ஸ்ரீ ஆதிநாதர் கவிதாஞ்சலி




                    ஸ்ரீ ஆதிநாதர்  கவிதாஞ்சலி





             என்  இனிய  சொந்தங்களே,

               இந்த  ஆதிநாதர்  கவிதாஞ்சலி  எனக்கு  தெரிந்த  கதையை, ஏதோ               ஒரு  புத்தகத்தில்  படித்ததும்,
  ( புலவர்  தோ.  ஜம்புகுமார்   அவர்கள்  எழுதியது  என்று  நினைவு )  பஞ்சகல்யாண  நிகழ்வுகளையும் 
 மனதில்  கொண்டு   எழுதியது.  நிறைய  தவறுகள்  இருக்க  சாத்தியக்  கூறுகள்  உண்டு.  2016  ல்,
 சிலப்பதிகாரத்திற்கு   முன்  எழுதினாலும்,  ஆதிநாதர்  காவியத்தில்  தவறு  நேர்ந்திடக்  கூடாதென்று
 பயந்து,  வெளியிடவில்லை.  எனவே  தான்  சிலப்பதிகார  கவிதாஞ்சலியை  முதல்  கவிதை  என்றேன்.
 ஒரு  சில  நண்பர்களிடம்  காட்டி,  வரலாறில்  தவறில்லை  என்று  அறிந்த  பின்  தான்  வெளியிட்டேன். 
 இது  என்  சமணம்  சார்ந்த  முதல்  கவிதை. எளிய  தமிழில்  சுவைத்துப்  பாருங்கள்.

                                                                                                                           அன்புடன்  உங்கள்,
                                                                                                             முட்டத்தூர்.  அ.  பத்மராஜ்.
            

            ஆதிநாதர்  கவிதாஞ்சலி.

            1.  கடவுள்  வணக்கம் :

            மூவுலகம்  வந்திறஞ்ச  மூவா  முதலாகி
           மூவுலகம்  தானே  முழுதுணர்ந்தான் – மூவுலகில்
            உட்பொருளாய்  ஓங்கி  உயர்பொருளாய்  நிற்கின்ற
           அப்பொருளாம்  எங்கட்கு  அரண்

2.  என்  வணக்கம் :

அருகன்  தாள்  வணங்கி  ஆன்றோரை  மனதிருத்தி
அறியாத  துறையினிலே  அடியெடுத்து  வைத்துள்ளேன்
ஆதிநாதர்  வரலாறு  அனைத்தையும்  நான்  அறியவில்லை
அறிந்த  சிலதை  மட்டும்  அவைக்கு  நான்  கொண்டுவந்தேன்
எழுத்துலகம்  அறியாமல்  எடுத்து  வைக்கும்  முதலடியில்
குற்றங்கள்  நிறைந்திருக்கும்  குணநலங்கள்  குறைந்திருக்கும்
குற்றங்கள்  அனைத்தையும்  குணவோரே  மறந்திடுங்கள்
எள்ளளவு  பயனிருந்தால்  என்னை  நீர்  வாழ்த்திடுங்கள்

3.      இந்திரன்  ஞானம்  :

அகமிந்ர  தேவன்  என்னும்  அழகிய  பெயர்  கொண்டு
அழியாத  சுகத்தினிலே  ஆனந்தமாய்  இருந்தார்
விண்ணுலகில்  வாழ்ந்திருந்த  வித்தான  அத்தேவன்
மண்ணுலகில்  ஆதியாய்  மறுபிறவி  எடுப்பாரென
இந்திரலோகத்தின்  இணையற்ற  மாமன்னன்
இந்திரன்  அறிந்திட்டான்  ஈடற்ற  ஞனத்தால்

            4. குபேரனுக்கு  அழைப்பு  :

வளங்களின்  வாரிசாம்  வடதிசை  அதிபதியாம்
குன்றாத  செல்வத்தின்  குபேரனை  அழைத்தான்
அயோத்தி  அரசனின்  அலங்கார  மாளிகையில்
நாபிராஜன்  வழ்கின்றான்  மருதேவி  மனம்  மகிழ
இவ்வினிய  தம்பதிக்கு  ஏற்றமிகு  மகன்  பிறப்பான்
தீர்த்தங்கராவதற்கு  திக்கெட்டும்  மண்ணொளிக்கும்
குபேரா  நீ  உன்  குறைவற்ற  செல்வத்தால்
அமராபுரியாக்கு  அயோத்தி  நகர்  தன்னை
இந்திரன்  ஆணையினை  இரு  கரம்  கூப்பியேற்று
எவ்வுலகும்  காணாத  எழில்  நகராய்  அமைத்திட்டான்

4.      நகர்  அமைப்பு  :

நாட்டிலே  எதிரி  இல்லை  நகரத்தில்  மதில்கள்  இல்லை
அகிம்சையின்  சிறப்பினாலே  அகழிகள்  ஏதுமில்லை
நகரத்தின்  பெருமை  சொல்ல  நாற்புறமும்  ராஜபாதை
பாதையின்  இருமருங்கும்  பார்ப்பவர்க்கு  அழகு  போதை
விண்முட்டும்  மாளிகைகள்  வெண் முகிலால்  சூழ்ந்திருக்கும்
கண்ணெட்டும்  தூரம்  வரை  கவின்  பச்சை  கவிழ்ந்திருக்கும்
திங்கள்  மும்மாரி  பெய்து  திரண்டு  வரும்  நீர்  வளத்தால்
தாவி  குதித்தோடும்  தண்ணீர்  வாழ்  மீனினங்கள்
இளம்பெண்  தன்  நாணத்தால்  இருகண்கள்  தாழ்ந்தது  போல்
தலைகுனிந்து  நிலம்  நோக்கும்  தங்க  நிற  நெற்கதிர்கள்
உழக்கு  நெல்லுக்கு  ஒரு  கதிரே  போதுமென்றால்
           கலத்து  நெல்  கொடுக்கும்  ஒரு  கட்டு  நெற்கதிர்கள்
நெல்  அறுத்த  உழவர்கள்  நிமிர்ந்து  நின்று  பார்கையிலே
            மறுதாள்  பயிராகும்  அயோத்தி  மண்  வளத்தால்
            நிறை  கொள்ளும்  தூய்மையுடன்  அறம்  நிறை  அயோத்தியில்
            தடையற்ற  ரத்தினத்தால்  நாளெல்லாம்  வான்தூவும்
            கொடைவள்ளல்  குபேரன்  கொட்டிக்  கொடுத்ததனால் – அயோத்தி
            குறையாத  செழுமையில்  குபேரபுரி  ஆனது

5.      பதினாறு  கனவுகள் :

மாதவத்தாள்  மருதேவி  மஞ்சத்தில்  துயில்  கொள்ள
ஈரெட்டு  சொப்பனத்தில்  இளந்தேவி  ஆழ்ந்திட்டாள்
குன்றொத்த  களிறொன்று  குறு  நடையில்  அசைந்து  வர
வெண்முகிலின்  நிறங்கொண்ட   எருதொன்று  ஓடியது
காட்டரசன்  அரிமா  கம்பீரமாய்  உலவ
இரு  கஜங்கள்  நீர்  சொரிய  இலக்குமியும்  வந்திட்டாள்
மல்லி  முல்லையுடன்  மணக்கின்ற  பூவணைத்தும் – கூட்டி
மாலை  இரண்டிணைத்து  மனத்திரையில்  கண்டிட்டாள்
முழுத்திங்கள்  முன்  தோன்ற  முன்  ஞாயிறு  பின்  தோன்ற
குதித்தோடும்  இரு  கயல்கள்  கோதையவள்  கண்டிட்டாள்
அபிஷேக  நீர்  கொள்ளும்  அலங்கார  இரு  கும்பம்
அரசியின்  கனவினிலே  அதிசயமாய்  வர
புள்ளினமும்  பூங்காற்றும்  பொதிகைமலை  மென்காற்றும்
பூவையவள்  மனதினிலே  பூம்பொய்கை  சுற்றி  வர
நீல  நெடுவானம்  நெடுங்கடலை  தொட  நினைக்க
அரிவையின்  நெஞ்சினிலே  அலைஆழி  வரக்கண்டாள்
சிங்கமிரு  தலைகொண்ட  தங்கசிம்மாசனம்  ஒன்றும்
           வண்ணமணி  கல்  பதித்த  வனவர்  விமானமொன்றும்
நானிலமே  வியக்கும்  நாக  விமானமொன்றும்
           நவரத்ன  குவியலுடன்  புகையற்ற  கனல்  கண்டாள்
            மருதேவி  கருவறையில்  முதல்  நாதன்  பெயர்வதற்குள்
           பதினாறு  அதிசயங்கள்  பாவையவள்  கண்டிட்டாள்

6.      ஆதவன்  கண்  விழித்தல்

            புள்ளினங்கள்  ஆர்பரிக்க  பூவினங்கள்  இதழ்  விரிக்க
            பூவடிக்கும்  மதுவுக்கு  வண்டினங்கள்  படையெடுக்க
            பஞ்ச  மந்திர  ஒலி  பாரோரை  துயிலெழுப்ப
            வைகரையில்  வனிதையர்கள்  வாசலில்  நீர்  தெளிக்க
            பூந்தென்றல்  இசைக்கின்ற  பூபாள  ராகத்தில்
            பொன்கதிரோன்  கண்விழித்து  பூமிதனை  நோக்கினானே

7.      கணவனிடம்  கனவு  சொல்லல்

            அயோத்தி  அரசியின்  அத்தனை  கனவுகளும்
            அதிகாலை  கனவென்று  ஆதவனும்  முன்  மொழிய
            வழி  மொழிய  வந்த  ஒலி  மங்கல  வாத்திய  ஒலி
            விடியலில்  ஒலிக்கின்ற  ஜினாலய  மணியின்  ஒலி
            ஆலய  மணி  ஒலியில்  ஆரணங்கு  துயில்  நீங்கி
            அலங்காரப்  பதுமையாகி  அரசனை  நாடினாலே
            நங்கையவள்  கண்ட  நன்நான்கு  கனவுதனை
            நாயகனாம்  நாபிக்கு  நயம்பட  உரைத்திட்டாள்
            நான்  கண்ட  அத்தனைக்கும்  நல்ல  பலன்  என்னவென்று
            நல்வாக்கு  கூறிடுங்கள்  நான்  மகிழ்வு  கொண்டிடுவேன்

8.      நாபி  கனவு  பலன்  உரைத்தல்

            தங்கமகன்  பிறப்பான்  தரணி  போற்றும்  புகழ்  பெறுவான்
            ஆன்றோரும்  சான்றோரும்  அவன்  புகழைப்  பாடிடுவர்
            குடிமக்கள்  நலங்காத்து  கோணாத  கோல்  கொண்டு
            தருமத்தின்  தலைவனாய்  தலைசிறந்து  விளங்கிடுவான்
            முக்காலமும்  அறியும்  முதலறிவு  கொண்டவனாய்
            இக்கால  மக்களுக்கு  எழுத்தறிவு  படைத்திடுவான்
            இல்லறமும்  துறவறமும்  இரு  தருமம்  என்றுரைத்து
            நல்லறத்தை  கைகொண்டு  நாடாளப்  பிறந்திடுவான் – என்று
            மன்னனவன்  உரைத்திட்டான்  மடந்தையவள்  மகிழ்ந்திட்டாள்
            பொங்கி  வரும்  புனல்  போல  பூவையவள்  நாணிட்டாள்

9.      தேவ  மகளீர்  பணிவிடை

            சூல்கொண்ட  மருதேவி  சுகவாழ்வு  பெற  வேண்டி
            தெய்வலோகம்  விட்டு  தேவதையர்  வந்திட்டார்
            இந்திரனால்  இட்ட  பணி  இனி  நாங்கள்  செய்யும்  பணி
            ஜினபாலன்  பிறக்கும்  வரை  மருதேவி  ஏற்கும்  பணி
            நன்னீரால்  நீராட்டி  நறும்புகை  குழலிட்டு
            பட்டாடை  உடுத்தி  பசும்  பொன்  நகைகள்  பூட்டி
            கயலொத்த  கண்களுக்கு  கருப்பு  மையெழுதி
            கணைத்தொடுக்கும்  வில்லாக  கரும்  புருவம்  தீட்டினரே
            முக்கனியும்  முழு  உணவும்  மூத்த  மகன்  நலங்கருதி
            தப்பாமல்  ஊட்டினரே  தகை  சான்ற  பணிமகளீர்
            தாம்பூலம்  தரித்த  அவள்  தலைசாய்ந்து  ஓய்வெடுக்க
            மருதேவி  பாதமலர்  மங்கையர்கள்  பிடித்தனரே

10. மருதேவி  புகழ்  உரைத்தல்

            மருதேவி  பெயர்  கொண்ட  மாமன்னன்  மாராணி
            ஈராறு  ஆண்டில்  இதழ்  விரியும்  குறுஞ்சியவள்
            ஈரெட்டு  பேறுடைய  இகஞன  குலவிளக்கு
            ஏந்திழைகள்  காதலுரும்  ஏழுலக  பேரழகி
            மாதங்கள்  பன்னிரன்டில்  மார்கழி  திங்களவள்
            மயக்கும்  மாலையில்  தென்மலையின்  தென்றலவள்
            காலங்கள்  பலவிருந்தும் களிக்கின்ற  வசந்தமவள்
            எட்டெட்டு  கலைகளிலும்  ஏற்றமிகு  ஓவியத்தாள்
            ஜினபாலனை  சுமக்கும்  ஸ்ரீ  தேவி  பெற்ற  மகள்
            ஜினவாணி  வீற்றிருக்கும்  செந்தாமரையாவாள்
            கேட்டதை   அள்ளித்  தரும்  கற்பக  விருட்சமவள்
            சித்திரை  மாதத்து  சிறப்பான  முழு  நிலவு

11. ஆதி  அவதரித்த  போது  நடந்தவை

 வெண்பனி  கவிந்தார்  போல்  வெளிவானம்  கண்  பறிக்க
             தண்மதியின்  நிறத்தினை  போல்  எண்திக்கும்  பளபளக்க
 மங்கல  ஒலி  ஓசை  முரசோடு  போட்டியிட
            வானுலக  துந்தூபி  தேனூரும்  பண்ணிசைக்க
அயோத்தி  மக்களின்  ஆனந்த  குரளொளிக்க
            ஆழ்கடலின்  கொந்தளிப்பால்  அலையோசை  ஆர்பரிக்க
கற்பக  விருட்சங்கள்  களிப்பெய்தி  பூ  சொரிய
            விண்ணோரும்  மண்ணோரும்  விழி  வைத்து  காத்திருக்க
ஓங்கார  பெரு  ஓசை  ஒலித்திட்ட  நாழிகையில்
            ஆதிநாதன்  வந்து  அவதரித்தான்  அவணியிலே

12. இந்திரன்  தேவர்களை  அழைத்தல்

தேவர்களே  வாருங்கள்  தெய்வமகன்  பிறந்திட்டான்
            பார்  புகழும்  பாரீசன்  பாங்குடனே  பிறந்திட்டான்
ஐராவதம்  மீது  ஐங்கலசம்  ஏற்றிடுங்கள்
            அனைவரும்  சென்றிடுவோம்  அமுத  பாற்கடலுக்கு
அபிஷேக  நீர்  மொண்டு  ஆனந்த  குரல்  கொண்டு 
            அபிஷேகம்  செய்திடுவோம்  ஆதிநாத  தேவனுக்கு

13. இனிய  நாள்

இந்நாளும்  பொன்னாளே  எங்கள்  தேவன்  பிறந்ததனால்
            இந்நாளும்  திருநாளே  எங்கள்  நெஞ்சம்  குளிர்ந்ததனால்
வாருங்கள்  சென்றிடுவேம்  மந்தார  மலை  நோக்கி
            பண்ணாலே  இசைத்திடுவோம்  பாலகன்  திருவடியை
மந்தமாருதம்  வீசும்  மகரயாழ்  இனிதூட்டும்
            மாலவன்  திருவடிக்கு  மலர்  தூவி  அடிதொழுவோம்
அன்போடு  அறம்  சேரும்  ஆதியின்  இந்நாளில்
            அவலங்கள்  அகன்று  விடும்  அவன்  முக  நன் நோக்கில்
கனகமணி  தொட்டிலிலே  களித்திருக்கும்  ஆதியை
            கனகாபிஷேகத்தால்  கண்குளிரக்  கண்டிடுவோம்

15. ஜன்மாபிஷகம்

அறம்  கூறும்  ஆதிக்கு  ஜென்மாபிஷேகம்
            அயோத்தி  அதிபதிக்கு  ஜென்மாபிஷேகம்
இணையற்ற  வீரனுக்கு  ஜென்மாபிஷேகம்
            ஈரற  உபதேசிக்கு  ஜென்மாபிஷேகம்
உத்தம  ராஜனுக்கு  ஜென்மாபிஷேகம்
            உலகாளும்  அரசனுக்கு  ஜென்மாபிஷேகம்
ஐந்தரசி  ஏற்றவர்க்கு  ஜென்மாபிஷேகம்
            ஐம்புலன்  வென்றவர்க்கு  ஜென்மாபிஷேகம்
கலை  ஞானம்  தந்தவர்க்கு  ஜென்மாபிஷேகம்
            கல்வியை  அளித்தவர்க்கு  ஜென்மாபிஷேகம்
மருதேவி  மைந்தனுக்கு  ஜென்மாபிஷேகம்
            மங்காத  ஒளியனுக்கு  ஜென்மாபிஷேகம்
முக்கால  ஞானிக்கு  ஜென்மாபிஷேகம்
            மிக்கெழில்  கொண்டவர்க்கு  ஜென்மாபிஷேகம்
ஜினபாலன்  ஏற்றிட்டான்  ஜின்மாபிஷேகம்
            ஜினதர்ம  போதிக்கு  ஜென்மாபிஷேகம்
ஜெயவர்ம  மன்னனுக்கு  ஜென்மாபிஷேகம்
            ஜெயசாந்தி  நாதனுக்கு  ஜென்மாபிஷேகம்
நல்லற  நாயகனுக்கு  ஜென்மாபிஷேகம்
            நற்காட்சி  வேந்தனுக்கு  ஜென்மாபிஷேகம்
நாபியின்  வாரிசுக்கு  ஜெமாபிஷேகம்
            நற்கதி  கடந்தார்க்கு  ஜென்மாபிஷேகம்
தொழிலாறு  தந்தார்க்கு  ஜென்மாபிஷேகம்
            துலங்கிய  முக்குடையானுக்கு  ஜென்மாபிஷேகம்

16. தாலாட்டு

நாபிராஜன்  மாளிகையில்  மருதேவி  தாய்  மடியில்
            ரிஷபநாதன்  தூங்குகிறார்  தாலேலோ – அவர்
நற்காட்சி  நல் ஞானம்  நல்லொழுக்கம்  கற்பித்த  பின்
            ஓய்வெடுத்து  உறங்குகிறார்  ஆராரோ                                 (நாபிராஜன்)

கல்வியோடு  தொழிலாறும்  கற்று  தந்த  ரிஷபநாதர்
            கண்மூடி  தூங்குகிறார்  தாலேலோ – அவர்
ஐங்குலத்தை  ஏற்படுத்தி  அரசகுலம்  தழைக்க  வைத்து
            அமைதியுடன்  உறங்குகிறார்  ஆராரோ                               (நபிராஜன்)

ஆறெட்டு  நாடுகளும்  அழகான  நகரங்களும்
            அமைத்துவிட்டு  தூங்குகிறார்  தாலேலோ – அவர்
ஈராறு  சிந்தனைகள்  எல்லோர்க்கும்  தந்து  விட்டு
            இன் முகத்தில்  உறங்குகிறார்  ஆராரோ                               (நாபிராஜன்)

ஆதியவர்  தூங்கி  விட்டால்   அவணி  எல்லாம்  தூங்கிவிடும்
            மன்னவரே  துயில்  எழுப்ப  வாரீரோ – அவர்
            அழகு  முகம்  பார்ப்பதற்கும்  ஆசை  முத்தம்  பெறுவதற்கும்
            கன்னியரே காளையரே  வாரீரோ                                             (நாபிராஜன்)

17. காதணி  விழா

ஆதியின்  காதுக்கு  காதணி  பூட்டிட  காசினி  அரசரெல்லாம்
            கட்டியம்  கூறிட  பட்டத்து  யானையில்  பல்பொருள்  கொண்டு வந்தார்
பன்னீரில்  குளுப்பாட்டி  பட்டாடை  திருத்தி  பசும்  பொன்  நகைகளிட்டார்
            பாரோர்  அனைவரும்  பரவச  மயக்கத்தில்  பாலனை  நோக்கினாரே
அழகென்ற  சொல்லுக்கு  அகராதி  தேடினால்  ஆதியின்  பெயர்  மட்டும்  தன்
            அவன்  காதினில்  ஆடிடும்  குண்டலம்  இரண்டுமே  ஆதித்தன்  தந்ததுதான்
செந்நிற செவிதன்னில்  குண்டல அழகினை செப்பாத வாய்களில்லை-இவன்
            விண்ணோர்  வணங்கிடும் பொன் நிற அழகினை  பேசாத  ஆள்களில்லை

18. பெயர்  சூடல்

விண்ணோரும்  மண்ணோரும்  ஒன்றாக  சேர்ந்து 
            விருஷபன்  என்றழைத்தார் – அவன்
வெவ்வினை  போக்கும்  எண்குணத்தானாய்
            வாழ்க்கை  அறமளிப்பார்
குறையாத  வயதோடு  குன்றாத  எழிலோடு
            பல்லாண்டு  வாழ்ந்திடுவார்
பன்னாட்டு  மன்னரும்  இந்நாடு  கண்டு
            இவர்  பாதம்  போற்றிடுவார்
ரிஷபத்தையே  தன்  அடையாளமாக்கிட்ட
            ரிஷாபதேவர்  இவர்  தான்
கைலாசகிரியை  தன்  நிர்வாண  நிலை  கொண்ட
            கேவலக்  ஞானி  இவர்  தான்

19. விளையாட்டு

பந்துகள்  கொண்டு  பலரோடு  விளையாடும்  பாலகன்  ரிஷபநாதன்
            சிந்தை  வியந்திடும்  செய்கைகள்    செய்யும்  பாரீசன்  ரிஷபநாதன்
உள்ளத்தை  மகிழ்விக்கும் ஒரு கோடி வித்தைகள் செய்பவன் ரிஷபநாதன்
            ஓடி ஒளிந்திடும் விளையாட்டில்  ஒருபோதும் தோற்காத ரிஷபநாதன்
பொம்மை விளையாட்டில் புதுமைகள்  செய்திடிடும் ஜினபாலன் ஆதிநாதன்
           வாழ்க்கையில் நடக்கும் வெற்றியும் தோல்வியும் சமம் எனும்  ஆதிநாதன்
           விளையாடி  விளையாடி  மற்றோரைக்  கவர்ந்திடும் அழகிய  ஆதிநாதன்
           வினைகளைப்  போக்கிட  ஐம்புலன்  அடக்கமே  விடையென்ற ஆதிநாதன்
[           
20. திருமணம்

மாணவ  பருவத்தை  மதி  கண்ட  அல்லி  போல்  மகிழ்வுடன்  ஏற்ற  பின்பு
            ஆயகலைகள்  அற்பத்து  நான்கிலும்  ஐயமறத்  தேறினார்
குமாரப்  பருவத்தில்  குன்றிடை  விளக்கு  போல் ஸ்ரீகுமரன்  இருந்தார்
நாபியின்  மனதினில்  திருமண  வயதினை  ரிஷபரும்  எட்டிவிட்டார்
அன்பும்  குணமும்  பண்பும்  ஒன்று சேர்ந்த  அரிவையை மணமுடிக்க
அம்மையும்  அப்பனும்  அன்பு  மகனிடம்  ஆசையை  விளம்பளுற்றார்
பெற்றோரின் ஆசையை பெரிதாய்  மதிக்கின்ற பெருந்தகை ஆதிநாதன்
           யஸ்யஸ்வதியையும் இளையவள் சுனந்தையும் இடம் வலம் ஆக்கினாரே
கலைமகள் திருமகள் ஒரு மகளாகி இருபாகம் ஏற்றதினால்-அவர்கள்
            கலையோடு செல்வமும் குலத்தோடு சீலமும் கலையா சீதனமாம்
இல்லற  வாழ்க்கையை  நல்லறமாக்கினார்  நாபியின்  மைந்தன்  ஆதி-அதை
           எல்லோரும் பின்பற்றி இன்பமாய் வாழ்ந்திட முன்னின்றார்  ஆதிநாதன்

21. தொழில்கள்  வகுத்தல்
 
தானே  வளர்ந்து  தளராத  பயன்  தந்த  தாவர  நெற்பயிர்கள்
            காலத்தின் கோலத்தால் போகத்தின் மாற்றத்தால் பசிதுன்பம் பெரிதானது
மும்மாரி பெய்து முழுவதும் பெற்று மூவேளை உணவுண்ட  மக்கள்
            தாளாத  சோகத்தில் தங்காத துன்பத்தில் தலைவனை நாடிவந்தார்
வானமும் பொய்த்தது வளமையும் மறைந்தது வகையேதும் தெரியவில்லை
            கவலைகள்  ஏகிட  கஷ்டங்கள்  நீங்கிட  கட்டாயம்  வழிகாட்டுங்கள்
அயோத்தி  இளவளும் மருதேவி மைந்தனும்  மக்களின் துயர் நீங்கிட
            அறுதொழில்  ஒன்றே  ஆக்கத்தை  தந்திடும்  ஆதார  சுருதி  என்றார்
கலையாத  கல்வியும்  கறையாத  வணிபமும்  கண்கவர் சித்திரகலையும்
            பொன்னேரு உழவும் புகழ் தரும்  வித்தையும்  போற்றும்  தொழிலாறும்
என் நாட்டு  மக்களே இவ்வாறு  பிரிவையும் இனிதே உம் செயல்  திறனால்
            குன்றாத மனதோடும் குறையாத மகிழ்வோடும் செய்துண்டு வாழ்வீரே
அவர் சொன்ன தொழிலின்  அகிம்சை தருமத்தை அனைவரும் ஏற்றதினால்
            அறம் ஓங்கி தனம் பெறுகி சுக கர்ம பூமியாய்  ஆனதால்  மகிழ்ந்தனரே

22. பட்டபிஷேகம்

இளவலாய்  இருந்திட்ட  இளம் ஞானி  ரிஷபனை அரியனை ஏற்றி வைக்க
            முடிகொண்ட  நாபியும்  இடங்கொண்ட தேவியும்  முரசறிவித்தனரே
இதை  கேட்ட  இந்திரன் இவ்வுலகம்  வந்து  எழில்  மண்டபம்  அமைத்தார்
            சந்தன  சாந்திலே  மண்டபத்  தரையினை  இந்திராணி  அமைத்தாள்
தேவதை அனைவரும் வண்ணம் பல கொண்டு தரையினில் கோலமிட்டார்
            தேவர்கள் அனைவரும் நறுமண மலரிலே தோரணம் கட்டிவிட்டார்
அயொத்தி ஆண்கள் அனைவரும் சேர்ந்து அலங்கார  வளைவு  கட்ட
            ஆரணங்கெல்லாம் அவரவர் வாசலில்  அழியாத  கோலமிட்டார்
விண்ணோர்கள் எல்லாம் வியக்கும் விழிகாண  வீதியை  அலங்கரித்தார்
           அன்னோர்கள் எல்லாம்மண்ணோர்கள் ஆக மனதினில் விதைவிதைத்தார்
அவனியில் செல்வத்தின் ஆதிக்கம் கொண்டிட்ட அங்க நாட்டரசன்
            ரத்தினம்  பதித்த  ரதத்தினில்  ஏறி  ராணியுடன்  வருகிறார்
காசினி  தன்னில்  களங்கின்றி  ஆளும்  கலிங்க  நாட்டரசன்
            கருணை மிகக் கொண்டு மருதேவி செல்வனின் காலடி பணியவந்தார்
கன்னலும் செந்நெல்லும் கடல் போல் விளைந்திடும் கன்னட மாமன்னரும்
            கட்டிட கலையில் வித்தகம் பதித்திடும் கலைபொருள் கொண்டுவந்தார்
கள்ளமே இல்லாத வெள்ளை மனங்கொண்ட  காஷ்மீரத்தின்  காவலன்
            கனகமணி கொண்ட ரத்தின கம்பளம் கையோடு கொண்டுவந்தான்
தண்ணொளி மதியின் வெண்ணிறங் கொண்ட  யவ்வன  நாட்டரசன்
            வெண்முகில் நிறங்கொண்ட முத்துப்பொதியுடன் கப்பலில் வருகின்றார்
துயரமும் தொல்லையும் துட்டமும் இல்லாத குந்தளத்தின் கோமகன்
குறைசொல்ல இயலாத ரத்தின  குவியுடன் துவிகையில்  வருகின்றார்
பல்லக்கு  பரிவட்டம்  படைகள்  புடை  சூழ  பாஞ்சால  நாட்டரசன்
            பாரீசநாதனின்  பட்டபிஷேகத்தை  பார்க்கவே  வந்துவிட்டார்
ஆழியே  அகழியாய்  அரணாய்  அமைந்திட்ட  சிங்கள நாட்டரசர்
            ஆதிநாதரின்  பட்டபிஷேகத்தை  அணி  செய்ய  வந்து  நின்றார்
எண்ணிட  முடியாத  இன்னும் பல  நாட்டின்  ஏற்றமுள்ள  வேந்தர்கள்
            எண்குணத்தான்  எங்கள் ரிஷபனின்  பொன்னடி  பணியவந்தார்
அத்தனை அரசரும் அவரவர் கொணர்ந்த  அரிய  பெரும்  செல்வத்தை
            ஆதியின் பாதத்தில் அடக்கத்துடன் வைத்து ஆசியை வேண்டி நின்றார்
கண்ணெட்டும் தூரம் பன்னாட்டு மக்களும்  பாதம்  பணிய  வேண்டி
            விண்ணெட்டும்  கோஷத்தில்  விருஷன் புகழ் பாடி வீதியில் கூடினரே

23. அரசகுலம்  அமைத்தல்

நதிக்கரையோரமும்  மலையடியோரமும்  மாக்களாய்  வாழ்ந்த  மக்கள்
            மன்னவன் ஆதியின்  மதியூக ஆட்சியால் மாற்றத்தின் மாட்சி கண்டார்
வீடுகள் கட்டி ஊரை அமைத்தான் ஊரின் பெருக்கத்தில் நகரை சமைத்தான்
            மாட  மாளிகை  மலர்  பூங்காவென  எழிலோடு  மாற்றி  தந்தான்
நாடுகள்  ஆறெட்டை  நாட்டிய கோமகன்  மருதேவி  மைந்தன்  ஆதி
           அன்றாண்ட அரசர்கள் பரம்பரைத் தொடர்ந்திட ஐங்குலம் அமைத்திட்டார்
இட்சவாகு,  ஹரி,  குரு,  நாத,  உக்கிர  குலம்  என்று  ஐந்தினையும்
            அரசர்க்கு  தந்து  இட்சவாகுவின்  முதல்  நாதன்  ஆதியானார்
ஹரிகுலம் துவங்கி வளம்பெற வழிசெய்ய ஹரிகாந்தன் வந்துதித்தார்
            குரு குலம் தழைக்க குன்றாத ஜோதியாய்  சோமப்ரபன் நின்றார்
நாதகுலத்துக்கு  நாயகனாக  அகம்பனும்  ஏற்றுக்கொண்டார்
            உக்கிரகுலத்திற்கு காசிப வழிதோன்றல் வரிசையில் தழைக்கவந்தார்

24. நீலாஞ்சனை  பிரிவு

ஆதியின்  அவையில் ஆன்றோரும் சான்றோரும்  ஆசனம் கொண்டிருக்க
            அயோத்தி மக்களும் அயல் நாட்டு  மக்களும் பணிவுடன் நின்றிருக்க
இந்திரன்  சபையில்  நர்தனமாடிடும்  அரம்பைக்கு  நிகரானவள்
            ரிஷபனின்  சபையிலே  அலங்கார  தேவதை  நீலாஞ்சனை  ஆடினாள்
இதயத்தை வருடும் பொதிகைமலைத் தென்றல் இவளாடும் நடனம்     தானோ
            கோபத்தைக் கொட்டிடும் ஆழியின் அலையென புயலாக ஆடினாளே
நவரச  உணர்ச்சியை  நயனத்தில் கொட்டியே  நங்கையவள் ஆடிவந்தாள்
            சபையினர் அனைவரும் கண்ணசையாமல் கன்னியை கண்டுவந்தார்
காலத்தின்  கோலமோ காலனின் கணக்கோ  அறிந்தவர் யாருமில்லை
            ஆட்டத்தின்  நடுவிலே  ஆடிய  அரிவையும்  ஆவி  பிரிந்தனளே
ஆதியும் அவையோரும் அதிர்ச்சிக்குள்ளாயினர்  அவளின் நிலை கண்டு
            காலனோகடமையை முடித்துக் களித்திட்டான் கணக்கு முடிந்ததனால்

25. ஆதிக்கு  தேவர்கள்  போதனை

விதி  நின்று  சிரிக்கிறது  வினைப்  பயனோ அழுகிறது 
தேற்றுவார்   யாருமின்றி
உடலென்ற  கூட்டை  விட்டு  உயிர்  பறவை  பறக்கிறது 
உறவுகள்  ஏதும்  இன்றி
கல்லெறிந்த  தண்ணீரில்  காணுகின்ற  நீர்குமிழி
            கணநேரந்தான்  வாழ்ந்திடும் – அதுபோல்
கண்ணிமைக்கும்  நேரத்தில்  கர்மாத்தின்   ஆன்மாவும்
 காணாமல்  போய்  விடுமே
இரவெல்லாம்  இலையின்  மேல்  இன்புற்ற  பனித்துளியும் 
இது  வாழ்க்கை  என்றிருக்க
இளங்காலை  செங்கதிரோன்  இமை  திறந்து  பார்க்கையிலே
 இல்லாமல்  போய்  விடுமே
மண்ணுலக  வாழ்க்கையிலே  மனிதர்களும்  இப்படித்தான் 
வரவென்ற  விருந்தினர்கள்
செலவென்ற  வாழ்க்கைக்  கணக்கை  முடிப்பது
            நாம்  முன்  பிறவி  வினைப்  பயன்கள்
என்மனைவி,   என்மக்கள்,  என்சொத்து  என்று
            எதுவுமே  நம்  உரிமை  இல்லை
எடுக்கின்ற  பிறவியில்  என்றென்றும்  நிரந்தரம்
            என்பவைகள்  ஒன்றும்  இல்லை
இம்மையில்  நாம்  செய்திடும்  புண்ணியம்
            ஒன்றே  தான்    சேர்த்த  சொத்து
எப்பிறவி  எடுத்தாலும்  என்றும்  தொடர்வது
            முத்தான  அச்சொத்து  தான்
பற்றற்ற  வாழ்வுதனை என்றும்  தொடருங்கள்
            பெரும்  பாவங்கள்  அழிந்து  நிற்க
பல்வேறு  உயிர்களிடம்  பாசத்தை  காட்டுங்கள்
            விண்ணோர்கள்  நம்மைப்  பெற
அகிம்சையே  தர்மமாய்  ஆன்ம  சுகத்திற்கு
            அனைத்துயிரைப்   போற்றிடுங்கள்
ஐம்புலனை  வென்று  அருகன்  பதம்  நாடி
            ஆன்ம  நலம்  பெற்றிடுங்கள்
துறவினை  துணிவுடன்  கொள்ளுங்கள்
            வாழ்வின்  துன்பங்கள்  கரைந்துவிடும்
தூயத்  தவம்  ஒன்றே  தொடரும்  பிறவியை
            தொடராது  அழித்து  விடும்
அத்தனை  தேவர்களும்  இப்  பிறவி  வாழ்வினை
            ஆதிநாதனுக்கு  போதித்ததால்
அயோத்தி  அண்ணலும்  நாபியின்  மைந்தனும்
            ஆழ்ந்திட்டான்  பெரும்  சிந்தனையில்

26. ஆதிநாதரின்  12  சிந்தனைகள்

                   1.       நிலையாமை  :

அன்னையின்  தயவிலே  மண்ணீல்  பிறக்கையில்
அரும்பொருள்  ஏதுமில்லை
கூற்றுவன்  தயவிலே  விண்ணுலகம்  செல்கையில்
            பொன்  பொருள்  வருவதில்லை
மண்ணிலே  வாழ்கின்ற  மனிதனின்  வளர்ச்சியில்
            மாற்றங்கள்  எத்தனையோ
மனம்  போன  போக்கிலே  வாழ்கின்ற  மனிதனின்
            வாழ்க்கையே  சிக்கல்கள்  தான்
சாகாவரம்  பெற்று  தரணிக்கு  வந்தோம்  என்ற
            தவறான  சிந்தனையால்
தன்னிலை  மறந்து  தனம்  பொருள்  சேர்க்கின்றோம்
            தலைமுறைக்கு  தலைமுறைக்கும்
அழியாத  ஆன்மா அடைந்துள்ள  கூடு  தான்
            அழிகின்ற  மனித  உடல் – இந்த
நிலையாமை  அறிந்திட்டால்  நித்திலம்  முழுவதும்
            நிறைவான  வாழ்வு  கிட்டும்

                  2.      புகலின்மை  :

கொல்லாமை,  பொய்யாமை,  மிகுபொருள்  விரும்பாமை,
            களவாமை  பிறன்மனை  விழையாமைகள்
இவ்வைந்தாமை  நுழைந்திட்ட  இல்லத்தில்  என்றென்றும்
            இறையாண்மை  வந்து  சேரும்
சேர்த்திட்ட  பாவங்கள்,  சேர்க்கின்ற  பாவங்கள்
            செல்லாது  ஒழிந்து  விட
செல்வத்தை  அள்ளிக்  கொடுத்தால்  போதுமென்ற
            தெளிவற்ற  சிந்தனையில்
மண்ணையும்  பொன்னையும்  மாபெரும்  தனத்தையும்
            மலை  போல்  குவிக்கின்றோம்
புங்கவன்  திருவடி  ஒன்ற  நம்  புகலிடம்
            என்பதை  மறக்கின்றோம்


           3.      தனிமை  :

அழியாத  ஆன்மாக்கள்  ஒவ்வொன்றும்  இருப்பது
            அதனதன்  தனித்தன்மையில்
அடைகின்ற  கூடுகள்  ஒவ்வொன்றும்  ஏற்பது
            அதனதன்  வினைத்தன்மையில்
மனைவியும்  மக்களும்  மாபெரும்  செல்வமும்
            துணையென்ற  நமது  வாழ்க்கை
அத்தனையும்  இழந்திட்டு  அறுதியில்  முடிவது
            அழியாத  தனிமை  ஒன்றே

                   4.      அன்யத்துவம்  :

பாசத்தின்  மோகத்தில்  பற்றின்  தாக்கத்தில்
            பாவங்ககள்  பல  செய்கின்றோம்
என் ரத்தத்தின்  உறவுகள்  மொத்தமும்  இவரென்று
            இறுமாப்பில்  வாழ்கின்றோம்
காலத்தின்  எண்ணிக்கை  கணித்திட்ட  காலன்
            கண்  முன்னே  தோன்றுகையில்
அழியாத  உறவென்று  இறுமாந்த  உள்ளத்தில்
            உதிப்பதும்  அன்யத்துவமே

                   5.      பிறவிச்சுழல்  :

ஓரறிவு  ஜீவன் முதல்  ஆறறிவு  ஜீவன்  வரை
            ஆன்மாவின்  சுழற்சி  ஒன்றே
ஆறறிவு  ஜீவன்  என  ஆன்மா  பெறும்  கூடு
            அரிய  மனிதப்  பிறப்பே
அரிய  தவத்தில்  அவனிக்கு  வந்திட்டோம் 
            மானிடப்  பிறப்பெடுத்து - இதில்
நல்வினை  மட்டுமே  முன்  கர்ம  பாவத்தை
            நலிந்தோடச்  செய்து  விடும்
சம்சாரக்  கடலிலே  நல் ஞான  முத்தினை
            நாம்  தேடி  எடுத்து  விட்டால்
பிறவிச்  சுழற்சியில்  நாம்  பெரும் பெரும்பேறு
            பிறப்பற்ற  ஓர்  நிலை  தான்

                  6.      உலகம்  :

வேதங்கள்  கூறிடும்  உலகங்கள்  மூன்றையும்
            வாதத்தில்  எடுத்துக்கொண்டால்
நாம்  வாழும்  உலகத்தில்  செய்திடும்  கர்மங்கள்
            பிரிதுலகம்  காட்டிவிடும்
நற்காட்சி,  நல் ஞனம்,  நல் ஒழுக்க  செய்கையால்
            நாம்  விண்ணூலக  விருந்தினரே
கீழான  செயல்  செய்து  கீழுலகம்  செல்கின்ற
            நாம்  ஏழ்  நரக  நகரத்தாரே


                  7.       தூய்மை  :

ஒன்பது  வாயிலால்  உருவான  இக்கூட்டில்
            மனம்  என்ற  மாயை  மட்டும்
ஐம்புலனடக்கத்தில்  அடையாமல்  திமிர்வதால்
            அகத்தூய்மை  மறைந்து  விடும்
கூட்டினைக்  கழுவி  குளித்திடும்  செய்கையில்
            புறத்தூய்மை  ஒன்றே  வரும்
அன்பெனும்  குளியலை  அகத்தினில்  ஏற்றிட்டால்
            அகத்தூய்மை  தோன்றிவிடும்

8.       வினையூற்று  :                                                                                    

மிகு  பொருள்  விரும்பி  பெரும்  பொருள்  சேர்த்திட
            வினைகள்  பல  செய்கின்றோம் – அதில்
தீவினைப்  பெருக்கத்தால்  சோதனை  பலவேற்று
            சோகத்தில்  ஆழ்கின்றோம்
மணற்கேனி   தன்னிலே  சுரக்கின்ற  நீரை  போல்
            நம்  மானிடப்  பிறவி  தன்னில்
மனம்  போன்  போக்கிலே  செய்கின்ற  செயல்களால்
            தீவினைகள்  ஊற்றெடுக்கும்

                   9.      வினை  செறிப்பு  :

பிறர்  மனம்  நோகாத  பிறர்  மனம்  வாடாத
            மனத் தூய்மை  பெற்றுவிட்டால்
பொல்லாமை,  பொய்யாமை  புறங்கூறல் அனைத்தும்
            பனிபோல்  செறித்து  விடும்
அல்லவை  ஒழித்திட்டு  நல்லவை  நாம்  செய்து
            வாழ்கின்ற  நல் வாழ்க்கையில்
அறியாமை,  அழுக்காறு,  வன்சின  வெறுப்புகள்
            வேருடன்  செறித்து  விடும்
மனமென்னும்  ஆன்மாவில்  மாசுக்கள்  கலக்காமல்
            மாண்பினை  பெறவேண்டும்
மானிடப்  பிறவியில்  மெய்நிலைக்  காண்கின்ற
            உன்னத  நிலையும்  வேண்டும்

                   1 0.  வினை  உதிர்ப்பு  :

அரிதாய்  கிடைத்திட்ட  மானிடப்  பிறவியில்
            அன்பெனும்  சொத்தைச்  சேர்த்தால்
ஆன்மாவில்  கலந்திட்ட  அத்தனை  பாவமும்
            பழுபோலைப்  போல்  உதிரும்
தன்னிலை  அறிந்திட  தன்  மனம்  நிறைந்திட
            தவம்  ஒன்றே  நற் செயலாம்
தவத்தினை  ஏற்றிட்ட  மனிதர்கள்  அனைவரும்
            கேவலக்  ஞானியரே

1               1.  அறம்  :

இல்லறம்  துறவறம்  இரண்டையும்  போதித்த
            மன்னவன்  ஆதி  மனதில்
அகிம்சையின்  மகிமையால்  நல்லறம்  மட்டுமே
            மறுமையை  வென்று  விடும்
துன்பங்கள்  சூழ்ந்திட்ட  துயரங்கள்  பெருகிட்ட
            இவ்வுலக  வாழ்வு  தன்னில்
அறம்  ஒத்த  செய்கையால்  அனைத்துயிரை  நேசித்து
            ஆன்ம  நல்ம்  பெற்றிடலாம்

1                2.  ஞானம்  பெறல்  :

பஞ்சமந்திரம்  தனை  சொல்லிச்  சொல்லி
            தினம்  பாவம்  போக்குதல்  ஞானமே
எண்குணத்தானை  எண்ணி  எண்ணி
            தினம்  ஏற்றம்  பெருவதும்  ஞான்மே
அருகன்  அருளிய   அமுத  வழியினை
            அடி தொழுது  ஏற்பதும்  ஞானமே
அனைத்து  உயிர்க்கும்  கசிந்து  உருகி
            தினம்  அன்பு  காட்டலும்  ஞானமே
27.  அன்னை  விடை  தருதல்  :

பதினாறு  கனவிலே  மருதேவியான  என்  வயிற்றிலே  பிறந்த  ஆதி
            முடினை துறந்து  மறுமையை வென்றிட மாதவம்  நோக்கி  செல்வாய்
இப்பிறவி  தன்னிலே  என்மகனாக  நீ  உதித்திட்ட  ரிஷப  தேவா
            எப்பிறவி  எடுத்தாலும்  நான்  உன்  தாயாக  பிறக்கனும்  ரிஷபதேவா
அயோத்தி  மக்களின்  அறிவுக்கும்  உயர்விற்கும்  ஆதாரமான  மகனே
            அருகபதவியை  அருந்தவம்  புரிந்து  நீ  ஆனந்த நிலையடைவாய்
பெற்றோர்கள் பிள்ளைகள் மனைவியர் என்றெல்லாம் பற்றுள்ள உன் மனதை
            பற்றற்றான் பற்றினை பக்குவப்படுத்தி ஐம்புலன்  வெல்லச் செல்வாய்
மானிடப்  பிறவியில்  கர்மங்கள்  சேர்வது  மாறாதென்பது உண்மை
            கருமங்கள்  போக்கிட  கைவலம்  பெற்றிட கைலாசகிரி   செல்லுவாய்
பெண்ணின்  பெருமையை பெரிதாக எண்ணூம் பொன்மனம் கொண்டவனே 
            விண்ணவரும்  வந்து உன்  புகழ் பாடுவார்  சென்றிடு என் மகனே

28. அனைத்தும்  நிச்சயம்  :

கருவினில்  உதிக்கின்ற  போதே  இறக்கின்ற  நாளும்  நிர்ணயமாகிவிடும்
            பிறந்து செல்லும் பாதையும்  வாழும்  வாழ்க்கையும் நிச்சயமாகிவிடும்
நாம் வேண்டி பெறாத மனைவி  மக்கள்  நமக்கான நிர்ணயங்கள் – அவர்கள்
            நல்லவராவதும்  தீயவராவதும்  அவர்க்கான  நிச்சயங்கள்
தேவர்களாவதும்  நரகர்களாவதும்  நம்  கர்மத்தின்  நிர்ணயங்கள்
           தாரத்தைத் தொடர்வதும் தவவாழ்க்கை ஏற்பதும் நமக்கான நிச்சயங்கள்
இம்மைப் பிறப்பினில் எல்லோரும் எதிர்கொள்ளும் எல்லாம் நிர்ணயங்கள்
            எல்லாம்  எதிர்கொண்டு பிறவிசுழல்வது வினையென்ற நிச்சயங்கள்

29. துறவுற்ற  ஆதிநாதர்  :

மனமென்னும்  மஞ்சத்தில்  தவமென்னும்
            ஞானத்தை  மகிழ்வுடன்  ஏற்ற  ஆதி
மண்ணும்  பொருளும்  மகத்தான உறவும்
            மாயையாய்  நினைக்கலுற்றார் 
மண்ணாண்ட  மாமன்னன்  துறவற  அரசனாய்
            தூய்மையுடன்  செல்கின்றார்
மறுமையை  வென்றிட  மாதவம்  செய்திட
            மாமுனிவர்  போல்  போகிறார்
பட்டத்தைத்  துறந்திட்ட  பற்றினை வென்றிட்ட
            பண்பாளர்  ரிஷபநாதர்
பாரோர்  வணங்கிட  மேலோர்  தொழுதிட
            பரம ஞானியாய்  செல்கிறார்
காதி கர்ம  வினைகளைப்  போக்கிட
            கருதும்  மக்கள்  அனைவரும்
ஆழியாய்  சுகம்  பெற  ஆன்ம ஞானம்  பெற
            ஆதியைப்  பின்  தொடர்வோம்

30.  தவம்  :

மனமென்னும்  ரதத்திலே  துறவென்னும்  பரி  கட்டி
            மாதவம்  செய்யும்  ஆதி
உண்வையும்  உடலையும்  உள்ளத்தில்  நீக்கியே
            உறுதவம்  செய்யலுற்றார்
இம்மியும்  அசையாமல்  இமைகளை  திறக்காமல்
            இமயத்தைப்  போலிருந்தார்
மூவிரு  திங்கள்  தவத்தினில்  இருந்து
            உள்ளத்தில்  மகிழ்வு  கொண்டார்
உன்னத  தவசியாய்  உணவுக்கு  நகர் வந்தார்
            ஊர்மக்கள்  உணவிட  அறியவிலை
அட்சயதிருதியை  நாளன்று  ஆதிநாதர் கன்னல்
  சாறுண்டு  மீண்டும்  சென்றார்
திக்கெட்டு  திசைகளை  ஆடையாய்  அணிந்து
            தீர்த்தங்கர்  நிலையடைந்தார்
சரித்திர  தலைநாதர்  சமணத்தின் முதல்நாதர்
            ஜைனத்தைத்  தோற்றுவித்தார்

31.  கேவலக்  ஞானம்  :

ஆயிரம்  ஆண்டுகள்  அருந்தவம்  புரிந்திட்ட  ஆதிநாத  முனிவர்
            அறுவினை போக்கி கதிநான்கை நீக்கி ஆழ்நிலை  கொண்டுவிட்டார்
முக்காலம் உணர்ந்திடும் முழுதுணர் ஞானமே கேவலக் ஞானமென்பார்
            ரிஷபரின் தவத்திலே நித்திலம் அறிந்திட மலர்ந்தது அந் ஞானமே
ஜீவனின் இயல்பும் ஊழ்வினை உணர்வையும் உள்ளத்தில் தெளிவுற்றார்
            மோகத்தைத்  துறந்து  மூவினை உதிர்த்து மும்மணி முழுமை பெற்றார்
பிறப்புப்  பிணியோடு  மூப்பைத்  துறந்திட்ட  கேவலக்  ஞான  ஆதி
            இம்மை  நற்பயன்  அனைத்தையும்  அடைந்து  அருகபதம் அடைந்தார்
ஆதிநாதர்  முதல்  நாலாறு   தீர்த்தங்கர் வாழ்நாளை நாம்  தொடர்ந்து
            சமணத்தில் பிளவில்லா தமிழ் சமணர்களே வாருங்கள் வணங்கிடுவோம் 


                        ஆதிநாதர்  கவிதாஞ்சலி  நிறைவுற்றது.


No comments:

Post a Comment