திருமணம் அதன் காலக்கட்டம்


திருமணம் 
அதன் காலக்கட்டம் ….


திருமணம் ஒரு சமூக, சட்ட, உறவுமுறை சார்ந்த அமைப்பாகும். மணம் என்பது ஓர் ஆணும், ஒரு பெண்ணும் இணைந்து இல்லறம் மேற்கொள்ள நடத்தபெறும் ஒரு வாழ்க்கை ஒப்பந்தம். குடும்பம், பாலுறவு, இனப்பெருக்கம், பொருளாதாரம் போன்ற பல காரணங்களுக்காக திருமணம் செய்யப்படுகிறது. மனிதனால் மனித சமுதாயத்தின் நலன் கருதி உருவாக்கப்பட்ட ஒழுக்க முறை. திருமணம் என்பது மனித இனத்தைப் பொறுத்தவரை ஒரு உலகளாவிய பொதுமையாக இருந்த போதிலும், வெவ்வேறு பண்பாட்டுக் குழுக்களிடையே திருமண நடைமுறைகளில் வெவ்வேறு விதமான விதிகளும், நெறிமுறைகளும் காணப்பட்டாலும், அது சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆண், பெண் உறவு நிலையைக் குறிக்கிறது.


அதோடு திருமணம் என்பது ஒரு புதிய சந்ததி தோன்றுவதற்குரிய ஒருவிதப் பிணைப்பு ஆகும். ஓர் ஆணும் பெண்ணும் சேர்ந்து ஒருவருக்கொருவர் கட்டுப்பட்டு, அவர்களது வாழ்க்கையைக் கூட்டுப்பொறுப்பில் நடத்துவதற்குப் பலர் அறியச் செய்துகொள்ளும் செயலே திருமணம் எனப்படும்.

மணம் என்ற சொல்லுக்குக் 'கூடுதல்' என்பது பொருள். திருமணம் என்பது இருவர் கூடிக் கலந்து நிறைவுபெரும் செயலைக் குறிப்பதாக அமைகின்றது. சிறப்பான, மேன்மையான ஒன்றைக் குறிப்பிட, 'திரு' என்ற அடை கொடுத்து அழைப்பது தமிழர் மரபாகையால், இல்லற வாழ்வின் அடிப்படையாக அமையும் மணம் 'திருமணம்' என்று அழைக்கப்படுவதாகப் பொருள் சொல்வார்.

இவை மணத்தின் தன்மை, நடைபெறும் இடம் போன்ற காரணங்களின் அடிப்படையில் உருவானது. ' கல்யாணம்' என்ற சொல் மணத்தைக் குறிக்கும் வகையில் நாலடியாரிலும், ஆசாரக்கோவையிலும் பயின்று வந்துள்ளமையைக் காணலாம்.

----------------------------------------------- 

திருமணம் என்பதற்கான சிறு விளக்கத்தை கண்டோம். இதனை தனித்தனியே ஆய்ந்து அறிந்து புரிந்து கொண்டால்தான் திருமண வாழ்க்கையும் சிறக்கும்.

திருமணம் ஒவ்வொரு ஆணுக்கும், பெண்ணுக்கும் அவர்களது திருமண பருவம் உடலால் வந்தவுடன் அதனை எவ்வாறு உளதாலும் ஏற்றுக் கொள்ள வேண்டும் எனபதை பக்குவமாக எடுத்துக் கூறி பெரியோர்களும் உதவ வேண்டும். அதை விடுத்து அவரவர்கள் இன்றைய ஊடகம், சுற்றுப் புறம் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறது என்று வாளா இருந்து விடுகின்றனர். மேலும் பலரும் காமத்தை தணிக்கவே திருமணம் என்றளவில் தான் பெரியோர்களும் இருப்பதால் அதனை பூடகமாக கூட தெரிவிக்க மறுக்கின்றனர் என்பதே உண்மை.

வாழ்க்கையில் லட்சியங்கள், நோக்கங்களும் அந்த திருமணப் பருவ வயதிற்கு முன்னர்தான் நிர்ணயிக்க துவங்கிடுவது இயற்கை. அதற்கு காரணம் அவரவர் குலக்கல்வியை பயின்று தொழில் செய்வதிலிருந்து இன்றைய சமுதாயம் வெகுதூரம் சென்று விட்டது. செய்யும் பரம்பரைத் தொழிலை யாரும் விரும்பவதாக இல்லை. அதனால் மாற்றுத் தொழிலுக்கு மதிப்பளித்து தொழில்சார்ந்த கல்வியில் சேர்த்து விட பெரும்பாலான, ஏன் 95% சதவீதத்தினர், முனைப்பாய் இருப்பதால் பருவம் தாண்டியே இக்காலத்தில் திருமணத்தைப் பற்றி யோசிக்கக் துவங்குகின்றனர்.

இலட்சியம் நிறைவேறிய பின்னர் தான் திருமணம் என்றளவில் முனைப்பாய் இருந்து விட்டு தன் துணையைத் தேடும் போது கிடைப்பது அரிதாகி விடுகிறது.


அதே சமயம் இலட்சியம் நிறைவேறிய பின்னர்தான் திருமணம் என்ற நோக்கம் மேலோங்கிய பெற்றோர்களின் நிலைப்பாட்டிலிருந்து சற்று விலகிய பதின் பருவத்தினர் காம உணர்வு மேலோங்க, இக்கால ஊடகமும், அரசும் பலவகையிலும் உறுதுணையாய் இருக்கின்ற பட்சத்தில் விரும்பிய எதிர் பாலினத்தவரை மணம் செய்து கொண்டும் விடுகின்றனர்.  இதில் ஆண் பெண் என்ற வேறுபாடு இக்காலத்தில் இல்லை. முற்காலத்து ஆண்மட்டும் என்ற நிலைப்பாடு தற்போது தகர்க்கப்பட்டு விட்டது. ஏனெனில் பெண்களும் ஆண்களைப் போன்றே இலட்சியப் பாதையில் பயணிக்கத் துவங்கி விட்டதே முக்கிய காரணம். அது தவறென்று குறிப்பிட முடியாது. பலகால ஆணாதிக்கத்தை தகர்க்க முற்பட்டதில் அடையாளம் தான் இன்றைய நிலை. அதில் ஆணும்,  பெற்றவர்களும் இக்காலச் சூழலை புரிந்து கொள்ளாமல் முற்காலம் போல் நொண்டியாய், முடமாய், பணமின்றி இருந்தாலும் ஒரு பெண்துணை கிடைப்பாள் என்ற நிலைப்பாட்டில் இருந்து விடுவதே இச்சூழலை ஏற்பதில்  சற்று சிரமப்படுகின்றனர்.


அதனால் இக்காலத்தில் அனைத்து நிலையிலும் ஆணும், பெண்ணும் சமம் என்றளவிலான இச்சூழலை நன்றாக பெற்றோர்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும். திருமணம் என்பது பாலுணர்ச்சி சம்பந்தப்பட்டதாகவே முற்காலத்திலிருந்தே சித்தரிக்கப்பட்டு விட்டது. அதனை இன்னும் இமயமலை உச்சிக்கு கொண்டு  சென்று கொண்டிருக்கிறது இன்றைய ஊடகம்.


அதே சமயம் இலட்சியத்தை நிறைவேற்ற எத்தனையோ கல்லூரிகளும், தொழிற்கல்வி கூடங்களும் பலவகையில் மாணவப் பருவதிலிருந்தே பணம் சம்பாதிப்பதே பிரதானம் என்பதாக பயமுறுத்தி தங்கள் கட்டுக்குள் சிறுவயதினைக் கொணர்ந்துள்ளனர். மேலும் பலவகை அறிவுரைகளும், தவறான முறையை மூடி மறைத்து பணம் சம்பாதிக்கும் யுக்திகளையும் வழங்கியும் வருவதால்; அதில் முன்னேறுபவர்களே இன்று பெரிய கதாநாயகர்களாக கருதப்படும் சூழல் உருவாகிவிட்டது.


பணம், பொருள், வீடு, வாகனம், மேலும் இக்காலக்கண்டுபிடிப்புகள் போன்றவையே எதிர்காலத்தில் தம்மை நல்வாழ்வு வாழ வழிவகுக்கும் என்ற மாயத்தோற்றத்தைக் கண்டு பல இளைஞர்களும் அதில் வீழ்ந்து விட்டனர். விவசாயம் செய்பவர்களும், பழங்காலத் தொழில் செய்பவர்களும் கூட இக்கால நவீன கருவிகளை கையாளும் துறைகளையும், தொழில்களையும் விரும்பும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இயந்திர மனிதர்களை சாதாரண வேலையிலிருந்து, பளுவான வேலைக்கும் பயன்படுத்தும் விஞ்ஞானத்தை பெரும் ஜனத்தொகை கொண்ட நம்நாடும் முனைப்புடன் முன்னேற்றி வருகிறது.

இது போன்று பல வகையிலும் இக்காலச் சூழல் மாயவலைகளால் சிறைப்படுத்தப் பட்டுள்ளது. (எழுதினால் நீண்டு கொண்டே போகும்.)


திருமணம் என்பது அதன் பருவத்தில் செய்யப்பட வேண்டிய ஒன்று என்பதை பெரியோர்களும், அப்பருவத்தினரும் உணர வேண்டும். சில தலைமுறைக்கு முன்பு அப்படித்தான் இருந்தது. பால்ய விவாகத்தை தவறாக பயன்படுத்திய வேளையிலிருந்து பருவம் தவறி திருமணம் செய்யும் நிலைப்பாட்டிற்குள் சமூகம் வீழ்ந்துள்ளது.

அதிலிருந்து மீள மேற்படிப்பு, பெரும் பணம் ஈட்டுதல் போன்ற இலட்சியங்களை ஒருபுறம் தாமதிக்கச் செய்து; மணம் முடித்த பின் இருவருமாக தொடர துவங்கினால் திருமணத் தாமதம் மெள்ள மெள்ள சரியான பருவம் என்றளவில் மாற்றம் பெறும்.


ஆணுக்கும், பெண்ணுக்கும் 21, 18 என்ற பருவம் எய்தியதும் அவர்கள் பிழைப்பிற்காக ஏதோ ஒரு பணியில் உடன் அமர வேண்டும். உடன் திருமணம் செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு இலட்சியமான தொழிற்கல்வியோ, நவீனத்துறைக்கு சென்றமர்வதோ என்ற நிலைப்பாட்டிற்கு வந்தால் சரியாக அமையும். அந்நிலை சமூகத்தில் தொடர்ந்தால் இருபாலரும் அதனை ஏற்பர்.


பிழைப்பது என்பது வேறு இலட்சியம் என்பது வேறு. (They must know the difference between employment and career). பணம் சம்பாதிக்கும் வேலை, தொழிலுடன் இலட்சிய பதவியை இணைத்து (doctor, engineer), அதனை பெற்றோர் துணையுடன் தான் நிறைவேற்ற வேண்டும் என்ற நிலை மாறவேண்டும். பிள்ளைகளே தங்கள் வருமானத்தில் இலட்சியத்தை அடைய முயல்வதே சரியான சமுதாயம் அமைய வழி செய்யும். அவரவர் இலட்சியத்தை(மோக்ஷமாயினும்) அவரவரே அடைய முயற்சி செய்வதையே சமண வழிகாட்டுதலும் அறிவுறுத்துகிறது.

அதற்கேற்றார் போல் இனி வரும் காலத்தில் பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு விளங்கச்செய்து வளர்ப்பதே, அவர்களும் தங்கள் கடமைகளை செவ்வனே நிறைவேற்ற இயலும். சமூகத்தில் சீர்கேடான நிலையும் குறையும்.  இல்லாவிடில் தாமதத்திற்கு தாங்களா, பிறந்த சமூகமா என்ற கேள்விகள் துளைக்க ஆரம்பித்து மன அழுத்தத்தை வெளிப்படுத்தவே செய்யும் எனபதே நிதர்சனம்.


பணியில், தொழிலில் அமர்ந்த பின்னர் தான் திருமணம் என்றால் அவ்வயதிற்குள் பிழைப்புக்காக ஒன்றைத் தேர்ந்தெடுத்து ஆணும், பெண்ணும் அமர்ந்தபடி திருமணம் செய்து கொண்டபின்னர் தங்கள் லட்சிய படிப்பையோ, பணம் சேர்ப்பதையோ தொடரும் வழியை கற்பித்தலே இனி வரும் காலத்திற்கு பொருத்தமாய் அமையும்.


மற்றபடி சாதம் பார்த்தல், அழகு/அழகற்ற தன்மை, குலம், கோத்திரம், உறவுமுறை, அதே இனம் போன்றவை வழக்கம் போல் அழுத்தம் கொடுக்கத்தான் செய்யும் அதிலிருந்தும் வெளியே வரும் வழியை முன் தலைமுறையினரின் அனுவப அறிவு கண்டிப்பாய் சரி செய்து விடும்.


திருமண வயதில் கல்யாணம்…

அதற்குப் பின்னர் இலட்சிய நிறைவேற்றம்…

இல்லையெனில் சந்யாசம் என்ற நிலைப்பாடுதான் இனி வரும் காலத்திற்கு பொருந்தும்.


நன்றி.

பத்மராஜ் ராமசாமி.

No comments:

Post a Comment