான். பசுக்களைக் கொண்டு சகரனுக்கு யாகம் செய்தான் பர்வதன். யாகம் செய்பவர் சொர்க்கம் செல்லுதல் போல மாயமாகக் காட்டினான். பசுக்கள் கொலைக்குக் காரணமான யாகத்தைச் செய்த பர்வதன் ஏழாம் நரகம் சென்றான். சகரனும் ஏழாம் நரகம் சென்றான். ஆனால், அசுர தேவனான மதுபிங்கலன் நிதானத்தால் தான் செய்த பெரும் பாபத்துக்குப் பிராயச்சித்தம் செய்தான்.

          துறவுத் தோற்றம் கொண்டு கடுந்தவம் செய்த மதுபிங்கலன் நிதானத்தால் அகத்தே மலினப்பட்டதால் துறவின் விளைவான முக்தியை அடையாமல் அசுரதேவனாகப் பிறந்தான். அகவுணர்வு சற்று மலினப்பட்டாலும் பிறவியே தொடரும், புறத்தே எவ்வளவுதான் கடுமையான தவம் செய்தாலும். என்பதனை உணர்த்தவே இக் கதையை எடுத்துக் காட்டினார்.

"காட்சியைக் கலக்கி ஞானக்
   கதிர்ப்பினைத் திரித்துப் புக்கான்
மீட்சியில் உலகம் ஏற்றும்
   ஒழுக்கத்தை அழித்து வையம்
ஆட்சிபெற்று அவனை வையம்
   அதனுக்கே அடிமை ஆக்கும்
மாட்சித்தா நிதானம் தன்னை
   மனங்கொள்ளார் மதியின் மிக்கார்"

        என நிதான சல்லியத்தால் வருங் கேட்டினைக் காட்டுவார் வாமன முனிவர்.
---------------------------------------------
மேருமந்தர புராணம்-139
---------------------------------------------

 ************************************** 


46

அண்ணம் ச வஸிட்ட முணீ பத்தோ துக்கம் ணியாண தோஸேண |
ஸோ ணத்தி வாஸட்டாணோ ஜத்த ண டுருடுள்ளிஓ ஜீவோ ||


(பதவுரை)

அண்ணம் ச - மேலும் மற்றொருவர், வஸிட்ட முனீ - வசிட்ட முனிவர், ணியாண - நிதான சல்லிய,  தோஸேண - குற்றத்தால், துக்கம் பத்தோ - துன்பம் அடைந்தார், ஆகவே, ஜீவோ - உயிர், ஜத்த - இவ்வுலகில், ண டுருடுள்ளிஓ - சுற்ற வில்லை என, ஸோ - அப்படி, வா ஸட்டாணோ - வாழிடம், ணத்தி - ஏதும் இல்லை.

(கருத்துரை)

அடுத்து, நிதானத்தால் துன்பம் அடைந்த வசிட்ட முனிவர் வரலாறு. ஆகவே, அகவுணர்வு இன்மையால், உயிர் பிறந்து உழலாத இடம் என ஏதும் இவ்வுலகில் இல்லை.

(விசேடவுரை)

அடுத்த ஒரு வரலாற்றையும் ஆசாரியர் இங்குச் சுட்டுகிறார். நிதான சல்லியத்தால் வசிட்ட முனிவர் அடைந்த துன்பத்தைக் காட்டி, புறநிலையில் முனித்தோற்றம் கொண்டு, கடுமையான உபவாசம் முதலான தவத்தைச் செய்தாலும் அகவுணர்வு மலினப்படுமானால் பிறவியில் உயிர் எங்கும் உழல்கிறது என்று கூறுகிறார். அறியாமையுடைய உயிர்கள் அலைவது போல உடல் துறவியும் அலைகிறார் என்று காட்டுகிறார்.

         கங்கை கந்தவதி ஆறுகள் கலக்கும் இடத்தில் சடகௌசிகன் என்ற தபசியின் குடில் இருந்தது. அங்கு வசிட்டர் என்ற தபசி ஐந்தீ தவம் செய்து கொண்டிருந்தார். அங்கு குணபத்திரர், வீரபத்திரர் என இரண்டு சாரண முனிவர் வந்தனர். அவர் வசிட்ட தபசி செய்யும் தவத்தில் உயிர் வதை ஏற்படுகிறது என்று காட்டினர். அதனை நேரே கண்ட தபசி சாரண முனிவரைப் பணிந்து ஜிந துறவு ஏற்றார். கடுமையான மாத உபவாசம் ஏற்று ஆதப யோகத்தில் நின்றார். அவருடைய தவச் சிறப்பை அறிந்த வியந்தர தேவர் அவர் ஆணை ஏற்று சேவை செய்ய அவரிடம் வந்தனர். ஆனால் அவர், 'இப்போது எனக்கு உதவி ஏதும் வேண்டாம்; அடுத்த பிறவியில் உம்மை நினைவுகூர்வேன்' என்று சொல்லி  திருப்பிவிட்டார். பிறகு மதுராபுரி சென்று மாத உபவாசம் ஏற்று தவத்தில் நின்றார்.

            அவ்வூர் அரசன் உக்கிரசேனன். அவர் முனிவருடைய தவச் சிறப்பைக் கண்டு அவருக்குத்  தான்  உணவு வழங்க வேண்டும் எனும் அன்பு (பக்தி) உணர்வால்  முனிவருக்குத் தன்னைத் தவிர யாரும் உணவு வழங்கக் கூடாது என அறிவிக்கச் செய்தான்.

       மாத உபவாசம் முடிந்து வசிட்ட முனிவர் உணவு ஏற்க வருகிறார்.

மாத உபவாசம் முடிந்து முனிவர் ஆகாரம் ஏற்க வரும்போது, நெருப்பு பற்றிக் கொண்டது.  அதனைக் கண்ட முனிவர் உணவு ஏற்காமல் திரும்பி தவத்தில் நின்றார். பிறகு மாத உபவாசம் முடித்து உணவு ஏற்க வரும்போது பட்டத்து யானை மதம் கொண்டு ஓடிவர முனிவர் உணவு ஏற்காமல் திரும்பி விட்டார். மீண்டும் மாத உபவாசம் தவத்தில் நின்றார். உபவாசம் முடிந்து உணவு ஏற்க வரும்போது, அரசன் ஏதோ அரச தொல்லையால் முனிவரை எதிர்கொள்ள மறந்து விட்டான். மீண்டும் முனிவர் இருப்பிடம் திரும்பி விட்டார். உணவு ஏற்காததால் முனிவர் களைப்படைந்து இருந்தார். அப்போது, "அரசர் தானும் முனிவருக்கு உணவு வழங்கவில்லை; நம்மையும் வழங்க விடாமல் செய்து விட்டார்" என்று மக்கள் பேசுதலைக் கேட்க, முனிவருக்கு அரசன் மீது மிகுந்த கோபம் ஏற்பட்டது. "அரசனுக்கு மகனாய்ப் பிறந்து அவரைக் கொல்வேன்"  என வெகுளி காரணமாக நிதானம் செய்து இறந்தார்.

            அரசன் உக்கிரசேனனுக்கும் அரசி பத்மாவதிக்கும் மகனாக அடுத்த பிறவியில் பிறந்தார். புறத்தே துறவுத் தோற்றம் இருந்தும் கடுமையான மாத உபவாசம் போன்ற தவங்களில் ஒழுகியும் அகவுணர்வு வெகுளியால் மலினப்பட்டதால் கடுந்துன்பம் முதலான உடைய மனிதப் பிறவியில் பிறந்தார். கருவில் இருந்த காலத்தும், பிறந்த காலத்தும் காணப்பட்ட கொடுந்தன்மையால் பிறந்தவுடன் ஒரு பெட்டியில் குழந்தையை வைத்து அதில் ஒர் அறிமுகக் கடிதமும் வைத்து ஆற்றில் விட்டனர்.

           கௌசாம்பிபுரத்தில் மந்தோதரி என்ற அம்பட்டச்சியிடம் அப்பெட்டி கிடைத்தது. அவள் அதில் இருந்த குழந்தையை எடுத்து தாயன்புடன் வளர்த்தாள். அவனுக்கு கம்சன் எனப் பெயரிட்டாள். அவன் வளர்ந்தபோது அவனுடைய துன்பம் தரும் பொல்லாத குணத்தால் வீட்டை விட்டு துரத்திவிட்டாள். கம்சன்  சௌர்யபுரம் எனும் நகருக்கு வந்து வசுதேவ அரசனுக்குப் பணியாளனானான். அப்போது போதனபுர அரசனை வென்று கொண்டு வருவோருக்கு ஆட்சியில் பங்கும், அரசனின் மகளும் கிடைக்கும் என செய்தி வந்தது. அப்போது வசுதேவன் கம்சனுடன் சென்று போதனபுர அரசனை வென்று கொண்டு வந்தான். அதனால் ஆட்சியில் பங்கும், அரசன் மகளும் கம்சனுக்குக் கிடைக்க வைத்தான் வசுதேவன். அப்போது கம்சன், மதுராபுரி அரசன் உக்கிர சேனனையும் அரசி பத்மாவதியையும் கொண்டுவந்து சிறையில் அடைத்தான். அதாவது தான் முற்பிறவியில் நிதானம் செய்தது போல பெற்றோரை சிறையிலிட்டான். பிறகு தானும் கிருஷ்ணனால் கொல்லப்பட்டான்.

          இப்படி வசிட்ட முனிவர் கடும் புறத்தவம் உடையவராக இருந்தும் நிதானத்தால் அகவுணர்வில் மலினப்பட்டு முக்தி வாய்ப்பினை இழந்து பிறவியில் உழன்று துன்புற்றான். ஆகையால் தூய அகவுணர்வு உடையாரே சித்தி அடைவர் என்பதாம்.

************************************** 


47

ஸோ ணத்தி தப்பஏஸோ சஉராஸீலக்க ஜோணி வாஸம்மி|
பாவவிரஓ வி ஸவணோ ஜத்த ண டுருடுள்ளிஓ ஜீவ ||


(பதவுரை)

ஜத்த - இவ்வுலகில், சஉராஸீ லக்க ஜோணி - எண்பத்து நான்கு நூறாயிரம் யோனி, வாஸம்மி - பிறப்பிடத்தில், ஜீவ - இந்த உயிர், பாவ விரஓ - அகவுணர்வு இன்றி, ஸவணோ வி - சமணத் துறவியாகவும், (அதாவது உடல் துறவியாகி) ணடுருடுள்ளிஓ - உழலாத, ஸோ ணத்தி தப்பஏஸோ - அப்படி ஓர் இடமும் இல்லை.

(கருத்துரை)

 இவ் வுலகில் எண்பத்து நான்கு நூறாயிரம் பிறப்பிடத்தில் இந்த உயிர் அகவுணர்வு இன்றி உடல் துறவியாகி உழலாத இடம் ஒன்றும் இல்லை.

(விளக்கவுரை)

ஆசாரியர் அகவுணர்வு இல்லாது உடல் துறவு ஏற்போர் (திரவியலிங்கி) எல்லா யோனிகளிலும் பிறந்து உழல்கின்றன என்று சுட்டுகிறார்.

      பற்றற்ற புறத்தோற்றம் ஏற்று ஆன்ம அனுபவம் கொள்ளும் அகவுணர்வு இன்றி எண்பத்து நான்கு நூறாயிரம் யோனிகளிலும் பிறப்பெடுத்து உழல்கிறது என்கிறார். ஆன்மத் துய்ப்பு இயல்பு அறியாமல் வெறும் புறத்தோற்றம் ஏற்பதால் அறியாமையுடைய உயிர்பிறவியில் உழல்வது போலவே இந்த புறத் தோற்ற முனிவரும் உழல்கிறார். ஏனெனில், துறவுத் தோற்றம் மட்டுமே சித்திக்குக் காரணம் அன்று. அகவுணர்வே (பாவமே) சித்திக்கு ஏது ஆகும். அதனை உணராமையால்  இந்தத் துறவியும் அறியாமை உடையவரே. அதனால் துறவு ஏற்காதாரைப் போல பிறவியில் இவரும் உழலுகிறார். உடல் துறவு மட்டுமே வேறுபாட்டைத் தராது.

"மெய்த்தவத் தன்மை தானும்
   வென்றவர் படிமம் தாங்கிச்
சித்தமெய் மொழிகள் மூன்றில்
   இருதொடர்ப் பாட்டின் நீங்கிப்
பத்தறம் பன்னி ரண்டாம்
   தவத்தொடு பயின்று தன்கண்
உத்தமக் காட்சி ஞான
   ஒழுக்கத்தை அழுத்தல் கண்டாய்"

[இதன் விளக்கம் :- உண்மையான உயர் தவத்தின் இயல்பானது, வினைகளை வென்றுயர்ந்த இறைவனைப் போல் நிர்வாண உருவத்தை எய்தி, மனம், மொழி, செயல்களால் தூய்மையாகி அகப்புறப் பற்றுக்களை அடியோடு நீக்கி, பத்து அறங்களையும், பன்னிரு அறங்களையும் ஏற்றுப் பயின்று, மிக உயர்ந்த காட்சி, அறிவு, ஒழுக்கங்களைத்  தன்னிடத்தே தாழ்வின்றி தரித்து அதிலே நிலைத்திருத்தலாகும் என்பதை அறிவாயாக.]

       என அகவுணர்வுடன் கூடிய புற உருவமே உண்மையான துறவு நெறி என வாமனர் சுட்டுதலைக் காணலாம்.

எண்பத்து நூறாயிரம் யோனிகளாவன :-

மண் உடல்- 7,00,000; நீருடல் - 7,00,000; நெருப்புடல் - 7,00,000; காற்றுடல் - 7,00,000; நித்திய நிகோதம் - 7,00,000; இதர நிகோதம் - 7,00,000; தாவரம் - 10,00,000; இருபொறி உடல் - 2,00,000; முப்பொறி உடல் - 2,00,000; நாற்பொறி உடல் - 2,00,000; ஐம்பொறி விலங்குடல் - 4,00,000; தேவ உடல் - 4,00,000; நாரகர் உடல் - 4,00,000; மனித உடல் - 14,00,000; மொத்தம் 84,00,000.
----------------------------------------------
மேருமந்தர புராணம்- 411.
---------------------------+------------------ 

************************************** 

48

பாவேண ஹோஇ லிங்கீ ண ஹு லிங்கீ ஹோஇ தவ்வமித்தேன |
தம்ஹா குணிஜ்ஜ பாவம் கிம் கீரஇ தவ்வலிங்கேண ||

(பதவுரை)
பாவேண - அகவுணர்வால் (பாவத்தால்), லிங்கீ - துறவி, ஹோ இ - அமைகிறார், தவ்வமித்தேண - உடல் தோற்றத்தால் மட்டும், லிங்கீ - துறவி, ணஹு ஹோஇ - ஆவதே இல்லை, தம்ஹா - ஆகையால், பாவம் - அகவுணர்வு, குணிஜ்ஜ - ஆளுக, தவ்வ லிங்கேண - உடல் தோற்றத்தால், கிம் - என்ன, கீரஇ - செய்ய முடியும்?

(கருத்துரை)
அகவுணர்வாலே துறவி அமைகிறார். உடல் தோற்றத்தால் மட்டும் துறவி ஆவது இல்லை. ஆகையால் அகவுணர்வு கொள்க. உடல் தோற்றத்தால் என்ன செய்ய முடியும் ?

(விளக்கவுரை)
ஆசாரியர் புறத்தோற்றம் மட்டும் போதாது; அகவுணர்வு வேண்டும் துறவி ஆவதற்கு என்று குறிப்பிடுகிறார்.

        புற நிலை உடல் சார்ந்தது. அகநிலை உயிர் சார்ந்தது. துறவு அல்லது முனிமை என்பது உயிரைச் சார்ந்தது ஆகும் ;உடலைச் சார்ந்தது அன்று. உயிருக்கும்  உடலுக்கும் இடையே 'நிமித்திக - நைமித்திக' தொடர்பு காணப்படுகிறது. உயிரில் ஏற்படும் மாற்றத்துக்கு ஏற்ப உடலிலும் மாற்றம் ஏற்படுகிறது. உயிரில் ஏற்படும் மாற்றத்தை அறிவு மிக்கார் அறிய முடியும். அறிவு குறைந்தார் அறிய முடியாது. ஆனால் உடலில் ஏற்படும் மாற்றத்தை அனைவரும் அறிவர். உடல் தோற்றம் கண்டே ஒருவரைத் துறவி என்றோ துறவி அல்ல என்றோ குறிப்பிடுவர். உடல் தோற்றத்துக்கு ஏற்ப உயிர்த் தோற்றம் இல்லை என்றால் பிறகு அது போலி என்று ஒதுக்கப்படும்.

        முக்தி நெறியில் பற்றற்ற அகவுணர்வு முதன்மையானது. அகத்தில் பற்று இல்லாத போது புறத்திலும் பற்று இராது. ஆனால் இதனை உணராது புறப் பற்றுக்களை நீக்கி விடுவதால் முக்தி அமையும் என்பது அறியாமை ஆகும். தான் ஏற்ற துறவு அகப் பற்று நீங்கியதால் அமைந்ததா அல்லது புறப் பற்று மட்டும் நீங்கியதால் மட்டும் அமைந்ததா என அறிந்து கொள்ள வேண்டும். ஏனெனில், புறத் தோற்றம் அகவுணர்வு இன்றியும் அமைதலைக் காண முடிகிறது. முக்தி அனுபவம் பெற முடியாத அபவ்வியனும் துறவுத் தோற்றம் கொள்ளுதலைக் காண முடிகிறது. அதனால் ஆசாரியர்  துறவி அகவுணர்வாலேயே அடையாளப்படுத்தப்படுகிறார்; புறத் தோற்றத்தால் அன்று எனத் தெளிவு செய்கிறார். முன்னே எடுத்துக் காட்டுகள் வழிதெளிவு செய்ததை இங்கே உயிர் - உடல் நோக்கில் தெளிவு செய்கிறார் எனலாம்.

"அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார்
அற்றுஆக அற்றது இலர்"
   
         [திருக்குறள்-365]
        
எனத் தேவர் துறவு அகவுணர்வில் அமைகிறது எனச் சுட்டுதலைக் காண்க.
              * * *
************************************** 

49

தண்டயணயரம் ஸயலம் டஹிஓ அப்பந்தரேண தோஸேண |
ஜிணலிங்கேண வி பாஹு படிஓ ஸோ ரஉரவே ணரஏ ||

(பதவுரை)

பாஹூ - பாகு என்னும் துறவி, ஜிணலிங்கேண வி - ஜிநர் (பற்றற்ற ) தோற்றம் கொண்டும், அப்பந்தரேண - அகவுணர்வால், தோஸேண - மலினப்பட்டதால், தண்டய ணயரம் ஸயலம் - தண்டக நகர் முழுவதையும், டஹிஓ - கொளுத்தி, ஸோ - அவர், ரஉரவே ணரஏ - ரௌரவம் எனும் ஏழாவது நரகத்தில், படிஓ - விழுந்தார்.

(கருத்துரை)

பாகு எனும் ஜிந முனிவர் அகவுணர்வில் மலினப்பட்டதால் தண்டக நகரைக் கொளுத்தி தானும் ஏழாவது நரகத்தில் சென்று விழுந்தார்.

(விளக்கவுரை)

ஆசாரியர் உடல் துறவி (திரவிய லிங்கி) தானே துன்பத்துக்கு இரையாகிறார் என ஒரு வரலாற்றை எடுத்துக் காட்டுகிறார்.

     கும்பகாரகடக நகருக்கு அரசன் தண்டகன் என்பான். அவருடைய அமைச்சன் பாலகன். அந்நகருக்கு அபிநந்தனர் முதலாக ஐந்நூறு முனிவர் எழுந்தருளினர். அவர்களுள் கண்டகர் எனும் பெயருடைய ஒரு முனிவர் இருந்தார். அவர் அமைச்சரை அற எதிராடலில் (வாதத்தில்) வென்றார். அதனால் வெகுண்ட அமைச்சன் ஒரு விதூடகனை முனிவர் வேடம் கொள்ளச் செய்து அரசியுடன் விளையாடி மகிழ அனுப்பினான். பிறகு அரசனை அழைத்து வந்து இக் காட்சியை காணச் செய்தான். அதைக்கண்ட அரசன் வெகுண்டு உண்மையறியாமல் ஐந்நூறு முனிவரையும் செக்கிலிட்டு ஆட்டி கொல்லுமாறு ஆணையிட்டான். அம் முனிவர்கள் அனைவரும் நடுநிலை உணர்வோடு நின்று சித்தி அடைந்தனர்.

         பிறகு சில காலம் கழித்து பாகு என்னும் முனிவர் வந்தார். அப்போது மக்கள் அவரை எச்சரித்து அரசன் கொடுங்கோலனாக இருப்பதால் நகருள் போகவேண்டாம் என்றும், "ஐந்நூறு முனிவர்களை செக்கிலிட்டுக் கொன்றான் இந்த அரசன், நீங்கள் சென்றால் உங்களையும் கொன்று விடுவான்" என்றனர். அதைக் கேட்ட முனிவர் வெகுண்டு, அந்நாட்டு அரசனையும், அமைச்சனையும், நகர் முழுவதையும் தன் தவ ஆற்றலின் சிறப்பால் கொளுத்தி அழித்தார். அரசனும் அமைச்சனும் இறந்து ஏழாம் நரகத்தில் வீழ்ந்தனர். பாகு முனிவரும் அங்கே சென்றார். இப்படி அகவுணர்வு மலினத்தால் உடல் துறவிக்கும் கேடு விளைகிறது. அதனால் அகவுணர்வே முதன்மை என்பது அறிவுரையாகும்.

" ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்
 எண்ணின் தவத்தான் வரும் "
   
                      [குறள்- 264]
என்பார் தேவர்.

************************************** 
50

அவரோ வி தவ்வஸவணோ தம்ஸண வரணாண சரண பப்பட்டோ |
தீவாயணோ த்தி ணாமோ அணந்த ஸம்ஸாரிஓ ஜாஓ ||


 (பதவுரை)

அவரோ வி - மற்றொருவர், தீவாயணோத்தி - தீபாயனர் என்ற, ணாமோ - பெயருடைய, தவ்வ ஸவணோ - உடல் முனிவர்(திரவிய லிங்கி), தம்ஸண வரணாண சரண - உயர்ந்த காட்சி, அறிவு, ஒழுக்கத்திலிருந்து, பப்பட்டோ - இழிந்து, அணந்த ஸம்ஸாரிஓ - அனந்த பிறவியில், ஜாஓ - சென்றார்.

(கருத்துரை)
மற்றொருவர் தீபாயனர் எனும் 'திரவிய லிங்கி' உயர்ந்த மும்மணியிலிருந்து இழிந்து வரம்பற்ற பிறவிக் கடலில் உழன்றார்.

(விளக்கவுரை)

ஆசாரியர் மற்றொரு வரலாற்றைச் சுட்டிக் காட்டி அகவுணர்வு இல்லாத முனிவர் அடையும் கேட்டினைக் காட்டுகிறார்.

     தீபாயனர் வரலாறு :  ஒன்பதாவது பலபத்திரர்  நேமிநாத பகவானை சமவசரணத்தில் பணிந்து, "கடலில் உள்ள துவாரகை எத்தனைக் காலம் இருக்கும்?" எனக் கேட்டார். பகவான், "பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கள் நிமித்தமாக வெகுண்டு இந்த நகரை எரிப்பார் தீபாயனர்" என்றார். இதைக் கேட்டு உறுதி பூண்டு தீபாயனர் துறவு ஏற்று கிழக்கு நாடு சென்றார். பன்னிரண்டு ஆண்டு கழிய தபத்தைத் தொடங்கினார். பலபத்திரர் துவாரகையில் கள் குடித்தலைத் தடை செய்தார். அதனால் கள் தயாரிப்போர் அதற்கான கலன்களையும் பொருள்பளையும் வெளியே மலை முதலான இடங்களில் எறிந்தனர். அப்போது கலன்களில் இருந்த கள் அதற்கான பொருட்கள் எல்லாம் நீர் நிலைகளில் கலந்தன.

       பிறகு பன்னிரண்டு ஆண்டுகள் கழிந்த பின்பு தீபாயனர் துவாரகை திரும்பி நகருக்கு வெளியே ஆதப யோகத்தில் நின்றார். பகவானுடைய மொழியில் நம்பிக்கை வைக்க வில்லை. சம்பவ குமாரன் முதலான யாதவ இளைஞர்கள் வேடிக்கை விளையாட்டுக்களில் இருந்த போது நீர் வேட்கையால் குட்டை, குளங்களில் இருந்த நீரைக் குடித்தனர். மது ஊறிய நீரைக் குடித்ததால் இளைஞர்கள் உன்மத்தம் அடைந்தனர்.  அங்கே நின்றிருந்த தீபாயன முனிவரைக் கண்டு, "இவர் துவாரகையை எரிக்கப் போகும் முனிவர்" எனக் கூறி கல் முதலானவற்றால் அடித்தனர். அப்போது முனிவர் கீழே விழுந்தார். அவருக்கு வெகுளி ஏற்ப்பட்டு துவாரகையை எரித்துச் சாம்பலாக்கினார். இப்படி தீபாயனர் அகவுணர்வில் இழிந்ததால் பிறவிக் கடலில் உழன்றார்.
               * * *
************************************** 

51

பாவஸமணோ ய தீரோ ஜுவஈஜணவேடிஓ விஸத்தமஈ |
ணாமேண ஸிவகுமாரோ பரீத்த ஸம்ஸாரிஓ ஜாதோ ||


(பதவுரை)

ஸிவகுமாரோ ணாமேண - சிவகுமார் எனும் பெயருடைய, பாவ ஸமணோ ய - பாவ (அகவுணர்வுடைய) சமணர் (முனிவர்)), ஜீவஈஜண - இளம் பெண்கள், வேடி ஓ- சூழ்ந்து இருந்தும், விஸத்த மஈ - தெளிந்த அறிவுள்ள, தீரோ - தீரர், பரீத்த ஸம்ஸாரிஓ - பிறவியைக் கடந்தவர், ஜாதோ - ஆனார்.

(கருத்துரை)

அகவுணர்வுடைய சிவகுமார முனிவர், இளம் பெண்களுக்கு இடையே இருந்தாலும் தெளிந்த அறிவுள்ள தீரர் பிறவிக்கடலைக் கடந்தவர் ஆனார்.

(விளக்கவுரை)

"திரவிய லிங்கி" வரலாறுகளைச் சுட்டிக் காட்டிய ஆசாரியர், இங்கே சித்தி அடைந்த "பாவ லிங்கி" வரலாற்றைக் காட்டுகிறார்.

    சிவகுமார் மனத் தூய்மையால் பிரம்ம கல்ப தேவனாகி அங்கிருந்து வந்து 'ஜம்புசுவாமி' கேவலியாகி வீடுபேறு பெற்றார். அவர் வரலாறு;

      சம்புத்தீவு கிழக்கு விதேகத்தில், புஷ்கலாவதி நாட்டில் வீதசோகபுர அரசன் மகாபத்மன்;  அரசி வனமாலை. அவர்களுக்கு சிவகுமாரன் பிறந்தான். அவன் ஒருநாள் நண்பர்களுடன் காட்டில் விளையாடி விட்டு நகருக்குத் திரும்பிக் கொண்டிருந்தான். வழியில் மக்கள் பூசைப் பொருள்களை எடுத்துச் செல்வதைப் பார்த்தான். "இவர்கள் எங்கே போகின்றனர்?" என நண்பரிடம் கேட்டான். "இவர்கள் ரித்தியுள்ள சாரதத்த முனிவரை வழிபடச் செல்கின்றனர்"  என்றான் நண்பன். அப்போது சிவகுமாரன் முனிவரை அணுகித் தன் முன் பிறவியை அறிந்து உலகப் பற்றை ஒழித்துத் துறவு ஏற்றான். பெண்களுக்கு இடையே இருந்தாலும் சலனப்படாத 'அஸிதாரா விரதம்' ஏற்று அகண்ட பிரமசரியத்தைப் போற்றி சல்லேகனை மரணம் அடைந்து பிரம்ம கல்பத்தில் தேவனானான். அங்கிருந்து வந்து ஜம்புகுமாரராகி துறவு ஏற்று கேவல ஞானம் அடைந்து வீடுபேறு பெற்றார்.


          இப்படி சிவகுமார முனிவர் 'பாவலிங்கியாக' இருந்து வீடுபேறு பெற்றார்.


**************************************

52

கேவலிஜிணபண்ணத்தம் ஏயாதஸஅங்க ஸயலஸுயணாணம் |
படிஓ அபவ்வஸேணோ ண பாவஸவணத்தணம் பத்தே ||


(பதவுரை)

அபவ்வஸேணோ -அபவ்வியசேனர் என்ற முனிவர், கேவலிஜிண - முழுதுணர் அறிவால், பண்ணத்தம் - சொல்லப்பட்ட, ஏயாதஸ அங்க - பதினோரங்கமான, ஸயலஸுய - முழு சுருத, ணாணம் - அறிவையும், படிஓ - படித்தார், எனினும், பாவஸவணத்தணம் - பாவ முனிமையை , ண பத்தே - அடையவில்லை.

(கருத்துரை)

அபவ்வியசேன முனிவர் முழுதுணர் அறிவர் அருளிய பதினோர் அங்க வடிவமான எல்லா சுருத அறிவையும் படித்தார் எனினும், 'பாவலிங்கி' ஆகவில்லை.

(விளக்கவுரை)

ஆகமங்கள் முழுவதும் கற்றாலும் அகவுணர்வு அமையவில்லை எனில் பிறவியில் உழல்வர் எனப் புறத்தோற்ற முனிவர் அபவ்வியசேனர் வரலாற்றைச் சுட்டிக்காட்டி விளக்குகிறார் ஆசாரியர்.

அபவ்விய சேனர் வரலாறு:-


அரசி இரேவதி வரலாற்றில் இக் கதை இடம் பெற்றுள்ளது.


        சந்திரபிரப வித்தியாதர அரசன் குப்தி ஆசாரியரிடம் சுல்லகர் துறவு ஏற்றார். அவர் குருவின் இசைவு பெற்று வடக்கு மதுரைக்கு யாத்திரை செய்தார். ஜிநாலயங்களையும் ஜிநமுனிவர்களையும் தரிசிக்கச் சென்றார். அப்போது குரு இரேவதி அரசிக்கு ஆசி கூறினார்.  வேறு எவருக்கும் ஆசி கூறவில்லை. அபவ்வியசேன முனிவருக்கு வந்தனையும் கூறவில்லை.

        சுல்லகர் பிறகு ஜிநாலய தரிசனம் முடித்து பவ்வியசேன முனிவருள்ள இடத்துக்கு வந்தார். அவரை வணங்கினார். முனிவர் அவரைக் கண்டு கொள்ளவே இல்லை.

       மறுநாள் அவரை சோதிக்க வந்தார். அவர் கமண்டலத்தை எடுத்துக் கொண்டு அவருடன் சென்றார். சுல்லகர் தம் வித்தையால் முனிவர் செல்லும் வழியில் புற்களைத் தோன்றச் செய்தார். முனிவர் புற்கள் மீது நடந்து சென்றார். முனிவர் சௌசம் சென்றபோது கமண்டலத்தில் இருந்த நீரை வித்தையால் கீழே கொட்டி விட்டார். அங்குள்ள குளத்து நீரால் கழுவிக் கொள்ளலாம் என்றார் சுல்லகர். 'ஆகமத்தில் தண்ணீர் ஒரு பொறியுடையது எனக் கூறப்பட்டுள்ளது' என்று சொல்லிக் கொண்டே கை கால்களைக் கழுவிக் கொண்டார் முனிவர். மெய்யறிவு இல்லாதவர் என்னதான் செய்யார்? முனிவரின், ஆகமத்துக்கு எதிரான செயலைக் கண்டு, சுல்லகர் அவரை அபவ்வியசேனர் என அழைத்தார்.

      சுருதம் பன்னிரண்டு அங்கமாகும். பதினோரங்க சுருதங்களை பவ்வியசேன முனிவர் அறிந்து இருந்தார். சொல்லும் பொருளும் மொழியால் அறிந்தாரே தவிர ஆன்மா அனுபவத்தால் உறுதி செய்யவில்லை. ஏனெனில் அவர் 'பாவலிங்கியாக' இல்லை. அகன்ற ஆகம அறிவு இருந்தாலும் அகவுணர்வு இல்லையெனில் அந்த அறிவால் பயன் இல்லை. நூல் ஓதுலால் மட்டும் பயன் உண்டு என்று சிலர் நம்புகின்றனர். அது உண்மை அன்று. நூல்களைக் கற்பதால் மட்டும் சித்தி அடைய முடியாது. அபவ்வியசேனர் முனிவராகவும் இருந்தார்; பதினோரங்கம் படித்தவராகவும் இருந்தார் என்றாலும்; ஜிநர் மொழியில் நம்பிக்கை உணர்வு தோன்றவில்லை. அதனால் 'பாவலிங்கியாக' விளங்க முடியவில்லை. அகவுணர்வு அமையாத வரை ஆகம அறிவால் பயன் இல்லை.

'கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக'

எனவும்,

'கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.


எனவும் தேவர் அகவுணர்வு ஒழுக்கத்தை வலியுறுத்தலைக் காணலாம்.

************************************** 

53

துஸமாஸம் கோஸந்தோ பாவவிஸுத்தோ மஹாணுபாவோய |
ணாமேண ய ஸிவபூஈ கேவலணாணீ புடம் ஜாஓ ||


(பதவுரை)

ஸிவபூஈ ணாமேண ய - சிவபூதி எனும் பெயருடைய முனிவர், துஸமாஸம் - துஸ மாஸ எனும் இரண்டு சொற்களை, கோஸந்தோ - உருப்போட்டு, பாவ விஸுத்தோ - அகவுணர்வு தூய்மை பெற்று, ய - மேலும், மஹாணுபாவோ - பெரும் அனுபவம் அடைந்து, கேவலணாணீ - முழுதுணர் அறிவரானார் என்பது, புடம் ஜாஓ - தெளிவாயிற்று.

(கருத்துரை)

சிவபூதி முனிவர் 'துஸ மாஸ' எனும் இரண்டு சொற்களை உருப்போட்டு உள்ளத் தூய்மையாகி ஆன்மானுபவம் பெற்று முழுதுணர் அறிவரானார்.

(விளக்கவுரை)

ஆகமம் கற்காத சிவபூதி முனிவர் குரு தந்த இரு சொற்களை உருப்போட்டு உள்ளத் தூய்மையாகி ஆன்மானுபவம் பெற்று முழுதுணர் அறிவரானார்.

     சிவபூதி முனிவர் குருவிடம் ஆகமம் பயின்றார்.ஆனால் எதுவும் நினைவில் நிற்கவில்லை. அப்போது குரு 'மா ருஷ், மா துஷ்' என்ற சொற்களைக் கற்பித்தார். அச் சொற்களையே உருப்போட்டார். "விருப்பு கொள்ளாதே, வெறுப்பு கொள்ளாதே" என்பதே அவற்றின் கருத்தாகும். அந்தச் சொற்களும் முறையாக அவர் நினைவில் பதியவில்லை.  அதனால் ' துஷ் மாஷ் ' என்றே உருப்போட்டார். அப்போது ஒரு பெண் உளுந்தை நீரில் போட்டு ஆடை, பருப்பு என வேறுவேறாக ஆக்கிக் கொண்டிருந்தாள். 'என்ன செய்கிறாய்?' என்று கேட்டபோது,  'ஆடை வேறு, பருப்பு  வேறாகப் பிரிக்கிறேன்' என்றாள்.  முனிவர் அதனைக் கேட்டு, உடல் ஆடை, உயிர் பருப்பு என அகவுணர்வு பெற்றார். அதனால் ஆன்ம அனுபவத்தில் தோய்ந்து காதி வினை கெடுத்து, கேவலி ஆனார். ஆகையால் அகவுணர்வு விளக்கம் பெறுவதாலேயே சித்தி அமைகிறது என்பதனை அறிந்து முயல்க என்பதாம்.

************************************** 

54

பாவேண ஹோஇ ணக்கோ பாஹிரலிங்கேண கிம் ச ணக்கேண |
கம்மபயடீண ணியரம் ணாஸஇ பாவேண தவ்வேண ||

(பதவுரை)

ணக்கோ - அம்மணம், பாவேண - பாவத்தாலே, ஹோஇ- அமைகிறது, பாஹிரலிங்கேண - உடல் அடையாளத்தாலான, ணக்கேண - அம்மணத்தால், கிம் ச - என்ன செயல் ஆகும்? பாவேண தவ்வேண - பாவத்தோடு கூடிய உடல் அம்மணத்தால், கம்ம பயடீண - கரும மூலங்களின், ணியரம் - கூட்டம், ணாஸஇ - அழிகிறது.

(கருத்துரை)

அம்மணத்துவம் அகவுணர்வால் அமைகிறது. அது இல்லாத உடல் அம்மணத்தால் என்ன சித்தி ஆகும்? ஏனெனில், அகவுணர்வோடு கூடிய உடல் அம்மணத்தாலேயே வினைகளின் கூட்டம் அழிகிறது.

(விளக்கவுரை)

அம்மணத்தாலேயே கருமம் அழியும் நிலையை ஆசாரியர் சுட்டுகிறார்.

        கருமத்தின் உதிர்ப்பால் ஆன்மா வீடுபேறு பெறுகிறது. அந்த நிலை உடல் அம்மணத்தால் நிகழ்வது அன்று. மாறாக அகவுணர்வுடன் கூடிய உடல் தோற்றத்தாலேயே வினை அழிவு ஆகிறது. உடல் அம்மணத் தோற்றத்தால் ஆவது மட்டும் அன்று. அப்படிக் கொண்டால் விலங்குகள் எல்லாம் வீடுபேறு பெற்றுவிடும். ஏனெனில், அவை பிறந்த நாள் முதல் அம்மணமாக உள்ளன.

      அம்மணம் - உடுத்தாமை, உடல் ஆடை இன்றி இருத்தல் உடல் அம்மணம். உயிர் பொய்ம்மை முதலான பற்றுகளால் மூடாது இருந்தால் உயிர் அம்மணம். எனவே அம்மணத்துவம் இரண்டு நிலைகளிலும் அமைகின்றன. அப்போதுதான் வீடுபேறு அமைகிறது. உடல் அம்மணத்துவம் உயிர் அம்மணத்துவத்தின் புற அடையாள மாகும். நெருப்பைப் பார்க்காத போது புகையைக் கொண்டு நெருப்பை அறிதல் போல எனக் கருதுதல் வேண்டும்.

        பற்றுகளுக்கு இடையே வாழ்ந்தாலும் அகத்தில் பற்று இல்லை என்பது பொருந்தாது. ஏனெனில், பற்றற்ற நிலை என்பது இரண்டிலும் பற்று இல்லாத நிலையாகும். பற்றுகளை அறிந்து பற்றுகளுக்கு இடையே வாழும்போது அங்கே உயிரின் விகாரம் காணப்படுகிறது. உயிரில் விகாரம் உள்ளவரை வினை உதிர்ப்பு முற்றுப் பெறாது. ஆகையால் ஆசாரியர் 'பாவேண தவ்வேண' என்ற தொடரால் இரண்டின் இருப்பையும் சுட்டினார். வீடுபேற்றுக்குக் காரணம் காட்டினார்.

 "பணமிசை மணிதோல் நஞ்சு
    பரிந்ததோர் பணியைப் போல
மணிமுடி ஆடை குஞ்சி
    மனத்திடை மாசு நீக்கி"

என அகப்புற பற்றுகள் நீக்கத்தைச் சுட்டுவார் வாமனர்.

    அம்மணத்துவம் என்பது பற்றுணர்வு இன்மையைச் சுட்டுவதாக கொள்ள வேண்டும். 'நக்கோ' என்ற சொல்லை ஆசாரியர் ஆண்டுள்ளார். ஆடையின்மை நக்கனத்துவம் அன்று! பற்றுணர்வு இன்மை நக்கனத்துவம் ஆகும். அது அகப் புற நிலை இரண்டிலும் அமைகிறது.
------------------------------------------------
மேருமந்தர புராணம் -421
---------------------------------------------------


************************************** 

55

ணக்கத்தணம் அகஜ்ஜம் பாவணரஹியம் ஜிணேஹிம் பண்ணத்தம் |
இய ணாஊண ய ணிச்சம் பாவிஜ்ஜஹி அப்பயம் தீர ||

(பதவுரை)

பாவண - அகவுணர்வு, ரஹியம் - இல்லாத, ணக்கணத்தணம் - நக்கனத்துவம் (அம்மணம்), அகஜ்ஜம் - பயன்ற்றது என்று, ஜிணேஹிம் - ஜிநரால், பண்ணத்தம் - அருளப்பட்டுள்ளது, இய - இவ்வாறு, ணாஊண - அறிந்து, தீர - தீரரே, ணிச்சம் ய - இடைவிடாது, அப்பயம் - ஆன்மாவின், பாவிஜ்ஜஹி - பாவனை செய்க.

(கருத்துரை)

அகப்பற்று நீங்காத அம்மணம் பயன்ற்றது என்று ஜிநர் அருளியுள்ளார். அதனை அறிந்து, தீரரே! ஆன்மாவின் பாவனையை இடைவிடாது செய்க.

(விளக்கவுரை)

பரமான்மாவை பாவனை செய்ய ஆசாரியர் அறிவுறுத்துகிறார்.

       அகப்பற்று நீங்காத நக்கனத்துவத்தால் எந்தப் பயனும் இல்லை என்று அருக தேவர் அருளியுள்ளார். வினை உதிர்ப்பு பற்றற்ற நிலையிலே, அதாவது தன் இயல்பில் நிற்குங்கால் நிகழ்வதாகும். தன் இயல்பில் நிற்றலையே பற்றற்ற நிலை எனப்படுகிறது. அதனால் ஆசாரியர் தன் தூய பரமான்ம நிலையை பாவனை செய்யச் சொல்லுகிறார். ஆன்ம பாவனையோடு கூடிய நக்கனத்துவமே பயனுடையது என்பதாம்.

************************************** 

56

தேஹாதி ஸங்க ரஹிஓ மாணகஸாஏஹிம் ஸயலபரிசித்தோ |
அப்பா அப்பம்மி ரஓ ஸ பாவலிங்கீ ஹவே ஸாஹூ ||


(பதவுரை)

தேஹாதி - உடல் முதலானவற்றில், ஸங்க - பற்று, ரஹிஓ - விட்டவர், மாணகஸாஏஹிம் - மாண கசாயத்தை, ஸயல பரிசித்தோ - எல்லா கசாயங்களுடன் விட்டவர், அப்பா - ஆன்மா, அப்பம்மி - தன் ஆன்மனில், ரஓ - திளைக்கச் செய்பவர், ஸ - அவர், பாவலிங்கீ - பாவலிங்கி, ஸாஹூ - சாது, ஹவே - ஆவார்.

(கருத்துரை)

உடலாதி பற்று விட்டவர், கசாயங்களை விட்டவர், தன் ஆன்ம இயல்பில் ஆன்மாவை திளைக்கச் செய்பவர் அவரே பாவலிங்கி சாது ஆவார்.

(விளக்கவுரை)


ஆசாரியர் இங்கே 'பாவலிங்கி' இயல்பினை விளக்குகிறார். 'பாவ' எனில் உயிரின் இயல்பான நிகழ்வு ஆகும். அந் நிகழ்வைக் காட்டுவன 'லிங்கம்'- அடையாளம், குறி ஆகும். உயிர் அருவ அறிவு வடிவம். அதன் நிகழ்வு காட்சி, அறிவு ஆகும். அது வினை நிமித்தம் பெறும்போது உருவ புற்கல உடல் முதலானவற்றோடு தொடர்பும், பொய்ம்மை,விருப்பு, வெறுப்பு முதலான கசாய உணர்வும் அமைகின்றன. அதனால், உடல் முதலான புறப் பொருள்கள் பற்றின்மையும், விருப்பு வெறுப்பு முதலான உணர்வுகளில் கொள்ளும் 'நான்' எனும் மான உணர்வு இன்மையும், தன் அறிவுக் காட்சி இயல்பின் தன்மயமாவதும் 'பாவலிங்கி' யின் இலக்கணம் ஆகும் என்பர். அவரே 'பாவ லிங்கி' சாது ஆவார்.

************************************** 

57

மமித்தம் பரிவஜ்ஜாமி ணிம்மமத்தி முவட்டிதோ|
ஆலம்பணம் ச மே ஆதா அவஸேஸாஇம் வோஸரே ||

(பதவுரை)

மமித்தம் - 'எனது' உணர்வை, பரிவஜ்ஜாமி - விடுகிறேன், ணிம்ம மத்திம் - 'எனது' எனும் உணர்வு இன்மையால், உவட்டிதோ - நிலைக்கிறேன், ச - இனி, மே - எனக்கு, ஆதா - ஆன்மா, ஆலம்பணம் - சார்பாகும், அவஸேஸாஇம் - புறமான பிற அனைத்தையும், வோஸரோ - விலக்குகிறேன்.

 (கருத்துரை)

மமகாரத்தை விடுகிறேன் ; மமகாரம் இல்லாமையில் நிலைக்கிறேன். இப்போது எனக்கு ஆன்மாவே சார்பாகும். புறமான பிற அனைத்தையும் விலக்குகிறேன்.

(விளக்கவுரை)

ஆசாரியர் 'பாவலிங்கியின்' பாவனையை இங்கு விளக்குகிறார். முன் காதையில் 'பாவலிங்கியின்' இயல்பை விளக்கினார். இந்த காதையில் அவரது நினைவு ஓட்டத்தைக் காட்டுகிறார்.

        'மமகாரம்' - 'மமத்துவம்' எனில் பிற பொருள்களை, பிற (திரிவு) உணர்வுகளை எனது என்னும் மயக்கம் கொள்ளுதலாகும். தனது அல்லாததைத் தனதாக மயங்கும் வரை தன் உயிர் இயல்பைத் துய்க்க முடியாது. அதனால் அதனை விட வேண்டும். 'எனது' எனும் உணர்வு தோன்றுதல் உயிரின் திரிபாகும். திரிபற்ற தன் இயல்பில் நிலைப்படும் போது அவ் வுணர்வு காணப்படாது. ஏனெனில் தன்னில் நிலைப்படும் போது தன் இயல்பை மட்டுமே உயிர் சார்ந்து நிற்கிறது. அங்கே திரிபுக்கு ஏதுவான புறநிமித்தம் இல்லை. எனவே பிற பற்று எல்லாம் விலகிப் போகின்றன.

 'யான்எனது என்னும் செறுக்கறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும்'

என்பார் தேவர்.
------------------------------------------------
திருக்குறள் -346
************************************** 

58

ஆதா கு மஜ்ஜ ணாணே ஆதா மே தம்ஸணே சரித்தே ய |
ஆதா பச்சக்காணே ஆதா மே ஸம்வ்வரே ஜோகே ||

(பதவுரை)

மஜ்ஜ - எனது, ணாணே - அறிவில், கு - உண்மையில், ஆதா - ஆன்மாவாகும், மே - எனது, தம்ஸணே - காட்சியில், ஆதா - ஆன்மா வாகும், ய - மற்றும், சரித்தே - எனது ஒழுக்கத்தில், ஆதா - ஆன்மா வாகும், பச்சக்காணே - புற விடுகையில், ஆதா - ஆன்மாவாகும், மே ஸம்வரே - எனது செறிப்பில், ஆதா - ஆன்மாவாகும், மே ஜோகே - எனது தியானத்தில், ஆதா - ஆன்மா வாகும்.

(கருத்துரை)

அறிவு என்பதும் ஆன்மாதான், காட்சி என்பதும் ஆன்மாதான், ஒழுக்கம் என்பதும் ஆன்மாதான், புறப் பொருள் விடுகை என்பதும் ஆன்மாதான், செறிப்பு என்பதும் ஆன்மாதான், தியானம் என்பதும் ஆன்மாதான்.

(விளக்கவுரை)

 ஆசாரியர் இங்கே ஆன்மத் துய்ப்பு நிலையில் வேறுபாடு இன்மையைக் காட்டுகிறார்.

        அறிவு, காட்சி, ஒழுக்கம், விடுகை, செறிப்பு, தியானம் இவை எல்லாம் பாவ லிங்கிக்கு அமைவன வாகும். இவை பலவாகக் கூறப்பட்டாலும், அனுபவ காலத்தில் ஆன்மாவின் ஒருமை நிலையே காணப்படுவதால் இவை ஆன்மாவாகும் என்றார். இவை ஆன்மாவில் இருந்து வேறுபட்டவை அல்ல. பெயர், எண்ணிக்கை, குறி முதலான நோக்கில்  பலவாகக் கூறப்படுகின்றன. ஆனால் ஒருமை நோக்கில் பார்க்கும்போது இவை எல்லாம் ஆன்மாவே ஆகும். ஆகையால் 'பாவ லிங்கி' முனிவரது அனுபவத்தில் விகல்பம் இல்லை; நிர்விகல்ப அனுபவமே சித்தி ஆகிறது.

           ஒழுக்கம் அறிவு காட்சியில் நிலைத்தல். பச்சக்காணம் எனில் விடுகை. தன் உயிரைச் சார்ந்து நிற்றலால், புறப் பொருள் தொடர்பு எதிர் வராது விடுதல் என்பதாம். செறிப்பு - அறிவு வடிவில் செறிதல் ; பிறபொருள் உணர்வில் நிகழாது இருத்தல். ஜோகம் - ஒரு முனைப்பட்டு நிற்கும் தியானம் - சமாதி.

தான்எனப் படுவது எட்டு
   வினைவிட்ட தன்மை தன்கண்
ஊனமில் அனந்த நான்மை
   இருமையும் ஒருமை ஆக்கி
யான் எனது என்ன நீங்கும்....
வினை.....

என்பார் வாமனர்.
--------------_-------------------------------
மேரு மந்திர புராணம் -412.


************************************** 

59

ஏகோ மே ஸஸ்ஸதோ அப்பா ணாணதம்ஸணலக்கணோ |
ஸேஸா மே பாஹிரா பாவா ஸவ்வே ஸஞ்ஜோக லக்கணா ||

(பதவுரை)

ணாண - அறிவு, தம்ஸண - காட்சி, லக்கணோ - இலக்கணமும், ஸஸ்ஸதோ - நித்தியமானதும் ஆன, அப்பா - ஆன்மா, ஏகோ - ஒன்றே, மே - என்னுடையது, ஸேஸா பாவா ஸவ்வே - பிற பாவம் எல்லாம், ஸஞ்ஜோக - கூட்டுநிலை, லக்கணா - இலக்கணமுடையன, மே - எனக்கு, பாஹிரா - புறமானவை.

(கருத்துரை)

அறிவு, காட்சியுடைய ஆன்ம ஒன்றே என்னுடையது. பிற உணர்வுகள் எல்லாம் கூட்டு நிலையின. அவை எனக்குப் புறமானவை.

(விளக்கவுரை)

பாவலிங்கி முனியின் சிந்தனைப் போக்கினை மீண்டும் இங்கு உறுதி செய்கிறார்.

       அறிவு காட்சி வடிவ நித்திய ஆன்மா ஒன்று - ஒருமையானது. அதுவே என்னுடைய வடிவம். பிற எல்லாம் புறமானவை; கூட்டு நிலையில் கூடுவன; என்னிலிருந்து வேறானவை, இத் தகு பாவனை உடையவர் பாவலிங்கி சாது என்பதாம்.

"வினையுயிர் கட்டு வீட்டின்
   மெய்ம்மையை அறிந்து தேறித்
தினையனைத் தானும் பற்றில்
   செறிவிலா நெறியை மேவித்
தனைவினை நீக்கி நின்ற
   தன்மைய னாக நோக்க
வினையெனத் தானும் நீங்கும்
   விகாரங்க ளோடும் என்றான்"

என்பர் வாமனர். 'தனைவினை நீக்கி நின்ற தன்மையனாக நோக்க' என்ற தொடர் பாவலிங்கியின் உள்ளுணர்வைச் சுட்டுதலைக் காணலாம்.
-------_---------------------------------------------
மேரு மந்தர புராணம் -776
************************************** 

60

பாவேஹ பாவஸுத்தம் அப்பா ஸுவிஸுத்த ணிம்மலம் சேவ |
லஹு சவுகஇ சஇஊணம் ஜஇ இச்சஹ ஸாஸயம் ஸுக்கம் ||

(பதவுரை)

சஉகஇ - நாற்கதியை, சஇஊணம் - விட்டு, லஹு - விரைந்து, ஸாஸயம் - நிலையான, ஸுக்கம் - இன்பத்தைப் பெற, ஜஇ இச்சஹ - விரும்புவாய் எனில், நீர், பாவ - பாவனையால், ஸுத்தம் - தூய்மை பெற, ஸுவிசுத்த - நல் தூய்மையான, சேவ ணிம்மலம் - நிர்மலமே உள்ள, அப்பா - ஆன்மாவை, பாவேஹ - பாவனை செய்க.

(கருத்துரை)

முனிவரே ! பிறவியை ஒழித்து விரைந்து வீடுபேற்றைப் பெற விரும்பினால், பாவனையால் தூய்மை பெற, நல் தூய நிர்மலமே வடிவாக உள்ள ஆன்மாவை பாவனை செய்க.

(விளக்கவுரை)

ஆசாரியர் வீடுபேறு பெற தூய பாவனை செய்யவேண்டும் என்கிறார்.

        பாவனை இரண்டு வகையாக அமைகிறது. ஒன்று சார்புடைய பாவனை ; மற்றொன்று சார்பற்ற பாவனை. சார்புடைய பாவனையில் பாவனை, பாவிப்பவன். பாவனைப் பொருள் என விகல்பம் காணப்படும். அப்படி இல்லாது தூய உயிரில் திளைப்பது நிர்விகல்ப பாவனை - சார்பற்ற பாவனை - எனப்படும். தூய ஆன்மாவை பாவனை செய்தால் காலம் காலமாக கட்டி வந்த கருமங்கள் அழிந்து ஆன்மா பரமான்ம நிலையை அடைகிறது. பிறவி ஒழிகிறது. எனவே ஆசாரியர் நிர்மலமான ஆன்மாவை தியானம் செய்ய அறிவுறுத்துகிறார். பாவலிங்கி முனிவரே இதனை செய்ய முடியும் என்பதாம்.
     ************************************** 

61

ஜோ ஜீவோ பாவந்தோ ஜீவஸஹாவம் ஸுபாவ ஸஞ்ஜுத்தோ |
ஸோ ஜரமரண விணாஸம் குணஇ புடம் லஹஇ ணிவ்வாணம் ||

(பதவுரை)

ஜோ - எந்த, ஜீவோ - உயிர், ஸுபாவ -  தன்னியல்பான உணர்வோடு, ஸஞ்ஜுத்தோ - கூடியுள்ள, ஜீவ ஸஹாவம் - உயிர் இயல்பை, பாவந்தோ - பாவனை செய்கிறது, ஸோ - அவ்வுயிர், ஜர மரணம் - பிறப்பு  முதுமை இறப்பு, விணாஸம் - அழிவை, குணஇ - செய்கிறது, புடம் - விளங்கும், ணிவ்வாணம் - வீடுபேற்றை, லஹஇ - அடைகிறது.

(கருத்துரை)

தன் இயல்பான உணர்வோடு கூடியுள்ள உயிர் இயல்பை அறிந்து பாவனை செய்யும் உயிர் பிறவியை ஒழித்து  வீடு பேற்றைப் பெறுகிறது.

(விளக்கவுரை)

ஆன்ம பாவனை என்பது ஆன்மாவை அறிந்து செய்யும் பாவனை என்கிறார் ஆசிரியர்.

        உயிர் இயல்பை உள்ளவாறு உணராத வரை பாவலிங்கி முனிவர் ஆக முடியாது. உலகில் உயிர் பற்றி எல்லோரும் பேசுகின்றனர். ஆனால், அதன் இயல்பு என்ன ? என அறிவார் இல்லை. மதங்களும் உயிர் இயல்பு குறித்து வேறுவேறான கருத்துகளை முன் வைக்கின்றன. அதனால் ஆசாரியர் உயிரின் உள்ளவாறாம் இயல்பை அறிந்து பாவனை செய்வாரே பிறவியை ஒழித்து பிறவா நிலையை அடைகின்றனர் என்று சுட்டிக் காட்டுகிறார்.

         உயிரின் உண்மையான இயல்பை அறியாத வரை பிறவியை ஒழிக்க முடியாது. எனவே உயிரின் உண்மையான இயல்பைத் தெளிய வேண்டும். அதனைத் தெளிந்து பாவனை செய்பவரே பிறவியை ஒழிக்கிறார். வீடுபேறு பெறுகிறார்.

              ************************************** 

62

ஜீவோ ஜிணபண்ணத்தோ ணாணஸஹாஓய சேயணாஸஹிஓ |
ஸோ ஜீவோ ணாயவ்வோ கம்மக்கயகரண ணிம்மித்தோ ||


(பதவுரை)

ஜீவோ - உயிர், ணாண ஸஹாஓ - அறிவு குணம் உடையது, ய - மற்றும், சாயணா ஸஹிஓ - உணர்வோடு கூடியது என, ஜிண பண்ணத்தோ - ஜிநரால் அருளப்பட்டுள்ளது, ஸோ - அத்தகு, ஜீவோ - உயிரை, ணாயவ்வோ - அறிந்து செய்யும் பாவனை, கம்மக்கய - கரும கேட்டுக்கு, கரண ணிம்மித்தோ - நிமித்த காரணமாகிறது.

(கருத்துரை)

ஜிநர் உயிர் அறிவு குணம் உடையது,  உணர்வோடு கூடியது என்று அருளியுள்ளார். அத் தகு உயிரை பாவனை செய்வதால் கருமம் அழிகிறது.

(விளக்கவுரை)

உயிர் இயல்பு குறித்து ஜிநர் கூறிய இலக்கணத்தை இங்கு ஆசாரியர் சுட்டுகிறார்.

      உயிரின் உள்ளவாறான இயல்பை அறிய வேண்டும் என முன் காதையில் குறிப்பிட்டார். அவ் வுயிரின் இயல்பை ஜிநர் விளக்கியுள்ளார் எனக் குறிப்பிட்டுள்ளார்.

      உயிர் அறிதல் குணமுடையது; உணர்தல் குணமுடையது, என ஜிநர் உரைத்துள்ளார். ஆசாரியருடைய காலத்தில் உயிர் இயல்பு குறித்து பலவாறான கருத்துகள் இருந்துள்ளன. அதனால் அக்கருத்துக்களை ஆய்ந்து உயிரின் இயல்பைத் தெளிய வேண்டும் எனக் குறிப்பிட்டு ஜிநர் கூறிய இயல்பையும் சுட்டிக் காட்டுகிறார். உயிரே வீடு பேறு அடைகிறது. அது வினை அழிவால் அமைகிறது. அதனால் ஜிநர் கூறிய இயல்புடைய உயிரைத் தெளிந்து பாவனை செய்தால் கருமம் கெட அப்பாவனை நிமித்த காரணம் ஆகும் என்றார். வேறு வகையான உயிரை அறிந்து பாவனை செய்தால் கருமம் அழியாது எனும் குறிப்பு உள்ளதை உய்த்துணரலாம்.

         ************************************** 

63

ஜேஸிம் ஜீவஸஹாவோ ணத்தி அபாவோ ய ஸவ்வஹா தத்த |
தே ஹோந்தி பிண்ண தேஹா ஸித்தா வசிகோயரமதீதா ||

(பதவுரை)

ஜேஸிம் - எவருக்கு, ஜீவ ஸஹாவோ - உயிர் இருப்பியல்புடையதோ, ய - மற்றும், ஸவ்வதா - முற்றிலும், அபாவோ - இல்லாததாக, ணத்தி - இல்லையோ, தே - அவர், பிண்ண தேஹா - உடலிலிருந்து வேறுபட்ட, வசிகோயரமதீதா - சொல்லுக்கு அப்பாற்பட்ட, ஸித்தா - சித்தர், தத்த - அங்கே, ஹோந்தி - ஆகிறார்.

(கருத்துரை)

உயிரின் இருப்பு இயல்பையும், முற்றிலும் அழிதல் இல்லாத இயல்பையும் ஏற்கின்றவர் உடலிலிருந்து வேறுபட்ட, சொல்லுக்கு அப்பாற்பட்ட சித்தர் ஆகின்றனர்.

(விளக்கவுரை)

ஆசாரியர் உயிரின் இருப்பை ஏற்பவரே சித்தர் ஆகின்றார் என்று சுட்டுகிறார்.

     இருத்தலும், இயங்குதலும் பொருளின் இயல்பாகும். தன் தன்மையை இழக்காது தொடரும் ஆற்றல் இருத்தலாகும். அத் தன்மைக்கு இசைவான வேறு வேறான மாறுதல்களை உறுதல் இயங்குதல் ஆகும். பொருள் அதனால், தோற்றமும் அழிவும் நிலைபேறு உடையது என்பர். தோற்றமும் அழிவும் 'பரியாயம்' எனப்படும். நிலைபேறு திரவியம் எனப்படும்.

       உயிரும் திரவிய பரியாய வடிவமாகும். ஒரு வகையில் உளதாம் தன்மையும் ஒருவகையில் இலதாம் தன்மையும் உடையது ஆகும். பரியாயம் அநித்தியமாகும். வினையின் தொடர்பால் உயிர் மனித, விலங்கு, தேவ, நாரக பரியாயங்களை எடுக்கிறது. இதில் காணப்படும் அழியும் தன்மையைக் கண்டு உயிர் முற்றுமாக அழிகிறது எனக் கருதக் கூடாது. அதனால் ஆசாரியர் முற்றுமாக இல்லாதது இல்லை என விளக்குகிறார். ஒரு பரியாயம் முடிந்தவுடன் முற்றுமாக உயிர் முடிந்துவிட்டது எனக் கருதக் கூடாது. ஏனெனில் இருப்பு நோக்கில் அது நித்தியமானது. இந்த இரண்டு நிலைகளை இங்கு ஆசாரியர் சுட்டுகிறார். அதனால் இதனை ஏற்பவரே உடலிலிருந்து வேறுபட்ட சொல்லுக்கு அப்பாற்பட்ட சித்த பரியாயத்தை அடைகிறார் என்றார்.

' உண்டே தனது இயல்பின்
   உணரும் காலை உயிர்என்றி
உண்டா யஅவ் உயிரே
   பிறிதின் இல்லை எனஉரைத்தி '

என்பார் திருத்தக்க தேவர்.
--------------------------------------------------
சீவக சிந்தாமணி - 1419
----------------------------------------------------- 

 ************************************** 


64

அரஸமரூவமகந்தம் அவ்வத்தம் சேதணாகுணமஸத்தம் |
ஜாண அலிங்கக்கஹணம் ஜீவமணித்திட்டஸண்டாணம் ||

(பதவுரை)

ஜீவம் - உயிர், அரஸம் - சுவை இல்லாத, அரூவம் - உருவம் இல்லாத, அகந்தம் - மணமில்லாத,  அவ்வத்தம் - ஊறு இல்லாத, சேதணா குணம் - அறிவுணர்வு உள்ள, அஸத்தம் - ஒலி இல்லாத, அலிங்கக் கஹணம் - சின்னம் இல்லாத, அணித்திட்ட ஸண்டாணம் - குறிப்பிட்ட வடிவம் இல்லாத தன்மையதாம் என, ஜாண - அறிக.

(கருத்துரை)

உயிர் சுவை, மணம், உருவம், ஊறு, ஒலி, சின்னம், வடிவம் இல்லாதது, அறிவுணர்வு உடையது என அறிக.

(விளக்கவுரை)

உயிர் இயல்பை அனுபவத்தாலே அறிய முடியும் எனக் கூறுகிறார் ஆசாரியர்.

    சுவை முதலானவை புற்கலத்தின் பண்புகள் ஆகும். அப் பண்புகள் உயிரில் காணப்படா. ஏனெனில், உயிர் அறிவுணர்வு குணமுடையது. இங்கே ஆசாரியர் உயிரின் இயல்பை எதிர்மறை முகத்தானும் உடன்பாட்டு முகத்தானும் விளக்கியுள்ளார். சுவை முதலானவை இல்லாதது உயிர் என்பது எதிர்மறை முகத்த வருணனை. அறிவுணர்வு உடையது என்பது உடன்பாட்டுமுக வருணனை. எதிர்மறையில் கூறியது உயிர் இயல்பு சொல்லுக்கு அப்பாற்பட்டது என்பதனைச் சுட்டுகிறது. உடன்பாட்டு முகமாகக் கூறியது தன் அனுபவத்தால் அறியப்படுவது என்பதனைச் சுட்டுகிறது.

       இப்படி உயிர் இயல்பை அறிந்து அனுபவம் செய்ய வேண்டும் என்பதாம். 'பாவலிங்கி' முனிவருக்கே அது கூடும் என்பது குறிப்பு.

        இந்த காதை சமயசாரம் (49), பிரவசன சாரம் (172), நியம சாரம் (46), பஞ்சாஸ்தி காயம் (172) ஆகிய நூல்களிலும் இடம் பெற்றுள்ளது. உரைகாரர்கள் இந்த காதையைச் சிறப்பாக விளக்கியுள்ளனர். அங்குக் காணலாம்.

               ************************************** 

65

பாவஹி பஞ்சபயாரம் ணாணம் அண்ணாணணாஸணம்ஸிக்கம் |
பாவண பாவியஸஹி ஓ திவஸிவஸுஹபாயணோ ஹோ இ ||

(பதவுரை)

ஸிக்கம் - விரைந்து, அண்ணாண - அஞ்ஞானத்தை, ணாஸணம் - அழிக்கும், பஞ்ச பயாரம் - ஐந்து வகைப்படும், ணாணம் - ஞானத்தை, பாவஹி - பாவனை செய்க, ஏனெனில், பாவண பாவிய ஸஹிஓ - ஞான பாவனையோடு கூடிய உயிர், திவ - சொர்க்க, ஸிவ - மோக்ஷ,  ஸுஹ - இன்பத்துக்கு,  பாயணோ - பாத்திரம், ஹோ இ - ஆகிறது.

(கருத்துரை)

முனிவரே ! விரைந்து அஞ்ஞானத்தை அழிக்கும் ஐங்கூறுபடும் ஞானத்தை பாவனை செய்க ! ஏனெனில், அந்த ஞான பாவனையோடு கூடிய உயிர் சொர்க்க, மோக்ஷ இன்பத்துக்குத்  தகுதி உடையதாக ஆகிறது.

(விளக்கவுரை)

ஆசாரியர் உயிரின் அறிவு வகைப்படும் பாங்கினை இங்குக் கூறுகிறார்.

      அறிதல் இயல்புடைய அறிவு குண நோக்கில் ஒன்றுதான் என்றாலும் அறிவு மறைப்பு வினை நிமித்தத்தால் அது ஐந்து வகையாகக் கூறப்படுகிறது. அவை மதி ஞானம், சுருத ஞானம், அவதி ஞானம், மனப்பர்யய ஞானம், கேவல ஞானம். இவை அறிவு குணத்தின் பரியாயங்கள் ஆகும். இவற்றுள் பொய்ம்மை உணர்வு நோக்கில் மதி, சுருத, அவதி ஞானங்களை 'மித்தியா' ஞானம் என்றும் குறிப்பிடுவர். ஆகையால் பொய்யறிவை அழிக்க மதி முதலான ஐந்து  நல்லறிவு அறிந்து அதனை பாவனை செய்ய வேண்டும். உண்மை நோக்கில் ஞானம் ஒரே வகைதான். அந்த ஞான பாவனையால் தேவ இன்பமும் வீடு பேற்று இன்பமும் அமைகின்றன.

 ************************************** 

66

படிஏண வி கிம் கீரஇ கிம் வா ஸுணிஏண பாவரஹிஏண |
பாவோ காரணபூதோ ஸாயார ணயார பூதாணம் ||

(பதவுரை)

பாவ ரஹிஏண - அகவுணர்வு இல்லாது, படி ஏண வி கிம் - என்ன கற்றாலும், வா - மற்றும், ஸுணிஏண - கேட்டாலும், கிம் கீரஇ - என்ன பயன் விளையும்? ஸாயாரணயார பூதாணம் - இல்லறம், துறவறம் இரண்டுக்கும், காரண பூதோ - காரணமாவது, பாவோ - அகவுணர்வே ஆகும்.

(கருத்துரை)

அகவுணர்வு இல்லாது கற்றலும் கேட்டலும் என்ன பயனைத் தரும்? (ஒன்றும் தராது). ஏனெனில், இல்லறம் துறவறம் இரண்டுக்கும் காரணமாவது அகவுணர்வே ஆகும்.

(விளக்கவுரை)

அகவுணர்வு இன்றி ஆகமங்களைக் கற்றாலாலும், கேட்டலாலும் பயன் இல்லை என்கிறார்.

         இல்லறம், துறவறம்  அகவுணர்வு அமைவதலாயே ஆகின்றன. நற்காட்சி முதலானவை அகவுணர்வு ஆகும். அது இல்லாதபோது நோன்பு நோற்றல் முதலான செயல்களால் பயன்/ ஏதும் இல்லை. ஏனெனில் தேவ இன்பம், முக்தி சுகம் ஒழுக்கத்தால் அமைகின்றன. நற்காட்சி முதலான அகவுணர்வு உடையார் பெறும் இன்பமே சுட்டப்படுகின்றது. இங்கு ஏனெனில், உயிர் பரமான்ம நிலைக்கு உயரும் வரிசை முறை இது. ஆகமம் கற்றலும் கேட்டலும் ஆகம அறிவுதானே என ஐயம் எழலாம். அப்படி இல்லை, நூல் கற்றும் கேட்டும் அறிவின் இயல்பு அறிந்து அனுபவம் பெற்றால் அப்போது அகவுணர்வு அறியப்படுகிறது. ஆகையால், இடைவிடாது பாவனையோடு பயில வேண்டும் என்பதாம்.

         ************************************** 

            
67

தவ்வேண ஸயல ணக்கா ணாரயதிரியா ய ஸயலஸங்காயா |
பரீணாமேண அஸுத்தா ண பாவ ஸவணத்தணம் பத்தா ||


(பதவுரை)

ணாரய - நாரகர், திரியா - விலங்குகள், ய - மற்றும், ஸயல - எல்லா, ஸங்காயா - உயிர்கள் தொகுதியும், தவ்வேண - உடலால், ஸயல ணக்கா - எல்லாம் ஆடையின்றி உள்ளன, ஆனால், பரிணாமேண - பரிணாமத்தால், அஸுத்தா - தூய்மையற்றவை, ஆகையால், பாவ ஸவணத்தணம் - பாவ முனிமையை, ண பத்தா - அவை அடையவில்லை.

(கருத்துரை)

நாரகர், விலங்குகள் மற்றும் எல்லா உயிர்கள் தொகுதியும் உடலில் ஆடையின்றி அம்மணமாக உள்ளன. ஆனால், அகத்தே தூய்மை அற்று உள்ளன. அதனால் அவை 'பாவலிங்கி' நிலையை அடையவில்லை.

(விளக்கவுரை)

ஆடைவிட்டு அம்மணமாக இருப்பதாலேயே சித்த நிலையை அடையலாம் என்றால், உலகில் எல்லா உயிர்களும் ஆடையின்றி உள்ளன என்பதால் அவையும் சித்தி அடைய வேண்டும் என ஆசாரியர் உடல் துறவியை (திரவிய லிங்கியை) எச்சரிக்கிறார்.

       நாரக உயிரும், விலங்கு உயிரும் பிறவி முழுதும் ஆடையின்றி அம்மணமாக உள்ளன. மனிதரும் ஆடையின்றி இருப்பதைக் காண முடிகிறது. ஆனால், அவ்வுயிர்கள் முத்தியை அடையவில்லை. ஏனெனில், அவற்றின் பரிணாமம் தூய்மை அற்று கிடக்கிறது. அதுபோல, துறவு ஏற்று, உடலை அம்மணமாக இருந்து உயிரில் விருப்பு  வெறுப்பு முதலான தூய்மை அற்ற பரிணாமம் இருக்குமானால் அத் துறவி பாவ முனிமையைப் பெற முடியாது. அதனால் வீடு பேறும் வாய்க்காது. மாறாகப் பிறவித் துன்பமே தொடரும். உடல் அம்மணம் போதும் என்றால் அம்மணமாக உள்ள அத்தனை பேரும் முனிவர் ஆக ஆகிவிடுவர். ஆனால் முனிமை நிலை அகவுணர்வு உள்ளபோதே அமைகிறது என்பதாம். உடல் அம்மணமாக, அகவுணர்வு இன்றியும் அமைய முடியும். ஆனால் அகவுணர்வு உள்ள போது அதாவது அகத்தே முனிமை உணர்வு உள்ளபோது உடல் உடையுடன் இராது. அது அம்மணமாகவே இருக்கும். அதனால் ஆசாரியர் 'பாவலிங்கத்துடன் திரவிய லிங்கம்' அமைய வேண்டும் எனத் தெளிவு செய்கிறார்.



 ************************************** 

68

ணக்கோ பாவஇ துக்கம் ணக்கோ ஸம்ஸாரஸாயரே பமஇ |
ணக்கோ ண லஹஇ போஹிம் ஜிணபாவணவஜ்ஜிஓ ஸு இரம் ||


(பதவுரை)

ஸுஇரம் - நீண்ட காலம், ணக்கோ - உடல் அம்மணம், துக்கம் - துன்பத்தை, பாவஇ - அடைகிறது, ணக்கோ - உடல் அம்மணம், ஸம்ஸார ஸாயரே - பிறவிக் கடலில், பமஇ - உழல்கிறது, ணக்கோ - உடல் அம்மணம், போஹிம் - மும்மணியை, ண லஹஇ - அடைவது இல்லை, அது ஜிண பாவண - ஜிந பாவணையிலிருந்து, வஜ்ஜிஓ - விலகி இருக்கிறது.

(கருத்துரை)

நீண்ட காலம் வரை உடல் அம்மண முடையார் துன்பத்தை அடைகிறார், பிறவியில் உழல்கிறார், மும்மணியைப் பெறுவது இல்லை, ஜிந பாவணையிலிருந்து விலகி இருக்கிறார்.

(விளக்கவுரை)

ஆசாரியர் வெறும் உடல் அம்மணத்தால் வரும் கேட்டினை விளக்குகிறார்.

    "ஜிந பாவணா" என்பது மும்மணி பாவனை ஆகும். அது இல்லாதபோது உடல் துறவியாக இருந்தாலும் முத்திக்குக் காரணமான மும்மணியைப் பெறுவது இல்லை. அதனால் பிறவிக் கடலில் உழன்று பலவான பிறவித் துன்பங்களை அடைகிறது உயிர். நிலையான இன்பத்தை பாவலிங்கி - முனிவரே அடைகிறார். அவர் அம்மணமாக இருந்தே அடைகிறார்.

"பொறிப்புலத்து எழுந்த போகத்து
    ஆசையைப் போக விட்டு
வெறுத்தெழு மனத்தர் ஆகின்
    வீட்டின்பம் விளையும் அன்றி
மறுத்துஎதி ராகச் செல்லின்
    மாற்றிடைச் சுழல்வர் என்றும்
திறத்தினை நினைத்தல் இல்லான்
    சீலத்தின் இழிந்து சென்றான்"

என வாமனர் அகவுணர்வு மலினத்தால் வரும் கேட்டினைக் கூறுவார்.
---------------------------------------------------
மேரு மந்தர புராணம் - 862
----------------------------------------------------

 ************************************** 

69

அயஸாண பாயணேண ய கிம் தே ணக்கேண பாவமலிணேண |
பேஸுண்ண ஹாஸ மச்சர மாயா பஹுலேண ஸவணேண ||

(பதவுரை)

பேஸுண்ண - குறைகூறல், ஹாஸ - நகைத்தல், மச்சர - மொறாமை, மாயா - வஞ்சனை, பஹுலேண - மிகுதியாகக் காணப்படுவதால், தே - உம்முடைய, ஸவணேண ணக்கேண - முனித் தோற்ற அம்மணத்தால், கிம் - என்ன பயன் ? ஏனெனில், அது பாவ மலிணேண - பாபத்தால் மலினமானது, ய - மற்றும், அயஸாண - இழிவுக்கு, பாயணேண - பாத்திரமானது.

(கருத்துரை)

முனிவரே ! குறை கூறல், நகையாடுதல், பொறாமை கொள்ளல், வஞ்சனை செய்தல் முதலானவை மிகுந்து காணப்படுகின்றன, உம்முடைய முனித்தோற்ற அம்மணத்தால், அது பாபத்தால் மலினமானது, இழிவுக்குப் பாத்திரமானது. அதனால் என்ன பயன்?

(விளக்கவுரை)

 உடல் அம்மணம் மட்டும் உடைய முனிவரிடம் காணக்கூடிய குறைபாடுகளைக் கூறி அத் தோற்றத்தால் என்ன பயன் என்று எண்ணச் செய்கிறார்.

         அகவுணர்வு இல்லாது புறத்தோற்றம் கொள்ளும் முனிவர் பிறவி நீட்டத்துக்கான பாப உணர்வை உடையவராக இருப்பார் என இங்கே ஆசாரியர் சுட்டுகிறார். மும்மணி போற்றாத உயிர் பொய் நம்பிக்கையுடைய உயிர் என்பர். அந்த உயிர் பாப உணர்வு உடைய உயிர். அதுபோல் உடல் அம்மணம் ஏற்று உள்ளே பாப உணர்வு இருக்கும் எனில் அம் முனிவரும் பாபத்திற்குப் பாத்திரமானவரே. உடல் அம்மணம் பயன் ஏதும் தராது. சில முதன்மையான பாப உணர்வுகளை இங்கே சுட்டுகிறார். இவை அத்தகு முனிவரிடம் காணக் கூடியவை.

பேஸுண்ண - புறங்கூறுதல் - பிறர் குறைகளைப் பேசுதல் - 'பைசூன்யம்' என்பர்.

ஹாஸ - நகையாடுதல் - புலன் வேட்கையால் பிறரோடு நகையாடுதல் - சிரித்து மகிழ்தல். 'ஹாஸ்யம்' என்பர்.

மச்சர - பொறாமை - பிறர் ஆக்கம் கண்டு அழுக்காறு கொள்ளுதல் 'மாத்ஸர்யம்' என்பர்.

மாயா - வஞ்சனை - பிறரை ஏமாற்றி வஞ்சித்தல், 'கபடம்' என்பர்.

      இத்தகு தீய ஒழுக்கங்கள் அந்த போலித் துறவியிடம் காணப்படும். அதனால் பாப உணர்வால் மலினப்பட்டு இருப்பர். இகழ்ச்சிக்குப் பாத்திரம் ஆவர். இத் தீய ஒழுக்கங்கள் மிகுந்து அவரிடம் காணப்படும் என்பது சிந்தனைக்கு உரியது. 'பஹுலேண' என்ற சொல்லால் அதனைக் குறிப்பிடுகிறார்.  துறவுத் தோற்றம் உடையவர் புறத்தே உண்மைத் துறவி போல் நடித்து அகத்தே இத்தகு பாப உணர்வுகளில் நிகழ்வர் என உய்த்துணர வேண்டியுள்ளது.

"வஞ்ச மணத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்"

"வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்னெஞ்சம்
தான்றி குற்றப் படின்"

"வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
 புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று"

"பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்று
ஏதம் பலவும் தரும்"

     இக் குறள்களும் இங்கே இணைத்துப் பார்க்கத் தக்கன. உயிரொழுக்கம் இன்றி புறத்தே அம்மணத்துவம் உடையவர் இப்படித்தான் உலகில் காணப்படுவர்.
----------------------------------------------
திருக்குறள்- 271, 272, 273, 275.
----------------------+---±------------------

 ************************************** 

70

பயடஹிம் ஜிணவரலிங்கம் அப்பிந்தர பாவ தோஸ பரிஸுத்தோ |
பாவமலேண ய ஜீவோ பாஹிர ஸங்கம்மி மயலிய இ ||

(பதவுரை)

அப்பிந்தர பாவ - அகவுணர்வில், தோஸ - குற்றம் இல்லா, பரிஸுத்தோ - தூய்மையோடு கூடிய, ஜிணவர லிங்கம் - ஜிநர் முத்திரையை (பற்றற்ற உருவை), பயடஹிம் - வெளிப்படுத்துக, ஏனெனில், பாவ மலேணய - அகவுணர்வு மலினப்படுவதாலே, ஜீவோ - உயிர், பாஹிர ஸங்கம்மி - புறப்பற்றுகளாலே, மயலியஇ - மலினப்படுகிறது.

(கருத்துரை)

அகவுணர்வைத் தூய்மையாக வைத்து புறத்தோற்றத்தை வெளிப்படச் செய். ஏனெனில், அகவுணர்வு மலினப்படுவதாலே உயிர் புறப் பற்றுகளில் மலினப்படுகிறது.

(விளக்கவுரை)

ஆசாரியர் முனிமை நிலை கொள்ளும் முறைமையை இங்குக் கூறுகிறார்.

        அகவுணர்வு தூயதாக உள்ள போது கொள்ளும் துறவுத் தோற்றம் இழிந்து போகாது. அகவுணர்வு மலினமானால் புறத்தே பற்றுகளின் தொடர்பால் முனிவர் இழிந்து போகிறார். ஆகையால், முதலில் அகவுணர்வை தூயதாக வைக்க அருளுகிறார்.

"இயல்பாகும் நோன்பிற்கொன் றின்மை உடைமை
மயலாகும் மற்றும் பெயர்த்து"

"மற்றும் தொடர்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல்
உற்றார்க்கு உடம்பும் மிகை"

"பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்
பற்றி விடாஅ தவர்க்கு"

என வரும் குறள்கள் அகவுணர்வு தூய்மையைப் போற்றுதலைக் காணலாம்.
----------------------------------------------
திருக்குறள் - 344, 345, 347.
-----------------------------------------------

 ************************************** 

71

தம்மம்மி ணிப்பவாஸோ தோஸாவாஸோ ய உச்சுபுல்லஸமோ|
ணிப்பள ணிக்குணயாரோணடஸவணோ ணக்கரூவேண||

(பதவுரை)

தம்மம்மி - தருமத்தில், ணிப்பவாஸோ - தங்காத உயிர், தோஸா வாஸோ - குற்றங்களுக்குத் தங்குமிடமாம், ய - மற்றும், ணிப்பண - பழமாகாத, ணிக்குணயாரோ - குணமில்லாத வடிவமுடைய, உச்சுபுல்ல - கருப்பம் பூவை, ஸமோ - ஒத்ததாகும், அதனால், ணக்க  ரூவேண - அம்மண வடிவம் கொண்ட, ணட ஸவணோ - சமண கூத்தன் ஆவார்.

(கருத்துரை)

தருமத்தில் தங்காத உடல் துறவி குற்றங்களுக்குத் தங்குமிடமாம். பழமும் மணமும் இல்லாத கருப்பம் பூவை ஒத்தவர் அவர். எனவே அவர் அம்மண வடிவம்கொண்ட சமண கூத்தன் ஆவார்.

(விளக்கவுரை)

அகவுணர்வு இல்லாத முனிவர் கூத்தனை ஒத்தவன் என்கிறார்.

        அகவுணர்வு அறத்தில் - இயல்பில் - தங்கவில்லை என்றால், அங்கே வெகுளி முதலான குற்றங்களே குடி இருக்கும். உணர்வு இரண்டுதான். ஒன்று தன்னுணர்வு (நிர்விகல்பம்) மற்றொன்று புற உணர்வு (விகல்பம்). உயிர் தன் இயல்பில் நிற்றல் வேண்டும். அப்படி நிற்கவில்லை என்றால் அங்கே புற உணர்வு தோன்றி நிற்கும். அதனால் ஆசாரியர் அறத்தில் நிற்காத போது குற்றங்கள் தோன்றிவிடும் என்றார். அந்த நிலையை கருப்பம் பூ நிலைக்கு ஒப்பிடுகிறார். கரும்பு  பூத்தாலும் அதில் கனி வருவது இல்லை; பூவின் பிற குணங்களும் காணப்படுவது இல்லை. புறத்தளவில் முனிமைத் தோற்றம் இருந்தாலும் அகத்தளவில் முனிமைத் தன்மை இல்லாதவர். அவர் முனிமை கருப்பம் பூ போன்றது.   அதனால் அவருக்கு முத்தியும் இல்லை; நற்காட்சி முதலான பிற குணங்களும் வாய்க்கவில்லை. நற்காட்சி முதலான அகவுணர்வு இல்லாதவர் அம்மணமாக இருந்தாலும் கூத்தனை ஒத்தவர் என்கிறார். கூத்தன் வேடம் புனைந்து ஆடுபவன். ஏற்ற வேடத்துக்குத் தக்கவாறு நடிப்பான். அவன் வேடத்துக்கும் உணர்வுக்கும் ஒற்றுமை இராது. அவன் வேறு; அவன் புனையும் வேடம் வேறு. அதுபோல அகவுணர்வு வேறாகவும் புற உருவம் வேறாகவும் காணப்படுவதால் 'திரவிய லிங்கி' முனிவர் சமணக்கூத்தன் ஆவார்.

        ஆசாரியருடைய கால கட்டத்தில் பற்றற்ற முனிமைத் தன்மையில் இழியும் நிலை தொடங்கிவிட்டது. அதனுடைய தாக்கத்தை பாவ பாகுடத்தில் பரக்கக் காணலாம்.

"தவம் மறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து
வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று"

எனக் குறிப்பிடும் குறள் இங்கு ஒப்பு நோக்கத் தக்கது.
-----------------------------------------------
திருக்குறள் - 274

----------------------------------------------- 



72

ஜே ராயஸங்க ஜுத்தா ஜிண பாவணரஹிய தவ்வ ணிக்கந்தா |
ண லஹந்திதே ஸமாஹிம் போஹிம் ஜிணஸாஸணே விமலே ||

(பதவுரை)

ராயஸங்கஜுத்தா - ஆர்வப் பற்றுடைய, ஜிணபாவண ரஹிய - தன்னுயிர் அகவுணர்வு இல்லாத, தவ்வ ணிக்கந்தா - உடல் அம்மண, ஜே - முனிவர், விமலே - குற்றமில்லா, ஜிணஸாஸணே - ஜிந நெறியில் கூறியுள்ள, ஸமாஹிம் - சமாதியும், போஹிம் - மும்மணியும், தே - அவர், ண லஹந்தி - அடைவது இல்லை.

(கருத்துரை)
 அகத்தே ஆர்வப் பற்றுடைய, அகவுணர்வு இல்லாத முனிவர் ஜிந நெறியில் கூறியுள்ள சமாதியும், மும்மணியும் அடைவது இல்லை.

(விளக்கவுரை) 
ஆசாரியர் உடல்முனிவர் மும்மணியும் அடைவது இல்லை. சமாதியும் அடைவது இல்லை என்று உறுதி செய்கிறார்.

        உடல் அம்மணமாக இருக்கிறது. ஆனால் உள்ளம் அம்மணமாக இல்லை. அங்கே ஆர்வம் (ராகம்) காணப்படுகிறது. எதில் ஆர்வம் என்று கூறப்படவில்லை. ஆர்வம் என்பது வினை நிமித்தத்தால் தோன்றுவது. புறப் பொருளில் ஆர்வம் கொள்ளும் போது வினை உதயம் நிமித்தமாக அமைகிறது. அதனால் வினைக் கட்டு புதுப்பிக்கப்படுகிறது. உயிரில் தோன்றும் ஆர்வம் அகப்பற்று எனப்படும். அகப்பற்று உள்ள இடத்தில் புறப்பற்றும் இருக்கவே செய்யும். அகப்பற்றும் புறப்பற்றும் உள்ளதனால் தன்னுயிர் அகவுணர்வு இராது. அங்கே பொய்மை உணர்வே (மித்யாத்வ பாவம்) இருக்கும். அதனால் உள்ளே பற்றுடைமையால் புறத்தே பற்றற்ற உருவம் கொண்டாலும் (அம்மணம்)உடல் துறவியே ஆவார்.

       உடல் துறவி ஜிந நெறியில் முன்னேற முடியாது. அப்போது முத்திக்கு ஏதுவான மும்மணியும் சமாதியும்  அமையாது. புறவேடம் புனைந்தோரால் அகத்தே ஆர்வத்தை விடமுடியாது என்பதாம்.

"வேடம் தரித்து விதிஅந் தரிக்க ஒழுகி மெய்ந்நூல்
பாடம் தரித்து உண்மை பாரா முனிவரின் பாயரிமான்
பீடம் தரிக்க இருந்தபெம் மான்அறம் பேணல்இன்றி
மூடம் தரித்துஎண் மயத்துநின் றார்நல்லர் மும்மடியே"

என்பார் அவிரோதி ஆழ்வார்.
---------------------------------------------
திருநூற்றந்தாதி- 62

---------------------------------------------- 


************************************** 

73

பாவேண ஹோஇ ணக்கோ மிச்சத்தாஈ ய தோஸ சஇஊணம் |
பச்சா தவ்வேண முணீ பயடதி லிங்கம் ஜிணாணாஏ ||


(பதவுரை)

மிச்சத்தாஈ - பொய்ம்மை முதலான, யதோஸ - குற்றங்களை, ச சஇஊணம் - விட்டு, பாவேண - அகவுணர்வால், ணக்கோ - அம்மணம், ஹோஇ - அமைகிறது, பச்சா - பிறகு, ஜிணாணாஏ - ஜிநர் ஆணையான, தவ்வேண லிங்கம் - உடல் அம்மண அடையாள தோற்றம், முணீ - முனிவர், பயடதி - வெளிப்படுத்துகிறார்.

(கருத்துரை)

பொய்ம்மை முதலான அக மலங்களை களைந்து விட்ட பிறகு அகவுணர்வால் அம்மணம் (பற்றின்மை) அமைகிறது. இதை அறிந்து முனிவர் ஆகுபவர் ஜிநர் ஆணையான உடல் அம்மண அடையாளத்தை வெளிப்படுத்துகிறார்.

(விளக்கவுரை)

ஆசாரியர் அகவுணர்வு அம்மணமான பிறகே முனிவராகி புற உடல் அம்மணத்தை வெளிப்படுத்துகிறார் என்று கூறுகிறார். இது ஜிநர் ஆணை என்றும் கூறுகிறார். தீர்த்தங்கரர் வரலாற்றில் இதனைக் காணலாம்.

        அகவுணர்வு தூய்மை பெறாத நிலையில் புறத்தே உடல் அம்மணத் தோற்றம் கொண்டால் பிறகு தூய்மை அற்ற அகவுணர்வுக்கு இசையவே முனிவர் ஒழுகுவார். அவ் வொழுக்கம் உண்மையானதாக இருக்க முடியாது என்றாலும், தம்மை முனிவர் என்றே அழைத்துக் கொள்வர். ஜிநர் உருவம் கொள்ளாமலே தம்மை 'ஜகத் குரு', 'பற்றற்றவர்',  'பட்டாரகர், என்று தற்காலத்தே சிலர் அழைத்துக் கொள்ளுதல் போல !

       ஆனால், முதலில் அகவுணர்வு பற்றற்று இருக்க வேண்டும். பிறகு அதனைப் புற அம்மணத்தால் வெளிப்படுத்த வேண்டும். இதுவே ஜிநர் ஆணை. சாதனை என்பது நெறி அறிந்து செய்யப்படுவது. அதனை அறியாதவர் சாதனை செய்ய முடியாது. 'முதலில் துறவியாகி விடு; பிறகு எல்லாம் சரியாகி விடும்' என்பது ஜிநர் ஆணை அன்று. இதனையே ஆசாரியர் இங்குத் தெளிவு செய்கிறார்.

         இங்கே ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். அக அம்மணத்தை தொடர்ந்து புற அம்மணம் தோன்றிவிடும். ஏனெனில் இரண்டுக்கும் இடையே பிரிவுறா உறவு இருக்கிறது.

"மாற்றிடைச் சுழற்றும் மட்டில்
    புலன்கள்மேல் மற்றி வற்றை
ஆற்றவும் துறக்க மாற்றின்
    சுழற்றியது அகலும் ஆகின்
காற்றிஎம் மனத்து மட்டைக்
    கடையிலா தெளிவை ஆக்கும்
ஆற்றல்சால் துறவென்று ஓதும்
    அருமருந்து அளிக்க என்றார்"

என அகப் புற அம்மண நிலையை வாமனர் காட்டுதலைக் காணலாம்.
-----------------------------------------------
மேருமந்தர புராணம்- 847
----------------------------------------------- 
************************************** 

74

பாவோ வி திவ்வஸிவ ஸுக்க பாயணோ பாவ வஜ்ஜிஓ ஸவணோ |
கம்ம மல மலிணசித்தோ திராயாலயபாயணோ பாவோ ||

(பதவுரை)

பாவோ வி - அகவுணர்வே, திவ்வ ஸிவ - தேவ முத்தி,  ஸுக்க - இன்பம், பாயணோ - பாத்திரம் (காரணம்) ஆகும், பாவ வஜ்ஜிஓ - அகவுணர்வு இல்லாத, ஸவணோ - சமணர் (துறவி), கம்மமல மலிண பாவோ - கரும மல மலின பாவ, சித்தோ - சித்தமுடையவராகி, திரியாலய - விலங்கு கதிக்கு, பாயணோ - பாத்திர மாகிறார்.

(கருத்துரை)

தேவ இன்பத்துக்கும், முத்தி இன்பத்துக்கும், அக உணர்வே காரணம் ஆகும். அகவுணர்வு இல்லாத துறவி கரும மலின சித்தம் உடையவராகி விலங்கு கதிக்குப் பாத்திரம் ஆகிறார்.

(விளக்கவுரை)

நல் அகவுணர்வு இன்பத்துக்கும், மலின அகவுணர்வு துன்பத்துக்கும் காரணம் என்கிறார்.

       முத்திக்கும் பிறவிக்கும் அகவுணர்வே காரணம் ஆகும். புறத்தோற்றம் அன்று. அகவுணர்வு தூயதானால் முத்தி நோக்கிப் பயணம் அமையும். அது மலின முடையதானால் பிறவி நோக்கிப் பயணம் அமையும். விலங்கு கதி என்று குறிப்பிட்டாலும் பிறவி அனைத்தையும் தழுவியதாகக் கொள்ளலாம். பாப முடையார் இன்ன துன்பம் அடைவார் என வரையறை இல்லை. மலின அகவுணர்வு அளவுக்கு ஏற்ப துன்பம் துய்ப்பர்.

"மௌவலங் குழலிக் காக
   மயங்கிமா தவத்தை விட்டூன்
செவ்வியைக் காட்டித் தீற்ற
   செறிந்திட்ட பாவந் தன்னால்
அவ்வுடல் விட்டுவந்தவ்
    அளியனிவ்வானை ஆனான்
இவ்வனத்து தியான்தி லோக
    பச்சத்தீ இயம்பக் கேளா"

என அகவுணர்வு மலினப்பட்டதால் ஆனையான வரலாற்றை வாமனர் காட்டுவார்.
----------------------------------------------
மேருமந்தர புராணம் - 867
-----------------------------------------------
 ************************************** 
75

கயரா மரமணுயகரஞ் ஜலிமாலாஹிம் ச ஸந்துயா விஉலா |
சக்கஹர ராய லச்சீ லப்பஇ போஹீ ஸுபாவேணே ||

(பதவுரை)

ஸுபாவேண - நல்ல அகவுணர்வால், கயராமர - வித்தியாதரர், அமரர், மணுய - மனிதர் முதலானோர், கரஞ்ஜலி மாலாஹிம் - கை குவித்து வரிசையாக, ஸந்துயா - போற்றிப் புகழும், சக்கஹாரராய - பேரரசருடைய, விஉலா லச்சீ - பெரும் லக்ஷிமியையும், போஹி - மும்மணியையும், லப்பஇ - அடைகிறார்.

(கருத்துரை)

நல் அகவுணர்வால் வித்தியாதரர், தேவர், மனிதர் கைகுவித்து வரிசையாகப் போற்றிப் புகழும் பேரரசரது பெரும் லக்ஷ்மியையும், மும்மணியையும் அடைகிறார்.

(விளக்கவுரை)

அகவுணர்வு சிறப்பால், அடையப்படும் மிகு சிறப்பினை ஆசாரியர் காட்டுகிறார்.

        நல் அகவுணர்வு - தூய உணர்வு - கொள்ளுதலால் அரசர் தேவர் முதலானோர் கைகுவித்து போற்றிப் புகழும் பேரரசர் பதவி வைபவமும், அடுத்து மும்மணியையும் பெற முடிகிறது. அதனால் முத்தியையும் முடிவில் அடையப்படுகிறது. மந்த கசாய நிலையில் பேரரசர் போன்ற வைபவங்களும் தூய அகவுணர்வு நிலையில் முத்தியும் பெறப்படுகின்றன. இது தூய அகவுணர்வை அடையும் முயற்சியின் பெருஞ் சிறப்பாகும்.

"முச்சக் கரத்தோடு சித்தியும் எய்துவர்
நச்சறு காட்சியவர்"

எனச் சுட்டும், அருங்கலச்செப்பு.
---------------------------------------------
அருங்கலச் செப்பு - 56
---------------------------------------------- 

************************************** 

76

பாவம் திவிஹபயாரம் ஸுஹாஸுஹம் ஸுத்தமேவ ணாயவ்வம் |
அஸுஹம் ச அட்டரஉத்தம்ஸுஹ தம்மம் ஜிணவரிந்தேஹிம் ||

(பதவுரை)

பாவம் - அகவுணர்வு, ஸுஹாஸுஹம் - சுபம், அசுபம், ஏவ - மற்றும் , ஸுத்தம் - சுத்தம் என, திவிஹ பயாரம் - மூவகையாக, ணாயவ்வம் - அறிய வேண்டும் என, ஜிணவரிந்தேஹிம் - ஜிநரால் அருளப்பட்டுள்ளது, ச - மேலும், அஸுஹம் - அசுபம், அட்டரஉத்தம் - ஆர்த்தம், இரௌத்திரம், ஸுஹ - சுபம், தம்மம் - தருமம் ஆகும்.

(கருத்துரை)

அகவுணர்வு சுபம், அசுபம், சுத்தம் என மூவகை ஆகும். அதில் அசுபம் - 'ஆர்த்தம்'  'இரௌத்தரம்' எனவும், சுபம் - தருமம் எனவும் ஆகும் என்று ஜிநேந்திர பகவானால் அருளப்பட்டுள்ளது.

(விளக்கவுரை)

அகவுணர்வு மூன்று வகையாக அமைகிறது என்கிறார் ஆசாரியர்.

      சுபம், அசுபம், சுத்தம் என அகவுணர்வு மூன்று நிலைகளில் நிகழ முடியும். வினை உதய நிமித்தம் அமையும்போது சுப, அசுப உணர்வுகள் அமையும். வினை உதய நிமித்தமாக அமையாதபோது சுத்த உணர்வு அமையும். முன்னவை இரண்டும் புறப் பொருள் நோக்கால் அமைவன. பின்னது தன் உயிர் நோக்கால் அமைவது.

 ************************************** 
77

ஸுத்தம் ஸத்தஸஹாவம் அப்பா அப்பம்மி தம் ச ணாயவ்வம் |
இதி ஜிணவரேஹிம் பணியும் ஜம் ஸேயம் தம் ஸமாயரஹ ||

(பதவுரை)

ஸுத்தம் - சுத்தம், தம் - அது, அப்பம்மி - ஆன்மாவில் இருக்கும், அப்பா ச - ஆன்மாவின், ஸுத்த - தூய, ஸஹாவம் - இயல்பாக, ணாயவ்வம் - அறிய வேண்டும், இதி - என்று, ஜிணவரேஹிம் - ஜிந பகவானால், பணியம் - அருளப்பட்டுள்ளது, ஜம் - இவற்றுள், தம்ஸேயம் - சிறந்ததை , ஸமாயரஹ - ஏற்று ஒழுக வேண்டும்.


(கருத்துரை)

சுத்தம் உயிரில் காணப்படும் அதன் இயல்பாகும். இம் மூன்று அகவுணர்வுகளுள் சிறந்ததை ஏற்று ஒழுக வேண்டும்.

(விளக்கவுரை)

அகவுணர்வு மூவகை என அருளிய ஆசாரியர் அவற்றுள் உயிருக்குச் சிறப்பு தருவதை ஏற்று ஒழுக வேண்டும் என்கிறார்.

       அசுபம், சுபம், சுத்தம் இவற்றுள் அசுபம் - ஆர்த்தம், இரௌத்திர உணர்வு என்பர். 'ஆர்த்தம்' எனில் துன்புறும் உணர்வு ஆகும். வேண்டாதன அல்லது விரும்பாதன வரும்போதும், விரும்புவன அல்லது வேண்டுவன கிடைக்காத போதும் வரும் உணர்வு ஆகும். அது துன்ப அனுபவமாக இருக்கும்.  'இரௌத்திரம்' எனில் கொடுஞ்செயல் உணர்வு ஆகும். கொடுஞ் செயல்களில் மகிழ்வு கொள்ளுதல் என்பதாம். அது எண்ணத்தாலும், பேச்சாலும் செயலாலும் அமையும். இவை உயிரைக் கீழான நிலைக்குக் கொண்டு செல்லும் மட்டமான இழிந்த உணர்வுகளாகும். எனவே இவற்றைத் தவிர்க்க வேண்டும்.

         சுபம் என்பது இன்புறும் அற உணர்வாகும். அற உணர்வு உயிரை மேல் நிலைக்குச் செலுத்த உதவுவது என்றாலும், இது மந்த கசாயத்தின் பாற்படும். இழிவான உணர்வை நோக்க இது ஒரு வகையில் ஏற்புடையதாகும். ஏனெனில், உயிரை இது கீழான நிலைக்குக் கொண்டு செல்வது இல்லை. இதனால் இதன் 'தரும தியானம்' என்பர்.

        சுத்தம் என்பது உயிர் இயல்பு உணர்வாகும். இங்குத் துன்புறும் உணர்வும் இல்லை. இன்புறும் உணர்வும் இல்லை. மாறாகத் தன் இயல்பைத் துய்க்கும் நிலையாகும் இது.  இவ் வுணர்வாலேயே  உயிர் வீடுபேறு பெறுகிறது. அதனால் இது எப்போதும் ஏற்கத் தக்கது; ஒழுகத் தக்கது. இப்படி இம்மூன்றில் தள்ளத் தக்கதையும், கொள்ளத் தக்கதையும் தெளிந்து உயிருக்கு உகந்ததை ஏற்க வேண்டும். அதனால்தான் ஆசாரியர் 'ஸேயம் தம் ஸமாயரஹ'  - அதாவது 'சிறந்ததை பயிறல்' என்றார்.

"ஆர்த்தரவுத் திரத்த சிந்தை
   அறஎறிந்து உயிரை மாற்றில்
பேர்த்துமுத் திக்கண் வைக்கும்
   தருமசுக் கிலத்தி யானம்
ஓர்துடன் உள்ளம் வைத்தான்
   உதிர்ந்தன வினைகள் பின்னைப்
பார்த்திப குமரன் சிந்தைப்
   பரமாமா முனிவன் ஆனான்"

என வாமனர் சிறந்து பயிறலைச் சுட்டுவார்.

"காமம் சான்ற கடைகோட் காலை
ஏமம் சான்ற மக்களொடு துவன்றி
அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும்
சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே"

எனத் தொல்காப்பியர் உயிருக்குச் சிறந்ததை பயிற்ற வேண்டும் என இல்லறத்தார்க்கு அறிவுறுத்தலைக் காணலாம்.* ஏனெனில் இல்லற வாழ்வு அசுப, சுப உணர்வுகள் நிகழும் இடமாகும். அதிலிருந்து விடுபட்டு சுத்த உணர்வை பயிற்றும் துறவு ஏற்க உரைக்கிறார்.

"மக்களொடு மகிழ்ந்து மனையறம் காத்து
மிக்க காமத்து வேட்கை தீர்ந்துழி
தலைவனும் தலைவியும் தம்பதி நீங்கித்
தொலைவில் சுற்றமொடு துறவறம் காப்ப"

என இதனை வழிமொழியும் இலக்கண விளக்கம்.#
----------------------------------------------
மேருமந்தர புராணம்
*தொல்காப்பியம் கற்பியல்-51
# இலக்கண விளக்கம் 112.

(இன்னும் வரும்)
-----------------------------------------------
பாவ பாஹுடம் அருளியவர்:

ஆசாரியர் குந்தகுந்தர்🙏🙏🙏

தமிழில் விருத்தியுரை வழங்கியவர்,

சல்லேகனா விரதமேற்று பண்டித மரணத்தை தழுவிய,
சுல்லக் ஸ்ரீ ஆதிசாகர்ஜி மகராஜ் அவர்கள்,
--------------------------------------------
 ************************************** 


78

பயலியமாணகஸாஓ பயலிய மிச்சத்தமோஹ ஸமசித்தோ |
பாவஇ திஹுவணஸாரம் போஹி ஜிணஸாஸணே ஜீவோ ||

(பதவுரை)

பயலிய மாணகஸாஓ - மான கசாயம் இல்லாத, பயலிய மிச்சத்த மோஹ - பொய்ம்மை இல்லாத, ஸம சித்தோ - நடுநிலை உணர்வுடைய, ஜீவோ - உயிர், திஹுவண ஸாரம் - மூவுலகிலும் சாரமாக விளங்கும், போஹி - மும்மணியை, ஜிணஸாஸணே - ஜிநர் நெறியில், பாவஇ - அடைகிறது.

(கருத்துரை)

கசாயமும் பொய்ம்மையும் விலக நடுநிலை உணர்வு எய்திய உயிர் ஜிநர் நெறியில் மூவுலகின் சாரமாக விளங்கும் மும்மணியை அடைகிறது.

(விளக்கவுரை)

 ஜிநர் நெறியில் மும்மணியை அடையும் முறையை ஆசாரியர் விளக்குகிறார்.

         முக்தி நெறி மும்மணி வடிவமாகும். அம் மும்மணியைப் பெறுவதில் பெருந் தடையாய் இருப்பவை கசாயங்களும், பொய்ம்மை (மித்யாத்வ) உணர்வுமாகும். ஆசாரியர் இங்கு மான கசாயத்தை எடுத்துப் பேசுகிறார். மானம் செருக்கின்பாற்படும். அதனால் எட்டு மதங்களும் அழியும்போது மும்மணி தோன்ற வாய்ப்பு அமைகிறது என்பதாம்.

         பொய்ம்மை உணர்வு இருக்கும்போது மோகமும் இருக்கும். அவை அழியும்போது மும்மணி தோன்றுகிறது. அப்போது நடுநிலை உணர்வு - விருப்பு - வெறுப்புக்கு ஆட்படாத உணர்வு - அமைகிறது. ஆகையால் இவை இல்லாத உயிரே மும்மணியை அடைகிறது. அதுவே ஜிநர் நெறி. அந்த மும்மணி மூவுலகிலும் உத்தமமானது என்றார்.

"வரிசையில் சுருக்கி வையத்து
   உச்சியார் வடிவு தன்னைப்
புருவத்தின் இடையின் மூக்கின்
   நுனியிற்றான் பொருந்த வைத்துத்
திரிவித யோகி னோடும்
    சென்றுவந்து ஆடும் சிந்தை
உருமற்று இதனை உன்ன
    வினைகள்எழ உடைந்த அன்றே"

என்பார் வாமனர்.*

        சமற்கிருத உரையில் இது 76- வது கதையாக உள்ளது. 76, 77 காதைகள் சமற்கிருத உரையில் இல்லை.
----------------------------------------------
* மேருமந்தர புராணம் - 804
-----------------------------------------------
************************************** 

79

விஸயவிரத்தோ ஸமணோ சத்தஸவரகாரணாஇம் பாஊண |
தித்யரணாம கம்மம் பந்தஇ அஇரேண காலேண ||

(பதவுரை)

விஸய விரத்தோ - புலன் வேட்கையிலிருந்து விடுபட்ட, ஸமணோ - சமணர் (முனிவர்), சத்தஸவரகாரணாஇம் - பதினாறு காரணங்களை, பாஊண - பாவித்து, அஇரேண - சிறிது, காலேண - காலத்திலே, தித்தயர - தீர்த்தங்கர, ணாம கம்மம் - நாம கருமத்தை, பந்த இ - பந்தித்துக் கொள்கிறார்.

(கருத்துரை)

புலன் வேட்கையிலிருந்து விடுபட்ட முனிவர் பதினாறு காரணங்களைப் பாவித்து, சிறிது காலத்திலே தீர்த்தங்கர நாம வினையைப் பந்திக்கிறார்.

(விளக்கவுரை) 

அகவுணர்வு சிறப்பால் தீர்த்தங்கர நிலையும் அடையப்படுகிறது என்கிறார் ஆசாரியர்.

       ஐம்புல வேட்கை உள்ளவரை உயிர், பிறவிக்கு வேண்டிய வினைகளையே பந்திக்கும். அதனால், பிறவி அறுபட புலன் வேட்கை அறுபட வேண்டும். புலன் வேட்கை அறுபடும் உயிரிலேயே நடுநிலை உணர்வு வெளிப்படும். அப்போது தன்னுயிர் நோக்கிய உணர்வு தெளிவு பெறும். அந்த நிலையில் பதினாறு பாவனைகள் பாவிக்கும் எண்ணம் பிறக்கும். அதனை 'பதினாறு காரண பாவனைகள்' என்பர். அதன் விளைவாக தீர்த்தங்கர நாம வினை பந்தமாகிறது. அந்த வினையைத் துய்த்துக் கழிந்த பின் வீடுபேறு வந்து அடைகிறது. பதினாறு பாவனைகள் ஆவன;

1. காட்சி (நம்பிக்கை) தூய்மை (தரிசன விசுத்தி)

   மெய்ப்பொருளில் கொள்ளும் அசையாத ஈடுபாடு. ஐயமின்மை முதலான எட்டு பண்பு நலன்களுடன் கூடியது.

2. நிறைவான பணிவுடைமை (விநய ஸம்பன்னதா)

   மும்மணியிடத்தும் மும்மணியாளரிடத்தும் கொள்ளும் பணிவு, தக்கவாறு அறவோரைச் சிறப்பிக்கும் பண்பு.

3. செம்மையான சீல விரதம் (சீலவ்ரதேஷ்வனதிசார)

      ஏற்ற நோன்புகளைக் குறையின்றி செம்மையாகப் பாதுகாத்து ஒழுகுதல், கொல்லாமை முதலானவை நோக்கில் அடங்கும். அந் நோன்புகளுக்குத் துணை செய்வன சீலங்கள் எனப்படும். திசை எல்லை கட்டுதல் முதலானவை சீலம்.

4. இடையறா அறிவு விளக்கம் (அபீக்ஷண ஞானோபயோகம்)

     மெய்ப் பொருள்களில் இடையறாது அறிவு விளக்கம் பெறுதல்.

5. பிறவி அஞ்சுதல் (ஸம்வேகம்)

     துன்புடை பிறவிக்கு எப்போதும் அஞ்சுதல், அல்லது அறத்தில் எப்போதும் உவகை கொள்ளுதல்.

6. வல்லன தருதல் (சக்தித தியாகம்)

       தன் ஆற்றல் அல்லது வல்லமைக்கு ஏற்ப தருதல் / அறஞ் செய்தல்.

7. வல்லன தாங்குதல் (சக்தித தபம்)

       தன் ஆற்றலை மறைக்காமல் உபவாசம் (உண்ணாமை) முதலான தவங்களைச் செய்தல்.

8. தவத்தோர் இடையூறு நீக்கல் (ஸாது ஸமாதி)

     தவத்தில் நிகழும் முனிவருக்கு இடையூறு நேருங் காலை அதனை நீக்குதல்.

9. அறவோர் துன்பம் நீக்கல் (வையாவ்ருத்யம்)

        அறவோருக்குப் பிணி முதலான துன்பம் வருங்கால் விதி முறையால் அத் துன்பம் துடைக்கச் சேவை செய்தல்.

10. அருகரிடம் அன்பு கொள்ளல் (அருஹத் பக்தி)

    அருகருடைய குணங்களில் ஆழ்ந்த அன்பு கொள்ளல், அல்லது அவர் நெறியில் ஒழுகுதல்.

11. ஆசாரியரிடம அன்பு கொள்ளல் (ஆசார்ய பக்தி)

    சுருத ஞான வடிவ ஆசாரியரிடம் ஆழ்ந்த அன்பு கொள்ளல்.

12. உவாத்தியாயரிடம் அன்பு கொள்ளல் (பஹுசுருத பக்தி)

   பன்னிரண்டு அங்க அறிவு நிறைந்த உவாத்தியாயரிடம் ஆழ்ந்த அன்பு கொள்ளுதல் / அவர் நெறிப்படி நடத்தல்.

13. அருகர் மொழியில் அன்பு கொள்ளல் (பிரவசன பக்தி)

     அருகர் அருளிய ஆறிரண்டு நூல்கள் வடிவான மொழியில் ஆழ்ந்த அன்பு கொள்ளல். அவற்றின் பொருளறிந்து ஒழுகுதல்.

14. காலந்தவறா கடமை (ஆவச்யகா பரிஹாணி)

    முனிவர் தமக்குரிய ஆறு கடமைகளைத் தக்க காலத்தில் தக்க விதிப்படி செய்தல்.

15. அறநெறி விளக்கம் (மார்க பிரபாவனை)

    அருகர் அருளிய அறநெறியை தக்கவாறெல்லாம் விளங்கச் செய்தல்.

16. அறவோரோடு அளவளாவுதல் (பிரவசன வாத்ஸல்யம்)

    தன்போல் அற நெறிச் செல்லும் அறவோரைக் காணுங்கால் கறவை கண்ட கன்று போல மகிழ்ந்து அளவளாவுதல்.

          இப்பதினாறு அகவுணர்வுகளைப் புலன் வேட்கை விளக்கியவர் நன்கு ஒழுகும்போது தீர்த்தங்கர பதவிக்கு ஏதுவான நாம வினை கட்டுகிறது.


************************************** 

80

பாரஸ விஹத வயரணம்தேரஸ கிரியாஉ பாவ திவிஹேண |
தரஹி மணமத்த துரியம் ணாணங்குஸுஏண முணிபவர ||

(பதவுரை)

முணி பவர - முனிபுங்கவ, திவிஹேண - மனம், மொழி, உடல் வழி, பாரஸ - பன்னிரண்டு, விஹத - வகைப்படும், வயகரணம் - தபங்களையும், தேரஸ - பதின்மூன்று, கிரியாஉ - கிரியைகளையும், பாவ - ஒழுகுக, (மேலும்), ணாணங்கிஸுஏண - அறிவு அங்குசத்தால், மணமத்த துரியம் - மதங்கொண்ட மன யானையை, தரஹி - அடக்குக.

(கருத்துரை)

முனி புங்கவ! நூர் முக்கரண தூய்மையொடு பன்னிரண்டு தபங்களையும், பதின்மூன்று செயல்களையும் போற்றுக. மேலும், மதங்கொண்ட யானையை வயப்படுத்துக.

(விளக்கவுரை)

ஆசாரியர் அகவுணர்வு தூய்மை பெறும் ஏதுக்களைக் கூறுகிறார்.

       தபம் அகத்தவம் ஆறு, புறத்தவம் ஆறு என பன்னிரண்டு வகைப்படும். அவற்றுள்,

 புறத்தவம் : 1) அனசனம் (உண்ணாமை), 2) அனுமோதரியம் (சுருக்கி உண்ணுதல்), 3) விருத்த சங்கமம் (எல்லை கட்டி உண்ணுதல்), 4) சுவை பரித்யாகம் , 5) விவிக்த ஸையாசனம் - தனி இடத்தில் உறைதல்,  6) காலயோகு - காய கிலேசம்.

அகத்தவம் : 1) பிராயசித்தம், 2) விநயம், 3) வையா வச்சம் - (சேவை), 4) சுவாத்தியாயம் - (நூல் பயிலுதல்), 5) வியுத்சர்கம் (விடுகை), 6) தியானம்.

        பதின்மூன்று கிரியைகள் : ஐந்து பரமேட்டிகளையும் வணங்கும் செயல் 5, நாள் கடமைகள் ஆறு, ஆலயத்தில் புகுதல் செயல், வெளியேறுதல் செயல், வேறு வகையிலும் சொல்லுவர்.

     மனம் மதங்கொண்ட யானை போன்றது. அது தபத்தோடும் கிரியைகளோடும் கூடிய அறிவு எனும் அங்குசத்தாலேயே வசப்படும். வேறு வகையில் இல்லை.

"நெறிச் சென்று ஒருவண்ணம் நின்அற மாகிய நீள்நிலைச் செந்
தறித்தங்கியஎன் மனத்தனி யானை தளைபரிந்து ஐம்
பொறிப்பன்றி யோடுஐம் புலன்களும் புக்குஅழி யாமல் இன்னும்
குறிக்கொண்டு அருளுகண் டாய்பிண்டி நீழல் குணதரனே"

என்பார் அவிரோதி ஆழ்வார்.*
-------------------------------------------------
திருநூற்றந்தாதி -58
------------------------------------------------ 

************************************** 


81

பஞ்ச விஹ சேலசாயம் கிதிஸயணம் துவிஹஸஞ்ஜமம் பிக் கூ |
பாவம் பாவியபுவ்வம் ஜிணலிங்கம் ணிம்மலம் ஸுத்தம் ||

(பதவுரை)

பஞ்ச - ஐந்து, விஹ - வகை, சேல சாயம் - உடை இல்லாமை, கிதி - நிலத்தில், ஸயணம் - படுத்தல், துவிஹ - இரண்டு வகை, ஸஞ்ஜமம் - சய்யம், பிக்கூ - பிச்சை ஏற்றல், பாவிய புவ்வம் - அகவுணர்வு முன்பே அடைதல், பாவம் - மீண்டும் மீண்டும் அதனை பாவித்தல் (அனுபவித்தல்) உள்ளபோது, ணிம்மலம் - புறத்தூய்மை, ஸுத்தம் - அகத் தூய்மையோடு, ஜிணலிங்கம் - ஜிநபடிமம் - (ஜின தோற்றம்) ஆகும்.

(கருத்துரை)

ஐந்து வகை ஆடை இல்லாதவருக்கு, நிலத்தில் படுப்பவருக்கு, இரண்டு வித சய்யம் உடையவருக்கு, பிச்சை ஏற்பவருக்கு, முன்பே அகவுணர்வு அமைந்தவர்க்கு,  அகவுணர்வை அனுபவம் செய்பவருக்கு புறத்தும் அகத்தும் குற்ற மில்லாத ஜிந தோற்றம் அமைகிறது.

(விளக்கவுரை)

ஆசாரியர் ஜிந தோற்றத்தின் அகப் புற இயல்பை விளக்குகிறார்.

     இங்கே ஜிந தோற்றம் அகநிலை, புறநிலை என்ற இரண்டு நோக்கில் பார்க்கப்படுகிறது. புற நிலையில் ஐந்து வகை ஆடை இராது. பட்டாடை, பருத்தியாடை, மயிராடை, மர(ப்பட்டை) ஆடை, தோலாடை என ஆடை ஐந்து வகையாகப் பேசப்படும். கருத்து என்னவென்றால், எந்த ஆடையும் உடுத்தார் என்பதாம்.நிலத்தில் படுத்தல் எனில் நிற்றல்,  உட்காருதல், போதல், படுத்தல் என எல்லாம் நிலத்தில் நடைபெறும். பலகை காய்ந்த புல்(பாய்) முதலானவையும் இதில் அடங்கும். சய்யம் பிற உயிர்களுக்கு ஊறு செய்யாமை (பிராணி சய்யம்), ஐம்புல வேட்கை இல்லாமை (இந்திரிய சய்யம்) என இரண்டாகும். பிச்சை உணவு என்பது தனக்கு என்று செய்யாத உணவை ஏற்றல், செய்தல், செய்வித்தல் உடன்படுதல் இல்லாமல் 46 குற்றம் நீங்கிய உணவை விதிமுறையோடு ஏற்றல். இனி அக நிலை என்பது முன்னரே கூறியது போல அகவுணர்வு தோன்றி புறத் தோற்றம் அமைய வேண்டும் என்பதாம். இப்படி 'ஜிநலிங்கம்' இரண்டு நோக்கில் தூய்மை உடையதாக அமைகிறது என்பதாம். பிற தோற்றங்கள் பற்றற்ற தோற்றங்கள் அல்ல எனத் தெளிதல் வேண்டும்.

"மணிமுடி கலிங்க மாலை
   மணித்துணர் அனைய குஞ்சி
பணியொடு பரிந்து நின்றார்
   பருமத யானை ஒத்தார்
குணமணி அணிந்து குன்றாப்
   பண்ணவர் குழாத்தைப் புக்கார்"

என ஜிந தோற்றத்தின் அகப் புறத் தூய்மையை விளக்குவார். *
------------------------------------------------
* மேருமந்தர புராணம் - 123

------------------------------------------------- 


************************************** 


82

ஜஹ ரயணாணம் பவரம் வஜ்ஜம் ஜஹ தருகணாண கோஸீரம் |
தஹ தம்மாணம் பவரம் ஜிண தம்மம் பாவிபவமஹணம் ||




(பதவுரை)
ரயணாணம் - இரத்தினங்களில், ஜஹ - எப்படி, வஜ்ஜம் - வைரம், பவரம் - சிறந்தது, தருகணாண - மரங்களில், ஜஹ - எப்படி, கோஸீரம் - சந்தனம், பவரம் - சிறந்தது, தஹ - அப்படி, தம்மாணம் - தருமங்களில், ஜிண தம்மம் - ஜிந தருமம், பவரம் - சிறந்தது, அது பாவி பவ மஹணம் - எதிர்வரும் பிறவிகளை அழிப்பது.

(கருத்துரை)
அருமணிகளில் வைர மணியும், பெரு மரங்களில் சந்தன மரமும் சிறப்புற்று இருப்பது போல, அறங்களில் பிறவிகளை அழிக்கும் ஜிந அறம் சிறந்தது ஆகும்.

 (விளக்கவுரை)
ஆசாரியர் பற்றற்ற ஜிந அறத்தின் சிறப்பை விளக்குகிறார்.

        'தருமம்' என்ற சொல் உலகில் பரவலாக வழங்கும் சொல்லாகும்.  அப் பெயரால் உலகில் பல வகையான நெறிகள் காணப்படுகின்றன. அந் நெறியில் செல்வோரும் பலராக உள்ளனர். ஆனால் நெறியை ஆய்ந்து தெளிந்து ஏற்று நடப்போர் மிகவும் அரிதாகவே காணப்படுகின்றனர்.

         உயிரைத் தன் தூய நிலைக்கு உயர்த்துவதுதான் உண்மையான தருமம்/ அறம் ஆகும். அறத்தின் பயன் வீடுபேறு ஆகும். ஆனால் அறம்/ தருமம் எனும் பெயரால் செய்வன எல்லாம் உயிரைப் பிறவியிலேயே உழலச் செய்கின்றன. ஏனெனில் அங்கே அறம் தெளியப்படவில்லை. அதனால் ஆசாரியர் பற்றற்ற அறம்தான் உயர்ந்த நெறி என்றார். அருமணிகளுள் வைரம் போல, பெரு மரங்களுள் சந்தன மரம் போல சிறப்புடன் விளங்குவது பற்றற்ற தருமம் ஆகும். அதனை ஜின தருமம் என்று சுட்டினார்.

"தோன்றிமாய்ந்து உலகம் மூன்றில்
   துயர்எய்தும் உயிர்கள் தம்மை
ஈன்றதாய் போல ஓம்பி
   இன்பத்துள் இருத்தி நாதன்
மூன்றுல கிற்கும் ஆக்கி
   முடிவிலா தன்மை நல்கும்
ஆன்றநல் அறத்தைப் போலும்
   அரியது ஒன்று இல்லை என்றான்"
  
என ஜிந அறத்தை நல்லறம் என்பார் வாமனர்.  எனவே அந்த பற்றற்ற அறத்தை ஏற்க வேண்டும் என்பதாம்.
--------------------------------------------
* மேருமந்தர புராணம்- 117

---------------------------------------------


************************************** 

83

பூயாதிஸு வயஸஹியும் புண்ணம் ஹி ஜிணேஹிம் ஸாஸணே பணியம் |
மோஹக் கோஹவிஹீணோ பரிணாமோ அப்பணோ தம்மோ ||


(பதவுரை)

பூயாதிஸு - பூசை முதலானவற்றில், வய ஸஹியம் - நோன்புடன் கூடி இருத்தல், புண்ணம் - புண்ணியம், மோஹக் கோஹ - மோக கலக்கம், விஹீணோ - இல்லாத, அப்பணோ - ஆன்மாவினுடைய, பரிணாமோ - பரிணாமம், தம்மோ - தருமம், என ஜிணேஹிம் - ஜிநரால், ஸாஸணே - ஜிந நெறியில், பணியம் - கூறப்பட்டுள்ளது.

(கருத்துரை)

பூசை முதலான செய்தல், நோன்பு நோற்றல் இவை புண்ணியம். மோக கலக்கமில்லாத உயிரில் தோன்றும் நிகழ்வாக்கம் (பரிணாமம்) தருமம் என  ஜிந நெறியில் ஜிநரால் அருளப்பட்டுள்ளது.

  (விளக்கவுரை)

ஆசாரியர் சுப உணர்வுக்கும் தூய உணர்வுக்கும் இடையே உள்ள வேறுபாட்டினை இங்குச் சுட்டுகிறார்.

        பூசை முதலானவை என்றதால், பூசை வந்தனை, சேவை என தேவன், குரு ஆகமத்துக்குச் செய்யப்படும் அத்தனை நற்செயல்களையும் உள்ளடக்கிக் கொள்ளலாம். நோன்புடன் கூடி இருத்தல் என்றதால், உபவாசம் முதலிய நியமங்களை உள்ளடக்கிக் கொள்ளலாம். இவை எல்லாம் நற்செயல்கள். அதனால் உயிரில் சுப உணர்வு பரிணமிக்கிறது. இந்த சுப உணர்வு ஆர்வத்தோடு (ராகத்தோடு) கூடியது. அதனால் புண்ணிய கருமம் பந்தமாகிறது. அதற்கு ஏதுவான இவற்றையே புண்ணியம் என்றது காரணத்தைக் காரியமாக ஏற்றி உரைத்ததாகும். இவ் வுணர்வுகளால் மோக கலக்கத்துக்குச் சிறிது தடை ஆகிறது. அதனால், இச் சுப உணர்வை உபசாரமாக  'தருமம்' என்றனர்.  ஆனால், இந்த சுப உணர்வை, சுப செயல்களை உண்மையான தருமம் என மகிழ்தல் தவறாகும். அதனால் உண்மையான தருமத்தை அடைய முடியாது.

     மோக கலக்கம் இல்லாத உயிரின் நிகழ்வே உண்மையான தருமம் ஆகும்.

         மோகம்,  தரிசன மோகம் சாரித்திர மோகம் என இரு கூறுபடும். பொய்ம்மை உணர்வு - மெய்ப் பொருள் அல்லாதவற்றை மெய்ப் பொருளாக உணர்தல்/ நம்புதல் தரிசன மோகம். வெகுளி , மானம் , அரதி (உவகை இல்லாமை) சோகம், அச்சம், அருவருப்பு இவ் வாறும் வெறுப்பு (துவேச) வினை மூலங்கள். மாயை, உலோபம், சிரிப்பு, ரதி (உவகை) , ஆண் வேதம், பெண் வேதம், அலி வேதம் இவ் வேழும் ஆர்வ (ராக) வினை மூலங்கள். இப்பதிமூன்றின் (4 கசாயம் + 9 நோகசாயம்) நிமித்தமாக உயிரின் இயல்பு திரிவு அடைகிறது. அத்திரிவு இல்லையெனில் உயிர் தன் தூய அறிவுகாட்சி நிகழ்வில் பரிணமிக்கும். அந் நிகழ்வு ஆன்மாவின் தருமம் எனப்படுகிறது. அதுவே புதிய வினை வருகைக்குத் தடையாகவும், பழைய வினை கழிதற்கும் காரணமாகிறது. முற்றுமாக வினைகள் கழியும் போது உயிர் வீடுபேறு அடைகிறது.

       புண்ணியம் - தருமம் இரண்டுக்கும் இடையே உள்ள வேற்றுமையைக் காட்டி தருமத்தின் சிறப்பை - உயர்வை - விளங்க வைத்தார்.


************************************** 

84

ஸத்தஹதி ய பத்தேதி ய ரோசேதி ய தஹ புணோ வி பாஸேதி |
புண்ணம் போய ணிமித்தம் ண ஹு ஸோ கம்மக்கயணிமித்தம் ||



(பதவுரை)

(ஒருவர் புண்ணியத்தில்) ஸத்தஹதி - நம்பிக்கை வைக்கிறார், ய - மற்றும், பத்தேதி - அன்பு கொள்கிறார், ய - மற்றும், ரோசேதி - ஈடுபாடு கொள்கிறார், தஹ - மேலும், புணோவி - மீண்டும், பாஸேதி - ஏற்று ஒழுகிறார், புண்ணம் - அந்த புண்ணியம், போயணிமித்தம் - போகத்துக்கு (புலன் இன்பத்துக்கு) நிமித்தமாகும், ஸோ - அது, கம்மக்கய - கரும கழிவுக்கு, ணிமித்தம் ஹு - நிமித்தமே, ண - அன்று.

(கருத்துரை)

நம்புகிற, அன்பு செய்கிற, ஈடுபாடு   காட்டுகிற, ஏற்று ஒழுகுகிற புண்ணியம் புலன் இன்ப நிமித்தமாகும். அது கரும அழிவுக்கு நிமித்த மாகாது.

(விளக்கவுரை)

ஆசாரியர் புண்ணியம் கரும அழிவுக்குக் காரணம் அன்று எனத் தெளிவு செய்கிறார்.

         கரும அழிவுக்குக் காரணம் உயிர் தன் இயல்பான அறிவு - காட்சியில் நிகழ்வதே ஆகும். அதனாலேயே வீடுபேறு கிடைக்கிறது. உயிர் சுப உணர்வில் நிகழும் போது புண்ணிய வினை பந்தமாகிறது. அந்த சுப உணர்வுக்கு ஏதுவான பூசை முதலான செயல்களில் மிகு நம்பிக்கையும், அன்பும், ஈடுபாடும் கொள்ளப்படுகிறது. ஒழுகவும் படுகிறது. இந்த சுப நிகழ்வுகளை வீடுபேற்றுக்கு ஏதுவான தருமம் எனக் கருதினால் அது தவறாகும். அதனால் ஆசாரியர் அவை புலன் இன்பம் பெற ஏதுக்கள் எனத் தெளிவு செய்து அதனால் கரும அழிவு ஆகாது எனத் தெளிவு செய்கிறார்.

 "புண்ணிய யம்உத யம்செய்த போழ்தினில்
எண்ணி லாத பொருட்குவை யாவையும்
நண்ணும் என்றருள் நாதன் உரையினுக்கு
அண்ண லேஎடுத்து ஈடது ஆயினான்"

என வாமன முனிவர் புண்ணியம் புலன் இன்பம் தரும் என அருகர் உரைத்துள்ளார் எனச் சுட்டுதலைக் காணலாம்.
----------------------------------------------
மேருமந்தர புராணம் - 238

---------------------------------------------- 




************************************** 

86

அக புண அப்பா ணிச்சதி புண்ணஇம் கரேதி ணிரவஸேஸாஇம் |
தஹ வி ண பாவதி ஸித்திம் ஸம்ஸாரத்தோ புணோ பணிதா  ||


(பதவுரை)

அக புண - இனி அடுத்து, அப்பா - ஆன்மாவை, ணிச்சதி - விரும்பாதவன், ணிரவேஸேஸாஇம் - எல்லா, புண்ணஇம் - புண்ணியங்களையும், கரேதி - செய்கிறான், தஹ வி - என்றாலும், ஸித்திம் - முத்தியை, ண பாவதி - அடைவது இல்லை, புணோ - மீண்டும், ஸம்ஸாரத்தோ - பிறவியில் உழல்கிறான் என்றே, பணிதோ - கூறப்பட்டுள்ளது.

(கருத்துரை) 

ஆன்மாவைத் தெளியாதவன் புண்ணியங்கள் அனைத்தையும் செய்தாலும் முத்தியை அடைவது இல்லை. அவன் பிறவியில் உள்ளவனே எனக் கூறப்பட்டுள்ளது.

(விளக்கவுரை)

ஆசாரியர் அனைத்துப் புண்ணியங்களையும் செய்தாலும் ஒருவன் முத்தியை அடைய முடியாது என்கிறார்.

        ஆன்மாவின் இயல்பைத் தெளிந்து அதில் தோயாமல் தானம், பூசை, சேவை முதலாகப் பலவகைப்படும் புண்ணியங்கள் அனைத்தையும் செய்தாலும் ஒருவன் முத்தியை அடைய முடியாது. ஏனெனில் புண்ணியம் பந்த காரணம் ஆகும். முத்தி காரணம் அல்ல. முத்தி ஆன்மாவின் தருமத்தைச் சேருவதாலேயே அடையப்படுகிறது. புண்ணியத்தையே தருமமாக மயங்குதல் கூடாது என்பதாம்.

"புண்ணியம் உதித்துழிப் போகம் எய்துமால்"

என புண்ணியம் போக காரணமே தவிர முத்தி காரணம் அன்று.



************************************** 

87

ஏஏண காரணேண ய தம் அப்பா ஸத்தஹேஹ திவிஹேண |
ஜேண ய லஹேஹ மோக்கம் தம் ஜாணிஜ்ஜஹ பயத்தேண ||

(பதவுரை) 

ஏஏண - முன் சுட்டிய, காரணேண - காரணத்தால், திவிஹேண - முக்கரணத்தால், அப்பா - ஆன்மாவை, பயத்தேண - முயற்சியுடன், ஜாணிஜ்ஜஹ - அறிந்து, ஸத்தஹேஹ - நம்பி, ஜேண ய - இதனால், தம் மோக்கம் - அந்த முத்தி, லஹேஹ - அடைக.

(கருத்துரை)

முன்பு சுட்டிய காரணத்தால் ஆன்மாவை முக்கரணத்தால் முயற்சியுடன் அறிந்து, நம்பி ஒழுகி முக்தியை அடைய வேண்டும் என்பதாம்.

(விளக்கவுரை)

ஆன்மாவின் தருமம்தான் முத்தி என்று முன்பு கூறப்பட்டது. அந்த ஆன்மாவை முயற்சியுடன் எல்லா வகையிலும் உழைத்து உண்மை அறிந்து, நம்பி ஒழுகுக. மனம், மொழி, உடல் எனும் முக் கரணங்களாலும் இவற்றைச் செய்க என்கிறார்.




************************************** 




88

மச்சோ வி ஸாலிஸித்தோ அஸுத்தோ பாவோ கவோ மஹாணரயம் |
இய ணாஉம் அப்பாணம் பாவஹ ஜிணபாவணம் ணிச்சம் ||

(பதவுரை)

ஸாலிஸித்தோ - அரிசி பருக்கை அளவு, மச்சோ வி - சிறு மீனும், அஸுத்த பாவோ - தீய அகவுணர்வால், மஹாணரயம் - ஏழாம் நரகம், கவோ - சென்றது, இய - இதனை, ணாஉம் - அறிந்து, ணிச்சம் - இடைவிடாது, ஜிண பாவணம் - ஜிநர் உரையை நினைத்து, அப்பாணம் - ஆன்மாவை, பாவஹ - நினைவு கூர்க.

(கருத்துரை)

அரிசி பருக்கை அளவு சிறு மீனும், தீய அகவுணர்வால் ஏழாம் நரகம் சென்றது. ஆகையால் அதனைத் தெளிந்து இடைவிடாது ஆன்மாவை நினைவு கூர்க.

(விளக்கவுரை)

அகவுணர்வு தூய்மை இல்லையெனில், உயிர் அடையும் துன்ப மிகுதியை மீண்டும் நினைவு படுத்துகிறார்.

         இந்த காதையில் ஆசாரியர் ஒரு கதையை நினைவு படுத்துகிறார்.

          காக நந்தி புர அரசன் சூரசேனன். அவன் புலால் உண்பதில் மிகவும் வேட்கை உடையவன். எப்போதும் புலால் பற்றியே சிந்திப்பவன். அவனுக்கு பித்துரு பிரியன் என்ற சமையல்காரன் இருந்தான். அவன் அரசனுடைய மிகு வேட்கைக்கு ஏற்ப பலவாறான விலங்குகளைக் கொன்று அரசருக்கு எப்போதும் புலால் உணவைச் சமைத்துப் பரிமாறினான். ஒருநாள் சமையல்காரனை பாம்பு ஒன்று கடிக்க அதனால் அவன் இறந்து கடைசி பெருங்கடலான சுயம்பு ரமண கடலில் மிகப் பெரிய மீனாகப் பிறந்தான். அரசன் சூரசேனனும் இறந்து அப் பெருமீனின் காதில் வாழும் சிறு மீனாக (அரிசி பருக்கை அளவு) மீனாகப் பிறந்தான்.

        அங்கே பெரு மீன் வாயில் பல உயிர்கள் வரும் போகும். அப்போது அந்தச் சிறு (தந்துல) மீன் அவற்றைப் பார்த்து, "இந்தப் பெரு மீனுக்கு நற்பேறு இல்லை, தன் வாயினுள் வரும் போகும் உயிர்களை இது உண்ணாது விட்டுவிடுகிறது. இதன் உடல் போல் என் உடல் மிகப் பெரியதாக இருந்தால் கடல் வாழ் உயிர்கள் எல்லாம் உண்பேன்" என இடைவிடாது தீய சிந்தனையால் ஆழ்ந்து கிடந்தது. அந்தத் தீய அகவுணர்வால் மட்டுமே புறத்தே எந்த இன்னாமை (இம்சை) செய்யாமலே - ஏழாம் நரகத்தில் சென்று பெருந் துன்பத்தை அடைந்தது. பெரு மீனோ உயிர்களை உண்டும் தீய அகவுணர்வாலும், ஏழாம் நரகம் சென்றது.

       தீய அகவுணர்வோடு புறத்தே இன்னாமை (இமிசை) செய்தால் நரகம் போன்ற துன்பம் கிடைக்கவே செய்யும். ஆனால் இங்கே சிறு மீன் புற இன்னாமை ( இம்சை) ஏதும் செய்யாமலேயே தீய அகவுணர்வால் மட்டுமே நரகத் துன்பத்தை அடைந்துள்ளது. புற இன்னாமை இருக்கலாம்; இல்லாமலும் போகலாம். அகவுணர்வே முதன்மையாவது என்பது கருத்து. முன்னே நல் அகவுணர்வு (சுப பாவம்) இருந்தமையால் அரசனாகப் பிறந்தான். அரசனாக இருந்தபோது தீய அகவுணர்வு (அசுப பாவம்) இருந்தமையால் விலங்காகப் பிறந்தான். அங்கும் தீய அகவுணர்வே தொடர்ந்தமையால் நரகனாகப் பிறந்தான் அதனால் தீய அகவுணர்வைத் தவிர்க்க வேண்டும் என்பதாம்.

          அடுத்து ஆன்மா  பற்றிய அறிவு இல்லாமல் செய்யப்படும் புண்ணியம் மட்டுமே முத்திக்கு ஏது ஆகாது. புண்ணியம் ஆன்ம தருமம் அன்று.முக்தி ஆன்ம தருமத்தாலேயே அமைகிறது.
-------------------------------------------------
அரசன் புலால் உண்ணவில்லை. ஏனெனில் அவன் புலால் உண்ணாமை விரதம் ஏற்றிருந்தான். ஆனால் புலால் உண்ணும் வேட்கை உணர்வு இருந்து கொண்டே இருந்தது அவனுக்கு. அதனால் அவன் சிறு மீனாக விலங்கு கதியில் பிறந்தான் என்னும் வரலாறு சமஸ்கிருத உரையில் கூறப்பட்டுள்ளது.
------------------------------------------------



**************************************

89

பாஹிரஸங்கச் சாஓ கிரி சரிதரிகந்தராஇ ஆவாஸோ |
ஸயலோ ணாணஜ்ஜயணோ ணிரத்தஓ பாவரஹியாணம் ||

(பதவுரை)

பாவ - அகவுணர்வு, ரஹியாணம் - இல்லாத, பாஹிர - புற, ஸங்க - பற்றுகளை, சாஓ - விடுகையும், கிரி - மலை, சரி - ஆற்றங்கரை, தரி - குகை, கந்தராஇ - பள்ளத்தாக்கு இவற்றில், ஆவாஸோ - வாழ்தலும், ஸயலோ - எல்லா, ணாணஜ்ஜயணோ - நூல்களைப் பயிலுதலும், ணிரத்தஓ - வீணேயாகும்.

(கருத்துரை)

அகவுணர்வு இல்லாமல் புறத்தே செய்யப்படும் பொருளை விடுதலும், மலையில், குகையில், பள்ளத்தாக்கில், ஆற்றங்கரையில் வாழ்தலும், நூல்கள் பல ஓதுதலும் வீணே ஆகும்.

(விளக்கவுரை)

ஆசாரியர் புற ஒழுக்கங்கள் மட்டும் பயன் தராது என்கிறார்.

      அகவுணர்வோடு கூடிய புற ஒழுக்கங்கள் பயன் தரவல்லன. அகவுணர்வு இல்லாத புற ஒழுக்கங்களால் ஆன்மப் பயன் அடைய முடியாது. புற ஒழுக்கங்களே தருமம் எனக்கருதி  செய்வார் முயற்சி அத்தனையும் வீண் ஆகும் என்பது கருத்து. அவற்றால் புண்ணியம் வாய்த்தாலும் அப் புண்ணியத்தின் பயனாகப் பிறவிச் சுழலே அமையும். முக்தி அடைய முடியாது.

         துறவிகள் புற ஒழுக்கங்களைக் கடைபிடிக்கும் சிலவற்றை ஆசாரியர் இங்குச் சுட்டியுள்ளார். நூல்கள் கூறும் புற ஒழுக்கங்கள் அத்தனையும் இவற்றுள் அடக்கிக் கொள்ளலாம். அகவுணர்வு உள்ளபோது இவை உறுதியாகக் காணப்படும். ஆனால் அகவுணர்வு இல்லாதவரிடம் இவை போலியாகக் காணப்படும்.

"நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணார் இல்."

என்பது காண்க.
-----------------------------------------------
திருக்குறள் -276
------------------------------------------------- 


**************************************

90

பஞ்ஜஸு இந்திய  ஸேணம் பஞ்ஜஸு மணமக்கடம் பயத்தேண |
மா ஜணரஞ்ஜணகரணம் பாஹிரவயவேஸ தம் குணஸு ||

(பதவுரை)

தம் - நீ, இந்திய ஸேணம் - பொறிகள் எனும் படையை, பஞ்ஜஸு - அழிக்க, மண - மனம் எனும், மக்கடம் - குரங்கை, பயத்தேண - முயற்சியுடன், பஞ்ஜஸு - அடக்குக, பாஹிர வய வேஸ - புறத் தோற்றத்தை, ஜணரஞ்ஜணகரணம் - உலக மக்கள் களிப்பதற்பாக, மா - ஆக்காதே, குணஸு - இவற்றைச் செய்வாயாக.

(கருத்துரை)

முனிவரே, நீர் புலன் வழிச் செல்லும் பொறிகள் எனும் படையைத் தடுத்தல் வேண்டும். மனம் எனும் குரங்கை இங்கும் அங்கும் புலனில் தாவாமல் தடுத்தல் வேண்டும். புறத் துறவுத் தோற்றத்தை உலக மக்கள் மகிழ்வதற்காக என ஆக்காது தடுத்தல் வேண்டும். இவற்றை நீர் செய்வாயாக.

(விளக்கவுரை)

ஆசாரியர் அகவுணர்வு செம்மை பெற செய்யத் தக்கனவற்றை இங்கே குறிப்பிடுகிறார்.

       முனிவர் புறத் தோற்றத்தைக் கண்டு மக்கள் மகிழ்வர். மகிழ்வதனால் அவர் பயன் ஏதும் உண்மையில் அடைய முடியாது. எனவே முனிவர் தோற்றம் பிறர் மகிழ்வதற்காக ஏற்பது அன்று. அது நல் அகவுணர்வின் வெளிப்பாடாகும். அதனால், புலன் வழிப் பொறிகள் செல்லாமலும், மனம் குரங்கு போல் அதில் தாவாமலும் இருக்க புற முயற்சி செய்தல் சிறப்பாகும். அரசன் தன் நாட்டின் மீது படையெடுப்போரை எதிர்த்துத் தடை செய்தல் போல,  உயிர் அரசன் படை போல வரும் பொறிகள் போக்கினை எதிர்த்து தடை செய்ய வேண்டும். அதாவது புலனாசை எனும் விகாரம் திரிபு தோன்றாமல் காக்க வேண்டும்.

           மனம் குரங்குக்கு ஒப்பாகும் என்பர். குரங்கு இங்கும் அங்கும் தாவிக்கொண்டே இருக்கும். அதே போல மனமும் சஞ்சலத்தால் இங்கும் அங்கும் தாவிக் கொண்டே இருக்கும். அந்த சஞ்சலத்தை நூல் ஓதுதல், ஊழ்கம் செய்தல் முதலானவற்றில் ஒரு நிலைப்படுத்த வேண்டும். இவற்றைச் செய்யாமல் புறத் தோற்றம் மட்டும் ஏற்பதால் எந்தப் பயனும் இல்லை. இவற்றைச் செய்ய வேண்டும் என ஆசாரியர் அறிவுறுத்துகிறார்.

" மெய்ததவத் தன்மை தானும்
   வென்றவர் படிமம் தாங்கிச்
சித்தமெய் மொழிகள் மூன்றில்
   இருதொடர்ப் பாட்டின் நீங்கிப்
பத்தறம் பன்னிரண்டாம்
   தவத்தொடு பயின்று தன்கண்
உத்தமக் காட்சி ஞான
   ஒழுக்கத்தை அழுத்தல் கண்டாய் "

என்பார் வாமனர்.
-----------------------------------------------
மேருமந்தர புராணம் - 411

-----------------------------------------------

**************************************


No comments:

Post a Comment