கரணாணுயோகச் சொற்களுக்கான தமிழ் விளக்கம்
கரணாணுயோகச் சொற்களுக்கான

தமிழ் விளக்கம்
 திருவாளர் ஜெயராஜ் சாஸ்திரி அவர்களுடைய ஒன்பது ஆடியோக்களில் இருந்து கேட்டு பதிவு செய்த கரணாணுயோகச் சொற்கள் பற்றிய விளக்கங்களாக வந்த குரல்பதிவுகள் அனைத்தையும் பொறுமையாக எழுத்துருவம் கொடுத்து நமக்கு தினந்தோறும் திருவாளர் T. ஸ்ரீதர், விளாங்காடுபாக்கம் ஜினாலய அறங்காவலர் அவர்கள் வாட்ஸ்அப் செயலில் தொடராக வெளிவந்த  தினத் பதிவுகளின் தொகுப்பு….

மிகவும் பயனுள்ள விளங்களை நமக்காக சிரமம் பாராமல்  வழங்கிய பவ்யருக்கு  நமது நன்றியை தெரிவித்துக் கொள்வோம்.

மிக்க நன்றி ஐயா….


கரணாணுயோக ஆகமங்களைப் படிக்கும் போது அதில் உள்ள சமஸ்கிருத சொற்களைப் புரிந்து கொள்வது என்பது மிகவும் கடினமாக உள்ளது. சாஸ்திரிகள் எடுத்துச் சொன்னால் மட்டுமே, தமிழ் மட்டுமே தெரிந்த நமக்கு அந்தச் சொற்களின் உள்ளர்த்தம் புரியும். வெறுமனே சமஸ்கிருத சொற்களை மட்டும் மனப்பாடம் செய்து கொள்வதால் ஆகமங்களைப் புரிந்து கொள்ள முடியாது. எனவே திரு.ஜெயராஜ் சாஸ்திரிகள் சுமார் 150க்கு மேற்பட்ட கரணாணுயோகச் சொற்களைச் சொல்லி அவைகளின் அர்த்தங்களை ஒன்பது யூ ட்யூப் வீடியோக்களில் விளக்கம் அளித்து உள்ளார்.

 

அந்த வீடியோக்களில் இருந்து ஒவ்வொரு சமஸ்கிருத வார்த்தை அதன் தமிழ் அர்த்தம் தினந்தோறும் வாட்ஸ்அப் மூலம் பதிவு செய்ய உள்ளேன். அதே வடமொழி வார்த்தைகளை திரும்ப உபயோகித்தாலும் அதன் உள்ளர்த்தம் சரியாகப் புரியும் என்ற எண்ணத்தில் இந்த முயற்சி.

நன்றி வணக்கம் இவண்

T.ஸ்ரீதர் விளாங்காடுபாக்கம்.

 

[7:14 am, 02/03/2023] Sridhar T Vilangadupakkam: கரணாணுயோகச் சொற்கள்.

 

மோக்ஷ தத்துவம் குணஸ்தானங்கள் கர்ம சித்தாந்தம் சம்பந்தப்பட்ட ஆகமங்களைப்  படித்துத் தெரிந்து கொள்வதற்கு முன் பல சமஸ்கிருத கடின சொற்களின் பொருளை அதாவது அர்த்தங்களை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

 

1.கர்மம் என்றால் என்ன?

 

உயிரின் (ஆத்மனுடைய) மோகம் விருப்பு வெறுப்பு அதாவது மோக இராக துவேஷங்களின் காரணங்களால்  கார்மண வடிவ வர்க்கணையாக மாறக்கூடிய அல்லது உருவாகக் கூடிய புத்கலம் அல்லது மிகமிகச் சிறிய பொருள் அதாவது நுண்ணிய கர்ம அணுவிற்கு கர்மம் என்பது பெயர். இந்த தனிப்பட்ட கர்ம பரமாணுவை கார்மண வர்க்கணை என்றும் கார்மாண வர்க்கணை என்றும் இரு பெயர்களில் குறிப்பிடுவர். இரண்டும் தனிப்பட்ட ஒரே  கார்மண வர்க்கணையை மட்டுமே குறிக்கும் சொற்களாகும். கர்மமாகக் கட்டக் கூடிய புத்கலத்தின் மாற்றம் (பர்யாயம்) தான் கர்மம் ஆகும்.

கர்மமாகக் கட்டக் கூடிய என்றால் என்ன அர்த்தம்?

 

நம்முடைய மோக இராக துவேஷத்தால் மனம் மொழி மெய் கொண்டு செய்யப்படும் நற்செயல் அல்லது தீய செயல்கள் ஒவ்வொன்றும் புத்கலமாகிய பரமாணுவில் பதிவாகி ஆத்மனில் படிந்து விடும். இதற்கு தான் கர்மமாகக் கட்டக் கூடிய புத்கலத்தின் மாற்றம் என்று சொல்லப்படுகிறது கர்ம வினைகள் அத்தனையும் நம்முடைய செயல்கள் ஒவ்வொன்றின் நுண்ணிய பதிவுகள் தான். இவைகளைப் பற்றிய மேலும் விரிவான விளக்கங்களைக்  கர்மங்களின் பத்து கரணங்கள் அதாவது நிலைகள் பற்றி பின்னர் பார்ப்போம்.

 

2. கார்மண வர்க்கணை என்றால் என்ன?

கர்ம வடிவில் உருவாகக் கூடிய புத்கலம் (பரமாணு) கர்மம் ஆகும். ஒன்றுக்கு மேற்பட்ட கார்மண புத்கலங்கள் அல்லது கார்மண வர்க்கணைகளின் கூட்டு அல்லது சேர்க்கை   கார்மண வர்க்கணை எனப்படும்.

 

புத்கலம் என்றால் தனிப்பட்ட ஒரேயொரு பரமாணுவாகும். மிக மிக நுண்ணியமானது.  பல்வேறு தன்மையுள்ள புத்கலங்கள் நிறைய உள்ளன. இங்கு நாம் சொல்வது ஒன்றுக்கு மேற்பட்ட கார்மண வர்க்கணைகளாக உருவாகக் கூடிய கர்மமாகக் கட்டக் கூடிய திறன் கொண்ட புத்கலங்களுக்கு  கார்மண வர்க்கணை என்று பெயர். புத்கலங்கள் நிறைய உள்ளன. ஆனால் கர்ம வடிவில் கட்டக்கூடிய ஒன்றுக்கு மேற்பட்ட கார்மண வர்க்கணைகளைத் தான் கார்மண வர்க்கணைகள் என்று அழைக்கப்படுகிறது.

 

3.கர்மங்களின் மூலபேதம் அல்லது மூலப் பிரக்ருதிகள் எத்தனை வகைப்படும்? அதாவது கர்ம வினைகள் எத்தனை வகைகள் உள்ளன?

 

கர்மங்கள் பொதுவாக எட்டு வகைப்படும். அவை ஞானாவரனீயம்.

தர்சனாவரணீயம்.

மோகனீயம்.

வேதனீயம்.

ஆயுள்.

நாமம்.

கோத்திரம்.

அந்தராயம் என்று எட்டு வகைகளாகத் தரம் பிரித்து வகைப்படுத்தப் பட்டுள்ளன. இந்த எட்டு மூலப்பரக்ருதிகள் 148 உத்தரப் பிரக்ருதிகளாக உபபிரிவுகளாக மேலும் பிரிக்கப்பட்டுள்ளன.

 

4. சித்த பகவானின் எட்டு சிறப்பு குணங்கள் யாவை?

அனந்த ஞானம், அனந்த தரிசனம், அனந்த சுகம் , அனந்த வீர்யம், அவகாஹனத்வம், அகுருலகுத்வம், சூக்ஷுமத்வம் மற்றும் அவ்யாபாதத்வம் என்ற இந்த எட்டு குணங்களும் சித்த பகவானின் வரையறை அற்ற சிறப்புக் குணங்கள் முழுமையான குணங்கள் ஆகும்.

 

5. ஆத்மனின் அனுஜீவி குணங்கள் அல்லது இயல்பான இயற்கையான குணங்கள் யாவை?

கேவலஞான குணம், தரிசன குணம், எல்லையற்ற பலம் (அனந்த வீர்யம்), பூரண சுகம் (அனந்த சுகம்), அவ்யாபாதத்வம், அகுருலகுத்வம், சூக்ஷுமத்வம் மற்றும் அவகாஹனத்வம் இவை எட்டும் ஆத்மனின் இயல்பான குணங்கள் ஆகும். சித்தரின் சிறப்பு குணங்கள் அனைத்தும் சம்சாரத்தில் உள்ள போதும் ஆத்மனின் இயல்பான குணங்கள் ஆகும். ஏனெனில் ஆன்மா சித்த நிலையை அடையக் கூடியது. இந்த குணங்கள் ஆத்மனில் எப்போதும் உள்ள நீங்காத குணங்கள் ஆகும். ஆனால் பிறவி உயிராக இருக்கும் போது இவை வெளிப்பாட்டுக்கு வருவது இல்லை. கர்ம வினைகள் மறைப்பதால் வெளிப்பட முடியாமல் மறைந்தே இருக்கின்றன. இதன் காரணமாக கர்மங்கள் ஆத்மனை விட பலம் மிக்கவை என்று அர்த்தம் அல்ல. ஆத்மனின் அதாவது பிறவி உயிரின் பாவனை அல்லது எண்ணங்கள் சுத்தமாக நிர்மலமாக இருக்கும் போது (பரிணாமம்) ஆத்மனின் முன் கர்மங்களால் எதிர்த்து நிற்க முடியாது. பலமற்று விடும். ஆன்மா தான் பலம் மிக்கது.

 

6. காதி கர்மங்கள் என்றால் என்ன?

ஆத்மனின் இயல்பான அனுஜீவி குணங்களை  வெளிப்பட விடாமல் முற்றிலும் தடுக்கக் கூடிய கர்ம வினைகள் காதி கர்ம வினைகள் ஆகும். ஆன்மாவானது இயற்கையாக கேவலஞான குணம் கொண்டது. தன்னை முற்றிலும் அறிந்த தர்சனகுணம் கொண்டது. மோகமற்ற உன்னத பற்றற்ற வீதராக பாவம் கொண்டது. எல்லாத் தடைகளையும் தாண்டி செயல்படும் தன்மை கொண்டது. நான்கு கதிகளிலும் இல்லாமல்  தன்னுள்ளே ஒன்றிவிடும் தன்மை (அவகாஹனத்வம்) கொண்டது. அகுருலகுத்வம் (பளுவற்றதும் லேசான அல்லது லகுவான தன்மையும்) கொண்டது. சூக்ஷுமத்வம் (கண்ணுக்குப் புலப்படாத அருவமான தன்மையும்) கொண்டது. அவ்யாபாதத்வம் தன்னுள் தான் ஐக்கியம் அடைந்து விடும் தன்மை கொண்டது. இவைகளை முழுமையாகக் கொண்டது. ஆனால் இவைகளை வெளிப்படுத்த முடியாமல் காதி அகாதி கர்ம வினைகள் எட்டும்  முழுமையாகத் தடுக்கின்றன. அவைகளால் முற்றிலும் அழிக்க முடியாது ஆனால் கதிரவனைக் கார்மேகம் சூழ்ந்து மறைத்திருப்பது போல் ஆத்மனின் இயல்பான குணங்களை அழிக்க முடியாவிட்டாலும் வெளிப்பாட்டுக்கு வர விடாமல் முற்றிலும் தடுத்து விடுகின்றன.

 

ஞானாவரனீயம் தர்சனாவரனீயம் மோகனீயம் அந்தராயம் இவை நான்கும் காதி கர்ம வினைகள் ஆகும். இந்த நான்கும் உதயத்தில் இருக்கும் போது ஆத்மனின் இயல்பான அனுஜீவி குணங்களை அதாவது இயல்பான குணங்களை வெளிப்பட விடாமல் முற்றிலுமாக தடுத்து விடுபவை.

 

7. அகாதி கர்ம வினைகள் என்றால் என்ன?

காதி என்றால் முற்றிலும் அழிப்பது என்று பொருள்.

 

 அகாதி அ + காதி என்று இரண்டாகப் பிரித்து பார்க்க வேண்டும். ந + காதி என்றும் சொல்லலாம்.

ந என்றால் வடமொழியில் இல்லை என்று பொருள். ந காதி அல்லது அகாதி என்னும் ஆத்மனின் அனுஜீவி குணங்களை முற்றிலும் அழிக்காதவை என்று பொருள்.

 

அநியாயம் என்றால் நியாயம் அற்றது என்பது போலவும் , அதர்மம் என்றால் தர்மமற்றது என்பது போலவும், அகாதி என்பதற்கும் பொருள் கொள்ள வேண்டும்.

 

ஆத்மனின் இயல்பான தன்மைகளை முழுவதும் தடுக்க முடியாத, அவைகளின் தனித்த இயல்பை மட்டுமே செயல்படுத்தக் கூடிய ஆத்மனின் இயல்பான குணங்களை ஓரளவு மட்டுமே தடுக்க முடிந்த கர்ம வினைகளுக்கு அகாதி கர்ம வினைகள் என்று பெயர்.

 

அகாதி கர்ம வினைகளின் தனித்த இயல்புகள் என்றால் என்ன?

ஆயுள் கர்ம வினை.

எந்த கர்ம வினை  ஒரு உயிர் தேவ மனித விலங்கு நரகம் ஆகிய நான்கு கதிகளில் பிறந்து  அந்த உடல்களில் குறிப்பிட்ட ஆயுள் எவ்வளவு காலம் என்று உள்ளதோ அதுவரை உதயத்தில் இருந்து உயிரை அந்த உடல்களில் தக்க வைக்கும் தன்மை கொண்டதோ அதற்கு ஆயுள் கர்மம் என்று பொருள் .

 

 தேவ கதியில் 33 கோடி  கடற்காலமாகவோ? 10000 வருடங்களோ? மனித கதியில் 70 அல்லது அதற்கு மேற்பட்ட வருடங்களோ? விலங்கு கதியில் வெவ்வேறு அதாவது ஒரு இந்திரிய உயிர்களில் இருந்து மனமற்ற ஐம்புலன் கொண்ட உயிர்களின் வெவ்வேறு விதமான ஆயுள்களிலோ? நரக கதிகளில் அவைகளுக்குரிய ஆயுள் காலம் முழுவதும் உயிரை அந்தந்த பிறவிகளில் தக்க வைப்பது ஆயுள் கர்ம வினையின் தன்மை ஆகும். ஆயுள் கர்ம வினை முற்றிலும் அழியும் போது உயிரானது தன்னிலேயே ஐக்கியமாகி நிலைபெற்று விடும். அதாவது அவகாஹனத்வம் அடைந்து விடும்.

 

நாம கர்ம வினையானது பல்வேறு உடல் அமைப்புகளைப் பெறுவதற்குக் காரணமாக இருப்பது. தேவ மனித விலங்கு நரக கதிகளில் பிறக்கும் பிறவி உயிர்களின் அந்தந்தப் பிறவிக்கான 93 வகையில் அவைகளின் உடல் அமைப்புகளை ஏற்படுத்தி அந்த உடல்களில் ஆயுள் முழுவதும் உழல வைப்பது நாம கர்மத்தின் தன்மை. அழகாகப் பிறப்பது, அசிங்கமான உடலுடன் பிறப்பது, அங்க லட்சணங்களுடன் பிறப்பது, அவலட்சணமாகப் பிறப்பது, ஊனமாகப் பிறப்பது, கருப்பாகப் பிறப்பது, சிவப்பாகப் பிறப்பது, நெட்டையாக பிறப்பது, குளளமாகப் பிறப்பது, இப்படி 93 வகையான உடல்களின் அமைப்பை உயிர் பெறுவதற்கு காரணமாக இருப்பது நாமகர்ம உதயத்தின் பலனாகும். நாமகர்மம் முழுவதும் அழியும் போது ஆன்மா அகுருலகுத்வம் தன்மையை அடைந்து விடும்.

 

கோத்திர கர்ம வினையானது உயிரை உச்ச கோத்திரம் மற்றும் நீச்ச கோத்திரத்தில் பிறவி அமையக் காரணமானது ஆகும். அதாவது மேல்ஜாதி மற்றும் கீழ்ஜாதி உயர்ந்த ஜாதி தாழ்ந்த ஜாதி என்ற இரண்டு வகையான பிரிவில் பிறவி அமையக் காரணமாக இருப்பதாகும். வியவகார நயத்தில் இப்படி சொல்வதுண்டு. நிச்சய நயத்தில் எந்த உயிர், புறப்பொருள்களில் இருந்து விலகி மோகத்தை விட்டு தனது ஆத்மனில் கவனத்தைச் செலுத்துகிறதோ? அது உச்ச கோத்திரம் அதாவது உயர்ந்த கோத்திரம் என்றும், எந்த உயிர் தனது ஆத்மனில் கவனத்தைச் செலுத்தாமல் தனது உடல் மற்றும் புறப்பொருள்களில் மட்டுமே மோகத்தோடு கவனத்தைச் சிதற விடுகிறதோ? அது நீச்ச கோத்திரத்தில் அதாவது தாழ்ந்த கோத்திரத்தில் உள்ளது என்றும் ஆகமங்கள் சொல்கின்றன. கோத்திர கர்ம வினை முற்றிலும் அழியும் போது ஆன்மா சூக்ஷுமத்வ குணத்தை அடைந்து விடும். உயர்ந்தது தாழ்ந்தது என்ற பேத நிலை அகன்று தன்னில் தானாக சூக்ஷுமமாகிவிடும்.

 

வேதனீய கர்ம வினையானது உயிர்களின் ஐம்புலன்கள் மற்றும் வெளிப்புறம் சார்ந்த இன்ப துன்பங்களை அனுபவிக்க காரணமாக அமைவதாகும். அது சாதா வேதனீயம் மற்றும் அசாதா வேதனீயம் என்று இரண்டு வகையாக உள்ளன.

 

சாதா வேதனீயம் உயிரின் அல்லது பிறவியின் காலத்தில் ஐம்புலன் சார்ந்த இன்பத்திற்கும், சுகத்திற்கும், அனுகூலமான சூழ்நிலை, நல்ல உறவுகள் நண்பர்கள், ஆரோக்கியமான உடல், செல்வச் செழிப்பு, வளமை இவை போன்ற இன்பங்கள், நன்மைகள், சுகபோகங்கள் ,அமைவதற்கும் காரணமாக இருப்பதாகும்.

 

அசாதா வேதனீயம் உயிரின் அல்லது பிறவியின் காலத்தில் துன்பத்திற்கும், துக்கத்திற்கும், அனுகூலம் இல்லாத சூழ்நிலை, தீய உறவுகள், விரோதிகள் ஆரோக்கியமற்ற உடல், வறுமை, தரித்திரம் இவை போன்ற துன்பங்கள் தீமைகள் துக்கங்கள் அமைவதற்கும் காரணமாக இருப்பதாகும்.

 

ஆயுள் நாமம் கோத்திரம் வேதனீயம் ஆகிய நான்கும் அகாதி கர்ம வினைகள் ஆகும்.

 

இவைகள் உதயத்தில் இருக்கும் போது ஆத்மனின் இயல்பான குணங்களை ஓரளவுக்கு தான் மறைக்க முடியும் முழுவதும் தடுக்க இயலாதவைகள் ஆகும்.

 

காதி கர்ம வினைகள் 1சர்வகாதி கர்ம வினைகள் 2தேசகாதி கர்ம வினைகள் என்று மேலும் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப் பட்டு உள்ளது.

 

சர்வகாதி கர்ம வினைகள் ஆத்மனின் அனுஜீவி குணங்களை அதாவது இயல்பான இயற்கையான ( புதிதாக ஒன்றும் தோன்றப் போவதில்லை,  ஆத்மனில் இயற்கையாகவே உள்ளது என்று பொருள்) குணங்களை முற்றிலும் தடைசெய்பவை. வெளிப்பாட்டுக்கு வர விடாமல் தடுப்பவைகளாகும்.

 

தேசகாதிக் கர்ம வினைகள் ஆத்மனின் அனுஜீவி குணங்களை முழுவதும் தடுக்க முடியாதவைகள் ஆகும். தேசகாதிக் கர்மங்கள் எவ்வளவு உதயத்தில் உள்ளதோ? அந்த அளவிற்கு மட்டுமே அவைகளின் தடை இருக்கும். அவைகளின் உதயம் இல்லாத க்ஷயோபசம நிலையில் தடைகளற்ற நேரத்தில் அவைகளால் ஆத்மனின் இயல்பான குணங்களை தடுக்க முடியாது. இயற்கை குணங்கள் வெளிப்பாட்டில் இருக்கும்.

 

உதாரணமாக மதிஞானாவரணம் எவ்வளவு உதயத்தில் உள்ளதோ? அவ்வளவு புத்திக்கூர்மை அல்லது ஞானம் தடைபடும். எவ்வளவு உதயத்தில் இல்லையோ? அந்த அளவில் புத்திக்கூர்மை தடைபடாது. ஆத்மனின் தடுக்கப்படாத  பகுதியளவு ஞானம் செயல்பாட்டில் இருக்கும். இதுதான் தேசகாதிக் கர்மங்களின் தடை செய்யும் தன்மை ஆகும். இப்படியே ஒவ்வொரு தேசகாதிக் கர்மங்களின் தன்மையை அளவிட்டுப் புரிந்து கொள்ள வேண்டும்.

 

ஞானாவரணம் தரிசனாவரணம் மோகனீயம் அந்தராயம் நான்கு காதி கர்மங்கள் ஒவ்வொன்றாகச் சிறிது விளக்கமாகப் பார்ப்போம்.

 

1.ஞானாவரணம் என்பது ஞானம் + ஆவரணம் என்ற இரண்டு சொற்கள் கொண்டது.

ஞானம் என்றால் அறிவு என்று நமக்கு தெரியும்.

ஆவரணம் என்றால் தடை என்பது அர்த்தமாகும்.

ஞானத்தைத்  தடை செய்வது மறைப்பது தடுப்பது என்று ஞானாவரணத்தின் பொருளாகும். ஆத்மனின் ஞான குணத்தை தடுப்பது ஞானாவரணத்தின் தன்மை ஆகும். இந்தக் கர்மவினை உதயத்தில் இருக்கும் காலம் வரை ஆத்மனின் ஞான குணம் வெளிப்பட விடாமல் தடுத்துவிடும்.

 

ஞானாவரணம் ஐந்து உபப்ரக்ருதிகள் அல்லது உத்தரப் பிரக்ருதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை

மதி ஞானாவரணம்,

ஸ்ருத ஞானாவரணம்,

அவதி ஞானாவரணம்,

மனப்பர்யய ஞானாவரணம்,

மற்றும் கேவலி ஞானாவரணம் என்று ஐந்து பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

 

இதில் கேவலி ஞானாவரணம் சர்வகாதி பிரக்ருதி ஆகும். இந்த கர்ம வினை உதயத்தில் இருக்கும் காலம் முற்றும் கேவல ஞானம் எனப்படும் முழுதுணர் ஞானம் ஏற்படவே ஏற்படாது. இந்த சர்வ காதி கர்ம வினை முற்றிலும் அழிந்தால் தான் ஆத்மனின் முழுதுணர் ஞானம் முழுமையாக வெளிப்படும். பிறகு ஆத்மனில் இருந்து விலகவே விலகாது. முக்தி எய்திய பிறகும் தொடர்ந்து நீடிக்கும். சர்வகாதிக் கர்மம் எளிதில் நீங்காது. ஒரு முறை நீங்கி விட்டால் முற்றிலும் ஆன்மனில் இருந்து அழிந்து விடும்.

 

மதி ஞானாவரணம் ஸ்ருத ஞானாவரணம் அவதி ஞானாவரணம் மனப்பர்யய ஞானாவரணம் இவை நான்கும் தேச காதிக் கர்ம வினைகளாகும். தேச காதிக் கர்ம வினைகளின் தன்மை அவைகளின் உதயம் எவ்வளவு  இருக்கின்றதோ? அவ்வளவு ஞானத்தை மறைத்துவிடும். அவைகளின் உதயம் எவ்வளவு இல்லையோ? அவ்வளவு ஞானம் வெளிப்பாட்டில் இருக்கும். ஞானத்தை முழுவதும் தடுக்க தேச காதிக் கர்ம வினைகளால் முற்றிலும் மறைக்க முடியாது . பகுதி அளவே மறைக்கக் கூடியவை என்பதால் தேசகாதிக் கர்மங்கள் என்று பெயர்.

 

தர்சனாவரணம் என்பது தர்சனம் + ஆவரணம் என்ற இரண்டு சொற்கள் கொண்டது. தரிசனம் என்பது ஆத்மனின் தரிசன குணம். ஆவரணம் என்றால் தடை செய்வது தடுப்பது என்று பொருள்.

தர்சனாவரணம் என்பது ஆத்மனின் தரிசன குணத்தை மறைக்கின்ற அல்லது தடுக்கின்ற கர்ம வினையைக் குறிப்பதாகும்.

 

தரிசனாவரணம் ஒன்பது உத்தரப் பிரக்ருதிகளாக துணை ப்ரக்ருதிகளாக  வகைப்படுத்தப்படுகின்றது.

அவை

1.சக்ஷு தரிசனாவரணம்

2.அசக்ஷு தரிசனாவரணம்

3.அவதி தரிசனாவரணம்

4.கேவலி தரிசனாவரணம்

5.நித்ரா தரிசனாவரணம்

6.நித்ராநித்ரா தரிசனாவரணம்

7.பிரக்ஷளா தரிசனாவரணம்

8.பிரக்ஷளாபிரக்ஷளா தரிசனாவரணம்

9.ஸ்தானக்ருதி தரிசனாவரணம் என்ற இந்த ஒன்பது வகைகள் ஆகும். இவைகளில் சக்ஷு தர்சனாவரணம் அசக்ஷு தர்சனாவரணம் அவதி தர்சனாவரணம் மூன்றும்  தேச காதி கர்ம வினைகளாகும். மற்ற ஆறும் சர்வகாதிக் கர்ம வினைகளாகும்.

 

 மோகனீயம்.

மோகனீயம் கர்ம வினை என்பது எந்த கர்ம வினை ஆத்மனின் சம்யக்த்வ குணம், சாரித்ர குணம்  இரண்டையும் அழிக்கின்றதோ? அதற்கு மோகனீய கர்ம வினை என்பது பெயர். இந்த மோகனீயம் உதயத்தில் இருக்கும் போது ஆத்மனுக்கு சம்யக்த்வம் ஏற்படுவதையும் சாரித்ரம் அதாவது ஒழுக்கத்தையும் ஏற்பட  விடாமல் தடைகளை ஏற்படுத்தும்.

 

இருப்பதிலேயே மோகனீயம் அல்லது மோகம் தான் ஆத்மனின் முக்கியமான எதிரி என்றும் சொல்லலாம். இந்த மோகனீயம் காரணமாக சம்சார சமுத்திரத்தில் இருந்து மீண்டு வர முடியாமல் கணக்கற்ற காலங்களாக வதைப்பட்டுக் கொண்டு இருக்கிறது நம்முடைய ஆன்மா. மோகனீயம் உயிரை எழுபது கோடா கோடி கடற்காலங்கள் வரை கூட சம்சாரத்தில் ஆழ்த்திவிடும் மோசமான தன்மை கொண்டது. இதிலிருந்து ஆன்மா மிக்க பிரயாசை  எடுத்து கடுமையாக  முயற்சி செய்துதான் மீள வேண்டும். சாதாரண முயற்சிகளுக்கு கட்டுப்படாத கர்ம வினையாகும் மோகனீய கர்ம வினை.

  மோகனீயமானது தரிசன மோகனீயம் மற்றும் சாரித்ர மோகனீயம் என்று இரண்டு வகையாக உள்ளது.

 

அதில் சாரித்ர மோகனீயம் அதாவது ஜீவனின் நடைமுறை ஒழுக்கத்தை பாதிக்கும் கர்ம வினைகள் மொத்தம் 25 வகைகள் உள்ளன.

அனந்தானுபந்தி குரோதம் மானம் மாயை லோபம் நான்கு

அப்ரத்யாக்யானாவரண  குரோதம் மானம் மாயை லோபம் நான்கு

ப்ரத்யாக்யானாவரண குரோதம் மானம் மாயை லோபம் நான்கு

சஞ்ஜ்வலன குரோதம் மானம் மாயை லோபம் நான்கு

இவை சேர்ந்து 16 கஷாயங்கள், (கஷாயங்கள் என்பது நமது எண்ணங்களை எண்ண ஓட்டத்தின் கடுமை மென்மை தன்மைகளைக் குறிக்கும் வடமொழி சொல்லாகும்)

நோகஷாயங்கள் ஹாஸ்யம், ரதி, அரதி, சோகம், பயம்,ஜுகுப்ஸா (அருவருப்பு), ஸ்திரீவேதம் (பெண் காமம்) புருஷவேதம்(ஆண்காமம் ) மற்றும் நபும்சகவேதம்  (அலிகளின் காமம்) ஆகிய ஒன்பதும் சேர்ந்த 25 நோகஷாயங்கள் (தீவிர எண்ணங்கள்),

 

இவைகளோடு தரிசன மோகனீயத்தின் மித்யாத்வம்,

சம்யக் மித்யாத்வம் மற்றும் சம்யக்த்வம் இந்த மூன்று தரிசன மோகனீய கர்ம வினைகள் சேர்ந்து 28 கர்ம வினைகள் ஆத்மனின் சம்யக்த்வ குணம் சாரித்ர குணம் இரண்டையும் பாதிக்கின்றன அல்லது அழிக்கின்றன அல்லது வெளிப்படவிடாது தடை செய்கின்றன.

  இவைகளில் அனந்தானுபந்தி குரோதம் மானம் மாயை லோபம் நான்கு

அப்ரத்யாக்யானாவரண குரோதம் மானம் மாயை லோபம் நான்கு

ப்ரத்யாக்யானாவரண  குரோதம் மானம் மாயை லோபம் நான்கு மற்றும் தரிசன மோகனீயத்தின் மித்யாத்வம் சம்யக் மித்யாத்வம் இரண்டும் சேர்ந்து 14ம் சர்வகாதிக் கர்ம வினைகளாகும்.

 

சஞ்ஜ்வலன குரோதம் மானம் மாயை லோபம் நான்கு,

நோகஷாயங்கள் ஒன்பது மற்றும் தரிசன மோகனீயத்தின் சம்யக்த்வ ப்ரக்ருதி சேர்ந்து 14ம் தேசகாதிக் கர்ம வினைகள் ஆகும். இவைகள் பற்றிய விளக்கம் பின்னர் பார்ப்போம்.

 

மேலும் தொடர்வதற்கு முன்னால் சம்யக்த்வத்தின் ஏழு மூலப்பிரக்ருதிகள் எவை? என்று பார்ப்போம்.

தரிசன மோகனீயத்தின் மித்யாத்வம், சம்யக் மித்யாத்வம் மற்றும் சம்யக்த்வம் மூன்று,

அனந்தானுபந்தி குரோதம் மானம் மாயை லோபம் ஆகிய நான்கு அதிதீவிர கஷாயங்கள்,  இவை சேர்ந்தது சம்யக்த்வத்தின் ஏழு மூலப்பிரக்ருதிகள். இவை ஏழும்  தணிந்து இருக்கும் போது உபசம சம்யக்த்வம் ஏற்படும். இது தான் உயிருக்கு ஏற்படும் முதல் சம்யக்த்வம் அதாவது சம்யக் தரிசனம் அல்லது நற்காட்சியாகும். மித்யாத்வம் மற்றும் அனந்தானுபந்தி குரோதம் மானம் மாயை லோபம் இந்த ஐந்தும் முற்றிலும் அழிந்தால் தான் நற்காட்சி உயிரில் நற்காட்சி தோன்றுவதற்கான வழியே ஏற்படும். அதுவரை உயிரானது நற்காட்சியே இல்லாமல் சம்சார சமுத்திரத்தில் உழன்று கொண்டிருக்கும். இது பற்றிய விரிவான விளக்கங்களை பின்னர் மீண்டும் பார்ப்போம்.

 

அந்தராய கர்மம்.

இந்த கர்மமானது ஆத்மனின் நற்செயல் ஈடுபாட்டுக்குத் தடைகளை ஏற்படுத்துவது ஆகும். ஒரு ஜீவன்  தானம் செய்ய விரும்புகிறது என்று வைத்துக் கொள்வோம். அந்த தானம் செய்யும் நற்செயலைச் செய்ய விடாமல் தடைகளை ஏற்படுத்தும். சாஸ்திர தானம் செய்ய விரும்புகிறது அப்போதும் தடை. அபயதானம் செய்ய விரும்புகிறது அப்போதும் ஏதாவது ஒரு தடை ஏற்படும். அந்தராய கர்ம வினை உதயத்தில் இருக்கும் போது எந்தவொரு செயலையும் எளிதாகப் பூர்த்தி செய்ய இயலாது. இதற்கு தான் அந்தராய கர்ம வினை என்பது பெயர்.

இந்த அந்தராய கர்ம வினை தானாந்தராயம், லாபாந்தராயம், போகாந்தராயம், உபபோகாந்தராயம் மற்றும் வீர்யாந்தராயம் என்று ஐந்து வகைகளாகப் பிரிக்கப் பட்டுள்ளது. இவைகள் அனைத்தும் தேசகாதிக் கர்ம வினைகள் ஆகும்.

 

 

தமிழில் அர்த்தம் சொல்வதாகக் கூறிவிட்டு அதே வடமொழி வார்த்தைகளே வருகிறதே என்ற எண்ணம் இந்த கட்டுரையை படிப்பவர்கள் மனதில் தோன்றலாம். தூய தமிழ்ச் சொற்களை உபயோகப்படுத்தி எழுதினால் அந்த வார்த்தைகளுக்கு மீண்டும் ஒரு தனி அகராதி தேட வேண்டி வரும். நமக்கு சாதாரணமாக தெரிந்த தமிழில் கடின வார்த்தைகளை உபயோகப் படுத்தாமல் வடமொழி சொற்களுக்கு தேவையான போது விளக்கம் தர முயற்சி செய்கிறேன். கட்டுரையின் போக்கைப் பொருத்து அவைகளின் அர்த்தங்கள் சிறிது சிறிதாக புரிய ஆரம்பிக்கும்.

 

கர்ம வினைகள் மொத்தமாக எத்தனை உள்ளது?

 

ஞானாவரனீயம் 5 வகை.

தர்சனாவரனீயம் 9 வகை.

மோகனீயம்

தரிசன மோகனீயம் 3 வகை

சாரித்ர மோகனீயம் 25 வகை

அந்தராயம் 5 வகை

வேதனீயம் 2 வகை

ஆயுள் 4 வகை

நாமம் 93 வகை

கோத்திரம் 2 வகை

ஆக காதி அகாதி வினைகள் சேர்ந்து மொத்தம் 148 வகைகளாக உள்ளன. இந்த 148 வினைகள் தான் நமது ஆன்மாவை சம்சார வாழ்க்கையில் தள்ளிவிட்டு அதிலிருந்து ஆன்மா மீள வழி தெரியாமல் தத்தளிக்க வைக்கின்றன. இவைகளைப் பற்றி மேலும் விரிவாக ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு மோக்ஷ சாத்திரத்தை எடுத்தியம்பும் ஜினாகமங்களை நாள்தோறும் இரண்டு நாழிகை நேரம் நிச்சயமாக படித்து வர வேண்டும். ஒவ்வொரு கருத்தையும் திரும்பத் திரும்ப படித்தால் நீங்களாகவே அவற்றின் முழு அர்த்தத்தையும் புரிந்து கொள்ளலாம். அப்படி புரிந்து கொள்வீர்களானால் நீங்கள் எப்படி வாழ வேண்டும் என்பதை நீங்களே வகுத்துக் கொள்வீர்கள். மூன்றாமவர் சொல்லித்தான் உங்கள் பாதையை வகுத்துக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை.

 

மோகம் என்றால் என்ன அர்த்தம்?

பிறபொருள்கள் என்னைச் சேர்ந்தவை என்று நினைத்து அதை உறுதியாக நம்புவது மோகம் ஆகும். எது தன்னுடையது இல்லையோ? அதனைத் தன்னுடையது என்று இந்த ஜீவன் நம்புகிறது அதற்கு மோகம் என்றும் மோகபாவம் என்றும் பெயர்.

 

திரவியம் குணம் பரியாயம் இவைகளைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் இருப்பது மோகம் ஆகும். திரவியம் என்பது உயிர்ப் பொருளான ஆத்மனைக் குறிக்கிறது.  ஆன்மா அதன் இயல்பு மற்றும் அதன் பிறவி பந்தங்கள் அவைகளால் ஏற்படும் பிறவிகள் இவைகளை உணர்ந்து கொள்ளாமல் இருப்பது மோகம் ஆகும்.

 

உண்மையான தேவன், சாஸ்திரம், குரு, தர்மம், ஆப்தன், ஆகமம் இவைகள் பற்றி அறியாமல் இருப்பது அஞ்ஞானத்துடன் இருப்பது மோகம் ஆகும். அல்லது இவைகளில் நம்பிக்கை கொள்ளாமல் இருப்பதும் மோகம் ஆகும். இவைகளை அறிந்தும் தவறாகப் புரிந்து கொள்வதும் மோகம் ஆகும். அல்லது இவைகளை நன்கு அறிந்திருந்தும் அவைகளை நம்பாமல் அவநம்பிக்கை கொள்வதும்  மோகம் ஆகும். தேவ சாஸ்திர குரு இவர்கள் மீது நம்பிக்கை இல்லாமல் இருப்பது மோகம் ஆகும்.

 

உடலும் உயிரும் ஒன்று என்று நினைத்து அவைகள் வேறு வேறு என்பதை உணர்ந்து கொள்ளாமல் இருப்பது மோகம் ஆகும். அதாவது உடலைத் தான் என்று நம்பி மயங்குவது மோகம் ஆகும். அதாவது தான் உடலல்ல அதிலுள்ள உயிர்தான் தான் அதாவது ஆன்மாதான் தான் என்று சுயத்தை உணராமல் இருப்பது மோகம்.

 

புலன் சார்ந்த இன்பங்களில் ஈடுபாடு கொள்வது அவைகளை அனுபவிக்க வேண்டும் என்று தீவிர எண்ணம் கொள்வது மோகபாவம் ஆகும். புலன் சார்ந்த சுகங்கள் நிரந்தரம் என்று நம்புதல் மோகம் ஆகும்.

 

சாதா வேதனீய கர்மங்களின் காரணமாக இன்பங்கள் சுகங்கள் ஏற்படும் போது அதில் ஆழ்ந்து விடுவது அவை நிலையானது என்று எண்ணி ஆனந்தக் கூத்தாடுவது மோகம் ஆகும்.

 

அசாதா வேதனீய கர்மங்களின் காரணமாக மிகுந்த துன்பம் வேதனை வலி துக்கங்கள் ஏற்படும் போது மனம் சலித்து சோர்ந்து போய் சூம்பி விடுவது, முயற்சி இன்றி இருப்பது  மோகம் ஆகும்.

 

உடலைத் தான் என்று எண்ணி அதனைத் தான்தான் கட்டுக்குள் வைத்திருப்பதாக எண்ணி மயங்குவது மோகம் ஆகும். என்னதான் நாம் பேணிக் காத்தாலும் உடல் நம் கட்டுப்பாட்டில் இல்லை என்பதை உணராமல் இருப்பது மோகம் ஆகும். இவ்வாறு மோகத்திற்குப் பல சான்றுகளைக் கூறலாம். கர்ம சித்தாந்தம் பற்றி ஆழமாகப் பார்க்கப் பார்க்க இன்னும் நம் கவனத்திற்கு வராத மோகத்திற்கான சான்றுகள் நமக்குத் தெரிய வரும். இந்த மோக பாவம் தான் சம்சாரத்திற்கான ஆணிவேர் ஆகும். இதனால் தான் மித்யாத்வம் நம்மை விட்டு விலகாமல் இருக்கிறது. அதன் காரணமாக சம்யக்த்வம் நமக்கு ஏற்படாமல் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது. இந்தக் கொடூரமான மோகத்தில் இருந்து விடுபட நாம் சதாசர்வ காலமும் ஈடுபடவேண்டும்.

 

நேற்று மோகத்திற்கான காரணங்ளைச் சொல்லும் போது திரவியம் என்றால் ஆன்மா என்று மட்டும் தான் குறிப்பிட்டு இருந்தேன். அதை இன்று திருத்தி எழுதி இருக்கிறேன். அதைச் சேர்த்து படிக்கக் கேட்டுக் கொள்கிறேன்.

 

 திரவியம் குணம் பரியாயம் இவைகளைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் இருப்பது மோகம் ஆகும். திரவியம் என்பது உயிர் (ஆன்மா), புத்கலம் (உடல்)(ஜடப்பொருள்)  தர்மம் அதர்மம் ஆகாயம் காலம் இவைகளைக் குறிக்கும். திரவியங்களின் இயல்பு மற்றும் மாற்றங்கள் தன்மை  இவைகளை உணர்ந்து கொள்ளாமல் இருப்பது மோகம் ஆகும். திரவியங்களில் உயிர் மட்டுமே ஜீவப்பொருள் அருவமானது உருவமற்றது ஞானமயமானது. புத்கலம் ஜடப்பொருள் ஆகும் உருவமுண்டு உயிரற்றது ஞானமற்றது. தர்மம் அதர்மம் ஆகாயம் காலம் அருவமானவை உயிரற்றவை எங்கும் நிறைந்திருப்பவை  ஞானமற்றவை இவைகளை அறியாமல் இருப்பது மோகம் ஆகும்.

 

ராகம்  என்றால் என்ன?

 

பிற பொருட்கள் எனக்குப் பலன் தரக் கூடியவை, உபயோகமானவை, இன்பத்தையும் சுகத்தையும் தரக் கூடியவை  என்று எண்ணி அவைகளின் மீது விருப்பம் கொள்ளுதல் அன்பு செலுத்துதல் பாசத்துடன் அபிமானத்துடன் ஆசையுடன் இருத்தலுக்கு  ராகம் அல்லது ராக பாவம் என்று பெயர். பிற பொருட்கள் என்பது உங்கள் உடல் உள்பட, மாடு மனை வீடு மக்கள் சுற்றம் நட்பு இப்படி அனைத்தையும் குறிக்கும். மனை என்பது குடும்ப உறவுகளைக் குறிக்கும். இவைகள் அனைத்தும் நம்முடைய வாழ்க்கையைச் செவ்வனே நடத்த இன்றியமையாதவை.

 

ஆனால் இவைகள்தான் நம்முடைய ராகபாவத்திற்குக் காரணங்கள் ஆகும். இவைகள் நம்முடைய ராகபாவத்திற்குக் காரணம் என்பதால் இவைகளை தியாகம் செய்து விட வேண்டும் என்று அர்த்தமா? என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழும். அப்படியல்ல இப்போது நடக்கும் ஐந்தாம் காலத்தில் முக்தி கிடையாது என்பது நாம் அனைவரும் அறிந்ததே! அதற்காக எந்தவொரு முயற்சியும் எடுக்காமல் வந்த வரை அனுபவிப்போம் என்று கையைக் கட்டிக் கொண்டு சும்மா இருந்து விடலாமா?

 

இல்லறத்தில் இருந்து கொண்டே அதில் ஆழ்ந்து விடாமல் புளியம்பழமும் அதன் ஓடும் போன்று சம்சாரத்தில் ஒட்டியும் ஒட்டாமலும் இருக்கலாம். அப்படி முயன்று குடும்ப பாரத்தைச் சுமந்து கொண்டே நன்கு கனிந்த புளியம்பழம் அதன் ஓட்டில் இருந்து விலகி இருப்பது போன்று நாம் ஆத்மனில் ஆழ்ந்து சம்சாரத்தில் கடமைகளைச் செய்து கொண்டே விலகியும் இருக்க முடியும் என்பதே கருத்து.

 

சாரித்ர மோகனீய கஷாயங்களில் மாயை லோபம் நோகஷாயங்களில் ஹாஸ்யம் (கேலி கிண்டல் வீணான நகைச்சுவை), ரதி(விருப்பம்), ஸ்திரீவேதம் புருஷவேதம் நபும்சகவேதம் (மூன்று விதமான காம இச்சைகள் அல்லது நாட்டங்கள்) இவைகள் நமக்கு இராக பாவத்தை உண்டாக்குபவை. இவைகளால் கர்ம வினைகள் ஊற்றாகப் பெருக்கெடுத்து ஆத்மனில் சேரும். நம்மை சம்சாரக் குழியில் தள்ளும்.

 

துவேஷம்

ஒரு பொருள் நமக்கு தீய பலனைத் தரும், துன்பத்தைத் தரும், துக்கத்தைத் தரும், என்று எண்ணி அந்தப் பொருளை வெறுப்பது, சினம் கொள்வது, எரிச்சல் அடைவது, மற்றும் பகைமை பாராட்டி வெறுத்து ஒதுக்குவது துவேஷம் அல்லது துவேஷபாவம் என்று சொல்லப்படுகிறது. இந்த துவேஷபாவத்தால் நம்முடைய மனதில் விகார எண்ணங்கள் உண்டாகி  நம் எண்ணங்கள் அசுத்தமாவதோடு இவை  காரணமாக நாம் செய்யும் தீய செயல்களால் பாவ கர்ம வினைகளின் ஊற்று பெருக்கெடுத்து ஆத்மனில் சேருகிறது. ஆத்மனை தொடர்ந்து பாவகர்ம வினைகளால்  அசுத்தம் ஆக்கிக் கொண்டே இருக்கின்றன. விகார எண்ணங்களால் நமது பரிணாமம் எனப்படும் எண்ண ஓட்டங்கள் களங்கம் அடைந்து கொண்டே இருக்கின்றன.

 

சாரித்ர மோகனீய கர்ம வினைகள் குரோதம், மானம் (அஹங்காரம்) , நோகஷாயங்களில் அரதி (வெறுப்பு), சோகம், பயம் ஜுகுப்ஸா (அருவருப்பு) இவை நம்முடைய துவேஷ எண்ணங்களுக்கு காரணங்களாகும். இவைகளால் ஜென்மாந்திர பகை கூட ஏற்படும். அது அனந்தானுபந்தி கர்ம வினைக்குக் காரணமாகி சம்சாரத்தை அதிகரித்துக் கொண்டே போகும். அதன் காரணமாக பாவ கர்ம வினைகள் உற்பத்தி பெருகும்.

 

மோக ராக துவேஷ எண்ணங்களால் நம்மிடம் உள்ள மித்யாத்வம் மேலும் அதிகரிக்கும். அது நம்மை சூழ்ந்து கொள்வதால் நற்காட்சி தோன்றுவதற்கு பெரும் தடையாகி விடுகிறது. நற்காட்சி ஏற்பட்டால் தான் மோக்ஷ மார்க்க கதவு திறக்கும். மோக்ஷ மார்க்க கதவு திறந்தால் தான் நாம் அந்த பாதையில் அடியெடுத்து வைக்க முடியும்.

 

திரு.ஜெயராஜ் சாஸ்திரி அவர்களுடைய கரணாணுயோகச் சொற்கள் பற்றிய முதல் ஆடியோவில் இருந்து எடுத்துச்   சொல்லப்பட்டவை சில நாட்களாக நான் எழுதி பதிவு செய்தவை ஆகும். அவரது உரையை அப்படியே தர முடியாவிட்டாலும் முக்கியமான அர்த்தங்களை மாறாமல் தர முயற்சி செய்துள்ளேன். அவற்றில் பிழையேதும் இருக்குமாயின் அது அவரது உரையின் தவறு கிடையாது என்னுடைய புரிதலில் ஏற்பட்ட தவறாகத்தான் இருக்கும். பவ்யர்கள் சரியானதை மட்டும் எடுத்துக் கொண்டு தவறானதை விட்டு விடக் கோருகிறேன். அடுத்து அவரது இரண்டாவது ஆடியோவில் இருந்து புதிய பதிவுகளை நாளை முதல் பதிவு செய்கிறேன்.

முதல் ஆடியோவைத் தங்கள் அனைவரின் பார்வைக்கும் வைக்கிறேன்.

 

துவேஷம்

ஒரு பொருள் நமக்கு தீய பலனைத் தரும், துன்பத்தைத் தரும், துக்கத்தைத் தரும், என்று எண்ணி அந்தப் பொருளை வெறுப்பது, சினம் கொள்வது, எரிச்சல் அடைவது, மற்றும் பகைமை பாராட்டி வெறுத்து ஒதுக்குவது துவேஷம் அல்லது துவேஷபாவம் என்று சொல்லப்படுகிறது. இந்த துவேஷபாவத்தால் நம்முடைய மனதில் விகார எண்ணங்கள் உண்டாகி  நம் எண்ணங்கள் அசுத்தமாவதோடு இவை  காரணமாக நாம் செய்யும் தீய செயல்களால் பாவ கர்ம வினைகளின் ஊற்று பெருக்கெடுத்து ஆத்மனில் சேருகிறது. ஆத்மனை தொடர்ந்து பாவகர்ம வினைகளால்  அசுத்தம் ஆக்கிக் கொண்டே இருக்கின்றன. விகார எண்ணங்களால் நமது பரிணாமம் எனப்படும் எண்ண ஓட்டங்கள் களங்கம் அடைந்து கொண்டே இருக்கின்றன.

 

சாரித்ர மோகனீய கர்ம வினைகள் குரோதம், மானம் (அஹங்காரம்) , நோகஷாயங்களில் அரதி (வெறுப்பு), சோகம், பயம் ஜுகுப்ஸா (அருவருப்பு) இவை நம்முடைய துவேஷ எண்ணங்களுக்கு காரணங்களாகும். இவைகளால் ஜென்மாந்திர பகை கூட ஏற்படும். அது அனந்தானுபந்தி கர்ம வினைக்குக் காரணமாகி சம்சாரத்தை அதிகரித்துக் கொண்டே போகும். அதன் காரணமாக பாவ கர்ம வினைகள் உற்பத்தி பெருகும்.

 

மோக ராக துவேஷ எண்ணங்களால் நம்மிடம் உள்ள மித்யாத்வம் மேலும் அதிகரிக்கும். அது நம்மை சூழ்ந்து கொள்வதால் நற்காட்சி தோன்றுவதற்கு பெரும் தடையாகி விடுகிறது. நற்காட்சி ஏற்பட்டால் தான் மோக்ஷ மார்க்க கதவு திறக்கும். மோக்ஷ மார்க்க கதவு திறந்தால் தான் நாம் அந்த பாதையில் அடியெடுத்து வைக்க முடியும்.

 

திரு.ஜெயராஜ் சாஸ்திரி அவர்களுடைய கரணாணுயோகச் சொற்கள் பற்றிய முதல் ஆடியோவில் இருந்து எடுத்துச்   சொல்லப்பட்டவை சில நாட்களாக நான் எழுதி பதிவு செய்தவை ஆகும். அவரது உரையை அப்படியே தர முடியாவிட்டாலும் முக்கியமான அர்த்தங்களை மாறாமல் தர முயற்சி செய்துள்ளேன். அவற்றில் பிழையேதும் இருக்குமாயின் அது அவரது உரையின் தவறு கிடையாது என்னுடைய புரிதலில் ஏற்பட்ட தவறாகத்தான் இருக்கும். பவ்யர்கள் சரியானதை மட்டும் எடுத்துக் கொண்டு தவறானதை விட்டு விடக் கோருகிறேன். அடுத்து அவரது இரண்டாவது ஆடியோவில் இருந்து புதிய பதிவுகளை நாளை முதல் பதிவு செய்கிறேன்.

முதல் ஆடியோவைத் தங்கள் அனைவரின் பார்வைக்கும் வைக்கிறேன்.

 

கர்ம வினைகளின் "கரணங்கள்" என்றால் என்ன?

 

கர்ம வினைகளில் ஆத்மனின் பல்வேறு பாவனைகளினால் அவைகளின் நிலைப்பாட்டில் தோன்றும் மாற்றங்களைக்  "கரணங்கள்" என்று ஆகமங்கள் கூறுகின்றன.

 

கரணங்கள் எத்தனை வகைப்படும்? அவற்றை வரிசைப்படுத்துக.

 

கரணங்கள் பத்து வகைப்படும். அவை

1.பந்தம்.

2.சத்தா.

3.உதயம்.

4.உதீரணை.

5.உத்கர்ஷணம்.

6.அபகர்ஷணம்.

7.சங்க்ரமனம்.

8.உபசாந்தம்.

9.நிதந்தி.

10.நிகாசித்.

இவ்வாறு பத்து வகைகளாகக் கர்ம வினைகளின் நிலைகள், அல்லது "கரணங்கள்"   பிரித்துச் சொல்லப்படுகின்றன.

 

கரணங்கள் பத்திற்கும் ஒவ்வொன்றாக விளக்கம் பார்ப்போம்.

 

பந்தம்.

பந்தக்கரணம் என்பது ஆத்மனின் மோக இராக துவேஷ எண்ணங்களால் மனம் மொழி மெய் இவற்றில் ஏற்படும் செயல்களால் பாவ புண்ணிய கர்ம பரமாணுக்களாக உருவாகும் நுண்ணிய புத்கலங்கள் ஆத்மனில் வந்து படிகின்றன. இதற்கு பந்தம் என்றும் பந்தக்கரணம் என்றும் அழைக்கப்படுகிறது.

 

பந்தக்கரணம் எத்தனை உட்பிரிவுகளாகப் பிரிக்கப் பட்டுள்ளது?

1.பிரக்ருதிபந்தம்.

2.பிரதேசபந்தம்.

3.ஸ்திதிபந்தம்.

4.அனுபாகபந்தம்.

என நான்கு வகைகளாகப் பிரிக்கப்படுகிறது.

 

1.பிரக்ருதிபந்தம்.

பிரக்ருதி என்றால் இயல்பு அல்லது சுபாவம் என்பது பொருள். இங்கு பிரக்ருதி என்பது கார்மண வர்க்கணைகளின் இயல்பை அல்லது அவற்றின் குணங்கள் அல்லது தன்மையைக் குறிக்கும்.

 

கர்ம வினைகளின் இயல்புகள் பொதுவாக

ஞானாவரனீயம்

தர்சனாவரனீயம்

மோகனீயம்

வேதனீயம்

ஆயுள்

நாமம்

கோத்திரம்

அந்தராயம்

என்ற எட்டு வகையான இயல்புக் குணங்களைக் கொண்டவை. கர்ம வினைகளின் எட்டு வகையான பிரக்ருதிகள் என்று வடமொழியில் சொல்லப்படுகிறது. இந்த எட்டு மூலப்பரக்ருதிகள் மேலும் 148 உட்பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன.

 

புதிதாக உருவாகும் கார்மண வர்க்கணைகள் மேலே சொன்ன எட்டு கர்ம வினைகளும் 148 வகையான இயல்புகளோடு ஏகப்ரதேச அவகாஹனமாக ஆத்மனில் வந்து படிகின்றன. அதனதன் குணங்களோடு பலன் தரும் தன்மைகளோடு ஆத்மனில் படிவதால் பிரக்ருதி பந்தம் என இந்தக் கரணம் அழைக்கப்படுகிறது.

 

2.பிரதேச பந்தம்.

 

148 கார்மண வர்க்கணைகள் ஆத்ம ப்ரதேசத்தில் ஏகப்ரதேச அவகாஹனமாக ஆத்மனில் படிவதற்குப் பிரதேச பந்தம் என்பது பெயர். புதிதாக உருவாகும் கார்மண வர்க்கணைகள் ஆத்ம ப்ரதேசத்தில் அதனதன் குணங்களோடு படிகின்றன என்று பார்த்தோம்.

 

ஏகப்ரதேச அவகாஹனமாக ஆத்மனில் படிவது என்றால் என்ன?

 

புதிதாக உருவாகும் கார்மண வர்க்கணைகள் ஆத்மனில் அதன் இடத்திலேயே (பிரதேசத்தில்) வந்து தங்குகின்றன. அதாவது ஆத்மன் இருக்கும் இடமும் கார்மண வர்க்கணைகள் வந்து படிகின்ற இடமும் ஒரே இடம் தான். அதாவது ஆத்மனிலேயே வந்து படிகின்றன. திரும்பத் திரும்ப படிகின்றன என்ற சொல்லை பயன்படுத்தக் காரணம் கர்மங்கள் ஆத்மனோடு ஐக்கியம் ஆவதில்லை, ஆத்மனின் மேற்பரப்பில் அல்லது அதனோடு ஐக்கியம் ஆகாமல்  தான் படிகின்றன என்று அர்த்தம். ஆத்மனின் இடமும் கார்மண வர்க்கணைகள் தங்கும் இடமும் ஒரே பிரதேசம் அதாவது ஒரே இடம் தான் என்று பொருள். ஆத்மனிலேயே கார்மண வர்க்கணைகள் வந்து தங்குவதற்கு ஏகப்பிரதேச அவகாஹன சம்பந்தத்தோடு தங்குகின்றன என்று பொருள். அவகாஹனம் என்றால் இருத்தல் நிலை கொள்ளுதல் என்று பொருள்.

 

ஆத்மனின் பிரதேசம் என்பது எது?

ஆன்மா தற்போது எந்த உடலமைப்பு கொண்டு உள்ளதோ? அந்த உடலளவே ஆத்மனின் பிரதேசம் ஆகும். அந்த உடல் மிகச் சிறிய எறும்பாகவும் இருக்கலாம் அல்லது உருவத்தில் பெரிய யானையின் உடலளவும் இருக்கலாம். ஆனால் எந்த உடலைக் கொண்டுள்ளதோ? அந்த உடலின் அளவு மட்டுமே ஆத்மனின் பிரதேசம் அல்லது இடம் எனப்படுகிறது

வியவகார நயத்தில், அதாவது உலக வழக்கில் இவ்வாறு சொல்லப் படுகிறது.

 

நிச்சய நயத்தில் பார்க்கும் போது  ஆன்மாவின் பிரதேசம் லோகாலோகங்கள் அனைத்தையும் தன்னுள் அடக்கியதாகும்.  ஆகையால் தான் மலை மலையாக கர்மங்கள் அதனிடம் வந்து சேர்ந்தாலும் அத்தனையும் அதனிடம் வந்து தங்க இடம் அபரிமிதமாக உள்ளது. இப்படி கார்மண வர்க்கணைகள் ஆத்மனில் வந்து தங்குவதற்கு பிரதேச பந்தம் என்பது பெயர்.

 

3.ஸ்திதி பந்தம்.

இவ்வாறு ஆத்மனில் வந்து தங்கும் கார்மாண வர்க்கணைகள் உடனே அவைகளின் பலனை ஆத்மனுக்குத் தர முடியாது. ஏனெனில் ஏற்கனவே பல கார்மண வர்க்கணைகள் உதயத்திற்கு வந்து ஆத்மனுக்கு அவைகளின் பலனைத் தந்து கொண்டு இருக்கின்றன. மேலும் பல தங்கள் காலம் வருவதற்காக காத்திருக்கின்றன. எனவே புதிதாக வந்தவை தங்களின் உதயம் ஏற்படும் காலம் வரை காத்திருக்க வேண்டும். இவ்வளவு காலம் என்று நிர்ணயம் செய்து கொண்டு அந்த காலம் வரும் வரை ஆத்மனில் கார்மாண வர்க்கணைகள் தங்கிவிடும். எவ்வளவு காலம் கர்மங்கள் ஆத்மனில் தங்குகின்றனவோ? அதற்கு ஸ்திதி பந்தம் என்பது பெயர். ஸ்திதி என்றால் கால அளவு என்பதாகும். அந்தக் கால அளவு முடியும் வரை கர்மங்கள் உதயத்திற்கு வராது. காலம் கனிந்தவுடன் அல்லது முடிந்தவுடன் உதயத்திற்கு வந்து அவைகள் தரவேண்டிய பலனைத் தரும். கர்ம வினைகள் ஒவ்வொன்றும் ஆத்மனில் தங்கியிருக்கும் கால அளவிற்கு, அது ஒரு அந்தர் முகூர்த்தமாகவும இருக்கலாம் அல்லது 70 கோடாகோடிக் கடற்காலமாக கூட இருக்கலாம், இதற்கு  ஸ்திதி பந்தம் என்பது பெயர்.

 

4.அனுபாக பந்தம்.

அனுபாகம் என்றால் கர்மங்கள் உதயத்திற்கு வந்து  பலனைத் தருவதற்கு அனுபாகம் என்று பொருள். கர்மங்கள் என்ன விதமான பலனைத் தர வேண்டும் என்று நிர்ணயம் செய்து கொண்டு ஆத்மனில் வந்து படிகின்றனவோ? அதற்கு அனுபாக பந்தம் என்பது பெயர்.

 

பொதுவாக கார்மண வர்க்கணைகள் ஸ்திதி காலம் முடிந்து உதயத்திற்கு வந்து ஆத்மனுக்கு அவைகளின் பலனைத் தந்து விட்டு ஆத்மனில் இருந்து விலகி விடும். இதற்கு சவிபாக நிர்ஜரை என்று பெயர். இது தானாக ஏற்படும் நிகழ்வாகும். ஒரு முறை அதன் முழுபலனையும் ஆத்மனுக்கு தந்த பிறகு கர்மங்கள் அழிந்து விடும் இந்த வகைக்கு கர்மங்களை அனுபவித்துக் கழிப்பது என்று பெயர். இந்த முறையில் தான் ஆன்மா காலங்காலமாக தான் செய்த கர்மங்களை, அகப்பையில் மொண்டு சமுத்திரத்தை வற்றச் செய்வது போல் கர்ம வினை சமுத்திரத்தை  வற்றச் செய்ய முயற்சி செய்து கொண்டு வருகிறது. இதைத் தான் சவிபாக நிர்ஜரை என்று ஆகமங்கள் கூறுகின்றன.

 

தன்னிடம் வந்து சேர்ந்த கர்மங்களை அவைகள் உதயத்திற்கு வந்து பலனைத் தருவதற்கு முன்பாகவே ஆன்மா அவைகளை சுத்தோபயோக பற்றற்ற வீதராக பாவத்துடன்,  ஆத்ம தியானத்தின் துணை கொண்டு அழிக்கும் செயலுக்கு அவிபாக நிர்ஜரை என்று பெயர். இந்த இரண்டு வகைகளைத் தவிர வேறு எந்த வகைகளிலும் கார்மண வர்க்கணைகள் ஆத்மனில் இருந்து அழியாது. அவைகள் அழிக்கப்படும் வரை ஆத்மனை விட்டு விலகவும் விலகாது.   ஏனெனில் அவை நமது விகார எண்ணங்களால் உருவானவை. அவைகள் தரும் பலனை நாம் மட்டுமே அனுபவித்தாக வேண்டும்.

 

கார்மண வர்க்கணைகள் ஆத்மனில் தங்கிப் பின்னர் என்ன வகையான பலனைத் தரவேண்டும் என்று தங்கி உள்ளதோ? அதற்கு தான் அனுபாக பந்தம் என்பது பெயர். பந்தத்தின் நான்கு துணைப் பிரிவுகளின் விளக்கம் முடிகிறது.

 

2.ஸத்தா.

ஸத்தா அல்லது ஸத்வம் என்றும் அழைக்கப்படுகிறது. ஸத்வம் என்றால் இருப்பதை அல்லது இருப்பைக் குறிக்கும். ஆத்மனில் கார்மாண வர்க்கணைகள் நீண்ட காலம் அல்லது குறைந்த கால அளவில் உதயத்திற்கு வராமல் இருப்பாகத் தங்கி இருப்பதற்கு ஸத்தா என்று பெயர்.

 

ஆத்மனில் வந்து படிகின்ற கார்மாண வர்க்கணைகள் அந்தந்த பிரக்ருதிகளாக படிவதோடு மட்டும் அல்லாமல் குறிப்பிட்ட காலம் வரை உதயத்திற்கு வராமல் ஆத்மனிலேயே ஸத்தா அதாவது இருப்பாகத் தங்கி விடும். கர்மங்களின் இந்த நிலைக்கு அதாவது கரணத்திற்கு ஸத்தா என்று பெயர். அதாவது கர்மங்கள் ஆத்மனில் உதயத்திற்கு வராமல் இருப்பாகத் தங்கி விடும் தன்மைக்கு ஸத்தா என்று பெயர். ஸத்தா காலத்தில் கர்ம வினைகள் உதயத்திற்கு வராது. ஸத்தா காலம் முடிந்ததும் உதயத்திற்கு வந்து அவைகள் தர வேண்டிய பலனை ஆத்மனுக்குத் தந்துவிட்டு அழிந்து விடும்.

 

ஸ்திதி பந்தம் மற்றும் ஸத்தா இரண்டும் ஒரே மாதிரியாகத் தெரியும்.

ஆனால் ஸ்திதி பந்தம் என்பது கார்மாண வர்க்கணைகள் தனித்தனியாக எவ்வளவு கால அளவில் ஆத்மனில் பந்திப்பதைக் குறிக்கும்.

 

ஸத்தா என்பது கார்மாண வர்க்கணைகள் எவ்வளவு காலம் ஆத்மனில் இருப்பாக அதாவது உதயத்திற்கு வராமல் தங்கி இருப்பதைக் குறிக்கும்.

 

எவ்வளவு காலத்திற்கு தங்குவது என்பது ஸ்திதியாகும்.

 

எவ்வளவு காலத்திற்கு இருப்பாக உள்ளது என்பது ஸத்தா எனப்படும். இது புரிந்து கொள்ள சற்று கடினமாக இருக்கும். குணஸ்தானங்கள் அல்லது க்ஷயோபசமம்  பற்றி படிக்கும் போது இந்த குழப்பம் நீங்கிவிடும்.

 

கரணங்கள் பற்றிய விளக்கம். 


3.உதயம்.

உதயம் என்பது கார்மண வர்க்கணைகள் அவைகளின் காலம் வந்ததும் உதயத்திற்கு வந்து அவைகள் தரவேண்டிய பலன்களை ஆத்மனுக்கு தரும் நிலைக்கு உதயம் என்பது பெயர். கர்ம வினைகளின் மூன்றாவதாக உள்ள நிலை அல்லது கரணம் உதயம் என்று ஆகமங்கள் கூறுகின்றன.

 

உதாரணத்திற்கு ஒரு ஜீவனுக்கு தற்போதைய பிறவியில் இருக்கும் போது அதன் ஆயுளில் இரண்டில் ஒரு பங்கு ஆயுள் இருக்கும் போதோ? அல்லது மூன்றில் ஒரு பங்கு ஆயுள் இருக்கும் போதோ? ஒரு ஜீவனின் ஆயுளில் ஆறு தடவைகளில் அடுத்த பிறவிக்கு உண்டான ஆயுள்கட்டு,  அதாவது நான்கு கதிகளில் ஏதாவது ஒன்றில் அப்போதைய பரிணாமத்தின்படி நிர்ணயம் ஆகிவிடும். ஒரு ஜீவனுக்கு அடுத்த பிறவி தேவ ஆயுள் பந்தம் கட்டுவதாக வைத்துக் கொள்வோம். அப்படி கட்டிய தேவ ஆயுள் கர்ம வினை, ஸத்தாவில் இருப்பாக இருக்கும்.  தற்போதைய பிறவியின் மரணத்திற்கு பிறகு,  அந்த ஜீவன் தேவ பிறவியில் பிறக்கும். இதற்கு தான் காலம் வரும் போது உதயத்திற்கு வந்து பலனைத் தருவதாகும். இது உதாரணத்திற்காகச் சொல்லப்பட்டது. அடுத்த பிறவியிலும் தேவ ஆயுள் பலனைக் கொடுக்கலாம். ஸத்தாவில் இருப்பாக இருந்து காலம் வரும் போது அந்த தேவ ஆயுள் அனுபாகம் ஏற்படலாம் அதே பிறவியில் தான் கர்ம வினை பலனைத் தரும் என்பது இல்லை. இவ்வாறு கர்ம வினை பல பிறவிகள் கழிந்த பிறகும் உதயத்திற்கு வந்து அதன் பலனைத் தரலாம். ஆத்மனுக்கு வினைகள் அவைகளின் பலனைத் தரும் நிலைக்கு உதயம்  என்று   பெயர். உதயமும் கர்ம வினைகளின் கரணத்தில் ஒன்றாகும்.

 

4.உதீரணா அல்லது உதீரணை.

உயிரின் பிரசஸ்த பரிணாமம் காரணமாக ஒரு கர்ம வினை அதன் ஸ்திதி காலம் முடிவதற்கு முன்பே உதயத்திற்கு வந்து அதன் பலனைத் தருவதற்கு உதீரணை என்று பெயர். இது சாதாரண நிகழ்வல்ல. சம்யக் திருஷ்டிகளுக்கும் திகம்பர முனிகளுக்கும் மட்டுமே சாத்தியம் ஆகக்கூடிய நிகழ்வாகும்.

 

கர்ம வினைகள் ஆத்மனில் தங்கியுள்ளன. அவை உதயத்திற்கு வந்து பலன் தருவதற்கான காலம் இன்னும் வரவில்லை. ஸத்தாவில் இருப்பாக உள்ளன. உதயத்திற்கு வந்து பலனைத் தருவதற்கு இன்னமும் காலம் இருக்கிறது. இப்போது உதயத்திற்கு வர வாய்ப்பு இல்லை. ஆனால் இப்போது முனிவரின் தூய்மையான பரிணாமம் மற்றும் தவம் காரணத்தால் பின்னர் எப்போதோ உதயத்திற்கு வரவேண்டிய கர்ம வினை இப்போது உதயத்திற்கு வந்து அதன் பலனைத் தரும்.

 

அதாவது ஸ்திதி காலம் முடிவதற்கு முன்பே உதயத்திற்கு வந்து பலன் தரும் நிகழ்வானது உதீரணை என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு அபூர்வமான நிகழ்வு. மேல் குணஸ்தானங்களில் இருப்பவர்களுக்கு மட்டுமே இது சாத்தியம் ஆகிறது.

 

பிரசஸ்த பரிணாமம் என்பது முனிவரின் தூய்மையான எண்ணங்கள் செயல்கள் ஒழுக்க நிலையைக் குறிப்பது. பரிணாமம் களங்கமாக அதாவது சங்க்லேஷ பரிணாமம்  உள்ள உயிர்களுக்கு இது சாத்தியம் ஆகாது.

 

5.உத்கர்ஷணம்.

இந்தக் கரணமானது பிரசஸ்த பரிணாமம் காரணமாக ஒரு கர்ம வினையின் ஸ்திதியும் அனுபாகமும் கூடுவதாகும். உத்கர்ஷணம் என்று இந்த நிலைக்குப் பெயர்.

 

அதாவது ஏற்கனவே கட்டியுள்ள கர்ம வினைக்கு குறிப்பிட்ட கால அளவு மற்றும் பலனும் தீர்மானிக்கப்பட்டு ஆத்மனில் பந்தித்துள்ளது. அதே கர்ம வினையின் ஸ்திதி அதாவது கால அளவு முன்பை விட அதிகமாகவும் அதே சமயம் அதன் பலன் தரும் தன்மையும் கூடுதலாகவும்  அதிகரிக்கும்.

 

சுருக்கமாக சொன்னால் ஒரு கர்ம வினையின் ஸ்திதியும் அனுபாகமும் முன்பு இருந்ததை விட ஸ்திதியும் அனுபாகமும் அதிகரிக்கும் இந்த நிலைக்கு உத்கர்ஷணம் என்று பெயர். உத் என்றால் மேலே என்று பொருள். இங்கே கர்ம வினையின் ஸ்திதியும் அனுபாகமும் கூடுதல் ஆவதால் உத்கர்ஷணம் என்ற சொல் உபயோகப்படுத்தப்படுகிறது.

 

உதாரணத்திற்கு ஒரு முனிவருக்கு தேவ ஆயுள் வினை கட்டுவதாக வைத்துக் கொள்வோம். அதாவது எடுத்துக்காட்டாக 10000 வருடம் ஆயுள் உள்ள தேவனாகவும் அதற்கு உண்டான தேவசுகம் அனுபவிக்க வேண்டும் என்று புண்ணிய கர்ம வினை கட்டுவதாக வைத்துக் கொள்வோம். இப்போது உள்ள அதே பிறவியில் முனிநிலையில் மேலும் பரிணாமம் பிரசஸ்தமாக தூய்மை அதிகம் உண்டாவதாக வைத்துக் கொள்வோம்.

 

இப்போது அதே தேவபிறவியின் ஆயுள் அதாவது ஸ்திதி மேலும் அதிகரிக்கும். அதுபோல அந்த தேவபிறவியில் அனுபவிக்க வேண்டிய சுகங்களும், அதிகரித்த ஆயுளுக்கு ஈடாக கூடிவிடும்.

 

ஏற்கனவே நிர்ணயித்து உள்ள ஆயுளுக்கு மேலும் அதிக ஆயுள் கூடும். அது போலவே நீடித்த ஆயுளுக்கு  தக்கவாறு அனுபவிக்க வேண்டிய சுகங்களும் கூடும். கர்ம வினைகளின் ஸ்திதியும் அனுபாகமும் (பலன் தரும் தன்மை) கூடுவதற்கு "உத்கர்ஷணம்" என்று பெயர்.


 

குறிப்பு: நேற்றைய பதிவில் 22-3-2023 என்று தவறுதலாக குறிப்பிட்டிருந்தேன். அது 21-3-2023 செவ்வாய் கிழமை என்று திருத்திக் கொள்ளவும்.

 

அபகர்ஷணம்.

அபகர்ஷணம் என்பது கர்ம வினைகளின் ஸ்திதியும் அனுபாகமும் குறைவதாகும். ஏற்கனவே ஆத்மனில் பந்தித்துள்ள ஒரு கர்ம வினையின் ஸ்திதியும் அதன் அனுபாகமும் நிர்ணயிக்கப்பட்டு ஸத்தாவில் உள்ளது. இங்கு முனிவரின் தூய்மையான பரிணாமம் காரணமாக அந்தக் கர்ம வினையின் ஸ்திதியும் (கால அளவு) அனுபாகமும் (பலன் தரும் தன்மையும்)  குறைவதற்கு தான் அபகர்ஷணம் என்று பெயர். அப என்றால் வடமொழியில் கீழே அல்லது குறைதல் என்ற பொருள்.

 

உதாரணத்திற்கு ஒரு முனிவருக்கு ஏழாம் நரக ஆயுள் கட்டு பந்தித்து ஸத்தாவில் இருப்பாக உள்ளது என்று வைத்துக் கொள்வோம். முனிவர் தான் சம்யக்திருஷ்டி ஆயிற்றே! சம்யக் தரிசனம் ஒருவர் அடைந்து விட்டால் அந்த உயிரானது பெண்ணாக ,அலியாக, விலங்கு கதியிலோ, நரககதியிலோ மற்றும் கீழான ஜென்மங்களிலோ பிறக்காது என்று ஆகமங்கள் கூறுகின்றனவே? திகம்பர முனிவருக்கு நடப்பு பிறவியில் நரகாயுள் கட்டுகிறது என்று சொன்னால் எப்படி நம்புவது? இது சரியான கூற்று அல்லவே என்று நீங்கள் சிந்திப்பது தெரிகிறது.

 

முனிவருக்கு ஏழாம் நரக ஆயுள் கட்டு பந்தித்து ஸத்தாவில் இருப்பாக உள்ளது என்பது தான் வாக்கியம்.  முன்னர் எந்தப் பிறவியிலோ கட்டிய கர்ம வினையைப் பற்றிதான் இப்போது உதாரணத்திற்கு எடுத்துக் காட்டாக வைத்து உள்ளோம். விஷயத்திற்கு வருவோம்.

 

திகம்பர முனிவரின் பிரசஸ்த பரிணாமத்தால் ஏழாம் நரக ஆயுள்கட்டானது முதலாம் நரக ஆயுள்கட்டாகக் குறைந்து, அதன் அனுபாகமும் முதலாம் நரக துன்பத்தின் அளவில் குறைந்து விடும். இப்படி ஒரு கர்ம வினையின் ஸ்திதியும் அனுபாகமும் குறைவதற்கு அபகர்ஷணம் என்று ஆகமங்கள் கூறுகின்றன. ஜீவனின் பரிணாமம் தூய்மை அடைய அடைய இம்மாதிரி அதிசயங்கள் நிறைய  ஏற்படும்.

 

குறிப்பு: பெண் பிறவி இழிந்த பிறவி அல்ல. பெண்ணாகப் பிறந்துள்ள போது நற்காட்சி பெற முயற்சி செய்வதற்கு எந்த விதமான தடையும் கிடையாது. பெண்ணுக்கு நற்காட்சி கிடைக்காது என்று யாரும் சொல்லவும் முடியாது. ஏனெனில் நரகத்திலேயே உயிர்கள் நற்காட்சி அடைவதாக ஆகமங்கள் கூறுகின்றன. முயன்றால் முடியாதது எதுவும் இல்லை. நற்காட்சி பெற்றே தீர்வேன் என்ற வைராக்கியம் மட்டும் தான் இப்போதைய தேவை பெண்களுக்கு. அந்த வைராக்கியம் உங்களுக்கு நற்காட்சி பெற வழி வகுக்கும். இது என்னுடைய கருத்து. ஏற்றுக் கொள்வதும் ஏற்றுக் கொள்ளாததும் உங்கள் உரிமை.

 

7.சங்க்ரமனம்.

சங்க்ரமனம் என்றால் மாறுதல் அல்லது மாற்றம் என்பது பொருள்.

இந்திய  நாட்டின் வடபகுதியில் நாம் சிறப்பாக கொண்டாடும் பொங்கல் திருநாளானது  "சங்கராந்தி" என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது

சங்கராந்தி என்றால் மாறுதல் அல்லது மாற்றத்தைக் குறிக்கும். அதாவது சூரியனானது தக்ஷிணாயனத்தில் இருந்து உத்தரயாணத்திற்கு மாறுகின்ற தினத்தில் சங்கராந்தி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதாவது சூரியனானது தக்ஷிணாயனத்தில் இருந்து உத்தரயானத்திற்கு மாறுகின்ற  தை  மாதம் முதல் தேதியில் இந்த மாறுதல் ஏற்படுகிறது. அதன் காரணமாக சூரியனை வழிபடும் சிறப்பு பண்டிகையாக சங்கராந்தி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

 

சங்கராந்தி பண்டிகை பற்றிய குறிப்பு எதற்காக? என்றால் மாற்றம் அல்லது மாறுதலுக்கான விளக்கமாக இங்கு பயன்படுத்தப் படுகிறது.  அதுவும் அல்லாமல் சங்கராந்தி வார்த்தையை ஒத்த வார்த்தை தான் சங்க்ரமனம் ஆகும்.  சங்க்ரமனத்திற்கு மாறுகை அல்லது மாறுதல் என்று அர்த்தமாகும்.

 

அதுபோல சங்க்ரமனம் என்றால் கர்ம வினைகள் ஏற்படுகின்றன. அப்படி உண்டான ஒரு கர்ம வினை அதே பிரிவைச் சேர்ந்த      அதாவது 

உத்தரப் பிரக்ருதிகளுக்குள் வேறொரு பிரக்ருதியாக மாற்றம் அடைவதைக் குறிக்கிறது.

 

மூலப்பிரக்ருதிகள் எட்டும் மாறாது. அந்தந்த மூலப் பிரக்ருதிகளின் உத்தரப் பிரக்ருதிகளுக்குள் மாற்றம் ஏற்படும்.

 

ஞானாவரணம் தரிசனாவரணமாக மாற்றம் அடையாது. ஞானாவரணத்தின் ஐந்து உத்தரப் பிரக்ருதிகளுக்குள் ஒன்றாக சங்க்ரமனம் அடையும். அதாவது மதி ஞானாவரணம், ஸ்ருத ஞானாவரணம், அவதி ஞானாவரணம்,  மனப்பர்யய ஞானாவரணம் மற்றும் கேவல ஞானாவரணம்  இந்த ஐந்திற்குள்  ஒன்றாக மாறும்.

 

மோகனீயத்தின் தர்சன மோகனீய கர்ம வினை சாரித்ர மோகனீய கர்ம வினையாக சங்க்ரமனம் ஆகாது. அதுபோல சாரித்ர மோகனீய கர்ம வினை தர்சன மோகனீய கர்ம வினையாக சங்க்ரமனம் ஆகாது. தர்சன மோகனீய கர்ம வினைகளின் மூன்று அதாவது மித்யாத்வம், சம்யக் மித்யாத்வம் மற்றும் சம்யக்த்வம் இவைகளுக்குள் மட்டுமே  மாற்றம் ஏற்படும்.

 

அது போலவே சாரித்ர மோகனீய கர்ம வினைகளின் பதினாறு பிரிவுகளுக்குள் சங்க்ரமனம் ஆகும். அனந்தானுபந்தியின் நான்கு கர்ம வினைகள் அப்ரத்யாக்யானாவரண கர்ம வினைகளாகவும், அப்ரத்யாக்யானாவரண குரோதம் மானம் மாயை லோபம் ப்ரத்யாக்யானாவரண குரோதம் மானம் மாயை லோபமாக சங்க்ரமனம் ஆகும். அது போலவே ப்ரத்யாக்யானாவரண கர்மங்கள் சஞ்ஜ்வலன கர்மங்கள் நான்காக மாற்றம் அடையலாம். அந்தந்த ப்ரக்ருதிகளுக்குள் மட்டும் தான் சங்க்ரமனம் நிகழும்.

 

வேதனீய கர்மங்களின் இரண்டு பிரிவுகளுக்குள் சாதா வேதனீயம் அசாதா வேதனீயம் ஆகவும், அசாதா வேதனீயம் சாதா வேதனீயம் ஆகவும் சங்க்ரமனம் ஆகும். இருப்பதே இரண்டு வகைதான் அவைகளுக்குள் ஒன்றுக்கொன்று மாற்றம் அடையும்.

 

சாதா வேதனீய கர்மங்களின் உதயம் காரணமாக ஒரு ஜீவன் நல்ல செல்வச் செழிப்புடன் மிகவும் சுகங்களை அனுபவித்துக் கொண்டு இருக்கும் போது திடீரென மனதில் ஏற்படும் சங்க்லேஷ பரிணாமம் (களங்கமுள்ள தூய்மையற்ற எண்ணங்கள் காரணமாக இன்ப சூழல் மாறி துன்ப சூழலாக மாறிவிடும்.

அது போலவே அசாதா வேதனீய கர்மங்களின் காரணமாக மிகுந்த துன்பங்களை அனுபவித்துக் கொண்டு இருக்கும் ஒரு ஜீவன் தூய்மையான பரிசுத்த பரிணாமம் காரணமாக துன்ப நிலை முற்றிலும் மாறி இன்பம் அதிகரிக்கும் சூழலாக மாறிவிடும்.

 

நம்முடைய பரிணாமங்கள் அதாவது எண்ணங்கள் தான் சம்சாரத்திற்குக் காரணமாக அமைகின்றன. நம்முடைய தூய்மையான பரிசுத்த பரிணாம எண்ணங்கள் தான் முக்திக்கும் காரணமாக அமைகின்றன. சம்சாரமோ? அல்லது முக்தியோ? இரண்டிற்கும் நம்முடைய எண்ணங்கள் மட்டுமே காரணங்களாகின்றன. ஆகவே நமது எண்ணங்கள் மீது நாம் கவனம் அல்லது எச்சரிக்கை கொள்வது கட்டுக்குள் வைப்பது மிகவும் அவசியம் ஆகும்.

 

ஆயுள் கர்ம வினையின் நான்கும் உத்தரப் பிரக்ருதிகளாக இருந்தாலும் அவைகளுக்குள் சங்க்ரமனம் ஏற்படாது. அதாவது மனித ஆயுள் தேவ ஆயுளாக மாறாது. விலங்கு ஆயுள் நரக ஆயுளாக மாறாது. எந்த விதமான ஆயுள் என்று கட்டுகிறதோ? அது உதயத்திற்கு வரும் வரை மாற்றம் என்பது ஏற்படாது. அதை மட்டும் தான் அனுபவித்தாக வேண்டும்.

 

நரக ஆயுள் அதாவது ஏழாம் நரக ஆயுள் முதல் நரக ஆயுளாக மாற்றம் அடையலாம். ஏழு விதமான நரக ஆயுள்களுக்குள் மாற்றம் ஏற்படலாம். நரக ஆயுள் மனித ஆயுளாக அல்லது மற்ற தேவ விலங்கு ஆயுள்களாக சங்க்ரமனம் ஏற்படவே ஏற்படாது. ஆயுள் கர்ம வினையின் சிறப்புத் தன்மையாகும். 

 

8.உபசாந்தம்.

உபசாந்தகரணம் என்பது கர்ம வினைகள் உதயத்திற்கு வராமல் அல்லது வரமுடியாமல் ஸத்தாவில் இருப்பாகத் தங்கி விடுவதற்கு "உபசாந்த கரணம்" என்று பெயர்.

 

இதற்கு உதாரணமாக எதைச் சொல்வது என்றால் கண்ணாடிப் பாத்திரத்தில் தேத்தாங்கொட்டையுடன்  தண்ணீரை ஊற்றி வைக்கும் போது சில நேரம் கழித்து அந்த பாத்திரத்தின் அடிப் பகுதியில் தண்ணீரில் உள்ள அழுக்குகள் படிந்து இருப்பதைச் சொல்லலாம். கீழே அழுக்குகள் படிந்து மேல் பகுதியில் நீர் தெளிவாக இருக்கும். பாத்திரத்தின் அடியில் அழுக்குகள் படிந்து இருப்பதைத்  தான் உபசாந்த கரணத்திற்கு உதாரணமாக ஆகமங்கள் கூறுகின்றன. ஆத்மனில் கார்மாண வர்க்கணைகள் ஏராளமாக சேர்ந்து கொண்டே  உள்ளன. அப்படி சென்று படிகின்ற கார்மாண வர்க்கணைகள் உதயத்திற்கு வராமல் இருப்பாக படிந்திருக்கும் அல்லது தங்கியிருக்கும் நிலை உபசாந்த கரணம் ஆகும்.

 

கர்ம வினைகள் உதயத்திற்கு வர முடியாது ஸத்தாவில் இருப்பாக உள்ள நிலைக்கு உபசாந்த கரணம் என்று பெயர்.

 

உபசாந்த கரணத்தில் ஸத்தாவில் இருப்பாக இருக்கும் போது கர்ம வினைகள் உதயத்திற்கு வராது.

 

உபசாந்த கரணத்தில் இருக்கும் கர்ம வினைகளுக்கு உத்கர்ஷணம் ( ஸ்திதியும் அனுபாகமும் கூடும் தன்மை) , அபகர்ஷணம் ( ஸ்திதியும் அனுபாகமும் குறையும் தன்மை) மற்றும் சங்க்ரமனம் (உத்தரப் பிரக்ருதிகளுக்குள் மாற்றம் அடைவது) இம்மூன்றும் ஏற்படாது. இந்த நிலை உபசாந்த கரணம் என்று சொல்லப்படுகிறது.

 

ஸத்தாவில் இருக்கிறது ஆனால் உதயத்திற்கு வராது என்று சொல்வது சரியாகப் புரிந்து கொள்ள முடியவில்லையே என்று நீங்கள் கேட்கலாம். பின்னர் நான்காவது அவிரத குணஸ்தானத்தில் உபசம சம்யக்த்வம் அதாவது பிரதமோபசம சம்யக்த்வம் பற்றிய விளக்கம் வரும் அப்போது இந்தக் குழப்பம் தானாக நீங்கிவிடும்.

 

உபசாந்த கரணத்தில் எட்டுக் கர்ம வினைகளுக்கும் உதயத்திற்கு வராமல் ஸத்தாவில் இருப்பாக உள்ள தன்மை  ஏற்படும்.

 

உபசாந்த கரணம் பற்றிச் சொன்னவுடனேயே உபசமத்தைப் பற்றிய விளக்கம் சொல்லப்படுகிறது உபசமம் கரணத்தில் ஒன்றல்ல ஆனாலும் இந்த இடத்தில் அதைப் பற்றிய விளக்கத்தை அளிக்க வேண்டியது அவசியம் ஆகிறது.

 

உபசமம் என்றால் என்ன?

உபசமம் என்றால் கர்ம வினைகளின் பலன் தரும் தன்மை அல்லது சக்தி வெளிப்படாமல் அல்லது பலனைத் தரும் சக்தியிழந்து  ஏதோ ஒரு காரணத்தால் உதயத்திற்கு வராமல் ஸத்தாவிலேயே இருப்பாக இருக்கும் நிலை அதாவது தணிவாக இருப்பதற்கு உபசமம் என்று பெயர்.

 

ஏதோ ஒரு காரணம் என்றால் என்ன?

உயிரின் பஞ்ச லப்தியின் உபயோகத்தில் அதப்பிரவ்ருத்தி கரணம், அபூர்வ கரணம் மற்றும் அநிவ்ருத்தி கரணம் என்று மூன்று கரண நிகழ்வுகள் ஏற்படும். இந்த மூன்று கரணங்கள் காரணமாக உயிர் மிகவும் பரிசுத்த அதாவது தூய்மையான பரிணாமத்துடன் பற்றற்ற வீதராக நிலையில் இருக்கும். இந்தச் சிறப்பான நிலைதான் அந்த ஏதோ ஒரு காரணமாகும்.

 

இந்தச் சிறப்பான தூய்மையான பரிணாமம் காரணமாக மோகனீய கர்ம வினைகள் அவற்றின் பலன் தரும் சக்தியை சிறிது காலம் வெளிப்படுத்தாமல் ஸத்தாவில் இருப்பாக தணிந்து விடும். இந்தத் தணிவு நிலைதான் உபசமம் ஆகும்.

 

உபசமம் உபசாந்தம் இரண்டும் ஒன்று போலவே தெரியும். ஆனால் இரண்டிற்கும் வேறுபாடுகள் உள்ளன.

 

உபசாந்த கரணம் எட்டு கர்ம வினைகளுக்கும் ஏற்படும்.

 

உபசமத்தில் கர்ம வினைகளின் பலன் தரும் சக்தி வெளிப்படாது  ஸத்தாவில் இருந்து உதயத்திற்கு வராமல் தணிவடையும் நிலை மோகனீய கர்ம வினைகளுக்கு மட்டும் தான் ஏற்படும்.

 

உபசமம் எத்தனை வகைப்படும்?

 

1.பிரசஸ்த உபசமம்

2.அப்ரசஸ்த உபசமம்

என இரண்டு வகைப்படும்.

 

பிரசஸ்த என்றால் பரிபூரண பரிசுத்தம் என்று பொருள். பிரசஸ்த என்றால் புண்ணியம் என்றும் பொருள் சொல்வார்கள்.

 

அப்ரசஸ்த என்றால் பாவம் என்று பொருள். ஆனால் இந்த இடத்தில் அப்படி எதிர்மறையாகப் பொருள் கொள்ள முடியாது.

அப்ரசஸ்த என்றால் பூரணமாக இல்லாவிட்டாலும் ஓரளவு பரிசுத்த பரிணாமம் என்று பொருள் கொள்வது பொருத்தமாக இருக்கும்.

 

1.பிரசஸ்த உபசமத்தின் விளக்கம் என்ன?

கரண லப்தியின் போது ஏற்படும் மூன்று நிகழ்வுகள் அதப்ரவிருத்தி கரணம், அபூர்வ கரணம் மற்றும் அனிவிருத்தி கரணம் ஏற்படுகிறது. இந்த மூன்று கரணங்கள் காரணமாக பரிணாமத்தில் தூய்மைத் தன்மை ஏற்பட்டு அதன் பயனாக சம்யக்த்வம் ஏற்படுவதற்கு முன்னர் தரிசன மோகனீயத்தின்   மூன்று (மித்யாத்வம், சம்யக் மித்யாத்வம் மற்றும் சம்யக்த்வம்) ப்ரக்ருதிகளும் பலன் தரும் சக்தியை இழந்து தணிவடையும் தன்மைக்கு பிரசஸ்த உபசமம் என்று பெயர். சம்யக்த்வம் ஏற்படுவதற்கு முன்னர் சம்யக்த்வ ப்ரக்ருதிகள் ஏழும் அதாவது  மித்யாத்வம், சம்யக் மித்யாத்வம், சம்யக்த்வம் (ச்சல மல அகாட தோஷங்கள் கொண்டது), அனந்தானுபந்தி குரோதம் மானம் மாயை லோபம் நான்கு இந்த ஏழும்  ஒன்று தணிவு நிலை அடைய வேண்டும். அல்லது அழிய வேண்டும். ஆனால் முதன் முதலாக உபசம சம்யக்த்வம் அதாவது பிரதமோபசம சம்யக்த்வம் தான் ஏற்படும். அப்போது சம்யக்த்வ ப்ரக்ருதிகள் ஏழும்  அழியாது ஆனால்  தணிந்து தான் இருக்கும்.  இது பற்றிய விரிவான விளக்கங்களை பின்னர் பார்ப்போம்.

 

அந்தர்கரண உபசமம் என்றால் என்ன?

ஸத்தாவில் இருப்பாக இருக்கும் மோகனீய கர்ம வினைகள் எதிர்காலத்தில் குறிப்பிட்ட கால அளவில் உதயத்திற்கு வர வேண்டும். ஆனால் அந்த குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே வீதராக பற்றற்ற பரிணதி காரணமாக பலனைத் தந்துவிடும் அல்லது சில காலம் தாமதித்து  ஸத்தாவில் இருப்பாக இருந்து பிறகு உதயத்திற்கு வந்து அதன் பலனைத் தரும். இந்த நிலை அந்தர்கரண உபசமம் என்று சொல்லப்படுகிறது.

 

2.அப்ரசஸ்த உபசமத்தின் விளக்கம் என்ன?

அதப்ரவிருத்தி கரணம் அபூர்வ கரணம் அநிவ்ருத்தி கரணம் இம்மூன்று கரணங்களும் இல்லாமல் தானாகவே சாரித்ர மோகனீய கர்ம வினைகளின் தணிவு ஏற்படுவது அப்ரசஸ்த உபசமம் என்று சொல்லப்படுகிறது. அதாவது அனந்தானுபந்தி கர்ம வினைகள் நான்கும் கரண நிகழ்வுகள் ஏதுமின்றி தானாகவே தணிவதற்கு அப்ரசஸ்த உபசமம் என்று சொல்லப்படுகிறது.

 

ஸதவஸ்தாரூப் உபசமம் என்றால் என்ன?

நிகழ்காலத்தில் உதயத்திற்கு வர வேண்டிய கர்ம வினைகள் (அனந்தானுபந்தி வகையறாக்கள்)  இப்போது இதைப் பற்றி பேசாமல்,

எதிர்காலத்தில் உதயத்திற்கு வர வேண்டிய கர்ம வினைகள் (அனந்தானுபந்தி வகையறாக்கள்) உதயத்திற்கு வராமல் ஸத்தாவிலேயே இருப்பாக தணிந்து இருக்கும். இதற்கு ஸத் அவஸ்தா ரூப உபசமம் என்று பெயர். ஸத் என்றால் இருப்பு என்பது பொருள். அவஸ்தா என்பது இருப்பாக தங்கி இருக்கும் நிலையாகும். ரூப் என்றால் வடிவம் என்று பொருள்.

அதாவது கரண நிகழ்வுகள் இன்றி நிகழ்காலத்தில் உதயத்திற்கு வர வேண்டிய கர்ம வினைகள் உதயத்திற்கு வராமல், அதே சமயம் எதிர்காலத்தில் உதயத்திற்கு வர வேண்டிய (அனந்தானுபந்தி சதுஷ்கங்கள்)  கர்ம வினைகள் ஸத்தாவில் இருப்பாக தங்கி உதயத்திற்கு வராமல் தணிவடையும் நிலைக்கு ஸதவஸ்த்தாரூப் உபசமம் என்று பெயர். சதுஷ்கங்கள் என்றால் நான்கு என்ற எண்ணிக்கையைக் குறிக்கும்.

ஸதவஸ்தாரூப் உபசமம் அப்ரசஸ்த உபசமம் ஆகும். இங்கு கரண நிகழ்வுகள் இல்லை. ஆனால் கர்ம வினைகள் தானாக உபசமம் அதாவது தணிவாக இருக்கின்றன.

 

அதப்ரவிருத்தி கரணம் அபூர்வ கரணம் அநிவ்ருத்தி கரணம் இந்த மூன்று நிகழ்வுகள் காரணமாக தரிசன மோகனீயத்தின் மித்யாத்வம் சம்யக் மித்யாத்வம் மற்றும் சம்யக்த்வம் தணிவடையும் நிலை பிரசஸ்த உபசமம் ஆகும்.

 

கரண நிகழ்வுகள் இன்றி சாரித்ர மோகனீயத்தின் அனந்தானுபந்தி சதுஷ்கங்கள் ஸதவஸ்தாரூப் உபசமம் ஆவது அப்ரசஸ்த உபசமம் ஆகும்.

 

இன்னும் சுருக்கமாக சொல்வதானால் தரிசன மோகனீயத்தின் கர்ம வினைகள் தணிவதற்கு பிரசஸ்த உபசமம் என்று பெயர். இங்கு கரண நிகழ்வுகள் காரணமாக உள்ளன.

 

சாரித்ர மோகனீயத்தின் அனந்தானுபந்தி சதுஷ்கங்கள் ஸதவஸ்தாரூப் உபசமம் மூலம் தணிவடைவதற்கு அப்ரசஸ்த உபசமம் என்று பெயர்.

 

இந்த இரண்டு உபசமங்களுக்கும் வேறு வேறு கோணங்களில் விளக்கம் அளிக்கப்படுகிறது

கரணாணுயோகச் சொற்கள். 27-3-2023 திங்கட்கிழமை.

 

9.நிதந்தி கரணம்.

எந்தக் கர்ம வினைகளுக்கு உதிரணா (உதய காலம் வரும் முன்பே பலனைத் தரும் தன்மை) சங்க்ரமனம் ( ஒரு கர்ம வினை பிரக்ருதி வேறொரு பிரக்ருதியாக மாற்றம் அடையும் தன்மை) ஏற்படாதோ? அவைகள் நிதந்தி கரணத்தில் உள்ளதாகும்.

 

10.நிகாசித் கரணம். 

எந்தக் கர்ம வினைகளுக்கு உதிரணா (காலத்திற்கு முன்பே பலனைத் தரும் தன்மை),

உத்கர்ஷணம் (ஸ்திதியும் அனுபாகமும் கூடும் தன்மை),

அபகர்ஷணம் (ஸ்திதியும் அனுபாகமும் குறையும் தன்மை)

சங்க்ரமனம் ( ஒரு பிரக்ருதி வேறு பிரக்ருதியாக மாற்றம் அடையும் தன்மை) இந்த நான்கு கரணங்களும் ஏற்படாதோ? அந்தக் கர்ம வினைகள் நிகாசித் கரணத்தில் உள்ளவைகள் ஆகும்.

 

கர்ம வினைகளில் ஆத்மனின் தூய்மையான பரிணாமம் காரணமாக ஏற்படும் பத்து வகையான நிலைகள் கரணங்கள் என்று ஆகமங்கள் கூறுகின்றன. இந்த பத்து கரணங்களையும் மீண்டும் ஒரு முறை பார்ப்போம்.

 

கரணங்கள்

1.பந்தம்,

2.ஸத்தா,

3.உதயம்,

4.உதீரணை,

5.உத்கர்ஷணம்,

6.அபகர்ஷணம்,

7.சங்க்ரமனம்

8.உபசாந்தம்,

9.நிதந்தி,

10.நிகாசித்.

என பத்து வகைகள் உள்ளன.

 

1.பந்தம்.

ஆத்மனின் மோக இராக துவேஷ எண்ணங்களால் நம்மிடம் உண்டாகும் புத்கல வடிவ கார்மண வர்க்கணைகள் ஆத்மனில் வந்து ஏகப்ரதேச அவகாஹனமாக ஆத்மனில் படிவதற்குப் பந்தம் என்பது பெயர்.

பந்தக்கரணம் மேலும் நான்கு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. அவை

1.பிரக்ருதி பந்தம்,

2.பிரதேச பந்தம்,

3.ஸ்திதி பந்தம் மற்றும்

4.அனுபாக பந்தம் என நான்கு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன.

 

1.பிரக்ருதி பந்தம்.

ஆத்மனில் உருவாகும் கார்மாண வர்க்கணைகள் அஷ்ட கர்ம வினைகளின் 148 பிரக்ருதிகளாக அந்தந்த பிரக்ருதிகளாக ஆத்மனில் பந்திப்பதற்கு பிரக்ருதி பந்தம் என்பது பெயர்.

2.பிரதேச பந்தம்.

புதிதாக உருவாகும் கார்மண வர்க்கணைகள் ஆத்மனின் பிரதேசத்தில் ஏகப்ரதேச அவகாஹன சம்பந்தத்தோடு ஆத்மனில் தங்குவதற்குப் பிரதேச பந்தம் என்பது பெயர். ஆத்மனின் பிரதேசம் கார்மண வர்க்கணைகளின் பிரதேசம் இரண்டும் ஒரே இடம் தான். ஒரே இடத்தில் ஆத்மனும் கார்மண வர்க்கணைகளும் இருக்கும். ஆனால் ஆத்மனில் கார்மாண வர்க்கணைகள் ஐக்கியம் ஆவதில்லை.

3.ஸ்திதி பந்தம்.

புதிதாக உருவாகும் கார்மாண வர்க்கணைகள் இவ்வளவு காலம் ஆத்மனில் தங்கிப் பின்னர் உதயத்திற்கு வரவேண்டும் என்று நிர்ணயித்து படிவதற்கு ஸ்திதி பந்தம் என்பது பெயர்.

4. அனுபாக பந்தம்.

புதிதாக உருவாகும் கார்மண வர்க்கணைகள் உதயத்திற்கு வந்து இன்ன பலனைத் தர வேண்டும் என்று நிர்ணயம் செய்து கொண்டு படிவதற்கு அனுபாக பந்தம் என்பது பெயர்.

 

2. ஸத்தா கரணம்.

புதிதாக உருவாகும் கார்மாண வர்க்கணைகள் குறிப்பிட்ட காலம் வரை உதயத்திற்கு வராமல் இருப்பாக ஆத்மனில் தங்குவதற்கு ஸத்தா என்பது பெயர்.

 

3.உதயம் அல்லது உதயகரணம்.

ஆத்மனில் தங்கியுள்ள காலம் முடிந்து உதயத்திற்கு வந்து  கர்ம வினைகள் அவைகளின்  பலனைத் தருவதற்கு உதயம் என்பது பெயர்.

 

4.உதீரணா அல்லது உதீரணை.

கர்ம வினைகள், ஜீவனின் பரிசுத்த பரிணாமம் காரணமாக ஸ்திதி காலம் முடிவதற்கு முன்பாகவே உதயத்திற்கு வந்து பலனைத் தருவதற்கு உதீரணை என்று பெயர்.

 

5.உத்கர்ஷணம்.

ஜீவனின் பரிசுத்த பரிணாமம் காரணமாக கர்மங்களின் ஸ்திதியும் அனுபாகமும் கூடும் தன்மைக்கு உத்கர்ஷணம் என்று பெயர்.

 

6.அபகர்ஷணம்.

ஜீவனின் பரிசுத்த பரிணாமம் காரணமாக கர்மங்களின் ஸ்திதியும் அனுபாகமும் குறையும் தன்மைக்கு அபகர்ஷணம் என்று பெயர்.

 

7.சங்க்ரமனம்.

ஜீவனின் தூய்மையான பரிசுத்த பரிணாமம் காரணமாக கர்ம வினை அதன் உத்தரப் பிரக்ருதிகளுக்குள் வேறொரு பிரக்ருதியாக மாற்றம் அடைவதை சங்க்ரமனம் என்று ஆகமங்கள் கூறுகின்றன.

 

8.உபசாந்தம்.

கர்ம வினைகள் உதயத்திற்கு வரமுடியாமல் ஸத்தாவில் இருப்பாக இருக்கும் தன்மை உபசாந்த கரணம் என்று சொல்லப்படுகிறது.

 

9.எந்த கர்ம வினைகளுக்கு உதீரணையும் சங்க்ரமனமும் ஏற்படாதோ? அந்த கர்ம வினைகள் நிதந்தி கரணத்தில் உள்ளதாகச் சொல்லப்படுகிறது.

 

10.எந்த கர்ம வினைகளுக்கு உதிரணை, உத்கர்ஷணம், அபகர்ஷணம் மற்றும் சங்க்ரமனம் என்று நான்கு கரணங்களும் ஏற்படாதோ? அவைகள் நிகாசித் கரணத்தில் உள்ளதாகச் சொல்லப்படுகிறது.

 

ஜீவனின் பல்வேறு பரிமாணங்களினால் கர்ம வினைகளில் பத்து வேறுபட்ட நிலைகளை அதாவது கரணங்களை இது வரை பார்த்தோம். கரணங்களின் சுருக்கமான விளக்கங்கள் முடிவிற்கு வருகின்றன.

 

திருவாளர். ஜெயராஜ் சாஸ்திரி அவர்களுடைய இரண்டாவது ஆடியோவில் இருந்து கர்ம வினைகளின் பத்து கரண நிலைகள் பற்றிய விளக்கம் முடிகிறது. இந்த ஆடியோவையும் பவ்யர்களின் பார்வைக்கு வைக்கிறேன். அந்த ஆடியோவை கேட்டு விட்டு மீண்டும் ஒரு முறை இந்த கட்டுரையைப் படித்தீர்கள் என்றால் புரியாத கருத்துக்கள் தெளிவாகும்.

 

அடுத்து அவரது மூன்றாவது ஆடியோவும் இதே பத்து கரணங்களின் மறு விளக்கம் இரண்டு உதாரணங்களைக் கொண்டு விளக்குகின்றார். நான் அதை கட்டுரையாக்கம் செய்தால் சொன்னதையே திரும்பத் திரும்ப எழுதுமாறு ஆகும். எனவே விரும்பும் பவ்யர்களுக்கு வேண்டும் என்றால் அந்த ஆடியோவை forward செய்கிறேன்.

 

மோகனீய கர்மங்கள் எத்தனை வகைப்படும்.

தர்சன மோகனீயம் மற்றும் சாரித்ர மோகனீயம் என்று இரு வகைப்படும்.

 

தர்சன மோகனீயம் என்பது நாம் நற்காட்சி அடைவதைத் தடுக்கும் கர்ம வினைகளாகும்.

மித்யாத்வம்,

சம்யக் மித்யாத்வம் மற்றும்

சம்யக்த்வம் என்ற மூன்று பிரக்ருதிகளைக் கொண்டது.

இதில் சம்யக்த்வம் என்ற மூன்றாவது பிரக்ருதி நமது நற்காட்சியைத் தடுக்குமா? என்ற சந்தேகம் எழும். ஆம் ஆனால் சம்யக்த்வ பிரக்ருதியில் ச்சல மல அகாட தோஷங்கள் என்று கேவலஞானிகள் மட்டுமே அறியக்கூடிய தோஷங்கள் இருக்கும். இந்த சம்யக்த்வம் தேசகாதி பர்தகமாகும். இந்த சம்யக்த்வம் தான் தரிசன மோகனீயத்தின் மூன்றாவது பிரக்ருதி ஆகும்.

 

சாரித்ர மோகனீயம் மொத்தம் இருபத்து ஐந்து வகைகள் உள்ளன. இவை ஜீவனின் ஒழுக்கத்தை பாதிக்கும் கர்ம வினைகள் ஆகும்.

 

நோகஷாயங்கள் ஒன்பதும் மற்றும் அனந்தானுபந்தி வகை கஷாயங்கள் பதினாறு ஆக மொத்தம் இருபத்து ஐந்து கஷாயங்கள் உயிரின் ஒழுக்கத்தை முழுவதும் பாதிக்கின்றன. சாரித்ர மோகனீய கஷாயங்களின் விளக்கங்களை ஒவ்வொன்றாக பார்ப்போம்.

 

கஷாயங்கள் என்றால் நமது எண்ணங்களைக் குறிக்கும் வடமொழி சொல்லாகும். நோ அல்லது நௌ என்பது ஒன்பது என்ற எண்ணிக்கையைக் குறிக்கும் வடமொழி சொல்லாகும்.

ந என்றால் இல்லை அதாவது கஷாயங்கள் இல்லை என்றும் பொருள்படும். தீவிர கஷாயங்கள் இல்லை ஆனாலும் ஓரளவு கஷாயங்கள் தான், கர்மங்களாக உருவாகக் கூடிய எண்ணங்கள் தான் என்று அர்த்தம்.

 

நோகஷாயங்கள் எத்தனை வகைப்படும்?

நோகஷாயங்கள் ஒன்பது வகைகள் உள்ளன. அவை

1.ஹாஸ்யம்,

2.ரதி,

3.அரதி,

4.சோகம்,

5.பயம்,

6.ஜுகுப்ஸா,

7.ஸ்திரீ வேதம்,

8.புருஷ வேதம்,

9.நபும்ஸக வேதம் என்று ஒன்பது வகைகள் உள்ளன.

 

1.ஹாஸ்யம்.

ஹாஸ்யம் என்பது நகைச்சுவை உணர்வைக் குறிப்பது. சிரிப்பது என்றும் பொருள். சாதாரணமாக நாம் மகிழ்ச்சியின் காரணமாக சிரிப்பதாக வைத்துக் கொள்வோம். சிரிப்பு என்பது கஷாயங்களில் ஒன்று என ஆகமங்கள் கூறுகின்றன.

 

கஷாயங்கள் என்றால் எண்ணங்கள் அல்லது மனோபாவத்தைக் குறிப்பது. சிரிப்பது எப்படி கர்மங்களுக்குக் காரணமாகிறது? வெறுமனே சிரிப்பது கர்மங்களை உருவாக்காது. இங்கே ஹாஸ்யம் என்பதற்கு கிண்டல் செய்தல் கேலி செய்தல் நையாண்டி செய்தல் என்று பொருள் கொள்வது தான் சரியாக இருக்கும்.

 

தேவையில்லாமல் பிறரை எள்ளி நகையாடுவது கேலி செய்து மகிழ்ச்சி அடைவது நமக்கு மகிழ்ச்சியைத் தரலாம் ஆனால் சம்பந்தப்பட்ட நபருக்கு மிகவும் மனவருத்தத்தைத் தரும். இப்போது கர்மமாகக் கட்டுவது நம்முடைய நகைச்சுவை எண்ணங்கள் தான். இப்போதுதான் ஹாஸ்யம் கஷாயமாகப் பரிணமிக்கும்.

 

 2.ரதி

ரதி என்றால் விருப்பத்தைக் குறிக்கும். ஒருவர் மீதோ? பலர் மீதோ? ஏதேனும் ஒரு பொருள் மீதோ? ஈர்ப்பு கொள்வது மிகவும் பிரியத்துடன் அபிமானத்துடன் இருப்பதற்கு ரதி என்று பொருள். மோகம் பற்றி பேசும் போது ரதி கஷாயம் மோகத்தில் இராக பாவம் அமைய காரணமாகக் கூடியதாகும். இதுவும் கர்மமாகக் கட்டக்கூடியதே!

 

3.அரதி.

அரதி ஒருவர் மீது அல்லது பலர் மீது அல்லது பொருட்கள் மீது வெறுப்பை வெளிக்காட்டுவது. நாம் வெறுக்கும் நபர் நம் அருகில் வரும் போது அல்லது இருக்கும் போது நமக்கு ஏற்படும் அசூயை அருவருப்பு மற்றும் இருப்புக் கொள்ளாத தன்மை நமது எண்ணங்களை களங்கப்படுத்தும். அவைகள் பாவ கர்ம வினைகளுக்கு வித்துக்கள் ஆக அமைந்து விடுகின்றன. அரதி நோகஷாயங்கள் துவேஷ பாவம் அமைய காரணமாக அமைந்து விடுகின்றன.

 

4.சோகம்.

சோகம் எந்த நேரத்திலும் நமக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை, வேதனை வலி அவமானம்  தந்த நிகழ்வுகளை எண்ணி எண்ணி வருந்துவது ஒரு சிலர் குமுறி அழவும செய்வர். துயரப்படுவது அழுவது சோக நினைவுகள் சதா சர்வ காலமும் மனதை ஆக்கிரமிக்க விடுவது. இவைகள் எல்லாம் நம்முடைய எண்ணங்களை அசுத்தப்படுத்தும். சென்றது சென்றதுதான் அவைகளை மீண்டும் மீண்டும் நினைவு கூர்ந்து மனதை வருத்திக் கொள்வது நம் ஆத்மனுக்கு எந்த விதத்திலும் நன்மை செய்வதல்ல சோகத்தையும் துயரத்தையும் வெல்வது மிகவும் அவசியம். தவறினோமானால், விலங்கு கதிக்கு நம்முடைய ஆத்மனை செலுத்தும் கர்ம வினைக்குதான் உட்படுத்துகிறோம் என்று பொருள்.

 

5.பயம்.

பயம் என்பது நிகழ்காலத்தில் சுகம் சந்தோஷம் அனுபவிக்க வேண்டும் என்று நினைப்பது அது கிடைக்காமல் தடை ஏற்படுமோ? என பயப்படுவது. எதிர்காலத்தில் சுகம் மகிழ்ச்சி ஆரோக்கியம் சற்றும் குறையாமல் இருக்க வேண்டும் என்ற பயம். எதற்கெடுத்தாலும் பயம் நல்லது நடக்கும் போது அது நிலைக்க வேண்டுமே என்ற பயம், கெடுதல் ஏற்பட்டால் அது விரைவில் நீங்க வேண்டுமே என்ற பயம். எப்போதும் எதையாவது நினைத்து அச்சப்பட்டுக் கொண்டு இருப்பது. இது போன்ற சிந்தனைகள் நம்முடைய மனோபாவத்தை களங்கப்படுத்தும். எனவே எதற்காகவும் பயப்படாமல் அச்சம் தவிர்ப்பது ஆன்மனுக்கு அழகு.

 

6.ஜுகுப்ஸா.

ஜுகுப்ஸா என்பது ஒரு வடமொழி சொல்லாகும். இதன் பொருள் அருவருப்பு அடைவதைக் குறிக்கும் சொல்லாகும். அழகு நமக்கு பிடித்த ஒன்று. அதேசமயம் அழகற்ற அசிங்கமான தூய்மையற்ற எதுவாக இருந்தாலும் நாம் அருவருப்பு அடைவோம். இந்த அருவருப்பு உணர்வு துவேஷத்திற்கு வித்தாகும். அருவருப்படைவது ஆத்மனின் இயல்பு கிடையாது. ஆத்மனுக்கு அழகும் அசிங்கமும் ஒன்று தான். எதுவும் அதனை பாதிக்காது. சலனமற்ற பேதமற்ற சமபாவம் கொண்டது. அருவருப்பு அடைவதும் நம்முடைய மனோபாவத்தை மிகவும் களங்கப்படுத்தும் ஒன்றாகும்

எதன் மீதும் அருவருப்பு கொள்ளாமல் இருப்பது மிகவும் நல்லது.

 

7.ஸ்திரீவேதம்.

ஸ்திரி என்றால் பெண். வேதம் என்பது வேதனை அல்லது காம இச்சையை குறிப்பிடும் வடமொழி சொல்.

பெண்களைப் பற்றிய காம இச்சைகள் எண்ணங்கள் விகாரங்கள் இவைகளை உணர்த்துவது ஸ்திரீவேதம் ஆகும்.

ஆணுக்கு பெண் மீது காம இச்சைகள் எண்ணங்கள் அதிலேயே மனம் ஆழ்ந்து விடுவது. இது நம் ஒழுக்கத்தை முழுவதும் பாதிக்கும் எண்ணங்கள். இதன் தீவிரம்  காரணமாக இல்வாழ்வைத் தொலைத்தவர்கள் ஏராளம். ஆன்மீகத்தைத் தவற விட்டவர்கள் ஏராளம் ஏராளம். ஒருவருடைய மனம் முழுக்க ஆக்கிரமித்து மனோபாவத்தை கலங்கிய சேறாக்கிவிடும். அதனைத் தூய்மையாக்குவது என்பது சுலபமாக நடவாத விஷயம். காம இச்சைகள் இக வாழ்விலும் சரி அகவாழ்விலும் சரி பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதோடு பாவ கர்ம வினைகளின் உற்பத்திக்கும் காரணமாக அமைந்து விடுகிறது. நம் ஒழுக்கத்தை பூரணமாக கெடுத்து விடும்.

 

8.பும்வேதம் அல்லது புருஷ வேதம்.

புருஷ என்பது ஆணைக் குறிக்கும் வடமொழி சொல்.

வேதம் என்பது வேதனை காம இச்சைகள் எண்ணங்கள் விகாரங்கள் இவைகளை உணர்த்துவது ஆகும். புருஷ வேதம் என்பது பெண்களுக்கு ஆண்கள் மீது ஏற்படும் உணர்ச்சிப் பெருக்கைக் குறிப்பிடுவது ஆகும்.

ஆண் மீது பெண்ணுக்கு ஏற்படும் காம இச்சைகள் எண்ணங்கள் பற்றி குறிப்பிடும் வடமொழி சொல்லாகும். இதுவும் சம்பந்தப்பட்டவர்களின் ஒழுக்கம் கெடுவதோடு மனோபாவமும் களங்கம் அடையும். பளிங்கு போல இருக்க வேண்டிய மனம் களிமண் சகதியைப் போல் அழுக்காகி விடும். கர்ம வினைக்கட்டும் அதிகமாகி விடும். அகமும் புறமும் களங்கப்பட்டு ஒழுக்கம் கெட்டொழியும். ஆத்மனுக்கு மாபாதகத்தை ஏற்படுத்தும்.

 

9.நபும்சக வேதம்.

நபும்சக என்பது ஆணுமற்ற பெண்ணுமற்ற அலிகளைக் குறிப்பிடும் வடமொழி சொல். வேதம் என்பது அலிகளுக்கே உரித்தான காம இச்சைகள் என்ற பொருள். இந்த எண்ணங்கள் அவர்களின் மனோபாவத்தை களங்கப்படுத்தும். அதனால் தூய்மையற்ற மனம் கர்மங்களின் பிறப்பிடமாக அமைந்து விடுகிறது. ஆத்மனின் பால் அவர்கள் திரும்புவதற்கே முடியாமல் போகும்.

 

இந்த ஒன்பது நோகஷாயங்கள் ஜீவன்களின் மனோபாவத்தை முற்றிலும் பாதிப்பவை புதிதாக கர்ம வினைகளை உருவாக்கும். சம்சார பந்தத்தை நீட்டிக்கும். எனவே இவைகளை விலக்குவதே ஆத்மனைத் தூய்மைப்படுத்தும் பிறவிப் பிணி அழியும் வழியாகும்.

 

அனந்தானுபந்தி கஷாயங்கள்.

வரம்பற்ற கணக்கற்ற பிறவிகளுக்கு அல்லது சம்சார பந்தத்திற்கு காரணமாக அமைகின்ற கஷாயங்கள் எவைகளோ? அவை அனந்தானுபந்தி கஷாயங்கள் ஆகும். தீவிர கடும் எண்ணங்களுக்குக் காரணமாகும் குரோதம் (கோபம் சினம்), மானம் (அஹங்காரம் திமிர் தற்பெருமை), மாயை (கபடம் வஞ்சகம் துரோகம்) லோபம் ( அகப்பற்று புறப்பற்றுக்கள் அனைத்தும்) நமது அதாவது ஆத்மனின் தூய பரிணாமத்தை குழப்பி அசுத்தம் செய்கின்றனமேலும் கணக்கற்ற பிறவிகளுக்கு மூல வித்துக்களாக அமைகின்றன. இது அனந்தானுபந்தி கஷாயங்கள் பற்றிய கருத்தாகும்.

 

அனந்தானுபந்தி கஷாயங்கள் வரிசையில் மித்யாத்வம் முக்கியமாக இங்கு பிரதானமாகச் சொல்லப்படுகிறது. மித்யாத்வம் தரிசன மோகனீயத்தின் அதாவது நற்காட்சி பெற விடாமல் முற்றிலும் தடுக்கும் கர்ம வினையாகும். அனந்த அனுபந்தங்கள் அதாவது வரம்பற்ற, கணக்கற்ற பிறவிகளுக்கு மித்யாத்வம் பெரும் காரணமாக உள்ளது. பாவங்களிலேயே பெரும் பாவம் மிகக் கொடிய பாவம் மித்யாத்வம் என்று ஆகமங்கள் கூறுகின்றன. மித்யாத்வம் உதயத்தில் இருக்கும் போது சம்யக் தரிசனம் அதாவது நற்காட்சி ஏற்படவே ஏற்படாது. நற்காட்சி ஏற்படுவதைத் தடுப்பது மட்டும் அல்லாமல் எண்ணிக்கையற்ற பிறவிகளுக்கு அதாவது தொடர்ந்த சம்சார பந்தத்திற்கு காரணமாக அமைகின்றது. மீள முடியாமல் சம்சாரத்தில் ஆழ்த்தும் மித்யாத்வ கர்மம் அனந்தானுபந்தி கஷாயங்களை விட கடுமையாக சம்சார பந்தத்திற்கு காரணமாக  ஆகின்றது. எந்த கர்ம வினை வரையறை இல்லாமல் சம்சார சுழற்சிக்கு காரணமாக ஆகின்றதோ? அதுவே அனந்தானுபந்தி கர்மமாகும். மித்யாத்வத்தை அனந்தானுபந்தி கர்ம வினை என்றும் ஆகமங்கள் கூறுகின்றன.

 

மித்யாத்வம் என்றால் என்ன?

ஆத்மனின் உண்மைத் தன்மையை தெரிந்து கொள்ளாமல் இருப்பது மித்யாத்வம். தர்மத்திற்கு எதிராக மாறாக செயல்படுதல் மித்யாத்வம்.

 

திரவியம் (ஆத்மா), அஜீவபொருள் ( உடல்), தன்மம் ,அதன்மம், ஆகாயம், மற்றும் காலம் ஆகிய ஆறு திரவியங்களை முழுமையாகப் புரிந்து கொள்ளாமல் இருப்பது மித்யாத்வம்..

 

ஆத்ம தத்துவம் ஆன்மா, உடல், ஆஸ்ரவம் (வினை ஊற்று), பந்தம் (வினைக்கட்டு), சம்வரை (வினைத்தடுப்பு), நிர்ஜரை (வினை உதிர்ப்பு) மற்றும் மோக்ஷம் (பிறவிப் பிணி நீங்கி நிலைத்த பேரின்பம் அடைதல்) இந்த ஏழு தத்துவங்களைப் புரிந்து கொள்ளாது இருத்தல் மித்யாத்வம்.

 

உண்மையான தேவ சாஸ்திர குருவை அறிந்து கொள்ளாமல் இருப்பது மித்யாத்வம்.

 

அனாதி மித்யாதிருஷ்டிக்கு அதாவது வரம்பற்ற காலங்களாக சம்யக்த்வம் அடைந்தே இராத ஜீவன் தான் அனாதி மித்யாதிருஷ்டி ஆகும். இந்த அனாதி மித்யாதிருஷ்டிகள் முதன் முதலாக நற்காட்சி பெற வேண்டுமானால் மித்யாத்வ கர்ம வினைகள் தணிவு நிலை அடைய வேண்டும். அப்போது தான் அந்த ஜீவன் நற்காட்சி அடைய முடியும். உயிர்கள் நற்காட்சி பெறுவதற்கு மித்யாத்வ பரிணாமம் முழுமுதற் தடையாக இருக்கும்.

 

அனந்தானுபந்தி கஷாயங்கள் நமது மனோபாவத்தில் பாறையில் செதுக்கப்பட்ட எழுத்துக்கள் போல நீண்ட காலம் அழியாமல் இருக்கும். அவைகள் ஆத்மாவை மீள முடியாத சம்சாரத்தில் ஆழ்த்தும். மித்யாத்வம் எவ்வாறு நற்காட்சி பெறுவதற்கு தடையாக இருக்குமோ? அதைப் போல அனந்தானுபந்தி கஷாயங்கள் உயிர்கள் நற்காட்சி அடைவதைத் தடுக்கக்கூடிய சர்வகாதிக் கர்ம வினைகளாக இருக்கும்.

 

எனவே  இவைகள் ஒன்று உபசமம் அடைய வேண்டும் அல்லது அழிய வேண்டும் அப்போது தான் உயிர் நற்காட்சியை அடைய முடியும். முதலில் உயிரானது தன்னுடைய சுய முயற்சியால் மிக்க பிரயாசை உடன் இவைகளை உபசமம் அல்லது தணிவடையச் செய்து விட்டு நற்காட்சி பெறும்.

 

அனந்தானுபந்தி கஷாயங்களால் நற்காட்சி இருக்காது‌. ஞானம் மித்யா ஞானமாக இருக்கும். ஜீவனின் ஒழுக்கம் தீய ஒழுக்கமாக இருக்கும். தீயொழுக்கம் இருக்கும் போது சம்சார பந்தம் அதிகரிக்கவே செய்யும். அனந்தானுபந்தி கஷாயங்களால் இல்லற தர்மத்தை ஒழுங்காகக் கடைபிடிக்க முடியாது. இல்லற தர்மத்திற்கே வாய்ப்பு இல்லை என்று சொல்லும் போது துறவறத்திற்கு அல்லது நல்லறத்திற்கு அங்கு ஏது இடம்? அனந்தானுபந்தி கஷாயங்கள் மற்றும் அனந்தானுபந்தி கர்ம வினைகள் உதயத்தில் இருக்கும் போது "உருவத்தில் மனிதன்" "உள்ளத்தில் மிருகம்" என்று தான் சொல்ல வேண்டும். ஆக அனந்தானுபந்தி கஷாயங்கள் ஒழுக்கத்திற்கு பாதிப்பு ஏற்படுத்துகிறது, பிறவிச் சுழற்சியை அதிகப்படுத்துகிறது. எனவே இவற்றை எப்பாடுபட்டாவது விலக்குவதே ஆத்மனுக்கு நன்மை தரும்.


அப்ரத்யாக்யானாவரண குரோதம் மானம் மாயை லோப கஷாயங்கள். ப்ரத்யாக்யானாவரணம் என்றால் இங்கு தேச விரதத்தை தடைசெய்யும் கஷாயங்கள் என்று பொருள் கொள்ள வேண்டும். அணுவிரதங்கள் கடைபிடிக்க முடியாமல் தடை செய்வது அப்ரத்யாக்யானாவரண கஷாயங்களின் இயல்பு.

 

 ப்ரத்யாக்யானம் என்பது சிறிதளவு விரதங்களை மேற்கொள்வதைக் குறிக்கும்

 

ப்ரத்யாக்யானம் என்றால் சிறிதளவு அதாவது தேசவிரதங்கள் அல்லது அணுவிரதங்கள் இல்லை என்று பொருள்.

 

ஆவரணம் என்றால் தடை செய்வது, தடுப்பது என்று பொருள்.

 

அப்ரத்யாக்யானாவரணம் என்றால் இல்லறத்தில் இருந்து கொண்டே ஐந்தாவது குணஸ்தான நிலையில் தேச விரதங்களை அல்லது அணுவிரதங்களைக் கடை பிடிப்பதைத் தடுக்கும் கஷாயங்கள் என்று பொருள்.

 

இங்கு ஜீவனுக்கு நற்காட்சி ஏற்பட்டிருக்கும். அப்ரத்யாக்யானாவரண குரோதம் மானம் மாயை லோபம் உதயத்தில் இருக்கும் போது ஜீவனின் மனோபாவம் தேசவிரதம் அதாவது அணுவிரதங்கள் கடைபிடிப்பதில் ஈடுபாடு கொள்ளாது. இந்தக் கஷாயங்கள்  சிறு சிறு விரதங்களைக் கடைபிடிக்க விடாமல் தடுத்து விரதமற்ற அவிரத நிலையில் ஜீவனை வைத்து இருக்கும். இந்தக் கஷாயங்கள் அழிக்கப்பட்டால் மட்டுமே அணுவிரதங்கள் கடைபிடிப்பதில் தடை இருக்காது.

 

மித்யாத்வம் தணியும் போது சம்யக் தரிசனம் ஏற்படும். மித்யாத்வம் மற்றும் அனந்தானுபந்தி குரோதம் மானம் மாயை லோபம் அழிந்தால் தான் விரதமற்ற அவிரத நிலையை ஜீவன் அடையும்.

 

அப்ரத்யாக்யானாவரண குரோதம் மானம் மாயை லோபம் அழிந்தால் தான் தேச விரதங்களைக் கடைபிடிக்க முடியும். தேச என்றால் சிறிதளவு என்று பொருள். தேசவிரதம் என்றால் முடிந்த அளவு விரதங்கள் முழுமையாக இல்லாவிட்டாலும் பகுதி அளவில் விரதங்களைக் கடைபிடிப்பது என்று பொருள்.

 

திரவ்ய விரதம் என்றால் என்ன?


அணுவிரதங்கள் கடைபிடித்தல் மஹா விரதங்கள் கடைபிடித்தல் 28 மூல குணங்கள் கடைபிடித்தல் ஆகிய சுபோபயோக செயல்கள் திரவ்ய விரதங்கள் ஆகும்.

 

ஃபாவ விரதம் என்றால் என்ன?

மேற்சொன்ன விரதங்களைக் கடைபிடிக்கும் போது உள்ளுக்குள் ஏற்படும் சுத்தோபயோக பற்றற்ற வீதராக பரிணதி இருக்கிறதே? அதற்குத்தான் ஃபாவ விரதம் என்பது பெயர்.

 

தேச விரதங்கள் அல்லது அணுவிரதங்களைக் கடை பிடிப்பதற்கு சம்யமாசம்யமம் என்று ஆகமங்கள் கூறுகின்றன. சம்யமம் என்பது சாரித்ரம் அதாவது ஒழுக்கத்தை அல்லது   விரதங்களைக் கடைபிடிப்பதைக்  குறிக்கும்.

அசம்யமம் என்பது சாரித்ரம் அதாவது ஒழுக்கம் இல்லை விரதங்கள் இல்லை என்று பொருள்.

 

சம்யமாசம்யமம் என்றால் தேச விரதங்கள் ஜீவனால் ஓரளவேனும்  கடைபிடிக்கப் படுகிறது ஆனால் சகல சாரித்ரம் அதாவது சம்யமம் முனி தர்மம் கடைபிடிக்க முடியவில்லை என்று பொருள்.

 

அப்ரத்யாக்யானாவரண குரோதம் மானம் மாயை லோப கஷாயங்கள் மணல் மேல் எழுதிய எழுத்துக்கள் போன்றவை. நம்முடைய எண்ணங்கள் தீவிரத்தன்மை மட்டுப்பட்டு இருக்கும். அப்படி குறைந்த தன்மையில் வினைக்கட்டின் அளவு சற்று குறைந்து விடும். ஆனாலும் இந்த மட்டுப்பட்ட கஷாயங்களும் அழிந்தால் தான் தேச விரதங்கள் அல்லது அணுவிரதங்களை முழுமையாகக் கடைபிடிக்க முடியும்.

 

ப்ரத்யாக்யானாவரண கஷாயங்கள்.

ப்ரத்யாக்யானம் என்றால் இங்கு சகல சாரித்ரத்தைக் குறிக்கும்.

ஆவரணம் என்றால் தடை செய்வது என்று பொருள்.

ப்ரத்யாக்யானாவரண கஷாயங்கள் ஜீவனின் சகல சாரித்ரத்தை அல்லது திகம்பர துறவற நெறியைத் தடுக்கும் கஷாயங்கள் என்று பொருள்.

 

ப்ரத்யாக்யானாவரண கஷாயங்கள் அதாவது எண்ணங்கள் இருக்கும் போது திகம்பர துறவற நெறியில் ஈடுபடுவதற்கு மனம் இடங்கொடுக்காது. அப்படியே ஒரு உத்வேகத்தில் ஈடுபட்டாலும் துறவற நெறியில் குறைகள் உண்டாகும். எனவே ப்ரத்யாக்யானாவரண கஷாயங்கள் முற்றிலும் அழிந்து பிறகு அல்லது அழித்த பிறகு திகம்பர துறவற நெறியில் ஈடுபடும் போது துறவு நிலை முழுமை அடையும்.

 

ப்ரத்யாக்யானாவரண கஷாயங்கள் தேங்கிய நீர் மேல் கீறிய கோடு போன்றது. தண்ணீரின் மேல் கோடு வரையும் போது அந்தக் கோடு எழுதும் போதே மறைந்து விடும். அது போல குரோத மான் மாயா லோப கஷாயங்கள் மனதில் தோன்றிய மாத்திரத்திலேயே அழிந்து விடும். மனதில் அதன் அழுத்தம் அல்லது வடு சில வினாடிகள் மட்டும் இருக்கும் பின்னர் அதுவும் நீங்கி விடும். ஆனால் இந்த இலேசான அழுத்தமும் பதியாமல் இருக்கும் போது தான் ப்ரத்யாக்யானாவரண கஷாயங்கள் அழிந்த நிலை. அப்போது மனம் எண்ணங்கள் அற்ற விசுத்தியில் இருக்கும். விசுத்தி என்பது தூய்மை உள்ளது ஆனாலும் முழுவதும் தூய்மை இல்லை என்று பொருள்.

 

ப்ரத்யாக்யானாவரண கஷாயங்கள் இருக்கும் போது கர்ம வினைகளின் உற்பத்தி சற்று மந்தமாக இருக்கும். கர்ம வினைகள் உருவாகாது என்று பொருள் அல்ல. அதில் மந்த நிலை இருக்கும்.

 

ப்ரத்யாக்யானாவரண கஷாயங்கள் அழிந்த நிலையில் சகல சாரித்ரம் அதாவது தூய துறவு ஒழுக்கத்தை கடைபிடிக்க முடியும். ஆனால் யதாக்யாத சாரித்ரம் இருக்காது. அதாவது ஆத்மனில் ஒன்றி உள்ள நிலைக்குத் தடை உண்டு.


சஞ்ஜ்வலன கஷாயங்கள்.

சஞ்ஜ்வலன குரோதம் மானம் மாயை லோப கஷாயங்கள் சகல சாரித்ரத்தைத் தடை செய்யாது. ஆனால் யதாக்யாத சாரித்ரத்தை மட்டுமே தடை செய்யும். திகம்பர நெறியில் ஈடுபடுவதற்கும் துறவு ஒழுக்கத்தை முழுவதும் கடைபிடிப்பதற்கும்  எந்தவொரு தடையும் கிடையாது. உயிர்களிடம் கடைசியாக அழியும் கஷாயங்கள் சஞ்ஜ்வலன கஷாயங்கள் தான். நான்கு காதி கர்ம வினைகள் அழிந்து திரிகால ஞானம் அதாவது கேவலஞானம் அடைவதற்கு சற்று முன்னர் வரை இவைகள் இருக்கும். கேவலஞான நிலையில் இவைகள் இருக்காது.

சஞ்ஜ்வலன கஷாயங்களின் தன்மை என்னவென்றால் வைக்கோல் பிரியை நெருப்பிட்டு எரித்தவுடன் அதன் உருவம் மாறாமல் கருத்த கயிறு போன்று இருக்கும். அதைத் தொட்டோமானால் பொல பொலவென்று உதிர்ந்து விடும். இலேசான காற்று வீசினாலும் அதன் உருவம் கலைந்து விடும். 

அது போல சஞ்ஜ்வலன கஷாயங்களும் ப்ரத்யாக்யானாவரண கஷாயங்கள் அழிந்த நிலையில் சஞ்ஜ்வலன கஷாயங்கள் கடுமை ஏதும் இல்லாமல் மனதில் பதியாது, அப்படியே பதிந்தாலும் மயிலிறகால் வருடியது போன்று மென்மையாக இருக்கும். மனது மாசுபடுதல் என்பது மிகமிகச் சன்னமாகவே இருக்கும்.

இங்கு சகல சாரித்ரம் அதாவது பூரண சம்யமம் துறவு நெறி கடைபிடிக்க முடியும். ஆத்மனாக வாழும் நிலைக்கு தடை இருக்கும். ஏனெனில் மனம் முழுவதும் சஞ்சலம் இன்றி பளிங்கு போன்ற நிலையில் இருக்கும் போது தான் யதாக்யாத சாரித்ரம் முழுமை பெறும். சஞ்ஜ்வலன கஷாயங்கள் உள்ள நிலையில் எண்ணங்கள் வெளிப்படையாக தெரியாது ஆனால் பரிணாமம் மாசுபடுதல் இருக்கும்.

சஞ்ஜ்வலன கஷாயங்கள் முழுவதும் அழிந்த பிறகு யதாக்யாத சாரித்ரம் முழுமை பெறும்.


 இது வரை மோகனீய கர்ம வினைகளின் உற்பத்திக்கு மூல வித்துக்களான அனந்தானுபந்தி, , அப்ரத்யாக்யானாவரண, ப்ரத்யாக்யானாவரண மற்றும் சஞ்ஜ்வலன கஷாயங்கள் பதினாறின் இயல்புகளைப் பார்த்தோம்.

அவைகளின் சுருக்கமான விளக்கங்களை மீண்டும் ஒரு முறை பார்த்து விட்டு அடுத்த கரணாணுயோகச் சொற்களின் பொருளைப் பார்ப்போம்.

1.அனந்தானுபந்தி குரோதம் மானம் மாயை லோபம் நான்கும் வரையறை அற்ற பிறவிகளுக்குக் காரணமாக அமைகின்றன. 
இந்தக் கஷாயங்கள் அல்லது எண்ணங்கள் பாறையில் செதுக்கிய எழுத்துக்களைப் போன்று அழியாது நீண்ட காலம் பதிந்திருக்கும். அவைகளின் தாக்கம் ஜென்ம ஜென்மத்திற்கும் தொடர்ந்து கணக்கற்ற பிறவிப் பந்தங்களை ஏற்படுத்தும். இவை உயிருக்கு தான் ஆன்மா என்பதை உணர்வதற்கு, நற்காட்சி அடைவதற்கு வாய்ப்பே தராது. இல்லறத்தில் கூட ஒழுங்கு முறை என்பது இருக்காது. தர்மத்தை விட்டு வெகு தொலைவில் இருப்பார்கள்.

 அப்ரத்யாக்யானாவரண குரோதம் மானம் மாயை லோப கஷாயங்கள்.
அனந்தானுபந்தி கஷாயங்கள் அழிந்து நற்காட்சி பெற்ற உடன் உள்ள கஷாயங்களின் நிலை என்று கூடச் சொல்லலாம். 

இப்போது உயிரானது சம்யக்த்வம்  ஒரு முறை அல்லது பல முறை பெற்ற நிலையில் இருக்கும். அணுவிரதங்கள் கடைபிடிக்க விடாமல் அப்ரத்யாக்யானாவரண கஷாயங்கள் தடை செய்யும். விரதங்கள் ஏற்படுவதற்கு மனோநிலை இடங்கொடுக்காது. இவைகளின் தன்மை எவ்வாறு இருக்கும் என்றால், மணல் மேல் எழுதிய எழுத்துக்கள் போல இருக்கும். மணல் மேல் எழுத்துக்கள் நீண்ட காலம் இல்லாவிட்டாலும்  குறுகிய காலம் வரை இருந்து பிறகு அழிந்து விடும். இவை மனதில் இருந்து சிறிது காலத்தில் அல்லது நாளடைவில்  நீங்கிவிடும். ஆனால் அவை மனதில் உள்ள காலம் வரை மனதை களங்கப்படுத்தும். இதன் காரணமாக கர்ம வினை உற்பத்தி ஓரளவு இருக்கவே செய்யும்.  ஆகையால் இல்லற நெறியில் விரதங்கள் கடைபிடிக்க முடியாமல் இருக்கும். இவை அழிந்த நிலையில் தேச சாரித்ரம் ஏற்பட்டுவிடும். அணுவிரதங்கள் கடைபிடிக்க முடியும்.

ப்ரத்யாக்யானாவரண கஷாயங்கள்.

இந்த கஷாயங்கள் திகம்பர துறவற நெறியைக் கடைபிடிக்க விடாமல் தடுக்கும். இப்போது சம்யக்த்வம் இருக்கும். இவைகளின் தன்மை எவ்வாறு இருக்கும் என்றால் தண்ணீரில் எழுதப்படும் எழுத்துக்கள் போல எழுதும்போதே மறைந்து விடும் தன்மை கொண்டவை. அதாவது எண்ணங்கள் மனதில் தோன்றிய உடனேயே மறைந்து விடும். ஆனால் எண்ணங்கள் தோன்றிய அழுத்தம் மட்டும் சிறிது நேரம் இருக்கும். அதன் காரணமாக கர்ம வினை உற்பத்தி சற்று குறைந்து விடும். இந்தக் கஷாயங்கள் அழியும் நிலையில் சகல சாரித்ரம் அதாவது முனி தர்மம் முழுமையாக கடைபிடிக்க முடியும். உயிர் மோக்ஷ மார்க்கத்தில் நடை பயிலும்.

சஞ்ஜ்வலன கஷாயங்கள்.

இந்தக் கஷாயங்கள் உள்ள போது சகல சாரித்ரம் அதாவது முனி தர்மம் முழுமையாக கடைபிடிக்கத் தடை ஏதும் இல்லை. ஆனால் யதாக்யாத சாரித்ரம் ஏற்படுவதைத் தடுக்கும். அதாவது ஆத்மனோடு ஒன்றிய உன்னத நிலையை தடை செய்யும்.

இதன் தன்மை எவ்வாறு இருக்கும் என்றால் நன்கு எரிந்து முடிந்த வைக்கோல் பிரியைப் போன்று இருக்கும். எரிந்து முடிந்த வைக்கோல் பிரி பார்ப்பதற்கு கயிறு தோற்றத்தில் இருந்தாலும் பலமற்று லேசான காற்று அடித்தாலும் லேசாக தொட்டாலும் பொல பொலவென்று உதிர்ந்து விடும். அது போல சஞ்ஜ்வலன கஷாயங்கள் தோன்றும் போது அவைகள் பாதிப்பு உணர இயலாது அளவில் இருக்கும். ஏனெனில் பண்பட்ட மனதில் எண்ணங்கள் வலுவற்ற நிலையில் இருக்கும். மயிலிறகால் வருடும் போது எவ்வாறான மென்மை இருக்குமோ அந்த அளவுக்கு எண்ணங்கள் ஏற்படுவது மிகவும் சன்னமாகவே இருக்கும். ஆனால் உணர இயலாத இந்த எண்ணங்கள் கூட பற்றற்ற வீதராக பாவத்தை மாசுபடுத்தும். ஆகையால் யதாக்யாத சாரித்ரம் தடைபடும். சஞ்ஜ்வலன கஷாயங்கள் முற்றிலும் அழிந்த பிறகு யதாக்யாத சாரித்ரம் முழுமை பெறும்.


அஷ்ட கர்ம வினைகளில் மோகனீய கர்ம வினைகள் மட்டுமே உபசமம் அடையும் மீதமுள்ள கர்ம வினைகள் உபசமம் அடைய வாய்ப்பு இல்லை என்று சொல்லப்படுகிறது. 


அப்படி பார்க்கும் போது க்ஷயோபசம நிலையில் சர்வகாதிக் கர்ம வினைகள் நிகழ்காலத்தில் உதயத்திற்கு வராத நிலை உதயாபாவிக் க்ஷயம். 


எதிர்காலத்தில் உதயத்திற்கு வராமல் ஸத்தாவிலேயே அமுங்கி இருக்கும் நிலை ஸதவஸ்தாரூப் உபசமம் என்ற பெயர். ஆனால் உண்மையில் சர்வகாதிக் கர்ம வினைகள் உபசமம் அடையவில்லை ஆனால் உதயத்திற்கு வராமல் ஸத்தாவில் இருப்பாக அமுங்கி உள்ளன. இங்கும் உதயம் இல்லை கர்ம வினை தணிந்து உள்ளன. எனவே இதனை சதவஸ்த்தாரூப உபசமம் என்று ஆகமங்கள் கூறுகின்றன.

சர்வ காதி கர்ம வினைகள் நிகழ்காலத்தில் உதயத்திற்கு வராமல் இருப்பதற்கு உதயாபாவிக் க்ஷயம் என்று சொல்லப்படுகிறது. உதயத்திற்கு வரவில்லை, அதனால் க்ஷயம் என்று ஆகமங்கள் கூறுகின்றன. உண்மையில் இது அழிதல் அல்லது க்ஷயம் அல்ல. இதற்கு ஒரு உதாரணம் சொல்லப்படுகிறது.

ஒரு மனிதன் ஒரு கொடிய பாவச் செயலைச் செய்து விடுகிறான். அச்செயலுக்கு அவன் தண்டிக்கப்பட வேண்டும். ஆனால் அந்த தீயச் செயலை செய்து 20 வருடங்கள் ஆகிவிடுகிறது. அவன் செய்த செயலை நிரூபிக்க முடியாததால் அவன் இத்தனை வருடங்கள் தண்டனையில் இருந்து தப்பிவிடுகிறான். 


திடிரென இருபது ஆண்டுகள் கழித்து அவனது குற்றம் நிரூபிக்கப்பட்டு நீதிமன்றத்தில் தண்டனை விதிக்கப்படுகிறது. அவன் தண்டிக்கப்படுகின்றான்.


அதைப் போன்றது உதயாபாவிக் க்ஷயம் என்பது. குற்றம் நடந்த இருபது வருடங்கள் கழித்து தண்டித்தது போல சர்வ காதி கர்ம வினை உதயத்திற்கு வராமல் இருப்பது. கர்ம வினை கண்டிப்பாக அதன் பலனைத் தந்தே தீரும். ஆனால் இப்போது தற்காலிகமாக உதயத்திற்கு வராமல் இருக்கிறது. இது தான் உதயாபாவிக் க்ஷயம். இந்த தன்மையும் ஜீவனின் விசுத்த பரிணாமம் காரணமாக ஏற்படுவதாகும். 

உதாரணத்தில் அவன் குற்றம் செய்தவன். குற்றம் நிரூபிக்கப்படவில்லை. ஆகையால் இருபது வருடங்கள் தண்டனையில் இருந்து தப்பிவிடுகிறான்.

கர்ம வினைகள் ஜீவனின் தூய்மையான பரிணாமம் காரணமாக அதன் இயல்பு சற்று வெளிப்படாது இருக்கிறது. அவ்வளவு தான்.


சர்வ காதி கர்ம வினைகள் உதயத்திற்கு வராமல் இருந்து அவை உதயத்திற்கு வருவதற்கு ஒரு சமயம் முன்பாக தேசகாதி கர்ம வினையாக மாற்றம் அடைந்து அதன் பலனைத் தரும். இந்த தன்மைக்கு திமுக் சங்க்ரமனம் என்று சொல்லப்படுகிறது. இது கர்ம வினைகளின் இயல்புக்கு மாறான ஒன்றாகும். ஆனால் இது உண்மையே.


சர்வ காதிக் கர்ம வினைகளின் அழிதல் அல்லது க்ஷயம் முழுவதும் தடுக்கும் சக்தி குறைந்து தேச காதிக் கர்ம வினையாக மாற்றம் அடைந்து பலனைத் தரும். இதைத் தான் சர்வ காதிக் கர்ம வினைகளின் க்ஷயம் என்று ஆகமங்கள் கூறுகின்றன. ஆத்மனின் பரிணாம சுத்தியினால் இம்மாதிரி அதிசயங்கள் நடப்பதுண்டு.

 

இந்த உரையில் மீண்டும் ஒரு முறை க்ஷயோபசமம் பற்றிய விளக்கத்தை நினைவு கூர்கின்றார்.

 

1.நிகழ்காலத்தில் உதயத்திற்கு வரவேண்டிய சர்வகாதிக் கர்ம வினைகள் உதயத்திற்கு வராமல் ஸத்தாவிலேயே தங்கிவிடும் இதற்கு  உதயாபாவிக் க்ஷயம் என்று பெயர். இங்கு சர்வ காதிக் கர்ம வினைகள் உதயத்திற்கு வரவில்லை அதனால் க்ஷயம் என்று ஆகமங்கள் கூறுகின்றன.

 

2. எதிர்காலத்தில் உதயத்திற்கு வர வேண்டிய சர்வகாதிக் கர்ம வினைகள் ஸதவஸ்தாரூப் உபசம நிலையில் உள்ளன. சர்வ காதிக் கர்ம வினைகள் ஸத்தாவில் இருப்பாக இருந்து பலனைத் தராமல் ஸத்தாவிலேயே இருப்பாக இருப்பதற்கு ஸதவஸ்தாரூப் உபசமம்.

ஸத் என்றால் இருப்பு என்று பொருள்.

அவஸ்தா என்றால் ஸத்தாவில் இருப்பாக இருக்கும் நிலைக்கு அவஸ்தா என்பது பொருள்.

ஸதவஸ்தாரூப் என்றால்

சர்வ காதிக் கர்ம வினைகள் உதயத்திற்கு வராமல் ஸத்தாவிலேயே இருப்பாக தங்கி அதன் பலனைத் தர இயலாமல் தணிந்து இருப்பது.

 

3. நிகழ் காலத்தில் தேசகாதி கர்ம வினைகள் உதயத்தில் இருப்பது. இந்த மூன்று நிகழ்வுகள் சேர்ந்துதான் க்ஷயோபசமம் நிலை ஏற்படுகிறது.

 

சர்வ காதிக் கர்ம வினை உதயத்தில் இருக்கும் போது ஜீவனின் ஞான குணத்தை முழுவதும் வெளிப்படாமல் தடை செய்யும். ஆனால் உதயாபாவிக் க்ஷய நிலையில் சர்வகாதிக் கர்ம வினை உதயத்திற்கு வராமல் அதன் பலனைத் தராமல் இருக்கும். ஆகையால் சர்வ காதிக் கர்ம வினையின் உதயம் இல்லாத நிலையில் நம்முடைய ஞான குணம் ஓரளவு வெளிப்படும்.

 

மதி ஞானாவரணம் கர்ம வினை இங்கு உதாரணமாக சொல்லப்படுகிறது. மதி ஞானாவரணம் தேசகாதிக் கர்ம வினை தான் அது நூறு சதவீதம் பலனைத் தரக்கூடியது என்றால் சர்வகாதிக் கர்ம வினை தான் என்று கருத வேண்டும். முழுவதும் இல்லாமல் ஓரளவு தடைதான் அது செய்யும் என்றால் அப்போது தேச காதிக் கர்ம வினை எனப்படுகிறது. தேச காதிக் கர்ம வினை, சர்வ காதியாகவும் தேச காதிக் கர்ம வினையாகவும் இருக்கும் அதன் தடை செய்யும் தன்மையைப் பொறுத்ததாகும்.

 

சதவஸ்த்தாரூப உபசமத்தில் எதிர்காலத்தில் உதயத்திற்கு வர வேண்டிய சர்வகாதிக் கர்ம வினை உதயத்திற்கு வராமல் ஸத்தாவிலேயே இருப்பாக தணிந்து இருப்பதனால் உபசமம் என்று சொல்லப்படுகிறது. இங்கு வினையானது பலனைத் தர இயலாமல் இருப்பதால், அதாவது மதி ஞானாவரணம் முழுமையாக ஞானத்தை தடை செய்யும் நிலையில் உள்ளது. இந்த (ஸதவஸ்தாரூப் உபசமம்) நிலையில் அந்த கர்ம வினை செயலிழந்து விட்டது. ஆகையால் உபசமம் என்ற சொல் ஆளப்பட்டுள்ளது.

 

நிகழ் காலத்தில் தேசகாதி கர்ம வினையாக பகுதி அளவு, ஓரளவு மட்டுமே தடை செய்யும் நிலையில் உதயத்தில் இருக்கிறது. மீதி தடை இல்லாத நிலையில்   நமது மதி ஞானத்தின் தன்மை பகுதி அளவு வெளிப்படுகிறது. இது தான் க்ஷயோபசம நிலை. நம் அனைவருக்கும் க்ஷயோபசம ஞானம் அதாவது புத்திக் கூர்மை நபருக்கு நபர் வேறுபாட்டுடன் இருக்கும்.

 

(இன்னும் ஒரு குறிப்பையும் இங்கே குறிப்பிட வேண்டும். அதாவது சர்வ காதிக் கர்ம வினைகளுக்கு க்ஷயோபசம நிலை ஏற்படாது. இதன் விரிவான விளக்கம் பின்னர் வரும்.)

 

சம்யக்த்வமானது உபசம சம்யக்த்வம், க்ஷயோபசம சம்யக்த்வம் மற்றும் க்ஷாயிக சம்யக்த்வம் என்று மூன்று வகைப்படும்.

 

இந்த மூன்றில் க்ஷயோபசம சம்யக்த்வத்தில் அனந்தானுபந்தி குரோதம் மானம் மாயை கர்ம வினைகள் உபசமமாகத்தான் இருக்கும். அதாவது ஸதவஸ்தாரூப உபசமமாக இருக்கும்.

 

அனந்தானுபந்தி கர்ம வினைகள் சர்வ காதிக் கர்ம வினைகள். அவைகள் உதயத்தில் இருக்கும் போது உயிருக்கு சம்யக்த்வம் ஏற்படவே ஏற்படாது. பிரதமோபசம சம்யக்த்வம் பெறும் போது கூட இவைகளின் உபசமம் இருந்தாக வேண்டும்.

 

க்ஷயோபசம சம்யக்தவ நிலையில் அனந்தானுபந்தி கர்ம வினைகள் நான்கும் உதயத்திற்கு வராமல் இருக்கும். ஸத்தாவில் இருப்பாகத் தங்கி இருக்கும். ஸதவஸ்தாரூப உபசமத்தில் கர்மவினைகள் அவைகளின் பலன் தரும் சக்தியைத் தரமுடியாமல் தணிந்து விடும். ஆகையால் உயிருக்கு க்ஷயோபசம சம்யக்த்வம் பெற முடிகிறது. ஸதவஸ்தாரூப உபசமத்தின் தனித்தன்மை இவ்வாறு உள்ளது.

 

கரணாணுயோகச் சொற்கள். 14-4-2023. சோபக்கிருது வருடம். சித்திரை மாதம் 1ந் தேதி. வெள்ளிக்கிழமை.

 

 ஆத்மனின் அனுஜீவி குணங்கள் என்றால் என்ன?

நமக்கு அதாவது ஆத்மனுக்கு அனந்த ஞானம், அனந்த தரிசனம், அனந்த சுகம், அனந்த வீர்யம், அவகாஹனத்வம், அகுருலகுத்வம் சூக்ஷுமத்வம் அவ்யாபாதத்வம் என்னும் முழுமையான குணங்கள் இயற்கையிலேயே உள்ளன. ஆனால் அவைகளை வெளிப்பட விடாமல் அஷ்ட கர்ம வினைகள் ஆத்மனை சூழ்ந்து கொண்டு தடுத்து விடுகின்றன.

 

அஷ்ட கர்ம வினைகள் என்றால் என்ன?

1.ஆத்மனின் ஞான குணத்தை மறைக்கக் கூடிய ஞானாவரனீயம்,

2. ஆத்மா தன்னைத் தானே உணர்ந்து கொள்ளும் தரிசன குணத்தை தடுக்கக்கூடிய தரிசனாவரணம்,

3. ஆத்மனை கணக்கற்ற வரம்பற்ற பிறவிகளில் ஆழ்த்தி சம்சாரக் கடலில் தத்தளிக்க வைக்கும் மோகனீயம்,

4. சம்சாரக் கடலில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் ஆத்மனுக்கு இன்பம் துன்பம் இரண்டையும் மாற்றி மாற்றி தந்து கொண்டு இருக்கும் வேதனீயம்,

5.சம்சாரக் கடலில் ஒவ்வொரு பிறவியின் ஆயுளை அதாவது தேவாயுள் நரகாயுள் விலங்காயுள் மற்றும் மனிதாயுள் இவற்றை நிர்ணயித்து அதில் உயிரைக் கட்டுப்படுத்தி வைக்கும் ஆயுள் கர்ம வினை,

6.சம்சாரக் கடலில் சிக்கித் தவிக்கும் ஆத்மனுக்கு 93 வகையான உடல் அமைப்புகளைக் கொடுத்து அந்த உடல்களில் உயிரைக் கட்டுப்படுத்தி வைக்கும் நாம கர்ம வினை,

7. சம்சாரக் கடலில் சிக்கித் தவிக்கும் ஆத்மனுக்கு மிக உயர்ந்த நிலையிலும் மிகவும் தாழ்ந்த நிலையிலும் பிறக்க வைத்து உயிரைக் கட்டுப்படுத்தி வைக்கும் கோத்திர கர்ம வினை மற்றும்

8.எதற்கெடுத்தாலும் தடைகளை ஏற்படுத்தி அலைக்கழிக்கும் அந்தராய கர்ம வினை இப்படியாக எட்டு வகையான கர்ம வினைகள் ஆத்மனின் இயற்கை குணங்கள் எட்டையும் அடைய விடாமல் தடுத்துக் கொண்டு இருக்கின்றன.

 

அஷ்ட கர்ம வினைகள் எத்தனை வகைப்படும்?

ஆத்மனைப் படாதபாடு படுத்தி அலைக்கழிக்கும் அஷ்ட கர்ம வினைகள்,  காதி கர்ம வினைகள் மற்றும் அகாதி கர்ம வினைகள் என்று இரு பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன.

 

காதி கர்ம வினை என்றால் என்ன? அவைகள் யாவை?

ஆத்மனின் அனுஜீவி குணங்கள் வெளிப்பாட்டுக்கு வரவிடாமல் தடுக்கும் கர்ம வினைகள் காதி கர்ம வினைகளாகும். "காதம்" என்ற வடமொழி சொல் அழிவைக் குறிக்கும் சொல் ஆகும். காதிகர்மம் என்பது ஆத்மனின் இயல்பான குணங்களை அழிப்பவை என்று பொருள்.

ஞானாவரணீயம், தரிசனாவரணீயம், மோகனீயம் மற்றும் அந்தராயம் நான்கும் காதி கர்ம வினைகளாகும்.

 

அகாதி கர்ம வினை என்றால் என்ன? அவைகள் யாவை?

ஆத்மனின் அனுஜீவி குணங்களை முற்றிலும் அழிக்காதவை அகாதி கர்ம வினைகளாகும். "காதம்" என்ற வடமொழி சொல்லிற்கு முன் "" அக்ஷரத்தை அதாவது எழுத்தைச் சேர்த்து "அகாதம்" என்ற சொல்லிற்கு அழிக்க இயலாது என்று பொருள். அகாதி கர்ம வினை ஆத்மனின் அனுஜீவி குணங்களை அழிக்க முடியாதவை என்று பொருள்.

வேதனீயம்,ஆயுள், நாமம் மற்றும் கோத்திரம் ஆகிய நான்கும் அகாதி கர்ம வினைகளாகும்.

காதி கர்ம வினை மேலும் எத்தனை வகைப்படும்?

காதி கர்ம வினைகள் சர்வ காதி கர்ம வினை மற்றும் தேச காதி கர்ம வினை என்று மேலும் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

 

சர்வ காதிக் கர்ம வினை என்றால் என்ன?

ஆத்மனின் இயல்பான குணங்களை அனுஜீவி குணங்களை முற்றிலும் தடுக்கக்கூடிய கர்ம வினைகள் அனைத்தும் சர்வ காதி கர்ம வினைகள் ஆகும்.

 

உதாரணம்: கேவலஞானாவரண கர்ம வினை சர்வ காதி கர்ம வினையாகும். இந்த கர்ம வினை உதயத்தில் இருந்தாலும் சரி அல்லது ஸத்தாவில் இருப்பாக இருந்தாலும் சரி உயிருக்கு முழுதுணர் ஞானம் எனப்படும் கேவல ஞானம் ஏற்படாது. ஆனால் கேவல ஞானம் ஆத்மனின் இயற்கை குணம் ஏற்கனவே ஆத்மனில் நிறைந்து இருக்கும் ஞான குணம். அந்த உன்னதமான ஞானத்தை உயிர் வெளிப்படுத்துவதற்கு கேவல ஞானாவரணம் கர்ம வினை முழுவதும் தடை செய்யும். கேவல ஞானாவரணம் கர்ம வினை ஆத்மனில் இருந்து முழுவதும் அழிக்கப்பட்ட பிறகு தான் உயிர் தனது முழுதுணர் ஞானத்தை வெளிப்படுத்த முடியும்.

 

முழுதுணர் ஞானம் எங்கோ ஆகாயத்தில் இருந்து வராது. ஆத்மனில் ஏற்கனவே உள்ள உன்னத ஞானம். அது உருவாக்கப்படுவதல்ல. ஆத்மனில்  இயல்பாகவே உள்ள ஞானம். அதை  கேவல ஞானாவரணம் கர்ம வினை முழுவதும் தடை செய்கிறது.

 

உயிர்கள் அனைத்தும் ஞானம் கொண்டவை எல்லா உயிர்களும் ஞானம் முழுமையாகக் கொண்டவை எந்த உயிரும் விதிவிலக்கு அல்ல. ஒவ்வொரு உயிரும் சுய முயற்சியால் மட்டுமே கேவல ஞானாவரண கர்ம வினையை அழித்து தனது ஞானத்தை வெளிப்படுத்தி ஆக வேண்டும். எந்த அமானுஷ்ய சக்தியும் இதில் உயிருக்கு உதவ முடியாது.  சர்வ காதி கர்ம வினை மட்டும் அல்ல அஷ்ட கர்ம வினைகளையும் அழிக்கும் சக்தி அந்தந்த உயிர்களிடம் மட்டுமே உள்ளது.

 

சர்வ காதி கர்ம வினையைப் புரிந்து கொள்ள எளிய உதாரணம் ஒன்று முன் வைக்கப்படுகிறது. எந்த ஒரு நாட்டிலும் அந்த நாட்டவரைத் தவிர்த்து அயல் தேசத்து மக்கள் குடியேற முடியாது. ஒவ்வொரு நாட்டில் குறிப்பிட்ட நாட்டைச் சேர்ந்த பிரஜைகள் நுழையக் கூடாது என்று சட்டம் இயற்றி அதை கடுமையாக அமுல்படுத்தி செயல்படுத்துவார்கள்.

 

அது போலவே சர்வகாதிக் கர்ம வினைகள் இயற்கையாக உள்ளுக்குள் உள்ள ஞான குணம் வெளிப்பட விடாமல் தடுக்கும்.

 

சர்வ காதி கர்ம வினைகள் ஒன்று உதயத்தில் இருக்கும் அல்லது க்ஷயம் அதாவது அழிந்து விடும். சர்வ காதி கர்ம வினைகளுக்கு க்ஷயோபசம நிலை ஏற்படவே ஏற்படாது. ஏனெனில் சர்வ காதி கர்ம வினைகளில் தேச காதி கர்ம வினை இருக்காது. அவற்றிற்கு ஆத்மனின் குணங்களை முற்றிலும் தடுக்கும் தன்மை மட்டுமே உண்டு. கொஞ்சம் விட்டுக் கொடுத்துதான் பார்ப்போமே என்ற தன்மை கிடையவே கிடையாது.

 

சர்வ காதி கர்ம வினை எத்தனை வகை உள்ளது?

 

ஞானாவரனீய கர்ம வினைகளில்

1.கேவல ஞானாவரணம்.

தர்சனாவரணீய கர்ம வினைகளில்

2.கேவல தர்சனாவரணம்

3.நித்ரா

4.நித்ரா நித்ரா

5.பிரக்ஷளா

6.பிரக்ஷளா பிரக்ஷளா

7.ஸ்தானக்ருதி

தர்சன மோகனீய கர்ம வினைகளில் சம்யக்த்வத்தை தடை செய்யும்

8.மித்யாத்வ தர்சன மோகனீயம்

9.சம்யக் மித்யாத்வ மோகனீயம்

சாரித்ர மோகனீய கர்ம வினைகளில் சம்யக்த்வம் பெற விடாமல் தடுக்கும்

10.அனந்தானுபந்தி குரோதம்

11.அனந்தானுபந்தி மானம்

12.அனந்தானுபந்தி மாயை

13.அனந்தானுபந்தி லோபம்

தேச சாரித்ரம் கடைபிடிக்க விடாமல் தடுக்கும்

14.அப்ரத்யாக்யான குரோதம்

15.அப்ரத்யாக்யான மானம்

16.அப்ரத்யாக்யான மாயை

17.அப்ரத்யாக்யான லோபம்

சகல சாரித்ரம் கடைபிடிக்க விடாமல் தடுக்கும்

18.ப்ரத்யாக்யான குரோதம்

19.ப்ரத்யாக்யான மானம்

20.ப்ரத்யாக்யான மாயை

21.ப்ரத்யாக்யான லோபம்

ஆக 21 சர்வகாதி கர்ம வினைகள் ஆத்மனின் அனுஜீவி குணங்களை வெளிப்பட விடாமல் முற்றிலும் தடுத்து நிற்கின்றன. இவைகள் ஸத்தாவில் இருந்தாலே போதும் ஆத்மனின் குணங்கள் வெளிப்படாது.

 

இவைகளின் க்ஷயம் மற்றும் அழிதலின் போதுதான் ஆத்மனின் இயல்பு குணங்கள் வெளிப்படும். அதற்கான வழியைத் தேடி இந்த உயிர் தன் சுய முயற்சியால் தான் காதி கர்ம வினைகளை அழிக்க வேண்டும். அழிக்க முடியும்.

 

கரணாணுயோகச் சொற்கள். 17-4-2023. திங்கட்கிழமை.

 

 தேச காதி கர்ம வினைகள் என்றால் என்ன?

தேச என்றால் வடமொழியில் பகுதியளவு அல்லது ஓரளவு என்று பொருள். காதி அல்லது காதம் என்றால் அழிப்பது. தேசகாதி என்றால்  முழுமையாக இல்லாமல் ஓரளவு மட்டுமே  அழிப்பது என்று பொருள்.

 

தேச காதி கர்ம வினைகளால்  ஆத்மனின் இயல்பான குணங்களை ஓரளவு மட்டுமே தடை செய்ய இயலும். அவைகளின் தடை செய்யும் தன்மை ஏற்ற இறக்கங்கள் கொண்டது.

 

தேச காதி கர்ம வினையாக இருந்தாலும் ஜீவனின் குணத்தை முழுவதும் தடுக்க முடிந்த தேச காதி கர்ம வினைகளும் உண்டு. முழுமையாக இல்லாமல் ஓரளவு மட்டுமே தடை செய்யும் தேச காதி கர்ம வினைகளும் உண்டு.

 

உதாரணத்திற்கு  ஒரு வகுப்பில் பயிலும் குழந்தைகள் அனைவரும் ஒரேயளவு அதாவது சமமாக போதிக்கும் பாடங்களைப் புரிந்து கொள்ளும் புத்திக்கூர்மை உள்ளவர்கள் அல்ல. சில குழந்தைகள் ஒரு முறை சொன்னாலே புரிந்து கொள்ளும் சக்தி வாய்ந்தவை. சில குழந்தைகள் ஒன்றிரண்டு முறை கூடுதலாகச் சொன்னால் புரிந்து கொள்ளும். சில குழந்தைகள் எத்தனை முறை போதித்தாலும் பாவம் அவர்களால் புரிந்து கொள்ள இயலாமல் தவிப்பார்கள். அவர்களுக்கு மதி ஞானாவரணம் முழுமையாக ஆட்கொண்டு உள்ளது என்று பொருள். நடத்தும் பாடத்தை புரிந்து கொள்ள விடாமல் அவை தடுக்கின்றன என்று பொருள்.

 

அதே நேரத்தில் ஒரு முறை பாடம் நடத்தும் போது புரிந்து கொள்ளும் குழந்தைக்கு மதிஞானாவரணம் குறைந்த அளவே தடுக்கிறது என்று பொருள். இப்படி தேச காதி கர்ம வினைகளின் தன்மை ஏற்ற இறக்கங்கள் கொண்டதாக உள்ளதால் தேச காதி கர்ம வினைகளில் சர்வ காதி கர்மமும் உள்ளது பலன் தரும் தன்மை குறைந்த தேச காதி கர்ம நிலையும் உண்டு. பலன் தரும் தன்மை அதிகம் உள்ளவை சர்வ காதியாகவும் பலன் தரும் தன்மை குறைந்தவை தேச காதி கர்ம வினையாகவும் பரிமளிக்கச் செய்கின்றன. ஆகையால் தான் தேச காதி கர்ம வினைகளில் க்ஷயோபசம நிலை சாத்தியம் ஆகிறது.

 

தேச காதி கர்ம வினைகள் எத்தனை வகைப்படும்?

 

ஞானாவரணீய தேச காதி கர்ம வினைகளில்

1.மதிஞானாவரணம்

2.ஸ்ருத ஞானாவரணம்

3.அவதி ஞானாவரணம்

4.மனப்பர்யய ஞானாவரணம்

 

தர்சனாவரணீய தேச காதி கர்ம வினைகளில்

5.சக்ஷு தர்சனாவரணம்

6.அசக்ஷு தர்சனாவரணம்

7.அவதி தர்சனாவரணம்

 

மோகனீய தேச காதி கர்ம வினைகளில்


8.சம்யக்த்வ தர்சன மோகனீயம்

9.சஞ்ஜ்வலன குரோதம்

10.சஞ்ஜ்வலன மானம்

11.சஞ்ஜ்வலன மாயை

12.சஞ்ஜ்வலன லோபம்

நோகஷாய கர்ம வினைகள்

13.ஹாஸ்யம்

14.ரதி

15.அரதி

16.சோகம்

17.பயம்

18.ஜுகுப்ஸா

19.ஸ்திரீ வேதம்

20.புருஷ வேதம்

21.நபும்சக வேதம்

அந்தராய கர்ம வினைகளில்

22.தானாந்தராயம்

23.லாபாந்தராயம்

24.போகாந்தராயம்

25.உப போகாந்தராயம்

26.வீர்யாந்தராயம்

ஆக 26 தேச காதி கர்ம வினைகள் உள்ளன. இவைகள் ஆத்மனின் அனுஜீவி குணங்களை முழுவதும் இல்லாமல் ஓரளவு மட்டுமே தடை செய்யும் தன்மை கொண்டவை.

சர்வ காதி கர்ம வினைகள் 21 தேச காதி கர்ம வினைகள் 26

அகாதி கர்ம வினைகள் 101 ஆக மொத்தம் 148 கர்ம வினைகள் ஆத்மனை அலைக்கழிக்கின்றன.

 பொருட்கள் அதாவது புத்கலத்தின் தன்மைகளை எத்தனை விதத்தில் பார்க்கலாம்?

 

பொருட்களை திரவ்யம் க்ஷேத்திரம் காலம் ஃபாவம் இந்த நான்கு வகைகளில் ஆராயப்படுகிறது.

 

பரமாணு என்றால் என்ன?

திரவ்ய அடிப்படையில் பொருட்களை ஆராயும் போது ஒரு பொருளை இரண்டிரண்டாகப் பகுத்துக் கொண்டு வரும் போது இறுதியில் இரண்டாகப் பிரித்துப் பார்க்க முடியாத நிலையில் நுண்ணிய அளவில் பார்வைக்கும் புலப்படாத அளவு அணுப்பிரமானம் ஒன்று இருக்கும். அதை மேலும் இரண்டாகப் பிரிக்கவே முடியாது. அதுதான் பரமாணு எனப்படுகிறது. இது தான் ஒரு பொருளின் அல்லது புத்கலத்தின் இறுதி துகள் ஆகும். ஒரு பொருளின் மிக மிக நுண்ணிய பொருள் சிறிய பொருள் "பரமாணு".

 

பிரதேசம் என்றால் என்ன?

க்ஷேத்திர அடிப்படையில் ஆகாயத்தின் மிக மிக நுண்ணிய பகுதி பிரதேசம் எனப்படுகிறது.

 

நுண்ணிய பிரதேசம் அல்லது இடத்தை எவ்வாறு கணக்கிடுவது?

புத்கலமாகிய ஒரேயொரு நுண்ணிய பரமாணு ஆகாயத்தில் எவ்வளவு இடத்தை ஆக்கிரமிக்குமோ? அது ஒரு பிரதேசம் எனப்படுகிறது. ஒரு பரமாணுவானது கண்ணுக்குப் புலப்படாத ஒரு சிறு தூசு என்று கூடச் சொல்லலாம். ஆனால் தூசு பரமாணுவுடன் ஒப்பிடும் போது அந்த தூசுவில் எண்ணிலடங்காத பரமாணுக்கள் இருக்கும்.

அப்படி என்றால் ஒரு பரமாணுவினால் ஆகாயத்தில் எவ்வளவு இடத்தை ஆக்கிரமிக்க முடியும்? அதுவும் மிக மிக நுண்ணிய அளவில் பிரதேசம் இருக்கும். எடுத்துக்காட்டாக நம்முடைய விரல் நுனியில் எண்ணிக்கையில் அடங்காத பிரதேசங்கள் இருக்கும். இது தான் ஒரு பிரதேசத்தை கணக்கிடும் முறை ஆகும். ஆகாயத்தில் மிக குறைந்த சிறிய அளவிற்கு "பிரதேசம்" என்று பெயர்.

 

ஒரே ஒரு புத்கல பரமாணு ஆகாயத்தில் எவ்வளவு இடத்தை ஆக்கிரமிக்குமோ? அந்த நுண்ணிய ஆகாயப் பகுதி ஒரு பிரதேசம் எனப்படுகிறது. க்ஷேத்திர அடிப்படையில் ஆகாயத்தின் மிகச் சிறிய அளவு "பிரதேசம்" ஆகும்.

 

"சமயம்" என்ற கால அளவு எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

கால அடிப்படையில் ஒரேயொரு பரமாணு அதற்கு அடுத்து இருக்கும் இன்னொரு பரமாணுவை நோக்கி மிக நிதானமாக சென்று சேரும் கால அளவு நேரத்திற்கு " சமயம் " என்று ஆகமங்கள் கூறுகின்றன. காலத்தைக் கணிக்கும் போது அதன் மிக மிக நுண்ணிய கால அளவு ஒரு "சமயம் " ஆகும்.

 

அவிபாகிபிரதிக்க்ஷேதம் என்றால் என்ன?

ஃபாவ அடிப்படையில் மிக மிக நுண்ணிய அளவில் சக்தியின் மிக மிக நுண்ணிய அளவை கணக்கிடுவது. அந்த நுண்ணிய அளவிற்கு அவிபாகிபிரதிக்க்ஷேதம் என்று பெயர்.

 

விபாகம் என்றால் பிரிப்பது அல்லது பகுப்பது என்று பொருள். பிரதிக்க்ஷேதம் என்றால் பொருட்களின் சக்தி அல்லது வீரியம் அதாவது பலன் தரும் தன்மை இவற்றைக் குறிப்பது. " " என்ற அக்ஷரத்தை விபாகிபிரதிக்க்ஷேதம்

சேர்த்து அவிபாகிபிரதிக்க்ஷேதம் என்ற வடமொழி சொல்லிற்கு பொருட்களின் சக்தியை வீரியத்தை இதற்கு மேலும் பிரிக்க முடியாது என்று பொருள்.

 

அதாவது மிக மிக நுண்ணிய சக்தியை  அதாவது சக்தியை மேலும் பிரிக்க முடியாத சக்தியின் அளவு அவிபாகிபிரதிக்க்ஷேதம் என்று ஆகமங்கள் கூறுகின்றன.

 

இதன் உண்மை தன்மையை நன்கு புரிந்து கொள்ள வேண்டுமானால்,

ஒரு பொருளின் மிக மிக நுண்ணிய புத்கலம் பரமாணு.

 

ஆகாயத்தின் மிக மிக நுண்ணிய அளவு, ஒரேயொரு பரமாணு மட்டும் அடைக்கக் கூடிய ஆகாயப் பகுதி பிரதேசம்.

 

காலத்தின் மிக மிக நுண்ணிய ஒரு பரமாணு தனக்கு மிகவும் அருகில் உள்ள மற்றொரு பரமாணுவை சென்று அடையும் நேரம் காலத்தின் மிக குறைந்த "சமயம்" எனப்படும் சிறிய அளவாகும். இன்னும் விளக்கமாக சொல்வதானால் நாம் மிகவும் குறைந்த கால அளவாகக் கருதும் "நொடி" நேரத்தில் எண்ணில் அடங்காது சமயங்கள் உள்ளன. இதைக் கொண்டே சமயத்தின் நுண்ணிய தன்மையை உணரலாம்.

 

இது போலவே கார்மாண புத்கல பரமாணுவின் பலன் தரும் சக்தியின் அளவை உணரலாம். இந்த மிகக் குறைந்த சக்தியின் அளவிற்கு தான் அவிபாகிபிரதிக்க்ஷேதம் என்று பெயர்.

இவ்வாறாக திரவ்யத்தின் அடிப்படையில் மிகக் குறைந்த அளவு "பரமாணு".

க்ஷேத்திர அடிப்படையில் ஆகாயத்தின் மிக குறைந்த அளவு "பிரதேசம்".

காலத்தின் அடிப்படையில் மிகக் குறைந்த கால அளவு "சமயம்"

ஃபாவ அடிப்படையில் சக்தியின் மிகக் குறைந்த அளவு "அவிபாகிபிரதிக்க்ஷேதம்"

இவ்வாறாக திரவ்யம் க்ஷேத்திரம் காலம் ஃபாவ அடிப்படையில் நாம் பொருட்களை பகுத்துப் பார்க்க வேண்டும். இவை நம்முடைய க்ஷயோபசம ஞானத்திற்கு எட்டாத விஷயங்கள். இவை அனைத்தும் ஏற்கனவே அரஹந்த பகவானால் அருளப்பட்டு சுருதங்கள் ஆகமங்களில் ஆச்சாரியர் மூலம் பதிவு செய்யப்பட்டு வழி வழியாக வலம் வரும் கருத்துக்கள்அதை நாம் ஒரு முறைக்கு பலமுறை படித்தாலே போதும் நாம் முழுவதும் புரிந்து கொள்ள!

 

வர்க்கம் என்றால் என்ன?

வர்க்கம், கார்மாண வர்க்கணா மற்றும் கார்மாண வர்க்கணை அனைத்தும் ஒரே அர்த்தம் கொண்டவை.

 

வர்க்கம் என்பது சக்தி அடிப்படையில் சிறிய அளவிலான அவிபாகிபிரதிக்க்ஷேதம், ஒன்றுக்கு மேற்பட்ட பல அவிபாகிபிரதிக்க்ஷேதங்களின் நுண்ணிய பலன் தரும் தன்மைகளின்  தொகுப்பிற்கு வர்க்கம், கார்மாண வர்க்கணா மற்றும் கார்மாண வர்க்கணை என்று பொருள். ஒன்றுக்கு மேற்பட்ட பரமாணுக்களின் தொகுப்பு அவற்றின் பலன் தரும் சக்தி அம்சம்  இவைகள் எல்லாம் வர்க்கம் என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறது. கார்மாண வர்க்கணா மற்றும் கார்மாண வர்க்கணை இவைகளுக்கும் அதே அர்த்தம் தான்.

 

ஒரே விதமான பலனை மட்டுமே தருகின்ற கார்மாண பரமாணுக்களின் தொகுப்பு வர்க்கம்கார்மாண வர்க்கணைகள் என்று சொல்லப்படுகிறது. அதாவது ஒரே விதமான பலனைத் தரும் கார்மண பரமாணுக்கள் (இன்பத்தை மட்டும் தருகின்ற சாதா வேதனீய கர்மங்கள்) இவை மட்டுமே சேர்ந்த தொகுப்பு சாதா வேதனீய கார்மாண வர்க்கணைகள் எனப்படும். இது போன்றே அஷ்ட கர்ம வினைகளின் தனித் தனியான தொகுப்புகள் வர்க்கம், கார்மாண வர்க்கணா மற்றும் கார்மாண வர்க்கணைகள் என்று ஆகமங்கள் கூறுகின்றன.

ஸ்பர்தகங்கள் என்றால் என்ன?

பல்வேறு விதமான பலன்களைத் தருகின்ற அதாவது அவிபாகிபிரதிக்க்ஷேதங்கள் சேர்ந்த தொகுப்புகளுக்கு "ஸ்பர்தகங்கள்" என்று பெயர்.

 

வெவ்வேறு விதமான பலன்களைத் தருகின்ற அஷ்ட கர்ம வினைகளின் தனித்தனி வர்க்கங்கள் அல்லது கார்மாண வர்க்கணைகள் ஒன்று சேர்ந்த தொகுப்புகள் ஸ்பர்தகங்கள் என்று சொல்லப்படுகிறது.

 

இவைகளில் இன்பத்தை தருகின்ற சாதா வேதனீய வர்க்கம், துன்பத்தை மட்டுமே தருகின்ற அசாதா வேதனீய வர்க்கம், நான்கு வகையான ஆயுள் பலனை  மட்டுமே தருகின்ற தேவாயுள் வர்க்கம், நரகாயுள் வர்க்கம், மனித ஆயுள் வர்க்கம் மற்றும் விலங்கு ஆயுள் வர்க்கம் இவ்வாறு அஷ்ட கர்ம வினைகளின் தனித்தனி பலன்களைக் கொண்டு இருக்கின்ற தனித்தனி வர்க்கங்கள் ஒன்று சேர்ந்த தொகுப்பிற்கு ஸ்பர்தகங்கள் என்று பெயர்.

 

இதில் ஒரு சர்வகாதி கர்ம வினைகளின் வர்க்கம் மற்றொரு சர்வ காதி வர்க்கத்தோடு தான் சேரும். தேசகாதி வர்க்கங்களோடு சேராது. அதாவது கார்மாண வர்க்கணைகள் அதனதன் தன்மையை ஒத்த வர்க்கங்களோடு மட்டுமே சேர்ந்திருக்கும்.

 

இப்படி சர்வ காதி கர்ம வினைகளின் வர்க்கங்கள் ஒன்றாகச் சேர்ந்த ஸ்பர்தகங்கள் ஆகவும், தேசகாதி கர்ம வினைகளின் வர்க்கங்கள் ஒன்றாகச் சேர்ந்த ஸ்பர்தகங்கள் ஆகவும் இருக்கும்.  

 

 இது வரை நாம் பார்த்துக் கொண்டு இருக்கும் விளக்கங்கள் விவரங்கள் அனைத்தும் புத்கல பரமாணுக்களின் பல்வேறு தன்மைகளைப் பார்த்துக் கொண்டு இருக்கிறோம். ஆத்மனில் அவை பந்திக்கும் பல்வேறு வகையான தன்மைகளைப் பார்த்துக் கொண்டு இருக்கிறோம். இவை வெறும் ஊகங்களோ? கற்பனை கட்டுக் கதைகளோ? அல்ல. அரஹந்த பகவானின் கேவல ஞானத்தால் அறியப்பட்டு அவருடைய திவ்யத்வனி மூலம் உயிர்களுக்கு அருளப்பட்ட கருத்துக்கள். இவை அனைத்தும் நம்முடைய கற்பனைக்கு அப்பாற்பட்டவை. ஆனால் ஆகமங்கள் வடிவில் நமக்கு கிடைக்கின்றன. இவைகளைப் படித்து விவாதித்து சிந்தித்து அவற்றின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து அறிய வேண்டியது நம் கடமை.

 

பூர்வ ஸ்பர்தகங்கள் என்றால் என்ன?

குணஸ்தானங்களில் ஒன்பதாவது அனிவிருத்தி கரண குணஸ்தானத்திற்கு முன் ஆத்மனில் இருக்கும் கர்ம வினை ஸ்பர்தகங்களுக்கு பூர்வ ஸ்பர்தகங்கள் என்று பெயர். ஏழாவது அப்ரமத்த குணஸ்தானத்தில் அதப்பிரவ்ருத்தி கரண பரிணாமத்தில் உபசமக்ஷ்ரேணி மற்றும் க்ஷபகஸ்ரேணியில் பயணிக்கும் ஆத்மனில் இருக்கும் ஸ்பர்தகங்களின் அனுபாகங்கள் அதாவது பலன் தரும் தன்மைகள், எட்டாவது அபூர்வ கரண குணஸ்தானம் வரை ஆத்மனின் தூய பரிணாமம் காரணத்தால் கர்ம வினை ஸ்பர்தகங்களின் பலன்தரும் தன்மை குறைந்து கொண்டே வரும். ஒன்பதாவது அனிவிருத்தி கரண குணஸ்தானத்தில் நுழைவதற்கு முன்னர் உள்ள கர்ம வினை ஸ்பர்தகங்களுக்கு பூர்வ ஸ்பர்தகங்கள் என்று பெயர்.

 

ஏனெனில் ஒன்பதாவது அனிவிருத்தி கரண குணஸ்தானத்தில் ஸ்பர்தகங்களின் அனுபாகங்கள் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு மிகவும் அதிகமாக குறையும் க்ஷீணமடையும். இந்த ஸ்பர்தகங்களின் பலன் தரும் தன்மை விசேஷமான அளவில் குறைவதால் இந்த குணஸ்தானத்திற்கு முன் உள்ள ஸ்பர்தகங்கள் பூர்வ ஸ்பர்தகங்கள் என்று சொல்லப்படுகின்றன.

 

அபூர்வ ஸ்பர்தகங்கள் என்றால் என்ன?

ஒன்பதாவது அனிவிருத்தி கரண குணஸ்தானத்தில் கர்ம வினை ஸ்பர்தகங்களின் பலன்தரும் தன்மைகள் அதாவது அனுபாகங்கள் இதற்கு முன் எப்போதும் இல்லாத வகையில் சமயத்திற்கு சமயம் மிகவும் குறைந்து கொண்டே வரும். இந்த சமயத்தில் இருக்கும் அனுபாகம் அடுத்த சமயத்தில் பல மடங்கு குறையும். அதற்கடுத்த சமயம் சென்ற சமயத்தில் குறைந்ததை விட மேலும் குறையும். எதன் காரணமாக இவ்வாறு நடைபெறுகிறது என்றால் அனிவிருத்தி கரண பரிணாமத்தில் ஆத்மனின் பரிணாம தூய்மையின் காரணமாக கர்மங்களின் பலன் தரும் தன்மை குறைந்து விடும். ஆத்மனுக்கு இது முன் எப்போதும் இல்லாத அபூர்வமான நிகழ்வாகும். இந்த நிலையில் இருக்கும் கர்ம வினை ஸ்பர்தகங்களுக்கு அபூர்வ ஸ்பர்தகங்கள் என்று பெயர்.

 

க்ருஷ்டி அல்லது அனுக்ருஷ்டி என்றால் என்ன?

 

உயர் குணஸ்தானத்தில் இருக்கும் ஆத்மனில் உள்ள கர்ம வினை ஸ்பர்தகங்களின் பலன் தரும் தன்மை படிப்படியாக சீரான அளவில் குறைந்து கொண்டு வரும். இப்படி கர்மங்களின் பலன் தரும் தன்மை படிப்படியாக சீராக குறைந்து வருவதற்கு க்ருஷ்டி அல்லது அனுக்ருஷ்டி என்று பெயர்.

 

பாதரக்ருஷ்டி என்றால் என்ன?

அபூர்வ ஸ்பர்தகங்களை விட  அனுபாகம் மேலும் க்ஷீணம் அடைந்த பலன் தரும் தன்மை குறைந்த ஸ்பர்தகங்கள் பாதரக்ருஷ்டி எனப்படுகிறது. இது சஞ்ஜ்வலன குரோதம் மானம் மாயை லோபம் ஆகிய ஸ்பர்தகங்கள் ஸ்தூலமாக உடைவதைக் குறிக்கும்.

 

சூக்ஷும க்ருஷ்டி என்றால் என்ன?

பாதரக்ருஷ்டி ஸ்பர்தகங்களை விட மேலும் அதிக அளவில் பலன் தரும் தன்மை குறைகின்ற ஸ்பர்தகங்களுக்கு சூக்ஷும க்ருஷ்டி என்று பெயர். இதன் உள்ளர்த்தம் என்னவென்றால் கர்ம வினை ஸ்பர்தகங்களின் பலன்தரும் தன்மைகள், ஆத்மனின் பற்றற்ற வீதராக பரிணாமம் சமயத்திற்கு சமயம் கூடிக் கொண்டே போவதால் கர்ம வினைகளின் வீரியம் மிகவும் குறைகிறது க்ஷீணம் அடைகின்றன என்று பொருள்.

 

 அடுத்து கரணாணுயோகச் சொற்களின் விளக்கம் அடங்கிய அவரது ஆறாவது ஆடியோ உரையின் விளக்கம் இன்று முதல் பதிவாகிறது.

 

மார்க்கணா ஸ்தானம்.

மார்க்கணா ஸ்தானம் என்றால் என்ன?

 

சென்ற கட்டுரையில் புத்கலங்கள் பற்றிய விளக்கங்கள் இடம் பெற்றன.

இப்போது உயிரின் அதாவது திரவ்யத்தின் பல்வேறு நிலைகளைப் பற்றிய விளக்கங்கள் சொல்லப் படுகிறது.

 

உயிர்ப் பொருள் தற்போது இருக்கும் நிலை என்ன? என்பதை ஆராய்வதே மார்க்கணா ஸ்தானம் ஆகும். "மார்க்கணா" என்றால் தேடுதல் அல்லது என்னவாக இருக்கிறது? என்று ஆராய்வது ஆகும். "ஸ்தானம்" என்றால் இடம் என்று பொருள். உயிர் எந்த இடத்தில் எவ்வாறாக இருக்கிறது? என்று ஆராய்வது ஆகும்.

 

அதாவது உயிரை பர்யாயம் அதாவது பிறவிகள் மாற்றத்தின்  அடிப்படையில் மற்றும் ஃபாவ அடிப்படையில் எப்படி? எவ்வாறு? எந்த இடத்தில் இருக்கிறது? என்று ஆராய்வது ஆகும்.

 

உயிரின் படிப்படியான முன்னேற்றங்களுக்கு  14 குணஸ்தானங்களை வரையறை செய்து இருப்பது போல உயிரை நன்கு ஆராய்ந்து பார்க்க 14 மார்க்கணா ஸ்தானங்கள் வகுக்கப்பட்டுள்ளது. அவை என்னவென்று பார்ப்போம்.

 

உயிரினை ஆராய உதவியாக உள்ள மார்க்கணாக்கள் யாவை?

கதி மார்க்கணா,

இந்திரிய மார்க்கணா,

காய மார்க்கணா,

யோக மார்க்கணா,

வேத மார்க்கணா,

கஷாய மார்க்கணா,

ஞான மார்க்கணா,

சம்யம மார்க்கணா,

தர்சனமார்க்கணா, லேஸ்யைமார்க்கணா, பவ்யத்வமார்க்கணா, சம்யக்த்வமார்க்கணா, சங்ஞி மார்க்கணா, மற்றும் ஆகாரக மார்க்கணா என்று பதினான்கு விதமான மார்க்கணாக்கள் உள்ளன. மார்க்கணா அல்லது மார்க்கணை என்றும் சொல்லலாம். இவைகளை அடிப்படையாகக் கொண்டு உயிரினை உள்ளது உள்ளவாறு சரியாக ஆராய்ந்து பார்க்க ஆத்மனின் அப்போதைய தன்மை புலனாகும்.

 

1.கதி மார்க்கணை என்றால் நான்கு விதமான ஆயுள்களில் எந்த கதியில் உயிரானது தற்போது உள்ளது? என்பதாகும். மனித கதியில் உள்ளதா?

தேவ கதியில் உள்ளதா? நரக கதியில் உள்ளதா? விலங்கு கதியில் உள்ளதா? என்று ஆராய்வது ஆகும். இந்த நான்கு வகைகளில் ஒவ்வொன்றிலும் பல்வேறு பிறவிகள் உள்ளன. அவைகளில் எந்த மாதிரியான பிறவியில் தற்போது உயிர் இருக்கிறது என்பதை பார்ப்பதாகும். கதி மார்க்கணா என்பதின் பொருள் இது தான்.

 

2.இந்திரிய மார்க்கணா.

இந்த மார்க்கணை அடிப்படையில் உயிர் ஒரு இந்திரிய உயிரா? இரண்டு இந்திரிய உயிரா? மூன்று, நான்கு, ஐந்து இந்திரிய உயிரா? என்று இந்திரிய அடிப்படையில் புலன்கள் அடிப்படையில் உயிரை பார்ப்பதாகும்.

 

3.காய மார்க்கணா.

காயம் என்றால் உடலைக் குறிக்கும். உயிர் தற்போது இருக்கும் உடல் ஔதாரிக உடலா? பரம ஔதாரிக உடலா? (அரஹந்த பகவானின் உடல் பரம ஔதாரிக உடல்) தைஜஸ உடலா? ஆகாரக சரீரமா? கார்மண சரீரமா?(கார்மண சரீரம் பார்வைக்குப் புலப்படாது. ஆத்மனின் சரீரங்களில் ஒன்று) எந்த உடலுடன் உயிர் இருக்கிறது என்று ஆராய்வது ஆகும்.

 

4.யோக மார்க்கணா.

யோகம் என்பது மன வசன காய செயல்களைக் குறிக்கும்.

 

5.வேத மார்க்கணா.

வேதம் என்பது பாலினத்தை குறிப்பது. உயிரானது ஸ்திரீ வேதம் அல்லது புருஷ வேதம் கொண்டதா? அல்லது ஆணுமற்ற பெண்ணுமற்ற நபும்சக வேதம் கொண்டதா? என்று ஆராய்வது வேத மார்க்கணா எனப்படும்.

 

6.கஷாய மார்க்கணா.

சாரித்ர மோகனீய கஷாயங்கள் 25 ல் என்னென்ன கஷாயங்களை உயிர் கொண்டிருக்கிறது என்று ஆராய்வதற்கு கஷாய மார்க்கணா எனப்படும். மித்யாத்வ உயிர்களிடம் இவை அனைத்தும் குடி கொண்டு இருக்கும். சம்யக்திருஷ்டி உயிர்களிடம் இவைகளின் இருப்பில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். இருந்து தான் ஆக வேண்டும். இல்லை என்றால் சம்யக்த்வம் கொண்ட உயிர் என்று சொல்ல முடியாது. எனவே கஷாயங்கள் அடிப்படையில் உயிர்களை ஆராய்வது கஷாய மார்க்கணா.

 

7.ஞான மார்க்கணா.

ஞான மார்க்கணா என்பது உயிரானது மதி ஞானத்துடன் உள்ளதா? ஸ்ருத ஞானம் கொண்டதா? அவதி ஞானத்துடன் உள்ளதா? மனப்பர்யய ஞானம் கொண்டதா? என்று ஆராய்வது ஞான மார்க்கணா. அரஹந்த உயிர் என்னும் போது கேவலஞானம் கொண்டது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போன்று தெரிந்த விஷயம். இப்படி ஞானம் அல்லது அறிவு சம்பந்தமாக உயிரை ஆராய்ந்து பார்ப்பது ஞான மார்க்கணா ஆகும்.

 

8.சம்யம மார்க்கணா.

சம்யமம் என்பது உயிரின் அடக்கம் அல்லது விரதங்களின். தன்மை பற்றி ஆராய்வது ஆகும். உயிரானது இந்திரிய சம்யமம் கொண்டதா? பிராணி சம்யமம் கொண்டதா? என்று ஆராய்வது சம்யம மார்க்கணா ஆகும்.

 

9. தர்சன மார்க்கணா.

உயிரானது தற்போது மித்யாத்வதரிசனத்தில் உள்ளதா? சம்யக்திருஷ்டி ஆக உள்ளதா? எந்த தரிசனம் கொண்டு உள்ளது என்பதை ஆராய்வது தரிசன மார்க்கணா ஆகும்.

 

10.லேஸ்யா மார்க்கணா.

உயிரின் லேஸ்யை அல்லது எண்ணப்போக்கு மனோபாவத்தின் தன்மை எவ்வாறு உள்ளது? என்பதை ஆராய்வது லேஸ்யா மார்க்கணா ஆகும்.

 

11.பவ்யத்வ மார்க்கணா.

உயிரானது தற்போது பவ்ய ஜீவனாக உள்ளதா? அல்லது அபவ்ய ஜீவனாக உள்ளதா? என்பதை ஆராய்வது பவ்யத்வமார்க்கணா ஆகும்.

 

12.சம்யக்த்வ மார்க்கணா.

உயிரானது சம்யக்த்வத்துடன் உள்ளதா? மித்யாத்வத்துடன் உள்ளதா? என்று ஆராய்வது சம்யக்த்வமார்க்கணா ஆகும்.

 

13.சங்ஞி மார்க்கணா.

சங்ஞி என்றால் மனதைக் குறிக்கும். உயிரானது மனமுள்ள உயிராக உள்ளதா? மனமற்ற உயிராக உள்ளதா? என்று ஆராய்வது சங்ஞி மார்க்கணா ஆகும்.

 

14. ஆகாரக மார்க்கணா.

இப்படி பதினான்கு மார்க்கணாக்கள் வழியாக ஆத்மனின் அப்போதைய நிலையை ஆராய்ந்து பார்ப்பது மார்க்கணா ஸ்தானம் எனப்படுகிறது. மார்க்கணாக்கள் மூலம் ஸத்பாவ அடிப்படையிலும் அஸத்பாவ அடிப்படையிலும் தேடப்படும். அதாவது உயிரானது ஸத்பாவ அடிப்படையில் இன்ன நிலையில் இருக்கிறது, அஸத்பாவ அடிப்படையில் அந்த நிலையில் இல்லை என்றும் ஆராய்வதாகும்.

 

மார்க்கணா பற்றிய விவரங்கள் முழுமையாக தரப்படவில்லை. சுருக்கமாக தான் உள்ளது. கட்டுரையில் பிரவசனத்தை அப்படியே சொல்லவில்லை சுருக்கமாக எழுதி உள்ளேன். திரவிய சங்க்ரஹம் என்ற ஆகமத்தில் மார்க்கணை பற்றிய விரிவான விளக்கம் உள்ளது என்று சாஸ்திரியார் சொல்லி இருக்கிறார். அந்த ஆகமம் தமிழிலும் உள்ளது அதைப் படித்து விளக்கம் பெறலாம்.

இந்த பதினான்கு மார்க்கணா ஸ்தானங்களில் குறிப்பாக சம்யக்த்வ மார்க்கணையை கொண்டு உயிரை ஆராய்ச்சி செய்யும் வழியை பார்ப்போம். உயிரில் அதாவது ஆத்மனில் ஞானகுணம், சாரித்ர குணம் இருப்பது போல "ஸ்ரத்தாகுணம்" என்பது இயல்பான இயற்கையான குணம் ஆகும்இந்த ஸ்ரத்தாகுணம் தான் சம்யக்தர்சனம் ஏற்பட முழுமுதற் காரணமாக அமைகிறது. சம்யக்த்வ மார்க்கணை ஸ்ரத்தாகுணம் அடிப்படையில் தான் பார்க்கப்படுகிறது.

 

சம்யக்த்வ மார்க்கணையில் உயிரானது மித்யாத்வத்தில் உள்ளதா? அல்லது சம்யக்த்வத்தோடு உள்ளதா? என்று ஆராய்வது ஆகும். மேலும் சம்யக்த்வ மார்க்கணை ஆறு விதமாக பகுக்கப்பட்டு ஆராய்ச்சி செய்யப்படுகிறது.

 

அவைகள்

மித்யாத்வம்

ஸாஸாதன மித்யாத்வம்

மிஸ்ர மித்யாத்வம்

ஔபசமிக சம்யக்த்வம்

க்ஷயோபசமிக சம்யக்த்வம்

க்ஷாயிக சம்யக்த்வம்

என்று ஆறு வகைகளில் சம்யக்த்வ மார்க்கணையின் அடிப்படையில் உயிர்களை ஆராய்ந்து பார்க்க உபயோகப் படுகின்றன.

 

உயிரானது மித்யாத்வத்தில் உள்ளதா? என்பதை அதன் மித்யாத்வ பாவனை அல்லது பாவத்தை அதாவது எண்ணங்கள், ஒழுங்கீனம், செயல்களைக்  கொண்டு, உயிர் மித்யாத்வத்தோடு உள்ளது அல்லது இல்லை என்று அறியப்படும். மித்யாத்வமானது உயிரை அனாதி காலங்களாக வாட்டி வதைத்துக் கொண்டு இருக்கிறது.

 

ஸாஸாதன மித்யாத்வம்.

இந்த நிலையில் உயிரானது மித்யாத்வமும் இல்லாமல் சம்யக்த்வமும் இல்லாமல் இரண்டுமற்ற நிலையில் திரிசங்கு நிலையாக இருக்கும். இங்கு சம்யக்த்வம் இருக்கும் ஆனால் அது ச்சல மல அகாட கோஷத்துடன் இருக்கும். இந்த தோஷமானது கேவல ஞானிகள் மட்டுமே அறிவர். சாதாரண க்ஷயோபசம ஞானத்திற்கு புலப்படாததுஆக இங்கு சம்யக்த்வம் இருந்தாலும் தோஷங்கள் காரணமாக, மித்யாத்வம் உபசமத்தில் இருந்தாலும், மித்யாத்வம்  மட்டுமே பிரதானப்படுத்தப் படுகிறது. ஆகையால் இங்கும் மித்யாத்வம் தான் உள்ளது.

 

மிஸ்ர மித்யாத்வம்.

உயிரானது மித்யாத்வம் சம்யக்த்வம் இரண்டும் கலந்த நிலையில் இருக்கும். இங்கும் மித்யாத்வம் மட்டும் தான் பிரதானப்படுத்தப் படுகிறது.

 

 ஔபசமிக சம்யக்த்வம்.

 

அனந்தானுபந்தி கர்ம வினைகளின் உபசமம் மற்றும் மித்யாத்வ ப்ரக்ருதியின் (4+1) உபசமம் மற்றும் தணிவு நிலையில் ஔபசமிக சம்யக்த்வம் உயிரில் முதன் முதலாக ஏற்படுகிறது.

 

முதன்முதலாக உயிரில் தோன்றும் சம்யக்த்வம் ஔபசமிக சம்யக்த்வம் ஆகும். அனாதி மித்யாதிருஷ்டிகளுக்கு முதலில் ஏற்படும் சம்யக்த்வம் ஔபசமிக சம்யக்த்வமாகத்தான் இருக்கும்.

 

அனாதி மித்யாதிருஷ்டி என்றால் என்ன?

எந்த உயிருக்கு இதுநாள் வரையில் சம்யக்த்வம் ஏற்படவே இல்லையோ? அந்த ஜீவனுக்கு "அனாதி மித்யாதிருஷ்டி" என்று பெயர். அனாதி காலமாக மித்யாத்வத்திலேயே உழன்று கொண்டு இருக்கின்ற ஜீவன் இது நாள் வரை நற்காட்சி பெறவில்லையோ? அந்த ஜீவன் அனாதி மித்யாதிருஷ்டி ஆகும்.

 

இந்த அனாதி மித்யாதிருஷ்டிக்கு முதன்முதலாக ஏற்படும் சம்யக்த்வம் (4+1) ஔபசமிக சம்யக்த்வம் மட்டும் தான்.

 

ஔபசமிக சம்யக்த்வம் எவ்வளவு நேரம் இருக்கும்?

முதன்முதலாக உயிருக்கு ஏற்படும் சம்யக்த்வம் ஒரு "அந்தர் முகூர்த்த" (குறைந்த அளவு ஒரு ஜகன்ய அந்தர்  முகூர்த்தம் அதிகபட்சம் உத்கிருஷ்ட அந்தர் முகூர்த்தம்) நேரம் மட்டுமே இருக்கும். அந்த நேரம் முடிந்த பிறகு உயிரை மீண்டும் மித்யாத்வம் ஆட்கொண்டு விடும் அல்லது மித்யாத்வம் சூழ்ந்து கொண்டு விடும்.

 

நீண்ட காலம் மழை நீர் தேங்கிய ஒரு சிறிய குளத்தில் நீர் பச்சைப் பசேலென்று பாசிகள் படர்ந்து நிறைந்து இருக்கிறது. அதில் ஒரு கல்லை எறிகிறோம் என்று வைத்துக் கொள்வோம். நீர்ப்பரப்பில் கல் விழும் போது அங்கு நீரானது கல்லின் அழுத்தம் காரணமாக பாசிகள் விலகி நீர்ப்பரப்பு சற்று பார்வைக்கு புலப்படும். ஒரு வினாடி நேரம் கழித்து கல் விழுந்த இடத்தில்  பச்சை நிற பாசிகள்மீண்டும்  சமமாகப் பரவி நீர்ப்பரப்பு பார்வைக்கு பச்சைப் பசேலென்று சமமாக முன்பு இருந்ததைப்  போல இருக்கும். அதுபோல சம்யக்த்வம் ஏற்படும்  அந்த ஒரு அந்தர் முகூர்த்த நேரம் வரை மித்யாத்வம் விலகி இருக்கும். அந்தர் முகூர்த்த நேரம் முடிந்ததும் உயிரை மீண்டும் மித்யாத்வம் ஆக்கிரமித்து விடும்.

 

ஒரு முறை சம்யக்த்வம் ஏற்பட்டாலும் மீண்டும் மீண்டும் சம்யக்த்வம் பெற முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும். ஏனெனில் மித்யாத்வம் உயிரை அவ்வளவு எளிதாக விட்டு விடாது. ஸாதிமித்யாதிருஷ்டிக்கு (4+1) ,(4+2) மற்றும் (4+3) இந்த மூன்று ஔபசமிக சம்யக்த்வங்கள் ஏற்படும். எத்தனை முறை ஔபசமிக சம்யக்த்வம் ஏற்பட்டாலும் அத்தனை தடவையும் பிரதமோபசம சம்யக்த்வம் என்று தான் ஆகமங்கள் கூறுகின்றன

 

க்ஷயோபசமிக சம்யக்த்வம் என்றால் என்ன?

நிகழ் காலத்தில் சர்வகாதி கர்ம வினைகளின் உதயாபாவிக் க்ஷயம். உண்மையில் க்ஷயம் கிடையாது. கர்ம வினை உதயத்திற்கு வரவில்லை ஆகையால் க்ஷயம் என்று ஆகமங்கள் கூறுகின்றன.

 

எதிர்காலத்தில் உதயத்திற்கு வரவேண்டிய சர்வகாதிக் கர்மங்களின் ஸதவஸ்தாரூப உபசமம். அதாவது உதயத்திற்கு வரவேண்டிய சர்வகாதிக் கர்மங்கள் உதயத்திற்கு வராமல் ஸத்தாவிலேயே இருப்பாகத் தங்கி விடுகின்றன. பலனைத் தரமுடியாமல் ஸத்தாவில் இருப்பாக உள்ளன. இதற்கு ஸதவஸ்தாவடிவ உபசமம் என்று பெயர்.

 

நிகழ் காலத்தில் தேசகாதி கர்ம வினைகள் உதயத்தில் இருக்கும். தேசகாதி கர்ம வினைகள் உதயம். இந்த மூன்று தன்மைகளும் சேர்ந்ததே க்ஷயோபசம சம்யக்த்வம் ஆகும்.

 

க்ஷயோபசமிக சம்யக்த்வம் எவ்வளவு நேரம் இருக்கும்?

ஆகமங்களின் கூற்றுப்படி 66 கோடி கடற்காலங்கள் வரை க்ஷயோபசம சம்யக்த்வம் நீடித்து இருக்கும்.

 

க்ஷாயிக சம்யக்த்வம் என்றால் என்ன?

முதலில் சம்யக்த்வத்தின் ஏழு மூலக்கூறுகள் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

 

சாரித்ர மோகனீயத்தின் அனந்தானுபந்தி குரோதம், மானம், மாயை, லோபம் நான்கு,

தரிசன மோகனீயத்தின் மித்யாத்வம், சம்யக்மித்யாத்வம் மற்றும் சம்யக்த்வம் இவை மூன்றும் சேர்ந்த ஏழு ப்ரக்ருதிகள் சம்யக்த்வத்தின் ஏழு மூலக்கூறுகள் அல்லது மூல பேதங்கள்  ஆகும்.

 

இந்த ஏழு மூலக்கூறுகள் அனைத்தும் முற்றிலும் அழிய வேண்டும். இவை ஏழும் அழிந்த நிலையில் தோன்றும் சம்யக்த்வம் க்ஷாயிக சம்யக்த்வம் ஆகும். க்ஷாயிக சம்யக்த்வம் எடுத்த எடுப்பிலேயே தோன்றி விடாது. முதலில் க்ஷயோபசமிக சம்யக்த்வம் தோன்ற வேண்டும். அதற்கடுத்த தீவிர முயற்சிகளுக்குப் பிறகே க்ஷாயிக சம்யக்த்வத்தை உயிரானது பெறமுடியும்.

 

க்ஷாயிக சம்யக்த்வம் எவ்வளவு நேரம் இருக்கும்?

க்ஷாயிக சம்யக்த்வம் தோன்றி விட்ட உயிருக்கு முடிவற்ற காலம் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும். மாறாது. சித்த நிலை அடைந்த பிறகும் அதற்குப் பிறகும் எக்காலமும் இருக்கும் அழியவே அழியாது.

 

சம்யக்த்வ மார்க்கணையின் இந்த ஆறு விதமான தன்மைகளில் உயிரானது எங்கே இருக்கிறது? அல்லது இல்லை என்று ஆராய்வது சம்யக்த்வ மார்க்கணையின் வழியாகும். அதாவது உயிர் மித்யாத்வத்தில் உள்ளதா? ஸாஸாதன மித்யாத்வத்தில் உள்ளதா? மிஸ்ர மித்யாத்வம் கொண்டதா? ஔபசமிக சம்யக்த்வம் உடையதா? க்ஷயோபசமிக சம்யக்த்வம் உடையதா? க்ஷாயிக சம்யக்த்வத்தில் உள்ளதா? உயிர் எவ்விதமான சம்யக்த்வத்துடன் உள்ளது அல்லது மித்யாத்வத்தின் மூன்று தன்மைகளில் எதில் உள்ளது? என்று ஆராய்வது சம்யக்த்வமார்க்கணா ஆகும். இந்த ஆறு விதமான தன்மைகளில் உயிர் ஏதாவது ஒரு தன்மையில் கண்டிப்பாக இருக்கும்.

 

அடுத்து ஔபசமிக சம்யக்த்வத்தின் மேலும் சில அம்சங்கள் பற்றி பார்ப்போம்.

 

அனாதி மித்யாதிருஷ்டிக்கு சாரித்ர மோகனீயத்தின் அனந்தானுபந்தி குரோதம் மானம் மாயை லோபம் ஆகிய நான்கு அதனோடு கூட தரிசன மோகனீயத்தின் மித்யாத்வ ப்ரக்ருதி ஒன்று இவை ஐந்தும் உபசமம் அடையும் போது ஸ்ரத்தாகுணத்தில் சம்யக்தர்சனம் அதாவது நற்காட்சி உண்டாகிறது. அனாதி மித்யாதிருஷ்டி என்றால் இதுவரை சம்யக்த்வமே அடையாத ஜீவன் "அனாதி மித்யாதிருஷ்டி" என்று ஏற்கனவே பார்த்துள்ளோம்.

 

ஸாதிமித்யாதிருஷ்டி என்பது யாரைக் குறிக்கிறது?

அனாதி மித்யாதிருஷ்டி ஆக இருந்த ஜீவன் சம்யக்த்வம் அடைந்த பிறகு அந்த சம்யக்த்வம் ஒரு அந்தர் முகூர்த்த நேரத்திற்கு மேல் நீடிக்க முடியாத நிலையில் மீண்டும் மித்யாதிருஷ்டி ஆக மாறி விடுகிறது.

 

மீண்டும் முயற்சி செய்து அனந்தானுபந்தி குரோதம் மானம் மாயை லோபம் மற்றும் மித்யாத்வத்தை விலக்கி மீண்டும் சம்யக்த்வம் அடையும். இப்படி ஒரு முறை அல்ல பலமுறை மீண்டும் மீண்டும் முயற்சி செய்து சம்யக்த்வம் பெறும். இப்படி பலமுறை நற்காட்சி பெற்ற ஜீவன் ஸாதிமித்யாதிருஷ்டி என்று ஆகமங்கள் கூறுகின்றன.

 

இந்த ஸாதிமித்யாதிருஷ்டி சம்யக்த்வம் பெறுவதில் சில நுணுக்கமான அம்சங்கள் உள்ளன.

அனந்தானுபந்தி கஷாயங்கள் நான்கு அதனோடு கூட மித்யாத்வ ப்ரக்ருதி சேர்ந்த ஐந்து ப்ரக்ருதிகளின் உபசமத்தின் காரணமாக அனாதி மித்யாதிருஷ்டிக்கு ஏற்படும் நற்காட்சி பிரதமோபசம சம்யக்த்வம் என்று ஆகமங்கள் கூறுகின்றன. அதற்கு பிறகு எத்தனை முறை ஸாதிமித்யாதிருஷ்டி சம்யக்த்வம் பெற்றாலும் அவை அத்தனைக்கும் பிரதமோபசம சம்யக்த்வம் என்று தான் ஆகமங்கள் கூறுகின்றன.

 

அனாதி மித்யாதிருஷ்டிக்கு அனந்தானுபந்தி கஷாயங்கள் நான்கு மித்யாத்வ ப்ரக்ருதி ஒன்று சேர்ந்த (4+1) ஐந்து ப்ரக்ருதிகளின் உபசமத்தில் தான் ஸ்ரத்தாகுணத்தில் சம்யக்த்வ பர்யாயம் அதாவது மாற்றம் அதாவது நற்காட்சி  ஏற்படும்.

 

அனந்தானுபந்தி கஷாயங்கள் நான்கு மித்யாத்வ ப்ரக்ருதி சம்யக்மித்யாத்வ ப்ரக்ருதி இரண்டு சேர்ந்த (4+2) ஆறு ப்ரக்ருதிகளின் உபசமத்தின் காரணமாக ஸ்ரத்தாகுணத்தில் சம்யக்த்வ பர்யாயம் ஸாதிமித்யாதிருஷ்டிக்கு ஏற்படும்.

 

அனந்தானுபந்தி கஷாயங்கள் நான்கு மித்யாத்வ ப்ரக்ருதி சம்யக்மித்யாத்வ ப்ரக்ருதி மற்றும் சம்யக்த்வ ப்ரக்ருதி இவை மூன்றும் சேர்ந்த (4+3) ஏழு மூல ப்ரக்ருதிகளின் உபசமத்தின் காரணமாக ஸ்ரத்தாகுணத்தில் சம்யக்த்வ பர்யாயம் ஸாதிமித்யாதிருஷ்டிக்கு ஏற்படும்.

 

இவ்வாறு ஐந்து, ஆறு மற்றும் ஏழு தரிசன மூல  ப்ரக்ருதிகளின் உபசமத்தின் காரணமாக உயிர்களுக்கு மூன்று விதமாக  ஔபசமிக சம்யக்த்வம் ஏற்படுகிறது. இவை மூன்றுமே ஔபசமிக சம்யக்த்வம் தான். அதுவும் பிரதமோபசம சம்யக்த்வம் தான். இவை அனைத்தும் ஒரு அந்தர் முகூர்த்த நேரத்திற்கு மேல் நீடிக்காது. அப்படியே நீடிப்பதாக இருந்தாலும் க்ஷயோபசம சம்யக்த்வ நிலை அடைந்த பிறகு க்ஷயோபசம நிலையில் நீடிக்கும்.

 

க்ஷயோபசமிக சம்யக்த்வம் பற்றி மீண்டும் பார்க்க வேண்டியுள்ளது.

 

சம்யக்த்வத்தின் ஏழு மூலக்கூறுகள் யாவை?

சாரித்ர மோகனீயத்தின் அனந்தானுபந்தி குரோதம் மானம் மாயை லோபம் ஆகிய நான்கு,

 

தரிசன மோகனீயத்தின் மித்யாத்வம்

சம்யக்மித்யாத்வம்

சம்யக்த்வம்

இவை மூன்று

ஆக இந்த ஏழு ப்ரக்ருதிகள் சம்யக்த்வத்தின் ஏழு மூலக்கூறுகள் அல்லது மூலபேதங்கள் என்று ஆகமங்கள் கூறுகின்றன.

 

இவற்றில் சம்யக்த்வம் என்ற ஏழாவது ப்ரக்ருதி உயிருக்கு  நற்காட்சி ஏற்படுவதை எப்படி தடை செய்யும் என்ற ஐயம் ஏற்படுகிறது. இதற்கான விளக்கம் ஸாஸாதன குணஸ்தானம் பற்றி விளக்கும் போது இந்த சந்தேகம் காற்றாகப் பறந்து விடும். இப்போதைக்கு ச்சல மல அகாட தோஷங்கள் உள்ள சம்யக்த்வம் என்று மட்டும் புரிந்து கொண்டால் போதும். இந்த தோஷமானது யாருக்கு உள்ளதோ? அவருக்கே கூட தெரியாது ஆனால் கேவல ஞானிகள் மட்டுமே அறிவர் என்று ஆகமங்கள் கூறுகின்றன. அவ்வளவு நுண்ணிய தோஷங்கள் அவை சம்யக்த்வ குணத்தை மாசு படுத்துகின்றன. அதனால் சம்யக்த்வம் ஏற்பட தடை உள்ளது என்று பொருள்.

 

இந்த ஏழு மூலக்கூறுகளில் சாரித்ர மோகனீயத்தின் அனந்தானுபந்தி கஷாயங்கள் நான்கும் சர்வகாதி ப்ரக்ருதிகள்.

 

தரிசன மோகனீயத்தின் மித்யாத்வம் மற்றும் சம்யக்மித்யாத்வம் இரண்டும் சர்வகாதி ப்ரக்ருதிகள்.

 

சம்யக்த்வ ப்ரக்ருதி மட்டும் தேசகாதி ப்ரக்ருதி ஆகும்.

 

மேலும் மோகனீய கர்ம வினைகள் அனைத்திற்கும் உபசமம் ஏற்படும் என்று ஆகமங்கள் கூறுகின்றன.

 

இப்போது க்ஷயோபசமத்தின் இலக்கணம் என்ன என்று மீண்டும் பார்ப்போம்.

 

ஜீவனானது தனது சுத்தாத்மனில் ஆழ்ந்து தூய பாவனையில் மூழ்கும் போது,

 

1.நிகழ் காலத்தில் சர்வகாதி கர்ம வினைகளின் உதயாபாவிக் க்ஷயம்.

சர்வ காதி கர்மங்களான அனந்தானுபந்தி கஷாயங்கள் நான்கு மற்றும் தரிசன மோகனீயத்தின் சர்வகாதி கர்மங்களான  மித்யாத்வம், சம்யக் மித்யாத்வம் இவைகள் ஆறின்  உதயாபாவிக் க்ஷயம், அதாவது நிகழ் காலத்தில் உதயத்திற்கு வரவேண்டிய அனந்தானுபந்தி குரோதம் மானம் மாயை லோபம் இவை நான்கு, தரிசன மோகனீயத்தின் மித்யாத்வம் சம்யக்மித்யாத்வம் இரண்டு, இவைகள் ஆறும்  உதயாபாவிக் க்ஷய அடிப்படையில் உதயத்திற்கு வராமல் உபசமமாகி தணிந்து இருக்கின்றன. உபசமமாகி உதயத்திற்கு வராமல் இருப்பதால் க்ஷயம் என்று ஆகமங்கள் கூறுகின்றன . ஆனால் உண்மையில் க்ஷயம் கிடையாது. பின்னர் இந்த கர்ம வினைகள் உதயத்திற்கு வரும் ஆனால் இப்போது வரவில்லை அவ்வளவு தான்.

 

2.எதிர்காலத்தில் உதயத்திற்கு வர வேண்டிய சர்வகாதிக் கர்ம வினைகளின் ஸதவஸ்தாரூப உபசமம்.

 

சாரித்ர மோகனீயத்தின் சர்வகாதி கர்மங்களான அனந்தானுபந்தி குரோதம் மானம் மாயை லோபம் நான்கு, தரிசன மோகனீயத்தின் சர்வ காதி கர்ம வினைகளான மித்யாத்வம் மற்றும் சம்யக்மித்யாத்வ பிரக்ருதிகள் இரண்டு, இவைகள் ஆறும் ஸதவஸ்தாரூப உபசமம் அடைதல். இவை ஆறும் உதயத்திற்கு வராமல் ஸத்தாவிலேயே இருப்பாக தங்கி விடுவது ஸதவஸ்த்தாவடிவ உபசமம் ஆகும்.

 

3. நிகழ் காலத்தில் தேசகாதி கர்ம வினைகளின் உதயம்.

 

தரிசன மோகனீயத்தின் தேச காதி கர்ம வினையான  சம்யக்த்வ ப்ரக்ருதியின் உதயம்

இந்த மூன்று நிகழ்வுகள் சேர்ந்து ஆத்மனின் ஸ்ரத்தாகுணத்தில் சம்யக்தர்சன குணம், அதாவது தூய்மை தன்மை நற்காட்சி  ஏற்படுகிறது. இது தான் க்ஷயோபசம சம்யக்த்வத்தின் செயல் முறை.

 

க்ஷயோபசமிக சம்யக்த்வம் எவ்வளவு நேரம் இருக்கும்?

க்ஷயோபசமிக சம்யக்த்வம் 66 கோடி கடற்காலங்கள் வரை நீடித்து இருக்கும் என்று அதன் ஸ்திதி கால அளவை ஆகமங்கள் கூறுகின்றன.

 

உயிருக்கு முதன் முதலாக ஏற்படும் சம்யக்த்வம் ஔபசமிக சம்யக்த்வம். அதற்கு அடுத்து ஏற்படுவது க்ஷயோபசமிக சம்யக்த்வம் ஆகும். அடுத்து மூன்றாவதாக ஏற்படுவது க்ஷாயிக சம்யக்த்வம் ஆகும். இந்த வரிசையில் எந்த மாற்றமும் இருக்காது. ஆகையால் நமக்கு என்ன சம்யக்த்வம் இருந்தாலும் அது பற்றிய  கவலையை விட்டு விட்டு புதிதாக சம்யக்த்வம் பெறப் போவதைப் போன்று தீவிரமாக ஆத்மனில் தோய முயலுவோமாக. அப்போது தான் மோக்ஷ மார்க்கத்தில் சரியான பாதையில் நாம் செல்ல முடியும்.

 

க்ஷாயிக சம்யக்த்வம் என்றால் என்ன?

 

சாரித்ர மோகனீயத்தின் அனந்தானுபந்தி குரோதம் மானம் மாயை லோபம் ஆகிய நான்கு,

தரிசன மோகனீயத்தின் மித்யாத்வம் சம்யக்மித்யாத்வம் மற்றும் சம்யக்த்வம் ஆகிய மூன்று இவை அனைத்தும் சேர்ந்து ஏழு கர்ம வினைகளையும் உயிரானது தன்னுடைய சுய முயற்சியால் முற்றிலும் அழித்த பிறகு ஆத்மனின் ஸ்ரத்தாகுணத்தில் ஏற்படும் முற்றிலும் தூய்மையான பர்யாயம் அல்லது சம்யக்த்வம் க்ஷாயிக சம்யக்த்வம் என ஆகமங்கள் கூறுகின்றன.

 

இப்படி கர்ம வினைகள் ஏழினையும் அழித்த பிறகு உண்டாகும் க்ஷாயிக சம்யக்த்வம் ஆத்மனை விட்டு விலகாது. க்ஷாயிக சம்யக்த்வத்துடன் க்ஷபக ஸ்ரேணியில் ஏறிய பின்னர் சித்த நிலையை குறுகிய காலத்தில் பெற்று விடும். சித்த நிலையிலும் முடிவில்லாத காலமும் க்ஷாயிக சம்யக்த்வம் நிரந்தரமாக நீடித்து இருக்கும். இதை நீ பார்த்தாயா? என்று ஒரு சிலர் கேட்கலாம். இது ஆகமங்கள் சொல்கின்றன, அதை பிரவசனத்தில் கேட்டு எழுதுகிறேன் அவ்வளவு தான்.

 

விஸய்யோஜனம் என்றால் என்ன?

 

அனந்தானுபந்தி குரோதம் மானம் மாயை லோபம் ஆகிய நான்கு கர்ம வினைகளின் தீவிர பலன் தரும் தன்மை சாரித்ர மோகனீய கர்மங்களின் அனந்தானுபந்தி கர்மங்களில் இருந்து  மீதமுள்ள 21 கர்ம வினைகளில் சங்க்ரமனம் அடைவதை அதாவது பலன் தரும் தன்மை குறைந்து மாற்றம் அடைவதற்கு "விஸய்யோஜனம்" என்று ஆகமங்கள் கூறுகின்றன. இங்கு அனந்தானுபந்தி கர்மங்கள் தங்களின் பலன் தரும் தன்மையை அனந்தானுபந்தி தவிர்த்த மற்ற 21 கர்மங்களில் மாற்றம் செய்து உபசமம் தான் ஆகின்றன. ஆனால் அவை அழியவில்லை இதனை மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும்.

 

மேலும் இன்னும் ஒரு  தகவலையும் சொல்ல வேண்டும்.

 

அனந்தானுபந்தி கர்மங்களின் விஸய்யோஜனமானது நான்காவது அவிரத குணஸ்தானத்தில் ஏற்படும்.

ஐந்தாவது தேச விரத குணஸ்தானத்தில் ஏற்படும்.

ஆறாவது விழிப்புணர்வு குறைந்த பிரமத்த குணஸ்தானத்தில் ஏற்படும். மற்றும் ஏழாவது ஸாதிசய அப்ரமத்த குணஸ்தானத்தில் ஏற்படும். இவ்வாறு 4,5,6 மற்றும் 7 குணஸ்தானங்களிலும்  விஸய்யோஜனம் ஏற்படும் என்று ஆகமங்கள் கூறுகின்றன. ஆனால் அவற்றின் அளவு அந்தந்த குணஸ்தான அடிப்படையில் படிப்படியான ஏற்றங்களைக் கொண்டிருக்கும்.

ஸ்ரேணிகளில் ஏறுபவர்கள் யார்?

 

ஏழாவது ஸாதிசய அப்ரமத்த குணஸ்தானத்தில் உள்ள மிகவும் அபூர்வமான ஆன்ம அனுபவங்களைப் பெற்று உள்ள ஏழாவது ஸாதிசய அப்ரமத்த குணஸ்தான வர்த்தி, முனிவர்களில் த்விதியோபசம சம்யக்த்வம் பெற்றவர்கள் உபசம ஸ்ரேணியிலும் ஏற்கனவே க்ஷாயிக சம்யக்த்வம் பெற்றவர்கள் க்ஷபக ஸ்ரேணியிலும் ஏறுவர். ஸ்ரேணிகளில் பயணம் செய்யும் தகுதி திகம்பர முனிவருக்கு மட்டுமே உண்டு. ஆறாவது குணஸ்தானத்தில் இருந்தே திகம்பர முனி நிலை என்பதைப் பவ்யர்கள் அனைவரும் அறிவீர்கள்.

 

த்விதியோபசம சம்யக்த்வம் பெற்ற முனிவர் 8,9,10 மற்றும் 11 குணஸ்தானம் வரை செல்வர். பின்னர் அதற்கு மேற்பட்ட குணஸ்தானத்தில் செல்ல இயலாது கால க்ஷயம் அல்லது பவக்ஷயம் ஏற்பட்டதும் கீழ் குணஸ்தானங்களில் வந்து விடுவர். இது பற்றிய விரிவான விளக்கம் பதினோராவது உபசாந்த மோஹ கஷாய குணஸ்தானத்தில் விரிவாக பேசப்படும். பவக்ஷயம் என்பது பிறவி முடிவு அல்லது மரணத்தைக் குறிக்கும். காலக்ஷயம் என்பது குணஸ்தானம் முற்றுப் பெறும் காலத்தைக் குறிக்கும்.

 

க்ஷாயிக சம்யக்த்வம் பெற்ற முனிவர் 8,9,10,வரை சென்று 11 குணஸ்தானத்தை தவிர்த்து 12,13,14 குணஸ்தானங்களில் தடைகளின்றி பயணித்து அஷ்ட கர்ம வினைகளையும் வேரோடு அழித்து மோக்ஷம் அடைவர்.

மூன்று சம்யக்த்வங்கள் பற்றி மீண்டும் ஒருமுறை சுருக்கமாக பார்ப்போம்.

 

ஔபசமிக சம்யக்த்வம்.

அனாதி மித்யாதிருஷ்டிக்கு அனந்தானுபந்தி கஷாயங்கள் நான்கு, மித்யாத்வ ப்ரக்ருதி ஒன்று இவை ஐந்தின் உபசமத்தால் ஆத்மனின் ஸ்ரத்தாகுணத்தில் ஏற்படும் தூய்மை அல்லது நற்காட்சி ஔபசமிக சம்யக்த்வம் ஆகும். அதுவே பிரதமோபசம சம்யக்த்வம் எனப்படும்.

 

ஸாதிமித்யாதிருஷ்டிக்கு மேற்சொன்ன தன்மைகள் கொண்ட ஔபசமிக சம்யக்த்வம்,

 

அனந்தானுபந்தி கர்மங்கள் நான்கு,

மித்யாத்வம் மற்றும் சம்யக்மித்யாத்வம் இரண்டும் சேர்த்து ஆறு பிரக்ருதிகளின் உபசமம் காரணமாக உண்டாகும் ஔபசமிக சம்யக்த்வம்,

 

அனந்தானுபந்தி கர்மங்கள் நான்கு,

மித்யாத்வம் சம்யக்மித்யாத்வம் மற்றும் சம்யக்த்வம் ஆகிய மூன்று

மொத்தம் ஏழு பிரக்ருதிகளின் உபசமம் காரணமாக உண்டாகும் ஔபசமிக சம்யக்த்வம் ஏற்படும். இவை அனைத்தும் பிரதமோபசம சம்யக்த்வம் ஆகும்.

 

க்ஷயோபசமிக சம்யக்த்வம்.

நிகழ் காலத்தில் உதயத்திற்கு வரவேண்டிய சர்வகாதிக் கர்மங்களின் உதயாபாவிக் க்ஷயம்,

 

எதிர்காலத்தில் உதயத்திற்கு வர வேண்டிய சர்வகாதிக் கர்மங்களின் ஸதவஸ்தாரூப உபசமம்,

 

நிகழ் காலத்தில் தேசகாதி கர்மங்களின் உதயம் இவைகள் மூன்றும் சேர்ந்து ஆத்மனின் ஸ்ரத்தாகுணத்தில் ஏற்படும் தூய்மை அல்லது நற்காட்சி ஔபசமிக சம்யக்த்வம்.

 

க்ஷாயிக சம்யக்த்வம்.

சாரித்ர மோகனீயத்தின் அனந்தானுபந்தி கர்மங்கள் நான்கு மற்றும் தர்சன மோகனீய கர்மங்கள் மூன்று ஆக ஏழு மூலக்கூறுகள் அனைத்தையும் அழித்த பிறகு ஆத்மனின் ஸ்ரத்தாகுணத்தில் ஏற்படும் தூய்மை அல்லது நற்காட்சி க்ஷாயிக சம்யக்த்வம் ஆகும்.

 

இவை பற்றித் திரும்பவும் ஏன் கூறுகின்றேன் என்றால் அடுத்து ஆத்மனின் ஃபாவங்கள் பற்றிய விளக்கம் வரப்போகிறது. திரும்பத் திரும்ப இதே சொற்கள் உபயோகிக்கப்படும். ஆனால் சொல்லப்படும் கருத்துக்கள் வேறாக இருக்கும். ஆகையால் வார்த்தைகளை மட்டும் பார்த்து ஒதுக்கி விடக் கூடாது என்பதற்காக இவைகளை சுருக்கமாக விவரிக்க வேண்டி வந்தது.

 

இது வரை வந்த கருத்துக்கள் அனைத்தும் திருவாளர் ஜெயராஜ் சாஸ்திரி அவர்களுடைய ஆறாவது ஆடியோவில் இருந்து கேட்டு அதன் உட்கருத்துக்கள் எழுதப்பட்டன. நாளை அவருடைய ஏழாவது ஆடியோவில் இருந்து கரணாணுயோகக் கருத்துக்கள் பதிவு செய்யப்படும்.

 

ஔபசமிகௌ க்ஷாயிகௌ பாவௌ மிஸ்ரஸ்ச்ச ஜீவஸ்ய ஸ்வதத்வ மௌதயிக பாரிணாமிகௌ

 

இந்த சூத்திரம் தத்வார்த்த சூத்திரம் இரண்டாவது அதிகாரத்தில் உள்ள முதல் சூத்திரம் ஆகும். இதில் ஆத்மனின் அசாதாரணமான ஐந்து ஃபாவங்களைப் பற்றி சுருக்கமாக குறிப்பிடுகிறது.

 

ஆத்மனின் அசாதாரண ஃபாவங்கள் எத்தனை வகைப்படும்?

 

1.ஔபசமிக ஃபாவம்,

2.க்ஷாயிக ஃபாவம்,

3. க்ஷயோபசமிக ஃபாவம்,

4. ஔதயிக ஃபாவம்,

5. பரமபாரிணாமிக ஃபாவம்

என்று உயிரின் அசாதாரண ஃபாவங்கள் ஐந்து வகைகளாக உள்ளன.

 

அசாதாரண ஃபாவங்கள் என்றால் என்ன?

 

உயிருக்கு அதாவது ஆத்மனுக்கு மட்டுமே உள்ள   பிரத்யேகமான சிறப்புத் தன்மைகளுக்கு அசாதாரண ஃபாவங்கள் என்று பெயர். இந்த சிறப்புத் தன்மைகள் இல்லை என்றால் அது உயிர்ப் பொருளாகக் கருதமுடியாது. ஜடப் பொருளாக மட்டுமே இருக்கும். ஆத்மனுக்கே உண்டான தனித்துவமான சிறப்பான தன்மை ஃபாவம் எனப்படும்.

 

இங்கு ஃபாவம் என்பது ஜீவனின் மனோபாவத்தை அல்லது எண்ணப் போக்கை குறிக்காது. உயிரில்  ஔபசமிக சம்யக்த்வம், க்ஷாயோபசமிக சம்யக்த்வம், க்ஷாயிக சம்யக்த்வம்  ஏற்படும் போது உயிரில் அதாவது ஆத்மனில் நிலவும் தூய்மைத் தன்மையைக் குறிக்கும் சொல்லாகும். கர்ம வினைகளின் உதயத்தின் போது ஆத்மனில் ஏற்படும் சலனத்தையும் இது குறிக்கும். இதை நன்கு மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும். இங்கு மனம் அடங்கிய நிலையில் தான் இவைகளை நாம் உணர்வோம். மனமாகிய ஆறாவது புலனுக்கு இங்கு இடம் கிடையாது. ஆத்ம ஃபாவம் அல்லது ஆத்மானுபவம் மட்டுமே இங்கு பிரதானம்  முக்கியம்.

 

ஔபசமிக ஃபாவம்.

இப்படி ஆத்மனுக்குத் தனிச் சிறப்பாக உள்ள ஔபசமிக ஃபாவம் எப்படி அறியப்படுகிறது?

 

ஆத்மனின் பால் ஈர்ப்பு கொண்ட ஜீவனானது ஆத்மனில் தோய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டு மோகனீய கர்மங்களை சுய முயற்சியால் (புருஷார்த்தத்தால்) உபசமம் செய்து அதன் காரணமாக ஆத்மனில் தோன்றும் சுத்தி அல்லது தூயதன்மை ஔபசமிக ஃபாவம் என்று ஆகமங்கள் சொல்கின்றன. ஆத்மனில் ஏற்படும் பரிசுத்தம் ஃபாவம் எனப்படும்.

 

ஃபாவம் என்ற சொல்லை தமிழில் மொழி பெயர்த்து சொல்வதை விட வடமொழியில் அப்படியே சொல்வது அதன் உண்மையான அர்த்தத்தை அணுபிசகாமல் புரிந்து கொள்ள முடியும் என்பதனால் அந்த சொல்லையே இனி பயன்படுத்த எண்ணி உள்ளேன். "பா" என்ற எழுத்தின் அழுத்தம் குறைத்து உச்சரிப்பதற்காக "பா"விற்கு முன்பு "" சேர்த்து ஃபாவம் (Bhavam) என்று எழுதுகிறேன்அவ்வாறு உச்சரித்து வாசிக்க வேண்டுகிறேன்.

 

ஆத்மா தன்னுடைய சுய முயற்சியால் மோகனீய கர்மங்களை உபசமம் செய்து ஔபசமிக ஃபாவம் அடைகிறது.

 

ஆத்மா என்பது நாம் தானே தவிர ஆத்மா வேறு நாம் வேறு அல்ல. எப்போது நாம் நம்மை ஆத்மனாக உணருகின்றோமோ? அப்போது ஆத்மாவே நாம் நாமே ஆத்மா. அதுவரை நம் உடலைத்தான் நாம் என்ற மாயையில் மூழ்கி இருப்போம். ஆத்மனையும் அறியாமல், ஆத்ம சுத்தியையும் அறவே ஒதுக்கி விடுகின்றோம்.

 

இப்போது கர்மம் பெரிதா? ஆத்மா பெரிதா? என்று பார்க்கும் போது ஆத்மா தான் பெரியது பலமானது. கர்மங்கள் ஆத்மனை விட சக்தி வாய்ந்தவை அல்ல. கர்மங்களை ஈர்ப்பதும் ஆன்மாதான் அவைகளை அழிப்பதும் ஆன்மாதான் கர்மங்களை எப்படி ஈர்த்ததோ? அதுபோல அவைகளை ஆத்மா தான் அழிக்க வேண்டும் அதனால் மட்டும் தான் முடியும். வேறு எந்த சக்திகளாலும் கர்மங்களை அழிக்க முடியாதுஎப்போது ஆத்மா தன்னை உணர்ந்து விட்டதோ? உணருகின்றதோ? அப்போதே கர்மங்களின் இரும்புப்பிடி உடும்புப்பிடி தளர்ந்து விடும் அதுவரை அவைகளின் ருத்ர தாண்டவம் தான் நடக்கும்.

 

இப்போது ஔபசமிக ஃபாவத்தை ஆத்மா தன் சுய முயற்சியால் அடைகிறது. கர்மங்களின் உபசமம் அதற்கு காரணம் ஆகிறது. எனவே ஆத்மா என்று வரும் இடத்தில் நம்மைத் தான் நாம் உணரவேண்டும்.

 

ஆத்மனின் பால் ஈர்ப்பு கொண்ட நாம் முயற்சி செய்து மோகனீய கர்மங்களை உபசமம் செய்து அதன் மூலம் நமது ஸ்ரத்தாகுணத்தில் ஏற்படும் தூய்மைத் தன்மையை, ஔபசமிக ஃபாவத்தை அடைகிறோம். இங்கு மோகனீய கர்மங்களின் உபசமம் அதாவது தணிவு நிலை ஔபசமிக ஃபாவம் ஏற்பட நிமித்தமாக அல்லது காரணமாக மட்டுமே உள்ளது.

 

க்ஷாயிக ஃபாவம் என்றால் என்ன?

ஆத்மனின் பால் ஈர்ப்பு கொண்ட ஜீவனானது தனது சுய முயற்சியால் (புருஷார்த்தத்தால்) மோகனீய கர்மங்களை முழுவதும் அழித்து அதாவது க்ஷயம் செய்து அதனால் ஆத்மனில் ஏற்படும் பரிசுத்தம் அதாவது தூய்மை க்ஷாயிக ஃபாவம் எனப்படுகிறது. இதில் மோகனீய கர்மங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டு விடுகின்றன. க்ஷாயிக ஃபாவம் உண்டாக மோகனீய கர்மங்களின் அழிவு, க்ஷாயிக ஃபாவம் ஏற்பட நிமித்தமாக மட்டுமே உள்ளன. அவைகள் க்ஷாயிக ஃபாவமாகாது. ஆத்மா தான் க்ஷாயிக ஃபாவத்தை அடைகிறது. மோகனீய கர்மங்களற்ற நிலை அவை முற்றிலும் அழிந்த நிலையில் ஆத்மனில் தோன்றும் ஃபாவம் க்ஷாயிக ஃபாவம்.

 

கேவல ஞானம் க்ஷாயிக ஞானம் ஆகும். மோகனீயம் முதலில் அழிகிறது. பின்னர் ஞானாவரணம் தர்சனாவரணம் அந்தராயம் இவைகள் முற்றிலும் அழிந்த உடன் ஆத்மனின் இயல்பான ஞான குணம், கேவல ஞானம் ஆத்மனில் இருந்து வெளிப்படுகிறது. இந்த ஞானம் கர்மங்களின் அழிவின் காரணமாக ஏற்படும் க்ஷாயிக ஞானம் ஆகும்.

 

இப்படி ஏற்படும் பரிசுத்த தூய்மை அழியாது நிரந்தரமாக நீடித்து இருக்கும். சித்த நிலைக்கு பிறகும் எல்லையில்லாத காலம் இருக்கும். ஒரு முறை க்ஷாயிக ஃபாவம் தோன்றிவிட்டால் அழியவே அழியாது.

 

ஔபசமிக ஃபாவம் க்ஷாயோபசமிக ஃபாவம் இரண்டும் இடையில் விடுபடும். காரணம் ஆத்மனின் முயற்சி அதாவது புருஷார்த்தம் தொடர்ந்து நீடிக்காததால் அவை இரண்டும் விடுபட்டு விடும்.

 

ஏனெனில் கர்ம வினைகள் உபசமத்தினால் சம்யக்த்வ பர்யாயம் ஏற்படும். மீண்டும் வினைகள் உதயத்திற்கு வர வாய்ப்பு உள்ளதாலும் ஜீவனின் முயற்சியில் தொய்வு ஏற்படுவதாலும் இவ்விரு சம்யக்த்வங்களும் நீடிக்காது.

 

ஆனால் க்ஷாயிக சம்யக்த்வம் அல்லது ஃபாவம் ஜீவனின் தொடர்ந்த முயற்சிகள்  காரணமாக கர்மங்கள் வேரோடு  அழிக்கப்படுகின்றன. அவை மீண்டும் எழ வாய்ப்பில்லை ஆகவே க்ஷாயிக ஃபாவம் என்றென்றும் நிலைக்கும் சித்த நிலைக்கு பிறகும் ஆத்மனில் நீடித்து நிற்கும்.

 

க்ஷாயோபசமிக ஃபாவம் என்றால் என்ன?

 

மோகனீய கர்மங்களின் க்ஷயோபசமிக நிலையில் ஆத்மனில், ஸ்ரத்தா குணத்தில் தோன்றும் சுத்தி க்ஷாயோபசமிக ஃபாவம் என்று பெயர்.

 

க்ஷயோபசமம் பற்றி நாம் பல முறை பார்த்து இருக்கிறோம். எனவே அதைப் பற்றி விரிவாக இல்லா விட்டாலும் அதன் மூன்று முக்கிய அம்சங்களை மட்டும் பார்ப்போம்.

 

1.நிகழ்காலத்தில் உதயத்திற்கு வர வேண்டிய சம்யக்த்வத்தின், மூலபேதங்களான  சர்வகாதிக் கர்மங்கள் ஆறும் உதயத்திற்கு வராமல் உதயாபாவிக் க்ஷயம் நிலையில் இருப்பது.

 

2.எதிர்காலத்தில் உதயத்திற்கு வர வேண்டிய சம்யக்த்வத்தின் ஏழு மூலக்கூறுகளில் சர்வகாதிக் கர்மங்கள் ஆறும் ஸதவஸ்தாரூப வடிவ உபசமத்தில் இருப்பது

 

3.நிகழ்காலத்தில் தேசகாதி கர்ம வினை உதயத்தில் இருப்பது.

 

உதயாபாவிக் க்ஷயம் மற்றும் ஸதவஸ்தாரூப உபசமம் இரண்டிலும் சர்வகாதிக் கர்மங்கள் உதயத்திற்கு வராமல் உபசமம் அதாவது தணிந்து இருக்கும். ஆகையால் அவை ஆன்மா சம்யக்த்வம் பெற முயற்சி செய்யும் போது எந்தவொரு தடையும் செய்ய வாய்ப்பு இல்லை. ஏனெனில் அவை செயல்பாட்டில் இருக்காது.

 

மூன்றாவது தேசகாதி கர்ம வினை உதயத்தில் இருந்தாலும் பகுதி அளவே செயல்படும் ஆதலால் சம்யக்த்வம் ஏற்பட தடை இல்லை.

 

இந்த மூன்று நிகழ்வுகள் சேர்ந்து க்ஷாயோபசமிக சம்யக்த்வம்  ஏற்படுகிறது. அதன் காரணமாக ஆன்மாவின் உண்டாகும் தூய்மை க்ஷயோபசமிக ஃபாவம் ஆகிறது.

 

  ஔதயிக ஃபாவம் என்றால் என்ன?

அஷ்ட கர்ம வினைகள் உதயத்தால் ,அவற்றின் பலன் தரும் சக்தியால் ஐம்புலன்கள் சம்பந்தப்பட்ட ஆத்மனுக்கு தரும் பல்வேறு விதமான இன்ப துன்பங்கள், சுக துக்கங்கள் வளமை வறுமை தடைகள் தடையின்மை இவை போன்ற பல்வேறு வெளிப்புற அனுபவங்கள் ஔதயிக ஃபாவம் எனப்படும்.

 

இந்த ஔதயிக ஃபாவம் ஜீவனுக்கு ஜீவன் மாறுபட்டு இருக்கும். சாதா வேதனீய உதயத்தால் உயிருக்கு மிகவும் சாதகமான சூழ்நிலை இன்பங்கள் சுகங்கள் இவற்றிற்கு எந்த விதமான குறைபாடும் இருக்காது. மண், பெண், பொன், நவரத்தினம், சகல ஐஸ்வர்யங்கள் இன்னமும் உலக சுகங்கள் அனைத்திற்கும் எந்தவொரு தடையும் குறையும் பரத சக்கரவர்த்திக்கு கிடையாது. ஆனால் இவை அனைத்தும் அவரை சம்சாரத்தில் ஈர்க்கவில்லை. அவைகளில் இருந்து விலகி தன்னுள் தோய்ந்து இருந்தார். அவர் க்ஷாயிக சம்யக்த்வம் கொண்டவர். உலக இன்பங்களில்  பற்றின்றி தாமரையிலை தண்ணீர் போல வாழ்ந்தவர். அவரை சாதா வேதனீயம் உதயத்தில் மிகவும் உச்சத்தில் இருந்த போதும் அது அவரின் ஆத்ம வைராக்கியத்தில் இருந்து சற்றும் அவரை விலக்க முடியவில்லை.

 

பெரும்பாலான ஜீவன்கள் சாதா வேதனீயம் உதயத்தில் இருந்து அதன் காரணமாக தங்களுக்கு ஏற்படும் இன்பங்கள் சுகங்கள் இவற்றிற்கு அடிமையாகி தங்களின் சுய தன்மையில் இருந்து விலகி செருக்கு அகங்காரம் ஆணவம் கொண்டு திரிகின்றன. இவைகளின் காரணமாக சம்சார சுழற்சியில் சிக்கி விடுகின்றன.

 

மேலும் பல ஜீவன்கள் அசாதா வேதனீயம் காரணமாக அவைகளுக்கு ஏற்படும் துன்பங்கள் துயரங்கள் இவைகளைத் தாங்க முடியாமல் அவைகளில் இருந்து விடுபட தீவிர முயற்சிகள் செய்து தோற்கும் போது அதனை சகித்துக் கொள்ள முடியாமல் ஆர்த்த ரௌத்திர தியானங்களில் ஆழ்ந்து தங்களின் பிறவி சுழற்சிகளை அதிகரித்துக் கொள்கின்றன.

 

ஒரு சில ஜீவன்கள் இரும்பு கடப்பாரை உடலில் செருகி இருந்தாலும் சிறு முணுமுணுப்புக் கூட இல்லாமல் இருப்போரும் உண்டு. ஒரு சிலர் சிறு துரும்பு லேசாக உடலில் உறுத்தினாலும் அழுது ஆர்ப்பாட்டம் ஆகாத்தியம் செய்வோரும் உண்டு.

 

மேலும் திகம்பர முனிவர்கள் அவர்களுக்கு ஏற்படும் உபசர்க்கங்களின் போது எவ்வளவு துன்பங்கள் நேர்ந்தாலும் அவைகளை சகித்துக் கொண்டு ஆத்மனில் இருந்து தங்கள் கவனத்தைச் சிதற விடாமல் நிச்சலனமாக தியானத்தில் அதாவது ஆத்மனில் ஆழ்ந்து இருப்பர். துன்பங்கள் வேதனைகள் முனிவர்களை பாதிப்பதில்லை அவர்களின் ஃபாவத்தின் வலிமை அப்படிப்பட்டது வஜ்ரம் போன்றது.

 

இவ்வாறாக கர்ம வினைகளின் உதயம் காரணமாக அவற்றின் பலன்களை பல்வேறு வகைகளில் வெளிப்படுத்தி செயல்படுவோர்  பலவிதம். உயிர்களிடம் கர்ம வினைகளின் உதயங்கள்  வெளிப்படுத்தும்  தன்மை ஔதயிக ஃபாவம் எனப்படும். இந்த தன்மை உயிருக்கு உயிர் மாறுபடும் ஒரே விதமாக இருக்காது.

பரமபாரிணாமிக ஃபாவம் என்றால் என்