இரத்தின சாரம்




(மதிப்பிற்குரிய திரு. அ.  ரவிச்சந்திரன், போளூர் அவர்கள் தினப்பதிவாக மின்னூடகங்களில் வழிங்கியதின்  தொகுப்பு. நன்றி... )


ஆச்சார்ய குந்தகுந்தரின் ரயன சாரத்தைத் தழுவி வங்காரம் ஜெ.  அப்பாண்டைராஜன் அவர்களால் தமிழில் ஆக்கப்பட்ட நூல்


--------------------------

1. இறைவணக்கம்

--------------------------

மனம்மொழி மெய்யால் மகாவீரர்

மலரடி வணங்கியே கூறுகின்றேன்

மனையறம் பூண்டோர் சாதுவரின்

மாக்கடன் இரயண சாரநூலில்!

--------------------------

🔰என் மனம், மொழி, உடல் ஆகிய மூன்றும் ஒன்றினைய, வர்த்தமான மகாவீர பகவனை வணங்கி இல்லறத்தார், துறவியர் ஆகிய இருநிலையினரின் கடமைகளை இரயண சாரம் என்னும் இந்நூலில் கூறுகின்றேன்.

 

**********************************

 

2. நற்காட்சியாளன் யார்?

--------------------------

அன்றே பகவன் அவைதன்னில்

அருளிய உண்மை கணதரரால்

பின்பே விளங்க சாதுவரும்

பெய்தனர் ஏற்பதே நற்காட்சி!

--------------------------

🔰சமவ சரணத்தில் அருகப் பெருமான் அருளிய உண்மைத் தத்துவத்தைக் கணதர பரமேட்டியர் விரித்துரைத்துள்ளனர். பின்னர் ஆசாரியர்களும், உபாத்தியாயர்களும் இக்கருத்தையே பரப்பினர். அத்தகைய உண்மயான தத்துவத்தை ஏற்பதே நற்காட்சியாகும்.

 

***********************************

 

3. பொய்க்காட்சியாளர் யார்?

--------------------------

தன்மதி சுருத அறிவதனால்

தன்மனம் போலவே பேசுதலும்

நன்மதி யின்றி ஜிநவரரின்

நன்னெறி மறுத்தலும் பொய்க்காட்சி!

--------------------------

🍁தன்னுடைய சிறிய மதியறிவா;லும் நூலறிவாலும் தவறாகப் புரிந்து கொண்டதையே, மெய்யெனக் கருதி, மனம் போன போக்கில் பேசுபவனும், ஜிநவரரின் நன்னெறியை அறியாதவனும் பொய்க்காட்சியாளன் ஆவான்.

 

************************************

 

4. நற்காட்சியின் இருவகை

--------------------------

வீடு பேறதன் வித்தாக

விளங்கிடும் இரத்தினம் நற்காட்சி

கூடும் வகைதான் இரண்டாகும்

கூறுவர் நிச்சயம் உலகியலாய்!

--------------------------

🔰வடு பேற்றிற்கு வித்தாக அமைந்திடும் மும்மணிகளில் முதன்மையான மணியான நற்காட்சி நிச்சய நற்காட்சி, உலகியல் நற்காட்சி என இரு வகையாகும்.

******************************

 

5. நற்காட்சியாளனின் தன்மை

--------------------------

நடுக்கம் வியசனம் ஏழில்லான்

நவையிரு பத்தைந் துமில்லானே

கிடைக்கும் சுகத்தினில் விருப்பில்லான்

குணத்தொடு ஐவரின் அடிதொழுவோன்!

--------------------------

💦ஏழுவகையான நடுக்கங்களும் ஏழு வகையான வியசனங்களும் இருபத்தைந்தான குற்றங்களும் இல்லாதவனாகவும், இல்லறத்தில் கிடைக்கும் சுகபோகங்களில் மிகு விருப்பம் இல்லாதவனாகவும், நற்காட்சியின் எட்டு அங்கங்களை உடையவனாகவும் பஞ்ச பரமேட்டியரை வணங்குபவனாகவும் உள்ளவனே உத்தம் நற்காட்சியாளன் ஆவான்.

******************************

 

6. துன்பம் அடையாதவன்

--------------------------

தன்னுயிர் அறிபவன் பிறபொருளின்

தாக்கமில் லாதவன் ஜிநவரனை

நன்மையாம் அறத்தினை சாதுவரை

நாடுவோன் துன்பிலாக் காட்சியனே!

--------------------------

🔰தன் தூய உயிரின் இயல்பை நன்கு அறிபவன்: உலகின் பிற பொருள் மோகத்தால் தாக்குதல் அடையாதவன்; நன்மை தரக்கூடிய நல்லறத்தையும் நல்லறத்தை அருளிய ஜிநவரனையும் உத்தம சாதுவரையும் போற்றி வாழ்பவன்; இத்தகைய குனங்கள் நிரம்பிய நற்காட்சியாளன் என்றும் துன்பம் அடைவதில்லை.

************************************

 

7. நாற்பத்து நான்கு குற்றங்கள் இல்லாமை_

------------------------------

*செருக்கு மூடம் அவிநயமும்*

*சிறப்புழி குற்றம் வியசனமும்*

*உருக்கும் பயமொடு அதிசாரம்*

*உத்தம காட்சிக் கெதிராமே!*

--------------------------------

எண் வகையான செருக்குகளும் மூவகையான மூடமும்அறுவகையான அவிநயமும் எட்டு வகையான குற்றங்களும் ஏழு வகையான வியசனமும் ஏழு வகையான பயமும் ஐந்து வகையான அதிசாரமும் இல்லாதவனே உத்தம நற்காட்சியாளன் ஆவான்.

*******************************

 

8. எழுபத்தேழு குணங்கள்.

--------------------------------

நாற்பத்து நான்குடன் மூலகுணம்

நாலிரு உத்தரம் பன்னிரண்டும்

சீர்மிகு பதினொரு சிராவகமும்

சிறப்புடைப் பாவனை பக்தியுமே!

----------------------------------

முன் காதையில் கூறப்பட்ட 44 குணங்களுடன் எட்டு மூல குணங்களும் பன்னிரண்டு உத்தர குணங்களும் பதினோரு சிராவக நிலைகளும் தூய பாவனையும், ஜிநபக்தியும் இணைய இல்லறத்தாரின் உத்தம குணங்கள் எழுபத்து ஏழாகும்.

(44+8+12+11+1+1=77)

*************************************

 

9.விடுதலை இன்பம்

----------------------------------

அருகர் குருநூல் பக்தராவோர்

அனைத்து வகையாம் பற்றற்றோர்

சிறப்பு மும்மணி உருவமானோர்

சேர்குவர் விடுதலை பேரின்பம் !

----------------------------------

💢ஜிநதேவரிடமும், குருக்களிடமும் நல்ல நூல்களிடமும் பக்தியுடையோராய், உலகியலில் பலவகையான பற்றுகளிலிருந்து விடுபட்டவராய், மும்மணியின் உருவமாய்த் திகழ்பவர், முக்திப் பேரின்பத்தை அடைகின்றனர்.

************************************

 

10. நல்லொழுக்கம் உயர்வைத் தரும்

----------------------------------

தானமும் பூசையும் நல்லொழுக்கமும்

தளரா நோன்புமே விடுதலைக்காம்

காரணம் ஆகிடும் ஆனாலும்

காட்சி இல்லையேல் சுழற்சியாகும் !

----------------------------------

💦இல்லறத்தார் செய்திடும் தானமும் ஜிந பூசையும் ஏற்கும் நல்லொழுக்கமும் தளராத நோன்புகளும் வினை உதிர்ப்பை நல்கி, பிறவி விடுதலைக்கு வழிவகுக்கும். ஆயினும் இவையனத்தும் நற்காட்சி இல்லையேல் பயனற்றதாகி, மீண்டும் பிறவிச் சுழற்சிக்கே காரணமாகும்.

*********************************

 

11. இல்லறத்தார், துறவியர் கடமைகள்

----------------------------------

ஏற்புடைத் தானமும் பூசையுமே

இல்லற நோன்பிகள் நற்கடனாம்

சீருயர் தியானமும் நூலோதல்

செய்வதும் சாதுவர் தம்கடனாம் !

----------------------------------

💠இல்லறத்தார், தக்கோர்க்குத் தானம் செய்வதையும், ஜிநபூஜை செய்வதையும், தவறாமல் மேற்கொள்ளவேண்டும். சாதுவர், தினந்தோறும் தியானம் செய்வதையும் நன்னூல் ஓதுவதையும் தவறாமல் மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு மேற்கொள்ளாதவர் சாதுவர் ஆகார்.

************************************

 

12. விட்டில் பூச்ச்சிகள்_

----------------------------------

*தானம்தான் வழங்கிடான் தருமத்தை*

*நாளும் ஏற்றிடான் நேர்மையிலான்*

*ஈன்னாய் உலோபியாய் இருப்பவனே*

*இறக்கும் விட்டிலாம் காட்சியிலன் !*

----------------------------------

💦இல்லறத்தில் தானம் வழங்காதவன்; தருமத்தை ஏற்காதவன்; புலனின்பங்களில் மூழ்கி நேர்மை மறப்பவன்; உலோபியாய் வாழ்பவன்; அவன் விளக்கில் விழுந்து மடியும் விட்டில் பூச்சி போன்றவனேயாவான். நற்காட்சியற்ற மூடனாவான்.

**********************************

 

13.உத்தம நற்காட்சி

----------------------------

பகவனைத் தினம்தினம் வணங்கிடுவோர்

பாங்குயர் சாதுவர்  அடிபணிந்தே

தகுமுறை தானமே தருவோர்தாம்

தரணியில் விடுதலை வழிசெல்வோர்

--------------------------------

🌸அன்றாடம் ஜிந பகவானை வணங்குவோரும், உத்தம சாதுவர்க்கு  முறையோடு தானம் தந்து வணங்குவோரும் முக்திப் பாதையில் செல்லும் உத்தம காட்சியுடைய சிராவகர் ஆவார்.

********************************

 

14.பூசை, தானத்தின் பயன்

-------------------------

தூயதாம் மனத்தினர் செய்கின்ற

தூயநல் பூசையால் நல்லமரர்

தூயரைப் போற்றுவர் தானத்தால்

துய்ப்பரே மகிழ்வுதான் மூவுலகில் !

-----------------------------

🔰தூய மனதுடன் ஜிந பகவானுக்குப் பூஜை செய்வோரை அமரர்களும் போற்றுவர். இல்லறத்தார் தம் தானத்தின் பயனால் மூவுலக இன்பம் எய்துவர் என்பது உறுதி.

**************************************

15. சாதுவர்க்குத் தானம் வழங்குதலின் சிறப்பு.

------------------------------

இல்லற நோன்பிகள் துறவியர்க்கே

ஏற்புடை உணவினை அளித்தல்தான்

நல்லறக் கடமையாம் அத்துறவி

நற்குணம் ஆய்தலைத் தவிர்த்திடுக !

---------------------------------

💦திகம்பர சாதுவர்க்கு ஆகார தானம் அளிப்பது இல்லறத்தாரின் முக்கியக் கடமையாகும். அத்துறவி உத்தம துறவொழுக்கம் ஏற்றவர்தானா என்ற ஆராய்ச்சியில் ஈடுபடுதல் வேண்டாம்.

************************************

 

16.இரத்தின சாரம்*

---------------------------

உத்தம சாதுவர்க் களிக்கின்ற

உணவும் மருந்தும் நன்னூலும்

நிச்சயம் நல்கிடும் அமரசுகம்

நிரந்தர விடுதலைப் பேறமையும் !

---------------------------

💠உத்தம சாதுவர்க்கு அளிக்கின்ற ஆகாரதானம், மருந்து தானம், நன்னூல் தானம் ஆகியவைகளால் இல்லறத்தார் அமரசுகம் பெறுவர். நாளடைவில் முக்திப் பேறும் எய்துவர் என்பது நிச்சயம்.

************************************

 

17. நன்னிலம் ஊன்றிய நல்விதைகள்

நற்பயன் நல்கிடும் நல்லுலகில்

அங்கனம் உத்தம சாதுவர்க்கே

அளித்திடும் தானமும் சிறப்புடைத்தாம் !

----------------------------

🔰செழிப்பான பூமியில் நடப்படும் நல்ல விதைகள் நற்பயனைத் தந்து உலகோரை மகிழ்விக்கும். அதுபோன்றே உத்தம சாதுவர்க்கு அளிக்கப்படும் தானமும் இல்லறத்தார்க்கு சிறப்பான பெருநன்மைகளை தரும்.

****************************

 

18.இரத்தின சாரம்

-----------------------------

இறைவன் அருளிய எழுநிலத்தில்

ஈட்டிய நற்பொருள் விதைப்போர்கள்

பெறுவர் சுகங்களே மூவுலகில்

புண்ணிய தீர்த்தகர் நாமமுமே !

---------------------------------

🍁அருகப்பெருமான் அருளிய ஏழு வகை நிலங்களாக ஜிந பிம்பம்,  ஜிப் சைத்யாலயம், ஜிந பூஜை,  தானம், ஜிந யாத்திரை, ஜிநர் விழாக்கள், ஜிநர் நூல் வெளியிடுதல் ஆகியவற்றில் தாம் ஈட்டிய பொருளை விதைப்போர்கள் (செலவிடுவோர்) மூவுலகில் குறைவிலாப் பெருஞ்சுகங்களை பெறுவர். விரைவில் தீர்த்தங்கர நாம புண்ணிய வினையையும் ஈட்டிடுவர் என்பது உறுதி.

**************************************

 

19. இரத்தின சாரம்.

-----------------------------

நற்குணப் பெற்றோர்கள் புத்திரர்கள்

நற்குண மனைவி பெருஞ்செல்வம்

அற்புத மாளிகை வாகனங்கள்

அமைவதே முத்தமோ தானத்தால் !

----------------------------------

🌼உலக வாழ்வில் நற்குணம் நிரம்பிய தாய், தந்தை, மனைவி, மக்கள், பெருஞ்செல்வம், மாளிகை, வாகனம் மேன்மை முதலான பற்பல சுகங்களும் முற்பிறவியில் செய்த தவத்தின் பயனே என்றறிக.

 

**************************************

 

20. இரத்தின சாரம்

---------------------------

எழுவகை ஆட்சியும் அறுவகையாம்

ஏற்றநற் சேனையும் ஒன்பதெனும்

பழுதிலா நிதியும் பதினான்கு

இரத்தினங் களெல்லாம் தானத்தால் !

------------------------------

💢இரண்டு வகையான ஆட்சி, ஆறு வகையான சேனை ஒன்பது வகையான நிதி, பதினான்கு வகையான இரத்தினங்கள் முதலான பெருஞ்சிறப்புகள் யாவும் உத்தம தானத்தால் விளைந்த நன்மைகளையாகும்.

***************************************

 

21. இரத்தின சாரம்

--------------------------------

நற்குணம் நல்லெழில் நல்லறிவு

நற்குணம் நற்புகழ் இவையாவும்

உத்தம தானத்தின் பயனெனவே

உறுதியாய் நம்புக நல்லோரே !

----------------------------------

💠இப்பிறவியில் நமக்கு வந்துள்ள நற்குல பிறப்பு, நல்லழகு தோற்றம்,  நல்லறிவு, நற்பண்பு, பெரும்புகழ் முதலானயாவுமே முன்னரே நாம் செய்த உத்தம தானத்தின் பயனே என்பதை உறுதியாய் நம்பிடல் வேண்டும்.

****************************************

 

22. இரத்தின சாரம்.

-------------------------------

தூயராம் சாதுவர்க் களித்தபின்னே

தூயநல் லுணவினை ஏற்கின்ற

தூயநல் மனத்தினன் மிகஉயர்ந்தோன்

துய்ப்பனே பெருஞ்சுகம் முக்தியுமே !

----------------------------------

💠ஜிநபகவானின் அருளுரையாவது யாதெனின், தூய சாதுவர்க்கு நவதா பக்தியுடன் ஆகார தானம் அளித்த பின்னர், அவர் மலரடி வணங்கித் தன் உணவை அருந்துகின்ற நல்லுள்ளம் படைத்த சிராவகன், இம்மையில் பெரும் சுகங்களைப் பெறுவதோடு, விரைவில் முக்திப் பேற்றையும் அடைவான் என்பதாம்.

**************************************

 

23. இரத்தின சாரம்

---------------------------

சாதுவர் உடல்நிலை காலநிலை

சாதனை மனநிலை நன்காய்ந்தே

யாதொரு உணவையும் இல்லறத்தார்

அம்முனி ஏற்றிட வழங்குகவே !

---------------------------

💢இல்லறத்தார் முனிவர்க்கு ஆகார தானம் அளிக்கும்போது மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும். முனிவரின் அப்போதைய உடல்நிலை, மனநிலை, முனிவர் ஏற்றுள்ள தியான நிலை, நோன்பின் தன்மை முதலானவற்றை கருத்தில் கொண்டு, ஏற்ற உணவை வழங்குதல் வேண்டும்.

***************************************

 

24. இரத்தின சாரம்

---------------------------

உணவிலும் நீரிலும் பிழையின்மை

உட்கொளும் மருந்திலும் குறையின்மை

முனிவருக் கேற்றதாம் இடவசதி

முனைப்புடன் சிராவகர் செய்திடுவார் !

---------------------------

🌺முனிவர்களுக்கு ஏற்ற உணவு, நீர், மருந்து, இடவசதி முதலானவற்றில் எவ்விதக் குற்றம் குறையும் இல்லாமல் சிராவகர் தானம் வழங்கவேண்டியது முக்கியக் கடமையாகும்.

**************************************

25. இரத்தின சாரம்

---------------------------

அன்னையும் தந்தையும் தம்குழந்தை

அன்புடன் காப்பது போன்றேதான்

பண்புடைச் சிராவகர் சாதுவர்க்கே

பணிவிடைச் செய்தலும் அவசியமே !

---------------------------

தாயும் தந்தையும் தம் குழந்தையை எவ்விதம் மிக்க அன்பு செலுத்திக் காக்கின்றனரோ, அவ்விதமே பண்பில் சிறந்த சிராவகர்கள் சாதுவர்க்கு என்றும் சளைக்காமல் நற்சேவை புரிதல் மிக அவசியக் கடமையாகும்

***********************************

 

26. இரத்தின சாரம்

---------------------------

உத்தமர் வழங்கிடும் தானமேதான்

உண்மையில் கற்பகம் என்றுணர்க

செத்தவன் பேசுதல் போன்றதேதான்

சிறியவன் ஈனனின் தானமேதான் !

---------------------------

🌸நல்லுள்ளம் உடைய உத்தமர்கள் வழங்கிடும் தானம் கற்பக விருட்சம் போல் நன்மைகளைத் தரும். சிறுமதி படைத்த உலோபிகளின் தானமோ செத்தவன் பேசவியலாததைப் போன்றே பயனின்றி போகும்..

*************************************

 

27. இரத்தின சாரம்

---------------------------

பெருமையும் பலனையும் எதிர்நோக்கிப்

புரிந்திடும் உலோபியின் தானமேதான்

குறுகிய பொய்மையாம் ஆதலினால்

கீழ்மையில் சேருமே பயனிலையே !

---------------------------

🍀உலோபியானவன், தனக்குப் பெருமை வரவேண்டும், பலரும் பாரட்ட வேண்டும் என்று எதிர்நோக்கி விளம்பரத்திற்காக தானம் செய்கின்றான். நற்காட்சியின் பாற்படாத பொய்யான அத்தானத்தால் பயன் விளையாது என்றறிக.

**************************************

 

28.இரத்தின சாரம்

---------------------------------

மந்திர தந்திரப் பலன்வேண்டி

மனத்தினில் ஈகையாம் பண்பின்றி

தந்திடும் தானத்தால் பயனில்லை

தர்மத்தின் பாதையும் அதுவல்ல !

---------------------------------

🔰மந்திர, தந்திரச் சாதனைகளைப் பெறலாம் என்ற எண்ணத்தில் தம் பொருளை, ஈகைப்பண்பின்றி வழங்குவதால் பயனில்லை.  அச்செயல்  தருமநெறியோ, முக்தி வழியோ ஆகாது.

***************************************

 

29. இரத்தின சாரம்

-----------------------------

வள்ளல்கள் வறுமையில் வாடிடவும்

வழங்கிடா உலோபிகள் செல்வராயும்

உள்ளதன் காரணம் முன்வினையே

உண்மையை உணர்த்தவே உலகோரே !

---------------------------

🔹இவ்வுலகில் ஈகைக் குணம் நிரம்பிய வள்ளல்கள், வறுமையில் வாடுபவர்களாகவும், உலோபிகள்  செல்வந்தர்களாகவும் உள்ளதைக் காணமுடிகின்றது. அத்தகைய நிலைமைகளுக்கு அவர்களின் முன் வினையே காரணம் என்றறிதல் வேண்டும்.

***********************************

30. இரத்தின சாரம்

--------------------------

செல்வ வளத்தினால் சிறப்புண்டாம்

சகத்துயிர் மகிழ்தலும் கண்டிடலாம்

உள்ளம் உவந்திட ஈவதனால்

உண்மைப் பெருநலம் விளைந்திடுமே !

-------------------------

செல்வ வளம் பெருகுவதால் உலகத்துயிர்கள் மகிழ்வதைக் காண்கிறோம். அவ்விதமே மனம் மகிழ்ந்து தானம் செய்வதனால் இம்மையிலும் மறுமையிலும் பெருமைக்குரிய நன்மைகள் விளையும்.

*****************************************

 

31. இரத்தின சாரம்.

-----------------------------

உத்தம பாத்திரம் அல்லாமல்

உதவிடும் தானத்தால் பயனில்லை

உத்தமக் குணமிலா விரதம்போல்

உழைப்பிலா வரவுபோல் வீணேயாம் !

---------------------------

💢உத்தம பாத்திரத்துக்கு அல்லாமல் பிறருக்கு அளிக்கப்படும் தானத்தால் நற்பயன் விளையாது. நற்பண்பு இல்லாதவர் மேற்கொள்ளும் விரதங்களும் உழைப்பில்லாமல் வருகின்ற வருமானமும் எவ்விதம் சிறப்பற்றவையோ அவ்விதமே அத்தகைய தானமும் பயனற்றதாகும். (பாத்திரம்  அறிந்து பிச்சை இடு என்பது பழமொழியல்லவா?)

 

************************************

 

32. இரத்தின சாரம்.

------------------------------

கோயிலின் நிதியினைப் பொய்க்கணக்குக்

கொண்டவர் துய்ப்பரோ அவரெல்லாம்

போய்விழித் திடுவரே இருள்நரகில்

பொதுநிதித் துய்த்திடின் அவ்விதமே !

-------------------------------

🔹 யாரெல்லாம் பொய்க் கணக்கு எழுதி, ஆலயம் சார்பான நிதியையும் பொதுப்பணிக்கான நிதியையும், தன்னலத்திற்காகப் பயன்படுத்துகின்றாரோ, அவரெல்லாம் துயரமிக்க நரகத்தில் சென்று வீழ்வர் என்பது அருகன்  அருளுரையாகும்.

****************************************

 

33. இரத்தின சாரம்.

---------------------------

அறப்பணி நிதியினை வஞ்சனையால்

ஆள்பவன் தன்மனை மக்களானோர்

இறந்திட வறுமையுள் இழிகுலனே

இனிவரும் பிறப்பினில் ஊனமாவான் !

-------------------------------

💠அறப்பணிகளுக்கான பொது நிதியை வஞ்சனையால் தன்னலத்திற்கு செலவு செய்பவன், தன் மனைவி, மக்களை இழப்பதோடு, வறுமையுள் வாடுவான். இழிகுலப் பிறப்பெடுப்பான். மறுமையில் நொண்டியாகவோ, முடவனாகவோ, ஊமையாகவோ, செவிடனாகவோ, குருடனாகவோ, உடல் ஊனமுற்றவனாகப் பிறந்துத் துன்புறுவான்.

***********************************************

 

34. இரத்தின சாரம்.

-------------------------------

நன்கொடைத் தொகையினை பொதுநலத்து

நன்மைகள் செய்யாது வஞ்சனையால்

தன்னலம் பெருகிடச் செலவிடுவான்

தன்பொருள் இழந்திடப் பிணியுறுவான் !

------------------------------

🍁பொது நலப் பணிகளுக்குத்தாகத்தான் பெற்ற நன்கொடைத் தொகையை, அத்தகைய நற்பணிகளுக்குச் செலவிடாமல் தன்னலம் பெருகிடச் செலவழிப்பவன் தன் பொருளையும் இழப்பதோடு நோயுற்றுத் துன்புறுவான்.

**************************************************

35. இரத்தின சாரம்.

--------------------------------

அறக்கொடை பெற்றவன் நற்பணியை

அத்தொகை கொண்டுதான் ஆற்றிலனேல்

பெரும்பிணி உடலினில் படர்ந்திடவே

பெருந்துயர் எய்துவான் பெரும்பாவி !

------------------------------------

🔰அறச் செயல்களுக்காக வசூலித்த தொகையை அதற்கெனப் பயன்படுத்தாதவன், நீங்காத பெரும் பிணிகள் பல பெற்று பெருந்துயரடைவான். அவனே பெரும்பாவி.

********************************************

 

36. இரத்தின சாரம்.

-------------------------------

ஜினவரன் பூசையில் நல்லோர்கள்

செய்திடும் கொடையில் இடையூறு

நினைப்பவன் செய்பவன் எய்துவனே

நீங்கிட பிணிபல தன்னுடலில் !

--------------------------------

💢ஜின பகவானுக்குச் செய்யப்படும் பூஜைக்கும், நல்லோர்கள் வழங்கும் தானத்திற்கும், மனத்தாலும் செயலாலும் இடையூறு செய்பவன், தன் உடலில், மருத்துவரால் தீர்க்கமுடியாத பிணிகள் பலவும் வரப்பெற்றுத் துன்புறுவான்.

********************************************

 

37. இரத்தின சாரம்.

------------------------------

இறைதுதி சாதுவர் அடிபணிதல்

ஏற்புடை ஆகமம் பயின்றிடுதல்

அறவுரை நடைபெற இடையூறு

ஆற்றுவோன் தீக்கதி எய்துவனே ?

---------------------------------

️ஜின்வரைத் துதி செய்தல், சாதுவர்தம் திருவடி வணங்குதல், நன்மைபயக்கும் நூல்களை பயிலுதல், அறவுரை  ஆற்றுதல், அறவுரை கேட்டல் முதலானா நற்பணிகளுக்கு இடையூறு செய்வோன் நரககதி, விலங்குகதி,  ஊனம் உடைய இழிபிறப்பு முதலான துன்பங்களுக்கு ஆளாவான்.

******************************************

 

38. இரத்தின சாரம்.

------------------------------

இறங்கு காலம் ஐந்ததினில்

இந்நிலம் வாழ்வோர் காட்சியின்மை

குறைமதி விரத சீலமின்மை

கொண்டவர் ஆகலாம் என்பதுண்மை !

---------------------------------

️பரத கண்டத்தில் இறங்கு காலமாகிய ஐந்தாம் காலத்தில் வாழும் மானிடர், நற்காட்சியற்றவராகவும், நல்லறிவு குறைந்தவர்களாகவும் விரதங்களையும், நல்லொழுக்கங்களையும் ஏற்பதில் குறைபாடுடையவர் களாகவும் இருப்பர் என்பதுண்மையே.

**************************************

 

39. இரத்தின சாரம்.

------------------------------

அருகரைத் துதிப்பதும் நன்கொடைகள்

அளிப்பதும் நோன்புகள் ஏற்பதுமே

பிறவியின் பயனென உணராதோர்

பிறப்பரே நரகராய் விலங்குகளாய் !

---------------------------------

️அன்றாடம் அருகர் உள்ளிட்ட பஞ்சபரமேட்டியரை வணங்குதல் வேண்டும். சக்திக்கேற்ற நன்கொடைகள் வழங்கிட வேண்டும். அணுவிரதங்கள் உள்ளிட்ட நோன்புகளை இல்லறத்தார் ஏற்க வேண்டும். அத்தகைய வாழ்வியல் முறையே மனித பிறவியின் பயன் என உணராதோர், மறுமையில் நரகராகவும், விலங்குகளாகும் பிறந்து துன்புறுவர்.

**********************************************

 

40. இரத்தின சாரம்.

------------------------------

நன்மையும் தீமையும் தத்துவத்தின்

தன்மையும் புண்ணிய பாவமுமே

உண்மையாய் உணர்ந்திலன் பொய்காட்சி

உடையவன் ஆகிறான் என்றறிக !

---------------------------------

️எது நன்மை பயக்கும்? எது தீமை பயக்கும்? உண்மையான தத்துவம் எது? புண்ணிய பாவத்தின் தன்மை யாது? என்பதனைப் பகுத்தறியாதவன் பொய்காட்சியுடையவன் ஆகின்றான்.

*******************************************

 

41. இரத்தின சாரம்.

---------------------------------

ஏற்புடைத் தத்துவம் எதுவென்றே

எவரொரு வர்அறி கின்றாரோ

சீரிலாச் சிறுமையை நீக்குவரோ

சிந்தையில் அவரே காட்சியாளர்.

---------------------------------

💢ஏற்கத்தக்க உண்மையான தத்துவத்தைப் பகுத்தறிந்து, சிறப்பினை நல்காத சிறுமையை நீக்குபவரே சிறந்த நற்காட்சியாளர் ஆவர். மற்றவர் பொய்சாட்சியினரே ஆவர்.

***********************************************

 

42. இரத்தின சாரம்

-------------------

தீயவர் நட்பினால் என்றென்றும்

தீமையே விளைந்திடும் என்பதனால்

ஆய்வினால் தேர்ந்தபின் நல்லோரை

அடைகவே நண்பராய் பவ்வியரே !

--------------------

🌺தயோர்களுடைய நட்பினாலும் தொடர்பினாலும் தீமையே விளையுமாதலால், பவ்வியர்கள் நன்கு ஆரய்ந்தறிந்து நல்லோரை நண்பராக ஏற்க வேண்டும்.

*************************************************

43. இரத்தின சாரம்.

-------------------------------------

கொடியதாம் சிந்தையும் செயலையுமே

கொண்டவன் பொய்நூல் ஓதுபவன்

கொடுமொழி கூறுவோன் நேர்மையிலன்

கொள்கையில் துட்டனே காட்சியிலன் !

-----------------------------------

🎈கொடுமையான எண்ணம், கொடுமையான மொழி, கொடுமையான செயல் ஆகியவற்றை உடையவன்: பொய்மையான நூல்களை பயிலுபவன்:  நேர்மையில்லாதவன்: நல்ல கொள்கைப் பிடிப்பிலாதவன்:  துஷ்டன்:   அத்தகையோன் நற்காட்சியற்றவன் ஆவான்.

*******************************************************

 

44. இரத்தின சாரம்.

-------------------------------------

கோபமும் கலகமும் தீங்குளமும்

கொண்டவன் பழிப்பவன் செருக்குடையன்

பாவந்தான் செய்திட அஞ்சிடாதான்

பகுத்தறி வில்லனே காட்சியிலன் !

-----------------------------------

🎈எதற்கெடுத்தாலும் கோபம் கொள்பவன்: கலகம் செய்பவன்: தீய மனம் உடையவன்: பிறரை பழிப்பவன்: செருக்கு மிகுந்தவன்: பாவம் செய்திட அஞ்சாதவன்: நன்மை தீமைகளைப் பகுத்தறியாதவன்: அத்தகையோனே நற்காட்சியற்றவன் ஆகிறான்.

*****************************************

 

45. இரத்தின சாரம்

------------------------

கழுதயாய் குரங்காய் புலிநாயாய்

கருந்தலைப் பேனாய் பன்றியாமை

அழுக்குடை ஈயாய் பண்பில்லா

ஆனையாய் இருப்போர் அறமறியார் !

------------------------

🕉கழுதை, குரங்கு, புலி, நாய், பேன், பன்றி, ஆமை, ஈ, யானை முதலான நற்பண்பற்ற விலங்கினத்தின் குணங்களை உடையோர், நல்லறத்தின் தன்மை அறியார்.

***************************************************

 

46. இரத்தின சாரம்

------------------------

ஜிநவரன் அருளினார் நமக்கெல்லாம்

சிறந்ததாம் முதன்மை நற்காட்சி

கனிவதே இல்லையே ஞானசீலம்

காட்சிதான் இல்லையேல் என்ற்றிக !

------------------------

🔰நற்காட்சியே மும்மணிகளில் முதன்மையானது. நற்காட்சி இல்லாமல் நன்ஞானமும் நல்லொழுக்கமும் மலராது என்றருளியுள்ளார் ஜிநபகவான்.

****************************************

 

47. இரத்தின சாரம்

------------------------

அறிவினில் சீலத்தில் தவம்தன்னில்

அமைந்திடும் இழிவுகள் இறைதுதியில்

பொருந்திடாச் சிறுமையும் பொய்நூலைப்

போற்றலும் அழித்திடும் நற்காட்சி !

------------------------

🔰அறிவு, ஒழுக்கம், தவம் ஆகியவற்றில் ஏற்படும் இழிவும் பொருந்தாத இறைவழிபாடும் பொய்யான நூலைப் போற்றுவதும் நற்காட்சியைச் சிதைக்கும் செயல்களாம்.

*******************************************

 

48. இரத்தின சாரம்

------------------------

தொழுநோய் உடலைக் கெடுப்பதேபோல்

தொடரும் பொய்மை உயிர்கெடுக்கும்

இழிவாம் பொய்மை மிகக்கொடுமை

இழைக்கும் பிறவிப் பெருந்துன்பம்

------------------------

️தொழுநோய் உடலெங்கும் பரவி, உடலைக் கெடுப்பதேபோன்றே, பொய்க்காட்சி உயிர் நலத்தைக் கெடுக்கும் ஆதலால், பொய்க்காட்சியே மிகவும் கொடியது. பிறவிப் பெருந்துன்பத்தைத் தருவதும் பொய்க்காட்சியே.

***************************************

 

49. இரத்தின சாரம்.

---------------------------------

இறைகுணம் நல்லறம் நல்லொழுக்கம்

ஏற்புடை தவநெறி நற்குணமே

அறிந்தவர் யாவரும் காட்சியரே

அறிந்திடார் யாவரும் பொய்யர்தாம்

----------------------------------

🌷இறைவனின் சிறப்பு, நல்லறத்தின் மாண்பு, நல்லொழுக்கம்,  நற்றவம், நற்குணம் ஆகியவற்றை நன்கு அறிந்தவர்கள் யாவரும் நற்காட்சி உடையவராவர். அறியாதவர் யாவரும் பொய் கட்சியினரேயாம்.

 

**********************************

 

50. இரத்தின சாரம்

------------------------

தன்னுயிர் விடுதலை தான்எண்ணான்

தன்குறை உணர்ந்திடான் பிறர்குற்றம்

எண்ணுவான் தூற்றுவான் எப்போதும்

இக்குணம் தாங்குதல் பொய்க்காட்சி!

------------------------

💎தன் குறைகளை உணராமல் தன்னுயிரின் மேன்மை பற்றியும் முக்தி நெறிபற்றியும் ஒரு கணமும் எண்ணாமல், எப்போதும் மற்றவர் குற்றங்குறைகளையே தூற்றிக் கொண்டிருப்பவன் பொய்க்காட்சியனாம்.

*********************************

 

51. இரத்தின சாரம்

--------------------------------

கள்ளினை உண்டவன் ஆணவத்தால்

காண்பவர் பழித்திடும் கடுஞ்சொற்கள்

சொல்லுவான் அவ்விதம் பொய்க்காட்சி

தூயதாம் ஆன்மனை அறிவதில்லை!

---------------------------------

கள் குடித்தவன் போதையில் செருக்குற்று, பலரும் பழிக்கத் தக்க கடுஞ்சொற்களை உளறிக் கொட்டுவான். அதுபோன்றே பொய்காட்சியாளனும் தன் தூய உயிரின் இயல்பை உணராமல் மனம் போன போக்கில் செல்வான்.

*****************************

 

52. இரத்தின சாரம்

------------------------

பொறுமையாம் நற்குணம் முன்வினைகள்

போக்கிடும் புதுவினை தன்னுயிரில்

வருவதைத் தடுத்திடும் இம்மைக்கும்

வருங்கதி தன்னிலும் நன்மையாக்கும் !

------------------------

💎உத்தம பொறுமை என்னும் நற்குணம், முன்னரே ஈட்டிய வினைகளின் தாக்கத்தை அழிக்கும். புதிய வினை ஊற்று உயிரில் ஏற்படாமல் தடுக்கும். எனவே இம்மைக்கும் மறுமைக்கும் நன்மை தருவது பொறுமையே.

****************************************

 

53. இரத்தின சாரம்

------------------------

தூய்மையாம் சிந்தனை பற்றிலனாய்

துணிவுடன் வாழ்பவன் காட்சியனே

ஆவலில் சோம்பலில் கலகத்தில்

ஆயுளைக் கழிப்பவன் பொய்மையனே !

------------------------

🍃எப்பொழுதும் தூய சிந்தனை உடையவனாய், கடும் பற்றிலனாய். துணிவான மனத்துடன் வாழ்பவன் நற்காட்சியாளன் ஆகின்றான். பேராசையும், சோம்பலும் மேலிட கலகம் செய்து ஆயுளைக் கழிப்பவன் பொய்க்காட்சியாளன் ஆகின்றான்.

******************************

 

54. இரத்தின சாரம்_

------------------------

*பின்னடை காலத்தில் பெரும்பாலும்*

*பாரத பூமியில் வாழ்வோர்கள்*

*எண்ணத்தில் கொடுமையே கொண்டவராய்*

*இருக்கின்றார் நல்லவர் மிகச்சிலரே*

------------------------

🔰இறங்கு காலமாகிய தற்காலத்தில் பாரத பூமியில் பெரும்பாலோர் கொடுமையான சிந்தனை உள்ளவர்களாக இருக்கின்றனர். நல்லெண்ணம் கொண்டோர் மிகச் சிலரே!

*********************************

 

55. இரத்தின சாரம்

------------------------

பொய்மையில் திளைப்பவர் பாரதத்தில்

பெருகியே உள்ளனர் ஆனாலும்

மெய்மையை உணர்ந்ததநற் காட்சியரும்

மெய்த்தவ சீலரும் உள்ளனரே !

------------------------

🔰ஐந்தாம் இறங்கு காலத்தில் பொய்க்காட்சியில் மூழ்குவாரே பெருகி உள்ளனர் என்பது உண்மைதான். ஆயினும் நற்காட்சியுள்ள சிராவர்களும் துறவியரும் எண்ணிக்கையில் குறைந்த நிலையில் உள்ளனர் என்பதையும் காணலாம்.

********************************

 

56. இரத்தின சாரம்

------------------------

அறந்தனில் ஆர்வலர் இக்காலம்

அதிகமாய் இல்லைதான் எண்ணிக்கை

குறைந்தாலும் சிந்தனைச் சிறந்தோர்கள்

கொள்கையில் பிடிப்புளோர் உள்ளனரே !

------------------------

🔰இவ்விறங்கு காலத்தில் அறச் சிந்தனையுள்ளோர் எண்ணிக்கையில் மிகவும் குறைவே. எனினும் நற்சிந்தனையும் கொள்கைப் பிடிப்புமுள்ள சான்றோர்களும் இப்பூமியில் உள்ளனர்.

 

************************

 

57. இரத்தின சாரம்

------------------------

தீயவை எண்ணிட நரகம்தான்

தேவராய் மகிழலாம் நற்பண்பால்

ஆவதும் அழிவதும் எண்ணத்தால்

அவரவர் செய்கையால் என்றறிக !

------------------------

🍁தய எண்ணங்கள் நரக கதியில் தள்ளும். நல்ல எண்ணங்களும் செயல்களும் தேவகதியைத் தரும். நன்மையடைவதும் துன்பம் அடைவதும் அவரவர் எண்ணங்களாலும் செயல்களாலுமே என்றறிக.

****************************

 

58. இரத்தின சாரம்

------------------------

உயிர்க்கொலை தீச்சினம் செருக்குடனே

உலோபம் வஞ்சனை பொய்யறிவும்

செயல்களில் தீமையும் ஓருயிரை

சிதைத்திடும் துன்பினில் தள்ளிடுமே !

------------------------

💎உயிர்களைக் கொல்லுதல், கடுஞ்சினம் கொள்ளுதல், செருக்குடைமை, உலோபம், வஞ்சனை, பொய்க்காட்சி, தீமைபயக்கும் செயல்கள் ஆகியவை உயிரின் நற்பண்பைச் சிதைப்பதால் பிறவித் துன்பம் பெரிதாகும்.

************************

 

59. இரத்தின சாரம்

------------------------

தீயதாம் இலேசியை மனம்கிளரும்

தீக்கதை ஏக்கமும் எரிச்சலுந்தான்

பாவத்தில் தள்ளிடும் புகழ்போதை

பற்றிட நேர்மையும் மாய்ந்திடுமே !

------------------------

💦தமைதரும் மூன்று இலேசியை (குணமாறுபாடு)களும் மனதைப் பாழ்படுத்தும் தீய கதைகளும், ஏக்க உணர்வும், மன எரிச்சலும் மானிடரைப் பாவக் குழியில் தள்ளிவிடும். புகழ்பெற வேண்டும் என்ற தீவிரமான போதையும் நேர்மை பிறழச் செய்திடும் என்றறிக !

***************************

 

60. இரத்தின சாரம்

------------------------

அறுபொருள் ஐந்தெனும் அத்திகாயம்

அறிந்திடும் தத்துவம் ஏழோடு

பொருள்கள் ஒன்பதும் கட்டுவீடும்

பொருந்திய சிந்தனை பன்னிரண்டே !

------------------------

🌹ஆறுபொருள்கள், ஐந்து அத்திகாயங்கள், ஏழு தத்துவங்கள், ஒன்பது பதார்த்தங்கள், வினைக்கட்டு, வீடுபேறு, பன்னிருசிந்தனைகள் ஆகியவை நல்லெண்ணங்களாகும்.

****************************

 

61. இரத்தின சாரம்

------------------------

மும்மணி இயல்பையும் மூண்டுவரும்

முன்வினைப் பயனையும் எண்ணுதலும்

நன்மையே நல்கிடும் நற்கருணை

நன்மொழி நற்செயல் நன்னெறியாம் !

------------------------

🌹மும்மணிகளின் பொருளையும் முன்வினைப் பயனையும் எண்ணுதல் நன்மை பயக்கும். கருணை உணர்வு, நன்மொழி, நற்செயல்களை மேற்கொள்ளுதல் ஆகிய யாவுமே நன்னெறிகளாம் என்றறிக..

***************************

 

62. இரத்தின சாரம்.

-----------------------------------

நற்கதி நல்கிடும் நற்காட்சி

நன்மையாம் முக்தியும் வாய்த்திடுமே

துர்கதி தள்ளிவிடும் தீக்காட்சி

துணையது எதுவெனச் சிந்திப்பீர்!

------------------------------------

️நற்காட்சியால் தேவகதியும், மனிதகதியில் உயர்வும் உண்டாகும். நாளடைவில் முக்திப் பேறு வாய்க்கும். தீக்காட்சியால் விலங்கு கதித் துன்பமும், நரககதி பெரும் துன்பமும் நேரிடும். உண்மையை உணர்ந்து தெளிவீராக!.

****************************

 

63. இரத்தின சாரம்.

-----------------------------------

எத்தனை விரதங்கள் ஏற்றென்ன

இதயத்தில் ஆசையை ஒளியாமல்

பற்றினைத் துறவாமல் எவ்வுயிரும்

பான்மையில் உயருதல் ஆகாதே !

------------------------------------

💦விரதங்கள் பலவற்றை ஏற்ற போதும், எவ்வுயிரும் உள்ளத்தில் எழுகின்ற ஆசையை ஒழிக்காமல் பான்மையில் உயருதல் ஆகாது. பற்றினை துறப்பதே விடுதலை வழியாகும்.

*************************

 

64. இரத்தின சாரம்.

-----------------------------------

அணிகலன் ஆடையைத் துறந்திடினும்

ஆசையை விடாதோர் விரதங்கள்

துணையெனக் கூறுதல் தீக்காட்சி

துன்பமும் பிறவியில் உழலுவரே!

------------------------------------

💦ஆடை அணிகலன்களை துறந்து, திகம்பரத் துறவேற்றாலும், ஆசையை அடியோடு அறுக்காமல், விரதங்கள் விடுதலை நல்கும் என்று கூறுதல் பொய்க்காட்சியாகும். அத்தகையோர் பிறவிச் சுழற்சியில் துன்புறுவர்.

***********************

 

65. இரத்தின சாரம்.

-----------------------------------

மறுமையில் பெருஞ்சுகம் பெறவேண்டி

மனத்தினில் பற்றினை அறுக்காமல்

வருத்திடும் விரதங்கள் தீக்காட்சி

வாய்க்காதே விடுதலை நற்பேறு !

------------------------------------

💦வரும் பிறவியில் பெரும் சுகம் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் பற்றினை முழுமையாக அறுக்காமல் மேற்கொள்ளப்படும் உடல் வருத்தும் விரதங்களும் தீக்காட்சியேயாகும். அதனால் வீடுபேறு வாய்க்காது.

***************************

 

66. இரத்தின சாரம்

------------------------

புற்றினை இடிப்பதால் உள்ளிருந்த

பாம்புகள் மடிந்ததாய் ஆகாதே

பற்றினை விடாமல் உடல்வருத்தும்

பல்வகை நோன்பினால் பயனில்லை !

**********************************

 

💦புற்றினை இடிப்பதால் மட்டும் உள்ளிருந்த பாம்புகள் மடிந்துவிடும் என்று கருதுதல் கூடாது. அதுபோன்றே பற்றுகளைத் துறக்காமல், உடலை வருத்தும் நோன்புகளை ஏற்பதனால் வினைகள் அழிவதில்லை.

 

67. இரத்தின சாரம்.

------------------------

மனத்தினை பொறிகளை அடக்குவோனே

மாதவம் செய்பவன் ஆகின்றான்

சினத்தினை செருக்கினைச் சேர்ப்பவனோ

சிதறிடும் அறிவிலி ஆகின்றான்.

------------------------

🔰ஐம்பொறிகளையும் மனத்தையும் அடக்கி ஆள்பவன் பெருந்தவம் புரிபவனுக்கு ஒப்பாவான். சினத்தையும் செருக்கையும் உடையவன் பண்பினில் சிதறிய அறிவிலி ஆகின்றான்.

****************************

 

68. இரத்தின சாரம்

------------------------

அறிவினால் ஞானியர் வினைக்கட்டை

அகற்றுவர் மருந்தினை அறிந்திருந்தும்

அருந்திடா மூடரே போல்பேதை

அகற்றிடான் கட்டினைச் சேர்ப்பவனே !

------------------------

️அறிஞர்கள் தம் அறிவினால் தெளிவடைந்து, வினைக்கட்டை விலக்குவர். ஆனால் நோக்க்கு ஏற்ற மருந்தினை அறிந்திருந்தும் அதை ஏற்காத மூடரைப் போன்றே அறிவிலிகள் தம் வினைக்கட்டை போக்கிட முயலாமல், மேலும் கட்டுக்குள்ளாவர்.

*****************************

 

69. இரத்தின சாரம்

------------------------

பொய்மையாம் அழுக்கினை நற்காட்சி

போக்கிடும் வினைகளாம் பெருநோயை

மெய்மையாம் ஒழுக்கம் தீர்த்திடுமே

மேலான விடுதலை வழியிதுவே

------------------------

️பொய்க்காட்சியாகிய அழுக்கை நற்காட்சி என்னும் மருந்தால் போக்கிடலாம். வினைகளாகிய பெருநோயை நல்லொழுக்கத்தால் போக்கிடலாம். எனவே மும்மணியே முக்திக்கு வழியென உணர்கவே !

******************************

 

70. இரத்தின சாரம்

------------------------

ஐம்புலன் சுகங்களை நீக்கிட்டோன்

அறிஞனே ஆயினும் துவர்ப்பசையில்

தம்முளம் தோய்ந்திடான் பேரறிஞன்

தகுதியில் உயர்ந்தவன் அவனேயாம்

------------------------

💠ஐம்புலன் இன்பங்களை நீக்கி ஒதுக்கியவன் அறிஞன் என்பதில் ஐயமில்லை. ஆயினும் நான்கான துவர்ப்பசைகளில் தோயாதவனே அவனினும் உயர்ந்தவன் ஆகின்றான்.

***************************

 

71. இரத்தின சாரம்

------------------------

அருகரின் பக்தியில் தோயாதார்

அடக்கமும் உறுதியில் நிலைக்காத

ஒருவரின் தியானமும் அறிமுகமில்

ஒருத்தியின் அழுகைபோல் வீணாமே !

------------------------

️அருகரின் பக்தியில் திளைக்காத மாந்தரின் அடக்கமும் மன உறுதியில் நிலைக்காதார் மேற்கொள்ளும் தியானமும் அறிமுகமில்லாப் பெண்ணின் அழுகையைப் போல் பயனற்றவையாகும்.

********************************

 

72. இரத்தின சாரம்

------------------------

வலிமை யில்லாப் போர்வீரன்

வாழ்க்கைத் துணையிலா மாதர்கள்

புலன்கள் அடக்கா சாதுவரும்

பொருந்திய சாதனை புரியாரே !

------------------------

💢உடலிலும் மனத்திலும் வலிமையில்லாத போர்வீரனும் இல்வாழ்க்கையில் நல்ல கணவனைப் பெறாத மங்கையரும், ஐம்புலன் அடக்கத்தை மேற்கொள்ளாத முனிவர்களும் சாதனை ஏதும் செய்ய முடியாதவர்களேயாவர்.

*************************

 

73. இரத்தின சாரம்

------------------------

ஆயிரம் பொருள்களை குவித்தாலும்

அறிவிலா உலோபிகள் அனுபவியார்

மேவிய தவத்தரும் பற்றுவிடேல்

மேன்மைதான் பெற்றிடல் ஆகாதே !

------------------------

🌹ஆயிரம் ஆயிரம் செல்வங்களைக் குவித்தாலும் உலோபிகளான அறிவிலிகள் அவற்றால் சுகம் அடைவதில்லை. அதுபோன்றே துறவறத்தை ஏற்றோரும் தம் உள்ளத்திலிருந்து பற்றை நீக்கவில்லையாயின் மேன்மையடைந்திடாரே.

**********************************

 

74. இரத்தின சாரம்

------------------------

நற்பொருள் ஈட்டிய நல்லறிவன்

நால்வகைத் தானத்தால் சிறப்படைவான்

நற்பதம் விரும்பிடும் சாதுவரும்

ஐம்புலன் அடக்கத்தால் சிறப்படைவர்.

------------------------

🌼நல்வழியில் பொருள் ஈட்டிய நல்லறிவன் நான்கு வகையான தானங்களைச் செய்து சிறப்புறுவான். அவ்விதமே, முக்திப் பேற்றினை நோக்கமாக கொண்ட துறவியரும் ஐம்புலன் அடக்கத்தால் மேன்மையுறுவர்.

*********************************

 

75. இரத்தின சாரம்

------------------------

மூவகை ஆசையாம் பாம்பினையே

மும்மணி மந்திரம் அடக்கிடுமே

யாவரும் சூடுக மும்மணியே

யாதொரு துன்பமும் பறந்திடுமே.

------------------------

💢மண் ஆசை, பெண் ஆசை, பொன் ஆசை ஆகிய மூவகை ஆசைகளாகிய பாம்புகள், நற்காட்சி, நன்ஞானம், நல்லொழுக்கமெனும் மும்மணி மந்திரத்தால் அடக்கப்பட்டுவிடும். எனவே மும்மணி சூடி, துன்பவிடுதலை பெற்றிடுக!

*******************************

76. இரத்தின சாரம்

------------------------

தலையின் முடியினைத் தான்நீக்கித்

தவத்தினை ஏற்றிடும் முன்பேதான்

நிலையாய் ஐம்புலன் அடக்கத்தில்

நின்றிடல் வேண்டுமே விடுதலைக்கே !

------------------------

🍃தன் தலை முடியைத் தன் கைகளால் தானே நீக்கித் துறவறம் ஏற்றிடும் முன்பாக ஐம்புலன் அடக்கத்தில் நிலைத்து நின்றிடல் வேண்டும். அதுவே முக்திக்கு வழிவகுக்கும்.

***********************************

 

77. இரத்தின சாரம்

------------------------

பணிவிலா மனைவியும் ஊழியரும்

பகவனை குருவினை வணங்காரும்

இனியவாய் நன்னூல் பயிலாரும்

எய்துவார் தீக்கதி நிச்சயமே !

------------------------

💦கணவனுக்கு அடங்காத மனைவியும், தலைவனுக்கு அடங்காத ஊழியனும் பகவனையும், தன் குருவையும் வணங்காதோரும் நன்மை பயக்கும் நன்னூல்களையும் பயிலாரும் தீக்க்தியை நிச்சயமாய் அடைவர்.

************************

 

78. இரத்தின சாரம்

------------------------

நன்னிலம் ஊன்றிய விதைபோல்

நற்குரு பணிவதே நன்மையாகும்

என்னதான் நற்குணம் பெற்றிடினும்

ஏற்றிடேல் பணிவுதான் பயனில்லை !

------------------------

🌹ஒரு சீடர் பல நற்குணங்கள் (தியானம், விரதம்) பெற்றவராயினும், அவர் தன் குருவிடம் பணிவுடன் இல்லையேல் பயனில்லை: சீடரின் பணிவுடமை நல்ல நிலத்தில் ஊன்றப்பட்ட நல்ல விதைகளைப் போல் நன்மைபயக்கும். பணிவில்லாத ஒழுக்கம் நன்மை பயக்காது.

**************************

 

79. இரத்தின சாரம்

------------------------

நல்லவன் அரசனாய் அமையாத

நாடுதான் கேடுறும் அதுபோன்றே

அல்லவை விலக்கிய தன்குருவின்

அடிமலர் பணிந்திடார் பயனுறாரே!

------------------------

🔰செங்கோல் செலுத்தும் அரசன் இல்லாத நாடு கேடடையும். அவ்விதமே பற்றினை விலக்கிய தன்குருவின் திருவடியை பணிந்திடாத சீடர்களும் நன்மைகளை அடைவதில்லை.

*************************

 

80. இரத்தின சாரம்

------------------------

அன்பும் பக்தியும் போலியானால்

அறத்தினில் கருணை உணர்வின்றேல்

பண்பின் சிகரம் குருமகானைப்

பணிந்திடேல் பயன்தான் விளைவதில்லை.

------------------------

💦அன்பு, பக்தி ஆகியவை உண்மையாக இல்லையானால், அறம் புரிவதில் கருணை உணர்வின்றி, விளம்பர நோக்கம் இருந்திடின், பண்பின் சிகரமாய்த் திகழும் குருமகானைப் பணிந்திடாவிடின் பயன் விளையாது.

*****************************

 

81. இரத்தின சாரம்

------------------------

ஏற்றிடத் தக்கன தகாதனவும்

எண்ணித் தெளிந்திடல் இல்லாயின்

போற்றிடும் உண்மையை அறிவதில்லை

புலன்களில் மூழ்கியே மயங்குவரே !

------------------------

🌺எது ஏற்கத்தக்கது எது தகாது என்றுணரும் பகுத்தறிவு இல்லாவிட்டால், உண்மையான முக்தி நெறியை அறிய முடியாது. அந்நிலையில் அத்தகையோர் புலன் இன்பங்களையே இன்பம் எனக் கருதி மயங்கித் துன்புறுவார்கள்.

*******************************

 

82. இரத்தின சாரம்

------------------------

உடலினை வருத்திடும் உண்ணாமை

உள்ளிட்ட நோன்புகள் தவமேயாம்

தடங்கலின் காரணம் தானறிந்தே

தன்னுயிர் போற்றிடின் வினையழியும்!

------------------------

🔰உடலை வருத்தும் உண்ணா நோன்பு முதலானவையும் தவமேயாகும். உண்மைச் சுகத்திற்குத் தடையாகவுள்ள கடும்பற்றினை நீக்கி, தன்னுயிரின் சிறப்பை உணர்ந்திட்டால், வினைகள் அழிந்தொழியும்.

********************************

 

83. இரத்தின சாரம்

------------------------

தன்னுயிர் மாண்பினைத் தான்உணரா

தவமுனி இம்மை மறுமையிலும்

நன்மைதான் அடைந்திடார் நற்காட்சி

நல்லுயிர்ப் பணிபினில் இழிந்தவரே!

------------------------

🔰தன்னுயிரின் சிறப்பை உணராத ஒரு முனிவர் இம்மையிலும் மறுமையிலும் எவ்வித நன்மையும் அடைவதில்லை. நற்காட்சியில் இழிந்தவர் ஆகின்றார்.

*************************************

 

84. இரத்தின சாரம்

------------------------

ஒருமுனி உடையினைத் துறந்திடினும்

உயிரதன் மாண்பினை உணர்ந்திடாரேல்

கருத்தினில் தூய்மையைக் கொள்ளாரேல்

கதிகளைக் கடப்பவர் ஆகாரே!

------------------------

🍀தன் உடையும் மிகையெனக் கருதித் துறக்கும் ஒரு முனிவர், தன் உயிரின் சிறப்பை உணராவிடின், உயிரின் தூய்மை பற்றிச் சிந்திக்க வில்லையாயின், அவர் முக்திநெறி செல்லாதவரேயாவர்.

****************************************

 

85. இரத்தின சாரம்

------------------------

எதுவரை சாதுவர் தன்னுயிரின்

எண்ணிலாச் சுகங்களை உணராரோ

அதுவரை அம்முனி சாதனையில்

ஆனந்தம் அடைவது தானிலையே

------------------------

💢தன்னுயிரின் இயல்பான எண்ணிலாச் சுகங்களை எதுவரை ஒரு முனிவர் அறியவில்லையோ, அதுவரை அவர் ஆன்ம சாதனை புரியாதவரே ஆவார்.

****************************************

 

86. இரத்தின சாரம்

------------------------

ஆன்மனை அறிபவர் நற்காட்சி

அடைந்தவர் ஆவரே அக்காட்சி

மேன்மைக்கே அவசியம் ஒருதுறவி

முயற்சிகள் கொள்ளுதல் முக்கியமே!

------------------------

🌺தன் உயிரின் ஆற்றலை அறிபவர் நற்காட்சி அடைந்தவர் ஆவார். அத்தகைய காட்சியின் மேன்மைக்கு ஒரு துறவி இடையறாது முயலுதல் வேண்டும்.

*******************************************

 

87. இரத்தின சாரம்

------------------------

அரணிலா அரசுபோல் இல்லறத்தார்

ஆகுவர் தானம்தான் புரிந்திடாரேல்

கருணைதான் வேண்டும் அவரிடத்தே

கல்வியால் சிறப்பர் அருந்தவத்தோர்!

------------------------

️கோட்டையரண் இல்லாத அரசனின் நாடு பகைவரால் தாக்கப்படுதல் போன்றே, தானம் புரியாத இல்லறத்தார் வாழ்வும் கடும் பற்றினால் தாக்கப்படும். தானம் புரிவதிலும் கருணை உணர்வு மிகமிக அவசியமாகும், அவ்விதமே கல்வி அறிவினால் துறவியர் மேன்மையடைவர்.

*******************************************

 

88. இரத்தின சாரம்

------------------------

சளியில் விழுந்த ஈபோன்றே

தவிப்பர் மூடர் பொருளாசை

களிப்பில் மிதந்தால் துறவியரும்

காயம் வருத்திப் பயனில்லை

------------------------

🔰துப்பிய சளியில் விழுந்த ஈ தப்பி வெளியேற முடியாமல் தவிப்பது போன்றே, பொருளாசை கொண்ட மூடரும் உலோபிகளும் துன்புறுவர். துறவியரும் பொருளாசை நீக்காமல் உடல் வருத்தும் நோன்புகளால் பயன் அடையார்.

*********************************

 

89. இரத்தின சாரம்

------------------------

ஆன்மனை அறியா ஒரு துறவி

அகத்தில் புறத்தில் தூய்மையிலர்

மேன்மைத் தியானம் அமையாது

மேலாம் முக்தி கிட்டாது.

------------------------

💢தன் ஆன்மாவின் சிறப்பை உணராத துறவி, மனத் தூய்மை உடையவராகவோ, புறத் தூய்மையுடையவராகவோ இருக்க வியலாது. மேன்மையான தியானத்திலும் அவர் ஈடுபட வியலாது. எனவே முக்தி வாய்த்தலும் ஆகாது.

*********************************

 

90. இரத்தின சாரம்

------------------------

உத்தம நூல்கள் ஓதுவதே

உன்னதத் தியானம் என்றாகும்

சித்தம் கலக்கும் துவர்ப்பசைகள்

திண்டா தொழியெமே இக்காலம்!

------------------------

💦அருகன் திருமொழியின் சாரமான உத்தம நூல்களை ஓதுவதே ஐந்தாம் தீக்காலத்தில் ஏற்படக்கூடிய உன்னதத் தியானமாக அமையும். அதனால் மனதைப் பாழ்படுத்தும் துவர்ப்பசைகள் ஒழியும்.

*********************************

 

91. இரத்தின சாரம்

------------------------

ஐவகை பாவங்கள் நீக்குதலும்

அறப்பணி ஆர்வமும் நல்லறிவால்

கைவரப் பெறுதலால் நல்லறிவே

கைக்கொள்ளும் தியானம் என்றறிக!

------------------------

💢கொலை, பொய், களவு, தீக்காமம், பேராசை ஆகிய ஐவகையான பாவங்கள் நீங்குவதும் நல்லறப் பணிகளில் நாட்டமும் நல்லறிவால் ஏற்படும். எனவே இக்காலத்தில் நல்லறிவைப் பெற முயலுவதே தருமத் தியானமாக அமையும் என்றருளியுள்ளார் பகவன்.

********************************

 

92. இரத்தின சாரம்

------------------------

பகவனார் அருளிய நன்னூலில்

பயிற்சி யில்லாச் சாதுவர்க்கே

தகுதியாம் தவந்தான் அமையாது

சிராவகர் போலவர் பற்றுடையார்!

------------------------

🔰அருகர் அருளிய ஆகமங்களில் ஞானம் பெறாத முனிவர்க்கு நற்றவம் அமையாது. இல்லறத்தார் போன்றே அம்முனிவரும் பற்று மிக்கவராவார்.

*******************************

 

93. இரத்தின சாரம்

------------------------

ஏழாம் தத்துவச் சிந்தனையில்

என்றும் தோய்பவர் மயக்கத்தில்

வீழார் நல்லறக் கதைகளையே

உரைப்பார் அவரே நன்முனிவர்!

------------------------

💦அருகன் அருளிய ஏழு தத்துவங்களின் நுட்பத்தை எப்போதும் சிந்திப்பவர் யாரோ, உலகிய சுகங்களில் மயங்காமல், நல்லோர்க்கு நல்லறக் காதைகளை உரைப்பவர் யாரோ, அவரே சிறந்த நன்முனிவர் ஆவார்.

**********************************

 

94. இரத்தின சாரம்

------------------------

தீக்கதை விலக்குவார் தீச்செயலை

நீக்குவார் அறிவினில் சிறந்திடுவார்

ஆக்கம் என்பதே அறமென்பார்

ஆறிரு சிந்தனை யார்சாது.

------------------------

💦உண்மையான முனிவர் என்பார், தீமை பயக்கும் கதைகளை கேட்பதில்லை. தீச்செயல்களிலிருந்து முற்றிலும் விலகியே இருப்பார். நல்லறிவில் சிறந்திடுவார். அறம்ம் ஒன்றே ஆக்கிட தக்கது என்பார். பன்னிரு சிந்தனைகளை ஏற்பவர் ஆவார்.

************************************

 

95. இரத்தின சாரம்

------------------------

வஞ்சனை அறியார் அருந்தவத்தோர்

வாய்த்திடும் இருபான் இரண்டான

துன்பங்கள் பொறுப்பார் பற்றிலரே

தூயநன் நூல்கள் பயிலுவரே!

------------------------

💦உத்தம துறவியர் சற்றும் வஞ்சனையில்லாதவர்கள், இருபத்து இரண்டு வகையான துன்பங்களைப் பொறுத்து வென்றிடுவர். பற்றற்றவர்கள், நன்னூல்களை ஆழ்ந்து பயிலுபவர்கள்.

*******************************

 

96. இரத்தின சாரம்

------------------------

யாரிடமும் வெறுப்பிலர் பற்றுமிலர்

எவ்விதக் குற்றமும் அற்றவரே

கூர்மையாய்த் தியானத்தில் ஆழ்பவரே

கொள்கையில் நிலைத்தவர் பெருமுனியே!

------------------------

🔰உத்தம முனிவர் என்பார், யாரிடமும் விருப்பு வெறுப்பு இல்லாதவர்; எவ்விதக் குற்றமும் அற்றவர்; தியானத்தில் நிலைத்து ஆழ்பவர்; தவநெறியில் மாறுபடாதவர் ஆவார்.

*********************************

 

97. இரத்தின சாரம்

------------------------

 எத்தனைத் தான்உடல் வருத்தினாலும்

இயல்பினில் பொய்க்காட்சி உடைத்தாயின்

உத்தமத் துறவியாய் ஆகாரே

உன்னத முக்தியை சேராரே!

------------------------

️ஒரு முனிவர் எவ்வளவுதான் தன் உடல் வருத்தும் தவநிலைகளை மேற்கொண்டாலும், அவர் பொய்க்காட்சி உடையவராயின் உத்தமத் துறவியாகார். முக்திப்பேறும் அவருக்கு வாய்ப்பதில்லை.

*******************************

 

98. இரத்தின சாரம்

------------------------

 அழுக்கு மூடிய கண்ணாடி

யதனில் உருவம் தெரிவதில்லை

இழுக்குக் கேதுவாம் பற்றிருப்பின்

இயல்பாம் தூய்மை வாய்க்காதே!

------------------------

🔰அழுக்குப் படிந்த கண்ணாடியில் உருவங்கள் தெரிவதில்லை. அதுபோன்றே பற்றில் தோய்ந்த உயிரும் தூய்மை பெறுவதில்லை.

**********************************

 

100. இரத்தின சாரம்

------------------------

உடல்சுகம் நாடுவோர் புலனாசை

உள்ளவர் துவர்ப்பசை சேர்ந்திட்டோர்

மடிமிகத் தூங்குவோர் நற்காட்சி

மாண்பினை எய்திடார் என்றறிக!

------------------------

உடல் மீது பற்று கொண்டோரும் ஐம்புலன் ஆசைகளையும் விரும்புவோரும் நான்கு துவர்ப்பசைகளை சேர்ந்தோரும் சோம்பல் கொண்டு மிகுதியாகத் தூங்குவோரும் நற்காட்சி பெற மாட்டார் என்பதே உண்மை.

*****************************

 

101. இரத்தின சாரம்

------------------------

வாழ்க்கைப் பொருள்களில் எத்துறவி

வரம்பிலா ஆசைகள் கொண்டவரோ

தாழ்வெண் ணம்பசை விரதமின்மை

தாங்கியே வாழ்வரோ அவர்பொய்யர்!

------------------------

🎈அன்றாடப் பயன்பாட்டுப் பொருள்களில் அதிகப் பற்றுடையவரும் தாழ்வான எண்ணங்களான பொறாமை, கலகம் முதலானவற்றையுடையவரும் துவர்ப்பசை கொண்டோரும் தக்க விரதங்களை ஏற்காதோரும் பொய்த்துறவியர் ஆவர்.

***********************************

 

102. இரத்தின சாரம்

------------------------

சங்கம் எதிர்ப்போர் தீக்குணத்தோர்

தன்குரு மதியார் அறிவற்றோர்

மன்னரை செல்வரைப் போற்றிடுவோர்

மாண்பினில் குறைந்த துறவியரே!

------------------------

🔰தான் சார்ந்த சங்கத்தின் கட்டுப் பாட்டுக்கு அடங்காதோரும் தன் குருவை அவமதிபோரும் ஆகம ஞானமில்லாரும், மன்னர். செல்வந்தர் போன்றோரைப் போற்றி வாழ்வோரும் போலித் துறவியரே ஆவர்.

******************************

 

103. இரத்தின சாரம்

------------------------

மருத்துவம் ஜோதிடம் மந்திரங்கள்

மகத்துவம் சொல்லியே நிதிபெறுவோர்

வருத்திடும் பேய்களை ஓட்டுவதாய்

வரவுகள் திரட்டுவோர் பொய்த்துறவி!

------------------------

🔰மருத்துவம், ஜோதிடம், மந்திர தந்திரங்களாலும், பேய், பிசாசு ஓட்டுவதாய் கூறுவதன் மூலமும், பொருள் திரட்டுவோர், பொய்யான துறவியரே ஆவர். அவர்கள் அருக நெறியிலிருந்து தவறியவர்கள் ஆவர்.

****************************************

 

 

104. இரத்தின சாரம்

------------------------

பாவம் செய்திட அஞ்சாதார்

பல்வகைத் தொழிலில் பற்றுடையார்

கோபம் முதலாம் துவர்ப்பசைகள்

கொண்டவர் யாவரும் காட்சியற்றோர்.

------------------------

🔰பாவம் விளையும் செயல்களைச் செய்திட அஞ்சாதவர்கள், பொருள் சேர்க்கும் தொழிலில் பற்றுடையோர், கோபம் முதலான துவர்ப்பசைகள் உடையோர் ஆகிய யாவரும் நற்காட்சியற்றோரே.

***********************************

 

105. இரத்தின சாரம்

------------------------

மற்றவர் புகழினைப் பொறுக்காதார்

மறைமுக நேர்முக வழிகளிலே

தற்புகழ் விளம்பரத் தன்னலத்தோர்

சாதுவர் அல்லரே பொய்யர்தாம்.

------------------------

💦மற்றவர்களுடைய புகழைத் தாங்க இயலாமல் பொறாமைப்படுவோரும் தற்பெருமையைப் பல வழிகளிலும் விளம்பரம் செய்கின்ற தன்னலம் மிகுந்த குணத்தோரும் துறவியாயினும் துறவியல்லர்: பொய்க்காட்சியரே யாவர்.

*****************************

 

106. இரத்தின சாரம்

------------------------

மாமிசம் விரும்பும் தெருநாய்கள்

மானிடர் கண்டிட குரைப்பதேபோல்

தாமெனும் அகந்தையர் குறைசொல்வார்

தருமத்தைச் சொல்பவர் மீதென்றும்!

------------------------

🍁மாமிசத் துண்டுகளை விரும்பி உண்ணும் தெருநாய்கள், மானிடர் அங்கு வரக் கண்டால் குரைக்கின்றன. அதுபோலவே நல்லோர்கள் அறவுரையைக் கூறும்போது, செருக்கில் மிக்க பேதையர், அச்சான்றோரைப் பழித்துக் கூறுவர்.

*****************************

 

107. இரத்தின சாரம்

------------------------

உடலினை வளர்த்திடும் நோக்கமின்றி

உயரிய தியானத்தில் மூழ்கவேண்டி

கிடைத்திடும் உணவையே ஏற்பவர்தான்

விடுதலை விரும்பிடும் சாதுவராம் !

------------------------

💦தன் உடல் வளர்ச்சிக்காக என்றெண்ணாமல் உத்தமத் தியானம் மேற்கொள்ளும் நோக்கத்தில் கிடைக்கின்ற எளிய நல்லுணவை ஏற்கின்ற முனிவரே முக்திப் பாதையில் செல்பவராம்.

*******************************

 

108. இரத்தின சாரம்

------------------------

அளவினில் குறைவாய் உண்பவராம்

அச்சினில் எண்ணெய் மலர்வண்டாய்

அளிப்பவர் நோக்கா துண்டிடுவார்

அறுசுவை வேண்டார் சாதுவராம் !

------------------------

💦உத்தம சாதுவர் குறைவான நல்லுணவையே உண்பர். அச்சுக்கு எண்ணெய் இடுவது போல் அம்முனிவரின் தியானத்திற்கு அவ்வுணவு உதவிடும். மலருக்கு சேதமின்றி வண்டு, மலரில் தேன் அருந்துவது போன்றே, யாருக்கு இடையூறு ஏதுமின்றி, கொடுப்பவர் செல்வ நிலைநோக்காது, அறுசுவை விருப்பமின்றி மருந்தெனவே உண்பர்.

****************************

 

109. இரத்தின சாரம்--

------------------------

மாதவர் உண்பதே சாதனைக்கே

மற்றுடல் வளர்த்திடும் நோக்கில்லை

கோதெனத் தம்முடல் தனைவருத்தி

குற்றமில் அறத்தினில்  தோய்கின்றார்.

------------------------

💢அருந்தவத்தோர் ஆகாரம் ஏற்பதே ஆன்ம சாதனைக்காகத்தான். உடலோம்பும் நோக்கம் அவர்க்கில்லை. சக்கைபோன்றே தம்முடலை வருத்தி, குற்றமற்ற திருவறச் சிந்தனையில் அவர்கள் தோய்கின்றனர்.

*************************************

 

110. இரத்தின சாரம்

------------------------

குருதியும் கொழுப்பும் சீழ்மலமும்

கொண்ட்தாம் இவ்வுடல் துர்நாற்றம்

கிருமிகள் நிறைந்ததே என்றாலும்

கருவியாய் ஆகுமே விடுதலைக்கே!

------------------------

🔰இவ்வுடலானது இரத்தம், கொழுப்பு, சீழ், மலம், சிறுநீர் முதலான அழுக்குகளுடன் துர்நாற்றம் வீசக்கூடியதாகவும் எண்ணற்ற கிருமிகள் நிறைந்ததாகவும் உள்ளது என்றாலும் தவமியற்றி விடுதலை பெறுவதற்கு கருவியாக ஆகின்றது என்பதனால் துறவியர் உணவேற்கின்றனர்.

********************************

 

111. இரத்தின சாரம்

------------------------

சிந்தனை தொடரவும் நாள்தோறும்

சிறந்தநூல் பயிலவும் இவ்வுடலே

யந்திரம் என்பதால் உணவேற்பர்

இதனையே மறந்தவர் சுழல்பவரே!

------------------------

🔹தூய சிந்தனை தொடரவும் தினந்தோறும் நன்னூல் பயிலவும் இவ்வுடல் என்னும் யந்திரம் பயன்படும். எனவே தான் துறவியர் உணவு ஏற்கின்றனர். இதனை மறந்தவர் பிறவிச் சுழற்சியில் துன்புறுவர்.

*********************************

 

 112. இரத்தின சாரம்

------------------------

கோபமோ கொடிய ஆத்திரமோ

கொண்டொரு முனிவர் உணவேற்றால்

பாவமே சேர்த்தவர் ஆகின்றார்

பிசாசெனக் கூறினால் தவறில்லை !

------------------------

💧ஒரு முனிவர் கோபமோ அல்லது கொடிய ஆத்திரமோ கொண்டு, உணவு ஏற்றால் அவர் பாவத்தை ஈட்டியவரேயாவார். அவரை பிசாசு என்று கூறுவதும் தவறில்லை.

*******************************************

 

113. இரத்தின சாரம்

------------------------

காய்ச்சிய இரும்பு கொண்டெனவே

கைகளில் உணவை இல்லறத்தார்

தூய்மையாய்த் தந்தால் ஏற்றிடுவர்

துறவியர் படகாம் அவ்வுணவே !

------------------------

🌸பிறவியாகிய கடலைக் கடக்க தாம் இருக்கும் தூய உணவு ஒரு படகு போல் உதவக்கூடும். எனவே காய்ச்சிய இரும்புக் குண்டு போல் தூய்மையான உணவை இல்லறத்தாரிடமிருந்து தம் கைகளில் பெற்றுத் துறவியர் உண்பர்.

******************************

 

114. இரத்தின சாரம்

------------------------

உணவினைத் தானமாய் ஏற்போர்கள்

உத்தம விரதமில் காட்சியரும்

அனுவிர தநோன்பிகள் மாமுனிகள்

அறிஞர்கள் யாவரும் பலவகையாம்.

------------------------

️ஆகார தானத்திற்குரியோர்கள் பலவகைபடுவர்.  விரதங்களை ஏற்காத நற்காட்சியாளர்கள், அனுவிரதங்களை ஏற்ற இல்லறத்தார், மகா விரதங்களை ஏற்ற மாமுனிவர்கள், ஆகமஞானம் மிகுந்த தத்துவஞானிகள் என்று அவர்களை பட்டியலிடலாம்.

*********************************

 

115. இரத்தின சாரம்

------------------------

உத்தமப் பாத்திரம் என்போர்கள்

உயரிய தவத்தினை ஏற்றோர்கள்

அத்தனை மேன்மையும் தாங்கிட்ட

அறவோர் சாதுவர் என்பாரே!

------------------------

🟢தானத்திற்கு ஏற்ற உத்தம பாத்திரம் அருந்தவம் ஏற்ற முனிவர்களேயாவர். அவர்கள்  முனிநிலைக்கேற்ற எல்லாச்சிறப்புகளையும் உடையவர்கள்.

*************************************

 

116. இரத்தின சாரம்

------------------------

அருகரின் சிறப்பையும் அளவில்லா

ஆனந்த வடிவினர் சித்தர்தம்

பெருமையும் தன்னுயிர் ஆற்றலையும்

பிழையின்றி அறியார் சுழலுவரே.

------------------------

🔹அருகப் பெருமானின் சிறப்பையும் அளவில்லாத ஆனந்த வடிவனரான சித்த பரமேட்டியின் சிறப்பையும் தன்னுயிரின் பேராற்றலையும் அறியாதார் பிறவியில் உழலுவரே.

***********************************

 

118. இரத்தின சாரம்

------------------------

உயரிய காட்சியை உடையோர்தாம்

உத்தம பாத்திரம் ஆகின்றார்

அவர்களை அறிந்துதான் தானத்தை

அளிப்பவர் முக்தியின் வழிசெல்வோர்!

------------------------

🔸நற்காட்சியில் தெளிந்தோரே தானம் வழங்குவதற்கு ஏற்ற உத்தம பாத்திரம் என ஜிநர் அருளியுள்ளார். அத்தகையோர்களைக் கண்டறிந்து நால்வகைத் தானமளிப்போர் முக்திப் பாதையில் செல்பவர் ஆவார்.

************************************ 


119. இரத்தின சாரம்

------------------------

உலகியல் நிச்சயம் என்றேதான்

உரைப்பரே மும்மணி வகையிரண்டாய்

தெளிந்தவர் யாவரும் காட்சியரே

தெளிந்திடா மயக்கமே பொய்க்காட்சி!

------------------------

🔸மும்மணியை உலகியல் நிச்சயம் என இருவகையாய்க் கூறுகின்றன நம் ஆகமங்கள். அதை நன்கு அறிந்தவர் நற்காட்சியர், உலகியலில் மயங்குவோர் பொய்க்காட்சியர் ஆவர்.

*****************************

 

120. இரத்தின சாரம்

------------------------

தத்துவ அறிவினைப் பெற்றிருந்தும்

தவத்தினில் முனிவராய்த் தானிருந்தும்

உத்தம காட்சிதான் இல்லாயின்

உழலுவர் பிறவியில் பலகாலம்!

------------------------

🔸ஒருவர் தத்துவ ஞானம் உடையவராய் இருந்தாலும், முனிவராய்த் தவத்தினை ஏற்றாலும், அவரிடம் நற்காட்சி இல்லையானால் அவர் பிறவிச் சுழற்சியில் பலகாலம் உழலுவர் என்பதை உணர்தல் வேண்டும்.

------------------------

121. இரத்தின சாரம்

------------------------

ஐவகை நோன்புகள் துயர்வெல்லல்

அறுவகைக் கடமைகள் நூற்பயிற்சி

மெய்வகைத் தியானமும் சிறப்பதில்லை

மேன்மையாம் காட்சிதான் இல்லாயின்!

------------------------

🔸துறவியர் மேற்கொள்ளும் துன்பம் வெல்லுதல் முதலான ஒழுக்க முறைகளும் நித்திய கடமைகளான ஆறும் நூலோதுதலும் தியானமும் நற்காட்சி உடையோர்க்கே நன்மையாகும். நற்காட்சியின்றேல் அனைத்தும் வீணேயாம்.

****************************

 

122. இரத்தின சாரம்

------------------------

மறுமையில் மேன்மைதான் வேணுமாயின்

மானிடர் இம்மையில் தன்னலமாம்

சிறுமையை மறந்திடல் தான்வேண்டும்

சேவையில் வாழ்நாள் செலவிடுக!

------------------------

🔸மறுபிறவியில் மேன்மை பெறவேண்டும் என விரும்புவோர், இப்பிறவியில் தன்னலத்தை மறந்து (தற்பெருமை பாராது) மற்றவர்க்கு உதவிடும் பொது நலத்தில் தம் வாழ்நாளைச் செலவிட வேண்டும்.

*******************************

 

123. இரத்தின சாரம்

------------------------

விருப்பையும் வெறுப்பையும் விலக்குதலே

வினைகளைத் தடுத்திடும் என்றுணர்ந்தே

பொறுமைக் காத்திடும் நன்முனிவர்

பொருந்துவர் உயிர்நலம் நிருவாணம்!

------------------------

விருப்பையும், வெறுப்பையும் விலக்குவதுதான் வினைகளைத் தடுகின்ற வழி என்பதை உணர்ந்த முனிவர், எந்நிலையிலும் உத்தமப் பொறுமையை ஏற்கின்றனர். தன் உயிரின் தூய்மையில் முழுக்கவனம் செலுத்துவதால், முக்திப் பேறு அடைகின்றார்.

**********************************

 

 124. இரத்தின சாரம்

------------------------

வினைகளின் விடுதலை விரும்பிடுவோர்

வேர்களை ஊற்றினை கட்டுக்கே

அணையிடும் முறையொடு அழித்தலையும்

அறிந்திடல் அவசியம் அவசியமே!

------------------------

💢வினைகளிலிருந்து பூரண விடுதலை பெற விரும்புவோர், வினை வருகைக்கான மூல காரணங்களையும் ஊற்றின் வழிகளையும் வினைக்கட்டு நிகழாமல் தடுக்கின்ற வழிகளையும் முன் வினைகளை அழிக்கின்ற முறைகளையும் நிச்சய நோக்கில் உணர்ந்திட வேண்டும். (ஏழு தத்துவம் அறிந்திட வேண்டும் என்பதாகும்)


125. இரத்தின சாரம்

------------------------

திரும்பத் திரும்பக் கூறவேண்டாம்

துறவி என்பார் பற்றிலரே

அரும்ப வேண்டும் முக்தியாயின்

ஆன்ம இயல்பை உணர்ந்திடுக!

------------------------

💢மண்டும் பலமுறை கூறவேண்டிய அவசியம் இல்லை. உண்மையான துறவி என்பார் ஆசைகளை அறவே விட்டவர் ஆவார். முக்திப் பேறு வாய்க்க ஆன்ம இயல்பை உணர்தல் வேண்டும்.

*************************

 

126. இரத்தின சாரம்

------------------------

நன்னூல் ஓதலும் தியானமுமே

நல்லுயிர் மேம்படும் நன்னெறியாம்

இன்பம் புலன்களில் துய்ப்பதுதான்

இன்னல் படுத்திடும் தீக்காட்சி!

------------------------

💢தினந்தோறும் தவறாமல் நன்னூல்கள் பயிலுவதும் தியானத்தில் ஈடுபடுவதும் உயிரைத் தூய்மையாக்கும் நன்னெறியாகும். புலன்களில் இன்பம் துய்ப்பதே தீக்காட்சியாகும்.

**********************************

 

127. இரத்தின சாரம்

------------------------

எட்டிக் கனிகள் தோற்றத்தில்

இனிக்கும் இலட்டாய்க் காட்சிதரும்

கட்டும் புலன்கள் இன்பந்தான்

கட்டின் காரணம் உயிரழிக்கும்!.

------------------------

💢எட்டிப்பழங்கள் தோற்றத்தில் இனிப்பான லட்டுகளைப் போன்றே இருக்கும். உண்டால் உயிரைக் குடிக்கும். அவ்விதமே மனத்தைக் கவரும் ஐம்புலன் இன்பங்களும் உயிரின் தூய்மையை அழிக்கும்.

***********************************

 

128. இரத்தின சாரம்

------------------------

தன்னுடல் தன்மனை தன்மக்கள்

தன்பொருள் என்பான் நிச்சயத்தில்

உண்மை உணர்ந்திடான் பொருளென்ப

தன்னுயிர் என்பான் நல்லறிவன்!

------------------------

💢தான் பெற்றுள்ள உடலும் தன் மனைவி, தம் மக்களும் தன்னுடைய சொத்துக்களும் தன் உரிமைப் பொருள்கள் என்று கருதுவோன் உண்மையை உணராதவனே ஆவான். தன்னுயிர் மட்டுமே தன் பொருள் என்று நம்புபவனே நல்லறிவனாம்.

**************************************

 

129. இரத்தின சாரம்

------------------------

ஐம்புலன் இன்பமே இன்பமென

ஆழ்பவன் துன்பினில் வீழ்பவனே

தம்முயிர்த் தத்துவம் தானறிவான்

விரைவினில் விடுதலை தான்பெறுவான்.

------------------------

💢ஐம்புலன்களில் மூலம் கிடைக்கும் சுகபோகங்களே உண்மையானவை என்று கருதி, அவைகளில் மூழ்கிக் கிடப்பவன் மீண்டும் மீண்டும் பிறவித் துன்பத்தில் வீழ்பவனே, தன்னுயிரின் உண்மையான இயல்பை உணர்ந்து ஒழுகுபவனே விரைவில் முக்தியை அடைவான்.

**************************************


130. இரத்தின சாரம்

------------------------

புலன்களில் இன்பினில் மூழ்குவோர்தாம்

பொய்மையில் மூழ்கியோர் ஆவாரே

தெளிவான சிந்தனை உடையோர்கள்

தம்முயிர் மேன்மையை அறிவாரே!

------------------------

💢புலன் இன்பங்களை நிலையெனக் கருதி அவற்றில் அழுந்துவோர், பொய்க்காட்சியரேயாவர். தம்முயிரின் மேன்மையை அறிபவர்களே தெளிவான சிந்தனை உடையவர் ஆவர்.

*****************************

 

131. இரத்தின சாரம்

---------------------------

புழுக்கள் மலத்தில் கிடப்பதுபோல்

புன்மை அறிவிலி புலன்சுகத்தில்

அழுந்திக் கிடப்பான் நிலையில்லை

அச்சுகம் என்றவன் நினைப்பதில்லை!

-----------------------------

️எவ்வாறு புழுக்கள் மலத்தில் புதைந்து கிடக்கின்றனவோ, அவ்வாறே இழிவான அறிவிலியும் புலன் சுகங்களில் அழுந்திக் கிடக்கின்றான். அச்சுகங்கள் நிலையில்லாதவை என்றவன் நினைப்பதில்லை.

**************************

 

132. இரத்தின சாரம்.

-------------------------------

தக்கவை தகாதவை என்பனவே

தகுதியால் பகுத்தறிவு யான்பேதை

முக்கியம் ஆன்மனின் முழுத்தூய்மை

முழுதுணர்ந் தார்மொழி அறிந்திடானே!

---------------------------------

💢எது செய்யத்தக்கது எது செய்யத் தகாதது என்பதனை பேதை பகுத்தறிவதில்லை. உயிரின் முழு தூய்மையே முக்கியம் என்னும் முழுதுணர் ஞானியர் மொழிகளை அவன் அறிந்திடானே!.

**************************

 

133. இரத்தின சாரம்

------------------------

 உடலும் உயிரும் வேறுவேறு

உணர்ந்தவன் புலன்களில் தோய்ந்திடானே

தடையிலா முக்திச் சுகம்பெறும்

தகுதியும் கொண்டவன் அவனன்றோ?

------------------------

💦உடல் வேறு, உயிர் வேறு என்று உணர்ந்தவன் ஐம்புலன்களின் சுகங்களில் மூழ்குவதில்லை. முத்தி சுகம் பெறுகின்ற தகுதி படைத்தவன் அத்தகையோனேயாவான்.

************************************

 

134. இரத்தின சாரம்

----------------------------------

நீண்டநாள் அழுக்கு பழங்குடத்தில்

நீங்குதல் அரிதாம் கழுவிடினும்

ஆண்டுகள் பலவாய் தொடர்கின்ற

அழுக்கெனும் வினைகள் அவ்விதமே.

------------------------------------

️பழைய மண் குடத்தில் படிந்துவிட்ட நீண்ட அழுக்கு, கழுவினாலும் எளிதில் நீங்குவதில்லை. அவ்விதமே பலகோடி ஆண்டுகளாய் (அனாதி காலமாய்) உயிரில் சூழ்ந்த வினைகளும் எளிதில் விலகுவதில்லை.

**************************

 

135. இரத்தின சாரம்

-----------------------------------

விருப்பமே இல்லை என்றாலும்

விலகிடும் நோயென மருந்தொன்றை

அருந்துவர் மானிடர் காட்சியரும்

அவ்விதமே நுகருதல் செய்கின்றார்

-------------------------------

️தனக்கு விருப்பம் இல்லாவிட்டாலும், தன் நோய் தீர வேண்டும் என்பதற்காக, நோயாளி மருந்து உண்கின்றான். அது போலவே உலகியலில் பற்றில்லாதவன் என்றாலும் நற்காட்சியாளன், புலன் இன்பங்களை நுகருதல் செய்கின்றான்.

******************************


136. இரத்தின சாரம்

------------------------

மீண்டும் கூறுவோம் பவ்வியர்கள்

மேன்மை என்பதே உயிர்நலம்தான்

வேண்டாம் வெறுப்பே யாரிடத்தும்

விமலன் பகவனைப் போற்றிடுவீர்!

------------------------

பவ்வியர்களே! மீண்டும் மீண்டும் கூறுவோம். உயிரின் நலத்தைக் காப்பதே வாழ்வின் குறிக்கோள்! யாரிடத்தும் வெறுப்புணர்ச்சியைக் கொள்ளாதீர்! ஆன்ம தூய்மையாளராகிய பகவனின் குணநலன்களைப் போற்றுவீராக!

***********************************

 

137. இரத்தின சாரம்

------------------------------

பொய்மையில் ஊறுவோன் எண்ணங்கள்

புன்மையில் வீழ்த்திடும் எந்நாளும்

உய்த்திடும் நாற்கதித் துன்பந்தான்

உண்மையை உணர்ந்திடல் நன்றாகும்!

-------------------------------

️தக்காட்சியில் திளைப்பவனின் எண்ணங்கள் அவனை இழி நிலைக்கே கொண்டுவிடும். எந்நாளும் மீளாத நாற்கதித் துன்பங்களையே தரும் என்ற உண்மையை நன்கு உணர்தல் வேண்டும்.

******************************

 

138. இரத்தின சாரம்.

-----------------------------------

சிந்தனை தன்னுயிர்த் தோய்ந்திட்டால்

சினவரன் குணநலம் போற்றிட்டால்

வந்திடும் தீர்த்தகர் பதவியுந்தான்

வாய்க்குமே முக்தியும் வெகுவிரைவில்

--------------------------------

💦 தன்னுயிரைப் பற்றிய சிந்தனையில் மூழ்கி (புறப்பொருள் சிந்தனைகளை விலக்குவோர்) தீர்த்தங்கரரின் குணநலன்களையே போற்றுவோர் தீர்த்தங்கரர் பதவியை அடைந்து விரைவில் முக்திப்பதம் வாய்க்கப் பெறுவர்.

************************

 

139. இரத்தின சாரம்.

-------------------------------------

உயிரும் பிறவும் பொருட்குணமும்

உடையவாம் மாற்றமும் அறிவாரே

மயக்கிலா ஞானி தன்னுயிரின்

மாண்பினை உணர்பவர் விடுதலையர்.

-----------------------------------

️ உயிருள்ளவை, உயிரற்றவை ஆகிய பொருள்களின் பாகுபாட்டையும் பொருள்களின் குணங்களையும் மாற்றங்களையும் அறிபவரே மயக்கு நீங்கிய நல்லறிவராவர். அவரே  தன்னுயிரின் மாண்பினை உணர்ந்தவரும் முக்திப் பாதையில் செல்பவரும் ஆவார்.

***********************************************

 

140. இரத்தின சாரம்.

-----------------------------------

புறப்பொருள் மூழ்கிடும் ஓருயிரும்

புண்ணியம் தேடியும் ஓருயிரும்

முறைப்படி கூறிடின் புறவயமே

முழுதுணர் ஞானமே இன்பநிலை

----------------------------------

💦உலகியல் சுகங்களில் மூழ்குவோரும் புண்ணியம் வாய்க்கும் எனக்கருதி, நற்செயல்கள் புரிவோரும் புறச் சிந்தனை உடையவர்களே யாவர். முழுதுணர் ஞானமே இறை நிலையாகும்.

**************************

 

141. இரத்தின சாரம்.

---------------------------------

குண நிலை வரிசையில் மூன்றுவரை

குறையுடை பொய்மையே நான்கதனின்

இனம்கீழ் இடைநிலை பதினொன்றே

ஏற்படும் உத்தமம் பின்தூய்மை!

------------------------------------

💎 குண நிலைகளின் அடிப்படையில் உயிரை கூறுங்கால், ஒன்று முதல் மூன்று வரை பொய் காட்சிதான். நான்காம் நிலை கீழ்நிலைத் தூய்மை. ஐந்து முதல் பதினொன்று வரை இடைநிலை தூய்மை. பன்னிரண்டில் உத்தம நிலையும், பதிமூன்று பதினான்கில் முழுத்தூய்மையான இறைநிலையும் அமையும்.

********************************


142. இரத்தின சாரம்.

------------------------------------

மூடம் சல்லியம் அடக்கமெனும்

மூன்றும் மூவகை ஒவ்வொன்றும்

கூடும் ஆணவம் அடக்கிவிட்டால்*"

குற்றம் விலகிடும் முக்தியும்தான்!

--------------------------------------

️ மூன்று வகையான மூடங்கள், மூன்று வகையான சல்லியங்கள், மூன்று வகையான அடக்கங்கள், செருக்கு ஆகியவற்றை விலக்கிடும் துறவி, குற்றங்களை விலக்கியவர் ஆவார். முக்திப் பாதையில் செல்வரும் ஆவார்.

*******************************

 

143. இரத்தின சாரம்.

---------------------------------

மும்மணி சூடுவோர் யோகங்கள்

மூன்றினைக் கூடுவோர் உத்தமராம்

நன்முனி குப்திகள் மூன்றுடையார்

நலமுயர் முக்திப் பாதையராம்!

-------------------------------------

️உத்தம நன்முனிவர் என்பார், மும்மணிகளை ஏற்றவர். மூவகையான யோகங்களை உடையவர். மூவகையான குப்திகளை உடையவர். அவரே முக்திப் பாதையில் செல்பவராம்.

*******************************

 

144. இரத்தின சாரம்.

------------------------------------

பிறந்த மேனியிர் நற்காட்சிப்

பேற்றினர் பற்றெலாம் துரத்திட்டார்

சிறந்த ஞானியர் தவசீலர்

செல்பவர் ஆகிறார் முக்திக்கே!

--------------------------------------

️நிருவாணத் துறவேற்றவரும் நற்காட்சிப் பேற்றினை அடைந்தவரும் அனைத்துப் பற்றுகளையும் துறந்தவரும் சிறந்த ஞானியுமாகிய சாதுவர், தம் தவ ஆற்றலால் முக்திக்கு செல்கின்றனர்.

****************************

 

145. இரத்தின சாரம்.

------------------------------------

புறத்திலும் அகத்திலும் பற்றறுத்தார்

பொருந்தியோர் அடிப்படைத் துணைகுணங்கள்

சிறந்தவர் சாதுவர் பத்தறமும்

செய்கடன் குப்தியும் அணிந்தவரே.

-------------------------------------

️உத்தம சாதுவர் என்போர், புறப்பற்றும் அகப்பற்றும் அறவே துறந்தவர்கள். மூல குணங்களும் உத்தர குணங்களும் நிரம்பியவர்கள். பத்தறம் ஏற்றவர்கள். அவசியக் கடமைகளைத் தவறாது ஆற்றுபவர்கள். மூன்று வகையான குப்தியைக் கொண்டவர்கள் ஆவர்.

***************************

146. இரத்தின சாரம்.

-------------------------------------

பிறப்பையும் முதுமையும் இறத்தலையும்

போக்கிடும் மருந்துதான் நற்காட்சி

சிறந்ததோர் விடுதலைப் பேரின்பம்

சேர்ந்திட விரும்புவோர் சிந்திப்பீர்!

---------------------------------------

நஞ்சினைப் போக்கவல்ல மருந்தினைப் போன்றே பிறப்பு, முதுமை, இறப்பு ஆகியவற்றை நீக்க வல்லது நற்காட்சியாகும். எனவே முக்திப் பேரின்பம் விரும்புவோர் நற்காட்சி பற்றியே சிந்திக்கின்றனர். சாதனை செய்கின்றனர் என்பதை எண்ணுவீராக!

 

*********************************

 

147. இரத்தின சாரம்.

--------------------------------

இந்திரர் கணதரர் எல்லோரும்

ஏற்றிடும் இறையவர் நற்காட்சிச்

சுந்தர வடிவினர் என்றறிக

தூயதாம் காட்சியைப் பெற்றிடுக !

---------------------------------------

💎 இந்திரர், கணதரர் உள்ளிட்ட யாவரும் எந்நாளும் போற்றி வணங்கிடும் இறையவர் எல்லோரும் நற்காட்சியின் மகிமையால் உயர்ந்த நற்காட்சி வடிவினரேயாவர் என்றறிக! அத்தகைய மேன்மைமிக்க நற்காட்சியைப் பெற முயல்வீராக!

***************************


148. இரத்தின சாரம்.

---------------------------------

இறங்கு காலம் என்பதனால்

ஏற்படும் பொய்மையின் தாக்கந்தான்

பிறக்கும் உபசம நற்காட்சி

பிழைபடும் துயர்ப்பசை மேலோங்கும்!

----------------------------------

💢 இக்காலம் ஐந்தாம் இறங்கு காலமாவதால், தீக்காட்சியின் தாக்கம் அதிகமாகும். எனவே சிலரிடம் தோன்றும் குறைந்த நிலை (உபசம) நற்காட்சியும் கூட குறைபாடுடையதாகவே அமையும். அதனால் துவர்ப்பசைகளே மேலோங்கும்.

********************************

 

149. இரத்தின சாரம்.

----------------------------------

குணங்கள் விரதம் தவசீலம்

கொள்ளும் படிகள் நடுவுநிலை

மணிகள் தானம் நீர்வடித்தல்

இரவுண் ணாமை என்பநோற்றல்

---------------------------------------

💦இல்லறத்தார் எட்டு மூல குணங்களையும், பன்னிரண்டு விரதங்களையும், பன்னிரண்டு வகையான தவமுறைகளையும், பதினோரு வகையான பிரதிமைகளையும், நடுவுநிலை மனப்பான்மையும், மும்மணிகளையும், நால் வகையான தானம் செய்வதையும், நீரை வடித்து உபயோகித்தலையும், இரவில் உண்ணாமையையும் ஆகிய ஐம்பத்தி மூன்று நோன்புகளை ஏற்க வேண்டும்.

*************************

 

150. இரத்தின சாரம்.

_________________

அறிவினால் தியானம் மலர்ந்திடும்

அழிந்திடும் வினைகள் தியானத்தால்

சிறந்ததாம் முக்தி விளைந்திடுமே

சிறப்புதான் அறிவே என்றுணர்க!

--------------------------------------

️நல் அறிவினால் தியானம் சிறப்படையும். நல்ல தியானத்தால் வினைகள் அழிந்திடும். வினைகளின் அழிவால் முக்தி வாய்த்திடும். எனவே நல்லறிவே தலை சிறந்தது என்றுணர்வீராக!

******************************

 

151. இரத்தின சாரம்.

--------------------------------------

தவமொடு அடக்கம் சமநிலையும்

தளர்ந்திடா உறுதி நல்லொழுக்கம்

பயனெனப் பெறலாம் நல்லறிவால்

பயிலுக நன்னூல் பவ்வியரே!

-------------------------------------

🔰புலனடக்கம், சமதாபாவம், தளராத மன உறுதி, நல்லொழுக்கம் முதலான நற்பயன்கள் நன்னூல் பயிலுவதால் விளைவதால், பவ்வியர்கள் நன்னூல் பயிலுதல் மிக மிக அவசியமாகும்.

***********************************

 

152. இரத்தின சாரம்

------------------------

ஐவகைத் தன்மையாய் அநாதிகாலம்

அறிவினில் குழம்பியே நற்காட்சி

மெய்மையைப் பெறாமலே பல்லுயிரும்

மிகுதுயர் எய்தியே சுழன்றிடுமே!

------------------------

🌹பொருள், இடம், காலம், பிறவி, உணர்வு ஆகிய ஐந்து வகையான தன்மைகளில் (பஞ்ச பரிவர்த்தனைகளில்) அநாதிகாலமாக பல்லுயிரும், அறிவில் தெளிவின்றி, நற்காட்சி பெறாமலே, பிறவிச் சுழற்சியில் சிக்கித் துன்புறுகின்றன.

***************************

 

153. இரத்தின சாரம்

------------------------

எதுவரை உயிரில் நற்காட்சி

எனுமுயர் சிறப்பு தோன்றாவோ

அதுவரை அவ்வுயிர் நல்லின்பம்

அடைவதே இல்லை என்றுணர்க!

------------------------

️நற்காட்சி என்னும் மேன்மையைப் பெறாத வரை எவ்வுயிரும் உண்மையான இன்பத்தை அடையவே முடியாது என்றுணர்க!

*********************************

 

154. இரத்தின சாரம்

------------------------

ஒன்றினை உறுதியாய் உணர்ந்திடுக

உண்மையாம் காட்சியில் ஊறுவோர்க்கே

நன்மைகள் யாவும் உண்டாகும்

நாசந்தான் விளைப்பதே தீக்காட்சி!

------------------------

💎நற்காட்சியில் திளைப்போர்க்கே இம்மையில் மறுமையிலும் எல்லா வித நன்மைகளும் விளையும். முக்தியும் வாய்க்கும். மாறாக தீக்காட்சியானது பலவித இன்னல்களுக்கும் காரணமாகும் என்பதை உறுதியாய் உணர்வீராக!

**************************************

 

155. இரத்தின சாரம்

------------------------

அறிவினில் பலவிதம் நயடேபம்

ஆடலும் பாடலும் தத்துவமும்

அறிந்தவர் ஆயினும் நற்காட்சி

அடைந்திடேல் பிறவியில் சுழலுவரே!

------------------------

🍃ஒருவர் இரு வகை நயங்கள் , நால்வகை நிடேபங்கள், ஆடல், பாடல் கலைகள், தத்துவம் முதலான பல்வகைப் பட்ட ஞானம் படைத்தவராயினும் அவர் நற்காட்சி பெறவில்லையேல் பிறவியில் சிக்கியே துன்புறுவர்.

********************************

 

156. இரத்தின சாரம்

------------------------

எண்வகைச் செருக்கும் கடும்பற்றும்

எவரிடம் உளதோ அவரிடத்தில்

உண்மையாய்த் தியானம் அமையாதே

உறுதியாய் முக்தியும் அடையாரே!

------------------------

️யாரிடம் எட்டு வகையான செருக்குகளும் கடும் பற்றும் வெறுப்பும் உள்ளதோ அவரிடத்தில் உண்மையான தருமத் தியானம் அமையாது, எனவே அவருக்கு முக்தியும் வாய்க்காது என்பது உறுதி.

*******************************

 

157. இரத்தின சாரம்

------------------------

தன்பொருள் தன்இனம் தன்சீடர்

தன்னவை என்கின்ற எண்ணம்தான்

என்முனி கொள்வாரோ அம்முனிவர்

எய்திடல் ஆகாதே விடுதலைதான்!

------------------------

🍁எம்முனிவரிடத்து தன்னுடைய பொருள்கள் தன்னுடைய இனத்தவர், தன்னுடைய சீடர்கள் தன்னுடைய சங்கம் என்கின்ற எண்ணம் விலகாமல் உள்ளதோ, அம்முனிவருக்கு முக்தி வாய்க்காது.

*****************************

 

158. இரத்தின சாரம்.

------------------------

முக்தியை நாடிடும் சாதுவர்க்கே

மும்மணி என்பவை அணிகலனாம்

தத்துவ சீலமே அவர்சங்கம்

தன்னுயிர் போற்றலே நூலோதல்!

------------------------

🌹முக்திப் பாதையில் செல்லும் முனிவர்க்கு மும்மணிகள் தான் அணிகலன்களாகும். தத்துவம் கூறும் நல்லொழுக்கமே அவருடைய சங்கமாகும். தன்னுயிரின் தூய்மை பற்றிய சிந்தனையே அவர் ஓதும் நன்னூல் ஆகும்.

***************************

 

159. இரத்தின சாரம்.

------------------------

காரிருள் பரிதியால் கார்மேகம்

காற்றினால் காடுகள் பெருந்தீயால்

கூரிய ஆயுதத் தால்மலைகள்

அழியுமே காட்சியால் தீவினைகள்!

------------------------

🍀சூரியனால் காரிருள் விலகும். பெருங்காற்றினால் மேகங்கள் கலைந்தோடும். பெருந்தீயால் காடுகள் அழியும். கூர்மையான ஆயுதங்களால் (வஜ்ஜிராயுதங்களால்) மலைகள் உடைந்து சிதறும். அவ்விதமே நற்காட்சியால் தீவினைகள் அழியும்.

******************************

 

160. இரத்தின சாரம்.

------------------------

மனத்திருள் ஆகிய தீக்காட்சி

மாய்த்திடும் இரத்தினம் நற்காட்சி

இணெயென ஒன்றிலை காட்சிக்கே

ஏற்பவர் காண்கிறார் மூவுலகே!

------------------------

🍃மனதில் தோன்றும் இருளாகிய தீக்காட்சி, நற்காட்சி என்னும் இரத்தினம் பேரொளியால் விலகிவிடும். நற்காட்சிக்கு இணையாக மூவுலகிலும் ஏதுமில்லை. நற்காட்சி உடையவர் மூவுலகையும் ஒருசேர காண்கிறார்!

****************************

 

161. இரத்தின சாரம்.

------------------------

தன்னுயிர்த் தூய்மையில் தோய்தல்தான்

தியானத்தின் பொருளாம் தோய்ந்திட்டால்

இன்னலை விளைத்திடும் இருவினைகள்

எரிந்திடும் அந்நிலை உயிர்த்தூய்மை!

------------------------

🍃யாரொவர் தன்னுயிரின் தூய்மையை இடைவிடாது சிந்திக்கின்றாரோ அவர்தான் உண்மையான தியானத்தில் ஆழ்பவர் ஆகின்றார். அவ்வாறு தியானத்தில் ஆழ்வதால், துன்பத்திற்கு காரணமான இருவினைகளும் தவமாகிய தீயில் எரிந்தொழியும். அதுவே முக்தி நிலையாகும்!

****************************

 

 162. இரத்தின சாரம்.

-----------------------------------

உள்ளமும் சொற்களும் செயல்களுமே

ஒன்றியே நின்றிடத் தியானத்தில்

வெல்லுவர் வினைகளை அருந்தவத்தோர்

விடுதலை என்பதே அந்நிலைதான்

-----------------------------------

️ உத்தம தரும தியானத்தில் மனம், சொல்,  செயல்கள் ஒருமை நிலையில் ஒன்றிடும்போது, அருந்தவத்தோரின் அனைத்து வினைகளும் விலகி விடுகின்றன. அந்நிலையே முக்திப் பேரின்பமாகும்.

*********************************

 

163. இரத்தின சாரம்.

--------------------------------------

பலமுறை காய்ச்சிடத் தங்கம்தான்

பளிச்சிடும் அழுகெல்லாம் விலகிடவே

நலம்பெறும் ஓருயிர் முக்தியினால்

நேரமும் முயற்சியும் கூடி வந்தால்!

---------------------------------------

💦 திரும்பத் திரும்ப நெருப்பிலிட்டுக் காய்ச்சுவதால் அழுக்குகள் நீங்கித் தங்கம் மெருகேறிப் பளிச்சிடுதல் போன்றே, ஓருயிரும் இடையறாது முயன்றால், நேரமும் கூடி வரும்போது வினைகள் விலகிட முக்தியைப் பெற்றிடும்.

****************************

 

164. இரத்தின சாரம்.

---------------------------------

கற்பகம் காம தேனுவையும்

ஒப்பிலா பாரஸ மணியோடு

அற்புத சிந்தா மணியையுமே

அடைந்தவர் போல்வரே காட்சியரும்!

-----------------------------------

💦நினைத்ததை வழங்கிடும் கற்பகம், காமதேனு, சிந்தாமணி, ஒப்பிலா இரசாயணம், பாரஸமணி முதலானவற்றை அடைந்தவர்கள் எவ்விதம் இன்புறுவார்களோ, அவ்விதம் நற்காட்சியடைந்தவர்களும் இன்புறுவர்.

*************************************

 

165. இரத்தின சாரம்

--------------------------------------

இரயண சாரம் எனுமிந்நூல்

இயம்பிடும் கருத்தாம் பற்றின்மை

இரத்தினம் மூன்றும் நற்குணமும்

யார்க்கும் நன்மை நல்கிடுமே

------------------------------------

️இரயண சாரம் என்னும் இந்நூலில் கூறப்படும் கருத்துக்களான பற்றின்மை, மும்மணிகளின் சிறப்பு, நற்குணங்களின் அவசியம் முதலானவை எல்லோருக்கும் எல்லாவித நன்மைகளையும் தருவனவாகும்.

*************************** 

 

166. இரத்தின சாரம்.

--------------------------------------

இந்நூல் கருத்தினை ஒப்பாதோர்

ஏற்கவும் கேட்கவும் மறுக்கின்றோர்

தன்னுள் நிலைபெறச் செய்யாதோர்

தவிப்பரே துன்பினில் தீக்காட்சி!

---------------------------------------

💎இந்நூலில் கூறப்பட்ட கருத்துக்களை உண்மையானவை என ஒப்புக் கொள்ளாதோரும் ஏற்கவும் கேட்கவும் மறுப்போரும் தம் மனதில் பதிய செய்யாதோரும்  தீக்காட்சியினராய்ப் பிறவித் துன்பத்தில் தவிப்பர் எமது உறுதி.

*****************************

 

167. இரத்தின சாரம்.

-------------------------------------

மேலோர் போற்றும் இந்நூலின்

மேன்மை உணர்ந்தே அயராமல்

நாளும் ஏற்போர் நிரந்தரமாம்

நன்மை முக்தி அடைகுவரே!

-----------------------------------------

🔰மேலோர்கள் ஏற்றுப் போற்றும் இந்நூலின் சிறப்பை நன்குணர்ந்து, அயராமல் யாரெல்லாம் கற்றொழுகுவரோ, அவரெல்லாம் அழிவற்ற நிரந்தரப் பேரின்ப நிலையாகிய முக்தியடைவர் என்பது உறுதி!

*************************************** 



🟢தமிழ்ப்பா வடிவமும், தெளிவுரையும், இத்துடன் நிறைவுற்றது.


No comments:

Post a Comment