தமிழகத்தில் சமணம்
சில நாட்களுக்கு முன்னர் தஞ்சையில் சமணம் என்ற நூலினை ஏடகம்
என்ற பதிப்பகத்தாரின் வழியே திருவாளர்கள் முனைவர் பா. ஜம்புலிங்கம், கோ. தில்லை கோவிந்தன்
மற்றும் மணி. மாறன் மூவர் வெளியிட்டார்கள் என்பது பலரும் அறிந்திருப்பர்.
அவர்களின் தொண்டு போற்றுதற்குரியது. பா. ஜம்புலிங்கம் எனும்
பெரியார் தமிழ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி தற்போது ஓய்வில் இருப்பவர். பெளத்த தடயங்கள்
பலவற்றை கண்டறிந்து வெளியிட்டவர். பெளத்தம் காணும் இடங்களில், முன்னதாக சமணம் நுழைந்திருக்கவே
அச்சின்னங்களை அவர் மேற்கொள்ளும் பட்சத்தில் அவருடன் திரு. தில்லை கோவிந்தன் அவர்களும்
உடன் சென்று சமணத் தடங்கள் பலவற்றையும் இப்பகுதியில் வெளிப்படுத்தி வந்தனர். (இவர்கள்
இருவரும் எனக்கு பரிச்சயமானவர்கள்). மேலும் சரஸ்வதி மஹால் நூலகத்தில், (மன்னர் சர்போஜி
மாஹாராஜா அவர்களால் துவக்கப்பட்டது.) பணியாற்றி வரும் திரு. மணி. மாறன் அவர்களும் இவர்களது
பணியில் பல நூல்களை அளிப்பதும், துணை செல்வதுமாக இருந்துள்ளார்கள்.
அவர்கள் மூவரும் இணைந்து பழைய தஞ்சைப்பகுதி சமணத்தடயங்களை
வெளியிட்டால் வரலாறு அனைவருக்கு வெளிப்படும் என்ற நோக்கில் தஞ்சை ச. அப்பாண்டைராஜன்
அவர்கள் வினவ அவர்களும் அவர் வாய்மொழியினை உறுதியுடன் ஏற்றுக் கொண்டு தஞ்சையில் சமணம்
என்ற ஒரு வரலாற்று ஆய்வு நூலை, தற்போதைய தஞ்சாவூர், திருவாரூர், மாவட்டத்திலுள்ள, அதாவது
பழைய தஞ்சாவூர் மாவட்ட சமணச் சின்னங்களைப் பற்றி எழுத எத்தனித்து முடித்தும் தந்துள்ளனர்.
அதற்கான பொருளுதவியை இப்பகுதி மக்களிடம் இருந்து அளித்து, விழா எடுத்து அவர்களை சிறப்பித்தும்
அனுப்பிய திரு. தஞ்சை ச. அப்பாண்டராஜன் அவர்களுக்கும் (உறவினராய் இருந்தாலும்) நன்றியை
தெரிவிக்க கடமைப் பட்டுள்ளேன்.
அந்நூலில் தஞ்சைபகுதியிலுள்ள செய்திகளுக்கு முன்னர் தமிழகத்தில்
சமணம் என்ற தலைப்பில் ஒரு அத்தியாயத்தை வெகு சிறப்பாக எழுதியுள்ளனர். அதனை மட்டும்
சில நாட்கள் தொடராக தங்கள் முன் வைக்கிறேன்.
நாளை முதல் இத்தலைப்பில் தமிழக சமண வரலாற்றை திரு. ஜீவபந்து
டி. எஸ். ஸ்ரீபால் அவர்கள் காலத்திற்கும், மயிலை சினி. வெங்கடசாமி நாட்டார் அவர்களுக்குப்
பின் மெய்யான கள ஆய்வுகளையும், தடயங்கள், சமண வரலாற்று உண்மைகளையும் தந்துள்ள இந்நூலின்
அப்பகுதியை தெரிவிக்க முற்படுகிறேன்.
--------------------------------
தமிழ் ஆய்வுக்களம் பரந்து விரிந்தது. எல்லைகள் இல்லாதது சங்ககாலம்
தொடங்கி இக்காலம் வரை மலர்ந்த இலக்கியங்கள் எண்ணற்றன. இலக்கியம் மட்டுமல்லாது கல்வெட்டுகள்,
செப்பேடுகள், சுவடிகள் அளிக்கும் வரலாற்றுச் செய்திகள் ஏராளம் .
அவற்றுள் காணப்படும் நம் முன்னோர்களின் வாழ்வியல் முறைகளையும்
அந்த அனுபங்களை அவர்கள் பதிவு செய்துள்ள விதங்களையும் தொகுத்து நோக்குமாயின் அவை நம்மை
பிரமிக்க வைக்கும். அவற்றுள் மிகச் சிறந்த நீதி நூல்களைப் படைத்து தமிழுக்குத் தொண்டாற்றியது
சமணம்.
தமிழ்த் மொழித்தொண்டும், தமிழ் இனத்தொண்டும் ஆற்றிய சமணர்
படைத்த இலக்கிய, இலக்கண நூல்களும் நீதி நூல்களும் எண்ணிறந்தவை ஆகும். ‘அகிம்சையே மேலான
அறம்’ ‘ஒன்றாக நல்லது கொல்லாமை’ ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’ போன்ற உயரிய கொள்கைகளை
வலியுறுத்தியவர்கள் சமணர்கள். இதனை விளக்கியவர்கள் தீர்த்தங்கரர்கள் ஆவர். இவர்களே
கடவுளர்களாகப் போற்றி வணங்கப்படுகின்றனர்.
இத்தகு சிறப்புமிக்க தீர்த்தங்கரர்களின் சிற்பங்கள் ஒருங்கிணைந்த
தஞ்சாவூர் மாவட்டத்தில் பல சிற்றூர்களில் புதைந்தும், சிதைந்தும், காடுகளுக்கிடையில்
கிடந்தவைகளையும் களப்பணியின் வாயிலாகக் கண்டறிந்து, நாளிதழ்களில் அச்செய்திகள் வெளிவந்தன……..
இவ்வாறான வரிகளுடன் மேலும் சில செய்திகளைத்தாங்கிய…. வெளியீட்டாளர்
முகவுரையுடன் ஏடகம், தஞ்சாவூர் எனும் அடி விலாசத்துடன் துவங்கும் இந்நூலில் அணிந்துரை,
வாழ்த்துரை மற்றும் சமணம் பற்றிய எட்டுப்பக்க குறிப்புகளுக்கு அடுத்த அத்தியாயமான
-
தமிழகத்தில் சமணம்
என்ற தலைப்பில்….
நீண்ட தொரு வரலாற்றினைக் கொண்ட பெருமைக்குரியது சமண சமயம்.
பரந்து விரிந்து தமிழ் நிலப்பரப்பில் வெவ்வேறு காலக் கட்டங்களில் ஆட்சி செய்த மன்னர்
பரம்பரையினரும் சமணத்தின் மீது பற்று கொண்ட பெருமக்களும் சமண சமயத்தின் வளர்ச்சிக்குப்
பெரிதும் துணை நின்றனர்.
அன்புடைமை, அஹிம்சை, அவாயின்மை, சமத்துவம், சகோரத்துவம், வாய்மை
போன்ற அறநெறிக் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு சமுதாய முன்னேற்றத்திற்கு அருந்தொண்டாற்றியவர்கல்
சமண சமயத்தைச் சார்ந்த அறவோரே ஆவர்.
கிறித்துவ ஆண்டு தொடங்குவதற்குச் சில நூற்றாண்டுகளுக்கு முன்னரே
சமண சமயம் வேரூன்றலாயிற்று. கி.மு. 4ஆம் நூற்றாண்டின் இறுதியில் மகத நாட்டில் கடும்
பஞ்சம் உண்டான போது மெளரியப் பேரரசன் சந்திரகுப்தன் முடிதுறந்து பத்திரபாகு முனிவருடனும்
12000 சமணத்துறவிகளுடனும் தென்னகம் நோக்கிப் புறப்பட்டு இன்றைய கர்நாடக மாநிலத்தில்
உள்ள சரவணபெலகொலாவில் தங்கி அங்கே சமண சமயம் நிலைபெற வழிவகுத்தார்.
சந்திரகுப்த மெளரியரும் பத்திரபாகு முனிவரும் இயற்கை அடைந்த
பின்னர் பத்திரபாகுவின் சீடராகிய விசாகாச்சாரியார் தலைமையில் எண்ணற்ற துறவியர் தமிழகம்
வந்து சமண சமயத்தை வேரூன்றச் செய்தனர். இத்துறவிகளின் அடிச்சுவட்டினைப் பின் பற்றிய
அருளறம் பூண்ட அண்ணலார் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உள்ள மலை குகைகளில் உறைந்து
சமயப் பணிகளை மேற்கொண்டு வந்ததை கற்படுக்கைகளும் அத்துறவியரின் பெயர்களையோ, அந்த கற்படுக்கைகளைச்
செய்து கொடுத்த பெருமக்களின் பெயர்களையோ கொண்ட பிராமி கல்வெட்டுகளும் பெருமளவில் காணப்படுகின்றன.
கி.மு. 3-4 ம் நூற்றாண்டு காலகட்டத்தைச் சார்ந்த கல்வெட்டுக்களிலும்
அன்றைய காலகட்டத்தில் தோன்றிய சங்க இலக்கிய நூல்களிலும் சமண சமயம் செல்வாக்கு பெற்றது
எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.
தொடக்க காலத்தில் குகைகளில் உறைந்த துறவியருக்கும், ஊர் புறத்தே
வாழ்ந்த சமணப் பெருமக்களுக்கும் நெருங்கிய தொடர்பு இல்லை என்றாலும் கால ஓட்டத்தில்
குகைப் பள்ளிகளுடனான மக்களின் ஈடுபாடு அதிகரிக்கத் தொடங்கியது. இதன் காரணமாக சமயப்
பணிகள் மட்டுமின்றி சமுதாயப் பணிகளும் சிறந்தோங்கி வந்தன.
குறிப்பாக சமுதாயப் பணியில் துறவியரும் சிராவகப் பெருமக்களும்
சாதிபேதம் பாராட்டாமை, எளிய வாழ்க்கை நெறிகள், சமயக் கல்வி, மருத்துவ உதவி, வறியோர்க்கு
உணவளித்தல், அடைக்கலதானம் போன்ற நற்பணிகளை செய்து வந்தமையால் மக்களிடையே சமண சமயம்
ஒரு வலிமை மிக்க அமைப்பாக வளர்ந்து வந்தது.
தமிழகத்தின் வரலாற்றில் இருண்ட காலமாகக் கருதப்படும் களப்பிரர்களின்
ஆட்சியிலும் சமணம் போற்றாப்பட்டதாகவே தெரிகிறது. பூஜ்யபாதரின் சீடராகிய வஜ்ரநந்தியின்
தலைமையில் மதுரையில் திராவிடச் சங்கம் நிறுவப்பட்டு சமயப் பணிகள் மேற்கொள்ளப்பெற்றது
களப்பிரர்களின் ஆட்சியில்தான். இந்த காலகட்டத்தில் தான் பதினென்கீழ்க்கணக்கு நூல்கள்
பலவற்றைச் சமணச் சான்றோர்கள் படைத்தனர்.
கி.பி. 6ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் களப்பிரரைப் பாண்டிய
மன்னன் நெடுங்கோனும் பல்லவ மன்னன் சிம்ம விஷ்ணுவும் போர் தொடுத்து வென்று தமிழகத்தின்
தென்பகுதியில் பாண்டியர் ஆட்சியும், வடபகுதியில் பல்லவர் ஆட்சியும் நிலைபெறச் செய்தனர்.
கி.பி. 6ம் நூற்றாண்டு முதல் கி.பி. 9ம் நூற்றாண்டு வரை சிறப்புடன் விளங்கிய இந்த இரு
பேரரசுகளும் சைவ, வைணவ சமயங்களுக்குப் பெரும் ஆதரவை அளித்ததால் சமய மார்க்க நெறியில்
நாயன்மார்களும், ஆழ்வார்களும் ஈடுபட்டு தத்தம் சமயங்களை வளர்த்தெடுப்பதற்கு முனைந்து
செயலாற்றினர். அதே நேரம் பெளத்த, சமண நெறிகளை மிகத் தீவிரமாகக் கண்டித்தும், அச்சமய
நெறியாளர்களைப் பழித்தும் வந்தனர். அது மட்டுமின்றி சில இடங்களில் சைவ சமயத்தோருக்கும்
சமணருக்கும் இடையே சமயப் போர்களும் நிகழ்ந்தன.
கி.பி. 7ம் நூற்றாண்டில் பக்தி இயக்கம் வெகு வேகமாக எழுச்சி
பெற்றது. இதனால் சமண சமயம் மிகுந்த பாதிப்பை எதிர்கொண்டது. மீண்டும் வளர்ச்சி அடையவும்
தன்னை முன்னிறுத்திக் கொள்ளவும் வழிவகைகளை மேற்கொண்டது. உருவ வழிபாட்டிற்கு மேன்மை அளித்து குகைக் கோயில்களையும்
கட்டடக் கோயில்களையும் தோற்றுவித்து வழிபாடுகளையும் திருவிழாக்களையும் நடத்தலாயினர். இதன் காரணமாக சைவ வைணவச் சமயங்களுக்கு ஈடுகொடுக்கும்
வகையில் புத்துயிர் பெற்றது.
கி.பி. 9ம் நூற்றாண்டின் இடையில் சோழப்பேரரசு ஏற்பட்டது. வலிமை
மிக்கப் பேரரசாக உருவெடுத்த இப்பேரரசு பாண்டிய நாட்டையும் தொண்டை நாட்டையும் தன் வசமாக்கிக்
கொண்டது. சோழ மன்னர்கள் சைவ சமயத்தைச் சார்ந்து விளங்கினாலும் இவர்கள் ஆட்சியில் சமண
சமயத்தின் வளர்ச்சி தடைபெறவில்லை. இவர்கள்
காலத்தில்தான் எண்ணிறந்த சமண ஆலயங்கள் தோற்றுவிக்கப்பட்டன. இவர்களின் ஆட்சிக்கு அடங்கி அரசு செலுத்திய குறுநில
மன்னர்கள் பலரும் சமண சமய ஆலயங்களின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றினர். இதனைத் தொண்டை நாட்டில் பரவலாகக் காணப்படும் சமணச்
சின்னங்களில் இருந்து அறியலாம்.
கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் பாண்டிய நாட்டில் சமணம் பாதிப்புக்கு
உள்ளானதிலிருந்து அங்கிருந்த சமணப் பெருங்குடி மக்கள் குடிபெயர்ந்தனர். பின்னர் பாண்டியநாடு சோழர்களின் ஆட்சிக்கு உட்பட்டபோது
சோழ, பாண்டிய போர்களால் அங்கு அரசியல் நெருக்கடிகள்
ஏற்பட்டன. இப்போக்கானது சோழப் பேரரசின் இறுதி
காலமாகிய கி. பி. 13 ம் நூற்றாண்டு வரை தொடர்ந்து இருந்தது. இதன் காரணமாக கி.பி. 10ம் நூற்றாண்டிற்குப் பிறகு
பாண்டிய நாட்டுப் பகுதியில் சமண சமயம் சிறந்து விளங்குவதற்கு வாய்ப்பின்றி போய்விட்டது. இதனால் சமணப் பெருங்குடி மக்கள் தங்களது சமணம் செல்வாக்குப்
பெற்றுத் திகழ்ந்த தமிழகத்தின் வடபகுதிகளுக்கு மீண்டும் குடிபெயர வேண்டிய நிலை ஏற்பட்டது. இதன் விளைவால் சோழ நாட்டின் வடபகுதியில் புதியதாக
பல சமண குடியிருப்புகளும், அதனிடையே சிறிய அளவிலான சமண ஆலயங்களும் தோன்றலாயின. சோழர்கள் சமணத்தைப் புறந்தள்ளாததால் இவர்களின் ஆட்சியில்
சமண சமயத்தின் வளர்ச்சி நன்றாகவே அமைந்தது.
தமிழகத்தில் சோழர்களின் ஆட்சிக் காலம் சமண சமயத்தின் பொற்காலமாக விளங்கியதை
அறிய முடிகிறது.
தமிழகத்தில் இவ்வளவு செல்வாக்கு மிக்க சமயமாக சமணம் திகழ்ந்தத்தற்கு
அதன் பழமையும் ஒரு காரணமாகும். கி.மு. 3 ஆம் நூற்றாண்டுக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே
சமணம் தமிழ்நாட்டிற்கு வந்திருக்க வேண்டும்.
மாஹாபாரத காலத்திலேயே அதாவது கண்ணபிரானுடைய காலத்திலேயே சமணர் தமிழ் நாட்டிற்கு
வந்ததாகத் தெரிகிறது. 22வது தீர்த்தங்கரராகிய
நேமிநாதசுவாமி கண்ணபிரானுடைய நெருங்கிய உறவினர் என்றும், கண்ணபிரான் எதிர்காலத்தில்
சமண தீர்த்தங்கரராக பிறந்து சமண சமயத்தை நிலைநாட்டப் போகிறார் என்றும் சமண நூல்கள்
கூறுகின்றன. கண்ணபிரானும் அவரைச் சேர்ந்தவர்களும் சமண சமயத்தவர் என்று சமண நூல்கள்
குறிப்பிடுகின்றன. கண்ணபிரானிடத்தில் அகத்தியர்
சென்று அவர் இனத்தவராகிய பதினென்குடி வேளிரையும், அருவாளரையும் தமிழகத்திற்கு அழைத்து
வந்து குடியேற்றினார் என்று தொல்காப்பியத்தின் உரையில் நச்சினார்க்கினியர் குறிப்பிடுகின்றனர்.
அகத்தியர் தென்னாடு போகும் போது துவாராபதி போந்து நிலங்கடந்த
நெடுமுடியண்ணல் வழிக்கண் பதினெண்குடி வேளிரையும் அருவாளரையும் கொண்டு போந்து காடு கெடுத்து
நாடாக்கி குடியேற்றினார் என்று தொல். எழுத்து பாயிர உரையில் கூறியுள்ளார். இது “மலயமாதவன்
நிலங்கடந்த நெடுமுடி யண்ணலுழை நரபதியருடன் கொணர்ந்த பதினெண் வகைக் குடிப்பிறந்த வேளிர்க்கும்
வேந்தன் தொழில் உரித்தென்கிறது” தொல் பொருள் அகத்திணை
32 ஆம் சூத்திரத்திற்கு உரிய நச்சினார்க்கினியர் உரை.
மலயமாதவன் ஆகிய அகத்திய நிலங்கடந்த நெடுமுடி அண்ணலாகிய கண்ணபிரானிடமிருந்து
பதினெட்டு குடியைச் சேர்ந்த வேளிரையும், அருவாளரையும் தமிழ்நாட்டிற்கு கொண்டுவந்து
குடியமர்த்திய செய்தியினை இதன்வழி அறியலாம். கண்ணபிரான் சமணராக இருந்தால் அவர் வழியினராகிய
அகத்தியரால் அழைத்துவரப் பெற்ற பதினெண்குடி வேளிரும், அருவாளரும் சமணராகவே இருந்திருக்க
வேண்டும்.
பதினெண்குடி வேளிர் தமிழகத்தின் குடியேறிய பின் சேர, சோழ,
பாண்டிய மன்னர்களுக்கு பெண் கொடுக்கும் உரிமை உடையவராக வாழ்ந்தனர் என்று சங்கநூல்கள்
வழி அறிகின்றோம். மேலும் அக்காலத்தில் அவர்கள்
சமண சமயத்தினராக இருந்தனர் என்பதையும் அறிய முடிகிறது. அகத்தியரோடு வந்த அருவாளர் தொண்டை நாட்டில் குடியேறினார்கள்.
அவர்கள் குடியேறிய பிறகு தொண்டை நாட்டிற்கு அருவா நாடு என்று பெயர் உண்டாயிற்று. அருவாளரும் அக்காலத்தில் சமணம் சார்ந்தவராக இருந்தனர்
எனக் கருதப்படுகின்றனர். நெல்லூர் மாவட்டத்தைச்
சார்ந்த மாலகொண்டா என்னும் மலைமேல் உள்ள ஒரு குகையில் கி.மு. 8 ம் நூற்றாண்டில் எழுதப்பெற்றுள்ள
பிராகிருத மொழியிலே பிராமி எழுத்தினால் எழுதப்பெற்றுள்ள எழுத்துப் பொறிப்பில் அருவாஹி(ள)
குலத்து நந்த செட்டி மகன் சிறீவீரி செட்டி செய்வித்த குகை என்றுள்ளது.
இக்குகை சமணத்துறவிகளுக்காக அமைக்கப்பட்டது. தமிழ் நூல்களில் அருவாளர் என்று கூறப்படுபவர் இச்சாசனத்தில்
அருவாஹி(ள) குலம் என்பதும், அருவாளர் பண்டைக்காலத்தில் சமணராக இருந்தனர் என்றும் இந்த
சாசனம் காணப்படுகின்ற இடம் பண்டைக்காலத்தில் தமிழ்நாட்டின் வட எல்லையாக இருந்தது என்பதும்,
கி. பி. 2 ஆம் நூற்றாண்டில் டாலமி என்ற ஆசிரியர் அருவார்னொய் என்னும் இனத்தார் இந்தப்
பகுதியில் வாழ்ந்தனர் என அவருடைய குறிப்பில் குறிப்பிடப்படுவதில் இருந்தும் சமணர்களின்
பழமை வரலாற்றை அறியலாம்.
பதினெண்குடி வெளிரும், அருவாளரும் சமண சமயத்தவராக இருந்ததோடு
அவர்கள் தென்னாட்டிற்கு வந்த பின்னர் கண்ணன், பலராமன் என்னும் இருவரையும் வழிபடுகின்ற
வழக்கத்தினை தமிழ்நாட்டில் தொடங்கினர் என்று தெரிகிறது. சங்க நூல்களில் பல இடங்களில் கண்ணன், பலராமன் வழிபாடு
செய்திகள் காணப்படுகின்றன. இச்செய்திகளிலிருந்து
சமண சமயத்தின் தொன்மையினை அறிய முடிகின்றது.
தமிழ்நாடு முழுவதும் சமண சமயம் பரவி நிலைபெற்று இருந்ததுடன்,
இச்சமயம் தமிழகத்தில் வேரூன்றி தழைத்து செல்வாக்குடன் திகழ்ந்ததை மணிமேகலை, சிலப்பதிகாரம்
மற்றும் தேவாரம், நாலாயிர திவ்யப்பிரபந்தம், பெரிய புராணம், திருவிளையாடல் புராணம்
முதலிய நூல்கள் குறிப்பிடப்படுகின்றன. இலக்கியச்
சான்றுகள் மட்டுமின்றி ஆங்காங்கு காணப்படுகின்ற கல்வெட்டுச் சான்றுகளும் அழிந்தும்
அழியாமல் காணப்படுகின்ற சமணக் கோயில்களும், தீர்த்தங்கரர்களின் திருவுருவங்களும் சமணத்தின்
வரலாற்றைக் காட்சி நிற்கின்றன.
அருங்கலச் செப்பு என்னும் நூல்,
பறையன் மகனெனினும் காட்சியுடையான்
இறைவன் எனஉணரற் பாற்று
எனக் குறிப்பிடுகிறது. இதன் பொருள் பிறப்பால் உயர்வு, தாழ்வு
எனும் குறுகிய எண்ணம் பண்டைக் காலத்தில் சமண சமயத்தில் இல்லை. எந்தக் குலத்தைச் சார்ந்து இருந்தாலும் தம் சமயக்
கொள்கையை பின்பற்றக் கூடியவனை சமணர் போற்றி வந்தனர். ஆகவே சாதி பேதம் பாராட்டாத தமிழ்நாட்டில் சாதி பேதம்
பற்றிய எண்ணம் இல்லாத சமண சமயம் பரவியதில் வியப்பில்லை..
சமணர்கள் உயர்ந்தோங்கிய சிந்தனையாக நான்கு தானங்களை செய்வதை
ஒரு பெரும் அறமாக கொண்டு திகழ்ந்தனர். அவை அன்னதானம், அபயதானம், ஒளடததானம், சாத்திரதானம்
என்பனவாகும். உணவின்றி தவிக்கின்ற ஏழை மக்களுக்கு உணவளித்து பசி நோயை நீக்குவது தலைசிறந்த
அறமாகும். எனவே அன்னதானத்தை முதல் தானமாக செய்து வந்தனர்.
அபயதானத்தையும் சமணர்கள் பொன்போல் போற்றி வந்தனர். அச்சம் கொண்டு தான் வாழ்ந்த பகுதியில் இடம்பெயர்ந்து
அடைக்கலம் என்று புகல் அசைந்தவர்களுக்கு அபயம் அளித்துக் காப்பது அபயதானமாகும். இதற்கென்றே சமண ஆலயங்களை அடுத்து குறிப்பிட்ட சில
இடங்கள் இருந்தன. இந்த இடங்களில் புகல் அடைந்தவர்களை சமணர்கள் காத்துப் போற்றினார்கள்.
அடுத்ததாக ஒளடத தானத்தையும் செய்து வந்தனர் சமணர்கள். சமணப்
பெரியார்கள் மருத்துவம் பயின்று நோயாளிகளுக்கு மருந்து கொடுத்து நோய்ப்பிணி தீர்த்து
வந்தனர். இவர்கள் இலவசமாக மருந்து கொடுத்து
மக்களின் நோயைத் தீர்த்தக் காத்ததால் சமணம் ஆக்கம் பெற்றது. இச்செயலினைச் செய்த செய்தியினை அவர்கள் இயற்றிய
திரிகடுகம், ஏலாதி, சிறுபஞ்சமூலம் போன்ற நூல்களிலிருந்து அறிய முடிகிறது.
நான்காவது தானமாகிய சாத்திர தானத்தையும் பொறுப்போடு செய்து
வந்தனர் சமணப் பெரியோர். தம் பள்ளிகளிலேயே ஊரிலுள்ள சிறுவர்களுக்கு கல்வி கற்பித்து
வந்தனர். இவர்களின் சாத்திர தானம் பிள்ளைகளுக்கு
கல்வி கற்பிப்பதோடு நின்றுவிடாமல் வசதி கொண்ட சமணர்களின் இல்லங்களில் நடைபெறும் திருமண
விழாக்கள், இறந்தோர்க்கு செய்யப்படும் இறுதிக்கடன் நாட்களிலும் தங்கள் சமய நூலகளைப்
பல பிரதிகள் எழுதச்செய்து, அவற்றை தானமாக வழங்கி வந்தார்கள்.
சங்க காலத்தில் தமிழ்ச் சங்கங்கள் தென்மதுரையில் தோன்றின. அவற்றுள் மதுரை நகரில் பூஜ்ஜியபாதரின் மாணவரான வஜ்ரநந்தி
என்னும் சமண முனிவரால் திராவிட சங்கம் கி.பி. 470 இல் தோற்று விக்கப்பட்டது. இச்சங்கத்தின் பெருமுயற்சியால் சமனர் பலர் தமிழ்
நூல்களை யாத்தனர். அவற்றுள் குறிப்பிடத்தக்கவை
சீவக சிந்தாமணி, நீலகேசி, குண்டலகேசி, யசோதர காவியம் போன்றவையாகும்.
தமிழ்நாட்டில் புதுக்கோட்டை, சித்தன்னவாசல், திருச்சி, தஞ்சை,
கொங்குநாடு, தொண்டைநாடு வரை சமண சமயம் பெருவளர்ச்சி பெற்றிருந்தது. சமண மடங்கள் காஞ்சிபுரம் (ஜினகஞ்சி), திருப்பருத்திக்
குன்றம், மேல்சித்தாமூர், தாழனூர், திருபாண்மலை,
வள்ளிமலை, பொன்விளைந்தான் பட்டி, சித்தன்னவாசல், திருப்பாதிரிபுலியூர் போன்ற இடங்களில்
அமைந்திருந்தன. அதேபோல மலையடிப்பட்டி, கீழ்ச்சாத்தமங்கலம், பஞ்சபாண்டவர் மலை, கீழவளைவு,
ஆனைமலை, அரிட்டாப்பட்டி, கீழக்குயில்குடி போன்ற இடங்களில் சமணப் பள்ளிகளும் ஓவியங்களும்
காணப்படுகின்றன.
வெடால் என்ற இடத்தில் பெண்களுக்கான சமணப்பள்ளி ஒன்று இருந்துள்ளது. அழகர்கோயில் கல்வெட்டில் பமித்தி என்ற சொல் காணப்படுவதால்
பெண் துறவிகளும் குகைத்தளங்களில் இருந்திருக்க வேண்டும் எனத் தெரியவருகிறது. இக்கல்வெட்டில் பமித்திஸபகிதா(ஸர்ப்பமித்ரா) என்ற
பெண் துறவியின் பெயர் காணப்படுகிறது.
கி.பி. 4 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த நெகனூர்ப்பட்டிக் கல்வெட்டில்
கந்தி என்ற பெண் துறவியின் பெயர் காணப்படுகிறது.
இக்கல்வெட்டில் காணப்படும் வாசகம் கந்தி என்பதும், கவுந்தி என்பதும் சமணப்பெண்
துறவியைக் குறிப்பதாகும். சிலப்பதிகாரத்தில்
கவுந்தி அடிகள் என்ற சமணத்துறவி வாழ்ந்ததும் அவர் தங்கி இருந்த பள்ளிக்கு கவுந்தி பள்ளி
என்ற பெயர் வழங்கப்பட்டதையும் காணலாம். கேக்கந்தண்ணி
என்பவர் சமணப்பள்ளி ஒன்றினைச் செய்வித்ததாகக் குறிப்பு உள்ளது. சேக்கத்தி என்று அழைக்கப்பட்ட பெண் துறவியின் தாயார்
சேக்கந்தண்ணி எனக் குறிக்கின்றது. ஆதித்தன்
காலத்தில் குணகீர்த்தி பட்டாரகர் மாணாக்கியராகிய கணவீரக் குறத்தியார் என்ற பெண் சமணத்துறவி
இருந்ததைக் தென்னிந்திய கல்வெட்டுச் சாசனம் குறிப்பிடுகின்றது. சமன ஒழுக்கத்தைத் தங்களுக்கு கீழிருந்த மாணவர்களுக்கு
கற்பிக்கும் ஆசிரியர்களாக அத்திரன், செங்காயபன், இளங்காயபன் போன்ற முனிவர்களின் பெயர்
கல்வெட்டுகளில் காணப்படுகிறது.
சமணர் வளர்த்த கலைகளுள் ஓவியக்கலையும் ஒன்றாகும். சித்தன்ன வாசலில் காணப்படும் தாமரைக்குளம் ஓவியம்
சமண சமயத்தில் குறிக்கப்படும் காகிதாபூமி எனப்படும் சமண சமயக் காட்சி என தங்கவேலு தம்முடைய
நூலில் குறிப்பிட்டுள்ளார். சமண சமயம் பரவத்
தொடங்கியபோது அச்சமயத்தில் எழுந்த பெரியோர்களால் எழுத்துக்கள் வளர்ச்சி பெற்றன. அவை பிராமி எழுத்துக்கள் என்றும் அழைக்கப்பட்டதோடு,
சமண சமயம் சார்ந்த குகைகளில் இவ்வகைப் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டன. அரிட்டாப்பட்டி மாங்குளம், முத்துப்பட்டி, திருப்பரங்குன்றம்,
மாறுகால்தலை, அழகர்மலை, கீழவளவு, மேட்டுப்பட்டி போன்ற இடங்களில் காணப்படுகின்றன.
சமண சமயமானது பத்திரபாகு காலத்தில் கர்நாடகத்திலிருந்து கொங்குநாடு,
தென்பாண்டி நாடு பரவி புதுக்கோட்டை, திருச்சி மற்றும் தொண்டை நாட்டின் வழியாக வளர்ச்சி
பெற்று ஹொய்சாளர் விஜயநகர ஆட்சிக்காலம் வரை தமிழகத்தில் சிறப்புற்று இருந்தது.
திருச்சிராப்பள்ளி குன்றின் மீது மூன்று கோயில்கள் உள்ளன. உச்சியில் பிற்காலத்தில் உச்சிப்பிள்ளையார் கோயிலும், இடையே மகேந்திர பல்லவன் சமணம் விடுத்துச் சைவம்
மாறியவுடன் எடுத்த லலிதாங்குர பல்லவ ஈஸ்வர கிருஹம் எனும் குடைவரையும், அதற்குக் கீழாகத்
தாயுமானஸ்வாமி கோயிலும் உள்ளன. உச்சிப்பிள்ளையார் கோயில் பிதுக்கம் பெற்ற பெரிய பாறையின்மேல்
கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இப்பாறையின் வடபுறமாக மிக ஒடுக்கமான பாதை ஒன்று மேற்குப்
பக்கம் செல்கிறது. அங்கு இயற்கையாக அமைந்த
குகைத்தளம் ஒன்றும் உள்ளது. இக்குகையில் சமண
முனிவர்களுக்கான கற்படுக்கைகள் உள்ளன. கி.பி.
5ம் நூற்றாண்டு எழுத்தமைதியில் அக்கற்படுக்கைகளுக்குரிய சமணத் துறவிகளின் பெயர்கள்
கல்லில் பொறிக்கப்பெற்றுக் காணப்பெறுகின்றன.
அவற்றுள் ஒரு பொறிப்பு சிரா என்ற சமணத் துறவியின் பெயரைக் குறிப்பிடுகின்றது. இவரது பெயரால்தான் சிராப்பள்ளி என இவ்வூருக்கும்
பெயர் வந்தது எனக் கருதுகின்றனர்.
இக்குகைத்தளத்திற்குச் செல்லும் வழியில் பாறையின் மீது பல
கல்வெட்டுப் பொறிப்புகள் உள்ளன. அவற்றுள் ஒன்று
தஞ்சஹரக என்று கிரந்த லிபியில் எழுதப்பெற்றுள்ளது. இது இப்பாறைக்குக் கீழாக உள்ள லலிதாங்குர பல்லவ
ஈஸ்வர கிருஹத்தில் காணப்பெறும் மகேந்திர பல்லவனின் கல்வெட்டுக்களில் உள்ள எழுத்துப்
பொறிப்புக்களையே ஒத்துள்ளது. எனவே இப்பொறிப்பு
மகேந்திர பல்லவனது காலத்தில் எழுதப்பெற்றிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இப்பொறிப்புக்கு அருகில் எழுதப் பெற்றுள்ள கமதுஹீ
என்ற பெயர் மகேந்திர வர்மனின் பட்டப்பெயராக இருக்கும் என்றும், அவன் சைவனாக மாறிக்
கீழே உள்ள குடைவரைக் கோவிலை எடுப்பதற்கு முன்னர் இச்சமனக் குகையைப் போற்றி இருக்க வேண்டும்
எனவும் தொல்லியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.
தஞ்சஹரக என்பதும் மகேந்திரனின் பட்டப்பெயராகவே
இருக்க வேண்டும் எனவும் கருதுகின்றனர். இது தஞ்சையை வென்றவன் என்ற பொருளைக் குறிப்பதாகவும்
குறிப்பிட்டுள்ளனர்.
இச்சான்று கொண்டு நோக்கும்போது சிராப்பள்ளி மலையுச்சியில்
சமணக் குகையில் காணப்பெறும் தஞ்சஹரக (தஞ்சையை வென்றவன்) என்ற சொல் சிம்மவிஷ்ணு தஞ்சையைக்
கைப்பற்றியதைக் குறிப்பதாக இருக்கலாம் என்று ஊகிக்க முடிகிறது. இக்கல்வெட்டே முதன் முதலில் தஞ்சையைப் பற்றிக் குறிப்பிடுகிறது. எப்படி இருப்பினும் கி.பி. 6-7ம் நூற்றாண்டுகளில்
சிம்ம விஷ்ணு அல்லது மகேந்திரபல்லவன் ஆகிய இருவரில் ஒருவர் தஞ்சையைக் கைப்பற்றி இருக்க
வேண்டும்.
இலக்கியத்தில் தஞ்சை எனும் தலைப்பில்ள் தஞ்சை என்ற பெயர் குறிப்பு
முதன் முதலில் நாவுக்கரசரின் தேவாரப்பாடலில் காணப்படுகிறது. …….. இதிலிருந்து கி.பி.
7ம் நூற்றாண்டுக்கு முன்னரே அதாவது கி.பி. 5-6 ஆம் நூற்றாண்டுகளில் தஞ்சை என்ற ஊர்
இருந்திருக்க வேண்டும் என்பதை அறிய முடிகிறது. அதேபோல் ஆழ்வார்களில் முதல் ஆழ்வார்கள்
எனப்படும் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார் போன்றோர்கள் கி.பி. 7 ம் நூற்றாண்டாக இருக்கலாம்
என்பது அறிஞர் தம் கருத்து. திருமங்கையாழ்வார் தஞ்சையின் எழில் பற்றியும் தஞ்சையில்
கண்ட விஷ்ணு மூர்த்தங்கள் பற்றியும் திவ்வியப்பிரபந்த பாசுரங்களில் பாடியுள்ளதையும்
குறிப்பிட்டுள்ளார்.
இத்தகு ஒரு நீண்ட பாரம்பரியத்தையும் வளமையையும் கொண்ட சிறப்புமிக்க
தஞ்சை நகருக்கு வரலாற்றில் தனித்த ஒரு எப்போதும் இருந்து வந்துள்ளது. (தற்போதைய தஞ்சை,
திருவாரூர், நாகை மாவட்டங்கள் ஒருங்கிணைந்த மாவட்டமாக தஞ்சை மாவட்டம் என்றிருந்துள்ளது.
சங்ககாலம் தொட்டு சோழ மரபினர் உறையூர் சோழர் எனவும், புகார்
சோழர் எனவும் அழைக்கப்பட்டனர். சோழர்களின் தலைநகரங்களாக கோழியூர் எனப்படும் உறையூரும்,
பழசை எனப்படும் பழையாறையும், புகார் எனப்படும் பூம்புகாரும் சிறந்து விளங்கின. உறையூர்
சோழர்களின் தரை வணிகத் தலமாகவும், பூம்புகார் கடல் வணிகத் தலமாகவும் விளங்கியதை வரலாறு
நமக்கு காட்டுகிறது.
காவிரிப்பூம்பட்டினத்தில் பல்வேறு கடவுளர்களுக்கு கோட்டம்
எனப்படும் கோயில்கள் எழுப்பப்பட்டிருந்தன. தேவர்கள் தலைவன் இந்திரன் கோயில் ஐராவதம்
நிற்கும் கோட்டம் என்றும், பலதேவன் கோயில், சந்திரன் கோவில் ஆகியவற்றுடன் அருகதேவன்
கோவிலான நிக்கந்தக்கோட்டம் எனப்படும் கோயில் இருந்தத்தையும் சிலப்பதிகாரம் காட்டுகிறது.
சிலம்பில் புகாரை விட்டு கோவலனும், கண்ணகியும் மதுரை புறப்படுவதற்கு முன்பாக புகாரில்
இருந்த பல கோயில்களை வழிபட்டனர். அக்கோயில்களில்
ஒன்றான அருகன் கோவிலைப் பற்றியும் அங்கு வாழ்ந்துவந்த சமணர்களின் கொள்கைகளைப் பற்றியும்,
நாடுகாண் காதையில் விவரிக்கப்பட்டுள்ளது.
மாமிச உணவினைத் துறந்து உண்மை விரதத்தோடு துன்பம் ஆசைகளை அடக்கி
வாழ்ந்து, மேன்மை பொருந்திய அருகன் கோயிலிலே சமணர் கூடியிருந்தனர். இக்காட்சியினை புலியூர்கேசிகன்
தன் சிலப்பதிகார உரையில் குறிப்பிட்டுள்ளார்.
சங்கம் மருவிய நூலான கலித்தொகையில் பாரதக் கதைகளும், மதுரையில்
தமிழ்ப்புலவர்கள் கூடி தமிழாய்ந்த செய்திகளும், மதுரையைக் களப்பிரர்கள் கைப்பற்றிய
செய்தியும் கூறப்பட்டு களப்பிரர்கள் சமணர்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இச்செய்தியிலிருந்து
பாண்டியநாடு முதல் தென்தமிழ்நாடு முழுவதும் களப்பிரர்கள் ஆட்சியின் கீழ் திகழ்ந்தமையால்
சோழநாடும் அதற்கு உட்பட்டதாகவே இருந்துள்ளது.
மீண்டும் பாண்டியர்களும், பல்லவர்களும் களப்பிரர்களை வெற்றி கொண்டு, தம் நாட்டினைத்
திரும்பப் பெற்றனர். சோழர்கள் மட்டும் பல்லவர்களின்
கீழ் சிற்றரசர்களாக விளங்கினர் என்பதைப் பல்லவர் கல்வெட்டு குறிப்பிடுகின்றது.
களப்பிரர்களை வெற்றிகொண்ட பல்லவர்கள் தஞ்சையை தம் ஆட்சியில்
சமணம் வளர்ச்சியுற்றதை பொன் விளைந்தான்பட்டி கல்வெட்டு காட்டி நிற்கின்றது. பல்லவ மன்னர்களின் காலத்தில் அவர்களின் மேலாதிக்கத்தினை
ஏற்று முத்தரையர்கள் வல்லம், செந்தலை போன்ற பகுதிகளில் குறுநில மன்னர்களாக ஆட்சி செய்தனர். முத்தரைய குறுநில மன்னர் ஒருவரால் சமண ஆலயத்திற்கு
நிவந்தங்கள் அளிக்கப்பட்டதை தஞ்சாவூர் வட்டக் கல்வெட்டுக்கள் என்னும் நூல் குறிப்பிடுகின்றது.
பெரும்பிடுகு முத்தரையன் குவாவன் மணவாட்டி ஆன திருக்கோட்டற்று
பெருமகனார் சமணப் பள்ளிக்கு நிவந்தம்** அளித்துள்ளனர். முத்தரையரின் தலைநகரான செந்தலை, வல்லம், திருக்காட்டுப்பள்ளிப்
பகுதிகளில் சமண சமயம் நிலை பெற்றிருந்தது.
முத்தரைய மன்னர்கள் தஞ்சையர்கோன், வல்லக்கோன் என்ற பெயரினைத் தாங்கி ஆட்சி செய்தனர்.
பல்லவர் காலத்தில் தஞ்சைப்பகுதியில் வளர்ச்சிப் பெற்ற சமண
சமயத்தை சோழர்களும் போற்றிப் பாதுகாத்தனர்.
களப்பிரர்கள் காலத்தில் சோழநாட்டை விட்டு அகன்ற சோழ மரபினர் பல்லவர் காலத்தில்
அவர்களின் குறுநில மன்னர்களாக விளங்கினர் என்பதை வேளஞ்சேரி செப்புப்பட்டயம் கூறுகின்றது. இப்பட்டயத்தில் குமாரங்குசன் என்பவரே தஞ்சையில்
சோழர் ஆட்சியை நிலைநாட்டிய விஜயபாலயன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. விஜயபாலயன் உறையூரில் தங்கி முத்தரையரை வெற்றிகொண்டு
தஞ்சையை சோழர்களின் தலைநகராக நிறுவினான்.
** நிவந்தம்: மன்னர் ஆட்சிகாலத்தில் ஒரு கிராமத்தையோ/ஊரையோ
ஒரு குறிப்பிட்ட கோவிலுக்கு ஆண்டுதோறும் இவ்வளவு பொருள்/சேவைகளைச் செய்தால் வரி விலக்கு
என்று அறிவிக்கும் வழக்கமிருந்தது. சில நேரங்களில் கோவிலின் முழு பராமரிப்பையும் அவ்வூர்களே
ஏற்றுக்கொள்ளும். இது அவ்வூர்களை நிவந்தம் செய்து தருவதாக வழங்கப்பட்டது.
கி.பி. 9, 10 ஆம் நூற்றாண்டுகளில் மேல்சித்தாமூர், திருநறுங்கொண்டை,
அனந்தமங்கலம், ஆட்சிப்பாக்கம், சோழபாண்டியபுரம், வழுதலங்குணம், மேல்கூடலூர் (எண்ணாயிரமலை),
வளத்தி (நல்ஞானக்குன்று), புதுக்கழனி, சேதாரம்பட்டு போன்ற இடங்களில் புதியதாக குகைக்கோயில்களும்,
பாறைச் சிற்பக் கோயில்களும் தோற்றுவிக்கப்பட்டன. மேலும் பல கோயில்கள் புதுப்பிக்கப்பட்டு
பொலிவுபெற்றன.
தஞ்சை மாவட்டத்தில் பள்ளி என்ற பெயரில் அகத்தியான் பள்ளி,
மகேந்திரப்பள்ளி, திருக்காட்டுப்பள்ளி என்ற பெயரில் ஊர்கள் உள்ளன. பள்ளி என்ற பெயர் சமணப் பெருமக்கள் வாழ்ந்த ஊரினைக்
குறிப்பதாகும். சமண முனிவர்களின் கற்படுக்கைகள்
இருந்த இடம் பள்ளி என வழங்கப்பட்டதைக் கல்வெட்டுக்கள் காட்டுகின்றன.
சமணச் சுவடிகள்:
உலகப்புகழ் பெற்ற சுவடி நூலகமான தஞ்சாவூர் சரசுவதி மஹால் நூலகத்தில்
பல்லாயிரக்கணக்கான பனை ஓலைச் சுவடிகளும், காகிதச் சுவடிகளும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இங்கு பாதுகாக்கப்பட்ட ஓலைச்சுவடிகளிலிருந்து சமண
நூல்கள் பற்றிய அட்டவணை விவரப்பட்டியல் தொகுக்கப்பட்டு நூலாக இந்நூலகத்தாரால் வெளியிடப்பெற்றுள்ளது. இப்பட்டியலில் 314 நூல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
இரண்டாம் சரபோஜி மன்னரின் காலத்திலோ அதற்கு முன்போ இந்நூலகத்தில்
சமணம் சார்ந்த சுவடிகளில் இரண்டு சுவடிகள் மட்டுமே பாதுகாக்கப் பெற்றுள்ளன. 08.01.1921 ஆம் ஆண்டு J.L. தொகுதி என்று அழைக்கப்படும்
ஜம்புநாத பட்லாண்டகே என்பவரால் தொகுக்கப்பட்ட சுவடிகள் அன்பளிப்பாக இந்நூலகத்திற்கு
வந்து, தனித் தொகுதியாக வைத்துப் பாதுகாக்கப்படுகிறது. இச்சுவடி தொகுப்பிலுள்ள சுவடிகளில் 3 தலைப்புக்கள்
சமண சமயத் தொடர்புடைய சுவடிகளாகும். ஆக 5 சுவடிகளைப்பற்றிய
குறிப்புகளுடன் 1932 ஆம் ஆண்டில் வெளிவந்த சுவடி விவரப்பட்டியலில் (Descriptive
catalogue Vol. XIV) எண் 8239 முதல் 8243 வரையுள்ள எண்களில் விளக்கமாக அறியலாம். இவை அனைத்துமே காகிதச்சுவடிகளாகும்.
1973, 74 ஆம் ஆண்டுகளில் இந்நூலகத்தில் சம்ஸ்க்ருத பண்டிதர்களாகப்
பணியாற்றிய திரு என்.கே. இராமானுஜ தாத்தாச்சாரியார் அவர்களும், திரு. கே.இ. கோவிந்தன்
அவர்களும் அரிதின் முயன்று சமண மதத் தொடர்புடைய ஓலைச்சுவடிகளை இந்நூலகத்தில் சேர்த்துள்ளனர். இச்சுவடிக் கட்டுகளில் பல்வேறு தலைப்புக்குரிய நூல்களும்,
ஸ்தோத்திரங்களும், புராணங்களும் காணப்படுகின்றன.
இச்சுவடிகள் திருச்சேறை, நெல்லியாங்குளம், சாத்தமங்கலம், கீழ்ச்சாத்தமங்கலம்,
இளங்காடு, திருவாய்ப்பட்டி, பொன்னூர், முதலூர் ஆகிய ஊர்களிலிருந்து பெறப்பட்டவை.
இச்சுவடிகளைப் பரிசீலிக்கும் போது 297 தலைப்புக்களில் நூல்கள்
காணப்படுகின்றன. இச்சுவடிகளில் காணப்பெறும்
நூல்களை இயற்றிய ஆசிரியர்களில் குறிப்பிடத்தக்கவர்கள், தன்யஸூரி, ஸ்நவேதாசார்யார், மானதுங்காச்சாரியார், வாதிராஜசூரி, பட்டிதீக்ஷித
தேவதத்த, வாதீபஸிம்ஹர், ஆசாரஸுரி, மல்லிஷதேவர்,
ஸமந்தபத்ரஸ்வாமி, அகளங்கபட்டர், ஸித்ததேவ திவாகர் போன்ற ஆசிரியர்களைக் குறிப்பிடலாம். இத்தொகுப்புக்களில் குறிப்பிடத்தக்க வேறுபல ஆசிரியர்களின் நூல்களும்
இடம் பெற்றுள்ளன.
கி.பி. 3, 4 ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்தவரான ஸமந்தபத்ரர்
இயற்றியுள்ள நூல்களில் ஸ்வயம்பூ ஸ்தோத்ரம், ரத்னகரண்டகம், கி.பி. 5 ம் நூற்றாண்டில்
வாழ்த்த ஸித்ததேவ திவாகரர் இயற்றிய கல்யாணமந்த்ர ஸ்தோத்ரம், கி.பி. 8 ம்நூற்றாண்டில் வாழ்ந்த அகளங்கபட்டரின்
தத்வார்த்தஸுத்ரம், அகளங்க ஸ்தோத்ரம் ஆகிய நூல்கள் இத்தொகுதிகளில் காணப்படுகின்றன.
வேறு எந்த நூலகத்திலும் காணப்படாத பல ஸ்தோத்திரங்கள் இத்தொகுதிகளில்
காணப்படுவதும் சிறப்புக்குரியது. கி.பி. முதலாம்
நூற்றாண்டில் வாழ்ந்தவரான குந்தகுந்தாச்சாரியார் பெயரில் இயற்றப்பெற்ற குந்தகுந்தாஷ்டகம்
போன்ற ஸ்தோத்திரங்களும் பல்வேறு பெயர்களில் காணப்படும் வேறுபல ஸ்தோத்திரங்களும் இத்தொகுதியில்
காணலாம். இவற்றில் ஒருசில நூல்களுக்கு தமிழுரைகளும்,
சமஸ்கிரத உரை நூல்களும் காணப்படுகின்றன. சமண
சமயத் தொடர்புடைய சுவடிகளின் அகர வரிசைப்பட்டியல் இச்சமயம் பற்றி ஆய்வு செய்பவர்களுக்கு
உதவியாக இருக்கும்.
மேலும் ஸ்ரீ பார்ஸ்வநாதர் அம்மானை, திருக்குறள் ஜைன உரை, லோகஸ்வரூபம்,
பதார்த்தஸாரம் போன்ற நூல்களும் இந்நூலக வெளீயீடாக வெளிவந்துள்ளன.
உயர்ந்த சிந்தனைகளும், மக்கள் நலனில் அவர்கள் காட்டிய அக்கறையும்
தமிழகத்தில் சமணம் உயர்ந்த நிலையில் திகழ்ந்ததற்குக் காரணமாய் அமைந்தது.
ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் சமண ஆலயங்கள் இன்றளவும்
வழிபாட்டில் இருந்து வருகின்றது. எடுத்துக்
காட்டாக தஞ்சாவூர், கும்பகோணம், மன்னார்குடி, தீபங்குடி ஆகிய ஊர்களில் சிறப்புடன் திகழ்கின்றன.
அதுபோல இம்மாவட்டத்தில் சமணப்பள்ளிகள் இருந்ததற்கான சான்றாதாரங்கள் காணப்படுகின்றன.
தஞ்சாவூரிலிருந்து திருக்காட்டுப்பள்ளி செல்லும் சாலையில்
அமைந்துள்ள சந்திரலேகை சதுர்வேதிமங்கலம் திருப்பெருந்துறை என்று சோழர் காலத்திலும்,
அரசு ஆவணங்களில் மன்னார்சமுத்திரம் என்றும் அழைக்கப்படுகின்ற செந்தலை மீனாட்சி சுந்தரேசர்
திருக்கோவிலின் முதல் கோபுரத்திலும் வேறுசில பகுதிகளிலும் சமணச் சிற்பங்கள் காணப்படுவதை
இன்றும் நாம் காணலாம். இச்சிவன்கோவில் ஒருகாலக்
கட்டத்தில் இடிபாடுற்று சிதைந்திருந்த நிலையில் பின் வந்த மன்னர்களால் புதுப்பிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு புதுப்பிக்கப்படும் பொழுது போதுமான கற்கள்
கட்டுமானத்திற்கு இல்லாத நிலையில் அதே போன்ற சிதைவுற்ற நிலையில் திகழ்ந்த அருகமைந்த
ஊர்களில் உள்ள கற்களையும், சிற்பங்களையும் கொண்டுவந்து செந்தலைக் கோவிலை புதுப்பித்து
முழுமைபெறச் செய்துள்ளனர். இதன் காரணமாகவே
செந்தலையிலுள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் சமணச் சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன.
தமிழ்நாட்டில் பண்டைக்காலத்தில் சமண சமயம் நன்கு செல்வாக்குடன்
விளங்கியது. அக்காலக்கட்டத்தில் நகரங்கள் மட்டுமின்றி சிற்றூர்களிலும் சமண ஆலயங்கள்
எழுப்பப்பெற்றன. செந்தலைக்கு அருகமைந்த திருக்காட்டுப்பள்ளி
சமணர்கள் வாழ்ந்த பகுதியாக விளங்கியது. செந்தலையிலிருந்து கிழக்கு நோக்கி அமைந்துள்ள ஊர் அம்மங்குடி என்னும்
ஊராகும். இச்சிற்றூர் அமணர்கள் வாழ்ந்ததால்
அமணர்குடி என்று அழைக்கப்பட்டு பிற்காலத்தில் மருவி அம்மங்குடி என்று வழங்கப்படலாயிற்று. இவ்வூரில் சமணர் ஆலயம் இருந்து இடிபாடுற்று இருக்கலாம்
என்பதை கள ஆய்வினால் கண்டறிய முடிகிறது.
இவ்வூரிலிருந்த (அம்மங்குடி) சிற்பங்களே செந்தலை கோபுரத்தில்
இடம் பெற்றிருக்க வாய்ப்புண்டு. அதேபோன்று
இவ்வூருக்கு நேர் கிழக்காக அமைந்து சங்க காலத்தில் சிறந்து விளங்கிய அல்லூர் அழிசிகுடி
என்னும் ஊரில் சமண சிற்பம் ஒன்று கண்டுஎடுக்கப்பட்டது. இவற்றை வைத்துப் பார்க்கும் போது அல்லூர் அழிசிகுடியில்
அமைந்துள்ள மிகப்பெரிய ஏரியினைச் சுற்றி சமண ஆலயங்கள் திகழ்ந்திருக்க வாய்ப்புண்டு.
வீரசிகாமணிப் பேரேரி என்று சோழர் காலத்தில் வழங்கப்பட்ட அல்லூர்
அழிசிகுடி ஏரியினைப் பராமரிப்பு செய்யும் பொருட்டு கனகசேனபிடாரன் என்ற சமணத் துறவி
இப்பணிக்காக நிலமளித்த செய்தியை கல்வெட்டு குறிப்பிடுகின்றது. கனகசேனபிடாரன் என்பவர் இன்று திருவரம்பூர், துப்பாக்கித்
தொழிற்சாலை பகுதிகளுக்கு அருகமைந்த புத்தாமூர் எனும் ஊரைச் சேர்ந்தவர் ஆவார். இப்பேரேரியின் புகழுக்கு மற்றும் ஒரு வரலாற்றுச்
சான்று ஈழப்போருக்கு தலைமையேற்று படையெடுத்துச் சென்ற இராஜேந்திர சோழனின் படைத்தளபதியான
ஜெயமூரி நாடாள்வான் என்பான் இவ்வேரியின் நிருவாகத்தை கவனித்து வந்ததை சோழர் கல்வெட்டு
குறிப்பிடுகின்றது.
தமிழ்நாட்டில் உள்ள சமண சமயம் பற்றி சமணமும் தமிழும் என்ற
தலைப்பில் வரலாற்று அறிஞர் மயிலை சீனி. வெங்கடசாமி எழுதிய நூலும், சோழர் ஆட்சியில்
சமண சமய வளர்ச்சி என்ற தலைப்பில் ஏ. ஏகாம்பரநாதன் எழுதிய நூல்களுமே இன்றுவரையில் ஆய்வாளர்களிடையே
முக்கியத்துவம் வாய்ந்த நூல்களாக விளங்கி வருகின்றன. இவர்களின் நூலில் காணப்படாத செய்திகளையும் தஞ்சாவூர்
மாவட்டத்தில் அமைந்துள்ள பல்வேறு சிற்றூர்களுக்கு நேரில் சென்று கள ஆய்வு மூலம் கண்டறியப்பட்ட
சமணச் சிற்பங்கள் மற்றும் அவை போன்ற சான்றாதாரங்களையும் ஒருங்கு திரட்டி ஒரு முழுமையான
வரலாற்று ஆய்வு நூலாக தமிழுலகிற்கு வழங்க வேண்டும் என்பதே இந்நூலாசிரியர்களின் (தஞ்சையில்
சமணம்) ஆவல்.
-----------------------------------------------
இவ்வாறான வரலாற்றுச் செய்திகளை வழங்கியதோடு மேலும் இப்பகுதியில்
கண்டறிந்த சமணச் சின்னங்களின் களஆய்வு, ஸ்தலம், படம், விளக்கத்துடன் அழகாக சுருக்கமாக
எதுவும் விடுபடாமல் இந்நூலாசிரியர் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தஞ்சையில் சமணம் என்பது நூலின் தலைப்பாக இருந்தாலும்;
தமிழகத்தில் சமணம் என்ற வரலாற்றுச் சுருக்கத்துடன், சமணம்
பற்றிய சிறுகுறிப்பு; வில்; இலட்சப்பூர்வ ஆண்டு; களப்பணியில் ஊர்கள்; பள்ளிச்சந்தம்;
வழிபாட்டுமுறைகள்; விழாக்களும் சடங்குகளும்; 24 தீர்த்தங்கரர்களின் விபரம்; சமணர் யாத்த
நூல்களுள் சில; கட்வெட்டுக்கள் போன்ற துணைத்தலைப்புக்களில் விரிவான செய்திகளை படங்களுடனும்
தொகுத்து வழங்கியுள்ளது பாராட்டுக்குரியது.
திருவாளர்கள்
முனைவர் பா. ஜம்புலிங்கம் அவர்கள்
கோ. தில்லை கோவிந்தராஜன் அவர்கள்,
மணி. மாறன் அவர்கள்
இம் மூவரின் கூட்டுமுயற்சிக்கு சமண சமூகத்தார்களின் நன்றிகலந்த
வணக்கங்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வோம்.
இவர்கள் மட்டுமல்லாது இத்துறையில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு
மேலும் பல நூல்களை நமக்கு அளிக்க உள்ள நண்பர்கள்... (எனக்குத் தெரிந்தமட்டில்)
உயர்..
திரு. முத்துகிருஷ்ணன் அவர்கள்
திரு. V. ராஜகுரு அவர்கள்
திரு. D. ரமேஷ் அவர்கள்
திரு. மஹாத்மா செல்வபாண்டியன் அவர்கள்,
டாக்டர் திரு. பொன்னம்பலம் அவர்கள்
ஆறகழூர் திரு. பொன்.
வெங்கடேசன் அவர்கள்
திரு. அருண் ராதாகிருஷ்ணன் அவர்கள்
செ.மா.கணபதி அவர்கள்
பொ. வேல்சாமி அவர்கள்
திரு. தாமஸ் அலெக்ஸாண்டர் அவர்கள்
திரு. அப்துல் அஸீஸ் ரஜ்புத் அவர்கள்
ஆ.பத்மாவதி அம்மையார் அவர்கள்
செல்வி. Tfh. சுஹாசினி அவர்கள்
மார்க்சிய காந்தி அம்மையார் அவர்கள்
மேலும் பலரும் தமிழகத்தில் சமண, பெளத்த போன்ற வரலாற்றுச் சின்னங்களை
காடு, கரம்பு, முட்புதர்கள், மேடுபள்ளங்கள், மலைப்பகுதிகளுக்கு என வார இறுதி நாட்களில்
வீட்டுச் சொந்த வேலைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு இருசக்கர வாகனங்களில் 200 கி.மீ.
வரை சென்று மழை, வெயில், குளிர் பாராது அயராது அரும்பணியாற்றும் இவர்களது ஆர்வத்திற்குமுன்
நம் பாராட்டுக்கள் வெறும் சம்பிரதாயமாகத்தான் இருக்கும்.
அதேசமயம் இக்களப்பணிக்கு சென்று ஆய்வுசெய்ய அனுமதிக்கும் இவர்களது
பெற்றோருகளுக்கும், துணைவியாருக்கும், குழந்தைகளுக்கும் மனமார்ந்த நன்றிகளை அளிக்கவும்
கடமைப்பட்டுள்ளோம்.
வாழ்க இவர்களது சேவை…
நன்றி.
முற்றும்.
பத்மராஜ் ராமசாமி.
-----------------------------------------------
No comments:
Post a Comment