கோமடேஸ்வர பாகுபலி



கோமடேஸ்வர பாகுபலி







 திருவாளர் கம்பீர. துரைராஜ் தொடராக வாட்ஸ் அப்பில் பகிர்ந்த வந்த பதிவுகளின் தொகுப்பு.



ஹிந்தியில் ஆசிரியர், டாக்டர் ஹுகம் சந்த் பாரில்]

[தமிழாக்கம்- பரத சக்ரவர்த்தி ஜெயின் சாஸ்திரி.]

[ஆண்டு- 1981.]


பாரதம் ஒரு பரந்த நாடு. வடக்கே இமய மலையில் இருந்து, தெற்கே கன்னியாகுமரி வரை ஆயிரம் ஆயிரம் கிலோமீட்டர் நீளத்தில் பரந்து காணப்படுகிறது. இப்பாரத நாட்டில், நடை- உடை- உணவு , மொழி முதலிய பல வேறுபாடுகள் காணப்படுகின்றன. ஆன்மீக வாழ்வு பாரத நாட்டு மண்ணுக்குள்ள ஒரு தனிச் சிறப்பு. இந்த காரணத்தால்தான் 'தார்சனிக' வேறுபாடுகள் கூட இதில் குறைந்து விடவில்லை. பல ஜாதி மதங்களுக்கும் (சம்ப்ரதாயம்) இந்த பாரதநாடு உயிர்க்காட்சி சாலையாக விளங்குகிறது.

         இப்படி பாரதத்தின் ஒற்றுமைக்கு பகையாக விளங்கும் மதம், ஜாதி, மொழி, தர்மத்தின்பால் கொண்டுள்ள மயக்கம் முதலிய பல பிளவுச் சக்திகள் இருந்தும், இந்த பாரத நாடு ஒற்றுமையாக இருக்கிறது. ஒற்றுமை என்னும் கயிற்றால் கட்டப்பட்டிருக்கிறது. இதற்கெல்லாம் ஒரே காரணமாக விளங்குவது நம்முடைய தீர்த்தங்கரர்களேயாம். இவை வடக்கிலிருந்து தெற்கு வரை கிழக்கிலிருந்து மேற்கு வரை பரந்து கிடக்கின்றன. இது அப்படிப்பட்ட ஒரு நூல், இதில், பல வண்ணங்களும் மணங்களும் நிறைந்த மலர்கள் அழகாக தொடுக்கப்பட்டுள்ளன; எனவே கவர்ச்சியாகவும்; அழகாகவும் காணப்படுகின்றன. தீர்த்தம் என்னும் நூலில் கட்டப்பட்ட பாரதத்தின் இந்த வேற்றுமைகள் வண்ண- வண்ண மணமுள்ள மலர்களாலான கவர்ச்சி மிக்க மாலை வடிவைக் கொண்டுள்ளன. பிளவுச்சக்தியான வேறுபாடுகள் அழகிய ஒற்றுமை வடிவை ஏற்றுக் கொண்டுள்ளன.

        இது ஒரு வியப்புக்குரிய கலப்பு என்றே கூறவேண்டும். சிரமண கலா சாரத்தின் இருபத்து நான்கு தீர்த்தங்கரர்களும், வைஷ்ணவ கலாசாரத்தின் இருபத்து நான்கு அவதாரங்களும், வடநாட்டில்தான் நிகழ்ந்துள்ளன. ஆனால் இரண்டு கலாசாரங்களின் தலைசிறந்த ஆசார்ய தேவர்களைத் தந்தது தென்னாடுதான்.

        இந்த உண்மை பாரதத்தின் எல்லா தர்மங்களுக்கும், கலாசாரங்களுக்கும் தீர்த்தங்கள் சமமாக காணப்படுகின்றன என்றாலும், இங்கே ஜைன தர்மம் சிரமண கலாசாரத்தைப் பற்றிய ஆய்வே மேற்கொள்ளப்படுகிறது.



                    
       ஜைன தர்மம் அல்லது சிரமண கலாசாரத்துடன் தொடர்புள்ள சித்த ஷேத்திரங்கள் எத்தனை உண்டோ அவை அனைத்தும் வடநாட்டில் உள்ளன. தென்னாட்டில் ஒன்று கூட இல்லை. ஆகவே தென்னாட்டவர்கள் சித்த ஷேத்திரங்களை தரிசிக்க வட நாட்டிற்கு இயல்பாகவே வருகிறார்கள். ஆனால் தென்னாட்டில் கோமடேஸ்வர பாகுபலி பகவானுடைய மிகப் பெரிய சிலை இல்லாதிருந்தால் வடநாட்டிலிருந்து தார்மிக யாத்திரைச் செய்பவர்கள் தென்னாட்டிற்கு எதற்காகப் போக வேண்டும் , இது ஒரு சிந்தனைக்குரிய வினா.

       தென்னிந்தியாவில் இப்படி ஒரு பிரம்மாண்ட சிலை வடிக்க பல காரணங்கள் இருக்கலாம்; வரலாறு, செவிவழிச் செய்திகள் அடிப்படையில் பலவாறு கூறலாம், ஆனால் என்னுடைய நோக்கத்தில் , பெருமை மிக்க காரணமாக நான் காண்பது இதுதான்; தென்னிந்தியாவில் தார்மீக வரலாற்றையும் புராணங்களையும் பார்க்கும்போது, தீர்த்தங்கரர்கள், கல்யாணங்கள் முதலியவை நிகழ்ந்த புனிதத் தலங்கள் இல்லாததால், வடநாட்டுத் தார்மீக யாத்திரிகர்கள் தென்னிந்தியாவிற்கு வருகைதர கவர்ச்சி உண்டு பண்ணவே இப்படி ஒரு ஏற்பாடு இருந்திருக்கலாம்.

    'சம்மேத சிகரம்', 'கிரிநார்' முதலிய ஷேத்திரங்களில் கவர்ச்சியான ஆலயமோ, சிலைகளோ இல்லாதிருந்தாலும் மக்கள் யாத்திரைக்கு அங்கு வருவர். ஏனென்றால் இந்தப் புனிதத் தலங்களின் தொடர்பு தீர்த்தங்கரர்களின் பஞ்ச கல்யாணங்களுடன் உள்ளது. ஆனால் தென்னாட்டில் தீர்த்தங்கரர்களின் பஞ்ச கல்யாணத்துடன் தொடர்பு இல்லை. ஆகவே ஏதாவது ஒரு கவர்ச்சியான காரணம் இருந்தாலொழிய போக்குவரத்துச் சாதனங்கள் வசதியாக இல்லாத அக்காலத்தில் - வடநாட்டு யாத்திரிகர்கள் இவ்வளவு தூரம் வருவது என்பது இயலாது. வடக்கிலிருந்து தெற்கே வருவதற்கு ஆண்டுக் கணக்கில் பயணம் செய்யவேண்டி இருந்தது. இடையில் கணக்கில் அடங்காத இடையூறுகள் இருந்தன; உயிரைப் பணயம் வைத்துத்தான் பயணம் செய்யவேண்டி இருந்தது.

      யார் இத்தகைய பிரம்மாண்டமான சிலையை வடித்தாரோ, அவர் உள்ளத்தில் இமாலயத்தின் அடித்தளம் வரை தன் கவர்ச்சியை பரப்பக்கூடிய அளவுக்கு வியக்கத்தக்க ஜினபிம்பத்தை பிரதிஷ்டை செய்யவேண்டுமென்ற எண்ணம் இருந்திருக்கக்கூடும்.





      அவருக்கு அந்த எண்ணம் இருந்ததோ இல்லையோ, ஆனால் ஆயிரம் ஆண்டுகளாக வட இந்திய ஜைன யாத்திரிகர்கள் தென் இந்தியாவிற்கு விஜயம் செய்ய பகவான் பாகுபலி யின் இந்தப் பரந்த உருவம் கவர்ச்சிப் பொருளாக விளங்கி வருகிறது. இரண்டாவது கவர்ச்சிப் பொருள் மூடுபத்திரியில் உள்ள இரத்தினமய பிம்பங்களாகும். இவற்றைத் தரிசிக்க இலட்சக்கணக்கான யாத்திரிகர்கள் ஆண்டுதோறும் வடநாட்டிலிருந்து தென்னாட்டிற்குச் செல்லுகின்றனர். பாகுபலி சுவாமியை தரிசிக்கும் பவித்திர எண்ணத்தால் தூண்டப்பட்டு வருகின்றனர். மேலும் அவருடைய பெருமைகளைப் புகழ்ந்து பாடி திரும்புகின்றனர். எந்தக் கவர்ச்சி, உருவத்திற்கு உரிய பாகுபலியைக்கூட மறக்க வைக்கிறதோ அத்தகைய கவர்ச்சி மிக்க சிலைகள் மிகக் குறைவு. பாகுபலியின் பரந்த உருவம் எப்படி இருக்கிறதென்றால் தரிசிக்கும்போது, சிலையைப் போற்றும் மக்களைத்தான் காண முடிகிறது. சிலையின் மூலபுருடர்பால் கவனம் செல்லுவதில்லை.

         'என்ன பரந்த உருவம்? கல் என்றாலும் எவ்வளவு நேர்த்தி? மாசு காண முடியாத வடிவம், ஆண்டுகள் ஆயிரம் கடந்து விட்டதென்றாலும் அதில் ஒரு கீரலைக்கூட காணமுடியாது', என்று பேசிக்கொள்ளும் மக்கள் உங்கள் பார்வைக்கு எங்கும் கிடைப்பார்கள். "என்ன பளபளப்பு? ஆயிரம் ஆண்டுகள் ஆகியும் அதன் 'பாலிஷ்' குறையவே இல்லை. இதை உருவாக்கிய சிற்பி புனிதமானவன் என்றாலும், உருவாக்கக் காரணமாக இருந்தவனும் புனிதத் தன்மையில் குறைந்தவனல்ல என்று, செய்தவர், செய்வித்தவர், அல்லது சிலையின் பாலிஷைப் பற்றிப் பேசுவர், பாராட்டுவர். எவர் இச்சிலைக்கு உரியவரோ, எவர் யுகத்தின் தொடக்கத்தில் கடுந்தவம் புரிந்து முதன் முதல் முக்தியடைந்தவரோ,  அவரைப்பற்றிய பேச்சு எந்த கட்டத்திலும் வருவதில்லை. மக்களுக்கு ஆயிரம் ஆண்டு என்பது நினைவிற்கு வருகிறது; ஆயிரம் ஆண்டு பெருமைகள் தெரிய வருகின்றன. சிலை வடித்து ஆயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டது; ஆனால் இது எவருடைய சிலையோ, அவர் தோன்றி எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆயின? என்பவனவற்றில் எண்ணம் செலுத்துவதில்லை; பெருமை தெரிவதில்லை.

      சாதாரண சிலைகள் கூட உரியவரை நினைவு கொள்ளச் செய்கின்றன; ஆனால், இது ஒரு இணையற்ற சிலை. தரிசிப்பவர்களைத் தன்மயமாக்கி தரிசிப்பவர்களையே மறக்கச் செய்கிறது, பிறகு என்ன? தன்னை மறந்தவர்கள் உருவத்திற்கு உடையவரையும் மறந்து விடுகிறார்கள்.




வடக்கையும் தெற்கையும் இணைக்கச் செய்யவல்ல இந்த பரந்த உருவத்தின் முன் 1981 பிப்ரவரி 23 ந் தேதி இருபது மாநிலங்களிலிருந்து வந்த இருபது மொழிகளைப் பேசும் பத்து இலட்சம் மக்கள் நிற்கும்போது, எல்லா வேற்றுமைகளையும் மறந்து, "நாம் எல்லோரும் ஒரே பரமாத்மனின் பக்தர்கள், ஒன்றானவர்கள், என்ற உணர்வை கட்டாயம் கொள்வார்கள். இத்தகைய ஒற்றுமையின் சின்னம்தான் இந்த பரந்த சிலை. பாகுபலியின் வரம்பில் தைரியத்திற்கும், தியானத்திற்கும் ஒரு எடுத்துக்காட்டு, அவருடைய உடலில் கொடிகள் படர்ந்தன. அவர் நின்ற இடத்தில் பாம்புகள் புற்றை  உண்டாக்கிக் கொண்டன. ஆனால் அவருடைய தைரியம் சிதையவில்லை, தியானம் கலையவில்லை.  அவர் தன்னுள் சென்றார் என்றால் சென்றே விட்டார். பிறகு புறத்துக்கு வரவே இல்லை, சில வினாடிகள் அவருடைய உள் உணர்வு ஆன்மாவிலிருந்த விலகினாலும கூட, மீண்டும் அதிலேயே (ஆன்மாவில்) நிலைக்க உக்கிர புருஷார்த்தத்தில் ஈடுபட்டார். இப்படிப் பல முறை நிகழ்ந்தன, ஆனால் அதிலேயே (ஆன்மாவிலேயே) தோய்ந்து விட்டார். தன்னுடை குறிக்கோளான "ஸர்வக்ஞ"  நிலையை அடைந்து அதிலேயே நிலைத்து விட்டார்.






     ஆத்ம தர்மத்தின் ஆசிரியர் இந்த கட்டுரை வாயிலாக பகவான் பாகுபலிக்கு பக்தி கலந்த நமஸ்காரத்தைத் தெரிவித்துக்கொண்டு, நான் இந்தச் சிலை மற்றும் சிலைக்குரிய பாகுபலியைப் பற்றி வழக்கில் உள்ள கதைகளையும், செவிவழிச் செய்திகளையும் விமர்சிக்க விரும்பவில்லை. ஏனென்றால் அவை வேண்டிய அளவு விமர்சிக்கப்பட்டு விட்டன; ஆதலால் மேலும் விமர்சிக்கத் தொடங்கினால் அரைத்த மாவையே அரைப்பதாக இருக்குமே தவிர புதியதாக ஒன்றும் இருக்காது. மேலும் தொடர்புள்ளவகையிலும், தொடர்பில்லாத  வகையிலும் வெகுவாக விமர்சிக்கப்பட்ட விமர்சனங்களை மீண்டும், மீண்டும் விமர்சித்து "ஆத்ம தர்மம் போன்ற  இதழின், ஆழ்கடல் சென்று பார்க்கும் வாசகர்களின் பொன்னான நேரத்தை வீணாக்குவதில் எனக்கு விருப்பமில்லை. எந்த மார்க்கத்தில் அந்த மகா தபஸ்வி (பாகுபலி) யுகத்தின் தொடக்கத்தில் சென்றாரோ, எவருடைய வரலாறு ஆயிரம் ஆண்டுகளாக மட்டுமல்ல, மாறாக யுகத்தின் தொடக்கத்திலிருந்தே ஆக்கபூர்வமான ஊக்கம் அளித்து வருகிறதோ, எவை நம்மையெல்லாம் அம் மார்க்கத்தின்பால் ஊக்குவிக்கின்றனவோ , அத்தகைய விமர்சனங்களையே விமர்சிக்க விரும்புகிறேன்.

       பூமி சாம்ராஜ்யததை இழந்த பிறகு அனைத்தையும் துறக்கவேண்டி நேருகிறது ; ஆனால் பாகுபலி சாம்ராஜ்யத்தை வென்ற பிறகு துறந்து சென்றார். வெற்றி கண்டு துறப்பதில் காணப்படும் அழகும், பற்றற்ற தன்மையும் தோல்வி கண்டு துறப்பதில் எங்கு காணப்படுகின்றன? பாகுபலியின் தியாகம் , ஏதும் கிடைக்காததால் ஏற்பட்டதல்ல, எல்லாம் கிடைத்த பின் செய்த தியாகம் ஆகும். வைராக்ய நிலை உச்சகட்டத்தில் இருந்தது. பாகுபலியின் ஷமை (பொறுமை) வேறு வழியின்மையால் மகாத்மா காந்தி, என்ற  பெயர் பெற்றுக்கொள்வதல்ல, மாறாக 'வீரபுருடனின் அலங்காரமாக' அது (ஷமை) விளங்கியது.




இந்த பரந்த சிலை வரம்பில் தோல்வல்லமையைப் பெற்றிருந்தவனுடையது மட்டுமன்று, வரம்பில் ஆன்ம பலம் பெற்றவனுடையதும்  ஆகும். அவர் பௌதனபுரத்து மன்னனாக இருந்து சக்கரவர்த்தி பரதனுடன் போரிட்டபோது அவருடைய தோல்வல்லமை காணப்பட்டது. ஆனால் இந்தச்  சிலை பௌதனபுரத்து மன்னனுடைய உருவம் அல்ல , பெறும் தபஸ்வி, முனிபுங்கர், பாகுபலியின் உருவமாகும் ; இதில் அவருடைய இணையற்ற தவத்தின் கம்பீரத்தோற்றம் பளிச்சிடுகிறது. அவரைப் போன்ற தன்மானமும், கொள்கையில் உறுதியும் கொண்டவர் வரலாற்றிற்கு அரியர் ; புராணங்களின் ஏடுகளிலும் காண முடிவதில்லை.

       இவர் வெறும் தியாகி, தபஸ்வி, பற்றற்றவர் மட்டுமல்ல, கொள்கையில் மாறாத உறுதி உடையவர். எந்நிலையிலும் பின்புறம் திரும்பிப் பார்க்கக் கற்றதே இல்லை போலும் ! எனவேதான்,

      போரில் ஈடுபட்டார் என்றால் தொடர்ந்து ஈடுபட்டே இருந்தார். வெற்றித் திருமகளை மணந்த பிறகே ஓய்வு பெற்றார். எப்போது தன்னில் தோய்ந்தாரோ, தன் பேரானந்தத்தில் மூழ்கினாரோ, அப்படி மூழ்கின அவர் மீண்டும் புறத்தைப் பார்க்கவே இல்லை. பிறகு என்ன ?  வினைப் பகைவர்களை வென்று அனந்த சதுஷ்டயங்களைப் பெற்று இந்த யுகத்தின் தொடக்கத்தில் முக்தி அடைந்தார். பாகுபலி திகம்பர நிலையை அடைந்து தன்னுள் தோய்ந்தபின் அவர் வெளியே வரவே இல்லை ; சில சமயம் சைதன்ய உபயோகம் ஆன்மாவினின்றும் விலகினாலும், மீண்டும் அதிலேயே தோய்ந்துவிட முழு ஆற்றலோடு புருஷார்த்தத்தில் ஈடுபட்டார். ஓராண்டு வரை ஆன்மாவில் தோய்ந்திருக்கும் நிலையிலேயே இருந்தார். அல்லது ஆன்மாவில் தோய்ந்திருக்கும் முயற்சியான பயனுள்ள அனந்த புருஷார்தத்தில் ஈடுபட்டிருந்தார்.

       தீஷைக்குப் பிறகு ஆகாரம் ஏற்பது, ஆகாரத்திற்குச் செல்வது, போன்றவை ஒருபுறம் இருக்கட்டும், ஆகாரம் கொள்ளவேண்டும் என்ற எண்ணங்கூட அவரைத் தொட்டுப் பார்த்ததில்லை. ஓராண்டுவரை ஏன் அவர் இன்றுவரை -- ஆன்மாவில்தான் தோய்ந்திருக்கிறார். ஓராண்டு என்பது அவருடைய சாதனையின் உயர்ந்த பட்ச காலம், அதன் பிறகு அவருடைய சாதனை  சித்தியாகி விட்டது. இன்றுவரை மட்டுமல்ல, தொடர்ந்து அனந்த காலம் வரை அவ்வடிவமாகவே இருப்பார்.



      இந்த பரந்த சிலை வரம்பில் தோல்வல்லமையைப் பெற்றிருந்தவனுடையது மட்டுமன்று, வரம்பில் ஆன்ம பலம் பெற்றவனுடையதும்  ஆகும். அவர் பௌதனபுரத்து மன்னனாக இருந்து சக்கரவர்த்தி பரதனுடன் போரிட்டபோது அவருடைய தோல்வல்லமை காணப்பட்டது. ஆனால் இந்தச்  சிலை பௌதனபுரத்து மன்னனுடைய உருவம் அல்ல , பெறும் தபஸ்வி, முனிபுங்கர், பாகுபலியின் உருவமாகும் ; இதில் அவருடைய இணையற்ற தவத்தின் கம்பீரத்தோற்றம் பளிச்சிடுகிறது. அவரைப் போன்ற தன்மானமும், கொள்கையில் உறுதியும் கொண்டவர் வரலாற்றிற்கு அரியர் ; புராணங்களின் ஏடுகளிலும் காண முடிவதில்லை.

       இவர் வெறும் தியாகி, தபஸ்வி, பற்றற்றவர் மட்டுமல்ல, கொள்கையில் மாறாத உறுதி உடையவர். எந்நிலையிலும் பின்புறம் திரும்பிப் பார்க்கக் கற்றதே இல்லை போலும் ! எனவேதான்,

      போரில் ஈடுபட்டார் என்றால் தொடர்ந்து ஈடுபட்டே இருந்தார். வெற்றித் திருமகளை மணந்த பிறகே ஓய்வு பெற்றார். எப்போது தன்னில் தோய்ந்தாரோ, தன் பேரானந்தத்தில் மூழ்கினாரோ, அப்படி மூழ்கின அவர் மீண்டும் புறத்தைப் பார்க்கவே இல்லை. பிறகு என்ன ?  வினைப் பகைவர்களை வென்று அனந்த சதுஷ்டயங்களைப் பெற்று இந்த யுகத்தின் தொடக்கத்தில் முக்தி அடைந்தார். பாகுபலி திகம்பர நிலையை அடைந்து தன்னுள் தோய்ந்தபின் அவர் வெளியே வரவே இல்லை ; சில சமயம் சைதன்ய உபயோகம் ஆன்மாவினின்றும் விலகினாலும், மீண்டும் அதிலேயே தோய்ந்துவிட முழு ஆற்றலோடு புருஷார்த்தத்தில் ஈடுபட்டார். ஓராண்டு வரை ஆன்மாவில் தோய்ந்திருக்கும் நிலையிலேயே இருந்தார். அல்லது ஆன்மாவில் தோய்ந்திருக்கும் முயற்சியான பயனுள்ள அனந்த புருஷார்தத்தில் ஈடுபட்டிருந்தார்.

       தீஷைக்குப் பிறகு ஆகாரம் ஏற்பது, ஆகாரத்திற்குச் செல்வது, போன்றவை ஒருபுறம் இருக்கட்டும், ஆகாரம் கொள்ளவேண்டும் என்ற எண்ணங்கூட அவரைத் தொட்டுப் பார்த்ததில்லை. ஓராண்டுவரை ஏன் அவர் இன்றுவரை -- ஆன்மாவில்தான் தோய்ந்திருக்கிறார். ஓராண்டு என்பது அவருடைய சாதனையின் உயர்ந்த பட்ச காலம், அதன் பிறகு அவருடைய சாதனை  சித்தியாகி விட்டது. இன்றுவரை மட்டுமல்ல, தொடர்ந்து அனந்த காலம் வரை அவ்வடிவமாகவே இருப்பார்.



        இன்று கோடிக்கணக்கான கண்கள் பகவான் பாகுபலி பிரதி பிம்பத்தை (சிலையை) வியப்புடன் காண்கின்றன. ஆனால் அவர் எப்போது ஒருமுறை கண்களை மூடினாரோ, அதுமுதல் இன்றுவரை திறக்கவே இல்லை. கண் இருந்தும், அதைத் திறக்காமலேயே அவர் எல்லாவற்றையும் பார்க்கலானார். அறியலானார் ; சிறிது காலத்திற்குப் பிறகு, தன்னுடைய அவசியமின்மையை உணர்ந்து, கண்கள் மட்டுமல்ல, கண்களுக்கு ஆதாரமாக இருந்த உடலும் நீங்கி விட்டது. அப்போது அவர் 'விதேக' ராகிவிட்டார். (விதேகம் = உடல் இல்லாதவர்)

         இந்த பரந்த ஜினபிம்பம் - படிமம்  அவர் ஆன்மாவில் தோய்ந்திருந்தபோது இருந்த நிலை. பரம பவித்ரமான ' நக்ன' திகம்பர நிலைக்கு இது இணையற்ற ஜினபிம்பம், திகம்பர நிலையின் சாதனைக்கு எடுத்துக்காட்டாக இருப்பதுடன், ஒருபுறம் உலகை திகம்பர நிலைக்கு ஈர்த்துக் கொண்டிருக்கிறது. மறுபுறம் திகம்பர நிலை விளையாட்டல்ல என்பதையும் உணர்த்துகிறது. விந்திய மலை மீது வீற்றிருக்கிற, செடி கொடிகளால் சூழப்பட்டிருக்கிற இந்த பரந்த திகம்பர ஜினபிம்பத்தை நிறுவியதன் நோக்கம், ஆசாரத்தில் குறைந்த திகம்பரர்களுக்கு திகம்பர சாதுக்களின் உறுதி மிக்க வடிவத்தைக் காண்பிப்பது கூட காரணமாக இருக்கலாம் என்றால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஏனெனில் அப்போதே ஆசாரத்தில் குறைபாடுகள் தோன்றத் துவங்கிவிட்டன.

      ஒன்பதாவது நூற்றாண்டில் தலைசிறந்து விளங்கிய ஆசாரிய குணபத்திரர் ஆத்மானு சாசனத்தில் திகம்பர முனிகள் நகர வாழ்வில் காட்டும் ஆர்வத்தை விமர்சிக்கும் வகையில் கூறுகிறார்.



ஆசாரிய குணபத்திரர் ஆத்மானு சாசனத்தில்,
இதஸ் ததஸ்ச த்ரஸ்யந்தோ, விபாவர்யாம் யதா ம்ருகா :
வனாத் விசந்த்யுப கிராமம். கலௌ கஷ்டம் திபஸ்வின :

    " எப்படி இங்குமங்கும் பயந்த நரி இரவில் காட்டை விட்டு கிராமத்திற்கு அருகில் வந்து விடுகிறதோ, அதுபோன்ற இந்த கலிகாலத்தில் முனிகள் கூட காட்டை விட்டு கிராமத்திற்கு அருகில் வசிக்கத் தொடங்கி விட்டார்கள். இது வருந்தத் தக்க விஷயம்.

       நகர வாழ்க்கை, இன்ப அனுகூலங்களால் ஈர்த்துள்ள திகம்பரர்களுக்கு , வனாந்திரங்களில் மலை உச்சிமீது கொடி - புதருகளால் சுற்றப்பட்ட முனி நிலையை இந்தச் சிலை நிச்சயமாக சுட்டிக் காட்டுகிறது. சிலை வடிப்பதில் இதை வடித்தவர் உள்ளத்தில் மேற்கண்ட எண்ணம் இருந்திருக்கலாம். இல்லறத்தான் முனிபுங்கர்களுக்கு ஏதேனும் சொல்ல விரும்பினால் அதற்கு இதைவிட அழகிய உருவம் வேறு என்னவாக இருக்க முடியும்? இல்லையேல் அவர் இருபத்துநான்கு தீர்த்தங்கரர், அரஹந்த நிலையின் சிலைகளை ஏன் நிறுவ்வில்லை? முனிகள் முன், ஒரு முன் மாதிரியை வைக்கவே முனிநிலை சிலை வடிக்கப்பட்டதென்று தோன்றுகிறது ; ஏனென்றால் அரஹந்தருடைய சிலையைக் கொடிகளால் சுற்றப்பட முடியாது. முந்திய பரம்பரையினின்றும் விலகி, முனிபுங்கவர் பாகுபலியின், கொடிகளால் கட்டப்பட்ட சிலையை நிறுவியதில் ஏதோ ஒரு சிறப்புக் காரணம் நிச்சயம் இருக்க வேண்டும்.

       *திகம்பர நிலைமீது வெறுப்பும், நம்பிக்கையின்மையும் உள்ளவரிடையே திகம்பர முனிகள் தங்கு தடையின்றி விஹாரம் செய்வதில் எப்போதும் பல தடைகள் இருந்து வந்துள்ளன ; பத்மாசன முத்திரை (உட்கார்ந்த நிலை) யில் உள்ள திகம்பர ஜினபிம்பங்களை சுவேதாம்பர மாக்குவது கூட நிகழ்ந்துள்ளது. இப்படிப்பட்ட ' நக்ன திகம்பர கட்காசன ' (நின்ற நிலை) பரந்த சிலை வடிக்கப்பட்டு 'நக்ன நிலை' (பிறந்த நிலை) தெளிவாக இருப்பதால் சுவேதாம்பர மயமாக்க முடியாமலும், ' நக்ன' திகம்பர முனிகளின் தங்கு தடையில்லாத விஹாரத்திற்கு எடுத்துக் காட்டாக அமையட்டும் என்று சிலை வடித்தவர் உள்ளத்தில் ஒரு காரணம் இருந்திருக்கலாம்.




இந்தப் பெருமைமிக்க உண்மைகள் வெளிப்பட்டதில் ருசி இல்லாதவர் இந்த ஊகங்கள் எல்லாம் என்னுடைய (ஆசிரியர்) கற்பனைகளாகும் என்றும் சொல்லலாம். ஆனால் நான் சொல்லுவது என்னவென்றால் சாமுண்டராயன் போன்ற சிறந்த நுண்ணறிவு படைத்த, அரசியல் வல்லமையுடைய அமைச்சனுக்கு பாரத நாட்டின் ஒற்றுமை, திகம்பர முனைகளின் சிறப்பு அவர்களது தடையில்லாத விஹாரம் போன்ற பெருமை மிக்க விஷயங்கள் பால் விழிப்புணர்வு இருந்திருக்கும் என்பது மட்டுமல்ல, அது இருக்க வேண்டியது மிக்க அவசியமும், இயல்பும் ஆகும்.

      மேலும் பழக்கவழக்கம் என்று தலைகீழான பயன்ற்ற செவிவழி வதந்திகளுக்கு உண்மை வடிவம் கொடுத்து நாம் பரப்பத் தயங்காதபோது, அறிவிற்கு இசைந்த சத்தியத்திற்கு மிக அருகில் உள்ள ஆக்கபூர்வகமான ஊக்கம் அளிக்கக் கூடிய, வழிகாட்டியாக உள்ள இத்தகைய உண்மைகளுக்கும் தக்க அளவு பெருமை கொடுத்தே  ஆக வேண்டும்.

         நாம் இந்தப் புனித சந்தர்ப்பத்தில் பரந்த இந்த ஜினபிம்பம் காட்டும் பெருமைமிக்க குறிப்பைப் புரிந்து கொள்ள முடிந்தால், வாழ்க்கையில் இதனின்றும் ஏதாவது கற்க முடிந்தால், நம்முடைய இந்த உற்சவம் பயனுள்ளதாக இருக்க முடியும், மேலும் ஒற்றுமை என்ற கயிற்றால் கட்டவும் படுவோம், எனவே ஒழுக்கச் சிதைவினின்றும் விலகி நின்று திகம்பர நிலையின் உண்மையை, பெருமையை நிலை நிறுத்துவோம்.

        மேற்கண்ட ஆய்வுக் குறிப்புகள், சிலை, சிற்பி, சிலையை நிறுவியவர் எழுப்பிய எண்ணங்களாகும். இனி சிலை வடிவில் உள்ள பகவான் பாகுபலியின் வாழ்க்கை நிகழ்ச்சிகளைச் சற்று பார்ப்போம்.




         வீரன் பாகுபலியின் வாழ்க்கை நிகழ்ச்சிகளில் மிக அதிகமாக எல்லோராலும் பேசப்படுவது- பரதர், பாகுபலி யுத்தம். இரு தரப்பு சேனைகள் போர்க்களத்தில் போர் புரிய தயாராக இருந்த போது, போர் சேனைகளுடன் அல்ல, இரு சகோதரர்களோடு ஆயுத மின்றி  நடக்கவேண்டும் என்று அமைச்சர்கள் சார்பிலிருந்து செய்தி வருகிறது. இந்தச் சந்தர்பத்தில் மூவகைப் போர் முடிவாயிற்று. அவை நேத்திரயுத்தம், ஜலயுத்தம், மல்யுத்தம்.

      இந்தச் சூழ்நிலையை ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால் பல ஆழ்ந்த கருத்துகள் காணவரும். இந்த முடிவு குரோதம், மானம், உலோபங்களால் ஆட்கொள்ளப்பட்ட, மன்னர்களுக்கு எதிராக, விவேகம் படைத்த அமைச்சர்களின் வெற்றியைக் குறிப்பதாகும். இவ்வமைச்சர்கள் யுகத்தின் தொடக்கத்திலேயே பொருள் ,பூமி காரணமாக நடக்கப் போகும் போரை ஒரு அஹிம்சா யுத்தமாக மாற்றி விட்டார்கள். பயங்கரமான போருக்கு விளையாட்டுப் போட்டி வடிவம் கொடுத்து விட்டார்கள். வெற்றி தோல்வியில் காணக்கூடிய விளையாட்டுகளுடைய தோற்றம்(உதயம்) யுகத்தின் தொடக்கத்தில் இந்த நிகழ்ச்சியிலிருந்து தோன்றி இருந்தால் வியப்பேதுமில்லை.

       பாகுபலி பரதனை பின்னர்தான் வெற்றிகொண்டார். ஆனால் பாகுபலியின் அமைச்சர்கள் தங்களுடைய அரசியல் தந்திரங்களால் பரதனின் அமைச்சர்களை அதற்கு முன்னரே வென்று விட்டார்கள். அதாவது அவர்கள் (பாகுபலியின் அமைச்சர்கள்) பரதனுடைய அமைச்சர்களையும், பரதனையும் தங்கள் கருத்தை ஏற்கச் செய்து விட்டார்கள். ஏனென்றால் தங்களது அரசியல் தந்திரத்தால் சக்கரவர்த்தியின் சக்தியாக விளங்கும் சக்கர ரத்தினமும், சேனைகளும் இருக்கும்போதே பரதனை நிராயுதபாணியாக்கி விட்டார்கள். சக்கரவர்த்தி என்பது தனி மனிதன் பெயரல்ல; மாறாக எல்லாச் சுற்றமும் சேர்ந்தவன்தான் சக்கரவர்த்தி எனப்படுகிறான். தான் செய்த தவறு மூவகைப் போரிலும் தோல்வியுற்ற பிறகே பரதனுக்குத் தெரிய வந்தது. இதனால்தான் இறுதியில் வெகுண்டு சக்கர ரத்தினத்தை ஏவி விட்டான். போருக்கு முன் அமைச்சர்கள் கூறிய நிபந்தனையை ஏற்க வேண்டிய கட்டாயம் ஏதும் இல்லை.

 

       ஆறு கண்டம் பரதன் முன் அல்ல, பரத சக்கரவர்த்தியின் முன் வணங்கி இருந்தன. பாகுபலியினுடன் பரதசக்ரவர்த்தி அல்ல வெறும் பரதன்தான் போர் புரிந்து கொண்டிருந்தான்.

      இன்னும் கொஞ்சம் ஆழத்திற்குச் செல்லும்போது மேலும் பல புதிய இரகசியங்கள் காணப்படுகின்றன. இந்த இரகசியங்கள் உங்களுக்கும் ஏற்புடையதாக இருக்கலாம்.

       இரு தரப்பு அமைச்சர்களும் போரைத் தவிர்க்க விரும்பினார்கள். "மக்களோ - போர் வீரர்களோ ஏன் மடிய வேண்டும், இரு சகோதரர்களே......." இப்படித் தங்கள் எஜமானனிடம் நம்பிக்கை வைத்துள்ள அமைச்சர்கள் எப்படி நினைக்க முடியும்? ஆகவே அவர்கள் முடிந்த வகையில் போரைத் தவிர்க்க விரும்பினார்கள். அரசைக் கைப்பற்றுவதிலோ, அடிமையை ஏற்பதிலோ அவ்வளவு சிக்கல் இல்லை. எவ்வளவு மான அவமானத்தின் பால் இருந்தது என்று அவர்கள் உணர்ந்திருந்தார்கள். பிரச்சனை மரியாதையைப் பற்றியது, மீசையைப் பற்றியது! பூமியைப் பற்றியது அல்ல ! தலை வணங்குவதோ, தலை வணங்காததோ அல்ல ! ஏனென்றால் தன் மூத்த சகோதரர் என்ற  முறையில் பாகுபலி நமஸ்காரம் செய்யத் தயாராக இருந்தார். மேலும் சக்கர ரத்தினத்தின் மார்கம் தடைபடாமல் இருந்திருக்குமேயானால் பாகுபலியை வயப்படுத்த வேண்டுமென்ற எண்ணமே பரதனுக்கு உதித்திருக்காது. பரதன் பாகுபலியை வயப்படுத்தி அடிமையாக்க விரும்பவில்லை. மாறாக வலது கையாக்கிக் கொள்ளவே விரும்பினான். பாகுபலியும் அன்புடன் சக்கரவர்த்திக்கு ஒத்துழைத்து இருக்கக் கூடும். அங்கு அவமானமல்ல பெரும் சிறப்பு நடைபெற இருந்தது.

          சிக்கல் பெரிதல்ல, தவிர்க்க விரும்பி இருந்தால் கூடிப்பேசி சுலபமாக தவிர்த்திருக்கலாம். ஆறு கண்டத்திற்கும் சக்கரவர்த்தி ஒருவன்தான் என்றால், அவனைத் தவிர்த்து மற்ற அனைவரும் அடிமைகளா என்ன ?    ஒரு சக்கரவர்த்தியின் சாம்ராஜ்யத்தில் இலட்சக்கணக்கான சரமசரீரிகள், (கடைசி உடலைப் பெற்றுள்ளவர்கள், அதே பிறவியில் முக்தி யடைபவர்கள்) இருக்கிறார்கள். அப்படியானால் அவர்கள் எல்லோரும் தன் மானத்தை விற்று இருப்பார்களா ? மித்யா திருஷ்டிகள் இராஜ்யத்தில் கூட சம்யக் திருஷ்டிகளும், விரதிகளும் தன்மானத்தோடு இருக்கமுடிகிறது என்றால்----- ஏன் இருக்கவேச் செய்கிறார்கள் என்றால்  -- சம்யக்திருஷ்டியான மூத்த சகோதரன் பரதன் சக்ரவர்த்தியாக இருக்கும் நாட்டில் பாகுபலியின் தன்மானம் எப்படி மாசு பெறமுடியும்.
 


      தூதர்கள் மூலம் பேசுவதால் சில சமயம் பேச்சு வார்த்தை சுமுகமாக முடிவதில்லை. மாறாக சுமுகமான பேச்சு கூட தகர்ந்து விடுகிறது. இங்கு நடந்ததும் அதுதான்.

       பரதன் பாகுபலியைத் தானே சந்தித்து அன்பாக அவர் முன் தன் விருப்பத்தைத் தெளிவு படுத்தியிருந்தால் பாகுபலி சுலபமாக அப்போதே ஒரு சமாதான திட்டத்தை வைத்திருக்கக் கூடும். ஆகவே அமைச்சர்கள், இரு சகோதரர்களும் நேருக்கு நேர் ஏன் சந்திக்கக்கூடாது? என்று நினைத்தார்கள். அவர்கள் கண்கள் இரண்டும் கலக்கும்போது துவேஷம் அனைத்தும் கரைந்து விடும். பாசம் பொங்கிவரும் சிக்கலுக்கான சமாதானம் சுலபமாக கிடைத்துவிடும். நேத்ரயுத்தம் என்பது கண்ணோடு கண் கலக்கச் செய்யும் ஒரு நாடகமேயன்றி வேறில்லை.

       எவருடைய உள்ளத்தில் குற்றம் நிறைந்திருக்குமோ அவருடைய கண்கள் கீழ் நோக்காமல் இருக்க முடியாது. பரதனுடைய கண்கள் பலவீனமானவை. ஆகவே அவை கீழ் நோக்கின என்று கூறமுடியாது. ஏனென்றால் சக்கரவர்த்தியின் கண்கள் எல்லோரையும்விட பலம் பொருந்தியவை. ஆயினும் அவருடைய மனதில் தந்தை விருஷபதேவரால் அளிக்கப்பட்ட, பாகுபலிக்குச் சொந்தமான பூமியை அபகரித்துக் கொள்ளவேண்டுமென்ற தீய, எண்ணம் இருந்ததால் சக்கரவர்த்தியின் கண்கள் கீழ்நோக்கின.

      தாம் நினைத்தபடி நடைபெறாததால் அமைச்சர்கள் யோசித்தார்கள். இருவரும் சூடாகவே உள்ளனர். மான கஷாயத்தால் நினைவிழந்தவர்கள் முகத்தில் தண்ணீர் தெளித்தால் சுய உணர்வுக்கு வருவார்கள் என்ற நினைப்பில் "ஜலயுத்தம்" நீர் விளையாட்டுப் போட்டி வைத்தார்கள். ஏனென்றால் நீரில் இறங்கிவிட்டால்  இருவரும் தணிந்து விடுவார்கள், நீர் முகத்தில் தெளிக்கப்பட்டதும் உணர்வுக்கு வந்துவிடுவார்களானால் யுத்தம் சந்திப்பில் முடிந்துவிடும். ஆனால் இங்கு வெற்றி கிடைக்கவில்லை. அதாவது மல்லயுத்தம் நடந்தது.







         இருவருடைய உடலிலும் ஒரு தந்தையின் இரத்தம்  ஓடிக்கொண்டிருக்கிறது. எப்போது அவர்கள் ஒருவருக்கொருவர் பிடியில் சிக்கிக் கொள்வார்களோ அப்போது உடல் வியக்கத்தக்கச் செயலை காண்பிக்காமல் இருக்காது. இப்படி இருதரப்பு அமைச்சர்களுக்கும் நம்பிக்கை இருந்தது. அதில் வெற்றியும் பெற்று விட்டார்கள். பாகுபலியின் துவேஷம், வெகுளி, ராக பாவமாக (பாசமாக) மாறியது. அவர் பரதனை தலைமீது தூக்கிக் கொண்டார். ஆனால் கீழே எறியவில்லை. விரும்பினால் கீழே எறிந்திருக்க முடியும். அவரைத் தோல்வி காணச் செய்திருக்கலாம், ஆனால் வெற்றி பெற வேண்டுமென்ற எண்ணம் இருக்கவில்லை. சகோதரன்பால், பூஜ்ய சகோதரன்பால் விநயபாவம் தோன்றிவிட்டது. ஆகவே அவரை தோல்வியுறச் செய்யவில்லை. ஆனால் போர், தீர்ப்பு இல்லாமலே முடிந்து விட்டது. ஏனென்றால் எதனால் வெல்ல விரும்பினாரோ, பாகுபலியின் அந்த 'மானகஷாயம்' உருகிவிட்டது.

       பரதன் தோல்வியுறவில்லை என்றாலும் அவர் தோல்வியின் எல்லைக்குச் சென்று தோல்வி உணர்வைக் கொண்டார். அவருடைய குரோதம் வீறுகொண்டெழுந்தது. விவேகம் மறைந்து விட்டது. அவருடைய சக்ரவர்த்தித்வநிலை அலைமோத ஆரம்பித்து விட்டதுதான் தாமதம், சக்ர ரத்தினத்தை ஏவினான். சைதன்யசுபாவமுடைய பரதன் விவேகத்தை இழந்து விட்டான். ஆனால் ஜட சக்ரரத்தினம் தன் சுபாவத்தை இழக்கவில்லை. அது பாகுபலியை நேசித்தது. ஆனால் அவர் கையில் (பாகுபலி) இருக்கவில்லை. திரும்ப வந்தது பரதன் கைக்கே.

     இப்படிச் சக்கரம் தன் முடிவைத் தெரிவித்துவிட்டது. அதாவது சக்கரவர்த்தி பரதனே, பாகுபலி அல்ல. பரதனைத் தழுவியதால் பாகுபலியின் துவேஷம் பாசமாக, பாசம் வைராக்கியமாக மாறிவிட்டது.

      இவ்வாறு பரதன் சக்கரவர்த்தியானார். பாகுபலி அவருக்கும் (பரதனுக்கும்) பூஜ்யரானார்.






      பாகுபலியின் இந்த மிக உயர்ந்த இரகசியம் நிறைந்த வாழ்க்கை நிகழ்ச்சியிலிருந்து தற்போதைய சந்தர்பத்தில் நாம் கற்றுக்கொள்ள வேண்டியது இதுதான். அதாவது, தவறான வதந்திகளால் நமக்குள் உண்டான பிரச்னைகளை நேருக்கு நேர் அமர்ந்து பேசி சமாதானம் காண்போமானால் வீணான மோதல்களிலிருந்து பெரும்பாலும் தப்பிக்கலாம். நாசத்தனமான போர்நிலையை அஹிம்சாவடிவமான போட்டிகளாக மாற்றி அமைத்து உலகை அழிவினின்றும் காப்பாற்ற முடியும்.

     பகவான் பாகுபலியின் பாதங்களில் நூறாறு முறை வணங்கி இந்த மகோற்சவம் நம்முடைய ஒற்றுமையை உறுதிப்படுத்தட்டும். திகம்பர நிலையின் பெருமையை உயர்த்தட்டும் ; நம் எல்லோருக்கும் "பகவான் பாகுபலி" யின் வழியில் முன்னேறிச் செல்வதற்கு தூண்டுகோலாக இருக்கட்டும் என்ற பவித்ர எண்ணத்துடன் ஓய்வு பெறுகிறேன்.

தன்னுள்ளே நின்று தன்னைத்தான் நரகத்துள் உய்க்கும்,

 தன்னுள்ளே நின்று தன்னைத்தான் துறக்கத்து வைக்கும்,

தன்னுள்ளே நின்று தன்னைத்தான் தடுமாற்றுள் உய்க்கும்,

தன்னுள்ளே நின்று தன்னைத்தானே சித்தி யகத்துவைக்கும்.

தான் எனப்படுவது எட்டுவினை விட்ட தன்மை தன்கண்,
ஊனமில் அனந்த நாண்மை இருமையும் ஒருமையாக்கி,
யான் எனது நீங்கும் வினையன்றி யாக்கை சுற்றம்,
யான் எனது என்ன நீங்காது எண்வினைத் தொடரும் என்றான்.

ஐந்தலை அரவம் தன்வாய், ஐந்துடன் கலந்தநஞ்சில்
துன்பம் ஓர் கடிகை அல்லால், துஞ்சினால் தொடர்ந்திடாதாம்.

ஐம்பொறி அரவம் தன் வாய், ஒன்றினால் ஆயநஞ்சு
துஞ்சினால் அநேக காலம், தொடர்ந்து நின்றடுங்கள் கண்டீர்.

            --மேருமந்தரம்

ஆசிரியர்:-
டாக்டர், ஹுகம்சந்த் பாரில்

தமிழாக்கம்:-
பரத சக்ரவர்த்தி ஜெயின் சாஸ்திரி

வெளியிட்டோர்:-
ஸ்ரீ குந்த குந்த-- கஹான் திகம்பர் ஜைன் தீர்த்த சுரக்ஷா டிரஸ்ட்,
ஜைன இலக்கிய ஆராய்ச்சி நிலையம்,
சென்னை-600 001.

வாட்ஸ் அப் பதிவு,
G. துரைராஜ்,
 செய்யாறு.

[குறிப்பு:- இச்சிறு நூல் 1981 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நடந்த ஆயிரம் ஆண்டு பெருவிழா வைபவத்தை முன்னிட்டு, பகவான் பாகுபலியை போற்றி புகழ்ந்து ,டாக்டர் ,ஹுகம்சந்த் பாரில் அவர்களால் வெளியிட்ட படைப்பு ஆகும்

No comments:

Post a Comment