YUGADI - யுகாதி



ஸ்ரீ ஆதிநாதர்,  முதலூர்..



யுகத்தின் ஆதி – யுகாதி.




மனித வாழ்க்கையில் இன்ப துன்பங்கள் மாறிவரும் என்பதையும் அதைப் பொறுமையோடு எதிர்கொள்ள வேண்டும் என்பதையும் இந்த யுகாதி பண்டிகை உணர்த்துகிறது.


----------------------

ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதத்தில் வருகிற அமாவாசைக்கு மறுதினம் சாந்திரமான வருடம் என்ற பெயரில் சந்திரன் பன்னிரெண்டு அம்சங்களோடு திகழும் மாதங்கள் தொடங்குகின்றன. அதன்படி ஒவ்வொரு அமாவாசைக்கு மறுநாள் வரும் பிரதமை முதல் அடுத்துவரும் அமாவாசை வரை கணக்கிடப்படும் மாதங்களுக்கு வடமொழியில் ஒவ்வொரு பெயர் உண்டு. இந்த மாதங்களின் பெயர்கள் பவுர்ணமி எந்த நட்சத்திரத்தின் நாளில் நிகழ்கிறதோ அந்த நட்சத்திரத்தின் பெயரில் அழைக்கப்படும்.



பொதுவாக நாட்காட்டிகள் மூன்று வகைப்படும். அவை,


1.  சௌர (அ) சூரிய நாட்காட்டிகள் (Solar calendars);

2.  சந்திர நாட்காட்டிகள் (Lunar calendars) ;

3.  சந்த்ர-சௌர நாட்காட்டிகள் (luni-solar calendars)



சமணர்கள் ஆதிகாலத்தில் சந்திர நாட்காட்டியை உருவாக்கி அதன் வழியே திதிகளையும் விரத நாட்களையும் கடைபிடித்து வந்துள்ளனர். சூரிய நாட்காட்டி சில நாடுகளில் கடைபிடிக்கப்பட்டு வந்துள்ளது. முடியாட்சி மாறிய காலங்களில் சூரியனும், சந்திரனும் என்றைக்கு ஒரே தொகுதி நட்சத்திரக் கூட்டத்தில் (மேஷம்) ஆண்டைத்துவக்குறதோ அதே இடத்தில் சந்திக்கும் காலத்தை பூஜ்ஜியமாக எடுத்துக் கொள்ளப்பட்டது. அதுவே யுகம் துவங்கும் நாளாகவும் எடுத்துக் கொள்ளப்பட்டது.



யுகாதி என்றால் "யுகத்தின் ஆதி ஆரம்பம்" என்று பொருள்.



அந்த யுகத்தில் எந்த மகாபுருஷர் மக்கள் நன்மையை மேற்கொண்டிருந்தார்களோ அவரை யுக புருஷர் என அழைத்தனர். அவ்வகையில் நாம் ஸ்ரீஆதினாதரை முதன்மையாக கருதுகிறோம்.


போகபூமியில் மக்கள் தங்களது தேவைகளை பத்து வகை கல்பதருக்கள் மூலம் பெற்றனர். கர்மபூமியில் கல்பதருக்கள்   மறைய தொடங்கி அவற்றினால் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் அச்சங்களை பிறகு வந்த 14 மநுக்கள் மக்களுக்கு தெளிவித்தனர்.


14ம் மநு நாபி மஹாராஜா புதல்வராக விருஷபநாதர் அவதரித்த காலத்தில் கல்பதரு முழுவதும் மறைந்தன.


மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. கர்ம பூமி துவங்கிவிட்டதை அறியாமல் மக்கள் தவித்தனர்.


இதற்கு தீர்வாக விருஷபநாதர் மக்களுக்கு முதலில் உழவுத்தொழிலைக் கற்பித்தார். அதன் வழியே பல தானியங்கள், காய்கறி, கனிகளை பயிர்செய்வித்து உணவுத்தேவையை சமன்  செய்தார். அனைவரும் மகிழ்ந்தனர்.


உழவுடன், கல்வி, நெசவு, தச்சு, வணிகம், கட்டிடம் ஆகிய 6 வகை தொழில் கற்று தந்ததாகவும் வரலாறு கூறுகிறது.



மேலும் அக்காலத்தில் மக்கள் பயிர் செய்த நெல்மணி போன்ற அனைத்து தானியங்களையும் குருவுக்கு நன்றி கூறும் வகையில் ஆதிநாதருக்கு அர்ப்பணித்துள்ளனர்.


உழவுத்தொழிலை துவங்கிய அந்த திருநாளை யுகாதி ( ஆதிபகவன் யுகம்) எனவும் நம் தீர்த்தங்கரர்கள் வரலாறு கூறும் ஸ்ரீபுராண நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.


வாழ்வின் ஆதாரங்கள் அனைத்தையும் அறிந்து தெளிவுடன் வாழ வழிவகுத்தவரை, அன்றைய தினம் வணங்கும் வழிபாட்டுமுறையும் வந்துள்ளது.

---------------------

சமண நாட்காட்டி தற்காலத்திய சந்த்ர-சௌர நாட்காட்டியை (lunisolar calendar ) ஒத்ததுள்ளது. அதாவது சந்திரன் பூமியைச் சுற்றும் வட்டப்பாதையில் எந்த முகத்தை காட்டுகிறது, அதாவது எந்த புள்ளியில்  சூரிய வட்டப்பாதையில் உள்ள சூரிய நாட்காட்டியின் நாளைக்குறிக்கும்.



அது சூரியனை பூமி சுற்றும் வட்டப்பாதைக்கு நிகரான மாதத்தை குறிக்கும் பழக்கம் பின்னர் வந்துள்ளது. ஆனால் ஒவ்வொரு சந்த்ர நாட்காட்டியின் முதல் நாள் சைத்ர மாதம் பிரதமையன்று துவங்கும்.



அதனால் சந்த்ர-சௌர நாட்காட்டி ஆண்டின் நாட்கள் ஒவ்வொரு ஆண்டிற்கும் 353, 354, 355 சற்று வேறுபடும். ஆகவே அதனை சூரிய நாட்காட்டியுடன் சரிசெய்ய சாதாரண ஆண்டுக்கு 12 மாதங்களையும், லீப் வருடத்திற்கு 13 மாதங்களாக சரிசெய்து மூன்று ஆண்டுகளுக்கொரு முறை இரண்டையும் இணைத்துள்ளனர்.



அதாவது சந்திரவட்ட பாதை மாதமானது 29.5 நாட்களைக் கொண்டது. ஆனால் மாதம் முப்பது என எடுத்துக் கொள்வோமேயானால் 360 வரவேண்டும், ஆனால் 354 நாட்கள் என ஆண்டிற்கு குறைவான நாட்களாக இருந்துள்ளது. அதனை சரிசெய்யவே லீப் வருடத்திற்கு 13 மாதங்களாக சந்த்ர-சௌர நாட்காட்டியை வகுத்துள்ளனர்.



இந்த சந்த்ர-சௌர நாட்காட்டியை சமணம் மட்டுமல்லாது ஹீப்ருக்கள், இந்து சந்திரநாட்டியினர், பெளத்தர்கள், திபேத்தியர்கள் கடைபிடித்து வருகின்றனர்.
(ஜப்பானியர்கள் 1873ம் ஆண்டுவரியிலும், சீனர்கள் 1912ம் ஆண்டு வரையிலும் கடைபிடித்துள்ளனர்.)



ஆனால் இஸ்லாமியர்கள் கிரிகோரியன் நாட்காட்டியான (தற்போது உலக நடப்பில் உள்ளது)  சூரிய நாட்காட்டியுடன் சரி செய்யாமலே கடைபிடித்து வருகின்றனர். அதனால் பெரும்பாலான இஸ்லாமிய பண்டிகைகள் ஒவ்வொரு ஆண்டும் ஓரளவுக்கும் இணையாமல் வெவ்வேறு மாதங்களில் கூட வருவதுண்டு.

-----------------------------


இந்த யுகாதிப் பண்டிகை நாளன்று  அதிகாலையில் எழுந்து, புத்தாடைகள் அணிந்து, அருகில்  உள்ள ஜினாலயங்களுக்குச் சென்று நெல்மணி போன்ற தானியங்களை இன்றும் யுகபுருஷருக்கு அர்ப்பணிக்கும் பழக்கம் உள்ளது.

-----------------------
நாம் எந்த ஒரு ஹோமம், விதானம், திருவிழா போன்ற பூஜைகளில் நவதான்யம் உபயோகிப்பது மரபு. அந்த அடிப்படையில் யுகாதி அன்றும் வீட்டிலோ, ஆலயத்திற்கோ சென்று அரிசி புஞ்சத்தில், மோட்சமார்க்கத்தின் சிற்றடையாளமான, ஸ்வஸ்தீகம், ரத்னத்திரயம் (மூன்று), சித்தக்ஷேத்தரம் (பிறைவடிவம்), சித்தர் (ஒன்று) என குவித்து விட்டு;

நமது வயலில் விளைந்த நெல்மணிகளை புஞ்சம் வைத்து ; மற்றும் விளைந்த துவரை, உளுந்து, பயரு போன்ற தானியங்கள், மற்றும் கடையில் விற்கும் மீதி தான்யங்களை நவதேவதைகளை நினைவுறுத்தி ஒன்பது புஞ்சமாக  வைப்பது வழக்கம். (வீட்டு சாமி அலமாரியில் நெற்கதிரை புதிரு என்று கட்டி தொங்கவிடுவோம் சொந்த வயல் இருந்த(1998) வரை…. மேலும் இவ்விஷயம் எங்கள் இல்ல பெரியோர்கள் வழிகாட்டல் மற்றும் செயல்வடிவைக் கவனித்தது)

யுகாதி அன்று நாட்டின் வளர்ச்சிக்காகவும்,  குடும்பத்தின் நலத்திற்காகவும் ஸ்ரீஆதிநாதருக்கு குருகாணிக்கையாக தானியங்களை அர்ப்பணித்து,  பிரார்த்தனை செய்வது சமண மரபு.

---------------

யுகாதி வசந்த காலத்தில்  கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் புதிய வேலை, கல்வி, தொழில் தொடங்குவது சிறந்தது .


-----------------------

வாழ்க்கையில் மகிழ்ச்சி , கவலை ,கோபம்,அச்சம், சலிப்பு , ஆச்சரியம்  போன்ற இவைகள் எல்லாம் மாறி மாறி வரக்கூடியவை .இந்த தத்துவத்தை உணர்த்தும் படியாக , ஆறு சுவைகள் கொண்ட பச்சடிகளை உணவில் சேர்த்து கொள்வர்.


கசப்பு ----வேப்பம்பூ; துவர்ப்பு ---மாங்காய் ; புளிப்பு ----புளி; கார்ப்பு ---மிளகாய்; இனிப்பு ---வெல்லம்; உவர்ப்பு ---உப்பு


இதை கொண்டு பச்சடி செய்வர்.



அனைவருக்கும் யுகாதி வாழ்த்துகள் !!


No comments:

Post a Comment