குருதத்தபட்டாரர்


 குருதத்த பட்டாரர்


திருவறம் வளர்க  Whatsapp குழுவில் தொடராக செய்யாறு திரு கம்பீர. துரைராஜ் அவர்கள் பதிவு செய்து வந்த தொடர். அவரது தொடர் அஞ்சல்களுக்கு நன்றி.


   
        [பற்று நீங்கி முற்றுந்துறந்த தவநிலையில் நீரும் நெருப்பும் ஒன்று போலவே தெரியும். குருதத்த பட்டாரர்(முனிவர்) தீயிடை வெந்தபோதும் குளிர்நீரருவியில் குளிப்பது போன்ற மெய்மறந்த தவநிலையில் நீடித்துத் தவ நெறியின் உயர்வையும் பயனையும் உலகிற் குணர்த்தினார்.]

          இச்சம்புத் தீவத்தின் பரத நிலத்தில் குணாளம் என்னும் நாடிருந்தது. சாவத்தியம் என்னும் பொழில் (நகரம்) இதன் தலைநகரம். இந்நாட்டை ஆட்சி புரிந்த மன்னன் உபரிசரன். இவனுடைய அரசிகளுள் பதுமாவதி, அமிதபிரபை, சுப்பிரபை, பிரபாவதி என்னும் நால்வர் பட்டத்தரசிகள். இவர்கள் உள்ளிட்ட ஐந்நூறு பேர் அரசனின் மனைவியராக இருந்தனர்.

       அனந்தவீரியன், வச்சிரபாணி, வச்சிரபாகு, வச்சிரதரன் ஆகிய நால்வரும் முறையே நான்கு பட்டத்தரசிகளின் மைந்தர் (பிள்ளைகள்). அரசனுக்கு மொத்தம் ஐநூறு பிள்ளைகள் இருந்தனர்.

        ஒருநாள் இளவேனிற் காலத்தில் நகரத்தையடுத்த மலர்ச் சோலைக்கு அரசனும் ஐநூறு அரசிகளும் அவர்களின் மக்களும் விளையாடவும் நீராடி மகிழவும் இன்பமாகப் பொழுது போக்கவும், சென்றனர். அச்சோலையில் களித்துப் பேசியும் விளையாடியும் ஓடியாடியும் பொழுது போக்கினர். அங்கிருந்த சுதர்சனம் என்னும் நீராடும் பொய்கையில் இறங்கி நீராட விரும்பினர். அது ஒன்பது வகை மணிகள் நவமணிகள் பதிக்கப்பட்ட படிக்கட்டுகளை உடையது. புதிதாக நீரை நிரப்பவும் உள்ள நீரை அடித் தூம்பின் வழியாக வடித்து விடவும் ஏற்றவாறு, அது அமைக்கப்பட்டிருந்தது. அதனால் அதனைப் புழைவாவி எனவும் அழைத்தனர்.

      அரசனும் அரசியர் நால்வரும் அந்த வாவியில் இறங்கி நீராடினர். சந்தனக் கலவைகளையும், மலர்களையும், நறுமணக் குழம்புகளையும் ஒருவர் மீது ஒருவர் வீசி விளையாடினர். அன்னப்பறவை, சகோரம் முதலிய பறவைகள் நீரில் நீந்துவதைக் கண்டு அவற்றைப் போலவே தாமும் நீந்தி மகிழ்ந்தனர். அரசன் அரசியருடன் நெடுநேரம் நீரில் விளையாடினான்.

அரசன் அரசியருடன் நெடுநேரம் நீரில் விளையாடினான். அப்பொழுது வானத்தின் வழியாக, வச்சிரதடன் என்னும் வித்தியாதரன் தன் மனைவி மதனவேகையுடன் வானவூர்தியில் பறந்து வந்து கொண்டிருந்தான். அவன் விசயார்தமலையின் வடக்கிலுள்ள அளகாபுரியை ஆண்ட அரசன். நிலவுலகில் உள்ள அழகிய பூஞ்சோலைகளைக் கண்டு மகிழும் பொருட்டு அவர்கள் இருவரும் நெடுந்தொலைவு வந்து கொண்டிருந்தனர்.

         சுதர்சனம் என்னும் சோலையில் தாளம், மத்தளம், பம்பை, பணவை, துணவை, சல்லரி, சங்கு, வீணை, குழல், தாளம், பேரிகை முதலிய இசைக் கருவிகளின் ஓசை பெரிய விழாவில் எழும் ஓசை போல் கேட்டது. அங்கு என்ன நடைபெறுகிறது என்று காண்பதற்காக வச்சிரதடனும் மதனவேகையும் வானூர்தியை அங்கு இறக்கித் தாமும் ஓரிடத்தில் நின்று பார்த்தனர்.

       தேவேந்திரனை விட அழகான அரசனும், தேவருலகப் பெண்களை விட அழகிய ஐநூறு அரசிகளும், ஆடல் மகளிரும், களித்து கும்மாளமிட்டு மகிழ்வதையும், எங்கு நோக்கினும் பாட்டும் ஆட்டமுமாக இருப்பதையும் கண்டு வியந்தனர். அரசன் பட்டத்தரசிகளுடன் நீரில் நீந்தியும் நீர் தெளித்தும் மலர்களை வீசியும் விளையாடுவதைக் கண் கொட்டாமல் நெடுநேரம் பார்த்துக் கொண்டு நின்றனர். மதனவேகை தன் கணவனை நோக்கிக் கூறினாள்.

        " நாம் காக்கைகளைப் போல் வானத்தில் வெறுமனே பறந்து திரிவதல்லது இவர்களைப் போல் இயற்கை இன்பங்களைத் துய்க்கவும், அரச வாழ்வில் கிட்டும் இன்பநலன்களை நுகரவும் கொடுத்து வைக்கவில்லை. நமக்கு இவ்வளவு செல்வம் கொழித்த வாழ்வு ஏது?" என்று பெருமூச்சு விட்டாள். "அழகில் அவர்களைவிட, நாம் குறைந்தவர்களே" என்று குறைபட்டுக் கொண்டாள். "அவர்களுக்கிருக்கும் தேர், யானை, குதிரை, பல்லக்கு முதலிய ஊர்திகளையும், அவர்கள் உண்ணும் பலவகை உணவு வகைகளையும், அணியும் பலவகை விலையுயர்ந்த வண்ண வண்ண ஆடைகளையும், அணிகலன்களையும், அவர்கள் பூசிக் கொள்ளும் நறுமணப் பொருள்களின் மணம் சோலை முழுவதும் வீசுவதையும், கண்டு வானுலகிலும் கூட இவர்களைப் போன்று இன்பநலம் துய்ப்பவர்கள் இருக்க முடியாது. வாழவேண்டிய செல்வ வாழ்வுக்கு உண்மையான எடுத்துக்காட்டாக இருப்பவன் இந்த அரசன் ஒருவனே, எவ்வுலகிலும் இவனுக்கு இணையானவர்கள் இருக்கமுடியாது"என்று புகழ்ந்து பேசினாள்.

  மதனவேகை உபரிசர மன்னனைப் புகழ்ந்து பேசுவதைக் கேட்டு வச்சிரதடனுக்குப் பொறாமை பொங்கி எழுந்தது. அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் மதனவேகையை அழைத்துக் கொண்டு தன் நகருக்குச் சென்றான். அவளைத் தன் மாளிகையில் விட்டுத் தான் ஒருவனே வானூர்தியில் ஏறி விரைந்து சுதர்சன பூஞ்சோலைக்கு மீண்டும் வந்தான். அப்பொழுது மன்னன் உபரிசரன் தன் நான்கு பட்டத்தரசிகளுடன் நீராடும் வாவில் நீராடிப் புறப்படவிருந்தனன். வச்சிரதடன் ஒரு பெரிய பாறாங்கல்லைப் பெயர்த்தெடுத்து வந்து அவர்கள் நீராடிக் கொண்டிருந்த வாவியை (குளத்தை) மூடிவிட்டான். காற்றும் உட்புகாதவாறு பல கற்களைச் சுற்றிலும் கொணர்ந்திட்டான். வாயில்களையும் அடைத்து விட்டு வானூர்தியில் ஏறித் தன் நகருக்குப் போனான்.

        அரசனும் அரசியரும் மூச்சுத் திணறினர். அரசியர் அருகதேவனை மந்திரங்களால் வழிபட்டனர். அந்நிலையில் உயிர் நீங்கி அரசியர் நால்வரும் சவுதரும கல்பம் என்னும் மேலுலகில் ஒரு சாகரோப காலம் வாழ்நாள் பெற்றுத் தேவாரப் பிறந்தனர். அரசன் மண்ணுலக இன்பங்களில் விருப்பம் உடையவனாக உலக இன்பங்களை நினைத்தவாறே உயிர் நீங்கினான். ஆதலால், அரண்மனையை அடுத்துள்ள மனோகரம் என்னும் மலைச்சோலையில் 🐍 மலைப்பாம்பாகப் பிறந்தான்.
  
      அடுத்த நாள் அமைச்சர்களும், படைத் தலைவர்களும் பிறரும் கொலு மண்டபத்தில் கூடியிருந்து அரசனின் மூத்த மகன் அனந்தவீரியனுக்கு முடி சூட்டினர். மூன்றாம் நாள், அரண்மனையைச் சார்ந்த மனோகரம் என்னும் மலர்ச்சோலையில் சாரசுவத முனிவர் தன் குழுவில் உள்ள ஐந்நூறு முனிவர்களுடன் வந்து தங்கியிருக்கிறார் எனக் கேள்விப்பட்டனர்.

       அனந்தவீரியன் முனிவரைக் கண்டு வழிபட விரும்பித் தன் சுற்றம்சூழ பலவகை வழிபடு பொருள்களை எடுத்துச் சென்றான். முற்றும் அறிந்த அவதிஞானமுடைய அம்முனிவர் பெருமகனார் பளிங்கு இருக்கையின் மீது அமர்ந்து இருந்தார். அனந்தவீரியன் அவரை வலம் வந்து வணங்கினான். பக்கத்தில் பணிவுடன் அமர்ந்திருந்து அறவுரைகளைக் கேட்டான். பின்பு முனிவரை நோக்கி, "அடிகளே! என் தந்தையும் தாய்மாரும் எவ்வாறு இறந்தனர்? அவர்களைக் கொன்றது யார்? அருள் கூர்ந்து தெரிவித்தருள வேண்டும்" என வேண்டினான்.

 "மலர்ச்சோலையில் சுதர்சனம் என்னும் நீராடும் வாவியில் உன் தந்தையும் நான்கு அரசிகளும் நீராடி மகிழ்ந்திருந்தனர். அப்பொழுது வான் வழியே வந்த வச்சிரதடன் என்னும் வித்தியாதரனும் அவன் மனைவி மதனவேகையும் அங்கு வந்தனர். மதனவேகை உன் தந்தையையும் தாய்மார்களையும் புகழ்ந்து பேசினாள். பொறாமை கொண்ட வச்சிரதடன் பெரிய பாறாங்கல்லைக் கொணர்ந்து சுதர்சனம் நீராடும் வாவியை மூடிவிட்டான். அதனால் உன் தந்தையும் தாய்மார்களும் வெளிவர முடியாமல் மூச்சுத் திணறி இறந்தனர்." என்று கூறக்கேட்ட மன்னன் அனந்தவீரியன், 'இப்பொழுது என் பெற்றோர்கள் எங்கே பிறந்துள்ளனர்?' என வினவினான்.

     " உன் தாய்மார்கள் அருகதேவனை நினைத்தவராய் உயிர் துறந்ததால் சவுதரும கல்பம்என்னும் மேலுலகில் ஒரு சாகரோப காலம் வாழ்நாள் பெற்று, காந்தன், சுகாந்தன், நந்தன், சுநந்தன் என்னும் தேவர்களாகப் பிறந்துள்ளனர். உன் தந்தை, தன் மனைவி, மக்கள், அரசவாழ்வு, செல்வம், ஆகிய உலக இன்பங்களையே நினைத்தவனாய் உயிர் துறந்ததால் அங்குள்ள மலர்ச்சோலையில் ஒரு குகையினுள் மலைப்பாம்பாகப் பிறந்திருக்கிறான்" என்று முனிவர் கூறினார். "அடிகளே! என் தந்தை இனிவரும் பிறவியிலாயினும் அறநெறிகளைக் கைக்கொள்வாரா? " என வினவிய அரசனுக்கு,"உன் தந்தை அறநெறிகளைக் கைக்கொள்ளும் நிலையும் பெறுவான். நீ உரைத்தாலும் ஏற்றுக் கொள்வான்" என்று முனிவர் உரைத்தது ஆறுதல் அளித்தது. அரசன் முனிவரை வணங்கி விடைபெற்றுத் தன் அரண்மனைக்குச் சென்றான்.

         மறுநாள் மன்னன் அனந்தவீரியன் தன் தம்பிகள் ஐநூறு பேர்களுடன் அரசு சுற்றத்தாருடனும் சென்று மலர்ச் சோலையிலுள்ள குகையை அடைந்தான். குகைவாயில் நின்று,

     "உபரிசர மன்னனே! நீ மலைப்பாம்பாகப் பிறந்து ஏன் துன்பப் படுகின்றாய்? உயிர்கள் தாம் செய்த வினைக்கேற்ப பிறவிகளைப் பெறுகின்றன. பிறந்த நிலையிலேயே தத்தம் வினைப் பயன்களையும் நுகர்கின்றன. அவ்வாறே நீயும் துன்பப் படுகின்றாய். மண்ணுலக இன்பங்களை விரும்பியதால் மண்ணில் ஊர்ந்து செல்லும் பாம்பாகப் பிறந்திருக்கிறாய்!

     முன்னே ஒளியுமிழும் மாடமாளிகையில் ஐந்நூறு அரசிகளுடனும் ஆடல் மகளிருடனும் மகிழ்ந்து உலவி, கொலு மண்டபத்தில் அமைச்சர், படைத் தலைவர், சுற்றம் புடைசூழ அரியணையில் அரசு வீற்றிருந்து ஆடல் பாடல் இன்னிசை இன்பங்களை நுகர்ந்து கொண்டிருந்ததால் இப்பொழுது பெரிய மலைப்பாம்புகளுடன் காற்றுப் புகாத குகையில் குறுகிப் படுத்துக் கிடக்கிறாய்.

 முன்னே ஐந்தடுக்கு மெத்தையில் அழகியர் வெண்சாமரம் வீச கண்ணுறங்கினாய். இப்பொழுது மண்கட்டிகளும் கற்களும் உறுத்துகின்ற இருளடர்ந்த குகையில் கண்ணை மூடிக் கொண்டு இருக்கிறாய்.

       முன்னே அறுசுவை உண்டியும் பாலும் பழங்களும் உண்டாய். இப்பொழுது தவளையும் ஓணான், நண்டு, எலி ஆகியவற்றையும் விழுங்குகிறாய். இந்த உயிர்க் கொலைகளால் மீண்டும் நிரயத்தில் (நரகம்) புகத்தக்க தீவினைகள மேலும் மேலும் செய்து வருகிறாய்" என்று கூறிய சொற்களைக் கேட்ட மலைப்பாம்புக்குப் பழம் பிறப்பின் நினைவுகள் வந்தன. மலைக்குகையின் வாயிலில் படுத்துக் கொண்டு சொல்வதையெல்லாம் உற்றுக்கேட்டது.

      அப்பொழுது சவுதரும கல்ப உலகில் தேவர்களாகப் பிறந்த நான்கு அரசிகளும் பழைய அரசியர் வடிவெடுத்து, முன்னால் வந்து நின்றனர். அனந்தவீரியன் முதலிய அரசிளங் குமாரர்கள் தம் தாய்மாரின் அருகில் நெருங்கிச் சென்றதும் அவர்கள் நால்வரும் வானத்தில் கைக் கெட்டாத உயரத்தில் எழும்பி நின்றனர்.

        அவர்கள் தாம் வச்சிரதடனால் கொல்லப் பட்டதையும், வானுலகில் தேவராகப் பிறந்திருப்பதையும் கூறினர். மலைப்பாம்பாகப் பிறந்திருக்கும் கணவனுக்கும் பிள்ளைகளுக்கும் சில அறிவுரைகளைச் சொல்ல வந்திருப்பதாகக் கூறினர்.

     "இந்த நாடு என்னுடையது, இந்த நிலம் என்னுடையது, இந்த வீடு என்னுடையது, இவர்கள் என் மனைவியர், இவர்கள் என் மக்கள், இவர்கள் என் உறவினர், இவர்கள் என் அமைச்சர்கள், இவர்கள் என் படைவீரர்கள், இவர்கள் என் நண்பர்கள், இவை என் யானைப் படைகள், இவை என்தேர்ப் படைகள் என்று நிலையாத பொருள்களைச் சொந்தம் கொண்டாடும் விலங்கியல்புடைய மாந்தன் தன் ஆசைகளால் தன் உயிருக்குத் தீங்கு பயக்கும் தீவினைகளைச் செய்து விடுகிறான்."

     பொன்னும் பொருளும் எனக்கே, அனைத்து இன்பங்களும் வாழ்க்கை நலங்களும் எனக்கே என்று அலைகின்ற பேராசைக்காரன் எமனுக்கு உரியவனாகி அழிந்து போய்விடுகிறான். ஆதலால் பொன்னிலும் பொருளிலும் இன்பங்களைத் துய்ப்பதிலும் ஆசை கொள்ளாத அறிவு விளக்க முடையவனாய் உலகில் வாழவேண்டும். இதனை யறியாத மன்னன் தன் இன்ப நாட்டத்தால் மலைப் பாம்பாகிப் பிறந்து விட்டான். நாங்கள் அறத்தில் கருத்தூன்றி அருக தேவனையே நினைத்த மனமுடையவர்களாய் இருந்ததால் தேவராகப் பிறந்தோம். எங்கள் மக்களாகிய (அரசிளங்குமரர்) நீங்கள் எச்சரிக்கையாக வாழ வேண்டும் என்பதற்காக இதனைச் சொன்னோம்" என்று கூறிவிட்டு வானூர்திகளில் மீண்டும் தேவர்களின் வடிவம் பெற்று வான்வழியே சென்றனர்.

அவர்கள் வான் வழியே சென்றபோது அந்நான்கு தேவர்களின் தேவிமார்களும், பிற வானுலகத்தவரும் திரளாக ஒளிவீசும் அழகோடு சூழ்ந்து சென்றனர். அவர்கள் ஏறிச் சென்ற வானூர்திகள் பலவகை வண்ண நிறங்களோடு பளபளத்தன. உபரிசரன் ஆணாகப் பிறந்திருந்தும், அரசனாக வாழ்ந்திருந்தும் ஜினதேவனின் அற நெறிகளைப் பின்பற்றாதவனானான், பெண்களாகப் பிறந்திருந்த அரசியர் நால்வரும் ஜினதேவனின் அற நெறிகளைப் பின்பற்றித் தேவராயினர். இதிலிருந்து சமண சமயத்திலுள்ள அறங்களின் பெருமை தெளிவாகத் தெரிகிறது என்பதை அரசிளங்குமாரர்கள் நன்கு புரிந்து கொண்டனர். பிறகு தம் அரண்மனைக்குத் திரும்பினர்.

         குகை வாயிலிருந்தபடி அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த மலைப்பாம்பு அரசியர் நால்வரும் தேவர்களாகப் பிறந்திருப்பதறிந்து பெருமை கொண்டது. தன் நிலைமைக்குப் பெரிதும் வருந்தி மனத்தால் அருக தேவனின் திருவடிகளை நினைத்து வணங்கியது. அப்பொழுது அம்மலைப் பாம்புக்கு அறவுரை கூறித் தெளிவிப்பதற்காக முனிவர் ஏனைய முனிவர்களையும் அழைத்துக் கொண்டு மலர்ச் சோலையிலிருந்து குகையினருகில் வந்தார். மலைப் பாம்புக்கு அறவுரை புகட்டுவதற்காகச் சிலவற்றைக் கூறத் தொடங்கினார்;

       "மாந்தராகப் பிறந்தவர்கள் தீவினைகளைத் திட்டமிட்டும் முயன்றும் செய்கிறீர்கள். நல்வினைகளைச் செய்யத்தக்க கட்டாயம் வந்தாலும் பலர் செய்வதில்லை. இது மண்ணுலகத்தில் காணப்படும் புதுமைகளில் ஒன்று, மாந்தர் பாலருந்துவதை விட்டு நஞ்சு உண்பது போல் நல்வினைகளைச் செய்ய மறந்து தீவினைகளைச் செய்வதில் ஆர்வமுள்ளவர்களாய் காணப்படுகின்றனர்.
  
            அனைத்துச் செல்வங்களும் இன்ப நலன்களும் அழியக் கூடியவை. அருகதேவனின் அருளுரை ஒன்றே என்றும் அழியாதது. ஆதலால் அறநெறியைக் கைக்கொள்ளும் போது உயிர்களுக்கு அழியாத நிலமை உண்டாகும்.

          கிழக்கில் முளைத்த கதிரவன் மேற்கில் மறைவது உறுதி. பிறந்த உயிர்களும் இறப்பது உறுதி. ஆதலால் தோற்றமும் மறைவும் இல்லாத அறநெறிகளை அறிவுள்ள மாந்தர் எப்பொழுதும் பின்பற்றுகின்றனர்.

        இளமை அழகு முதுமை என்பவை மரத்தில் தோன்றும் பூ, காய், பழங்களைப் போல் அடுத்தடுத்துத் தோன்றி மலையினின்றும் உருண்டோடி வரும் ஆற்று நீரைப் போல், வெகு விரைவில் வாழ்நாளை அடித்து வாரிக்கொண்டு போய் விடுகின்றன.


         மாந்தன் தன்னந் தனியனாக இவ்வுலகில் பிறக்கிறான். தன்னந்தனியாக இவ்வுலக வாழ்வை நீத்துச் சாகிறான். தன் தீவினையால் தனியாக நிரயத்திற்குச் (நரகம்) செல்கிறான். தன் நல்வினையாலும் தவத்தாலும் வானுலகம் அல்லது வீடுபேறும் தனியனாகவே பெற்று இன்புறுகிறான்.

 "நமக்குத் தந்தை யார்? தாய் யார்? மனைவி யார்? மக்கள் யார்?" என்று ஆராய்ந்து பார்த்தால் யாரும் நமக்கு உண்மையான உறவினர் இலர்; எல்லாம் வேறு வேறானவர்களே என்பதும் மற்ற பிறவிகளில் அவர்கள் எத்துணையோ பேருக்குத் தந்தையாகவும் தாயாகவும் மனைவியாகவும் மக்களாகவும் இருந்தவர்கள் என்பது தெரியும்.

      "செல்வங்கள் அனைத்தும் வீட்டு வாயிற்படியுடன் நின்று விடும். உறவினர்கள் சுடுகாடு வரை வருவார்கள். உடம்பு அதனைக் கிடத்திய  ஈம விறகில் செந்தீ கொழுந்து விட்டு எரியும் வரை இருக்கும். செய்த நல்வினையும் தீவினையும் உயிரோடு கூட வரும்."

     இவ்வாறு நெடுநேரம் அறங்களை எடுத்துரைத்த முனிவரின் நல்லுரைகளைக் கேட்ட மலைப்பாம்பு ஒன்றும் உண்ணாமல் நோன்பிருக்கத் தொடங்கியது. முனிவர் அதனை நோக்கி," உனக்கு இன்னும் பதினைந்தே நாட்கள்தான் வாழ்நாள் உள்ளது " என்றார். பாம்பு அல்லும் பகலும் அருக தேவனை மனதிற்குள் போற்றத் தொடங்கியது. பாம்பின் மனத்தவத்தை முனிவர் பாராட்டினார். பாம்பின் மனவுறுதி மிகும் வகையில் அருக பூசையும் விழாவும் செய்யுங்கள் என்று முனிவர் கூறியதற்கிணங்க அரசன் பூசைக்கான ஏற்பாடுகளைச் செய்தான். பாம்புக் குகையின் முன்னால் பெரிய பந்தலிடப்பட்டது. நேத்திரம் என்னும் உயர்வைப் பட்டுத் துணியால் பந்தலில் மேற் கட்டு (விதானம்) அமைத்தனர். கொடிகளை நாட்டினர். அருக தேவனின் படிமையை நிறுத்து பூசையும் விழாவும் செய்தனர். முனிவரும் அற நூல்களை ஓதி மந்திரங்களை முறையாகச் சொல்லிக் கொண்டிருந்தார்.

     " எவன் உயிர் நீங்கும் நேரத்திலும் மனவுறுதியுடன் அறத்தின் வழி நின்று தளராமல் இருக்கிறானோ அவன் மீண்டும் இவ்வுலகிற்கு வராத, பிறவாப் பேரின்ப வீடு அடைகிறான்.

       நெருப்பு விறகை எரித்து விடுவது போல, தவஞ் செய்பவனின் உறுதியான கோட்பாடு இப்பிறப்பிலும் முற்பிறப்பிலும் செய்த தீவினைகளை எரித்து விடுகிறது.

    இதயத்திலும் நெற்றிச் சுழியில் இரு புருவங்களிடையே உயிரையும் கையையும் ஒரு முழுத்த (முகூர்த்த) நேரமாயினும் நிறுத்த வல்லவர்களுக்கு அறியாமையால் செய்த பயன்களின் சுமை அற்றுப் போகும்.

      வானுலகம், மண்ணுலகம், கீழுலகம் ஆகியவற்றில் இளமையில் சாகும் சாவுகளைப் பெற்றிருக்கிறேன். இனி, ஞானத்தின் உதவியால் ஞானச் சாவு (பண்டித மரணம்) அடையப் போகிறேன்.

 விருப்பு வெறுப்புகளால் வரும் சாவு, கருவிலேயே வரும் சாவு, கீழுலகில் (நரகத்தில்) பல துன்பங்களுக்குள்ளாக்கி நேரும் சாவு ஆகியவற்றின் தாழ்வை உணர்ந்து உயர்ந்த ஞானச் சாவைப் (பண்டித மரணம்) பெற விரும்புகிறேன்.

     ஒருமுறை நேரும் ஞானச் சாவு நூற்றுக் கணக்கான பிறவிச் சாவுகளைக் கத்தரித்து அழித்து விடுகிறது. உயிருக்கு நன்மை உண்டாக்கும் ஞானச் சாவு வரவேற்கத் தக்கது.

     தவசிகளுக்கு நேரும் பசி, நீர் வேட்கைத் துன்பங்களே நிரயத் (நரக) துன்பங்களைப் போல் தோன்றும் போது, இல்லறத்திலிருப்பவர்களுக்கு நேரும் துன்பங்களை அளவிட்டுரைக்க முடியுமா? ஆதலால் துன்பங்களைக் கண்டு அஞ்சுதல் ஆகாது.

      பல்வகைப் பிறப்புகளிலும் நான் விரும்பிய உணவு வகைகளை உண்டிருக்கிறேன். இனிமையான உணவு வகைகளைப் பலமுறை உண்டும், எனக்கு அவற்றில் ஆசை தீர்ந்த பாடில்லை. உண்ண உண்ண ஆசை பெருகுகிறது. புலனின்பங்களும் இவ்வாறே. பசியை அறவே நீக்காத உணவாலும் ஆசையை நிறைவு செய்யாத புலனின்பங்களாலும் யாது பயன்?

      மீன்கள் இரைதேடி அடிக்கடலுக்குச் செல்கின்றன. மாந்தரும் இன்பம் தேடும் முயற்சியில் தீவினைகளைச் செய்து கீழுலகத்திற்கு (நரகம்) செல்கின்றனர். ஆதலால் மாந்தர் மீனைப் போல் மற்றொரு உயிரைக் கொன்று தின்னலாகாது.

     நூற்றுக்கணக்கான ஆறுகள் வந்து கலந்தாலும் கடல் நிறைவடைவதில்லை. எத்துணை மரங்களையும் காடுகளையும் எரித்துச் சாம்பலாக்கினாலும் நெருப்புக்குப் போதும் என்று இருக்காது. அதைப்போல, மண், பெண், பொன் ஆகியவற்றால் வரும் இன்பங்களை எத்துணைக்காலம் நுகர்ந்தாலும் மனநிறைவு (திருப்தி) ஏற்படாது.

         விறகுகள் அதிகரிக்க, அதிகரிக்க எரியும் தீயும் கொழுந்து விட்டு உயரமாக எரிகிறது. பலவகை இன்பங்கள் எண்ணிக்கையில் பெருகும் போது ஆசையின் அளவும் கட்டுக்கடங்காமல் வளர்கிறது.

       நீர்வேட்கை (தாகம்) கொண்டவர்கள் உப்பு நீரைப் பருகினால் நீர் வேட்கையும் அதிகரித்துத் துன்பமும் அதிகரிக்கும். அதுபோல, ஆசை மிக்கவர்கள் இன்பங்களை நுகர்ந்தால் ஆசையும் அதிகரித்துத் துன்பங்களையும் பெருக்கி விடும்.

     உயிர்ப்பிரியும் நிலைமை வரும்போது உறுதியாக "அருகதேவனை" நினைத்து, அகப்பற்று புறப்பற்றுகளைத் துறந்து, மனத்தை ஒருமுகப் படுத்தி, இருவினைகளைக் கெடுத்து, இருபத்திரண்டு வகை துன்பங்களையும் பொறுத்து, அமைதியாகவும் மெதுவாகவும் உடம்பிலிருந்து உயிரைப் பிரிக்கும் வகையைச் 'சமண நெறி' சொல்லித் தருகிறது.

 "யாரிடமும் எனக்கு நட்பும் பகையும் இல்லை. அருகதேவனின் திருவடிகளே எனக்கு அடைக்கலம். என் ஞானமல்லாது எனக்கு வேறு துணையில்லை. அறமே எனக்கு அடிப்படை. ஐந்து வணக்கமே (பஞ்ச நமஸ்காரம்) எனக்கு இறுதிக் காலத்திலும் இன்பம் தரும்."

       அருகனின் அருளுரைகளே உயிர்களுக்கு மருந்தாகும். அவன் திருப்பெயர் ஒன்றே உயிர்களின் பிறப்பு, சாவு, மூப்பு, நோய் ஆகிய துன்பங்களைத் தீர்க்கும் வலிமையுடையது.

      இப் பிறப்பிலேயே எந்த உயிர் உள்ளடங்கு இயற்கை (சமாதி மரணம்) எய்துகிறதோ அந்த உயிருக்கு ஒருசில பிறவிகளுக்குள் பிறவாத பேரின்ப வீடு (மோட்சம்) கிடைப்பது உறுதி. ணமோ அரஹந்தாணம் என்னும் மந்திரத்தை எவனொருவன் மனமொழி மெய்களின் தூய்மையோடு சொல்லுகிறானோ அவன் அனைத்து நலங்களையும் பெறுவான்.

      அனைத்து தீவினைகளையும் சுட்டெரிக்கும் ஐந்து வணக்கம் (பஞ்ச நமஸ்காரம்) எல்லா மங்கலங்களிலும் மேன்மையான மங்கலமாகும்.

         "முழுமனத் தூய்மையுடன் எவனொருவன் அருகனை உறுதியுடன் எண்ணி வழிபடும் தூயவனோ அவன் வீடுபேறு எய்துவான்."

      இவ்வாறு பதினைந்து நாட்களும் அற நூல்களை (ஆராதனை) முனிவர் ஓதி விளக்கியுரைத்துக் கொண்டிருந்தார். அறங்களைக் கேட்ட நிலையிலும், மலைப்பாம்பு, தான் பதினைந்தாம் நாள் உயிர் நீங்கும் தறுவாயில், வச்சிரதடன் தன்னை வேண்டுமென்றே கொன்றதை நினைத்தவாறே பழிவாங்கும் எண்ணத்துடன், உயிர் துறந்தது; அசுரர் உலகில் நூறு பளிதோப காலம் வாழ்நாள் பெற்றுத் தரணேந்திரன் என்னும் நாகேந்திர தேவனாகப் பிறந்தது.

        அனந்தவீரியன் பல ஆண்டுகள் நாடாண்ட பின் தவம் மேற்கொள்ள நினைத்தான். தன் மூத்த மகன் சுபாகு என்பவனுக்கு முடி சூட்ட நினைத்தான். மூத்த மகன் சுபாகு தானும் துறவு கொள்ள விரும்புவதாகக் கூறினான். சுபாகுவை மனம் மாற்றி வல்லாண்(மை) தனத்தால் (பலாத்காரம்) அவனுக்கு அரசு பட்டங் கட்டினான். அரசாட்சியின் நெறிமுறைகளைக் கீழ்கண்டவாறு எடுத்துக் கூறினான் :

        "ஆசைகளை நீக்கு, என்றும் பொறுமையும் மன்னிக்கும் குணமுடையவனாய் இரு. செருக்கில்லாதவனாய் விளங்கு. தீவினைகளில் நாட்டம் செலுத்த வேண்டாம். எப்பொழுதும் உண்மையே பேசு. முனிவர், அறிஞர் ஆகியோரின் துணையைக் கொள். கற்றறிந்த மேலோரை மதித்துப் பணிவிடை செய். மதிக்கத்தகுந்த பெரியோர்களைப் போற்று. பகைவரையும் பேணி உதவி செய். புகழ் பெறு. துன்பப் படுவோர்க்கு இரக்கம் காட்டு. இவை உள்ளத் தூய்மை நிறைந்த நல்ல மாந்தனின் ஒழுக்கங்கள்."


            இவ்வாறு தன் மகனுக்கு அறிவுரைகளைக் கூறி அனைவரிடமும் விடை பெற்று அரண்மனையை விட்டு மன்னன் அனந்தவீரியன் வெளியேறினான்.

அரண்மனையை விட்டு வெளியேறிய மன்னன் அனந்தவீரியன், தன்னுடன் வந்த பிற அரசர்கள், அரசிளங்குமாரர்கள் ஆகியோருடன் சாரசுவத பட்டாரர் என்னும் முனிவரிடம் சென்று துறவு மேற்கொண்டனர். அனந்தவீரியன் மன்னன் அனந்தவீரிய முனிவர் எனப்பட்டார். சம்மேத மலையின் மேல் பல ஆண்டுகள் கடுந்தவம் செய்து வினைகளைக் கெடுத்து மனவொருமை பெற்று இவ்வுலக வாழ்வை நீத்து வீடுபேறு பெற்றார்.

          ஒருநாள் தரணேந்திரன் ஜின ஆலயங்களை வழிபட்டு வருவதற்காக வானூர்தியில் ஏறி மந்திரகிரி மலைக்கு வந்தான். வச்சிரதாடன் மேலும் பல அரிய மாயங்களை கற்பதற்காகத் தன் மனைவியுடன் வானூர்தியில் ஏறி மந்திரகிரிக்கு வந்தான். வச்சிரதாடனைக் கண்டதும், "முற்பிறவியில் மனைவியரோடு நீராடிக் கொண்டிருந்த என்னை வேண்டுமென்றே கொன்ற கொடியவன் இவன்" என்று தன் முன்னறிவால் (விபங்கஞானம்) தரணேந்திரன் உணர்ந்தான். கடுஞ்சீற்றம் கொண்டான். வச்சிரதாடனின் மாய மந்திர ஆற்றல்களைப் போக்கி, அவனையும் அவன் மனைவியையும் வான் வழியாகத் தூக்கிச் சென்று அடிக்கடலில் ஆழ்த்தினான். பின் கடலுக்கடியிலிருந்த பிலத்திற்கு (பாதாளம்) க் கொண்டு போய் கொதிக்கும் நீரில் அமிழ்த்தினான். பலவகைகளில் மேலும் மேலும் துன்புறுத்திக் கொன்றான். இறந்த வச்சிரதாடன் நிரயத்தில் (நரகம்) பிறந்து துன்புற்று மூன்று பளிதோபகால வாழ்நாளுக்குப் பின் இறந்து நீலகிரி என்னும் மலையில் 🐅புலியாகப் பிறந்தான்.

குருதத்தனின் பிறப்பு வளர்ப்பு

        தரணேந்திரன் தன் வாழ்நாள் முடிந்து இறந்து குருசாங்கண நாட்டில் அத்தினாபுரம் பொழிலில் (நகரில்) இட்சுவாகு மரபில் வந்த விசயதத்தன் என்னும் அரசனுக்கும் விசயமதி என்னும் அரசிக்கும் குருதத்தன் என்னும் மகனாகப் பிறந்தான். அரசி நெடுநாள் குழந்தை இல்லாமல் வருந்தி இறுதியில் குரவர் (குரு) உரைத்த அருள்மொழியின் வண்ணம் ஆண் குழந்தையைப் பெற்றதால் குருதத்தன் (குருவால் அருளப்பட்டவன்) என்று பெயரிட்டனர்.


        குருதத்தன் அழகும் ஆற்றலும் உள்ளவனாக வளர்ந்தான். கல்வி கற்கச் சேர்த்து ஏழு ஆண்டுகளுக்குள் அறுபத்து நான்கு கலைகளையும், எழுபத்திரண்டு அறிவு நூல்களையும் முழுமையாகக் கற்றான். எடுப்பான தோற்றமும் எழிலார்ந்த மேனிப்பொலிவும் உள்ள கட்டிளங் காளையானான். குருதத்தனுக்கு அரசனாக முடி சூட்டி விட்டு விசயதத்தன் துறவு மேற்கொண்டான். சுதரும பட்டாரரின் சீடனாக ஆனான்.

 👳‍♀அரியணையில் அரசனாக வீற்றிருந்த குருதத்தன் குடிமக்களைக் காத்து நன்கு ஆட்சி புரிந்தான். திறை செலுத்தாத சிற்றரசர்களின் மீது படையெடுத்து அவர்களை முறியடித்து அடக்கினான். பகை மன்னரின் கோட்டைகளைத் தவிடு பொடியாக்கினான். பொன்னும் பொருளும் உள்ளிட்ட செல்வங்களையும் திறைப் பொருளாகப் பெற்றான். குருதத்தனின் பெயரைக் கேட்டாலே பகைவர் அஞ்சினர். பெயரும் புகழும் பெற்ற பேரரசனாக குருதத்தன் நாட்டை ஆட்சி புரிந்து வந்தான்.

       ஒருநாள், 🐅புலியின் கொடுமை தாளாமல் நாட்டு மக்கள் மன்னனிடம் வந்து முறையிட்டனர். "அரசே! நீலகிரி மலையைச் சுற்றிலும் இருந்த ஊர்களெல்லாம் பாழடைந்து விட்டன. அம்மலையின் குகையில் வாழும் ஒரு பெரிய புலி யமனைப் போல் அனைவரையும் கொன்று தின்று விட்டது. மக்கள் தம் வீட்டை விட்டு வெளியில் வர அஞ்சுகின்றனர்." இதைக் கேட்ட மன்னன் புலியாகப் பிறந்திருப்பவன் தன் பகைவனாக இருக்க வேண்டும் என்றுணர்ந்து அதைக் கொல்வதற்காக வீரர்களுடன் புறப்பட்டான். நீலகிரி மலையை (முற்றி) ச் சுற்றிலும் சூழ்ந்து நின்ற போர்வீரர்கள் புலியின் இருப்பிடத்தைத் தேடினர்.

           🌋பொங்குகின்ற கடலின் பேரொலி போல் சங்கு, படகம், மத்தளம், பெரும்பறை ஆகிய இசைக் கருவிகளை முழக்கிப் பேராசை உண்டாக்கினர். பேரோசையைக் கேட்டு புலி குகையினுள் பதுங்கிக் கொண்டது. இந்த ஓசைகளைக் கேட்க கேட்க புலிக்கு அச்சம் அதிகரித்தது.


      💂🏻‍♀அரசனின் வீரர்கள் குகை வாயிலை அடைந்து வாயிலில் மரக்கட்டைகளையும் காட்டுப் புல்லையும் குவித்துத் தீ 🔥மூட்டினர். குகையினுள் தீ பரவியது. 🐅புலி வெளியில் வரமுடியாமல் குகையினுள்ளே இறந்து விட்டது. இறந்த புலி, சுராட்புர நாட்டு பள்ளிகேடம் என்னும் ஊரில் சலிதாபரணன் என்னும் பார்ப்பனனுக்கும் கடுகி என்னும் பார்ப்பனத்திக்கும் அளமுகன் என்னும் மகனாகப் பிறந்தது.

 அங்க நாட்டுச் சம்பா நகரத்தில் தாத்திரிவாகனன் என்னும் அரசனுக்கும் அரசி சீமதிக்கும் அபயமதி என்னும் மகளிருந்தாள். அவள் பேரழகுடையவள். அவளை மணந்து கொள்ள குருதத்தன் விரும்பினான். ஆனால் குருதத்தனுக்குத் தன் மகளைத் தர தாத்திரிவாகனன் மறுத்து விட்டான்.

      ஒருநாள், தாத்திரிவாகனன் தேர் செய்யும் தச்சர்களான விசுவகருமன், விசுவமதி என்பவர்களை அழைத்து, "இன்னும் ஆறு திங்களுக்குள் ஒவ்வொருவரும் ஐந்நூறு தேர்களைச் செய்து என்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஆணையிட்டான். அரசனின் ஆணைப்படி ஆறு திங்களுக்குள் ஐந்நூறு தேர்களைச் செய்து விசுவமதி அரசனிடம் ஒப்படைத்தான். அரசன் பெரிதும் மகிழ்ந்து அவனுக்குப் பரிசளித்துப் பாராட்டினான். ஆனால் விசுவகருமன் ஆறு திங்களில் ஒரே சக்கரத்தை மட்டும் செய்து கொண்டு வந்து காண்பித்தான். ஆதலால் அரசன் சினந்து அவனைக் கொல்விக்க விரும்பினான். இதைத் தெரிந்து கொண்ட விசுவகருமன் தான் கொணர்ந்த தேர்ச் சக்கரத்தை, அரசன் முன், மணிபதித்த மண்டபத் தரையில் கிடத்திவிட்டு வெளியில் சென்று வருபவனைப் போல் தப்பி ஓடி  குருதத்த மன்னனிடம் அடைக்கலம் புகுந்தான்.

         விசுவகருமன், அரசன் முன் கிடத்திய தேர்ச்சக்கரம் பதினைந்து நாள் வரை தரையைத் தொடாமல் மேலெழும்பி நின்று விரைவாகச் சுழன்று கொண்டிருந்தது. இதைக் கண்ட தாத்திரிவாகனனுக்குப் பெருவியப்பு உண்டாயிற்று. விசுவகருமனின் திறமையை அரசன் வாயாரப் புகழ்ந்து பாராட்டினான். தன் வீரர்களைப் பல திசைகளிலும் அனுப்பி விசுவகருமனைத் தேடிக் கொணர ஆணையிட்டான்.


          அரசனின் வீரர், அரசனிடம் வந்து, விசுவகருமன் அரசனுக்கு அஞ்சி குருதத்த மன்னனிடம் அடைக்கலம் புகுந்திருப்பதாக் கூறினர். தாத்திரி வாகனன் தன் பெருங்கடை என்னும் அதிகாரிகளை அழைத்து, "நீங்கள் குருதத்தனிடம் சென்று விசுவகருமனுக்கு அடைக்கலம் தந்தது தவறு என்று எடுத்து காட்டி, இனிமேல் எனக்குக் குருதத்தன் சிற்றரசர்களைப் போல் திறை (கப்பம்) கட்ட வேண்டும், விசுவகருமனை என்னிடம் ஒப்படைக்க வேண்டும்" என்று சொல்லி வருமாறு அனுப்பி வைத்தான். பெருங்கடைகள் குருதத்தனிடம் சென்று தாத்திரி வாகனன் கூறியவற்றைக் கூறினர்.

செவிலித் தாய் சொல்லத் தொடங்கினாள்,

      "மகளே! உன்னால்தான் இத்தகைய கைகளை யுடைய அரசர்கள் பலர் செத்துக் கொண்டிருக்கிறார்கள்"  என்று செவிலித் தாய் கூறியதும், "என் பொருட்டு அவர்கள் ஏன் சாகவேண்டும்?" என்று இளவரசி இடைமறித்து வினவினாள்.

        "குருசாங்கணம் என்னும் நாட்டை அஸ்தினாபுரம் என்னும் தலைநகரிலிருந்து ஆளும் பேரரசன் குருதத்தன் என்பவன். அவன் எழிலார்ந்த தோற்றமுடையவன். ஏராந்த நடையழகன். இறுமாந்த செருக்கும் வீரமும் உடையவன். கண்டவரின் கண்ணைக் கவரும் கட்டழகன். களித்தோடும் காளையைப் போல் பகைவரை எதிர்த்தோடும் அஞ்சா நெஞ்சன். அவனைக் காமதேவனே என்று நினைத்தவர் பலர். பல அண்டை நாடுகளை வென்று வெற்றிக் கொடி நாட்டியவன். அத்தகைய வீரன் உன்னை மணந்து கொள்வதற்காகப் பெண் கேட்டு உன் தந்தையிடம் பெரும் பரிசு கொடுத்து பெருங்கடை என்னும் அதிகாரிகளை அனுப்பினான்.

          உன் தந்தை பெண் கொடுக்க மாட்டேன் என்று மறுத்து விட்டார். அதனால் சினம் கொண்ட குருதத்தன் உன் தந்தையின் தலையை வெட்டியெரிந்து உன்னை மணந்து கொள்வதாக சூளுரைத்து ஊழிக் காலத்தில் கடல் பொங்கி வருவது போல் பெரும் படையுடன் நம் தலைநகரைத் தாக்கி முற்றுகையிட்டுப் போர் புரிந்து கொண்டிருக்கிறான். உன் பொருட்டு நடைபெறும் இப்போரில் இதுவரை ஏராளமான வீரர்கள் இறந்து விட்டனர். நகரமே வெறிச்சோடிக் காணப்படுகிறது. உன் தந்தை கோட்டைக் குள்ளிருந்தவாறே எதிரியை முறியடிக்க முடியாமல் கோட்டை வாயில்களை யெல்லாம் அடைத்து விட்டு கோட்டையின் புறத்தே எல்லாப் படைகளையும் ஒன்று கூட்டிப் பகைவரோடு போரிடச் செய்திருக்கிறான். ஏழு நாட்களாக இப் போர் நடைபெற்று வருகிறது. பெரிய படைத் தலைவர்களும் பல அரசிளங்குமாரர்களும், சிற்றரசர்களும் இறந்து விட்டனர். போரில் கடந்த ஏழு நாட்களாக இறந்த யானைகள், குதிரைகள், போர் வீரர்கள் ஆகியவர்களைக் கணக்கிடவே முடியாது. போரின் கொடுமைகளை வாய்விட்டு உரைக்க முடியாது " என்றாள்.


       " அம்மா! நான் சொல்லுவனவற்றை உடனே என் தந்தையிடம் போய்ச் சொல், நான் குருதத்தனைத்தான் மணந்து கொள்வேன், வேறு யாரையும் விரும்ப மாட்டேன். குருதத்தனுக்கு என்னைத் திருமணம் செய்து தராவிட்டால் நான் துறவு மேற்கொள்வேன். இது உறுதி, இதனை நான் சொன்னதாக உடனே என் தந்தைக்கு தெரிவி" என்று செவிலித் தாயை அனுப்பினாள்.

 இளவரசி அபயமதி கூறியதைக் கேட்ட செவிலித் தாய் அவள் உடனே அரசன் தாத்திரி வாகனனிடம் சென்று இளவரசி கூறியதை அப்படியே தெரிவித்தாள். அரசனும் மகள் விருப்பப்படியே செய்வதாக ஒப்புக் கொண்டான்.

      தன் பெருங்கடைகளை (அதிகாரிகளை) குருதத்தனிடம் அனுப்பி அவனுக்குப் பெண் கொடுக்க இசைவதாக சொல்லச் சொன்னான். குருதத்தன் மனம் மகிழ்ந்து போரை நிறுத்தினான். தாத்திரி வாகனனும் தன் படைகளைப் போரிடாமல் திரும்பி வர ஆணையிட்டான். போரில் இறந்தவர்களுக்கான ஈமக் கடன்களை இருதிரத்தாளும் செய்து முடித்தனர். இறந்த வீரர்களின் குடும்பத்தாருக்கு மன்னன் பொருளுதவி செய்தான்.

         சில நாட்களுக்குப் பின் நல்ல நாளில் குருதத்த னுக்கும் அபயமதிக்கும் திருமணம் வெகு சிறப்பாக நடைபெற்றது. திருமணமாகி மேலும் சில நாட்கள் சம்பா நகரத்தில் தங்கியிருந்த குருதத்தன் தன் தலைநகருக்குச் செல்ல விரும்பினான். மகளுக்குத் தரவேண்டிய சீர் வரிசைகளான யானை, குதிரை, பல்லக்கு, பொன், பொருள், பணியாட்கள், தோழிப் பெண்கள், விலையுயர்ந்த ஆடை அணிகலன்களும் கொடுத்து மன்னன் அனுப்பி வைத்தான். குருதத்தன் தன் மனைவியுடன் தலைநகரம் வந்து சேர்ந்தான்.

      குருதத்தன் அபயமதியுடன் இனிது வாழ்ந்து வந்தான். அபயமதிக்கு சுவர்ணபத்திரன் என்னும் மகன் பிறந்தான். ஒருநாள், தலைநகரை அடுத்த தரணிபூடணம் என்னும் மலையில் அமிர்த ஆச்சாரியார் என்னும் முனிவர் ஐந்நூறு சீடர்களுடன் வந்து தங்கியிருப்பதாகக் கேள்விப்பட்டு, மனைவி மக்களுடனும் அரச சுற்றத்தாருடனும் முனிவரை வழிபட்டு வருவதற்காகச் சென்றான்.

       மலையில் தங்கியிருந்த முனிவரைக் கண்டு வலம் வந்து வணங்கி வழிபடு பொருள்களை அவர் முன் வைத்துப் பணிந்து நின்றான். முனிவர் உரைத்த அருளுரைகளைக் கேட்ட பின் அரசன் குருதத்தன், "அடிகளே! என் பழம் பிறப்பினைப் பற்றித் தெரிவித்தருள வேண்டும்" என்று வேண்டினான். முனிவர் கூறத் தொடங்கினார்.....

அமிர்த ஆச்சாரியார் என்னும் முனிவர் அரசன் குருதத்தன் வேண்டுகோளுக்கிணங்க அவனது பழம் பிறப்புகளை கூறத் தொடங்கினார்.

     "நீ இந்தப் பிறவிக்கு முன்பு நான்காம் பிறவியில் சாவத்த நகரில் உபரிசரன் மன்னனாக இருந்தாய், மலர்வாவியில் நீராடும் போது வச்சிரதாடன் என்பவனால் கொல்லப்பட்டு, இறந்து அங்கிருந்த சோலையில் மலைப் பாம்பாகப் பிறந்தாய்; பாம்பாக வாழ்ந்து இறந்த பின், தரணேந்திரனாகப் பிறந்தாய்; பிறகு இப்பிறவியில் குருதத்தன் என்னும் அரசனாகப் பிறந்திருக்கிறாய்! " என்று முனிவர் கூறியதைக் கேட்டு, உலக நிலையாமை எண்ணி மன்னன் மனம் வருந்தினான்.

        அருகிலிருந்த அபயமதி முனிவரை வணங்கி," அடிகளே! என்னுடைய பழம்பிறவியைப் பற்றி அறிவித்தருள வேண்டும்"என்று வேண்டினாள்.

          " சம்பா நகரத்தில் பறவைகளைப் பிடித்து விற்று வாழும் கருடவேகன் என்பவனின் மனைவியாக சென்ற  பிறவியில் பிறந்திருந்தாய். அப்பொழுது உன் பெயர் கோமதி. அந்நகருக்கு சமாதிகுப்தர் என்னும் முனிவர் தன் சீடர்களுடன் வந்து தங்கியிருந்தார். நீ அவரைக் கண்டு வணங்கி அவர் உரைத்த அருளுரைகளைக் கேட்டு, புலால் உண்பது, மது அருந்துவது, பொய், கொலை, களவு தவிர்ப்பது, ஐந்து பால் மரங்களின் பழங்களையும் காளானையும் உண்ணாதிருப்பது போன்ற நோன்புகளை மேற்கொண்டாய். ஒருநாள், உன் கணவன் காட்டில் பிடித்து வந்த பறவைகளைக் கூட்டிலடைத்து வீட்டில் வைத்துவிட்டு  வெளியில் சென்றபோது நீ அப்பறவைகளுக்காக இரக்கப்பட்டு கூட்டைத் திறந்து பறவைகளைப் பறக்க விட்டுவிட்டாய். உன் கணவன் வந்து பறவைகளைத் திறந்து விட்டது யார்? " என்று கடுஞ்சீற்றம் கொண்டு வினவினான். 'அருளுள்ளத்தால் நான்தான் அவற்றைத் திறந்து விட்டேன்' என்று நீ சொன்னதும் இத்தகைய மனைவி என் வீட்டுக்குத் தகாது என்று உன்னை அடித்துத் துரத்தி விட்டான். நீ வேறு வழியின்றி உன் உறவினர் வீட்டில் தங்கியிருந்தாய்.


      நீ உன் உறவினர் வீட்டில் தங்கியிருந்தபோது ஒருநாள், இந்நகர அரசன் தாத்திரிவாகனனும் அரசி சீமதியும் நகரில் உலா வந்தனர். அவர்களின் அழகும் செல்வ வாழ்வும் பெருமையும் கண்டு வியந்த நீ அவர்கள் வயிற்றில் குழந்தையாகப் பிறந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தாய். சில நாட்களில் இறந்து நீ நினைத்தவாறே தாத்திரிவாகன மன்னனின் மகளாக வந்து பிறந்திருக்கிறாய். நீ அரசியின் வயிற்றில் குழந்தையாய் இருந்தபோது அரசிக்கு நகரில் யாரும் எந்த உயிரையும் கொல்லக் கூடாது என்ற எண்ணம் தோன்றியது. அரசி தன் வேண்டுகோளை மன்னனிடம் தெரிவித்தாள். மன்னன் நகரில் யாரும் எவ்வுயிரையும் கொல்லக் கூடாது எனப் பறையறையச் செய்தான். அனைத்துயிர்களுக்கும் அடைக்கலம் (அபயம்) தரும் எண்ணத்தை நீ ஊட்டியதால் உனக்கு அபயமதி எனப் பெயரிட்டனர்" என்று முனிவர் கூறினார்.

அரசன் குருதத்தனும் அரசி அபயமதியும் தம் பழம் பிறப்புகளை முனிவர் உரைக்க கேட்டு மகிழ்ந்தனர். அரசனுக்கு உலக வாழ்வில் வெறுப்புத் தோன்றியது. தன் மூத்த மகன் சீதத்தனுக்கு அரசனாக முடி சூட்டிய பின் குருதத்த அரசன் அரண்மனை வாழ்வை நீத்து முனிவரிடம் துறவு மேற்கொண்டான். அரசனுடன் பல சிற்றரசர்களும் இளவரசர்களும் துறவு பூண்டனர். அபயமதியும் முனிவரையே குரவராக (குரு)க் கொண்டு சுவிரதைஎன்னும் கந்தியரிடம் தவமேற் கொண்டாள். முனிவரிடம் பல அரிய நூல்களைக் கற்றுக் கடுந்தவம் செய்து நோன்புகளால் மெலிந்து எலும்பும், தோலுமாக இளைத்து உள்ளத்தின் ஆற்றலைப் பெருக்கிக் கொண்டாள். மனவுறுதியுடனும் அறநெறி நினைவுடனும் இவ்வுலக வாழ்வை நீத்து காபிட்டம் என்னும் எட்டாவது மேலுலகில் பதினான்கு சாகரோப காலம் வாழ்நாள் பெற்று அமிதகாந்தன் என்னும் தேவனாகப் பிறந்தாள்.

       குருதத்தர், முனிவரை விட்டு அகலாமல் பன்னிரண்டு ஆண்டுகள் வரை பன்னிரு அங்கம் நாற்பது ஆகமங்கள் ஆகிய நூல்களைக் கற்று கடுந்தவம் செய்தார். அதன்பின் முனிவரின் இசையுடன் சிற்றூர், நகரம், மலையூர், காட்டூர், ஆற்றூர், பட்டணம், துறைமுகப்பட்டினம், தலைநகரம் என்னும் பலவிடங்களுக்கும் செலவு(பயணம்) மேற்கொண்டார். வழியில் சுராட்டம் என்னும் இடத்திற்கு வந்தார்.

        அங்கு தோணிமந்தம் என்னும் மலைச்சாரல் பகுதியில் பள்ளிகேடம் என்னும் ஊரை அடைவதற்குள் கதிரவன் மேற்கில் மறைந்ததால் மேற்கொண்டு பயணம் செய்யலாகாது என்று நடுவழியிலேயே நின்ற நிலையில் தவம் செய்து கொண்டிருந்தார். இரவு முழுவதும் பெருமழை பெய்தது. முனிவர் அசையாமல் தவத்தில் ஈடுபட்டிருந்தார்.

முனிவரைக் கொன்ற பார்ப்பனன்


    பொழுது விடிந்தும் முனிவர் நின்ற நிலையிலேயே தவம் செய்து கொண்டிருந்தார். தோணிமந்த மலைச்சாரலில் வாழ்ந்து வந்த அளமுகன் என்னும் பார்ப்பனன் விடியற்காலையில் நிலத்தை உழுவதற்காக கலப்பையை எடுத்துக் கொண்டு மாடுகளுடன் வந்தான். முனிவர் நின்றிருந்த இடத்துக்கு அருகிலேயே அவன் நிலம் இருந்தது. மழை அதிகம் பெய்ததால் அந்நிலம் உழுவதற்கேற்ற பதமாயில்லை என்பதால் மலையின் மேற்குப் பக்கத்தில் உள்ள நிலத்தை உழச் சென்றான். அவன் செல்லும் முன் முனிவரை நோக்கி, "அடிகளே! நான் இந்த நிலத்தில் ஏர் உழுவதாக நினைத்து என் மனைவி எனக்கு சோறு எடுத்துக் கொண்டு வருவாள். நான் மலையின் மேற்குப் பக்கத்தில் ஏர் உழப் போகிறேன். அவளை அங்கு சோறு கொண்டு வருமாறு சொல்லியனுப்புங்கள்" என்று கூறிவிட்டு ஏரைத் தோளில் சுமந்து மாடுகளை ஓட்டிக் கொண்டு போனான்.

நண்பகலாகும் முன் பார்ப்பனனின் மனைவி ஏர் உழும் தன் கணவனுக்காக மலையின் கிழக்குப் பக்கத்தில் உள்ள நிலத்துக்குச் சோறு எடுத்துச் சென்றாள். நிலம் முழுதும் தேடியும் கணவனைக் காணாது வருந்தினாள். அங்கு நடுப்பாதையில் நின்று சூரியப் பிரதமை என்னும் தவம் செய்து கொண்டிருந்த குருதத்த முனிவரைப் பார்த்து, "என் கணவர் இந்த நிலத்தை உழுவதற்காக வந்தார். அவர் எங்கே போனார்? " என்று கேட்டாள். முனிவர் ஒன்றும் பேசவில்லை. அவள் செய்வதறியாது அந் நிலத்தில் நெடுநேரம் காத்திருந்து சலித்துப் போய் வீட்டுக்குத் திரும்பிப் போய்விட்டாள்.

         பார்ப்பனன் பொழுது சாயும் வரை ஏர் உழுது களைத்துப் போனான். மனைவி சோறு கொண்டு வருவாள் என எதிர்பார்த்து ஏமாந்தான். அவள் ஏன் சோறு கொண்டு வரவில்லை என்று அவனுக்குச் சினம் அதிகரித்தது. சினத்தோடும் பசியோடும் வீடு வந்து சேர்ந்தான். 'நீ ஏனடி எனக்குச் சோறு கொண்டுவரவில்லை?' என்று மனைவியை அடிஅடியென்று அடித்து நொறுக்கினான். அவள் குய்யோமுறையோ எனக் கதறி அங்குமிங்கும் ஓடிக் கீழே விழுந்தழுது, "ஐயோ! நான் சோறு கொண்டு வந்தேன், உன்னைக் கிழக்கு நிலத்தில் காணவில்லை. நெடுநேரம் காத்திருந்து வந்து விட்டேன்" என்றாள். "அந்தச் சமண முனிவன் தவம் செய்து கொண்டிருந்தானே, அவனை நீ வினவவில்லையா? நான் மேற்குப் பக்கத்திலுள்ள நிலத்தில் உழப்போகிறேன். என் மனைவி வந்தால் சொல்லியனுப்பு என்று நான் சொல்லியிருந்தேனே" என்றான் பார்ப்பனன்.


      " நான் பலமுறை வினவியும் கூட அந்தச் சமண முனிவன் வாயே திறக்கவில்லை, நான் என்ன செய்வேன்? " என்று பார்ப்பினி கூறியதும்,"உன் மீது ஒரு குற்றமுமில்லை, அந்த முனிவனை ஒரு கை பார்க்கிறேன்" என்று பார்ப்பனன் சினந்து உரைத்தான். " எனனைப் பசியால் வாட்டிய அந்த முனிவனை தீயினால் சுட்டெரித்த பின்புதான் உண்பேன்" என்று சூளுரைத்து முனிவர் இருந்த இடத்துக்கு வைக்கோல்புரியால் திரித்த பழுதைக் கயிறுகள், உலர்ந்த புல், எண்ணெய் குடம், தீப்பந்தம் வறட்டிகளின் மூட்டை ஆகியவற்றை எடுத்துச் சென்றான்.


 குருதத்த முனிவர் கண்ணை மூடித் தவம் செய்து கொண்டிருந்தார். பார்ப்பனன் முனிவரை நோக்கி, "சமணனே! நீ என்னைப் பசியால் சுட்டாய், நான் உன்னை நெருப்பால் சுடுகிறேன். உன்னை காப்பாற்றுபவர்கள் யார் இருக்கிறார்கள்?" என்றான். முனிவர் என்ன நடக்கப் போகிறது என்பதை உணர்ந்து கொண்டார். "இந்த பார்ப்பனன் முற்பிறவியில் புலியாக இருந்தபோது இவனை குகையில் தீமூட்டிக் கொன்றதன் விளைவாக இப்பிறவியில் என்னைத் தீயால் சுட்டுக் கொல்கிறான். பார்ப்பனன் செய்வதில் தவறொன்றுமில்லை. இவன் எனக்கு நன்மையே செய்கிறான். நாம் செய்த தீவினைதான் நமக்கு வரும். ஒரு தீவினையும் செய்யாதவர்களுக்குத் துன்பமே வராது. இவன் என்னைத் தீயால் சுடட்டும். அதனால் நிறைஞானம் பெற்ற என் உயிர் துன்புறாது. இவன் வைக்கும் தீ என் நற்காட்சி, நல்லொழுக்கம், நன்னம்பிக்கை ஆகியவற்றைச் சுட முடியாது. இந்த நிலையாத உடலைச் சுட்டெரிப்பதன் மூலம் இவன் எனக்குப் பெரிய உதவி செய்கிறான்" என்று முனிவர் நினைத்தார்.

        "முனிவர்கள் இழிந்தவர்களின் கடு மொழிகளையும் சுடு சொற்களையும் பொறுத்துக் கொள்வார்கள். உள்ளத்துக்கு நேரும் துன்பங்களையே பொறுத்துக் கொள்ளும்போது உடலுக்கு நேரும் துன்பங்களைப் பொறுத்துக் கொள்வது எளிமையானது. எத்தகைய துன்பம் நேர்ந்தாலும் சமண முனிவர்கள் சினங் கொள்ள மாட்டார்கள்.

      வாழ்விலும் சாவிலும், பிறப்பிலும் வெறுப்பிலும் இன்பத்திலும் துன்பத்திலும் நிலை பிறழாத ஒரே மனநிலையைக் கைக் கொண்டிருப்பதும் முனிவர்களின் இயல்பு. இத்தகைய மனநிலை சாமாயிகம் என்றழைக்கப்படுவது இந்த மனநிலை பெற்ற எனக்கு எந்தத் துன்பமும் தெரியாது." என முனிவர் தவநிலைகளின் மேன்மைகளை நினைந்து பெருமை கொண்டார்.


         இதற்குள் பார்ப்பனன் அளமுகன் வைக்கோல் புரி கயிற்றை (பழுதை) எண்ணையில் தோய்த்து முனிவரின் உச்சந் தலை முதல் கால் நகம் வரை சுற்றிச் சுற்றிக் கட்டினான். உடம்பு முழுவதும் தீ வைத்தான். நன்றாக எரியட்டும் என்று எண்ணையைத் தெளித்துக் கொண்டேயிருந்தான். தீ கொழுந்து விட்டு எரிந்தது.

 குருதத்த முனிவர் மீது அளமுகன் பார்ப்பனன் வைத்த தீ கொழுந்து விட்டு எரிந்தது. அளமுகன் தொலைவாக நின்று வேடிக்கை பார்த்தான். முனிவர், தீ தன்னைச் சுடும்போது ஆக்ஞாவிசயம், அபாயவிசயம், விபாகவிசயம், சமசுத்தான விசயம் என்னும் நான்கு அற முழக்கங்களில் (தருமதியானம்) ஒன்றிப் போயிருந்தார். நெருப்பு எரிய, எரிய அவருக்குக் கேவல ஞானம் என்னும் உண்மை விளக்கம் ஏற்பட்டது. இந்நிலை ஏற்பட்டவர்களை தீ ஒன்றும் செய்யாது. வானுலகத் தேவர்களெல்லாம் கேவல ஞானியாகிய குருதத்தரைக் கண்டு வழிபட கூட்டங் கூட்டமாக வந்தனர்.

    வானுலக இசைக் கருவிகள் முழங்கின. தேவர்கள் முனிவரின் முன்பு பணிந்து வணங்கி நின்றனர். தேவேந்திரனும் வந்து வணங்கி நின்றான். தேவேந்திரனும் தேவர்களும் ஏறி வந்த வானூர்திகள் அணி அணியாக வானத்தில் பறந்து கொண்டிருந்தன. பொன்னொளி வீசும் அரியணையில் வெண்கொற்றக் குடையின் கீழ் தேவேந்திரன் வீற்றிருந்த அழகும் அவன் இருந்த இருக்கையைத் தாங்குகின்ற பொன் தாமரையின் அழகும் இருமருங்கிலும் வானுலக மகளிர் கவரி வீசுகின்ற அழகும் காண்போரின் கண்களை மயக்கின.

       தேவேந்திரன் உள்ளிட்ட தேவர்கள் அனைவரும் முனிவரை வலம் வந்து வணங்கிய பின் கீழே அமர்ந்து முனிவர் உரைத்த அருளுரைகளைக் கேட்டபின் மீண்டும் வானுலகம் சென்றனர்.  இதையெல்லாம் தொலைவில் நின்று பார்த்துக் கொண்டிருந்த அளமுகன் முனிவரிடம் ஓடோடி வந்து, காலில் விழுந்து வணங்கித் தன்னை மன்னிக்க வேண்டினான். முனிவர் அவனுக்கு ஆறுதல் மொழிந்தார்.

     தேவர்களும் வழிபடும் பெருமை பெற்ற முனிவர் உடலில் தீ வைத்துக் கொளுத்தினேனே என்று அவன் வருந்தினான். தன்னையும் தவநெறியில் ஈடுபடுத்துமாறு பணிவுடன் வேண்டினான். குருதத்த முனிவர் அப்பார்ப்பனனின் வேண்டுகோள் ஏற்று அவனுக்குத் துறவு நெறியளித்தார். அளமுகன் கடுந்தவம் செய்து அளமுக முனிவர் என்று அழைக்கப்படும் பெருமை பெற்றான்.

        குருதத்த முனிவர் மேலும் கடுந்தவங்கள் செய்து ஈறிலா காட்சி, ஈறிலா இன்பம் ஆகியவை பெற்று பிறவாப் பேரின்ப வீடு (மோட்சம்) பெற்றார்.

சுபம்

திருவறம் வளர்க!
           
       டைப் செய்யும் போது ஒருசில வார்த்தைகளில் எழுத்துப் பிழை ஏற்பட்டிருக்கலாம். அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி!

          இங்ஙனம், 
       கம்பீர. துரைராஜ்,
       செய்யாறு.

No comments:

Post a Comment