Altar - பலிபீடம்


பலி பீடம்









அதன் பின்னணியில் என்ன சிறப்பு அடங்கியுள்ளது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.


எல்லா ஆலயங்களிலும் கொடி மரத்துக்கு அடுத்தபடியாக பலிபீடம் அமைத்து இருப்பார்கள்.


கொடி மரத்தை வழிபட்டு முடித்ததும் நாம் பலி பீடத்தை மனதார வழிபட வேண்டும்.


பொதுவாக பலி பீடங்கள் மூன்று அடுக்கு பீடம் மீது தாமரை மலர் வடிவம் போன்று அமைக்கப்பட்டிருக்கும். (சில இடங்களில் அடுக்கில்லாமலும்  அமைக்கப்பட்டிருப்பதுண்டு.)


அந்த பீடங்களில் சிற்பங்களுடனும், சில ஆலயங்களில் வெறும் பீடம் மட்டும் காட்சியளிக்கும்.


இதன் மூலம் கருவறைக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் பலிபீடத்திற்க்கும் கொடுக்கப்படுவதை அறியலாம்.


பலி பீடம் என்றதும் 90 சதவீதம் பேர் மனதில் “கோழி, ஆடு போன்றவைகளை பலி கொடுக்கும் இடமா? ” என்ற எண்ணம் ஏற்பட்டிருக்கலாம்.



ஏனெனில் வேத காலத்தில் வேள்வித்தூணாகவும், விலங்குகளை பலியிடும் மேடையாகவும் இருந்தவை தான் நாளடைவில் கொஞ்சம், கொஞ்சமாக உருமாறி இன்று கொடி மரமாகவும், பலி பீடமாகவும் வடிவெடுத்துள்ளன.


பலியிடும் பழக்கத்தை சரியான வழிகாட்டுதலுடன் நம் சமணர்கள் பின்னர் அமைத்துள்ளனர்.


இந்துக்களில்  சிலர் மேன்மையடைய உயிர் பலியிடும் பழக்கத்திலிருந்து விலகி அஹிம்சைக் கருத்துக்களை ஏற்றுக் கொண்ட பின்னர் சமணர் தாத்பர்யத்தின் படியே அமைக்க முற்பட்டனர் என்பதே உண்மை.


ஆனாலும் உயிர் பலி கொடுக்கும் இடம் பலி பீடம் என்ற எண்ணம் பலரது மனதிலும் பதிந்துள்ளது.


இதை உறுதிபடுத்துவது போல கிராமங்களில் இன்றும் கோவில் ஆண்டு திருவிழாக்களின் போது பலி பீட மேடையில் ஆடு, கோழிகளை பலி கொடுப்பதை காணலாம்.

இது தவறு. கிராமத்து மக்களின் இந்த நம்பிக்கை வம்சம், வம்சமாக தொடரவும் வாய்ப்புள்ளது.

ஆனால் ஆகம விதிகளின் படி அமைக்கப்பட்டுள்ள ஆலயங்களிலும் உள்ள பலி பீடங்கள், நம் வாழ்வை மேம்படுத்தும் ஒன்றாக கருதப்பட்டு போற்றப்படுகின்றன.



அஹிம்சை கொள்கையை ஏற்றுக் கொண்டவர்கள் ஆலயங்களில் பலி பீடங்களில் உயிர்கள் பலி கொடுக்கப்படுவது இல்லை.


அதற்கு பதில் நம்மிடம் உள்ள மோசமான குணங்களை அங்கு பலியிடுகிறார்கள்.


அதெப்படி குணத்தை பலியிடுவது எனின்? 


மனிதர்களாகிய நமக்கு ஆழ்மனதில்  குரோதம், மானம், மாயை, லோபம் போன்ற கஷாயங்களின் தாக்கத்தினால் கெட்ட குணங்கள் பல இருக்கும்.


எவ்வளவுதான் பக்குவப்பட்ட பெரிய மனிதர்களாக இருந்தாலும் அவர்கள் மனதுக்குள்ளும் கஷாயங்களின் வழியே ஏற்பட்ட போட்டி, பொறாமை, காமம், குரோதம், கோபம், தாபம், சூது, வாது, வஞ்சனை, வயிற்றெரிச்சல் போன்றவைகளில் ஏதாவது ஒன்றிரண்டு கெட்ட குணங்கள் நீக்க முடியாததாக இருக்கலாம்.


இப்படி கெட்ட குணத்துடன் கருவறை பகுதிக்கு நாம் சென்றால் உள்ளத்தைக் கடந்த கடவுள் நமக்கு எப்படி அருள்புரிவார்?


நம் மனது எந்த ஆசாபாசமும் இல்லாமல், தெள்ளத்தெளிவாக, சுத்தமாக, வெற்றிடமாக இருந்தால்தான் நம் பக்கம் அவ்விறைவன் கடைக்கண் பார்வையுடன் அருள்வார். எதுவும் இல்லாத, எந்த எதிர்பார்ப்பும் இல்லாத மனநிலை உடையவர்களால் தான் கடவுள் அருகில் செல்ல முடியும்.


எனவே நம் மனதில் உள்ள தீய குணங்களை எல்லாம் வெளியேற்ற வேண்டும்.


அதாவது கெட்ட நினைவுகளை பலி கொடுக்க வேண்டும்.


இது ஆலய வழிபாட்டில் மிகவும் முக்கியமானது.


ஏனெனில் நாம் நம் மனதில் உள்ள தீய அழுக்குகளை விரட்டும் போது நாம் நல்ல மனிதனாக மாறி விடுவாம்.


இத்தகைய அற்புத மாற்றத்தை ஒவ்வொரு பக்தனிடமும் ஏற்படுத்தும் அருமையான ஆடையாளத்தை கொண்டது தான் பலிபீடம்.

உயிர்ப்பலி இல்லாத இந்த ஆன்மிகப் பலி பீடமானது உயரியது.


எனவே பலி பீடம் அருகே சென்றவுடன் ஆணவம், மாயை போன்ற நமது மலங்களையும் பலியிடுதல் வேண்டும். ‘‘நான்’’ என்ற அகங்காரத்தை பலியிட்டாலே அவை தாமாகவே வெளியேறிவிடும்.


சிலர் எல்லாமே நம் ஒருவரால்தான் நடக்கிறது என்ற இறுமாப்புடன் இருப்பார்கள். அந்த இறுமாப்பை பலிபீடம் அருகில் நின்று பலியிட வேண்டும்.


பலி பீடத்தை வழிபட்டு முடித்ததும், நம் மனதில் மேலான எண்ணங்கள்தான் உள்ளன என்ற நினைப்பை மனதினில் தழுவ வேண்டும்.


அந்த நல்ல மன நிலையுடன் கருவறை அருகில் சென்று இறைவனை வழிபடும்போது, அவர் அருள் நம்மை ஆக்கிரமிக்கும், ஆசீர்வதிக்கும். பலி பீடத்தை பலி நாதர் என்றும் சொல்வார்கள்.


அதாவது நமது பிறப்பு - இறப்பு எனும் மாயச் சக்கரமாக பலி பீடம் கருதப்படுகிறது. இதை சுற்றி வந்து வழிபட்டால், ஸ்தூல சூட்சம கார்மண சரீரங்களில் இருந்து என்னை விடுவித்து விடு என்று வேண்டுவதற்கு சமமாகும்.

முற்காலத்தில் பொதுவாக கோவில்களில் எட்டு மூலைகளில், எட்டு பலி பீடங்கள் அமைத்திருப்பார்கள்.

இந்த பலி பீடத்தை அமைப்பதற்கு என்று சில விதிகள் உள்ளன. பொதுவாக தலைமை பலி பீடம், மூலவ மூர்த்தியின் பாதங்களை, அதாவது  அவரது வேதிகை மேடை உயரத்துக்கு சமமாக, மேற்புறம் தாமரை வடிவை தாங்கியதாக இருக்கும்.

பலி பீடம் முன்பு நின்று அதன் வழியே மூலவரை அத்தாமரையில் அமர்ந்த நிலையில் ஆத்மார்த்தமாக வழிபடும் போது:


நம்மிடம் உள்ள தேவையற்ற காமம், ஆசை, கோபம், தீராத பற்று போய் விடும்.

நெறி பிறழாத தன்மை உண்டாகும். உயர்வு - தாழ்வு மனப்பான்மை விலகும்.

ஆக பலி பீடம் மனிதனை... மனிதனாக மாற்றுகிறது.


எனவே பலி பீடம் அருகில் நின்று நிதானமாக வழிபடுவதை பழக்கத்துக்கு கொண்டு வருதல் நலம் பயக்கும். அது நம்மை மேன்மைப்படுத்தும்.


கோவிலில் கோபுர வாசலுக்கு கொடிமரத்திற்கும் இடையில் உள்ள பலிபீடத்தில் நித்யபூஜையின போது கோவிலுள்ள அனைத்து தெய்வங்களுக்கும், அன்னம் (சாதம்) வைப்பர், முடிவில் பலிபீடத்திலும் பூஜைக் கிரியை செய்து முடித்தபின் புனித கந்தநீர் வழங்குவது நமது ஜினாலய மரபு.


வழிபாட்டின் போது பலிபீடத்தை தொட்டுக் கும்பிடுவதோ, உரசிச் செல்வதோ கூடாது. ஏனெனில் பலி கொடுத்த எண்ணங்களை மீண்டும் தீண்டக்கூடாதென்பது ஐதீகமாகும்.


பெரியவர்கள் சொல்லக் கேட்டது.




No comments:

Post a Comment