சுவாமி சமந்த பத்திரர்



சுவாமி சமந்தபத்திரர்







Jain United News Centre, Whatsapp குழுவில் தொடராக செய்யாறு திரு கம்பீர. துரைராஜ் அவர்கள் பதிவு செய்து வந்த தொடர். அவரது தொகுப்பு அஞ்சல்களுக்கு நன்றி.



காலத்தால் சுவாமி சமந்தபத்திரர் கிருத்த பிச்சாரியருக்குப் பிற்பட்டவர் என்று கூறுவர்.


           சமந்தபத்திரர் சோழ நாட்டின் தலைநகரான உறையூரில் கி.பி 120 ல் பிறந்தார் என்றும், கி.பி 185 வரை வாழ்ந்தார் என்றும் நாகர் குல சோழ மன்னன் கீலிக வர்மனின் இளைய மகன் சாந்திவர்மன் என்றும், நாடாளும் உரிமையுடைய சர்வவர்மனின் இளவல் ஆவார் என்றும், சரித்திரப் பேராசிரியர் டாக்டர் ஜோதி பிரஸாத் ஜைன் குறிப்பிடுகிறார். இவருக்கு தாய் தந்தையர் இட்ட பெயர் சாந்திவர்மன் என்றும் இவர் கி.பி. இரண்டாம் நூற்றாண்டினர் என்றும் பலர் கருதுகின்றனர்.

     சுவாமி சமந்தபத்திரரின்  சித்திர கவியால் இயன்ற  'ஜினசதக' த்தில் 'சாந்திவர்ம கிருதம்' என்ற சொற்றொடர் வருவதால் இந்நூல் அவர் முனியாவதற்கு முன் எழுதப்பட்டதாகக் கூறப்படுகிறது.

         முனியான பிறகு அவர் முனி சங்கத்தோடு 'மாணுவகஹல்லி' என்ற இடத்தில் இருந்த போழ்து அவருக்கு 'ஆனைத் தீஎன்ற கொடும் பசி நோய் கண்டது. அதனால் அவர் முனி ஒழுக்கத்தை ஒழுக முடியவில்லை. அவர் குருவிடம் சென்று தான் வடக்கிருத்தல் மேற்கொண்டு சமநிலை நோற்று உயிர்விட ஆணை வேண்டினார். அவரது அறிவாற்றலை நன்குணர்ந்த குரு அவரால்  ஜைன அறம் பின்னர் வளரும் வாய்ப்புண்டு என்று கருதி, அவர் தற்சமயம் முனி ஒழுக்கத்தைக் கைவிட்டுப் பசி நோயைப் போக்கும் வழி காணுமாறும் நோய் நீங்கியதும் வந்து துறவேற்றுக் கொள்ளவும் அறிவுரை கூறினார்.
                             
-----------

    2

சமந்தபத்திரர்  குருவின் கட்டளையை ஏற்றுத், தன் முனி ஒழுக்கத்தைக் கைவிட்டுக் காசிக்குச் சென்று சிவகோடி மன்னனின் பீமலிங்க சிவாலயத்தில் அம்மன்னனைச் சந்தித்து அவனை வாழ்த்தினார். மேலும் தான் கோயிலில் இடப்படும் நைவேத்தியத்தை, சிவலிங்கத்திற்கே ஊட்டுவதாகக் கூறினார். சிவகோடி மன்னன் மகிழ்ந்து அதற்கு இசைந்தான்.

     மன்னனின் இசைவு பெற்றுச் சமந்தபத்திரர் கோயிற்கதவை மூடித் தாளிட்டு விட்டுத் தானே நாள்தோறும் நைவேத்தியத்தை உண்டு தன் ஆனைப் பசியைத் தணித்து வந்தார். சிறிது சிறிதாக அவர் நோய் குணமடைந்து வந்ததால் நைவேத்தியம் மிச்சப்பட்டு வந்தது. மன்னனுக்கும் அவர் மீது ஐயம் ஏற்பட்டது.

      மன்னனின் ஏவலால் கோயிலில் ஒளிந்திருந்து பார்த்தவர்கள் சுவாமி சமந்தபத்திரர் தாமே நைவேத்தியத்தை உண்பதை நேரில் கண்டு மன்னனுக்கு அறிவித்தனர். அதை அறிந்த சுவாமி சமந்தபத்திரர் தீங்கு என்பதை உணர்ந்து ஒவ்வொருவராக இருபத்து நான்கு தீர்த்தங்கரர்களையும் துதிக்கத் தொடங்கினார். நடுவில் மன்னன் வந்து பலவாறு அச்சமுறுத்திய போதிலும் அவர் ஒரு மனத்தோடு நின்று துதித்தார்.

         அவர் சந்திரப்பிரப தீர்த்தங்கரரின் துதிகளைக் கூறுகையில் பீமலிங்கம் பிளந்து அதன் நடுவில் சந்திரப்பிரபுவின் பொன்னால் இயன்ற திருமேனி தோன்றிற்று. இதைக் கண்ட சிவகோடி மன்னனும் அவரது இளவல் சிவாயனனும் வியப்பில் ஆழ்ந்தனர். சுவாமி சமந்தபத்திரர் தொடர்ந்து இருபத்தி நான்கு தீர்த்தங்கரர்களின் துதிகளைக் கூறி முடித்த பின்னர் மன்னனை வாழ்த்தினார். மன்னன் வியப்புற்றுப் பின் துறவேற்றார். சுவாமி சம்பந்தபத்திரரும் துறவி ஆனார்.
                      
---------------


     3

     மேலே கூறப்பட்ட சிவகோடி மன்னன் நவதிலிங்க நாட்டு மன்னன் என்று கூறப்படுகிறது. அந்நாட்டின் தலைநகரம் காஞ்சியாக இருக்கலாம் என்றும் ஏனெனில் அது தென்காசி என்று வழங்கப்படுகிறது என்றும்,அதனால் மேற்கூறிய நிகழ்ச்சி காஞ்சியிலேயே நடைபெற்றதாகவும் பலர் கருதுகின்றனர்.

         இந்தக் கதை இராஜாவளி கதையிலும் பிரம்ம நேமிதத்தனின் ஆராதனா கதாகோசத்திலும் கூறப்பட்டிருக்கிறது. மேலும் கி.பி.1022ல் சிரவணபெளி குளத்தில் வரையப்பட்ட கல்வெட்டுச் செய்தியும் இதைக் கூறுகிறது.

       ஆனைத் தீ நோயுற்ற சுவாமி சமந்தபத்திரர் 'பத்மாவதி தேவி'யின் திவ்ய சக்தியால் மேலான பதவி அடைந்தார். தன் மந்திரச் சொற்களால் 'சந்திரப்பிரபு'வின் திருமேனியைத் தோன்றச் செய்தார். நன்மை விளைக்கும் ஜைன அறம் அவரால் கலி காலத்தில் எல்லா இடங்களிலும் பரவிற்று. அவர் பன்முறை வணங்கத் தக்கவர்.

       முதன் முதலில் தத்துவம் மற்றும் தருக்க நூல் கருத்துக்கள் நிரம்பிய  துதிப் பாடல்கள் இயற்றிய பெருமை சுவாமி சமந்தபத்திரரையே சாரும். இவர் இயற்றிய துதிப்பாடல் நூல்கள் 'ஜினஸ்துதி சதகம்' 'பிருஹத் சுயம்பு தோத்திரம்' 'தேவாகம் தோத்திரம்' மற்றும் 'யுக்தியானு சாசனம்' ஆகும்.
           

--------------

   4

      தேவாமக தோத்திரங்களை விளக்க எழுந்த நூல்களே ஆசாரியார் அகளங்கரின் எண்ணூறு செய்யுள்கள் கொண்ட 'அஷ்ட சதியும்' ஆசாரியார் வித்தியானந்திகளின் எட்டாயிரம் செய்யுள்கள் கொண்ட 'அஷ்ட சஹஸ்ரியும்' என்பதிலிருந்தே சுவாமி சமந்தபத்திரரின் பெருமை நன்கு விளங்கும். 'இரத்தினகரண்டக சிராவகாசாரம்' என்ற இல்லற ஒழுக்கம் கூறும் நூலும் அவர் இயற்றியதே. அவரது ஜீவசித்தி, தத்துவானு சாசனம், பிராக்கிருத வியாகரணம், பிரமாண பதார்த்தம் கருமப்பிராப்ருதடீகா மற்றும் கந்தஹஸ்தி மகாபாஷ்யம் நூல்கள் கிடைக்கவில்லை.

          பிருஹத் சுயம்பு தோத்திரத்தில் கீழ்க் கூறப்பட்டுள்ள பாடல் ஜினரின் முழுதுணர் ஞானத்தை உறுதிப் படுத்துகிறது.


ஸ்திதி-ஜனன நிரோத லக்ஷணம்
சரமசரம் சஜகத் பிரதி க்ஷணம்
இதிஜின! சகலக்ஞ லான்சனம்
வசனமிதம் வததாம் வரஸ்யதே

      " அருளுரையாளர்களில் மிகச்சிறந்த ஜினரே! இடம் பெயர்ந்து செல்வனவும் செல்லாதவைகளுமான ஆறு வகைப் பொருள்கள் (வரம்பில்லா எண்ணிக்கை உள்ள உயிர்கள், வரம்பில்லா எண்கள் இரண்டின் பெருக்கல் தொகைக்கு ஈடான உருவப் பொருள் பரமாணுக்கள், தருமப் பொருள்அதருமப் பொருள், ஆகாயப் பொருள்,மற்றும் எண்ணிக்கையில்லாக் கால அணுக்கள் ஆகிய ஆறுவகைப் பொருள்கள்) ஒவ்வொன்றிலும் (அர்த்தக் கிரியை ஆற்ற அல்லது செயலாற்றிப் பயனுடையதாகி நிலைக்க)  கணம் கணந்தோறும்  (புதிய உருவம்)தோன்றல்  (பழைய உருவம்)அழிதல் (பொருளின்)நிலைபேறு ஆகிய (பொருளின்) முக்கூட்டுத் தன்மையை நீங்கள் கூறியுள்ளதே உங்களின் முழுதுணர் ஞானத்தை உறுதிப்படுத்தும் சான்றாகும்"என்பதாம்.


மைசூர் ஹாஸன் ஜில்லாவைச் சார்ந்த சென்னராயப்பட்டினம் தாலுக்காவில் கி.பி.1047ல் வரையப்பட்ட கல்வெட்டுகளும் சுவாமி சமந்தபத்திரரை சுருத கேவலியை ஒத்தவர் என்றும்,  சுருதகேவலி மற்றும் பிற ஆசார்யர்களுக்குப் பின் அவர் பகவான் வர்த்தமான மகாவீரர் அருளிச் செய்த அறத்தை ஆயிரம் மடங்கு பரவச்செய்து நற்பேறடைந்தார் என்றும் போற்றிக் கூறுகின்றன.
       
--------- 


No comments:

Post a Comment