ஆலகிராமத்தில் சமணம்
ஆலகிராமத்தில் சமணம்…..செம்மொழியாம் தமிழுக்கு சங்ககாலம் முதல் இலக்கியங்கள், நீதிநூல்கள், இலக்கண நூல்கள், நிகண்டுகள், கேசிநூல்கள்(தருக்கம்) மற்றும் இன்னும் பிறவகை நூற்சுவடிகளை அளித்த மிகப் பழமையான சமண மதத்தின் தமிழ்நாட்டு வரலாற்று ஏடுகளைப் புரட்டிப் பார்க்கும் போது;

  

யாதவகுல திலகம் ஸ்ரீநேமிநாதர் காலத்தில் அகத்தியர் துவாரகை சென்று பகவானை தரிசித்து திரும்பியபோது சில வேளிர் மற்றும் அருவாளர் குடிகளை தம்முடன்  அழைத்து வந்து தமிழகத்தில் குடியேற்றினார். வேளிர்குலம் சிராப்பள்ளிக்கு தெற்கிலும், அருவாளர் குலம் வடக்கிலும் சமணர் வம்சத்தினை விரிவடையச் செய்தனர் என்றே நூற்குறிப்புகள் எடுத்துரைக்கின்றன.

 

 

அதன் ஆரம்பக்காலச் சான்றுகளான, மதுரை மாங்குளம் போன்ற மலைப்பள்ளிகளில்  பொறிக்கப்பட்டுள்ள கிமு 3ஆம் நூற்றாண்டைச் சார்ந்த தமிழ்-பிராமி கல்வெட்டுகளைக் காணும் போது சமணத்தின்  தொன்மையை நாம் உறுதி செய்து கொண்டாலும் ;

 

முதலாம் பொது ஊழிக்காலத்தில்(C.E.) கர்நாடகத்திலிருந்து இங்கு வந்த சமணத்துறவியர்கள் பூதபலி,  புஷ்பதந்தர்  போன்றோரின் விஜயத்திற்கு பின்னரே தமிழக வரலாற்றில் அதிகாரபூர்வமாக சமணம் இடம்  பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

 

தென்னகச் சமணர்கள் தமிழ் மொழிவழியே அறங்களைப் பரப்பி அமைதியை இங்கு நிலைநாட்டிய பின்னரே தங்களது வாழ்வாதார வளர்ச்சியின் மீது சிறிது கவனம் செலுத்தினர் என்பதை இப்போது வாழும் தமிழ்ச் சமண இல்லறத்தார்களின் பொருளாதார நிலையைக் கண்டாலே தெரிந்து கொள்ளலாம். ஏனெனில் சமணம் பகன்ற அன்னதானம், அபயதானம், சாஸ்திரதானம், மருத்துவதானம் போன்ற நான்கு வகைச்சேவைகளை அப்போது வாழ்ந்த பாமரமக்களுக்கு அளித்து வருவதையே தமது வாழ்வின் முதற்கடமையாய்க் கொண்டிருந்தனர்.

 

சமண மார்க்கத்தை பொ.ஊ. 3 முதல் 7 ஆம் நூற்றாண்டுவரை ஆண்ட களப்பிர அரசர்கள், ஆதரித்தனர். அதேகால பிற்பகுதியில் ஆட்சிசெய்த  பல்லவர்கள் இந்து மதத்துடன், சமண மதத்தையும் ஆதரித்தனர். காஞ்சிபுரத்தில் இப்போதுள்ள த்ரைலோக்யநாதர் கோயிலும், சிதரால் சமணப் பள்ளியும் பல்லவர்கள் காலத்தில் கட்டப்பட்டவை.

 

பாண்டிய மன்னர்கள் ஆரம்பத்தில் சமணத்தை பின்பற்றினர். பின்னர் சைவர்கள் ஆட்கொண்டனர். இருப்பினும் சித்தன்னவாசல் குகை மற்றும் சமணர் மலை ஆகியவை, பாண்டியர் ஆட்சிக் காலத்தில் பாதுகாக்கப்பட்ட சமணத் தடயங்களை இன்றும் தென்தமிழகத்தில் காணலாம்.

 

சோழர்கள் ஆட்சியின் போதும் சமணம் வளர்ச்சி பெற்றுள்ளது. திருமலை குகை வளாகத்தை கட்டும் பணி முதலாம் ராஜராஜ சோழனின் மூத்த சகோதரி குந்தவை பிராட்டியிடம் ஒப்படைக்கப்பட்டது . திருமலை குகை வளாகத்தில் 3 சமணக் குகைகள், 2 சமண கோவில்கள் மற்றும் 16 அடி உயரமுள்ள தீர்த்தங்கரர் நேமிநாதரின் சிற்பம் செதுக்கப்பட்டு இன்றும் கம்பீரமாக நிற்பதைக்  காணும் போது அதை உறுதி செய்யலாம்.

 

ஆனால் பக்திமார்க்கம் தழைக்கத் துவங்கிய பின்னர் தமிழகம் எங்கும் பரவியிருந்த சமணக் கோவில்கள் பல அழிக்கப்பட்டும், சில உருமாற்றமும் பெற்றன என்பதே உண்மை வரலாறு. இருப்பினும் பொது ஊழி 10ம் நூற்றாண்டிற்குப் பின்னர் எஞ்சிய சமணக்காவலர்களால் முன்பு சிதைந்த சமணக்குகைப்பள்ளிகள், தடயங்கள் பாதுக்காக்கப்பட்டது மட்டுமல்லாமல், மேலும் பல சமணக் கோவில்கள் உருவாக்கம் பெற்றுள்ளது என்பதை இன்று தமிழகம் எங்கும் காணப்படும் சமணச்சின்னங்களே பறைசாற்றுகின்றன.

 

அத்தகைய தொன்மையான வரலாற்றைத் தன்னகத்தே கொண்ட பழம் சமண சமயச்சான்றுகளில் ஒன்று ஆலகிராமம் ஸ்ரீஆதிநாதர் ஜினாலயம். இது மாவட்டத்தலைநகரான விழுப்புரத்திலிருந்து 29 கி.மீ. மற்றும் மாநிலத் தலைநகரான சென்னையிலிருந்து 144 கி.மீ. தொலைவில், மைலத்திலிருந்து 4 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது.

 

முற்காலத்தில்… பல்லவர் (பொ.ஊ. 275 – 897) ஆட்சிக்கால வரையரைக்குட்பட்ட பிரதேசமாக இருந்தபோது ஆலக்கூரை என்று அழைக்கப்பட்டு, பின்னர் சோழர் காலத்தில் (பொ.ஊ. 275 – 897)   ஆர்காமூர் கிராமமாக அரசாங்கப் பதிவேட்டில் இடம் பெற்றிருந்த இந்தத் சிற்றூரில், பல்லவர் காலத்திலிருந்தே இங்கு சமணக் குடும்பங்கள் இருந்துள்ளது என்பது இங்குள்ள வட்டெழுத்துக் கல்வெட்டொன்று கண்டுபிடிக்கப்பட்டபின் நிரூபணம் ஆகியுள்ளது.

 

செஞ்சி சிறுகடம்பூர் மலைப்பகுதி சிம்மபுரத்திலுள்ள திருநாதர்குன்றில் காணப்படும் பொது ஊழி(C.E.) 5ம் காலத்தைச் சார்ந்த கல்வெட்டிலுள்ள வட்டெழுத்துக்களையும், அதே காலத்தைச் சார்ந்த பறையன் பட்டு சமணர்க் குகை, ஆலகிராமக் கல்வெட்டில் காணப்படும் வட்டெழுத்துகளையும்  ஒத்ததாகக் காணும் போது நிரூபணம் ஆகிறது. அதனால் அன்றைய காலக்கட்டத்திலோ, அருகாமைக் காலத்திலோ இங்கு ஒரு சமண அருகக்கோவில் இருந்திருக்க வேண்டும். அது பிற்கால மதச்சூழலில் அழிந்து பட்டிருக்கவேண்டும் என்பதும் புலனாகிறது.

 

வெகுகாலத்திற்குப் பின்னர், மதப்போர்கள் நீங்கி மத நல்லிணக்கம் வளர்ச்சியடைந்த பின் ஆலகிராம சமணஇல்லறத்தார்கள் கூடி ஆலயம் கட்ட முடிவு செய்தபோது, அருகாமையிலுள்ள வேம்பூண்டிக் கிராமத்திலிருந்து ஸ்ரீபார்ஸ்வநாதர் சிலையை வேண்டிப் பெற்று இங்கு ஒரு சிற்றாலயம் அமைத்து வழிபட்டு வந்துள்ளனர்.

 

பின்னாளில் தற்போதுள்ள ஆலயத்தை நிறுவ முற்படும் போது கிராமப் பெயருக்கு பொருத்தமாக ஸ்ரீஆதினாதரை மூலவராக நிறுவி வழிபாட்டிற்கு கொண்டு வந்துள்ளனர். அதாவது சோழர்கால ஆர்காமூராய் விளங்கிய இக்கிராமத்தில் இக்ஷுரச இயந்திரம் பின்நாளில் நிறுவியுள்ளனர். கரும்புபிழியந்திர ஆலை துவக்கப்பட்டதால் ஆலைக்கிராமம்,  ஆலகிராமமாக அழைக்கப்பட்டுள்ளது. அதனால் இக்ஷுவாகு வம்ச முதற்திலகமான  விளங்கும் ஸ்ரீரிஷபநாதரை மூலவராக அமைக்க இவ்வூர் பவ்யர்கள் முடிவு செய்திருக்கலாம். இருப்பினும் ஸ்ரீரிஷபநாதர் மூலவராய் அமர்த்தப்பட்டிருந்தாலும் முன்பு தரிசன மூலவராக இருந்த ஸ்ரீபார்ஸ்வஜினருக்கே தசதின பிரம்மோற்சம் இன்றும் நிகழ்வது சிறப்பானதொரு வரலாற்றுக் குறிப்பாகும்.

 

அதுமட்டுமல்லாமல் உற்சவ துவக்கநாளன்று கிராம மக்களில் சிலர் வீதியுலாவைத் தடுத்து  நிறுத்தியுள்ளனர்.  சிராவகர்கள் ஒன்றுகூடி அப்போதைய ஆங்கிலேய அரசாங்கத்திடம் தெரிவித்தபோது, அப்போதைய  மாவட்ட ஆட்சியாளர் நேரடியாக ஸ்தலத்திற்கு விஜயம் செய்து வீதியுலா அனுமதிக்கான உத்தரவையும் பிறப்பித்துள்ளார் என்பது ஆலயத்தின் முக்கிய வரலாற்றுக் குறிப்புகளில் ஒன்றாகும்.

 

ஸ்ரீஆதிநாதருக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த சமணராலயம்; முலக்கருவறை வேதிகையில் ஸ்ரீவிருஷபதீர்த்தங்கரர் கற்சிலை நிறுவப்பட்டு அதன் மேல் துவிதள விமானமும் எழுப்பபட்டுள்ளது. அக்கட்டமைப்பு திராவிடப்பாரம்பர்ய கோவிற்கலையை ஒத்த கருவறை; உபபீடம், அதிட்டானம், பிரநாளம், அதன் மீது அரைத்தூண்கள் இடையே கோட்டபஞ்சரங்கள் போன்ற அம்சங்களுடன் பித்தி(பாதசுவர்), பிரஸ்தரம், கபோதம், துவி(இரண்டு)தளங்கள், கீரீவம் மற்றும் விமானக்கோளம், கலசம் மற்றும் அக்கட்டமைப்பிற்கு அழகு சேர்க்கும் விதமாக கர்ணகூடுகள், ஐந்து கலசத்துடனான சாலையமைப்பு மற்றும்

 

விமானத்தைச் சுற்றியுள்ள மஹாநாசிகள் போன்ற உறுப்புகளுடன் சிகரத்தில் உலோகக் கலச அமைப்பு அழகாக காட்சியளிக்கிறது. அதனை ஆராய்ச்சி செய்யவரும் வரலாற்று ஆர்வலர்கள் 600 ஆண்டுகளிலிருந்து 400 ஆண்டுகளுக்குள் இந்தக் கட்டமைப்பு உருவாக்கம் பெற்றிருப்பதாக கருதுகின்றனர். (நண்பர் தேனுகா சீனிவாசன், குடவாயில் பாலசுப்ரமணியன் மற்றும் கடலூர் சீனு போன்ற நிபுணர்களின் காலக்கணிப்பு. முற்காலக் கல்வெட்டுகள் அவ்வப்போது நடந்த ஆலயச் சீரமைப்பினால் மறைந்தும், அழிந்தும் போயிருக்க வாய்ப்புண்டு.)

 

ஆலய மரபின் படி சில அடி தூரத்தில் பலிபீடம் ஒன்றும் அமைக்கபட்டுள்ளது. அதற்குபின் சில ஆண்டுகள் கழிந்து 16 கால் மண்டபம் பிரார்த்தனைக்காக கட்டப்பட்டிருந்தாலும்; பின்னாளில் உலோகச் சிலைகள் கூடிய காரணத்தால், பாதுகாப்புக் கருதி இடைநாழி மற்றும் நுழைவு வாயிலுக்காக விடப்பட்டு சுற்றிலும் சுவரால் அடைக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. அந்த அர்த்தமண்டபம் தினஅபிஷேக மேடையுடன் காணப்படுகிறது. அதில் பழைய  மூலவராக இருந்த ஆதிநாதர் கற்சிலை அமர்த்தப்பட்டு அபிஷேகமும் நிகழ்கிறது.
 

பாதுகாப்புக் கருதி ஆலயச் சுற்றுச்சுவர் உருவாக்கம் பெற்றபோது,  குடவரைக் கோவில் போன்ற தோற்றத்தில் ஆலய நுழைவாயில் உருவாக்கம் பெற்றது. பின் திருச்சுற்றில் காவணக்கால் மண்டபம் (தற்போதைய சாந்தி/கலச மண்டபம்)  சற்றொப்ப நூறாண்டுகளுக்குப் பின் கட்டப்பட்டதாக அதில் பதிக்கப்பட்டுள்ள கல்வெட்டுக் குறிப்பு தெரிவிக்கிறது. எதிரேயுள்ள சிற்றாலயங்களின் வேதியின் மேல் நான்கு அடிக்கும் சற்றுக் குறைவான உயர ஸ்ரீசாஸ்த்தைய்யன் கற்சிலையும்,  நான்குஅடிக்கும் கூடுதலான உயர ஸ்ரீகூஷ்மாண்டினி(தர்மதேவி) கற்சிலையும் மேடையில் தனித்தனி விமான கலசத்துடன் கருவறை மேடையில் நிறுவப்பட்டுள்ளன.

 மேலும் 1894 ம் ஆண்டிலிருந்து ஸ்ரீபார்ஸ்வஜினருக்கு தசதின பிரமோற்சவம் செய்ய முடிவு செய்தபோது நெடிய துவஜஸ்தம்பம் செப்புக் கவசத்துடன் - நாற்புறமும் (மூலவருக்கெதிரே) முக்குடை, கூஷ்மாண்டினி,  தர்மசக்கரம் சிரசிலேந்திய சர்வாண்ண யக்ஷன் மற்றும் செளதர்மேந்திரன் போன்ற புடைப்புச் சிற்ப உருவங்களாக காட்சியளிக்கும் படி செய்விக்கப்பட்டு - நிலை நிறுத்தப்பட்டுள்ளது.  மஹாபிஷேகம் மற்றும் ஜன்மாபிஷேக நிகழ்வுகளை பலரும் காணும் வகையில் நீளமான ஏறுபடிக்கட்டுகளுடன் சுற்றுச்சுவர் உயரத்தில்  அழகிய பாண்டுகசிலை மண்டபம் விமானக் கலசத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது ஆலயத்தின் ஒரு சிறப்பு அம்சமாகும். 

 1974 ம் ஆண்டு ஸ்ரீமஹாவீரரின் 2500 வது ஆண்டு நினைவாக ஒரு மங்கலஸ்தூபி ஒன்றும்,  சமீப ஆண்டுகளில் தென்மேற்கு மூலையில் ஸ்ரீமஹாவீரருக்கான ஒரு தனிக்கருவறையும் கட்டப்பட்டு  இவ்வாலயத்தின் அழகு மேலும் கூட்டப்பட்டுள்ளது. இவ்வாறாக இத்தலத்தில் வெவ்வேறு காலகட்டத்தில் உருவாக்கம் பெற்ற ஆலயக் கட்டமைப்புகள் சமண ஆன்மீக வளர்ச்சிக்கு சான்றாக அமைந்துள்ளது  மட்டுமல்லாமல் இக்கிராம இல்லறத்தாரின் தெய்வபக்தியின் மேன்மையைக் சுட்டிக் காட்டுகிறது.

 

ஆலய உருவாக்கத்தின் முக்கியத்வத்தை உணர்த்தும் முகமாக ஆலய மூலவருக்கு தினமும் அபிஷேகம், அஷ்டமங்கல சிறப்புடன் ஆரத்தி, பூஜைகள் நிகழ்வதோடு, மேலும் அனைத்து தெய்வ உருவங்களுக்கும் நித்திய பூஜை இரண்டுகாலமும் நிறைவேற்றப்படுகிறது. அதுமட்டுமல்லாது வெள்ளிக்கிழமை விசேஷ பூஜைகள், பூஜா விதானங்கள், நவராத்திரி விழா, நந்தீஸ்வர பருவகால பூஜை மற்றும் ஆண்டுதோறும் நிகழும் தசதின பிரமோற்சவம் - ஆடி மாத வளர்பிறை சப்தமியிலிருந்து பிரதமைவரை பகல் இரவு வீதியுலாவுடன் வழமையாய் பூஜைவிதிகள் நிர்ணயித்தவகையில் -நிறைவேற்றப்படுகின்றன.

 

மேலும் பன்னிரு ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தனம் நிறைவேறும் வகையில் மூலவருக்கு பஞ்சகல்யாண பெருவிழாவும் 1932, 1972, 1994, and 2007 ம் ஆண்டுகளில் நடத்தப்பட்டுள்ளன.


அவ்வகையில் இவ்வாண்டும், நடைபெறவுள்ள 129 வது மிகச்சிறப்பாக பிரமோற்சவ தசதினங்களில் சிறப்பாக பஞ்சகல்யாண விழாவும் – 25-06-2023 தேதியில் துவங்கி 10 நாட்கள் – ஆலய நிர்வாகத்தினரால் வெகுவிமரிசையாக கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளதும் மிகவும் பாராட்டுக்குரியது.

 

ஆலயங்கள்  உருவானதின் நோக்கம்…

 

சமண ஆன்மீகத்தின் உச்சநிலை முக்தி. அதற்கு ஒரே வழி சரணாகதி, சரணாகதிக்கு வழிவகுப்பது மனச் சமநிலை. மனச்சமநிலைக்கான யுக்தியை அளித்தவர் பகவான். அந்த யுக்தியைப் பெற ஒரே வழி அவர் மீதான பக்தி. அப்பகவானின் தரிசனமே பக்தியை நினைவூட்டும் நிகழ்காலம். அந்நிகழ்காலத்திற்கான புனிதக்களம் ஆலயம். அவ்வாலயம் தொழுவது சாலவும்  நன்று.  இந்த அடிப்படைக் கருவில் உருவானது ஆலயக் கட்டுமானங்கள்.

 

மங்கலங்களின் உருவாக்கம்….

 

அத்திருவிற்கான விதை, வேர்கள் - பூஜை, ஆரத்தி, மந்திரம், விதானம், விழாக்கள் போன்றவை. அது நித்தியமோ,  பருவமோ அதை நிறைவேற்றுவது நம் கடமை. சரணாகதிக்கான சரியான வழிகாட்டுதலை தெரிவிப்பதே ஆலய விழாக்களின் நோக்கம். அதில் பிரதானமானது பகவானின் பஞ்சகல்யாண விழா.

 

ஆக முக்திக்கு வழிவகுக்கும் ஆலயம், பூஜை, ஆரத்தி, திருவிழா போன்றவை மக்கள் நன்மைக்காகவே உருவாக்கம் பெற்றது. மக்களின் நன்மையை தெரிவிப்பதாவது மங்கலங்கள். அம்மங்கல நிகழ்வுகளில் கலந்து கொள்வது நம் கடமையாகும்.

 

மங்கலக்காரியங்கள் அடங்கிய திருப்பணிகளை நிறைவேற்றும் அனைத்து சிராவக, சிராவகிகளின் இல்லங்களில் ஆலகிராம ஆலய மூலவர் ஸ்ரீஆதீனாதரின் அருளால் எல்லா வளமும், நலமும் கூடி சுபிட்சமாக வாழ்வார்கள் என்பதில் யாதொரு ஐயமுமில்லை.

 

ஆக்கம்….

பத்மராஜ் ராமசாமி, 

மன்னார்குடி.

 

****************************

 

NB: கர்ண பரம்பரையாய் தொடரும் பழம் நிகழ்வுகளை நினைவுகூர்ந்து தெரிவித்த கிராமத்தின் மூத்தகுடி மக்களுக்கு நன்றி.

 


அருகாமையிலுள்ள  ஜினாலயங்கள் 

No comments:

Post a Comment