மாணவர்கள் பரிசளிப்பு விழா, சோனாகிரி



ஞான் ப்ரதிபா

அகில இந்திய திறம்வாய்ந்த ஜைன மாணவர்களை ஊக்கமளிக்கும் திட்டம்



Gyan Pratibha :


All India Jain Talented Students Encouraging Scheme





இந்திய சமண மாணவர்களில் 10வது மற்றும் 12வது இறுதி தேர்வில் மொத்த மதிப்பெண்ணில் 90 சதவீதம் பெற்றவர்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் இந்த சம்மேளனம் வணக்கத்திற்குரிய ஆச்சார்ய ஸ்ரீ 108 விராக்சாகர்ஜி மஹராஜ் அவர்களால் துவக்கப்பட்டு, தற்போது ஆச்சார்ய ஸ்ரீ 108 ஞானசாகர்ஜி மஹராஜ்  அவர்கள் வழிகாட்டுதலில் தொடர்கிறது.


மேலும் சமண மாணவர்களுடைய எதிர்கால கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பற்றிய ஆலோசனைகள் வழங்கும் முகமாக ஆண்டு தோறும் இந்திய அளவிலான ஒரு விழாவினை ஏற்படுத்தி அதில் பரிசளிப்பதுமான சமூகப்பணிகள் தொடர்ந்து பதினெட்டு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

இவ்வாண்டுக்கான இந்திய அளவிலான செயல்திறன் மிக்க ஜைன மாணவர்களுக்கான பதினெட்டாம் ஆண்டு பரிசளிப்பு விழா நிகழ்வுகள் 31 டிசம்பர்,2017 (ஞாயிறு) அன்று மத்திய பிரதேசம், டாட்டியா மாவட்டம் சோனாகிரி சித்தக்ஷேத்ராவில் நடைபெற்றது.


அந்நிகழ்விற்காக இந்திய அளவில் சிறந்த மற்றும் அதிக மதிப்பெண்கள் பெற்ற

12வது வகுப்பில்  171 மாணவர்களும் (தமிழ்நாடு 23, பாண்டி 1)
10வது வகுப்பில் 388 மாணவர்களும் (தமிழ்நாடு 59, பாண்டி 1)

தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.











மேலும் அவ்வாறு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு அந்தந்த  மாநிலத்திலும் ஒரு நாள் வகுப்பு நிலைக்கேற்ப பரிசளிப்பு விழா வட்டார அமைப்பு செயலாளர்களால் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


அவ்வகையில் இவ்வாண்டும் தமிழ் நாட்டிற்காக தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் தமிழ்மாநில அமைப்புச் செயலாளரான திரு. ஸ்ரேணிக்ராஜ் ஜைன் அவர்களால் சிறப்பான முறையில் விழா ஏற்பாடு செய்து பரிசளிப்பும் நடைபெற்றது அனைவரும் அறிந்ததே.


இவ்வாண்டு மாணவர்களுக்கான இந்திய அளவிலான பரிசளிப்பு விழாவிற்கு 12ம் வகுப்பு முடித்து கல்லூரியில் சேர்ந்தவர்களுக்கு செமஸ்டர் தேர்வு நடைபெறுவதாலும், தொலைதூரம் கருதியும் பெரும்பாலான மாணவர்கள் சோனாகிரி விழாவில் கலந்து கொள்ள வரவில்லை.


இப் பரிசளிப்பு விழாவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 12வது வகுப்பில் 3 மாணவர்களும், 10 வது வகுப்பில் 32 மாணவர்களும் பங்குபெற அவரவர் பெற்றோர் உறவினர் நண்பர்களுடன் மொத்தம் 157 பயணிகளுடன் சோனாகிரி ஸ்தலத்திற்கு சென்று சிறப்பித்தனர். (மன்னார்குடியிலிருந்து 4 மாணவமணிகள் கலந்து கொள்ள சென்றதால் நாங்களும் அவ்விழாவினை கண்டுகளிக்க நேர்ந்தது.)


அவ்விழாவிற்கான பிரத்யேக ஏற்பாடுகள் (மிக தடபுடலாக) செய்யப்பட்டிருந்தது. நல்ல பனிமழையில்(fog); பந்தல், ஷாமியான தடுப்புகள், நுழைவாயில் அலங்காரங்கள், பெரிய மேடை, மின் விளக்குகள் அலங்கரிப்பு போன்ற அனைத்தும் பிரம்மாண்டமாக காட்சியளித்தன.


தங்குமிட வசதி, உணவு அருந்தும் இடம் மற்றும் உணவு வகைகள் அனைத்தும் நல்ல முறையில் அமைக்கப்பட்டிருந்தன.


(காலை சிற்றுண்டி; பஃபே முறையில், பனீர் பட்டர் மசாலா, சன்னா மசாலா, பூரி, நாண் (மைதா ரொட்டி), இட்லி(என்ற பெயரில் கொஞ்சம் உளுந்து கலந்த கொழுக்கட்டை, சாப்பிடவில்லை) சட்னி, (இனிப்பு) சாம்பார், கச்சோளி (கார உள்ளீடுள்ள மைதா பனியாரம்), காரவகை ஒன்று (பெயர் தெரியவில்லை), தேனீருடன் தரப்பட்டது. சிலவற்றை நீக்கினாலும் மற்றவை அருமை.)






காலை அமர்வு: கடுங்குளிரில் வெந்நீர் ஸ்நானம், சிற்றுண்டி முடிந்ததும்  உள்ளாடை, மேலாடை, குளிருக்கான ஆடை, தொப்பி, காலுறை, கையுறையுடன் விழா கொட்டகையை நெருங்கினேன். மேடையில் ஆச்சார்ய ஸ்ரீ ஞான் சாகர் மகராஜ், மற்றும் அவரது சீடர் மேடையில் ஆடையின்றி வெற்றுடம்புடன் நிர்வாண கோலத்தில் கண்டதும் வெட்கித்தலை குனிய நேர்ந்தது. (உடன் தொப்பியை கழற்றினேன், ஸ்வெட்டரை களைய கைகள் மறுத்தன.)


Morning Session: ஆச்சார்ய ஸ்ரீ, சீடர்கள், நம் சமயத்தில் கல்வியில், தொழிலில் முன்னோடிகளான சிலர், மாணவர்களை வாழ்த்தியும், ஆசீர்வதித்தும், எதிர்கால வழிகாட்டுதலையும் வழங்கினார்கள்.


(அனைத்தும் ஹிந்தி மொழியில் வழங்கப்பட்டது….. சற்று புரியவில்லைதான். ஆங்கில மொழியாக்கம் செய்தவரின் உச்சரிப்பு தெளிவாக இல்லை. அதற்கு காரணம் ஹிந்தி புரியாமை, அவர்கள் மீது எக்குறையுமில்லை.)


மதிய அமர்வில் மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு நடைபெற்றது. அவரவர் வகுப்பு நிலைக்கு ஏற்ற ஒரு நினைவுப்பரிசும், சான்றிதழும், ஊக்கமளிக்கும் வகையிலான நூல்களும் வழங்கப்பட்டன. பின்னர் உணவருந்த சென்றோம்.


நல்ல வழிகாட்டுதல்கள், பிரம்மாண்ட ஏற்பாடுகள் அனைத்தும் ஆச்சார்ய ஸ்ரீ யின் நுணுக்கமான ஏற்பாடுகளையும், வழிகாட்டுதலையும், சமணத்தின் மீது கொண்ட பற்றுதலையும் நிரூபித்தது.


விழாவிற்காக பயணத்தை மேற்கொண்டாலும் 2000 கி.மீ. கள் கடந்து செல்வதால் தீர்த்தயாத்திரையும் அதனுடன் இணைத்திருந்த திரு. ஸ்ரேணிக்ராஜ் ஜைன் மற்றும் அவர்தம் குழுவினருக்கும் பாராட்டுக்கள்.


டில்லியிலிருந்து AC பேருந்து ஒன்றும், மதுராவிலிருந்து மூன்றும், டில்லி (தமிழ்) சமையற் கலைஞர்களையும் வருவித்து, தினம் காலை, மாலை சுவையான உணவுடன், இரவுத்தங்கலுக்கான ஏற்பாட்டையும் தங்களது சிரமம் கூடுவதை பொருட்படுத்தாமல்;


மடியாஜி, பனாகர், கோனிஜி, குண்டல்பூர், நைனாகிரி, பாப்பெளராஜி, திகம்கார், ஜான்சி, சோனாகிரி போன்ற புண்ணிய ஸ்தலங்களுக்கு (குறைந்த செலவில்) சென்று தரிசிக்க வகை செய்த அமைப்பாளர் குழுவினருக்கு மேலும் நன்றிகள் பல.


(தினமும் அத்தலங்களின் விபரங்கள், புகைப்படங்களைக் கண்டோம்.)
(டில்லி சமையல் அருமை சோனாகிரியில் சாப்பிடும் உணவில் தெரிந்தது.)


குளிரின் கடுமையும், ரயிலின் 12 மணிநேரத் தாமத வருகையை தவிர வேறு சிரமங்கள் எவருக்கும் ஏற்பட்டதாக தெரியவில்லை.


விழாக்குழுவினருக்கும், அமைப்பாளர்களுக்கும் நன்றிகள் பல….

ஒவ்வொரு ஆண்டும் இவ்விழா சிறக்க வாழ்த்துக்கள்!!!



பத்மராஜ் ராமசாமி.

No comments:

Post a Comment